அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சுருட்டப் பள்ளி மகிமை

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம் (சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளி சயனேஸ்வரர் மஹிமை)
ஆம், சற்குருவை நாடி அடைந்து அவரளிக்கும் ஆன்மீகத் திருப்பணிகளை அவருடனேயே சேர்ந்து செய்து பெறுகின்ற ஆனந்தத்திற்கு ஈடு இணையேது! அதனையே சுந்தரானந்தம் என்று குறிப்பிடுகின்றோம். கடந்த 21.5.1994ல் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ஜெயந்தி தினமாகும். அப்போது ஒரு மாத காலத்திற்கும் மேலாக மௌன நோன்பு ஏற்றிருந்தார்.
இந்நாளில் (21.5.1994) நம் சபை அடியார்கள் தங்கள் குடும்பங்களுடன் நம் குருமங்கள கந்தர்வாவுடன் சேர்ந்து சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்ட சயனேஸ்வரர் சிவன் கோயிலில் உழவாரத் திருப்பணி செய்யும் பாக்கியத்தைப் பெற்றனர். இந்த பாக்கியமே சுந்தரானந்தமாக மலர்ந்தது! நடுப்பகலில் ஒரு மணி அளவில் ஆண், பெண் இருபாலாரும் தகிக்கும் வெயிலில் சிவபெருமான், அம்பாள் இரு கோயில் பிரஹாரங்களையும் முட்டிப் பிரதட்சணமிட்டு வலம் வந்தனர். உடல் வேதனைகளைத் துறந்த நம் குருமங்கள கந்தர்வா முட்டியிட்டு முன் செல்ல, அனைவரும் பின்னால் முட்டிப் பிரதட்சணம் செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அவனியில் அவணி விளைய
புவனத்தில் பொன் வேய
மவுனத்தில் மகேசனைக் காண்பாயே
என்ற அகத்திய உரைக்கேற்ப மௌனத்தில் மகேசனைக் காணும் யோகத்தை நேரிடையாகத் தன் அடியார்களுக்கு குருமங்கள கந்தர்வா புகட்டிய இடமே சுருட்டப்பள்ளி திருத்தலமாகும்.
மௌன விரத நாட்களிலும் வியாழக் கிழமைகளிலும் மேற்கூறிய குருமௌனகுரு துதியை மௌனமாக மனதிற்குள் ஓதி வந்தால் காஷ்ட மௌன சித்திகள் மலரும்.

பின்னர் கோயிலின் ஒட்டடை, தூசு, அழுக்கினைச் சுத்தப்படுத்தி, நீர் ஊற்றிக் கழுவி, பிசுக்குகளை அகற்றி ஆலயமெங்கும் நறுமணம் மிகுந்த பன்னீர் தெளித்து, நறுமண தூபமிட்டு உழவாரத் திருப்பணி நடந்தது. சற்குருவை நாடினாலன்றோ இத்தகைய பெறற்கரிய பாக்கியங்கள் கிட்டும். அவர்தம் சத்சங்கங்களில் இணைந்தாலன்றோ இத்தகைய அரிய இறைப் பணிகளை ஆற்ற முடியும்! தனித்திருந்தால் இத்தகைய பெரிய இறைப் பணிகளை ஆற்ற முடியுமா? குருவருள் பெற்றிட, இறைவனின் திருவருள் தானே எளிதினில் கனியும்!
சிவபெருமான் சயனக்கோலம்
ஸ்ரீரங்கநாதர் போல சிவபெருமானும் சயனக் கோலத்தில் காட்சி தந்து அருள்புர்கின்றார். எங்கு? சென்னை – திருப்பதி சாலையில், ஊத்துக் கோட்டையில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆந்திர எல்லையில் ‘சுருட்டப்பள்ளி’ என்னும் கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் “ஸ்ரீபள்ளி சயனேஸ்வரராக” சயனங் கொண்டு சிவபெருமான் சுமார் 12 அடி நீளத்தில் சுதை ரூபத்தில் ஸ்வாமியின் திவ்ய ஸ்வரூபம் காட்சியளிக்கிறது. மூலவரைச் சுற்றி கர்ப்பக்ரஹத்தின் செவ்வக வடிவ நான்கு சுவர்களிலும் சுதை ரூபங்களில், ஸ்ரீபார்வதி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீஅகஸ்தியர் மற்றும் பல மூர்த்திகள், மஹரிஷிகள் சிவபெருமானை தரிசித்தவாறே நமக்கு அருள்பாலிக்கின்றனர். சிவபெருமான் இந்த சயனக்கோலம் பூண்டது ஏன்?
சயனக்கோலக் காரணம்
பாற்கடலில் அமிர்தம் திரண்டு வர, ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி கையில் அமிர்த கலசத்துடன் தோன்றுகிறார்! அமிர்தத்தைக் கண்ட பேராசையில், வெறியில், தேவர்களும் அசுரர்களும் அமிர்த கலசத்தை ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்திகளிடமிருந்து பறித்துக் கொண்டு இங்குமங்குமாக ஓடினர்! “புண்ய சக்திகள் மிகுந்த தேவர்களா இப்படி நடந்து கொள்கிறார்கள்” தெய்வ மூர்த்திகள் வேதனையுற்றனர்.
அமிர்தம் பெருக்கெடுத்தவுடன் “ஆலால சுந்தரனாய்” அவனியைக் காத்தருளும் சிவபெருமானுக்கல்லவா  நைவேத்யம் காட்ட வேண்டும்! சர்வேஸ்வரனுக்குப் படைத்த பிறகே எதையும் தமக்கென ஏற்கும் பண்பைப் பெற்றிருக்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இன்று என்ன நேர்ந்தது!” ஸ்ரீமஹாவிஷ்ணு மனம் வருந்தினார். “அழிவில்லாத் தன்மையை அளிக்கவல்ல அமிர்தந்தனை, ஈஸ்வரன் அல்லவோ முதலில் உண்ண வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிட்டாமல் போய் விடுமோ என்று அஞ்சி, பேராசை வசப்பட்டு, ஸ்வயமாயையில் ஆட்பட்டு சர்வேஸ்வரனையே மறந்து விட்டார்களே! ஸ்ரீபிரம்மா கவலை கொண்டார். அனைத்தையும் கைலாயத்திலிருந்து கண்டு இரசித்து நின்ற சிவபெருமான் தம் திருவிளையாடலைத் துவங்கினார். பிரபஞ்சத்தின் உள்ளும், புறமாய் அனைத்துமாய் நின்று ஆ(ட்)டுபவனன்றோ! ஆலகால விஷத்தை சிவன் உண்டிட அதன் உஷ்ணத்தின் விளைவினால் களைப்புற்றுச் சற்று சயனிக்க விரும்பினார் சிவபெருமான்!
சிவபெருமான் பூலோகத்தில் இறங்கினார் எதற்கு? சயனங் கொள்ள! பூலோகத்தில் புதுக் கோலத்தில், அதுவும் சயனக் கோலத்தில் திருவருள் புரியவே இத்திருவிளையாடலோ! இவ்வாறாக சிவபெருமானே சயனித்து ஸ்ரீரங்கநாதர் போல் சயங்க் கோலத்துடன் அருள்புரியத் தேர்ந்தெடுத்த தலமே சுருட்டப்பள்ளி. பூலோகமென்ன, விண்ணுலக லோகங்கள் பல கோடியிருக்கும் எவற்றிலும் சிவபெருமானின் வேறு சயனக் கோலத்தைக் காண இயலாது! திருக்கயிலாயத்திலிருந்து ஆதிசிவன் பூலோகம் ஏகினான் என்று அறிந்ததுமே சகலதெய்வ மூர்த்தியரும், அவதாரங்களும், மஹரிஷிகளும் சிவனைத் தொடர்ந்தனர். சிவபெருமான் சுருட்டப்பள்ளித் திருத்தலத்தில் சயனக் கோலத்தில் எழுந்தருள......
சிவதரிசன மாயை
ஆலகால விஷம் உண்ட களைப்பால் அன்றோ சிவபெருமான் இங்கு வந்தார்.. களைப்பின் ஊடே அவர் பெருமூச்சுவிட..... அங்கு அதனால் எழுந்த உஷ்ணக் கனல் அங்கு மேக மண்டலமாய் உருப்பெற்றுச் சூழ்ந்திட.... மேக மண்டலத்தின் ஊடே நீரிடை மீனாய், சிவபெருமானின் திருஉருவம் ஒளிர்ந்தது. எவராலும் அருகில் செல்ல இயலவில்லை. என் செய்வது? அனைத்து தெய்வமூர்த்திகளும், மஹரிஷிகளும், கந்தர்வ, கின்னர, கிம்புருட ஏனைய விண்ணுலகத்தாரும் குழுமி நிற்க.....
தேவர்களின் குருவாம் பிரகஸ்பதியும், அசுரர்களின் குருவாம் சுக்ராச்சாரியாரும் விரைந்தோடி வந்தனர். அசுரர்களில் பெரும்பான்மையோர் தங்கள் குருவைப் பின் தொடர்ந்து வந்துவிட்டனர். “அமிர்த மாயையில்” திளைத்த தேவர்களோ அமிர்தத்தினை அசுரர்களிடம் சிக்காமல் எப்படிக் காப்பாற்றுவது என்ற எண்ணங்களிடையே உழன்றமையால் ஏனையவற்றை மறந்தனர். இவ்வகையில் அசுரர்கள் புத்திசாலிகளே! குருவை நாடி, ஓடி வந்தமையால் அவர்களுக்கு ஆதி சிவனின் அற்புத சயனக் காட்சி கிட்டியது!
அசுரர்கள் யார்?
அசுரர் என்றால் தீயவர்கள், வெறுக்கத் தக்கவர்கள் என்று எண்ணல் வேண்டாம். அசுரர்களிடையே மஹிரிஷிகளும் உண்டு. தீய எண்ணங்கள் உடைய மனிதர்கள், தேவர்கள், விண்ணுலகவாசிகளே அசுரர்கள் ஆகின்றனர். அபரிமித தபோ சக்தியால் விண்ணளாவும் வரங்களைப் பெற்றவர்கள். அத்தகைய தெய்வீக சக்தியினை நல்லவற்றிகாகப் பயன்படுத்தாமல் தம் வலிமையைப் பெருக்கி எதிரிகளை அழித்தல், தம் ஆட்சியை விரித்தல், பிறர் பொருளைக் கவர்தல் போன்ற தீய காரியங்களில் இறங்கிட, அவர்கள் அசுரர்களாகின்றனர். அசுரர்களில் தம் தவறுகளை உணர்ந்து, பிராயச்சித்தம் தேடி, கடுந்தவமிருந்து இறைநெறியில் திளைத்து மக்களுக்கு சேவை புரிந்து மஹரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் அசுர குலத்தவர்களாகவே வாழ்ந்து காட்டித் தீயவர்களும் நல்வழி பெற்று அற்புதமான இறைநிலைகளை அடையலாம் என்று வழிகாட்டி உணர்வித்தனர்
ஸ்ரீஅகஸ்தியர் காட்டிய வழி
ஆலால சுந்தரனாம் ஆதிசிவன் பள்ளி சயனேஸ்வரராக தரிசனம் தர எவராலும் அவர்தம் பரிபூர்ண தரிசனத்தைப் பெற இயலவில்லை! ஆலகால விஷத்தின் தாள இயலா வெப்பத்தினால் எவராலும் ஈஸ்வரன் அருகில் செல்ல இயலவில்லை! அனைத்தும் உணர்ந்த தெய்வாவதார மூர்த்திகள், சிவபெருமானின் திருவிளையாடல் சம்பூர்ணம் பெறக் காத்திருந்தனர். மஹரிஷிகள், யோகியர், விண்ணுலகத்தோர், பித்ருதேவர்கள்  அனைவரும் விளக்கம் பெற ஸ்ரீமஹா விஷ்ணுவை நாடினர்.
“ஸ்ரீஅகஸ்திய மஹா பிரபுவை நாடி விளக்கம் பெறுவீர்களாக! உத்தம சித்த புருஷர்களின் நாயகரும் என்றும் கைலாயத்தில் நித்ய சித்தராய் உலாவும் பேறு பெற்றவருமான ஸ்ரீஅகஸ்தியரே இதற்கான விளக்கம் தரவல்லவர்” என்று ஸ்ரீமன் நாராயணன் அருளினார். அனைவரும் திருக்கயிலாயம் விரைந்தனர். ஸ்ரீஅகஸ்தியரை எங்கும் காணவில்லை. “நாரத மஹாப்ரபுவே! தாங்கள் ஸர்வலோக சஞ்சாரி! ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவைக் கண்டீர்களா!”

ஸ்ரீபள்ளிகொண்ட சயனேஸ்வரர்
சுருட்டப்பள்ளி

“ஸ்ரீஅகஸ்தியரா! எங்கெல்லாம் சிவபெருமான் உறைகின்றாரோ அங்கெல்லாம் அவர் பிரசன்னமாயிருப்பாரே, சிவபெருமான் சயனிக்கும் அத்திருத்தலத்தில் நன்றாகத் தேடினீர்களா!”அனைவரும் பூலோகத்திற்கு, சுருட்டப்பள்ளி க்ஷேத்திரத்திற்கு விரைந்து திரும்பினர்.
முட்டிப் பிரதட்சிண முறை
ஆங்கே..... ஸ்ரீஅகஸ்தியர் பஞ்சகச்ச வஸ்திரம் தரித்து, சிவபெருமான் சயனத்திருக்கும் ஸ்தானத்தைச் சுற்றி முட்டிப் பிரதட்சிணம் செய்து கொண்டிருந்தார். உச்சிக்காலம்.... கடும்வெயில்... தாங்க முடியாத சூரிய வெப்பத்தில் கை, கால்கள் மண்டியிட்டு முட்டிக் காலில் பிரதட்சணமா! உடல் வேதனைகளைத் துறந்து அமைதியாகக் கைகளை ஊன்றி முட்டியிட்டு பிரதட்சிணம் செய்து கொண்டிருந்தார் அகஸ்தியர்! நல்ல உச்சி வெயில், கடுமையான உஷ்ணத்தின் ஊடே தாங்க இயலா வெப்பத்தில் ஊன்றிய உள்ளங்கைகள், கால் முட்டிகள், கால் விரல்கள் – அனைத்தும் கொப்புளிக்க, தோல் ஜவ்வுகள் சூட்டினால் வெடித்துப் பாளங்களாக ... ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி சாந்தமாகத் துன்பங்களைச் சகித்துக் கொண்டு “ஓம் நமசிவாய”“ என்று ஓதியவாறே மண்டியிட்டு முழங்கால்களில் முட்டிப் பிரதட்சிணம் செய்து வலம் வர....
ஓர் அற்புதமான ஒளி அங்கு தோன்றி ஸ்ரீஅகஸ்தியருக்கு ஜோதிப் பாதை ஒன்றை அமைத்திட,  அந்த ஒளிப் பாதையில் அவர் சென்று சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நின்றார். அவருக்கு மட்டும் இது எவ்வாறு சாத்தியமாயிற்று  கடும் உஷ்ணப் படலங்களிடையே சிவபெருமானின் தரிசனமே பலருக்கும் இலைமறை காயாகத் தெரிந்திட....அவர்தம் சயனக்கோலமருகில், சற்று தூரத்தில் கூடச் செல்ல இயலாதவாறு அனைவரையும் கடும் உஷ்ணம் தாக்கியது!
ஆனால் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவோ முட்டிப் பிரதட்சிணம் செய்து சிவபெருமானின் திருவடிகளில்  அமர்ந்து தவம் செய்கின்றாரே! என்ன மகாத்மியமோ தெரியவில்லையே! ஸ்ரீஅகஸ்தியர் உள்ளிருந்தவாறே அனைவருக்கும் சைகைகள் காண்பித்தா! தம் முட்டிகளைச் சைகையால் சுட்டிக் காட்டியவாறே சிவமுத்திரைகள் புரிந்திட.... ஆம்! தம்மைப்போல் முட்டிப் பிரதட்சிணம் செய்து வருமாறு அனைவரையும் வேண்டுகிறார்! அனைவரும் ஸ்ரீஅகஸ்தியர் காட்டிய வழியில் வெயிலைப் பொருட்படுத்தாது முட்டிப் பிரதட்சணம் செய்திட.... அவ்வாறு முட்டிப் பிரதட்சணம் செய்தோருக்கு சிவபெருமானின் சயனக் கோலம் தெளிவாகக் கிட்டியது. அது மட்டுமா, ஸ்ரீஅகஸ்தியருக்கு வழிகாட்டிய திருவாதிரை நட்சத்திரப் பேரொளி முட்டிப் பிரதட்சணம் செய்தவர்களுக்கும் வழிகாட்டி அனைவரையும் சிவபெருமான் சயனக் கோலம் கொண்டிருந்த இடத்திற்கு ஒளிப்பாதையில், “த்ரைலிங்க சௌம்ய ஜோதிப்“ பாதையில் அழைத்துச் சென்றது!
சுருட்டப்பள்ளியில் ஸ்ரீபள்ளிகொண்ட சயனேஸ்வரரை, பிரஹாரத்தை முட்டிப் பிராதட்சிணம் செய்த பின்னர் தரிசிக்கின்ற முறை இவ்வாறாகவே தோன்றியது. நடுப்பகலில் (11.AM  to 1.pm)  இவ்வாறு முட்டிப் பிரதட்சணம் செய்தபின் ஸ்ரீபள்ளி கொண்ட சயனேஸ்வரரை, தரிசித்து, இயன்ற (உழவாரத்) திருப்பணிகள் புரிந்திட சிவபெருமானின் சயனக்கோலத்தின் பரிபூரண அனுக்கிரஹம் கிட்டிடும். மஹா பிரதோஷத்திற்குப் பின் அமைந்த சயனத் திருக்கோலமாதலின் இத்தகைய முட்டிப் பிரதட்சணத்துடன், முறையாக  மூலவரை தரிசித்தல், ஒரு கோடி பிரதோஷங்களை அனுஷ்டித்த பலனைப் பெற்றுத் தரும் என சிவபெருமான் அருளியுள்ளார். இத்தகைய ஆன்மீக இரகசியங்கள் ஸ்ரீஅகஸ்தியரின் “பிரதோஷகால மூர்த்திகள்” என்ற அகஸ்திய கிரந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. எழுதாக் கிளவிகளாய், வேத மறைகளாய்ப் பொலியும் இத்தகைய அகஸ்திய கிரந்த விஷயங்களை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக எடுத்தருளி அருட்பணியாற்றுபவர் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள். இவையெல்லாம் அவர்தம் குருகுலவாச அனுபூதிகளாம்.
முட்டிப் பிரதட்சணம் செய்வதன் பொருள் என்ன?
முட்டிப் பிரதட்சணம் செய்து சிவபெருமானின் சயனக்கோல தரிசனத்தைப் பெற்ற முமூர்த்திகள், மஹரிஷிகள்..... அனைவரும் ஸ்ரீஅகஸ்தியரிடம் இத்திருக்கோயிலில் முட்டிப்பிரதட்சிணம் செய்வதன் மஹாத்மியத்தை விவரிக்க வேண்டினர்.
“மும்மூர்த்திகளும், தெய்வாவதார மூர்த்திகளும் அறியாத பொருள் பிரபஞ்சத்தில் ஏதேனும் உண்டா? அவர்களுடைய ஒருமித்த திருவிளையாடலன்றோ இது! அவர்களுடைய் அருட்கடாட்சத்தால் யாமறிந்ததை விளக்குகின்றோம். பாற்கடலில் அமிர்தம் கிட்டியவுடன் தேவர்களும் அசுரரகளும் செய்ய வேண்டியது என்ன? அந்த தேவாமிர்தத்தை ஆலால சுந்தரனாம் சிவபெருமானுக்கல்லவோ நைவேத்தியம் வைத்துப் படைக்க வேண்டும்! அதனையே அனைவரும் மறந்தனரே! மேலும் ஆலகால விஷம் என்பது ஸகல கோடி லோலகங்களிலுமுள்ள தீயசக்திகளின் திரட்சி அல்லவா! அதனையே தம் கண்டத்தில் ஏற்று சகலகோடி லோகங்களையும், அனைத்து ஜீவன்களையும் இறைவன் இரட்சித்தான் என்பதை ஓரணுவினும் சிறிதேனும் உணர்ந்தால் தானே இறையருளை அவரவர்க்குரித்தான மானுட, தேவ, அசுர ஏனைய சரீரங்களில் பெற்று மகிழலாம்.
இதற்காகவே இறைவனின் இத்திருவிளையாடல்!
நடுப்பகலில், உச்சி வெயிலில், கடுமையான வெப்பத்தில் முட்டிப் பிரதட்சணம் செய்கையில் – அப்பப்பா... எவ்வளவு வேதனைகள், துன்பங்கள், தாங்க முடியாத வலி! இதயத்தைத் துளைக்கும் இரண எரிச்சல், சூடான மணலில் தோல் பாளங்கள் உருண்டு கொப்புளங்களாக வெடித்திட, அம்மம்மா..!!! என்னே சோதனைகள்..... கடும் வெயிலில் சற்று முட்டி போட்டு, மண்டியிட்ட நிலையில், பிரதட்சணம் செய்திட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்றால்.....  
சகலகோடி லோகங்களின் உஷ்ணத் திரட்சியாம் ஆலகால விஷத்தினைத் தம் கண்டத்தில் ஏற்று நம்மை சிவபெருமான் அரவணைக்கின்றார்! சற்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! தம்மை உஷ்ணக் கனலில் மறைத்து, இலைமறைகாயாய்ச் சயனித்துத் தம் ஆலகால விடத்தின் உஷ்ணத்தினை ஒரு சிறிதேனும் பிறருக்கு உணர்த்தவே இங்கு முட்டிப் பிரதட்சணத்தின் துன்பங்களை அனுபவித்தவர்களுக்கே தம் சம்பூர்ண தரிசனத்தை அளிக்கிறான். இறையவதாரங்களும், பிரம்மா, விஷ்ணு, ருத்ரத் திரிமூர்த்திகளும் சிவபெருமானைப் பரிபூரணமாக உணர்ந்து அவர்தம் பேரம்சமாகவே அருள்பாலிப்பவர்கள்! அவர்களே இன்று இங்கு முட்டிப் பிரதட்சணத்தின் மஹிமையை என்னென்று உரைக்க முடியும்!  எனவே சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலத்தில் முட்டிப் பிரதட்சணமிட்டு குடும்பத்தோடு இம்மூர்த்தியை தரிசிப்போர்க்கு அதிஅற்புதப் பலன்கள் கிட்டும்.
அக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் முட்டிப் பிரதட்சிணமிட்டுக் கோயிலை வலம் வந்த பின்னரே மூலவரையும், அம்பாளையும் தரிசிப்பார்கள். மௌனவிரதத்தை இங்கு துவங்குவதும், முடிப்பதும் விசேஷமானதாகும். இங்கு பிரதோஷ காலத்தில் தரிசனப் பலன்கள் பல்கிப் பெருகி நமக்கு அருள்மாரி பொழியும்.

  
பெண்களுக்கான இறைப் பணிகள்

பெண்களுக்கான தினசரி இறைப்பணிகள் ஏராளமாக உள்ளன. அக்காலத்தில் பெண்கள் விடியற்காலையில் எழுதல், கணவனின் பாதங்களைச் சேவித்தல், பசுஞ்சாணத்தால் வாசலில் நீர் தெளித்தல், கோலமிடுதல், பசுவிற்கான சேவைகள், தினமும் கோயில் தரிசனம் என்றவாறாகத் தம் தினசரி வாழ்வில் நூற்றுக்கணக்கான இறைப் பணிகளை அன்றாட வாழ்க்கையில் பிணைத்துக் கொண்டனர். இதனால்
1, தினமும் அளவு கடந்த புண்ய சக்தியினைப் பெற்றனர்.
2. தினசரி இறைப் பணிகளால் பெற்ற புண்ய சக்தியினால் தம் வாழ்நாள் முழுவதும் அமைகின்ற துன்பங்களை எதிர்நோக்கத் தேவையான புண்ய கவசத்தினையும் பெற்றனர்.
3. இவ்விறைப் பணிகளின் பயனால் வளமான குடும்ப சந்ததிகள், திடகாத்திரமான மனம், வலுவான தேகம், நீண்ட ஆயுள் போன்ற நற்பலன்களைப் பெற்று இனிதே வாழ்ந்தனர்.
ஆனால் கலியுலகிலோ இடநெருக்கடி, நவீன வாழ்க்கை, அடுக்கு வீடுகள் (Flats), நகரமய வாழ்வு, பணப் பிரச்சனை, இறைவழிபாடு குறைவு போன்றவற்றால் பெண்களின் தினசரி இறைசேவைகள் மறைந்து விட்டன என்றே சொல்லலாம். இதனால் அவர்கட்குப் புண்ய சக்தி குறைகிறது. பலவித கெட்ட பழக்கங்கள், புகை, மது, ஜரிதா போன்ற தீய வழ்க்கங்கள், நேரமின்மையால் தர்ப்பணங்கள், சந்தி வழிபாடுகள் செய்யாமை – இவற்றால் கணவரும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான புண்ய சக்தியைப் பெறுவதில்லை. இவ்வாறாக , கணவன் – மனைவி இருவருக்குமே புண்ய சக்தி குறைந்தால்,
1. குழந்தைகளுக்கு நோய்கள், படிப்பின்மை , ஒழுங்கீனம்
2. வீட்டில் குழப்பம், ஒற்றுமையின்மை, சச்சரவுகள்
3. பணப் பிரச்சனைகள், அதிக செலவீனங்கள், திருமணத் தடங்கல்கள்
4. மாமியார், நாத்தனார், மருமகள் – இவர்களிடையே தினசரி சண்டைகள்
5. வேலையின்மை, விரயங்கள , விபத்துக்கள்
என்றவாறாக ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்றாக தினசரி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே வரும். இவை நீங்க, பெண்களுக்கு எளிதான முறையாக, சித்தர்கள் தினசரி இறைப்பணிகளை அளித்துள்ளனர். இவற்றைக் கடைப்பிடித்தால் பெண்கள் நிச்சயமாக அளவிறந்த புண்ய சக்தியினைப் பெற்று அதன் மூலம் இன்னல்களைக் களைந்து சாந்தமான வாழ்வைப் பெறலாம். பெண்கள், கணவனுக்கு செய்ய வேண்டிய பாதபூஜையையும் மற்றும் சில எளிய இறைப் பணிகளையும் மே, ஜுன் அகஸ்திய விஜயம் இதழ்களில் விளக்கியிருந்தோம். மேலும் பல தினசரி இறைப்பணிகளை சிவகுருமங்களா கந்தர்வா அருளியுள்ளார்.

ஸ்ரீஅவதூத தட்சிணா மூர்த்தி சுவாமிகள்

என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகள் - ஸ்ரீ அவதூத தட்சிணா மூர்த்தி சுவாமிகள்
தற்போது நடைமுறையிலிருக்கும் இராமாயணம், மஹாபாரதம், பாகவதம் – இவற்றில் இடம் பெறா இராமாயண மஹாபாரத, பாகவதப் புராண நிகழ்ச்சிகள் பல்லாயிரம் உண்டு. இவையனைத்தும் சித்தர்களுடைய இருடிகள் இராமாயணம், இருடிகள் மஹாபாரதம், இருடிகள் பாகவதம் ஆகியவற்றில் தான் குறிபிடப்படுகின்றன. இவைதாம் அற்புதமான முறையில் புராணங்களை விவரிக்கின்றன. இவற்றை நாடிகள் வடிவிலும் கிரந்தங்களாகவும் வடித்துள்ளவர்கள் சித்த புருஷர்களே! கலியுலகில் யோகிகள், மஹான்கள், ஞானிகளாய் பவனி வரும் உத்தம இறையடியார்கள், பல புராண யுகங்களில் அற்புத மஹரிஷிகளாய் இறை ஆணையின்படி மலர்ந்து அருள் புரிந்தவர்களே! இந்த ஆன்மீக இரகசியங்களையும் அளிக்க வல்லார்கள் சித்த புருஷர்களே! இவ்வகையில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகள் என்னும் தலைப்பில்
1. காஞ்சிபுரம் “போடா ஸ்வாமிகள்“
2. கசவனம்பட்டி அவதூது சுவாமிகள் ( ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தர் )
3. அவதூது மஹாபாபா
4. ஸ்ரீஞானேஸ்வர ஸ்வாமிகள் 
ஆகியோரைப் பற்றி எவரும் அறியா அரிய ஆன்மீக இரகசியங்களை முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் அளித்துள்ளோம். அடுத்து வருவது.....
துவாதச நெல்லி மரம்
துவாதச நெல்லி மரம் என்பது ஓர் அபூர்வமான நெல்லிமரம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மரத்தில் ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் காய்க்கும். இறையருள் பெற்றவர்களே இதனை தரிசனம் பெற இயலும் என்றால் இதனை உண்டால் அடையும் ஆன்மீக சக்தியின் மஹிமையை என்னென்று சொல்வது! இதனையே அதியமான் பெற்று ஔவைப் பிராட்டிக்கு ஈந்து சுயநலமற்ற இறைச் சேவை புரிந்து உன்னத நிலையைப் பெற்றான். இத்தகைய துவாதச நெல்லி மரம் பொதிய மலை, இமயமலை, திருஅண்ணாமலை, கொல்லி மலை போன்ற சித்த புருஷர்கள் நடமாடும் மலைப்பகுதிகளில் மட்டுமே உண்டு.
மஹா பாரத காலத்தில்,  அந்த அழகிய வனத்தில் துவாதச நெல்லி மரம் ஒன்று இருந்தது. குரு மித்ர ஈஸ்வரர் என்னும் சித்தபுருஷர் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு இட்ட கட்டளைப்படி பன்னிரண்டு ஆண்டுகள் உபவாசமிருந்து துவாதசியன்று இந்த துவாதச நெல்லிக் கனியை உண்பார். பிறகு மீண்டும் 12 வருட உபவாசம். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மகத்தான மக்கள் சேவையை மஹேசன் சேவையெனப் புரிந்து வந்தார். என்ன சேவை அது? பன்னிரண்டு ஆண்டுகள் உபவாசம், பிரம்மச்சர்யம், எப்போதும் சிவ சிந்தனை, ஸ்ரீஅகஸ்தியரின் திரண்ட குருவருள் இவற்றால் ஜோதியாய் மிளிர்ந்த குருமித்ர ஈஸ்வர சித்தருக்கு ஓர் அற்புத இறையருள் ஆன்மீக சக்தியாய், ஆற்றலாய் மலர்ந்தது. அது என்ன?
கர்ம பரிபாலனம்
ஒரு முறை இந்த நெல்லிக்கனியை உண்டால் அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பூவுலகின் (கோடிக்கணக்கான) அனைத்து உயிரனங்களின் கர்மப் பாங்கினை அறிந்து இறை நியதிக்கேற்ப அவற்றைச் சீராக்கும் வியத்தகு வல்லமையைப் பெற்றார். சுருங்கச் சொல்லிடின் எறும்பு முதல் யானை, இமயமலை ஈறாக அனைத்து உயிர்களின், ஜடப் பொருட்களின் தலைவிதியையே மாற்றியமைக்கும் இறையாற்றலைப் பெற்றார். ஆனால் இந்த ஆன்மீகசக்தியைத் தனக்கென சுயநலமாகக் கிஞ்சித்தும் பயன்படுத்துவாரில்லை.
இவர்தம் தபோ பலத்தை அறிந்த தேவர்கள், பித்ருக்கள், மஹரிஷிகள் போன்றோர் ஆயிரக்கணக்கில் இவரைச் சூழ்வராயினர். சிறிது கூடக் களைப்படையாது அனைவரையும் மலர்ந்த முகத்துடன் உபசரித்து அற்புத தான தர்ம முறைகளை அளித்து பலகோடி ஜீவன்களின் இன்னல்களைத் தீர்த்து வந்தார். குருமித்ர ஈஸ்வர சித்தரின் அருட்கருணையால் பலன் பெற்றோர் பூவுலகெங்கும் அவர்தம் மஹிமையைப் பரப்பி வந்தனர். ... ஒரு முறை...
அன்று துவாதசித் திருநாள்...... துவாதச நெல்லிக் கனி பூரித்து ஈஸ்வரரின் வருகைக்காகக் காத்திருந்தது! .... ஆங்கே வந்து சேர்ந்தனர் துரியோதனின் ஆணையால் வனவாசம் ஏற்ற பாண்டவர்கள்.
திரௌபதியின் மனப்பாங்கு
திரௌபதி துவாதச நெல்லிமரத்தையும் அதன் கனியையும் கண்டாள். அதைப் பெற ஆசைப்பட்டாள்! அர்ஜுனன் அம்பை எய்தினான். கனி அசைவதாயில்லை! சரமாரியாக ஆயிரமாயிரம் அம்புகளை மழையாகப் பொழிந்தான் அர்ஜுனன்! அனைத்தும் கனியைச் சுற்றி வட்டமாக ஆரம் போல் அமைந்தன. பாண்டவர்கள் அதிசயித்தனர்! சகாதேவன் பேசலானான் “அர்ஜுனா! இது தெய்வீகக் கனி! இதை அடித்தோ, பறித்தோ பெறலாகாது! எனவே கனியை அடிக்காமல் நம் குருவை தியானித்து அம்புகளை எய்து அதைத்தாங்கி வருமாறு செய்வாயாக!” அர்ஜுனன் “ஓம் குருதேவா!” என்று ஓதியவாறே அம்புகளை எய்திட ஆயிரமாயிரம் அம்புகள் அணிவகுக்க, நெல்லிக் கனி தானே இறங்கி வந்திட... அம்புகள் அக்கனியைத் தாங்கியவாறே அர்ஜுனனிடம் திரும்பி வந்தன.
துவாதச நெல்லிக் கனி தானே பேசலாயிற்று.. “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருள் பெற்ற பாண்டவர்களே! பன்னிரெண்டு ஆண்டுகட்கு ஒரு முறையே கனியும் என்னை குருமித்ர ஈஸ்வர சித்தரே உண்ணும் பாக்யம் பெற்றவர். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வர இருக்கிறார். மரத்தில் கனியில்லை என்றால் சாந்தமாகத் திரும்பிச் சென்று விடுவார். அடுத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் உண்பார். அதுவரை விரதம் தான். குருதேவரின் நாமத்துடன் அர்ஜுனன் அம்பு எய்ததால் குரு நாமத்திற்குக் கட்டுப்பட்டு நான் மரத்திலிருந்து விடுபட்டேன். என்னைத் திருப்பி மரத்தில் சேர்த்துவிடுங்கள்!”
அர்ஜுனன் தாம் பயின்ற் வில் வித்தைகள் அனைத்தையும் பிரயோகித்தும் நெல்லிக் கனியை அதன் மரத்தில் சேர்க்க முடியவில்லை. “ஒரு சித்த புருஷர் பட்டினி கிடப்பதற்கு நாம் காரணமாகலாமா”, திரௌபதி தன்னால் ஏற்பட்டதே இந்நிலை என்று மனம் வருந்தி பதைபதைத்தாள். “ஹே கிருஷ்ணா!” – கூப்பிட்ட குரலுக்குக் குழைந்தோடி வருபவன் குழலூதும் கிருஷ்ணனன்றோ! கண்ணன் தன் திருவிளையாடலைத் துவங்கினான்!
கண்ணனின் திருவிளையாடல்
“அடடா! இப்படிச் செய்து விட்டீர்களே! சகாதேவா! நீதான் மஹரிஷிக்குரித்தான குணங்களைப் பூண்டவன்! நீதான் வழி சொல்ல வேண்டும்”  “என்ன கிருஷ்ணா! விளையாடுகிறாயா! இந்த மாதிரிப் பிரச்சனைகள் என்றாலே உனக்கு வெல்லக் கட்டி ஆயிற்றே!” “அதற்கில்லை சகாதேவா!  சகுனம், ஜோஸ்யம் என்று சகலமும் அறிந்தவன் நீ ! இக்கனியை மரத்தில் சேர்க்க உனக்கு ஏதேனும் வழி தோன்றுகிறதா என்றுதான் கேட்கிறன்” “நீ அறியாததா கிருஷ்ணா? இருப்பினும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்! பிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துக்களும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவையே! இக்கனியைப் பார்த்தால் நிதர்சனமான உண்மையையே பேசவேண்டும் என்றே தோன்றுகிறது!” “சரியாகச் சொன்னாய் சகாதேவா! நீங்களனைவரும் இப்போது உங்கள் மனதில் உள்ளதை உண்மையாக ஒப்புவிக்க வேண்டும். உங்கள் வாக்கு சத்தியமானதாக  இருந்தால் இக்கனி அந்த சத்தியத்தின் மஹிமையால் தன் தாய் மரத்தைச் சார்ந்து விடும்.” அக்கனியைப் பார்த்தவாறே பாண்டவர்கள் தங்கள் மனதில் பட்டதைக் கூறிட அக்கனி சிறிது சிறிதாக வானில் உயர்ந்தது. மனதில் படுவதைக் கூறுவது பெரிய காரியமா என்ன என்று கேட்கலாம். இறைவனின் திருவிளையாடலில் ஒன்றான அக்கனியின் படைப்பின் விசேஷ தத்வம் என்னவெனில் அக்கனியைக் கண்டவுடன் தான்.... இதுகாறும் மனதில் அழுந்தியிருந்த எண்ணங்கள், ஆசைகள், சஞ்சலங்கள், விகார எண்ணங்கள், காமக் குரோத உணர்ச்சிகள், விருப்பு, வெறுப்புகள்.... அனைத்தும் தூபப்புகை போல் வெளிப்படும். அதனை உள்ளதை உள்ளவாறே ஒப்புவித்தால் தான் மனம் சுத்தமாகும். பல வருடங்களில் படிந்த மாசற்ற எண்ணங்களை அகற்றி மனதை சுத்தப்படுத்தும் மாமருந்தே இக்கனியின் தரிசன விசேஷமாகும்!
உண்டாலோ! ஸ்படிகமான மனதைப் பெற்று ஜகத்ஜோதியுடன் பிரகாசிக்கலாம்! பாண்டவர்கள் தங்கள் மனதில் எழுந்ததைக் கூறிட கனி வானில் உயர்ந்து மரத்தை நோக்கிச் செல்ல.... இப்போது திரௌபதியின் முறை..... அனைவரும் ஆவலுடன் அவளை நோக்கிட., திரௌபதி கிருஷ்ணனை வணங்கினாள்... “கிருஷ்ணா! பாண்டவர்களிடம் நான் செலுத்தும் அதே அன்பை என் உள்ளம் கர்ணனிடமும் பொழியத் துடிக்கின்றது. இவர்களிடம் நான் கொண்டுள்ள பாசம், நேசம், அன்பு அனைத்தையும் கர்ணனைக் காணும் போதெல்லாம் நான் பெறுகிறேன்! இது ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.”
அனைவரும் மௌனமாயினர், நெல்லிக்கனி தாய்மரத்தில் இணைந்தது! “பரம வைரியான கர்ணனிடத்தில் பாஞ்சாலி அன்பு கொண்டுள்ளாளா?” பீமன் கொந்தளித்தான். சகாதேவன் அவனை அடக்கினாள். “இக்கனியின் மஹிமையால் பரமாத்மா ஏதேதோ திருவிளையாடல்களைப் புரிகின்றான். திரௌபதியின் சத்திய வாக்கின் மஹிமையால் துவாதச நெல்லிக் கனி இமைக்கும் நேரத்தில் தாய் மரத்தில் இணைந்தது நமக்கும் ஏதோ தாய்ப்பாச உணர்வினைக் காட்டுகிறது! சற்று அமைதியாக யோசிப்போம்” – சகாதேவன் ஆத்மவிசாரத்தில் ஆழ்ந்தான். தர்மபுத்திரரும் ஆழ்ந்த சிந்தனையுடன் , “கிருஷ்ணன் காரண காரியமின்றி திரௌபதியின் உள்ளக்கிடக்கையினை வெளிப்படுத்தமாட்டான். இதில் ஏதோ விசேஷார்த்தம் பொதிந்துள்ளது.” என்று யோசிக்கலானார். பரமாத்மாவின் லீலைகளைப் பார்த்தீர்களா! ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரே நிகழ்ச்சியினால், திருவிளையாடலினால் பல ஆத்ம விசாரங்களுக்கு வித்திகிறான். தாய் (கல் ஆல) மரம் அவனன்றோ! – சற்று நேரம் கழித்து குருமித்ர ஈஸ்வர சித்தர் துவாதச நெல்லிக் கனி உண்ண அங்கு வந்திட, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை அங்கு கண்டதும் பேரானந்தம் கொண்டு தொழுதெழுந்தார். “துவாதச பாரணை, அதுவும் ஸ்ரீகிருஷ்ணன் முன்னிலையில்!...” குருமித்ரர் மகிழ்ச்சியுடன் துவாதச நெல்லி மரத்தினிடை சென்றார். மேலே உற்று நோக்கினார்.. மீண்டும் திரும்பி வந்தார்.., “ஸ்ரீகிருஷ்ணா! இக்கனியை யாரோ தீண்டிவிட்டாற் போல் தோன்றுகிறதே! யாரும் கொய்யா(த)க் கனியையே யாம் உண்ணவேண்டும் என்பதல்லவா இறை நியதி! இப்போது என் செய்வது? யான் மீண்டும் திரும்பிச் சென்றிடலாமா! தங்கள் விருப்பம் போல் செயல்படுகிறேன்”
“உண்ணாமல் சென்றால் அடுத்த பன்னிரெண்டு வருடமும் சேர்ந்து இருபத்துநாலு வருட விரதமா?” “யாரும் கொய்யாத துவாதச நெல்லியை மட்டும் யாம் பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை துவாதச திதியில் உண்ண வேண்டும் என்பது இறை நியதி. தாங்கள் பரமாத்மா அன்றோ! தாங்கள் தற்போது எனக்கு என்ன என்ற விதிக்கின்றீர்களோ  அதுவே இறை நியதியாகும்... ஊட்டுவித்தால் உண்கின்றேன்! உண்ணேல் என உறங்க வைத்தால் உறங்குகின்றேன்! எல்லாம் தங்கள் சித்தம்!”
“சகாதேவா! நீ என்ன சொல்கிறாய்”
“சிவசிவ! என்ன கிருஷ்ணா மீண்டும் விளையாடுகிறாயா! ஜகத்குருவாம் குரு மித்ர ஈஸ்வர சித்தர் முன்னிலையில் யான் பேசுவதற்கே ஆருகதையற்றவன்!”
குருமித்ரர் : சகாதேவா! நீ நாலும் தெரிந்தவன் என்று பரமாத்மா என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்! அதனால் தான் உன்னைக் கேட்கிறார்! சகாதேவனின் குணாதிசயங்களை இத்தகைய திருவிளையாடல் மூலமாகத்தானே உலகிற்குக் காட்டமுடியும்
சகாதேவன் : நான்கு வேதம் அறிந்து குருவருள் பூண்ட ஜோதி தாங்கள் அல்லவா சித்தர் பெருமானே?
குருமித்திரர் : நான்கு வேதங்களையும் சாஸ்திரத்தால் நன்கு அறியும் வல்லவனன்றோ நீ. எனவே  தான் நீ நான்கும் தெரிந்தவனென்கிறோம்!
பரமாத்மாவின் திருவிளையாடலோடு சித்த புருஷராகிய குருவின் விளையாடலும் சேர்ந்துவிட்டதா! – சகாதேவன் சிந்தித்தான்
சகாதேவன் : கிருஷ்ணா! ஒருமுறை துர்வாச மஹரிஷி தம் ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் புடை சூழ பசியுடன் வந்தபோது அட்சய பாத்திரத்திலிருந்த சிறு கீரைத்துகளை நீ உண்டமையால் சகல ஜீவன்களின் பசியும் ஆறிற்று. அதே போல நீயே இந்த துவாதச நெல்லிக் கனியை உண்டால் குருமித்ர ஈஸ்வரரின் விரதமும் முடிந்தவாறு ஆகும் அல்லவா!
கிருஷ்ண பரமாத்மா : சபாஷ்! நல்ல யோசனை” என்று கூறியவாறே தம் திருக்கரங்களை நீட்ட அதில் துவாதச நெல்லிக் கனி வந்து அமர்ந்திட அதனை ஸ்ரீகிருஷ்ணன் உண்டான்! சகாதேவன் ஸ்ரீகிருஷ்ணனையும் குருமித்ர ஈஸ்வரரையும் வலம் வந்து வணங்கினான். துவாதச நெல்லிக்கனி மரம் மறைந்துவிட்டது! குருமித்ர ஈஸ்வரர் ஸ்ரீகிருஷ்ணனைத் தொழுதார்.
ஸ்ரீகுருமித்ர ஈஸ்வர சித்தர் பெற்ற முக்தி
“ஈஸ்வர தேவா! பரமாத்மாவே! தங்கள் திருவிளையாடலை அறியும் தெளிவை யான் பெறவில்லை, யான் இந்த துவாதச நெல்லிக் கனியை உண்டு வாழுமாறு சர்வேஸ்வரன் பணித்தான். சர்வேஸ்வரனின் பேரம்சமாகி உலவும் ஸ்ரீகிருஷ்ணனாக தங்கள் இன்று அருள்புரிய இந்த துவாதச நெல்லி மரம் மறைந்து விட்டது. அதாவது இதைச் சார்ந்திருக்கும் அடியேனின் தேகத்தை உகுக்கும் தருணம் வந்து விட்டதை உணர்கின்றேன்! தங்கள் சித்தத்தை வேண்டிச் சரண் அடைகின்றேன்” குருமித்ர ஈஸ்வரர் கண்கள் பணிக்க ஸ்ரீகிருஷ்ணனின் கமல பாதங்களைப் பற்றி நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து நமஸ்கரித்தார். “ஆம் குருமித்ரரே! ஒரு கோடி சதுர்யுகம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகட்டு ஒரு முறை துவாதச திதியில் துவாதச நெல்லிக்கனி மட்டும் உண்டு தாங்கள் ஆற்றிய இறைப்பணியாம் திருப்பணி இன்றுடன் சம்பூர்ணம் அடைய வேண்டும் என்பது சர்வேஸ்வரனின் விருப்பம்!” என்று கூறியவாறே தம் புல்லாங்குழலை எடுத்து ஸ்ரீகிருஷ்ணன் இசைத்திட, குருமித்ர ஈஸ்வரர் ஜோதியாய் மாறி கிருஷ்ணனின் குழலினுள் பரஞ்ஜோதியாய் ஒன்றினார்!
இந்த லீலா விநோதங்களைப் பார்த்து மலைத்து நின்றான் சகாதேவன்!
ஸ்ரீகுருமித்ர ஈஸ்வரரின் கலியுக அவதாரம்
........... பல யுகங்களுக்குப் பிறகு.... கலியுகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர்....,  சிவநெறியில் திளைத்த ஒரு தம்பதியினர் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து இடையே ஓரிடத்தில் தங்கினர். அவ்விடமே “சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசன” இடமாகும். மலையைச் சுற்றி கிரிவலம் வருகையில் சாட்சாத் சதாசிவனாம் சிவபெருமானாய் ஒளிரும் திருஅண்ணாமலையின் ஒவ்வொரு தரிசனமும் விதம் விதமாய் அமைந்திருக்கும் அற்புதத்தை இன்றும் காணலாம். ஒரு நடை நடந்து மலையை நோக்கினால் வெவ்வேறு விதமாகத் தோற்றமளிக்கும். ஒவ்வொரு தரிசனத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பலன்களும் வெவ்வேறு விதமானவை! இதனை அறிந்தவர்கள் சித்தபுருஷர்களே! இன்றைக்கும் கோடிக் கணக்கான சித்த புருஷர்கள் உலவும் புண்ணிய பூமி! அத்தம்பதியினர் தங்கிய இடத்திலிருந்து மலையை நோக்கினால் மலையின் பத்து பெரிய முகடுகள் வரிசையாய் அமைந்து அற்புத தரிசனந்தரும்! இதற்கு “தசமுக தரிசனம்” என்று பெயர். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, ஸ்ரீகிருஷ்ண, கல்கி  ஆகிய பத்து தசாவதார மூர்த்திகளும் ஒருங்கே நின்று சதாசிவனை தரிசித்த இடமே தசமுக தரிசனமாகும்! வைகுண்டத்தில் கூட தசாவதார மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து காட்சியளித்தது இல்லை.
இங்கிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்க பத்துமுகடுகளும் தசாவதாரங்களாய்ப் பரிணமிக்க, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற உன்னத இறை நிலை கிட்டும். தரிசனங் கிட்டுகிறது. இந்த தரிசனப் பகுதியில் மலைப் பகுதியின் முன் வெளித்தோற்றம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியைக் குறிக்க, மலையின் விரிந்தபின் பகுதி சிவ நிலையைக் குறிக்கிறது. இவ்விரண்டும் கூடும் பாங்கான தோற்றமே “சிவசக்தி ஐக்ய ஸ்வரூப” தரிசனமாகும். இங்குதான் ஸ்ரீபரமேஸ்வரர், ஸ்ரீபார்வதி தேவி சகிதம் தசாவதார மூர்த்திகளுக்குக் காட்சியளித்தார்.
ஸ்ரீஅவதூத தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் தோற்றம்
இந்த சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனப் பகுதியில் இரவில் தங்கிய அத்தம்பதியினருக்குக் கனவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தி தரிசனம் தந்து, ”திருஅண்ணாமலையை குருவருளால் முறையாக வலம் வந்தமையாலும் அறிதற்கரிய சிவசக்தி ஐக்யஸ்வரூப தரிசன நிலப்பகுதியில் தங்கியதன் தவப்பலனாயும் அதிஅற்புதக் குழந்தைச் செல்வத்தைப் பெறுவீர்களாக! அவனுக்கு குரு தட்சிணாமூர்த்தி என்று பெயரிட்டுப் போற்றுவீர்களாக! குருமித்ர ஈஸ்வரனாய்ப் பலயுகங்களுக்கு முன் இறைப் பணி ஆற்றியவனே உங்கள் செல்வமாய், குருதட்சிணாமூர்த்தியாய் மக்களுக்கு  அருட்பணி ஆற்றுவான்” என்று அருளினார்.
குருமித்ர ஈஸ்வரரே அவதூத தட்சிணா மூர்த்தி ஸ்வாமிகளாய் அவதரித்தார். தமிழகமெங்கும் குறிப்பாகத் தஞ்சை, கும்பகோணம் போன்ற சோழநாட்டுப் பகுதிகளில் அவதூதராய் சஞ்சரித்து ஜாதிமத பேதமின்றி ஏழைகட்கு அருட்பணி புரிந்த ஸ்ரீதட்சிணா மூர்த்தி சுவாமிகளின் ஏனைய சரிதம் அடியார்கள் அறிந்ததே!
சிவகுருமங்கள கந்தர்வா அருளிய மேற்கண்ட “என்றும் வாழும் ஏகாந்த ஜோதி”யின் சரிதம் நம் குருமங்கள கந்தர்வாவின் கருணையால் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்)
1963ம் ஆண்டு தன் தேகத்தை மறைத்துக் கொண்ட ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் தம் சித்தர் குலத் தோன்றலாய் உருவாக்கிய நம் குருமங்கள கந்தர்வாவிற்கு 1964வரை அவ்வப்போது நேரில் தரிசனந் தந்து ஊக்குவிப்பார்.
“என்னுடைய தேகத்தில் பற்று வைக்காதே! இது அழியக் கூடியது! நான் சொன்னதைச் செய்! நான் சொல்லித் தந்த இறைப் பணிகளைப் பலருக்கும் எடுத்துரைத்து அவர்களையும் தெய்வீகப் பணிகளில் ஈடுபடுத்தும் போது தான் உன் குருவாகிய என்னை நீ சந்தோஷப் படுத்த முடியும்! உன்னை சந்தோஷப்படுத்த நான் நேரில் வருகிறேன் அல்லவா! என்னையும் நீ ஆனந்தம் பெறச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக நான் உனக்கிட்ட பணிகளைச் செய்வாயாக!” 1964ம் ஆண்டு முற்பகுதியோடு ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தரின் நேரடி தரிசனமும் முடிந்தது! பிறகு அவ்வவ்போது தம் குரல் மட்டும் கேட்குமாறு செய்வார். 1964ம் ஆண்டு இறுதியில் குரல் கேட்பதும் நின்றுவிட்டது
1964ம் ஆண்டிலிருந்து தனி மனிதனாய்க் குருவருளுடன் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் தமக்கிட்ட இறைப்பணிகளைத் தொடங்கினார் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்
“வாத்யாரே! வாத்யார்னு கூப்பிட்டா ஒரு மாதிரி இருக்கு! வைதீக காரியம் பண்றவங்களை வாத்யார்ன்னு சொல்றாங்க! மெட்ராஸ் பாஷைல வாத்யார்னா ஏதோ அர்த்தம் சொல்றாங்க! உன்னை குருன்னு கூப்பிடட்டுமா?”

“வாத்யார்னா கத்துக் கொடுக்கிறவர்னு அர்த்தம்டா! உன்கிட்ட சிஷ்யனுக்கான எல்லா யோக்யதாம்சங்களும் இருக்கு! ஆனா உன்னை மாதிரி அற்புதமான சிஷ்யனுக்கு குருவா இருக்கிற தகுதி எனக்கு இல்லியே! அந்த குரு பட்டத்துக்குத் தகுதி வேணும்னுதான் ஏதோ கொஞ்சம் இறைப்பணி அங்காளி கருணையோட செஞ்சுகிட்டு வர்றேன்!” இதற்குப் பிறகு சிறுவனால் பேசமுடியுமா என்ன?

1955 முதல் 1963 வரை இராயபுரம் அங்காளம்மன் திருக்கோயிலில் மீனவர்கள், துணி துவைக்கும் தொழிலாளர்கள், கசாப்புக் கடைக்காரகள், பெட்டிக் கடை நடத்துவோர், பீடித் தொழிலாளர்கள், கை ரிக்ஷாக்காரகள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களும் “சாமியார், சாமியார்” என்று அன்புடன் சிவகுருமங்கள கந்தர்வாவைச் சுற்றி சுற்றி வருவார்கள்.
ஜாதி மத பேதமின்றி அவரவர் வீட்டுப் பிரச்சனைகள், உறவினர் சண்டைகள், தெருச் சண்டைகள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளையும் நயமாகக் கேட்டு அவரவர் பாணியில், பாஷையில் இனிமையாகப் பேசி “சரி சரி! எல்லாம் அங்காளி பாத்துப்பா! கொஞ்சம் கஞ்சி வடிச்சு ஏழைகளுக்கு ஊத்து! ஏழைப் பசங்களுக்கு சிலேட்டு, பலப்பம் வாங்கிக் கொடு....” என்றவாறாக அவர்களுடைய லௌகீகப் பணிகளோடு தானதர்மங்களையும் நயமாக நிறைவேற்றச் செய்வார். அனைவரும், “சாமியார், சொன்னார் செஞ்சிடுவோம்” என்று சொன்னதைச் செய்து விடுவார்கள். காரணம் “இந்த சாமியார் எல்லாம் தெரிஞ்சவர்” என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை! அந்த ஒன்று போதுமே, வாழ்க்கையில் கடைத்தேற!
இத்தகைய நம் குருமங்கள கந்தர்வாவின் தெய்வீகக் குருகுலவாச அனுபங்களே “அடிமை கண்ட ஆனந்தம்” தொடரில் மலர்கின்றன. அடிமையின் அடிமையாய் அவ்வானந்தத்தைத் தூய்ப்போமாக! – குருகுல வாசத்தில் ஓர் நாள்....
சிறுவன் பெரியவரைப் பார்ப்பதற்காக அங்காளியம்மன் கோயிலுக்கு விரைந்து, கொண்டிருந்தான்! வழியில்....... இரண்டு பெரிய பிரம்புக் கூடைகளில் கோழிகள்! சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே தயங்கி நின்றான். அருகில் சிறு தள்ளுவண்டி! “ஓஹோ! இதில்தான் கோழிகள் பயணமா!?”
தள்ளுவண்டிக்காரன் அப்போது தான் எதிரிலுள்ள டீக்கடையினுள் நுழைந்திருந்தான். சிறுவன் மெதுவாக அந்தக் பிரம்புக் கூடைகளின் அருகில் சென்று உற்றுப் பார்த்தான். ஒன்றிரண்டு பெரிய சேவல்களே கால்களில் கட்டப் பெற்றிருந்தன. மற்ற கோழிகள் ஒன்றுக் கொன்று உரசிக் குத்திக் கொண்டு சப்தமிட்டுக் கொண்டிருந்தன. இரண்டு பிரம்புக்கூடைகளின் மேல் வெயிட்டிற்காக இரண்டு பெரிய செங்கல்கள் வைக்கப்பட்டிருந்தன. சிறுவன் நாலாபுறமும் கண்களால் நோட்டம் விட்டவாறே இரண்டு செங்கல்களையும் அப்புறப் படுத்தினான்! இமைக்கும் நேரத்தில் இரண்டு பிரம்புக் கூடைகளையும் அவன் சாய்த்து விட.. விடுதலை பெற்ற கோழிகள் பறந்தன. கால்கள் கட்டப் பட்டிருந்த சேவல்கள் தத்தித் தத்தி நடக்க....,அவற்றில் சிலவற்றின் கட்டுகள் தாமாக அவிழ்ந்து அவைகளும் பறந்தன! ஒன்றும் அறியாதவன் போல் சிறுவன் எதிர்ப்புறமாக மெதுவாக நடந்தான். ஓடினால் பிடித்து விடுவார்களே!
....... தெருவில் ஒரே கூச்சல், குழப்பம்! கோழிகள் கூரைகளில் பறந்து ஓடின! பலத்த கூக்குரல்கள்! கோழிகளுக்குச் சொந்தக்காரன் போலும்! அனைத்தையும் கண்டும் காணாதவனாய்க் கேட்டும் கேளாதவனாய் சிறுவன் நடந்து கொண்டிருந்தான். தெருக் கடைசி வந்ததும் பிடித்தானே ஓட்டம்! “தஸ், புஸ்” என்று இரைத்தவாறே அங்காளம்மன் கோயிலில் தான் வந்து நின்றான்! “கொறஞ்சது அறுவது கோழிகளையாவது காப்பாற்றியிருப்போம்! ஆனால் நல்ல காரியம் செஞ்சால் வெளியில் சொல்லாதேன்னு வேற சொல்வாரே!” சிறுவன் யோசனையுடன் அங்காளியை வலம் வந்தான். சிறுவன் அடக்க ஒடுக்கமாகப் பெரிய தர்ம காரியத்தைச் செவ்வனே முடித்தவன் போல் தன்னைத் தயார் செய்து கொண்டான். அவர் வந்தவுடன் எப்படிச் சொல்வது? அவர் என்ன சொல்வார்? கற்பனை செய்தவாறே தனை மறந்து நின்றவனை,
“துரை, பெரிய பெரிய தர்ம கார்யம் எல்லாம் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கே” பெரியவர் வந்துவிட்டார். சிறுவன் மிகவும் சந்தோஷத்துடன் கடகடவென்று தான் “கோழிகளை மீட்ட புராணத்தை“விரிவாக எடுத்துரைத்தான்! பெரியவர் வழக்கத்திற்குக் மாறாக மிகவும் பொறுமையுடன் ஆழ்ந்த நிதானத்துடன் அனைத்தையும் கேட்டார். “அப்படியா?” “அப்படியா?” என்று அவர் அவ்வப்போது கூறிக்கொண்டே வர, சிறுவனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. “அப்படியா”வில் ஒலித்த தொனி மாறிக் கொண்டே வருவது வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது!
“நன்றாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!” இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் தான், தான் ஒரு தர்ம கைங்கர்யத்தைச் செய்தோம் என்ற நிலையிலிருந்து மாறி நடந்ததைச் சொல்வது என்ற எண்ணத்தைக் கொண்டவனாய் சிறுவன் மீண்டும் விவரிக்கலானான்! பெரியவர் சிறுவனின் கண்களை உற்று நோக்கினார்.
“ஏண்டா, எங்கிட்ட சொல்லிட்டுத்தானே எதையும் செய்வியே, இன்னிக்கு என்னாச்சு, ஏற்கனவே உனக்குச் சொல்லிக் கொடுத்த நற்காரியங்கன்னா என்னைக் கேக்காமலே செய்யலாம், புதுசுன்னா கேட்க வேண்டாமா ராஜா?”
நீ யார் பிறர் கர்மங்களில் குறுக்கிட.....
“நீ தெறந்து விட்ட கோழிங்களைப் புடிச்சவங்க அறுத்துத் திங்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அந்தக் கோழிங்க அறுபட்டுப் பிரியாணியா, கோழிக் கறியா மாறி நூறுபேர் வயித்துக்குள்ள போகணும்னு அதுங்க தலையில பகவான் எழுதியிருந்தான்னா அதை நீயும் நானும் மாத்த முடியுமா?“
“அந்தக் கோழிங்க யாருன்னு உனக்குத் தெரியுமா? எத்தனை மீனு, கோழி, நண்டு, ஆடு, வயித்துக்குள்ள போகுதோ அத்தனையும் மறுபடியும் மனுஷனா, மிருகமா ஜென்மம் எடுக்கும். அதுகளைத் தின்னவங்க கோழியா, ஆடாப் பொறந்து திருப்பி மனுஷ, மிருக ஜன்மங்க வயித்துல, பிரியாணியா, கறியாப் போய்ச் சேரணும். இது பிரம்மாவோட நியதிடா! இதுனாலதான் ஜனனம், மரணம் மாறி மாறி வருது! இதை மாத்தறதுக்கு நீயா ஆளு?!“
“கோழி, ஆடு திங்கற நியதி ஏன் வந்தது? இல்லாட்டி உலகம் முழுக்க கோழியும், மீனும், ஆடும் நெறஞ்சு போய் மனுஷங்க நிக்கக் கூட இடமிருக்காது. எவன் தலைல நான்-வெஜிடேரியன்னு எழுதியிருக்கோ அவன் தான் அதுகளைத் தின்பானுங்க..,மத்தவங்க அதை தொட்டு கூடப் பார்க்க மாட்டானுங்க! இப்ப நீ கோழியத் தெறந்து அவுத்துவிட்ட, அவன் நேரே இங்கு வந்து மண்னைத் தூவிச் சபித்தால் நம்ப அங்காளிக்கு நாம என்ன பதில் சொல்றது?”
“அந்தக் கோழிங்களை நெஜமாவே காப்பாத்தணும்னா என்ன செஞ்சிருக்கணும், உடனே எங்கிட்ட வந்து ஐடியா கேட்டிருக்கணும், நம்ம ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் விலைக்கு வாங்கிக் கட்டிக்கினு போய் யாருமில்லாத காட்டுல விட்டுட்டு வரணும். ஆனா அங்க கூட கீரி, நரி அதுகளைச் தின்னுடிச்சுன்னா! அங்கே நாலுகால் மிருகங்க, இங்கே ரெண்டு கால் மிருகங்க, எங்கதான் கோழிகளைக் காப்பாத்தறது! அப்ப என்ன அர்த்தம்? அதது விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். அதுகளைக் காப்பாத்தறது, பராமரிக்கிறது, கறியா ஆக்கறது, தானா சாவுறது இதையெல்லாம் கவனிக்க நூத்துக்கணக்கான தேவதைகள் இருக்கு! தேவதைகளோட வேலைல நீ குறுக்கே புகுந்தா என்னாகும்!
எவன் வயித்துல எவ்வளவு முட்டை, மீன், கோழி, நண்டு, ஆடு, இது மட்டுமில்ல எவ்வளவு அரிசி, தக்காளி தண்ணீ போகணும்னு பிரம்மா எழுதி வச்சுருக்கானோ அதை நீயும் நானும் மாத்த முடியாது ராஜா!”
பெரியவர் களைப்புற்று அமர்ந்தார்.
“ஏண்டா அந்த எழுபத்தி மூணு கோழிங்களோட தலைவிதியை சரியா செட்பண்றது கஷ்டமான வேலையாச்சே!“
“இது உனக்கு ஒரு பெரிய வேலையில்லையே வாத்தியாரே!  சிறுவன் சொல்ல நினைத்தான், ஆனால் சொல்ல முடியுமா??
“ஆமாண்டா! அது பெரிய வேலையில்ல தான், ஆனா நீ தேவையில்லாத கர்மாவைச் சேர்த்துகிட்டு வந்துட்டியே அதுக்கு என்ன பரிகாரம்ணுதான் யோசிக்கிறேன்! சிறுவன் அதிர்ந்து போனான்! ... “ஏதோ விட்டுடுவார் என்று பார்த்தோம். பரிகாரமா?” சிறுவனுக்கு பயம் வந்துவிட்டது. “பட்டினியா, வனவாசமா, பொட்டை வெயிலில் நடையா, சிறுநீர் வரவிடாமல் அடைத்து விடுவாரோ, அந்தக் கோழிகளைப் பிடித்து வா என்று சொல்வாரோ! என்ன தண்டனை காத்திருக்கிறதோ?” – சிறுவன் PERUMUTATION – COMBINATION போட்டுக் களைத்துப் போனான்!

திருவுளச் சீட்டு

திருஉளச் சீட்டு – இறைவன் விருப்பத்தை அறிய வழி
ஒரு சீடன் என்ன காரியம் செய்தாலும் அது சற்குரு விரும்பியதா என்று தெரிந்தே செய்தல் வேண்டும். இது சீடனுடைய BASIC  கடமையாகும், ஏனென்றால் சற்குரு தன் சீடனுடைய கர்மங்களைத் தீர்த்து அவனை எம்பெருமானிடம் சேர்ப்பதையே தன் தொழிலாகக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட கருணை வள்ளலுக்கு சீடன் காட்டும் நன்றியானது மேன் மேலும் கர்மங்களை வளர்த்துக் கொள்ளாமல் சற்குரு விருப்பப்படி காரியங்களைச் செய்தல் ஆகும். உத்தம சீடனுக்கு சற்குருவின் விருப்பம் தான் இறைவனின் விருப்பம். சற்குரு அருகே இருந்தால் அவரை நாடி ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் அல்லது செய்யலாமா, வேண்டாமா என்று கேட்டு அவர் விருப்பத்தை அறியலாம். ஆனால் சற்குருவிடமிருந்து PHYSICAL ஆக வெகு தூரத்தில் உள்ளவர்கள் சற்குருவின் விருப்பத்தை எப்படி அறிவார்கள்?
TELEPATHYயில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தால் மனோரீதியாக சற்குருவின் பதிலைப் பெறலாம். ஆனால் இவ்வாறு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வழி உண்டா? உண்டு. அதுதான் திரு உளச்சீட்டு எனப்படுவது. திருஉளச்சீட்டு என்றால் திருவின் (இறைவனின்) உள்ளத்தை (விருப்பத்தை) அறிவிக்கும் சீட்டு என்று எளிதில் பொருள்படுத்திக் கொள்ளலாம். இதை நடைமுறையில் எப்படி உபயோகப்படுத்தலாம் என்று பார்ப்போம். உதாரணமாக ஒரு காரியத்தைச் செய்யலாமா, செய்ய வேண்டாமா என்பதை இரு தாள்களில் எழுது வைக்கவேண்டும். உடல் சுத்தத்துடன் நெற்றிக்கு இட்டுக் கொண்டு, தீபமேற்றி, அடக்கத்துடன் பூஜை செய்து சற்குருவை அன்புடன் வேண்டி எழுதி வைத்த இரு தாள்களையும் சற்குருவின் திருவுருவப்படத்தின் முன்போ அல்லது இறைவனின் திருஉருவப் படத்தின் முன்போ வைக்க வேண்டும். பின்பு ஒரு சிறுகுழந்தையை கொண்டு அக்காகிதங்களுள் ஒன்றை எடுக்கச் சொல்ல வேண்டும். குழந்தை எதை எடுக்கிறதோ அதுவே சற்குருவின் விருப்பமாகும். குழந்தையின் உள்ளமே இறைவன் குடியிருக்கும் கோயில். குழந்தை இன்றி பெரியவர்களே சீட்டை எடுப்பது நல்லதல்ல.
திருஉளச்சீட்டின் மூலம் சற்குருவின் விருப்பத்தை அறிய விரும்புவர் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒன்று, முழு நம்பிக்கையுடன் இதைச் செய்ய வேண்டும். இரண்டு, கிடைத்த விடை சற்குருவின் முடிவான விடை என்று ஏற்று அதனைச் செயல்படுத்த வேண்டும். இன்பம் வந்தாலும் சரி, துன்பம் வந்தாலும் சரி சற்குருவின் விருப்பப்படியே செய்தோம் என்ற மன திடத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் சற்குரு காட்டிய வழி லௌகீக வாழ்க்கையில் நாம் எதிர்பாத்தபடி இல்லாமல் மாறுதல்களைக் கொடுக்கலாம்.
அவர் காட்டிய வழியில் சென்றால் தெய்வீக இன்பம் நிச்சயம் என்ற உறுதியுடன் லௌகீகத் துன்பங்களை இன்முகத்துடன் ஏற்றுக் கடைசி வரை மனம் கலங்காமல் திருஉளச்சீட்டு காட்டிய வழியில் செல்ல வேண்டும். திருஉளச்சீட்டு மார்கத்தை பயன்படுத்துவோர் இதனை நன்றாக உணர வேண்டும்.
ஒரே விஷயத்திற்காக மறுமுறை திருஉளச்சீட்டு போட்டுக் கேட்பது தவறு.
சற்குருவைக் கேட்ட பிறகு திருஉளச்சீட்டு போடுவதும், திருஉளச்சீட்டு போட்ட பிறகு    சற்குருவைக் கேட்பதும் தவறே!

குக்குடாப் ஜதரர்

குக்குடாப் ஜதரர் என்ற சிவ அவதார மூர்த்தியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பரமேஸ்வர மூர்த்தி ஸ்ரீநடராஜராக அவதாரங்கொண்டுத் தம் விதவிதமான நாட்டியங்களால் உடுக்கை ஒலிகொண்டு கோடிகோடியாம் லோகங்கள், ஜீவன்கள், நக்ஷத்திரங்கள், கிரகங்கள் போன்றவற்றைப் படைக்கின்றாரல்லவா? ஸ்ரீநடராஜ அவதாரத்திற்குப் பின் சிவபெருமான் மேற்கொண்ட தெய்வத் திருஉருவே ஸ்ரீகுக்குடாப் ஜதர மூர்த்தியாவார். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் எவரேனும் ஒரு சித்தபுருஷர் மூல காரணமாக இருப்பார். சித்தபுருஷர்களின் சித்தத்தில் உறைந்து உலாவருதில் சர்வேஸ்வரன் மகிழ்ச்சி கொள்கிறார். இவ்வாறாக குக்குடாப் ஜதரரின் மூலாவதாரப் புராணத்தில் கட்டுசுமந்தான் மஹரிஷி என்ற சித்த புருஷர் பெரும் பங்கு வகிக்கிறார்.
ஸ்ரீகட்டு சுமந்தான் மஹரிஷி
ஸ்ரீகட்டுசுமந்தான் மஹரிஷி என்ற சித்தர் பல திருக்கோயில்களில் திருப்பணி புரிந்து தலையில் ஒரு கட்டைச் சுமந்தவாறே பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்து வந்தார். ‘மாட்டிற்குக் கொம்பு எங்குள்ளது’? – அனைவருடமும் எளிதான இவ்வினாவை அவர் எழுப்பி வந்தார். சுலபமான கேள்வியாகத் தோன்றிடினும், இதற்கு என்ன விடை சொல்வது? ‘மாட்டிற்குக் கொம்பு அதன் தலையில் உள்ளது’ என்ற சாதாரண பதிலை அவர் அங்கீகரிக்கவில்லை.. ‘சற்று யோசித்துப்பார்’ என்று கூறி அவர்களுடைய ஆத்மவிசார சிந்தனையைத் தூண்டி விடுவார். ஒரு பெரிய கட்டைத் தலையில் சுமந்துக் கொண்டே குக்குடாசனம் என்ற அபூர்வமான ஆசனத்தை மேற்கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். மிகவும் கடினமான இந்த ஆசன நிலையில் ஒரு கட்டுச் சுமையுடன் அமர்வது எளிதல்லவே!

சித்தருடைய கட்டுச் சுமையில் இருந்தது தான் என்ன? பல கொடிய நோய்களுடனும், சொல்லொணாத் துயரங்களுடனும் தன்னை நாடி வரும் அடியார்களைக் குறிப்பிட்ட சில திருக்கோயில்களில் அவர்களைக் கொண்டு உழவாரத் திருப்பணி செய்வித்துக் கோயிலில் சேர்ந்த குப்பைகளைத் தன் தலைமீதிருக்கும் கட்டுச் சுமையில் சேர்த்திடுவார். உலகத்தவர் கண்களுக்கு அது குப்பையாகத் தோன்றியதே தவிர உண்மையில் அது அவரை அண்டிவரும் அடியார்களின் கர்மச்சுமையே ஆகும். பிறருடைய கர்மச்சுமைகளைத் தாங்கி அற்புத இறைப்பணியாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தார் ஸ்ரீகட்டுசுமந்தான் மஹரிஷி!
 குருவருளால் நிறைவேற்றும் கோயில் உழவாரத்திருப்பணிகள், எத்தகைய கடுமையான பாவங்களுக்கும் தக்க பரிகாரங்களாக அமைகின்றன. ஒவ்வொரு கோயிலில் உழவாரத் திருப்பணியும் பல்வேறு விதமான கர்மவினைகளைக் கழிக்கின்றன. இவ்வான்மீக ரகசியங்களை இந்த சித்தபுருஷர் பல்வேறு சற்குருமார்களுக்கும் குரு உபதேசங்களைப் பொழிந்து வந்தார்.
திருப்போரூர் மஹிமை
இவ்வாறு பல அற்புதச் சேவைகளை ஆற்றி வந்த ஸ்ரீகட்டு சுமந்தான் மஹரிஷி, சென்னை அருகேயுள்ள திருப்போரூர் ஸ்ரீமுருகன் திருக்கோயிலை வந்தடைந்தார். இவர்தம் இறைப்பணிகளால் மனமகிழ்ந்த சதாசிவ மூர்த்தி இவரை ஆட்கொள்ள விழைந்தார். சிவபெருமான் சித்த புருஷருக்கு விருப்பமான குக்குடாசன யோக நிலையில் குக்குடப் ஜதர மூர்த்தியாகத் திருப்போரூரில் காட்சியளித்தார். சில கோயில்களில் மட்டும் அபூர்வ்மாகக் காணப்படும் இம்மூர்த்தியின் சிலாரூபம், திருப்போரூர் முருகன் கோயிலின் உட்பிரகாரத்தில் வலப்புறம் தத்ரூபமாக அமைந்துள்ளது.
ஸ்ரீ கட்டுசுமந்தான் மஹரிஷி இக்கோயிலில் தற்போது ஸ்ரீநடராசர் காட்சி தருமிடத்தில் ஸ்வாமிக்கு இடப் புறச்சுவரில் ஜீவசமாதி கொண்டு அருள்பாலிக்கின்றார். இத்தகைய ஆன்மீக ரகசியங்களை எடுத்தருள்பவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள். இவையெல்லாம் அவர்தம் குருகுலவாச அனுபூதிகளே.
ஸ்ரீகுக்குடாப் ஜதரரின் மஹிமை
 சிவபெருமான், குக்குடாப் ஜதரராகப் பூண்டுள்ள குக்குடாசன யோக ரூப சக்தியே இப்பிரபஞ்சத்திற்குப் புவியீர்ப்புச் சக்தியை அளிக்கிறது. பூலோகம் உட்பட அனைத்து லோகங்களுக்கும், கிரஹங்களுக்கும் புவியீர்ப்புச் சக்தியை (Gravitational Force)  வழங்குபவர் ஸ்ரீகுக்குடாப் ஜதரரே. தக்க முறையில் குக்குடாசனம் பயின்றால் புவிஈர்ப்பு சக்தியையும் வெல்லலாம். விண்வெளியில் எளிதாக மிதக்கலாம். ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட்ஸ் சகோதரர்கள் குக்குடாசனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டன் ஸ்ரீகுக்குடாப் ஜதரரின் அருள் பெற்றவர். பூர்வ ஜென்மத்தில் திருப்போரூர் கோயிலில் இறைத் தொண்டு புரிந்தவர்.
தரிசன பலன்கள்
1. பெரும் பூகம்பங்கள், நிலச்சரிவுகள், நில நடுக்கங்கள் இவற்றிலிருந்து மக்களை ரட்சிப்பவர் குக்குடாப் ஜதரரே. இவருக்குத் தேனாபிஷேகம் செய்து, கிழங்கு வகைகளினாலான உணவினைப் படைத்து ஏழை மக்களுக்குத் தானமாக அளித்தால் எத்தகைய குடுமையான பூகம்பங்களிலிருந்தும் மக்களைக் காப்பாற்றி விடலாம்.
2. விமானம், ஹெலிகாப்டர் போன்ற ஆகாய வாகனங்களில் பணிப்புரிவோர், விமானத்தில் பயணம் செய்வோர் தங்கள் பாதுகாப்பிற்காகப் புவியீர்ப்பு சக்தியை நம்பி வாழ்வதால் ஸ்ரீகுகுடாப் ஜதரரைத் தியானித்துத் தங்கள் பணியை / பயணத்தைத் தொடங்க வேண்டும். அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வோர் ஸ்ரீகுக்குடாப் ஜதரரின் திருவுருவத்தை எப்போதும் பையில் வைத்திருப்பது அவர்கள் தியானத்தை மேம்படுத்தும்.
3. பொதுவாக புவியீர்ப்பு விசை சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஸ்ரீகுக்குடாப் ஜதரரை வழிபட்டு வருவது சாலச் சிறந்ததாகும்.
4. பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டும் எஞ்சினீயர்கள். தொழிலாளர்கள், காண்ட்ராக்டர்கள், ப்ரமோட்டர்கள் போன்றோருக்கு ஸ்ரீகுக்குடாப் ஜதரரின் அனுக்ரஹம் இன்றியமையாததாகும்.
வழிபடும் முறை
யோகம் பயின்றவர்கள் தக்க முறையில் குக்குடாஸனம் இட்டு ஸ்ரீகுக்குடாப் ஜதரரைத் தியானிக்க வேண்டும். தேன் கலந்த உணவு, பழங்கள், பஞ்சாமிர்தம், கிழங்கு வகை உணவுகள் – இவை ஸ்ரீகுக்குடாப் ஜதரருக்கு விருப்பமானவையாகும். ஸ்ரீகட்டு சுமந்தான் மஹரிஷிக்குக் காட்சி தந்த ஸ்ரீ குக்குடாப் ஜதரரே திருப்போரூர் முருகன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். அதனால் இவ்விடத்தில் புவிஈர்ப்பு விசையின் விஞ்ஞான அளவு (Gravitational Force) வியக்கத்தக்க முறையில் மாறுபாடடைகிறது என்பது ஆன்மீக விந்தையாகும்.
ஆடிப்பெருக்கு
ஆடிப் பெருக்கன்று அரிய வித்யா வித்தைகளையும் கலையம்சங்களைப் பற்றிய மேன்மையான அறிவினையும் பெறற்கரிய ஓலைச் சுவடிகள், சக்கரங்கள், யந்திரங்கள் போன்ற அற்புதமான ஆன்மீக பொக்கிஷங்களையும் பிறருக்குக் கற்பித்துப் பல கலைகளையும் “பெருக்க” வேண்டும் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். மேலும் ஆடிப் பெருக்கானது, வருண பகவானுக்கும் நதி தேவதைகளுக்கும் நன்றிப் பிரார்த்தனை செலுத்தும் நாளென ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் விளக்குகின்றன. ஆடிப் பெருக்கன்று “பஞ்ச கவ்ய கும்ப பூஜை” என்ற விசேஷ்மான பூஜையை ஜாதி வேறுபாடின்றி அனைவரும் செய்தல் இறையருளை பெருக்கித் தரும்.
சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் தமக்குக் கற்பித்த “ஆடிப் பெருக்கு” மஹிமையினை கலியுக மக்களின் நலனுக்கென எடுத்தருள்பவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பஞ்ச கவ்யம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுகோமேயம், (பசுவின் மூத்திர நீர்) , பசுஞ்சாணம் – இவ்வைந்தும் கூடியதாகும். இந்த மருத்துவக் கலவைக்குப் பஞ்சகவ்யம் என்று பெயர். இக்கலவை மிகவும் அற்புதமான மருந்தாக சித்தாயுர் வேத மருத்துவத் துறைகளில் போற்றப்படுகிறது, “சித்ர காஸவம்” என்று ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்புடன் விளங்கும். இந்த பஞ்சகவ்யம் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் (Antibiotic) கடுமையான தோல் நோய்களைக் குணப்படுத்தும் சஞ்சீவி மருந்தாகவும் பயன்படுகிறது.
ஆடிப் பெருக்கன்று மேற்கண்ட ஐந்தும் சேர்ந்த பஞ்சகவ்யத்தை ஒரு கும்பத்தில் வைத்து மாவிலை, நறுமணமுள்ள பூக்கள், தேங்காய் கொண்டு மூடிக் கும்பத்தை நன்கு அலங்கரித்து ஆற்றினுள் நீர்ப் போக்கிற்கு எதிர்ப்புறம் தாங்கி நின்றவாறு, (தாம் அறிந்த) அனைத்துத் துதிகள், மந்திரங்களையும் ஓதி நதி தேவதையை வணங்கி நன்றி செலுத்திய பின் இறைநாமத்தைக் கூட்டாக ஓதியவாறு பஞ்சகவ்யத்தை ஆற்று நீரில் சேர்க்க வேண்டும். சிறிது பஞ்சகவ்யம், தேங்காய், பூவினைப் பிரசாதமாக அனைவருக்கும் அளிக்க வேண்டும்.
பிறகு ஒரு தாமரையிலையில்/ வாழையிலையில் ஒரு சிறுஅகல் விளக்கினை வைத்து பசு நெய் தீபம் ஏற்ற வேண்டும். மாவிளக்கு ஜோதி அல்லது கற்பூர ஜோதியையும் ஏற்றலாம். நதி தேவதையை வணங்கி, ஜோதி தாங்கிய தாமரையிலையினை (அல்லது) வாழையிலையினை ஆற்று நீரில் விட்டு விடவேண்டும். இந்த பூஜை முறையை எந்நதியிலும் செய்யலாம். நதிகள் இல்லா இடங்களில், கிணற்றைச் சுற்றிப் பிரதட்சிணம் வந்து தென்கிழக்கு திசையில் மேற்கண்டவாறு கும்பம் வைத்து வாழையிலையில் / தாமரை இலையில் தீபத்தை ஏற்ற வேண்டும். பஞ்ச கவ்யத்தில் சிறிதளவைக் கிணற்று நீரில் சேர்க்க வேண்டும் வாழை/தாமரையிலையில் சிறிது உணவிட்டுப் பசுவிற்கு அளிக்க வேண்டும். ஆடிப் பெருக்கன்று குடும்பப் பெண் எட்டுமுறை தன் கணவனை வலம் வந்து வணங்க வேண்டும். “பதியை எட்டால் பெருக்கு – ஆடிப் பெருக்கைக் காண்“ – என அகஸ்தியர் அருள்கிறார். பெண்கள் “ஓம் நமோ நாராயணாயா” என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஓதி தியானிக்க வேண்டும். மாங்கல்ய விருத்திக்கு, ஆடிப் பெருக்கில் உத்தம புருஷனை வலம் வருவது இன்றியமையாததாகும். மாங்கல்ய சக்திக்குப் பெரியோர்களின் ஆசியோடு புண்ணிய நதிகளின் ஆசியும் தேவையானதாகும். இதைப் பெறவே கணவனை வலம் வருதல் விதிக்கப்பட்டுள்ளது.
இவையே ஆடிப்பெருக்கன்று செய்ய வேண்டிய பூஜைகள் என சிவகுருமங்கள கந்தர்வா தமக்கு அருளிய நம் குரு மங்களகந்தர்வா எடுத்துரைக்கின்றார். தீராத நோய் உள்ளோர், அடிக்கடி நோய் வாய்ப்படுபவர்கள் ஆடிப்பெருக்கன்று உடலில் வெறும் வேப்பிலை ஆடை மட்டும் கட்டி எந்த அம்மனையும் வலம் வர, நோய் பிணிக் கொடுமைகள் மறையும்.
வியாபாரிகள், ஏனையோர் தங்கள் செல்வம் நிலைத்து நிற்க, ஆடிப்பெருக்கன்று நதிக்கரையில் ஏழைக் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடைகளை அளிக்க வேண்டும். இதனால் வீண்விரயமான செலவுகள், தவறான முறைகளில் பணத்தைச் செலவழித்தல் போன்றவை குறைந்து செல்வம் நிலைத்து நிற்க, அஷ்டலட்சுமி தேவிகளின் கருணை கடாட்சம் கிட்டும்.

விசேஷ தினங்கள்

 ஆகஸ்ட் 1994 விசேஷதினங்கள்
மக்களால் அறியப்படாத ஒவ்வொரு மாதத்திற்குரித்தான சில விசேஷ தினங்களின் ஆன்மீக முக்யத்துவத்தை நம் குருமங்கள கந்தர்வா அருளியபடி இங்கு அளிக்கிறோம்.
திரிதின நாட்கள் (திருவாதிரை)
3-8-94 இரவு 4.46 [28-46] மணிமுதல் 5.8.94 காலை 6.05 மணிவரை தமிழ் ஆண்டிற்குரித்தான சூரியோதய நாள் நிர்ணயப்படி மூன்று நாட்களிலும் திருவாதிரை நட்சத்திரம் “திரிதினமாக” மிளிர்கிறது.
முக்கூட்டுத் திருவாதிரை 
3.8.94 புதன் – முக்கூட்டுத் திருவாதிரை முதல் நாள் : சர்க்கரைப் பொங்கல்/மிளகு கலந்த வெண் பொங்கல்/இனிப்பு சுய்யம் – பெருமாள் கோயிலில் அன்னதானம்
4.8.94 வியாழன் – முக்கூட்டுத் திருவாதிரை இரண்டாம் நாள் : தேங்காய் கலந்த அத்திப்பூ பொறியல்/ கறி செய்து பசுவிற்கு தானம்.
5.8.94 வெள்ளி – முக்கூட்டுத் திருவாதிரை மூன்றாம் நாள் – பூரணக் கொழுக்கட்டை தானம்.
அன்னதானம்


குழந்தைகளின் வகை

தானம் பெறவேண்டிய ஏழை

மூன்று பெண் குழந்தைகள்,
ஒரு ஆண்குழந்தைகளைப் பெற்றோர்

மூன்று ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகளைப் பெற்றோர்

ஏழைப் பெண் குழந்தை

 
ஏழை ஆண் குழந்தை

பெண் குழந்தைகள் மட்டும் உள்ளோர்

ஏழை ஆண் குழந்தை

ஆண் குழந்தை மட்டும் உள்ளோர்

ஏழைப் பெண் குழந்தை

இத்தகைய பெற்றோர்கள் தகுந்த ஏழை ஆண்/பெண் குழந்தைகளுக்கு ஆடை, அன்னம், அணிகலன், காலணி போன்றவை அளித்து முக்கூட்டுத் திருவாதிரையைக் கொண்டாட வேண்டும். இதனால் பெண் குழந்தைகளின் மாங்கல்ய பாக்யம் விருத்தி அடையும். ஆண் குழ்ந்தைகள் திடகாத்திரமாக நோயின்றி வாழ்வர்.
திருவாதிரைக்கு உரித்த தேவியே ஸ்ரீத்ரைலிங்க ஸெளம்யா தேவி
ஸ்ரீ ஸ்ரீத்ரைலிங்க ஸெளம்யாவின் பரிபூர்ண அருளைப் பெற்ற அவதூத சித்தபுருஷரான ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் சிவபெருமானை ஸ்ரீபாசாங்குலி ஈஸ்வரராக தரிசனம் பெற்று அனைவருக்கும் இன்று (4.8.1994 – ஸ்ரீபாசாங்குலி ஈஸ்வர பிரதோஷம்) அருள்பாலிப்பார். எனவே ஸ்ரீத்ரைலிங்க ஸெளம்யா என்ற திருவாதிரை நட்சத்திர தேவி பூஜையானது ஸ்ரீத்ரைலிங்க சித்த புருஷரின் அருட்கடாட்சத்தையும் பெற்றுத் தரும். இத்தகைய திரிதின பூஜை முறைகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. நம் குரு மங்களகந்தர்வா இத்தகைய பூஜை முறைகளுக்குப் புத்துணர்ச்சியூட்டி கலியுக மக்களின் நல்வாழிவிற்கு அருளியுள்ளார். இவையெல்லாம் சிவகுரு மங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் நம் குருமங்களகந்தர்வாவிற்கு அளித்துள்ள ஆன்மீக பொக்கிஷங்களாம்.
இம்மூன்று நாட்களிலும் திருவாதிரை நட்சத்திர தேவியை சித்தர்கள் அருளியுள்ள தக்க தான தர்மங்களுடன் வழிபட
1. ஸ்ரீத்ரைலிங்க ஸெளம்யா என்ற நாமம் கொண்ட திருவாதிரை நட்சத்திர தேவி, பாபநாசினி துவாதசி தேவி, த்ரயோதசி திதி தேவி ஆகிய இரண்டு திதி தேவதாக்களின் திரண்ட அருளுடன் கூடி ஸகல பாக்யங்களையுந் தருகின்றாள்.
2. 4.8.1994 அன்று ஸ்ரீபாசாங்குலி ஈஸ்வர மூர்த்தி தரிசனத்துடன் (அன்றைய பிரதோஷ கால சர்வேஸ்வர மூர்த்தி) அற்புத பிரதோஷ கால பூஜையின் தவப்பலனையும் பெற்றுத் தருகிறாள். ஸ்ரீசக்தி மாதம் என அழைக்கப்படும் ஆடி மாதம் அம்பாளுக்குரித்தான மாதம், இதில் ஸ்ரீபரமேஸ்வரனின் திருவாதிரை நட்சத்திரம் ஒரு நாள் முழுவதும் அமைந்து அதனுடன் பிரதோஷ காலமும் சேர்வது மிகவும் அபூர்வமானதாகும். இவ்வாறு அதியற்புத தெய்வாதார சக்திகள் பரிணமிக்கும் நாளே 4.8.1994 பாசாங்குலி பிரதோஷ நாளாகும்.
3.819.94 – ஆடிப்பெருக்கும் நதியில் பஞ்சகவ்ய கும்ப பூஜை
9.8.1994 – ஆடிப்பூரம் ஸ்ரீகோமதி அம்மனுக்கு பூஜை – வேர்க்கடலைக் காவடி எடுப்பு, வேர்க்கடலை உருண்டைகள், வேர்க்கடலை சர்க்கரை கலந்த பாயசம் நைவேத்யம்/தானம்.
10.8.1994  தூர்வா கணபதி பூஜை வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகபுல்லால் ஆசனம் (பீடம்) அமைத்து பூஜை. வெள்ளெருக்கு ஸ்தல விருட்சங்கள், வெள்ளெருக்குப் பீடங்கள், வெள்ளெருக்குத் தூண்களை வலம் வரும் விசேஷ்மானதாகும். வெள்ளெருக்கு விநாயகர் கிடைக்காவிடில் வலஞ்சுழி விநாயகர் கோயிலில் தரிசனம்/ தானம் . சென்னை – திருமுல்லைவாயில் ஸ்ரீமாசில்லாமணீஸ்வரர் சிவன் கோயிலில் வெள்ளெருக்குத் தூண் உள்ளது. இதனைப் பிரதட்சணம் செய்வதால் தீராத நோய்கள் குறிப்பாகக் கழுத்து நோய்கள் தீரும்.  பிரசாதம் : இரட்டை பீன்ஸ் (Double Beans) (சிவப்பு நிறம்) கலந்த உணவு அன்னதானம்.
11.8.1994 – அறிந்தவர்கள் தூர்வா சூக்தம் பாராயணம் செய்யலாம். (ஹஸ்தம்) நாக பஞ்சமி “ஸ்ரீஅஸ்தீக சித்தர்” கூட்டு நாம ஜபம்.
13.8.1994 – (அனுஷம்) சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருநட்சத்திரம் அழகு, அழகப்பன், முருகன், சுந்தரம், மூர்த்தி போன்ற “சுந்தர” (அழகு) நாமமுடையோர் இயன்ற தானங்கள் செய்யவேண்டும். மேற்கண்ட பெயர்களை உடைய ஏழைகளுக்கு தானமளித்தல் விசேஷமானதாகும்.
17.8.1994 – விஷ்ணுபதி புண்யகாலம் (விளக்கம் ஸ்ரீஅகஸ்திய விஜயம்- ஜுலை 1994 இதழில்)  கூரத்தாழ்வார் சந்நதி பூண்டுள்ள கோயில்களில் விடியற்காலையில் சர்க்கரைப் பொங்கல் தானம்.
22.8.1994 நேரங்காலமின்றி எப்போதும் தூங்குவதால் (பஸ் பிரயாணம், அலுவலகம், பகல், மாலை etc) பல நோய்கள், பணக் கஷ்ட தரித்திரங்கள், அசூயைகள் உண்டாகும். இதற்குப் பரிகாரமாக அசூன்ய சயன விரத நாளான இன்று ஸ்ரீகாலபைரவருக்கு புனுகு சார்த்தி முந்திரிப் பருப்பு மாலையிட்டு வணங்க வேண்டும். முந்திரிப் பருப்பினை பிரசாதமாக ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும். இதனால் காலத்தை வீணடித்த சாபங்கள் தீரும். காலை, மாலை இரண்டு அம்சங்களால் உருப்பெற்றதே ஒரு முந்திரி முழுப் பருப்பு! இயன்றவர்கள் உறங்காமல் இரண்டு வேளை பசியெடுக்கா விரதமிருந்து கால பைரவருக்குரித்தான பூஜை செய்து விரதத்தை முடித்திட உத்தம பலன்கள் கிட்டும்.
29.8.1994 – கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி (அஷ்டமி ரோஹிணி இணைந்து வரும் நாள்)

செவ்வாய் தோஷம்

சகோதர, சகோதரிகளுடன் பகை, நிலம், வீடு முதலான சொத்துக்களைக் கையாள்வதில் முறையற்ற நிலை, சினத்தால் பிறருக்கு ஏற்பட்ட விபரீதங்கள், வைத்தியத் துறையில் அதர்மச் செயல்கள், பெற்றோர்களுக்கு அநீதியிழைத்தல், உழைப்பின்றி ஊதியம் பெறுதல், கடன் கொடுத்தவர்களை ஏமாற்றுதல், பூமி பூஜை செய்யாது பூமாதேவியின் சாபத்தைப் பெறுதல், வாகனங்களால் பிறருக்கு சேதம் விளைவித்தல்.
இவ்வாறாகப் பல முன் ஜன்ம கர்மவினைகளின் தொகுப்பே செவ்வாய் தோஷமாக அமைகிறது. சற்குருவை நாடினால் அவரே, அவரவருடைய செவ்வாய் தோஷத்திற்கான காரணங்களை விளக்கித் தக்க பரிகாரங்களையும் தந்தருளிக் காப்பாற்றுகிறார். ஜோதிட அறிவில் முழுமை பெறாதவர்களை நம்பினால் ஏதேதோ பரிஹாரங்கள் சொல்லித் தவறாக வழிக்காட்டுவர். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள்
1. தங்களுக்கு ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் அமைந்ததற்குத் தங்களுடைய பூர்வ ஜன்ம கர்ம வினைகளே என்று உணர்வது முதல் நிலை.
2. அதற்கான தக்க பரிகார முறைகளைத் தரவல்லவர் சற்குருவே என்று உணர்ந்து அவரை நாடித் தக்க விளக்கங்கள் பெற வேண்டும். சற்குருவை உணரும் வரை, மிகுந்த இறை பக்தி உடைய, சுயநலமற்ற வாழ்க்கை வாழும் ஜோதிட அறிவு நிறைந்த நல்லோரை நாடி அறிய வேண்டும். இது இரண்டாம் நிலை.
அடியார் : செவ்வாய் தோஷம் உள்ள குழந்தைகள், சிறுவர்கள் இளவயதினர் என் செய்வது குருதேவா!
குரு : மிகவும் முக்கியமான கேள்வியிது! அவர்கள் தக்க பருவம் அடையும் வரை அவர்தம் பெற்றோரே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே ஜாதகம் கணித்து அவர்களுடைய தோஷங்களை அறிந்து கொண்டால் திருமணப் பருவம் வரை உள்ள சுமார் இருபது, இருபத்தைந்து வருட காலத்தில் முறையான பரிகாரங்களான தானதர்மங்கள், இறைப்பணிகள் மற்றும் இதர நற்பணிகளை எளிதாக நிறைவேற்றி தோஷ விளைவுகளிலிருந்து விடுபட்டு இறையருளால் அவர்கள் நல்வாழ்வு பெற வழி வகுப்பது பெற்றோர்களின் கடமை. திருஅல்லிக்கேணியில் கடுமையான செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண் குழ்ந்தையின் பெற்றோர்கள், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அரளிமாலை சூட்டுதல் போன்ற எளிமையான பல பரிஹாரங்களைச் செய்து வந்தனர். ஜோதிடர்கள் அப்பெண்ணிற்குப் பல கடுமையான தோஷங்களால் திருமணம் நடப்பதே அரிது என்று எச்சரித்திருந்தனர். மேற்கண்ட பரிஹார முறைகளின் தெய்வீக சக்தியால் ஜோதிடர்களே வியக்கும் வண்ணம் . எளிதில் திருமணம் நடந்தது. அதுவும் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில்! இதுவன்றோ பெற்றோர்களின் கடமை!
எந்த ஒரு பெண்ணின்/பையனின் கல்யாண வயதில் அவர்களுடைய பெற்றோர்கள் பரிஹாரங்களை நாடி அலைவதை விட, வருமுன் காப்பது நல்லதல்லவா! பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கான தோஷ பரிஹார முறைகளைச் சிறுவயதிலேயே முறையாகச் செய்துவர எதிர்காலத்தில் சகல காரியங்களும் இலகுவாக ஜயமாகும்!
 திருமணத் தடங்கல்கள் – மற்றுமோர் பரிஹாரம்
ஸ்ரீஅகஸ்தியரின் “கிரஹ சஞ்சார கிரந்த நியதிகளிலிருந்து” தம் சற்குரு ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் அருளியுள்ளதை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் விளக்குகின்றார். இதுவும் மிகவும் எளிதான செவ்வாய் தோஷ மற்றும் ஏனையத் திருமண தோஷ நிவர்த்தி முறையாகும்.
சென்னை வடபழனி முருகன் திருக்கோயிலில் செவ்வாய் பகவானுக்குத் தனி சந்நிதி உண்டு. சிறிதளவு குங்குமம் கலந்த பச்சரிசியைப் பாலில் சேர்த்தால் கிட்டும் சிவப்பு நிற “செம்பால்” கொண்டு இந்த செவ்வாய் பகவானுக்கு செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை உள்ள நேரத்தில் (காலை 6 மணி முதல் 7 மணி வரை – பிற்பகல் 1 மணி முதல் 2 மணிவரை – இரவு 8 மணி முதல் 9 மணி வரை) அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடைகள் தானம் செய்தல் வேண்டும். வடபழனிக்கு வர இயலாதோர் செவ்வாய் பகவானுக்குத் தனி சந்நிதி உள்ள பாடல் பெற்ற முருகன் ஸ்தலங்களில் மேற்கண்ட செம்பால் அபிஷேகத்தினைச் செய்து வரத் திருமணத் தடங்கல்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் நிவர்த்தி பெற்றுத் திருமணம் கைகூடும். இது அனைத்துத் திருமண தோஷங்களுக்கும் உரித்தான சிறப்புப் பரிஹார முறையாகும்.
ஸ்ரீவள்ளி திருமணம்
செவ்வாய் கிரஹத்திற்குரிய பிரத்யதி தெய்வமே ஸ்ரீமுருகப் பெருமான். ஸ்ரீவள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஸ்ரீவள்ளி வாழ்ந்த வனத்தில் ஸ்ரீமுருகனே பல இன்னல்களை ஏற்க வேண்டியதாயிற்று. காரணம், அந்த வனத்தில் பூமாதேவிக்குரிய பூஜை முறைகளை எவரும் சரியாக நிறைவேற்றாததால் பூமிகாரகனாகிய செவ்வாய் பகவான் சினங்கொள்ள, அவ்வனத்தில் மாங்கல்ய தாரண தோஷங்கள் பெருகின. அனைவருடைய திருமணங்களும் தடைப்பட்டன. பூமாதேவிக்குப் பிரியமானவற்றுள் ஒன்று யானை நடையாகும். வெறும் பச்சிலைகளையும் மூலிகைகளையும் உண்டு பிரபஞ்சத்திலேயே சாத்வீக குணத்தை மிக அதிக அளவு விகிதாச்சாரத்தில் பெற்றிருக்கும் ஒரே ஜீவன் யானையே! எனவே பூமாதேவி தன்மீது யானைகளின் சாத்வீக சஞ்சாரம் நடைபெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். எனவே கஜ பூஜையும் செவ்வாய் தோஷ பரிஹார நிவர்த்தியாக விதிக்கப்பட்டுள்ளது. விக்னங்களைக் களைபவன் கஜமுக விநாயகர் தானே! எனவேதான் ஸ்ரீவள்ளி புராணத்தில் தன் இளவலின் திருமணத்திற்காகவும் பூமாதேவியின் சீற்றம் தணிந்து செவ்வாய் பகவானின் அருள் கனியவும் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவ்வனத்தில் யானை வடிவமெடுத்து அருள்பாலித்தார்.
இவ்வாறு ஸ்ரீகணேசர் யானை வடிவெடுக்க எண்ணிட கிருத்திகா கஜானன் என்ற நாமமுடைய (விண்ணுலகத்தின் ஷ்ண்முக மண்டலத்தில் உறையும்) யானை தன் வடிவை விநாயகருக்குத் தந்திட அவர் யானை வடிவில் ஸ்ரீவள்ளியை அச்சுறுத்தும் திருவிளையாடலைப் புரிந்து ஸ்ரீமுருகனின் திருமணம் நடைபெற ஆசிர்வதித்தார். பூமிகாரகனாகிய ஸ்ரீவிநாயகரும் அந்த ஷண்முக மண்டல யானைக்கு முக்தி தந்து ஸ்ரீமுருகனுக்கே வாஹனமாய் அமைய அருள்பாலித்தார்.
ஸ்ரீவள்ளியை மணம் புரிந்த கோலத்துடன் ஸ்ரீவள்ளி தெய்வானை சகிதம் ஸ்ரீமுருகன் தோன்றியுள்ள இடங்களில் ஸ்ரீசெவ்வாய் பகவான் எழுந்தருளி, தம்மை செம்பால் கொண்டு அபிஷேகிப்பவர்களுடைய திருமணத் தடங்கல்களை குறிப்பாக செவ்வாய் தோஷங்களை நிவர்த்தித்து திருமணம் நன்கு நடைபெற அருள்பாலிக்கின்றார்.
செம்பால் அபிஷேகம் ஏன்?
செவ்வாய் கிரஹத்திற்குரிய வண்ணம் சிகப்பு, சந்திர கிரஹத்திற்குரிய வண்ணம் வெண்மை, திருமண வாழ்வு நன்கு அமைய செவ்வாய் தோஷ நிவர்த்தியோடு தாரா பலம், சந்திரபலம், இரண்டும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அருந்ததி போல தாரா நட்சத்திர தேவியும், மாங்கல்ய பாக்கியம் தந்தருளும் அற்புத நட்சத்திர தேவியாவாள். மிகப்பெரிய குங்குமத் திலகத்துடன் தேஜஸ்வரூபியாய்க் காட்சியளிப்பவள் தாரா தேவி. இவை தவிர குருபலமும் திருமண வாழ்விற்கு இன்றியமையாததாகும்.

சர்வ சாந்த துதி

ஸ்ரீஅகத்திய பெருமானிடமிருந்து குரு பிரசாதமாகப் பெற்ற குருமௌனகுரு துதியை முறையாக ஓதி அத்துடன் தன்னுடைய தபோ சக்திகளையும் சேர்த்து சர்வ சாந்தி துதியாக, திரைலிங்க பஞ்சாட்சர துதியாக உலகத்தவர் நன்மைக்காக அளித்துள்ளார் ஸ்ரீஅகத்தியரின் அருமைச் சீடரான போகர் பிரான்.

அவனியில் அவணி விளையட்டும் !
புவனமெங்கும் பொன் வேயட்டும் !
மௌனத்தில் மகேசனைக் காண்போமே !!

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam