அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆடிக் கிருத்திகை

முருகன், அம்பாள், கனகமாலினி, சோழி அம்மன், சந்தோஷிமாதா போன்ற அனைத்து தெய்வ மூர்த்திகட்கும் உரித்தான விசேஷ தினமே ஆடிக்கிருத்திகை ஆகும். இரண்டு, எட்டு முகங்களையுடைய முருகப் பெருமானுக்கும் உரித்தான நாள்! எட்டுக்கரங்கள், எட்டு முகங்கள் கூடிய துர்கை, மகிஷாஸுர மர்தினி, வீரபத்ரர் போன்ற தெய்வ மூர்த்திகள் அவதரித்த திருநாள்! துரியோதனனுடைய மனைவியாகிய பானுமதி, ஆடிக்கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதில் சிறந்தவளாவாள். இவளுடைய ஆடிக் கிருத்திகை விரத புண்ய சக்தியினால் தான் துரியோதனன் பல பேராபத்துக்களிலிருந்து தப்பினான்.. ஆனால் அவளுடைய தபோ சக்திளையெல்லாம் அவன் விரயமாக்கித் தீச்செயல்களில் ஈடுபட்டான். அலுவலகம், வியாபாரம், வழக்கு போன்றவற்றில் கணவனைப் பெருந்துன்பங்களிலிருந்து காப்பாற்றுவதற்கு ஆடிக் கிருத்திகை விரத பூஜாபலன்கள் பெரிதும் உதவுகின்றன. இன்று கிருத்திகை நேரத்தைக் கணித்து கிருத்திகா நக்ஷத்ரம் துவங்குவதிலிருந்து முடியும் வரை முருகனுடைய நாம ஸ்மரணத்தில் திளைப்பது சிறப்பானதாகும். எண் முகம்/கரங்களையுடைய முருகனை தரிசித்த பின் குறித்த தானதர்மங்களை முடித்தவுடன் உணவேற்க வேண்டும். எட்டுக்குடி, எண்கண் போன்ற முருகன் தலங்களில் ஆடிக்கிருத்திகை தரிசனம் விசேஷமானது. அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம் போன்று அவரவர் வசதிக்கேற்ப எட்டுவிதமான தானதர்மங்களைச் செய்திட விரத பலன்கள் பன்மடங்காகும். துரியோதனனின் கோயில் “தனரேகை” இருந்தமையால் அவன் தொட்ட இடமெல்லாம் ஐஸ்வர்யம் பொங்கியது. ஆனால் அதனை சரிவரப் பயன்படுத்தாவிடினும் பானுமதியானவள் தனரேகை கொண்டு பலவித அற்புதமான தானதர்மங்களைச் செய்யவைத்து பெரும் புண்ய சக்தியைப் பெற்றுத் தந்தனள். ஆனால், பெருமளவு புண்யத்தைப் பெற்றாலும் அதை நன்முறையில் செலவழித்திட வேண்டுமே! இதற்குப் பெரியோர்களின் ஆசி இன்றியமையாததாகும். உத்தமியான பானுமதியின் ஆடிக்கிருத்திகை விரதத்தின் பரிபூர்ண பூஜா பலன்கள் கிட்டிடினும், பீஷ்மர், விதுரன் போன்ற பெரியோர்களை துரியன் மதியாததால் அப்புண்யசக்தி வீணே கழிந்தது. எனவே ஆடிக் கிருத்திகை விரதம் பரிபூரணம் அடைய கிருத்திகை நக்ஷத்ரம் முடியும் தறுவாயில் பெரியோர்கட்குப் பூஜை, பாத நமஸ்காரம் , பணிவிடை செய்திட வேண்டும்.
சித்தர் பட்டம் விடுதல்
ஆடிக்கிருத்திகையில் சித்தர் பட்டம் விடுதல் என்ற நியதி ஒன்று உண்டு. சித்தர்களும், மஹான்களும், யோகிகளும் ஜீவசமாதி பூண்ட/எழுந்தருளியுள்ள தெய்வத் திருத்தலங்களில் அவர்கட்கு அபிஷேக ஆராதனைகள் செய்து துதித்திட வேண்டும். திருஅண்ணாமலை ஸ்ரீஅருணகிரி ஸ்வாமிகள், மருதமலை (பாம்பாட்டி சித்தர்), திருப்போரூர் (சிதம்பரம் ஸ்வாமிகள்) 

கருடக்கொடி சித்தர் சித்துக்காடு

போன்ற முருகன் தலங்களிலும், பலவிதத் தூண்களில் மஹான்கள் தங்கியிருக்கும் திருச்சி ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம், கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் சிவாலயம் (ஸ்ரீஹேரண்ட மஹரிஷி) திருச்சேறை சிவன் கோயில் (ஸ்ரீமேதாவி மாமுனிவர்) போன்ற பலத் திருத்தலங்களில் சித்தர்/யோகி/மகான்களுக்கு பூஜை நிகழ்த்திட வேண்டும். ஆடி கிருத்திகையன்று இவர்கள் ஜீவசமாதியில் இருந்து சூட்சுமமாய் வெளிவந்து அருள்பாலிக்கின்றனர். பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடேசாஹிப் சித்புருஷர், கரூர் அருகே நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், வடலூர் ஸ்ரீவள்ளலார் ஸ்வாமிகள், திருஅண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, ஈசான்ய சித்தர், திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த ஸ்வாமிகள், போளூர் ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள், ஸ்ரீபூண்டி மஹான், காஞ்சிபுரம் ஸ்ரீபோடா (சிவஸ்வாமி) சித்தர், ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மதுரை ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள், திண்டுக்கல் ஸ்ரீகசவனம்பட்டி ஸ்வாமிகள் போன்ற மஹான்களுடைய ஜீவசமாதிகளிலும் அன்னதானம் மற்றும் பல தான தர்மங்களுடன் ஆடிக்கிருத்திகையைக் கொண்டாடுதலால் பல அரிய புண்ய சக்திகளைப் பெறுவதோடு அவர்களுடைய கருணைக் கடாட்சமும் கிட்டும். காரணம், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு ஜோதிகளிலிருந்து தோன்றிய முருகப் பெருமானின் ஆடிக்கிருத்திகையன்று தான் ஜோதி ரூப தத்துவங்களைப் பிரபஞ்சத்திற்குணர்த்தி ஏக முகனாக, இரு முகனாக, மூன்று முகத்தோனாக, சதுர்முகனாக, ஷ்ண்முகனாக (ஆறு) , எண்முகனாகப் பல தெய்வ தரிசனங்களாகத் தந்து மகிழ்வித்தார். பொதுவாக அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகையன்று சித்தர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். மலைத் தலங்களில் இன்று சந்திர (நிலா) தரிசனம் செய்து, பசும்பால், பால்கோவா, பால்பேணி, பால் பாயசம் போன்ற பால் உணவினை தானம் செய்திட பால் பாக்கியமாகக் குழந்தைப் பேறு கிட்டிடும். இவ்வாறாக ஆடிக்கிருத்திகை பல விசேஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளமையால், அன்பர்கள் இவ்வரிய விரத நாளை நன்முறையில் கொண்டாடிட வேண்டுகிறோம்.

ஆடி அமாவாசை

உத்தராயணத்தில் வரும் தை அமாவாசையைப் போல், தட்சிணாயன ஆடி அமாவாசையன்று பெறுதற்கரிய பித்ரு பூஜைகளில் ஒன்றாகும். பித்ரு லோகமானது, சூர்ய கிரஹத்திற்கு அருகில் உள்ளது. பித்ருக்களின் நாயகரே ஸ்ரீமகாவிஷ்ணு ஆவார். ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியாக அவதரித்த ஸ்ரீமகாவிஷ்ணு ஆதித்யனாகிய ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியை, தட்சிணாயன காலத்தில் பித்ருக்களின் அதிபதியாக அருள்பாலிக்கச் செய்கின்றார். இதற்காகவே சூர்யமண்டலத்தில் விசேஷமான பித்ரு பூஜையானது ஆடி அமாவாசையன்று தெய்வ மூர்த்திகளால் அங்கீகரிக்கப்படுகின்றது. சிவபெருமான், திருஅண்ணாமலையில் வல்லாள மகாராஜாவிற்காகத் தர்ப்பணம் அளிக்கும் திருவிழாவை இன்றும் அங்கு தரிசித்து மகிழலாம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே, தன் பெற்றோர்களுக்குத் தர்ப்பணம் அளித்துள்ள காட்சியை மகாபாரதத்தில் காண்கிறோம். தாட்சாயணியாக ஸ்ரீபார்வதி தேவி, தட்சனுடைய யாக வேள்வியில் பாய்ந்து தன்னை அக்னிக்கு அர்ப்பணித்துக் கொண்டு தாட்சாயணி அவதார வைபவம் நிறைவுற்றதல்லவா ? சிவபெருமான் தாட்சாயிணிக்காகத் தர்ப்பணம் கொடுத்து பித்ரு பூஜை நிகழ்த்திய தினமும் ஆடிக்கிருத்திகை ஆகும். ரிஷிகளுக்கோ, தெய்வ மூர்த்திகளுக்கோ தர்ப்பணம் அளிக்கலாமா அல்லது அர்க்கியம் (தர்ப்பண நீர் விடுதல்) மட்டும் அளிப்பதுண்டா? மகரிஷிகளுக்கும் தர்ப்பணம் அளிக்கலாமா? – என்ற வினாக்கள் எழுவது இயல்பே! சித்தர்களின் மகான்கள், யோகியர் போன்றோர் பிறப்பையும், இறப்பையும் கடந்தவர்கள் எனினும் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களை உய்விப்பதற்காக, ஏதேனும் ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு இறை ஆணையாகப் பிறப்பெடுக்கின்றனர். அந்த சரீரத்தை உகுத்து, அவர்கள் ஜீவசமாதியில் கூடுகின்ற பொழுது, அந்த சரீர வாழ்க்கைக்காக நாம், நம் மேன்மைக்காக அவர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கின்றோம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்துத் தன் மானுட சரீரத்தையும் உகுத்துச் சென்றமையால் அவருக்கு அர்க்கியம் அளிக்கின்றோம். எனவே தர்ப்பணம் என்றால் இறந்தவர்களுக்காக மட்டும் அளிப்பது என்று பொருள் வேண்டாம்.
தேவ, தேவாதி தர்ப்பணங்கள்
நவக்கிரஹாதிபதிகளுக்கும் தர்ப்பணம் அளிப்பது உண்டு. ஏன், ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கும், காண்ட ரிஷிகளுக்கும் கூட தர்ப்பணம் அளிக்கின்ற முறைகளை சந்தியா வந்தன மந்திரங்களில் காணலாம். எனவே ஆடிக்கிருத்திகையன்று நீங்கள் அறிந்த, படித்துணர்ந்த, பிறர் மூலம் தெரிந்து கொண்ட சித்த புருஷர்கள், மகான்கள், யோகியர், ஞானியர், முமூட்சுகள் போன்று அனைவர்க்கும் அவரவர் பெயரைச் சொல்லி நீரை வார்த்து அர்க்கியம் அளித்திட வேண்டும்.
ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகன் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிருஹஸ்பதிம் தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனீஸ்வரன் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி, கேசவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுஸுதனம் தர்ப்பயாமி, த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ரிஷிகேசம் தர்ப்பயாமி, பத்மநாபம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி
என்றவாறாக தேவாதி தேவர்களுக்கும் அனைவரும் ஜாதி மத இன பேதமின்றி தர்ப்பணம்/அர்க்யம் அளித்திடலாம். தட்சனின் யாகத்தீயில், அக்னிக்குத் தன்னை தியாகம் செய்தாளன்றோ தாட்சாயிணி! ஆனால் அக்னி தேவர் தாட்சாயணியின் உடலைத் தாங்கி நின்ற போது அவராலேயே தேவியின் அக்னிப் ப்ரவாகத்தைத் தாங்க இயலவில்லை. கணவனின் சொல்லைவிடத் தன் செயலால் எதனையும் தடுத்து விட முடியும் என்ற கர்வமான எண்ணம் தாட்சாயணியிடம் குடி கொண்டிருந்ததல்லவா? அதுவே, அதுமட்டுமே அக்னியில் பஸ்மமாயிற்று. ஸ்ரீஅக்னிபகவான், தாட்சாயணியின் திருஉடலை சிவனிடம் அளித்திட அவர் அதைத் தாங்கி சென்று பிரபஞ்சத்தையே வலம் வந்தார். காரணம் என்ன?
சிவ நடனங்கள்

ஸ்ரீபரசுராமலிங்கம் திருமங்கலம்

பிரபஞ்சத்தில் பல கோடி லோகங்களில் உள்ள மகரிஷிகளும் தபஸ்விகளும் சிவபெருமானின் பலவித நடன தரிசனங்களுக்காக யோக நிலையில் காத்துக்கிடக்கின்றனர். விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், மஹாஸ்வரூப தரிசனம், ஜோதி தரிசனம் என்று பல வித தரிசனங்களைக் காட்டி அருள்கொள்கின்றான் இறைவன். இது அவரவர் தபோ நிலையைப் பொறுத்தது. விஸ்வரூப தரிசனம் முக்தி நிலை தரவல்லது எனினும், அத்தரிசனத்தால் பெறும் புண்ய சக்தியைத் தீய வழிகளில் செலவழித்தால் அது பெரும் பாவமாக பல்கிப் பெருகும். தாட்சாயணியின் திருஉடலைச் சுமந்தவாறே தட்சனை வதம் செய்த உக்ரஹ சக்தியோடு சிவபெருமான் பலவித யோகாத்ம ஊர்த்துவ தாண்டவ பாணியில், பலவிதமான உக்ரக நடனங்களை ஆடியவாறே பிரபஞ்சமெங்கும் பவனிவந்திட்டார். ஆங்காங்கே பல இடங்களில் இறை ஆணையின்படி தாட்சாயணியின் அங்கங்கள் வீழ்ந்தன. இவ்வாறு ஸ்ரீபார்வதி தேவியின் திருஅவயங்கள் விழுந்த 51 இடங்களே சக்தி பீடங்கள் ஆயின. இந்த 51 இடங்களிலும் ஆடி அமாவாசையன்று பரமசிவன் தாட்சாயணிக்குத் தர்ப்பண பூஜை செய்து அர்க்யங்கள் அளித்தார். சிவபெருமானே பித்ரு தர்ப்பணம் அளித்தார் எனில் தர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை எளிதில் உணரலாம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே பாரதப் போரில் தர்ப்பணம் அளித்த சம்பவத்தைத் கண்டுள்ளோம். திருஅண்ணாமலையில் கூட குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீசிவபெருமானே திருஅருணாசலத் திருக்கோயிலை நிர்மாணித்துப் பெரும்புகழை அடைந்த வல்லாள மகாராஜாவிற்குத் தர்ப்பணம் கொடுக்கின்ற வைபவம் குறித்த நாளில் நடக்கின்றது. 51 சக்தி பீடங்களில் யோனி பீடமாக விளங்குவது காமாக்யா (அஸ்ஸாம்) என்னும் தலமாகும். யோனி யோகக் கூற்றிற்கான தர்ப்பணத்தை திருஅண்ணாமலையின் தான் சிவபெருமான் முதன் முதலாக தாட்சாயணிக்குத் தீப தர்ப்பணமாக அளித்தார் எனவே ஆடி அமாவாசையன்று காமாக்யா பீடத்தில் தான தர்மங்களுடன் மூதாதையர்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் அர்க்யமும் அளிப்பது பெரும் பிராயசித்தத்தைத் தரும். ஆடி அமாவாசை அன்று சிவபெருமான் மட்டுமன்றி திருமால் உள்பட பல தெய்வமூர்த்திகளும் நாரதர் உள்ளிட்ட பல மகரிஷிகளும் காமாக்யா பீடத்தில் தாட்சாயணிக்காகத் தர்ப்பணம் அளித்தனர்.
திருமால் அருளிய தர்ப்பை
பித்ருக்களுக்கு நாயகரான திருமால் எள்ளும் நீரும் இட்டு வார்த்த தர்ப்பணத்தில் இவ்விரண்டும் தர்ப்பைகளாக மாறின. இதனை எடுத்துச் சென்ற ஸ்ரீபரசுராமர் பித்ரு தர்ப்பண மந்திரங்களை தேவலோகங்களிலிருந்து பூமிக்குக் கொணர்ந்தார். ஸ்ரீபரசுராமர், அற்புத சக்தி வாய்ந்த இத்தர்ப்பைப் புற்களை எடுத்துச் சென்று கேரள ஆலயங்களில் இயந்திரப் பிரதிஷ்டை செய்தார். அனைத்துத் கேரள ஆலயங்களிலும் இயந்திர பிரதிஷ்டை செய்தது போக ஸ்ரீபரசுராமரிடத்தில் 12 தர்ப்பைகள் மிஞ்சின. தமிழகத்திலும் இத்தெய்வீக தர்ப்பைகள் செழித்தோங்க வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீமகாகணபதி சின்னஞ்சிறு பாலகனாய் பரசுராமர் முன் தோன்றினார். “யாது வேண்டும், குழந்தாய்?“
‘தாங்கள் எது கேட்டாலும் தருவீர்களா?’ என்று வினவியவாறே பிள்ளையார் ஸ்ரீபரசுராமரின மடியைத் தட்டிக் காண்பித்தார். அதில்தான் 12 தர்ப்பைகளும் குடியிருந்தன! இது இறைவனின் திருவிளையாடலென எண்ணி வியந்த பரசுராமர் அனைத்தையும் அச்சிறுவனுக்கே அளித்து ஆசீர்வதித்தார். திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயில், திருப்புடார்ஜுனம், திருஅண்ணாமலை, மல்லிகார்ஜுனம், தர்ப்பசயனம், அவினாசி, திருக்கோகர்ணம் போன்ற இடங்களில் பூமியில் புதைத்துத் தர்ப்பைப் புற்களின் தெய்வீக சக்தி இவ்விடங்களில் சிறந்தோங்குமாறு செய்தார். எனவே இவ்விடங்களில் ஆடி அமாவாசையன்று எள், தர்ப்பை, நீர் கொண்டு முறையாகத் தர்ப்பணம் அளிப்பதால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து ஆடி அமாவாசையில் தர்ப்பண பூஜை செய்த பலனைப் பெற்றிடலாம்.

ஆவணி அவிட்டம்

பொதுவாக அவிட்ட நட்சத்திரம் கூடிய ஆவணி நாளிதான் பூணூல் அணிவது சிறப்புடையதாகும். பிரளயத்திற்குப் பின் சிருஷ்டி ஏற்பட்டபோது கிராத மூர்த்தியாக அவதாரம் கொண்ட சிவபெருமான் ஜீவ அணுக்கள் கூடிய குடத்தை மேருமலையில் வைத்துத் தன் வில் கொண்டு சிருஷ்டி ஜோதியை ஏவியபோது அத்திருக்கடம் உடைந்து அதன் மேலிருந்த பூணூல், மாலை போன்றனவும் பல இடங்களில் தெறித்து விழுந்தன. இவ்வாறு அதன் பூணூல் விழுந்த இடத்தில் ஆதிசிவனே ஸ்ரீயஞோபவீதேஸ்வரராக (கும்பகோணம்) எழுந்தருளினார். எனவே உபநயனம், ஆவணி அவிட்டம் மட்டுமல்லாது எப்போது பூணூல் அணிந்திடினும் கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிவதே மிகவும் விசேஷமானதாகும். இன்றைக்கும் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் திருவடியில் பூணூலை வைத்து அவருக்குச் சாற்றி அதனையே அணிகின்ற நல்வழி முறையைப் பின்பற்றுவோர் பலர் உள்ளனர். இதனால் பூணூலில் படிந்திருக்கும் சகல தோஷங்களும் நீங்கி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் உரு ஏற்றுவதற்காக மிகச் சிறந்த தெய்வீகப் பெட்டகமாக அது மிளிர்கின்றது.
ஜாதி, இன, குல, சமய பேதமின்றி யாவரும் பூணூல் அணிய வேண்டும் என்பதை நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் வலியுறுத்தி வந்துள்ளோம். ஆவணி அவிட்டத்தன்று ஏழைச் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வித்தலை மிகச் சிறந்த தானங்களுள் ஒன்றாக சித்தபுருஷர்கள் அருள்கின்றனர். ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரரின் சந்நிதியில்தான் ஸ்ரீமகாவிஷ்ணுவே முன்னின்று ஸ்ரீநாரதருக்கு உபநயனம் செய்வித்தார். இவ்விடத்தில் மிக எளிமையான முறையில் உபநயனத்தை நடத்திக் குறைந்தது 108 பேருக்கு அன்னதானம் அளித்திட பித்ரு லோக மகரிஷிகளே ஸ்ரீநாரதரின் தலைமையில் நேரில் சூட்சுமாய்ப் பிரசன்னமாகி ஆசிர்வதிக்கின்றனர். பெறற்கரிய பாக்கியமிது!
பூணூலில் உள்ள முடிச்சிற்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இதை கைகளுக்குள் அடக்கிப் பிடித்தவாறு காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பர். இவ்வாலயத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிந்து பிரம்ம முடிச்சை வலது உள்ளங்கைக்குள் இருத்தி காயத்ரீ மந்திரத்தை ஜபிப்போருக்கு ஞாபக சக்தி விருத்தி அடைவதோடு மனக்குழப்பங்கள் நீங்கி வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகளிடையே பரஸ்பர அன்பும் ஏற்படும். ஆன்மீகத்தில் முன்னிலை பெற விழைவோருக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பீஜாட்சர சக்திகள் இன்றியமையாததாகும். ஆவணி அவிட்டத்தன்று ஜாதி, மத, இன பேதமின்றி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மட்டுமே அறிந்தோர்க்கும், இம்மந்திரத்தை அறியாதோர்க்கும் பூணூலை அணிவித்து ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜெபத்தையும் அதன் மகிமையையு விளக்குவது மிகச்சிறந்த வித்யா தானமாகும்.
பூணூல் அணிய விரும்புவோர்க்கு :- பூணூலை முறைப்படி அணிய விரும்புவோர்க்காக ஆவணி அவிட்டத் திருநாளன்று திருஅண்ணாமலை ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சார்த்தப்பட்ட புனிதமான பூணூல் அளிக்கப்படும். ஸ்ரீகாயத்ரீ மந்திர விளக்கங்களும் தெளிவுற உணர்த்தப்படும். அனைத்து ஆன்மீக அன்பர்களும் இதன் மூலம் நற்பலன்களை அடைய வேண்டுகிறோம்.
பிரம்மச்சாரிகள், மூன்று புரிகளையும், திருமணம் ஆனவர்கள் ஆறு புரிகளையும் கொண்ட பூணூலை அணிய வேண்டும். தாய், தந்தையரை இழந்தோர் ஒன்பது புரிகளை அணிந்திடுக.
பூணூலை எக்காரணம் கொண்டும் கழற்றுதல் கூடாது.
நீரிலோ அல்லது அசந்தர்ப்பங்களினாலோ, பூணூல் அறுந்தாலோ, தொலைந்தாலோ அல்லது கழன்றாலோ அதை மீண்டும் அணியலாகாது. உடனே (ஸ்ரீயஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய) புதிய பூணூலை அணிதல் வேண்டும். இதற்காகவே பல பூணூல்களை ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிக் கைவசம் வைத்திருப்பது நலம். காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் கண்டிப்பாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இம்மூன்று வேளைகளிலும் தர்ப்பைப் பாயில் கிழக்கு/அல்லது வடக்கு/மேற்கு நோக்கி அமர்ந்து ஜபித்திட வேண்டும். ஏனைய நேரங்களில் எந்நேரமும், எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திடலாம். 32, 64, 108 என்று குறுகிய எண்ணிக்கைக்குள் முடித்திடாது குறைந்தது 1008 முறையேனும் ஜபித்திடுக மனதினுள் அதாவது மானசீகமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கப் பழகிடில் ஒருமணி நேரத்தில் நின்று, அமர்ந்த, நடந்த நிலைகளில் கூட குறைந்த்து 300 முறை எவரும் ஜபித்திடலாம், ஆரம்பத்தில், கலியுக கர்ம பரிபாலனத்திற்கேற்ப ஒரு நாளில் குறைந்தது 10,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தல் உத்தமமானது என்பதே சித்தர்களின் அருள்வாக்காகும். இதனால் அவரவர்க்குரிய கர்மசுமைகளின் பளுவை உணராது இறை நினைவுடன் பொழுதில் ஒன்றுவது எளிமையாகிறது.

மங்கள கௌரி விரதம்

ஆவணி மாதத்தில் மூன்று செவ்வாய்க்கிழமைகளில்
1. தன மங்கள கௌரீ விரதம்
2. தான்ய மங்கள கௌரீ விரதம்
3. தான மங்கள கௌரீ விரதம்
 ஆகிய மூன்று கௌரீ விரதங்கள் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாரத்தின் ஏழு நாட்களுமே புனிதமானையெனினும் தெய்வ கடாட்சம் பரிபூர்ணமாகப் பரிணமிக்கின்ற நாட்களாக செவ்வாயும், வெள்ளியும் அமைந்துள்ளன. இந்நாட்களில் செய்யப்படும் ஆலய தரிசனம், அபிஷேக ஆராதனை, தான தர்மங்களின் பலன்கள் அளப்பரியன. ஏகாதசி விரதம், துவாதசி பாரணை, சங்கடஹர சதுர்த்தி, நாக பஞ்சமி, ரத சப்தமி, மாத சிவராத்திரி, பிரதோஷம் போன்ற அனைத்து விசேஷ தினங்களையும் கொண்டாடுவதென்பது கலியுகத்தில் கடினமாகத் தென்படுகின்றது. இதற்காகவே ஸ்ரீபரசுராமர் பல செவ்வாய்க்கிழமைகளின், வெள்ளிக்கிழமைகளின் புனிதத்துவத்தைத் திரட்டி மங்கள கௌரீ விரதங்களாக அமைத்துத் தந்துள்ளார்.
தன மங்கள கௌரீ விரதம்
இன்று காலையில் பூஜையறையில் தரையைப் பசுஞ்சாணியால் மெழுகி, பச்சரிசி மாக்கோலமிட்டு மஞ்சள், செம்மண் காவியிட்டு இதன்மேல் ஒரு நுனி வாழை இலையை வைத்து அதில் குறைந்தது ஒருபடி பச்சரியைப் பரப்பி நாணயங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து நடுவில்
1. ஒரு செப்பு/வெண்கலம்/வெள்ளிச் செம்பு வைத்து, கங்கை, காவிரி போன்ற புனித நீரை ஊற்றி, துளசி, வில்வம், வெட்டிவேர், ஜாதிக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம், ஏலம் கலந்து
2. பூமாலை சுற்றிய தேங்காயால் கும்பத்தை மூடி மஞ்சள், குங்குமம், சந்தனம் கொண்டு செம்பை அலங்கரிக்க வேண்டும்.
3. செம்பின் பக்கவாட்டில், கண்மை, சந்தனம் கொண்டு அம்பிகையின் படம் வரைந்து
4. அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி  போன்ற அம்பிகைத் துதிகளால் 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.
5. 108 நாணயங்கள், வில்வ/துளசி தளங்கள் போன்றவற்றால் அர்ச்சிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
6. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அன்னதானத்துடன், ஒன்பது ஏழை சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் மற்றும் மங்கலப் பொருட்களைத் தானம் புரிந்து பூஜைதனை நிறைவு செய்தல் வேண்டும்.
தான்ய மங்கள கௌரி விரதம்

மூன்று அம்பிகைகள் எழுந்தருளிய
திருத்தலம் காளையார்கோவில்

இரண்டாவது செவ்வாய்க் கிழமையில், முதல் செவ்வாய்க் கிழமைக்கான தன மங்கள விரதம் போன்றே வாழை இலைப் பீடம், கும்பம் அமைத்திட வேண்டும். வாழை இலையில் பச்சரிக்குப் பதில் நவதான்யங்கள், பருப்பு, கேழ்வரகு போன்ற தான்ய வகைகளைப் பரப்பிட வேண்டும். பூஜையின் நிறைவில், கும்பநீரை நெல், அரிசி போன்ற தான்யங்களிலும், வீட்டின் எட்டுத் திக்குகளிலும் தெளித்திட வேண்டும். நவதான்யத்தினை மாவுடன் நொய், நெய், சர்க்கரையுடன் சேர்த்துக் கோயிலில் உள்ள எறும்பு, புறாவிற்கு இட வேண்டும். இதனால் கடன் தொல்லைகளிலிருந்து நிவாரணம் கிட்டுவதுடன், வறுமையும் நீங்கும். வியாபாரிகளுக்கும் நன்முறையில் செல்வம் கொழிக்கும். சுண்டல் நைவேத்தியமும், தானமும் செய்திடல் வேண்டும்.
தான மங்கள கௌரி விரதம்
மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் வரும் தான மங்கள கௌரீ விரதத்தில், முதலாவதான தன மங்கள கௌரி விரதம் போன்றே வாழை இலை பீடம், கும்பம் அமைத்து பச்சரிக்குப் பதிலாக வாழை இலையில் பூக்களால் புஷ்ப்பீடம் ஏற்படுத்தி, கும்பத்தையும் அலங்கரிக்க வேண்டும்.
1. ஜாதி பேதமின்றி 60 வயதிற்கு மேற்பட்ட பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு பூஜையை நிகழ்த்துவது மிகவும் சிறப்புடையது. சுமங்கலிகளைக் கொண்டு புஷ்ப அலங்காரம் செய்தலும் விசேஷமானது .
2. இந்நாளில் விதவிதமான தானங்கள் செய்வதால் தான மங்கள கௌரீ ப்ரீதி அடைகின்றாள். மங்கள ஆரத்தியுடன் தான மங்கள கௌரீ விரதம் பூர்த்தி அடைகின்றது.
இன்று மூன்று அம்பிகையர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து ஆனந்தித்திடலாம். ஏனெனில் சிவபெருமானுடைய கும்பேசுவரர், ஈசான்ய  மூர்த்தி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், பரமசிவன் போன்ற பலவித அவதாரங்களிலும், ஈஸ்வரியாக அமையும் பாக்கியம் பெற பார்வதி தேவியே சுவர்ண கௌரீ, மங்கள கௌரீ, பஞ்சகௌரீ, சிவகௌரீ போன்று கௌரீ என்ற நாமம் தாங்கிய பிறவி கொண்டு மேற்கண்ட மூன்று விரதங்களை மேற்கொண்டு இறைவியாய்த் திருக்கோலம் பெற்றனள். எனவே ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியே ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிய கௌரி விரதங்களை, பெண்கள், முறையாக்ச் செய்து வந்தாலே போதும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தில் வறுமை நிலை தணியும். கணவனுடைய ஒழுக்கம் மேன்மையடையும். எடுக்கின்ற முறையான வைராக்கிய முறைகள் நன்கு நிறைவு பெறும்.
ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம்
பொதுவாக ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள், காயத்ரீ ஜப நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தற்காலத்தில் 24,36,64,108 முறை மட்டும் வேக வேகமாக ஜபித்து விட்டு அலுவலகத்திற்குப் பறக்கின்ற அவல நிலையே நிலவுகின்றது. பலர், ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வருகின்ற காயத்ரீ ஜபத் திருநாளன்று மட்டும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நினைவு கூர்கின்றனர். இதுவே கலியுகத்தின் கொடுமையாகும். காயத்ரீ ஜபதினத்தன்று கடைபிடிக்க வேண்டிய முறைகளாக சித்தர்கள் அருள்வதாவது.
1. காலையில் சங்கல்ப காயத்ரீ த்யானம் – இன்று காலையில் ஏதேனும் ஒரு சுயநலமற்ற நற்காரியம் நன்முறையில் நிறைவேற சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைக் குறைந்தது 1008முறை ஜபிக்க வேண்டும். ஜபித்த பின் அதனைக் குலதெய்வத்திற்கு எடுத்த சுயநலமற்ற காரியம் நிறைவேற அர்ப்பணிக்க வேண்டும்.
ஸ்ரீகாயத்ரீ ஜபத்திற்கான நியதிகள்
1. பூணூல், கடுக்கன், விபூதி/குங்குமம்/சந்தன்ம்/த்ரிபுண்டரம், பஞ்சகச்ச முறையில் வேஷ்டி அணிந்து தர்ப்பை பாயில்/பலகையில் அமர்ந்து ஜபத்தைச் செய்வதே விசேஷமானதாம்.
2. மனதிற்குள் ஜபிப்பதே பலன்களைப் பன்மடங்காக்கும்.
3. இயன்றவரை ஒரே இடத்திலேயே அமர்ந்து, இடைவெளியின்றித் தொடர்ந்து ஒரே சமயத்தில் 1008 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதே மன அமைதியையும், கார்ய சித்தியையும் பெற்றுத் தரும்.
4. பத்மாசனத்தை மேற்கொள்தல் சீரான சுவாச ஓட்டத்தைத் தந்து எண்ண அலைகளைத் தணிக்கும்.
2. பித்ரு சாந்தி காயத்ரீ ஜபம் :- காலையில் சங்கல்ப காயத்ரீ தியானத்தை முடித்த பின்னர், பகல் உச்சிப் பொழுதில்

தந்தை வழி – ஆண்வர்க்கம்

தாய் வழி – பெண் வர்க்கம்

தந்தை

தாய்

தாத்தா

பாட்டி

பாட்டனார்

பாட்டியின் தாய்

முப்பாட்டனார்

பாட்டியின் பாட்டி

 
மேற்கண்ட வகையில் (வாழ்கின்ற சந்ததியைத் தவிர்த்து) அதற்கடுத்த மூதாதையரை வரித்து மொத்தம் நான்கு வர்க்கங்களிலும், ஒரு வர்க்கத்திற்கு மூன்று பேராக 12 தலை முறையினருக்குத் தர்ப்பணமளித்திடல் வேண்டும்.
தந்தை வர்கம் :- ஆண்/பெண் வகையினர்
தாய் வர்கம் :- ஆண்/பெண் வகையினர்
ஒவ்வொரு தலைமுறைக்கும் 90 காயத்ரீயாக 12 வர்க்கத்தினருக்கும் 1008 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபித்திட வேண்டும். அதாவது முதலில் 90 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து, தர்ப்பணம், மீண்டும் 90 முறை ஜபம் மீண்டும் தர்ப்பணம்....... இவ்வாறாக 12 முறை ஜபங்கள்/தர்ப்பணங்கள் செய்திட வேண்டும். ஏழைத் தம்பதிகளுக்கு அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான ஒரு முழு செட் ஆடையை தானமாக அளித்து பித்ரு சாந்திகாயத்ரீ ஜபத்தை நிறைவு செய்திட வேண்டும்.
3. ஸ்வர்ண காயத்ரீ ஜபம்
பொன்னிறக் கதிர்களுடன் பிரகாசிக்கின்ற சூர்ய பகவானை சூர்ய அஸ்தமனத்திற்கு முன்னர் ஹோரை காயத்ரீ ஜப முறையில் பூஜித்துத் தரிசிப்பதே இதன் முக்கியத்துவமாகும்.
ஒரு தினத்தின் 24 மணி நேரங்களும் 24 ஓரைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஓரை விதிகளின்படி ஒவ்வொரு நாளின் முதல் ஓரை அந்த நாளுக்குரிய கிரஹ ஓரையாகத் துவங்குகின்றது.  உதாரணமாக சூர்ய உதயத்தின் போது, ஞாயிறு அன்று சூர்ய ஓரையும், திங்களன்று சந்திர ஓரையும், செவ்வாயன்று செவ்வாய் ஓரையும் துவங்கும்.
(உ.ம்) ஞாயிற்றுக்கிழமைக்குரிய ஓரை நேரங்களாவன : சூர்ய உதயம் முதல்

6-7 சூர்ய ஓரை

7-8 சுக்ர ஓரை

8-9 புத ஓரை

9-10சந்திர ஓரை

10-11 சனி ஓரை

11-12 குரு ஓரை

12-1 செவ்வாய் ஓரை

1-2 சூர்ய ஓரை

இதே வரிசையில் ஞாயிறு முழுதும் ஓரை நேரங்கள் அமைகின்றன. திங்களன்று சந்திர ஹோரையில் சூர்ய உதயம் சந்திர ஹோரையில் தொடங்கி மேற்கண்ட வரிசையில் பிற ஹோரைகள் அமையும். ஸ்வர்ண காயத்ரீ ஜபத்திற்கு இந்த எளிய ஹோரை நேர முறையைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். பஞ்சாங்கத்தைப் பார்த்தும் அறிந்து கொள்ளலாம். ஸ்ரீகாயத்ரீ தேவி அவதரித்த காலம் மாலை சந்தி நேரமாகும். எனவே காயத்ரீ ஜப தினத்தன்று 24 ஹோரைகளிலும் ஒரு ஹோரைக்கு 1008 முறை வீதம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இது இயலாவிடில் காலையில் சூர்ய உதயத்திலிருந்து 3 ஹோரைகளிலும் பகல் 12 மணி முதல் 3 ஹோரைகளிலும் மாலையில் சூர்ய அஸ்தமனத்திற்கு முன் 4 மணி முதல் 7 மணி வரை மூன்று ஹோரைகளில் .... ஆக மொத்தம் 9 மணி நேரங்களுக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைக் கட்டாயம் ஜபிக்க வேண்டும். மானசீகமாகவும் ஜபிக்கலாம். அந்தந்த ஹோரைக்குரிய கிரஹ தேவதையைத் துதித்து ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தைத் தொடங்க வேண்டும். இத்தகைய விரிவான முறையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதே காயத்ரீ ஜப முறையாகும். இதை விடுத்து 24/32/64/108 முறை மட்டுமே ஜபிப்பது என்பது தற்போதைய கலியுக வாழ்க்கைக்கு போதாதது மட்டுமன்றி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையே புறக்கணிப்பது போலாகும். எனவே சித்த புருஷர்கள் அருளியுள்ள மேற்கண்ட முறையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்துப் பரிபூர்ண பலனைப் பெற வேண்டுகிறோம்.

ஸ்ரீகாயத்ரீதேவி திருவெள்ளறை

ஸ்ரீகாயத்ரீ ஸ்தலங்கள்
1. பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீகாயத்ரீ லிங்கம்.
2. திருச்சி – திருவெள்ளறையில் சுதை வடிவில் இருக்கும் ஸ்ரீகாயத்ரீ தேவி.
3. திருச்சி அன்பில் அருகே ஓடுகின்ற காயத்ரீ ஆறு – இம்மூன்று தலங்களிலும் மேற்கண்ட முறையில் ஸ்ரீகாயத்ரீ ஜப தினத்தன்று
1. ஸ்ரீசங்கல்ப காயத்ரீ ஜபம்
2. ஸ்ரீபித்ரு சாந்தி காயத்ரீ ஜபம்
3. ஸ்ரீஸ்வர்ண காயத்ரீ ஜபம்
ஆகிய மூன்று முறைகளைக் கடைபிடித்து ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் அமைகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப நன்னாளைக் கொண்டாடிட வேண்டுகிறோம்.
ஸ்ரீகாயத்ரீ ஜபதினத்தின் விசேஷ அம்சங்கள்
1. புது பூணூலுக்கு மந்திரங்களை நன்கு கிரஹிக்கும் சக்தி உண்டு., கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை இன்று அணிவதால் இந்த பூஜா பலன்கள் பன்மடங்காகின்றன.
2. ஸ்ரீகாயத்ரீ தேவிக்குரித்தான பண்டிகை இது ஒன்றே.
ஆண், பெண் இருபாலாரும் இத்திருநாளில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திடலாம். பெண்களுக்கு மாங்கல்யமே பூணூலாகும். சில கர்நாடகப் பகுதிகளில் பெண்களும் பூணூல் அணிந்து ஹோமங்களை நடத்துகின்றனர். கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையை பூணூலோடு விஸ்வரூப தரிசனம் காண்பது பெறற்கரிய பாக்யமாகும்.
ஸ்ரீகாயத்ரீ மந்திரம்
ஓம்
பூர்புவஸ்ஸுவஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்
என்று ஐந்து பதங்களாகப் பிரித்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைத் தியானித்திடல் வேண்டும். மாதாந்திரத் தீட்டுக் காலங்களைத் தவிர பெண்கள் கூட எப்போதும் இதனை ஜபித்திடலாம்.

மலைக்கோட்டை மகிமை

(சென்ற இதழ் தொடர்ச்சி) – திருச்சி  மலைக்கோட்டை கோயில் தொடர் கட்டுரை....
இங்கிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய அது விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசனம் ஆகும். (வடக்கு ஆண்டவர் வீதியும் கீழ ஆண்டவர் வீதியும் சந்திக்கும் இடம்.) விருத்தீஸ்வர தாயுமான லிங்கமுக தரிசன மகிமை! ஒரு முறை இந்திரன், ஒரு முனிவரின் சாபத்தால் தன் பதவியை இழந்து திரிந்தான். இழந்த பதவியை மீண்டும் பெற இறைவனை வேண்டி பூலோகம் அடைந்தான். தாயுமானவரை நெடுங்காலம் வலம் வந்தான். தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை வேண்டிப் பிரார்த்தித்தான். ஈசன் மனமிரங்கி விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசன இடத்தில் அவனுக்கு தரிசனம் கொடுத்தார். ஸ்ரீமகாலட்சுமியும் இந்திரனின் தவறினைப் பொறுத்து மீண்டும் பதவியைக் கொடுத்து மற்ற முறையான செல்வங்கள் அனைத்தையும் இந்திரனுக்கு அருளினாள். பதவியை இழந்தவர்கள் (dismissed & suspended employees) தங்கள் தவறை உணர்ந்து தாயுமான ஈசரை வணங்கி தினமும் காலை, மதியம், மாலை கிரிவலம் வருவதால் தாங்கள் இழந்த பதவியை மீண்டும் பெற இறைவன் அருள் செய்வான். செல்வங்களை இழந்து வருந்துவோர்க்கெல்லாம் ஒரு சஞ்சீவி மருந்தாக அமைந்துள்ளது விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசனம். மகாலட்சுமியின் பேரருட்கடாட்சத்தை நல்கும் உன்னத தரிசனம். தற்போது கட்டிடங்கள் ம்றைத்திருப்பதால் உச்சிப்பிள்ளையாரை இங்கிருந்து தரிசனம் செய்ய இயலாது. இருப்பினும் சித்தி விநாயகரை தரிசனம் செய்து உச்சிப் பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மானசீகமாக வணங்கி வழிபட்டு அவர்கள் திருவருளைப் பெறலாம்.
கிரிவலத்தில் அடுத்து வருவது ஸ்ரீஅங்காளம்மன் கோயில். இங்கிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய அது மடிப்பிச்சை ஏந்து முக தரிசனம் ஆகும். அற்புதப் பலன்களை நல்கும் விசேஷமான தரிசனம்.
மடிப்பிச்சை ஏந்து முக தரிசனம்!
சிவதர்மன் என்ற வணிகன் நீண்ட நாட்களாகத் தன் தொழிலில் திருப்பம் ஏற்படாமல், முன்னேற்றம் ஏதும் இன்றி வருந்தினான். இதற்குப் பரிகாரம் காண தன் குருநாதரை அணுகி வேண்டினான். குருநாதரோ வணிகனை, கொல்லி மலை சித்தரை நாடிப் பரிகாரம் காணுமாறு கூறினார். குருநாதர் உத்தரவின் படி கொல்லிமலை சித்தரை தரிசித்து வணங்கித் தன் குறையைத் தெரிவிக்கலானான் சிவதர்மன். சிவதர்மனின் நிலையறிந்த சித்தபுருஷர் திருச்சி உச்சிப் பிள்ளையாரை காலை, மதியம், மாலை மூன்று முறை வலம் வந்து மடிப்பிச்சை ஏந்து முக தரிசனத்தை வணங்கும்படி அருளினார். வணிகனும் அவ்வாறே வலம் வந்து உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மன்றாடி அழுது பிரார்த்தனை செய்தான். தொடர்ந்து மடிப்பிச்சை ஏந்து முக தரிசனத்தையும் தினம் மும்முறை பெற்றான். அதனால் அவன் வியாபாரம் பல்கிப் பெருகி உயர்நிலையை அடைந்தான். கடன்தொல்லைகளாலும், தொழிலில் முன்னேற்றம் காணாது துன்பம் அடைந்தவர்களும் இத்தரிசனம் செய்து நல்ல நிலையை அடைந்தார்கள். மடிப்பிச்சை ஏந்து முக தரிசன இடத்தில் இப்போது அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. எல்லா சிறு வியாபாரிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் சுயமாகத் தொழில் செய்வோருக்கும் (self-employed entrepreneurs) தொழிலில் ஒரு திருப்பத்தையும், முன்னேற்றத்தையும் பெற உச்சிப்பிள்ளையாரையும் தாயுமானவரையும் இத்தரிசனத்துடன் மானசீகமாகத் தியானித்து வழிபட வேண்டும். கிரிவலத்தில் அடுத்து வருவது இச்சிமரத்தடி வீரபத்திர சுவாமி கோயில்.
இச்சிமர வீரபத்திர கோயில் மகிமை!
தட்சன் யாகத்தில் உக்ரஹத்தால் ஸ்ரீவீரபத்திர சுவாமி தேவர்கள் பலரை அடித்துத் துன்புறுத்தினார், அங்கங்களை வெட்டி வீழ்த்தினார். சிவபெருமானுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவரை அழைக்காமல் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் தேவர்கள் கடும் தண்டனை அடைந்தார்கள். தக்ஷனின் யாகத்தை முறியடித்தார் வீரபத்திரசுவாமி. யாகத்திற்கு முக்கிய கர்த்தாக்கள் எல்லோரும் பலவிதமான துன்பங்களை அடைந்து தங்கள் தவறுக்கு வருந்தி சிவபெருமானிடம் பிராயச்சித்தம் வேண்டினர். கருணைக்கடலான எம்பெருமான் அவர்களுடைய தவறைப் பொறுத்தருளி உச்சிப் பிள்ளையாரை வலம் வருமாறு பணித்தார். ஸ்ரீவீரபத்திரசுவாமியே அவர்களுடைய தவறுக்குப் பிராயச்சித்தம் அளிப்பார் என்று வரம் அருளினார்.
தவறிழைத்த தேவர்கள் அனைவரும் தாயுமான ஈசனைப் பலகாலம் வலம் வந்து வணங்கினர். அவர்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தர ஸ்ரீவீரபத்திரசுவாமியே இங்கு இச்சி மரமாய் நின்றார். யாகத்தில் வெட்டுமப்பட்ட உதிர சக்தியானது உயர்வாளாய் மாறியது. தேவர்கள் எல்லோரும் இலைகளும் கிளைகளுமாக மாறினார்கள். வீரபத்திர சுவாமியுடன் சேர்ந்து சதா சர்வகாலமும் தாயுமான ஈசரை தரிசித்தவாறே அமர்ந்திருக்கும் அற்புதப் பேரருளைப் பெற்றார்கள். உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வீரபத்திர சுவாமி கோயிலில் உதிர சக்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வீர வாளையும், இச்சிமரத்தையும், உச்சிப்பிள்ளையாரையும் தரிசனம் செய்தால் வீரபத்திர சுவாமியின் திருவருளையும், அனைத்துத் தேவர்களின் அருளாசியையும், உச்சிப் பிள்ளையார் தாயுமான ஈசரின் பேரருட் கடாட்சத்தையும் ஒருங்கே பெறலாம். என்னே இறைவனின் அற்புதம்!
ஒப்பற்ற இந்த தரிசனத்தால்
1. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் (court cases) சுமுகமாகத் தீரும்.
2. ‘வெட்டுவேன்,குத்துவேன்’ என்று எதிரிகளின் பயமுறுத்தல்களால் அவதிப்படுவோர் அத்தகைய துன்புறுதல்களிலிருந்து விடுதலையாவார்கள்.
3. வெட்டுக் காயங்களாலும், ஆயுதப் பிரயோகங்களினாலும் பாதிக்கப்பட்டுத் துன்பமடைந்தோருக்கு மன அமைதியும், துரித நிவாரணமும் கிட்டும். தவறிழைத்தவர்களுக்குத் தக்க தண்டனையையும் ஸ்ரீவீரபத்திர சுவாமி அளிப்பார். ஆனால் ‘பழிக்குப் பழி வாங்குவேன்’ என்ற எண்ணத்தை விட்டு ஸ்ரீவீரபத்திர சுவாமியிடம் சரணாகதி அடைய வேண்டும்.

விஷ்ணுபதி

விஷ்ணுபதி புண்யகாலம்
காஸ்யப மஹாமுனிவர், அவரது தர்மபத்தினி அதிதி, இருவரு குழந்தை வரம் வேண்டிக் கடுத்தவம் மேற்கொண்டனர். புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்கள். புத்ரகாமேஷ்டி யாகத்தை முற்காலத்தில் பலவித ஹோம குண்டங்களை வைத்துச் செய்தனர். ஆனால் தற்காலத்தில் எவ்வளவு வசதி, செல்வம் இருந்தாலும் குழந்தையில்லாப் பெற்றோர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். முற்காலத்தில் புத்ரகாமேஷ்டி யாகம் செய்யும் ரகசியங்களைத் தெரிந்தவர்கள் அதிகம் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அம்முறைபாடுகளையும், ஹோம இரகசியங்களையும் அறிந்தோர் மிகமிகக் குறைந்து விட்டார்கள். புத்ரகாமேஷ்டி யாகம் செய்யத் தகுதிபெற்றவர்கள் யாரென்றால் “வாமன கமண்டலத் தொகுப்பு” என்னும் ரகசியத்தை குரு மூலமாக அறிந்திருக்க வேண்டும். சவுக்குக் கட்டைகளை யாகத்தில் என்றுமே பயன்படுத்தக் கூடாது. அக்னிதான் முக்கியம், எந்தக் கட்டையை வேண்டுமானாலும் அக்னியில் வைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது மிகவும் தவறு.
அக்னி ரகசியங்கள்
ஒவ்வொரு யாக சமித்திலிருந்தும் ஒவ்வொரு விதமான அக்னி ஜ்வாலை வீசும். அந்த அக்னி ஜ்வாலைகளின் ரகசியத்தை “ருத்ராக்னி வண்ணப்படலம்” என்ற வாமன தந்திரத்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த சமித்தின் மூலம் வருகின்ற அக்னியை அறிந்து அந்த அக்னியில் எந்த மந்திரத்தை ஓதி அவிர்பாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தால் தான் புத்ரகாமேஷ்டி யாகத்தைப் பூரணமாகச் செய்ய முடியும். ஆகவே தயவு செய்து யாரும் சவுக்கு கட்டைபோன்ற சமித்து வகையில்லாத மறக்கட்டைகளை வைத்து ஹோமத்தைச் செய்ய வேண்டாம். அரசு, ஆல், அத்தி போன்ற சமித்து மரக்கிளைகளையே ஸ்தாபன அக்னியாக ஏற்படுத்தி அதில்தான் ஹோமங்களை வளர்க்க வேண்டும். அடுத்து, தாமரை இலையில் பிடித்த பசுஞ்சாணத்தை அருகம்புல்லால் மந்திரித்து (அதற்குரித்தான மந்திரத்தை குரு மூலமாகத் தெரிந்து கொள்ளவும்.) தர்ப்பையில் “சக்ரவாக” மந்திரத்தை மந்திரித்திடுக! கால்படாத உயரமான இடத்தில் செம்மண் சட்ட ஓட்டில் (Tiles) வடகிழக்குப் பார்த்து வரட்டியைத் தட்டிக் காய வைத்து “சுடுபுலான்” என்னும் சித்த முறை தைலம் தடவிய கதர் துணியில் மடித்து எடுத்துத் தூபம் காட்டி சுரைக்குடுவையில் வைக்க வேண்டும். இவ்வாறு மந்திரித்த பசுஞ்சாண வரட்டியைத்தான் ஹோமத்தில் வைத்து அவிசு இடவேண்டும்.

ஸ்ரீகாச்யப லிங்கம் வாணியம்பாடி

இதைப்போல் பலவிதமான இரகசியங்கள் உள்ளன, புத்ர காமேஷ்டி யாகத்தில் செய்ய வேண்டிய முறைகளில்! இவ்வாறு முறையாக புத்ரகாமேஷ்டி யாகத்தைச் செய்தார்கள் காஸ்யப முனிவரும் அவருடைய தர்மபத்னி அதிதியும். அந்த யாகத்தின் பயனாக ஸ்ரீமந்நாராயணனே வாமன மூர்த்தியாகப் பிறந்தார். ஸ்ரீவாமனமூர்த்தியே மஹாபலி சக்ரவர்த்தியின் அகந்தையை அடக்குவதற்காக யாசகம் பெற வந்தார். மஹாபலிக்கு வாமனனாக வந்தவர் ஸ்ரீமந்நாராயாணனே என்பது தெரியாது. ஆனால் பலிச்சக்ரவர்த்தியின் குருவான சுக்ராச்சாரியார் “வந்திருப்பவர் ஸ்ரீமந்நாராயணனுடைய அவதாரம்! உன்னை அழிப்பதற்காக வந்திருக்கிறார்!” என்று சொன்னார்.  இருந்தாலும் “வந்திருப்பவர் சிறுபிள்ளை தானே! என்ன கேட்டு விடப் போகிறான்!” என்று அகந்தையால், “எது கேட்டாலும் கொடுப்பேன்!” என்று வாக்களித்து விட்டான். வாமன மூர்த்தி மூன்றடி மண் கேட்டது அனைவருக்கும் தெரியும். மஹாபலித் தாங்கிய கமண்டலத்தின் வாயை சீடனைக் காக்க வேண்டும் என்று எண்ணி வண்டு உருவம் கொன்டு கமண்டல துவாரத்தை அடைத்து விட்டார், குருவான சுக்ராச்சாரியார்! வாமனர் தர்பையைக் கொண்டு கமண்டலத்தின் வாயை அடைத்திருந்த வண்டுருவமாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்களைக் குத்திவிட்டார். ஆகவே குருமார்கள், சீடர்களைக் காக்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தாலும் குருமார்கள் சொல்லி கொடுத்த பூஜை, தவம், தானம் அனைத்தையும் செய்து அதனால் வரும் புண்ணியத்தின் பலனால் “தான்” என்ற அகந்தையை வளர்த்துக் கொள்கிறார்கள். முற்காலத்திலும் தற்காலத்திலும் குருமார்கள் உதவி செய்யப் புகுந்திடில் குருவிற்கு தண்டனைதான் கிட்டுகின்றது! அன்றும் இன்றும்! அதுபோலவே சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை இழந்தார். வாமன அவதார மூர்த்தி, மஹாபலியினால் தாரை வார்த்துப் பெற்ற நீரை ஏற்று விஸ்வரூபம் எடுத்தார். விண்ணை நோக்கித் தூக்கிய திருவடி! அனைத்து உலகங்களையும் கடந்து சத்யலோகம் வரை சென்றது! அப்போது சத்யலோகத்தில் இருந்த பிரம்மதேவர், உயரத் தூக்கப்பட்டத் திருவடியினை, மஹா அற்புத சிறப்பு வாய்ந்த கமண்டலமாகிய “பாஸ்கர கண்டாமணி கமண்டலத்தின்” அதி அற்புத நீரால் திருமாலின் பாதத்தை அபிஷேகித்து பூஜித்தார். அந்த பாஸ்கர கண்டாமணி கமண்டல தீர்த்த மஹிமையைப் பற்றிப் பல ஆண்டுகள் சொல்லலாம்.! பிரம்மரால் அபிஷேகிக்கப்பட்ட விஷ்ணுபாத தீர்த்தம் பூமியில் ஆறு இடங்களில் விழுந்த நாளே தாது வருஷ விஷ்ணுபதி புண்யகாலமாகும். இந்த விஷ்ணுபாத தீர்த்தத்தை அனைவரும் பெற்று, தான தர்மங்கள் செய்து, தர்ப்பணங்கள் கொடுத்து, பெரியோர்களுக்குப் பாத பூஜை செய்து  (80 வயதிற்கு குறையாத, நிறைய குழந்தைளுடன் இருக்கின்ற தம்பதிகள்) தீர்த்தத்தைத் தலையில் தெளித்து கொண்டு குடும்ப சுகத்தை முறையாக இறை நிறைவுடன் அனுபவிக்குமாறு வேண்டிகொள்வதே விஷ்ணுபதி புண்யகாலத்தின் சிறப்பாகும். இந்த திவ்ய விஷ்ணுபதி புண்யகாலத்தை கொண்டாட வேண்டிய திருக்கோவில்கள்:-

விண்ணளந்தாய் விதி அளப்பவனும்
நீயே வாமனா !

1. திருக்கோவிலூர்.
2. திருக்கண்ணபுரம்.
3. திருக்கண்ணங்குடி.
4. திருக்கண்ணமங்கை.
5. திருக்கண்ணகவிதலம்.
6. காஞ்சிபுரம் திரிவிக்ரமஸ்வாமி (உலகளந்த பெருமாள் கோவில்)
என்ற ஸ்ரீபிரும்ம அபிஷேக தீர்த்தம் விழுந்த ஆறு திருக்கோவில்களில் செய்வது மஹாவிசேஷமாகும். இதனால் பெறும் பலன்கள் யாதெனில், முன்னோர்களால் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களைத் தீய வழியில் அழித்தவர்களும், உறவினர் சொத்துக்களை அபகரித்தவர்களும், விதவைப் பெண்களின் சொத்துக்களை ஏமாற்றியோரும், நம்பிக் கொடுத்து விட்டுச் சென்ற சொத்துக்களை/ நண்பர்களை ஏமாற்றியவர்களும் இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் திருவிக்ரம ஸ்வாமியின் திருமஞ்சன திருப்பாத நீரைத் தலையில் தெளித்து தான் செய்த துரோகத்திற்குப் பரிகாரம்தனை மேற்கண்ட முறையில் செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் இந்த விஷ்ணுபதி புண்யகாலம்! வரும் விஷ்ணுபதி புண்யகாலம் 16.8.1996 அன்று விடியற்காலை 1½ மணி முதல் 10 ½ மணி அமைகின்றது.

பிரசாத வகைகள்

அடியார் : குருதேவா! சிலசமயங்களில் நாம் உண்டு எஞ்சியதை அன்னதானமாகக் கொடுத்து விடுகிறோம். நம் ஆஸ்ரமத்தில் மார்கழி முதல் தேதி விடியற்காலையில் கொடுக்கப்படும் சர்க்கரை, வெண்பொங்கல் பிரசாதம் சிறிதளவில் வழங்கப்படுகின்றது! இதற்கெல்லாம் காரண காரியங்கள் உண்டா ?
சற்குரு : ஏனில்லை! இவ்வுலகில் நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரணமுண்டு! ஒரு நாயோ, ஆட்டுக் குட்டியோத் தன் வாலை ஆட்டுவதற்குக் கூடக் காரணங்கள் உண்டென என் குருநாதர் அடிக்கடி சொல்வார். அவற்றை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். எனவே ஒரு விரலை சற்றே அசைப்பதற்கும் காரணம் உண்டு, இறைசக்தியின்றி ஒரு சுண்டு விரலைக் கூட நாம் அசைக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்! இந்த ஆழ்ந்த நம்பிக்கையை நன்கு  வேரூன்றச் செய்தால் தான் “அனைத்தும் இறையாணையின் படி தான் நிகழ்கின்றன. நம் விருப்பு, வெறுப்பிற்கு எதிலும் இடமில்லை” என்பதை உணரலாம். நாம் உண்டபின் மிஞ்சுகின்ற உணவை அளிப்பதற்கு “காரணப் பிரசாதம்” என்று பெயர். அறியாமல் செய்கின்ற சிறு தவறுகளுக்கு இது பிராயச்சித்தம் தருகின்றது! நம் வாழ்நாளில் கோடிக்கணக்கான சிறு சிறு தவறுகளைச் செய்கின்றோம். இதற்கான பரிகாரமே தினசரி இரவு நேர அன்னதான முறையாக (இராப்பிச்சை) அக்காலத்தில் இருந்தது. அன்னத்தை இலை நிறைய அள்ளித் தருவது ஸ்தூலப் பிரசாதமாகும். பித்ருப்ரீதிக்கு இது உதவுகிறது.  சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் போன்றவற்றைக் (கோயிலில் அளிப்பது போல) ஓரளவு வயிறாரும்படி சூட்சுமப் பிரசாதமாகும். மார்கழி விடியற்காலையில் வயிறு, குறைந்த அளவு உணவையே ஏற்கும். சூட்சுமப் பிரசாதம் இறைநினைவில் மனதை நிறுத்தும். தெய்வீக சிந்தனையைப் பெருக்கும். ஆனால் இம்மூன்றிலும் பிரசாதத்தின் சக்தியானது அதனைத் தயாரிக்கும் முறை, செய்வோரின் எண்ணங்கள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும் இம்மூன்றைப் பற்றியும் நிறைய விளக்கங்கள் உண்டு. தக்க சற்குருவை நாடி அனைத்து ஆன்மீக இரகசியங்களையும் பெற்றிடுக! அவ்வப்போது “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலம் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. சில சமயங்களில் நாம் உண்டு எஞ்சிய எச்சில் உணவைப் பிச்சைகாரருக்கு அளித்திடுவோம். நாய், பூனை, பசுவிற்கும் வைப்பதுண்டு! பசுவிற்கு ஒரு போதும் எச்சில் உணவை அளிக்காதீர்கள்! அதுவே தானாக இலை, உணவை உண்பதில் தவறில்லை. பஸ், இரயிலில் பயணம் செய்கையில் எவரேனும் கேட்டிடில் கையில் எஞ்சியிருக்கும் உணவை அப்படியே தானமாக அளித்து விடுகிறோம். இவ்வாறாக (எச்சில்) உணவை அளிப்பதற்கு “காரணப் பிரசாதம்” என்று பெயர். இதனால் சிறிய முறையான லௌகீக ஆசைகள் நிறைவேறும்.
இவ்வாறாகத் தானங்களில் பலவகை உண்டு. ஆன்மீகம் என்பது எளிதல்ல! பிற ஜீவன்களுக்காக, ஜாதி, மத, இன, பேதமின்றி மட்டுமல்லாது வாயில்லா ஜீவன்களுக்கும் பயன்படும் வகையில் நாம் வாழ்ந்தால் தான் பிறவியற்ற நிலையைப் பெறலாம். இதற்கு தான தர்மங்களே பிரதானமாகும் என்பதை உணர வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

“கதியே போற்றி கனியே போற்றி” இது மாணிக்கவாசகருடைய வாக்கு.... கதி என்றால் “நற்கதி”.... “நற்கதி” என்றால்..... யாருக்கு? மனிதனுக்கு மட்டுமா அல்லது எல்லா உயிரினங்களுக்குமா... ? என்று நாம் கேட்டால்.... அதற்கு விடை என்ன தெரியுமா?..... அனைத்துக் கோடி யோனி பேதங்களிலும் உருவாகும் உயிர்களுக்கும் நற்கதியளிப்பவன் சிவன் என்பது தான் அந்த விடை!... அப்படி.. மனிதன் அல்லாத ஒரு சிற்றுயிருக்குக் கிட்டிய நற்கதி பற்றிய ஓர் உண்மை நிகழ்ச்சியை இங்கு காணப்போகிறோம்.
ஆப்பரிக்கக் காட்டில் வசித்து வந்த; சுமார் 20 அடி நீளமுள்ள ஒரு கருநாகப் பாம்பு, அதை ஒரு ஆப்பிரிக்க தனவான் பிடித்து உணவிட்டு வளர்த்து வந்த சமயம்..                           
ஒரு முறை இந்தியாவிற்கு அவன் வர நேரிட்ட பொழுது தன்னுடைய Petஐயும் ஒரு பெட்டியில் போட்டு அன்புடன் அழைத்து வந்திருந்தான்.  கடல் வழிப்பயணம்..அவன் இறங்கிய இடமோ கேரளத்துக்குச் சொந்தமான கொச்சின் என்ற இடம், Port லிருந்து வெளியேவந்த போது, அவன் நல்ல குடிபோதையிலிருந்தான்... தள்ளாடியவாறே அவன் நடந்து வந்து கொண்டிருந்த போது அவனுக்கு மயக்கம் வந்து கீழே சாய்கிறான்....  அப்பொழுது அந்த நாகம் இருந்த பெட்டி திறந்து கொள்ள... சுதந்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாகமும் ‘சடார்’ என்று வெளிவந்து தனக்கேற்ற இடத்தைத் தேடிக்கொண்டு வேகமாக வருகிறது. வழியில் ஒரு குடிசை.... அதற்குள் புகுந்துவிடுகிறது...... தலையைத் தூக்கி அங்கிருக்கும் மனிதனைப் பார்க்கிறது...அவனோ ஒரு “தாந்த்ரீக மந்திரவாதி”... டக் கென்று சிறிது விபூதியை எடுத்து அதன் மீது தூவி அதை ரப்பர் போல் சுருட்டிப் பெட்டிக்குள்ளே போட்டு அடைத்து விடுகிறான்.
சரியாக அந்த நேரம் பார்த்து அந்த மந்திரவாதியினுடைய வாடிக்கையாளன் ஒருவன் அங்கு வருகிறான். அவனுக்கோ வீட்டில் சொத்துத் தகராறு.... அண்ணனைத் தீர்த்து விடுவதற்காக அந்த மந்திரவாதியிடம் வந்து பணத்தையும் அள்ளி வீசுகிறான்... மந்திரவாதியும் சிறிதும் தயங்காமல் தன்னைத் தேடிவந்த கருநாகத்தையே அந்த அண்ணன் மீது மாந்த்ரீகமாக ஏவுகிறான். நாகமும் புற்ப்படுகிறது......
இங்கே சென்னை இராயபுரம் அங்காளம்மன் கோயிலில் சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்த பெரியவர் (உத்தம குரு) திடீரென்று எழுந்து அருகிலிருந்த ஒரு குச்சியைக் கையில் பிடித்தவராக....... “அடே மடையா என்ன காரியம் பண்ணதுணிஞ்சுட்ட...... என்று சொல்லிக் கொண்டே அந்தக் குச்சியால் குறுக்கும், நெடுக்குமாக, வட்டமாக.... இப்படி பல கோடுகளைப் போட்டுக் கொண்டே பிரகாரம் முழுதும் “இப்படிவா.... அப்படித் திரும்பு., நேராகவா...” என்றெல்லாம் இஷ்டத்துக்கும் பேசியவராக..... கோடுகளை இன்னமும் விடாமல் போட்டுகொண்டே , கிட்டத்தட்ட பகல் முழுவதும் செய்து வருகிறார். சிறுவனும் குருவினுடைய இச்செயலைப் புரிந்துகொள்ள முடியாமல் திக்கித் திணறுகிறான்.....
முடிவில் பெரியவர் “அப்பாடி..... “ என்று கூறியபடி நிம்மதியாக அமர்கிறார். அப்பொழுது .... “புஸ்ஸ்” என்ற சத்தம் கேட்டு சிறுவன் அதிர்ந்துபோய் திரும்பிப் பார்க்க... நம்முடைய ஆப்பரிக்க ஜீவன் அந்த கருநாகம் தான்....! மூச்சு வாங்கிய வண்ணம் சுமார் 5 அடி எழும்பி நிற்கிறார்!  எங்கோ .... யார் மேலோ ஏவப்பட்ட அந்த சர்ப்பம் இப்பொழுது அங்காளம்மன் கோயிலில் பெரியவர் காலடியில் வந்து நிற்கிறது..
சிறுவன் : “சுவாமி சுவாமி பாம்பு சுவாமி”
பெரியவர் : “அட..... போடா... ஏதோ புதுசா சொல்ற! சுமார் 600 கிலோ மீட்டர் அதை இழுத்துக்கிட்டு வந்தவனுக்கு தெரியாதா அது பாம்புன்னு...... அது ஊருக்கு புதுசுதானே.... அதானல் தான் அதுக்கு இங்கிருந்து ரூட்போட்டு வலிச்சு இழுத்துட்டேன்”,
சிரிக்கிறார்..... கடவுளே .... பெரியவர் பாம்பிற்குக் கோடுபோட்டு Route காண்பித்தது எந்த விஞ்ஞானத்தைச் சாரும்..! இப்படிக் கூறிவிட்டு அந்த பாம்பிருந்த பக்கம் அனாயாசமாகத் திரும்பி...... “ஏண்டா நயினா! என்ன வேலை நீ செய்யத் துணிஞ்சிட்ட.... நீ வந்த பரம்பரை என்ன! வழி என்ன! ஏதோ ஒரு மடையன் ஏவினான்னா நீயுமா பிச்சிக்கினு கிளம்புவியா..... நம்ம பரசுராமர் கொச்சியில் ஒரு கோயில் கட்டி அங்கு நாகப் பிரதிட்டை செய்தபோது அவர் (பரசுராமர்) தன் நெத்தியில் இட்டு கிட்ட விபூதி கொஞ்சம் புத்துல விழுந்தது... அது உன் தாத்தா மேல விழுந்து அவனுக்கு முக்தி கெடச்சுது...”
“அதே பரசுராமர் தன் சீடர்களோடு இருந்தப்ப அந்த ‘அண்ணன்’ யாரை அந்தப்பாம்பு கொல்லச் சென்றதோ.. அவன் அவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு போட்டிருக்கான்... பரசுரமரோட அருள் வாங்கினது உன் (பாம்பின்) பரம்பரை...... அதே பரசுராமரோட அருளை வாங்கினது அந்த “அண்ணா” பரம்பரை... இப்படி தெய்வீகத்துல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க அடிச்சுக்கிட்டா உலகம் சிரிக்காது?” .... “சரி.... சரி என் பின்னால் வா.. உன்னை இனி அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிச்சுடறேன். ” என்று கூறியவராக நடக்க ஆப்பரிக்க நண்பரும் (!) பவ்யமாக (!) அவர் பின்னே செல்கிறது....
சிறுவனோ ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவாறு பெரியவரைத் தொடர்ந்து சென்றான் ....
பெரியவர் குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கி நிற்கிறார். நாகமும் அவருடைய ஆணைக்குக் காத்து நிற்கிறது..
. அங்கு ஒரு படிக்கட்டில் இருந்து ஓர் ஓட்டையைக் காட்டி   “டேய் (பாம்பிடம்) இதுக்குள்ள பூந்துக்க நீ உன் தாத்தாகிட்ட போயிடுவே” என்று கூற நாகமும் அந்த ஓட்டைக்குள் புகுந்து மறைந்து விடுகிறது..... ஆஹா.... என்னே பெரியவர்களின் கருணை!.....  நாம் நாயன்மார்களின் உண்மை  வரலாற்றைப் படித்திருக்கிறோம்... அதில் ஈசன் கொடுத்த தங்கக் கட்டிகளை (எல்லாம் அடியார்களுடைய பசி தீர்க்கத்தான்) ஒரு கோயில் குளத்தில் போட்டுவிட்டு..... பல கல் தொலைவிலுள்ள வேறொரு கோயிலின் குளத்திலிருந்து அதை எடுத்துக் கொண்டதைப் போல... இங்கு அங்காளம்மன் கோயில் குளத்தில் உள்ள ஓர் ஓட்டையில் இறங்கினால் நாகலோகம் சென்றடைந்து விடலாம் என்றால் அதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது....!

ஆன்மீக வினா விடை

சீடன் :  சென்ற பௌர்ணமியன்று (30.6.1996) நள்ளிரவில் திருஅண்ணாமலை உச்சியில் தீபம் ஒன்று தென்பட்டதே, இதற்கான விளக்கம் தர வேண்டுகிறேன்.
சற்குரு : திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபப் பெருவிழாவில் மட்டுமல்லாது சில நாட்களில், சில சமயங்களில் அபூர்வமாக ஜோதி தென்படும். காட்டுத்தீ, மனிதர்கள் தீப்பந்தம் ஏற்றுதல், வேடிக்கை விளையாட்டுக்காகப் பலர் தீபமேற்றுதல் – போன்று பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் எதுவும் தெய்வ சக்தியின்றி நிகழ்வதில்லை என்பதே நிதர்சன உண்மை. இறைவன் தன் திருவிளையாடல்களை மிகமிகச் சாதாரணமான முறைகளில் நிறைவேற்றி விடுவதால் நம்மால் எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய ஆன்மீக ரகசியங்களை உய்த்து உணர்விக்க அவற்றைத் தொட்டுக் காண்பிப்பவரே சற்குரு ஆவார்? இன்றைக்கும் பல மகரிஷிகளும், யோகியரும், சித்புருஷர்களும் திருஅண்ணாமலையில் நட்சத்திர ஜோதி வடிவில் காட்சி தருகின்றனர். காரணம், அவர்களுடைய ஜோதி மயமான ஸ்தூல வடிவை நம் கண்களால் பார்க்கின்ற சக்தி நம்மிடம் இல்லை. சூரியனைவிடப் பலகோடி மடங்கு பெரிதான வானில் உள்ள நட்சத்திரங்களை ஒரு சிறு தீபம் போல்தானே நாம் இன்று பார்க்கின்றோம்? இறைவனே தன்னை மலையாக விரித்து ஸ்தூல ரூபத்தில், நம் கண்ணுக்குத் தெரியும் வடிவில் காட்சியளிப்பது திருஅண்ணாமலை திருத்தலத்தில் தானே! ஒளி வடிவத்தில் மட்டுமன்றி ஒலிவடிவத்திலும் இறைத் தூதுவர்களான மகரிஷிகள், யோகியர் போன்றோர் பூலோகத்திற்கு ஓடோடி வருகின்றனர். எததனையோ கோடி யுகங்கள் சீரிய தவத்தை மேற்கொண்டிருக்கும் மகரிஷிகள் கூட, பரமாத்மாவின் திவ்ய தரிசனத்துக்காக, பூலோகத்தில், அதுவும் திருஅண்ணாமலை திருத்தலத்துக்குத் தான் வருகின்றனர். தேவர்கள், கந்தர்வர்கள், மகரிஷிகள், சித்புருஷர்கள், யோகியர், ஞானிகள், முமூட்சுகள், சிவலோக, வைகுண்டலோக வாசிகள் போன்றோர் அனைவரும் ஜோதி வடிவமான வாகனங்களில் தான் திருஅண்ணாமலைக்குப் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இங்கு வந்தவுடன் சாதாரண மானுடர்களைப் போலவே நடந்து திருஅண்ணாமலையை வலம் வருகின்றனர்.
ஜோதியாய்...... அவர்கள்..... மிகவும் சக்தி வாய்ந்த தீபப் பிரகாசம் உடைய அவர்களுடைய தேவலோக வாகனங்களை சாதாரணமாக பூமியில் நிறுத்த இயலாது. மேலும் இவ்வாகனங்களின்றி அவரவர் தத்தம் லோகமும் திரும்ப இயலாது. Flying saucerஐப் போல் இன்றைக்கும் தெய்வீக வாகனங்கள் வந்திறங்குகின்ற திருத்தலங்கள் பல உண்டு. சற்குரு அருள் பெற்றோர்க்கு இவை தாமாகவே தரிசனம் தரும்.  திருப்பதி, திருத்தணி, மருதமலை, பழனி, சென்னை திருக்கச்சூர் மலைக்கோயில், சதுரகிரி மலை, தங்கால் மலை, வெள்ளியங்கிரி மலை, சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மப்பேடு, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இரவில் தேவலோக வாகனங்கள் வந்திறங்குவது உண்டு. இதில் வரும் தேவாதி தேவர்கள் இரவில் ஸ்வயம்பு மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தித் தம் புண்ய சக்திகளையும் கலியுக மக்களுக்காக கோபுரங்களிலும் மலைகளிலும் இட்டுச் செல்கின்றனர். அவர்களுடைய தெய்வீக வாகனங்களும், ரூபங்களும், ஆபரணங்களும், க்ரீடங்களும், ஆயுதங்களும், தேவலோக புஷ்பங்களும் நமக்கு சில தருணங்களில் ஜோதியாகக் காட்சியளிக்கிறது. இது பெறற்கரிய பாக்கியமாகும்.
நாடுவீர் குருவை......
ஆனால் இவ்வாறான அபூர்வ ஜோதி தரிசனங்களைப் பற்றிய விளக்கங்களை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஜோதி தெரிந்த நேரம், திக்கு, இடம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு சற்குருவை நாடி விளக்கம் பெறவும். பல நூறு பேர்களுக்கும் தெரிகின்றவாறு ஜோதி தரிசனம் கிட்டிடில், குறைந்தது மூன்று மகரிஷிகளேனும் அந்த நேரத்தில், அவ்விடத்தில் நற்காரியம் புரிய அனுக்கிரகம் செய்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தந்த தினத்திற்குரிய நட்சத்திர தேவதை திருஅருணாசலத்தை கிரிவலம் வருகையில் ஒளிரூபமாகக் காட்சி தருவதுண்டு. இத்தரிசனத்துக்குப் பிறகு அந்தந்த நட்சத்திரத்துக்குரிய அபிஷேக ஆராதனையுடன் வழிபடுவது சிறந்ததாகும். நட்சத்திர உதக சாந்தி என்ற வேதமந்திரப் பகுதியில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கு உரிய மந்திரங்களை ஜபித்து அர்க்யம் விடுதல் விசேஷமானதாகும். இவற்றுக்கு ஈடான தமிழ்மறை மந்திரங்களைத் தக்க சற்குருவை நாடிப் பெற்றுப் பயனடைய வேண்டுகிறோம். பொதுவாக, இத்தகைய அபூர்வ ஜோதி தரிசனத்துக்குப் பிறகு இல்லத்துக்குத் திரும்பியவுடன் செய்ய வேண்டிய விளக்கு பூஜையினால் தான் ஜோதி தரிசனத்தின் பரிபூர்ண அனுக்ரஹப் பலன்களைப் பெற முடியும். திருஅண்ணாமலையில் எத்திசையில் ஜோதி தரிசனத்தைப் பெற்றார்களோ அதே திசையில் இல்லத்திலும் தீபம் கோயிலிலும் ஐந்து முக பஞ்ச எண்ணெய் தீபம் (நல்லெண்ணெய் + தேங்காயெண்ணெய் + பசு நெய்+ விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய்) ஏற்றி “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சரத்தை ஓதி வணங்கிட வேண்டும். ஐந்து அகல் விளக்குகளையும் ஏற்றிடலாம். இவை தவிர அக்னியால் வரும் துன்பங்களை அறிவிக்கும் முகமாகவும் தீபம் தோன்றுவதுண்டு. ஆனால் ஜோதிக் கிரணங்களின் வடிவைக் கொண்டும் அன்றைய செவ்வாய் கிரஹ சஞ்சாரத்தைக் கொண்டுமே இதனை சித்புருஷர்கள் நிர்ணயிக்கின்றனர் . தக்க சற்குருவை நாடி விளக்கம் பெறுதலே உத்தமமானது. உடல் ஒரு ஹோம குண்டம்! பசியே அக்னி! நாம் உண்ணும் உணவே ஆஹுதிகள்! எனவே பசி அக்னியால் வாடும் ஏழைகளுக்கு உணவளிப்பது சிறந்த ஹோம பூஜையாகும். அன்னதானத்தில் அனைத்து தரிசனங்களும் பூஜைகளும் அடங்குகின்றன. இதனையும் உணர்விப்பதே ஜோதி தரிசனம்! ஜோதி தரிசனப் பலன்கள் ஒவ்வொரு ஜீவனின் தேக அமைப்பிற்கும் அவரவருடைய கர்மவினைப் பாங்கிற்கேற்பவும் மாறுபடும். எனவே இத்தகைய அபூர்வ தரிசனங்கள், அற்புதமான கதைகள், அதிசயங்கள் நிகழ்கையில் அந்நேரம், நட்சத்திரம்தனைக் குறித்து ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து நேரடியாக விளக்கங்கள் பெறுதலே உத்தமமான அணுகுமுறையாம்!

அமுத தாரைகள்

1. உட்கார்ந்த/படுத்த நிலையில் கால்களை ஆட்டக் கூடாது. வலது காலை ஆட்டிடில் மூட்டு சம்பந்தமான நோய்களும் இடது காலை ஆட்டிடில் வாயு சம்பந்தமான பிடிப்புகளும் ஏற்படும்.
2, மஞ்சள், துளசி, குங்குமச் சிமிழ், விபூதி மரவை, சந்தனக் கல்/கட்டை போன்ற மங்களைப் பொருட்களில் எப்போதும் ஆயிரக்கணக்கான தேவதைகள் உறைகின்றனர். எனவே இவற்றைத் தினந்தோறும் சுத்தம் செய்து பொட்டிடுவது சிறந்த பூஜையாகும். குறிப்பாக சந்தனக்கல், கட்டை இரண்டையும் பிரித்திடாமல் எப்போதும் ஒன்றாகவே ஒரு மஞ்சள் துணியில் சேர்த்து வைத்திட அதன் புனிதத் தன்மை பொங்கிப் பெருகுகின்றது.
3. இதய நோய்கள் நலம் பெற :- இதய நோயால் துன்பப்படுவோர் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் கொடிமரத்திற்கு முன்னும் பின்னும் நந்தி உள்ள சிவன் கோயில்களில் இறைவனை நம்பி வாழும் ஏழைகளுக்கு சர்க்கரைப் பொங்கல், மசால் வடை தானம் செய்து, வழிபட்டு வந்தால், நோய் குணமாகி நலம் பெறுவர். மேலும், அவர்கள் கண்பார்வை இல்லாதோருக்குத் தங்களால் இயன்ற சேவை, உதவிகளை அவ்வப்போது செய்து வந்தால் நோயிலிருந்து பூரண குணம் பெறலாம். விழி இழந்தோருக்குச் செய்யும் சேவையே, இதய நோய்களுக்கு அற்புதமான மருந்து!
4. குடி, புகை, போதை, கேளிக்கை, தகாத உறவு, முரட்டுத்தனம் போன்றவற்றால் மனைவியை வதைக்கும்/வருத்தும் கணவன்மார்கள் திருந்தி வாழ்ந்திட ஞாயின்று ஸ்ரீசரபேஸ்வரருக்கு ராகுகாலத்தில் (மாலை 4.30 – 6.00) அபிஷேக ஆராதனைகள், குறிப்பாக பாலபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால் பாயசம் அளித்து வர கணவனின் மூர்க்கத்தனம்/ தீய பழக்கங்கள் தணிவு பெறும். (உ.ம்) சென்னை – கோயம்பேடு சிவாலய முன் மண்டபம், சென்னை – காம்ப்ரோட் அருகே உள்ள மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம், திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயம், திருஅண்ணாமலை அம்பிகை முன்மண்டபம் etc…)

ஸ்ரீநர்த்தன விநாயகர்
திருவாசி

5. தங்க நகைகள் வாங்குவதற்கும் பெண் பார்க்கச் செல்வதற்கும் அஸ்த நக்ஷத்திரம் மிகச் சிறந்ததாகும். நகை வாங்கச் செல்கையில் தாழம்பூக்களினால், பூவின் கூரான நுனி மேலிருக்கும்படி அலங்கரித்து தாழம்பூப் பாவாடை சாற்றி அம்பாளை வணங்கிச் சென்றிட மேலும் மேலும் சொர்ணம் வந்து சேரும். தாழம்பூப் பாவாடையை பூவின் கூர்நுனி கீழே வரும்படி வைத்து அம்பாளுக்குச் சாற்றினால் ஆடைகள் பெருகும். மங்களகரமான புடவை, ரவிக்கைத் துணி வந்து சேர்ந்தவாறு, இல்லத்தில் மங்களம் பொங்கும்.
6. பயணத்திற்கு ஏற்றது மூல நக்ஷத்திரமாகும், செம்பருத்தி + அருகம் புல்லினால் மாலை கட்டி மூல நக்ஷத்திரத்தில் நர்தன விநாயகருக்குச் சாற்றி வணங்கிப் பயணம் மேற்கொண்டிடில் வியாபாரம், திருமண விஷயங்கள், தேர்வுகள் போன்றவை காரிய சித்தியாகும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்குப் பசித்துன்பம் பிராயணத்தில்/ எப்போதும் பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றது. சண்பகப் பூமாலையை முருகனுக்குச் சாற்றி தேன் + தினை மாவு கலந்த இனிப்பினைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் பசியால் ஏற்படும் உடல் துன்பங்கள் தீரும்.
7. பலருக்கு வீடு சரியாக அமையாமல் தவிக்கின்றனர். கையில் பணமிருந்தும் வீடு கிட்டாமல் தட்டிப்போய் விடுகின்றது. நல்ல இல்லத்தைப் பெற விரும்புவோர் செவ்வாய் தோறும் ஆறுமுகனுக்கு அரளிப் பூமாலை சாற்றி ஆறு ஏழைக் குழந்தைகளுக்கு அன்னமிட்டு வந்தால் நன்முறையில் இல்லம் கிட்டும்.
8. வெள்ளை நிற ரோஜாப் பூவை அணிதல் கூடாது. அணிந்திடில் வாய்ச்சண்டைகள் வலுத்து, உறவு நட்பு முறியும் , மாசீர் தனுவசி என்னும் அற்புத தேவதை வசிக்கின்ற மஞ்சள் நிறரோஜா தான் அளப்பரிய தெய்வீக சக்தியுடையது. காரிய சித்தியைத் தரும். பெண் பார்த்தல், இண்டர்வ்யூ, தேர்வு போன்றவற்றிற்கு மஞ்சள் ரோஜா அணிந்திடுக ( சுயநலமற்ற, பிறருக்குத் தீங்கிழைக்காத) நற்காரியங்கள் சித்தியாகும்.!
9. இண்டர்வ்யூ போன்ற போட்டி நிறைந்த இடங்களுக்குச் செல்கையில் 5, 10, 15 என்றவாறாக ஐந்தைந்து பூக்களாகச் செம்பவள நிற ரோஜாவினை இறைவனுக்குச் சாற்றி அணிந்து சென்றிடில் கார்ய சித்தியாகும்! காகிதப்பூ, கனகாம்பரம், காட்டுமல்லி போன்ற (மணமற்ற) புஷ்பங்களை ஒரு போதும் சூடாதீர்கள், இறைவனுக்கும் சாற்றுதலும் கூடாது. மணமற்ற பூக்களைச் சூடிடில் வாழ்க்கையில் பிரிவுகள், மனத் துயரங்கள், விவாகரத்து போன்றவை உண்டாகும்.
9. பில்லி, சூன்யம் , திருஷ்டி, ஏவல் போன்றவற்றால் ஏற்படும் எதிரிகளின் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மகிழம் பூ மாலையை ஸ்ரீநரசிம்மருக்குச் சாற்றி சுதர்சனத் துதிகள் ஓதி வழிபட்டிடுக! மகிழம் பூவிற்கு எதிர்வினைகளை முறியடிக்கும் ஆன்மீக சக்தியுண்டு.
10. அறுவை சிகிச்சை, வியாதிகளுக்கு மருத்துவரை அணுக, பூசநட்சத்திரம், குறிப்பாகத் தேய்பிறையில் வரும் பூச நட்சத்திரமே ஏற்றதாகும். பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர்/ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்கு சாமந்திப் பூமாலை சாற்றி வணங்கி வர எத்தகைய கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறுவர். பூச நட்சத்திரத்தில் ஏழை நோயாளிகளுக்குப் பலவிதமான (இயன்ற) தானங்களைச் செய்துவர அற்புதமான குணங்களைப் பிரத்யட்சமாகக் கண்டிடலாம்.
11. இல்லறப் பெண்கள் செய்கின்ற பல தவிர்க்கக் கூடிய, தெரிந்து செய்கின்ற சிறியதும் பெரியதுமான தவறுகளால் தான் மனஸ்தாபம், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், நகையிழப்பு, மானம் பறிபோதல், ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்றாகக் காயம் படுதல் போன்றவை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புருவத்தைச் சிரைத்தல், முன்பக்கத் தலைமுடியை (அழகிற்காக) வெட்டுதல், பின்னலை முன்பக்கமாகப் போடுதல், தலைமுடி நுனியை வெறுமனே விடுதல் (ரிப்பன், நார் போட்டு எப்போதும் முடி கட்டப்பட வேண்டும்) புடவை நுனியைக் கீழே தொங்க விடுதல், கண்ட இடங்களில் பூவை வாங்கியவுடன் அங்கேயே தலைக்குப் பூ வைத்தல், காதுகளை மூடித் தலை வாருதல், தலையின் இருபுறங்களிலு புஷ்பம் வைத்தல், இரும்பால் ஆன ஹேர்பின்களை வைத்தல், தலையில் ஆடி அதிரும்படி பூ வைத்தல் – போன்ற சிறுசிறு தவறுகளைப் பெண்கள் செய்து வருகிறார்கள். மேற்கண்டவற்றை அறவே தவிர்த்தால் இல்லறத்தின் பெரும்பான்மையான தினசரிப் பிரசனைகளை எளிதில் களைந்து விடலாம். இவற்றால் தான் பல சாபங்கள்/ தோஷங்கள் உண்டாகின்றன.
12. சிறுநீரகக் கோளாறுகள், இருதய வியாதிகளினால் அவதியுறும் கணவன்மார்களின் ஆயுளைப் பற்றிய (எம) பயத்தால் பல குடும்பப் பெண்கள் எப்போது மனம் கலங்கி வாழ்கின்றனர். இவர்கள் அடிக்கடி  சென்னை – திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் தானதர்மங்கள் செய்து ஈஸ்வரனைத் தொழுவதுடன் தினமும் இல்லத்தில் பன்னீர் பூக்களினால் லிங்கத்திற்கு/ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்திடில் எமபயம் அகலும், மாங்கல்ய பலம் விருத்தியாகும். குறிப்பாக பூச நட்சத்திர பன்னீர் புஷ்பார்ச்சனை மிகமிகச் சிறப்புடையதாம்.
13. ஸ்ரீவரலட்சுமி விரத்தை அனைவரும் கடைபிடித்தாக வேண்டும். “எங்கள் குடும்பத்தில் இப்பழக்கம் கிடையாது.” என்றெல்லாம் காரணம் சொல்லாது அனைத்து இல்லறப் பெண்களும் இவ்வரிய, அளப்பரிய பலன்களைத் தரவல்ல. கேட்கும் நல்வரங்களைக் கூட்டித் தரும் அற்புதமான ஸ்ரீவரலட்சுமி விரத்தை மேற்கொண்டு உத்தம வாழ்வினை அடைந்திடுக!
“தீர்க்க புன சரண பூஜை” எனப்படும் இவ்விரதத்தில் 9 வயதிற்குட்பட்ட 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையிலான பெண் குழந்தைகளுக்கு நீராட்டி , சீராட்டி அலங்கரித்து அவர்களுக்குரிய தான தருமங்களைச் செய்திட பலன்கள் பன்மடங்காகும். 60 வயதிற்கு மேற்பட்ட பழுத்த சுமங்கலிகள் விரதச் செம்பினை (கும்பத்தினை) எடுத்தளிக்க மாங்கல்ய பாக்யம் ஸ்திரமாகும். கணவனை நல்வழிப் படுத்தும் நல்வரத்தைத் தரும் அபூர்வமான பூஜை! அஷ்டலக்ஷ்மிகளின் திரண்ட அவதார அம்சமாகிய ஸ்ரீவரலட்சுமி தேவி நம் இல்லத்தில் எழுந்தருள்வது பாக்யங்களுள் பெறற்கரிய பாக்கியமாகும். “லக்ஷ்மி ராவே மாயின்டிகி” என்று நம் பெரியோர்கள் உரிமையுடனும் அன்புடனும் “ஸ்ரீலட்சுமி தேவியே! என் இல்லத்திற்கு வந்தருள்வாய்” என்று மனமார அழைக்கும் சிறப்பான பண்டிகை!
சேது நீராடுதல் – ஆடி அமாவாசையில்

பித்ரு முக்தி தீர்த்தம்
திருவிடைமருதூர்

ஆடி அமாவாசையன்று ஸ்ரீராமேஸ்வரத்தில் புனித நீராடுதல் மிகவும் விசேஷமானதாகும். இராவண வதத்திற்குப் பின்னர் ஸ்ரீராமர், ஸ்ரீலெக்ஷ்மணர், ஸ்ரீஆஞ்சனேயருடனும் சீதாபிராட்டியுடனும் இத்திருத்தலத்தில் பல விதமான ஹோமங்கள், பித்ரு பூஜைகள், சாந்தி  பரிஹாரங்களை நிகழ்த்தினாரெனில், தெய்வாவதாரங்களே நாடும் திருத்தலமெனில் இராமேஸ்வரத்தின் மஹிமைதான் என்னே! இன்று கடலினுள் மூழ்கியிருப்பதாகத்தான் தனுஷ்கோடி கருதப்படுகிறது. ஆனால் கடலின் கீழுள்ள பல லோக தேவதைகளால், தேவர்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறது. சித்தபுருஷர்களும் மஹரிஷிகளும் இன்றும் நித்ய வழிபாடு நிகழ்த்துகின்ற ஸ்தலமே (மூழ்கியிருக்கும்) தனுஷ்கோடியாகும். இராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் பல பித்ரு லோகங்களுடன் தொடர்புடையவை! பித்ருக்களின் ஒளி/ ஜோதிப் பாதையாகவும் இவை திகழ்கின்றன! ஜாதி, இன, மத பேதமின்றி ஒவ்வொரு ஜீவனுக்கும் வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் என்ற முக்கியமான மூன்று வகைப் பித்ருக்கள் உண்டு. இவர்களுடைய ஆசியால் தான் நாம் இன்று வீடு, வாசல், நிலபுலன்கள், குழந்தை பாக்யம், செல்வம் போன்றவற்றுடன் சுகமாக வாழ்கின்றோம். அவர்கள் ஆசியின்றி நம் சுண்டு விரலைச் சற்றே கூட அசைக்க முடியாது என்பதை உணர்ந்தால்தான் பித்ருக்களின் மஹிமை புரியும். இராமேஸ்வரத்திலும், கங்கை தீரமான காசி, பிரயாகை, கயா, திருவிடைமருதூர்  போன்ற இடங்களிலும் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் பித்ரு லோகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
பரத்வாஜர், காஸ்யபர், ஆத்ரேயர், கௌண்டின்யர் போன்ற மஹரிஷிகளும் பல ப்ரவர ரிஷிகளும் இவற்றில் தீர்த்தமாடித் தங்களுடைய தபோ சக்தியை இட்டுச் செல்கின்றனர். உலகில் புழு, புல் , பூண்டு முதல் தாவரம், விலங்கு, மனிதன் வரை அனைத்து ஜீவன்களும் ஒவ்வொரு ரிஷியின் பாரம்பரியத்தில் வந்தவர்களே! இதில் ஜாதி, இன, மத பேதத்திற்கு இடமேது! இத்தீர்த்தங்களின் சிறுதுளிகள் நம் மீது பட்டாற்கூடப் போதும் அம்மஹாபுருஷர்களின் தபோபலன்களின் அற்புத சக்திகள் நம்மைக் கரையேற்றி விடுமே! சித்தபுருஷர்கள் அருளியபடி இராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களின் மஹிமைதனை ஈண்டு காண்போம். சேதுபூமியாம் இராமேஸ்வரத்தில் 64வித தீர்த்தங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றின் மஹிமைகளைப் பற்றிக் காண்போம். கோயிலினுள்ளும், கடற்கரைப் பகுதியிலும், இராமேஸ்வரத்தைச் சுற்றிலுமாக இத்தீர்த்தங்கள் பரந்து காணப்படுகின்றன. தீர்த்தங்களில் நீராடுதலோடு தான, தர்ம, பூஜைகள் கூடும் போது பலா பலன்கள் பரிபூர்ணமடைகின்றன . இராமேஸ்வரத்தில் தங்கி ஆடிஅமாவாசையன்று கீழ்க்கண்ட முறையில் நீராடுதலுடன் குறித்த  தானதர்மங்களை நிறைவேற்றிட பல அற்புதப் பலன்களைப் பெற்றிடலாம்.
ஆடி அமாவாசையில் பல ஜீவ நதிகள் இங்கு சூட்சுமமாகத் தீர்த்தங்களில் சங்கமமாகின்றன. இயன்றால் நீராடிடுக! அல்லது நீரை சிரசில் தெளித்துக் கொண்டிடுக! தீர்த்த நீருடன் நல்ல நீர் சேர்த்துக் குறித்த பிரசாத வகைகளைச் செய்து தானத்தை நிறைவு செய்திடுக!
1 சக்கர தீர்த்தம் :- கிலி, பயம், பீதி, அச்சம், நடுக்கம், எமபயம் – இவை சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படுவதே. வாழ்க்கையில் நிகழ்ந்த குறித்த ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரும்  உண்டு. இதில் நீராடி, தீர்த்தத்தைப் பாலில் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திட வேதம் ஓதிய பலன் கிட்டும். மேற்கண்ட அச்சங்களும் தீரும். வீட்டில் நிகழ்ந்த தற்கொலை, தீவிபத்து, பெரும் விபத்தின் வினைவுகள் பூண்டோடு தீரும்.
2. வேதாள தீர்த்தம் :- பேய், பிசாசு, பூதங்களும் ஒரு வகை ஜீவன்களே ! வீடு, நிலம், அலுவலகம் வியாபார இடங்கள், கிணறு போன்றவை பூதவினைகள் நிறைந்த இடங்களில் அமைந்தால் துன்பங்கள் ஏற்படும். இதில் நீராடி சாம்பார் தானம் செய்திட வேதாளத் தீவினைகள் தீரும்.
3. பாபவிநாச தீர்த்தம் :- நாம் அறிந்தும் அறியாமலும் பல பாவங்களைச் செய்கின்றோம். புண்ய காரியங்களினால் ஓரளவு பாவங்களையே போக்க முடியும். இத்தீர்த்தத்தில் நீராடி காய்கறிகள் கலந்த உணவினை தானம் செய்திட புண்ய சக்தியால் தீர்க்க இயலாத பாவங்கள் தீரும். வாழ்க்கையில் பெரும் பாவங்களை இழைத்திருந்தால் இத்தீர்த்த நீராடல்/தானம் நல்வழி காட்டும்.
4. சீதா குண்டம் :- சீதா தேவியின் பூஜா பலன்களின் சக்திகள் நிறைந்த தீர்த்தம். கணவனை/மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வோர் மீண்டும் இணைந்து வாழ, இதில் நீராடி இத்தீர்த்தத்தில் செய்த சர்க்கரைப் பொங்கலை தானமாக அளிக்க வேண்டும்.
5. மங்கள தீர்த்தம் :- கடும் நோய்களால் வாடும் கணவன்/மனைவியின் ஆயுள் தீர்கமடைய, மாங்கல்ய பலம் விருத்தியடைய, நிலபுலத் தகராறுகள் தீர இதில் நீராடி இத்தீர்த்தத்தில் செய்த கேழ்வரகுக் கூழ்/களி/சாதம் தனை தானமளித்திட வேண்டும்.
6. தேவ தீர்த்தம் :- பாற்கடலில் கிட்டிய அமிர்தம் தனை கருடாழ்வார் இத்தீர்த்தத்தில் கலந்து அருள்பாலித்தார். இதில் நீராடி இத்தீர்த்தம் கலந்த தேன்+தினைமாவினை தானமளித்திட கர்பக் கோளாறுகள் நீங்கும்.
7. பிரம குண்டம் :- பிரம்ம தேவர் தம் பூஜை, யாக, வேள்வி, ஹோமங்களின் பஸ்ம – தெய்வீக சக்தியினை இன்றும் இதில் கூட்டி நமக்கு அருள்பாலிக்கின்றார். இதில் நீராடி இத்தீர்த்தத்தில் உளுந்து தோசைகளை தானம் செய்திடில் கிணற்றில் நல்ல ஊற்று ஏற்படும் – வறண்ட கிணறும் ஜீவிக்கும்.
8. அநும குண்டம் :- இன்றும் அனுமார் தன் சிவபூஜைகளை நிகழ்த்துகின்ற தீர்த்தம். இதில் நீராடி இத்தீர்த்தத்தில் செய்த உளுந்து இட்லியைத் தானம் செய்திட பிராணிகளை வதைத்த சாபம், புலால் உண்ணல் ஆகியவற்றிற்குப் பிராயச்சித்த நல்வழிகள் கிட்டும்.
9. அகத்திய தீர்த்தம் :- இதில் நீராடி அகத்தியர் பல மஹரிஷிகளுக்கு யாகங்களைக் கற்றுத் தந்து அருள்பாலித்தார். நீராடுதலுடன் புளியோதரை தானத்தால் குறை பிரசவக் கோளாறுகள், மலட்டுத் தானம், கர்பாயாசக் குறைகள் நீங்கும்.
10. ராம தீர்த்தம் :- நீராடல்  எலுமிச்சை சாத தானம், பிறந்து இறந்த/கர்பத்திலேயே இறந்த சிசுக்களுக்கு நன்னிலை கிட்டும். இத்தகைய ஜீவன்களின் ஆசியே நமக்கு வாழ்க்கையில் மன நிம்மதியைத் தரும் கருத்தடை, கருச்சிதைவிற்கான பிராயச்சித்தங்களுக்கான அறவழிகளைத் தரவல்ல தீர்த்தம். தக்க சற்குருவை நாடித் தகுந்த பரிஹாரங்களைச் செய்திடுக.
11. இலக்குமண தீர்த்தம் :- சினத்தால் இலட்சுமணர், பரதன், கைகேயி, சுக்ரீவன், அனுமார் போன்றோருக்கு மனவேதனைகளைத் தந்தமையால், சிவபெருமானின் ஆணைப்படி லட்சுமணரே தம் சினத்திற்குப் பரிஹாரம் தேடிய தீர்த்தம் – இதில் நீராடி தக்காளி சாதம்/ செந்நிற உணவு தானம் செய்திட இல்லத்தில் காத்து/ கருப்பு/பூத  சேஷ்டைகள் தணிவதுடன் தேவையற்ற சினமும் மறையும்.
12. ஜடாயு தீர்த்தம் :- இறை நினைவுடன் இவ்வுலகை நீக்கும் உபாயம் தரும் தீர்த்தம். இத்தீர்த்தத்தை எடுத்து வைத்து இறக்குந் தறுவாயிருப்போர்க்கோ, இறந்தோர்க்கோ அளித்திட ஸ்ரீஜடாயு பகவானின் ஆக்ஞைப்படி நல்லதே நடக்கும். தியான நிலையைக் கூட்டும் தீர்த்தம். நீராடி, கோதுமைத் தவிடு கலந்த தீனியைப் பசுவிற்கு அளித்திட தெய்வீக சக்தி நிறைந்த உண்மையான வேதியர்க்கு உணவிட்ட பலனும், பித்ருக்களின் ஆசியும் கிட்டும். சம்பாதி பித்ரு தர்ப்பணமிட்ட புண்ய தீர்த்தம். பித்ரு லோகத்துடன் தொடர்புடைய தீர்த்தம்.
13. இலக்குமி தீர்த்தம் : இல்லத்தில் வசதிகள் பெருக இதில் நீராடி இத்தீர்த்தத்தை மங்களப் பொருட்களின் மேல் தெளித்து பழுத்த ஏழைச் சுமங்கலிகட்களித்து வணங்கிட வேண்டும்.
14. அக்னித் தீர்த்தம் :- ஸ்ரீராமர் தம்முடைய யாகத்திற்கான அக்னியையும் சீதாதேவி அக்னிப் பிரவேசத்திற்கான அக்னியையும் இதனின்றே பெற்றனர். இதில் நீராடி இத்தீர்த்தத்துடன் தயிர்சாதம் தானம் செய்திட பெருங்கண்டங்களினின்று தீர்வு பெறலாம். பாலாரிஷ்டம் தீர்க்கும் தீர்த்தம்.
15. சிவகங்கைத் தீர்த்தம் : சிவபெருமானின் ஜடாமுடியினின்று உற்பவிக்கும் ஆதிகங்கை நீராலான தீர்த்தமிது. இதில் நீராடி இத்தீர்த்தங் கலந்த நீர்மோரை தானஞ்செய்திட பங்காளிச் சண்டை தீர்ந்து, சொத்து, நில, புல விவகாரங்கள், கோர்ட் வழக்குகள் நன்முறையில் முடியும்.
16. சங்க தீர்த்தம் :- திருக்கயிலாயத்தில் வலஞ்சுழி விநாயகராக ஸ்ரீகணபதி சிவபெருமானுக்குத் தினமும் 1008 சங்குகளால் 1008 புண்ணியத் தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் கூடும் கோமுக நீரைக் கொண்டதே இப்புனித தீர்த்தம். இதில் நீராடி இத்தீர்த்தம் கலந்த உளுந்தாலான பட்சணங்களைத் தானம் செய்திட மனதிற்குத் திருப்தியான புது உத்யோகம் கிட்டும்.
17.  முத்தீர்த்தம் : மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றத் தீர்த்தம் இது. இதில் நீராடி பித்ருத் தர்ப்பணம் இட்டு எள் கலந்த உணவினை தானம் செய்திட பிறவாப் பெருநிலையடைந்த பித்ருக்களின் ஆசிகிட்டும். இறை நினைவுடன் கூடிய இறுதிக் காலம் பேரருளாய்ப் பெருகும்.
18. கோடித்தீர்த்தம் :- இத்தீர்த்தக் கரையில் காது குத்தி, கடுக்கனிட்டு, முடி இறக்கி, நீராடி, புத்தாடைகளைத் தானம் செய்திட வியாபாரம் நன்கு விருத்தி அடையும்.
19. சாத்யாம்ருதத் தீர்த்தம் :- குழந்தைகள் நிறைந்த 60 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு இத்தீர்த்தத்தால் பாத பூஜை செய்து வணங்கிட சுமங்கலித்துவம் தீர்க்கமாகும். மாங்கல்ய பலம் விருத்தி அடையும். அனுசூயா தேவி ஸ்ரீபார்வதியை தரிசனம் பெறத் தவமிருந்த தீர்த்தம்.
20. சர்வ தீர்த்தம் :- பேரக் குழந்தைகளை இதில் நீராட்டி ஜாதி, மத பேதமின்றி ஏழைக் குழந்தைகட்கு புது ஆடைகளை தானம் செய்திட செல்வப் பெருக்கு உண்டாகும். அஷ்டலக்ஷ்மி தேவிகள் தாண்டவமாடும் தீர்த்தம்!
21. தனுஷ்கோடித் தீர்த்தம் :- புது மணத் தம்பதியர்க்கு உரித்தான தீர்த்தம். இவர்கள் இதில் நீராடி மாங்கல்யச் சரடுகளை மேலும் பல தம்பதியர்க்கு மஞ்சட் குங்குமத்துடன், கண்ணாடி வளையல், புதுக்காலணிகள், ஆகியவற்றையும் அளித்திட திருமண வைபவத்தில் உண்டான கண் திருஷ்டி விலகும். திருமணமானவுடன் தேனிலவில் வீணாகப் பணம், நேரம், உடல் சக்தியை விரயம் ஆக்காது இத்தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிடில் உத்தமமான வாழ்க்கை கிட்டும்.
22. பாலோடை (தேவ) தீர்த்தம் :- இதில் நீராடி இத்தீர்த்தம் கூடிய பஞ்சாமிர்தத்தை இறைவனுக்குப் படைத்து தானம். அளித்திட பால் பாக்கியம் கிட்டும். பலவித கோபூஜைகளின் சக்தியைத் திரட்டி அருளும் தீர்த்தம் இது. பித்ருக் காரியங்களில் பசுதானம் என்ற ஒன்றுண்டு. தற்காலத்தில் ஏதோ ஒரு தொகையை அளித்து பசுவின் வாலை வழித்து ஏனோதானோ என்று கோ தானத்தைச் செய்கின்றனர். இது மிகவும் பாபகரமான செயல் மட்டுமன்றி கோகத்தி தோஷம் என்ற தீர்க்க இயலா பாவத்தையும் தந்து விடும். உண்மையிலேயே கோதானம் செய்தாக வேண்டும். இயலாவிடில் பால் வற்றியப் பசுக்களைப் பராமரிக்கும் கோசாலையில் சரீர சேவை மற்றும் பசுக்களுக்குச் சேவை  செய்திட வேண்டும். கோதானப் பலனைத் தரவல்லதே இத்தீர்த்தத்தின் மகிமையாகும்.
23. கவிகுண்டம் :- இதில் நீராடிம் இத்தீர்த்தத்தால் சித்ரான்னங்கள் செய்து தானமளித்திட கல்வி மற்றும் கலைஞானம் பெறுவர். படிப்பில் மக்காய் இருக்கு பிள்ளைகட்கு இத்தீர்த்த ஸ்நானம், தானதர்மம் நற்பலனளிக்கும்.
24. ஸரஸ்வதி, காயத்ரீ தீர்த்தம்:- இத்தீர்த்தத்தில் ஒரு தர்ப்பையை வைத்து முறையாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திட, ஒன்றுக்குப் பல்லாயிரமாக பீஜாட்சர சக்திகள் பொங்கிப் பெருகுகின்றன. சூரியோதயத்திற்கு முன்னும், உச்சிப் பொழுதிலும், சூரிய அஸ்தமனமான சந்தி வேளையிலும் இவ்வித ஸரஸ்வதி, காயத்ரீ ஜப மந்திரம் மிகவும் விசேடமானதாகும். அப்பம், பொரி, தேங்காய் வில்லை, நாட்டுச் சர்க்கரைக் கலந்த தின்பண்ட தானம் மிகவும் விசேடமானதாகும், தேஜஸ் கூடிய ஞானத்தையும் தரவல்லது.
25. நளத்தீர்த்தம் :- சனீஸ்வர பகவானே பலவித பீடைகளால் பீடிக்கப்பட்டு அவதியுற்ற போது ஸ்ரீசனீஸ்வரனே நீராடி பீடை நிவர்த்தி பெற்ற தீர்த்தம். இதில் நீராடி கருப்பு நிற அன்னவகை, (திராட்சை, எள் சாதம்), கருப்பு நிற ஆடை வகைகளை ஏழைகட்கு, குறிப்பாக ஊனமுற்றோர்க்கு அளிப்போர்க்கு, பொங்கு சனி, தங்குசனி, மங்குசனி பீடைகளினின்று நிவாரணம் அளிக்கின்றார் ஸ்ரீசனீஸ்வர பகவான், எங்கும் கிட்டாத அதி அற்புதத் தீர்த்தம்.
26. நீல தீர்த்தம் :- படகு, ஓடம், கப்பல், கட்டுமரம் சொந்தக்காரர்கள்/காண்டிராக்டர்கள், ஓடுனர்கள், பிரயாணிகள்/கடல் பொருள் வியாபாரிகள்/ மீனவர்கள்/ நீச்சல் வீரர்கள் இதில் நீராடி ஏழைகளுக்குத் தைலம் (எண்ணெய்) தானம் அளித்திட வாகனங்கள் நீரில் மூழ்காது நற்பிரயாணம்/வியாபாரம் அமைந்திடும்.
27. கலாட்சத் தீர்த்தம் :- இதில் நீராடி இத்தீர்த்தத்தால் கொழுக்கட்டை செய்து ஸ்ரீவிநாயகருக்கு நைவேத்தியம் செய்திட இழந்த செல்வம், சொத்தினை (முறையாக) மீண்டும் பெறலாம்.
28. கந்தமாதனத் தீர்த்தம் :- இதில் நீராடி இத்தீர்த்தத்தில் பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்களைச் சேர்த்து எந்த சுவாமியையும் அபிஷேகித்திட எத்தகைய கடுமையான தோல் வியாதிகளும் தீரும். இந்திரனுக்குக் கடுமையான தோல் வியாதிகளைத் தீர்த்த அற்புதமான தீர்த்தமாகும்.
29. மாதவ தீர்த்தம் :- ஹரி பகவான் மதுசூதனனாகப் பரிபூர்ண அவதாரம் பெற்றிட இங்கு தீர்த்தமாடினார். இதில் நீராடி மனவியாதி உள்ளோருக்கு இத்தீர்த்தம் கலந்த உணவினை தானமாக அளித்திட மனவியாதி, பைத்தியம் பிடித்தல் போன்ற வியாதிகள் தீரும்.
தீர்த்த நீராடல், தான முறைகள் :- ஆடி அமாவாசையன்று இவையனைத்தையும் நிறைவேற்ற இயலுமா என்ற எண்ணம் எழும். வருடத்தில் ஒரே முறை வரும் அற்புத நாள்! பெறற்கரிய பாக்கியங்களைப் பெற்றுத் தரும் நாள்! சத்சங்கமாக பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இவற்றை நிறைவேற்றிடில் சுலபமாக, சுபமாக அனைத்தையும் செய்து பன்மடங்குப் பலனடையலாமே! குறித்த நற்காரியத்திற்காகவும் அதற்குரித்தான பரிகாரங்களைச் செய்திடலாம். அனைத்தையும் செய்ய விரும்புவோர் இங்கு தங்கி ஒவ்வொன்றாக அனைத்தையும் நிறைவேற்றிய பின் இல்லம் திரும்பலாம். ஆடி அமாவாசையன்று இவற்றை நிறைவேற்றிடில் அளப்பரிய பலன்களை பெற்றிடலாம். ஏனைய அமாவாசை தினங்களிலோ அல்லது சாதாரண தினங்களிலோ இதனைக் கடைப்பிடிக்கலாம்.

கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி என்பது நம் வீட்டளவில் சீடை, முறுக்கு, அப்பம் தின்று நம் குடும்பத்தோடு கொண்டாடி முடிப்பது அன்று! நம் பெரியோர்கள், கோகுலாஷ்டமியை எவ்வாறு கொண்டாடிட வேண்டும் என்று வரையறுத்துத் தந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் நாம் தற்குறியாய் வாழ்ந்து தார்மீக நெறி முறையினையே மறந்து விட்டோம்! பொதுவாக நாம் அஷ்டமி, நவமி திதிகளையே அசுபமென ஒதுக்கி  விடுகின்றோம். இது தவறு! இதற்காகவே ஸ்ரீராமர், நவமி திதியிலும் ஸ்ரீகிருஷ்ணர், அஷ்டமி திதியிலும் அவதரித்து இத்திதிகளின் மஹிமைகளை அறிவுறுத்துகின்றனர். ஜாதகத்தில் அஷ்டமத்தில் (லக்னத்திலிருந்து எட்டாமிடம்) சனி மற்றும் பல கிரஹக் கூட்டு சஞ்சாரங்களினால் (அஷ்டமத்தில் சனி என்பது போல) பல இன்னல்கள் ஏற்படும். இவற்றிற்குப் பிராயச்சித்தமாக அஷ்டமித் திதியில் பல விசேஷ பூஜைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிலருடைய வீடுகள், மனை சாஸ்திரப்படி கிணறு, வாசல், சமையலறை, படுக்கையறைகள் சரியாக அமையாது. இவை அயன சுகங்களை பாதிப்பதோடன்றி புத்ரபாக்யமின்மை, புத்தி சுவாதீனமின்மை, கிணறு வற்றுதல், அடிக்கடி திருடுபோதல், சமையலறையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்தல் போன்றவையும் ஏற்படும். இதற்குப் பரிஹாரமாக அமைவதே புனிதமான அஷ்டமி திதி. எட்டுத் திக்குத் தேவதா மூர்த்திகளை முறையாகப் பூஜை செய்து அஷ்டமியில் துதித்திட மேற்கண்ட துன்பங்கள் எளிதில் தீரும். எனவே அஷ்டமித் திதி பூஜை பற்றிய விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடிப் பெறுவீர்களாக! அஷ்டமித் திதியன்று, குறிப்பாக கோகுலாஷ்டமியன்று எட்டு விமானங்களையுடைய கோயிலில் அபிஷேக ஆராதனைகள் அபரிமிதமான பலன்களைப் பெற்றுத் தரும். “கோபுர தரிசனம் கோடி பாபநாசனம்” என்ற மூதுரைக்கேற்ப அஷ்டமியன்று குறைந்தது எட்டுக் கோயில்களின் கோபுரங்களையேனும் தரிசித்து எட்டுத் தலங்களிலும் இயன்ற தானதர்மங்களைச் செய்தல் சிறப்புடையது. கோகுலாஷ்டமியன்று நம் வீட்டில் செய்கின்ற சீடை, அப்பம், அடை, முறுக்கு தின்பண்டங்களை எட்டு கோயில்களுக்கு எடுத்துச் சென்று அன்னதானமாக அளித்திட ஸ்ரீகிருஷ்ணநாம ஸ்மரண பலன்கள் அஷ்டமியன்று குறைந்தது எட்டுக் கோயில்களின் கோபுரங்களையேனும் தரிசித்து எட்டுத் தலங்களிலும் இயன்ற தானதர்மங்களைச் செய்தல் சிறப்புடையது. கோகுலாஷ்டமியன்று நம் வீட்டில் செய்கின்ற சீடை, அப்பம், அடை, முறுக்கு – தின்பண்டங்களை எட்டு கோயில்களுக்கு எடுத்துச் சென்று அன்னதானமாக அளித்திட ஸ்ரீகிருஷ்ணநாம ஸ்மரண பலன்கள் குருவருளால் கூடிடும். அஷ்டமித் திதியில் எண் கரங்களை உடைய தெய்வ மூர்த்திகளுக்குப் பால், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், விபூதி, குங்குமம், போன்ற எட்டுவிதமான அபிஷேகங்களை நடத்துவது அதிஅற்புதப் பலன்களைத் தரும். குறிப்பாக, எதிரிகளால் வரும் துன்பங்கள் தணியும், உறவினர்களால் ஏற்படும் பில்லி, சூன்ய தோஷத் துன்பங்கள் தீரும்.
கோகுலாஷ்டமி பூஜை :- இன்று பசுவிற்குப் பூஜை செய்தலே ஸ்ரீகிருஷ்ணனுக்குப் ப்ரீதியைத் தரும். பசுவை நீராட்டி மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மாலை சாற்றி வாழைப் பழம், புல், வைக்கோல், தீவனம் அளிக்க வேண்டும். 21 முறை வலம் வந்து வணங்கி பசுவின் பாதம் பட்ட “மண் தூசியை” நெற்றித் திலகமாக இடுதலால் பலவித கொடிய தோஷங்கள் தீரும். பசுவின் “கோ தூளிக்கு” அத்தகைய மஹிமை உண்டு! கோடிக்கணக்கான தேவதா மூர்த்திகளைத் தாங்கி நிற்கும் திருப்பாதங்களாயிற்றே! இன்று மூன்று வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைக்கு வெண்ணெய், பால் ஊட்டி மகிழ்ந்திட வேண்டும். எட்டு விதமான தரிசனங்கள், நவநீத கிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனைகள், எட்டுக் கோயில்களில் இயன்ற தானதர்மங்கள் போன்றவைதாம் கோகுலாஷ்டமியை நிறைவு செய்கின்றன. பலர் “திருப்பதிக்கு வேண்டிக் கொண்டேன், குணசீலத்தில் மொட்டையடிப்பதற்காகப் பிரார்த்தனை”- என்று பல வருடங்களாக/மாதங்களாகப் பிரார்த்தனைகளை நிறைவேற்றாமல் அல்லது செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவ்வாறு அமைந்திடும்.
எண் எட்டின் மஹிமை
“எட்டில் முடியும் எதுவும்”- அதாவது ஒன்று, இரண்டு போன்ற எண்கள் மேலும், கீழும், பக்கவாட்டிலும் தொக்கி நிற்கும். புறப்பட்ட இடத்திலிருந்து துவங்கி அங்கேயே நிறைவு பெறுவது எட்டில் தான். எனவே தீராத பிரார்த்தனைகளைத் தீர்ப்பதற்கு கோகுலாஷ்டமிப் பண்டிகை திருவருள் புரிகின்றது.
1. இந்நாளில் இக்காரியம் முடிந்தால் இதைச் செய்கிறேன் என்ற வகைப் பிரார்த்தனை.
2. காரியம் கை கூடாமல் பிரார்த்தனையைச் செய்வதா, இல்லையா என்ற மன உளைச்சல்.
3. காரியம் முடிந்தும் பிரார்த்தனையை நிறைவேற்ற இயலா நிலை.
- போன்ற நெடுநாள் பாக்கியான பிரார்த்தனைகளை எளிதில் நிறைவேற்ற கோகுலாஷ்டமியன்று
1. எட்டுக் கோயில்களில் விமான தரிசனங்கள் (விமானம் – சந்நதிக்கு மேல் உள்ள கோபுரம்)
2. எட்டு சுமங்கலிகளுக்குப் (80 வயது நிறைந்தவர்) பாத பூஜை, தானங்கள்.
3. தசாவதார மூர்த்திகள் எழுந்தருளியுள்ள கோயில்களில் எட்டுமுறை அனைத்து கோபுரங்களையும் வலம் வருதல் – இம்மூன்றையும் நிறைவேற்றிட எத்தகைய பிரார்த்தனையும் கைகூடுதற்கான நல்வழிகள் எளிதில் வந்தமைந்திடும்.

நித்யகர்ணம நிவாரணம்

நித்ய கர்ம  நிவாரண சாந்தி ஆகஸ்ட் – 1996’
நித்ய கர்ம – வினை வேரறுக்கும் வழி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக!

தேதி

 குறித்த நற்காரியம்

 அபரிமிதப் பலன்கள்

1.8.1996

கோழிக் குஞ்சுகளுக்கு உணவு

ஆபீஸில் கோள் மூட்டுபவர்களால் வரும் துன்பம் தீரும்.

2.8.1996

வெள்ளை மயிலுக்கு உணவு

உயரதிகாரிகளால் வரும் துன்பம் தடுக்கப்படும்.

3.8.1996

வெள்ளைப் பூசனிக் குழம்பு சாத தானம்

பகைவர்களால் வரும் துன்பங்களின் வேகம் தணியும்.

4.8.1996

பூசணிக்காய் தானம்

கணவனையிழந்தோர்களின் ஏக்கங்கள்/ஆதங்களால் வரும் துயர்கள்  தீரும்.

5.8.1996

பாகற்காய் சாத தானம்

பழைய நண்பர்கள் உதவி புரிவர்.

6.8.1996

நாவல் பழ தானம்

நம்பியோர் கைவிடாமல் உதவுவர்.

7.8.1996

அன்னாசிப் பழ தானம்

மனைவி உடல் நலம் அடைவாள்.

8.8.1996

தக்காளி சாதம் தானம்

வீட்டில் கலகம் குறையும்.

9.8.1996

மல்லிகைப்பூ தானம்

சுமங்கலிகளுக்குத் தீய கனவுகளால் வரும் பாதிப்பு குறையும்.

10.8.1996

சம்பங்கிப் பூ தானம்

வயிற்று வலி தணியும்.

11.8.1996

குடை தானம்

அலுவலகத்தில் குள்ளநரிகளின் கெட்ட திட்டங்கள் தோற்றுவிடும்.

12.8.1996

செருப்பு தானம்

அலுவலகத்தில் உதவி கிட்டும்.

13.8.1996

பூணூல் தானம் மற்றும் அன்னதானம்

எதிரிகளால் வரும் கண்திருஷ்டி தணியும்.

14.8.1996

பசுவிற்கு அகத்திக் கீரை அளித்திட

உடலில் மருந்துகள் நன்கு குணம் தரும்.

15.8.1996

யானைக்கு உணவு

தீராத கடன் தீரும்.

16.8.1996

ஏழைப் பெண்ணிற்கு தாலிசரடு தானம்

மன நிம்மதி கிட்டும்.

17.8.1996

சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பையனுக்கு உதவி

பிரயாண சுகம் கிட்டும்.

18.8.1996

குட்டிபோட்ட தாய் நாய்க்குப் பால் அளித்திட

பதவி உயர்வு கிட்டும்.

19.8.1996

கன்று ஈன்ற பசுவிற்குப் புல் அளித்தல்

பண வரவு.

20.8.1996

ஒரு (காலில்லா) ஊனமுற்ற ஏழைக்கு உதவி புரிதல்

தூக்கமின்மைத் துன்பங்கள் தீரும்.

21.8.1996

கிராம தேவதைக்குப் பொங்கல் படைத்தல்

குடும்பத்தில் பணக் கஷ்டம் தீரும்.

22.8.1996

சிவன் கோயிலில் பன்னிரெண்டு ராகங்களில் நாதஸ்வர இசைக்கு ஏற்பாடு

பணக் கஷ்டம் தீரும்.

23.8.1996

முருகன் கோயிலில் ஆறு ராகங்களில் புல்லாங்குழல் இசைக்கு ஏற்பாடு

புதிய பதவி கிட்டும்.

24.8.1996

ஏழைப் பெண்களுக்கு வளையல் அளித்தல்..

கணவனுக்குக் கெட்ட நண்பர்களின் சகவாசம் ஒழியும்.

25.8.1996

ஏழைகளுக்குத் தாம்பூல தானம்

சுற்றத்தாரின் பொறாமையால் வரும் துன்பங்கள் தீரும்.

26.8.1996

ஒட்டடைக் குச்சிகளைத் தானம் அளித்தல்

வீட்டுக் கடன் தீரும்.

27.8.1996

பாய் தானம்

வயதானவர்கள் இட்ட சாபம் தீரும்.

28.8.1996

கைத்தடி தானம்

தீய கனவுகள் ஏற்படாது.

29.8.1996

ஓர் ஏழைக்குக் கடிகாரம் தானம்

கணவன் மனைவியரிடையே பரஸ்பர அன்பு வளரும்.

30.8.1996

முருங்கைய்க்காய் கலந்த உணவு தானம்

குழந்தைகளின் பயம் அகலும்.

31.8.1996

சிகப்புப் நிறப் புடவை தானம்

தீ விபத்துத் துன்பங்கள் தவிர்க்கப்படும்.

ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம் – திருஅண்ணாமலை
ஸ்ரீஅகஸ்திய விஜயம் (ஆகஸ்ட் 1996) இதழ் இணைப்பு
தாத்ரு வருட ஆடி மாத இறுதியிலிருந்து (ஆகஸ்டு 1996) கிரக சஞ்சார மாறுதல்களினால் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். அலுவலகம் , குடும்பம், உறவு, நட்பு, அரசியல் ரீதியாக தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், பொதுப் படையான சமுதாய வாழ்விலும் விபத்து, பிணி போன்ற எண்ணற்ற துன்பங்கள் ஏற்படும். இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி ஏனைய ஜீவன்களின் நல்வாழ்விற்காகவும் ஒவ்வொரு மனிதனும் பலவிதமான இறை வழிபாடுகள், தான தர்மங்கள் மற்றும் இறைப்பணிகளில் ஈடுபட்டு, சுயநலம் அற்ற தியாக வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும். மானிட வாழ்க்கை என்பது புல், பூண்டு முதல் யானை, மனிதன் வரை அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக உடலாலும் மனதாலும் தொண்டு செய்வதே ஆகும். இத்தொண்டு பரிபூர்ணமடைந்தால் தான் இறை தரிசனம் பெற முடியும். கீழ்க்கண்ட முறைகளில் குறித்த பூஜைகளைக் குறித்த நாட்களில் நிறைவேற்றி வந்திட குருவருளால் நிறைந்த இறையருளைப் பெற்று எதிர் வருகின்ற துன்பங்களிலிருந்து நம் குடும்பத்தினரையும் ஏனைய மக்களையும் காத்து நல்வழி அடைவோமாக!  “இறையருளால் இன்று நாங்கள் நிகழ்த்த இருக்கின்ற பூஜை, ஹோமத்தின் பலன்கள் எங்கள் குடும்பத்தினருக்கும் கிரக சஞ்சாரங்களினால் பாதிக்கப்படவிருக்கும் குடும்பங்களுக்கும் சென்றடைய சங்கல்பம் செய்து கொள்கின்றோம். ..”என்றவாறாக பூஜைக்கு முன்னும் பின்னும் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

நாள்

கிழமை

 பூஜை

4.8.1996

ஞாயிறு

ஸ்ரீசுப்ரமண்யர் சகஸ்ரநாமம்

5.8.1996

திங்கள்

ஸ்ரீபஞ்சாக்ஷர ஜபம் 10000 முறை

6.8.1996

செவ்வாய்

ஸ்ரீசுப்ரமண்யர் ஹோமம்/ சகஸ்ரநாமம்

7.8.1996

புதன்

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்

8.8.1996

வியாழன்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஹோமம்/ சகஸ்ரநாமம்

9.8.1996

வெள்ளி

ஸ்ரீசுக்ர ஹோமம்/ சகஸ்ரநாமம்

10.8.1996

சனி

ஸ்ரீசனீஸ்வர ஹோமம்/ சகஸ்ரநாமம்

11.8.1996

ஞாயிறு

*ஸ்ரீசூர்ய கவச நமஸ்காரம்

12.8.1996

திங்கள்

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்

13.8.1996

செவ்வாய்

ஸ்ரீஅக்னி ஹோமம்/சகஸ்ரநாமம்

14.8.1996

புதன்

ஸ்ரீகருட ஹோமம்/ சகஸ்ரநாமம்

15.8.1996

வியாழன்

ஸ்ரீபிரகஸ்பதி ஹோமம்/ சகஸ்ரநாமம்

16.8.1996

வெள்ளி

ஸ்ரீலக்ஷ்மி சகஸ்ரநாமம்/ ஹோமம்

17.8.1996

சனி

ஸ்ரீசுதர்சன ஹோமம்/ சகஸ்ரநாமம்

“ஓம் தத்புருஷாய வித்மஹே பாஸ்கராய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்”
என்று 37/51/108 முறை சொல்லி ஸ்ரீசூர்ய பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.
குறிப்பு : 1. பலர் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக / கூட்டு வழி பாடாக இவற்றை நிகழ்த்துவது  அபரிமிதமான பலன்களைப் பெற்றுத் தரும்.

2. ஹோமம் நிகழ்த்த இயலாவிடில் அந்தந்த சகஸ்ர நாமத்தை 10 முறை, பாராயணம் செய்தல் வேண்டும்.
3. சகஸ்ரநாமத் துதிகளை 10 முறை அல்லது தமிழில் 1008 போற்றித் துதிகளைக் குறைந்தது பத்து முறை ஓதிடுக அல்லது 108 போற்றித் துதிகளை நூறு முறை ஓதிடுக... (குறிப்பிட்ட நாட்களில்..)
4. தமிழ் மறை வேள்விகளை நடத்தும் முறைகளைத் தக்க சற்குருவை நாடி அறியவும்.
5. ஸ்ரீகருடன்/ஸ்ரீஅக்னி/ஸ்ரீபிரகஸ்பதி போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு சகஸ்ரநாமமோ 1008 போற்றித் துதிகளோ கிட்டாவிடில் பொதுவாக மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைக் குறைந்தது பத்து முறையேனும் ஓதிடுக. இராமாயணத்தில் ஜடாயு மோட்சப்பகுதி பாராயணத்தாலும், அக்னி புராணம் / அக்னி துதி பாராயணத்தாலும் சகஸ்ரநாம பாராயண பலன் கிடைக்கும்.

விசேஷ தினங்கள் ஆகஸ்டு 1996
13.8.1996 – ஆடி அமாவாசை
16.8.1996 – விடியற்காலை 1.30 முதல் 10.30 வரை விஷ்ணுபதி புண்யகாலம்
20.8.1996 , 27.8.1996 , 3.9. 1996 – மூன்று செவ்வாய்க்கிழமைகளில் மூன்று மங்கள கௌரி விரத நாட்கள்
23.8.1996 – ஸ்ரீவரலக்ஷ்மி விரதம்
24.8.1996 – ஆவணி மூலம் – திருச்சி மலைக்கோட்டை கிரிவல நாள்
28.8.1996 – பௌர்ணமி பூஜை, ஆவணி அவிட்டம்
29.8.1996 – ஸ்ரீகாயத்ரீ ஜபம்
4.9.1996 – கோகுலாஷ்டமி

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam