அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

புத்தாண்டு பூஜை

புத்தாண்டு பூஜை
1996-97 ஆம் ஆண்டுகளில் பல கிரஹ சஞ்சார மாற்றங்களினால் எண்ணற்ற துன்பங்கள் ஏற்படும் என்பதை கடந்த பல இதழ்களில் குறிப்பிட்டு வந்துள்ளோம். இதன் காரணமாகவே கூடுதலான சத்சங்க பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள், தான, தருமங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம். இறையருள் திருஅருளாகப் பலவிதங்களில் பரிணமித்து நம் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றது.. பித்ருக்கள்/பெரியோர்களின் ஆசி, தெய்வீக விருக்ஷங்களின் அருள், கோபுர தரிசனம், ஆலய வழிபாடு, குலதெய்வ, இஷ்ட தெய்வ பூஜைகள், ஹோமம், கிரிவலம், விரதங்கள், பௌர்ணமி பூஜை, தீப வழிபாடு – போன்ற பலவிதங்களில் இறையருளைப் பெற்று கோடிக்கணக்கான நம்முடைய கர்மவினைகளைத் தீர்த்து நன்னிலை பெறவேண்டும்.
மனித மனம் பொதுவாக ஏக தத்துவமாக ஒரே நிலையில் இருப்பதில்லை. பலவிதமான எண்ணங்களிலும், பலவிதமான சூழ்நிலைகளிலும் மனிதன் வாழ வேண்டி இருப்பதால் “ஒருவனே தேவன்” என்ற உயர்ந்த ஆன்மீக நிலையைப் பெற இயலவில்லை. மனக்கட்டுப்பாடின்றி நியாயமான ஆசைகள்/பேராசைகள்/நிராசைகள், முறையற்ற காம உணர்வுகள், அதிகார, ஆணவச் செருக்கு என்று பலவிதமான ஆசாபாசங்களிடையில் தான் மனிதன் வாழுகின்றான். எனவேதான் மனிதனை நல்வழிப்படுத்தவே, அவனுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் பலவித தெய்வ வழிபாடுகள், பூஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
‘நட்சத்திர தத்துவம்’
கிரஹ சஞ்சாரம் எனப்படும் கிரஹ அசைவுகளினால் துன்பங்கள் ஏற்படுமா? ராசி மண்டலம் என்பது ஜீவன்கள் வாழும் பூமி எனக் கொள்வோம். உண்மையில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு. அவற்றில் மனித அறிவு கொண்டு நாம் அறிந்தவை இருபத்தி ஏழு நட்சத்திரங்களே. பொதுவாக இந்த 27 நட்சத்திரங்களின் இருப்பிடங்களைச் சுற்றித்தான் நவகிரஹங்களின் அசைவுகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய நட்சத்திரம் அனுஷம் எனில் அவருடைய உடலில் அனுஷ நட்சத்திர மண்டலத்திற்கு உரித்தான குணங்கள், அம்சங்கள், உணர்வுகள் நிறைந்திருக்கும். விண்ணில் அந்த அனுஷ நட்சத்திரம் அருகே நவகிரஹங்களும் வந்து நகர்ந்து அசைந்து செல்கையில் கிரஹங்களின் ஈர்ப்பினாலும், அவற்றின் சக்தியினாலும், அனுஷ நட்சத்திர மண்டலம் பல மாறுதல்களுக்கு உள்ளாகின்றது. இவை அனுஷ நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கும் சென்றடையும். இதையே ‘கிரஹ சஞ்சார மாறுதல்கள்’ என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நிறம், குணம், ருசி, வடிவம், மொழி, திசை, நாடி, வியாதி, நவரத்தினக்கல் போன்று பலவித கூறுபாடுகள் உண்டு. இவை அனைத்தும் அந்தந்த நட்சத்திர மண்டலத்திற்கு அருகே ஏற்படும் நவகிரஹ அசைவுகளினால் பலவித மாறுதல்களுக்கும் உள்ளாகும். உதாரணமாக, அனுஷ நட்சத்திர மண்டலத்தருகே செவ்வாய் கிரஹ ஈர்ப்பு சக்தி அல்லது அதன் கோணப்பார்வை மிகுமானால் அங்கு உஷ்ணம் அதிகமாகும். இதனால், அதே சமயத்தில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு உடல் உஷ்ண அதிகரிப்பு, உஷ்ண நோய்கள், மிகுந்த கோபம், சினத்தினால் வரும் விளைவுகள் ஏற்படும். இவ்வாறாக 1996-97 வருடங்களில் கிரஹ சஞ்சார மாறுதல்களினால் துன்பங்கள் ஏற்படும் என்று சொல்வதைவிட, ஜீவன்களுடைய பெருகி வரும் தீய கர்மவினைகளின் விளைவுகளால் எண்ணற்ற துன்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்திட வேண்டும்.
நவகிரஹ தெய்வமூர்த்திகள் நம்முடைய நித்ய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கின்றனர். எனவே நவகிரஹ இறை வழிபாடு மூலமாக நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். வெறும் வழிபாடு எவ்வாறு ஒரு ரட்சையாக மாறுகின்றது என்ற ஆன்மீக விளக்கத்தைக் காண்போமா? நம் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ இதழ்களில் அந்தந்த தினத்திற்குரிய கிரஹ பூஜைகளையும், சூர்ய ஹோரை, சந்திர ஹோரை என்றவாறாகத் தினந்தோறும் அந்தந்த ஹோரை நேரத்தில் அதற்குரிய கிரஹமூர்த்தியின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறோம். உதாரணமா , செவ்வாய்க்கிழமையில் அங்காரக வழிபாடும், செவ்வாய்க் கிரஹத்திற்குரிய கிரஹமூர்த்தியான ஸ்ரீசுப்ரமண்யர் வழிபாடும், பூஜை செய்கின்றவரின் நட்சத்திரத்துக்கு உரித்தான மண்டலத்தின் பல தெய்வீக சக்திகளையும், கிரணங்களையும், அருட்கதிர்களையும், உருவாக்கிப் பரவெளியைப் புனிதமாக்குகின்றன. எனவே, அந்த நட்சத்திர மண்டலத்தினருகே செவ்வாய்க் கிரஹ சஞ்சார விளைவுகள் குறைக்கப்படுகின்றன அல்லது நன்மையாக அமையும்படி மாற்றப்படுகின்றன. இவ்வாறாகவே ஒவ்வொருவருடைய பூஜாபலன்களும், அவரவருக்கான நட்சத்திர மண்டலத்தை அடைந்து அந்தந்த நட்சத்திர தேவதையைப் ப்ரீதி செய்கின்றன. மேலும் அந்நட்சத்திர மண்டலத்திற்கு உரித்தான அதிதேவதா, ப்ரத்யதி தேவதா மூர்த்திகள் தம்முடைய நட்சத்திர பிரஜைகளுக்காக நவகிரஹ மூர்த்திகளைப் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு ஒரு சிறு பூஜையே பன்மடங்காகப் பரந்து விரிந்து எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள நட்சத்திர மண்டலங்களை அடைகின்றன.
நட்சத்திர மண்டலங்களும், கோயில் கோபுரங்களும்.....
நாம் தனித்துப் பூஜிப்பதைவிட குடும்பத்தினருடனோ, பலரும் ஒன்று சேர்ந்தோ சத்சங்க கூட்டு வழிபாட்டை மேற்கொண்டால் அதற்குச் சக்தி அதிகம் உண்டு. கூட்டு வழிபாட்டின் மஹிமையினால் பூஜா சக்தி பல்கிப் பெருகி எளிதில் அவரவர் நட்சத்திர மண்டலத்தை அடைகின்றன. உதாரணமாக, பத்துபேர் சேர்ந்து சகஸ்ரநாம துதியை (ஆயிரம் போற்றித் துதிகள்) ஒரு முறை நிகழ்த்தினால் ஒவ்வொருவரும் 10x1000 = 10,000 துதிகளை ஓதிய பலன்களை எளிதில் பெறலாம். அதாவது, பத்து பேருடைய கூட்டு சகஸ்ரநாம வழிபாட்டில் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொருவரும் பத்து முறை சகஸ்ரநாமம் ஓதிய பலனை மிக எளிதாகப் பெற்று விடலாம். இதனால் தான் அனைத்து மதங்களிலும் கூட்டு வழிபாடே வலியுறுத்தப்படுகிறது.  கூட்டு வழிபாட்டின் மேன்மையை உணர்த்துவதற்காகவே ஆலய வழிபாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் பார்த்தோமானால் தினமும் ஏதேனும் ஒரு விசேஷ பூஜையைக் குறித்திருப்பர். இல்லங்களில் பஞ்சாங்கத்தில் குறித்தபடி அனைத்து விசேஷ பூஜைகளையும் கடைபிடிக்க இயலாதல்லவா? இதற்காகவே ஜாதி, இன, குல, மதபேதமின்றியும், மனிதர்கள் , தாவரங்கள், விலங்குகள் என்ற பேதம் கூட இல்லாமலும், புழு முதல் பெரிய விலங்கு, மரம் உட்பட அனைத்து ஜீவன்களின் நன்மைக்காகவும் ஆலய வழிபாடு நிகழ்கின்றது. விதவிதமான விசேஷ பூஜைகளில் கூட கருட பஞ்சமி, நாக பஞ்சமி, மஹாளய தர்ப்பணம், அரச பூஜை என்றவாறாக விருட்ச பூஜைகளும், பிராணிகளுக்கான பூஜைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மனிதர்களை விட உத்தம ஆன்மீக நிலைகளையுடைய விருட்சங்களும், நாக தேவதைகளும், வசுக்களும் உண்டு என்பதை உணர்ந்திடுக.
கோபுர கலசங்கள்
ஆலய வழிபாட்டின் பூஜா பலன்கள் கோயில் கோபுர கலசங்களின் மூலம் நட்சத்திர மண்டலங்களை விரைவில் அடைகின்றன. கோயில் கோபுர கலசங்களுக்கு அரிய தெய்வீக சக்திகள் உண்டு. தினந்தோறும் சுயம்புமூர்த்திகளைத் தரிசிக்க வரும் சித்தபுருஷர்கள், மஹரிஷிகள், ஞானியர், யோகியர், மும்மூட்சுகள் போன்றோர் தங்களுடைய ஜோதிமயமான தேகங்களை கோயில் கோபுரங்களிலும், ஸ்தல விருட்சங்களிலும் நிலை நிறுத்தி சாதாரண மனித, பிராணிகளின் ரூபத்தில் இறைவனைத் தரிசிக்கின்றனர். ஏனென்றால் மிகவும் ஒளிபொருந்திய, பல கோடி சூரியர்களின் ஒளி பிரகாசத்தையுடைய அவர்களுடைய தேகங்களைத் தாங்குகின்ற தெய்வீக சக்தி கோயில் கோபுரங்களுக்கும், கலசங்களுக்கும், ஸ்தல விருட்சங்களுக்கும் மட்டுமே உண்டு. தத்தாத்ரேயர், நவகிரஹ மூர்த்திகள் போன்ற தெய்வ மூர்த்திகளோ ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அபூர்வமான யந்திரங்களிலும், சக்கரங்களிலும் தங்கிச் செல்வதுண்டு. இன்றைக்கும் நவராத்திரி தினங்களில் காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம், திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன் ஆலயம், சென்னை ஸ்ரீவட்டப் பாறை அம்மன் சந்நிதி – போன்ற இடங்களில் உள்ள தெய்வீக யந்திரங்களில் ஸ்ரீவித்யா சக்கர மண்டலத்திலுள்ள 43 கோடி தேவதா மூர்த்திகளும் பிரசன்னமாகி அருள்பாலிக்கின்றனர். இவ்வரிய தெய்வீக சக்திகளையும் கோபுர கலசங்கள் தாம் விண்ணிலும், மண்ணிலும் செலுத்தி நம்மை உய்விக்கின்றன.
கோயிலில் அர்ச்சனை செய்கையில் என்ன நட்சத்திரம் என்று கேட்பதுண்டு. எந்த நட்சத்திரத்திற்காக அர்ச்சனை செய்யப்படுகின்றதோ அதற்குரித்தான அர்ச்சனையின் பலன்கள் கோயில் கோபுர கலசம் மூலமாக அந்த நட்சத்திர மண்டலத்தை நொடிப்பொழுதில் அடைந்துவிடுகின்றன. இவ்வாறாக ஒருவர் தன் நட்சத்திரத்திற்காகச் செய்கின்ற கோயில் பூஜையின் பலன்கள் உலகெங்கும் உள்ள அந்த நட்சத்திரக்காரர்களுக்காகவும் பயன்படுகின்றது. இவ்வாறாகக் கோயில் பூஜையின் மஹிமையை விவரித்தால் அது பல புராணங்களாக விரிவு பெறும்.
1997 புத்தாண்டு பூஜை
இசைக்குரித்தான தாத்ரு வருடமும், பூஜைக்குரித்தான ஈஸ்வர வருடமும் இணைகின்ற 1997ல் நட்சத்திர தேவதா மூர்த்தி பூஜைகளுக்குச் சித்தர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள். 1997ல் தினந்தோறும் நட்சத்திர தேவதா மூர்த்திகளைக் கண்டிப்பாகப் பூஜித்திட வேண்டும். ஆங்கில ஆண்டு துவக்கமாயினும்  தாது வருடத்தின் உத்தராயண பூஜையாகவும், அடுத்து வரும் ஈஸ்வர வருடத்திய தட்சிணாயண பூஜையாகவும் சித்புருஷர்கள் “நட்சத்திர சகாய பூஜை” என்ற ஓர் எளிய அரிய பூஜையை அளித்துள்ளனர். கிரந்த நாடிகளின் வடிவில் “நட்சத்திர சகாய திருவாக்யத் திரட்டு” என்று இது குறிப்பிடப்படுகின்றது. இது அனைவர்க்கும் உரித்தான, பல பெரியோர்கள் அறிந்த, நம் மூதாதையர்கள் அளித்துள்ள பொதுவான பூஜையாகும்.

நட்சத்திர சகாய திரட்டு

நட்சத்திர சகாய பூஜை – நட்சத்திர சகாயத் திருவாக்யத் திரட்டு
1. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரித்தான ஒரு வரி பிரார்த்தனைத் துதியான இதனை அனைவரும் தினந்தோறும் பாராயணம் செய்திட வேண்டும்.
2. அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று மிக அதிகமாகத் துதித்திடல் உத்தமமானதாகும். மாதந்தோறும் அவரவர் நட்சத்திர நாளில் இந்த 27 துதிகளையும் பாராயணம் செய்தல் சிறப்புடையதாகும்.
3. 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான துதிகள் மிகவும் அரியவை. இதனைப் பாராயண சித்தி செய்து சுயநலமற்ற பல நற்காரியங்களுக்குப் பயன்படுத்திடலாம்.
4. நட்சத்திரங்கள் பலகோடி சூரியன்களை நிகர்த்த ஒளிப் பிரகாசம் உடையவையாதலின் இந்நட்சத்திர சகாய துதி கொண்டு தீப பூஜை, அக்னியிலான ஹோமம் போன்ற அக்னிவளர் பூஜைகளை நிகழ்த்திடில் பன்மடங்கு பலன்கள் கிட்டும்.
5. பல இல்லறப் பெண்கள் ஒன்று சேர்ந்து கச்ச முறையில் ஒன்பது கஜம் புடவை அணிந்து, 27 விளக்குகளைத் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி இந்நட்சத்திர சகாயத் துதியைத் குறைந்தது 108 முறை ஓதிட, இது நற்காரிய சித்திக்குப் பெரிதும் உதவும். தீப பூஜையின் பூரணமாகக் குறைந்தது 27 ஏழை சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்கள் (மாங்கல்யச் சரடு, குங்குமம், கண்ணாடி போன்றவைதனை அளித்திட வேண்டும்.
6. 27 செங்கற்களைக் கொண்டு நட்சத்திர மண்டல ஹோம குண்டம் அமைத்து இந்நட்சத்திரத் துதியுடன் “ஸ்வாஹா” சேர்த்து ஓதி, குறைந்தது 108 ஆஹுதிகளுடன் ஹோமத்தை நிறைவேற்றலாம்.
7. 27 நட்சத்திர லிங்கங்கள் உடைய கோயில்களில், அந்தந்த நட்சத்திர நாளன்று, அந்தந்த நட்சத்திர லிங்கத்திற்கு, இந்நட்சத்திர சகாயத் துதியை ஓதி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதல் சிறப்புடையதாகும். குறிப்பாக அவரவர் நட்சத்திர பிறந்தநாளன்று இதனை நிகழ்த்துதல் அபரிமிதமான பலன்களை அளிக்கும். சென்னை திருவொற்றியூர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீபடம்பக்கநாதரின் ஆலயத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.
8. நட்சத்திர லிங்கங்கள் இல்லாத இடங்களில் சந்திர பகவானுக்கு இப்பூஜையை நிகழ்த்தலாம். ஸ்ரீசந்திர பகவானின் தேவியர்களே 27 நட்சத்திர தேவியர்கள். ஆதலின் ஸ்ரீசந்திர பூஜையும் நட்சத்திர தேவதா மூர்த்திகளுக்குப் ப்ரீதியளிக்கும்.
9. இத்துதியை நித்ய பூஜையாக ஏற்றல் மிகவும் நன்மை பயக்கும். நாள்தோறும் நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற இடர்களைக் களையும் உன்னத வழிபாடாக இது அமைகின்றது.
10. திருஅண்ணாமலை கிரிவலத்தில் ஸ்ரீசந்திரமௌளீஸ்வர தரிசனம் என்ற ஓர் அபூர்வ தரிசனம் உண்டு. இது மட்டுமின்றி அடிஅண்ணாமலைப் பகுதிக்கு முன், பிறை வடிவில் மலை தரிசனம் கிட்டும். இதற்குப் ‘பிறை தரிசனம்’ என்று பெயர். இந்நட்சத்திரத் துதியை ஓதியவாறே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து இவ்விரண்டு தரிசனப் பகுதிகளிலும், 27 முறை விழுந்து வணங்கிட, தீயோர் தொடர்பு நீங்கி நல்வாழ்வு கிட்டும். பல தீய வழக்கங்களை உடையோர்க்கு அவை தீர இது ஓர் அரிய ஆன்மீக மருந்தாகும்.
11. இந்நட்சத்திரத் துதியைப் பாராயண சித்தி செய்து கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தத்தில் இதனை ஜபித்து நோயிலிருந்து நிவாரணம் பெறுவர். ஆனால் இதனைக் குறுகிய நோக்கில், வருமானம் பெறும் வழியாக மேற்கொண்டால் சாபங்களே ஏற்படும். ஆனால் பொதுத் தொண்டாக, சுயநலமற்ற, இறைச் சேவையாக மக்கள் சேவையாக மேற்கொண்டால் அபரிமிதமாக இறையருள் கூடும்.
12. 27 நட்சத்திரங்களுக்குள் அனைத்து ஜீவன்களும் அடக்கமாகும். எனவே தினமும் நட்சத்திரத் துதியை ஜீவன்களின் நன்மைக்காகச் சங்கல்பம் செய்திடில் அது மிகச் சிறந்த சமுதாய சேவையாகும்.
13. புத்தாடைகளை ஒரு தட்டில் வைத்துத் தினமும் இந்நட்சத்திரத் துதியை ஓதிடுக. நோயுற்றவர்கள் இவ்வாடையை அணிந்திட நோயிலிருந்து சுகம் பெறுவர். இவ்வாறு நட்சத்திர துதி, மந்திர சக்திகள் கூடிய மேல் துண்டு, மேல் ஆடை, அங்கவஸ்திரம் போன்றவற்றைப் பயன்படுத்திட தீய சக்திகள் உடலை அண்டாது. தீயோர்களின் எண்ணமும் நம்மைத் தாக்காது. வியாபாரம், அலுவலகம், நீதிமன்றம் போன்ற இடங்களில் மேற்கண்டவாறு ஆடைகளை அணிந்து சென்றிட, எதிரிகளின் தீய சக்திகளிலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
14. ஏழைகளுக்கு இந்நட்சத்திரத் துதிகளின் சக்திகள் சென்றடைய வேண்டுமல்லவா? தன்னுடைய பிறந்தநாள், நட்சத்திரம் அறியாது வாழ்கின்ற, அறியாமையில் உழல்கின்ற ஏழைகள் ஏராளமாய் உள்ளனர். அவர்களுக்கும் நட்சத்திர சகாயத் துதியின் இறையருளைப் பெற்றுத்தரும் வண்ணம் மந்திர சக்தி நிறைந்த புத்தாடைகளை அவர்களுக்குத் தானமாக வழங்கி அவர்களும் நன்னிலை பெற்றிட உதவிடுவீர்களாக!!
நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு
1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே
2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே
3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே
4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே
5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே
6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே
7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே
8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே
9. சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே
10. சாது ஜடராச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே
11. துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே
12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே
13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே
14. ரத கஜ துரக பதாதி சேவக சாஸ்திர மய சித்ரா தேவி சஹாய க்ருபே
15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே
16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே
17. சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே
18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை பிரதாயினி சஹாய க்ருபே.
19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.
20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.
21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.
22. மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.
23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.
24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.
25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.
26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.
27. ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

களிமண் பிள்ளையார்

களிமண்ணில் பிள்ளையார்
ஒற்றைப் படைநாளில் பிள்ளையாரை நீரில் விடுவது ஏன்?
விநாயக சதுர்த்தியன்று நாம் பூஜிக்கும் பிள்ளையாரைப் பூஜை தினத்திலிருந்து 1,3,5,7,9....(பூஜை தினத்தையும் சேர்த்து) என்று ஒற்றைப்படை நாளில், அதிலும் குறிப்பாக ஞாயிறு அல்லது திங்களன்று விஸர்ஜனம் செய்தலே சிறப்புடையது! ஒற்றைப்படை நாளின் மகத்துவம் என்ன? அனைத்து இறைமூர்த்திகளுக்கும் “ஸஹஸ்ராக்ஷ” என்று புருஷ ஸுக்தத்தில் வருவது போல் ஆயிரக்கணக்கான கண்கள் உண்டு. ஆனால் இறைவன் விஸ்வரூபியாக ஆயிரக்கணக்கான கண்களுடன் நம்முன் வந்து நின்றால்.... சற்றே சிந்தித்துப் பாருங்கள்!  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஆயிரமாயிரம் கண்களுடன் விஸ்வரூபங் காட்டிய போது அர்ஜுனனே அஞ்சிக் கதறி, “கிருஷ்ணா! நீ சாதாரணமான தோற்றத்திலேயே காட்சிகொடு” என்றல்லவா வேண்டினான்! அர்ஜுனனுக்கு முன் நாம் எம்மாத்திரம்? எனவேதான் நம் அச்சம், பயம், நாணம் போன்ற சாதாரண மனித குணங்களைக் கருத்தில் கொண்டு, நாம் நம் (குறுகிய) அறிவிற்கெட்டிவாறு “சாதாரண மனித ரூபத்தில்” கடவுளை வணங்குகின்றாம். சூர்யன், சந்திரன், பூலோகம், கோடி கோடி நட்சத்திரங்களைப் படைத்தவனை, அவற்றின் உள்ளும் புறமுமாய் விளங்குபவனை எதற்குள் அடக்க முடியும்?!
முக்கண்ணில் ஒன்று அக்னியே
தெய்வ மூர்த்திகளும் நம் அறிவு, பார்வைக்கு எட்டுமளவில் மூன்று கண்களுடன் “உருவ வழிபாட்டினை” ஏற்கின்றனர். சூர்ய, சந்திரர்கள் அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் இரு கண்களென்பதை முன்னரே விளக்கியுள்ளோம். அனைத்து சஹஸ்ரநாமத் துதிகளிலும் (1000 போற்றித் துதிகள்) ‘சூர்ய, சந்திராக்னி நேத்ராய நம:”- “சூர்ய, சந்திர அக்னி மூர்த்திகளைக் கண்களாக உடையோய் போற்றி” என்று வருவதைக் காணலாம். எனவே தெய்வ தேவதா மூர்த்திகளின் மூன்றாவது நேத்ரமே ஸ்ரீஅக்னி பகவான்! ஹோமங்களில் நாமளிக்கும் ஆஹுதிகளை அந்தந்த தெய்வ லோகங்களுக்கு எடுத்துச் செல்லு “ஸ்வாஹா” தேவியின் நாயகரே அக்னிபகவான், மூன்று முகங்களை உடைய ஸ்ரீஅக்ன் பகவானின் ரூபத்தைக் காண்பதே பேரருள் தரும். காணக் கிடைக்காத , மூன்று முகங்களை உடைய ஸ்ரீஅக்னி பகவானின் உருவத்தைத் திருக்கழுக்குன்றம் ஸ்ரீபக்தவத்சல ஈஸ்வர ஆலய முன் மண்டபத்தில் காணலாம். ஒரு நாக்கு, மூன்று முகம் என்றவாறு ஒற்றைப்படை அம்சங்களை உடையவர் ஸ்ரீஅக்னி பகவான். ஸ்ரீஅக்னி ஹோமத்திலும் அவருக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் ஹோம ஆஹுதிகள் அளிக்கப்படும். எனவே தெய்வ மூர்த்திகளுக்கான பூஜைகளில். ஒற்றைப் படைநாளில் அக்னி சக்தி மிகுந்திருக்கும், திருவிழாக்களிலும் அக்னி பூஜைகளான ஹோமம், வேள்வி, தீமிதி, விளக்கு பூஜை போன்றவை ஸ்ரீஅக்னிபகவானுக்குரித்தான ஒற்றைப் படை நாட்களில் தான் அமையும். எனவேதான் களிமண் சிலையின் மூன்றாவது கண்ணாக அமையும் அக்னி பகவானுக்குரித்தான ஒற்றைப்படை நாளில் விஸர்ஜனம் செய்வது சிறப்புடையதாகும்.
ஒற்றைப்படை நாட்களின் மகத்வம் மேலும் பல உண்டு. தக்க சற்குருவை நாடி விளக்கம் பெறுக. மரணச் சடங்குகளில் கூட, ஒற்றைப் படைநாளில் அக்னியில் நடைபெறும் (அதே தினத்தில்) பிரேத சம்ஸ்காரம் விசேஷமானதாகும். களி மண்ணில் பிள்ளையார் பற்றிய விளக்கம் எவ்வாறு பல அரிய ஆன்மீக பொக்கிஷத்திற்கு  வித்திடுகிறது பார்த்தீர்களா! மூன்றாவதாக, பிள்ளையார் சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு முன் அதனை விஸர்ஜனம் செய்வது சிறப்புடையது! வெடிப்புகள் நிறைய ஏற்பட்டால் இல்லத்தில் திருஷ்டி தோஷங்கள் மற்றும் துர்சக்திகளின் ஆக்ரமிப்பு அதிகம் என்று பொருள். நம்முடைய கர்மவினைகளைக் கழிப்பதற்கு விநாயக சதுர்த்தி பூஜை ஓர் எளிய வழியாகும். அவரவர் பூஜை செய்த பிள்ளையாரை அந்தந்தக் குடும்பத்தினரே விஸர்ஜனம் செய்திட வேண்டும். பிறரிடம் கொடுத்தனுப்புவதோ அல்லது பிறரிடம் பெறுவதோ இரண்டையும் தவிர்த்திடுக!
முத்தாய்ப்பாக, விநாயகரின் தொப்புளில் நாம் வைக்கின்ற நாணயத்தில் (காசு) நம் மூதாதையர்களான பித்ருக்கள் ஆவாஹனமாகி நமக்கு அருள்புரிகின்றனர்.,இத்தகைய “நாபிலோக வாசத்திற்காக” நம் பித்ருக்கள் ஏங்குகின்றனர். காரணம் இது பல மஹிமைகளை, மகத்துவங்களை உடையது. கணபதி நாபிலோக வாசம் எவர்க்கும் கிட்டாத அரிய பாக்யம். இறைவனின் திருமேனியிலேயே உறைகின்ற உத்தம பாக்யம்! இந்த ஆன்மீக இரகசியத்தை இனியேனும் உணர்ந்திடுக! எனவே விஸர்ஜனத்திற்கு முன் இந்த “பித்ருக்கள் உறையும் பாக்யம்” பெற்ற நாணயத்தைத் தனியே எடுத்து வைத்துப் பிறகு மண் பிள்ளையாரை நீரில் இடுக! இல்லத்தில் சொல்லொணாப் பிரச்சனைகள் ஏற்படுகையில் இந்த நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து கையில் வைத்துக் கொண்டு தியானம் செய்திடுக! பித்ருக்களின் ஆசியால் நல்வழி கிட்டும். சொல்லவும் பெரிதே களிமண்ணில் பிறக்கும் விநாயகரின் மஹிமை!

குரோத பட்டாரகர் மார்கழி

தாத்ரு வருட மார்கழிக்கு ‘க்ரோத பட்டாரகர் மார்கழி’ என்று பெயர். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் உரித்தான மார்கழி மாதத்திற்கு விதவிதமான மகத்துவங்கள் உண்டு. காரணம் பலவித யுகங்களில், பல ஆண்டுகளில் கூடிய மார்கழி மாதங்களில் பல்வேறு புராண நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றுள்ளன. ஸ்ரீஆண்டாள் சரிதத்தில் பல அற்புத திருவைபவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஜீவனுக்கும் 12 வகையான பித்ரு பரிபாலனங்கள் உண்டு. படத்தில் காணும் வகையில் வருடத்தின் 12 மாதங்களிலும் 12 வகையான பித்ருக்களின் பரிபாலனங்கள் உள்ளன. இதில் மார்கழி மாதத்தில் தாய் வழியில் பெண் வர்க்கத்தில் பித்ருக்களின் பரிபாலனம் நடைபெறுகின்றது. உண்மையில் நாம் அனைவரும் தினந்தோறும் 12 வகையான பித்ருக்கள் மற்றும் ரிஷிகள், ரிஷிபத்னிகள், நவகிரஹ மூர்த்திகள், காண்ட ரிஷிகள், தேவர்கள் போன்ற அனைவர்க்கும் தர்ப்பணம் அளித்தாக வேண்டும். கலியுகத்தில் பக்தி செலுத்துவதில் அசிரத்தை மிகுந்து வருவதால் நித்ய தர்ப்பணம் என்பது மறைந்து, மாதம் ஒருமுறைஅமாவாசையன்று மட்டுமே பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிக்கின்ற முறை ஏற்பட்டுவிட்டது என்ற நிலை மிகவும் வேதனைக்குரியது. இந்நிலையிலும் இத்தகைய மாமலை போன்ற பெரும் குற்றங்களை மன்னித்து நம் பித்ருக்கள் கருணை புரிகின்றனர் என்றால் என்னே அவர்கள் காருண்யமும் மகிமையும்!
மனித குணத்தின் பெருங்குற்றங்களுள் ஒன்று சினம் ஆகும். சினம் முற்றிடில் குரோதமாகிறது. சினத்தின் சின்னமாய் சிவந்து, சீரிய சிவப்பணி ஆற்றி வரும் சீலராம் ஸ்ரீதுர்வாசரைப் பற்றி நாம் அறிவோம். உத்தமச்  செல்வர்களுள் இன்ப துன்பங்களுக்கும், எண் குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாய் விளங்குவதால் அவர்களுடைய சினமும், சாபமும் என்றுமே நல்வழிக்குத்தான் பயன்படும். “தூர்” எனப்படும் அறுகம்புல்லை மட்டுமே உண்டு அன்றும், இன்றும், என்றும் அருள்புரிந்து வரும் ஸ்ரீதூர்வாச மகரிஷியின் சினம் எத்தகையதோ! அவர் சினமடைகையில் தான் அவர் தபோபலன் பன்மடங்காய்ப் பெருகி பலன் அளிக்கும் என்பது அவருக்கென வகுக்கப்பட்ட நியதியாகும்.
அருகம் புல்லார்க்கு அற்புத விருந்து
ஒரு முறை, பெருகி வரும் யமுனை நதியின் வெள்ளத்தைக் கடக்க முடியாமல் கோகுலப் பெண்கள் அவதியுற்று ஸ்ரீகிருஷ்ணனைப் பிரார்த்தித்தனர். ஸ்ரீகிருஷ்ணனோ, “உங்களுடைய விரத பூஜைகளின் நைவேத்தியங்களை யமுனை நதிக்கரையில் வெறும் அறுகம்புல்லை மட்டும் உண்டு வாழும் ஸ்ரீதுர்வாச மகரிஷிக்குப் படைத்து அவருடைய அருளால் நதியைக் கடப்பீர்களாக!” என்று கூறினார். அவர்களும் யமுனா பூஜா விரத்தின்ப பூரணமாக, ஸ்ரீதூர்வாச மகரிஷிக்கு அனைத்து அன்ன வகைகளையும் படைத்தனர். அவரோ அனைத்தையும் உண்டார். தூர்வாசர் “அறுகம்புல்லை மட்டுமே உண்டு வாழும் இந்த தூர்வாசனாகிய யான் அளிக்கும் மந்திரத்தைத் துதித்தவாறே யமுனையைக் கடப்பீர்களாக” என்று அருளினார். கோகுலப் பெண்கள் அவர் அளித்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் துதித்தவாறே யமுனையைக் கடந்தனர். என்னே அவர்கள் பக்தி!
ஸ்ரீதூர்வாசரோ அறுகம்புல்லை மட்டுமே உண்டு வாழ்பவர். ஆனால் கோகுல மாதர்கள் அளித்த அனைத்து அன்னவகைகளையும் உண்டதோடு மட்டும் அல்லாது “அறுகம்புல்லை மட்டுமே உண்டு வாழும் தூர்வாசனாகிய யான்” என்றல்லவோ கூறினார்! இது உண்மைக்குப் புறம்பானதாகத் தோன்றுகின்றதே! இது எவ்வாறு சாத்தியமாகும்? இவ்வகையில் தான் கோகுல மக்களின் ஆழ்ந்த பக்தி வெளிப்படுத்தப்படுகின்றது. பரிபூர்ணமான நம்பிக்கையில் அவர்கள் மந்திரத்தை ஓதியமையால் தான் அவர்கள் யமுனையைக் கடக்க முடிந்தது. “என்ன ஸ்வாமி! தாங்கள் அனைத்து அன்னவகைகளையும் உண்டீர்களே! பின் எவ்வாறு அறுகம்புல்லை உண்டு வாழும் யான் என்று சொல்கின்றீர்கள்?” என்றா கேட்டார்கள் கோகுல மக்கள் இல்லையே! சற்குருவின் வார்த்தைகளில் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்ததால் தான் அவர்கள் நல்வழி பெற்றனர்.
ஸ்ரீதூர்வாச மகரிஷி தன்னுடைய தபோபலன்கள் மூலமோ அல்லது விசேஷ பூஜைகள், ஹோமங்கள் மூலமாகவோ தன்னுடைய சினத்திற்குப் பரிகாரம் கண்டிருக்க முடியும். கோகுல மக்கள் தனக்கு அன்னவகைகளை நைவேத்தியமாகப் படைத்த போது ஸ்ரீதூர்வாச மகரிஷி அவர்களுக்குப் பல அறிவுரைகளை வழ்ங்கினார்., உண்மையில் அத்தருணத்தில் யமுனா தேவியானவள் தன்னுடைய தவங்களுக்குத் துரித பலன்கள் வேண்டி சீற்றத்துடன் வெள்ளமாகப் பாய்ந்து வந்தனள். தன்னுடைய நதிக்கரையில் ஸ்ரீதூர்வாசர் தவமிருப்பதை அறிந்த யமுனா தேவி, தான் சீற்றத்துடன் வெள்ளப் பெருக்கெடுத்திடில் ஸ்ரீதூர்வாசர் சினந்து சாபமளிப்பார், அவர் சாபம் என்றைக்குமே நல்லதுதானே செய்யும்! அதன் மூலம் நற்கதி பெற்றிடலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் சீற்றமடைந்தாள்.
யமுனா தேவியின் வருத்தம்
யமுனா நதியின் கோபத்திற்குக் காரணமென்ன? ஸ்ரீகிருஷ்ணனுக்குத் துன்பம் விளைவிப்பதற்காக, காளிங்க நாகமாக அரக்க சக்திகள் ஒன்று சேர்ந்தன அல்லவா! பல்லாயிரக்கணக்கான லோகங்களும் தாங்க இயலாத அளவிற்கு விஷத்தைக் கொண்டிருந்த காளிங்க நாகம் முதலில் யமுனை நதியில் தான் சில காலம் வாழ்ந்தது. உண்மையில் பல தேவதா மூர்த்திகள் யமுனா தேவியை வேண்டி, “தாயே! ஸ்ரீகிருஷ்ணனுடைய காளிங்க நர்த்தன வைபவம் நடக்கவிருப்பதால் அதுவரை நீதான் காளிங்கனுக்கு அடைக்கலம் தரவேண்டும். பூலோகத்தில் காளிங்கனின் கொடிய விஷத்தால் அந்த இடமே வெடித்து விடும். ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதம் பட்டால்தான் அவ்விஷத்தின் தன்மை மறையும். வசுதேவர் ஸ்ரீகிருஷ்ணனைக் குழந்தையாக இருக்கும் போது தன் தலையில் தாங்கி உன்னைத் (யமுனை) தாண்டி வந்தாரல்லவா? அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் கைகால்களை ஆட்டி உன்னை ஸ்பரிசித்தான். ஸ்ரீகிருஷ்ணனின் திருமேனியில் பட்ட முதல் நீர்த்துளியே உன்னுடைய (யமுனை) நீர்ப்ரவாகம் தான். எனவே உன்னுடைய புண்ய நதி தீர்த்தத்திற்குத்தான் காளிங்கனின் கொடிய விஷத்தின் சக்தியைத் தாங்கமுடியும். எனவே நீதான் அவனுக்கு அடைக்கலம் தந்து காளிங்க நர்த்தன வைபவத்திற்கு பேருதவி புரிய வேண்டும்” என்று வேண்டினர். ஆனால் காளிங்கன் யமுனை நதியில் சில காலம் பதுங்கியிருந்ததால் யமுனா தேவியைப் பாதித்த அவ்விஷ சக்திகள் தீர்த்தத்தில் கலந்திடலாகாது என்பதால் யமுனா தேவியே அவற்றைத் தன் தேகத்தில் ஏற்றாள். ஆனால் காளிங்கனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்தபின் தனக்கு காளிங்க விஷத்திலிருந்து நிவாரணம் கிட்டும் என யமுனா தேவி எதிர்பார்த்திருந்தனள். ஆனால் இதற்கெல்லாம் பொறுமை வேண்டுமே! ஸ்ரீகிருஷ்ணனோ யமுனா தேவியின் ப்ரார்த்தனைக்குச் செவி சாய்க்காதவன் போல் இருந்தான்.
கண்ணனுடைய லீலைகளை எவர்தான் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் ஸ்ரீகிருஷ்ணனே யமுனை நதிக்கரையில் ஸ்ரீதூர்வாச மகரிஷியைத் தவம் புரியும்படி வேண்டியிருந்தான் காரணம் அறுகம்புல்லிற்கு எத்தகைய கொடிய விஷத்தையும் உறிஞ்சும் தன்மை உண்டு. கீரிப் பிள்ளை கூட பாம்ப்பைக் கடித்த பிற்கு அறுகம்புல்லினைக் கடித்துத் தின்கின்ற காட்சியை இன்றும் காணலாம். பூனையும், நாயும் கூட ஏதேனும் மாமிசத்தை உண்டதும் அறுகம்புல்லைத் தேடி சிறிது உண்கிறதை இன்றும் நாம் காண்கிறோம். அறுகம்புல்லை உண்டு வாழ்கின்ற ஸ்ரீதூர்வாச முனிவரின் தேக காந்தியால், யமுனை தேவியின் தேஹத்தில் கூடியிருந்த காளிங்கனின் விஷப்படிவுகளைக் களைந்து திருவிளையாடல் புரிவதன்றோ ஸ்ரீகிருஷ்ணனின் லீலை. இதனை யார் அறிவர்?
கோகுலப் பெண்கள் அன்னவகைகளை ஸ்ரீதூர்வாசருக்கு அளித்தனர் அல்லவா? அவரோ தவத்தின் உச்ச நிலையில் இருந்தார். எதிர்க்கரையில் ஸ்ரீகிருஷ்ணன் அமர்ந்திருப்பதைக் கண்ட ஸ்ரீதூர்வாசர் இவை அனைத்தும் அவன் செயலே என்று அறிந்து ஆனந்தம் அடைந்தார். பலவகையான பட்சணங்களையும் உண்டு. யமுனை நதியில் இறங்கி வாய் கொப்பளித்து ஆசமனம் செய்து கரையேறினார். இதைத்தானே ஸ்ரீகிருஷ்ணன் எதிர்பார்த்திருந்தான். அறுகம்புல்லை உண்டு வாழும் ஸ்ரீதூர்வாசரின் தபோ சக்திகள் அவர் யமுனையில் வாய் கொப்பளித்ததன் மூலமாக யமுனா நதியில் கலக்க,
“ஸ்ரீஅச்சுதாய நம:
 ஸ்ரீஅனந்தாய நம:
ஸ்ரீகோவிந்தாய நம:
என ஸ்ரீ கிருஷ்ணனின் நாமங்களை ஓதி ஆசமனமாக அமர மூன்று முறை யமுனை நீரை உண்டமையால் காளிங்கனின் விஷ சக்தி யமுனையிலிருந்து நீங்கியது. மேலும் ஒவ்வொரு மார்கழியிலும் ஸ்ரீதூர்வாச மகரிஷி ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பாதபூஜை செய்கின்ற அனுகிரஹத்தைப் பெற்றுள்ளார். பல யுகங்களில் பல்லாயிரக்கணக்கான மார்கழி மாத நாட்களில் ஸ்ரீகிருஷ்ணனின் பாதத்தை ஸ்பர்சிக்கும் பேறு பெற்றமையால் ஸ்ரீதூர்வாச மகரிஷியின் கரங்கள் பட்டவுடனேயே யமுனையில் படிந்திருந்த விஷசக்திகள் நீங்கி விட்டன. யமுனை தேவிக்கு என்னே பெரும் பாக்கியம்!!

ஸ்ரீதுர்வாச மகரிஷி ஆஸ்ரமம்
திருஅண்ணாமலை

ஸ்ரீவேணுகோபாலனாக, பல்லாயிரக்கணக்கான பசுக்களுடனும், கோகுல மக்களுடனும் பாரதமெங்கும் பவனி வந்துள்ளான் கண்ணன், அவற்றுள் திருக்கண்ணபுரம், திருஅண்ணாமலை போன்றவை முக்கியமானவையாகும். ஸ்ரீதூர்வாச மகரிஷி பல இடங்களில் ஆசிரமம் கொண்டிருந்தார். அவற்றுள் திருஅண்ணாமலையும் ஒன்றாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில், வடமேற்குப் பகுதியில் ஸ்ரீதூர்வாச மகரிஷியின் ஆசிரமம் ஒரு யுகத்தில் சிறந்து விளங்கியது. ஸ்ரீதூர்வாசரின் திருப்பாத படிவுகளைத் திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் வடமேற்கு பகுதியில் இன்றும் காணலாம். பல யுகங்களின் மார்கழி புனித காலங்களில் ஸ்ரீதூர்வாசர் இங்கு பல சிறப்பான பூஜைகளைக் கொண்டாடியுள்ளார். தாத்ரு வருட மார்கழிப் பூஜையானது மனிதனுடைய சினத்தைத் தணிக்கும் அறவழி முறைகளை அளித்திடுகிறது. மேலும் கோபம் வருகின்றவர்களோடு பழகுகின்றவர்கள் அன்பும், பணிவும் பூண்டிருந்தால் எத்தகையோரையும் தன்மையான முறையைப் பெறச் செய்யலாம். மார்கழி மாத நோன்பினை ஏற்று உத்தம தெய்வ நிலைகளைப் பூண்டவர்களுள் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமாணிக்கவாசகர், ஸ்ரீதூர்வாச மகரிஷி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
தாது தரும் மாது பெறும் பாக்கியம்
ஸ்ரீதூர்வாச மகரிஷி தாத்ரு வருட மார்கழி மாதத்தினைத் ‘தாது தரும் மாது பெரு(று)ம் பாக்யம், என்றே அழைக்கின்றார். அக்காலத்தில் ஒவ்வொரு மார்கழியும் விதவிதமான பூஜை முறைகளை ஏற்று ஏனைய மக்களும் கடைபிடித்து நல்வாழ்வு பெற அருள் புரிந்தவரே ஸ்ரீதூர்வாச மகரிஷி. கலியுகத்திற்கு மிகவும் ஏற்புடையவை இப்பூஜா முறைகளாம். காரணம், இந்த யுகத்தில்தான் பலவிதமான கர்மவினைகளைச் சுமந்து பேராசை மற்றும் காமக் குற்றங்களுக்கு ஆட்பட்டு தீவினைப் புரிந்து மனித சமுதாயம் அல்லப்படுகிறது. கணவனுடைய தீய பழக்கவழக்கங்கள், தேவையற்ற சினம், க்ரோதம் போன்றவற்றால் இல்லறப் பெண்மணி துன்பங்களில் ஆட்படுகிறாஅழுந்துதல் மற்றும் தீய ஒழுக்கங்களால் கணவனுடைய ஆயுளும் பாதிக்கப்படுவதால் எதிர்கால வாழ்வே பல குடும்பங்களில் கேள்விக்குறியாக உள்ளது. நல்லவிதமாக வாழ்கின்ற குடும்பங்களிலும் நோய், வறுமை, வசதியின்மை, கோட்டு வழக்குகள், உறவுப் பிரச்சனைகள், திருமண தோஷங்கள் போன்றவற்றால் துன்பமே வாழ்க்கையில் நிலவுகிறது. அவற்றிற்குப் பரிகாரமாகவும் குடும்ப பெண்மணிகள் நல்வாழ்க்கை பெறவும் ஸ்ரீதூர்வாசர் சக்தி மஞ்சள் பூஜை முறையினை அளித்துள்ளார்.
“பஞ்ச பூத சக்தி மஞ்சள் பூஜை”
1. ஸ்ரீதூர்வாச மகரிஷி எழுந்தருளியுள்ள கோவில்களில் இப்பூஜையை நிறைவேற்றுதல் மிகவும் சிறப்புடையதாகும். பல குடும்பப் பெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடாக இதனை நிறைவேற்றிட, பலன்கள் பல்கிப் பெருகும்.
2. பலர் ஒன்று சேர்ந்து நிறைய மாங்கல்ய சரடுகளையும், கொம்பு மஞ்சளையும் ஒரு பெரிய தட்டில் வைத்து ஸ்ரீதூர்வாச முனிவரின் சந்நிதியின் முன் வைத்து “ஸ்ரீசக்தி மஹிம்ன” ஸ்தோத்திரத்தைத் துதித்திட வேண்டும்.
3. கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ய நதிகளின் தீர்த்தத்தை மஞ்சள், மாங்கல்ய சரடுகளின் மேல் தெளித்திட வேண்டும். குறிப்பாக யமுனா நதியின் புண்ய தீர்த்தத்தைத் தெளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
4. பல விதமான கொடிய தோஷங்களினால் கணவனுக்கு ஆயுள் பங்கமும், திருமணம் கைகூடாமை போன்றவையும் ஏற்படுகின்றன. இக்கொடிய எதிர்ப்பு சக்திகளைத் தீர்க்க வல்லதே யமுனை புண்ய தீர்த்தம்.
5. யமுனை நதி தீர்த்தத்தைப் பெற இயலாவிடில் ஸ்ரீகிருஷ்ணனுக்குக் கங்கை, காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஸ்ரீகிருஷ்ணனின் பாதங்களிலிருந்து அபிஷேக நீரைப் பெற்று மாங்கல்யத்தின் மேல் தெளித்திட வேண்டும். வசுதேவர் கம்சனின் சிறையிலிருந்து வெளிவந்து ஸ்ரீகிருஷ்ணனைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்தவாறு பொங்கி வந்த யமுனையைக் கடந்தாரல்லவா? ஸ்ரீகிருஷ்ணனுக்காக வழிவிட்ட போது, யமுனை தேவி ஸ்ரீகிருஷ்ணனைத் தொட்டு ஸ்பர்சிக்க ஆசை கொண்டனள். இருபுறமும் நீர் வழிவிட இடையில் வசுதேவர் சென்றமையால் யமுனை தேவியின் ஆசை எவ்வாறு நிறைவேறும்? கைக்குழந்தையான ஸ்ரீகிருஷ்ணன் கூடையிலிருந்து கால்களைத் தூக்கி ஆட்டிட, க்ஷண நேரத்தில் யமுனா தேவி நீர் மட்டத்தை உயரே எழுப்பி கிருஷ்ணனின் பாதத்தைத் தீண்டும் பெரும் பாக்கியத்தைப் பெற்றாள். எனவேதான் ஸ்ரீகிருஷ்ணனின் பாதத்திலிருந்து பெறும் அபிஷேக நீருக்கு யமுனா நதியின் மகத்துவ சக்தி உண்டு.

ஸ்ரீதுர்வாச மகரிஷி கூரூர்

6. ஸ்ரீதூர்வாச மகரிஷியை வணங்கி பிரார்த்தித்துத் திருமண தோஷங்களையும், திருமண வாழ்க்கையில் உள்ள தோஷங்களையும் நீக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
7. “ஸ்ரீசக்தி மஹிம்ன” ஸ்தோத்திரத்தை ஓதியவாறே ஸ்ரீகிருஷ்ணனை வலம் வருதல் வேண்டும். ஸ்ரீதூர்வாச மகரிஷி இல்லாத கோயில்களில் ஸ்ரீவிநாயகருக்கு, ஸ்ரீதுர்க்கைக்கு அறுகம்புல் மாலை சாற்றி பூஜையைத் தொடங்கிட வேண்டும்.
8. ஸ்ரீசக்தி மஹிம்ன ஸ்தோத்திரத்தை ஓதியவாறே கோயிலை வலம் வருகையில் ஒவ்வொரு கொம்பு மஞ்சளிலும் மாங்கல்ய சரடைச் சுற்றிவர வேண்டும். மாங்கல்ய சரடு சுற்றப்பட்ட கொம்பு மஞ்சளைத் தனியே வேறொரு தட்டில் எடுத்து வைத்திட வேண்டும். குறைந்தது 108 கொம்பு மஞ்சளைச் சுற்றும் வரையில் கோயிலை வலம் வருதல் விசேஷமாகும்.
9. இத்தகைய பஞ்ச பூத சக்தி மஞ்சள் கோயில் வலம்தனை மார்கழியில் தினந்தோறும் நடத்துதல் அற்புத பலன்களைப் பெற்றுத் தரும்.
10. சக்தி மஹிம்ன ஸ்தோத்திரத்தால் பூஜிக்கப் பெற்ற, ஸ்ரீதூர்வாச மஹரிஷி ஆசிர்வதித்த, ஸ்ரீயமுனா தேவி அருள் நிறைந்த கொம்பு மஞ்சளைத் தன்னுடைய உறவில் மட்டுமின்றி, அறிந்த அறியாத சுமங்கலிப் பெண்களுக்குத் தினமும் அளித்து வர வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள தீராத தோஷங்கள் தீரும்.
ஸ்ரீஉமையவளின் மாங்கல்ய பூஜை
11) ஸ்ரீபார்வதி தேவியும் இவ்வித மாங்கல்ய பூஜை முறைகளை ஸ்ரீதூர்வாச முனிவரிடமும், ஸ்ரீஅனுசூயா தேவியிடமும் பெற்று முறையாகப் பல திருத்தலங்களில் நிறைவேற்றினாள். ஸ்ரீபார்வதி தேவியே இவற்றைக் கடைபிடிக்க காரணமென்னவோ? தட்சயாகத்தில் சிவபெருமானின் ஆணையை மீறி உமையம்மை சென்றமையால் ஏற்பட்ட விளைவுகளை நாம் நன்கறிவோம். இதனால் சிவபெருமானைப் பிரிந்து பல யுகங்கள் தனித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே கணவனை விட்டுப் பிரியாது சேர்ந்து எப்போதும் இணைந்து வாழ்கின்ற பண்பும் மாங்கல்ய பாக்யத்தின் ஓர் அம்சமாகும். தற்காலத்தில் கணவன் பதவிமாற்றத்தாலோ, செல்வஞ் சேர்க்கும் ஆசையில் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூர்களிலோ இருந்திட, அவர்தம் குடும்பம் இங்கு தனித்திருக்கும் நிலையைக் காண்கிறோம். இதற்கு நிவர்த்தியாக இல்லறப் பெண்டிர் மேற்கண்ட “பஞ்சபூத சக்தி மஞ்சள் பூஜையினை” ஜாதி, மத பேதமின்றி ஏழை தம்பதியர்க்கு நிறைவேற்றி சக்திமஹிம்ன மந்திர சக்தி நிறைந்த கொம்பு மஞ்சளை மாங்கல்யச் சரடுடன் அளித்துவர, கணவனுடன் குடும்பம் சேர்ந்து இருப்பதற்கான நல்வழிகள் உண்டாகும். முத்தாய்ப்பாக, இப்பூஜையின் மகத்வம் என்னவெனில் எந்த அளவிற்குப் பெண்கள், பிறருடைய மாங்கல்ய சக்திக்காக சுயநலமற்ற பூஜைகளையும், தானதர்மங்களையும் நிறைவேற்றுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய (பூஜையைச் செய்பவர்களுக்கு) மாங்கல்ய சக்தி பல்கிப் பெருகி, கணவன் நல்லொழுக்கத்துடன் நீண்ட ஆயுளுடன் சிறந்து விளங்குவான்.
உத்தராயண சக்தி மஞ்சள் பூஜை
தேவர்களுக்கு ஒரு பகல் என்பது பூலோகத்தின் ஆறு மாதங்களைக் குறிக்கும் (தை முதல் ஆனி வரை). இது உத்திராயணப் புண்யகாலம். ஆடி முதல் மார்கழி வரை (தட்சிணாயணம்) அவர்களுக்கு இரவுப் பொழுதாகும். இவ்வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவு முடிந்து பகல் வருவதற்கு முன்னான அதிசக்தி வாய்ந்த “பிரம்ம முகூர்த்த” விடியற்காலைப் பொழுதாக அமைகின்றதல்லவா!  பிரம்ம முகூர்த்தம் எனப்படும் விடியற்காலை 3 ½ முதல் 5 ½ மணி காலத்தில் செய்யப்படும் பூஜை, ஹோமம், யோகம், தியானம் ஆகியன மிகவும் அதிஅற்புதமான, பன்மடங்கு பல்கிப் பெருகும் பலன்களைத் தரும் என்பதை நாமறிவோம்.
மார்கழியில் தினந்தோறும் கையில் கிழங்கு மஞ்சளைத் தாங்கியவாறு திருப்பாவை, திருவெம்பாவை ஓதியவாறு கோயிலை வலம் வந்து பிரார்த்தித்து வழிபட்டு, இல்லத்திற்கு வந்தவுடன் கிழங்கு மஞ்சளினை, ஒரு மஞ்சள் துணியில் வைத்துப் பூஜையறையில் வைக்க வேண்டும். இவ்வாறு மார்கழியில் தினந்தோறும் கோயிலை வலம் வந்து பூஜித்த கிழங்கு மஞ்சளை, உத்தராயணம் பிறக்கின்ற தை மாதம் முதல் தேதியன்று, 60 வயது நிரம்பிய, நிறைய குழந்தைகளைப் பெற்று, மனநிறைவுடன் வாழும் சுமங்கலிகட்கு பாதத்தில் வைத்தளித்துப் பாத பூஜை செய்திட வேண்டும். அதே மஞ்சள் கிழங்கை அரைத்துப் பாதங்களுக்கு மஞ்சள் பூசுவது மிகவும் சிறப்புடையதாகும். ஏனைய மஞ்சள் கிழங்குகளையும் தைமாதப் பிறப்பன்றே பல சுமங்கலிகளுக்கு அளித்திட வேண்டும்.
1. மார்கழியில் தினந்தோறும் இப்பூஜையை நிகழ்த்த இயலாவிடில் இயன்ற நாட்களில் 30 மஞ்சள் கிழங்குகளுடன், குறைந்தது முப்பது முறையாவது திருப்பாவை, திருவெம்பாவை ஓதி கோயிலை வலம் வருதல் வேண்டும்.
2. இப்பூஜையின் பலன்களாக எத்தகைய திருமண தோஷங்களும் விலகி திருமணம் கைகூடும்.
3. பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேருவர், விவாகரத்து நிலையில் உள்ள தாம்பத்ய உறவும் நன்னிலை பெற்றுத் தம்பதியர் ஒன்று கூடுவர்.
பதவி மாற்றம், உத்யோக உயர்வு, காண்ட்ராக்ட், Deputation , தணிக்கை (Audit) அலுவல் போன்றவை காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்பவர்கள் மேற்கண்ட உத்தராயண சக்தி மஞ்சள் பூஜையை நிறைவேற்றிட, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழும் நன்னிலை கிட்டும்.
திருஅண்ணாமலையில் பஞ்சபூத சக்தி மஞ்சள் பூஜை
1. திருஅண்ணாமலையில் ஸ்ரீதுர்வாஸ மஹரிஷி ஆஸ்ரமம் கொண்டிருந்த மையாலும், இத்திருத்தலத்தில் பல மார்கழி மாதங்களில் ஸ்ரீதூர்வாஸ மகரிஷி தினமும் ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பாதபூஜை செய்து வந்தமையாலும் இத்தலத்தில் பஞ்சபூதசக்தி மஞ்சள் பூஜையை நிறைவேற்றுவது மிகவும் சிறப்புடையதாகும்.
2. ஸ்ரீதூர்வாச மஹரிஷி குடிகொண்டுள்ள கோயில்களில் தாத்ரு வருட மார்கழியைக் கொண்டாடுதல் மிகவும் விசேஷமானது என முன்னரே குறிப்பிட்டுள்ளோம்!
திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசல சிவாலயத்தில் ஸ்ரீதூர்வாஸ மஹரிஷியின் திருஉருவத்தை ஈஸ்வர சந்நதியின் முதல் பிரகாரத்தில், ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நதி எதிரில் தெற்குப் பகுதியில் தரிசித்திடலாம். மேலும் ஸ்ரீதூர்வாச மகரிஷி மார்கழியில் பாதபூஜை செய்து வணங்கிய கண்ணபிரான் ஸ்ரீகிருஷ்ணனை ஸ்ரீவேணுகோபாலனாக ஈஸ்வர சந்நதிக்குப் பின்புறம் முதல் பிரஹாரத்தில் அருள்பாலிப்பதைக் கண்டு ஆனந்தித்திடலாம்.
மார்கழியில் ஸ்ரீஅருணாசல கிரிவலம்
தாத்ரு வருட மார்கழி மாதம் ஸ்ரீதூர்வாச மஹரிஷிக்கே உரித்தானதாகையால் மார்கழி மாத கிரிவலம்தனைச் சிவாலயத்தில் ஸ்ரீதுர்வாச மஹரிஷியின் சந்நதியில் தொடங்கிட வேண்டும். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து “பஞ்சபூத சக்தி மஞ்சள் பூஜையில்” கண்டுள்ளது போல் கொம்பு மஞ்சளையும், மாங்கல்யசரடுகளையும் ஸ்ரீதூர்வாஸரின் திருவடிகளில் சமர்ப்பித்து ஸ்ரீகிருஷ்ணனை (ஸ்ரீவேணுகோபாலனை) வழிபட்டுக் கிரிவலத்தினைத் தொடங்கிட வேண்டும். கிரிவலத்தில் சக்தி மஹிம்ன ஸ்தோத்திரத்தைத் துதித்தவாறே கொம்பு மஞ்சளில் மாங்கல்ய சரட்டினைச் சுற்றிட வேண்டும். இவ்வாறு கிரிவலத்தில் மாங்கல்ய சரடு சுற்றப்பட்ட கொம்பு மஞ்சளைத் தனியே எடுத்து வைத்து உறவினர்களுக்கு மட்டுமின்றி ஏழை சுமங்கலிகட்கும் தானமாக அளித்திட வேண்டும். குறைந்தது 108 கொம்பு மஞ்சளில் 108 மாங்கல்ய சரடினைச் சுற்றித் தானமளிப்பது அற்புத மாங்கல்ய பலத்தைத் தரும். கணவனுக்கு ஆயுள்பலத்தையும் நல்லொழுக்கங்களையும் பெற்றுத் தரும். கன்னிப் பெண்களுக்கு நன்முறையில் திருமணம் நடைபெறும்.
திருஅண்ணாமலையில் உத்தராயண சக்தி மஞ்சள் பூஜை
1. உத்தராயண சக்தி மஞ்சள் பூஜையும் திருஅண்ணாமலை திருத்தலத்தில் சிறப்புடையதே. காரணம் உத்தராயண, தட்சிணாயன கால மாற்றங்களுக்குச் சூர்ய அயன கதி மாற்றங்களே காரணம் என்பதை நாமறிவோம். திருஅண்ணாமலையில் சூர்யபகவான் மலையைத் தாண்டிச் செல்லாது சுற்றியே செல்கின்றார்.
2. (அ) மார்கழி நோன்பினை உலகிற்கு உணர்த்திய மஹரிஷிகளுள் ஒருவரான ஸ்ரீதூர்வாஸர் அருணாசலப் புனித பூமியில் ஆஸ்ரமம் கொண்டிருந்தமையாலும், திருஅண்ணாமலையார் ஆலயத்தில் ஸ்ரீதூர்வாஸர் பிறிதொரு யுக மார்கழி மாதங்களில் ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பாதபூஜை செய்து வந்தமையாலும்,
(ஆ) ஸ்ரீமாணிக்க வாசகப் பெருமான் திருவெம்பாவையை ஓதியவாறே 10000 கிராம மக்களுடன் திருஅண்ணாமலையை மார்கழி முழுதும் தினந்தோறும் கிரிவலம் வந்தமையாலும்,
(இ) “(திருவெம்)பாவை பாடிய வாயால் (திருக்)கோவை பாடு” என்று ஸ்ரீசிவபெருமானே அருளாணையிட, ஸ்ரீமாணிக்க வாசகர் தங்கி மார்கழி நோன்பு நோற்ற மண்டபம் இன்றும் கிரிவலப் பாதையில் (தற்போது சிதிலமடைந்த நிலையில்) விளங்குகின்றது. இங்கிருந்து மலையைத் தரிசிப்பதற்கு “மார்க சிரச தரிசனம்” என்று பெற்றுள்ளமையாலும், தாத்ரு வருட “க்ரோத பட்டாரகர் மார்கழி” மாதங்களைக் கிரிவலத்துடன் கொண்டாடுதல் வாழ்க்கையில் பெறுதற்கரிய பூஜையாகும்.
குறிப்பு :- அடிஅண்ணாமலைப் பகுதியில் ஸ்ரீதுர்கையம்மன் கோயிலுக்கு இடப்புறப் பகுதியில் குளத்திற்கு எதிரே கிரிவலச் சாலையின் இடப்புறத்தில் இம்மண்டபம் காணப்படுகிறது. பக்தர்கள் இதனைப் புதுப்பித்து ஸ்ரீமாணிக்க வாசகரின் அருட்பணிகளைத் தொடர ஆவன செய்திடல் வேண்டும்.
3. முன்பு விவரித்துள்ளவாறே சக்திமஹிம்ன ஸ்தோத்திரத்தையும், திருவெம்பாவையையும் ஓதியவாறே கொம்பு மஞ்சளில் மாங்கல்யச் சரடினைச் சுற்றி தானத்திற்காக எடுத்து வைத்து ஸ்ரீமாணிக்கவாசகர் மண்டபமருகில் ஸ்ரீஅண்ணாமலையானைத் தரிசித்து (மார்கசிரச தரிசனம்) சாந்தமான தாம்பத்ய வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவியரிடையே மனஸ்தாபங்கள் தீர்தல், விவாகரத்து நிலையிலுள்ள தாம்பத்ய உறவு மீண்டும் நல்வழிப்படுதல் போன்ற நன்னிலைகள் ஏற்படும்.
4. மேலும் சூர்ய பகவானின் அயனகதி ஓர் ஆன்மீக விந்தையாகத் திருஅண்ணாமலையைக் கடக்காது செல்வதால் இங்கு உத்தராயண சக்தி மஞ்சள் பூஜையும் விசேஷமாக அமைகின்றது.
5. உத்தராயண சக்தி மஞ்சள் பூஜையில் மஞ்சள் கிழங்குகளைக் கைகளில் தாங்கியவாறு திருவெம்பாவை, மாங்கல்ய ஸ்தவம், சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், திருப்பாவை போன்ற துதிகளை ஓதியவாறு கிரிவலம் வருதல் வேண்டும். திருஅண்ணாமலை சிவாலயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் (ஸ்ரீவேணு கோபாலன்) சந்நதியிலிருந்து கிரிவலத்தைத் துவங்கி உண்ணாமுலை மண்டபதனில் மஞ்சள் கிழங்குகளைத் தர்பைப் பாயிலோ, தாமரையிலையிலோ வைத்து ஸ்ரீஉண்ணாமுலையம்மன் தீர்க சுமங்கலித்துவம் தர வேண்டிடுக! ஏனெனில் ஆதிசிவன் ஸ்ரீஅருணாசலேஸ்வரராக எழுந்தருள்கையில், ஸ்ரீஉமையவள் இறைவனின் துணைவியாக வேண்டி, ஸ்ரீஉண்ணா முலையம்மனாக அவதாரம் பெற்றிட இங்குதான் தடாகத் தாமரைமேல் அமர்ந்து அரிய தவம் புரிந்தனள். இங்கு கிரிவலப் பகுதியில் மஞ்சள் கிழங்கினை நெஞ்சில் தாங்கியவாறு சிறிது தூரமேனும் (குறைந்தது 30 அடி) அங்கப் பிரதட்சிணமோ, அடிப்பிரதட்சிணமோ (குறைந்தது 300 அடி) செய்தல் சித்திக்குத் துணை புரியும். அம்பாள் காலாற நடந்து பவனி வந்த பூமியன்றோ!
ஸ்ரீஅம்பிகையின் தவக்கோலத்தைத் தரிசித்திட கோடானு கோடி சித்தர்களும், ஞானியரும், மஹரிஷிகளும் குழுமிய புனித பூமியன்றோ! அவர்களுடைய கால் தூசி ஒரு சிறிது நம்மேல்பட்டால் போதுமே, நாம் கடைத்தேறி விடலாமன்றோ! அடுத்து உத்தராயண நாதனாகிய ஸ்ரீசூர்யபகவானின் திருச்சந்நதியில் மலையைப் பார்த்தவாறே சந்நதியை வலம் வருதல் வேண்டும். அதாவது சூர்ய பகவானின் சந்நதிப் பிரகாரத்தில், ஸ்வாமிக்கு வலப்புறம் மலையை நோக்கியவாறு பின் புறமாக நடந்தும், ஸ்வாமிக்குப் பின்புறத்தில் மலையைப் பார்த்தவாறே இடப் புறமாகப் பக்கவாட்டிலும், ஸ்வாமிக்கு இடப்புறம் மலையை நோக்கியவாறே முன்புறமாகவும் வலம் வந்திடுக! சந்நதியின் நான்கு திக்குகளிலும் மலையை நோக்கி சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிடுக. “இத்தகைய பிரதட்சிணமுறைக்கு, தரிசனத்திற்கு, “தைத்ரீகப் பிரதட்சிணம்”, “தைத்ரீக தரிசனம்” என்று பெயர். 
ஸ்ரீயாக்ஞவல்கியர் தம் குருவின் வார்த்தைகளை மீறியமைக்காக, அவர்தம் சற்குருவே மன்னிப்பளித்த போதிலும், உத்தராயண காலம் முழுதும் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வந்து, குறிப்பாக ஸ்ரீசூர்யபகவான் சந்நதியில் தைத்ரீய தரிசனத்தையும் பெற்று, தைத்ரீயப் பிரதட்சிணமும் செய்து பிராயச்சித்தம் பெற்றார். உத்தராயண காலத்தில் குருவி வடிவில் ஸ்ரீயாக்ஞவல்கியர் இன்று திருஅருணாசலத்தை வலம் வந்து ஸ்ரீசூர்ய பகவான் சந்நதியில் தங்கிச் செல்கின்றார். குருவருள் கூடியோர்க்கு உத்திராயணத்தில் ஸ்ரீயாக்ஞவல்கியரின் தரிசனம் கிட்டும். இங்கு தைத்ரீய மந்திர கோச வேத மந்திரங்களைப் பாராயணம் செய்வதால் குருவருள் தானே கனிந்து கூடும். இப்பகுதியில் எருக்கஞ் செடி தென்படில் அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு வழிபட்டு வலம் வருக! இதற்கு “அர்க்க பூஜை” என்று பெயர். ஸ்ரீசூர்ய பகவான் தம்முடைய  ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற தேரில் தான் அண்டங்களை வலம் வருகின்றார். அவருடைய தேரானது சிவபெருமானுக்குப் ப்ரீதியான வெள்ளை எருக்க மரத்தால் ஆனதாகும்.
எருக்கஞ்செடி என்று தானே கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலமணீஸ்வரர் சிவாலயத்தின் கர்ப்பகிருகத்திற்கு முன் அர்த்த மண்டபத்தில் சுமார் 10அடி உயரமுள்ள 4 அடி குறுக்களவுள்ள இரு பெரிய எருக்கந் தூண்களைக் காணலாம். மிகுந்த தெய்வீக சக்தி நிறைந்த இதனைக் கட்டியணைத்தவாறே சுற்றி வந்திடில் கொடிய நோய்களும் தீர்கின்ற அற்புதத்தை இன்றும் உய்த்து உணர்ந்திடலாம். கிரிவல முடிவில் மஞ்சள் கிழங்குகளை ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் சந்நதியில் ஸ்ரீஅம்பிகையின் திருவடிகளில் பிரசாதமாக வைத்துப் பெற்றுக் கிரிவலம்தனை நிறைவு செய்திடுக! இல்லத்தில் இம்மஞ்சள் கிழங்குகளை வைத்து மார்கழி மாதம் முழுவதும் பூஜை செய்திடுக! உத்தராயணம் பிறக்கும் தை முதல் தேதியன்று அற்புத தெய்வீக சக்தி வாய்ந்த மஞ்சள் கிழங்குகளை ஜாதி, மத, குல பேதமின்றி சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கிடுக! கணவனுடைய தீயொழுக்கங்கள், நீங்கவும், நோய்கள் தீரவும், தீர்க சுமங்கலித்வம் பெறவும் இவ்வுத்தராயண பூஜை உதவுகின்றது.

அமுத தாரைகள்

1. கணவன் – மனைவி வேறுபாடுகளால் சிறிய பிரச்னைகள் பெரிதாக வளர்ந்து அதனால் பிரிவினை ஏற்பட்டு துன்பம் அடைபவர்கள் ஏராளம். அத்தகையோர் கொடுமுடி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் அல்லது கோஷ்டி மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் முன் பஞ்சுத் திரியிட்ட தேங்காய் எண்ணெய் தீபங்கள் (ஐந்து) ஏற்றி வழிபட்டு, இயன்ற தான தர்மங்களைச் செய்து வந்தால் மன வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் அமைதி நிலவும், பிரிந்தவர் கூடுவர்!
2. புகைபிடித்தலுக்கு நிவாரணம்

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
உய்யக்கொண்டான் திருமலை

கணவனுடைய புகைபிடிக்கும் தீய பழக்கம் கண்டு மனம் நொந்திருக்கும் இல்லறப் பெண்மணிகள் ஏராளம். தன் குழந்தைகளுக்கு எதிரில் புகைபிடிக்கும் தந்தையை என்னென்று சொல்வது! இவ்வாறிருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளும், பெண்களும் ஒழுக்கத்துடன் நன்கு சிறிந்து விளங்க வேண்டும் என்று எண்ணுவது எவ்விதத்தில் நியாயமானதாகும்? புகைபிடித்தலால் கொடிய கர்ம வினைகள் தாம் சேர்கின்றன. தன் கணவன் விடுகின்ற சிகரெட்/சுருட்டு/பீடிப் புகையினால் எத்தனையோ லட்சக்கணக்கானவர்களுடைய உடல்நிலையும் மனோ நிலையும், சுற்றுப்புறமும் பாழடைகின்றனவே! ஒரே நாளில் எத்தனை லட்சம் கர்மங்கள் சேர்ந்து விடுகின்றன! கொடூரமான பலகோடி தீய கர்மவினைகளைக் கூட்டித் தரும் புகை பிடித்தலுக்கு ஓரளவு நிவாரணமாக கணவனோ, மனைவியோ அல்லது இருவரும் சேர்ந்தோ தினமும் ஒரு கோயிலில் சாம்பிராணி தூபத்தை இட்டுவர வேண்டும். செயற்கரிய அரிய இறைத் திருப்பணியிது! ஆயிரக்கணக்கான சிகரெட்டுகளைப் பிடித்து லட்சக்கணக்கான நுரையீரல்களுக்குத் தீங்கு விளைத்ததற்கும், சாந்தமான விண்வெளியில் விஷக் காற்றைப் பரப்பியதற்கும் ஓரளவு பரிஹாரமாக அமையும். தாங்களும் இனியாவது உணர்ந்து பீடி, சிகரெட் பிடிப்பதை விட்டுவிட வேண்டும்.
3. ஆண்மைக் குறைவா, அஞ்ச வேண்டாம்!
திருச்சி அருகே உள்ள ராச்சாண்டார் திருமலை ஈசன் ஆண்களுக்கு பலம் வழங்கும் அற்புத மூர்த்தியாவார்! இத்திருத்தலத்தில் இயன்ற திருப்பணிகளைச் செய்து ஏழைக்குழந்தைகளுக்கு காலணிகள் தானம் அளித்து வர வேண்டும். இதனால் நரம்புத் தளர்ச்சியால் புனிதமான உடலுறவு கொள்ள இயலாது, தாம்பத்யம் பூர்ணமடையாது வருந்துபவர்கள் சுகமடைவர். மனோதைரியமும், நம்பிக்கையும் பெருகும்! கோழையும் வீரனாவான்!

ராச்சாண்டார் திருமலை

4. ஆன்மீக சக்தியைப் பெருக்கும் எளிய வழி
தலைமுடியில் ஆன்மீகச் சக்தி தங்குகிறது. தலைமுடியை வெட்டாமல் வளர விடுவதால் எளிதாக ஆன்மீகச் சக்தியைப் பெருக்கலாம். ஆனால் அடிக்கடி முடியை வாரி சிக்கல், பிசுக்கு இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பெண்கள் எக்காரண்ம் கொண்டும் முன் முடியை ஃFashion என்று சொல்லி வெட்டவோ, குறைக்கவோ, புருவத்தை சிரைப்பதோ கூடாது. இதனால் கணவனின் ஆயுள் குறையும். இறைப்பிரசாதமாக பெற்ற மணமுள்ள மலர்களையே தலைக்குச் சூட வேண்டும்.
5. மாத விடாய் நோய்கள் அகல
மாத விலக்கு சமயங்களில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டு மிகுந்த துன்பத்தை அடைவர். இத்தகைய நோய்களால் (dyamenorrhoea) அவதிப்படுவோர் கர்ப்பிணிகளுக்கும், ஏழைகளுக்கும் Sanitary Napkins, உள்பாவாடை போன்றவற்றை தானமாக அளித்து வந்தால் துரித நிவாரணம் பெறுவர்.
6. A Heaven for Gynacaologists!
பெண்பிணி இயல் (gynaeologists) மருத்துவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறார் திருச்சி பெட்டவாய்த் தலையில் உறையும் சிவபெருமான். பல யுகங்களுக்கு முன் பத்து நாளைக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற்பட்டு பெண்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். இவர்கள் துன்பம் நீங்க, பொற்றாளம் பூவாய சித்தர் என்ற மகரிஷி சிவபெருமானையும், பாலாம்பிகையையும் வேண்டி, பெண்கள் மாதம் ஒரு முறை மட்டுமே விலக்காகும் வரத்தைப் பெற்றார். பொற்றாளம் பூவாய் சித்தர் ஜீவசமாதி பூண்டிருக்கும் இத்திருக்கோயிலில் இயன்ற திருப்பணிகளைச் செய்து வழிபட, எத்தனைய கடினமான அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிட இயலும். (Uterus Removal, complicated Caesarean operations, etc) மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை இறக்கம் (hernia) போன்ற வியாதிகளால் அவதிப்படும் பெண்கள் இயன்ற தான தர்மங்களுடன் இத்தல ஈசனையும், பாலாம்பிகையையும், பொற்றாளம் பூவாய் சித்தரையும் வழிபட்டு விரைவில் நிவாரணம் பெறலாம்!
7. பெயர்களைச் சுருக்காதீர்!

பெட்டவாய்த்தலை திருத்தலம்

பொதுவாக குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமத்தையே சூட்டுகிறோம். இதனால் ஒவ்வொரு முறை அவர்களை “ராமா, கோவிந்தா” என்று அழைக்கும்போது எளிய இறைவழிபாட்டைச் செய்த பலன் கிட்டுகிறது. ஆனால் இந்த நாமங்களைச் சுருக்கி அழைப்பதால் பீஜாட்சர ஒலிகள் வேறுபட்டு விபரீதமான பலன்களே ஏற்படும். உதாரணமாக ‘பாலகிருஷ்ணன்’ என்ற இனிய நாமத்தை ‘பாலு’ என்றோ ‘கிட்டு‘ என்றோ அழைப்பது தவறு. இறைவனின் திருநாமத்தை முழுமையாக உச்சரித்து அவன் அருளைப் பெறுங்கள்!
8. எதிர்மறை சக்திகளுக்கு இடம் தராதீர் :
அக்குள்களில் (arm pit) உள்ள உரோமங்களில் எதிர்மறைச் சக்திகள் (Negative Forces) தங்குகின்றன, எனவே சவரம் செய்யும் போது அக்குள்களில் உள்ள உரோமங்களை அகற்றி விட வேண்டும். நகத்தை வளர விடுவதால், நக இடுக்குகளில் அழுக்கு சேர்ந்து எதிர்மறை சக்திகள் நம் உடலில் புக ஏதுவாகிறது. எனவே அடிக்கடி நகத்தை வெட்டி கை, கால் விரல்களைத் தூய்மையாக வைத்திருக்கவும்.
9. எலும்பு முறிவு குணமாக
திருச்சி – நாச்சியார் கோயிலில் வீற்றிருக்கும் (கை உடைந்த) ஆஞ்சநேயர், கை நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத அனுக்கிரக மூர்த்தி. வலது கையில் வரும் நோய்கள், வாயு, எலும்பு முறிவு, வாதம், வலது கையால் செய்த தவறுகள் இவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறார் இங்குள்ள ஆஞ்சநேயர். வெண்ணெய் சார்த்தி, உணவுப் பண்டங்களின் தானதர்மங்களுடன் இவரை வழிபட, துரித நிவாரணம் கிட்டும்.
9. அனைத்து நலன்களையும் பெற
வாழ்க்கையில் நமக்கு எல்லா நலன்களையும் செல்வங்களையும் அளிக்க வல்லது குலதெய்வ வழிபாடு, பெரும்பாலானோர்க்கு அவர்தம் குலதெய்வம் தொலைவில் உள்ள ஊர்களில் இருக்கும். இவர்கள் எவ்வாறு குல தெய்வத்தைத் தினமும் வழிபட முடியும்? அத்தகையோர் வருடம் ஒரு முறையாவது தங்கள் குல தெய்வத்தை நேரில் தரிசனம் செய்து, உரிய அபிஷேக ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் வழிபட வேண்டும். பின்னர் தினமும் மாலையில் தங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்துத் தம் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுவதால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிட்டும்.
10. தாங்க முடியாத வேதனையா? கவலை வேண்டாம்.....
திருச்சி தாயுமான ஈசருக்கு நெடுங்காலம் வாழைப்பழ அபிஷேகம் செய்து வந்தார் ஒரு சித்தர். சித்தரின் அற்புத சேவையால் மகிழ்ந்த ஈசன் தம் அருட்கடாட்சத்தைப் பொழிந்து அவரைத் தம் வாகனமாக ஏற்றுக் கொண்டார். இவரே வாழைப்பழ சித்தர் என்னும் காரணப் பெயர் பூண்ட தாயுமான நந்தீஸ்வரர். எத்தகைய கடுமையான, தாங்கமுடியாத பிரச்சனைகளால் அவதியுறுபவர்களும் வாழைப்பழ சித்தரை (நந்தீஸ்வரர்) வணங்கி தாயுமான ஈசருக்கு வாழைப்பழ அபிஷேகம் செய்தால், பிரச்னைகளிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
11. விளைச்சல் பெருக:
முற்காலத்தில் அரசர்கள் கோயில் மடப்பள்ளிகளை முறையாகப் பராமரித்து தூய்மை செய்து பாதுகாத்தார்கள். இதனால் கடுமையான உணவுப் பஞ்சங்களிலிருந்து மக்களைக் காத்தனர். இன்றும் பலர் ஒன்று கூடி கோயில் மடப்பள்ளிகளைத் தூய்மை செய்து, வெள்ளையடித்து இயன்ற திருப்பணிகளைச் செய்தால் நாட்டில் பஞ்சம் தீரும். நிலத்தில் விளைச்சல் பெருகும்.
அட்டைப்பட விளக்கம்
ஸ்ரீகிருஷ்ணரும் ஸ்ரீபலராமரும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் காட்சி., “மகாபாரதப் போருக்கு முன்னால் பலராமர் நான் இந்தப் போரில் போரிடமாட்டேன்” என்று சபதம் செய்துவிட்டு தீர்த்தயாத்திரை மேற்கொண்டு விடுகிறார். பலராமரை இவ்வாறு சபதமேற்கச் செய்தவனே கிருஷ்ணன் தான்.... அவன் தான் பாரதப்போரில் அனைத்தையும் பின்னால் நின்று இயக்கியவன், என்னதான் பலராமரை நாசுக்காக கழற்றிவிட்டாலும் ... ஒரு வேளை அண்ணன் போர் செய்ய வந்திவிட்டால்..என்ற எண்ணத்தின் உந்துதலால் கிருஷ்ணன் பலராமருடைய தீர்த்த யாத்திரையின் இடையில் அவ்வப்பொழுது கலந்து கொண்டு அவருடைய சபதத்தை அவருக்கு சூசகமாக உரைத்து விட்டு வருவதுண்டு.. அப்படி.... அந்த தீர்த்தயாத்திரையின்  போது.. ஒரு கட்டத்தில் .. பலராமர் திருஅண்ணாமலை ஏகி அங்கு அண்ணாமலையாரை தரிசித்துப் பின் கிரிவலம் வருங்காலையிலே கிருஷ்ணனும் அவருடன் சேர்ந்து கொள்கிறான் பாரதப்போரிலே பாண்டவர்களுக்கே வெற்றி கிட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையை பூண்டவராய் அண்ணனுடன் கிரிவலம் வரும் காட்சியே இம்மாத அட்டையை அலங்கரிக்கிறது.

ஐயர் மலை மகிமை

அய்யர்மலை ஸ்ரீஇரத்னகிரீஸ்வரர் மஹிமை இரத்னகிரீஸ்வரர் தரிசன மஹிமை
(திருச்சி – குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், தம் சற்குருநாதர் சிவகுரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடன் தங்கி உழவாரப்பணி மற்றும் கிரிவலம், இறைப்பணிகளைச் செய்யும் பாக்யம் பெற்றார். அவர்தம் குருநாதர் அருளியவற்றுள் சிலபகுதிகளைத் தொகுத்துத் தருகின்றோம்.)
ஒப்பற்ற இரத்தின சிலாதரங்களினால் ஆன சிவலிங்கமாய் இரத்தினகிரிப் பெருமான் அமைந்திருப்பதால் உயர்ரக இரத்தினக் கற்கள் அனைத்தையும் ஒருங்கே தரிசித்த பலனைப் பெறலாம். பூலோக மக்களின் ஊனக் கண்களுக்கு இரத்தினகிரி கல்மலை போல் தோன்றினாலும், சித்தர்களும், மகான்களும், ரிஷிகளும் இரத்தினகிரியைத் தரிசனம் செய்யும்போது அதிலிருந்து உயர் ரக இரத்தினக் கற்களிலிருந்து வரும் ஒளி வீச்சுகளைக் காணமுடியும். அந்த ஒளி வீச்சுக்கள் தரிசனம் செய்வோர் உடலில் புகுந்து எண்ணற்ற உயர் தெய்வீக நிலைகளை அடைவதற்கு உறுதுணையாக அமையும்.
ராஜலிங்கம்
இரத்தினகிரி லிங்க மூர்த்தியை ‘ராஜலிங்கம்’ என்று அழைப்பதுண்டு. சாதாரண மனிதன் இரத்தினகிரி ஈசனை தரிசனம் செய்தால் ஈசனின் பேரருள் கடாட்சத்தால் அரசன் ஆகிறான். ஆனால் ராஜாக்கள் அவரைத் தரிசனம் செய்யும் போது ராஜாதி ராஜாவாக, மன்னர்களுக்கெல்லாம் மன்னராக ஆகிறார்கள். சிறு பதவிக்காரர் அடுத்த பதவிக்கு உயர்த்தப்படுகிறார். பெரும்பதவியில் இருப்பவர் பெரும் புகழை அடைகிறார். சாதாரண துறவி, சாந்தம் தரும் பெரும் துறவி ஆகிறார். சாதாரண வைத்தியர் பெரும் வைத்தியராய் (specialist) மாறுகிறார். சாதாரண வியாபாரி பெரும் வியாபாரி ஆகிறார். சாதாரண விவசாயி பெரும் பண்ணையாராக ஆகிறார். அப்படியானால் ராஜலிங்கத்தைத் தரிசனம் செய்யும் சாதாரண திருடன், பெரிய திருடனாக மாறுவானா என்ற கேள்வி, எழலாம். சாதாரண திருடனும், பெரிய திருடனும் முறையான தரிசனத்தால் மனம் திருந்தி நல்ல மனிதர்களாய் மாறுவார்கள். இதனிலும் உயர்ந்த ஓர் அற்புதச் செயல் இருக்க முடியுமா?
இரத்தினகிரி பூமிக்கு வருவதற்குமுன் பூவுலகில் இரத்தினமே கிடையாது. எல்லா இரத்தினங்களும் எம்பெருமான் இரத்தினகிரி ஈசனிடமிருந்தே தோன்றின. எனவே குற்றமுடைய, தோஷமுள்ள இரத்தினத்தை ஈசன் திருவடிகளில் சமர்ப்பித்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, வலம் வந்து வணங்கினால் இரத்தின தோஷங்கள் நிவர்த்தியாகும். இரத்தின வியாபாரிகளுக்கு ஒரு கண்கண்ட புண்ணியத்தலம் இரத்தினகிரி, முறையாக வழிபாடு செய்து, ஈசனை வலம் வந்து வணங்குவதால் அவர்கள் தங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடையலாம். தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.

இரத்தினகிரி ஐயர்மலை

கிரிவல மஹிமை :
இரத்தினகிரியை வலம் வர உகந்த நாட்கள் :
1. பங்குனி உத்திரம்
2. தைப்பூசம்
3. கார்த்திகை தீபம்
4. (அ) திரயோதசி திதி
   (ஆ) கார்த்திகை சோமவாரங்கள்
   (இ) திருவாதிரை நட்சத்திரம்
  (ஈ) மார்கழி முழுவதும் திருவெம்பாவை பாடிக் கொண்டே கிரிவலம் வரலாம்.
  (உ) அவரவர் பிறந்த நக்ஷத்திர தினங்கள்
  (ஊ) மூதாதையர் இறந்த திதிகள்
6. சிலருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்தோ, அல்லது மற்ற பாவக் கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் அதனால் சூரிய குற்றங்களும், தோஷங்களும் ஏற்படும். அத்தகைய துன்பத்திற்கு ஆளானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் வலம்வர , துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
7. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் காலங்கள்.
இவை தவிர ஒவ்வொருவருடைய தனிப்பட்ட காரிய சித்திக்கான வலம் வரும் முறைகளும், அற்புதமான நாட்களும் உண்டு. அம்முறைகளைத் தக்க குருவை நாடித் தெரிந்து கொள்ளவும்.
தலச்சிறப்பு – சந்திர பகவான் :
எங்கும் இல்லாத விதத்தில் இத்திருத்தலத்தில் சந்திரபகவான் சூரியனுக்குச் சமமான நிலையில் அருள்பாலிக்கிறார். எல்லா இடங்களிலும் ஒரே பத்தினியுடன் காட்சி தரும் சந்திரபகவான் இங்கு திருவோணம், திருவாதிரை என்ற ஒரு தேவிகளுடன் அனுக்கிரக மூர்த்தியாய் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீமன்நாராயண மூர்த்திக்கு உகந்த நட்சத்திரம் திருஓணம், சிவபெருமானுக்கு உகந்தது திருஆதிரை. இந்த இரண்டு ஒப்பற்ற தேவிகள் அளிக்கும் அருட்கடாட்சத்தை ஒருங்கே வழங்குகிறார் சந்திர பகவான். சரபேஸ்வரர், நரசிம்மர், உக்ரஹப் பிரத்யங்கிரா, மாலினி, சூலினி, காளி போன்ற உக்கிரஹ மூர்த்திகளின் உபாசகர்களுக்குப் பூஜாநியதிகளில் உத்தம நிலை அடையவும், “சாந்தி பூஜாக்களின்” பலன்கள் அபரிமிதமாய்ப் பொழியவும் திருவாதிரை, திருஓணதேவியர் சமேத சந்திர பகவான் தரிசனம் வழிவகுக்கிறது.
சோமநாதர் :- இரத்தினகிரி ஈசனின் அருள் ஆணைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரதிஷ்டா மூர்த்தி சோமநாதர். வருங்காலத்தில் சந்திரக் குற்றங்கள் நிறைய ஏற்படும் என்பதை உணர்ந்த சந்திர பகவான் கலியுக மக்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு இரத்தினகிரியில் சோமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். தண்ணொளியையும் மற்ற எல்லாவித சித்திகளையும் அனுக்கிரகமாகப் பெற்றார். தற்போது இத்தலம் கவனிக்கப்படாத நிலையில் இருந்தாலும், சித்தர்கள் அடிக்கடி வாசம் செய்யும் உன்னத உறைவிடமாக உள்ளது. சித்த மகாபுருஷர்கள் இங்கே தங்களுக்குள் அளவளாவி கலியுக மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் வழங்கி தங்கள், அருட்கடாட்சத்தை எல்லாத் திக்குகளிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வழிபாட்டு முறைகள்
ஒப்புயர்வற்ற கருணாமூர்த்தியான இரத்தினகிரி ஈசன் அதிதீட்சண்ய சுயம்பு மூர்த்தி. எல்லா நலங்களையும் கேட்காமலே நல்கும் கருணைக் கடல், இத்துணை சிறப்புடைய தெய்வ மூர்த்தியை எவ்வாறு வணங்குவது? சித்தர்கள் அருளியுள்ள சில வழிபாட்டு முறைகளைக் காண்போம்.
1. இரத்தினகிரியில் சுமார் 1200 முதல் 1500 தேவ அசுரர்கள் படிகளாய் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர் . இரத்தினகிரியில் அவர்கள் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற, ஒவ்வொரு படியிலும் மெதுவாக ஏறி, ஏதாவது ஒரு இறைநாமத்தை ஓதி (சிவாயநம, மகாதேவா, ராமா, முருகா, etc…) பின்னர் அடுத்த படியில் கால் வைக்க வேண்டும். எந்த ஒரு படியை விட்டு விட்டு ஏறினாலும் அந்தப் படியாய் அமைந்து அருள்பாலிக்கும் தேவ அசுரரின் அனுக்கிரகத்தை இழந்தவர்கள் ஆவோம்.
2. ஒவ்வொரு படியிலும் பச்சரிசி மாக்கோலம் இட்டு, முடிந்தால் மஞ்சள், குங்குமம், மலர்கள் கொண்டு அர்ச்சித்து செல்வது சாலச் சிறந்தது. இரத்தினகிரியில் 1500 படிகளில் மூன்று படிகள் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன .அந்த மூன்று படிகள் அருளும் வரங்களாவன :
(அ) மனிதன் என்றால் எண்ணங்கள் உடையவன் என்று பொருள். எண்ணங்கள் இல்லாத மனிதனே கிடையாது. எண்ணங்கள் நல்லவையாக இருக்கலாம். கெட்டவையாக இருக்கலாம். சஞ்சலமுடையவையாக இருக்கலாம். இந்த பலதரப்பட்ட எண்ணங்களை எப்போதுமே உடையவனே மனிதன். “இப்படிப்பட்ட மனிதன் என்னை மிதித்து ஏறும் போது அவனுடைய சஞ்சலமான எண்ணங்களை நான் மாற்ற அருள வேண்டும்” என்ற தபசை ஏற்று அருள் பெற்ற பலகணி சித்ர சூரன் என்ற தேவ அசுரன் ஒரு படியில் அமர்ந்திருக்கிறார்.
(ஆ) மனிதனுடைய எண்ணங்களில் எது நல்லது, எது கெட்டது என்று முடிவெடுக்கும் திறமை அவனிடம் இல்லை. இது நமக்கு நல்லது என்று எண்ணி எடுக்கும் முடிவானது பிற்காலத்தில் அவனுக்குத் துன்பமாய் வந்தமைகிறது. எனவே “நல்லது கெட்டதை அறியாத மனிதன் என்னை மிதிக்கும் போது அவனுக்கு எது தகுதியோ, எது நன்மையோ, அதை அளிக்கும் வரத்தை எனக்குத் தர வேண்டும்!” என்று ஈசனைப் பிரார்த்தித்து வரம் பெற்ற வலத்ரய புவிசந்திராசுரன் என்ற தேவ அசுரன் ஒரு படியில் அமர்ந்திருக்கிறார்.
(இ) “மனிதன் என்றாலே எண்ணங்களை உடையவன், அவை நல்லவையாகவோ, கெட்டவையாகவோ இருக்கும். அதனால் வரும் விளைவுகளை மனிதன் அனுபவித்தே ஆகவேண்டும். . கடவுள் இதில் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார். மனிதனின் இப்போதைய நிலையைப் பற்றி கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை. பிறந்த மனிதனுக்கு இறப்பு நிச்சயம் எல்லோரும் ஆவி உலகை அடைந்தே தீர வேண்டும். எனவே இறந்தவுடன் ஆவியுலகில் நிம்மதியாய் வாழ என் படியை யார் மிதிக்கிறானோ அவனுக்கு நான் அனுக்கிரகம் செய்ய வேண்டும்!” என்ற வரத்தை எம் பெருமானிடம் வேண்டிப் பெற்றார் மூன்றாவதான கல்பனாத்ரய பஹுதாசுரன் என்ற தேவ அசுரர்.
3. படி தீப வழிபாடு :
ஒவ்வொரு படியிலும் தீபமேற்றி வழிபடுவதால் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். வழிபாடு செய்ய உகந்த நாட்கள்
1. தீபாவளி தினம்
2. கார்த்திகை தீப தினம்
ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தீபங்களைப் படிகளில் ஏற்றி வைத்து இரத்தினகிரி ஈசனின் அருளைப் பெறலாம்.
படிதீபப் பலன்கள் :
முறையான படி தீப வழிபாடு
1. பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது.
2. பிரிந்த கணவன் மனைவியைக் கூட்டுவிக்கிறது.
3. நியாயமாக ஒருவருக்குச் சேர வேண்டிய சொத்து எங்காவது தடைபட்டிருந்தால், தடை நீங்கி சொத்து உரியவரை வந்தடைய துணை புரிகிறது.
4. அலுவலகத்தில் ஒருவருக்கு நியாயமாக வர வேண்டிய பணம், ஏதாவது ஒரு காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் பணத்தைப் பெற வழி செய்கிறது.
5. கார்த்திகை தீபத்தன்று, மலையில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய், எண்ணெய், திரி போன்ற பொருட்களையும், சரீர சேவையையும் அளித்து இரத்தினகிரி தீபத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்களும் தரிசனம் செய்ய துணைபுரியும். பக்தர்களுக்கு இரத்தினகிரி ஈசனின் அருட்கடாட்சமும், பஞ்சமகா சித்தர்களின் அனுக்கிரகமும் பிரம்ம தேவரின் அருளாசியும் கிட்டும் என்பது உறுதி.!

திருஅண்ணாமலை கிரிவலம்

திருஅண்ணாமலை கிரிவலம் செவ்வாய்க்கிழமை கிரிவல மஹிமை
அக்டோபர் 1996 இதழ் தொடர்ச்சி.... 
பலவிதமான தீட்சா பலன்களைத் தரவல்லது திருஅண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் புரிதல்
பொதுவாக அனைத்துத் தீட்சைகளையும் முறையான சற்குருவிடமிருந்தே பெறுதல் வேண்டும். ஆனால் “என் குரு யார்?” என்று கலியுகத்தில் எவரும் தேடுவதில் நாட்டம் செலுத்துவதில்லை. அவ்வாறு சிரத்தையுடன் குருவை நாடுபவர்களும் குறுகிய காலத்திலேயே “குருவிடம் வந்தும் என்ன பிரயோஜனம்? துன்பங்கள் தாம் அலையலையாய் மோதுகின்றனவே!? ஒரு வேளை இவர் நம் குரு இல்லையோ”- என்றெல்லாம் மனம் பேதலிக்கத் தொடங்கி, இருக்கின்ற ஸ்திரத் தன்மையையும் இழந்து விடுவர். மேலும் பல விபரீத எண்ணங்களும் கிளைத்து இறை நம்பிக்கையையே ஆட்டங்காணச் செய்துவிடும்.
சற்குருவோ, குலப் பெரியோர்களோ அளிக்கின்ற மந்திர உபதேசம், எந்திர பூஜை முறைகள் இரட்சை போல் தேகத்திலும், மனதிலும் தங்கி தேவையற்ற எண்ணங்களை, உணர்வுகளை , Negative Forces  எனப்படும் தீயசக்திகளை நம் தேகத்தில் சேரவிடாமல் தடுத்து நிறுத்தி நம்மைக் காக்கின்றது. எனவே சற்குருவை நாடுவோர்க்கும் சற்குருவின் அவசியத்தையும் முக்கியத்வத்தையும் ஊட்டியளிப்பதே திருஅண்ணாமலை கிரிவல தீட்சை தரிசன முறைகளாகும். இந்தத் தரிசனங்களைப் பெற்றாலே அந்தந்த தீட்சைக்குரிய மந்திரங்களைப் பெற்ற சக்திகள் உண்டாகும்.
சிலருக்கு இத்தீட்சா தரிசனங்களாய் அபூர்வமாக அதற்குரித்தான மந்திரங்களே பிற நற்பெரியோர்கள் மூலம் கிட்டும். எனவே பல அரிய அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்திகள் பூரித்து நிற்கும். பல்வேறு வகையான தீட்சா மந்திரங்கள், மந்திர சக்திகளைப் பெற்றிட திருஅண்ணாமலையை செவ்வாயன்று கிரிவலம் வந்திடுதல் வேண்டும். கடந்த சில இதழ்களில் சில தீட்சா பலன்களைத் தரவல்ல ஒருசில திருஅண்ணாமலைக் கிரிவல தரிசனங்களைப் பற்றி நம் குருமங்களகந்தர்வா எடுத்துரைத்துள்ளார்கள். அவரருளியுள்ள மேலும் சில அரிய விளக்கங்களைக்  காண்போமா? செவ்வாய்க் கிழமையன்று துலா லக்ன நேரத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் யோக சக்தி முறைகளில் அதிகப் பக்குவம் கிட்டும். பலர் நித்ய யந்திர பூஜைகளை வீட்டில் செய்து விடுகின்றனர்.
மூதாதையர்கள் பூஜித்த, சக்கரங்கள், நற்பெரியோர்கள் அளித்த யந்திரங்கள், தனலாபம், தோஷ நிவர்த்தி போன்றவற்றிற்காக நாம் வாங்கிய பல் கோண சக்கரங்கள் இவ்வாறாகப் பல தெய்வீக யந்திர/சக்கரங்கள் பலர் வீட்டில் இன்றைக்கும் இருந்து வருகின்றன. இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, பூஜை செய்வது என்று அறியாமையினாலோ, அச்சத்தினாலோ இவற்றை யாரும் முறையாக வழிபடுவதில்லை.
சக்கர/யந்திர தோஷ நிவர்த்திகள்!
தோஷத்தை நீக்கும் மாந்த்ரீக, தாந்த்ரீக,  யந்திர சக்கரங்களுக்கே தோஷங்கள் ஏற்படுமா? மூதாதையர்களின் பூஜா சக்திகளும், இதில் ஏற்றப்பட்டுள்ள மந்திர சக்திகளும் நிறைந்த யந்திர சக்கரங்கள் நாளடைவில் பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ, பூஜை செய்யப்படாமல் இருந்தாலோ அவற்றின் தெய்வீக சக்தி யாருக்கும் சென்றடையாமல் அச்சக்கரங்களிலேயே சிறிது சிறிதாகக் கரைந்து விடும்.
நித்ய பூஜைகளின் மூலமாகத்தான் அவற்றில் பரிபூரணமான தெய்வீக சக்தியை நிலைபெறச் செய்ய முடியும். எனினுல் மூதாதையர்களின், பெரியோர்களின் திருக்கரங்கள் பட்டமைக்கான ஆசிர்வாத சக்திகள் யந்திர/சக்கர ஆவாஹன நியதிகளுள் நித்ய பூஜையும் ஒன்றாகும். இதைக் கடைபிடிக்காவிடில் யந்திரங்களில் ஆவாஹனமாகியுள்ள தேவதைகளுக்குப் பூஜைகள், நைவேத்யம் இல்லாமையால் அவர்களுக்குத் தேவதா பசி உண்டாகி அவையே தோஷங்களாக மாறுகின்றன. மேற்கண்ட தோஷங்களுக்கு நிவர்த்தியாக, செவ்வாய்க் கிழமையன்று துலா லக்ன நேரத்தில் நம் இல்லத்தில் உள்ள சக்கரங்களையும், யந்திரங்களையும் ஒரு மஞ்சள் துணியில் வைத்துக் கைகளில் தாங்கியவாறே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து கீழ்க்கண்ட யோக தீட்ச தரிசனத்தைப் பெற்றிட வேண்டும்.
“ஸ்ரீஅகஸ்திய விஜயம்” அக்டோபர் 1996 இதழி குறித்துள்ளவாறு தெற்குக் கோபுர வாயிலிருந்து நேரே சென்று முக்கூட்டு சாலையில் வலதுபுறம் திரும்பிட, தற்போதைய அரசினர் உயர்நிலைப் பள்ளி அருகில் இருந்து கிட்டுவதே திருஅருணாசல யோக தீட்சை தரிசனமாகும். ஸ்ரீகுருநமச்சிவாயர், ஸ்ரீவசிஷ்டர் ஸ்ரீதூர்வாசர் போன்ற மஹரிஷிகளும், மஹான்களும் இவ்விடத்தில் தங்கி பல் அரிய யோக தீட்சைகளைத் தங்கள் சற்குருமார்களிடம் இருந்து பெற்று யோக தீட்சை மஹிமைகளையும் உலகுக்கு உணர்த்துகின்றார்கள். தமிழ் மறை, கிரந்தங்களில் ஈடுபாடு உள்ளோரும், வங்க , கோயில், கணக்குத் துறை,  மின்சாரம், தபால் தந்தித் துறை மற்றும் தணிக்கைத் (Inspection) துறை போன்றவற்றில் உத்யோக உயர்வு, தேவையான இட மாற்றம், அலுவலகத் துன்பங்களிலிருந்து நிவாரணம் போன்றவற்றைப் பெற விரும்புவோர்க்குத் திருஅண்ணாமலை செவ்வாய்க்கிழமை கிரிவலம் உதவி புரியும்.
அவுத்ரி தீட்சை
ஒவ்வொரு தீட்சையையும் சற்குருவிடமிருந்து பெறுவதற்கு முன் ஒவ்வொரு சிஷ்யனும் பல சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பலவிதமான கொடிய கர்மங்களைச் செய்து வாழ்வோர் பலர். இவற்றுக்காக ப்ராயச்சித்தம் தேடி பலவிதமான பரிகாரங்களைச் செய்து வருவோரும் உண்டு. எந்தத் தவறுக்காகப் பரிகாரத்தை நாடுகின்றோமோ
1. அதனை மீண்டும் தன் வாழ்க்கையில் செய்யாதிருத்தல்
2. நம் தவறுகளினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை அளித்தல்
3. குறித்த பரிகாரம்தனை முறையோடு செய்திடல்.
இம்மூன்றால் தான் எவ்வித கர்மவினைக்கும் நிவாரணம் பெற முடியும். அவுத்ரி தீட்சையைப் பெறும் முன் அவர் தன் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்ற மனப் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதே தவறை எக்காரணம் கொண்டும் மீண்டும் செய்திடலாகாது.
அதாவது அவுத்ரி தீட்டையின் மூலமாய் எவ்வித பரிகாரமும் இன்றி எத்தகைய கொடிய கர்மவினைக்கும் தீர்வு காண முடியும். இத்தகைய சக்தியைப் பெற்றதே திருஅண்ணாமலையில் செவ்வாயன்று கிரிவலம் செய்து பெற்ற அவுத்ரி தீட்சா தரிசனமாகும். செவ்வாய்க் கிழமையன்று, குறிப்பாக செவ்வாயுடன் திரிதியை கூடும் நாளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து திருமூர்த்தி லிங்க முக தரிசனம் பெற்று ஸ்ரீதிரிமூர்த்தி ஹோமம் செய்த பின்னரே அவுத்ரி தீட்சையைப் பெற முடியும். ஆனால் செவ்வாய்க் கிழமையன்று சந்திர ஹோரை நேரத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அவுத்ரி தரிசனம் எனப்படும் விசேஷமான தரிசனத்தைப் பெற்று 101 முறை நமஸ்காரம் செய்திடில் அவுத்ரி தீட்சா சக்தி கிட்டும். ஸ்ரீரமணாஸ்ரமம் செல்லும் வழியில் இந்திர தீர்த்தமருகில் மூன்றாம் பிறை வடிவில் ஈசன் அருள்காட்சி புரிகிறார். இதுவே அவுத்ரி தீட்சா தரிசனமாகும்.
பல கொடிய வினைகளைத் தீர்க்க வல்லது. இத்தரிசனத்தைப் பெற்று ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் ஹோமங்கள் நிகழ்த்தி, சிகப்பு நிற ஆடைகளைத் தானம் செய்து வந்திடில் எத்தகைய குடும்பப் பிரச்சனைகளும் தீர்வு பெறும். திருஅருணாசலேஸ்வரரே குருவாக நின்று அளிக்கின்ற தீட்சா தரிசனங்களுள் இதுவுமொன்று. ஸ்ரீஅருணகிரியார், ஸ்ரீஅருணாசலேஸ்வரரிடமிருந்து பெற்ற அனுக்ரஹங்களுள் அவுத்ரி தீட்சையும் ஒன்றாகும்.
ஞான தீட்சை
பல இறையடியார்கள் உத்தம குணங்களைப் பெற விரும்புகின்றனர். உத்தம குணங்களின் ஒளி மொத்த ரூபமே மஹரிஷிகளும், யோகியரும் , ஞானியாரும். வெளிப்பார்வைக்குச் சினம், விருப்பம் போன்ற குணங்களுக்கு ஆட்பட்டவர்களாய் இவர்கள் தென்படினும் உண்மையில் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்ட உத்தம தெய்வீக நிலைகளைப் பூண்டவர்கள். ஞானதீட்சையில், பல ஆண்டுகள் அனுபவப்பட்டுப் பெற வேண்டிய சில உத்தம குணங்களை சற்குருவிடமிருந்து பெறுகின்ற ஞானதீட்சை ஓர் இமைப்பொழுதில் பெற்றிடலாம். நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது ஓர் உத்தம குணமாகும்.
நாம் எப்போதும் நல்லதுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று எண்ணி விடாதீர்கள். எதிர்பாராத விதமாக பலவித துன்பங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையிலும் நீங்கள் எவ்வாறு எண்ணுகிறீர்கள் என்பதே முக்கியமானதாகும். துன்பங்களில் உழல்கையில் அவற்றைச் சமாளிக்கவே உடல் சக்தியும், மனோசக்தியும் செலவழிவதால் நல்லதையே நினைக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது தீய எண்ணங்களே மூழ்கி நிற்கும்.
திருஅண்ணாமலையில் ஞான தீட்சைப் பெற்ற உத்தம மகரிஷிகளில் குகை நமச்சிவாயர், பல இடங்களில் ஜீவ சமாதி பூண்டிருக்கும் ஸ்ரீகுழந்தையந்ந்தா ஸ்வாமிகள், கும்பகோணத்தில் ஜீவஸமாதி பூண்டிருக்கும் ஸ்ரீதியாகாநந்த ஸ்வாமிகள், போன்றோர் அடங்குவர். ஞான தீட்சையில் சிறப்பு அம்சம் என்னவெனில் தீய எண்ணங்கள் மட்டுமின்றி, தீய குணங்களைக் களைந்து, உத்தம குணங்களைக் களைந்து, உத்தம குணங்களை உடலிலும், மனதிலும் எடுத்து நிகழ்கின்ற இவ்விந்தையை திருஅண்ணாமலையின் ஞான தீக்ஷா தரிசனம் பெற்றுத் தருகிறது என்றால் என்னே அதன் மஹிமை!!
செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் கிரிவலம் வந்து குறிப்பிட்ட இடத்தில் ஞான குரு தரிசனத்தைப் பெற்றிடில் ஞான தீட்சை கிட்டும். ஞான குருவாக விளங்கும் திருஅண்ணாமலையாரே ஞான தீட்சை தந்திடுகின்ற இவ்வரிய ஸ்ரீஞான குரு தரிசனத்தைப் பரிபூரண உத்தம குணங்களைப் பூண்டால் தான் பெற முடியும். ஸ்ரீஅருணாசலேஸ்வரரே மனமுவந்து ஆட்கொள்கின்ற அற்புத தரிசனம் இது. ஸ்ரீகுகை நமச்சிவாயரையும், ஸ்ரீகுழந்தையாநந்தா ஸ்வாமிகளையும், ஸ்ரீதியாகாநந்தரையும், ஸ்ரீஅண்ணாமலையாரே ஆட்கொண்ட தரிசனமே ஸ்ரீஞான குரு தரிசனமாகும். ஸ்ரீஅமாவாசை சித்தர் என்னும் உத்தம சித்புருஷரும் ஸ்ரீஞான குரு தரிசனத்தைக் கிரிவலத்தில் பெற்று இன்றும் அருட்பெரும் சித்தராய், ஞான குருவாய் அருள்பாலிக்கின்றார். எனவே உத்தம பக்தியுடைய செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் ஸ்ரீஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் ஞான குருவே ஞானதீட்சா தரிசனத்தை நமக்கு அளித்து அரவணைப்பார்.
கிரியா தீட்சை
நம்முடைய முதுகுத் தண்டில் உள்ள வெள்ளை நரம்பின் மூலமாக மூலாதார சக்தி மேல் சென்று சகஸ்ராரத்தை அடைவதே குண்டலினி யோக முறையாகும். கலியுகத்தில் முறையில்லாத யோகப் பயிற்சிகளால் மூலாதாரத்தில் கிளம்பும் சக்தி ஆங்காங்கே அடைபட்டு, தடைப்பட்டு பல உடல் நோய்களையும் மனோ நிலைக் கோளாறுகளையும் அளிக்கிறது. காரிய சித்திக்குக் கிரியாசக்தியால் பெறுகின்ற குண்டலினி சக்தி மிகவும் அத்யாவசியமானதாகும். குண்டலினி சக்தி எழும்போது அதிக அளவில் உடலில் உஷ்ணம் ஏற்படும். இதனை உடலில் ஏற்கின்ற யோக சக்தியைப் பெற வேண்டும் அல்லது உஷ்ணத்தை ஏற்கின்ற சக்தியைத் தருகின்ற மூலிகா குளிகைகளை உண்ண வேண்டும்.
உடல் உஷ்ணம் ஒருவகை அக்னியின் பால்பட்டதே. உண்மையில் குண்டலினி சக்தி முறையில் ஏற்படுகின்ற உஷ்ணத்தின் அளவு பல வெடிகுண்டுகளின் மொத்த உஷ்ணத்திற்கு ஈடானதாகும். இதனைப் பத்மாசனம், கர ஸ்பலிதயோகம், அக்னி ஸ்பர்சம், நேத்ர கிரியா தீட்சை, உரோமச முனிவர் அருளியுள்ள ரோமாலி பந்தனம் போன்ற யோக சக்தி முறைகளால் முறைப்படுத்த முடியும். குண்டலினி யோக முறையில் ஈடுபாடு உள்ளோருக்குக் கிரியா தீட்சை பெரிதும் உதவுகின்றது. செவ்வாய்க் கிழமையன்று வானில் செவ்வாய்க் கிரஹத்தைக் கண்டவாறு அதன் சிகப்பு ஒளியைக் கண்டு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் குண்டலினி யோக சக்தி பெருகும்.
யோக சக்கரங்களை வழிபடுபவர், ஆரூடம், குறிசொல்வோர், அருள்வாக்கு கூறுவோர், Telepathy எனப்படும். மனோரீதியான தொடர்புக் கலையில் நாட்டமுள்ளோர், யோகப் பயிற்சியாளர்கள் போன்ற யோக, ஜாதக, தாந்த்ரீகத் துறையிலுள்ளோர் மேற்கண்ட முறையில் செவ்வாய்க் கிரஹ ஒளியைக் கண்டு திருஅண்ணாமலைக் கிரிவலம் செய்திடில் குண்டலினி யோக சக்தி முறைகளை அறியப் பெறுவர்.
கிரிவலத்தில் ஓரிடத்தில் செவ்வாய்க் கிரஹ ஒளியும், திருஅண்ணாமலை உச்சியும் ஒன்றிணைந்தோ, செங்குத்தாக ஒரே நேர்கோட்டிலோ காட்சி தரும். இத்ற்கு “அங்காரக ரக்தக்ரியா தீட்ச தரிசனம்” என்று பெயர். இதனால் திருஅண்ணாமலையாரே ஆனந்தித்து அளிக்கின்ற “கிரியா தீட்சையைப்“ பெற்றிடலாம் . பொதுவாக ஆண்கள் கடுக்கண்களுடனும், பெண்கள் தோடுகள், மூக்குத்திகளுடனும் திருஅண்ணாமலையை வலம் வருதலின் அவசியத்தை, ஸ்ரீஅகஸ்திய விஜயம், இதழில் வலியுறுத்தி வந்துள்ளோம். குறிப்பாகக் குண்டலினி சக்தியின் அம்சங்களைப் பரிபூர்ணமாக உணர்த்த வல்ல திருஅண்ணாமலையார் “கிரியா தீட்ச“ தரிசனத்தைப் பெறுவதற்குக் காதில் சிகப்பு நிறக் கடுக்கன்களை அணிந்து கிரிவலம் வருதலால், குண்டலினி சக்தியின் யோக சக்தி நல்வழி முறைகளைத் துரிதமாக அறிவதற்கான அனுகூலங்கள் கிட்டும்.
“குண்டலினி சக்தி, கிரியாசக்தி இவையெல்லாம் எனக்குப் புரியாத விஷயங்கள்” என்று எண்ணி ஒதுங்கி விடாதீர்கள். கிரியா தீட்ச தரிசன பலன்களை முறையான செவ்வாய்க் கிரிவலத்தின் மூலம் எளிதில் பெற்றிடலாம். இதன் மூலம் வாழ்க்கையில் முன்கூட்டியே துன்பங்களை அறிந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். இது மட்டுமா? சற்று உயர்ந்த ஆன்மீக நிலையில் நம் இன்ப துன்பங்களுக்கான காரணங்களையும் உணர்ந்திடலாம். இம்மட்டுமா? அனைத்திற்கும் காரணம் நம் பூர்வ ஜன்ம கர்மவினைகளே. தீதும் நன்றும் பிறர் தந்து வருவதில்லை என்று உத்தம ஆன்மீக நிலையையும் அடைந்திடலாம். இறைவனை அடைவதற்கான எளிய மார்க்கங்களுள் கிரியா தீட்சை முறையும் ஒன்றாகும்.
சுபிட்ச தீட்சை
கர தீட்சை, பீலிகை தீட்சை, பாத ரக்ஷ தீட்சை, வஸ்திர தீட்சை, கோல் தீட்சை, விபூதி தீட்சை, மாலா தீட்சை, தளதீட்சை, வாயு தீட்சை என்றவாறாகச் சற்குருவானவர் சிஷ்யனைத் தலையில் தொட்டோ, ஸ்பர்சித்தோ அல்லது விபூதி, ஜப மாலை, வஸ்திரம், சமித்துக் குச்சி, கோல் , தளம் (இலை) போன்றவற்றை அளித்துத் தீட்சை அளிக்கின்றார். மந்திர தீட்சையும் உண்டு. ஆனால் இவற்றில் கடுமையான நித்ய பூஜா முறைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் விட குருவிடமே இருந்து சேவைகளைப் புரிந்து திருமறைகள்/ வேதம்/ ஆகமம் போன்றவற்றைப் பயின்று தேகத்தால் ஆன இறைப் பணிகள் செய்து குரு அருள் பெறுவதாகும். இதுவே மிக மிக எளிதான குருவருளுடன் கூடிய திருவருளைப் பெற்றுத் தரும் சுபீட்ச தீட்சை முறையாகும்.
கலியுகத்தில் குருவைப் பெறுதலே அரிதாயிருக்க சுபீட்ச தீட்சை, எவ்வாறு கிட்டும்? என்று பலர் கேட்டிடுவர். கிருத, திரேதா, துவாபுர யுகங்களில் சற்குருவைத் தேடி இறையடியார்கள் பக்தி வேட்கையுடன் அலைவர். ஆனால் கலியுக நியதிப்படி சற்குருவே இறையடியார்களைத் தேடி அரவணைத்து ஆட்கொள்கின்றார். கேட்பதற்கே வியப்பாக இருக்கின்றது அல்லவா!? ஆனால் இது உண்மையே. பிற யுகங்களில் மோட்சம் பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு சிறு பிழைக்கும் கூட மகரிஷிகள்/ முனிவர்களின் கடுமையான சாபம் தண்டனையாகக் கிட்டும். கலியுகத்திலோ அசத்தியமும், அதர்மமும் பெருகி நிற்க, இவற்றினூடே மனிதனுக்கு மிக மிக எளிய முறையில் மோட்சத்திற்கான பல வகையான வழி முறைகள் காட்டப்பட்டுள்ளன.
இது காரணமாகவே ஏனைய மூன்று யுகங்களில் முக்தியைப் பெற இயலாத தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், கின்னர கிம்புருவர்களும் கலியுகத்தில் பிறப்பெடுக்க வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றனர். என்னே கலியுகத்தின் மகிமை! நம் வாழ்க்கைக் காலத்திலேயே சற்குருவானவர் நிச்சயமாக நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார். நம்மை அண்டியும் வந்துள்ளார். நாம் தாம் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை. “இவர் இப்படி இருக்கின்றாரே, அப்படிச் செய்கின்றாரே, இவர் ஏன் நான் நினைத்த மாதிரி இல்லை? இவரை நம்பி முழுமையாக இறங்கிடலாமா?... “
1. எத்துனையோ சற்குருமார்கள் ஆங்காங்கே அன்னதானம் கோயில் திருப்பணிகள், ஏழைகளுக்கான அறவழித் திட்டங்கள், பல்வேறு வகையான தான முறைகள், பௌர்ணமி, ப்ரதோஷம்/விஷ்ணுபதி போன்ற விசேஷமான பூஜைகள், ஹோமங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றார்களே! இவற்றில் எதிலேனும் நாம் பங்கு கொண்டோமா?
2. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றோ, ஏதோ ஒரு தொகையைத் தானமாகவோ தருகிறோம் அல்லது சிறிய சரீர சேவையைச் செய்து விட்டு வந்து விடுகின்றோம் அல்லவா?
3. எத்தனையோ சத்சங்கங்கள், ஆஸ்ரமம், பீடங்கள் போன்றவை எத்தனையோ நற்காரியங்களை, மக்கள் சேவையை மஹேசன் சேவையாக நடத்தி வருகின்றன. ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீகுகை நமச்சிவாயர், ஸ்ரீகுருநமச்சிவாயர், ஸ்ரீகுழந்தையாநந்த சுவாமிகள், ஸ்ரீபூண்டி மகான் ஸ்ரீவள்ளி மலை ஸ்வாமிகள், ஸ்ரீதங்கால் மகரிஷி, ஸ்ரீசந்திர சேகரேந்திர பரமாசார்யாள் ஸ்வாமிகள் போன்ற எத்தனையோ மகான்களும், யோகியரும், ஞானியரும் உலவிய, இன்றும், என்றும், உலவுகின்ற புனித பூமி இது. ஏதேனும் ஒரு மார்க்கத்தை உறுதியாக வாழ்நாள் முழுதும் கடைபிடித்து கடைத்தேற அரும்பாடுபட வேண்டும்.
4. இன்றும் எத்தனையோ சற்குருமார்கள் தங்களுடைய பரிபூரணமான தெய்வீக சக்தியையும், திரண்ட திருவருளையும் சற்றும் வெளிக்காட்டாது நம்மைப் போல சாதாரண மனிதனாக நம்மிடையே வாழ்ந்து நம்மை கரையேற்றத் துடிக்கின்றனர். ஆனால் நமக்கு அத்தகைய சற்குருவிடம் பரிபூரண நம்பிக்கை ஏற்பட வேண்டுமே!
5. அருகில் இருந்தும் அறிந்து கொள்ளாதது நம்முடைய பெரும் பிழையன்றோ? சுகபோகங்களையும், இன்பங்களையும் மட்டுமே நாடி, நம்முடைய வாழ்க்கைப் பிரச்சனைகள் மட்டுமே தீரவேண்டும் என்ற சுயநலத்துடன் அவரை நாடிடில் என்ன பிரயோஜனம்? நம்முடைய கர்ம வினைகளுக்கேற்ப புதுப்புது துன்பங்கள் ஒன்று மாற்றி ஒன்றாக முளைத்துக் கொண்டுதான் இருக்கும். இவற்றைப் பற்றி மட்டுமே பேசிப் பேசி சற்குருவை அணுகினால் அவர் விலகிச் செல்வது போன்றே தோன்றும். இது நம் பிழையன்றோ?
6. சற்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிடில் நாம் சந்திக்கின்ற இன்ப துன்பமனைத்தும் சற்குரு சித்தப்படியே நிகழ்கின்றது என்ற அரிய உண்மை புலப்படும்.
7. குருவிடத்தில் முறையாகச் சேவை செய்ய சந்தர்ப்பம் வேண்டுமெனில், சற்குருவைப் பெற வேண்டுமெனில் திருஅண்ணாமலையைச் செவ்வாய்க் கிழமை கூடிய விசாக நட்சத்திரத்தில் பல முறை வலம் வருதல் வேண்டும். இவ்வாறு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்திடில் நிச்சயமாக திருஅருணாசலேஸ்வரரே குருவைக் காட்டி, நம்பிக்கையையும் ஊட்டி, குருசேவை செய்யும் வாய்ப்பையும் கூட்டித் தந்து அருள்பாலித்திடுவார். ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பல இடங்களில் தக்க சற்குருவை நாடி விளக்கம் பெற்றிடவும் என்று அடிக்கடி எழுதி வருகின்றீர்களே? எங்களுக்குரிய சற்குருவை எவ்வாறு பெறுவது என்று கேட்டு மாதந்தோறும் பல அன்பர்கள் கடிதங்களை எழுதி வருகின்றார்கள். மேற்கண்ட முறையில் விசாக நட்சத்திரம் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் நிச்சயமாக இறையாணையால் தக்க சற்குருவைப் பெற்றிடலாம்.

புனுகு மகிமை

ஈசன் ஏற்கும் புனுகுச் சட்டம்
பொதுவாகவே மண்ணினாலான மூல விக்ரகங்களுக்குத் திருக்கோயில்களில் வழக்கமான அபிஷேகங்களை நிகழ்த்துவது கிடையாது. ஏனென்றால்... முடியாது. ஆனால் ஈசனோ ‘அபிஷேகப் பிரியன்’‘ ஆயிற்றே! என்ன செய்வது! இதற்குத்தான் சித்தர்கள் ஒருவழி கண்டுபிடித்தனர். அந்த வழிதான் “புனுகுச் சட்டம் சாற்று முறை” என்பது.... சென்ற இதழில் ‘புனுகுச் சட்டம்’‘ என்பதை நாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்... இருந்தாலும் இதனைப் பற்றி வாசக அன்பர்களுடைய கேள்விகள் வந்த வண்ணமிருப்பதால் “புனுகுச் சட்டம் சாற்றும் முறை“ பற்றிய விளக்கங்களைச் சிறிதளவே இங்கு நமக்கு அளிக்கிறார் ஸ்ரீகுருமங்கள கந்தர்வா அவர்கள்....
புனுகு என்றால் என்ன?  பூனைகளில் பலவகை உண்டு.. அவற்றுள் ஓர் அற்புதமான வகையைச் சார்ந்தது தாம் “புனுகுப் பூனை“ என்பது. இந்த வகைப் பூனைகள் பொதுவாகவே இமயமலைச்சாரல்களில் தாம் காணப்படுகின்றன. இவ்வகை பூனைகளுக்கு உள்ள Telepathy Power மனிதனுக்குக் கூட கிடையாது. பக்தியிலும் இவற்றுக்கு நிகர் கிடையாது. இத்தகைய ஒப்பற்ற புனுகுப் பூனையின் விந்துதான் ‘புனுகு’ என்று அழைக்கப்படுகிறது. புனுகுப் பூனையின் விந்து தான் புனுகு என்றால், அந்தப் புனுகு தான் ஈசனுக்கும் தெய்வங்களுக்கும் உகந்ததென்றால்... அந்த விந்து “நாத விந்து“ என்றல்லவா ஆகிவிடுகிறது.! அப்படியென்றால் அந்த “நாத விந்து“ புனுகுப் பூனையின் உடலிலிருந்து எப்படி, எந்த நிலையில் பிரிகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா..?
புனுகுப் பூனை தியானத்தில் ஈடுபடும் போது.... அது தெய்வீக பரவச நிலையினை அடையும். அந்த நிலையில் அப்பூனை சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டு அதற்கு அபிஷேகம் செய்வது  போல் நினைத்துக் கொண்டே... மெய்மறந்த நிலையில் (அதாவது Transல் செல்லும் போது) விந்தினை வெளிவிடும்..... அவ்வாறு வெளிவந்த விந்தே ‘புனுகு‘ என்றழைக்கப்படுகிறது..... இத்தகைய சிவ பரவச நிலையை அடைந்தாலொழிய புனுகுப் பூனைக்கு விந்து வெளி வராது. இதை இங்கு சொல்வதற்குப் பூலோகத்தில் ஆள் கிடையாது..! இத்தகைய ஒப்பற்ற புனுகைப் பெறுவது எப்படி?,,, இதைத் திபெத் நாட்டின் லாமாக்கள் (Lamas) அற்புதமாக அறிந்திருந்தனர்... புனுகுப் பூனைகளுடன் பழகிப் பழகி..... அவற்றை Telepathy (வாய் திறவாமல் எண்ணங்களினால் பேசிக் கொள்ளும் வித்தை)ல் நன்றாகப் பழக்கி, அவற்றைப் பரவச நிலைக்குக் கொண்டு சென்று, உத்தமப் புனுகைப் பெறுவது அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது.
புனுகின் மணம் :
அப்படி... அந்தத் தெய்வீக பரவச நிலையி புனுகுப் பூனைகள் வெளிவிடும் விந்தினை, லாமாக்கள், மூலிகப் பூச்சு உள்ள கிண்ணத்தில் சேகரிப்பர். அப்பொழுது அப்புனுகின் மணம் குறைந்தது ஒரு கி.மீ தூரத்திற்கு வீசுமாம். அப்படியென்றால் புனுகின் மகிமையை என்னென்பது!! புனுகுப் பூனையிடமிருந்து மேற்கூறிய வழியில் அல்லாது வேறு எந்த வழியிலும் புனுகைப் பெறவே..... முடியாது என்பதை நாம் உணர வேண்டும். உத்தம புனுகுக்குரிய மணந்த எந்த மணத்துடன் ஒப்பிடுவது...? கடினம்., மிகக் கடினம்... மனித நிலைக்கு எட்டாத மணம் அது.. ஆகவே துணிய வேண்டாம் – குருமங்கள கந்தர்வா.!
புனுகின் நிறமும் பதமும் :
மூலிகைப் பூச்சு உள்ள கிண்ணத்தில் புனுகைச் சேகரிக்கும் போது அந்தப் புனுகு மூலிகையுடன் கலந்து பசுமை கலந்த காவி நிறத்தில் ஒளிரும். மூலிகையுடன் கலப்பு இல்லையென்றால் தும்பைப்பூ நிறம்.. புனுகுப் பூனை வெளிவிடுகின்ற விந்தாகிய ஒப்பற்ற புனுகு மெழுகுப்பதத்தில் அமைந்திருக்கும்.... பின் இதைப் பக்குவப்படுத்தி பொடியாகவும் (Powder)   மாற்றிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒப்பற்ற புனுகினைத்தான், அபிஷேகத்திற்குப் பதிலாக ஈசன் ஏற்கின்றான் என்றால் அதில் என்ன ஆச்சர்யம்...! இப்பொழுது புனுகு சாற்றும் முறைகளைக் காண்போமா...!
சோமக்களிம்பு சாற்று முறை :
1. மேற்கூறிய முறையில் பெறப்பட்ட புனுகினை உள்ளங்கையில் மெழுகுப் பதத்தில் வைத்து இரண்டு கைகளாலும் சுமார் 25 முறை தேய்த்து (குளிர்காலத்தில் சூட்டிற்காகத் தேய்த்துக் கொள்வோமே.... அதுபோல.. ) முடித்தபின் ஒருவித சூட்டுடன் திரளும் புனுகினைச் சூரிய விரலால் (மோதிர விரல்) சந்திரமேட்டிலிருந்து வழித்து, சிலலிங்கத்திற்கு முதலில்... வடக்கிலிருந்து  தெற்காகவும், பின் தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்காகவும் சாற்ற வேண்டும். இப்படிச் சாற்றுவதால் யோகிகளுக்கும், மற்றவர்க்கும் யோகசக்தி படிப்படியாக ஏறி சஹஸ்ரார நிலையிலே அமிர்தம் பருக அருள்கிட்டுகிறது... பொதுவாகச் சொன்னால்... மேற்கூறிய முறைப்படி புனுகுச்சட்டம் சாற்றுவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமும், அருளும் கிட்டும்..

தைப்பூசம்

தைப்பூசம்  சில ஆன்மீக விளக்கங்கள்
தைப்பூசத்தைப் பற்றி அறியுமுன் பூச நட்சத்திரத்தின் மஹிமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீசனி பகவானுக்குரித்தான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...
1. தனக்கென்று ஒரு பாணியை, திறமையை, தொழில் நுட்பத்தை, ஆற்றலை, இரகசியத்தைத் துன்னுள்ளேயே வைத்திருந்து அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பர்.
2. தனக்குரித்தான தனித்தன்மை கொண்டு இயல், இசை, நாடகம், சிற்பம், நடனம் போன்ற பல துறைகளில் சீரிய பங்கேற்பர்.
3. சாதுர்யங்கள் , தந்திரங்கள், வாக்சாதுர்யம், தொழில் ஞானம் கூடிய வழக்கறிஞர் பணி, காண்ட்ராக்ட், கல்வி ஆகியவற்றில் சிறப்படைவர்.
இவ்வாறாகத் தனி பாணியுடையவர்களாய் விளங்குகின்ற பூச நட்சத்திரக்காரர்கள் எண்ணச் சுழற்சி உடையவர்களாயிருப்பர். அதாவது எப்போதும் அவர்கள் தம் மனம், பலவிதமான எண்ணங்களிடையே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் , எண்ணங்கள், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்., பூச நட்சத்திரக்காரகளின் எண்ணங்களை
1. விமலானந்த சுழற்சி
2. மலானந்த சுழற்சி
என்று இருவகைகளாகப் பகுத்துள்ளனர்.,
விமலானந்த சுழற்சி : பூச நட்சத்திரத்தாருடைய நற்குண எண்ணங்களை, சக்திகளை, (Positive Force), விமலானந்த சுழற்சி என்று சித்புருஷர்கள் வகுக்கின்றனர். இவை பரமானந்தத்தைத் தரும், எண்ணங்கள் நற்செயல்களாக மாறிடில்..,ஆனால் அனைத்து எண்ணங்களும் காரியங்களாக மாற மனவுறுதி, ஆக்கம், மனித சக்தி, உழைப்பு, கல்வியறிவு, நிதி  அனைத்தும் தேவையன்றோ!
மலானந்த சுழற்சி : பூச நட்சத்திரத்தாருடைய தீய சக்திகள், தீய எண்ணங்களை “மலனாந்த சுழற்சி” என்றழைக்கின்றனர்.. கலியுகத்தில் (Positive Force) விட சற்றே அதிக வலுவுள்ளது போல் காணப்பட்டாலும் இறுதியில் நற்சக்தியே, இறையருளால் வெற்றி கொள்ளும்.
கலியுக நியதி :
உண்மையில் கலியுகத்தின் இலக்கணமே நற்சக்தி, தீய சக்திகளிடையே உள்ள போராட்டம் தான்! எனவே ஒவ்வொரு மனிதனும்,
1. தன்னிடமுள்ள தீய சக்திகளைக் களைந்து..
2. நற்சக்திகளை இறைவழிபாடு, ஹோமம், பூஜை, அன்னதானம் மற்றும் ஏனைய தானதர்மங்கள், இறைப்பணிகள், மக்கள் சேவை எனப் பெருக்கி..
3. மேற்கண்ட இரண்டால் உள்ளத்தை உறுதியாக்கி
4. தான் வாழும் சமுதாயத்தில் விரவிக் கிடக்கும், தீய சக்திகளைச் சாத்வீகமாக ஆன்மீகரீதியாக எதிர்த்துப் போராடி
5. சத்சங்க அமைப்பாக, ஜாதி, இன பேதமின்றி பலருடன் இணைந்து தியானம், வழிபாடு , இறைப்பணிகள், பொதுத்தொண்டு மூலமாக நாடெங்கும், உலகெங்கும் நற்சக்தியைப் பரப்பி வாழ்ந்திட வேண்டும்.
இதுவே ஒவ்வொரு ஜீவனுடைய வாழ்க்கைக் குறிக்கோளாகும். இதை விடுத்துப் பணம் சம்பாதிப்பது, வியாபாரப் பெருக்கம், சுகபோகங்கள், பிறரை ஏமாற்றி வஞ்சித்துப் பொருள் சேர்த்தல் இவற்றிலேயே மனம் செல்லுமாயின், சொல்லொணாப் பிறவிகளே மிஞ்சும்.
பூச நட்சத்திர கிரஹ மூர்த்தி
ஸ்ரீசனீஸ்வரருக்கு உரித்தான நட்சத்திரங்களுள் பூசமும் ஒன்று. இவ்வாறாக ஒவ்வொரு கிரஹத்திற்கும் உரிய நட்சத்திரங்கள் உண்டு. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! நாம் எவ்வாறு நம்முடைய நல்வாழ்விற்காக கிரஹங்களைப் பூஜிக்கின்றோமோ அதேபோல் நம் நட்சத்திரத்திற்குரிய கிரஹ மூர்த்தியும் பிற நவகிரஹ மூர்த்திகளையும், தெய்வ மூர்த்திகளையும் நம் நல்வாழ்விற்காகப் பூஜிக்கின்றனர்., நாம் எந்த அளவிற்கு நவகிரஹ மூர்த்திகளைப் பூஜிக்கின்றோமோ அந்த அளவிற்கு அவர்களுடைய தெய்வீக பூஜைகளின் பலாபலன்கள் நமக்குக் கிட்டும்.
ஸ்ரீசனீஸ்வரர் தமக்குரித்தான பூச நட்சத்திரக்காரர்களின் இருவகை எண்ணங்களையும் (விமலானந்த சுழற்சி, மலானந்த சுழற்சி) சீர்படுத்திட எண்ணி அவற்றைப் பரவெளியில் அணுக்களாக்கினார், அவையிரண்டும் இரண்டு அரைச் சக்கரங்களாக மாறிப் பிரபஞ்சத்தையே வலம் வந்தன., ஸ்ரீசனீஸ்வரரோ அவற்றைத் தொடர்ந்து சென்றார். பல ஆண்டுகள் கழிந்தன. பூச நட்சத்திரக்காரர்களின் எண்ணிக்கையும் அருகிட, புதிய உலகிலேயே பூச நட்சத்திர ஜீவன்களின் வாழ்க்கையும் ஸ்தம்பித்து நின்றது. இதுவே ஸ்ரீசனீஸ்வரருக்கு ஏற்பட்ட மாயை!
விமலானந்த, மலானந்த எண்ணச் சுழற்சிச் சக்கரங்களைச் சீர்படுத்திட, எண்ணி அவற்றைத் தொடர்ந்து சென்றிட, பூச நட்சத்திர ஜீவன்களின் வாழ்க்கை ஸ்தம்பித்தது, ஆனால் இதுவும் இறைவனின் திருவிளையாடல் அன்றோ! நவகிரக மூர்த்திகள் ஜீவன்களின் மேன்மைக்காக அரும்பாடுபடுகின்றனர் என்பதை உணர்த்தவே இறைவனின் இத்திருவிளையாடல்! ஸ்ரீசனீஸ்வரர் அச்சக்கரங்களை ஸ்ரீவிநாயகர் உறையும் காணாபத்ய லோகத்திற்கு இட்டுச் சென்றார். இந்த லோகத்தில்தான் முதன் முதலாக வியட்டி, சமட்டிச் சக்கரங்கள் ஒன்றிணைந்து “உ” என்றும் பிள்ளையார் சுழி உண்டாயிற்று. ஸ்ரீசனீஸ்வரர் ஸ்ரீமஹா கணபதியை வேண்டி, “ஸ்வாமி! எம்முடைய பூச நட்சத்திரக்காரகள் எண்ணச் சுழற்சிகளால் அவதியுறுகின்றனர்., அவை தாம் இன்று விமலானந்த, மலானந்த சக்கரங்களாகத் தங்கள் லோகத்திற்கு வந்துள்ளன! தாங்கள் வியட்டி, சமட்டிப் பிரணவச் சக்கரங்களை இணைத்தது போல் இவ்விரண்டையும் சீர்படுத்தி அருள வேண்டும்”, என்று வேண்டினார்.,
ஆழத்துப் பிள்ளையார்
“சனீஸ்வரா! இத்தகைய எண்ணச் சக்கரங்களை இணைக்கையில் பூவுலகமே தாள முடியாத அளவிற்கு உஷ்ணம் ஏற்படும். நனமையும் தீமையும் சேர்ந்ததே வாழ்க்கை! இரண்டுமிருந்தால் தான் கர்ம வினைகளோடு பூலோக சஞ்சாரம் நடக்கும். மேலும் பூலோகத்தினர் மட்டுமல்லாது ஏனைய கோடி கோடியாம் லோகங்களில் வாழ்வோருடைய பாவங்களையும், தீவினைகளையும், கர்மங்களையும் ஸ்ரீகங்காதேவியே ஏற்று ஜீவன்களைக் காப்பாற்றுகின்றாள். தன்னால் அத்தகைய பாரத்தைத் தாங்க இயலவில்லை என்றும் முறையிட்டுள்ளாள். மேலும் இத்தகைய சக்கரங்களை இணைத்து அருள் பாலித்திடும்போது, அதி உஷ்ணம் பொங்குவது மட்டுமின்றி, தீயசக்திகளும் மட்டுப்படுத்தப்படுமல்லவா? அவற்றை யார் ஏற்பது? பூமாதேவியும், கங்கா தேவியும், தானே அவற்றை ஏற்றாக வேண்டும்.
எனவே பூலோகத்தில் ஓரிடத்தில் ஈஸ்வரனே ஸ்ரீகங்காதேவிக்கு அருள்பாலிக்கும் அற்புதத் தலமொன்றுள்ளது. அங்கு நான் ஆழ்த்துப் பிள்ளையாராகப் பூமிக்கடியில் தங்கி ஸ்ரீபூமாதேவியின் பாரத்தையும், ஸ்ரீகங்கா தேவியின் பாரத்தையும் தாங்க இருக்கிறேன். வியட்டி, சமட்டிப் பிரணவச் சக்கரங்கள் சேர்ந்து தான் “ஓம்” என்னும் தற்போதைய உருவம் கிட்டியது. நானே ஓங்கார ரூபியாக இருப்பினும், ஓங்காரத்தின் முழுப் பொருளை உணர்ந்து பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்த பிரம்மாவிற்கும், தம் தந்தையாம் ஈஸ்வரனுக்குமே ஓங்காரத்தை உணர்த்தியவன் சிங்கார வேலனாம் திருமுருகன்! விருத்தகிரி (விருத்தாசலம்) என்னும் திருத்தலத்தில் யான் “ஆழத்துப் பிள்ளையாராக“ அமர்ந்திருக்க, வரும் உத்தராயணத்தில் தைமாதம் பூச நட்சத்திரத்தின் விமலானந்த, மலானந்த சுழற்சிச் சக்கரங்கள் ஒன்றிணைந்து சீர் பெற்று முழுமை பெறும். இதற்கு விருத்தகிரியின் முருகப் பெருமானே அருள்புரிகின்றான்..
பூச நட்சத்திரத்தின் விமலானந்த, மலானந்த சக்கரங்கள் கூடும் அத்திருநாளே தைப்பூசம் என்று கொண்டாடப்படும். இச்சக்கரங்களின் இணைப்பில் ஒரு “பேரண்ட அக்னிப் பிரவாகம்“ உண்டாகும் என்று கூறினேனல்லவா? ஜோதி ஸ்வரூபமான ஆறு கிருத்திகா ஜோதிகளிலிருந்து  பிறந்த முருகனே சக்கராக்னியை ஏற்று அருளும் சக்தியுடையவன்“ என்று கூறி அருள்பாலித்தார்.. தமிழகத்தில் விருத்தாசலம் எனப்படும் விருத்தகிரியில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீஆழ்த்துப் பிள்ளையாரும், ஸ்ரீமுருகனும் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றனர். சுற்றிலும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் சூழ்ந்த அதிஅற்புதத் தலமிது!
அனைத்துப் பூச நட்சத்திரத்தாரும் அடிக்கடி சென்று தொழ வேண்டிய பெருமானே விருத்தாசல ஸ்ரீமுருகன். தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பூச நட்சத்திரக்காரர்கள் விருத்தகிரி ஸ்ரீமுருகனைப் பூசித்தேயாக வேண்டும். ஸ்ரீசனீஸ்வர பகவான் இங்கு ஆழத்துப் பிள்ளையாரையும், ஸ்ரீமுருகனையும் பூஜித்துப் பூச நட்சத்திர ஜீவன்களுக்குப் பல அனுக்ரஹங்களைப் பெற்றுத் தந்தார். எனவே பூச நட்சத்திரக்காரர்கள் மட்டும் தான் இங்கு வழிபட வேண்டுமா என்று கேட்டிடலாம்.
1. நம்முடைய மூதாதையரும், உறவினர்களும், நண்பர்களும் பூச நட்சத்திரத்தைக் கொண்டிருக்கலாம். .. அல்லவா?
2. இனி வரவிருக்கும் திருமண உறவுகளோ, சந்தியினரோ , பூச நட்சத்திர சம்பந்தம் கொண்டிருக்கலாமன்றோ!
3. மாதந்தோறும் பூச நட்சத்திர நாட்கள் வருகின்றனவே, அந்நட்சத்திர நாட்கள் நன்முறையில் நடக்க வேண்டுமன்றோ!
4. விவாஹம், சீமந்தம், கிரஹப்பிரவேசம், மனை முகூர்த்தம், புனித மஞ்சள் நீராடுதல், போன்ற இல்லத்து விசேஷ தினங்கள், இல்லற வைபவங்கள் பூச நட்சத்திரத்தில் அமையலாமன்றோ!
எனவே அனைவரும், குறிப்பாகப் பூச நட்சத்திரத்தினர் தைப் பூசத்தன்று விருத்தாசலம் சிவாலயத்தில் ஸ்ரீமுருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால், பால் அன்னம், பால் சம்பந்தமான இனிப்புகள் அளித்து வழிபட வேண்டும். எனவே வரும் தைப்பூசத்தன்று திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் பழமலைநாத சிவாலயத்தில் ஆழத்துப் பிள்ளையாருக்கு, வடமேற்கே ஆகம மண்டபத்தில் 63 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வழிபட்ட முருகப் பெருமான் சந்நதியில் மேற்கண்ட வகையில் தாத்ரு வருட தைப்பூசத்தை முறையாக அபிஷேக ஆராதனைகளுடன் தான தர்மங்களுடன் கொண்டாடி சகல சௌபாக்யங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறோம்.

தோஷ நிவர்த்தி ஹோமங்கள்

பித்ரு தோஷ நிவர்த்தி – சில ஆன்மீக விளக்கங்கள்
வினா : (அ) பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமங்களை (நன்கு அறியாது) நிகழ்த்தினால் வேறு விளைவுகள் ஏற்படுமா?
(ஆ) நிர்ணபிக்கப்பட்ட ஆயுள் முடிவதற்கு முன்னரேயே மரணம் நிகழ்வதுண்டா?
விடை : 1. எந்தப் பயன்களை வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு ஹோமங்கள் நிகழ்த்தப் படுகின்றனவோ அவற்றிற்காகவே ஹோமத்தின் பலன்கள் சென்றடையும். எனவே வேறு விளைவுகள் ஏற்படும் என்றோ தில ஹோமம், குளிக ஹோமம், பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவற்றை நடத்துவதால் வேறு வினைவுகள் ஏற்பட்டுவிடும் என்றோ அஞ்சுதல் வேண்டாம்.
2. தில ஹோமம், குளிக சாந்தி ஹோமம் போன்றவற்றை முறையோடு நிறைவேற்றினால் தான் பரிபூரண பலன்களைப் பெற முடியும். இதற்குச் சற்குருவின் அருளும், அறவழி முறையும் தேவையானதாகும். நாம் அறிந்த வரையிலோ, பிறரைக் கொண்டோ தெரிந்த வகையில் ஹோமத்தை நிகழ்த்துகையில் ஹோமத்தில் பரிபூரண பலன்கள் கிட்டாவிடினும் அதற்குரித்தான பலன்கள் சங்கல்பம் செய்த காரியத்திற்கு நிச்சயமாகச் சென்றடையும்.
3 தேனுபுரி தில ஹோமம , பட்டிபுரி தில ஹோமம், வசல புரி தில ஹோமம், ஆதித்ய தில ஹோமம் என்று பல வகையான தில ஹோமங்கள் உண்டு. ஒரு தில ஹோமத்தை எந்த கார்ய அனுகூலத்திற்காகச் சங்கல்பித்துச் செய்கின்றோமோ அத்தில ஹோமத்தின் பலன்கள் அதற்குத்தான் பயன்படும்.
4. தில ஹோமத்தை முறையோடு நிகழ்த்தினால் பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகி புத்ர பாக்யம் கிட்டும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
அற்புத சக்திவாய்ந்த தில ஹோமம், குளிகசாந்தி ஹோமம் போன்றவற்றை நடத்துவதால் வேறு எவ்விதத் துன்பங்களும் நிச்சயமாக ஏற்படாது
இல்லத்தில் ஆவிநிழல் படியும் மற்றும் ஆவி தோஷமுள்ள இடங்களில் மட்டும் ஹோமங்களை நிகழ்த்தலாகாது.
5. தில ஹோமத்திற்குப் பின் சமாராதனை எனப்படும் அதிதி போஜனம் அல்லது அன்னதானம் கண்டிப்பாக நடைபெற வேண்டும். அதிதி போஜனம் உண்பவர்கள், அன்னதானத்தைப் பெறுபவர்கள் மூலமாகவே பித்ருக்கள் தங்கள் ஆசிகளை வழங்குகின்றனர். இவ்வாறாகவே தில ஹோமத்தின் பலன்கள் பெறப்படுகின்றன என்பதை உணர்தல் வேண்டும்.
6. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலவகை தில ஹோமங்களில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கப்படுகையில் பொதுவாக சுத்த அன்னமே (சாதம்) ஆஹிதியாக அளிக்கப்படுகின்றது. அக்காலத்தில் நம்முடைய மூதாதையர்களே மீண்டும் நம் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக ஆண்வர்கம் பெண்வர்கத்திற்கேற்ப, குழந்தையைப் பெறுவதற்காக சம்பா, குருணை போன்ற அன்ன வகைகளை ஆஹுதிகளாக அளிப்பர். இவற்றைத் தக்க குலகுரு சற்குரு மூலம் கேட்டறிந்து கடைபிடிக்க வேண்டும்.
7. மனிதன் ஆயுளைத் தேவகணக்கு, மணித கணக்கு என இரு வகையில் வகுக்கின்றனர். மனிதக் கணக்கில் அனைத்து வகையான மரணங்களும் அதனதன் ஆயுள் நிர்ணயப்படியே நிகழ்கின்றன. உத்தம ஆன்மீக நிலைகளை அடைந்தால் தான், மரண ரகசியங்கள் புலப்படும். அதுவரையில் மரண விளக்கங்கள் புரிபடாமல்தான் இருக்கும். தேவ கணக்கு என்பது மரண ரகசியங்களுள் ஒன்றாகும். தேவ கணக்கில், தற்கொலை போன்றவற்றில் அந்தந்த ஜீவனுக்குரித்தான நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்வரை அது ஸ்தூல உருவத்திலோ (தேக வடிவில்) அல்லது ஆவியாகவோ வாழ்ந்தாக வேண்டும். அதனை நன்கு புரிந்து கொள்ள ஆழ்ந்த ஆத்மவிசாரம்தனை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் எவ்வகையில், எவ்விடத்தில், எவ்வாறு மரணம் ஏற்பட வேண்டும் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உறக்கம் என்பது கூட ஒருவகை மரணமே! மரணம் பற்றிய பல அபூர்வமான விளக்கங்களை முந்தைய “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ இதழ்களில், அளித்துள்ளோம். எம் ஆஸ்ரம வெளியீடான ‘இறப்பின் இரகசியம்‘ என்ற நூலில் மேலும் பல விளக்கங்களைக் காணலாம்.
8. அதே குடும்பத்தில் ஹோம சங்கல்பத்தின்படி அதே சந்ததியினர் மீண்டும் பிறப்பதற்காகச் சில விசேஷ தினங்களுக்கும், பூஜைகளுக்கு முன்னரோ பின்னரோ சில உயிர்ப்பிரிவுகள் ஏற்படும். அக்குடும்பங்களின் நன்மைக்காகப் பித்ரு லோகத்தில் நிகழ்த்துகின்ற இச்சிருஷ்டி தத்துவத்தின் ரகஸ்யங்களைச் சாதாரண மனித அறிவு கொண்டு உணர்ந்திட இயலாது. நன்மையோ, தீமையோ, அனைத்தும் இறையருளால் இறையாணையின் படிதான் நிகழ்கின்றன என்ற ஆன்மீக அறிவைப் பெற்றால் தான் இறப்பின் காரணங்களைப் பற்றி அறிந்திட முடியும். சற்குருவைப் பெற்றால் அவரே உள்ளங்கை நெல்லிக்கனி போல நம் நடைமுறை வாழ்க்கையில் உணர்த்திடுவார்.

கூடுதல் பூஜைகள்

கூடுதல் பூஜைகளின் மகத்துவம்
நவம்பர் 1997 வரை நம் நாட்டில், கிரஹசஞ்சார விளைவுகளினால் ஏற்படும் அரசியல், பொருளாதார, சமுதாயத் துன்பங்கள் பற்றியும் அவற்றிலிருந்து நம்மைக் தற்காத்துக் கொள்ள வேண்டி நாம் கூடுதலாகப் பூஜைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தையும் கடந்த பல இதழ்களில் வலியுறுத்தி வந்துள்ளோம். 20.11.1997 முதல் 30.11.1997 வரை நாம் நம் சமுதாயத்தில் பற்பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமாதலின் ஜாதி, மத, இன, குல வேறுபாடின்றி சத்சங்கமாக ஒன்று கூடி இப்பொழுது முதலே பூஜைகள், ஹோமங்களை நிறைவேற்றி, நிறைந்த தெய்வீக அருளைப் பெற்றிட வேண்டும். கூட்டு வழிபாட்டினால்தான் சமுதாய ஒற்றுமை, சாந்தமான வாழ்வு, மனதிருப்தி நிறைந்த குடும்ப வாழ்க்க , நல் ஒற்றுமை ஆகியவற்றை எளிதில் பெற இயலும். வன்முறை, எதிர்ப்பு சக்திகள், குரோதம், பேராசை, முறையற்ற காமம், தீய சக்திகள், பொறாமை, கொலை, கொள்ளை போன்ற ஒழுங்கீனங்கள் மிகுவதற்கு காரணம் பக்தியின்மைதான்.
இன்றைய கலியுக வாழ்க்கையே நற்சக்தி, தீய சக்திகளுக்கு இடையேயான போராட்டம் தான். (Positive forces vs  Negative  forces) தீய  சக்திகள்மிகுவது போல் தோன்றிடினும் இறுதியில் வெற்றில் பெறுவது நற்சக்தியே! இதற்குக் கூட்டு வழிபாடுதான் பக்கபலமாக உறுதுணையாக நிற்கின்றது. உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவலக சக ஊழியர்கள், மாணவ மாணவியர் போன்ற பலர் ஒன்று கூடி கீழ்க்கண்ட பூஜைகளை முறையாக நிறைவேற்றி வந்தால்....
1. சமுதாயத்தில் ஏற்படும் சீர்குலைவுகள்
2. நிதிப் பிரச்னைகள்
3. மனநிம்மதியின்மை, குழப்பங்கள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை
4. அடிக்கடி, காரண காரியமின்றிக் குடும்பத்தில் நோய்கள் ஏற்படுதல்
5. குழ்ந்தைகளின் கல்வி, நடத்தையில் ஏற்படும்., ஒழுக்கத்தில் ஏற்படும் ஒழுங்கீனங்கள்
6. உறவு, நட்புகள் விரோதமாக மாறித் தீராப் பகை ஏற்படுதல்
வரும் நவம்பர் 1997 வரை மேற்கண்டவற்றால் ஏற்படும் மிதமிஞ்சிய துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வென்று அமைதியான நல்வாழ்வைப் பெற்றிடலாம்.நம் தினசரி வழிபாடுகள் மிகமிக குறைந்து வருவதால் தான் நம்முடைய துன்பங்களும் அதிகரித்து வருகின்றன என்பதை உணர்ந்திடுக!
கீழ்க்கண்ட பூஜை முறைகள் அந்தந்த தினத்திற்கேற்ப / ருது, நட்சத்திரத்திற்கேற்ப கிரஹப் பிரீதியைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு ராகு காலத்தில் ராகு பகவானின் பூஜையும், எம கண்டத்தில் ஸ்ரீஎமபகவானுக்குரித்தான பூஜையும் (திருச்சி  திருப்பைங்ஞீலி சிவாலயத்தில் ஸ்ரீஎமபகவான் பத்னியுடன் அருள்பாலிக்கின்றார்.) குளிகையில் ஸ்ரீசனீஸ்வர பூஜையும் பன்மடங்கு பலன்களை அளிக்கின்றனவோ இதேபோல ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கால வரையறைக்குரித்தான தெய்வ மூர்த்தியைக் குருவருளால் அறிந்து கடைபிடித்திடில் நம் வாழ்க்கையின் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் களைந்து விடலாம்.
அமிர்தயோக நேரத்தில் பாலில் தேன் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் விஷக்கடி நோய்களும், பில்லி, சூன்ய தோஷங்களும், உறவுப் பகைகளும் தீரும். சித்த யோக நேரத்தில் மந்திர/கவச பாராயணங்கள் செய்து ஸ்ரீயோக தட்சிணாமூர்த்திக்கு அல்லது ஸ்ரீசித்தி விநாயகருக்கு உலர் பழங்களால் (dry fruits,  முந்திரி , திராட்சை, பாதாம் பருப்பு etc…) அர்ச்சித்து அவற்றை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்துவர மந்திர சித்திக்கான நல்வழிகள் கிட்டும். மந்திர சித்தி மந்திரத்தின் பலன்களைத் துரிதப்படுத்தும். இவ்வாறாக, சற்குருவை நாடி எளிய கால சந்தி பூஜா முறைகளை அறிந்து கடைபிடித்துச் சாந்தமான வாழ்வைப் பெறுவீர்களாக!
டிசம்பர்  1996

தேதி

துதி /வழிபாடு

1.12.1996

ஸ்ரீசிவாஷ்டக ஹோமம் ‘நாகேந்த்ராய‘ (எனத் தொடங்கும் துதி) சஹஸ்ரநாமம்

2.12.1996

உத்தாலக சாந்தி ஹோமம் (ஸ்ரீஜேஷ்டா தேவியின் நாயகரே ஸ்ரீஉத்தாலக சாந்தி ஹோமம் எத்தகைய வறுமையையும், தரித்திர நிலையையும் போக்க வல்லது.

3.12.1996

ஸ்ரீசரபேஸ்வர சஹஸ்ரநாமம் / ஸ்ரீப்ரத்யங்கிரா அஷ்டோத்திரம்.

4.12.1996

ஸ்ரீபிரத்யங்கிரா சஹஸ்ரநாமம் / ஸ்ரீசரபேஸ்வர அஷ்டோத்திரம்

5.12.1996

ஸ்ரீபிரஹஸ்பதி சஹஸ்ர நாமம்/ ஹோமம்

6.12.1996

ஸ்ரீபஞ்சபூத ஹோமம் / ஸ்ரீசுப்ரமண்ய சஹஸ்ரநாமம்

7.12.1996

ஸ்ரீசனீஸ்வர சஹஸ்ரநாமம் / ஹோமம்

8.12.1996

ஸ்ரீஆஞ்சநேய சஹஸ்ரநாமம்/ ஹோமம்

9.12.1996

ஸ்ரீகோமாதா சஹஸ்ரநாமம்

10.12.1996

ஸ்ரீகற்பகாம்பாள் சஹஸ்ரநாமம்

11.12.1996

ஸ்ரீசௌபாக்யலக்ஷ்மி சஹஸ்ரநாமம்

12.12.1996

ஸ்ரீசாகம்பரி தேவி சஹஸ்ரநாமம்

13.12.1996

ஸ்ரீபவானி சஹஸ்ரநாமம்

14.12.1996

ஸ்ரீகுருவாயூரப்பன் சஹஸ்ரநாமம்

15.12.1996

ஸ்ரீஅன்னபூரணி சஹஸ்ரநாமம்

16.12.1996

ஸ்ரீவெங்கடாசலபதி சஹஸ்ரநாமம்

17.12.1996

ஸ்ரீசரஸ்வதி சஹஸ்ரநாமம்

18.12.1996

ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரநாமம்

19.12.1996

ஸ்ரீசுதர்ஸன சஹஸ்ரநாமம்

20.12.1996

ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவ சஹஸ்ரநாமம்

21.12.1996

ஸ்ரீராம சஹஸ்ரநாமம்

22.12.1996

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்

23.12.1996

ஸ்ரீகணேச சஹஸ்ரநாமம்

24.12.1996 to 29.12.1996

ஸ்ரீமுருகனின் அறுபடை வீடுகளுக்கு உரித்தான மூர்த்திகளின் சஹஸ்ரநாமம்/ கவசம்.

30.12.1996

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்

31.12.1996

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.

எத்தனையோ கோணங்களிலிருந்து எவ்விதமான துன்பங்களையெல்லாம் நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இல்லம், அலுவலகம், வியாபாரம், பிரயாணம், வழக்கு என எங்கெங்கும் விதவிதமான பிரச்னைகள் முளைக்கின்றனவே, காரணமென்ன? ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ என்பது போல நம்முடைய முன்ஜென்ம கர்மவினைகளே நமக்கு த்ற்போது வருகின்ற இன்னல்கள்! ஏதோ பிறரால் வருவது போலத் தோன்றினாலும், நமக்கும் அவருக்குமுள்ள பூர்வ ஜென்மத் தொடர்புகளே அத்தகைய துன்பங்களாகவும், இன்பமாகவும் உருவெடுக்கின்றன என்பதனை மறந்திடலாகாது!
டிசம்பர் 1996 க்குரித்தான வழிபாடுகளினால், நம்முடைய அனைத்துக் கர்மவினைகளுக்குரிய, வரும் நவம்பர் 1997 வரை நாம் சந்திக்கவுள்ள கிரஹ சஞ்சார விளைவுகளுக்கும் ஏற்ற பரிஹாரங்களைத் தரவல்லவை! நோய்களுக்கேற்ப மருந்துகள் அமைவது போல, கர்மவினைகளுக்கேற்ப அவற்றை நிவர்த்திக்கும் பூஜை முறைகளுமுண்டு! சற்குருவை நாடி விளக்கங்களைப் பெற்று பயன் பெறுவீர்களாக! ... சற்குரு இல்லையெனில்...! இல்லையென்று சொல்லாதீர்கள். அனைத்து ஜீவன்களுக்கும் சற்குரு உண்டு. ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருவைப் பெற வேண்டி திருஅண்ணாமலையைக் கிரிவலம் வாருங்கள்! தக்க சமயத்தில் அவரே அரவணைத்திடுவார், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூஜித்து வந்திடில்! நீங்களே சற்குருவைப் பெற்று வரும் வரை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் விளக்கப்படுகின்ற பூஜை முறைகளைப் பரிபூர்ண நம்பிக்கையுடன் செய்து வந்திடில் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவே உங்களுக்குரிய சற்குருவை காட்டிடுவார்.

சகஸ்ரலிங்க மகிமை

சஹஸ்ரலிங்க மஹிமை
(தொடர்ச்சி..... ஸஹஸ்ரலிங்கம் மிகவும் அபூர்வமாக சிவ கோயில்களில் மட்டும் தான் காணப்படுகிறது என்பதை நாமறிவோம். அதுவும் அதனைச் சுற்றிப் பிரதட்சிணம் வர இயலாத முறையில் சுவரை ஒட்டியோ, ஓரத்திலோ, மூலையிலோ அமைந்திருக்கும், இதுவும் இறைவனின் திருவிளையாடலே, ஒரு முறை வலம் வந்தால் ஓராயிரம் லிங்க மூர்த்திகளை வலம் வந்த பலன்கிட்டுமே! அதற்காகவே இத்திருவிளையாடல்!
ஊர்மிளை லிங்கம்
சஹஸ்ரலிங்கங்களின் அமைப்பை பொறுத்து அதன் நைவேத்ய முறைகளும் மாறுபடும் ஸஹஸ்ரலிங்கத்திற்கு உரித்தான “கர முத்திரை“ வகைகளும் உண்டு. ஒவ்வொரு கரமுத்திரையும் பல சஹஸ்ரநாமங்கள் ஓதிய பலனை எளிதில் பெற்றுத் தரும். இம்முத்திரைகளில் தேர்ச்சி பெற்ற தேவியே ஸ்ரீலெட்சுமணனின் பத்னியான ஊர்மிளை தேவி! ஊர்மிளையின் தெய்வீக ஆற்றலைப் பலர் அறியார்,
ஸ்ரீஇராம பிரானுடைய வனவாசத்தில் சற்றும் கண்துஞ்சாது அவரைக் காத்துவந்த ஸ்ரீலெட்சுமண சுவாமி, இராவண வதம் முடிந்து ஸ்ரீராமபட்டாபிஷேகத்தை கண்டுகளித்த பின்னர் அண்ணனின் ஆணையின் பேரில் உறங்கச் சென்றார். ஏற்கனவே ஸ்ரீலெட்சுமணசுவாமி உறங்காதிருக்க தான் ஏன் உறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணன் தம்பியிருடைய 14 வருட வனவாசப் பொழுதிலும் ஊர்மிளை தேவி உறங்கவில்லை. ஆனால் ஸ்ரீலெட்சுமணர் உறங்குகையில் அவரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மேலும் பல ஆண்டுகள் ஊர்மிளை உறங்கவில்லை, உறங்கச் செல்லும்முன் ஸ்ரீலெட்சுமணர், “அம்மா, ஊர்மிளை! எங்களுடைய வனவாசத்தில் நீயும் உறங்கவேயில்லையாமே? என்னைக் கவனித்துக் கொள்வதற்காக மீண்டும் நீ உறங்கபோவதில்லை! எவ்வாறு உன்னால் உறங்காமலிங்க முடிகிறது?” என்று கேட்டார்.
ஸ்வாமி அது ஒன்றும் பெரிய காரியமில்லையே! தினமும் ஸஹஸ்ரலிங்கத்தின் ஒவ்வொரு லிங்கத்திற்கும் சஹஸ்ர நாம பாராயணம் செய்து முடித்த பிறகே தூங்குவது என்று ஒரு வைராக்கியத்தை மேற்கொண்டேன், ஆனால் 1000 லிங்களுக்கும் ஸஹஸ்ரநாமங்களை ஓதுவதற்குள் மறுநாள் விடிந்து விடும்!“ என்று சொல்லி ஊர்மிளை சிரித்தனள்! 12 ஆண்டுகள் சஹஸ்ரலிங்க மூர்த்திகளுக்குச் சஹஸ்ரநாம பாராயணங்கள் செய்தமையால் ஊர்மிளை தேவிக்குக் கிட்டிய தெய்வீக சக்தி என்ன தெரியுமா?
டிசம்பர் ’1996 விசேஷ தினங்கள்
15.12.1996 சௌர விரதம்
24.12.1996 பௌர்ணமி [இரவு 1.02 மணி முதல் 24.12.1996 இரவு 2.10 மணி வரை]
25.12.1996 ஆருத்ரா அபிஷேகம்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam