அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தட்சிணாயனம்

ஆடி முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாத காலம் தேவர்களுக்குரிய இரவுப் பொழுதாகும். நாம் வாழும் பூமியில் குறைந்தது 24 மணி நேரம் கொண்டதே ஒரு நாள் அல்லவா, தேவர்களுக்கோ நம் கணக்கில் ஆறு மாதங்கள் ஒரு பகலாகவும் ஆறு மாதங்கள் ஒர் இரவாகவும் கருதப்படுகின்றன. மாதங்களில் சிறந்தது மார்கழி என்று ஏன் சொல்கின்றோம்? நமக்குரிய ஒரு நாளின் 24 மணி நேரங்களில் ப்ரம்ம முகூர்த்தமாகிய உஷத் காலத்திற்கு (காலை 3 மணி முதல் 5.30 வரை) பெரும் சிறப்பு உண்டு. இதே போல் தேவர்களுடைய (6 மாத கால ஆடி முதல் மார்கழி வரை) இரவுப் பொழுதான தக்ஷிணாயனம் முடிந்து பகல் துவங்கும் முன் (தேவர்களுக்குரிய) பிரம்ம முகூர்த்த நேரமாக மார்கழி மாதம் அமைவதால் இது சிறப்புடையதாகிறது. உத்தராயண (தை-ஆனி), தக்ஷிணாயனப் (ஆடி-மார்கழி) புண்ய காலங்களின் தொடக்கத்தில் அயன கலைகள் மாறுகின்றன. பித்ரு லோகங்களிலும் சூரிய பகவானின் அயனப்பாதை மாறுபடுவதால் சூரிய, சந்திர கலைகளின் மூச்சு பேதங்களும் மாறுகின்றன. இவற்றிற்கு ஏற்ப ஜீவன்களின் பிராணாயாம சுவாச முறைகளும் மாறுபடும். இதை முறைப்படுத்தவே உத்தராயண, தக்ஷிணாயன புண்ய கால துவக்கத்திற்குரித்தான விசேஷமான தியான முறைகளும் உண்டு. இப்புண்ய காலத் தர்ப்பணத்தில் வரும் பூணூலின் இட வல மாற்றங்கள், தர்ப்பைச் சட்டங்களை வைக்கும் முறை, உள்ளங்கை விரல்களின் மூலம் தர்ப்பணம் வார்த்தல் – இவற்றால் இயல்பாகவே நம்முடைய சுவாச கலைகளும் நன்முறையில் மாறுகின்றன. இவையெல்லாம் சற்குரு மூலம் பெறவேண்டிய ரகஸ்யங்கள் ஆகும்.

திருப்பைஞ்ஞீலி

விசேஷத் தர்ப்பணங்கள்
உத்தராயணம் பிறக்கும் தை முதல் தேதியிலும் தக்ஷிணாயனம் தொடங்கும் ஆடி முதல் தேதியிலும் ஸ்ரீசூரிய பகவானுக்குரித்தான தலங்களில் தர்ப்பணம், அன்னதானத்துடன் நிறைவேற்றுவது சிறப்புடையதாகும். சென்னை – ஞாயிறு சிவன் கோயில், ஸ்ரீசூரியனார் கோயில், லிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் படக்கூடிய திருத்தலங்களான கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில், சென்னை – பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரர் கோயில், சென்னை – குன்றத்தூர் –ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் ; திருச்சி – திருப்பைங்ஞீலி சிவாலயம், ஏதாப்பூர் சிவன் கோயில், சித்தூர் ஜில்லா நாகலாபுரம் சிவாலயம் போன்ற திருத்தலங்களில் தக்ஷிணாயனப் புண்யகாலத்தில் தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை நிறைவேற்றிட விசேஷமான பலன்களைப் பெற்றிடலாம்.
தாத்ரு வருட தக்ஷிணாயனம்
   தாத்ரு வருடத்திற்குரிய சிறப்பான தக்ஷிணாயன புண்ய கால பூஜையாக சித்த புருஷர்கள் ஸ்ரீஅகஸ்தியர் கிரந்தங்களில் அருள்வதாவது :
இறப்பிற்குப் பின் மனிதர்கள் அடையக்கூடிய பல நிலைகளில் முக்கியமானவை இரண்டாகும்.
1. ஒளிப் பகுதி ; 2. இருண்ட பகுதி  ; அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினைகளுக்கு ஏற்பவும் பாவ புண்யகாரியங்களின் விளைவுகளைப் பொறுத்தும் சிறப்புடைய ஒளி லோகத்தையோ அல்லது நரகத்தை  நிகர்த்த இருண்ட பகுதியையோ மனிதன் அடைகின்றான். இருண்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் நம் மூதாதையர்களுக்கு ஒளிப் பகுதியை அடைவதற்கான நல்வழியைத் தருவதே பித்ரு தர்ப்பணங்கள், ஹோமம், பல் வகை தானங்கள், பாத பூஜை, ஏழைகளுக்கான மாங்கல்ய தானம் போன்றவை ஆகும். நம் மூதாதையர்கள் அனைவரும் ஒளிப்பகுதிக்கு உரித்தான பித்ரு லோகத்தை அடைவதில்லை. விதி வசத்தால் தீய நெறியில் ஆட்பட்ட நம் முன்னோர்கள் இருண்ட பகுதியை அடைகின்றனர். ஒரேயோரு தீய செயலுக்காகக் கூட இருண்ட பகுதியில் தண்டனை பெறும் பித்ருலோகவாசிகளும் உண்டு.     இதற்காகவே நடப்பு தாத்ரு வருடத்தில், இருண்ட லோகத்தில் உள்ள மூதாதையர்களை ஒளிப்பகுதிக்கு மாற்ற உதவும் விசேஷ பூஜையாக “தக்ஷிணாயன ஸ்கந்த பூஜை” நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்ஷிணாயன ஸ்கந்த பூஜை
கார்த்திகையின் ஆறுவிதமான ஜோதிகளில் பிறந்தவனே முருகன். அவற்றுள் ஒன்றே பாஸ்கர ஜோதியாகும். பாஸ்கரனே ஸ்ரீசூரிய பகவான். எனவே தக்ஷிணாயன புண்ய காலத்தன்று ஸ்ரீமுருகனுக்கு செவ்வாழைப் பழ மாலை, பச்சரிசி, அட்சதைகள், குங்குமம் அபிஷேகம் செய்து ஏழை கர்பிணிப் பெண்களுக்குத் தேவையான உள்ஆடைகள் சத்துணவு, Tonic, மருந்துகள், உடை, தைலம், ப்ரசவ லேகியம் போன்றவற்றை அளித்திட வேண்டும். இவ்வாறாக ஒரு ஜீவன் பிறப்பிற்கு நல்வழி காட்ட உதவிடில் இருண்ட பகுதியில் தத்தளிக்கும் நம் மூதாதையருக்கு ஒளிப்பாதைக்கு வரும் அறவழியைப் பெற்றுத் தரலாம். அனைவரும் கட்டாயமாக செய்ய வேண்டிய பூஜை இது.

ஆடிப் பூரம்

ஆடிப்பூரத்தன்று பல தேவிகள் உற்பவிக்கின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் குறிப்பிட்ட மன்வந்திரத்திற்குரித்தான ஆடிப்பூரத்தில் அந்த தேவி மகாத்மியம் நிறைவு பெறுகின்றது. ஸ்ரீகோமதி அம்பிகையின் அற்புதமான தபஸ் நிறைவு பெற்ற தினமே ஆடிப் பூரமாம். ஆடிப் பூரத்திற்கும் ஸ்ரீகாயத்ரீ அவதாரத்திற்கும் தொடர்புண்டு. சமஷ்டி காயத்ரீ என்பது மூன்றுவிதமான ஸ்ரீகாயத்ரீ ஸ்வரூபங்களின் ஐக்கியமாகும். மனித வாழ்க்கையென்பது ரஜோ, தாமஸ, சாத்வீக குணங்களின் தொகுப்பாம். வெறும் சாத்வீக குணத்தோடா அல்லது ரஜோ குணத்தோடோ மட்டும் மனிதன் வாழ்ந்திட முடியாது. உத்தம மகரிஷி, சாத்வீக குணங்களின் ஒட்டு மொத்தமாக இருப்பினும் சிறிதளவு கோபம் கூடிய ரஜோ குணம் இருந்தால் தான், அவர் கண்டிப்புடன் சிஷ்யர்களைப் போஷித்துக் காக்க முடியும்.. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜபித்து வந்தால் மனிதனுடைய முக்குணங்கள் தாமாகவே அவரவர் தேக, கர்ம பாங்கிற்கேற்ப சீர்பெற்று மன சாந்தியும் ஆனந்தமய வாழ்வும் கிட்டும்.
கோபம், பொறாமை, முறையற்ற காமம், வருத்தம், குரோதம் போன்ற தீய குணங்களுக்கு ஆட்படாத மனிதனே இல்லை. இந்நிலையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரமே நற்குணங்களை அளித்து தீய நெறிகளை அழித்து உத்தம நிலையைத் தந்தருள்கின்றது. “நான் எத்தனையோ முறை காயத்ரீ மந்திரத்தை ஜெபித்துள்ளேனே! ஆனால் எவ்விதப் பலனும் ஏற்பட்டாற் போல் தோன்றவில்லையே! இன்னமும் துன்பங்கள் தொடர்கின்றனவே!”என்று வருந்துவோர் பலருண்டு. முறையான உச்சரிப்பு கூடினால் தான் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூர்ணமான பீஜாக்ஷர மந்திர சக்தியினைப் பெற்றிடலாம். ஆனால் யாவர்க்கும் இவை சாத்தியமாகி விடுமா? பாமரர்களால் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓரளவு தானே சொல்ல இயலும். கல்வியறிவுடையவர்க்குக் கூட அட்சரப் பிழைகள் ஏற்படுமே! என் செய்வது!
ஏதுமறியா பாமரர்களுக்கும், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நன்கு உச்சரிக்க இயலாதோர்க்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தி சென்றடைவதற்காகவே ஸ்ரீகாயத்ரீதேவியே முந்தைய ஸ்ரீகாயத்ரீ அவதார வைபவத்தில் முக்குணங்களின் ஜோதியாக ஸ்ரீ முப்புடாத்தம்மனாக அவதாரம் பூண்டாள். எனவே தாது வருஷத்திய ஆடிப்பூரமானது ஸ்ரீகாயத்ரீ தேவியின் ஸ்ரீமுப்புடாத்தம்மன் அவதார லீலானுபவமாக வர்ணிக்கப்படுகின்றது. தாது வருட ஆடிப்பூரத்தில் ஸ்ரீமுப்புடாத்தமன் பத்து வயதிற்குட்பட்ட சிறுமியாக எந்த இல்லத்திற்கும் வந்து அருளிடுவாள். நம் கண்ணுக்குத் தெரிகின்ற பாலகியாய் காட்சி தருவாள். அடர்த்தியான புருவங்கள், இடது பக்க மூக்குத்தி, கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் காட்சி தருவாள். இப்பாலகி ஒரு வினாடி நம்மிடையே இருந்தாற்கூட போதும், நாம் அடைய வேண்டிய சகல ஐஸ்வர்யங்களையும், சம்பத்துகளையும், தெய்வானுக் கிரஹத்தையும் எளிதே பெற்றிடலாம். சித்தர்கள் போற்றி வழிபடுகின்ற முக்குண ஸ்ரீகாயத்ரீ தேவியே ஸ்ரீமுப்புடாத்தம்மன் ஆவாள். இந்நாளில் குழந்தைகளுக்கு உணவு, புத்தகம், சிலேட், பென்சில், பொம்மைகள் போன்றவற்றை கழித்து அவர்கள் ஆனந்தத்தில் பங்கு பெற்று ஸ்ரீமுப்புடாத்தம்மனின் அருட்கடாட்சத்தைப் பெற்றிடலாம். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜெபிக்காதோர், ஆடிப் பூரத்தன்று ஸ்ரீமுப்புடாத்தம்மனின் தரிசனத்தைப் பெற்று ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜபிக்காததற்கான பிராயச்சித்தத்தை ஓரளவு பெற்றிடலாம். ஆனால் இதற்குப் பின்னர், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜெபித்திடல் வேண்டும். ஸ்ரீமுப்புடாத்தம்மன் கோயிலைத் தேடி அறிந்து தரிசிப்பீர்களாக! .

கடுக்கன் மகிமை

சென்ற இதழில் கடுக்கன் அணிவதில் உள்ள ஆன்மீகச் சிறப்பு அம்சங்களாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளியவற்றைக் கண்டோம். மேலும் பல சிறப்பு அம்சங்களை இங்கு தொடர்கின்றோம். ஹோமம், பூஜைகள், பித்ரு தர்ப்பணம் போன்றவற்றில் காதில் கடுக்கன்களை அணிந்து கொண்டு நடத்துகையில் இந்நற்காரியங்களின் பலன்கள் பல்கிப் பெருகுகின்றன. கடுக்கன்களை அணிந்தவாறு ஒருவர் வார்க்கும் தர்ப்பண நீரை, அர்க்யத்தை பித்ரு தேவர்களே ஸ்வதா தேவதைகளிடமிருந்து நேரடியாகப் பெற்று அருள்பாளிக்கின்றனர். இதன் காரணமென்ன? பூலோகத்தில் கிடைக்கும் பொருட்களில் ஒரு சிலவே, (கோடிக்கணக்கான) பிற அண்டங்களில் கிடைக்கின்றன., ஏனையவை பூலோக வாழ்விற்கு மட்டுமே உரித்தானவையாம்! தர்பை, தங்கம், சந்தனம், நவரத்னங்கள், ருத்ராக்ஷம் போன்ற சில அரிய பொருட்களே பூமியிலும் பல லோகங்களிலும் பொதுவாகக் காணக்கிடைக்கின்றன. அதாவது இதன் ஆன்மீக ரகசியம் என்னவெனில் பிற அண்டங்களுடன், லோகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் அங்குமிங்கும் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களின் மூலம் ஒளி, ஒலியலைகள் மூலம் எளிதில் தொடர்பு கொண்டிடலாம். உதாரணமாக சந்திரமண்டலத்துடன் தொடர்புகொள்ள வேண்டுமெனில் ஈயம், முத்து, வெள்ளை அல்லி, முறுக்கு என்னும் தாவர மூலிகை போன்றவை பூமியிலும் சந்திர கிரஹத்திலும் கிடைக்கக் கூடிய பொருட்களாகும். பூமியில், சந்திர கிரஹத்திற்குரிய தென்கிழக்கு திசையில் அமர்ந்து முத்து அல்லது வெண்கற்கள் பதித்த தோடு, கடுக்கன் அணிந்து, முறையான வெள்ளை அல்லி அர்ச்சனை, முறுக்கு என்னும் சமித்து ஆஹுதியாக அளிக்கும் ஹோமம், ஈயத்தில் செய்யப்பட்ட சந்திரப் பிரதிமை பூஜை போன்றவற்றின் மூலம் சந்திர மண்டல தேவர்கள், ஜீவன்களுடன் தொடர்பு கொண்டிடலாம். சந்திர கிரஹத்திற்குரிய மொழி தமிழாதலின், தமிழ் மறைகளை ஓதி முறுக்கு எனப்படும் தாவரசமித்தைப் பசு  நெய்யில் தோய்த்து ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடில் மனக் கலக்கம், சித்த சுவாதீனம், மனகோளாறுகள் தீர்ந்து, மனநலம் குன்றியோர்க்கு நல்வழி ஏற்படும். இவ்வாறாக கடுக்கன் அணிவதால் பித்ரு தர்ப்பணங்கள், ஹோமம், பூஜைகளின் பூஜா சக்திகள் மேன் மேலும் விருத்தியாகின்றன. இதற்காகவே நம் இல்லங்களில் தாத்தா, பாட்டிமார்களின் கடுக்கன், மூக்குத்தி, தோடுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்துக் குழந்தைகளுக்கு அணியும் நற்பழக்கம் ஒன்றுண்டு. இவற்றின் மூலம் நம் மூதாதையர்களின் ஆசியை எளிதில் பெற்றிடலாம். கடுக்கன்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அவற்றில் நூற்றுக் கணக்கான கோணப் பெட்டகங்கள் இருப்பத்தைக் கண்டிடலாம். பித்ரு மந்திரங்கள், பூஜா மந்திரங்கள், ஹோம மந்திரங்கள், வடமொழி, தமிழ் மறைகள் – என ஒவ்வொரு கோணப் பெட்டகத்திலும் விதவிதமான மந்திரங்கள் குடிகொண்டு வாழ்நாள் முழுதும் நம் உடலுக்குத் தேவையான மந்திர சக்தியினை அளிக்கின்றன. எனவே கடுக்கன்களை ஒருவிதத்தில் பீஜாட்சர மந்திர சக்திகளைத் தருகின்ற டானிக் என்றே கூறவேண்டும்.
நம் முன்னோர்கள் நன்கு வயதானவர்களைக் கொண்டு நகைக் கற்களுக்குப் பட்டை தீட்டுவர். பல்லாண்டுகளுக்கான தங்கள் பூஜா பலன்களின் திரண்ட சக்தியோடு பெரியோர்கள் நகைகளுக்குப் பட்டை தீட்டிட அவற்றின் பீஜாட்சர மந்திர சக்தியைத் தாங்கும் பாங்கும் அபிவிருத்தியடையும்! எனவே கடுக்கன்களை அணிந்து அரிய தெய்வீக சக்தியைப் பெற்று உத்தமமான ஆன்மீக வாழ்க்கையைப் பெறுவீர்களாக! ஏழைகளுக்கு கடுக்கன்கள் அளிப்பது மிகச் சிறந்த தானங்களுள் ஒன்றாகும்.  தெய்வ மூர்த்திகளும், மஹரிஷிகளும் சித்த புருஷர்களும் கடுக்கன்களுடனும் மகர குண்டலங்களுடனும் விளங்குகின்றனர். ஒவ்வொரு மஹரிஷிக்கும் உரித்தான கடுக்கன் அமைப்பும் உண்டு! மகாபாரதத்தில் கர்ணன் அணிந்த மகர குண்டலம் சூர்ய மண்டலத்திலிருந்து பெறப்பட்டதாகும். யாக்ஞவல்கியர் அணிந்திருந்த கடுக்கன் வகையைச் சார்ந்ததாம்!
உத்தாலகர் மஹரிஷி :- உத்தாலகர் என்ற உத்தம மஹரிஷியானவார் கடுக்கனின் தெய்வீக குணங்களை யாங்கணும் பரப்பி வந்தார். தம் மூதாதையர்கள் அணிந்திருந்த பாஷ்ய சிருங்கார வகைக் கடுக்கனை அவர் அணிந்தமையால் சிறுவயதிலேயே எதையும் கற்காமலேயே, பாஷ்ய சிருங்காரக் கடுக்கனின் தெய்வீக குணங்களால் கல்லாமலேயே பல வேதபாடங்களில் சிறப்பைப் பெற்றார். ஆனால் இறைவன் மஹரிஷிகளையும் கூட அவ்வவ்போது சோதனைக்குள்ளாக்குகின்றான்! எதற்கு? நமக்கு பாடம் புகட்டத்தான்!
ஒரு நாள்... உத்தாலகர் தம் மாலை சந்திபூஜைகளை நிறைவு செய்து, தீர்த்தத்தைத் தெளித்து அதனை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டார். இதற்கு “தீர்த்தத் திலகம்” என்று பெயர். இந்த தீர்த்தப் பொட்டு பல தோஷங்களையும் நீக்க வல்லது. ஒவ்வொரு பூஜைக்குப் பின்னும் அனைவரும் தீர்த்தப் பொட்டிட வேண்டும். இதனால் தப, ஜப, பூஜா பலன்களின் சக்தி உடலின் நீர்ப் பகுதியை அடைகிறது. பஞ்ச பூதங்களின் தொகுப்பே மானுட சரீரமாகும். இதேபோல் ஒவ்வொரு ஹோமத்தின் பூஜா பலனும் பஞ்ச சக்திகளாக வியாபித்து உடலின் அந்தந்தப் பகுதியை அடைகின்றன. உத்தாலகர் தீர்த்தப் பொட்டு இட்டவாறே நதி நீரில் தன் முக பிம்பத்தில் தீர்த்தப் பொட்டைத் தரிசனம் செய்து கொண்டார்.
ஆனால்..... நீர் பிம்பத்தில்.. அவருடைய ஒரு காதிலிருந்த கடுக்கனைக் காணவில்லை! மஹரிஷி பதைபதைத்துத் தன் வலது காதைத் தடவிப் பார்த்தார்!.... காது மூளியாக இருந்தது! கடுக்கனைக் காணவில்லை! “என்ன இது! ஒற்றைக் காதுக்கடுக்கனுடனா சந்தி பூஜைகளைச் செய்தேன் இறைவா! இந்த அபசாரத்தை மன்னித்து விடு! ஒற்றைக் காதுக் கடுக்கனுடன் இருப்பது பெரும் பாவச் செயலாயிற்றே..” உத்தாலக மஹரிஷி கண்கலங்கியவாறு இல்லந் திரும்பினார், நடந்ததைக் கேள்வியுற்ற மஹரிஷியின் அன்னை பெரிதும் கவலையுற்றாள். காரணமென்ன?
.... இளஞ்சிறானாய் உத்தாலகர் வளர்ந்த காலை..,அவருக்குக் காதணி விழா நிர்ணயிக்கப்பட்டது, ஓர் உத்தமமான நாளில்! முகூர்த்த நாளும் நெருங்கலாயிற்று. அக்காலத்தில் அணிய வேண்டிய தோடு/கடுக்கனுக்கென சில விசேஷமான பூஜைகளைச் செய்வர். மச்சு மூலிகை, கரண மூலிகை, கண்ட மூலிகை  - ஆகிய மூன்று மூலிகைகளைப் பூஜை செய்து பறித்து வந்து ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மூலிகைத் தண்டில் கடுக்கன்கள் “குத்தி” வைக்கப்படும். இம்மூலிகைகளின் தேவதைகளே ஆயுள் தேவதைகளாவர். இம்மூன்று ஆயுள் தேவதைகளும் கடுக்கன்களில் உறைந்து, அதில் பதிய வேண்டிய தெய்வசக்தியினை மட்டும் கிரஹித்து அக்குடும்பத்தின் குலதெய்வத்திடம் சென்று சமர்ப்பணம் செய்திடுவர். எனவேதான் குலதெய்வக் கோயிலில் காது குத்தும் நற்பழக்கம் ஏற்பட்டது! காதணி முகூர்த்த நாளுக்கு முதல் நாள்... மூலிகை வாசத்தின் மூன்றாம் நாளுக்குரிய கண்ட மூலிகைத் தண்டில் பதிந்திருந்த கடுக்கன்களைக் காணவில்லை! கொள்ளை, வன்முறை போன்று எந்த தீய சக்திகளும் அண்டாத புனித யுக காலமது! எனவே திருடுபோக வாய்ப்பில்லை! உத்தாலகரின் பெற்றோர்கள் துடிதுடித்தனர். கடுக்கன்கள் என்னவாயினவோ! உத்தாலகர் அணிய வேண்டிய கடுக்கன்கள் அவர்தம் முன்னோர்களிடமிருந்து வழிவழியாக வந்தவை! மேலும் “பாஷ்ய சிருங்கார“ வகையைச் சேர்ந்த கடுக்கன்கள் என்பதாலும், உத்தாலகரின் மூதாதையர்கள் வேதங்களில் சிறந்து விளங்கியமையாலும், அக்கடுக்கன்கள் அபரிமிதமான வேதத்தின் சாரத்தைத் தம்முள் கொண்டிருந்தன.
மூன்று மூலிகை (ஆயுள்) தேவதைகளும் பாஷ்ய சிருங்கார கடுக்கன்களின் அபரிமிதமான வேதசாரத்தால் கவர்ந்திழுக்கப் பெற்று, வேதத்திற்கு இருப்பிடமான ஸ்ரீகாயத்ரீ தேவியின் திருமண்டலத்திற்கே சென்று, ஸ்ரீகாயத்ரீ தேவியிடம் கடுக்கன்களை அர்ப்பணித்தன! இதைத் தம் பூஜாபலன்களால், தீர்க தரிசனமாக அறிந்த உத்தாலகரின் அன்னையார் தம்முடைய மூன்று கால சந்தி பூஜைகளின், ஒவ்வொரு சந்திகாலத்திலும் 10 காயத்ரீ மந்திர ஜப பலனை, ஆக 30 முறை ஜபித்த ஸ்ரீகாயத்ரீ மந்திர பலனை, மூன்று மூலிகை தேவதைகளுக்காக அர்ப்பணித்திட, அதன் மஹிமையால் அவை மூன்றும் பாஷ்ய சிருங்கார கடுக்கன்களுடன் பூலோகம் திரும்பின! அக்காலத்தில் பெண்களும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தனர் என்பது இதன் மூலம் தெரிகின்றதல்லவா! அனைவரும் பூணூல் அணிந்திடலாம் அனைவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திடலாம்., இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது! இவ்வாறு ஸ்ரீகாயத்ரீ தேவியின் திருக்கரம் பட்ட கடுக்கன் காணாமற் போய் விட்டதெனில் உத்தாலகரும் அவர் அன்னையாரும் பரிதவித்து நிற்பதில் வியப்பென்ன?

அமுத தாரைகள்

1. நிரந்தர வேலை பெற :- தற்காலத்தில் பலர் எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் நிரந்தர வேலையின்றி அல்லல்படுகின்றனர். ஒவ்வொரு திருவோண நக்ஷத்திரத்தன்றும் சிவன் கோயிலில் சிவனுக்கு இடதுபுறம் அமைந்துள்ள பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்து திருவோண நக்ஷத்திரத்திற்கு உரித்தான விஷ்ணு நக்ஷத்திர தேவதையையும் காளிங்கன் என்ற நாகதேவதையையும் வழிபட்டு வந்தால் நிரந்தர வேலை கிட்டும்.
2. கும்பகோணம் அருகே கொட்டையூரில் ஸ்ரீகோடீஸ்வரராக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். எவ்வித மந்திரமும் பூஜையும், பிரதோஷ வழிபாடும், ஜபமும் இங்கு கோடி மடங்காய்ப் பெருகிடும். சூட்சுமமாய் கோடி லிங்கங்கள் இருக்கின்ற லிங்கம்! ஆனால் தரிசிக்கும் போது ஏற்படுகின்ற எத்தகைய எண்ணங்களும் கோடியாய்ப் பெருகும்! எனவே அனைத்தையும் ஸ்ரீகோடீஸ்வரருக்கே அர்ப்ணித்து வந்திடுக!
3. சாக்ஷீக்ஷ மனு – பஞ்சாங்கத்தில் மனுவாதிகள், யுகாதிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அந்தந்த மனுவிற்குரித்தான யுகமோ காலமோ துவங்கும் நாளையே மனு புண்ணிய காலம் என்று குறிக்கின்றனர். இவ்வாண்டில் ஆடி மாதத்தில் சாக்ஷீக்ஷ மனுவாது 25.7.1996 அன்று அமைகின்றது. சாக்ஷீக்ஷ மனு ஓர் உத்தம மகரிஷியாவார். புடைத்தாணு மாலயன் என்ற நாமம் தாங்கி ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபட்ட மகரிஷி. ஸ்ரீதிரிவிக்ரமர் அவதார காலத்தைச் சார்ந்தவர். சாக்ஷீக்ஷ மனுவாதியன்று (25.7.1996) தாமரை இலையில் தர்ப்பைச் சட்டத்தைச் பரப்பி நம் மூதாதையர்க்குத் தர்ப்பணம் இட்டிடில் ;
பிறருடைய சொத்துக்களை அபகரித்து ஏமாற்றுதல்,
பூர்விகச் சொத்துக்களைத் தீய வழிகளில் இழத்தல்;
சொத்திற்காக ஆசைப்பட்டு கணவனே மனைவியைக் கைவிடுதல் – போன்ற கொடிய தீவினைகளுக்குப் பரிகாரம் கிட்டுவதோடு அறவழியில் செல்லும் பாங்கு கிட்டும். திருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.
4. முகசவரம் செய்து கொள்கையில், செல்லும் காரியத்தைப் பொறுத்து சவரம் செய்யும் முறைமாறும். பெரியோர்களைக் காண்பதெனில் முதலில் தாடிப் பகுதியிலும் அலுவலகம் செல்வதெனில் காதோரமும் சவரத்தைத் தொடங்க வேண்டும். எதிர்த் திசையில் (Reverse) இழுத்து சவரம் செய்யாதீர்கள். செய்திடில் வார்த்தைக் குற்றங்கள் ஏற்பட்டு வீண் பழி உண்டாகும்.
5. பெண்கள் தம் வீட்டு வாசற்படியைத் தூய்மையான அரைத்த மஞ்சளைக் கொண்டுதான் மெழுக வேண்டும். இதனால் தீய ஆவி, துர்தேவதை, பில்லி சூன்ய துர் சக்திகள் போன்றவை வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கப்படுகின்றன. மஞ்சள் மிகச் சிறந்த கிரிமி நாசினியாகும். அரிசி மாவு கொண்டே கோலமிட வேண்டும். மொக்கு மாவு கோலம் மிகவும் பாவகரமானது. வாசற்படிக்கு மஞ்சள் பெயிண்ட் அடிப்பது மிகவும் தவறாகும்.
6. பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் : ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் பவளமல்லிப் பூவினால் மாலை கட்டி, பெருமாளுக்குச் சார்த்தி வழிபட்டு வந்தால் வெளிநாட்டுப் பயணம், கடல் கடந்த பயணம் போன்றவை வெற்றியுடன் நிறைவேறும். புதிதாக நிலம் வாங்க எண்ணுபவர்களும் மேற்குறித்த வழிபாட்டை முறையாகச் செய்து வர, நல்ல முறையில் நிலம் வாங்க வழி ஏற்படும்.
7. ஏணிகளின் இலக்கணம் – 9,12,15,18 என்ற எண்ணிக்கையில் உள்ள படிகளைக் கொண்ட ஏணிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். 18 படி உள்ள ஏணியில் 18ஆம ்படி மன உளைச்சலைத் தரும், குழப்பங்களைப் பெருக்கும். எனவே தீவிர முடிவுடன், மன வைராக்யத்துடன்தான் 18ஆம் படியில் ஏற வேண்டும். 9, 12, 15 படிகளை உடைய ஏணிகள் அளிக்கின்ற தீர்கமான முடிவை 18ஆம் படி தருவதில்லை. அப்படியானால் 18 படி உள்ள ஏணிகளையே தவிர்த்து விடலாமா என்ற கேள்வி எழும்! ஆனால் அந்த உயரத்திற்கு ஏணி தேவைப்படுமே! 18 படி உள்ள ஏணிகளை வைத்துக் கொள்ளுங்கள். 17 படிகளுக்குள்ளேயே நின்று கார்யங்களை முடித்துக் கொள்ளுங்கள் அல்லது 18ஆம் படியில் ஏற வேண்டிய நிர்பந்தம் ஏற்படில் தீர்கமான முடிவுடன் ஏறுங்கள். ஏறியபின் “இதைவிட்டு விடலாமா, அதைச் செய்யலாமா“ என்ற குழப்பங்களுக்கு இடமளிக்காதீர்கள். ஏனெனில் இத்தகைய மன ஓட்டங்களைத் தரும் இயல்புடையதே ஏணியின் 18ஆம் படியாம்.

முள்ளில்லா வில்வம் நகர்

8. வெளியில் அவசரமாகச் செல்கையில் சில சமயங்களில் வல இட செருப்புகளைக் கால்மாற்றி அணிந்து கொள்வதுண்டு. இதனால் செல்லும் கார்யம் தடைப்படும், பல பிரச்னைகள் உருவாகும் என்பதை தீர்க தரிசனமாக அறிந்திடுக! அச்சமயத்தில் பொறுமையுடன் எதையும் செய்திடுக! செல்லும் கார்யத்தை அத்தருணத்தில் தவிர்த்தல் உத்தமம்.
9. திருச்சி அருகே லால்குடி செல்லும் பாதைப் பிரிவில் நகர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழைய சிவாலயம் உள்ளது. பலகோடி யுகங்களுக்கு முந்தைய இச்சிவாலயத்திற்குச் செல்லும் வழியெங்கும் தர்பைப் புதர்கள் நிறைந்துள்ளமையைக் கொண்டே இன்றைக்கும் சித்தர்களும் மஹரிஷிகளும் நிதமும் வருகின்ற சிவாலயம் என்பதை அறிந்திடலாம். இங்கு பல நூறாண்டுகள் வயதான வில்வமரம் ஒன்றுள்ளது. முள்ளில்லாத அபூர்வமான அற்புத சக்திகள் நிறைந்த தலவிருட்சமே இவ்வில்வ மரமாகும். பெற்றோர்களை உதாசீனம் செய்தவர்கள், அவர்களுக்குக் கடமையாற்றத் தவறியவர்கள், வெளிநாடுகளில் தங்கி இங்கு பெற்றோர்களை தவிக்க விடுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து வில்வத்திற்கு மஞ்சள் குங்குமத்துடன் அபிஷேக ஆராதனைகள் செய்து பெற்றோர்களையோ அல்லது அவர்கள் இல்லாவிடில் பெரியவர்களையோ இங்கு அழைத்து வந்து பாத பூஜை செய்து முதியோர்க்கு தான தர்மங்களுடன்  பிராயச்சித்தம் பெறவேண்டும்.
10. கடன் தொல்லைகள் தீர : தீராத கடன்களால் துன்பப்படுபவர்கள், ‘ஹர்ஷணம்’ என்னும் யோக நேரத்தில் (பஞ்சாங்கத்தைப் பார்த்து அறிந்து கொள்ளவும்) ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் சன்னதிக்குச் சென்று ஆஞ்சநேய மூர்த்திக்கு உரிய காயத்ரீ மந்திரத்தைக் குறைந்தது 108 முறையாவது ஜெபித்து நைவேத்யம் செய்த வடையை தானமாக அளித்துவர வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் விடாது செய்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கி நல்வாழ்வு பெறுவர் : ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரித்தான காயத்ரீ மந்திரம் :
“ஓம் தத்புருஷாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி
 தந்நோ மாருதி ப்ரசோதயாத்”
11. ஒற்றைக் காதில் கடுக்கன் அணியக் கூடாது :- எக்காரணம் கொண்டும் ஒற்றைக் காதுக் கடுக்கன் கூடாது. காரணமென்ன? ஒவ்வொரு காதிலும் சதுர் மண்டல நரம்பு ; விகிர்ப்பத் தரண நரம்பு ; சூர்ய மண்டல நரம்பு சுகபந்து மண்டல நரம்பு – ஆகிய நான்கு நரம்பு மண்டலங்கள் உள்ளன. இவை இருகாதுகளிலும் முறையாக இயங்கினால் தான் உடலின் சரிசம நிலை உண்டாகும்! ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கனை அணிந்திடில் ஒருகாதில் உள்ள நான்கு நரம்பு மண்டலச் சுரப்பிகள் அதிவிரைவாகச் செயல்பட, தேக சரிசமநிலை பாதிக்கப்பட்டு மயக்கம், இரத்த அழுத்த மாறுதல்கள், ஞாபக மறதி, மனோ நிலை பாதிக்கப்படுதல் போன்றவை உண்டாகும். எனவே Fashion என்று நினைத்துக் கொண்டு ஒற்றைக் காதில் கடுக்கனை மாட்டாதீர்கள்!
12. பெண்கள் மூக்குத்தியின் திருகாணியையோ, மேல்பாகத்தையோ தொலைத்து விடுவது உண்டு. நன்கு தேடியும் திருகாணி கிடைத்திராவிடில், எஞ்சி இருக்கும் மூக்குத்திப் பகுதியை அம்பாள் சந்நதி உண்டியலில் அன்றே சேர்த்து விட வேண்டும். இதனால் பெற்றோர்களுக்கு, கணவனுக்கு, பிள்ளைகளுக்கு வரவிருக்கும் இருதயக் கோளாறுகள், சுவாச நோய்கள் தாமாகவே நீங்கும்..
13. பூ விற்போர் வந்தால் “பூ வேண்டாம்“ என்று சொல்லாதீர்கள். “பூ இருக்கிறது“ “வாங்கியாயிற்று“ என்றே சொல்லிடுக! எப்போதும் பூக்களைச் சுற்றிப் பரிஹார தேவதைகளிருக்கும். “பூ வேண்டாம்“ எனில் அவைகளை உதாசீனம் செய்ததாகிவிடும். வெளியில் செல்கையில் “போய் விட்டு வருகிறேன்“ அல்லது “வருகிறேன்” என்று சொல்லியே விடைபெற வேண்டும். “போகிறேன்” என்று எப்போதும் சொல்லலாகாது.
14. காலையிலும் இரவிலும் மட்டுமே பல் துலக்குதல் வேண்டுமென்பதில்லை கார்யங்கள் நன்கு சுபமாக முடிய, வெளிச் செல்லுமுன் வலது மேல் புறம் தொடங்கி பல் துலக்கிச் சென்றால் “வாக் சாதுர்யம்” ஏற்பட்டும் சுபம் ஏற்படும்.. ஆலங்குச்சி ஏற்புடையது. லலாடங்கக் கஷாயம் எனப்படும் (ஆலங்குச்சிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டப்படும்) புனித நீரால் வாய் கொப்புளித்துச் சென்றிடில் வாக் சுத்தி ஏற்படும். குழந்தைகளுக்கு இதனைப் பழக்கி வந்தால் அவர்கள் பொய் பேசமாட்டார்கள், வாக் வன்மையும் ஏற்படும். ஜோதிடர்கள் இதைச் செய்து வந்திடில், குறிப்பாக ஜோதிடம் சொல்லுமுன் செய்திடில், சொற்பலிதம் ஏற்படும். ஆல் சமித்துகளைக் கொண்ட ஹோமம், ஜோதிடர்களுக்கு வாக்பலிதத்தைத் தரும்.
15. பெண்களின் காதில் ஏழுவகையான அணிகலன்களை அணிய வேண்டும்.சப்த மாதர்களின் அனுகரஹத்தைத் தருவதோடு இது இனிய சொல்வன்மையையும் தந்திடும். நகைகளை அணிய இயலாதோர் காதில் ஏழு துவாரங்களைக் கொண்டு தோடுகளைத் தவிர ஏனையவற்றில் குச்சிகளையேனும் அணிதல் வேண்டும்.
16. மனநோய்கள் நீங்க ஓர் மாமருந்து : சூலம் என்று ஒருவகை யோக நேரம் உண்டு. பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அந்த நேரத்தில் ஸ்ரீசுதர்சனர்/ஸ்ரீசக்கரத் தாழ்வார் சன்னதிகளில் ஸ்ரீசுதர்சன காயத்ரீ மந்திரத்தைக் குறைந்தது 108 முறையாவது ஜெபித்து, தேன்குழல் பலகாரத்தினைப் பிரசாதமாகப் படைத்து தானம் செய்து வந்தால் எத்தகைய மன நோய்களால் பாதிக்கப்பட்டோரும் வேதனை நீங்கி விரைவில் குணம் பெறுவர். ஸ்ரீசுதர்சன காயத்ரீ மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே ஜ்வாலாசக்ராய தீமஹி
         தந்நோ சுதர்சன ப்ரசோதயாத்
17. சில குழந்தைகளுக்குப் பேசும்போது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதில் சிரமம் இருக்கும். இக்குறையை நிவர்த்தி செய்ய தாய்மார்கள் ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் அகத்திக்கீரை பிசைந்த உணவினைக் குழ்ந்தைகளுக்குக் கொடுத்துவர வேண்டும். இறை நம்பிக்கையுடன் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், குழந்தைகளின் பேச்சு நாளடைவில் தெளிவாக அமையும்.
18. தற்காலத்தில் பெண்கள் பலவகையான குங்குமத்தை நெற்றியில் இடுவதால் புண், அரிப்பு ஏற்பட்டு அவ்விடம் தழும்பாகி விடுவதுண்டு. இதற்காக Sticker பொட்டு இடாதீர்கள். இதனால் குங்குமத்தின் புனிதத் தன்மை இழக்கப்பட்டு மாங்கல்ய தோஷங்கள் உண்டாகி கணவனின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும். தூய்மையான சந்தனத்தை தம் கைப்பட அரைத்து இறைவனுக்கு சார்த்தி பின் அதனைப் பிரசாதமாக நெற்றியில் அணிந்து அதன் மேல் (பெரிய அளவு) குங்குமப் பொட்டினை இட்டு வந்தால் அரிப்பு ஏற்படாது, தழும்பும் மறைந்து விடும். குங்குமத்தின் புனிதத் தன்மையும் உடலில் சேரும், கணவனின் ஆயுளும் விருத்தியாகும், மாங்கல்ய பாக்யம் ஸ்திரமாகும். Sticker பொட்டு பாவகரமானது. ஒரு போதும் அதனை இடாதீர்கள்.

உடையார்கோவில் தஞ்சை அருகே

19. மேற்படிப்பிற்கு உகந்த நட்சத்திரங்கள் :- தொழில் நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற உயர் கல்வியில் மேன்மைபெற திருவோண நக்ஷத்திரத்தன்று உயர்கல்வியைப் பயிலத் தொடங்க வேண்டுmம். Computer  Science  முன்னேற்றம் பெற விரும்புவோர் ஹஸ்தம், ஸ்வாதி நக்ஷத்திரங்களில் Computer  சம்பந்தமான கல்வியை/பயிற்சியைத் தொடங்க வேண்டும். Computer கல்விக்கு உரித்தான சரஸ்வதிதேவி; ஸ்ரீஅணுராதா க்ரமண சரஸ்வதி தேவியாவாள்.  இத்தேவியின் த்யானம் பல உயர்ந்த முன்னேற்றங்களைத் தரும்.
20. வெள்ளி டம்ளர், மூங்கில் குவளை, சுரக் குடுவையில் நீர் அருந்துவதே சிறப்பானது! எவர்சில்வர் அறவே கூடாது. கொதித்து ஆறிய நீரை தாமிரப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் நீரை அருந்தாமல் மேற்கண்ட முறையில் அருந்துவதே சிறப்பானது.

அக்னி சாவர்ணி மனு

பித்ரு லோகத்திலிருந்து நம்முடைய பித்ருக்கள் பூலோகத்திற்கு ஒரு வருடத்தில் குறைந்தது, முக்கியமாக 1996 நாட்களுக்கு வருகை புரிகின்றனர். இதனையே ஷண்ணவராதி சிராத்த தினங்கள் என நம் பெரியோர்கள் அழைக்கின்றனர். அதாவது ஒரு மனிதன் ஒரு வருடத்தில் தன் மூதாதையர்களுக்காக 1996 நாட்களில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் இடுதல் வேண்டும். ஆனால் கலியுகத்தில் 12 அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது கூட சரிவர நிகழாதபோது 1996 நாட்களில் தர்ப்பணமிடுதல் என்றால் மலைப்பாக அல்லவா இருக்கின்றது! இதனால் தான், இக்கலியுகத்தில் நோய், குடும்பப் பிரச்னைகள், பணக்கஷ்டம், சந்ததியின்மை, அலுவலகத் துன்பங்கள், வியாபார நெருக்கடிகள் போன்றவற்றினூடே மனிதன் உழன்றவாறு இருக்கின்றான். சாவர்ணிகள் எனப்படுவோர் நம் மூதாதையர்களுக்கும், ஆதிமூல பித்ரு மனு தேவராவார். அதாவது ஸ்ரீபிரும்மாவிடம் தோன்றிய மூலப் பிரஜாபதிகளின் தலைமைப் பிரதிநிதிகளான உத்தம மகரிஷிகளாவார்கள். பொதுவாக அக்னியில் நாம் செய்கின்ற பூஜைகள் பலப்பல- எண்ணற்ற நம் கர்ம வினைகளைக் கழிப்பதற்காக ப்ருத்வி (நிலம்) அப்பு (நீர்) வாயு (காற்று) அக்னி (தீ) ஆகாசம் (பரவெளி) ஆகிய ஐந்து பஞ்சபூதங்களுக்குரித்தான பல்வேறு வகை பூஜைகளை மேற்கொண்டாக வேண்டும்.

திருக்காட்டுப்பள்ளி

இவை பரிபூர்ணமடைந்தால் தான் பஞ்ச பூதங்களிலிருந்து பிறந்த நம் தேகத்திற்கும் விமோசனம் கிட்டும். ஆனால் அக்னியில் செய்கின்ற ஹோமம், அன்னதானம், தீ பூஜை போன்றவற்றின் புண்ணிய சக்தியின் ஒரு பங்கு அக்னி லோகத்திற்குச் சென்று விடுகின்றது. ஆனால் அக்னி சாவர்ணி தோன்றிய புண்ணிய தினத்தில் அக்னி மூலமாகச் செய்யப்படுகின்ற ஹோமம், அன்னதானம், தீ பூஜை, வேள்வி, சூரிய பூஜை, ஸ்ரீஅக்னீசுவரர் போன்ற ஸ்ரீஅக்னி நாமம் தாங்கிய ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் . (ஸ்ரீஅக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ள தஞ்சை – திருக்காட்டுப் பள்ளி, கஞ்சனூர் etc., திருக்கழுக்குன்றம் முன் மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅக்னி பகவானின் அபூர்வ சிலை) போன்றவற்றை  நிகழ்த்திட இவ்வக்னி பூஜைகளின் பரிபூர்ண பலன்களைப் பெறலாம். இந்நாளில் (30.7.1996) நான்கு திக்குகளிலும் அக்னி குண்டத்தையெழுப்பி நடுவில் அமர்ந்து, தங்கம்/வெள்ளித் தட்டில் நான்கு அகல் விளக்குகளை ஏற்றிட வேண்டும். இந்நான்கு அகல் விளக்குகளின் அடியில் தர்ப்பையை சதுரமாக வைத்து இணைத்திட வேண்டும். இதன் மத்தியில் தர்ப்பைச் சட்டத்தை வைத்து நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணமிட வேண்டும். குறிப்பாக ஆதரவில்லாத அநாதையாக இறந்த ஏழைகளுக்கு அவர்கள் பெயரைச் சொல்லி தர்ப்பணமிட்டு எள் அன்னத்தைத் தானமாக அளித்திட அக்னி லோகத்தின் பித்ருக்களின் பேரருளைப் பெற்றிடலாம். பெறற்கரிய பாக்கியமிது! இந்நாளில் 12 அல்லது 24 சாத உருண்டைகளைப் பிண்டமாக அமைத்து இவற்றின் மேல் தர்ப்பைகளைப் பரப்பிப் பிண்டத் தர்ப்பணமிடுவது மிகவும் விசேஷமானதாகும். இவ்வரிய தர்ப்பண முறையை நமக்குப் பெற்றுத் தந்தவர் பலோதய பாத மகரிஷியாவார். அக்னி பூஜைகளின் பரிபூர்ண பலனைப் பெறுவதென்பது எளிதல்லவே!
அதிஅற்புதப் பலன்களைத் தரவல்ல இப்பலோதய அக்னி தர்ப்பண முறையை நமக்களித்த பலோதய மகரிஷிக்கு கங்கை/காவேரி போன்ற புண்ணிய தீர்த்தங்களினால் (சூரியனை நோக்கி அமர்ந்து மேற்கண்ட தர்ப்பணத்திற்குப் பின்) சுண்டு விரல்வழியே புனித நீரை வார்த்து அர்க்கியம் அளிப்பது தர்ப்பணங்களின் முழுப்பலன்களையும் அளிக்கும்.
இத்தர்ப்பண முறையில் வெள்ளித் தட்டை வைத்துச் செய்ய இயலாதோர், சந்தனக் கல்லில் தர்ப்பைச் சட்டத்தைப் பரப்பித் தர்ப்பணமளிக்க வேண்டும்.

குமார சஷ்டி

முருகனை, பாலசுப்பிரமணியனாக, பாலமுருகனாக வழிபட்டு, செவ்வாழை, பன்னீர் திராட்சை, பலாச்சுளை, பாதாம்பருப்பு, பசும்பால் (குறிப்பாகக் காராம்பசு பால்) ஆகியவற்றாலான பஞ்சாமிர்தம் செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திட குளி தோஷம், கண்ட வாதங்கள், கக்குவான் இருமல், போலியோ நோய்கள் போன்றவற்றிற்கு நிவாரணம் பெற்றிடலாம். பாலசுப்பிரமணியன், பாலமுருகன், பாலகுமரன் போன்ற பாலரூப முருக தெய்வத்திற்கு மேற்கண்ட பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து குழந்தைகளுக்குத் தானமாக அளிப்பது விசேஷமானதாகும்.
திரிஸ்பர்ஸ மகா துவாதசி
சிருஷ்டிக்கு வித்தாக ஆதிசிவன் பலவித வர்ணங்களையும் குணங்களையும், விருட்சங்களையும் இன்னும் பலவற்றையும் படைத்தார். இவற்றில் தமோகுணம், ரஜோகுணம், சாத்வீக குணம் ஆகிய மூன்றும் ஜீவசிருஷ்டியில் பெரும்பங்கு ஏற்றமையால் ஆதி சிவனுடைய பிரளயத்திற்குப் பின்னான விசுவரூபத்தை அவர்களால் தரிசிக்க இயலாமல் போய்விட்டது. ஸ்ரீகிராத மூர்த்தியாகவும், ஸ்ரீபிரளய காலேஸ்வரராகவும் சிவபெருமான் காட்சி தந்தும் அதனால் திருப்தியுறாத தமோ, ரஜோ, சாத்விக தேவ தேவர்கள் பரமேசுவரனுடைய பிரளயத்திற்குப் பின்னான ஸ்ரீத்ரயம்பகேசுவரரை தரிசிக்க விரும்பினார்கள். ஸ்ரீத்ரிகுணேஸ்வரராகிய திரியம்பகேஸ்வரரைத் தொட்டு ஸ்பர்சிக்க வேண்டிய முறையாக முதலில் ஸ்ரீபிரும்மாவை நாடினர். சிருஷ்டியின் பரிபூர்ணத்தால் இறுமாந்திருந்த பிரும்மா பகுட குண்டம் என்னும் அற்புத யாகத்தில் ஆழ்ந்திருந்தமையால் அவர்களை உதாசீனம் செய்தார். இதனால் பிரும்மா பூமியில் மனிதனாகப் பிறந்து தம்முடைய தேவ, தெய்வீக குணங்களை இழந்தார். பிறகு மூவரும் ஸ்ரீமகா விஷ்ணுவை நாடிட, அவர் தம்முடைய சிரசையும், கைகளையும் மட்டுமே தொட்டு ஸ்பர்ஸிக்க அனுமதித்தார். மும் மூர்த்திகளையும் ஸ்பரிஸித்தவர்களே ஸ்ரீத்ரயம்பகேஸ்வரரைப் தரிசிக்க முடியும் என்பது நியதி. ரஜோ குணம் ஸ்ரீமகா விஷ்ணுவின் கரங்களையும் தாமஸ குணம் அவரது சிரசையும் தொட்டு ஸ்பரிசித்தனர். சாத்வீகமோ அவரது பாத ஸ்பரிசத்தை வேண்டிட இறைத் திருவிளையாடலால் ஸ்ரீமகா விஷ்ணு அதற்கு இணங்கவில்லை. இதனால் சாத்வீக குணமானது வைகுண்டத்திலிருந்து தன்னுடைய சாத்வீக குணங்களையெல்லாம் உறிஞ்சியது. இதனால் ரஜோகுணமும், தமோகுணமும் நிரம்பப் பெற்றவர்களாய் வைகுண்ட வாசிகள் பூலோகத்திற்கு வந்திட விரும்பிடவே.
ஸ்ரீமகாவிஷ்ணுவும் தம் அடியார்களுடன் பூலோகத்திற்கு ஏகினார். ஸ்ரீரெங்கநாத அவதார வைபவத்திற்கான தருணம் வந்து விட்டதையே இதன் மூலம் ஸ்ரீவிஷ்ணு பிரபஞ்சத்திற்கு உணர்த்தினார். முக்குண தேவ மூலவர்கள் அடுத்து திருக்கயிலாயத்திற்குச் சென்றனர். அங்கு ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர் “கடுபிறப்பன்பாலை” என்ற அற்புத சக்தி வாய்ந்த கோலைத் தாங்கிக் காவல் காத்து நின்றார். எவருக்கும் அடிபணிந்திடா கடுபிறப்பன்பாலைக் கோல் அன்று நந்தீஸ்வரருடைய உறைக்குள் சென்று மறைந்தது.
காரணமென்ன?
முக்குணங்கள் சேர்ந்து வந்தால் அதன் பொருள் என்ன? முக்குணங்களின் முதலும் முடிவும் சர்வேஸ்வரன் தானே! எனவே முக்குணங்கள் சேர்ந்து வந்ததில் ஸர்வேஸ்வர ஐக்கியத்தின் பிரதிபலிப்பை அவர் உணர்ந்தமையால் பணிவு, பக்தியின் இருப்பிடமாய் ஸ்ரீஅதிகார நந்தீசுவரர் தமது திருக்கோலை உறைக்குள் இருத்தினார். இதனை இறைவனின் நல் ஆணையாக ஏற்று மூவரும் ஸ்ரீநந்தீஸ்வரரை வணங்கி உட்சென்றனர். ஆங்கே.... சிவபெருமான் திருநேத்ரதாரியாக, முக்கண்ணனாக, த்ரிகுணேஸ்வரனாக, திரிபுராந்த ஸம்ஹாரகனாக, த்ரியம்பகேஸ்வரராக  விதவிதமான நடனங்களை ஆடிக் காட்டினார். ரஜோகுணத்தை தம் திருக்கழுத்தைத் தழுவும் பாம்பில் கூட்டினார். தம் வலது மணிக்கழலில் சாத்வீகத்தை ஏற்றார். தம் நாசியில் சாத்வீகத்தையும் ஏற்றிட மூன்று குண தேவதைகளும் தாம் விரும்பியவாறே இறைவனை ஸ்பர்சித்தனர். இத்திருநாளே திரிஸ்பர்ஸ மஹா துவாதசி. இறைவனை தரிசனம் பெற விரும்புவோர் இந்நாளில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் சர்க்கரை பொங்கல் அன்னதானம் செய்த பின்னரே உணவேற்க வேண்டும்.

திருச்சி மலைக்கோட்டை மகிமை

தொடர் கட்டுரை (நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடரம ஸ்வாமிகள் அருள்வது)
மலைக்கோட்டை கிரிவலத்தில் அடுத்து வருகின்ற செல்வ விநாயகரை தரிசனம் செய்து கிரிவலத்தைத் தொடர அடுத்து வருவது ஏழைபிள்ளையார் கோயில். ஏழைபிள்ளையார் என்று தற்போது அழைக்கப்படும் பிள்ளையாரின் ஆதிபெயர் சப்தபுரீஸ்வரர். சப்தபுரீஸ்வரர் என்ற பெயர் மறைந்து ஏழு பிள்ளையாரானார். ஏழுபிள்ளையார் சிறிது காலத்திற்குப் பின் எழுபிள்ளையாராகி தற்போது ஏழைப்பிள்ளையார் ஆகி விட்டார். அவருடைய ஒவ்வொரு திருநாமத்திற்கு பலவிதமான அனுக்கிரக சக்திகள் உண்டு. சப்தபுரீஸ்வரர் திருக்கோயிலிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய அது ஒலி விடங்க தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

ஸ்ரீசப்தபுரீஸ்வரர் ஆலயம்
திருச்சி மலைக்கோட்டை

சப்தபுரீஸ்வரர் :  பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஒலிகளும், சொற்களும், அனைத்து ஸ்வரங்களும் எம்பெருமான் சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியவையே. பூலோக மக்கள் அறிந்ததெல்லாம் ஏழு ஸ்வரங்கள் மட்டுமே! இந்த சப்த ஸ்வரங்கள் அல்லாது கோடிக்கணக்கான ஸ்வரங்கள் உண்டு. ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு தேவதையும் உண்டு. ஒரு முறை சப்தஸ்வர தேவதைகளுக்கு “தங்களால் தான் இனிமையான ஒலியை எழுப்ப முடியும் தங்கள் இனிமையான ஸ்வரங்களினால் தான் வானுலகமே அற்புத இசையால் விரவியிருக்கிறது” என்று கர்வம் கொண்டன. ஆணவத்தால் இறைவனைத் துதிப்பதையும் மறந்தன. அதனால் கலைவாணி சப்த ஸ்வர தேவதைகளை சபித்துவிட, அவை தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் பிராயச்சித்தம் பெற மன்றாடின. இறைவன் அவர்களை பூலோகம் சென்று உச்சிப்பிள்ளையாரை வலம் வந்து சப்தபுரீஸ்வரரிடத்தில் பாடல்கள் பாடுமாறு பணித்தான். இறை ஆணையை ஏற்று சப்த ஸ்வர தேவதைகள் பூலோகமடைந்து உச்சிப்பிள்ளையாரை வலம் வந்து சப்தபுரீஸ்வரரை வணங்கி அற்புதமான கானத்தால் இறைவனைப் புகழ்ந்து பாடின. அவர்களுடைய அற்புதமான இசையில் மகிழ்ந்த சப்தபுரீஸ்வர விநாயகர் சாப விமோசனம் அளித்து அந்த தேவதைகளுக்கு நற்கதி அளித்தார். அன்று முதல் இன்றும் கூட சப்தஸ்வர தேவதைகள் தாயுமானவரை நிதமும் வலம் வந்து இவ்விடத்தில் அமர்ந்து சப்த ஸ்வரங்களால் இறைவனைத் துதிக்கின்றன, சந்தி நேரங்களில்!
ஒலி விடங்க தாயுமான லிங்க தரிசன மஹிமை!

ஒலிவிடங்க தாயுமானலிங்க தரிசனம்

1. வித்வான்கள், இசைக் கலைஞர்கள், இசைமாணாக்கர்கள், நாமகீர்த்தனம் பாடுவோர்கள், ஓதுவார் மூர்த்திகள் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து இறைதுதிகளையும் வடமொழி வேதங்களையும் தமிழ்மறைகளையும் ஓதினால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
2. புத்தி மந்தமான குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லா குழந்தைகளும் இந்த தரிசனத்தைக் கண்டு சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து இறைநாமங்களைப் பாடித் துதித்தால் சீரான மூளை வளர்ச்சியும் அறிவு விருத்தியும் ஏற்படும்.
3. நன்றாக படிக்கும் குழந்தைகளும் தேர்வு சமயத்தில் கவனக் குறைவாலும், படித்ததை நினைவு கூர முடியாமலும் போவதால் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து போய்விடுகிறது. அத்தகைய மாணவ மாணவிகளும் இங்கு அமர்ந்து இறைத் துதிகளைப் பாடினால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி பெற சப்தபுரீஸ்வரர் அருள் செய்கிறார்.
4. கல்வியில், உத்தியோகத்தில், அறிவில், பொருளில் ஏழ்மையாக இருப்பவர்கள் (தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்) சப்தபுரீஸ்வரரைத் துதித்து இங்கு இறைவனை வணங்கிட கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் உயர்நிலையை அடைவார்கள். எனவேதான் சப்தபுரீஸ்வரர் ‘ஏழை பிள்ளையார்‘ என்ற பெயரைப் பெற்றார்.
5. தனி நபராக இவரை வழிபடுவதை விட பலர் ஒன்றாக சேர்ந்து இறை கீர்த்தனைகளையும், நாமாவளிகளையும் பாடித் துதிப்பதால் அளவிறந்த பயன்களைப் பெறலாம். கூட்டு வழிபாட்டில் இறையருள் பல்கிப் பெருகிறது. கிரிவலத்தில் அடுத்து வருவது மன்மத சுவாமி கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது பிராணநாதேஸ்வர தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.
மன்மத சுவாமியின் தியாகம் :  அம்பிகையின் திருஅவதாரங்களில் ஒன்றில் தட்சனுக்கு மகளாகப் பிறந்திருந்தாள் பார்வதி. தாட்சாயணியை மனைவியாக ஏற்றுக் கொண்ட சிவபெருமானை தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு அழைக்கவில்லை. மாப்பிள்ளையாகவும் அகிலாண்ட ஈசனாகவும் இருக்கும் சிவபெருமானை அழைக்காமல் யாகத்தை நடத்திய தட்சனுக்கு புத்தி புகட்டுவதற்காக, ஈசுவரனின் சொல்லை மீறி தாட்சாயணி தட்சனின் யாகசாலைக்கு சென்று யாகத்தை நிறுத்தும்படி கூறினாள். தச்சன் மறுத்து பார்வதியையும் சிவபெருமானையும் இழிவாகப் பேசினான். தாட்சாயணி பெருங்கோபமடைந்து தட்சனை சபித்து யாகத்தீயில் வீழ்ந்தனள். ஈசன் வீரபத்திரரை அனுப்பிட அவர் யாகத்தை அழித்து தட்சன் தலையை வீழ்த்தி யாகத்தில் கலந்து கொள்ள வந்து தன்னை எதிர்த்த தேவர்களையெல்லாம் அடித்து விரட்டினார். பின்னர் இறைவன் தாட்சாயணியின் உடலைத் தன் தோளில் சுமந்து கொண்டு பாரதமெங்கும் பவனி வந்தார். தாட்சாயணியின் உடல் அங்கங்கள் ஒவ்வொரு இடத்திலும் வீழ்ந்தன. அவையே சக்தி பீடங்களாகும்!
சிவபெருமான் கோபக்கனல் குளிர்ந்து யோகநிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் யோகத்தில் அமர்ந்துவிட்டால் உலகம் என்ன ஆகும்? அனைத்தும் ஸ்தம்பித்து விட்டன. படைப்பே நின்று போய்விட்டது. இயக்கமே இல்லை தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சிவபெருமான் கண் திறந்தால் தான் காரியங்கள் நடக்கும். அளவில்லாத யோகத்துடன் யோகத்தில் அமர்ந்திருக்கும் எம்பெருமானை யோக நிலையிலிருந்து எழுப்புபவர் யார்? யாருக்கும் அதற்குத் துணிவில்லை.

ஸ்ரீமன்மத சுவாமி திருச்சி மலைக்கோட்டை

அனைவரும் கலந்து ஆலோசித்து மன்மதனை அணுகினார்கள். அவர்களின் நிலையறிந்த மன்மத சுவாமியும் தான் சிவபெருமானை யோகத்திலிருந்து எழுப்பினால் தம்முடல் அழிவது உறுதி என்று உணர்ந்தார். அதே சமயம் படைப்பைத் தொடர, சிருஷ்டிகள் உதயமாக வேறு வழியில்லை. தன் இன்னுயிரை கொடுக்கத் தயாரானார் மன்மதன். மன்மதனின் தியாக உணர்வைப் பாராட்டிய தேவர்கள் அவர் மீண்டும் உயிர் பெறும் உபாயத்தையும் கூறினார்கள். தாயினும் சாலப்பரிந்து உயிர்களைக் காக்கும் தாயுமான ஈசனைச் சரணடைந்து நல்வழிகாட்ட வேண்டுமாறு மன்மதனுக்கு அறிவுரை தந்தனர். தேவர்களின் ஆலோசனையை ஏற்று மன்மதன் தாயுமான சுவாமியை துதித்தவாறே திருச்சிமலையைக் கிரிவலம் வந்தான்.பல ஆண்டுகள் கிரிவலம் வந்து தாயுமானவரை வேண்டினான். ஈசன் மனமிரங்கி ப்ராணநாதேஸ்வர தாயுமான லிங்க தரிசன இடத்தில் மன்மதனுக்கு காட்சி கொடுத்து. “எம்முடைய நெற்றிக்கண் தீப்பொறிகளால் நீ மறைந்தாலும், மீண்டும் உயிர் பெற்றெழுவாய்!“ என்ற வரத்தை அருளி மறைந்தான்.
பிராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசன மகிமை!
உச்சிப் பிள்ளையாரை காலை, மதியம், மாலை மூன்று வேளையும் கிரிவலம் வந்து பிராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசனம் செய்து மன்மத சுவாமியை வணங்கி வழிபட்டால்,
1. அந்திம காலத்தில் இயற்கையான அமைதியான மரணம் ஏற்படும்.
2. வியாதிகளாலோ, விபத்துக்களாலோ உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் நோயிலிருந்து விடுபட்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை அடைவர்.
3. வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்படும் மரணபயத்தால் துன்பம் அடையமாட்டார்கள்.
4. வாகன விபத்துகளால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
5. வாகன ஓட்டிகள், Travel Agents, வாகன உரிமையாளர்கள் (Auto, Taxi, Bus, Tourist Cabs and Lorry owners) தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். தற்போது கட்டிடங்கள் மறைத்திருப்பதால் உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசனையும் மன்மதசுவாமி கோயிலிருந்து தரிசனம் செய்ய இயலாது. இருப்பினும் தொடர்ந்து பல முறை கிரிவலம் வந்து, உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசனையும் மானசீகமாக வணங்கி, மன்மத சுவாமியை தரிசனம் செய்து தீபமேற்றி வணங்கினால் அனைத்து நலன்களையும் ஈசனருளால் பெறலாம்.

வியாகரண லிங்கமுக தரிசனம்
திருச்சி மலைக்கோட்டை

 வியாகரண தாயுமான லிங்க முக தரிசனம்
கிரிவலத்தில் அடுத்து வருவது நிர்தானந்த விநாயகர் கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது வியாகரண தாயுமான லிங்கமுக தரிசனம். இத்தரிசனம் வாக்வன்மையை அளிக்கிறது.
1. வக்கீல்கள்
2. மொழிபெயர்ப்பாளர்கள் ( Translators)
3. தரகர்கள் (Brokers)
4. Real Estate Dealers
5. நீதிபதிகள்
6. முகவர்கள் (LIC Agents etc…)
7. Development Officers (LIC, etc…)
8. Medical/Sales Representatives
போன்ற பேச்சுத்திறமையை அடிப்படைத் தேவையாக உள்ளவர்களும் உயர் அதிகாரிகளும் உச்சிப்பிள்ளையாரைத் தினமும் காலை, மதியம், மாலை, கிரிவலம் வந்து வியாகரண தாயுமான லிங்க முக தரிசனத்தைப் பெறுவதால் பேச்சுத் திறமை வளர்ந்து தங்கள் தொழிலில் முன்னேற்றத்தையும் பெரும் புகழையும் அடைவார்கள். தற்போது கட்டிடங்கள் மறைத்திருப்பதால் இங்கிருந்தும் உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய இயலாவிடினும், நிர்தானந்த விநாயகரை வணங்கி இங்கு அமர்ந்து உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மானசீகமாகத் தொழுது எல்லா நலன்களையும் இறையருளால் பெறலாம். கிரிவலத்தில் அடுத்து வருவது சித்திவிநாயகர் கோவில்!

மாங்கல்ய அபிஷேகம்

மாங்கல்ய அபிஷேக முறை – சென்ற இதழ் தொடர்ச்சி
மாங்கல்யத்தை எக்காரணம் கொண்டும் கழற்றலாகாது. மாங்கல்ய கயிறு மாற்றிடுகையில் கூட, புதுச்சரடை ஏற்ற பின்னரே (பெருகிய) சரடை எடுத்திட வேண்டும். அறியாத காரணங்களினாலோ, அசந்தர்ப்பங்களினாலோ, பிக்பாக்கெட், திருட்டினாலோ மாங்கல்யச் சரடு பெருகிடில், உடனடியாக புது மாங்கல்யச் சரடு அணிந்து அதற்கு “மாங்கல்ய அபிஷேகம்” செய்து அன்றைய தினமே அம்பிகைக்குக் குங்குமார்ச்சனை செய்து மஞ்சள்நிறப் புஷ்பம், வஸ்திரம், உணவினை தானமாக அளித்திட, மாங்கல்யம் (அசந்தர்ப்பத்தால்) “பெருகுவதால்” வரும் தோஷங்களைத் தவிர்த்திடலாம் மாங்கல்ய அபிஷேக முறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து (மாங்கல்யத்தைத் கழற்றாமல்) மாங்கல்யத்தைச் சற்றுத் தூக்கிப் பிடித்தவாறு ஸ்ரீகாயத்ரீ மந்திரம், அபிராமி அந்தாதி போன்ற இறைத்துதிகளை தியானித்திட வேண்டும். ஒரு கிண்ணத்தில் பசும்பால், மஞ்சள், குங்குமம் கலந்து மாங்கல்யத்தை உயரத் தூக்கிப்பிடித்தவாறு கிண்ணத்தில் உள்ள பாலில் 12 முறை அமிழ்ந்து அபிஷேகித்திட வேண்டும். கறந்த பசும்பாலில், கறந்த ஒரு நாழிகை நேரத்திற்குள் மாங்கல்ய அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். அமிர்த, சித்தயோக நேரத்தில் மாங்கல்ய அபிஷேகம் விசேஷமானதாகும்.

ஸ்ரீரதி மன்மதன் திருலோகி

பசும்பாலே மாங்கல்ய அபிஷேகத்திற்கு ஏற்றதாகும். பசும்பாலைத் தங்க, வெள்ளிக் கிண்ணத்தில் வைத்திருப்பது அதன் தெய்வீக சக்தியைப் பெருக்கும். வசதியற்றோர் வெண்கலக் கிண்ணம் அல்லது மரகுடுவையினைப் பயன்படுத்திடலாம். எவர்சில்வரைத் தவிர்க்கவும். பசும்பாலைத் கிண்ணத்தில் ஊற்றிடுகையில் ஸ்ரீகாமதேனுவை தீர்கமாங்கல்ய சக்தியைத் தருமாறு வேண்டிட வேண்டும். மஞ்சளைச் சேர்த்திடுகையில், ஸ்ரீகாமகலாகாமேஸ்வரியை பிரார்த்திட வேண்டும். குங்குமம் சேர்க்கும் போது ஸ்ரீலலிதா பரமேஸ்வரியைத் துதித்திட வேண்டும். மாங்கல்யத்தைப் பாலில் பண்ணிரெண்டு முறை அமிழ்ந்துப் பூஜித்திடுகையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதுவது சிறப்புடையதாம். ஏனெனில் பெண்களுக்குரிய பூணூல் அம்சம் மாங்கல்யமே! மாங்கல்ய ஸ்பர்சம் பட்ட பசும்பாலிற்கு “அமிர்தக்ஷீரம்” என்று பெயர். இது மிகவும் விசேஷமான பிரசாதமாகும். மாங்கல்யத்தில் பல தேவதைகள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அமிர்த க்ஷீர ஸ்நானம் மிகவும் ப்ரீதிதரக் கூடியதாகும். இதனைக் கணவனும் மனைவியும் குழந்தைகளும் பிரசாதமாக அருந்திடக் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். கணவன், மனைவியரிடையே பரஸ்பர அன்பும் விருத்தியாகும். மாங்கல்ய அபிஷேகம் செய்த அன்று அம்பாள் தாயார் சந்நதியைக் குறைந்தது 12 முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்து ஏழை சுமங்கலிகளுக்கு ஜாதி, மத பேதமின்றி, குங்குமம், மஞ்சள், சந்தனம், தேங்காய், வஸ்திரம், கண்ணாடி, சீப்பு போன்ற மாங்கல்யப் பொருட்களைத் தானமாக அளித்து வர, தீர்க மாங்கல்யத்வம் கிட்டும். மாங்கல்ய அபிஷேக நீரில கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தம், துளஸி, வில்வம், ருத்ராட்சம் போன்றவற்றைச் சேர்த்திட அபிஷேக பூஜா பலன்கள் பன்மடங்காகும்.
ஸ்ரீகட்டு சுமந்தான் சித்தமஹரிஷி
மே 1996 இதழில் ஒன்பதாம் பக்கத்தில் தரிசனம் தருபவரே ஸ்ரீகட்டு சுமந்தான் சித்தர். சென்னை – திருப்போரூரில் ஸ்ரீநடராஜர் சந்நதியில் கதவருகே சுவற்றில் ஜீவசமாதி பூண்டு அருள் புரிந்து வருபவர். ஆத்மவிசாரத்தில் ஞானம் பெற விழைவோர், இத்திருக்கோயிலில் உழவாரப் பணிபுரிந்து தேன் கலந்த உணவினைக் (பஞ்சாமிர்தம், தினைமாவு, பழஜாம் etc… ) குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வர சூட்சும ஞானம் கிட்டும். சற்குரு வாய்ப்பதற்கு அருள்புரியும் அற்புத சித்தபுருஷர். தக்க வழிகாட்டியின்றி ஏதேதோ தியான யோக வழியினை முறைப்படி கடைபிடிக்காமையால் மனம் கலங்கி நிற்போர்க்கு இவருடைய தரிசனமும், மேற்கண்ட இறைப்பணி, தான தர்மங்களும் நல்வழிகாட்டும்.

திருஅண்ணாமலை மகிமை

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், இத்தொடரில் ஸ்ரீஅருணாசல சிவமாகிய திருஅண்ணாமலையின் மஹிமையை சித்தர்களின் அருள்மொழிகளாக அளித்து வருகின்றார்கள்.)
திருஅண்ணாமலை பற்றிய அரிய ஆன்மீக இரகசியங்களை, தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடமிருந்து பெற்ற குருகுலவாச அனுபூதிகளை, கலியுக மக்களின் ஆன்மீகப் பெருவாழ்விற்காக, குருவாணையாக, இவ்வருட் செல்வத்தை ஈந்து வந்து அளிக்கின்றார்கள். திங்கட்கிழமை கிரிவல மஹிமையைக் கடந்த இதழ்களில் கண்டோம். செவ்வாய்க் கிழமையன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதின் பெருமஹிமையினை குருவருளால் ஈண்டு காண்போமாக! குருவருளின்றித் திருவருளில்லையன்றோ!
முருகப் பெருமானுக்கு உகந்த நாளன்றோ செவ்வாய்க் கிழமை! ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிப் பிழம்புகளாய் வெளிப் போந்து சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களாய் அவதரித்த நாளே செவ்வாய்க் கிழமை! செவ்வாய் பகவான் போற்றித் துதிக்கும் திருமூர்த்தி! ஸ்ரீதுர்கா தேவி தன் பரிபூரண அம்சங்களுடன் அனுக்ரஹிக்கின்ற திருநாளே செவ்வாய் தினமாகும்! செவ்வாய் தோஷமுள்ளோர்க்கு அருள்புரிய, இன்றும் என்றும் செவ்வாய் பகவானே திருஅருணாசல மலையை கிரிவலம் வருகின்றார். செவ்வாய்க் கிழமையன்று முறையாகச் செய்கின்ற கிரிவலம் மிகச் சிறந்த தோஷப் பரிஹாரமாக அமைகின்றது. செவ்வாய்க் கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் கிரிவலத்தை மேற்கொண்டிடில் செவ்வாய் பகவானே மனமுவந்து தம் தோஷ கிரண வீச்சுக்களை மட்டுப்படுத்தித் தெய்வீக நிவாரணமளித்து திருமண தோஷம், நிலபுல விவகாரங்களுக்குத் தீர்வு, ஆழமான தீப்புண்களுக்கு ரண, ரோக நிவர்த்தி போன்றவற்றைத் தந்து அருள்பாலிக்கின்றார். செவ்வாய் பகவானே மனமுவந்து நேரடியாகத் தீர்வளிக்கின்ற திருத்தலம் திருஅண்ணாமலையாகும். காரணம் அக்னிக் கோளமான செவ்வாய் கிரஹம், பஞ்சபூதலிங்கங்களில் அக்னி ஸ்தலமான திருஅண்ணாமலையிலிருந்துதான் தன் அக்னி குணங்களைப் பெறுகின்றார்! முருகப் பெருமான், கம்பத்திளையனாராக அருணகிரிச் சித்த புருஷரை தடுத்தாட்கொண்ட திருநாளும் செவ்வாய் தினமேயாம்!
ஸ்ரீசண்முக கணபதியாக, பெறற்கரிய திவ்ய தரிசனமாக, சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்கும் ஸ்ரீவிநாயகர் தம் மடியில் சண்முகனை அமர வைத்து இங்கு காட்சி தந்த தினமும் செவ்வாய் ஆகும். இன்றைக்கும் திருஅருணாசலத் திருக்கோயிலில் வன்னிமர கணபதிக்கு அருகில் சந்நதி கொண்டுள்ள  ஸ்ரீசண்முக கணபதியைச் செவ்வாய் தோறும் தரிசித்து கிரிவலம் செய்துவர நிலபுலன்கள், வியாபாரங்களில் இருந்து வரும் நீண்டகாலத் தடங்கல்கள் மறையும். சண்முக கணபதியின் திரண்ட அருள் கூடும் இடமன்றோ! செவ்வாய்க் கிழமைக்கான திருஅண்ணாமலை கிரிவலத்தை ஆநிரை கொண்ட கணபதியைத் துதித்தே தொடங்குதல் வேண்டும். பிரம்ம தீர்த்தமருகே அருள் பாலிக்கும் ஆநிரை கொண்ட கணபதியின் மஹிமை யாதோ!
கஜபூஜை
சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் வலுப்பெற்று ஒற்றுமையுடன் ஆட்சிபுரிந்த காலமது! யானைப் படைகள் பெருத்திருந்தமையால் மூவருமே படைபலச் செருக்கில் மிதந்து முறையான கஜபூஜையைச் செய்ய மறந்தனர்! செருக்கில் சி(பி)றப்பது மமதைதானே! அக்காலத்தில் யானைப் படை பலத்தை வைத்தே ஆட்சியின் ஆயுள்மயம் நிர்ணயிக்கப்பட்டது! சதுர்த்தி திதியன்று யானைப் படைகளை அணிவகுத்துச் சென்று ஸ்ரீகணபதிக்குப் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் யானைகள் மூலமாகவே நடைபெறும். பிறகு 108 யானைகளைக் கொண்ட தொகுதியில், சைவ, வைணவ முறைகளில் கஜபூஜை நடைபெறும்.

திருஅண்ணாமலையார் ஆலயம்

எங்கெல்லாம் 108 யானைகளைக் கொண்டு கஜபூஜை நடைபெறுகிறதோ அங்கு 108 யானைகளில் ஏதேனும் ஒன்றில், ஸ்ரீகணபதியே  நேரில் ஆவாஹனமாகி அருள்பாலிக்கின்றார். அன்று அங்கு அந்த யானை பலவித தெய்வாம்சங்களை வெளிக்காட்டி நிற்பதிலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாம்.
ஒரு வேண்டுகோள்
இன்றைக்கும் பல சத்சங்கங்கள் ஒன்று கூடி “108 யானைகள் கூடும்” கஜபூஜையைக் கூட்டாக நிகழ்ந்திடில் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமுதாயத் தீங்குகளுக்கு எளிதில் ஆன்மீக நிவாரணம் காணலாம்! காரணம், வெறும் இலை, தழைகளைத் தின்று அசாதரணமான பலத்தை யானை பெறுதல் போல் பொறுமை, பணிவு, அன்பு, பரிவு, காருண்யத்திற்கு இலக்கணமாகத் திகழும் யானையைப் போல், இக்குணங்களைக் கொண்டு எத்தகைய தீய சக்திகளையும் வென்று, தீயோரையும் திருத்தி நல்வழிப்படுத்திச் சமுதாயத்திற்கே நல்வழி காட்டிடலாம். எனவே ஆன்மீகச் செல்வர்கள் இத்தகைய கஜபூஜைக்குப் பேராதரவு தந்து அரிய, அறச் செயலை ஆற்றிட உளமார வேண்டுகிறோம். கஜபூஜை பற்றிய அரிய பல விளக்கங்களைக் கடந்த ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் காணலாம்.
மூவேந்தர்கள், படைபலச் செருக்கில், சதுர்த்தியில் செய்ய வேண்டிய கஜபூஜையை மறந்தமையால் இறையாணையாகப் பல யானைகள் காடுகளுக்குள் சென்று மறைந்தன! மூவேந்தர்கள் திகைத்தனர்! தக்க பெரியோர்களை நாடி விளக்கங்களை பெற்று மூவேந்தர்களும் ஒன்று கூடி திருஅண்ணாமலை அருகே “யானைப் பள்ளம்” என்னுமிடத்தில் 1008 யானைகளைக் கொண்ட கஜபூஜையை நிகழ்த்தினர். சதுர்த்தியும் செவ்வாயும் கூடிய அரிய தினத்தில் அவ்வருட விநாயகச் சதுர்த்தி செவ்வாயன்று அமைந்தது! பூலோகத்தார் மட்டுமன்றி ஏனைய லோக வாசிகளும் இவ்வரிய கஜபூஜைகளைக் கண்டு ஆனந்தித்தனர். குறிப்பாக கணபதி உபாஸகர்களுக்கு இது தெய்வீக விருந்தாய் அமைந்தது! கணபதி உபாஸகர்களுக்குத் தலைமை பீடாதிபதிகளாய் விளங்கும் ஸ்ரீஅகஸ்தியரும்  ஔவையாரும் நேரில் வருகை தந்து கஜபூஜையைச் சிறப்பித்தனர். இன்றைக்கும் இந்த யானைப் பள்ளப் பகுதியில் கஜபூஜையின் சக்தி பரிணமிக்கின்றது என்றால் என்னே கஜபூஜையின் மஹிமையும் மகத்துவமும்!
“திருஅண்ணாமலைச் சிவாலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் யாம் குடிகொண்டுள்ளோம்! நீங்கள் மூவரும் உங்களிடமுள்ள அனைத்து கஜங்களையும், எம் சந்நதியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்குத் திறையாக, வரியாகச் செலுத்துவீர்களாக!”  ஸ்ரீகணபதி அருளாணையிடவே, மூவேந்தர்களும் தம் படையானைகளைத் திரட்டிச் சென்று திருஅண்ணாமலைத் திருக்கோயிலில் பிரம்ம தீர்த்தக் கரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆநிரை கொண்ட கணபதியிடம் சமர்பித்தனர்! பழங்கால, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! எத்தனையோ கோடி யுகங்களாக இங்கு அமர்ந்து அருள்பாலிக்கும் மூர்த்தி! ஸ்ரீகணபதி உபாஸகர்கள் தாங்கள் பெறுகின்ற திரவியத்தை, செல்வத்தை இவரிடம் அர்ப்பணித்திட வேண்டும்! துவாபரயுகத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக, உலாவந்தபோது கோகுலத்திலேயே ஆநிரைகளான பசுக்கள், கன்றுகளின் கூட்டம் குறைந்திடவே, அனைத்து கோகுல வாசிகளும் ஸ்ரீகிருஷ்ணனுடன் அருணாசலம் வந்து இங்கு தங்கள் ஆநிரைகளை ஸ்ரீகணபதியிடம் அர்ப்பணித்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே ஸ்ரீஆநிரை கொண்ட கணபதி எனப் பெயர் சூட்டி வணங்கித் துதித்துத் தாமே ஸ்ரீவேணுகோபாலனாக அருட்காட்சி தந்தார். அவரே இன்றைக்கு மூலவருக்குப் பின்னால், முதல் பிரஹாரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் “குழலூதி நின்ற கோலத்தில்” காட்சி தரும் ஸ்ரீவேணு கோபாலன்!  திருச்செவ்வாய்க் கிழமையன்று அருட்காட்சி தந்த அற்புத மூர்த்தி!

நித்ய கர்ம நிவாணம்

(நித்ய கர்ம-வினை வேரறுக்கும் வழி)
கடந்த பல இதழ்களில் தொடர்ந்து “நித்யகர்ம நிவாரண சாந்தி” என்னும் தலைப்பில் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய தான, தர்ம பூஜா விளக்கங்களை அளித்து வருகின்றார்கள். இப்பகுதியானது ஒவ்வொரு பக்கத்தின் கீழ் அடிப் பகுதியில் வெளியிடப்பட்டு வருகின்றது. தினமும் தான தர்மமா? இது கலியுகத்தில் சாத்யம் தானா? – என்ற வினாக்கள் எழும். முறையற்ற காமம், பிறன்மனை நோக்குதல், பொய் கூறல், அலுவலப் பொருட்களை அபகரித்தல் (சிறிய குண்டூசி உட்பட), பிறரை கேலி செய்தல், மனைவியை/குழந்தைகளை வைதல்/அடித்தல், பொடி, சிகரெட் – போன்ற தீய செயல்களை, தீங்குகளை, பாவச் செயல்களை ஒரு மனிதன் செய்யாத நாளுண்டா? இவ்வாறாக அவன் தினமும்தானே நிறைச் பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்! அப்படியானால் நிகழும் கர்மவினைகளைக் கழிக்கும் அறவழி முறைகளை மேற்கொண்டுதானே ஆக வேண்டும்! நித்ய கர்ம  நிவாரண சாந்தியின் மகத்வம் என்ன?
1.அந்தந்த நாளுக்குரிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தினை ஆராய்ந்து எவை உச்சமாயுள்ளன, எந்த திதி சக்தி பெற்றுள்ளது, சுபகரண, சுபயோக நாளா, எந்த கிரஹத்திற்குரிய நட்சத்திரம் ஆதிக்கம் பெற்றுள்ளது போன்ற அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்றாற்போல் தான, தர்ம, பூஜைகள் அந்தந்த தினத்திற்கு அளிக்கப்படுகின்றன.
2. மேல் நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாள், கரிநாள், திதித்வயம், தனியனாள், சூன்யதிதி போன்றவையும் கணிப்பிற்கு உள்ளாகின்றன.
3. அந்த நாளின் கிரஹ சஞ்சாரங்களும் கோசார பலன்களும் அறியப்படுகின்றன.
4. அந்த நாளில் எக்கோயிலில் உற்சவம் நடைபெறுகின்றது, அன்றைய தின ஆதிக்கத்திற்குரிய தெய்வ மூர்த்திகள் போன்ற விளக்கங்களும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
5. இவை தவிர ஒவ்வொரு தினத்திற்குமுரிய அயனகர்ம அணு நுணுக்களும் உண்டு. அதாவது சூர்ய, சந்திர அயனப் பாதைகளைப் பொறுத்து ஒவ்வொரு நாளிலும் எவ்விதக் கர்ம வினைகள் சேரும்/தீரும் என்ற ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த கர்ம நிவாரண சாந்தி முறைகளும் ஆராயப்படுகின்றன.
6. அந்தந்த நட்சத்திரத்திற்குரிய, கிரஹத்திற்குரிய விருட்சம், மூலிகை, பறவை, சமித்து, விலங்கு போன்றவையும் கணிக்கப்பட்டு அத்தினத்திற்குரிய தான, தர்மங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
7. அந்நாளின் சூர்ய வெப்பம், மேக மூட்டம், மழைப் பொழிவு, இரவுக் கால நேரம், இரவு நேர நட்சத்திர அமைப்புகள், சந்திரப் பிறை போன்ற விஷயங்களும் அந்நாளின் செவ்வாய், சூரிய, சந்திர கிரஹ சஞ்சாரங்களினால் அறியப்பட்டு இதனால் அந்நாளில் எத்தகைய கர்மங்கள் சேரும் என்பனவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன!
எல்லாவற்றிற்கும் மேலாக சற்குருவின் அருள்மொழிகளுக்கு அபாரமான தெய்வீக சக்தி உண்டன்றோ! இந்த “நித்யகர்ம நிவாரண சாந்தி” முறையைப் பகுக்கும் ஆன்மீக ரகசியங்களைக் கற்றுத் தந்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருளாசியும் நிறைந்ததெனில், சற்குருவின் திருவருட் செல்வமாக, நட்சத்திர வாக்யங்களாக மிளிரும் இதன் மஹிமைதான் என்னே! எனவே நித்யகர்ம நிவாரண சாந்தி” என்னும் தலைப்பில் வரும் அந்தந்த தினத்திற்குரிய தான, தர்ம, பூஜை முறைகளைக் கடைபிடித்து எளிதில் கடைத்தேறும் அறவழி முறைகளைக் காண்போமாக!  பெறற்கரிய அருட் செல்வமிது! அதிஅற்புத சக்திவாய்ந்த சித்தபுருஷர்களுடைய வாக்யங்கள்! அரிய தெய்வீக வாழ்வை இழந்து விடாதீர்கள்! சத்சங்கமாகக் கூட்டாக ஒன்று சேர்ந்து இவற்றை எளிய முறையில் நிறைவேற்றி குருவருள் நிரம்பிய திருவருளைப் பெற்று ஆனந்தமடைவோமாக.!
நித்ய கர்ம வினை வேரறுக்கும் வழி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக!

தேதி

குறித்த நற்காரியம்....!

அபரிமிதப் பலன்கள்...!

1.7.1996

முருகன் கோயிலில் சேவலுக்கு தான்யம் இட வேண்டும்.

தந்தையைப் பணியாத சாபம் தீரும்.

2.7.1996

பல்லில்லா பாட்டிக்கு பால் தானம்

மனைவி இட்ட சாபம் தீரும்.

3.7.1996

இன்று தந்தை வாக்கு கேட்டல்

வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படும்.

4.7.1996

ஐந்துதலைப் பிள்ளையார் கோயிலில் கொழுக்கட்டை தானம்

குழந்தையை அடித்த துன்பம் தீரும்.

5.7.1996

இரண்டு சக்கர ஊர்திகளுக்கு காற்று அடிக்கும் ஏழைப் பையன்களுக்கு உணவிடுதல்.

வழி தவறி தீய நெறி செல்லாமல் இருக்க உதவும்.

6.7.1996

விறகு சுமக்கும் பெண்ணிற்கு உணவிடுதல்.

நீண்ட நாள் கடன் தொகை வந்து சேரும்.

7.7.1996

மூங்கில் அறுப்போர்க்கு உணவிடுதல்

வயதானவர்களைத் திட்டிய பாபம் தீரும்.

8.7.1996

வெற்றிலை விற்போர்க்கு அன்னதானம்

ஒற்றைத் தலைவலி தீரும்.

9.7.1996

வயதான குதிரைக்கு உணவளித்தல்.

தானமிட்டோர்க்கு மூட்டு வலி தீரும்.

10.7.1996

கறவை நின்ற பசுமாடுகளுக்கு புல் அளித்தல்.

அரிப்பு நோய் தீரும்.

11.7.1996

யானைக்கு வயிறார உணவளித்தல்

ஏகாதசி விரத பலன் கிட்டும்.

12.7.1996

கூனர்களுக்கு அன்னதானம்

அலுவலகத்தில் புறம் சொல்வோர்களால் வரும் துன்பங்கள் தீரும்.

13.7.1996

சிவன் கோயிலில் அடிப்ரதக்ஷிணம்

அன்னத்வேஷம், பசியின்மை தீரும்.

14.7.1996

வலது கால் தூக்கி நடனமாடும் கோயிலில் சர்கரைப் பொங்கல் தானம்

குழப்பங்கள் தீர்ந்து மன சாந்தி கிட்டும்.

15.7.1996

செருப்பில்லாதோர்க்கு காலணி தானம்

தவறு செய்யாதோர்க்கு அறியாயமாக மெமோ/ தண்டனை அளித்த பெரும் பாவம் தீர நல்வழி கிட்டும்.

16.7.1996

பஞ்சவர்ண கிளிக்கு கோவைப் பழதானம்

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாததற்கு [பரிகாரம் ஒரு முறையே செல்லுபடியாகும்.]

17.7.1996

கையில் கோதண்டம் இல்லா ஸ்ரீராமர் கோயிலில் கோலமிடுதல்.

தவறி விழும் குழந்தைகள் காப்பாற்றப்படுவர்.

18.7.1996

சசிதரன், சோமன், சந்திரன் போன்ற “ச” வகை பெயருடையோர்க்கு அன்னதானம்

வேலைபளு தீரும்.

19.7.1996

பல்லில்லாத வயதானோர்க்கு பால் பாயச தானம்

குழந்தைகள் இரவில் மிரள்வது தணியும்.

20.7.1996

80 வயது சுமங்கலி பாதபூஜை தானம்

பொய் சொல்லி பணம் பெற்ற பாவத்திற்குப் பரிகாரம் (இப்பரிகாரம் ஒரு  முறை மட்டுமே.)

21.7.1996

கழுகுமலை முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு வினியோகம் .

துஷ்டர்களின் துன்பங்களிலிருந்து நிவாரணம்.

22.7.1996

பிள்ளையாரை Skipping (கயிறு தாண்டும் ஓட்டம்) முறையில் வலம் வர..

கன்னிப் பெண்களின் குறை தீரும்.

23.7.1996

செம்பருத்திப் பூ சொரிந்து பிள்ளையாரைத் தரிசித்தல் – பால் பாயச தானம்

கன்னிப் பெண்களின் மன ஏக்கங்கள் தீரும்.

24.7.1996

மலையில் உள்ள சிவன் கோயில் துர்க்கைக்குப் பாலபிஷேகம், சர்க்கரைப் பொங்கல் தானம், ஏழை சுமங்கலிகளுக்குத் தானம்

கணவனுக்கு வரும் கெட்ட பெயரைத் தீர்த்திடலாம்.

25.7.1996

குரங்கிற்குப் பால் தானம்

மனக் கலக்கம் தீரும்.

26.7.1996

காராம்பசுவிற்குப் பசும்புல் அளித்தல்

மாரடைப்புத் (Mild Heart Attack) துன்பங்கள் தணியும்.

27.7.1996

அனந்த பத்மநாப சுவாமிக்கு அரிசிப் புட்டுப் படைத்து ஏழைகளுக்குத் தானம்

எதிர்பாராத நற்செய்தி கிட்டும்.

28.7.1996

மூல நட்சத்திரமுடைய பெண்கள் நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு தேங்காய் சாதம் படைத்து அன்னதானம்.

வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

29.7.1996

ஏழைகளுக்கு இலவசமாக முடிவெட்டிக் கொள்ள உதவுதல்...

மறந்து போன குலதெய்வ பிரார்த்தனைகள் நினைவுக்கு வரும்

30.7.1996

எட்டு சுமங்கலிகளுக்குப் பாதபூஜை – விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதி மாங்கல்யச் சரடு தானம்

பெற்ற மகளின் துன்பங்கள் நீங்கும்.

31.7.1996

பொக்கை வாயுடைய கிழவர்களுக்குப் பால் பாயச தானம்.

எழுத்தினால் வரும் துன்பங்கள் தீரும்.

மழை விளக்கங்கள்

அடியார் : மழை என்பது என்ன?
சற்குரு : சித்த புருஷர்களும் மஹரிஷிகளும் பூஜை செய்வதற்கான தீர்த்தத்தைத் தரும் தெய்வ காரியமே மழையாகும். ஒரு நாள் பெய்கின்ற மழையின் அளவே அவ்விடத்தில் பூஜை செய்யும் மஹரிஷிக்கு, யோகிக்கு, சித்தருக்குத் தேவையான அர்க்ய நீராம், பூஜைக்குரிய தீர்த்தமாம். சூரியன் உள்ளிட்ட பல கோள்களும், வருணன் உட்பட தேவாதி தேவர்களும் அந்தந்த இடத்தில் தவம்புரிய வரும் இறைஞானியர்க்கு அவர்தம் பூஜைக்கு மழையாக நீரைப் பெற்றுத் தருகின்றனர்.
அடியார் : மேகங்களால் தானே மழை பொழிகின்றது?
சற்குரு : மேகங்களின் மறைப்பில்தான் தேவபூஜை நிகழ்கின்றது. எதற்காக? வருண பகவானின் புனித நீரைப் பெற்றுத் தர! மேக மறைப்பு, வருணனின் பூஜைக்குத் திரையிடுவது போல் தான்.
அடியார் : மழை பொழிவதற்குக் காரணமென்ன?
சற்குரு : பல காரணங்கள் உண்டு! வருடத்திற்கு ஒரு முறையே, ஒரு நாளே வாழ்ந்து மறைகின்ற உத்தம மூலிகையொன்று கொல்லிமலை, சதுரகிரிமலை, பொதியமலை, வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் உண்டு. நீர் மூலம் இதன் தெய்வீக சக்தி சகல பூலோக ஜீவன்களுக்கும் செல்ல வேண்டுமெனத் தவம் புரியும் மஹரிஷிகளுமுண்டு. இவர்களுக்காகவே மழைப் பொழிவு ஏற்பட்டு மழைத்துளிகள் அவ்வுத்தம மூலிகையின் மேல்பட்டு, மழை நீரில் கரைந்து பல இடங்களிலும் அதன் தெய்வீக சக்தி பரவுகின்றது! மேலும் மஹரிஷிகளும் ஞானிகளும் பூமியின் பல இடங்களுக்கும் செல்கையில் அவர்களுக்காகப் பலகோடி தேவதைகள் மழையை வேண்டி பூமியைக் குளிர வைக்கின்றனர். மேலும் வானில் செல்லும் மஹரிஷிகள் தங்களை வேண்டிப் பூஜை செய்யும் ஓரிரு உத்தம ஜீவன்களுக்குகாக மழைநீர் மூலம் தங்கள் அனுக்ரஹத்தை யாங்கணும் பரப்புகின்றனர்.
அடியார்: சில இடங்களில் சாரல்கள் மட்டுமே விழுகின்றன. மழைப் பொழிவு இல்லாது போய் விடுகின்றதே!
சற்குரு : முறையற்ற காமம், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற தீய சக்திகள் பெருகுகையில் அவ்விடங்களில் உள்ள மஹரிஷிகளின் தவநிலை கலைந்து விடுகிறது. உடனே அவர் நல்லிடம் தேடிச் சென்று விடுகின்றார், இருப்பினும் அவர் கொண்ட குறைந்த நேர தபோநிலையிலும், மழைச் சாரல்கள் மூலம் தம் தபோபலன்களை அளித்துச் செல்கிறார்.
அடியார் : மழையினால் தீய சக்திகள் அழிகின்றனவா?
சற்குரு: ஓரளவு தீயசக்திகளின் படிவுகள் அகற்றப்படுகின்றன. அவை மேலும் பரவாது அடக்கப்படுகின்றன. பூமா தேவியும் தன் பங்கிற்கு, மழைநீர் மூலம் தீயசக்திகளைத் தன்னுள் உறிஞ்சி அவற்றின் பரவலைத் தடுக்கின்றாள்!
அடியார் : மழை நீர் புனிதமானதா?
சற்குரு : நிச்சயமாக! பல புனித நதிகளின் மேன்மையை ஒன்று திரட்டித் தரவல்லதே மழைநீராகும்!
அடியார் : அப்படியானால் மழை நீர் பூஜைக்கு ஏற்புடையதா?
சற்குரு : நிச்சயமாக! ஆனால் அதனைப் பெறும் முறையை அறிதல் வேண்டும்! வெட்டவெளியில் ஒரு தாமிரக் குடத்தை வைத்துச் சுத்தமான துணியால் மூடி அதில் மழை நீரைச் சேகரிக்க வேண்டும். இதில் பாதி நீரைக் கோயிலில் அபிஷேகத்திற்கு அளித்தோ அல்லது கோயில் கிணறு, குளங்களில் சேர்த்த பின்னரோ எஞ்சிய பாதி நீரைப் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். மழை நீரில் சமைத்த உணவினை அன்னதானம் செய்தலால் பல கொடிய கர்மவினைகள் கழிவு பெறுகின்றன.
அடியார் : பெய்யும் மழைக்குப் பூஜை உண்டா?
சற்குரு : உண்டே! மழை ஆரம்பிக்கின்ற நேரத்தைக் குறித்து வைத்து கணித்துப் பார்த்தீர்களானால் பல ஆன்மீக விந்தைகளை உணர்வீர்கள்! மழை ஆரம்பித்தவுடன் குலதெய்வத்திற்கும், வருண பகவானுக்கும் பூஜை செய்து குறித்த நைவேத்யங்களைப் படைக்க வேண்டும். இன்றைக்கும் பல இல்லங்களில் மழை பெய்தவுடன் எண்ணெய்ப் பலகாரங்கள் செய்வதைக் காணலாம். அதேபோல் மழை நின்றவுடன் உடனடியாக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வருண பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டும். மழை நின்றவுடன் கோயில் தரிசனம் செய்வதால் பல அற்புத அனுக்ரஹங்கள் கிட்டுகின்றன. கோயில் கோபுரங்களில் உறையும் கோடிக் கணக்கான தேவதைகள் மழை நீரால் கோயில் கோபுரக் கலசங்களுக்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்துவதால் கோபுரம் வழியே கீழிறங்கும் நீர் புனிதத்தன்மை பெறுகின்றது. இது நம் உடலில் படுவது பெறற்கரிய பாக்யமன்றோ?
அடியார் : அப்படியானால் மழை பெய்கையில் நிகழும் (கோயிலின்) அபிஷேக ஆராதனைகளுக்கு...
சற்குரு : பன்மடங்கு பலன்கள் உண்டு! நாதஸ்வரம், மேளம், மிருதங்க ஒலிகளைப் போல் மழைச் சப்தமும் புனிதமானதாம்! மழை பொழிகையில் சொல்ல வேண்டிய ஸுக்த மந்திரங்களும் உண்டு!
மழையில் சில தரிசனங்கள் : மழைப் பொழிவின் ஊடே கற்பூர ஹாரத்தி திவ்யமான தரிசனமாகும். ஐல, அக்னி தத்துவங்களின் பிணைப்பு இது! இதனால் நீர், அக்னி மூலம் கழிய வேண்டிய கர்மங்கள் எளிதில் தீர்வு பெறுகின்றன! மழை பொழிகையில் இல்லங்களில் ஹோமங்களை நடத்தினால் அதற்கு விசேஷமான பலன்களுண்டு. மழை நீரையே ஆஹுதியாக அளிப்பதும் உண்டு! கொட்டும் மழையில் பத்மாசனமிட்டுச் செய்ய வேண்டிய யோகாசனங்களும் உண்டு! சேவல், மயில், யானை போன்றவை மழைபொழிகையில் விநோதமான முறையில் நிற்பதை/படுத்திருப்பத்தைக் காணலாம். இவையெல்லாம் “ஜல தாரை யோக” முறைகளில் அடங்கும்! இதனால் சுவாச பந்தனங்கள் எளிதில் சித்தியாடும். தக்க சற்குருவை நாடி இவ்வான்மீக ரகசியங்களை உய்த்துணர்ந்திடுக!
அடியார் : மழையில் தெய்வ தரிசனமுண்டா?
சற்குரு : கொட்டும் மழையில் புனித யாத்திரையைத் தொடர்தல், திருச்சி-வெக்காளியம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர், அரசமரப் பிள்ளையார் போன்ற பரவெளியில் உள்ள தெய்வ மூர்த்திகளை தரிசித்தல், மழையில் பவனி வரும் உற்சவ மூர்த்திகளை தரிசித்தல், மழை பெய்கையில் செய்யப்படும் குடை, உடை, போர்வை தானங்கள் போன்றவற்றிற்கு அதிஅற்புத பலன்கள் கிட்டுகின்றன. இதற்காகவே கொட்டும் மழையில் பசுவிற்குப் புல், அன்னம், பழங்களை, அளிப்போரும் உண்டு! இவற்றால் பொதுவாக விந்துக் குற்றங்கள் தீர்கின்றன!
அடியார் : கடல் நீரால் தான் மழை உண்டாகிறதா?
சற்குரு : அது விஞ்ஞான விளக்கம்! கடலின் அடியில் ஓடும் நீரோட்ட, பூமி மற்றும் ஏனைய லோகங்களின் நீரூற்றுகள், பல அரிய மூலிகைகளின் வேர் நீர், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் நீர்த் தர்ப்பணம், தெய்வ மூர்த்திகளுக்கு நிகழ்த்தப்படும் அபிஷேக ஆராதனைகளே மழைப் பொழிவை உருவாக்குகின்றன. மெய்ஞ்ஞான விளக்கத்தை உள்ளத்தால் தான் உணர முடியும்!
அடியார் : மேகங்களால் தான் மழைப் பொழிவென விஞ்ஞானம் கூறுகின்றதே!
சற்குரு : பல இடங்களில் மேகமிருந்தும் மழை பொழிவதில்லை, மேகமின்றியும் மழை பொழிகின்றது. ஆன்மீகத்தில் மேகங்கள் திரையிட்டு நிற்க மேற்கண்ட காரணங்களால் மழை பொழிகின்றது! மேகமின்றி மழை தருவித்த மஹான்கள் பலருண்டு! அமிருத வர்ஷிணி ராகத்தை முறையாகப் பாடினால் மேகங்களின்றி மழையைப் பெய்விக்கலாம்! எனவே விஞ்ஞானத்தோடு முரண்பாடு கொள்ளாது, உள்ளத்தளவில்,  ஆத்மவிசாரமாக இவற்றைப் புரிந்து கொள்ள, தெளிவு பெற முயன்றிடுக! விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டால் குழப்பங்களே மிஞ்சும்! அபிராம பட்டருக்காக அமாவாசையே பௌர்ணமி ஆயிற்று! தெய்வ ஸங்கல்பத்தால் எதுவும் நிகழும்.
அடியார் : பாலைவனங்களில் மழை இல்லையே!
சற்குரு : அதனாலென்ன, ஜீவன்கள் இருக்கின்றனவே! மண்புழு, மணற் பாம்பு, பேரீச்சை மரமென எத்தனையோ ஜீவன்கள் வாழ்கின்றனவே! நீரில்லா இடத்தைப் பாழ் என்று எண்ணாதீர்கள்! சில விசேஷமான தியானங்களுக்காக பல யோகியர் இன்றைக்கும் பாலைவனத்தையே நாடுகின்றனர். ஒட்டகத் தோலில் அமர்ந்து செய்யப்படும் யோகியருடைய அத்தியான முறையில் நீரின்றிப் பல ஆண்டுகள் வாழ்கின்ற அரிய சித்தியைப் பெற்றிடலாம்.
ஸ்ரீபடேசாஹிப் மஹான் :- பாண்டிச்சேரியில் சின்னபாபு சமுத்திரம் என்னுமிடத்தில் ஜீவசமாதி பூண்டிருக்கும் “படே சாஹிப்” என்ற சித்புருஷர் பாலைவனப் பகுதியில் பல்லாண்டுகள் தவம் புரிந்து கடுமையான கொடிய நோய்களைத் தீர்த்து இறுதியில் இங்கு வந்து ஜீவஸமாதி பூண்டார். பாலைவனப் பகுதியில் ஸ்ரீவைத்யநாதராகிக் காட்சி தந்த உன்னத சித்புருஷர் பாலை வனத்தில் அவர் கால் சுவடுகள் பதிந்த இடங்கள் மட்டும் ஜில்லெனக் குளிர்ந்திருக்கும்! இன்றைக்கும்  எவ்வித வியாதிகளையும் (ஜீவசமாதியிலிருந்தவாறே) தீர்த்து அருள்பாலிக்கும் உத்தம சித்புருஷரே படேசாஹிப்
அடியார் : மழையோடு சூறாவளி வருவதன் காரணமென்ன?
சற்குரு : சூறாவளியில் துன்பங்கள் ஏற்படுவதாகவே நாம் உணர்கிறோம்! ஆனால் இதன் பின்னனியில் ஆயிரமாயிரம் ஆன்மீக ரகசியங்கள் உண்டு! பலவிதமான கொடிய, தீய சக்திகள் சூறாவளியில் தான் அழிகின்றன! இதுவே மழையால் விளைகின்ற நன்மை! வெளிப்பார்வைக்கு சூறாவளித்  துன்பங்கள் மனதைக் கலக்கும்! ஆனால் கோடிக்கணக்கான தீயசக்திகளை அழித்து ஓரளவிற்குப் புனிதத் தன்மையை நிரந்தரப்படுத்துவது சூறாவளியே! மேலும் மழைப் பொழிவைப் பெறுகின்ற அளவிற்குச் சில இடங்கள் ஆன்மீகத் தகுதிகளைப் பெற்றிருப்பதில்லை. ஆனால் அங்கு வாழும் நல்லோர்கள் மழைப் பொழிவை வேண்டித் தவமிருப்பர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்வதுதானே மழை!
எனவே மழை பொழியும் தகுதியுள்ள இடங்களில் மழைத் திவலைகளை உருவாக்கி சூறாவளிக் காற்றால் அவற்றைத் தள்ளி மழையே பெய்ய இயலா இடங்களுக்கு இட்டுச் சென்று மழையைத் தருவது சூறாவளியே! இவ்வாறாக ஆக்கலும் அழித்தலும் நடப்பது சூறாவளியால்!
அடியார் : மழையின் பின்னணியில் சூரியன் மறைவதேன்!
சற்குரு : உண்மையில் மழைப் பொழிவைத் தரும் மூலகர்த்தாக்களில் சூர்ய பகவானும் ஒருவர்! அவரே மேகங்களின் பின்னணியில் தன் பங்கை ஆற்றுகிறார். சூரியனை ஒரு தீக்கோளமென நாம் எண்ணுகிறோம்! ஆனால் சூரியனின் உட்பகுதி மிகவும் குளுமை உடையது! இதுவே மெய்ஞ்ஞானம்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள். “இன்றும் யோகியர்களின் சோலையாக விளங்கும் செஞ்சிமலை – ஆன்மீக யாத்திரையில் ஏற்பட்ட அனுபவங்களின் தொடர்ச்சி....” )
.. அவருக்கு எதைக் காணிக்கையாகத் தர முடியும்? அவனோ உடலில் பல ரண காயங்களுடன் அவதூதாக நின்றிருக்க..... அவனிடம் என்ன இருக்கின்றது, காணிக்கையாக அளிப்பதற்கு! சோதனையாக அந்தத் தபஸ்வியும், “சரி நீயும் வற்புறுத்துவதால் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்,
“அடடா, வாக்குக் கொடுத்து விட்டோமே!” சிறுவனின் மூளை விரைந்து வேலை செய்தது! தன் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையைக் கழற்றி அவரிடம் பணிவாக அளித்தான். அவரோ எழுந்து நின்று, எட்டுத் திக்குகளையும் நோக்கி, நமஸ்கரித்து சிரந்தாழ்த்தி இருகைகளையும் தாங்கி ருத்ராட்ச மாலையைப் பெற்றுக் கண்களில் ஏற்றிக் கொண்டார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது! “பெறற்கரிய பொக்கிஷமிது!! வேறு எந்த லோகத்திலும் பெறமுடியாத பிரசாதமிது! என்னைக் கடைத்தேற்றவிருக்கும் உத்தம குரு காணிக்கை!” ..... இதற்கு மேல் அந்தத் தபஸ்வியால் பேச முடியவில்லை. பேரானந்தத்தில் நாதழுதழுத்தது!
“ஏன் வாத்யார் எங்கே? அவரை நான் உடனே பார்க்கணும்” ....
சிறுவன் தன் பல்லவியை ஆரம்பித்து விட்டான்! தபஸ்வி சிரித்துக் கொண்டே குரங்கிடம் ஏதோ சைகை காண்பித்தார். குரங்கும் குஷாலாகக் குதித்துக் கொண்டே சிறுவனை இழுத்துக் கொண்டு வெளியில் விரைந்தோடியது. குகையை விட்டு வெளியில் வந்ததும் தான், “இதுவரையில்  தானிருந்தது வேறொரு லோகத்தில் தானோ”- என்ற எண்ணம் சிறுவனுக்கு உதயமாயிற்று! உண்மைதானே, யோகியர்களின் தவயோகச் சோலையாக விளங்கும் இருபதிற்கும் மேற்பட்ட செஞ்சி மலைத் தொடர்களில் உள்ள குகைகளில் இன்றைக்கும் பல யோகியரும் ஞானியரும் நிர்விகல்ப சமாதியிலும் ஏனைய அற்புதமான ஞானயோக நிலைகளிலும் கூடியிருப்பதை, சற்குருவருளால் கண்டு ஆனந்திடலாமே!
அக்குகையிலிருந்து வெளிவந்ததும் தான் சிறுவனுக்குப் புறஉலகு புரியலாயிற்று. பெரியவரின் உடல் கிடந்த இடம், சுனை – அனைத்தும் இப்போது தெரியலாயின. பெரியவரின் உடல் இருந்த இடத்திற்கு “வாத்யாரே” என்று பெருங்குரல் கொடுத்தவாறே துள்ளிக் குதித்து ஓடினான் சிறுவன்! அங்கே..... பெரியவர் உடலிருந்த இடத்தில்....... நான்கடி உயரத்திற்குக் காளான்கள் செழித்து வளர்ந்து மண்டியிருந்தன. சிறுவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்! “வாத்யாரின் உடல் என்னவாயிற்று?” வந்த வேகத்தில் “காளான்களின் மீது பாய்ந்து பிடுங்கி எறிந்து உள்ளே தேடலாம்” – என்ற எண்ணமே சிறுவனுக்கு மேலோங்கியது... ஆனால் ....
காளான் ஒவ்வொன்றும் ஒளிமயமாய் ஜ்வலித்தன! “வெற்றிடத்தில் அல்லவா வாத்யாரின் உடலை வைத்து விட்டுப் போனார்! அவர் திருஉடலைச் சுற்றிக் காளான்களா முளைக்கும்! காளான்கள் வடிவில் மஹரிஷிகள் காவல் காக்கின்றார்களோ!”
“வாத்யாரே!” – ஓ வென்று கதற ஆரம்பித்து விட்டான் சிறுவன்.... அங்கே..
“என்னடா நைனா!.... ஏண்டா இப்படி அலர்றே... “ – என்று குரல் கொடுத்தவாறே பெரியவர் காளான் தோட்டத்திலிருந்து வெளிவந்தார்! அவ்வளவுதான். பெரியவரைப் பார்த்ததும் சிறுவன் எட்டடிக்குப் பத்தடியாய்ப் பாய்ந்து சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்! அவர்தம் கால் விரல்களை, பாதத்தை, முழங்கால்களை இடுப்பை, முதுகை மாற்றி மாற்றிக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தான்! உடலில், முதுகில் ஏறி முழங்கைகளில் சறுக்கினான். தாய்ப் பசுவை கண்ட கன்று போலச் சுற்றிச் சுற்றி ஓய்ந்து, களைத்துத் தரையில் விழுந்தான்! பெரியவர் அவனை அரவணைத்து முத்தமிட்டார். “ஏண்டா இத்துனூண்டு ஊசி வெடிக்கே என்னா அலறு அலறிட்டே! நீ இன்னும் வாழ்க்கைல பெரிய பெரிய வெடி.....
பெரியவரைப் பேச விடவில்லை சிறுவன்!... “........... ஆங்... ஊசி வெடியா ஒடம்பெல்லாம் பாத்தியா...டஜன் கணக்குல காயம்... வெடியெல்லாம் போதும் ...வா..... வா இந்த இடத்தை விட்டுக் கிளம்பி நம்ப அங்காளி கோயிலுக்குப் போகலாம்”..
“என்னடா பெரிய காயம்.. மொதமொதல்ல நீ என்ன பாத்தப்ப கூட முட்டிக் காயத்தோடதானே பார்த்தே!” – பெரியவர் கண்ணைச் சிமிட்டினார்!
சிறுவனுக்கு அந்நிகழ்ச்சி மலரும் நினைவுகளாய் மலர்ந்ததும் தன்னையறியாமல் சிரித்து விட்டான்! பிறகு அவசரம், அவசரமாக நாக்கைக் கடித்துக் கொண்டு மூஞ்சியை உர்ரென்று வைத்துக் கொண்டான்!
“ஆமாம், இவ்வளவு காயம் பட்டதுனாலத்தானே அபூர்வமான சித்தர்களின் தரிசனம் கெடச்சுது, அது போதாதா?” சிறுவன் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை! அவரைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தான். இருவரும் சுனையில் நீராடியபின் கீழிறங்கினர்.
நல்ல பசி சிறுவனுக்கு... வழியில் சிறிய ஹோட்டலில் “பரோட்டா” வாங்கித் தருமாறு கேட்டான்..,
“நல்லாத் தின்னுடா ராஜா! ....ஆனா  இந்த பரோட்டாவை நீ திங்கணும்னு உன் தலைல எழுதியிருக்கா பாத்துக்கோ...”
சிறுவன் பரோட்டாவை வாங்கத் தயாரானபோது எல்லோரும் தன்னையே பார்ப்பதைக் கவனித்தான். ஏனிப்படி? அப்போது தான் கவனித்தான், தான் நிர்வாணமாக இருப்பதை! அவசர கோலத்தில் ஓடி வந்து பெரியவரை வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.  பெரியவர் சிரித்தவாறே அவனைத் தெருக் கொடியிலிருந்த சிறு துணிக்கடைக்கு அழைத்துச் சென்று ஒரு டிராயரை வாங்கி மாட்டி விட்டு “போடா, போய் பரோட்டா வாங்கிவா!” என்று சொல்லிட சிறுவன் மீண்டும் அந்த ஹோட்டலுக்குச் செல்ல மறுத்தான்!
“அப்பவே சொன்னேனே கேட்டியா?...அந்த பரோட்டாவைத் திங்கணும்னு உன் தலைல எழுதலையே, என்ன செய்யறது?”
சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான். இருவருமே உரக்கச் சிரித்து மகிழ்ந்தனர். (பின்னர் பெரியவர் சிறுவனுக்கு செஞ்சி அனுபவங்களுக்கான ஆன்மீக விளக்கங்களை அளித்தபோதுதான் அவன் தான் பெற்றது பெறற்கரிய பரமானந்த அனுபூதி என்பதை உணர்ந்தான்.!) இவற்றைப் பின்னர் காண்போம்!
ஆஸ்ரமத்தில் கிடைக்கும் புத்தகங்கள்

புத்தகம்

விளக்கம்

1. திருஅருணாசல கிரிவல மஹிமை

திருஅண்ணாமலை கிரிவல முறை விளக்கம்.

2. ஸ்ரீஆயுர்தேவி மஹிமை

ஸ்ரீஆயுர்தேவி அம்பிகை விளக்கம்.

3. ஓங்கார மஹிமை

ஓம்கார விளக்கங்கள்.

4. திருப்பணி தரும் திருவருள்

எளிய கோயில் உழவாரத் திருப்பணி முறைகள்.

5. ஆசான் அனுபவ மொழிகள்

சற்குருவின் அருளுரை (ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் )

6. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துதி.

7. அஷ்டதிக்கு பாலகர்

தென்கிழக்கு திசை மஹிமை.

8. பெண்கள் சிந்தும் கண்ணீரால் சிறகடித்துப் பறக்கும் வாழ்வு

பெண்கள் ஏன் கண்ணீர் விடலாகாது? – விளக்கம்.

9. சுமங்கலிக் காப்பு

சுமங்கலித்வம், குங்குமம் பற்றிய விளக்கம்.

10. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?

பிள்ளைகளை ஆன்மீக முறையில் வளர்க்கும் முறைகள்.

11. எளிமையான தியான முறை

எளிய தியான முறைகள்.

12. மாங்கல்ய மஹிமை

மாங்கல்ய விளக்கங்கள்.

13.  திருமணம் ஆகவில்லையா ஏன்?

திருமணத் தடங்கல்கள் தீரவழிகள்.

14.  எறும்பு வைராக்கியம்

எறும்பிற்கு இடும் உணவுதான விளக்கங்கள்.

15. கோமுக நீர் மஹிமை,  சிவபாத  மஹிமை

கோயிலில் சிவபாத பூஜை, கோமுக நீர் விளக்கங்கள்

16. சாம்பிராணி தூப மஹிமை

தூப விளக்கங்கள்.

17. சந்தன மஹிமை

சந்தனம் பற்றிய விளக்கங்கள்.

18. இறப்பின் ரகசியம்

மரணம் பற்றிய விளக்கங்கள்.

ஸ்ரீஆயுர்தேவி அம்பிகையின் படங்களும் கிடைக்கும். ஆஸ்ரமத்திற்கோ அல்லது ஸ்ரீஅகஸ்திய விஜயம் – ஆசிரியருக்கோ கடிதம் எழுதி விளக்கம் பெற்றிடுக.
விசேஷ தினங்கள் – ஜூலை 1996
15.7.1996 – மல(ஆனி)மாத இரண்டாவது அமாவாசை – தர்ப்பண நாள்
16.7.1996 – தட்சிணாயனம் – தர்ப்பண நாள்
20.7.1996 – ஆடிப்பூரம்
21.7.1996 – குமார சஷ்டி
25.7.1996 – சாக்ஷீச மனு – தர்ப்பண நாள்
27.7.1996 – திரிஸ்பர்ஸ மஹாதுவாதசி
29.7.1996 – பௌர்ணமி பூஜை
30.7.1996 – அக்னி ஸாவர்ணி – தர்ப்பண நாள் – வியாஸ பூஜை

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam