அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மல மாதம்

மல மாதம் – சில ஆன்மீக விளக்கங்கள்....
வரும் தாது வருட ஆனி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அமைகின்றன. இவ்வாறு ஒன்றுக்கு மேல் அமாவாசை வருகின்ற மாதத்தை “மல மாதம்” எனக் கூறுகின்றனர். மல மாதமாதலின் இம்மாதத்தில் சுப காரியநகளைத் தவிர்ப்போரும் உண்டு. இது சரியா?
தக்க சற்குருவை ஓர் ஆன்மீக வழிகாட்டியாகப் பெற்றிருந்தால் இதற்குத் தகுந்த விளக்கங்களை எளிதில் பெறலாம். ஆனால், ஆன்மீகப் பெரியோகளை அறிந்து, உய்த்து உணர்கின்ற பண்பாடும், கலாசாரமும், நெறிமுறைகளும் கலியுகத்தில் மறைந்து வருகின்றனவே, என் செய்வது “நாங்கள் சற்குருவைப் பெற ஏங்கித் துடிக்கின்றோம். ஆனால், சற்குரு கிட்டவில்லையே”, எனக் கூறுவோர் பலருண்டு.
நீரில் மூழ்கிய ஒருவன் எவ்வாறு முழுமுயற்சியுடன் அடித்துப் பிடித்துக் கரையேறத் துடிக்கின்றானோ அத்தகைய பரிபூரணமான ஆத்ம ஏக்கத்துடன் சற்குருவைத் தேடினால் அவர் இந்நேரம் கிட்டாமலா இருப்பார்? தக்க சற்குருவைப் பெறும்வரை நம் முயற்சிகள் போதவில்லை, நாம் உண்மையான் வைராக்யத்துடன் ஆத்மார்த்தமாக முயற்சிகளைத் தொடர வேண்டும் என்பதை அறிந்து தெளிந்திடுக!
சற்குருவை பெற....
“ஸ்ரீஅகஸ்திய விஜயம்”“ மாத இதழின் முக்கியமான குறிக்கோள்களுள் ஒன்றாக, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கென இறை நியதிப்படி விதிக்கப்பட்டுள்ள சற்குருவைக் காணும் நல்வழி முறைகளை எடுத்தியம்புவதும் ஒன்றாகும். “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலமாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளித்து வரும் எளிய ஆன்மீக அறவழி முறைகளை உண்மையான மனதுடன் அவரவர் தேக ஆரோக்கியம , பொருளாதார, குடும்ப, அலுவலக மற்றும் வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து இயன்ற மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும், சற்குருவே தானே வந்து அரவணைத்திடுவார்! சாஸ்திர சம்பிரதாயங்கள், பூஜா விதி முறைகள், ஆன்மீகக் கோட்பாடுகள் போன்றவை கலியுகச் சூழ்நிலைகட்கேற்ப மாறுபடும். இவற்றை நம் கர்மவினையின் பரிபாலனத்திற்கேற்ப எடுத்துரைக்க வல்லவர் நம் சற்குரு ஒருவரே! எனவே சற்குருவைக் காட்டும் நல்வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கையின் முதல் குறிக்கோளாக, கொள்கையாக இருக்கட்டும்.
மும்மலங்கள்
ஆணவம், கன்மம், மாயை ஆகியவையே மும்மலங்களென நாமறிவோம். அறிந்தால் மட்டும் போதுமா? அவற்றைக் களையும் வழிமுறையை அறிய வேண்டாமா? மும்மலங்களைக் களையும் முறைகளையும் கூட உபநிஷத்துக்களிலும், புராணங்களிலும், சாஸ்திரங்களிலும், பெரியோர்களின் அறிவுரைகளிலும் நாம் காண்கின்றோம். ஆனால் மும்மலங்களைக் களையும் விதிமுறைகளைக் கையாண்டால் தானே கர்ம வினையறுப்புச் சாத்தியமாகும்? எல்லாமே தத்வார்த்தமாக நமக்குத் தெரிவதால் நடைமுறையில் நம்மால் எதையும் செய்ய முடியவில்லை. இதற்காகவே நாம் வாழ்கின்ற காலம்தனை நாள், நக்ஷத்திரம், திதி, கரணம், யோகம், கண்டங்கள் போன்ற பல்வேறு காலப் பகுதிகளாகப் பிரித்து, நம் வாழ்க்கையை ஒட்டியவாறே அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டிய அறவழி நியதிகளைச் சித்த புருஷர்களும், மஹரிஷிகளும் அளித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும்போது 3 பட்சங்கள் ஏற்படுகின்றன. இம்மூன்று பட்சங்களிலும் அம்மாதத்திற்குரிய மூல தேவதை ஆட்சி செலுத்துவதாலும் கோள்களின் சஞ்சார பலன்களும் செம்மையாக நமக்கு உதவிபுரிவதற்கு 3 பட்ச பூஜாமுறைகள் உதவிபுரிகின்றன.
அதுவும் வருடத்தின் மூன்றாவது மாதமாகிய ஆனி மாதத்தில் இரண்டு அமாவாசைத் திதிகள் ஏற்பட்டு மூன்று பட்சங்கள் அமைவது சிற்ப்புடையதாகும். மிகவும் அபூர்வமாகவும் அமையக் கூடியதாகும்.
மலத்தின் விளக்கம்
உடலில் சேரும் தீய சக்திகள், அழுகிய பொருட்கள், விஷ்வஸ்த்துக்கள், கெடுதல் தரும் இரத்த நிணநீர் அணுக்கள் போன்றவையே மலமாக வெளிவருகின்றன. இவை தவிர ஒவ்வொருவருக்கும் உரித்தான இரண்டுவிதங்களில் தேகங்களில் (1. மனோ தேகம், 2. ஊன் தேகம்) சேரும் ஏனைய மலபொருட்களைத்தான் ஆணவம், கன்மம், மாயை என மூன்று வித மலங்களுக்குள் பகுத்துள்ளனர். இதை எவ்வாறு வெளியேற்றுவது?
அமாவாசை விளக்கம்
சூரிய, சந்திர கிரஹாதிபதிகள் ஒன்று சேர்வதே அமாவாசையாகும். சூரியனே நாம் உயிர் வாழ்வதற்கான ஜீவசக்தியைத் தருபவர். சந்திரனே நம் மதிகாரகனாக அமர்ந்து மனோ சக்தியை நிர்வகிப்பவர். இவ்வாறாக ஜீவ சக்தியும், மனோ சக்தியும் இணைகின்ற நாளே அமாவாசைத் திதியாகும். சித்தபுருஷர்களும், மஹரிஷிகளும், இவ்விரண்டு சக்திகளையும் வெல்லும் தெய்வீகச் சக்தி பெற்றவர்கள்.
ஜீவ + மனோ சக்தி = அமாவாசை
ஆனால், சாதாரண மானுடர்களாகிய நாம் உடலையோ, மனதையோ கட்டுப்படுத்தி நிலைநிறுத்தும் பக்குவத்தைப் பெறவில்லை. எனவே தான் மனோ ஆசைகள், அவையங்களின் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒவ்வொரு கணமும் பலவிதமான கர்மங்களைச் சேர்த்துக் கொள்கின்றோம். பின் எவ்வாறுதான் நாம் கடைத்தேற இயலும்? இதற்காகவே ஜீவ சக்தியாம் சூரியனும், மனோ சக்தியாம் சந்திரனும் சேர்ந்து, எந்த இவ்விரு சக்திகளை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லையோ அவ்விரண்டும் சேர்ந்திருக்கின்ற ஒரு தெய்வீகத் திருநாளை அமாவாசையாக நமக்கு அளித்துள்ளனர். பெறற்கரிய இவ்வரிய திருநாளை, 30 நாட்களுக்கு ஒரு முறையே வருகின்ற மிகவும் சகதி வாய்ந்த அமாவாசைத் திதி நாளை வீணாக்கிடாது, அன்று முறையாகச் செய்ய வேண்டிய நியதிகளைக் கடைபிடித்தால் மும்மலங்களை எளிதில் போக்கிடலாமே! அதாவது உடல்,மனம் இரண்டாலும் (மும்மலங்களிலும் அடங்கும்) பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளைக் கழிக்கும் தெய்வத் திருவாய்ப்பை அளிக்கின்ற நன்னாளே அமாவாசைத் திதியாகும். அதுவும் ஒரே மாதத்தில் இருமுறை இத்திருநாட்கள் அமைகின்றனவெனில் அது மிகவும் சிறப்பானதன்றோ!
பீடுடைய மாதம்....
பீடுடைய மாதமான மார்கழியானது பெருமானுக்கு மிகவும் விசேஷமானதாகையால், நாள்தோறும் பிரம்ம முகூர்த்தமென்று சிறப்புற அழைக்கப்படும் விடியற்காலை நேரத்திலிருந்து பூஜைகளைத் தொடங்கி நாள் முழுதுமாக மாதத்தின் 30 நாட்களிலும் இறை நினைவே மலர வேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் முழுதும் வேறு எவ்விதக் காரியங்களையும் மேற்கொள்வதில்லை. ஆனால், காலப் போக்கில் பக்தி குறைந்தமையால் மேற்கண்ட நியதி மருவி பீடுடைய மாதமானது வழக்கில் பீடை மாதமாக மாறிவிட்டது. இதேபோல் மும்மலங்களையும் களையவல்ல அரிய இறைவழி  முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பான மலம் நீக்கும் (இரு அமாவாசைக்குரிய) மாதமானது மல மாதமாக மருவி இதன் பொருளும் மாறி மல மாதத்தில் சுபகாரியங்கள் கூடாது என்ற வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
அகஸ்தியரின் விளக்கம்
ஒருமுறை ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் தம் சிஷ்யர்களுக்கு ஒரு அமிர்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தார். பல்லாயிரம் வருடங்களுக்கு ஒருமுறையே வருகின்ற மிகவும் விசேடமான நேரம் அது! கோள்களின் சஞ்சாரமும் மிக அற்புதமாக அமைந்த நேரம்! குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ஆகிய நான்கு சுப கிரகங்களும் மிக மிகச் சிறப்பான இடங்களில் அமர்ந்திருக்க அமிர்த யோகமோ, கிடைத்தற்கரிய சுபயோக, சுப கரணங்களில் பதிந்திருந்தன. ஆனால், இவ்வமிர்த நேரமோ, மூன்றே மூன்று நிமிடங்களுக்கு மட்டுந்தான் இருக்கும். அதன் பின்னர், கிரகசஞ்சாரங்களும், ஏனையவும் மாறிவிடும்!
அகஸ்தியர் : சிஷ்யர்களே! அமிர்தமயமான இம்மூன்று நிமிட நேரத்தை உங்களுக்கு அளிக்கின்றேன். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்கள் கைகளில் இருக்கின்றது. நீங்கள் பிரபஞ்ச ஜீவன்களுக்காகப் பல யுகங்களாக, பல விதமானத் தியாகங்களைச் செய்துவரும் உங்களுக்குப் பெறற்கரிய இவ்வமுத நேரத்தை இறையருளால் அளிப்பதால் மகிழ்ச்சியடைகின்றேன். மூன்றே மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய இவ்வற்புதக் காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?
தங்களுக்கு சற்குரு அளிக்கும் மாபெரும் சோதனை என்பதை உணர்ந்த சிஷ்யர்கள் மௌனிகளாய் நின்று “தங்கள் சித்தம் எப்படியோ அதுவே எமது விருப்பம்” என்று கூறினர்!
அகஸ்தியர் : நானே சொல்வதாக இருந்தால் இந்த அமிர்த நேரத்தைத் தெரிவிக்காமலேயே செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருப்பேனே? பிறகு எவ்வாறுதான் நான் உங்களை அறிந்து கொள்வது? சற்குரு அனைத்தையும் அறிவார் என்பது உண்மையே! எத்தகைய உயர்நிலைகளை இறைவழியில் அடைந்தாலும், ஆங்காங்கே பரிசோதனைகளும் தொடரும் என்பதை உங்கள் மூலம் இறைவன் உலகுக்குக் கற்பிக்க விழைகின்றான். எனவே மூன்று விதமான யோசனைகளை உங்கள் முன் வைக்கின்றேன்.
1. முதலாவதாக இந்த அமிர்த நேரத்தில் பிரபஞ்சமெங்கும், திருமணங்கள், உபநயனங்கள், கிரஹப் பிரவேசம், சீமந்தம், சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற சுப காரியங்களை நிகழ்த்திடில் இந்த அமிர்த நேரங்களின் அற்புதப் பலன்களாக எதிர்வரும் யுகங்களில், நன்னெறி மிக்கப் பிரஜைகளை உருவாக்கலாம். இதனால் சமுதாயத்தில் அமைதி நிலவும்.
2. இரண்டாவதாக பிரபஞ்சமெங்கும், பூஜை, ஹோமம், யாகம், வேள்வி, தியானம் போன்றவற்றைப் பிரபஞ்சத்தின் நலனுக்காக நிகழ்த்திடலாம். இதனால் சர்வலோகங்களிலும் சாந்தம் பெருகும்.
3. மூன்றாவதாக இவ்வமிர்த நேரத்தை அடியேன் பெற்ற முறையை விளக்குகின்றேன். திரிகாலத்திற்கும், மும்மலங்கட்கும் தொடர்பு உண்டு. ஆதிசிவன் ஸ்ரீத்ரயம்பகேஸ்வரராக திருஅருணாசலத்தில் தோற்றம் கொண்டு த்ரயம்பகேஸ்வர தரிசனத்தை அளிக்கிறார். அருணாசல கிரிவல தரிசனத்தில் முக்கியமானவைகளுள் இதுவும் ஒன்றாகும். இரண்டு அமாவாசைகள் சேர்ந்து வருகின்ற மல மாதத்தில் அடியேன் ஸ்ரீத்ரயம்பகேஸ்வரரை உபாசித்து திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து ஸ்ரீத்ரயம்பகேஸ்வர தரிசனத்தைப் பெறும் பாக்கியம் அடைந்தேன். மும்மலங்களை நீக்கி முக்தி தரும், நல்வழிகளைப் பெற்றுத் தரும் தரிசனம் இது! எனவே, மலமாதத்தில் வரும் இரண்டு அமாவாசைகளிலும், மூன்று பட்சங்களிலும் ஸ்ரீத்ரயம்பகேஸ்வரர் பூஜை, உபாசனை, திருஅண்ணாமலை கிரிவலம் மும்மலங்களையும் நீக்கும் வல்லமையுடையதாகும்.
இம்மூன்றில் “எதைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்?” என்று கூறிய ஸ்ரீஅகஸ்தியர் சற்றே நிறுத்தினார்.
நெடுநேரம் யோசித்தனர்! சிஷ்யர்கள் மீண்டும் மௌனத்தின் பால் அசையாது நின்றனர். இப்பொழுது ஸ்ரீபுலிப்பாணி சித்தர் முன்வந்து ,  “சற்குருவே! தாங்கள் எடுத்துரைத்த மூன்றையுமே நாங்கள் கடைபிடிக்கச் சித்தமாயுள்ளோம். தாங்களே இம்மூன்றுவிதத் திருப்பணிகளை எங்களுக்குள் பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்”.
அகஸ்தியர் : “நன்றாகக் கூறினாய் புலிப்பாணி! பொதுவாக நான் கூறியவற்றில் மூன்றாவதையே அனைவரும் தேர்ந்தெடுப்பர். ஆனால் முதல் இரண்டும் மூன்றாவதின் பலன் என்பதை நீ நன்றாக உணர்ந்தமையால், சரியாகக் கூறிவிட்டாய்!” அதன் பின் ஸ்ரீஅகஸ்திய மஹாப்பிரபு மலமாதத்தின் மஹிமையை எடுத்தியம்பினார்.
தியாகமே மும்மலத்தை நீக்கும்
தியாகம் மிகுந்த வாழ்வுதான் நிலையான, நீடித்த, உண்மையான, சாந்தம், பக்தி நிறைந்த ஆனந்தத்தையளிக்கும். என்றும், எந்நேரமும், தனக்காகவே வாழும் மனிதன் என்று பிறர்க்கென வாழ்வோம் என்று சிந்தனை செய்யத் தொடங்குகிறானோ, அன்றுதான் அவன் உண்மையாக வாழத் தொடங்குகிறான். தனக்கென வாழ்ந்த நேரமெல்லாம் வீணான நேரமே! இவ்வாறு எவருக்கும் உபயோகமற்று வாழ்ந்த நேரமே பல்வேறு பிறவிகளாய்ப் பல்கிப் பெருகும் சுயநலமின்றி பிறருக்காகவே மக்கள் பணியாம் மஹேஸன் பணிகளை, (அன்னதானம், வஸ்திர தானம், உழவாரத் திருப்பணி, மருத்துவ சேவை etc..) பணிகளைச் செய்வோர்க்கு அமிர்த நேர விளக்கங்கள் இறைவனால் இயற்கையாகவே அளிக்கப்படுகின்றன. அவர்களுக்குப் பல்வேறு இறை தரிசனங்களும், திருஅண்ணாமலை தரிசனமும், தானாகவே கனியும்.
மல மாத முதல் பட்சம்
மலமாத முதல் அமாவாசையிலிருந்து முதல் சுக்லபட்சம் ஆரம்பம் ஆகின்றது. மலமாதத்தின் முதல் அமாவாசையே நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்தத் தியாகிகளுக்கு  உரிய தினங்களாகும். பொதுச் சேவை, இராணுவ சேவை, சமுதாயப்பணி, மக்கட் சேவை போன்றவற்றிற்காகக் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான நேர்மையான, அப்பழுக்கற்றத் தியாகிகளுக்கு இந்த முதல் அமாவாசையில் தர்ப்பணம் அளிக்க வேண்டும். புண்ணிய நதிக் கரைகள், கடல் கோயில்கள், கோயில் திருக்குளம், அரசு, ஆல், புரசு, வேம்பு போன்றப் புனித விருட்சங்களின் கீழும் தர்ப்பணம் அளித்தல் சிறப்பான பலன்களைத் தரும்.
நாட்டிற்காக உயிர் துறந்த இராணுவ வீரர்களுக்கு அவர் எந்த மதம், குலம், இனத்தைச் சார்ந்தவராயினும் சரி அவர்களுக்காகத் தர்ப்பணம் செய்து, அவர்கள் பெயரில் சங்கல்பித்து அன்னதானம் செய்தல் பித்ரு லோகங்களில் அவர்களுக்கு உயர்நிலை அளிப்பதோடு, நாட்டின் பேரமைதிக்கும் வழிவகை செய்யும். வீரமரணமுற்ற, இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவி செய்தல் மலமாதத்தின் மிகச் சிறந்த தானமாகக் கருதப்படுகிறது. இதனையே சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
மல மாத இரண்டாவது (கிருஷ்ண) பட்சம்
மலமாதத்தின் இரண்டாவது பட்சமாகிய பௌர்ணமியையடுத்த கிருஷ்ணபட்சத்தில் தெய்வ ஆராதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மலமாதத்தின் மூன்றாம் பட்சம் இரண்டாவது அமாவாசை அன்று தொடங்குகிறது. பல குடும்பங்களில் தங்களுடைய சகோதர, சகோதரிகளை வளர்த்து ஆளாக்குவதற்காகத் தன்னையே தியாகம் செய்து கொண்டு திருமண வாழ்வை நிராகரித்துப் பிரம்மச்சாரிகளாய், கன்னிப் பெண்களாய், தியாகத்தின் சிகரங்களாய் வாழ்ந்தோரும், இன்றும் வாழ்வோரும் உண்டு. மலமாதத்தின் இரண்டாம் அமாவாசைத் திதியில் குடும்பத் தியாகிகளாய் வாழ்ந்த உத்தமப் பெரியோர்களுக்கும், உத்தமப் பெண்களுக்கும் விசேஷமான முறையில் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.  தியாகத்தின் சின்னமே வாழையும் தென்னையும் ஆகும். குடும்பத்தில் தியாகிகளாய் வாழ்ந்து, மலர்ந்த உத்தமர்களுக்கு ஆண்களாயின் வாழை இலையில் பச்சரி பரப்பி (குறைந்தது 3படி) 6 செவ்வாழைப் பழங்கள், 3 முற்றிய தேங்காய் (மட்டைத் தேங்காய்) வைத்து இதன்மேல் தர்ப்பணச் சட்டம் வைத்துத் நீர் வார்த்து தர்ப்பணம் இடவேண்டும். பெண்களாயின் வாழை இலையில் பச்சரிசி பரப்பில் மலை வாழையுடன் 3 மட்டைத் தேங்காய் வைத்துத் தர்ப்பணச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் இடல் வேண்டும். தர்ப்பணத்திற்குப் பின் வாழை இலை, பழங்களைப் பசுவிற்கும், அரிசி, தேங்காய்களை தானமாகவோ அன்றி உணவாக்கி அன்னதானமாகவே இடுதல் வேண்டும். இதனால் குடும்பத் தியாகிகளாகிய பித்ருக்களின் பரிபூரண ஆசி கிட்டுவதோடு, மலமாதத்தின் விசேஷஅம்சங்களும் கூடி மன அழுக்குகளை நீக்குகின்றன, தியாகம், சகிப்புத் தன்மை, பொறுமை, தயாள குணம் ஆகியவை நிறைந்த இறைபக்தியும் ஏற்படும்.
குடும்பத் தியாகிகள் தற்போதும் சிறப்புடன் வாழ்வோராயின் அவர்கட்கு மலமாதத்தின் இரண்டாம் அமாவாசையின் போதும், அடுத்து வரும் சுக்ல பட்சத்திலும் தினந்தோறும் பாதபூஜை செய்வது மிகவும் சிறப்புடையதாகும். குறைந்தது மூன்று தினங்களேனும் அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி ஆகிய தினங்களிலேனும் பாதபூஜை செய்து வெல்லம், வாழைக்காய், வாழைப் பூ, வாழைப் பழம், எள் கலந்த உணவு வகைகளை அவர்களது திருக்கரங்களால் பிறர்க்குத் தானம் செய்தல் வேண்டும்.
ஆனால் பொதுவாக மலமாதத்தின் இரண்டாவது சுக்லபட்சம் அம்மாதத்தில் ஒரிரு நாட்களே அமையும். எனினும் மலமாதத்தின் விசேட பலன்கள் இரண்டாவது சுக்ல பட்சத்தினங்களில், அதாவது அதற்கு அடுத்து வரும் மாதத்தில் அமைந்தாலும், அந்நாட்களுக்கும் அப்பலன்கள் தொடர்கின்றன.
மலமாத சுப கரியங்கள்
மலமாதத்தின் சுக்லபட்சத்தில் தாத்தாவின் பெயரைத் தாங்கியிருக்கும் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இதனால் உபநயனத்தைப் பெறும் சிறுவனுக்கு வாழ்க்கையில் பெறற்கரிய புண்ணிய சக்தி, பித்ருக்கள் ஆசி, தெய்வீக சக்தியைப் பெற்றுத் தரும். மேலும் அவன் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இறையருள் நிரம்பியதாக அமையும். பாட்டியின் பெயர் பெற்றுள்ள பெண்களுக்கு மலமாத சுக்ல பட்சத்தில், அதாவது அமாவாசைக்குப் பின்வரும் 15 நாட்களில் நற்பலாபலன்களைத் தந்தருளும். தீர்க்க சுமங்கலித்வம், சந்ததிவிருத்தி,  ஐஸ்வர்ய கடாட்சங்கள் நிறைந்து அப்பெண் பலரும் போற்றிடப் பெருவாழ்வு பெற்றிடுவாள்.  மலமாத சுக்ல பட்சத்தில் வாஸ்து புருஷ பூஜாவிதிகளைத் தழுவி கிரஹப் பிரவேசத்தினைச் செய்திடலாம். வாஸ்து நியதிகள் கூடிய கிரஹப்பிரவேசத்தின் பலனாய் அந்த இல்லம் மிகவும் இராசியானதாகவும், சகல பாக்கியம் தருவதாகவும் அமையும். பித்ருக்களின் ஆசி எட்டுத் திக்கும் நிறைந்திருக்கும்.
தேய்பிறையில் தன்வந்த்ரி ஹோமம், கணபதி ஹோமம், ஆகியவை ரோக நிவர்த்தியளிக்கும் தேய்பிறையாம் கிருஷ்ண பட்சத்தில் யானை, பசு, மயில், புறா போன்றவற்றிற்கு உணவளித்தல் மிகவும் சிறப்பானதாகும். ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வேண்டிய உதவி செய்தல், ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ உதவி (ஊசி, மருந்து, டானிக் etc.)  போன்றவற்றைத் தக்க மருத்துவ ஆலோசனைப்படி அளித்தல் போன்றவற்றால் நோய் நிவாரணமும், தீர்க்க ஆயுள், மாங்கல்ய விருத்தி கிட்டும். சகல ஆலயங்களிலும், விதவிதமான அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்தல் மிகச் சிறப்பானதாகும்.
எனவே மலமாதம் என்பதை மலங்களை நீக்கும் மாதமென அறிந்து, குறித்த  நல்வழிமுறைகளைக் கடைபிடித்து மலமாதத்தின் விசேடமான பலன்களைப் பெற்று நல்வாழ்வடைவோம். அடைவது மட்டுமின்றி அனைவரும் நற்பேறுபெற நம்மைத் தியாகத்திற்கு உட்படுத்துவோமாக!

காயத்ரீ மந்திரம்

ஸ்ரீகாயத்ரீ மந்திரம் – ஸ்ரீசூர்ய பகவான்
ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை எப்போதும், எங்கும், எவ்விடத்திலும், எந்நேரமும், எவரும் ஜபித்திடலாம். உலக ஜீவன்கள் அனைத்திற்குமே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் அளிக்கப்பட்டது என்றால், மனித சமுதாயத்திற்கே அது உன்னதமான தன்றோ! இன்றைய சூழ்நிலையில் அனைவருமே தினமும் குறைந்தது 10000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதினாற் போதும், திருட்டு, கொலை, கொள்ளை, வன்முறையற்ற சாந்தம் தவழும் சமுதாயத்தை எளிதில் உருவாக்கிவிடலாம்! நான்கு வேதங்கள் காலப்போக்கில் கலியுலகில் மறைவுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்தே மஹிரிஷிகள் அளித்த நான்கு வேதங்களின் சாரமாய் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நாம் பெற்றுள்ளோம். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்கும் சூர்யனுக்கும் என்ன பிணைப்பு? காலை, மாலை, மதியம், மாலை சந்தி வழிபாடுகளிலும் சூரிய உதய, உச்சிஸ்தான, அஸ்தன நேரத்தை ஒட்டியே ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன்?
சூர்ய மண்டலத்தில் ஸ்ரீகாயத்ரீ
சூர்ய மண்டலத்தில் தான் ஸ்ரீகாயத்ரீதேவி உறைகின்றாள். சூர்ய மண்டலங்கள் பல கோடி உண்டு. அவற்றில் ஆதிபாஸ்கர மண்டலமெனப்படும் சூர்ய மண்டலத்தில் தான் ஸ்ரீகாயத்ரீ தேவி தரிசனம் தருகின்றாள். ஸ்ரீமன்நாராயண மூர்த்தி ஹயக்ரீவராகவும் ஏனைய அவதாரங்கள் பூண்டும் பலமுறை வேதங்களை அசுரர்களிடமிருந்து காத்து ரட்சித்தாரன்றோ! வேதங்களின் அருமை, பெருமைகளை அறிந்தோரே வேதங்களை மறைத்து விடுகின்றனரே, கலியுகம் வந்தால் என்னாவது? வேத மந்திர ஒலிகள் தாமே வையகத்தை வாழ வைக்கும். கலியுகத்தில் இதை எப்படிக் காப்பது என்று எண்ணி வருந்திய ஸ்ரீமஹாவிஷ்ணு சர்வேஸ்வரனிடம் தன் கவலையைத் தெரிவித்திடவே, “கலியுகத்தில் வேதத்தின் சாரமாக விளங்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், தாங்கள் ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியாக உறையும் சூர்ய மண்டலத்தில் தான் பாதுகாக்கப்படும் ஏனென்றால், பல யுகங்களிலும் வேதத்தைக் காத்து ரட்சித்தவரன்றோ! ஸ்ரீகாயத்ரீ மந்திரமே ஜோதி வாழிபாடு தானே! அதற்கான ஜோதி ஸ்ரீசூர்யநாராயண மண்டலத்திலிருந்தே உற்பவிப்பதாக!“ என்று பரமேஸ்வரன் அருளிடவே ஸ்ரீபெருமாள் ஆனந்தமடைந்தார்.
ஸ்ரீகாயத்ரீ எழுந்தருளுதல்
சதாசிவ பரம்பிருமத்தின் வலது கண்ணிலிருந்த ஸ்ரீஆதிபாஸ்கர மூர்த்தி, ஸ்ரீசூர்ய பகவானாய்த் தோன்றிடவே ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஸவிதா போன்ற பல ஜோதி மண்டலங்கள் அங்கு தோன்றிடவே, உலகெங்கும் எங்கு எவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், செய்திடினும், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை எவர் துதித்திடினும் முதலில் அது ஸ்ரீஆதிபாஸ்கர மண்டலத்தை அது சென்றடைகின்ற நியதி ஏற்பட்டது.  நான்கு வேதங்களை மீட்டுக் காத்தருளிய ஸ்ரீமஹாவிஷ்ணுவே, நான்கு வேதங்களின் சாரமான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையும்  கட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்று தம்முடைய ஸ்ரீசூர்யநாராயண மண்டலத்திலேயே  ஸ்ரீகாயத்ரீ தேவியை எழுந்தருளச் செய்தார்.
ஸ்ரீகாயத்ரீயின் வடிவங்கள்
ஸ்ரீகாயதீ தேவி, பல வடிவங்களில் காட்சி தருகின்றாள். ஸ்ரீசமஷ்டி காயத்ரீ தேவி என்பது அதில் ஒரு வடிவமாகும். இதனை ஸ்ரீகாயத்ரீ தேவியின் பூரண வடிவென்றும் சொல்வர். சமஷ்டி என்றால் பொதுவானது என்று பொருள். வேதங்களோடு பிறந்தவர் சூர்ய பகவான். இவர் வேறு, நவகிரஹ ஸ்ரீசூர்ய பகவான் வேறு, நமக்கு ஒளிதரும் ஸ்ரீசூர்ய பகவான் வேறு, சூரிய நமஸ்காரத்தை ஏற்கும் ஸ்ரீசூர்ய பகவான் வேறு!  இதேபோல் ஸ்ரீசூர்ய பகவானின் கோடி கோடியான அம்சங்களும் ஸ்ரீஆதிபாஸ்கர சூர்யபகவானிடம் இணைகின்றனர். பலவித ஸ்ரீகாயத்ரீ வடிவங்கள் (ஸவிதா, ஸாவித்ரீ, சரஸ்வதி, சந்தியா etc.) ஸ்ரீசமஷ்டி காயத்ரீ தேவியிடம் ஐக்யமடைகின்றனர். இவற்றோடு பித்ரு லோகங்கள் மற்றும், ஏனைய லோகங்களுக்கும் முதன்மையானவரே சூர்யநாராயணா மூர்த்தி! வேதங்களைக் காத்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியே, கூர்மாவதார மூர்த்தியே ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியாக வேதங்களின் சாரமான ஸ்ரீகாயத்ரீ மந்திரமானது எவ்வித தீய சக்திகளிடமும் சிக்கிடாது ரட்சிக்கின்றார். நம்மை ரட்சிக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையே காத்து ரட்சிப்பதால் ஸ்ரீசூர்யநாராயண சுவாமியின் திக்கு நோக்கி கிழக்கில், மேற்கில் அமர்ந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கின்றோம்.
அதிமைத்ரேய வேதம்
ருத்ராதிகா வேதம்
புனருத்தாரண வேதம்
ஜகதத்ரய வேதம்
விஸ்வத்ராய வேதம்
பஞ்சவவாந்திர வேதம்
பகுஸ்திராந்திக வேதம்
ஜனுபுத்ராதிக வேதம்
சாமத்ரய வேதங்கள்
சௌந்திக ருத்ராதிகம்
என்று வேதத்தில் பல பிரிவுகள் உண்டு. தற்போது நாமறிந்த நான்கு வேதத்திற்கு அப்பாற்பட்டவை இவை! விண்ணுலகங்கள் பலவற்றில் இன்னும் இவை வழக்கத்தில் உள்ளன. உண்மையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நான்கு வேதங்களின் சாரம் என்று சொல்வதே தவறு! நான்கு மட்டுமின்றி, மேலே கண்டுள்ள வேதங்கள் மட்டுமின்றி அனைத்து வேதங்களின் சாராம்சமே ஸ்ரீகாயத்ரீ மந்திரம்.
ஸ்ரீமஹாவிஷ்ணு பலமுறை வேதங்களை அசுரர்களிடமிருந்து மீட்டுத் தந்தாரன்றோ! சர்வேஸ்வரன் அனைத்து வேதங்களின் திரட்சியை காயத்ரீ ஜோதியாகத் திரட்சி செய்து வைத்துப் பின்னர், வேதங்களைப் பல்வேறு தீய சக்திகளிடமிருந்து மீட்டு இரட்சித்த ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு நன்றிக் கடனாக அவர்தம் ஸ்ரீசூர்யநாராயண மண்டலத்திலேயே ஸ்ரீகாயத்ரீ தேவியை ஆவாஹனமாகிடச் செய்தார். இவ்வாறாக ஸ்ரீகாயத்ரீ மந்திர ரகசியங்களை அருமை, பெருமைகளை விவரித்துக் கொண்டே செல்லலாம் இறையருளால்.

ஆன்மீக வினா விடை

அன்பர்களின் ஆன்மீகச் சிந்தனையுள்ள வினாக்களுக்கு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அளிக்கும் விளக்கங்கள்.
வினா : கலசத்தில் (கும்பத்தில்) தேங்காய் வைத்துப் பூஜை செய்கையில் தேங்காயை வைக்கும் முறைகளை விளக்க வேண்டுகிறேன்.
விளக்கம் : குடும்பத்தில் ஸ்ரீவரலட்சுமி விரதத்தில்  மாவிலை வைத்தும், ஸ்ரீசத்யநாராயண பூஜையில் வெற்றிலையை வைத்தும், வருண ஜபத்தில் தர்ப்பையை வைத்தும் தேங்காயை நேராக வைத்துப் பூஜிக்க வேண்டும். உடல் நிலை தேறுவதற்காகவும் ரோக நிவர்த்திக்குமான கலசங்களில் கும்பத்தின் மேல் தேங்காயைப் படுக்கை வசத்தில் வைக்க வேண்டும். பித்ரு சாந்தி கலசங்களிலும் தேங்காயைப் படுக்கை வசமாக வைத்திட வேண்டும். பெண் வர்கத்தினருக்கு (கிழக்கு நோக்கிய கும்பத்தில்) கும்பத்திற்கு இட்து பக்கம் தேங்காய் நுனி (வடக்கு திசை) வருமாறும் ஆண்வர்கத்தினருக்கு (கிழக்கு நோக்கிய கும்பத்தில்) வலது பக்கம் (தெற்கு திசை) தேங்காயின் நுனிவருமாறும் படுக்கை வசத்தில் வைக்க வேண்டும். உச்சாடனப் பிரயோகங்களிலும் (பில்லி, சூன்யக் கழிப்பு) தேங்காயைப் படுக்கை வசத்தில் வைப்பதுண்டு.
வினா : ஒரே கலசத்தில் பல தேவதைகளை ஆவாஹனம் செய்திடலாமா?
விளக்கம் : ஒரு கலசத்தில் ஒரு தேவதையே ஏற்புடையது. ஆனால் ஒரு ஹோம குண்டத்தில் பல தேவதைகளை ஆவாஹனம் செய்திடலாம்.
வினா : வரலட்சுமி, காரடையான் நோன்புக் கயிறுகளை எப்போது கழற்ற வேண்டும்.

பள்ளிகொண்ட தேங்காய்
திருப்பத்தூர் சிவாலயம்

விளக்கம் : பொதுவாக தாமாகவே அவை பின்னமாகும் வரை அணிந்திடுதல் வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் கழற்றக் கூடாது. பின்னமான, கழற்றப்பட்ட நோன்புக் கயிறுகள், மாங்கல்யச் சரடுகளை ஆறு, குளம், (நீருள்ள) கிணறு, கடலில்தான் சேர்க்க வேண்டும். இவற்றைத் தூக்கி எறிதல் கூடாது. பாழுங் கிணற்றைத் தவிர்த்திடுக!
வினா : பெண்கள் தியானத்தில் முன்னேற...
விளக்கம் : கணவனுக்குச் சேவை செய்யும் நற்பண்பினைப் பெற்றால் தான் எளிய முறையில், துரிதமாக தியானம் கைகூடும். கணவனே கண்கண்ட குரு! கணவனுக்கு  முறையாக சேவை செய்து வரும் பெண்களுக்கே தியான நிலைகள் மேம்படும்.

கடுக்கன் மகிமை

கடுக்கன் அணிவதன் ஆன்மீக்ச் சிறப்பு
இன்றும் கூடப் பல கிராமங்களில் ஜாதி, மத பேதமின்றி பல பெரியோர்கள் தலையில் தீட்சை (குடுமியுடனும்), காதுகளில் கடுக்கங்களுடனும் பீடுநடை போட்டு வருவதைக் கண்டு ஆனந்தித்திடலாம். இவ்விரண்டும் சிறந்த ஆன்மீக குணங்களையும், தெய்வீக அருட்சக்தியையும் பெற்றுத் தர வல்லதாகும். அவரவர் நட்சத்திர, ராசி, நாமம், பிறந்த தேதிக்கேற்ப கடுக்கன் கற்களின் நிறம் மற்றும் வடிவம் மாறும். ஒருவர் எந்த ராசிக்குடையவரோ, அந்த ராசிக்குரிய ஆட்சி, உச்ச மற்றும் ஏனைய கிரக அம்சங்கள் அவருடைய வாழ்க்கை முழுதும் ஒட்டி வருவதால் அந்தந்த ராசிக்குரிய கல்லையுடைய கடுக்கன்களை அணிவதால், நற்காரியங்களை எளிதில் நிறைவேற்றுவதோடு, தீய சக்திகள், பகைவர்களின் தாக்குதலினின்று தற்காத்துக் கொள்ளலாம்.
நம்முடைய அவையவங்களே நம் தீவினைகளுக்குக் காரணமாகின்றன. கண்களாலும், காதுகளாலும் தான் உணர்ச்சிகள் பெருகின்றன. கோயில் கோபுர தரிசனம், புனிதமலை, ஆறு, விருட்சங்களின் தரிசனங்கள், பூஜை, அபிஷேக ஆராதனைகள் போன்றவற்றின் மூலம், நற்காரியங்களையே கண்களால் காணப் பழகிடில், கண்களால் கூடும் தீவினைகள் குறையும். வடமொழி, தமிழ்மறையொலிகள், இறை துதிகள், இறை நாமாவளிகள், அஷ்டோத்திர, சகஸ்ரநாம பாராயணத்துதிகள், புராண வசனங்கள், பெரியோர்களின் அறிவுரைகள் போன்றவற்றைக் கேட்டு ஆனந்திக்க வேண்டிய காதுகளால், தீயவார்த்தைகள், பயனற்ற உரையாடல்கள், வாகனங்களின் பெருத்த சப்தங்கள், தேவையற்றப் பேச்சுக்கள் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு உணர்ச்சிகள் கொந்தளித்து அவயவங்களும், உந்தப் பெற்று தீய உபயோமற்ற எண்ணங்களையும், செயல்களையும் உருவாக்குகின்றன.
கண்களை மூடியோ, திரையிட்டோ மறைத்திடலாம். காதுகளை என் செய்வது? தீவினைகள், தீய சக்திகள், எண்ணங்களிலிருந்த உடலைப் பாதுகாக்கக் காதுகளை ஒரு நற்கருவியாய் பயன்படுத்துவதற்குக் கடுக்கன்களாகிய அணிகலன்களே பெரிதும் உதவுகின்றன. இவைதாம் மிகச்சிறந்த ஆன்மீக உபகரணங்களாகும்.
கடுக்கன்களின் அமைப்பு
பெண்களுக்குத் தோடுகள், முக்குத்தி, வளையல்கள் மெட்டிகள் போன்ற தங்க இரத்தின ஆபரணங்களால் அவர்களுக்கு உடலில் தங்கத்தின் தெய்வீக சக்தி உடலில் சேரும். தங்கத்திற்கு மந்திரங்களைக் கிரகிக்கும் சக்தி மிகவும் உண்டு. நவரத்தினங்களுக்குத் தங்கத்தைவிடப் பன்மடங்கு  மந்திர ஆகர்ஷண சக்தி உண்டு. ஒரு சாதாரண மனிதனால் அனைத்து விதமான மந்திரங்களை, வடமொழி, தமிழ் மறைகளை ஓத இயலாது. இது கருதியே அக்காலத்தில்  கோயில்களில் வருடம் முழுதும் வேதபாராயணம், ஹோமம், வேள்வி, போன்றவை நிகழ்த்தப் பெற்றன.
மறையொலி கேட்பீர்
இவற்றைக் கண்ணால் கண்டு, காதால் கேட்டாலே போதும் அம்மந்திர சக்திகள் உடனடியாக நம் உடலில் சேர்கின்றன. ஆனால் அனைத்து மந்திரங்களின் முழுமையான சக்தியைப் பெறுமளவு புனிதமான உடலமைப்பை நாம் பெறவில்லையே என் செய்வது? நாம் அணிந்திருக்கும் ஆபரணங்கள் நம்மைவிட எளிதில் மந்திரங்களைக் கிரகிக்கும் சக்தியுடையன. தங்க ஆபரணத்தை உருக்கித் தட்டி புது நகை செய்திடினும் கூட அதனுள் பதிந்திருக்கும் புனித மந்திரங்களின் தெய்வீக சக்தி மறைவதில்லை. ஏழை, எளியோர்களால், தங்கத்தைப் பெற இயலாதே என் செய்வது? இதற்காகவே நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஏழைகட்கான மாங்கல்ய தானம், மூக்குத்தி, மெட்டிகள் தானம் போன்ற இவற்றை வலியுறுத்தி வருகின்றார்கள்.
கடுக்கனின் தெய்வீக அமைப்பு
கடுக்கனின் அமைப்பானது தீய சக்திகளை வடிகட்டிப் புனிதமான சொற்களின் சக்தியை உட்செலுத்துகிறது. கடுக்கன் அணிவதால் தீய சொற்கள் காதில் விழாதா என்ற வினா எழும். நம்முடைய பூஜா பலன்களைப் பொறுத்துக் கடுக்கனின் தெய்வீக சக்தி மாறுபடும். தீய சொற்கள் காதில் விழுந்திடினும் அதன் வன்மையைக் கடுக்கன்கள் பகுப்பதால் தேகத்தில் தீய சொற்களின் பாதிப்பு தணிக்கப்படும். மேலும் நல் மந்திரங்களின், இறைத்துதிகளின் சக்திகளைப் பல கோணங்களிலும், பிரதிபலிப்பதால், அதன் புனிதமான ஒளிச் சிதறல்கள், தீயசொற்களின் கொடுந்தன்மையைத் தணிக்கின்றன.
இதனால் தான் கோயில்களின் உற்சவ மூர்த்திகளின் புறப்பாட்டின் போது பல்வேறு நகைகளால் அலங்கரித்து பவனிவரச் செய்கின்றோம். இறைமேனியில் தவழும் நகைகளின் பிரகாசத்தை “எட்டுக் கண்ணும், விட்டடிக்குமாறு” எனக் கூறுவதுண்டு. திருஷ்டியைத் தாங்கி வரும் தீயசக்தியுடைய உருவத்திற்கு 8 கண்களுண்டு. உற்சவ மூர்த்தி பவனிவருகையில் அப்பகுதியிலுள்ள கொடிய தீவினைச் சக்திகளை இறை ஆபரணங்களே தம்முள் ஏற்று சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துகின்றன. மேலும் தினசரி 6 கால பூஜைகளின் பலாபலன்களை ஒளிச் சிதறல்களின் மூலம் யாவர்க்கும் சென்றடையுமாறு அருள்பாலிக்கின்றனர். கடுக்கன்களுடன் சுவாமியைத் தரிசிப்போர்க்கு அபரிமிதமான சக்திகள் கடுக்கன்களின் மூலம் சேர்க்கப்படுகின்றன.
கரணதேவதையின் மஹிமை
ஒவ்வொரு அவயவத்திற்கும் ஒரு தேவதையுண்டு. காதுகளில் குடிகொண்டு அருள் பாலிப்பவையே கரணதேவதைகள். இவைகட்குப் ப்ரீதியானவை தோடு, கடுக்கன் போன்ற ஆபரணங்களாகும். கரண தேவதைகள் மிகவும் புனிதம் பெற்றமை யாதலின் அவை புனிதமான தங்கத்தில் உறைந்து அருள்பாலிக்கின்றன.
தோப்புக்கரணம்
காதுகளில் சூரியகிரண நரம்பு ஒன்றுண்டு காது ஓரத்தில் ஆழ்ந்து, பதிந்து கிடக்கும் இதனை நன்கு பயன்படுத்துவதற்காகவே கரணம் தோப்பு என்னும் தோப்புகரண முறையை நாம் பின்பற்றுகின்றோம். தோப்புக் கரணத்திற்கு கால் கட்டை விரல்கட்கும் தொடர்பு உண்டு. யோக சம்பந்தமான தோப்புக்கரண முறையில் இரண்டு கால் கட்டை விரல்களில் மட்டும் உடல் பாரத்தை தேக்கித் தோப்புக் கரணம் போடுவதால், கட்டுக் கோப்பான சுவாசபந்தனமும், பிரம்மச்சர்ய வியாபகங்களும் எளிதில் கைகூடும்! வலது, இடது கரங்களை மாற்றிக் காதுகளைப் பிடித்துக் தோப்புக் கரணமிடுகையில் சூர்ய, சந்திர கலை விகிதம் பக்குவப்படச் சுழுமுனை சுவாசம் மிகுந்து தேக ஆரோக்கியம் மேம்படும். கடுக்கன் அணிந்து தோப்புக் கரணமிடுகையில் இப்பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.
கரண தேவதைக்குப் ப்ரீதி தருகின்ற கடுக்கன்களை அணிவதால் தீர்க்க தரிசன சக்திகள் ஏற்பட்டு எதிர்வரும் துன்பங்களை அறியும் பக்குவமும் கிட்டும். பெரியோர்களை நமஸ்கரித்திடுகையில் இரு காதுகளையும் சற்றே (பின்னால்) பொத்தி “அபிவந்தனம்” கூறி வணங்கிடும் நற்பழக்கமொன்றுண்டு! அதே போல் சாஷ்டாங்கமாகக் கீழ் வீழ்ந்து வணங்கிடுகையில் வலது, இடது காதுகளைப் பெரியோர்களின் பாதங்களிலும் பூமியிலும் உரசுவதுமுண்டு. இதனால் கடுக்கன்கள் பெரியோர்களின் ஆசியை எளிதில் கிரஹித்து நமக்களிக்கின்றன.  கடுக்கன்களில் எண்ணெய் இறங்கிடில் உடனடியாகச் சுத்தம் செய்திட வேண்டும். காலம் தாழ்த்திடலாகாது. தீய சக்திகளைப் பகுத்து வடிகட்டுகையில் சிலகொடிய தீயசொற்களின் பாதிப்பு எண்ணெய் போல் தங்கும்.
பௌர்ணமியில்....
 கடுக்கன் அணிந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலால் பல மூலிகைகளின் சக்தியைப் பரிசாகப் பெற்றிடலாம். எவ்வாறு?

காயத்ரீ முத்திரை

ஸ்ரீகாயத்ரீ முத்திரை
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூரண பலன்களை யாவரும் அடையும் பொருட்டு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள், தம் சற்குருநாதர் சிவகுரு மங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடமிருந்து தம் குருகுலவாசத்தில் கற்றுணர்ந்த ஸ்ரீகாயத்ரீ முத்திரைகளை இத்தொடரில் அளிக்கின்றார்கள்.
கபால முஷ்டிக சுழற்சி
வழக்கம் போல் பத்மாசனம் இட்டு அமர்ந்து மூச்சை இலகுவாக விட்டுப் பழகிய பின்னர் அடுத்த காயத்ரீ தபஸிற்குத் தயாராகிறோம். கைகளைப் படத்தில் உள்ளபடி மடக்கித் தலைக்கு மேல் ஏற்றிட வேண்டும். இடது கைவிரல்கள் வலது கைக்குள்ளும் வலது கைவிரல்கள் இடது கை மேலும் இருக்கும்படி கைகளை மடக்கி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து தலையை நேராக வைத்துக் கொண்டு அத்தலையின் மேல் கைகளைப் பிணைக்க வேண்டும். இப்போது காயத்ரீ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே (மனதிற்குள்) கண்களைச் சுழலவிடவேண்டும். எப்படியெனில் முதலில் மடக்கிய கைகளை, முழங்கையின் முட்டி நுனி, தெரியும் படி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் கண்களால் மேல்நோக்கிப் பார்க்கும்போது விழியோரங்களில் முழங்கை முட்டியின் வெளிப்புறம் தெரியவேண்டும். இந்நிலையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். இடது முழங்கை நுனியில் ஆரம்பித்துப் பார்வையை மெதுவாகக் கை ஓரங்களில் ஓட்டி வலது முழங்கை நுனியை அடைந்திடுக! பின் அங்கிருந்து வலது முழங்கைவழியே பார்வையை இறக்கி கைகள் வழி தோளுக்குக் கொணர்ந்து – முகத்தின் கீழ்ப்பகுதி – கழுத்து வழியாக மீண்டும் இடது தோளுக்குச் சென்று அங்கிருந்து இடது கை வழியாக இடது முழங்கைக்கு செல்ல வேண்டும். பின்னர் தொடர்ச்சியாக இதே பாதையில் சுழன்று சுழன்று வரவேண்டும்.

கபாலிக முஷ்டிக சுழற்சி

1. பத்மாசனம் அப்படியே தொடர வேண்டும்.
2. நிமிர்ந்து அமர்ந்திருக்க வேண்டும்.
3. மனம், காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
4. கண்கள் சுழலும்போது தலை அசைதல் கூடாது.
5. குறைந்தது 5 நிமிடங்கள் செய்திடுக!
பலன் : கபாலச் சூட்டைத் தனித்து மூளையின் வளர்ச்சிக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். ஞாபகமறதி மறையும், நினைவுத் திறன் மேம்படும்.
நேத்திர தரிசனம்
இந்த புதிய காயத்ரீ தபஸ் முத்திரையையும் மேற்கண்ட கபால முஷ்டி சுழற்சி தபஸுடன் சேர்த்து செய்வது நல்லது. பத்மாசனத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை இரு தொடைகளிலும் ஊன்றி, கண்களைக் கொட்டாமல் நேராக கண்களுக்கு எதிரில் உள்ள ஒரு பொருளை உற்று நோக்க வேண்டும். மிக முக்கியமான நியதி என்ன வென்றால் கண் இமைகள் மூடக் கூடாது. இமைகளில் நீர் தளும்பும், அது நன்மைக்கே. இவ்வாறு செய்தால் பார்வையில் தீட்சண்யமும், செய்யும் காரியங்களில் ஒருமித்த திறன்பாடும் (Concentration) வேலைத் திறன்பாடும் அதிகரிக்கும். நேத்திர தரிசனத்தைத் தனித்துச் செய்யக்கூடாது. கபால முஷ்டிக சுழற்சி தியானத்துடன் சேர்த்துச் செய்திடல் வேண்டும்.

வில்வ திரிராத்ரி

வில்வ த்ரிராத்ரி விரதம்
வில்வதள பூஜை மிகவும் சக்தி வாய்ந்த பூஜையாகும். இப்பூஜையை முறையாகச் செய்து வந்தால் ப்ரத்யட்சமான பலன்களைக் கண்கூடாகக் காணலாம், தக்க ஆன்மீக வழிகாட்டியின் துணையுடன். வில்வ தளத்தில் மூன்று முதல் இருபத்து ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களுடன் பல்வகையுண்டு. சென்னை அருகே கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் சிவாலயத்தில் மிகவும் அபூர்வமான எட்டு, பன்னிரண்டு, பதினாலுக்கும் மேற்பட்ட தளங்களையுடைய அபூர்வமான வில்வ மரங்களைக் கண்டு ஆனந்தித்திடலாம். பல சிவலோக தேவதைகள் வாழ்கின்ற இத்திருச் சிவவில்வ மரங்களிலிருந்து இறைவன் திருமேனிக்காக மட்டுமே, குறித்த பூஜா விதிகளைக் கடைபிடிப்போரே இவற்றைப் பறித்திடலாம்.
பொழுது போக்கு, சுயநலம், விளையாட்டிற்காகக் கூட இத்தளங்களைப் பறித்திடல் ஆகாது. இம்மரங்கள் சிவனின் சொத்து என்பதைப் பரிபூரணமாக உணர்த்திட வேண்டும். வில்வதளங்களில் பல முடிச்சுகள் இருக்கும். அவற்றைக் களைந்து காம்புப் பகுதி, சிவ லிங்கத்தின் மேல் படுமாறு அர்ச்சிக்க வேண்டும். இவை பகுதி லிங்கத்தின் மேல் படுமாறு பூஜிப்பதற்கு “தான சுக அர்ச்சனை” என்று பெயர். இதனால் தான தர்மங்களில் கிட்டும் சுக போக பலன்கள் மறைந்து விடும், அதாவது இறைவனிடமே ஐக்யமாகி விடும். லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வித்யாபலன், தைர்ய சக்தி, யோக முக்தி போன்றவற்றைத் தன்னுள் அடக்கியதே வில்வதள பூஜையாகும். துளஸியைப் போல் வில்வத்தைப் பறிப்பதற்கான நேர கால நியதிகள் உண்டு.
வில்வ பூஜையின் பொது நியதிகள்
1. எக்காலத்துமே இலவசமாக வில்வதளத்தைப் பெறலாகாது! பணமோ, பொருளோ கொண்டுதான் வில்வத்தைப் பெற்றிட வேண்டும்.
2. கோயில்களில் உள்ள வில்வ இலைகளைப் பறித்தால், தகுந்த தொகையை உண்டியலில் செலுத்துவதோடு மட்டுமல்லாது அவற்றை இறைவனுக்குத்தான் அர்ப்பணிக்க வேண்டும், சுயநலத்துடன் வீட்டிற்கு எடுத்தவரலாகாது.
3. ப்ரசாதமாக மட்டும் வில்வத்தைப் பெற்று எடுத்து வரலாம்.
4. “பூக்குடல்” சேவையாக இறைப் பூஜைக்காக வில்வத்தை பறித்துத் தருவது தவறில்லை. வில்வ மரத்தின் மீது ஏறும்போதும் அதனை ஸ்பர்சிக்கும் போதும் ஆயிரமாயிரம் சிவலோக தேவதைகள் உறையும் மிகவும் பவித்ரமான, புனிதமான மரமே வில்வ மரம் என்பதை உணர்ந்திடுக.
5. கூரிய நகங்களால் கூட வில்வங்களை பறிக்கலாகாது, நக அழுக்கோடு எக்காரணம் கொண்டும் வில்வத்தைப் பறிக்கலாகாது. நகங்களில், எதிர் வினைகளும் தீயசக்திகளும், தேகத்தின் பாவ அம்சங்களும் நக அழுக்காகச் சேர்கின்றன.
6. குறித்த தினங்களில் மட்டும் நகங்களை வெட்டி அடிக்கடி மருதாணி இட்டுக் கைகளைப் புனிதப்படுத்துவதற்கான நல்வழியினைக் கடைபிடிக்க வேண்டும். கை விரல்களின் மூலமாகத்தான் பெரும்பாலான பாவச் செயல்கள் நிகழ்கின்றன. தான தர்மங்களாம் நற்காரியங்கள் கூடவிரல் நுனிகளால் தான் செய்யப்படுகின்றன, நல்லதும் கெட்டதும் நடப்பதும் நம் கையில்தான் இருக்கிறது, எனவே அடிக்கடி மருதாணி இட்டுக் கைகளைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
7. வில்வம், துளஸி, ருத்ராட்சம் ஆகியவற்றை அணிந்திருந்தாலும் இவை இல்லங்களில் இருந்தாலும் மாதவிலக்கு போன்ற தீட்டு சம்பந்தமான குற்றங்கள், முறையற்ற காமச்செய்கைகள், பொய், பொறாமை, அதர்ம எண்ணங்கள்/காரியங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
ஆனால் கலியுகத்தில் இது சாத்யமானதா? இவற்றிற்கு பிராயச்சித்தமானதா? இவற்றிற்கு பிராயச்சித்தமாகத்தான் வில்வத்ரிராத்ரி விரதம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
வில்வ த்ரிராத்ரி மஹிமை
பூலோக மக்களின் கர்ம வினைகளைத் தம்முள் தாங்கி அவர்களுக்கு அருள்பாலித்து வந்த வில்வமரங்களும், வில்வமர தேவதைகளும் தங்களுக்கு நற்கதி அளிக்க வேண்டுமென சர்வேஸ்வரனை வேண்டின. ப்ரபஞ்சத்தில் உள்ள பலகோடி ஜீவன்களின் கர்ம வினைகளைத் தாங்கி, வந்தமையால் வில்வ த்ரிதளங்களும் வில்வமர தேவதைகளும் மனச் சோவுற்றன. சர்வேஸ்வரனும் தம்முடைய அதிகார நந்தியை அழைத்து, “வில்வ பூஜையின் இலக்கணங்களை நன்று அறிந்த நந்தீஸ்வரா! நீ வில்வ தேவதைகளுக்கு நல் வழிகாட்டுவாயாக” என்று அருள் ஆணையிட, ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரரும் அவர்களுக்கு நல்விளக்கங்களை அளிக்கலானார்.
“முந்தைய கலியுகமொன்றில் பாவங்களும் அதர்மமும் பல்கிப் பெருகிடவே பூலோகத்தைக் கண்டு அஞ்சி சூரிய, நட்சத்திர தேவர்கள் பூமியை விட்டு ஒதுங்கிச் சென்றனர். இதனால் பூலோகமே இருண்டு விட்டது.
அருணாசலத்தில் தான் நிவாரணம்
அதுவரையில் சூரிய ஒளியின்றி ஒருநாள் கூடப் பூலோகம் இருந்ததில்லை. இருளில்தானே கொலை, கொள்ளை, வன்முறை போன்றவற்றிற்க்கான துர்சக்திகளின் ஆதிக்கம் வலுக்கின்றது. “முப்பது முக்கோடி தேவர்களும் எம்மைச் சார்ந்த பல நந்தீஸ்வரர்களும் ஈஸ்வரனைக் காண விரைந்தோம். ஆனால் அதற்குள் கலியுகத்தின் அதர்மச் சக்தி பல்கிப் பெருகி எங்குமே எதிலும் இருள் எங்களைச் சூழ்ந்தது. ஆனால், அருணாசலமாகிய திருஅண்ணாமலையில் மட்டும் சிறிய ஜோதி பிரகாசித்து கொண்டிருந்தது. கரிய இருளில், யாம் பெற்றிருந்த தெய்வீக சக்திகளெல்லாம் எம்முள்ளேயே மறைந்து கிடக்க யாது செய்வதென்று அறியாமாலேயே அந்த ஜோதியைச் சுற்றி வந்தோம். அதற்குள் மூன்று இரவு பகல்கள் கடந்துவிட்டன. நான்காம் நாள் அந்த ஜோதி விரிந்துப் பெருகி பிரபஞ்சத்தையே ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தியது”
“அம்மூன்று தினங்களிலும் எங்களையும் அறியாமல் வில்வாஷ்டகத்தைத் துதித்தவாறே அந்த ஜோதியே வலம் வந்தோம். நான்காம் நாள் காலையில் தான் எங்களுக்கு முன்னர் ஆயிரமாயிரம் மஹிரிஷிகளும், சித்தர்களும் யோகியரும் வில்வாஷ்டகத்தைத் துதித்தவாறே திருஅருணாசல ஜோதியை வலம் வரக் கண்டோம். இருளில் யாம் எதையும் உணரவில்லை!” வில்வ தளங்களை அருணாசலமலைக்கு அர்ச்சித்தவாறே அவர்கள் சென்றமையால் அம்மூன்று தினங்களிலும் கலியுகத்தின் அதர்ம துர்சக்திகள் எங்களைத் தீண்ட முடியவில்லை. அன்றிலிருந்து வருடத்தில் மூன்று தினங்களை வில்வ த்ரிராத்ரி தினங்களாக சர்வேஸ்வரன் அறிவித்தார். அம்மூன்று தினங்களிலும் ப்ரபஞ்சத்தில் சிவலோகங்களில் உள்ள இறைப் பெரியோர்களாம் சித்தர்கள், மஹரிஷிகள், ஞானியர், யோகியர், வில்வ தளங்களால் திருஅருணாசலத்தை அர்ச்சித்தவாறே சூட்சும சரீரங்களில் மலையைச் சுற்றி வருகின்றனர். “இன்றும் இம்மூன்று தினங்களில் திருஅண்ணாமலை உச்சி குறித்த அமிர்தநேரத்தில் மலையுச்சியில் மேகங்களால் சூழப்படுவது கண்டு இன்புறலாம். சிவலோக மஹரிஷிகளின் பூஜையைக் குறிப்பதே இது. இம்மூன்று தினங்களில் அவர்கள் செய்யும் பூஜா பலன்களினால் வில்வ தேவதைகளாகிய நீங்கள் சுமக்கின்ற (பிறருடைய) கர்மவினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்”.
“இது மட்டுமின்றி இம்மூன்று தினங்களில் பகலில் சிறிது வில்வப் ப்ரசாதம் கலந்த அன்னதானம், இரவில் வில்வாஷ்டகம் துதித்தவாறே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவோர்க்கு மஹரிஷிகளின் வில்வதள பூஜையின் மகா சக்திகளின் பலன்கள் கிட்டுவதோடு பல அரிய வில்வதளங்களின் தரிசனமும் வில்வ தள பூஜை செய்யும் பாக்யமும் கிட்டும். வில்வ த்ரிராத்திரிகளாகிய மூன்று தினங்களிலும் திருஅண்ணாமலைக்குப் பல உண்மையான காரணங்களால் வர முடியாதோர் வில்வத்தைத் தலவிருட்சமாக உள்ள சிவ ஸ்தலங்களில் வில்வ ப்ரசாதம் கலந்த அன்னதானம், வில்வாஷ்டக கூட்டுப் பாராயணம், வில்வ மரத்திற்கு அரைத்த மஞ்சள், சந்தனம் பூசி குங்குமம் வைத்து 108 முறை அடிப் ப்ரதட்சிணம் செய்திடில் வில்வ தள விருட்சங்களில் பதிந்திருக்கும் வில்வ சம்ரட்சக ஒளிக் கதிர்களின் தெய்வ சக்திகளைப் பெற்றிடலாம்”. சென்னை அருகே கோவூரில் உள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலின் நந்தவனமானது சிவலோக வில்வ தேவைதளின் அருட்கடாட்சம் நிறைந்த ஆலயமாகும். தேவ லோகங்களில் கூட கிட்டாத இவ்வில்வ தளங்களைக் கோயில் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கோ வியாபாரத்திற்காகவோ எடுத்துவரலாகாது. ஆனால் சிறிதளவு இறை ப்ரசாதமாக் பெற்றுவருவதில் தவறில்லை. இதற்கும் தகுந்த தொகையை கோயில் உண்டியிலில் செலுத்துதல்  உத்தமமாகும். வில்வ த்ரிராத்ரியின் மூன்று தினங்களிலும் இரவு நேர அர்த்த ஜாம, மற்றும் வில்வாஷ்டகத்துடன் கூடிய வில்வ பூஜை அன்னதானம், பள்ளியறைப் பூஜைக்கு பால் அளித்து, அப்பால் ப்ரசாதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திட விசேஷமான பலன்கள் கிட்டும்.
பலன்கள் :- பலருக்கு பல வருடங்களாகவே வெளியில் சொல்ல இயலாத பல குற்ற உணர்வுகள் பல வருடங்களாக மனதில் பதிந்திருக்கும். இவ்வெண்ண அழுத்த விளைவுகளாலும் பல கூடுதல் துன்பங்கள் ஏற்படும். இக்குற்ற உணர்வுகள் தணிந்திடவும் முறையற்ற, தகாத பால் உணர்வுகள் மறைந்திடவும்  வில்வ த்ரிராத்ரி பூஜை நல் வழிகாட்டுகிறது. தாது வருடத்தில் 31.5.191996 முதல் 2.6.191996 வரை மூன்று தினங்களுக்கு வில்வ த்ரிராத்ரி விரதம் அமைகிறது.

அமுத தாரைகள்

அமுத தாரைகள்
1. அற்புத காயகல்ப சஞ்சீவி மருந்து :-  உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க எளிய வழிமுறைகளை நம் நல்வாழ்விற்கெனச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். அவற்றில் ஒன்று காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் – இவை மூன்றையும் முறைப்படி உண்ணுவதே!
காலையில் இஞ்சி : காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் காய்ச்ச வேண்டும். நீர் அரை டம்ளராகச் சுண்டியபின் அதை வடிகட்டிப் பருக வேண்டும். இஞ்சி நீர் அருந்திய ஒரு மணி நேரம் கழித்து வேறு ஏதும் உண்ணலாம்.
மதியம் சுக்கு : சுக்கை சுண்ணாம்பு தடவி வெயிலில் நன்றாகக் காயவைத்து மேல் தோலைச் சீவி, பின் அதைப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டு. அப்பொடியில் ¼ அல்லது ½ டீஸ்பூன் மதியம் சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து ஒன்று அல்லது இரண்டு உருண்டைகள் உண்ண வேண்டும். பின்னர் எப்போதும் போல் உணவு உண்ணலாம்.
மாலையில் கடுக்காய் : கடுக்காயை நன்கு வெயிலில் காயவைத்து கொட்டையை (விதை) நீக்கி மேல் தோலைப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொடியை வெயில் காலத்தில் மோரிலும், குளிர் காலத்தில் தேனிலும் கலந்து மாலை நேரத்தில் உண்ண வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்குறித்த முறையில் செய்து வந்தால் அவர்களை எந்த நோயும் அணுகாது, மிகமிக அற்புதமான காயகல்ப மருந்து இது!.
 2. பணத்தை எப்போதுமே மார்பின் இடது பக்கத்தில் நமது இதயம் உள்ள பகுதியில் தான் வைக்க வேண்டும். சட்டையின் பின்பகுதியிலுள்ள உள்பாக்கெட்டிலும் வைத்துக் கொள்ளலாம். ஸ்ரீலக்ஷ்மி தேவியின் அம்சமான பணத்தை வயிற்றுப் பகுதிக்குக் கீழோ, பின்பக்கம் உள்ள பாக்கெட்டிலோ வைப்பது தவறு. அதேபோல் தோல் பொருட்களுடன் சேர்த்து வைப்பதால் பணத்திற்குத் தோஷம் ஏற்படுகிறது. ஆகவே தோலால் செய்த பெல்ட், பர்ஸ் போன்றவற்றில் பணத்தை வைக்கக் கூடாது.
3. கோலம் போடுவதற்குப் பச்சரிசி மாவையே பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போடவே கூடாது. பச்சரிசி மாவால் கோலமிட்டால் எறும்புகளும், பூச்சிகளும் உண்ணுகின்றன. ஆகவே தினந்தோறும் நம்மை அறியாமலே இறைவன் படைப்பில் உள்ள மற்ற ஜீவராசிகளுக்கு உணவிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அதேபோல பல வண்ணப் பொடிகளையும், பெயிண்டையும் கோலமிடப் பயன்படுத்துவது தவறு. கண்களுக்கு அழகாகத் தெரிந்தாலும், அது கோலமிடுபவருக்கு வறுமையைத்தான் தரும். கடன் தொல்லைகளும் அதிகரிக்கும். மாறாக பச்சரிசி மாவால் கோலமிட்டால் செல்வம் பெருகும். குடும்ப ஒற்றுமையும் வளரும்.
4. செடிகளில் இருந்து மலர்களைப் பறிக்கையிலும், மலர்களைத் தொடுக்கும் போதும் “சாந்த்யை ஸ்ரீரிஷ்யசிருங்கர் பத்ன்யை நம:” என்னும் எளிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். கடைகளில் வாங்கும் போது, பூக்களைத் தலையில் சூடும்போது இம்மந்திரத்தைச் சொல்வது சிறப்பானது. பூக்களுக்குரித்தான இந்த எளிய மந்திரத்தைத் தவறாது ஜெபித்து வருவது பெண்களின் சுமங்கலித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்க வழிசெய்கிறது.
5. விபூதி , குங்குமம் போன்ற இறைப் பிரசாதங்களை வலது கையில் பெற்றவுடன் இடது கைக்கு மாற்றிப் பின்னர் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர். இது மிகவும் தவறானபழக்கம். விபூதி, குங்குமத்தை வலது கையின் கீழே இடதுகையை வைத்துத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். உடனே வலது கைமோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். அதன்பின் இடது கைக்கு மாற்றிக் கொள்ளலாம் . இதுவே சரியான முறை.
6. கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு : தினந்தோறும் கோயில்களில் இரவில் நடைபெறும் சிவபாத பூஜையில் கர்பிணிப் பெண்கள் இறை நாமங்களையோ, தோத்திரங்களையோ ஜபித்தவாறே கலந்து கொள்வது நல்லது. அவ்வாறு பங்கேற்றுப் பின்னர் பசுவிற்கு வாழைப்பழம் போன்ற கனிகளைப் பிரசாதமாக அளித்து வந்தால், பிரசவம் நன்கு நடைபெறும்; உத்தமக் குழந்தைகளைப் பெற்றடுப்பர். மேலும், அவர்கள் கோயிலில் பள்ளியறை நைவேத்தியப் பாலைப் பலருடன் பகிர்ந்து இறைச் சிந்தனையுடன் அருந்தி வர, எவ்வித வலியுணர்வுமின்றிப் பிரசவம் இனிது நடைபெறும்.
7. தலைமுடி வெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல், நகம் வெட்டுதல் போன்ற காரியங்களை நாள், நட்சத்திரம், கிழமை, திதி பாராது நம் மனம் போன போக்கில் எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால், நமக்கு நாமே தீய விளைவுகளை உருவாக்கிக் கொள்கிறோம். அதற்கான விதிமுறைகளை நம் நல்வாழ்விற்கென ஸ்ரீகுண்டலினி மஹரிஷி அளித்துள்ளார்.
தலைமுடி, நகம் வெட்டுதல் மற்றும் சவரம் செய்யக் கூடாத நட்சத்திரங்கள் : பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம் பூராடம், பூரட்டாதி.
நாட்கள் : செவ்வாய், வெள்ளி மற்றும் அவரவர் ராசிக்கு உரித்தான சூன்ய திதி நாட்கள்.
தலைமுடி வெட்டக்கூடாத மாதங்கள் ; ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி.
ஸ்ரீகுண்டலினி மஹரிஷி அருளிய மேற்கண்ட விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் தீய சக்திகளின் தாக்குதலினின்று எளிதாக நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஆனால் இறைவனுக்குக் காணிக்கையாகவோ, பிரார்த்தனையாகவோ முடியைச் செலுத்துவதற்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது.
8. அறுவை சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவோர் பூச நட்சத்திரத்தன்று சாமந்திப் பூவினால் மாலை கட்டி முறையாக ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது அனந்தபத்மநாம சுவாமிக்கோ அணிவித்து வணங்கினால் எத்தகைய வியாதியாக இருந்தாலும் அறுவை சிகிச்சையில் அற்புதமான முறையில் விரைவில் குணம் காணலாம். அதேபோன்று மருத்துவர்களும் ஒவ்வொரு பூச நட்சத்திரத்தன்றும் சாமந்திப் பூ மாலை கட்டி ஸ்ரீரங்கநாதருக்கோ, அனந்தபத்மநாப சுவாமிக்கோ அணிவித்து வணங்கி வந்தால் அவர்களை நாடிவரும் நோயாளிகள் அனைவரும் வியத்தகு முறையில் குணமடைவதைக் காணலாம். குறிப்பாக, அறுவை சிகிச்சைகள் வெற்றியைத் தரும்.
9. பொதுவாக தேய்பிறையில் வரும் செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் வைத்தியம் குறிப்பாக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் வளர்பிறை நாட்களில் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முல்லைவன நாதரையும், அருள்மிகு கர்ப்பரட்சாமிகையையும் வணங்கிப் பின்னர் செய்து கொள்வது மிக்க நலம் பயக்கும்.
10. கும்பகோணம் அருகேயுள்ள கூத்தனூர் என்னும் ஊரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கலைவாணி “ஸ்ரீபால வித்யா சரஸ்வதி” ஆவாள். குழந்தைகள், சிறுவர்கள் கல்வியில் மேன்மைபெற இந்த அம்பிகை அருள்புரிகின்றாள். பெற்றோர்கள், ஸ்ரீபால வித்யா சரஸ்வதியை முறையாக அபிஷேக, ஆராதனை, தான தர்மங்களுடன் வழிபட்டுவரத் தங்கள் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவதைக் காணலாம்.
11. நோயாளிகளைப் பார்க்கச் செல்கிறீர்களா? உடல் நோயால் வருந்துவோரைப் பார்க்கச் செல்லும் போது வெறும் கையுடன் போகாமல் ஏதேனும் பழம், பிஸ்கட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வர். அவ்வாறு செல்லும் போது அவர்கள் நோய் தீர ஓர் அற்புத மருந்தையும் கையுடன் கொண்டு செல்லலாம், பொய்யாப் பிள்ளை சித்தர் என்ற மஹாஞானி அருளிய முறையைக் கடைப்பிடித்தால்! பழவகைகளில் ஆப்பிள், எலுமிச்சை போன்ற சில பழங்கள் ஓங்காரத்தை (ஓம் என்னும் மந்திரத்தை) தம்முள் அடக்கும் ஆற்றல் பெற்றவை. நோயாளியைக் காண்போகும் முன், ஒரு ஆப்பிள் பழத்தை ஆள்காட்டி விரலாலும், கட்டை விரலாலும் பற்றி 1008 முறை “ஓம்” எனும் மந்திரத்தை மனதில் முறையாக ஓதி, விரல்களின் மேலும், அடிப்பகுதியிலும் வாயால் ஊத வேண்டும். பின்னர் அந்தப் பழத்தைப் பிறர் கைபடா வண்ணம் தாமரை இலையில் முழுமையாகச் சுற்றிக் கொண்டு, செல்லும் வழியெல்லாம் ஓங்காரத்தை மனதினுள் தியானித்தாவாறே சென்று நோயாளியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு மந்திர உருச் சக்தி பெற்ற பழத்தை நோயுற்றவர் காலையில் உண்டால், மாலையில் அவரது நோய் நீங்குவது உறுதி!
12. பரம்பொருளாம் சிவபெருமானின் திருநடனத்தின்போது சிந்தும் வியர்வைத் துளிகளே உலகின் பல பாகங்களில் சந்தன மரங்களாய் மலர்ந்தன. உலகில் உள்ள ஒவ்வொரு சந்தன மரத்திலும் சப்தரிஷிகளில் ஒருவரின் சக்தி அரூபமாக வியாபித்துள்ளது. எனவே சந்தனத்தை எப்போதுமே நன்கு அரைத்து, முதலில் இறைவனுக்குச் சார்த்திய பின்னரே எதற்கும் அதனைப் பயன்படுத்த வேண்டும். சந்தன மரத்தில் சப்தரிஷிகள் உறைவதால், சந்தனம் அரைக்கும் போது அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்ற ஒரு ரிஷிகளின் நாமங்களை ஜெபித்தவாறே அரைக்க வேண்டும். அல்லது “ஏழுமுனி ஏற்றருளணும் என் குருவே!” என்ற எளிய தமிழ் மந்திரத்தை உச்சரித்தவாறே அரைப்பதும் சிறந்தது.  சந்தனத்தை அரைத்த 12 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் முழுப்பலன் கிட்டுவதில்லை.
13. சூன்ய திதிகள் – விளக்கம் :- ஒவ்வொரு ராசிக்கும் சில தகாத சூன்ய திதிகள் உண்டு. அந்தந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு உரித்தான சூன்ய திதிகளில் திருமணம்/புதுமனை புகுதல், வியாபாரத் துவக்கம் போன்ற எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது. கோயில் தரிசனம், பூஜை, இறைவழிபாடுகளை தாராளமாகச் செய்யலாம்.

இராசி

 சூன்ய திதிகள்

மேஷம்

 சஷ்டி

ரிஷிபம்

சதுர்த்தி, திரயோதசி

மிதுனம்

பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடகம்

சப்தமி

சிம்மம்

திருதியை, சஷ்டி, நவமி, திரயோதசி

கன்னி

பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம்

பிரதமை, துவாதசி

விருச்சிகம்

தசமி

தனுசு

துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம்

பிரதமை, திருதியை, துவாதசி

கும்பம்

சதுர்த்தி

மீனம்

துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

சூன்ய திதி நாட்களில் கூட்டாக விஷ்ணு சகஸ்ரநாமம், கால பைரவர் துதி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் சூன்ய திதிகளின் தீய விளைவுகளைத் தணிக்கலாம்.
14. கணவன்மார்களின் கடமை :- பொதுவாக நாம் உறங்கும் போது நாம் விடும் மூச்சுக் காற்றையே மீண்டும் சுவாசிக்காமல் இருக்க வேண்டுமெனில் நாம் படுத்து உறங்கும் இடம் 10 அடி அகலமும் 12 அடி நீளமும் உள்ள, நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும். கணவனும், மனைவியும் உறங்கும் போது ஒருவர் மூச்சுக் காற்றை மற்றொருவர் சுவாசிப்பது தவிர்க்க இயலாததொன்று, ஆனால் கணவனின் ஆயுள் வளர்ந்து, மனைவியின் ஆயுள் குறைகிறது. காரணம் தன்னைவிட வயதில் இளையவர்களின் மூச்சுக் காற்றை சுவாசிப்பதால், ஒருவரது ஆயுள் வளரும்! அதே சமயம், தன்னைவிட வயதில் மூத்தவரின் சுவாசக் காற்றை சுவாசித்தால் ஆயுள் குறையும். இதற்குப் பரிகாரமாக, ஒவ்வொரு கணவனும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் , சூரிய ஹோரையில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9)  அல்லது சிம்ம லக்னத்தில் மனைவியின் மாங்கல்யத்திற்குக் குங்குமம் இட்டுவந்தால் மனைவியின் ஆயுள் வளரும். தத்தம் மனைவியருக்குத் தங்களால் ஆயுள் பங்கம் ஏற்படாதிருக்க, இதை ஒவ்வொரு கணவன்மாரும் அவசியம் செய்துதான் தீர வேண்டும்.
15. தாலிச்சரடு மாற்றும் முறை :- வளர்பிறை சதுர்த்தியில் புதிய நூல் சரட்டிற்கு மஞ்சள் தடவி அதனை நிழலில் காயவைக்க வேண்டும். பஞ்சமி திதியில் கோயிலுக்கு எடுத்துச்சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாங்கல்யக் கயிற்றை கையில் ஏந்தியபடி அம்மனை தசமி திதி வரை தினந்தோறும் வலம் வரவேண்டும். தசமியன்றே கையில் தாலிச்சரடுடன் வன்னி மரத்துப் பிள்ளையாரை 108 முறை வலது வந்து வணங்கிப் பின்னர் வீட்டுக்கு வந்து (குறைந்தது 2 சுடராவது இருக்கும்படி) குத்து விளக்கினை ஏற்றி அதையே ஈசனாக தியானித்து அதன் முன் தாலிச்சரடினை மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லா மாதங்களிலும் வளர்பிறையில் மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்ளலாம் என்றாலும் நவராத்திரி சமயத்தில் விரதமிருந்து, பூஜைகள் செய்து தசமியில் மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. பழைய தாலிக் கயிறுகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாது. பால் உள்ள மரத்தில் கட்டிவிட வேண்டும் அல்லது கடலிலோ, ஓடும் நதியிலோ சேர்த்துவிடலாம்.

16. பஞ்ச தீப எண்ணெய் :- தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் மற்றும் பசுநெய் கலந்த எண்ணெயே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும். இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் துன்புறுவோர் தங்கள உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவர். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த, கண்கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாம் தேவியை மகிழ்விக்க பஞ்சமி திதியில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச தீபம் (5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால், அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.
17. கோமுக நீரின் சிறப்பு :- கோமுகம் என்பது கோயில்களில் இறைச் சன்னதிகளில் இருந்து அபிஷேக நீர் வெளிவரும் பகுதியாகும். கோயிலுக்குச் செல்வோர், இதுவழியே வெளிவரும் அபிஷேக தீர்த்தத்தை ஏதோ அழுக்கு நீர் என எண்ணித் தவிர்த்து விடுகின்றனர். உண்மையில் அதில் அடங்கியுள்ள  ஆன்மீக சக்திகளை அறிந்தால், கோமுகத்தில் ஒரு சொட்டு நீரைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள்! பல கோடி யுகங்களாக மஹான்களால் பூஜிக்கப் பெற்று, இறை மூர்த்திகளின் மேல் பட்டு வழிகின்ற அபிஷேக தீர்த்தம் சிவபெருமானின் சிரசில் குடியிருக்கும் கங்கையை விடப் புனிதமானது. தன்னில் நீராடும் பக்தர்களின் பாவச் சுவையை ஏற்பதால் மாசுற்ற தன் தேகத்தைப் புனிதப்படுத்த கோமுக நீரைத்தான் கங்காதேவி தன் சிரவில் தெளித்துக் கொள்கிறாள் என்னும்போதும் கோமுக தீர்த்தத்தின் சிற்ப்பை என்னென்பது! பரணி அல்லது மகம் நட்சத்திரத்தன்று பெறும் கோமுக தீர்த்தத்தை ஒரு சிறுபாட்டிலில் எப்போதும் வைத்து இருப்பது நல்லது. இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அதை அருந்தினால், சொல்லொணாப் பாவங்கள் கூட உடனே நீங்கும் அற்புத நிலையைப் பெறுவர்.
18. பெண்களுக்கான செவ்வாய் தோஷப் பரிகார முறைகள் :- சென்னை வடபழனி முருகன் கோயிலில் செவ்வாய் பகவானுக்குத் தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படும் பெண்கள் செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை மணி 6-7, மதியம் 1-2, இரவு 8-9) செவ்வாய் பகவானுக்கு செம்பால் (குங்குமம் கலந்த பச்சரிசியைப் பாலில் இட்டால் அதுவே செம்பால்) அபிஷேகம் செய்து ஏழைகளுக்குச் சிவப்பு வண்ண ஆடைகளை தானமளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் விலகும். வடபழனி செல்ல இயலாதோர், செவ்வாய் பகவான் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள மற்ற கோயில்களிலோ அல்லது ஏதாவது பாடல் பெற்ற முருகன் கோவிலிலோ மேற்குறித்த அபிஷேகம், ஆராதனைகளைச் செய்து வரலாம்.
19. “தேவி கனிகள்” என போற்றப்படும் எலுமிச்சம் பழங்களை பூஜைக்காக மட்டுமின்றி எப்போது நறுக்கினாலும் “ஓம் தும் துர்கையே நம:” எனக்கூறி துர்க்கா தேவியை மனதினுள் தியானித்தவாறே கீழிருந்து மேலாகத்தான் நறுக்க வேண்டும். இதுவே சரியான முறை.

வடசாவித்திரி விரதம்

வடசாவித்ரீ விரதம்
ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி இம் மூன்று தெய்வ ரூபங்களும் சேர்ந்ததே “சமஷ்டி காயத்ரீ தேவியாவாள்”. பொதுவாக அனைத்து இல்லறப் பெண்மணிகளின் ஒரே நல்லெண்ணம் தன் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்பதேயாகும். ஆனால் இது எங்கும் எப்போதும் சாத்யமாகுமா? அதுவும் கலியுகத்தில் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் பார்க்கும் பாங்கு மறைந்து வருகிறதே என் செய்வது! எந்த ஒரு கணவனும் பொதுவாக நற்பண்புகளுடனும், பக்தியுடனும், பரிசுத்தமான, பவித்ரமான ப்ரஜையாக தன்னை வைத்துக்கொள்ள முடியவில்லையே! ஆண்களை விட இல்லறப் பெண்களே அனைத்துத் துன்பங்களையும் வெளிக்காட்டாது சகித்துக் கொண்டு இல்லற வாழ்க்கையைச் சாந்தமாக நடத்துகின்றனர். இருப்பினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தாலும் பணிவு, அடக்கத்துடன் சிகரமாக விளங்கும் ஒரு பெண்மணி கூட கால வர்த்தமான மாறுதல்களால் கணவனைச் சபிக்க வேண்டிய, கோபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது. இதற்கு என்ன பரிஹாரம் தேட முடியும்!
கலியுகத்தில் இத்தகைய நிலைகள் ஏற்படும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த மஹரிஷிகள் பல அருந்தவங்களை மேற்கொண்டு பெறற்கரிய வரங்களைப் பெற்றுக் குறித்த சில பூஜைகள், விரதங்கள் பண்டிகைகளை வரையறுத்து அந்நாட்களில் அவற்றைக் கடைபிடிப்போர்க்கு அவ்வரிய வரங்களின் பலாபலன்களை அள்ளித் தருகின்றனர். இவ்வகையில் கலியுகத்தில் கணவனுடைய குணங்கள், வறுமை, இல்லறச் சூழ்நிலைகள் போன்றவை காரணமாக மனைவியானவள், தன் கணவனை நிந்திக்க, சபிக்க, உள்ளூற மனதிற்குள்ளாவது கடிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுவதுண்டு. ஆனால் இவை நிச்சயமாகக் கணவனைப் பாதிக்கும். “என்ன செய்தாலும் இவருக்குத் திருப்தியில்லையே, ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்” என்று வேதனைப்பட்டால் அதன் விளைவுகள் கணவனைத் தாக்கும், மனைவியின் வருத்தத்தில் நியாயமிருந்தால்! ஆனால் நொந்த மனோ நிலையில் கணவனைச் சினந்து கடிந்து கொண்டு பின்னர் “அடடா, நாம் இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டியதில்லையே” என்று தெளிவதால் அதன் வேகம் தணியப் போவதில்லை, வார்த்தைகளைக் கொட்டியது கொட்டியதுதான், வில்லை விட்டுக் கிளம்பிய அம்பைப் போல..
ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் பரிபூர்ண ரூபமே ஸ்ரீகாயத்ரீ தேவியாவாள். ஸ்ரீசாவித்ரீ தேவியே, இல்லறப் பெண்மணியின் குணாதிசயங்களை முறைப்படுத்துபவளாதலின், ஸ்ரீசாவித்ரீ தேவியே, கலியுகத்தில் மேற்கண்ட (இல்லறப் பெண்மணிகளின்) துன்பங்களைத் துடைக்க இமாலயத்தில் அருந்தவத்தை மேற்கொண்டவள். எத்தகைய தவம் தெரியுமா? பித்ரு லோகமிருக்கும் வடதிசை நோக்கி இடதுகாலில் நின்று ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு கங்கா ஜலத்தில் ஸ்ரீகாய்த்ரீ மந்திரத்தை ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கே, அர்ப்பணித்து அர்க்யம் அளித்துத் தவமிருந்தாள். எத்தனையோ யுகங்களுக்கு அருந்தவம் தொடர்ந்தது.
ஸ்ரீகாயத்ரீ லிங்கம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் நெற்றிக் கண் திறந்த போது நிகழ்ந்த புராண சம்பவங்கள் பல உண்டு. சினத்தின் உச்சியில் தான், (நக்கீரர் சம்பவத்தைக் கொண்டு), சிவன் நெற்றிக் கண்ணைத் திறப்பதாகப் பலர் தவறாகக் கருதுகின்றனர். பல அனுக்ரஹங்களைப் பெற்றுத் தரும் பாவனையிலும் சிவன் நெற்றிக் கண்ணைத் திறப்பதுண்டு. ஒரு முறை ஆதிபராசக்தி, இறைவனுடன் இணைந்து சிவசக்தி ஐக்யஸ்வரூபத்தை வேண்டித் தவமிருந்து அத்ரி மஹரிஷியின் பத்னியாம் அனுசூயா தேவியிடம் தெய்வீகப் பாடங்கள் பயின்று உமையொரு பாகமாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அவதாரம் பெற்றாள்! ஆனால் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலம் பெற்றும் பார்வதி தேவியின் அவதார அம்சங்கள் பரிபூரணமானதாக உமையவளே உணர்ந்தமையால், முக்கண் கொண்டு ஆதிசிவன் தரிசனம் தருகையில் மற்றோர் அவதாரம் பெற வேண்டினாள். அப்போது ஆதிசிவன் “எம் முக்கண்ணின் அக்னி ஸ்வரூபத்தை உன்னால் தாங்க இயலாது. எனவே யாம் நெற்றிக் கண்ணைத் திறந்திடுகையில் முக்கண்களின் ஜோதிப் பிழம்புகளால் “ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி என்ற மூன்று தேவிகளாய் அவதாரம் பெற்றிடுவாய்., ஸ்ரீகாயத்ரீ லிங்க வழிபாடு பரிபூரணம் அடைகையில் மூன்றும் சேர்ந்த “சமஷ்டி காயத்ரீ” தேவியாய் அவதாரம் பூண்டிடுவாய் என்று அருள் பாலித்தார். சிவபெருமான் அருளியபடி முக்கண்ணாய் அவர் பரிணமிக்கையில் அவருடைய திரிநேத்திரங்களிலிருந்து வெளிவந்த மூன்று ஜோதிப் பிழம்புகள் ஸ்ரீகாயத்ரி லிங்கமாக உருப்பெற்றன. இதனையே உமையவள் வழிபட்டிட ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி என்ற (சிவபெருமானின் முக்கண் ஜோதி அம்சங்களாய்) மூன்று தேவியர் ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திலிருந்து ஆதிபராசக்தியின் அம்சமாய் அவதரித்தனர்.
இம்மூன்று தேவியரும் கிழக்கு, வடக்கு, மேற்கு திசைகளிலிருந்து ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தை வழிபடுவர். மூவரும் ஒன்றுள் ஐக்யமாகி ஸ்ரீசமஷ்டி காயத்ரீ தேவியாய் நாம் இன்று வழிபடும் ஐந்துமுக ஸ்ரீகாயத்ரீ தேவியாய் தரிசனம் தந்து அனைவரையும் மகிழ்வித்தனர். ஸ்ரீகாயத்ரீ மண்டல ரகசியங்களை விளக்கங்களைப் பிறகு காண்போம்.
ஸ்ரீசாவித்ரீ தேவியே இமாலயத்தில் இந்த ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தையே அர்க்ய வழிபாட்டுடன் பூஜித்து தவமிருந்தாள். ஸ்ரீகாயத்ரீயின் மூன்று அம்சங்களைத் தோற்றுவித்த ஸ்ரீத்ரிநேத்ரதாரியாக சிவபெருமான் காட்சியளித்து வடக்கு நோக்கித் தவமிருந்த ஸ்ரீசாவித்ரீ தேவிக்கு வேண்டும் வரங்களை அளித்தார். “ஸ்ரீசாவித்ரீ தேவி! கலியுகத்தில் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற அரிய நிலை மறைந்து வரும். நற்பண்புகள் வாய்ந்த குணவதியாய்ப் பிரகாசிக்கும் பத்னிமார்கள் கூடத் தங்கள் கணவன்மார்களை நிந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கு யாம் வடசாவித்ரீ விரதம்தனை இப்போது அளிக்கின்றோம். இதுவரையில் இது தேவபூஜையாகவே இருந்தது. ஸ்ரீவசிஷ்டரின் பத்னியாம் அருந்ததிக்கு ஸ்ரீவசிஷ்ட மாமுனியே இதனை போதித்தார். எனவே ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியே தம்பதி சகிதம் நேரில் வந்து தக்க விளக்கங்களையளிப்பர்” என்று கூறி அருள்பாலித்தார்.
ஸ்ரீவசிஷ்டரும், அருந்ததியும் எளிய தம்பதியினர் உருவில் வந்து வடசாவித்ரி விரத மஹிமையினை விளக்கினர்.
விரத முறை : வடசாவித்ரீ விரத தினத்தன்று இல்லறப் பெண்மணிகள் அவரவர் வழக்கிற்கேற்ப “கச்சை” (மடிசார், ஆந்திர, வங்காள முறை etc..)  முறையில் புடவையணிந்து (இம்முறை சுவாச கலைகளை மேம்படுத்தும்) வடக்கு நோக்கியமர்ந்து சிவலிங்கத்திற்கு கங்கை/காவிரி போன்ற புண்யநதி நீரால் அர்க்யம் வார்த்துப் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். குறைந்தது 108 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி இரு கரங்களிலும் கங்கை/காவிரி நீரை நிரப்பி விரல்களின் வழியே லிங்கத்தின் மேல் நீரைச் சொரிவதே அர்க்யமாகும். தேவையான அளவு கங்கை/காவிரி நீர் கிட்டாவிடில், சுத்தமான நீரில், கங்கை/ காவிரி நீர் சேர்த்து அரைத்த சந்தனத்தையும் கரைத்து அர்க்யம் நீரைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு மாங்கல்யமும், பூணூலாக கருதப்படுகிறது. ஜாதி, இன பேதமின்றி ஆண்பாலார் அனைவரும் பூணூல் அணியலாம். காலப்போக்கில் இந்நற்பழக்கம் மறைந்துவிட்டது.  அனைவரும் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை ஜபித்திடலாம். இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது. 108 முறை அர்க்ய பூஜை செய்த பிறகு, அபிஷேக நீரைத் தனியே எடுத்து அதில் மாங்கல்யத்தை (கழற்றாமல்) கையில் ஏந்தியபடியே  நனைத்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை தியானிக்க வேண்டும். இனிப்பு அப்பம், தேங்காய் பாயசம் நைவேத்யம் செய்து ஜாதி, சமய, இன பேதமின்றி ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திட கணவனை நிந்தித்த குற்றங்களுக்குப் பரிஹாரம் கிட்டும்.. இவ்வரிய விரதத்தைப் பெற்றுத் தந்தது ஸ்ரீவடசாவித்ரீ தேவி. ஸ்ரீகாயத்ரீ தேவியின் மூன்று அம்சங்களும் ஒன்றாய்த் திகழ்பவள்
அடியார் : குருதேவா! வீட்டில் பல சூழ்நிலைகளால் சிவலிங்கத்திற்கு அர்க்ய பூஜை செய்ய இயலாவிடில்?
சற்குரு: தெற்கு பார்த்த சிவலிங்கம் உள்ள கோயில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்திட வேண்டும் (உம். சென்னை- கோயம்பேடு- ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் ஆலயம்). வடசாவித்ரீ விரதத்தை பவானியில் ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள “ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு” அர்க்ய பூஜைகளுடன் நிறைவேற்றுவது மிகச் சிறப்பானதாகும். ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூவரும் பூஜித்த மிகவும் அற்புதமான காணக் கிடைக்காத லிங்கமிது! இம் மூன்று தேவியரோ அல்லது ஏதேனும் ஒரு தேவி எழுந்தருளியுள்ள கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு மேற்கண்ட அர்க்ய பூஜையைச் செய்திடலாம்.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம – நிவாரண சாந்தி
நித்யகர்ம – வினை வேரறுக்கும் வழி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக!

நாள்

 தானம் (நித்ய கர்ம)

 பலன் (நிவாரண சாந்தி)

1.6.1996

குலோப்ஜாமூன் தானம்

கண்ணில் நீர் வழிதல் குணமாகும்

2.6.1996

கோதுமை அல்வா தானம்

கணவனுக்குப் பகைவர்களிடமிருந்து வரும் துன்பங்கள் தணியும்.

3.6.1996

ஓர் ஏழைக்குக் கண் பரிசோதனை, கண்ணாடிக்கு உதவி செய்தல் –

மறந்து போன/ முக்கியமான காரியம்/தகவல்/ தஸ்தாவேஜு நினைவிற்கு வரும்.

4.6.1996

குள்ளர்களுக்கு (Dwarf) தானம்

குழந்தைகரள கோலால் அடித்த பாவம் தீரும்.

5.6.1996

அனாதை மிருகங்களுக்கு உணவிடுதல் (Blue Cross)

தொத்து நோய் அண்டாது.

6.6.1996

பெருமாள் கோயில் புறாவிற்கு உணவு

பதவி உயர்வு கிட்டும்.

7.6.1996

கிளிக்கு உணவு, பழம்,நெல் அளித்தல்

சயன சுகம்.

8.6.1996

ஊனமுற்றோர்க்கு தானம்

பகை தீரும்.

9.6.1996

நாத்தனார்க்கு மல்லிகைப்பூ அளித்தல்

குடும்பச் சுமை/ சச்சரவுகள் தீரும்.

10.6.1996

 கணவனின் உடைகளைத் தானமளித்தல்

அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.

11.6.1996

மூன்று சிறுமியர்க்கு (9 வயதிற்குள்) புஷ்ப தானம்

 மன சஞ்சலங்கள் தீரும்.

12.6.1996

முறையாகச் செய்த குங்குமத்தை 60 வயதிற்கு மேற்பட்ட தம்பதியர்க்கு அளித்து நமஸ்கரித்தல்

 கண்ணேறு தீரும்.

13.6.1996

பிரதோஷ நாயகரைத் தாங்கி வருவோர்க்குப் பால் தானம்

படுத்த படுக்கையில் உள்ளோர் மீள்வர்.

14.6.1996

வாளி தானம்

பெரியோர்களின் ஆசி கிட்டும்.

15.6.1996

கருணைக் கிழங்கு கூடிய கருவேப்பிலை சாத தானம்

பக்கத்து வீட்டுக்காரர்களால் வருத் துன்பந் தீரும்.

16.6.1996

கோயில் குள மீன்களுக்குப் பெரியிடுதல்

 நம்பிக்கைத் துரோகிகளால் வரும் கொடுமை தணியும்.

17.6.1996

அண்ணிக்குப் பாத மஞ்சள் அளித்தல்

 எதிர்பாராத நற்செய்தி வரும்.

18.6.1996

அனுமார் கோயிலில் திரட்டுப்பால் தானம்

 குழந்தைகளின் பயம் தீரும்.

19.6.1996

“ச” என்ற பெயரில் (சந்தானம், சந்தான கிருஷ்ணன், etc) உள்ளோர் எலுமிச்சை சாத தானம் செய்திடுக

குழந்தைகளுக்கு வரும் ஆபத்துக்கள் தணியும்.

20.6.1996

குள்ளர்களுக்கு (Dwarf) தானம்

பாட்டிமார்களின் சாபம் தீரும்.

21.6.1996

கண்ணாடி அணிவோர் தேங்காயெண்ணை தீபமிட்டு சூர்ய பூஜை செய்துவர

கண் ஒளி பெருகும். இன்று இப்பூஜை மிகவும் விசேஷமானதாகும்.

22.6.1996

எருமைக்கு அகத்திக் கீரையளித்தல்

 தடிப்பு நோய் தீரும்.

23.6.1996

இன்றைய தானத்திற்கு “பெண்கள் பூப்படைய..”

என்ற தலைப்பிலுள்ள விளக்கத்தைக் கண்டிக!

24.6.1996

இன்று சிதம்பரத்தில் நான்கு கோபுரங்களையும் பதினாறு முறை வலம் வர.....

 நோயற்ற வாழ்விற்கான நல்வழிகள் கிட்டும்.

25.6.1996

குழந்தைகளுக்கு “கலா கலா” (இனிப்பு/உப்பு) பட்சண தானம்

கக்குவான் , அம்மை போன்ற தொத்துவியாதிகள் தீண்டாது.

26.6.1996

மலை மீதுள்ள நரசிம்மருக்கு பானக தானம்

எதிரிகளிடமிருந்து வரும் துன்பங்கள் தணியும்.

27.6.1996

துளஸி வளர்த்துப் பெருமாள் கோயிலுக்கு/நந்தவனத்திற்கு தானமளித்து அதனை நீருற்றி பராமரித்தல்..இதனை இன்று தொடங்கிடவும்

 திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

28.6.1996

 அரசு+வேம்பு இணைந்த விருட்சங்களுக்கு பன்னீர், மஞ்சள், குங்கும அபிஷேகம் மஞ்சள் கயிறினை துவாதசி தோறும் கட்டிவர,

காதல் தோல்விகளால் பாதிக்கப்பட்டோருக்கு நன் முறையில் திருமணமாகும்.

29.6.1996

இன்று மாங்கல்ய அபிஷேகம் ....விளக்கங்களை

“மாங்கல் அபிஷேகம்” தலைப்பின் கீழ்க் காண்க.!

30.6.1996

ஏழை (கோயில்) சிற்பக் கலைஞர்களுக்கு எண்ணெய், சீப்பு, கண்ணாடி மங்கலப் பொருட்களை அளித்தல்..

 கைக் கெட்டாதது வாய்க்கு எட்டும்.

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனத்தில் பல தெய்வ மூர்த்திகளின் கல்யாண உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. “இறைவன் ஒருவனே” என்று உணரும் உத்தம நிலையை அடைவதற்கு மனிதன் பலவிதமான அறவழி முறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே, அதுவே உள்ளும் வெளிலும் உள்ளதென்பதை உணர்ந்து உய்க்கும் முன், மனிதன் மூன்று மாயைகளைக் கடந்தாக வேண்டும்.

1. தான் பிறப்பெடுத்தது தன் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல, மஹேஸன் சேவையாக தன் உடல், பொருள், ஆவிதனை, தான தர்மங்கள் இறைப் பணிகள் மூலமாகப் பிறருடைய நலத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்ய முன் வருதல்.
2. ஜாதி, இன, குல, மத வேறுபாடுகளைக் கடப்பது.
3. ஆண், பெண் இன உணர்ச்சிகளைக் கடந்து, மனிதன், மனித நிலையல்லாத வேறு ஜீவன்கள் அனைத்திலும் உறைவது ஓர் இறைவனே என்று தெளிவது.
இம்மூன்று உத்தம நிலைகளையடைவதற்காகத்தான் பல்வேறு பூஜை, வழிபாட்டு முறைகள், ஹோமம், யாகம், வேள்வி, தான தர்மங்கள், விரதங்கள், மூர்த்தி, தீர்த்த, தல தரிசனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நியாயமான, நியாயமற்ற ஆசாபாசங்களில் உழலும் மனிதனை ஆன்மீக வழியில் முறைப்படுத்தும் உபகரணங்களே விரத பூஜை விதானங்கள். இவற்றைக் கடைப்பிடித்தால் மட்டும் ஆசைகள் நிறைவேறிடுமா?
விரத, பூஜா வழிபாடுகளின் முக்யத்துவம்
1. தார்மீக ரீதியான விருப்பங்களைப் பூர்த்தி செய்தால் (சில நியாயமான ஆசைகள் பூர்த்தியானால் தான் மனம் அடங்கும்).
2. அதர்மமான ஆசைகளைக் களைதல்.
3. மேற்கண்ட இரண்டும் கிட்டிடில் மூன்றாவதாக “இறைவன் நிர்ணயிப்பது தான் நமக்குக் கிட்டும்” என்ற மனத்திருப்தியை எளிதில் அடைந்திடலாம்.
காம்யரீதியான அதாவது லௌகீகமான பிரார்த்தனைகளுடன் கூடிய விரத, பூஜா, வழிபாடுகளுக்கு இவைப் பொருந்தும். ஆனால் சத்சங்க ரீதியாக, பலர் ஒன்று சேர்ந்து செய்கின்ற பூஜைகளுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு. எவ்வித பலாபலன்களையும் நாடாது, ஜாதி, மத , பேதமின்றி அனைவரும் ஒன்றுகூடி ஆற்றுகின்ற விரத, பூஜா, வழிபாடுகளுக்கு ஆயிரமாயிரமாய்ப் பலன்கள் வர்ஷிக்கும்! இவ்வகையில் ஆனித்திருமஞ்சன பூஜை மேற்கண்ட உத்தம நிலைகளை எளிதில் தரவல்ல மிகமிக எளிமையான பூஜையாகும். ஆனித் திருமஞ்சன பூஜா முறைகள் பல உண்டு! அவற்றில் தாது வருடத்திற்குரிய, சித்தபுருஷர்கள் அருள்கின்ற பூஜா முறையை ஈண்டு அளிக்கின்றோம்.
பெற்றோர்களுக்குப் பாத பூஜை
ஆனித் திருமஞ்சனத்தன்று பெற்றோர்களுக்கு காலை மதியம் மாலை மூன்று, வேளைகளிலும் பாதபூஜை செய்திடல் விசேஷமானதாகும். சொல்லொண்ணா பல கர்ம வினைகளைத் தீர்க்கும் எளிய (ஆன்மீக) மாமருந்தே ஆனித் திருமஞ்சன பாத பூஜையாகும்.
1. பெற்றோர்களை முறையற்ற முறையில் நடத்துதல்.
2.பெற்றோர்களைச் சரிவரக் கவனிக்காது மேல்நாட்டுக் கல்வி, தொழில் போன்றவை காரணமாக செல்வம், கல்வியில் மேன்மையடைவதில் ஈடுபட்டு கண்கண்ட நடமாடும் தெய்வங்களாம் பெற்றோர்களின் மனதை வருத்தியோர் பலருண்டு.
3. மாற்றாந் தாய் ஸ்வீகாரம், மனைவி, மாமனார், மாமியாரின் தூண்டுதல் காரணமாகப் பெற்றோர்களை வதைத்தல்.
4. செல்வாக்கு, அந்தஸ்து, பணம், வந்தவுடன் பெற்றோர்களை ஏளனமாகப் பேசுதல்/நடத்துதல்
5. இறக்குந் தருவாயில் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து அதனால் மன வருத்தம் பெற்றோர்.
6. பல சூழ்நிலைகளால் பெற்றோர்களுக்கு ஈமக்கிரியைச் செய்ய இயலாதோர்.,
செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறுதல் போன்ற பலவற்றிற்கான பரிகாரங்களைத் தரவல்லதே தாதுவருட ஆனித்திருமஞ்சன பூஜையாகும். இது மட்டுமா! நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்வதால், அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த கர்மவினைகள் தீரும் பரிஹாரங்களும் அதில் அடங்குகின்றன.
பாத பூஜை முறை : - பெற்றோர்களின் பாதங்களை சுத்தமான நீர் (கங்கை/காவிரி போன்ற புண்ய தீர்த்தத்தையும் சேர்த்து) பன்னீர் கொண்டு கழுவித் (தாமே அரைத்த) சந்தனம், மஞ்சள் பூசிக் குங்குமம் இடவேண்டும். தரையில் பச்சரிசி மாவுக் கோலமிட்டு அதன் மேல் ஒரு தட்டினை வைத்திடல் வேண்டும். வெள்ளித் தட்டு விசேஷமானது! மரத்தட்டு மேலும் உன்னதமானது. இதனை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ கொண்டு அலங்கரித்து பெற்றோர்களின் திருப்பாதங்களை இத்தட்டில் வைத்துப் பூஜையைச் செய்திடுக! பெற்றோர்களின் பாதங்களுக்கு பூ, அட்சதை (முழுமையான அரிசி மணிகளாலான) நாணயங்கள் கொண்டு சிவபுராணம், புருஷ ஸூக்தம், அபிராமி அந்தாதி போன்றவற்றைத் துதித்து அர்ச்சித்திடுக! மனதிற்குத் திருப்தியாகும் வண்ணம் எம்முறையில் வேண்டுமானாலும் பெற்றோர்களின் திருப் பாதங்களை ஆராதித்திடுக! பெற்றோர்களுடன் நடந்த வாக்குவாதம், சண்டை, ஏசல்கள், இழைத்த கொடுமைகள் அனைத்தும் நினைவிற்கு வரும். இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆழ்ந்த உள்ளத்தில் பதிந்து கிடக்கும் குற்ற உணர்வுகள், தவறுகள் பீறிட்டுக்கொண்டு வெளிவந்து மனதைச் சுத்தப்படுத்தும். இத்தகைய பூஜை முறைகளால்தான் மனம் விரைவில் தூய்மையடையும். இவற்றை முறையாகச் செய்து வந்தால்தான் ஆரம்ப தியான நிலைகள் கைகூடி வரும்! பாதபூஜை முடிந்த பின்னர் 12 முறை அவர்களை வலம் வந்து வணங்க வேண்டும். மூதாதையர்களின் கைத்தடி, கண்ணாடி, பேனா, பூஜை சாமான்களையும் அலங்கரித்துப் பெற்றோர்களின் அருகில் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், புஷ்பம் சார்த்தித் துதித்து வலம் வந்திட்டால் பித்ருக்களின் ஆசியும் கூடி வரும்! அப்பப்பா, இவ்வெளிய பூஜை முறை எத்தகைய எவ்வளவு (பெருமளவில்) அனுக்ரஹங்களைப் பெற்றுத் தருகின்றது!
1. காலையில் பெற்றோர்களை ஸ்ரீபிரம்ம ஸ்வரூபர்களாகவும்.,
2. மதியத்தில் ஸ்ரீவிஷ்ணு ரூபிகளாகவும்,
3. மாலையில் சிவாம்சமாகவும் பாவித்து மூன்று வேளைகளிலும் பாதபூஜை செய்திடுக.
எவ்வாறு வெள்ள நீரோட்டம் அனைத்துக் கழிவுகளையும் அடித்துச் செல்கின்றதோ, அதுபோல் இப்பாத பூஜையை உள்ளன்போடு செய்திடில், வாழ்க்கையில் இதுகாறும் எவ்வளவோ வருடங்களாகச் (பெற்றோர்களுக்கு பாதபூஜை) செய்யாதிருந்தமையால் விளைந்த பெருமளவு கர்மவினைகளை ஒரேயடியாகக் கழித்து நல்வழிகாட்டும்.
காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் பாதபூஜைக்குப் பின் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவதரிசனம் பலன்களைப் பெருக்கி துரிதப்படுத்தும் ஸ்ரீபிரம்மா மூர்த்தியை தரிசிக்க இயலாதோர் ஸ்ரீசரஸ்வதியையேனும் தரிசித்திடல் வேண்டும். இதுவும் இயலாவிடில் ஸ்ரீவிஷ்ணுவின் நாபி தரிசனம் அல்லது ஸ்ரீவிஷ்ணுவிற்குத் தாமரைப் பூ சாற்றுதலாலும் ஸ்ரீபிரம்மா தரிசன பலன்களைப் பெறலாம்.
இத்தகைய பாதபூஜையுடன் ஓம்கார வடிவப் பிரஹாரமுடைய கோயில் தரிசனம், தானதர்மங்களைச் செய்திடல் சிறப்பானதாகும். (உ.ம் திருச்சி உய்யக்கொண்டான் மலை) பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் ஸ்ரீபிரம்மாவைச் சேவித்திடலாம். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவன் கூடியுள்ள திருக்கோயிலெனில் மிகச் சிறப்புடையதாம். கர்பக்ரஹத்தின் பின் புறப் பிரஹாரத்தில் சில கோயில்களில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அல்லது அன்னம், வராகம் சேர்ந்த ஸ்ரீசிவன் அல்லது ஸ்ரீமஹாவிஷ்ணு இருப்பதைக் கண்டிடலாம். கர்ப்பக்ரஹத்தின் பின் உள்ள மூர்த்தி ஸ்ரீமஹாவிஷ்ணுவாக உள்ள கோயில்களில் இப்பூஜை, தான தர்மம் செய்தலும் சிறப்புடையதே! ஆனித் திருமஞ்சனத்தன்று நீங்கள் உங்கள் பெற்றோருக்குப் பாதபூஜை செய்வதுடன் உங்கள் குழந்தைகளையும், (சங்கோஜமின்றி) உங்களுக்குப் பாதபூஜை செய்யும் நற்பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நம் குழந்தைகள் செய்கின்ற பாத பூஜையை ஏற்பதற்கு நம்மை நன்கு புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்குப் பாதபூஜை செய்கையில் ஆண்கள் காதில் கடுக்கன்கள் அணிந்து பூஜித்தல் பூஜையின் பலன்களைப் பூர்ணப்படுத்தும்.
அடியார் : குருதேவா! தாய், தந்தையரில்லாதோர் என் செய்வது?
சற்குரு : தந்தையோ/தாயோ இல்லாவிடில் தாய்க்கு/தந்தைக்குத் தனித்துப் பூஜை செய்திடுக! பெற்றோர்கள் இல்லையெனில் வீட்டில் உள்ள வயதானவருக்கே (தாத்தா, பாட்டி) முதல் வாய்ப்பு! ஏனெனில் வம்சாவழியினரின் மூலமாகவே பித்ருக்களின் ஆசியை எளிதில் பெறமுடியும். நீங்கள் மட்டும் உங்கள் பெற்றோர்களுக்குப் பூஜை செய்தால் அது சுயநலம்! பலருக்கும் இதன் சிறப்பினை விளக்கி அனைவரையும் இதில் ஈடுபடுத்திடுக! இப்பூஜை முறைகளை எடுத்துக் கூறியும் தெளிவாக உணர இயலாத கல்வியறிவு இல்லாத பல ஏழைக் குடும்பங்கள் உண்டு. அவர்களிடம் நன்கு விளக்கி, “ஆனித்திருமஞ்சனத்தன்று அவரவர் பெற்றோர்களை வணங்க வேண்டும்” என்று எளிய நியதியையேனும் உணர்த்திடுக! மேல்நாடுகளில் பணிபுரிவோர் இங்கு வாழும் பெற்றோர்களைக் கவனிப்பதேயில்லை. அவர்களுக்குத் தக்க பிராயச்சித்தமாக அமைவதே ஆனித் திருமஞ்சன பூஜை.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெற்றோர்களுக்குப் பாதபூஜை செய்ய இயலாதோர் பெற்றோர்களை பாதக்குறடுகளை (மரக் காலணிகள்) அணியவைத்து, அதனை எடுத்துச் சென்று பூஜித்திடுக. காசி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் கிடைக்கும் “விஷ்ணு பாதம்” போன்ற பாதங்கள் பொறித்த செப்பு, வெள்ளித் தட்டுகளை பெற்றோர்களின் பாதங்களாக பாவித்து பூஜித்திடலாம்.

மாங்கல்ய அபிஷேகம்

ஒவ்வொரு குடும்பப் பெண்ணிற்கும் பவித்ரமானது மாங்கல்யமாகும். மாங்கல்யத்தை மட்டும் பூஜித்து உத்தம நிலைகளையடைந்த பெண்மணிகள் பலருண்டு. ஒரு பெண்மணி எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் தன் மாங்கல்யத்தின் மீது பக்தி செலுத்தி அதற்குப் பூஜைகள் செய்கின்றாளோ அதற்கேற்றாற்போல் கணவனும் சிறந்த ஒழுக்கமுடையவனாக, நிறைந்த பக்தியுடையவனாகவும் பிரகாசிப்பான். சித்தபுருஷர்கள் அளிக்கின்ற “மாங்கல்ய அபிஷேகம்” முறை மிகமிக எளிமையானது. அனைவராலும் எளிதில் கடைபிடிக்கக் கூடியது.
மாங்கல்ய அபிஷேக காலங்கள் : - பலன்களை அறிந்தால் தான் பூஜையின் முக்யத்வம் புலப்படும்! இதுவே கலியுக நிலை! மாங்கல்ய அபிஷேகத்தினைத் தினசரி செய்தல் தீர்கமான மாங்கல்ய பலத்தைத் தரும். கணவன் சிறந்த ஆரோக்ய பலத்துடன், உண்மையான குரு பக்தியுடன் நீண்ட ஆயுளையும் பெறுவான். செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகள், ரோஹிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், சுவாதி, மூலம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள், கணவன், மனைவியரின் பிறந்த/பூப்படைந்த/திருமண நாட்கள், நட்சத்திர தினங்கள், பஞ்சமி, சப்தமி, தசமி, துவாதசி திதிகள் மாங்கல்ய அபிஷேகத்திற்கு விசேஷமானதாகும்.
பலன்கள் : மாங்கல்ய அபிஷேகத்தினை முறையாகச் செய்து வந்திடில்
1. கணவனுடைய சீட்டாட்டம், ரேஸ், லாட்டரி, புகை பிடித்தல், மது, புகையிலை பொடி போடுதல் போன்ற தீய வழக்கங்கள் தணியும்.
2. கணவனுடைய சினம், குரோதம், முரட்டுக் குணங்கள் தீர்வடையும்.
3. கணவனுடைய முறையற்ற காரியங்கள் முடிவிற்கு வரும்.
4. கணவன் தம் துறையில்/அலுவலகத்தில் சீரும் சிறப்பும் நற்பெயருடன் புகழும் அடைவான்.
இவையன்றி
1. கணவன், மனைவியரிடையே நிறைந்த வாத்ஸல்யம் ஏற்பட்டு இணைபிரியாது உண்மையான அன்புடன் வாழ்வர்.
2. பரஸ்பரமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்வர்.
பல குடும்பங்களில் திருமணமாகி எத்தனையோ வருடங்களாகியும் கணவன், மனைவியிடையே தீர்கமான ஒற்றுமை ஏற்படாது, குடும்பத்தில் சாந்தம் பரிபூரணமடையாது பாதியிலே நிற்கும். தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள மனித வாழ்க்கைக்கான கெடுவிற்குள் தம்பதியினர் பரஸ்பர “தாம்பத்ய முக்தி” நிலையை அடைந்தேயாக வேண்டும். தாம்பத்ய முக்தி நிலை இறப்பிற்கு முன் ஏற்படும் அற்புத நிலையாம். கணவன் நினைப்பதை மனைவி நிறைவேற்றுவாள், மனைவி எண்ணுமுன்னரே அதனைக் கணவன் செயலாக்கிடுவான்! இத்தாம்பத்ய முக்தி நிலையைப் பெறக் குறைந்தது பத்தாண்டுத் திருமண வாழ்க்கை போதும், ஆனால் அதற்குள் நிறைவேற்ற வேண்டியவை பலப்பல! அவற்றுள் ஒன்றே மேற்கூறிய மாங்கல்ய அபிஷேகம்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள் செஞ்சிப் புனித யாத்திரை அனுபவங்களின் தொடர்ச்சி)
உடலில் வலி மிகுந்திருந்தாலும் ஏதோ சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தான். குரங்குக் குட்டி அருகில் வந்தது. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாக சிறுவன் தன் உடல் வலியையும் ரணங்களையும் பொருட்படுத்தாமல் “எங்கே என் வாத்யார்?” என்று கூவிக்கொண்டு தொட்டியை விட்டு இறங்க முயன்றான். குரங்கு லாவகமாக அவன் கைகளை எடுத்துவிட்டு, “நீ தொட்டிக்குள்ளேயே இரு” என்று சைகை காட்டியது! ஆனால் சிறுவன் விடுவதாக இல்லை. அருகில் இருந்த அத்துறவியைப் பார்த்து “எங்கே என் குரு?” எங்கே என் வாத்யார்?” எனக் கூக்குரலிட்டான். கூச்சல் எழுப்புவதாக எண்ணினானே தவிர உதடுகள் மட்டுமே அசைந்தன! அப்பொழுதுதான் சிறுவனுக்குப் புரிந்தது, தன்னைக் காப்பாற்றியது அக்குரங்குக்குட்டியே என்று, அந்தத் தபஸ்வி பேசலானார். “சிறுவனே உன் பணி முடிந்துவிட்டதாக உன் குருநாதர் அருளிச் சென்றுள்ளார். இப்போது நீ எங்கள் பராமரிப்பில் உள்ளாய் உன் குரு சுகமாக இருக்கிறார். கவலைப்படாதே நீ இருப்பது எங்களுடைய உலகம்! எனவே யாம் சொல்லவதைக் கேட்டு அமைதியாக இங்கு தங்கி ரணமான புண்கள் ஆறியபின் உன் குரு கட்டளைப்படியே செல்வாயாக!”
“அந்த ராட்சசப் பிசாசின் கோரமான தாக்குதலால் உன் உடலில் நஞ்சு ஏறி உள்ளது. அதுவே இம் மூலிகைச் சாற்றி இறங்கி அதன் நிறமும் நீலமாய் மாறி வருகிறது” என்று, அவர் விவரிக்கும் முன்னரே சிறுவன் முந்திக் கொண்டான். “எனக்கு என் வாத்யாரைக் காட்டுங்கள்!” அவன் மனமே பேசிற்று, குரலே எழும்பவில்லை., “சிறுவனே இன்னும் இரண்டு நாட்கள் பொறுமையாக இருப்பாயாக!” என்னால் இதனை ஏற்க முடியாது என் வாத்யாரின் உடலை இவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். என்னிடம் பொறுப்பாக விட்டுவிட்டுச் சென்றாரே!” அந்த தபஸ்வி சிறுவனை சாந்தப்படுத்த முயன்றார். குரங்குக் குட்டியும் சிறுவனை ஆசுவாசப்படுத்தியும் கூட சிறுவன் கட்டுக்கடங்காமல் கத்தினான். “என் வாத்யருக்கு என்ன ஆயிற்றோ! ஏது ஆயிற்றோ! அவர்தானே எனக்கு உயிர்!”

விசேஷமான மங்கள ஒலிகள்
திடீர் என்று குகையருகே சங்கொலிகள் முழங்கின! ஜெயங்கொண்டம், மத்தள ஒலி, மேளச் சத்தம், டமருக வாத்ய ஒலி, உடுக்கை ஒலி, அனைத்தும் கேட்கலாயின. சிறுவனுடைய அழுகை நின்று விட்டது! மாறாக “அப்பப்பா! இத்தகைய விசேஷமான இவ்வொலிகள் கேட்டு எத்தனை நாளாயிற்று, சென்ற கார்த்திகை தீபத்தில் திருஅண்ணாமலையில் கேட்டதன்றோ!” சிறுவன் சிலையாய்ச் சமைந்தான். உள்ளூற ஆனந்தம் பொங்கியது, ஏதோ “நற்செய்தி வருகின்றதோ? வாத்யாருக்குப் பிடித்தமான வாத்யங்களாயிற்றே. யார் இவற்றை வாசிக்கின்றனர்? ஒன்றுமே புரியாத புதிராய் இருக்கின்றதே! இந்த வாத்யங்களுக்கு என்னே தெய்வீகச் சக்தி! துயரத்தில் கரை புரண்டு கிடந்த எனக்கு சாந்தத்தை அளிக்கிறதே!” வாத்யங்களின் ஒலிப்பின் ஊடே இனிய சாம்பிராணித் தூப நறுமணம் கமழ்ந்து வந்தது! சிறுவன் மேலும் மகிழ்ச்சி அடைந்தான்.
“ஏதேது, எல்லாம் நல்ல சகுனங்களாகவே தோன்றுகின்றனவே!” இமயமலை வெண்பனி எனச் சாம்பிராணி புகை காற்றில் விரவி மிதந்து வந்தது. அந்தத் தபஸ்வியும் கைகளை மேலே உயரத் தூக்கிக் கூப்பி வணங்கி நின்றார்.
“ இவர் எதற்காக எழுந்து நிற்கின்றார்?” சிறுவனுக்கு ஆவல் அதிகமாயிற்று. அங்கே...
அவதூது மஹான்
”ஒரு அவதூது மஹான் அங்கே நடந்து வந்துகொண்டிருக்கிறாரே.” அவரைச் சுற்றி நான்கு சிஷ்யர்கள். ஒருவர் வெண்சாமரம் வீசிவர அடுத்தவர் தன் வாயில் நான்கு பெரிய சங்குகளை  வைத்து அரும் பெரும் சங்கொலிதனை எழுப்பி உடன் நடந்த வர, மூன்றாமவர் ஜெயங்கொண்டம்தனை அடித்து நாதம் எழுப்பி வர... நான்காமவர் சூலக்கொடிதனைத் தாங்கிவர, அந்த அவதூது மஹான் சிறுவனை நோக்கி நடந்து வந்தார். ஏற்கனவே சாம்பிராணி தூபப் புகை மஹிமையால் ரண வலி பெருமளவில் குறைந்திருந்தது. இம் மஹானைச் சுற்றிலும் விதவிதமான ஒளி வட்டங்கள்! அவர்தம் திருப்பார்வை கடாட்சம் படப் படச் சிறுவனுடைய தேஹ ரணங்கள் குறையலாயின. சிறுவன் அதிசயமாகத் தன் தேகத்தைப் பார்த்து நின்றான். அவன் கண்ணெதிரிலேயே காயங்கள் ஒவ்வொன்றாக மறையலாயின. அவர் தன்னை நெருங்கி வந்ததும், “ஓம் ஸ்ரீஅருணாசல சிவ! தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்!” என அவர் கால்களில் விழுந்து வணங்கினான், “என் குருவைப் பற்றி நீங்களேனும் எடுத்துச் சொல்வீர்களா?” என்று மிகவும் வினயத்துடன் வேண்டினான். அவர் சற்றே குனிந்து சிறுவனின் காதில் எதையோ தெரிவித்துவிட்டு மிக விரைவாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறுவன் அந்தத் தபஸ்வியிடம் சென்று, “என்னை என் வாத்யாரிடம் கூட்டிச் செல்வீர்களா?” என மிகவும் பரிதாபமாக வினவினான்., அவரோ அக்குரங்கிற்குச் சைகை காண்பித்துச் சிறுவனை அழைத்துச் செல்லுமாறு கூறினார். “தங்களைப் போன்ற அபூர்வமான மஹரிஷிகளைக் காண்பது அரிது! தங்களுக்கு எதையேனும் குரு காணிக்கையாக வைக்க விரும்புகிறேன்!”

திருஅண்ணாமலை மகிமை

திருஅண்ணாமலை கிரிவல மஹிமை
(நம் சிவகுரு மங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளுடன் பன்முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் திருப்பேற்றினைப் பெற்ற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருநாதரிடமிருந்து பெற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை இத்தொடரில் அளித்து வருகின்றார்கள்..)
அடியார்: திருஅண்ணாமலை திவ்ய க்ஷேத்திரம் பூலோகத்தில் மட்டும்தான் பிரசித்தி பெற்றதா?
சற்குரு: பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி லோகங்களிலும் வேறு எங்கும் காண இயலாத சர்வேஸ்வரனே மலைத் திருமேனியாக அமர்ந்துள்ள புனிதத் தலம் திருஅண்ணாமலையாம். பித்ரு, கந்தர்வ, ரிஷி, சுந்தர போன்ற ஒளி லோகங்களுக்கு மட்டுமின்றி நரகம் போன்ற இருள் லோகங்களுக்கும் பூலோகத்திலுள்ள அருணாசலமாகிய திருஅண்ணாமலையே ஒரே அருணாசல தரிசனமாகும். ஆனால் மனிதர்கள் சாதாரணமாகத் திருஅண்ணாமலையைத் தரிசிப்பது போல் பிற லோகவாசிகள் அவ்வளவு சுலபமாகத் திருஅண்ணாமலையைத் தரிசித்திட முடியாது? மிகவும் உன்னத நிலையில் பிரகாசிக்கின்ற நம்முடைய மூதாதையர்களான ஆதித்யப் பித்ரு தேவர்கள் நம்மைப் போல் எளிதில் (சூட்சும் ரூபத்தில்) திருஅண்ணாமலைக்கு வந்திட இயலாது. புனிதத்திலும் புனிதம் நிறைந்த ஆதித்யப் பித்ருக்களுக்கு  இவ்வளவு கடினமான நியதிகள் என்றால் நாம் எவ்வளவு பக்திபூர்வமாக திருஅருணாசலத்தை வழிபட வேண்டும்!
அடியார் : குருதேவா! ஆதித்யப் பித்ருக்களுக்கு ஏன் இவ்வளவு கடினமான நியதிகள்! ?

சற்குரு : கடினமான நியதிகள் என்று சொல்வதை விட, ஒன்றை நன்றாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். ஆதித்யப் பித்ருக்கள் மிகவும் பரிசுத்தமானவர்கள் ஆதலின் அவர்களுக்கு எவ்விதக் கர்மவினை பாக்கியும் இராது. ஆனால் ஒவ்வொரு ஆதித்யப் பித்ருவிற்கும் இத்தனை பேரை ஆன்மீக நிலையில் உன்னதம் பெறச் செய்தல் வேண்டும்., என்று Target அளிக்கப்படும். அதை நிறைவேற்றினால் தான் ஸ்ரீஅருணாசல தரிசனத்தை அவர்கள் பெற முடியும்! உதாரணமாக ஓர் ஆதித்யப் பித்ருவிற்கு அவருடைய வம்சா வழியினரில் இரண்டு லட்சம் ஜீவன்களை உய்விக்க வேண்டும் என்று Target அளிக்கப்படுகின்றதென்றால் அவர் அதை முடிப்பதற்கு எத்தனை யுகங்கள் தேவைப்படும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!  
அந்த இரண்டு லட்சம் ஜீவன்கள் தாவரங்களாகவோ, புழுக்களாகவோ, விலங்குகளாகவோ, ஏனைய வகையிலோ பிறப்பெடுத்திருக்கலாம். அந்தந்த இனத்திற்குரிய (புழு, தாவரம், வண்டு, விலங்கு etc. ) ஆன்மீக வழிமுறைகளில் அவற்றை உய்வு பெறச் செய்ய வேண்டுமாயின் எத்தகைய கடினமான பணியிது! இதற்கு எத்துணை ஆயிரம் வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒருவர் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகிறார் என்றால் அது அவருடைய முயற்சியென்று நாம் கருதுகிறோம். ஆனால் இந்த வருடம், இந்த மாதம், இன்ன கிழமை, இன்ன நேரத்தில் அவர் கிரிவலம் வருதல் வேண்டும் என்பதற்காக அவருடைய பித்ருக்கள் இரவு பகலாக அலைந்து பிரயத்னம் செய்து அவரைத் திருஅண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர். உண்மையில் அந்த அடியாருடைய கர்ம வினைகளுக்கும் அவருடைய பித்ருக்களுக்குமிடையே பெரும் போராட்டமே நடக்கும். ஏனெனில் ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் கழிகின்ற கர்மவினைகளோ ஏராளம் ஏராளம். ஆனால் கர்ம வினைகளை அந்த அடியார் அனுபவித்தே ஆக வேண்டுமல்லவா! தம் வம்சாவழியில் வரும் அவ்வடியாரின் பல கர்ம வினைகளைப் பித்ருக்கள் தாமே ஏற்கின்றனர். ஆனால் பித்ருக்களுக்குரிய தர்ப்பண, பூஜைகளை அவ்வடியார் முறையாகச் செய்திருந்தால் தான் பித்ருக்கள் அவருடைய (சில) கர்ம வினைகளை ஏற்க முன்வருவர். இதிலும், தர்ப்பணம், பூஜைகளைச் சரிவரச் செய்து வராவிடில் பித்ருக்கள் சாபங்களை அளிப்பதும் உண்டு., இவை கர்மவினைகளின் வன்மையை அதிகரிக்கும்.
மேலும் கொடிய கர்மவினைகளாயிருப்பின் அவை அவ்வடியாரை, திருஅண்ணாமலைக்கே வரமுடியாமற் செய்து விடும்! நோய், அலுவல், ஸ்டிரைக், கையில், பணமின்மை, எதிர்பாராத நிகழ்ச்சிகள், பஸ் விபத்து, பஸ் ரிப்பேராதல் – போன்றவையே சில காரணங்களாக வெளிப்படையாகத் தோன்றும். ஆனால் இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் உள்ளன. எனவே இன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர முடிகின்றதென்றால் அது நம் பித்ருக்களின் ஆசியால் தான் என்பதைத் தெளிர்ந்து உணர்தல் வேண்டும்!
அடியார் : குருதேவா! பித்ருக்களால் நம்மைப் போல் ஏன் அடிக்கடி திருஅண்ணாமலையத் தரிசனம் செய்ய முடியவில்லை?
சற்குரு: சிவ, சிவ! கேள்வியே தவறு! பித்ருக்களால் தரிசனம் செய்ய முடியவில்லை என்று சொல்லலாகுமா? தரிசனம் என்றால் நாம் வெறுமனே கண்களால் தரிசித்து விட்டு வந்து விடுகிறோம். ஆனால் பித்ருக்களுடைய தரிசனமே வேறு! நமக்குள் கல் மமலயாகக் காட்சியளிக்கும் திருஅண்ணாமலை பித்ருக்களுக்கு ஜோதி ரூபமாகவோ, மரகத மலையாகவோ, பொன் மலையாகவோ அந்தந்த பித்ருக்களின் உத்தம நிலைகளுக்கேற்ப காட்சி தரும். பித்ருக்களின் நிலையே உத்தம நிலையெனில் அதற்கு மேலும் நிலைகள் உள்ளனவா என்ற வினா எழும்! இவையெல்லாம் தெய்வீக இரகசியங்கள், இவற்றைப் புரிந்து கொள்ள நிறைந்த பக்குவம் வேண்டும். அதுவரையில் இது உயர்ந்த நிலையா, அது உன்னத நிலையா என்ற கேள்விகள் எழுந்தவாறு தான் இருக்கும். சித்த புருஷர்களில் போகருடைய நிலை, புலிப்பாணியின் நிலை என்றா பிரிக்க முடியும்! இருவருமே ஸ்ரீஅகஸ்தியரின் உத்தம சிஷ்யர்கள்! பித்ருக்கள் திருஅண்ணாமலைக்கு வரவேண்டுமெனில் குறித்த சில இறைப்பணிகளை முடித்தாக வேண்டும்! பல்வேறு விதமான பிரார்த்தனைகளுடன் நாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றோம். இன்றைய பொழுதிற்கு நமக்கு எதுவும் தேவையில்லாது இருக்கலாம், எவ்விதப் பிரார்த்தனையுமின்றி கிரிவலம் வந்திடலாம்., ஆனால் நாளை நம் தேவை என்ன?

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை கிரிவல மஹிமை தொடர் கட்டுரை
சம்வர்த்தன தாயுமான பாண லிங்க தரிசனம் :-
எம்பெருமான் சிவபெருமானுக்கு பலவித நந்தி வாகனங்கள் உண்டு. பணக்காரர்கள் பல காரியங்களுக்காகப் பல கார்களையும் பலவித வாகனங்களையும் வைத்திருப்பது போல் அகிலாண்ட ஈஸ்வரனிடமும் பல காரியங்களை நிறைவேற்றப் பற்பல வாகனங்கள் உண்டு.. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொருவிதமான பெயர் சூட்டி இருப்பது போல சிவபெருமான் பவனிவரும் நந்தி வாகனங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. பல கோடி ஆண்டுகள் கடுமையாக தவமியற்றிய சிவனடியார்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்று அவருக்கு வாகனமாய் அமையும் வரத்தைக் கேட்கிறார்கள்., அந்த உத்தம அடியார்களே ஈசனின் வாகனமாய் மாறி  பற்பலத் திருநாமங்களைப் பூண்டு நந்தீஸ்வரர்களாக அருள்பாலிக்கின்றனர். ருத்ர சம்வர்த்தனன் என்ற ஓர் உத்தமர் நீண்ட நாட்களாக வேதங்களைப் பயின்று தமிழ் மறைகளையும், 5 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு உபதேசித்து மறைகளை முறையாக ஓதும் முறையை அவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வந்தார். இவ்வாறு சிறந்த பயிற்சி பெற்ற மாணாக்கர்களுடன் – சிறுவர்களுடன் தானும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டு உச்சிப் பிள்ளையாரைத் தினமும் வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வேதங்கள் முழங்க இவ்வாறு வலம் வருகையில் யாருக்காவது பிரசவ வேதனை ஏற்பட்டால் அவர்களுக்குப் பிரசவ வேதனை தெரியாமல் சுகமாக குழந்தை பிறக்க ஒரு எளிய தமிழ் மறைப் பாடலை ஓதுவார்.

ஸ்ரீருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரர்

தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்து உருகி
மாயமான்மழுவும் ஏந்தி மயிர்க்கூச் செறிந்து
ஏழையென் உடல்வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே.
என்ற இந்தப் பாடலைப் பாடித் தாயுமானவரை நினைத்து வெண்ணெய் அளிப்பார். கடவுளருளால் பூரண நம்பிக்கையோடு இந்தப் பாடலை பாடி வெண்ணெய் உண்டவர்களுக்கு சுகப் பிரசவம் நடந்து வந்தது. இவ்வாறு சுயநலம் சிறிதுமின்றி வேத சம்ரட்சணமும், பெண்களின் சுகப் பிரசவத்திற்காகவும்  ருத்ரஸ்ம்வர்த்தனன் ஆற்றிய அருந்தொண்டால் மகிழ்ந்தான் தாயுமான ஈசன். விண்ணுலாவும் தேவர்களுக்கும் கிடைக்காத இறை தரிசன திருக்காட்சியை ருத்ர சம்வர்த்தனுக்கு அருளினார். இறைவன் “சம்வர்த்தனா! உன்னுடைய அற்புதமான சேவையால் யாம் மகிழ்ந்தோம். உனக்கு யாது வேண்டும்?” என்று வினவ ருத்ர சம்வர்த்தனன் , “ஐயனே! தங்களை இங்கிருந்தே தரிசிக்கும் பாக்கியமும் தங்களைச் சுமக்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். இறைவனாம் தாயுமானவனும் மனங்கனிந்து “இங்கேயே நந்தீஸ்வரராய் அமர்ந்திடுவாய்!” என்று வரம் அருளினார்.
ருத்ர சம்வர்த்தனன் தாயுமான ஈசரைத் தரிசித்தவாறே ருத்ர சம்வர்த்தனன் என்ற திருநாமத்துடன் அமர்ந்தார். ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரிடமிருந்து உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்திட அது சம்வர்த்தன தாயுமான பாணலிங்க தரிசனம் ஆகும். முறையான இந்த தரிசனத்தால்:
 1. கர்ப்ப சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
2. சுகப் பிரசவம் ஏற்படும்.,
3. பிரசவ வேதனைகள் மிதமாகி சுலபமாக பிரசவம் ஏற்பட வழி செய்யும் .

4. பிரசவ காலத்தில் தாயோ நெருங்கிய உறவினர்களோ இல்லாமல் அவதியுறுவோர்களுக்கு இறைவன் தக்க உதவிகளை அளிப்பான்.
கர்ப்பிணிப் பெண்கள் மலைக் கோட்டையை கிரிவலம் வந்து ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரை தரிசிக்க அவர்களது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் கணவன்மார்களோ, தாய் தந்தையரோ, சகோதர, சகோதரிகளோ மற்ற நெருங்கிய உறவினர்களோ உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரைத் தரிசனம் செய்து மேற்கூறிய பாடலைப் பாடி நந்தீஸ்வரர் மீது பசுநெய் தடவி தாயுமானவரை வேண்டினால் சுகப் பிரசவம் ஏற்பட எம்பெருமான் தாயுமான ஈசன் அருள்புரிவார். கிரிவலத்தில் அடுத்து வருவது நாகநாத சுவாமி கோயில். கோயிலின் உள்ளே சென்று ஆனந்தவல்லித் தாயையும், நாகநாத சுவாமியையும் தரிசனம் செய்ய வேண்டும். எல்லாவித நாக தோஷங்களுக்கும் பரிகாரம் நல்குகிறார் நாகநாதசுவாமி. நந்தீஸ்வரரின் வலது பக்க தூணில் சசபிந்து மஹரிஷி ஜீவசமாதி பூண்டு சகல நாக தோஷங்களுக்கும் நிவாரணம் அளிக்கிறார். அவருக்கு எண்ணெய்க் காப்பிட்டு மஞ்சள் குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
சற்குருவைத் தேடுவோர்க்கு இவர் நல்வழிகாட்டுகின்றார். ஆன்மீக சக்தியைப் பெறுவதைவிட அதைக் கட்டிக் காப்பதே பெரும் பொறுப்பாகும், ஏனெனில் புண்ணியசக்தி பெருகப் பெருக அதிகாரம், ஆணவம், மமதை, கர்வம் போன்ற தீய குணங்களே பெருகும். பெறுகின்ற ஆன்மீக சக்தியை அறவழிகளில் செலுத்திட ஸ்ரீசசபிந்து மஹரிஷி அருள்புரிகின்றார்.
கிரிவலத்தில் அடுத்து வருவது கருப்பண்ண சுவாமி கோயில் (நந்தி கோயில் தெருவும் வடக்கு ஆண்டார் வீதியும் சந்திக்கும் இடம்.) இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரைத் தரிசனம் செய்ய அது கருப்பண கதிரறுத்தான் தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்
திருச்சி மலைக்கோட்டை

கருப்பண்ண கதிரறுத்தான் தாயுமான லிங்க தரிசன மஹிமை :
பத்தரையன் என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் இல்லத்தில் காற்று, கருப்பு சேஷ்டைகளால் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். விவசாயத்தில் மிகுந்த நஷ்டங்களை வேறு சந்திக்க வேண்டியிருந்தது. நெல் மூட்டைகளையெல்லாம் பூச்சிகள் அரித்தும், நெல் மணிகள் கருத்தும், சொத்தையாகியும் விரயமாகின, இவ்வளவு துன்பங்களுக்கிடையின் அவர் தன் மூதாதையர்கள் சொல்லிய படி தினமும் உச்சிப்பிள்ளையாரை காலை, மதியம், மாலை என மூன்று முறை கிரிவலம் வந்து வணங்கிப் பிரார்த்தித்தார். இவ்வாறு நீண்ட காலம் கிரிவலம் வந்து வேண்டும் போது ஒரு முறை இறைவன் கனவில் தோன்றி இந்த குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, “இங்கு கருப்பண்ண சுவாமி குடியிருக்கிறார். அவரை வேண்டினால் உன்னுடைய விளைச்சல் பெருகும், நெல் மணிகள் வீணாகாமல் பாதுகாக்கப்படும், ஆவி துன்புறுத்தல்களும் மறையும்!” என்று அருளினார். பத்தரையன் மகிழ்ந்து இறைவன் சுட்டிக் காட்டிய இடத்தை அடைந்தார். இவ்வளவு காலம் வலம் வந்தும் கருப்பண்ண சுவாமியை அந்த விவசாயி பார்க்கவில்லை! இப்போது கருப்பண்ண சுவாமியின் திருவுருவச் சிலை அவர் கண்களுக்குத் தெரிந்தது. அவரை வணங்கித் துதித்தார். கருப்பண்ண சுவாமிக்கு ஒரு சிறு கோயில் கட்டினார். அவருடைய  முறையான  வழிபாட்டினால் தீர்ந்து அமோக நெல் விளைச்சலையும் பெற்று ஆவி துன்பங்களும் நீங்கி மன அமைதியையும் பெற்றார். கருப்பண்ண சுவாமி கோயில் எதிரே வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்யலாம். காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் மலைக்கோட்டையை கிரிவலம் வந்து கருப்பண்ண சுவாமியை வேண்டினால்.,
1, விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.
2. பூச்சிகள், இயற்கை உபாதைகளால் பயிர், தானியங்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும்.
3. காற்று, கருப்பு தொந்தரவுகள், ஆவி சேஷ்டைகள் போன்ற பிணிகள் மறையும்.
4. மன அமைதி உண்டாகி இறைவனை அடையும் வழி கிடைக்கும்.!

கஜ பூஜை

கோபூஜை (பசுவை பூஜிப்பது) போல் கஜபூஜை – யானை வழிபாடும் மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் பெரிய பாவங்களுக்கெல்லாம் பிராயச் சித்தங்களைத் தரவல்லது. உதாரணமாக ஒரு பெரிய குடும்பத்தையோ அல்லது ஒரு பெரிய குடும்பத்தையோ அல்லது ஒரு பெரிய தொழிற்சாலையையோ தன்னுடைய அதிகாரம், செல்வாக்கு, பணபலம், அந்தஸ்து, ஆள்பலம், அரசியல் அந்தஸ்து காரணமாக அழித்து விடுகின்ற கொடிய பாவத்திற்குக் கஜ பூஜையே, மிகச் சிறந்த பரிஹாரமாகும். (தக்க குரு மூலம் அறவழிமுறைகளின் படி அப்பூஜையை நிறைவேற்றிடில்!) ஒரு சாதாரண மனிதனால் கஜபூஜை நிகழ்த்திட முடியுமா என்று எண்ணி மலைத்திடலாகாது. பலர் ஒன்று கூடிச் சத்சங்க பூஜையாக, சிறந்த சமுதாயத் திருப்பணியாக சுயநலமின்றிக் கஜபூஜையை எளிதில் நிகழ்த்தி அபரிமிதமான பலன்களைப் பெற்றிடலாம்.
1. ஒவ்வொரு சதுர்த்தி/சதுர்த்தசி திதியில் யானைக்கு நீராட்டுதல், ஆடைசாற்றுதல், ஆபரணங்கள் அளித்தல், சந்தனம், குங்குமம், விபூதி இடுதல், யானையின் பாதங்களுக்கு மஞ்சள், குங்குமிட்டுப் பாதபூஜை செய்தல்,
2. இயன்ற நாட்களில் குறிப்பாக சதுர்த்தி/சதுர்த்தசி திதிகளிலேனும் யானைக்குக் குறைந்தது 21 பெரிய கவள உணவளித்தல் (அரிசி , கோதுமை, கேழ்வரகுக் களி etc..)
3. குறைந்தது இரண்டு யானைகளை அழைத்து வந்து நீராட்டி, பன்னீர் அபிஷேகம், ஆடை, ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம் இடுதல்/அளித்தல் உணவளித்தல், 21 முறை அடிப்பிரதட்சிணமாகச் சுற்றி வருதல், ஏழைகளுக்கு மோதக தானம் - இதுவும் கஜபூஜை முறைகளில் ஒன்றாம்.
4. கோயில் யானைகளுக்கு முறையாக தினப்படி புல், இலை, தழைகள், கவள உணவளிக்க ஏற்பாடு செய்தல்.
5. இயன்ற இடங்களில் யானையைக் கொண்டு அதன் துதிக்கையால் பிள்ளையாருக்கு நன்னீர், இளநீர், பால் ,தேன், பழரச அபிஷேகங்கள் நடத்துதல்.
6. நோயுள்ள யானைகளுக்கு மருத்துவ உதவியளித்தல்!
7. வசதியற்ற யானை பாகன்களுக்குரிய தான, தர்மங்கள்
8. பழம் பெரும் ஸ்தலங்களில் (யானையை வாடைகைக்கேனும் பெற்று) அடிக்கடி அல்லது மாதமொரு முறையேனும் கஜபூஜை நடக்க ஏற்பாடு செய்தல்.
9. யானையை வாகனமாக உடைய கோயில்களில் (உதாரணமாக – வடபழனி) கஜபூஜை செய்தலால் பலன்கள் ஆயிரமாயிரமாய்ப் பெருகும்.
10. துதிக்கையை மேலே தூக்கியவாறு உள்ள பிள்ளையாருக்கு அபிஷேக , ஆராதனைகளுடன் கஜபூஜை செய்து ஏழைகளுக்கு மோதகம், கொழுக்கட்டை, நாவற் பழம் தானம் செய்வதால் கஜபூஜையின் பலன்கள் பன்மடங்காகும்.
11. வாழ்க்கையில் தாமிழைத்த கொடூரங்களுக்கு, கஜபூஜையை முறையாகச் செய்து வருதலே தக்க பிராயச் சித்தத்தைத் தரும்.
12. சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் யானைக்கு உணவளித்து வருதல் அனைவரால் இயன்ற எளிய பூஜை முறையாகும். தாமே அரைத்த சந்தனத்தையும் மஞ்சளையும் இத்திதிகளில் யானைக்கு பூசி அன்னம், பழம், கரும்பு, புல், இலை தழையளித்தல் எளிமையான பூஜையாகும்.

விசேஷ தினங்கள் ஜூன் – ஜூலை 1996

 கூடாத நாட்கள் ஜூன் – ஜூலை 1996

1.6.1996 –வில்வ த்ரிராத்ரி விரதம், பௌர்ணமி
2.6.1996 – வடசாவித்ரி விரதம்
15.6.1996 – அமாவாசை
24.6.1996 – ஆனித்திருமஞ்சனம்
30.6.1996 – பௌர்ணமி
15.7.1996 – அமாவாசை

4.6.1996 – செவ்வாய் – மாலை 4.38மணிக்கு மேல்
2.7.1996 – செவ்வாய் கிழமை நாள் முழுவதும்
3.7.1996 – புதன் – இரவு 8.36 மணிக்கு மேல்
30.7.1996 – செவ்வாய் – காலை 10.30மணி வரை
31.7.1996 – புதன் – காலை 6.47 மணிக்கு மேல்

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam