வாங்கிய நிலத்தில் வரவு பார்த்திடாமல் தூங்கியே கழித்தாயே தும்பியப்பா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சகஸ்ரலிங்க மகிமை

கடந்த அக்டோபர் 1996 இதழ் வரை சகஸ்ர லிங்கம் பற்றிய தொடர் கட்டுரைகளில் சித்புருஷர்களின் விளக்கங்களை ஓரளவு அளித்து வந்தோம். எல்லா கோயில்களிலுமே சகஸ்ரலிங்கம் அமைக்கப்படுவதில்லை. சகஸ்ர லிங்கங்களில் விசேஷ பிரதிஷ்டை முறைகள் இருப்பதோடு அவை எத்திசையில் எங்கெங்கே இருந்து அருள் பாலித்திட வேண்டும் என்ற நியதியும் உண்டு. அட்சரேகை, தீர்க்க ரேகைபோல் பூமியின் அடியில் சுவர்ண ரேகை, பூபாள ரேகை, காரீய ரேகை, ரஜத ரேகை, தாமிர ரேகை, சித்திர ரேகை போன்ற பலவித ரேகைகள் உண்டு. இந்த ரேகைகளின் பிரதிபலிப்புகளை நாம் சென்னை கடம்பத்தூர் அருகே கூவம் என்னும் ஸ்தலத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்தியின் மேல் காணலாம். கால தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப உலகத்தில் நிகழும் சம்பவங்களைத் தீர்க்க தரிசனமாக அறிவிக்கும் வகையில் இந்த லிங்கத்தின் மேல் உள்ள ரேகைகளும், அவற்றின் வர்ணங்களும் மாறுகின்றன. ருத்ர கோடி எனப்படும் தீர்க்க ரேகைகள் பூமியின் அடியில் ஓடும் பகுதிகளில் இத்தகைய சஹஸ்ர லிங்கங்கள் சுயம்புவாகத் தோற்றம்  பெறுகின்றன. இவ்வாறாக சகஸ்ர ருத்ர கோடி ரேகை ஓடும் இடங்களில் தான் சகஸ்ரலிங்க பிரதிஷ்டைக்கான பாக்யங்கள் ஏற்படுகின்றன.

கொன்றை நிழலில் ஸ்ரீகொன்றைநாயகர்
பந்தணைநல்லூர்

சகஸ்ரலிங்க பிரதிஷ்டை
1. குறைந்தது ஆயிரம் உத்தம பத்தினியரோ, தீர்க்க சுமங்கலிகளோ தியாகங்கள் புரிந்து இறைப்பணிகள் புரிந்த இடம்.
2. மஹரிஷியர், யோகியர், சித்புருஷர் போன்றோர் ஜீவசமாதி பூண்ட இடம்.
3. ஏகாதச ருத்ரர்களில் ஒருவரேனும் வந்து சேவித்து இறைப்பணி புரிந்த ஸ்தலம்.
4. இறைவனுடைய வாகன மூர்த்தியரான சக்திமிக்க நந்தீஸ்வரர்கள் பல கோடிப் பேர்கள் உண்டு. நம்முடைய கண் இமைக்கும் நேரத்தில் கோடானு கோடி மைல்களை ஒரு நந்திதேவர் கடந்த வேளையில் அடுத்த நந்தீஸ்வரர் பொறுப்பேற்று விடுகின்றார் எனில் இப்பிரபஞ்சத்தின் விஸ்தீர்ணத்தையோ, நந்திதேவரின் மஹிமையையோ, எவ்வாறு விண்டுரைப்பது! அதுபோல....
சாம்பவன், மஹாபத்ரன், விஸ்த்ரயன், வருணத்ரயன், விதண்டபுத்ரன், கரண்தண்டன், வசுதண்டன், ப்ரஸயாகார மூர்த்தி, பசுபாலன், அஸ்வதீக்ஷன், அமலாந்தகன், அருணாதரன், அகண்டி தஜன், வீஸத்ரவீர்யன் என்றவாறாக ஈஸ்வரனுக்குரித்தான நந்தி தேவர்கள் தங்களுடைய ஈஸ்வரப் பணியைப் பூர்த்தி செய்த ஸ்தலம்.
5. ஆயிரமாயிரம் இதழ்களுடைய கம நீலோத்பவம், பதங்க கமலம், ஸ்வர்ண நீலோத்பவம் போன்ற தேவலோக மலர்கள் உற்பவிக்கின்ற இடம்.
6. பிரதாப கந்தர்வர்கள், வருண கந்தர்வர்கள், மூக கந்தர்வர்கள், அபரஞ்சித கந்தர்வர்கள், பிரசோம கந்தர்வர்கள் போன்றோர் பூஜித்த ஸ்தலம்.
7. பலிபூ, வருணபூ, குலபூ, தவனபூ, யக்ஷபூ, ஸ்வர்ண நீல தாமரை, கோட்டபூ போன்ற அற்புதமான தாமரை மலர்கள் நிறைந்த ஸ்தலம்.
8. நவமணிகளில், கன பூஜித மணி கொண்டு தேவமூர்த்திகள் பூஜித்த ஸ்தலம். (பொதுவாக ஆயிரம் தேவலோக நவரத்தினங்களுள் ஒன்றாக மலர்வதே கனபூஜித மணி.)
9. சுயம்பு உருவான ஸ்தலம்.
- இதுபோன்ற தெய்வத் திருஅம்சங்கள் பொருந்திய ஸ்தலம் தான் சகஸ்ரலிங்க பிரதிஷ்டைக்குத் தகுந்த இடமாகும். ஆயிரம் சிறு லிங்கமூர்த்திகளும் பதிந்துள்ள பெரிய லிங்கமூர்த்தி பட்டையாக, அகலமாக இருப்பின் பினாகி பூதேஷு லிங்க மூர்த்தியென்றும், உயரமாகச் சற்றே கூம்பு வடிவில் இருப்பின் அகோர பூதேச லிங்க மூர்த்தி என்றும் பெயர். இவ்வாறு சஹஸ்ர லிங்கத்தில் பல வகைகள் உண்டு.

சகஸ்ரலிங்கம் திருவாசி

சகஸ்ரலிங்க வழிபாடு – திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை நட்சத்திரம், மாத சிவராத்திரி, திங்கட்கிழமை, மஹா சிவராத்திரி, பிரதோஷ தினங்களில் சகஸ்ரலிங்கத்தை வழிபடுவது மிகச் சிறப்புடையதாகும்.
1. திருவாதிரை நட்சத்திரம் துவங்கும் நேரத்திலிருந்து முடியும் வரை உண்ணாது நோன்பிருத்தல் வேண்டும்.
2. ஆண்களாயின் தூய வெண்ணிற ஆடைகளையே உடுத்திட வேண்டும். உள்ளாடையோ, புற ஆடைகளோ வெண்ணிறமே ஏற்புடையது.
பெண்களாயின் வெண்மையில் இளஞ்சிவப்பு (rose) கூடிய ஆடையை அணிந்திடலாம்.
3. தாமே அரைத்த சந்தனத்தை ஆயிரம் லிங்கங்களுக்கும் இடுதல் சிறப்புடையது. கடையில் விற்கப்படுகின்ற சந்தனப் பவுடரைக் குழைத்திடுதல் கூடாது.
4. தும்பைப் பூ கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து (1008 போற்றித் துதிகள் ஓதி) வணங்கிட வேண்டும்.
5. பலவித அபிஷேக ஆராதனைகள் இருப்பினும், முக்கியமாகத் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்புடையதாகும். இவற்றைப் பூஜைக்குப் பின்னர், வேதபாராயண முடிவிற்குப் பின் (ஏற்க வேண்டிய பிரசாதத்திற்காகச் சிறிது வைத்துக் கொண்டு ஏனையவற்றை) ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கிட வேண்டும்.
6. அபிஷேகம் தொடங்கி முடியும் வரையிலேனும் பத்மாசனத்தில் இருத்தலும், மௌன விரதம் இருத்தலும் பலன்களை அபரிமிதப்படுத்தும்.
7. தாமே அரைத்த அகில் கட்டைக் குழம்பினால் அபிஷேகத்தை நிறைவு செய்வது சிறப்புடையது.
8. திருவாதிரை விரத நேரம் முடிந்த பின் வில்வ தீர்த்தம் உண்டு விரதத்தை முடித்தல் வேண்டும்.
இவ்வாறு ஒரு வருடத்தின் ஒவ்வொரு மாத திருவாதிரை நட்சத்திரத்தன்றும் இத்தகைய பூஜையைத் தொடர்ந்து செய்வதற்கு ‘சகஸ்ர ஷட்கோண நட்சத்திர கோபூஜை’ என்று பெயர். இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் செய்து வந்திடில் அதற்கு ‘திருவாதிரை புஷ்கரிணி பூஜை’ என்று பெயர். இது பரிபூரணமான குருகடாட்சத்தை அளிக்கவல்லது. தேவையான உத்தியோக உயர்வுகள், மாங்கல்ய பிராப்தம், சந்ததி விருத்தி, ராஜ்ய உயர் பதவிகள், வியாபார விருத்தி போன்றவற்றை இப்பூஜையின் பலன்களாகப் பெறலாம்.

கர்ம வினைகள்

தீய கர்மவினைகளைக் கழிக்கும் சில எளிய வழிமுறைகள்!
பிப்ரவரி 1997 – ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பன்னிரெண்டு வகையான எளிய ஆன்மீக வழி முறைகள் அளிக்கப்பட்டிருந்தன. மனம், வாக்கு மற்றும் நம்முடைய அவயங்களால் எத்தனையோ விதமான தீய கர்மங்களை நாம் நாள்தோறும் சேர்த்துக் கொள்கின்றோம். இத்தகைய தீவினைகளின் வகைகளைப் பன்முறை நம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கி வந்துள்ளோம். விதவிதமான பாவங்களுக்கு விதவிதமான பரிகாரங்களைத் தானே நாடவேண்டியுள்ளது! உண்மையான பக்தியும், ஆழ்ந்த நம்பிக்கையும், இருந்தால் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளிலும், கோயில் தீர்த்தங்களிலும் நாம் ஒரு முறை நீராடினால் போதும். உத்தம நிலை கிட்டிடுமே!
கிருத, திரேதா, துவாபர யுக சமுதாய நியதிகள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. கலியுகத்திலும் ஒழுக்கமுடைய மனித வாழ்க்கைக்கான கட்டுக்கோப்புகள் வித்தியாசப்படுகின்றன உதாரணமாக, கிருதயுகத்தில் ஒரு மனிதன் காலை நேரத்திற்குரிதான வழிபாடுகளைச் செய்யத் தவறினால் உடனடியாக அவனுக்கு அங்கஹீனமோ அல்லது வேறுவிதமான தண்டனைகளோ அல்லது மகரிஷிகளின் சாபமோ ஏற்பட்டுவிடும். கலியுக நியதி அவ்வாறன்று. மனிதன் தன்னைத்தானே சுயசோதனை செய்து கொண்டு சற்குருவை நாடி இறைவழியில் நின்று ஏற்றம் பெறுதல் வேண்டும். இதற்காகவே வாரம் ஒரு முறையோ, பட்சத்திற்கொரு முறையோ (15 நாள்), மாதத்திற்கொரு முறையோ தன்னுடைய தீய கர்ம வினைகளுக்கு எளிதில் பிராயச்சித்தம் தேடும் வண்ணம் குருவார (வியாழன்) பூஜை, சோம (திங்கட்கிழமை) வார மௌன விரதம், ராகு கால பூஜை, பௌர்ணமி பூஜை, அமாவாசை மற்றும் மாதப் பிறப்புத் தர்ப்பணங்கள் இவை தவிர ரத சப்தமி, தீபாவளி, சித்ரா பௌர்ணமி, சந்திர தரிசனம், மாசி மகம், ஆனி திருமஞ்சனம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தக்க சற்குருவையோ அல்லது பெரியோர்களையோ நாடி முறையான விளக்கங்களைப் பெற்று இவற்றைக் கடைபிடித்தால் அபரிமிதமான தெய்வ அனுக்ரஹங்களைப் பெற்றிடலாம்.
இயன்ற வரை உட்கார்ந்து, நடந்து, நின்று, சாய்ந்து படுக்கின்ற நிலைகளில் நம் இரு கைகளையும் எப்போதும் இணைத்தோ, கோர்த்தோ (விவேகானந்தரைப் போல்) கரங்களைக் கட்டியவாறே வைத்திருத்தல் நலமுடையது. இதனால் உடலிலுள்ள தெய்வீக சக்தி வெளியில் சென்று வீணாகாமல் தடுக்கப்படுகிறது. அதே சமயம் வெளியே உள்ள தீவினைச் சக்திகள் உடலில் புகுந்து உடலையும் உள்ளத்தையும் மாசுபடுத்தும் செயலும் தவிர்க்கப்படுகிறது.
உடலில் தீவினைகள் புகும் நுழைவாயில்களாக விரல் நகங்கள் இருப்பதால் விரல் நகங்களை அவ்வவ்போது வெட்டி சுத்தமாக வைத்திருத்தல் நலம். மேலும், கால், கை விரல்களுக்கு அடிக்கடி மருதாணியிட்டு சுயம்புலிங்க மூர்த்திகளையோ மற்ற தெய்வ மூர்த்திகளையோ அடிப்பிரதட்சணம் வருதல் தீவினைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு சிறந்த ரட்சையாகும்.
எப்போதும் வெள்ளி டம்ளரில் நீர் அருந்துவது நல்ல தேக ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்றுத் தரும். பிளாஸ்டிக், எவர்சில்வர், வெண்கல டம்பளர்களைத் தவிர்ப்பது நல்லது. சுரைக் குடுவையில் நீரை வைத்து அருந்துவது மன அடக்கத்தையும், புனித சக்தியையும் தரும். தாமிர டம்பளரில் நீரை வைக்கலாம். ஆனால் நாம் அருந்திடும் போது தாமிர தம்பளரிலிருந்து நேரிடையாக அருந்தக் கூடாது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மூங்கில் தம்ளராகும். சராசரி மனிதனுக்குத் தேவையான உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், உடல் வலிமை, மனோ சக்தி, ஆகியவற்றை தரவல்லது மூங்கிலாகும். நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு இவை ஒத்து வருமா என்ற எண்ணம் வரலாம். ஒழுக்கமுடைய மனிதனாக, புனிதமான உள்ளத்துடன் ஆழ்ந்த இறைபக்தியுடன் பிரகாசிக்க வேண்டுமானால் இந்த எளிமையான முறைகளைக் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும்!
வாழை இலை, தாமரை இலை, மந்தார இலை, தென்னங்கீற்று இலை போன்றவற்றில் உணவை உண்பதே சிறப்புடையது., இயன்றால் வெள்ளித் தட்டில் உண்ணலாம்.
அக்னிபுராந்தகரின் அதிசயமான தியாகம்
அக்ன்புராந்தகர் என்ற மஹரிஷி அக்னி குண்டம் வளர்த்துத் தவமிருந்து பிறப்பிறப்பற்ற உத்தம நிலையைப் பெற்றவர். ஆனால் அந்நிலையிலும் தம் அக்னி குண்ட தவத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒவ்வொரு தவத்தின் முடிவிலும் அவர் இறைவனிடம் கேட்கும் வரம் வினோதமாக இருக்கும். இதுவரையில் எத்தனையோ கோடி கிருத, திரேதா, துவாபர, கலியுகங்கள் நிறைவு பெற்றுள்ளன. அந்தந்த யுகத்தில் உள்ள ஜீவன்களின் தலையாயப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் அவர் கேட்கும் வரமிருக்கும்...
ஒரு முறை ‘வற்கடம்’ என்னும் பஞ்சம் பல நூறு ஆண்டுகளுக்கு நிலவும் என்பதை தீர்க்கதரிசனமாக அறிந்தபோது அவர் களாச் செடியாகப் பிறப்பு வேண்டிப் பெற்றார்.. வெயிலோ, மழையோ ஓரளவேனும், குறைந்த நீருடன் காய்ப்பது களா. மேலும் முள்ளிருப்பினும் கால்நடைகள் விரும்பியுண்பது களாய்ச் செடி இலைகளைத்தான்! பல யுகங்களுக்கான தம் தபோபலன்களைத் திரட்டி மாபெரும் களாய்ச் செடியாகப் பிறப்பெடுத்து அவர் கோடிக்கணக்கான ஜீவன்களின் பசியாற்றினார். சில விதிமுறைகளுடன்! அவை யாதோ? அக்களாவின் காயினைப் பறித்து எடுத்துச் செல்லலாகாது! களாச் செடியருகிலேயே நின்று உண்டிட வேண்டும். ஒரு களாக்காயை உண்டாலே போதும் வயிறு நிரம்பிடும்! ஆனால் இதில்தான் எழுந்தன பிரச்னைகள்! களாச் செடியின் அருமையையுணர்ந்த பலநாட்டு மன்னர்களும், அசுரர்களும் இச்செடியை வேரோடு பிடுங்கித் தம் நாட்டிற்கும், பல லோகங்களுக்கும் எடுத்துச் செல்ல முற்பட, இதுவே பல பெரும் போர்களுக்குக் காரணமாகிக் கோடிக்கணக்கான மக்கள் மடிந்தனர். தம் தவத்தால் பலகோடி ஜீவன்கள் அழிவதைக் கண்டு அக்னிபுராந்தகர் கண்ணீர் உகுத்தார்.
இடையில் சனீஸ்வரர் ஒரு பைராகியின் உருவில் வந்து களாச்செடியினருகில் நின்றார். தமக்கு சனிதசை வருவதையும், சனீஸ்வரர் வந்து நிற்பதையும் உணர்ந்தார் அக்னிபுராந்தகர். சனீஸ்வரர் தம் கரத்தால் களாக்காயைப் பறித்தால் சனி கரம்பட்ட களாச் செடி கருகிவிடும்., இதனால் ஜீவன்கள் பாதிக்கப்படுவர் என்றெண்ணிய அக்னிபுராந்தகர், தாமே வளைந்து களாச் செடியிலிருந்து களாக்காய் ஒன்றை பைராகியின் மேல் விழுமாறு செய்தார்.. உடனே பைராகிக்குக் கோபம் வந்து விட்டது! ஆனால் இதுவும் சனீஸ்வரரின் லீலைதானே! “யானொன்றும் யாசகம் பெற வரவில்லையே! கேட்காது இட்ட குற்றத்திற்காகவும், என்னுடைய தவத்தைக் குலைத்ததற்காகவும், இறைவனருளால் நீ உருவாக்கிய ஒரு களாக்காய் எவருக்கும் பயனின்றி நீ கிழே இட்டதற்காகவும் நானே பொறுப்பேற்க வேண்டும்”, என்று கூறி அக்காளாக்காயை மீண்டும் களாச் செடியில் சனீஸ்வரர் பொருந்திட, இதுதானே சனீஸ்வரத் திருவிளையாடல்! சனீஸ்வரரின் கரம்பட்ட களாக்காய்ச் செடி கருதியது. செடியிருந்த இடத்தில் ஆங்கே பேரொளியுடன் அக்னிபுராந்தகர் நின்றிருக்க, எதிரே சனீஸ்வரர் பிரசன்னமானார்..., “ஸ்வாமி! களாய்ச் செடியாய் என் பிறப்பு முடிந்தது. தங்கள் திருக்கரம்பட்டு முடிவு ஏற்படுவதில் அடியேனுக்குப் பேரானந்தமே! ஆனால் இதில் விளைந்த துன்பங்களுக்கு இதன் காரணகாரியங்களை நான் அறியலாமா?” – அக்னி புராந்தக வேண்டி நின்றிட,
“அக்னி புராந்தகரே! வற்கடம் பஞ்சமென்பது இறைவன் இட்ட நியதி! அதன் மூலமாகக் கோடிக்கணக்கான ஜீவன்கள் அழிய வேண்டுமென்பதும் இறைவன் விதித்த நியதியே! அதற்கு மாறாகத் தாங்கள் களாச் செடியாய் மாறி, ஜீவ பரிபாலன விதியை மாற்ற முயன்றீர்கள்! வற்கடம் பஞ்சத்தில் அழிய வேண்டிய ஜீவன்கள் “இந்த களாச் செடி யாருக்கு”, என்று ஏற்பட்ட பெரும்போர்களில் வேறுவிதமாக மடிந்தனவே! அனைத்தும் முடிவில் விதிப்படி நடந்து விட்டதல்லவா!” அக்னிபுராந்தகர் மௌனமாய் நின்றார். “தாங்கள் பெரும் மஹரிஷியன்றோ! தங்கள் மூலம் இவை நிகழ வேண்டும் என்பது இறைநியதி அல்லவா! தற்போது தங்களைப் பீடிக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது.” அக்னிபுராந்தகர் பேசலானா! “விநாயகருக்கும், ஆஞ்சநேயருக்கும், நாரதருக்கும் கூட சனீஸ்வரராகிய தங்களுடைய சனிதசை காலம் ஏற்பட்ட போது அடியேன் எம்மாத்திரம்! சனிதசையில் கலியுக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்குத் தாங்களே நல்ல பரிஹாரம் ஒன்றைத் தந்திட வேண்டும்” என்றார். வறியோர்க்கு விருந்திட்டால் எவ்வினையும் தீரும். சனிக்கிழமை அன்று களாச் செடி தல விருட்சமாக உள்ள கோயிலில் சனிஹோரை நேரத்தில் ஏழைகளுக்கு எள் கலந்த உணவளித்து பசுஞ்சாணத்தில் உருவான களாக்காய் பதித்த எரு விரட்டியின் மேல் கரியில் அக்னியை எழுப்பி சாம்பிராணி தூபமிட்டு என்னை வணங்கிடில் சனிதசையில் ஏற்படும் துன்பங்களை நானே ஏற்று அவற்றின் தன்மைகளைக் குறைக்கின்றேன்” என்று அருள்பாலித்தார்..,
இறைப்பணிகளில் இடையூறுகள் ஏன்? அக்னிபுராந்தக மஹரிஷியோ தியாகத்தின் தவப்புதல்வரன்றோ! வற்கடப் பஞ்சத்திலிருந்து மக்கள் ஒரு சிறிதேனும் நிவாரணம் பெறவே களாச் செடியாய்ப் பிறப்பு வேண்டினார். அதற்கு இத்தகைய இடையூறுகள் ஏன்? இவ்வாறாகக் கலியுகத்தில் இறைப்பணிகளுக்கும் பல இடையூறுகள் ஏற்படுமாயின் மக்களுடைய இறை நம்பிக்கை குறைந்து விடுமே, என் செய்வது?
“இறைநம்பிக்கை என்றும் தளர்வதில்லை. ஆனால் அதில் சஞ்சலங்கள் ஏற்படுவதுண்டு. கலியுகத்தில் இறைநம்பிக்கையுள்ளோர் கூட கோபம், கௌரவம், பதவி அதிகாரம், பேராசைகளுக்கு ஆட்பட்டு இறைப்பணிகளையே தடுத்துவிடுவர். இதற்குக் காரணம் ஆங்காங்கே தீய சக்திகள் பரவிக் கிடப்பதுதான். ஒவ்வொரு இடமாகச் சென்று தனியொருவராகத் தீயசக்திகளை அழிப்பதென்பது அவதார புருஷர்களின் அருட்செயல்!..... ஆனால் தீயசக்திகளை ஓரிடத்தில் திரட்டி விட்டால்..... அவற்றை வெல்வது மிகவும் எளிதாகிவிடுமே..! அதற்கு இறைத் திருஅவதாரம் ஒன்றல்லவோ வேண்டும்! அதனாலென்ன இதன் மூலமாக சக்திமிகுந்த இறைவன் புது அவதாரங்களை எடுத்திட்டால் அதுவும் உலக நன்மைக்குத்தானே!
இவ்வாறாக ஆத்ம விசாரம் செய்த அக்னிபுராந்தகர் தனக்கு உரித்தான அக்னி குண்ட தவத்தில் ஆழ்ந்தார். தவத்தில் செல்வதும், சமாதியிற் கூடுவதும், ஜீவகளையோடு மீள்வதும் மஹரிஷிகளுக்குக் கைவந்த ஒரு கலையாயிற்றே! கடவுள் காட்சி தந்தார்....
“அடியவனே! நீ கேட்கின்றவாறு ஓரிடத்தில் தீயசக்திகளைத் திரட்டுவது இயலாத ஒன்று, ஏனெனில் அந்தந்த தீவினைகள், தீய காரியங்கள் மூலமாகத்தான் கழிய வேண்டும் என்பது நியதி. எதையும் அனுபவிக்காது எப்படிக் கழித்திட முடியும்?” என்று ஈசன் கேட்க... அக்னிபுராந்தகர் யோசித்தார்..
“ஈஸ்வரா! தீய சக்திகளைத் தொகுத்து என் முதுகில் கட்டி ஒரு பிறப்பைத் தாருங்கள்! எங்கெங்கோ தீய சக்திகள் தாண்டவமாடுவதை விட ஒரே இடத்தில் தீவினைகள் நிகழ்ந்து விடுமல்லவா!” சர்வேஸ்வரன் புன்னகை புரிந்தார்.. அக்னி புராந்தகா! என்ன கேட்கிறாய் என்று நன்கு புரிந்து கொண்டாயா? அனைத்துத் தீவினைகளையும் ஒன்று திரட்டிடில் அது பெரிய அசுரப் பிறவியாக இருக்குமே! நீ அசுரனாக விரும்புகிறாயா?”
“இறைவா! தங்களின் அருள்வாக்கிற்கு விஞ்சியது எதுவுமில்லை! ஆங்காங்கே பெரிய பெரிய ராட்சஸர்கள் தீவினைகள் புரிவதைவிட அவர்களுடைய கர்ம வினைகளை ஏற்று, அதாவது, தீவினைகளையும் ஒருமித்துக் கூட்டி ஒரே பிறவியிலேயே அனைத்துத் தீவினைகளையும் அழித்து விடலாம் அல்லவா!”
“உண்மையே அக்னிபுராந்தகா! ஆனால் ஆங்காங்கே விரவியுள்ள தீவினை சக்திகள் அந்தந்த இடங்களில் தான் கர்மவினைகளைக் கழிக்க முடியும். பெரிய அசுரப் பிறப்பெடுத்து அகந்தையால், பேராசையால் அசுர ராஜ்யத்தை விரித்து விதிப்படி மீண்டும் அங்கங்குதானே தீய சக்திகள் பெருக்கெடுக்கும்.”
ஈஸ்வரா! தாங்கள் அறியாதது எதுவுமில்லை! அடியேனை இவ்வாறு பேசத் தூண்டுவதும் தாங்கள் தானே! யான் கோரும் வரத்தைத் தங்களிடம் சமர்ப்பித்து விட்டேன். இனி தங்கள் சித்தம்!” இறைவன் அவருடைய தியாக சீலத்தை மெச்சி, அவர் வேண்டிக் கொண்டவாறு பல அசுரப் பிறவிகளை ஆட்கொண்டார். இவ்வாறாகத் தீய சக்திகளைத் தம்முள் ஏற்று அதற்கான கர்மவினைகளை அனுபவித்து அசுரப் பிறவியெடுத்த மஹரிஷிகள் பலர் உண்டு. இவ்வாறு ஸ்ரீஅக்னிபுராந்தகரே செய்திராவிட்டால் எத்தனையோ ராவணர்களும், கம்ஸர்களும், ஹிரண்யர்களும் உலகை இன்றளவும் ஆக்ரமித்திருப்பர். அந்த அக்னி புராந்தகரே, அடுத்தடுத்து எடுத்த அசுரப் பிறவிக்குரிய தீயசக்திகளின் வெம்மையோடு, அவற்றை வென்ற உக்ரஹத்தோடு அவர்தம் அக்னி குண்டத் தவ வலிமையும் கூடிப் பெறற்கரிய உக்ரஹ சக்தியைப் பெற்ற ஸ்ரீநரசிம்மரை உபாஸிக்கும் பேரருளைப் பெற்றார். பிரஹலாதன், பத்மபாதர், ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீஆஞ்சநேயர் போன்று ஸ்ரீநரசிம்மரின் விஸ்வரூப உக்ரஹ சக்தியை முழுதும் பரிபூர்ணமாகத் தரிசிக்கும் அருளைப் பெற்றவரே ஸ்ரீஅக்னிபுராந்தகர். ஹிரண்யன் கூட, தூணில் எழுந்த ஸ்ரீநரசிம்மரின் முழு உருவத்தைக் காண இயலாது அவ்வவதாரத்தின் ஓர் அம்சத்தைக் கண்டே அஞ்சி நடுங்கினான்!

இறை நம்பிக்கை

ஆத்ம விசார வினா – விடை
வினா : இறை நம்பிக்கை குறைந்து வருவது போல் தோன்றுவதன் காரணம் என்ன?
விடை : கேள்வியே தவறானதாகும். இறை நம்பிக்கையில் சஞ்சலம் ஏற்படுமே தவிர இறை நம்பிக்கை குறைவடைவது போல் தோன்றுவது இல்லை. நாம் மனிதனாக வாழ்வு பெற்றதன் முக்கிய நோக்கமே நம் ஒவ்வொரு அசைவும் செயலும் இறையருளால் தான் நடைபெறுகிறது என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்து கொள்வதற்காகத்தான். இறைவன் என்றால் நமக்கு எல்லா நலன்களையும் அளிப்பவன் என்பது உண்மையே. ஆனால் நாம் எதிர்பார்க்கின்றபடி நம்முடைய இகபர சுகங்கள் யாவும் அமைய வேண்டும் என்று எதிர்பார்த்திடலாமா? இன்று நம் குழந்தைக்கு திடீரென்று நோயோ விபத்தோ ஏற்படுகின்றதெனால் கூட அதுவும் நம்முடைய நலனுக்காக இறைவன் அளித்ததே! ஆனால் இதனை நம் மனம் ஏற்றிடுமா? அதெப்படி “நமக்கு ஏற்படுகின்ற வருத்தமும், துன்பமும் இறைவனால் நம்முடைய நலனிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்றா ஏற்றுக் கொள்ள முடியும்”. இங்குதான் சஞ்சலம் ஏறபடுகின்றது. நம்முடைய குழந்தைக்கு நோயோ, காயமோ ஏற்பட்டிடில் அதற்கான காரணங்களை நம் மனம் ஆராய்வதில்லை. அனைத்துமே இறைவன் செயல் என்றால் இதுவும் இறைவனின் லீலை தானே!
1. பெற்றோர்களுடைய சில கர்மவினைகளைக் கழிப்பதற்காக நம்மைவிட தெய்வீகத் தன்மை நிறைந்து விளங்கும் குழந்தைகள் அவற்றைத் தம்முள்ளே ஏற்றுப் பெற்றோர்களைக் காக்கின்றன. ஒரு தந்தையோ, தாயோ அடிபட்டிடில் எத்தனை காரியங்கள் தடைபட்டு நிற்கும்?
2. அடிபட்ட, நோய்வாய்ப்பட்ட குழந்தை இதன் காரணமாக இல்லத்திலேயே இருப்பதால் ஏதோ சிறிய துன்பத்துடன் நின்று விட்டதே தவிர வழக்கம் போல் அது பள்ளிக்கோ வேறெங்கோ சென்று பேராபத்தைப் பெற்று வந்தால்....?
3. ஒன்றுமறியாத, கள்ளம் இல்லாத, தெய்வத்தன்மை நிறைந்த குழந்தைகளுக்கு இறைவன் துன்பம் அளிப்பது ஏன்? இதைப் பற்றி என்றேனும் சற்றே ஆத்மவிசாரம் செய்து அல்லது இறைவனிடமே மன்றாடிக் கேட்டு பதில் காண யத்தனித்திருக்கிறோமா? “ஏன் இறைவன் நம்மைப் படுத்துகின்றான்”, என்று மனம் எண்ணிடுமே தவிர நம்முடைய துன்பங்கள் எல்லாம் நம்முடைய கர்ம வினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளே என்பதை உணர்ந்தால் இறை நம்பிக்கையில் சஞ்சலம் ஏற்படாது. செய்த தவறுக்குத் தண்டனையை ஏற்பது தானே சரியான நீதி. எனவேதான் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளுக்குத் தண்டனையாகத்தான் நமக்கு இடர்கள் ஏற்படுகின்றன. உண்மை இப்படி இருக்கப் பிறரால் தான் நமக்குத் துன்பம் ஏற்பட்டது என்றோ, ‘நாம் எவருக்கும் இடைஞ்சலின்றித்தானே நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்கின்றோம். நமக்கு ஏன் துன்பங்கள் இப்படி அடுக்கடுக்காக வருகின்றன?” என்றவாறான சஞ்சல புத்தி நிறைந்த எண்ணங்களே மனதில் தோன்றுகின்றன. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போல நமக்கு ஏற்படுகின்ற நன்மை தீமை அனைத்தும் நம்முடைய கர்மவினைகளின் தொகுப்பே என்று அறிந்து கொண்டால் இறை நம்பிக்கையில் சஞ்சலம் ஏற்படாது.
இறை நம்பிக்கை மட்டும் போதுமா? – இறை நம்பிக்கையோடு வாழ்தல் மட்டும் போதாது. அந்த இறை நம்பிக்கை விநாடிக்கு விநாடி ஆழ்ந்து வலுப்பெற்றால்தான் எத்தகைய சஞ்சலமும் ஏற்படாது. எப்போது ஒருவனுக்கு இறைவன் உள்ளான் என்ற அடிப்படை நம்பிக்கை ஏற்பட்டு விட்டதோ அதுவே அவனுடைய மகத்தான புண்ணிய சக்தியைக் காட்டுகின்றது. கடவுளே உள்ளம் உவந்து ஆட்கொள்வதால் தான் இறை நம்பிக்கை ஏற்படுகின்றது ! எனவே இறைநம்பிக்கை குறைந்து வருகிறது என்று சொல்வது தவறு. எப்போது கடவுள் இருக்கின்றார் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டதோ அதில் எவ்வாறு குறைபாடு இருக்க முடியும்? இறை நம்பிக்கையில் சஞ்சலம் ஏற்படுவது என்றால் என்ன பொருள்? நம்மை ஆட்டுவிப்பவனே ஆண்டவன் என்ற எண்ணம் சற்றே பிறழ்ந்து, நாமே செய்கின்றோம் என்ற சுயநல எண்ணம் பெருகுவதால்தான் நம் மனம் எண்ணங்களின்பால் சென்று ஆசாபாசங்களிடையே உழன்று, ‘நாம் நினைப்பது நடக்க வில்லையே! இறைவன் நமக்கு ஏன் இதைப் பெற்றுத் தரவில்லை என்ற எண்ணங்கள் எல்லாம் உதிக்கின்றன. அதாவது அனைத்தையும் அளிப்பவன் இறைவனே என்ற நிலைமாறி “நமக்கு ஏன் இதனை இன்னும் இறைவன் அளிக்கவில்லை?” என்ற கேவலமான எண்ணமாக மாறி விடுகின்றது.
இறை நம்பிக்கையில் ஏற்படும் சஞ்சல புத்தியினை எவ்வாறு நிவர்த்தி செய்வது? சஞ்சலங்களுக்கு நிவர்த்தியாக அமைவதே ‘படையல்’ என்னும் சித்புருஷர்கள் காட்டும் வழிபாட்டு முறையாகும். நாம் பெற்றுள்ளதைப் பிறருக்குப் படைப்பதையே அதாவது அளிப்பதையே படையல் என்று சொல்லுகிறார்கள்.. படையலின் ஒரு வகையே தான தர்மங்களாகும். அதாவது நமக்கென இறைவன் அளித்துள்ளனவற்றில் ஒரு சிலவற்றையேனும்  இறைவனுக்கே படைத்து அதைத் தான தர்மமாகப் பிறருக்கு அளிப்பதே படையல் ஆகும். உதாரணமாக எந்தத் திசையில் இருந்து நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றனவோ அத்திசையை நோக்கி எழுந்தருளி இருக்கும் இறை மூர்த்திகளுக்கு நாம் விரும்பியவற்றைப் படைத்துத் தான தர்மம் அளித்திடில் அத்திசையிலிருந்து துன்பங்கள் நம்மை அணுகாவண்ணம் இறைவன் நம்மைக் காத்து அருள்புரிகின்றான். எப்படி துன்பங்களின் திசையை அறிவது.?

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகளே இங்கு அடிமை கண்ட ஆனந்தமாக மலர்கிறது...)
பல ஆண்டுகளுக்கு முன்............
நம் குரும்ங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், தம் குருநாதர் ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து கொண்டிருந்த சமயம்...... இரவுப் பொழுது....
“டேய்!, இங்கேயே ராத்திரி தங்கிட்டுக் காலைல போகலாம்டா”, என்றார் கோவணாண்டிப் பெரியவர். சிறுவன் மௌனமாக இருந்தான். பிரம்ம லிங்கத்தில் கிரிவலம் தொடங்கிக் கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. வீட்டை விட்டு வந்தும் ஒன்றரை மாத காலமாயிற்று! வீட்டு ஞாபகம் சிறுவனுக்கு வந்துவிட்டதோ!! போதாக்குறைக்கு மேலும் கோவணாண்டிப் பெரியவர் அவனைச் சீண்டி விட்டார்.., “ஏண்டா ஸ்கூல்ல நெறய பாடம் ஓடியிருக்குமே, எப்படி நீ சமாளிக்கப் போறே! ஏதாவது டியூஷன் வச்சுத் தரட்டுமா! அதுக்குக் காசு செலவாகுமேடா! வீட்டை விட்டுப் பொறப்பட்டு ஒரு பத்து பதினஞ்சு நாளாயிருக்குமில்ல!” – பெரியவர் கண்ணைச் சிமிட்டியவாறே கேட்டிட, சிறுவனுக்கு ஆத்திரமும், அழுகையும் கடும் வெயிலினூடே வரும் மழை போல் கூடிட, அவனுக்கு முன்னர் ஒரு முறை பெரியவர் அவனைப் பெயிலாக்கிப் பாஸ் ஆக்கிய அனுபவம் நினைவுக்கு வந்தது;
“இதபார்டா தெய்வீகம்னா எல்லாந்தான் இருக்கும். என்ன படிப்புப் படிச்சு வேலைக்குப் போனாலும் அவங்கவங்க காதைப் பிடிச்சுக்கிட்டுத்தான் எல்லாரும் தோப்புக்கரணம் போட்டாகணும். நமக்குப் பின்னாடி பெரிய கர்ம மூட்டையே இருக்குடா! ஏதோ உன்ன மாதிரி ஏழெட்டு வயசுலேயே தெய்வ காரியம் பண்ண ஆரம்பிச்சாத்தான், குச்சி ஊன்ற வயசுல கொஞ்சம் கர்மம் போன மாதிரி இருக்கும் புரிஞ்சுதா! ஏதோ ஒரு மாசம் இந்த மலையைச் சுத்தி வந்தோமே, எதுக்குச் சொல்லு பாக்கலாம். விடுவிடுன்னு நடந்து மூணு மணி நேரத்துல கிரிவலம் முடிச்சுடலாம். ரமணர், சேஷாத்ரி மாதிரி மஹானுங்க கிரிவலம் புறப்பட்டாங்கன்னா எப்பத் திரும்புவாங்கன்னு யாருக்குமே தெரியாது! இந்த ஒரு மாசத்துல நாம் எத்தனை தரிசனம் பாத்துருப்போம்! எவ்வளவு மூலிகை காமிச்சுருக்கேன்! இராத்திரி ஒரு மணிக்கு ஒரு புது நட்சத்திரத்தோட சேர்ந்த மலை தரிசனம், அன்னப் பறவை தரிசனம் இப்படீன்னு எவ்வளவு பாக்யம் உனக்குக் கெடச்சுருக்கு” என்றார்.
நெடுநேரம் பேசிய பெரியவர் சற்று நிறுத்திட, சிறுவன் சற்றும் அசையாமல் அவரைப் பார்த்து நின்றான்.. “ஏண்டா, யாருமே மலைமேல் ஏறக்கூடாது, பிரார்த்தனைன்னா, மட்டும் போகலாம்னு சொன்னேனே, நம்பரெண்டு பேரும் போனவாரம் உன்னோட பிரார்த்தனைக்காக மலைமேல ஏறினோமே, நடுராத்திரி வேளையப்போ, எவ்வளவு நட்சத்திர தரிசனம்! மின்மினி பூச்சியாட்டம், மலைமேல் மரத்துல எல்லாம் குட்டி குட்டியா எவ்வளவு நட்சத்திரம்! அத்தனையும் தேவாதி தேவர்களோட உருவம்னு சொன்னேனே..!! இந்த மாதிரி தெய்வ தரிசனமோ, தேவதரிசனமோ கிடைக்கணும்னா குரு பின்னாடி சுத்தணும்டா, கால் தேய, கை தேய சுவாமிக்குத் திருப்பணி பண்ணணும். அடுப்பு ஏத்தி கைகால் சுட்டுக்கிட்டு விறகைத் தலையில ஏத்தி, தலை புண்ணாகி , அண்டாவைப் புரட்டி அன்னம் வடிச்சு’ ஏழைங்க வயித்த ரொப்பணும்டா. இதுக்குத் தான் குரு பின்னாடி சுத்தணும்னு சொல்றது!”
“ஒரே ஒரு இடத்தில கிரிவலத்துல அசையாம உக்காந்துக்கிட்டு நாம் மலையைப் பார்த்துக்கிட்டு இருந்தோமே! ஒரு அஞ்சு நிமிஷத்துல விதவிதமா தரிசனம் மாறிச்சுல்ல, அதை கூட நீதான் நல்லாப் பார்த்தியே! ஒரு மாசமா இந்தத் தெய்வீக மண்ல தானே ரெண்டு பேரும் புரண்டுக்கிட்டு இருக்கோம். இதுக்குள்ள எத்தனை கோடி சித்தருங்க, மஹானுங்க இங்க வந்துட்டுப் போயிருக்காங்க தெரியுமா? அதப் பார்க்கக் கூடிய சக்தி மட்டும் உனக்கு இருந்துச்சுன்னு வெச்சுக்கோ, நீ என்னை விட்டுட்டு அவங்க பின்னாடி ஓடிப் போய்டுவியே! அதனால தான் நாங்க அதெயெல்லாம் காட்றது கிடையாது! அது எங்களோட வேலையுமில்லை, அதுக்காக நாங்க பூலோகத்துக்கு வரலை!” என்று தொடர்ந்த  பெரியவர் பெரிதாகச் சிரித்தார்... “ஒரு மாசமா அண்ணாமலை மேல்பட்டு வர்ற காத்தைச் சுவாசிக்கிறோம். மஹானுங்க, சித்தருங்க நம்ப பக்கத்துல உரசி வந்துட்டுப் போறாங்க! மேல் உலகத்துல என்னடான்னா இந்திரனும், சந்திரனும் கூட அருணாசலத்துக்குப் போகணும்னு துடியாத் துடிக்கிறாங்க,
“நீ இந்த தவத்தைச் செய், நீ இவ்வளவு சேவை செஞ்சால் தான் புனிதமான அண்ணாமலை தரிசனம்னு” அவங்களுக்குச் சுவாமி நெறயக் கட்டுப்பாடு வச்சுருக்காரு... பூலோகத்துல இருக்கிற கோடிக் கணக்கான பேருக்கு மோட்சம் கொடுக்கிறவர்தான் சந்திர பகவான்! அவருக்கே அருணாசல தரிசனம்னா ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுன்னா, எப்படிப்பட்ட தெய்வீகமான மலை இது.....” விளக்கமாகப் பேசிக் கொண்டே வந்த பெரியவர் திடீரென்று கிசுகிசுத்தார்.. “ஏண்டா! இங்க இந்த வரப்புல இன்னிக்குப் படுக்கப் போறோமே, உனக்கு இங்கேயே ஒரு ஆஸ்ரமம் கட்டிக் கொடுத்துடட்டுமா?” – சிறுவன் விழித்தான், வியந்தான், வெட்கினான்...,“என்ன வாத்யாரே! அண்ணாமலையைப் பத்தி நெறய சொல்லிட்டு.... திடீர்னு ஆஸ்ரமம் கட்டிக்கோன்னு சொல்றே?”
“ஆமாண்டா, உனக்கு எவ்வளவு விஷயம் சொல்லித் தந்திருக்கேன், அதெல்லாம் நீ மத்தவங்களுக்குச் சொல்லணுமே..”
சிறுவன் மனதில் “வெறும் கோவணாண்டியாகத் திரியும் இவர் சொன்னால் எதுவும் பலித்து விடுமே!” என நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
“ஏண்டா யோசிக்கிறே? உன்னை ஜம்முன்னு ஒரு மேடையில் ஏத்தி மைக்கு, இஸ்பீக்கருங்க (Mike, Speaker) எல்லாம் வச்சு நீ தெய்வீகத்தைப் பத்திப் பேசினா எப்படியிருக்கும்? உங்கிட்ட எவ்வளவு விஷயங்களை ஆன்மீகப் பொக்கிஷம் போல கொட்டியிருக்கேன்!” என்றார்....
சிறுவன் அதிர்ந்தான்...
“என்ன இது! நாம் முழு டிராயர் அணிவதற்கு யோசிக்க வேண்டி இருக்கின்றதே! இவர் பெரிய தெய்வீக புருஷர்னு நல்லாத் தெரியுது! ஆனால் அப்பப்ப ஒன்றும் தெரியாதவர் போல் இருந்து விடுகிறாரே! திடீரென்று மேடையேற்றி  விடட்டுமா? ஆஸ்ரமம் கட்டிக் கொள்கிறாயா? என்றெல்லாம் கேட்கிறாரே”, என யோசித்தான்.....

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

(ஆனால் சற்குருவின் தீர்க்க தரிசனம் யாருக்குப் புரியும்? அதே சிறுவன் தான் 12 வயதிலேயே மேடையேறி “ஸ்ரீவெங்கடராம சுவாமிகளாய்” சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், பெரம்பூர் ஸ்ரீகோமதியம்மன் கோயில், தொழுப்பேடு முருகன் ஆலயம், பெண்ணாடம் சிவாலயம் மற்றும் திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசல ஈஸ்வரர் ஆலயம், சென்னை ஸ்ரீரமணகேந்திராவில் “ஸ்ரீஅருணாசல மஹிமை” என்னும் தலைப்பில் அற்புத ஆன்மீகப் பொழிவு – இவ்வாறாகப் பல வருடங்களாகச் சிறந்த ஆன்மீகப் பணிபுரிகிறார்... ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தித்திக்கும் ஆன்மீகத் தேனருவியாய், சித்புருஷர்களின் அருட்பொழிவுகள் மற்றும் ஸ்ரீஅகஸ்திய கிரந்தச் சாரங்களையும் தெய்வீக ஊற்றாய்ப் பெருக்கி முன்னூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் அப்பர்வழி உழவாரத் திருப்பணிகளையும், ஏழைகளின் திருமணத்தில் மாங்கல்ய உதவி, அன்னதானம், வஸ்திர தானம், மூன்றாண்டுகளாய் சென்னை மற்றும் திருச்சி பகுதி கிராமங்களில் ஏழைகளுக்கான இலவச மருத்துவப் பணிகளையும் சிரமேற்கொண்டு ஜாதி, இன, மத பேதமின்றி சத்சங்கங்கள் மூலம் நிறைவேற்றி வருகின்றார்கள்.... மேலும் நம் குருமங்கள கந்தர்வா, தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடமிருந்து பெற்ற எழுதாக் கிளவியாய் விளங்கும் குருஅருள் மொழித் திரட்டை ஸ்ரீஅருணாசல கிரிவல மஹிமை, ஸ்ரீசுபமங்கள தீப மஹிமை போன்ற 50க்கும் மேற்பட்ட தெய்வீக நூல்கள் மூலம் எளிமையான முறையில் வெளிப்படுத்தி அருட்பணியாற்றி வருகின்றார்கள்...)
..............”ஏண்டா திடீர்னு ரொம்ப மௌனமாயிட்டே! அதுக்குள்ளாற நிர்விகல்ப சமாதி கூடிருச்சா...” என்ற பெரியவரின் கேலிக் குரலால் சிறுவன் சிலிர்த்துக் கொண்டு எழுந்தான்.., “அவ்வளவு ஈஸியா தியானம் கூடிடுச்சுன்னா..... நீ செஞ்சுகிட்டு வர்ற நெறய தெய்வக் கார்யங்களோட புண்ய சக்தியை வெச்சுக்கிட்டு உனக்குச் சுலபமா சமாதி கூட வச்சுடலாம்... அதுதான் உனக்குப் பிருத்வி பூதம், அப்பு பூதம், வாசிகலை இரகசியங்களை நெறயச் சொல்லிக் கொடுத்திருக்கேனே! ஆனா நீ செய்ய வேண்டியது நெறய இருக்கேடா, கல்யாணம் ஆயி, பிள்ளை குட்டியைப் பெத்து, ஆயிரக் கணக்குல இறையடியார்களையெல்லாம் வெச்சு எத்தனையோ கோயிலில் திருப்பணி பண்ணி  மாசா மாசம் பௌர்ணமில அன்னதானம் செய்யணும்! இதெல்லாம் ஒழுங்காப் பண்ணினாலே எல்லா சமாதியும் ஒண்ணு கூடின பலன் கிடைக்குமே.. உனக்குன்னு ஆஸ்ரமம் கெடச்சுதுன்னு வெச்சுக்கோ, நீ நெறய அன்னதானம் பண்ணுவியா?” என அடுக்கிக் கொண்டே போனார். சிறுவன் விழிகளை உருட்டி உருட்டி எதுவும் புரியாத ஜடமாய் நின்றான்... பெரியவர் திடீரென்று ஜடபரதராய் சிறுவன் தோள்களை விருட்டெனப் பிடித்து உலுக்கி , “சொல்லுடா! இந்தக் கிழவன் உங்கிட்ட அதைத்தாண்டா எதிர்பார்த்துக் கிட்டிருக்கான்!” என்றார்... சிறுவனுடைய உடல் திசுக்களில் ஏதோ புது சக்தி ஏறினாற் போல்.....
(இவ்வாறாகவே சற்குருமார்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஸ்பர்ஸ தீட்சை மூலம் குரு அருளைத் திரட்டி அளிப்பார்கள்.. பல கோடி சூர்யப் பிரகாசம் வாய்ந்த, பலகோடி நட்சத்திரங்களின் எடை வலுவைப் பெற்ற, மிகவும் சக்தி வாய்ந்த குரு ஸ்பர்ஸ தீட்சையின் சக்தியை நேரில் காணுதலோ, பெறுதலோ, அடைதலோ இயலாது... திருஅண்ணாமலையைப் போன்ற சக்திவாய்ந்த இடங்களில் மட்டுமே இத்தீட்சை குரு தொடுவது போல் நிகழும். ஆனால் ஒரு சிஷ்யனின் வாழ்க்கையில் எப்போதெல்லாம் இது நிகழும் என்பது இறுதி வரை தெய்வீக ரகசியமாகத் திகழும்...) தன்னை ஏதோ ஒரு தெய்வீக சக்தி பற்றுவதை உணர்ந்த சிறுவனின் கண்களில் நீர்த்துளிகள் திரள..... கூப்பிய கரங்களுடன்...... ஆஞ்சநேய பாவத்துடன்.... பெரியவரைப் பார்த்து வணங்கினான்.... அவர் “சற்றே விலகும் பிள்ளையாய்த்” தள்ளி நின்று கொண்டார்! அவர் பின்னால் அற்புதமாய் அண்ணாமலையின் அனைத்து முகடுகளும் தரிசனம் தந்தன! “அவன் தாண்டா உனக்கு எல்லாத்தையும் கொடுக்கின்றவன்! இந்தக் கோவணாண்டி எதுக்கும் துப்பில்லாத சாதாரண மனுஷன்...”, என்றார்.... (பெரியவரும், சிறுவனும் அன்றிரவு தங்கிய இடம் எது தெரியுமா? இன்று நீங்கள் காணும்,, சிறிது சிறிதாக எழும்பி வரும் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம் உள்ள புனிதமான இடமே அது! குருவருளால் பிச்சை எடுத்துச் சிறுக சிறுக எத்தனையோ வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட இடம் பெரும் ஆஸ்ரமமாக மலர அனைவருடைய உதவியையும் வேண்டுகிறோம்..) அன்றிரவு தான் ஈஸ்வர வருடத்தில் சிறப்புப் பெற இருக்கின்ற ஆக்கோட்ட லிங்கத்தின் சிறப்பை ஸ்ரீஅகஸ்திய கிரந்த அட்சரப் பாமாலையாய் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள் அருளிட இன்றும் இறையருளால் குரு கூட்டும் “அட்சரம் வியாப்த தியான” நிலை மூலம் ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள் அருளிய ஆன்மீக பொக்கிஷங்கள் அனைத்தும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் பெறப்பட்டு பக்த கோடிகளுக்கு அளிக்கப்படுகின்றது. சற்குருவின் அடிமை கண்ட ஆனந்தத்திற்கு எல்லையேது? பரம்பொருளைக் காட்டும் பரமானந்தம் அன்றோ அது!

காயத்ரீ பூஜை

ஸ்ரீகாயத்ரீ பீஜாட்சர மஹா சக்கர பீட பூஜை
ஸ்ரீஈஸ்வர ஆண்டிற்குரித்தான மகத்தான சக்கர பூஜையாக இது அமைந்துள்ளது. அஷ்ட துர்க்கை அம்பிகையரும் எண் கரங்களுடன் ஸ்ரீகாயத்ரீ தேவியை வழிபடுகையில் உருவான சக்கரமாகும் இது! இதில் உள்ள பீஜாட்சரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை. தக்க சற்குரு ஒருவரிடமிருந்து இச்சக்கரத்தின் பூஜா முறைகளை அறிந்து வழிபடுதல் உத்தமமானது. ஆற்றல் மிக்க ஸ்ரீகாய்த்ரீ மந்திரம், பல கோடி சதுர்யுகங்களுக்கு முன் இறைவனின் கிருபையாக, அனைத்து லோகங்களுக்கும் அளிக்கப்பட்ட போது, சர்வலோக ஜீவராசிகளும் ஆனந்தமடைந்தன. நலமிக்க நான்கு வேதங்களின் திரட்சியான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உச்சரித்தாலே போதும், உன்னதமான பலன்களைத் தரும் என்று அந்த யுகத்தில் இறைநியதி அமைந்திருந்தமையால் யாங்கணும் ஸ்ரீகாயத்ரீ மந்திரமே ஒலித்தது.. தர்ம தேவதை செங்கோலோச்சிய காலமாதலின், அந்த யுகங்களில் ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலன்களை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்தினர். ஆனால் காலப் போக்கில் பலரும் சுயநலத்திற்காகவும், பேராசை கொண்ட எண்ணத்தோடும் கேடான காரியங்களை நிறைவேற்றுவதற்காகவும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பயன்படுத்துவராயினர். அசுரர்களும், ராட்சசர்களும், சுயநல மனிதர்களும் பெருகிடவே ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலன்களை இரட்சையாகக் கொண்டு சுயநலக் காரியங்களிலும், தீயவழிகளிலும் சென்று அழிவுப் பாதையைத் தேடுவாராயினர்....
ஸ்ரீகாயத்ரீ மந்திர பலன்கள்.
வினா : ஸ்ரீகாயத்ரீ மந்திர பலன்களால் தீய வழியில் செல்வதைத் தடுக்க இயலாதா?
விடை : உதாரணமாக இலட்சுமி கடாட்சம் என்று சொல்கின்றோம் பணம் நிறைய குவிந்து கிடக்கின்றது... இதனால் கேளிக்கைச் செயல்களில் ஈடுபட்டுப் பெரும் பாவங்களைச் சேர்த்துக் கொண்டால் இலட்சுமி கடாட்சத்தால் தீய வழிச் செல்வதைத் தடுக்க இயலாதா என்று கேட்டிட முடியுமா? இலட்சுமி கடாட்சமெனில் ஸ்ரீஇலட்சுமியே உறைந்து அருள்கின்ற செல்வம்! தீவினைகளில் பணத்தைச் செலவிட்டால் ஸ்ரீஇலட்சுமி ஒதுங்கி விலகுகின்றாள். ஸ்ரீகாயத்ரீ மந்திர பலன்களால், ஒருவன் தீயவழியில் செல்வதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து காப்பாற்றப் படுகின்றான் என்பதே இதன் பொருள்! அதாவது தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவதே ஸ்ரீகாயத்ரீயின் பொருளாகும். சாதாரணமாக ஒரு பாவத்தால் விளையும் எதிர்வினைகளை விட, “நாம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நிறைய ஜபித்து விட்டோம். இது நிச்சயமாக எங்கும் என்றும் காப்பாற்றும்”, என்ற தைரியத்தில் பெரும்பாவச் செயல்களில் ஈடுபடுவானாகில், அதன் எதிர்வினைகள் பன்மடங்காய்ப் பெருகும். காரணம் ஸ்ரீகாயத்ரீ  மந்திரப் பலன்கள் தீவினைத் தற்காப்புகளில் மிக விரைவாகக் கரைந்து விடுமாதலால், எதிர்வினைகள் பெரிதாகி எளிதில் அவனை ஆட்கொண்டு விடும்.. அதாவது நற்காரியங்களுக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரம் பெரிதும் உறுதுணையாக நிற்கும், தீவினைகளில் அது மிக விரைவாக, எளிதாகக் கரைந்து விடும். உதாரணமாக ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொண்டு எந்த நற்காரியத்தையும், தீய காரியத்தையும் செய்வது அதை செலவழிப்போரின் மனோநிலையைப் பொறுத்துள்ளது...,
இவ்வாறு அந்த யுகத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திர பலன்களைப் பலரும் தவறான முறைகளில் தற்காப்பிற்காகப் பயன்படுத்திட,, உத்தமர்களும், மஹரிஷிகளும், தேவர்களும் ஸ்ரீகாயத்ரீ தேவியிடம் முறையிடவே, இறைத் திருவிளையாடலாக, ஸ்ரீகாயத்ரீ தேவியும், “என்னை நம்புபவனை நான் காப்பாற்றுதல் வேண்டும் என்பது நியதி! மேலும் பூலோக பரிபாலனத்திற்கான மந்திர, வழிபாட்டு, பூஜை முறைகளை அளிப்பது மஹரிஷிகளாகிய தங்களின் கடமையல்லவா!” என்று அருளிடவே மஹரிஷிகள் திகைத்தனர்... பூலோகத்திற்கு ஜாதி, இன, குல பேதமின்றி, ஜீவன்களிடையே புல், பூண்டு, மனித பேதமுமின்றியும் கூட அனைவர்க்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அளித்த ஸ்ரீவிச்வாமித்ர மஹரிஷியே திகைத்து நின்றார்.
எனவே ஸ்ரீவிசுவாமித்ரரும், ஏனையோரும், ஸ்ரீவசிஷ்டரும் ஒன்று கூடி ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலன்களைப் பரிபூர்ணமாகப் பெற்றிட சில கட்டுப்பாடுகளை விதித்தனர்.. இதனையே மஹரிஷிகள் “ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்கு இட்ட சாபம்” எனக் கூறுவர். இதை நிவர்த்தி செய்ய “ஸ்ரீகாயத்ரீ சாப விமோசன மந்திரம்” என்று ஒன்றுமுண்டு... அதாவது ஸ்ரீகாயத்ரீ மந்திர பலன்களைப் பரிபூர்ணமாகப் பெற, மஹரிஷிகள் இட்ட “கட்டுகளை” உணர்ந்து அறிந்து தெளிந்து “விடுவித்து” நமக்கு நல்வழி காட்டுவதே “ஸ்ரீகாயத்ரீ சாபவிமோசன மந்திரம்” ஆகும். இது பற்றிய விளக்கங்களைப் பின்னர் காணலாம்.
“ஸ்ரீகாயத்ரீ மஹாபீஜாட்சர சக்கரபீட பூஜை” விளக்கத்தின் ஓர் அங்கமாக மேற்கண்ட விரிவான பதவுரை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாயத்ரீ சாப விமோசன மந்திரம் அற்புதமான சக்தியுடையதெனினும் பாமரர்களும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை நன்முறையில் பெற்று நல்வழியில் பயன்படுத்திட கலியுகத்தில் சற்குருமார்கள் மஹரிஷிகளின் கட்டு பீஜாட்சர மந்திரங்களைப் பதித்து சில அபூர்வமான யந்திரங்களைச் சித்புருஷர்களின் அருட்கடாட்சமாக அளித்துள்ளனர்.. ஸ்ரீநாரத மஹரிஷிக்கு பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீகாயத்ரீ தோத்திர விளக்கங்களை அளித்துள்ளார்.. நம்முடைய புராணங்களில் ஸ்ரீகாயத்ரீ தோத்திரமும், ஸ்ரீகாயத்ரீ ஹ்ருதய துதியும், ஸ்ரீகாயத்ரீ சாபவிமோசன தோத்திரமும் நிறைந்து  காணப்படுகின்றன. இவற்றின் ஒருமித்த பலாபலன்களைப் பெற ஸ்ரீமஹாபீஜாட்சர சக்ரபீட பூஜையைச் செய்து சித்புருஷர்கள் அருளியுள்ள இந்த யந்திரத்தை எவ்வித பேதமுமின்றி அனைவரும் குருகாட்டும் வழியில் பூஜித்து நல்வாழ்வு பெற வேண்டுகிறோம்.
ஸ்ரீகாயத்ரீ பீஜாட்சர மஹா சக்ர பீட அமைப்பு
1. பூஜைத் தலைப்புப் பெரிதாக இருப்பினும் எளிமையான பூஜையிது! இந்த யந்திரத்தில் பீஜாட்சரம் எனப்படும் மந்திர சக்திகளின் தெய்வீக ஒலி அணுக்கள் பொதிந்திருப்பதையும், ஸ்ரீகாயத்ரீ தேவியின் விஸ்வரூப வடிவமே சக்கரக் கோணங்களில் அமைந்திருப்பதையும் இதைப் பீடமாக அதாவது மூலமாக வைத்து பூஜிப்பதால் உத்தம நிலைகளை எளிதில் சற்குரு மூலமாக அடைந்திடலாம் என்பதையும் உணர்ந்திடுக!
2. இச்சக்கரத்தைப் பச்சரிமாவுக் கோலமாக சந்தனம், தேக்கு, பலா, அரசு, ஆல், மா பலகைகளில் அமைத்துக் கொள்ளலாம்.
3. தயவு செய்து பெயிண்டினால் எக்காரணங் கொண்டும் இதனை வரைந்திடாதீர்கள்..
4. இதனை மேற்குறித்த மரப் பலகைகளிலோ, பூஜைக்குரித்தான வேறு பலகைகளில் மட்டுமோ அல்லது தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஐம்பொன் உலோகங்களிலோ பொறித்துக் கொள்ளலாம். இரும்பு, எவர்சில்வர், வெண்கலம், ஈயம் ஆகியவற்றையும் வேறு மரப்பலகைகளையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
5. சக்கர மரப் பீடத்திற்கு நான்கு திசைகளிலும் பசுநெய் விளக்கேற்றி இங்கு அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாயத்ரீ தோத்திரத்தைப் பாராயணம் செய்து எளிமையான முறையில் பசும்பால் சாதம் நிவேதனம் செய்து வழிபடவும்.
6. குங்குமம், வில்வம், துளசி, மணமுள்ள மலர்கள், நாணயங்களால் அர்ச்சித்து அவற்றைப் பிரசாதமாக ஜாதி, இனபேதமின்றி அனைவருக்கும் அளித்திடவும்.
7. பலரும் ஒன்று கூடி சத்சங்கமாகக் கூட்டு வழிபாடாக செய்வது சிறப்புடையது.
8. இதனை தினசரிப் பூஜையாக ஏற்றிடில் இதுவரையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜபம் செய்யாமைக்கும் பலருக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் சென்றடைவதற்கான உத்தம இறைப்பணிகளை நிறைவேற்றாமைக்கும் இது பிராயச் சித்தமாக அமையும்.
குறிப்பு: இச்சக்கரத்தைத் தகடுகளில் பொறித்து வியாபார நோக்கில் ஈடுபட்டால் எதிர்விளைவுகளும் சாபங்களுமே ஏற்படும். எனவே எக்காரணம் கொண்டும் எவரும் இதனை சுயநலத்திற்காக சக்கரத்தை விற்றுப் பணம் சம்பாதிக்கும் அதர்ம வழியில் ஈடுபடலாகாது என்று எச்சரிக்கின்றோம். நிறைய மந்திரகட்டு வைத்து வரைந்த சக்கரம் இது! நிறைந்த தபோபலன், பூஜாசக்தி, தான தர்ம புண்யசக்தி, ஸ்ரீகாயத்ரீ ஜப சித்தி, வேத பாராயண அனுக்ரஹம், மந்திர சித்தி, சற்குருவின் குருவருள் இவை கூடிய ஸ்ரீவெங்கடராம சுவாமிகளால், அவர்தம் குருநாதரின் ஆக்ஞைப்படி அளிக்கப்பட்டுள்ள அபூர்வமான சக்கரமிது.. தினசரி கூடுதல் பூஜைகளில் இதனை ஓர் அங்கமாகச் சேர்த்திடில் கிரஹ சஞ்சார விளைவுகளினால் ஏற்படும் பெரும் துன்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீகாயத்ரீ ஸ்தோத்ரம் (ஸ்ரீமன் நாராயாணர் நாரதருக்கு உபதேசித்தது)
நாரத உவாச
பக்தானுகம்பின் ஸ்ர்வக்ஞ ஹ்ருதயம் பாப நாசனம்|
காயத்ர்யா:கதி தம் தஸ்மாத் காயத்ர்யா: ஸ்தோத்ரமீரய||
நாராயண உவாச
ஆதிசக்தே ஜகன்மாத: பக்த அனுக்ரஹ காரிணி|       
ஸ்ர்வத்ர வ்யாபிகே அனந்தே ஸ்ரீஸந்த்யேதே நமோஸ்துதே||
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ ஸாவித்ரீ
சரஸவதீச: ப்ராஹ்மீ ச வைஷ்ணவீ
ரௌத்ரீ ரக்தா ச்வேதா அஸிதேரா|
ப்ராத: பாலா ச மத்யாஹ்னே யெனவனஸ்தா
பவேத்புன:| வ்ருத்தா ஸாயம்
பகவதீ சிந்த்யதே முனிபி : ஸதா|
ஹம்ஸஸ்தா கருடாருடாத ததா வ்ருஷப
வாஹினீ| ரிக்வேத அத்யாயினீ பூமௌ
த்ருச்யதே யா தபஸ்விபி||
யஜுர்வேதம் படந்தீ ச அந்தரிக்ஷே விராஜதே|
ஸா ஸாமகாபி ஸர்வேஷு ப்ராம்யாமணா ததா புவி|
ருத்ரலோகம் கதா த்வம்ஹி விஷ்ணுலோக நிவாஸினி|
த்வமேவ ப்ரஹ்மனோ லோகே அமர்த்ய அனுக்ரஹ காரிணீ|
ஸப்தர்ஷி ப்ரீதி ஜனனீ மாயா பஹுவர ப்ரதா|
சிவயோ: கரநேத்ரோத்தா ஹ்யச்ரு ஸ்வேத ஸமுத்பவா|
ஆனந்த ஜனனீ துர்கா தசதா பரி பட்யதே|
வரேண்யா வரதா சைவ வரிஷ்டா வரவர்ணினீ.|
கரிஷ்டா ச வராஹா ச வராரோஹா ச ஸப்தமீ|
நீல கங்கா ததா ஸந்த்யா ஸர்வதா போக மோக்ஷதா|
பாகீரதீ மர்த்ய லோகே பாதாலே போக வத்யபி|
த்ரிலோக வாஹினீ தேவி ஸ்தான த்ரய நிவாஸினீ|
பூர்லோகஸ் த்வமேவாஸி தரித்ரீ சோக ஹாரிணீ|
புவோ லோகே வாயு சக்தி: ஸ்வர்லோகே தேஜஸாம் நிதி:|
மஹர் லோகே மஹா ஸித்தி : ஜன லோகே ஜனன்யபி|
தபஸ்வினீ தபோ லோகே ஸத்ய லோகே து ஸத்யவாக்|
கமலா விஷ்ணு லோகேச காயத்ரீ ப்ரஹ்ம லோகதா|
ருத்ர லோகே ஸ்திதா கௌரீநிஹர அர்தாங்க வாஸினீ|
அஹமோ மஹத்ச்சைவ ப்ரக்ருதி : த்வம் ஹி கீ யஸே|
ஸாம்ய அவஸ்தாத்மிகா த்வம்ஹி சபல ப்ரஹ்ம ரூபிணீ.|
தப : பரா பராசக்தி : பரமா த்வம்ஹி கீயஸே|
இச்சா சக்தி : க்ரியாசக்தி : க்ஞான சக்தி : த்ரிசக்திதா|
கங்கா ச யமுனா சைவ விபாசா ச ஸரஸ்வதீ|
ஸரயூ: தேவிகா ஸிந்து: நர்மதா ஐராவதீ ததா.|
கோதாவரீ சதத் ரூச்ச காவேரீ தேவ லோககா|
கௌசிகீ சந்த்ர பாகா ச விதஸ்தா ச ஸரஸ்வதீ.|
கண்ட கீ தாஷினீ தோயா கோமதீ வேத்ரவத்யஷி|
இடாச பிங்களா சைவ ஸுஷும்னா ச த்ருதீயகா|
காந்தாரீ ஹஸ்த ஜிஹ்வாச பூஷா அபூஷா ததைவ ச|
அலம்பு ஸா குஹுஷ்சைவ சங்கினீ ப்ராணவாஹினீ
நாடி சத்வம் சரீரஸ்தா கீயஸே ப்ராக்த்னை : புதை: |
ஹ்ருத் பத்மஸ்தா ப்ராண சக்தி:
கண்ட ஸ்தா ஸ்வப்ன நாயிகா|
தாலுஸ்தாத்வம் ஸதாதாரா பிந்துஸ்தா பிந்து மாலினீ|
மூலேது குண்ட லீ சக்தி: வ்யாபினீ கேச மூலகா.
சிகாமத்யாஸனா த்வம்ஹி சிகாக்ரேது மனோன்மனீ|
கிமன்யத் பஹுனோக்தேன யத்கிஞ்சித் ஜகதீத்ரயே.
தத் ஸர்வம் த்வம் மஹாதேவி ச்ரியே
ஸந்த்யே நமோஸ்துதே| இதீதம் கீர்த்திதம்
ஸ்தோத்ரம் ஸந்த்யாயாம் பஹுபுண்யதம்|
மஹா பாப ப்ரசமனம் மஹாஸித்தி
விதாயகம்| ய இதம் கீர்த்த யேத்
ஸ்தோத்ரம் ஸந்த்யாகாலே ஸமாஹித:|
அபுத்ர : ப்ராப்னுயாத் புத்ரம் தனார்த்தீ தன மாப்னுயாத்|
ஸர்வ தீர்த்த தபோ தான யக்ஞயோக பலம் லபேத்|
போகான் புக்த்வா சிரம் காலம் அந்தே
மோக்ஷம் அவாப்னுயாத்| தபஸ்விபி: க்ருதம்
ஸ்தோத்ரம் ஸ்னான காலே துய :படேத்|
யத்ர குத்ர ஜலே மக்ன: ஸந்த்யா மஜ்ஜனஜம் பலம்|
லபதே நாத்ர ஸந்தே ஹ: ஸத்யம் ஸத்யம் ச நாரத|
க்ஷ்ருணுயாத்யோபிதத் பக்த்யா ஸ துபாபாத் ப்ரமுச்யதே|
பீயூஷ ஸத்ருசம் வாக்யம் ஸந்த் யோக்தம் நாரதேரிதம்|

ஆலய கும்பாபிஷேகம்

ஒவ்வொரு விநாடியும் எந்த இறைவனின் பெருங்கருணையால் வாழ்கின்றோமோ அப்பரம்பொருளின் தெய்வாம்சம் கூடித் திரண்டிருக்கும் ஆலயங்களை மிகத் தூய்மையாக வைத்திருப்பதோடல்லாமல், புனித இறைவன் உறைகின்ற சிலா ரூபங்களை மேலும் புனிதப்படுத்தி தெய்வீக ஆவாஹன சக்தியை புனருத்தாரணம் செய்வதும் நம் தலையாய கடமையாகும். தற்போது பல ஆலயங்களிலும் இவை நன்முறையில் நடைபெற்று வருவது மிகவும் ஆனந்தம் அளிப்பதாகும்.
SAND BLASTING ஐத் தவிர்ப்பீர்களாக : கும்பாபிஷேக இறைத்திருப்பணியில் கோயில் தூண்களை நவீன முறையில் தூய்மைப்படுத்தும் வகையில் உயர்தர மோட்டார் சக்தியைக் கொண்டு சிறு இரும்புக் குண்டுகள், மணல், நுண்ணிய உருளைக் கற்களை இரும்புக் குழாய்கள் மூலமாக வேகமாகத் தூண்களில் பாய்ச்சுகின்ற வேதனையான Sand Blasting முறையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுமாறு சம்பந்தப்பட்ட அனைவரின் தாள்களில் வீழ்ந்து வணங்கி இறைஞ்சுகின்றோம்.
இத்தகைய விளக்கங்களையும் அறிவிப்பையும் நாம் முன்னரே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வெளியிட்டுள்ளோம். இவ்விரண்டு வருடகால இடைவெளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மீண்டும் Sand Blasting தலை தூக்கி நிற்பதால் விபரீதமான விளைவுகளைத் தரும் இவ்வேதனையான முறையைத் தவிர்த்தல் வேண்டி இத்தகைய விண்ணப்பத்தை மீண்டும் வெளியிட வேண்டியுள்ள நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். சித்புருஷர்களும் மகான்களும் தங்களுடைய தெய்வத் திருமேனிகளை பல கோயில் தூண்களில் நிலை நிறுத்துகின்றனர். மேலும் அவர்களே நிர்மாணித்த அல்லது ஆவாஹன பூஜைகள் செய்த பல தெய்வத் திருமேனிகளும், அபூர்வமான சக்கரங்களும் தேவலோக புஷ்ப, கோல வடிவுகளும் கோயில் தூண்களில் அமைந்துள்ளன. அற்புத பீஜாக்ஷர சக்திகள் நிறைந்த வடிவுகள் இவை! பல்லாயிரம் சதுர்யுகங்களாக தெய்வீக சக்தியினை பல மகான்களும், யோகியரும், ஞானியரும், சித்புருஷர்களும், பல பிரகாரத் தூண்களின் அடியில் அமர்ந்து தங்கள் தபோபலன்களைத் தூண்களில் பதித்துச் செல்கின்றனர்.
அங்கப்பிரதக்ஷிணம், அடிபிரதக்ஷிணம், முழங்கால் பிரதக்ஷிணம் என்ற பல வகையான பிரதக்ஷிண முறைகளில் பக்த கோடிகள் வலம் வருகையில் அவர்களுடைய, உடலில் தூண்களில் பதிந்துள்ள தெய்வ சக்திகள் கூடி அளப்பரிய அனுக்ரஹங்களைத் தருகின்றன. இத்தகைய அருள் சக்தி நிறைந்த தூண்களிலும், அவர்கள் திருமேனியிலும், சிலைகளிலுமா, இரும்புக் குண்டுகளையும், சிறுகற்களையும் பாய்ச்சி மூளி செய்வது! இம்முறையில் தூண்களின், அவற்றின் மேல் பரப்பு செதில் செதிலாக பெயர்க்கப்பட்டு அவற்றில் வசிக்கும் ஆயிரக்கணக்கான நல்ல தேவதைகளின் சாபத்திற்கு அனைவரும் ஆளாகின்றனர். ஒரு கோயில் சிற்பத்தை உருவாக்க எத்தனையோ வழிபாடுகளையும் விரதங்களையும் தெய்வீகச் சிற்பிகள் மேற்கொண்டு இவ்வரிய இறைப்பணிக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்தனரே! அவர்களுடைய இறைத் திருப்பணிகளைக் கேவலம் செய்வது போல் தற்காலத்தில் Sand Blasting நடைபெறுவது மிகவும் வருத்தத்திற்குரியதல்லவா? நம் மூதாதையர்கள் பயன்படுத்திய, கோயில்களைத் தூய்மைப்படுத்துவதற்கான நல்வழிமுறைகள் பல இருக்க நவீனம் என்ற பெயரில் நெஞ்சைப் பிளந்து வேதனைகளைக் கொட்டும் கொடிய இம்முறையைக் கைவிட வேண்டி அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சுயம்புத் திருமேனிகள் :- உலகத்தில் வேறெங்கும் காணப்படாத அளவிற்கு நம் தமிழ்நாட்டில் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுயம்பு மூர்த்திகளும், அர்ச்சாவதாரங்களும் பலப்பல, தெய்வீகத்தில் நன்கு தழைத்திருப்போர்களே கூட சுயம்பு லிங்க மூர்த்திகளின், சிலாரூபங்களைத் தூய்மைபடுத்துகையில், கத்தி, பிளேடு, கட்டை பிரஷ், கூர்மையான கருவிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாக அறியும்போது மனம் சொல்லொணாத துயரத்திற்கு ஆளாகின்றது.. ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலும், சித்தர்களின் நாடிப் பதிகங்களிலும் கல்லாலான சிலாரூபங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான கொள்ளுக் காப்பு, தானியக்காப்பு, தைலக் காப்பு, மாவுக்காப்பு போன்ற பல அரிய முறைகள் அளிக்கப்பட்டுள்ளன... தக்க குருவை நாடி அறிந்திடுகையில் மிகச் சிறந்த முறையில் சிலா ரூபங்களை அவற்றின் தெய்வீகத் தன்மைக்கு எவ்வித பங்கமும் வராமல் தூய்மை செய்திடலாம். பஞ்சலோக விக்ரஹங்களையும் நவீன ரசாயனக் காப்பு என்ற முறையில் (Chemical treatment) அவற்றின் நளினத்தையும், உலோகத் தன்மையையும் பாழ்படுத்துகின்ற துயரச் சூழ்நிலைகளையுமே காண்கின்றோம்.
பூசாரிகள், அர்ச்சகர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பட்டாச்சார்யார்கள் – போன்ற இறைத் திருமேனிகளைப் பூஜிக்கும் பெரும் பேற்றையும், பாக்யத்தையும் பெற்றோர், தக்க சற்குருமார்களை நாடி சிலாரூபங்களை எவ்வித ரசாயனப் பூச்சின்றியும், கூர்மையான கருவிகள் இன்றியும் எளிய மூலிகைக் காப்பு முறைகளினால் சிலா ரூபங்களைத் தூய்மையாக்கும் அற்புதக் கலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் எக்காரணம் கொண்டும் சுயம்பு மூர்த்திகளுக்கும், சிலை ரூபங்களுக்கும், சோப்பு, ஷாம்பு, Brush போன்ற எதனையும் பயன்படுத்தலாகாது. இறைவனே உறைகின்ற லிங்கத் திருமேனியை எவ்வளவு நளினமாகப் பேணுதல் வேண்டும்! பல கோடி யுகங்களாக இருந்து வரும் லிங்க மேனிகளும், சிலா ரூபங்களும் எத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்தவை! எண்ணெய்ப் பிசுக்கை எடுப்பதாக எண்ணிக் கொண்டு பிரஷையும் எரிசோடா கலந்த சோப்பையும், கூர்மையான ஆயுதங்களையும் கொண்டா தேய்ப்பது? நம் உடலில் பிரஷ், பிளேடு வைத்துத் தேய்த்தால்.... சற்றே சிந்தியுங்கள்!
இத்தகைய சாபங்கள் நிறைந்த காரியங்களினால் தான் கடுமையான இரண சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்றன.. இன்றைக்கும் புனித தெய்வ மூர்த்திகளைத் தூய்மைப்படுத்தும் தீர்க்கமான முறைகளை அறிந்தோர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். தக்க சற்குருவை நாடி இவற்றை அறிந்து நன்கு கடைபிடித்திடுவீர்களாக! பரிபூரணமாக பக்தியுடன் எதனையும் செய்திடில் பகவான் உறைகின்ற பட்டுத் திருமேனியாக சிலா ரூபங்கள் தோன்றுமே அன்றி வெறும் கல் எனத் தோன்றாது. வெறும் கல்லாய் மதித்திடில்தான் பிளேடு, செங்கல், பிரஷ் போன்றவற்றால் சுரண்டும் தவறான எண்ணம் ஏற்படும்.
சித்தர்கள் அளித்துள்ள சிலா ரூபங்களைத் தூய்மையாக்குகின்ற சில களிம்புக் காப்பு முறைகளை ஈண்டு அளிக்கின்றோம்.
1. கக்ஷக் களிம்புக் காப்பு
2. அக்ஷரீட்டுடல் களிம்புக் காப்பு
3. பட்ச பாத காப்பு
4. மித்ரு சம்ஹாரிணி காப்பு
5. அட்சய அந்தரீ காப்பு
- என்றவாறாகப் பல வகையான காப்பு முறைகள் தெய்வசிலாரூபங்களை இயற்கையான முறையில் தூய்மைப்படுத்துவதற்காக நம் மூதாதையர்களால் அளிக்கப்பட்டு உள்ளன. குறித்த சில விரதங்களுடன் இவற்றை மேற்கொள்ள வேண்டுமாதலின் தக்க பெரியோரையும் சற்குருவையும் நாடி விளக்கங்களைப் பெறுதலே தகைமையுடையது. எனினும் இது பற்றிய விளக்கங்களைக் கேட்டு எமக்கு நிறையக் கடிதங்கள் வருவதால் அனைத்துக் கோயில்களும் பின்பற்றும் வண்ணம் எளிய “கக்ஷக் களிம்புக் காப்பு” முறையினை இங்கு அளிக்கின்றோம்.

வாஸ்து பூஜை

பஞ்சாங்கத்தில் வாஸ்துநாள் என்று சில தினங்களில் குறிக்கப்பட்டிருக்கும். வாஸ்து நாளைப் பற்றி பல அரிய விளக்கங்களை சாதாரண மனிதர்கள் கூட அறியவும் இந்நாளில் செய்யப்பட வேண்டிய எளிய பூஜை முறைகளையும் ஏற்கனவே நன்கு விளக்கியுள்ளோம்.. இதைப் பற்றி மேலும் பல விளக்கங்களைக் கேட்டு நேயர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்துள்ளன. வாஸ்துநாள் பற்றி பலருக்கும் பொதுவாக எழுகின்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வண்ணம் இங்கு எளிய முறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
வினா: “பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும் வாஸ்து நாளுக்குரிய பூஜை அஸ்திவாரப் பூஜைக்கும், புதுக் கட்டிடங்களுக்கும் மட்டும் தானா?”
விடை : அனைவருக்கும் உரித்தானது இது! ஸ்ரீவாஸ்து நாள் பூஜை என்பது புது அஸ்திவாரங்களுக்கானது மட்டுமே என்ற எண்ணம் அறியாமையினால் ஏற்பட்டுள்ளது, இப்பூவுலகில் மட்டுமல்லாது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மண்டலங்கள், நிலபுலன்கள், மாளிகைகள், குடிசைகள் போன்ற எல்லாவிதமான கட்டிடங்களுக்கும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியே நாயகரும் அதிபதியுமாதலின் அஸ்திவாரத்தின் போதே கட்டிடங்களை வாஸ்து இலக்கணங்களின்படி அமைத்து முறையான ஸ்ரீவாஸ்து பூஜைகளையும் கடைபிடிப்பதே மிகச் சிறப்புடையது.ஆனால் தற்போது
1. ஸ்ரீவாஸ்து புருஷ தேவமூர்த்தியைப் பற்றியும் ஸ்ரீவாஸ்து  இலக்கண முறைகள் பற்றியும் பலர் அறியாததாலும்...
2. ஏற்கனவே நிலபுலன்களையும், கட்டிடங்களையும், வீடுகளையும், ஃபிளாட்டுகளையும் (Flats) பலரும் எதையும் பார்க்காது அவசரம், பண நெருக்கடி, கோர்ட் வழக்குகள், வங்கிக் கடன்கள் போன்ற சந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள் காரணமாக உடனடியாக வாங்க வேண்டிய நிலைகள் ஏற்படுவதுண்டு. மேலும் பிதுரார்ஜித நிலபுல வீடுகள், பழைய வீடுகளை வாங்குகையில் வாஸ்து இலக்கணங்களைப் பார்த்து வாங்குதலும் கடினமே.. நகரங்களிலோ வாஸ்து இலக்கணப்படி எவருமே வீடுகளைக் கட்டுவது கிடையாது. மேற்கண்டவற்றால் புது அஸ்திவாரங்கள் மட்டுமின்றி தற்போது குடியிருக்கும், வியாபாரம் நடக்கும், விளைச்சலில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், நிலங்கள், ஸ்ரீவாஸ்து இலக்கணத்தின்படி, திசை நியதிகளின்படி அமையாவிடில் இதனால் பலவிதமான தோஷங்களும், சாபங்களும், துன்பங்களும், நஷ்டங்களும் ஏற்படுகின்றன.

ஆவிபடிதல், நிழல் விழுதல், தானாக நெருப்புப் பற்றிக் கொள்ளுதல், பயங்கர சப்தங்கள் ஏற்படுதல், பிசாசு, மோகினி, ராட்சஸ, மாயா உருவங்கள் தென்படுதல், திடீர் மரணங்கள், விபத்துகள், கட்டிடங்கள் எரிந்து விழுதல், வியாபாரம் நொடித்தல், நஷ்டங்கள், கடன் சுமைகள் கூடுதல், பயிர் நஷ்டங்கள், இடிவிழுதல், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், வேலை இழப்பு, சந்ததியின்மை போன்ற பலவிதமான துயர்களுக்கும் முதன்மையான காரணமாக இருப்பது நாம் வசிக்கின்ற, வியாபாரம் நடக்கின்ற தலங்கள் வாஸ்து இலக்கணங்களுக்கு ஏற்ப அமையாததே ஆகும்.. வாங்கிய இடமோ மாற்றங்கள் செய்ய இயலாமையாலும் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதாலும் ஸ்ரீவாஸ்து நியதிகளின்படி திருத்தி அமைக்க இயலாத நிலைகளும் உண்டு. மேற்கண்டவாறு ஸ்ரீவாஸ்து நியதிகளின்படி கட்டப்பெறாத இடங்களில் வசிப்போரும் வியாபாரம் செய்வோரும் மேற்குறித்த துன்பங்களிலிருந்து சிறிதேனும் பிராயச்சித்தம் பெறும் வண்ணம் ஸ்ரீவாஸ்துநாள் அமைகின்ற விசேஷ தினங்களில் முக்கியமாக சில வழிபாடுகள், பூஜை முறைகள், தான தர்மங்கள், ஹோமங்களைச் செய்தாக வேண்டும்.
வினா : அப்படியானால் இன்றைக்குப் பெரும்பாலான தொழிற்சாலைகள் , கட்டிடங்கள், இல்லங்கள் போன்ற அனைத்தும் ஸ்ரீவாஸ்து முறைகளின்படி அமையவில்லையே, எனவே பிரதோஷம், மாத சிவராத்திரி, பௌர்ணமி போன்று கிட்டத்தட்ட அனைவரும் ஸ்ரீவாஸ்து நாளை சிறப்புட பூஜைகளுடன் வழிபட வேண்டும் அல்லவா?

விடை :- ஆம்! உண்மையில் கலியுகத்தில் தற்போது வாஸ்து நாளை அனைவரும் மிக முக்கியமான பூஜைகளுள் ஒன்றாகக் கண்டிப்பாக நிறைவேற்றினால் தான் நாம் வசிக்கும் இடங்களில் உள்ள பூமி தோஷங்களும், வாயு தோஷங்களும் நிவர்த்தியாகும். ஏனெனில் மயான பூமியாகவோ, அல்லது கோயில் இடமாகவோ, தேவதைகள் உறையும் இடமாகவோ இருந்தாலும் கூட அதற்குரிய பிராயச்சித்த ஹோமங்களையும் பரிகாரங்களையும் செய்துதான் ஆகவேண்டும். துர்தேவதைகள் குடியிருத்தல், யானை, குதிரை மற்றும் நாய் போன்றவை புதைக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்குரித்தான பரிகாரங்களை நிறைவேற்றியாக வேண்டும். தென்னை, பனை, மா, பலா, வாழை போன்ற சமித்துக்குரிய நல்விருட்சங்கள் அநீதியான முறையில் வெட்டப்பட்டிருப்பினும் அதற்குரிய நிவர்த்திக்கான வழிபாடுகளைச் செய்திடல் வேண்டும். ஆனால் விற்பவர்கள் இதைப் பற்றிய விவரங்களை  வெளியிடுவார்களா? பரம ரகசியமாய் அனைத்தையும் மறைத்து வைத்து விற்று விடுவார்கள். எனவே நாம் எவ்வளவு கவனமாக ஜோதிட ரீதியாகவும், செவிவழி ரீதியாகவும், நிலபுல குறிப்புகளை ஆராய்ந்தாலும் கூட பூமி தோஷங்களுக்குரிய விஷயங்கள் மறைக்கப்பட்டு விட்டால் அவை நம்மைத் தானே பாதிக்கும். இதற்காகவே அனைவரும் ஸ்ரீவாஸ்து நாளுக்கு உரித்தான பூஜைகளைக் கடைபிடித்தல் வேண்டும்..
ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக நித்திரை விடும் நாட்கள்

சித்திரை 10

ஐப்பசி 11

வைகாசி 21

கார்த்திகை 8

ஆடி 11

தை 12

ஆவணி 6

மாசி 23

வருடத்தில் எட்டு நாட்களில் மட்டுமே ஸ்ரீவாஸ்து மூர்த்தி தன்னுடைய யோக நித்திரையிலிருந்து மீண்டு மானுடர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மானிடர்களுக்குப் புரியும் வகையில் தந்த சுத்தி, (பல் துலக்குதல்), நீராடுதல், பூஜை, உணவு ஏற்றல், தாம்பூலம் தரித்தல் ஆகிய முக்கியமான ஐந்து நற்காரியங்களில் ஈடுபடுகின்றார். இவற்றின் மொத்த நேரமே ஒன்றரை மணி நேரமாகும். ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக நித்திரையிலிருந்து மீள்வதற்குக் காரணமே பூலோக மக்களுக்கு தன்னுடைய யோக நித்திரையின், தபோ பலன்களை நிலபுல ஐஸ்வர்யங்களாக அள்ளித் தருவதற்காகவே! ஸ்ரீவாஸ்துவின் லீலைகள், ஐந்து முக்கியமான நற்காரியங்களாக பிரிக்கப்பட்டிருப்பினும் அவருடைய ஏனைய தெய்வீக லீலைகளை அறியும் மனோதிடத்தையும், உத்தம தெய்வீக நிலையையும், அறிவையும் நாம் பெறவில்லை. புது அஸ்திவாரங்களிலோ ஸ்ரீவாஸ்து மூர்த்தி உணவேற்று தாம்பூலம் தரிக்கின்ற காலங்களைப் புனித நேரமாக ஏற்று பூமி பூஜைகளை நிகழ்த்துகின்றனர். எனவே ஏனையோர் அதாவது புது அஸ்திவாரம் இடாதோர் அனைவரும் ஸ்ரீவாஸ்து புருஷன் யோகநித்திரையிலிருந்து மீண்டு, மீண்டும் யோக நித்திரையைத் தொடரும் வரை முக்கியமான பூஜை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்..
எளிய ஸ்ரீவாஸ்து பூஜை முறை :
1. முதலில் நாம் ஸ்ரீவாஸ்து மூர்த்தியினுடைய யோக நித்திரையிலிருந்து விழித்தெழும் காலத்தை நன்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும். மேற்கண்ட எட்டு தினங்களிலும் அந்தந்த வாஸ்து நேரத்திலிருந்து 90 நிமிடங்களுக்கு அவர் பூவுலகில் அருள்பாலிக்க எழுந்தருளிடுவார். இத்தொண்ணூறு நிமிட நேரமான மணித்துளிகளை இல்லறவாசிகள் நன்கு கடைபிடித்தால் பலவிதமான தோஷங்களும் நீங்கி இல்லற, வியாபாரத் துன்பங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்...
ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் தந்த சுத்தி – 18 நிமிடங்கள்
ஸ்ரீவாஸ்து தேவரின் நீராடுதல் – 18 நிமிடங்கள்
ஸ்ரீவாஸ்து புருஷரின் பூஜை – 18 நிமிடங்கள்
ஸ்ரீவாஸ்து புருஷரின் உணவு ஏற்றல் – 18 நிமிடங்கள்
ஸ்ரீவாஸ்து புருஷரின் தாம்பூலம் தரித்தல் – 18 நிமிடங்கள்
ஓராண்டிற்கு எட்டு நாட்களே அமைகின்ற மிக விசேஷமான இவ்வாஸ்து நாட்கள் ஒவ்வொன்றிலும் 90 நிமிடங்களுக்கு மட்டுமே ஸ்ரீவாஸ்து மூர்த்தி தம்முடைய யோக நித்திரையிலிருந்து எழுந்து நமக்கு அருள்பாலிப்பதற்காக கீழிறங்கி வந்து நம்முடைய பூஜைகளை ஏற்றுக் கொள்கின்றார்.. எனவே பெறற்கரிய இத்தினங்களில் நாம் அனைவருமே சித்புருஷர்கள் அருளியுள்ள பூஜைகளை மேற்கொள்வோமேயானால் அறிந்தோ அறியாமலோ நாம் வசிக்கின்ற இடங்களில் உள்ள தோஷங்களுக்கும், சாப விளைவுகளுக்கும், பித்ரு சாபங்களுக்கும், பில்லி, ஏவல், சூன்யம், காற்று, கறுப்பு போன்ற தீவினை சக்திகளுக்கும் ஒரு நல்ல பரிகாரம் எளிதில் கிட்டும்...
ஸ்ரீவாஸ்து பூஜை : ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக நித்திரையிலிருந்து எழுகின்ற நேரத்தை அறிந்து துவக்கத்திலிருந்தே “ஸ்ரீவாஸ்து புருஷாய நம:” (ஸ்ரீவாஸ்து மூர்த்தியே போற்றி) என்று மானசீகமாக துதிக்கத் தொடங்குதல் வேண்டும். வீட்டின் நிலைப்படிகள், மரக்கதவுகள், மர ஜன்னல்கள், அனைத்திற்கும் தாமே அரைத்த மஞ்சள், சந்தனம் பூசி குங்குமம் இட வேண்டும். வீட்டிலுள்ள அனைத்துக் கதவுகளின் கீழ்ப்பகுதிகளில் நிலைப்படி இருத்தல் அவசியம் ஆகும். அக்காலத்தில் தேக்கு கருங்காலி, பலா போன்ற நல் தேவதைகள் உறையும் தூய மரங்களை நிலைச் சட்டத்திற்காகப் பயன்படுத்தினர். தற்காலத்தில் அதிக விலையைக் காரணங்காட்டி தூங்குமூஞ்சி, வேலிகருவை, உதியமரம், பிளைவுட் (பல மரங்களின் கலப்பு) போன்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் மரங்களையே வீட்டு கதவிற்காகவும், நிலைகளுக்காகவும் பயன்படுத்தும் நிலையைக் காண்கிறோம். மேலும் எளிதில் நீர் ஊற்றி அலம்புவதற்கு ஏதுவாக நவீன வீடுகளில் நிலைப்படிகளை  அமைப்பதே கிடையாது. இதனால் நிலைப்படி தேவதைகள் உறைய இடமின்றி தெய்வீகச் சூழ்நிலை மறைந்து துர்சக்திகளின் ஆதிக்கத்திற்கு நாமே ஒரு காரணமாகி விடுகின்றோம்.. எனவே நிலைப்படியை அனைத்து அறைகளிலும் வைத்தே ஆகவேண்டும். கதவு, நிலைப்படிகளில் இடப்படும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இவற்றில்தான் குறிப்பிட்ட நல்தேவதைகள் வசிக்கின்றன. இவை கண் திருஷ்டிகளையும், சூன்ய சக்திகளையும் விரட்டிடும் ஆற்றல் கொண்டவை. தற்காலத்தில் விபூதி, சந்தன, குங்குமப் பட்டைகளை பெயின்ட்டால் பூசுகின்றனர். இது மிகவும் தவறானதாகும்..
2 .ஆயுஷ்ய ஸுக்தம் என்ற அற்புதமான தேவ ஸுக்த மந்திரங்கள் உண்டு. சாதி, சமய வேறுபாடின்றி இது அனைவரும் ஜபிக்க வேண்டிய சக்தி வாய்ந்த ஆனால் மிகச் சிறிய வேத மந்திரமாகும். நன்றாகத் தூய்மை செய்யப்பட்ட வெள்ளி/செம்பு/மரச் சொம்பில் (எவர்சில்வர் தவிர்க்கவும்) புனிதமான கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் தூய்மையான நீரை ஊற்றி, மாவிலைகளினால் செம்பை அலங்கரித்து அதன்மேல் மஞ்சள் குங்குமமிட்ட தேங்காயை வைத்து ஆயுஷ்ய ஸுக்தத்தை ஒன்பது முறை ஓத வேண்டும். பின்னர் செம்பில் உள்ள நீரை வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும். ஆயுஷ்ய ஸுக்தம் அறியாதோர் ஔவையார் அருளிய “சீதக்களபச் செந்தாமரை.” என்னும் ஸ்ரீவிநாயகர் அகவலை ஒன்பது முறை ஓதலாம். இதனால் ஆங்காங்கே படிந்துள்ள துர்சக்திகளும், துர்எண்ணங்களும் அகலுகின்றன. ஸ்ரீவாஸ்து நாளில் இதனைச் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இன்று இல்லங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஸ்ரீவாஸ்து ஹோமம் செய்வது ஸ்ரீவாஸ்துபுருஷரின் ப்ரீதியைப் பெற்றுத் தரும்.
3. ஸ்ரீவாஸ்து நாளன்று மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு அன்னத்தையும், ஆடைகளையும், குங்குமம், சீப்பு, கண்ணாடி போன்ற மங்களப் பொருட்களையும், காலணிகளையும் தானமாக அளித்திடில் அவர்கள் பெறுகின்ற மனச்சாந்தியானது நம் இல்லங்களில் படிந்துள்ள சோகச் சூழ்நிலைகளை அகற்றுகின்றது..
4. இன்று கோயில்களில் உள்ளப் பிரபைகள், மணிக் கதவுகள், வாகனங்கள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துதல் பித்ருக்களுக்குப் ப்ரீதியைத் தரும். கோயில்களில் நிலைப்படிகளில் பித்ரு தேவர்கள் உறைகின்றனர்..

பாவங்கள் பலவிதம்

உடலால்... மனதால்.... உள்ளத்தால்.... பாவங்கள் பலவிதம்!
உடலாலும், உள்ளத்தாலும், மனதாலும் நாம் செய்கின்ற பாவங்கள் எத்தன , எத்தனை? கை, கால்கள் ஓய்ந்திருப்பினும் ஒரு விநாடியேனும் மனம் சும்மாயிருக்கின்றதா? சும்மாயிருப்பதே சுகம் என்பது வள்ளலாரின் திருவாக்கு! உடலாலன்றியும் மனமும் ஒன்றையுமெண்ணாது இறைவனின் திருவடிகளில் ஒருமித்திருத்தலே உண்மையான சுகம் என்பது இதன் பொருள்! “நான் எவருக்கும் மனசறிஞ்சு துன்பம் கொடுத்ததில்லை”, என்று பலர் பெருமைப்படப் பேசுவதைக் கேட்கின்றோம். அவரவர் மனதைத் தட்டிக் கேட்டிடட்டும்.. “ஒரு சிறு (முறையற்ற) காம எண்ணம் கூட எழாததுண்டா?” என்று. உடலால் மட்டுமின்றி மனதாலும், உள்ளத்தாலும் குற்றம் ஒரு சிறிதும் செய்யாதவர்களே புனிதமான மஹான்கள்! உடலால், உள்ளத்தால், மனதால், குற்றங்கள் புரியாத நிலையில்தான் உன்னத பக்தி கைகூடும். பொறாமை, குரோதம், பேராசை, முறையற்ற காமம், கோபம், அதிகாரம், பதவி, வலிமை, வசதி, புகழ் போன்றவை காரணமாகத்தான் உடலாலும், மனதாலும் பாவங்களை செய்யவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படுகின்றன. உடலால் செய்யும் பாவச் செயல்களை நாம் நன்கறிவோம். மனதினுள் ஏற்படும் அலையோடும் எண்ணங்களையும் அறிந்திட்டோம். அதெப்படி உள்ளத்தால் பாவம் செய்வது? மனம் வேறு, உள்ளம் வேறா?
நம்முடைய உள்ளம் என்பது நம்முடைய சூட்சும தேகத்தின் மனம் ஆகும்.  தவறு என்று நன்றாகத் தெரிந்தும் குற்றங்களைத் தொடர்ந்து செய்வதோ, நற்காரியங்களான இறைப்பணிகளுக்கான வாய்ப்புகள் சிறப்பாக கிட்டியும் அதை வேண்டுமென்றே நழுவ விடுவதோ, செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்தும் செய்யாதிருத்தலோ உளமாறச் செய்யும் தவறுகளாம். இதற்குத் தண்டனைகள் அதிகம் . குறிப்பாக அவரவர் சந்ததியினரைப் பாதிக்கும் பாவங்களாகும்.
திருஅண்ணாமலை, திருப்பதி, பழநி, திருப்போரூர் போன்ற திருத்தலங்களில் தமிழ்/வடமொழி வேதபாராயணம், தான தர்மங்கள், கோயில் உழவாரத் திருப்பணிகள், இலவச மருத்துவ சேவை, அநாதைகள்/நோயாளிகள்/வயதானோர்க்கு சரீர சேவை போன்ற தெய்வீக சேவைகளை உடற்பணிகளால் செய்துவர, இதுவரை அந்தந்த அங்கங்களால் செய்த அதனதன் பாவங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும். இதனால் அவயங்களையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திடலாம். மனதாற் செய்யும் பாவங்களின் வகைகளை நாமே நன்கு அறிவோம். உடலாற் செய்யும் பாவங்களை விட மனதாற் செய்யும் பாவங்களுக்குப் பிராயச்சித்தங்களும் பரிஹாரங்களும் அதிகம்.. மனப் பாவங்களை எண்ணி, வருந்தி, அழுது, கதறிப் பிராயச்சித்தம் பெற்றிடலாம்.. ஆனால் அத்தவறுகளை மீண்டும் மனதால் செய்திடலாகாது. எனினும் உடலாற் செய்த பாவங்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் தீரும் வரை பாவங்கள் தொடர்ந்து, பல்கியும் பெருகும். பெற்ற தாய், தந்தையரை இங்கே தனித்து விட்டு விட்டு பணம், புகழ், சேர்த்திட வெளியூர், வெளிநாட்டிற்குச் சென்று, பெற்றோர்கள் இங்கே மனம் கலங்கிட காரணமானோர்களின் செயல் உள்ளத்தால் செய்யும் பாவங்களில் ஒன்றாகும்.
உள்ளத்தாற் செய்த பாவங்கள் தீர, தக்க நிவாரண உதவிகள் செய்வதோடன்றி சென்னை திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் இறைப்பணி, சரீர சேவை, அங்கப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம் மற்றும் ஆலயம் முழுமையாக சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும். உடலாற் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக திருஅண்ணாமலை, திருப்போரூர், பழநி, சென்னை திருக்கச்சூர், திருச்சி மலைக்கோட்டை, திருச்சி அருகே ஐயர்மலை, பர்வதமலை போன்ற மலைத் தலங்களில் ஏழைகளாயுள்ள வயதானோர், குருடர்கள், ஊனமுற்றோரை நடந்தோ, சுமந்தோ கிரிவலம் வரச் செய்தல் வேண்டும். கன்றைத் தோளில் சுமந்து பசுவுடன் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது. உடலில் சக்தியுள்ளவரை இவற்றைத் தொடர்ந்து செய்து வாருங்கள். மனதாற் செய்த பாவங்கள் தீர மனதிற்கு அதிபதியான சந்திரபகவான் பரிபூர்ண கலைகளுடன் பிரகாசிக்கும் பௌர்ணமி திதியன்றும், அவருக்குரிய திங்கட்கிழமை அன்றும் முழுமையான மௌன விரதமிருக்க வேண்டும். மௌன விரதத்துடன் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பழநி, அய்யர்மலை, திருச்சி மலைக் கோட்டை, திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்திடில் தியானநிலை மேம்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.

ராம லட்சுமண துவாதசி

ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசி
ஸ்ரீராமர் மானிடரூபத்தில் தோன்றி தன் அவதார அம்சங்களைச் சற்றும் வெளிக்காட்டாது, மக்களோடு மக்களாய் சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்து காட்டியவர்! அரண்மனை வாசத்திலும் சரி, வனவாசத்திலும் சரி, ஏகாதசி, துவாதசி, சிவராத்திரி, ஷஷ்டி போன்ற விரதங்களைப் பரிபூரணமாகக் கடைபிடித்தவர். மனைவியின் அனுமதியுடன் தான் நாம் சிலவித விரதங்களையும், ஹோமங்களையும் பூஜா முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதிக்குத் தன்னை முழுவதும் ஆட்படுத்திக் கொண்ட ஸ்ரீராமர், சீதையைப் பிரிந்த போது பலவகை விரதங்களை, வழிபாடுகளையும் செய்ய இயலாது திகைத்து, முனிவர்களையும் மஹரிஷிகளையும் நாடி அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்களையும், பரிஹாரங்களையும் பெற்றார். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயருண்டு என்பதுடன் ஒவ்வொன்றையும் கொண்டாட வேண்டிய விசேஷமான முறைகளும் உண்டு. உதாரணமாக கோ துவாதசியன்று பசுவிற்கு அகத்திக்கீரையளித்து ஏகாதசி விரதத்தை முடிப்பதால் பெண்களுக்குச் செய்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும். இவ்வாறாக ஸ்ரீராமரும், ஸ்ரீலக்ஷ்மணரும் ஏகாதசி, துவாதசி விரத நியதிகளை பரிபூர்ணமாகக் கடைபிடித்தனர்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

அஸ்திர வித்தையில் கைதேர்ந்த இருவருமே, விரதாதி நியதிகளைக் கடுமையாக, இம்மியளவும் பிசகாது கடைபிடித்தமையால் தான் அனைத்து அஸ்திர மந்திரங்களும் தக்க சமயத்தில் கைகூடின! .....
அன்று பரணி நட்சத்திர நாள்..... ஏகாதசி விரதமெனில் ஏகாதசி திதி தொடங்கும் போதே விரதத்தைத் தொடங்கி ஏகாதசி திதி முழுதும் விரதம், பஜனை, பூஜை, ஹோம வழிபாடுகளில் ஈடுபட்டு இறைச் சிந்தனையில் வாழ்ந்து ஏகாதசி திதி முடிந்து துவாதசி தொடங்குகையில் அகத்திக்கீரை உணவு அல்லது நெல்லிக்கனி உண்டு இவ்வித துவாதச பாரணையுடன் ஏகாதசி விரதம் பரிபூரணமான பரணி நட்சத்திர நாளன்றோ இந்நட்சத்திரத்திற்குரிய பூஜைக்கான தளமே நெல்லி விருட்சமாகையால் பரணி ஏகாதசியன்று நெல்லி தளங்களால் இறைவனை அர்ச்சனை செய்வது அபரிமிதமான பலன்களை குறிப்பாக குடும்பத்தில் கணவன்/மனைவி சகோதர சகோதரிகளிடையே மற்றும் சுற்றத்திலுள்ள பிணக்குகளைத் தீர்ப்பதோடு மனக்கிலேசங்களையும், குழப்பங்களையும் நீக்கும்.
ஸ்ரீராமரும், ஸ்ரீலட்சுமணரும் நெல்லிமரத்தினைத் தேடி யாங்கணும் அலைந்தனர். அதற்குள் அந்தப் பொழுது வந்திடவே மிகவும் அசதியுடன் ஓரிடத்தில் தங்கினர். இன்னும் சிறிது நேரத்தில் ஏகாதசி திதி துவங்க இருக்கின்றது... ஏகாதசி விரத பூஜைக்கான, பலவிதமான மலர்களையும், கனிகளையும் , மூலிகைகளையும் கொணர்ந்த ஸ்ரீலக்ஷ்மணர் ஏகாதசி விரத சங்கல்பத்திற்கு உரியதை எடுத்து வைத்திட்டார். நெடுநேரம் அலைந்த களைப்பினால் தாங்கள் தங்கியிருப்பதே ஒரு நெல்லிமரம் என்பதைக் கூட ஸ்ரீலக்ஷ்மணர் கவனிக்கவில்லை. ஆங்கே அருகருகே இரண்டு மரங்கள்! உயர்ந்த நெல்லியும், இலந்தையுமே அவை! கொம்பு கொண்டு கூடப் பறிக்க இயலாத உயரமன இடத்தில் பெரிய நெல்லிக்கனி இருட்டினூடே தென்பட்டது. விரதம் துவங்கும் முன், வியப்புடன் ஸ்ரீராமர் அவ்விருமரங்களையும் ஸ்ரீலக்ஷ்மணருக்கு சுட்டிக் காட்டினார். பிறகு ஸ்ரீராமரின் மனம் ஆழ்ந்த சிந்தனையில் லயித்தது. பெறற்கரிய விருட்ச தரிசனமாயிற்றே!
ஆம்...... எவ்வித பூஜையென ஸ்ரீராமர் நிர்ணயித்து விட்டார். அந்த இடத்தின் விசேஷமான தெய்வீக அம்சம் காரணமாக முக்கியமான வழிபாட்டிற்குத் தயாரானார். ஆனால் தர்மபத்தினியின் சம்மதம் கேட்டுத்தான் அப்பூஜையைக் கடைபிடிக்க இயலும். இந்த நியதிக்கு சில வரைமுறை விலக்குகள் உண்டு! மனைவி அருகில் இல்லாவிடில் தர்ப்பை கட்டையோ அல்லது செவ்வாழை மரத்தையோ அல்லது நெல்லி மரத்தையோ மனைவியாக பாவித்து பூஜையினைத் தொடர்ந்திடலாம் என்பதே ஆகும். ஸ்ரீராமர் மனம் மகிழ்ந்தார்.. ஆங்கே கனகம்பீரமாக நின்ற நெல்லி மரத்தைச் சீதையாக பாவித்து அதற்கு ஒரு மஞ்சள் கயிறு கட்டி சந்தனம், குங்குமமிட்டு அதற்கு அடுத்த இலந்தை மரத்தை ஸ்ரீமன்நாராயணனாக உருவகித்து நெல்லி இலைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினார். இறைவனை இறைவனே அர்ச்சிக்கும் இனிய அனுபூதி!
ஏகாதசி திதி முழுதும், ஸ்ரீபத்ரி நாராயணனாக நெடிதுயர்ந்து நின்ற இலந்தை மரத்திற்கு, அற்புத சக்தி வாய்ந்த நெல்லி இலைகளால் அர்ச்சனை, ஆராதனை செய்து ஆனந்தித்தனர்.. ஸ்ரீராமரும் ஸ்ரீலட்சுமணரும், விடியவிடிய விமலவிநோதனுக்கு வில்லாளனின் விஸ்தாரமான விழிதுஞ்சா விழுமிய பூஜை! நெல்லி இலைகள் சிறு குன்றாய்க் கூடின! தேவாதி தேவர்கள் இவ்வரிய பூஜையைத் தரிசித்து விண்ணளவு புண்ய சக்தியைப் பெற்றனர். இறைவன் தன்னைத் தானே பூஜிக்கும் தனித்தன்மை கொண்ட ஏகாதசியன்றோ! ஏகாதசி திதி முடியுந்தறுவாயில்...... துவாதசி பாரணைக்கு .... நெல்லிக் கனி வேண்டுமே! அப்போது தான் ஸ்ரீலக்ஷ்மணர் அண்ணாந்து பார்த்தார். உயரே... ஒரே ஒரு நெல்லிக் கனி கண்ணில் பட்டது! ஒரேயொரு கனியிருப்பின் அதனை அணில், பறவையினங்களுக்கு என விட்டுவிட வேண்டுமென்பது சாஸ்திர நியதி. இருப்பினும் துவாதசி பாரணைச் சரியான நேரத்தில் நிறைவேற்றாவிடில்..... ஏகாதசி விரதத்திற்கு பங்கம் வந்து விடுமே! கொம்பு கொண்டு கனியைப் பறிக்கலாமெனில்... நெல்லி, இலந்தை, நாவல் போன்ற கனிகளைக் கொய்தல் கூடாது. மரத்தை உலுக்கியே கனிகளைப் பெற வேண்டும்! அதுவும் அக்கனிகள் தரையில் விழுமுன் கையிலோ, துணியிலோ பிடித்து அவற்றை இறைவனுக்குப் படைத்தால் அதன் மஹிமையே தனி! அளப்பரிய பலன்களைத் தரவல்லதே! சீதையும், ஸ்ரீநாராயணமூர்த்தியும் என்று உருவகித்திருக்கும் மரங்களை உலுக்குதல் தகுமா? சற்று முன் பார்த்த நெல்லிக் கனியோ இன்னமும் உயரத்தில் போய்க் கொண்டே இருப்பதாகத் தோன்றுகின்றதே! ஸ்ரீலக்ஷ்மணர் குழப்பமுற்றார். என்ன செய்வதென்று அறியாது இராமனை நோக்கிட... ஸ்ரீராமரோ கண்கள் பனித்திட மண்டியிட்டுக் கைகளை உயரே தூக்கி இலந்தை விருட்சத்தைச் சரணடையும் பாவனையில் இருக்க... ஸ்ரீலக்ஷ்மணர் துணுக்குற்றார்.. “என்ன இது! புனிதமான ஏகாதசி நேரத்தை ஏதேதோ சிந்தனையில் செலவழித்து விட்டேனா?” ஸ்ரீலக்ஷ்மணர் தடாலெனறு கீழே வீழ்ந்து இலந்தை விருட்சத்தைச் சரணடைந்து வணங்கினார். .... ஆங்கே .. இலந்தை மரமே விஸ்வரூபம் கொண்டது போல் ஸ்ரீபத்ரீ நாராயண மூர்த்தி தோன்றினார்.. ஸ்ரீராமரும், ஸ்ரீலக்ஷ்மணரும் உளம் பூரித்து நிற்க..... ஸ்ரீநாராயணமூர்த்தியின் திருக்கரங்களிலிருந்து நெல்லிக்கனி ஒன்று ஸ்ரீராமரின் திருக்கரங்களில் விழுந்தது! பக்தியுடன் அக்கனியைத் தம் திருக்கண்களில் ஒற்றிக் கொண்டனர் ஸ்ரீராமரும் ஸ்ரீலக்ஷ்மணரும். அதுவே ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசி! “லக்ஷ்மணா! நம்மால் முடியும், நாம் தான் செய்கின்றோம் என்ற எண்ணமிருக்கும் வரை, எது எப்படி நடக்குமோ என்ற குழப்பங்கள் தான் ஏற்படும்! நடப்பதனைத்தும் இறைவன் செயலே என்ற உயர்ந்த எண்ணம் இருந்தால் போதும், வருவதை ஏற்போம் அனைத்தும் நம் நலனுக்காக இறைவன் செய்வதே என்ற தெளிவு கிட்டும். தீர்க்க தரிசனம் ஏற்படுகையில் எம்முயற்சியும் நல்லவிதமாகவே முடியும். பெறுவதற்கரிய இலந்தை, நெல்லி விருட்சங்களை அருகருகே நமக்கு ஏகாதசி விரதத்திற்குத் தந்த இறைவனுக்குத் துவாதசி பாரணைக்காக நமக்கு ஒரு சிறு நெல்லிக்கனியளிப்பது ஒரு பெரிய விஷயமல்லவே!” குறும்புடன் ஸ்ரீராமர் நகைத்திட, ஸ்ரீலக்ஷ்மணர் தலை குனிந்தார்! “ஏகாதசி திதியின் ஒவ்வொரு வினாடியும் இறைச் சிந்தனையில் தான் அமைந்திட வேண்டும். எத்தகைய சோதனைகள் வரினும் மனக்குழப்பத்திற்கு இடங்கொடலாகாது.!”
ஸ்ரீராமரும், ஸ்ரீலக்ஷ்மணரும் விசேஷமான அனுகிரஹங்களைப் பெற்ற இந்த ஏகாதசி, துவாதசி திதிகள் வரும் 16.6.1997, 17.6.1997 அன்று அமைகின்றன. ஏகாதசி திதி – 16.6.1997 – திங்கள் விடியற்காலை 3.20 முதல் திங்கள் இரவு 4.13 வரை.. துவாதசி – திங்கள் இரவு 4.14 முதல் செவ்வாய் இரவு 4.22 வரை. இந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசியென்றும், துவாதசிக்கு ஸ்ரீராமலக்ஷ்மண துவாதசியென்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு.
நிர்ஜல ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டிய முறைகள்
அதற்குக் கடுமையான நியதிகள் உண்டு. முறையாகக் கடைபிடித்திடில் அரும்பெருந் தவநிலைகளில்,  யோக முறைகளில், பலவிதமான தான தர்மங்களில் பெறவேண்டிய பலன்களை வாழ்க்கையில் ஒரே நாளிலே பெற்றிடலாம்.
1. ஏகாதசி திதி துவங்கும் போதே உண்ணாநோன்பைத் தொடங்கிடுக! நிர்ஜலமெனில் நீர் கூட அருந்தாத விரதமென்பதாகும். ஆண், பெண் இருபாலாரும் விரதத்தை நன்கு கொண்டாடிடலாம்.
2. விரத நேரத்தில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பார்த்தல் கூடாது. அதாவது தனியறை பூஜை, ஆஸ்ரம பூஜையே இதற்கு சிறப்புடையதாகும்.
3. குறைந்தது இரண்டு முக பசுநெய் தீபமேற்றி ஜோதி தரிசனத்துடன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும். ஆறுமணி நேரத்திற்கு ஒரு முறையே இயன்ற மல, ஜலக் கழிப்பு இருத்தல் நலம். சகிப்புத் தன்மையையும், பொறுமையையும், மனக்கட்டுப் பாட்டையும் பெற்றிருப்போர்க்கும், நீர் கூட அருந்தாது இருக்குமிடத்திலேயே விரதம் பூணுவதாலும் இவ்வியற்கைக் கட்டுப்பாடும் எளியதே! மல, ஜலக் கழிப்பிற்குப் பின் நீராடுதலும் ஆடைமாற்றுதலும் அவசியமே, வெளிர் நீல நிற ஆடை சிறப்பானதாகும்.
4. மா, பலா, தேக்கு போன்ற மரப்பலகைகளின் மேல் கம்பளி ஆடை இட்டு அமர்ந்திடுக! உறக்கம் கூடாது., கை, கால் விரல்கள், பாதங்களில் மருதாணி அணிதல் நலம்.
5. மௌன விரதமிருத்தலும், பிறரைப் பார்க்காமல் இருத்தலும் புனிதத் தன்மையைப் பெருக்கும்.
6. விரதம் முடிந்த பின் மனைவியை மங்களகரமான, குங்குமம், பூச்சூடிய சுமங்கலிக் கோலத்தில் கையில் தீபத்துடன் கண்டிட வேண்டும், தீட்டு, மாத விலக்கு போன்ற நிர்பந்தங்களில், ஐந்து வயதுக்குட்பட்ட கொண்டை, மயிற்பீலி, கோபி சந்தனமிட்டு ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீசிவ, ஸ்ரீசீதை, ஆண்டாள், ஸ்ரீமுருகன் வேடம் தரித்த சிறுவர் சிறுமியரைக் காணுதலோ அல்லது கன்றுடன் கூடிய பசுவின் தரிசனமோ சிறப்புடையதாகும்.
7. பெண்கள் அனுஷ்டிக்கும் விரதத்தில் ஏகாதசி விரத முடிவில் கன்றுடன் கூடிய பசு, கோயில் கோபுர தரிசனம், மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தையின் தரிசனம் தனைப் பெற்றிட வேண்டும்.
8. இதற்குப்பின் துளஸி தீர்த்தம்/ நெல்லிக் கனி உண்டு துவாதசி பாரணையுடன் நிறைவு செய்திட நிர்ஜல ஏகாதசி, ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசியின் பரிபூரணப் பலன்கள் கிட்டும்.
9. மேற்கண்ட கடின நியதிகளைப் பின்பற்ற இயலாதோர் குறைந்த பட்சம் நிர்ஜல விரதம், மௌனவிரதம்தனைக் கண்டிப்பாக ஏற்றிட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உண்டு.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை
ஆண்டார்கோயில் கும்பகோணம்

நிர்ஜல ஏகாதசி – ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசி பலன்கள் :-
மேற்கண்ட முறையில் பக்திபூர்வமாக நிர்ஜல ஏகாதசியையும் ஸ்ரீராமலக்ஷ்மண துவாதசியையும் முறையே கடைபிடித்திடில்...
1. கர்ப்பம் தாங்கும் பாக்யம் கிட்டும். கர்ப்பப்பை வலுப்பெற்று கர்ப்பதான பாக்யம் கைகூடும்.
2. பல முயற்சிகளெடுத்தும் வாழ்க்கையில், தொழிலில், இல்லறத்தில் சீரான நிலைமை, தனித்தன்மை, ஸ்திரநிலை பெறாதோர் இவ்விரத மஹிமையினால் ஏற்றம் பெறுவர்.
3. ரிக்வேதத்தவர்க்கு மனபீதியகன்று சாந்தியும், யஜுர்வேதத்தவர்க்கு முறையாகக் கடைபிடித்த பூஜா பலன்களும், சாம வேதத்தவர்க்கு தனபாக்யமும், அதர்வண வேதத்தவர்க்கு சகல சகாயங்களும் உண்டாகும்.
4. தமிழ்மறை ஒதுவோர்க்கு வாழ்க்கையில் பிடிப்பும், குடும்பத்தினரிடையே அபரிமித ஒற்றுமையும், குழந்தைகள் பிள்ளைகளுக்குச் சிறப்பான எதிர்காலமும் கிட்டும்.
5. அரசாங்க அலுவலகர்களுக்கு முறையான பதவி உயர்வும், மனதிற்கு உகந்த இடமாற்றங்களும் கிட்டும்.
6. வெளிநாட்டுக் கல்வி, தொழிலில் ஈடுபாடு கொண்டுள்ளோர் இவ்விரதத்தைத் தொடர்ந்து செய்துவர பிரமாதமான கல்வியும், வேலை வாய்ப்புகளும் அமையும்.
7. நிர்ஜல ஏகாதசி, ஸ்ரீராமலக்ஷ்மண துவாதசியின் பூஜா மஹிமைகளை மேன்மேலும் விவரித்திடலாம். பிரத்யட்ச பிரார்த்தனா பலன்களைத் தரவல்ல அதிஅற்புத விரதங்களிவை!
நிர்ஜல ஏகாதசி/ ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசி :- “மேலே குறிப்பிட்டுள்ள நியதிகள் மிகக் கடுமையாக உள்ளனவே! கலியுகத்தில் இது சாத்யமானதா?”. என்ற வினா காதில் ஒலிக்கின்றது. அதி அற்புதமான, அபரிமிதமான பலன்களைப் பெற வேண்டுமெனில் மெய்யட(ங்)க்கும் விதிகளைக் கைகொண்டுதானே ஆக வேண்டும். “இப்படிப்பட்ட மிகக் கடுமையான விரதக் கட்டுப்பாடுகளை ஒரு கோடிப் பேருக்கு ஒருவர்தானே செய்ய முடியும்.” அதனால் தான் ஒரு கோடியில் ஒருவர்தான் இறை தரிசனத்தைப் பெறுகின்றார். அஞ்சேல்! மேற்கண்ட நிர்ஜல ஏகாதசி விரதத்தைப் பரிபூரணமாகக் கடைபிடிப்பவர்கள் பலர் உண்டு. ‘சொன்னால் கால்பலன் (சொன்ன அகந்தையால்) கழிந்து விடும் என்பதாலும் அடக்கத்தின் காரணமாகவும் பலரும் சாந்தமாக சர்வ சாதாரணமாக இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். உத்யோகஸ்தர்கள், இல்லறவாசிகள், பெரிய குடும்பிகள் என் செய்வது? நிர்ஜல ஏகாதசி விரதத்தில் குறைந்த பட்சம் மௌன விரதத்தையேனும் நீர் கூட அருந்தா உண்ணாநோன்பையோ ஏற்கலாமன்றோ! பரிபூர்ணமான முறையில் நிர்ஜல ஏகாதசி விரதத்தை ஏற்க இயலாதோர் சாதாரண முறையிலேனும் கடைபிடிப்பார்களாக!
1. இன்று ஏகாதசி திதி நேரம் முழுதும் நெல்லி இலைகளால் இறைவனை அர்ச்சித்திடுதல் சிறப்புடையது! நெல்லி, இலந்தை ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்களில் ஏகாதசி விரதத்தைத் தொடங்கி ஆலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து இல்லத்தில் விரதத்தைத் தொடர்ந்து துவாதசி பாரணையாக, ஆலயத்தில் துளஸி தீர்த்தம் உண்டோ, இறைவனுக்குப் படைக்கப்பட்ட நெல்லியை உண்டோ விரதத்தை முடித்திடலாம்.
2. இன்று நெல்லிமரத்திற்கும், இலந்தை மரத்திற்கும் மாங்கல்யச் சரடு கட்டி, (தாமே அரைத்த) மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வலம் வருதலால், கணவனுக்கு நோய், நொடியில்லா ஆரோக்யமான, நீண்ட வாழ்விற்கான தெய்வ அருள்கிட்டும். விட்டுப்பிரிந்த கணவனைப் பற்றிய நற்செய்தி கிட்டும்.

3. இறைவன் தன்னைத்தானே பூசித்த ஏகாதசி நாளிது. ஸ்ரீராமன், ஸ்ரீநாராயணனை வழிபட்டுத் தரிசனம் பெற்ற துவாதசி திதியாயிற்றே! இதே போல் திருவையாற்றுத் தலபுராணத்தில் காசி யாத்திரை சென்றிருந்த சிவாச்சாரியார் பூஜை முறைக்கு வர இயலாமற்போகவே அவருடைய பத்னியின் உளமார்ந்த பிரார்த்தனையினால் ஆனந்தித்த சிவன் அதே சிவாச்சாரியார் வடிவில் தோன்றி, ஆலயத்தில் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டான், எனவே இந்த திருவையாறு ஸ்ரீஐயாறப்பன் ஆலயத்தில் தன்னைத்தானே பூசிக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தரிசித்து நிர்ஜல ஏகாதசியைத் தொடங்கி ஸ்ரீராமலக்ஷ்மண துவாதசியை நிறைவேற்றுதல் சிற்ப்புடையது. தன்னிடம் உள்ள குறை, குற்றங்களை மனதாரச் சமர்ப்பித்துத் தீயொழுக்கங்களைக் கைவிட்டுப் புது மனிதனாக வாழ இது உதவும்.
4. மேலும் நெல்லியும் இலந்தையும் விருட்சங்களாகவுள்ள தலங்களில் இவ்விரதத்தை ஏற்பதோ, ஏகாதசி, துவாதசிக் கோயில் தரிசனங்களாகக் கொள்வதும் விசேஷமானதாகும்.

ஓமாம்புலியூர்

இலந்தை விருட்ச தலங்கள்
கீழ்வேளூர் – (கீவளூர் – திருவாரூர் – நாகூர் சாலை)
ஓமாம்புலியூர்
வழுவூர் – வெண்பாக்கம்
உத்தரகோசமங்கை (இராமநாதபுரம் அருகே)
இலந்துறை
பத்ரிநாத் – வடஇந்தியா
நெல்லி – திருநெல்லிக்கா (திருவாரூர் அருகே)
இவ்வாறாக நிர்ஜல ஏகாதசி ஸ்ரீராமலக்ஷ்மண துவாதசியின் மஹிமை பற்றி விவரிக்கின் ஈண்டு பல புராணங்களாகப் பெருகும். படித்தலை விட நாம் ஒரு சிறிதேனும் கடைபிடித்தால் தான் தெய்வக் கடாட்சத்தைப் பெற இயலும். நியூஸ் பேப்பர், சினிமா, அரசியல், வம்பு சிற்றின்பம் என அரிய பல வருடக் காலத்தை வீணே கழித்தாகி விட்டது. இதனை ஈடு செய்யவே இத்தகைய அரிய விசேஷ நாட்களை இறைவன் அளித்துள்ளான். சற்றே முயற்சித்திடில் எளிதில் கைகூடுமே!

ஆனித் திருமஞ்சனம்

பல தெய்வ மூர்த்திகளுக்கும் சிறப்பான நாளிது! சிவபெருமான், பெருமாள், முருகன் அருள்பாலிக்கும் நன்னாள். இறைவனை நீராட்டுதற்கே திருமஞ்சனம் என்று பெயர்., அலங்காரப் பிரியரான பெருமாள் புனித நீராடலேற்றலையும் திருமஞ்சனமெனக் கூறுவதுண்டு. அனைத்து வைணவத் தலங்களிலும் இது மிகவும் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கும் மிகவும் ஏற்புடைய நாள். பொதுவாக தட்சிணாயனம் (ஆடி- மார்கழி), உத்தராயணம் (தை-ஆனி) என இரண்டு அயன காலங்களுக்கும் தெய்வமூர்த்திகளின் சிலா ரூபங்களுக்கும் நெருங்கிய ஆன்மீக தெய்வீகத் தொடர்பம்சங்கள் பல உண்டு. சூரிய, சந்திர கதி ஓட்டங்களுக்கேற்ப கோயில்களின் விமானங்கள் மூலம் கருவறைக்குள் தெய்வீகக் கதிர்களின் வீச்சுகள் அமையும். அதேபோல் பூமிக்கடியில் உள்ள நீரோட்டங்களும், ஒளி நீரோட்டங்களும் அந்தந்த அயன கதிகளுக்கேற்ப அந்தந்த அயன கதிகளுக்கேற்ப மாறுபடும். அபிஷேக நீர், கோமுக (அபிஷேக நீர் வரும் வழி) நீர், பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களும் சுயம்புத் திருமேனியிலோ, உற்சவ விக்ரஹங்களிலோ பட்டு பூமியை அடைகையில் பூமியின் கீழுள்ள நீரோட்டங்களும், அலை, கதிர், ஒளி, ஒலியோட்டங்களும் அவற்றைப் பெற்றுப் பிரதட்சிணம் வருகையில் நம் பாதங்கள் மூலமாக நம் தேகத்தில் சேர்க்கின்றன.

ஸ்ரீவிஜய கணபதி
பழமண்ணிப்படிக்கரை

ஆனி மாதம் உத்தராயணக் கடைக்காலமும் தட்சிணாயனத்தின் முதற்காலமும் சேரும் உத்தம மாதம். இரு அயன கதிகளின் கூட்டுக் கதிர்களைச் சுமந்து வருவதே ஆனி மாதம் .உண்மையில் சூர்யப் பாதையில் மாற்றம் ஓரளவு ஆனியிலேயே ஏற்பட்டு விடுவதால் ஆனி மாதத்தில் இறை நீராட்டினால் ஏற்படும் தெய்வீக விளைவுகள் அற்புத சக்தி வாய்ந்தவை. ஏனெனில் பூமியினடியில் உள்ள அனைத்து வகை ஓட்டங்களும் பூரித்து நிற்கும் காலமே ஆனிமாதம். இவ்வோட்டங்கள் மாறுபடக் காரணமே தட்சிணாயன, உத்தராயனக் கலப்புக் கதிர் வீச்சுக்களாகும். இவ்வற்புத “பூரேகை” ஓட்டங்களைக் கலைத்தலாகாது என்பதினால்தான் “ஆனி அடிப் போடாதே” என்ற முதுமொழி அதாவது “ஆனியில் அஸ்திவாரம் போடாதே!” என்ற பொருளில் ஏற்பட்டுள்ளது. இவ்வரிய “பூரேகைகளின்” சக்தியை நாம் பெற வேண்டுமெனில்.....
1. கால் விரல்களில் அடிக்கால் பாதத்தில் மருதாணியிட்டு இயன்ற அளவு, சக்தியுள்ள வரை கிரிவலம், திருப்பாதயாத்திரை, அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
2. அவரவர் ஊரில் உள்ள சிவன், பெருமாள், பிள்ளையார், ஐயனார் என அனைத்துத் தெய்வ மூர்த்திகளுக்கும் ஆனித் திருமஞ்சனம் (இறைவனை நீராட்டுதல்) தனை குளத்துப் பிள்ளையார், தெருக் கோடிப் பிள்ளையார், முச்சந்திப் பிள்ளையார் என பல குடங்களில் புனித நீர் கொணர்ந்து அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்தல் வேண்டும்.
3. பல கோயில்களின் வெளிப ்பிரஹாரங்களில் பல லிங்க மூர்த்திகள், பாவைச் சிற்பங்கள், பேச்சாயி அம்மன், பிரம்மா, லிங்கோத்பவர், சண்டேச்வரர், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்கள், நால்வர், காளி, ஐயனார் துவஜஸ்தம்ப விநாயகர் போன்ற மூர்த்திகளைச் சரிவரக் கவனிப்பதே இல்லை. தக்க ஆலயப் பெரியோர்களின் அனுமதியுடன் ஆனித் திருமஞ்சனத்தன்று ஒரு மூர்த்தியையும் விட்டுவிடாது அனைத்து மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்தல் ஆனியில் கிடைக்கும் பெரும் பேறாகும்.
4. ஆனித் திருமஞ்சனத்தின் மஹிமையால் ஏற்படும் “பூரேகைகளின்” மகத்தான தெய்வீக சக்தி அய்யர்மலை, பழநி, குன்றக்குடி, திருநீர் மலை, திருப்பதி போன்ற மலைத் தலங்களில் பல்கி பெருகுகின்றது.
குறிப்பாக திருச்சி குளித்தலை அருகில் உள்ள அய்யர்மலையில் ஸ்ரீரத்ன கிரீஸ்வரருக்குக் காவிரி தீர்த்தமே அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனித் திருமஞ்சனத்தன்று இம்மலைவாழ் ஈஸ்வரனுக்கு, தக்க ஆலயப் பெரியோர்களின் அனுமதியுடன் கடினமான மலைப் படிகளில் ஏறி, காவிரி நீரை அளிக்கும் அரிய திருப்பணியைச் செய்திடில் அரிய அனுக்ரஹங்களை எளிதில் பெற்றிடலாம். பல முறை முயன்றும் சரிவராத நற்காரியங்கள் கைகூட இது பெரிதும் உதவும். மலைத் தலங்களில் “தீயசக்திகளின் ஆகாய மிதப்பு” குறைவு என்பதாலும், மலைக்கோயிற் கருவறை விமானங்கள் நட்சத்திர, கிரஹ, சூரிய,சந்திர மண்டலப் பாதைகளுக்கு  (தடங்கல்களின்றி) அருகாமையிலிருப்பதாலும் ஆனித் திருமஞ்சன “பூரேகை” சக்திகள் இங்கு அபரிமிதமாகப் பொழிகின்றன. .

நெல்லி தலவிருட்சம்
திருநெல்லிக்கா

5. ஆனித் திருமஞ்சன மஹிமை சொல்லில் அடங்காதது, விரிக்கின் வியாச பாரதமாய்ப் பெருகும். ஆனித் திருமஞ்சனத்தில் உற்பவிக்கும் “பூரேகை” தெய்வீக சக்தியினை கோமுக நீர், விபூதி, மஞ்சள், குங்குமப் பிரசாதம் மட்டுமின்றி தீப, தூபங்களின் தரிசனம், முகர்தல், தொட்டு ஏற்றுதல், ஸ்பரிசித்தல் மூலமாகவும் பெற்றிடலாம். நந்தி தீபம், சூர்ய தீபம், நாக தீபம், மயூர தீபம், பஞ்ச தீபம், மஹா தீபம் என்ற பல வகையான தீபங்களில் ஒரு குண்டுச் செம்பில் காட்டப்படும் “தீபமே” பூரேகை சக்திகளை ஒளிப் பிழம்பில் ஏற்று நமக்கு அளிக்கின்றது. எனவே இன்று தீபாராதனை காட்டுகையில் கண்களை மூடிக் கொண்டு நில்லாது “தீபத்தை நன்கு (கண்ணாடியைக் கழற்றிவிட்டு) உற்று நோக்கி தரிசித்திடுக! ஆனித் திருமஞ்சனத்தின் தீபமே இவ்விதழ் அட்டைய அலங்கரிக்கின்றது. ஆனித்திருமஞ்சனத்தின் இந்தத் தரிசனம்
1. தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) அகற்றி மனோதிடத்தை வளர்க்கும்.
2. தாய் தந்தையரை மதியாது, அவர்கட்கு இழைத்த கொடுமைகளின் சாபங்களிலிருந்து காக்கும். ஆனால் அவர்களிடம் தக்க மன்னிப்பைப் பெறுதல் வேண்டும் அல்லது இனியேனும் அவர்கட்கு முறையான தர்ப்பண பூஜை செய்தல் வேண்டும். கடினமாக உழைத்தும் பலன் தரா திட்டங்கள், வியாபார முறைகள் நன்கு நிறைவேறும்.
ஆஸ்ரம சேவைகள்
1. சென்ற மாதம் நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த அடியார்கள், குருமங்கள கந்தர்வா அவர்களின் அருளாணையின் படி அவர்களுடைய தலைமையில், ‘நகரேஷூ காஞ்சி’ என்று புகழப்பெறும் காஞ்சிபுரத்தில். சென்ற மாதம் அதாவது 4.5.1997 முதல் 10.5.1997 வரை சுமார் 12 திருத்தலங்களில் (ஏகாம்பரேஸ்வரர், வரதராஜபெருமாள், காமாக்ஷி போன்ற தலங்கள்) உழவாரத் திருப்பணிகளை செவ்வனே செய்தனர்.. இத்திருப்பணியில் நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த சுமார் 150 அடியார்கள் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
2. நாம் தொடர்ந்து நடத்திவருகின்ற மருத்துவ முகாம்கள் சென்ற மாதம் 18.ம் தேதி.... திருச்சியிலும், 25-ம் தேதி சென்னையிலும் குருமங்கள கந்தர்வாவின் பேரருட்கருணையினால் இனிதே நடந்தேறியது. அம்முகாம்களில் சுமார் ஆயிரம் ஏழை எளியவர்கள் மருத்துவ உதவிகள் பெற்று பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகருடாழ்வார் நாச்சியார்கோவில்

விசேஷ தினங்கள்
4.6.1997 – வாஸ்து நாள்
17.6.1997 – ராம லக்ஷ்மண துவாதசி
20.6.1997 – வெள்ளி – பௌர்ணமி இன்று இரவு பௌர்ணமி கிரிவலம்
கூடா நாட்கள்
பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கூடாநாட்களில் எல்லாவிதமான சுபகார்யங்களையும் தவிர்க்கவும்.
16.6.1997 – திங்கள் – முழுநாள்
25.6.1997 – புதன் – காலை 6.12வரை
28.6.1997 – முழுநாள்

அமுத தாரைகள்

1. நாச்சியார்புரம் ஒப்பிலியப்பன் கோயிலில் ஸ்ரீகருடாழ்வாருக்கு முன் உள்ள இருபாதங்களில் மிளகையும், உப்பையும் பிரார்த்தனைக் காணிக்கையாக இட்டு, ஏழைகளுக்குப் புது ஆடைகளை தானமளித்து வர தோல் சம்பந்தமான நோயகளுக்கு நிவாரணம் கிட்டும்.
2. ஓம் ஸ்ரீநவநாயகாய நம: நாகப்பட்டிணம் ஸ்ரீகாயாரோகணர் சிவாலயத்தில் உள்ள மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வமான நவகிரஹ மூர்த்திகளுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வறியோர்க்கு சர்க்கரைப் பொங்கல் தானமளித்து வந்திடில் புது வியாபாரங்கள் நன்கு விருத்தியடையும்.
3. சங்கு, சக்கரம், வாள், கதை, கோதண்டம், ஆகிய பஞ்சாயுதங்களைத் தாங்கிய பெருமாளுக்கு, புதன்கிழமை தோறும் தானோ, தன் குடும்பத்தவர்களோ தொடுத்த துளசி மாலைகளைச் சாற்றி வர வெளிநாடுகளில் நல்ல உத்தியோகமும், பாதுகாப்பும், நிரந்தர உத்தியோகமும் பிரஜா உரிமையும், (Green card, etc…) கிட்டும். இதனுடன் பெருமாளுக்குப் ப்ரீதியான சர்க்கரைப் பொங்கல் தானம் செய்தல் சிறப்புடையது.. இதனால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பற்றிய கவலைகள் தணியும்.

இலந்தை நிழலில் சகஸ்ரலிங்கம்
உத்தரகோசமங்கை

4. சிறு வயதிலேயே தினமும் தாய் தந்தையரின் பாதங்களைத் தொட்டு வணங்கும் நல்வழக்கத்தை ஏற்படுத்தி வந்தால் நல்ல ஒழுக்கமும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளும் தானாகவே இயற்கையிலேயே அமையும். திங்கட்கிழமை தோறும் ஸ்ரீசோமாஸ்கந்தரை வழிபட்டு குழந்தைகளே அரைத்த சந்தனத்தை இட்டு வந்திடில் நல்லொழுக்கத்திற்கு எளிதில் வித்திடலாம்.
5. குழந்தைகளை “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய்ராம்” என்று 1008 முறை எழுத வைத்து அக்காகித மாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்குச் சாற்றி அவர்களைக் கொண்டு வெண்ணெயை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமளிப்பதால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் ஸ்ரீஆஞ்சநேயரைப் போல் நற்குணங்களும் நல்ல ஞாபக சக்தியையும் பெறுவர்.
6. ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி – தாய் வழியைச் சார்ந்த மூதாதையர்களைப் பலரும் மறந்து விடுகின்றனர். அன்னை வழி பாட்டியின் அருமையான பெயரைக் கூட மறந்து விடுகின்றனர். இன்றைக்கு நாம் பெற்றுள்ள குழந்தை குட்டிகள், வீடு, வாகனம், நிலபுலன்கள் எல்லாம் நம் மூதாதையர்களின் பூஜா சக்தியால் தான் என்பதை மறந்து விடுகின்றோம். வாழை இலையின் இளம் குருத்தினைச் சிறு சிறு துண்டுகளாக்கி பருப்புடன் சேர்த்து சமைத்து கீரை சாதத்துடன் சேர்த்து ஸ்ரீகணபதிக்குப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானம் அளித்திடில் தாய்வழி சந்ததியினர் கீர்த்தி அடைவர். இதனால் குடும்பத்திற்குப் பித்ருக்களின் ஆசீர்வாதம் எளிதில் கிட்டும்.
7. வாகன வியாபாரிகள் தம் தொழிலில் மேன்மையுற்று வியாபாரம் செழித்திட சிவலிங்கத்தை மாணிக்கக் கற்களால் அர்ச்சித்து செவ்வாய்க் கிழமையன்று சிவப்பு நிற ஆடைகளைத் தானம் செய்துவர வியாபாரம் அபரிமிதமாகப் பெருகும்.
8. தங்களுடைய பதவி எப்போது மாற்றப்படுமோ அல்லது பறிபோகுமோ அல்லது எப்பதவியிலும் நிரந்தரமாக இல்லையே என்று வருந்துவோர்கள் காரகத்தான் சன்னிதியில் (உலகளந்த பெருமாள் திருக்கோயில் காஞ்சீபுரம்) கருணாகரப் பெருமான் ஆதிசேஷன் மீது வடக்கே திருமுகம் காட்டி வீற்றிருந்த பெருமாளை 51 சனிக்கிழமைகளில் தாமரை மலரால் அலங்கரித்து புளியோதரை அன்னம் தானமாக அளித்து வர பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் தகுதி அனைவருக்கும், குறிப்பாக வருமானத் துறை, வணிகத் துறையினருக்குக் (Revenue, Income-Tax, Commercial Tax, Sales Tax, Departments) கிட்டும்.

ஸ்ரீசோமாஸ்கந்தர்
சாக்கோட்டை காரைக்குடி

9. மாமியார் மருமகள் என்றவாறாக பலவிதமான பெண் உறவு முறைகளாலும் பல குடும்பங்களில் பிரிவுகளும் பெருந்துன்பங்களும் உண்டாகின்றன. செவ்வாய்க் கிழமை தோறும் அஷ்டபுஜ துர்கைக்கு (எட்டு கைகள் கொண்ட துர்கை) தக்காளி சாதம் போன்ற சிவப்பு நிற உணவினைப் படைத்து அன்னதானம் செய்துவர பெண் உறவுமுறைத் துன்பங்கள் விலகும்.
10. முறையற்ற காமம், பேராசை, கோபம், பொறாமை, ஆகியவை மூலமே தான் மனிதன் அடிக்கடி சபலங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆட்படுகின்றான். நின்ற கோலத்திலிருக்கும் விநாயக மூர்த்திக்கோ அல்லது ஸ்ரீவிஜய கணபதிக்கோ 108 முறை தோப்புக் கரணம் இட்டு வந்திடில் சபலங்களும், சஞ்சலங்களும் தானே குறையும். யோக-ஆசன-பிராணாயாம நிலைகள் மூன்றும் கூடுவதே தோப்புக் கரணமிடுதல் ஆகும்.
11. பல குடும்பங்களில் குழந்தைகள் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெறுவது பெற்றோர்க்கு நாள்தோறும் மன அமைதியின்மையை அளிக்கிறது. வியாழக்கிழமை தோறும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமியின் சின்முத்திரை காட்டும் வலக் கரவிரல்களுக்கு குழந்தைகள் தாமே அரைத்த சந்தனத்தைப் பொட்டாக இட்டு வந்திடில் குழந்தைகள் நிச்சயமாக நன்கு படித்து முன்னேற்றம் அடைவர்.
12. தினமும் ஆலம்பட்டையை வேகவைத்த நீர்க் கஷாயத்தால் வாய் கொப்புளித்து வர வாக்கு சுத்தி பெருகி உடற்குற்றங்களும், மனக் குற்றங்களும் தணியும்.
13. ஆலயங்களில் உள்ள நிர்மால்யப் பூக்களை தாமே சுமந்து சென்று அப்பூக்களை நதிகளிலும் கடலிலும் கரைத்து, ஆலயத்தில் உள்ள குப்பைகளையும் அகற்றுவதால் உடற் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்.
14. ஏழைக் குருடர்களுக்குத் தேவையான பிரெய்லி கடிகாரம், கைத்தடி போன்றவற்றைத் தானமாக அளித்து வர மன சஞ்சலங்கள் நிவர்த்தியாகும்.
15. திருவையாறு ஸ்ரீஐயாறப்பன் சிவாலயத்தில் சந்நதியில் எப்போதும் சாம்பிராணி தூபம் இருந்து வருகிறது. வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறை 5 மணி நேரம் தொடர்ந்து இங்கு அமர்ந்து சாம்பிராணி இட்டுத் தூபம் பெருக்கிடில் முறையற்ற காம உணர்வுகள் தாமாக நீங்குவதைக் கண் கூடாகக் காணலாம்.
16. திருப்பெருந்துறையாம் ஆவுடையார் கோயிலில் உள்ள 11 கரங்களையுடைய ஸ்ரீகணபதிக்கு சதுர்த்தி, சதுர்த்தசி, ஏகாதசி திதியில் 12 பெரிய மோதகங்களைப் படைத்து, பதினொன்றை ஏழைகளுக்கும், ஒன்றைக் குளத்து மீன்களுக்கும் இட்டுவர காமத்தால், பேராசையால், குரோதம், பொறாமையால் செய்த குற்றங்களுக்கும் பிராயச்சித்தம் கிட்டி மனம் தூய்மை அடையும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam