அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விஷ்ணுபதி புண்ணிய காலம்

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாக, ஒரு வருடத்திற்கு நான்கு விஷ்ணுபதி புண்ய கால விசேஷ தினங்கள் அமைகின்றன. பிரதோஷம் போன்று மிகவும் சக்தி வாய்ந்த நேரங்களுள் ஒன்றே விஷ்ணுபதி புண்யகாலமாகும். நம் ஆன்றோர்கள் அக்காலத்தில் மிகச் சிறப்புடன் பூஜைகளுடன், பலவிதமான தான தர்மங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தமையால் தான் அவர்கள் இன்றைக்குப் பித்ரு லோகங்களில் உத்தம தெய்வீக நிலைகளைப் பெற்று அன்றும் இன்றும் என்றும் நம்மை ஆசீர்வதித்து நம்முடைய நலமிக்க வாழ்விற்காக எப்போதும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். பித்ருக்களின் லோகத்தில் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களாக அமர்வதே மிகச் சிறப்பான தெய்வீக நிலை. இவர்களே நம்முடைய நல்வாழ்விற்காக அனைத்து சௌபாக்கியங்களையும் தரவல்லவர்கள்.
இத்தகைய அரிய இறை நிலையைப் பெற்றிருப்பினும் கூட நம்முடைய மூதாதையர்கள் நம் கூட அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள், ஏனைய பூஜைகளைச் செய்து வருகின்றார்கள் என்றால் கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா! பிரதோஷம், விஷ்ணுபதி போன்ற புனிதமான தினங்களில் தேவாதி தேவர்களும், தேவமூர்த்திகளும், மகரிஷிகளும், பித்ருக்களும், இந்தப் பூலோகத்திற்கு வந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பிரதோஷம் மற்றும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் நம் நன்மைக்காக நம்முடைய மூதாதையரே கோயிலில்களில் பூஜை செய்து காத்துக் கிடக்க, நாமோ இத்தகைய அபூர்வமான புண்ணிய நேரங்களில் கேளிக்கைகளிலும், உபயோகமற்ற காரியங்களிலும் தானே நாம் வீணாக நம் நேரத்தைக் கழிகின்றோம்?
இவ்வாறு எவருக்கும் எந்தப் பிரயோசனமுமின்றி எவ்வளவு வருடகாலத்தை வாழ்க்கையில் நாம் இழந்து விட்டோம்!? இழந்த காலத்தை ஈடு செய்ய வேண்டுமெனில் ஒரு சிறு பூஜைக்கும் பன்மடங்கு பலன்களை அள்ளித் தருபவையான பிரதோஷம், விஷ்ணுபதி புண்யகாலம் போன்ற விசேஷ தினங்களில் பூஜைகள், தான தர்மங்கள், தர்ப்பணங்கள் ஆகியவற்றைக் கட்டாயம் மேற்கொண்டால் தான் மனச்சாந்தியுடன் இவ்வுலக வாழ்வை நாம் முடித்திடலாம், ஓட்டிடலாம். இல்லை எனில் கர்மவினைகளே பல்கிப் பெருகி, பிறவிகளே பெருஞ்சுழலாய்க் கூடி, துன்பகரமான வாழ்க்கையே நமக்கு வருகின்ற பிறவிகளிலும் அமைந்து விடும்.
வைணவப் பெரியோர்களும், கருணையுள்ளம் கொண்ட வசதிமிக்கோரும், தெய்வீக நிலையில் திளைப்பவர்களும், பக்தர்களும் பிரதோஷம் போன்று விஷ்ணுபதி புண்யகாலமும் சிறப்புடன் கொண்டாடப்படுவதற்காக ஆன்மீக வழியில் பிரச்சாரங்களும், இறைப் பணிகளும் ஆற்றிட பணிவன்புடன் வேண்டுகிறோம்.
திருஅண்ணாமலை கிரிவல மகிமை, ஸ்ரீஆயுர்தேவி மகிமை போன்ற பல தெய்வீக நூல்கள் மூலமாகவும், ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக மாத இதழ் மூலமாகவும், விஷ்ணுபதி புண்யகாலத்தின் சிறப்பை எடுத்துரைத்து வருவதோடு அன்னதானம், வஸ்திர தானம் திருஅண்ணாமலையில் ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் அமைத்து ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் அருள்வழிகாட்டி வருகின்ற ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் அருளியவற்றைத் திருஅருள் ஆணையாக மேற்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபதி மகா புண்ய காலத்தின் மகாத்மியத்தை யாங்கணும் பரப்பிட அருட்பணி ஆற்றி வருகின்றார்கள்..
வரும் விஷ்ணுபதி புண்யகாலம் 14.5.1997 (புதன்கிழமை) அன்று விடியற்காலை இரண்டு மணி முதல் காலை பத்து மணி வரை அமைகின்றது. பெறுதற்கரியதான இப்புண்யகாலத்தில் மகா சிவராத்திரியைப் போல், வைகுண்ட ஏகாதசியைப் போல் நாம் இரவில் கண்விழித்துப் பூஜை, ஆராதனைகள், தர்ப்பணங்களை நிறைவேற்றிடில் பலன்கள் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகி, வேண்டும் நல்வரங்களைத் தந்து தீவினைகளைக் கழித்து நம் இல்லத்திலும், அலுவலகத்திலும், அனைத்து இடங்களிலும் சாந்தமும் அமைதியும் நின்று நிலவுவதற்கான அருளைப் பெற்றுத் தரும். விஷ்ணுபதி புண்யகாலம் எனப்பெறும் மிகவும் விசேஷமான நாளானது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருகின்றதல்லவா! கடந்த பல கோடி சதுர்யுகங்களில் எத்தனையோ விஷ்ணுபதி தினங்களும் வந்து சென்றுள்ளன என்பதும் கண்கூடன்றோ! அதுமட்டுமல்லாது மிகவும் சக்தி வாய்ந்த விஷ்ணுபதி புண்யகால தினத்தன்றுதான்..
1. எத்தனையோ மஹரிஷிகளும், தேவாதி தேவர்களும், மிக அற்புதமான உத்தம தெய்வ நிலைகளை அடைந்துள்ளனர்.
2. பல தேவ மூர்த்திகள், பல திருவிளையாடல்களையும், இறை லீலைகளையும், தெய்வ அனுபூதிகளையும் நிகழ்த்தி உள்ளனர்.
3. எண்ணற்ற திருக்கோயில்களும், புண்யநதிகளும், தீர்த்தங்களும், புனித ஸ்தலங்களும் தோன்றின.
4. வசு, ருத்ர, ஆதித்யர்கள் போன்ற உத்தமமான தெய்வீக நிலைகளில் உள்ள பித்ருக்கள், மேலும் பல அற்புதமான தெய்வீக நிலைகளை அடைந்துள்ளனர்.
மஹாளய அமாவாசை போன்று விஷ்ணுபதி புண்யகாலத்திலும் பித்ருக்களுக்குத் திவசம், சிரார்த்தம், படையல், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்திடில் பலன்கள் எளிதில் பன்மடங்காகும். மேலும் இப்புனித நேரத்தில் பூஜைகள், வடமொழி/தமிழ் மறை ஓதுதல், அபிஷேக ஆராதனைகள், ஹோம அர்ச்சனைகள், தான தர்மங்களைச் செய்திட அவற்றின் பல நல்விருட்சம் போல் பெருகி ஆண்டவனின் அருட்கடாட்சத்தைக் கூட்டி நம்முடைய முறையான இகபர சுகத் தேவைகளைப் பூர்த்தி செய்து தீய கர்மவினைகளைக் கழித்து நல்வாழ்வு நிலையைப் பெற்றுத் தருகின்றன. எனவே இவ்வாறு எத்தனையோ தேவமூர்த்திகள் தெய்வத் திருலீலா விநோதங்களை நிகழ்த்திய விஷ்ணுபதி புண்யநாளின் மஹிமையை உணர்ந்து சுமார் எட்டு மணி நேரம் அமையும், இந்த அற்புதமான தெய்வீக நேரத்தை வீணாக்காது நன்முறையில் பயனுள்ள வகையில் இயன்ற எளிய இறைப்பணிகளுடன் சாதி, இனபேதம் இன்றிப் பலருடன் இணைந்து சத்சங்கமாக நிறைவேற்றி ஆனந்தமடைவோமாக!
ஸ்ரீமந்நாராயண மூர்த்தியானவர் தசாவதாரங்கள் மட்டுமல்லாது அதற்கு மேலும் நாம் ஓரளவு அறிந்த 24 அவதாரங்களுக்கும் மேலாக, எண்ணற்ற அவதாரங்களை ஏற்று நமக்கு அருள்வழி காட்டுகின்றார். ஸ்ரீமகாவிஷ்ணுவின் புனித அவதாரங்களில் உக்ரஹ சக்தி கூடியது ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அவதாரமாகும். பிரகலாத சரிதத்தின் மூலம் நாம் ஸ்ரீநரசிம்மரின் அவதார லீலையை அறிவோம். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் தூணிலும் துரும்பிலும் உறையும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி உற்பவித்து ஹிரண்யனை வதம் செய்து பிரகலாதனை ஆட்கொண்டாரன்றோ! அப்பப்பா! இவ்வனைத்துப் புராண நிகழ்ச்சிகளும் இமைப் பொழுதில் நிகழ்ந்து விட்டன. இப்புனித நேரமே பிரதோஷ காலம் என்பதும் நாம் அறிந்ததே.
தன்னிலை தன்மயடைய
அர்ச்சுனனுக்காக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தம்முடைய விஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டி நின்ற பொழுது, பக்திப் பெருக்கெடுத்துப் பரவச நிலை அடைய வேண்டிய அர்ச்சுனன், “ஹே கிருஷ்ணா! உன்னுடைய விஸ்வ ஸ்வரூபத்தை என்னுடைய ஊனக் கண்களால் காண முடியவில்லையே! எனவே எனக்கு நன்கு பரிச்சயமான பார்த்தசாரதி ரூபத்திலேயே நீ பரிமளிப்பாயாக!” என்று வேண்டியதைப் போல், பிரகலாதனும் ஸ்ரீஉக்ர நரசிம்மரைப் பார்த்துத் திகைத்து நின்றிட்டான்.  ஸ்ரீநரசிம்மரே தம் உச்சகட்ட உக்ரஹத்தைத் தணித்துப் பிரகலாதனை ஆசுவாசப்படுத்த முயன்றபோதிலும் ஸ்ரீஉக்ரஹ நரசிம்மராலேயே தம் உக்ரஹவேகத்தை தணித்துக் கொள்ள முடியவில்லை! காரணம் என்ன?
ஹிரண்யனுடைய கொடூரமிக்க குணங்களை நாம் அறிவோம். ஸ்ரீநரசிம்மர் ஹிரண்யனை வதைத்திடுகையில் அவன் பெற்ற வரம் காரணமாக, அவ்வரத்திற்கான அம்ஸங்களைக் கருத்தில் கொண்டு ஹிரண்யனுடைய உதிரமானது பூமியில் பட்டுவிட்டால் எத்தகைய தீங்குகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் தான் அவனுடைய உதிரத்தின் ஒரு சிறுதுளி கூட பூமியில் சிந்தாமல் அனைத்தையும் ஸ்ரீநரசிம்மர் தம் தேகத்தில் ஏற்றார்.

திருமகளின் வாகனம்

ஹிரண்யன் பலகோடிக் கணக்கான ஆண்டுகளாக, மகரிஷிகளுக்கும், புல், புண்டு முதல் புனித தேவாதி தேவர்கள் வரை அனைவருக்கும் பல கொடுமைகளை இழைத்தவன், ஆதலால் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டது போல ஸ்ரீநரசிம்மர் ஸர்வ லோகங்களையும் காக்கும் பொருட்டு ஹிரண்யனின் உதிரத்தை உண்டார். இச்செயல் மேலும் ஸ்ரீநரசிம்மருடைய உக்ரஹத்தைப் பன்மடங்காக்கி விட்டது. சாட்சாத் மஹாவிஷ்ணுவின் அவதாரத்திற்கு இத்தகைய விளைவு ஏற்படுமா என்ற எண்ணம் தோன்றலாம்! ஆனால் அனைத்தும் இறைலீலைகளன்றோ! ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆயிரம் ஆயிரம் காரணங்களுண்டு!
உக்ரஹ ரூபம் கொள்வது ஏன்?
உக்ரஹம் என்று சொல்கின்றோம் அல்லவா! அதனை நாம் வெறும் கோபமென்று பொருள் கொள்ளக் கூடாது. ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி மூர்த்தங்களை நாம் பார்த்திருக்கிறோம். – பாண்டிச்சேரி அருகே திருவக்கரைத் தலத்தில் காளிதேவியும், கும்பகோணம் – திருநாகேஸ்வரம் அருகே ஐயாவாடியில் உக்ரஹப் பிரத்யங்கிரா காளியும், மத்யப் பிரதேசத்தில் உஜ்ஜெயினி மாகாளியும் அச்சம் தரக்கூடிய பயங்கரமான கோலத்தைப் பூண்ட, மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்திகள்.. உண்மையில் “அச்சம் தரக் கூடிய .. பயங்கரமான... “ என்று காளிதேவியை வர்ணிப்பதே பெருந்தவறு!
மகாகவி பாரதியாரும், ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸரும், காளிதாஸனும் நேருக்கு நேர் பேசி ஆனந்தித்த காளிதேவி பயங்கரமான, அச்சம் தரக்கூடிய உருவத்தைக் கொண்டவளா, இல்லை?! நிச்சயமாக இல்லை. நாம் தெய்வீகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் இப்படியெல்லாம் எண்ணுகின்றோம். வெறும் தெய்வ நம்பிக்கை மட்டும் போதாது. அது நாளுக்கு நாள் ஆழமாக, வேரூன்ற வேண்டும். நம் இல்லங்களில் குழந்தைகளின் விஷமங்களைத் தணிக்க “பூச்சாண்டி” காட்டுகின்றோம்.. ஏன்!
அவர்கள் தவறு செய்யக் கூடாது என்பதற்காகத்தான்! அதாவது அச்சம் தரக்கூடியதை எண்ணினாலோ அல்லது பார்த்தாலோ, மனித இயல்பாகவே, தவறுகள் குறையும் என்பதால் தான், ராட்சஸர்களும், அசுரர்களும் தாங்கள் பெற்ற அரிய வரங்களையே தவறாகப் பயன்படுத்திய போது அவர்களை விட பயங்கரமாக, அவர்களையே அச்சுறுத்தக் கூடிய வடிவுகளைக் காளியாரும், நரசிம்மர்களும் பூண்டனர்...
1. தங்களுடைய ஆயுள், ஆட்சி, இகபர சுகங்களை நீட்டிப்பதற்கும்,
2 தங்களை வெல்ல இனி வேறொருவரும் இந்த உலகில் இருக்கக் கூடாது என்பதற்காக அனைவரையும் அழிப்பது.
போன்ற கொடூரமான செயல்களில் அசுரர்கள் ஈடுபட்டனர். கம்ஸன், ஹிரண்ய கசிபு, ஹரண்யாட்சன், இராவணன், கரன், சிரன், புரன், மஹிஷாசுரன், நரகாசுரன் போன்ற அரக்கர்களின், அசுரர்களின் வரலாறுகள் இவ்வாறு தானே வருவாயின!
அதிகாரம், செல்வம், ஆற்றல் மட்டுமின்றித் தபோபலன்கள் கூடினும் மனிதனுக்கு அகந்தை, கர்வம், சுயநலம், பேராசை, மிகுமாயின் அவர் பெற்றதனைத்தும் வீணே என்ற பாடத்தைத் தான் மேற்கண்ட அசுரர்களின் வாழ்க்கை புகட்டுகின்றது! பல கோடி உலகங்களை அழித்துப் பயிர்கள், மரங்கள் செடி, கொடிகள், விலங்குகளை நாசஞ்செய்து, உயிர்களை வதைத்து அக்கிரமங்கள் புரிந்த அசுரர்களைத் தபோசக்தி, சாந்தம், பொறுமை, தயாளம், கருணை கொண்டு பல மஹரிஷிகள் திருத்த முனைந்தனர். அத்தகைய மஹரிஷிகளையே எதிர்த்து அழிக்க அசுரர்கள் முயன்றபோது தான், மஹரிஷிகள் கோபம் கொண்டு அசுரர்களுக்கு பலவித சாபங்களை அளித்தனர். இராவணனுக்கு அவனுடைய பூஜா சக்தியினால், தபோபலத்தினால் “சிவதரிசனம்” கிட்டிடினும் கூட சாகாவரமும், தான் எவராலும் வெல்லப்படாத வரமும் தான் அவனுக்குக் கேட்கத் தோன்றியதே தவிர “பிறப்பிறப்பற்ற சாகாவரம்” கேட்க வேண்டுமெனத் தோன்றவில்லையே! பத்துதலைகள், எவரையும் அழிக்கும் ஆயுதங்கள், பார்த்தவர்கள் கதிகலங்கி ஓடும் கோர ரூபம் போன்றவற்றை அசுரர்கள் பெற்றார்கள் அல்லவா! அப்படியானால் அத்தகைய அச்சம் தரக் கூடிய, கண்டாலே இரத்தத்தை உறைய வைக்கும் அதிபயங்கர ரூபத்தைப் பெற்ற அசுரர்களை அடக்க வேண்டுமானால்....
அவர்களைவிட இன்னும் அதிகோர ரூபங்கொண்ட உருவத்தைக் கண்டால் தானே அந்த  அசுரர்கள் நடுங்குவர்?! எனவேதான் அசுரகளை விட, இராட்சஸர்களை விட மிகமிக கோரமான ரூபத்தை, அவர்களே அஞ்சி நடுங்கி ஓடும்படியான உக்ரஹமான ரூபத்தை இறைவி ஏற்று அவர்களை சம்ஹாரம் செய்தனள்... மேலும் ஈஸ்வரியே, துர்க்கை, காளி போன்ற தேவியர் உருவம் கொண்டு எதிர்நின்றபோது, தீய அசுரர்களுக்குத் தங்களை வெல்ல எவருமில்லை என்ற அகந்தையின் காரணமாக வந்திருப்பது சாட்சாத் அகிலாண்டேஸ்வரியே என்ற எண்ணம் தோன்றாது, அம்பிகையையே எதிர்த்துப் போரிட்டனர். ஏன்? எந்த இறைவனின் தரிசனம் வேண்டி ஏங்குகின்றார்களோ... அது கிட்டும் போது.... தெய்வாவதாரத்தையே வென்று விடலாம் என்ற கேவலமான புத்திதானே தலை தூக்கி நிற்கின்றது!
நம்மிடையே இராவணர்கள்
இன்றும், இராவண புத்திக்குக் கலியுகத்தில் பஞ்சமில்லையே!, இராவணனுடைய சிறுமையான காம புத்தியும் இன்று தலைதூக்கியுள்ளதே! சாட்சாத் இராமச்சந்திர மூர்த்தியின் தெய்வபத்னியாகிய ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீமஹாலட்சுமியின் திருஅவதாரம் அன்றோ! சீதாதேவி அம்பிகையின் ரூபமே, ஸ்ரீராமன் பரம்பொருளின் மானுட ரூபமே என்றறிந்தும் இராவணன் கீழ்த்தர எண்ணங்களில் தானே சிக்குண்டு கிடந்தான். இதேபோல் தான் இன்றும் பல கோயில்களில் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, பூஜைகள் நிகழ்கையில், இறைவனின் திருச்சந்நதி முன் நின்றிருந்தும் கூட, அதே இறைவன் புஷ்பலாங்காரங்களுடன் உள்ளத்தைக் கவரும் ஆனந்தக் கோலத்தில், சிலாரூபத்தில் காட்சியளித்தும் கூட, அதில் மனம் செலுத்தாமல், தரிசனம் செய்ய வருகின்ற பெண்களைக் காம எண்ணங்களுடன் நோக்குகின்ற அதிகேவலமான மனிதர்கள் எத்தனை! எத்தனை!!
அவரவர் உள்ளத்தைத் தொட்டுப்பார்த்தால் தான் உள்ளே எத்துணை இராவணர்கள் வசிக்கின்றார்கள் என்பது புரியும். அனைத்தையும் நன்கறிந்த ஆண்டவன், சிலாரூபத்தில் மௌனியாக நிற்பதால் தான் மனிதர்கள் புனிதமில்லாத, தீய, மிகவும் அருவருக்கத்தக்க காம எண்ணங்களோடு நிற்கின்றனர். இதே தெய்வம் ஸ்ரீதுர்கையாய், ஸ்ரீசாமுண்டியாய், ஸ்ரீகாளியாய் பத்து ஆயுதங்களுடன் முறையற்ற காம, தீய எண்ணம் கொண்டோரை அழிக்க வந்தாளெனில்....இவ்வுலகில் ஒரு சில மனிதர்களே மிஞ்சுவர்! உண்மையான மனசாட்சியுடன் உங்கள் உள்ளத்தை நீதிமன்றமாக்கி நீதிபதியாம் நிமலப் பரம்பொருளிடம் சரணடையுங்கள்! கலியுகத்தில் நம்மிடத்தில் குடிகொண்டிருக்கும்.....
1. பிறரைக் கொள்ளையடிக்கும், ஏமாற்றும் தீய எண்ணங்களை வேரறுக்கவும்.,
2. நம் பெண் குழந்தைகள் நன்கு, வளர்ந்து, படித்து ஆளாகி நல்வாழ்வு பெற்று வாழ வேண்டிப் பிரார்த்தனை செய்யச் செல்கின்ற கோயில்களில், பிற பெண்களைப் பார்த்து கீழ்த்தரமான காம எண்ணங்களிலும், செயல்களிலும் செல்கின்ற சிந்தை செலுத்துவோரின் கொடிய மனப் போக்குகளை அழிக்கவும்...
3. முறையற்ற காமம், அதிகாரம், செல்வம், அந்தஸ்து, பதவி, ஆள்பலம், கௌரவம் போன்றவை காரணமாகப் பிறரை வதைத்தல், துன்புறுத்துதல், கொடுமைப்படுத்துதல் போன்ற கொடூரமான பாவச் செயல்களைக் களையவும் தானே அசுரர்களையும், இராட்சஸர்களையும் வதைத்துச் சம்ஹரித்த ஸ்ரீகாளியும், ஸ்ரீதுர்கையும் , ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும் கோயில்களில் எழுந்தருளி உள்ளனர்.
அசுர குணங்களே அசுரரின் வடிவாம் உருவத்தால் மனிதர்களாகவும், மனதால் கொடிய அசுரர்களாகவும், இராட்சஸர்களாகவும் வாழ்வோரைச் சீர்திருத்தி நல்வாழ்க்கையளிக்கவே உக்ரஹ மூர்த்திகள் அவதரித்துள்ளனர்.. சினம், பொறாமை, அகந்தை, குரோதம், லோபம், முறையற்ற காமம், பகைமை, பேராசை, புகழ் மற்றும் சொத்திற்கு ஆசைப்படுதல், கொலை உணர்ச்சி – என்றவாறாகப் பல அசுர குணங்களுண்டு! இறைவனின் உக்ரஹ சக்தியால் மேற்கண்ட கொடிய சக்திகளை அழித்திட விஷ்ணுபதி போன்ற அரிய புனிதமான நாட்களின் பூஜைகளே பெரிதும் உதவுகின்றன... ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால விளக்கமானது எத்தனை அரிய குறிப்புகளைத் தந்து விட்டது பார்த்தீர்களா? கொடிய அசுரர்களை வதைத்திட அவர்களை விடக் கொடிய ரூபத்தை ஸ்ரீஅம்பிகையும், ஸ்ரீநரசிம்மரும் ஏற்றார்கள் என்று கண்டோம். இதற்கு மேலும் பல காரணங்கள் உண்டு. பெரும்பான்மையான நம் நியாயமான பிரார்த்தனைகள் பல நிறைவேறாமைக்குக் காரணம் தீவினை சக்தியே! தீய சக்திகளின் படிமானம் குறைகையில் இறைவன் அருளால் பிரார்த்தனையின் பலன்கள் துரிதமாகக் கிட்டும்.
1. தீய எண்ணங்கள், தீவினைப் படிவுகள் ஆடையிலும், உணவிலும், பரவெளிக் காற்றிலும், மனிதனின் மூச்சுக்காற்றிலும், மனிதனின்  இரத்தத்திலும், தசையிலும், சதையிலும், முடியிலும் படிகின்றன. தினமும் நீராடுவதால் தோலிலும், முடியிலும் சேர்கின்ற வெளிப்படிவுத் தீவினை சக்திகள் கழிகின்றன. புனித நதி, கோயில், குளம் (அமாவாசை, மற்றும் பௌர்ணமிகளில்) கடலில் நீராடுதலால் பலவித கொடிய சக்திகள் எளிதில் கரைகின்றன. இயன்றவரை ஹோட்டலில், வெளியிடங்களில் உண்பதையோ, நீர்  அருந்துவதையோ தவிர்த்தால் வெளிலுள்ள தீயசக்திகள் நம்மைத் தாக்குவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வகையில் ஹிரண்யன் போன்ற அசுரர்கள் எண்ணம், மனம், உள்ளம், தேகம் என எதிர்வினைகளின் (negative forces) மொத்த உருவாக வலுப்பெற்று அக்கிரமங்களைச் செய்து வந்தமையால் அவர்களுடைய மூச்சு, முடி, உதிரம், எலும்பு சதையாவும் கொடூரங்களின் திரட்சியாக இருந்தன. எனவே திருவக்கரை காளி, நரசிம்மர், உக்ரஹ பிரத்யங்கிரா காளி போன்ற உக்ரஹ மூர்த்திகள், அசுரர்களைச் சம்ஹரித்த பின்னர் அசுரர்களின் உதிரமோ, உடல் கூறோ ஒரு துளி அல்லது ஒரு துண்டு கீழே விழுந்தால் கூட அதுவே அந்த இடத்தைப் பாழ்படுத்தி துர்சக்திகளின் பெருக்க நிலைக்கு வழிவகுக்கும் என்பதால், அசுரர்களின் உதிரத்தை அருந்தி, எலும்புகளையும், சதையையும் மாலை போலாக்கித் தம் திருமேனிகளில் பூண்டனர்.
‘தேவமூர்த்திகள் அரக்கர்களின் உதிரத்தை ஆருந்துவது உண்டா?” என்று கேட்டிடலாம்.. தெய்வாவதாரங்களும் நம்மைப் போல் உண்டு, உறங்கி, உணர்ந்து, இயங்குகிறது என அறியாமையால் நாம் கருதுவதால் தான் நமக்கு இவ்விதமான மனவோட்டம் எழுகின்றது! ஆக்கலும் காத்தலும் அழித்தலும் அவனேயெனில் நல்லது, தீயதெனப் பதிவிரதா தேவியான சீதையை அக்னி தீண்டிடாதன்றோ!! நல்லதும் தீயதும் ஒடுங்குவது அக்னியில் தானே! அக்னியே தீண்டவில்லை எனில் அப்புனிதப் பரம்பொருளை நன்மை, தீமைகள், விருப்பு வெறுப்புகளா அண்டும்? அதே போல் நிலம், நீர், வாயு, காற்று, ஆகாயமென்னும் ஐந்தாய் விரிந்து, ஒடுங்கி நிலைத்து நிற்கும் பரம்பொருளிடம் நல்லதும் தீயதும் அடைக்கலம் ஆகி விடுவதால் அசுரர்களின் உதிரம், அமிர்தமாகும் அன்னக்களஞ்சியம் அவனன்றோ! கொட்டமடித்த கொடூரர்களைக் கொன்று, வென்று, கொண்டாள்கின்ற ஈசனின் இறைத் திருலீலைகளின்  சாராம்சமே நம் சிற்றறிவிற்கு எட்டாத சீர்மிகு சிவநாதங்கள், நாராயண நற்கீதங்கள், ஹரிஹர இறைநெறிகள்! .
2. மேலும் இறைவன் அளித்த வரங்களைப் பெற்ற தைரியத்தில் தானே அசுரர்கள் அழிவுப் பாதையிலே இறங்கினர். எனவே இதற்கான பொறுப்பை இறைவனே தம்முள் ஏற்று அசுர உடற் கூறுகளையும் தம்முள் புகுத்திக் கொண்டு “அவரவர் காரிய விளைவுகளுக்கு அவரவரே பொறுப்பு” என்ற அரிய பாடத்தை நமக்குப் புகட்டுகின்றார்..,
3. கோரச் செயல்களைப் புரிந்த அசுரர்கள் இறை அவதாரங்களின் திருக்கரங்களினால் சம்ஹரிக்கப்படும் பேறு பெற்றது ஏன்? மிகவும் சிறப்புடைய கேள்வி அது!
ஏனென்றால் கலியுகத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல், கேளிக்கை விளையாட்டுகள், சிற்றின்பங்கள், சூதாட்டம் போன்ற தீயவினைகளைச் செய்து வருவோர், “நாமே பல வருடங்களாய்ச் சீரழிந்து வருகிறோம்! நமக்கு விமோசனமே கிட்டப்போவதில்லை. எனவே கெட்டது தான் கெட்டு விட்டோம், கெட்ட வழக்கங்களைத் தொடர வேண்டியது தான்! இனிமேல் சமுதாயத்திலோ, உறவினர்களிலோ, குடும்பத்திலோ நம்மை யாரும் மதிக்கப் போவதில்லை!”- என்று விஸ்ராந்தியாக வாழ்கின்றனர். மேலும் தீயவர்கள் தானே சிறப்புடன் வசதிகளுடன் வாழ்கின்றனர் என்று பலரும் எண்ணுகின்றனர்.. நடந்ததை மறந்து விடுங்கள்! நடந்தவற்றிற்கு மனதார வருந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண சேவை செய்து “இனியாவது எவ்வித கெட்டவழக்கத்திற்கும் ஆட்பட மாட்டேன்” என்று இறைவனிடம் சத்தியம் செய்து உண்மையாக வாழ்வு வாழ்ந்திடுங்கள்! நிச்சயமாக இறைவனே வந்து ஆட்கொள்வான்! இறைவனே ஆட்கொண்ட கொடிய அசுரர்களின் வாழ்க்கை காட்டும் பாடம் இது!!
ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹம் தணிதல் :
ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹத்தைப் புராணங்கள் பல வகைகளில் நன்கு விவரிக்கின்றன. அக்னிமலையென ஆர்பவித்த ஸ்ரீநரசிம்மர் ஹிரண்யவதம் முடிந்த பின் தம் அவதார சங்கல்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடினார். ஏற்கனவே ஸ்ரீநரசிம்மர் உக்ரஹத்தால் எழுந்த அக்னியின் ஜ்வாலைகளைக் கண்டு அஞ்சி தேவாதி தேவர்களும், புனித மஹரிஷிகளும் கைலாயத்தில் சரணடைந்தனர். பல கோடி அண்டங்கள் வெம்மையில் சுருங்கி, வெடித்து எங்கெங்கோ சிதறின. பரவசப் பெருக்கெடுத்தோட நடனமாடிய ஸ்ரீநரசிம்மரின் இந்த ஆட்டத்தைக் காணுகின்ற பேறு பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவரே அக்னிபுராந்தக மஹரிஷி. பெரும்பாலும் ஸ்ரீநரசிம்மர், அல்லது ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியுள்ள தூண்களின் அருகில் இன்றும் அக்னிபுராந்தக மஹரிஷி பல வடிவங்களில் இருப்பதைக் காணலாம். ஸ்ரீநரசிம்மர் தோன்றியது பிரதோஷ காலம் ஆதலின் இன்றும் அபூர்வமாக சில தலங்களில் பிரதோஷ காலங்களில் ஸ்ரீநரசிம்ம வழிபாடும், ஸ்ரீநரசிம்மரின் நாட்டிய அலங்காரமும் இடம்பெறுவது உண்டு. ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹ நாட்டியம் நெடுங்காலத்திற்குத் தொடர்ந்து இறுதியில் ஸ்ரீநரசிம்மரே தம்முடைய அவசியத்தை உணர்ந்து பல புண்ணிய தலங்களுக்கும், நதி தீரங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் சென்றார். எதற்காக?
ஆங்காங்கே எழுந்தருளியிருந்த தேவ மூர்த்திகள் ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹத்தின் தரிசினத்தினை ஓர் அணுவினும் சிறிய பங்கினைப் பிரசாதமாகப் பெறும் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆண்டவனின் இத்திருவிளையாடல்!! சில இடங்களில் பூமாதேவி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருபாதப்படிவுகளுக்குப் பாத பூஜை செய்திட்டாள். அப்பகுதிகளே இன்றும் செம்மண் பூமியாக விளங்குகின்றன. ஸ்ரீநரசிம்மரின் திருப்பாதம் பட்ட கோயில் தீர்த்தங்கள் அக்னி தீர்த்தங்களாக மாறியன. பல இடங்களில் தம் உக்ரஹ சக்தியைத் தணிக்க ஸ்ரீநரசிம்மர் சிவபூஜை செய்திட,, அந்த லிங்கமூர்த்திகள் ஸ்ரீஅக்னீஸ்வரராகப் பெயர் கொண்டனர்.
மனிதன் இறந்தபின் அடையும் லோகங்களைப் பொதுவாக இருள்பகுதி, ஒளிப்பகுதி எனப் பிரிக்கலாம். இந்த ஒளிப்பகுதியில் பித்ருலோகம், கான லோகம், கந்தர்வ லோகம், நட்சத்திர லோகம் எனப் பல உண்டு. இருள் பகுதிகளில் நரகலோகம், ராட்சஸ லோகம், அசுரலோகம், எனப் பல லோகங்களுக்கும் சென்றிடுகையில் இருட் பகுதியிலிருந்தவர்கள் ஒளிப்பகுதிக்குச் செல்லும் உத்தம நிலைகளை அடைந்தனர்.. ஒளிப் பகுதியிலிருந்தோர் மேலும் பல தெய்வீக நிலைகளை அடைந்தனர்.., இது மட்டுமா ஸ்ரீநரசிம்மரே தம் உக்ரஹத்தைத் தாமே தணித்துக் கொள்வதற்குப் பல இடங்களில் விதவிதமான  யோக, ஆசன, நடன, உக்ரஹ, சாந்த, சௌந்தர்ய, கம்பீர, காருண்ய, தந்த்ர, மந்த்ர நிலைகளைப் பூண்டார். இவ்வாறு பல நிலைகளில் தோன்றியவர்களே...

அஹோபில நரசிம்ம மூர்த்தி

போக நரசிம்ம மூர்த்தி

மஹா நரசிம்ம மூர்த்தி

பார்க்க நரசிம்ம மூர்த்தி

ருத்ர நரசிம்ம மூர்த்தி

ச்ருங்கார நரசிம்ம மூர்த்தி

மாலோல நரசிம்ம மூர்த்தி

நரசிங்க மூர்த்தி

ஸ்தாணு நரசிம்ம மூர்த்தி

யோக நரசிம்ம மூர்த்தி

காட்டு அழகிய சிங்கர்

ஆனந்த நரசிம்ம மூர்த்தி

ஜ்வாலா நரசிம்ம மூர்த்தி

பாவன நரசிம்ம மூர்த்தி

பஞ்ச நரசிம்ம மூர்த்தி

வீர நரசிம்ம மூர்த்தி

சத்ரவட நரசிம்ம மூர்த்தி

அழகிய சிங்கர்

சக்ர நரசிம்ம மூர்த்தி

லாவண்ய நரசிம்ம மூர்த்தி

கேவல நரசிம்ம மூர்த்தி

காரஞ்ச நரசிம்ம மூர்த்தி

மேட்டு அழகிய சிங்கர்

உக்ர நரசிம்ம மூர்த்தி

பிரசன்ன நரசிம்ம மூர்த்தி

சாந்த நரசிம்ம மூர்த்தி

கிரிஜா நரசிம்ம மூர்த்தி

பிரத்யட்ச நரசிம்ம மூர்த்தி

ஸர்வ முக நரசிம்ம மூர்த்தி

படி நரசிம்ம மூர்த்தி

- என்றவாறாகப் பலவித ரூபங்களில் ஸ்ரீநரசிம்மர் காட்சி தந்து அருள்பாலித்தார். இவ்வாறு ஆதிமூல உக்ரஹ நரசிம்ம மூர்த்தியிடமிருந்து பல நரசிம்ம மூர்த்திகள் தோன்றிய போதும் அவர்தம் உக்ரஹம் தணிந்த பாடில்லை!!

திருவுடன் கூடிய ந்ருசிம்மர்
இதோ... ஸ்ரீநரசிம்மர், தாண்டவத்துடன் திவ்ய தரிசனம் தந்தவாறு சென்று கொண்டிருக்கிறார்.. ....ஸ்ரீமஹாலக்ஷ்மி அம்பிகையானவள், ஸ்ரீநரசிம்மர் இருக்குமிடம் தேடிப் பல கோடி லோகங்களுக்கும் செல்கின்றாள்.. இருளிலும், வறுமையிலும், கருமையிலும் கிடந்த லோகங்கள் ஸ்ரீமஹாலட்சுமியின் வரவால் ஒளி பெற்று, ஐஸ்வர்யங்கள் நிறைந்து பொலிந்தன. இந்த ஓர் அவதாரத்தில் புதைந்த லீலா விநோதங்கள் தாம் எத்தனை! எத்தனை!
குறித்த ஒரு லோகத்தில் ஸ்ரீநரசிம்மர் ஆனந்த நடனம் இயற்றிக் கொண்டிருக்கின்றார்! என்ற செய்தி வந்ததும் இமைப் பொழுதில் ஸ்ரீலக்ஷ்மி ஆங்கே சென்றிடுவாள்.. அதற்குள் ஸ்ரீநரசிம்மர் அங்கிருந்து பலகோடி அண்டங்களைக் கடந்து சென்றிருப்பார்! ஸ்ரீநரசிம்மரின் இத்தகைய உத்வேகத்திற்கும், உக்ரஹத்திற்கும் ஸ்ரீலட்சுமிதேவியால் ஈடுகொடுக்க இயலவில்லை! இதற்காகவே ஸ்ரீமஹாலட்சுமி பல புண்ய நதி தீரங்களிலும், திருத்தலங்களிலும் தவம் பூண்டனள். இவ்வாறு ஸ்ரீமஹாலட்சுமி தவம் பூண்டு நெடுங்காலம் தங்கியிருந்த இடங்களே இன்று பூலோகத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த நகரங்களாகவும் விலை மிதிப்பற்ற கற்கள், உலோகங்கள் நிறைந்த சுரங்கங்களாகவும் மாறியுள்ளன. அனைத்துத் தேவர்களும், முனிபுங்கவர்களும், தேவாதி தேவர்களும் ஸ்ரீமஹாலட்சுமியைச் சரணடைந்து ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹத்தைத் தணிக்க அவர்முன் சென்றிட வேண்டினர்..ஸ்ரீமஹாலட்சுமியின் அருள் நிறைந்த சாந்தஸ்வரூபத்தைக் கண்டவுடன் ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹம் தணிந்திடும் அல்லவா!! எத்தனையோ லோகங்களில் பல கோடி ஜீவன்களில் ஸ்ரீநரசிம்மரைத் தரிசித்திட, தனக்கு அந்த பாக்யம் கிட்டாமல் நெடுங்காலம் கடந்து விட்டதை எண்ணி ஸ்ரீமஹாலட்சுமி வருந்தினள்.. தேவமூர்த்திகளுக்கே உரிய துரித கதியில் இமைக்கும் நொடிப் பிரயாணம் வேகம் கொண்டும், ஸ்ரீமஹாலட்சுமியினால் பூலோகத்தில் காலாற சென்ற ஸ்ரீநரசிம்மரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை..
ஒவ்வொரு மஹாபிரளயத்தின் பின்னர் ஏற்படும் சிருஷ்டியின் போது ஆதிகிராத மூர்த்தியான ஈஸ்வரர் ஸ்ரீமஹாலட்சுமியின் உதவியுடன் தான் சிருஷ்டியைத் தொடங்குவார். கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆதிகும்பேசுவரரைத் தரிசித்துத் திருவிடைமருதூர், தாராசுரம், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, கருப்பூர் ஆகிய ஐந்து ஆதிசிருஷ்டித் தலங்களில்.. வெள்ளிக் கிழமையன்று சுக்ர ஹோரை நேரத்தில் குறிப்பாக ஸ்ரீலட்சுமிக்குரிய அனுஷ நக்ஷத்திரத்தில், முழுத்தாமரை மலர்களால் அர்ச்சித்து, உலக சிருஷ்டியில் முதன் முதலாகத் தோன்றிய தாவரங்களுள் ஒன்றான (சுக்ரனுக்குரிய) மொச்சையினை உணவில் சேர்த்து (சுண்டல், காரக்குழம்பு etc..) மேற்குறித்த இடங்களிலும் அன்னதானமாக அளித்து வர எத்தகைய தரித்திர நிலையும், வியாபாரக் கஷ்டங்களும் மாறி தன வரவு மிகும். சுக்ர ஹோரை இருக்கும் ஒரு மணி நேரத்தில் ஐந்து கோயில்களையும் தர்சிக்க இயலாவிடில் ஆறு மணிநேரம் பொறுத்து (அதே நாளில்) அடுத்து வரும் சுக்ர ஹோரை நேரத்தில் வழிபாட்டைத் தொடர வேண்டும்.
இவ்வாறாக, சிருஷ்டியின் போது கிராத மூர்த்தியின் வாகனமான நந்தீஸ்வரரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஸ்ரீலட்சுமி, பராசக்தியை வேண்டிட, அகிலாண்டேஸ்வரி,, “துவியாம்ஸு” என்ற ஒரு வாகனத்தை அளித்திட்டாள்.. துவியாம்ஸு வாகனமானது இரு மாம்பழங்களை இணைத்தாற் போலிருக்கும் (துவி – இரண்டு, ஆம் – மா). பெரும்பாலான ஆலயத் தூண்களில் இன்றும் இவ்வடிவைக் காணலாம். ஐசிங் என்று பிற மொழிகளில் கூறப்படும் துவியாம்ஸு வேத, மந்த்ர, யந்த்ர, தந்த்ர, வாமன, யோக, மூலாதார, தெய்வீக சக்கரங்களுள் ஒன்றாகும். ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் தலையாய சிஷ்யர்களுள் ஒருவரான போகர் சித்தர் தம் தபோபலத்தால் விண்ணிலிருந்து கிரஹித்து இதைக் கோயில் சிற்பக் கலைகளில் கூட்டினார். இந்தச் சக்கரத்தை முறையாக வரைந்து குறித்த பூஜைகளைக் குரு அருளுடன் நிறைவேற்றிட ஐஸ்வர்ய கடாட்சம் பொங்கும்.. ஆதிகாலத்தில் வெள்ளிக்கிழமைகளில் தூண்களில் உள்ள துவியாம்ஸு ரூபத்திற்கு அரிசிமாவுக் கோலமிட்டு மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு முழுத் தாமரை, மலர்களிட்டு வணங்குவர். இன்றும் இதனைச் செய்து வளம் பெறுவீர்களாக.. வறுமையைப் போக்கும் எளிய ஆன்மீக மருந்திது!! ஸ்ரீநரசிம்மரைத் தேடிச் சென்ற ஸ்ரீமஹாலட்சுமி தேவி, பராசக்தி அளித்த துவியாம்ஸு வாகனத்தில் அமர்ந்து பல லோகங்களுக்கும் விரைந்தனள்..... ஆகாயத்தினூடே . துவியாம்ஸு பறந்திட...
ஓரிடத்தில்....... வெண்புகை மண்டலம்... நறுமண தூபம் நிறைந்திருக்க... அதனூடே ஓர் அற்புத ஜோதிப் பிழம்பு தென்பட்டது..... ஸ்ரீமஹாலட்சுமி எழுந்து நின்று சற்றே குனிந்து பார்த்தனள்... ஆங்கே ஸ்ரீஉக்ர நரசிம்மர் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருக்க.... அதனூடே ஜோதிப் பிழம்பு தென்பட்டது... ஸ்ரீலட்சுமியின் நிழல் அவர்மீது பட ஆங்கே திருவும் ந்ருசிம்மரும் கூடி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். இப்புனித நேரமே விஷ்ணுபதி புண்யகாலமாகும். அந்த யுகத்தின் ஈஸ்வர வருட வஸந்த ருதுவிற்கான விஷ்ணுபதி புனித நாளாகும் அது. அதாவது ஸ்ரீமஹா லக்ஷ்மி ஸ்ரீஉக்ர நரசிம்மருடன் ஐக்யமாகி ஸ்ரீலட்சுமி சமேதராய், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் தோன்றிய அற்புத நாளே விஷ்ணுபதி புண்ய நாளாகும்.
புளியங்குடியில் விஷ்ணுபதி
ஆம்... இத்திருலீலை நடந்த இடமே தென்காசி – மதுரை சாலையில் இராஜபாளையம், அருகில் உள்ள புளியங்குடி என்னும் ஊராகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அற்புத சக்திகள் வாய்ந்த மூர்த்தி.. நாம் வேண்டுகின்ற வரங்களாய்த் தரும் விஷ்ணுமூர்த்தி! பிரிந்த குடும்பங்களைப் பிணைக்கும் பரம்பொருள்! இல்லத்தில் கணவன் மனைவிரியரிடையே சாந்தத்தைப் பரிணமிக்கச் செய்யும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவரே..!
புளியங்குடியில் புனர்வாழ்வு  - 14.5.1997 (சித்திரை 31-புதன்கிழமை) அன்றே ஸ்ரீவிஷ்ணுபதி அமைகின்றது... பெருமாளுக்குரியதாகிய புதன் கிழமை, ஈஸ்வர வருடத்தில் விஷ்ணுபதி அன்று கூடுவது அபூர்வமானதே...! திருமாலின் திருவருளைப் பன்மடங்காய்க் கூட்டியளிக்கும் புனித வைபவத் திருநாள்! இத்திருநாளில் புளியங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள், திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரங்கள் சார்த்தி, தாமரை, சாமந்தி, பவளமல்லி மலர்களால் அர்ச்சித்துப் பானகம், சர்க்கரைப் பொங்கலைத் தானம் செய்திட குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு மனம் சாந்தமடையும். கணவன், மனைவியரிடையே உள்ள மனஸ்தாபங்கள், கருத்து வேற்றுமைகள் குறைந்து கவின்மிகு நல்வாழ்வு அமையும். சிதைந்து சிதறிய உறவுகள் புனர்வாழ்வு பெற்றுப் பல குடும்பங்களில் அன்புப் பிணைப்பு ஏற்படும் .பிரிந்தவர் கூடுவர்..
1. பிறருடன் வாழ்ந்து, கட்டிய மனைவியை நிராகரித்துத் தவிக்கவிட்டோர், அக்கொடிய செயலுக்காக மனம் வருந்தி, விஷ்ணுபதி தினத்தில் இங்கு வழிபட்டு மேற்கண்ட முறையில் பூஜித்துக் கைவிடப்பட்டோர்க்குத் தகுந்த நிவாரணம் அளித்திட பாவச் சுமைகள் விலகும்.
2. இதே போல் காதலித்துக் கைவிட்டுப் பிறிதொருவருடன் வாழ்வோர்க்கும் இத்தகைய பரிஹார முறையே பெண்பாவத்திலிருந்து விடுபட உதவும். ஆனால் இதேபோல் பாதிக்கபட்டோருக்குரிய உதவி நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
3. மனைவியோடு ஒருவாழ்க்கை, பிறிதொருவரோடு இன்னொரு வாழ்க்கையென வாழ்வோர் விஷ்ணுபதி புண்யகாலத்தில் குறித்த பூஜைகளைச் செய்து, தன்னால் துன்பமுற்றோரின் துயரைத் துடைக்கும் உதவிகளைச் செய்து வர, சிதறிய வாழ்க்கை முறைகள் நல்ல முறையில் சீரடையும்.
4. செல்வம் ஈட்டுவதற்காகத் தாய், தந்தையரை அநாதையாகவோ, தனித்தோ விட்டு அயலூருக்கோ, அயல் நாட்டிற்கோ சென்றுள்ளோர் பெற்றோர்களின் சாபத்திலிருந்து மீளவும் இவ்விஷ்ணுபதிப் புண்யகால வழிபாடுகளே உதவும். தாய் தந்தையருடன் இக்கோயிலுக்கு வந்து வணங்கி, தவறுகளுக்கு வருந்தி அவர்களுக்கு நல்வாழ்வு அளிதிட்டால் தக்க பிராயச்சித்தம் கிட்டும்.
5. நன்றி கெட்டு உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தோர், ஓரவஞ்சனை காரணமாக சொத்து, பண விஷயங்களில் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் பல கெடுதி செய்தவர்கள் இக்கோயிலில் தான் பரிஹாரம் பெறலாம். ஆனால் செய்த தவறுகளால் அவதியுற்றோர்க்குத் தக்க உதவிகளைச் செய்திட வேண்டும்.
6. பிதுரார்ஜித சொத்துக்களைக் காம கேளிக்கைகள், சூதாட்டம் போன்ற முறைகேடான வழிகளில் அழிப்போர் இத்தலத்தில் வழிபாடுகளையும், தான தர்மங்களையும் செய்து திருந்தி வாழ்ந்திட உறுதி பூண வேண்டும். இதற்க்கு இத்தலமே வழிவகுக்கும்.
7. தற்காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்றோர் அயல்நாட்டு விதிகள், நிதிமாற்ற முறைகள், பகைமை, ஏமாற்றப்படுதல்.. போன்றவற்றால் நாடு திரும்ப இயலாத நிலையில் அல்லது தொழில் காண்ட்ராக்ட் காரணமாகத் திரும்பி வர இயலாதோர் இத்தலத்தில் குறித்த வழிபாடுகளைச் (அவர்களோ, பெற்றோர்களோ, உறவினர்களோ) செய்திட அனைத்தும் நன்றாக முடியும்.
விஷ்ணுபதி பூஜை முறைகள் :-
பிரதோஷம் போன்று சிறந்த விஷ்ணுபதி புண்யகால தினத்தில் செய்யப்படுகின்ற பூஜைகளுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு.
1. ஆராதனைகள், விதவிதமான அபிஷேகங்கள்/திருமஞ்சனம், புது வஸ்திரங்கள்/ ஆபரணங்கள் சார்த்துதல்..
2. தானதர்மங்கள் அன்னம், ஆடை, மஞ்சள் சரடு, வளையல் போன்ற மங்களப் பொருட்கள், காலணிகள், நீர்மோர், பானகம் , பால் etc…
3. பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள்
4. ஜாதி, மத பேதமின்றி 60/70/80 வயது நிரம்பிய தம்பதியர்கட்குப் பாதபூஜை
5. ஹோமம், வடமொழி/தமிழ் மொழி வேத பாராயணம், நாம் சங்கீர்த்தனம், பஜனை  etc..
6. ஆலயம் முழுதும் அரிசிமாவுக் கோலம் போட்டு, அகல் தீபங்கள்/ விளக்குகள் ஏற்றுதல்
அனைவரும் இவ்வரிய தெய்வீக வாய்ப்பினைத் தவறவிடாது. புனித விஷ்ணுபதிப் புண்யகால மஹிமையை எங்கும் பறைசாற்றி மேற்கண்ட முறையில் வழிபாடுகள், தானதர்மங்களைக் கடைபிடித்து பெறுதற்கரிய இறை அருளைப் பெற வேண்டுகிறோம்.

ஆக்கோட்ட லிங்கம்

ஆக்கோட்ட லிங்க மஹிமை – அட்டைப்பட விளக்கம்
ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு அருள் பெருஞ் சித்புருஷர்; கைலாயத்தில் ஆதிசிவனையும், வைகுண்டத்தில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியையும் இன்றும் தினமும் ஆராதிக்கும் உத்தம மஹரிஷி. சித்புருஷர்களின் தலைவர்; வடமொழி, தமிழ் மறைகளில் கரை கண்ட பெரும் பரமானந்த யோகி; புலிப்பாணி, போகர் போன்ற தெய்வீக சித்புருஷர்களைச் சீடர்களாயடைந்து பல நாடுகளிலும் இறைப் பணிகளைத் தொடரச் செய்த சித்தர். ஸ்ரீராமன் போன்று தெய்வ மூர்த்திகளுக்கும் பல அரிய அற்புத மந்திரங்கள உபதேசிக்கும் ஞானயோகி; ஸ்ரீஅகஸ்தியர் மூலிகைகளின், மூலிகா தேவதைகளின் தலைமைப் பீடகர்த்தா. வைத்திய துறையில் பல அரிய கிரந்தங்களை அருளிய கர்மயோகி; மேலும் பிராணாயாம வாசிகலைகளில் உத்தம நிலைகளைப் பெற்று, அந்த ஆன்மீக ரகசியங்களை கிரந்தங்களில் பதித்த ராஜயோகி; மூதலாதார யோக முறைகளில் உன்னதம் பெற்ற ஹட யோகி; ஆஞ்சநேயரைப் போல் இசையிலும், இசைக்கருவி வாசிப்பிலும் கைதேர்ந்த கானயோகி.
ஸ்ரீஅகஸ்திய ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்று, நான்கு வேதம் மற்றும் ஆறங்கங்களில் கரைகண்டமையால் ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து “ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை” அவருக்கு உலகில் முதன் முதலாக உபதேசித்தார்.. ஸ்ரீகணபதி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீராமன், ஸ்ரீமஹா விஷ்ணு, ஸ்ரீபிரம்மா போன்று அனைத்து தெய்வ மூர்த்திகளுடன் பல்வேறு புராண நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பாக்யம் பெற்று அன்றும் இன்றும் என்றும் பவனிவரும் சிரஞ்சீவி அகஸ்திய மாமுனி.. கோடி கோடியாம் அகஸ்தியர்கள் வந்து சென்றுள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு உருவம், பெயர் ஏற்றுக் கொண்டு இறைத் திருவிளையாடல்களைப் புனைந்தவர். புனித மிக்க திருக்கயிலாயம், ஸ்ரீவைகுண்டம், திருஅண்ணாமலை, ஸ்ரீகாளஹஸ்தி, காசி, திருவிடைமருதூர், மேருமலை, இமாலயம், சங்கத் தமிழ் வளர்த்த சீர்மிகு மதுரை, திருச்சி மலைக்கோட்டை போன்ற பல இடங்களுக்கு இன்றும் தினமும் வந்து தரிசித்து, இரவில் தம் வாசஸ்தலமான பொதியமலைக்குத் திரும்புகின்றார் அகஸ்தியர், திருஅண்ணாமலையைத் தினமும் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் கிரிவலம் வரும் சித்தர் பெருமானே ஸ்ரீஅகஸ்தியர்!
ஸ்ரீபார்வதி – பரமேஸ்வர திருமண வைபவத்தில் “உலகம் சமநிலை காண தென் திசைக்குச் செல்”, என்று ஈஸ்வரனே உரிமையுடன் ஆணையிடும் அளவிற்கு, வேறு எவருக்கும் கிட்டாத பாக்யத்தைப் பெற்று இறையருளால் அகத்தியான்பள்ளி, வேதாரண்யம் போன்ற பல இடங்களில் இறைவனுடைய அற்புதத் திருக்கல்யாணக் காட்சியினைக் காணும் பெரும் பேறு பெற்றவர் ஸ்ரீஅகஸ்திய பெருமான் ஆவார். ஸ்ரீஅகஸ்தியர் வழி வருகின்ற சித்புருஷர்களின் அருள் திருவாய் மொழிகளே இன்று கலியுலகில் உங்கள் கரங்களில் தவழ்கின்ற “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ். ஸ்ரீஅகஸ்தியர் தரிசித்திடாத தலங்கள் பூலோகத்தில், ஏன், பிரபஞ்சத்திலேயே எதுவுமில்லை. ஸ்ரீஅகஸ்தியரும், அவருடைய சிஷ்யர் குழாமும் திருத்தலங்களுக்குச் செல்கையில் ஆங்காங்கே உள்ள தூண்களிலும், விருட்சங்களிலும், சிலாரூபங்களிலும், கொடிக் கம்பங்களிலும், தீர்த்தத் துறைகளிலும் இன்னும் பல சிறப்புற்ற இடங்களிலும் தங்கள் தவசக்தியை விட்டுச் செல்கின்றனர். கலியுலகில் சத்சங்கமாக, சாதி, இன, மத, குல பேதமின்றிக் கோயிலில் அப்பர் சுவாமிகள் அருளிய வழியில் உழவாரப் பணிகளைச் சற்குருவின் தலைமையின் கீழ் மேற்கொள்கையில், சற்குருமார்களுக்கு இறை ஆணையாக, ஸ்ரீஅகஸ்தியரின் ஆசியால் மேற்கண்ட இடங்களை அணுகும் போது அவற்றின் தெய்வீக அம்சங்கள் அசரீரியாகவும், மனோலயத் தொடர்பாகவும் (Telepathy) உணர்த்தப் பெறுகின்றன. இவைதாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈசசித்த ஸ்வாமிகளின் திருவாய் மொழிகளாகவும், தம் சற்குருநாதரின் அருள் ஒளி வார்த்தைகளாகவும், குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்த சுவாமிகளால் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலம் அளிக்கப்படுகின்றன.. சற்குருவின் குருஅருளால், பல ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலைப் பகுதியில் விறகுவெட்டியாய்க் காட்சியளித்த ஸ்ரீஅகஸ்தியரின் அற்புத தரிசனத்தைப் பெற்ற உத்தமரே ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்!!
விறகுவெட்டியாய் வந்த மகான் ஸ்ரீஅகஸ்தியர் கொல்லிமலையில், சிறுவானாயிருந்த ஸ்ரீவெங்கடராம ஸ்வாமியின் நாவில், தம் திருவிரல் கொண்டு எழுதிட அன்று முதல் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் வெங்கடராம ஸ்வாமிகளின் திருவாயிலிருந்துத் தேனருவியாய்ப் பொழியலாயிற்று! எத்தகைய தெய்வீக வினாக்களுக்கும் கான கவிமழையாய், ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் இன்றைக்கும் அவர்தம் திருவாய்மொழிகளாக வெளிப்படுவதை உய்த்துணர்வது பெரும் பாக்யமாகும். ஒவ்வொரு சதுர்யுகத்திலும் கிருத, திரேதா, துவாபர, கலியுகங்கள் வருகின்றன அல்லவா! அனைத்து யுகங்களிலும் ஸ்ரீஅகஸ்தியர் தோன்றி பல கோடி அண்டங்களிலும் பவனி வருகின்றார். ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலேயே இதுவரையில் 2000 கோடி அகஸ்தியர்கள் தோன்றியுள்ளமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. சோமலிங்க, அகத்தியர், கற்கடபூர்வ அகத்தியர், ஸ்ரீசூக்த அகத்தியர், ஸ்ரீபத்ரப்ரிய அகத்தியெரென அவருடைய நாமங்கள் பலப்பல. ஸ்ரீஅகஸ்திய முனிவரே திருஅண்ணாமலை கிரிவல மகிமை பற்றி அனைத்து லோகங்களிலும் அன்றும் இன்றும் என்றும் பரப்பி வருகின்றார். திருஅண்ணாமலை கிரிவல மஹிமை சொல்லவும் பெரிதன்றோ!
ஸ்ரீஅகஸ்தியரின் கிரிவலம் :
தினந்தோறும் ஸ்ரீஅகஸ்திய பெருமான் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தவாறிருக்கிறார். மிகச் சாதாரண மனிதனாய், எளிய விறகு வெட்டியாய், பிச்சைக்காரனாய். பைராகியாய், கோவணாண்டியாய், இன்னமும் எத்தனையோ ரூபங்களில் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றார். எனவே நீங்கள் கிரிவலம் வருகையில் எவரைக் கண்டிடினும் கைகூப்பி வணங்கி இயன்ற தான தர்மங்களைச் செய்திடுக! விறகுவெட்டிக் கோலம் அடிக்கடி அவர் மிகவும் விரும்பி ஏற்கும் உருவமாகும். மஹாசித்புருஷரன்றோ! எந்நேரத்திலும் எவ்வுருவும் எடுக்கும் சக்தி பெற்றவராயிற்றே!
ஸ்ரீஅகஸ்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள்
சிவராத்திரி, மஹாபிரதோஷம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், சித்திரா பௌர்ணமி, சோமவார (திங்கட்கிழமை கூடும்) அமாவாசை – போன்ற விசேஷமான தினங்களில் ஸ்ரீஅகஸ்தியர் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகையில் பல அற்புதமான லிங்கங்களைத் தாமே பிரதிஷ்டை செய்துள்ளார். ஆக்கோட்ட லிங்கம், அசுவினி லிங்கம், கோஹிதாய லிங்கம், ரௌத்ரபால லிங்கம் போன்ற பல சூட்சும லிங்கங்கள் அகஸ்தியர் மூலம் திருஅண்ணாமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை மேற்கண்ட தினங்கள், ஏனைய பௌர்ணமி திதிகள், குறிப்பாக சூர்ய, சந்திர ஹோரை நேரங்களில் தாமே ஒளியை வெளிவிடும் சக்தி கொண்டவை. நட்சத்திர ஒளி போன்ற இதன் பிரகாசம் ஒரு சில வினாடிகளே தோன்றும். இதனைக் காணுகின்ற பாக்யம் பெற்றவர்களுக்கு ஸ்ரீஅகஸ்தியரின் பரிபூர்ண ஆசிகிட்டும். ஆனால் இந்த ஜோதி தோன்றும் தருணத்தில் நம் மனோநிலையிலுள்ள அபிலாசைகள் நிறைவேறும். இதனைக் கருதியே எப்போதும் இறைநாமத்தை மனதினுள் ஒலிக்கும் நல்வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிடில் பெறற்கரிய உத்தம இறை நிலைகளை இவ்வகை ஜோதி தரிசனங்களால் எளிதில் பெற்றிடலாம்.
ஆக்கோட்ட லிங்கம்
இவ்வாறாக ஸ்ரீஅகஸ்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களுள் ஒன்றே ஆக்கோட்ட லிங்கமாகும். திருஅண்ணாமலை கிரிவலத்தில் அபயமண்டபம் அருகில், மலையின் மேற்குப் பகுதியில் தசமுக தரிசனத்திற்கும், நம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் அமைந்துள்ள சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்கு ஆக்கோட்டலிங்க தரிசனம் என்று பெயர். இம்மலைப் பகுதியில் தான் ஆக்கோட்ட லிங்கம் சூட்சும ரூபத்திலும்; குரு அருள் கூடினால் சுயம்பு ரூபத்திலும் தரிசனம் தரும்.
பிரபஞ்சமே திரளும்.....
பொதுவாக முந்தைய யுகங்களில் திருஅண்ணாமலையில் ஸ்ரீஅகஸ்தியமஹா பிரபு ஒரு புதிய லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார் என்ற நற்செய்தி பரவினால், உடனே கோடானுகோடியான தேவர்களும், மஹரிஷிகளும் அருணாசலத்திற்கு ஓடோடி வந்திடுவர். காரணம் ஸர்வ வேதங்கள், நவ வியாகரணங்கள், ஆகம, வைதீகக் கோட்பாடுகள் ஆகியவற்றை நன்கறிந்த அகஸ்தியரே பிரதிஷ்டை செய்கின்றாரெனில் அது எத்தகைய சக்தி வாய்ந்ததாயிருக்கும்! மேலும் திருஅண்ணாமலையே சாக்ஷாத் பரம்பொருளின் திருமேனி! அத்திருமேனிக்குத் தெய்வீக அழகு சேர்க்கும் வண்ணம் மற்றொரு லிங்க மூர்த்தி முகிழ்தெழுந்திடில்!??.... அதன் மகிமையைச் சொல்லவும் கூடுமோ? ஸ்ரீஅகஸ்தியர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்கின்றாரெனில் அது புதிய சிலாரூபமல்ல! ஸ்வயம்பு ஜோதியாய், தானே அருணாசலத் திருமேனியில் சுயம்புமூர்த்தியாய் உற்பவித்து ஸ்ரீஅகஸ்தியரின் திருகண்களுக்குத் தென்பட, அதனை ஸ்ரீஅகஸ்தியர் பிரதிஷ்டை செய்து அர்ச்சனா மூர்த்தியாக்குகிறார்! இவ்வாறாக எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அற்புத சிவலிங்கங்கள் திருஅண்ணாமலையின் மலைத்திருமேனியில் பூத்துக் குலுங்குகின்றன.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவங்களில், பலவகையான அருள் கடாட்சங்களைப் பொழிகின்றன!
பிள்ளைச் சந்தானமளிக்க ஒரு பித்ரு கூப லிங்கம்!
வீடு, வாகன சம்பத்தைத் தரும் பந்த கணலிங்கம்!
உத்தம தியான நிலையைத் தரும் ஆத்மநாத லிங்கம்!
இறை தரிசனத்தைப் பெற்றுத் தரும் பிரகாச மூர்த்தி லிங்கம்!
திருஅண்ணாமலை மேலுள்ளவை வெறும் தாவரங்கள், கற்களோ அல்லவே! அங்கு ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்க மூர்த்தி! எனவே க்ஷேத்திரத்தில் உள்ள சிறு கல்லையோ, மண்ணையோ கூட எடுத்துச் சென்றிடாதீர்கள்! அனைத்தும் சிவன் சொத்து! இதனைப் பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அடிக்கடி வலியுறுத்திக் கூறி வந்துள்ளார்..
திருஅண்ணாமலை மேலுள்ள ஒவ்வொரு தாவரமும் மஹரிஷியின், ஞானியின், யோகியின் தவரூபமே! ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பூமி வந்து சேர்ந்துள்ள திருப்பதியில் “கல்லாய் பிறக்க வேண்டும், பக்தர்கள் கால்படும் படியாய்ப் பிறக்க வேண்டும்” என்றெல்லாம் பக்தியில் சிறந்த ஆழ்வார்கள், பரந்தாமன் அடியார்கள் வரம் வேண்டிப் பாடியுள்ளனரே! இதேபோல் அருணாசலத்தில் இலையாய், கொடியாய், மரமாய், முள்ளாய், புதராய்ப் பிறப்பெடுத்து உள்ளோர் உத்தம இறையடியார்களே! எனவேதான் இறை காரண, காரியம் இன்றி மலையின் மேல் ஏறலாகாது! ஸ்ரீஅகஸ்தியர் பெருமானும் கூட லிங்கப் பிரதிஷ்டைக்கும், மலையுச்சி தேவபூஜைக்காகவும் மட்டுமே மலையேறுவார். அதுவும் குறித்த விரதங்களை, அனுஷ்டானங்களைப் பரிபூர்ணமாகக் கடைபிடித்து முடித்த பின்னரே!

ஈஸ்வர ஆண்டில் ஆக்கோட்ட ஈசன்
ஆக்கோட்ட லிங்க மஹிமையே ஈஸ்வர வருடத்தில் பிரதானமாகும் என ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் கூறுவதற்குக் காரணம் பல சதுர்யுகங்களுக்கு முன்னர் ஈஸ்வர ஆண்டில் தான் ஆக்கோட்ட லிங்கத்தை ஸ்ரீஅகஸ்தியர் உலகுக்கு அளித்திட்டார். ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியானவர் ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் ஈஸ்வர ஆண்டில் தான்! தனக்கு ஈஸ்வரப் பட்டம் அளித்த சர்வேஸ்வரனைத் துதித்து, ஸ்ரீசனீஸ்வரர் பல திருத்தலங்களுக்கும் செல்லுமுன்னர் முதன் முதலாக அருணாசல க்ஷேத்திரத்தை அடைந்து ஸ்ரீஅருணாசல மூர்த்தியைத் தரிசிக்கும் போது தான் அகஸ்தியரும் ஆக்கோட்ட லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.. ஆனால் ஈஸ்வரப் பட்டம் பெற்றிருந்தும் ஆக்கோட்ட லிங்கத்தை வழிபட, ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி பல யோக, தியான, ஹோம வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. காராம்பசுவின் மடிபோல் அதே நிறத்தில் அதே ரூபத்தில் சூட்சுமமாகத் தோற்றமளிப்பதே ஆக்கோட்ட லிங்கம். புனிதத் திருஅண்ணாமலையில் சில தரிசனங்களுக்குச் சூட்சும தரிசனம் என்று பெயர். பகவான் ஸ்ரீரமண மஹரிஷிக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகநிலை பூண்டிருக்கும் கல்ஆல மரத்தின் ஒரு இலையை மட்டும் காணும் பேறு கிட்டியது. பகவான் ரமணர் எந்த இடத்தில் இந்தத் தெய்வீக இலையைத் தரிசித்தாரோ அப்பகுதியிலிருந்து மலையை வணங்கிடில் கிட்டுவதே “வடவிருட்ச சூட்சும தரிசனம்”, தன்னை உணர்விக்கும் தகைமையான தெய்வீக தரிசனமிது!
ஆக்கோட்ட லிங்க தரிசனமானது எத்தனையோ அபூர்வமான ஆன்மீக விளக்கங்களுக்கு நம்மை இட்டுச் செல்கின்றதே! அனைத்தும் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் சிறந்த ஆசிர்வாதமே! சூட்சும தரிசன விளக்கங்களைத் தொடர்வோமா! ஆக்கோட்ட லிங்க தரிசனமும் சூட்சும தரிசனமே! அதாவது குருஅருளை மட்டுமே மனப்பூர்வமாக நாடி வேறு எதனையும் வேண்டாது, ஆக்கோட்ட லிங்க தரிசனப் பகுதியில் அமர்ந்து ஆக்கோட்டலிங்க வடிவினை (காராம் பசுவின் மடி போன்றதன்றோ) மானசீகமாகத் தியானித்து வழிபட்டுக் கொண்டிருக்கும்போது, குருஅருள் திரள்கையில், ஆக்கோட்ட லிங்கம் ஸ்தூல ரூபத்தில் அதாவது நம் கண்களுக்கு தெரியும் வகையில் காட்சியளிக்கும், அதுவரையில் அது சூட்சும தரிசனமே! சூட்சும தரிசன விளக்கம் போதுமன்றோ! சிறிது தெளிவுபடுத்தியிருப்பினும் மீண்டும் ஆக்கோட்ட லிங்க தரிசன பகுதியை நன்கு புரியுமாறு விளக்குகின்றோம்.
அபயமண்டபத்தில் ஆக்கம் காட்டுவீர்!
திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில், அடி அண்ணாமலையை அடுத்து கிரிவலப் பாதை காஞ்சி-திருஅண்ணாமலை சாலையை அடையும் இடத்தில் தான் பழைய காலத்து அபயமண்டபம் உள்ளது. பல சித்புருஷர்களும், மஹரிஷிகளும், ஸ்ரீகுகை நமசிவாயர், ஸ்ரீகுருநமசிவாயர், ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீபகவான் ரமண மஹரிஷி , ஸ்ரீவிசிறி சுவாமிகள் போன்ற மஹான்களும் இதனருகில் மலையை நோக்கி அமர்ந்து தியானித்துள்ளமையால் அதிஅற்புத சக்திகள் நிறைந்த தெய்வீக மண்டபமிது! வசதியுடையோர் இம்மண்டப புதுபித்தலுக்கு ஆவன செய்து உதவினால், முன்போலவே புனிதமான வழிபடுமிடமாக இதனை ஆக்கிடில் நிறைந்த புண்ய சக்தியை எளிதில் திரட்டிடலாம். எளிய முறையில் இறை சக்தியைப் பன்மடங்கு பெற உதவும் திருவழிமுறைகளில் இதுவும் ஒன்று! தற்போது ஐம்பதினாயிரம் பக்தர்களுக்கும் மேல் மாதப் பௌர்ணமியிலும், மாதப்பிறப்பிலும், சிவராத்திரியிலும் மலை வலம் வருகின்றனரன்றோ! அபயமண்டபத்தைப் புதுப்பித்து வழிபடும் தலமாகப் புனருத்தாரணம் செய்திடில் ஆயிரம் ஆயிரம் மக்கள் மாதந்தோறும் இங்கு அமர்ந்து மலையைத் தரிசித்திடும் பாக்யம் பெறுவார்கள் அல்லவா? லட்சக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் இங்கிருந்து மலையைத் தரிசிக்கும் அரிய இறை வாய்ப்பை நல்கிடில் ROYALTY போல் இப்பணிக்கு உதவுபவர்களுக்கான புண்ணியக் கணக்கு பல்கிப் பெருகுமே!
எனவே திருஅண்ணாமலையில் வசிக்கும் அரிய பேற்றைப் பெற்ற பக்த கோடிகளும் ஏனையோரும் ஒன்று கூடி அபயமண்டபத்தைச் சீரமைத்துத் திருவழிகாட்டும் அருள் (வெளி) வழிமண்டபமாய் ஆக்கிட உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். அருள்வெளிச் சித்தர் எனும் அற்புத சித்புருஷர் சூட்சுமரூபத்தில் அடிக்கடி வந்து அனுக்கிரஹித்துச் செல்லும் அற்புத மண்டபமிது! ஈஸ்வர ஆண்டில் இது நன்னிலை பெற அனைவரும் ஒத்துழைத்து அரிய இறைப் பணியை ஆற்றிடுவீர்களாக!
தசமுக தரிசனம் :
இந்த அபயமண்டபத்திற்கு மிகவும் முக்யமான சிறப்பம்சம் ஒன்றுண்டு. இங்கிருந்து மலையைத் தரிசித்திடில் அருணாசலத்தின் பத்து முகடுகளையும் தரிசித்திடலாம். எனவே இதற்குத் ‘தசமுக தரிசனம்’ என்று பெயர். இதற்குத் ‘தசாவதார தரிசனம்’ என்ற பெயருமுண்டு. சில தலங்களில்தான் பத்து தசாவதார மூர்த்திகளையும் ஒருசேர தரிசித்திடலாம். இப்பலனைத் தருவதே இத்தரிசனம்.. புதன்கிழமை, திருவோணம், ரோஹிணி நட்சத்திரங்கள், சனிக்கிழமை, ஆதிசேஷனுக்குரிய ஆயில்ய நட்சத்திரம், ஸ்ரீலட்சுமிக்குரிய அனுஷம், துவாதசித் திதி, வைகுண்ட ஏகாதசி, ஆனித் திருமஞ்சனம், கோகுலாஷ்டமி போன்ற நாட்களில் கிரிவலம் வந்து சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் செய்து அபய மண்டபப் பகுதியில் அமர்ந்து தியானித்து இந்தப் பத்து முகடுகளையும் தரிசித்து வந்திடில் வியாபாரம், அலுவலகத்தில் உள்ள பகைமை மற்றும் தடைகள் நீங்கி, வரவேண்டிய பணபாக்கிகள், கடன்கள் வசூலாகும். அதோடு நியாயமாகக் கிட்ட வேண்டிய சொத்து சம்பந்தமான வழக்குகள் எளிதில் தீர்வு பெறும். இத்தசமுக தரிசனப் பகுதியை அடுத்து நம் ஆஸ்ரமத்திலிருந்து கிட்டும் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனப் பகுதியை ஒட்டி ஆக்கோட்ட லிங்க தரிசனம் கிட்டுகின்றது. ஆனால் ஆக்கோட்ட லிங்க தரிசனமானது சூட்சும தரிசனமாகையில் குருஅருள் கூடினால் தான் கைகூடும். எனினும் கிரிவலப் பகுதியில் ஆக்கோட்ட சூட்சும லிங்க தரிசனம் எங்கு கிட்டும் என்ற முக்கியமான வினா எழுமல்லவா? எனவேதான் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்தை ஒட்டிய பகுதி என இங்கு சூட்சுமமாகவே தெரிவிக்கப்படுகின்றது.. நம்பினார் அருள்பெறுவர்.. இது நான்கு மறை தீர்ப்பன்றோ!
ஸ்ரீசனீஸ்வரர் முறையாக அருணாசலத்தை வலம் வந்து ஸ்ரீஅகஸ்திய முனியின் ஆலோசனைப்படி ஈஸ்வரப் பட்டத்தைப் பெறும் இறை வழிபாட்டு முறைகளுள் தலையாய சிறப்புடைய ஆக்கோட்ட லிங்க தரிசனத்தைப் பெற்று, அதனை நியதிப்படி பூஜித்துப் பல திருத்தலங்களுக்கும் சென்று, திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலியில் அம்பிகையின் தரிசனம் பெற்றார். மேலும் பல தவங்களை மேற்கொண்டு இறுதியில் ஈஸ்வர ஆண்டில் ஈஸ்வரப் பட்டம் பெற்றார். தேவ மூர்த்திகளின் சிறப்பு மிக்க வாகனங்களாக அமைவோர் உத்தம தெய்வீக நிலைகளை அடைந்த சித்புருஷர்களும் மஹரிஷிகளுமாவர். சிவபெருமானுக்கு ஆயிரமாயிரம் வாஹன மூர்த்திகள் உண்டு.. இதேபோல் சனீஸ்வரருக்கு “வைகாசி பூரண மஹரிஷி” என்பார் காக்கை வாகனமாக ஆகி நின்றார். எத்தனையோ கோடி சதுர்யுகங்கள் இதற்காகத் தவமிருந்து ஸ்ரீசனீஸ்வரரின் வாகனமாகும் பாக்யத்தை அவர் பெற்றார்..
ஆனால்..
ஸ்ரீசனீஸ்வரர் ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் வைகாசி பூரண மஹரிஷிக்கு, தான் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஸ்ரீசனீஸ்வரருக்கு வாகனமாகத் திகழும் தகுதி பெற்றுள்ளோமா என்று சந்தேகம் வந்து விட்டது. ஆக்கோட்ட லிங்கத்தைத் தரிசித்த ஸ்ரீசனீஸ்வரரைப் போல் தாமும் அத்தரிசனத்தைப் பெறுதற்குரிய வழிபாடுகளையும் தவமுறைகளையும் மேற்கொள்ள வைகாசி பூரணர் ஸ்ரீசனீஸ்வரரின் அனுமதியை வேண்டி நின்றார். ஸ்ரீசனீஸ்வரரும் ஆனந்தம் கொண்டு “பொதிய மலையில் ஸ்ரீஅகஸ்திய மாமுனுக்குரிய ஆஸ்ரமப் பணிகளைச் செய்து வருவாயாக!” என்று அருளுரை வழங்கினார்.
பொதிய மலையிற் புனித சேவை
பொதிய மலையை அடைந்த வைகாசி பூரண மஹரிஷிக்கு ஓர் இன்ப அதிர்ச்சி! அங்கு ஆஸ்ரமப் பணிகள் அனைத்திலும் உதவ சித்புருஷர்களும், மஹரிஷிகளும், யோகியரும் நிறைந்திருந்தனர். ஒரு சிறு பணிக்குக் கூடக் குறைவின்றி அனைத்தும் இறை அருளால் நன்கு நடந்து வந்தன.. காக்கை வடிவிலிருந்த வைகாசி பூரண மஹரிஷிக்கு எப்பணியை அளித்திட முடியும்? அன்று....... ஸ்ரீஅகஸ்தியரின் பொதிய மலை ஆஸ்ரமத்தில், அவருடைய தூய அருள்மொழி உபதேசத்திற்காகப் பல லோகங்களிலிருந்தும் எண்ணற்ற மஹரிஷிகள் குழுமியிருந்தனர். ஸ்ரீஅகஸ்தியர் “இலை பூஜை தரும் ஈஸ்வர தரிசனங்கள்” என்ற தலைப்பில் ஓர் அற்புதப் பேருரையை நிகழ்த்தினார், அருகில் இருந்த இலுப்பை மரமொன்றில் அமர்ந்து இதனைக் கேட்டு ஆனந்தித்த வைகாசி பூரண மஹரிஷி இவ்வுரையையே குரு ஆசியாகக் கொண்டு இலை (தள) பூஜைக்கான சேவையைப் புரிந்திட சங்கல்பம் செய்து கொண்டார். அன்றைய தினம் ஸ்ரீஅகஸ்தியர் முனிவர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய விருட்சத்தின் சிறப்பியல், அந்தந்த நட்சத்திரத்திற்குரிய இலைகளால் முறைப்படி தளங்களால் சிவலிங்கத்தையோ அர்ச்சாவதார மூர்த்தியையோ அர்ச்சிப்பதால் கிட்டும் அளப்பரிய, அற்புதமான தெய்வீக சக்திகளைப் பற்றி ஸகல ஜீவன்களுக்கும் எடுத்துரைக்கும்படி தம் சிஷ்யர்களையும், மஹரிஷிகளையும் வேண்டினார்.
இலை/தள பூஜை தரும் ஈஸ்வர தரிசனங்கள் :-
தம்முடைய காக்கை வடிவுடன் ஸ்ரீஅகஸ்தியரின் பொதிகை மலை ஆஸ்ரமத்தினுள்ளே நுழைவதற்குத் தயங்கிய வைகாசி பூரண மஹரிஷி ஆஸ்ரம இறைப் பணியாகத் தினமும் விடியற்காலையில் அந்தந்த தினத்தின் நட்சத்திரத்திற்குரிய இலைகளை, தளங்களை ஸ்ரீஅகஸ்தியரின் தினசரி (ஆஸ்ரம) பூஜைக்குக் கொன்டு வந்து அளிக்கின்ற அரிய இறைப் பணியைச் சங்கல்பமாக ஏற்றுக் கொண்டார்.. ஸ்ரீஅகஸ்தியரே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மூலிகைகளின், மரங்களின், பூக்களின், தாவரங்களின் நாயகர் ஆவார்.. எனவே அக்காக்கை பகல். இரவெங்கும் எங்கெங்கோ அலைந்து உரிய கட்டு மந்திரங்களைச் சொல்லி இலைகளைப் பறித்து கங்கை, காவிரி போன்ற பல புண்ய நதிகளின் தீர்த்தத்தால் இலைகளை ஸ்பரிசித்து விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்திற்குள் பொதிய மலைக்கு வந்து சேர்ந்து ஸ்ரீஅகஸ்தியரின் பூஜை அறையில் சமர்ப்பித்து விடும்... ஸ்ரீஅகஸ்தியரின் பத்னியான ஸ்ரீலோபாமுத்ரா தேவியன்னை அந்த இலைகளைத் தினமும் அங்கு கொண்டு வருபவர்கள் சிஷ்யர்கள் என எண்ணி அவ்விலைகளைப் பூஜைத் தட்டில் சேர்த்திடுவார்.., வைகாசி பூரண மஹரிஷி, காக்கை ரூபத்தில் அந்தந்த தினத்தின் நட்சத்திர பூஜைக்காகக் கொண்டு வந்த இலைகளின்/தளங்களின் பெயர்களை அறிவோமா?

நட்சத்திரம் – இலைகள்/தளங்கள்

நட்சத்திரம் – இலைகள்/தளங்கள்

1. அசுவினி – எட்டி/காஞ்சிரை

2. பரணி – நெல்லி

3. கார்த்திகை –அத்தி

4. ரோஹிணி – நாவல்

5. மிருகசீரிஷம் – கருங்காலி

6. திருவாதிரை – செங்காலி

7. புனர்பூசம் – மூங்கில்

8. பூசம் – அரச மர இலை

9. ஆயில்யம் – புன்னை

10. மகம் – ஆல இலை

11. பூரம் – பலா

12. உத்திரம் – அலரி

13. ஹஸ்தம் – அத்தி

14. சித்திரை – வில்வம்

15. சுவாதி – மருதம்

16. விசாகம் – விளா,

17. அனுஷம் – மகிழ மர இலை

18. கேட்டை – பராய்

19. மூலம் – மரா

20. பூராடம் – வஞ்சி

21. உத்திராடம் – பலா

22. திருவோணம் - எருக்கு

23. அவிட்டம் - வன்னி

24. சதயம் – கடம்பு

25. பூரட்டாதி  - தேமா

26. உத்திரட்டாதி - வேம்பு

27. ரேவதி - இலுப்பை

இலை/தள பூஜா – இரகசியங்கள்
இலை/தள பூஜை என்றால் இலைகளை அப்படியே அர்ச்சிப்பது என்று பொருளன்று. இதில் பலவித இரகசியங்கள் உண்டு. அவற்றைத் தக்க சற்குருமூலம் அறிந்து கடைபிடித்திடுக!
1. சில இலைகளை மூன்று, ஐந்து, ஏழு என்று சேர்த்தே பூஜிக்க வேண்டும். தனித்தனியே அந்த இலைகளைப் பறிக்கலாகாது. (உ.ம் : வில்வம், வேம்பு).
2. சில இலைகள் பூக்களுடன் கொத்துக் கொத்தாக அர்ச்சிக்கப்பட வேண்டும்.
3. பாலுள்ள மர இலைகளில் பல நியதிகள் உள்ளன. இவை இறை மேனியில் பால் சிதறாது ஒரு தாமரை அல்லது வாழை இலையின் மேல் வைத்து அர்ச்சிக்கப்பட வேண்டும்.
4. சில இலைகளைக் கனிகள் குலுங்கும் மரங்களிலிருந்தே பெறுதல் வேண்டும். (உ.ம் : பலா, நெல்லி).
5. ஒவ்வொரு இலையையும் பறிப்பதற்குமுன் அவ்விருட்சட்திற்குரித்தான பீஜாட்சர மந்திரங்களை ஓதுதல் வேண்டும்.
6. சில இலைகளை இரவில் பறித்தலாகாது, சிலவற்றைச் சந்திர ஒளியிலும், சூரிய ஒளியிலும் மட்டுமே பறித்திட வேண்டும்.
7. வேம்பு போன்ற இலைகளை “இலையாடை ஆக்கி” லிங்கத்திற்குச் சார்த்த வேண்டும்.
8. பாலுள்ள விருட்சங்களில் பிரார்த்தனை முடிச்சுகள் இல்லாத விருட்சங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
9. சில இலைகளில் பூஜைக்குரிய சிறப்பியல்புகளைக் கூட்டிட ஆடா தொடை, துளஸி, வன்னி, தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை நியதிப்படி சேர்த்தல் வேண்டும்.
10. சில இலைகளைக் குறிப்பிட்ட திருத்தலங்களிலிருந்து தான் எடுத்து வருதல் வேண்டும். உதாரணமாக மூங்கில் இலையை அஸ்ஸாமில் உள்ள காமாக்யா யோனிபீட பூமியிலிருந்து பெற வேண்டும். இவ்வாறாக இந்த அரிய “நட்சத்திர தள சிவலிங்க பூஜை” ஒருவருக்குப் பெறற்கரிய பலன்களைத் தரவல்லது.
பல நாட்கள் ஸ்ரீஅகஸ்தியரின் சிஷ்யர்களே பூஜைக்கு உரிய இத்தளங்களைக் கொண்டு வருவதாக ஸ்ரீலோபாமுத்ரா தேவி எண்ணினள். வைகாசி பூரண மஹரிஷி தளங்களை விடியற்காலையில் கொண்டு வந்து வைத்திடவே, “ஒரு காகம் பூஜைக்கான சேவையை மிகுந்த உள்ளன்புடன் செய்கின்றது” என்பதை அறிந்த ஸ்ரீலோபாமுத்ராதேவி, மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் காக்கைக்காகக் காத்திருந்து அதனை அன்புடன் வரவேற்று விசாரித்தனள். காகமும் தன்னுடைய அபிலாசையாக, “ஆக்கோட்ட லிங்க தரிசனத்தைப் பெற்று அதனைப் பூஜிக்கும் பாக்யத்தைப் பெற வேண்டும்” என்பதை தெரிவித்திடவே தேவியும் மனமகிழ்ந்தனள்..
“ஸ்ரீஅகஸ்தியரும் அவருடைய சிஷ்ய கோடிகளும், அடியேனும் நாளை, வைகாசி பௌர்ணமிக்காக அருணாசல கிரிவலம் மேற்கொள்ள இருக்கின்றோம். தங்களுடைய கோரிக்கை நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்”, என்றுரைத்து ஸ்ரீலோபாமுத்ரா தேவியே ஆசி கூறிட, காக்கை ஆனந்தப் பரவசமடைந்தது. 
மறுநாள்.,

ஸ்ரீவிஷ்ணு துர்கை
குறுக்கை வீரட்டானம்

ஸ்ரீஅகஸ்தியர் தினம் அருணாசல கிரிவலத்துடன், நித்ய பிரதோஷ நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீச தரிசனம், வைகுண்டத்தில் ஸ்ரீநாராயண பூஜை, திருக்கயிலாயத்தில் சிவபூஜை – போன்றவற்றைச் சூட்சுமமாக நிகழ்த்தி வருகின்றார்.. ஆனால் இதுவோ சிஷ்ய கோடிகளுடன் கூடிய ஸ்தூலரூப அர்ச்சனா முறையாகும்..  ........ இவ்வாறாக அந்த யுக ஈஸ்வர ஆண்டின் வைகாசி பௌர்ணமி தினத்தில் அனைவரும் கிரிவலத்தை மேற்கொண்டனர். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இன்றும் ஸ்ரீஅகஸ்தியரே பிரதிஷ்டை செய்த ஈசான மூர்த்தி லிங்கம் போன்று பல லிங்க மூர்த்திகள் உள்ளன.. ஸ்ரீஅகஸ்தியரும், அவர்தம் பத்னியும், சிஷ்யர்களும் இதோ... தசமுக தரிசனப் பகுதியைக் கடந்ததும்...... ஓரிடத்தில் மலையை நோக்கி ஸ்ரீஅகஸ்தியரும், அவருடைய பத்னியாம் ஸ்ரீலோபாமுத்ரா தேவியும் தனித்துச் சென்றிட..... கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் உருவம் மாயமாய் மறைந்தது... சில விசேஷமான தேவ பூஜை முறைகளின் நிமித்தம் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு இவ்வாறு திடீரென்று மறைவதும், எழுவதும் அவருடைய சிஷ்யர்களுக்கு அவ்வவ்போது மிகவும் பரிச்சயமானதொன்று அல்லவா! அவர்கள் அங்கேயே அமர்ந்து சிவ பூஜைகளைத் தொடர்ந்தனர்.
காகமாகிய வைகாசி பூரண மஹரிஷி அருகிலிருந்த வேப்ப மரமொன்றில் அமர்ந்து கொண்டு ஸ்ரீஅகஸ்தியரும் ஸ்ரீலோபாமுத்ரா தேவியும் சென்ற திக்கை நோக்கி வணங்கினார். அக்காகம் அரசு, ஆல், வேல், மா, பலா, வாழை என்றவாறாக ஹோமத்திற்குரிய ஆஹுதியாகப் பயன்படும் சமித்துக்கான மரங்களில்தான் அமருமே தவிர வெறுந்தரையிலோ கல்லிலோ அமர்வதில்லை.
மரமறிந்து அமர்வீர்!,,,,
மனிதர்களாகிய நாமும் இயன்ற வரையில் சமித்து மர நிழலில் தான் ஒதுங்கி, அமரவேண்டுமே தவிர கருவேலி, விஷக்கள்ளி, புளியமரம் போன்ற மரங்களினடியில் எப்போதும் ஒதுங்கலாகாது. புளிய மரம், வேல மரம், உதியமரம் போன்றவற்றின் அடியில் தங்குவதெனில் இறைப்பணிகளுக்காகவும், இறைப் பிரசாரத்திற்காகவும், அன்னதானம் போன்ற நற்காரியங்களுக்காகவும் மட்டுமே தங்கிடலாம். மலைக் கோயில்களை நோக்கியிருக்கும் மரங்களுக்கும், கிரிவலப் பகுதியில் உள்ள விருட்சங்களுக்கும் மட்டும் சில விதி விலக்குகள் உண்டு!  காக்கையாய் வைகாசி பூரண மஹரிஷி வேப்ப மரத்தின் மேல் அமர்ந்திருக்க.... காக்கையின் கண்களுக்கு மட்டும் ஸ்ரீஅகஸ்தியரும், ஸ்ரீலோபாமுத்ரை தேவியும் தென்பட்டனர். ஏனைய பிறருக்கு அவர்களுடைய உருவங்கள் புலப்படவில்லை!  இதோ....
குறிப்பிட்ட பகுதியில் இருவரும் மலை மீது ஏறுகின்றனர். சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனமருகே... முன்னால் சிறுமுகடு – இதுவே சக்தி அம்சம். பின்னணியில் மலையுச்சி – இதுவே சிவ அம்சம். இதனருகே..... ஓரிடத்தில்.ஸ்ரீஅகஸ்தியரும், ஸ்ரீலோபாமுத்ரா தேவியும் அமர்ந்து.... தளங்கள், பூக்களால் அர்ச்சிக்கத் தொடங்கினர்.. எதனை...? காக்கை நன்கு உற்றுப் பார்த்தது! அதன் கண்களுக்கும் ஒன்றும் புலப்படவில்லை.. ஸ்ரீஅகஸ்தியரின் சூட்சுமமான ஆணைப்படி வைகாசி பூரண மஹரிஷி பசுவாகவும், குதிரையாகவும், நாயாகவும், இறுதியில் மீண்டும் காக்கையாகவும் வடிவெடுத்துத் திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வரலானார். அதற்குள் எத்தனையோ வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் கால உணர்வே இல்லாதவராய் வைகாசி பூரண மஹரிஷியானவர் ஸ்ரீஅகஸ்தியரின் ஆக்ஞைப்படி “கிரிவலம் ஒன்றே கொள்கை” என அருள்மலையாம் அண்ணாமலையைச் சுற்றி வந்தார்...!!
.........அதோ. .... அந்தக் காக்கை... தத்தித் தத்தி நடந்து வருகின்றதே! அக்காக்கையே வைகாசி பூரண மஹரிஷி! வருடக் கணக்காய்ப் பறந்து பறந்து .. மலையைச் சுற்றிச் சுற்றி..... அதன் இறகுகளில் ஓட்டைகள் ஏற்பட்டு. உடலும் திராணியிழந்து.... கால்களால் தத்தித் தத்தி நடந்து .... அந்த சிறுகால்களிலும் ரணங்கள் ஏற்பட்டு... உதிரம் வழிய கிரிவலம் செல்கிறது.... பார்ப்பதற்கு ஏதோ ஜீவஇம்சை போலிருக்கிறதா?
......... இல்லை..... அங்கப்பிரதட்சிணம், கிரிவலம் வருதல்,,, பாத யாத்திரை போன்றவற்றில் உடலை வருத்திச் செல்கின்றோமே, ஏன்? அவ்வுடல் வேதனைகள் எல்லாம் கர்மவினை கழிப்புகளே! இல்லாவிடில் அத்தகைய துன்பங்களை நாம் வாழ்க்கையில் வறுமையாகவோ, கொடிய நோய்களாகவோ, கோர விபத்துக்களாகவோ, இழப்புகளாகவொ சந்திக்க நேரிடும்! . இதே போல் தான், வைகாசி பூரண மஹரிஷி புனிதமானவர் எனினும் ஸ்ரீசனீஸ்வரனைப் பிரார்த்தித்து வலம் வருகின்றவார்களின் கொடிய பாவங்களையும், கர்மவினைகளையும் தம்முள் ஏற்றமையால் அவற்றையே இவ்வாறு தேகத்தின் அவஸ்தைகளாகத் திருஅருணாசலத்தில் கழிக்கின்றார்.. ... இனி ஓரடியேனும் வைக்க இயலாது என்ற நிலையில் காக்கை சுருண்டு விழுந்திட..... ஸ்ரீலோபாமுத்ரா தேவி அங்கு தோன்றி காக்கையை அரவணைத்துத் தூக்கினள்.. காக்கை கண்திறந்து பார்த்திட... எதிரே.... ஸ்ரீஅகஸ்திய மாமுனி ஆக்கோட்ட லிங்கத்தை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.. எதனால்? சிந்தாதர சஞ்சீவினி என்னும் அதிசயமான, மிகுந்த அபூர்வமான மலர்களால்.! இது வைகாசி மாதம் மட்டுமே அருணாசல மலையில் பூக்கும் மூலிகைப் புஷ்பம்! சுயஞ் ஜோதி மாருத அமிர்தம் எனும் தென்றல் காற்றைத் தழுவி வரும் புஷ்பம் இது! அதன் சுகந்த ஜீவனக் காற்று நம்மைத் தழுவிச் செல்லும் திருநாளே ஈஸ்வர வருட வைகாசி பௌர்ணமி! ஆக்கோட்ட லிங்க தரிசனப் பகுதியில் சிந்தாதர சஞ்சீவினி மலரின் தெய்வீக குணங்களைத் தழுவி வரும் காற்றினைச் சுவாசிக்கும் அரிய பாக்யம் இந்நாளில் தான் கிட்டும். ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசப் பிணிகள் உள்ளோர்க்கு இது சிறந்த பரிஹாரமாகும்.
காகம் பரமானந்தத்துடன் பறந்து சென்றது. ஸ்ரீஅகஸ்தியர் பரிவன்போடு காக்கையை அரவணைத்து அதனிடம் புஷ்பங்களையும் தளங்களையும் கொடுத்து அர்ச்சிக்கச் செய்தார். காக்கை ஆனந்தக் கண்ணீர் உகுத்தது! ஆக்கோட்ட லிங்க தரிசனமே மிகவும் விசேஷமானது. அதிலும் ஆக்கோட்ட லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யும் பாக்யம் பெற்றால்..! அது மட்டுமா! சகல கோடி சித்புருஷர்களின், யோகியரின் தலைமைப் பீடாதிபதியும், திருக்கயிலாயத்திலும், ஸ்ரீவைகுண்டத்திலும் சிவனையும், திருமாலையும் வழிபடும் பேற்றைப் பெற்ற ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியின் பொற்கரங்களால் புஷ்பங்களைப் பெற்று அர்ச்சிக்கும் பாக்யம் கிட்டியதென்றால்...?
எத்தகைய அரிய, அற்புதமான பரமானந்தம் தரும் ஈஸ்வர பூஜை! ஆக்கோட்ட லிங்கம் அனைத்தும் தரவல்ல ஆதிசிவமூர்த்தியன்றோ! பூஜை நிறைவு பெற்றதும் ஸ்ரீஅகஸ்தியர், “வைகாசி பூர்ணா! உன்னுடைய பெருந்தவம் இங்கு இன்று நன்முறையில் இறையருளால் நிறைவேறிற்று! நீ இனி தொடர்ந்து ஸ்ரீசனீஸ்வர பகவானின் வாகனமாக அருட்பணியாற்றுவாயாக” என்று அருளினார். “மஹா பிரபோ!எளியேனுக்கு ஆக்கோட்ட லிங்க தரிசனமே தங்கள் அருட்கடாட்சத்தால் தானே கிட்டியது!” எனக் குறிப்பிட்டார்.
“சிவசிவ! அடியேனுக்கு இதில் எவ்விதப் பெருமையும் கிடையாது... அதற்குரித்தான தகுதியும் கிடையாது. வைகாசி பூர்ணேஸ்வரா! வைகாசி பூர்ணன் இன்று முதல் வைகாசி பூர்ணேஸ்வரனாகப் பரிமளிக்க உன்னுடைய நட்சத்திர தள பூஜையே காரணம்! ஆக்கோட்ட லிங்க தரிசனம் பொதுவாக, புழு முதல் புள்ளினம், மனித இனம் உட்பட 1000 கோடி ஜீவன்களில் ஒருவருக்கே கிட்டும். ஒரு தளமாக, இலையாக 27வித தள பூஜைகளை நிறைவேற்றி உளமார குருசேவை புரிந்து பெறற்கரிய பாக்யத்தைப் பெற்று வைகாசி பூர்ணேஸ்வரனாக இன்று திகழ்கின்றாய்!  இன்று முதல் காக்கையை வைகாசி பூர்ணேஸ்வரனாக மனதில் பாவித்துத் தினமும் காலையில் பக்தியுடன், பரிபூரண நம்பிக்கையுடன் அன்னமிடுவோர்க்கு 27 இலைகளால் 27 நட்சத்திர லிங்கங்களைத் தரிசித்து வழிபட்ட பலன்கள் கிட்டுவது உறுதி” என்று ஸ்ரீஅகஸ்தியர் அருளினார். வைகாசி பூரணேஸ்வரர் கண்களில் ஆனந்தப் பரவசக் கண்ணீர் பெருக ஆக்கோட்ட லிங்கத்தை தரிசித்திட.... லிங்கம் மறைந்து விட்டது! இவ்வாறாக ஈஸ்வர வருட வைகாசி பௌர்ணமியன்று வைகாசி பூர்ணேஸ்வரர் ஆக்கோட்ட லிங்க தரிசனத்தைப் பெற்றார்.

வைகாசி பௌர்ணமி

ஈஸ்வர வருட வைகாசி பௌர்ணமி மஹிமை
திருஅண்ணாமலையை எந்நாளில் கிரிவலமாக வரினும் ஒவ்வொன்றிற்கும் விசேஷ பலன்கள் உண்டு. ஏன்? அஷ்டமி, நவமி திதிகளிலும், இராகு காலத்திலும், கிரிவலம் வந்திடில் அதற்குரித்தான விசேஷமான பலன்களும் உண்டு. இராகு காலம், எமகண்டம், கூடா (பிரலாரிஷ்ட யோக) நாட்கள் போன்ற நேரங்களில் தீய சக்திகளின் ஆக்ரமிப்பு அதிகமாக இருக்கும். தீய சக்திகளை எதிர்த்தல், அவற்றின் தீய கார்ய விளைவுகளைப் பொறுத்துத் தாங்கி அனுபவித்தல், தீய சக்திகளை அண்டவிடாமல் தடுத்தல்.. இவற்றிற்குப் பிரமாதமான, ஆழ்ந்த வலுவான புண்ய சக்தி தேவையன்றோ!  சாதாரணமாக தினசரி வாழ்க்கை நடத்தத் தேவையான பூஜாசக்தியே பற்றாக் குறையாக இருப்பதால்தான் தினந்தோறும் அலுவலகம், இல்லறம், வெளிச் சூழ்நிலைகளில் ஏகப்பட்ட இடையூறுகள், பிரச்னைகள் நமக்கு உண்டாகின்றன. இந்நிலையில் தீய சக்திகளை எதிர்க்கும் ஆன்மீக வலுஇல்லாமையினால் தான் அவை வலுபெற்றிருக்கும் இராகுகாலம், எமகண்டம், மரணயோகம், உற்பாத யோகம் போன்ற நேரங்களில் நற்காரியங்களைத் தவிர்த்து, மாறாக இறைபூஜைகளில் ஈடுபட வேண்டும்.
வைகாசி மாத பௌர்ணமியில் ஆக்கோட்ட லிங்கத்தின் தெய்வீகக் கதிர்கள் விண்வெளியில் நிறைந்து ஒளிர்கின்றன. ஆக்கோட்ட லிங்கம் என்றுமே ஜோதிப் பிரகாசத்தோடு இலங்கிடினும், சாதாரண மனிதனும், தன்னுடைய அரைகுறையான பூஜை வழிபாடுகள் அல்லது தினசரி பூஜைகளையே செய்ய மறந்தோரும், அதற்கு நேரமில்லையே எனத் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வோரும், நலமிக்க ஆக்கோட்ட லிங்கத்தின் அருட்சக்தியை ஒரு சிறிதேனும் பெறும் பொருட்டு சர்வேஸ்வரனே சூட்சுமமாய் வைகாசி பௌர்ணமியில் (குறிப்பாக ஈஸ்வர வருடத்தில்) காற்றுவெளியில் பரந்தும் நிறைந்து விரவி அருள்பாலிக்கின்றார்.
அபய மண்டபமருகே தசமுக தரிசனத்தையடுத்து நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் அருகிலிருந்து அருணாசல மலையைத் தரிசிக்கையில் கிட்டுகின்ற சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனப் பகுதியில் தான் ஆக்கோட்ட லிங்கம் சூட்சுமமாய் அருள்பாலிக்கின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாய் தற்போது அறிந்துள்ளீர்கள் அல்லவா! உள்ளம் உருக, ஸ்ரீஅருணாசலப் பெருமானிடம் கதறியழுது, “ஈஸ்வரா! ஈஸ்வரப் பட்டமளிக்கும் பெருஞ்சக்தி பெற்ற ஆக்கோட்ட லிங்கத்தின் அருள் கடாட்சத்தைப் பெற நீதான் வழிகாட்ட வேண்டும்”, என மனமருக வேண்டி மானசீகமாக ஆக்கோட்ட லிங்கத்தின் உருவத்தை மனதினுள் கொண்டுவந்து  இத்தெய்வீக நிலைவிலேயே வைகாசி மாதத்தில் பௌர்ணமியன்று (21.5.1997) திருஅண்ணமலையைக் கிரிவலம் வந்திடுக!
இதனைப் பரிபூர்ண நம்பிக்கையுடன் செய்தாலே போதும், உங்களுக்கு உறுதுணையாக ஸ்ரீஅகஸ்தியரும், ஸ்ரீலோபாமுத்ரா தேவியும், ஆக்கோட்ட லிங்க தரிசனத்தால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியும், அவர்தம் வாகனமாகும் பேறு பெற்ற ஸ்ரீவைகாசி பூர்ண ஈஸ்வர மஹரிஷியும் உறுதுணை புரிகின்றனர்... இந்த அரிய பாக்யத்தோடு தாங்கள் தற்போது இத்தெய்வீக விஷயங்களை அறிவதற்கு மூலகாரணமாயிருக்கும் எம்முடைய சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசியும் கூடும். ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியின் காகவாகனமாய்த் திகழும் ஸ்ரீவைகாசி பூரண மஹரிஷி மட்டுமின்றி, எவரும் தீண்டாத் திருமேனி லிங்கமான ஆக்கோட்ட லிங்கத்தை அர்ச்சிக்கும் பாக்யமும் பெற்றார். எதனால்? நட்சத்திர தள வழிபாட்டினால்! அந்தந்த நட்சத்திரத்திற்குரிய இலைகளால் அந்தந்த தினங்களில் பூஜித்து வந்திடில் கிட்டிடும் பெரும்பேற்றை உணர்ந்தீர்களா? எனவே வைகாசி பௌர்ணமி தினத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால்,
1. சனிதசை, புக்தி, மஹாதசைகளால் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்க பரிஹாரங்கள் அளிக்கப்படும்.
2. சுவாச நோய்த் துன்பங்கள் தணியும்.
3. முறையாகக் கிட்ட வேண்டிய உயர் பதவிகள் கிட்டும்.
4. பல வருடங்களாக மனதில் மூடி வைத்த குற்றங்களை ஆக்கோட்ட லிங்கத்தின் முன் சமர்ப்பித்து, மனமார வருந்தி, தன்னால் பாதிப்படைந்தோர்க்குரிய நஷ்ட ஈடுகளை அளித்து, இறைவனிடம் மன்னிப்புக் கோரிட, இதற்குரித்தான பாவமன்னிப்பையும் பெற்றிடலாம்.
ஈஸ்வர வருடத்தில் மட்டும் பெறக்கூடிய பேறு இது. பொதுவாக நம் வாழ்க்கையில் ஒரு முறையே வருவது! கலியுகத்தில் சித்புருஷர்கள் நம் கர்மவினைகளைக் கழிப்பதற்கான அரிய சிறப்புடைய நல்வழிகளைப் பெருங்கருணையுடன் நமக்குத் தந்து கொண்டேயிருக்கின்றனர். இவற்றை ஏற்று நன்கு கடைபிடித்து இவ்வரிய மனித வாழ்வினுள் பெறற்கரிய உத்தம இறைநிலையை மிக எளிதில் அடைந்திடலாமே!
தாமரை இலை மஹிமை – எமன் நமக்குக் காட்டும் கருணை!
அகஸ்தியர் : “முதுமை எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மகனே?”
போகர் : “ஐயனே! கலியில் முதுமை மரணத்தையே ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கிறது குருதேவா!”  
போகர் கூறியது நெத்தியடியல்லவா! மனிதன் சிறியதும் பெரியதுமாக எத்தனையோ தீவினைகளையும், பாவச் செயல்களையும் செய்வதற்குச் சிறிதும் அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்திற்கு மட்டும் பயம் கொள்கின்றான்.. பாவத்தின் சம்பளமே மரணமெனப் பல மத வேதங்களும் நன்கு கூறுகின்றன. தவறுகளைச் செய்ய அஞ்சாத மனிதன் மரணம் எனில் வெலவெலத்து விடுகின்றான். உயிர் என்பது அவனுக்கு வெல்லமாகத் தித்திக்கின்றதெனில் அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள வகையில் அல்லவா ஆனந்தித்துக் கழித்திட வேண்டும்? “ஆனால் அவன் அவ்வாறு செய்தவதாகத் தெரியவில்லையே?” இவ்வினாவை எழுப்பியவர் யார் தெரியுமா? சாட்சாத் எமதர்ம பகவானே ஆவார். கால பைரவரையே  அவர் இவ்வாறு கேட்டிட, அவரோ பதிலுக்கு “திருஆவினன் குடியின் வடக்கு மண்டபத்தில் தக்க தவம் பூண்டு தெளிவு பெறுவாயாக!” என்று அருளாணை இட்டார். அதனைச் சிரமேற்கொண்டு ஆவினங்குடியாம் பழநியம் பதியை அடைந்து தேவ பூஜையின் முதல் அங்கமாக பழநிகிரியை வலம் வந்தார் எமதர்மர்! அன்று விசாகத் திருநட்சத்திர புனித நாள்! திருமுருகனுக்குரிய தெய்வீகத் திருநாள். எமனும் சாதாரண மனிதனாய் வடிவு கொண்டு கிரிவலம் வந்திட.... வடக்கு மண்டபம் அருகில்.... ஒரு கோவணாண்டிக் கிழவர் ஒரு தாமரையிலையில் பிரசாதத்தை எடுத்து, அங்கு வேட்டியணிந்து தடியூன்றி நின்று கொண்டிருந்த சிறுவனிடம் அளித்திட, அவனோ எமதர்மரை அழைத்து, “பத்மாசனமிட்டுப் பத்ம தளத்தில் பசியாறுவாய்” என்று இனிய குரலில் மொழிந்திடவே, எமதர்மர் புரிந்து கொண்டார். இது யாருடைய திருவிளையாடல் என்று!

ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா

கோவணாண்டியான பழநி ஆண்டவன் வேட்டியணிந்து தடி கொண்டு நிற்க, தடியூன்ற வேண்டிய கிழவரோ கோவாணாண்டியாய் நிமிர்ந்து நிற்க, என்ன முரண்பாடிது! அவர்களே அழகிய ஸ்ரீமுருகனும், ஸ்ரீபோக சித்தரும் ஆவர். எமதர்மர் வீழ்ந்து வணங்கிப் பிரசாதத்தைக் கைகள் நடுங்கப் பெற்றுக் கொண்டார்.! “என்ன எமதர்மராஜரே! தங்களுக்கும் மரணபயமா?” என நையாண்டியாகச் சிரித்த முருகப் பெருமான் மறைந்தார். அருட்பெருஞ்சித்தராம் போகரின் ஜீவசமாதி உள்ள இடமாயிற்றே! எனவே ஆயிரமாயிரம் சித்புருஷர்கள் எப்போதும் நிறைந்திருக்கும் புண்ணிய பூமியே பழநி! கந்தவேள் தந்த கவின்மிகு பிரசாதத்தை ஒரு வாய்தான் எமதர்மர் உண்டிருப்பார்! கிழவனாராய் வந்த போகர் தட்டுத் தடுமாறியது போல் அவர்மீது விழ, தாமரை இலைப் பிரசாதம் கீழே கொட்டி விட்டது.. எமதர்மர் திகைத்து நின்றார்..
போகரின் ஜீவசமாதி மஹிமை
போகர் சித்தர், ஸ்ரீவாஞ்சியத்திலும் (இறைவனுக்கு யம வாகனம்), எமதர்மர் பத்னியுடன் விளங்கும் திருச்சி- திருப்பைஞ்ஞீலித் தலத்திலும், சென்னை வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயத்திலும் (எமதர்மர் தம் தண்டத்தைப் பெற்ற இடம்). தர்மபுரத்திலும் (எமதர்மர் பிரதிஷ்டை செய்த லிங்கம்) எமதர்மரைப் பல யுகங்களாகப் பூஜித்தவர். முருக உபாசனையிற் சிறந்த போகர் சித்தருக்குப் பழநிவாசனின் பவித்ரமான விஸ்வரூப தரிசனம் பன்முறை கிட்டியுள்ளது. சித்த வைத்திய முறையில் கரை கண்டவரான போகரின் (பழநியில் உள்ள) ஜீவசமாதியில் இன்றைக்கும் பல சித்த வைத்யர்கள் தங்களுடைய மருந்துகளை வைத்து ஸ்ரீதன்வந்த்ரீ சஹஸ்ரநாமத் துதிகள் ஓதி சமர்ப்பித்து எடுத்துச் செல்வதைக் காணலாம். இதே போல் கடும் நோய் நீங்க, சித்த வைத்தியத்தைத் தொடங்குவோர், தேய்பிறையில் , குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஹோரை நேரத்தில், (காலை 6-7, பகல் 1-2, இரவு 8-9, நள்ளிரவு 3-4) சித்த மருந்தினைப்  போகர் சமாதியில் சமர்ப்பித்து ஸ்ரீதன்வந்த்ரீ சஹஸ்ரநாமம் அல்லது 1008 போற்றிகள் அல்லது ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் பாடல்களை ஓதி ஏழைகளுக்குத் தாமே செய்த பஞ்சாமிர்தம்  ஏழை நோயாளிகளுக்கு மற்றும் ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவும் மருந்துகள், டானிக்குகள் போன்றவற்றை அளித்த பின் சித்த வைத்தியத்தைத் தொடங்கிட பலன்கள் துரிதமாகும்.
எமன் உய்த்த இறையனுபூதிகள்
‘அனைத்தும் இறைவன் செயலே! இதில் ஏதோ நமக்குப் பாடம் உள்ளது போலிருக்கிறதே!”, எமதர்மராஜர் ஆழ்ந்த சிந்தனையுடன் கீழே விழுந்த பிரசாதத்தை மீண்டும் எடுக்க மறந்தவராய் ஓரத்தில் அமர்ந்தார்... அடுத்த க்ஷணத்தில்... தரையில் ஊர்ந்து ஊர்ந்து வந்த, உடலெங்கும் குட்ட வியாதியால் பதிக்கப்பட்ட ஒருவர் மரண வேதனைகளுடன் கைகளை மெதுவாக ஆட்டியவாறே வந்திட..... மனித வடிவிலிருந்த எமதர்மர் பதறினார். “பாவம், நல்ல தாகம் போலிருக்கிறது” என்று அவரருகில் செல்ல முனைந்தார்... அந்நோயாளி பரபரக்கத் தரையில் விரைந்து ஊர்ந்து.. அதற்குள் அவனுக்கு எப்படி அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லயே..! ஒருவேளை வயிற்றுப் பசியோ.! அவன் வேக வேகமாக ஊர்ந்து வந்து தரையில் கிடந்த, தாமரை இலை மேலிருந்த பிரசாதத்தில் ஒரு கவளத்தை எடுத்து வாயில் போட்டிட..... பாதியே உட்சென்றது..... அதற்குள்,... அவன் கண்கள் மலர்ந்தன.. எமதர்மரோ “என்னவோ, ஏதோவென்று” அவனருகில் சென்றிட, அவன் கை கூப்பி வணங்கினான்.

குட்டத்தினால் பாதிக்கப்பட்ட விரல் ஒன்று சேறரா நிலையிலும் அனைத்தும் கூட.... “அப்பனே! முருகா! உன்னை நினைத்தபடியே போய்ச் சேர்கிறேன்” என்றான்.. அவன் தலை துவண்டது. அத்தியாயம் முடிந்து விட்டதோ? எமதர்மர் மீண்டும் தன்னிடம் திரும்பி வந்து அமர்ந்தார்.... இப்போது வாலறுந்த நாயொன்று விரைந்தோடி வந்து... தாமரையிலைப் பிரசாதத்தை ஒரு வாய் உண்டு.. வந்தவழி திரும்பிட..... எங்கிருந்தோ உருண்டு வந்த பாறையொன்று அந்நாயின் மேல் விழுந்து கீழே படிகளில் உருண்டு சென்றது. உடல் நன்கு நசுங்கிய நிலையிலும் ஈனஸ்வரத்தில் நாய் முனகியவாறே மெதுவாக எழுந்து எமதர்மரை நோக்கியும், முருகனை நோக்கியும் மண்டியிட்டுத் தலையைக் குனிந்தது... அதன் முனகல்களின் பரிபாஷை எமதர்மருக்குப் புரியாமலில்லை.. “பைரவா! எத்தனை நாய்ப்பிறவி எடுப்பினும், எத்தகைய இறப்பிலும் இதேபோல் உன் நினைவோடு இறக்க அருள்புரிவாய்!” என்பதே அதன் பிரார்த்தனை என்பது எமனுக்குப் புரிந்தது..  அத்தோடு அதன் அத்யாயமும் நிறைவுற்றது.
எமதர்மராஜர் திகைத்தார். மரணங்களை நிர்ணயிக்கும் பகவத் ஸ்வரூப எமதர்மபகவான், சாதாரண மனித ரூபத்தில் இவற்றைக் கண்ணுற்றிருந்தார்.. தேவர்களுக்கும் தேவாதி, தேவ மூர்த்திகளுக்கும் அவரவர் நிலையில் மாயைகளுண்டு! நாரதருக்கும், ஸ்ரீகிருஷ்ணரின் சற்குருவாம் சந்தீபினுக்கும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும், ஸ்ரீபார்வதி தேவிக்கும் ஏற்படுகின்ற இறைலீலா மாயா வினோதங்களை நாம் நன்கு அறிவோமே! எமதர்மர் வியப்புற்றிருக்க..

திருமீயச்சூர்

திடீரென்று சாரைசாரையாய் ஆயிரக்கணக்கான எறும்புகள் எங்கெங்கு இருந்தோ ஓடி வந்து தாமரை இலைப் பிரசாதத்தை மொய்த்தன!  எறும்புகள் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருப்பினும் உணவை நுகரும் வல்லமை பெற்றவையாயிற்றே! அடுத்த சில விநாடிகளில்.... திபுதிபுவென்ற மலையேறி ஓடி வந்த பக்த கோடிகள்... “அரோஹரா” கோஷத்துடன் எறும்புகளை மிதித்துக் கொண்டே சந்நிதிக்கு விரைந்தனர். கிட்டத்தட்ட அனைத்து எறும்புகளும் மாய்ந்தன! மானுட வடிவிலிருந்த எமதர்ம பகவானால் எவரும் காணா காட்சி ஒன்றைக் காண முடிந்தது! என்ன அது! இறக்கும் தருவாயிலும் அந்த எறும்புகள் தெற்கு நோக்கித் தலையைத் திருப்பி எமதர்மரை வணங்கி, ஸ்ரீமுருகன் சந்நதியை நோக்கித் துதித்து, “எறும்பீசப் பெருமானே! எங்கள் குலத்தைக் காக்க திருஎறும்பூரில் எழுந்தருளி அருள்புரியும் ஈஸ்வரா! இதேபோல் எப்பிறவியிலும் உன் நினைவுடன் திகழ அருள்பாலிக்க வேண்டும்’ என்று வேண்டின!
வைகாசி விசாகத்தில் தாமரையிலைப் பிரசாதம் :-
இவற்றையெல்லாம் கண்டு எமதர்மராஜர் ஆழ்ந்த தவத்தில் புகுந்திட, கால பைரவர் காட்சி தந்தார்... “எமமூர்த்தியே! இந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தப்படுவாயாக!” என்று அருளாணையிட, எமதர்மராஜர் கண்விழித்தார்.. சற்றுமுன் இறந்த குட்டரோகியான நோயாளி, நோய் தீரப் பெற்று உயிர்த்தெழுந்தான்.. வாலறுந்த நாயோ முழுவாலை ஆட்டியவாறே எழுந்து ஓடியது! கூட்டத்தில் நசுங்கிய எறும்புகள் உயிர்ப்பெற்று ஆளுக்கொரு உணவுக் கவளத்தைக் கவ்விக் கொண்டு ஓடின! அதனதன் விதிப்படி உயிர்களைக் கவர்கின்ற ஆபத்சகாய எம மூர்த்தியின் திருவடிகளில் தாம் இந்த ஜீவ சிருஷ்டியும் நிகழ்ந்தது.. ஸ்ரீகாலபைரவர் தொடர்ந்தார்....
“இங்கு நடந்த அற்புதங்களுக்கு எல்லாம் காரணம் என்ன தெரியுமா? அதுவே வைகாசி விசாகத்தில் அளிக்கப்பெறுகின்ற தாமரையிலைப் பிரசாத மஹிமை! இத்திருநாளில் தாமரை இலையில் அன்னமளித்தலும், தாமரை இலையில் அன்னத்தைப் பிரசாதமாகப் பெறுதலும் மிகவும் பாக்யமானதாகும். இது நீண்ட ஆயுளைத் தரவல்லது. கடுமையான நோய்களை தணிக்க வல்லது. மரண பயத்தைப் போக்கும். கொடிய, தீய செயல்களில், பாவ காரியங்களில், கெட்ட பழக்கங்களில் மனமும் தேகமும் ஈடுபடாது தடுக்கும். அதிலும் விசாகத்திற்குரிய திருமுருகனின் தலங்கள் மட்டுமின்றி, சிறந்த சித்புருஷர்கள், மஹான்களின் ஜீவசமாதிகளில் மகிமை மிக்க வைகாசி விசாகத்தன்று தாமரை இலையில் அன்னதானமிடுவது மனிதனுடைய எம பயத்தைப் போக்க உதவும். எனவே இன்றிலிருந்து விசாக நட்சத்திரந்தோறும் குறிப்பாக வைகாசி விசாகத்தில் நீ சித்புருஷர்களின், மஹரிஷிகளின் ஜீவசமாதியில் உறைந்து மக்களின் எமபயம் தீர அருள்பாலிப்பாயாக!” என்றார்.
பல கோடி ஜீவன்களின் மரணங்களில் ஒன்றிரண்டில் மட்டும் சாட்சத் எமதர்மரே நேரில் வந்து தரிசனம் தந்து தாமே உயிர்ப்பிரிவை நடத்துகின்றார்.. இறக்கும் தருவாயில் எமதர்ம தரிசனம் பெறற்கரிய பாக்கியங்களுள் ஒன்றாகும். அனைவருக்கும் இந்த அரிய பாக்யம் கிட்டுவதில்லை. மரணத்தைத் தருபவர் ஸ்ரீஎமதர்மர் என்பது தவறான கருத்தாகும். இறப்பின் இரகசியத்தை உணர்ந்தால்தான் நாம் மரணத்தை வெல்ல முடியும். பிறப்பிறப்பற்ற உத்தம நிலையையும் பெற்றிடலாம். எனவே இறப்பின் இரகசியத்தை உணரும் பக்குவத்தைப் பேணுவோர்க்கே ஸ்ரீஎமதர்ம பகவானின் தரிசனம் கிட்டும். மேற்கண்ட இறையனுபூதியில் குட்டரோகியும், நாயும், எறும்புகளும் விதிப்படி மரணத்தைப் பெற்றிடினும், வைகாசி விசாகத்தன்று தாமரையிலைப் பிரசாதம் உண்ட பாக்யத்தால் எவரும் எதிர்பாராவண்ணம் அவர்களிருக்கும் இடத்திலேயே எம தரிசனமும் பெற்று, இறைநினைவும் இறுதிவரையிருந்து, பின் நீடிய ஆயுளையும், ரோகநிவர்த்தியையும், நல்ல ஆரோக்யத்தையும் பெற்றனர்..

வைகாசி விசாகம்

ஒவ்வொரு மாத விசாக நட்சத்திரத்தன்றும், குறிப்பாக வைகாசி மாத விசாகத்தன்று ஸ்ரீகால பைரவரின் இறையாணைப்படி ஸ்ரீஎமதர்ம பகவான் ஸ்ரீமுருகனின் மலைத் தலங்களிலும், சித்புருஷர்கள், மஹான்கள், யோகியர், புனிதத் துறவியரின் ஜீவசமாதிகளில் / அதிஷ்டானங்களில் / ஆலயங்களிலும் எழுந்தருளி இறை அடியார்களுக்கு நீண்ட ஆயுளையும், நல் ஆரோக்யத்தையும் தந்து கடுமையான நோயின் தன்மைகளைத் தணித்து மரண பயத்தையும் தீர்த்து மிகுந்த அருள் பாலிக்கின்றார்.. ஸ்ரீபோகர், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபாம்பன் சுவாமிகள், ஸ்ரீஅருணகிரிநாதர் போன்ற ஸ்ரீமுருக தரிசனம் பெற்ற யோகியரின்/ மஹான்களின் / சித்புருஷர்களின் ஜீவசமாதிகளில்/ ஆலயங்களில் அதிஷ்டானங்களில் வைகாசி விசாகத்தன்று தாமரை இலையில் அன்னதானம் அளித்தலும், அன்னத்தைப் பிரசாதமாகப் பெறுதலும் எமபயம் தீர்க்கும் எளிய மருந்தாகிக் கொடிய நோய்களையும் தணித்து தீர்க்க சுமங்கலித்வத்தையும், நீண்ட ஆயுளையும், நல்ஆரோக்யத்தையும் தரும்.
குறிப்பு : விசாக நட்சத்திரத்தில் மட்டுமின்றி ஏனைய நாட்களிலும், மௌனவிரதமும், உண்ணா நோன்பும் இருந்து இறைவனுக்குத் தாமரையிலையில் பிரசாதத்தைப் படைத்து, அதே இலையைக் கொண்டு அன்னதானம் அளித்து, அவ்விலையிலையே நாம் இறைப் பிரசாத்தை உண்டு விரத்தை முடித்தலால் எத்தகைய நோயின் கடுமையும் குறையும். பிரசாதத்தைத் தாமரை இலையின் பின்பக்கத்தில் தான் வைக்க வேண்டும். நீர் ஒட்டாத மேற்பகுதியில் அல்ல! பிறருக்காகவும் இத்தகைய “பத்ம தளப் பிரசாத விரதத்தை” ஏற்றுச் செவ்வனே நிறைவேற்றலாம். எனினும், காவடி போல் அவரவரே கடைபிடித்திடில் பலன்கள் துரிதம் பெறும்.
பாஸ்கர பூஜை – லிங்கத்தின் மேல் படியும் சூரிய கிரணங்கள்
பிப்ரவரி 1997, மார்ச் 1997, ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் மாசி, பங்குனி மாதங்களில் குறித்த நாட்களில் சில சிவத் தலங்களில் மூலஸ்தான லிங்க மூர்த்திகளின் மேல், காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் (சூரியபூஜை) படிவதைப் பற்றி விளக்கியிருந்தோம். இவ்வரிய சூரிய பூஜை தினங்களன்று லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபட்டதைக் கண்டு தரிசித்து மகிழ்ந்ததாகவும்,  ஸ்ரீஅகஸ்திய விஜயத்திற்கு இதற்காக என்றும் கடமைப்பட்டிருப்பதாகவும் பலரும் கடிதங்கள் எழுதியுள்ளனர்..!!அனைத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக்குகின்றோம்.
திருமீயச்சூரில் சூரிய பூஜை

மீயச்சூர் சிவாலயம்

பஞ்சாங்க நியதிப்படியும், வானசாஸ்திரக் கூற்றுப் படியும் மயிலாடுதுறை அருகே பேரளம் எனும் சிறுநகருக்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் திருமீயச்சூர் என்னும் கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் வரும் சித்திரை மாதம் 21ஆம் தேதி முதல் 27 தேதி வரை (4.5.1997 – 10.5.1997) 7 தினங்களுக்கு மூலஸ்தான லிங்க மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் படிகின்றன. என்னே பெறுதற்கரிய பாக்யம்! இதற்குச் சூரிய (பாஸ்கர) பூஜை என்று பெயர். ஸ்ரீசூர்ய பகவானே புனித சிவலிங்கத்தைத் தொட்டு, ஸ்பரிசித்து வழிபடுகின்ற அற்புத நாட்கள்! வருடத்தில் ஒரு முறையே வருகின்ற அபூர்வமான தெய்வீகத்வம் நிறைந்து பரிணமிக்கும் சூரிய பூஜைக்கான நாட்கள் இவை.
கோடை விடுமுறையைக் கழிக்க பயனற்ற முறைகளில் பணத்தையும், பொன் போன்ற காலத்தையும் செலவழிக்கத் தயாராயிருக்கும் நாம் தெய்வீகத்திற்கு எனக் கோடை விடுமுறையின் போது திருமீயச்சூர் போன்ற அரிய இறைத் தலங்களுக்காக ஒரு சில தினங்களைப் பயன்படுத்திடில், எத்தனை ஜன்மங்கள் எடுத்திடினும் பெற இயலாத புண்ய சக்தியையும், இறை அருளையும் பெற்றிடலாம்! சற்றே பகுத்தறிவுடன் சிந்தித்திடுக! இறைப் பெருங்கருணையாகத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலும் நம்மைக் கடைத்தேற்ற இறைவனே உருவாக்கியுள்ள அற்புத மெய்ஞ்ஞானக் கூடமாகும். கொடிய கர்மவினைகளைக் கழிக்க உதவும் திருக்கூடமாகும். ஜாதி, மத பேத உணர்வுகளை அறுத்து, மனிதனுக்கும் ஏனைய ஜீவன்களுக்குமிடையே தாவர, புழு பூச்சிகளுக்குமிடையே உள்ள பேதங்களையும் நீக்கி உண்மையான பக்தி எனப்படும் மனிதநேயத்துடன் தன்னைத் தானே பரிசோதித்துக் கொள்ளக் கூடிய மெய்ஞ்ஞான பரிசோதனைக் கூடமாகும்!
சூரிய, சந்திர சாட்சிகளிடையே..... ஆம்., சூரிய, சந்திரர்கள் சாட்சிகளாக இருக்க, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. நல்லதோ, கெட்டதோ, நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் இவ்விரு மூர்த்தியர், ஏன் எண்ணற்ற கோள்கள், நட்சத்திரங்களின் பார்வையில்தான் நிகழ்கின்றன. இரகசியமாக, மறைவாகச் செய்யலாம் என்று எண்ணுகிறோமே, அது எத்தகைய அறிவிலித்தனம்? இவ்வாறாக எழுவதற்கோ அல்லது சொல்வதற்கோ கூட இயலாத, மனிதன் இயற்றுகின்ற கேவலமான, அருவருக்கத்தக்க பயங்கர செய்கைகளைக் கண்டு சூரிய, சந்திர தேவமூர்த்திகள் “இத்தகைய பாவகரமான நிகழ்ச்சிகளுக்குச் சாட்சி பூதங்களாக நிற்க வேண்டியிருப்பதால் எங்களுடைய ஒளிக்கிரணங்களின் தெய்வீகத் தன்மையும் மாசுபடுகின்றது. மக்கள் நீராடுவதால் அவர்களின் கொடிய பாவச் சுமைகளை ஏற்கும் புனித நதி தேவதைகளுக்குத் தக்க பிராயச்சித்தம் கிட்டியது போல எங்களுடைய கிரணங்களும் புனிதம் பெறத் தாங்களே தக்க நல்வரத்தைத் தர வேண்டும்” என்று சர்வேஸ்வரனை வேண்டினர்.. இவ்வாறு சூரியனும், சந்திரனும் இணைந்து இறைவனைத் துதிக்கின்ற நாளே அமாவாசை, மிகப் புனிதமான அமாவாசை தினம் தோன்றுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.
அமாவாசையன்று.......ஏற்கனவே “உன் கலைகள் தேய்வடைவதாக” என்று சாபம் பெற்ற சந்திரன், தம் கிரணங்கள் விதிப்படி தேய்வடைந்திடினும், ஜீவன்களுடைய காரண காரியங்களைச் சாட்சிபூதமாக நின்று காண்பதால் கிட்டும் தீய விளைவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ள சூர்ய பகவானோடு இணைந்து கூட்டுத் தவம் கொள்ளும் நாளே அமாவாசை! இன்னமும் அமாவாசை தினத்தின் மஹிமையை விவரித்துக் கொண்டே செல்லலாம்! சூர்ய, சந்திரர்களின் மேற்படி பிரார்த்தனையைச் செவியுற்ற ஈசன், “சந்திரனை எம் சிரசில் சூடும் லீலையொன்று உண்டாகும். மேலும் நீங்கள் இருவரும் கூடுகையில் சூரிய, சந்திர கிரணங்களின் சங்கமத்தில் மிகவும் புனிதமான, தேஜோமயமான “சோம பாஸ்கர கிரணங்கள்” உருவாகும். இதைத் தரிசிக்க கோடானு கோடி தேவமூர்த்திகலும், தேவர்களும், சித்புருஷர்களும், ஞானியரும், மஹரிஷிகளும், யோகியரும் ஓடோடி வருவர். அவர்களின் சங்கமமே பெரும் பாக்யம் தரக்கூடியதல்லவா! இதுவே உங்கள் கிரணங்களை மேலும் புனிதமடையைச் செய்யும்.

ஸ்ரீஅகத்திய லிங்கம்
திருமீயச்சூர்

மேலும் நீங்கள் இருவரும் எம் சிவலிங்கத் திருமேனியைக் குறித்த நாட்களில் பூஜித்து உங்களுடைய கிரணங்களை எம் லிங்கத் திருமேனியில் பெய்து ஆனந்திப்பீர்களாக!” என்று அருள்பாலித்தார்..இவ்வாறு சந்திரக் கதிர்கள் லிங்கத்தின் மேல் படுகின்ற திருத்தலங்களுமுண்டு. இவையே சந்திர பகவான் இறைவனை பூஜிக்கின்ற தலங்கள். இவற்றைப் பிறகு காண்போம்! சூரிய பூஜைக்காக ஈஸ்வரனால் ஆதவனுக்கு அளிக்கப்பட்ட தலங்கள் பல! அவற்றுள் திருமீயச்சூரும் ஒன்று! எட்டுத் திக்குகளிலும் உள்ள, சகல கோடி அண்டங்களிலும் உள்ள அனைத்து ஜீவன்களின் இயக்கங்களை இரவும், பகலுமாகச் சாட்சிபூதமாக இருந்து பார்ப்பதால் பொதியமுனி ஸ்ரீஅகஸ்தியருடன், சூர்ய பகவான், அஷ்டதிக்கு (எட்டுத் திக்கு) லிங்கங்களையும் பூஜித்து, அபூர்வமான “ஆம்லா பலாதி பூர்ண க்ரண பூஜை” என்னும் விசேஷ பூஜைமுறை மூலம் திருமீயச்சூர் சிவலிங்கத்தை வழிபட்டார்.. ஸ்ரீஅகஸ்தியர் இம்முறையில் தான் திருமீயச்சூர் ஈஸ்வரனை வழிபட்டார்.. அது மட்டுமின்றி இதே முறையில் சூர்யபகவான் லிங்கத்தை வணங்குகையில் ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் அருகில் நின்று லிங்கத்தின் மேல் சூர்ய கிரணங்கள் படிவதையும் கண்டு தரிசித்துத் தாமும் ஆம்லாபலாதி பூர்ண க்ரண பூஜை முறையிலேயே வழிபட்டு ஆனந்தித்தார்.. என்னே அவர்தம் அடக்கமும் பணிவும்! ஸ்ரீசூர்ய பகவானுக்கு ஓர் அரிய பூஜை முறையை அளித்த ஸ்ரீஅகஸ்தியர் பெருமானே அதே ஸ்ரீசூர்ய கிரணங்கள் லிங்கத்தின் மேல் படிவதையும் தரிசித்துப் பரமானந்தம் கொண்டார்.
ஆம்லாபலாதி பூர்ண க்ரண பூஜை
1. ஏகாதசி திதியன்று நெல்லிக் கட்டையைக் கங்கை, காவிரி போன்ற புனித நதி நீரிலோ/பூஜை நீர் தரும் கிணற்றிலோ, தீர்த்தத்திலோ போட்டு வைத்திருந்து மறுநாள் துவாதசி திதியன்று அப்புனித நீரால், சூரிய ஒளி படும்போது அபிஷேகம் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும்.
2. சித்திரை 21 முதல் 27 வரை சுவாமிக்கு மேற்கண்ட நெல்லி நீர் அபிஷேகமும், நெல்லியிலை அபிஷேகமும் பெரும் பாக்யத்தைப் பெற்றுத் தரக் கூடியதாகும்.
3. இந்த ஈஸ்வர ஆண்டில் சித்திரை 21ஆம் தேதி ஏகாதசியாக அமைவது பெரும் பாக்யமே! ஸ்ரீஅகஸ்தியரே எவ்வடிவிலும் நேரில் வந்து திருமீயச்சூர் ஈசனின் மேல் சூர்ய கிரணங்கள் படிவதைத் தரிசிக்கின்றார்.
4. ஜீவன்களுடைய அனைத்து நல்ல, கெட்ட காரியங்களுக்குச் சாட்சியாக இருக்கும் ஸ்ரீசூர்யபகவான், புண்ய நதிகளைப் போல், ஜீவன்களின் பாவகரமான காரியங்களைக் கண்ணுறுவதால் தமக்கு ஏற்படும் பாவப்படிவுகளுக்கு நிவர்த்தியாக, ஈஸ்வர லிங்கத் திருமேனியை இங்கு தழுவிப் புனிதம் அடைகின்றார். எனவே சித்திரை 21 முதல் லிங்கத்தின் மேல் பட்டு புனிதம் பெற்று வெளிவருகின்ற சூர்ய ஒளிக்கதிர்கள் மஹாசக்தி வாய்ந்தவை!
எமபகவானே அளித்த பூஜை முறை :-
மார்கண்டேயன் எமனுக்கு அஞ்சிடாது சிவசிந்தனையிலாழ்ந்திட எமதர்மர் பெற்ற நீதியை நாமறிவோம். அப்போது ஸ்ரீஎமதர்மரே மார்கண்டேயனிடம், “மார்கண்டேயோ! பூலோகத்தில் அனைவரும் இறப்பிற்கு அஞ்சி வாழ்ந்திட, நீயோ எமதர்மனையே எதிர்த்து நிற்கும் மனோதிடம் பெறக் காரணமென்ன தெரியுமா? அந்த இரகசியத்தை நசிகேதனுக்குப் பல யுகங்களுக்கு முன் உரைத்திட்டேன். தாமரையிலையில் சங்கு புஷ்பத்தை வைத்து முறையாகப் பூஜித்திடில் தீர்க ஆயுள் கிட்டும். இத்தெய்வீக நியதிக்கு அடியேனும் ஆட்பட்டவன் அன்றே!” என்று கூறி சங்கு புஷ்பத்தின் மஹிமையை விவரித்தார்.. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால், அதற்கு ஆயுளை கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தன்று (இதன் அதிதேவதையே எமதர்மன்) கெட்டியான ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் (பசும்பால்) செய்து மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களிலும் ஒன்றான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து வர எக்கடுமையான நோய்களுக்கும் அடியேனான எமதர்மராஜனே நிவாரணம் அளித்து நீடிய ஆயுளை அளிக்கின்றோம்.. ஆனால் இந்தப் பூஜையின் பலாபலன்களை எளிதில் பெற தாமரை இலையில் சங்கு புஷ்பத்தை வைத்துச் சதய நட்சத்திரத்தன்று குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை அர்ச்சித்தாலே போதுமானது. அதாவது தாமரையிலையில் சங்கு புஷ்பத்தை வைத்துப் பூஜிப்பதும், அதே இலையில் இறைவனுக்கு அன்னத்தைப் படைப்பதும், அன்னதானமாக அதே இலையில் அன்னத்தை வைத்து ஏழைகளுக்கு அளிப்பதும், அதே இலையில் அன்னத்தை உண்பதாலும் கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டுவதோடு, மரணபயமும் அகன்று நீண்ட ஆயுளும், நல் ஆரோக்யமும் கிட்டும்.. சங்கை சந்தனக் கல்லில் வைத்து அரைத்துச் சிவலிங்கத்திற்கு தினந்தோறும் சங்கு (வெண்ண்மைத்) திலகம் இட்டு வந்திடில் இது மிகச் சிறந்த ரோக நிவர்த்தினியாகும்.
ஈஸ்வர வருடத்தில் ஓர் அரிய வாய்ப்பு

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம் சிவாலயம்

இவ்வாறாக, கடுமையான நோய்களைத் தீர்ப்பதற்கான எளிய ஆன்மீக வழிமுறைகள் நிறைய உண்டு. ஆனால் அவைகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வருதல் வேண்டும். நம் இறை நம்பிக்கை நாளுக்கு நாள் வேரூன்ற வேண்டும். இறை சாதனையாக, நம் நம்பிக்கை ஸ்திரப்படும் பொருட்டு, இவ்வரிய பூஜைகளைக் கடைபிடிக்கும் போதெல்லாம் பல சோதனைகள் ஏற்படும், “என்ன இது, எத்தனையோ பூஜைகளையும், தானதர்மங்களையும் செய்தால் கூட நோய்களும், பல துன்பங்களும் நிவர்த்தியான பாடில்லை, மாறாக புதுப் புதுப் பிரச்னைகளும், வியாதிகளும் ஏற்படுகின்றனவே என்ற எண்ணம் ஒரு துளியும் ஏற்படலாகாது. இவ்வெண்ணம் வந்திடுமானால் நம் இறைநம்பிக்கை நன்கு வேரூன்றாது சலசலப்புக்கு ஆளாகின்றது என்பது பொருள்.
அனைத்தும் இறைவன் செயலே எனும்போது அவனளிக்கின்ற வீடு, வாசல், மனைவி குழந்தைகள், கார், பதவி, அதிகாரம், செல்வம் எனப் பல பாக்யங்களை இறைவனளித்த வரங்களாக நாம் அனுபவிக்கும் போது நமக்கு வருகின்ற கஷடங்களும் நம்முடைய பூர்வ ஜென்ம, நடப்புக் கர்ம வினைகளுக்கேற்ப இறைவனால் அளிக்கப்பட்டவையே என்று மனமுவந்து ஏற்போமானால் இதுவே நம் இறைநம்பிக்கையை நன்கு வலுப்படுத்தும். ஈஸ்வர வருடத்தில் இறை சக்தியைப் பெருக்குவதற்கும் நாம் நன்கு வாழத் தேவையான புண்ய சக்தியைச் சேர்த்துக் கொள்வதற்கும் இறைவனே மனமுவந்து பல நல்வாய்ப்புகளைச் சற்குரு வாய்மொழியாகவும், உறவினர்கள், நண்பர்கள், ரூபத்திலும் ஏனைய பல வழிமுறைகளிலும் அளிக்கின்றான்... அடுத்த ஈஸ்வர ஆண்டு வருகையில் நாம் எங்கிருப்போமோ? எனவே ஈஸ்வர வருடத்தில் நாம் செய்கின்ற பூஜைகளும் தான தர்மங்களும்தான் நம் வாழ்க்கையில் இறை நம்பிக்கை நன்கு வேரூன்ற பலத்த அஸ்திவாரத்தைத் தரவிருப்பதால் தீர்த்த யாத்திரைகள், தானதர்மங்கள், ஹோமம், வடமொழி/தமிழ்மொழி வேத பாராயணம், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், பௌர்ணமி பூஜைகள், கிரிவலங்கள், பாதயாத்திரைகள், விரதங்கள் போன்ற அனைத்தையும் பெருமளவில் நன்கு நிறைவேற்றிடுக.!
பெருமகளூரில் அரும்பெரும் ஈஸ்வரன்
மேற்கண்ட தாமரையிலைப் பிரசாத விரதத்தின் பரிபூர்ணமான பலன்களைப் பெற்றிட வைகாசி விசாகத்தன்று, பட்டுக்கோட்டை – பேராவூரணி, அத்தாணி வழியாக மீமீசல் செல்லும் சாலையில் பேராவூரணிக்கும் அத்தாணி கிராமத்திற்கும் இடையில் பெருமகளூர் என்னும் கிராமத்தில் உள்ள ஸ்ரீசோமேஸ்வரர் சிவாலயத்தில் இதனைச் செய்திடுக! சென்னை – மாயூரம் – காரைக்குடி ரயில்பாதை பேராவூரணி – அறந்தாங்கி மூலமாகவும் பெருமகளூரை அடையலாம்.
வேறெங்கும் காணப்படாத “தாமரைத் தண்டினால்” உருவான சிவலிங்கம் இங்குள்ளது! இவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி, பல யுகங்களுக்கு முன் மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தி! அன்பர்கள் இச்சிவாலயம் மீண்டும் அச்சிறப்பினைப் பெற அரிய இறைத் திருப்பணிகள் ஆற்ற வேண்டுகிறோம். இறைவனுடைய மாயையாக, லீலா விநோதமாக எவ்விதக் கொடுமையான நோய்களையும் தீர்க்கின்ற மகத்துவம் பெற்ற ஸ்ரீசோமேஸ்வர மூர்த்தி இவரே! தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொள்ளாது ஒரு குக்கிராமத்தில் இன்றும் உறைகின்றார்! இங்கு தாமரைத் தண்டுத் திரி கொண்டு பசுநெய் தீபமேற்றத் தாமரையிலையில் அன்னம் படைத்து, தாமரை இலையிலே ஏழைகளுக்கு அன்னத்தை எடுத்தளித்து, அன்னதானம் நிறைவுற்றபின் அதே தாமரை இலையில் பிரசாதத்தை இட்டுவரின் பல நோய்கள் நிவர்த்தியாகும். (தாமரையிலையின் பின்பக்கத்தில் தான் அன்னமிட வேண்டும்.) வாழ்க்கையில் பற்றில்லாத, உண்மையான, புனிதத் துறவியர்க்கு மட்டுமே நீர் ஒட்டாத மேற்புறத்தில் உணவை அளிக்கலாம். சகல ரோக நிவாரணி இது. ஈஸ்வர வருட வைகாசி விசாகத்தில் இங்கு இத்தகைய தாமரையிலை அன்னதானம் (பத்ம தளப் பிரசாத விரதம்) செய்வது எத்தகைய கொடிய நோய்களுக்கும் நிவாரணந்தரும். பெருமகளூர் ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற பக்தகோடிகள் அருள் பிரசாரம் செய்தல் வேண்டும். பூலோகத்தில் நோய்கள் இல்லாத இல்லங்களில்லை! ஸ்ரீசோமேஸ்வர மூர்த்தியின் “தாமரைத் தண்டு லிங்க ரூபம்” அனைத்துப் பூஜையறைகளிலும் பரிணமித்துப் பரிமளித்திடில், நோய்க்கு இடமேது!?

ஸ்ரீசனீஸ்வர பகவான்
உய்யக் கொண்டான்மலை திருச்சி

அமுத தாரைகள்
1. குறைந்தது ஐம்பத்தியோரு செண்பகப் பூக்களைத் தாமே தொடுத்து மாலையாக்கி, புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு அணிவித்து, புளியோதரை அன்னத்தைத் தானம் செய்து வந்திடில் குழந்தைகளின் முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் நீங்கும்.
2. ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வலக்கை காட்டும் சின்முத்திரைக்கு மல்லிகை, முல்லை, சம்பங்கி, இருவாட்சி, தவனம் ஆகிய ஐந்து விதமான பூக்களால் மாலை தொடுத்துச் சார்த்தி, எலுமிச்சை சாதம் தானமும் செய்து வந்திடில் ஆணவம், கர்வம், மாயை அழிந்து ஆன்மா இறைவனைச் சாரும். ஜோதி வழியை எளிதில் பெற்றிடலாம்.
3. பல பெண்களுக்கு நாத்தனார், மாமியாரின் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். இவர்கள் ராகு காலத்தில் சங்கு சக்கரம் தாங்கிய ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மனுக்கு மல்லிகைப் பூக்களால் பாவாடை சார்த்தி, பசுநெய், தாமரைத் தண்டுத் திரியிட்ட பதினெட்டு அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வெண்பொங்கல் தானம் செய்து வந்தால் நல்ல தீர்வு பெறுவர்!
4. கல்வித் துறைகளில் பணிபுரிவோர் இயன்ற போதெல்லாம் கோயில்களிலோ அல்லது இல்லங்களிலோ, ஐம்பத்தியோரு தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்து, எலுமிச்சை அன்னம், தானம் செய்து வந்தால் குழந்தைகளும், மாணாக்கர்களும் கல்வியில் சிறப்பிடம் பெறுவர்.
5. மனக்கோளாறுகள், மூளை நோய்கள், காக்கை வலிப்பு, குளிர் ஜுரம், காய்ச்சல் காரணமாக, wheezing, fits போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் பெறச் செவ்வாய்க் கிழமைகளில் தாமே தொடுத்த செவ்வல்லி (சிகப்பு நிற அல்லி) அல்லது செம்பருத்தி மலர்களால் முருகனுக்கு மாலை சார்த்தி, குழம்பு சாதத்தை அன்னதானம் அளித்து வருதல் வேண்டும்.
6. சிறந்த தியானத்திற்கும், மனம் ஒருமைப்படுவதற்கும் உடல் சூடு சமநிலை அடைய வேண்டும். மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, சந்தனத் தைலம் போன்றவை உடல் சூட்டைச் சமநிலைப்படுத்துபவை ஆகும். பேச்சாயி அம்மன், பகவதி, மகமாயி போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு குறிப்பாக, புதன் கிழமைகளில் வாழை இலை குளியலைச் செய்து வழிபட்டிட குடும்பத்திலுள்ள கொந்தளிப்பு நிலைகள் அடங்குவதோடன்றி சமுதாயத்தில் உள்ள பலவித கொடுமைகளும் அறவே நீங்கும்.
7. வெளியில் சொல்ல இயலாத பலவிதமான குற்ற உணர்வுடன் இன்றைக்கும் பலர் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவலிங்கத்திற்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்து நந்தீஸ்வரர் திருக்காதுகளில் தங்களுடைய சொல்லொணாக் குற்றங்களைச் சொல்லி மன்னிப்புக் கோருதல் வேண்டும். இவ்வாறு செய்வதுடன் மட்டுமின்றி தன்னுடைய குற்றங்களால் பாதிப்படைந்தோருக்குத் தக்க நிவாரணம் அளித்து வந்திடில் மனச்சாந்தி ஏற்படும்.

8. நாம் கேட்கும் நல்வரங்களை அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் இணைய பெற்றுத் தருபவளே ஸ்ரீவரலட்சுமி தேவியாவாள். தினமும் பெண்கள் அருகம்புல்லால் தாமே சிறுமாலை தொடுத்து வட்டமாக மேடையில் வைத்து நடுவில் விளக்கு ஏற்றி வைத்து லட்சுமி அஷ்டோத்திரம் (லட்சுமி 108 போற்றிகள்) ஓதினால் வரலட்சுமி நம் இல்லத்திற்குக் குடி வருவாள். காலையும் மாலையும் இந்தப் பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தால் வரலட்சுமி தேவியின் பூரண கடாட்சத்தைப் பெறலாம்.
9. உயர் அதிகாரிகளாய் இருந்து கொண்டு தன் கீழ் பணி செய்பவர்களை வருத்துவதால் “பஞ்சதோஷம்” என்ற சாபம் ஏற்படுகிறது. இது அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கடும் நோயையும், மனைவிக்கு அடி வயிற்று நோய்களையும் உண்டாக்கும். இதற்குப் பரிகாரமாக திருக்கண்டியூர் (தஞ்சை அருகே) ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்து தேன் கலந்த பாலைக் கார்த்திகை நட்சத்திரந்தோறும் தானம் அளித்து வர பஞ்சதோஷங்களினால் விளையும் சாபங்களிலிருந்து விடுதலை பெறலாம்.
10. இரு தேவியரோடு அருள்பாலிக்கும் பெருமாள் மூர்த்தியைப் பௌர்ணமி தோறும் 53 வெண் தாமரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் தானம் செய்திடில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் துன்பங்கள் படிப்படியாய் குறையும்.

ஸ்ரீமகாலட்சுமி திருச்செங்கட்டாங்குடி

11. சிக்கனமாக வாழ்ந்து நன்கு சேமித்து நலமுடன் வாழ்வதில் கணவன் மனைவியரிடையே பலவிதமான கருத்து பேதங்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் பல பிரச்னைகள் உண்டாகின்றன. இதற்கு நிவாரணமாக அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமகாலட்சுமியை அர்ச்சித்து, பசும் பாலைப் படைத்து அதனைப் பிரசாதமாக கணவன் மனைவியர் உண்டு வந்திடில் சிறுகக் கட்டி பெருக வாழ்வர்.
12. சாம்பிராணி தூபம் இடுதல், ஊதுபத்தி ஏற்றுதல், கற்பூர ஜோதி காட்டுதல் போன்றவற்றால் வீட்டில் அடையும் தீய சக்திகளை எளிதில் அகற்றிவிடலாம். குழந்தைகளுக்கு அடிபடுதல், இடறுதல், பாத்திரம் கைநழுவுதல், தலை அல்லது காலில் அடிபடுதல், சட்டை, புடவை, வேட்டி போன்றவை எதிலேனும் சிக்கிக் கிழிதல் போன்றவை அடிக்கடி இல்லத்தில் நிகழுமாயின் தீய சக்திகள் வீட்டில் பெருகியுள்ளன என்பதை நாம் அறியலாம். திங்கட்கிழமையன்று தாமே தொடுத்த துளசி மாலையை ஸ்ரீஅனுமாருக்குச் சார்த்தி, தூய வெண்ணெயைச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தானமாக அளித்திடில் தீய சக்திகளை அறவே அகற்றி விடலாம். அனுமாருக்குச் சார்த்திய புஷ்பத்தை இல்லத்தில் ஒரு நாளேனும் வைத்திருந்தால் தீய சக்திகள் மறைந்து விடும்.
13. பல குடும்பங்களில் கணவனின் குடும்பத்தார் மூலமாக (அண்ணன், தம்பி) பலவிதமான துன்பங்களும், சச்சரவுகளும் ஏற்படும் அக்காலத் திருமணங்களில் எள் கலந்த தேன்குழல் முறுக்கினை இறைவனுக்குப் படைத்துப் திருமணப் பிரசாதமாக அனைவருக்கும் அளித்திடுவர். எள் கூடிய தேன் குழல் பட்சணம் சனீஸ்வரருக்குப் ப்ரீதியானதாகும். மேற்கு நோக்கும் சனீஸ்வர பகவானுக்கு (சென்னை ஸ்ரீகபாலி கோயில். உய்யக்கொண்டான்மலை) மஞ்சள் ரோஜா, சங்கு புஷ்பம் கலந்த மாலையினைச் சார்த்தி, தேன் குழல் முறுக்கினைப் படைத்துத் தானமாக அளித்திட,, கணவருடைய உறவு முறைகளிடமிருந்து ஏற்படும் துன்பங்கள் விலகும்.
14. பணமுடை, தரித்திரம், பற்றாக்குறை என்று பல குடும்பங்களிலும் பொருளாதார நிலைமை முக்கியப் பிரச்னையாக இருக்கின்றது. இதற்குப் புதன்கிழமை தோறும் லட்சுமி நரசிம்ம மூர்த்திக்குத் தானே தொடுத்த துளசி மாலையை அணிவித்து, பானக தானம் செய்து வந்திடில் தரித்திர நிலைமை மாறும்.
15. நீதித் துறையைச் சார்ந்தோர் (judges, advocates,  senior advocates, magistrates) இன்று பலவிதமான இன்னல்களுக்கிடையே தான் வாழ வேண்டியுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித் துறையைச் சார்ந்தோரும் சிபிச் சக்கரவர்த்தியைப் போல் நீதி வழுவா நெறிமுறையுடன் வாழ்தலே சிறப்புடையது. ஆனால் நன்னெறியுடன் இவர்கள் வாழ்வதில் எத்துனை துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை நாம் அறிவோம். (கோபுர) காஞ்சீபுரம் உலகளந்த பெருமான் ஆலயத்தில் ஜகதீஸ்வர விமானத்தின், கீழ் நின்ற தெய்வீகத் திருகோலத்துடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநீரகத்தான் சந்நிதியில் 21 புதன்கிழமைகளில் தானே தொடுத்த துளசி மாலையைச் சார்த்தி வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் தானம் செய்து வந்திடில் நீதித் துறையினருக்கு உத்தம நிலைகளும், கீர்த்தியும் கைகூடும்.
16. பஸ், லாரி, கார், டாக்ஸி அதிபர்கள் தங்கள் தொழிலில் தினந்தோறும் பலவிதமான பேராபத்துக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பயணிகளின் பாதுகாப்போடு வாகனத்தின் நன்னிலையும் பற்றி அவர்கள் தினந்தோறும் கவலைப்பட வேண்டியுள்ளது. காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் புஷ்கல (கோபுர) விமானத்தடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கள்வர் பெருமாளுக்கு தூய வெண்ணிற வஸ்திரம் சாற்றி வெண்பொங்கல் படைத்துத் தானமளித்தல் வேண்டும். இவ்வாறாக 100 வெள்ளிக்கிழமைகளில் வழிபட எத்தகைய பேராபத்தினின்றும் எளிதில் மீளலாம்.
கூடா நாட்கள்
(பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கூடாநாட்களில் எல்லாவிதமான சுபகார்யங்களையும் தவிர்க்கவும்...)
19.5. 1997 திங்கள் – முழுநாள்
28.5.1997 புதன் – முழுநாள்
31.5.1997 சனி இரவு 8.27 மணிக்கு மேல்
விசேஷ தினங்கள்
4.5.1997 – ஞாயிறு – கத்ரி ஆரம்பம்
6.5.1997 செவ்வாய் – சர்வ அமாவாசை
9.5.1997 வெள்ளி – அக்ஷய திருதியை
14.5.1997 புதன் – விஷ்ணுபதி
21.5.1997 புதன் – வைகாச விசாகம்
21.5.1997 புதன் :- பௌர்ணமி (21.5.1997 மதியம் 3.08 மணி முதல் மறுநாள் 22.5.1997 மதியம் 2.43 வரை) பௌர்ணமி கிரிவலம் 21.5.1997 இரவு,
28.5.1997 – புதன் – கத்ரி முடிவு.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam