காமப் புணர்ச்சியை விட காதல் புணர்ச்சியே நிலையானது !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஐயர்மலை கிரிவலம்

ஸ்ரீ ரத்தினகிரி (ஐயர்மலை) கிரிவலம்

எங்கெல்லாம் குன்று தோறும், குறுமலையெங்கும் ஆலயங்கள் தோன்றியுள்ளனவோ அங்கெல்லாம் கிரிவலம் வருதல் மிகச் சிறப்பான வழிபாடாகும். சாதாரண தரைப் பகுதியில் அமர்ந்து தியானிப்பதை, ஜபிப்பதை விட, மலையில் அமர்ந்து தியானமோ, ஜபமோ புரிந்திடில் அதற்கென விசேஷமான பலன்கள் கூடி வருகின்றன.

பர்வதமலை, குன்றக்குடி, பழனி, ரத்னகிரி (குளித்தலை அருகே ஐயர் மலை), ஈங்கோய் மலை, திருச்சி மலைக்கோட்டை, திருஎறும்பூர் (திருச்சி), திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு. அப்பப்பா! இறைவன் தான் ஜீவன்களின் மேன்மைக்காக எத்தனை கிரிவலங்களைப் படைத்துள்ளான். இதிலும் சொல்லவும் பெரிதே திருஅண்ணாமலை கிரிவலம்!

வேலூர் அருகே உள்ள ரத்னகிரியிலும் முருகன் ஆலயம் உள்ளது. இங்கு நாம் விளக்குவது திருச்சி குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை எனப்படும் ரத்னகிரி மலையாகும் . பிரபஞ்சத்தில் அனைத்துக் கோடி அண்ட சராசரங்களிலும் உள்ள கோடானு கோடிரத்னப் பிரகாசங்களைத் தன்னுள் பூண்டு ரத்தினங்களுக்கெல்லாம் ரத்தினமாக அருள்பாலிப்பவரே ரத்னகிரீஸ்வரர்.

மனிதருள் மாணிக்கமாய், ஒழுக்கத்தின் சிகரமாய், புனிதமாக வாழ விரும்புகின்றவர்க்கு அருள் புரியும் அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி! மலை உச்சியில் பஞ்ச சீல (ஐந்து) சித்புருஷர்கள் சூட்சுமமாய்த் தவம் புரியும் சுனை ஒன்றுள்ளது. சகல நோய்களை நிவர்த்திக்கும் மிகப் புனிதமான தீர்த்தம். எனவே இத்தீர்த்தத்தில் கால் படுதல் கூடாது. இதனருகே உள்ள குகையும் பல தெய்வீக ரகசியங்களைத் தன்னுள் கொண்டது! இச்சித்புருஷர்களின் தவத்திற்கு இடையூறு நேரா வண்ணம், சற்றுத் தொலைவிலிருந்தே சுனையையும் குகையையும் தரிசித்தலே சிறப்புடையது!
ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து அற்புத சக்திகள் வாய்ந்த விலைமதிப்பில்லா ஒரேயொரு நவரத்தினக் கல்லைக் கக்குகின்ற தேவலோக நாகங்கள் இம்மலையை எப்போதும் வலம் வருகின்றன, எறும்பு, பசு, தேனீ என ஏதேனும் சில வடிவுகளில் ! ஏனென்றால் நாக வடிவில் வந்தால் அச்சத்தால் அலறி அதனை அடித்துத் துன்புறுத்துகின்ற மனப்பான்மைதானே கலியுகத்தில் பெருகி வந்துள்ளது!
பல யுகங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த இரத்னகிரிமலையானது தற்போது விழாக் காலங்கள் தவிர, ஏனைய நாட்களில் பேரமைதி பூண்டு பெரும் பொலிவுடன் விளங்குகின்றது. இதனை கிரிவலம் வருதற்கான நல்ல மண் பாதையும் உள்ளது! இன்று தேரே ஓடும் திருப்பாதையிது!
கிரிவலம் வருகையில் திருஅண்ணாமலையைப் போன்றே இங்கும் பலவிதமான தெய்வீக தரிசனங்களைக் கண்டு ஆனந்தித்திடலாம். அவற்றுள் ஒன்றே காளிந்தினி ஸ்ரீ நாக தரிசனம் . அதாவது அய்யர் மலையைச் சுற்றி கிரிவலம் வருகையில் ஓரிடத்தில் அற்புதமான நாகப் புற்றினைக் கண்டு தரிசித்திடலாம். கனக சுந்தராங்கிணி என்ற நாக தேவமூர்த்தி அருள் பாலிக்கின்ற அழகிய நாகப்புற்று இது! இங்கிருந்து நாகப் புற்றினை வணங்கி மலையையும் தரிசிப்பதற்கே "காளிந்தினி ஸ்ரீ நாக தரிசனம் '' என்று பெயர். நல்வரங்களைத் தரும் தகைமை வாய்ந்த தரிசனம்!
பாம்புப் புற்றுகளில் பல வகையுண்டு! நாம் நினைப்பது போல் எல்லாப் புற்றுகளிலும் நாக தேவதைகள் பாம்பு ரூபத்தில் வசிப்பதில்லை! நாக ரூபமே நாக தேவதைகளுக்குப் ப்ரீதி தரக் கூடியவை எனினும் அவர்கள் எவ்வித வடிவமும் எடுக்க வல்லவர்கள் ! உண்மையான தெய்வீக பக்தியுடன் வழிபடுவோர்க்கு அவர்கள் நல்ல பாம்பு வடிவில் ஐந்து தலைகளுடன் காட்சி தருகின்றனர்.  எனினும் நல்ல பக்தியுள்ளோர் கூட தற்போது “பாம்பு” என்றாலே அஞ்சி நடுங்குவதால் நாகதேவதைகள் வேறு ரூபங்களில் தான் தரிசனம் தர விரும்புகின்றனர்.
நகையே நாகம்!
சர்வேஸ்வரனாம் ஆதி சிவனின் திருமேனியை அலங்கரிக்கின்ற முதன்மையான ரத்னாபரணங்களுள் ஒன்றாகத் திகழ்வதே “இரத்னாங்கித ஸ்ரீநாகம்!'' உடலெங்கும் மிகவும் பிரகாசமான ரத்னக் கற்களையுடையஇந்த ஸ்ரீநாகத்தையே சிவபெருமான் “இரத்னாங்கித ஸ்ரீ நாகாபரணமாக” அணிந்து ஸ்ரீ ரத்னகிரீஸ்வரராக ஈஸ்வரன் காட்சியளித்த தலமே அய்யர்மலையாம் ரத்னகிரியாகும். இறைவனின் திருமேனியை அலங்கரிக்கின்ற இரத்னாங்கித ஸ்ரீ நாக தேவமூர்த்தியே இன்றும் பஞ்சமி, துவாதசி, சப்தமி, பிரதோஷ நேரங்களிலும் குறிப்பாக பெளர்ணமி திதியிலும் பல சூட்சும வடிவங்களில் ''கனக சுந்தராங்கிணி' என்ற நாமத்தைத் தாங்கி கிரிவலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பதால் நாக லோகங்களில் இப்பெயரே இந்நாகமூர்த்திக்கு நிலைத்து விட்டது.

பௌர்ணமியன்று அய்யர் மலையை கிரிவலம் வந்து இப்புற்றில் கனக சுந்தராங்கிணி நாக மூர்த்தியை வணங்கி ஏழைகளுக்குப் பால் தானமும், பகலில் நீர்மோர் தானமும் வழங்குதலால் பலவித நில தோஷங்களும் நீங்குகின்றன. சூன்யம், பொறாமை, பகைமையால் பலருக்கும் நில விளைச்சல் தடைப்படுவதுண்டு. மேலும் பூச்சுழல், புவனச் சுழல், கலிச் சுழல் போன்ற சூறைக் காற்றுகளால் வாழை,  கரும்பு போன்ற பயிர்கள் சாய்ந்து விடும். இது குறிப்பிட்ட சில தோஷமுள்ள நிலங்களையே தாக்கும்.

ஸ்ரீ கனக ஸ்ரீ நாகதேவ மூர்த்தியானவள், ஸ்ரீபுவனேஸ்வரியைப் பல கோடியுகங்கள் பூஜித்து நாகதேவமூர்த்தி ரூபம் பெற்றமையின் இந்த நாகப்புற்றிற்கு பூமி தோஷங்களை நிவர்த்தி செய்யும் அற்புத தெய்வ சக்தியுண்டு!

பெளர்ணமியன்றும் ஏனைய குறிப்பிட்ட திதிகளிலும் கனக சுந்தராங்கிணி ஸ்ரீநாகம் பலவித வடிவுகளை எடுத்திடினும், கலியுகத்தின் தற்போதைய சகாப்தத்தில் பொதுவாக பசு வடிவில்தான், சூட்சும வடிவு கொண்டு கிரிவலம் வந்து ஸ்ரீ ரத்னகிரீஸ்வரரை வழிபடுவதில் பரமானந்தம் கொள்கின்றாள். விவசாயிகளுக்கும் காய்கறிகள், கனிகள் பயிரிடுவோர்க்கும், தோட்டக்காரர்களுக்கும் அருள்பாலிக்கும் புவன மாதாவே ஸ்ரீ கனக சுந்தராங்கிணி நாகதேவி! எனவே பெளர்ணமியன்று பகற் பொழுதிலும் இரவிலும் இம்மலையை கிரிவலம் வருவோர்க்கு நற்காரிய சித்திகள் கிட்டுகின்றன. பகற் பொழுதில் நாகப் புற்றிற்குத் தாள்பணிந்து வணங்கிச் செல்க! இரவில் ஸ்ரீ நாகதேவி தியானம் கொள்வதால், தியானத்திற்கு இடையூறின்றி சற்று தூரத்தில் அமைதியாகச் சென்றிடுக! நாத தேவதைகள், நாகதேவ மூர்த்திகளுக்கு நாயகரான “ஸ்ரீ அஸ்தீக சித்தரத் துதித்தவாறு மெளனமாக இவ்விடத்தைக் கடப்பதால் நாக மூர்த்தியின் தியான சக்தியும் நம் உடலில் சேரும். மௌனத்தில்தான் நாகதேவ இறைசித்திகள் கூடும்.

பஞ்சமி திதியன்று இம்மலையை கிரிவலம் வந்து இந்நாகப் புற்றின் அடியில், தாமே கோர்த்த, ஐந்து வகையான புஷ்பங்கள் கூடிய, மாலையைச் சார்த்தி சாதி பேதமின்றி ஏழைச் சிறுமியர்க்கும், சுமங்கலிகட்கும் பாவாடை, சட்டை, புடவை, ரவிக்கை, வளையல்கள், மெட்டிகள் போன்ற மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தால் எத்தகைய நாக தோஷங்களும் நிவர்த்தியாகித் திருமண தோஷங்கள் நீங்கி திருமணம் கை கூடும்.

கனகாம்பரம், காட்டு மல்லி, செவ்வந்தி போன்ற வாசனையில்லாத பூக்களை, பூஜைக்கும் தலையில் சூடுவதற்கும் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. இவை வழிபாட்டிற்கு ஏற்புடையவை அல்ல!

பல தெய்வீக ரகசியங்கள் நிறைந்த அய்யர் மலையாம் இரத்னகிரி மலையை எந்நாளிலும் கிரிவலம் வந்திடலாம். மாதப் பிறப்பு, பௌர்ணமி, பஞ்சமி திதி, செவ்வாய், வெள்ளி, திங்கட்கிழமைகள் மிகவும் விசேஷமானவை!

அடிமை கண்ட ஆனந்தம்

ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் குருகுலவாச அனுபூதிகள்

தம் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் நேரடி அருட்பார்வையில் குருகுலவாசத்தைப் பெறும் அதி அற்புத பாக்யத்தை அடைந்தவரே நம் குரு மங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்!

சிவ, வைணவ பேதமின்றி, எத்தனையோ திருக்கோயில்களில் உழவாரத் திருப்பணிகளை மேற்கொண்டது மட்டுமன்றி, கலியுகத்தில் வேத, ஹோம, மந்திர, யந்திர வழிபாடுகள் வெகு வேகமாகக் குறைந்து வருகின்ற நிலையில் ஆலயத் திருப்பணிகளே கர்மவினைக் கழிப்பிற்குக் கலியுகத்தில் பெரிதும் உதவுகின்றன.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

இது மட்டுமா, ஆலயத் தூண்களில் ஜீவசமாதி கொண்டுறைகின்ற ஆயிரமாயிரம் சித்தர்களைப் பற்றிய அரிய விளக்கங்களையும் குருவாய் மொழிகளாகக் கேட்டு உய்த்துணரும் பேரின்பத்தையும் பெற்றார். இன்றும் தமிழகத்தின் எத்தனையோ கோயில் தூண்களில் விதவிதமான சித்புருஷர்களின் ரூபங்களைக் கண்டு களித்திடலாம். சற்குருமார்களே இவர்களுடைய மஹிமைகளை விளக்க வல்லவர்கள்.

இவ்வடிமை கண்ட ஆனந்தத் தொடரில் மிளிர்வதே, சித்புருஷ சற்குருப் பெருமானின் குருவாய் மொழித் தேனாமிர்தத்துளிகள்! - சென்னை ராயபுரம் கல் மண்டபம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் வழியாகக் கால் நடையாகவே கோவணாண்டிப் பெரியவரும் அரைடிராயர் சிறுவனும் பல முறை திருஅண்ணா மலைக்குச் சென்றுள்ளனர். கால்களில் செருப்பின்றி அதுவும் முற்றிய கோடை காலத் தில் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கேட்பதற்கே மலைப்பாக இருக்கின்றதல்லவா! வருடம் முழுதும் நாள் தோறும் ஒவ்வொரு வகையான இறையனுபவங்கள்! ஓய்வில்லா ஓம்காரத் திருப்பணிகள் ! ஜோதிடம், ஆகமம், சித்த மூலிகை வைத்யம், யோகாசனம், பிராணாயாம சுவாசப் பயிற்சிகள், அன்னதான சமையற்பணி, விசேஷமான அபிஷேக, ஆராதனைகள், அற்புதமான ஹோம குண்ட அமைப்புகள், நவரத்தினக்கல் ரகசியங்கள், செச்சி போன்ற தேவாபரண மஹிமை போன்று தெய்வீகத்தில் (மறைந்து வருகின்ற) அரிய கலைகளை சற்குருவாகப் பரிணமித்து ஊட்டி உணர்த்தியவரே, கோவணாண்டிப் பெரியவரான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள்
பலவிதமான பறவைகள், விலங்குகளின் மொழிகளில் வல்லவரான பெரியவர் அவற்றை விளக்கியவாறே பல இடங்களிலும் நடைப் பயணத்தைத் தொடர்ந்தமையால் சிறுவனுக்கு நடந்த களைப்பே தோன்றவில்லை.
செங்கல்பட்டு வழியே செல்லும் போதெல்லாம் அங்கேயுள்ள பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த சித்தி விநாயகரைத் தரிசிக்காமல் செல்வதில்லை! விரைந்து நடக்கும் பெரியவர் சித்தி விநாயகர் சந்நிதி வந்ததும் கூனிக் குறுகி, கைகட்டி, வாய் மூடி, கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவும் மௌனியாய்க் கிடந்திடுவார்! சர்வம் சரணாகதி மயம்.

“டேய், ரொம்ப பவர்புல் விநாயகர்டா!”.

ஸ்ரீஹேரம்ப கணபதி
திருவில்லிபுத்தூர்

“இவர் நெனச்சார்னா சர்வ லோகங்களையும் ஒரு ஆட்டி ஆட்டிடுவார்! ஒரு அடிக்குள்ளதான் இருக்கார்னு சும்மா நெனக்காதே! இவரைச் சித்தருங்க பட்டு விநாயகர்னுதான் கூப்பிடுவாங்க! கலியுகத்துல கண்கண்ட மூர்த்திடா! நல்ல கார்ய சித்தி தருவார்! சின்னக் கற்பூரம் ஏத்தி வச்சாக் கூடப் போதும், மனசு இளகி அள்ளிக் கொடுத்துடுவாரு! இதுதான் இவருக்கு ரொம்பப் புடிச்ச பேரு! ”

சித்தி விநாயகரின் சந்நதியில் சிறுவன் எத்தனையோ அற்புதங்களைக் கண்டிருக்கிறான், பெரியவரின் துணையோடு!

“சித்தனுங்க உலகத்துல எல்லா நாட்டுலயும் இருக்காங்கடா! ஆல்ப்ஸ் மலைல, அமெரிக்கால, அப்பலேசியன் பகுதில, எகிப்து பிரமிட்டுள்ளாற, அமேஸான் காட்டுல - இப்படி சித்தனுங்க எக்கச்சக்கமாக நடமாடுற இடம் பூலோகத்துல நிறைய உண்டு, ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க, எல்லா சித்தங்களுக்கும் திரு அண்ணாமலைதான் ஹெட் ஆபீஸ்!” - பெரியவரின் பாணியே அலாதியானதுதான். புரியாத இறைத் தத்துவங்களையும் மிக எளிமையாகப் புரிய வைப்பார்!

“எல்லாச் சித்தருங்களுக்கும் திருஅண்ணாமலை ஈசன் தாண்டா படியளக்குறான், திருக்கயிலாயமும் (Kailash), திருஅண்ணாமலையும்தான் அவங்களுக்கு பூலோக Entry -Point!”.

செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் மாமண்டூர் தாண்டியவுடனேயே வலப்புறம் இன்றும் ஒரு பழைய மண்டபம் தென்படும்! வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி சுவாமிகள் உட்பட பல சித்புருஷர்களின், யோகியர்களின் புனிதமான திருவடிகள் பட்ட இடம்!

இம்மண்டபத்தில்தான் இரவில் பெரியவரும் சிறுவனும் தங்குவர். இங்கு தங்கும் போதுதான் பாவாடைச் சித்தர், பன்றிமலைச் சித்தர், தடிதூக்கி சாமிச் சித்தர், தொழுப்பேடுச் சித்தர், கொடிபழச்சாமி, குடுவை லிங்கச்சாமி, கசவனம்பட்டிச் சித்தர், குளிகை சாந்துச் சாமி, பிடாரம் வணங்கிய சாமி, முள்ளுபாதை ரட்ச சித்தர், தவளகிரிச்சாமி, மதி சிரித்த சித்தர் என்று பல சித்புருஷர்களுடைய தியாகத் திருப்பணிகளை அவர் எடுத்துச் சொல்ல, அவனுக்கு மெய்சிலிர்க்கும்! இவற்றை யெல்லாம் கேட்டுக் கேட்டு அவனுக்குச் சித்தர்களின் மேல் ஒரு“பேரபிமானமே” ஏற்பட்டு விட்டது!

அவ்வப்போது அவரைக் கேட்பான், ''ஏன் வாத்யாரே! நீயும் ஒரு சித்தன்தானே!'' - சிறுவனாகையாலும், மெட்ராஸ் பாஷையின் (அ) நாகரீகத்தாலும் (!) அவரை, உலக மஹா சித்புருஷரை “நீ”, “வா”, “போ” என்றெல்லாம் சொல்கின்றோமே என்று அவன் நினைத்தானில்லை! அவரோ சர்வ லோகங்களையும் தன்னுள் அடக்கியவராய் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாது “நடித்தே” காலத்தை ஓட்டி விட்டார்! என்று தான் அண்டி வாழ்வது ஓர் அற்புதமான சித்புருஷர்தான், இனி அவரை நம் வாழ்க்கையில் விட்டுவிடக் கூடாது, அவரை மாணிக்கவாசகர்போல் “சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருளுவது இனியே” என்று அவர் தம் தெய்வீகத் தன்மையை உணர்ந்தவனாயத் தன்னை சுதாகரித்துக் கொண்டானோ, அன்றிலிருந்து அவர் தன்னை மாயமாய் மறைத்துக் கொண்டு விட்டார்.”

அன்றைய சிறுவனே பெரியவரின் பேரன்புச் சிஷ்யனாகப் பூத்து மலர்ந்து இன்று “ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளாய்ப்” பரிமளிக்கின்றார். (அவரைப் புரிந்து கொள்ளும் வரை) “அதுவரைக்கும் அவர் கூறும்போது அவரை ஏதோ நமக்கு நல்லது சொல்லித் தராரு, பசிச்சா கோலி மிட்டாய் வாங்கித் தருவாரு, என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாருன்னுதான் நெனச்சுகிட்டேன்! ஏன்னா அந்த அளவுக்குத் தான் எனக்கு அறிவு இருந்துச்சு. ஆனா அஞ்சாறு வருஷம் அவரோட நல்லா சுத்திப் பழகுனதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சது, அவர்தான் நம்ம குரு, நம்மை கரையேத்த வந்திருக்கற கடவுள், எல்லாம் தெரிஞ்சும் தெரியாம வாழுற சித்தன்னு! ஆனா.....” இதைக் கூறுகையில் அவர் கண்கள் பனித்தன!

“.....ஆனா... என்னிக்கி அவரோட சுயம்பிரகாசம் தெரிய ஆரம்பிச்சதோ அன்னிக்கே, அந்த செகண்டுலேந்தே தன்னோட உடம்பையே மறச்சுட்டாரு... அதுக்கப்புறம் வெறும் குரல் தான் கேட்கும்! ”

அதுக்கப்புறம் “டேய் நீ பெரியவனாயிட்டே, நான் சொன்னதெல்லாம் ஒழுங்கா செஞ்சுகிட்டுவா! உன்னை எப்பவுமே உஷாரா நான் பாத்துகிட்டுதான் இருக்கேன், நல்லா தெரிஞ்சுக்கோ...”

அவர் கண்கள் திருக்கயிலாயப் பனிமலையாய்ப் பனிக்கின்றன!

“நீயும் ஒரு சித்தன்தானே!”

“சிவ சிவ! அப்படியெல்லாம் சொல்லாதேடா! அடியேன் அங்காளியோட அடிமை! அடிமைனு சொல்றதுக்கே தகுதியில்லடா! ஏன்னா எங்க குரு சொன்னதை உனக்குச் சொல்லித் தர்றேன்! ஆனா நான் சொல்றது, செய்யறது எல்லாமே, உன்னோட நல்லதுக்குத்தான், அப்படீங்கற நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே! அதுதான் குருமேல உள்ள நம்பிக்கை! இந்த தேகத்து மேல அட்டாச்மென்டே வேண்டாம்! அது நெலச்சு நிக்காது! என் சரீரத்தையே பாத்துப் பழகி “சற்குருன்னா இப்படித்தான்னு”பழகிட்டா அத மாத்தறது ரொம்பக் கஷ்டம்! எங்க இருந்தாலும் கண்ணால் பாத்தாலும், பார்க்காட்டினாலும் நமக்கு நல்லதைத்தான் குரு செய்வார்னு நம்பிக்கைய வச்சுக்க. இது ஒன்றுதான் சாசுவதமா இருந்து உன்னைக் காப்பாத்தும்.”

....இதோ திருஅண்ணாமலை வந்து விட்டது.

சிறுவன் குஷியாகி விட்டான், காரணம் திருஅண்ணாமலை என்றாலே கிரிவலம், மஹான்களின் தரிசனம், அற்புத விஷயங்கள்... மேலும், மற்ற விஷயங்களில் கண்டிப்பாக இருக்கும் பெரியவர் திருஅண்ணாமலை வந்தாலே சற்று சாந்தமாகி விடுவார்!

நெடுந்தூரம் நடந்து வந்த காரணத்தால் சிறுவன் வெகுவாகக் களைப்படைந்தான். ஆனால் பெரியவரோ, “டேய் அமாவாசை நெருங்கிடுச்சு! ஜல்தியாப் போகணும்!” - என்று கூறிடவே சிறுவன் அரை குறை மனதுடன் தொடர்ந்தான்.

“அமாவாசைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?” - அவன் மனம் எதையோ அசைபோடத் தொடங்கியது. தெற்குக் கோபுரம் தாண்டியதும் “மகாமக மலை” தரிசனத்தைக் கண்ட நிலையில், கிரிவலப் பாதையை விட்டு மலையை நோக்கி விரைந்தார் பெரியவர்!

சிறுவன் பின்னால் ஓடினான்.

“இது என்ன கிரிவலம் போற மாதிரித் தெரியலையே!”

அப்போதெல்லாம் அங்கு மரங்கள் அடர்ந்திருந்தன. ஏதோ ரொம்ப தூரம் நடந்தது போலிருந்தது. அவனுக்கு மலையை ஒட்டி, சுற்றிலும் ஒற்றையடிப் பாதை இருப்பதாகப் பெரியவர் சொல்லக் கேட்டிருக்கிறான். பெரியவர் நடந்த நடைவேகத்தைப் பார்த்தால் மலையில் பாதியைச் சுற்றியிருப்போமே என்றுதான் சிறுவன் எண்ணினான். ஆனால் அவர் சென்ற வளைவுகளையெல்லாம் பார்த்தால் அவர் வேண்டுமென்றே பாதையைத் தான் அடையாளங் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இப்படி இழுத்துச் செல்கின்றாரோ என்று பட்டது.

சிறுவனின் மனமோ ஏதேதோ “இப்படியா, அப்படியா?”என்று பட்டி மன்ற விவாதத்திற்குத்தான் தயாராயிற்று!

பெரியவரோ திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கு இடையில் வந்த குரங்கைச் சைகை காட்டினர்! “மனம் ஒரு குரங்கு!”

சிறுவன் கப்சிப்பென்று ஆகிவிட்டான். இருக்கின்ற வயிற்றுப் பசியில் அவன் எந்த “பிரளயத்திற்கும்” தயாராகும் நிலையில் இல்லை!

இலைகள் தழைகளை எல்லாம் விலக்கிச் சென்ற பெரியவர், ஒரு தென்னை மரம் வந்ததும் டக்கென்று நின்றார். அதனை மூன்று முறைச் சுற்றி வந்து அதனை நமஸ்கரித்தார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! ஏதோ வேப்பமரத்தையும், வில்வ மரத்தையும் பெரியவர் சுற்றி வருவதைச் சிறுவன் பார்த்திருக்கின்றான். ஆனால் தென்னை மரத்தைச் சுற்றி வருவதை இன்றுதான் முதன் முதலில் பார்த்தான்.

தென்னை மரத்தினடியில் பத்மாசன மிட்டு அமர்ந்த பெரியவர் சிறிது நேரம் தியானித்தார். இதுவரை பெரியவர் செய்ததையெல்லாம் பின் பற்றிய சிறுவன் இப்போது திகைத்து நின்று விட்டான்.

தானும் கண்களை மூடி அமர்வதா வேண்டாமா?

ஏற்கனவே சிறுவனை எச்சரித்திருக்கிறார்.

“டேய் நம்ப ரெண்டுபேரும் வெளில யாத்திரை போனா, ஒரே சமயத்துல நம்ப ரெண்டு பேரும் தூங்கக் கூடாது. யாராவது ஒருத்தர் முழிச்சுக்கிட்டுத்தான் இருக்கணும்”

இப்போது சிறுவனும் “என்ன செய்வது?”என்று புரியாத நிலையில் ஓர் முடிவுக்கு வருகிறான்.

சிறுவனும் நன்றாகப் பத்மாசனமிட்டு அமர்ந்து கண்களை மூடினான்.
“நறுக்”கென்று தலையில் கொட்டு விழுந்திட வலிதாங்காது “அம்மா!'' என்று கத்தியவாறு மேலே பார்த்தான் சிறுவன்.

மேலே, தென்னை மரத்தின் உச்சியிலே ஒருவர் அமர்ந்திருந்தார்.
“ஏண்டா அம்மான்னு பாதில விட்டுட்ட, முழுசா அமாவாசைன்னு” சொல்றதுதானே!

ஆங்... சிறுவனுக்கு நினைவுக்கு வந்து விட்டது. இந்த அமாவாசைச் சித்தர் தான் அமாவாசையன்று மட்டும் மரத்திலிருந்து கீழிறங்கி வருவார்!

அமாவாசையன்று எத்தகைய சித்தர் பெருமானின் தரிசனம்!

மலைவல மகிமை

திருஅண்ணாமலையை மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா. 200-300 கி.மி. தொலைவில் உள்ள நாங்கள் என்ன செய்வது என்று கேட்டு எங்களுக்கு மாதம்தோறும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தவாறுள்ளன,  “குன்றுதோறும் குமரன் தானே” எங்கெல்லாம் மலையிலே கோயில்கள் அமைந்துள்ளனவோ அங்கெல்லாம் பெளர்ணமி தோறும் கிரிவலம் வருதற்கு பக்தர்கள் ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு மலை வலத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களுண்டு. அவரவர் ஊரிலுள்ள மலைத் தலத்தைப்பற்றி விளக்கமாக எங்களுக்கு கடிதமெழுதினால், நாம் நம் குரு மங்கள் கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளிடம் சமர்பித்து அவர்களுடைய அருளுரையை ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலமாக அளிக்கின்றோம். திருச்சி மலைக்கோட்டை,  பர்வதமலை, ஐயர் மலை, விராலிமலை, குன்றக்குடி மலை போன்ற மலைத் தலங்களை கிரிவலம் வருவதற்கான நல்ல பாதைகள் அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

சாதி பேதமின்றிப் பலரும் ஒன்று கூடி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி, ஏகாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம்,  மக நட்சத்திரம், பெளர்ணமி போன்ற விசேஷமான நாட்களில் சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக தேவாரம்,  திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்ற இறைத் துதிகளை ஓதியவாறு, சுற்றியுள்ள கிராமப்புற ஏழை ஜனங்களுக்கு இயன்றளவு அன்னதானம் செய்து கிரிவலம் வந்திடில் அற்புதமானப் பலன்களைப் பெறலாமன்றோ. தினசரி பூஜைகளையே மறந்துவிட்ட மனிதனுக்கு இத்தகைய கிரிவலங்கள் தான் இழந்த பூஜா சக்திகளுக்கு நல்ல ஈடு செய்கின்றன. மேலும் பல கொடிய கர்மவினைகளைத் தீர்க்கின்ற சக்தி கிரிவலத்திற்குத்தான் உண்டு. ஏனென்றால் மஹரிஷியரும், யோகிரும் ஜன சஞ்சாரமில்லாத மலைத்தலங்களையே தங்களுடைய கடும் தவத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அவர்கள் தவம் செய்கின்ற இடங்களிலெல்லாம் ஒளிவட்டம் பிரகாசிக்கும். இதற்கென்று தனி சிறப்புடைய தெய்வீக ஆகர்ஷண சக்திகள் நிறைய உண்டு. கிரிவலம் பாதைகளில் எப்போதும் இவை நிறைந்திருக்கும். நித்ய பூஜையையே ஒழுங்காகச் செய்யாத மனிதன் என்றைக்குத் தவத்தில் ஈடுபடப் போகின்றான். எனவே தவமொன்றும் மேற்கொள்ளாமல் மஹரிஷிகளின் தபோ சக்தியைப் பெறுதவற்கு கிரிவலமே சிறந்த வழியாகும். ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாரே கிரிவலம் வந்திடில்தான் பல ஆண்டுகளாக ஐபிக்கப்பட்டாமல் விட்ட ஸ்ரீ காயத்ரீ மந்திர பலனை ஓரளவேனும் ஈடு செய்ய முடியும்.

இலிங்கத் திருமேனிக்குச் சந்தனம் பூசுவீர்!

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீ மாசிலாமணீஸ்வர ஸ்வயம்பு லிங்க மூர்த்திக்கு வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று மட்டும் இடப்படும் சந்தனக் காப்பு ஆண்டு முழுதும் லிங்க பாணத்தின் மேலிருக்கும். அபிஷேகம் ஆவுடைக்கே! வரும் 22.4.1998 அன்று லிங்கத்திற்கான சந்தனக் காப்பு களையப் பெற்று புதுச் சந்தனக் காப்பிடப்படும். நம் ஆஸ்ரமம் சார்பில் கடந்த சில வருடங்களாகச் சித்திரை சதயத்தன்று அரைத்த சந்தனத்தை கோயிலுக்கு அளித்து வருகின்றோம்.

சந்தனத்தை, அரைத்துச் சாற்றிட வேண்டுமே தவிர, கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் குழைத்தல் கூடாது. 21.4.1998 அன்று இரவு 8 மணிக்குள் அரைத்த சந்தனத்தை ஸ்ரீ அகஸ்திய விஜயம் அலுவலகத்தில் அளித்திடில், சித்தர்கள் அளித்துள்ள “சந்தன பாணக் காப்பு” முறைப்படி பூஜைகள் நிகழ்த்தப் பெற்று ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படும். பக்தர்கள் 22.4.1998 அன்று ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயத்திலும் நேரடியாகவே அரைத்த சந்தனத்தை அளித்திடலாம்.

ஸ்ரீ சரபேஸ்வர கவசம்
(கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த, ஸ்ரீ சரபேஸ்வரத் துதி. பிரதோஷ நேரத்தில் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையன்று அந்தி நேரத்தில், பிரதோஷ நேரமும் ராகு காலமும் கூடுகின்ற மாலை 4½ மணி முதல் 6 மணிக்குள்ளான சாயங்காலப் புனித நேரத்தில் ஓதிடில் இத்துதியின் பீஜாட்சர சக்திகள் பன்மடங்கு பல்கிப் பெருகி நல்வரங்களை வர்ஷிக்கின்றன! எப்போதும் இதனை ஒதி வந்திடலாம், அச்சம், பீதி ஏற்படுகையில் அருகிலிருந்து அருளைத் தந்தருளும் திருமந்திரம், தடைகளால் தடையுற்றிருக்கும் திருமணத்தை, இடர்களைக் களைந்து இனிதே நடத்தித்தரும் நல்மந்திரம். பெண்களின் குடும்பச் சுமைகளைத் தீர்க்கும் பெருமந்திரம்!
ஸ்ரீ சரபேஸ்வர கவசம்
நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி என்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே !
பரம் பொருளே சரபேசா வாழி வழியே!

நவகிரஹ பிரதிஷ்டை விதி
தற்போது, சில கோயில்களில் அழகிற்காகவும் சிற்பக்கலையின் நேர்த்திக்காகவும் நவகிரஹ மூர்த்திகளை வட்ட வடிவத்தில் பிரதிஷ்டை செய்துவிடுகிறார்கள். 360 டிகிரியுள்ள வட்டத்தின் நடுவில் சூரியன் வீற்றிருக்க, வட்ட விளிம்புகளில் எட்டு நவகிரஹ மூர்த்திகளையும் வைத்துவிடுகின்றனர். இது நவகிரஹ பிரதிஷ்டை விதிக்குப் புரம்பானது. இத்தகைய தவறான முறையின் மூலம் நவகிரஹ மூர்த்திகளின் பார்வை குறைவுகள் ஏற்பட்டு சாபங்களே ஏற்படும். அழகு, நேர்த்தியை விட இறை சக்தியை, தக்கப் பிரதிஷ்டை விதிகளை அனுஷ்டிப்பதன் மூலம் பெறுதலே சமுதாயத்திற்கு உதவும்.

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம தினங்கள்
உங்கள் ராசிக்குரிய சந்திராஷ்டம தினங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் மனபேதலிப்பு ஏற்படும்

ஒரு மனிதன் எவ்வித சந்தோஷ மன நிலையயில் இருந்தாலும் கர்மவினைகளில் அழுத்தத்தால் எப்போதுமே தீர்கமான, சரியான முடிவை எடுக்க முடியாது

மன நிலை ஒருமைப்பாடு, யோக, பூஜா, பிராணாயாம சக்திகள் கூடினால் தான் எப்போதும் சரியான முடிவை எடுக்க முடியும்!

ஒவ்வொரு ராசிக்கும் உரிய சந்திராஷ்டம தின விளக்கங்களைப் பற்றியும் அதற்குரிய பரிஹார முறைகளையும் ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் விளக்கி வந்துள்ளோம். இவ்விதழிலிருந்து திருக்கணித பஞ்சாங்க முறைப்படி ஒவ்வொரு ராசிக்கும் உரிய சந்திராஷ்டம் நாட்களை, திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சரியான நேரக் குறிப்புகளுடன் அளிக்கின்றோம்.

இந்நாட்களில், தினந்தோறும் காலையில் ஸ்ரீ சந்திர பகவானுக்குப் படைக்கப் பட்ட உளுந்து வடைகளைப் பசுவிற்கு உணவாக அளித்து வர வேண்டும். ஸ்ரீசந்திர மெளளீஸ்வரர் என்ற நாமந்தாங்கிய சிவமூர்த்திக்கும் (முசிறி, திருவக்கரை etc,). அனைத்து சிவாலயங்களிலும் பொதுவாகத் தனி மூர்த்தியாக (முகப்பு மண்டபத்தின் வலது உட்புறத்தில்) அருள் பாலிக்கும் ஸ்ரீ சந்திர பகவானுக்கும் பசும் பால் அபிஷேகம் செய்து, வெள்ளை அல்லி மலர்களைச் சூட்டி வெண்ணிற ஆடைகளைச் சார்த்தி வழிபட வேண்டும்.

சந்திராஷ்டம தினங்களில் எத்தகைய முக்கியமான முடிவுகளையும் முற்றிலுமாகத் தவிர்த்து நன்கு தீர ஆராய்ந்து, நற்பெரியோர்களின் ஆலோசனைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீஅகத்திய பிரான் தினமும்
வழிபடும் ஈங்கோய்மலை

ஏனிந்த நல்ல நேர நியதிகள்?

அடியார் : சற்குருவே! கலியுகத்தில் நல்ல நேரம் பார்த்து எதையும் செய்யும் நற்பழக்கம் பெருகி வருகின்றது! நல்ல நேரம் பார்த்துச் செய்திடினும் சில குறைபாடுகள், காரியங்களில் ஏற்பட்டு விடுகின்றன, உண்மையான பக்தியுடன் இறைவனை வேண்டி, கால நேரம் பாராது காரியங்களைச் செய்திடலாகுமா?

சற்குரு : கிருத, திரேதா, துவாபர யுகங்களில் சற்குருவின் மகிமையை அரசர்களும் மக்களும் உணர்ந்திருந்தமையால் ராஜகுரு, குலகுரு, உபதேச குரு என சற்குருமார்களும், ராஜரிஷிகளும், மஹரிஷிகளும் மக்களுடனேயே வாழ்ந்துஅருள் வழி காட்டி நின்றனர். மஹான்களையும் சற்குருமார்களையும் மதித்து வாழ்ந்த காலமது! ஆனால் கலியுகத்திலோ மஹான்களை மதிக்கின்ற தெய்வீகப் பண்பாடு மங்கி வந்தாலும் சித்த புருஷர்களும், மஹரிஷிகளும், ஞானியரும் இலைமறை கனியாகத் தங்களுடைய தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டாது இப்போதும் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அடையாளங் கண்டுகொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவர்கள் காட்டுகின்ற அற வழிகளைக் கையாண்டு வந்திடில் நிச்சயமாக அவர்களே நம்மை ஆட்கொள்வர். ஆனால் அந்நம்பிக்கையானது எக்காலத்திலும் மாசுபடலாகாது! எத்தகைய கஷ்டங்கள் ஏற்பட்டாலும் குருவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில், ஒரு சிறிதும் குறை ஏற்படலாகாது. இவ்வாறாக, கலியுகத்தில் அனைவருக்கும் குருவைப் பெறுகின்ற பாக்யத்தை, இறைவன் அளித்திருப்பினும் அதனைப் பயன்படுத்துவோர் அதிகமில்லையே! நற்பெரியோர்கள் நிறைந்திருந்தால் தானே நற்காரியங்கள் நன்கு கூடி வரும்!

ஆனால் பெரியோர்களை உதாசீனப்படுத்தும் மனப் போக்கு தற்போது மிகுந்து விட்டதால், மனம் போன போக்கில் “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என மனிதன் தன் இஷ்டப்படி எந்த நேரத்திலும் எதை வேண்டுமானாலும் செய்வது என்ற மனோநிலையைப் பெற்றுவிட்டான். ஆசை, மோகம், காமம், அநாகரீகம், அதர்மம், லஞ்சம், சூது, திருட்டு போன்ற தீய பண்புகள் பெருகி வருவதால் எதையும் நேரங்காலம் பாராது செய்கின்ற அலட்சிய மனோபாவம் தலைக்கேறி விட்டது.

ஆனால் இவற்றிற்கிடையிலும் இன்றைக்கும் சற்குருவின் அறிவுரையின்படி வாழ்க்கையை நடத்துவோர் இருக்கத்தான் செய்கின்றார்கள்! அவர்கள்தாம் உண்மையிலேயே பெரும் பேறு பெற்றவர்கள்!

குருவைப் பெறுதல் கடினமா?

ஆழ்ந்த நம்பிக்கை, அதாவது குருவின்றி இறை தரிசனமில்லை, நற்கதியில்லை என்ற நம்பிக்கை வேரூன்றாத வரை அது கடினமே!

பலர் சற்குருவினருகில் இருந்தும் அதன் மேன்மையை உணராதவர்களாய் வாழ்கின்றனர். சற்குருவிடம் பல ஆண்டுகள் இருந்து, உள்ளத்தை ஸ்புடம் போட்ட தங்கமாய்ப் பிரகாசிக்கும்படிச் செய்வதற்காக அவர் தெரிவிக்கின்ற தெய்வீகப் பாடங்களை நன்கு உணராது, அகங்காரம், ஆணவம், கர்வம், பொறாமை, குரோதம், அவநம்பிக்கை காரணமாக குரு பக்தியை இழப்போரும் உண்டு!

சற்குருவுடன் கூடிய தெய்வீகப் பிணைப்பானது ஆயுள் முழுதும் மட்டுமல்லாது சூட்சும நிலையிலும் எப்போதும் தொடர்வது என்பதை உணர்ந்திட வேண்டும்!
சற்குருவைப் பெறாத நிலையில், எந்தக் காரியத்தையும் தீர ஆராய்ந்து நல்முடிவை எடுக்கும் வண்ணமாகத்தான் நாள், நட்சத்திர, யோகாதி, கரணங்கள் மற்றும் பல கால நெறிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலதேவதைகள் தாம் மனிதனுக்கு பொறுமை, சாந்தம், மனோ திடம், தீர்க அறிவிற்குரிய அம்சங்களைப் பெற்றுத் தருகின்றனர். இத்தகைய காலதேவதைகளே குரு ஸ்தானத்தில் இருந்து நற்காரியங்களை நடத்தித் தருகின்றனர்,

அப்படியானால் ராகுகால, எமகண்ட தேவதைகளின் பணி என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா! எவ்வாறு உயர் மின்சாரக் கம்பிப் பகுதிகளில் காவலுக்குள்ள பாதுகாப்புத் துறையினர் “இந்த எல்லைக்கு மேல் சென்றால் ஆபத்து!” என்று எச்சரிக்கை செய்கின்றார்களோ அதைப் போல எமகண்ட, ராகு கால மூர்த்திகள், இக்குறித்த நேரங்களில் அசுர சக்திகள் தலையெடுக்கும் நேரமாதலின் காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து இறைபூஜைகளில் மனதைச் செலுத் திடுக என்பதை அறிவுறுத்தும் முகமாகத்தான் இறைவனால் படைக்கப்பட்டுள்ளனர்.

எந்த சூட்சும உடலில் வாழ்கின்றீர்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்பது விதமான சரீரங்கள் உண்டு, பெரும்பாலும் இவை சூட்சும சரீர ரீதியாகவே (Mental bodies) செயல்படுகின்றன. அதாவது பூத உடல் ஒன்றாயினும் இதனுள் ஒன்பது சரீரங்களும் மாறி மாறிச் செயல் படுகின்றன. இதனால் தான் திடீரென்று பக்தி ஏற்படுவதும், மறைவதும், காம உணர்ச்சிகள் , குரோத உணர்வுகள் கொப்புளித்து மறைவதுமாக மனிதன் பலவித நிலைகளுக்கு ஆட்படுகின்றான்.

பூஜைகள் செய்யும்போது சாந்தமான சூட்சும உடலில் அவன் வசிக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய ஒன்பது சூட்சும சரீரங்களில் பூர்வ ஜன்ம புண்ணிய நிலை, கர்ம வினைகளுக்கேற்ப குறைந்தது ஒரு சூட்சும சரீரமேனும் மிகவும் புனிதமானதாக இருக்கும். அடிக்கடி தெய்வீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவோமானால் இத்தகைய புனிதமான சூட்சும சரீரங்களிலேயே வாழக் கூடிய புனித நிலையும் கைகூடும். இதுவே மஹான்களின் நிலை! அவர்களுக்கோ ஒன்பது புனித சரீரங்களிலும் ஒப்பற்ற இறைநிலைகள் கை கூடும்.

இந்த ஒன்பது சரீரங்களின்செயல்பாடும் நம்ம மனம் மூலமாகத்தான் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. “நல்லதோ, கெட்டதோ, மனம் கூறுவதையே மனிதன் செயல்படுத்துவதால் நம் சூட்சும சரீரங்களில் மிகவும் புனிதமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றுள் வாழ முயற்சிக்க வேண்டும். இதற்குத் தேவையான மனவலிமையைத் தரவல்லதே ஸ்ரீ சந்திர பகவானின் வழிபாடாகும் .

அருள் வாய்க்கின் அருள் வாக்காம்!

இத்தகைய ஒன்பது சரீரங்களில், குறித்த சில உபாசனைகள், பூஜைகள், வழிபாடுகள், ஹோமம், உபதேசங்கள், விரதங்கள் போன்றவற்றைச் செய்து வந்தால் ஒரு மனோலய சரீரமானது எதிர்காலத்தையும் எதிர் வரும் துன்பங்களையும் அறியும் தீர்க தரிசனத்தை ஓரளவு பெறுகின்றது. இதனையே “குறி சொல்லுதல்” என்றும் அருள் வாக்கு என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

அதாவது குறித்த நாட்களில், குறித்த நேரங்களில், அந்த குறிப்பிடத்தக்க, தீர்க தரிசன வல்லமை பெற்ற சூட்சும சரீரத்தில் நிலை கொள்வதால் பல உத்தம நிலைகளை அடையலாம்.

எவ்விதக் கட்டணமும் பெறாது, பணம் சம்பாதிக்கும் நோக்கமின்றி, சுயநலமின்றி, தியாக உணர்வுகளுடன் ஜீவன்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தெய்வீக ரீதியாகத் தீர்வளிக்கின்ற அற்புதமான நல்ல மனநிலையுடனும், புகழ், கௌரவத்திற்காக அன்றி, மக்கள் சேவைக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் ஆன்மீகப் பெருந்தன்மை உடையோர்க்கு அருள்வாக்கு தானாகவே தீர்க பலித சக்தியுடன் எப்போதும் மலரும். பலவிதமான பூஜா சக்திகளாலும், உபாசனைகளாலும் கூட இவ்வரிய சக்தியை சித்தியாகப் பெற்றிடலாம். ஆனால் சித்தியில் மட்டும் மனம் லயிக்கக் கூடாது. அருள் வாக்கிற்கும் மனநிலைக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு! மனதிற்கு அதிபதியே ஸ்ரீ சந்திரபகவான்! எனவேதான் பௌர்ணமியன்று அருள்வாக்கு சித்தி நன்கு கை கூடும்!

சந்திராஷ்டம தின விளக்கங்களில் புகுந்து பல தெய்வீக அம்சங்களைத் தழுவிச் சென்று விட்டோமல்லவா! தெய்வீகம் என்பது பிரபஞ்சத்திற்குள்ளும் அடங்காத அருட்பெரும் பொருளன்றோ!
எனவே சந்திராஷ்டம தினங்களின் போது ஸ்ரீ சந்திர பகவானைப் ப்ரீதி செய்யும் வகையில் அபிஷேக, ஆராதனை, பூஜை, ஹோம, அன்னதானங்களை நடத்திடுக!

சந்திராஷ்டம தின ஹோமங்கள்

ஆலயங்களில் ஸ்ரீ சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமை தோறும் அந்த வாரம், சந்திராஷ்டம் தினங்கள் அமைகின்ற ராசிக்காரர்களுக்காக ஸ்ரீ சந்திர ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் செய்து ஏழைகளுக்குப் பிரசாதமாக பசும் பாலை தானமாக அளிக்கின்ற வகையில் விசேஷ வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யும்படி அன்பர்களைப் பணிவன்புடன் வேண்டுகின்றோம், ஸ்ரீ சந்திர பகவானுக்குரிய தலங்களான திருவையாறு அருகே திங்களூர், மதுரை, திருப்பதித் தலங்களில் சந்திராஷ்டம தின வழிபாடுகள் மிகவும் விசேஷமானவை!

அரைமனதுடனா ஆண்டவனுக்குத் தோப்புக் கரணம் ?
நன்றாக, முழுமையாத், தோப்புக் கரணமிடுங்கள்
தோப்புக்கரணம் பிராணயாம தியான ஆசன சக்திகளைத் தரவல்லது!

காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற விநாயகருக்கு நன்றாக உட்கார்ந்து, நிமிர்ந்து, நின்று, உடல் வளைய நன்கு தோப்புக்கரணமிட வேண்டும், முன் நெற்றியின் இருபுறமும் விரல்களின் முட்டிகளால் குட்டிக் கொள்ள வேண்டும்.

பிள்ளையாரைப் பார்த்தவாறே தோப்புக் கரணமிடுகையில், அவர் திருமேனியின் மேல் வைத்த விழிகளை எடுக்காது, மேலும் கீழும் உடலை எழுப்பியபடி தோப்புக்கரணமிடுகையில் விநாயகரின் “நேத்ர அரவிந்த தீக்ஷண்ய சக்தியால்” நம் நெற்றிப் பட்டையில் உள்ள பஞ்சபூத அமிர்த நாடிகள் ஆக்கம் பெறுகின்றன.

விரல் கணுவின் ஒவ்வொன்றிலும் முன்புறமும் பின்புறமும் பல தேவதைகள் உறைகின்றன. குறிப்பாக விரல் முட்டிகளில் “கபாலவடி தேவதா”சக்திகள் நிறைந்துள்ளன.

ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தகைய தெய்வீக சக்திகள் நிறைய உண்டு. ஆனால் இதனை எவரும் பரிபூர்ணமாக உணர்வதில்லை. அரை குறையாக உணர்பவர்களும் சித்திகளின் பால் ஈர்க்கப்பட்டு இருக்கின்ற யோக, தெய்வத் தன்மையையும் இழக்கின்றனர்!
நெற்றிப் பட்டையில் அமைந்திருக்கின்ற கபால வடிநரம்புகள் செயல் பட்டால் தான் அபிஷேகஆராதனைகளின் போது தெய்வச் சிலைகளிலிருந்து வெளிப்படுகின்ற அற்புதமான தெய்வீக சக்திகளை கபால வடி நரம்புகளில் ஊறுகின்ற அமிர்தத் திவலைகளின் மூலமாகப் பெறமுடியும்.

பெளர்ணமி கிரிவலம், சூரிய, சந்திர கிரணங்களின் போது நெற்றியில் யோகப் பட்டை அணிதல், செவ்வாய் /வெள்ளி, புதன் /சனிக் கிழமைகளில் பெண்கள் / ஆண்கள் முறையாக எண்ணெய் நீராடுதல், கழுத்தளவு நீரில் நின்று மந்திர ஜபம், பக்தியுடன் சில பிராணாயாம, யோகாசனங்களைப் பயில்தல் போன்றவை மூலமாகவும் இவ்வமிர்த, சக்தியின் பலன்களைப் பெற்றிடலாம்.

தோப்புக் கரணமிடுதலில் பலவித சுவாச, யோகாசன, பிராணாயாம, தெய்வீக ரகசியங்கள் நிறைந்துள்ளன. எனவே அலட்சியமாக, நின்ற நிலையிலேயோ, ஏதோ சற்றே குனிந்து அரை குறையாக ஒருபோதும் தோப்புக் கரணமிடக் கூடாது.

பாண்ட்டோ, வேட்டியோ எதை அணிந்திருப்பினும், சற்றும் வெட்கப்படாது, பிறர் கேலி செய்வார்களோ, பார்த்து விடுவார்களோ என்று சங்கோஜப்படாது முழுமையாகத் தோப்புக் கரணமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் சுவாசம் சுழுமுனையில் (இரு நாசிகளிலும் தொடர்ந்து சீராகச்) செல்லும். இது மன அமைதியைத் தருவதோடு தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு/பிரச்னைகளுக்குத் தக்க முடிவையும் பெற்றுத் தரும்.

தோப்புக் கரண மஹிமையைப் பற்றிச் சித்புருஷர்களின் கிரந்தங்களில் பல வகைகளில் வர்ணிக்கின்றனர்..

ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருக்கரங்களால் குட்டுப் பட்டவரன்றோ அகஸ்தியர் பெருமான்! என்னே பெரும்பாக்யம் இது!

இன்றைக்கும் காலையிற் பொதிய மலையிலிருந்து புறப்படுகின்ற ஸ்ரீ அகஸ்திய மாமுனி பலகோடி லோகங்களுக்கும் சென்று திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரையின் ஆதிபீடமாக கயிலாயத் தில் சிவபெருமானையும்,  திருவேங்கடத்துறை கும்ப முனிப் பரம்பரை நாயகராக வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியையும் வணங்கி பூலோகத்தின் பல ஆலயங்களுக்கும் தினமும் சென்று இறை மூர்த்திகளைப் போற்றித் துதித்து வருகின்றார் என்பது பலகோடி யுகங்களாக இலங்கி வருகின்ற தெய்வத் திருநிகழ்ச்சி!

இவ்வகையில் ஸ்ரீ அகஸ்தியர் மஹாபிரபு நிதமும் பல திருத்தலங்களுக்கும், குறிப்பாக திருச்சி அருகே உள்ள ஈங்கோய் மலை, கொல்லி மலை , திருஅண்ணாமலை, கும்பகோணம் அருகே கணபதி அக்ரஹாரம், “ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்” என்று நாமத்தைத் தாங்கியுள்ள லிங்கமூர்த்திகளின் ஆலயங்கள் போன்ற தலங்களுக்குச் சென்று தரிசிப்பதோடு, இங்கெல்லாம் ஸ்ரீ அகஸ்திய சித்புருஷரே நன்கு தோப்புக் கரணமிட்டு ஸ்ரீ விநாயகரை வணங்குகின்றார் என்றால் சாதாரண மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்?

விநாயகர் சிலையின் கீழ், மூலாதாரப் பீடத்தில் மந்திர, யந்திரச் சக்கரங்களும், நவரத்தினங்களும் பதிக்கப் படுகின்றன அல்லவா! சக்கரங்களில் சலனச் சக்கரம், நிலைச் சக்கரம், அமிர்தச் சக்கரம் எனப் பல வகைகள் உண்டு. சலனச் சக்கரங்களில் எப்போதும் சில அபூர்வமான ஆகர்ஷண சக்திகள், ஈர்ப்பு சக்திகளைப் போல் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

நாம் தோப்புக் கரணம் இடுகையில் காற்று மண்டலத்தில் அசைவுகள் ஏற்படுகின்றன அல்லவா! மேற்கூறிய சலன சக்திகளை தோப்புக் கரணமிடுகையில் காற்றில் ஏற்படுகின்ற சலன அசைவுகளின் மூலமே பெற இயலும். இதற்காகவே நாக தீபம், சிம்ம தீபம், நட்சத்திர தீபம் எனப் பலவிதமான தீபாராதனைகளால் ஆலயங்களில் பீடங்களின் சலன ஜோதி சக்திகள் எழுப்பப் பெற்று அவற்றின் மூலம் நாம் பலவிதமான தெய்வ அனுகிரஹங்களைப் பெறுகின்றோம்.
.
எனவே தோப்புக் கரணமிடுகையில் நம்மைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் ஏற்படும் சலனங்களால், விநாயகச் சக்கர ஆகர்ஷண சக்திகள் ஆக்கம் பெற்று நம் உடலில் கூடுகின்றன. நெற்றிப் பட்டையில் குட்டிக் கொள்தலாலும் ஆக்கம் பெறுகின்ற கபால வடி நரம்புகளில் திரள்கின்ற பஞ்சபூத அமிர்தத் திவலைகளின் ஊற்றும் இத்தகைய சலன ஆகர்ஷண அம்சங்களால் நன்கு விருத்தியடைகின்றன. இதனால் தெளிந்த அறிவும், சாந்தமும் உருவாவதோடு பலவகையான காரியத் தடங்கல்களுக்குக் காரணமாக அமையும் தோஷங்களும் எதிர்வினைச் சக்திகளும் களையப்படுகின்றன.

மேலும் அதி அற்புத  “அயனச் சக்கரப்” பிரதிஷ்டைகளும் உண்டு . இவற்றைச் சுற்றி வரும் போது ஏற்படும் அயனச் சலனங்களினால் இச்சக்கரத்தின் தெய்வீக சக்திகள், வலம் வருவோருக்குக் கிட்டுகின்றன,

உதாரணம் :
1. காஞ்சி  காமாட்சி மேரு சக்கரம்
2. சென்னை - பூந்தமல்லி - வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இரு அற்புதச் சக்கரங்கள்
3. சென்னை  திருவொற்றியூர் ஸ்ரீ படம்பக்கநாதர் ஆலயத்திலுள்ள வட்டப் பாறை

அரசு, ஆல், வேம்பு, வில்வம், மகிழம் போன்ற “ஹோம சமித்து” வகையைச் சார்ந்த விருட்சங்களுக்கு இயற்கையாகவே இறையருளாக அயனச் சக்கர சக்திகள் மிகுந்துள்ளன. அதாவது ஆலயங்களிலுள்ள இம்மரங்களுக்கு தாமே அரைத்த மஞ்சள் பூசிக் காப்பிட்டு அடிப் பிரதட்சிணமாகவோ, சாதாரண நடையிலோ சுற்றி வருகையில் விஞ்ஞானத்தில் கூறப்படுகின்ற “Centripetal/centrifugal Force” போல் இதில்ஏற்படுகின்ற அயனச் சக்கர ஆகர்ஷண சக்திகளால் பலவிதமான அனுகிரஹங்கள் ஏற்படுகின்றன. பல தீய கர்மவினைகளை பஸ்மமாக்கும் இத்தகைய அக்னி சக்தி அயன சக்கரத்திற்கும் புனித விருட்சங்களைச் சுற்றி வரும் வழிபாட்டிற்கும் உண்டு.

சிதறு காயை உடைக்கும் போது கூட வாயு மண்டலத்தில் ஏற்படுகின்ற சற்றுச் சலனங்கள் /அசைவுகள் தாம், மூர்த்தியின் பீட மூலச் சக்கர சக்திகளை கிரஹித்து தோஷங்களை பஸ்மமாக்கி நற்காரிய சித்திக்கு வழி வகுக்கின்றன. எனவே இத்தகைய மஹிமை வாய்ந்த தோப்புக் கரண வழிபாட்டை, இனியேனும் அரைகுறையாக கால் முட்டி, அரை முட்டியாக உடம்பு வளைந்தும் வளையாமலும் செய்திடாது, பரிபூரணமாகச் செய்து முழுமையான பலன்களைப் பெற வேண்டுகிறோம்.

விஷ்ணுபதி

ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணியகாலம்
பிரதோஷம், ஏகாதசி போன்று விஷ்ணுபதி என்பது மிகவும் புனிதமான காலம்
நல்ல நேரமே கிடைப்பது அபூர்வமாக இருக்கையில் விஷ்ணுபதி புண்யதின புனித நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்க.

பெரும்பாலும் தமிழ் மாதப் பிறப்பை ஒட்டியதாக, மூன்று மாதத்திற்கு ஒருமுறை, வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் அமைவதே விஷ்ணுபதிப் புண்யகாலமாகும். பெறற்கரிய, அற்புத தெய்வீக சக்திகள் பொங்கித் ததும்புகின்ற நேரம். பிரம்ம முகூர்த்த நேரம், (விடியற்காலை 3-5 மணி), பிரதோஷ நேரம், மாளயபட்சம் போன்று மிகவும் புனிதமான புண்ய நேரமிது! இந்நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு. காரணம் இவ்விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தான் கோடானுகோடி யுகங்களாகத் தொன்று தொட்டு எத்தனையோ தெய்வாவதார் அனுபூதிகளும், இறைலீலைகளும் நிகழ்ந்து நமக்கு அருள் பாலித்திட, லட்சோப லட்சம் மஹரிஷிகளும், யோகியரும் உத்தமர்களும், புனிதத் துறவிகளும், (இப்புண்ய காலத்தில்) பெறுதற்கரிய தெய்வீகப் பேறுகளைப் பெற்றனர்.

வரும் விஷ்ணுபதி புண்யகாலம் திருக்கணித பஞ்சாங்கக் கணித முறைப்படி15.5.1998 வெள்ளிக் கிழமையன்று விடியற் காலை 2 மணி முதல் காலை 10.30வரை அமைவதால் இவ்வரிய விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் சகல வைணவத் தலங்களிலும் அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ ஏற்பாடுகளைச் செய்து பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயண னின் திருவருட் கடாட்சத்திற்குப் பாத்திரமாகும்படி வைணவப் பெரியோர் களையும் இறையடியார்களையும், பக்த கோடிகளையும் வேண்டுகின்றோம்.

பிரதோஷ மஹிமை, ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமை போன்ற ஆன்மீக நூல்கள் மற்றும் ஆன்மீக உரைகள், திருஅண்ணாமலையில் மாதாந்திரப் பெளர்ணமி அன்னதானம், இன்னோரன்ன அரிய இறைத் திருப்பணிகள்மூலம் தெய்வீகத் தொண்டாற்றி வரும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஸ்ரீ விஷ்ணுபதிப் புண்யகாலத்தின் மஹிமையைப் பரப்பிட அரும்பாடுபட்டு வருகின்றார்கள்.

அறிவின் உருவே ஆஞ்சநேயர்
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் சரிதம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! நைஷ்டிக்க பிரம்மச்சாரி! நான்கு வேதங்கள் உட்பட நவ வியாகரணங்களில் தேர்ச்சி பெற்ற பண்டிதர்! இசைப் பெருஞ்ஞானி! இறப்பிறப்பில்லா சிரஞ்சீவி! சிவாம்சம் நிரம்பியவர், ஸ்ரீராம் பக்தர்! மஹா வீரர்! கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்தி! பக்தியிற் கசிந்து பக்தர்களுக்கு அருள்பவர்!

அவரோ சிறு பிராயத்தில் மாருதியாய் அவனியை வலம் வந்தார்! அவர் தம் வீரத்தையும், மன உறுதியையும், பக்தியையும் மெச்சிப் பல தேவமூர்த்திகள் நேரில் வந்து வரங்களை அள்ளித் தந்தனர். பல மஹரிஷிகளும் இறை தரிசனத்திற்காகப் பலகோடி யுகங்கள் கடுந்தபசில் ஆழ்ந்திட, ஆஞ்சநேயரின் பக்தி, பராக்கிரமம், சத்ய குணங்கள், கருணை, வீரம், அறிவு, பிரம்மச்சரிய நெறிகளுக்காகத் தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளே ஓடோடி வந்து அதியற்புத வரங்களையும் தெய்வீக சக்திகளையும் வேத, மந்திர, யந்திர, தந்திர சக்திகளையும் தாமே வரங்களாகத் தந்தருளி ஸ்ரீ ஆஞ்சனேய மூர்த்திக்கு அருள்பாலித்தனர்.

ஞான பாலனான ஆஞ்சநேயருக்கு வேத வியாகரண, மந்திரங்களைப் புகட்ட விரும்பினர் அவர் தம் தாய் தந்தையரான அஞ்சனாதேவியும் கேசரியும். இவ்வாறு அவர்கள் எண்ணிய உடனேயே ஸ்ரீ சூர்ய நாராயண சுவாமி அங்கே எழுந்தருளி, ஆஞ்சநேயருக்கு வேத அறிவு புகட்டும் பணிக்குத் தன் இசைவைத் தெரிவித்தார். சூரியனோ தினமும் பலகோடி லோகங்களுக்கு செல்பவர். அக்னிக் கோளமாய் விளங்கி எவரும் அண்ட இயலாத கடும் நெருப்பு மண்டலமாய் விளங்குபவர் ! அவருடைய வேகமோ அபரிமிதமானது! கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சோப லட்சம் மைல்களைக் கடந்து விடுவார்!

மேலும , ஒரு வினாடி நேரத்தில் எத்தனையோ கோடி மந்திரப் பொழிவுகளும், வியாக்யானங்களும், உரைகளும் ஆதித்யனாம் சூரிய பகவானின் திருவாக்கிலிருந்து பொழியும்!

ஆனால் அதைக் கேட்போர்க்குத் தான் அவற்றை விரைவில் கிரஹித்து, அறிந்து உய்த்து, உணர்ந்து தெளியும் ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அனைத்துத் தகுதிகளையும் தெய்வ கடாட்சமாய்ப் பெற்றிருப்பவரே ஆஞ்சநேயர் என்பதை சூரியன் அறிந்திருந்மையால்தான் தாமே முன் வந்து ஸ்ரீ சூர்யநாராயண சுவாமியாய் வேதங்களைப் புகட்டிட முன்வந்தார். ஆனால் ஆதித்யனுக்கு, ஒரே ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

என்ன அது?

“தானோ தினமும் அதிவிரைவில் பலகோடி அண்டங்களையும், கண்டங்களையும், லோகங்களையும் கடக்க வேண்டியதுள்ளது. இந்த வேகத்தைக் குறைக்கவும் கூடாது! ஏனெனில் அஸ்தமன நேரத்திற்குள் அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஜீவித ஒளிச் சக்தியைத் தாம் தந்தாக வேண்டும்! ஆஞ்சநேயரால் இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா?”

எனினும் அனைத்தும் பரம்பொருளின் விருப்பமே என்று தெளிந்து ஆஞ்சநேயரை அழைத்தார்!

அவரோ சூரிய பகவானின் கருத்தைப் புரிந்து கொண்டவராய் ஒரு விளக்கம் தந்தார். சூரிய பகவான், விடியற்காலையில் தன் சஞ்சாரத்தை உதயமலை (உதயகிரி) என்னும் விண்ணுலக மலைப் பகுதியிலிருந்து தொடங்கி அஸ்தமன மலை (அஸ்தமன கிரி) என்னும் பகுதியில் மாலைப் பொழுதை முடிப்பார், ஒரு பகுதியில் உதயமெனில் மறுபகுதியில் அஸ்தமனமாக நம் பூமிக்குத் தோன்றினாலும் இதில் நம் மனித அறிவாற் புரிந்துகொள்ள முடியாத பல தெய்வீகப் புதிர்கள் உள்ளன.

பூமி ஒன்றல்ல, இரண்டல்ல. இதைப் போல நிறைய பூலோகங்கள் உள்ளன. சூரியனிலும் கோடானு கோடி சூரிய லோகங்கள் உள்ளன. இவையெல்லாம் கேட்பதற்குக் கட்டுக்கதை போல் நம் மனித அறிவிற்கு அப்பாற்பட்டு அமைவதால் மஹான்களும், சித்புருஷர்களும் தம்மை அண்டி, நம்பி, சரணடைவோர்க்கே இவ்வரிய ரகசியங்களைப் புலப்படுத்துகின்றனர். தொல்பொருள் விஞ்ஞான ஆய்வு என்ற பெயரில், தேவையில்லாத விஞ்ஞான ஆராய்ச்சிகளால் இன்று சக்தி வாய்ந்த தெய்வ மூர்த்திகளின் சிலா ரூபங்களெல்லாம் அபிஷேக ஆராதனையின்றிக் கிடக்கின்றன. இதுதான் விஞ்ஞானம் தரும் பரிசு! நம் புராணங்கள், இதிகாசங்களெல்லாம் விஞ்ஞானத்திற்குப் புதிர்களாக பல அற்புதமான விஷயங்களைத் தருகின்றன! ஆனால் யார் இதனை உத்தம பக்தியுடன் புரிந்துகொள்கின்றார்கள்!
“எது விஞ்ஞானத்தின் எல்லையோ அங்குதான் மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பப் பாடமே துவங்குகிறது” என்பது சித்புருஷர்களின் வாக்கு! இதன் உட்பொருளென்ன? விஞ்ஞானமும் இறைவனின் படைப்பே! எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, விஞ்ஞானம் மூலமாக ஒவ்வொரு தெய்வீக அம்சத்தையும் ஆராய முற்படுவது மடமையாகும்.
சூரிய பகவானுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து அவர் செல்லும் திசையிலேயே விரைந்து சென்று அனைத்தையும் கற்றார் ஆஞ்சநேயர்! சூரிய நாராயண சுவாமியே வேதங்களின் பிறப்பிடம்! வேத ஊற்று! உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள வேதங்களையும் எழுதாக் கிளவியாக மறை பொருளாக உள்ள வேத மந்திர சப்தங்களையும் அனைத்தையுமாக ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ சூரியபகவான் போதித்திடவே ஆஞ்சநேயர் “நவ வியாகரண” பண்டிதரானார். அதாவது ஒன்பது விதமான வியாகரணங்களில் தேர்ச்சி பெற்றவராய், அறிவின் சிகரமாய் விளங்கினார் ஸ்ரீ ஆஞ்சநேயர்!

பலவிதமான முக பாவனைகளோடு சூரிய பகவானின் வேகத்திற்கு ஈடு கொடுத்து,

1. சில வேத பாடங்களை, சூரிய பகவானுக்கு இணையாகப் பறந்த நிலையிலும்

2. சில வேதாப்யாசங்களை சூரியனுக்கு எதிர்முகமாக நின்ற நிலையிலும் - இவ்வாறாக  ஐந்துமுக நிலைகளில் அவர் பாடம் கற்ற பணிவன்பையும், உதயமலையில் ஒரு பாதத்தையும் அஸ்தமன மலையில் மற்றொரு பாதத்தையும் வைத்தவராய், தன்னையுமறியாது விஸ்வரூபம் கொண்டு தன்னை விடப் பன்மடங்கு வேகமாய் விரைந்து செல்லும் ஆஞ்சநேயரின் அற்புத தெய்வீக சக்தியைக் கண்டு வியந்தார் சூரிய பகவான்!

இவ்வாறாக தெய்வ மூர்த்திகளே வியந்து போற்றுமளவிற்கு கல்வி, கேள்வி, அறிவு, வீரம், நைஷ்டிக பிரம்மச்சர்யம், மந்திர சித்தி, பணிவு, அடக்கம், பக்தி, தேஜஸ் போன்று பல தெய்வீக அம்சங்களில் மிளிர்ந்து ஒளிர்ந்த ஆஞ்சநேயரை சகல தேவாதி தேவ மூர்த்திகளும் போற்றினர்.

சிறுவனான ஆஞ்சநேயருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்த சூரிய பகவான் அஞ்சனா தேவியிடம் “அம்மா! தங்கள் திவ்ய புத்ரனும் தெய்வ மூர்த்தியுமான ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு யாமறிந்ததைக் கற்றுக் கொடுக்கும் பெரும் பாக்யத்தைப் பெற்றோம். ஸ்ரீ ஆஞ்சநேய சரிதத்தை நோக்குங்கால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு உறுதுணையாக, ஸ்ரீராமபக்தனாக பரிமளிக்கவிருக்கின்ற அற்புதமான தெய்வீக நிலையை தீர்க தரிசனமாகக் காண்கின்றோம். ஆஞ்சநேயர் அறிய வேண்டிய ஒரே ஒரு கலை பாக்கியுள்ளது ! அதுவே பிரசண்ட வேத புவனக் கலையது!

அஷ்டதிக்குகளில் எந்த இடத்தில் எது எங்கு எப்போது நடக்கும், எந்தப் பொருள் எத்திசையில் எங்கிருக்கிறது போன்ற பல அரிய அம்சங்களைத் தழுவிய வேத தந்திரமது ! சர்வ வேதங்களின் சாராம்சமது! யாம் இதனை ஆஞ்சநேயருக்குக் கற்றுத் தந்திடலாம். ஆனால் மாருதிக்கு முனிவர்கள் அளிக்கின்ற சாபமொன்றின்படி “தன் சக்தியைத் தானே அறியும்” ஆற்றல் சில காலத்திற்கு மறைத்து வைக்கப்படுமாதலின், யாம் அதனைக் கற்றுக் கொடுப்பினும் பிரசண்ட வேத புவனக் கலை பயனில்லாமற் போய் விடும். மேலும் இதனை மறு முறை உபதேசித்தலாகாது என்ற கட்டுப்பாடும் உண்டு.

எனவே பிரசண்டதந்திரக் கலையை ஆஞ்சநேயர் இறையருளால் அறிந்திட வழிமுறையொன்றுண்டு!

பூலோகத்தில் எண்திசை தேவமூர்த்திகள் இறைவனை வழிபடுகின்ற, அதாவது திசாதேவதைகளின் சக்தி மிகுந்த இடமொன்று உண்டு. யோக நிலையில் தான் அனைத்து திக்குகளும், திசைகளும் அடங்குகின்றன. பரம் பொருளே யோகத்தில் அமர்ந்த தலமிது. எண்திசைகளை அறியும், அடக்கும் சக்திகளோடு எண் திசைகளிலும் உள்ள பொருட்களையும் ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிய வல்ல யோக சக்திகள் நிரம்பிய திருத்தலமிது! அங்குதான் இறைவனே யோக நிலையில் கூடியுள்ளான். எனவே ஆஞ்சநேயர் தம் தெய்வீக அறிவு பரிபூர்ணமடைய, பிரசண்ட வேத புவனக் கலையை அறிந்து தெளிந்திட இத்தகைய அற்புதமான தலத்திற்குச் சென்று இறைவனை வழிபடவேண்டும்.

சூரிய பகவானின் அருளுரையிது.

இத்திருத்தலமே சென்னை - வேலூர் சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திசைமுகன்சேரி திருத்தலமாகும். திசைமுகச்சேரி என்றும் தியமுகச்சேரி என்றும் வழக்கில் மருவியுள்ளது! ஐயன்பேட்டைச்சேரி அருகே உள்ளது. அதி அற்புதமான பெருமாள் தலம். மூலமூர்த்தி ஆதிகாலத்தில் பரமபத நாதர் எனப்பெயர் கொண்டிருந்தார். வைகுண்ட நாதராகவும் தற்போது தபோவன நாதராகவும் அருள் பாலிக்கின்றார். ஆதிகாலத்தில் ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஐந்து தலைகளுடன் விளங்கியபோது இவ்விடத்தில் தான் வேதப்ரம்மமாக சர்வேஸ்வரனை நோக்கி யோக தவம் பூண்டார். பரம்பொருளே யோகநிலை பூண் டு பரமபத நாதராக அருள்புரியும் அற்புதத் தலம். இத்திருத்தலத்தில்தான் ஸ்ரீ ஆஞ்சநேய மஹாபிரபு யோக நிலை பூண்டு பிரசண்ட வேத புவனக் கலையைப் பரிபூர்ணமாக உணர்ந்து அறிவின் சிகரமாய்ப் பிரகாசித்தார்.

இவ்வாறாக ஆஞ்சநேயர் இங்கு யோக தவம் பூண்டு பிரசண்ட வேத புவனக் கலையை உயத்துணர்ந்த புனித நேரமே விஷ்ணுபதி புண்யகாலமாகும்.

எனவே வரும் விஷ்ணுபதி புண்ய கால விசேஷ நாளில் இத்திருத்தலத்தில் பெருமாளுக்குத் (கோதண்டராமர், ஆஞ்சநேயர் உட்பட) தைலக் காப்பிட்டு, திருமஞ்சன அபிஷேக ஆராதனைகளுடன் துதித்து வணங்கி, ஏழை எளியோர்க்கு (தெளிந்த அறிவுக்குரிய, மூளைக்குச் சக்தியைத் தரக்கூடிய) பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை கலந்த உணவு வகைகளை தானமாக அளித்துவர

1. பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர்

2. புத்தி மந்தமாக உள்ளோர் தெளிவுபெற அவர்களோ/அவர்கள் சார்பிலோ இங்கு வழிபாடுகளை முறையாகச் செய்துவர நல்ல பலன் கிட்டும்

3. நல்ல கல்வி, உழைப்பு இருந்தும் வாழ்க்கையில் முன்னேற இயலாதோர்க்குத் தக்க நல்வாய்ப்புகள் கிட்டும்.

4. பல விதமான கெட்ட வழக்கங்களுக்கு ஆட்பட்டோர் எட்டுத் திக்குளிலும் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்குப் பிரயாசித்தமாக இங்கு எட்டுத் திக்குகளிலும் தக்க மந்திரங்களுடன், அஷ்டதிக்கு பாலகர்களுக்குரிய மந்திரங்களை ஓதி வருதல் வேண்டும். எட்டு விதமான உணவு வகைகளை (இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, நீர்வகை - மோர், பானகம், மாவு வகை - இட்லி, தோசை) தானமாக அளித்து வந்தால் நல்ல பிராயசித்த வழிகள் கிட்டும்.

5. சமையலறை - தென் கிழக்கு படுக்கையறை - வடகிழக்கு - என வாஸ்து சாஸ்திரங்களின் படி எட்டு திசைகளிலும் வீட்டுப் பகுதிகள் முறையாக அமையாவிடில் பல வித தோஷங்கள் ஏற்பட்டு சந்ததியின்மை, வியாபார நஷ்டம், வேலையிழத்தல், துர்மரணம், அடிக்கடி நோய் வாய்ப்படுதல்/ விபத்துகள் ஏற்படுதல் போன்றவை ஏற்படும். இவற்றிற்குப் பரிஹாரமாக, திசைதேவதா மூர்த்திகளின் சக்தி மிகுந்த திசைமுகச்சேரி போன்ற தலங்களில் ஆலயத்திற்குத் தேவையான திருப்பணிகளைச் செய்து வருதல் வேண்டும்.

விஷ்ணுபதி புண்யகாலத்தில் இங்கு ஆஞ்சநேயருக்கு எட்டுவிதமான கனிகளால் மாலை சார்த்தி வறியோர்க்குத் தானமாக அளிப்பதால் பிள்ளைகளுக்குக் கல்வியறிவு விருத்தியாகும்.

ஒப்பற்ற வைணவத்தலம்! விஷ்ணுபதி புண்யகாலத்தில் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஐயப்ப விரதம்

ஸ்ரீ ஐயப்ப விரத நெறிமுறைகள்
கடந்த சில இதழ்களாக ஸ்ரீ ஐயப்ப விரத முறைகளைப் பற்றிய விளக்கங்களை அளித்து வருகின்றோம் அல்லவா! ஸ்ரீ ஐயப்ப வழிபாடு நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருவதைக் கண்டு ஒரு புறம் பேரானந்தம் அடைந்தாலும், விரத பங்கங்களும் அதிகரித்து அவரவர்க்குத் தோன்றியபடியெல்லாம் விரதமுறைகளைக் கையாள்கின்ற தவறான போக்கும் மிகுந்து வருவது கண்டு வேதனையுறுகின்றோம்.

எவராயினும் சரி, சாதி, சமய வேறு பாடின்றி முறையான விரத முறைகளைக் கடைபிடித்தே சபரிமலை யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீ ஐயப்பனின் அவதார மஹிமை பல விசேஷத் தன்மைகளைக் கொண்டவை. முறையான விரதங்கள் கூடிய தரிசனம் தான் ஸ்ரீ ஐயப்பனுக்கு ப்ரீதியைத் தரும் என்பதை உணர்ந்து கொள்க.

பம்பை நதி

விரத மஹா மூர்த்தியின், சகல லோகங்களிலும் போற்றப்படுகின்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்கான பல விரத நெறிகளில், எவருக்கும் விதிவிலக்கு கிடையாது! இதனால் தான் வனங்களின் நடுவே ஸ்ரீ ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றான், பக்தியே பெரிதென, உயிரையுந் துச்சமாக மதித்து, வனவிலங்குகளும், நாகங்களும் ஆர்ப்பரிக்கின்ற காடுகளைக் கடந்து ஸ்ரீ ஐயப்ப தரிசனம் பெற வேண்டுமென்றால் எத்தகைய வைராக்ய சித்தாந்தத்தையும், மன உறுதியையும், சகிப்புத் தன்மையையும், ஆழ்ந்த நம்பிக்கையையும் உத்தம பக்தியையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளின் தவத்தாலும் யோகத்தாலும் பெறக் கூடிய மனோ வைராக்யத்தை, முறையான விரதங்களுடன் கூடிய ஜோதி தரிசனமும், ஸ்ரீ ஐயப்ப தரிசனமும் சில ஆண்டுகளிலேயே பெற்றுத் தந்துவிடும்! 

ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் மாதாந்திரத் தீட்டு எனப்படும் பெண்களுக்கான மாத விலக்கு நாட்களுக்கான தீட்டுப் பொருட்களின், உடைகளின் சம்பந்தம் முற்றிலும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். சத்ய வசனம் எனப்படும் பொய் கூறாமை கூடிய விரதமே சிறப்புடையது. ஏனென்றால் ஒரு மண்டலம் (48 நாட்கள்) பொய் கூறாது உண்மையே பேசி ஏதாவதொரு மந்திரத்தை ஓதி வந்தால் கூட காரிய சித்தி எளிதில் கை கூடுகின்றது. எனவே ஒரு முறை கடுமையான விரத நெறிகளுடன் ஸ்ரீ ஐயப்ப தரிசனம் பெற்றால் இதனால் கிட்டும் அருட்சக்தியானது வாழ்க்கையின் எத்தனையோ கோணங்களிலும், பல்வேறு நிலைகளிலும், பல கட்டங்களிலும் பயன்படும்/உதவி புரியும். மேலும் இவ்வருட் புலன் தான் ஆன்மீக வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும். ஸ்ரீ ஐயப்ப வழிபாடானது கலியுகத்தில் பிறவிப் பெரும் பிணியைத் தீர்க்க வல்ல மஹிமை வாய்ந்த விரத வழிபாடாகும்.

மூலிகைகள் நீக்கும் தோஷங்கள்

ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பலவிதமான மூலிகா பந்தன வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. மூலிகைகள் மாமருந்தாக இருப்பதோடு மட்டுமின்றி காத்து, கருப்பு, தீட்டு தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்லவை, பத்துபடி என்ற பரிபாஷைப் பெயரையுடைய மூலிகையொன்றுண்டு. இது எத்தகைய தோஷங்களையும் தீட்டுகளையும் நீக்க வல்லதாகும். ஆனால் இத்தகைய மூலிகை ஸ்நான முறையானது அவரவர் உடலில் உள்ள பித்த நாடி வகையைப் பொறுத்ததாகும், சிலேத்தும் நாடி, பார்சுவ நாடி, வாத நாடி, பித்தநாடி, மத்யம் நாடி என பல வகை உடல் வாகுகள் உண்டு, அக்காலத்தில் சித்த வைத்தியர்கள் பரம்பரை பரம்பரையாகத் தம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மாசு படாத, ஒரு பட்டுத் துணியை மணிக் கட்டின் மேல் விரித்து நோயாளியின் உடல் நாடி வகையை அறியும் கலையில் சிறந்திருந்தனர்.

ரஸாஞ்ஜனம், பத்துபடி, விழுக்கொன்றை, மரமஞ்சள், ஹரித்ரா மஞ்சள், முஞ்சைப் புல், நீர் ஆலம், வெண் புரசு, பாரிஷம், நந்தி விருட்சம், விஸ்வ துளசி போன்ற பல விதமான மூலிகைக் கஷாயம் கலந்த நன்னீரில் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் தினமும் நீராடி வந்திடில் வெளியில் பட்டுவரும் சகல விதமான தீட்டுகளும் தோஷங்களும் நீங்கும். ஆனால் அவரவர் உடல் நாடியைப் பொறுத்து அவரவருக்குரிய மூலிகா பந்தன கஷாயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிடில் உடல் சீதளமோ, உஷ்ணமோ கூடிவிடும். இதற்குத்தான் ஒரு சற்குருவின் அருள்வழி அவசியமாகிறது.

விரத நாட்களில் அனாவசியமாக வெளிச் செல்வதால் கட்டுப்பாடில்லாத பஞ்சேந்திரிய போக்கினால் விரத பங்கங்கள் ஏற்படுவதோடு மன சஞ்சலங்களினால் பூஜா சக்திகளும் குறைந்து தீட்டுகள் சம்மந்தப்பட்ட சாபங்களும் தொற்றிக் கொள்ளும். இதைத் தடுக்கவே அவரவர் ராசிக்குரிய கிரஹ நாதருக்கான மூலிகா சமித்துக் குச்சியை காசிக் கயிறுடன் கட்டிக் கொள்வர். (உதாரணம் - சுக்கிரனுக்குரிய அத்திக் கட்டை, குருவிற்குரிய - அரசங்குச்சி, சனிக்குரிய - வன்னி etc)

ஸ்ரீஐயப்ப சுவாமி திருக்கோயில்
ஆரியங்காவு

சென்ற இதழில் ஸ்ரீ ஐயப்ப விரதத்திற்கான உணவுக் கட்டுப்பாடு முறைகளைப் பற்றி விளக்கியிருந்தோமல்லவா! ஞாயிற , திங்களுக்குரிய உணவு முறைகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன,
மேலும் பகல், இரவுக்குரிய நேரங்களும் கால அம்சங்களும் அந்தந்த கிழமைக்கேற்ப மாறுபடுவதால் அந்தந்த நாளுக்குரிய ஒளிப் பிரகாச, இருட் பிரவாக அம்சங்களையும் கருத்தில் கொண்டு உணவு முறை வகுத்துத் தரப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமையன்று மதிய உணவாக அன்னமுடன் அரைக் கீரை, தயிர், இரவில் கறந்த பசும்பாலில் சிறிது மஞ்சள் சேர்த்து அருந்திடலாம்.

செவ்வாய்க் கிழமையன்று பொதுவாக ராஜஸ குணம் சற்று தலை தூக்கி நிற்கும். அதாவது கோப, குரோத மற்றும் பகைமை, காம உணர்வுகள் சற்று மிகுந்திருக்குமாதலின் மிதமான சாத்வீக உணவே, இன்று நற்பண்புகளை நிலை நிறுத்தித் தரும்.

இன்று சிகப்புக் கீரைத் தண்டுடன் துவர்ப்புச் சுவையுள்ள பருப்புப் பொடியினை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். செவ்வாய்க்குரிய அங்காரகச் சுவையாய் துவர்ப்பு விளங்குவதால் இச்சுவை கலந்த உணவே இன்று சிறப்புடையதாகும்,

புதன் கிழமையானது வாத நாடியைச் சேர்ந்த செளம்ய குணங்களை உடையதாகும். இன்று மதிய உணவாக அன்னத்துடன் மிளகுப்பொடி, முருங்கைப் பொறியல் மற்றும் தயிரைச் சேர்த்துக் கொள்ளலாம். இன்று ஐயப்பனுக்குரிய ஹோமத்தை நடத்தி புதன் கிரஹத்திற்குரிய நாயுருவி சமித்துக்களுடன் ஹோமம் செய்வது சிறப்புடையதாகும். பொதுவாக புதன் கிழமை ஹோமம் புனிதத்தைப் பெருக்கும்.

மழித்தல், கழித்தல் விதிகள்!

பலரும் விரதம் முடிந்து ஸ்ரீ ஐயப்ப மலைச் சென்று திரும்பிய உடனேயே முடியை வெட்டி தாடி மீசையை மழித்து விடுகின்றனர். மீசையை மட்டும் அழகாகக் கத்தரித்து வைப்போரும் உண்டு! பரணி, கார்த்திகை, திருவாதிரை, கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், மகம், விசாகம், பூரம், அவரவர் ராசிக்குரிய சூன்ய திதிகளிலும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் முடி, மீசை, தாடியினை மழித்தல் கூடாது.

ஆரியங்காவு திருத்தலம்

ராசி சூன்ய திதிகள்

மேஷம் சஷ்டி
ரிஷபம் சதுர்த்தி, திரயோதசி
மிதுனம் பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம் சப்தமி
சிம்மம் திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி
கன்னி பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம் பிரதமை, சதுர்த்தசி
விருச்சிகம் நவமி, தசமி
தனுசு துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம் பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம் சதுர்த்தி
மீனம் துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

மேற்கண்ட, அந்தந்த ராசிக்குரிய திதி சூன்ய நாட்களில் அனைத்து விதமான நற்காரியங்களையும் குறிப்பாக திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். தற்கால சுப முகூர்த்த நாட்களில் மாப்பிள்ளை, பெண்ணின் ராசிகளுக்கான சூன்ய திதி நாட்களை கவனிக்காது விட்டு விடுகின்றார்கள். இது தவறானதோடு, திருமண வாழ்க்கையையே பாதிக்கக் கூடும் என்பதையும் உணர்தல் வேண்டும்.

மேலும் விரத நாட்களில் மட்டும் பீடி, சிகரெட், புகையிலை, மது எதையும் தொடுவது கிடையாது என்று பலரும் கூறுவர். ஒரு முறை, முறையான விரதமிருந்து ஸ்ரீ ஐயப்ப தரிசனம், ஜோதி தரிசனம் பெற்ற பின் எந்த விதமான தீய வழக்கத்தையும் அதன் பின்னர் தொடரக் கூடாது. தொடர்ந்தால் அடுத்த முறை விரதமேற்பதற்குரிய தகுதியை இழக்கின்றனர்.

“என் இஷ்டப்படி கெட்ட வழக்கங்களுடன்தான் வாழ்வேன். வேண்டுமானால் விரதத்தின்போது ஓரளவு கட்டுப் பாடாக இருக்கின்றேன்” - என்று எண்ணினால் இறைவனிடமே பேரம் பேசுவதுபோல் கேலிக் கூத்தாகி விடும்.
“ஒரு முடி ஹரியே
ஒரு முடி ஹரனே
இருமுடி தாங்கி – ஹரி ஹர
ஜோதியைக் காண்போம்!”

பன்றியின் படைப்பு

பன்றியைப் பற்றி சில ஆன்மீக விளக்கங்கள்
இறைவனின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் காரண காரியங்கள் உண்டு. பன்றியை வெறுக்காதீர்கள்! இறைவனே பன்றி ரூபத்தில் வராக அவதாரம் எடுத்துள்ளாரன்றோ!

பல குடும்பங்களிலும் குழந்தைகளைப் பன்றியென்றோ எருமையென்றோ திட்டுகின்ற பழக்கம் நிலவி வருகின்றது. தயவுசெய்து இத்தகைய தவறான பழக்கத்தை உடனடியாக நிறுத்தி விடுங்கள்! ஏனென்றால் பன்றியினுடைய சகிப்புத் தன்மையையோ எருமையினுடைய பொறுமையையோ மனிதன் இன்னமும் பெறவில்லை. இந்நிலையில் அவனுக்கு எந்த பிராணியையும் எதனுடனும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை!

நாம் ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அடிக்கடி வலியுறுத்தி வருவதுபோல, காரண காரியங்களின்றி எந்த ஜீவனும் உலகில் படைக்கப்படுவதில்லை! ஒவ்வொரு ஜீவனின் பிறப்பிற்குப் பின்னும் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்கள் நிறைந்துள்ளன. இவ்வகையில், சர்வேஸ்வரனாம் பெருமாளே பன்றியின் ரூபத்தில், ஸ்ரீவராக மூர்த்தியாய், அவதாரம் பூண்டு நமக்கு அருள்பாலிக்கின்றார் என்றால் பன்றியின் பிறப்பிலும் தெய்வீக மகத்துவங்கள் உண்டுதானே!

பன்றியானது கழிப்பிடங்களிலும், சாக்கடைகளிலும் மல ஜலம் நிரம்பியுள்ள இடங் களிலும் வசிப்பதால் அது அருவருக்கத்தக்க பிராணியாக நம் மனதில் வேரூன்றி நின்று விட்டது. ஆனால் மனிதகுல நன்மைக்காக, பன்றியானது எத்தகைய தியாகங்களை ஏற்று வாழ்கின்றது என்பதை ஆன்மீகத்தில் தான் அறிந்து உணர முடியும்!

மலத்திலிருந்துதான் கோடிக் கோடியான நோய்க் கிருமிகள் பரவுவதாக இன்றைய மருத்துவ விஞ்ஞானம் பறை சாற்றுகின்றது. ஆனால் பன்றியானது இத்தகைய வெளிமலங்களை இன்றும் உண்டு வருவதால்தான் நம்முடைய மனித சமுதாயமானது, பலவித மான நோய்க் கிருமிகளிடமிருந்து காக்கப்பட்டு வருகின்றது என்பது நாம் அறியாத ரகசியமாகும். ஆனால் பன்றியிடமிருந்துதான் “Brain Fever Encephalitis” பரவுவதாக விஞ்ஞானம் கூறுகின்றது. எந்த விஞ்ஞானமானது மலஜலாதிகள்தாம் கோடிக் கணக்கான நோய்க் கிருமிகளைப் பரப்புவதாகக் கூறுகின்றதோ அவற்றையேதான் உண்டு பன்றி ஜீவனம் நடத்துகிறதென்றால் பன்றியின் அபூர்வ உடலமைப்பை, பிறப்பு ரகசியத்தை எவ்வாறு விஞ்ஞானத்தால் விளக்க முடியும்?

பஞ்சாங்கத்தில் கீழ் நோக்கு நாட்கள் என்று சில நாட்களைக் குறித்திருப்பார்கள். இக் கீழ்நோக்கு நாட்களில், ஒவ்வொரு பன்றியின் உடலிலும் “வராஹ பூஷண” சக்தி என்ற நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகின்றது. இந்த எதிர்ப்புச் சக்தியின் மூலமாகத்தான் பன்றியானது எத்தனையோ கழிப்பிடங்களிலும், சாக்கடையிலும் புரண்டு எழுந்தாலும் கூட, எத்தகைய கடுமையான நோய்க் கிருமிகளும் அதனை அணுகா வண்ணம், இத்தகைய வராஹ பூஷண சக்தி அதற்கு ஆன்மீக ரீதியாக உதவி புரிகின்றது. மேலும் இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தில் பலவிதமான குடற் புழுக்களை வெளியே தள்ளும் முறைகளில் தான் அதனுடைய மருந்துகள் அமைந்துள்ளன. ஆனால் அக்குடற் புழுக்களை மலம் மூலமாக உண்ணும் பன்றியானது அவற்றை நசித்து விடுவதோடு, நோய்க் கிருமிகளையும் அழித்து விடுகின்றது.

பன்றியினுடைய குணாதிசயங்களை சற்று உன்னித்துக் கவனித்துப் பார்த்தீர்களானால், சில அபூர்வமான விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும். சில சமயங்களில் பன்றியானது பூமியை நன்றாகத் தோண்டி பூமியின் அடியிலிருந்து சில அபூர்வமான கிழங்கு வகைகளைக் கடித்துச் சுவைத்து உண்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம். இக்கிழங்குகளுக்குத் தாம் நோய்க் காப்பு சக்தி மிகவும் அதிகமாக இருக்கிறது. இத்தகைய அபூர்வமான மூலிகைக் கிழங்குகளைப் பன்றியினால் மட்டும் தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

மேலும் சாக்கடைகளிலும், கழிப்பிடங்களிலும் சேர்கின்ற அசுத்தங்களினால் ஏற்படுகின்ற பெரும்பான்மையான நோய்க் கிருமிகளைப் பன்றியானது அதிலே புரண்டு வசிப்பதால் அவற்றைத் தம்முடைய உடலில் ஏற்கின்றது. மேலும் பன்றியின் தோலில் உள்ள வராஹ பூஷண சக்தியினாலும் அதனுடைய உடலில் அமைந்துள்ள இயற்கையான வராஹ ஜீவித சக்தியாயினாலும் இத்தகைய நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் இவை மேலும் பல உயிரினங்களுக்குப் பரவுவது தடுக்கப் படுவதால் மனித சமுதாயமே பலவிதமான நோய்க் கிருமிகளிடமிருந்து காக்கப் படுகின்றது என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

ஸ்ரீவராக மூர்த்தி
பெருமாள்மலை துறையூர்

தன்னுடைய வராஹ பூஷண சக்தியையும் வராஹ ஜீவித சக்தியையும் பெருக்கிக் கொள்வதற்காகத் தான் பன்றியானது கீழ் நோக்கு நாட்களில் குறிப்பிட்ட சில மூலிகைக் கிழங்குகளைக் கடித்து உண்கின்றது.

சர்வேஸ்வரனுடைய அடி முடிகாணும் புராண வைபவத்தில் ஸ்ரீ நாராயண மூர்த்தியானவர் வராஹ அவதாரம் பூண்டு பூமியைத் துளைத்துச் சென்றாரல்லவா, அப்போது அவருடைய திருமேனி பட்ட இடங்களிலெல்லாம் இத்தகைய பூமிக் கிழங்குகள் முளைத்தன, சர்வேஸ்வரனாம் ஸ்ரீ வராஹ மூர்த்தியின் திருமேனி பட்டதால் தான் இப்பூமிக் கிழங்குகள் பல அபூர்வமான மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளன. இதிலுள்ள தெய்வீக சக்தியானது பலவிதமான நோய்களுக்கும் மாமருந்தாக அமைகின்றது.

அக்காலத்தில் சித்த மருத்துவர்கள் தம்முடன் ஒரு சிறிய பன்றிக் குட்டியையும் குரங்குக் குட்டியையும் அழைத்துச் சென்று தான் மூலிகை வனங்களில் கிழங்கு வகை மூலிகையைத் தேடுவார்கள். ஏனென்றால் பன்றிக்குத் தான் சில அபூர்வமான மூலிகைக் கிழங்குகளைத் தேடியெடுக்கும் நுகர்வு சக்தியிருப்பதால் அவை அத்தகைய மூலிகைக் கிழங்குகளை எளிதில் கண்டு பிடித்துவிடும். மேலும் அந்த காலத்து சித்த மருத்துவர்கள், மிகுந்த தெய்வீக பக்தியுடனும் நன்றியுணர்ச்சியுடனும் விளங்கியமையால் அவர்கள் இத்தகைய பன்றிக்கு அன்புடன் நன்றி செலுத்தும் விதமாகப் பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டு அவற்றுக்கான சில உணவு வகைகளைத் தான தருமங்களாகப் படைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய சித்த மருத்துவத்தில் பயிற்சி பெற்ற பன்றிகளுக்குப் பல விதமான உலோகங்களையும் கனிமப் பொருட்களையும் கண்டறியும் சக்தியும் உண்டு என்பது மிகவும் ஆச்சரியகரமான விஷயமாகும்.

மேலும் பன்றிகள் உண்கின்ற சிலவகைக் கோரைக் கிழங்களுக்கு ஜீவ அணுக்களை, உற்பத்தி செய்யும் மூலிகை மருத்துவ சக்தி மிகுந்திருப்பதால் இத்தகைய கோரைக் கிழங்குகளைக் குறிப்பிட்ட நட்சத்திர, திதி நாட்களில் உட்கொண்டு வந்தால், குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

இருதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் பலவிதமான நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெற்றுக் கொண்டால் தான் அவர்கள் நிறைந்த சகிப்புத் தன்மையுடன் சாதாரணமான வாழ்க்கையை வாழ இயலும். தற்கால விஞ்ஞான மருத்துவத்தில் இத்தகைய நோயாளிகள் பலவிதமான கட்டுக்கோப்புகளுடன் வாழவேண்டியிருக்கிறது. தூசியில்லாமல், அதிக வெப்பமில்லாமல் அதிக குளிரில்லாமல்... இவ்வாறாகப் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் ஓர் இருதய நோயாளியோ சிறுநீரக நோயாளியோ வாழவேண்டியிருந்தால், அது எத்தகைய கஷ்டமான வாழ்க்கை என்பதை நாம் அறிவோம். இவர்கள் விலங்குகள், பறவைகள், பசு, யானை, கோழி, புறா, போன்ற உயிரினங்களுக்கு உணவு, தான்ய வகைகள், பழங்கள், நீர், கஞ்சி, பால், களி அடிக்கடி அளித்து வந்தால் உடல் வாதனைகள் தணியும்.

எவ்வாறு, பசு யானை, கோழி, முயல் போன்ற பிராணி வகைகளுக்கு உணவு அளிக்கப்படுகின்றதோ, அவ்வாறே பன்றிக்கு உரிய சில உணவு வகை தானங்களும் உண்டு. இவற்றை முறையாகக் கடைபிடித்து வந்தால் கடுமையான நோய்களால் அவதியுறுவோர் ஓரளவு நிவாரணம் பெறுவதற்கும், மன அமைதியை அடைவதற்கும் பலவகையான நல் வழிகள் காட்டப்படுகின்றன. எனவே பன்றி என்பது ஓர் அருவருக்கத்தக்க பிராணியல்ல. அசிங்கமான இடங்களில் அது வாழ்வதால் அதை வெறுத்தல் கூடாது. இறைவனுடைய நியதியாகத்தான் பன்றியினுடைய வாழ்க்கை முறையானது குறிப்பிட்ட விதத்தில் அமைந்துள்ளது என்பதை உணர்ந்திடுக!

மேலும், பன்றிகள் இத்தகைய அசுத்தமான இடங்களில் வாழ்வதால்தான் இறைப் பெரும் கருணையால், அவை பெற்றுள்ள நோய் தடுப்புச் சக்தியினால் நாம் வெறுத்து ஒதுக்கின்ற அசுத்தங்களை உணவாக ஏற்று மனித சமுதாயத்தைப் பெரும் துன்பங்களிலிருந்து காக்கின்றது என்பதையும் மறந்துவிடலாகாது. இதற்காக மனித குலமே பன்றிகளுக்குக் கடமைப்பட்டுள்ளது அல்லவா! இதனை எவ்வாறு நாம் நிறைவேற்ற முடியும்? பன்றி அசுத்தமான பிராணியாய்க் கருதப்பட்டாலும் அசுப சகுனமாகவோ, நற்காரியத்திற்கு விரோதமாகவோ எங்கும் குறிக்கப் படவில்லையே! மேலும் திருமாலே பன்றியின் ரூபத்தைத்தான் எடுத்து ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் அன்றும் இன்றும் என்றும் சர்வேஸ்வர மூர்த்தியாய் நமக்கு அருள்பாலிக்கின்றார் என்றால் பன்றிகளின் வாழ்வும் பலவிதமான ஆன்மீகப் பின்னணிகளை உடையதுதானே?

பன்றிகளுக்கு மிகவும் பிடித்தமானவை பூமிக்கு அடியில் உள்ள கிழங்கு வகைகளேயாகும். எனவே கீழ் நோக்கு நாட்களில் ஏழ்மை நிலையிலுள்ள பன்றி வளர்ப்போர்களுக்குரிய தேவையான தான தருமங்களை, உதவிகளைச் செய்து, பன்றிகளுக்கும் கேரட், வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை அளித்துவந்தால் கடுமையான நோய்களின் துன்பங்கள் தணியும்.

மேலும் இந்நாட்களில் ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு கிழங்கு வகைகள் கூடிய உணவினைப் படைத்து வணங்குவது சிறப்புடையதாகும்.

PORK வேண்டாம்!

கடுமையான நோய்களால் அவதியுறுவோர் கீழ்நோக்கு நாட்களிலும், தங்களுடைய ஜன்ம நட்சத்திர நாட்களிலும், ஆயில்ய நட்சத்திரத்தன்றும் பன்றிகளுக்குக் கோரை வகைக் கிழங்குகளையும் மற்றும் பல கிழங்கு வகைகளையும் பச்சையாகவோ வேக வைத்தோ அளிப்பதுடன் பன்றிகளை வளர்ப்போர்க்கு உரிய தான தருமங்களைச் செய்து வருதல் வேண்டும். ஆனால் அவர்களிடம் பன்றியைக் கொன்று மாமிசமாக விற்றிடுதல் கூடாது என்ற உறுதி மொழியையும் பெற்றிடல் வேண்டும்

பன்றியை மாமிசமாக மாற்றுவதற்கு ஒரு போதும் உதவிசெய்ய/துணை போகக் கூடாது. இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல் தகாத செயலும், பெரும் பாவமும் ஆகும்.

பன்றியின் மாமிசத்தை உண்பதால் பலவிதமான சாபங்கள் ஏற்படுகின்றன. வெள்ளைப் பன்றி இறைச்சியென்றும், “Pork” இறைச்சிஎன்றும் சொல்லப்படுகின்ற மாமிசத்தை ஒருபோதும் உண்ணாதீர்கள். மனித மலத்தைத் தின்று நம்முடைய மனித சமுதாயத்திற்கு பெரும் உதவி புரிகின்ற பன்றி வர்கத்திற்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டுமென்றால் இதனுடைய இறைத் தன்மையை உணர்ந்து ஸ்ரீவராஹ வழிபாட்டில் ஈடுபடவேண்டும்.

அக்காலத்தில் பன்றிகளுக்குரிய ஜீவ மரியாதையை நம் முன்னோர்கள் அளித்து வந்துள்ளார்கள். இப்போதுள்ளது போல அக்காலத்தில் கழிப்பறைகளோ, சாக்கடைகளோ கிடையாது. தற்காலத்தில் Toilet Culture என்பது வாழ்வின் இன்றியமையாத அங்கமாகி விட்டதால் OpenToilet எனப்படும் இயற்கைச் சூழ்நிலையில் மல ஜலம் கழிக்கின்ற பண்டைய வழக்கம் முற்றிலும் மறைந்து வருகின்றது. தற்போது இருக்கின்ற நகர நாகரீகத்தில் டாய்லெட் முறை என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ஆனால் கிராமப் புறங்களில் இன்றும் இயற்கை வெளிச் சூழ்நிலைக் கழிப்பிடமே நிலவி வருவதைக் காண்கின்றோம். மஹாத்மா காந்தி அவர்களுடைய வாழ்க்கைச் சரிதத்தைப் படித்துப் பார்த்தோமேயானால் காலைக் கடன்களுக்காக பூமியில் சில குழிகளைத் தோண்டி மல ஜலம் கழித்து மண்ணால் மூடுகின்ற அற்புதமான ஆரோக்யமான பழக்கம் அக்காலத்தில் நிலவி இருந்ததைக் காணலாம்.

இப்போது இருக்கின்ற மக்கள் பெருக்கத்திலும் இடநெருக்கடியிலும் இது சாத்யமா என்பது கேள்விக்குரியதாகும். இருந்தாலும் நம் பண்டைய மக்கள் மல ஜல கழிப்பிற்கு இயற்கைச் சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து ஆற்று மணலாலும் ஆற்று நீராலும்தான் குத சுத்தி செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் ஆரோக்யமானதோடு மலச்சிக்கல், பைல்ஸ் (Piles) போன்ற வியாதிகளையும் வரா வண்ணம் தடுக்கின்றது. இத்தகைய இயற்கை ஒளிச் சூழ்நிலையில் நம் மூதாதையர்கள் வாழ்ந்தமையால் தான் அப்போது வாழ்ந்த பன்றிகள் சாக்கடையிலோ கழிவிடங்களிலோ வாழவில்லை! மாறாக அவை நல்ல நிலப் பகுதிகளில் ஆங்காங்கே கிடைக்கின்ற கிழங்குகளையும் உண்டே வாழ்ந்தன!

கணவனை இழந்தோர்க்கு ...

கணவனை இழந்தோர்க்கு நல்வழி வாழ்க்கை முறைகள்

இளவயதிலேயே கணவனை இழந்தோர் பலர், தமக்கு நல் வழிகாட்டுமாறும், சில வாழ்க்கைக் கட்டுப்பாடுகளுக்கான விளக்கங்கள் கோரியும் நமக்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர்,

கணவனை இழந்தோர் மறுமணம் செய்து கொள்ளலாமா? இது தெய்வீக நீதிகளுக்கு முரண்பாடானதா? வன்முறைகள் நிறைந்த இந்த சமுதாயத்திலே எங்களுக்குப் பாதுகாப்பிற்காக நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளலாமா? காமுகர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில் பாதுகாப்பும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மன நிம்மதியும் கிடைப்பதற்கான வழிமுறைகள் யாவை என்று பலரும் பலவிதமான எண்ணங்களைத் தெரிவித்துள்ளனர்.

கணவனை இழந்த பல இளம் பெண்களுடைய வேதனைகளைச் சுமந்து வரும் கடிதங்கள் எங்களுக்கு நிறைய வந்துள்ளன.

இறந்த கணவனையே தெய்வமாக மதித்து வாழும் பெண்களுக்குரிய சில தெய்வீக நியதிகள் உண்டு. இளம் விதவையின் வாழ்வில் உண்மையான அக்கறை கொண்டு அன்புடனும் பரிவுடனும், பாசத்துடனும் பெண்ணிற்கு நல் வாழ்வு அளிப்பதற்காக நேர்மையான தெய்வபக்தி நிறைந்த ஆண் முன் வருவானாயின் மறுமணம் செய்வதில் எவ்விதத் தவறுமில்லை. ஆனால் மறுமணம் என்பது வாழ்வில் ஆன்மீக மறுமலர்ச்சியை அளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர மீண்டும் ஏமாற்றம், ஏமாறுதல், வேதனைகள், காமவெறி முதலியவற்றிற்கு அதில் இடம் கொடுக்கக் கூடாது. இதில் இத்தகைய பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் ஆன்மீக ரகசியங்களாகவே வைக்கப்பட்டி ருப்பதால் இவற்றைப் பற்றி பலரும் அறியாதிருக்கின்றனர்.

குறித்த சில மந்திரங்களைத் தியானித்து துதித்துப் பெண்கள் தினமும் நெற்றிக்குச் சந்தனம் இட்டு வரலாம். அவ்வாறு சந்தனத்தை அரைக்கும்போது, தான் தெய்வமாக மதிக்கின்ற இறந்துபோன கணவனின் பெயரை ஜபித்தவாறே சந்தனத்தை அரைத்திடுதல் சிறப்பானது. மட்டுமன்றி சில அபூர்வமான தெய்வீக சக்திகளையும் அவர்களுக்கு அளிக்கின்றது.

ஆனால் நம்முடைய பூர்வ ஜென்ம வினைகளினால் தான் நம்முடைய தாம்பத்ய வாழ்வில் இத்தகைய தேக்க நிலை ஏற்பட்டது என்பதைப் பரிபூரண மாக உணர்ந்தால் தான் இத்தகைய வழிபாடு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டவா! எனக்கு மட்டும் இத்தகைய குறைபாடு ஏன் என்ற எண்ணம் முதலில் தோன்றும், ஆனால் இறந்த கணவனைத் தன்னுடைய தெய்வமாக மதித்துப் போற்றி வந்தால் இறையருளால் நிச்சயமாக மன நிம்மதி கிட்டுவதோடு மேலுலகில் கணவனோடு சேர்கின்ற தெய்வீக வாய்ப்பும் கிடைக்கும்.

இத்தகைய பெண்கள் தன்னுடைய கணவனுக்கு மாதப் பிறப்பு, அமாவாசை இறப்பு திதி நாட்களில் முறையாக தர்ப்பணத்தை அளித்து வரவேண்டும். பெண்களும் வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் அளிக்கலாம். (இது பற்றிய விளக்கங்களை எம்முடைய எளிய தர்ப்பண முறைகள் என்ற நூலில் காணலாம்.)

பிள்ளைகள் பெரிதாக நன்கு ஆளாகும் வரை மனைவியே தன்னுடைய கணவனுக்குத் தர்ப்பணம் அளிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது! கணவனுடைய தந்தையோ சகோதரர்களோ தர்ப்பணம் அளித்தாலும் கூட மனைவி என்னும் முறையில் வெள்ளை எள் கொண்டு இறந்த கணவனுக்குத் தர்ப்பணம் அளித்தல் மிகச் சிறந்த வழிபாடாகும். இதில் எவ்விதத் தவறும் இல்லை!

விதவைக் கோலம் என்பது ஒரு தண்டனை அல்ல! பூர்வ ஜென்ம வினைகளின்படி அமைகின்ற ஒரு வாழ்க்கை நிலையே இது. முன் வினைகளின் விளைவாக இதை ஏற்றுக்கொண்டால்தான் எவ்வித மனக் குழப்பமும் ஏற்படாது.

காமுகர்கள் நிறைந்த இவ்வுலகில் தன்னுடைய பாதுகாப்பிற்காக, கணவனை இழந்த பெண்ணானவள் நெற்றிக்குத் திலகம் இட்டுக்கொள்ளலாமா? 

இத்தகைய பெண்கள் மேற்கண்ட முறையில் சந்தனத்தை அரைத்து இட்டுக் கொள்ளலாம். நவீன நாகரீகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது என்று பலர் எண்ணலாம். ஆனால் நாம் இங்கு அளிப்பது தெய்வீக நெறிகளுடன் வாழ விரும்புகின்ற இளம் விதவைகளுக்கான வாழ்க்கை முறைகளே ஆகும். அதாவது இறந்த கணவனைத் தன் தெய்வமாக எண்ணிப் பூஜித்து வருகின்ற பெண்ணிற்குரிய நல்வாழ்வு முறை விளக்கங்களே ஆகும்!

கணவனையிழந்தோர் நெற்றிக்குச் சந்தனப் பொட்டு மட்டும் இடுகின்ற பழக்கம் இன்றைக்கும் கேரளத்தில் நிலவுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது!

கணவன் இறந்ததிலிருந்து, தாலிகளையும் சடங்கு வரை, குங்குமத்திற்கு பதிலாக “மூலிகைச் சாந்து” என்ற ஒன்றை இடும் வழக்கமொன்று நடைமுறையில் உண்டு . இரண்டு விதமான மூலிகைத் தைலத்தை அகல் விளக்கு மூடியில் தோய்த்து எடுக்கப்படும் சாந்து இது. இதனையும் இட்டுக்கொள்ளலாம். ஆனால் இம்மூலிகைகள் தற்போது அபூர்வமாகத்தான் கிடைக்கின்றன. இச்சாந்தை இட்டு வருவோர்க்கு மூலிகாசக்தியினால் “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற மன உறுதி பெருகி கணவனின் நினைவுடனேயே மிகப் புனிதமான வாழ்க்கையை நடத்துவர்.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற மூதுரை மிகவும் அர்த்தமுடையதே! ஆனால் கலியுக நடை முறையில் காமுகனாகவும், அசுர குணங்களை உடையவனாகவும், கொடியவனாகவும் கணவன் அமைந்து விட்டால் இதுவும் நிச்சயமாக முன்வினைப் பாவங்களுக்கான தண்டனையே! ஆனால் இத்தகைய கொடூரமான ராட்சசன், தன் தீய வழக்கங்களின் காரணமாக மடிந்தால் தனக்குப் புனிதமான மறு வாழ்க்கையைத் தரவல்ல, உத்தமர் கிட்டிடில் தாராளமாக மறுமணம் செய்துகொண்டு புனிதமான மறுவாழ்க்கையைத் தொடங்கிடலாம், ஆனால் காமம், ஆசை, அந்தஸ்து, போலி கெளரவம், குரோதம், துரோகம் போன்றவை காரணமாக மறுமணம் புரிதல் ஏற்புடையதன்று!

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

கடந்த சில இதழ்களாக ஸ்ரீ சரபேஸ்வரரின் மஹிமை பற்றிச் சித்புருஷர்களின் விளக்கங்களை அளித்து வருகின்றோம். ஞாயிற்றுக் கிழமை ராகுகால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடு ஏன் சிறப்புடையதாக அமைகிறது என்பதற்கான விளக்கங்களைக் கேட்டுப் பல கடிதங்கள் வந்துள்ளன.

கால நேரங்களைப் படைத்த இறைவன் இவற்றுள் நல்லநேரம், அமிர்த நேரம், பிந்து நேரம், க்ஷர நேரம்,  பிரதோஷ நேரம் எனப் பலவிதமான திவ்யமான நேர வகைகளையும் படைத்துள்ளான். தெய்வீகத்தில் நல்ல நேர இரகசியங்கள் பல உண்டு. இவை இறை நியதியாய் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ளன. காரணம், இதை அறிவோர் தம் சுயநலத்திற்காகவும், தம் செல்வம், வாழ்க்கை வசதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற அச்சமே! இதனால்தான் நேரம், திதி, கிழமை, நாள், நட்சத்திரம், யோகம், கரணம், யோகினி, நேத்ரம், ஜீவன், அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட யோகங்கள், லக்னம், தாராபலன், சந்திரபலன் போன்ற பல இலக்கணக் கூறுபாடுகளையமைத்து நல்ல நேரம் காண்பதைப் பல ஜோதிட ஞானக் கணித ரகசியக் கோட்பாடுகளாகப் பகுத்துத் தந்துள்ளனர்,

பிரதோஷ நேரத்தில்தான் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீ சரபேஸ்வரரும் அவதாரங் கொண்டனர் என்பதை நாம் அறிவோம் . பிரதோஷத்திலும், பட்சப் பிரதோஷம், நித்யப் பிரதோஷம் எனப் பல வகைகள் உண்டு, பிரதோஷ நேரம் என்பது திரயோதசி திதியன்று மாலை 4½ to 6 pm வரை என்று ஏற்கின்றோம் அல்லவா? இதேபோல் நித்தியப் பிரதோஷமான தினசரிப் பிரதோஷத்தில் தினந்தோறும் மாலை நேரமானது நித்தியப் பிரதோஷ நேரமாக சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. இதனைக் கொண்டாடி வருகின்ற உத்தமர்கள் இன்றும் உண்டு. தினசரிப் பிரதோஷ நேரத்தில் முறையாக வழிபட்டு வந்தால் மிக விரைவில் உத்தமமான இறைநிலைகளை அடையலாம். குருவருளும், ஆழ்ந்த நம்பிக்கையுமே இதற்குப் பரிபூரணமாக அருள் புரியும்.

ஞாயிற்றுக் கிழமையன்று இராகு காலமும் பிரதோஷ நேரமும் ஒன்றாக அமைவதால் இதற்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு. ஞாயிறு, சூரியனுக்கு உரிய தினமாகும். சூரியனும், சந்திரனும் இணைகின்ற நேரமே புனிதமான அந்தி நேரமாகும். சூரியனுக்குரிய ஆதிகால சில பஞ்சாங்க நியதிகளின் படி சூரிய அஸ்தமனத்திலேயே அடுத்த நாளான சந்திரனுக்குரிய திங்கட்கிழமை துவங்குவதாகக் கணக்கிடுவர். மேலும் அந்தியில் சூரிய, சந்திரர்கள் இணையும் போதோ, அல்லது அவர்கள் ஒரே சமயத்தில் வானில் தோன்றும்போதுதான் சிகண்டி சித்தர்களின் தோற்றம் ஏற்பட்டது.

சிகண்டி சித்தர்களின் தலைமைப் பீடாதிபதியே கவச ஜலூஷர் ஆவார். இவர் சூரிய, சந்திர கிரஹ சங்கமத்தில் தோன்றியவர். இவர்தம் பாரம்பரியத்தில் வந்தவர்களே ''அமாவாசை சித்தர்கள்'' மற்றும் சிகண்டி சித்தர்களின் அம்சங்களை உடையவர்கள்!

இராகு கால வழிபாட்டின் சிறப்பு அம்சம் குறித்து நாம் அறிவோம். தற்பொழுது செவ்வாய்க்கிழமைகளில் இராகுகால துர்க்கை வழிபாடு போல ஒவ்வொரு நாளின் ராகு காலமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததே! இத்தகைய இராகு கால வழிபாட்டின் நோக்கமே இராகு காலத்தில் தோன்றி வலுப்படுகின்ற தீயசக்திகள் பெருகா வண்ணம், அந்நேரத்தில் எக்காரியத்திலும் ஈடுபடாது இறைவழிபாட்டில் உடலையும், மனத்தையும் செலுத்திட வேண்டும். இதனால் அத்தீவினைகள் அழிவதோடன்றி, நல்ல பூஜாசக்திகளும் பல்கிப் பெருகும் என்பதையும் உணர்த்துவதாகும். ராகு கால, எம கண்ட நேரங்களில் தீய சக்திகள் வலுப்படுகின்றன என்பதை விட அந்தந்த நாளில் தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்ற நேரத்தையே ராகுகால, எமகண்டநேரங்களாக வகுத்துள்ளனர் என்பதே பொருத்தமானதாகும்...

ராகுவைப் பிடித்த ஆஞ்சநேயர்

ஞாயிற்றுக் கிழமையில் நித்தியப் பிரதோஷ நேரமும் இராகு காலமும் சேர்வதால் இக்கூட்டு வழிபாட்டின் மகிமை மேலும் சிறப்படைகிறது. இதன் பின்னணியில் ஓர் அற்புதப் புராண நிகழ்ச்சியும் உண்டு.

ஸ்ரீ ஆஞ்சநேயர் குழந்தையாய் இருந்த போது, சூரியனை சிவப்பு நிறக் கனி என எண்ணி, அதைப் பிடித்திட விரைந்தார். இளங்குழந்தையாய் இருந்தும் சூரியனுடைய அதி வெப்பத்தையுந் தாங்கியதோடு அண்ட சராசரத்திற்கும் ஒளி வழங்கும் மிகப்பெரும் கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனையே பிடிப்பது என்றால் எத்தகைய தெய்வீக சக்தியை ஆஞ்சநேயர் பெற்றிருக்க வேண்டும்!

மேலும் அன்றைக்குச் சூரிய கிரஹண நாளாதலின், சூரியனைப் பிடிக்க இராகுவும் விரைந்து கொண்டிருந்தார், ஆஞ்சநேயர் சூரியனை சிவப்புப் பழம் என எண்ணியதால் ராகுவும் அதனைப் பிடிக்கச் செல்கிறார் என்றெண்ணி தனக்கு முன் சென்ற இராகுவை நன்கு அழுத்திப் பிடித்து விட்டார்.

மஹா சக்திவாய்ந்த இராகுவைப் பிடிக்கும் தெய்வீக பலத்தை ஆஞ்சநேயக் குழந்தை பெற்றிருந்தது என்றால் என்னே அவர் தம் தெய்வீக ஆற்றல்! இதுவும் இறைவனின் திருவிளையாடலே!

அதுவரை இராகுவானவர் தன்னை அமிர்தம் பருகவிடாது தடுத்து நிறுத்தியவர்கள் சூரியனும், சந்திரனுமே என எண்ணி அவர்கள் மேல் பகைமை கொண்டிருந்தார். ஆஞ்சநேயரின் திருக்கரங்கள் பட்டவுடன் தான் அவருக்கு சூரிய சந்திரர்கள் மேலிருந்த பகைமை உணர்வு மறைந்தது! இதுவன்றோ இறைவனின் மகத்தான லீலை! இது நிகழ்ந்த தினமே ஆதிவாரம் எனப்படும் ஞாயிற்றுக் கிழமை! நேரமோ ராகுமூர்த்தி உச்சம் பெறுகின்ற ராகு காலம்!

ஸ்ரீ சரபேஸ்வரமூர்த்தி தம்முடைய சரபேஸ்வர அவதாரத்திற்கான பல தெய்வீக உக்ர அம்சங்களை உக்ர பிரத்யங்கிரா காளியிடமிருந்து பெற்றார். ராகுவிற்கு உரிய கிரஹ தேவதா மூர்த்தியே பத்ரகாளி! சரபேஸ்வர அவதாரத்தில் பார்வதியின் உக்ராவதாரமான உக்ர பிரத்யங்கிரா காளியின் உக்ர அம்சங்களும், சிவனுக்குரிய ருத்ராம்சங்களும் நிறைந்துள்ளனவே! மேலும் சூரிய கிரஹத்துக்குரிய தேவதா மூர்த்தி சிவன் சந்திரனுக்குரிய தேவதா மூர்த்தி பார்வதி!

இத்தகைய சிறப்பம்சங்கள் கூடியிருப்பதால் ஞாயிற்றுக் கிழமை ராகுகால நேரமானது நித்யபிரதோஷ நேரமாகவும் கூடி தெய்வ மஹத்துவம் நிறைந்ததாக விளங்குகின்றது! இத்தகைய விசேஷ இறையம்சங்கள் நிறைந்த நேர வழிபாடு மிகவும் புனிதமானதுதானே!

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி ''கம்பமாகிய'' தூணில் சேவை சாதிப்பதே சிறப்புடையது! இக்கம்பங்களில் சிகண்டி சித்தர்கள் எவ்வாறு ஆவாஹன சக்தியைக் கொணர்கின்றனர் என்பதை அறிவோமா! மற்ற தெய்வீக மூர்த்திகள் எழுகின்ற சிலா ரூபங்களில் தைல வாசம், தான்ய வாசமெனப் பலவித ஆகம, வைதீக முறைகளில் தெய்வ சக்திக்குரிய சூட்சுமப் படிவுகளை ஏற்றும் பூஜா விதிகள் உண்டல்லவா!

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி கம்பத்தில் எழுவதே அவருக்கு ப்ரீதியானதால் மேற்கண்ட ஆகமக் கோட்பாடுகளை சிகண்டி சித்தர்களே கவச ஜலூஷ் சித்தரின் அருட்தலைமையில் நிறைவேற்றுகின்றனர்!

கவச ஜலூஷ சித்தர் இறைத் திருப்பணிகளுக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்! ஒவ்வொரு சித்தரும் வெவ்வேறு விதமான இறைத் திருப்பணியில் ஈடுபட்டுத் தியாக சீலராய், சுயநலமற்ற சுடரொளியாய்ப் பிரகாசித்து சாசுவதமான என்றும் நம்மைக் காக்கின்ற அறவழியை சற்குரு மூலமாக அளிக்கின்றார். இன்றைக்கும் ஆலயத் தூண்களில் கோடிக் கணக்கான சித்தர்களின் உருவங்கள் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்! இவற்றிற்கான விளக்கங்களைத் தரவல்லவரே சற்குருநாதர்!

திருஅண்ணாமலையில் சிகண்டி தரிசனம் என்ற ஒன்றுண்டு! இது மூலிகைகள் நிறைந்த பகுதி ! இச்சிகண்டி தரிசனப் பகுதியில் அம்மையும் அப்பனும் காட்சி தருகின்றனர். மிகவும் விசேஷமான தரிசனம்! மாலைப் பொழுதில் இப்பகுதியில் அமர்ந்து மலையை தரிசித்தவாறே, தியானத்தில் அமர்ந்தால் உள்ளம் ஒடுங்குவதை உணரலாம்! இப்பகுதியில்தான் கவச ஜலூஷர் கடுந்தவம் செய்து தெய்வ மூர்த்திகளை ஆவாஹனம் செய்வதற்குரிய முறைகளை யோக சக்தியால் பெற்றார்!

திருஅண்ணாமலை, பர்வதமலை, பொதியமலை, சதுரகிரி மலை, தங்கால், வெள்ளியங்கிரி, வெண்ணெய் மலை போன்ற இடங்களில் சித்தர்கள் ஆயிரக் கணக்கில் நடமாடுகின்றார்கள் என்று நாமறிவோம்! திருஅண்ணாமலையை வலம் வருகின்ற சித்புருஷர்களின் எண்ணிக்கையோ கணக்கிலடங்காது! ஒவ்வொருவரும் வகை வகையான காரணப் பெயரைச் சூடியிருப்பார்!

கரலாக்கட்டைச் சித்தர், கொடுக்கு வால் குடுமி சித்தர், குப்பைச் சித்தர், கம்பளிச் சித்தர், பிண்ணாக்கீசர், பிறாண்டிச் சித்தர், கட்டைவிரல் சித்தர், படுக்கை ஜடை சித்தர், அக்னி புராந்தகர், குறுமுனிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அமாவாசைச் சித்தர் என லட்சோபலட்சம் சித்தர்களின் பெயர்களை எழுதிக் கொண்டே செல்லலாம், பல யுகங்களுக்கு! கவச ஜலூஷர், சிகண்டி சித்தர்கள், மழுச் சித்தர்களும் இவ்வகையினரே!

ஈசனின் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தமையால் “பூலோகத்தின் எந்த ஆலயத்திலும் நீ இடம் பெறாய்” என்ற சாபத்தைப் பெற்ற பிரமன், சாப விமோசனமாகத் தானே திருஅண்ணாமலையில் ஓர் ஆலயம் எழுப்ப முயன்றும் அது பல விக்னங்களால் தடையுற்றது! எனினும் பிரம்ம மூர்த்தி மனந்தளராது தொடர்ந்து அருணாசலத்தை கிரிவலம் வரலானார்.

சாதாரண மனித உருவெடுத்துச் சாபவிமோசனம் பெற விரும்பியமையால் கண் துஞ்சாது, ஊன், உறக்கமின்றி சிவனே கதியெனச் சிந்தையில் லயித்தமையால் பிரம்மனின் மனித உடல் மெலிந்து, வற்றி, ஒட்டி, சிறு துரும்பினும் சிறிதாயிற்று! அப்போது சிகண்டி தரிசனப் பகுதியில்தான் ஈஸ்வரன் காட்சியளித்து அவருடைய சாப விமோசனத்திற்கு வழிகாட்டினார். இதன் பின்னர் தாம் பிரம்ம தேவர் எழுப்பிய அடி அண்ணாமலை சிவாலயம் பரிபூரணமாயிற்று!

கவச ஜலூஷ சித்தர் யோக தவம் புரிந்து இவ்விடத்தில்தான் தம் சிஷ்யர்களான சிகண்டி சித்தர்களுக்குக் குருகுலவாசம் அளித்த மையின் இதுவே “சிகண்டி” தரிசனமாயிற்று!

கவச ஜலூஷர் பல யுகங்களாகத் தவம் புரிந்து இறைவனின் கழல்களாகவும், கங்கணங்களாகவும், சதங்கைகளாகவும் குண்டலங்களாகவும், அரைக் கச்சைக் காப்பு வளையமாகவும், மெட்டிகளாகவும், கிரீடமாகவும், நாகாபரணங்களாகவும், ஜடாபரணங்களாகவும், கொண்டைக் கழலாகவும் இறைவனுடைய திருமேனியில் உறைகின்ற பெரும்பாக்கியத்தைப் பெற்றார். . .

இறைவனுக்குப் பலவிதமான தங்க, வெள்ளி, ரத்ன, வைடூரிய கலசங்களாகவும் திகழ்ந்தமையால் பெறுதற்கரிய ஆவாஹனபிரபஞ்ச சக்தியை இறைவன் அவருக்கு அளித்தான். 

தேவாதி தேவமூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகியரும் பூலோகம் உள்ளிட்ட அனைத்து லோகங்களிலும் இறைவனுக்கு ஆலயங்கள் எழுப்பும் போதெல்லாம் தேவபிரதிஷ்டைக்கு கவச ஜலூஷரின் சேவையை நாடினர்,

ஸ்ரீ சரபேஸ்வரர் “கம்பத்தில்” ஆவாஹனம் ஆவதே சிறப்புடையது என விளக்கியுள்ளோமல்லவா! ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றி அருள் பாலிக்கவிருக்கின்ற அற்புதமான தூண்களில் ஸ்ரீ கவச ஜலூஷரே பலவிதமான பூஜைகளைச் செய்து தாமே அதில் இறைவனுடைய கழல்களாகவும், சதங்கை மணிகளாகவும் பல ரூபங்களில் உறைந்து “ஆத்ம சங்கர” பூஜையை நிகழ்த்தி அக்கம்பத்தை ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி ஆவாஹனம் ஆவதற்கான புனிதமான தெய்வச் சக்தியை வேத, மந் திர, யந்திர, தந் திர, பூஜை முறைகளினால் உருவேற்றுகின்றார்.

ஸ்ரீ சரபேஸ்வரருக்குரிய ஸ்ரீ கவச ஜலூஷர் அளித்துள்ள அருந்தமிழ்த் துதியொன்றுண்டு, பலவிதமான துன்பங்களையும் போக்கக் கூடிய அதியற்புத மந்திரம், ஓதுவதற்கு எளிமையானது. பல அற்புதமான பீஜாட்சரங்களைத் தன்னுள் கொண்டது!

முயற்சி திருவினையாக்கும்!

ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படுகின்ற சித்புருஷர்களின் அறவழி முறைகள்/பரிஹார முறைகளை ஒட்டி

சங்கு, சக்கரந்தாங்கிய முருகன் எங்கிருக்கிறார்?

அம்பிகையும் சிவனும் எதிரெதிரே உள்ள சந்நிதி எங்குள்ளது?

வீணை ஏந்திய தட்சிணா மூர்த்தி உள்ள கிள்ளையூர் தலம் எங்கிருக்கிறது?

-- என்று பல கேள்விகளுடன் ஆயிரக் கணக்கான கடிதங்களும், தொலைபேசியில்  விசாரணைகளும் வந்தவாறு உள்ளன.

ரிப்ளை கார்டோ, தபால் தலை ஒட்டிய கவரோ இல்லாத நிலையில் அனைவருக்கும் பதிலளிப்பது என்றால் தபாற்செலவையும் நேரக் கணக்கையும் சிந்தித்துப் பாருங்கள்! அதைவிட மேலானது இவற்றை அறிவதற்கு நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள் என்று ஆத்ம விசாரம் செய்வதே!

எதையும் “லட்டு” போல் எடுத்துக் கொடுத்து விட்டால் அதற்கு மதிப்பிருக்காது! சில தலங்களுக்குச் சென்று நேரில் விசாரித்தல், ஆன்மீகப் புத்தகளைப் படித்தல், பெரியோர்களை நாடுதல், தலயாத்திரை மேற்கொள்தல் - என ஏதேனும் முயற்சி எடுத்தால்தானே இறைவனே முன்வந்து அருள்வழி காட்டுவான்?

“அது எங்கிருக்கிறது, இது எங்கிருக்கிறது” என்று கேட்டுவிட்டு “அடேயப்பா, அவ்வளவு தூரம் போகணுமா-” என்று தெய்வீகத்தில் சலித்துக் கொண்டால் நமக்கு மனிதப் பிறவி தந்த கடவுளையே அவமரியாதை செய்வதாக ஆகின்றதே?

உங்கள் ஊர்களிலேயே சத்சங்க அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுக்குப் பலராக முயற்சி செய்தால் என்ன?

“சிவனும் அம்பிகையும் எதிரெதிரே உள்ள கோயில் எது” என்று ஒருவர் கேட்டிட. “கும்பகோணம் அருகே தேரழுந்தூரா என்று பாருங்களேன்!” என்று நாம் சொல்லிட அவர் அங்கு சென்று குடும்பத்துடன் தரிசித்து அருகிலுள்ள சில தலங்களுக்கும் சென்று மிகவும் அபூர்வமான கோயிலொன்றைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தார். நாமும் அதனை நன்கு விசாரித்து சற்குருவிடம் மேலும் பல விளக்கங்களைப் பெற்று ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் வெளியிட்டிட இன்று ஆயிரக் கணக்கானோர் அத்தலத்திற்கு வருவதாக தேனினும் இனிய செய்தி வருகின்றது.

ஒரு அடியார் ஏதோ முயற்சி செய்திட, இறைவன் இன்னொரு வழியையும் காட்டிட இன்றோ அதன் பலன்கள் ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்குச் செல்கின்றன என்பதே முயற்சி திருவினையாக்கும் என்பதற்கான நிரூபணம்! எனவே முயற்சி செய்யுங்களேன்!

நாகப்புற்று பூஜை

நாகப் புற்று பூஜை என்றாலே எல்லாப் புற்றுகளிலும் பால் ஊற்றுதல், முட்டை உடைத்தல் என்பதல்ல! புற்று மண்ணின் வகையைப் பொறுத்துதான் இதை முடிவு செய்ய வேண்டும்.

புற்றினடியிலோ சுற்றிலுமோ காலில் மிதிபடா வண்ணம் பூக்களையும், பூமாலைகளையும் வைத்திடலாம். பால் ஊற்றும்போது புற்று மண் சரியத் கூடாது. ஒரு சிறு கிண்ணத்திலோ மண் சட்டியிலோ பாலை வைத்து விடலாம். ஆனால் அதனை நாகம் குடிக்கின்றதா வேறு பிராணிகள் குடிக்கின்றனவா என்று சோதனை செய்யாதீர்கள்! நாகதேவதையே எறும்பு, பறவை என எந்த வடிவிலும் பாலை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் நாகதேவதைகள் எந்த உருவையும் எடுக்க வல்லவை! பாலின் சாராம்சத்தை அவை எப்படியும் ஏற்றிடலாம். புற்று பூஜையின்போது அருகில் ஏழைகள் பாலுக்காக ஏங்கி நின்றால் அவர்களுக்கும் பாலைக் கொடுத்திடலாம். ஏழைகளின் ரூபத்திலோ அல்லது அவர்கள் சரீரத்தில் புகுந்தோ கூட நாக தேவதை பாலை ஏற்கும்.

முட்டை உடைத்தலைத் தவிர்த்திடுக! மஞ்சள் தடவிய பஞ்சு மாலை சிறப்புடையது! அனைத்துலகங்களிலும் உள்ள நாகங்கள் தம் தலைமையாக ஏற்றுப் போற்றுவது ஒரு சித்புருஷரைத்தான்! அவரே ஸ்ரீஅஸ்தீக சித்தர். ஸ்ரீ ஆயுர்தேவியின் மூன்றாவது இடக் கரத்தில் உறைகின்ற பாக்யம் பெற்றவர்! “ஸ்ரீ அஸ்தீகா! ரட்சிப்பாயாக!”என்று கூறினால் எத்தகைய கொடிய நாகமும் விலகிச் சென்று விடும்.

“ஸ்ரீ அஸ்தீக சித்தரே! எம் குலத்தைச் சேர்ந்த கோடானு கோடி பாம்புகள் ஹோம அக்னித் தீயில் பாய்ந்து விழுந்து பாம்பு குலமே அற்றுவிடும் என்ற இருந்த நிலையில் தாங்களே சர்ப க்ரந்தி மூலிகை மூலம், ஹோமத் தீயில் மாய்ந்த கோடி கோடியாம் நாகங்களுக்கு உயிர்ப் பிச்சை தந்து எங்களுடைய நாக குலத்தையே தளிர்க்கச் செய்தீர்கள். எனவே இதற்கு நன்றிக் கடனாக யாரொருவர் ஸ்ரீ அஸ்தீகா என உங்கள் திருநாமத்தைச் சொல்கின்றாரோ அவரை எந்த நாகமும் தீண்டாது இது சத்தியம்”, என்று நாக குலமே செய்த சத்ய வாக்கு இன்றும் பூலோகம் மட்டுமன்றி அனைத்து லோகங்களிலும் நாகங்களால் கடை பிடிக்கப்பட்டு வருகின்றது! நம் புராணத்தில் சில இடங்களில் வருவதுபோல துறவிகளுக்குக் கூட சத்யத்தை மீற வேண்டிய கட்டாய நிலை ஏற்படக் கூடும். ஆனால் எந்த நாகமும் இந்த சத்யத்தை மீறுவது கிடையாது.

எனவே “ஸ்ரீ அஸ்தீக சித்தர்” துதியுடன்தான் எந்த நாக வழிபாடும் பரிபூர்ணம் அடைகின்றது என்பதை உணர்ந்திடுக!

நம்முடைய திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கான “குருவணக்க ஸ்வஸ்தி வசனத்தில்”

"ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரப்ரம்ஹ
ஸர்ப்ப ரட்சக அஸ்தீக சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்”

- என்ற திரு நாம வாக்யமும் ஓதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

ஸ்வர்ண ஹேரம்ப கணபதி

“ஸ்வர்ண ஹேரம்ப கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் பூஜையில் வைத்திடலாமா?'' என்று கிரிவலம் வருகின்ற அடியார்கள் ஆஸ்ரம அடியார்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவ்வினாவைக் குருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் நம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் சமர்ப்பித்திட உத்தம குருவும் உன்னத பதிலை அருள்மழையெனப் பொழிய, அதனை அருட்பிரசாதமாய் ஆன்மீக பக்தர்களாகிய உங்களுக்குக் காணிக்கையாக்குகிறோம்.

முதலில், இக்குறிப்பிட்ட சந்தேகம் வருவதற்குக் காரணமே ஸ்வர்ண ஹேரம்ப கணபதியின் இடையிலிருக்கும் யோக நடனமிடும் நாகமே!
.
இங்கு நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். நாகம் என்றாலே கொடிய விஷம் என்பதுதான் நினைவிற்கு வரும். அப்படியென்றால் கொடிய விஷ சக்தியையே அரைஞாண் கயிறாக்கிக் கணபதி இடுப்பிலே அணிந்துள்ளார் என்றால் என்ன அர்த்தம் என்று யோசிக்க வேண்டும்.....

“ஏ! மனிதனே! ஆணவம், கன்மம், மாயை என்று பல தீய விஷ சக்திகளைக் கொண்டு அலைக்கழிக்கப் படுகிறாயே.. நீ என்னிடம் தஞ்சம் புகுந்தால் நான் அத்தகைய விஷ சக்திகளை என்னுள் ஏற்று உனக்கு அருள் வழியை நிச்சயம் காட்டுவேன்” இது தான் அர்த்தம்! கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் பலவிதங்களில் யோசித்து நேரத்தை வீணாய்க் கழிக்கும் மனிதன் நன்கு ஆத்ம விசாரம் செய்ய வேண்டாமா? அரிசியிலிருந்து கல், நெல், நொய், உமி ஆகியவற்றைப் பகுத்துப் பிரித்து உணவாக்கி உண்ணும் மனிதன், கணபதி நாதன் ஏற்றிருக்கும் நாகத்தின் ரகசியத்தைப் பகுத்துணர வேண்டாமா?

அடுத்ததாக... இறைவன் அனைத்துயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளான் அல்லவா! இதனையே மாணிக்கவாசகர், “பித்தனே எல்லா உயிருமாய் தழைத்து” என்கிறார்.

“நள்ளுளும் கீழுளும் மேலுளும் யாவுளும் என்றாளும் எண்ணெயும் போனின்ற எந்தையாகிய ஈசன்” – மனித உடலில் எந்த வடிவத்தில் உள்ளான் தெரியுமா? குண்டலினி சக்தி வடிவில்தான்! அக்குண்டலினி சக்தியோ பாம்பின் வடிவத்தில்தான் இருக்கிறது.

அவ்வாறு அந்தப் பாம்பு வடிவில் இருக்கும் சக்தியை எப்படி எழுப்புவது ? எழுப்பினால் தானே அச்சக்தி ஒவ்வொரு படியாக சகஸ்ராரத்தைச் சென்றடையும், அப்படி "எழுப்புவது'' என்பதுதான் கணபதி இடுப்பிலே தலையை "எழுப்பி'' ஆடும் நாகத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது. அதாவது, “மூலாதாரத்து மூண் டெழு கனலைக் காலால் எழுப்பி” ... என்னும் நிலையை இது குறிக்கின்றது.

ஆகவே செல்வத்தை அள்ளித் தரும் ஸ்வர்ண ஹேரம்பர் தெய்வீக மேனிலையைத் தந்தருளும் குண்டலினி யோகத்தையும் அருட்செல்வமாகப் பெற்றுத் தருகிறார். அதாவது, “ஏ மானிடா! நீ பொருள் மட்டும் சேர்த்தால் போதாது. அதோடு அருளும் சேர வேண்டும். அது மட்டுமன்று, அருளை வைத்துத்தான் பொருளைச் சேர்க்க முடியுமே தவிர, பொருளை வைத்து அருளைச் சேர்க்க முடியாது” - என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

அடுத்து... மாணிக்கக் கல் என்றவோர் அற்புதமான கல் நாகத்திடமிருந்து பெறப்படுகின்றது என்பது நாமறிந்ததே. நவரத்ன பொக்கிஷமான அக்கல்லின் விலையை அறிந்தாலே நம் தலை சுற்றும். ஒரு கல்லின் விலையே ஏறத்தாழ முப்பது கோடி ரூபாயிருக்கலாம் என்பது சாதாரண மதிப்பீடு. அபூர்வ சக்திகளைக் கொண்ட அத்தகைய சுற்கள் தற்சமயம் சில கோடீஸ்வரர்களிடமும் வெளிநாட்டிலும் எவருக்கும் பயன்படாமல் இருப்பதை அறிந்து அவர்களுடைய சுயநலத்தைக் கண்டு பெருமூச்சு மட்டுமே நாம் விட்டுக் கொள்ள முடியும். இதே ரத்தினக் கல் இறைவன் திருமேனியை அலங்கரிக்குமாயின் இலட்சக் கணக்கான மக்கள் தரிசித்து அக்கல்லில் படிகின்ற மந்திர சக்திகளைப் பெறலாமன்றோ!

ஒப்பற்ற சிறப்புடைய மாணிக்கக் கல்லை விநாயகர் விக்கிரகத்தின் தொப்புளில் வைத்து பூஜை செய்து அக்கால அரசர்கள் வற்றாத செல்வம் பெற்றனர். எனவேதான் தற்காலத் தில் ஒரு பொன் காசையாவது விநாயகருடைய தொப்புளில் வைத்து (விநாயகர் சதுர்த்தியன்றாவது..!) வணங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” இதழ் வழி வலியுறுத்தியிருக்கிறோம். ஸ்வர்ணத்தைப் பொழிவதற்கு முன் அதற்கு மூலமாகிய மாணிக்கத்தைப் பொழியும் நாகத்தினை அரைக்கசைத்தான் கணேசன்!

அடுத்து... கணேசனுடைய அபயக் கரத்திலிருந்து ஸ்வர்ணம் பொழியும்போது அது சிதறாமல் ஒரு பேழையில் (படத்தில் - தட்டில்) குவிக்கப்படுகிறது. இது எதைக்காட்டுகிறது? பொருளைப் பெற்றால் மட்டும் போதுமா?அது சிதறாமலிருக்க வேண்டுமல்லவா? ஆகவே சேர்த்த பொருள் சிந்திச் சிதறாமல் நிலைத்து நிற்க “ஸ்வர்ண ஹேரம்பரை வந்தனை செய்வாய்" என்றனர் பெரியோர்கள், “converse is also true” -அதாவது சிந்திச் சிதறாமல் இருக்கும் பெருஞ்செல்வம் வேண்டுமெனில் ஸ்வர்ண ஹேரம்பரைச் சரணடைய வேண்டும் என்பதே இத்தெய்வத் திருஉரு சுட்டிக் காட்டும் உண்மை!

ஆகவே, பெருஞ்செல்வம் பெறும் அருளைக் கூட்டிடும் தொந்தி கணபதியின் “ஸ்வர்ண ஹேரம்பர்” எனும் உருவத்தை நாம் அனைவரும் வணங்கியே ஆக வேண்டும். ஏனெனில் அது அருளுடன் பொருளையும் அள்ளித் தருவதல்லவா! எனவே அருள் வழிகாண திருஅருணாசலத்தை நாடிய உளமுடன் கிரிவலம் வரும் அடியவர்களுக்குப் பொருட்செல்வம் காணும் வழியினைக் கூறவே, கணபதியின் ஸ்வர்ண ஹேரம்பர் திருவுருவத்தினைப் பொருள் பொதிந்திட உள்ளத்தில் பதிய வைத்துள்ளோம்!

ஓங்கார திரயம்பக சக்கரம்

திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில் பிரமிட் அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேல் விதான ஓங்காரத் த்ரயம்பக மண்டபமானது புனிதமான அருணாசல மலையிலிருந்து வெளி வருகின்ற ஜோதி கிரணங்களைத் தன்னுள் ஈர்த்து ஜீவன்களுக்கு அளிக்கின்றது. நம் ஆஸ்ரம மேல் விதான பிரமிட் வடிவமானது “மெத்த வாரண கூம்புக் கலைக்” கோணத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இக்கோண அமைப்பு, நீள, அகலங்களின் விசேஷத் தன்மையால் திரு அண்ணாமலையாரின் மலைத் திருமேனியிலிருந்து எப்போதும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் ஜோதிக் கிரணங்களின் சக்தியினை கிரஹிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

பிரபஞ்சத்திற்கு அக்னி சக்தியைத் தரும், பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருஅண்ணாமலையின் அருட் சக்தியை நேரடியாகப் பெறுமளவிற்கான யோக சக்தியை நாம் பெறவில்லையாதலின் மூலிகைச் செடிகள், பாறைகள், காந்த சக்தி மிகுந்த மணல், மரங்கள், தீர்த்தங்கள், அஷ்டலிங்க/நந்தி மூர்த்திகள், யோக மண்டபங்கள் போன்றவை மூலமாக நாம் இதனைப் பெறுகின்றோம்.

அருள்மிகு அருணாசல மூர்த்தியின் அளப்பரிய ஆற்றலை நாம் அடையும் வண்ணமாகவே நம் ஆஸ்ரமத்தின் மேல் விதான யோக மண்டபம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கோடிக் கணக்கான சித்புருஷர்களும் ஞானியரும் கோடானு கோடி தேவதைகளும் கந்தர்வர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்றும் என்றும் எப்போதும் அண்ணாமலையை கிரிவலம் வந்தவாறு இருக்கின்றனர். அவர்கள் கிரிவலப் பகுதியில் ஸ்ரீ காயத்ரீதரிசனம் (காயத்ரீ, சாவித்திரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் கூடி தரிசனம் தருவது) மேரு தரிசனம், கோண தரிசனம், ஸ்மசான தரிசனம், அடிஅண்ணாமலையில் நந்தி தரிசனம் போன்ற முக்கியமான தரிசனப் பகுதிகளில் பல்வேறு யோக நிலைகளில் அமர்ந்து இறைவனை வழிபடுகின்றனர். அப்போது, ஜோதிமயமான அவர்களுடைய சூட்சும உடலைத் தாங்கும் சக்தியுள்ள இடங்களில் மட்டுமே அவர்களால் அமர இயலும்.

பொதுவாக அரசு, ஆல் , வேம்பு, வில்வம், துளஸி போன்ற ஹோம ஆஹுதி/ தெய்வீக/மூலிகா விருட்சங்களிலும், கோயில் கோபுரங்கள், புனிதமான ஆஸ்ரம விதானங்களிலும்தான் அவர்கள் தங்குவர். இவ்வாறு புனிதமான அண்ணாமலையின் பத்துத் திருமுகங்களும் (முகடுகள்) தெரிகின்ற “தசமுகதரிசனப்”   பகுதியும் இறைவனும் இறைவியும் சேர்ந்து தரிசனம் தருகின்ற “சிவசக்தி ஐக்ய ஸ்வரூப” தரிசனமும் கூடிய மிகவும் புனிதமான தரிசனப் பகுதியே நம் ஆஸ்ரமப் பகுதி,

இரு கண்களையும் விரிந்து நோக்கிட அண்ணாமலையின் அத்தனை முகடுகளும் சிவனருளால் இப்பகுதியில் உங்கள் இரு கண்களுக்குள் அடங்கும் அதிஅற்புதக் காட்சி. இவ்வாறு திருஅண்ணாமலையின் இரு விளிம்புகளும் உங்கள் இரு விழிகளுக்குள் அடங்கிக் காட்சியளிப்பதை “சூர்ய சந்த்ராக்னி நேத்ர தீபம்” என்று சொல்கின்றார்கள். அதாவது இறைவனுடைய வலது கண்ணே சூர்ய பகவான், இடது கண்ணே சந்திர பகவான். திருஅண்ணாமலையார்தானே பரப்ரம்ம அக்னிமூர்த்தி

இறைவனுக்குரிய 1008 சஹஸ்ரநாம போற்றிகளில் “சூர்ய சந்த் ராக்னி நேத்ராய நம:” (“சூர்ய, சந்திர மூர்த்திகளை இரு கண்களாக உடையவனே போற்றி!”) என்ற முக்யமான போற்றித் துதியும் உண்டு. எனவே இங்கிருந்து திருஅண்ணாமலையை தரிசிப்பது பெறற்கரிய அனுகிரஹங்களைத் தந்தருளும். அதாவது நம்மை அறியாமலேயே நம் வாழ்வில் இவ்வருட் சக்திகள் கண் கண்ட மருந்தாய், அவ்வப்போது இரட்சையாய்த் துணை புரியும்.

நம் ஆஸ்ரமத்தின் மேல் விதான மண்டபத்தில் ஓம்காரத் த்ரயம்பக மூலப்பீடத்தில் நவகிரஹ, நட்சத்திர, தேவமூர்த்திகளின் பீஜாட்சர, யந்திர, எந்திர மூலிகை சக்கரங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. இவற்றுள் ஸ்ரீ வாஸ்து மூர்த்திக்குரிய வராஹ ப்ரக்ருதி யந்திரச் சக்கரமும் ஒன்றாகும். இதன் ஊர்த்வ மற்றும் அதோமுக பீஜாட்சர நட்சத்திரக் கால்கள் முன் மண்டபத்தின் இரு தூண்களின் வழியே கீழ்ச் சென்று கீழே 12 விதமான துவாதச பித்ருப் படிக்களுடன் இணையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்புருஷர்களுடைய “பாதரஸமூலிகா” பூச்சு மூலம் சாதிப்பதற்கான விசேஷ பூமி பூஜைகள், குறிப்பிட்ட வாஸ்து நாட்களில், அதிலும் குறித்த முகூர்த்த நேரங்களில் கடைபிடிக்கப்பட்டுள்ளன.

கால புருஷாங்க மேல்விதமான நியதிகளின்படி வரையப்பட்டதே இச்சக்கரங்களாகும். இங்கு காணப்படும் ஓங்கார வடிவமானது த்ரயம்பக சக்கரங்களின் பின்னணியில் அமைந்திருப்பதாலும் எப்போதும் திருஅண்ணாமலையை நோக்கி இருப்பதாலும் பல ஜோதி கிரணங்களை இது பிரதிபலிக்கின்றது.

முன்னரே தெரிவித்துள்ளபடி பலவித கிரகங்களின், நட்சத்திரங்களின் தெய்வீக சக்திகளைத் தன்னுள் ஈர்க்கும் தெய்வீக சக்தி வாய்ந்த த்ரயம்பக சக்கரங்களைத் தன் அடிப்பீடத்தில் கொண்டிருப்பதாலும் அவற்றின் ஜீவ கதிர்களை அவரவர் ஆன்மீக சக்தி மற்றும் உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ப இந்த ஓங்கார வடிவம் நமக்களிக்கின்றது.

சில விசேஷமான நாட்களில் ஸ்ரீ வாஸ்து மூர்த்தி தம்முடைய யோக நித்திரையிலிருந்து விழித்தெழுந்து சிரசு, பாதங்களை மாற்றித் துயில் கொள்வார். ஆஸ்ரமத் தூண்கள் இரண்டும் “வாஸ்த்வய ஸ்தம்பங்களாக”  இந்நாட்களில் பூஜிக்கப்பட்டு மூலிகா பந்தனங்கள் செய்யப்பட்டிருப்பதால் மேலே உள்ள ஓம்கார வடிவமானது திருஅண்ணாமலையாரின் மலைத் திருமேனிக் கிரணங்களின் தெய்வ சக்தியை ஈர்த்துப் பிரதிபலிப்பது மட்டுமன்றி வாஸ்தவ்ய ஸ்தம்பம் எனப்படும் இரு முகப்புத் தூண்களின் வழியே கீழேயுள்ள 12 (துவாதச) பித்ரு படிக்கட்டுகளை அடைந்து இதில் அன்னதானம் பெற வரும் கிரிவல அடியார்களுக்கும் என்றும் சேவை செய்கின்ற ஆஸ்ரம அடியார்களுக்கும் இத்தெய்வீக சக்தியை அளிக்கின்றது.

இம்மட்டோ, மேல்விதான மண்டபங்களும் சூட்சும ரூபமாக அருணாசலத்தை கிரிவலம் வரும் தேவாதி, தேவ மூர்த்திகளும் தங்கி யோக சக்திகளையளிக்கும் வண்ணம் தெய்வீக சக்திகள் ஆவாஹனமாவதற்குரிய வைதீக, ஆகம, சித்புருஷக் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கோபுர தேவ வடிவுகளைப் போல் இவற்றிலும் அண்ட சராசர மண்டல தேவதா மூர்த்திகள் தங்கிச் செல்லும் வகையில் நிர்மாணம் பெற்றுள்ளன. சிறிய ராஜகோபுர அமைப்பிற்காக முயன்று வருகிறோம், திருஅண்ணாமலையார்தான் கருணை புரியவேண்டும், பக்தர்களின் உள்ளத்திற் புகுந்து ஊக்குவித்து!

ஆன்மீகத்தில் பிரமிட் அமைப்பிற்குத் தனி மகத்வம் உண்டு. இதனைக் “கூட்டுக் கலைக் கோணம்” என்று சித்த கிரந்தங்கள் வர்ணிக்கின்றன. சாதாரணமாக பிரமிட் பற்றிய ஆராய்ச்சிகளில் ஒன்றாக காகிதம், உலோகத்தால் செய்யப்படும் பிரமிட்டு வடிவக் கூடுகளில் வைக்கப்படும் தக்காளி, மாம்பழம் போன்ற பழ வகைகள் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் என்பதை உங்கள் வீட்டில் நீங்களே செய்து பார்த்துக் கொள்ளலாம்.

பிரமிட் செய்வதற்கான குறித்த சில கோண அளவு முறைகளும் உண்டு. இதனுள் வைக்கப்படும் பிளேட், கத்தி போன்ற கூரிய பொருட்களின் முனை மழுங்காது, துருப் பிடிக்காது. நெடு நாட்களுக்கு வரும் என்ற விஷயங்களும் நீங்கள் நன்கு அறிந்ததே!

பிரமிட் தியானம் : உங்கள் வீட்டிலேயே அட்டை, மெல்லிய தகட்டால் (செம்பு சிறப்பானது) பிரமிட் ஒன்றைச் செய்து வைத்துக் கொண்டு தினமும் அதனுள் அமர்ந்து முறையான தியானம் பயின்று வாருங்கள்! பிரமிட் கோணங்கள் தக்க முறையில் அமைந்து விட்டால் தியானநிலையில் முன்னேற்றங்களைக் கண்கூடாகக் காணலாம்.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி

(ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளியது) அம்பிகையின் பலவித ரூபங்களுள் எளியோர்க்கும், அருள்பாலிக்கும் வண்ணம், கூப்பிட்ட குரலுக்கும், அழுது மனமுருகி வேண்டிக் கூப்பிடினும், செவி சாய்த்து அருள் புரியும் எளிய அம்பிகையே பராசக்தி ஸ்வரூப ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆவாள், இவ்வம்பிகையை பக்தி பூர்வமாக, குரு உபதேசமாக உபாசனை செய்து அன்றும் இன்றும் என்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் அடிமையாய்ச் சிறந்து விளங்கி அம்பிகையின் பேரருளால் நமக்கு நல்வழி காட்டி வரும் ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள், இளவயதிலேயே தம் சற்குருவின் திருவருளால் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதியின் 101 பாடல்கைளப் புனையும் அருட் சக்தியைப் பெற்றார். இவ்வாறு சற்குருவின் திருவாய் மொழிகளாகப் பிறந்ததே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி!

எவ்வளவோ கடினமாக உழைத்தாலும் நற்பெயரோ, புகழோ, பதவி உயர்வோ பெற முடியவில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு! தாம் செய்த கடின உழைப்பின் பலன்கள் எல்லாம் பெரும்பாலும் மேலதிகாரிக்கு/சக ஊழியருக்கு செல்வது கண்டு மேன்மேலும் வருத்தமே வந்து சேரும்!

எவ்வளவோ பாடுபட்டும் புகழ் ஏணியின் அடிப்படியைக் கூடத் தொட முடியவில்லை என்று ஏங்குவோரும் உண்டு. புகழோ, கீர்த்தியோ வேண்டாம், எவருக்கும் மனதால் கூடத் தீங்கிழைக்காது நன்றாக உழைக்கின்றோமோ அதற்காக ஒரு நல்ல பெயராவது எடுக்கக் கூடாதா என்பது கூடப் பலருடைய அங்கலாய்ப்புதானே? இத்தகைய நியாயமான குறைகளைத் தீர்த்து தார்மீகமான முறையில் தத்தம் துறையில் அலுவலகத்தில் நற்பெயரும் உரிய புகழையும் கீர்த்தியையும், பரிசையும் பெற்றிட கீழ்க்கண்ட ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் துதியைத் தினந்தோறும் ஓதி வருக!

பொருள் தரும் போகந் தரும் மதிமயங்கிப்போகு முன்னே
அருள் தரும் அனைத்துத் தரும் அங்காளம்பிகை தானே!
திருவருள் தரும் தினந்தரும் தன்பால் நினைவூட்டி ஆனந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே

அகத்திய நட்சத்திரம்

நம் சிவகுருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள், “கங்கையில் உள்ள மணலை எண்ணினால் எவ்வளவு வருமோ அந்த அளவிற்கு இந்திரர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். இரண்டாயிரம் கோடி அகஸ்தியர்களும் உண்டு...” என்று ஓர் அரிய விளக்கம் தருவார்! புதிர் போல இது தோன்றிடினும் இதில் ஆழ்ந்த உண்மையான கருத்துக்கள் உள்ளன.

இன்னம்பூர் திருத்தலம்

கோடானு கோடி யுகங்களாக இருந்து வருகின்ற மஹா மஹரிஷியே ஸ்ரீ அகஸ்தியர்! சித்புருஷர்களின் தலைமைப் பீட கர்த்தா! திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் ஆதி மூல பீடம்! திருவேங்கடத்துறை கும்பமுனிப் பரம்பரையின் ஆதி நாயகர் ! தமிழுக்கு இலக்கணம் தந்த உத்தம சித்தர் ! வடமொழியில் சிறந்து விளங்கும் கலைப் பொக்கிஷம்! தினந்தோறும் திருக்கயிலாயத்தில் ஈஸ்வரனையும் வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவையும் தரிசிக்கும் பேறு பெற்றவர்! நிதமும் காலையில் பொதிய மலையிலிருந்து புறப்பட்டு சகல தேவாதி தேவ தெய்வலோக மண்டலங்களிலும் சஞ்சாரம் புரிந்து அனைத்து தெய்வமூர்த்திகளிடமும் அளவளாவும் பாக்ய சக்தி பெற்றவர்.

இரண்டாயிரம் கோடி அகஸ்தியர்கள் வந்து சென்றுள்ளனர் என்றால் இதன் பொருளென்ன! அனைத்துப் புராணங்களிலும் ஸ்ரீ அகஸ்தியரின் சஞ்சாரங்களைக் காணலாம். ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் மந்திரத்தை உபதேசம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்.

ஈஸ்வரனுடைய திருமண வைபவத்தில் கோடானு கோடி மஹரிஷிகளும் ஞானியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும் திருக்கயிலைக்குச் சென்ற போது நெருக்கம் காரணமாக வடதிசை தாழ்ந்திட சர்வேஸ்வரனே “அகத்தியா! தெற்கே சென்று சமபாரத்தை ஏற்படுத்துவாயாக! உனக்காக யாமிருவரும் திருமணக் காட்சிகளை அங்கேயே தந்து மகிழ்வித்திடுவோம்!” என்ற தெய்வத் திருவாக்கு மூலம் ஸ்ரீ அகஸ்தியரின் அருட்பெரும் திறத்தை பிரபஞ்சத்திற்கே உணர்த்தும் பெருமை பெற்றவர்.

ஸ்ரீ லோபா முத்ரா தேவியை மணம் புரிந்து பித்ருக்களின் தெய்வீக மகத்துவத்தை உலக ஜீவன்களுக்குப் புகட்டி பித்ரு லோகங்களின் அரிய தெய்வீக சக்தியை உயர்ந்த நிலையில் வைத்து ஸ்ரீமஹா விஷ்ணுவையே பித்ருலோக நாயகராக விளங்கும்படி வரம் வேண்டிப் பெற்றவர். இவ்வாறாக ஸ்ரீ அகஸ்தியமஹாசித்புருஷரின் இறைத் திண்மைகளைப் பல புராணங்களாக விவரித்திடலாம். இப்பூவுலகில் மட்டுமல்லாது சகல கோடி அண்டங்களில் உள்ள மூலிகைத் தாவரங்களுக்கு அதிபதியே ஸ்ரீ அகஸ்திய மஹாபிரபு! சித்த வைத்தியத்திற்கு அதிபதியாய்த் திகழ்ந்து போகர், புலிப்பாணி போன்ற அருட்பெரும் சித்தர்களைச் சீடராகக் கொண்டு உலகெங்கும் சித்த மருத்துவத்தைப் பரப்பியவர். சகல தெய்வ மூர்த்திகளுடன் நேருக்கு நேர் அடி பணிந்து நின்று அளவளாவும் அருட்பெரும் பாக்கியத்தைப் பெற்றவர்.

வடமொழி, தமிழ் மொழிகளில் மறைப் பொருளின் மாணிக்கமாய்ப் பிரகாசிப்பவர்! இன்றைக்கும் ஸ்ரீ அகஸ்திய மஹாபிரபு மானிட வடிவிலோ வேறு வடிவிலோ வந்து தரிசித்துச் செல்கின்ற திருத்தலங்கள் பலப்பல. ஸ்ரீ அகஸ்திய சித்த புருஷரே பிரதிஷ்டை செய்த லிங்க திருமூர்த்திகள் இன்றும் பலவுண்டு. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நாரத மஹரிஷிபோல் சிரஞ்சீவியாய் கிருத திரேதாயுக துவாபர கலியுகங்களில் பூலோகத்திலும், கயிலாயத்திலும் வைகுண்டத்திலும் தேவலோக, சத்ய லோகங்களில், ஈரேழு பதினான்கு லோகங்களிலும் அருள் வலம் வரும் தெய்வீக பாக்யத்தைப் பெற்றவர்.

பிரும்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம், யம தீர்த்தம் , வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், வேத தீர்த்தம், க்ஷீர குண்டம், பிப்லாத தீர்த்தம், வில்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், பங்குனி தீர்த்தம், சித்ரா தீர்த்தம், சக்தி தீர்த்தம், அக்னி தீர்த்தம், வருண தீர்த்தம், பத்ம தீர்த்தம் என லட்சோபலட்சம் தீர்த்தங்களிலும் புண்ய நதிகளிலும் தினந்தோறும் நீராடும் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்.

இவ்வளவு தீர்த்தங்களிலும் நீராடி காலை சந்தியா வந்தன மந்திரத்தில் ஆசமனம் எனப்படும் மூன்று முறை தீர்த்தத்தை உட்கொள்கின்ற, உடலையும் உள்ளத்தையும் புனிதமாக்குகின்ற தீர்த்த பூஜையில் சற்றே தெளித்த நீர்த் திவலைகளே இன்று அகஸ்திய தீர்த்தமாக பல திருத்தலங்களில் காணப்படுகின்றன.

வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெறுவதற்காக இறைவனே முன் வந்து எழுத்தாணியும் சுவடியும் அளித்து ஸ்ரீ அகஸ்தியருக்கு இலக்கண உபதேசம் செய்த தலமே கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் திருத்தலமாகும். எழுத்தறிநாதராய், தான்தோன்றீசராய் சிவபெருமானே அகஸ்தியருக்கு கல்விச் செல்வத்தைப் புகட்டிய தலம். எனவே இத்திருத்தலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறத்திலோ அல்லது மா, பலா, தேக்குப் பலகையிலோ அல்லது தங்க/வெள்ளித் தட்டிலோ முழு நெல்லைப் பரப்பி அதில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு அதற்குப் பீடமிட்டு ஓம் என்றெழுதி “ஸ்ரீ லோபாமாதா சமேத ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியே போற்றி:”என்று எழுதிப் பள்ளியில் சேர்த்திட கல்விச் செல்வத்திற்குக் குறைவில்லாமல் ஐஸ்வர்யம்போல் பெருகும்.

இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ அகஸ்தியரின் தரிசனத்தைப் பெறுவதென்றால் அது எத்தகைய பாக்கியம்! எவ்வாறு இதனைப் பெறுவது? !

ஸ்ரீ அகஸ்திய நட்சத்திரம்

கோடானுகோடி நட்சத்திரங்களும் ஸ்ரீ சூரியன் சந்திரன் உள்ளிட்ட அனைத்து நவகிரஹ மூர்த்திகளும் ஸ்ரீ அகஸ்திய மூர்த்தியிடம் பாடம் கற்க விரும்பினார்கள் . . அப்போது சர்வேஸ்வரனே ஸ்ரீஅகஸ்தியவரின் ஸ்ரீ வித்யா சக்தியை ஒரு ஜோதி ரூபமாக்கி அதனைத் தம்முடைய ஆயிரம் கண்களால் பார்த்து தீட்சை செய்து அதன் ஜோதியைப் பன்மடங்காக்கினார். இம்மூர்த்தியே சகஸ்ர நேத்ரீஸ்வரராக, கண்ணாயிரமுடையாராக, கண்ணாயிர நாதராக மயிலாடுதுறையருகே திருக்கண்ணார் கோயிலில் அருள் புரிகின்றார்.

கடுமையான கண் நோய்களால் துன்பமுறுவோர் இச்சிவமூர்த்திக்கு (மாதுளம் பழ) முத்துக்களால் (குறைந்தது 1001 முத்துக்கள்) சந்தனக் காப்பு போல் முத்துக் காப்பிட்டு ஏழைகளுக்கு அளித்து வர கண்நோய்களுக்குத் தக்க நிவர்த்தியுண்டாகும்.

இவ்வாறாக சர்வேஸ்வரனே தம்முடைய ஆயிரம் கண்களால் பார்த்து தெய்வீகப் பொலிவு தந்த ஸ்ரீ அகஸ்தியரின் திவ்ய வித்யா ஜோதியானது இன்றைக்கும் வானிலே ஸ்ரீ அகஸ்திய நட்சத்திரமாக (Canopus) காட்சியளிக்கின்றது. வானில் தெற்குப் பகுதியில் காணப்படும் இதனை தினந்தோறும் தரிசித்து வருதல் சிறப்புடையதாகும். இதுவே, ஸ்ரீ அகஸ்தியர் தரிசனமாகும். திருஅண்ணாமலை, ஈங்கோய்மலை, பொதி மலை, திருச்சி மலைக் கோட்டை போன்ற நிதமும் ஸ்ரீ அகஸ்தியர் தரிசிக்கும் இத்திருத்தலங்களிலிருந்து ஸ்ரீ அகஸ்திய நட்சத்திரத்தை தரிசிப்பது மிகவும் சிறப்புடைய தாகும்.

21.5.1998 அன்று இந்த ஸ்ரீ அகஸ்திய நட்சத்திரத்தைத் தரிசிப்பது வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும். தக்க, பெரியோர்களின் ஆசியோடு இதனை தரிசித்திடுக.

அமிர்த தாரைகள்

குறையில்லா நிலை காண!

என்ன உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. அதை விட்டு விட்டாலோ பிழைப்புக்கு வழியில்லை. பெரும்பாடுபடுகின்ற மக்கள் எங்கு போய் தன்: குறைகளைச் சொல்லுவார்கள்? இவர்கள் குறைகளைக் கேட்பதற்கென்றே ஏலத்தூர் முருகன் இருக்கின்றார். இம்முருகனுக்குக் கறந்த பசும்பாலில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து அபிஷேகம் செய்து தானமாய் அளித்திடில் குறையெல்லாம்தீரும்!

திருமலை முருகன் தலம்

வேலை தரும் வேலவன்!

யாரையும் பார்க்காமல் வீட்டிலேயே இருந்துகொண்டு வேலை என்னைத் தேடி வர வேண்டும் என்று அமர்ந்திருந்தால் நடக்குமா இந்த காலத்தில்? நான்கு பேரைப் போய் பார்க்க வேண்டாமா? இப்படி எல்லாம் முறையீடு செய்யும் மனைவியைப் பார்த்து அப்படியே அமர்ந்திருக்கும் கணவன்மார்களுக்கு வழியில்லையா என்று ஏங்கும் பெண்களுக்கு வழிகாட்டுகின்ற முருகன் இருக்கும் இடமோ திருமலை முருகன் ஆவார். இம்முருகனுக்கு சாத்துக்குடிச் சாறால் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு தானமாய் அளித்து வேண்டிடில் கணவன் ஓடிப் போய் வேலையைத் தேடுவான்.

பாவம் களையும் அநுவாவி முருகன்!

பாவங்களைச் செய்தவர்களுக்கு அவரவர் மனசாட்சிதான் பிரதிபலிப்புக் கண்ணாடியாகும். அவ்வாறு மனசாட்சியைக் கொல்லாமல் ஓரளவு திருந்தி வாழ வேண்டும் என்று எண்ணுகின்றவர்களுக்கு இனிமேல் பாவம் செய்யாமல் இருப்பதற்கும் திருந்தி, செய்த பாவத் திற்குப் பிராயச்சித்தம் செய்கின்ற உண்மை அன்பர்களுக்குப் பாவம் தீர்த்து பக்தனுக்கும் அருள்பவர் யார்? இம்முருகனுக்கு தேனில் ஊறவைத்த அத்திப்பழத்தால் அபிஷேகித்து அதையே அனைவருக்கும் தானமாய் அளித்து வேண்டிடுக! இவ்வரமருளும் முருகன் தான் அநுவாவி முருகன். தேடிப்பிடித்து நிம்மதியாய் வாழுங்கள்,

கதித்த மலையானே கதி

படித்துப் படித்துச் சொன்னாலும் இடித்து இடித்து காட்டினாலும் புரிந்து கொள்ளாத கணவனைப் பெற்ற மனைவிமார்கள் படுகின்ற பாட்டை உணர்கின்ற ஒரே இறைவன் கதித்தமலை முருகன். இவருக்கு இனித்த பணியாரத்தை இதமாய் நிவேதனம் செய்து தான தர்மங்கள் செய்தால் கணவன்மார்கள் தெளிந்த அறிவோடு செயல்படுவர் வாழ்க்கையில்.

அன்பே அழகு!

தான் அழகாக இல்லையே என்னை யார் மணந்து கொள்வார்கள் என்று ஏங்குகின்ற பெண்களும் உண்டு ஆண்களும் உண்டு. ஆனால் உங்கள் உள்ளத்தைப் பார்க்கின்றவர் இறைவன் ஒருவன் தான். இவ்வாறு ஏங்கும் கன்னிகளுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் அமைய அழகுமலை முருகன் கோயிலில் தேனில் கலந்த அன்னாசிப் பழம் அபிஷேகம் செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் தானம் அளித்திடில் அழகைப் பற்றி கவலை வேண்டாம், அன்பு செலுத்தும் வரன் அமையும்.

மதுரையில் ஏராளமாக தெய்வீக ரகசியங்கள் உண்டு. அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற நிறைய வழிகாட்டி கோயில்கள் நிறைந்த தலம் மதுரையாகும். இதில் எதிர்பாராத பணக் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறவும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் எத்தகைய கடுமையான சோதனைகள் வந்தாலும் இதிலிருந்து விடுதலை பெறவும் ஒரு முறை செய்த தவறை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கும் பலவித அற்புத ரகசியங்கள் நிறைந்த உத்தம தெய்வமாகிய புலிப்பாத கணேசர் வீற்றிருக்கிறார். இவரை வியாக்ரபாத கணேசன் என்றும் சித்தர்கள் அழைக்கிறார்கள். தேடிக் கண்டுபிடியுங்கள். தன் கையால் அரைத்த சந்தனத்தால் இவருக்குப் பொட்டிட்டு கொழுக்கட்டை தானம் செய்து வந்தால் காரியசித்திபெறலாம்.

இருமுடியின் புனிதம் காப்பீர்

தற்போது பம்பை நதிக்கரையில் இருமுடிகள் விற்கப்படுவதாகவும் அன்பர்கள் நேரே அங்கு சென்று ரெடிமேடாகக் கிடைக்கும் இருமுடியை வாங்கி தலையில் வைத்துக் கொண்டு அப்படியே சபரிமலைக்கு செல்வதாக அறிகின்றோம். இது மிகவும் வேதனைப் படக்கூடிய விஷயமாகும். எத்தகைய பவித்ரமான முறையில் இரு முடியைத் தரிக்க வேண்டும்! தயவு செய்து இத்தகைய அதர்மமான வழி முறைகளைக் கையாளாதீர்கள். உண்மை பக்தியுடன் இருப்பதாகப் பிறரை ஏமாற்றிடலாம். ஆனால் ஸ்ரீ ஐயப்ப சந்நிதியிலே ஸ்ரீ ஐயப்பனுக்கே அநீதியான செயலைச் செய்திடலாமா. மனசாட்சியுடன் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

கண் திருஷ்டி, ஏவல் நிழலாடுகின்ற நிலை, வீட்டில் வீண் சண்டை, சொல்லுகின்ற நல்ல வார்த்தையைத் தவறாகப் புரிந்து கொண்டு குடும்பத்தில் சண்டைகள் உருவாகின்ற நிலை தீர வேண்டுமென்றால் ஊதி மலை முருகன் கோயிலில் வில்வ மரத் தேன் அடையில் எடுத்த தேனால் அபிஷேகித்து, தேனில் தினைமாவும் கலந்து நைவேத்யம் செய்து ஏழைகளுக்குத் தானமாய் அளித்திடில், குடும்பத்தில் நிம்மதி தாண்டவமாடும்.

ஸ்ரீஆதிவிநாயகர் திருச்சி

ஸ்ரீ ஆதிவிநாயகருக்கு .....

துதிக்கையின்றிக் காட்சி தருபவரே நரமுக விநாயகர் (திருச்சி நன்றுடையார் கோயில், திருவாரூர் அருகே திலதர்ப்பணபுரி) ஸ்ரீ ஆதிவிநாயகருக்கு ஞாயிறு, அசுவினி நட்சத்திர நாட்களிலும் சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும் மாதுளம் பழ முத்துக்களால் காப்பிட்டு அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் நிலம், வீடு, சொத்து, வேலை சம்பந்தமான நெடுநாள் கோர்ட் வழக்குகள் / தாவா தீரும்.

கைதேர்ந்த வைத்யர் ஆக வேண்டும் என்று அனைத்து வைத்தியர்களுக்கும் ஆசை உண்டு. இதற்கு படித்தால் மட்டும் போதாது! வைத்தியத் துறையில் கைராசி பெறுவதற்கு இப்பிறவியிலாவது அல்லது முற்பிறவியிலாவது தெய்வ உபாசனையையும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவையையும் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. ஆகவே இப்பிறவியில் கைதேர்ந்த டாக்டராக ஆக ஒரே வழி நித்ய சூரிய பூஜையும் முக்கியமாக விசாக நட்சத்திரத்தில் தொடர்ந்து சூரிய பூஜையும் செய்து வருதலே! வாரத்தில் ஒரு நாளேனும் இலவச வைத்யம் செய்திடுக!.

கடைகளில் தோஷங்கள் நீங்க....

ஆயிரக்கணக்கானோர் நடமாடுகின்ற, வந்து செல்கின்ற வியாபார இடங்களில் ஏமாற்றுதல், வஞ்சனை, திருட்டு புத்தி, பகைமை, பொறாமை, துரோகம், குரோதம், தரித்திரம் போன்றவை காரணமாக எதிர்வினை எண்ணங்களும் எதிர் வினைச் சக்திகளும் மிகுந்திருக்கும். இவை கடைகளில் குடிகொள்ளுமானால் ஏற்படுகின்ற விளைவுகளோ வியாபார வருமானத்தைப் பாதிப்பதோடு குடும்பத்திலும் பிரச்னைகளையும் உருவாக்கும். இவற்றைத் தவிர்த்திட,

1. நன்மை தரும் சக்திவாய்ந்த குங்கிலிய தேவதைகள் தோன்றுகின்ற காலை 6 மணி, மாலை 6 மணி - புனிதமான ப்ராத, சாயங்கால வேளைகளில் சிறிது குங்கிலியம், சந்தனத்துடன் சாம்பிராணி தூபமிட்டு வாருங்கள்.

2. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் விளக்குமாறால் பெருக்கி, குறைந்த பட்சம் காலணிகளை வைக்கின்ற இடத்தையேனும் அடிக்கடி பெருக்கிச் சுத்தம் செய்திடுக! பொறாமைக்குரிய துர்சக்திகள் படியுமிடங்கள் இவை!

3. ஒட்டடையில்தான் துர் சக்திகள் (Negative forces) பெரிதும் குடி கொள்கின்றனவாதலின் ஒட்டடையை முழுதும் நீக்கிட வேண்டும்.

அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்

ஆலயங்களில் தெய்வமூர்த்திகளின் பீடங்களை நிலைநிறுத்துவதற்காக எட்டுவகை மூலிகா பந்தனங்கள் நிறைந்த “அஷ்டபந்தன” மருந்து சாற்றுவார்கள். கட்டியாக நன்கு கெட்டியாக இருக்கும் இம்மருந்தை உரலில் நன்கு இடித்துப் பசுவெண்ணெய் சேர்த்து நல்ல சூடுவரும் பக்குவத்தில் உடனே சுவாமியின் பீடத்திற்குச் சாற்றினால் மந்திரங்களை கிரஹிக்கும் சக்தி நிறைய உண்டு. “பூகர்ஷணப் பிரகாச சக்தி” என்ற ஓர் அற்புதமான சக்தியொன்றுண்டு. இறைமூர்த்திக்கு சார்த்தப்படுகின்ற சந்தனம், இளநீர், பன்னீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் அனைத்துவிதமான அபிஷேகங்களும் மூலாதாரப் பீடத்தில் இறங்கி வருகையில், இந்த பூகர்ஷணப்பிரகாச சக்தி மூலமாக அஷ்டபந்தன மருந்தின் சக்தியில் இவை ஈர்க்கப்பட்டு கோமுக தாரை மூலமாக நமக்குக் கிட்டுகின்றது. மேலும் பீடத்தின் அடியில் உள்ள எந்திர, நவரத்தின, பொன் சக்கரங்களின் தெய்வீக சக்தியையும் நமக்குப் பெற்றுத் தருவதே அஷ்டபந்தன மூலிகாசக்தியாகும்.

தற்காலத்தில் அஷ்டபந்தன மருந்தினை முறையாக இடித்துப் பந்தனம் கட்டித் தருகின்ற பக்குவத்தைப் பலரும் அறியாததினாலும் பந்தனக் கட்டியை இடித்துத் தருகின்ற உரல், உலக்கை வசதியும், இடிப்பதற்கான ஆள் வசதியும் இல்லாது சிமெண்டை வைத்து கல் விக்ரஹங்களின் அடியில் பூசி விடுகின்றனர். இது தவறானதோடு மட்டுமன்றிச் சாபங்களையே பெற்றுத் தரும். லட்சக் கணக்கில் கும்பாபிஷேகத்திற்குச் செலவு செய்துவிட்டு, சிமெண்டை, காரையை வைத்து பிரதிஷ்டை செய்வதென்றால் இது தெய்வக் குற்றமாகி சம்பந்தப்பட்டோருடைய குடும்பங்களையும் சமுதாயத்தையும் பாதிக்கும். அஷ்டபந்தன மருந்தை முறையாக இடித்துப் பீடத்திற்கு இடுவதுதான் புனிதமானது, பசுநெய்தான் சேர்க்கப்பட வேண்டும். மருந்தைக் காய்ச்சி இடுவதும் தவறானதே! ஆதார பீடமில்லாது மருந்தைச் சாற்றக் கூடாது.

3.04.1998 அன்று சென்னை நங்கநல்லூரர் ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதனப் பெருமாள் ஆலயத்தில் அஷ்டபந்தன மருந்தை இடித்துச் சாற்றும் பெறற்கரிய பாக்யம் நம் ஆஸ்ரம அடியார்களுக்குக் கிட்டியது என்றால் ஈரேழுலகத்திலும் கிட்டாத பெரும்பேறன்றோ! அஷ்டபந்தன மருந்தின் மஹிமைபற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயங்களில் நிறைய விளக்கங்கள் காணப்படுகின்றன.

கொம்பரக்கு, குங்கிலியம் (ஒரு வகை சாம்பிராணி) சுக்கான் தூள், செம்பஞ்சு, கற்காவி, தேன் மெழுகு (மூலிகை மரங்களிலிருந்து எடுப்பது விசேஷமானது), ஜாதி லிங்கம், பசும்பாலிலிருந்து எடுத்த வெண்ணெய் ஆகிய எட்டு முக்கியமான பொருட்கள் சேர்ந்ததே அஷ்டபந்தன மருந்தாகும். அந்தந்த தெய்வ மூர்த்திக்கேற்ப சில மூலிகா பந்தனங்களும் சேர்க்கப்படுவதுண்டு.

நித்ய கர்ம நிவாரணம்

1.5.1998 – ஓடக்காரர்களுக்குத் தேங்காய் சாதம் தானம் – நெடுநாளைய நோய்கள் தீரும்.

2.5.1998 – ஸ்ரீராமர் கோயிலில் புளியோதரை அன்னதானம் – எதிர்பாராத நல்ல செய்திகள் வரும்.

3.5.1998 – பசு மாட்டிற்குப் புல் அளித்தல் – வருமானம் நன்முறையில் அதிகரிக்கும்.

4.5.1998 – குதிரைகளுக்கு (வேக வைத்த) கொள் அளித்தல் – புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

5.5.1998 – எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை தானம் – தேங்கியிருந்த பணம் திரும்பி வரும்.

6.5.1998 – பூனைகளுக்குப் பால் தானம் – புரியாத பிரச்னைகளுக்குத் தெளிவு கிடைக்கும்.

7.5.1998 – புறாக்களுக்குக் கேழ்வரகு தானம் – வெளியூர்களிலிருந்து நற்செய்தி/உதவி வீடு தேடி வரும்.

8.5.1998 – கூண்டில் அடைபட்ட பறவைகளுக்கு விடுதலை அளித்தால் தீராத நோய்கள் தீர வழி ஏற்படும்.

9.5.1998 – கோயிலில் எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த கோதுமை ரவை இடுதல் பெண் குழந்தைகள் நலம் பெறுவர்.

10.5.1998 – பைரவருக்குப் பூஜை செய்து நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி இடுதல் – நன்றி உடையவர்களால் வேண்டிய உதவி கிட்டும்.

11.5.1998 – கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு பொரி, இனிப்பு உருண்டைகள் இடுதல் – கணவன் மனைவியரிடையே பரஸ்பர அன்பு மேம்படும்.

12.5.1998 – மயில்களுக்குச் சிவப்பு சோளம் அளித்தல் – மகிழ்ச்சியான செய்திகள் தேடிவரும்.

13.5.1998 – வேதம் படித்தவர்களுக்கு அன்னதானம் – அயல்நாடு சென்றவர்கள் நலம் பெறுவர்.

14.5.1998 – தமிழ்மறை ஓதுவார் மூர்த்திகளுக்கு உணவு, உடை தானம் – வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

15.5.1998 – விஷ்ணு சகஸ்ரநாமம் எட்டு தடவை படித்திடில் நண்பர்களால் வருகின்ற தீங்கு தவிர்க்கப்படும்.

16.5.1998 – குபேர பூஜை செய்திடில் பணத்தால் வருகின்ற பிரச்சனைகளும் மனக் குழப்பங்களும் தீரும்.

17.5.1998 – காராம்பசுவிற்கு வாழைப் பழங்கள், புல்தழை அளித்தல் – நல்ல செய்திகள் வீடு தேடிவரும்.

18.5.1998 – சாதி, மத பேதமின்றி 80 வயது சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள் தாலிசரடு தானம் – குடும்பத்தில் பேரமைதியைத் தரும்.

19.5.1998 – 100 வயது நிரம்பிய பெரியோர்களுக்குப் பாத பூஜை செய்திடில் வியாபாரத்தில் / வேலையில் எதிர்பாராத, நல்ல அபூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

20.5.1998 – முதியோர்க்குக் கோவண ஆடைதானம் – பொருள் சேர்க்கையைத் தேடித் தரும்.

21.5.1998 – கன்றுடன் சேர்ந்த பசுவிற்கு புல், வாழைப்பழ தானம் – குழந்தைகள் அடிபடாமல் காப்பாற்றப்படுவர்.

22.5.1998 – ஸ்ரீராகுவிற்கும் பத்ரகாளிக்கும் வெண்ணெய் உருண்டை சாற்றுதல் – குடும்பத்தில் கொங்தளிப்பு அடங்கும்.

23.5.1998 – அணில்களுக்கு உணவிடுதல் புனிதமான காதலில் வெற்றி கொள்வர். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வர்.

24.5.1998 – பூசினிக்காய் தானம் – காணாமல் போன, திருடுபோன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.

25.5.1998 – வாழைக்காய் கூடிய உணவு அளித்தல் – மூதாதையர்களின் ஆசி கிட்டும்.

26.5.1998 – குழந்தைகளுக்கு ரசகுல்லா தந்திடுக! குடும்பத்தில் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

27.5.1998 – சிவன் கோயிலில் அடிபிரதட்சிணம், வேர்க்கடலை சாதப் பிரசாதம் அளித்தல் – நீண்ட நாள் ஏக்கங்கள் நிறைவேறும்.

28.5.1998 – மயில்களுக்கு உணவு இட்டால் வேண்டிய பொருள் வீடு தேடிவரும்.

29.5.1998 – காகங்களுக்கு உணவு இடுக! வீட்டில் ஏற்படும் கலகங்கள் தடுக்கப்படும்.

30.5.1998 – கோயில்களில் முக்கூட்டு எண்ணெய் (அகல் விளக்கு) தீப தானம் பெண் வயிற்றுப் பேத்திகள் நலம் பெறுவர்.

31.5.1998 – எங்கும் தங்காமல் முருகனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே (குமரா, குகா, சுபிரமணியா) குறைந்தது மூன்று மைல்கள் விரைவாக விரைந்து வந்திட கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கண்டிடலாம்..

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam