அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருஅண்ணாமலையான் துணை

“ஆடிப் பாடி திருஅண்ணாமலையைக் கைதொழ ஓடிபோகும் வல்வினைகளே“ – என்பது ஆன்றோர் வாக்கு.
“திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி” என்பதும் மறைகளின் கூற்று..
“நினைத்தாலே முக்தி” – என்றால் என்ன?
பல்லாயிரம் கோடி யோனி பேதங்களில் சிக்கிச் சீரழியும் இந்த உயிர், மனிதப் பிறவி என்கிற ஓர் அற்புதப் பிறவியை அடையும்போது பகுத்தறிவைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவைப் பெற்ற மனிதன் இறைவன் உண்டு என்பதைப் பகுத்தறிந்து, எண்ணுகின்ற எண்ண்மெல்லாம் இறைவடிவாக மாறும்போது நினைவு ஈசன்பால் லயித்து விடுகிறது. அப்படி லயித்த நிலையில் “திருஅண்ணாமலைக்கு அரோகரா” என்று ஒருமுறை கூறிடில் முக்தி மனிதனுக்குத் கிட்டி விடுகிறது. உதாரணத்திற்குப் பூசலார் நாயனாரை எடுத்துக்கொண்டால் “நீண்ட செஞ்சடையார்க்கு நினைப்பினால் கோயிலாக்கு”..... என்கின்றனர் பெரியார். “நினைவு, நினைவாற்றல்” என்பது மனிதனுடைய சொத்து.. அதை அவன் ஈசன்பால் செலுத்தும் போது மனிதப் பிற்வியே பூரணத்துவம் பெற்று விடுகிறது.. வினைகளெல்லாம் களைந்த நிலையில் ஓர் உயிர்க்கு ஏற்படுவது, “தெளிவு” . தெளிவடைந்த நிலையில் தொடர்ந்து ஆன்மீகச் சாதனங்களை இயற்றும்போது அவ்வுயிர் முக்தி அடைகின்றது. அப்படி “வல்வினைகளை அகற்றி முக்தி தரும் இடம் ஒன்று பூவுலகில் உண்டெனில் அது திருஅண்ணாமலை ஒன்றுதான் என்று உணருவாய் போகா” என்கிறார் அகத்தியர். ஆகவே நாமும் ஆடிப்பாடி திருஅண்ணாமலையைக் கைதொழுது வல்வினைகளை அகற்றி ஈசன்பால் அன்பு பூண்டு அவனை நினைத்து முக்தியடைவோமாக!!

சோமாஸ்கந்த தரிசனம்

கிரிவலத்தின் முதற்பகுதியின் அருகே இத்தரிசனம் அமைந்துள்ளது. பிரதோஷ நேரத்தில் இங்குள்ள லிங்கங்களுக்கு உரிய தானங்களுடன் அபிஷேக ஆராதனைகள் செய்வது கோடி பிரதோஷ பூஜைகளை அனுஷ்டித்த பலனைத் தரும். ஆனால் எத்தகைய சுயநலமும் இல்லாது இங்கு பலருடன் குறிப்பாக நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் பிரதோஷ பூஜைகளை அனுஷ்டிக்க வேண்டும். அனைவருக்கும் பிரதோஷ மகிமையினை உணர்த்தி ஸ்ரீபரமசிவனின் அனுக்கிரஹத்தைப்  பெற்றுத் தருவதே இத்தரிசனத்தின் சூட்சும ரகசியம்.. எனவே சிவபெருமானே தம் பிள்ளைகளுடன் ஸ்ரீபார்வதி சகிதமாக இத்தரிசனத்தில் காட்சித் தருகின்றார். இன்றைக்கும் சித்தர்கள், மகரிஷிகள், யோகிகள்... தேவர்கள் உள்ளிட்ட அனைத்து இறையடியார்களும் கிரிவலத்தின் இப்பகுதியில் தினமும் “நித்ய பிரதோஷ பூஜையை”க் கொண்டாடுகின்றனர்.. அப்படியானால் இத்தரிசன மகிமையை எவ்வாறு எடுத்துரைக்க இயலும்! சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ பூஜையில் ஸ்ரீஈஸ்வரனைத் தரிசித்தவர்களுக்கே திருஅண்ணாமலையில் இந்த சோமாஸ்கந்த தரிசனம் கிட்டும்.

ஸ்ரீசோமாஸ்கந்த மூர்த்தி
சாக்கோட்டை காரைக்குடி

“அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம், அடித்துகள்கள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்களே” என்கிறார். அகத்தியர். அதாவது திருஅண்ணாமலையிலே நாம் ஓர் அடி எடுத்து வைத்தோம் என்றால் அந்த அடிக்குள்ளே 1008 லிங்கங்கள் அடங்கிவிடும் என்பது பொருள்! ஆகவேதான் பல மகான்களும், சித்தர்களும் திருஅண்ணாமலையானைத் தரிசித்துப் பலவாறாகப் பாடித் துதித்துச் சென்று விட்டனர். ஏன்!... மாணிக்கவாசகப் பெருமான் கூட மலை எல்லையில் நின்றுகொண்டேதான் “ஆதியும் அந்தமுமில்லா அருட்பெரும் ஜோதி...” என்று திருவெம்பாவை அருளிச் செய்தார் என்பது சித்தர்கள் கூற்று. அதுமட்டுமா! “அன்னையே” என்று ஈசனால் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் திருஅண்ணாமலையாரைக் கிரிவலம், வர எண்ணி விருப்பம் கொண்டபோது ... அந்த மண்ணின் புனிதத்துவத்தை உணர்ந்து தலைகீழாக, பூமிக்குமேல் ஓர் அடி உயரத்தில் நின்று அந்தப் புனித மலையைக் கிரிவலம் வந்தனள் என்பதும் சித்தர்கள் கூற்று..
அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் மனிதர்களாகிய நாம் எப்படிக் காலடி எடுத்து வைப்பது?
ஈசன் அளவிடுதற்கு அரியவனாக இருந்தாலும் அடியார்க்கு எளியவனாக விளங்குபவனல்லவா! அனைத்துயிர்களும் திருஅண்ணாமலையாரைக் கண்டு அனுபவித்து ஆனந்திக்க வேண்டும் என்று ஓர் உத்தமர் விரும்பிக் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக ஈசனருள் கூடியது. பின் அவ்வுத்தமர் தன் ஜடாமுடியைப் பூமிக்கடியில் முழுவதுமாகப் பரப்பி, மனிதர்களுடைய காலடித் தூசி பூமிக்கு அடியில் இருக்கும் கோடானுகோடி லிங்கங்களைச் சென்று அடையாதவாறு தடுத்து விடுகிறார்! இதுதான் மகான்களுடைய கருணை! இன்று நாம் திருஅண்ணாமலை காலடி எடுத்து வைக்கிறோம் என்றால் அது அந்த மகானுடைய கருணை. ஆகவேதான் பெரியோர் ஈசனை அடைய வேண்டும் என்றால் ஆசான் தேவை என்று உறுதிபடக் கூறினார்கள். (மகானுடைய நாமமோ சடையப்பர் என்பதாகும்)

ஸ்ரீரமணர் கண்ட அருணகிரி

திருஅண்ணாமலை கிரிவல ரகசியங்கள் கோடியுண்டு.. அவற்றைக் குருமூலமாகத்தான் அறிய முடியும் ... ரிஷிகளில் ஒப்பற்றவரான ஸ்ரீரமண மகரிஷி கிரிவல ரகசியங்களை முழுமையாக ஈசனருளால் உணர்ந்து அனுபவித்தவர். அவர் தன் ஆசிரமத்தை அமைத்துக் கொண்ட விதமே இதை உறுதிப்படுத்தும். எப்படி? அன்னாருடைய ஆசிரமத்திலிருந்து நாம் கிரியைக் காணும்போது திருஅண்ணாமலை காட்டும் தரிசனமோ ஏக முக தரிசனமாகும். அதாவது பிரும்மாண்டமாக தசமுகங்கள் காட்டும் ஈசன், அந்த இடத்தில் காட்டுவதோ ஒரு முகம் தான்! (இது தான் அண்ணாமலையான் காட்டும் அற்புதம்!) அது சரி! ரமணர் ஏன் அங்கு ஆசிரமம் அமைத்தார்? “மனதை ஒருமுகப்படுத்து. நீ யார்? என்பதை அறிந்து கொள்வாய்” என்பதுதானே அவர் சொல்லும் ஞானப்பாடம்! ஆகவேதான் மனதை ஒருமுகப்படுத்தும் ஒருமுக தரிசனத்தைத் தேர்ந்தெடுத்தார். இங்கு தண்ணீருக்கு வழியில்லை என்று அவருடைய சீடர்கள் கூற, ரமணரோ அங்கு ஓர் இடத்தைக் காட்டி (பாறைதான்) “இங்கு தோண்டுங்கள்!” எனக் கூற அங்கு சிறிது ஆழத்திலேயே நீர் ஊற்றுப் பெருக்கெடுக்கிறது இன்றும் இப்படிப்பட்ட பல் மகான்களை நாம் பெற்றிருந்தாலும் நாம் தண்ணீர்ப் பஞ்சத்தினால் அவதிப்படுகிறோம் என்றால்…. வேதனையாகத்தான் இருக்கிறது என்ன செய்ய! ”மகான்கள் என்று மதிக்கப்படுகிறார்களோ அன்றுதான் மக்கள் வாழ்க்கை மலர்ச்சியடையும்” என்று குருமங்கள கந்தர்வா கூறுவது நினைவிற்கு வருகிறது.
அப்படிப்பட்ட உத்தமராகிய ஸ்ரீரமணர் அருணாசல கிரியை ஒரு முறை வலம் வருவதற்குச் சுமார் பத்து நாட்கள் எடுத்து கொள்வார். ஏன் அப்படி ஓர் அடி எடுத்து வைத்த உடன் நின்று கிரியைத் தரிசிப்பார். பின் அடுத்த அடி எடுத்து வைத்து நின்று மறுபடியும் மலையைக் காண்பார். இப்படியே கிரிவலம் வருவார் என்றால் நாட்களை நாம் கணக்கிட்டு கொள்ள வேண்டியதுதான்.. ஒவ்வோர் அடிக்கும் மாறி மாறி விதவிதமாகத் தரிசனங்களைக் காட்டும் மலையல்லவா அது! கிரிவல ரகசியங்களை ரமணர் ஓரளவு மட்டுமே மிகச் சிலருக்குக் காட்டியுள்ளார். ஸ்ரீரமணருக்குப் பிறகு, நாம் பெற்ற பெரு நிதியாகிய நம் குருதேவர் ஸ்ரீ குருமங்கள கந்தர்வா துணிந்து கிரிவல ரகசியங்களை முறையாய் ஈசன் திருப்பணி செய்பவர்களுக்கு எடுத்தளிக்க, அருள வந்துள்ளார்...!!!

அருகில் இருந்தால் அருமை விளங்காது

ஆம்.... ஒப்பற்ற திருஅண்ணாமலையாரைப் பற்றி நம் குருதேவராகிய ஸ்ரீகுருமங்கள கந்தர்வா கூறுவது இது தான்.. ஏன் என்று நாமும் வழக்கம் போல் கேட்க அவர் அளிக்கும் அற்புத விளக்கம் அணை மீறிய நீர் போல் வருவதை நாம் காண்கிறோம்....
“தெய்வங்களே வழிபடும் மலை திருஅண்ணாமலையாகும். தசாவதார மூர்த்திகளும் தங்களுடைய அவதார நோக்கம் நிறைவேற திருஅண்ணாமலையில் ஈசனை வலம் வந்தனர். குறிப்பாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மிக அற்புதமாக இங்கு ஈனை வணங்கியுள்ளார். ஏன் தெரியுமா? பாரதப் போரில் பாண்டவர் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்..!! அதுமட்டுமா?..... தேவலோகத்தில் தேவர்களுடைய பதவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவர்கள் திருஅண்ணாமலையில் குதித்து அற்புதமாகக் ஆராதனைகள் இயற்றி, சோதியை  வழிபட்டுத் தங்களுடைய பதவிகளைக் காத்துக் கொள்வர் என்றால் திருஅண்ணாமலையாரின் மகிமைகளை எப்படிச் சொல்வது....? “ஒருமுறை அடியேன் குருவுடன் (ஸ்ரீகுருமங்கள கந்தர்வா) கிரிவலம் வந்து கொண்டிருந்த போது அடியேனுக்கு உத்தம குரு... இருமுக தரிசனம் காட்டி,,, “மகனே! யாரொருவர் இத்தரிசனத்தில் அமர்ந்து தவமியற்றுகிறார்களோ அவர் அன்னையின் பூரண தரிசனம் பெறுவர்.. இது உறுதி” என்று சொல்லிக் கைகாட்டினார். அவர் காட்டிய திசையில் பார்த்தால் அங்கு ஒரு வெளிநாட்டவர் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்தார்.. உத்தம குருவோ அடியேனைப் பார்த்து, “மகனே!.. பார்த்தாயா! வெகு தூரத்திலிருந்து வந்தவனுடைய பாக்கியத்தை! நம்மவன் இன்னும் அறிந்தபாடில்லை.!” என்றார்.....
பிரும்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட நிலையில், சாணக்கியன் திருஅண்ணாமலை ஏகி, இரட்டைப் பிள்ளையார் அமர்ந்த இடத்திலிருந்து சோதியை வழிபட அவனும் அந்தச் சாபத்திலிருந்து விடுபடுகிறான்.... இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.... அப்படி யார் யாரோ.. எங்கிருந்தெல்லாம் ஓடோடி திருஅண்ணாமலைக்கு வந்து செல்லும் போது... அதன் அருகிலேயே ... இருக்கும் நாம் அருணாசல மகிமையை உணர்ந்தோமா.... ? ... இதைத்தான்... “அருகிலிருந்தால் அருமை விளங்காது என்றேன்”... என்று முடிக்கிறார்.
கோயில் சுடுகாடு – “கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் மேலாடை”  யாருக்கு...? நம் ஈசனுக்குத்தான் இவையெல்லாம்...”கோயில் சுடுகாடு” என்றால் அர்த்தம் என்ன?.... மக்களுடைய நல்வாழ்விற்க்கென்றே தம் வாழ்க்கையை அர்ப்பணித்த சித்தர்கள் பலருண்டு.. அவர்கள் தங்கள் உடலைத் துறக்கும் போது அவர்களுக்கு ஜீவசமாதி அமைப்பதுண்டு. அப்படிப்பட்ட ஜீவ சமாதிகளையே ஈசன் தம்முடைய இருப்பிடமாக அமைத்துக் கொண்டு தங்கி விடுகிறான்.. அப்படி ஈசன் அமர்ந்த இடங்களே நாளடைவில் திருத்தலங்களாக மாறிவிட்டன.. இதைத் தான் ‘கோயில் சுடுகாடு’ என்றார்கள் பெரியவர்கள்.., அப்படியென்றால் உத்தமத் தலமாகிய திருஅண்ணாமலையில் மூலத்தானத்தில் பொதிந்துள்ள ரகசியம் தான் என்ன..? இதோ குருமங்கள கந்தர்வா கூறுகிறார் கேட்போமா....!
“திருஅண்ணாமலைத் திருக்கோயிலில் மூலத்தானத்தில் அமைந்திருப்பது உத்தம குருவாம் இடைக்காட்டுச் சித்தருடைய சமாதியாகும்.... அன்னவர் (இடைக்காடர்) இன்றும் தினமும் இங்கு வந்து செல்கின்றார்.”

திருஅண்ணாமலை கிரிவல மகிமை

திருஅண்ணாமலையில் சாட்சாத் சிவபெருமானே மலை வடிவில் காட்சியளிப்பதால் மலையைச் சுற்றி வருவது (கிரிவலம்) கைலாசத்தை வலம் வருவதற்கு ஒப்பானது எனச் சித்தர்கள் அருள்கின்றனர். இன்றைக்கும் பல கோடி சித்தர்களும், மகான்களும், யோகிகளும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் செய்தவண்ணம் உள்ளனர். இவர்கள் அரூவமாகவோ அல்லது எறும்பு, காக்கை, நாய் பிறவி போன்ற பல வடிவுகள் எடுத்தோ காட்சியளிக்கலாம். எனவே கிரிவலம் வரும்பொழுது இயன்ற அளவு பிஸ்கட், பிரெட், நீர்மோர் போன்றவற்றைத் தானம் செய்வது அதிஅற்புத பலன்களைத் தரும்...
கிரிவலம் வரும்பொழுது கிரிவலத்தின் ஒவ்வொரு கோணத்திலிருந்து மலையுச்சியைத் தரிசனம் செய்வதற்குக் ”கிரிதரிசனம்” என்று பெயர். தரிசனத்தைப் பார்க்கும் இடங்களைப் பொறுத்துப் பலன்களும் மாறுபடும். மகாமக தரிசனம், சோமாஸ்கந்த தரிசனம், தசமுக தரிசனம், யேசு தரிசனம், பிறை தரிசனம், பஞ்சமுக தரிசனம், கர்ப்ப தரிசனம், சிவ பார்வதி தரிசனம், மாயக் குழிவடு தரிசனம் என்றவாறாகப் பல லட்ச தரிசனங்கள் உண்டு. இந்தத் தரிசனங்கள் பல கொடிய நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றனவாகும். இத்தரிசனங்களின் மகிமையால் குழந்தைப் பேறு, செல்வம், திருமணம் கைகூடுதல், வீடுகள்அமைதல் போன்ற நற்பலன்களை எளிதில் அடையலாம். இத்தகைய கிரிவல தரிசன மகிமைகளை முற்றிலுமாக அறிந்தவர்கள் சற்குருமார்களே. எனவே, சற்குருவுடன் கிரிவலம் வரும்பொழுது அவரே மறைபொருளாக நின்று லட்சக்கணக்கான தரிசனங்களை உணர்த்தி நமக்கு அருள் பாலிக்கிறார்..

ஏகமுக தரினம்
ரமணாஸ்ரமம் திருஅண்ணாமலை

சில தரிசனங்களைக் குறிப்பிட்ட திதியில், ஹோரையில், நட்சத்திரத்தில் தரிசனம் செய்வது கைமேல் பலன்களைத் தரும். ஆனால் இந்த ஆன்மீக ரகசியங்களைச் சற்குருவே உணர்த்தும் சக்தி பெற்றவர்.
கிரிவலப் பாதையில் நூற்றியெட்டுத் தீர்த்தங்கள் அமைந்திருப்பினும் கண்களுக்குப் புலப்படுபவை ஒரு சிலவே. குபேர தீர்த்தத்தில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரம், ஹோரையில் ஸ்ரீகுபேர பகவான் தீர்த்தமாடிச் செல்கின்றார். அவர் தீர்த்தமாடியபின் இந்தக் குபேர தீர்த்தத்தில் உடனே ஸ்நானம் செய்யும் பாக்கியம் பெற்றவர்களே மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறுகின்றனர்.
கிரிவலம் வரும் முறை : பலர் ஒன்று சேர்ந்து இறைநாமம் ஜபித்தவாறோ அல்லது பஜனைப் பாட்டுக்கள் பாடியவாறோ காலணியின்றி கிரிவலம் வருதல் வேண்டும். கர்ப்பிணியைப் போல் மெதுவாக நடந்து ஒவ்வொரு அடிக்கும் மலை உச்சியைத் தரிசனம் செய்தல் உத்தமமானது. சாலையின் இடது ஓரமாக நடந்து இயன்றளவு (சிறியதாகவாவது) தான தருமம் செய்தவாறே மேற்கூறியவாறு வலம் வருதல் நன்று. இம்முறையில் கிரிவலம் வருவதற்குப் பல நாட்களாயினும், இம்முறையிலான தரிசனமே கிரிவலத்தின் முழுப்பலனையும் தரும். ஸ்ரீரமண மகரிஷி இவ்வாறாகவே சித்தர்கள் அருளிய முறையில் கிரிவலம் செய்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டினார். கிரிவலத்தை இரட்டைப் பிள்ளையாரைத் தரிசிப்பதில் இருந்து துவக்கி, கிழக்கு ராஜ கோபுரம் வழியே உள் நுழைந்து, கிளி கோபுரம் தாண்டி, பிரம்மலிங்கத்தைத் தரிசனம் செய்து தெற்குக் கோபுரம் வழியாக கிரிவலப் பாதையை அடைய வேண்டும். கிரிவலப் பாதை துவக்கத்தில் கற்பக விநாயகரைத் தரிசித்து ஊதுபத்தி ஏற்றிப் பிரார்த்திக்க வேண்டும். ஏறுமுக தரிசனம், சாணக்கிய தரிசனம், முக்கூட்டு தரிசனம், கோண தரிசனம் போன்ற ஆன்மீக ரகசியங்கள் பொதிந்த தரிசனங்கள் கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ளன. இவற்றைச் சற்குரு மூலமாக அறிந்து தெளிதல் வேண்டும்.

சிவராஜ சிங்க தீர்த்தம்

சிவராஜ சிங்க தீர்த்தம் வரையில் பல்வேறு லிங்கங்களும் பலவகைத் தீர்த்தங்களும் நூற்றுக்கணக்கான தரிசனங்களும் அமைந்துள்ளன. சிவராஜ சிங்க தீர்த்தத்தில் ஸ்ரீகாயத்ரி மந்திரம் சொல்லித் தன் வாழ்வின் பெரும் பாவத்திற்குப் பிராயச்சித்தம் வேண்டி அர்க்யம் விடுதல் வேண்டும். இறையருள் கூடின் உண்மையான பிரார்த்தனைக்குப் பலனும் எத்தகைய பாவத்திற்குப் பரிகாரமும் உண்டு. ஆனால் அத்தகைய தவறை மீண்டும் செய்யாதிருத்தல், அத்தகைய தவறு செய்வோரையும் நல்வழிப்படுத்தித் திருந்தச் செய்தல் ஆகியன முக்யமானதாகும். இத்தீர்த்தத்தில் விடப்படும் அர்க்யம் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தின் மேன்மையை உணர்த்தும் . அந்த அர்க்கியத்திற்குப் பிறகு அதே தவறு நிகழுமாயின் எதிர் விளைவுகள் ஏற்படும்.
அடி அண்ணாமலையில் ஸ்ரீபிரும்மலிங்கத்தைத் தரிசனம் செய்து பஞ்சமுக தரிசனம், தசமுக தரிசனம் மற்றும் பல்வேறு லிங்கங்களின் தரிசனங்களுடன் “ஸ்ரீ இடுக்குப் பிள்ளையார்” நுழைவைக் கடந்து, ஸ்ரீபூத நாராயணர் சன்னதியில் பிரார்த்தனையுடன் கிரிவலம் நிறைவு பெறுகிறது.
மும்மூர்த்தி தரிசனம்
பிரபஞ்சத்தின் பெருஞ்சோதி லிங்கமாய் விளங்கும் திருஅண்ணாமலையே சிவபெருமானின் ஸ்தூலத் திருமேனி, சிவரூபத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ர திருமூர்த்திகள் காட்சி தரும் ஒரே இடம் இந்த மும்மூர்த்தி தரிசன ஸ்தலமாகும். உபநயனம் ஆனவுடன் முதல் ஸந்தியாவந்தனத்தை இவ்விடம் வந்து முறையாகச் செய்வது உன்னதமான தெய்வீக வாழ்வைத் தரும். லிங்கம், குத்துவிளக்கு ஆகியவற்றின் முதல், நடு, அடிப்பகுதிகள் பிரம்மா, விஷ்ணு, ருத்ர அம்சங்களைக் குறிக்கும். கிரிவலத்தின் இந்த மும்மூர்த்தி தரிசனப் பகுதிரில் உள்ள எந்த லிங்கத்திற்கும், மூன்று திரியிட்டு குத்துவிளக்கேற்றி வழிபடும் செயல் குடும்பத்திலுள்ள எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்க அருள்புரிகின்றது. இப்பகுதியிலுள்ள லிங்கமூர்த்திகளின் அருகே பெண்கல் கூட்டாக, அன்னதானத்துடன், குத்துவிளக்கு வழிபாடு செய்வது எத்தகைய திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்..
திருஅண்ணாமலை வஸ்திர தானம்
திருஅண்ணாமலையில் ஏழை எளியோர்க்குத் துணிமணிகள் இலவசமாக வழங்குவது விசேஷமான புண்ணியங்களைத் தரும். மனிதன் பெண்ணாசையால் பல பாவங்களைத் தேடிக் கொள்கின்றான். இவ்வாறு அறிந்தும் அறியாமலும் காமத்தால் செய்கின்ற தீவினைகளுக்குத் திருஅண்ணாமலையில் வஸ்திரதானம் செய்வது தக்கப் பிராயச்சித்தமாக அமைய, நல்வழி காணலாம்.
ஆடை என்பது மானத்தைக் காக்கும் அற்புத அணிகலன், எனவே உடல் விளைவித்த தீங்குகளுக்கு உடலைப் போர்த்திக் காக்கும் ஆடைகளைத் தானமாக வழங்குதலே தக்கப் பிராயச்சித்தமாகச் சித்தர்கள் அருள்கின்றனர்..
பரிசுத்தத்தை வழங்கும் அக்னி பகவானே கற்பைக் காக்கும் கடவுள் ஆவார். எனவே பஞ்சபூதத் தத்துவங்களில் ஒன்றான அக்னித் தத்துவமாக விளங்கும் திருஅண்ணாமலையில் பஞ்சபூத சக்திகளாலான ஆடையை வஸ்திரதானம் செய்வது நன்னெறியில் வாழ அருள் புரிகின்றது. அவ்வாறு தானம் செய்பவர் வாழ்விலும் ஆடைகளுக்குப் பஞ்சம் இராது. ஜவுளிக் கடைகாரர்கள், துணி மில் அதிபர்கள், பருத்தி பயிரிடுவோர் போன்றோர் திருஅண்ணாமலையில் வஸ்திரதானம் செய்தல், தொழிலை வளம்படுத்தி மேன்மையடையச் செய்ய வழிவகுக்கும். தீப்புண்ணால் அவதியுறுவோர் (third degree burns) குஷ்டம் போன்ற தோல் வியாதி உள்ளோர் இங்கு வஸ்திர தானம் செய்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

தீபப் பெருநாள்
அருணாசலம் என்றழைக்கப்படும் திருஅண்ணாமலை ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிப் பலகோடி யுகங்களாக ஸ்ரீஅகஸ்தியர் எடுத்துரைத்து வர ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமான் இன்றளவும் அதனை எழுதி வருகிறாராம்.. அருணாசல மகிமை விண்ணுலகங்களெங்கும் சித்த புருஷர்களால் பரப்பப்பட்டு வருகிறது. பூலோகத்திலோ சித்த புருஷர்கள் சற்குருமார்களாக உருவெடுத்துச் சத்சங்கங்கள் மூலம் திருஅண்ணாமலை மகிமையை எடுத்துரைத்து உணர்த்தி வருகின்றனர்.
திருஅண்ணாமலை வானளாவி உயர்ந்து நிற்கும் தெய்வீக மலை, சாட்சாத் சதாசிவ மூர்த்தியாம் சிவபெருமானின் ஸ்தூல ரூபமாகும். கடவுளைக் கண்களால் காண வேண்டும் என்று விரும்பிய கோடிக்கணக்கான ஜீவன்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு சிவபெருமான் இம்மலை வடிவத்தில் தோன்றினார்.
நம்முடைய பிரார்த்தனைகுச் செவிசாய்த்து இறைவன் ஸ்தூல வடிவத்தில் நம் கண்களால் கவினுறக் காணும் வண்ணத்தில் எழுந்தருளிய நாளே ‘கார்த்திகை தீபம்’ என்ற பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருஅண்ணாமலை – பிரபஞ்சத்தின் பெரிய லிங்கம்
உலகில் மட்டுமல்லாது, நட்சத்திரங்கள், கோள்கள், விண்மீன்கள் உள்ளிட்ட அனைத்து லோகங்களிலும், இவ்வாறாகப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பஞ்சபூதங்களினால் ஆனவையே..
நிலம் (பிருத்வி) , நீர்(அப்பு), அக்னி, காற்று, ஆகாசம் ஆகிய ஐந்து பஞ்சபூதத் தத்துவங்களின் பல்வேறு சஞ்சார விதங்களே உலகின்கண் அமையும் ஒவ்வொரு பொருளின் மூலாதாரத் தோற்றமாகும். வேதியியலில் (chemistry) இதனையே element என்கிறார்கள் .
பஞ்சபூதங்களைப் படைத்த இறைவன் காஞ்சீபுரம் (பிருத்வீ), திருவானைக்கோயில் (அப்பு), திருஅண்ணாமலை (அக்னி), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் பஞ்சபூத லிங்கங்களாக அருள்புரிகின்றார்.
இவற்றில் அக்னி தத்துவமாக மிளிரும் திருஅண்ணாமலை தனிச்சிறப்புப் பெறக் காரணம் என்னவெனில் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய லிங்கமாகத் திருஅண்ணாமலையே அமைந்திருப்பது தான்! வேறு எந்த லோகத்திலும் காண இயலா மிகப்பெரிய லிங்கமே திருஅண்ணாமலை எனில் அந்த லிங்கத்தின் பீடமான திருஅண்ணாமலைத் திருப்பூமியை என்னவென்று உரைப்பது!
சித்தர்களே திருஅண்ணாமலை பூமியின் மகிமையைப் பரிபூரணமாக அறிந்த சிவநெறிச் செல்வர்கள். இஃது வெறும் கல்மலையன்று. இதனுள் பலகோடி சித்த, தெய்வீக லோகங்கள் உள்ளன. இதற்குள் பலகோடி  சித்தபுருஷர்களும்,, ஞானியர், யோகிகளும் ஆழ்ந்த தவ நிலையில் அமர்ந்துள்ளனர். அவரவர்க்குரித்தான அமிர்த நேர காலங்களில் வெளிவந்து மக்களுக்கு அருள் புரிகின்றனர்.
கல் ஆல் மரம்
அகோரம், வாமனம், சத்யோஜாதம், ஈசானம், தத்புருஷம் இவ்வைந்து ஆதியவதாரங்களும் தோன்றிய இடம் திருஅண்ணாமலையே! எனவே தான் மகாப்பிரளய காலங்களிலும் கூட திருஅண்ணாமலை அழியாது. பரம்பொருள்தான் நித்ய ஜீவியாயிற்றே! மகாப்பிரளய ஜலப் பிரவாகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆலிலையில் மிதந்து அருள்புரிகின்றார் அல்லவா? அந்தக் கல்லால மரம் திருஅண்ணாமலையின் உச்சியில் தான் உள்ளது. இந்தக் மரத்தின் கீழ்தான் தட்சிணாமூர்த்தியாகச் சிவபெருமான் அவதாரம் பூண்டார். அதியற்புத சக்தி வாய்ந்த இந்த மரத்தின் இலையோ மிகமிகப் பெரியதாக இருக்கும். இத்தகைய ஆலமர இலையைக் காணும் பேறு பெற்றவரே இரமண மகரிஷி ! இது போன்ற கோடிக்கணக்கான  ஆன்மீக ரகசியங்களைக் கொண்டதே திருஅண்ணாமலையாகும்.
திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் ஜோதிக்கும் ஐயப்பனுடைய மகர ஜோதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஐயப்ப மலையில் தெரியும் மகரஜோதி தேவர்களால் ஏற்றப்படும் ஜோதியாகும். ஆனால் திருஅண்ணாமலை ஜோதியோ,, சுயஞ்ஜோதியாகும். ஆண்டவனே அழல் உருவாக நிற்குமிடம் திருஅண்ணாமலை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் – குருமங்கள கந்தர்வா

அடிமை கண்ட ஆனந்தம்

வருடா  வருடம் தீபப் பெருவிழாவிற்கு குருகுல வாசத்தில் பாலகனாய் இருந்த குருமங்கள கந்தர்வாவைத் திருஅண்ணாமலைக்கு அழைத்துச் சென்று அங்கு அன்னதானம் செய்ய வேண்டிய முறைகளைச் செயல்முறையில் காட்டி அழகாக விளக்கமளிப்பார் சிவகுரு மங்களகந்தர்வா. இவ்வாறாக இளம் வயதிலேயே ஆயிரக்கணக்கானோர்க்கு அன்னமிடும் நடைமுறைச் சமையல் முறைகளில் தேர்ச்சி பெற்றார் குருமங்கள கந்தர்வா. அத்தகைய தீபப் பெருவிழா ஒன்றில்....
... கிரிவலப் பாதையில் சிறுவனுடன் நெடுந்தூரம் நடந்து சென்ற பெரியவர் திடீரென ஓரிடத்தில் அமர்ந்து செங்கற்களை வைத்துச் சுள்ளிகளை அடுக்கி, “டேய்! இந்த ஏரியால (area) பட்டை மரம் ஒண்ணு ரெண்டு பனைமரத்துக்கு நடுவுல இருக்கும். இந்த டிஸைன்ல [தரையில் படம் போட்டுக் காட்டி] அந்தப் பட்டை மரம் இருக்கும். அதைக் கொஞ்சம் ஒடைச்சு எடுத்துக்கிட்டுச் சட்டுனு வா, அதை விறகாக்கி வடிச்சுப் போடனும்,” என்றார்.
சிறுகயிற்றை எடுத்துக் கொண்டு கிரிவல வனங்களில் பட்டை மரத்தைத் தேடலானான். அடர்ந்த மரங்கள்.... பெரிய பெரிய முள் பத்தைகள். ஆங்காங்கே ஒரிரண்டு பட்டைமரங்கள்.. “பெரியவர் சொன்ன பட்டைமரம் எங்கிருக்கிறது? இவ்வுளவு விளக்கம் சொன்னவர் அது எந்தத் திசையில் இருக்கிறது என்று சொல்லக் கூடாதா? ஏன் அலைய விடுகிறார்” இத்தகைய கேள்விக் கணைகளின் நடுவே சிறுவன் கிரிவலப் பாதையில் அந்த பட்டை மரத்தைத் தேடி ஓடி அலைந்தான்,
நடுவில் மழைத் தூறல்கள்.... வானம் கரு நீலத்தால் மூடப்பட்டது போலிருந்தது. “மழை வந்தால் பட்டைமர விறகு நனையுமே! நனைந்தால் அது எப்படி எரியும்? பக்கத்திலிருக்கும் சுள்ளிகளை வைத்துச் சமைக்கக் கூடாதா? அந்தப் பட்டை மரத்தில் அப்படி என்ன விசேஷம்! ஆனாலும் இப்படி அலையவிட்டுக் களைத்து வந்த பின்னர் ஒரு அற்புதமான ரகசியதைச் சொல்வார்“ எனச் சிறுவன் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தவாறே பட்டைமரத்தைத் தேடி அலைந்தான்.
“எந்தத் திசையில் எந்தப் பக்கத்தில் என்று சொன்னாலாவது அலைச்சல் மிச்சமாகுமே” சிறுவன் கிரிவலப்பாதையில் கிட்டத்தட்ட பாதி தூரம் நடந்து களைத்து அமர்ந்தான்.
“அருணாசல சிவா! எனக்கு வழிகாட்டப்பா” என்று மலை உச்சியைப் பார்த்து வணங்கிய சிறுவனின் கண்கள் ஓரிடத்தில் லயித்து நின்றன.
“ஆம்! அதோ இருக்கிறதே பட்டை மரம்! இரண்டு பனை மரங்களுக்கு நடுவில்” எனச் சிறுவன் மகிழ்ச்சியோடு குதித்து ஓடினான். பெரியவர் சொன்ன அடையாளங்கள் கச்சிதமாய் இருந்தன. பட்டை மரத்தில் இருந்து சில பட்டை விறகுளை எடுத்துக் கொண்டு சிட்டெனப் பறந்தான்.
“வாத்தியாரே! பட்டை மரம் கிடைச்சிடுச்சு” என்று சிறுவன் பலத்த கூக்குரலுடன் பெரியவரிடம் ஓடினான்.
அங்கே.. பெரியவரைச் சுற்றிப் பல பெரிய பாத்திரங்கள்! ஒரு மூட்டையில் மளிகைச் சாமான்கள்! மேலும் சமையலுக்கான பல இத்யாதிகள்!..
சிறுவன் வியந்தான் ”இந்தப் பெரியவர் எங்கிருந்து இவற்றைக் கொண்டு வந்தார்? பெரிய சித்து வேலைகளைத் தெரிந்தும் தெரியாதவர் போல் செய்து விடுகிறாரே. இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லையே!” எனச் சிறுவன் வழக்கம் போல் குழம்பினான்!
“என்னை நீ அப்புறம் புரிஞ்சுக்கலாம். அந்தப் பட்டை மர விறகை ஒடைச்சு உன் கையால எடுத்து அடுப்புல வை”
சிறுவன் அவ்வாறே செய்தான். பெரியவர் விரைவாகச் சுறுசுறுப்புடன் சாதம் வடித்துப் பாத்திரங்களில் நிரப்பினார். சிறுமழைத் தூறல்களின் இடையே விறகு பிரமாதமாக எரிந்தது! மழையில் அடுப்பு நனையாது தணல் நன்றாகக் கனிந்தது! திடீரென்று எங்கிருந்தோ பலர் அங்கு வந்து சேர, பெரியவர் அவர்களுக்கு அன்னமிட்டார். சில நிமிடங்களில் பாத்திரங்கள் காலியாயின.
அனைத்தையும் வியந்து நின்று நோக்கிய சிறுவன் மெதுவாகக் கேட்டான், “வாத்தியாரே! அந்தப் பட்டைமர விறகிலே என்ன விசேஷம்?”
அதுவா, அந்தப் பட்டை மரம்தாண்டா செத்துப்போன உன் அக்கா! என்றார் பெரியவர்.
“அக்காவா!” சிறுவன் மலைத்து நின்றான். ‘தன் தமக்கை கிரிஜா திருஅண்ணாமலையின் பெயரைச் சொல்லிக் கொண்டே இறந்தது இவருக்கு எப்படித் தெரியும்?” என யோசித்தான்..வழக்கம் போல் விடை தெரியாத வினா!!
“எங்களுக்கு தெரியாத கதை எதுவும் கிடையாதுடா! உன் அக்கா “இந்த தேகம் தெய்வீக காரியத்திற்குப் பயன்படணும்னு’ ஆசைப்பட்டா. அதை உன் மூலமா நிறைவேத்தியாச்சு. அவ ஆன்மாவுக்குச் சாந்தியும் கொடுத்தாச்சு. நீ இவ்வுளவு தூரம் அலைஞ்சியே அதெல்லாம் உன் அக்கா (கிரிஜா) மேலே நல்ல இடத்திற்குப் போய்ச் சேரத்தான்! திருஅண்ணாமலையிலே ஒரு மரமாய்ப் பிறந்தால் எவ்வுளவு பாக்கியம் அப்படின்னு தெரிஞ்சுக்கோ!
“இதை எதிர்காலத்தில் நீ அன்னதானம் செய்யும்போது எல்லோருக்கும் எடுத்துச் சொல். திருஅண்ணாமலையில்  அன்னதானம் இடுவது பாக்கியத்திலும் மகா பாக்கியம் ஆகும்.. இந்த அன்னதானமிடும் தெய்வீக வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை! எனவே மனித வாழ்வில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது!” என்று முடித்தார்.
அச்சிறுவனே இன்று நம்குருமங்கள கந்தர்வாவாக மலர்ந்து நம்முடன் ஆன்மீகப் பெருவாழ்வு வாழ்ந்து நம்மை வழிநடத்திச் செல்கின்றார். திருஅண்ணாமலையில் அன்னதான மகிமையை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பெருங்காப்பியமாக உணர்த்தி நடைமுறையில் செய்தும் நமக்கு வழிகாட்டி வருகிறார். இவரே மங்கள கந்தர்வ லோகத்தில் உதித்துத் திருக்கயிலைப் பொதிய முனியாக உலாவரும் குருமகா சந்நிதானம் ஆவார்.

தீபம் ஏற்றுவது ஏன் ?

வீட்டிலும், கோயில்களிலும் தீபங்கள் ஏற்றுவதன் பின்னணியில் அதிஅற்புத ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ளன. தீபாவளிப் பண்டிகையின் போதும் திருஅண்ணாமலை தீபப் பெருவிழாவின் போதும் பல லட்சக்கணக்கான தீபங்கள் (விளக்குகள்) ஏற்றப்படுகின்றன. அகல் விளக்கோ, குத்து விளக்கோ கற்பூர தீபமோ, சரவிளக்கோ, ஒவ்வொரு தீபமும் வெவ்வேறு விதமான வடிவில் அமைகிறது.
நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், இலுப்பெண்ணெய் இவ்வாறாக ஊற்றும் எண்ணைக்கேற்பவும் ஏற்றுகின்ற திரிக்கேற்பவும் ஊற்றுகின்ற ஜோதியின் வடிவமும், பலன்களும் மாறுகின்றன. மேற்கண்ட எண்ணெய் தாவரங்கள் சிறந்த மூலிகைகளாக அமைவதால் (எள், ஆமணக்கு, வேம்பு) இவற்றில் எழும் ஜோதி, பரவெளிக் காற்றைத் தூய்மைப்படுத்துவதுடன் விண்ணில் மிதக்கும் தீய எண்ணங்களின் சக்தியையும் தணிக்கின்றது.
தாமரைத் தண்டுத் திரியால் ஏற்றப்படும் தீப ஜோதி குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். கணவன் மனைவி மனஸ்தாபங்கள் தீர்ந்து சகஜ நிலை உருவாகும். கோயிலில் தாமரைத் திரி கொண்டு விளக்கேற்றினால் அங்கு வரும் பக்தர்களின் குடும்பப் பிரச்னைகள் சுமுகமாகத் தீரும். பொதுவாக எதிர்வினை எண்ணங்களே (negative forces) குடும்பச் சண்டைகளை உருவாக்கும்.. தாமரைத் தண்டுத் திரியானது இத்தகைய எதிர்வினை எண்ணங்களை முறியடித்து அவ்வெல்லையைத் தூய்மைப்படுத்துவதால் சாந்தமயமான சூழ்நிலை உருவாகிறது. இவ்வாறாக ஏற்றும் எண்ணெயின் தன்மை, திரியின் தன்மை, ஏற்றப்படும் நாள், நேரம், ஹோரை, நட்சத்திரம் போன்றவற்றைப் பொறுத்து ஜோதியின் வடிவமும், பலாபலன்களும் அமைகின்றன. ஜோதி வடிவவதத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்த புருஷர்கள். எனவே தக்க சற்குருவை நாடி ஜோதி வடிவங்களின் ஆன்மீக ரகசியங்களை அறிந்து பயன்பெற வேண்டும்.
ஜோதி வடிவ வழிபாட்டுத் தத்துவத்தின் ஓரங்கமே கூட்டு விளக்கு வழிபாடாகும். பலர் ஒன்று கூடி நூற்றுக்கணக்கான விளக்கு தீபங்களை ஏற்றும் போது எழுகின்ற பல்வேறு ஜோதி வடிவங்கள் அவ்விடத்தின் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகின்றன. மாசுடைய எண்ணங்கள் நீங்கி ரம்யமான அமைதி நிறைந்த பரவெளி உண்டாகிறது. பல்வேறு பிரச்சனைகளுடன் அங்கு கூடுகின்ற பக்தர்கள் அங்கு கூடி மந்திர ஒலிகளுடன் சேர்ந்து பிரார்த்தனைகளையும் எழுப்புகின்றனர். மந்திரங்கள் இயற்கையாகவே சக்தி வாய்ந்தவை. அவை கூட்டு ஜோதிகளால் மேலும் புனிதமாக, பரவெளியில், மந்திரங்களுக்குரிய தேவதைகள் எளிதில் ஆனந்தத்துடன் ஆவாஹனமாகின்றன.
பொதுவாக  தேவதைகளும் தெய்வங்களும் ஹோமாக்னி, சக்கரம், விக்ரகம், புனிதமான பரவெளி போன்றவற்றில் தான் பிரசன்னமாகின்றன. கூட்டு வழிபாட்டில் பலநூறு ஜோதிகள் ஒன்றாகப் பரிணமிப்பதால் தேவதைகள் எளிதில் ப்ரீதியாகி பக்தர்களுடைய பிரார்த்தனைகள் விரையில் நிறைவேற அருள்பாலிக்கின்றன. எனவே வீட்டிலோ, கோயிலிலோ ஏற்றப்படும்  ஜோதிகள், நம் கண்களுக்குப் புலனாகாத முறையில் அரிய பல வரங்களைப் பெற்றுத் தருகின்றன.
ஊதுபத்தியில் எழுகின்ற ஜோதியும் ஒரு வகை ஜோதி வடிவே. எனவே நறுமணத்துடன் எழுகின்ற ஊதுபத்தி, பல அற்புத மலர்களின் தொகுப்போடு, சந்தனம், பசுஞ்சாணம் போன்ற அரிய திரவியங்களால் செய்யப்படுவதால் இதன் ஆன்மீக குணங்களும் நாம் எளிதில் அறிய முடியாத ஆன்மீக ரகசியங்களாகும். மூன்று ஊதுபத்திகளின் நறுமணப் புகை அவ்விடத்தை 6 மணி நேரங்களுக்கு மிகவும் புனிதமான சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஆகவே ஜோதிகள் பலவிதம், பலன்கள் அபரிமிதம்.
எவ்வெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றுவது, எத்திரியினால் தீபம் ஏற்றுவது ஆகிய விளக்கங்களை எம் வெளியீடான “சுப மங்கள தீப மிகிமை“ புத்தகத்தில் காணவும்,
திருஅண்ணாமலையிடை அமர்ந்த திருஉண்ணாமுலை
புனித க்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலையில் ஈசனுக்குத் துணையாக அமர்ந்திருப்பவளே “அபீதகுசாம்பாள்” என்று அழைக்கப்படும் உண்ணாமுலைத் தாய் ஆவாள். “உண்ணாமுலை“ என்று அவளுக்குப் பெயர் வரக் காரணம்?... இந்தக் கேள்வியை நாம் குருமங்கள கந்தர்வாவிடம் கேட்டபோது அவர் அளித்த அற்புதமான விளக்கம் இதோ...!
பசுவினுடைய இரத்தம்தான் பாலாக மாறுகிறது. இதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்காகப் பசுவினுடைய பாலை அனுபவிக்க வேண்டுமென்றால் முறையாக அதன் மடியிலிருந்து தான் பெற வேண்டும். சாதாரணப் பாலுக்கே இப்படியென்றால் நாம் ஞானப்பால் முறையாகப் பருகுவதெப்படி.....?
திருஞான சம்பந்தரைத்தான் கேட்க வேண்டும்! அன்னையிடம் ஞானப்பால் உண்டவரல்லவா அவர்! அன்று ஞானசம்பந்தன் அன்னையிடம் உண்டான் ஞானப்பால். ஆனால் இன்றுவரை வேறு எவராலும் அதைப் பருக முடியவில்லை. ஆகவே தான் முக்தியை நாடும் ஆன்மாக்கள் கூடும் இடம் ஒன்றுதான் என்று அன்னையும் தெளிந்து முக்தியை நாடி வரும் ஆன்மாக்களுக்கு சிவஞானப் பாலை ஊட்டுவதற்காகவே திருஅண்ணாமலை வந்து அமர்ந்தனள்.
பாலைப் பசுவினுடைய மடியிலிருந்து தான் பெற முடியும்.. அதுபோல் சிவஞான போதத்தை அன்னையின் மூலமாகத்தான் பெறமுடியும். சக்தியைப் பற்றிக்கொண்டுதான் சிவத்தை அடையமுடியும்.
உண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா...!!!
திருஅண்ணாமலையில் அன்னதானம்
தானத்திலே சிறந்தது அன்னதானம். ஆனால் அன்னதானம் செய்வதற்குச் சிறந்த இடம் என்று எதைச் சொல்வது? இந்தக் கேள்வியை நாம் குருமங்களகந்தர்வாவிடம் சமர்ப்பித்தபோது அவர் கூறியது :-
“அன்னதானம்‘ என்பது ஒவ்வொருவரும் அவரவர் இடங்களில் தொடர்ந்து செய்ய வேண்டியது மிக அவசியம். ஆனால் அன்னதானம் செய்வதற்கு ஓர் உத்தம இடம் உண்டென்றால்...... அது திருஅண்ணாமலை ஒன்றுதான்.... ஏன் தெரியுமா ...? மற்ற இடங்களில் அன்னதானம் செய்யும் போது ஒரு மடங்கு பலன் என்றால் திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்வது ஆயிரம் மடங்கு புண்ணியப் பலனைப் பெற்றுத் தரும் என்பது அகத்தியர் வாக்கு.
அதுமட்டுமா ...!  தீபப் பெரு நாளில் தீபத்தைத் தரிசிக்கப் பிதுர்லோக ஒளிப்பகுதியிலிருந்து  அனைத்துப் பித்ருக்களும் திருஅண்ணாமலைக்கு வருகிறார்கள்.. அடியேன் குருஅருளால் ஒவ்வொரு வருடமும் கண்டு கொண்டிருக்கும் அற்புதக் காட்சி.. அப்படி அவர்கள் அங்கு வரும்போது.. தங்கள் பரம்பரையைச் சேர்ந்த யாராவது ஒருவர் ஈசனுக்காக, ஈசன் சேவைக்காக வந்துள்ளார்களா... என்று ஆவலுடன் பார்க்கிறார்கள்.. அப்படி தங்கள் பரம்பரையைச் சேர்ந்த ஒருவன் வந்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்தால் அன்னவனுக்குத் தங்கள் அருளாசியை அள்ளி வழங்குகின்றனர்.
பசியை நெருப்பிற்குச் சமமாகச் சொல்கிறார்கள். அந்த நெருப்பு அடங்க வேண்டுமென்றால் அதன் மேல் சோற்றைத்தான் இடவேண்டும்..அதுபோல திருஅண்ணாமலையில் ஏழைகளின் வயிற்றிலே நீ சோறு இட்டு அவர்களுடைய பசியாகிய “தீ”யை அடக்கினால் அகண்ட ஜோதி (திருஅண்ணாமலையான்) குளிர்ந்து விடுகிறது. ஆண்டவன் குளிர்ந்தால்.. அற்புதம் தான்!! அருள் மழைதான்..!!
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நம் பரம்பரையைச் சார்ந்த அனைத்து சித்தர்களும் திருஅண்ணாமலையிடை அன்னதானம் செய்வதுதான் உத்தமம் என்று உரைத்துள்ளார்கள் என்றால் அங்கு இயற்றும் அன்னதானத்தின் மகிமையை என்னென்றுரைப்பது.. குருவுடன் திருஅண்ணாமலை வந்து அங்கு உடலை வருத்தி ஊன் சுருங்கத் திருப்பணி செய்தவனுக்கே கிரிவல ரகசியங்களைக் காட்ட வேண்டும் என்பது சித்தர்களுடைய சட்டம். ஆகவே நீங்கள் திருஅண்ணாமலைக்கு கிரிவலம் வந்து வணங்கினால் அடுத்த ஒரு வருடத்தில் நீங்கள் சந்திக்கப் போகிற மலைபோன்ற துயரங்கள் ஈசனுடைய ஜோதியில் பனிபோல உருகி ஓடுவதைக் காண்பீர்கள் .,இது உறுதி” என்று முடிக்கிறார்.

மாயக்குழிவடு தரினம் திருஅண்ணாமலை

திருஅண்ணாமலையில் ஸ்ரீதுர்க்கையை முறையோடு தரிசித்து ஸ்ரீதுர்க்கை கோயிலிலிருந்து பெறுகின்ற தரிசனம் மாயக்குழிவடு தரிசனமாகும். பௌர்ணமி-பூர்ண சந்திரனோடு அமைகின்ற இத்தரிசனத்தால் அலைபாயும் மனவோட்டங்களால் ஏற்பட்ட மாயைகள் விலகும். குறிப்பாக தகாத பாலுணர்வுகள் தணியும் முறையற்ற காம எண்ணங்கள் குறையும். தீய சக்திகளை அழித்து நம்மைக் காக்கும் ஸ்ரீதுர்க்கையின் திருக்கோயிலிலிருந்து பெறுகின்ற இத்தரிசனத்தால் தீய எண்ணங்களும் நீங்குகின்றன. முறையற்ற வாழ்க்கையால் மன வேதனையுடன் வாழும் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் இந்தத் தரிசனம் தகுந்த பிராயச்சித்தம் தரும் தெய்வீக சக்தி வாய்ந்தது. அவர்கள் மனம் திருந்த நல்வாழ்வு வாழ தக்க தானதர்மங்களுடன் கூடிய இத்தரிசனம் உத்தமமான பலன்களை அளிக்கும்.
காமக்குரோத தரிசனம்

சாயா சந்திர தரிசனம் திருஅண்ணாமலை

காமம் என்பது பாலுணர்வுகளை மட்டுமல்லாது அனைத்துத் தகாத முறையற்ற, தகுதிக்கு மிஞ்சிய ஆசைகளைக் குறிக்கும். தான் ஆசைப்பட்டதைப் பெற இயலாதபோது அது குரோதமாக மாறி மனிதனைத் தீயவனாக்குகிறது. திருஅண்ணாமலை கிரிவலத்தில் “காமக்காடு” என்னும் பகுதியில் இருந்து திருஅண்ணாமலையை தரிசித்தலே காமக்குரோத தரிசனமாகும்.. இத்தரிசனத்தால் ஒருவரின் காமக்குரோத எண்ணங்கள் தணிகின்றன. யோனித் தத்துவத்தின் படி இவ்விடத்தில் சிறுநீர் கழிப்பது விதிக்கப்பட்டுள்ளது.  நிண நீரில் கழியும் தகாத காமக்குரோத எண்ணங்களை ஸ்ரீபூமாதேவி ஏற்று நம்முடைய கர்மங்களைச் சுமந்து தியாக தேவியாய்  நமக்கு  அருள் பாலிக்கின்றாள். பிறப்பின் ஆன்மீக ரகசியத்தை அறிந்தால், ஆண், பெண் வேறுபாடு மறைந்து அனைத்தும் அன்பின் உருவம் என்பது விளங்கும். இந்நிலையில் காமமோ, குரோதமோ எழாதல்லவா! சற்குருமார்களே காமத்தின் கோடியை (எல்லையை) சுட்டிக்காட்டி நம்மைக் கரையேற்றுகின்றனர். அதுவும் இத்தரிசனத்தின் மூலமாக! இத்தரிசனம் கொடிய சிறுநீரக வியாதிகளுக்கு அருமருந்தாய் அமைந்துள்ளது.
ஏறுமுக தரிசனம்
திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலினுள் ஸ்ரீகம்பத்திளையணாரையும், ஸ்ரீஆறுமுக ஸ்வாமியையும் முறையோடு தரிசித்த பின் கோயில் வளாகத்தினுள்ளிருந்து ஒவ்வொரு முறையும் விதவிதமாக அமையும் அற்புத தரிசனம் இது. தக்க தானதர்மங்களுடன் பெறுகின்ற இத்தரிசனத்தால் நியாயமான பதவி உயர்வுகள், வியாபார அபிவிருத்திகள், ஆன்மீக வாழ்வில் உயர்நிலை அடைதல் போன்றவை எளிதில் கிட்டும், ஆனால் ஒருவன் தான் மட்டும் இவ்வருளைப் பெறவேண்டும் என்ற சுயநலம் இல்லாது பலருக்கும் இம்மஹிமையைப் பரப்புதல் வேண்டும் .”விசிறி ஸ்வாமிகள்” என்று அன்புடன் அழைக்கப்படும் யோகி ஸ்ரீராம்சூரத்குமார் ஸ்வாமிகள் இந்த தரிசன மஹிமையை உணர்ந்த சித்த புருஷர்களுள் ஒருவராவார்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam