அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பீஷ்ம பஞ்சகம்

பீஷ்ம பஞ்சகம் 
கலியுகத்தில் இளம்பருவ ஆண்/பெண்களின் நல்லொழுக்கத்தைப் பற்றித்தான் அனைத்துப் பெற்றோர்களின் ஆதி கவனமும் செல்கின்றது. “தன் பிள்ளையோ/பெண்ணோ எத்தகைய தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நல்லபடியாக வாழ வேண்டும்” என்பது தானே ஒவ்வொரு தாயின் உள்ளக்கிடக்கை! இறையருளால் நம் பாரதத்தில் பெரியவர்கள் நல்லொழுக்கத்தைத் தரும் ஏராளமான அறவழிமுறைகளைத் தந்ததுள்ளனர். இவற்றுள் பல பெற்றோர்களே கடைபிடிக்க வேண்டிவையாகும். கலியுகத்தில் பெற்ற தந்தையே புகை மற்றும் மது அருந்தும் பழக்கங்களுக்கு அடிமையாகி நிற்கின்ற அவல நிலையைக் காண்கின்றோம்! நல்லொழுக்கத்தில் இன்றியமையாதது முறையற்ற காமத்தை ஒழித்தலாகும். குறிப்பாக இளம்பருவத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோநாராணா), பஞ்சாட்சரம் (நமசிவாய), விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, கந்தசஷ்டி கவசம், கோளறு பதிகம், புருஷ ஸுக்தம், சந்தியா வந்தன பூஜை, மாணிக்கவாசகரின் சிவபுராணம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், திருஅருட்பா போன்றவற்றுள் ஆரம்பத்தில் ஒரு சிலவற்றையேனும் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் துதித்து வந்திடில் மனம் எங்கும் அலைபாயாது காத்திடலாம்.
விந்துக் குற்றங்களுக்கு நிவாரணம்
விந்து தத்வ நெறிமுறைகள் ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. “தானே விந்தை கழித்தல்” என்னும் அருவருக்கத்தக்க தீயபழக்கத்திற்கு இளம்பருவத்தினர் அடிமையாகின்றனர். இரத்தத்தின் திரட்சியே விந்து! அது மட்டுமின்றி மூதாதையர்களின் பித்ரு ஆசியும் பெற்றோர்களின் பூஜா பலன்களின் திரட்சியோடும் விந்து உண்டாகிறது. ஆகவே விந்தினை எக்காலத்தும் வீணாக்கி விடாதீர்கள். முறையான தார்மீகமான திருமண வாழ்விலும் விந்தினை முறைப்படி கையாண்டு நற்சந்ததியைப் பெற உதவும் அறவழி முறைகள் பல உண்டு. திருமணமாகும் வரை புனிதமான பிரம்மச்சாரியாய் வாழ ஒவ்வொரு இளைஞனும் உறுதி பூண்டால் எளிதில் தெய்வீக மணங்கமழும் சாந்தமான சமுதாயத்தைப் பெற முடியும். இதற்காக நைஷ்டிக பிரம்மச்சாரியான ஸ்ரீபீஷ்மாச்சாரியார் பல அரிய எளிய பூஜைகளை அளித்துள்ளார். இளைஞர்கள் மட்டுமின்றி மற்ற அனைவரும் இதனைக் கடைபித்து வாழ வேண்டும். முறைதவறிய காமக் குற்றங்கள் நம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை அனைவரும் உணர்ந்திடில் சமுதாயத்தில் நிலவும் அதர்மமான காமத் தீச்செயல்களைப் பூண்டோடு அழித்து ஆன்மீக ரீதியாக ஒற்றுமையான, சாந்தம், தவழும், சமுதாயத்தைப் பெற்றிடலாம்.
பீஷ்ம பஞ்சகம்
பல நூற்றாண்டுகள் புனிதமான பிரம்மச்சர்யத்துடன் வாழ்ந்தவரே பீஷ்மர், விந்தைச் சிறிதும் வெளியிடாது அடக்கி ஜோதிப்பிழம்பாய், அக்னி சக்தியாய் அதனை மாற்றி, தம் வீர மரணத்திற்குப் பின் ஸ்படிகமாய் ஒளிரவிட்டுப் பிரகாசித்து அந்தத் தெய்வீக பிரம்மச்சரிய சக்தியை எதிர்வருகின்ற யுகங்களில் வாழும் இளையசமுதாயத்தின் நல்லொழுக்கத்திற்காக அர்ப்பணித்துச் சென்றுள்ளார்.

‘பீஷ்ம பஞ்சகம்’ என்பது ஐந்து நாள் பூஜையாகும். வரும் 21.11.1996 முதல் 25.11.1996 வரை ஐந்து நாட்களுக்குப் பீஷ்ம பஞ்சக பூஜை அமைகின்றது.
1. இவ்வைந்து நாட்களிலும் தந்தையர்களும், ஆண்பிள்ளைகளும் காலையில் ஸ்ரீபீஷ்மருக்கு அர்க்யத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். கங்கா தேவியின் புதல்வரானதினால், இவ்வைந்து நாட்களிலும் ஒரு பாத்திரத்தில் (தங்கம், வெள்ளி, தாமிரம், மரத்தாலான பாத்திரம், வாழையிலை தொன்னை இவை மட்டுமே உபயோகிக்கலாம். எவர்சில்வரையும், வெண்கலத்தையும் தவிர்க்கவும்.) கங்கா ஜலத்தை நிரப்பி அதில் மூன்று தர்ப்பைகளை வைத்து ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை துதிக்கவும். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை அறியாதோர் “துவாதச நாமாவளி” எனப்படும் 12 விஷ்ணு நாமங்களை 12 முறை துதித்திடுக.!
பின்னர் ஸ்ரீபீஷ்மரைத் துதித்து., “ஸ்ரீ பீஷ்ம மஹாபிரபோ! தங்களுடைய தேஜோமய பிரம்மச்சர்ய சக்தி மூலம் எனக்கு/ என் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைத் தந்தருள்வீராக! இந்தச் சமுதாயத்தில் அதர்மமான காமக்குற்றங்கள் மறைவதாக!” என்று பிரார்த்தித்துக் கொள்ளவும். இரு கால்களையும் உயரே தூக்கி இருகால்களின் முன் பாதங்களில் நின்று இரு கைகளிலும் கங்கை நீரைத் தாங்கி மார்பிற்கு முன் நீட்டி மெதுவாக விரல்களின் நுனி வழியே கங்கை நீரைப் பூமியில் விடவேண்டும். இதற்கே (அர்ப்பண) அர்க்யம் என்று பெயர். இவ்வாறு மூன்று முறை ஸ்ரீபீஷ்மரைத் துதித்துச் சங்கல்பம் செய்து அர்க்யம் வார்த்திடுக!
வெறும் நீரை ஊற்றுவதால் மட்டும் பலாபலன்கள் வந்திடுமா? இரு குதிகால்களையும் உயர்த்தி பூமியின் ஈர்ப்புவிசைக்கு மாறாக மேலிருந்து  கங்கை அல்லது காவிரி போன்ற புண்ய நதி நீரை அருவி போல ஊற்றிடுகையில் அருவி நீருக்குரித்தான விசை சக்தி உருவாகின்றது. இத்தகைய யோக முறையினால் காந்த யோக சக்தியை உடல் பெறுகின்றது. இதனால் அமிர்தமய விந்து ஆன்மீக சக்தி பெற்று முறையற்ற காம உணர்வுகள் வெளித் தள்ளப்படுகின்றன. ஜாதி, இன பேதமின்றி அனைவரும் தினமும் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டிய சந்தியாவந்தன பூஜையில் மூன்று வேளைகளிலும் அர்க்ய பூஜைகள் உண்டு. இவற்றை முறையாகச் செய்து வந்தால் முறையற்ற அதர்மமான காமக்குற்றங்களை அறவே நீக்கி உத்தமமான ஒழுக்கம் நிறைந்த சிறந்த வாழ்வைப் பெற்றிடலாம்.
இரண்டு கால் கட்டை விரல்களில் மட்டும் ஊன்றி நிற்கின்ற அபூர்வான யோகப் பயிற்சி ஒன்று உண்டு. இதன் ஆன்மீக இரகசியங்களைப் பீஷ்மாச்சார்யார் தகுந்த பீஜாட்சரங்களில் வடிவமைத்துத் தந்துள்ளார். இது தேஜோமயமான நைஷ்டிக பிரம்மச்சர்யத்தைத் தரும். பீஷ்ம பஞ்சகத்தில் ஐந்து நாட்களிலும் விடியற்காலையில் பீஷ்மருக்கு அர்க்யம் அளிக்கையில் மேற்கொண்டு “அங்குஷ்ட யோக சக்தி” உடலில் கூடுகின்றது. இவற்றை முறையாகச் செய்து வந்தால் எங்கும் எந்நிலையிலும் மனம் அலைபாய்ந்திடாது., புனிதத் தன்மையுடன் விந்து உடலில் சேரும், கண்களில் திவ்யமான ஒளி உண்டாகும்..
பீஷ்ம பஞ்சகத்தில் ஏழை பிரம்மச்சாரிகளுக்கு (ஜாதி, இன பேதமின்றி) பூணூல் அணிவித்தல், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பொருளோடு கற்றுத் தருதல், அன்னதானம், ஆடைகள் தானம், நோட்டு, புத்தகங்கள், பேனா போன்றவற்றை அளித்தல் விசேஷமானதாகும். ஏன் பீஷ்ம பஞ்சகத்தில் ஐந்து நாட்களும் அர்க்யம் அளிக்க வேண்டும்? பஞ்சேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து உறுப்புகளின் முறையற்ற உணர்ச்சித் தூண்டுதலால்தான் காமக்குற்றங்கள், முறையற்ற காம எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வைந்தும் ஒன்று சேர்ந்து மனதை இயக்குகின்றன. தேகத்தின் நவதுவாரங்களில் நாசி, மல நீர் துவாரங்கள் இயற்கை இயக்கங்களின் பால் பட்டவை. ஏனைய ஐந்தையும் மனிதன் யோக சக்தியால் முறைப்படுத்த இயலும். சுவாச பந்தத்தால் நாசித்துவாரங்களும்., இயற்கை ரீதியாக மலநீர் துவாரங்களும் மூடப்பட, ஏனைய ஐந்து துவாரங்களே அர்க்யத்தில் பங்கு பெறுகின்றன. மேலும் ஆழ்ந்த பிராணாயாம யோகத்தில் இடகலை, பிங்கலை, சுழுமுனை (வல, இட, இரண்டு வழி நாசித்துவார) என்ற மூன்று வகை மூச்சுக் காற்றினைப்
1. பிருதிவி பூதம்
2. வாயு பூதம்
3. அப்பு பூதம்
4. அக்னி பூதம்
5. ஆகாச பூதம்
– என்ற ஐந்து விதமான பகுதிகளில் பஞ்சபூத சுவாசத்தை ஓட்டும் யோகப்பயிற்சி உண்டு.  பீஷ்மர், ஸ்ரீகிருஷ்ணனின் ஆணையின்படி, பாரதப் போர் முடிவில், உத்தராயணம் வரை உயிரைத் தாங்கி, இறுதியான ஐந்து நாட்களிலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூதத்தில் சுவாசத்தை ஓட்டி ஐந்து நாட்களிலும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்க்யம் வார்த்தார். யோக சக்தியில், குறிப்பாக, நைஷ்டிக பிரம்மச்சர்ய யோகத்தில் கரை கண்டவர் பீஷ்மர். அவர் ஏன் மரணப் படுக்கையிலிருந்து கூட பஞ்சபூத யோக சுவாச நிலையை மேற்கொள்ள வேண்டும்? உத்தமரான பீஷ்மர், ஸ்ரீகிருஷ்ணனின் திருவருளால்..
1. வரும் யுகங்களில் காமக் குற்றங்கள் பெருகிவிடும் .
2. பிரம்மச்சர்ய ஒழுக்க நிலைகள் தகர்ந்து விடும்.
3. கூடாவொழுக்கம் பல்கிப் பெருகும்.
4. எதிர்காலச் சிற்பிகளான இளைய தலைமுறையினரே காமக் குற்றங்களுக்குப் பலியாவதால் நம்முடைய சக்தியையும், நல்லொழுக்கத்தையும், பூர்ண ஆயுளையும், நல்ல எதிர்காலத்தையும் கலியுகத்தில் இழப்பர்.
என்பதைத் தீர்கதரிசனமாக உணர்ந்து பீஷ்ம பஞ்சகம் என்னும் அர்க்ய பூஜையை அருளியுள்ளார். ஸ்ரீபீஷ்மர், ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஐந்து தினங்களிலும் பஞ்சபூத யோக முறையில் அர்க்யங்களை அளித்து அதன் பலன்களை ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மருடைய அர்கயப்பலன்களை பீஷ்ம பஞ்சக நாட்களில் பீஷ்மருக்கு அர்க்யம் அளிக்கின்றோர்க்கு எல்லாம் இந்தப் பஞ்சபூத யோக சக்தி சென்றடைவதாக என்று அருளாணையிட்டார். எனவே அபூர்வமான பீஷ்ம பஞ்சக நாட்களில் தினந்தோறும் பீஷ்மார்க்யம் அளித்துப் பெறற்கரிய யோக சக்தியைப் பெறுவோமாக!

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய தரிசன முறை

திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய தரிசன முறை
திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் முறைகளும் ஆலய தரிசன முறைகளும் பல உண்டு. அவரவர் குடும்பப் பெரியோர்களின் அறிவுரைகளின்படியும், குடும்பப் பாரம்பரியங்களுக்கேற்பவும் கிரிவல தரிசன முறைகளைக் கடைபிடிக்கலாம். ஆனால் அவற்றைப் பற்றிய சரியான விளக்கங்களில்லாத நிலையில் தக்க சற்குருவை நாடி அவர் அளிக்கும் அறவழிமுறைகளை ஏற்க வேண்டும். இங்கு சித்த புருஷர்கள் அருள்கின்ற ஆலய தரிசன முறையே அளிக்கப்படுகின்றது. நான்கு திசை கோபுரங்களில் ஒவ்வொன்றின் மூலமாகவும் ஈஸ்வரனை தரிசனம் செய்யும் முறைகள் உண்டு. முதலில் கிழக்கு கோபுரத்திலிருந்து தொடங்குவோம்.
1. ஸ்ரீஇலட்சண விநாயகர் :- கிழக்கு கோபுரத்தின் உள்வாயிலில் இடதுபுறம் காட்சி தந்து அருள்பாலிப்பவரே ஸ்ரீஇலட்சண விநாயகர். மிகவும் சக்திவாய்ந்த மூர்த்தி. பிரும்மாண்டமான கிழக்கு கோபுரத்தின் சக்திகளையும் கும்பத்தின் தெய்வ அம்சங்களையும் தாங்கி அருள்பாலிக்கும் கணபதியே ஸ்ரீலக்ஷண விநாயகர்.
1. விகாரமில்லாத அங்கலட்சணங்களை வேண்டுவோர்
2. சாமுத்ரிகா லட்சணங்களுடன் கணவன், மனைவி, குழந்தைகளை அடையப் பெற வேண்டுவோர்.
3. தங்களுடைய அழகு லட்சணங்கள் நீடிக்க, நிலைபெற விரும்புவோர் (நடிக, நடிகையர் etc… )
4. அழகான குழந்தைகளைப் பெற வேண்டுவோர்.
5. சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சைகளில் அவயவங்கள் பின்னமாகலாகாது என்று பிரார்த்திப்போர்.
6. தாங்கள் வடிக்கும் ஒவியங்கள், சிற்பங்கள், விக்ரஹங்களில் பின்னங்கள் ஏற்படலாகாது என்று வேண்டும் ஒவியக் கலைஞர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், etc….
போன்றோர் ஸ்ரீலக்ஷண விநாயகரை வணங்கித் தோப்புக்கரணமிட்டு வளையல்கள், பின்னல் கிளிப்புகள், சீப்பு, கண்ணாடி, குங்குமச்சிமிழ் போன்ற மங்களரமான அழகுப் பொருட்களை ஏழை சுமங்கலிகளுக்குத் தானமாக வழங்க வேண்டும். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய தரிசனத்தில் முதலில் ஸ்ரீஇலக்ஷண கணபதியை தரிசிக்க வேண்டும்.
2. ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி

ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி
திருஅண்ணாமலை

கிழக்கு ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வலப்புறம் ராஜகோபுர கீழ் மாடத்திலேயே திறந்த நோக்குடன் மஹிஷாசுமர்த்தினி அருள்பாலிக்கின்றாள். வெட்ட வெளியில் காட்சி தருகின்ற (பராசக்தியின்) காளி அம்ச மூர்த்திக்கு மிகுந்த சக்தி உண்டு. பிரபஞ்சமெங்கும் விரவிக்கிடக்கின்ற துர்சக்திகளை சம்ஹாரம் செய்பவளே திறந்த நோக்கில் உள்ள ஸ்ரீமஹிஷாசுர மர்த்தினி ஆவாள். திருச்சியில் ஸ்ரீவெக்காளி அம்பிகையும் இத்தகைய சக்தியைப் பூண்டவளே. பொதுவாக இத்தகைய திறந்த நோக்கு ஸ்ரீகாளி தேவியர் அருகிலுள்ள பூமியின் கீழுள்ள சிவலிங்க சக்திகளையும், சாளக்கிராம விஷ்ணு சக்திகளையும் கிரஹித்துத் திரட்டி அருள்புரிவர். ஸ்ரீமஹிஷாசுரமர்தினி தேவிக்கு நேர் எதிரே உள்ள ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரரின் சிவ சக்தியையும், கோயிலின் வட கிழக்கில் உள்ள ஸ்ரீபூதநாராயணப் பெருமானின் ஹரி சக்தியையும் பூண்டு துர் சக்திகளை வதம் செய்கின்றாள். ஸ்ரீசேஷாத்ரி சுமாமிகளுக்குப் பிடித்த தேவி, இத்தேவியின் பாதங்களில் இரவில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். இங்கு ஏழைகளுக்குக் கொத்துமஞ்சள் தானம் செய்திடில் கணவனுடைய தீய பழக்கங்கள் தணிவதற்கான நல்வழி பிறக்கும். இவ்வாலயத்தில் இரண்டாவதாக ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி தேவியை இவ்வாறாகவே வணங்குகிறோம்.,
3. ஸ்ரீகம்பத்திளையனார்:-
அருணகிரிநாதருக்குத் தூண்-கம்பத்தில் காட்சிதந்த முருகப் பெருமானே ஸ்ரீகம்பத்திளையனார். சம்பந்தாண்டான் – அருணகிரிநாதருக்கிடையே நிகழ்ந்த போட்டியில் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளிக்கக் கூடாது என்பதற்காக ஸ்ரீமுருகன் தாய் மடிமீது அமர்ந்திருந்த கோலத்தோடு பார்வதி தேவியை முன்னவர் மந்திரங்களால் கட்டுண்டுறச் செய்துவிடவே, மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டு முருகனால் கீழிறங்கி வர இயலவில்லை. ஆனால், அருணகிரியார் அன்புருகப் பாடிடவே – அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் – அன்பிற்குக் கட்டுப்பட்டவள்தானே ஆதிபராசக்தி – மந்திரக் கட்டினின்றும் விடுபட்டு அன்புக் கட்டில் சிக்குண்டாள் அன்னை! முருகன் வெளிவந்து கம்பத்தினில் இளையனாராகக் காட்சியளித்தான்!
முருகனுக்கு மூத்தது கம்பம்! கர்ப்பம் தாங்கிய கம்பம்! மிகவும் சக்தி வாய்ந்த கம்பம்! முருகனையே தாங்கிய கம்பம்! சக்தி அம்சங்களைக் கொண்ட கம்பம்! முருகப் பெருமானையே கர்ப்பமாகத் தாங்கிய கம்பம்!
1. கர்ப்பம் தாங்காமல், பிள்ளைப் பேறில்லாமலிருப்பவர்களும்
2. கர்ப்பம் தங்காமல், அடிக்கடி நழுவி, சக்தியற்ற கர்ப்பப்பை உள்ளவர்களும்
முருகப் பெருமானையே தாங்கி, கர்ப்பம் தாங்கிய இந்தக் கம்பந்தை நூற்றியெட்டு முறை ஷஷ்டி, கிருத்திகை நட்சத்திர நாட்சகளில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சுற்றி வந்தால் இறையருள் விரும்பிட கர்ப்பந்தாங்கும் பேறு கிட்டும். இங்கு கர்ப்பம் தாங்கிய கம்பத்தை வணங்கியபின் முருகனை வணங்க வேண்டும். தாய்க்குப்பின் தானே சேய்!
1. தாயை சரிவர நடத்தாதோர்,
2. தாயின் விருப்பங்களை சரிவர நிறைவேற்றாதோர்
தங்களுடைய தவறுகளுக்கு மனதார வருந்தி இத்திருக்கம்பத்தை ஆறுமுறை வலம் வந்து தன் தாய் விரும்பியவற்றை இங்கு தானமாக ஏழைகளுக்கு அளித்திட்டால் தாயிட்ட சாபம் தனியும். கர்ப்பஸ்தானத்தை வழங்கவல்ல அதிஅற்புத சக்திவாய்ந்த கம்பம்! மேலும் இங்கு கந்தரனுபூதி, கந்தரலங்காரம், குமரேச சதகம், சுப்ரமண்ய புஜங்கம் போன்ற துதிகளைத் துதித்திட கிடைக்காத தொலைத்திட்ட எப்பொருளும் (நியாயமாயின்) கிட்டும்.
4. பிள்ளையார் :- முருகனுக்குப் பின் பிள்ளையார் சந்நதி அமைவது மிகவும் விசேஷமானதாகும். காவல்துறை, பாதுகாப்புத் துறை, இராணுவத்துறையில் உள்ளோர் உயிரைத் துச்சாமாக மதித்துப் பணியாற்ற வேண்டியிருக்கும். அத்தகைய குடும்பத்தினர் இந்த ‘காவற் பிள்ளையாரை’ வேண்டிட நல்வழி கிட்டும். இங்கு கம்பளி ஆடை தானம் செய்வது சிறப்பானது. Body Guards, Security Guards, காவல் துறையில் இருப்பவர்கள் தங்கள் நல்வாழ்விற்கு, உத்யோக உயர்விற்கு இவரைத் தொழ வேண்டும்.
5. குதூகல நந்தீஸ்வரர் :- அடுத்து நாம் தரிசிப்பது பெரிய நந்தீஸ்வரரான குதூகல நந்தீஸ்வரர், இன்றைக்கும் அரூபமாக, சூட்சுமமாக, பல்வேறு ரூபங்களிலும் , கிரிவலம் வரும் தேவர்கள், கந்தர்வர்கள், மஹரிஷிகள், தேவ தெய்வ மூர்த்திகளுக்கு ஸ்ரீஅருணாசல கிரிவல மஹிமையை எடுத்துரைக்கும் குதூகல நந்தீஸ்வரர்! இவருக்குப் பல யுகங்களிலும் பல பெயர்கள் உண்டு. பனுவல் நந்தி, ரூபக நந்தி, பிரதான நந்தி, பாலேஸ்வர நந்தி , சிவபால நந்தி என்று பல பெயர்களைப் புண்டுள்ளார்.
குதூகுல நந்தியும் கூறிக் கொண்டே.. இருக்க  குருமுனி அகத்தியரும் கேட்டுக் கொண்டே... இருக்க . குறைவில்லாமல் நீண்டு கொண்டே .. செல்வதுதான் திருஅருணாசல மகிமை... – குருமங்கள கந்தர்வா.

ஸ்ரீகம்பத்திளையனார் சன்னதி
திருஅண்ணாமலை

இவரை வேண்டிடுக!! நன்முறையில் வாழ்க்கையில் இறைப் பணிகள் ஆற்றிட இவர் அருள்புரிகின்றார். தெய்வ நம்பிக்கை குறைந்து வருவது போல் தோன்றினால் எண்ணிக்கை எதுவுமின்றி இவரை காலும், உடலும் கடுக்கும் வரை அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் போதும். ஓர் ஆன்மீகப் புதுசக்தி பாய்ந்தது போல் தோன்றி பக்தி வளரும்.
6. ஆகர்ஷண சக்தி லிங்கம் :- அடுத்த தியான முறையில் தரிசிக்க வேண்டிய லிங்கேஸ்வரரே பாதாள லிங்கமெனும் ‘ஆகர்ஷண சக்தி லிங்கம்’ ஸ்ரீபிரம்மாவும், ஸ்ரீவிஷ்ணுவும் சர்வேஸ்வரனின் அடிமுடி காணும் லீலையில் இறைவன் அழற் பிழம்பாய் காட்சியளித்தான். ஆனால், இது தெய்வ மூர்த்திகளுக்குரிய தரிசனமாயிற்றே! கலியுகத்தின் சாதாரண மக்கள் என் செய்வது? இறைவன் அக்னி மலையாக மாறினான். எனினும் அக்னிப் பிழம்புகளின் குழம்புகள் திரண்டு உருண்டோடி வந்து அதள பாதாளத்தில் அக்னி லிங்கமாயிற்று. வராஹ விஷ்ணு அதனைப் பாதாளத்திலிருந்து தூக்கி எடுத்துவர, ஆதிபராசக்தியின் அம்சமான ஸ்ரீமஹிஷாசுரமர்தினி தேவியே அதனுடைய அக்னி சக்தியை ஏற்று சீதளப்படுத்திட வராஹமூர்த்தி அதன் ஆகர்ஷண சக்தி அம்சங்களைக் காத்து நிற்க ஆகர்ஷண லிங்கமாக, பாதாள லிங்கமாக அருள்பாலிக்கின்றது. எனவே ‘கடைத்தேற வேண்டும்‘ என்ற பிரார்த்தனை மட்டுமே இங்கு செய்யப்பட வேண்டும். பாதாள லோகத்தில் பலிச் சக்கரவர்த்திக்குத் தனியாக ஸ்ரீமஹாவிஷ்ணு இருப்பது போல் இந்த பாதாளலிங்கத்திற்கு வராஹமூர்த்தியே துணையாக நிற்கின்றது. பொதுவாக லிங்கமூர்த்தியானவர் தரைமட்டத்திற்கும் கீழிருந்தால் அதற்கு ஆகர்ஷண சக்தி அதிகம். இத்தகைய, பூமியினுள் உறைந்து அருள்பாலிக்கும் அம்பிகையே ஸ்ரீமஹிஷாசுரமர்தினி, பாதாள லிங்கம் பெறற்கரிய லிங்கம்! கடவுள் தரிசனத்தைப் பெற்றுத் தரும் லிங்கம்!
7. கோபுரத்து இளையனார் :- ஸ்ரீஆறுமுகப் பெருமான் சந்நதியின் வலப்புறம் கிளி கோபுரத்தின் வலப்புறமாக சற்று உள்தள்ளிய மண்டபத்தில் ஸ்ரீஆறுமுகப் பெருமான் காட்சிதருகின்றார். இங்கு பாகற்காய் சாத தானமானது குடும்பப் பிரச்னைக்களைத் தீர்க்கும். கிளிகோபுரத்தின் மீதேறி உடலை மாய்ப்பதற்கெனக் கீழே விழுந்த அருணகிரியாரைத் தானே இங்கு முருகன் அரவணைத்தான். இங்கு தேனினுமினிய திருப்புகழைச் சிறிதேனும் ஓதுதல் சாந்தத்தைத் தரும். வாழ்க்கையின் மீது ஏற்படும் வெறுப்பை (Frustration) தடுத்து வாழ்க்கையின் மீது ஆன்மீகப் பிடிப்பைத் தரும் மூர்த்தி! .
திருஅண்ணாமலை – மலை ரூபம்

ஸ்ரீகுதூகல நந்தி மூர்த்தி
திருஅண்ணாமலை

திருஅண்ணாமலையில் சாட்சாத் சிவபெருமானே மலை ரூபத்தில் காட்சி அளிக்கிறார் என்றால், மலை தரிசனமே மனித ஜன்மத்தில் பெறற்கரிய இறை தரிசனமல்லவா! என்றைக்குத் திருஅண்ணாமலையே கல் மலையே, ஜோதிப் பிழம்பாக, சிவஸ்வரூபமாக காட்சி அளிக்கின்றதோ அன்றுதான் நாம் தெய்வீகப் பாதையில் வெற்றிகரமாக முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் என்பதை நன்றாக உணர்தல் வேண்டும் அதுவரையில் இவ்வான்மா பக்குவப்படவில்லை என்று அறிந்து தெளிதல் வேண்டும்., இது சாதாரண கல் மலையன்று! முந்தைய க்ருத, த்ரேத, துவாபர யுகங்களில் பொன், வெள்ளி, தாமிரம், மரகதம், மாணிக்க மலையாக நம் கண்களுக்குத் தோன்றுகிறது. இதிலுள்ள ஒவ்வொரு மண் துகளும், பாறையும் சுயம்புலிங்க ரூபங்களாகும். பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சுயம்பு லிங்க மூர்த்திகளும் திருஅண்ணாமலையிலிருந்து தான் பெறப்பட்டவை. பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் திருஅண்ணாமலை. மலையிலுள்ள தாவரங்கள், பூச்சிகள் போன்ற ஜீவன்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மகான்களின், ரிஷிகளின், யோகியரின், ஞானியரின், முமூட்சுக்களின், பிரம்ம ரிஷிகளின், சித்த புருஷர்களின் தவ ரூபங்களாகும். இறைவனின் திருமேனியே மலையன்றோ! சர்வேஸ்வரனின் திருமேனியிலிருக்கும் அருள்பெற்றவை என்றால் என்னே பாக்கியம்!
பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரமம்யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரணர் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. --- திருவாசகம்
திருஅண்ணாமலையின் தோற்றம்

பிரம்மா, விஷ்ணு மூர்த்திகளிடையில் ஆதிசிவனின் முடியையும் அடியையும் காண இறைத் திருவிளையாடல் நடந்த போட்டியை நாம் நன்கறிவோம். சிவனின் பாதார விந்தங்களைக் காண இயலவில்லையென்று ஒப்புக்கொண்ட ஸ்ரீமகாவிஷ்ணு, ‘சர்வேஸ்வரா! எங்களை தெய்வ மூர்த்திகளாய்ப் படைத்து அருள்பாலிக்கின்றீர்கள். தங்களருளால் தான் தங்களையே அறியமுடியும். இறையருள் கூடினால்தான் இறைவனையே காணமுடியும் என்பதை உணராது செருக்கால் நாங்கள் அவதியுற்றோம்! அப்படியானால் சாதாரண ஜீவனின் நிலையென்ன? தீவினைகள் மலிந்து வன்முறையும் தீயொழுக்கமும் மிகும் கலியுலகில் நல்லவர்கள் கூட பல சோதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமே! அவர்களுக்கும் தங்களுடைய தரிசனத்தைப் பெறும் வகையில் அருள்பாலிக்க வேண்டுகிறேன்‘ என்று பிரார்த்தித்தார். ஸ்ரீபிரம்மாவும் அவ்வாறே இறைவனை வேண்டினார். ஸ்ரீஆதிசிவன் மனமிரங்கி, ‘இந்த அடிமுடி காணும் திருவிளையாடல் மக்களுக்கு இறை தரிசனத்தின் மகிமையை ஊட்டி உணர்த்துவதற்காக எம்மால் ஏற்படுத்தப்பட்டதாகும். ஏனைய யுகங்களில் இதே திருவிளையாடலின் மகிமையால் தேவர்களும், கந்தர்வர்களும் திருஅண்ணாமலையை நவரத்னமலையாக, பொன், வெள்ளி மலைகளாக காணும் பாக்கியாத்தைப் பெற்றனர். ‘கலியுகத்தில் யாம் கல் மலையாகக் காட்சி தருவதோடு மட்டுமல்லாமல் பஞ்சபூத ஸ்தலங்களில் (காஞ்சி, திருஆனைக்கோயில், காளஹஸ்தி, சிதம்பரம், திருஅண்ணாமலை) பிரதான அக்னி ஸ்தலமாகத் திருஅண்ணாமலை விளங்குவதால் இம்மலை ரூபத்தில் யாம் அவதாரம் பூண்ட கார்த்திகை தீபத்திருநாளில் ஏற்றப்படும் ஜோதியில் பரிபூரண பரஞ்ஜோதியாய் அனைவரும் காணும் வண்ணம் காட்சி அளிப்பேன் என்று அருள்பாலித்தார்.

பலவகை தீப தரிசனங்கள்
அடியார் :- குருதேவா! இத்தகைய தரிசனங்களை எவ்வாறு அறிவது? எப்படி நினைவு வைத்துக் கொள்வது?
சற்குரு :- தக்க சற்குரு, ஆன்மீக வழிகாட்டியுடன் கிரிவலம் சென்றால், அவர்களே இவற்றை நன்கு ஊட்டி உணர்த்துவார்கள். எனினும், நான் ஏற்கனவே அடிக்கடி கூறியுள்ளது போல் எப்போதும் ஸ்வாமியை (மலையை)த் தரிசனம் செய்தவாறே கிரிவலம் வந்தால், அவருக்குத் தரிசனத்தின் எல்லா பலன்களும் கூடிவரும் . சற்குருவுடன் கிரிவலம் வந்திடில், அவரே, குறித்த தானதர்மங்களுடனும், குறித்த நட்சத்திர ஹோரையில் செய்ய வேண்டிய முறையான தரிசனங்களையும் சொல்லாமல் சொல்லி பரிபூர்ணமான பலன்களைப் பெற்றுத் தருவார்.
அடியார் :- கார்த்திகை மாத பரணி தீபம் முதல் ஒவ்வொரு நாளும் கிரிவலம் வருகையில் இத்தகைய தரிசனங்களையும் காண வேண்டுமா குருதேவா?
சற்குரு :- பரணி தீப கிரிவலம், கார்த்திகை தீப கிரிவலம், விஷ்ணுதீப கிரிவலம், சரண தீப கிரிவலம் போன்று ஒவ்வொரு தீப நாளன்றும், கிரிவலத்தில் காணவேண்டிய தரிசனங்களை இவ்விதழில் வரிசைப்படுத்தி அளித்துள்ளோம். அந்தந்த தீபத்திற்குரிய அந்தந்த கிரிவல தரிசனங்களைப் பெற்றாலே போதும், பரிபூர்ணமான தீப கிரிவல தரிசனப் பலன்களைப் பெறலாம். அனைத்து தரிசனங்களையும், தீர்த்தங்களையும் கண்டு பலன்பெற வேண்டுமெனில் ஒரு கிரிவலத்தை நிறைவு செய்வதற்கே பல நாட்களோ, பல மாதங்களோ, ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்.
கார்த்திகை தீப ஜோதி
சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் ஸ்தூல ரூபத்தில் மலையாக எழுந்தருளிய நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப் பெறுகிறது. உண்மையில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனத்தைப் பெறுகின்றோம் என்றாலும் அதற்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்றும் இல்லங்களில் தீபங்கள் ஏற்றப்படுவதுண்டு. பரணி நட்சத்திரக்காரர்களும் பரணி நட்சத்திரத்தை உடைய  மூதாதையர்களும் பரணி நட்சத்திரத்தின் மகிமையை உணராதவர்களும் பரணி தீபத்தன்று திருஅண்ணாமலையைக் கட்டாயமாக கிரிவலம் வந்தே ஆகவேண்டும்.
பரணி தீபம் – பரணி தீபத்தில் தேவ பூஜைகள்
திருஅண்ணாமலையின் மலை உச்சியில் பரணி தீபத்தன்று நிகழ்கின்ற தெய்வீக விந்தை என்னவெனில் கார்த்திகை தீபத்திற்குரிய தேவபூஜைகளை பரணி தீபத்தன்று திருஅண்ணாமலையின் உச்சியில் தேவாதி தேவர்கள் நிகழ்த்துகின்றனர். இவையெல்லாம் சாதாரண மனிதருக்கு எட்டாத விண்ணுலக சம்பந்தமான பூமியில் நிகழ்கின்ற ஆன்மீக விந்தைகளாகும். இவ்வகையில் தான் இல்லங்களிலும் கார்த்திகை தீபத்தில் தோன்றுகின்ற சிவஜோதியைப் புனிதமான முறையில் வரவேற்கும் வண்ணம் முதல் நாளன்று பரணி நட்சத்திரத்தில் இல்லங்களில் பரணி தீபங்கள் ஏற்றப்படுகின்றன. பரணி தீபத்தன்று திருஅண்ணாமலை ‘ப்ருதிவி தான சர்வேஸ்வர மஹாப்ரபுவாக’ நாமம்பூண்டு மலையில் சூட்சும ஜோதிரூபத்தில் அருள்பாலிக்கின்றார்.
பரணி தீப கிரிவல மகிமை :- பரணி தீபத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதால் பல விசேடமான அனுக்கிரஹங்கள் கிட்டுகின்றன.
1. சுயமுயற்சியில் சொந்த உழைப்பில் வீடு, நில புலன்கள், கடை முதலியவற்றை வாங்க விரும்புவோர்.
2. தன்னால் சிறு வீடுகூட வாங்க முடியவில்லையே என்று எண்ணுவோர்.
3. விளைநிலங்களில் தோஷங்கள், திருஷ்டி பார்வை காரணமாக விளைச்சலின்மை கண்டு வருந்துவோர்.
4. வாடகை வீட்டிலேயே வாழ்க்கை நடத்துபவர்கள் சொந்த வீடு பற்றிய நற்கனவுகள் கொண்டிருப்போர்.
5. பணக்காரர்களாக இருந்தும் சிறப்பான வீடு அமையப் பெறாதோர்.
இத்தகையோர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரம் தொடங்குகின்ற நேரத்தில் கிரிவலத்தை தொடங்குதல், விசேஷமான வீடு, நிலபுல வசதிகளைத் தரும். கிரிவலத்தின் முதலிலும் முடிவிலும் பரணி நட்சத்திரம் இருப்பது மிகவும் முக்கியமானது. அதாவது, பரணி நட்சத்திரம் இருக்கின்றபோதே கிரிவலத்தை மேற்கொள்ளுதல் மிகச் சிறப்பானது.
பரணி தீப கிரிவலமுறை
பரணி நட்சத்திர கிரிவலம் தனை ஸ்ரீஅருணாசலேஸ்வர ஆலயத்தின் கிழக்கு கோபுரவாயிலில் துவங்கி, இடப்புறமாகக் கோயிலைச் சுற்றிவர வேண்டும். கோயிலின் வடகிழக்கு மூலையிலிருந்து பெறுகின்ற மலை தரிசனத்திற்கு முகட்டுப்பர்வத தரிசனம் என்று பெயர். யாரொருவர் முறையாக இந்த முகட்டுப்பர்வத தரிசனத்தைப் பெறுகின்றாரோ அல்லது நினைவு கொண்டு வணங்குகின்றார்களோ, அவர்களுக்கு கண்கள், காதுகள , மூக்கு, வாய், புருவம் இவற்றால் செய்த தீவினைகள் கழியும். தீராத கண்ணோய் உள்ளோர் இம்முகட்டுப் பர்வதத்தைத் தரிசித்து ஏழைகட்கு இலவச கண் சிகிச்சை அளித்தல் போன்ற உதவிகளைச் செய்திட நற்குணம் ஏற்படும். காது நோய்களால் வருந்துவோர் இத்தரிசனத்தைப் பெற்றுக் காதுகேளாதோர்க்கு இலவச சிகிச்சை ‘ஹியரிங்எய்ட்’ அளித்தல் போன்ற உதவிகளைச் செய்திட காது நோய்கள் தீரும். மூக்கும் வாயும் இணைந்து சுவாச, பேச்சுக் கோளாறு உள்ளோர்க்கு இத்தரிசனத்துடன் ஏதேனும் அம்மன் கோயிலில் ஸ்ரீஅம்பிகைக்கு மூக்குத்தி அணிவித்தல், தங்கள் குடும்பங்களில் மூக்குத்தி அணியாத பெண்களை மூக்குத்தி அணியச் செய்தல் போன்றவற்றால் அற்புத குணம் ஏற்படும். கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Ophthalmologist) இத்தரிசனம் பெற்று, எந்த கடினமான அறுவை சிகிச்சை செய்திடினும் வெற்றிகரமாக முடியும்.! காட்ராக்ட், க்ளொகோமா, மாலை நோய் போன்ற கண் நோய் உடையோர் இம்முகட்டுப்பர்வத தரிசனத்தைப் பெற்று அவர்கள் ஊரிலோ அல்லது எங்கேனுமோ உள்ள ஏழைக் கண் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தல், கண்ணாடி அளித்தல், கண் நோய் மருத்துவமனைகளில் சரீர சேவை போன்றவற்றைச் செய்துவர நற்குணம் ஏற்படும்.
நெளிவு கோடு ஓட்டு தரிசனம்
வடகோபுரமருகே ஸ்ரீஅருணாசலேஸ்வரர், நெளிவு சுளிவான மலைப்பாதை சரிவு, விளிம்புகளுடன் ஸ்வாமி (மலை) திவ்யமாக காட்சி தருகின்றார். இதுவே நெளிவு கோடு ஓட்டு தரிசனம். வாழ்க்கையில் சில துன்பங்களுக்கு அனுபவித்தல் ஒன்றுதான் வழியாகும். இத்தரிசன மகிமையால் இத்தகைய துன்பங்களை வாழ்க்கையோடு வாழ்க்கையாக இன்பதுன்பங்களுடன் சேர்த்து சிரமம் தெரியாது அனுபவித்து விடலாம். பரணி நட்சத்திர கிரிவலம், கிழக்கு கோபுர வாயிலிருந்து தொடங்கி, அப்பிரதட்சிணமாக கிழங்கு, வடக்கு, மேற்கு கோபுரங்களின் வழியே கிரிவலப்பாதை அமைகிறது என்பதை நினைவு கூர்தல் வேண்டும்.
கோண தரிசனம்
வடக்கு, மேற்கு கோபுரம் கடந்து கிரிவலப்பாதை செல்லும் சாலையில், வலதுபுறம் திரும்பவதற்கு முன், ஸ்வாமி (மலை) புதிய கோணத்தில் காட்சி அளிக்கின்றார். இதையடுத்து மலையின் கடைசி முகடு ஒரு குடம் (கும்பம்) போல் காட்சிதரும். இதற்கு மாசிமக தரிசனம் என்று பெயர். மாசிமாத மக நட்சத்திரம், மகாமக மக நட்சத்திரம், மாதாந்திர மக நட்சத்திர நாட்களில் இத்தரிசனம் பன்மடங்கு பலன்களைத் தரும்.
உடல்நிலை, வறுமை, அலுவல் மற்றும் பல நியாயமான காரணங்களுக்காக கும்பகோணம் மாசி மகம்/ மகா மகம் புனித காவேரி நீராடலை மேற்கொள்ள இயலாதோர் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகையில் இந்த மாசிமக தரிசனத்தைக் கண்டு இவ்விடத்தில் கங்கை, காவேரி புனித நீர் கலந்த உணவினை அன்னதானமாக இட்டிட மாசிமக தரிசன ஸ்நான பலன் கிட்டும்.
ஏகமுக தரிசனம் :- மாசிமக தரிசனத்திற்குப் பிறகு பரணி தீப கிரிவலத்தில் ஸ்ரீரமணாஸ்ரமம் அருகில் ஏகமுக தரிசனம் உண்டு. ‘ஸ்வாமி (மலை) ஒரே முகத்துடன் காட்சியளிக்கின்றார். இதன் அருகில் உள்ள ஏக தீர்த்தம் தியான நிலையில் பல உன்னத நிலைகளைத் தரவல்லது. இங்கு அமர்ந்து ஏகமுகத்தைப் பார்த்து ‘அருணாசல சிவ’ என்று தியானித்திடுங்கள். இங்கு ஏழைகளுக்கு முந்திரி தானமளித்திட தியானத்திற்குத் தேவையான வேத சக்தி கிட்டும்.
சிவபாத தரிசனம் :- அடுத்து அமைவது இரண்டு மலை முகடுகளுக்கு நடுவில் பாதங்களுடைய சிவபாத தரிசனம். பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் பூஜை செய்யும் கடமை மனிதர்களுக்கு உண்டு. அந்த நித்ய பூஜையைச் செய்யாமையால் தான், மனிதன், பல சந்ததிப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றான். இதனை நிவர்த்தி செய்வதாக தக்க சந்தான, பிராப்தியளிப்பது சிவ பாத தரிசனமாகும்.
சிவபாத பூஜை
ஒவ்வொரு சிவன் கோயிலிலும் இரவில் சிவப் பொற்பாதங்களைத் தாங்கிக் கோயிலை வலம் வந்து பள்ளியறையில் சேர்ப்பார்கள். இரவு பூஜையான சிவபாத பூஜையுடன் , நைவேத்தியமான பாலை அருந்திவர, சந்தான பாக்கியம் கைகூடும். சிவபாத பூஜைக்குப் பால் தானமளிப்பது அளப்பரிய பலன்களைத் தரும். இதைப் பற்றிய அரிய விளக்கங்களை, நம் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய ‘சிவபாத பூஜை மகிமை’ புத்தகத்தில் காணலாம். திருஅண்ணாமலை பரணி தீப கிரிவலத்தில், சர்க்கரை கலந்த பாலை ஏழைகளுக்குத் தானமாக அளித்திட 108 ஆலயங்களில் சிவபாதபூஜை செய்த பலனைப் பெறலாம்.
சிவபஞ்சமுக தரிசனம்
ஐந்து முகங்களுடன் ஸ்வாமி (மாலை) தரிசனம் தருகின்றார். சில சமயங்களில் பல வண்ணங்களில்லும் இங்கு காட்சி தருவதுண்டு தோல் வியாதிகளுக்கு நிவாரணம் தரவல்லது இத்தரிசனம். இங்கு கடினத் தோலுள்ள பழங்களை (ஆரஞ்சு, பலா etc…) தானம் செய்து வந்தால் வெண்குஷ்டம் தீரும்.
எம லிங்கமும் எம தீர்த்தமும்
மக நட்சத்திரத்தன்று எமலிங்க தரிசனம் விசேஷமானது. பரணி தீப கிரிவலத்தில் இங்கிருந்து மலையை தரிசிப்பது மிகவும் சிறந்தது. நோயில் கிடந்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு கிரிவலத்தில் இவ்விடத்தில் முறையான எம லிங்கபூஜை செய்வது சிறந்ததாகும். இதற்கு முறையான தான தர்மங்களும் உண்டு . இதனால் பாயிற்கிடப்போகும் நோயிலிருந்து மீள்வர், சற்குருவை நாடி விளக்கம் பெறுக.
சிங்கமுக தீர்த்தம் – திரிசடை ஜோதிலிங்க தரிசனம்

கோணலிங்க தரிசனம்
திருஅண்ணாமலை

அடுத்து வருவது சிங்கமுக தீர்த்தம். இங்கு சுதை வடிவமான சிம்மரூபத்தில் (சிங்க ரூபத்தில்) நுழைந்து தீர்த்தமாட வேண்டும். நீர்மட்டம் குறைந்திருந்தால், புனிதநீரை சிரசில் தெளித்துக் கொள்ளலாம். இங்கு மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. இங்கிருந்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்வதற்குத் திரிசடை ஜோதிலிங்க தரிசனம் என்று பெயர்.
பிரகலாத தீர்த்தம் – ஸர்வலிங்க தரிசனம்
பிரகலாத தீர்த்தம் தற்போது சற்று மறைந்த நிலையில் காணப்படும். ஸ்ரீநரசிம்ம மூர்த்தி தன் உக்கிரஹ நிலையில் சிவபெருமானுடைய சரபேசுவர ரூபத்தைப் பல இடங்களில் பெற்று ஆனந்திக்கிறார். எனவே இவ்விடத்திலிருந்து ஸ்வாமியைத் தரிசனம் செய்வதற்கு ஸர்வலிங்க தரிசனம் என்று பெயர். இதிலிருந்து செங்கம் சாலையிலிருந்து  வலது புறமாக கிரிவல உள்சாலையில் போகும்வரை நிறைய நந்தி தரிசனங்களும், தீர்த்தங்களும்  மேலும் இரண்டு சிங்கமுக தீர்த்தங்களும் உண்டு. ஓரிடத்தில் எழுமுக தரிசனத்தில் ஸ்வாமி (மலை) ஏழு முகடுகளுடன் காட்சி தருவார். இசைக் கலைஞர்களுக்கு ஏற்ற தரிசனமிது.
காமக்காடு
செங்கம் சாலையிலிருந்து  வலதுபுறம் திரும்பி கிரிவல உள் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் வலதுபுறம் மலையை நோக்கி அடர்ந்த மரங்கள் காணப்படும். இதற்குக் காமக்காடு என்று பெயர். அடர்ந்த மரங்களிடையே ஸ்வாமி (மலை) தரிசனம் மறைக்கப்பட்டு கண்களுக்குத் தெரியாது. காமம் கண்ணை மறைக்கின்ற வரை இறை தரிசனம் கிட்டாது என்பது இதன் பொருள். காமக்காடு துவங்குமுன், இவ்விடத்தில் சிறுநீர் கழித்தாக வேண்டும் என்பது நியதி. இதனால் யோனி பேத தோஷங்கள், விந்து விரயக் குற்றங்கள், முறையற்ற காமவினைகள் போன்றவை தீர்கின்றன இங்கு செய்ய வேண்டிய ஆசன நியதிகள் பலவுண்டு. இப்பகுதியில் சாலைக்கு இடப்புறத்தில் பல நாகங்கள் தங்கள் விந்துவைக் கூட்டி எழுப்பியுள்ள ஆள் உயர நாகப்புற்றுகள் உண்டு! 5 அடிக்கு மேல் உயரமுள்ள நாகப் புற்றிற்குப் பூஜை செய்திடில் அபரிமிதமான பலன்கள் கிட்டும் முக்கியமாக சந்தான பாக்கியத்தைத் தரவல்லது.

சிவராஜ சிங்க தீர்த்தம்
திருஅண்ணாமலை

காமக்காடு தாண்டியவுடன் அடர்த்தியான மரங்கள் குறைந்து, ஸ்வாமி (மலை) நன்றாக கண்ணுக்குத் தெரிவார். இதற்கு காமகுரோத நிவர்த்தி தரிசனம் என்று பெயர். இங்கு தாம் செய்த தீயொழுக்கச் செயல்களை எண்ணி மனம் வருந்தி உளமாரப் பரிகாரம் கேட்டு வேண்டிடுக.
சிவராஜ சிங்க தீர்த்தம்
காமக்காடையடுத்து பெரியநந்தி, பிள்ளையார் சன்னதியுடன் உள்ள தீர்த்தமே சிவராஜசிங்க தீர்த்தமாகும். இங்கிருந்து நந்தியுடன் கொம்புகளினிடையே மலையைத் தரிசனம் செய்வது விசேஷமானது. பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிட்டும். பல சமயங்களில் இலைகள் தரிசனத்தை மறைக்கும். காமக்காடு தாண்டியவுடன் பிரம்மா, விஷ்ணு , சிவன் கூடிய மூன்று முகடுகள் கூடிய திரிமூர்த்தி தரிசனம், காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகியோர் கூடி அளிக்கின்ற காயத்ரீ தரிசனம் போன்ற அற்புத தரிசனங்களைப் பெறலாம்.
பாலிகை தீர்த்தம்
சிவராஜ சிங்கமுக தீர்த்தம் அருகில் பாலிகை தீர்த்தம் உள்ளது. திருமணம் ஆகாது பல சூழ்நிலைகளால் கன்னியாகவே வாழ்கின்ற பெண்களுக்கு இத்தரிசனம் ஒரு வரப்பிரசாதமாகும். திருமண சந்தர்ப்பங்களை அதிகாரம், மமதை, பணமின்மை, கௌரவம் காரணமாக உதாசீனப் படுத்தியவர்களுக்கு கன்னி கழியாத தோஷம் ஏற்படுகிறது. இவர்கள், பாலிகைத் தீர்த்ததில் நீராடி முளைவிட்ட நவதானியங்களை ஏதேனும் தீர்த்தத்தில் சேர்க்க வேண்டும் அல்லது பசுவிற்கு அளிக்க வேண்டும்.
பிரும்ம பூர்ண சக்திமுக தரிசனம்
அடி அண்ணாமலையில் உள்ள ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்திலிருந்து பெறுகின்ற தரிசனத்திற்கே இப்பெயர். விண்வெளி வழியே பிற லோகங்களுக்குச் செல்கின்ற தெய்வீக சக்தி வாய்ந்த பறவைகளுள் புறா, காக்கை, கழுகு, கருடன் ஆகியவை இடம்பெறும். அடி அண்ணாமலையில் உள்ள புறாக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்டவை. இன்றைக்கும் பல லோகங்களுக்குச் சென்று வருகின்றன. எனவே விசேஷ தெய்வீக சக்தி வாய்ந்த அடி அண்ணாமலை கோயிற் புறாக்களுக்கு உணவிடுக. மகரிஷிகள் தேவர்கள், கந்தர்வர்கள், தேவதைகள் போன்றோர் கோயில் கோபுரங்களில் தங்கள் சூட்சும உடலை வைத்துவிட்டு பூலோக ஜீவன்களின் ரூபத்தில் வலம் வந்து, கோயில் மூர்த்திகளைப் பூஜித்துத் தரிசிக்கின்றனர். தங்கள் சூட்சும உடலைத் தாங்கிக் காவல் காத்த நற்பணிக்காக இவர்கள் கோயில் கோபுரங்களில் தங்கள் தெய்வீக சக்தியின் ஒரு பங்கை கோயில் கோபுரங்களில் செலுத்திவிட்டுச் செல்கின்றனர். இக்கலசங்கள் மூலவரின் ஈஸ்வர சக்தியுடன் இணைந்து, கோபுர தரிசனம் பெறுபவருடைய கர்மங்களில் சிலவற்றை ஏற்றுக் கர்மவினை தீர்க்கும் கவின்மிகு இறைப்பெட்டகமாக விளங்குகின்றன. இதனையே ‘கோபுர தரிசனம், கோடி பாப விமோசனம்’ என்று கூறுகின்றனர்.
புறாக்களுக்குத் தானம்
அடி அண்ணாமலையில் புறாக்களுக்கு நவதானியம், குறிப்பாகக் கேழ்வரகு ரவையினை இடுவது மிகவும் விசேஷமானதாகும். எத்தனையோ கிரஹங்கள் உண்டு அவற்றுள் நாம் அறிந்தவை ஒன்பதே! இப்புறாக்கள் பிறகிரஹ மண்டலங்களுக்குச் சென்று வருவதாலும், மேலும் இவை கோபுரத்தின் தெய்வீக சக்தியை ஜீவன்களுக்குப் பெற்றுத் தரும் இடைக் கருவியாகவும் செயல்படுவதால், இங்கு புறாவிற்கு உணவிடுதல் பெரும் பேறாகும். இதையடுத்து ஷண்முக தரிசனம், சப்தமுக தரிசனம், பாதநேர்நோக்கு தரிசனம் போன்றவையும் உண்டு. இவற்றை சற்குருவோடு கிரிவலம் வருகையில் உணர்ந்திடுக.!
தசமுக தரிசனம்
அடி அண்ணாமலையிலிருந்து தொடர்கின்ற கிரிவலப்பாதை, காஞ்சி மெயின் ரோடில் சேரும் பகுதியில் பத்து முகடுகளுடன் தசமுக தரிசனம் கிட்டுகின்றது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும், ஈஸ்வரனாம் பரம்பொருளை வணங்கி வழிபடுகின்ற காட்சியிது. நம் உடலில் பத்துவிதமான (தச)வாயு உண்டு. இறந்தவரின் சிதை மூலம் ஒன்பது வாயு வெளிச்செல்ல, அவருடைய தெய்வீக நிலையைப் பொறுத்து, பத்தாவது வாயு பிரியும் நிலையைப் பொறுத்து ஒருவனுடைய தெய்வீக நிலையை உணரலாம். மகான்கள், யோகியர் போன்ற உத்தம இறைநிலை உடையோர்க்கு கபாலம் வழியாக தசவாயுக்களும் பிரிகின்றன. உத்தம மரணம் வேண்டுவோர் தசமுக தரிசன மகிமையை உணர்தல் வேண்டும்.
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனம்
நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் நிர்மாணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஸ்வாமி (மலை) தருகின்ற தரிசனமே சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனமாகும். திருஅண்ணாமலை ஜோதி அலங்கார பீடாதிபதி சக்திஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இத்தரிசன மகிமையை நன்கு எடுத்தருளியுள்ளார்கள். முன்னால் அம்பாள் தரிசனம் தர பின்னணியில் மலைஉச்சி ஈஸ்வர ஸ்வரூபமாக காட்சிதரும் அதிஅற்புத தரிசனம். இப்பகுதியில் தங்கி பல உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவரே அவதூது ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள். இவ்விடத்தில் பல தான தர்மங்களைச் செய்திட சந்தான பாக்கியம் நிச்சயம் கிட்டும். தான தர்ம முறைகளைத் தக்க குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஅதிகார நந்தி
திருஅண்ணாமலை

அதிகார நந்தி
ஆஸ்ரமத்தை அடுத்து தரிசனம் தருபவர் ஸ்ரீஅதிகார நந்தி!  பிரதோஷ காலத்தில் இவ்விடத்திலிருந்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்வது பல திவ்யத் தலங்களில் அதிகார நந்தியுடன் கூடிய கோயில்களின் பிரதோஷம் கொண்டாடிய பலன்களைப் பெற்றுத்தரும். இதனையடுத்து குபேரலிங்கம், குபேர தீர்த்தம், பஞ்சலிங்க பஞ்சமுக தரிசனம் ஆகியவை அமைந்துள்ளன. பஞ்சமுக லிங்கங்களின் இடையே ஸ்வாமி(மலை)யைத் தரிசனம் செய்தல் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். பஞ்சமுகரிஷியென்பவர் பலகோடி யுகங்கள் தவம்புரிந்து ஐம்பூத சக்திகளைப் பகுத்து ஸ்ரீஅருணாசல மகிமையை உய்த்துணர்ந்தார். ஸ்ரீஇசக்கி சித்தரின் ஜீவசமாதியும் இங்குதான் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தவறான வழியில் சென்றோர்க்கு ஸ்ரீஇசக்கி சித்தரின் ஜீவசமாதி தரிசனம் நற்கதியைத் தரும். இங்கு சங்கினால் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு சங்கில் பால்தானம் அளித்திட தீய வழ்க்கங்கள் மறையும்.

பஞ்சமுக தரிசனம்
ஸ்ரீஇசக்கி சித்தர் ஜீவாலயம்

இடுக்குப் பிள்ளையார்
பல சக்தி வாய்ந்த பீஜாட்சரங்கள் பொதிந்த யந்திரங்களின் மேல் அமைந்து இருக்கும் இடுக்குப் பிள்ளையார் மண்டபத்தினூடே ஸ்ரீஸ்வாமி(மலை) தரிசனம் செய்வது பல பிறவிகளைக் கழிக்கும். மலையை நோக்கி உள்புகுந்து வெளிவருதல் வேண்டும். மலைக்குப் புறம் காட்டி வெளிவருதல் கூடாது. இங்கிருந்து பச்சையம்மன் கோயில்வரை பல மகான்களின் ஜீவசமாதிகளும் கண்ணுக்குத் தெரியாத தீர்த்தங்களும் உள்ளன. தற்போதைய இடுகாடுகளில் எண்ணற்ற மகான்கள், யோகிகள், ஞானிகள் போன்றோரின் ஜீவசமாதிகள் உள்ளன. இவற்றை விவரித்தால் இதுவே ஒரு பெரிய புராணமாக விரியும். எனவே தக்க குருவிடம் விளக்கங்கள் பெறவும். இடுகாட்டிலிருந்து ஒரு புதுகோணத்திலிருந்து ஸ்வாமியை (மலையை) தரிசிக்கலாம். இதற்குக் கோணலிங்க தரிசனம் என்று பெயர். விபரீத எண்ணங்கள், முறையற்ற காம எண்ணங்களைத் தணிக்கும் உத்தம தரிசனம். இங்கு நீர்மோர் தானம் செய்வது சாலச் சிறந்தது. பச்சையம்மன் கோயிலருகே பலாசரபகுலிங்க தரிசனம் உண்டு. நரம்பு வியாதிகள், பக்கவாத நோய்களைத் தீர்க்கும் சக்தியுடையது இது. துர்கை கோயிலருகே கிட்டுவது மாயக்குழிவடு தரிசனம். ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சன்னதியில் ஏறுமுக தரிசனத்துடன் கார்த்திகை மாத பரணிதீப கிரிவலம் பரிபூர்ணமடைகின்றது. இவ்வாறாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர சர்வாலய தீபத்திற்கு முதல் நாளான பரணி நட்சத்திரத்தன்று பல இல்லங்களிலும் கோயில்களிலும் தீபங்களை ஏற்றுவர். இதுவே, பரணி தீபமாகும். இப்பரணி தீபத்தன்று கிரிவலம் மேற்கொள்ள வேண்டிய முறையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பரணிதீப கிரிவலத்தை மேற்கொண்டு ஸ்ரீஅருணாசல ஈஸ்வரனின் பேரருளுக்குப் பாத்திரமாகும்படி வேண்டுகிறோம்.

ஸ்ரீஇடுக்கு பிள்ளையார் திருஅண்ணாமலை

குறிப்பு : ஸ்ரீஅகஸ்திய விஜயம் – நவம்பர்1994, டிசம்பர் 1995, இதழ்களில் மேலும் பல தரிசன விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபம்
வருடத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலை மலையுச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு கார்த்திகை தீபம் என்று பெயர். புருஷ ஸ்திரீ சம்பந்தமில்லாமல் சிவநேத்ராக்கினியின் ஆறு கிருத்திகா ஜோதி நட்சத்திரங்களிலிருந்து பிறந்த திருமூர்த்தியே திருமுருக அவதாரமாகும். பெரும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் வரவேண்டிய சிறப்பான முறையினை ஈண்டு விளக்குகிறோம்.
கார்த்திகை தீப கிரிவலம்
கார்த்திகை தீபத் திருநாளன்று கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி முடிவதற்கு முன் ஆறுமுறை கிரிவலம் வருதல் உத்தமமானதாகும். இதனால் ஆண்டவனின் அளவுகடந்த அருளைப் பெறலாம். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியானதா? இன்று நாள் முழுதும் எவ்வளவு முறை கிரிவலம் வர முடியுமோ அவ்வளவு முறை வாருங்கள். நன்றாக உண்டு இடைஇடையேயும் உண்டு ஆங்காங்கே ஓய்வெடுத்தும் ஆனால் இறை நினைவோடு இன்று கார்த்திகை நட்சத்திர நேரம் முழுதும் கிரிவலத்திலேயே ஈடுபட்டு அதிஅற்புத பலகோடி மடங்கு பலனைப் பெறுங்கள். இன்று வயதானோர் குறைந்தது மூன்று முறையேனும், மிகமிக வயதானோர் இரண்டு முறைகளும் கிரிவலம் வருதல் வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டோர் குறைந்தது ஒருமுறையேனும் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை தீபத்தன்று அன்னதானம் செய்வது மிகமிக விசேஷமாகையால், அன்னதானப்பணியில் ஈடுபட்டுள்ளோர் எவ்வாறு கிரிவலம் வர இயலும் என்ற கேள்வி எழலாம்?
1. திருஅண்ணாமலையில் அன்னதானம், மருத்துவ உதவி போன்ற சரீர சேவையில் ஈடுபட்டிருப்போர் பணி செய்து கொண்டு இருக்குமிடத்திலிருந்தே கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்வது கிரிவலப் பலனைத் தரும். ஆனால் உண்மையான உள்ளத்துடன் ஏழை எளியோர்க்காக சரீரசேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். கிரிவலம் வர முடியவில்லையே என்ற ஏக்கமுடன் சேவை செய்தலாகாது. நாம் உண்மையான முழுமனதுடன் சேவையில் ஈடுபட்டிடில், இறைவனால் நமக்காக அனுப்பப்படும் நம் பித்ருக்கள் கிரிவலம் வந்து அதன பலனை நமக்கு அர்ப்பணிக்கின்றனர்.
2. வெளியூர்க்காரர்கள் அன்னப்பொட்டலங்களுடன் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கார்த்திகை தீப தரிசனத்துடன் அன்னதானம் செயது சிறப்பானதாகும்.
3. அரசு அலுவல், நோய் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கிரிவலம் வர இயலாதோர் ஸ்ரீஅருணாசல சிவ என்ற சிவதியானத்துடன் இயன்ற சரீர சேவை செய்தல் வேண்டும்.

பிரம்மலிங்கம் திருஅண்ணாமலை

கார்த்திகை தீப கிரிவலமுறை
கோயிலின் தெற்கு கோபுரம் பிரும்ம தீர்த்தத்தின் அருகே பிரும்மலிங்கத்திலிருந்து கார்த்திகை தீப கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். இங்கு ஊதுபத்திகளை ஏற்றி அவற்றை மார்புக்கு எதிரே தாங்கி கிரிவலத்தைத் தொடர்ந்திடுக. ஊதுபத்தியின் தெய்வீகப் புகையினூடே (தெற்கு கோபுரம் அருகில்) அண்ணாமலையைத் தரிசனம் செய்வதற்கு ‘ஸர்ப்பப்படேஸ்வர தரிசனம்’ என்று பெயர். ஊதுபத்தியைத் தாங்கியவாறே தெற்கு கோபுர வாயிலின் வழியே நேரே சென்று தெற்கு கோபுர  நேர் வீதியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் அவ்வூதுபத்தியைச் சமர்ப்பித்து மீண்டும் புதுவத்தியினை ஏற்றிக் கிரிவலத்தைத் தொடர வேண்டும். கிரிவலத்தைத் தொடர்கையில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதியருகே மலையுச்சி சற்று அண்ணாந்து பார்க்கும் நிலையில் வானத்தையொட்டித் தோற்றமளிக்கும். இதற்கு ‘தொடுவானலிங்க மூர்த்தி தரிசனம்’ என்று பெயர். இதனால் வாழ்க்கையில் நிராசைகளினால் ஏற்படும் தோஷங்கள் பஸ்மமாகும். இங்கு சுவாமியை (மலையினை) சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். அடுத்து வருவது ஈஸான்ய மடம் அருகில் உள்ள பர்வதகிரி தரிசனம். கார்த்திகை தீப தரிசனத்துடன் இப்பகுதியில் ஐந்து முகங்களுடன் கூடிய தரிசனத்திற்கு ‘பஞ்சாயதன பஞ்சமுக தரிசனம்’ என்று பெயர். சாளக்கிராம பூஜை செய்வோர்க்கு இத்தரிசனம் உத்தம நிலைகளைத்தரும் பஞ்சாயதன பூஜை செய்யாத குற்றத்திற்கும் இத்தரிசனம் நிவாரணமளிக்கும்.

பிருத்வி நந்தி

பாதாதி கரந்யாச தரிசனம்
ப்ருத்வி நந்தியருகிலிருந்து பெறும் தரிசனத்திற்கே இப்பெயர் இங்கு வலது காலை வலது தோளுக்கு மேல் ஏற்றி வலது காலைச் சுற்றி வலது கையை சிரசு வரை எழுப்பி இடது கரத்துடன் சேர்த்து சிரசு மேல் கைகூப்பி வணங்குவதற்குப் ‘பாதாதி கர சேர்க்கை தரிசனம்’ என்று பெயர். திருஅண்ணாமலை திவ்ய பூமியெங்கும் ‘அடிக்கொரு லிங்கம், அடித்துகள்பட்ட இடமெல்லாம், கோடிகோடி லிங்கங்களே’ என்ற ஸ்ரீஅகஸ்தியரின் வாக்கிற்கேற்ப கோடானு கோடி லிங்கங்கள் பூமியிலும், விண்ணிலும் வியாபித்திருப்பதால் எங்கு திரும்பிடினும், நம் கைகால்கள் லிங்கத்தின் மேல் பட்டுவிடுமோ என்று அஞ்சுதல் வேண்டும். “இத்திருஅண்ணாமலை தெய்வீக பூமியில் பாதத்தால் நடந்துவர எனக்குத்தகுதியில்லை. ஆண்டவா! இதுவும் உன்திருப்பாதமே’ என்று இறைஞ்சி வேண்டி வலது காலை ஊர்த்வ தாண்டவமாக மேல் நோக்கித் தூக்கிக் கரங்களைக் கூப்பி சுவாமியை (மலையை) வணங்கிடுதல் வேண்டும் இதனையடுத்து ‘மாய சஞ்சல தரிசனம்’ சதுராதி அஸ்வினி தேவ தரிசனம் வாயுபுத்திர அனுமந்த தரிசனம்’ மற்றுமொரு ‘சிங்கமுக தரிசனம், ‘ஸ்ரீகௌதம முனிவர் ஆஸ்ரமமருகே ‘பாஸத்ரியாங்கு தரிசனம்’ ஆகியவற்றையும் கண்டு தரிசிக்கலாம். ‘பாஸத்ரியாங்குஸ தரிசன மகிமையால் நீரிழிவு நோய்க்கு நிவாரணம் கிட்டும். இங்கு ஸ்வாமிக்கு எதிர் மாற்றாக காற்றடிப்பதை உணரலாம். இங்கு ஏழைகளுக்கு இனிப்புணவு தானமளித்தல் சிறப்புடையது. காமக்காடு எனப்படும் மாயைக் காட்டினில் ஸ்வாமி (மலை) தரிசனம் மறைவது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. அடிஅண்ணாமலைக்கு முன் ‘இருகுன்று தரிசனம்’ கிட்டும். ஸ்வாமி(மலை) இரு குன்றுகளாகக் காட்சியளிப்பார். கணவன் மனைவியரிடையே பிணக்குகள் நீங்கி சுமூக வாழ்க்கை பெற இத்தரிசனம் உதவும். காமக்(மாய) காட்டிலிருந்து அடிஅண்ணாமலை வரை எண்ணற்ற தரிசனங்கள் உண்டு அவற்றுள் ஓரளவே இங்கு இறையருளால் விளக்கப்படுகின்றன. ஏனையவற்றை குருமுகமாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.
திரிசூல தரிசனம்

அடிஅண்ணாமலை அருகே மலையில் வரிகோடுகளாக திருசூலம் போன்ற அமைப்புத் தென்படும். வாகனப் பிராப்திக்கும், அடிக்கடி பயணம் செய்பவர்களின் தீர்க்க ஆயுளுக்கும் இத்தரிசனம் உதவுகின்றது. சிவபெருமான் ஒவ்வொரு முறையும் நந்தீஸ்வரரை அழைக்கும்போது  ஸ்ரீநந்தீசுவர அருணாசலத்தில் உள்ள இத்திரிசூலதரிசனத்தை வணங்கியபின்னரே தம்முடைய தேவ வாகனப் பணியினைத் தொடர்வார். ஒருமுறை நந்தீசுவரரை அழைத்த சிவபெருமான் அவர் வந்தவுடன் பதிலொன்றும் கூறாது திரும்பிச் சென்றுவிட்டார். இதைக்கண்டு துணுக்குற்ற நந்தீஸ்வரர் சிவபெருமானைத் தொடர்ந்து  சென்று காரணம் கேட்க, சிவபெருமான் ‘நந்தீஸ்வரா! தினமும் நான் உன்னை வாகனமாக ஏற்குமுன் நீயாது செய்வாய்?” நந்தீஸ்வரர் ஐயனே! அருணாசல க்ஷேத்திரத்தில் திரிசூல தரிசனத்தை வணங்கி வருவேன்.’ அப்பொழுதுதான் நந்தீஸ்வரன் தான் அன்று அண்ணாமலையின் திரிசூல தரிசனம் பெற மறந்ததை எண்ணி வெட்கினார். ‘நந்தீசுவரா! நீ தினமும் திரிசூல தரிசனம் பெற்றபின் உன் முதுகில் மூன்று திரிசூலக் கோடுகள் உண்டாகும். இன்று நான் அதனை உன் முதுகில் காணவில்லை. எனவே திரும்பிச் சென்றுவிட்டேன்.’ அன்றுதான் திருசூல முத்திரையின் மகிமையை ஸ்ரீநந்தீஸ்வரர் உணர்ந்து அதனை சிவகாஸ தத்துவமாக உலகிற்கு உணர்த்தினார். அடிஅண்ணாமலைக் கோயிலருகில் நந்தி திரும்புவது போல் தோற்றம் கிட்டும். இதற்கு நந்தி திரும்புமுக தரிசனம் என்று பெயர். இதனால் வாகனப்பிராப்தி எளிதில் கிட்டும். அடிக்கடி பயணம் செய்பவர்கள் குறிப்பாக விமானப் பயணம் செய்பவர்கள் இத்தரிசனத்தைப் பெற்றிடில் எவ்வித விபத்துகளுமின்றி காப்பாற்றப்படுவார்கள். வலது பிரதட்சிணப் பாதையிலிருந்து (கோயில் தீர்த்தக்கிணறு அருகில்) அடி அண்ணாமலைக் கோயிலினின்று பெறுகின்ற மலை தரிசனத்திற்கு ‘கல்பகப் பூர்ண தரிசனம்’ என்று பெயர்.

சாம்பிராணி தூப பலன்கள்
இவ்விடத்தில் சாம்பிராணி தூபம் மிகவும் விசேஷமானது. இதனால் சுவாச நோய், ஆஸ்த்மா, wheezing (மூச்சடைப்பு) போன்ற வியாதிகள் தணியும்.. கிரிவலம் முழுதுமே சாம்பிராணி தூபத்துடன் தரிசனம் செய்யப்பெறுவது பெறற்கரிய திருவருளைப் பெற்றுத் தரும். குறைந்தபட்சம் அடிஅண்ணாமலை கோயில் பகுதிகளிலேனும் சாம்பிராணி தூபமிடவேண்டும். பொதுவாக அடிஅண்ணாமாலைப் பகுதியானது அண்ணாமலையில் மூலாதாரமாக விளங்குவதால் இப்பகுதியில் தூபமிடுவது மொத்த மலையின் விஸ்தாரணத்திற்கும் பரவி மலையைச் சுற்றிலும் பல மைல்களுக்கு வியாபித்து கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு அருள் பாலிக்கின்றது. எனவே சத்சங்கமாகப் பலர் ஒன்று சேர்ந்து பலவிதமான தூபக்கால்களில் வெண் பனிபோல் அடர்த்தியாக தூபமிட்டு அடிஅண்ணாமலை கோயிலிருந்து தூபப் புகையை எழுப்ப வேண்டும். இது மிகச்சிறந்த  ரோக நிவாரணி ஆகும்.
இரு விசேஷத் தர்ப்பணங்கள்
அடுத்து தசமுக தரிசனப் பகுதியில் தூபமிடுதல் வேண்டும். தசமுகத் தரிசனப் பகுதியில் அபயமண்டபம் அருகில் தீர்த்தம் ஒன்றுண்டு.  இங்கு ‘தூர்வா காஷ்டம்’ என்ற விசேஷமான முறையில் தர்ப்பணமிடுவதால் பித்ருசாபங்கள் தீர்ந்து சந்தான பாக்கியம் ஏற்படும். ஆண் விந்து அணுக்கள் குறைவு., கர்ப்பப்பைச் சுருக்கம் போன்ற மருத்துவரீதியான குறைகள் நிவர்த்தியாக இந்தத் தீர்த்தக்கரையில் ‘பூஜ்ய தந்திரத் தர்ப்பணம்’ அல்லது ‘விந்து சுழல் தர்ப்பணம்’ என்ற முறையில் பச்சரிசியினைப் பரப்பி இரண்டு முழு முந்திரியினை மஞ்சள் பூசி, ஒரு வெற்றிலையின் மேல் வைத்து அதன்மீது தர்ப்பச் சட்டங்கள் அமைத்து பித்ரு தர்ப்பணமிடல் வேண்டும்.
தூர்வா காஷ்ட தர்ப்பண முறையில் ஒரு நல்ல துணியில் பச்சரிசியைப் பரப்பி அதன்மேல் தர்ப்பைகளை வட்டமாக அமைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். துணியையும் பச்சரிசியையும் தானமாக அளித்திட வேண்டும். இத்தீர்த்தத்தில் உறையும் விக்ன நாசினி என்ற தேவதை பித்ரு தர்ப்பண சக்தியை எடுத்துச் செல்லும் ஸ்வதா தேவியின் மண்டலத்தில் உறையும் முக்கியமான தேவதையாதலின் இத்தீர்த்தக் கரையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பவர்களுக்கு விக்னநாசினி தேவதையே மனமுவந்து அருள்பாலிக்கின்றாள்.
கார்த்திகை தீபத்தன்று இத்தீர்த்தத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணமளித்தல் விசேஷமானது என்றாலும், ஏனைய நாட்களில் கிரிவலம் வரும்போது இங்கு தர்ப்பணமிடுதலும் நன்றே. குளத்தில் தீர்த்தம் வற்றியிருந்தால், கங்கை, காவிரி போன்ற புனித நீரை எடுத்துச் சென்று இங்கு தர்ப்பணமளிக்கலாம். தசமுக தரிசனத்தையடுத்து, நம்முடைய ‘ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம்’ அமைந்திருக்கும் பகுதியில் சற்று அமர்ந்து தியானம் செய்து இயன்ற சிறு தான தர்மங்களைச் செய்திடில் தூர்வாகாஷ்ட தர்ப்பணத்தின் பலன் பரிபூர்ணமடைகிறது. ஏனெனில் அவதூது சித்த புருஷரான ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பெற்றோர்கள் தம்முடைய கிரிவல யாத்திரையில் தூர்வாகாஷ்டத் தர்ப்பணம் செய்து ஓரிரவு இங்கு தங்கி இறைவனை வேண்டி அன்றிரவு கனவில் அவர்களுக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகளின் தெய்வீகப் பிறப்பு உணர்த்தப்பட்டது.

சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனம்
திருஅண்ணாமலை

நம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலிருந்து கிட்டும் தரிசனமே ‘சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனமாகும்.’ இளைஞர்கள் இங்கு தியானித்து ‘ஸ்ரீஅருணாசலசிவ! அருணாசல சிவ’ என்று துதித்துக் கூட்டு நாம ஜெபத்துடன் கிரிவலத்தைத் தொடர்ந்திட வேலைவாய்ப்பு, கல்வியில் முன்னேற்றம், விவாகப் பிராப்தம் ஆகியவை கைகூடும். அடுத்ததாக குபேர லிங்கத்தில் தரிசனம் செய்து இலட்சுமி கவசம், லட்சுமித் ஸ்தோத்திரம் போன்ற இலக்குமி துதிகளுடன் ஸ்ரீகுபேர லிங்கத்தைப் பிரதட்சிணம் செய்து அடுத்து வரும் பஞ்சலிங்க பஞ்சமுகத்தைத் தரிசிக்க வேண்டும். பஞ்ச (ஐந்து) லிங்கங்களினூடே திருஅண்ணமலையைத் தரிசனம் செய்திட அதுவே பஞ்சமுக ரிஷி தரிசனமாகும். இடுக்குப் பிள்ளையாரைத் தரிசித்தபின் கிரிவலத் தொடர்ச்சியாக வேலூர் சாலை பிரியுமிடத்தில் உள்ள மயான பூமியிலிருந்து பெறும் தரிசனத்திற்கு ‘கோட்டி மயான லிங்க தரிசன்ம்’ என்று பெயர். அளவுக்கு மீறிய ஆசை கொண்டிருந்தால் அவற்றில் தகாதனவற்றை விலக்கும் பாங்கே இந்த தரிசனத்தின் பலனாகும். ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயிலருகே அடுத்ததாக நாம் பெறுவது மாயக்குழிவடு தரிசனம். மலையுச்சிப் பகுதியின் கீழ் ஒரு பெரிய குழி பிரதானமாகத் தென்படும். சிருஷ்டியின் மாயைகள் இதில்தான் உற்பத்தியாகி அஸ்தமனமும் ஆகின்றன. மனிதனை வாட்டும் மாயைகளைச் சுட்டிக்காட்டி, அவைகளை ஸ்ரீதுர்க்கை சக்தியால் ஸ்ம்ஹாரம் செய்து நல்வழியைக் காட்டுவதே இத்தரிசனமாகும். இம்மானுட உடலில் நம்மை என்றும் காத்தருளும் ஸ்ரீபூதநாராயணப் பெருமானின் தரிசனத்துடன், கார்த்திகை தீப கிரிவலம், குருவருளால் பரிபூர்ணமடைகிறது.

மாயக் குழிவடு தரிசனம்
திருஅண்ணாமலை

கார்த்திகை தீப கிரிவல நியதி – கார்த்திகை தீபத்தன்று கிரிவலத்தில் முழுமையான பரிபூர்ண பலன்களைப் பெற வேண்டும் என்றால் அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திர காலத்தில் குறைந்தது ஆறு முறையேனும் மேற்கண்ட முறையில் குறித்த தரிசனங்களுடன் ஆறு முறையேனும் கிரிவல வருதல் வேண்டும். ஆனால் இது நடைமுறையில் கடைப்பிடிக்கக் கூடிய ஒன்றா? இதற்கு சித்த புருஷர்கள் அளிக்கின்ற விளக்கமென்ன? ஆறு முறை கிரிவலத்திற்கீடான ஷண்முகபூஷண கிரிவல முறை ஒன்றும் அளிக்கப்படுகிறது.
ஷண்முக பூஷண கிரிவலம்
1. இம்முறையில் தெற்கு கோபுர வாயிலுனுள் இரண்டாவது முறையாக பிரம்ம வாயிலினுள் இரண்டாவது முறையாக பிரம்ம லிங்கத்திலிருந்து கிரிவலம் தொடங்குகிறது.
2. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதியைத் தாண்டியவுடன் பஞ்சமுக தரிசனத்திலிருந்து முப்பது அடிகள் அங்கப்பிரதட்சிணம் செய்தல் வேண்டும்.
3. காமக்காடு அருகே மூன்று குன்றுகள் சேர்ந்து காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி என்ற காயத்ரீ தரிசனப் பகுதியில் அறுபது அடி அங்கப்பிரதட்சிணம் செய்தல் வேண்டும்.
4. சிவராஜ சிங்கத் தீர்த்தப்பகுதியில் 90 அடி அங்கப் பிரதட்சிணம் செய்தல் வேண்டும்.
5. அடி அண்ணாமலைக் கோயிலருகில் 30 அடி அங்கப்பிரதட்சிணம் செய்தல் வேண்டும்.
6. தசமுக தரிசனம்/ சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபப் தரிசனத்திலிருந்து குபேர லிங்கம் வரை அங்கப்பிரதட்சணம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு கார்த்திகை தீப கிரிவலத்தில் மேற்குறித்தவாறு அங்கப்பிரதட்சிணங்களுடன் ஒருமுறை கிரிவலம் வருதல் கார்த்திகை தீபத்தன்று ஆறுமுறை கிரிவலம் வருதலுக்கு ஈடாகும். அங்கப்பிரதட்சிணம் செய்கையில் ஆங்காங்கே உட்கார்ந்தோ, எழுந்தோ, நின்றோ, நடந்தோ இளைப்பாறுவதில் தவறில்லை. ஆனால் விட்ட இடத்திலிருந்து அங்கப்பிரதட்சிணத்தைத் தொடங்க வேண்டும். கிரிவலம் முழுவதுமாக அங்கப்பிரதட்சிணம் செய்தால் கிட்டும் பலன்களைப் பல புராணங்களாக வடிக்கலாம். டிசம்பர் 1995 இதழில் இதனைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளோம்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் சன்னதி
திருஅண்ணாமலை

விஷ்ணு தீபம் (மூன்றாம் நாள் தீபம்)
திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் காட்சியளிக்கின்ற தீபத்திற்கு விஷ்ணுதீபம் என்று பெயர். காத்திகையில் ஏற்றப்படுகின்ற திருஅண்ணாமலை ஜோதி சாதாரண மனிதக் கண்களுக்கு ஒரு மாதிரியாகத் தினமும் தோன்றினாலும், ஒவ்வொரு க்ஷணத்திலும் பல தெய்வ கிருத்தியங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதனைக் கண்டு ஆனந்திப்பதற்காகவே ஜோதி தரிசனத்துடன் கூடிய தரிசனமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ கோடி மகான்கள், ஞானிகள், மகரிஷிகள், யோகிகள் இன்னோரன்ன பல உத்தம இறைநிலை கூடியோரும் மட்டுமின்றி ஸ்ரீமன்நாராயணன் ஏனைய அவதாரங்களும் அனைத்துத் தெய்வமூர்த்திகளும் ஒருங்கே கூடி சர்வேஸ்வரனை ஜோதி ரூபத்தில் கண்டு பூஜை செய்து ஆனந்தித்து மகிழ்கின்றனர். இதனைக் கண்டு களிக்கவே அவர்கள் மலையின் எப்பகுதியிலும் தோன்றி ஜோதியைப் பூஜிக்கக் கூடும். எனவேதான் தரிசனத்துடன் கூடிய விசேஷமான கிரிவலமுறையைப் பெரியோர்கள் அளித்துள்ளனர். இவ்வகையில், மூன்றாம் நாள், விஷ்ணு தீபத்தன்று கிரிவலம் வரவேண்டிய முறைகளை ஈண்டு காண்போம்.
விஷ்ணு தீப கிரிவல முறை
ஸ்ரீஅருணாசலேசுவரர் கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் அருகில் இரட்டைப் பிள்ளையார் கோயிலிருந்து விஷ்ணுதீப கிரிவலம் தொடங்கிறது. இரட்டைப் பிள்ளையாரின் சன்னதியிலிருந்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்திடில் சாணக்கிய தரிசனம் கிட்டும். ஞானத்தைத் தரவல்லது இத்தரிசனம். ஸ்ரீஅண்ணாமலையின் கோபுரத்தோடு, ஸ்வாமியை (மலை) வணங்கி, மல்லிகை மணம் கமழ தூபப்புகை எழுப்பித் துதிக்க வேண்டும். பிரும்மலிங்கம், தெற்கு கோபுர வாயில் வழியே ஸ்ரீகற்பக விநாயகர் முன்புறமுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனை தரிசித்து அங்கிருந்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்வதற்கு ‘ராஜலிங்க தரிசனம்’ என்று பெயர். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் இல்லத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பது இத்தரிசனம். இதையடுத்து செங்கம் சாலையில் மகாமக தரிசனத்தைத் தொடர்ந்து பூர்ணலிங்கம். பூர்ணலிங்க தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவையும் உண்டு. மங்கள தீர்த்தத்திலிருந்து சுவாமியை தரிசனம் செய்வதற்கு பழனி ராஜலிங்க தரிசனம் என்று பெயர். இதையடுத்து ஏகலிங்க தரிசனம், ஷண்முக தரிசனம் ஆகியவை உண்டு. பொதுவாக விஷ்ணு தீபத்தன்று ஷண்முக தரிசனத்திற்கு அப்பால் மேகமூட்டங்கள் நடுவே மலை தரிசனம் தென்படும். இவ்வாறாகப் பகலிலோ, இரவிலோ சூரி , சந்திர ஒளியில் சுவாமியை (மலை) தரிசனம் செய்வதற்கு ‘ஷீர பாக்கிய சிவசொரூப தரிசனம்’ என்று பெயர்.
மேகங்கள் விஷ்ணு தீபத்தன்று இப்பகுதியில் ஸ்வாமியின் மேல் படர்ந்திருப்பதால் அன்னாபிஷேக தரிசனம் என்று பெயர். இதைத் தரிசிப்போருக்கு வாழ்க்கையில் அன்னதுவேஷம் (வெறுப்பு) ஏற்படாது. பாயில் படுத்து நோயில் மடியும் நிலை ஏற்படாது. கால நேரங்களைப் பொறுத்து பாக்கியம் உள்ளவர்களுக்கே இந்த அபூர்வ தரிசனம் கிட்டும். இதை அடுத்து ஸ்வாமிக்கு (மலை) வலது, இடது புறங்களில் நட்சத்திரங்கள் தோன்றுவது உண்டு. நட்சத்திரங்களுடன் ஸ்வாமியை தரிசனம் செய்வதற்கு திருஷ்டி நிவர்த்தி லிங்க தரிசனம் என்று பெயர். கண்ணேறு, சாபங்கள் பொறாமை ஆகியவற்றைத் தீர்க்கவல்லது இத்தரிசனம். இப்பகுதியிலிருந்து செங்கம் சாலையில் வலப்புறம் திரும்பி காமக்காட்டுப் பகுதி வரும் வரை நிறைய நந்தி தரிசனங்களும், தீர்த்தங்களும் உண்டு. இயன்றவரை நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஸ்வாமியை (மலை உச்சியை) தரிசித்து வணங்க வேண்டும் இவற்றின் பலன்களை விவரித்தால் பல புராணங்கள் ஆகிவிடும்.
இன்றும் எந்நேரத்திலும் திருஅண்ணாமலையின் மகிமையை ஸ்ரீநந்தீஸ்வரன் விவரிக்க இன்றளவும் ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் எழுதி வருகின்றார் என்றால் எத்துணை கோடி புராணங்களாக அவை குவிந்திருக்கும்? மனத்தளவில் எண்ண இயலாத அளவிற்கு சொற்பொருள் கடந்ததல்லவா திருஅருணாசல மஹிமை! இவற்றைத்தாம் சித்த புருஷர்கள் கிரந்தங்களாக, நாடி வடிவம் அமைத்துத் தந்துள்ளனர். நான்மறை வேதம் போல் எழுதாக் கிளவியாக இந்த நாடிகள் விண்வெளியில் பரந்து கிடக்கின்றன. இவற்றை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் போன்ற சித்தர் குலத் தோன்றல்கள் மூலமாக இறையருளால் விண்வெளியில் இருந்து உட்கிரஹிக்கப்பட்டு குருவாய் மொழிநாடிகளாக நாம் பெறுகின்றோம்.
மழலைத் தரிசனம்
காமக்காட்டுப் பகுதியில் இயன்ற தூரம் வரை சிவராஜ சிங்க தீர்த்தத்திற்கு முன் குழந்தை போல் மண்டியிட்டுத் தவழ்ந்து கிரிவலம் வருதல் சிறப்பானதாகும். முழு தெய்வீகத் தன்மையுடன் பிறக்கின்ற குழந்தை கால, சந்தி, பகுபத வேறுபாடுகளால் கர்ம வினைகளால் சூழப்பெற்றும் அவற்றைத் தீர்க்கும் பொருட்டு சாதாரண மனிதனாக உருப்பெற்று வயோதிகம் அடைந்து நல்வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அம்முதிய பருவத்தில் மீண்டும் தெய்வீகத் தன்மையை பெறுகின்றது. நம் கர்ம வினைகளுக்கு இடையிலும் குருவருளால் நாம் புரிகின்ற நற்காரியங்களின் புண்யசக்தி ஓர் அளவு நமக்கு தெய்வத் தன்மையை அளிக்கும். ஆனால் இதனை சிக்கெனப்பிடித்து சீராக வாழவேண்டும். இதற்கு அருள் செய்வதே மழலைத் தரிசனம். அதாவது காமக்காட்டில் ஸ்வாமி (மலை) தரிசனம் மறைக்கப்படுகிறதல்லவா? காமக்காடு முடிந்தபின் அதாவது காமத்தைக்களைந்த பின்னரே இறை தரிசனம் பரிபூர்ணமடையும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

பஞ்சகச்சமுறை :-
மழலையைப் போல் தவழ்ந்த நிலையில் ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்வதே மழலைத் தவழ் தரிசனம். பொதுவாக வேண்டியதைப் பெற வேட்டியை பஞ்சக்கச்ச முறையில் அணிந்து கிரிவலம் வருவது சிறப்பானது. பஞ்ச கச்சமுறை அனைவருக்கும் உரித்தானதே.
இம்முறையில் வேஷ்டியை அணிந்தால் சுவாசம் சுழு முனையில் (இருநாசித் துவாரங்களிலும் சமமாக மூச்சை இழுத்து விடுதல்) சீராக ஓடி நல்லெண்ணங்களிலேயே  மனதை நிலைப்படுத்தும், சாதாரண முறையில் வேஷ்டி அணிந்தால் எண்ணச் சிதறல்கள் ஏற்படும். வேஷ்டியை அணிவதற்கும் ஒரு மந்திரம் உண்டு. இதனை தக்க சற்குருவிடம் கேட்டறிதல் வேண்டும். பஞ்சபூத சக்திகளின் உறைவிடமான பருத்தித் துணியில் இம்மந்திரம் மூலம் பஞ்சபூத சக்திகளை எளிதில் ஆவாஹனம் செய்தால் அவை நல்லெண்ணங்களையே மேம்படுத்தும்.
ஏ மானுடா.....
பஞ்சாட்சர ரூபனை பஞ்ச கச்சத்துடன் நினை.!
ஆசையோ எக்கச்சக்கம் அணிவதில் (பஞ்சகச்சம்) என்ன வெட்கம்.....! – குருமங்கள கந்தர்வா
இச்சக்தியை நம் உடலில் நிலைபெறச் செய்யவே பஞ்சகச்ச முறையில் நல்லெண்ணங்கள் வெளிச் சிதறாது வேட்டியின் உள்சுற்றுகளினால் உடலிலேயே தேக்கி வைக்கப்படுகின்றது. கைலி முறையில் உடை அணிந்தால் சுவாச பந்தனங்கள் சுற்றிச் சுற்றி வந்து எண்ணங்களை சீரழிக்கும் மனதைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாது. எனவே தியானம் அல்லது கிரிவலம் போன்ற நற்காரியங்களை செய்யும்போது பஞ்சகச்ச முறையில் வேஷ்டியை அணிவதே சிறந்ததாகும். காமக்காட்டுப் பகுதியைத் தாண்டியவுடன் பஞ்சகச்சம் அணிந்த நிலையில் ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்வதற்கு பஞ்சேஷ்டி தரிசனம் என்று பெயர். சிவராஜ சிங்க தீர்த்தத்திற்குப் பிறகு பல தரிசனங்கள் உண்டு. திருஉண்ணாமலை மண்டபத்திற்கு அருகே அம்மனுக்கு எதிரில் வலப்புறம் இடப்புறமும் முப்பதடி தூரத்திற்கு அங்கப்பிரதக்ஷிணம் செய்து ஸ்வாமியை (மலையை) வணங்குவது விசேஷமானதாகும். முதலில் அம்மனுக்கு வலப்புறம் முப்பதடி அங்கப்பிரதட்ஷணம் செய்து திரும்பி வந்து உண்ணாமலை மண்டபத்தில் இருந்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்ய வேண்டும். பிறகு இடப்புற அங்கப்பிரதட்சிணம். கிரிவலத்தின் இப்பகுதியில் சற்று தூரத்தில் த்ரயக்ஷக தரிசனம், த்ரிமூர்த்தி தரிசனம் என்ற முக்கியமான தரிசனங்கள் உண்டு.
மூன்று முகடுகளாக மலை காட்சியளிக்கும். பரணி தீபம், கார்த்திகை தீபம், விஷ்ணு தீபம், போன்ற அந்தந்த தீப தினம், நக்ஷத்திரம், நாள், யோகம், ஹோரை போன்ற கால விகிதங்களுக்கேற்ப ஒரே தரிசனமே பல நாமங்களைக் கொண்டு அருள்பாலிக்கின்றது. நவராத்திரியில் அம்பிகை பல ரூப நாமங்களைத் தாங்கி அருள் பாலிப்பதைப் போல! எனவே ஒரே தரிசனத்திற்கு இரு பெயர்களா என்று குழப்பமடைதல் வேண்டாம். அடிஅண்ணாமலையில் ஸ்வாமியைத் தரிசிக்க விஷ்ணு தீபத்தன்று இதற்கு குத்துவிளக்கு தரிசனம் என்று பெயர். விஷ்ணு தீபத்தன்று ஸ்வாமி (மலை) குத்துவிளக்குத் தீபச்சுடராய் காட்சி அளிக்கின்றார். குத்துவிளக்கின் அடிப்பகுதி – பிரம்மா, நடுப்பகுதி – விஷ்ணு, மேல் பகுதி – சிவன் என்பதை நாமறிவோம்.
தசமுக தரிசனம் :- அபய மண்டபத்திற்கு முன் நாம் பெறுகின்ற தரிசனமே முன் உச்சிக்கால தரிசனம் எனப்படும் அபய மண்டபம் முன் உள்ள தீர்த்தக் கரையில் முட்டிக்கால் மண்டியிட்டு தரையில் தலை படுமாறு வணங்கி மீண்டும் மலையை தரிசித்திட இதுவே சர்வ ஜீவ ப்ராப்த தரிசனம். சர்வ ஜீவ ப்ராப்த தரிசனம் வாழ்நாளில் உண்டு களி(ழி)த்த நண்டு, கோழி, மீன் போன்ற ஜீவன்கள் அடித்து உதைத்து வதைத்த மிருகங்கள், இச்செயல்களுக்கான பாப விமோசனத்திற்கும் அந்த ஜீவன்கள் பெற்ற வேதனைகளுக்கு நிவாரணமாகவும் இத்தரிசன பலன் உதவுகின்றது.
சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்
அடுத்து வருவது நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் இருந்து நாம் பெறுகின்ற தரிசனம் சிவசக்தி ஐக்யஸ்வரூப தரிசனம் . சக்தி முன் நிற்க ஸ்வாமி (மலையுச்சி) பின்னணியில் நின்று காட்சியளிக்கும் திவ்யமான தரிசனம்..இவ்விடத்தில் தானம், தர்மங்கள் செய்வது சந்தான ப்ராப்தியை அளிப்பதோடு கணவன் மனைவியரிடையே பூசல்கள் மறைந்து தீர்க்கமான ஒற்றுமையை அருள்கின்றது. இங்கிருந்து குபேரலிங்கம் வரை குதிகால்களில் நடந்து கிரிவலம் வருவது விசேஷமானது. (வீட்டு) தலைவாசலை உதைத்தல், பசு நாய் போன்ற ஜீவன்களை மிதித்தல், அதாவது திருஷ்டி போன்றவற்றை மிதித்தல். காலால். செய்த பாவங்கள் ஆகியவற்றிற்கு பரிகாரமாக குதிகாலில் நின்ற வண்ணம் இங்கு ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு குதிகால் லிங்க தரிசனம் என்று பெயர். காலை, மதியம், மாலை ஆகிய மூன்று சந்தி காலங்களில் இப்பகுதியை கிரிவலம் செய்யும் வாய்ப்பு கிட்டிடில் இவ்விடத்தில் குதிகாலை உயர்த்தி விடப்படும் ‘காயத்ரீ அர்க்யத்திற்கு’ பல கோடி மடங்குகள் பலன் உண்டு. அதாவது இப்பகுதியில் குறித்த வேளைகளில் காலந் தவறாமல் இங்கு சந்தியாவந்தனம் செய்வதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
அர்க்யம் :- காணாமல், கோணாமல் கண்டு என்பது சந்யாவந்தனத்திற்குரிய குறிப்பாக காயத்ரீ அர்க்யத்திற்கு உரிய பெரியோர்களின் மொழியாகும். அதாவது காலையில் சூர்யோதயத்திற்கு சற்று முன்பும், மதியம் உச்சி வேளையில், மாலையில் சூரியன் மறைந்த உடனேயே செய்ய வேண்டியது சந்தியாவந்தனம் ஆகும். ப்ராயச்சித்த அர்க்யம் என்பது தற்போது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும். காலப்போக்கில் மக்களின் அசிரத்தையால் ப்ராயச்சித்தார்க்யம் சந்த்யாவந்தனத்தின் இன்றியமையாத ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
விளையாட்டு, பொழுதுபோக்கு, பிரயாணம், கேளிக்கை, அரட்டை போன்றவற்றில் வீணாக நேரத்தைக் கழிக்கும் மனிதன் சந்த்யாவந்தனத்தை நேரந்தவறி செய்வது சரியல்ல. ஆனால் அன்னதானம், கோயில் உழவாரத் திருப்பணிகள், கிரிவலம் இறைச்சேவையில் ஈடுபட்டுள்ளோருடைய பிராயச்சித்தங்களே முறையாக ஏற்கப்படுகின்றன. தன்னுடைய சொந்தக் காரியங்களுக்காக காலந்தவறி சந்த்யாவந்தனம் செய்து பிராயச்சித்தார்க்யம் அளிக்கப்பட்டால் அவை ஏற்கப்படுவதில்லை. இவ்வாறாக தன் வாழ்நாளில் எத்தனையோ புனிதமான சந்தி பூஜைகளைத் தவறவிட்டமைக்காகவும், காலந்தவறி செய்த பூஜைகளினால் இழந்த பலன்களுக்கும் ஓரளவு பிராயச்சித்தம் காண்பதற்காகவே திருஅண்ணாமலை கிரிவலத்தில் சிவசக்தி ஐக்கியஸ்வரூப தரிசனத்திலிருந்து குபேரலிங்கம் வரை குதிகாலில் கிரிவலம் செய்வது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து குபேரலிங்கத்தில் லட்சுமி ஸ்தோத்திரம் கவசம் போன்ற இலக்குமி துதிகளை 12 அல்லது முப்பது முறை பாராயணம் செய்து ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்திட நாம் பெறுவது சக்ரபாணியாக அருள்பாலிக்கும் ஸ்ரீமந்நாராயணன் விஷ்ணு தீபத்தன்று “ஸ்ரீலக்ஷ்மி தேவியுடன் சேர்ந்து சர்வேஸ்வரரை சக்ராயுதபாணியாக தரிசனம் செய்த இடமே இவ்விடமாகும். இங்கிருந்து விஷ்ணு தீபத்தன்று ஸ்வாமியை (மலையை) தரிசிக்கின்ற போது தீபத்தின் ஒளிக்கதிர்கள் சாயாரூபத்தில் சக்ராயுதமாக காட்சிதரும். இத்தரிசனத்தினால் கிடைக்க வேண்டிய முறையான பிதுரார்ஜித சொத்துக்களை மீண்டும் பெறலாம். நெடுநாளாய் கோர்ட்டில் பைசலாகாமல் இருக்கும் வழக்குகள் நன்முறையில் தீரும். எதிரிகளின் கார்யங்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வு பெறும்.

ஸ்ரீபூதநாராயண பெருமாள்
திருஅண்ணாமலை

ப்ராயச்சித்த கர்மலிங்க தரிசனம்
அடுத்ததாக வேலூர் சாலையருகே இடுகாட்டின் இடையே பெறும் கோண தரிசனத்திற்கு பிராயச்சித்த கர்மலிங்க தரிசனம் என்று பெயர்.
1. தர்ப்பணங்களை சரியாக நிறைவேற்றாதோர்,
2. ச்ராத்தம், திவசம், படையல் போன்றவற்றை முறையாகச் செய்யாதோர்.
3. தர்ப்பண பூஜைகளை பிறருக்கு முறையாகச் செய்து வைக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு அரைகுறையாகச் செய்து முடிப்போர்.
ஆகியோர் அறிந்தோ, அறியாமலோ எண்ணற்ற கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் இவ்விடத்தில் எள்ளுருண்டை, எள் பொடி சாதம் போன்ற எள்ளாலான உணவுப் பண்டங்கள் தானமாக அளித்தல், ஏழைகளுக்கு நீராடுவதற்காக, நல்லெண்ணை, சீயக்காய் வழங்குதல், வயதானோர்க்கு கைத்தடி அளித்தல் போன்ற தான தர்மங்களைச் செய்திட இவை தக்க பரிகாரமாக அமைந்து பித்ருசாப நிவர்த்தியாக அமைந்து நல்வழிகாட்டும். பச்சை அம்மன் கோயிலருகே ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்து நாம் பெறுவது சுஷவாட தரிசனம். பிறரைப் பற்றி புறம் கூறுதல், பின்னால் பேசுதல், பிறருக்கு தீங்கிழைத்தல் ஆகிய கர்மவினைகளுக்கு இது நிவாரணமாகும்.

ஸ்ரீதார்மீக நாதர் ஆலயம்
குணசீலம் திருச்சி

ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயிலருகே பகலில் கிட்டும் தரிசனம் மாயக்குழிவடு தரிசனம் இரவில் இதுவே மாயாநிவர்த்தி லிங்க தரிசனமாக மாறி விசேஷ பலனைத் தரும். விஷ்ணு தீபகிரிவலமானது ஸ்ரீபூதநாராயண சன்னதியில் இருந்து ஸ்வாமியை (மலையை) தரிசிப்பதுடன் நிறைவு பெறுகின்றது. இங்கு சாஷ்டாங்கமாக உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படுமாறு வீழ்ந்து நமஸ்கரிக்க வேண்டும். இதனுடன் விஷ்ணு தீபத்தன்று விஷ்ணு தீபத்திற்குரிய கிரிவலம் பரிபூர்ணமடைகின்றது.

அமுத தாரைகள்

அமுத தாரைகள்
1. வெட்டுக்காயங்கள் குணமாக : திருச்சி குணசீலத்தில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் தார்மீகநாதர் பெருமான் எத்தகைய வெட்டுக் காயங்களுக்கும் நிவாரணம் அளிப்பவர். தங்களால் இயன்ற திருப்பணியைச் செய்து (உ.ம்: காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவருதல், பிரகாரத்திலுள்ள புல், பூண்டுகளை அகற்றுதல்) தார்மீக நாதரை அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட்டால் கொடுமையான உறவினர், அலுவலர்களின் அராஜகத்திலிருந்து விடுதலை கிட்டும். பிரிந்துபோன குடும்பங்கள் ஒன்று சேரவும் வழி ஏற்படும்.
2. நீண்ட ஆயுள் வேண்டுமா?
மக நட்சத்திரத்தன்று பலா மரத்தின் அடியில் பிறந்தவர் எமதர்மராஜன். எனவே அன்று பலாப்பழ தானம் எமப்ரீதியை தரக்கூடியது. பலாச் சுளைகளைத் தேனிலோ, நெய்யிலோ தோய்த்து எமதர்மர் தனிச் சந்நிதி கொண்டுள்ள கோயில்களில் (உதாரணமாக திருச்சி – திருப்பைஞ்ஞீலி) தானமளிப்பதால் இருதயக் கோளாறுகள், கான்ஸர் போன்றவற்றில் அகால மரணம் ஏற்படாமல் நீண்ட ஆயுள் பெற வாய்ப்புண்டு . இறுதிக் காலத்தில் அமைதியான வகையில் மரணம் அமையும்.

திருப்பைஞ்ஞீலி

3. கருப்பு நிறமா ? கவலை வேண்டாம்
கருப்பு நிறமுடைய பெண்களுக்கும், தோல் வியாதிகள் முகப்பருக்களால் வருந்தும் இளம் பெண்களுக்கும் அனுக்கிரகம் புரிகிறாள் திருச்சி குணசீலம் தார்மீக நாதர் சிவதலத்தில் உறையும் ஹேமவர்ணேஸ்வரி. இத்தலத்தில் வர்ணப்பூச்சுத் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளித்து, எண்ணெய்ப்பிசுக்கு போன்றவைகளை அவ்வவ்பொழுது நீக்கி அடிப்பிரதட்சிணம் செய்து வணங்கினால் தோல் வியாதிகள் குணமாகவும் நல்ல நிறமுடைய கணவன்மார்கள் வாய்க்கவும் ஹேமவர்ணேஸ்வரி அருள்புரிகின்றாள்.
4. பிரிந்த கணவனுடன் ஒன்று சேர
வாழை மரத்தை ஸ்தல விருட்சமாக உடையது  திருச்சி  - திருப்பைஞ்ஞீலி சிவாலயம். வாழைக் கன்றுகளை நடுதல், தானம் செய்தல், வாழைப் பழங்களைத் தானம் செய்தல் போன்ற நற்காரியங்களை இங்கு செய்வது சிறப்புடையதாகும். அத்தகைய தானங்களால் கன்னி தோஷம் நீங்கும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் . திருமணமாகி கணவனை விட்டுப்பிரிந்த பெண்கள் மீண்டும் கணவன்மாருடன் சேர்ந்து வாழ்வர்.
5. எண் விளையாட்டு, ஒரு விபரீதம்!
நியூமராலஜி என்ற பெயரில் பெயர்களை அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் மாற்றி வைத்துக் கொண்டு அல்லல்படுபவர்கள் ஏராளம். நியூமராலஜியில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களே, தன்னலமற்று அதை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துபவர்களே சரியான முறையில் பெயர்களை அமைக்க முடியும். பணத்திற்காக, அரைகுறையாகப் பெற்ற அறிவால் பெயர் மாற்றம் செய்வதால் விபரீதமே விளையும். Napolean Bonaspart அகில உலகையே ஆண்ட சக்கரவர்த்தி தன் பெயருடன் ஒரு ‘E’ சேர்த்து Napolean Bonasparte – ஆக மாற்றினான்., விளைந்தது விபரீதம்! அடுத்து வந்த வாட்டர்லூ போரில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எனவே , பெயர்களை மாற்ற விரும்புபவர்கள் தக்க குருவை நாடி விளக்கம் பெறவும்.
6. குடல் நோய்கள் மறைய :
வயிற்று அழற்சி, குடல்ம் நோய்களினால் அவதிப்படுவோர் அஸ்வினி நட்சத்திரத்தன்று தேங்காய் சாதம் அல்லது இட்லி தானம் செய்து வந்தால் துன்பம் குறையும். பூரம் நட்சத்திரத்தன்று கொத்துமல்லி சாதம் அல்லது கீரை சாதம் தானம் செய்து வந்தால் கல் அடைப்புகள் kidney Stones, Bile Stones நீங்கும்.
7. கனவில் பாம்பு:-

ஸ்ரீமணக்குள விநாயகர்
திருஅண்ணாமலை

கனவில் பாம்பைக் கண்டால் வாக்கு கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்., பாம்பு துரத்துவது போல கனவு கண்டால் எதிரிகள் நம்மை கவிழ்க்கத் திட்டம் போடுகிறார்கள் என்று அறியவும்., கனவில் பாம்பு கொத்தினால் சுபம் ஏற்படும்.
8. மூளை வளர்ச்சிக்கு:-
மூளையின் செயல் திறனில் ஒரு சதவீத அளவுகூட யாரும் பயன்படுத்துவது கிடையாது. Genius என்று கருதப்படுபவர்கள் கூட இரண்டு மூன்று சதவீத செயல்திறனைக் கொண்டவர்கள் தான், மருதாணியே மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத மூலிகை. அடிக்கடி மருதாணியை இட்டு முடிந்த போதெல்லாம் கோயிலில் அடிப்பிரதட்சிணம் வந்தால் மூளையின் செயல்திறன் பெருகும்.
9. கடுமையான நோய்கள் அகல
திருச்சி மலைக்கோட்டையில் அருள்புரியும் செவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மைவாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்.
10. ஆண்களுக்கான செவ்வாய் தோஷ நிவர்த்தி :-

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர்
திருச்சி மலைக்கோட்டை

க்ஷிப்ர கணபதியின் வழிபாடு ஆண்களுக்கான செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரும், திருஅண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம், அருகில் உள்ள மணக்குள விநாயகரும், க்ஷிப்ர கணபதியின் சிலாரூபமாகும். தகுந்த அபிஷேக ஆராதனைகளுடன் மணக்குள விநாயகரை வழிபட எளிதில் திருமணம் கைகூடும்.
அட்டைப்பட விளக்கம்
“அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீற்றாற்போல்....” “
“........ஆர்ந்த நின்பாத நாயேற்கு
அருளிடவேண்டும் போற்றி”.“ (திருவாசகம்)
பாடிய வேதம் தேடிய பாதம்...........
அரும்பாதம், பொற்பாதம், விரைமலர்த் திருப்பாதம்...
ஒண்மலர்த் திருப்பாதம்......
பொங்குமலர்ப்பாதம்.....
இப்படியெல்லாம் உத்தமர்களின் வாக்கினால் போற்றப்படுகின்ற ஈசனுடைய பாதங்கள்தாம் (இம்மாத) அட்டையை அலங்கரிக்கின்றன... அதாவது “முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதியாம் அண்ணாமலையாரின் அருட்கழல்களே அவை” என்பதாகிறது. ஈசனே..... ஓர் அடியவர் முன் தோன்றி., “உமக்கு என்ன வேண்டும்?” .... என்று கேட்டால்.... அடியவர் என்ன கேட்பார் தெரியுமா? “வேண்டும் நின் கழற்கண் அன்பு” என்றே கேட்பார். அப்படி அந்த ஒப்பில்லாத் திருப்பாதங்களில் ஒளிர்கின்ற மகிமைதான் என்ன?.... ஈசன் தானே வந்து நம் உள்புகுந்து அருள் செய்யாவிடில் மகிமைகளை அறிந்து கொள்ளத்தான் முடியுமோ.... ஈசன் தானே வந்து உள்புக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? .....
அடியார் கூட்டத்துடன் வேண்டுந்தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவி பூண்டு கிடக்க வேண்டும்.... அவ்வளவுதான்! அதுசரி... விஷயத்திற்கு வருவோம்... மாணிக்கவாசகர் பெருமான் காலத்தில் கன்னிப் பெண்கள் எம்பெருமானின் அருள்வேண்டிக் கூட்டம் கூட்டமாக, கிரிவலம் வருவதுண்டு... அப்படி அவர்கள் கிரிவலம் வரும் வேளையில் ஈசனுடைய திருப்பாதாரவிந்தங்களின் வடிவத்தை ஆங்காங்கு கோலமாகப் போட்டு (பச்சரிசி மாவில்) ஈசனுடைய மகிமைகளைக் கூறியவாறு சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்து ஆனந்திப்பது வழக்கம். அப்படி கும்மியடித்து ஈசனை வாழ்த்துங்காலையிலே...... அவர்கள் ஈசனிடம்...
“ உன்னைப் பிரானாக பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவர் ஆவாரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ற குறையுமிலோமேலோர் எம்பாவாய்” “
என்றும் .....
“பெருமானே!..... எங்கொங்கை நின் அன்பரல்லர்தோள் சேரற்க, எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க,..... கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க....” என்றும் மனமுருக வேண்டுவதுண்டு.... ஈசனை ஆதாரமாகக் கொண்டுதானே அண்டசராசரங்கள் சுற்றுகின்றன! “இங்கு ஈசனுடைய திருப்பாதாரவிந்தங்களை ஆதாரமாக வைத்துக் கன்னிப் பெண்கள் சுற்றி வந்து.... கும்மியடித்து .. கிரிவலம் வந்து கலியுகக் கன்னிப் பெண்களுக்கெல்லாம் அன்று ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள்... ஆனால் இன்று....!?

திருப்போரூர் மகிமை

திருப்போரூர் தரும் திருஅருள்
“ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத திருப்போரூர் முருகனுக்கு அரோகரா!”
திருப்போரூர் தலத்தில் முதலில் அமைந்துள்ள திருக்குளம் மிகச் சிறப்புடையது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற வகையில் இத்திருக்குளத் தீர்த்தம் மகிமை வாய்ந்தது. “கோள்வல கூட்டுற்றுக் குளம்” என்னும் தடாகச் சூத்திரத்தின்படி சுவாமியாலேயே அமைக்கப்பட்டது. ‘புற்று ஓட ஊற்று’ ; ‘மாடப் பிரிவு ஊற்று‘ ; ‘அட்சரக் களிம்பு ஊற்று‘ போன்ற பல ரகசிய புனித ஊற்றுக்களைக் கொண்டது இத்திருக்குளம்...
புற்று ஓட ஊற்று நீர் :
ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் இந்த ஊற்று நீர் சுரக்கும். இதன் விசேஷம் என்னவென்றால், மேற்கூறிய மாதங்களில் இத்திருக்குளத்தில் நீராடி, ஈர உடையுடன் திருக்கோயிலைக் குறிப்பிட்ட காலம் வலம் வந்தால்..
1. வானம் பார்த்த வயலில் விவசாயம் செய்வோர் நல்ல விளைச்சலைக் காண்பர்.
2. கிரானைட் தொழிற்சாலை விருத்தி அடையும்.
3. கட்டிடத் தொழிலாளர்கள், பெரிய கட்டிடங்களைக் கட்டுபவர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
4. கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர்கள், புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளைத் துன்பப்படுத்தி, வருத்தி வேலை வாங்கினால், அதனால் வருகின்ற தோஷம், குடும்பத்திற்குத் தலைவியான மாமியாரையும், நாத்தனாரையும் உடல் நோயால் வாட்டி விடும். இத்தோஷம் நீங்க மஞ்சள் ஆடையுடன் இத்திருக்குளத்தில் நீராடி, ஈர உடையுடன் இத்திருக்கோயிலை வலம் வந்து எம்பெருமானாகிய முருகனை வேண்டினால் குடும்பப் பிரிவினையைத் தடுக்கலாம். உடல் நோயும் தீரும். இத்தகைய புனிதமான திருக்குளத்தில், துணி துவைத்தல், சிறுநீர் , மலஜலம் கழித்தல் முதலியன பல துன்பங்களைத் தரும். ஆகவே இத்திருக்குளத்தைப் புனிதமாக வைப்பது பக்தர்களின் கடமை.
மாடப்பிரிவு ஊற்று:
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் இத்திருக்குளத்தில் சுரக்கும் ஊற்றே மாடப் பிரிவு ஊற்றாகும். வாசிக் கலையில் வல நடுக்கம் என்னும் இரகசிய காண்டத்தில் இந்த ஊற்றினைப் பற்றி பெரியவர்கள் மிக விரிவாகச் சொல்லியுள்ளார்கள். இந்த மாதங்களில் ஆண்கள் இத்திருக்குளத்தில் பிதுர்காரியங்களைச் செய்தல் மிகுந்த புண்ணியத்தைத் தரும். வாழ்க்கையில் பிள்ளைகளைத் தத்து எடுத்தவர்கள், நீத்தாருக்கு நீர்க்கடன் அளித்து முருகனை இங்கு வேண்டினால் வாழ்க்கையில் நல்லதொரு திருப்பம் ஏற்படும். நாட்டு விடுதலைக்குத் தன் உயிரைத் தியாகம் செய்தவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இத்திருக்குளத்தில் மேற்கூறிய மாதங்களில் நீராடி முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்திட்டால் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும். தான் செய்த குற்றத்திற்காகக் கிடைக்கப் பெறும் தண்டனை கடுமையாகத் தன் குடும்பத்தினரைத் துன்புறுத்தாமல் இருக்கவும், மீண்டும் அத்தவறைச் செய்ய மாட்டேன் என்று உறுதி பூண்டவருக்குப் பிராயச்சித்தமாகவும் தன்னால் துன்பப்படும் குடும்பங்களுக்கு விடிவு வழிகளைச் செய்து, திருந்தி, நல்லவராக வாழவும் மேற்கூறிய மாதங்களில் இத்திருக்குளத்தில் நீராடி முறையாக குருவின் அருளால் முருகனைத் தரிசித்திடில் அன்னவருக்கு எதிர்கால நிலை மாற்றம் தரும்.
அட்சரக் களிம்பு ஊற்றுநீர் :-
மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் இத்திருக்குளத்தில் சுரக்கும் ஊற்று நீருக்கு “அட்சரக் களிம்பு ஊற்று நீர்“ என்று பெயர். இது அலாதியான பலன்களைத் தரவல்லது. வளர்பிறையில் தூங்காச் சுடர்ஜோதி என்னும் ஜோதியை இத்திருத்தலத்தில் ஏற்ற வேண்டும். இதை அடியார்கள் ஏற்றுவதற்கு முன் மேற்கூறிய மாதங்களில் சனி மூலையில் தலையில் வில்வ இலைகளை வைத்துக் கொண்டு பச்சை ஆடையுடன் இத்திருக்குளத்தில் குளித்து ஈர ஆடையுடன் கோயிலை வலம் வந்து, புது ஆடை அணிந்து, முருகர் சந்நிதியின் முன்னால் தூங்காச் சுடர்ஜோதி ஏற்ற வேண்டும். இதற்கு எண்ணெயும் கொடுத்து உதவினால் அற்புதமான பலன்களைப் பெறலாம். இந்நாட்களில் இந்நீரினை எடுத்துப் புதிய மண்பானையில் வைத்து மஞ்சள், குங்குமம் மாவிலை கட்டி ; தேனும், தினைமாவும் நைவேத்தியம் வைத்துப் பூஜித்து, அறுவடை செய்யப் போகும் முன் வயல்களில் தெளித்து அறுவடை செய்தால் நல்ல பலன்களைத் தரும்.
இந்த நான்கு மாதங்களில் தினமும் இக்குளத்தில் விடாமல் நீராடி முருகனைச் சேவித்து விரதம் இருந்து தானதருமங்களைச் செய்திடில் புதிய பதவிகள் தானாகத் தேடி வரும் . ஆனால் அதில் தவறுகள் ஏதும் செய்திடாமல் கவனமாக இருக்க வேண்டும். திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகளின் அருளால் இன்னும் பல அற்புதமான ரகசியங்களை இத்திருக்குள அமைப்பில் பெரியவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். அவற்றைக் குருமூலமாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது நாம் கோயிலுக்குள் செல்கின்றோம். விநாயகரைத் தரிசித்துத் கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்குகிறோம். சக்கர வடிவில் கொடிமர மண்டபம் உள்ளது. இங்கிருந்து கோபுர தரிசனம் செய்து அன்னதானம் செய்திடில் பதவி உயர்வு, பதவி மாற்றம் விரும்பிய வகையில் கிடைக்கும். திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகளின் “ஜீவமூல ஒடுக்கம்” என்னும் தந்திரத்தில் முருகனுடன் இரண்டறக் கலந்தவர். ஆகவே ‘சாதாரணப் பிரதிஷ்டை’ , ‘அமைப்புப் பிரதிஷ்டை’‘போன்ற சிலாசக்தி உரு ஏற்றப்படாமல் ஜீவசக்தியைப் பெற்றவர் மூலவர்., ‘சிலாமூல ஒடுக்கம்‘ , ‘யந்திர மூல ஒடுக்கம்’‘ , ‘தாந்திரீக மூல ஒடுக்கம்’ , - இவை மூலமாகத் தான் பொதுவாக (சிற்பிகளால் செதுக்கப்பட்ட) மூர்த்திகளுக்குக் கலசத்தின் மூலமாய் உயிர்ச் சக்தி கொடுப்பதுண்டு. ஆனால் ‘ஜீவமூல ஒடுக்கத்தால்‘ ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளே திருப்போரூர் முருகனுடன், பிருதிவி நாடி முறைப்படி இரண்டறக் கலந்ததால், அப்பெருந்தகையே திருப்போரூர் முருகன் வடிவில் அனைவருக்கும் திருஅருளைப் பொழிகின்றார். இதைப் போல ஜீவ மூல ஒடுக்க மூர்த்திகள் பலர் உண்டு. இப்போது திருப்போரூர் முருகனுடன் ஐக்கியமாகி நின்று அருள்பாலிப்பது ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளே!
.இந்தியா முழுவது இத்தகு ஜீவமூல ஒடுக்க மூர்த்திகள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் தான் அவர்கள் கொலுவீற்று அருள்பாலிக்கும் இடங்கள் அதிகமாக உள்ளன. திருப்போரூர் முருகன் தலம், அறுபடைவீடு முருகர் தலங்களுக்கு ஒப்பானது. அதைப் போலவே பூரண பலன்களைத் தரவல்லது. ஜீவமூல ஒடுக்கக் கோயில்கள் கட்டுவதற்கு ஆகமத்தில் ஓரளவு தெளிவு உண்டு. இத்திருக்கோயில்களில் சேவை செய்தால் எளிதில் அபரிமிதமான பலன்களை அடையலாம். மனித இனம் மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிகளும் மிக எளிதில் அதிக புண்ணிய பலம் பெற இத்திருக்கோயில் உதவுகிறது. வயதானவர்கள், நிம்மதியான, அமைதியான மறுஉலக வாழ்வை விரும்புபவர்கள் ஆகியவர்களுக்கு வழிகாட்டி அருளும் பூரணுத்துவன் திருப்போரூர் முருகன் தான்.
திருப்போரூர் (முருகர் விக்கிரகம்) மூலவர் :-
சுயம்பு மூர்த்திகள் இயற்கையின் விளையாட்டு என்ற போர்வையில் சில, பல காரணங்களுக்காக மண்ணுள் புதையுண்டு, யாரும் காணாமல் மறைந்திருப்பதுண்டு. யார் மூலமாகத் தங்களை மீண்டும் உலகிற்கு உணர்த்த விரும்புகிறார்களோ அவர்கள் மூலமாகத்தான் வெளியுலகிற்கு வருவார்கள். காரண காரியமின்றி இச்செயல்கள் நடப்பதில்லை. அதன்படி முல்லை, அத்தி, வன்னி, ஆல் போன்ற மரங்களின் கீழ் புதையுண்டு, மீண்டும் தோன்றிய மூல தெய்வங்கள் தமிழ்நாட்டில் பல உண்டு. புற்றிலிருந்து தோன்றிய ஜீவ மூர்த்திகளும் உண்டு. இவ்வாறு ஒவ்வொரு விருட்சத்திற்கும் கீழ் தோன்றிய மூர்த்திகளுக்கு  வெவ்வேறு வகைகளில் கோயில்கள் அமைக்கப்பட வேண்டும். இக்கோயில்களில் இன்னார்தான் இறைவனைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உள்ளது. சித்தர்கள் மூலமாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய தேவதைகளைச் சித்தர்கள் மூலமாய்த்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இல்லையெனில் அத்தெய்வம் மிக உக்கிரமாக அமர்ந்துவிடும். யோகிகள் மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டிய தேவதைகளை யோகிகளே பிரதிஷ்டை செய்ய வேண்டும். இல்லையெனில் அது வக்ர வேகத்தில் செயல்படத் தொடங்கிவிடும்.  அடுத்து தாந்திரீக (விக்ரக) பிரதிஷ்டை தாந்திரீகர்களே  செய்ய வேண்டும். இல்லையேல் அத்தெய்வம் பலி தெய்வமாய் மாறிவிடும்., வேதப் பிரயோக பிரதிஷ்டை முறையில் வேதம் கற்று, ஸ்வரங்களும், விதிகளும் மாறாமல் , குரு சேவை செய்து சித்தி பெற்றவர்களே இப்பிரதிஷ்டையினைச் செய்ய வேண்டும். இல்லையேல் மூலசக்தி ‘கசடு வேகத்தில்’ செயல் படத்துவங்கிவிடும். அடுத்து – குருவிடமும், இறைவனிடமும், சரணாகதி அடைந்து, உண்மையாக ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனவும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதையும் பூரணமாய் உணர்ந்து தன்னலமின்றி சேவை செய்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் சேர்ந்து செய்ய வேண்டிய பிரதிஷ்டைகள் என்று உண்டு. இதிலும் முறை பிசகினால் தேவதைகள் ‘கிட தந்திர வேகத்தில்‘ செயல்படும்.
திருப்போரூர் முருகரோ, பெண் பனையின் கீழ் கிடைக்கப் பெற்றவர். ‘அவரை எப்படிப் பிரதிஷ்டை செய்வது?’ என்று குழம்பினார்கள் மக்கள். அப்போது அசரீரி, ‘கூர்ச்ச மூல சித்தி‘ பெற்றவரே பிரதிஷ்டை செய்ய வேண்டும், என்று முழங்கியது. ‘தன்னில் பல உத்தமர்களைத் தங்க வைத்தல் கூர்ச்ச மூல சித்தி ஆகும். இச்சக்தியைப் பெற்றவரே “உறு உடம்பு  காரை மாறுடம்பு  பல ஏற்றாரே” எனப்படுவர். இப்படிப்பட்ட , ஒரு மகானைத் தேடித் தேடி , மக்களும் முடிவில் ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளிடம் வந்து சரணடைந்தனர். ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளும் மிக மகிழ்ந்து, தன்னுடைய சக்தி மிக்க யோக தண்டம், பூச்செச்சியோடு கூடிய ருத்திராட்சம் இவைகளினால் திருப்போரூர் முருகரைப் பிரதிஷ்டை செய்தார். இன்றும் அவருடைய யோக தண்டமும், செச்சியோடு கூடிய ருத்திராட்சமும், பாதணிகளும் அவருடைய ஜீவ சமாதியில் உள்ளன. அவற்றின் தரிசனமும், ஸ்பரிசமும் பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.

விஷ்ணுபதி

ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம்
பிரதோஷம் போன்று விஷ்ணுபதி புண்ய காலமும் பெறற்கரிய, தெய்வீக சக்திகள் நிறைந்த அரிய நேரமாகும். இவ்விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற பூஜை, வழிபாடுகள், ‘அர்ச்சனை ஆராதனைகள்’ , ஹோமம் , தர்ப்பணம், வேள்வி, தீபப்பூஜை, தானதர்மங்கள் போன்றவற்றிலும் பன்மடங்கு பலன்கள் உண்டு. எனவே மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தின் அருமையை உணர்ந்து இதனை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி வைணவப் பெரியோர்களும், ஆன்மீகச் செல்வர்களும், பிரதோஷ காலம் போன்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமும் நன்கு பிரசித்தி பெற, வைணவ ஸ்தலங்களில் முறையான பொது பூஜைகளை நடத்த ஆவன செய்யுமாறு வேண்டி பிரார்த்திக்கின்றோம். வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியும் வெளி இருள் நீங்கி விட்டால் மட்டும் இருளே அகன்று விட்டது என்ற நிலைக்கு வந்துவிட முடியாது. நமக்குள்ளே இருக்கின்ற அஞ்ஞானம் என்ற அகஇருளும் அகன்றால்தான் நாம் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். இத்தகைய உண்மைகளை விளக்க வந்ததுதான் விஷ்ணுபதி புண்ய காலம் என்னும் விசேஷ தினமாகும்.
மஹாபாரதத்தின் மூலம் நரகாரசுரன் செய்த கொடுமைகளைப் பற்றி நாம் அறிவோம். இதன் பின்னர் நிகழ்கின்ற நரகாசுரவதமும்,  நரகாசுரன் விரும்பியபடியே, அவனுடைய முடிவு தாயான பூமாதேவியின் ரூபமான சத்யபாமாவின் பாணத்தால் நிறைவு பெற்றதும் நாம் அறிந்ததே. சித்தர்களுடைய “இருடிகள் மஹாபாரதம்“ என்னும் அரிய க்ரந்த வாக்கிய படிமத்தில் அற்புதமான ஆன்மீக நிகழ்ச்சிகள் விளக்கப் பெற்றுள்ளன. சித்த புருஷர்களின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெற்றவர்களுக்கு இது க்ரந்த நாடி ரூபத்தில் வாக்சதியாய் வெளிப்படும். நரகாசுரன் இறுதிக்காலம் அணுகிவிட்டதை உணர்ந்து தன் தாயிடமும், ஸ்ரீகிருஷ்ணனிடமும் பல வரங்களைக் கேட்டுப் பெற்றான். தான் இறந்த நாளை உலகமக்கள் தீபாவளியாகக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாது, தான் இயற்றிய தான, தவ, பூஜா, ஹோம, வேள்விகளின் தபோசக்தியையும் பூலோக மக்களுக்கு அர்ப்பணித்து, தீபாவளி அன்று நிகழ்த்த வேண்டிய பலவிதமான பூஜை முறைகள், மூலிகை நீராடல் விதிகள், தீப பூஜைகள், ஹோமங்கள், (விதவிதமான ஹோம குண்ட அமைப்புகள்) போன்றவற்றையும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருவருளால் வெளிபடுத்தினான். பல தெய்வ மூர்த்திகளிடமிருந்தும் மாபெரும் மகரிஷிகளிடமிருந்தும் உத்தம யோகியர்கள் மூலமாகவும் இவற்றை அவன் தன் தபோபலத்தால் பெற்றிருந்தான். இறக்கும் தருவாயில் நரகாசுரன், “தாயே! தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை மிகவும் ஏக்கத்துடன் தெரிவிக்கின்றேன். தங்கள் திருக்கரங்களால் எனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்பதை நான் உங்களிடமிருந்து வரமாகப் பெற்றேன் அல்லவா! ஆனால் தபோபலத்தின் அதிகார ஆணவச் செருக்கினால் ஒன்றை மறந்துவிட்டேன், ஒரு தாயே தன் புதல்வனை வதம் செய்திடலாகுமோ? நான் இழைத்த கொடுமைகளுக்காக எனக்குக் கொடிய தண்டனை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்னைக் கொன்றதன் காரணமாகத் தங்களுக்குப் “புத்திர ஹத்தி தோஷம்” ஏற்பட்டுவிட்டது. இதற்கான பரிகார முறைகளைத் தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் கேட்டுப் பெற வேண்டுகிறேன்” என்றான். ஸ்ரீகிருஷ்ணனும் சத்யபாமாவை நோக்கி “தேவி! இதுவும் இறைத் திருவிளையாடலே. இத்தகைய புத்திர ஹத்தி தோஷத்தை நீ சற்று அனுபவிப்பாயாக. ஏனென்றால் உலக மக்கள் உன்னிடமிருந்து பலவித பாடங்களைக் கற்று தெளிய வேண்டும்”, என்று அருளுரை கூறினார்.
புத்திர ஹத்தி தோஷ துன்பங்கள் :-
நரகாசுரவதம் நிகழ்ந்த நேரத்திலிருந்து சத்யபாமாவைப் புத்திர ஹத்தி தோஷ துன்பங்கள் சூழலாயின. நிம்மதியான உறக்கம் பறந்தோடியது. எதை நோக்கினாலும், கிலியும், பயமும் ஏற்பட்டது.. மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது., எக்காரியமும் பூரணம் அடையவில்லை. ஏதோ ஒரு நிழல் தன்னை எப்பொழுதும் தொடர்வது போல் இருந்தது. சிரசு முதல் பாதம் வரை சொல்லொணா துன்பங்கள் ஏற்பட்டவாறு இருந்தன. செல்வம், புகழ் கிட்டிடினும் மனதில் சுமை இருந்து கொண்டேயிருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய பயமும் ஏற்பட்டது. தன் குடும்பத்திற்கு ஏதேனும் தீங்கு நேருமோ’‘ என்ற அச்சம் பூதாகாரமாய் உருவெடுத்தது. பயங்கரமான கனவுகளும் ஏற்பட்டன. இவையெல்லாம் சத்யபாமாவிற்கு ஏற்படக் காரணமென்ன?
சத்யபாமாவினால் எளிதில் இவற்றிற்குப் பிராயச்சித்தம் கண்டிருக்க முடியுமே! சத்யபாமா ஒன்றைத் தீர்க்கதரிசனமாக அறிந்திருந்தமையால் இவ்வனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொண்டதோடு மட்டுமின்றி அவற்றை அனுபவிக்கவும் செய்தாள்.! சத்யபாமா அறிந்தது யாதோ...!
நரகாசுரன், தேவர்கள் மகரிஷிகளின் சந்ததிகள் பெருகக் கூடாது என்பதற்காக அவர்தம் பத்னிகளின் தேவ கர்ப்பங்களைக் கலைக்க துர்சக்திகளை ஏவினான். இதன் பலனாக நரகாசுரன் அனுபவிக்க வேண்டிய வேதனைகளைப் பெற்ற தாயின் கடமையாகச் சத்யபாமாவே தன் தேகத்தில் ஏற்று அனுபவித்தால் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும். அதாவது கலியுகத்தில், கருகலைப்புக் குற்றங்கள் பன்மடங்கு பெருகும்... இதனால் ஏற்படும் சொல்லொணா பாபங்களினால் கலியுகத்தில் கோடிக்கணக்கான தம்பதியினர் வாழ்க்கையில் பெரும் துன்பங்களில் உழல்வர். இவர்களுக்குப் பாடம் புகட்டி கரு கலைக்கும் கொடிய பாவத்தினை உணரச் செய்து அதனை மீண்டும் செய்யா வண்ணம் தடுத்து நல்வழி காட்டவே சத்யபாமா மூலமாக இறைவன் திருவிளையாடல் புரிந்தான்.... என்பதை நாம் உணர வேண்டும்.
கருச்சிதைவு – கருக்கலைப்பு – சில ஆன்மீக விளக்கங்கள்
கலியுகத்தில் செயற்கை முறையான கருச்சிதைவு பரவி வருகின்றது! அதுவும் பிறக்கு சிசு பெண் என்று அறிந்தால் உடனடியாகக் கருவைக் கலைத்து விடுகின்ற வேதனையான நிலையையும் காண்கிறோம். தற்காலத்தில் முறையற்ற வழியில் தாங்கிய கர்ப்பம், விரும்பாது வளரும் சிசு, பெண் சிசு போன்றவற்றை உடனடியாக கருச்சிதையின் மூலம் அழித்து வருகின்றார்கள். எந்த ஜீவனையும் வதைப்பதற்கோ அல்லது கொல்லுவதற்கோ இன்னொரு ஜீவனுக்கு அதிகாரம் கிடையாது. பணத்திற்காகவும் பலர் கருச்சிதைவு செய்வதுண்டு.
கருச்சிதைவான கருவின் வேகம்
சிதைக்கப்பட்ட கருவிற்க்குரித்தான உயிரானது.,
1. அதே தம்பதியினருக்குக் குழந்தையாகப் பிறக்கும் வரை எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அவர்களையே சுற்றி வரும்.
2. சாபத்தினாலோ, சினத்தினாலோ அக்குடும்பத்திற்குப் பல துன்பங்களை உண்டாக்கும். இதற்காகவே, சில விசேஷமான, மாளயபட்ச பரிகார தர்ப்பணங்கள் உண்டு. இத்தகைய முறையான தர்ப்பணங்கள், தான தர்மங்களைச் செய்தால் தான் அத்தகைய கருச்சிதைவான உயிர் சாந்தி பெறும்.
3. குடும்பத்தில் மன நிம்மதியின்மை, கணவன் – மனைவி பிரிவு, உற்றார் உறவினருடன் பகைமை, நம்பிக்கைத் துரோகத்தினால் பெருத்த தன நாசம், சந்ததியினருக்கு விபத்து, அங்கஹீனம் போன்றவற்றை உருவாக்கும்.
4. கலைக்கப்பட்ட கரு ‘கொடுவாலை‘ என்னும் வேறு ஒரு உடல் தாங்கி அக்குடும்பத்திற்குப் பலவிதமான துன்பங்களைத் தந்து வரும்.
5. கருக்கலைப்பிற்குக் காரணமானவர்களையும் அது பழிவாங்கியே தீரும். குடும்பத்தில் பலவிதமான – ஆபத்து – கண்டங்கள் உண்டாகும்.
6. கரு கலைப்பினால் முதலில் உருவாவது புத்ரஹத்தி தோஷம். தாயோ, தகப்பனோ.... தன் குழந்தையை கொன்றிடலாமோ? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
இப்புத்ரஹத்தி தோஷம் எளிதில் தீர்வதன்று. செய்த தவறுக்கு மனம் வருந்தி சிதைக்கப்பட்ட கருவிற்குக் கரு சிதைக்கப்பட்ட நாளில்/திதியில் முறையான தர்ப்பண, தான தருமங்களைச் செய்து பரிகாரம் வேண்டி பிரார்த்திக்க வேண்டும்.. இத்தகைய பரிகாரங்களை ஏற்று மன்னித்தருளும் சக்தி கருச்சிதைவுக்குள்ளான உயிருக்குத்தான் உண்டு என்பதை நன்றாக அறிந்து உணர்ந்து தெளிவு பெற்றிடுக.
7. கலைக்கப்பட்ட கருவிற்கான உயிர் சாந்தி பெற்றால் தான் கருக்கலைப்பிற்கான பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்.
சத்யபாமாவின் தியாகம்
கலியுகத்தில் அறிந்தோ, அறியாமலோ, கருச்சிதைவு செய்து கொண்டவர்கள் உண்மையிலேயே மனம் வருந்தி, உள்ளத்தால் உணர்ந்து பரிகாரம் காணத் துடிப்பார்கள் என்பதைத் தீர்க்க தரிசனத்தால் உணர்ந்தாள் சத்யபாமா, தங்கள் தவறுகளுக்காக ஆத்மார்த்தமாகப் பரிகாரம் தேட விழைவோர் எத்தகைய துன்பங்களை அனுபவித்தாக வேண்டும் என்பதைச் சத்யபாமா, நரகாசுரவதத்தின் மூலம் கற்றுத் தருகின்றாள். ‘அப்படியானால் சத்யபாமா நரகாசுரனை வதம் செய்திருத்தலாகாது .... அல்லவா!‘ என்ற எண்ணம் எழும். அதர்மத்தில் ஈடுபட்டு, கொடூரங்களைச் செய்வோர்க்கு எத்தகைய உறவாயினும் சரி தகுந்த தண்டனை அளித்தாக வேண்டும் என்பது நியதி.. மேற்கண்ட புராண நிகழ்ச்சியின் மூலம் சத்யபாமாவே தன் புதல்வனாகிய நரகாசுரன் இழைத்த பாவங்களுக்கான தண்டனைகளைத் தானே ஏற்றுத் தாயின் கடமையைப் பூர்த்தி செய்தனள். கருச்சிதவை செய்து கொண்ட தம்பதியினர் கருச்சிதைவிற்கு முழுப் பொறுப்பேற்றுத் தாங்கள் உருவாக்கிய சிசுவின் ஜன்ம பரிபூரணத்திற்கான பரிகாரங்களையும், தர்ப்பண முறைகளையும், தானதர்ம முறைகளையும் கைக்கொள்ள வேண்டும். சகல துன்பங்களையும் அனுபவித்த பின்னர் சத்யபாமா ஸ்ரீகிருஷ்ணனிடம் ‘ஸ்வாமி! அடியாளுடைய புத்ரஹத்தி தோஷம் தீர்வதற்கான வழிமுறைகளைத் தந்தருள வேண்டுகிறேன்” என்று பிரார்த்தித்தாள். “சத்யபாமா! புத்ரஹத்தி தோஷ நிவர்த்திக்குப் பல வழிமுறைகள் உண்டு. ஆனால் வரும் யுகங்களில் புத்ரஹத்தி தோஷத்திற்கு நிகரான பல கர்மவினைகளைப் பூலோக மக்கள் செய்து துன்புறுவர். கலியுகத்தில் சிசுவதை என்பது சர்வ சாதாரணமாகிவிடும். சிசுவதையானது (கருச்சிதைவு) புத்ரஹத்தி தோஷத்திற்கு நிகரான கொடிய கர்மவினைகளைக் கொண்டதாகும். இன்று புத்ரஹத்தி தோஷத்திற்கான அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்த பின்னர் பிராயச்சித்தம் கேட்டிருக்கின்றாய். இதே அளவு கலியுகத்தில் அறிந்தோ அறியாமலோ கருச்சிதைவு செய்து கொண்டோர்  மனமார வருந்தி இனி இக்கொடிய தவற்றினைச் செய்யலாகாது. இத்தகைய தவறுகளைச் செய்வோரையும் தடுத்து நிறுத்தி நல்வழிகாட்ட வைராக்கியம் பூண்டால்தான் சிசுவதைக்கான பிராயச்சித்தம் பெற முடியும்,” என்று அருளியவுடன் ஓர் அரிய புத்ர தோஷ/சிசுவதை சாந்தி பரிகார முறையைச் சத்யபாமா மூலம் உலகிற்கு எடுத்துரைத்தார். இம்முறைக்குச் சாயா கருட சாந்தி பூஜா என்று பெயர்.
“சத்யபாமா ! உன் புத்ர ஹத்தி தோஷ நிவர்த்திக்காக நானும் அருட்பணி ஆற்ற வேண்டியது உன் பர்த்தாவாகிய என் கடமையல்லவா! ஆனால் உன் மூலம் பரம்பொருள் அற்புத பூஜா முறையொன்றினை உலகிற்கு உணர்த்த விரும்புகின்றான். அதுவே விஷ்ணுபதி புண்யகாலமாகும். யுகம் யுகமாகத் தொடர்ந்து வரும் விஷ்ணுபதி புண்ய கால மகத்துவத்தினை ஜீவன்கள் மறந்து வருகின்றனர். கலியுகத்தில் இன்னுமும் இது அருகிவிடும். புத்திரஹத்தி தோஷத்தை நீக்க வல்லது விஷ்ணுபதி புண்யகால வழிபாடு. எனவே நாமிருவரும் தம்பதி சகிதமாய் விஷ்ணுபதி புண்யகால வழிபாட்டினை மேற்கொண்டு புத்ரஹத்தி தோஷத்திற்குப் பிராயச்சித்தம் காண்போமாக! விஷ்ணு பதியைக் குறித்த ஒரு தலத்தில் கொண்டாடிட, புத்ர ஹத்தி தோஷத்திற்கான பிராயச்சித்தம் கிட்டும். அதுவே ஸ்ரீகருடாழ்வார், சங்கு சக்கரதாரியாக, நின்ற நிலையில் தரிசனந்தரும் திருத்தலம்.
ஸ்ரீகருடாழ்வார் மஹிமை
புத்ரஹத்தி தோஷம் போல் கருச்சிதைவும் பல கொடிய வினைகளைக் கூட்டித் தரும் என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். நரக வேதனைகளுடன், பிண்டமாக, சதைச் சிதைவுகளாக வெளித்தள்ளப்படும் சிசு எவ்வித ஈமச் சடங்குகளுமில்லாமல் பூமியில் தானே புதைக்கப்படுகின்றது. தற்காலத்தில் பலர் சுயநலக் காரணங்களுக்காகக் கருச்சிதைவு செய்து கொண்டுவிடுகிறார்களே தவிர, சிதைவுற்ற சிசுப் பிண்டங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! ஏன்.... சிதைவுற்ற சதைச்சதைவுகள் என்னவாகின்றன என்று கூட யோசிப்பதில்லை! தானே இயற்கையாக நழுவி விழுகின்ற உயிரற்ற கரு – சிசுவிற்கும் பல சடங்குகள்  செய்தே புதைக்க வேண்டும். அல்லது அவற்றிற்குரியப் பிராயச்சித்த முறைகளையேனும் கடைபிடிக்க வேண்டும்.
பூமாதேவியின் பிரார்த்தனை
இத்தகைய சிசுப்பிண்டங்களின் வேதனைகளைப் பூமாதேவி தானே தாங்குகின்றாள்! எனவே ஒரு முறை பூமாதேவியே ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு, “ஸ்வாமி! பூலோக மக்கள் அனைத்து விதமான கழிவுகளையும் என்மீது தான் சுமத்துகின்றனர். சொல்லற்கரிய பாவச் செயல்களும் என்மீதே நடக்கின்றன. புண்ய நதிகள் சுமக்கும் கோடிக்கணக்கான ஜீவன்களின் கொடிய கர்மவினைகளின் ஒரு பங்குதனை நான்தான் ஏற்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் விட கருவில் வளரும் சிசுக்களையும் வதைத்து அவற்றைப் பிண்டங்களாக்கி மண்ணில் புதைக்கின்றனர். அவர்கள் ஏதேனும் வேத மந்திர, யந்திர, தந்திர, மாந்த்ரீக, வாமன பூஜா முறைகளை நடத்திடில் அவற்றின் சுமை ஓரளவேனும் எனக்குக் குறையும். ஆனால் எவற்றையும் பூலோக மக்கள் கடைபிடிப்பதில்லை! தாங்கள், எனக்குக் குறிப்பாக சிசுக்களின் வேதனைகளைத் தாங்கும் சக்தியை அளிப்பீர்களாக!” என வேண்டினாள்.
சாயாகருட சாந்தி பூஜை
ஸ்ரீவிஷ்ணுவும், ‘பொறுமைக்கு இங்கு உதாரணமாகப் படைக்கப் பெற்ற பூமாதேவியே! நீ சத்யபாமாவாக அவதரிக்கையில் உன் விருப்பம் பரிபூர்ணமடையும். எனினும் ஔஷதரூபியாக ஜீவன்களின் கர்மவேதனைகளைத் தீர்க்க வல்ல ஸ்ரீகருடனை யாம் அறிவிக்கும் திருத்தலத்தில் துதித்து வருவாயாக“ என்றார். ஸ்ரீபார்வதி தேவியே சிவ ஆணையின் பேரில் மகரிஷி பத்னியான அனுசூயா தேவியிடன் இல்லற தர்மங்களைக் கற்றனளன்றோ! ஸ்ரீகருடனைத் தொழ பூமாதேவிக்கு ஸ்ரீவிஷ்ணு குறித்துத் தந்த திருத்தலம் எது தெரியுமா! மேலும் படித்துவிட்டு அறிந்து கொள்ளலாமா! ஸ்ரீபூமாதேவி, ஸ்ரீகருடாழ்வாரைத் தோத்திரம் செய்து அத்திருத்தலத்தில் தவமிருந்தாள். எத்தனையோ யுகங்கள் மாறின! ஸ்ரீகருடாழ்வார் விஸ்வரூபமாக எழுந்தருளினார்! சங்கு சக்ரபாணியாக! அதுவும் நின்ற கோலத்தில்! அவ்விஸ்வரூபத்தின் நிழல் பூமியெங்கும் படர்ந்திட....  கருடசாயா கிரணங்களின் மகத்தான தெய்வீக சக்தியால் பூமி குளிர்ச்சியடைந்து! பூமாதேவியின் வேதனைகள் மறைந்தன! ஆம்! இதற்கே “சாயா கருட தரிசன பூஜை!“ இது நிகழ்ந்ததோ விஷ்ணுபதி புண்யகாலத்தில்! கருடனின் நிழலுக்கு அற்புத ஔஷத சக்தி அதாவது மகத்தான மருத்துவ சக்தி உண்டு! முற்காலத்தில் கருடனின் நிழல் தன் மேல் படாதா என்று பெரியோர்கள் ஏங்கி வேண்டி நிற்பர்., ஸ்ரீகருடபகவானின் விஸ்வரூப நிழலே பூமாதேவியின் உள்ளத்து வேதனைகளைத் தணித்ததென்றால் என்னே கருடனின் மஹிமை! ஸ்ரீபூமாதேவி தவமிருந்த இத்திருத்தலத்தில் தான் ஸ்ரீசத்யபாமாவும் வழிபட்டுத் தன் புத்ரஹத்தி தோஷத்திற்குப் பரிஹாரத்தினைப் பெற்றனள்.அறிந்தும் அறியாமலும் கருச்சிதைவு செய்து கொண்டோர் வரும் விஷ்ணுபதியன்று இத்திருத்தலத்தில்..
1. ஸ்ரீகருடாழ்வாருக்கு அபிஷேக, ஆராதனைகள் , கருடஹோமம்
2. அங்கப் பிரதட்சிணம் செய்தல்.
3. கோயிலில் நந்தவன அமைப்புப் பராமரிப்பிற்கு நிரந்தரமான உதவிகள் செய்தல்
4. ஏழைகளுக்குப் பால் சத்து மிகுந்த பால்கோவா, ரஸகுல்லா, திரட்டுப்பால் போன்றவற்றை அளித்தல்;
5. ஏழை கர்ப்பிணிகளுக்கு உணவு, டானிக், ஆடைகள் அளித்தல் ; இலவச பிரசவ உதவி/ சேவை.,
6. கர்ப்பம் தாங்கி நிற்கும் பசுவிற்கு இக்கோயிலில் மஞ்சள் நீராட்டி கோபூஜை செய்தல்.,
7. நிறைய குழந்தைகளைப் பெற்று இறையருளுடன் வாழும் 60/70/80 வயது நிறைந்த தம்பதிகளுக்குப் பாத பூஜை.
- போன்றவற்றை நிறைவேற்றிட ஸ்ரீகருடபகவானின் “சாயாகதிர்கள்” கருச்சிதைவுற்ற ஜீவ அணுக்களுக்குச் சாந்தமளித்துப் பிராயச்சித்த பலன்களை அளிக்கின்றன., ஆனால் இவற்றிற்குப் பிறகு எக்காரணம் கொண்டும் கருச்சிதைவு செய்து கொள்ளலாகாது. மாபெரும் மஹத்துவம் வாய்ந்த, சங்கு சக்ரதாரியாக ஸ்ரீகருடபகவான் எழுந்தருளியுள்ள, புத்ரஹத்தி தோஷத்திற்கும் கருச்சிதைவினால் விளையும் கொடிய வினைகளுக்கும் பிராயச்சித்தம் தரும் க்ஷேத்திரமாகவும் விளங்கும் இவ்வற்புதத் தலமே திருவெள்ளியங்குடி பெருமாள் ஆலயமாகும். கும்பகோணம் – அணைக்கரைப் பாதையில் சோழபுரம் அருகே உள்ள, நூற்றியெட்டு வைஷ்ணவப் பதிகளுள் ஒன்றாகச் சிறப்புப் பெற்ற உத்தமத் திருத்தலம்!

களிமண் பிள்ளையார்

களிமண்ணில் பிள்ளையார் – சில ஆன்மீக விளக்கங்கள்
வினா : விநாயக சதுர்த்திப் பண்டிகையில் வழிபடும் மண் பிள்ளையாரைக் கடலில் இடுவது (விஸர்ஜனம் செய்வது) ஏன்? விநாயக சதுர்த்தியின் களிமண் பிள்ளையாரை வீட்டில் நெடுநாள் வைத்திருத்தலாகாதா?

சற்குரு :- இறைசக்தியைப் பலவித பொருட்களில் பலவிதமாக ஆவாஹனம் செய்திடலாம். ஆவாஹனம் என்றால் தெய்வ சக்தியை எழச்செய்தல் என்று பொருள்.. எல்லோராலும், எவ்விதத்திலும் எப்பொருளிலும் தெய்வ சக்தியை ஆவாஹனம் செய்திட முடியுமா? முடியும். பரிபூரண நம்பிக்கையோடு, பக்தி சிரத்தையோடு சில முறை களைக் கடைபிடித்திடில்....
விநாயக சதுர்த்தியன்று களிமண் மற்றும் பல்வகை மணல் வகைகள், மாக்கல், கற்சிலை, சுண்ணாம்பு சேர்ந்த சுதை பீங்கான் மண், காகிதம் போன்ற பல பொருட்களால் விநாயகர் சிலை செய்யப்படுகின்றது. கோயிலில் கற்சிலையில் தெய்வீக சக்தியை ஊட்டுவதற்குக் கடினமான வேத, மந்திர, தாந்த்ரீக, யந்திர, தந்திர விதிமுறைகளுண்டு. இதன் பலனாய்த் தான் கோயிலிலுள்ள விக்ரஹத்தின் தெய்வீக சக்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஏன் பல கோடி யுகங்களுக்கு நீடிக்கின்றது. மேலும் முறையான நித்ய (ஆறுகட்டளை) பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள், ஹோம, வேள்வி, யாகங்கள், கும்பாபிஷேகங்களினால் அதன் சக்தி பல்கிப் பெருகுகின்றது.
களிமண்ணின் ஆன்மீக சக்திகள்
பாமர மக்களுக்கும் புரியும்படி, எளிய ஆவாஹன நியதியை அவர்களும் கடைபிடிக்கும் பொருட்டு விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற அற்புதமான பண்டிகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூமியின் அடியிலிருந்து பெறும் புதிய (இளஞ்சூடான) களிமண்ணிற்குப் பல அபூர்வமான  குணங்கள் உண்டு. நோய் தீர்க்கும் சக்தி, மந்திரங்களைக் கிரஹிக்கும் சக்தி, துர்சக்திகளை, துர்எண்ணங்களை ஈர்த்துப் பரவெளியைத் தூய்மையாக்கும் சக்தி, கண்திருஷ்டி கழிப்பு மிதித்தல், பிரேத கிலித் தோஷங்கள் போன்ற சூன்ய திருஷ்டிகளைத் தன்னுள் ஏற்று தோஷ நிவர்த்தி தரும் சக்தி, பல மூலிகை வேர்களின் திரண்ட வைத்ய சக்தி, மழைநீரி, நன்னீரின் புனிதசக்தி, பல உலோகப் பொருட்களின் ஆக்க சக்தி போன்ற அபூர்வமான தெய்வீக, மூலிகா , ஆன்மீக, மருத்துவ நிவாரண தோஷ நிவர்த்தி குணங்களை உடையதே களிமண். கேரளாவில் “நவரக்கிழி“ என்ற இயற்கை மண் மருத்துவ சிகிச்சை முறை இன்றும் அற்புத குணங்களை அளித்து வருகின்றது. களிமண்ணிலான விநாயகரைப் “பாமரர்களின் விக்ரஹம” என்றே கூறிடலாம்! கலியுகத்தில் தினமும் “ஆலய் தொழுகின்றம் சாலவும் நன்றான வழக்கம்” மறைந்து வருகின்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் பல விசேஷ தினங்களில் மட்டுமே கோயிலுக்குச் செல்கின்ற வழக்கம் நடைமுறைக்கு வந்து விட்டது. ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு இதயத் துடிப்பிலும், நாம் நம் மூதாதையராம் பித்ருக்களின் ஆசியாலும், இறைப் பெருங்கருணையாலும் தான் வாழ்கின்றோம். ஆனால் சிறிது கூட நன்றியில்லாமல் பித்ருக்களுக்கு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தர்ப்பண பூஜை! கோயிலுக்குச் செல்வதோ வாரம் அல்லது மாதமொருமுறை மட்டுமே! இது எவ்விதத்தில் நியாயமாகும்?.
....இல்லத்திலோ ஏனோ தானோவென்று நமக்குச் சௌகரியப்பட்ட நேரத்தில் மட்டும், அதுவும் அரைகுறையாக பூஜைகள் – இவற்றையெல்லாம் சற்றே ஆத்மவிசாரம் செய்து பாருங்கள். அசிரத்தையான, முறையற்றம் பக்தியில்லாத சுயநலம் மிகுந்த இறைவழிபாடுகளைச் சீர்படுத்தவும், பூஜைகளைக் கைவிட்டதற்கான ஓரளவு பிராயச்சித்தமாகவும், நம் இல்லம், சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் துர்சக்திகளை நீக்கி, புனிதமான, மாசற்ற சாந்தமான தெய்வீக சூழ்நிலையை உருவாக்கவுமே விநாயகர் சதுர்த்தி போன்ற சத்சங்கமாக, ஜாதி மதபேதமின்றி பலரும் கூட்டாகச் சேர்ந்து கடைபிடிக்க வேண்டிய பண்டிகைகள் அமைந்துள்ளன. களிமண்ணின் விசேஷமான சக்திகளில் சிலவற்றை அறிந்தோமல்லவா! பாமரர்களின் எளிய அறிவிற்கேற்ப களிமண் பிள்ளையாரை வடித்த , மஞ்சள், குங்குமம், திருநீறிட்டு, பூச்சூடி பூசித்து அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டிடலாம். இந்த எளிய ஆவாஹன முறைக்கு (களிமண் பிள்ளையாரை அலங்கரித்து  பூஜித்துக் கைகூப்பி வணங்கிடுகையில் உண்டாகும் தெய்வீக சக்திக்கு) “தருண ஆவாஹனம்” அல்லது “பலித ஆவாஹனம்” என்று பெயர், ஆனால் கோயிலில் உள்ள விக்ரஹத்தைக் கட்டிக் காத்து, நித்ய பூஜைகள் செய்து ஆராதிப்பது போல் இல்லத்தில் களிமண் பிள்ளையாரையும் வழிபடுவது கடினமல்லவா! மேலும் களிமண்ணில் ஆவாஹன, தெய்வீக சக்திகள் மூன்று முதல் பதினைந்து நாட்கள் வரையே நீடிக்கும். களிமண் விநாயகரின் தெய்வீக சக்தி குறைவதை அதில் வெடிப்பு, சுருக்கமும், பிறவும் ஏற்படுவதிலிருந்து அறியலாம். வெடிப்பு ஏற்பட்ட விநாயகரை உடனடியாக விஸர்ஜனம் செய்வதே உத்தமமானது. களிமண்ணாலாகிய பிள்ளையார் சிலையை நாம் பூஜிக்கையில். இவ்வழிபாடானது....
1. நம்முடைய ஆசைகள், விருப்பங்களில் முறையற்றவற்றை நீக்கி முறைப்படுத்தி, நியாயமானவற்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
2. இல்லத்தில், அக்கம்பக்கத்தில் உள்ள துர்சக்திகள், துர்எண்ணங்கள், முறையற்ற காம உணர்வுகள், வன்முறை சக்திகளை மண் விக்ரஹம் தன்னுள் ஈர்த்து இல்லறச் சூழ்நிலையைத் தூய்மையாக்குகிறது. களிமண்ணிற்கு இத்தகைய அபூர்வ சக்தி உண்டு. இதனால் நில பூஜையின் போது மண்ணின் தன்மையைக் கொண்டு நிலத்தின் இராசியையும் குணங்களையும் நிர்ணயிக்கின்றனர்.
3. குழந்தைகளின் மேல் படியும் கண்திருஷ்டிகள், பில்லி, சூன்ய, ஏவல் குற்றங்கள், கழிப்பினை, மிதிப்பதால் வரும் தோஷங்கள், ஆவித் துன்பங்கள், பிரேத (சவ) தோஷங்கள் போன்ற துன்பங்களையும் களிமண் விக்ரஹம் தன்னுள் ஈர்த்து நம்மைக் காக்கின்றது.
4. விநாயக சதுர்த்தியன்று நம் இல்லங்களில் மட்டுமன்றிப் பொது இடங்களிலும் பிள்ளையார் சிலை வைக்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டுச் செல்கையில் மேற்குறிப்பிட்ட “தருண ஆவாஹன சக்தி” அல்லது “பலித ஆவாஹன சக்தி” பல்கிப் பெருகுகின்றது. எனவேதான் கூட்டு வழிபாடான, சத்சங்க வழிபாட்டிற்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. எனவேதான் இந்து மதத்தில் மட்டுமல்லாது ஏனைய மதங்களிலும் கூட்டு வழிபாடு வலியுறுத்தப்பட்டிருப்பதை அறிந்திடலாம். கோயில் வழிபாட்டின் தத்துவமே... ஜாதி, இன பேதமின்றி கூட்டு வழிபாட்டினைக் கடைபிடிப்பது தானே!
5. இல்லத்தில் களிமண் விநாயகரைப் பூஜிப்பதற்குக் கூட இயலாத ஏழைக் குடும்பங்கள் உண்டல்லவா...! இவர்களுக்காகவே பொது இடங்களில் பெரிய மூர்த்திகளை எழுந்தருளச் செய்யும் அறவழிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
6. நம் வீட்டிலும் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து ஆண்டிற்கும் ஒரு முறையேனும்  கோயில் பூஜா முறைகளைப் போல் செய்து ஆனந்தம் அடையலாமன்றோ!
7. சமுதாயத்தில் வன்முறை, கலவரம், சண்டை சச்சரவுகள், திருட்டு, கொலை, கொள்ளை போன்றவையில்லாமல் சாந்தமான அமைதி நிலவ வேண்டுமென்றால் யாங்கணும் இறைவழிபாடு பரவுதல் வேண்டும். விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளில் இலட்சக்கணக்கான இல்லங்களில் விநாயக பூஜை நிகழ்கையில் அதன் ஒருமித்த சக்தி பல்கிப் பெருகி சமுதாயத்தில் சாந்தமான, அமைதியான வாழ்க்கை நடைபெற உதவுகிறது.
களிமண் பிள்ளையாரை நீரிலிடுதல்
கோயிலில் உள்ள விக்ரஹங்களும், மேற்கண்டவாறு துர்சக்திகளை ஈர்த்துப் பரவெளியைத் தூய்மையாக்குகின்றன. ஆனால் அவை சுயம்பு (தானாகத் தோன்றுவது) மூர்த்திகளாக விளங்குவதாலும், பலகோடி யுகங்களாகச் சித்தர்களாலும், மஹரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டு, அபிஷேக ஆராதனைகளாலும் நம் அறிவிற்கெட்டாத தெய்வீகத்தன்மை வாய்ந்தவை! களிமண் சிலைக்கு விக்ரத்திற்கீடான அபரிமித சக்திகளை எளிய முறையில் கொணர்தல் கடினம் . எனவே.........
1. மூன்று முதல் பதினைந்து நாட்களே களிமண் சிலையில் தெய்வீக சக்தி குடிகொள்ளுமாதலின் அதற்குள் அதனைக் கோயிற் குளம், புண்யநதி, கடல் (நீருள்ள) கிணறு போன்றவற்றில் விஸர்ஜனம் (நீரில் சேர்ப்பது) செய்திட வேண்டும். இதனால் அதன் தெய்வீக சக்தி பூமியில் சேர்ந்து பூமியடி நீர் வழியாகவும், நீர்த்துளி ஆவியாகி காற்று, மழை மூலமாகவும் மனிதன். முதல் தாவரம், புழு வரை கோடிக்கணக்கான ஜீவன்களுக்கும் சென்றடைகின்றது.
2. களிமண் சிலை தன்னுள் துர்சக்திகளையும் துர் எண்ணங்களையும் ஏற்றதல்லவா! களிமண்ணிற்கு நீர்ச்சத்தைத் தேக்கி வைக்கும் இயற்கை குணமுண்டும். இச்சக்திகள் மீண்டும் சிலையை விட்டு வெளிவருமுன் அதனை விஸர்ஜனம் செய்திட வேண்டும். புண்ய நதிகள் கடலில் சேர்வதால், புண்ய நதி தேவதைகள் கடல் தேவதைகள் மற்றும் சூர்ய, சந்திர ஏனைய கிரகங்கள் , நட்சத்திரங்கள் அனைத்தும் இத்தகைய துர்சக்திகளை ஆறு, கிணறு , குளம், கடல் இவற்றிலிருந்து பெற்றுத் தம்முள் ஏற்று நம்மைக் காக்கின்றனர். இதில் ஞாயிறு (சூர்ய) பகவானும், சந்திர பகவானும் (திங்கள்) துர்சக்திகளைத் தம்முள் ஏற்றுத் தியாகம் புரிந்து பூலோக ஜீவன்களைக் காக்கின்றனர். எனவே தான் ஞாயிறு அல்லது திங்களன்று களிமண் சிலையை விஸர்ஜனம் செய்வது உத்தமமானதாகும். சூர்யனும், சந்திரனுமே பல தெய்வ மூர்த்திகளின் இரு கண்களாக விளங்குகின்றனர். எனவேதான் களிமண்ணில் விநாயகரைச் செய்து கண்களை அமைத்திடும் போது “சூர்யா போற்றி, சந்திரா போற்றி” என்று துதித்திடுவர். எனவே சிலையின் கண்களாக விளங்கும் ஞாயிறு அல்லது திங்களில் விஸர்ஜனம் செய்வதே சிறப்புடையது.!

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam