ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
சப்த லிங்கங்கள் |
“ஏழு ஸ்வரங்களுக்கான ஏற்றமிகு லிங்கங்கள்”
இசைக் கலைஞர்களுக்கு ஓர் அரிய தெய்வீக பொக்கிஷம்! ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு லிங்க மூர்த்திகள், இசைச் செல்வமும், புகழும், ஐஸ்வர்யமும் தரும் சப்த லிங்கங்கள்!!
கர்ணேஸ்வரரின் கானம் கூட்டும் கர்ண விதாயினி
புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணத்தில் அதி அற்புதமான ஸ்ரீகோகர்ணேஸ்வரர் சிவாலயம் குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இரு சிவலிங்க மூர்த்திகளும் இரு அம்பிகை சந்நிதிகளும் உள்ள, மகிழமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த சிவத்தலம் இது. இங்கு ஸ்ரீசப்த லிங்கங்கள் என்ற அமைப்பில் ஒரு சிறுவட்டப் பாறையில் ஏழு சிறு லிங்கங்கள், ஸ்ரீசப்தலிங்க மூர்த்திகளாய், இசைச் செல்வத்தைப் பொழிகின்ற இறை மூர்த்திகளாய் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசப்த லிங்கங்கள் போன்ற, தரை மட்டத்திலிருந்து நன்கு உயர அமைந்து அருள்கின்ற மூர்த்திகள் மலைத் தலங்கள் போல் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். சப்த ஸ்வரங்களான ஏழு ஸ்வரங்களுக்கு உரித்தான தேவதைகள் பல உண்டு. பூலோகத்தில் தான் ஏழு ஸ்வரங்கள்! இசைக்குப் பெயர் பெற்ற கந்தர்வ லோகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்வரங்களைக் கொண்டு தேவாதி தேவர்கள் இசை மழை பொழிகின்றனர்! இத்தகைய ஏழு லிங்க மூர்த்திகளைக் காண்பதே மிகவும் அரிதாகும். எத்தனையோ வித்யா கலைகள் உண்டு. ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சரஸ்வதி தேவி அருள்பாலிக்கின்றாள். இவ்வகையில் இசைக் கலைக்கு உரித்தான சரஸ்வதி தேவியே ஸ்ரீகர்ணவிதாயினி சரஸ்வதி தேவி! எப்போதும் இறைவனின் திருச்செவிகள் குளிரப்பாடுகின்ற கலைவாணி என்பது இதன்பொருள், ஈஸ்வரனின் திருச்செவிகளில் இசையின் விதானமாக, இருப்பிடமாக, இசைப் பொக்கிஷமாக விளங்குகின்றவளே ஸ்ரீகர்ணவிதாயினி! இவ்வம்பிகை விசேஷ நாட்களில் குறிப்பாக நவராத்திரி தோறும், இன்னிசைப் பெருக்கெடுக்கும் தலங்களில் பிரசன்னமாகி அருள்பாலிக்கின்றாள்.
சப்தலிங்கங்கள் புதுக்கோட்டை
மகிழம்பூ மாலையை எப்போதும் ஆபரணமாகத் தரித்திருப்பதால் மகிழ மரம் விளங்குகின்ற தலங்களில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீகர்ணவிதாயினி சரஸ்வதிக்கு வகுளாபரணி என்ற திருப்பெயரும் உண்டு. மகிழமரம் உள்ள இறைத் தலங்களில், கல்வியறியாப் பாமரரும் கூட, மகிழத்தின் மகிமையால் நல்இசை பாடுவர். இவ்வாறாக ஸ்ரீசரஸ்வதி தேவியே ஈஸ்வரனை வழிபடுகின்ற தலங்களில்தான் சப்தலிங்க மூர்த்திகளும் எழுந்தருள்கின்றபடி தெய்வ சித்தம் கூடுகின்றது! அதாவது எங்கெல்லாம் ஸ்ரீசப்த (ஸ்வர) லிங்க மூர்த்திகள் இருக்கின்றார்களோ அங்கு ஸ்ரீகர்ண விதாயினி சரஸ்வதி, சப்த ரூபத்தில் பூமிக்கு மேல் ஆகாயத்தில் ஸ்வரயோகத்தில் சூட்சும ரீதியாய் அமர்ந்து லிங்க மூர்த்திகளைப் பூஜிக்கின்றாள். இறைத் திருவிளையாடலாய், சப்தலிங்கங்களை விட உயரமான இடத்தில், அடுத்த விதானத்தில் (அடுக்கில்), கோயிலின் விமான தளத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவி, பிரதிஷ்டையாகியிருப்பது ஆனந்தத்தைத் தருவதாகும்.
சிருஷ்டியின் போது முதலில் சப்தமே படைக்கப்பட்டது! ஈஸ்வரனின் உடுக்கை சப்தத்திலிருந்துதான் உயிர்கள் ஜனிக்கின்றன. சர்வேஸ்வரன் எத்தனையோ “தாண்டவ பாவனைகளில்“ நடனமாடுகையில் புதுப்புது ராகங்களும், தாவரங்களும், நுண்ணுயிர்களும், விலங்கினங்களும், நட்சத்திர மண்டலங்களும், கோள்களும், பிறக்கின்றன. சிருஷ்டியின் போது கட்டை விரலுக்கும் (சுக்கிர விரல்) ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஈஸ்வரன் தம் உடுக்கையை வைத்துப் பிடிப்பதின் ரகசியமென்ன? மூதாதையர்க்கான தர்ப்பணத்தில், கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பித்ரு மண்டல ரேகைப் பகுதிகளின் வழியே தான் தர்ப்பண நீர் வார்க்கப்படுகின்றது. எனவே கைகளின் பித்ருலோகப் பகுதியில் உடுக்கையை வைத்து இறைவன் சிருஷ்டியை, உடுக்கை ஒலி மூலம் பல லோகங்களுக்கும் ஜீவசக்தியைக் கூட்டுகின்றான். எனவே தாவரம், விலங்கு, மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கும் பித்ருக்கள் உண்டு! இவ்வாறாக பலவிதமான தாண்டவங்களில் , இறைவன் “ஆனந்த தாண்டவம்” ஆடுகையில்தான் இன்னிசை ஸ்வரங்கள் பிறக்கின்றன. இவை முதலில் பீஜாட்சரங்களாகத் தான் வெளிவருகின்றன. இவற்றை ஸ்ரீகர்ணவிதாயினி சரஸ்வதி தேவியே சப்தஸ்வரலிங்க மூர்த்திகளாக, நாம் காணும் வண்ணம் வடித்து வழிபடுகின்றாள். இவ்வாறு ஒரு தெய்வ மூர்த்தியே இன்னொரு தெய்வ மூர்த்தியை வழிபடுகின்றபோது அங்கு தோன்றுகின்ற மகத்தான தெய்வீகப் பெருஞ் சக்தியினை எவ்வாறு விண்டுரைக்க முடியும்? ஆறறிவிற்கும் அப்பாற்பட்ட அற்புத தத்துவமிது!
ஸ்ரீசப்தலிங்க மூர்த்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை! இசைச் செல்வத்தை, இன்னிசை பொக்கிஷத்தை, கான ஜோதியைப் பொழிகின்ற ஸப்த ஜோதி லிங்கங்கள்! அவற்றின் பேரருளை ஒரு சிறிதேனும் பெறுவதற்கான புனிதத் தன்மையை நாம் பெறவில்லையே! எனவே நமக்காக ஸ்ரீகர்ணவிதாயினி தேவியே ஸ்ரீசப்தஸ்வர லிங்க மூர்த்திகளைப் பூஜிக்கையில் அவற்றிலிருந்து எழுகின்ற ஆகர்ஷண கிரணங்கள் அவ்விடத்தை வியாபிக்கின்றன. இவற்றில் ஒரு சிறிது ஒளிச் சக்தியை நாம் பெற்றாலே/தரி சித்தால் போதும் நாம் இசைச் செல்வர்களாகி விடுவோம். எனவே திருக்கோகர்ணத்தில் இந்த சப்தலிங்க மூர்த்திகளின் திருச்சந்நிதியில்......
1. இசைப்பயிற்சியின் சரளி வரிசையைத் தொடங்குபவர்களும்
2. முதல் இசை அரங்கேற்றத்தை சப்தலிங்க மூர்த்திகளின் முன் நிகழ்த்துபவர்களும்
3. இசைத் துறை ஆராய்ச்சியாளர்களும், இசைப் பண் விற்பன்னர்களும் தம்முடைய ஆய்வுகளைப் படைத்து அர்ப்பணித்திடவும்.
4. இசைத் துறையில் செல்வம், புகழ், விருதுகள் பெற விழைவோர், இங்கு எவ்விதக் கட்டணமுமின்றி இறைப் பாடல்களை மட்டும் பாடி வந்திடவும்.
5. எத்தகைய பெரிய இசைஞானியாகவும், பாடகராகவும், வீணை, வயலின் போன்ற இசைக் கருவி வித்வானாகவும், வல்லுனர்களாகவும், விற்பன்னர்களாகவும் இருப்பினும் இங்கு வந்து தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பாடிட/வாசித்திட இதுவே இறைவன் அவர்கட்கு அளித்துள்ள இசைச் செல்வத்திற்கான ஆத்மார்த்தமான நன்றியெனவும் உணர்ந்திட,
6. இசையில் செழித்தோங்கி செல்வத்தில் புரண்டு தீய வழக்கங்கள், கர்வம், தீவினைகள், பண இழப்பு, கெட்ட சகவாசங்கள், கிரஹ சஞ்சார விளைவுகளினால் அனைத்தையும் இழந்து சோர்ந்திருப்போர் இங்கு தம்முடைய தீவினைகளுக்கு வருந்தி, ஸ்ரீசப்தலிங்க மூர்த்திகளிடம் பிராயசித்தம் வேண்டிச் சரணடைந்து, தீவினையின்பால் இனிச் செல்ல மாட்டேன் என சத்யப் பிரமாணம் செய்து, தம்மால் தீங்கிழைக்கப்பட்டவர்கட்குத் தக்க நிவாரணங்களையும் அளித்துத் திருந்தி வாழ்ந்திட, மேற்கண்டோர் இசைத் துறையில் உன்னதம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர். ஓவியக் கலை போல் இனிய குரலும், இசைத் துடிப்பும் இறைவன் அளிக்கும் வரங்கள்! எனவே இசைத் துறையில் ஈடுபட்டிருப்போர்க்கு இது ஓர் அற்புதமான தெய்வீக பொக்கிஷமாகும்.
சப்த லிங்க பூஜைகள்:-
கோமேயம், கறந்த பசும்பால், இனிய மலைத்தேன், கோரோசனைத் திரவியம், அதிமதுரமும் தேனும் கலந்த பஞ்சாமிர்தம் – போன்றவற்றால் சப்தமி திதியன்றும், ஸ்ரீசரஸ்வதிக்குரிய வளர்பிறை நவமி திதியிலும், ஸ்ரீசரஸ்வதியின் சற்குருவான ஸ்ரீஹயக்ரீவருக்குரிய புனர்பூச நட்சத்திரத்தன்றும், அபிஷேக ஆராதனைகள் செய்து இச்சந்நிதியில் இன்னிசை பாடி பலரையும் மகிழ்வித்து, மலைத்தேன், பஞ்சாமிர்தத்தை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமளித்து வர இசைத் துறையில் உலகமே போற்றுமளவு கீர்த்தியும், குறைவற்ற செல்வமும் பெற்றிடலாம். புதுக்கோட்டை திருக்கோகர்ண ஆலய மஹிமைகளைச் சித்புருஷர்களின் கிரந்த நாடிகள் மிகச் சிறப்பாகப் போற்றி விளக்குகின்றன. இவற்றில் ஸ்ரீசப்த லிங்கங்களைப் பற்றி மட்டுமே., அதிலும் ஓரணுத் துளியினும் சிறிதானதையே சற்குரு அருளால், ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியுள்ள வண்ணம் இங்கு அளித்துள்ளோம்.
வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் |
எவ்வளவு நெய்க்காப்பு, அபிஷேகம், செய்தாலும் ஈ, எறும்பு அண்டாத அதிசய நந்தீஸ்வர்ர்! நந்திக்கு இட்ட நெய்ப்பிரசாதம் சேர்ந்த நெய்க் கிணற்றிலும் ஈ, எறும்பு வருவதில்லை...!! நெய்தாங்கி உய்வு தரும் தெய்வ மூர்த்தி!!!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் (நெய்காரப்பட்டி) உள்ள சிவன் கோயிலில் மிகவும் அற்புதமான ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி அருள்பாலிக்கின்றார். காணுதற்கரிய கவின்மிகு நந்தி மூர்த்தம்! எவ்வளவு நெய்க் காப்பிட்டாலும், நெய்யை அபிஷேகித்தாலும் ஒரு ஈ, எறும்பு கூட மொய்ப்பதில்லை. பிரசாத நெய்யை, நெய்க்கிணறு ஒன்றில் ஊற்றி வைத்து கிட்டத்தட்ட நிரம்பும் நன்னிலையிலிருக்கின்ற அதில் எவ்வித நாற்றமும் கூட எழுவதில்லை. கலியுகத்தில் என்னே நந்தீஸ்வரரின் திருகூத்து! நெய்தாங்கி நம் தீய கர்மவினைகளை உருக்குகின்ற தெய்வ மூர்த்தியே வேந்தன்பட்டி நந்தீஸ்வரர்! சர்வேஸ்வரனின் வாஹனமாகத் திகழும் நந்தீஸ்வரர். சாட்சாத் பரமேஸ்வரரின் திருமேனியைத் தாங்கும் பாக்யம் பெற்றுள்ளாரெனில் நந்தியெம் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தாலே போதும், சர்வ வியாபியான சிவபெருமானின் பேரருளை எளிதில் பெற்றிடலாமன்றோ!
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி
வேந்தன்பட்டி
பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தீஸ்வர பூஜையை விடாது மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான பிரதோஷ கால பூஜைகளைச் சற்றும் நெறி வழுவாது கடைபிடித்து உத்தம இறைநிலைகளை அடைந்தோர் பலருண்டு! பிரதோஷ வழிபாடு, பிறவிகளை மாய்க்கும் ஹர பூஜை! எத்தனையோ மஹரிஷியரும் யோகியரும் இறைவனின் நடனக் (தாண்டவ) கோலத்தைக் கண்டு தரிசித்திட கடும் தியான, யோக முறைகளை மேற்கொண்டு ஏங்கி நிற்க, தம் திருகொம்புகளின் இடையே இறைவனே முன்வந்து “திரயோதச ஜோதி தாண்டவ நடனத்தை” ஆடும் பாக்யத்தை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமான் பெற்றுள்ளாரெனில் என்னே அவர் மஹிமை! பசு நெய் தெய்வீக சக்தி நிறைந்தது! சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய திரிமூர்த்திகளோடு ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதியுடன் கோடிக்கணக்கான தேவாதி தேவர்களும், தெய்வ மூர்த்திகளும் குடிகொண்டுள்ள பசுவிடமிருந்து பெறுகின்ற அமிர்தமயமான பால், அதிலிருந்து திரளும் பசு நெய்யானது தெய்வ கடாட்சத்தின் திரண்ட, திரட்டுப் பால் அன்றோ!
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும்/ காப்பிற்கும் விதவிதமான பலன்கள் உண்டு. தெய்வாம்சமான பசுவின் சரீரத் திரட்சியாகப் பசுநெய் விளங்குவதால் அது பல அபூர்வமான தெய்வீக சக்திகளைக் கொண்டுள்ளது. மற்ற அபிஷேகத் திரவியங்களை விடப் பல்லாயிரம் மடங்கு வேத மந்திர சக்திகளை கிரஹித்து அவற்றை “ஜீவன சுகந்த“ கிரந்தங்களாக மாற்றி, வழிபடுவோர்க்கு எளிதில் கிட்டும்படி செய்கின்றது. மேலும் அனைத்து தேவமூர்த்திகளும், மஹரிஷிகளும் யோகியரும் பல்வேறு விண்ணுலகங்களிலிருந்து பிரதோஷ காலத்தில் பூலோகத்திற்கு ஓடோடி வருகின்றனர். அத்தகைய புண்ணிய பூமியில் தான், பாரதத் திருமண்ணில் தான், அதிலும் கோயில்கள் நிறைந்திருக்கும் புனிதத் தமிழ்நாட்டில் தான் பிரதோஷ காலமூர்த்திகள் லட்சலட்சமாய் நிறைந்து அருள்பாலிக்கின்றனர்!
உலக நன்மைக்காகத் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகின்றது. பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தீஸ்வரரின் திருக்கொம்புகளினிடையே ஒவ்வொரு சிவாலயத்திலும் இன்றும் சிவபெருமான் நடனமாடி மகிழ்விக்கின்றார். ஏன், ஏதற்கு? பிறன்மனை நாடுதல், முறையற்ற காமச் செய்கைகள், கட்டிய கணவனுக்கு / மனைவிக்கு துரோகம் இழைத்தல், பிறரை வஞ்சித்துச் சொத்துக்களை அபகரித்தல், கோயில் நிலங்களை / இடங்களை ஆக்கிரமித்தல் / குறைந்த வாடகையில் அதர்மமான முறையில் கடைபோடுதல்/வசித்தல், லஞ்சம் பெறுதல், வாங்கும் சம்பளத்திற்கு நன்கு உழைக்காது நேரங்கழித்தல், மது, புகை, குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டில் செல்வத்தை வீணாக்குதல், மூதாதையர்களுக்கான தர்ப்பண, படையல் வழிபாடுகளைச் செய்யாது விடுதல், வியாபாரத்தில் கலப்படம், கூட்டாளிகளை ஏமாற்றுதல் போன்ற தீவினைகள்யாவும் ஆலகால விஷத்தை விடக் கொடியவையாகும். எனவே பிரதோஷ காலத்தில் மனந்திருந்தி வாழப் பிரார்த்தித்து நன்முறையில் வாழ்வோமாயின் ஆலகால விஷம் போல், நம்முடைய தீவினைகளையும் இறைவனே ஏற்று அருள்பாலிக்கின்றான். எனவே தான் பல பெரும் பாவச சுமைகளைப் பிரதோஷ வழிபாட்டில் தான் தீர்க்க முடியும் என்பதால் பிரதோஷ பூஜைக்கு மகத்துவம் அதிகம்.
சிலாக் கல்லின் தெய்வீக ரகசியங்கள்
எல்லாக் கற்களும் தெய்வ சிலாக் கற்களாக அமைவதில்லை. அதற்கென்றே வரம் பெற்று வந்த தெய்வீகக் கற்கள் உண்டு! செஞ்சிப் பகுதியிலுள்ள விநோதமான வடிவுகளை உடைய கற்கள் மிகவும் தெய்வீக சக்தியுடையவை. முப்பதுக்கும் மேற்பட்ட அற்புதமான தெய்வீக மலைகள் அங்கு உள்ளன. இன்றும் பல சித்புருஷர்களும், யோகியரும், மஹரிஷிகளும் தவம் புரியும் அதியற்புத மலைகளே செஞ்சி மலைகள்! ஜோதி ரூபமாய்த் திருஅண்ணாமலையில் காட்சி தந்த சர்வேஸ்வரன், திருஅண்ணாமலையானாய், விண்ணுக்கும் மண்ணுக்குள்ளுமாய் உயர்ந்து, விரிந்து, பரந்து, விஸ்வரூபமெடுத்து அனைவரையும் ஆனந்தப்படுத்தித் தாமே பேரின்பப் பெருக்கில் கைகளைத் தட்டிப் பரவசமடைந்திட அப்போது ஈஸ்வரனின் திருக்கரங்களிலிருந்து சிதறிய மண் துகள்களே செஞ்சி மலைகளாயின! எத்தனையோ கோடி யுகங்களுக்குச் சித்புருஷர்களும், மஹரிஷிகளும் அமர்ந்து யோக/ஞானத் தவம் பூண்ட தெய்வீகக் கற்களில்தான் இறைவன் குடிகொள்ள விரும்புகின்றான். ஏனெனில் இறை ஜோதியைத் தாங்கும் வல்லமையுடைய அவைதாம் புனிதமான கற்கள்! அத்தகைய தபோதனர்களின் உடலில் இறைவனே ஆவாஹனமாகி அருளொளிக் காட்சி தந்து, அரவணைப்பதால், இறைத் திருவிளையாடலாக எங்கெங்கிருந்தோ, எவருடைய சேவை மூலமாக அத்தகைய தெய்வ மூர்த்திகள் வெவேறு விதமான விசேஷமான முறைகளில் அக்கற்களில் இறைப்பெருஞ்சோதியாய் உற்பவிக்கின்றனர்.
இன்றைக்கும் செஞ்சிமலை, நார்த்தா மலை (புதுக்கோட்டை), பர்வத மலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி, பச்சைமலை, கொல்லிமலை போன்ற மலைகளில் இறைப் பெருஞ்சக்தி நிறைந்த மலைக்கற்கள் பல உண்டு. இவைகளில் ஏதேனுமொன்றில் சில நொடித் துளிகள் அமர்ந்தாலே போதும் அதிஅற்புத ஜோதிப் பிரகாச அனுபவம் கிடைக்கும்!
இவ்வகையில் வேந்தன்பட்டியில் உள்ள ஸ்ரீநந்தீஸ்வரருடைய திருஉருவமானது பிரகாச ஜோதிக்கல் வகையைச் சார்ந்ததாகும். அதாவது எத்தனையோ கோடி விண்ணுலக லோகங்களிலிருந்து சித்புருஷர்களும், மகரிஷிகளும், யோகியரும், ஞானியரும், ஜோதி ரூபத்தில் நுழைகின்ற பிலாகாச துவாரமாக இந்நந்தீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ள சூட்சும ஒளிக்கூடு பொருந்தியுள்ளது. இறைவனைத் தாங்குகின்ற இத்திருமேனியினுள், ஞானப்பிரகாசமாக ஒளிர்கின்ற பரஞ்சோதியைக் கண்டு மகிழ கோடானுகோடி சித்தர்கள் ஓடோடி வருகின்றனர். ஏனெனில் பசு நெய்யால் இறைப் பூரணம் கொண்டுள்ள இச்சிலா ரூபம் மிகவும் ஜோதிப்பிரகாச சக்தி வாய்ந்ததாகும். ரிஷப லோக மகரிஷிகள் எப்போதும் பூஜிக்கின்ற திருத்தலமிது! இப்புனித பூமியில் பசுக்களின் அதிபதியான காமதேனு, காமதேனுவின் புத்திரியான பட்டி தேவியும் பல கோடி ஆண்டுகள் தவம் புரிந்து அருள்சுரக்கும் புண்ணியத்தலம், சுவாமிக்குப் பசுநெய் காப்பிடும்போது, பசு நெய்யின் மகத்துவமாக கலியுக மக்களின் முறையான பிரார்த்தனைகளைப் பிலாகாச சூட்சும துவாரங்கள் மூலமாக உட்செலுத்தி, அவற்றைத் திருநந்தியின் உள்ளே ஜோதிச் சுழல்களில் படிந்திடச் செய்து பிரார்த்தனா பலித கிரணங்களாக மீண்டும் அவை வெளிவருகின்றன. இவ்வாறு பிரத்யட்ச மூர்த்தியாக ஸ்ரீநந்தீஸ்வரர் அருள்பாலிக்கும். மிகவும் அற்புதமான இறைத்தலம் இதுவே. இறைவனுக்கு முன் விதவிதமான ரூபங்களில் நந்தீஸ்வரரைப் பார்த்திருப்பீர்க. இறைவனை நோக்கியும், எதிர்புறம் திரும்பியும் (சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசில்லாமணீசுவரர்) பக்கவாட்டிலும், பின்புறமாகவும் பலவிதமான ரூபங்கள் உண்டு. இறைவனுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு வாகனமும் அமைகின்றது. இதில் வேந்தன்பட்டி நந்தீஸ்வரரின் இறைப்பணி என்னவோ?
கேட்டையும் சிறந்த நட்சத்திரமே |
அதிசயமாக மூன்று தினங்களில் கேட்டை நட்சத்திரம் கூடி வருகின்ற அபூர்வம் ! கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷமான வழிபாடுகள்.!
கேட்டை நட்சத்திரத்தைக் கண்டு ஒதுக்குதலோ, அஞ்சுதலோ, வெறுத்தலோ வேண்டாம்!
விருச்சிக ராசியைச் சேர்ந்த நட்சத்திரங்களுள் நான்காம் பாத விசாகமும், அனுஷமும், கேட்டையும் அடங்குகின்றன. கேட்டை நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை இந்திர பகவான் ஆவதோடு இதுவே சிறந்த கல்வி ஞானத்தை தரவல்ல புதன் கிரகத்திற்குரிய நட்சத்திரமும் ஆகும். “கேட்டை மூட்டை, செவ்வாய் வெறுவாய்”, என்ற மொழி வழக்கில் கேட்டை நட்சத்திரத்தைத் தற்காலத்தில் அறியாமையினால் நல்ல நட்சத்திரம் அல்ல என்று எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறு. நட்சத்திரங்களில் உயர்வு, தாழ்வே கிடையாது! கேட்டையைப் பற்றிய தவறான அபிப்ராயத்தினால்தான் கேட்டை நட்சத்திரத்தை உடைய பெண்களுக்கு (பலரும் இதனை ஒதுக்குவதால்) திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கின்றது.
எந்த நட்சத்திரமும் கெடுதல் பயப்பது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு தேவதா மூர்த்தியாகும். சென்னை திருஓற்றியூரில் அசுவினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன. வருடந்தோறும் அவரவருக்கான பிறந்த நட்சத்திரத்தன்று அந்தந்த நட்சத்திர லிங்கத்திற்கு இங்கு அபிஷேக ஆராதனைகளுடன் தான தர்மங்கள் செய்து நட்சத்திர தேவதா ப்ரீதியைப் பெற வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரிலும் ஒரு லிங்கமே வழிபாட்டில் உள்ளதென்றால் எவ்வாறு ஒரு நட்சத்திரம் கெடுதல்களைத் தர முடியும்? ஒவ்வொரு நட்சத்திரத்திலும் செய்ய வேண்டிய நற்காரியங்கள் பல உள்ளன. உதாரணமாக பும்சவனம் எனப்படும் ஏழாவது மாத (கர்ப்பிணியான) வைபவத்திற்கு ரோகிணி நட்சத்திரமும், நோயாளிகள் மருந்து உண்பதற்கு சித்திரை நட்சத்திரமும், சாந்தி முகூர்த்தம் எனப்படும் திருமணத் தம்பதிகள் தெய்வீக அன்புடன் இணைவதற்கு அசுவினி நட்சத்திரமும், பிரயாணம், தலயாத்திரைக்கு மூல நட்சத்திரமும் சிறப்புடையதாகும். இதேபோல் கேட்டை நட்சத்திரமானது தான தர்மங்கள் செய்வதற்கு மிகச் சிறப்பான நட்சத்திரமாகும்.
‘இரட்டை கேட்டை’ என்பது சித்தர்களின் பரிபாஷை, அதாவது கேட்டை நட்சத்திரத்தில் செய்யப்படுகின்ற அன்னதானம், ஆடைதானம் போன்ற நற்காரியங்களுக்கு இரண்டு மடங்கு புண்ணிய சக்தி கிட்டும். மேலும் ஆழ்கிணறு (borewell), கிணறு, குளம் ஆகியவை தோண்டுவதற்கும் கத்தி, அரிவாள்மனை போன்ற ஆயுதங்களை வாங்குவதற்கும், பசு, காளை, பறவைகள், கோழி, நாய், குதிரை போன்ற விலங்குகளை வாங்குவதற்கும் கேட்டை நட்சத்திரம் உத்தமமானதாகும். டைபாய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை, குளிர்ஜுரம் போன்ற வியாதிகளிலிருந்து நிவாரணம் பெற்ற நோயாளிகளின் முதல் குளியலுக்கு ஏற்ற நாள் கேட்டை நட்சத்திர தினமாகும்.
மூன்று நாட்களுக்குக் கேட்டை!
ஏற்கனவே கூறியுள்ளபடி கேட்டை நட்சத்திரத்தைச் சிறப்பானதல்ல என்று பலரும் கொண்டுள்ள தவறான கருத்தினால் இன்றைக்குப் பல குடும்பங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் பலவிதமான துன்பங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றார்கள். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையும் (inferiority Complex), வாழ்வில் சலிப்பும் (frustrations) எரிச்சலான உணர்வுகளும் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுக்கு ஓர் அற்புதமான விசேஷ தினமாக நவம்பர் மாதத்தில் 2, 3, 4 ஆகிய மூன்று தினங்கள் நன்கு அமைகின்றன. அதாவது கேட்டை நட்சத்திரமே மூன்று நாட்களுக்கு விரவி அருள் பாலிக்கின்றது. 2.11.1997 (ஞாயிறு) விடியற்காலை 5.48லிருந்தும் 3.11.1997 முழுவதுமாகவும் 4.11.1997 அன்று காலை 6.38 வரையிலும் திரிதினமாக அதாவது மூன்று நாட்களுக்கும் கேட்டை நட்சத்திரம் பரவி நின்று வருவதாக அமைவது மிகவும் அபூர்வமானதாகும். இதிலும் 3.11.1997 அன்று 24 மணி நேரமும் கேட்டை நட்சத்திர சக்தி அபரிமிதமானதாக இருக்கின்றது. எனவே கேட்டை நட்சத்திரக்காரர்கள், மிகவும் அதிசயமாக அரிதாக வருகின்ற இம்மூன்று தினங்களிலும் சித்புருஷர்களின் நட்சத்திர நிகண்டு கிரந்தங்களில் உள்ளபடி சில எளிய விசேஷமான வழிபாடுகளைச் செய்து அற்புதமான பலன்களைப் பெற வேண்டுகிறோம்!
ஆவுடையார் கோயிலில் அற்புத நட்சத்திரச் சக்கரம்!
ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகர் சந்நிதியின் நிலைவாயிற்படி மேல்புறம் 27 நட்சத்திரங்களுக்கான அபூர்வமான நட்சத்திர சக்கர அமைப்புகள் காணப்படுகின்றன. அந்தந்த நட்சத்திரத்தினர் குறிப்பாக கேட்டை, ஆயில்யம், நட்சத்திரத்திற்குரியோர் தங்களுக்குரிய நட்சத்திர அமைப்பை வரைந்து தினமும் பூஜித்து வருதல் வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் கேட்டை நட்சத்திரத்தன்று கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 முறை ஓதி அகத்திக் கீரை கலந்த உணவைப் படைத்து அன்னதானமாக அளித்திட வேண்டும்.
கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய துதி
“பாரதி பார்கவி மந்திர மய கோபுர
கேட்டை பிரதாயினி சகாயக்ருபே!”
அவரவர் நட்சத்திர வடிவைக் கண்ணாடிப் படமாகவோ அல்லது செப்பு, வெள்ளித் தகட்டிலோ பொறித்து வைத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் சிறுவயதிலேயே தங்கள் குழந்தைகளுக்காக இப்பூஜைகளைச் செய்து வருவார்களேயானால் அவர்களுடைய திருமணப் பருவத்தில் திருமணம் நன்கு நடைபெற இப்பூஜா சக்தி நிச்சயமாகப் பெரிதும் உதவும். இதேபோல் ஏனைய நட்சத்திரக்காரர்களும், ஆவுடையார் கோயிலில் உள்ள இந்த நட்சத்திரச் சக்கரங்களை முறையாக வழிபடுவதால் நல்ல திருமண வாழ்வு, சீரிய ஒழுக்கம், மாணவர்களுக்கு உயர் கல்வி போன்றவை நன்முறையில் அமையும்.
1. பல வருடங்களாகத் தடங்கல்களாகி வரும் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகி விரைவில் மாங்கல்ய பாக்யம் கிட்டும்.
2. கிணறு, ஆழ்கிணறு போன்றவற்றில் ஆயிரக் கணக்காகப் பணத்தைச் செலவழித்தும் சரியாக நீர் ஊறாது விவசாயம், தொழிற்சாலை, இல்லறத்தில் பல பிரச்னைகளால் அவதியுறுவோர்களுக்கு நல்வழி கிட்டும்.
3. கோழி, நாய் வளர்ப்பு போன்ற விலங்கு பண்ணைத் தொழிலில் உள்ளோர்க்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
4. “தனக்குக் கேட்டை நட்சத்திரத்தில் பெண் பிறந்து விட்டாளே” – என்று புலம்பி அப்பெண்ணிற்குத் திருமணமாகும் வரை நெஞ்சில் பெரும் சுமையைச் சுமந்து வாழ்கின்ற தாய்மார்கள் ஏராளம். இத்தகையோர் தங்கள் பெண்ணின் நல்வாழ்விற்காகவும்/ கேட்டையை ஒதுக்குவதால் பல துன்பங்களுக்கு ஆளாகி உள்ளோருக்காகவும், இங்கு அளிக்கப்பட்டுள்ள பூஜைகளைக் கடைபிடித்திடில் மனக்கவலை நீங்கி இறையருளால் சாந்தமும் மனநிம்மதியும் கிட்டும்.
5. கேன்டீன் (Canteen), ஹோட்டல், சமையல், இவைகளில் பணிபுரிவோர், கத்தி, அரிவாள்மனை போன்ற கூரிய ஆயுதங்களினாலும் அடுப்புத் தீயினாலும் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இப்பூஜை உதவுகிறது.
6. நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்ப்போர் இம்மூன்று தினங்களிலும் பல வகையான பிராணிகளுக்கு உணவளித்திட சந்ததி விருத்தி, பிரிந்த உறவு இணைதல் போன்ற நற்செயல்கள் கைகூடும் எதிர்பாராத முறையில் உத்தமப் பெரியோர்களின் ஆசி கிட்டும். ஆயில்யம், கேட்டை போன்ற நட்சத்திரங்களைப் பற்றிய தேவையற்ற அச்சம் காரணமாக நிறைய பாதிப்புகள் இக்குறித்த நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படுகின்றது அல்லவா? இவர்களும் இவர்கள் சார்பாகவும், மாதந்தோறும் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் சிவாலயத்தில் உள்ள (கேட்டை/ஆயில்யம் நட்சத்திர நாட்களில்) கேட்டை லிங்க மூர்த்திக்கு/ஆயில்ய லிங்க மூர்த்திக்குத் தகுந்த வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். கேட்டையின் அதிபதி இந்திர பகவான் ஆதலின் கேட்டை நட்சத்திரத்தன்று ஏழைகளுக்கு பட்டு, நார்ப்பட்டு, பளபளப்பான அலங்கார ஆடைகள், பாதாம் முந்திரி கலந்த உயர்ரக உணவுகளை தானமாக அளித்துவர இவர்களுக்குச் சிறப்பான வாழ்வு, திருமண வாழ்வு அமையும்.
“கேட்டையில், கடுவாயில் புகுந்த தவளையும் குதித்து வெளிவந்து பாடுமே” – என்பது சித்தர்களுடைய கேட்டை நட்சத்திர பரிபாஷைப் பாடல். இதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணமாக எத்தனையோ அடி ஆழத்திற்குத் தோண்டியும் நீர் வராதிருக்க, கேட்டை அன்று தோண்டப்படும் கிணறிலோ, ஆழ்கிணறிலோ, பள்ளத்தில் பாம்பின் வாயில் அகப்பட்டிருக்கும் தவளை கூட கேட்டை நட்சத்திர மகிமையால் பெருக்கெடுக்கும் நீரின் மேல் வந்து குதித்து ஆடும் என்பது பொருள்! கேட்டை நட்சத்திரத்தன்று செய்யப்படும் தான தர்மங்களால் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வை முடிக்க எண்ணும் ஏழைக்கு தர்மசக்தி சென்றடைந்து அவரை சாவிலிருந்து மீட்கும் என்பது மற்றொரு பொருள், தோஷங்களில் சிக்குண்ட கன்னிப்பெண் நன்னிலைக்கு வருவாள் என்பது பிறிதொரு பொருள்!
எல்லாம் இரண்டாக இருக்கட்டும்!
கேட்டை நட்சத்திரத்தன்று துணிமணிகள், பழம் என்று எதை வாங்கினாலும் இரண்டாகவே வாங்கிட வேண்டும். ஒரு சாதாரணப் பென்சிலாக இருந்தாலும் கூட இரண்டாக வாங்கி ஒன்றைத் தானமாக அளித்திட இதன் பலன் இரண்டு மடங்காகும். இரண்டு பெரியவர்களுக்குப் பாதபூஜை, இரண்டு கோயில் தரிசனங்கள் என்று என்று எல்லாமே இன்று இரண்டாக இருக்கட்டும். இது பன்மடங்காய் விருத்தியாவதோடு ஒன்றில் குறை ஏற்படினும் மற்றொன்று அதை நிவர்த்தி செய்துவிடும்.
இதனையே சித்தர்களுடைய பரிபாஷையில்
கேட்டை அன்று
இரண்டில் ஒன்று
நன்றாய் முடியும்
இரண்டும் நாலாய்
விரிந்தே பெருகும் – என்று கூறுகின்றார்கள்..
வரும் நவம்பர் 2, 3, 4 தேதிகளில் செய்ய வேண்டிய பூஜைகளாவன..... 2.11.1997 – குருஹோரை நேரங்கள் – விடியற்காலை 4.00 முதல் 5.00 வரை காலை 11.00 முதல் 12.00 வரை ; மாலை 6.00 முதல் 7.00 வரை ; நள்ளிரவு 1.00 முதல் 2.00 வரை
ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி
லால்குடி
ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
திருப்பாற்றுரை
3.11.1997 புதன், சுக்கிர ஹோரை நேரங்கள் :- விடியற்காலை 4.00 முதல் 5.00 வரை சுக்கிர ஹோரை , மதியம் 11.00 முதல் 12.00 வரை சுக்கிர ஹோரை ; விடியற்காலை 5.00 முதல் 6.00 வரை புதன் ஹோரை ; மதியம் 12.00 முதல் 1.00 வரை புதன் ஹோரை மாலை 6.00 முதல் 7.00 வரை சுக்கிர ஹோரை ; இரவு 7.00 முதல் 8.00 வரை புதன் ஹோரை
4.11.1997 : செவ்வாய் ஹோரை நேரங்கள் :- காலை 6.00 முதல் 6.38 வரை (கேட்டை நட்சத்திரம்)
குருஹோரை நேரத்தில் சாதி வித்தியாசமின்றி 70, 80 வயது நிறைந்த வயதான தம்பதிகளுக்குப் பாதபூஜை செய்தல் வேண்டும். ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் சின்மய முத்திரையைத் தாங்கியுள்ள வலது கை விரல்களுக்குத் தாமே அரைத்த சந்தனத்தால் கரக் காப்பு இடுதல் வேண்டும். ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள சனகாதி முனிவர்களுக்கு எண்ணெய்க் காப்பு இட வேண்டும். ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம், தாயுமானவரின் சற்குரு வணக்கம் பாடல்களை ஓதி வணங்குதல் வேண்டும். இன்று வீணையேந்திய தட்சிணாமூர்த்தியின் தரிசனம் மிகவும் விசேஷமானது (திருபாற்றுரை, லால்குடி) மேதா தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். மஞ்சள் நிற உணவு வகைகள், ஆடைகளை தானம் செய்தல் சிறப்புடையது. புதன் ஹோரை நேரத்தில் ஸ்ரீதத்தாத்ரேயரைப் போற்றித் துதித்திட வேண்டும் ஸ்ரீதத்தாத்ரேயரின் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத் துதிகள் சிறப்புடையவை. பொதுவாக தத்தாத்ரேயரின் மூர்த்தம் காண்பதற்கும் கிடைப்பதற்கும் அரிதாகும். நாமக்கல் சேந்தமங்கலத்திலுள்ள தத்தாத்ரேயர் கோயில் அல்லது பிரம்மா, சிவன், விஷ்ணு மூவரும் எழுந்தருளியுள்ள கோயில்களில் வழிபட வேண்டும். (திருச்சி உத்தமர் கோயில், கொடுமுடி) அல்லது தஞ்சை அருகே கண்டியூரில் உள்ளது போல அருகருகே உள்ள பிரம்மா, சிவன், விஷ்ணு ஆலயங்களைத் தரிசித்திட வேண்டும். சிவாலயங்களில் கோஷ்ட மூர்த்திகளாய் உள்ள பிரம்மா, விஷ்ணுவையும், சிவனுடன் மூவரையும் வழிபட்டிடலாம். இன்றும் பால் சாதம், வெண்ணிற ஆடை தானம், செய்தல் சிறப்பான பலன்களைத் தரும்.
4.11.1997 இன்று ஆறுமுகமும் இரண்டு கரங்களுமுடைய சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து சுப்ரமணியர் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம், கந்தரனுபூதி, கந்த சஷ்டிக் கவசம் போன்ற துதிப்பாடல்களை ஓதுதல் வேண்டும். செவ்வாய் ஹோரை நேரத்தில் முருகப் பெருமானின் வழிபாடு சிறப்புடையது! ஆட்டுப்பால் அபிஷேகம் அரிய பலன்களைத் தரும். இன்று திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள அபூர்வமான சுப்ரமண்ய சுவாமியைத் தரிசித்தலும் சிறப்புடையதாகும். இன்று செவ்வாய்க் கிழமையாதலின் செவ்வாய் கிரஹத்தின் அதி தேவதையான ஸ்ரீமுருகனுக்கு சிகப்பு நிற வஸ்திரங்களை சார்த்தித் தானமளித்திட வேண்டும்.
கிரீட சாந்தி அர்க்ய பூஜை
திருமணத் தடங்கல்கள் தீர..... திருமண தோஷங்கள் நிவர்த்தியாக....
பொதுவாக, மூதாதையர்களின் பித்ரு வழிபாட்டை நாம் மறந்ததும் திருமணத் தடங்கல்களுக்கு ஒரு காரணமாக ஆகிவிடுகின்றது. நாம் குழந்தை குட்டிகளுடன் எத்தனையோ இடர்களுக்கு இடையிலும் மூன்று வேளை நன்றாக உண்டு உறங்கி, வாழக்காரணமே நம்முடைய மூதாதையர்களின் புண்ய சக்தியே! அவர்களுடைய புனித ரத்தத்தை வம்சாவளியாக உடலில் தாங்கி நிற்கும் நாம் அதற்கு நன்றியாக பித்ரு தர்ப்பணத்தையோ, நகரத்தார் எனப்படும் சிவநெறிச் செல்வர்கள் புனிதமான முறையில் நடத்தும் “மூத்தார் படையல்” முறையில் அன்னதான வழிபாட்டையோ நடத்துதல்தானே சிறப்புடையது! பலரும் ஒன்று கூடி கூட்டாகச் சமைத்து உண்டு, பிறருக்கும் அன்னதானமளித்தலே படையல் ஆகும்!
சகார கிரீடம்
எனவே 3.11.1997 அன்று 60 நாழிகையும் (24 மணி நேரம்) கேட்டை நட்சத்திர தேவி பரிபூர்ண அருளைப் பொழிகின்ற நாளில் அன்னதானத்துடன் கிரீட சாந்தி என்னும் விசேஷமான அர்க்யத்தை அளித்திட வேண்டும். இது மிகவும், எளிமையானது! பெண்களும் கூட அளித்திடலாம். ஸ்ரீபரத்வாஜ மாமுனி இதனைக் கடைபிடித்துப் பூலோகத்தில் இதன் மஹிமையைப் பரப்பி வந்தார். தர்ப்பைப் புல்லைக் கொண்டு ‘S’ வடிவத்தில் அமைத்து SSSSS என்றவாறாக ஒரு கிரீடத்தைத் தலையில் அணியும் வண்ணம் செய்து கொள்க! அதாவது தர்பைகளை S வடிவில் வளைத்து வட்டமாகக் கோர்த்து அட்டையிலாவது கிரீடம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். படத்தைப் பார்க்கவும்! S என்பது ஆங்கில எழுத்தின் வடிவு மட்டுமல்ல! சகாரக் குறி என்று இதற்குப் பெயர். கோயில் தூண்களில் காணப்படும் ஐசிங் (Iching) சக்கரமானது S வடிவ சக்கர அமைப்பின் விரிவாகும். எந்த தெய்வீக சக்தியும், புண்ய சக்தியும் இருவகை ஆத்ம சக்திகளைத் தருகின்றன. இவை ஐக்யமாகும் போதுதான் பிரார்த்தனை பலனளிக்கின்றது. இதுவே சகாரத் தத்துவமாகும்! S வடிவ தர்ப்பைகளைக் கொண்டு அமைக்கப்படும் கிரீடத்திற்கு “சகாரக் கிரீடம்” என்று பெயர். அக்காலத்தில் மன்னர்கள் மஹரிஷிகளை வரவேற்கையில் பூரண கும்பத்துடன் “சகாரக் கிரீடத்தை” வைத்து அவர்களை அணியச் செய்வர். “ஆன்மீக உலகின் பேரரசே வாருங்கள்” என்று விளித்து பேரன்புடன் அழைக்கும் முறையிது!
3.11.1997 அன்று சகார தர்பை கிரீடத்தை அணிந்து கொண்டு அனைவரும் குறிப்பாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீபரத்வாஜ மஹரிஷிக்கு அர்க்யம் அளித்திட வேண்டும். அர்க்யம் என்றால் கங்கை, காவிரி, கோயில் தீர்த்தங்களை ஒரு சிறு பாத்திரத்தில் ஏந்தி, நன்றாக நிமிர்ந்து நின்று, குதிகால்களை மட்டும் உயர்த்தி, கால்களின் நுனிப் பாதங்களை அழுத்தி, அதன் அழுத்தத்தில் உடலை நிற்கச் செய்து, பாத்திரத்தை இரண்டு கைகளாலும் பிடித்து உயர்த்தி “ஸ்ரீபரத்வாஜ நமஸ்தர்ப்பயாமி“ என்றோ “அர்க்யம்தனை ஏற்று அருள்வீரே பரத்வாஜ மாமுனியே!” என்றோ துதித்து, பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை இருகை விரல்களின் வழியே கீழே, தரையில் படியுமாறு மெதுவாக வார்த்திட வேண்டும். ஸ்ரீபரத்வாஜ முனி வழிபட்ட இடங்களிலும் ஸ்ரீபரத்வாஜர் என்ற நாமந்தாங்கியுள்ள இறைத்தலங்களிலும் உள்ள கோயில் தீர்த்தங்களில் (சென்னை கோடம்பாக்கம்) இத்தகைய அர்க்யத்தை அளிப்பது மிகவும் விசேஷமானது. இந்த அர்க்யத்திற்குப் பிறகு பித்ரு தர்ப்பணங்களையும் செய்திடலாம். ஸ்ரீபரத்வாஜ சிவலிங்கத்திற்கு இத்தகைய தர்பை கிரீடத்தை அணிவித்து வழிபடுதற்கு “துவிசாயன கோத்ர பூஜை” என்று பெயர். இதுவரையில் தம் கோத்ராதிபதி யார் என்றே அறியாது வாழ்ந்தமைக்காகவும், அறிந்தும் அவரை வழிபட மறந்தமைக்கும் “துவிசாயன கோத்ரா பூஜை” சிறந்த பரிஹாரமாக அமைகின்றது. இன்று “படையல்” எனப்படும் அன்னதானம் அவசியமானதாகும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் மட்டுமன்றி திருமணத்தடங்கல்களால் துன்பப்படுவோரும், கேட்டை நட்சத்திரம் 60 நாழிகையும் (24 மணி நேரமும்) அபூர்வமாக அமைகின்ற 3.11.1997 அன்று மேற்கண்ட கிரீட சாந்தி அர்க்ய பூஜையை நிகழ்த்திட சுபவாழ்க்கை மங்களகரமாக அமையும்!
விஷ்ணுபதி புண்யகாலம் |
விஷ்ணுபதி புண்யகாலம் என்பது மூன்று மாதத்திற்கொரு முறை தமிழ் மாதப் பிறப்பை ஒட்டி வருகின்ற மிகவும் புனிதமான புண்ணிய காலமாகும். இந்த அரிய வழிபாடானது பல கோடி யுகங்களாகத் தொடரப் பெற்று சமீபத் தலைமுறைகளில் நடைமுறையில் மறைந்து விட்டது என்பதை, பஞ்சாங்கத்தில் இன்றும் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று குறிப்பிடப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரதோஷ காலம் போன்று மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாட்டின் சிறப்பினை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருவருளால் மிகவும் சிரத்தையுடன் எடுத்துரைத்து வருகின்றார்கள். வைணவத் தலங்களில் இவ்வழிபாட்டினை முறையாகக் கடைபிடிப்பதற்கும் பிரதோஷ வழிபாடு போல் செம்மையாக பூஜை முறைகள் நடைபெறுவதற்கும் வைணவப் பெரியோர்களும், ஆன்மீகச் செல்வர்களும் பக்தர்களும் பெருங்கருணையுடன் ஆவன செய்யப் பணிந்து வேண்டுகின்றோம். பிரதோஷ வழிபாடு போன்றே விஷ்ணுபதிப் புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற தானதர்மங்கள், அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், ஹோமம், தர்ப்பண பூஜைகள் போன்றவற்றிற்குப் பன் மடங்கு புண்ணிய சக்தி உண்டு. வரும் விஷ்ணுபதி புண்ய காலம் 16.11.1997 ஞாயிறு விடியற்காலை 2 மணி முதல் பகல் 10.30 மணிவரை அமைவதால் இத்தகைய தெய்வீகமான நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மூக்கறு படலம்!
விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் பலவிதமான புராண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் நன்கு விளக்குகின்றன. பல அவதார மூர்த்திகள் உத்தம இறைலீலைகளை நிகழ்த்திய புண்ணிய நேரமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலமாகும். இராவணின் தங்கையான சூர்ப்பனகை ஸ்ரீராமரின் அழகில் மயங்கித் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், “எனக்கோ திருமணமாகி விட்டது! என் தம்பி இலக்குவனைக் கேட்டுப் பார்”, என்று கூறிட அதன் பிறகு ஸ்ரீலட்சுமணனால் சூர்ப்பனகைக்கு மூக்கறுபடலம் நிகழ்ந்ததை நாமறிவோம். இதனால் ஸ்ரீராமருக்கும், ஸ்ரீலட்சுமணருக்கும், பெண்ணை வதைத்த தோஷம் ஏற்பட்டிட அதற்கு அவர்கள் பிராயச்சித்தம் தேடலாயினர். தெய்வ மூர்த்திகளே மானுட ரூபம் ஏற்று வந்திடினும், மனித குலத்திற்குச் சில பாடங்களைப் புகட்டுவதற்காக இறைவன் நிகழ்த்துகின்ற லீலைகள் இவை! தாடகை வதத்திற்கும் ராவணனைக் கொன்றதற்குமான பரிஹாரங்களாக ஸ்ரீராமர், தனுஷ்கோடி, இராமேஸ்வரம், திலதைப்பதி போன்ற பல புண்யத் தலங்களுக்குச் சென்று பல விசேஷமான பூஜைகளை மேற்கொண்டார். இதேபோல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததற்காக ஸ்ரீலக்ஷ்மணனுக்கு “நாகபரிதோஷம்” என்ற தோஷமும் இச்செயலுக்குத் துணையாயிருந்த ஸ்ரீராமனுக்கு “நோக்கு பரதோஷம்” என்ற தோஷமும் ஏற்பட்டது.
மூக்கையறுப்பானேன். முனைந்து பரிஹாரம் செய்வானேன்? ஒரே வினைக்கு இருவிதமான தோஷங்களா? இறைலீலைகள் எதுவும் காரண காரியமின்றி நிகழ்வதில்லை! ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்! இதை அறிவதே மனித வாழ்வின் இலட்சியம்!
ஸ்ரீபரத்வாஜலிங்கம் திருப்புகலூர்
சூர்ப்பனகையின் அநீதி :- சூர்ப்பனகை, காட்டில் இருந்து கொண்டு, பல மஹரிஷிகளின் யோக நிலைகளைக் கலைத்து, ஹோம குண்டங்களைச் சிதைத்தவள். நல்ல காரியங்கள் நடைபெறாமல் தடுப்பதில் பேருவகை கொண்டாள். பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு தந்து ஏக பத்தினி விரதனாக இருந்து, நமக்கு வழிகாட்டுகின்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் அவர்தம் இளவல் இலக்குவனும், சூர்ப்பனகையின் பூர்வஜென்ம விதி கணக்கை அறியாமலா அவள் தம் நாசியைப் பெயர்த்தனர்....! ஒரு முறை சப்த ரிஷிகளும் யாகம் நடத்துகையில் சூர்ப்பனகையானவள் தனக்கு எவ்வித சாபமும் வராமலிருக்குமாறும், அதே சமயத்தில் அவர்கள் யாகத்திற்கு பங்கம் விளைவிக்கும் எண்ணத்திலும் யாககுண்டம் அருகிலுள்ள மரத்தின் மேல் ஏறிப்படுத்து உறங்கலானாள். சூர்ப்பனகையின் குறட்டை ஒலியோ அடர்ந்த காட்டினையும் அதிரவைக்கும். மேலும் தனது ஆழ்ந்த மூச்சுக் காற்றினால் ஹோமப் புகையை உள்ளிழுத்துத் தேக்கி வைத்து, அதன் சக்தி எங்கும் செல்லாதவாறு தடுக்க முயன்றாள். சப்தரிஷிகள் திகைத்தனர்! உறங்குபவர்களுக்கு எவ்வித சாபமும் தரலாகாது, அவர்களை எழுப்புதலும் கூடாது என்பதி நியதி, அதே சமயத்தில் குறட்டை, அழுகை, தும்மல் ஒலி கேட்கின்ற இடத்தில் ஹோமத்தின் பலன்கள் குறைகின்றன என்பதால், சப்தரிஷிகளும், நாக மந்திரம் ஓதி அதனை சப்தநாகமாக மாற்றி சூர்ப்பனகையின் நாசியினுள் அதனை நுழையவைத்து, குறட்டை ஒலியை அடக்கியது மட்டுமல்லாமல், ஹோமத்தின் தெய்வீக சக்தி வாய்ந்த நறுமணப் புகையானது அங்கு சேர்வதைத் தடுத்துப் பரவெளியெங்கும் பரவ ஆவன செய்தனர். சூர்ப்பனகை எழுந்து நடந்ததை அறிந்தாள். தன்னுடைய நாசியினுள் நாகமிருப்பதை அறிந்து, அதனைக் கொன்றால் ஏற்படும் நாகதோஷத்தின் விளைவுகளை உணர்ந்தவளாய், அவவிடத்தை விட்டு அகன்றாள். அந்நாகமோ அவள் நாசியினுள் வளர தொடங்கியது. இதற்கு யாது பரிகாரமென அவள் பல மகரிஷிகளைக் கேட்டு வனமெங்கும் அலைந்தாள். “நாக தோஷம் தீண்டிடாத நல்ல, புனிதமான ஆத்மாவே இதற்குப் பரிஹாரத்தைத் தர இயலும்,” என அனைவரும் ஒருமித்துக் கூறினர். ஆனால் இது தேவஇரகசியமாகவே விளங்கும் என்பது அவர்களுடைய அருள்வாக்கு!
படநாகம் பெற்ற பாடம் :-
தசரதர், கௌஸல்யா தேவியை மணந்திடும் போது, அவர்கள் குழந்தையால்தான் தனக்கு மரணம் என்பதை முன்னரேயே அறிந்த இராவணன், அவர்களுடைய திருமணத்திற்கு ஆயிரமாயிரம் தடங்கல்களை ஏற்படுத்தினான். இறுதியில் அவர்கள் திருமணம் கடலுக்கடியில் நிகழ்ந்தபோது, அதனையும் தடுத்திடப் பூநாகமொன்றை அவன் ஏவினான். அப்பூநாக தேவதையே பின்னர் தன்னுடைய தீச்செயலுக்கு வருந்தி, பிராயச்சித்தத்தைப் பெறத் தவம் புரிந்து, எந்த தம்பதியினரின் சந்ததியைத் தடுக்க அது முயன்றதோ அதே சந்ததிகளின் திருக்கரங்களால் முடிவு ஏற்படுவதே இதற்குப் பரிகாரமென மஹரிஷிகள் அருளினர். அந்நாகமே சப்தநாகமாக உருப்பெற்று சூர்ப்பனகையின் நாசியை அடைத்து நின்றது! எனவே சூர்ப்பனகையின் மூக்கறுபடலத்தில் நிகழ்ந்த திருவிளையாடல் யாதெனில், நாகதோஷங்கள் தீண்டாதவரும், ஆதிசேஷ நாகத்தின் அவதாரமுமான ஸ்ரீலக்ஷ்மணர், இராவணனால் (பூநாகமாக) ஏவப்பட்டுத் தற்போது சூர்ப்பனகையின் நாசியிலிருந்த சப்த நாகத்திற்கு ஸ்ரீராமனின் ஆணையுடன் (அவளுடைய மூக்கை அறுப்பது போல்) மோட்சமளித்தார். இதுவே மூக்கறுபடலமாயிற்று.
இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கையரிவதற்கு இதுவே ஆன்மீக விளக்கமாகும். எனினும் மனிதர்கட்கும், தேவர்கட்கும் நல்வழிகாட்டி நற்பாடம் புகட்டும் வகையில், ஸ்ரீஇராமரும், ஸ்ரீலக்ஷ்மணரும், பரத்வாஜ மஹரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, சூர்ப்பனகையின் நாசியை அறுத்தமைக்குப் பிராயச்சித்தம் வேண்டினர். ஸ்ரீபரத்வாஜரோ, “பிற்காலத்தில் நீங்கள் மூவருமே (இராமர், லக்ஷ்மணர், சூர்ப்பனகை) ஒருசேர ஓர் அற்புதமான தெய்வ மூர்த்தியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். சூர்ப்பனகை எத்தகைய அதர்மங்களைச் செய்தவளாயினும், சப்தரிஷிகள் செய்த யாகத்தின் ஹோமப் புகையை நுகர்ந்து யோக முறையில் அடக்கி அறிந்தோ அறியாமலோ அதில் வாசம் செய்யும் பெரும் பேற்றைப் பெற்றமையால், அவள் தன்னுடைய முக்திக்கான வழிகளை சூட்சும சரீரத்தில் தொடர வேண்டியிருக்கும்”, என்று சூசகமாகக் குறிப்புரை தந்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு..... இராவண வதத்திற்கு பின்..... வனவாசத்தின் போது ஸ்ரீராமர் ஒரு கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வைராக்யம் பூண்டு அவ்வாறு செய்து வருகையில்..... பலவிதமான விஷ்ணு/சிவ பூஜைகளையும் நிகழ்த்தியவாறே இராவண வதத்திற்கும், ஜானகியின் அக்னிபிரவேசம், இலவகுச பிரிவு போன்ற பலவற்றிற்குமான பரிகாரங்களை ஸ்ரீராமர் ஒவ்வொரு இறைத்தலத்திலும் வழிபட்டுப் பெற்று வந்தார்..
தாடிக் கொம்புப் பெருமாள்!
ஸ்ரீராமர், ஸ்ரீலக்ஷ்மணர் இருவரும் திண்டுக்கல் – வேடசந்தூர் சாலையிலுள்ள தாடிக்கொம்பு எனுமிடத்தில் நதிக்கரையில் நித்யவழிபாடுகளை மேற்கொண்டிட ஆங்கே மாண்டூக மஹரிஷி தவளை ரூபத்தில் யோக நிலையிலிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். மஹரிஷியின் தரிசனமே, அவருடைய தீர்க்கமான பார்வையே, அற்புதமான தெய்வீக சக்தி உடையதன்றோ! தாம் தெய்வ அவதாரமாயிருப்பினும், கோடி கோடியாம் மஹரிஷிகளுக்கும் மேன்மையைத் தரக் கூடிய உத்தம தெய்வமூர்த்தியாயிருப்பினும், ஸ்ரீராமர், தன்னுடைய மானுட சரீரத்தில் சாதாரண மனிதனாக வாழ்ந்து வழிகாட்டி நின்றார். தம்முடைய யோக நிலையிலிருந்து மீண்ட மண்டூக மஹரிஷி... ஒரு மாபெருந் தவளையாக (மண்டூகம்) மாறிட... அத்தவளைக்கு குடை பிடித்ததோ ஓர் ஐந்து தலை நாகம்! இராவணனால் ஏவப்பட்டு லட்சுமணரின் திருக்கரங்களில் மோட்சம் பெற்ற பூநாகம்! நாகமே, தவளைக்குக் குடை பிடிக்கின்றதெனில் எத்தகைய தெய்வீக சாந்நித்யம் நிறைந்த தலம் இது! சாந்தம் பொழியும் இடம்!
ஆங்கே.....
தாடிக்கொம்பு திருத்தலம்
ஸ்ரீதிருமால் சுந்தவரதனத்துடன், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளாகக் காட்சி தந்தார். சூட்சும சரீரத்தில் இருந்த (அவலட்சண கோலத்துடன்) சூர்ப்பனகையும் ஆங்கே வந்திட.... சூர்ப்பனகை தன்னுடைய தீவினைகளுக்குப் பரிஹாரம் வேண்டிட, பெருமாள் அவளை மன்னித்து அவள் விரும்பியவாறே சுந்தர வடிவை அளித்து மேலும் பல தவமுறைகளைக் கடைபிடித்து நற்கதியைப் பெற அருள்பாலித்தார். ராவணன் கூடத் தன் தவறுகளுக்குப் பிராயசித்தம் பெறவில்லை. விபீஷணாழ்வாரின் அருட்கருணையால் சூர்ப்பனகை மேற்கண்ட நன்னிலையைப் பெற்றாள். எனவே எத்தகைய தவறுகளுக்கும் மனதார வருந்தி அதற்கான தண்டனைகளை ஏற்கச் சித்தமாயிடில் இறைவனே மனமுவந்து அருள்பாலிப்பான் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இது நிகழ்ந்ததே விஷ்ணுபதி புண்ய காலமாகும். ஸ்ரீராமரும், ஸ்ரீலட்சுமணரும், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளின் திருவதன அழகில் லயித்து மெய்ம்மறந்து பரவசமாகி நின்றிட ஸ்ரீமஹாவிஷ்ணு ஆனந்தத்துடன் அவர்கட்குத் தீர்த்தம் தந்து அருள்பாலித்தார். ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளும் ஸ்ரீராமரின் திருக்கரங்களால் பூநாகத்திற்கும், மண்டூக மஹரிஷிக்கும் தீர்த்தமளித்திட அனைவரும் ஆனந்தமடைந்தனர். ஸ்ரீவைதீஸ்வரரின் கோயிலில் தன்னுடைய தவளை ரூபத்திற்குச் சாப விமோசனம் பெற்ற மண்டூக மஹரிஷி தன் சுய உருவைப் பெற்றுத் திருமாலை வழிபட்ட இடம் இதுவே! இது நிகழ்ந்த நேரமே ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலமாகும். பிறிதொரு யுகத்தில், தேவ கற்பத்தில், ஈஸ்வர ஆண்டு, சரத்ருது காலத்தில் நிகழ்ந்த அற்புதமான வைபவம் ஆகும்! இதைக் குறிக்கும் வகையில் இத்திருத்தலத்தில், வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தை 16.11.1997 அன்று கொண்டாடிப் பெறற்கரிய ஸ்ரீபெருமாளின் திருவருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம். இத்தலத்தில் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், ஹோமம், தர்ப்பணங்கள், தானதர்மங்கள் செய்திட, பிரதோஷம் போல் பன்மடங்குப் பலன்களைப் பெற்றுத் தரும்.
விஷ்ணுபதி பூஜா பலன்கள்
வருகின்ற விஷ்ணுபதி பூஜையை திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு என்னும் திவ்யத் திருத்தலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளுடனும், ஹோம, தான தர்மங்களுடனும் தர்ப்பணப் பூஜைகளுடனும் கொண்டாடிட ஈஸ்வர ஆண்டிற்கே உரித்தான பல விசேஷமான பலன்களைப் பெற்றிடலாம்.
1. பெற்றோர்களை/உடன் பிறந்தோரை/மனைவியைப் பிறர் சொற்கேட்டு வதைத்த/ துரத்திய துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்
2. தகாத, தீய, மனதைக் குத்தும், வேதனைப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைக் கொட்டியதற்கான தீராப் பழி தீரவும்.
3. குரோதம், பொறாமை, அந்தஸ்து, பதவி காரணமாகப் பிறருக்கு (அறிந்தே) இழைத்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்.
4. பெரியோர்களை, மஹான்களை நிந்தித்தமைக்கான பரிஹாரமும் ஸ்ரீவிஷ்ணுபதிப் பூஜா பலன்களாகக் கிட்டும். தாம் செய்த தவறுகட்கு மனதார வருந்தி, பாதிக்கப்பட்டவர்கட்குத் தக்க நிவாரணங்களை அளித்து வந்திட, எத்தனையோ ஜென்மங்களுக்குத் தொடரவிருக்கின்ற தம் பிள்ளைகளைப் பற்றி வருத்தமும் மனவேதனைகளும் கொண்டிருக்கின்ற தாய்மார்கள் ஏராளம், இவர்கள் தங்கள் குடும்பத்துடன் விஷ்ணுபதியன்று இங்கு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டுப் பெருமாளுக்கு அப்பமும் சர்க்கரைப் பொங்கலும் படைத்து ஏழைகளுக்கு பொன் மாங்கல்யத்தை அளித்திட மன அழுக்குகள் நீங்கி, அருவருக்கத்தக்க, பாசி படிந்த வாழ்க்கை நினைவுகளுக்கு, நிகழ்ச்சிகளுக்குத் தக்கப் பரிஹாரங்களை இறையருளால் பெறுவர். எத்தனையோ அவதார மூர்த்திகளின் திருவடிகள் பட்ட தலம்! எண்ணற்ற மஹரிஷிகளும் தவம் புரிந்த அற்புதமான தலம். எனவே இவ்வரிய தெய்வீக வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
ஐப்பசி பௌர்ணமி |
அன்னம் பாலிக்கும் பௌர்ணமி ! அன்னாபிஷேக ஐப்பசி பௌர்ணமி அரிசிப் பஞ்சத்தைத் தீர்க்கும் ! ஹோட்டல், டீக்கடை சிறு உணவு விடுதிக்காரர்களுக்கு உவப்பான பௌர்ணமி! பாலில் நீர் கலத்தல், அழுகிய காய்களைச் சமைத்தல் போன்ற சொல்லொணாப் பாவங்களைத் தீர்க்க நல்வழி காட்டும் பௌர்ணமி! மீண்டும் தவறு செய்யாதிருத்தல் மிக முக்கியம்.
கடந்த பல வருடங்களாக திருஅண்ணாமலையின் ஆன்மீக ரகசியங்களையும், தெய்வீக அம்சங்களையும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் சித்தர்களுடைய கோணத்திலிருந்து அளித்து வருகின்றோம். எத்தனையோ சித்புருஷர்கள் பலவிதமான கிரந்த நாடிகளில் திருஅண்ணாமலையின் மகிமையைப் பதித்துள்ளனர். கேட்கத் தெவிட்டாத ஆன்மீகப் புத்துணர்ச்சியைத் தரும் கிரந்தங்கள் அவை! எந்த யுகத்திற்கும், எந்த ஆண்டிற்கும் பொருந்துமாறும் மிக மிக தீர்க்க தரிசனமாகக் கிரந்த நாடிகளில் அவை எழுதப்பட்டுள்ளன.
மொத்தத்தில் திருஅண்ணாமலை கிரிவலமானது நம்மைக் கடைத்தேற்றும் ஆன்மீக வழிப்பாதை, யோகக் கூடம், பக்தி மார்க்கம், தீய கர்மங்களைத் துடைக்கும் ராஜயோகப் பாட்டை! ஐப்பசிப் பௌர்ணமியானது மிகவும் சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜைகளுள் ஒன்றாகும். “அன்னம் பாலிக்கும்” பௌர்ணமியெனச் சித்புருஷர்கள் இதனைக் கூறுகின்றனர். ஏன் இவ்வாறு பெயர் வந்தது? இதற்கும் திருஅண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? திருஅண்ணாமலை, பார்பதற்குக் கல்மலையாகத்தான் சாதாரணமாகத் தென்படுகின்றது! ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீகுருநமசிவாயர், ஸ்ரீகுகை நமசிவாயர், ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர், மலப்புழு சித்தர், குப்பை சித்தர் போன்ற மஹான்களும் யோகியரும் வெறும் கல் மலையையா பார்த்து, சுற்றிப் போற்றி நின்றனர்? ஸ்ரீபிரம்ம மூர்த்தி அன்னப் பறவையாய்க் கோடானு கோடி அண்டங்களைத் தாண்டி உயரப் பறந்தும் திருஅண்ணாமலையின் முடியைக் காண இயலவில்லை என்றால் இதன் உயரம் இப்போது நம் மானுடக் கண்களுக்குத் தெரிவது போல் 2600 அடி உயரம் தானா? நெடிதுயர்ந்த பெருமாளும் ஸ்ரீவராஹ மூர்த்தியாய் திருஅண்ணாமலையின் அடியிற் புகுந்து அண்ணாமலையாய் ஒளிரும் பரம்பொருளின் அடியைக் காண முயன்று, தன்னால் இயலவில்லை எனத் தெய்வீகப் பெருந்தன்மையுடன் நவின்றாரே, அப்படியானால் அண்ட சராசரத்தையே தன்னுள் அடக்(ங்)கிக் கிடப்பதல்லவா திருஅண்ணாமலை! இதனை கிரிவலம் வருவதென்றால் ... என்னே பெரும் பாக்கியம்!
அன்னம் பெற அன்னையின் தவம்
ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்னாபிஷேகப் பௌர்ணமியாக விசேஷமாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணமென்ன? சிருஷ்டியின் போது முதன் முதலில் உருவான தாவரமே நெல் ஆகும். ஸ்ரீகிராதமூர்த்தியாக, இறைவன் தாவரங்களைப் படைக்கையில் நெல்லைப் படைத்தவுடன் அதனை முதன் முதலில் பெற்றுக் கொண்டவளே ஸ்ரீபார்வதியின் அம்சமாகிய ஸ்ரீஆஷாடதேவி! அம்முதல் நெல் மணியை விருத்தி செய்யும் தெய்வத் திருப்பணி ஸ்ரீஆஷாட தேவிக்கு அளிக்கப்பட்டது. எண்ணற்ற சித்புருஷர்களின், யோகிகளின், மஹரிஷிகளின் தபோபலத்துடன் அம்பிகை பிரபஞ்சமெங்கும் அதனை விருத்தி செய்தாள். நெல், கரும்பு, முந்திரி, வாழை, தேங்காய் போன்ற சில தாவரங்கள் தாம் பூலோகம் மட்டுமின்றி அனைத்து லோகங்களிலும் பூஜைகளில் பயன்படுகின்றன.
நெல் தாவரத்தை உருவாக்கினாற் போதுமா? அதற்குள் ஜீவசக்தியைச் சேர்த்து ஜீவன்கள் உண்கின்ற நிலையில் அதனை அன்னமாக ஆக்குதற்கு “அபீத அக்னி“ என்ற ஒரு வகை அக்னியை அதில் சேர்த்திடல் வேண்டும். அந்த அக்னி எல்லா இடத்திலும் எழுவதில்லை. அம்பிகை தன் திருக்கரங்களில் நெல்மணிகளைத் தாங்கி, பிரபஞ்சத்திற்கே அனைத்து வகையான அக்னி சக்திகளை அளிக்கின்ற அருணாசல க்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலையில் தவம் புரியலானாள். எவ்வாறாக? பிருதிவி லிங்கம், அப்பு லிங்கம், திருஅண்ணாமலை, ஆகாச லிங்கம், வாயுலிங்கம் என ஐந்து லிங்க மூர்த்திகளின் முன் நெல் மணி முனையில் கடுந்தவம் புரிந்தனள். ஏனெனில் எந்தப் பொருளிலும் பஞ்சபூத சக்திகள் சேர்ந்தால்தான் அது உண்ணும் உணவாகிறது. எந்த உணவில் எந்த பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதோ அதற்கு அத்தன்மை கூடியிருக்கும். உதாரணமாக மிளகும், நெல்லியில் ஜலத் (நீர்) தத்வம் மிகுந்திருப்பதால் அவை குளிர்ச்சி தரும் தன்மைகளைக் கொண்டவை!
ஆண்டவனின் அற்புத லீலையால், அபீத அக்னியை நெல்மணியினுள் இணைக்க வேண்டி அம்பிகை தவம் ஆற்றுகையில் காமதேனுவின் அருளால் பால், தயிர், நெய் மற்றும் ஏனைய பல தாவரங்களும் அங்கு தோன்றின! இவ்வாறு நெல்மணியுடன் அம்பிகை அமர்ந்து அண்ணாமலையில் தவம் புரிந்த இடமே “வாரண” தரிசனம் எனப்படுகிறது. திருஅண்ணாமலையார் ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பெறக் கூடியதே வாரண தரிசனம்! அன்னக் குற்றங்களை நீக்கி காசியில் கங்கையில் புனித நீராடி, ஸ்ரீகாசி லிங்க நாதரை, ஸ்ரீவிசாலாட்சி சமேதராக தரிசிக்கின்ற அற்புதமான பலன்களைத் தரக் கூடியது! அன்னையின் அருந்தவத்தின் முடிவில் சர்வேஸ்வரனே அன்ன அபீத ஜோதியாய் காட்சியளித்து “உண்ணாமுலையாளே! உன் திருக்கரங்களில் உள்ள நெல்மனி, உனக்காகத் தவம் புரியும் சித்புருஷர்கள், யோகியரால் பல்கிப் பெருகியுள்ளது! அன்புத் தாயின் முலைப்பாலின் தெய்வீக சக்தியை ஆயுள் முழுதுந் தந்து ஜீவசக்தியைத் தரவல்லதே அரிசி மணியாகும்! இதுவரை எவரும் உண்ணாத அரிசிமணியை, (தாயின்) முலைப் பாலின் தெய்வீக சக்தியை உடைய அரிசிமணிகளை, அன்னமாக இன்று பூர்ணச் சந்திர ஒளியில் யாம் எம் திருமேனியில் அபிஷேகமாக ஏற்கின்றோம்!
“இந்த அற்புதமான அரிசிமணிகளை உன் தபோபலத்தில் விளைந்த அபீத அக்னி சக்தியால் அன்னமாக ஆக்குவாயாக! உன்னுடைய தீவிரத் தவத்தால் எழுந்துள்ள அபீத அக்னி சக்தி மிதமிஞ்சிப் பெருகியிருப்பதால் அதனை இவ்வுலகமே தாங்காது! என்னுடைய ஜடாமுடியிலிருந்து பெருகும் கங்கையானவள் பனிச் சிகரங்கள் நிறைந்த கைலாயத்தின் சீதளத் தன்மையைத் தாங்க இயலாது வாடுகின்றாள். எனவே இந்த அபீத அக்னியுடன், அரிசி அன்னத்துடன் நீ காசித் தலத்திற்குச் சென்று தியானம் புரிவாயாக! கங்கையானவள் உன்னை வணங்கி அபீத அக்னியைப் பெற்றுத் தன் குளிர்ச்சிக்கு நிவாரணம் பெறுவாள். ஆங்கே யாமே உன்னிடம் அன்னம் யாசித்து உலகிற்களிப்போம். பிற்காலத்தில் கலியுகத்தில் ஜீவன்கள் அன்னமய கோசத்தைப் பெறுவர். அன்னத்தைச் சார்ந்தே உயிர்களின் ஜீவ வாழ்க்கை அமையும்! அப்போது நிறைய அன்னக் குற்றங்கள் ஏற்படும். வருவோர்க்கெல்லாம் வயிறார உணவளிக்கும் மனிதப் பண்பு குறைந்துவிடும். உணவுக் குற்றங்கள் பெருகும்! ஆதலின் நின்னைப் போல் எம்மை அன்னாபிஷேகம் செய்யும் விசேஷ பூஜையை முறையை அனைவர்க்கும் அளிப்பாயாக!” என்று அருளாணையிட்டார்,
ஐப்பசி அன்னாபிஷேகப் பௌர்ணமி – 13.11.1997
அன்னத்திற்கான அபீத அக்னி சக்தியைப் பெற்ற ஈஸ்வரியே அபீதகுஜாம்பாள் அம்பிகையாய்த் திருஅண்ணாமலையில் அருள்பாலிக்கின்றாள். முதன் முதலில் படைக்கப்பட்டதும், எவருமே பிரபஞ்சத்தில் உண்ணாத அரிசிமணிகளை, முன்னறி தெய்வமான தாயின் முலைப்பாலின் ஜீவசக்தியைப் பெற்றதுமான அரிசிமணிகளைப் பெருக்குதற்கு மோனதவம் பூண்டமையால் உண்ணாமுலைத் தாயானாள். இவ்வாறு அன்னையின் அருளால் விண்ணளாவி அன்னம் பெருகி நின்ற தலங்கள் பல உண்டு.
திருஅண்ணாமலை, காசி, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை (திருப்பரங்குன்றம்), திருவாரூர், திருச்சோற்றுத்துறை (திருவையாறு) – போன்ற இடங்களில் அன்னை அபீத அக்னி சக்தியால் சமைத்துப் பெருக்கிய அன்னம் விண்ணளாவி பெருகி நின்றது. அபீதகுஜாம்பாளும் மஹரிஷிகளும் யோகியரும் சித்புருஷர்களும் அன்னத்தை மலைமலையாக அந்தந்தத் தலங்களின் மூலத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து ஆனந்தித்தனர். இதுவே அன்னாபிஷேகமாகும். அன்னை ஆஷாட தேவியாய்த் தான் பெற்ற அரிசிமணியை ஸ்ரீஅகஸ்தியரிடமே தந்து அதன் விருத்திக்கு நல்வழி காட்டியமையால் இன்று அன்னாபிஷேகப் பௌர்ணமியன்று சில குறித்த தலங்களில் ஸ்ரீஅகஸ்தியரே தம் திருக்கரங்களால் லிங்கத் திருமேனிக்கு சூட்சும சரீரத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றார்.
எனவே ஐப்பசி பௌர்ணமியன்று அவரவர் ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு அனைத்து வகையான அன்னங்களையும் படைத்து அன்னாபிஷேகம் செய்து பிரசாதமாக அன்னத்தை ஏழைகட்கு அளித்திடுங்கள். நடமாடுந் தெய்வமாம் நம்மைப் பெற்ற தாயின் தாய்ப் பாலுண்டு வளர்ந்த நாம், தாய்க்கு ஆற்றும் சேவையாக இன்று ஒரு சிறு லிங்கத்திற்கேனும், சோற்றால் அபிஷேகம் செய்து மகிழ்வோமாக! இதனால் அன்னபூரணியின் பரிபூர்ண கடாட்சத்தைப் பெற்று வாழ்நாள் முழுதும் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படாது! இதனை ஊர்மக்கள் கூடிச் செய்வார்களேயானால் ஒற்றுமை பெருகி ஊருக்கே ஆன்மீகச் செழுமை ஏற்படும். இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து குறைந்தது ஒருபடி அரிசி மணிகளையோ அன்னத்தையோ அன்னதானமாக அளித்திடுக!
அன்னமய ஐப்பசிப் பௌர்ணமி – அருணாசல கிரிவலப் பலன்கள்
1. குழந்தைகளுக்கு அன்ன துவேஷம் போன்ற தோஷங்கள் தீர்ந்து, குழந்தைகள் நன்கு உண்ணும், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், வயிற்றுக் கட்டிகள் போன்றவை நிவர்த்தியாகும்.
2. பணக்காரர்களாயிருந்தும் ஒருவாய் கூட உணவு உண்ண இயலாது. நோய்கள் பல சேர்ந்து உணவுக் கட்டுப்பாடுகள் மிகுந்திருக்கும். இவர்கள் ஐப்பசி பௌர்ணமியில் அன்னதானம் செய்து திருஅண்ணாமலையை கிரிவலம் வர அபீதஅக்னி சக்தியின் மஹிமையால் நன்கு உணவேற்கும் வண்ணம் உடல் நிலை சீரடையும்.
3. பல ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர்க்கு நன்கு சாப்பிடும் வண்ணம் உடல்வாகிருந்தும் குடும்பச் சூழ்நிலை, ஹோட்டல் வாழ்க்கை, வறுமை, வசதியின்மை காரணமாகப் பலவேளைகளில் சாப்பாடே இராது! இன்று, அன்னாபிஷேகப் பௌர்ணமியன்று இத்தகையோர் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் இறையருளால் மனத்திருப்தியுடன் வாழ்வதற்கான நல்வழிகள் பிறக்கும்.
4. என்னதான் வாழ்க்கை நடத்தினாலும், வறுமையோ, செழுமையோ, தினமும் ஒரு காக்கை, பசுவிற்கேனும் எதையாவது உண்ண அளித்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தைக் கைக் கொண்டு கடைபிடிக்க வேண்டும். பிறருக்காகச் சேவை புரிகின்ற மனப்பான்மை வந்தால் இறைவனின் அருள் தானாகவே பொழியும். நமக்காக, நாமே சுயநலமாக வாழ்ந்தால் நம்முடைய புண்ய, பாவ வினைகளுக்கேற்பத்தான் நம் வாழ்க்கை அமையும், அன்னதானம் போன்று பிறருடைய நல்வாழ்விற்காக வாழ்வோமாயின் இறைவனே முன்வந்து இறைசக்தியை அளித்து, நம் வினைகளையுமேற்று நம்மை வழி நடத்திச் செல்கின்றான் சற்குருமூலமாக!
5. பலருடைய நிலபுலன்கள் கோர்ட் வழக்குகளில் சிக்கிப் பல ஆண்டுகளாகப் பிறரிடம்/ பயனின்றிக் கிடக்கும்! இவர்கள் ஐப்பசிப் பௌர்ணமியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, செவ்வாய் தோறும் தம் ஊரில் செவ்வாய் பகவானுக்கு உணவு படைத்து அன்னதானமளித்து வர நியாயமான முறையில் கோர்ட் வழக்குகள் துரிதமானத் தீர்வு பெறும். முறையான காரணங்களால் திருஅண்ணாமலையை கிரிவலம் வர இயலாதோர் பழனி, திருப்பரங்குன்றம், ஐயர்மலை, குன்றக்குடி, பர்வதமலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருக்கச்சூர் (சென்னை), சுவாமிமலை போன்ற இடங்களில் கிரிவலம் வந்து இன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தானமளித்திட மேற்கண்ட பலன்களைப் பெற்றிடலாம்.
அன்னமிடுவதின் தெய்வீக ரகசியங்கள்
நெல், அரிசியாகி, அரிசியின் அன்னத்திற்கான அபீத அக்னி சக்தியை அளித்தவளான ஸ்ரீஅபீதகுஜாம்பாள் அம்பிகையே அருணாசலத்தில் அருள் பாலிக்கின்றாள். பிரபஞ்சத்திலேயே எவரும் உண்ணாததும், முதன்முதலில் படைக்கப்பட்டதும், முன்னறி தெய்வமான அன்னையின் முலைப்பாலுக்கு ஈடான ஜீவித சக்தியை வாழ்நாள் முழுதும் தருவதும் ஆன அன்னத்தை ஈசனுக்குப் படைத்தமையால் “உண்ணாமுலையாள்” ஆகப் போற்றப்படுகின்றாள். எனவே அபீத குஜாம்பாளான உண்ணாமுலையம்மன், ஈசனின் ஆணைப்படி, முதலில் தோன்றிய நெல்மணிகளை, அபீத அக்னி சக்தியால் அன்னமாக்கி ஒரு கலசத்தில் ஏந்தி காசி மாநகரத்திற்குச் சென்று ஸ்ரீஅன்னபூரணியாய்த் தவம் பூண்டாள் பகீரதனுடைய பெருந்தவத்தால் கைலாச பனிச்சிகரங்களிலிருந்து பெருகி வந்த கங்கை தேவியானவள் பூலோகம் வந்ததும் தான் மிகவும் குளிர்ச்சியுற்றிருப்பதை உணர்ந்தாள். திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் சிரசில் சந்திர கிரணங்களின் மஹிமையால் கங்கை அக்குளுமையைத் தாங்கியிருந்தாள்.. காசியில் ஸ்ரீஅன்னபூரணியின் திருவடிகள் பட்டதுமே அபீத அக்னி சக்தியின் மஹிமையால் கங்காதேவி அளப்பரிய பேற்றைப் பெற்றாள். ஸ்ரீஅன்னபூரணியின் கலயத்திலிருக்கும் அன்னத்தையே சிவபெருமான் அட்சய திருதியை தினத்தன்று இரந்து பெற்றுத் தன் கையிலிருந்த பிரம்ம கபாலத்திற்கும் முக்திப் பெருமோட்ச நிலை தந்து அருள்பாலித்தார். இவ்வாறாகப் பிரளயகால ஐப்பசிப் பௌர்ணமியில்தான் அன்னமாகிய அரிசியின் படைப்பு ஏற்பட்டது. இது நிகழ்ந்த இடமே “வாரண தரிசனம்” என சித்புருஷர்களின் கிரந்தங்களில் போற்றப்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமன்றி உலகமெங்குமுள்ள ஹோட்டல்கள், உணவு விடுதிக, டீக்கடைகள் போன்ற உணவுப் பொருள் வழங்கும் வியாபாரிகள்/ நிறுவனர்களுடைய துன்பங்களையும், தோஷங்களையும், கர்மவினைகளையும் நிவர்த்தி செய்யும் பௌர்ணமியாக ஈஸ்வர ஆண்டின் ஐப்பசி மாத அன்னாபிஷேகப் பௌர்ணமி அமைகின்றது.
கிருதயுகத்தில் தானதர்மங்களைப் பெறுவோர் எவருமில்லை. தெய்வமூர்த்திகளே மக்களோடு மக்களாய் உலவிட தர்ம தேவதை நான்கு கால்களில் நின்ற தெய்வீக யுகமது! அடுத்து வரும் திரேதா யுகத்தில் தர்மம் சற்றே தளர்வுற தான தர்மங்களைப் பெறுவோரைத் தேடியலைந்து கண்டுபிடித்து அளித்தனர். தர்ம தேவதை மூன்று கால்களில் நின்ற யுகமிது. துவாபர யுகத்தில் அதர்மங்களே தலை தூக்கியமையால், தர்மதேவதை இரண்டே கால்களில் நின்றிட, தான தர்மங்களைப் பெறுவோர் அதிகரித்தனர். கலியுகத்தில் அதர்மங்கள் இப்போதே, தலைவிரித்தாடுகின்றன சுமார் 5098 கலியுக ஆண்டுகளே கழிந்துள்ளன. எஞ்சியுள்ள பல இலட்ச ஆண்டுகளில் அதர்மம்தான் பல்கிப் பெருகும். தர்மதேவதை ஒற்றைக்காலில் நின்று அழுது புலம்புகிறது.
இவ்வகையில் கலியுகத்தில் ஜீவன்களின் வாழ்க்கை அன்னமய கோசத்தை, அதாவது உணவு உண்டால் தான் உயிர் வாழ்க்கை என இருப்பதால் மூன்று வேளை உணவிற்காக மனிதன் படாதபாடு படுகின்றான். நல்வினைகளோ, தீவினைகளோ, பெரும்பாலும் ஆடை, உணவு மூலமாகத்தான் அனைத்தும் மனித உடலைச் சார்கின்றன. உணவுப் பொருட்களில், காய்கறிகள், எண்ணெய், மளிகைப் பொருட்கள் போன்றவற்றில் உள்ள தோஷங்கள், நீரில் உள்ள தோஷங்கள், உணவைச் சமைப்பவருடைய எண்ண, மனோ நிலைகள், உணவு விடுதி அமைந்துள்ள இடம் உணவைப் பரிமாறுவதற்கான டேபிள், நாற்காலி, பாத்திரங்கள் போன்றவற்றின் ஜீவ நீரோட்ட அலைகள் போன்ற அனைத்தும் சேர்ந்துதான் ஒரு இட்லியோ, தோசையோ, டீயோ, காபியோ உருவாகிறது. இது பலரும் அறியாத ஆன்மீக இரகசியங்களாகும்.
அன்னக் குற்றங்கள் / தோஷங்கள்
1. மளிகைப் பொருட்களில் உள்ள கல், தூசி, மண், அழுக்குகள், பூச்சிகள், அழுகல்தன்மை போன்றவற்றால் மளிகைக் கடைக்காரர்களுக்கு மட்டுமன்றி ஹோட்டல் உரிமையாளருக்கும் சொல்லொணாப் பாவங்கள் ஏற்படுகின்றன. இலட்சக்கணக்கான மக்களுக்கு உடலில் கல், மண்ணும், தூசியும் சேருவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தால் பெரும் பொறுப்பைத்தானே ஏற்க வேண்டும்!
2. தூய்மையான நீரல்லாது, மயானம் அருகே உள்ள நீர்நிலைகள்/குளம்/கிணறு மற்றும் தீவினை சூழ்ந்த இடங்களிலிருந்தும் குப்பைத் தொட்டி அருகில் உள்ள பைப் போன்றவற்றிலிருந்தும் நீரை எடுத்து சமைத்தால் மாதத் தீட்டுத் துணிகள், மாமிசப் பிண்டங்கள் மற்றும் ஏனைய அசூயைகளினாலும் பெரும் தோஷங்களும் துர்தேவதைகளின் சாபமும் சேர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களையும் உணவு அருந்துவோரையும் பாதிக்கும்.
3. நிலதோஷங்கள், மயானப் பகுதி, கோயிலுக்கு உரிய வாடகையைச் செலுத்தாது, மனசாட்சிக்கு விரோதமாகக் குறைந்த வாடகையில் ஹோட்டலை வைத்து அனுபவித்தல், நாகப் பாம்புப் புற்றுகள் இருந்த இடங்களில் அவற்றையிடித்து நாகங்களைக் கொன்று நாகதோஷப் பரிஹாரம் செய்யாது ஹோட்டல் கட்டிடம் கட்டுதல், பசுக்களைப் பராமரித்த இடங்களைத் தகர்த்து ஹோட்டலாக்குதல், பிறருடைய இடங்களை வஞ்சித்து, ஏமாற்றி, அபகரித்து ஆக்ரமித்து ஹோட்டலாக்குதல் போன்றவையும் சொல்லொணாத் தீவினைகளைத் தந்து சந்ததிகளையே பாதிக்கும். இதன் தீவினை சக்திகள் உணவு மூலமாகவும் பலருக்கும் பரவும். இதனால் தான் அக்காலத்தில் நம் மூதாதையர்கள் வெளியிடங்களில் குறிப்பாக, ஹோட்டல்களில் உண்பதையே தவிர்த்தனர்.
4. அடுத்ததாக உணவைச் சமைப்பவர்கட்கும் பரிமாறுவோர்க்கும் (waiters, servers) பரிமாறுவோர்க்கும் அவர்களைக் கசக்கிப் பிழிந்து வேலைகளைச் செய்ய வைத்தாலோ, அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தினாலோ அவர்கள் மிகுந்த மன வேதனைகளுடன் தான் உணவைச் சமைப்பர்/பரிமாறுவர். இவ்வேதனைப் படிவுகள் உணவிலும் பரவி உண்ணுவோர்க்கும் இதன் விளைவுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சமைக்கப்படும் உணவினைப் பாத்திரங்களோடு வைத்து இறைவனுக்குப் படைத்து கற்பூர ஆரத்தியெடுப்பர். இதனால் மேற்கண்ட தோஷங்கள் பெருமளவில் தீர்க்கப்படுகின்றன. ஹோட்டல் நிர்வாகம் பல பகுதிகளாப் பிரிக்கப்பட்டாலும் (Purchases Dept., சமையல் துறை , Service Dept.) மொத்தப் பொறுப்பும், தோஷங்களின் மொத்த விளைவுகளும் கர்த்தாவாகிய நிறுவனரையே சென்றடையும் . தொழிலாளர்களைச் சகோதரர்கள் போல் அன்புடன் நடத்திடில் தோஷங்கள் குறையும்.
5. பாத்திரங்கள், மேஜை, நாற்காலிகள், டம்ளர்கள் போன்ற ஜடப் பொருளாக நாம் எண்ணுபவற்றிற்கும், ஜீவ சக்தியுண்டு. எனவே இவற்றிற்கு செவ்வாய், வெள்ளி, தோறும் சந்தனம், மஞ்சள், குங்குமமிட்டுத் தோஷ நிவர்த்தி செய்து வழிபடுக!
6. எல்லாவற்றையும் விட, பாலில் நீர் கலப்பது, அழுகிய, கெட்டுப் போன மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மக்கிய எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாவங்கள் மிகக் கொடியவை. செல்வம், சந்ததி, ஆரோக்யத்தைப் பல தலைமுறைகளுக்குப் பாதித்துவிடும்.
- இவ்வாறாக ஹோட்டல் துறையில் கவனமாக இல்லாவிடில் விளைகின்ற கர்மவினைகள் ஏராளம். ஆனால் இதைக் கண்டு மனபீதி கொள்தல் வேண்டாம். இவற்றை நீக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பூஜை முறைகள் பல உண்டு. அவற்றை அன்புடனும், பக்தியுடனும் செய்து வந்தால் பெருமளவு தீவினைகளைக் கழிப்பதுடன் அன்றி, பல லட்சம் மக்களுக்கு வயிற்றிற்கு உணவளிக்கும் புனிதமான பணி ஆதலின், வியாபார சிந்தனையுடன் சில நற்காரியங்களை, பூஜைகளை நிறைவேற்றினால், மக்களுக்கு இறைசக்தி மிகுந்த ஆரோக்ய உணவை அளித்து, பல ஜன்மங்களில் கிட்டக் கூடிய அபரிமிதமான புண்யசக்தியைப் பெற்று நல்வாழ்க்கையை அடைந்திடலாம்.
அன்னக் குற்றங்களைத் தீர்க்கும் ஐப்பசிப் பௌர்ணமியில் அருணாசல கிரிவலம்
உணவுப் பொருட்களின் தோஷங்களுக்கு நிவர்த்தி தரும் கிரிவலம்!
கலப்பட தோஷங்கள், பாவங்களுக்கான பிராயசித்தம்!
ஒரு தலைமுடியோ, தூசி, தும்மையோ இருந்தால் கூட அவ்வுணவு உண்பதற்கு ஏற்றதல்ல. “தலைமுடியோ, பூச்சியோ தவறி விழுந்தது”, என்பதை விட இறைவனே “இவ்வுணவில் தீய சக்திகள் மிகுந்துள்ளன அதனை ஒதுக்கிடு”, என்பதை இவ்வாறே குறியிட்டுக் காட்டுகின்றார் என்பதே உண்மை! ஈஸ்வரியே அரிசியை உணவாகப் பெற்றுத் தந்த விசேஷ தினமாதலின், உணவுப் பொருளை விற்போரும், ஹோட்டல், உணவு விடுதி, டீக்கடைக்காரர்கள் போன்றோரும் இன்று (13.11.1997) திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஅபீத அக்னி சக்தி உருவான ஸ்ரீஅபீத குஜாம்பாளாக ஸ்ரீஉண்ணாமுலையாளாகப் பரிமளிக்கும் அம்பிகை சந்நதியின் முன் குறித்த இடத்தில் நின்று வாரண தரினமாக திருஅண்ணாமலையைப் பார்த்து வணங்கி தரிசித்திட வேண்டும். இன்று அரிசிமணிகளையோ, அன்னமாகவோ திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்திடுக! இதற்காகத் தங்கள் ஹோட்டல்களிலிருந்தோ, இல்லத்திலிருந்தோ உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்து வருடத்திற்கு ஒரு முறையான, மேற்கண்ட தோஷங்களுக்கும் நிவாரணம் தேடிடுக! கிடைத்தற்கரிய வாய்ப்பு இது!
அம்பிகையே அண்ணாமலையானை, அன்ன “மலையானாக” அன்னாபிஷேகம் செய்த அற்புதமான திருநாளில் அன்னதானம் செய்தவாறே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அற்புதமான பலன்களைப் பெறுவீர்களாக!
செய்யுந் தொழிலில் தெய்வ பூஜைகள்! தினந்தோறும் உங்கள் ஹோட்டலிலிருந்தும் பசுவிற்கும், காக்கைக்கும், யானைக்கும் உணவளித்திடுங்கள்! குறைந்தது 50 பேருக்காவது இரண்டு இட்லிகளையாவது நித்ய அன்னதானமாகச் செய்திடுக! நவமி திதி தோறும் குதிரைக்கு அவித்த கொள்ளை அளித்திடுக! சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் யானைக்கு 20 பெரிய உணவுக் கவளங்களை அளித்திடுக! இன்று உங்கள் “சிவலிங்கத்திற்கு” அன்னாபிஷேகம் செய்திடுக! அல்லது அன்னத்தைப் பெரிய சிவலிங்கம் போல் அமைத்துக் கூட்டு வழிபாட்டினை மேற்கொண்டிடுக! தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் அடர்த்தியான சாம்பிராணி தூபம் போடுதல், சமைத்து இறக்குகின்ற ஒவ்வொரு பாத்திர உணவையும் கற்பூர ஆரத்தியுடன் இறைவனுக்குப் படைத்த பின்பே பரிமாறுதல், வாரந்தோறும் திங்களன்று ஸ்ரீஅன்னபூர்ணி தேவிக்கு அன்னத்தை ஆஹுதியாக அளித்து ஹோமம் நிகழ்த்துதல், ஸ்ரீசாகம்பரி தேவிக்குப் பூஜைகளை நிகழ்த்துதல், கங்கை, காவிரி போன்ற புனித நீருடன் கோமேயம் சேர்த்து ஹோட்டலின் அனைத்துப் பகுதிகளிலும் மாவிலைகளால் தெளித்தல், பரிமாறுவோர்க்கு எளிய வடமொழி/தமிழ் மந்திரங்களை/ துதிகளை போதித்து அவற்றை ஜபித்தவாறே உணவைப் பரிமாறச் செய்தல், தினந்தோறும் பாத்திரங்கள், மேஜை, நாற்காலி, கதவுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமமிடுதல், ஹோட்டல் சுவர்களில் இறைப்படங்களை மாட்டித் தினமும் துடைத்துச் சுத்தஞ் செய்து சந்தனம், குங்குமமிடுதல் – இவ்வாறாகப் பல எளிய பூஜை முறைகளைக் கடைபிடித்து வர... இவ்விதழில் குறிப்பிட்டுள்ள அன்னக் குற்றங்களை இனியேனும் செய்யாதிருப்பின் தீவினைக் கர்மஞ் சேராத திருப்பணியாக ஹோட்டல் துறையை எளிதில் மாற்றி விடலாம். வாரமொரு முறை நீங்கள் வாங்குகின்ற தானியப் பொருட்கள், அரிசி, கோதுமை, மளிகைப் பொருட்களை வைத்து தேவார, ஸுக்த மந்திரங்களையோ, ஸ்ரீஅன்னபூரணி அஷ்டகம், ஸஹஸ்ர நாமத் துதிகளையோ ஓதி அவற்றில் புனித சக்தியை ஏற்ற்டுக! தினந்தோறும் ஸ்ரீஅன்னபூரணி தேவிக்கும் ஸ்ரீசாகம்பரி தேவிக்கும் முறையாக பூஜைகள் நிகழ்த்திடில் அன்னக் குற்றங்கள் ஏற்படாது.
அடிமை கண்ட ஆனந்தம் |
சாதாரண வெங்கடராமனாக, பள்ளிச் சிறுவனாய், பெறுவதற்கரிய பெரும்பேறாக, இளம் பிராயத்திலேயே தம் சற்குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடம் வேத, மந்திர, யந்திர, தந்திர, வாமன, சத்சங்க, இறைவழி முறைகளை, கர்ம நிவாரண சாந்தி வழிகளை, பிராயசித்த/பரிகார நெறி முறைகளை உணர்ந்தறியப் பெற்றவரே இன்று தெய்வத் திருவருட் கடாட்சம் நிரம்பப் பெற்றவராய் மலர்ந்து நம்மிடையே குருமங்கள கந்தர்வா என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளாய்ப் பரிமளிக்கின்றார். கரடு முரடான, கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளில், மூச்சுத் திணறும் பனியில் தம் குருவோடு பாரதத்தின் பல பகுதகளில் நடைப்பயணம்! இமாலயம், மானசரோவர், கங்கைப் புறப் பகுதிகளில் அற்புதமான தெய்வீகச் சூழ்நிலைகளில் உன்னதமான கால் நடையாத்திரைகள், சூட்சும சரீரப் பயணம் என அவர்தம் குருநாதர் மனமுவந்து ஊட்டிய உத்தம இறையருட் சூத்திரங்கள் எத்தனையெத்தனை!
ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் குருகுலவாச அனுபூதிகளே இங்கு அடிமை கண்ட ஆனந்தம் தொடராக அரும்புகிறது! அத்தனையும் தாமே நேரில் உய்த்துணர்ந்த குருகுலவாச சம்பவங்கள்! சென்ற இதழ் தொடர்ச்சி....
“ஏன் வாத்யாரே, நீயே போர்ட்டுக்கு (Port) வந்து வெள்ளைக்காரனோட வலியப் போய் பேசறீயே, கல்மண்டபம் அங்காளீஸ்வரி கோயில்ல உங்கிட்ட நாலு வார்த்த பேசறதுக்குப் பணக்காரங்க எவ்வளவு பேர் துடிக்கறாங்க! அதெல்லாம் பூர்வ ஜென்ம பாக்கியிருந்தாத்தாண்டா நான் ஒருத்தரோட பேச முடியும், சும்மா பேசிப் பேசி மத்தவங்க மாதிரிப் பொழுதைப் போக்கறதுக்கு நாங்க ஒண்ணும் பூலோகத்துக்கு வறலைன்னு அடிக்கடி சொல்லுவியே வாத்யாரே!”
“உன் கண்ணுக்கு அவன் வெள்ளைக்காரன்! இங்க பொறந்து Foreign போகணும்னு துடியாத் துடிச்சு அண்ணாமலையைச் சுத்தி சுத்தி வந்த நம்ப புதுக்கோட்டைப் பையன் தாண்டா இந்த ஜென்மத்துல தஸ்புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசிக்கிட்டு அங்க வெள்ளக்காரனாட்டம் பொறந்து அவனயே அறியாம அவன் பிறந்த மண்ண மிதிச்சுட்டுப் போறான். இந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரிஞ்சா தலைதான் சுத்தும்!” – சிறுவன் சற்றே மூச்சுவாங்கினான்!
தான் பேசி மகிழ்ந்து, வாழ்ந்து வருவது ஓர் அற்புதமான, அனைத்தையும் தரவல்ல சித்புருஷர் என்பதை அப்போது அவன் அறிந்தானில்லை! ஆனால் சில வருடங்களுக்குப் பின் “இவர் தான் நம் சற்குரு, இவரைச் சரணடைவதை விட வேறு கதியில்லை“ – என்று அவன் உணரத் தொடங்கிய உடனேயே “ராஜா! என்னோட உடம்பை மறச்சுக்க வேண்டிய நேரம் வந்துடிச்சு” என்று கூறியவாறே பெரியவர் ஸ்ரீஅங்காளி கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார்!
“மத்த மஹானுங்க, சித்தருங்க மாதிரி இவருக்கு ஏதாச்சும் ஜீவசமாதி இருந்தாலாச்சும் பரவாயில்லை, அடிக்கடி போய் தரிசிச்சு சமாதானம் ஆகிக்கலாம்! மனுஷன் இப்படி ஒடம்பயே மறச்சுக்கிட்டா நான் என்ன தான் செய்யறது”, என்று சிறுவன் அங்காளி சந்நிதியில் புலம்புவான்.
சென்னையில் இருந்த போதெல்லாம் “தினமும் 1008 முறை அங்காளி சந்நிதியைச் சுத்தி வந்தால்தான் சாப்பாடு, பிறகே பெரியவரின் தரிசனம்” – என்ற கட்டுப்பாடு வேறு! அங்காளியை வலம் வருகையில் 1008 எண்ணிக்கையில் களைப்பு, தளர்ச்சி காரணமாக நாளை கொஞ்சம் “அட்ஜஸ்ட்” பண்ணிக்கலான் என்று சிறுவன் நினைத்தால் மறுகணம் பெரியவரோ, “ஏண்டா, நைனா! இன்னிக்கு இருநூத்தி மூணு சுத்து கொறயுதே! அங்காளி அதுக்கு வட்டி போட்டாக்க ஆயிரம், ரெண்டாயிரமா arrears ஆயிடும்”, என்று கூறியவாறே கண்களைச் சிமிட்டிக் கொண்டு தூணின் மறைவிலிருந்து வெளிவருகின்ற பெரியவரைப் பார்த்துச் சிறுவன் அசந்திருக்கிறான்! Arrears போன்று பல ஆங்கில வார்த்தைகளை அவர் அநாயசமாக உதிர்ப்பது வேடிக்கையாயிருக்கும்!
“மனுஷன் விடாக் கண்டனாக இருக்கிறாரே, கொஞ்சம் அசந்தால் போச்சு“. என்று சிறுவன் அங்கலாய்க்கும் போதெல்லாம் “கண்ணு! அங்காளிக்குன்னு கால் தேஞ்சு தேஞ்சு நீ கட்டெறும்பு ஆனாக் கூட பரவாயில்லைடா ராஜா! இங்க கோடிக் கணக்குல தேவதைங்க எப்பவுமே சந்நிதியைச் சுத்தி சுத்தி வந்தி கிட்டே இருக்காங்க! சுதை மூர்த்தி! கல் விக்ரஹத்தை விடப் பவர் ஜாஸ்தி! அந்த தேவதைங்க எல்லாம் க்யூ கட்டிகிட்டு இங்கே வரத்துக்கு ஏங்கிகிட்டு இருக்காங்க! அவ்வளவு தெய்வ சக்தி குமிஞ்ச இடமிது! கிடச்ச சான்ஸை விட்டுடாதேடா கண்ணு!“ – என்று புத்திமதி கூறுவார்!
1008 சுத்தில் முக்கால் வாசியிலேயே மிகவும் களைப்புற்றுச் சிறுவன் தளர்ச்சியுற்றுத் தள்ளாடி நடக்கையில் அவன் முன்னே பெரியவர் வேகவேகமாகப் பிரதட்சிணம் வருவது தோன்றும்.... “இவர் எங்கேந்து திடீர்னு வந்தாரு!” என்று எண்ணி ஆச்சரியத்துடன் அவ்ரைத் தொடர்ந்து வேகவேகமாக நடப்பான்..
“நீ முன்னூறு சுத்தும் போதே வந்துட்டேனே”
“இல்லையே, இப்பத்தானே வந்தே வாத்யாரே! நான் இதுக்கு முன்னாடி பாக்கலியே!”
“நீ பாக்கலையா, இல்லாட்டி உன் கண்ணுக்குத் தெரியலியா?”– கண்களில் விஷமம் கொப்பளிக்கப் பெரியவர் கேட்டிட, சிறுவன் நாக்கைக் கடித்துக் கொள்வான்!
தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே, சிறுவனை அற்புதமான தெய்வீகச் சூழ்நிலையில் வளர்த்தார் பெரியவர். நடுவில் ஸ்கூலுக்குப் போயாக வேண்டும். பாடம் படித்துப் பரீட்சை எழுத வேண்டும்! அதெப்படி ஆன்மீகமும் வீட்டு வாழ்க்கையும் ஒத்துப் போகும்! இது தான் சற்குருவின் திருவிளையாடல்! காசி, ராமேஸ்வரம், ஷிர்டி, பூரி, ஹரித்வார் என்று சிறுவன் பெரியவருடன் சுற்றும் போது பள்ளியில் காலாண்டு, அரையாண்டு எல்லாம் ஓடியிருக்கும்! காசியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனில் காலையில் வந்திறங்கியவுடன், “டேய் வீட்டுக்குப் போறதுக்குள்ள அங்காளி கோயில்ல 1008 சுத்து சுத்திட்டு வீட்டுக்குப் போய் ஸ்கூல் வேலையைக் கவன்! ஒழுங்காப் படிக்காம, ஊரைச் சுத்திட்டு, கொறச்ச மார்க் வாங்கிட்டு எம் பேரைக் கெடுக்காதே!” – என்று பெரியவர் பலர் முன்னிலையில் ஸ்டேஷனிலேயே ஒரு வாங்கு வாங்கி விட்டுக் கிடுகிடுவென்று நடந்து சென்று விட்டார்! சிறுவனுக்கு எப்படியிருக்கும்? 30 நாளைக்கு மேல், இரயில், கார், நடைப் பயணமாக வட இந்திய யாத்திரை! ஆனால் இங்கு வந்தவுடன் பெரியவரின் பேச்சு இப்படி!
“வீட்டில் என்ன தண்டனை காத்திருக்கிறதோ?” சிறுவனுக்குக் கவலைகள் கொத்த ஆரம்பித்தன!
“என்ன வாத்யாரே! தெய்வீகம் தெய்வீகம்னு உன்னோட எப்பவுமே சுத்தறேன்! இதுல ஸ்கூல் பாடம் எதுக்கு? பேசாம ஸ்கூலே வேண்டாம், எல்லாத்தையும் விட்டுட்டு உன்னோட வந்துடறேனே!” “ஆங்! நான் ஒண்டிக் கட்டை! எனக்கு வீடு, வாசல் கெடயாது! என் சாப்பாட்டுக்கே நான் ததிகினதோம் போடறேன்! உனக்குத் தீனி போட்டு எனக்கு கட்டுப்படியாகாது! ஏதோ என்னை நம்பி நீ அப்பப்ப(!) கூட வர்றதுக்குக் கூலியா எனக்குத் தெரிஞ்ச கோயில், குளம், மலைய சுத்திக் காட்றேன்! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அரை குறை(!) விஷயங்களைச் சொல்றேன்! மறக்காம பின்னாடி யாருக்கானும் சொல்லிடு! ஆனா ஸ்கூல் விஷயம் ... நீ தான் நல்லாப் படிக்கணும்! டியூஷன், கியூஷன் வச்சு நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்துடு” – பெரியவர் குறும்புத்தனமான புன்னகையுடன் ஒரு லெக்சர் கொடுப்பார்!
அவர் சொன்ன “அரைகுறை” விஷயங்கள் தான் இன்று ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அன்றையச் சிறுவனாம் இன்றைய ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் திருவாய் மொழிகளாக என்றும் குறைவற்ற ஆன்மீக பொக்கிஷமாக நிறைந்து பொங்கி வழிகின்றது! Divinely Perennial River!
“என்ன வாத்யாரே! உனக்கே நியாயமாப்படுதா! திருஅண்ணாமலை கிரிவலம், கோயிலில் சுத்தஞ் செய்யறதுன்னு, திருப்பணின்னு, மாசத்துல பாதி நாள் ஓடிடுது! ஸ்கூலுக்கும் போறது கிடையாது”, என்று சிறுவன் சொல்லத் தொடங்கு முன்னரேயே “இதோ பாருப்பா! இந்தக் கோவணங்கட்டின, பரதேசிக் கிழவனோட சுத்தறது, சுத்தாதது எல்லாம் உன்கையில் தான் இருக்கு! இல்ல வாத்யாரே எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு இப்பவே சொல்லிடு, இந்த நிமிஷத்துல மேலே என்னோட லோகத்துக்குப் போயிடறேன்...”
அவ்வளவுதான் சிறுவன் தடாலென்று அவர் கால்களில் விழுந்திட்டான்!
“இல்லா....வாத்யாரே ஏதோ தெரியாமச் சொல்லிட்டேன்.”
“அந்தப் பாசாங்கெல்லாம் எங்கிட்ட பலிக்காதுடா! ஸ்கூலு, ஸ்கூலுன்னு அடிச்சுக்கிறியே, ஆனா ஆவன்னா படிச்சு என்ன சாதிக்கப் போற! எத்தனை எம்டி, எம்எஸ், எம்ஈ படிச்சாலும் அடுத்த ஜென்மத்துல திருப்பி A,B,C,Dல தான் ஆரம்பிக்கணும்! தெய்வீகத்துல மட்டுந்தாண்டா இந்த ஜன்மத்துல என்ன சாதிச்சியோ அடுத்த ஜன்மத்துல அப்படியே டிரான்ஸ்பர் பண்ணித் தராங்க! இந்த ஜன்மத்துல ஒரு ஆயிரங் கோயில்ல திருப்பணி செஞ்சியா, அந்த புண்ணியத்தை, நீ வேற மாதிரி அதைக் கழிக்காம இருந்தாக்க, அப்படியே லட்டாட்டம் அடுத்த ஜன்மத்துல கொடுத்துடுவாங்க! என்னடா பெரிய படிப்பு! நீ போன மாசம் ஃபுல்லா கங்கைலேயும் இமய மலைலேயும் தியானமும் திருப்பணியும் தானதர்மமும் பண்ணினேன்னு அந்த சரஸ்வதிக்குத் தெரியாதா! நீ படிக்காட்டாக் கூட பாஸ்போட்டு விட்டிடுவாளே அந்த சரஸ்வதி தேவி! என்னடா பெரிய படிப்பு!”
சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. “சற்று முன் தான் ஸ்கூலைப் பத்தி எவ்வளவு ஸீரியஸாகப் பேசினார்! அப்படியே தலைகீழாகப் புரட்டுகிறாரே! ஒரே குழப்ஸ்! ”
.... சிலவற்றை இவர் வேண்டுமென்றே புரிய விடாமல் ஏன் தடுக்கிறார்? தான் யாரென்று தெரிந்து விட்டால்..ஆனால் இதெல்லாம் சிறுவனுக்கு சகஜமாகிவிட்டது! ஏனென்றால் ஸ்கூலுக்குப் போனால் அங்கே எல்லா நாட்களுக்கும் பிரசன்ட் போட்டிருக்கும். கணக்கு டீச்சர், “ஏண்டா போன வாரம் கிளாசுல படிச்சு சொன்னேனே, அப்ப ஒழுங்காத்தானே கணக்கைப் போட்டுக் காமிச்சியே”, என்று கணக்குப் பேப்பரைக் கொடுத்துப் போதாக் குறைக்கு முதுகில் நாலு சாத்து, சாத்துவார்! தெய்வீகத்திற்கான பரிசு இது! வலியில் முணுமுணுத்துக் கொண்டே கணக்குப் பேப்பரைப் பிரிந்தால்...! அவன் கையெழுத்து மாதிரியே அப்படியே..! அவன் வராத நாட்களில் இன்னொரு “வெங்கடராமன்” வந்து பரீட்சை எழுதிச் சென்றிருக்கிறா! Alter-Ego மாதிரியா! இதெல்லாம் பெரியவரின் லீலையா! சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! அந்த “வெங்கடராமன்” எழுதிய பரீட்சை ரிசல்டிற்கு இந்த “வெங்கடராமனுக்கு” அடி, உதைகள்!
வீட்டிற்குப் போனாலோ “ஏண்டா இருபது நாளைக்கு எங்கடா ஊரைச் சுத்தினே”, என்று தந்தை பெரம்பால் “விளாறுவார்” என்று எதிர்பார்த்தால்..... “ஏண்டா, போன வாரம் தானே முழுப் பென்சில் வாங்கிக் கொடுத்தேன்! தொலைச்சிட்டு வந்து நிக்கறதுக்கு வெக்கமாயில்லை! நேத்திக்கு டிபன் பாக்ஸைத் தொலைச்சிட்டு வந்து நின்ன, இன்னிக்கு என்ன போச்சோ...” தொலைப்பதெல்லாம் “அந்த வெங்கடராமன்!” கிட்டும் அடியும், உதையும், பெரப்பம் பழமும் (பெரம்படி!) வாங்கிக் கொள்வதோ இந்த “வெங்கடராமன்!” இதுவும் கோவணாண்டிப் பெரியவரின் லீலைதானே! என்னே ஆன்மீக, லௌகீகக் கலப்படம்! இவ்வாறாக இல்லத்திலும், வெளி வாழ்க்கையிலும், பள்ளியிலும் பெரும் பிரச்னைகளுக்கிடையில் தான் பெரியவர் சிறுவனைப் பக்குவமாக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைத்து சித்புருஷர்களின் தெய்வீகத்தைப் புகட்டினார்! ஓர் அனுபவப் பாடம் ஓராயிரம் புத்தகங்களுக்குச் சமமல்லவா!
ஆமாம், கொல்லி மலையில் சிறுவன் ரசவாத மூலிகையைப் பெற்றதில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று விட்டோமல்லவா? சற்குருவின் கீழ் பெற்ற கோடானு கோடி அனுபவங்களை எப்படி, எவ்வகையில் எதற்குள் விவரிக்க முடியும்? குருகுலவாசம் என்ற ஒன்று தெய்வாம்சமாக அமைந்தால்தான் சற்குருவின் மஹிமையை உணர முடியும்! எவ்வுளவுதான் எழுத்தில் வடித்தாலும், படிக்கும் போது ஏற்படுகின்ற தெய்வீக உந்துதல், பேரின்பப் பெருமகிழ்ச்சி, (Spiritual ecstasy) புத்தகத்தை மூடி, சாதாரண வாழ்க்கைக்கு வந்த உடனேயே அதன் Effect மாறிவிடும்! அந்தப் புனிதமான தெய்வீக நெகிழ்ச்சியை உடலில் நிலை நிறுத்துமளவிற்கும் (Retention of spiritual enlightenment) புனித உடலை, Repository of spiritual bonanza வாக, ஆன்மீக பொக்கிஷப் பெட்டகமாக, நம் உடலை உத்தமமாக்குதல், புனிதமாக்குதல் வேண்டும். இதற்கு வழிவகை செய்வதே கோயில் உழவாரத் திருப்பணிகளும், ஏழை மக்களுக்கான சேவைகளும், தானதர்மங்களுமாகும்! இதைத்தான் பெரியவர் சிறுவனுக்குப் புகட்டினார்!
“இறைவன் படைத்தளித்த உனது தேகத்தை எந்த அளவிற்குப் பிறருடைய நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றாயோ அந்த அளவிற்குத் தெய்வீகமும், இறையருளும் ஒளிமயமாக மிளிரும்” – இதுவே கோவணாண்டிப் பெரியவரின் சதுர்வேதவாக்கு!
அங்காரக சதுர்த்தி |
செவ்வாய்ச் சதுர்த்தி பூஜையில் நீங்கும் துன்பங்கள் ! செவ்வாய் பகவானே வணங்கிய பிள்ளையார்!
நாகங்களை ஆபரணமாக அணிந்த நாக கணபதி! அருகம்புல் அற்புதனே, ஆனந்த வெண்டாமர விநாயகர்!
அங்காரக சதுர்த்தி – செவ்வாயில் வரும் சதுர்த்தி திதி! ஆம், 4.11.1997 செவ்வாய்க் கிழமையன்று சதுர்த்தி திதி வருகின்றது. இன்றே நாக சதுர்த்தி! தூர்வா கணபதி விரதம் என்ற அற்புதமான விரத நாளும் கூட! பிள்ளையார் பக்தர்களுக்கு இன்று கொண்டாட்டம் தான்! இதனை அங்காரக சதுர்த்தி என்றும் அழைக்கின்றார்கள். தட்ச யாகத்தில் பங்கு கொண்ட நவகிரஹாதிபதிகள் அறியாமையினால் தேவர்களைப் போல் தட்சனை ஆதரித்தமையால் ஏற்பட்ட விளைவுகளை நாம் நன்கு அறிவோமே! சிவனின் அம்சமாக ஸ்ரீவீரபத்திர சுவாமி தோன்றி அனைவரையும் துரத்திட, செவ்வாய் பகவான் செய்வதறியாது திகைத்து நின்றார்.! இதுவும் இறைலீலை தான்! ஏனெனில் ஸ்ரீபார்வதியின் வேண்டுகோளின்படி தட்சனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்கப்பட்ட போது அங்கிருந்த ஆட்டுத் தலையே பொருத்தப்பட்டு தட்சனுக்கு ஆத்ம சக்தி அளிக்கப்பட்டது.
தன் தவறுகளுக்கு வருந்திய தட்சன் சிவதோத்திரம் செய்து ஆட்டுத் தலையுடன் சமகம் எனப்படும் வேத மந்திரங்களை ஒலித்தார் என்றும், எனவே தான் சமக மந்திரங்கள் ஆடு கத்துவதைப் போல் “மே....மே....மே...மே...” என்று முடிவதாகச் சொல் வழக்கு ஒன்றும் உண்டு! தட்சனின் உடலுக்கு ஆட்டுத்தலை இணைக்கப்படுமுன் ஆட்டினை வாகனமாக உடைய அங்காரக பகவானின் விருப்பத்தை நாரதர் கேட்டிட, அங்காரகரும் ஏதுசெய்வதென்றறியாது வேதப் பொருளுக்கும் ஆதி மூலமான ஸ்ரீமஹாகண்பதியை தியானித்து வழிபட்டிட இதுவே அங்காரக சதுர்த்தி வழிபாடாயிற்று! ஸ்ரீவிநாயகரும் தனக்கும் ஹோமத்தில் படைக்கப்பட்ட அன்னத்தை அன்னவாகனமாக்கி செவ்வாய் பகவானுக்கு அன்னப் பறவையை வாகனமாக்கினர். ஆடு தட்சனுக்குத் தலையாயிற்று!
நாக சதுர்த்தி :- ஸ்ரீவீரபத்ரரின் அவதார லீலைகளால் தேவாதி தேவர்கள் அணிந்திருந்த நாகாபரணங்கள் கீழே விழுந்து பலருடைய கால்களில் மிதிபட்டமையால் நாக கணங்களும், நாக தேவதைகளும், நாக தேவதாமுர்த்திகளும் வருத்தமடைந்து ஹோமத்திற்கென பிரதிஷ்டையான ஸ்ரீகணபதியைத் துதித்தன, கணபதிப் பெருமானோ, அனைத்து நாகங்களையும் தன்னுடைய திருமேனியில் நாகாபரணங்களாகவும், பூணூலாகவும், தண்டைச் சிலம்புகளாகவும் கிரீடமாகவும் அணிந்து கொண்டார். இவரே நாகாபரண கணபதி! நாக சதுர்த்தியன்று வழிபட வேண்டிய கணபதி! எனவே அங்காரக சதுர்த்தியும், நாக சதுர்த்தியும், தூர்வா கணபதி விரத்துடன் இணைந்து வருகின்ற இந்த அற்புதமான நாளில் நாகங்களைத் தன் திருமேனியில் தாங்கியுள்ள கணபதிக்கு நாகங்களுக்குப் பிரியமான பசும்பால் அபிஷேகஞ் செய்து அருகம்புல்லை கிரீடமாகவும் ஆபரணங்களாகவும் செய்து அணிவித்து வழிபட வேண்டும்.
தூர்வா கணபதி விரதம்
தூர்வா கணபதி விரதம் என்றால் என்ன?
தூர்வம் என்றால் அருகம்புல் என்று பொருள்! அருகம்புல்லை மட்டுமே உண்டு வாழ்வதால் தூர்வாச முனிவர் இப்பெயரைப் பெற்றார்! தூர்வா கணபதி விரத்தினால்தான் தூர்வாசருக்கு மஹரிஷிப் பட்டம் பெறுமளவிற்கு உத்தம தெய்வீக நிலை கிட்டியது! மஹரிஷிகள் பலரும் சாபங்களை அளிக்கும் போது அவர்களுடைய தெய்வீக சக்தி குறைவுபடும் என்பது இறைநியதி! ஆனால் தூர்வாசருக்கோ, சினத்தில் சிவக்கும் சிவப்பழயோக முனிவருக்கோ கோபத்தில் தான் தபோபலன்கள் பல்கிப் பெருகுமென்பது அவருக்குக் கிட்டிய வரம்! ஒரு முறை கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்ய வேண்டுகையில் “முதலில் இந்த யமுனை ஆற்றின் எதிர் கரையில் தவம் பூண்டிருக்கும் பெரியவரான தூர்வாச மாமுனிக்குப் பாத பூஜை செய்து இந்த பட்சணங்களையெல்லாம் அவருக்கு அர்ப்பணியுங்கள்” – என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறிவிடவே, கோபியர்கள் நதிக்கு விரைந்தனர்.
யமுனை நதியோ கிருஷ்ணன் மேலுள்ள கோபத்தில் வேண்டுமென்றே பொங்கியெழுந்திட, வெள்ளம் கரை புரண்டோடியது. யமுனைக்கு என்ன கோபமோ? தன்னை மணப்பதாக வாக்களித்த ஸ்ரீகிருஷ்ணன் இன்னமும் வரவில்லை! மேலும் காளிந்தி நாகமானது ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்வதற்காக பூலோகத்திற்கு வந்தபோது யமுனை நதியில்தான் முதலில் பதுங்கி இருந்தது. காளிந்தி நாகத்தின் விஷ மூச்சு ஜுவாலைகளால் யமுனை நதி துயருற்ற போது, பல கோடி ஜீவன்களின் நன்மைகளைக் கருதி யமுனை தேவியே அவ்விஷத் தன்மையைத் தன் திருமேனியில் ஏற்றுக் கொண்டாள். இதனால் அவளுடைய புனிதமான திருமேனியானது கருநீலமாயிற்று! இதனை நிவர்ப்பிப்பதற்கும் ஸ்ரீகிருஷ்ணன் வரவில்லையே என்ற ஏக்கத்திலும், கோபியர்களின் பால் அன்பு பூண்டமையால் தான் தன்னை ஸ்ரீகிருஷ்ணன் உதாசீனப்படுத்துகிறான் என்றும் மேலும் சினம் கொண்டாள் யமுனா தேவி!
எனவே கோபியர்கள் நதியைக் கடக்க இயலா வண்ணம் யமுனா தேவி வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினாள். இதனைக் கன்டு அஞ்சிய கோபியர்கள் திரும்பி வந்து ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைய, ஸ்ரீகிருஷ்ணனோ புன்னகையுடன் “நீங்கள் அனைவரும் புனிதமான பிரம்மச்சாரியான ஸ்ரீகிருஷ்ணனை உளமாற நம்புகிறோம்”, என்ற அர்த்தம் பொதிந்த மந்திரம் ஒன்றை கோபியர்களுக்கு அளித்து, “இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஜபித்தால் நீங்கள் எளிதில் யமுனையைக் கடந்து விடலாம்”, என்று அருளினார்.
“ருக்மணி, சத்யபாமா, ராதை, ஜாம்பவி போன்ற பலரைத் தெய்வீகத் திருமணம் புரிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணனா பிரம்மச்சாரி?”- என்று எந்த கோபியரும் எண்ணவில்லை! மாறாக ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கே வேதம் போல் சத்தியமானது என்று உறுதியான நம்பிக்கையுடன் அவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்தவாறே மிக எளிதில் யமுனையைக் கடந்தனர். என்னே நம்பிக்கை! என்னே தெய்வ பக்தி!
மறுகரையில் தூர்வா கணபதி விரதம் பூண்டிருந்த ஸ்ரீதூர்வாச முனிவருக்கும் பூஜை செய்து தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களையெல்லாம் அவருக்கு அர்ப்பணித்தார்கள். அவரோ தூர்வா கணபதி விரதம் ஏற்றிருந்தமையால் உண்ணா நோன்பு இருப்பவர். அப்படி உண்டாலும் அருகம்புல்லைத் தான் உண்பார். ஸ்ரீகிருஷ்ணனின் ஆணை என்று கோபியர்கள் கூறியதைக் கேட்டதும் மெய் சிலிர்த்த தூர்வாசர் தனக்களிக்கப்பட்ட பாதபூஜையை ஏற்றுத் தனக்குப் படைக்கப்பட்ட அனைத்து பட்சணங்களையும் ஒன்று விடாமல் உண்டு விட்டார். உண்ட களைப்பில் மெல்ல எழுந்து நடந்து யமுனை நதிக்கரையில் வாய்கொப்பளித்திட...
அருகம்புல்லை உண்டு வாழும் அற்புத மகரிஷி அன்றோ! அருகம்புல்லிற்கு விஷத்தைக் களைகின்ற சக்தி உண்டல்லவா! அவர்தம் உயிரும், உடலும், சதையும், நகமும், எலும்பும், முடியும் அருகம்புல்லின் அற்புத சக்தியைப் பெற்றதன்றோ! அவர்தம் திருவாயிலிருந்து பெய்த நீரின் தெய்வீக சக்தியால் அருகம்புல்லைத் தின்று விஷம் நீக்கும் சக்தியைத் தன் திருமேனியில் கொண்டவருடைய திரு இதழ்களிலிருந்து பொழிந்த நீரின் மகிமையால் யமுனை நதியின் விஷத் தன்மையும் அகன்றதோடல்லாமல் யமுனை தேவியின் கருநீல நிறமும் மாறி அவள் தன்னுடைய சுயமான ஒளிப் பிரகாச வடிவத் திருமேனியைப் பெற்றாள். இது தானே ஸ்ரீகிருஷ்ண லீலை! யமுனா தேவியும் தன்னுடைய செயலுக்காக வெட்கித் தலைகுனிந்து ஸ்ரீகிருஷ்ணனின் மன்னிப்பைப் பெற வேண்டி ஸ்ரீதூர்வாச முனிவரின் பாதங்களைச் சரண்டைந்தாள்..
இதற்கு முன்...வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்ற நதியை மீண்டும் கடக்க வேண்டி கோபியர்கள் ஸ்ரீதூர்வாச மாமுனியிடம் நல்வழி காட்டுமாறு வேண்டிட அவரும், “அருகம்புல்லை மட்டும் உண்டு வாழும் கிருஷ்ண பக்தனான இந்த தூர்வாச முனியின் வார்த்தகளை நம்பிச் செல்லுங்கள்”, என்ற பொருள் பொதிந்த மந்திரத்தை அளித்திட கோபியர்கள் அந்த மந்திரத்தை ஜபித்தவாறே யமுனை நதியின் மேல் நடந்து அதைக் கடந்து சென்றனர். அருகம் புல்லை மட்டும் உண்டு வாழ்வதாகக் கூறிய மாமுனி எவ்வாறு கோபியர்கள் படைத்த பலகார, பட்சணங்கள் அனைத்தையும் உண்டார்? ஸ்ரீகிருஷ்ணனோ தம்மை பிரம்மச்சாரி என்றார்! ஸ்ரீதூர்வாசரோ தம்மை அருகம்புல்லை உண்டு வாழ்பவன் என்று கூறிக் கொள்கின்றார்! இத்தகைய வினாக்கள் கோபியர்கள் மனதில் சற்றும் எழவில்லை! காரணம் ஆழ்ந்த பக்தியும், இறையன்பும் மிகுந்திருந்தால் அங்கு கேள்விக்கு இடமேது? அனைத்தையும் படைத்தவனுக்கு அனைத்தும் சத்தியம் என்பது சாத்தியம் தானே! இவ்வற்புதமான இவ்வற்புதமான நிகழ்ச்சியை ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கியுள்ளோம்! இவ்வாறாக தூர்வா கணபதி விரதத்திற்கு வித்திட்ட தூர்வாச மகரிஷியே இவ்விரத மகிமையை பற்றி விளக்கியுள்ளார். இன்று (4.11.1997) அருகம்புல் ஊறிய நீரை மட்டும் உண்டு உபவாசம் இருத்தல் சிறப்புடையதாகும். நாகங்களை அணிந்த ஸ்ரீவிநாயகரின் தரிசனத்தைப் பெற்ற பின்னர் உணவை ஏற்கலாம். இன்று தூர்வா ஸுக்தம் என்ற அருகம் புல்லைப் பற்றிய வேத மந்திரத்தைத் துதிப்பது மிகவும் விசேஷமானதாகும் நாகங்களை ஆபரணமாக அணிந்த விநாயகருக்கு அருகம்புல் மாலையும் அருகம்புல் கிரீடமும் அணிவித்து தூர்வா ஸுக்த மந்திரங்கள் ஓதி மோதகம் படைத்துத் தானம் செய்து தூர்வா கணபதி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.
தூர்வா ஸுக்தம்
ஸஹஸ்ர பரமா தேவீ
சதமூலா சதாங்குரா|
ஸர்வகும் ஹரது மே பாபம்
தூர்வா துஸ்ஸ்வப்ன நாசினீ|
காண்டாத் காண்டாத் ப்ரரோஹந்தீ
பருஷ: பருஷ: பரி||
ஏவாநோ தூர்வே ப்ரதனு
ஸஹஸ்ரேண சதேன ச
யா சதேன ப்ரதனோஷி
ஸஹஸ்ரேண ஸிரோஹஸி
தஸ்யாஸ்தே தேவீஷ்டகே விதேம
ஹவிஷா வயம்“
மிகவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரமிது! கெட்ட கனவுகளையும் அதன் தீய பலன்களையும் நசித்துவிடக் கூடியது! அருகம்புல்லின் கணுக்களைப் போல் சந்ததிகளைத் தழைத்திடச் செய்யும் அற்புத சக்தியைக் கொண்டது! தூர்வா கணபதி மற்றும் சங்கடஹர சதுர்த்தியில் பசும் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் அருகம்புல்லை வைத்து அதனை விரல்களால் தொட்டவாறு இந்த தூர்வா ஸுக்தத்தை 108 முறை ஓதி, பாலைப் பருகிவர நற்பலன்கள் கிட்டும்.
பலன்கள் :-
1. அங்காரக (செவ்வாய்) சதுர்த்தி, நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம் ஆகிய மூன்றும் சேர்ந்து வருகின்ற இந்த தினமானது மிகவும் அபூர்வமாக அமைகின்ற விசேஷ நாளாகும். எத்தனையோ நாட்களை நாம் பூஜையின்றி வீணே கழித்து விட்டோம். இத்தகைய விசேஷ நாளில் செய்கின்ற பூஜைகள் தாம் பல நாட்களின் பூஜைகளுக்கான பலன்களை மிக எளிதில் தந்து விடுகின்றன. எனவே இத்தகைய அற்புதமான பூஜைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விடுபட்ட பல ஹோமங்களின் பலாபலன்களைத் தரவல்லது.
2. தேள், நட்டுவாக்களி, பாம்பு போன்றவற்றால் கடிக்கப்பட்டவர்கள், இத்தகைய பூஜைகளைக் கடைபிடித்தால் விஷ ஜந்துக்களின் பயம் அகல்வதோடு பலவிதமான தோஷங்களும் தீரும். மேலும் சுற்றிலும் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால் அஞ்சி வாழ்கின்றோருக்கு பாம்பைப் பற்றிய பயம் தணிந்து நல்வழி ஏற்படும். விஷ ஜந்துக்களும் அண்டாது.
3. இன்று நாக சதுர்த்தியும் சேர்வதால் நாக தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடங்கல்கள், சந்ததியில்லாமைக்கு இப்பூஜைகள் தக்க நாக தோஷ பரிஹாரங்களாக அமைகின்றன.
4. பல குடும்பங்களில் கணவன், மனைவியரிடையே உள்ள சிறு சந்தேகங்களே பெருவினைகளாக மாறி, குடும்பத்தில் சூறாவளியை உருவாக்கிவிடும். இவர்கள் மேற்கண்ட விரதத்தை மேற்கொண்டிடில் குடும்பத்தில் அமைதி உண்டாகி ஒன்று சேர்வர்.
5. இது அங்காரக சதுர்த்தி, மேலும் வியாபார இடங்களுக்கு அதிபதி செவ்வாய் பகவான்! கடுமையான போட்டியுள்ள உள்ளோர் இவ்விரதத்தைக் கடைபிடித்து வருவார்களேயானால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஏற்பட்டுத் தொழிலில் முன்னேற்றம் அடைவர்.
6. முறைப்பெண், முறை மாப்பிள்ளை உறவுடையோர் திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட அனைத்தும் நன்முறையில் நடைபெறும். காரணம் அருகம்புல்லினால் நிகழ்த்தும் பூஜைக்கு “கணு-உறவை” பலப்படுத்தும் சக்தி உண்டு.
முச்சந்தி விநாயகர் |
முச்சந்தி விநாயகர் – சில ஆன்மீக விளக்கங்கள்
சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான ஆன்மீக வழிமுறை
விபத்துக்களைத் தவிர்க்க, நாலு ரோடு, முக்கூட்டு ரோடு, சந்திப்புகளில் பிள்ளையாரை வைத்திடலாமா?
வீட்டிற்கு எதிரில் வீதி இருந்தாலோ, முச்சந்தியில் வீடு இருந்தாலோ வீட்டின் முன் ஸ்ரீவிநாயகரைப் பிரதிஷ்டை செய்யலாமா?
மேற்கண்ட வினாக்களுடன் எங்களுக்குப் பல கடிதங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அனைத்து விக்னங்களையும் களைபவர் விநாயகரே! ஆனால் பிள்ளையார் சிலையை மட்டும் வைத்து விட்டால் போதுமா? விநாயகரை வைத்தால் தினமும் விளக்கேற்றுவதற்கும், பிரசாதம் படைப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்! கோயிலில் ஒரு வேளை நைவேத்யத்தை விட்டுவிட்டால் எத்தகைய சாபங்கள் ஏற்படும் என்பதை நாமறிவோம். அதைப்போல், சாலைகளின் சந்திப்பிலோ முச்சந்தியிலோ பிள்ளையாரை வைத்துவிட்டு விளக்கேற்றாமல், நைவேத்யமும் படைக்காமல் விட்டிடில் இது தெய்வ குற்றமாகிவிடும். ஏனெனில் எந்த ஒரு தெய்வ மூர்த்தியும், கல்சிலையாகவோ, விக்ரஹமாகவோ ஆவாஹனம் ஆகிவிட்டால் அதற்குரிய வழிபாட்டை மேற்கொண்டே ஆக வேண்டும்.
அக்காலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம தேவதை, எல்லை தேவதை மூர்த்திகளைச் சுதையில் பிரதிஷ்டை செய்திருப்பர். முனீஸ்வரர், ஐயனார், கருப்பண்ணசுவாமி, எல்லையம்மன் என இன்றைக்கும் பெரும்பான்மையான கிராமங்களில் பெரிய சுதை உருவங்களிருக்கும். கிராம தேவதை, எல்லை தேவதைதானே என்று சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்! ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, பிள்ளையார் போன்ற தெய்வமூர்த்திகளின் அம்சங்களைப் பூண்டவர்களே கிராம, எல்லை தேவதா மூர்த்திகள், ஸ்ரீமகா விஷ்ணுவின் அம்சமே ஐயனார் எனக் கூறுவதும் உண்டு. ஈஸ்வரனின் அம்சமே ஸ்ரீமுனீஸ்வரர் ஆவார். சுதை மூர்த்திகளுக்கும், கல் சிலைகளுக்கும் உலோக விக்ரங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டெனினும் தெய்வ சக்தியில் பலவித ஆவாஹன கோணங்களும் உண்டு. சுதையாலான மூர்த்திகளுக்குப் பிரத்யட்ச சக்தி அதிகம். இதற்கு வாயுபிரமாண சக்தி என்று பெயர்.
அதாவது பெரும்பாலான கிராம, எல்லை தேவதா மூர்த்திகள் ஆறு அடிக்கு மேலான உயரத்தைக் கொண்டு கம்பீரமாக விளங்குவதாலும் வெயில், மழையைத் தாங்கி நிற்பதாலும் இவர்கட்கு ஆகாச, வாயு பூத சக்திகள் அபரிமிதமாக உண்டு. இம்மூர்த்திகளே பூவுலகில் ஒளியால் வரும் சக்தி, திசையால் வரும் சக்தி, ஒலி விரைவு, வேக அம்சங்களை நிர்ணயிக்கின்றனர். எனவே அவரவர் கிராமத்தில் உள்ள கிராம, எல்லை தேவதை வழிபாட்டை முறையாக நிகழ்த்தினால் அனைத்து சாலை விபத்துகளையும் எளிதில் தவிர்த்து விடலாம். கல் சிலைகளிலும், உலோக விக்ரகங்களிலும் உள்ள தெய்வீக சக்திகள் மந்திர, தந்திர, இயந்திர சக்திகளால் நிலை நிறுத்தப்படுகின்றன. ஆனால் சுதை மூர்த்திகளுக்கு இத்தகைய கடுமையான நியதிகள் கிடையாது. அன்பு, பக்தி எளிய மந்திரங்கள், கற்பூர தீபம், சாம்பிராணி தூபம், எளிய பிரசாதப் படையல், இறைத் துதிகள் போன்றவற்றின் மூலம் சுதையாலான தேவதா மூர்த்திகளின் அனுக்கிரகத்தை எளிதில் பெற்றிடலாம்.
இடி, மின்னல் என்று நாம் கருதுகின்றவையெல்லாம் இத்தகைய வானம் பார்த்த சுதை மூர்த்திகளுக்காக இந்திர பகவான் செய்கின்ற பூஜையாகும். ராமநாதபுரம் அருகே உள்ள உப்பூர் விநாயகரும், திருச்சி வெக்காளியம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர், திருமானூர் விஷ்ணுமூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகள் ஆகாச தீர்க்க சக்தியைப் பெற்று வெயில், மழையைத் தாங்கி நிற்கின்ற மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். எல்லை தெய்வத்தையோ, கிராம தெய்வத்தையோ முறையாக வணங்காது அவ்வூரில் உள்ள எந்தக் கோயில் மூர்த்தியை வணங்கிடினும் அது முழுமையான பலனைப் பெற்றுத் தராது என்பதை உணர்ந்திடுக. எனவே சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கான ஆன்மீகத் தீர்வாக அமைவது கிராம, எல்லை வழிபாட்டை மீண்டும் புத்துணர்வோடு கடைபிடிப்பதாகும். எல்லை தேவதைகளின் அனுகிரகம் இருப்பின் அங்கே எமதூதுவர்களும் கூட வர அஞ்சுவர்.
முச்சந்தி விநாயகர்
வீதியை நோக்கியோ அல்லது வீதிகளின் சங்கமத்தில் வீடு இருந்தாலும் தோஷங்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையே. இதற்குப் பிராயச்சித்தமாக முச்சந்தியில் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்வதும் சிறப்புடையதே. ஆனால் இவ்வாறு வைக்கப்படும் பிள்ளையாருக்கு முறையாக நாள்தோறும் தீபம் ஏற்றிப் பிரசாதம் படைத்து வர வேண்டும். ஏதோ பிள்ளையாரை நட்டு வைத்தோம், அவரே தோஷங்களை நிவர்த்தி செய்வார் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. மரம் வைத்தவன் தானே தண்ணீர் ஊற்ற வேண்டும். குழந்தையைப் பெற்றால் போதுமா, அதனை வளர்த்து ஆளாக்குவது பெற்றோர்களின் கடமை அல்லவா? இதற்காகவே அக்காலத்தில் சாலை ஓரங்களிலும் குறிப்பாக சாலை சந்திப்புகளிலும் அரசு, ஆல், வேம்பு, அத்தி, வில்வம், இலுப்பை போன்ற மூலிகை சக்தி நிறைந்த மரங்களை நட்டு வளர்த்தனர். இவற்றில் கோடிக்கணக்கான தேவதைகள் எப்போதும் வாசம் செய்வதாலும் மேலும் தெய்வீக நடைப் பயணம் புரிகின்ற ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், ஸ்ரீபரமச்சார்யார் போன்ற மகான்கள் இளைப்பாறுவதற்காகத் தங்குவதால் மேன்மேலும் புனிதமடைகின்ற இம்மரங்கள் எத்தகைய தீய விளைவுகளையும் தடுக்கும் சக்தியைப் பெற்றவை. இதுவும் சாலை விபத்தைத் தடுக்கும் ஆன்மீக வழிமுறைகளுள் ஒன்றாகும்.
எல்லாவற்றையும் விட, சாலை சந்திப்புகளில் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறுவதைவிட வாகன அதிபர்கள், ஓட்டுனர்கள், பயணிகள் ஆகியோருடைய பூஜா சக்திகள் குறைவாக இருப்பதால் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என்பது உண்மையாகும். எந்த ஒரு வாகனத்தையும் எப்படி எடுக்க வேண்டும். புறப்படும் போது எத்தகைய மந்திரங்களைத் துதிக்க வேண்டும். எந்த திசைக்கு எந்த தெய்வ மூர்த்தியை வணங்கிட வேண்டும் என்ற விளக்கங்களோடு வாரசூலை என்னும் சிறப்பான பிரயாண ஆன்மீக வழிகாட்டி முறையை அறிந்திடல் வேண்டும். இவ்வாறாகப் பல எளிய ஆன்மீக முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை அறவே தவிர்த்து விடலாம்.
விபத்தைத் தவிர்க்கும் கோமுக வழிபாடு
கோமுக தீர்த்த வழிபாடு பற்றிய எம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பல முறை விளக்கியுள்ளோம். கோமுகம் என்பது கோயில் மூலஸ்தானத்திலிருந்து/ சந்நிதியிலிருந்து அபிஷேக நீர் வெளிவரும் வழியாகும். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலிலோ, கிருஷ்ணன் கோயிலிலோ புதன் ஹோரை நேரத்தில் (காலை 11 மணி முதல் 12 வரை, மாலை 6 முதல் 7 வரை) கோமுகம் வழியே வரும் அபிஷேக நீரை ஒரு செம்பு/வெள்ளி/ மரப்பாத்திரத்தில் பிடித்து அதனை பஸ், கார், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்களின் மீது தெளித்து வந்திட, விபத்துகளைத் தவிர்த்திடலாம்.
2. சிவபெருமானின் வாகனம் நந்தி! ஸ்ரீவிஷ்ணுவின் வாகனம் கருடாழ்வார்! எனவே திங்கள் அன்று ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பச்சரிசிக் காப்பிட்டும், வியாழன் அன்று ஸ்ரீகருடாழ்வாருக்கு முழுத் தாமரைப் பூக்களையும் சார்த்திர வர இதுவே சிறந்த ரட்சையாக அமைகின்றது.
3. செவ்வாய் பகவான், வாகனத்திற்குரிய கிரகாதிபதியாக விளங்குவதால் செவ்வாய்க் கிழமை அன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரங்களைச் சார்த்தி அவற்றை ஏழைகளுக்கு அளித்து வந்தால் வாகனங்கள் சிறப்பாக இருக்கும்.
4. சாலைகளின் சந்திப்புப் பகுதியில் பிள்ளையாரை வைத்துத் தினந்தோறும் மூன்றுவேளை வழிபாட்டினைத் தவறாது செய்து வந்தால் அப்பகுதியில் விபத்துக்களைக் கண்டிப்பாகத் தவிர்த்திடலாம். பிள்ளையாரை தினசரிப் பூசையின்றி வைத்துவிட்டு வருதல் கூடாது.
5. வீதியின் எதிரில், மூன்று வீதிகள் இணையும் முச்சந்தியில் வீடோ, கடையோ இருப்பின் தோஷங்கள் நிச்சயமாக உருவாகின்றன. இதற்கான பரிஹாரங்களுள் ஒன்றாக முறையான பூஜைகளுடன் பிள்ளையாரை இல்லத்திலோ, தெரு முனையிலோ வைத்திடில் இது தோஷங்களை நிவர்த்தி செய்து சிறப்பான பலன்களைத் தரும். தமிழ்நாடெங்கும் குறிப்பாக சென்னை, மதுரை போன்ற நகர்ப்பகுதிகளில், சுவற்றில் ஒரு சிறு மாடத்திற்குள், கம்பி வலைக் கதவினுள் சிறிய ஒரு பிள்ளையாரை வைத்து அப்படியே விட்டுவிடுகிறார்கள். இது தவறானதோடு “ஆவாஹன ஹத்தி தோஷம்” என்ற சாபமும் சேர்கின்றது. தினந்தோறும் மூன்று வேளை பூஜை செய்து, உணவும் படைத்தால் தான் தெய்வீக சக்தி நிலை பெற்றுப் பலன்களைத் தரும். சிறிய பிள்ளையாருக்கு நித்ய பூஜை தேவையில்லை என்று எண்ணுவது தவறு.
ஊர்ப் பலகைக்கும் ஆன்மீக சக்தி உண்டு!
ஒவ்வொரு ஊரினையும் தெரிவிக்கும் பெயர்ப் பலகைக்கு மகத்தான சக்தி உண்டு. இதன் மேல் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டி மறைத்து விட்டால் இதுவும் சாலை விபத்திற்கு வழிகோலும். எவ்வாறெனில், உதாரணமாக பிள்ளையார்ப்பட்டி என்ற பெயர்ப் பலகையை அதன் வழியே செல்கின்ற எத்தனை ஆயிரம் மக்கள் படிக்கின்றனர்? ஒவ்வொரு முறையும் இதைப் படிக்கும் போது அது ஒரு நாமாவளியாக ஆகின்றதல்லவா? எனவே அப்பெயர்ப் பலகையானது. தோத்திரப் புத்தகத்திற்கு ஈடான தெய்விக சக்தியைத் தருகிறது. இதனால் அப்பகுதியில் இறைக் கதிர்கள் பரிணமிப்பதால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. எனவேதான் அக்காலத்தில் நிலவியபடி அந்தந்த ஊரின் கோயில், மூலமூர்த்தி, எல்லை/கிராம தேவதா மூர்த்தியின் பெயரை ஒட்டி, ஊர்ப் பெயர் அமைவதால் அதைப் படிக்கின்ற எழுதுகின்றபோது, தெய்வார்ச்சனையாக மாறி அருள்புரிகின்றது. இவை தவிர பஸ், லாரி போன்ற வாகனச் சொந்தக்காரர்களும், ஓட்டுநர்களும் (Drivers), பயணிகளும் கடைபிடிக்க வேண்டிய எளிய பிரயாண வழிபாட்டு முறைகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைபிடித்தால் சாலை விபத்துகளை நிச்சயமாகத் தவிர்த்து விடலாம்.
துளசி திருமணம் |
ஸ்ரீதுளஸி தேவி திருக்கல்யாணம்
ஸ்ரீதுளஸிச் செடியும் ஒரு கோயிலே! துளசிச் செடியை தரிசித்து வெளிச் செல்லுதல் சிறந்த நல்சகுனமாகும். ஸ்ரீதுளஸியின் திருமணநாள் வழிபாடு, இல்லத்தில் கெட்டிமேள வைபவத்திற்கு வழிவகுக்கும். ஸ்ரீதுளஸி தேவியின் அவதாரம் பற்றிப் பலவிதமான புராணங்கள் உண்டு. ஸ்ரீகிருஷ்ண துளஸி, ஸ்ரீ நீலதுளஸி, ஸ்ரீமாதவ துளஸி, ஸ்ரீ லக்ஷ்மி துளஸி என துளஸி தேவியர் பலருண்டு. மற்ற தேவியரின் திருக்கல்யாண வைபவத்தைவிட ஸ்ரீதுளஸி தேவியின் விவாகத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் தரப்படுவது ஏனெனில் இதில் மணாளனே மங்கையைத் தானே வரித்துத் திருமணம் செய்து கொண்டதாம்! அதாவது ஸ்ரீமஹாவிஷ்ணுவே துளஸி தேவியைத் தடுத்தாட் கொண்டு அரவணைத்துத் திருமணம் செய்து கொண்டமையால், ஸ்ரீதுளஸி தேவியின் திருமண நாள், பெண் குலத்திற்கு குறிப்பாக கன்னிப் பெண்களுக்கு மிகவும் புனித நாளாக விளங்குகின்றது.
தற்காலத்தில் ஆண்டுதோறும் திருமண தினத்தன்று (Wedding Day) புது ஆடைகள் அணிந்து ஓட்டலிலும், சினிமா அரங்குகளிலும், பீச்சிலுமாக ஆயிரக்கணக்கான ரூபாயை வீணாகச் செலவழிக்கின்றோம். இது தேவைதானா? வெறும் தாலிச் சரடை மட்டும் அணிந்துள்ள ஏழைப் பெண்ணிற்கு இன்று பொன் மாங்கல்யம் அளித்து மகிழ்ந்திடுக! இதுவே திருமண நாளைக் கொண்டாடும் சிறந்த ஆன்மீக முறையிலொன்றாகும்! ஆண்டாள் திருக்கல்யாணத்தன்றும் ஸ்ரீதுளஸி தேவி விவாக நாளன்றும் சில குறித்த வழிபாடுகளையும் தான தர்மங்களையும். மேற்கொண்டால் உண்மையில் திருமண வாழ்வானது எவ்வித சச்சரவுமின்றி இனிதே அமையும்.
ஸ்ரீதுளஸி தேவியின் திருக்கல்யாண வைபவமானது சித்புருஷர்களின் கிரந்தங்கள் அருள்கின்றபடி தெய்வீகச் சுவை ததும்பும் வண்ணம் இங்கு எடுத்தியியம்பப்படுகிறது. பாற்கடலில்தான் முதன் முதலில் ஸ்ரீலட்சுமி அவதாரம் பெற்றதாக எண்ணுகின்றோம். இதற்கு முன் பல புராண நிகழ்ச்சிகளின் தொடர்பாய், ஸ்ரீலக்ஷ்மி தேவி தன்னைத்தானே மறைத்துக் கொண்டாள். ஒரே புராண நிகழ்ச்சி பல்வேறு கற்ப காலங்களில் நிகழ்கின்றது! இவ்வகையில் பல கோடிக் கற்பங்களுக்கு ஒருமுறையாக பாற்கடல் பன்முறை கடையப் பெற்றுள்ளது! கிருதயுகம் , திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகமென நான்கு யுகங்களும் மாறி மாறி வருகையில் அந்தந்த யுக சம்பவங்கள் சில மாறுதல்களுடன் இறைலீலையாக மீண்டும் நிகழ்கின்றன. பல சுயம்புத் திருமேனிகளும் அர்ச்சாவதார மூர்த்திகளும் உள்ளே புதைந்து மறைந்து அந்தந்த யுகத்தில் ஸ்வயம் பிரகாசமாய் வெளித் தோன்றுகின்றன!
பாற்கடலில் பல்வேறு யுகங்களில், பல்வேறு கற்பங்களில் ஸ்ரீலக்ஷ்மி தோன்றும் போது பலவித ஸ்ரீலட்சுமி நாமங்களை ஏற்று அருள்பாலிக்கின்றாள்! இவ்வாறாகவே ஸ்ரீஐயப்பன், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீபிரதோஷ நாயகர், ஸ்ரீராகு, கேது மூர்த்திகள், ஸ்ரீசந்தோஷி மாதா, ஸ்ரீஆயுர்தேவி, ஸ்ரீநற்பவி, ஸ்ரீஹேரம்ப விநாயகர், ஸ்ரீதத்தாத்ரேயர் போன்ற தெய்வமூர்த்திகளின் வழிபாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்து ஜீவன்களுக்கு அளவற்ற அருட்செல்வத்தைப் பெற்றுத் தருகின்றன!
ஸ்ரீதேவி பாகவதத்திலும் மற்றும் பல புராணங்களிலும், ஸ்ரீதுளசி தேவியின் அவதாரங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே விளக்கியுள்ளபடி அவையாவும் ஸ்ரீகிருஷ்ண துளசி, ஸ்ரீவித்யா துளசி, ஸ்ரீதர்ம துளசி, ஸ்ரீஆநநா துளசி, ஸ்ரீயஸஸ்வினி துளசி என பலவிதமான துளசி தேவிகளின் அவதாரிகைகளைக் குறிப்பதாகும். உதாரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு மிகவும் உகந்த கோபிகையாய் ஸ்ரீபிருந்தாவனத் துளசி பகவானுக்கு சேவை புரிந்திட, இதைக் கண்டு அறியாமையினால் கோபம் கொண்ட கோபியர்கள் அவளுக்கு சாபமளித்திட ஸ்ரீதுளசி தேவி, தர்ம துளசியாக அவதாரம் பெற்றனள்.
சிவக் குழந்தையாக மலர்ந்த துளசி தேவி ஆதிதுளசி தேவியாவாள் பாற்கடலைக் கடைந்திருக்கையில் காமதேனு, ஐராவதம், கற்பக மரம், கௌஸ்துப மணி, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை, ஸ்ரீமகாலெட்சுமி, சந்திரன் போன்றோர் தோன்றினர். இறுதியில் அமிர்தம் தோன்றிடவே ஸ்ரீமகாவிஷ்ணு பரமானந்தம் அடைந்திட பேரின்பப் பெரு வெள்ளமாக அவருடைய ஆனந்தக் கண்ணீர், ஸ்வர்ணத் திவலைகளாக அமிர்தத்தில் கலந்தன. பரம்பொருளாம் பரந்தாமனின் பச்சை மாமலையானின் பவளத் திவலைகள் கூடிய அமிர்தத்திலிருந்து ஸ்ரீதுளசி தேவி பச்சை நிறப் பரஞ்சோதித் தாயாராய்த் தோன்றினாள்.
கௌஸ்துப மணியை அணிந்து கொண்டு ஸ்ரீலெட்சுமி தேவியைத் தம் திருமார்பில் வைத்த ஸ்ரீமகாவிஷ்ணு, துளசி தளங்களை ஆரமாக்கி சிரசு முதல் பாதம் வரை அணிந்து கொண்டார் . எனவே ஸ்ரீமகாவிஷ்ணுவின் விஸ்வரூபத்தையே அணுவுக்கு அணுவாய் ஒவ்வொரு அம்சத்திலும் பரிபூர்ணமாக ஐக்கியமாகி இருக்கின்ற தாயாரே ஸ்ரீதுளசி தேவியாவாள். இது எந்த அவதார மூர்த்திக்கும் கிட்டாத, பெரும் பேறாகும். மணாளனாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவே, ம(ன)ணங் கொண்டு மாலையிட்ட மங்கள தேவியே ஸ்ரீதுளசி தேவியாதலின், இத்திருமண நிகழ்ச்சி நடந்த துளசி கல்யாண தினத்தில் கன்னிப் பெண்களோ அவர்களுடைய தாய்மார்களே துளசி பூஜையை முறையாகச் செய்திடில் கன்னியர்க்குத் திருமண பாக்கியம் எளிதில் கைகூடும், தீர்க்க சுமங்கலித்வம் கிட்டும்!
துளசியின் வேரில் ஸ்ரீமகாவிஷ்ணு குடிகொண்டுள்ளார். வாழையைப் போல் துளசி இலை, பூ, வேர்க்கட்டை அனைத்துமே மக்களுக்குத் தெய்வீகத்தில் பயன்படுகின்ற மிகவும் புனிதமான பொருட்களாகும். இன்று துளசி கல்யாண தினத்தன்று (12.11.1997) துளசி மாடத்திற்கு/செடிக்குப் பச்சரிசி மாக்கோலமிட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, குறைந்தது 108 முறை வலம் வருதல் வேண்டும். துளசியை வலம் வருகையில் ஜபிக்க வேண்டிய துதியாவது:
“யந்மூலே ஸர்வ தீர்த்தாநி யன்மத்யே ஸர்வ தேவதா:
யதக்ரே ஸர்வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்”
திருமண பாக்கியத்தையும், தீர்க்க சுமங்கலித்வத்தையும் தரக்கூடிய அற்புதமான மந்திரம்! துளசிச் செடியின் முன் ஒரு தட்டில் புஷ்பங்களை வைத்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், திவ்யப்ரபந்தம், பெருமாள் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் போன்ற பெருமாளுக்குரிய துதிகளை ஓதி ஸ்ரீதுளசி தேவிக்குப் ப்ரீதியான பால் பாயாசம் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்திடவும். நெல்லிக் கனியைப் படைத்தல் மிகவும் விசேஷமானது. துளசி இலைகளை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, துவாதசி திதி மாலை, இரவு நேரங்கள் என்றவாறாக சில தினங்களில்/ நேரங்களில் பறித்தல் கூடாது. இத்தகைய விளக்கங்களைத் தக்க சற்குருவை/பெரியோர்களை நாடிப் பெற்றிடவும் துளசி இலைகளைப் பறிக்கும் போதோ, வாங்கும் போதோ சொல்ல வேண்டிய மந்திரம் :
“துளஸீ அம்ருத ஸ்ம்பூதே ஸதா த்வம் கேசவப்ரியா!
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ ஸோபனே!!
ஒவ்வொருவரும், வீட்டில் துளசிச் செடி வைத்து தினமும் காலை மாலை பச்சரிசி மாக்கோலமிட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து தினமும் 12 அல்லது 21 முறை வலம் வருதல் வேண்டும்.
சிவக் குழந்தையே, ஸ்ரீஆதி துளஸி தேவி
ஸ்ரீபரமேஸ்வரனின் குழந்தையே ஸ்ரீஆதி துளஸி தேவியென சித்புருஷர்களின் அவதார புராணம் விவரிக்கின்றது! ஆலகால விஷத்தைத் தம் திருவாயில் சிவபெருமான் ஏற்றபோது ஸ்ரீபார்வதி தேவி தம் திருக்கரங்களால் ஈசனின் கண்டத்தின் கீழ்ப் பகுதியைப் பிடித்திட, மேல் பகுதியில் ஆலகால விஷம் தங்கிட, சிவனே திருநீலகண்டரானார். அம்மையின் ஸ்பரிசம் பெற்ற அப்பனின் திருக்கண்டத்திலிருந்து ஓர் அழகிய தேவ மூர்த்தி தோன்றிட அவளே துளஸி தேவியாவாள்! துளஸிதேவி தந்த குளிர்ச்சியினால் தான் ஆலகாலத்தை உண்ட சிவபெருமானின் வெம்மை தணிந்தது! பாற்கடலில் உருவான துளஸி தேவி பரமேஸ்வரனின் திருநீலகண்டத்தில் தான் துளஸி தேவியாய் மலர்ந்தாள். அமிர்தத்தை உண்ண அமர்ந்த தேவர்களுக்கு அமிர்தம் எளிதில் கிட்டவில்லை. கலசத்தை ஏந்தி வந்த ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியிடமிருந்து அவசர கோலத்தில் சில அசுரர்களும் தேவர்களும் அதைப் பிடுங்கி ஓடியலைந்திட.... இவ்வாறு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போகக் காரணம் என்ன?
தமக்கு அமிர்தம் கிடைக்க ஆலகால விஷமுண்டு அருள்பாலித்த சிவபெருமானை தேவர்களும் அசுரர்களும் தமக்கு அமிர்தம் கிட்டிய ஆனந்தத்தில் மறந்து விட்டார்கள்! பாற்கடலின் அடியில் மத்தைத் தாங்கி நின்ற ஸ்ரீவராஹ மூர்த்தியையும் அவர்கள் மறந்தனரே! அவர்கட்கு அமிர்தப் பிரசாதத்தை நைவேத்யமாகப் படைத்துப் பின்னரன்றோ அவர்கள் அருந்த வேண்டும்! தேவபூஜைகளின் சிறந்து விளங்கும் தேவர்களே இவ்வாறு செய்திடலாமா? பல மஹரிஷிகளும், தேவர்களுக்கு அவர்களுடைய பெரும் பிழையை இடித்துரைத்திட இதன் பிறகு தேவர்களும் அசுரர்களும் அமிர்தக் கலயத்தை ஸ்ரீவராஹ மூர்த்தியாம் விஷ்ணுவிற்கும் ஸ்ரீபரமேஸ்வரனுக்கும் படைத்திட, ஸ்வாமியும் அதனை ஏற்று, சில துளிகளை துளஸி தேவிக்கு அளித்திட, துளஸி தேவி, திருத்துழாய் தேவியாய், ஸ்ரீலட்சுமியின் திருஅவதாரமாய்க் காட்சியளித்தாள். ஈஸ்வரன் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு அமிர்தப் பிரசாதத்திற்குப் பதிலாக ஸ்ரீதுளஸி தேவியையே தந்து மணமுடித்து வைத்தார்! இவ்வாறு ஸ்ரீதுளஸிதேவியை சிவக்குழந்தையெனப் போற்றுவர். இதுவும் ஒரு கற்பத்தில் நிகழ்ந்ததாகும்! ஸ்ரீஆதி துளஸிதேவி அவதாரமிது!
அமுத தாரைகள் |
1. பிராயசித்தம் இங்குதான்! :- 5, 7, 12 போன்ற நட்சத்திர மற்றும் (Star Hotels) சொகுசு ஹோட்டல் அதிபர்கள் முதல் அனைத்து விதமான உணவு விடுதிகளின் நிறுவனர்களும் தங்களுடைய தொழிலில் ஏற்படும் அன்னக் குற்றங்களுக்கான நிவர்த்தியைத் தருவதே 13.11.1997க்கான திருஅண்ணாமலை கிரிவலம்! உலகமெங்குமுள்ள ஹோட்டல்களில் நிகழும் (இவ்விதழில் விவரிக்கப்பட்டுள்ள) அன்னக் குற்றங்களுக்கு அக்னித் தலமான திருஅண்ணாமலையில் தான் அன்னாபிஷேகப் பௌர்ணமியில்தான் பரிகாரம் கிட்டும். எனவே இத்திருநாளில் அருணாசல கிரிவலத்துடன் தங்கள் ஹோட்டல் மூலமாகப் பெருமளவில் அன்னதானம் செய்து இத்தகையோர் அன்னதோஷங்களுக்குப் பிராயசித்தம் பெற வேண்டுகிறோம்.
2. திருமணத்தைக் கூட்டும் தர்பை கிரீட பூஜை
கேட்டை நட்சத்திரத்தின் போது, S வடிவில் தர்பைகளை வைத்துக் கட்டி கிரீடம் செய்து சிவலிங்கத்திற்கு அணிவித்து நந்தியாவட்டைப் பூவால் அர்ச்சித்துவர சீதனங்கள், பணவிஷயமாகத் தடைபட்டுள்ள திருமணங்கள் சுபகரமாக முடிவைத் தரும். இவ்வித பூஜைக்கு “மௌர்ய பீலிக அஞ்சன சாந்தி” என்று பெயர். விவாகத் தடைகள் எனப்படும் திருமணத் தடங்கல்களுக்கு இப்பூஜை நல்ல நிவர்த்தியைப் பெற்றுத்தரும்.
3. சென்ற மருமகள் திரும்பிவர... :- கொய்யாப்பழத்துடன் சிறிது உப்பைச் சேர்த்திட நன்றியைப் பெருக்கும் ஆன்மீக சக்தி அதற்குரித்தாகிறது. ஆந்திரப் பகுதிகளில் கல்யாணச் சாப்பாட்டில் முதலில் உப்பையோ, ஊறுகாயையோ பரிமாறும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு, எவரும் கொய்யாமல் தானே பழுத்து உதிரும் கொய்யாப் பழத்திற்கு சாந்த சக்தி அதிகமாக இருக்கும். கொய்யாப் பழத்தில் ஊறுகாய் செய்து சந்திரபகவானுக்குரிய தானியமான உளுந்து சேர்ந்த தோசை/ஊத்தப்பத்துடன் ஸ்ரீகற்பக விநாயகருக்குப் படைத்து அன்னதானமளித்து வர, பிரிந்து சென்ற மருமகள் இல்லந் திரும்புவாள்!
4. பில்லி, சூன்யம் அகல..... சில மூலிகைகளுக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தியோடு சில தீய குணங்களையும் நீக்கும் தெய்வீக சக்தி உண்டு! “வேப்பிலை அடித்தல்” இவ்வகையைச் சேர்ந்ததே ஆகும். முள்ளுமுருங்கை இலைகளால் அடை செய்து செவ்வாய்க் கிழமையன்று ஸ்ரீஆஞ்சநேயருக்குப் படைத்து வர, வீட்டில் உள்ள பில்லி, சூன்ய, காத்து, கறுப்பு போன்ற துர்சக்திகள் பறந்தோடும்.
5. கேட்டையர்க்கு நல்திருமணம் கை கூட... கேட்டை நட்சத்திரக்காரர்கள்
புதன் – புத ஹோரையில் – ஸ்ரீதத்தாத்ரேயர் வழிபாடு/ஹோமம்
வியாழன் – குரு ஹோரையில் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி பூஜை/ ஹோமம்
வெள்ளி – சுக்ர ஹோரையில் – ஸ்ரீகாமாட்சி வழிபாடு/ ஹோமம்
செய்து வர எவ்வித வாழ்க்கைப் பிரச்னைகளும் தீரும், திருமணத் தடங்கல்கள் நீங்கி சுபமான மணவாழ்வு கிட்டும். புதன் – புதஹோரை நேரம் ; வியாழன் – குருஹோரை நேரம் ; வெள்ளி – சுக்ர ஹோரை நேரம் | காலை 6-7; பகல் 1-2. இரவு 8-9.
6. தீய வழக்கங்கள் நீங்கிட....
எள் தானியமே தோஷ நிவர்த்தியைத் தரக்கூடியது என்றாலும் மோர் மிளகாய்ப் பிரியரே ஸ்ரீசனீஸ்வர பகவான்! இது கருதியே திவசத்தில்/சிராத்தத்தில் விஷ்ணு இலையில் சனி மூலையில் மோர்மிளகாய் வைக்கும் பழக்கமும் சில குடும்பங்களில் உண்டு! தான உணவுகளில் மோர் மிளகாய்க்கு மிகுந்த மகத்வம் உண்டு. இதனைச் சிறிதே கடித்து உண்டிடில் ஆயுர்வேத, சித்த வைத்யமும் ஆகின்றது! ஸ்ரீசனீஸ்வர பகவான் ஸ்ரீசாகம்பரியை வழிபட்டு ஆயுள்காரகனாகத் திகழ்கின்றார்! புகை, பொடி, புகையிலை, மது போன்ற தீய வழக்கங்களுக்கு மதிகெடுதலே காரணமாகும்! மதிகாரனாகிய சந்திர பகவானுக்கு வெண்மையும் உளுந்தும் உரித்தானதொரு தக்க சுப கிரஹங்களின் பார்வையிலும் இணைப்பிலும் சந்திர, சனி கிரஹக் கூடுதல் அம்சங்கள் நல்ல புத்தியைத் தரும்! கெட்ட பழக்கங்களிலிருந்து தங்கள் கணவன்மார்களை / பிள்ளைகளைத் திருத்த மோர் மிளகாயைப் பொடிசெய்து நல்லெண்ணெய் கலந்து (உளுந்து) இட்லியுடன் சேர்த்து திங்கள், சனிக்கிழமை அன்று தானம் செய்திட சந்திர சனி கிரஹ ப்ரீதியின் பலனாக நல்வழி பிறக்கும்.
7. தர்பை நீரால் தணியும் நோய்கள்
தர்பையை கங்கை/காவிரி போன்ற புண்ணிய நதி தீர்த்தத்தில் வைத்து ஸ்ரீஆதிசங்கரருடைய ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க மந்திரத்தை ஜபித்து, இத்தீர்த்தத்தால் கேட்டை நட்சத்திரத்தில் சிவலிங்கத்தை அபிஷேகித்து வர சுவாச நோய்கள் தணியும்! முருகப் பெருமான் சிவனை திருச்செந்தூரில் இறைவனை வழிபட்டு ஆதிசங்கரர் தம் சுவாச நோய்க்குத் தீர்வைப் பெற்றார்.
8. வயிற்று நோய்கள் தீர....
லட்டூகம் என்பதே பூந்தியாகும். அம்பிகைக்குப் ப்ரீதியானது! கடலைமாவுக் கலவையுடன் சர்க்கரை ஜீரா சேர்த்து செய்யப்படுவதே அங்கூரா பூந்தி! காசியில் தீபாவளியன்று ஸ்ரீஅன்னபூரணிக்கு அங்கூரா பூந்தியினால் பல தேர் வடிவங்களைச் செய்து படைத்து மக்கள் ஆனந்தமடைவர். சனிக்கிழமையில் ஸ்ரீஅன்னபூரணியின் அம்சம் பூண்ட ஸ்ரீகோனி அம்மனுக்கு (கோயம்புத்தூர்) அங்கூரா பூந்தியைப் படைத்து ஏழைகட்குத் தானம் செய்து வந்திட தீராத வயிற்று வலி / வயிற்று நோய்கள் தீரும்.
திருஅண்ணாமலை – கார்த்திகை தீபப்பெருவிழாவில் மகத்தான அன்னதானம்
வ்யோமநாத சித்தர், மலப்புழுசித்தர், குப்பைச் சித்தர், சுருசோதன மஹரிஷி, ரிஷிசுமந்தான் ரிஷி, சடையப்ப சித்தர், ஜடாமுனிச் சித்தர் போன்ற சித்புருஷர்களைப் போல், ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள், இறைப் பெருஞ்ஜோதியின் இறைத் தூதுவர் போல் என்றும் வாழும் ஏகாந்த ஜோதி! காலத்தைக் கடந்த கற்பக தீபம்! அவர்தம் அற்புதத் திருவடிச் சிஷ்யராம் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் குருவின் ஆணையாக, கடந்த பல ஆண்டுகளாக திருஅண்ணாமலையில் கார்த்திகையில் அன்னதான உற்சவத்தை நடத்தி வருகின்றார்கள். திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பிரமோற்சவமே கார்த்திகை தீபப் பெருவிழாவின் அன்னதானமாகும். கோடானு கோடி சித்தர்கள் கூடுகின்ற குதூகலத் திருவிழா! பலகோடி சித்தர்களும், மஹரிஷிகளும், யோகியரும், ஞானியரும் மனித ரூபத்தில் அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற ஆனந்தப் பெருவிழாவே கார்த்திகை தீபப் பெருவிழா! லட்சோபலட்ச மக்கள் கிரிவலம் வருகையில் அவர்களுடைய உடலில் அவரவருடைய பல்லாயிரம் தலைமுறையைச் சார்ந்த பித்ருக்கள் சூட்சுமமாகப் புகுந்து அவர்களும் கிரிவலம் வரும் பேரருளைப் பெறுகின்றனர். எனவே கிரிவலம் வரும் ஓர் அடியார்க்கு உணவிட்டால் அவர்தம் தேகத்தில் பெருஞ் சுடராய்ப் புகுந்து நிற்கும் பித்ரு தேவர்களும் அதனை இறைப் பிரசாதமாக ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர். ஏன், உங்களுடைய முன்பிறவிகளின் கர்மவினை பாக்கியாக உங்களுடைய பித்ருக்களுக்கே அன்னமிடுகின்ற பாக்யம் கிடைத்தற்கரிய பேறு அல்லவா! எங்களுடைய ஆஸ்ரம அன்னதானம் பல தனிச் சிறப்புகளைக் கொண்டது! சமையல் பணி, பாத்திரங்கள் கழுவுதல், ஆஸ்ரம துப்புறவுப் பணி போன்ற சேவைகளுக்கு எவரையும் அமர்த்திடாது அடியார்களே ஜாதி, மத, இன, குல பேதமின்றித் தங்கள் குடும்பத்தினர்களுடன் அனைத்து விதமான பணிகளையும் சற்குருவின் ஆணையாக ஏற்று பதவி, அந்தஸ்து, கௌரவம் பாராது மனப்பூர்வமாக அன்னதான இறைப்பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு புறம் அபிஷேக ஆராதனைகள்! மறுபுறம் ஹோம, யாக, வேள்விகள்! பிறிதோரிடத்தில் நாமசங்கீர்த்தனம்! மற்றோரிடத்தில் வடமொழி/தமிழ்மறைப் பாராயணம் – இத்தகைய தெய்வீகச் சூழ்நிலையில் உத்தம சற்குருநாதரின் அருட்கட்டளைக்கிணங்க, இறையருட் சுரக்கும் புனிதமான கோட்பாடுகளுடன் அன்னம் தயாராகிறது! ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அறியாதோர்க்காக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கப்பட்டுத் தயாராகும் உணவு! இதனால் அன்னதானம் பெறுவோர்க்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி எளிதில் கிட்டுகிறது!
இத்தகைய மகத்தான அன்னதான வைபவத்தை நன்கு நடத்திட ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாசகர்களும், இறைச் செல்வர்களும், பக்திமான்களும், அடியார்களும், மனித நேயப் பண்பாளர்களும் பொருளுதவி தந்து உதவிடும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பௌர்ணமியும் அன்னாபிஷேகமும் – தின மாறுதல் விளக்கம்
13.11.1997 இரவு 10.30 முதல் 14.11.1997 அன்று இரவு 7.41 வரை திருக்கணித முறைப்படிப் பௌர்ணமி திதி அமைகின்றது. நம்முடைய திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில், சித்தர்களின் பூஜாவிதிகளின்படி பௌர்ணமி திதி உச்சமாக உள்ள இரவு நேர தினமே பௌர்ணமியாகக் கொண்டாடப்படுகிறது. கோயில்களில் காலை, மதிய, மாலை நேர பௌர்ணமி பூஜைகளைப் பொறுத்துப் பௌர்ணமி தினம் அமைவதாலும், வாக்கியப் பஞ்சாங்க முறை நேரங்கள் கையாளப்படுவதாலும், பௌர்ணமி தின வித்யாசம் ஏற்படக் காரணமுண்டு. அவரவர் ஊரில் உள்ள கோயில் முறைப்படிப் பௌர்ணமி தினத்தை அறிந்து கொள்க.., 13.11.1997ல் பௌர்ணமி பூஜையும் அன்னதானமும் சிறப்புடையது! அன்னாபிஷேகத்தை 13.11.1997 அல்லது 14.11.1997 அன்று அந்தந்தக் கோயில் முறைப்படி நிகழ்த்திடலாம்.
கூடா நாட்கள்
கூடா நாட்கள் எனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களில், கரிநாட்கள், இராகு காலம், எமகண்டம் போன்று சுபகார்யங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். 29.6.1997 ; 19.1.1998 , 16.2.1998 போன்றவை கூடா நாட்களாதலின் இந்நாட்களில் எவ்வித சுபகாரியங்களும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நாட்களில் அறியாமையினால், திருமணம், சீமந்தம், கிரஹப்பிரவேசம், அலுவலக மாற்றம், கடன் கொடுத்தல் / வாங்குதல் போன்றவை நடந்திருப்பின் / நிகழவிருப்பின் பல துன்பங்களே ஏற்படும். தக்க சற்குருவை நாடிப் பிராயசித்தம் பெற்றிடுக! .
ஞாயிறு – பரணி , திங்கள் – சித்திரை , செவ்வாய் – உத்திராடம் , புதன் – அவிட்டம் , வியாழன் – கேட்டை, வெள்ளி – பூராடம் , சனி – ரேவதி
இவ்வாறாக மேற்கண்ட நாளும், நட்சத்திரமும் சேரும் நாட்களே கூடாநாட்கள் ஆகும். நவம்பர் -1997ல் கூடா நாட்கள் இல்லை..
நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ தான தருமம்/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிகையுடன் கடைபிடித்திடில்..குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்மவினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேராவண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
நாள் | தான/ தர்ம / வழிபாடு முறைகள் |
நிவாரண பலன்கள் |
1.11.1997 |
கோமாதாவாகிய பசுவிற்கு அகத்திக் கீரையளித்தல் |
அடிவயிறு சம்பந்தமான நோய்கட்கு நிவர்த்தி |
2.11.1997 |
சந்திரன் என்ற பெயர் (ராமச்சந்திரன், சிவச்சந்திர etc…) உடையோர்க்கு உதவி... |
மாலையில் சந்திர தரிசனம் - அலுவலக /இல்லத்தில் மனசாந்தி கிட்டும். |
3.11.1997 |
“ந”வில் தொடங்கும் பெயருடையோர்க்கு ஆடைதானம் - 24மணி நேரமும் கேட்டை நட்சத்திர சக்தியுள்ள அபூர்வமான நாள்! |
பண உதவி கிட்டும். |
4.11.1997 |
அங்காரக சதுர்த்தி – இவ்விதழில் விளக்கியுள்ளபடி செய்திடுக.... |
இவ்விதழில் அற்புத விளக்கங்கள் |
5.11.1997 |
பெற்ற தாய்க்கு/தாயை நிகர்த்தவர்க்குப் பச்சை நிற ஆடை தானம் |
ஆயுள் விருத்தி |
6.11.1997 |
இன்றிலிருந்து ஆறுநாள் ஷஷ்டி விரதம் |
கர்பப்பை சம்பந்தமான நோய்கள் தீரும். |
7.11.1997 |
ஏழை மாணவ, மாணவியர்க்கு டானிக்குகள், மருந்துகள் அளித்தல். |
தானமளிப்போரின்..குழந்தைகளின் பிடிவாதம் அடங்கி பாடத்தில் கவனம் கொள்வர். |
8.11.1997 |
பெருமாள் கோயிலில் பச்சரிசி மாக்கோலம் இடுதல்... |
இல்லறச் சண்டைகள் ஓயும். |
9.11.1997 |
கோனி அம்மன் (கோவை) கோயிலில் எலுமிச்சை அன்னதானம் – இதுவரை மறைத்த ரகசியத்தை அம்மனிடம் மானசீகமாகக் கூறிட |
பெருத்த மன நிம்மதி கிட்டும்.. “கோணல் மனது கோனியிடம் நாணும் ஆதியொன்பதில்”- சித்தர் பரிபாஷை. |
10.11.1997 |
எழை பிரம்மச்சாரிகளுக்கு ஊறுகாயுடன் அன்னதானம் |
கடன்கள் தணியும். |
11.11.1997 |
பாம்புப் பிடாரனுக்கு உதவி |
நல்ல செய்தி வரும். |
12.11.1997 |
துளசிச் செடிக்கு மஞ்சள், குங்குமமிட்டுப் பூஜை மேலும் விளக்கங்கள் இவ்விதழில்... |
திருமணம் பிராப்தி |
13.11.1997 |
சந்திர பகவானுக்கு வெள்ளை நிற ஆடை சார்த்தி வெண்ணிற உணவு படைத்தல்... |
குழந்தைகளின் பிணி நிவர்த்தி |
14.11.1997 |
பௌர்ணமி... |
இவ்விதழில் அருளியபடி... |
15.11.1997 |
ஏழைக் குழந்தைகளுக்கு லட்டு தானம் |
வீட்டில் அடம்பிடிக்கும் பிள்ளைகள் நல்வழி பெறுவர். |
16.11.1997 |
காவல் துறை/ இராணுவத் துறையைச் சேர்ந்த கணவனையிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி |
மனக்குழப்பங்கள் நீங்கும். |
17.11.1997 |
கருவேப்பிலைப் பொடி சாதம் தானம் |
பேரன், பேத்தியர் நலம் பெறுவர். |
18.11.1997 |
விஷ்ணுபதி... |
இவ்விதழில் அருளியபடி... |
19.11.1997 |
ஏழைப் பயணிகளுக்கு /யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவி |
வெளியூர்க் கடன்கள் வசூலாகும். |
20.11.1997 |
தமிழ்/வடமொழி மறை ஓதுவோர்க்கு உதவி |
மன ஏமாற்றங்கள் தணியும். |
21.11.1997 |
ஏழை ஆசிரியர்களுக்கு உதவி |
கண் நோய்கள் தணியும். |
22.11.1997 |
ஸ்ரீஎமபகவான் உள்ள தலங்களில் (திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம்) எள் கலந்த அன்னதானம் |
தீய/அச்சுறுத்தும் கனவுகள் நீங்கும். |
23.11.1997 |
எளிய வாஸ்து பூஜை செய்திடுக... |
ஸ்ரீலட்சுமி கடாட்சத்திற்கு வழிவகுக்கும். |
24.11.1997 |
பள்ளிகளுக்குக் காற்று வசதி – ஜன்னல் அமைத்தல், Fan அளித்தல் . |
சுவாய நோய்கள் (ஆத்மா, மூச்சுத் திணறல்) தணியும். |
25.11.1997 |
புளியோதரை தானம் |
கால் சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். |
26.11.1997 |
ஸ்ரீதத்தாத்ரேய பூஜை – மூன்று வண்ண வகையில் அன்னதானம் |
விடை காணாத பிரச்னைகளுக்கு புதிர்களுக்கு/கணக்கு , வழக்குகளுக்குத் தெளிந்த முடிவு கிட்டும். |
27.11.1997 |
இன்று கோயிலில் தெற்கு திசையில் நெய் தீபமேற்றிட |
அகால மரணமடைந்தோர் பற்றிய பீதி/பயம்/ மரண பயம்/ பிரேத அச்சம் தீரும். |
28.11.1997 |
சிவனுக்கு ஆறுகால வழிபாடு |
எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். |
29.11.1997 |
ஊனமுற்றோருக்கு உதவி |
அலுவலகப் பிரச்னைகளுக்கு எதிர்பாராத முறையில் நல்ல முடிவு ஏற்படும். |
30.11.1997 |
கங்கை தீர்த்தத்தை ஏழைகளுக்கு அளித்தல்.. |
மனைவியுடன் உள்ள சச்சரவுகள் தீரும், மனத் தெளிவு கிட்டும். |
விசேஷ தினங்கள் – நவம்பர் 1997
4.11.1997 – அங்காரக சதுர்த்தி, நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதநாள்
12.11.1997- ஸ்ரீதுளஸி தேவி கல்யாண வைபவம்
13.11.1997 – பௌர்ணமி நாள் – இன்று கிரிவலம் சிறப்புடையது .இன்று இரவு 10.30 முதல் மறுநாள் (வெள்ளி) இரவு 7.41 வரை பௌர்ணமி திதி.
16.11.1997 – விஷ்ணுபதித் திருநாள் (இவ்விதழில் விளக்கம் காண்க)
ஓம் ஸ்ரீ குருவே சரணம்