அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

இராயபுரம் அங்காளி

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் கல்மண்டபம், இராயபுரம்
சென்னை இராயபுரம் கல்மண்டபம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயம் மிகச் சக்தி வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது.இவ்வம்மனைப் பக்தியுடன் தரிசிக்கும் பக்தனுக்கு முக்தி நிச்சயம். இவ்வாலயத்தில் இரகசியங்கள் உண்டு.
கதிரவன் உதிக்கும் வங்கக் கடலை நோக்கிச் சிம்ம வாஹனத்தின் மீதமர்ந்து மணிமுத்துச் சிரிப்புடன் புவனங் காக்கும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை இவ்வாலயத்தில் தரிசிக்கத் தக்க முறை உண்டு.
ஆலயத்தின் வாசலில் நுழைந்ததும் இடப்புறம் உள்ள ஸ்ரீசொல்கேட்டார் பிள்ளையாரை முதலில் தரிசிக்க வேண்டும். இவர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஸ்ரீதீர்த்த பாதேஸ்வரர் என்னும் மஹான் சமாதி கொண்டுள்ளார். நம்குறைகளை எளிதில் தீர்த்து வைத்து, நாம் கேட்டதைக் கொடுக்கும் சொல்கேட்டார் பிள்ளையாரை அம்மஹானின் தியானத்துடன் வணங்கிப்பின் துவஜஸ்தம்பம் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, ஸ்ரீமதுரை வீரனையும், ஸ்ரீபாவாடைராயனையும் வணங்கி, அம்மன் வாயிலில் இரு துவார பாலகிகளைக் கண்டு உத்தரவு பெற்று கலியுகக் காளி அருள்மிகு அங்காள பரமேஸ்வரியை மெய்யன்போடு வணங்க வேண்டும், அம்பாளின் ஏக சக்திக்குக் கட்டுப்பட்ட பலகோடி சித்தர்கள், தேவதைகள் பிரபஞ்சம் முழுவதிலும் உண்டு.

அம்மனின் வலப்புற துவார பாலகிக்கு முதல் வலத்தூணில் ஆனந்தத் தாண்டவ சாட்சியாய் விளங்கும் ஆனந்த விநாயகரைத் தரிசித்துக் கொள்ள வேண்டும். இத்தூணிலேயே மஹான் சுத்த பிரம்மர் சமாதி அடைந்துள்ளார். இதையடுத்த சுற்றில், வலுவான வாழ்வையளிக்கும் ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்பிகையை வணங்க வேண்டும் இவ்விடத்திலேயே வஜ்ஜிர பாத சித்தர் என்னும் மஹானின் திருச்சமாதி உள்ளது. அடுத்து நின்றருளும் அம்மன் ஸ்ரீதீர்க்கஞான அம்பிகை ஆவாள். வேண்டிய வரத்தை இல்லையென்னாமல் கொடுக்கும் சக்தி உடைய இவ்வம்மன் இருக்கும் இடத்தில் தீர்க்க ஞானி என்னும் மஹானின் சமாதி உள்ளது.
தென்மேற்கில் உள்ள ஸ்ரீவியாக்ரபாத மஹா கணபதி பக்தர்களின் வாக்கு, சத்தியம் நிலைபெற வரந்தரும் ஐயனாக அமர்ந்துள்ளார். தன்னைத் தியானிப்பவர்களுக்கு வாக்சுத்தம் கிட்டச் செய்திடும் ஸ்ரீவியாக்ரபாத சித்தர் சமாதி இவ்விடமே உள்ளது.
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியின் நேர்பின்னே ஸ்ரீலோக ரக்ஷக சித்தர் சமாதியான இடத்தில் ஸ்ரீலோக ரக்ஷக ஸர்வேஸ்வரி நின்றருள்கிறாள். பெரியபாளையத்தில் அருளும் ஸ்ரீபவானித் தாயின் சக்தியைப் பெற்ற இவள், வாடிய உள்ளத்திற்கு வதங்காத வளத்தைக் கொடுக்கும் இளகிய மனம் படைத்தவள். இவளுக்கெதிராக உலக சக்தியே திரண்ட கோலமாக, மஹாசக்தியாக ஸ்ரீமூலாம்பிகை அமர்ந்துள்ளாள். கற்புக்கரசியாம் ஸ்ரீதிலோத்தமைத் தாய், மாங்கல்ய பாக்கியத்தைப் பரிபூரணமாக அளிக்கும் காந்த ஸ்வரூபிணியாக ஆதிகாந்த மூல அங்காள பரமேஸ்வரியான இவ்வம்பிகையிடத்தில் பக்திகொண்டு இவ்விடத்தில் பூரணத்துவம் எய்தினாள்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அற்புத முருக பக்தர்களாக வாழ்ந்த முருகையன், முருகாம்பிகை, முருக தும்பிகை ஆகிய இரு மனைவியரோடு தெய்வீகமாக வாழ்க்கை வாழ்ந்து; ஸ்ரீமுருகபெருமானுக்கு உகந்த இடமான இங்கு, வடமேற்குத் திசையில் திருமுருகனுடன் ஒன்றிய இடம் இதுவே., இங்கு முருகன் திருமணக் கோலத்துடன் வள்ளி, தெய்வானையோடு காட்சி தருகிறான். எனவே இங்கு ‘முருகையா, முருகையா’ எனப் போற்றி வணங்குதல் சிறந்தது. தம்முடைய வல்வினை எளிதில் நீங்க,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!     எனப் பாடித் துதிக்க வேண்டும்.
இதற்கடுத்து உள்ள ஸ்ரீபைரவி பிராம்ராம்பிகை, வேண்டுபவருக்கு மூளை சம்பந்தமான நோய்களை அகற்றி அருள்பவள்.
அடுத்து ஸ்ரீதுர்கையை ‘திருஅண்ணாமலைக்கு அரோஹரா‘ என முழங்கித் துதிக்க வேண்டும். ஆத்ம சுத்திக்கு ஜோதியாய் நிற்கும் இத்துர்கை உள்ள இடத்தில் ஸ்ரீஜோதிபுரீஸ்வர சித்தர் சமாதி அடைந்துள்ளார்.
இவ்வாலயத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான இரகசியங்கள் உண்டு. இவற்றை சற்குருவின் அருளுடன் உய்த்துணர வேண்டும்.

ஸ்ரீஉக்கிர ப்ரத்யங்கிரா தேவி

கும்பகோணம் அருகே திரு நாகேஸ்வரத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சிவன் கோயிலுள்ளது. இத்திருக்கோயிலையடுத்து உக்ரஹப் பிரத்யங்காரா தேவி சுதை ரூபத்தில் எழுந்திருளி பக்தர்களை மிகிழ்விக்கிறாள்., ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீஆதிபராசக்தியை ஸ்ரீகாளி ரூபத்தில் வழிபட்ட சித்த புருஷராவார். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அம்சமான இத்தேவி (உக்ரஹப் பிரத்யங்காரா) தீய சக்திகளிடமிருந்து நன்மக்களைக் காப்பதற்காகவே அவதாரம் பூண்டவள். அப்படியானால் செந்நிற நாக்கு வெளித் தொங்க பல்வகை ஆயுதங்களுடன் பயங்கர ரூபத்தில் தோற்றமளிப்பது ஏன்? ஸ்ரீகாளி தேவியின் இத்தகைய வடிவம் தீ்ய சக்திகளை வென்று நல்லோர்களைக் காப்பாற்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே ஆகும். ‘தீய சக்திகள் இத்தகு பயங்கர வடிவைக் கண்டு அஞ்சுமா’ என்ற கேள்வி எழலாம். கலியுகத்தில் ஸ்ரீகாளி, ஸ்ரீமுனி, ஸ்ரீஐயனார் போன்ற தெய்வ ரூபங்களைக் கண்டு தீயவர்கள் அஞ்சுவதைக் காண்கிறோம். தீய எண்ணங்கள் பெருக்கெடுக்கும்போது தீயசக்திகளாக உருவெடுக்கின்றன. அத்தீயசக்திகளைச் சம்ஹாரம் செய்வதற்காகவே ஸ்ரீமுருகப் பெருமான் சூரசம்ஹார அவதாரம் எடுத்தது போல, ஸ்ரீஆதிபராசக்தியும் ஸ்ரீஉக்ரஹப் பிரத்யங்காரா தேவியாக உருவெடுத்து அசுரகுணம் பொருந்திய தீயவர்களை அழிக்கின்றாள்.

காயத்ரீயில் உத்தம காயத்ரீ என்று ஒன்று உண்டு. இதைத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சித்த மூல காயத்ரீ – சித்தர்கள் விரும்பினால் மட்டுமே சொல்லித் தருவர். நதிமூல காயத்ரீ – 12 ஆண்டுகள் சூரிய நமஸ்காரம் செய்திடில், ஓடும் நதியில் குளிக்கும்போது தலையில் ஓலைச் சுவடி வந்து தட்டும்.

இந்தப் பிரத்யங்காரா தேவியின் திருக்கோயிலின் முன்புறத்தில் அமைந்துள்ள குளக்கரையில் அற்புத தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு ஆலமரம் உள்ளது. ஒரே கிளையில் ஐந்து விதமான இலைகளையுடைய இந்த அபூர்வ ஆலமரத்திற்கு பஞ்ச பூத விருட்சம் என்று பெயர். இந்த ஆலமரம் போல வில்வமரம், வேம்புமரம், அரசமரம் போன்ற மரங்களிலும் ஐந்து வகையான இலைகளையுடைய பஞ்சபூத விருட்சங்களுண்டு! இத்தகைய தெய்வீக விருட்சங்கள் பல சித்த புருஷர்களால் மேலுலகங்களிலிருந்து மக்களின் நலன் கருதி பூமிக்கு எடுத்து வரப்பட்டவையாகும்.
ஸ்ரீஉக்ரஹப் பிரத்யங்காரா தேவியின் திருக்கோயிலின்பால் அமைந்துள்ள இந்த பஞ்ச பூத ஆலமரமானது ஸ்ரீகாளி தேவியின் முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. எனவே, ஏவல், பில்லி , சூனியம், தீவினைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த அற்புத விருட்சத்தைத் தரிசித்து இதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டால் அதிஅற்புதப் பலன்களைப் பெறலாம்.
ஸ்ரீகாளி தேவி பலகோடி லோகங்களிலும் விரவி நிற்கும் தன் பக்தர்களை, அசுர குணத் தீயசக்திகளிடமிருந்து காப்பதற்காகப் பரிவாரத்துடன் வெளிச்செல்வாள் அல்லவா? அச்சமயங்களில் தன் முழுஅவதார சக்தியினையும், இந்த பஞ்ச பூத ஆல விருட்சத்தில் இட்டுச் செல்கின்றாள்
எனவே ஸ்ரீகாளி தேவிக்குரித்தான அனுக்ரஹ சக்திகளையும் இந்த விருட்ச தரினமே தரவல்லதாகும்.
நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சக்திகட்கு ஆட்பட்டுத்தான் மந்திர சக்தி தேவதைகள் பணிபுரியும்.. எனவே அனைத்து விதமான நல்ல மந்திரங்களும், துர்வினைகளுக்கான மந்திரங்களும் பஞ்ச பூதசக்திகளுக்கு ஆட்பட்டவையே. பஞ்சபூத சக்திகளுடன், அவற்றின் பிறப்பிடமான ஸ்ரீபராசக்தியின் அம்சம் ஒன்று சேர்ந்து பரிணமிப்பதால் எத்தகைய துர் வினைகளும் இந்த ஆலமர தரிசத்தைக் கண்டதும் அகன்று தேவியின் அனுக்ரஹம் கிட்டும். எனவே தீவினை கொண்ட மந்திரவாதிகள் இக்காளி தேவியைக் காண்பதற்கே அஞ்சி நடுங்குவர்.
செவ்வாய்கிழமை, பௌர்ணமி திதிகளில் இத் தேவியின் அருளும், ஆல விருட்சக் கடாட்சமும் பல்கிப் பெருகி, வழிபடுவோர்க்கு சகல துன்பங்களையும் நீக்கி நிவாரணம் அளிக்கும்.

தனக்கு மிஞ்சிய தர்மம்

தன் தகுதிக்கும் மிஞ்சித் தான தர்மம் செய்வதையே தனக்கு மிஞ்சித் தானம் செய்தல் என்று பெரியர்கள் அருளியுள்ளனர்.
ஒருமுறை சித்ரகுப்தர் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் சுக்ர ஹோரையில் ஸ்ரீமஹா லக்ஷ்மியை பக்திசிரத்தையுடன் பூஜித்து வந்தமையால் பொன்னும், பொருளும், நவரத்னங்களையும் இமயமலையென விரிந்த அளவில் செல்வத்தையும் பெற்றார். எடுக்க எடுக்கக் குறையாத ஸ்ரீலக்ஷ்மிகடாட்சத்தால் கிட்டிய செல்வத்தைத் தனக்கென கடுகளவும் பயன்படுத்தாது பூலோகத்திலுள்ள இரண்டு திருக்கோயில்களிலும் தான தருமமாக வாரி வழங்கிடவே விண்ணளாவும் புண்ணியத்தைப் பெற்றனர்.

மதிக்கும்போது மகானாகவும், மதிக்காதபோது மிருகமாகவும் மாறி நடப்பதே மனித இயல்பு.

அளவறந்த புண்ணியமும் அகம்பாவத்தைத் தானே தரும்! தான தருமத்தில் தன்னை மிஞ்சியோர் எந்த் லோகத்திலுமில்லை என்று சித்ரகுப்தர் கர்வங் கொண்டார். அவருக்குப் பாடம் புகட்ட விரும்பிய ஸ்ரீமஹாவிஷ்ணு சித்ரகுப்தரை பிரம்மாவிடம் ஒப்படைத்து,, “பூலோகத்திலுள்ள இரண்டுகோடி திருக்கோயில்களிலும் தான தருமங்கள் செய்தமையால் பிரபஞ்சத்திலேயே அதிக புண்ணிய சக்தியைச் சித்ரகுப்தன் பெற்றுள்ளான். அதற்குரித்தான தெய்வீக பயனாக அனைத்து ஜீவ்ன்களின் கர்மவினைகளுக்கேற்ப பாவ புண்ணியங்களை நிர்ணயித்து அதைக் கணக்கெழுதும் தெய்வீக சக்தியை இவனுக்கு அளிப்பாயாக!” என்று வரமருளினார்.
மிகுந்த ஆனந்தத்துடன் சித்ரகுப்தர் தன் பணியைத் தொடங்கினார். மேலே பாற்கடலில் ஸ்ரீமஹாவிஷ்ணு புன்னகை செய்ய ............
திருஅண்ணாமலை திருக்கோயிலின் முன்  ஒரு  பிச்சைக்காரன் நின்று கொண்டிருக்க, அவனருகே கை கால்கள் இல்லாத முடவன் பிச்சை கேட்க, முதல் பிச்சைக்காரன் தன் திருவோட்டைக் கவிழ்த்து அதிலிருந்து 10 பைசாவை முடவனுக்கு அளித்தான்.
“10 பைசாவை வைத்து என் செய்வது? கஞ்சி வாங்குவதற்கே நாலணா ஆகுமே!” முடவன் பரிதாபமாகக் கேட்டான்.
முதல் பிச்சைக்காரன் சற்றும் சளைக்காமல் தன்அருகில் இருந்த மற்றொரு பிச்சைக்காரனிடம் 15 பைசா கடன்வாங்கி முடவனுக்களித்தான்.
இது பூலோகத்தில் நடந்த நிகழ்ச்சி இதுவே சித்ரகுப்தரின் பணியில் முதல் ஜீவனின் பாவபுண்ணியக் கணக்கின் துவக்கமாக அமைந்தது.
சித்ரகுப்தர் முதல் பிச்சைகாரனுடைய கர்மபரிபாலனக் கணக்கில் ‘தானம் 10 பைசா, கடன் 15 பைசா’ என்று எழுதிட, என்ன மாயம்! அவ்வெழுத்துக்கள் மறைந்து விட்டன, சித்ரகுப்தர் மீண்டும் எழுத எழுத அவை மறைந்தன. தன் கணக்கு தவறோ என்று ஐயுற்ற சித்ரகுப்தர் ‘தானம்  25 பைசா, கடன் 15 பைசா ‘ என்று கணக்கை மாற்றி எழுதினார், என்ன மாயம்! இவ்வெழுத்துகளும் மறைந்தன. சித்ரகுப்தர் கலங்கினார். தனது முதல் காரியமே சரியாக நிறைவேறவில்லையே என ஸ்ரீபிரம்மாவிடம் சரணடைந்தார். அவரோ ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவிளையாடல் என்பதால் ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் சித்ரகுப்தரை அனுப்பி வைத்தார்.

நல்லதே நினை. நல்லதே பேசு. நல்லதே செய். முடிந்த மட்டும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்.

“ஸ்ரீமந் நாராயணா! தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்!”  சித்ரகுப்தர் சரணடைந்தார். ஸ்ரீமஹாவிஷ்ணு சிரித்தவாறே, “சித்ரகுப்தா! அந்தப் பிச்சைக்காரனிடம் இருந்த தொகை எவ்வளவு?”
“பத்து பைசா சுவாமி”!
“அவன் எவ்வுளவு தானம் செய்தான்”?

“25 பைசா சுவாமி!“
“நீ அளவிறந்த தான தருமங்கள் செய்தமையால் இப்பதவி பெற்றாயல்லவா? நீ எவ்வாறு தான தருமங்கள் செய்தாய்?
“ஸ்ரீலக்ஷ்மி கடாட்சத்தால் கிட்டிய அனைத்தையும் தானம் செய்தேன், மஹாப்பிரபோ!”
“அப்படியானால் உன்னிடம் இருந்ததை தர்மம் செய்தாய்.. அப்படித்தானே!”
“ஆமாம் சுவாமி!”
“ஆனால் அந்தப் பிச்சைக்காரன் தன்னிடம் இருந்ததை விட, அதாவது தனக்கும் மிஞ்சித் தானம் செய்திருக்கிறான் அல்லவா? அதுவும் திருஅண்ணாமலை ஷேத்திரத்தில்! அப்படியானால் உன்னைவிட அவன் உயர்ந்தவனல்லவா? உன்னைவிட ஆன்மீகத்தில் உயர் நிலையடைந்த அப்பிச்சைக்காரனுடய பாவ, புண்ணியக் கணக்கை எழுதும் தகுதி உனக்கில்லையே! அதனால்தான் நீ எழுதிய யாவும் மறைந்தன, புரிந்ததா?”
“எவனொருவன் தன் தகுதிக்கு மிஞ்சித் தான தருமங்கள் செய்கிறானோ, அவனுடைய கர்மபரிபாலனத்தை யாமே ஏற்போம்! இதை உன்மூலம் அனைவரும் அறியவே யாம் இத்திருவிளையாடல் செய்தோம்!”
சித்ர குப்தர் வெட்கித் தலைகுனிந்தார்.

தனக்கு மிஞ்சித் தானம் செய்கின்ற பண்புடையோரின் கர்மபரிபாலனத்தை சாட்சாத் ஸ்ரீமஹா விஷ்ணுவே ஏற்றுக் கொள்கின்றார். திருஅண்ணாமலை திருத்தலத்தில் தனக்கும் மிஞ்சித் தானம் செய்கின்ற பண்பு ஓங்கும்பொழுது அதன் பலன் பன்மடங்காகப் பெருகி அருள்பாலிக்கின்றது. அத்தகைய அறப் பண்புடையவர்களின் கர்மபரிபாலனம் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியின் அருட்பார்வையில் அமைகின்றது. தக்க சற்சங்கங்களை நாடி உழவாரத் திருப்பணிகள, ஆலயத் திருப்பணிகள், அன்னதானம், வஸ்திரதானம், ஏழை எளியோர்க்கு மருத்துவ உதவி, கல்விக்கு உதவியளித்தல் போன்ற நற்காரியங்களால் தனக்கு மிஞ்சித் தானதருமங்களில் திளைக்கின்ற அடியவருக்கு எல்லாம் வல்ல ஸ்ரீசற்குருவே ஸ்ரீமஹா விஷ்ணுவாகவும், ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாகவும் அமைந்து அன்பால் அரவணைத்துப் போஷிக்கின்றார். எனவே சற்குருவே அனைத்து இறை அவதாரங்களின் ஸ்தூல வடிவம்.

கோபுர தரிசனம்

கோபுர தரிசனம் கோடி பாபவிமோசனம் என்பது உண்மையே. ஆயிரம் ஆயிரம் தான தருமங்கள் உண்டு.. ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு வித புண்ணியம் சேரும். ஒவ்வொரு வித புண்ணியத்தாலும் தீவினை கர்மம் கழியும். நீர்மோர் தானமளித்துப் பெறுகின்ற புண்ணியத்திற்கும் ஏழைக்கு இலவச மருந்து அளிப்பதால் கிட்டும் புண்ணியத்திற்கும் வெவ்வேறு புண்ணிய சக்திகள் உண்டு. இவை வெவ்வேறு விதமான கர்மங்களைக் கழிக்கின்றன.

மக்கள் தங்களுடைய விதியைத் தங்கள் வார்த்தைகளால்தான் நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

நம் கண்களால் செய்யும் தீவினைகளால் அளவற்ற கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம். பார்க்கத் கூடாததைப் பார்த்தல், பிறரை இழிந்த நோக்குடன் காணுதல் போன்ற பல எண்ணற்ற கர்மவினைகளுக்குக் கண்களே காரணமாகின்றன.. கோயில் கோபுரத்தின் மேல் ஒளிரும் கும்பங்கள் மூலவரின் இறைச் சக்தியை சுற்றிலுமுள்ள ஜீவன் களுக்காக வெளியிடுகின்ற transmitter ஆக அமைக்கப்பட்டுள்ளன. இவை வெறும் உலோகங்களால் ஆன கும்பங்கள் மட்டுமல்ல, இவ்வகைக் கும்பமாக அமைவதற்கு பலகோடி ரிஷிகள் பலகோடி ஆண்டுகள் தவமிருந்து கும்பங்களாக மாறி அருள்பாலிக்கின்றனர். வரையறுக்க இயலா தவசக்தியைக் கொண்ட மஹரிஷிகள் குடியிருக்கும் கும்பங்களாகக் கோயில் கும்பங்கள் விளங்குகின்றன. எனவே அவற்றைப் பார்த்து தரிசனம் செய்வோர் தங்கள் பார்வைகளால் செய்த தீவினைகட்கு ஓரளவு பரிகாரம் பெற்கின்றனர்.
கோயில் கும்பத்தைத் தரிசனம் செய்வோரின் நேத்திரப் பாவச் சுமைகளில் பலகோடி இந்தக் கும்ப மஹரிஷிகளால் பெறப்படுகின்றன.. பிறருடைய பாவச்சுமையை ஏற்று அதற்கு ஈடாகத் தங்கள் தவத்தை அளிக்கின்ற தியாக புருஷர்களே இக்கும்ப மஹரிஷிகளாவர். இதனால் அவர்கள் தவத்திறன் குறையக் குறைய மீண்டும் தங்களை மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகத் தங்கள் தவத்திற்காகக் கும்பத்தை விட்டுச் செல்கின்றனர். அப்போது அடுத்த மஹரிஷிகள் குழு புதுக்கும்பங்களாய்ப் பரிணமிக்கின்றனர். இந்த இடைப்பட்ட இடைவெளியைத்தான் கும்பாபிஷேகம் என்று கூறுகிறோம். இதைத் தவிர கும்பாபிஷேகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆன்மீக வினோதங்கள் நிகழ்கின்றன. அவை அனைத்தையும் அறிந்தவர் சற்குருவே! எனவே கோபுர தரிசனம் கண்களால் செய்கின்ற கோடி பாவங்கட்குப் பிராயச்சித்தமாக அமைகின்றது..
தீக்காயம் பட்டவர்கள், ஆழ்ந்த தீப்புண் ரணத்தால் பாதிர்க்கப்பட்டோர் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதிருவட்டீஸ்வர சிவபெருமான் நிவாரணம் அளிக்கிறார். அத்தகையோர் இத்திருக்கோயிலில் இயன்றளவு தான தர்மங்களும், திருப்பணிகளும் செய்வாராயின் இயற்கைத் தோல் வரப் பெறுவர். இந்த லிங்கேஸ்வர மூர்த்திக்குத் பால், தேன், தயிர் இளநீர், சந்தன அபிஷேகம் செய்து சிறு குழந்தைகட்குத் தேன், பால், தேங்காய் கலந்த தின்பண்டங்களைத் தானமளிக்க எத்தகைய ஆழ்ந்த தீ ரணமும் (third degree burns) ஆறி குணமடைவர். இக்கோயிலில் விசிறி தானமும் செய்தல் சிறந்ததாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

ஸ்ரீஇராமேஸ்வரம் திருக்கோயிலினுள் பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தீர்த்தக் கிணற்றிற்கும் சென்று தீர்த்தம் பெற்றுத் தந்தார். ஒவ்வொரு கிணற்றிலும் புண்ணிய தீர்த்தத்தை வாரி வழங்கியவர் காசித் துறவியே.
சிறுவன் விழித்தான்! ‘காசி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மூன்றிலும் ஒரே துறவியா’, சற்று யோசித்தான். அதற்குள் காசித் துறவி சிறுவனின் தலையில் தீர்த்தத்தை தெளித்து விட்டார். இராமேஸ்வரம் கோயிலில் கடைசிப் புண்ணிய தீர்த்தக் கிணற்றிக்கு வந்தவுடன் சிறுவனுக்குப் பளிச்சென்று மின்னல் கீற்றுப் போல் பொறி தட்டியது.

ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள்

“ஆ! ஒரே சமயத்தில் இரு உருவங்களோடு பேசும் சித்புருஷர் பற்றி ஏற்கனவே வாத்தியார் சொல்லி இருக்கிறாரே! இப்போது தான் நினைவுக்கு வருகிறது!“என்று சிறுவன் எண்ணியது தான் தாமதம், ஒருபுறம் காசித் துறவி நீர்தெளித்து சிறுவனை ஆசிர்வதிக்க, அவரே பெரியவருடன் இன்னோரு உருவத்தில் ஆனந்தமாக சம்பாஷிப்பதைக் கண்டான்.
சிறுவனுக்குப் புரிந்து விட்டது. “அடடே! இவர் த்ரைலிங்க சுவாமிகள் அல்லவா!” காசித் துறவியாய் மலர்ந்து திருவிளையாடல்கள் புரிந்த ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகளின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். கண்களை மூடியவாறே அவர்தம் பாதங்களைப் பற்ற அவன் முயல அங்கு வெற்றிடமே மீந்தது.. சிறுவன் கண் விழித்தான்.. த்ரைலிங்க சுவாமிகள் மறைந்து விட்டார்,.
எதிரே பெரியவர் சிரித்துக் கொண்டு நின்றார். “சித்தனை அடையாளங் கண்டுண்டா அட்ரஸ் இல்லாமப் போயிடுவான்னு சொல்லிருக்கிகேனில்லயா!”
பெரியவரின் ஆனந்தச் சிரிப்பு இந்த உலகத்தின் மிகப் பெரிய (கோயில்) பிரகாரத்தில் தேவவாக்காய் ஓலித்து நின்றது, சித்தரைச் சித்தரால் தானே புரிந்து கொள்ள முடியும்!

திருமணத் தடங்கல்கள்

உண்மையான பிரார்த்தனை எது? திருமணத் தடங்கல்கள், வேலையின்மை, பணக் கஷ்டம், மனக் கஷ்டம், குழந்தைப் பேறின்மை, வியாதிகள் போன்ற துன்பங்கள் தீர வேண்டி சாதாரண மனிதன் பிரார்த்திக்கின்றான். அவன் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு அவனிடம் புண்ணிய சக்தி வேண்டுமல்லவா? அதை வைத்தல்லவோ இறைவன் அவனுடைய பிரச்சனைகளைத் தீர்க்கின்றான்! எனவே ‘எனக்கு எது நன்மையோ அதைச் செய்வாயாக’ என்று இறைவனை வேண்டும் போது இறையருளால் அவன் நற்காரியங்களைச் செய்யத் தொடங்குகின்றான்.. எனவே கோயிலுக்குச் செல்லும் முன் இயன்ற அளவு வாழைப்பழம், Bread, சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், துணி, புத்தகங்கள் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றையோ பலவற்றையோ  தானமாக அளித்து விட்டு, கோயிலில் வழிபடுதல் வேண்டும். இதையும் செய்ய இயலாதோர் பசுவிற்கு வாழைப்பழம் கோயிலிலுள்ள எறும்புகட்கு இனிப்பிட்ட அரிசி மாவு, தானிய மாவு, காக்கைக்குச் சாதம் போன்ற சிறிய அளவு தானத்தையாவது செய்து.. கோயிலில் வழிபடுவது மனத்திருப்தி அளிக்கும்...

ஊருடன் ஒட்டி வாழ். எல்லாவற்றிற்கும் தலையாட்டு. உன் வழியில் நல்லதை நோக்கிச் செல்.

இவ்வாறாக நற்காரியம் செய்வதால், மன அமைதி கிட்டுகின்றது. இந்த மன அமைதியுடன் இறைவன் சன்னதிக்குச் செல்லும் போது அம்மன அமைதி பன்மடங்காகப் பெருகுகிறது, அமைதியான மனதில் பிரார்த்தனைக்கு இடமேது?
திருமணத் தடங்கல்கள் – ஓர் அன்மீகத் தீர்வு
தற்போது பல குடும்பங்களில் வயதான கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடாமையால் சோகமும், கவலையும் பெரிதும் படர்ந்திருப்பதைக் காணலாம். ஜாதக ரீதியாகப் பரிகாரங்களை நிறைவேற்றுதல், திருத்தலயாத்திரைகள், இறைவனுக்குத் திருக்கல்யாண உற்சவங்கள் நிகழ்த்துதல், நாக தோஷ நிவர்த்தி முறைகள் போன்ற பல தாந்த்ரீக, மாந்த்ரீக, வைதீகக் காரியங்களை நிறைவேற்றியும் திருமணத் தடங்கல்கள் தீரவில்லை என்ற ஏக்கம் தொனிப்பதைக் காண்கிறோம். இதன் காரணமென்ன?
திருமணத் தடங்கல்களால் நடுத்தர வயதைத் தாண்டிய கன்னிப் பெண்களை ஒரு பெரிய பளுவாகவே பல குடும்பங்களில் கருதுகின்றனர். இத்தகைய சமுதாயப் புரைக்குத் தீர்வு கிடையாதா ? நிச்சயம் உண்டு!. முதலில் திருமணத் தடங்கல்களுக்கான காரணங்களைப் பெற்றோர்கள் அறிந்து தெளிய வேண்டும். நாங்கள் யாருக்கும் எந்தத் தீமையையும் செய்யவில்லையே! எங்கள் பெண்ணுக்கு வயதாகிக் கொண்டே வருகிறதே! ஆண்டவன் ஏன் எங்களைச் சோதிக்கிறான்? இது சராசரிக் குடும்பத்தில் உதிக்கும் மனக்குமுறல், இதன் பின்னணி யாது?
கணவனைத் துன்புறுத்துதல், மனைவியை வதைத்தல், மருமகளைக் கொடுமைப் படுத்துதல், மாமனாரை மனம் நோகச் செய்தல், தம்பதியரைப் பிரித்தல், தம்பதியரைக் கூட விடாது இம்சித்தல், விதவைகளைப் பழித்தல், தன்னை அண்டியிருக்கும் கன்னிப் பெண்களுக்குக் காலாகாலத்தில் திருமணம் செய்யாது காலம் கடத்துதல், திருமண உறவுகளை முறித்தல். நிச்சயதார்த்தம் செய்துவிட்டு ஏமாற்றுதல் போன்ற பல ஜென்ம கர்மவினைகளைச் செய்தோருக்கு அடுத்து வரும் ஜன்மங்களில் திருமணங்கள் தடைப்படும். இத்தகைய குற்றங்களைப் புரிந்தோருடைய பெண்களின் திருமணங்களும் தடைப்படும்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
கறுப்பு கலர் – 100 % பலன்
நீலக் கலர் – 75 % பலன்.
கார்களில் கூட கறுப்பு கலர்தான் சிறப்பானது.

‘இப்பிறவியில் நல்வாழ்க்கைதானே வாழ்கிறோம்! முந்தைய ஜன்மத் தவறுகளுக்காக இப்பிறவியில் தண்டனை தேவையா? அதற்காக எங்கள் பெண்பிள்ளைகள் அவதியுற வேண்டுமா?’ இத்தகைய வினாக்கள் எழலாம்.
தவறுக்கு தண்டனை அனுபவிப்பது தானே தர்மநெறி போதிக்கின்றது! தண்டனையனுபவிக்காது தப்பிக்க முடியுமா? தம்பதியரின் மனம் நோகப் பேசி இம்சித்து அவர்களைக் கூடவிடாது தடுக்கும் போது அவர்கள் மனம் வேதனையுறும் அல்லவா? இத்தகைய வேதனைகளின் பிரதிபலிப்பே இப்பிறவியில் தன் பெண்களுக்கு திருமணம் நிறைவேறாததால் எழும் சோக கீதங்கள்,, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமன்றோ!
இத்தகைய சூழ்நிலைகளில் தான் சற்குருநாதர் அற்புதமாக வழிகாட்டுகிறார் அவர் தன்னை  நாடி வருவோருக்கு அற்புதங்கள் புரிந்து திருமணங்களை மட்டும் பரிசாக வழங்குவதில்லை, அதனினும் வியத்தகு அற்புதங்கள் புரிகின்றார். எவ்வாறு? இறை நியதிப்படி தவறுக்குத் தண்டனை பெற வேண்டுமல்லவா? எனவே அவர் திருமணத் தடங்கல்களுக்குக் காரணம் அவரவர் பூர்வஜென்ம வினைகளே என்பதைத் தெளிவாக உணர வைக்கிறார்.
அ) தன் கர்மவினைகளின் பலனே திருமணத் தடங்கல் என்பதை மனப்பூர்வமாக உணர்பவர் எத்தகைய தண்டனையையும் அனுபவிக்கத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளத் தயாராகிறார். இது அவரது சோகத்தையும், கவலையையும் தணிக்கின்றது..
ஆ) இப்போது அவர் தனது தவறுகளுக்குத் தண்டனை அனுபவிக்கத் தயாராவதுடன் அவற்றிற்கான பிராயச்சித்தத்தைச் செய்யத் தயாராகிறார். உண்மையாக இதய பூர்வமாக இத்தகைய உணர்வைப் பெறும் அன்பர்கட்கு சற்குரு பரிகாரமளிக்கிறார். என் பிராயச்சித்தமது?
1) குண்டுமணித் தங்கம் கூட இல்லாது தவிக்கும் ஏழைக் குடும்பங்களில் இயன்ற அளவு பொன் மாங்கல்யத்தைத் தானமாக அளித்து ஏழைத் தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல்.
2) கோயில்களில் ஏழைத் தம்பதிகட்குத் திருமணம் செய்வித்து இயன்ற அளவு செலவினை ஏற்று நன்முறையில் திருமணங்களை நடத்துதல்.
3) அளப்பரிய பலன்களை அருளும் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய வைபவங்களை நடத்த இயலா ஏழைத் தம்பதியர்களுக்கு அவர்கள் மனம் மகிழுமாறு பொன் மாங்கல்யமளித்து, இயன்ற அளவு செலவினை ஏற்று நன்முறையில் நடத்துதல்.
4) திருமணம் ஆகாத கன்னிப் பெண்களைக் கோயிலில் ஒன்று கூட்டி லலிதா சஹஸ்ர நாமம்,, மாங்கல்யஸ்தவம், அபிராமி அந்தாதி, துர்க்கைத் துதி போன்ற வடமொழி, தமிழ் மந்திரங்களை ஓதி ஏழைச் சுமங்கலிகட்கு உடை, மஞ்சள். குங்குமம், வளையல், கண்மை, மருதாணி, கண்ணாடி, சீப்பு,, வெற்றிலை,, பாக்கு,, பழம் போன்ற பொருட்களைத் தானமாக அளித்தல்.
5) இளம் ஏழை விதவைகளுக்கு ஜீவன வசதி அளித்தல்.
6) இறைவனின் திருக்கல்யாண உற்சவங்களை நிகழ்த்துவதோடு அல்லாமல், அக்கோயில்களில் ஏழைகட்குத் தாராளமாக அன்னதானம், வஸ்திரதானமளித்தல்,
7) பிரிந்த தம்பதியரை சமரப்படுத்தி ஒன்று கூட்டுதல்..
இவ்வாறான ப்ராயச்சித்த நற்காரியங்களை சற்குரு அருளால் செய்வோருக்கு அக்குடும்பங்களில் திருமணத் தடங்கல்கள் உடனடியாக நீங்கி நன்முறையில் திருமணம் நடைபெறும்.
எனவே ஏழைக் குடும்பங்களில் நிலவும் திருமணத் தடங்கலை நீக்குவதற்குப் புரியும் நற்காரியங்களே ஆசீர்வாதமாக மாறித் தங்கள் குடும்பத்   திருமணத் தடங்கல் நீங்கும் மாமருந்தாய் அமைகின்றது என்பதை உணர்தலே ஆன்மீகத் தீர்வாகும்.

நிலநடுக்கம்

நில நடுக்கத்தில் விளையும் துன்பங்களுக்கு ஆன்மீகமளிக்கும் நிவாரண முறைகள் யாவை? சரீர சேவை, நிதியுதவி, மருத்துவ உதவி போன்றவற்றோடு ஆன்மீக அடியார்கள் நிறைவேற்ற வேண்டிய திருப்பணிகளைச் சித்தபுருஷர்கள் அருளியுள்ளனர்,
மனிதர்கள் பூமாதேவிக்கு இழைக்கின்ற துன்பங்களுக்கு அளவேயில்லை. விஷப் பொருட்களைக் கழித்தல், மது போதை மருந்துகளைப் புதைத்தல், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்கள், கோயில்களில் பூஜைகட்கு இடையூறுகள் விளைவிக்கும் ஆராய்ச்சி, ஆய்வில் ஈடுபட்டு தெய்வகுற்றங்கள், மூர்த்திகளுக்குச் சேதம் விளைவித்தல், மனிதனின் சுயநலத்திற்காக கால் நடைகளை அழித்தல், கோயில் நிலங்களை சுயநலத்திற்காக ஆக்கிரமித்தல் போன்ற அதர்மங்கள் பெருகும் போது பூமா தேவி வேதனையடைகிறாள்.

திருவக்கரை குண்டலினி மகரிஷியின் சிறப்பு
ஸ்திர புத்தி அருள்பவர். மக்களை நாணயஸ்தனாக மாற்றுபவர். மாத விலக்குத் துன்பங்கள், உதிரக் கட்டுப்பாடு, கர்ப்பப்பைக் கோளாறுகளை அகற்றுபவர். விளைச்சல் நிலங்களில் நல்ல விளைச்சல் தருபவர். நல்ல திருமண சம்பந்தத்தைத் தருபவர். எதிரிகள் தரும் துன்பத்தைக் காரியங்களுக்கு முன்னால் தடுத்து நிறுத்துபவர். வக்கிரத்தை நேர்வழிப்படுத்துபவர்.
துன்பம் அகல விரதம் இருக்க வேண்டும். 3 கருப்புக் கயிறு எடுத்து, அதைச் சடை போல பின்னி, வக்கிரகாளி பாதத்தில் வைத்து, அர்ச்சனை, நெய் தீபம் போட்டு, வளர்பிறையில் எடுத்து பாதிக்கப்பட்டவர் கையில் கட்டினால், படிப்படியாக அகலும். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பால் விருட்சங்களில் கட்டலாம். கயிறு அறுந்து விட்டால், மருந்து (செய்வினை) அகன்று விட்டது என்று அர்த்தம்.

பெறற்கரிய பிறவியைப் பெற்ற மனிதன் சற்குருவை நாடி இறைவனைச் சாரும் வழியைத் தேடாது எண்ணற்ற பாவாங்களைச் சுமக்கின்றானே, எத்தனையோ தேவர்களும் மஹரிஷிகளும் அற்புதமான, எங்கும் காண இயலாத இறைத்தலங்களைத் தரிசிக்க பூமிக்கு வருகின்றார்கள். இதையறியாது மனிதன் தீய செயல்களில் ஈடுபடுகின்றானே, என்று பூமாதேவி வருத்தமடைகின்றாள்.
தன்மீது இழைக்கப்படும் அநீதிகள் பெருகும்போது பூமாதேவி துன்பமடைகையில் மழையின்மை, பஞ்சம், வெள்ளம், பயிர்ச் சேதங்கள், நில நடுக்கம் போன்ற சேதங்கள் ஏற்படுகின்றன..
இதற்குப் பிராயச்சித்தமாக பூமாதேவியைப் ப்ரீதி செய்யும் தர்ம காரியங்களும், திருப்பணிகளும் செய்தல் வேண்டும். சித்தர்கள் அருளும் திருப்பணிகளாவன :
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முதலியவற்றில் நந்தவனங்களும், பழம் தரும் மரங்களும் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
நறுமணம் மிகுந்த பூக்கள் நல்லெண்ணங்களை வளர்ப்பதுடன் அமைதியைத் தரும் சூட்சுமக் கதிர்களை வெளியிடும் சக்தி கொண்டவை.. அதுபோல பழமரங்கள் பலருடைய பசிப்பிணியைத் தீர்ப்பதுடன், நாவிற்கும் மனதிற்கும் இனிமையும் சாந்தமும் தரும் பண்புடையவை.
பூமாதேவி தன் தேகத்தில் பூச்செடிகளையும் பழமரங்களையும் தாங்குவதில் உவப்படைகின்றாள். இவற்றின் மூலமாக பூலோக ஜீவன்களுக்கு நன்மைகள் செய்வதில் தானும் பங்கு கொள்வதால், ஆனந்தத்துடன் இத்தகைய நற்காரியங்கள் புரிவோர்க்கு நல்வரம் அளிக்கின்றாள்.
நில நடுக்கச் சீற்றங்களுக்குப் பரிகாரமாக இறைத்தலங்களில் நடப்படும் ஒவ்வொரு பூச்செடியும், பழச்செடியும் நில நடுக்கத்தில் உயிரிழந்த ஒவ்வொரு ஜீவனின் கர்மபரிபாலனத்தை நிர்ணயிப்பதாக அமைகின்றது..
இவ்வாறு நடப்படும் பூச்செடியும், பழச்செடியும் பூக்களையும் கனிகளையும் தந்து அவை நற்காரியங்களுக்குப் பயன்படும்போது நில நடுக்கத்தில் இறந்த ஜீவன்கள் அவற்றிற்குரித்தான ஆன்மீக நிலைகளை இறையருளால் அடையும்.
இவ்வாறாக பூச்செடிகள், பழமரங்கள் நடுதல், தென்னை மரங்களைப் பராமரித்தல் ஆகிய தர்ம கைங்கர்யங்கள் நில நடுக்கத்தில் இறந்த ஜீவன்களுக்குரித்தான பித்ரு தர்ப்பணங்கள், கிரியைகள் செய்வதற்கு ஒப்பானதாகும். நன்முறையில் மயானத்தில் ஈமச் சடங்குளைப் பெற இயலாத ஜீவனகளுக்கு இந்த நந்தவனத் திருப்பணியே ஒப்பற்ற உத்திரக் கிரியைகளாக அமைகின்றது,
இறைத் தலங்களில் மட்டுமல்லாது அவரவர் வீட்டிலும், தோட்டத்திலும் பூச்செடிகள், பழமரங்கள் நட்டு, நில நடுக்கத்தில் இறந்தோருக்கு நன்முறையில் அஞ்சலி செய்யலாம்.
பிறருக்குப் பூச்செடிகளையும், பழச்செடிகளையும் தானமாகத் தருதலும் சாலச் சிறந்தது.
மனிதனுக்கு தாமஸ குணம் மட்டும் பெருகி மிருகத்தனம் மிகும்போது அதர்மங்களைப் புரிகின்றான் அத்தகைய மனிதன் பூமாதேவிக்குப் பாரமாக அமைகின்றான். ஆனால் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் இலை, தழைகள், தாவரங்களை மட்டும் உண்டு சாத்வீக குணத்தில் உயர்ந்து நிற்கும் யானை பூமாதேவிக்குச் சந்தோஷமளிக்கும் ஜீவனாகும். சாத்வீக குணம் சாந்தத்தையும் , மன அமைதியையும் தரவல்லது .எனவே சாத்வீகத்தில் திளைத்து மனித குலத்துக்குச் சேவை செய்யும் யானை எடையில் மிகுந்திருந்தாலும். அதனை தாங்குவதில் பூமாதேவி பெரு மகிழ்ச்சி அடைகின்றாள். எனவே பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொருவரும் ஒரு யானைக்கு ஒரு நாளைக்குரித்தான உணவுச் செலவினை ஏற்று அந்த யானைக்கு வயிறார உணவளிக்க வேண்டும். இதனால் பூமாதேவி ஆனந்தித்து நில நடுக்கத்தில் இறந்தோருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நல்வழி காட்டுகின்றாள். சாத்வீக குணமுடைய யானை தன்மீது நடக்கும்போது, ஒரு சேயின் பிஞ்சு நடையென மனமுவந்து பூமாதேவி களிக்கின்றாள். எனவே யானைக்கு வயிறார பல கவள உணவளித்தல் உன்னதமான தர்மமாகும்... இதனைச் சதுர்த்தியிலோ சதுர்த்தசியிலோ செய்வது பன்மடங்கு பலனைத் தரும்.

திருஅண்ணாமலை தீபம்

திருஅண்ணாமலையில் தீபப் பெருவிழாவின் போது அன்னதானமிடுதல் அனந்தகோடி பலனைத் தரும். ‘கார்த்திகையன்று வீட்டில் அல்லவோ தீபம் ஏற்ற வேண்டும், திருஅண்ணாமலைக்குச் செல்ல இயலாதே’ என்ற கேள்வி எழலாம். திருஅண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்குச் சுந்தர தீபம் என்று பெயர். அச்சமயத்தில் திருஅண்ணாமலையில் கோயிலிலோ, வீட்டிலேயோ, திருஅண்ணாமலைப் பகுதியில் எவ்விடத்தில் தீபம் ஏற்றினாலும் சுந்தர தீபத்தின் மகிமையால் தன் சொந்த வீட்டில் விளக்கேற்றிய பலனைத் தருகின்றது. உலக ஜீவன்களுக்காக ஏற்றப்படும் சுந்தர தீபத்தைத் தரிசித்து அங்கு திருஅண்ணாமலையிலேயே தீபம் ஏற்றினால் அதன்பலன் பன்மடங்கு பெருகி நம் வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க நல்வழி காட்டுமல்லவா? எனவே தீபப் பெருவிழா சமயத்தில் பொறுப்பானவரிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் திருஅண்ணாமலை சென்று இயன்ற அளவு அன்னதானம் செய்துவிட்டு, அங்கு தீபம் ஏற்றுவதே வீட்டில் தீபம் ஏற்றியதற்கு ஈடாக மட்டுமல்லாது அதை விடச் சிறந்த நற்காரியமெனச் சித்தர்கள் அருளுகின்றனர்.

சூட்சும சரீரம்

பல ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப் புயல் நிவாரணத்தின் போது ஆறு வயதுச் சிறுவனாக இருந்த நமது குருமங்கள கந்தர்வாவை ஆந்திரப் பகுதிகட்கு இட்டுச் சென்றார் சிவகுரு மங்களகந்தர்வா..

கணவனைப் பிரிந்து வாடுகின்ற பெண்களின் துயரங்களை நாமறிவோம். தஞ்சை அருகே திருக்கண்டியூரில் உள்ள பிரம்மசிரகண்டீஸ்வரர், சதாதபஸ் சித்தர் ஆகியோரை வணங்கி இத்திருகோயிலில். மாங்கல்யச் சரடு, மஞ்சள், குங்குமம், தேங்காய், புடைவை, வஸ்திரம் போன்றவற்றை ஜாதி மதம் பாராது ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானம் செய்வோருக்கு கணவனுடன் மீண்டும் இணையும் பாக்யம் கிட்டும். தக்ஷனின் சாபத்தால் சந்திரனைப் பிரிந்த 27 நக்ஷத்ர தேவிகளும் ஸ்ரீசதாதபஸ் சித்தரின் குரு அருளால் ப்ரம்மஸிரகண்டீஸ்வரரை வணங்கிச் சந்திரனுடன் இணையும் பேறு பெற்றனர் தேய்பிறையால் இளைத்து மிகச் சிறியதாக காட்சியளிக்கும் சந்திரன் சதாதபஸ் சித்தரின் பேரருளால் மனைவியரை அடைந்தான்.

சிவகுரு மங்களகந்தர்வாவுடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அநாதைப் பிணங்களைத் தகுந்த உத்தரக் கிரியைகளுடன் ஜாதி, மத பேதமின்றி ஸம்ஸ்காரம் செய்யும் அஸ்வமேத யாகத்திற்கு ஈடான திருப்பணியைச் செய்யும் பெரும் பேற்றைப் பெற்றார் குருமங்களகந்தர்வா,
உடல் விறைக்கும் குளிரில், அழுகிய பிணங்களின் நடுவில், துர்நாற்றம் பொங்கிச் சுவாசத்தை அடைக்க, மக்கள் சேவையே மஹேசன் சேவையென அதி அற்புதமான பாக்கியமாக அநாதைகளின் வடிவங்களைக் காட்டி நம் குருமங்களகந்தர்வாவிற்கு விளக்கினார்.
சரீர ரகசியத்தைப் பற்றி உப நிஷதங்களும் புராணங்களும் நிறைய விளக்கங்கள்  தருகின்றன. இவை சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. ஆனால் அறிந்து கொண்டவர்களோ விளக்கும் போது குழம்பி விடுகிறார்கள்.
ஸ்தூல, சூட்சும தேக விளக்கங்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? மரண பயத்தைப் போக்குவதற்காக! ‘மரணம் என்பது ஒரு துன்பம், மீள முடியாதது ; ஒரு பேரிழப்பு ; தாங்க முடியாதது ,’ என்று மரணத்தைப் பற்றிப் பல்வேறு தவறான கருத்துகள் நிலவுகின்றன. மரணத்தைப் பற்றி அறிய வேண்டுமானால் இந்தப் பிறவியைப் பற்றி, இந்த மனித உடலைப் பற்றி அறிய வேண்டும். தன்னை அறியும் மனிதனே தன்னுள் உறையும் இறைவனை அறிவான்.
அடியார் : “நல்லோர்கள் மட்டும் தான் இறைவனை அடையமுடியுமா குருதேவா?”
குரு : “ஒவ்வொரு ஜீவனும் அறிந்தோ அறியாமலோ கடவுளை அறிய தீவினைகளில் மாய்ந்து பிறவிகளைப் பெருக்கி இறைவனை அடையத் தாமதம் ஆகிறது, அவ்வளவே!”
அடியார் : “அப்படியானால் சூட்சும சரீரம் என்றால் என்ன குருதேவா?”
குரு : “ஒவ்வொரு பிறவிக்குரித்தான ஸ்தூல தேகம் தவிர அப்பிறவிக்குரித்தான சூட்சும சரீரமும் உண்டு. சூட்சும சரீரத்திற்கு உருவம் கிடையாது.. ஆனால் எந்த உருவம் வேண்டுமாயினும் எடுக்கும் ஆன்ம சக்தியுடையது.. இச்சரீரம் நற்காரியங்களையே செய்யும் நல்ல எண்ணங்களையே தாங்கும்.. உண்மையில் இந்த சூட்சும சரீரமே எப்போதும் இறைவனைச் சேரத் துடிகின்றது . இவ்வாறு ஒரு தேகத்தில் பல சூட்சும சரீரங்கள் தங்கி அந்த தேகத்தைக் கருவியாகக் கொண்டு ஜீவனை உய்விக்கப் பாடுபடுகின்றன”
அடியார் : “இறைவன் சிருஷ்டியில் முதலில் அமைவது ஸ்தூல தேகமா அல்லது சூட்சும தேகமா குருவே ?”
குரு: “இறைவன் சிருஷ்டியில் முதலில் அமைவது இந்த சூட்சும தேகமே. ஒவ்வொரு பிறவியிலும் இந்த சூட்சும சரீரம் அந்தந்த்த் தேகத்தில் தங்குகிறது. பிறவி முடிந்தபின் அப்பிறவிக்குரித்தான கர்மங்கள் சூட்சும சரீரத்தைச் சார்கின்றன.”
அடியார் : “இறப்பால் அழிவது ஸ்தூல தேகமா அல்லது சூட்சும தேகமா குருவே?”
குரு : “ஒரு சூட்சும சரீரம் தன்னுடைய கர்மங்களை நிறைவேற்றி இறைவனை அடைவதற்காக ஒரு ஸ்தூல சரீரத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இதுவே பிறப்பு அது  அத்தேகத்திலிருந்து விடும்போது அது இறப்பு எனப்படுகிறது..”
அடியார் : “சூட்சும சரீரம்  குறித்து தெளிவாக அறிய வேண்டுகிறேன், குருதேவா!”

திருஷ்டி கழிக்கச் சிறந்தது ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமை மாலை நேரங்கள் மட்டுமே.

குரு : “சூட்சும சரீரம் பல உண்டு என்று விளக்கினோம்.. எளிமையாகப் புரியும் பொருட்டு ஒரு ஜீவனின் அனைத்து சூட்சும சரீரங்களையும் ஒரு சூட்சும சரீரம் என்று ஒருமையில் குறிக்கிறோம். இவ்வாறாக பல்லாயிரம் சூட்சும சரீரங்கள் ஒன்றோடொன்று கூடி ஒரு ஸ்தூல சரீரத்தில் வசிக்கின்றன..”
அடியார் : “குருதேவா! மனிதன் நற்காரியங்கள் செய்யும் போதெல்லாம் அவன் சூட்சும சரீரத்தின் இயக்கத்தினால் தான் செய்கிறான் எனக் கூறினீர்கள். அவ்வாறாயின் மனிதன் ஏன் எப்போதும் நற்செயல்களைப் புரிவதில்லை?”
குரு : “சூட்சும சரீரம் ஸ்தூல தேகத்தை இயக்கி நற்காரியங்கள் மட்டுமே செய்ய வைக்கும் என்பது உண்மையே. ஆனால் இறைவன் நிர்ணயித்துள்ள விதிகளுக்கேற்ப மனிதனுடைய பூர்வ ஜன்ம பலாபலன்களின்படி அவன் இரண்டு விதமான காரியங்களிலும் மாறி மாறித்தானே ஈடுபட வேண்டும்.!”
“சூட்சும சரீரம் நற்காரியங்களைச் செய்ய நினைத்தாலும் அத்தேகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட தீய செயல்களில் அது ஈடுபடும்போது சூட்சும சரீரம் ஜடமாக இருந்து விடுகிறது  (dormant) ; தீய காரியங்களில் அது பங்கு பெறுவதில்லை”

சீதையின் அருந்தொண்டு

மாமாத்ய தேவோ வடமூல வாஸிம்
க்ருபா விசேஷாத் க்ருதஸன்னிதான:
ஓம்கார ரூபாம் உபதிஸ்ய வித்யாம்
அவித்ய கத்வாந்தம் அபாகரோது||
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்வரும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஸ்லோகம் அளிக்கப்பட்டதல்லவா? இச்சுலோகத்தை பல மகரிஷிகள் ஒன்று கூடி உபதேசமாக  ஸ்ரீசீதா தேவிக்கு அளித்தனர்., இதனைப் பாராயணம் செய்தமையால் ராமாயணத்தில் ஸ்ரீசீதா தேவி பல துன்பங்களைத் தாங்கும் தெய்வ அனுக்ரஹத்தைப் பெற்றாள்.

குழந்தைகள் திருந்த…
திருந்த வேண்டும் என்று நினைப்போர் ஸ்ரீஹயக்ரீவ ஜயந்திக்கு முன்னால் ஒரு வாரம் விரதம் இருந்து, ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, ஜயந்தி அன்று ஸ்ரீஹயக்ரீவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் வைத்து வேண்டி தானம் செய்ய வேண்டும்.

மஹரிஷிகள் தனக்கருளிய இந்த ஸ்லோகத்தைக் கலியுக மக்கள் பெற்றுப் பயன் பெற வேண்டும் என்ற நல்ல தெய்வீக சிந்தனையில் ஸ்ரீசீதா தேவி பூலோகத்தின் பல திருக்கோயில்களுக்கும் சென்று இம்மாமந்திரத்தின் மஹிமையை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
பல திருக்கோயில்களில், குறிப்பாக பல சிவாலங்களில் ஸ்ரீமஹா லக்ஷ்மிக்கு தனிச் சன்னிதி அமைந்திருப்பதை அறிவோம். சிவத்தலங்களில் ஸ்ரீமஹா லக்ஷ்மி அருள்புரிவதன் பின்னணி யாது? இத்தலங்களில் எல்லாம் ஸ்ரீசீதா தேவி மேற்கண்ட ஸ்லோகத்தைத் த்யானித்து அங்கு வரும் மக்களுக்கு இம்மந்திரத்தின் மஹிமையை எடுத்துரைத்தாள். எனவே,, இத்தகைய  ஸ்ரீமஹா லக்ஷ்மி திருச்சன்னிதிகளில் பெண்கள் ஒன்று கூடி கூட்டமாக இம்மந்திரத்தைப் பாராயணம் செய்தல் அதியற்புதப் பலன்களைத் தரும்.
சிவன் கோயில்களில் ஸ்ரீசீதா தேவி இம்மந்திரத்தை மக்களுக்கு உபதேசித்தது ஏன் என்ற வினா எழுகின்றதல்லவா. மஹா பிரளய முடிவில் சிவபெருமான் கிராத மூர்த்தியாக அவதாரம் எடுத்த பொழுது ஸ்ரீமஹா லக்ஷ்மி துணை கொண்டு ஜீவசிருஷ்டியைத் துவங்கினார். அப்போது பல சிருஷ்டி தத்துவங்களை ஸ்ரீதேவிக்கு சிவபெருமான் போதித்தார். “ஸ்ரீதேவி! த்ரேதாயுகத்தில் ஸ்ரீசீதா தேவியாகப் பிறப்பெடுப்பாய். அப்போது பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்,, அப்போது யாம் பல மகரிஷிகளின் மூலமாக உனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிப்போம். அதனை ஆழ்ந்து தியானித்து எமது இன்னொரு அவதாரமாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் எமது ஆசீர்வாதத்தைப் பெறுவாயாக! எமது ஆலயத்தில் நீ இந்த மந்திரத்தை மக்களுக்கு உபதேசித்து அவர்களைப் பல துன்பங்களிலிருந்து காப்பாற்றுவாயாக சிருஷ்டித் தத்துவத்தை நீ உணர்த்துவளாதலின் துன்பங்களைச் சிருஷ்டிக்கும் கர்மங்களிலிருந்து பெண் குலத்தைக் காக்கும் நல்வழியை அருள்வாயாக!” என்று வரமளித்தார்.

புனுகுச் சட்டம்

சில ஜீவன்கள் தங்கள் சரீரம் முழுதும் இறைவனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உளமார விரும்புகின்ற பொழுது இறைவன் இத்தகைய ஜீவன்களை மலர்களாகவும், தைலங்களாகவும், நறுமணத் திரவியங்களாகவும் படைக்கின்றான்... அவ்வாறு இறைவன் மேனியைத் தீண்டும் பாக்கியம் வேண்டி கடுந்தவம் புரிந்து படைக்கப் பெற்றவையே புனுகுப் பூனைகள் ஆகும்... இவை மனோரீதியான (telepathy) தகவல் தொடர்பில் மனிதனை விடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவை. தாய்லாந்துப் பகுதியிலுள்ள பல புனுகுப் பூனைகள் சைவப் பிராணிகள் ஆகும். இவை மாமிசத்தை உண்பது கிடையாது.. இவை உலர்ந்த பழங்களையும், குறிப்பிட்ட சில பூக்களையுமே உண்ணும் இரவில் உணவேற்பதில்லை.

பைரவர், கால பைரவர், மஹாகால பைரவர், ப்ரளய கால பைரவர் என வெவ்வெறு பைரவர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பொறுப்பு. அனைத்துக் காவல் தேவதைகளும் தினசரி நடவடிக்கைகளை தெரிவிப்பார்கள். பைரவர் காக்கும் தெய்வம்.

புலப்படன், போடகன், சுருவாணன், சித்ரதன், வைத்ரிருதன், மிசாகரன், தைத்தியசூலன், சம்பவணன், கௌலவன், சாந்தமூர்த்தன் என்ற பத்துவகைப் பூனுகுப் பூனை குலங்கள் உண்டு,
புனுகு உருவாகும் விதம் : சிவபனிசார மூலிகை என்ற அதியற்புத மூலிகையுள்ளது. இதன் அருகில் சென்றாலே ‘சிவ தியானம்’ கிட்டும்.. இலையை முகர்ந்தாலோ,, சிவத்தைப் பற்றிய ஆழ்நிலை தியானம் உடனே பரிணமிக்கும்.. ஆனால் இம்மூலிகையை புனுகுப் பூனையால் மட்டும் தான் கண்டறிய இயலும்.
சிவபனிச்சார மூலிகையை இனங்காணும் புனுகுப் பூனை அதன் இலையை நுகரும்.. உடனே அந்த இலை வாடி வதங்கும்.. உடனே அடுத்த இலையை நுகரும்..இவ்வாறாக ,,ஒவ்வொரு இலையின் சுவாச பந்தத்தினால் கிளர்ந்தெழும் சிவ இன்பத்தில் திளைத்து அப்புனுகுப் பூனை ஆழ்ந்த தியான நிலையில் ஆடிக் கொண்டே வெளிவரும்..
இந்நிலையில் அரசு, ஆல், சந்தனம், மா, தேக்கு, அத்தி போன்ற ஹோம சமித்திற்குரித்தான மரக்கிளையை நாடி இப்பூனை சென்று அதில் அமர்ந்து கொள்ளும், சிவ நினைவோடு வெளி வருகின்ற விந்துப் படலம் அம்மரக்கிளையில் பரவிட இதுவே புனுகு ஆகும். பல மைல்கள் தொலைவிற்கு நறுமணம் வீசுகின்ற புனுகினை சந்தனம், குங்கும்ம், விபூதி, ஆபரணங்கள் ஆகியவற்றில் தோய்த்து இறைவனுக்குச் சார்த்திப் பின் பயன்படுத்த வேண்டும்..
சதுரகிரிமலை, கொல்லிமலை, பொதிகைமலை, தங்கால் மலை ஆகிய மலைகளில் சிவபனிச்சார மூலிகைகள் காணப்படுகின்றன. புனுகுப் பூனையிடமிருந்து இயற்க்கையாகப் பெறும் புனுகே மிகச் சிறந்ததாகும் .. செயற்கை முறையில் பெறுதல் பாவச்செயலாகும்..
திருக்கருகாவூர் முல்லைவன நாதர்.. சீர்காழித் தோணியப்பர்.. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், திருபோரூர் முருகன் போன்ற ஸ்வயம்புப் புற்றாலான மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள் கிடையாது.. அதற்குப் பதிலாக புனுகுச் சட்டம் சார்த்தி வழிபடுதல் விசேடமானதாகும்., புனுகினைச் சுவாமியின் திருமேனியில் தோய்த்தலே இத்தகையைத் தெய்வங்கட்குரித்தான அபிஷேக முறையாகும்.. 

பல் விழுதல்

சிறுவர்கட்குப் பல் விழுவது இயற்கை, விழுகின்ற பல்லை வைத்து என்ன செய்வது? சித்தர்கள் அருளியபடி அப்பல்லைச் சுத்தப்படுத்திப் பத்திரமாக எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.. நடுத்தர வயதில் எடுக்கப்படும்/விழும் பல்லையும் இவ்வாறாக எடுத்து வைத்துப் பத்திரப்படுத்த வேண்டும்.
இவ்வாறாக பத்திரப்படுத்தப்பட்ட பல்லை ஆலம்பட்டைக் கஷாயத்தில் (ஆலம்பட்டையை  நீருடன் வேக வைத்து வடிகட்டுதல்) தோய்த்து எடுத்து வைத்து சென்னை அருகே ஞாயிறு என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலைச் சார்ந்த இடத்தில் பூமியில் புதைத்திட வேண்டும்..
இக்கோயிலில் கண்வ மகரிஷி காட்சி தருகிறார். இவரே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன் களின் பல் உறுப்பினைப் படைத்துக் காக்கும் அற்புத மகரிஷி, கொடிய பல் நோய், பல்லில் புற்றுநோய் உள்ளோர் இந்த மகரிஷியைத் தரிசித்து இங்கு தான தருமங்கள் செய்திடில், அற்புதமான முறையில் குணமேற்படும்.
கோயிலைச் சார்ந்த இடத்தில் பற்களைப் பூமியில் பதிப்போர்க்கு ஸ்ரீகண்வமகரிஷியின் திருவருளால் எத்தகைய பல்வியாதியும் ஏற்படுவதில்லை. வாக்குச் சுத்தமும் ஏற்படும். நல்ல கல்வி அறிவு உண்டாகும்.. வாக்குச் சித்தியும் ஏற்படும். குறிப்பாக ஜோதிடர்களுக்கு இது சிறந்த தலமாகும்.
எதிர்காலத்தில் இயற்கையாகவே விழுந்த பல்லைப் பத்திரபடுத்தி மீண்டும் பொருத்துமளவு மருத்துவ விஞ்ஞானம் முன்னேறும் எனச் சித்தர்களின் அருள் மொழிகள் கூறுகின்றன.. ஆகவே பல் மருத்துவத்துறையில் மாற்று உறுப்பு பொருத்தும் முறை நன்கு முன்னேறும். அப்போது விழுந்த பல்லை பத்திரமாக எடுத்து வைத்திருந்தால். மேற்கூறிய முறையில் அதே தேகத்திற்குச் சீரிய முறையில் பயன்படுத்தலாம். மேலும் தற்காலத்தில் பல்வியாதிகள் பல்கிப் பெருகியுள்ளன. இந் நிலையில் ஞாயிறு திருக்கோயில் பல் நோயாளிகளுக்கு அருள், குணம் தரும் அற்புதத் திருக்கோயிலாக அமையும். பல் மருத்துவர்கள் வழிபட வேண்டிய அற்புத மஹரிஷியே கண்வ மகரிஷியாவார்.
எனவே தீர்க்க தரிசனமாக சித்த புருஷர்கள் சுட்டிக் காட்டியுள்ளதைத் தெளிந்து ஞாயிறு திருக்கோயிலின் மஹிமையைப் பல் நோயாளிகளும் , பல் மருத்துவர்களும் இனியாவது உணர்ந்து பயன்பெறுவார்களாக!!
பாழடைந்துள்ள இத்திருக்கோயிலைப் பல் மருத்துவர்களும்,,,வசதியுள்ளோரும் பராமரித்துத் திருப்பணிகள் செய்து அதிஅற்புதப் பலன்களைப் பெறுவார்களாக!!!



ஸ்ரீகண்வ மகரிஷி அவளிவநல்லூர்

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam