அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பித்ரு சாந்தி ஹோமம்

பித்ரு சாந்தி ஹோமம் என்றால் நம் மூதாதையர்களான பித்ருக்களுக்கு சாந்தி அளிக்கக் கூடிய ஹோமம் என்று பொருள். ஊண், உறக்கம், பசியின்றி நாள் முழுதும் நம்முடைய நல்வாழ்விற்காக பித்ரு லோகங்களில் அவர்கள் தவமிருந்து அளப்பரிய பூசைகள், ஹோமங்களைச் செய்து வருகின்றனர். தம்முடைய லட்சக்கணக்கான வம்சாவழியினரைக் கரையேற்றும் ஆன்மீக சக்தி கொண்ட பித்ருக்கள் ஹோமத்தின் மூலமாகவா சாந்தி அதாவது மனதிருப்தி, மன அமைதியைப் பெற்று விடுகிறார்கள்? பித்ருக்கள் தம் மனசாந்தியை இழப்பது எப்போது? அவர்கள் வழிவந்த நாம் தெய்வீக நற்காரியங்களில் ஈடுபடாது, தீய எண்ணங்களல், தீய பழக்க வழக்கங்கள், தீயொழுக்கங்கள், தீய காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் மனம் வேதனை அடைகிறது. எனவே அவர்கள் மன சாந்தியை இழப்பதற்கு நாமே காரணம். எவரொருவர் பித்ருக்களின் மன சாந்தியைக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தாரோ அவர்தானே அதற்கான முறையான பரிகாரத்தைச் செய்திடல் வேண்டும்! எனவே அவரவர் செய்கின்ற தர்ப்பண பூஜைகளே பரிபூர்ண பலன்களைத் தரும். இதற்காகவே சித்புருஷர்கள் பித்ரு சாந்தி ஹோமம் என்ற ஓர் அற்புதமான ஆன்மீக நிவாரண மருந்தினைத் தந்துள்ளனர்.
ஹோம விளக்கம்
பித்ருசாந்தி ஹோமத்தில் நிகழ்வதென்ன? கேட்பதற்கே வியப்பாக இருக்கும் உண்மையான ஆன்மீக ரகசியங்களாகும் இவை. இவற்றை மட்டும் ஒரு மனிதன் நன்கு புரிந்து கொண்டால் அவன் தன் வாழ்நாள் முழுவதும் பித்ரு தர்ப்பணங்களை அந்தந்த நாட்களில் செய்து எளிமையான முறையில் தெய்வீகப் பெருவாழ்வை எய்திடலாம். ஸ்ரீஅகஸ்தியரின் திருவாக்காக நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஸ்வாமிகள் அடிக்கடி சொல்வாராம். “வாழ்க்கையில் ஒரே ஒரு பித்ருவோட ஆசி கிடைச்சா போதும், நாம் கரையேறிடலாம்.” என்னே பித்ருக்களின் மஹிமை! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் தம் குருகடாட்சத்தால் ஹோமங்களில் அந்தந்த தேவதா மூர்த்திக்குரிய லோகத்தின் அமைப்பைப் போலவே செங்கற்களால் ஹோம குண்டத்தை அமைத்திடுவார். தம்முடைய லோகத்தைப் போலவே ஹோமகுண்டம் அமைந்திருப்பததைக் கண்டு அதிசயிக்கும் தேவ தேவாதி மூர்த்திகள்/ தேவதைகள் பரமானந்தத்துடன் ஹோம குண்டத்தில் ஆவாஹனமாகி அபரிமிதமாக அருட்கடாட்சத்தைப் பொழிகின்றனர். எனவே தக்க சற்குரு கிட்டிடில் ஹோம பூஜை மட்டுமன்றி விளக்கு பூஜை, தர்ப்பணம், திவசம், அன்னதானப் பூஜை, நாம சங்கீர்த்தனம், அபிஷேகம், அர்ச்சனை போன்ற பலவிதமான பூஜைகளின் பரிபூரணப் பலன்களை எளிதில் பெற்றிடலாம்.
பித்ரு சாந்தி ஹோமத்திக்குரிய விசேஷமான ஹோம குண்ட அமைப்புமுண்டு. பூர்வசாந்தி என்ற அமைப்பில் பித்ரு சாந்தி ஹோம குண்டம் அமைகிறது. 36 செங்கற்களுடன் அமைக்கப்படும் ஹோம குண்டம் இது. தெற்குப் பகுதியில் ஒரு கும்பம் வைக்கப்படும் ஹோமத்தைச் செய்கின்ற கர்த்தாவானவர் தென்கிழக்குப் பகுதியில் அமர்ந்திடுவார்.

கடுக்கன் மகிமை

“இடுக்கன் நீங்க கடுக்கன் அணி”
அடியார் : சென்ற August 1996 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பெண்கள் மஞ்சள் பூசும் முறை என்பதில் காதில் தோடுகளுடன் பெண்கள் செய்ய வேண்டிய பூஜை பற்றி விளக்கப்பட்டு இருந்தது. ஆண்கள் கடுக்கன்களுடன்  செய்ய வேண்டிய பூஜை முறை ஏதேனும் உள்ளதா சற்குருதேவா?
சற்குரு :- கடுக்கனின் நிறம், அமைப்பு, அதிலுள்ள பட்டைகளின் கோணங்கள், தங்கத்தின் அளவு போன்றவற்றைப் பொறுத்தும், அதை அணிந்து இருப்பவரின் நட்சத்திரம், ராசி போன்ற அம்சங்களைக் கொண்டும் பூஜா முறைகள் வேறுபடும். எனினும், கலியுக மக்களின் நல்வாழ்விற்கான சில அரிய விளக்கங்களை அளிக்கின்றோம். ஏனைய விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடிப் பெறுவீர்களாக!
வெள்ளைக் கடுக்கன்
வெண்மை நிறமுள்ள கற்களை உடைய கடுக்கன்களை அணிந்து இருப்போர், பல புண்ணிய நதிகளின் புனித நீருள்ள பாத்திரத்தில் துளசியையும் கடுக்கன்களையும் சேர்த்து ஓர் இரவு முழுதும் வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை அணிந்து, காதுகளோடு முகத்தைக் கழுவி, துளசியையும் உண்டிடுக. அப்புனித நீரையும் அருந்தி மேற்கு நோக்கிச் சென்றிட எடுத்த நற்காரியம் எளிதில் கைகூடும். செல்ல வேண்டிய இடம் வேறு திசையாயின் முதலில் மேற்கு திசையில் சென்றிடுக. இது மிகவும் சிறப்புடைய காரிய சித்தி பூஜை முறையாகும்.
பச்சைக் கடுக்கன் :- பச்சை நிறக் கடுக்கன்களை, பெருமாள்/ஆஞ்சநேயர்/தாயார்/கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்ட பிரசாத நீரில் துளசி சேர்த்து ஒரு பகல் முழுவதும் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) வைத்திருக்க வேண்டும். பின்னர் கடுக்கன்களை அணிந்து இப்புனித நீரால் காதுகளோடு சேர்த்து முகத்தைக் கழுவி, துளசியை உண்டு, நீரை அருந்தி தென்கிழக்கு திசை நோக்கிச் சென்றிட காரியங்கள் சுபமாய் முடியும்.
மஞ்சள் நிறக் கடுக்கன் :- கையில் தர்ப்பைகளைத் தாங்கி, சூரிய கவசம் ஓதி, அதைப் புண்ணிய நதிகளின் நீர் சேர்ந்த பாத்திரத்தில் வைத்து கடுக்கன்களை அதில் ஒரிரவு வைத்திருக்க வேண்டும். மறுநாள் கடுக்கன்களை அணிந்து இப்புனித நீரால் காதோடு சேர்ந்து முகம் கழுவி, கிழக்கு திசை நோக்கிச் சென்றிட செல்லும் காரியமும் சுபமாக முடியும்.
வயலட் நிற (lilac) கடுக்கன் :- சனிக்கிழமைகளில் சப்த நதிகளின் (7 புண்ய நதி தீர்த்தங்கள்) கூட்டு தீர்த்தத்தில் கடுக்கன்களையும் தூதுவளை கீரையையும் சேர்த்து ஓரிரவு வைத்திடுக. மறுநாள் காலையில் அந்தக் கீரையை உண்டு, அந்நீரையும் பருகி கடுக்கன்களை அணிந்தவாறு மேற்கு திசை நோக்கிச் சென்றிட, செல்லும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
கற்களில்லாத தங்கக் கடுக்கன் :- மஹான்களின்/சித்தர்களின் ஜீவ சமாதிகளில் அபிஷேகம் செய்த நீருடன் வில்வம், துளசி, 10 மிளகு சேர்த்து வியாழக்கிழமை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் கடுக்கன்களுடன் வைத்திடுக. மறுநாள் காலையில் வில்வம், துளசி, மிளகு முதலியவற்றை உண்டு அத்தீர்த்தத்தைப் பருகி கடுக்கன்களை அணிந்து வடகிழக்கு, வடமேற்கு திசை நோக்கிச் சென்றிடில் செல்லும் காரியங்கள் நல்ல முறையில் நடக்கும்.

அருணாசல மகிமை

செவ்வாய் கிரிவல மஹிமை
(சென்ற இதழ் தொடர்ச்சி...) செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2. பின் இரவு 3-4) திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கோயிலின் கிளி கோபுரம் அருகே பிரம்ம தீர்த்தத்தில் இருந்து திருஅண்ணாமலையாரை தரிசனம் செய்திடில் “ஸ்பரிச தீட்ச தரிசனம்” பெறலாம். தனுசு லக்னமும், லக்னத்தின் ஏழுக்குடைய புதன் அஸ்தமனமுமாகி சூரிய, சந்திர கிரகங்கள் கூடிடில் திருமண வாழ்வு திருப்தி தராது. தனுசு லக்ன நேரத்தில் செவ்வாயன்று சூரிய ஹோரையிலோ, புத ஹோரையிலோ அல்லது சனி ஹோரையிலோ திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தும் இதற்குப் பரிகாரம் கண்டிடலாம். மங்கள வாரம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிழமை பல புனிதமான அம்சங்களைத் தன்னுள் கொண்டது. அக்காலத்தில் மஹரிஷிகள் சற்குருமார்களாக உலாவந்து பர்ணசாலைகளில் குருகுலங்களை நடத்திய போது செவ்வாய்க் கிழமையன்று தான் புது ஆன்மீகப் பாடங்களைத் துவங்குவர். குறிப்பாக, தீட்சா ரகசியங்கள் செவ்வாயன்று தான் விளக்கப்படும். நயன தீட்சை தரிசனம், குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையைப் பெற்றுத் தருவதைப் போல, ஸ்பர்ச தீட்ச தரிசனமானது நல்லறமாம் இல்லறத்தில், குருகாட்டும் அறவழியில் நடக்க உதவுகிறது. குருவைப் பெறுதலே அரிது. குருவழி நடத்தல் அதனினும் அரிது. குருவழி நடந்தால்தான் பரிபூரணமான குருஅருளைப் பெற முடியும். இதற்கான அடிப்படை வழிமுறைகளையும், ஆன்மீக சக்தியையும் தீட்சா தரிசன முறைகள் எளிதில் பெற்றுத் தருகின்றன.

திருஅண்ணாமலையார் பாதம்

மானச தீட்சை :- சிம்ம லக்னத்தோடு ஐந்துக்குரிய குரு, எட்டில் அமர்ந்து சூரிய, சந்திர, புத, கிரகங்கள் தன் ஏழாவது பார்வையில் இருப்பின், இல்லத்தில் பல துன்பங்கள் ஏற்படும். உடனடியாக இடமாற்றம் செய்திடல் வேண்டும். மேலும் வியாபாரம், அலுவலகம் போன்றவற்றில் இடமாற்றங்கள் தனபாக்யம் பாதிக்கப்படும். நல்இடமாற்றத்தோடு தனவரவும், சுபிட்சமாய் அமைந்திட செவ்வாய் ஹோரைக்கு முன் அபிஜித் முகூர்த்தத்தில் (உச்சிப் பொழுது) கிரிவலத்தைத் தொடங்கி (செவ்வாய் ஹோரையில்) தெற்கு கோபுர வாயிலில் இருந்து வலதுபுறம் திரும்பியவுடன் தெரிகின்ற தரிசனமே “மானஸ தீட்ச” தரிசனமாகும். இதனால் லௌகீகமான பலன்களாக நல்ல விதமான இடமாற்றமும், செல்வ விருத்தியும் கிட்டும். ஆன்மீக ரீதியாக, மானஸ தீட்சா தரிசனத்தின் பலன்களாக, குரு காட்டும் அறவழியில் செல்கையில் நம் பூர்வஜென்ம கர்மவினைகளால ஏற்படும் தடங்கல்கள் நிவர்த்தியாகும்.
கர்மவினை நிவாரணத்தில் சற்குருவின் பங்கு :- சற்குரு காட்டும் வழியில் நடக்கையில் சோதனைகள் ஏற்படுவது ஏன்? எந்த ஒரு சற்குருவும் தனது அடியார் தனக்குரிய கர்மவினைகளை முறையாகக் கழிப்பதையே விரும்புவார். இதில் எத்தகைய அற்புதங்களையும் செய்திட சற்குரு விரும்புவதில்லை. நடப்பு வாழ்க்கையில் உள்ள (ப்ராரப்த) கர்மங்களை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டுமே தவிர எவ்வித மாற்றத்தையும் அதில் செய்ய சற்குரு விரும்புவதில்லை. ஆனால் எவ்விதப் புதுக் கர்மங்களையும் சேர்க்க விடாது நாம் கவனமாக இருப்பதையே சற்குரு விரும்புவார். அப்படியானால் சற்குருவின் பங்கு தான் என்னே? நம்முடைய கர்மவினைகள் சிறிது சிறிதாக தீரத் தீர, புதுவிதமான கர்மங்கள் சேர்வது குறைந்து வந்திடில் அதுவே மறுஜென்மமற்ற வாழ்வுக்கான அறிகுறியாகும். இதுவே ஒவ்வொரு சற்குருவின் கடமையாகும். உண்மையாகவே சற்குருவின் அறவழிகளை முறையாக கடைப்பிடிப்போர்க்கு அவருடைய பூர்வஜன்ம வினைகளால் வரக்கூடிய, எதிர்வரும் ஜன்மங்களின் கர்மவினைகளைக் கூட சில சமயங்களில் நடப்பு வாழ்க்கையிலேயே சற்குரு புகுத்தி விடுவார். ஏன் சற்குரு இவ்வாறு செய்கிறார்? உதாரணமாக, நல்லடியார் ஒருவருக்குப் பூர்வஜன்ம வினைகளின் தொகுப்பாக 300 அடுத்த பிறவிகள் இருக்குமாயின் சற்குருவானவர் அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு 100 பிறவிகளுக்கான கர்மவினைகளை இப்பிறவியிலேயே அளித்துக் கழிப்பதுண்டு. இதனால் அவர் ஆன்மீக வழியில் நன்கு நிறைவுபெற்று இருந்தாலும் 100 பிறவிகளின் அதிகப்படியான சுமையால் அளவற்ற துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் இன்றைக்குப் பல தேசங்களில் உள்ள இறைஅடியார்கள் எத்தகைய தெய்வீக வாழ்வைப் பெற்று இருப்பினும் பல துன்பச் சூழ்நிலைகளில் வாழ்வதாகவே நம் கண்களுக்குத் தோன்றும். ஆனால் எத்தகைய இடர்வரினும் “குரு அருளால் எதையும் தாங்கி அனுபவித்திடுவோம்!” என்ற நல்லெண்ணம் ஏற்படில் அதுவே சற்குருவின் அருளைத் திருவருளாகக் கூட்டித் தரும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போல நாம் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தும் நம் கர்மவினைகளின் பொருட்டே என்பதை உணர்ந்திடுவோமாக!
வாசக தீட்ச தரிசனம் :-  ரிஷப லக்னத்தில் பத்துக்குரிய சனி அஷ்டமாதிபதியாக குருவுடன் கூடி எட்டில் இருப்பதும் தொழில் கல்வி, இல்லறம் போன்றவற்றில் பொறாமை, பகைமை, கலகம், அவமானம் போன்றவற்றை உருவாக்கும். இதற்கு நிவாரணமாக செவ்வாய்க் கிழமையன்று குருஹோரையில் (காலை 4-5, மதியம் 12-1, முன் இரவு 7-8, பின்இரவு 2-3) திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் தெற்கு கோபுரம் எதிரே திருமஞ்சன வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் இருந்து. திருஅண்ணாமலையாரை தரிசனம் செய்திட இதுவே வாசக தீட்ச தரிசனம் ஆகும். ஆன்மீக ரீதியாக “வாசக தீட்ச” தரிசனத்தால் சற்குரு காட்டும் வழியில் நடக்கையில் சோதனைகளை எதிர் நோக்கும் போது அவற்றை வெல்வதற்கான நல்வழி முறைகள் காட்டப்படுகின்றன. பெரியோர்கள்/ பித்ருக்களின் ஆசியும், சகல தேவதைகளின் கருணை கடாட்சமும் கிட்டுவதற்கான ஹோம, பூஜாவழிபாடுகளிலும் தான தர்மங்களிலும் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் குரு அருளின் மேன்மையை உணரத் தொடங்குகிறோம்.
யோக தீட்சை :- கலியுகத்தில் பலருக்கு யோகமார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் எதற்கும் முறையான குரு தேவையன்றோ? முறையற்ற யோகப் பயிற்சி மனோவியாதிகளைத் தந்து விடும். துலா/குரு/சந்திர லக்னத்துடன் ஐந்தில் கேது, பதினொன்றில் இராகு, பன்னிரண்டில் சனி, ஒன்பதில் செவ்வாய், எட்டில் சூரியன்/புதன் அமைவது மிகவும் அபூர்வமான யோகமாகும் . இத்தகையோர்க்கு இயற்கையாகவே யோக சக்தி பெருகிடும். கற்பக விநாயகர் கோயிலில் இருந்து நேரே சென்று முக்கூட்டு ரோட்டில் வலதுபுறம் திரும்பிட அரசினர் உயரிநிலைப்பள்ளி அருகே கிட்டுவதே “யோக தீட்சை” தரிசனமாகும். செவ்வாய்க் கிழமை துலா லக்னத்தில் கிரிவலம் வந்து யோக தீட்சை தரிசனத்தைப் பெறுவோர்க்கு யோகாப்யாசங்கள் எளிதில் கைகூடும். லௌகீகமாக யோக தீட்ச தரிசனபலன் : மளிகை வியாபாரத்தில் மேன்மையடைவதற்கும், நல்ல உத்தியோக உயர்வைப் பெறுவதற்கும், திருமணம் கைகூடவும், விவசாய அபிவிருத்திக்கும் மிகச்சிறந்த தரிசனமாகும்.

மாளய பட்சம்

மாளய பட்ச மஹிமை – சஸ்த்ர ஹத மாளயம்
11.10.1996 – சஸ்த்ர ஹத மாளய தர்ப்பண பூஜை
பாரதப் போரில் ஸ்ரீகிருஷ்ணனுடைய உதவியைப் பெறுவதற்காக அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகை மாளிகைக்குச் சென்ற சம்பவத்தை நாம் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ணன் விழித்தெழுந்தவுடன் தன்னையே முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக துரியோதனன், பகவானின் கண்பார்வைபடும் வண்ணம் அமர்ந்து கொண்டான். இதன்பின்னர் துரியோதனின் விருப்பப்படி ஸ்ரீகிருஷ்ணர் தன் படைகளை பாரதப்போரில் அவனுக்கே அளித்திட உறுதி அளித்ததும் அர்ஜுனனுக்குத் தானே நேரில் வந்து உதவுவதாகவும் அளித்த வாக்குறுதியையும் நாம் அறிவோம். இருடிகள் ராமாயணம், இருடிகள் மஹாபாரதம் என்ற சித்தர்களின் நாடி வடிவில் உள்ள இருபெரும் இதிகாசங்கள் உண்டு. ஏட்டில் இல்லாமல் சற்குருவின் குருவருள் கூடிய தகைமை சான்ற உத்தமப் பெரியோர்களுக்கு இது ஆசு கவியாய் இந்நாடிகள் பிரவாகமெடுக்கும். நமக்குக் கிட்டியுள்ள வால்மீகி/கம்பராமாயணம், வியாசரின் மகாபாரதம் மிகக் குறைவானவையே, லக்ஷக்கணக்கான கிரந்தங்கள் இன்னமும் நமக்குக் கிட்டாத பல தேவாரத் திருமுறைப் பாடல்கள் போல ஆன்மீக ரகசியமாக மறைந்து பொதிந்து கிடக்கின்றன. அவையெல்லாம் தக்க உத்தமர்களால் தக்க சமயத்தில் வெளியிடப்படும். துரியோதனன் பெரு மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணரின் படை பலத்தை வரமாகப் பெற்ற உற்சாகத்தில் தன் அரண்மனைக்குத் திரும்பினான். உத்தமப் பெரியவராம் பீஷ்மாச்சாரியார் துரியோதனின் அகம்பாவத்தையும் அறியாமையையும் எண்ணி மனங்கலங்கினார்.
“துரியோதனா! உன்னுடைய முன்யோசனை இல்லாத முட்டாள் தனத்தினால் எத்தகைய மாபெரும் தவறு செய்துவிட்டாய்! பரமாத்மாவே பாண்டவர்கள் பக்கம் நின்று விட்டாரே, அவர்தம் படைகளை வைத்துக் கொண்டு வெறும் எண்ணிக்கையைத்தானே நாம் கூட்ட முடியும்! பரம்பொருளின் திருவருளை அன்றோ அர்ஜுனனைப் போல் நீ நாடியிருக்க வேண்டும்”
துரியோதனன் குழம்பி நின்றான். தன் மகனின் ஆற்றாநிலை கண்டு மனம் வெதும்பிய திருதராஷ்டிரன் பீஷ்டரிடம் தன் குலத்தின் பெருமையைக் காப்பதற்காகத் தக்க உபாயம் சொல்லும்படி மன்றாடினார். பீஷ்மர் விதுரருடன் கலந்தாலோசித்து துரியோதனுக்கு புத்திமதி உரைத்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரிடம் சென்று சில புதிய வரங்களைப் பெற்று வருமாறு அனுப்பினார். “ஸ்ரீகிருஷ்ணா! வழக்கம் போல் இம்முறையும் உன் ஆத்மார்த்த நண்பனான அர்ஜுனன் பக்கம் நீ சாய்ந்து விட்டாயே! எங்கள் பக்கம் உன் படைகள், நீயோ அவன் பக்கம், இது என்ன ஓர வஞ்சனை?”
ஸ்ரீகிருஷ்ணனுக்குக் குறும்புடன் நகைப்பது ஒரு பெரிய விஷயமல்லவே! “துரியோதனா! நீயே முதலில் வந்தவன், அர்ஜுனனுகு மூத்தவனும் கூட! எனவே உனக்கு வேண்டியதை நீயே முதலில் பெற்றுக்கொள் என்று முதலிடத்தை உனக்குத்தானே அளித்தேன். உனக்கு வேண்டியதை நீ கேட்டுப் பெற்றுக் கொண்டாய். அர்ஜுனனும் அவனுக்கு வேண்டியதைப் பெற்றான். நீங்களிருவரும் உங்களுக்கு வேண்டியதைக் கேட்டுத்தானே பெற்றீர்கள்! நானாக ஒன்றும் கொடுக்கவில்லையே! இதில் என்ன ஓர வஞ்சனை?”
“பின் எதற்காக பீஷ்மாச்சாரியார் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கின்றார். நீ பாரதப் போரில் எவ்வித ஆயுதத்தையும் ஏந்துவதில்லை என்ற சத்தியத்தைப் பெற்று வருமாறு இங்கு என்னை அனுப்பியுள்ளார்.. பீஷமர் ஒன்றைச் சொன்னாலோ, செய்தாலோ அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் நிறைந்து இருக்குமே! நீ அளித்த படைகளோடு அவர் திருப்தியாகாமல் உன்னிடம் இத்தகைய பிரதிக்ஞை பெற்று வரச் சொல்வதற்குக் காரணமென்ன?”
“ஓகோ! உத்தமப் பெரியவரான பீஷ்மாச்சாரியார் அவ்வாறு கேட்டுவரச் சொல்லியிருக்கின்றாரெனில் அதை மீறுவதற்கு நான் யார்? நைஷ்டிக ப்ரம்மச்சாரியான பீஷ்மருக்குத் தாள் பணிந்து  அவருடைய விருப்பப்படி நாம் பாரதப் போரில் எவ்வித ஆயுதத்தையும்...” – என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணன் சற்றே நிறுத்தி யோசித்தார். பரமாத்மாவாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கே யோசனையா? அவர் எண்ணமெல்லாம் தானே பிரபஞ்சத்தின் காரண கார்யங்களாகின்றன. அவரே யோசித்தாரெனில்...... துரியோதனன் வியப்போடு ஸ்ரீகிருஷ்ணனை நோக்கினான். ஸ்ரீகிருஷ்ணனோ தெற்கு நோக்கி அமர்ந்து கைகளில் தர்ப்பையாலான பவித்ரம் அணிந்து எங்கோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணன் தன் வாக்குறுதியைத் தொடர்ந்தான்... “...... பிரயோகிப்பதில்லை! அதாவது பாரதப்போரில் நான் எவர்மீதும் எவ்வித ஆயுதத்தையும் பிரயோகித்திடமாட்டேன் என்று பீஷ்மாச்சாரியாரின் பெயரில் சத்தியம் செய்கின்றேன்”
துரியோதனன் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பினான். ஸ்ரீகிருஷ்ணன் தெற்கு நோக்கி அமர்ந்தன் காரணமென்னவோ? விஷ்ணுவாகிய ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீகிருஷ்ணனாக மானுட ரூபத்தில் தோன்றியமையால் ஸ்ரீராமரைப் போல் மானுட அம்சங்கள் அனைத்தையும் தாங்கி வாழ்ந்து ஸ்ரீகிருஷ்ண சரிதம் படைத்து நமக்கெல்லாம் பாடம் புகட்டுகின்றார்.
ஸ்ரீகிருஷ்ணனும் நம்மைப் போலவே
1. சந்தியாவந்தனம், சிவபூஜை போன்ற நித்ய கர்மாக்களை/பூஜைகளை நிறைவேற்றினார்.
2. பூணூல் தரித்து, கடுக்கன்களை அணிந்து ஓர் எளிய மனிதன் நடைமுறையில் எத்தகைய ஆன்மீக வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே கடைபிடித்துக் காட்டியுள்ளார்.
3. பித்ரு தர்ப்பணம் போன்ற மனிதனுக்குரிய நித்ய கடமைகளையும் தானே முன்னுதாரணமாக நின்று நிறைவேற்றி மனித குலக் கடமையை உணர்த்துகின்றார். துரியோதனன் மூலம் பாரதப் போரில் தான் ஆயுதம் எதையும் பிரயோகிப்பதில்லை என்ற வாக்குறுதியைத் தந்தாரல்லவா, ஆனால் அதனை எப்படி நிறைவேற்றுவது என்பதில் தான் ஸ்ரீகிருஷ்ணனின் சிந்தனை லயித்திருந்தது. ஸ்ரீகிருஷ்ணன் தெற்கு நோக்கி அமர்ந்து கைகளில் பவித்ரம் தரித்து, தன் பித்ருலோக வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு நாயகர்களுடன் தொடர்பு கொண்டு தன்னை இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றுபடி வேண்டினார். ஒருபுறம் உத்தமப் பெரியோராம் பீஷ்மரின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்களுக்கு உதவ வேண்டும். இரண்டையும் எவ்வாறு ஒன்றாக இணைத்து நிறைவேற்றுவது? பரமாத்மாவாக விளங்கும் ஸ்ரீகிருஷ்ணன் அறியாதது ஒன்றுண்டா? ஆனால் பூலோக ஜீவன்களுக்கு மட்டுமன்றி அனைத்து கோடிலோகங்களிலுமுள்ள சகலவித ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஓர் அரிய தர்ப்பண பூஜையை பெற்றுத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணனே நிறைவேற்றிய பூலோகத் திருவிளையாடல் இது. ஸ்ரீகிருஷ்ணன் துர்யோதனனுக்கு வாக்களிக்கையில் அவருடைய ஆதித்ய பித்ருதேவதேவாதியர் அவர் வாக்கில் புகுந்து., “எவ்வித ஆயுதத்தையும் ஏந்தமாட்டேன் என்பதை எவ்வித ஆயுதத்தையும் பிரயோகிக்கமாட்டேன்” – என்று மாற்றி அருளினர். எனவே இதன் மூலம் ஸ்ரீகிருஷ்ணபகவான் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் மிகுந்த துன்பங்கள் உண்டாகும் போது முறையான பித்ருபூஜை தர்ப்பணங்களினால் பித்ருக்களிடமிருந்து தகுந்த உதவிகளையும் மனச்சாந்தியையும் எளிதில் பெறலாம் என்பதே.
தர்ப்பையின் தெய்வீக சக்தி
ஸ்ரீகிருஷ்ணன் தர்பையாலான பவித்திரம் அணிந்தது ஏன்?
சுப காரியங்களிலும் பித்ரு தர்ப்பணம் திவசம் மற்றும் பல பூஜைகளிலும் இரண்டு/மூன்று தர்ப்பைகளைக் கொண்டு மோதிரம் போல் அமைத்து அணிவதே பவித்திரம் எனப்படும். டெலிபதி (Telepathy) எனப்படும் மனோரீதியான முறையில் மனித மனங்களுடம் பேசும் அற்புதமான ஆன்மீக சக்தியைப் பெற தர்ப்பையே ஒரு ஆன்மீகத் தகவல் துறை சாதனமாகப் பயன்படுகிறது. தர்ப்பையை வைத்து செய்யப்பட்ட பல மின்சார சோதனைகளின் மூலம் விஞ்ஞானிகள் தர்ப்பையின் விசேஷமான தன்மையை நிரூபித்து உள்ளனர். தர்ப்பையாலான பவித்திரத்தை அணிந்து பூஜையோ, ஹோமமோ, தர்ப்பணமோ, செய்திடுகையில் அந்தந்த லோகத்திற்குரிய அனுக்கிரஹ சக்திகிரணங்கள்/வீச்சுகள் (rays ), தர்ப்பைகள் மூலமாகத்தான் நீரிலோ, பூஜைப் பொருளிலோ, நம் தேகத்திலோ சேர்க்கின்றன. எனவேதான் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த தர்ப்பையை புனிதமான முறையில், கால்களில் மிதிபடாதவாறு பயன்படுத்தவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
துரியோதனனும், அர்ச்சுனனும் கண்ணனைப் பார்க்க வந்தார்கள் அல்லவா? அன்றைய தினம் தான் ஸ்ரீகிருஷ்ணன் தன்னுடைய மூதாதையர்களுக்காக ஒரு விசேஷமான சாந்தி ஹோமத்தைச் செய்து முடித்திருந்தார். இதனால் ஸ்ரீகிருஷ்ணனுடைய வசு, ருத்ர, ஆதித்ய – ஆகிய மூவகை பித்ருதேவர்களும் பிரசன்னமாகி, “ஸ்ரீகிருஷ்ணா! இன்று நாங்கள் உன் மூலமாக சகல ஜீவன்களுக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மாளயபட்ச தர்ப்பணமுறை ஒன்றை அளிக்க இருக்கின்றோம் . நீயும் இதனைக் கடைபிடித்து சகல ஜீவன்களுக்கும் இதனை எடுத்துரைப்பாயாக!” என்று அருளினர். அத்தகைய மிகவும் சக்தி வாய்ந்த பித்ரு தர்ப்பண பூஜையே மாளய பட்ச சதுர்த்தசி திதியில் அதாவது மாளயபட்ச அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசி திதியில் அமையும் சஸ்த்ரஹத மாளயத் தர்ப்பணம்.
இத்தர்ப்பணப் பூஜையின் மஹிமையால் தான் பாரதப்போரில் ஸ்ரீகண்ணன் ஆயுதம் ஏந்தினானே தவிர அதனை எங்கும் பிரயோகித்திடவில்லை. ஆனால் ஸ்ரீகிருஷ்ணன் ஆயுதத்தை ஏந்துவதற்கு கூடக் காரணங்கள் உண்டு. “பாரதப்போரில் தன் எதிரே நின்ற படைவீரர்கள் தன் உறவினர்களே, கேவலம் ஒரு சிறு பங்கு நிலத்தை ஆள்வதற்காக லட்சோப லட்சம் வீரர்களை மாய்ப்பதா?” – என்ற எண்ணம், அர்ச்சுனன் உள்ளத்தில் புகுந்ததும் அவன் தன் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டதும் இதன் விளைவாய் ஸ்ரீகிருஷ்ணனின் திருவாய்மொழிகளாக நாம் பெறற்கரிய பகவத்கீதையை பெற்றோம் என்பதை எல்லாம் நாம் அறிவோம். கண்ணனின் மொழிகளைத் கேட்டும் கூட அர்ச்சுனன் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கீழே கிடக்கும் ஆயுதங்களை எடுக்கும் மனோ நிலையில் இல்லாததைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் (பொய்க்) கோபத்துடன் தன் ஆயுதத்தை எடுத்திட, உடனே அர்ச்சுனன் கதறி அழுதான் “ஹே கிருஷ்ணா!“ என்ன காரியம் செய்து விட்டாய்! பீஷ்மருக்கு நீ செய்த சத்தியத்தை மறந்து விட்டாயா? கிருஷ்ணா! பாரதப் போரில் எவ்வித ஆயுதத்தையும் பிரயோகித்திட மாட்டேன் என்ற உன் சத்திய வாக்கு என்னவாயிற்று? பரமாத்மாவாகிய நீயே இவ்வாறு செய்யலாமா?”
“அர்ச்சுனா! நான் சொல்வதை நீ கேட்டிடவில்லை. நீ ஆயுதம் ஏந்தி தர்மத்தைக் காக்காவிடில் நான் ஆயுதம் ஏந்தித்தானே ஆக வேண்டும்!” எங்கே கண்ணன் தன் உறுதிமொழியை மீறி விடுவானோ, இதனால் அவனுக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய அர்ஜுனன் தன் ஆயுதங்களை எல்லாம் மீண்டும் எடுத்துக் கொண்டான். இதைத்தானே கண்ணன் எதிர்பார்த்திருந்தான். இதனோடு அவனுடைய திருவிளையாடலின் ஒருபகுதி நிறைவு பெற்று விட்டதே! இவ்வாறு அஸ்திர வதைகளிலிருந்து பெறுகின்ற சாபநிவர்த்திக்காக நாம் பித்ருக்களிடமிருந்து பெறுகின்ற சஸ்த்ர ஹத மாளயத்தர்ப்பண பூஜையின் பலன்களை இங்கு காண்போமாக.!
சஸ்த்ர ஹத மாளயத் தர்ப்பண பூஜை
1. ஆயுதபூஜை முறையாகச் செய்யாதவர்கள் பலர் உண்டு. பணி, பிரயாணம், தீட்டு போன்ற பல காரணங்களினால் ஸ்ரீஆயுதபூஜையைத் தவறவிட்டோரும் உண்டு. இதற்குப் பிராயச்சித்தமாக, எக்காரணம் கொண்டும் இயற்கைக் காரணங்களினாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் ஆயுத பூஜையை விட்டுவிடக் கூடாது என்று எண்ணுபவர்கள் அதே வைராக்கியத்துடன் இந்தத் தர்ப்பண பூஜையை நிறைவேற்ற வேண்டும். இதன் பயனாய் அவர்கள் எங்கிருந்தாலும் எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டாலும் மாளயபட்ச  அமாவாசைக்குப் பின்னர் வரும் ஆயுத பூஜையை நிறைவேற்றுகின்ற தெய்வீக பாக்கியம் நிச்சயம் கிட்டும். தர்ப்பண பூஜை முறை இறுதியில் விளக்கப்பட்டுள்ளது.
2. அறுவைச் சிகிச்சைத் (Surgery) துறை மருத்துவர்கள் இந்தத் தர்ப்பண பூஜா முறையைக் கடை பிடித்திடில் எத்தகைய கடினமான அறுவைச் சிகிச்சையும் இறையருளால் எளிதில் வெற்றிகரமாக முடியும். பல காரணங்களுக்காக முக்கியமான பெரிய அறுவை சிகிச்சைகள் தடைபட்டு நாட்கள் பல கழிந்து விடுகின்றன. இத்தடங்கல்கள் நீங்கி நன்முறையில் விரைவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற இப்பூஜா முறை உதவும்.
3. காய்கறிகள், மளிகை, ஏற்றுமதி, இறக்குமதித் துறையில் இருப்பவர்களுக்கு வாகனப் போக்குவரத்து இன்றியமையாததாகும். எனவே வியாபாரத்தில் எவ்வித வாகனப் போக்குவரத்துத் தடங்கல்களும் ஏற்படாதிருக்க இத்தர்ப்பண பூஜாவிரதம் உதவுகின்றது.
4. பிரயாணத் தடங்கல்களால் வியாபாரம், அலுவல், நிலபுல விஷயங்கள் தடைபடாதிருக்க இப்பூஜையை மேற்கொள்தல் வேண்டும்.
5. புலால் உண்ணாதோர் பலவித உணவுச் சத்துக்களின் பற்றாக்குறையால் எண்ணற்ற நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இயற்கை ஊட்டச் சத்துக்கள் பல இருப்பினும் தற்காலத்தில் இயற்கைத் தழை உரமின்றி செயற்கை உரங்கள்/பூச்சி மருந்து போன்றவற்றுடன் ரசாயன உப்புகள் நிறைந்த அரிசி, கோதுமை, காய்கறிகளே உற்பத்தியாவதால் சைவத்தைக் கடைபிடிப்போர் தகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை. கலியுகத்தில் புலால் உண்பது என்பது பெருகி வருகின்றது! புலால் உண்பது என்பது ஜீவன்களின் விகிதாசாரத்தைச் சமநிலைப்படுத்த ஏற்பட்ட அமைப்பாகவே விளங்குகின்றது. மனித சமுதாயத்தில் ஆன்மீக குணங்கள் நிறைந்தால் தான் சைவ உணவு முறையை உலகில் நிலை நிறுத்த முடியும். இந்நிலையில் சில விரதங்களில், சிலமத வழிபாடுகளில் புலால் உணவை இறைவனுக்குப் படைப்பதும் ஏற்கப்பட்டுள்ளது. அத்தினங்களில் புலால் உணவு விரிந்த அளவில் அன்னதானமாக அளிக்கப்படுகின்றது.
காருண்ய தானம்
புலால் உணவை அன்னதானமாக அளிப்பது காருண்ய தானத்தில் சேர்க்கப்படுகின்றது. மகாபாரதத்தில் பீமன், கடோத்கஜன், பர்பரிஹன் போன்றோர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை விழுங்கியதாக அறிகின்றோம் அலல்வா! இதற்காக அவர்கள் பிராயச்சித்த பூஜைகளையும் யாகங்களையும் நிகழ்த்தினர்.சைவ உணவே, தெய்வீக உணர்வுகளைப் பெருக்கும். எனினும் சைவ உணவு இயக்கம் சிறிதளவில் தான் இயங்குகின்றது. இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில்தான் சைவ உணவு இயக்கம் ஓரளவிற்கு வலுப்பெற்றுள்ளது. தாவரங்களே இல்லாத மணற்பகுதிகளில் உள்ள மக்களின் நிலை என்ன? இந்நிலையில் உண்மையான இறையடியாரின் பங்கு என்ன ? தனி ஒருவராகவோ, மிகச் சிறிய அளவிலான இயக்கத்தாலோ உலகெங்கும் வியாபித்துள்ள புலால் உணவு முறையை மாற்ற முடியாது. ஒருபுறம் இறைவனிடம் இவர்களுக்காக மன்றாடுவதுடன் மறுபுறம் இதற்காக உடலால், மனதால், உழைத்து வழிபடுவதோடு மட்டுமன்றி இன்னொரு விதத்திலும் மிகச்சிறப்பாக தெய்வீகப்பணி ஆற்றிடலாம். எவ்வாறு? திருஅண்ணாமலையில் நிகழும் அன்னதானம் போல பல இடங்களில் பல விசேஷதினங்களில் முட்டை, பிரியாணி போன்ற உணவு வகைகளும் பெருமளவில் அன்னதானமாக அளிக்கப்படுகின்றன. புலால் உணவிற்காக ஏங்குகின்ற ஏழை சாதாரண மக்களும் அதை பெற இயலாத அளவிற்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் மிகுந்த விருப்பத்துடன் இதனை ஏற்கின்றனர். லட்சக்கணக்கான மக்களின் உடல் பசியையும் நாக்கு ருசியையும் தனிப்பதற்காக எவ்வளவு சாத்வீகப் பிராணிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றன? வழிபாடு, பூஜை ஹோமம் மூலமாக இவைகளின் ஆன்மீக உய்விற்காக உதவிபுரிதல் இறையடியார்களின் கடமை அல்லவா! எந்த சாத்வீகப் பிராணியின் மாமிசத்தை உண்கின்றார்களோ அதனுடைய வேதனைகளும் கர்மவினைகளும் அதில் சேர்ந்திருக்கும்., இதன் விளைவுகள், புலால் உணவினை தானம் செய்வோரையும், அதனை ஏற்று உண்பவர்களையும் பாதிக்கும். அவரவர் மதக் கோட்பாடுகளின்படியும் இன, குல வழக்கங்களின் படியும், வழிபாடுகளிலும், விரதங்களிலும் புலால் உணவை இறைவனுக்குப் படைத்து உண்டு அன்னதானமாகவும் இடுவதும் உண்டு. புலாலாகித் தங்களைத் தியாகம் செய்து கொண்ட ஜீவன்கள், தானம் செய்தோர், உண்டு களித்தோர் – ஆகிய மூன்று வகையினரின் – அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளுக்குப் பிராயச்சித்தமாக வழிபட வேண்டியது இறையடியார்களின் முக்கியமான கடமை அல்லவா?
எனவே அவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் சாத்வீக உணவையும் சேர்த்து அளிக்கின்ற வகையில் இணைந்து இறைப்பணி ஆற்றிட வேண்டும். இதனை உள்ளத்தளவில் ஏற்பது சற்றுக் கடினமானதே. இதற்காகவே காருண்ய தான பூஜை என்ற விசேஷமான பூஜையினை சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
சஸ்த்ரஹத விரத பூஜை :- இத் தர்ப்பண நாளில் சாத்வீகமான உணவைத் தயாரித்து, ஸ்ரீகாளஹஸ்தீசர் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் துதித்து, அர்ப்பணித்து மேற்கண்ட மூவகையினரின் நலன்களுக்காகப் பிரார்த்தித்து எங்கெல்லாம் புலால் உணவு தானம் நடைபெறுகின்றதோ அங்கு அவர்களுடைய முழு சம்மதத்துடன் சாத்வீக உணவையும் சேர்த்து அளித்திட ஆவன செய்தல் வேண்டும். இவ்வாறாக சமுதாய ஒற்றுமையைப் பேணும் மிகச்சிறந்த இறைப்பணியே இக்காருண தர்ப்பண பூஜா முறையாகும்.
2. வியாபாரிகளுக்கு ஆயுதபூஜை மிககும் இன்றியமையாததாகும், சஸ்த்ரஹத மாளயத்திற்கும், ஆயுத பூஜைக்கும் பல ஆன்மீகப் பிணைப்புகள் உண்டு. இந்நாளில் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கோயில்கள், நதிக்கரைகள், திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கும்பகோணம் – சக்கரப் படித்துறை போன்ற தர்ப்பணத்திற்குரிய விசேஷமான தலங்களில் எள்கலந்த உணவை அன்னதானமாக இடுதல் வேண்டும். தராசு, படிக்கல், வாகனம், கல்லாப்பெட்டி போன்றவையும் ஆயுத பூஜைக்குரித்தானவையாதலால் எடை குறைவு, அதிகவிலை போன்றவற்றால் விளையும் பலவிதமான பெருமளவு கர்மவினைகளைக் கழிப்பதற்கும் சஸ்த்ரஹத மாளயத் தர்ப்பண பூஜாவிரதம் உதவுகின்றது.
3. புலால் உண்டோர் இந்நாளில் புலால் உணவைத் தவிர்ப்பதற்கு வைராக்கியத்தை மேற்கொள்ள இது மிகச் சிறந்த நாள். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்பதை சிந்திக்க வேண்டும். இறைவனிடமே வாக்களித்து விட்டு மீறுதல் பெரும் பாவமன்றோ!
ஆன்மீக உணர்வுகளில் முழுமையாகத் திளைத்தாலன்றி முழுசைவத்தில் ஈடுபடுவது கடினமானது. அதுவரையில் நாம் உண்பதைப் பிற ஏழைகளுடன் பகிர்ந்தளிக்கின்ற இறைப்பணியினைத் தொடர்ந்து செய்து வந்திடுக!
சஸ்த்ரஹத மாளய தர்ப்பண பூஜாவிரதம்
இப்பூஜா விரதத்தின் பெயர் புதிதாக இருப்பினும் எளிமையாகப் புரியும்படி சொல்வோமா! ஆயுதம் போன்று வன்மையான/கூரிய சொற்களால் பிறரை வதைத்திருந்தால் அதற்காக நிவாரணம் பெறவும். காய்கறிகள்/சாத்வீகமான பிராணிகளை உணவிற்காக, கத்தி அரிவாள்மனை போன்ற ஆயுதங்களால் அ(ரி)றுத்தல் போன்றவற்றிற்குப் பிராயச்சித்தமாகவும் வாகனங்களில் ஏற்படும் தடங்கல்கள், விபத்துகள் ஆகியவற்றிற்கு நிவர்த்தி அளிக்கின்ற விசேஷமான பூஜைதினம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்நாளில்...
1. ஒன்பது/பதினொன்று/இருபத்திஒன்று – பச்சை அல்லது காய்ந்த அரச மர இலைகளை அதன் நுனிகள் ஒன்றாக சேரும்படி வட்டமாக வைத்துப் பரப்பிட வேண்டும். அரசஇலையின் உள்புறம் மேல்பார்த்து இருக்கும்படி அமைய வேண்டும். அதன்மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து மூதாதையர்களுக்கு எள்+நீர் கொண்டு தர்ப்பணமிடுக.
2. இத்தகைய விசேஷமான தர்ப்பணத்தை, ஓடும் நீர், ஊற்றுநீர், சுனைநீர், நதி ஊற்றுள்ள இடங்கள், கோயில் தீர்த்தங்கள், அருவிகள், புனிதமான கடற்கரைகள், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கும்பகோணம் – சக்கரப்படித்துறை, கோதாவரி, பத்ரிநாத், காசி போன்ற புனிதமான தலங்களில் செய்வது பலன்களை பல்கிப் பெருக்கும்.
3. மேற்குறித்த தான தர்மங்களை நிறைவேற்றும் வரை உணவு உண்ணாதிருத்தல் விசேஷமானதாகும்.
4. தானதர்மங்கள் நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் இருக்க இயலாவிடில் குறைந்த பட்சம் தர்ப்பண பூஜையை நிறைவேற்றும் வரையிலாவது உண்ணாது விரதமிருத்தல் நலம்.

விருட்ச நவராத்திரி

விருக்ஷ நவராத்ரி பூஜை
நடப்பு தாத்ரு வருடத்திற்குரிய நவராத்ரி பூஜையினை விருக்ஷ நவராத்ரி பூஜையாக சித்புருஷர்கள் வருணிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் குலதேவதை அமைந்திருப்பது போல இஷ்ட தெய்வத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை ஸ்ரீஅகஸ்திய விஜயம் செப்டம்பர் 1995 இதழில் நன்கு விளக்கியுள்ளோம். முறையான குலதேவதைப் பூஜைகளும் இஷ்ட தெய்வ வழிபாடும் நம்முடைய கர்மவினைகளின் சுமையை கணிசமான அளவு குறைத்து விடுகின்றன. கலியுகத்தில் ஒன்பது விதமான பெரிய மதங்கள் நடைமுறையில் நிலவுகின்றன. குறுகிய மனப்பான்மை காரணமாக மதவேறுபாடுகள் தோன்றி சமுதாய அமைதி சீர் குலைந்து வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். அனைத்து மதங்களும் இறைவனைக் காட்டும் வழி முறைகளே என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜயம் அக்டோபர் 1994 இதழில் நன்கு விளக்கியுள்ளோம். இதில் நவராத்ரி கொலு தத்துவமானது எவ்வாறு சமுதாய ஒற்றுமைக்கு வித்திடும் மிகச்சிறந்த வழிபாடாக அமைந்துள்ளது என்பதையும் சிறப்புற விளக்கியிருக்கக் காணலாம்.
எளிய நவராத்திரி கொலு பூஜை
1. ஏழை, எளியோர் கூட இருக்கின்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு எளிமையான கொலுவை அமைத்திடுக. அனைவரையும் உங்கள் இல்லத்திற்கு அழைத்து அன்புடன் உறவாடி மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களை அளித்துச் சிறந்த சமுதாய அமைதிக்குப் பணிக்கு சீரிய முறையில் கடமையாற்றிடுக..
2. கொலுவில் தெய்வீக, இயற்கை சம்பந்தமான பொம்மைகளையும் இயற்கைக் காட்சிகளையும் வைத்திருங்கள். ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதப் பெரியோர்களின் உருவங்களையும் வைத்திடுக. சித்புருஷர்கள் அனைத்து மதங்களிலும் உண்டு. எந்த அளவிற்கு தெய்வ மூர்த்திகளின் உருவங்களும், மத, இன பேதமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த மகான்களின் உருவங்களையும் கொலுவில் வைக்கின்றோமோ அந்த அளவிற்கு கொலுவில் ஓர் அற்புதமான, தெய்வீக சக்திகள் மிளிர்கின்ற ஜீவகளை ததும்பும்.
3. மேற்கண்ட புனித சக்தியை நம் இல்லத்திற்கு மட்டுமின்றி நாம் இருக்கின்ற தெரு, நகரம், நாடு அனைத்திற்கும் பரப்புவோமாக. எத்தனை இல்லங்களில் நவராத்திரி கொலு அமைத்து வழிபடுகின்றார்களோ  அந்த அளவிற்கு சமுதாய அமைதியும் தார்மீக ரீதியாக பல்கிப் பெருகும்.
4. நவராத்ரியில் ஒன்பது தினங்களிலும் தினம் தோறும்  ஏழை சுமங்கலிகளுக்கு குங்குமச் சிமிழ், மஞ்சள், (பெரிய) கண்ணாடி, வளையல், மாங்கல்யச் சரடு, சீப்பு, மெட்டிகள், கண்மை, ரவிக்கைத் துணி, புடவை, சிகையலங்காரப் பொருட்கள் etc…
ஏழை கன்னிப் பெண்கள்: (மரத்தாலான) ஹேர்பின், சீப்பு போன்ற அலங்கார மங்களப் பொருட்கள், தாவணி புடவைகள் வளையல்கள், ரிப்பன், கண் மை etc…. ஆகியோருக்கு இவற்றைத் தன் சக்திக்குத் தகுந்தவாறு அளித்திட வேண்டும். மேற்கண்ட மூவகையினர்க்கும் கால், கைகளில் மருதாணி இடுதல், மஞ்சள் பூசுதல் மிகவும் சிறப்புடையதாகும். தினந்தோறும் மாலையில் தெய்வீகப் பாடல்களை இசைத்து/வாசித்து ஆனந்தத்தைப் பரப்புங்கள். தினமும், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி இட்டு புனிதமான மனிதத் தன்மையைப் பெருக்குங்கள்.
இத்தகைய மங்களகரமான காரியங்களினால் தான் இல்லத்திலும், நாம் வசிக்கும் பகுதியிலும் தெய்வீகச் சுழ்நிலையை உருவாக்கிடலாம். வன்முறை, கலவரம், கொள்ளை போன்ற தீய சக்திகளை அழித்து எங்கும் இறையருளால் அமைதியைப் பரப்பும் உத்தம பூஜையே நவராத்ரி பூஜையாகும். அனைவரும் கொண்டாட வேண்டிய மிக எளிமையான பூஜை, நவராத்ரி பூஜை. ஆதிபராசக்தி, துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் ஏனைய அவதாரங்களைப் பூண்டு பரம்பொருளாம் சதாசிவப் பரம்பிரும்மத்தைத் துதித்துப் பூஜிக்கின்ற நாட்களே நவராத்ரி தினங்களாகும் அகிலாண்டேஸ்வரியே பரம்பொருளை பூஜிக்கின்ற இந்த நவ தினங்களிலும் நாம் ஆதிபராசக்தியாம் பரமேஸ்வரியின் ஈஸ்வர பூஜையில் பங்குபெறும் பெறற்கரிய பாக்யத்தையும் பெறுகின்றோம். என்னே நவராத்திரியின் பெருமை!

மாக்கல் விநாயகர்

ஆன்மீக வினா-விடை
மாக்கல் விநாயகர்
வினா :- சென்ற செப்டம்பர் 1996 இதழில் மாக்கல் விநாயகர் வழிபாடு குறித்துத் தக்க சற்குருவை நாடி விளக்கம் பெறுக என்று அறிவித்துள்ளீர்கள்.. விளக்கம் தர வேண்டுகிறோம்.
விடை :- உண்மையே! சில பூஜா விதிமுறைகளை மஹான்களிடம் / சற்குருவிடம் /பெரியோர்களிடம் கேட்டுப் பெற்றால் தான் பரிபூர்ணமான பலன்களைப் பெற முடியும். மாறாக அறியாது செய்தால் தோஷங்களே கூடிவரும். உலோக வடிப்புகளில் தெய்வ சக்தியை ஆவாஹனம் செய்வது/ஊட்டுவது சற்று எளிமையானதே! கல் விக்ரஹங்களாயின் தான்ய வாசம், எண்ணெய் வாசம், ஜல வாசம், (தேன்) வாசம், பழ(இரச)வாசம், கோமேய வாசம் என்ற பலவிதமான  அபிஷேக, ஆராதனைப் பொருட்களில் குறிப்பிட்ட காலத்திற்கு, கல்விக்ரஹத்தை வைத்திருப்பார்கள். மாக்கல் வெளிப்புறமாகச் சற்றுத் தேயும் குணமுடையதாயின் இதில் “உள்நாடி” முறையில் மாக்கல்லின் ஹிருதயாகாசப் பகுதியில் தெய்வீக சக்தியை ஆவாஹனம் செய்திடல் வேண்டும் . சித்த புருஷர்கள் மாக்கல் விநாயகர் வழிபாட்டை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் எளிமையாக்கித் தந்திருக்கின்றார்கள். மாக்கல் விநாயகரின் உயரம், பருமன், கல்லின் வயது, வாங்கிய/செய்த இடம், வலஞ்சுழி/இடஞ்சுழி அமைப்பு, விநாயகரின் ஆசன தோரணை, கரங்களின் அமைப்பு – போன்றவற்றைப் பொறுத்து வழிபடும் முறைமாறுபடும். இது கருதியே “தக்க சற்குருவை நாடிடுக“ என்ற விளக்கமளித்தோம்! சற்குருவானவர் மாக்கல் விநாயகரை நேரில் பார்த்து குருகடாட்சத்தால் தக்க வழிபாட்டு முறைகளைக் குரு உபதேசமாக அளித்திடுவார். குருவாய்மொழிக்கு ஈடு இணை எதுவுமுண்டோ! எனினும் கலியுக மக்களின் நலனுக்காகச் சில பொதுவான விளக்கங்களை எடுத்துரைக்கின்றோம். கோயில் கும்பாபிஷேகம் போல, மாக்கல் விநாயகருக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவாஹன பூஜை கீழ்க்கண்டவாறு செய்திடல் வேண்டும்.
1. மாக்கல் விநாயகரை 12 ஆண்டுகள் வைத்துப் பூஜித்த பின்னர் அதனைச் செய்த ஸ்தபதிக்குப் பாத பூஜை செய்து ஆசி பெறவும்.
2. குறைந்தது 50 வருடங்கள் – வயதிற்கு மேற்பட்ட வேப்பமரத்தின் (முழு) வேப்பிலைகளை ஒரு செப்புத் (தாமிர) தாம்பாளத்தில் முழுதுமாகப் பரப்பி அதன்மேல் 9 ஆழாக்கு பச்சரிசி, 9 ஆழாக்கு கோதுமை, தலைக்கு 21 மிளகு (குடும்பத்திலுள்ளோரைக் கணக்கிட்டுக் கொள்ளவும்) வைத்துப் பரப்பிட வேண்டும். இதன் நடுவில் மாக்கல் விநாயகரை வைத்து, விநாயகரின் திருவடிகளில் ஒரு பவள மோதிரத்தையும் வைத்திட வேண்டும்.
3. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கணபதி விநாயகர் கவசம் என்னும் மந்திரத்தை ஓதி 21 முறை வணங்க வேண்டும். பிறகு சகஸ்ரநாமம் அல்லது 1008 போற்றித் துதிகளால் அர்ச்சித்து, அவல், பொரி, கொழுக்கட்டை , சுய்யம், அப்பம், பாயசம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்திடுக.
4. நைவேத்தியப் பண்டங்களைச் சிறிது பிரசாதமாக உண்டு அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக அளித்திடவும்.
5. செப்புத் தாம்பாளத்திலுள்ள பொருட்களனைத்தையும் (மோதிரம், தாம்பாளம் உள்பட மாக்கல் விநாயகரைச் செய்த ஸ்தபதிக்குத் தானமாக அளித்திடுக! (மாக்கல் கணபதியைத் தவிர!) இத்தகைய “தாம்ரபத்ர“ பூஜையினால் மாக்கல் விநாயகருக்கு அளப்பரிய  தெய்வீக சக்தி உட்புகுந்து ஆவாஹனமாகிக் கும்பாபிஷேக சக்தியினைப் பெறுகின்றார்.
* மாக்கல் விநாயகரை எங்கிருந்தோ/விலைக்கு வாங்கினோம்.
* மாக்கலைச் செய்த ஸ்தபதி தற்போது இல்லை.
* மாக்கல் விநாயகர் சிலை கீழே விழுந்து உடைந்து விட்டது.
* மாக்கல் விநாயகர் சிலை தேய்ந்து பின்னமாகி விட்டால்....
-- போன்றவற்றிற்கு விளக்கங்கள் கோரலாம். முதல் இரண்டிற்கும், 70/80 வயது நிறைந்த பழுத்த, அனுபவமிக்க, நிறைய குழந்தைகளைப் பெற்ற உத்தம ஸ்தபதி தம்பதியினருக்குப் பாதபூஜை செய்து பல நூற்றுக்கணக்கான தெய்வீகச் சிற்பங்களை வடித்த அவர்தம் புனிதக் கரங்களால் ஆசி பெறவும். மாக்கல் பின்னமடைந்தாலோ/ உடைந்து விட்டாலோ,
1.அதே அளவு/உயரம்/எடைக்கு உலோகத்தால் (தங்கம், வெள்ளி, பஞ்சலோகம், ஸ்படிகம் etc) புது விநாயகரைப் பெற்றுப் பூஜையில் வைத்திடவும்.
2. அல்லது மேற்கண்ட வகையில் புது பிள்ளையாரைப் பெற்றுக் கோயில்/ஆசிரமம்/குருகுலம்/ உத்தமமான பிள்ளையார் உபாசகருக்குத் தான தருமங்களுடன் அளித்திடலாம்.
3. பின்னமுற்ற/உடைந்த மாக்கல் விநாயகரை, விநாயகச் சதுர்த்தியன்று கங்கை, காவேரி போன்ற புனித நதி நீரில் வைத்துக் களிமண் விநாயகருடன் கடலில்/நீருள்ள கிணற்றில் விஸர்ஜனம் (நீரில் சேர்த்தல்) செய்துவிடவும்.
குறிப்பு :- அன்பர்கள் இத்தகைய பயனுள்ள ஆன்மீக வினாக்களை அனுப்பினால் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அற்புதமான ஆன்மீக விளக்கங்களை உணர்த்துகின்ற புண்ணியத்தை எளிதில் பெற்று இரட்டிப்பாகப் பலன்களைப் பெறலாம்.

ஐயர்மலை மகிமை

ஐயர் மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர் மஹிமை (திருச்சி – குளித்தலை அருகே ஐயர்மலை உள்ளது.)    (சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடன் திருச்சி – குளித்தலை அருகே உள்ள இரத்னகிரி மலைப் பகுதியில் தங்கும் பேறு பெற்றார். அவர்தம் சற்குருநாதர் அருளிய இரத்ன கிரிமலையின் மஹிமையை இத்தொடரில் அளிக்கிறோம்.)
“ஐந்தெழுத்து ஓதி ஐயர் மலை நாடு”
பிரம்மாவின் சாப விமோசனம் :- ஓங்கி அழலாய் நிமிர்ந்த எம்பெருமான் சிவபெருமானின் அடி, முடி காணாது பிரம்மாவும், திருமாலும் தோல்வியடைந்து வருந்தினர். ஆனால் பிரம்மாவோ தன் தோல்வியை ஒப்புக் கொள்ள இயலாமல் தான் சிவபெருமானின் திருமுடியைத் தரிசித்ததாகப் பொய் கூறினார். பின்னர் தன்னிலை அடைந்து மூல முதல்வனிடமே பொய்யுரை கூறியதற்காக மனம் வருந்தி அதற்காகப் பிராயச்சித்தம் பெற எண்ணினார். திருஅண்ணாமலையில் ஆதி அண்ணாமலை என்னுமிடத்தில் (தற்போது அடிஅண்ணாமலை என்று வழங்கப்படுகிறது) சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பல காலமாக வழிபாடு செய்யலானார். தன் தவறுக்காக மனம் வருந்தி சிவபெருமானிடம் தொடர்ந்து பிரார்த்தித்தார். இந்த வழிபாடுகளினால் பிரம்மாவுக்குப் பூரண மன அமைதி கிட்டவில்லை. அதனால் திருஅண்ணாமலையைக் கிரிவலம்‘ வந்து பிராயச்சித்தம் காணமுயன்றார். பல யுகங்கள் கிரிவலம் வந்த பின் ஒருநாள் திருஅருணகிரி ஈசன், “நான்முகனே! நீ ஐயர் மலை செல்வாயாக! அங்கு உனக்கு அருணை கிரிவலப் பயனாக யாம் விமோசனம் அளிப்போம்! உன் மூலமாக ஐயர்மலையாம் இரத்னகிரியின் மஹிமை எங்கும் பரவட்டும்.” என்று அசரீரியாக ஒலித்தார். மிக்க உவகையுடன் பிரம்மா ஐயர் மலையை அடைந்தார்.

இரத்தினகிரியில் (ஐயர்மலை) தற்போது உள்ளது போன்ற படிகள் அக்காலத்தில் கிடையாது. மிகவும் சிரமத்துடன் மலைமேல் சென்று அங்கு அருள்பாலிக்கும் பஞ்ச மகாசித்தர்களைத் தரிசனம் செய்து அவர்களின் அருளாசியைப் பெற்றார். ஆதிமுதல்வனிடம் பொய்யுரை உரைத்ததையும் அதனால் தான் பெற்ற சாபத்தையும் அவர்களிடம் விவரித்து, அந்தச் சாபத்திற்கான பரிகாரம் பெறும் முறையைக் கேட்கலானார். பஞ்ச மகா சித்தர்கள் ஸ்ரீஇரத்னகிரீஸ்வரரின் அற்புதங்களைப் பிரம்மாவுக்கு எடுத்துக் கூறினர். இரத்தினகிரியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மகத்துவத்தையும் விரிவாக உரைத்தனர். அதுவே சகல சாபங்களையும் போக்கும் அருமருந்தென உணர்ந்தார் பிரம்மா. பஞ்ச மகாசித்தர்கள் அருளிய முறையில் பிரம்மா இரத்தின கிரியில் (ஐயர்மலை) தீபம் ஏற்றி ஸ்ரீஇரத்தின கிரி ஈஸ்வரரை முறையாக வழிபட்டார். அதனால் பிரம்மாவின் சாபம் முழுமையாக நிவாரணம் அடைந்து  எல்லா நலன்களையும் ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரின் திருவருளால் பெற்றார் பிரம்மதேவர். பிரம்மாவுக்குப் பின்னர் பல மன்னர்கள், சித்தர்கள் அருளிய தீப பூஜை முறையைத் தக்க குருநாதர்கள் மூலம் அறிந்து தொடர்ந்து இரத்தினகிரியில் கார்த்திகை தீபமேற்றி வழிபாடுகள் செய்து நாட்டுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ சீரிய தொண்டாற்றினர்!
மன்னர்கள் மறைந்த பின் இரத்தினகிரியில் அகண்ட மலை தீபம் ஏற்றும் வழக்கமும் மறைந்து விட்டது. மக்கள் சேவையையே மகேசன் சேவையாக எண்ணி அற்புதத் தொண்டாற்றி வரும் ஸ்ரீகுருமங்கள கந்தர்வா அவர்கள் பொதுமக்களின் பேருதவியுடன் யுவவருட கார்த்திகை தீபத்தை ஐயர்மலையில் பஞ்சமகா சித்தர்கள் அருளிய வண்ணம்/முறையில் தீபம் ஏற்றிட பெரிதும் விழைந்தார்.., ஸ்ரீகுருமங்கள கந்தர்வாவின் அருளாணையின் பேரில் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம் அடியார்கள் யுவவருட கார்த்திகை தீபத்தைப் பொதுமக்களின் பேருதவியுடன் இரத்தினகிரியில் ஏற்றி ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரின் திருவருள் அனைவரையும் சென்றடைய வழிசெய்தனர். மிகப் பெரிய கொப்பறையை மலை மேல் ஏற்றி அதில் சுத்தமான பசுநெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயை ஊற்றி சுமார் ஐந்து நாட்கள் தீபம் எரிய ஏற்பாடு செய்தனர். ஐயர்மலையிலும், அதைச் சுற்றிலும் உள்ள பல கிராமத்திலுள்ள மக்களும் தீபத்தைத் தரிசித்துப் பேரருள் பெற்றனர். பல யுகங்களுக்கு முன் ஸ்ரீஇரத்தினகிரி ஈஸ்வரரிடமிருந்து பிரம்மா பெற்ற திருவருளை இன்று கலியுகத்தில் வாழும் மக்களும் பெற்று வாழ பெருங்கருணை புரிந்து நம்மை வழி நடாத்திச் செல்லும் ஸ்ரீகுருமங்கள கந்தர்வாவுக்கு நன்றியுரை நவில வார்த்தைகளை எங்குதான் சென்று தேடுவது!
இரத்தின கிரியின் தோற்றம் :-
எம்பெருமானாகிய சிவபெருமான் உறையும் திருக்கயிலாயத்தில் உச்சிவழுதி என்ற மலைப்பகுதி உண்டு. அம்மலைப் பகுதியில் ஏராளமான ரிஷிகள் தவமியற்றிப் புனிதமான கயிலாயத்தை மேலும் புனிதமடையச் செய்திருந்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த உச்சிவழுதி மலையைப் புவிவாழ் மக்களுக்குக் கொண்டு வந்து அருள்பாலிக்க அங்குள்ள ரிஷிபுங்கவர்கள் விரும்பினர். ரிஷிகளின் தன்னலமற்ற தியாக உணர்வை அறிந்த சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று உச்சி வழுதி மலைப்பகுதியைப் பூலோகத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி அளித்தார். பூலோகத்தில் அம்மலையை எந்த இடத்தில் நிலைபெறச் செய்வது என்று அறிந்து வருமாறு ரிஷிகளைப் பணித்தார் சிவபெருமான். நினைத்தவுடன் காரியசித்தி அருளும் இடங்கள் பல பூலோகத்தில் உண்டு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமான காரியங்கள் சித்தியாகும். தற்போது இரத்தினகிரி அமைந்துள்ள ஐயர் மலைப் பகுதியை காரிய சித்தி நல்கும் உன்னத இடமாகத் தேர்ந்தெடுத்து எம்பெருமானிடம் அறிவித்தனர் ரிஷிகள். மேலும் தேவலோகத்தில் “இரத்தின சிலாதரங்கள்” என்ற அதியற்புதமான கற்கள் உண்டு. தேவலோக இரத்தின சிலாதரங்களைத் தம் கால் கட்டை விரலில் ஆபரணமாக அணிந்திருந்தார் சிவபெருமான். அந்தச் சிலாதர வளையத்தையும் பூலோக மக்களுக்கு அருள் வழங்க நல்குமாறு சிவபெருமான் ரிஷிகள் வணங்கிக் கேட்டனர்.

உலகத்தவர் உய்ய நஞ்சையே உண்ட நீலகண்டன் அல்லவா? ரிஷிகள் கேட்டவுடன் எம்பெருமானும் சிலாதர வளையத்தைக் கழற்றி பூமியில் விழச் செய்தார். சிவபெருமான் கட்டைவிரலை அணி செய்த அந்த அற்புத இரத்தின சிலாதர வைரம் ரிஷிகள் தேர்ந்தெடுத்த பகுதியில் விழுந்தது.. சிவபெருமான் ரிஷிகளைப் பணித்து உச்சி வழுதி மலையைச் சிலாதர வளையத்தின் மீது நிர்மாணிக்கும்படி கூறினார். கயிலாயம் பூமிக்கு வந்தால் பூமாதேவியால் அதைத் தாங்க இயலுமா? எனவே சிவபெருமானின் திருஆணைப்படி உச்சிவழுதி மலையை ரிஷிகள் தங்கள் தவவலிமையால் இலேசான பொருளாக மாற்றி அதன் எடையைக் குறைத்துப் பூலோகத்திற்குக் கொண்டு வந்து, சிலாதர வளையத்தின் மீது பொருத்தினர். பின்னர் உச்சி வழுதி மலை மேல் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினர். ஆனால் உச்சி வழுதியைச் சிலாதர வளையத்தின் மீது பொருத்திய மறுகணமே சிலாதர வளையம் மலைக்கு மேல் வளர்ந்து, மலையை ஊடுருவி, தான் தோன்றி இலிங்கமாக, சுயம்பு மூர்த்தியாக, இரத்தினகிரீஸ்வர பிரானாக ஒளிர்ந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அண்ட சராசரத்திலுள்ள எல்லா ரிஷிகளும் முனிவர்களும், தேவாதி தேவர்களும் இரத்தினகிரி ஈசனைத் தரிசித்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். ஐயர் மலையில் இரத்தின கிரிலிங்க மூர்த்தி பட்டை லிங்க வடிவில் அமைந்திருக்கிறார். பூமியிலிருந்து மலையைக் கிழித்துக் கொண்டு வெளிவருவதற்கு ஏதுவாகக் கூர்மையான பிம்பத்தை உடையவர். இரத்தினம் என்றால் விலை மதிப்பற்றது. விலைமதிக்க முடியாதது என்று பொருள். தேவலோக சிலாதர ரகசியத்திலிருந்து உருவானதால் உலகில் உள்ள கோடானுகோடி இரத்தினங்கள் கொடுக்ககூடிய செல்வங்களையும், அனுகூலங்களையும், அனுகிரகத்தையும் அருளும் இரத்தின பாணலிங்கமாகக் காட்சியளிக்கிறார் இரத்தினகிரி பெருமான். சித்தர்கள் மட்டுமே அறிந்த சிலாதர ரகசியங்களைக் கலியுக மக்களும் உய்த்துணர பெருங்கருணை கொண்டு எடுத்துரைத்து வருகின்றார்கள் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளாய்ப் பவனி வரும் ஸ்ரீகுரு மங்கள கந்தர்வா அவர்கள்.

கூடா நாட்கள் :- சில கிழமைகளில், சில நட்சத்திரங்கள் கூடினால் அந்நாட்களில் சுப காரியங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

நாள்

நட்சத்திரம்

ஞாயிறு

பரணி

திங்கள்

சித்திரை

செவ்வாய்

உத்திராடம்

புதன்

அவிட்டம்

வியாழன்

கேட்டை

வெள்ளி

பூராடம்

சனி

ரேவதி

மேற்கண்டவாறு அந்தந்த கிழமைகளில் அந்தந்த நட்சத்திரம் சேரும் நாட்களே கூடா நாட்களாகும். இதனைப் பஞ்சாங்கங்களில் பிரபலாரிஷ்ட யோக நாட்கள் எனக் குறிப்பிடுவர். இது பற்றிய அபூர்வமான விளக்கங்களை எம் ஆஸ்ரமத்தின் வெளியீடான “நாளும் கிழமையும் செய்வதை நான்கு பேர்கள் செய்யார்” என்ற புத்தகத்தில் காணலாம். தற்போது இதன் பிரதிகள் கைவசம் இல்லையெனினும், ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உள்ளோர், இதனுடைய மறுபதிப்பிற்கு உதவி செய்வார்களேயானால், மக்களுக்கு.....
1. மேற்கண்ட கூடா நாட்களின் விளைவுகளைப் பற்றியும்
2. இந்நாட்களில் திருமணம், சீமந்தம், கோர்ட்டு வழக்கு, வியாபார ஒப்பந்தம், கையெழுத்திடல், கிருஹப் பிரவேசம், பள்ளி, கல்லூரியில் சேர்த்தல், தேர்வுக் கட்டணம் செலுத்துதல், பேங்க் செக் கையொப்பமிடல், பிரயாணம் செய்தல், திருமண நிச்சயதார்த்தம் செய்தல் போன்ற அனைத்து சுப காரியங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும்
3 மேற்கண்ட கூடாநாட்களில் தீயவினைகளைத் தணிக்கக் கடைபிடிக்க வேண்டிய  ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை விடாது ஜெபித்தல் – போன்றவற்றையும்.., மக்களுக்கு அறிவுறுத்துகின்ற மாபெரும் இறைப் பணியைச் செய்திடலாம்

அமுத தாரைகள்

1. சந்தான பாக்கியம் பெற :- திருவோண நக்ஷத்திரத்தில் (குழந்தைப் பேறு வேண்டும்) தம்பதியினர் பசுங்கன்றைத் தோளில் தாங்கி பசுவை ஓட்டியவாறே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பசுவையும் கன்றையும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தானமாக அளித்து ஸ்ரீஅண்ணாமலையார் சந்நிதிக்கு பின் உள்ள ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியைத் துதித்து ஸ்ரீஉண்ணாமுலை அம்மனை வேண்டிடுக. இதனால் குழந்தை பேற்றிற்கான நல்வழிகளைப் பெறலாம்.
2. புதிதாக பசு, கன்றினை வாங்கியபின் அவற்றை ஓட்டியவாறே (இயன்றால் கன்றினைத் தோளில் சுமந்தவாறே) திருவாதிரை நக்ஷத்திரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த பின்னரே இல்லத்திற்கு அவற்றைக் கூட்டி வரவேண்டும். பிறர் கண்படுமுன் பசுவானது திருஅண்ணாமலையின் தரிசனத்தைப் பெருதலால் பலவிதமான தோஷங்களை நிவர்த்தி செய்துவிடலாம். மேலும் இத்தகைய பூஜை முறையால் பசு இனம் நன்கு விருத்தியாவதோடு அதனுடைய பாலும் வளமையான ஆரோக்கியத்தையும் சந்தான விருத்தியையும் பெற்றுத் தரும்.
3. தினமும் பலவிதமான கோணங்களில் தீய சக்திகளையும் பகைமையையும் சந்தித்து வருகின்றோம், வெளியில் சென்றிடில் விபத்தின்றி, காயமின்றி பத்திரமாக நன்னிலையில் வீடு திரும்புவதற்கே நிறைந்த புண்ய/பூஜா சக்தி தேவைபடுகின்றது. ஸ்ரீகிருஷ்ணனுக்கு அவருடைய வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு நாயகர்கள் அளித்த சஸ்த்ர ஹத மாளய தர்ப்பண பூஜை நமக்கு தினந்தோறும் தேவையான புண்ய சக்தியை அளிக்கவல்லதாம். உண்மையில் நாம் அனைவரும் தினந்தோறும் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டும். அமாவாசையன்றாவது கண்டிப்பாக தர்ப்பணபூஜை செய்திட வேண்டும். அமாவாசைத் தர்ப்பணங்களையும் தவற விட்டவர்களுக்காக வருடத்திற்கு ஒரு முறை 15 தினங்களுக்கான மாளயபட்ச தர்ப்பண பூஜை விதிக்கப்பட்டுள்ளன. இம் மாளயபட்சத்திலாவது நாம் தினந்தோறும் செய்யத் தவறிய சஸ்த்ர ஹத தர்ப்பணத்திற்கு ப்ராயச்சித்தமாக மாளய சதுர்த்தசி திதியில் இதனை முறையாக நிறைவேற்றிட வேண்டும்.
4. பிரயாண இரட்சை :- கணவன் அடிக்கடி விமானம்/கப்பல்/இரயில்/கார் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் இதனால் கவலையுடன் ஒவ்வொரு தினத்தையும் கழிக்கின்ற மனைவியர் உண்டு. இவர்கள் செவ்வாய் தோறும் செவ்வாய் பகவானுக்கு அரளி, சம்பங்கி பூக்களால் அலங்கார அர்ச்சனைகள் செய்து வந்திடில் இது மிகச் சிறந்த பிரயாண இரட்சையாக அமைந்து வாகன விபத்துக்களிலிருந்து கணவனைக் காப்பாற்றும். பிரயாணத்திற்கு முன் வார சூலை பார்ப்பதும் ஸ்ரீபைரவருக்கு முந்திரிப் பருப்பினால் ஆகிய மாலையை சார்த்தி வழிபட்டு முந்திரியை ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதும் சுபமான பிரயாணத்திற்கு உதவும்.
5. கடும் நோய்களுக்கு நிவாரணம் :- பல வருடங்களாகக் கடும் நோயால் அவதியுறுவோர் பலர் உண்டு. எங்கெங்கோ எத்தகைய வைத்தியம் செய்திடினும் நோய் தீராது இவர்கள் துன்பத்தில் உழன்று வருகின்றனர். இத்தகையோர், விசாக நக்ஷத்திரத்தன்று, பசு, கன்றுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அப்பசுவைக் கன்றுடன் ஓர் ஏழைக்குத் தானமாக அளித்திட நோய் நிவாரணம் பெறும் நல்வழிகளைக் காணலாம். இவர்கள் மாதந்தோறும் விசாக நக்ஷத்திரத்தில் சென்னை, திருச்சி, காஞ்சி போன்ற இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்களுக்கோ அல்லது ஒரு எளிய குடும்பத்தினர் வைத்துள்ள பசுவிற்கோ தாமே கைப்பட அரைத்த மஞ்சளை நீரில் கரைத்து பசு, கன்றிற்கு நீராட்டி, பசுஞ்சாணம், குப்பை, வைக்கோல் போன்றவற்றை எடுத்துத் துப்புரவு செய்து, பசு/கன்றிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி வரவேண்டும். கொடிய கர்மங்களால் விளைகின்ற கடுமையான வியாதிகட்கு இதுவே மிகச் சிறந்த பரிகாரமாகும். ஆனால், தீதும், நன்றும் பிறர் தர வாரா, அதாவது, நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கட்கு நாமே பொறுப்பாளி என்றுணர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.
6. உத்தியோகம் கிடைக்க :- கோயிலில் முதல்நாள் இறைவனுக்கு அணிவித்த பூக்களை மறுநாள் காலையில் களைவார்கள். இவற்றிற்கு நிர்மால்ய பூக்கள் என்று பெயர். இப்பூக்களைக் கால்களில் மிதிபடாமல் நதியிலோ, கடலிலோ, நீரில்லாத கிணற்றிலோ சேர்த்திட வேண்டும். அருகில் நதி, கடல், நீரற்ற கிணறு இருக்குமிடம் சென்று சேர்ப்பது மிகச் சிறந்த இறைத் திருப்பணியாகும். வேலையின்றி அவதியுறுவோர், பாடல் பெற்ற/மங்களாசாஸனம் செய்யப் பெற்ற கோயிலையோ அல்லது தனக்கு இஷ்டமான கோயிலையோ தேர்ந்தெடுத்து நாள்தோறும், நிர்மால்யப் பூக்களை மேற்கண்ட முறையில் விஸர்ஜனம் (நீரில் சேர்ப்பது) செய்கின்ற அற்புதமான இறைத் திருப்பணியை உள்ளன்புடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் செய்து வந்திடில் நிச்சயமாக நல்ல வேலை கிட்டும்.
7. குழந்தைகளின் ஒழுக்கம் மேம்பட...... :- சில குழந்தைகளின் பொய், புரட்டினால் பெற்றோர்களுக்கு மிகுந்த துன்பங்கள் உண்டாகின்றன., பெண் குழந்தையாயின் ஒன்பது சிகப்பு நிற ரோஜாக்களைத் தலையில் ஆரமாகக் கோர்த்துச் சூட்டி கோயிலில் ஒன்பது முறை [மருதாணியிட்ட கால்களுடன் – குறிப்பாக உள்ளங்கால் மருதாணியினால் நன்கு சிவந்திருக்க வேண்டும்] வலம் வரச் செய்திடுங்கள். நக நுனிகளின் மூலமே தீயசக்திகள் உள்புகுந்து பொய், புரட்டல் போன்ற தீய குணங்களைத் தருவிக்கின்றன. மருதாணியின் மூலிகை குணங்களினால், தீவினைச் சக்திகளை அறவே தவிர்த்திடலாம். சிறு ஆண் குழந்தைகளுக்கும் மேற்கண்ட முறையில் பூச்சூடி வழிபடும்படி செய்திடலாம். சிறுவர்களாயின் தாமரையிலையில் ஒன்பது சிகப்பு நிற பூக்களுடன் கோயிலில் ஒன்பது முறை மருதாணியிட்ட கால்களுடன் முடிந்தால் அடிப்பிரதட்சிணம் செய்து பூக்களைப் பாலமுருகனுக்கு, தண்டாயுதபாணிக்கு, பாலவிநாயகருக்குச் சாற்றி வந்திடில் பொய் கூறுதல் மறையும். ஏழைக் குழந்தைகளுக்குத் தேன் கலந்த பால் அளித்து வருதலால் பொய்மை குறைந்து குழந்தைகளின் வாக்சக்தி பெருகும்.
8. மாங்கல்ய பலத்திற்கு :- சிறுநீரகக் கோளாறுகள், இருதயக் கோளாறுகள், தலையில் அடிபடுதல், கோமா முதலிய கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் பற்றிப் பல இல்லங்களில் தினமும் வேதனைச் சூழல்கள் சூழ்ந்திருக்கும். “நித்ய கண்டம், பூர்ண ஆயுள்” என்ற நிலையில் நோயுற்றிருப்போரும் உண்டு. பெண்கள், பூச நட்சத்திரம் தோறும் பன்னீர்ப் பூவினால் சிவபெருமானுக்கு அர்ச்சித்து வழிபடுதல், பூச நட்சத்திரம் நேரம் முழுவதும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலும் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தையும் மனச்சாந்தியையும் அளிக்கும். பூச நட்சத்திரத்தில் ஏழைப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ஆடைகள் போன்ற தானதர்மங்களையும் செய்து வருக.
9. புது ஆடைகளுக்கான பூஜை :- புது ஆடைகளை வாங்கியவுடன் குங்குமமிட்டு வெண்தாமரை மலர்களுடன் சேர்த்துத் தட்டில் வைத்து வழிபடுக. வெண்தாமரை மலர்களால் இல்லத்திலோ, கோயிலிலோ சிவபெருமானுக்கு/லிங்கத்திற்கு அலங்காரம் செய்து துதித்திட, இல்லத்தில் ஆடைகளுக்குப் பஞ்சமே ஏற்படாது. ஆடைகள் பல்கிப் பெருகும். ஜவுளிக் கடைக்காரர்களுக்கு இவ்வித வெண்தாமரை மலர் பூஜை மிகவும் சிறப்புடையதாகும். வியாபார அபிவிருத்திக்கும், துணிகளுக்குக் குறைவில்லாமல் நன்கு வியாபாரம் செய்யவும் இப்பூஜை உதவும். எந்நிலையிலும் ஆடைப் பஞ்சம் ஏற்படாது.
அட்டைப் பட விளக்கம் :- அட்டையில்  - ஸ்ரீஅகண்ட சக்தி பாத தரிசனம்
1. நாம் பெற்றோர்க்கும்/பெரியோர்களுக்கும், மஹான்களுக்கும்
2. மனைவி, கணவனுக்கும்,
3. குழந்தைகள் பெற்றோர்களுக்கும். – பாதபூஜை செய்ய வேண்டியது நித்ய கடமையாகும்.
கலியுகத்தில் பாதபூஜை முறை துரதிருஷ்டவசமாக மறைந்து வருகிறது. இதனால் தான் ஒழுக்கமின்மை நிலவி வன்முறைகள் பெருகின்றன. நித்ய பாத பூஜைகளைக் கைவிட்டதற்கான பிராயச்சித்தமாகத்தான் திருஅண்ணாமலை கிரிவலப் பகுதி, திருக்கழுக்குன்றம், திருப்பதி, கயா, பழனி போன்ற இடங்களில் ஆங்காங்கே “பாதப் படிவுகள்” வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கங்கை/காவிரி போன்ற புண்ய நதி நீரால் அபிஷேகித்து மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு வணங்கிட வேண்டும். நம் பித்ருக்களுடைய, ஆன்றோர்களுடைய, பெரியோர்களுடைய ஆசிகள் கூடினால் தான் நமக்குச் சாந்தமான வாழ்வு அமையும் என்பதை மறந்திடலாகாது. அட்டையிலுள்ள ஸ்ரீஅகண்ட சக்தி பாத தரிசன வடிவைப் பூஜையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், மஞ்சள் நிற புஷ்பம் சார்த்தி வழிபடுக. மாளயபட்சத்தில் யதிமாளய தினத்தன்று (9.10.1996) இப்பாத பூஜை மிகவும் விசேஷமானதாகும். இதுவரை பாத பூஜைகளைச் செய்யாதோருக்கு இது ஓரளவு பரிஹாரமாக மாளய பட்ச மஹிமையால் அமைகின்றது.

விருட்ச பூஜை மகிமை

விருக்ஷ நவராத்ரி பூஜை
12.10.1996 சனிக்கிழமை/மஹாளய பட்ச அமாவாசை 
பித்ரு லோகத்திலிருந்து நம்முடைய மூதாதையர்களான ஒளிப்பகுதியில் வாழும் பாக்யம் பெற்றவர்களான பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசைத் திதியிலும், பௌர்ணமித் திதியிலும் பூலோகத்திற்கு வருகின்றனர். அப்படியானால் பௌர்ணமியில் அல்லாமல் அமாவாசையில் மட்டும் பித்ரு தர்ப்பணங்களைச் செய்வது ஏன்? அமாவாசை, மாதப்பிறப்பு போன்ற 96 வகையான இறந்தவர்களுக்காகத் தர்ப்பணங்கள் அளிக்கப்பட வேண்டிய விசேஷ தினங்கள் உண்டு. ஆனால் ஒவ்வொரு தர்ப்பண தினத்திற்கும் வரவேண்டிய பித்ருக்களின் வகையினரை நம் கோத்ராதிபதிகளே நிர்ணயிக்கின்றனர். ஜாதி மத பேதமின்றி புல , பூண்டு முதல் மனிதர், தேவர்கள் வரை அனைவர்க்கும் மூலாதாரமாக ஒவ்வொரு மகரிஷியே கோத்ராதிபதியாக அமைகின்றனர். அதாவது நம் அனைவர்க்கும் கோத்ராதிபதிகள் உண்டு. வசு, ருத்ர, ஆதித்ய, நாரதீய, புருஷோத்தம, பஞ்சப்ரேம என்றவாறாக ஒவ்வொருவருக்கும் பல வகை பித்ருக்கள் உண்டு. நிறைய தான தர்மங்களுடன், உய்வுடன் வாழ்ந்தவர்க்கு ஒரு பித்ரு லோகம் அன்னாபிஷேகம், அன்னதானம், நீர்மோர் தானம் மிகவும் விசேஷமாக அமைகின்றன.
அமாவாசையன்று பூலோகத்திற்கு வந்து செல்கின்ற பித்ருக்கள் ஜலமய (நீர்மயம்) கோசத்தின் அம்சங்களை ஏற்றுவருவதால் இவர்களுக்கு எள், நீர் கொண்டு வார்க்கப்படும் பித்ரு தர்ப்பணங்களே மிகவும் ப்ரீதியாக அமைகின்றன. சர்வகோடி பித்ருக்களுக்கும் அதிபதியான திருமாலின் முடிகளே கருப்பு நிற எள் மணிகள் ஆயின. எள் பிறந்த இத்திருநிகழ்ச்சி நடந்ததும் அமாவாசைத் திதியில்தான். ஆகையால் எள்,பித்ரு தர்ப்பணத்தில் சிறப்பிடம் வகிக்கின்றது.
அமாவாசையில்..... அமாவாசை அன்று பூலோகத்திற்கு வரும் பித்ருக்கள் ஒளி வடிவை ஏற்பதில்லை. மாறாக இருளையும் ஒளியையும் பிரித்துக் காட்டும் மின்னல் போன்ற நிறமற்ற நீர் போன்ற உருவைப் பெறுகின்றனர். இது மட்டுமன்றி அமாவாசையில் பூலோகத்திற்கு வரும் பித்ருக்கள் நம் பூஜை அறையில் மூதாதையர்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்திய சந்தனக்கல், சந்தனக்கட்டை, தூபக்கால் போன்றவற்றில் ஆவாஹனம் ஆகின்றனர். எனவேதான் அமாவாசை அன்று நம் வீட்டுப் பெரியோர்கள் பயன்படுத்திய பொருள்களைச் சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம், இட்டுப் பூஜையில் வைத்திட வேண்டும். சில சமயங்களில் அபூர்வமாகச் சில பித்ருக்கள் அமாவாசைத் திதியில் ஒளி ரூபத்தையும் ஏற்பதுண்டு. புண்ய நதி, கடலில் இன்று நீராடுவதால் இவர்களுடைய ஆசியைப் பெற்றிடலாம். அமாவாசை அன்று மழை பெய்திடில் மழையினூடே செய்கின்ற பித்ரு பூஜைகளுக்குப் பன்மடங்கு பலன்கள், பழங்கள் போன்றவற்றை இறைவனுக்குப் படைத்துத் தானம் செய்திடில் பித்ருக்களின் ஆசியை எளிதில் பெற்றிடலாம். காரணம் இவையெல்லாம் மழையினூடே மின்னல் ஒளியில் நிவேதனம் செய்யப்பட்டவை ஆகின்றன. இவை ஒளிரூபப் பித்ருக்களைச் சென்றடைகின்றன. இவ்வாறாக நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய நாளான மாளய பக்ஷ அமாவாசையில் பித்ருக்கள், நம் இல்லத்திற்கு வந்து புனிதமான, பவித்ரமான ருத்ராக்ஷம், ஸ்படிக மாலை, வில்வம், துளசி தளங்கள், கடுக்கன்கள், நவரத்தினங்கள் பதித்த தோடுகள், மூக்குத்திகள் போன்றவற்றில் தங்கள் ஆசியைப் பதித்துச் செல்வதால் மாளய பக்ஷ அமாவாசை அன்றே கொலுவிற்கான பொம்மைகளை அமைக்கும் நற்பழக்கம் நிலவுகின்றது.
காலம் காலமாக கொலு பொம்மைகள் நம் வீட்டில் இருந்து வருவதால் நம் வீட்டுப் பெரியோர்கள் கரங்கள் தொட்ட இவற்றில் பித்ருக்கள் தங்கள் ஆன்ம சக்தியை, அற்புதமான ஆசீர்வாதமாக நிலைநிறுத்திச் செல்கின்றனர். மாளய பக்ஷ அமாவாசை அன்று கொலுவை அமைக்குமுன் நிறைவேற்ற வேண்டிய அஸ்வத விருக்ஷ (அரசமர) பூஜை ஒன்றுண்டு. மஞ்சள் கிழங்கை நன்றாக ஊறவைத்து நாமே இல்லத்தில் மஞ்சளை அரைத்து ஒரு பெரிய உருண்டையாக உருட்டி அரசமரம் இருக்கின்ற கோயிலுக்கு எடுத்துச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். அம்பிகையின் நாமத்தைத் துதித்தவாறே நம் இல்லத்தில் உள்ள அனைவரும் மஞ்சள் அரைத்தல் உத்தமமானது. மூன்று அல்லது ஆறு அல்லது ஒன்பது புரிகள் (இழைகள்) உள்ள பருத்தி நூலில் மஞ்சளைத் தோய்த்து ஐந்து கொம்பு மஞ்சள் துண்டுகளை நூலில் கட்டிட வேண்டும். கோயிலில் உள்ள அரச மரத்திற்குக் கீழ் இருந்து மேலாக (மட்டும்) மஞ்சளைப் பூச வேண்டும். இதனைச் சுற்றிக் கொம்பு மஞ்சள் கட்டப்பட்ட மஞ்சள் நிறப் பருத்தி நூலினை 3 அல்லது 6 அல்லது 9 முறை சுற்றிக் கட்டிட வேண்டும். இதுவே ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஸ்ரீலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய ஐந்து சக்திகளின் ஒருமித்த சக்தியைப் பெற்றுத் தருகின்ற அபூர்வமான அஸ்வத விருக்ஷ பூஜையாகும்.
பொதுவாக அனைத்து இல்லங்களிலும் தெய்வீக சக்திகள் நிறைந்த பித்ருக்கள் தங்குமளவிற்கு ஒரு விதமான தெய்வீகச் சூழ்நிலை அமைந்திருப்பதில்லை. தீய பழக்கவழக்கங்கள், மாதவிலக்கு நாட்கள் போன்ற பல அசந்தர்ப்பங்களால் இவை ஏற்படக் கூடும். அதற்குப் பரிஹாரமாகவே அரச விருட்ச பூஜை அமைந்துள்ளது. பொதுவாக அமாவாசையன்று அனைத்து வகையான பித்ருக்களும் அரச மரங்களில் தங்குவதுண்டு. பித்ருக்களின் ஆசியைப் புனிதமான மஞ்சள் பூசும் பூஜை மூலமாகப் பெண்களும் பெறும் பொருட்டு நவராத்திரிக்கு முன்பே இப்பூஜை விதிக்கப்பட்டுள்ளது. கொம்பு மஞ்சளுக்கும் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவிநாயகர், நாக மூர்த்திகளுக்கும் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழ நைவேத்தியத்துடன் கற்பூர தீபத்துடன், நெய் தீபத்துடன் பூஜைதனை நிறைவு செய்து பின் இல்லத்திற்கு வந்து கொலு பொம்மையை அடுக்கி வைத்திட வேண்டும். கொலுவை அமைத்தவுடன் நவராத்ரியின் முதல் தினத்திற்குரிய ஸ்ரீகுலவாதின்ய துர்கா தேவியை எழுந்தருளும் படி பிரார்த்தித்து வணங்கிட வேண்டும்.
13.10.1996 ஞாயிறு – பிரதமை நவராத்திரி முதல் தினம்
இத்தினத்திற்குரிய தேவி ஸ்ரீகுலவாதின்ய துர்கை. இன்று அனைவரும் குறிப்பாக குழந்தையில்லாதோர், செய்ய வேண்டிய பூஜை யாதெனில் மூன்று குழந்தைகளைப் பெற்ற, 60/70 வயது நிரம்பிய ஏழைத் தம்பதிகளுக்குப் பாதபூஜை செய்து அவர்களுக்குரித்தான தான, தர்மங்களைச் செய்வதே! இதற்கு குல சம்பத்துப் பூஜை என்று பெயர். இதனால் பெரியோர்களைத் திட்டிய பாவம், சந்தான பாக்ய தோஷங்கள், பிறரை அவமதித்த குற்றங்கள் தீர்வு பெறும். இன்று கொலு பொம்மைகளுகுத் தங்க நிற/மஞ்சள் நிற உணவுப் பண்டங்களை (சர்க்கரைப் பொங்கல், கேசரி etc… ) நிவேதித்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திடுக! சூர்ய பகவானுக்குரித்தான நிறங்களிவை.
14.10.1996 – திங்கள் – துவிதியை – இரண்டாம் நாள்
இன்றைய தேவியே ஸ்ரீஆகாச காமின்ய துர்கை . இன்று பிள்ளையார் குடிகொண்டிருக்கும் ஆலமரத்திற்கு அரைத்த மஞ்சளைப் பூசி 9 மஞ்சள் கொண்ட நூலை, ஆலமரத்திற்குச் சார்த்தித் துதித்திடுக! இன்று இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்ற 60/70/80 வயது நிரம்பிய ஏழைத் தம்பதிகளுக்குப் பாத பூஜை செய்திட வேண்டும். வெள்ளை நிற உணவு, ஆடைகளைத் தானமளித்தல் விசேஷமானது! இத்தகைய பூஜைக்குப்பின் இன்று சந்திர தரிசனம் கிட்டிடில் மிகவும் விசேஷமானதாகும். இப்பூஜா பலனானது இல்லத்திலோ, அலுவலகத்திலோ இருக்கும் பெரும் பிரச்னைகளைத் தீர்க்க வல்லது.
15.10.1996 – செவ்வாய் – திரிதியை – மூன்றாம் தினம்
நவராத்திரி மூன்றாம் தினத்திற்குரிய தேவி ஸ்ரீபிரம்மசாரிண்ய துர்கை. இன்று புரசமரத்திற்கு வலது, இடமாக வட்ட, வட்டமாக மஞ்சளைப் பூசி, 9 மஞ்சள் கூடிய மஞ்சள் நூலைப் புரச மரத்திற்குச் சாற்றிடுக! ஆறுமுக ஷண்முகநாதன் எழுந்தருளியுள்ள கோயிலில் சிகப்பு நிற பூ, ஆடை, அன்னதானம் விசேஷமானது. நான்கு குழந்தைகளைப் பெற்ற 60/70/80 வயது நிரம்பிய ஏழைத் தம்பதிகட்குப் பாதபூஜை செய்திட வேண்டும். கணவன், மனைவியரிடையே மனஸ்தாபங்கள், நிலபுலப் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் பூஜையிது .
16.10.1996 – புதன் – சதுர்த்தி – நான்காம் நாள்
இன்றைய நாளுக்குரிய தேவி ஸ்ரீபூர்ண சந்திர துர்கை இன்று புரசமரத்திற்கு இடவலமாக மஞ்சளைப் பூசி 5 கொம்பு மஞ்சள் கொண்ட நூலைச் சாற்றிடுக! இன்று ஐந்து குழந்தைகளைப் பெற்ற 60/70/80 வயது நிரம்பிய ஏழைத் தம்பதியருக்குப் பாத பூஜை செய்க. பேதலிக்கும் புத்தியைச் சாந்தப்படுத்தும் பூஜையிது. கணவன்மார்களின் ஸ்திரமில்லாத மனோநிலையைச் சரிப்படுத்தும். இன்று பச்சை நிற உடை அணிந்து பூஜித்தலும், பச்சை நிற உணவு வகை, ஆடைகளைத் தானம் செய்திடலும் புத பகவானைப் ப்ரீதி செய்வதோடு ஸ்திரமான நல்புத்தியையும் தரும்.
17.10.1996 – வியாழன் – பஞ்சமி – ஐந்தாம் நாள்
இன்றைய தினத்திற்கு உரித்தான தேவி ஸ்ரீபஞ்சக தாரிண்ய துர்கை! இன்று அத்தி மரத்திற்கு (அரைத்த) மஞ்சளைப் பூசி 3/6/9 புரிகளை உடைய பருத்தி நூலில் ஒன்பது மஞ்சள் துண்டுகளைக் கட்டி இதனை அத்திமரத்திற்குச் சார்த்தி வழிபட வேண்டும். இன்று, மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகளை உடைய 60/70/80 வயதுள்ள ஏழைத் தம்பதிகளுக்குப் பாத பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய தான தர்மங்களைச் செய்ய வேண்டும். இதனால் மலைபோல் தெரியும் உறவு, கோர்ட் பிரச்னைகள் எளிமையாகத் தீர்ந்து விடும். மனக்குழப்பங்களும், இனம் புரியாத பீதிகளும் அகலும்.
18.10.1996 – வெள்ளி – சஷ்டி – ஆறாம் நாள்
ஆறாம் நாளுக்குரிய நவராத்திரி தேவியே ஸ்ரீமதுப்ரிய தேவியாவாள். இன்று வில்வமரத்திற்குக் கீழிருந்து மேலாக மஞ்சளைப் பூசி மூன்று புரிகளையுடைய மஞ்சள் பூசிய நூலைச் சாற்றி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட வேண்டும். பெண் வாரிசில்லாத ஆண் குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்த 60/70/80 வயது ஏழைத் தம்பதிகளுக்குப் பாதபூஜை செய்து சேவை புரிந்திட வேண்டும். தேன் கலந்த பாலை அம்பிகைக்கு அபிஷேகித்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமளித்திட, தீராத ரண நோய்கள் நிவாரணம் பெறும். அதிகாரம், ஆணவம், பகை, செல்வாக்கு, பதவி காரணமாகப் பிறருக்கு இழைத்த கொடுமைகளினால் விளையும் பெரும் பாபங்கள் தீர நல்வழிகள் கிட்டும்.
19.10.1996 – சனி – சப்தமி – ஏழாம் நாள்
இன்றைய தின நவராத்ரி தேவி ஸ்ரீசிகிபிஞ்சத்வஜ துர்கா தேவி. இன்று பாரிஜாதம் எனப்படும் பவள மல்லி மரத்திற்கு மஞ்சள் சரடு கட்டி வழிபட வேண்டும். இன்று இரண்டு பெண், மூன்று ஆண்களைப் பெற்றெடுத்த  60/70/80  ஏழைத் தம்பதியர்க்குப் பாத பூஜையும், சரீர சேவையும் செய்திடல் வேண்டும். இதனால் ராகு/கேது தசா/புத்தியினால் ஏற்படும் துன்பங்கள் தீரும். உடலில் இடுப்புப் பகுதி நோய்கள் தீரும்.
20.10.1996 – ஞாயிறு – அஷ்டமி – எட்டாம் நாள்
இன்றைய தினத்திற்குரிய தேவி ஸ்ரீபாசதாரிண்ய துர்கை.. இன்று மாவிலங்கை எனப்படும் அபூர்வமான மூலிகைத் தாவரத்திற்கோ – இது கிட்டாவிடில் துளசிச் செடிக்கோ அரைத்த மஞ்சளையிட்டு  மஞ்சள் சரடு சார்த்தி ஆறு குழந்தைகளுக்குக் குறையாது பெற்ற 60/70/80 வயதுடைய ஏழைத் தம்பதியினர்க்குப் பாதபூஜை செய்து இயன்ற உதவிகள் செய்திடுக! கூட்டுக் குடும்பங்களுக்குச் சிறந்த பூஜை! எவ்வித மனஸ்தாபங்களுமின்றி கூட்டுக் குடும்பம் நன்கு விருத்தியடையவும். இயலா நிலையிலுள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுக்கு உதவி புரியாது அவர்களை வருத்திய துன்பங்களைத் தீர்க்கவும் நல்வழிகள் கிட்டும்.
21.10.1996 – திங்கள் – நவமி – ஒன்பதாம் நாள் 
இன்றைய தினத்திற்குரிய தேவி ஸ்ரீபிரசன்ன துர்க்கை. வாழைமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட கோயிலில் இன்று அவ்வாழை விருட்சத்திற்கு அரைத்த மஞ்சளிட்டு மஞ்சள் சரடு சார்த்தி வழிபடுதல் வேண்டும். இன்று 9 குழந்தைகளுக்குக் குறையாமல் பெற்ற 60/70/80 வயதுடைய தம்பதியினர்க்குப் பாதபூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய சரீர சேவைகளையும், தான தர்மங்களையும் செய்திட வேண்டும். வாழை தல விருட்சமாக உள்ள ஸ்தலங்கள் சில :- திருச்சி திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், மற்றும் பட்டுக்கோட்டை அருகில் ஸ்ரீகதலிவனேசுவரர் கோயில் (வாழைத் தோட்டத்து அய்யன்) – மற்றும் வாழையின் நாமத்தைத் தாங்கியுள்ள மூர்த்தியின் திருக்கோயில்கள்.
22.10.1996 – செவ்வாய் – விஜய தசமி
விஜயதசமிக்குரித்தான நவராத்திரி தேவி ஸ்ரீதிரிபுர சௌந்தர்ய துர்கை. இன்று வன்னி மரத்திற்கு மஞ்சள் பூசி மஞ்சள் சரடு சாற்றி வழிபடுதல் வேண்டும். வன்னி மரத்தடியில் பிள்ளையார் மூர்த்தி எழுந்தருளியிருந்தால் மிகவும் சிறப்புடையது ஆகும். ஸ்ரீதிரிபுர சௌந்தர்ய துர்கா தேவி பூஜைக்குப் பிறகு ஸ்ரீஆயுர்தேவிக்குரித்தான கலச பூஜையினை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீஆயுர்தேவி பற்றிய விளக்கங்களை, நமது ஆஸ்ரம வெளியீடான “ஸ்ரீஆயுர் தேவி மகிமை” நூலில் காணலாம்.
குறிப்பு : 1. நவராத்திரியில் மட்டுமின்றி எப்போதும் அரைத்த மஞ்சளை/சந்தனத்தைப் பயன்படுத்துதலே உத்தமமானது. மஞ்சள்/சந்தனப் பவுடரைக் குழைத்துப் பயன்படுத்துதல் கூடாது. 2. நவராத்திரி நாட்களில் மஞ்சள், (பெரிய) கண்ணாடி சீப்பு, வளையல், ரவிக்கை, மெட்டி, ரிப்பன் போன்ற மங்களப் பொருட்களைச் செட்டாக தினந்தோறும் (ஜாதி மத பேதமின்றி) ஏழைச் சுமங்கலிகளுக்குக் கோயிலில் அளித்துவர கணவனின் ஆயுளும், ஆரோக்யமும் பெருகும். 3. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஆதிபராசக்தியே சர்வேஸ்வரனை வழிபடுவதால், இந்நாட்களில் பூஜை செய்வோர்க்கெல்லாம் ஈஸ்வரியின் பூஜையில் பங்கேற்ற பலன்களை ஈஸ்வரனே மனமுவந்து அளித்து அருள்பாலிக்கின்றார். என்னே அரிய பாக்யம்!

அன்ன ஆவி நிறைகுட தீபாவளி

தாது வருடத்து அன்ன ஆவி நிறைகுட தீபாவளி
வருடந்தோறும் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளைத் தக்க பெரியோர்களிடம் அறிந்து கொண்டாடினால் தான் பரிபூர்ண பலன்களைப் பெற முடியும். முறைகள் மாறுபடுகையில் ஏதேனும் ஒன்றினை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். நம் பண்டிகைகள் நமக்கு நலம் தரும் பொருள் பொதிந்த விழாக்கள் ஆகும். முன்வினைகளைத் தீர்க்கின்ற முப்பெரும் தேவனின் திருவருள் பொழியும் மெய்விளக்கங்களாகவும் நம் பண்டிகைகள் அமைந்திருக்கின்றன. பல்லாண்டுகளாக ஓரிடத்தில் இருள் மண்டி இருந்தாலும் ஒரு சிறு விளக்கு ஏற்றப்பட்டால் அவ்விடத்தை விட்டு இருள் பறந்தோடி விடுகிறது. ஒரு சிறு விளக்கே பல ஆண்டுகளின் இருளை ஒரு சிறு நொடியில் ஓட்டி விடுகிறது என்றால் பலவிளக்குகள் சேர்ந்து ஏற்றினால் எத்தனையோ எதிர்கால இருள்களை நம்மை நாடவிடாமல் ஓட்டிவிடலாம். இது எப்படி சாத்தியமாகும்?
பல ஆண்டு இருளானது ஒரு சிறு விளக்கால் ப்ரகாசம் பெறுகிறதென்றால் பல விளக்குகளை நாம் தினமும் ஏற்றிக் கொண்டு வந்தால் இருளென்பதே இல்லாமல் போய்விடும். இது எதைக் குறிக்கிறது என்றால், வாழ்வில் வழியே கிடைக்காமல் திணறுகின்ற குடும்பங்களுக்கு உடலாலோ, உழைப்பாலோ, அன்பளிப்பாலோ, திறமையாலோ, தியாகத்தாலோ, சேவையென்ற விளக்குளை விடாமல் ஏற்றிக் கொண்டு வந்தால் (செய்து கொண்டு வந்தால்) எதிர்கால ‘இருள்’ என்கின்ற துன்பத்தை நம்மால் மாற்றிவிட முடியுமல்லவா? ஆகவே, விளக்குகளை ஏற்றுங்கள். வாழ்க்கையை வீணடிக்காதீர்கள் என்ற தத்துவத்தை விளக்குவதுதான் தீபாவளித் திருநாளாகும். அதோடுமட்டுமல்லாமல் தீபாவளித் திருநாள் நம்முடைய முன்னோர்கள் மேலுலகில் தாங்கள் பெற்ற அருள் வரத்தினைப் பிறர் சேவைக்காகத் தன்னையே தியாகம் செய்த அனைவருக்கும் அருள்வழங்கும் திருநாளாகும். ஆகவேதான் இத்திருநாளை “நீத்தார் நினைத்தருளும் திருநாளே தீபாவளி“ என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இத்தீபாவளித் திருநாள் பொருள் பொதிந்த உத்தம தத்துவத்தையும் விளக்குகிறது.
நரகாரசுரன் என்ற அரக்கன் பெற்றவரம் யாது தெரியுமா? பல வருடங்களாகத் தவமிருந்து தேவர்களையும், மனிதர்களையும், பூலோகத்திலும், மேலுலகுகளிலும் ஆளுகின்ற அருள் வரமும், அதோடு மட்டுமல்லாமல் யாராலும் தான் இறக்கக்கூடாது. ஆனால் தன் தாயின் கையால் மட்டுமே இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். எந்தத் தாயும் தன் குழந்தையைக் கொல்லமாட்டாள் என்ற பூரண நம்பிக்கையே இதற்கு மூலகாரணமாகும். ஆனால் வரமளிக்கும் இறைவன், பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தான் தீர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியவன் நரகாசுரனுக்கு மட்டும் விதிவிலக்களித்து விட முடியுமா?
ஆகவே, தான் இறக்காமலிருப்பதற்குத் ‘திறமையாக வரம் பெற்று விட்டோம்’ என்ற மமதையால் நரகாரசுரன் பலருக்கும் பலவிதமான துன்பங்களை அளித்தான். ஒருவருடைய தபோபலம் (புண்ணியம்) இருக்கும் வரை எல்லாவித அக்கிரமங்களும் நல்லவிதத்தில் செயல்படும். என்றைக்குப் புண்ணியம் முடிகிறதோ, அன்று இறை தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதுபோல நரகாரசுரன் வாழ்ந்தாலும், அவனைப் பெற்றெடுத்த தாய், அடுத்த பிறவியில் பரம்பொருளாகிய ஸ்ரீகிருஷ்ணனைத் தன்னுடைய கணவனாகப் பெற்றாள். அந்தக் கண்ணனுடைய மனைவியின் நாமம் சத்யபாமா என்பதாகும். சத்யபாமாவிற்கு முன்ஜன்மத்தில், நரகாசுரன் தன் மைந்தன் என்ற ரகசியத்தை நினைவுறுத்தாமல் மறைத்து வைத்திருந்தான் இறைவன். நரகாசுரனின் கொடுமையால் பல துன்பங்களை அனுபவித்த மக்களும், சாதுக்களும் யோகிகளும் கண்ணனிடம் முறையிடவே, கண்ணபிரான நரகாரசுரன் மீது போர் தொடுக்கச் சென்றார். அப்பொழுது சத்யபாமா தேரோட்டியாக விளங்க கண்ணன் பலவித ஆயுதங்களோடு போருக்குச் சென்றார். கண்ணன் நரகாரசுரனுடன் கடுமையாகப் போர் தொடுத்தார்., நரகாசுரன் “மாத்ருமாயா” என்ற அஸ்திரத்தைக் கண்ணன் மீது வீசினான். அப்போது கண்ணபிரான் அடிபட்டு மயக்கத்தில் சாய்வது  போல் சாய்ந்தார். இதைப் பார்த்த சத்யபாமா கணவன் இறந்துவிட்டார் என்ற பயத்திலும், கோபத்திலும் எதிரே இருக்கின்ற நரகாசுரன் தன்னுடைய எதிரி என்ற எண்ணத்தைப் பூண்டனள். ஆகவே கோபம் கொண்டு நரகாசுரனைச் “சிம்சுபா” என்ற அஸ்த்திரத்தால் அடித்து வீழ்த்தினாள். நரகாசுரன் உயிர் துறக்கும் நிலையில் இருந்தான். அப்போது கண்ணன் மயக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தார். நரகாசுரனுக்கு இறக்கும் நிலையில் கண்ணனுடைய கண்களின் ஒளியால் முன்வினை நினைவுகள் தெரியத் தொடங்கின.அப்போது சத்யபாமாதான் தன் தாய் என்றுணர்ந்து, “அம்மா! உன் கையாலேயே இறக்க வேண்டிய நிலையைத் தந்துவிட்டாயே” என்று வருந்தினான். “அதற்கு என்ன செய்வது” என்று தன் மகனையே சத்யபாமா கேட்டாள்.
“நான் இறந்த நாளை அன்ன ஆவிநிறைகுட தீபம் ஏற்றி தீபாவளியாகக் கொண்டாடுவீர்” என்று கூறி இறந்தான் நரகாசுரன். ஆகவே “அன்ன ஆவி நிறைகுடதீபம்” ஏற்றும் முறையைத் தாது வருடத் தீபாவளியில் கடைப்பிடிப்பதால் அளவு கடந்த அருளைப் பெறலாம். நரகாசுரன் கண்ணனிடம் பலவிதமான தீப முறைகளை வரங்களாகக் கேட்டுப்பெற்றான். இம்முறையில் குந்திதேவி, திரௌபதி, அனுசூயா, ராதை, ஜாம்பவான் போன்றோர் பலவிதமான தீபங்களை தீபாவளியன்று ஏற்றி பல அனுக்ரஹங்களையும், தெய்வீக சக்திகளையும் பெற்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு அளித்துள்ளோம்.
உத்திர ஆவி நிறைகுடதீப முறைகள்
தீபாவளியன்று விடியற்காலை மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் பெரிய சுமங்கலிகள் முதலில் எழுந்து ஸ்நானம் முடித்து வெங்கலப் பானையில் அரிசி இட்டு சாதம் வடித்து அந்த வெங்கலப்பானையில் அகல்விளக்கு ஏற்றி ஆவி வரும் பொழுதே சாதத்தின் நடுவில் வைக்க வேண்டும். அப்பானைக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பானையைச் சுற்றி 12 தீபங்கள் ஏற்றி “நீத்தார் நீடு அருள் தருவீரே” என்று வேண்டுதல் வேண்டும். இதனால் பெரிய சுமங்கலிகள் கங்காமாதாவின் அருளால் முன்னோர்களின் ஆசியை எளிதாகப் பெறலாம். மாலையில் மீண்டும் வேறொரு வெங்கலப் பாத்திரத்தில் அரிசி இட்டு சாதம் வடித்துச் சூடு ஆவி வரும் போது அதனுள் அகல்விளக்கேற்றி அச்சாதத்தில் பதித்து அந்த வெங்கலப் பானையைச் சுற்றி 14 தீபங்களை, அவ்வீட்டு மருமகள்கள் மற்றும் மகள்கள் கூடி, ஏற்றி வழிபடுதல் வேண்டும். இதற்குத் “தக்ஷிண ஆவி நிறைகுட தீபம்” எனப்பெயர். இதனால் குடும்பத்தில் இறந்த குழந்தைகளுக்கும் இருக்கின்ற குழந்தைகளுக்கும் நீத்தாரின் நல்லருள் கிடைக்கும்.
தாது வருடத்தில் தீபாவளி தானம்
1. ஏழைகளின் வீட்டிற்குப் புதுக் கூரை போட உதவுதல் வேண்டும். பலன் – கால் பகுதிகளில் வந்த நோய் விலகும்.
2. கூரை வீடுள்ளவர்களுக்குச் சீமை ஓடுபோட உதவுதல் வேண்டும். பலன் – வயிற்றுநோய் உள்ளவர்களுக்கு வியாதியின் தொல்லை விலகும்.
3. புதுப் பாய், ஜமுக்காளம், வெண்கல விளக்கு, பசுநெய், திரியுடன் தமிழ்மறை, வேதமறை ஓதுபவர்களுக்குத் தானமளித்தல் வேண்டும்., பலன் – மன அமைதியைப் பெறலாம்.
4. பசுமாட்டின் மீது பட்டுப்புடவை போர்த்தி ஆரத்தி எடுத்துச் சர்க்கரைப் பொங்கலை அப்பசுமாட்டை உண்ண வைத்து, மாட்டின் மீது போர்த்திய பட்டுப்புடவையை ஏழைகளுக்குத் தானம் செய்திடில், தீராத கடன் சுமை ஒழியும்.
5. புது சூளை அடுப்பு, புது மண்ணெண்ணை அடுப்பு, புது கேஸ் (Gas) அடுப்பு இவைகளை வைத்துச் சுற்றி விளக்குகள் ஏற்றி வணங்கி இவற்றை ஏழைகளுக்குத் தானமாய் தீபாவளியன்று அளித்திடில், தாய் தந்தையரைப் பிரிந்து காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பெண்களின் வாழ்வு சிறப்புறும், விவாகரத்து நிலையிலுள்ள உறவுகள் சுமுகமாக நல்லநிலையில் தீர்வு பெறும்.
6. தீபாவளியில் விளக்கேற்றி வழிபட முடியாதவர்கள் “ஸ்ரீபவானி” சஹஸ்ரநாமாவளியை 5 முறையாவது படித்தால் “அன்ன ஆவி நிறை குட தீபம்” ஏற்றிய பலனைப் பெறலாம்.
7. அகல்விளக்கு, எண்ணெய், திரி இவற்றை அறியாதோர்க்குத் தானம் தந்து கோவில்களில் விளக்கு ஏற்றவைப்பது பெரும் பலனைத் தரும்.
8. வேதம் படித்தவரை வைத்துக் கோவில்களில் விளக்கேற்றி வைப்பது,  கடுமையான ஜுர சம்பந்தமான நோய்கள் தீர வழி செய்யும்.
9. கர்ப்பிணியை வைத்துக் கோவில்களில் தீபாவளி அன்று விளக்கேற்ற வைத்தால் குடும்பத்தில் நற்செய்திகள் வரும்.
10. கோவில்களில் 60 வயது சுமங்கலியை வைத்து விளக்கேற்ற வைப்பதால், தாமதித்த திருமணம் நிறைவேற வழியுண்டு.
கணவனை இழந்தோர், கணவனையே தெய்வமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இறந்த கணவன் நன்னிலையடைய அவர்களுக்கென விசேஷமான தீப முறையுண்டு. கணவனையிழந்தோரும் தீபாவளியன்று விளக்கேற்றி வழிபடுவதில் எவ்விதத் தவறுமில்லை. பின்வரும் தீபமுறை வழிபாடு இவர்களுக்கு உகந்தது.
தீபாவளி தீபம் (கணவன் இழந்தோருக்கு)
நக்ஷத்திரங்கள் வானில் இருக்கும் போதே, விடியும் முன் நீராடி அவரவர் குலதர்மபடி நூல் ஆடை, அணிந்து படத்தின் முன் மூன்று திக்கில் மூன்று உலோக கீழ்கண்ட முறையில் விளக்குகளை ஏற்றுதல் வேண்டும். கணவன் படத்தைக் கிழக்கு நோக்கிப் பார்க்குமாறு வைத்து வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் மூன்று தீபங்கள் ஏற்றி தனியாக அமர்ந்து கணவனின் பெயரையே விடாமல் ஒரு மணி நேரம் ஜபித்து 3 உலோக விளக்குகளை ஏற்ற வேண்டும். சிறிய வெள்ளி அகல்விளக்கு, சிறிய வெண்கல அகல்விளக்கு, சிறிய பித்தளை அகல்விளக்கு ஏற்றி ஜபித்து இந்த விளக்குகளைத் தானம் செய்து விடுதல் நலம். இதை “உதய சாந்தி தீபம்” என்று பெயரிட்டனர் பெரியோர் இதைக் காலையில் செய்து முடித்தல் வேண்டும். மதியம் புதுப்பாயில் அல்லது புது ஜமுக்காளத்தில் அமர்ந்து கணவனின் பெயரை ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஜபித்திடல் வேண்டும். மீண்டும் 3 உலோக விளக்கு ஏற்றிடுக. மதியம் ஏற்றும் தீபத்தை “ருணபந்த தீபம்” என்று பெரியோர் அழைக்கின்றனர். இந்தத் தீபத்தை வீட்டில் ஏற்றிய பிறகு வெள்ளி விளக்கை முறையாகக் குளிர வைத்து, அவ்விளக்கைக் கணபதி கோவில் உண்டியலில் செலுத்துதல் நலம். செப்பு, வெண்கல விளக்குகளைக் கணபதி சன்னதியில் ஏற்றி வைத்துவிட வேண்டும். எவர் வேண்டுமாயினும் இவற்றை எடுத்துக் கொள்ளுமாறு அங்கேயே வைத்துவிடுக! மாலையில் கணவன் படத்திற்குத் தன் கையாலேயே கட்டிய மணமுள்ள மாலையை அணிவித்துத் தர்ப்பைப் பாயில் அமர்ந்து மீண்டும் வெள்ளி விளக்கு, செப்பு விளக்கு, வெங்கல விளக்குகள் வைத்துத் தேங்காய் எண்ணெய் விட்டு திரியிட்டு தீபம் ஏற்றி ஒரு மணி நேரம் தனியாகக் கணவன் பெயரை ஜபித்துவிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாலையில் ஏற்றும் தீபத்திற்கு “விமோசன தீபம்” என்று பெயர். இத்தீப உலோக விளக்குகளையும் தானமாய் அளித்திடல் வேண்டும். மறைந்த கணவனின் நினைவோடு வாழ்வோர்க்கு ஏற்ற நவதீப (9) பூஜையிது.
தீபாவளியன்று ஹோமங்கள் செய்ய விரும்பினால்..
1. பாலாழி சங்கு ஹோமம் :- சிறந்தது. இதைக் குரு மூலமாய் அறிந்து செய்தல் நலம். அண்ணன், தம்பி, அம்மா, சித்தி இவர்களோடு கூட்டு சேர்ந்து பல குடும்பங்களுக்கு அளித்த துன்பச்சுமை குறையவும், பரிஹாரமாகவும் இது அமைகிறது. அவ்வாறு துன்புறுத்திய குடும்பங்களுக்குப் பணத்தாலோ, பொருளாலோ உடலாலோ உதவி செய்தல் நலம் தரும்.
ரோஹிணி மூலிகா ஹோமம் செய்தல் நலம், வாகனங்களை முறையற்ற வழியில் பயன்படுத்தி இருந்தால் சிலந்திக் கட்டி நோய்கள் வரும். இதையும் குரு மூலமாய் தீர்த்தல் நலம். வாகனங்களை முறையற்ற வழியில் பயன்படுத்தி யாருக்கெல்லாம் துன்பம் அளித்தோமோ, அந்தக் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் நல்லது செய்தல் வேண்டும். இந்த ஹோமத்தை குருமூலமாய் முடிந்த பிறகு..!
ஸகலஸித்தி ப்ராயசித்த ஹோமம் : பணம், புகழ், பதவி என்ற அகந்ததையால் தடுக்கி விழப்போகிறவர்கள் பணம், புகழ், பதவி எல்லாம் நிரந்தரம் அல்ல இறைசேவையும், குருசேவையும் தான் தன்னைக் கடையேற்றும் என்ற எண்ணத்தைப் பூரணமாக நினைவு கூரவும், நிறைவேற்றவும் இந்த ஹோமம் வழிசெய்யும். இதையும் குருவைச் சுற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜம்பாரி தீப ஹோமம் :- இது இந்திரபயசித்தி என்ற கிரந்த முறை ஹோமம், பலரைத் துன்புறுத்தி அவர்களிடம் இருந்து பறித்த பணத்தைப் பலவாறாக தவறு வழிகளுக்குச் செலவழித்த கர்ம மூட்டைகளால் வரும் கண்டத்திற்குப் ப்ராயசித்தப் பரிகாரம் இது. படிப்பிச்சையும், மடிப்பிச்சையும், நிலப்பிச்சையும் எடுத்துச் செய்ய வேண்டிய இரகசியங்கள் நிறைந்த ஹோமம் இது. குருவிடம் இருந்து எளிதில் பெற முடியாத ஹோமம் பலவற்றில் இதுவும் ஒன்று.
தாதுவருட தீபாவளியன்று கொன்றை மரத்தின் சமித்துகளை (குச்சி) வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் நீராட வேண்டும். இதுவும் நரகாசுரன் பெற்ற வரமே....

சகஸ்ரலிங்க மகிமை

சஹஸ்ரலிங்க மஹிமை
சஹஸ்ரலிங்கம் என்றால் 1000 லிங்கங்கள் ஒருங்கிணைந்தது என்று பொருள். காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் போன்ற ஆலயங்களில் ஸஹஸ்ரலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சஹஸ்ரலிங்கம் முன்நின்று எந்த இறை நாமத்தை ஓதினாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும். சஹஸ்ரலிங்கத்தை ஒரு முறை வலம் வந்தால், ஆயிரம் லிங்கங்களை வலம் வந்தது போலாகும். இதேபோல் கும்பகோணம் அருகே காவிரிக் கரையில் கொட்டையூரில் “ஸ்ரீகோடீஸ்வர லிங்க மூர்த்தி” எழுந்தருளியுள்ளார். இங்கு ஒரு முறை “நமசிவாய” என்றோ அல்லது எந்த இறைநாமத்தையோ ஓதிடினும் அதன் பலன்கள் கோடி கோடியாய்ப் பெருகும். ஒரு முறை இங்கு பிரதோஷ வழிபாடு செய்திடினும் பிரதோஷ பூஜைப் பலன்களும் கோடி கோடியாய்ப் பெருகும்.

சகஸ்ரலிங்கம்
தென்குடித்திட்டை தஞ்சாவூர்

ஆனால், சஹஸ்ரலிங்கமோ கோடீஸ்வர லிங்கமோ, இம் மூர்த்திகளின் முன் எழுகின்ற எண்ணங்களும், நல்லெண்ணெங்களோ, தீய எண்ணங்களோ அவையும், ஆயிரமாயிராமாய், கோடி கோடியாய்ப் பெருகும்! என்னே இக்கட்டான நிலை! முறையற்ற காம எண்ணம் சிறிதளவு எழுந்தால் கூட போதும், அதுவும் ஆயிரமாயிரமாய் கோடி கோடியாய் பல்கிப் பெருகிடும். இந்நிலையில் என் செய்வது?
கோடீஸ்வரரையும் ஸஹரலிங்கத்தையும் வழிபடுகையில் “ஈஸ்வரா! உன்னை வழிபட்டால் பலன்கள் பல்கிப் பெருகும் என்பதை அறிவேன். எனவே ஈஸ்வரார்ப்பணமாக உன்னை வழிபட்ட பலனை உன்னிடமே அர்ப்பணிக்கின்றேன்” என்று அர்ப்பணித்து வர வேண்டும் இந்த ஈஸ்வரார்ப்பணத்தின் பலன்களில் ஆன்மீக இரகசியமும் பல உண்டு. ஒன்றை அர்ப்பணம் செய்து விட்டால் பின் அதன் பலன்களைக் கோருவதில் உரிமை உண்டா? இங்குதான் ஈஸ்வரார்ப்பணத்தின் மஹிமை புரியும். உலகில் ஸஹஸ்ரலிங்கங்களும், கோடீஸ்வர மூர்த்திகளும் எழுந்தருள்வதற்கான மூலகாரணமே “ஈஸ்வரார்ப்பணத்தை” அதாவது இறைவனுக்கு எதையும் அர்ப்பணம் செய்வதின் மஹிமையை விளக்குவதற்காகத்தான். ஸஹஸ்ரலிங்கத்தை வழிபடும் விசேஷமான முறையொன்றுண்டு.
1. ஐந்து அல்லது எட்டுபேர் சேர்ந்து அபிஷேக ஆராதனைகளைச் செய்திட வேண்டும்.
2. 5/8 பேர்களின் குழுத்தலைவர் ‘முத்தாமணி’ என்று அழைக்கப்படுவார்.
3. முத்தாமணி தன் கையில் மோதிர, நடு, ஆள்காட்டி விரல்களுகிடையே ‘திரிபுரபத்ரம்’ என்ற விசேஷமான மூலிகை இலையை மடக்கிப் பிடித்தவாறு தான் அபிஷேக ஆராதனையைத் தொடங்கி,  நடத்தி முடித்து வைக்க வேண்டும். திரிபுரபத்ரம் பூஜையின் போது கழன்றிடாமல் அதனைப் பத்திரமாக நன்றாக மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஸஹஸ்ரநாம பாராணயங்களுக்கு உரித்தான பத்ரம் (இலை) இது!  மந்திரங்களை குறிப்பாக 1008 போற்றிகளான ஸஹஸ்ரநாம மந்திரங்களைக் கிரஹிக்கும் சக்தியுடையது இவ்விலை! கும்பாபிஷேக காலங்களில் தலைமை முத்தாமணியானவர் தலையைச் சுற்றிக் கட்டிக்கொள்ளும் “பட்டுப்பட்டயங்களில்” திரிபுரபத்ரம் கட்டாயம் வைத்திருக்கப்பட வேண்டும்.
4. ஸஹஸ்ர லிங்கத்திற்கான பஞ்சாமிர்தத்தில் செவ்வாழைப் பழமும் பனவெல்லமும் சேர்க்கப்பட வேண்டும். வேறு வாழைப்பழம், வெல்ல வகைகள் கூடாது. தேன், பேரீச்சம் பழம், பசுநெய் சேர்த்திடலாம்.
5. காராம் பசும்பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது. பாலைக் கறந்த உடனேயே அந்த இயற்கையான இளஞ்சூட்டோடு அபிஷேகித்தல் பரிபூர்ண பலன்களைத் தரும்.
6. ரிக், யஜுர், சாம, அதர்வண மந்திரத்தை நன்கறிந்த நால்வர் தேவை.
யஜுர் வேதமறிந்தவர் வலது காலை உட்புகுத்தி நின்றவாறு, இடகலை சுவாசத்தோடு (இடது நாசி சுவாசம்) பூஜையையும், ரிக்வேதமறிந்தவர் இடது காலை உட்புகுத்தி  நின்ற நிலையில் பிங்கள வாசிக்கலை (வலது நாசி சுவாசம்) கொண்டு பூஜையையும்., சாம, அதர்வண வேதமறிந்தோர் வல, இட நுனிக் கால்களில் நின்று சுழுமுனை சுவாசத்தில் (இருநாசி சுவாசம்) பூஜையையும் நிகழ்த்திட வேண்டும். தலைமையரான முத்தாமணி திரிபுரபத்ரத்தை வலதுகையில் தாங்கியவாறு, பூரகம், கும்பகம், ரேசகம் என்றவாறு மூச்சை உள்ளிழுத்து, சற்று அடக்கி வெளிவிட்டுப் பிராணாயாம முறையில் பூஜிக்க வேண்டும்.
7. பசுநெய் தீபம் காட்டிய பின்னர் கற்பூர தீபம் ஏற்றிட வேண்டும்.
8. சஹஸ்ர நாம பூஜை /1008 போற்றித் துதிகளுக்கும், குறைந்தது ஒன்பது வகையான பூக்களால் அர்ச்சித்திடுக!
9. சஹஸ்ர லிங்கத்தில், லிங்கத்தின் வடிவைப் பொருத்தும் (செவ்வகம், சதுரம், சாய்சதுரம் etc… ) பூஜை, நைவேத்ய முறைகள் மாறுபடும்.
10. ஆயிரம் பிறை கண்டோர் (80வயது நிறைந்து சதாபிஷேகம் கொண்டாடியோர்) கொண்டு பூஜிப்பது சிறந்தது. அல்லது அவர்கள் ஸஹஸ்ரநாமத்தை ஓதுதல் வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

அடிமை கண்ட ஆனந்தம்
“குரு கைவிட மாட்டார் என்று ஊது சங்கே”... ... இது ஆன்றோர் வாக்கு.
‘கைவிடாமல் காப்பாற்றுவார் குரு’ என்பது சத்தியவாக்கு... ஆனால் ‘குரு கைவிட்டும் காப்பாற்றுவார்’ என்பதை அறிவோமா?
என்ன...! ஆச்சரியமாக இருக்கிறதா! சொல்லித் திருத்துவதிலும், அரவணைப்பதிலும் திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரைக்கு ஈடு, இணைதான் உண்டோ! இதோ நம் குருமங்கள கந்தர்வாவின் அனுபவப் படிப்பு.
கலைகளை அவர் ஒவ்வொன்றாகக் குருவிடம் பயின்று வந்த வேளை. குதிரை ரகசியங்களைப் பற்றி விளக்கமாகத் தன் குரு மூலமாக அறிந்து அதிசயித்த வேளையிலே.... ஒருநாள்... ‘இதன் ரகசியங்களை நாம் ஏன் சோதித்துப் பார்க்கக் கூடாது? என்ற எண்ணம் சிறுவனுக்கு வந்துவிடுகிறது. இயற்கைதானே!
நேராக அங்காளிம்மன் கோயிலை அடைந்தான் சிறுவன்.
எப்போதும் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்கும் பெரியவர் அன்று சிறுவன் கோயிலுக்குள் நுழையும் முன்னரே கோயில் வாசலில் எதிர்ப்பட்டு, “வாடா மகனே! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்... ” எனக் கூறி கையில் ஒரு நூறுரூபாய் நோட்டைக் காட்டி “இந்தா.. இந்தப் பணத்தைப் பத்திரமா வச்சிக்க நான் கேக்குறப்ப கொடு.. எதும் தப்பு, தண்டால மாட்டிக்காதே.... என்ன?” என்று சொல்லியவாறு பணத்தைச் சிறுவனின் கையில் திணித்தார்.
சிறுவனுக்கோ ஆனந்தப் பரவசம். ‘ஆஹா... ஈசனும் நம் எண்ணத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டான் போலும்’ என்று எண்ணியபடி கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்கு நாலுகால் பாய்ச்சலில் விரைந்தான்.
மைதானத்தை அடைந்த சிறுவனுக்கு அன்று ஓடும் குதிரைகளின் பெயர் பட்டியலைப் பார்த்தவுடன் பெரியவர் கூறிய முறையில் விரைவில் ஒரு கணக்கைப் போட்டு அன்று எந்த குதிரை முதலாவதாக வரும் என்று தெரிந்து கொண்டான்.

இருந்தாலும் தோசையை சுவைத்தால்தானே ருசி தெரியும் ? அதனால் உடனே கவுண்டர் பக்கம் வேகமாகச் சென்று பணம் கட்ட நினைத்த சிறுவனை அங்கிருந்த கூட்ட அலைகளைக் கண்டு மலைத்துப் போய் விட்டான். அவனோ சிறுவன் அங்கு நின்றவர்களோ பெரும்பாலும் நடுவயதினர். மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ கிண்டியில் கும்பல் பெருகி இருந்தது.
எப்படியோ முண்டிஅடித்துக் கொண்டு கூட்டத்தில் புகுந்து சென்று கையில் பத்திரமாக மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டை கவுண்டருக்குள் கொடுத்தான். அவனுடைய பாக்கெட்டோ ஓட்டை பாக்கெட் தானே. டிக்கெட் கவுண்டர் உள்ளே இருந்து ஒரு கை வந்து பணத்தை வாங்கிக் கொண்டதை சிறுவன் கண்டான், ஆனால் அவன் கைக்கு வரவேண்டிய டிக்கெட் வரவில்லை.
சிறுவன் ஒன்றும் புரியாமல், “எங்கே என்னுடைய டிக்கெட்?” என்று பதட்டத்துடன் கேட்க, கவுண்டரில் இருந்தவரோ.. “யாரிடம் நீ பணத்தைக் கொடுத்தாய்..? பணம் கொடுத்தவன் போல் டிக்கெட் கேட்கிறாயே... முதலில் பணத்தைக் கீழே வை... ! இல்லாவிட்டால். நகர்ந்து போ...” என்று கூற., சிறுவனுக்கு ஒரே கோபம், ஏமாற்றம், குழப்பம். “நாம் கரெக்டாகத் தானே பணம் தந்தோம்.. அப்படியென்றால் இடையிலே கைவிட்டு வாங்கியது யார்?.... ஆஹா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்றே.... அது சரி.., இப்பொழுது வாத்யார் அந்த நூறு ரூபாயைக் கேட்டால் நான் எங்கு போவது...? நம் கவனக்குறைவினால் வந்த வினைதானே இது...!” என்றெல்லாம் எண்ணியபடி பயந்து பயந்து அங்காளி கோயிலை அடைந்தான் சிறுவன்.
“இன்னா.. நைனா..! எல்லாக் கலைகளையும் தெரிஞ்சுகிட்டு பெரிய ஆளா ஆயிட்ட போலிருக்கு.. ஏதோ இந்தக் கிழவனையும் கண்டுக்க.... அதுசரி.! அருள்வழியில் போய்க் கிட்டிருந்தவன் ..எப்படி அப்பால (வேறு வழியில்) போனே? ... நான் மட்டும் உஷாராக இல்லைன்னா இன்னா ஆயிட்டிருக்கும்...” என்று பெரியவர் கர்ஜிக்க சிறுவன் நடு நடுங்கி விட்டான்.
... இனி மறைப்பதற்கு ஏதுமில்லை என்பதை உணர்ந்தவனாக.. “வாத்யாரே! அடியேன் தவறு செய்து விட்டேன்... கலையின் தரத்தைச் சோதிப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ தவறு செய்துவிட்டேன்.. மன்னிசசுக்க.., வாத்யாரே..... பத்திரமா வச்சுக்க சொல்லி நீ கொடுத்த அந்த நூறு ரூபாய் தற்சமயம் அடியேனிடத்தில் இல்லை... அதையும்...” என்று சிறுவன் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் பெரியவர் குறிக்கிட்டு .... “எங்க... இந்த நோட்டா பாரு....” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை கோவணத்திலிருந்து எடுத்துக் காட்ட... திகைத்துப் போன சிறுவன் அந்த ரூபாய் நோட்டை வாங்கி முன்னும் பின்னும் பார்த்து ...“ஆமாம் வாத்யாரே இதே நோட்டுத்தான்... இங்கெப்படி வந்தது...?” என்று சிறுவன் ஆச்சரியத்துடன் வினவ ..
பெரியவர் தன்னுடைய வழக்கமான புன்முறுவலை உதிர்த்து, “எங்கிருந்து  கிளம்புச்சோ அங்கேயே வந்துடுத்து.. இதுல என்னடா இருக்கு.?”
ஆதி குரு என்றால் அந்தமும் அவர்தானே ?.
பெரியவர் தொடர்ந்து, “கவுண்டரில் பணம் நீட்டினப்ப நான் தான் இடையில் கையவிட்டு வாங்கிப்புட்டேன்.. வித்தையைச் சொல்லிக் கொடுத்தா மட்டும் போதுமா? விபரீதங்கள் ஆகாமலும் பாத்துக்கணும் இல்லையா? சரி நீ செஞ்ச தப்புக்கு அங்காளியை 1008 தடவை சுத்து.. அப்பறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்...” என்று காட்டமாகச் சொல்ல சிறுவனும், “இப்போதைக்கு தலை தப்பியதே ... அது போதும்...” என்ற சந்தோஷத்தில் அங்காளியை வலம் வந்து முடித்தான்.
சற்று நேரத்தில் பனி மலையாய்க் குளிர்ந்த பெரியவர் சிறுவனை வாஞ்சையுடன் அழைத்து அங்காளி கோயில் குளத்திற்கு கூட்டி வந்தார்.
குரலில் கண்டிப்பை வரவழைத்துக் கொண்ட பெரியவர், “நான் சொல்றத நல்லா கேட்டு உன் மரமண்டல ஏத்திக்கிட்டு எனக்கு நீ இப்ப சத்தியம் செஞ்சு கொடுக்கனும்.... ‘நான் கற்ற கலைகளை இனி சோதிக்கத் துணிய மாட்டேன்’.
சிறுவன் பலமாகத் தலை ஆட்டி ஆமோதித்து பெரியவர் கூறிய முறையில் அவர் கைமேல் அடித்து சத்தியம் செய்து கொடுத்தான்.
ஒரு வேளை பெரியவரின் உள்ளங்கை மேல் தன் கையை வைக்கும் பாக்யத்தை அளிப்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாட்டை பெரியவர் செய்திருப்பாரோ என்று பெரியவனான பின் சிறுவன் நெடுங்காலம் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தானாம்.
எனவே கை கொடுப்பவரும் குருவே, கை விட்டு காப்பாற்றுபவரும் சற்குருவேதான் !
சீடனின் குருபக்தி பசுமரத்து ஆணி அறைந்தார் போல...
குருவின் அருள் பிரிவினையறியா நிழல் போல.....
உறுதியாக நம்பு இறுதி வரை காப்பார் ...

கூடுதல் பூஜைகள்

கூடுதல் பூஜைகள் அவசியமே...
சென்ற மாத (ஆகஸ்ட் 1996) ஸ்ரீஅகஸ்திய விஜயம் இணைப்பில்  தாத்ரு வருட ஆடி மாத இறுதியிலிருந்து ஏற்படும் கிரஹ சஞ்சார மாறுதல்களினால் உண்டாகவிருக்கும் துன்பங்களிலிருந்து மக்களையும் ஏனைய ஜீவன்களையும் காப்பதற்கென 4.8.1996லிருந்து தினசரி செய்ய வேண்டிய கூடுதல் பூஜைகளைப் பற்றி விளக்கியிருந்தோம்.
“தினமும் பத்துமுறை சஹஸ்ர நாமமா? 10x1000= 10000 இறைநாமங்களா?” என்று மலைத்திட வேண்டாம். நம் குடும்பத்தில் நாலைந்து பேர்களுடன் சேர்ந்தோ அல்லது நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்தோ, குறைந்தது பத்து நபர்கள் ஒன்றாக, சத்சங்கமாய் அமர்ந்து, ஒரு முறை சஹஸ்ரநாமம் ஓதினால் கூட 10x1000=10000 இறைத் துதிகளை எளிதில் அரைமணி நேரத்திற்குள் ஓதிடலாமே! ஜாதி, குல பேதமின்றி அமையும் கூட்டு வழிபாடே தெய்வீக மகத்துவம் வாய்ந்தது, மிகுந்த சக்தியுடையது, அளப்பரிய பலன்களையும் பெற்றுத் தரும். எனவே கீழ்க்கண்ட முறையில் பலர் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடாக, சத்சங்கப் பூஜைகளை மேற்கொண்டு சிறந்த சமுதாய இறைப் பணியாக, மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காகச் சங்கல்பம் செய்து கொண்டு பூஜைகளை நிறைவேற்றிப் பயனுள்ள அறவாழ்வுதனைக் கொண்டிட வேண்டுகிறோம்.

தேதி

பாராயணம்

1.10.1996

செவ்வாய் பகவானுக்கு ஹோம பூஜை/ பரசிவநிலை வணக்கம்/அங்காரக சஹஸ்ரநாமம்..

2.10.1996

ஹனுமான் சஹஸ்ரநாமம்/ அருட்பெருஞ்ஜோதி அகவல்*.

3.10.1996

தட்சிணாமூர்த்தி ஹோமம்/ சஹஸ்ரநாமம்.

4.10.1996

லலிதா சஹஸ்ரநாமம்/நடராஜப் பதிமாலை.*

5.10.1996

சனீஸ்வர ஹோமம்/திருவைப்புக் காட்சி.*

6.10.1996

சரபேஸ்வரர் ஸஹஸ்ரநாமம்/ ஹோமம்.

7.10.1996

சிவ சஹஸ்ரநாமம் / மஹாதேவ மாலை*

8.10.1996

சுப்ரமண்யர் சஹஸ்ரநாமம்/ சற்குரு வணக்கம்.*

9.10.1996

விஷ்ணு சஹஸ்ரநாமம்/ திருத்தவத்திறம்.*

10.10.1996

விநாயகர் அகவல்/ காசி டுண்டி விநாயகர் துதி*

11.10.1996

லலிதா சஹஸ்ரநாமம்/ நடராஜப் பதிமாலை.*

*இக்குறியிட்டவை தனை வள்ளலாரின் திருஅருட்பாவில் காணலாம்.
1. சஹஸ்ரநாமமாயின் குறைந்தது 10 முறை பாராயணம் செய்திடுக. ஹோமம் அறியாதோர் சகஸ்ரம நாம பாராயணம் செய்திடுக.. அல்லது குறித்த அஷ்டோத்திரம்தனை பத்துமுறை படித்திடுக!
2. ஹோமமெனில் ஒவ்வொருவருக்கும் ஆஹுதி வாய்ப்புத் தந்து, குறைந்தது 108 ஆஹுதிகள் அளித்திடுக! எளிமையான முறையில் பசுநெய், சமித்துகளை வைத்து மட்டும் ஹோமம் செய்திடலாம். பழம், பால் என இயன்றளவு எளிமையான நைவேத்யம் போதுமானது.
3. மக்களின் துன்பங்களை நிவர்த்தி செய்திட அந்தந்த பூஜையின் பலா பலன்கள் பாதிக்கப்பட்டோருக்குச் சென்றடைய பூஜை/ஹோமத்தின் முன்னும் பின்னும் ஸங்கல்பம் செய்திடுக!
4. வடமொழி அல்லது குறித்த தமிழ் மறைகளையும் ஓதிடலாம்.
5. நாமே நமக்கென, நம் குடும்பத்திற்கென வாழாது,, பிறருடைய நல்வாழ்விற்காகச் சேவை செய்யும் சிறந்த இறை மனப்பான்மையைப் பெற்று வாழ்வதே நாம் பிறப்பெடுத்ததின் நோக்கமாகும். இத்தகைய தியாக வாழ்வுதான் பரிபூர்ண இறைதரிசனத்தைப் பெற்றுத் தரும்.

தீப எண்ணெய்

தீப எண்ணெய் –விளக்கம்
கேள்வி :- இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், பசுநெய் கலந்து கோயிலில் பஞ்சதீப விளக்கேற்றினால் தோல் வியாதிகள் தீரும் என ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் அறிந்தேன். பெருமாள் கோயிலில் இவ்விளக்குதனை ஏற்றலாமா?
விடை : வேப்பெண்ணெய் கலந்த பஞ்ச எண்ணெய் தீபத்தை ஏற்றி வந்தால் பரிசுத்தமான மனோநிலை உண்டாகும். முறையற்ற, தேவையில்லாத எண்ணங்கள் தணியும். நம் வாழ்க்கையில், நம்முடைய நடவடிக்கைகளினாலும், உத்தியோக தோரணையாலும் ஜாதி, அந்தஸ்து, செல்வம் பதவி, அதிகாரம் காரணமாகவும் கடுஞ்சொற்களாலும், தண்டனை அளித்தலாலும், அவமரியாதை செய்ததினாலும் பலருடைய மனக்கசப்பிற்கு ஆளாகியிருப்போம். இவையே பல சாபங்களையும், தோஷங்களையும் உருவாக்கித் தோல் வியாதிக்கு ஒரு காரணமாக அமைகிறது. கடைநிலை ஊழியர் (subordinates) போன்ற பாகுபாடுகளினால் பிறருக்கு மனக்கசப்பை, மனவேதனைகளைத் தரும் வகையில் நாம் நடந்து கொண்டிருப்போம். இவ்வாறு நாம் பிறருக்கிழைத்த கசப்பான சம்பவங்களே தோல் வியாதியாக நம்மைத் தாக்குகின்றன. இதற்குப் பரிகாரமாக்வே மேற்கண்ட பஞ்ச தைல தீபம்தனை கோயிலில் ஏற்றிட வேண்டும். நமக்கு இஷ்டமான சந்நிதியில் ஏற்றிவர சுத்தமான மனம் அமைவதோடு ப்ரத்யட்சமான பலன்களையும் கண்டிடலாம்.
இனிப்பான வேப்பம்பூ பச்சடிதனை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கம் வடஇந்தியாவில் பல பகுதிகளில் உண்டு. எனவே பெருமாள் கோயிலில் வேப்பெண்ணெய் கலந்த பஞ்சதீபத்தினை தாராளமாக ஏற்றிடலாம். பஞ்சதைல தீபத்தினை கோயிலில் எட்டுத் திக்குகளிலும் ஏற்றி இறைவனுக்கு, குறிப்பாக அம்பிகைக்கும் பகவானுக்கும் பட்டு வஸ்திரங்களைச் சாற்றி பட்டு துணிகளை ஏழைகளுக்கு தானமாக அளித்து வர தோல் வியாதிகள் நீங்கும். ஏழைகள், தங்களால் கனவில் கூட காண இயலாத பட்டு வஸ்திரத்தை அதுவும் இறைமூர்த்தியின் திருமேனியைத் தழுவிய பட்டாடையை அணியும்போது கிட்டுகின்ற பேரானந்தமே தோல் வியாதிகளுக்குரிய கர்மவினைகளைத் தீர்க்கும் தெய்வீக சக்தி உடையதாம். (தீபம் பற்றிய பிற விளக்கங்களை எமது ஆஸ்ரம வெளியீடான சுப மங்கள தீப மஹிமை என்னும் நூலில் காணலாம்.)
அக்டோபர் 1996 – விசேஷ தினங்கள்
2.10.1996 – சந்திர சஷ்டி (விளக்கம் – செப்டம்பர் 1996 இதழில்..)
11.10.1996 – சஸ்த்ரஹத மாளயம்
12.10.1996 – மாளயபட்ச அமாவாசை
13.10.1996 – நவராத்திரி ஆரம்பம்
20.10.1996 – சரஸ்வதி பூஜை
21.10.1996 – விஜய தசமி
25.10.1996 – பௌர்ணமி
 மாளய பட்ச விளக்கங்கள் சென்ற செம்படம்பர்1996 இதழில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. 21.10.1996 – இன்று ஸ்ரீஆயுர் தேவியின் அவதாரத் திருநாளாகையால் ஸ்ரீஆயுர்தேவியை கலசம் வைத்து வழிபடுவது அதிஅற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும். விளக்கங்களை எம் ஆஸ்ரம வெளியீடாகிய ஸ்ரீஆயுர்தேவி மஹிமை என்னும் நூலில் கண்டிடுக.!

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam