அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியர் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மௌன விரதம்

13-9-1996 அன்று பிரதமை திதியும் உத்திர நட்சத்திரமும் (பின்னமில்லாமல்) நாள் முழுதும் முழுமையாக அமைவது ஓர் அபூர்வமான அம்சமாகும். பாத்ர பத சுத்தமும் கூடிய நாள்! மௌன விரதத்திற்கு மிகச் சிறந்த நாள்! பொதுவாக ஒவ்வொரு மனிதனும் மாதத்திற்கு ஒரு முறையேனும், குறிப்பாக, சந்திர பகவானுக்கு உரித்தான திங்கட்கிழமையில் மௌன விரதம் இருந்திடில், பொய் சொல்லுதல், வாக்கு தவறுதல், பெரியோர் சொல் கேளாமை, குழந்தைகளைத் திட்டுதல் போன்ற பாவங்களுக்கு இது ப்ராயச்சித்தம்தனைத் தந்திடும். மௌன விரதத்தின் பரிபூரண பலன்களைப் பெறுவதற்கு குறித்த திதி, நட்சத்திரமும், மதிகாரகனாக இருந்து நம் மனதை இயங்க வைக்கும் சந்திரன் கூடி இருக்கின்ற ராசிக்குரிய நாள், அவரவர் ஜாதக நிலைக்கேற்ப வாக்கு வன்மைக்குரிய இரண்டாம் இடத்தில் சந்திரன் அமைகின்ற நாள் என்றவாறாக மௌன விரதத்திற்கான நாள் பற்றிய பலவிதமான ஆன்மீக நியதிகள் உண்டு. இதை அறிந்து அந்நாளில் மௌன விரதத்தை முறையாகக் கடைபிடித்திடில் ஒரு மண்டலத்திற்குரிய (45/46 நாட்கள்) வாக்சித்தியைப் பெறுவதோடு வாயினால் இழைக்கும் சொல், பொருள், காமக் குற்றங்களுக்குப் பரிகாரங்களைப் பெற்றிடலாம். தக்க சற்குருவை நாடி மௌன விரதம் பற்றிய ஆன்மீக ரகஸ்யங்களை அறிந்து பலன் பெறுவீர்களாக! 13.9.1996 அன்று பெறற்கரிய மௌன விரத நாள் வருகின்றது. அம்பாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். தங்கம், வெள்ளி, மணிகள், துளசி , ருத்ராட்சம், பவளம், ஸ்படிகம், புத்ரஜித் மணிகள் போன்ற 108 மணிகளை உருட்டி அம்பிகையின் நாமங்களை மானசீகமாக ஜபித்து மௌன விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருவீழிமிழலை

மௌன விரதம் இருவகைப்படும் :
1. நைஷ்டிக மௌன விரதத்தில் முதல் நாள் சூர்யோதயத்தில் இருந்து மறுநாள் சூர்யோதயம் வரையோ அல்லது குறித்த திதி நட்சத்திரத்தின் துவக்கத்திலிருந்து முடிவு வரையோ எதுவும் பேசாது முழுமௌனத்தைக் கடைபிடித்தல்.
2. அவசியம் நேர்ந்தாலன்றி ஏனைய நேரங்களில் மௌனத்தைக் கடைபிடித்து மானசீகமாக எப்போதும் இறைத்துதிகளை ஜபித்தல்.
மேற்கண்ட மௌன விரத நாளன்று (13-9-1996) மௌன ஞான குருமூர்த்தியாய் விளங்கும் தட்சிணாமூர்த்தி தன் பத்னியுடன் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்ற திருத்தலத்தில் மௌன விரதத்தைத் தொடங்குதல், கடைபிடித்தல், முடித்தல் மிக மிக விசேஷமான, பெறற்கரிய பாக்யங்களுள் ஒன்றாகும். சென்னை – திருப்பதி சாலையில் (ஊத்துக் கோட்டை வழியான மார்க்கத்தில்) ஆந்திர மாநிலம் சித்தூர் ஜில்லாவில் சுருட்டப்பள்ளி கிராமத்தில் பள்ளி கொண்ட ரூபத்தில் அபூர்வமாக சிவபெருமான் காட்சி தருகின்றார். இத்திருத்தலத்தில் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தம் பத்னியுடன் அருள் புரிகின்றார். மனைவி, குழந்தைகளோடு இவரை தரிசித்து மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளித்திட குடும்பத்திலுள்ள மனஸ்தாபங்கள், விவாஹரத்துப் பிரச்னைகள் தீரும். இங்கு மௌன விரத வழிபாட்டினை மேற்கொள்தல், முடித்தல் மிகவும் விசேஷமானது.
பிரதமை திதியின் மஹிமை
அனைத்துத் திதிகளும் பல்வேறு விதமான விசேஷமான அனுக்ரஹங்களைத் தரவல்லதே! தற்காலத்தில் குறிப்பாக, தமிழகத்தில் பிரதமை திதியை அசுபமாகக் கருதுகின்றனர். இது மிகவும் தவறு! (பிரதமை திதியைத் தமிழ்நாட்டில் பாட்டிமை என கூறி அறவே ஒதுக்கி விடுகின்றனர்.) ஆனால் ஆந்திரப் பகுதியில் பாட்டிமையான பிரதமையில் தான் முகூர்த்தங்கள் வைக்கப்படுகின்றன. வளர்பிறை பிரதமை திதியானது பல விசேஷமான குணங்களைக் கொண்டுள்ளது. பிரதமையன்று நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களும் பல உண்டு.
1. பூணூலுக்காக நூலைத் தக்ளியில், திரித்தல், பூணூலை வாங்குதல், பூணூலை ஸ்வாமிக்கு சார்த்திப் பிரசாதமாகப் பெறுதல், பூணூலை மாற்றுதல் போன்ற நற்காரியங்களைச் செய்திட பூணூலின் தெய்வீக சக்தி பெருகின்றது.
2. பொதுவாக சூரிய பகவானுக்கு உரிய திதியாக பிரதமை அமைந்திருப்பதால் பிரதமையன்று செய்யப்படும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், ஸ்ரீகாயத்ரீ ஹோமம், ஸ்ரீகாயத்ரீ தரிசனம் ஆகியவற்றுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு.
3.பண வசதியின்மை, குடும்பப் பிரச்னைகள் காரணமாகப் பல குடும்பங்களில் உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் வைபவம் தள்ளிப் போகும். பிரதமையன்று ஸ்ரீகாயத்ரீ ஹோமம் செய்து ஏழைகளுக்குப் பொரி, வெல்லம், தானமளித்திட அனைத்தும் சுமுகமாகத் தீர்ந்து சாந்தமும் அமைதியும் பெருகுவதோடு உபநயனமும் எளிதில் நடக்கும். ஸ்ரீஆதி மூல தக்ஷிணாமூர்த்தி முதல் முதலாக குருகுஹ மூர்த்தியாய் விஸ்வரூப தரிசனம் தந்த போது அவருடைய மௌனத்தின் மூலம் ஞானத்தை ஏற்கும் தெளிவான அறிவை எவரும் பெறவில்லை. இத்திருக்கோலத்தில் அதாவது எவ்வித சனகாதி முனிவர்களும் கீழ் அமராது ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி காட்சி தரும் கோயிலில் பூஜை செய்திடில் உயர்ந்த ஆத்ம ஞானமும் யோகமும் கைகூடும். பூணூல் அணியும் வைபவம் நிகழாமல் காலதாமதமாகிடில் இவர்கள் பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனையும் ஸ்ரீகாயத்ரீ ஹோமமும் செய்து ஏழைகளுக்குப் பொரி வெல்லம் தானமளித்திட உபநயனத்திற்கான நல்வழி விரைவில் கிட்டும்.
4. எவரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி பூணூல் அணிந்திடலாம். பூணூல் அணிவதென்பது நெற்றிக்கு இடுதல், கச்ச முறையில் உடை அணிதல், கைக்குக் காப்பு இடுதல், தீட்சை (குடுமி) வைத்தல், மொட்டை அடித்துக் கொள்தல், ரட்சை அணிதல், காப்பு கட்டுதல் போன்ற இறைவழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.
5. கட்டிடத் துறையில் கடினமான திட்டங்களினால் (Plans) ஏற்படும் பிரச்னைகளுக்குப் பிரதமையில் சுலபமாக தீர்வு காணலாம். பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு வரைபடக் கணக்குகளை பிரதமைத் திதியில் மிக எளிதில் உருவாக்கிவிடலாம்.
6. தேவலோக சிற்பியான மயன், பல அற்புதமான கோயில் கோபுரங்களையும், இறைபீடங்களையும், தெய்வீக நினைவாற்றலையும் பிரதமைத் திதி மௌன உபாசனையில் பெற்றார்.
மயனின் பூஜா சக்தியால் மதுரைக் கோயிலை ஒரே இரவில் தேவர்களும், பூத கணங்களும் கட்டி முடித்தனர். உத்திர நட்சத்திரம் கூடிய வளர்பிறை பிரதமைத் திதியின் மௌன உபாசனையினால் மயனுக்கு இது சாத்தியமானது. கட்டிட வல்லுனர்கள் (Structural engineers, Architects, designers, planners etc. ) தங்கள் துறையில் சிறந்து விளங்க உத்திர நட்சத்திரமும் பிரதமை திதியும் கூடிய இந்நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீகாமதகன ஈஸ்வரர்
திருக்குறுக்கை

7. வீட்டு வரைபட அமைப்புகளில் வாஸ்துபுருஷ சாஸ்திரப்படி வாசற்படி வாசல் நிலை, ஜன்னல்கள், குளியல் அறை, பூஜை அறை, படுக்கை அறை போன்றவை நன்முறையில் அமைவதற்கு பிரதமை திதியும் உத்திர நட்சத்திரமும் கூடிய நாளில் மேற்கண்ட மௌன உபாசனை முறையை மேற்கொள்ள வேண்டும்.
8. வாஸ்து புருஷ சாஸ்திரத்தின் படி அறைகளை அளவிடுவதற்குத் திக்குப் புள்ளிகள் என்று பெயர். இதற்கான அளவுகள் சரியாக அமைந்தால் தான் சகல சௌபாக்யங்களும் கைகூடும் திக்குப் புள்ளிகள் சரியாக அமைவதற்கு மேற்கண்ட வளர்பிறை பிரதமை + உத்திர நட்சத்திர (பூரண அறுபது நாழிகையும் இருக்கின்ற) இந்த உத்தம நாள்தான் மிகச் சிறந்ததாகும். ஒரு விரற்கிடை இடம் நகர்ந்தால் கூட எட்டு திக்கிற்கான புள்ளிகளின் இடம் மாறி வரைபடத்தில் பல வித்யாசங்கள் ஏற்பட்டு ஈடு செய்ய இயலா இழப்புகள் ஏற்பட்டு விடும். இதைத் தவிர்க்கவும் கட்டிடமானது வாஸ்து புருஷநியதிகளின் படி அமைவதற்கும் மேற்கண்ட வழிபாடே உதவுகின்றது. இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் சரியான முறையில் திக்குப்புள்ளிகளை வாஸ்து புருஷ இலக்கணப்படி இணைப்பதற்கு சித்தர்களுடைய பரிபாஷையில் “நூலாட்டு நிழல் கோள் ரகசியங்கள்” என்று பெயர். இப்பூஜையில் சிறப்பிடம் பெற்றவரே தேவலோகச் சிற்பியான மயன் ஆவார்.
பிரதமை நூலிழை பிரசித்தத்வம்
இல்லறத்துப் பெண்மணிகள், முழுமையான வளர்பிறைப் பிறைப் பிரதமையுடன், முழுமையான உத்திர நட்சத்திரத்துடன் கூடுகின்ற அற்புதமான “பூர்ண உத்திரப் பிரதமை” நாளில் (13.9.1996) செய்ய வேண்டிய விசேஷமான பூஜை முறைகள் உண்டு. இதற்கு “நூலிழை பிரசித்தத்வம்“ என்று பெயர். இந்நாளில் புதிய பருத்தி ஆடைகளின் நூல் இழைகளில் பதிந்துள்ள ஆன்மீகச் சக்திகளுக்குப் பஞ்சபூத சக்திகளின் தெய்வீக அம்சத்தைப் பிரகாசிக்கச் செய்து அதன் மூலம் நற்காரியங்களை பிரசித்தி அடையச் செய்வதாம். இந்த பூஜை தினமான உத்திரப் பிரதமை நாளில் இல்லறப் பெண்மணிகள் ஒன்றாகக் கூடி வட்டமாக அமர்ந்து இயன்ற அளவு, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது கஜ புதிய புடவைகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு நடுவில் பரப்பி விரித்திட வேண்டும். எத்தனை முழங்களுக்குப் புடவைகள் வந்துள்ளனவோ அதனைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாக ஐந்து, எட்டுமுழப் புடவைகள் என்றால் நாற்பது முழங்கள் ஆகின்றன. நல்ல நீளமான தர்ப்பைப் புற்களை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சிட்டு, எவ்வளவு முழங்களுக்குப் புடவைகள் வந்துள்ளனவோ, அந்த அளவு நீளத்திற்குத் தர்ப்பைப் புற்களை முடிச்சிட்டு தர்பை மாலையைப் புடவைகளைச் சுற்றி வட்டமாக வளையம் போல் வைத்திட வேண்டும். தர்ப்பைகளை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சுப் போட்டு இணைத்துள்ளோம். அல்லவா! இம் முடிச்சுகளை உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டு இந்த “வஸ்திர தர்ப க்ரந்தி” சுழலைச் சுற்றிப் பெண்கள் அமர்ந்து அம்பிகையின் நாமங்களைத் துதிக்க வேண்டும்.
பட்டுப் புடவை அணிதல் பாபகரமானது
இந்நாளில் பெண்கள் எக்காரணம் கொண்டும் பட்டாடையை அணியக் கூடாது. பொதுவாக இலட்சக் கணக்கானப் பட்டுப் புழுக்களை வதைத்து உருவாக்கப்படும் பட்டாடையைத் தரிப்பது மிகவும் பாபகரமான செயலாகும். தற்காலத்தில் அந்தஸ்து ஆடம்பரம் காரணமாகப் பட்டாடையை உடுத்துவது ஃபேஷனாகி விட்டது. ஆனால் நம்முடன் சமுதாயத்தில் வாழ சகல உரிமைகளைப் பெற்றுள்ள பட்டுப் புழுக்களைக் கொதிக்கும் வென்னீரில், சித்திரவதை செய்து சாகடித்துப் பெறப்படுகின்ற பட்டுப் புடவைகளில் அப்பட்டுப் புழுக்களின், சோகச் சுழல்கள் குடி புகுந்து விடும். இந்தப் பட்டுத் துணிகளை நாம் அணிவதால், நமது வாழ்க்கையிலும் துயரச் சுமைகளே அதிகரிக்கும். தயவு செய்து ஒரு போதும் பட்டு உடைகளை அணியாதீர்கள்.
சுழல் ரகசியங்கள்
மேற்கண்ட முறையில் வளர்பிறைப் பிரதமையில் “வஸ்திர தர்ப்ப க்ரந்தி” எனப்படும் தர்ப்பச் சுழல் பூஜையைப் பற்றிய பல ஆன்மீக ரகசியங்களை சித்த புருஷர்கள் விளக்கியுள்ளனர். எண்ணங்களிலோ எழுத்திலோ அவற்றை வடிக்க இயலாது, அந்த அளவிற்கு இது புனிதம் தரவல்லதாம்! ஏதேனும் ஓர் அம்பிகையின் மூல மந்திரத்தைக் குறைந்தது 1008 முறையேனும் (தர்ப்பை முடிச்சினை உள்ளங்கையில் பிடித்தவாறே) ஜபித்து வஸ்திரங்களுக்குக் கற்பூர ஆரத்தி காட்டி அன்ன நைவேத்தியத்துடன் பூஜையை நிறைவு செய்திடல் வேண்டும்.
வளர்பிறை பிரதமை திதி பூஜையின் மகத்துவம்
இங்ஙனம் செய்யப்படும் பூஜை முறையால் இப்புடவைகளுக்கு மகோன்னதமான தெய்வீக சக்திகள் ஏற்படும். பிரசவ நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள், பூஜை சக்திகள் நிறைந்த இப்புடவைகளை அணிந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். தவிர சீமந்தம், வளைகாப்பு, சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற சுபகாரியங்களில் இப்புடவையை அணியச் செய்வதின் மூலம் அனைத்தும் மங்களகரமாக முடியும். நோயுற்றவர்களுக்கு போர்த்தினால் பூரண குணம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழாவின்போது இப்புடவையை அணியச் செய்தால் மங்களகரமான திருமண வாழ்க்கை ஏற்படும். ஒழுக்கமுள்ள, நல்ல கணவன் கிடைக்கப் பெறுவான். அப்பெண்ணிற்குப் பூரண சுமங்கலித்துவம் கிட்டும். இதுவே பிரதமை நூலிழைப் பிரசித்தத்வம் எனப்படும். பிரசித்தி என்றால் பெருமை வாய்ந்தது என்று பொருள். வளர்பிறைப் பிரதமை பூஜையில் நிறைய புடவைகளைக் கொண்டு பல குடும்பங்களுக்கு நோய் நிவர்த்தி, திருமணம் கைகூடுதல், சுகப் பிரசவம் போன்ற நற்காரியங்கள் கைகூடி , சௌபாக்கியம் தரவல்ல அறவழியினைக் கடைபிடிப்போமாக!
மேற்கண்ட பாத்ரபத சுத்த மௌன தினத்தன்று இயன்ற அளவு மௌனத்தை மேற்கொண்டு குறைந்தது நான்கு முறையேனும் 108 – மணி மாலையினை உருட்டி அம்பிகையின் நாமத்தையோ ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தையோ ஜபித்து முறையாக வழிபட்டிட
1. வைராக்யமான மனோதிடம் கூடிய மன வலிமை கிட்டும்.
2. எத்தகைய இடர்கள் வரினும் மனம் கலங்கா அஞ்சா நெஞ்சமுடைய உறுதிப்பாடு ஏற்படும்..
3. தனக்கு மட்டுமல்லாது பிறருக்கும் மனோ வலிமை ஊட்டுகின்ற பக்குவம் கிட்டும்.
4. பெண்கள் தங்களுக்குள் பல விதமான குடும்ப,பொருளாதார, உறவுப் பிரச்னைகளால் குழ(ப்)ம்பி மனம் கலங்கி நிற்பர். இத்தகைய மனக் குழப்பங்களுக்கு நல்ல முடிவைத் தரவல்லதே மௌன விரதமாகும்.
5. இத்தகைய சுக்லபக்ஷ (வளர்பிறை) மௌன விரதத்தினால் மனோ சக்தி பெருகிடும்! மன ரகஸ்யங்கள்/எதிர்பார்ப்புகள் நன்மையாயின் கைகூடும். தீமையாயின் தீர்ந்துவிடும்.
மஞ்சள் பூசும் முறை  சுபகார்ய சித்தி
ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணும், கன்னிப் பெண்களும், சிறுமியர்களும் (ஜாதி, மத, பேதமின்றி) நாள்தோறும் மஞ்சள் பூசி நீராடுகின்ற நற்பழக்கத்தைக் கொண்டிட வேண்டும். குடும்பத்தில் பிணியற்ற வாழ்வு, கணவனுக்குப் புகை பிடித்தல், மது போன்ற தீயொழுக்கமும் இல்லாது நல்லொழுக்கத்துடன் வளர்தல், கற்பு நெறி, பெண் குழந்தைகளுக்கு நன்முறையிலான திருமண வாழ்வு, பெரியோர்களின் ஆசி, சித்புருஷர்கள்/மஹான்களின் அருள் ஆகியவற்றை எளிதில் பெற்றுத் தரவல்லதே மஞ்சள் பூசி நீராடுவதின் மஹிமையின் சில முக்கியமான அம்சங்களாகும். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாம் ஸ்ரீஅம்பிகை வசிக்கின்ற ஸ்ரீவித்யாலோகத்தின் ஒன்பது கோணங்களிலும் உறைகின்ற 43 கோடி தேவதைகளின் லோகங்களின் வாசல்களில் முன் விளங்குவது மங்களகரமான மஞ்சள் கிழங்கேயாம். மேலும் மஞ்சள் தரிசனம் மாங்கல்ய தரிசனத்திற்கு ஈடானதாகும். பெண்கள், தற்போது மஞ்சளைக் கடையிலிருந்து பெறவேண்டியதாய் இருந்தாலும் பூசும் மஞ்சளுக்குப் புனிதத்துவம் தரவேண்டிய முறைகளை அறிந்து அவற்றை கடைபிடித்திடில் மஞ்சளின் தெய்வீக சக்தியை எளிதில் அடைந்து பலன் பெறலாம்.

ஸ்ரீசக்கரம்
கரிவலம்வந்தநல்லூர்

சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள ஸ்ரீ காமகலாகாமேஸ்வரி ஆலயம் மஞ்சளின் மஹிமையைப் பறை சாற்றும் ஓர் அற்புத ஆலயமாகும். இவ்வாலயத்தில் தான் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாமகலாகாமேஸ்வரியின் திருஅருட்கடாக்ஷத்தைப் பற்றி “மஞ்சள் மஹிமை” என்னும் தலைப்பில் சித்த புருஷர்கள் அருள்கின்ற மஞ்சளின் புனிதமான குணங்களைப் பற்றிக் குருவருளால் எடுத்துரைத்தார்கள். அவர்தம் “மஞ்சள் மஹிமை” உரையின் ஒரு பகுதியே “மஞ்சள் மஹிமை“ என்னும் நூலாய் வடிக்கப் பெற்றுள்ளது. ஸ்ரீஅகஸ்திய மகாபிரபு யுகயுகமாகத் தவமிருந்து இங்கு ஸ்ரீகாமகலாகாமேஸ்வரியின் திருக்கரங்களிலிருந்து மஞ்சளைப் பெற்றுப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து லோகங்களுக்கும் மஞ்சளின் மஹிமையை உணர்த்தினார். எனவே மஞ்சளை இவ்வம்பிகையின் திருவடிகளில் சார்த்தி அபிஷேக ஆராதனைகள் செய்து குறைந்தது 21 முறை அடிப்பிரதட்சிணம் செய்து 21 ஏழை சுமங்கலிகளுக்கு மஞ்சளைத் தானமாக அளித்திட வேண்டும். இதற்குப் பின்னர் அம்பிகையின் திருவடி ஸ்பர்சம் பெற்ற மஞ்சளைப் பூசும் மஞ்சளாகப் பயன்படுத்திடில் கிட்டும் தெய்வீக சக்திகள் பலப்பல.
சென்னையிலுள்ள கோயிலாயிற்றே, அனைவருக்கும் இது சாத்யமானதா? செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மருதாணி பூசி மஞ்சளை வலது கையில் தாங்கி “ஓம் சக்தி” என 51 முறை ஜபித்து மஞ்சளைப் புடவை முந்தானையில் முடிந்து கொண்டு அம்பிகை கோயிலுக்குச் சென்று குறைந்தது 21 முறை அடிப்பிரதட்சிணமாய் வலம் வந்து வணங்கிட வேண்டும். இவ்வாறாக பூஜை செய்யப்பட்ட மஞ்சளைப் பூசும் மஞ்சளாக பயன்படுத்திடலாம். பொதுவாக மஞ்சளின் பரிபூரணமான பலன்களைப் பெறவேண்டுமெனில் மேற்கண்ட முறையில் மஞ்சளுடன் கோவிலை வலம் வந்து அன்றைய தினமே அம்மஞ்சளை நீராடுவதற்குப் பயன்படுத்த வேண்டும். பெண் பார்த்தல், பிரவசத்திற்குச் செல்லுதல் போன்றவற்றிற்குச் செல்கையில் மஞ்சள், சந்தனக்கட்டை, சந்தனக் கல், துளசி வில்வம், குங்குமச் சிமழ் இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து தரிசனம் செய்திடில் அனைத்தும் சுபமாய் முடியும். இவ்வைந்து சுபப் பொருட்களின் தரிசனத்தை அனைத்து நற்காரியங்களுக்கும் நல்ல சகுனமாகக் கொண்டிடலாம்.
சந்திர சஷ்டி – 2.2.1996
நவ லோகங்களிலிருந்து, நவதேவியர் உருவாயினர், நவதேவியருக்காக, ஷண்முக முக லோகத்திலிருந்து நவவீரர்கள் தோன்றினர். இந்த நவவீரர்களின் தோற்றத்திற்காக நவதேவிகள் சந்திர சஷ்டியில் தான் விரதம் இருந்தனர். எனவே சந்திர சஷ்டி விரத மஹிமையால் இந்த நவ வீரர்களும் சிவபெருமானால் முக்கியமான கைலாசவாச பூதகணங்களாய் அமையும் பேறுபெற்றனர். எனவே கணவன்மார்கள் ஸ்திரமான புத்தியுடனும் நல்லொழுக்கத்துடனும் வாழ சந்திர சஷ்டியன்று பெண்கள் சஷ்டி நேரம் முழுதும் முறையாக விரதமிருந்து மாலையில் சந்திர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகளுடனும் தேன் கலந்த பாலை ஏழைக் குழந்தைகட்கு (5 வயதிற்குட்பட்ட) அளித்து, சந்திர சஷ்டி பூஜையை நிறைவு செய்திடுக! பிரத்யட்சமான பலன்களைத் தரவல்ல பூஜை! திருஅண்ணாமலையில் தசமுக தரிசனம் கிட்டும் அபய மண்டபத்தில் தான் சூரசம்ஹாரத்திற்குச் செல்லு முன் முருகப் பெருமானின் நவவீரர்களும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரைத் தொழுதனர். அதுவும் சந்திரசஷ்டி தினத்தன்று! இப்பகுதியில் தான் முன்பு சந்திர லிங்கத்திற்கான கோயில் அமைந்திருந்தது. எனவே சந்திர சஷ்டி தினத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அபயமண்டபப் பகுதியிலிருந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரை தரிசித்தும் சந்திரச் சஷ்டி விரதத்தை நிறைவு செய்திடலாம். தேன் கலந்த தினைமாவு தானம், விரதபலன்களை முழுமையாக்கி, காமம், சூது, சீட்டு, குதிரைரேஸ் போன்றவற்றில் மனவயப்பட்டு செல்வம்/ஒழுக்கத்தை இழக்கும் கணவன்மார்கள் நல்வழி பெறுவர். இத்தீய பழக்கங்களையுடையோரே மேற்கண்ட முறையில் விரத பூஜை, கிரிவலம், தான தர்மங்களை மேற்கொண்டிட நல்வழி கிட்டும்.

அமுத தாரைகள்

1. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவில் அருந்ததி நட்சத்திரத்தை தரிசித்து 12/21 முறை நமஸ்கரித்து வணங்கி, தேன் கலந்த பாலை தானமளித்துவர, பெண்களின் (முறையான) நியாயமான விருப்பங்கள் நிறைவேறும். (வீடு மாற்றுதல், வாகனம் வாங்குதல், நகையணிதல், தீர்த்த யாத்திரை செல்லுதல் etc. ).
2. கம்ப்யூட்டர் கல்வி/தொழில்/ஆராய்ச்சி அச்சுத் தொழில் (offset, laser printing) போன்றவற்றில் ஈடுபட்டு இருப்போர், திருவோண நட்சத்திரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சர்க்கரைப் பொங்கல் தானமளித்து ஸ்ரீகாயத்ரீ முக தரிசனம் பெற்றிடில் தத்தம் துறையில் சிறந்து விளங்குவர்! விருதுகள் கிட்டும்! வியாபாரம் பன்மடங்கு விருத்தியாகும். (ஸ்ரீஉண்ணாமுலை மண்டபத்திற்கு அருகே ஸ்ரீஅண்ணாமலையாரே ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரி, மற்றும் ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூவரும் ஒருங்கே இணைந்த மூன்று முகடுகளுடன் ஸ்ரீகாயத்ரீ லிங்கமாகக் காட்சி அளிக்கின்றார்.)
3. திருவாதிரை நட்சத்திரத்தன்று கிரிவலத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கோதுமை அல்வா தானமிட்டு இருமுக தரிசனத்தைப் பெற்றிட சூது, சொத்து போன்றவற்றில் மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்றுகின்ற தீய எண்ணம் ஆண்களிடம் மறையும். கணவனுக்கு துன்பங்கள் தருகின்ற/துரோகம் செய்கின்ற தீய குணங்கள் விதி வசத்தால் பெண்களுக்கிருந்தால் அத்தகைய தீய எண்ணங்களுக்கு இத்தரிசனத்தால் ப்ராயச்சித்தம் கிட்டும்.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
அவளிவநல்லூர்

4. சித்திரை நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து “மூஷிக லிங்கமுக“ தரிசனத்தை கண்டு இனிப்புப் பூரண கொழுக்கட்டை தானம் செய்துவர கணவனுக்கு வருகின்ற ஆபத்துகள் நீங்கி தீர்க மாங்கல்ய சக்தி கிட்டும். மிகவும் நோயுற்றுக் கிடக்கும் கணவன் சுகம் பெறுவான்.
5. சித்திரை நட்சத்திரத்தன்று பத்மாசனமிட்டு சூர்யனை நோக்கிய அமர்ந்து அதேநிலையில் குனிந்து முகத்தைத் தரையில் பதித்து நமஸ்கரித்து சூரிய கவசம் ஓதி வணங்கி ஏழைகளுக்குக் காலணிகள் தானமளித்திட யோக சக்தி எளிதில் உண்டாகும். ரசாயனத் துறையைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு இது மிகச் சிறந்த வழிபாடாகி, ரசாயனத் துன்பங்களிலிருந்து ரட்சை போல் காக்கின்றது. சொத்துப் பங்கீடு மற்றும் ஏனைய பிரச்னைகளில் தந்தையுடன் சுமுகமாக உறவு ஏற்பட இச்சூர்ய கவச நமஸ்காரம் பெரிதும் உதவும். சூர்ய கவசத்தை அறியாதோர் சூர்யனின் 12 பலவித ஆதித்ய நாமங்களைச் சொல்லித் துதித்து நமஸ்கரித்திடுக!
6. பஞ்சமி திதியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பஞ்சமுக தரிசனம் கண்டு எலுமிச்சை அன்னம் தானமிட்டு, ஐந்து முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்திட நல்மனைவி வாய்ப்பாள். ஆண்களுக்கான திருமணத் தடங்கல்களும் நீங்கிடும். கிரிவலத்தில் இடுக்குப் பிள்ளையார் அருகே திருஅண்ணாமலையின் உச்சியில் ஐந்து முகடுகள் காட்சி தரும். இதற்குப் “பஞ்சமுக தரிசனம்” என்று பெயர்.
7. உத்திர நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, தக்காளி சாத தானமளித்து சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம் கண்டு ஐந்து முறை நமஸ்கரித்திட நற்செய்திகள் தேடி வரும்! (நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் இருந்து பெறும் தரிசனத்திற்கு “சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்” என்று பெயர். முன்புறம் ஸ்ரீஅம்பிகையும் பின்னால் ஸ்ரீஅருணாசலேஸ்வரராக மலை உச்சியும் தென்படுகின்ற அதிஅற்புத தரிசனம்!) திருமண சம்பந்தம் பிரசவம், உறவு போன்றவற்றில் நற்செய்திகள் நாடி வரும்.
8. தசமி திதியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தசமுக தரிசனம் கண்டு பத்துமுறை நமஸ்கரித்து ஐந்து வித காய்கறிகள் கலந்த சாம்பார் சாதத்தை தானம் செய்து வர வியாபாரம், அலுவலகம், குடும்பத்தில் உள்ள தீராத துன்பங்கள் தீரும். [ நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அருகேயுள்ள அபயமண்டபத்திலிருந்து தெரிகின்ற தரிசனமே தசமுக தரிசனமாகும்.]
9. சதுர்த்தித் திதியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சதுர்முக தரிசனத்தைக் கண்டு 21/36/64/108 முறை தோப்புக் கரணம் இட்டு வணங்கி இனிப்பு ரவா உருண்டையினை [ரவாலாடு] தானமாக அளித்துவர வேலைவாய்ப்பு கிட்டும், உத்யோகம் நிரந்தரமாகும். [Confirmation ]
10. பகைவர்களால் உண்டாகும் அச்சம், உறவினர்களால் ஏற்படும் பீதி, தீய குணமுள்ளோரைக் கண்டு ஏற்படும் கிலி, உயரதிகாரிகளைக் கண்டால் ஏற்படும் பயம், மற்றும் பரீட்சை, இன்டர்வ்யூ, கோர்ட் வழக்கு, விளையாட்டுப் பந்தயம் போன்றவற்றிற்குச் செல்லுமுன் உண்டாகும் மனக் கலக்கம் ஆகியவற்றை அறவே களைந்திட மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, பிரசாத வெண்ணெய், பசுவெண்ணெய் + சர்க்கரை, பால்தானம் செய்திடுக!
11. குழந்தைகளை அடிக்கக் கூடாது. குறிப்பாக ஆண் குழந்தைகளை விசாகம், மூலம் நட்சத்திர நாட்களிலும் பெண் குழந்தைகளை ரோஹிணி, உத்திர நட்சத்திரங்களிலும் அடிக்கக் கூடாது. அடித்திடில் பெற்றோர்களுக்கு சொல்லொணாத் துன்பங்கள், தோல் வியாதி வந்து சேரும்.
12. புதிய வாகனம் வாங்கியவுடன் விசாக நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையிலுள்ள ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்திற்கு வாகனத்துடன் சென்று ஸ்ரீஅம்பிகைக்கு வில்வமாலை சாற்றி, அம்மாலையைப் புதிய காரின் உட்பகுதியில் மாட்ட வேண்டும் இருசக்கர வாகனமாயின் வில்வமாலையைத் தொங்கவிடாது, டயர் பகுதியிலும் படாதவாறு வாகனத்தின் கழுத்துப் பகுதியில் சுற்றி வைத்து ஸ்ரீஅம்பிகையை வழிபட்டு, பச்சை நிறமுள்ள பிஸ்தா கேக்கினை ஏழைகளுக்குத் தானமாக வழங்கிட வேண்டும் இதனால் வாகன அபிவிருத்தி கிட்டும். புதிய வாகனம் வாங்கிய உடனேயே வேறெங்கும் செல்லாது ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்திற்குச் செல்வது மிகவும் விசேஷமானதாகும் . விசாக நட்சத்திரமும் கூடிட வாகனயோகம் பொங்கி சௌபாக்யம் பெருகும். பஸ், லாரி முதலாளிகள், கேப்ஸ் (cabs) அதிபர்கள் போன்றோர்க்கு இது மிகச் சிறந்த பூஜையாக அமைந்து வாகனங்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகும். வாகன பூஜைக்கு விசாக நட்சத்திரம் மிகவும் உகந்ததாகும். ஏனைய நாட்களிலும் செய்திடலாம் சிறப்பான வாகன பூஜை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
13. மனைவி அளிக்கும் துன்பங்களினால் வேதனை அடைந்து இறக்கின்ற கணவனுக்கு மாளயபட்சத்தில் பஞ்சமி திதியன்று (1.10.1996) தர்ப்பணம் அளித்திட மனசாந்தி கிட்டும். கணவனின் ஆயுள் காலத்திலேயே, “பிற்காலத்தில் தன் பிள்ளைகள் தன்னை நிராதரவாக்கிவிடுவார்கள், எனவே இப்போதே எனக்குரிய சொத்தினைத் தந்துவிடுங்கள்” என்று கணவனை வேதனையடையச் செய்த சாபங்களுக்கு இத்தர்ப்பணமே பரிஹாரம் தரும்.
மனிதர்கள் தின்று தீர்த்த கோழி, நண்டு, மீன், காடை, கௌதாரி, வாத்து, முயல், ஆமை etc. எத்தனை, எத்தனை! எத்தனையோ தாய் நண்டுகளையும் தாய் மீன்களையும்/கோழிகளையும் உண்டு அதன் குஞ்சுகளை/குட்டிகளைத் தவிக்க விட்டிருக்கின்றோம். மாளய பட்ச துவாதசித் திதியில் இதற்கு ஓரளவுப் பிராயச்சித்தமாக அனைத்து சாத்வீக பிராணிகளுக்கும் (பூனை, நாய் உட்பட) தர்ப்பணமளித்திட வேண்டும். சாத்வீக பிராணிகளின் ஆன்மீக உய்விற்காக அவற்றிற்குத் தர்ப்பணமளிக்க வேண்டியது மனித குலத்தின் கடமை!
9.10.1996 அன்று மாளய பட்ச துவாதசியில் – சாத்வீகப் பிராணிகளின் உய்விற்காகத் தர்ப்பணமளிக்கும் அரிய பாக்யத்தை விட்டு விடாதீர்கள். பிராணிகளை மனதால் எண்ணி அவற்றின் உய்விற்காகப் பிரார்த்தித்து எள்+நீர் வார்த்துத் (தர்ப்பைகளின் மேல்) தர்ப்பணமிடுங்கள்! இது உங்களுடைய தெய்வீகக் கடமையாகும்.

ஆத்ம விசார வினா விடை

ஆத்ம விசார வினா-விடை (நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தெளிவுபடுத்தியது.)
வினா :- தினசரி தான தருமங்களில் நூடில்ஸ் (Noodles)  என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உணவு வகை சம்ப்ரதாயங்களில் உள்ளனவா?
விடை :- முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், நூல்கோல் போன்றவை ஆங்கிலக் காயகறிகளாகக் கருதப்படுவது விந்தையாக இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சித்தர்களுடைய பரிபாஷையில் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பூலோகம் மட்டுமன்றி ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்துத் தாவரங்களுக்கும் அதிபதிதானே ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு! இன்றும் நம் பாரத தேசத்தில், குறிப்பாக பெருமைக்குரிய நம் தமிழகத்தில், பொதிய மலையில் நித்ய வாசம் செய்கின்ற சித்புருஷர்! அவருடைய ஆணையின் கீழ் வராத தாவரம் ஏதேனும் உண்டா! கேரட் என்பதை போகர் தம்முடைய வைத்திய நூலில், செங்குடு கிழங்கு என வர்ணித்து அதனுடைய சிறப்பு இயல்புகளைப் பல நூறு பாடல்களில் விவரித்துள்ளார். எனவே காலப்போக்கில் இவற்றின் பெயர்களை நாம் மறந்ததாலோ தட்ப, வெட்ப , பூகோள மாற்றங்களுக்கேற்ப தாவர கிருத்யங்களும் மாறுவதாலோ தான் இவை இன்றைக்கு ஆங்கிலக் காய் கறிகளாக தென்படுகின்றன. பாரதத்தின் எத்தனையோ மலைப் பகுதிகளில் பல யுகங்களாய் இவை இருந்துதான் வருகின்றன. வேதத்தின் பிரிவுகளில் ஆயுர்வேதம், துனுர்வேதம் இரண்டிலுமே குறிப்பிட்ட சில காண்டங்களே நமக்கு கிட்டியுள்ளன. இவற்றில் கூடநாம் ஆங்கிலக் காய்கறிகள் என்றும் கருதும் பல தாவரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை தவிர நாம் அறியாத ஆயுர், தனுர் வேத காண்டங்களும் உண்டு அவற்றுள் லட்சக்கணக்கான தாவரங்களைப் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
அர்ஜுனனும், பீமனும் குறிப்பிட்ட சில பூ, கிழங்கு இன தாவரங்களை உண்டு அற்புதமான உடல் வலுவினைத் தரும் முறைகளை தனுர் வேதத்திலிருந்து தாம் பெற்றனர். நூடில்ஸ் என்பது இடியாப்ப வகையைச் சேர்ந்ததாகும். நம் தாவரங்களில் இருந்தே பல உணவு முறைகளை மேல் நாட்டார் கண்டறிந்து அவற்றிற்குப் புது ஆங்கிலப் பெயர் சூட்டி நமக்கே அளிக்கின்றனர். இதுவும் ஒரு மாயையே! போகருடைய வைத்ய நூல்களில் “அரிசி நுதல்கூழ்” உணவு என்று noodlesஐ வர்ணிக்கின்றார். இதை எடுத்துக் கூறினால் யாருக்குப் புரியும்? நூடில்ஸ் என்றால் சிறு குழந்தையும் புரிந்து கொள்கின்றது! அரிசி நுதல் நூல் கூழின், அதாவது நூடில்ஸின் ஆன்மீக சக்தி என்னவென்று தெரியுமா, போகர் அளிக்கின்ற விளக்கத்தைக் காணுங்கள்! ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் ப்ரதான சிஷ்யர்களுள் ஒருவர் போகர் ஆவார். அக்காலத்தில் நாட்டுப் பிரிவுகள் கிடையாது! போகர் உலகின் கிழக்குப் பகுதியில் அதாவது தற்போதைய சீனா/ஜப்பான் பகுதியில் சித்த வைத்ய முறையைப் பரப்பி வந்தார். பல லட்சம் ஆண்டுகள் நித்ய சித்த புருஷராய் அப்பகுதிகளில் வாழ்ந்தமையால் அவருடைய மானுட ரூபமும் மங்கோலிய இன முகமாகவே தோன்றிற்று! போகர் சித்த வைத்யத்தில் மட்டுமல்லாது Flying Saucer எனப்படும் பறக்கும் தட்டு வாகனம் மூலமாக, பூலோகம், ஸ்ரீசூர்ய, ஸ்ரீசந்திரலோகம், குருமண்டல லோகங்கள் மற்றும் பல கோடான கோடி லோகங்களுக்குச் சென்று வரும் மெய்ஞ்ஞான விஞ்ஞானி! இவருடைய சிஷ்யரான புலிப்பாணி சித்தர் சித்த வைத்யத் துறையில் ப்ரசித்தி பெற்றவர்! போகர் பல லோகங்களுக்கும் செல்கையில் தம் இடத்தில் புலிப்பாணி சித்தரை வைத்துவிட்டுச் செல்வார். தஞ்சை ஸ்ரீப்ரஹதீஸ்வரா ஆலய விமானத்தில் சீன தேசத்தவருடைய பொம்மையொன்று காணப்படும். போகர் சீனாவிலிருந்து தஞ்சைக்கு வந்ததைக் குறிக்கும் சின்னமிது!
இன்றைக்கும் பல சித்த வைத்யர்கள் தங்களுடைய புதிய சித்த வைத்ய மருந்தினைப் பழநியில் போகருடைய சமாதியில் சமர்ப்பித்துப் பின்னர் தஞ்சைக் கோயில் விமானத்தில் தரிசனம் தரும் போகருக்கு அர்ப்பணம் செய்கின்ற ஆன்மீக ரகசியத்தை ஒரு சிலரே அறிவர். இப்பூஜை முறையினால் எவ்வித சித்த வைத்ய மருந்தும் மிகவும் பிராபல்யமாகும். ஆனால் வியாபார நோக்கில்லாது ஏழைகளுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை கூடிட வேண்டும். பாலத்ரயணி என்ற தேவ மாது பூலோகத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகையில் சந்திரலாதரன் என்ற பேரரசன் அவளுடைய பேரழகில் மயங்கித் தன்னை மணம் புரியுமாறு வற்புறுத்தினான். “நானோ தேவ மாது, நீயோ மானுடன், நான் பூலோகம் வந்ததோ இறை தரிசனம் பெறவே! நீ நினைத்தது நடக்க வேண்டுமெனில் பெரியோர்களின் ஆசியை நாடிடுக. எனக்குரித்தான நாளன்று நான் தேவலோகம் சென்றால் வேண்டும்“ என்று கூறிய பாலத்ரயணி தன் பணியைத் தொடர்ந்தாள். சந்திரகலாதரன் தான தருமங்களில் சிறந்து விளங்கியதால் நாடே சுபிட்சமாக விளங்கியது. பல நற்பண்புகளுடன் வாழ்ந்த அவனால் பாலத்ரயணியை மறக்க இயலவில்லை. வலிமை மிக்க பேரரசன், தேவமாதுவின் நினைவிலேயே சில வருடங்களைக் கழித்தான். சந்திரகலாதரன் பக்தி நெறியோடு, தர்மம் தழைத்தோங்க ஆட்சி புரிந்திடினும் அவனால் பாலத்ரயணி மங்கையின் நினைவினைக் கைவிட இயலவில்லை.
காதல் எண்ணங்கள், முறையானவையாயின் நிறைவேறிட, உத்தம அன்பு பூண்டோர் மணம் புரிந்திட, பூலோகத்தில் குறித்த ஓர் திருத்தலம் உண்டு. அங்கு முறையாக நீராடி இறைவனைப் பூசித்து வந்திடில் தார்மீகமான முறையில் அன்பு கொண்டோரை மணந்திடத் திருவருள் கிட்டும் தக்க சற்குருவே விளக்கம் தர வல்லார். சந்திரகலாதரன் இத்திருத்தலத்தில் முறையாகப் பூஜை செய்து வருகையில் ஸ்ரீஅகஸ்திய மாமுனியும் அவர்தம்  சிஷ்யரும் போகர் சித்த மஹா பிரபுவும் அக்கோயிலுக்கு வந்தனர், மாமன்னனின் நிலை கண்ட அகஸ்தியர், போகரிடம், “போகா! விதிப்படி பாலத்ரயணி இவனுக்கு உரித்தானவல்லள். எனினும் எதிர்வரும் ஜன்மங்களில், அவன் தற்போது செய்து வரும் பூஜைகளினால் அவன் நினைப்பது நடைபெறும். எனினும் சத்யவானாக அவன் தர்ம நெறி பிறழாது ஆட்சி புரிவதால் சிவபெருமானின் இறையாணையின்படி நாம் சில செயல்களை நிறைவேற்ற இங்கு வந்துள்ளோம்.
பிளாஸ்டிக் சர்ஜரி – ஆன்மீகக் குறிப்பு
“சந்திரகலாதரன் பாலத்ரயணியின் முக அழகை எண்ணி ஏங்குவதால், போகா! நீ மூலிகை சாஸ்திரப்படி சந்திர கலாதரனுக்கு முக அறுவை சிகிச்சை மூலம் (Facial Plastic Surgery ) அவனுக்கு பாலத்ரயணியின் முகத்தை அமைப்பாயாக!” என்று அருளினார். போகரும் சந்திரகலாதரனுக்கான முகத்தில் அறுவை சிகிச்சையைத் தேய்பிறையில் தொடங்கி வெற்றிகரமாக அதனைக் குருவருளால் முடித்து சந்திர கலாதரனைத் திருஅண்ணாமலையில் “ஏகமுக“ தரிசன கட்டுக்களுடன் ஒரு பட்சம் வைத்திருந்தார். அடுத்த பௌர்ணமியன்று அவனுடைய முகக்கட்டுகள் பிரிக்கப்பட.... என்ன ஆச்சரியம்! சந்திரகலாதரனின் முகம் பாலத்ரயணியின் முகம் போலவே மாறிவிட்டது! தினமும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தவாறே தன் ஏக்கங்களை நிறைவு செய்தான் மாமன்னன்! இத்தகைய அறுவை சிகிச்சையின் போது போகர் சந்திரகலாதரனுக்கு அளித்த உணவு என்ன தெரியுமா? அரிசி நுதல் நூல் கூழ் உணவான Noodles தான்! முகமெல்லாம் மூலிகைக் கட்டுக்களுடன் இருக்க noodles உணவுதான் மிகக் குறைந்த வாய், உதடு, பல், நாக்கு அசைவுகளுடன் சத்துணவாக அமைந்து ஆரோக்யமளிக்கிறது. அறுவைச் சிகிச்சை சமயத்தில் உன்ன வேண்டிய உணவுகளைப் பற்றி போகர் நன்கு விளக்கியுள்ளார். போகர், சந்திரகலாதரனுக்குரிய அறுவை சிகிச்சையைத் துவங்குமுன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து “புரிமான்கண் தரிசனம்” கண்டு அரிசி நுதல் நூல் கூழ் உணவினைத் தானமாக அளித்தார். இறைப் பெருநிலையை அடைந்த உத்தம சித்புருஷராம் போகரே இத்தரிசன, தானதர்ம முறைகளைக் கைக்கொண்டாரெனில் எத்தகைய அற்புத தரிசனமிது ! மாங்கோலிய/ஜப்பானிய/சீன இனத்தவர்களின் “இடுக்கிய கண்களைப்“ போல், திருஅண்ணாமலை கிரிவலத்தில் ஒரு தரிசனம் தென்படும்! இதுவே “புரிமான்கண் தரிசனம்” பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களும், இவ்வறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நோயாளிகளும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து “புரிமான்கண் தரிசனம்” கண்டு வணங்கி அரிசி நுதல் நூல் கூழ்தனை (Noodles) தானம் செய்திடுக! மேலும் , மூக்கு வாய்ப்பகுதி சேர்ந்த விஹார ரூபங்கள், தீ விபத்து மற்றும் தோல் நோய்களால் ஏற்படும் விஹாரத் தோற்றங்கள், விபத்தினால் ஏற்படும் கோரமானா அமைப்புகள் – போன்றவற்றிற்கு இத்தரிசனமும், தான தருமங்களும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். கோதுமை அல்வா, பிஸ்தா கேக், போண்டா போன்றவையும் சம்பிரதாயங்களிலும், சாஸ்திரங்களிலும் காணப்படுகின்றனவா? கோதுமை, சூரிய பகவானுக்கும், உளுந்து சந்திர பகவானுக்கும், பச்சை நிறம் உள்ள பாதாமும், பயறும் புதனுக்கும் உரித்தானவையாகும். எனவே கிரஹங்களுக்குப் ப்ரீதியான தானியங்களைத் தற்கால சூழ்நிலைக்கேற்ப உணவுப் பண்டங்களாக மாற்றிக் கொள்கிறோம். வட இந்தியாவில் சப்பாத்தி, பூரி பிரதானமான உணவாகும். அங்கு அரிசி உணவை அவ்வளவாக ஏற்பதில்லை.
 எனவே, கால வர்த்தமான தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப தான, தர்ம வகைகள் வேறுபடும். குறுகிய கண்ணோட்டத்தோடு பாராமல், விசாலமான வேத புராண, சமுதாய அறிவுடன்/ நெறிகளுடன் தானதர்மங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திட வேண்டும்.

கடுக்கன் மகிமை

கடுக்கன் மஹிமை
ஆண்கள் கடுக்கன் அணிய வேண்டிய அவசியத்தையும் கடுக்கனின் தெய்வீக சக்தி, ஆன்மீக குணங்கள், இதனை அணிவதால் வாழ்வில் ஏற்படும் நற்பலன்கள் பற்றியும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் இத்தொடரில் விளக்கி வருகின்றார்கள்.) ..... ஸ்ரீகாயத்ரீ லோகத்திலிருந்து அத்தேவதைகள் உத்தாலகரின் மற்றொரு கடுக்கனை மீட்டு வந்தன அல்லவா! இதற்கு முன்னரேயே உத்தாலக மஹரிஷி மீண்டும் நதிக்குச் சென்று இடுப்பளவு நீரில் நின்று தவம்புரியலானார். ஆனால் இறைவன் அவரை நெடுநேரம் சோதனை செய்ய விரும்பவில்லை போலும்! குறிப்பிட்ட ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப எண்ணிக்கை முடிந்ததும் உத்தாலகர் இருகைகளாலும் நதி நீரைத் தாங்கி அர்க்யம் வார்த்திட..... அவர் கையில் தொலைந்து போன கடுக்கன், பளபளவென்ற ஜோதியொளியுடன் பூரித்து நின்றது! உத்தாலகர் பேரானந்தமடைந்தார். பெற்றோர்களின் ஆசியோடு கடுக்கன்களை அவர் மீண்டும் அணிந்திட வருணபகவான் மற்றும் ஆயிரமாயிரம் தேவதைகளும் அவரை வாழ்த்தினர். கடுக்கன்களுக்குரித்தான “மகர குண்டல தேவதை“ உத்தாலகரின் முன்வந்து “ஸ்வாமி! காதில் கடுக்கன்களின்றித் தாங்கள் இருந்துவிட்டமையால் தங்களுடைய பூஜைகள் பரிபூர்ணமடையவில்லை. இதற்குத் தாங்கள் என்ன பரிஹாரம் செய்யப்போகின்றீர்கள்! உத்தாலகரே! பூணூலின்றியோ, மாங்கல்யமின்றியோ, கடுக்கன்களின்றியோ, மெட்டிகளின்றியோ, நெற்றித் திலகமின்றியோ ஆண்களோ, பெண்களோ ஒரு சிறிது நேரங்கூட இருத்தலாகாது! இவ்வாறு கடுக்கன் மஹிமையை உணர்த்திடவே, தங்கள் மூலமாக உலகிற்கு, குறிப்பாக, கலியுகத்திற்கு அளித்திடவே இச்சம்பவம் இறையருளால் நிறைவேறியுள்ளது. சிரவண நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தன்று கடுக்கன்களை ஏழைகட்கு தானமளித்தல் மிகச் சிறப்புடைய தானமாகும்! தாங்கள் கடுக்கன் அணிவதனின் மஹிமையை உலகெங்கும் பரப்புவீர்களாக! தங்கள் பிரசாரத்தால் எத்தனை மானுடர்கள் இதனை அணிகின்றார்களோ அந்த அளவிற்குப் பிராயச்சித்தமும் உத்தம பலன்களும் வந்து சேரும்“.
உத்தாலகர் பிரபஞ்சமெங்கும் பவனி வந்து கடுக்கன் அணிதலின் அருட்சக்தியைப் பரப்பலானார்.
கடுக்கனின் கற்கள்
நவரத்னங்கள், ஏனைய கற்களையும் அவரவர் பிறந்ததேதி, நட்சத்திரத்திற்கேற்ப அணிந்திட வேண்டும். சற்குருவே தேர்ந்தெடுப்பாராயின் அது மிகவும் உத்தமமானதாகும். அவரவர் பிறந்ததேதி எண், அல்லது கூட்டு எண்ணிற்கேற்பவும் கற்களைத் தேர்ந்தெடுத்திடலாம். பிறந்த தேதி எண் 11, 23, 30 என்றவாறாக 1+1, 2+3, 3+0 என்று பிறந்த தேதி எண்தனைக் கூட்டிட வேண்டும். பிறந்த தேதியுடன், மாத, வருட எண்களையும் கூட்டும் முறையும் உண்டு. உதாரணமாக கூட்டு எண்ணிக்கை = பிறந்த தேதி எண் + மாத எண் + வருட எண். 2-10-1887 எனில் 2+1+1+8+8+7 = 27 = 2+7 = 9 இவ்வாறாக
1. பிறந்த தேதி
2. பிறந்த தேதி + மாத + வருட எண் கூட்டு எண்ணிக்கை  இவ்விருமுறைகளில் ஏதேனும் ஒன்றைக் கடைபிடித்து 1 முதல் 9 க்குள் வருமாறு எண்ணைக் கூட்டி கணித்திடுக! இரண்டு முறைகளும் பலவிதத்தில் பயன்படுகின்றன. வீடு, வாகனம், திருமணப் பொருத்தம், அலுவலகம், வியாபாரம் போன்று எதில் எம்முறையை அனுசரிக்க வேண்டும் என்பதைத் தக்க வழிகாட்டியிடம் கேட்டுப் பயன் பெற்றிடுக!

எண்

நவரத்னங்கள்

கல்லின் நிறம்

1.

மாணிக்கம்

சிகப்பு

2.

Moon Stone

பொன்/தேன் கலர்

3.

மரகதம்

பச்சை

4.

பவளம்

சிகப்பு

5.

பச்சைநிறக்கல்

பச்சை

6.

மேகநீலக்கல்

நீலம் (வானநீலம்)

7.

கருஞ்சிவப்புக்கல்

சிவப்பு

8.

கருப்புநிறக்கல்

கருநீலம்

9.

பவளம்

சிகப்பு

சற்குருவைப் பெற்றிருந்தால் அவரே நட்சத்திர, ராசி, பிறந்த தேதி கொண்டு மட்டுமன்றி அவரவர் கர்மவினைப் பாங்கைனுக்கேற்ப கடுக்கனுக்குரிய ராசிக் கல்லைத் தேர்வு செய்திடுவார் என்பது குறிப்பிடத்தக்கது! கடுக்கன் அணிவதில் அளப்பரிய தெய்வீக சக்திகள் கிட்டுவதோடு பல லௌகீகமான பலன்களும் உண்டாகும் .
1. முக வசீகரம் உண்டாகவும், சினம், வக்ர, மூர்க போன்ற குணங்கள் தணிந்து அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மை உண்டாகும்.
2. பூஜா சக்திகள் பெருகும்.
3. வியாபார அபிவிருத்தி ஏற்படும்.
4. டெண்டர், கான்டிராக்ட், நேர்முகத் தேர்வு போன்றவற்றிற்கு கடுக்கன்களுடன் சென்றிட முறையான அதிர்ஷ்டம் ஏற்படும்.
5. கடுக்கன்களுடன் பித்ருத் தர்ப்பணங்களைச் செய்திட பித்ரு சாந்தி எளிதில் உண்டாகும்.
6. தீய சொற்கள், தீய பழக்கங்கள் மறையும்.
7. நல்லெண்ணங்களே உருவாகும். முறையற்ற காம, குரோத நினைவுகள்/எண்ணங்கள் நீங்கும்.
8. கிரிவலம், புண்ய நீராடல், தீர்த்த யாத்திரை போன்ற இறைப்பணிகள் பெருகும்.
பெண்களுக்கான மஞ்சள் பூசும் முறையில் விளக்கப்பட்டுள்ளது போல ஆண்களுக்கும் கடுக்கன்களின் நிறங்களுக்கேற்ப சில எளிய பூஜைகள் உண்டு. இவற்றைக் கடைபிடித்திடில் மிகமிக எளிதான முறையில் பூஜாபலன்களைப் பெற்றிடலாம்.

மாளய பட்சம்

மாளயபட்சம் என்பது புரட்டாசி அமாவாசைத் திதிக்கு முன் உள்ள ஒரு பட்ச (15நாட்கள்) பித்ரு பூஜை தினங்களாகும். நம் மூதாதையர்கள் எல்லோரும் பித்ருலோகத்தில் நன்னிலையில் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. மனிதனாக புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுத்திருக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கேற்ப, பிசாசு, பேய், போன்ற ஆவி ரூபப் பிறவிகளும் கொண்டிருக்கலாம். கோடானு கோடி விண்ணுலகக் கோளங்களில் எங்குமிருக்கக் கூடும் மக்களுக்குத் தொண்டாற்றி, சுயநலமின்றி, அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் பித்ருலோகம் போன்ற நல்லோகங்களை அடைந்து மீண்டும் அங்கு இறைசேவையைத் தொடர்கின்றனர். அங்கிருந்தவாறே பிரபஞ்சமெங்கும் பல பிறவிகளுடன் வாழும் தம் சந்த்தியினருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர்.
வினா: குருவே பட்சத்திற்கும் பித்ருக்களுக்கும் யாது தொடர்போ?
விடை : நம் மூதாதையர்கள், நல்லவர்களோ, தீயநெறி வயப்பட்டவர்களோ எவராயினும் சரி, பூலோகத்தில்தான் தம் பிறவிப் பிணிக்கு நிவர்த்தி காண வேண்டும். அனைவருக்கும் வசு, ருத்ர, ஆதித்ய ஆகிய முக்யமான மூன்று வகைப் பித்ருக்கள் உண்டு.  புரட்டாசி அமாவாசையுடன் முடியும் மாளயபட்சத்தில் சகலகோடி லோகங்களிலுமுள்ள அனைத்து ஜீவன்களும் மஹரிஷிகளும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து புண்யநதி தீரங்கள், தல விருட்சங்கள், தீர்த்தக்குளங்கள், கோயில்கள், புனிதமான சமுத்திரம் போன்ற இடங்களில் மாளயபட்சத்திற்குரிய பதினைந்து நாட்களுக்குத் தங்கி......
1. தாங்களும் அரிய பூஜைகளை நிறைவேற்றுவதோடு
2. தம் சந்ததியினருக்காகவும் பூஜா சக்தியினை அளிக்கின்றனர்.
3. தீவினைகளால் பேய், பிசாசு போன்ற ஆவி ரூபங்களில் அலையும் தம் வழி ஜீவன்களுக்கு நல்வழி காட்டுகின்றனர்.
4. அறியாமை/அசிரத்தை காரணமாக பித்ரு தர்ப்பணம்/ திவச பூஜைகளைச் செய்யாதோர்க்குப் பிராயச் சித்தம் தருகின்றனர்.
5. மிகவும் உயர்ந்த, தெய்வீக சக்திகள் நிரம்பிய வசு,ருத்ர, ஆதித்யப் பித்ரு தேவர்களே மாளயபட்சத்தில், பூலோகத்திற்கு வந்து பித்ருத் தர்ப்பணம் இடுகின்றனரென்றால் என்னே மாளயபட்சத்தின் மஹிமை!
6. பித்ரு தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையினால்தான் வியாதிகள், சந்ததியின்மை, விபத்துகள், இல்லத்தில் ஒன்றுமாற்றி ஒன்று ஏதேனும் துர்சம்பவம் நிகழ்தல், தம்பதியினரிடையே மனஸ்தாபங்கள், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற துன்பங்கள் அடிக்கடி உண்டாகின்றன.
7. புரட்டாசி அமாவாசையிலிருந்து சக்தி உபாஸனையாக, அம்பாளுக்குரித்தான நவராத்திரி பூஜை தொடங்குகின்றது. அதற்காக நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இத்தகைய தர்ப்பணம், ஹோமம், பூஜைகளை நிறைவேற்றிடுக.,இவ்வாறாகவே பித்ரு சாபங்களிலிருந்தும் ஏனைய தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கும் வண்ணம் ஆன்மீகப் பணியாற்ற வேண்டும்.
8. நம் மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வரை இயலாது, ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளயபட்ச நாட்கள் போன்ற நாட்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.
9. ஜாதி, இன, குல மத பேதமின்றி அனைவருக்கும் பித்ருக்கள் உண்டு. இது மட்டுமன்றி அனைத்து ஜீவன்களுக்கும் மூதாதையர் உண்டு. இவையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ளை இயலாத விஞ்ஞான அறிவிற்கெட்டா இறைவனின் சிருஷ்டி லீலைகள்!
தாத்ரு வருட மாளயபட்ச முக்கியத்துவம்
விபத்து, தற்கொலை, உறவினர்/நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல முறைகளில் மரணம் ஏற்படுவதுண்டு! ஏன், நம் தினசரி வாழ்க்கையில் எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள் , உணவு/தான்யத்திலுள்ள பொடிப்பொடி ஜீவன்கள், எறும்புகள் போன்ற பல உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோமே! நம் மூதாதையரே கொசுவாகப் பிற்ப்பெடுத்தால்! சற்றே சிந்தித்துப் பாருங்கள் அதன் விளைவுகளை! கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் வன்முறையாளர்களே கொடிய விஷக்கிருமிகளாகவும், ஜந்துக்களாகவும் பிறப்பெடுக்கின்றனர். எனவே விஷப்பாம்பு, தேள் போன்றவை நம்மைப் போல் மனிதர்களாக இருந்து கொடிய தீவினை புரிந்தவர்களே!
இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர்விட்ட ஜீவன்களில் குறித்த வகையினருக்காக இந்த தாது வருடத்தில் நிவாரணம் கிட்டுகின்றது. முறையாகப் பித்ரு தர்ப்பணங்களை நிறைவேற்றிடில்! குறிப்பாக தாத்ரு வருட ஆடி மாத இறுதி முதல் கிரஹ சஞ்சார மாறுதல்களினால் பல துன்பங்கள் ஏற்படுமாதலின் பல பூஜை முறைகளை நிறைவேற்றி இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள விசேஷமான அருள்வழிமுறையை சித்புருஷர்கள் அருளியுள்ளனர்.
தாத்ரு வருட மாளய பட்ச தாத்பரியம் என்னவெனில் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சகஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் உடல் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றோமே அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்! சுயநலமான நம்மளவில் நம் குடும்பங்களுக்காகச் செய்வதை விடுத்துப் பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்திட தாத்ருவருட மாளயபட்சம் உதவுகின்றது.
தர்ப்பண பூஜை
தர்ப்பண பூஜை என்றால் மலைத்து விடாதீர்கள். அவரவர் தாமே பித்ரு தர்ப்பணம் செய்யும் எளிய முறையை நம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் (உதாரணமாக பிப்ரவரி 1995, மார்ச் 1995, ஏப்ரல் 1995 etc) இதழ்களில் அவ்வப்போது அளித்து வருகின்றோம். அனைவரும் கடைபிடிக்கக்கூடிய மிக எளிய பூஜையே பித்ரு தர்ப்பணம் ஆகும். தக்க பெரியோர்களை நாடி தர்ப்பண முறைகளை அறிந்திடுக! அல்லது “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் தரப்படும் எளிய முறைகளைக் கடைபிடித்திடுக! “தர்ப்பணமா, எனக்குத் தெரியாதே, அதில் நம்பிக்கையில்லையே, வெறும் எள்ளும் தண்ணீரும் வார்த்து என்ன பயன்?” – என்று எண்ணி அறியாமையினால் ஒதுங்கிவிடாதீர்கள். இது உங்கள் குடும்பத்தாரை மூதாதையர்களுக்கு உயர்நிலைத் தரும்/நல்வழிப்படுத்தும் உத்தம பூஜை! உங்கள் குழந்தைகள் தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் நல் ஒழுக்கத்துடன் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு இத்தகைய பித்ரு பூஜைகளே பெரிதும் உதவுகின்றன.
மூதாதையர்களின் பெயர், நட்சத்திரம் பிறந்த திதி தெரியாவிடில் அவர்களின் நினைவுடன் தர்ப்பணமிடுங்கள்! செப்டம்பர் 1994, செப்டம்பர் 1995 இதழ்களில் மாளயபட்ச விளக்கங்களை அளித்துள்ளோம், படித்து உணர்ந்து கடைபிடித்துப் பித்ருக்களின் ஆசியைப் பெற்றிடுக!
27.9.1996 பிரதமை  க்ஷீர சுக்ல பர்ண தர்ப்பணம்
DNC எனப்படும் கருவைக் கலைத்தல் பல கொடிய, தீர்க்க இயலா கர்மவினைகளைத் தரும். எக்கருவைக் கலைத்தார்களோ அது மீண்டும் அதே தம்பதியினருக்குப் பிறக்கும் வரை பிறவிகள் தொடரும். தக்க சற்குருவே இதற்குரிய பிராயச்சித்தத்தை அளிக்கவல்லார். இன்று (27.9.1996) கருகலைக்கப்பட்ட பிண்டங்களுக்குத் தர்ப்பணமிடுக! மனம் வருந்தி உள்ளத்தால் அழுது பிராயச்சித்தம் தரும்படி கலைக்கப்பட்ட அக்கருவிற்குரிய ஜீவனை வேண்டி மனமுருகிப் பிரார்த்தித்து எள் ,நீருடன் தர்ப்பணமிடுக! தாத்ரு வருடத்தில் இத்தகைய ஓரளவான பிராயசித்தம் கிடைப்பதே அபூர்வமானது! இனிமேல் கருகலைக்கும் கொடிய வினையை மீண்டும் செய்திடாதீர்கள்! பிராயசித்தம்/மன்னிப்பு ஒரு முறையே! பிராயசித்தம் என்று கேட்கின்றோமே தவிர, இதன் பிறகு மக்கட் சேவை, இறைப்பணிகளைப் புரிந்தால் தான் நமக்கு உண்மையாக பிராயசித்தம் அளிக்கப்படும்! இங்கு கருகலைத்த ஜீவன்களுக்குத் தர்ப்பணத்துடன் ஏழைகளுக்கு சீம்பால், ரஸகுல்லா தானம் செய்திடுக! இதில் உள்ள பால்சத்து, கருகலைக்கப்பட்ட பிண்டங்களுக்கு உணவாக மாறி அவைகட்கு ஜீவன்களையை உண்டாக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! கருகலைக்கப்பட்ட ஜீவன்தான் இதற்குரிய பிராயச்சித்தத்தைத் தரவல்லது. பால் சத்துள்ள தானதர்மங்கள் இத்தகைய கருவிற்குப் ப்ரீதியாக அமைகிறது. இவற்றில் இன்னும் பல பிராயச்சித்த வழிமுறைகள் உண்டு. தக்க ஆன்மீக வழிகாட்டியை நாடிடுக.
28.9.1996 துவிதியை – வீர்ய சாப விமோசனத் தர்ப்பணம்
பல குடும்பங்களில் மாமியார்/நாத்தனார் உறவு பிரச்னைகள் நிறைய உண்டு. உறவினர்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், மன வருத்தங்களால் பல தோஷங்கள், சாபங்கள் உண்டாகின்றன. குறிப்பாக திருமணம் ஆகாத நாத்தனார் இறந்திருந்தால் அவருக்கு இன்று தர்ப்பணம் அளித்திடுக! அவர் உடல்வாகு ஒல்லியாக இருந்தால் முறுக்கு தானமும் பருமனாக இருந்தால் ஜவ்வரிசி வடாமும் தானம் செய்திடுக. முறுக்கில் உள்ள உளுந்து, சந்திரனுக்கு ப்ரீதியானது. மதிகாரகனான சந்திர பகவானே மன எண்ணங்களை சமநிலையாக்குகின்றார். ஜவ்வரிசிக்கு பூரிக்கும் தன்மை உள்ளமையால் அது உஷ்ணமான எண்ணங்களைத் தணிக்கும். இன்று அகத்திக் கீரைப் பொரியல் குழம்பு அன்னம் தானம் செய்திடுக!
29.9.1996 திரிதியை சபல ம்ருத்யு- சாந்தி சங்கல்ப தர்ப்பணம்
1, வயதான தாய், தந்தையரை அனாதையாக விடுத்து அவர்கள் மரணமடைந்திருப்பின்.,
2. வெளிநாட்டிற்குச் சென்று அங்கேயே வசதிகளுடன் தங்கி, இங்கு பெற்றோர்களைத் தவிக்க (என்ன செல்வ வசதியிருப்பினும்) விட்டு மனவருத்தங்களில் பெற்றோர் இறந்திருப்பின் அத்தகையோர்க்கு இன்று தர்ப்பணமிட அவர்கள் மனசாந்தி பெறுவர்! தானம், மிளகுப் பொங்கல் முந்திரியுடன்! மிளகின் குளுமையான தன்மை மனசாந்தியைப் பெற்றுத் தரும். பெற்றோர்களுக்கு இழைத்த அநீதிகளுக்குப் பிராயச்சித்தம் தரும் நாள்! தாத்ரு வருடத்தில் பெறற்கரிய தர்ப்பண நாள்!
30.9.1996 சதுர்த்தி வித்யா ப்ரேம தர்ப்பணம்
இன்று இறைநெறி பரப்பிய உபந்யாஸகர்கள், ஆன்மீகப் பிரசாரகர்களுக்குத் தர்ப்பணம்! உறவு முறை இல்லாதிருப்பினும் நாமறிந்த, இறைநெறி பரப்பிய அனைவருக்கும் தர்ப்பணம் அளித்திடலாம். முந்திரி மட்டும் கலந்த புளியோதரையன்னம் தானம், முந்திரிக்கு வேத மந்திரங்களை கிரஹிக்கும் சக்தி அதிகம். அளவான புளி, முறையான ரஜோ குணத்தைத் தந்து நற்காரியங்களை நடத்திட மனோவலிமையைத் தரும்.
1.10.1996 பஞ்சமி தான்ய வ்ரத தர்ப்பணம்
இன்று மனைவியால் துன்புறுத்தப்பட்டு, வருத்தத்தில் இறந்தோர்க்குத் தர்ப்பணம்! அகத்திகீரை, கத்திரிக்காய் கலந்த உணவுதானம்! கத்திரிக்காயின் ஆன்மீக குணங்களில் ஒன்று நீர்ச்சத்தைப் பெருக்குவது! அகத்திக்கீரை மனவலிமையைத் தரும். ஈவு இரக்கமின்றி வாழ்ந்திறந்தோர்க்கும் மனதில் ஈரம் கசியும் தன்மையையும், நல்ல சாத்வீக மனவலிமையையும் இத்தான தர்மங்கள் அளிக்கின்றன.
2.10.1996 சஷ்டி – பல சாந்தி தர்ப்பணம்
பல பெண் குழந்தைகள் பிறந்து ஒரு ஆணும் பிறந்து அவ்வாண்குழந்தை இறந்ததால் மனவருத்தமுறும் குடும்பங்கள் பல உண்டு! இது மிகவும் சங்கடமான நிலை. அவ்வாறு இறந்த ஆண்வர்க்கத்துக்கு இன்று தர்ப்பணம் எவர் வேண்டுமானாலும் அளித்திடலாம். இன்று மூன்று வகை இனிப்புகள் தானம்! முக்கூட்டு இனிப்பிற்கு சந்ததி விருத்தி தரக்கூடிய ஆன்மீக குணமுண்டு இதனால்தான் பாயஸத்தில் வெல்லம், கற்கண்டு, பால் ஆகிய மூன்று இனிப்புகளைச் சேர்ப்பர்.
3.10.1996 சப்தமி – குருகுத் தர்ப்பணம்
தீய நண்பர்களின் சேர்க்கை, தீயோழுக்கங்கள், கொடிய (பால்) நோய், தீயவர்களின் கொடுமை/ துன்புறுதல்கள் போன்ற காரணங்களால் இறந்தோர்க்கு இன்று தர்ப்பணமிடுக! பச்சைப் பயறு பாயாஸமே இன்றைய தானம்! பச்சைப் பயிறு புதனுக்குரிய தான்யம்! நல்ல புத்தியைத் தரும்.
4.10.1996 அஷ்டமி – பவித்ர வே(த)தித் தர்ப்பணம்
இன்று ஸ்ரீகிருஷ்ன்ன், பலராமன், சுபத்ரா – தேவ மூர்த்திகட்கு அர்க்யம் அளித்திடுக! குறிப்பாகத் திருக்கண்ணபுரத்தில் இன்று மூவருக்கும் அர்க்யம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். திருக்கண்ணபுரத்தில் இவற்றை நிறைவேற்றிடப் பூஜா சக்திகள் பன்மடங்காவதோடு ஸ்ரீகிருஷணனின் அருளும் கிட்டிடும். இன்று பாதாம் அல்வா தானம்! முந்திரியைப் போல் பாதாம்பருப்பிற்கும், மந்திர, வேத, யந்திர சக்திகளை கிரஹிக்கும் சக்தி அதிகம், கோதுமை சூர்யனுக்குரிய தான்யமாதலின், ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளை நன்கு கிரஹிக்கும். ஏழைகட்கு பாதாம் அல்வாவினை தானமளித்தலின் மூலம் மந்திரங்களைப் பற்றி அறியாத பாமரர்களுக்கும், இதன் மூலம் பூஜா சக்திகளை அளிக்கின்ற உத்தம சமுதாயப் பணி இறையருளால் நமக்குக் கிட்டுகின்றது. அரிய உணவுப் பண்டங்களைப் பலருடன் பகிர்ந்து உண்டு வாழ்ந்திடுக!
5.10.1996 நவமி – ப்ரபல மூலத் தர்ப்பணம்
இன்று நவகிரஹ ஹோமம்/பூஜை/அர்ச்சனை செய்து நம்முடன் பணிபுரிந்து இறந்த (colleagues) அலுவலகர்கட்குத் தர்ப்பணம்! இன்று தேங்காய் சாத தானம்! ஏதோ பூர்வ ஜன்மப் பிணைப்பினால் நாம் பலருடன் ஒன்றாகப் பணிபுரிகின்றோம். ஸ்ரீபரசுராமரால் பூலோகத்திற்கு வந்த தாவரமே தேங்காய் ஆகும்.! சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மப்பேடு சிவாலயத்தில் தான் ஸ்ரீபரசுராமர் பூலோகத்திற்கான முதல் தேங்காயை இறைவனுக்கு அர்ப்பணித்தார். எனவே இத்தலத்தில் இன்று இத்தர்ப்பணத்தைச் செய்தல் விசேஷமானது. மேலும் தன்னுடன் பல வருடங்களாகப் பணிபுரிந்த/பழகியவருடைய இறப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டோர், மப்பேடு சிவத்தலத்திற்கு வந்து தரிசித்து இறந்தவருக்கான தர்ப்பண பூஜைகளைச் செய்து அவருடைய பெயரில் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்திட மனத்துயரங்கள் நிவாரணம் பெறும். இறந்தவருக்கும் நன்னிலை கிட்டும். பித்ரு தர்ப்பண மந்திரங்கள், தேங்காய், தர்ப்பை போன்றவற்றைத் தேவலோகங்களிலிருந்து பூலோகத்திற்கு கொணர்ந்த பரசுராமர், பித்ரு சாந்தி ஹோமங்களில்/பூஜைகளில் தேங்காய்க்கு முக்யத்வம் தந்துள்ளமையால் இன்று தேங்காய் சாத தானம், பித்ரு ப்ரீதியைத் தரும். நவகிரகங்களும் தங்களுடைய ஆசிகளைப் பித்ருக்கள் மூலமாகவே அளிக்கின்றனர்.
6.10.1996 தசமி – ப்ரதான சம்ரட்சணத் தர்ப்பணம்
இன்று உயிரோடிருக்கும் – கன்று ஈனாத – பசுவிற்கும், விந்துத் திசுநாசம் பெற்ற (castrated) காளைக்கும் பட்டியின் நாமம் சொல்லி பூஜை செய்திடுக. அல்லது பட்டியின் நாமம் சொல்லி மேற்கண்ட வகையிலிருக்கும் இறந்த பசு, காளைக்குத் தர்ப்பணமும் செய்திடுக! நகரத்தில் உள்ளோர் இவைபற்றி அறிய வாய்ப்பில்லை. எனவே நகரத்து வாசிகள் மானஸீகமாக அத்தகைய பசு, காளையை எண்ணிப் பூஜையும் தர்ப்பணமும் செய்திடுக. ஆனால் அவற்றைத் தேடிப் பூஜை செய்வதால் உத்தமமான பலன் ஏற்படும். இன்று மல்லிகைப்பூ (பதம் உள்ள) இட்லியும் தேங்காய் சாதமும் தானமாகும் ஆனால் மல்லிகைப் பூவை இட்லியில் சேர்த்து விடாதீர்கள்! மனித சமுதாயம் தன்னுடைய தேவைக்காக இளங்காளை மாடுகளுக்கு விந்துத் திசுநாசம் (கொட்டையடித்தல் – castration ) என்ற முறையைப் பின்பற்றிக் காளைகளைச் சுமக்கும் பணியில் ஈடுபடுத்துகிறது! இது சரியானதா, இல்லையா என்பதற்கான ஆன்மீக விளக்கங்கள் பல உண்டு. அதை விவரித்திடில் மாளயபட்ச விளக்கங்கள் நீண்டு விடும். “நாம்தான் அத்தகைய வேதனையான செயலைச் செய்யவில்லையே” என்று எண்ணாதீர்கள். அத்தகைய காளைகள், வண்டியில் சுமந்து வந்த தான்யங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடைகள் போன்றவைதனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா! மென்மையான உணவு வகைகள், விந்தடிக்கும் வேதனைகளுக்கு ஓரளவு பிராயச்சித்தம் தருவதோடு அத்தகைய ஜீவன்களுக்கு மனசாந்தியைப் பித்ரு லோகம் மூலமாகத் தரும். பொதுவாக தேகத்தின் அமிர்தமான தாய்ப்பால்/விந்து இரண்டையும் வீணாக்குதல் பெரும்பாவமாகும். இரத்தினத்தின் திரட்சியே இவை! பத்து வகையான வாயுக்கள், (தசவாயுக்கள்) சேர்ந்தவையே நம் தேகம். பத்து வாயுக்களின் திரட்சியே தாய்ப் பாலுக்கு ஈடான பாலைத் தரும் பசுவைக் காப்பது மனித சமுதாயத்தின் தலையாய கடமை! எனவே தசமித் திதிகளில் (பத்தாவது திதி) விந்துக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தமாக தேங்காய் சாத தானம்! மல்லிகைப் பூ (பதத்தில்) இட்லி தானம் செய்திடுக! மல்லிகைப்பூ போன்று மென்மையான பதத்தில் செய்வதே மல்லிகைப்பூ இட்லி.
7.10.1996 பிசாச சாபல்ய நிவர்த்தித் தர்ப்பணம்
தற்கொலை, விபத்து போன்று அகாலமரணமடைந்தோர்க்கு, இன்று தர்ப்பணமிடுதல் விசேஷமானதாகும். தற்கொலை என்பது மிகவும் கொடிய கர்ம வினையாகும். ஆன்மீகத்திற்கு இது சற்றும் ஏற்புடையதல்ல! இறைவன் அளித்த பிரசாதமான அரிய அமிர்தமான இம்மானுட வாழ்வைத் தற்கொலை மூலம் முடித்திடில் இறைவனுடைய திருப்பிரசாதத்தை விட்டெறிதல் போல் அல்லவா ஆகும்! தற்கொலைக்கான பிராயசித்தமே கிடையாது. சற்குருவின் அருள் சந்ததியினர்க்குக் கிட்டினாலன்றி! தற்கொலை செய்து இறந்தோர்க்கு இன்று தர்ப்பணமிட்டு நெய்சாதம்தனை ஒரு சட்டியில்/வாழையிலையில் வைத்து, காட்டில்/இடுகாட்டில் வைத்து விட்டுத் திரும்பிப் பாராமல் வந்திடுக. “திரும்பிப் பாராமல்” என்றவுடன் பயந்து விடாதீர்கள்! இவ்வாறு சொல்வதற்குக் காரணம்! ஆர்வம் மிகுதியால் “என்ன நடக்கிறது?“ என்பதைப் பார்க்கும் ஆவலில் நாம் சற்றே திரும்பிப் பார்ப்போம். இது தர்ப்பணத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைத்து விடுவதால் தர்ப்பணத்தின் பலன்களும் கிடைக்காமற் போய்விடும். மேலும் ஒரு வேளை திரும்பிப் பார்த்திட, நாயோ, காக்கையோ நெய்சாதம் தனை உண்டிடில் உங்கள் மனமானது எதையெதையோ எண்ணி இருக்கின்ற நம்பிகையையும் குலைத்து விடும். நம் மூதாதையர் எந்த ரூபத்திலும் வந்து நாம் அளிப்பதை ஏற்பார்கள் என்பதைப் புரிந்து கொள்க! வாழை இலைக்கும் பசு நெய்க்கும் ஆன்மீக சக்திகளை தேகத்திற்குள் செலுத்தும் தெய்வீக சக்தியுண்டு. எனவேதான் பித்ருகாரியங்களில் வாழை இலை, பசு நெய் இரண்டும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன!
8.10.1996 திதி சங்கமம் சம்புநாத பாக்யத் தர்ப்பணம்
இன்று ஜீவசமாதி பூண்ட/சிவலோக, வைகுண்ட பதவிகொண்ட பீடாதிபதிகளுக்கு/பெரியோர்களுக்கு அர்க்யம் /தர்ப்பணம் அளித்திடுக. 60 வயது நிரம்பி இறந்த பெரியோர்களுக்கும் தர்ப்பணம் அளித்திடுக! காணாமல் போய் இறந்தோர்க்கும் இன்று தர்ப்பணமிடுக! இன்று இடியாப்ப தானம் சிறப்புடையதாம். இடியாப்ப உணவு எளிதில் ஜீரணமாகக் கூடியது. மனகிலேசங்களை சாந்தப்படுத்தும் தன்மை உடையது. வடஇந்தியாவில் வணிகர்களுடைய பித்ரு சிராத்தப் பூஜைகளில் இடியாப்பம் சிறப்பாக இடம் பெறுகிறது. சூன்யத் திதியில் பித்ருபூஜை செய்யும் பழக்கம் கிடையாது. ஆனால் திதி சங்கமம் பல விசேஷங்களைக் கொண்டதாகும். இரு திதிகளின் குணங்கள் சங்கமிக்கும் சங்கம திதிநாளில் இடியாப்ப தானம் சித்தர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
9.10.1996 – துவாதசி – கர்மநிவாரணத் தர்ப்பணம்
இன்று பூனை, கோழி போன்ற சாத்வீகப் பிராணிகளுக்குத் தர்ப்பணம்! சாத்வீகத்தின் ஆன்மீக இரகசியமென்னவெனில் இக்குணமே வன்முறையை, தீய சக்திகளை உண்மையாக எதிர்த்துப் போராடுகிறது! இன்று இனிப்பு சேவை தானம்.
10.10.1996 – திரயோதசி – பஞ்சபட்சித் தர்ப்பணம்
பறப்பன, நீர்வாழ்வன, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்குத் தர்ப்பணம், அதாவது மனித இனைத்தைத் தவிர ஏனைய அனைத்து ஜீவன்களுக்கும் இன்று சமுதாய சேவைத் தர்ப்பணம். இத்தர்ப்பணங்களின் சக்தியினை பஞ்சவர்ணக்கிளிகளே மேல் லோகங்களுக்கு எடுத்துச் செல்கின்றன என்பது ஓர் ஆன்மீக விந்தையாகும்.
11.10.1996 சதுர்த்தசி – பாப விமோசன தர்ப்பணம்
இன்று சப்தரிஷிகளுக்கும் அவர்களுடைய பத்னியர்க்கும் அர்க்யம் அளித்திட வேண்டும். பாவ நிவர்த்தி வேறு, பாபவிமோசனம் வேறு! செய்த பாவம் நீங்கிட சில விதப் பிராயச்சித்தங்கள மேற்கொண்டிடில் பாவநிவர்த்தி கிட்டும். ஆனால் பிராயச்சித்தத்திற்குப் பின்னும் அப்பாவத்தையே மீண்டும் செய்திடில் கர்மவினைகள் பல்கிப் பெருகும். பாபவிமோசனம் கிட்டினால் தான் பல்கிப் பெருகிய பாவங்கள் விமோசனம் பெற்றுத் தீரும். மஹரிஷிகள், சித்தர்கள் போன்ற இறைப் பெருநிலையை அடைந்தவர்களால் தான் பாபவிமோசனத்தைத் தர இயலும். அத்ரி, பிருகு, குத்ஸர், வஸிஷ்டர், காஸ்யபர், ஆங்கிரஸர், கௌதமர் ஆகிய ஏழு சப்தரிஷிகளுக்கும் பத்னியர்க்கும் இன்று அர்க்யம் அளித்திட வேண்டும். அர்க்யம் என்றால் சுத்தமான நீரை இரு கைகளிலும் ஏந்தி எழுந்து நின்று  ஸ்ரீஆங்கீரஸாய நம: (ஆங்கீரஸ மஹரிஷிக்கு வந்தனம்) என்றவாறு சொல்லி நீரைக் கிழக்கு அல்லது வடக்கு திசையில் கீழே விடுதல் ஆகும். அதாவது நம் பூஜா சக்தியை அந்தந்த மஹரிஷிக்கு நீரைத் தாரையாக வார்க்கின்றோம். இன்று ஆப்பமும், தேங்காய்ப்பாலும், தானமாகும். ஆப்பம் சாத்வீக குணங்களைத் தரும். தேங்காய்ப்பால் உடல், உள்ளத்திற்கு சாந்தத்தைத் தரும்.
12.10.1996 புரட்டாசி அமாவாசை நிர்மால்ய தர்ப்பணம்
அறிந்தோர், அறியாதோர் அனைவர்க்கும் மாபெரும் சமுதாய இறைப்பணியாக, அனைத்து ஜீவன்களுக்கும் தர்ப்பணம்! அரிய அபூர்வமான ஆறாவது அறிவை மனித குலம் பெற்றிருப்பதால் நாம் மாளய பட்சத்தின் மூலம், அறிந்துணர வேண்டிய வாழ்க்கைப் பாடம் என்னவெனில்
1. நாள்தோறும் மடிகின்ற கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு (புழு, பூச்சி, தாவரமுட்பட) அவற்றின் மரணத்திற்குப் பின்னான நல்வாழ்விற்காக ஜாதி, மதபேதமின்றி அனைவர்க்கும், அனைத்திற்கும் தர்ப்பண பூஜை அளிக்க வேண்டிய நியதி மனித குலத்திற்குண்டு!
2 நாம் உணவாக உண்டு செரித்த கீரை, காய்கறிகள் போன்றவற்றிற்கும் பலவாறாக ருசித்துச் சுவைத்த மீன், ஆடு, கோழி போன்ற உயிரினங்களுக்கும் நாம் தர்ப்பணம் அளித்தே ஆக வேண்டும்.
3. வைச்வ தேவம் என்ற நாம் தினசரி செய்ய வேண்டிய இரவு நேர ஹோமப் பூஜை ஒன்று உண்டு. இதைச் செய்பவர்கள் தற்போது அருகிவிட்டமையால் மாளய பட்சத்திலேனும் இதற்குப் பரிஹாரம் தேடிடுக!
4. பலகோடி நெல், கோதுமை, பருப்பு மளிகை, தான்ய, தாவரச் செடிகள் தங்களைத் (மனித குல உணவிற்காக) தியாகம் செய்வதால் தான் நாம் மூன்று வேளையும் உண்டு சுகமாக வாழ்கின்றோம் என்பதை மறந்து விடலாகாது. எனவே அவற்றின் ஆன்மீக வளர்ச்சிக்கு நாம், நம் வாழ்நாளில், நம் கடமையாக, இறையாணையாக, பித்ரு பூஜைகளை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும்.
5. மேற்கண்ட ஆன்மீக ரீதியான கடமைகளிலிருந்து நாம் தவறியதால்தான் ஆஸ்த்மா, கண் பார்வைக் குறைவு, பல்நோய், தோல்நோய்கள், ரத்த அழுத்த, இருதய நோய்கள், ஜுரம், சர்க்கரை நோய், மூல வியாதிகள், வயிற்றுப் போக்கு போன்று பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.
6. எனவே பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிஹாரம் தரும் மாளய பட்சத் தர்ப்பண, தான தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக! இது மிகச் சிறந்த சமுதாய இறைப்பணி!

திருச்சி மலைக்கோட்டை மகிமை

அனைத்து  ஹோமங்களிலும் சிவபெருமானுக்கு ஆஹுதி அளித்தே ஆக வேண்டும். சிவனுக்கு ஆஹுதி அளிக்காத யாகத்தினால் சாபம் வந்து சேரும். இத்தகைய தவறிழைத்தவர்கள் மீண்டும் அத்தவற்றைச் செய்ய மாட்டோம் என்று உறுதி மொழி பூண்டு இச்சிரமரத்தடி வீரபத்திர சுவாமியைத் தரிசிப்பதால் பிராயச்சித்தம் காண்பர்.
அரியும் சிவனும் ஒன்றே. அறியாமையால் சிவ துவேஷம், சிவநிந்தனை செய்தவர்களுக்கு மலைக்கோட்டை கிரிவலமும், இச்சிமர தரிசனமும் உன்னத பிராயச்சித்தமாக அமையும். கிரிவலத்தில் அடுத்து வருவது முத்தாளம்மன் திருக்கோயில், இங்கிருந்து உச்சிப்பிள்ளையாரின் எழில்மிகு தரிசனத்தைக் காண அது ‘சந்திர கதிர் வீச்சு’ தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.
பெண்களைத் தெய்வமாக மதிப்பீர்
வாதுனபுரீசன் என்ற ஓர் இளைஞன் நல்ல உடல் பலமுள்ளவன், மிகுந்த செல்வம் உடையவன், உயர் பதவி வகிப்பவன். உடல், பணம், பதவி என்ற நிலையற்ற இந்த ஆணவத்தால் மிகவும் செருகுக்குற்று அனைவருக்கும் மிகுந்த துன்பம் அளித்தான். தன் தாயையும், தமக்கைகளையும், சிற்றன்னையையும், மனைவியையும், பிற பெண்களையும் மிகவும் துன்புறுத்தினான். சிறிது காலம் சென்றதும் அவனுக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்பட்டுச் சொல்லொணா வேதனை அடைந்தான். இதற்கு நிவாரணம் வேண்டிப் பல இடங்களில் அலைந்து திரிந்தான். பூர்வீக புண்ணியத்தால் திருச்சி மலைக்கோட்டையில் முத்கல முனி வரை சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அவரிடம் தான் இழைத்த தவறுகளையும் தற்போதைய நிலையையும் சொல்லி அழுதான். முனிவர் அவன்மேல் பரிதாபப்பட்டு மனமிரங்கி மலைக்கோட்டை தாயுமான ஈசனை, காலை, மதியம், மாலை மூன்று வேளையும் வலம் வந்து தற்போது முத்தாளம்மன் கோயில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து தாயுமான ஈசனை தரிசிக்கும்படி அருளினார். முனிவரின் அருளுரையின்படி வாதுனபுரீசன் தாயுமானவரை வலம் வந்து வணங்கி சந்திர கதிர் வீச்சு தாயுமான லிங்க தரிசனம் பெற்றுத் தன்னுடைய நோய் நீங்கப் பெற்று சுகமடைந்தான். அன்றிலிருந்து திருந்தி வாழ்ந்தான்.
சந்திர கதிர் வீச்சு தாயுமான லிங்க தரிசன மகிமை

சந்திர கதிர் வீச்சு
தாயுமான லிங்க தரிசனம்

தினமும் காலை, மதியம், மாலை உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து வணங்கி இத்தரிசனத்தைப் பெற்று வந்திடில்....
1. நரம்புத் தளர்ச்சி நோய்கள் நீங்கும்.
2. தாய், சிற்றன்னை, சகோதர, சகோதரிகளையும் , பிற பெண்களையும் துன்புறுத்தியதால் ஏற்பட்ட சாபம் நீங்கும். தரிசனம் செய்வது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்து அவர்களுக்கு மனசாந்தி அளிக்க வேண்டும்.
3. மனைவியை இம்சித்தல், பிறன்மனை நோக்குதல் போன்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தம் கிட்டும். ஆனால் மீண்டும் அவர்கள் அந்த தவறினைச் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும், திருந்தி வாழ வேண்டும்.

பேதவித தாயுமான லிங்க
தரிசனம் மலைக்கோட்டை

கிரிவலத்தில் அடுத்து வருவது ஒன்றாம்படி முத்துக் கருப்பண்ண சுவாமி கோயில், இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது பேதவித தாயுமான லிங்கமுக தரிசனம் ஆகும்.
பேதவித தாயுமான லிங்கமுக தரிசன மகிமை
தரம்பாடி காலதர்மன் என்ற சிற்றரசன் பலவிதப் போர்களில் கலந்து கொண்டு விழுப்புண்களைப் பெற்று வீரவாகை சூடி தன் மக்களைக் காப்பதற்காக அரசாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுடைய குழந்தைக்கு புத்தி சுவாதீனம் இல்லாமலிருந்தது, எந்த வித வைத்தியங்களும், மந்திர தந்திரங்களும் பலனளிக்கவில்லை., பல இடங்களுக்குச் சென்று தன் குழந்தையை குணமாக்க முயன்றான். ஆண்டவனருளால் திருச்சி அருகே குளித்தலை என்ற இடத்தில் தியாகானந்த சுவாமிகளைச் சந்தித்து அவரிடம் தன் குறையைச் சொல்லி மன்றாடினான். நீதிநெறி தவறாத காலதர்மனின் மனக்குறையைத் தீர்க்க முன் வந்தார் சுவாமிகள். மலைக்கோட்டைத் தாயுமான ஈசனை காலை, மதியம், மாலை வலம் வந்து பேதவித தாயுமான லிங்கமுக தரிசனம் பெறுமாறு பணித்தார். மன்னனும் சுவாமிகளின் ஆணையை ஏற்றுத் தாயுமான ஈசனை வலம் வந்து வணங்கி வர, குழந்தை தெளிந்த அறிவைப் பெறும் பேறு பெற்றான். எனவே தினமும் மூன்றுமுறை காலை, மதியம், மாலை தாயுமானவரை கிரிவலம் வந்து பேதவிதலிங்க முக தரிசனம் பெற்று, ஒன்றாம்படி கருப்பண்ண சுவாமி கோயிலில் குழந்தையை அமர்த்தி இறைவனிடம் மன்றாடி வேண்டினால்
1. புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகள் பூரண அறிவைப்  பெறுவார்கள்.
2. படிப்பில் மந்தமான குழந்தைகள் அறிவு தெளியைப் பெற்று நல்ல தேர்ச்சி அடைவார்கள்.
3. சொல்/பேச்சு கேட்காமல், நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அல்லல்படும் சிறுவர்கள் திருந்துவதற்கு இந்த தரிசனம் உறுதுணை செய்யும்.
4. நிலையில்லாத மனமுடையவர்கள் தொடர்ந்து மலைக்கோட்டையை கிரிவலம் வருவதால் திடமான மனவளர்ச்சியைப் பெற்று தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.

திருஅண்ணாமலை கிரிவல மகிமை

செவ்வாய்க் கிழமைக் கிரிவலம் வருதலின் மஹிமை
பிறவிப் பிணி தீருவதற்கும், இறையருளைப் பெறுவதற்கும் குருவருளே இன்றியமையாததாகும். இதற்கு ஆன்மீக வழிகாட்டியான சற்குருவை நம் வாழ்நாளில் பெற்றாக வேண்டும். சற்குருவைப் பெறுவது எவ்வாறு? அவர்தாமாகவே வந்து நம்மை அரவணைப்பாரா? அன்றி நாமே அவரைத் தேடிச் செல்ல வேண்டுமா? எனக்குரிய சற்குரு யார் இதுவே அனைவர் உள்ளத்திலும் எழும் வினாக்களாம். உண்மையிலேயே உங்களுக்கு தெய்வீகத்தில் பரிபூரணமான ஈடுபாடிருந்தால் செவ்வாய்க்கிழமையன்று குறித்த நேர, யோக, லக்ன, ஹோரை நேரங்களில், “ஸ்ரீஅருணாசலேஸ்வரா! எனக்குரிய சற்குருவைத் தந்தருள்வாயாக என்று உள்ளமுருக வேண்டிடுக! அண்ணாமலையின் சிறப்பு அம்சம் என்னவெனில் ஸ்ரீஅண்ணாமலையாரே  சற்குருவாய் நின்று பல விதத் தீட்சைகளை அளிக்கின்றார். சற்குருவை நாடுவோர்க்கு, உள்ளன்புடன் தேடுவோர்க்கு தக்க பெரியோரை சற்குருவாய் அனுப்புகின்றார். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை வேரூன்றி நின்றால்தான் சற்குருவின் மஹிமை புரியும். ஒரு முறை செவ்வாய் பகவான், முருக பெருமானிடம் “சுவாமி! கேட்டை மூட்டை என்றும், செவ்வாயோ வெறும் வாயோ என்றும் பேசி பூலோகத்தில் அடியேனை ஒதுக்கி விடுகின்றனர். மங்கள வாரம் என்ற பெயர் தங்களால் எனக்கு அளிக்கப்பட்டதல்லவா? எனவே, மற்ற நாட்களைப் போல் செவ்வாய்க் கிழமையாகிய எனக்குரித்தான நாளும் நன்மதிப்பைப் பெறத் தாங்கள் தான் கருணை புரிதல் வேண்டும்“ என்று ஸ்ரீமுருக பெருமானை நாடி வேண்டினார். முருகவேளோ, “செவ்வாய் கிரஹாதி பதியே! தாங்கள் தினமும் திருஅருணாசலத்தை வலம் வந்து இதற்கான விளக்கங்களைப் பெறுவீராக! உவப்பான பக்தியுடன் நாள் முழுதும் அருணாசல சிவ என்ற திருமந்திரத்தை ஓதுதல், தான தருமங்களுடன் ஸ்ரீஅருணாசல தரிசனத்தைப் பெறுதல் இவ்விரண்டுமே ஸ்ரீஅண்ணாமலையாரின் அருட்காட்சத்தைப் பெறவல்லதாம்.“ என்று அருளினார். இதன் பின்னர் செவ்வாய் பகவான், ஸ்ரீகுருகுஹநாதனாம் முருகனின் அருளுரையின் படி, பலயுகங்களுக்குத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பல அற்புத வரங்களை நமக்குப் பெற்றுத் தந்துள்ளார். இதன் பயனாகவே இராகு கால பூஜை உண்டாயிற்று. ஏனைய நாட்களில் இராகுகால பூஜையை விட, செவ்வாய்க் கிழமை இராகு கால பூஜைக்கு அற்புதச் சிறப்பிடம் உண்டு.
குருவைத் தேடு
செவ்வாய்க் கிழமை கிரிவலமானது சற்குருவைத் தேடுவோர்க்கு அரிய வரப்பிரசாதம் ஆகும். ஆனால் கலியுகத்தில் சற்குரு அருகில் இருந்தால் கூட, மாயைகளின் விளைவுகளால் அவரை நாம் புரிந்து கொள்ள இயலா நிலையில் உள்ளோம். காரணம், சற்குரு என்றால், ஜடாமுடி, கமண்டலம், காவியுடை, ருத்திராட்சம், கமண்டலம், காவியுடை,  ருத்திராட்சம், திருபுண்ட்ரம் என்றவாறாக நாமே அவருடைய உருவத்தை எடை போட்டு வைத்துள்ளோம். ஆனால், கலியுகச் சூழ்நிலைகளுக்கேற்ப சற்குருவானவர் எந்த உருவத்திலும், எப்படி வேண்டுமாயினும், நம்மை அரவணைத்திடலாம். நம்முடனேயே, நம்மைப் போலவே வாழ்ந்து அலுவலகம் சென்று குடும்பஸ்தராக வாழ்ந்து பேண்ட், ஷு, தொப்பி சகிதங்களுடன் தோன்றி எவ்வுருவத்தில் வேண்டுமாயினும் வந்திடலாம். ஆழ்ந்த, அசைக்க முடியாத குருநம்பிக்கையே சற்குருவைக் காட்டிடும். சற்குருவைப் பெற்றவுடன் கூட பலவிதமான சோதனைகள் தொடரும். எனவே சற்குருவைப் பெறுவது எளிதன்று! கிட்டினும் அவருடன் இணைந்து வாழ்தலில் பலவித சோதனைகள் தொடரும். அனைத்தும் நம் நல்வாழ்விற்காகவே, நாம் கடைத்தேறவே! சற்குருவை நாடி, செவ்வாய்க் கிழமைகளில் அருணாசலத்தைக் கிரிவலம் வந்திடில் ஸ்ரீஅருணாசலப் பெருமானே, பலவிதமான அருள் தீட்சைகளை அளிக்கின்றார். அருள் தீட்சை, ஸ்பர்ச தீட்சை, மானஸ தீட்சை என்று தீட்சைகள் பலவகைப்படும். தீட்சை என்றால் தொட்டு உணர்த்துதல் என்று பொருள். பலவிதமான தீட்சைகளின் மூலமாகத்தான் சற்குருவின் அருள் கனிவுறும்.
நயன தீட்சை
செவ்வாய்க்கிழமையன்று ராகுகாலத்தில் திருஅண்ணாமலைக் கிரிவலத்தில் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்திற்கருகே பவளக்குன்றோடு ஸ்ரீஅண்ணாமலையைத் தரிசிப்பதற்கு நயனதீட்சைத் தரிசனம் என்று பெயர். அதாவது, இராகுகாலத்தில் (செவ்வாய் 3 to 4. Pm ) இத்தரிசனத்தைப் பெறுமாறு கிரிவலத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும். ஆன்மீக பலா பலன்களாக செவ்வாய் – இராகு கால கிரிவலத்தை மேற்கொள்வோருக்கு ஸ்ரீஅண்ணாமலையாரின் நயன தீட்சை கிட்டும். லௌகீகமான காரியத் தடங்கல்கள் தீரும். பூச்சிகளால் பாதிக்கப்படும் பயிர்கள் பாதுகாக்கப்படும். காய்கறிகளின் விளைச்சல் பெருகும். நயன தீட்சை சற்குருவின் திருவருளை உணர்த்தும். இதன் மூலமே சற்குருவை நாம் காணமுடியும்.
ஸ்பரிஸ தீட்சை :-
ஏற்கனவே கூறியுள்ளபடி சற்குருவானவர் தன்னை சற்குருவென காட்டிக் கொள்ளாது நம்முடனேயே ஒன்றுமறியாதவர் போல் வாழ்ந்து நயனதீட்சை, ஸ்பர்ஸ தீட்சை போன்றவற்றின் மூலம் பலவிதமான தெய்வீக சக்திகளை நம் தேகத்திற்கு அளிக்கின்றார். நாம் சுயநலமாக வாழ்ந்து “அது வேண்டும், இது வேண்டும்“ என்று நமக்காக வாழ்ந்தால் இத்தகைய தீட்சைகளின் பரிபூர்ண பலன்கள் நமக்குக் கிட்டாமற் போய்விடும்.

அடிமை கண்ட ஆனந்தம்

அடிமை கண்ட ஆனந்தம்
ஒருநாள்... நம் குருமங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகள் (சிறுவயதில்) தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடன் சென்னை இராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அமர்ந்திருந்த போது நடுத்தர வயதுள்ள ஒருவர் –குடுமி, கடுக்கன், பஞ்சகச்ச உடை, விபூதி, சந்தனம், குங்குமத்துடன் அம்பிகையை வலம் வந்து, பை நிறைய உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்து ஏழைகளுக்கு அளித்து “அம்மா! என் மகள் SSLC ல் பாஸாக அருள்புரியணும், தாயே!” என்று அழுது பிரார்த்திட்டுச் சென்றார். சிறுவன் இதைக் கண்டு பெரியவரைப் பார்க்க..... அவரோ நிர்ச்சலனமாய் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறுவனுக்குப் பொறுமையில்லை! “என்ன வாத்யாரே! நல்ல காரியம் தானே!” பெரியவர் தலையாட்டினார். “இந்த மாதிரி எல்லாரும் பண்ணினா யாருக்கும் பெயிலாடுவோம்னு பயம் வராது இல்லையா!”
பெரியவர் வேகமாகத் தலையாட்டினார்.“என்ன இது! ஒரு சின்ன கேள்வி கேட்டால், மணிக் கணக்கா பதில் சொல்வாரு! இன்னிக்கு என்னமோ வாய்க்குப் பூட்டுப் போட்ட மாதிரி கம்முனு இருக்காரு! ஒரு வேளை அவர் பேசி நமக்குத்தான் காதில் விழவில்லையா!” – என்று சிறுவன் எண்ணிய உடனேயே, பெரியவர் நமுட்டுச் சிரிப்புடன் இதற்கும் தலையாட்டினார். இதன் பிறகு சிறுவன் குறைந்த பட்சம், பத்துக் கேள்விகளையாவது வந்து சென்றவரைப் பற்றிக் கேட்டிருப்பான், ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரே சிம்பிளான பதில் “தலையாட்டுத்” தான்! சிறுவன் கேட்டு அலுத்துப் போய் பள்ளிக்குச் செல்ல எழுந்தான். பெரியவரும் எழுந்து விட்டார்.
 “என்னடா பண்றது, அங்காளி அம்பாள் இந்த ஆசாமிக்குன்னு அண்டா அண்டாவா அமிர்தம் செஞ்சு வச்சுருக்கா! திகட்டாத அமிர்தம்! ஆனா என்னபண்றது? வந்தவன் இத்துனூண்டு ஸ்பூனை மட்டும் எடுத்துக்கிட்டு வந்து அதுல நாலஞ்சு துளிய மட்டும் வாங்கிக்கிட்டுப் போறானேன்னு வருத்தமாயிருக்கு.! ”
கூடுதல் பூஜைகள் அவசியமே!
சென்ற மாத (ஆகஸ்ட் 1996) ஸ்ரீஅகஸ்திய விஜயம் இணைப்பில் தாத்ரு வருட ஆடி மாத இறுதியிலிருந்து  ஏற்படும் கிரஹ சஞ்சார மாறுதல்களினால் உண்டாகவிருக்கும் துன்பங்களிலிருந்து மக்களையும் ஏனைய ஜீவன்களையும் கார்ப்பதற்கென 4.8.1996லிருந்து தினசரி செய்ய வேண்டிய கூடுதல் பூஜைகளைப் பற்றி விளக்கியிருந்தோம். “தினமும் பத்துமுறை சஹஸ்ரநாமமா? 10x1000= 10000 இறைநாமங்களா ?” என்று மலைத்திட வேண்டாம். நம் குடும்பத்தில் நாலைந்து பேர்களுடன் சேர்ந்தோ அல்லது நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, குறைந்து பத்து நபர்கள் ஒன்றாக, சத்சங்கமாய் அமர்ந்து, ஒரு முறை சஹஸ்ரநாமம் ஓதினாற் கூட 10x1000 = 10000 இறைத் துதிகளை எளிதில் கால் மணி நேரத்திற்குள் ஓதிடலாமே! ஜாதி, குல பேதமின்றி அமையும் கூட்டு வழிபாடே தெய்வீக மகத்வம் வாய்ந்தது, மிகுந்த சக்தியுடையது., அளப்பரிய பலன்களையும் பெற்றுத் தரும். எனவே கீழ்க்கண்ட முறையில் பலர் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடாகவும், சத்சங்கப் பூஜைகளை மேற்கொண்டு சிறந்த சமுதாய இறைப்பணியாக, மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக சங்கல்பம் செய்து கொண்டு பூஜைகளை நிறைவேற்றிப் பயனுள்ள அறவாழ்வுதனைக் கொண்டிட வேண்டுகிறோம்.

13.9.1996

ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம்/(*அருட்பெரும் ஜோதி அஷ்டகம்.

14.9.1996

ஸ்ரீஹனுமான் ஸஹஸ்ரநாமம் / அருட்பெரும் ஜோதி அகவல்*

15.9.1996

ஆதித்ய ஹிருதய பாராயணம்/ திருவடிப் புகழ்ச்சி*

16.9.1996

ஸ்ரீநரசிம்ம ஹோமம்/ சித் சக்தி வணக்கம்.*

17.9.1996

ஸ்ரீசுப்ரமண்ய ஹோமம்/ சற்குரு வணக்கம்*

18.9.1996

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்/ திருத்தவத் திறம்*

19.9.1996

ஸ்ரீகணபதி ஸஹஸ்ரநாமம் /நக்கீரரின் - விநாயகர் திருஅகவல்.

20.9.1996

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்/ நடராஜப் பதிமாலை *

21.9.1996

ஸ்ரீசனீஸ்வர ஹோமம் / திருவைப்புக் காட்சி *

22.9.1996

ஸ்ரீஆதித்ய ஹ்ருதய பாராயணம்/ திருவடிப் புகழ்ச்சி*

23.9.1996

ஸ்ரீகிருஷ்ண ஹோமம்/ பரசிவ நிலை வணக்கம்*

24.9.1996

ஸ்ரீநவக்ரஹ ஹோமம் / மஹாதேவ மாலை *

25.9.1996

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்/ திருத்தவத்திறம்*

26.9.1996

ஸ்ரீகணபதி ஹோமம்/ விநாயகர் அகவல் (அவ்வையார்)

27.9.1996

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் / அருட்பெரும் ஜோதி அஷ்டகம்*

28.9.1996

ஸ்ரீசனீஸ்வர ஹோமம்/ திருவைப்புக் காட்சி *

29.9.1996

சூர்ய கவசம் – ஹோமம் / திருஇரட்டை மணிமாலை (காரைக்கால் அம்மையார்)

30.9.1996

ஸ்ரீகணபதி சஹஸ்ரநாமம்/ விநாயக கவசம்.

(*)இக்குறியிட்டவைதனை வள்ளலாரின் திருஅருட்பாவில் காணலாம்.

1. சஹஸ்ரநாமமாயின் குறைந்தது 10 முறை பாராயணம் செய்திடுக. ஹோமம் அறியாதோர் சகஸ்ரநாம பாராயணம் செய்திடுக.
2. ஹோமமெனில் ஒவ்வொருவருக்கும் ஆஹுதி அளிக்க வாய்ப்பு தந்து குறைந்தது 108 ஆஹுதிகள் அளித்திடுக! எளிமையான முறையில் பசுநெய், சமித்துக்களை வைத்து மட்டும் ஹோமம் செய்திடலாம். பழம், பால் என இயன்றளவு எளிமையான நைவேத்யம் போதுமானது.
3. மக்களின் துன்பங்களை நிவர்த்தி செய்திட அந்தந்த பூஜையின் பலாபலன்கள் பாதிக்கப்பட்டோருக்குச் சென்றடைய பூஜை/ஹோமத்தின் முன்னும் பின்னும் ஸங்கல்பம் செய்திடுக!
4. வடமொழி அல்லது குறித்த தமிழ் மறைகளை ஓதிடலாம்.
5. நாமே நமக்கென, நம் குடும்பத்திற்கென வாழாது, பிறருடைய நல்வாழ்விற்காக சேவை செய்யும் சிறந்த இறைமனப் பான்மையைப் பெற்று வாழ்வதே நாம் பிறப்பெடுத்ததின் நோக்கமாகும். இத்தகைய தியாக வாழ்வுதான் பரிபூர்ண இறைதரிசனத்தைப் பெற்றுத் தரும்.
ஸ்ரீவிநாயகர் மஹிமை
அட்டைப்படத்தில் : ஸ்ரீலாப நிர்ணய விநாயகர் வியாபார அபிவிருத்தியை நல்குபவர்
ஒவ்வொருவர் வீட்டிலும் பூஜை அறையில் ஒரு சிறு பிள்ளையார் நிச்சயம் குடியிருப்பார். விநாயக சதுர்த்தியன்று துவங்கி அந்தந்தப் பிள்ளையாருக்குரிய பூஜையினை நிகழ்த்தி பரிபூர்ணமான பலன்களை அடைய வேண்டுகிறோம்.
1. வெள்ளெருக்கு விநாயகர் – புனுகு சட்டம் சார்த்தி முறையாக வழிபட செல்வச் செழிப்பு கிட்டும்.
2. பாதரச விநாயகர் – உத்தியோக உயர்வு வரும். வெள்ளிப் பாத்திரத்தில் பாலில் அமிழ்ந்து பூஜித்தல் வேண்டும். பசும்பால் தானம்.
3. களிமண் விநாயகர் – சகல காரியசித்தி தரும். ஆனால் பூஜைக்குப் பின் பூஜை தினத்திலிருந்து ஒற்றைப் படநாளில் கடலில்/ நதியில் இட்டிட வேண்டும்.
4. சுதை விநாயகர் – வேதனைகள் தீரும், எலுமிச்சம்பழ சாத தானத்துடன் பூஜையை நிறைவேற்றிடுக.
5. கருங்கல் விநாயகர் – சுப காரியங்கள் நிறைவேறும். தினமும் பால் அபிஷேகம் மூன்று வேளையும் தேவை, மாலையில் பிடிகொழுக்கட்டை தானம்.
6. மாக்கல் விநாயகர் – வழிபடலாம். ஆனால் முறைகளைக் குருவிடம் கேட்டறிக.
7. வெள்ளி விநாயகர் – வழிபடலாம். குறைந்தது 100 கிராம், எடையில் இருக்க வேண்டும். பால் அபிஷேகம் செய்து குரு தந்த மந்திரத்தால் பூஜை – பாயாச தானம். சிறந்த கார்ய சித்தி தரும் உத்தம பூஜை.
8. தங்க விநாயகர் – மிகவும் சிறப்புடையது. தங்கத்தின் தங்கத்தின் பங்கு அதிகமிருத்தல் நலம். தினம் வில்வ நீரால் அபிஷேகித்துப் பருகிடுக. வாக்கு சித்தி ஏற்படும். சர்க்கரைப் பொங்கல் தானம்.
9. ஸ்படிக வினாயகர் – வாக்கு சித்தியுடன் சத்யாம்சம்ங்களும் ஏற்படும். தினமும் பழச்சாறு அபிஷேகம், பழங்கள் தானம்.
10. மரகத விநாயகர் – வெற்றியைத் தருவார், தினமும் பால் அபிஷேகம், முந்திரி கலந்த அன்னம் தானம்.
11. மாணிக்க விநாயகர் – வாகன விருத்தியைத் தருவார், தினமும், பஞ்சாமிர்த அபிஷேகம், தக்காளி சாதம் தானம்.
12. பவள விநாயகர் - ஆபத்தை விலக்குவார். தினமும் பன்னீரால் அபிஷேகம் – பூரி, சப்பாத்தி தானம் தினமும்.
13. தங்கத்தில் வைரம் பதித்த விநாயகர் – மந்திரம் தனியாக உண்டு. குருவை நாடிடுக,. ஜனவசியத்தைத் தரும் பூஜை. புளியோதரை தானம்.
14. சந்தன விநாயகர் – வெளியூர்/அயல் நாட்டு வியாபாரத்தைப் பெருக்குவார். மாதம் ஒரு கோயிலுக்கு 1 கிலோ சந்தனக்காப்பு இடுதல் அவசியம் – தனி மந்திரம் உண்டு குருவை நாடுக. சாம்பார் சாதம் தினமும் தானம்.
15. வில்வ வினாயகர் – மனோ வைராக்கியத்தை வளர்ப்பார். முறையற்ற காமம், பிறன்மனை நாடுதலை அழித்து உறுதியான உள்ளத்தைத் தருவார். தனி மந்திரம் உண்டு. குருவை நாடி பூஜை முறைகளை அறிக. தேங்காய் சாதம் தானம் தினமும்.
16. செப்பு விநாயகர் : செம்பருத்தி பூவால் அர்ச்சனை, இதற்குரித்தான மந்திரத்தை குருவிடம் பெற்றிடுக. பிரசாதமாக இப்பூவை உண்ண வேண்டும். பதார்த்தத்துடன் மிளகுபொடி சாதம் தானம். கணித ஞானம் உண்டாகும்.
17. பஞ்சலோக விநாயகர் – தனி மந்திரம் அறிய குருவை நாடுக. பஞ்சகவ்ய அபிஷேகம்- ஐந்துவித காய்கறிகள் கூட்டிய சாம்பார் சாத தானம் தினமும் செய்திடுக. நோய் நிவாரணம்.
18. பிள்ளையார் படம் : 32 வகை பூஜை முறைகள் உண்டு. தனி மந்திரங்களை குருவிடமே பெற வேண்டும். அருகம்புல் சாற்றி பூர்ணக் கொழுக்கட்டை தானம் தினமும் செய்திடுக. குடும்ப/அலுவலகப் பிரச்னைகள் தீர்ந்து மனஅமைதி உண்டாகும்.
சித்தர்கள் அளிக்கும் எளிய விநாயக பூஜை முறைகள் பல உண்டு.

கம்ப்யூட்டர் வைரஸுக்கு ஆன்மீகத் தீர்வு :- கம்ப்யூட்டர் துறையில் இருப்போர், virus போன்ற பிரச்னைகளால், பல துன்பங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர் துறைக்கான சரஸ்வதியின் பெயர் “ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி” ஆகும். பொறியியல் துறை, கணிதம், தாவர இயல், சட்டம், மருத்துவம் என்று ஒவ்வொரு துறைக்கும் உரித்தான சரஸ்வதி தேவி உண்டு ! இதனைத் தக்க சற்குரு மூலம் அறிந்து முறையான வழிபாடுகளை மேற்கொண்டு அந்தந்தத் துறைக்கான ஸ்ரீசரஸ்வதி தேவியின் நாமத்தையறிந்து, பூஜா விளக்கங்களைக் கடைபிடித்து சிறப்பான வாழ்வைப் பெறுவோமாக!
கம்ப்யூட்டர் கருவியானது கண்ஒளியை முக்கியத்துவமாக வைத்துக் கொண்டு செயல்படுகின்றது. Output எனப்படும் கம்ப்யூட்டரின் நிறைவுப் பகுதி முற்றிலுமாக ஒளிச் சார்புடையதாகும். Monitor,  ஒளி வடிவில்  output ஐப் பெற கண்ணொளி கொண்டுதானே அனைத்துக் கம்ப்யூட்டர் நிர்வாகமும் இயங்குகின்றது.  ஆயிரமாயிரம் சூர்ய லோகங்களில் Monitor க்கான புதியவகை ஒளியானது ஆறாவது சூரிய லோகமான க்ரமண சூர்ய லோகத்திலிருந்து பெறப்படுகின்றன. சந்தனத்தைப் பூலோகத்திற்குக் கொணர்ந்த தாது மஹரிஷி, கந்த மஹரிஷி போன்றோர் க்ரமண சூர்ய லோகத்திலிருந்து தோன்றியவர்களே! எனவேதான் நுணுக்கமான கண்பார்வை தேவையான கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிவோர், “வலிய சந்தனாதி தைலம்“ என்ற ஆயுர்வேதத் தைலத்தை தினமும் தலையில் தடவி சற்று ஊறி நீராடி வந்தால், உஷ்ணம் தணிந்து கண்ணொளி பாதுகாக்கப்படும்! சூர்ய சஷ்டி தினத்தன்று ஆறாவது சூர்ய லோகமான க்ரமண சூர்ய லோகத்தில் ஸ்கந்த தீப பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பிரபஞ்சத்தில் எதிர் விளைவுகளைக் (negative forces)  களைவதற்காக இன்று அங்கு மகரிஷிகள் ஒன்று கூடி ஸ்ரீசூர்ய நாராயண சுவாமியை ஆராதித்து நற்சக்திகளை (Positive Forces) வலுப்படுத்திப் பல லோகங்களுக்கும் அனுப்புகின்றனர்.
நித்ய கர்ம – நிவாரண சாந்தி – செப்டம்பர் -1996
நித்ய கர்ம – வினை வேரறுக்கும் வழி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக!

தேதி

 குறித்த நற்காரியம்

 அபரிமிதப் பலன்கள்

1.9.1996

சூரியனுக்கு எலுமிச்சைக் கனி மாலை/எலுமிச்சை சாத தானம்

கம்ப்யூட்டர் அறிவு விருத்தி

2.9.1996

கணபதிக்கு பால்கோவா நைவேத்தியம் / தானம்

பிள்ளைகள் கணக்கில் மேம்படுவர்.

3.9.1996

முருகனுக்கு செவ்வாழைப் பழமாலை/தானம்

 ஞாபக சக்தி பெருகும்.

4.9.1996

புத பகவானை வலம் வந்து பச்சை ரவிக்கைத் துணி தானம்

சரித்திரப் பாட அறிவு மிகும்.

5.9.1996

பெருமாள் கோயிலில் தேன் குழல் முறுக்கு தானம்

படிப்பில் கவனம் மிகும்.

6.9.1996

சுக்ரன் வழிபட்ட கோயிலில் சீம்பாலில் செய்த இனிப்பு தானம்

பூகோள அறிவு விருத்தி          (உ.ம் : சென்னை –மயிலை- ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயம்.)

7.9.1996

சிவன் கோயிலில் வேர்க்கடலை + ஆட்டுப்பால் தானம்

நடன, இசை அறிவு விருத்தி.

8.9.1996

வால் உயர்ந்திருக்கும் அனுமாருக்கு தயிர்சாத நைவேத்தியம்/ தானம்

அல்ஜீப்ரா கணித அறிவு விருத்தி.

9.9.1996

ஸ்ரீஹயக்ரீவர் கோயிலில் – கொத்துமல்லி சாதம் + உருளைகிழங்கு வறுவல் தானம்

குழந்தைகளின் ஞாபகசக்தி பெருகும்.

10.9.1996

சந்திரன் , சசி என்ற “ச” வகை பெயருடையோருக்கு  - “ச” வகை பெயருடையோரும் தானமளிக்கலாம் .

சோர்வான குழந்தைகள் முன்னேற்றம் பெறுவர்.

11.9.1996

சிவன் கோயிலில் வெல்லம் கலந்த வேகவைத்த வேர்கடலை தானம்

விட்ட படிப்பு தொடரும்.

12.9.1996

ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு பச்சை நிற பன்னீர் திராட்சை மாலை/ நைவேத்தியம்/தானம்

மாலை கண் நோய் தீரும்.

13.9.1996

ஸ்ரீசுக்ர பகவானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்/தானம்

 ஆத்ம சக்தி உண்டாகும்.

14.9.1996

“ப” , “மு” எழுத்தில் துவங்கும் அம்மனுக்கு (பச்சை அம்மன், முப்பாத்தம்மன்) கோயிலில் இடியாப்பம் தானம்.,

Zoology படிப்பில் சிறப்பிடம்.

15.9.1996

ஸ்ரீமாதவன் (பெருமாள்) கோயிலில் மாதுளை தானம்

வேதியல் துறையில் சிறப்பு கிட்டும்.

16.9.1996

ஆலிலை கிருஷ்ணனுக்கு இலை அடை நைவேத்தியம் / தானம்

கடல் துறை படிப்பில்/ வியாபாரத்தில் (Marine Engg..) முன்னிலை பெறுவர்.

17.9.1996

ஸ்ரீசரஸ்வதி எழுந்தருளியுள்ள கோயிலில் அரிசி புட்டு தானம்

Graphics துறையில் சிறப்பிடம்.

18.9.1996

பால ரூப (பால முருகன், பாலவிநாயகர்) மூர்த்திகளுக்கு தேன் கலந்த chocolate இனிப்பு தானம்.,

பெற்றோர்களின் ஆசி கிட்டும்.

19.9.1996

பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகம். கருப்பு நிற ரசகுல்லா, குலோப்ஜாமுன், பீட்ரூட் அல்வா தானம்

பிரயாண காரியசித்தி.

20.9.1996

ஸ்ரீதுர்வாசர் உள்ள கோயிலில் சர்க்கரைப் பொங்கல் தானம்

கடினமான காரியங்கள் சுலபமாக நிறைவேறும்.

21.9.1996

மேற்கு பார்த்த சனீஸ்வரர் கோயிலில் எள், மசால் வடை தானம்

கடினமான மொழி எளிமையாகும்.

22.9.1996

வலஞ்சுழி விநாயகருக்கு இனிப்பு அப்பம் தானம்

பெரியோர்களின் ஆசி கிட்டும்.

23.9.1996

நரசிம்மர் கோயிலில் பானகம் நைவேத்யம்/தானம்

பில்லி, சூன்ய பாதிப்புகள் நீங்கும்.

24.9.1996

திருவிக்ரமருக்கு மூவகை உணவு நைவேத்தியம்/ தானம்

உயரதிகாரிகளால் வரும் பிரச்னைகள் தீரும்.

25.9.1996

கறுப்பு நிற (காராம்) பசுக்களுக்கு பால் சாதம் அளித்தல்

Surveyour களுக்கு நன்மை அளிக்கும்.

26.9.1996

சர்க்கரைப் பொங்கல் தானம் –

மருந்துக் கல்வியில் சிறப்படைவர்.

27.9.1996

நெய் கலந்த இனிப்புகள் தானம்

Automobile Engg துறையில் சிறப்பு/அபிவிருத்தி உண்டாகும்.

28.9.1996

விளாம்பழம், வில்வம் தானம்

Physics துறையில் சிறப்பு.

29.9.1996

பப்பாளி தானம்

பெண்களுக்கு உரித்தான நோய்கள் தீரும்.

30.9.1996

முருகன் கோயிலில் கோதுமை அல்வா தானம்

சுருக்கெழுத்துத் துறையில் சிறப்பு கிட்டும்.

விசேஷ தினங்கள் - செப்டம்பர் 1996 
4.9.1996 – கோகுலாஷ்டமி
3.9.1996 to 10.9.1996 மங்கள கௌரீ விரதம் (விளக்கம் ஆகஸ்ட் 1996 இதழில்)
12.9.1996 – கரிநாள் கூடிய அமாவாசை
13.9.1996 – மௌன விரதம்
19.9.1996 – சூர்ய சஷ்டி 
20.9.1996 to 4.10.1996 – மஹாலக்ஷ்மி விரதம் – 15 நாட்கள் ஷோடஸ மஹாலக்ஷ்மி பூஜை   
26.9.1996 – பௌர்ணமி பூஜை
27.9.1996 – மாளய பட்சம் ஆரம்பம்
30.9.1996 – மஹா பரணி
2.10.1996 – சந்திர சஷ்டி.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam