ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அமிர்த ஔஷதப் பௌர்ணமி |
ஸ்ரீ காகபுஜண்ட அமிர்த ஒளஷதபெளர்ணமி
ஆம், வருகின்ற பகுதான்ய வருட ஆவணி மாதப் பௌர்ணமிக்குத் தான் ஸ்ரீ காகபுஜண்ட அமிர்த ஒளஷத பெளர்ணமி எனப் பெயர் சூட்டி சித்புருஷர்களின் கிரந்தங்கள் அழைக்கின்றன, பிரபஞ்சத்தின் அதி அற்புத சித்த புருஷர்களில் ஒருவரான ஸ்ரீ காகபுஜண்டர், ஸ்ரீ அமிர்த தன்வந்த்ரியின் நேரடி தரிசனத்தைப் பெற்ற இறைப்பெருந் தூதர்களுள் உன்னதமான இடத்தை வகிக்கின்றார். சித்தத்தை எப்போதும் சிவப் பரம் பொருள்பால் செலுத்தி ஜீவன்களுடைய நல்வாழ்வுக்காகவும் அவர்களைக் கடைத் தேற்றுவதற்காகவும் ஒவ்வொரு விநாடியும் அயராது தெய்வத் திருப்பணிகளைச் செய்து வருகின்ற சித்புருஷர்களுள் சிறப்புடைய இடத்தைப் பெற்றுத் திகழ்பவரே ஸ்ரீ காகபுஜண்டர். பல்வேறு யுகங்களிலும் ஸ்ரீ அகத்தியரைப் போல, கொங்கணச் சித்தரைப்போல, பல கோடி யுகங்களிலும் ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி பல ரூபங்களில் தோன்றி அருள்கின்றார்.
வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்கு எப்போதும் சேவை புரிகின்ற பாக்யத்தைப் பெற்ற நித்ய சூரிகளைப் போல் சர்வேஸ்வரனாலேயே நேரடியாகப் படைக்கப்பட்டு, புனிதமிகு உத்தம இறை நிலைகளைச் சூடிய யோகியர்களுக்கும், மகரிஷிகளுக்கும், சித்புருஷர்களுக்கும் பிறப்பும் மறைவும் ஏதும் உண்டோ ? என்றும் ஒளி தரும் ஏகாந்த ஜோதிகளே சித்புருஷர்கள்.
திருஅண்ணாமலையில் எட்டுத் திக்குகளிலும் அஷ்டதிக்கு லிங்க மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். நம் பூலோகத்தை எட்டு திக்கிலும் தாங்கி நிற்கின்ற அஷ்டதிக்கு பாலகர்கள் உண்டு. அஷ்ட திக்குகளுக்குரிய கஜங்களும் (யானைகளும்) உண்டு, எட்டு பிரம்மேந்திரர்கள், எட்டு ருத்திரர்கள், எட்டு காலபைரவ மூர்த்திகள், எட்டு துவார பாலகர்கள், எண்திக்கு நந்திகள் என எட்டுத் திசைகட்குரிய தேவாதி தெய்வ மூர்த்திகளே பலரும் உண்டு.
திருஅண்ணாமலையின் ருத்ரபூர்வ எட்டுத் திக்குகளும் பிரபஞ்சத்தின் எல்லைகளைக் குறிப்பனவாகும். உலகம் தோன்றுவதும் ஒடுங்குவதும் மறைவதும் எழுவதும் சர்வேஸ்வரனின் பூதத் திருமேனியாக விளங்குகின்ற திருஅண்ணாமலையிலிருந்து தானே!
எட்டு திக்குகட்கும் எண்வித ருத்ர மூர்த்திகளும் உண்டு. அனைத்து பூலோக ஜீவன்களும் எட்டு விதமான குணங்களின் திரட்சியாகவே விளங்குகின்றன. எட்டு ருத்ர மூர்த்திகளும் பூலோகத்தின் எண் குண கர்ம வினைக் கோப்பினைத் தாங்கி நிற்கின்றனர்.
உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஆனந்தமோ, வருத்தமோ, அஷ்ட ஐஸ்வர்யமோ, எட்டு குணங்களோ அல்லது எட்டு வகையான பெருந் தீமைகளோ பரவெளியின் எல்லையாக விளங்கும் எட்டுத் திக்குகளிலிருந்துதான் உருவாகின்றன. எட்டு ருத்ர மூர்த்திகளின் வழிபாட்டினைத் தினந்தோறும் மிகச் சிறப்புடன் கடைபிடித்து வருவோர்க்கு எண் திசைகளிலும் நடைபெற்ற, நடந்த, வரவிருக்கின்ற நிகழ்ச்சிகளை உணர்கின்ற தீர்க்க தரிசனம் கிட்டும். அதாவது காலத்தைக் கடந்து நிற்கின்ற உத்தம நிலையை அஷ்ட ருத்ர வழிபாடு நல்வரமாகத் தருகின்றது.
ஸ்ரீ சிவ குங்குமாங்கித ருத்ரர்
ஸ்ரீ சிவ குமுதாக்ஷ ருத்ரர்
ஸ்ரீ சிவ புண்டரீக ருத்ரர்
ஸ்ரீ சிவ வாமநீஸ்வர ருத்ரர்
ஸ்ரீ சிவ சங்குகர்ண ருத்ரர்
ஸ்ரீ சிவ சர்வநேத்ர ருத்ரர்
ஸ்ரீ சிவ சுமுக ருத்ரர்
ஸ்ரீ சிவசுப்ரதிருஷ்டித ருத்ரர்
- ஆகிய எட்டு ருத்ரர்களே இன்றும் திரு அண்ணாமலையில் அருள்பாலிக்கின்றனர். யுக நியதிகளுக்கேற்ப ருத்ர மூர்த்திகளும் மாறுபடுவர்.
ஈஸ்வரன் இந்த ருத்ர மூர்த்திகளைப் படைத்து உலகின் எட்டு திக்குப் பரிபாலனத்தை அவர்களிடம் ஒப்படைத்தபோது திருவிளையாடலையும் புனைந்தான்.
அத்திருவிளையாடல் யாதோ?
எட்டுத் திக்குப் பரிபாலனத்திற்குரிய தெய்வீக சக்தியை அஷ்ட ருத்திரர்களும் பூமியிலேயே பெறவேண்டுமென்பதே பரம் பொருளின் அருளாணை! அம்பிகையே பல மானுட ரூபங்களை எடுத்தபோது, தன் தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டாது மனிதப் பிரயத்ன சக்தியைச் சார்ந்தே, உலக நியதியை ஒட்டி, உலகநாயகியாக, உமையாம்பிகையாக அருள் வாழ்க்கை பூண்டனள் அல்லவா! ஏன் ஸ்ரீராமரே தம் அவதார அம்சங்களை ஒரு துளியும் வெளிக் காட்டாது மிகமிகச் சாதாரண மனித வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாரன்றோ!
எட்டுத் திக்கு ருத்ர மூர்த்திகளுக்குரிய திக்பரிபாலனத்திற்கான தெய்வீகப் புண்ய சக்தியை அளிப்பதென்றால் எளிதான காரியமா?
பிரபஞ்சத் தோற்றங்கெளல்லாம் மாயையென அதில் மூழ்குவோர் உணர்வதெப்படி ? அனைத்து இன்ப, துன்ப உணர்வுகளுக்குக் காரணமாக இருப்பது மாயையே என்று தெளிந்து பூர்ண முடிவை, ஆத்ம விசாரம் மூலமாகப் பெற்றால் தானே அஷ்டதிக்குகளுக்குரிய காரண, காரியங்களை மெய்ஞ்ஞானத்தால் உணரமுடியும்.
இஞ்ஞானத்தைப் பெற்றால் தானே இதனால் கிட்டுகின்ற அபூர்வமான ஜப, தப, யோக சக்தியைப் புண்ய சக்தியாகத் திரட்டி ருத்ரர்களுக்கு அர்ப்பணித்திட முடியும்!
இத்தகைய மேன்மைகளை உடைய வல்லார் யாரோ?
அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடலென பரிபூரணமாக உணர்ந்து ஞானம் பெறுகின்றவர்க்கே மேற்கண்ட புண்ய சக்தியைத் தாரை வார்க்கின்ற, ருத்ர மூர்த்திகளிடமே அர்ப்பணிக்கின்ற தெய்வீகத் தியாக உணர்வு பரிணமிக்கும்!
இத்தகைய தெய்வத் திருவருள் பெற்றார் யாரோ?
இதற்கு விடை காண இயலாது அனைத்து மஹரிஷிகளும் ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபுவை நாடி விளக்கம் கேட்டனர்.
“எவராலும் பெற இயலாத அஷ்டதிக்கு இரகசியங்களை அறிந்தவரும், பல யோகிகள், மஹரிஷிகள், முமுக்ஷக்களின் சர்வஸித்தி மஹா காரணங்களை உய்த்தவரும், தன் திருவாக்கால் ருத்ர, சக்தியை ஆக்கி, அர்ப்பணிக்கும் தபோ பலன் அனைத்து வைத்ய சித்திகளைப் பெறுதற்கான ஸ்ரீ அமிர்த தனவந்த்ரீ மூர்த்தியின் பரிபூரண அனுக்ரஹத்தைப் பெற்றவர் தாம், அருணாசல க்ஷேத்திரத்தின் அஷ்ட ருத்ர மூர்த்திகளுக்குத் தம் கோடானுகோடி யுகத் தபோ பலனை சமர்ப்பித்து அர்ப்பணிக்கும் தெய்வத் திருவருள் பெற்றவராகின்றார். இத்தகைய அருட்பெரும் பரஞ்ஜோதிப் பிரகாசராய்த் திகழ்பவரே ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷியாவார்!” என்று அரிய விளக்கங்கள் தந்த ஸ்ரீ அகஸ்தியர் ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷியின் பெருமைகளை, அவருடைய அருட் திறத்தைப் பரமானந்தத்துடன் எடுத்துரைத்தார்.
இவ்வாறாக அஷ்ட ருத்ர மூர்த்திகளுக்கே தம் தபோ பலனை அர்ப்பணித்து ஸ்ரீ அமிர்த தன்வந்த்ரி மூர்த்தியின் பரிபூர்ண தரிசனத்தையும் பேரருளையும் பெற்றவரான ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷியின் குருவருளைப் பெற்றிடவும், எத்தகைய நோய், நொடிகளாக இருந்தாலும் அதற்குரிய வைத்ய சித்தி மூலம் பரிஹாரங்களையும் தீர்வுகளையும் மஹரிஷியின் குருவருளைப் பெற்றிடவும், பாவச் செயல்களும், நோய்களும், ரோகங்களும் பெருகி வருகின்ற கலியுகத்தில் இவறிற்குரிய பிராயச்சித் தங்களைத் தரவல்ல,ஸ்ரீ அமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியின் திருவருளையும் பெற்றுத் தர வல்ல ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷியின் தரிசன பலன்களைப் பெறவும் பகுதான்ய ஆண்டின் ஆவணிமாத பௌர்ணமியில் திருஅண்ணாமலை கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.
நோய் தீர்ந்து நல்வாழ்வு வாழ்வதே ஒவ்வொரு மனிதனின் அபிலாட்சையாகும். ஆனால் தீவினைகளுக்கான தண்டனையாகவே நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அத்தகைய தீவினைகளை அனுபவித்தாலோ, கழிந்தாலோ, பஸ்மமானாலோ தானே நோய்களிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஸ்ரீ அமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியை உள்ளன்புடன் பூஜித்தால், இப்பரம் பொருள் மூர்த்தியே, ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷி போன்ற தம் உத்தம அடியார்களாகிய சித்புருஷர்கள் மூலம் நோய் நீக்கும் நல்லமிர்தத்தை, ஈஸ்வர சங்கல்பமாக அளிக்கின்றனர்,
எனவே பகுதான்ய வருட ஆவணி மாதப் பெளர்ணமியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும். வாழ்வில் கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! பகுதான்ய வருட ஆவணி மாதப் பௌர்ணமி வாழ்வில் எத்தனை முறை வரும் என்று சற் றே யோசித்திடுக!
சப்த கன்னியர்கள், சப்த மாதாக்கள், நவகன்னியர் தேவமூர்த்திகள் இணைந்து பூஜிக்கின்ற நவராத்திரி மஹிமை
இல்லறப் பெண்களுக்கு மங்களம் என்றாலே ஆனந்தம் தான். மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூச்சூடி, மங்களகரமாக, தெய்வீகக் களை தரக் கூடிய லட்சுமிகரமான தோற்றத்தில் திளைப்பதில் தான் அவர்கள் பரிபூர்ண மகிழ்ச்சியடைகின்றனர். புனிதமான பெண் குலத்திற்கு சுபிட்சந் தரக்கூடியதாகப் பல சுபமங்களப் பொருட்களை இறைவன் படைத்துள்ளான். எத்தகைய ஏழ்மை நிலையில் இருந்தாலும் செல்வத்திற் புரண்டாலும் மங்களம் தரும் மாங்கல்யம், வளையல், பூ, குங்குமம், மாங்கல்யச் சரடு போன்றவற்றைப் புனைந்திடில் பூவையர்க்கு தெய்வீகக் களை பெருக்கெடுக்கின்றதன்றோ! எனவேதான் எத்தகைய நற்காரியத்திற்கும், சாதி, குல பேதமின்றி, சுமங்கலியான ஒரு இல்லறப் பெண்மணி எதிரில் வருவது, நல்ல தெய்வீகப் பசுவைப் போன்று, சுபமானதாக, நல்ல சகுனமாக அமைந்திருக்கின்றது.
நவராத்திரிப் பெருவிழாவின் அருட் பெரும் மகத்வமாக, அம்பிகையே இம்மாதத்தில் ஈஸ்வரனை வழிபட்டு பூலோகத்திற்கு நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றாள். இதன் அர்த்தம் என்ன? நாம் எந்த அளவிற்குப் பிறருக்கு, சேவை புரிகின்றோமோ அந்த அளவிற்கு நம் இல்லத்திலும் செல்வம் கொழிக்கும் ! நவராத்திரி தினங்கள், தெய்வத் திருவருளாக, சுபமங்களத்தைக் கொழிக்க வைக்கும் அதி அற்புதமான நாட்களாக அமைகின்றன!
எவ்வாறு, மங்களகரமான நற்காரியங்களைச் செய்வது! சுபிட்சத்தை எப்படிப் பரப்புவது? எங்கும் மங்களம் தங்கட்டும்! அவரவர் வசதிக்கேற்ப, பலரும் பொருட்களைத் திரட்டி/வாங்கி வாசனைப் புஷ்பம், கண்ணாடி, சீப்பு, வளையல்கள், கண் மை, மருதாணி, நல்ல குங்குமம், மஞ்சள், சிறுமியர்க்கான பட்டுப் பாவாடை, ரிப்பன், மற்றும் பல வண்ண ரவிக்கைகள், மெட்டிகள் போன்ற சுபமங்களப் பொருட்களை செட்டாக வைத்து நவராத்திரியில் ஏழைக் குடும்பங்களுக்கு அளித்திடுங்கள்!
வறுமையில் உழலும் ஏழைப் பெண்மணிகளும் சிறுமியர்களும் இத்தான தர்மங்களைப் பெற்று, அவற்றை அணிகையில் சூடுகையில், அவர்கள் திருமுகத்தில் திளைக்கின்ற பரமானந்தமே நவராத்திரி பூஜையில் விளைகின்ற சுபிட்ச வித்துக்கள்! சமுதாயப் பூங்காவில் வளர்கின்ற ஆனந்த விருட்சங்கள் ! இதனையளிக்கின்ற தெய்வீக சக்தி நவராத்திரி பூஜைகளுக்கே உண்டு.
ஸ்ரீராமருக்கு உபதேசித்த ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ துர்கை!
பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை அருகே திருவுசாத்தானம் என்ற திருத்தலத்தில் உள்ள ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் சிவாலயத்தில் நவகன்னியர்களும் சப்த கன்னியர்களும், சப்தமாதாக்களும் அருள்பாலிக்கின்றனர். இத்தெய்வமூர்த்திகளை ஒரே ஆலயத்தில் காண்பது மிகவும் அரிதாகும். மேலும், இங்கு ஸ்ரீ துர்க்கை அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பதும் காணக் கிடைத்தற்கரிய தெய்வீக தரிசனமாகும் . இம்மட்டோ, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ லஷ்மி மூன்று தேவியரும் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ளது போல திருவுசாத்தானம் எனப்படும் கோயிலூரில் ஒன்றாகச் சேர்ந்து அருள்பாலிக்கின்றார்கள்,
எனவே, நவராத்திரி தினங்கள் அனைத்திலும் அல்லது ஒரு தினமேனும், செவ்வாய்/வெள்ளிக் கிழமையில் காணுதற்கரிய இத்திருக்கோயிலில் இல்லறப் பெண்கள் சத்சங்கமாக ஒன்று கூடி
1. ஆலயத்தை நீரால் கழுவி சுத்தம் செய்து ஆலயமெங்கும் பச்சரிசி மாவு/நீர்க் கோலமிட்டு, செங்காவி பூசுதலும்.
2. ஆலயத்திலேயே மஞ்சள், சந்தனம் அரைத்து நவகன்னியர், சப்த மாதாக்கள், சப்தகன்னியர்கள், இத்திருத்தல அம்பிகையான ஸ்ரீபெரியநாயகிக்கு மஞ்சள் பூசி, சந்தனக் காப்பிட்டு, குங்குமமிட்டும்.
3. ஆலயத்திலேயே அமர்ந்து இறை நாமங்களை ஜபித்தவாறே தாமே தொடுத்த பூமாலைகளால் அனைத்து அம்பிகைகட்கும் பூச்சொரியலிட்டும்.
4. ஏழை சுமங்கலிகட்குத் தாம்பூலம் மற்றும் மஞ்சள், குங்குமம், வளையல்கள் போன்ற மங்களப் பொருட்களை அளித்தும்
- இவ்வாறாக நவராத்திரி பூஜைகளை இத்திருத்தில் சிறப்பாகக் கொண்டாடினால்
1. பித்ரு முக்தித் தலமாக விளங்கும், தெய்வீகம் மிகவும் பூத்துக் குலுங்கும் இத்திருத்தலத்தின் மகிமையால், பித்ரு சாபங்கள் நீங்கி, பல ஆண்டுகளாகத் திருமணமாகாது அவதியுறும் கன்னிப் பெண்கட்கு நல்வாழ்வு அமையும்.
2. திருமணமாகியும் வறுமை, புகுந்த வீட்டுத் துன்பங்கள், கணவனின் தீயொழுக்கம், பிள்ளைகளின் பொறுப்பின்மை போன்றவற்றால் கஷ்டப்படும் இல்லறப் பெண்கட்கு மன நிம்மதி கிட்டும்.
பொதுவாக, அமர்ந்த கோலத்திலுள்ள ஸ்ரீதுர்க்கையை (திருவையாறு அருகே விளாங்குடி etc.,) வழிபடுவதால், குறிப்பாக நவராத்திரியின் ஒன்பது தினங்களில் ஒன்பது விதமான பழங்களால் காப்பிட்டு (மாம்பழத் துண்டுகளால் மாம்பழக் காப்பு, பலாப்பழக் காப்பு etc.,) வழிபட்டு வருதலால் குடும்பத்தில் சாந்தம் கிட்டும். பலவிதமான துன்பங்களால் மன அமைதியின்றி, எப்பொழுதும் சோகத்துடன் வாழும் பெண்கட்கு மேற்கண்ட கோயில்களில் நவராத்திரி வழிபாட்டின் பலன்கள் தான் கண்கண்ட மருந்தாகும்.
திதி தர்ப்பணம் நற்கதியைத் தருமே
மாளய பட்ச திதி பூஜைகள்
அஷ்டமி திதி
தன்னுடைய சகோதர, சகோதரிகள் வறுமையில் உழன்று தகுந்த வேலை, வீடு, வாசலின்றித் தவிக்கின்ற நிலையில் அவர்கட்குத் தார்மீகமான முறையில் உதவுவதை விடுத்து, மனைவியின் உறவு முறைகளைச் சேர்ந்த நன்றியில்லாத உறவினர்க்கும், தகுதியில்லாத, நற்குணமில்லா ஏனையோர்க்கும் தேவையில்லாமல் செலவழித்து, இதனால் மனமுடைந்து இறந்த சகோதர சகோதரிகட்கு இன்று தர்ப்பணம் செய்திடல் வேண்டும்.
தர்ப்பையின் மேல் மல்லிகைப் புஷ்பங்களைப் பரப்பி, அதன் மேல் தர்ப்பண நீரை வார்ப்பதுடன் இறந்துபோன சகோதர சகோதரிகளின் குடும்பத்திற்குத் தக்க உதவிகளைச் செய்திடவும் வேண்டும். இன்று சங்கு தீர்த்தம் உள்ள இடங்களில் தர்ப்பணமிட்டு, புளியோதரை மற்றும் கருநீல உணவு வகைகளையும் (திராட்சை, கத்திரிக்காய், பீட்ரூட் etc.) ஆடைகளையும் தானமளித்தல் சிறப்புடையதாகும்.
நவமி திதி
பாரிச வாயு நோயால் இறந்தோர்க்கும், இரு மனைவியுடன் வாழ்ந்து இறந்தோர்க்கும், நண்பர்கட்குத் துரோகங்களைச் செய்து இறந்தோர்க்கும் (நண்பன் விரும்பிய பெண்ணைத் தான் மணத்தல், பணம் வாங்கி ஏமாற்றுதல் etc.) இன்று தர்ப்பணம் செய்திட வேண்டும்.
அதாவது இத்தகைய துரோகங்களால் அதிர்ச்சியுற்று இறந்தோர்க்கும், இத்துரோகங்களைச் செய்து பாவங்களைச் சேர்த்து இறந்தோர்க்கும் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.
பொதுவாக தேன் கலந்த இனிப்பு உணவுதான் (பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் etc.) இத்தகைய துரோகங்கட்கு ஓரளவு பிராயச்சித்தம் தரும். இன்று கருட தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்து நீருருண்டை (நீர்க் கொழுக்கட்டை) தானம் செய்திடுக! வெளிர் மர நிற ஆடை (Light Brown) தானமும் சிறப்புடையது.
கடல் வாணிபம் செய்வோர்க்கு மிகவும் சிறப்பான நாள்.
வயலூர் அக்னி தீர்த்தம்
தசமி திதி
குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் மனதிலேயே மறைத்து வைத்து இறந்தவர்க்கும், தவறான வழியில் குழந்தைகளைப் பெற்று அவர்களை அனாதையாகத் தவிக்க விட்டு இறந்தவர்கட்குமாக இன்று தர்ப்பணமிட வேண்டும்.
தசமி திதியில் அக்னி தீர்த்தம் (இராமேஸ்வரம், திருச்சி வயலூர்) உள்ள இடங்களில் தர்ப்பணம் செய்து இலைப் பச்சை நிற ஆடைகளையும், ஊத்தப்பம் போன்ற மாவு உணவு வகைகளையும் தானமளிக்க வேண்டும்.– கோர்ட்டு வழக்குகள் சுமுகமாக முடிய, இந்த திதி பூஜை உதவுகின்றது.
ஏகாதசி திதி
குந்தி தேவியைப் போன்று, தன்னைத் தாயென்றோ, தந்தையன்றோ, சொல்ல முடியாமல் இறந்தோர்க்கும்., தன் குழந்தை பிறரிடத்து வளர்ந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இறந்தோர்க்கும் இன்று திவசமும், தர்ப்பணமும் செய்திடல் நலம்.
சந்திர தீர்த்தம் உள்ள இடங்களில் இன்று தர்ப்பணமளித்து எலுமிச்சை சாதம் தானமும், மஞ்சள் நிற ஆடை தானமும் செய் தல் சிறப்பானது. சூரிய, சந்திர தீர்த்தம் உள்ள இடங்களில் அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை வறியோர்க்கு அளித்திடுக!
துவாதசி திதி
இயலாமையால் வாடும் தன் பெற்றோர்க்கு சேவை செய்யும் பொருட்டுத் தான் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்து தன் பெற்றோர்க்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து இறந்தவர்க்காக இன்று திவசம் செய்தல் சிறப்புடையது.
தெய்வ சேவைக்காகப் பிரம்மச்சரிய விரதம் பூண்டு இறந்தோர்க்கும் இன்று திதி வழிபாடு செய்வதானது அரும் பெரும் பலனாக நல்ல செல்வத்தைத் தரும்.
இன்று கருட தீர்த்தத்தில் தர்ப்பணமளித்து, பொரி உருண்டை மற்றும் நீல நிற ஆடை தானமளித்தால் எத்தகைய மனக்கலக்கம் தீருவதோடு பொன், பொருளும் நியாயமான முறையில் சேரும்.
திரயோதசி திதி
தன் பெண் திருமண வாழ்க்கையில் அமைதியான வாழ்வைப் பெறாது, ஒரு துஷ்டனுக்குத் தன் மகளைத் தந்து விட்டோமே என்று எண்ணி வேதனைக் கடலில் மூழ்கி இறந்தோர்க்கு இன்று திவசமும் தர்ப்பணமும் செய்திடல் வேண்டும். இதனால் மருமகனும் திருந்தி வாழ்கின்றபடி நல்வாய்ப்புகள் உருவாகும்.
அடிக்கடி பிரயாணம் செய்வோர்களும் விபத்துகளிலிருந்து மீண்டு, ஆரோக்கியம் மற்றும் மனோசக்தியைப் பெற்றிட திரயோதசி திதியில், சக்தி தீர்த்தத்தில் நீராடி கோதுமை உணவையும், கோதுமை நிற ஆடைகளையும் தானமளிக்க வேண்டும்.
சதுர்த்தசி திதி
பிறர் குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கிய பின்பு தன்னை கவனிக்கவில்லையே என்று ஏங்கி இறந்தவர்கட்கும், தகுதியில்லாதோர்க்குத் தான் எழுதி வைத்த சொத்தை அவர்கள் தீய வழியில் செலவிடுவதைப் பார்த்து மனம் வெதும்பி இறந்தவர்க்கும் இன்று சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் அளித்திடுக!
இன்று சூரிய தீர்த்தத்தில் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதிக் கொண்டே நீராடி, தர்ப்பணமிடுதல் மிகுந்த நன்மை பயக்கும்.
இன்று பழுப்பு நிற ஆடைகளைத் தானமளித்து ரசகுல்லா போன்ற பால் - திரி இனிப்பு வகைகளைத் தானமளித்திடுக.
மாளய பட்ச அமாவாசை பூஜை
அனைத்து வகையான உயிரினங்கட்கும் காருண்ய தர்ப்பணமும் திவசமும் அளிக்க வேண்டிய முக்கியமான தினமாகும். நாட்டு கோட்டைப் பகுதியில் படையல் என்ற பொது வழிபாட்டில் அனைத்துப் பித்ருக்கட்கும் உணவு படைத்து அன்னதானமளிக்கும் முறைபோல், பொதுப் படையலுக்கு இந்நாள் ஏற்ற தினமாகும். இது மிகச் சிறந்த சமுதாய வழிபாடுமாகும். கண் பார்வையற்ற, கடுமையான நோயில் படுத்த படுக்கையான, ஊனமுற்ற பெரியோர்களின்/உறவினர்களின் பணத்தை/நகைகளை அபகரித்தல் மிகவும் கொடிய தீவினையும் பாவமும் ஆகுமன்றோ ! இதற்கான பரிகாரத்தைத் தக்க குருவிடம் கேட்டுப் பெறுதல் வேண்டும். ஆனால்,இத்தகைய பரிகாரத்தைப் பெறுவதற்கான மாளய அமாவாசைப் பூஜை முறை ஒன்று உண்டு.
பூவாளூர் திருத்தலம்
பல இடங்களில் ஸ்ரீ காயத்ரீ தீர்த்தங்கள் / குளங்கள்/ நதிகள் உண்டு. இராமேஸ்வரம் மற்றும் திருச்சி அருகே திருமாந்துறையில் காயத்ரீ தீர்த்தம் உள்ளது! இராமேஸ்வரத்தில் கோயிலுக்கு எதிரே உள்ள கடல் தீர்த்தமே அக்னி தீர்த்தம். திருமாந்துறை, லால்குடி, அன்பில் பகுதிகளில் இன்றும் காயத்ரீ நதி உள்ளதே! ஆனால் ஒரு சில இடங்களில்தான் நீராடும் வகையில் சுத்தமாக உள்ளது. ஸ்ரீ காயத்ரீ நதியையே அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள் என்றால் என்னே கலியுகக் கொடுமையிது! தற்போது மலட்டாறு எனப்படுவதே முற்கால ஸ்ரீ காயத்ரி நதியாகுமென்பது நம் மூதாதையரின் நல்வாக்கு!
இத்தீர்த்தத்தில் மாளய அமாவாசையன்று நீராடி, தர்ப்பணமிட்டு, ஏழைகட்கு வெண் பட்டு ஆடைகளைத் தானமளித்து வந்திடில் எத்தகைய பெருந் தீவினைக்கும் பிராயச் சித்தம் குரு மூலமாக கிட்டும். இன்று பாதாம் அல்வா தானம் சிறப்புடையது காமக் குற்றங்களுக்குப் பிராயசித்தம் தரவல்லது!
கும்பகோணம் அருகே திருநாரையூரில் உள்ள சர்வ தீர்த்தம், திருவிடைமருதூர் கோயில் தீர்த்தம், கும்பகோணம் சக்கரப் படித்துறை, வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கோடிக்கரை அகஸ்திய தீர்த்தம், பாபநாசம், திருச்செந்தூர் நாழிக்கிணறு, பழமுதிர்ச் சோலையிலுள்ள நூபுர கங்கை, கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் வழியிலுள்ள ருத்ரப் பிரயாக், நந்தப்பிரயாக் போன்ற ஐந்து வகை நதிச் சந்திப்புகள், பவானி முக்கூடல் ஆகிய இடங்கள் மாளய பட்சத்திற்கு மிகவும் சிறப்பானவை!
திருவிடைமருதூர்
திருச்சி - லால்குடி அருகே பூவாளூரில் திருமூலநாதர் சிவன் கோயில் அருகே அமைந்திருக்கும் பல்குனி நதியானது மிகவும் விசேஷமானது! கயாவில் உள்ள பல்குனி நதியின் தெய்வீகத் தன்மையுடையது. கயாவில் செய்யப்படும் திவச, தர்ப்பணம் பலன்களைத் தரவல்லது. நம் தமிழ் நாட்டிலேயே கயாவின் பிண்ட தர்ப்பண பலன்களைத் தரவல்ல க்ஷேத்திரங்கள் பல உள்ளன. அவற்றுள் பூவாளூரும் ஒன்று!
மேற்கண்ட இடங்களில் மாளய பட்ச தர்ப்பணம்/திவச வழிபாடுகளைக் கடைபிடித்தலால் அளப்பரிய பலன்களையும் நல்வரங்களையும் அள்ளிச் செல்வீர்களாக!
தீயோர்க்கும் தர்ப்பணமா ?
பல கொடிய தீவினைகளைச் செய்து இறந்த கொடியவர்களுக்குத் தர்ப்பணம் ஏன்? எத்தனையோ குடும்பங்களில் குடிப்பழக்கம், சீட்டு, குதிரை ரேஸ், முறையற்ற காமச ்செயல்கள் போன்றவற்றால் பலரையும் அடித்து, வதைத்து, துன்புறுத்தியோர்க்கு அவர்களுடைய சந்ததிகள் சரிவரத் தர்ப்பணம் செய்வது கிடையாது.
மன்னித்தல் என்பது மனிதனுடைய தெய்வீகப் பண்புகளில் ஒன்றாகும். மேலும், ஒருவன், தன் தவறுகட்கு மனதார வருந்தி உண்மையிலேயே திருந்தி வாழ்வானாயின் அதற்குரிய மன்னிப்பைத் தரவேண்டியது மனித குலத்தின் கடமையாகும். மேலும், இளமையில், குழந்தைப் பருவத்தில் செய்கின்ற சிறு தவறுகளையும், சஞ்சல வினைகளையும், மன்னித்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களே பெருந்தவறுகளை இழைத்து இறந்திருப்பின் அவர்கட்கும் நற்கதியைப் பெற்றுத் தர வேண்டியது அவர்களுடைய சந்ததியினரின் தலையாய கடமையல்லவா?
மேலும், மாளய பட்சத்தின்போது உறவினர்கள் மட்டுமல்லாது தம்முடைய நண்பர்கள், சக ஊழியர்கள், தாம் விரும்பிப் போற்றுகின்ற நடிகர்கள், தலைவர்கள் என இறந்தோர்கள் அனைவர்க்கும் அவர் எந்த மதத்தை, சமயத்தை, ஜாதியைச் சேர்ந்தவராயினும் தர்ப்பணம் அளித்திடலாம். இது மட்டுமல்லாது, தாம் உண்டு சுவைத்த காய்கறிகள், கனிகள், கிழங்கு வகைகள், ஆடு, கோழி, மீன், பன்றி (Mutton, Beef, Pork, Venison etc.) போன்றவற்றிற்கும் மட்டுமின்றி, நடந்து, வண்டிகளை ஓட்டி, மிதித்து, நசுங்(க்)கி இறந்து போன புழு, பூச்சி போன்ற எல்லா உயிரினங்கட்கும், நற்கதியைத் தரவல்ல காருண்ய தர்ப்பணத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு பகுத்தறிவுடைய மனித சமுதாயத்திற்கு உண்டு.
ஆவணி அவிட்டம் |
ஆவணி அவிட்ட நாள்
ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் பூணூல் அணிவதுதான் சிறப்புடையதாகும். ஜாதி, இன பேதமின்றி பூணூலை அனைவரும் அணிந்திடலாம். இதில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் பொதுவாக ஒருமுறை பூணூல் அணிந்திடில் வாழ் நாள் முழுதும் அதனையணிந்து தினந்தோறும் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஜெபித்து வருவதுதான் சிறப்புடையதாகும். இன்று, பலரும் திருமணம் மற்றும் விசேஷ தினங்களில் மட்டும் பூணூலை அணிந்து பிறகு கழற்றி வைத்து விடுகின்றார்கள். இதில் எவ்விதப் பயனும் இல்லை.
பூணூல் என்பது தாலிச் சரடு, காசிக் கயிறு, இரட்சா பந்தனம், விபூதி, நாமம் போன்று தெய்வீகத்தை நமக்குப் பெற்றுத் தரும் இறைவழிமுறையே தவிர இதை அணிவதற்கு எவ்வித ஜாதி, குல வித்தியாசம் கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
கும்பகோணத்தில் ஸ்ரீ யக்ஞோபவீதேஸ்வரர் என்ற பெயரிலேயே, இறைவனே “பூணூலை அணிந்தவர்” என்ற பெயரிலேயே அருள்பாலிக்கின்றார். யக்ஞோபவீதம் என்றால் பூணூல் என்று பொருள். எவ்வாறு இறைவன் ஆனவன் அனைவருக்கும் உரித்தானவனோ, அதே இறைப் பரம்பொருளே பூணூல் சக்தியாக ஸ்ரீ யக்ஞோபவீதேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கி இருப்பதால் இறைவனை வழிபடுகின்ற அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றிப் பூணூலை அணிந்திடலாம் என்பது வேத வாக்குதானே!
பூணூல் என்பது மிகவும் புனிதமான பொருளாகும். புனிதமான எதுவுமே யாவரும் இறைவனை அடைவதற்காகத்தானே அணியப்படுகின்றது. அப்படியானால் இதில் எவ்வாறு பாகுபாடு இருக்க முடியும் ? பூணூலை அணிகின்ற பொழுது அதில் உள்ள பருத்தி நூலில் பதிந்துள்ள பஞ்சபூத சக்தியினால் அது பலவிதமான மந்திரங்களை கிரஹித்துக் கொள்கின்றது. இதனை எப்போதும் தரிப்பதால் கோயில், புண்ணிய நதிகள், புனித தீர்த்தங்கள் மற்றும் பல திருத்தலங்களுக்குச் செல்கையில் அங்கு நிலவுகின்ற வேத, மந்திரங்களின் சக்தியும், அபிஷேக ஆராதனைகளின் சக்தியும், தீர்த்த சக்தியும், பருத்தி நூல் மூலமாக நம்முடைய உடலைச் சேர்கின்றன. தற்போது பருத்தி ஆடைகளை அணிகின்ற பழக்கம் மறைந்து வருதால் டெரிலின், டெரிகாட்டன், நைலக்ஸ், போன்றவற்றை அணிவதன் மூலம் நமக்கு தெய்வீக சக்தியைப் பெற்றுத் தரும் பருத்தி ஆடைக் கருவி இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இத்தகைய தற்கால நாகரீகப் படலத்தில் இவ்வித ஆடைகளை அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதால் உடலிலே புனிதமான, பக்தி சம்பந்தப்பட்ட, பஞ்ச பூத சக்திகள் நிறைந்த பருத்தி நூலால் ஆன பூணூலையாவது நாம் அணிந்திருந்தால்தான் இப்பூணூலாவது பலவிதமான மந்திர சக்திகளைப் பெற்று நம் உடலுக்கு தெய்வீக சக்தியை அளித்திடும் அல்லவா!
ஆவணி அவிட்ட நாள் பற்றிய பலவிதமான பஞ்சாங்க பேதங்கள் உண்டு. மேற்கண்ட சித்புருஷர்களின் அருள் விளக்கப்படி ஆவணி மாத அவிட்ட நட்சத்திரம் சேர்கின்ற 5/9/1998 நாளே பூணூல் அணிவதற்கான சிறப்பான நாள்.
சக்கரப் படித்துறை
கும்பகோணம்
பூணூல் தரும் சுவாச பந்தனம்
இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பலவிதமான சுவாச முறைகள் உண்டு, இதனால் ஆண்கள், வலது நாசி மூலமாகவும், பெண்கள் இடது நாசி மூலமாகவும் சுவாசத்தைச் செலுத்தப் பழகிட வேண்டும். சுழுமுனை சுவாசமான இரு நாசி சுவாசமானது சாந்தமான பஞ்சபூத சக்தியையும் தருகின்றது. இதனை நமக்கும் பெற்றுத் தருவதே பூணூல் ஆகும் எவ்வாறு?
பூணூலில் உள்ள பருத்தி இழைகளில் பஞ்ச பூதச் சக்திகள் நிறைந்து இருப்பதால்தான் தாலிச் சரடைக் கூட சுத்தமான பருத்தி நூலில் அணிய வேண்டும் என்ற நியதியும் இருக்கின்றது. ஆனால் தற்காலத்திலே மாங்கல்யத்தைத் தங்கச் செயினிலே போட்டுக் கொள்கின்றார்கள். இதுவும் தவறானதாகும். பொன்னாலான மாங்கல்யத்தைத் தெய்வீக சக்திகள் நிறைந்த பருத்தி இழைகளாலான தாலிச் சரடில்தான் கோர்க்க வேண்டும். அப்பொழுதுதான் தீர்க மாங்கல்ய சக்தியைத் தரும் வேத, மந்திர இறை நாம சக்திகள் அதன் மூலமாக மாங்கல்யம் அமையும்.
தங்கம் எத்தகைய சிறப்பான உலோகமாக இருந்தாலும் பருத்தி இழைகளுக்கு உரிய பஞ்ச பூத சக்தியைத் தங்கம் பெறவில்லை அல்லவா! எனவேதான் பெண்களுக்கு மாங்கல்யமும், ஆண்களுக்குப் பூணூலும் பஞ்சபூத (பருத்தி) சக்தியாக உடலிலே சேர்க்கப்படுகின்றது.
எவ்வாறு மங்களகரமான தாலிச் சரடானது ஜாதி, இன பேதமின்றி புனிதமான பெண் குலத்திற்கு உரித்தானதோ இதே போல பூணூலும் அனைத்து ஆண்களுக்குமுரிய இறை வழிபாட்டு.
தர்ப்பணம் செய்கையில் பூணூலை இடவலமாக மாற்றிப் போட்டுக் கொண்டு தர்ப்பணம் இடுவார்கள். இதன் காரணம் பொதுவாக வலது இடதுமாகப் போடப் பட்டிருக்கும் பூணூலை, இடம்வலமாக மாற்றும் பொழுது சுவாச கலைகள் மாற்றப்பட்டு பித்ரு லோகத்திற்குரிய தர்ப பவித்ர சுவாச நாடிகளை இது பெற்றுத் தருகின்றது. இதேபோல தேவ பூஜையின் பொழுது பூணூலைக் கழுத்திலே நிவீத மாலையாக அணிந்து கொள்வார்கள். இத்தகைய பூஜை விளக்கங்களைத் தக்க சற்குருவிடம் பெற்றுப் பயனடைதல் வேண்டும். எனவே நீங்கள் எங்கு பூணூலை வாங்கினாலும் அதனை கும்பகோணத்தில் உள்ள கௌதமேஸ்வரர் எனப்படும் ஸ்ரீ யக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றி அதனைப் பிரசாதமாக அவிட்ட நட்சத்திரம் கூடிய ஆவணி மாத விசேஷநாளில் அணியத் தொடங்குவது மிகவும் சிறப்புடையதாகும்.
விசேஷதினங்கள் - செப்டம்பர் 1998
(திருக்கணித பஞ்சாங்க முறைப்படி)
1.9.1998 ஆவணி மூலம் - திருச்சி மலைக்கோட்டை கிரிவலத்திற்குச் சிறப்பான தினம்.
5.9.1998 ஆவணி, அவிட்ட - பூணூல் அணியும் நாள் (சித்புருஷர்களின் சாங்கியப்படி)
5.9.1998 பெளர்ணமி - கிரிவல நாள்
5.9.1998 இரவு 07.40 முதல் 6.9.1998 மாலை 4.51 வரை திருக்கணித பஞ்சாங்க முறைப்படி பௌர்ணமி திதி அமைகின்றது.
6.9.1998 மாலை 4.52 முதல் மாளய பட்சம் துவக்கம்
6.9.1998 மாளய பட்சம் - பிரதமை
7.9.1998 - துவிதியை
8.9.1998 திரிதியை
9.9.1998 சதுர்த்தி
10.9.1998 பஞ்சமி
11.9.1998 ஷஷ்டி
12.9.1998 சப்தமி
13.9.1998 அஷ்டமி
14.9.1998 நவமி
15.9.1998 தசமி
16.9.1998 ஏகாதசி
17.9.1998 துவாதசி
18.9.1998 திரயோதசி
19.9.1998 சதுர்த்தசி
20.9.1998 மாளய பட்ச அமாவாசை
21.9.1998 முதல் நவராத்திரி ஆரம்பம் - பிரதமை
22.9.1998 துவிதியை
23.9.1998 - திரிதியை
24.9.1998 சதுர்த்தி
25.9.1998 பஞ்சமி
26.9.1998 ஷஷ்டி
27.9.1998 ஷஷ்டி/சப்தமி
28.9.1998 சப்தமி
29.9.1998 அஷ்டமி
30.9.1998 நவமி, சரஸ்வதி பூஜை
1.10.1998 விஜய தசமி /ஸ்ரீ ஆயுர்தேவி கலச பூஜை
ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் -திருஅண்ணாமலை சேவைச் செய்திகள்
26.7.1998 சென்னை - பனையூர் குப்பம் கிராமத்தில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
26.7.1998 திருச்சி - திருவளர்சோலை கிராமத்தில் வறியோர்க்கான இலவச மருத்துவ முகாம்
7.8.1998 திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை/அன்னதானம்
12.7.1998 தஞ்சை ஸ்ரீ சிவேந்திரர் ஆலயத்தில் உழவாரத் திருப்பணி
வெள்ளை வேம்பு விருட்சம் |
துர்வாசர் தந்த சோதனை!
அப்போது துர்வாச மாமுனியானவர் தம்முடைய பல்லாயிரக் கணக்கான சிஷ்யர்களுடன் அருணாசலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். இன்றைக்கு துர்வாச மாமுனியின் திருப்பாதங்கள் பதிந்துள்ள இடமே அக்காலத்தில் மிகப் பெரிய ஆஸ்ரமமாக, துர்வாச முனிவருடைய பர்ண சாலையாக மலர்ந்து பல்லாயிரக் கணக்கான சிஷ்யர்களுக்கும் எத்தனையோ கோடி ஜீவன்களுக்கு நற்கதியை அளித்தது.
இதோ .....
துர்வாசரே தம் முனிபுங்கவ சிஷ்யர்களுடன் வந்து கொண்டிருக்கின்றார்.
கடும் பஞ்சம் நிலவிய காலம் அது....
திருஅண்ணாமலைப் பகுதியை ஆண்ட மன்னனுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. கஜானாவில் நிதி நிலைமையும் சரி இல்லை. தான்ய விளைவு மிகவும் குறைந்து போய் நாடெங்கும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு விட்டது. வற்கடம் என்னும் கோர பஞ்சம் மீண்டும் திரும்பி வந்து விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு அகோரப் பசி எங்கும் தாண்டவமாடியது. இந்நிலையில் துர்வாசரோ நிறைய சிஷ்யர்களுடன் வந்து கொண்டிருக்கின்றார். அவர்களுக்கு உணவு படைப்பது அரசனுடைய கடமை அல்லவா!
கடும் பஞ்சம் நிலவுகின்ற நிலையில் அனைவர்க்கும் உணவு படைப்பது என்றால் ஒரே நாளில் எவ்வாறு சாதிக்க முடியும் ? மன்னனாக இருந்தாலும் அவரும் சாதாரண மனிதன் தானே! தெய்வ அருள் இல்லாது எதனைத்தான் அவன் சாதிக்க முடியும்?
அக்காலத்தில் மன்னனை நல்வழிப்படுத்துவதற்காக ராஜகுரு என்பார் ஒருவர் இருந்தார், அவரைத் தெய்வத்திற்கு சமமாக மதித்துத்தான் அக்காலத்து மன்னர்கள் நற்பணியாற்றினார்கள். இந்த ராஜகுருவும் வேந்தனிடம், “மன்னா ! ஆயிரமாயிரம் சிஷ்யர்களுடன் வந்து கொண்டிருக்கும் துர்வாசருக்கு உணவிடாவிட்டால் நமக்கு எத்தகைய சாபம் கிட்டுமோ தெரியாது! ஆனால் இவர்களுக்கெல்லாம் இத்திருஅண்ணாமலைத் தலத்தில் உணவளிக்கக் கூடிய ஒருவர் திருவோட்டுச் சித்தரே. அவரை நாம் தேடிக் கண்டுபிடித்துச் சரணடைவோமாக! எந்த சமயத்தில் எவ்விடத்தில் அவர் இருப்பார் என்று எவருக்கும் தெரியாது! அருணாசலப் பெருமானை வேண்டிடுவோம்! நாம் அவரை நாடிச் சரணடைய முயல்வோம்!” என்று அறிவுரை வழங்கிடவே மன்னன் தன் பரிவாரங்களுடன் திருவோட்டுச் சித்தர் இருக்கும் இடந்தனை நோக்கி விரைந்தான்!
திருவோடு தந்த பெரு விருந்து
அம்மன்னன் மிகவும் அறிவுடையவன், நல்ல தெய்வ பக்தி உடையவன், மக்களைப் பேணுகின்ற பணியைச் செவ்வனே தர்ம சிரத்தையுடன் செய்து வருகின்றவன். மக்களை உயிருக்குயிராக நேசிக்கின்ற உத்தம மன்னன்! இத்தகைய நற்பண்புகள் கூடி இருந்தமையால் திருவோட்டுச் சித்தருடைய தரிசனம் அவனுக்கு எளிதில் கிட்டி விட்டது!
திருவோட்டுச் சித்தர் பெருமானிடம் தன்னுடைய குறைகளை எடுத்துக் கூறிய மன்னன், ஸ்ரீ துர்வாச முனிவருக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் தன்னால் முழுமையான அன்னம் அளிக்க இயலாமல் இருப்பதை எடுத்துரைத்து, தக்க பரிகாரத்தைத் தந்தருளுமாறு வேண்டி நின்றான்.
மஞ்சலாறு திருவாவடுதுறை
திருவோட்டுச் சித்தர் தான் கூட்டி வைத்திருந்த அன்ன மலையைக் காண்பித்து, “இந்த அன்ன மலையைப் பயன்படுத்திக் கொண்டு முனிபுங்கவர்களுக்கெல்லாம் உணவு படைப்பாயாக!”என்று கூறிடவே மன்னன் மிகவும் ஆனந்தமடைந்தான். அந்த அன்ன மலையிலிருந்து அறுசுவையான உண்டிகள் தோன்றின. அனைத்தையும் ஸ்ரீ துர்வாச முனிவரின் பரிவாரங்களுக்கு அளித்திடவே அவர் மனமகிழ்ந்து, “நாடெங்கும் வருண கடாட்சம் பொழிவதாக”, என்று ஆசிர்வதித்துச் செல்லவே தெய்வீக மாமுனிவரின் திருவாக்கினால் உடனடியாக மழைப் பொழிவு ஏற்பட்டது. நாட்டிற்கும் சுபிட்சம் கிட்டியது.
அன்னமலையைக் கொண்டு துர்வாச முனிவருக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் அன்னதானமிட்டால் என்ன பலன் கிட்டும்? உத்தம தெய்வீக முனிவரான ஸ்ரீதுர்வாசரின் திருவயிற்றில் சிறிது அன்னத்தை இட்டமையால்தான் அவர் மன மகிழ்ந்து கோடானு கோடி மக்களுக்கு அன்னத்தை அளிக்க வல்ல மாமழைப் பொழிவை இறையருளால் பெற்றுத் தந்தார்.
இதுவே ஒரு முனிபுங்கவருக்கு அன்னதானம் இடுவதன் பெரும் பலனாம்!
அண்டைக் காலம் வரை வாழ்ந்து அன்றும் இன்றும் என்றும் அருள்பாலிக்கும் பூண்டி மஹான் ஆற்று சித்த சுவாமிகள் தமக்கு அடியார்கள் அளித்த காணிக்கைகளையும் பொருட்களையும் (வாழைப் பழம், பூ, தேங்காய் அனைத்தும்) ஒரு அறைக்குள் போட்டு விடுவார்கள். இவையே ஒரு குன்று போல் குவிந்து விடும். எவ்வளவு நாட்பட்டாலும் எவ்வித நாற்றமும் ஏற்படாது! இவருடைய ஜீவசமாதி போளூர் கலசப்பாக்கம் அருகே பூண்டி கிராமத்தில் உள்ளது! தரிசித்து அனுகிரஹம் பெறுங்கள்!
ஆயிரம் பேருக்குத் திருஅண்ணாமலை திருத்தலத்தில் உணவளித்தால் ஒரு சித்புருஷரோ, மஹரிஷியோ, யோகியோ நிச்சயமாக வந்து அன்னத்தைப் பெற்று ஆசி கூற வேண்டும் என்பது இறைநியதி. ஒரு சித்புருஷரோ, மஹரிஷியோ, யோகியோ அன்னத்தை ஏற்றால் போதுமே அவருடைய ஆசீர்வாதத்தால் லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான ஜீவன்களுக்கு அருளாசி கிட்டுமே என்ற இறைப் பெரும் வரத்தை எண்ணித்தான் திருஅண்ணாமலையில் அன்னதானத்தை இடுதல் மிகவும் விசேஷமானது என்று காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது! இவ்வாறு அண்ணாமலையில் பல கோடி ஜீவன்களுக்கும் எண்ணற்ற மஹரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் அன்னம் புகட்டியமையால் சித்புருஷர் கூட்டிய சிறு அன்னமலை நின்ற இடந்தனில் தெய்வீகப் பேரொளி வீசியது!
இறை நடன உற்சவமே பிரதோஷம்!
ஸ்ரீவெள்ளை வேம்பு மாரியம்மன்
திருக்கோயில் திருவாவடுதுறை
இதோ! ...... திருவோட்டுச் சித்தர் தன்னுடைய அன்னமலை அருகே நின்று கொண்டிருக்கின்றார். அருகில் ஐராவத யானையும் நின்று கொண்டிருக்கின்றது. அக்காலத்தில் தினந்தோறும் திருஅருணாசல மூர்த்தியானவர் தன்னைத் தானே வலம் வருவதுபோல் உற்சவ மூர்த்தியாய் ஸ்ரீ அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.
அன்றைக்கு ஸ்ரீ அருணாசல மூர்த்தி உலா வருகையில்...
திருவோட்டுச் சித்தர், ஐராவத யானையிடம் சுவாமியைத் தாங்கி வருகின்ற இறைப்பணியை மேற்கொள்ளுமாறு பணித்திடவே ஐராவதமும் ஆனந்தப் பெருக்குடன் தன்னுடைய முதுகில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியின் பல்லக்கைத் தாங்கி வந்தது! இது காண்பதற்கு தேவ காட்சியாக இருந்தது!
பலகோடி இந்திர மூர்த்திகளைத் தாங்கி பவனி வந்த ஐராவதத்திற்கே எத்தனையோ கோடி ஆண்டுகளின் தவத்திற்குப் பிறகுதான் ஸ்ரீ அருணாசல மூர்த்தியைத் தாங்கி வலம் வருகின்ற வரம் கிட்டியது என்றால் எத்தகைய பாக்கியத்தைப் பெற்றிருந்தால் ஒருவருக்குக் கோயிலில் இறைவனைத் தாங்குகின்ற பாக்கியம் கிட்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இதைக் கொண்டுதான் பிரதோஷ நேரத்தில் உற்சவமூர்த்தியைத் தாங்கி உலா வருவதைப் பெறுதற்கரிய பாக்கியமாகக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.
இதோ .....
ஐராவதம் தன் திருத்தோளிலும், முதுகிலும் அருணாசல மூர்த்தியைத் தாங்கி பவனி வந்த கொண்டிருக்க...
திருவோட்டுச் சித்தருடைய அன்னமலை அருகே ஐராவதம் வந்து கொண்டிருக்கிறது...
திருவோட்டுச் சித்தர் அருணாசல மூர்த்தியை வணங்கி ஐராவதத்திற்கும் அண்ணாமலை தரிசனத்தையும் சுட்டிக் காட்டி அவ்வற்புத தரிசனத்தைக் காண வைத்து அதற்குரிய விளக்கங்களைத் தந்தார்.
இதுவே அன்னபூரண தரிசனம்!
நாட்டின் வறுமையைப் போக்கக் கூடியது! ஐராவதமும் திருவோட்டுச் சித்தர் காட்டிய திசையில் நின்று திருஅண்ணாமலையாரை வழிபட அவர் தாங்கி வந்த அருணாசல மூர்த்தியிடமிருந்து ஒளிப் பிரவாகம் பெருக்கெடுத்தது! இவ்விடத்தில் தானே ஸ்ரீ துர்வாச மாமுனிவர் தன்னுடைய பல்லாயிரக் கணக்கான சிஷ்யர்களுடன் அன்னமுண்டு மாரியைப் (மழையைப்) பெய்யச் செய்தார். மாரி பெய்த இடத்தில் மாரி அம்பிகையாக மாரியம்மனாக அப்பேரொளி அன்னமலை இருந்த மலைப் பகுதியிலிருந்து உருவெடுத்தது.
ஆம்! அவ்வொளிப் பிழம்பே அம்பிகையாக மாறி வெள்ளை உருக்கொண்டு, கௌரியினின்றும் வந்த மாரியம்மனாகத் தோற்றம் அளித்திடவே அனைவரும் இவ்வருட்காட்சியைக் கண்டு ஆனந்தித்தனர். இவ்விடத்திலிருந்துதான் கடும் பஞ்சம் நீங்கும் வண்ணம் மாதம் மும்மாரிமழை பெய்யும் அனுகிரகத்தை ஸ்ரீதுர்வாச மாமுனி பெற்றுத் தந்தார்!
திருவோட்டுச் சித்தரும் ஐராவதத்திடம், “இவ்வம்பிகையைத் தாங்கிச் சென்று நீ தெற்கு நோக்கிப் பயணம் செல்வாயாக! பல ஆண்டுகளாக நிலவிய கடும் பஞ்சத்தால் மக்கள் பலவிதமான வெம்மை நோய்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். நீ அம்பிகையை தாங்கிச் செல்லும் இடங்களெங்கும் வெம்மையைத் தணிக்கின்ற, வெம்மை நோய்களை நிவர்த்தி செய்கின்ற வேம்பு இலைகளை அவ்வம்பிகையின் அருட்பிர சாதமாகத் தூவிக் கொண்டே செல்வாயாக!”
மாரியம்மன் அவதாரமஹிமை
“ஈஸ்வரியின் அனுகிரகத்தால் நீ அம்பிகையைத் தாங்கிச் செல்கின்ற இடமெங்கும் புனிதமான வேப்பிலை மரங்கள் இறைப் பிரசாதமாய்த் தோன்றும். இந்த வேப்ப இலைகளின் தெய்வீக மருத்துவ குணத்தினால் வெம்மையின் தன்மை தணியும். இதனால் மக்கள் பலவிதமான கோடை நோய்களிலிருந்து விடுபடுவார்கள். ஆங்காங்கே அம்பிகையின் அருட்பிரவாகத்தால் அகிலாண்டேஸ்வரியின் அம்சங்களைக் கொண்ட ஸ்ரீமாரியம்மன் அம்பிகையர் பல இடங்களிலும் எழுந்தருள்வர். எனவே நீ மாரியம்மனாம் கெளரி தேவியை தாங்கிச் சென்று தெற்கு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிடுவாயாக! எங்கு இந்த அம்பிகை திருக்கோவில் கொள்கின்றாளோ அந்த இடத்திலேயே நீ மாரி அம்பிகைக்கு என்றும் நிழலாக இருப்பாயாக! இன்று பூமியெங்கும் படர்ந்துள்ள கோடை நோயைத் தணிக்கின்ற இறைப் பணியைச் செய்வாயாக!”என்று வேண்டிட...
இவ்வாறுதான் ஆங்காங்கே அகிலாண்டேஸ்வரியின் அருட்தோன்றலாக ஸ்ரீ மாரியம்ம தேவி தெய்வ நாயகி மூர்த்திகள் தமிழகமெங்கும் தோன்றினர்.
“முதலில் நீ அருணாசல மூர்த்தியைத் தாங்கினாய்! அடுத்ததாக நீ ஆதி சிவனின் அம்பிகையாகிய மாரியம்மனாம் கெளரியையும் தாங்கிச் செல்லும் பாக்யத்தைப் பெற்றுள்ளாய்! எனவே சர்வேஸ்வரனையும், சர்வேஸ்வரியையும் தாங்கியவர்களுக்குத் தான் இந்திர மூர்த்திகளை தாங்கிச் செல்கின்ற வாகனமாக அமைகின்ற - நிரந்தர பரிபூரண வாகன தேவமூர்த்தியாகும் பாக்கியம் கிட்டும். நீ வேண்டி நிற்கும் இப்பெருவரத்தையும் நீ பெறுவாயாக!”என்று கூறி ஆசிர்வதித்தார்.
அதன்படியே வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த கெளரி அம்பிகையை முதுகில் ஏற்றிக் கொண்டு வழியெங்கும் வேப்பிலைகளைப் பிரசாதமாக சாலையின் இருபுறங்களிலும் தூவியவாறே ஐராவதம் தனது தெற்கு திசை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இவ்வாறாகத் திருவாவடுதுறை அருகே சென்று கொண்டிருக்கையில்..
ஓரிடத்தில் புனிதமான மஞ்சள் கிழங்கின் வாசனை திடீரென்று பரிமளித்தது....! எதிரே காவிரி கரை புரண்டு ஓடியது! காவிரி தேவியை வணங்குவதற்காக மண்டி யிட்டு ஐராவத யானை சற்றே அமர கெளரி அம்பிகை மஞ்சள் உருக்கொண்டு காவிரியில் புனித நீராடிடவே... ஆற்றின் நிறமும் மஞ்சளாகி மஞ்சள் ஆறாயிற்று.
அம்பிகை அக்கரையிலேயே மாரி அம்மனாக அமர்ந்துவிட அவ்விடத்திலேயே ஐராவதமும் அன்றும் இன்றும் என்றும் அம்பிகைக்கு நிழலாக அமைந்து தன் சூட்சும உடலில் இந்திர லோகத்திற்குச் சென்றது. வேம்பு விருட்சத்திலேயே தன் வடிவைக் கொண்ட மாரியம்மன் அம்பிகை காலப் போக்கில் தற்போது சிலா ரூபத்திலும் இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கின்றாள்!.
தோள் கண்டார் தோளே கண்டார்
முற்காலத்தில் மக்கள் இறைபக்தியில் சிறந்து விளங்கியமையால் தினசரி கிரிவல உற்சவம் என்பது கோயிலில் அப்போது மிகவும் எளிமையாக இருந்தது. சுவாமியைத் தோள் கொடுத்துத் தூக்குவதற்காக ஆயிரக் கணக்கான மக்கள் முன் வந்து நின்றார்கள். ஆனால் இன்றைக்கோ பல கோயில்களில் பிரதோஷ நேரத்தில் உற்சவ மூர்த்தியைத் தோள் கொடுத்துத் தூக்குவதற்கு எவரும் முன் வராமையினால் பிரதோஷ உற்சவங்களே நின்று போய்விட்டன. மாறாக வெறும் பூஜைகள் மட்டுமே பிரதோஷ நேரத்தில் நடைபெறுகின்றன. இதனைப் படித்த பிறகாவது அன்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து எல்லாத் திருத்தலங்களிலும் பிரதோஷ நேரத்தில் இறைவனுடைய திருமேனியைத் தாங்கி உலா வருகின்ற முக்கியமான வழிபாட்டைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
ஏனென்றால் பிரதோஷ நேரத்தில் தான் ஆதி சிவன் பலவிதமான நடனங்களை மேற்கொண்டு நமக்கு விதவிதமான தெய்வீக சக்திகளைத் தந்து அருள் புரிகின்றான். இறைவனுடைய 64000க்கும் மேற்பட்ட நடனங்கள் மஹரிஷிகளுக்கோ, தேவர்களுக்கோ மட்டும் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. பிரதோஷ நேரத்தில் பூலோக மக்களுக்காக அவற்றை இறைவன் ஆடிக் காண்பிக்கின்றான். இறைவனுடைய நடனம் என்பது வேத, ஒலி, ஒளிக் கிரணங்களைப் பரப்பி பலவிதமான அருளாசிகளை வழங்குகின்ற விசேஷமான நடனங்களாகும். இவற்றைப் பிரதோஷ உற்சவ வழிபாட்டு மூர்த்தி மூலமாகத்தான் பெற முடியும், உற்சவ மூர்த்தியின் உலா இல்லாமல் அர்ச்சனைகளோடு மட்டும் தயவு செய்து பிரதோஷ வழிபாட்டை நிறுத்தி விடாதீர்கள். அனைத்துக் கோவில்களிலும் கண்டிப்பாக உற்சவ மூர்த்தியின் உலா பிரதோஷ நேரத்தில் நடைபெற்றாக வேண்டும். இதற்கு பக்த கோடிகள் அனைவரும் பாடுபட வேண்டும்.
அடிமை கண்ட ஆனந்தம் |
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பால பருவ குருகுல வாச அனுபூதிகள்)
சிறுவன் உயரப் பறந்தாலும் அச்சம் ஏதும் ஏற்படவில்லை ! “யாமிருக்க பயமேன்”எனத் திருமந்திரம் ஓதும் சற்குருதான் அருகில் இருக்கின்றாரே!
கண்களை மூடியவாறு தியான நிலையில் தான் பெரும் பான்மையான ஆஸ்ட்ரல் பயணங்கள் தொடங்கும். ஆனால் பெரியவரோ “ ஜாக்ரத் ”எனப்படும் “ விழிப்பு” நிலையிலேயே விஸ்தாரமாக, பரிபூரண ஆஸ்ட்ரல் பயணத்தைத் தரவல்ல சித்புருஷரன்றோ ! மிகவும் கடினமான உத்தம் இறை நிலை கூடிய யோகப் பயிற்சியிது! இவ்வாறு கண்களைத் திறந்த நிலையிலேயே ஆஸ்ட்ரல் பயணம் செல்வதற்கு “ சஹஸ்ர பாத யோகம் ” என்று பெயர்!
“தெய்வீகத்துல எவ்வளவு உயர்ந்த நிலைக்குப் போனாலும் சரி, அது Seventh Planeஆக இருந்தாலும் சரி, அதுக்கு அடுத்த படில ஒருத்தரு எப்பவுமே உட்கார்ந்து இருப்பாருடா, அவர்தான் சித்புருஷன் !”
என்னே அற்புதமான விளக்கம், சித்புருஷர் என்பாருக்கு!
“ஏன் வாத்யாரே இந்த மாதிரி ஆஸ்ட்ரல்ல போகணும்? நீதான் உக்கார்ந்த இடத்துலேயே எல்லாத்தையும் பண்ணுவியே”
(மேற்கண்ட ஆஸ்ட்ரல் பயணமென்ன, இந்த மாதிரி எத்தனையோ முறைகள் தெய்வீகப் பயணங்கள் சென்ற பிறகும் கூட சிறுவன் நூற்றுக்கணக்கான முறைகள் கேள்விகளைக் கேட்டுத் தன் சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொண்டான்!)
“சிவ சிவ! அந்த மாதிரி சொல்லாதேடா! அடியேனுக்கு சித்தும் தெரியாது. ஒண்ணும் தெரியாது! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க, ஒரு சித்தனால ஆயிரம் கொய்யாப் பழத்தை ஒரு நொடில கொண்டு வர முடியும். ஆனா அந்த சித்தன் கூட, கொய்யாப் பழம் கெடைக்கற இடத்துக்கு நேரே நடந்து போய்த் தான் கொய்யாப்பழம் சாப்பிடுவான்! இதுதாண்டா உண்மையான சித்தனுக்கு அடையாளம்!”
பார்த்தீர்களா, எத்தகைய எளிமையான மற்றொரு விளக்கம் சித்புருஷருக்கு!
“ஆஸ்ட்ரல் பயணம்னு நம்ப சொல்றது ரொம்ப கஷ்டமான வேலைடா! உண்மையிலேயே மனசுக்கு தெய்வீக சக்தி கொடுக்கற யோகப் பயிற்சியிது! இங்கேந்து டெல்லி, அங்கேந்து பத்ரிநாத் போறது, அங்கேந்து நட்சத்திர மண்டலம் போறது, அங்கேந்து திரும்பி வரது, இப்படித்தான் ஆஸ்ட்ரல் பயணம்னு தோணும்! ஆனா எத்தனையோ விஷயங்கள் உள்ள இருக்கு! அந்தர் யோகத்துல இந்த மாதிரி ரகசியங்கள் நெறய இருக்கு!”
(பெரியவர் தந்த மன வழிப்பயண விளக்கங்களின் சிறு தொகுப்பைத் தனியாக அளிக்கின்றோம்)
எத்தனையோ மேகமூட்டங்களிடையே, மலைகளிடையே, பள்ளத்தாக்குகளிடையே...பெரியவரும் சிறுவனும் அன்று எத்தனையோ ஆயிரம் மைல்களைக் கடந்திருப்பார்கள்! அனைத்தும் சில நொடிகளில் முடிந்தாற் போலிருந்தது! ஆனால் காலத்தைக் கடப்பதற்குத்தானே மனவழிப் பயண யோகப் பயிற்சிகள்! காலங் கடந்தோர்க்கே கவின்மிகு முக்தி!
சிறப்பான ஆஸ்ட்ரல் பயணங்களாக விளங்கும் குறிப்பாக சற்குருவின் அருளுடன் கூட்டிச் செல்கின்றவற்றில் தான் பல அற்புதக் காட்சிகள் தென்படும். ஆனால் இவற்றைக் கண்டு மலைத்திடாது, திகைத்திடாது, ஆனந்தத்தினால் மனம் அதிர்ச்சியடைந்திடாது, இரத்த ஓட்டம் நின்றிடாது, மூளை செயல்படாது நின்றிடாது.சர்வ சாதாரணமாக இவற்றை ஏற்று நடத்திச் செல்கின்ற பாங்கு சற்குருவிற்கே உண்டு!
... சுற்றிலும் எங்கிலும் மணற்பாங்கு! எங்கு நோக்கினாலும் மணல் அலைப் படிவங்களே கண்ணுக்குத் தென்பட்டன!
... ஆம்... பெரியவரும் சிறுவனும் கீழிறங்கி விட்டார்கள்! சிறுவனால் நம்ப முடியவில்லை ! இவ்வளவு சீக்கிரமாக அதுவும் போனதும் வந்ததும் தெரியாமலா?
Smooth landing without jerks!
ஏறியதோ, இறங்கியதோ, பல்லாயிரம் மைல்களைக் கடந்ததோ எதையும் சிறுவன் அறிந்தானில்லை, உணர்ந்தானில்லை ... ஆனால் குருவருளாக “உணர்விக்கப்பட்டான் ”
நீ நீயாகவே இரு!
தரையைத் தொட்டதுமே ... நல்ல பசி சிறுவனுக்கு!
சிறுவனுக்கு இதுதான் ஆச்சரியமாக இருக்கும்! எதுவோ ?
பெரியவருடன் சேர்ந்து ஏதோ பெரிய தெய்வீக சாதனைகளைப் படைத்தது போல் முதலில் தோன்றும், இதனால் ஏதோ அருட்பெரும் திருவருள் சக்தி உடலில் ஏறியிருக்கும் என்று சிறுவன் எண்ணிய அடுத்த வினாடியே....மிக மிகச் சாதாரணமான தண்ணீர் தாகமும் வயிற்றுப் பசியும் உண்டாகி அவனைக் கேவலப் படுத்தி விடும்!
“சே, நம் தெய்வீக நிலை இவ்வளவுதானா?”
அப்போதெல்லாம் பெரியவர் சிரித்திடுவார்!
“எவ்வளவு பெரிய மஹானா இருந்தாலும் யோகியா, சித்தனா இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை வர்றதுக்காக, தாகத்துக்குக் கூட அவங்க தண்ணி குடிச்சாகணும்னு இறை நியதி! அப்புறம் நீ என்ன லார்ட் லிம்போவாக்கும்! நீ நீயாகவே இருடா! உன்னை மாத்தறதா வேண்டாமா, இருக்கறத வச்சு அட்ஜஸ்ட் பண்ணலாமா, இதெல்லாம் எங்க தலைவலி!”
இப்போதோ அதே போல் கடுந்தாகம்! கடும் பசி! சிறுவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை !
“ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்திருக்கலாமோ?”
தன்னையுமறியாமல் அவனுள் எழுந்த இந்த அபத்தமான கேள்வியைக் கண்டு அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது!
“இத்தனை ஆயிரம் மைல்களை நொடிப் பொழுதில் கடந்து கூட்டி வந்தவர்தானே இந்த தாகத்தையும் பசியையும் தந்துள்ளார்! இந்த எண்ணம் ஏன் உடனே வரவில்லை ?”
“ஆமாம், இந்தப் பாலைவனத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறோம்?”
அவனையுமறியாமல் இவ்வாறான பல கேள்விகள் எழுந்தன!
“காரண காரியமில்லாமல் இங்கு கூட்டி வருவாரா?” இதையும் அதே மனம்தான் கேட்கிறதா?
“வாத்யார் தான் சொல்லியிருக்காரே! ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பது சரீரங்கள் உண்டு! அதனால் ஒன்பது மனசும் உண்டு! ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி நினைக்கும். ஆனால் அவனவனோட கர்ம வினையைப் பொறுத்து இந்த ஒன்பதுல ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல நிலைல இருக்கும்! இந்த நல்ல மனசுகளுக்குள்ள மனுஷன் வாழக் கத்துக்கிட்டான்னா நல்ல தியானம் கூடும்...!”
சிறுவன் ஒருபுறம் தெய்வீக விஷயங்களை அசை போட்டுக் கொண்டே ஆத்ம விசாரஞ் செய்திட, மறுபுறம் பசி வயிற்றைக் கிள்ளியது! அவன் பெரியவரை மிகவும் பரிதாபத்தோடு பார்த்தான்!
“ம்..ம்..ம்.. எனக்குந் தாண்டா பசிக்குது! இப்படி ‘சோத்து மூட்டையா’ நாம் இருந்தாக்க என்னிக்குடாதெய்வீகத்துல முன்னுக்கு வர்றது?”
பெரியவர் கலகலவென்று சிரித்தவாறு எங்கேயோ புறப்பட்டார்!
“நீ இங்கேயே இருடா.. பின்னாடியே ஓடி வந்துடாதே.. இங்கு பயம் ஒண்ணும் கிடையாது. செஞ்சில வந்த மாதிரி நரி, புலி ஒண்ணும் இங்க வந்துடாதுடா! ஏதாச்சும் ரொட்டி, கிட்டி கெடைக்குதான்னு பாத்துட்டு வர்றேன்!”
செஞ்சி அனுபவங்கள் என்றதுமே சிறுவனுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது! அதில் தான் எத்தனை தெய்வீக அனுபவங்கள்! இதர லோகங்களில் வசிக்கும் பல உருவங்களுடன் கிட்டிய அற்புத அனுபவங்கள் அவை! பூலோகம் என்றால் இது ஒன்றுதான் என்று எண்ணி “குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும்” நமக்கு எத்தனையோ கோடி லோகங்களில் எத்தனையோ கோடி ஜீவன்கள் உறைகின்றன என்பதை உணர்த்தும் அனுபவப் பாடங்கள் அவை!
தற்கொலை “செய்து கொண்டு” ஆவியாய் அலைகின்ற ஜன்மங்களையும் பல இடங்களில் பெரியவர் சிறுவனுக்குக் காண்பித்திருக்கின்றார்! “உயிர்ங்கறது கடவுள் கொடுத்த பிரசாதம். தற்கொலை பண்ணிகிட்டு உயிரை மாய்ச்சுக்கறதுன்னா ஆண்டவன் முகத்துலேயே பிரசாதத்தை விட்டெறிஞ்சதா அர்த்தம்! இதுக்குத் தண்டனையாத் தான் சரீரம் இல்லாம அலைய வேண்டியதிருக்கும், இதைத்தான் பேய், பிசாசுன்னு சொல்லி ஜனங்க பயப்படறாங்க! இதெல்லாம் உண்மையே!
ஆனா விஷயம் தெரிஞ்சா இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்ல, ஆனா இந்த ஆவிங்ககிட்ட போகாம இருக்கறது நல்லது! ஏன்னா அந்த ஆவி உடம்புல இருந்துகிட்டு அவங்களோட வேதனைகள் நம்ம கிட்ட சொல்லறதுக்குத் துடியாத் துடிக்கறாங்க! நம்மள வழிமறிச்சு “எங்களோட வேதனைக் குரலைக் கேட்டு ஆறுதல் சொல்லி, எங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணிட்டுப் போங்க”, என்று சொல்ல அந்த ஆவிங்க துடிச்சுகிட்டு இருக்கும். ஆனால் பேச்சு வராது, மொழி புரியாது, நம்ப கண்ணுக்கும் தெரியாது! என்ன நரக வேதனை பாரு! தற்கொலை பண்ணிகிட்டாலும் கொலை, கொள்ளைன்னு பெரிய பெரிய பாவங்களைச் செஞ்சாலும் இதுதாண்டா தண்டனை!”
இவ்வாறாகச் சிறுவனுக்கு ஏதேதோ நினைவுகள் வந்ததுமே... சிறுவன் திடீரென்று நினைவுகளிலிருந்து மீண்டு நடப்புலகிற்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்திடவே, ...பெரியவரைக் காணவில்லை !
“இவர் இந்த மணல் காட்டில் எங்கு சென்று எப்படி எதைக் கொண்டு வருகிறார்?” - என்று வேடிக்கை பார்க்க எண்ணிய சிறுவனுக்கு ஏதேதோ நினைவுகளைத் தந்து தான் சென்ற பாதையையே மறைத்து விட்டாரோ! சிறுவன் தலையில் குட்டிக் கொண்டான்.
“.... எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்...!''
சிறுவன் நான்கு திசைகளில் மட்டுமல்ல, எட்டுத் திக்குகளிலும் பார்த்தான்! அவர் சென்ற சுவடே தெரியவில்லை! அவருடைய காலடிச் சுவடிகள் கூட மண்ணில் தெரியவில்லை !
... “ஆமாம், எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சிறு குடிசை கூடக் கண்ணில் தென்படவில்லையே! பெரியவருடைய எத்தனையோ அற்புதங்களைக் கண்டு அவன் ரசித்திருக்கின்றான்! ஆனால் அவரோ எதையும் செய்ததாகக் கூறிக் கொண்டதுமில்லை. அதைப் பற்றிப் பேசினாற் கூடக் கண்டு கொள்வதில்லை!
“... ஏண்டா ! ஏதாச்சும் இறை நாமம் சொல்லிக்கிட்டு, இல்லாட்டி தியானம் பண்ணிகிட்டு இருக்க வேண்டியதுதானே! சும்மா டயத்தை வேஸ்ட் பண்ணாதேடா! என்ன பண்றது, எங்களை ஆராய்ச்சி பண்றதுக்கே உனக்கு நேரம் பத்தலை! நாங்கள்ளாம் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட மெய்ஞான ஆளுங்கன்னு உனக்கு ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு! இங்க இந்த மனுஷ உடம்புலேயே எங்க காலடிச் சுவட்டையை உன்னால் புடிக்க முடியலை, இந்த உடம்பை விட்டுக் கிளம்பினோம்னா எங்களைக் கண்ணால் கூட பாக்க முடியாதுடா! உஸ்ஸுனு சொல்றதுக்குள்ள ஒன்பதாயிரம் கோடி மைல் தாண்டியிருப்போம்டா! அதனால, எங்க மேல முழு நம்பிக்கை வச்சு வந்தா ஏதாச்சும் முக்தி, மோட்சம்னு கொஞ்சம் கண்ணுல காட்டுவோம். இல்லாட்டி மாடு, பல்லி, மனுஷன், முருங்கைக்காய்னு ஏதாச்சும் பிறவிதான், அது கூடச் சொல்ல முடியாது! தலை கீழாகக் கட்டித் தொங்க விட்டு ஒரு புழு, பூண்டாப் பிறவி கூட இல்லேன்னு சொல்லிடுவாங்க தெரியுதா?”
“உன்ன கஷ்டப்பட்டு ஆஸ்ட்ரலா இங்க ஏன் கூட்டி வரணும் ? எனக்கு என்ன தலையெழுத்தா உன்னோட இந்த இடத்துக்கு வரணும்னு ! ஆச்சு, ஏதோ நாலஞ்சு வருஷமா இந்தக் கிழவனை நம்பி சுத்திகிட்டு வர்ற! வீட்டுல, பள்ளிக் கூடத்துலன்னு அடி, உதை வாங்கிகிட்டு, ஏதோ ஒரு நம்பிக்கைல எம் பின்னாடி சுத்தறியே! எவ்வளவு கோயில்ல திருப்பணி செஞ்சுருக்க! கால்ல கொப்பளம் வர்ற மாதிரி வெயில் மழை, கல்லு, முள்ளு பாக்காம ஆயிரக் கணக்கான மைல் நடந்துருக்க! கைலாசம், மானஸரோவர், கேதாரு, பத்ரிநாத்துன்னு அலையோ அலைன்னு அலைஞ்சுருக்க! திருஅண்ணாமலையை மாஞ்சு மாஞ்சு சுத்தி வந்திருக்க ..... இவ்வளவும் எதுக்குடா...? (அவர் கண்களில் நீர் மல்கியது). இந்த யூஸ்லெஸ் கிழவனை நம்பித்தானே!”
“பாவம், இந்த சின்ன வயசுல உனக்கு முக்தி, மோட்சம் கேட்கக் கூடத் தெரியாது! கலியுகத்து அசடுகளாட்டம் காரு, பங்களா, பணமும் உனக்குத் கேட்கத் தெரியாது! உனக்குக் கேட்கத் தெரிஞ்சதெல்லாம் பரோட்டா, விமுதி, பூரி கிழங்கு அவ்வளவுதான்! அது கூட நீ கேக்கும்போது நான் தர்றது கெடையாதுடா! நானா பாத்துக் கொடுத்தாத்தான் உண்டு! அப்படி என்னடா எங்கிட்ட இருக்கு என்னைச் சுத்தி சுத்தி வர்றீயே, சொல்லுடா ராஜா...'' அவர் குரல் தழுதழுத்தது!
சிறுவனுக்கு உத்வேகம் பொங்கி விட்டது!
“நம் வாத்யாரைக் கண் கலங்க விடுவதா!”
“அதெல்லாம் நீ நல்லதுதான் பண்ணுவே, அடிச்சாலும் புடிச்சாலும் என்னோட நல்லதுக்குத்தான்னு தெரியும் வாத்யாரே... அப்...'' சிறுவன் மேலும் தொடர்வதற்குள்,
“அப்படீன்னா, இப்போதைக்குத் திங்கறதுக்கு இதான் கெடச்சுது, எங்கே கொஞ்சம் தின்னு பசியாத்திக்க பாக்கலாம்”
பெரியவரின் குரலே மாறி விட்டது! அவன் கையில் இரண்டு, மூன்று சுக்கா ரொட்டிகளைத் திணித்தார். அந்த சுக்கா ரொட்டிகளைப் பார்த்ததுமே ... சிறுவனுக்கு முழி பிதுங்கி விட்டது!
வறண்டு ... காய்ந்த ரொட்டி! பிய்த்தாலும் பியக்க முடியாத ரொட்டி! காய்ந்து கரடு முரடான ரொட்டி! ... காய்ந்த ரொட்டியின் கவின்மிகு வர்ணனையே ஆறு, ஏழு பக்கங்களுக்கு வரும் போலிருக்கிறதே!
“... தெலுங்குல ஒரு பழமொழி சொல்லுவாங்கடா காலே கடுபுகு மண்டே பூடித! - அதாவது பசியால் காயற வயித்துக்கு எரியற சாம்பல் கெடச்சாக் கூடப் போதும்னு...ஏதோ காயற நம்ப வயத்துக்கு... ஆனா சும்மா சொல்லக் கூடாதுடா... இந்த ரொட்டிய ரொம்ப நல்லாப் பண்ணியிருக்காங்க தெரியுமா, கொஞ்சம் சூடு கொறஞ்சு போச்சு, அவ்வளவுதான்...”
கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நாத்தழு தழுச்கப் பேசிய பெரியவரெங்கே, இப்போது “வழக்கமான தொனியில்” பேசும் பெரியவரெங்கே!
அப்பப்பா என்னே நடிப்பு!
“... ஆமாண்டா, சித்தனா இருந்து கிட்டு சாதாரண மனுஷனா நடிக்கறது ரொம்பக் கஷ்டமான வேலைடா,ஆனா ஒரு சாதாரண மனுஷன், பெரிய சித்புருஷனாட்டம் நடிக்கறது. இந்த காலத்தில ரொம்ப ரொம்ப ஈசியாப் போச்சுடா!”
சிறுவன் பெரியவரை ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டு, ரொட்டியை மிகவும் கஷ்டப்பட்டு
பி....ய்..த்.....தா...... ன்! இல்லை, இல்லை, பிய்க்க முயன்றான்!
“... இதுக்கு ஏண்டா இவ்வளவு கஷ்டப்படற!”
பெரியவர் ஒரு ரொட்டியை எடுத்து சர்வ சாதாரணமாகத் துண்டு துண்டாக்கி வாயில் போட்டுக் கொண்டு,
“சப்ஜி இல்லாம, தொட்டுக்க இல்லாம எப்படித் திங்கறதுன்னு நானே முதல்ல யோசிச்சேன்! அப்பப்பா என்னா டேஸ்ட்! எதுவுமே இல்லாம் வெறுமனேயே தின்னுடலாம் போலிருக்கே!”.
சிறுவனுக்குக் கோபம் கோபமாக வந்தது! ஒன்றுமில்லா ரொட்டி தின்னும் படலம் இவ்வளவு விரிவானேன் என்றுதான் தோன்றும்.
சிறுவனுக்குக்கூட, “ஆப்டர் ஆல், ஒரு ரொட்டி தின்பதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்!” என்று கூடக் கேட்கத் தோன்றிற்று!
ஆனால்... ஒன்றைச் சிந்தித்துப் பார்த்தீர்களா? சற்குருவின் திருக்கரங்களிலிருந்து எதைப் பெற்றாலும் அது திவ்யமான இறைப் பிரசாதமே என்பதை என்றுதான் உணர்வது? மேலும் பெரியவரோ “பசிக்குக் கிடைத்ததை உண்டு விடு! அது அறுசுவை உண்டியானாலும் சரி, அருகம்புல்லாயிருந்தாலும் சரி! ஆனால் அது கிடைத்தால் தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிக்கக் கூடாது” என்பார்!
இப்படி நம்பிக்கையை வளர்த்தால்தான் சற்குருவின் மேல் ஆழ்ந்த பரிபூரண நம்பிக்கையாக மலர்ந்தால்தான் இறைவன் யார் என்ற உண்மையே புலப்படத் தொடங்கும்! இதுதான் இறை தரிசனத்தைப் பெறுவதற்கான இரண்டாம்படி!
..... இந்த ஆஸ்ட்ரல் பயண அனுபவத்திற்குப் பிறகுதான் திருக்கழுக்குன்றத்திலும், திருஅண்ணாமலையிலும் சிறுவனுக்கு மலப்புழுச் சித்தரின் தரிசனம் கிடைத்தது!
தரிசனம் மட்டுமா?
அவர் திருக்கரங்களிலிருந்து நாறுகின்ற “மலமே” பிரசாதமாகக் கிடைத்தது! ஆனால் பெரியவரின் திருக்கரங்களினால் “அம்மலத்தைப்” பெற்றபோதுதான் அப்பிரசாதமே “மும்மலம் நீக்கும் மாமருந்தென” இனிப்புச் சர்க்கரைப் பொங்கலாய் மலர்ந்ததைக் கண்டு அதிசயித்தான் சிறுவன்! எனவே சற்குரு அளிக்கின்ற காய்ந்த ரொட்டியால் கூட மாய்ந்து போகும் தீவினைகள் என்பதுதானே அனைவரும் பெறுகின்ற பாடம்! ஆனால் அந்த அளவிற்கு நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டுமே!
மாளயபட்ச அமாவாசை |
மாளய பட்ச காலத்தில் அனைத்து தேவாதி தேவர்களும், தேவ மூர்த்திகளும் பித்ரு லோகங்களில் குழுமிப் பலவிதமான இறை வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பித்ரு தேவர்களின் ஆசியை வேண்டி இத்தகைய தெய்வீக வழிபாடு தேவாதி தேவர்களின் மூலமாக மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றது. ஏனென்றால் பித்ருக்கள் இல்லாத எந்த ஜீவனும் உலகத்தில் கிடையாது. அதாவது ஒவ்வொரு ஜீவனும் எவ்வித தேசப் பாகுபாடின்றி பித்ருக்களின் வழி வந்ததே ஆகும்.
எனவேதான் ஜீவன்களிடையே எவ்வித ஜாதி, மதம், இன வேறுபாடும் இல்லை ! ஆண், பெண் என்ற வேறுபாடும் கூடக் கிடையாது. இது மட்டும் அல்லாது மனிதன், விலங்கு, தாவரங்கள் என்று எவ்வகையான வேறுபாடும் நாம் கொள்ளலாகாது. ஆனால் இது மிகவும் உத்தமமான இறை நிலையில் பெறக்கூடிய பேரறிவாகும். இவ்வறிவைப் பெற்றால் தான் இறை தரிசனம் நமக்குப் புலப்படும்.
பித்ருக்களின் வழிபாடு நம்முடைய பூலோக வாழ்க்கை செம்மையுடன் நடப்பதற்குப் பெரிதும் உதவுகின்றது. பூலோகத்தில் உள்ள மாயைகளில் நாம் ஆட்பட்டு பேராசை, குரோதம், பண ஆசை, பகைமை போன்றவை காரணமாகப் பலவிதமான கர்ம வினைகளில் உழல்கின்றோம். இவற்றிற்கிடையில் மனிதர்கள் தாங்கள் பிறப்பெடுத்ததற்கான காரண, காரியங்களையே மறந்து விடுகின்றார்கள், பிறவிப் பெருங்கடலை நீ(ங்)க்குவதற்கான நல்வழிகளை நிறைவேற்றுவதற்காக மனிதப் பிறவியைப் பெற்ற ஒருவன் தன் வாழ்நாளில் இந்த முக்கியமான குறிக்கோளை உணராது, தான் நன்றாகக் கல்வி, செல்வத்துடன், போகத்துடன் வாழ்வதற்கான முறையற்ற அதர்ம நெறிகளிலேயே தன் வாழ்வைச் செலவழித்து விடுகின்றான். எனவே நம்முடைய வாழ்க்கைக் குறிக்கோளாகிய இறை தரிசனத்தைப் பெறுவது, தீவினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது, பிறஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பல தியாகங்களை மேற்கொள்வது இவற்றை எல்லாம் ஆசியாக நமக்குப் பெற்று தருவதே பித்ரு வழிபாடாகும்.
துவிதியை, திருதியை என 14 திதிகளில் திதிகளுக்கு மாளய பட்ச காலம் அமைந்து 15-வது திதியாக புரட்டாசி மாளய பட்ச அமாவாசை வருகின்றது அல்லவா! இதில் ஒவ்வொரு திதிக்குரிய பலவிதமான தர்ப்பண வழிபாடுகள் உண்டு. இவற்றை விளக்கினால் மாளய பட்ச புராணமாகவே மாறிவிடும். எனினும் கலியுக வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ப, பகுதான்ய வருட மாளய பட்சத்தின் ஒவ்வொரு திதிக்குரித்தான தர்ப்பண முறைகளையும் பலன்களையும் மட்டும் சித்புருஷர்கள் அருள்கின்ற வழிமுறையிலேயே இங்கு நாம் அளிக்கின்றோம்.
பிரதமை திதி (முதலாம் நாள்)
சர்க்கரை வியாதியால் இறந்தவர்களுக்கும், ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்று இறந்தவர்களுக்கும், தன்னுடைய பிள்ளையின் /பெண்ணின் திருமணத்திற்குக் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க முடியாமலே வேதனையுடன் இறந்தவர்களுக்கும் இன்று முக்கியமான சிராத்தம் செய்வதும் தர்ப்பணம் அளிப்பதும் மிகவும் விசேஷமானதாகும், இவர்கட்கான நற்கதி முறைகளை இந்தப் பிரதமைத் திதிக்குரிய மாளயபட்ச வழிபாடு நமக்குத் தருகின்றது.
மேற்கண்ட முறையில் இறந்தோர்க்கு அவர் நம் உறவினராகவோ, நண்பராகவோ, சகஅலுவலராகவோ இருந்தாலும் சரி தர்ப்பையில் வன்னி இலைகளை வைத்து எள்ளுடன் சேர்த்துத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இன்று ஆப்பம், அரிசிப் பாயாசம், பால் பேணி போன்ற உணவுப் பொருட்களைப் பித்ருக்களுக்குப்படைத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் மேற்கண்ட முறையில் இறந்தோர்க்குப் பித்ருக்கள் மூலமாக இறைவன் நற்கதியை அருள்கின்றான். மேலும் இத்தகைய குறைகள் நம் வாழ்விலும், நம்முடைய சந்ததியினர் வாழ்விலும் ஏற்படாமல் இருக்கவும் இப்பிரதமைத் தர்ப்பண பூஜை உதவுகின்றது.
ஆனால் மேற்கண்ட இத்தகைய விசேஷமான பலன்களையும் நல்வழிமுறைகளையும் தருகின்ற மாளய பட்ச வழிபாடு இந்த பகுதான்ய வருடத்திற்கு மட்டுமே உரித்தானது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டியது ஆகும். இதனை நாம் விட்டு விட்டோமானால் அடுத்த 60 வருடங்கள் காத்திருந்து இதற்குப் பிறகு வருகின்ற பகுதான்ய வருடத்தில் தான் இத்தகைய மகிமை வாய்ந்த பலாபலன்களைப் பெற முடியும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய குறுகிய மனித வாழ்வில் இது சாத்யமானதா? எனவே கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள்! அடுத்த வருட மாளய பட்ச பலன்கள் மாறும்!
இப்பிரதமைத் தர்ப்பணப் பூஜையில் நம்முடைய நடப்பு வாழ்விற்கான பலன்கைளையும் நாம் பெற வேண்டும்அல்லவா! அவை எங்ஙனமோ? நம்முடைய குடும்பத்தின் மேல் பிறர் கொண்டுள்ள பொறாமையினால் தான் பலவிதமான கண் திருஷ்டிகளும் பல தோஷங்களும் ஏற்பட்டு, குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுதல், அடிபடுதல், வீட்டில் பொருட்கள் உடைதல், பலவிதமான சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படுதல், திருடு போதல் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றிற்கு நிவர்த்தியைத் தேடும் வண்ணம் இப்பிரதமைத் திதி அன்று, தர்ப்பணத்திற்குப் பிறகு (முற்றிலும்) பருத்தி இழைகளால் ஆன கதர் ஆடைகளை இறைவனுக்குச் சாற்றி (சிவபெருமானோ, பெருமாளோ, எந்த இறை மூர்த்தியாக இருந்தாலும் சரி) அதனை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் தோஷங்கள் விலகுவதோடு மட்டுமன்றிக் குடும்பத்திலும் பண வரவும் முறையான வழியில் பெருகிடும்!
துவிதியை (இரண்டாம் நாள்)
இத்திதியில் செய்யப்படுகின்ற சிராத்தம், தர்ப்பணம் பூஜைகளினால் ஆஸ்த்மா நோயால் அவதியுற்று இறந்தோர், சுவாசம் மற்றும் காச நோயால் இறந்தோர், ஒரேயொரு ஆண் குழந்தையைப் பெற்று அப்பிள்ளையால் எவ்விதப் பிரயோஜனமும் இல்லாமல் வாழ்க்கையில் விரக்தியுடன் நொந்து இறந்தோர், மற்றும் மருமகள்களால் துன்புறுத்தப்பட்டு இறந்தோர் - போன்றோர்க்கு நற்கதி மற்றும் ஆத்ம சாந்தி அளிக்கும் வண்ணம் இத்திதித் தர்ப்பணப் பூஜை அமைகின்றது.
மாளய பட்சத்தின் துவிதியைத் திதி அன்று மேற்கண்ட முறையில் மரணத்தைத் தழுவியோர்க்கு, சக்கர தீர்த்தம், மற்றும் சூரிய தீர்த்தம் உள்ள ஆலயங்களில் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். இன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும், இல்லத்திலேயே மஞ்சளை இடித்துச் செய்த குங்குமத்தைத் தானமாக அளிப்பது, செந்தாமரை நிறத்தில் உள்ள ஆடை - போன்றவற்றைத் தானமாக அளித்தல் - இவற்றால் சந்ததி நன்கு தழைக்கும் . கோத்ராதிபதிகளின் ஆசியும் கிடைக்கும்.
கோத்ராதிபதிகள் என்போர் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதில் ஜாதி, நாடு, மத வேறுபாடே கிடையாது. நாம் அனைவருமே, தாவரங்களாயினும் சரி, விலங்காயினும் சரி, மனிதனாயினும் சரி, ஒவ்வொரு மகரிஷியின் பரம்பரையின் வழி வந்தவர்கள் ஆவர். அவரவர் தமக்குரிய கோத்ராதிபதி ரிஷியை அறிந்து கொண்டு அவரைத் தினந்தோறும் பூஜித்துத் தர்ப்பணத்தில் அவருக்கும் அர்க்கியம் அளித்து வந்தால் நம்முடைய சந்ததி நன்கு தழைக்கும்.
திருதியை (மூன்றாம் நாள்)
மாளய பட்சத்தின் திருதியைத் திதியில், இரத்த அழுத்தம் மற்றும் முட்டி வலி காரணமாக இறந்தோர்க்கும், வெளிநாடுகளில் வாழ்கின்ற குழந்தைகளை எண்ணி, ஏங்கி, தனிமையில் வாடி, தவித்து இறந்தோர்க்கும், மாமியாரால் துன்புறுத்தப் பட்டு வருத்தத்தில் இறந்தோர்க்கும் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் அளித்தலால் இவர்களுக்கு நற்கதிப் பேறு கிடைக்கும். இன்று அக்னி தீர்த்தம் உள்ள ஆலயங்களில் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஆலயங்களைப் பற்றிய நூல்களை நிறையப் படியுங்கள். இவற்றில் தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற ஸ்தலங்களில் மற்றும் பல்வேறு ஆலயங்களிலும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், எம தீர்த்தம், சித்தாமிர்தத் தீர்த்தம் என்று பலவிதமான தீர்த்தக் குளங்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள தீர்த்தம் பற்றிய குறிப்பைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு உங்களுடைய இறை அறிவையும் பெருக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு இறை நூல்களைப் படிக்கும் பொழுது செலவிடுகின்ற நேரமும், வழிபாட்டிற்குரிய நேரமாகவே அமைகின்றது. இதனால் இவ்வருமையான நேரத்தில் உங்களுடைய மனம் எந்த விதமான தீய எண்ணங்களையோ, தீவினைகளையோ செய்வதில்லை. இதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இத்திரிதியைத் திதியில் சிகப்பு நிற ஆடை தானமும், சிகப்பு நிற (தக்காளி) சாத தானமும் மிகவும் சிறப்புடையதாகும். இதனால் தடைபட்ட திருமணங்களில் உள்ள இடையூறுகள் விலகி திருமணம் நடைபெற நல்வழி பிறக்கும்.
சதுர்த்தி திதி (நான்காம் நாள்)
இன்று வயிறு, சிறுநீரக நோயால் இறந்தோர்க்கும், பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் தான்தோன்றித்தனமாகத் தானே கணவனை/மனைவியினைத் தேடித் திருமணம் செய்து கொண்டு தாய், தந்தையரைத் தவிக்க விட்டு இவ்வகையில் வருத்தமுற்று இறந்த பெற்றோர்களுக்கும், மாமனாரால் துன்புறுத்தப்பட்டு இறந்தோர்களுக்கும் இத்தகைய மாளய பட்ச சதுர்த்தி திதிச் சிராத்தமும், தர்ப்பணமும் நற்கதியைத் தருகின்றது.
இன்று பிரம்ம தீர்த்தம் உள்ள ஆலயங்களில் தர்ப்பணம், மற்றும் திவசம் செய்தல் மிகவும் விசேஷமானதாகும். இன்று கொழுக்கட்டை, மற்றும் கிளிப் பச்சை நிறத்தில் உள்ள ஆடைகளைத் தானம் செய்வதால் விரோதிகளால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.
பகைமை என்பது உறவு முறையிலும், அலுவலகத்திலும் நிலவி நம்முடைய வாழ்க்கையைப் பெரும் அளவில் பாதிக்கின்றது. எதிரிகளை அழித்தல் என்றால் அவர்களைக் கொன்று விடுதல் என்று பொருள் அல்ல, குறிப்பாக சரபேஸ்வர் வழிபாடானது எதிரிகளை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என்பதை நாம் அறிவோம், எதிரிகளை அழித்தல் என்றால் நமக்குப் பகைவர்களாக, விரோதிகளாக விளங்குகின்றவர்களுடைய மனதின் உள்ளே விளங்குகின்ற பகைத் தன்மைகளை அழித்து, அவர்கள் மூலம் ஏற்படுகின்ற வன்முறைகளை, கலவரங்களைத் தடுத்து நிறுத்துவதே எதிரிகளை அழித்தல் என்பதற்குப் பொருளாகும். இவ்வாறு பகைமையை அழிப்பதற்கு இச் சதுர்த்தி திதித் தர்ப்பணம் பெரிதும் உதவுகின்றது.
பஞ்சமி திதி: (ஐந்தாம் நாள்)
தலையில் ஏற்பட்ட நோயால் இறந்தோர், பெற்றோர்களைத் தவிக்க விட்டுத் தானும், தன் குடும்பமும், மாமனார், மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்திட, இவ்வேதனையிலேயே இறந்த பெற்றோர்களுக்கும் இன்றைய பஞ்சமி திதி, சிராத்த தர்ப்பண வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன.
இன்று இத்தகையோர்க்கு வேல்வடித் தீர்த்தம் (வேலால் குத்தித் தீர்த்தம் ஏற்பட்ட ஸ்தலம்) உள்ள இடங்களில் தர்ப்பணம் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். பெரும்பாலும் இது முருகன் ஸ்தலங்களில் அமைந்திருக்கும். (வல்லக் கோட்டை)
இன்று பூரணக் கொழுக்கட்டையும், மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளைத் தானம் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். இதனால் எப்போதும் வியாதிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு நோய் நிவாரணம் கிட்டி, மன சாந்தியும் அமையும்.
சஷ்டி திதி (ஆறாம் நாள்)
தாய் தந்தையரை இழந்து பாட்டி, தாத்தாவால் வளர்க்கப்பட்டு வாழ்வோர் தம்முடைய பாட்டி, தாத்தாவிற்கு இன்று தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும். இதற்கு இச்சஷ்டி தர்ப்பண வழிபாடு மிகவும் விசேஷமானதாக அமைகின்றது. இவை அனைத்தும் பகுதான்ய வருடத்திற்கு மட்டும் உரியன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இன்று அகஸ்திய தீர்த்தம் உள்ள இடங்களில் தேனையும், தினைமாவையும் இறைவனுக்குப் படைத்து பச்சையில் வெள்ளைப் பூ கலந்த ஆடை அதாவது பச்சையும், வெண்மையும் குறிப்பாக பச்சையில் வெள்ளைப் பூ உள்ள ஆடைகளையும் தானம் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். இதனால் பித்ரு தோஷங்களும், நாக தோஷங்களும் தீர்ந்து சந்ததி இல்லாதவர்களுக்கான ஏக்கங்களைத் தீர்க்கும் நல்வழிகள் கிட்டுகின்றன.
சப்தமி திதி : (ஏழாம் நாள்)
சகோதர, சகோதரிகளை ஏமாற்றி அவர்களைத் தவிக்க விட்டு, இவ்வகையில் தனித்து, வாடி, வேதனைப்பட்டு இறந்த சகோதரிகளுக்கு இன்று தர்ப்பணம் அளித்தால் இவ்வாறு செய்தமைக்காக ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும், அவர்களுடைய ஆன்மாவும் நற்கதி அடையும்.
மேலும் ஏழையாக உள்ள சகோதரிகளுக்கு உதவாமல் அவர்களைத் தவிக்க விட்டு வறுமையில் வாடி இறந்திருப்பின் அவர்களுக்கும் சிரார்த்தம், தர்ப்பணமும் அளித்தல் வேண்டும். முடிந்தால் இயன்ற வரையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட சகோதரி குடும்பங்களுக்கு மாளய பட்ச காலத்திலாவது மிகச் சிறந்த முறையில் பணம் மற்றும் பொருளுதவி அளித்து அவர்களுடைய மன சாந்திக்கு வழிவகை செய்தல் வேண்டும். காலம் காலமாய்த் தொடரக் கூடிய பலவித மான சாபங்கள் தீர்வதற்கு சப்தமி திதி வழிபாடு பெரிதும் உதவுகின்றது.
இன்று குபேரத் தீர்த்தம் உள்ள இடங்களில் தர்ப்பணம் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். இன்று நெய் தோசையும், சந்தன நிற ஆடையும் தானம் செய்வதால் மேற்கண்ட வகையில் அல்லலுற்ற சகோதரிகளின் ஆத்மா சாந்தி அடைந்து, ஆவி தோஷத்திற்கு நிவர்த்தியும் கிட்டிடும். இதுவே அவர்களுடைய ஆசியாக மாறி நம் குடும்பத்திற்குப் பெரிதும் உதவும். இதுவும் பகுதான்ய மாளய பட்ச நாளில் பெறற்கரிய நல்வரமாகும்.
சாதி, இன வேறுபாடின்றி யாவர்க்குமாம் மாளய பட்சமே
மேற்கண்ட சூழ்நிலைகள் நம் வாழ்க்கையில் அமையவில்லையே என்று எண்ணாதீர்கள். உங்கள் உறவுகளிலோ, நண்பர் குழாத்திலோ அல்லது சக அலுவலகர்களிடமோ இத்தகைய வாழ்க்கைச் சூழ்நிலைகள் அமைந்திருக்கக் கூடும் அல்லவா! அவர்களுக்கு இவற்றைப் பற்றி அறிவிப்பது, மட்டும் அல்லாமல் அவர்களுக்காக நீங்களும் இத்தகைய தியாகத் தர்ப்பணத்தைச் செய்து புண்ய சக்தியைப் பெறலாம்.
தர்ப்பணம் என்பது நம்முடைய உறவினர்களுக்காக மட்டும் அல்ல! காருண்யத் தர்ப்பணம் என்ற முறையில் சாதி மத வேறுபாடுமின்றி நாம் அறிந்தோர், அறியாதோர் அனைவருக்கும் அளித்திடலாம். ஏன், நாம் நன்கு வளர்த்து இறந்த நாய், பூனை, கிளி என அனைத்து விலங்கினங்களுக்குக் கூடத் தர்ப்பணம் அளித்திடலாம். இதுவே பகுத்தறிவைப் பெற்றிருக்கும் மனிதர்களுடைய தெய்வீகக் கடமை!
நாம் நடந்தோ அல்லது வாகனங்களில் செல்லும் போதோ எத்தனையோ ஆயிரக் கணக்கான புழு, பூச்சி, வண்டு இனங்கள் அழிகின்றன அல்லவா! அவற்றிற்கு எல்லாம் நற்கதி அளிக்க வேண்டிய பொறுப்பு மனித இனத்தைச் சேர்ந்த நமக்கு உண்டு. இதனால் தான் மனித அறிவு, சிறப்பான இறைப் பகுத்தறிவாகப் போற்றப்படுகின்றது. இதன் மூலம் பிற ஜீவன்களின் நல் வாழ்விற்காகப் பாடுபட வேண்டும். இதற்குப் பெரிதும் உதவுவதே இத்தர்ப்பண பூஜையாகும்.
மாளய பட்சக் காலத்தில் இதனையாவது மிகச் சிறப்புடன் நிறைவேற்றி, வாழ்க்கையில், பெறுதற்கரிய இந்த மானுட வாழ்க்கையில் தியாகம் நிறைந்த பலவிதமான பூஜைகளை மேற்கொண்டு மன சாந்தியைப் பெறுங்கள். பிறருக்கும் சாந்தமான வாழ்வை அளித்திடுங்கள். இதுவே மாளய பட்ச விரத வழிபாட்டுக் காலத்தில் மனித குலத்திற்கு மட்டுமன்றி உங்கள் வாழ்க்கைக்கே நீங்கள் செய்கின்ற தியாகம் நிறைந்த வழிபாடு!
சிராத்தம், திவசம் என்பது இறந்தோர்க்குப் பிரியமான உணவினைப் படைத்துப் பின் அதனை ஏழைகளுக்குத் தானமாக வழங்குவது ஆகும். தர்ப்பணம் என்பது எள், நீர்கொண்டு தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்தலாகும்.
எல்லோருக்கும் பித்ருக்கள் உண்டு!
பித்ருக்கள் என்போர் நம்முடைய, (தெய்வ நிலையைப் பெற்ற) மூதாதையர்கள்! இறைவனை அடைய பித்ருக்களின் ஆசி நிச்சயமாகத் தேவை! நம் கஷ்டங்கள் தீரவும் பித்ருக்கள் உதவுகின்றனர்! நம்முடைய மூதாதையர்களாகிய பித்ருக்கள் நம் மீது அளவு கடந்த கருணையை வைத்துத் தர்ம தேவதையின் உத்தரவிற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து அத்தர்ம தேவதைகளின் பரிபூரண ஆசியுடன் அவர்களுடைய குழந்தைகளாகிய நாம் நலம் பெறவும் மேலும் நமக்கு நற்காரியங்களைச் சிறப்பாக நடத்தித் தரவும் மாளய பட்ச காலத்தில் பூலோகத்திற்கு வருகின்றார்கள்.
நாம் நினைப்பது போல பித்ருக்கள், தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வருவதில்லை, வர முடிவதும் இல்லை. அவர்களுக்கு இத்தகைய தெய்வீக சக்தி இருந்தாலும் கூட இறை ஆணைப்படியே, எங்கெல்லாம் செல்வதற்குக் கடவுளின் உத்தரவு கிட்டுகின்றதோ அங்குதான் அவர்கள் செல்வார்களே அன்றி அதனை மீறி எங்கும் ஒருபோதும் நடந்திட மாட்டார்கள்.
பூலோகத்தில் மட்டும்தான் பெரியோர்களையும், மகான்களையும், யோகியர்களையும், மனிதர்கள் அவமதித்து அவர்களுடைய வார்த்தைகளை மீறி நடக்கின்ற அதர்மத்தைக் காண்கின்றோம். ஆனால் பூலோகம் தவிர மற்றைய பெரும்பான்மையான லோகங்களில் எல்லாம் உண்மையான நீதி நெறி வழுவாத சத்திய பரிபாலனம் தான் நடைபெறுகின்றது. எனவே பித்ருக்கள் தங்களுடைய வம்சா வழியினருக்கு ஆசியைத் தர வேண்டும்என்றால் குறிப்பிட்ட சில தினங்களில் தான் பூலோகத்திற்கு வர முடியும் என்ற இறை நியதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாதப்பிறப்பு, சிராத்தம்/திதிநாள், திவச நாள், அமாவாசை, பௌர்ணமி, சந்திர, சூரிய கிரஹணக் காலங்கள் போன்ற முக்கியமான தினங்களில் மட்டும் தான் பித்ருக்கள் பூலோகத்திற்கு வருகின்றனர். இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாம் இன்று நினைத்தால் உடனே பஸ்ஸில் ஏறி திருஅண்ணாமலைக்குச் சென்று விடுகின்றோம் அல்லவா. திருஅண்ணாமலைக்குச் செல்கின்ற பாக்கியம் இறை அருளால் தான் நமக்குக் கிட்டுகின்றது என்பது உண்மையே! இருப்பினும் பேருந்தில் ஏறிச் சென்றால் திருஅண்ணாமலையை அடைந்து விடலாம் என்ற அருமையான தெய்வீக ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கின்றது அல்லவா! ஆனால் இத்தகைய தெய்வீக வாய்ப்பினைப் பித்ருக்கள் அவ்வளவு எளிதாகப் பெற முடியாது. இறைவனே அழைத்து இந்தந்தப் பித்ருக்கள் தான் இன்றைக்குத் திருஅண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்று அருளாணை இட்டால்தான் அவர்கள் அங்கு செல்ல முடியும்.
ஆனால் எவரெல்லாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்களோ அன்றைய தினத்தில் அவர்களுடைய பித்ருக்களுக்கு திருஅண்ணாமலைக்கு வந்து செல்ல இறை அருள் பரிபூரணமாகக் கிட்டுகின்றது. ஒருவர் திருஅண்ணாமலைக்கு விஜயம் செய்கின்றார் என்றால் அதற்கு அவர்களுடைய பித்ருக்களின் ஆசியே காரணமாக அமைகின்றது என்பதை நாமறிவோம்! இன்னொரு விதமாக இதைச் சொல்ல வேண்டும் என்றால் தெய்வ சங்கல்பத்தால் நாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றபொழுது நம்முடைய பித்ருக்களுக்கும் இப்புனிதத் தலத்திற்கு வருகின்ற வாய்ப்பை இறைவனே தன்னுடைய இறைச் சட்டமாக ஏற்படுத்தித் தருகின்றான்!
ஆனால் இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நம்முடைய பித்ருக்கள் அமாவாசை அன்று பூலோகத்திற்கு வருகின்றார்கள் என்பது பொதுப்படையான இறை நியதியே தவிர நம்முடைய பித்ருக்கள் அனைவருமே அமாவாசையன்று பூலோகத்திற்கு வருகின்றார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் வசு பித்ருக்கள், ருத்ர பித்ருக்கள், ஆதித்ய பித்ருக்கள், பிரகதப் பித்ருக்கள், தண்டூலப் பித்ருக்கள், சகஸ்ரப் பித்ருக்கள், காமியப் பித்ருக்கள், பூம்யப் பித்ருக்கள் என்றும் பலவிதமான வகையினர் உண்டு. இவர்களில் குறிப்பிட்ட சில வர்க்கத்தினரே அமாவாசை அன்று பூலோகத்திற்கு வந்திருந்து நம்முடைய தர்ப்பணங்களைப் பெற்றுச் செல்கின்றார்கள்.
மேலும் குறித்த ஒருவருக்காக நாம் சிராத்தத்தையோ, திதி பூஜையையோ நடத்தும்பொழுது அந்தக் குறித்த பித்ருதான் சிரார்த்தத் தர்ப்பணங்களையும், ஹோம ஆஹுதிகளையும் பெற்றுச் செல்கின்றார் என்றும் கூறிட முடியாது. அவருடன் சேர்ந்து பலவிதமான பித்ருக்களும் வந்து அவற்றைப் பெறுவதும் உண்டு. இவை எல்லாம் தர்ப்பண இரகசியங்கள் ஆகும். இவற்றைச் சாதாரண மனித அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது. சொன்னாலும் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வெறும் கட்டுக்கதை என்று சொல்லி விடுவார்கள். எனவே சற்குருவின் அருள் மொழிகளாக இவை வெளி வருகையில்தான் அதில் தெய்வீகம் ததும்புவதால் குறித்த நம்பிக்கையும் Self Loadedஆக அதில் சேர்ந்து வருகின்றது!
இவ்வகையில் எதுவுமே சற்குருவின் அருள் மொழிகளாக உணர்த்தப்படும் பொழுதுதான் இவற்றின் தெய்வீக ரகசியங்கள் புரிய வரும். எனவே சற்குருவின் அருள் இல்லாமல் உலகத்தில் எந்தவிதமான இறை அருளையும் நாம் பெற முடியாது. வெறும் தர்ப்பையை வைத்துக் கொண்டு எள்ளையும், தண்ணீரையும் இறைத்தால் அது எப்படிப் பித்ருக்களைச் சென்றடையும்? பன்முறை பல பெரியோர்களால் பதிலளிக்கப்பட்ட கேள்வி இது! எள் என்றால் எள்ளு சாதம் சாப்பிடுவது, எள்ளுருண்டையை உருட்டித் தின்பது என்று நாம் அதனைச் சாதாரணமாகவே ஒரு உணவுப் பொருளாக, தானியமாக மதிப்பிடுவதால்தான், பல தெய்வீக சக்திகள் நிரம்பிய ஒரு சிறு எள்ளின் அருமையைக் கூட நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
ஒரு எள்ளைப் பற்றியே நமக்கு எதுவும் தெரியாத போது பித்ருக்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வதற்கு நமக்கு என்ன உய்த்துணர இருக்கின்றதா ? எள் என்பது மிகவும் புனிதமான தாவரங்களுள் ஒன்றாகும். பரம்பொருளாம் சாட்சாத் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திருமேனியிலிருந்து பிறந்த தெய்வீகத் தாவரம் ஆகும். ஒரு சிறு எள்ளினுள் கோடிக் கணக்கான மந்திரங்களின் பீஜாட்சரங்களைத் திரட்டி வைக்கக் கூடிய அளவிற்கு கம்ப்யூட் டரின் Pentium II Processer போல் மிகச் சிறிய இறை அணுத்துகள்கள் நிறைந்திருக்கின்றன.
ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய ஆயுள் முழுவதும் எவ்வளவுதான் வேதத்தைக் கற்றாலும் ஒரு சிறு எள்ளின் உட்பகுதியில் நிறைந்திருக்கின்ற வேதசக்திகளை அவனால் எத்தனைக் கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் பெற முடியாது. இத்தகைய அபூர்வமான தெய்வ சக்தியைப் பெற்றிருப்பதால் தான் எள் தாவரமானது ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திருமேனியிலிருந்து தோன்றுகின்ற பாக்யத்தைப் பெறுமளவிற்கு ஒரு அவதார மூர்த்தியின் தெய்வீக அருளைக் கூட்டித் தரும் தர்ப்பண வழிபாட்டின் மூலச் சின்னமாக விளங்குகின்றது.
நாம் ஏற்கனவே பன்முறை ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் குறிப்பிட்டு வந்திருப்பதைப் போல் பூலோகத்திலும், சூரிய, சந்திர தேவலோக மண்டலங்களிலும் ஒன்றாகக் காணப்படுகின்ற தாவரங்கள் ஒரு சிலவே. தர்பை, எள், நாகலிங்கப் புஷ்பம், அரிசி, தேங்காய் போன்ற தெய்வீகப் பொருட்கள் தான் அனைத்து உலகங்களிலும் இதே மாதிரியான அளவில் இதே உருவத்தில் எங்கும் காணப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் அனைத்துத் தேவதா மூர்த்திகளின் மண்டலங்களும் உள்ளன. எனவேதான் நம் ஊனுடல் தேவாலயம் ஆகிறது. இதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதை தான் நாம் நம்முள் இறைவன் உய்கின்றான், எல்லா உயிரினங்களிலும் இறைவன் வாழ்கின்றான், நிரந்தரமாக உறைகின்றான் என்று சொல்கின்றோம்.
ஆனால் தெய்வம் என்பது தன்னைத் தானே உணர்ந்து கொள்வது, தன்னைத் தானே உணர்வித்துக் கொள்வது, தன்னைத் தானே உணர்த்துவது என்ற மூன்று தத்துவ ஓங்கார இறை உணர்வே ஆகும்.
உடலே திருக்கோயில்! வலது கண் சூரிய மண்டலமாகவும், இடது கண் சந்திர மண்டலமாகவும் இவ்வாறாக நம் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தேவதா மண்டலங்கள் உள்ள அல்லவா! நம் உள்ளங்கையில் அனைத்து நவக்கிரஹ மண்டலங்களும், தேவ மூர்த்திகளின் மண்டலங்களும் உள்ளன என்பதை அறிவோம். இதனையே கைரேகை சாஸ்திரம் பிரதிபலிக்கின்றது. ஆனால் தற்காலத்தில் கைரேகை என்பதை ஒரு விற்பனைப் பொருளாக ஆக்கி விட்டார்கள். கைரேகை பார்ப்பதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதனால் அதன் புனிதத்வம் மங்குகின்றது.
கட்டை விரல் - சுக்கிர விரல்
ஆள்காட்டிவிரல் - குருவிரல்
நடுவிரல் - சனி விரல்
மோதிர விரல் - சூரிய விரல்
சுண்டு விரல் - புதன் விரல்
இதைத் தவிர சந்திர, செவ்வாய் மற்றும் ஏனைய மண்டலங்களும் உடலில்/கையில் உண்டு. கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் உள்ள இடைப் பகுதியில் தான் சூட்சும பித்ரு மண்டலம் இருக்கின்றது. இதனால் தான் தர்ப்பணத்தின்போது இந்த இரண்டு விரல்களின் வழியே தர்ப்பண நீர், பித்ருக்களுக்குத் தாரையாக அளிக்கப்படுகின்றது. எந்தெந்த விரல்களால் எள்ளை எடுக்க வேண்டும் என்ற நியதியும் உண்டு. எந்தக் கிழமையில் தர்ப்பணம் செய்கின்றோமோ அந்தக் கிழமைக்கு ஏற்ப குறித்த இரு நுனி விரல்களின் மூலமாகவே எள்ளை எடுப்பதுதான் சிறப்புடையது.
ஆன்மீகத்தில் ஒவ்வொன்றையும் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்! தெய்வீகம் என்பது முழுக்க முழுக்கப் பரிபூரணமான ஆழ்ந்த நம்பிக்கையில் அமைந்திருப்பது ஆகும். இந்த அடிப்படை நம்பிக்கையிலேயே சற்று ஆட்டம் கண்டால் அது வாழ்வையே முற்றிலும் பாதித்து விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி மறந்த நானிலம்!
நம்முடைய பூஜை முறைகள் எல்லாம் யுகம் யுகமாக, கோடானு கோடி ஆண்டுகளாக நம்முடைய மூதாதையர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்ததே ஆகும். நவீன Computer Software/Osஇல் வருகின்ற Bugs போல இதில் குறை, குற்றங்கள் எதுவும் கிடையாது. எல்லாம் Time tested !
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் இடுகின்றார் என்றால் அவர் முன் நாம் எம்மாத்திரம்? மாதந்தோறும் சிரத்தையாகச் செய்ய வேண்டிய தர்ப்பணம், பூஜைகளையும் நாம் மறந்தாகி விட்டது. சூரிய, சந்திர கிரஹணங்களில் செய்ய வேண்டிய தர்ப்பண வழிபாடுகளையும் கைவிட்டு விட்டோம்! நம் மூதாதையர்களுக்கு எந்தவிதமான பூஜைகளையும் செய்யாமல் ஆனால் அவர்கள் நமக்குத் தந்த இல்லங்களில் வாழ்ந்து கொண்டு, நிலபுலன்களையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் ஆசியால் நாம் பெற்றுள்ளக் குழந்தைச் செல்வங்களையும் கண்டு மகிழ்ந்து கொண்டு இருந்தால், என்றைக்குத்தான் நாம் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவிப்பது ? நம்முடைய நன்றியை அவர்கள் எதிர்பார்த்திடவில்லை.
“எல்லாம் நமக்கு இறைவன் தந்ததே! அருளாளா, அருணாசலா!” - என்ற உணர்வை நம்மிடம் ஆணித்தரமாகப் பதிய வைக்க வேண்டும். இதுவே சாசுவதமானது. இதனையளிக்க வல்லவர்கள் பித்ருக்களே! இதுவே எல்லா ஜென்மங்களுக்கும் தெய்வீக அருளைப் பொழிவது என்பதற்காகத் தான் பித்ரு வழிபாடே ஏற்படுத்தப்பட்டது. ஏதோ....நம் வாழ்க்கையில் நடந்தது நடந்து விட்டது, இதோ... மகத்தான தெய்வீக சக்திகள் நிறைந்த மாளய பட்ச அமாவாசையும் வந்து கொண்டிருக்கின்றது! இந்த மாளயபட்ச காலத்திலாவது நாம் இதுவரையில் தவற விட்ட தர்ப்பணங்களுக்குப் பிராயச்சித்தமாக மனதார மன்னிப்புக் கேட்டு, உளமாற வருந்தி இனிமேல் “மாதந்தோறும் அமாவாசையில் என்னுடைய மூதாதையரான தெய்வமூர்த்தியாக விளங்குகின்ற பித்ருக்களுக்கு உரித்தான தர்ப்பணங்களைச் செய்வேன்'', என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு நற்கதியை நோக்கி நடைபோடுங்கள்!
தான தர்மமே அற்புதமான கலியுக பூஜை!
எதற்கெடுத்தாலும் தான தர்மங்கள் என்று சொல்கின்றீர்களே என்று அலுப்புக் கொள்ளாதீர்கள். லட்சக்கணக்கான நாமாவளிகள், மந்திரங்கள், அஷ்டோத்திரங்கள், இறைத்துதிகள், தேவாரத் திவ்யப் பிரபந்த திருவாசகப் பாடல்கள் இருக்கின்றன, ஏதேனும் ஒன்றையாவது உருப்படியாகப் படித்திருக்கின்றீர்களா? துன்பங்கள் வரும்போது மட்டும், காலை, மதியம், மாலை என மாய்ந்து மாய்ந்து கோயிலைச் சுற்றிப் பூஜை செய்து வருகின்றீர்கள்! நம் துன்பங்களைத் தீர்ப்பதற்கு மட்டும் தானா இறைவன் ? இன்ப துன்பங்களை எல்லாம் கடந்த நிலையைத் தரவல்ல இறைவனிடம் சென்று மிக மிகச் சாதாரண வரத்தைப் பெற்றுக் கொண்டு வந்தால் நம்முடைய அறியாமையை என்னவென்று செல்வது?
நம்முடைய கோடானுகோடிப் பித்ருக்கள் பூலோகத்திற்கு வருகின்ற மிகப் புனிதமான காலமாகிய மாளய பட்ச அமாவாசையின் போது சித்தர்கள் அருளியுள்ள பகுதான்ய வருடத்திற்கு உரிய ) தர்ப்பணப் பூஜை முறைகளை மிகவும் சிரத்தையுடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் கடைபிடித்து பிறருக்கும் அறிவித்து அவர்களையும் கடைபிடிக்கச் செய்து அனைவரும் தக்க பிராயச்சித்தங்களைப் பெற்று நல்வழிகளை நாடி சாந்தமான வாழ்க்கையைப் பெறும்படி வேண்டுகின்றோம்.
வருடந்தோறும் மாளய பட்ச அமாவாசைக் காலத்தின் மகிமையைப் பரப்பி ஜாதி, மத, இன பேதமின்றி யாவரும் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பக்கம் பக்கமாக, குருவாய் மொழிகளாக எளிய தர்ப்பண விளக்கங்களை அளித்து வருகின்றோம். படிப்பதோடு மட்டும் அல்லாது உங்களுடைய பித்ருக்களுக்கு மாளய பட்சக் காலத்தில் தினந்தோறும் மிக எளிமையான பித்ரு வழிபாடான தர்ப்பணத்தைச் செய்து தக்க பிராயச் சித்ததத்துடன் நல்வரங்களையும் பெற்று அர்த்தமுள்ள வாழ்வை ஆனந்தமுடன் அடைய பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
கலியுகத்தில் தான தர்மங்கள்தாம் நாம் அடியோடு விட்டுவிட்ட பூஜைகளுக்கும், மறந்து விட்ட வழிபாடுகளுக்கும் தக்க பிராயச்சித்தத்தைத் தருகின்றன. தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 10,000 முறை ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அப்பொழுதுதான் அவனுடைய தினசரி வாழ்வானது எவ்விதப் பிரச்னைகளும் இன்றி சுமூகமாக நடைபெறும். எந்த மந்திரத்தையும் முறையாக நாம் ஜெபிப்பதில்லை . 10,000 முறை மந்திரம் ஜபிக்க வேண்டிய இடத்தில் வெறும் 36 என்றால் நம் வாழ்நாளில் ஜெபிக்காமல் விட்ட காயத்ரீ மந்திரத்தின் எண்ணிக்கை கோடி கணக்கான அளவில் இருக்கின்றது அல்லவா! இதற்கு எப்படிப் பிராயச்சித்தத்தைத் தேடிப் பெற முடியும்?
ஆனால், இவ்வாறு விட்டுப் போன, கோடானுகோடி மந்திர, ஜெப சக்தியைத் தரவல்லது தான தர்மங்கள் என்றால், எத்தகைய தெய்வீகச் சக்திகள் நிறைந்ததாக ான தர்மங்கள் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,
தான தர்மங்கள் எப்போதும் ஒரே விதமான பலன்களைத் தருவதில்லை . மாளய பட்சம் சமயத்தில் செய்கின்ற தான தர்மங்களுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. இதனால்தான் நம்முடைய பலவிதமான தீய கர்மவினைகள் மாளய பட்சக் காலத்தில் பஸ்மம் ஆவதோடு இல்லாமல் நாம் பித்ருக்களுக்கான வழிபாடுகளை முறையாகச் செய்யாமையால் ஏற்பட்ட பித்ருதோஷங்களுக்கு உரிய பரிகாரங்களைத் தந்து நம்முடைய எத்தனையோ விதமான துன்பங்களுக்கான எளிமையான தீர்வையும் அளிக்கின்றன. நம்முடைய வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் நம்முடைய சந்ததியினருடைய வாழ்க்கைக்கும் நற்கதியைத் தரக்கூடியதாக அமைந்திருக்கின்ற மாளய பட்ச அமாவாசை நம்முடைய வாழ்நாளில் பெறற்கரிய திருநாள் அல்லவா!
வருடந்தோறும் தான் மாளய பட்ச அமாவாசை வருகின்றதே, ஒன்றை விட்டு விட்டால் அடுத்ததைப் பிடித்துக் கொள்ளலாம் அல்லவா என்று நாம் எண்ணுவோம். மனித புத்திதானே! இப்படித் தான் சோம்பேறித்தனத்தினால் தவறாக எண்ணும்! இந்த ஒரு வருட காலத்தில் அதாவது இரண்டு மாளய பட்ச அமாவாசைகளுக்கு இடையே உள்ள ஒரு வருட காலத்தில் எத்தனை ஆயிரம், ஏன் எத்தனை இலட்சம் கூடுதல் தீய கர்ம வினைகளை நாம் சேர்த்துக் கொள்கின்றோம் ? பொய் சொல்லாமல், தீயதை எண்ணாமல், தீயவற்றைச் செய்யாமல் ஏதேனும் ஒரு நாளையாவது ஏன் ஒரு பத்து நிமிடத்தையாவது நாம் கழித்திருக்கின்றோமா! அதனால்தான் வருடா வருட மாளய பட்ச பரிஹாரம்! இதுவே இறைவனின் பெருங்கருணை
உங்களை நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய தினசரி பூஜைகள் உண்டு. அவற்றை என்றைக்காவது உருப்படியாக, பரிபூரணமாகச் செய்திருக்கின்றோமா! இப்படி உங்களைத்தானே நீங்களே ஆத்ம விசாரம் செய்து நம்மைப் பற்றிய Balance Sheet போட்டுக் கொண்டால் தான் எத்தகைய கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். ஏதோ ஆபீஸ் போனோம், வந்தோம், சாப்பிட்டோம், உண்டோம், உறங்கினோம், இப்படித்தானா வாழ்க்கையை ஓட்டுவது ? இதில் என்ன பயனைக் கண்டீர்கள்?
இதோ வந்து விட்டது மாளய பட்ச அமாவாசை! சித்புருஷர்கள் அளித்துள்ள மாளய பட்ச பூஜை முறைகளை இனியேனும் உருப்படியாக நன்முறையில் செய்து வாழ்க்கையில் நற்கதியை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். ஸ்ரீ அகஸ்திய விஜயம் காட்டுகின்ற பாதையானது சற்குரு காட்டுகின்ற பாதை! உங்களுக்கு உரிய சற்குரு, இன்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை நீங்கள் சந்திக்கும் வரையில் அவரே ஆட்கொள்ளும் வரையில் ஏதேனும் ஒரு கருவி மூலமாக உங்களுக்கு அவருடைய நற்செய்திகளை அளித்துக் கொண்டுதானே இருக்கின்றார். நீங்களும் பெற்றுக் கொண்டுதானே இருக்கின்றீர்கள்! ஆனால் சற்குரு உங்கள் முன் தோன்றினால் அவரை நீங்கள் சற்குருவாக ஏற்பீர்களா! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
ஏனென்றால் துன்பங்களைத் தீர்ப்பவர் சற்குரு, சகல நலன்களையும் தருபவர் சற்குரு என்ற உத்தம எண்ணத்தைக் கொண்டிருக்கின்றோம் அல்லவா! இது வேதமய உண்மையே. ஆனால் ஒன்றையுமே உருப்படியாகச் செய்யாது தினந்தோறும் நோய் நொடி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணுவது பேராசை அல்லவா! ஒவ்வொரு சற்குருவும் விரும்புவது என்னவென்றால் அவரவர் தனக்குரிய கர்மவினைகளை - நல்லதோ, தீயதோ, இன்பமோ, துன்பமோ - தனக்குரிய விதியினை அமைதியுடன் ஏற்று வாழ்க்கையை நன்முறையில் நடத்துதல் வேண்டும்.
“கஷ்டம் வந்தால் கஷ்டப்படுங்கள், சுகம் வந்தால் சுகப்படுங்கள். ஆனால் உங்கள் பாதை நல்ல பாதையாக இருக்கட்டும். உங்கள் பின்னால் நான் வந்து கொண்டிருக்கின்றேன்”. இதுவே ஒவ்வொரு சற்குருவுடைய உபதேசம். பாதையில் செல்லும் பொழுது கல் இருக்கலாம். முள் இருக்கலாம். குழி இருக்கலாம். அதற்காகப் “பட்டுக் கம்பளம் விரித்தால்தான் நான் செல்வேன். அப்பாதையைத்தான் சற்குரு காட்ட வேண்டும்” என்று
எண்ணாதீர்கள். ஏனென்றால் சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் எத்தனை பேருக்குச் சுகத்தை அளித்திருக்கின்றீர்கள் ?
சற்றே எண்ணிப் பாருங்கள்!
பொறாமை, குரோதம், பதவி, பகைமை, விரோதம், இனம், பேராசை, காமம், ஆணவம், அகங்காரம், சுயநலம், செருக்கு காரணமாக எத்தனை பேர்களை உங்கள் குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி வதைத்திருக்கின்றீர்கள்? அவற்றின் பலன்கள் தானே நீங்கள் இன்று வாழ்கின்ற வாழ்வு! இன்பமும் துன்பமும்! உண்மையில் நாம் தெய்வத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நாம் செய்துள்ள இத்தனை கோடானுக் கோடித் துன்பங்களுக்கும் பிராயச்சித்தம் தருகின்ற மனிதப் பிறவியை நமக்கு அளித்திருக்கின்றான் அல்லவா! அதற்காகத்தானே நாம் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்! நம் கர்ம வினைகளைத் தீர்ப்பதற்காகத் தானே இந்த மனித வாழ்கை !
வெறுமனே உண்டு, உறங்கி, வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு, மண வாழ்க்கை வாழ்ந்து, கிழவன் கிழவியாக வெற்று வாழ்க்கை வாழ்ந்து போய்ச் சேர்வது மட்டுமல்லவே வாழ்க்கை! இத்தகைய பல வாழ்க்கைப் பருவங்களை இறைவன் நமக்கு அளிப்பதற்குக் காரணம் நம்முடைய கர்மவினைகளைச் சீர் செய்து கொண்டு கர்மவினை பந்தங்கள் இல்லாத ஒரு கர்ம யோகியாக, ராஜயோகியாக, உத்தம புருஷனாக வாழ்ந்து பிறரையும் வாழ்வித்து இறைவனை அடைதல் வேண்டும் என்பதற்காகவே! இதுவே ஒவ்வொரு மனிதனின் கடமை! இதனை உணர்விப்பதே மாளய பட்ச அமாவாசை
மாளய பட்ச அமாவாசைக்கான விளக்கத்திற்கு முன் சில குறிப்புகளைத் தர விரும்புகின்றோம்.
தர்ப்பணம் : தர்ப்பணம் என்றால் தர்ப்பை, எள், நீர் கொண்டு நம்முடைய பித்ருக்களுக்கு நாம் அளிக்கின்ற நீர்த் தாரை பூஜை! சில விதமான மந்திரங்களை ஓதி எள்ளையும், நீரையும் சேர்த்துக் கட்டை விரல், ஆள் காட்டி விரல்களுக்கு இடையே உள்ள பித்ரு மண்டல லோகப் பகுதி வழியாக நீரைத் தர்ப்பைச் சட்டத்தின் மேல் தாரை வார்த்தலாகும்.
எள், மாவிலை, தர்ப்பையிலை இவற்றில் பித்ருக்கள் எளிதில் ஆவாஹனம் ஆவதால் பித்ரு மூர்த்திகளுக்கு நாம் செய்கின்ற ஆராதனையாக தர்ப்பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அபிஷேகமாகக் கூட இது அமைகின்றது! இந்த தர்ப்பணச் சக்தியானது பித்ருக்களுக்குப் போய்ச் சேரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் தான் நாம் தர்ப்பணம் அளிக்கின்றோம் அல்லவா! இந்த நம்பிக்கை தான் வேத சக்தியைப் பெற்று நீர் மூலமாக எள்ளின் உட்பகுதியை அடைந்து தர்ப்பையில் வசிக்கின்ற பித்ருதேவர்களை அடைகின்றது.
மலர்கள் மூலமாக இறைவனைச் சென்று அடைகின்றனவோ அதேபோல நம்முடைய நியாயமான ஏக்கங்களும், முறையான ஆசைகளும், பிரார்த்தனைகளும் எள் மூலமாகப் பித்ருக்களை அடைகின்றன. ஆனால் இறைவனிடம் வேண்டுவது போல பித்ருக்களிடம் நாம் எதையும் வேண்டுவதில்லையே என்று கேட்கத் தோன்றும். ஆனால் உண்மையிலேயே நம்முடைய வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் பரம்பொருளாம் இறைவனைச் சென்று அடைவதற்கு முன்னால் என்ன நடக்கிறது தெரியுமா?
இறைவனுடைய நியதிப்படி இறைவனுக்கும், நமக்கும் பாலமாக விளங்குகின்ற கோடிக் கணக்கான நல்தேவதைகள், தேவதா மூர்த்திகள், தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், தெய்வ மூர்த்திகளைத் தாம் நம் வேண்டுதல்கள் சென்று அடைகின்றன. நாம் பித்ருக்களை முறையாக வேண்டாமல் போனாலும் கூட நமக்குரிய ஏனைய சுகபோகங்களையும் அதாவது குழந்தை பாக்கியத்தையும் நமக்குத் தருகின்றவர்கள் பித்ருக்களே! அப்படியானால் பித்ருக்களை மட்டும் நாம் வணங்கினால் போதுமா ? யாரொருவர் பித்ருக்களைப் பரிபூரணமாக நம்பி அவர்களுக்கு உரிய வழிபாட்டு முறைகளையும், பூஜைகளையும் பரிபூரணமாகக் கடைபிடிக்கின்றார்களோ அவர்கள் மோட்சம், முக்தி என எத்தகைய உத்தம இறை நிலைகளையும் மிக எளிதில் அடைந்திடலாம். இதில் ஐயமே இல்லை .
எள் தானியத்திற்கு தெய்வீக ஆகர்ஷண சக்தியை உருவாக்கும் ஓர் அற்புதமான சக்தி உண்டு, எவ்வாறு ஒரு இரும்புத் துண்டில் உள்ள காந்த மண்டலம் அதனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் படர்கின்றதோ அதேபோல் ஒவ்வொரு சிறு எள் தானியமும் குறிப்பிட்ட தூரத்திற்கு இறை ஆகர்ஷண சக்தியை எழுப்புகின்றது. இதற்கு ப்ராக்ருத சக்தி என்று பெயர். தர்ப்பண நீரை எள் மூலமாக வார்த்து தர்ப்பையில் ஆவாஹனம் ஆகி இருக்கின்ற பித்ருக்களுக்கு அளிக்கின்ற பொழுது அந்த எள்ளின் ஆகர்ஷண சக்தியால் நம்முடைய பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் பித்ருக்களைச் சென்று அடைகின்றன. பித்ருக்களும் நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்பவும், ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்தும் அவர்களுடைய அருளாசிகளை எள்ளின் ப்ராக்ருத ஆகர்ஷண சக்தியின் மூலமாக மேலே எழுப்புகின்றனர். அது தர்ப்பணம் செய்பவரை உடனடியாக அடைகின்றது.
தர்ப்பணம் அளித்த உடனேயே பித்ருக்களுடைய அருள் சக்தி நம் உடலை அடைகின்றது என்றால் அதனுடைய பலாபலன்களும், உடனடியாகக் கிட்ட வேண்டும் அல்லவா! உண்மையே! புரோட்டீன் நிறைந்த உணவை தட்டுத் தட்டாக உண்டால் அதன் சக்தியை ஒரே நாளில் நம் உடலில் ஏற்றிட முடியுமா? சிறிது சிறிதாகத் தானே உடலில் சேர வேண்டும்! இதேபோல் பித்ருக்கள் அளிக்கும் ஆசி நம் உடலில் பல இடங்களில் குறிப்பாக கட்டை விரல், ஆள் காட்டி விரல்களிடையே உள்ள பித்ரு மண்டலப் பகுதி, நுனிக் காது, நாசி மண்டலம், கால் கட்டை விரல்கள், விரல் நுனிகள் போன்ற இடங்களில் சேர்கின்றன.
தோப்புக் கரணமிடுதல், மூக்கைப் பிடித்துப் பிராணாயாமம் செய்தல், நுனிக் காலால் அடிப்பிரதட்சிணம் செய்தல், அங்கந்யாசம், கரந்யாசம் பூஜை விதி முறைகள் போன்றவற்றால் பித்ரு ஆசி சக்தி நம்மைச் சேர்கின்றது! இவற்றை அறியாதோர் என் செய்வது?
அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம் போன்ற பலவிதமான தானங்களை மாளய பட்சத்தில் செய்யும் போது, இதற்குச் சாட்சியாக விளங்குகின்ற தர்ம தேவதைகள் மிகவும் மகிழ்ந்து நம் உடலில் சில நொடிகள் தங்கி ஆங்காங்கே உள்ள பித்ரு சக்தியை நாம் பெறும்படி செய்து (activate) விட்டு மறைந்து விடுகின்றன. இதுவே தான தர்மங்களில் நாம் பெறுகின்ற ஆனந்தமாகும்.
ஸ்ரீ அம்ருத மிருத்யுஞ்ஜய மூர்த்தி
ஸ்ரீ அகஸ்திய மாமுனியின் மூலமாக பாற்கடலில் அமிர்தம் விளைந்தது, ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் திரு அவதாரத்திற்குத்தான், இதற்கான ஒளர்வர் சித் புருஷரின் தெய்வத் திருப்பணி மகத்தானது என்பதையும் தேவர்கள் அறிந்து பெருமகிழ்வு கொண்டனர். இறைவனுடைய திருவிளையாடலை எவர்தான் முழுதுமாகப் புரிந்து கொள்ள முடியும்?
ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியாய்ப் பரம்பொருளே தன்னைத் தானே அமிர்தத்தால் அபிஷேகித்துக் கொண்டபொழுது திரண்டெழுந்த அமிர்த ஆறானது பூலோகத்தில் பல திருமலைகளை நனைத்துச் சென்றது. திருஅண்ணாமலையில் அமிர்த தரிசனப் பகுதி என்ற ஒன்று உண்டு. இப்பகுதியில் தான் அற்புதமான அமிர்த சுனையும் உண்டு. இதில் பல மஹரிஷிகளும், யோகியரும், சித்புருஷர்களும் அமிர்தமயமாக நீராடி தேவாமிர்தத்தின் பலன்கள் யாவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இன்றும் இச்சுனையின் அமிர்த நீரைப் புனிதமாகக் காத்து வருகின்றார்கள்.
இங்குள்ள எத்தனையோ சுனைகளில் இந்திரத் தீர்த்தப் பகுதியைத் தாண்டி உள்ள மலைப்பகுதியில் இச்சுனை காணப் படுகின்றது. இங்கிருந்து மலையை தரிசிப்பதற்கே அமிர்த தரிசனம் என்று பெயர். சென்ற July-1998 ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் அட்டைப் படத்தில் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் திருஉருவத்தையும் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் வழிபாட்டுப் பலன்களுடன் அளித்துள்ளோம். எங்கும் காணக் கிடைக்காத அற்புத மூர்த்தியின் தரிசனம் இது.
ஸ்ரீஅமிர்த ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி
இவ்வாறாக அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் அமிர்த கடாட்சம் பெற்ற சுயம்புலிங்க மூர்த்திகளே இன்று ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராக பல ஆலயங்களில் அருள்பாலித்து வருகின்றார்கள். ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாற்கடல் அமிர்தமானது பூலோகத்தின் பல இடங்களிலும் அருவியாக ஓடியதன்றோ ! ஈரோடு அருகே தட்சிணப் பிரயாகை எனப்படும் பவானியில் காவேரி, பவானி ஆற்றுடன், அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் அந்தர்யாமியாக சரஸ்வதி நதி கலப்பது போல பவானியிலும் அமுத நதி அந்தர்யாமியாகக் கலந்து பூலோக மக்களுக்கு அமிர்தத்தின் பலனை வழங்கின்றது. இங்கும் அமிர்தலிங்கம் உள்ளது!
இன்று கலியுகத்தில் அனைவரையும் ஆட்டிப் படைப்பது மரண பயமே. நான் சாவதற்கு அஞ்சவில்லை - என்று சொல்பவர்கள் கூட சற்றே மூச்சடைக்கும் பொழுது திக்கி திணறிக் கொண்டு அலறுவதைக் காண்கின்றோம். எனவே மரணபயம் இல்லை என்று சொல்வது எளிது, ஆனால் சற்றே மூச்சுத் திணறினால் அந்த மூச்சைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு பாடுபடுகின்றோம் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது மரண பயத்தை விட்டவர்கள் மிகவும் சொற்பமே என்று கூறிவிடலாம்.
மரண பயம் தீர்தல் மட்டும் போதாது. பெறுவதற்கரிய இந்த மானுடப் பிறவியில் நல்ல ஆயுளைப் பெற்று இப்பிறவிப் பிணிகளை முடிப்பதற்கான பலவிதமான திருப்பணிகளைச் செய்து வருதல் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இப்பிறவியில் மனிதப் பிறவியைப் பெற்று விட்டோம். அடுத்த பிறவி பூமியில் உண்டா ? மறு ஜென்மாக்கள் நமக்கு உண்டா? அதிலும் மனிதப் பிறவி உண்டா என்பது நிச்சயமானதா?
எனவே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியை வழிபடுவோமேயானால் மரணபயம், எமபயம் தெளிந்து, நடப்பது எல்லாம் இறைவன் அருளாணையால் தான் என்பதை அறிவு பூர்வமாகத் தானே உணர்ந்திடலாம். இத்தகைய ஞானம் பெறும் பொழுது, கிடைத்திருக்கின்ற மனிதப் பிறவியை நன்கு பயன்படுத்திக் கொண்டிடுக! பிறவிப் பிணியைத் தீர்க்கின்ற மார்கத்தைத் தரவல்ல இறைத் திருப்பணிகளாக விளங்கும் மக்கள் சேவையையே முழு மூச்சுடன் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு ஏற்படும். இத்தகைய உயர்ந்த இறை எண்ணத்திற்குப் பரிசாக ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியே நல்ஆயுளைத் தந்தருள்கின்றார்.
அமிர்த யோகமும் உண்டே !
யோகங்களில் அமிர்த யோகம் என்ற ஒன்ற உண்டு. இது ஸ்ரீ அம்ருத மிருத்யுஞ்ஜெய மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியான நேரமாகும். குறிப்பிட்ட கிழமையும், குறிப்பிட்ட நட்சத்திரமும் சேரும் பொழுது அமிர்த யோகங்கள் உண்டாகின்றன. இவ்வெளிய விளக்கங்களைப் பஞ்சாங்கத்தில் காணலாம். சுப முகூர்த்த நேரங்களுக்கு அமிர்த யோகமும், சித்தயோகமும் மிகவும் ஏற்றவையன்றோ! சுபமுகூர்த்த நேரத்திற்குள்ளேயே சித்த புருஷர்கள் அமிருத நேரம் என்ற தெய்வீகமான நேரம் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள். இது இன்றைக்கும் பரம இரகசியமாக விளங்குகின்றது. காரணம், அமிர்த நேரத்தில் செய்யப்படுகின்ற காரியங்களின் பலன்கள் யாவும் பன்மடங்காகப் பெருகும். இதன் சூட்சுமங்களை விளக்கப் புகுந்தோமேயானால் இதனைத் தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களுடைய வியாபார அபிவிருத்திக்காகவோ, பணத்தை எப்பாடு பட்டும் சேர்ப்பதற்காகப் பலரும் இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் தான் இதுவரையில் இச்சூட்சும் அமிர்த நேரக் கணிப்பு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. குருவருளைப் பரிபூரணமாக உணர்ந்தவர்களால் தான் இதனைப் பெற இயலும்.
ஆனால் மஹான்களும், சித்புருஷர்களும், யோகியர்களும் உத்தமமான இறையடியார்களுக்கு அவர்கள் அறியாவண்ணம் இவ்வமிர்த நேரத்திலேயே அனைத்தும் நடக்கும்படி செய்து விடுவார்கள். ஏனென்றால் இந்த அமிர்த நேரத்தில்தான் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் பிரத்யட்ச கடாட்சம் பரிபூரணமாக நிறைந்திருக்கும். அதாவது இந்த நேரத்தில்தான் அவருடைய திருமேனியிலிருந்து பொங்கி வழிகின்ற அமிர்தப் பிரசாதமானது குறித்த சில புனிதத் தலங்களில் ஒளிக் கிரணங்களாகவோ அல்லது வேறு சூட்சும ரூபத்திலோ வந்து சேரும். இந்த அமிர்த நேரத்தில் அறிந்தோ அறியாமலோ செய்யப்படுகின்ற அனைத்து நற்காரியங்களுக்கும் அபரிமிதமான பலன்கள் உண்டு.
எனவே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது பிரபஞ்சத்தில் மானுட தேகத்தில் முதன் முதலாக அவருடைய தரிசனத்தைப் பெற்ற ஸ்ரீ ஒளர்வர் சித்புருஷரைத் தியானித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும்.
நல்ல மணமுள்ள தேன் நிறைந்த பூக்களால் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தி யைப் பூஜித்தல் மிகவும் விசேஷமானதாகும். உதாரணமாக தும்பைப் பூவில் எப்பொழுதும் தேன் நிறைந்திருக்கும் அல்லவா! இதே போல ரோஜா மற்றும் பன்னீர் புஷ்பங்களில் தேன் நிரம்பியிருப்பதையும் கண் கூடாகவே காணலாம். தேனே கலியுக அமிர்த பிந்து எனப்படுகின்றது. அதாவது பூலோகத்திற்கு உள்ள அமிர்தமாக நல்ல தேன் விளங்குகின்றது. மலைத் தேனாக இருந்தால் மிகவும் விசேஷமானதாகும். சித்தர்களின் ஆசியைப் பெற்றதே மலைத் தேன்! பொதுவாக தேனீக்கள் வடிவிலும் சித்புருஷர்கள் வலம் வருகின்ற மற்றும் பல வடிவுகளிலும் கொல்லி மலையிலிருந்து பெறுகின்ற தேன் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்ததாகும்.
ஓம் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியே நம :(போற்றி)
ஓம் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியே நம :(போற்றி)
ஓம் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியே நம : (போற்றி)
என்று ஓதி தேன் நிறைந்த புஷ்பங்களால் அமிர்த யோகத்தில் சுவாமியை அர்ச்சித்திட வேண்டும். இம்மூர்த்திக்கான பிரத்யேக அஷ்டோத்திர சகஸ்ர நாமத்துதிகளும் உண்டு.
வித்யா தானம் செய்வீர்!
வித்யா (கல்வி) தானமும் தம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்! தெய்வீக அறிவினைப் பரப்புதலால் பெரும் புண்ய சக்தியைப் பெற்றிடலாம்! தெய்வீக அனுபூதிகளே எப்பிறப்பிலும் அருட் சக்தியாகக் கூடி வரும். கல்வியோ, செல்வமோ, வீரமோ அந்தந்தப் பிறவியோடு சரி! என்ன, M.S. Phd. M.Tech ஆக இருந்தாலும் அடுத்த பிறவியில் LKG தான் தொடக்கம்! கல்வி, செல்வம், வீரம் - மூன்றும் தெய்வீகக் காரியங்களுக்கே பயன்படுத்தப்படுமானால்தான் அவை பயனுள்ளதாக அமையும்.
அன்பார்ந்த வாசகர்களே!
தாங்கள் விரும்பிப் படித்துப் போற்றுகின்ற ஆன்மீக மாத இதழான “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” மூலம் விரவுகின்ற இறையருட் சுடர்கள் அனைத்து இல்லங்களிலும் தெய்வீக ஒளி பரப்பும் வண்ணம் தங்களுடைய உற்றம், சுற்றம், நண்பர்கள், அறிந்தோர்கள் மட்டுமன்றி பள்ளிகள், கல்லூரிகள், மடங்கள், ஆஸ்ரமங்கள், ஆதீனங்கள், நூலகங்களிலும் பரிமளிக்கும் வண்ணமாகவும் தங்களுடைய குடும்பத்தாருடைய பிறந்த நாள் திருமண நாள் மற்றும் விசேஷ தினங்களுக்குரிய தெய்வீகப் பரிசாகவும் ஸ்ரீ அகஸ்திய விஜய சந்தாவை அளித்திடலாமன்றோ !
இன்றும் பல திருமணங்களில் தாம்பூலப் பையோடு ஸ்ரீ அகஸ்திய விஜயம் மற்றும் மாங்கல்ய மஹிமை, ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமை, பிரதோஷ மஹிமை, திருஅண்ணாமலை கிரிவல மஹிமை போன்ற எங்களுடைய ஆஸ்ரம வெளியீடுகளையும் அளித்துப் பலரும் பெருமிதம் அடைகின்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். புண்யந் தரும் நற்காரியங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்ரீஅகஸ்திய விஜயம் சந்தாதாரர்களின் புகார்கள்:
ஸ்ரீ அகஸ்திய விஜயம் சந்தாதாரர்களுக்கு, ஸ்ரீ அகஸ்திய விஜயத்தின் அலுவலகப் பணிகள் யாவும், ஜாதி, மத, வேறுபாடின்றி அன்பார்ந்த இறையடியார்களின் இறைத் திருப்பணியாகவே (Voluntary Social, divine service) நடைபெற்று வருகின்றது, எல்லாம் வல்ல இறைத் திருவருளால்! ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களுக்குத் தபால் மூலம் இதழ்களை அனுப்புகையில் பலவிதமான காரணங்களால் மாதந்தோறும் சிலவாசகர்கள் இதழ்களைப் பெறாமலிருக்கக் கூடும். எனினும் எவரிடமிருந்தேனும் “இதழ் வரவில்லை” என்று தகவல் வந்தவுடனேயே ரூ.2/ -தபாற் செலவையும் பொருட்படுத்தாது உடனேயே இதழை அனுப்பி விடுகின்றோம். இருப்பினும் ஒரு சிலர் மிகவும் கடுமையாக விமர்சித்துக் கடிதம் எழுதுவது கண்டு மிகவும் வேதனையுறுகின்றோம். தவிர்க்க முடியாத காரணங்களாலும், மற்றும் அன்பர்களுடைய குறைகள், பரிகாரங்கள், ஜாதகங்கள், பிராயசித்த விளக்கங்கள், குடும்பப் பிரச்னைகள் கோயில்கள் பற்றிய விசாரணைகள் போன்ற எண்ணற்ற கடிதங்கள் - இவைகளுக்கு இடையில் சந்தா மற்றும் முகவரி பற்றிய புகார்கள், இதழ் வராமை குறித்த கடிதங்களுக்கு பதிலளிப்பதிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு என்பதை ஒப்புக் கொள்கின்றோம்,
மாதந்தோறும் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையில் அன்னதானம், மாதந்தோறும் திருச்சி, சென்னைப் புற கிராமங்களில் இலவச மருத்துவ சேவை, உழவாரத் திருப்பணிகள், வாராந்திர பூஜைகள், ஹோமங்கள் திருஅண்ணாமலை ஆஸ்ரமக் கட்டடப் பணிகள் இவற்றிற்கிடையில் வாசகர்களுடைய கடிதங்களுக்குப் பதிலளிக்கும் இறைப் பணியையும் நடத்த வேண்டியதிருப்பதால் ஏற்படுகின்ற சிறு காலதாமதத்தையும் பொறுத்தருள வேண்டும்படி வாசகர்களை மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம். மேலும் உடனடிக் கடிதப் போக்கு வரத்திற்கும் இதழைப் பெறாதோர்க்கு அவர்களுடைய கடிதம் வந்த உடனேயே இதழை உடனடியாக அனுப்புவதற்குமான கம்ப்யூட்டர் சந்தா எண் முறை போன்ற நவீன விரைவு முறைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சரபேஸ்வர போற்றித் துதிகள் |
சரபேஸ்வரர் 108 போற்றிகள்
கடந்த பல இதழ்களாக, பரம்பொருளாம் சிவபெருமானின் அவதாரமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியின் அவதார மகிமை பற்றி சித்புருஷர்கள் அருளிய வகையில் அளித்து வருகின்றோம் அல்லவா! கலியுகத்திற்கே உரித்தான வன்முறை, தீய செயல்கள், பகைமை, கொடுமை போன்றவை அதிகரித்து வருவதால், இவற்றுக் கிடையேதான் எதிரிகளின் பகைமையை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டவாறு நம் வாழ்க்கை நடைபெற்று வருகின்றது. கலியுகத்தில் ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடானது, மக்களுக்குப் பெரும் பிரச்னையாக இருக்கின்ற பகைமையை எதிர்த்து நின்று, வென்று, அதனை அழித்து, பகைவர்களையும் திருத்தி, நல்வாழ்க்கை வாழ்வதற்கான நல்லறத்தை அருள்கின்ற பொக்கிஷமாக அமைந்துள்ளது.
சென்ற இதழில் ஸ்ரீ சரபேஸ்வரரின் 108 போற்றிகளில் 52 போற்றிகளை அளித்திருந்தோம். ஏனையவற்றை இங்கு தொடர்கின்றோம். தாமே அரைத்த மஞ்சள், சந்தன உருண்டைகளாலும் நல்ல தூய்மையான வெண்ணை உருண்டைகளாலும் இப்போற்றிகளை ஓதி சரபேஸ்வரரை அர்ச்சித்து வழிபடலாம். பிரதோஷ நாட்களிலும் தினசரி பிரதோஷநேரமான மாலை 4.30 - 6 வரையிலான நித்திய பிரதோஷ நேரத்திலும் சரபேஸ்வரரை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
ஸ்ரீ சரபேஸ்வரர்
53 ஓம் ஐம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
54 ஓம் ஐம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய்போற்றி
55 ஓம் ஐம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
56 ஓம் ஐம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி
57 ஓம் ஐம் வழித்துணையாய் வருவாய் போற்றி
58 ஓம் ஐம் வலம் சுழித்து எட்டு திசையும் காப்பாய் போற்றி
59 ஒம் ஐம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி
60 ஓம் ஐம் நம்பி என்னை வருவோர்க்கு அருள்வாய் போற்றி
61 ஓம் ஐம் நமசிவாய திருவே போற்றி
62 ஓம் ஐம் சிவ சூரியா போற்றி
63 ஓம் ஐம் சிவச் சுடரே போற்றி
64 ஓம் ஐம் அட்சர காரணனே போற்றி
65 ஓம் ஐம் ஆதி சிவனே போற்றி
66 ஓம் ஐம் கால பைரவரே போற்றி
67 ஓம் ஐம் திகம்பரா போற்றி
68 ஓம் ஐம் ஆனந்தா போற்றி
69 ஓம் ஐம் கால காலனே போற்றி
70 ஓம் ஐம் காற்றென கடுகி உதவும் தேவா போற்றி
71 ஓம் ஐம் கர்ப்பப்பையைக் காப்பவனே போற்றி
72 ஓம் ஐம் காத்து கருப்புகளை அழிப்பவனேபோற்றி
73 ஓம் ஐம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனேபோற்றி
74 ஓம் ஐம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி
75 ஓம் ஐம் வல்லார்கள் நால்வரும் தோத்தரித்த தேவா போற்றி
76 ஓம் ஐம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி
77 ஓம் ஐம் முக்திக்கு வித்தாகும் மூல குருவே போற்றி
நவராத்திரி பூஜை மகிமை |
கடந்த பல வருடங்களாகவே மாளய பட்ச அமாவாசையின் மகிமையை எளியோரும் புரிந்து கொள்ளும்படி பல அற்புதமான விளக்கங்களை அளித்து, யாவரும் ஜாதி, மத, இன, குல வேறுபாடின்றித் தர்ப்பண பூஜையைச் செய்து நற்பலன்களைப் பெற வேண்டும் என்பதற்காக எளிய தர்ப்பண முறைகளையும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம் அல்லவா? இதே போன்று தான் மாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாட்களுக்கு அமைகின்ற நவராத்திரி விழாவின் சிறப்பினைப் பற்றியும் நாம் இதுவரையில் சித்புருஷர்களின் விளக்கங்களை அனைவருக்கும் நன்கு புரியும்படி அளித்து வந்துள்ளோம்.
இதன் குறிக்கோள் என்னவெனில் அனைவருமே நவராத்திரி பூஜையினைக் கொண்டாடி அம்பிகையின் அருட்கடாட்சத்தைப் பெற வேண்டும் என்பதேயாகும். நாம் தினசரி பூஜைகளைச் சரியாகச் செய்வது கிடையாது. பக்தி சிரத்தையும் மிகவும் மலிந்து வருகிறது. மேலும் நம் பூஜைகளெல்லாம் சுய நோக்கோடு அமைந்து பலவிதமான லெளகீகமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில்தான் அமைந்துள்ளது. எவருமே இறப்பிறப்பற்ற முக்தி நிலை அடைய வேண்டும், மோட்சத்தைப் பெற வேண்டும், அம்பிகையின் திருவருளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இறை வழிபாடுகளை மேற்கொள்வது கிடையாது. வயதான பின்னர் இவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான், பலரும் மிகமிக லெளகீகமான பிரார்த்தனைகளுடன்தான் பூஜை முறைகளையும் விரதங்களையும் மேற்கொள்கின்றனர்.
கலியுகத்தில் மக்களுடைய இறை பக்தி இத்தகைய நிலையில் தான் அமையும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்தேதான் அகிலாண்டேஸ்வரியான அம்பிகையானவள் நவராத்திரியின் 9 தினங்களில் 9 இரவுகளிலும் இறைவனை இடைவிடாது பிரார்த்தித்து மக்களுக்கு அனைத்து விதமான நலன்களையும் பெற்றுத் தருவதற்காகப் பல சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால், நாமும் நவராத்திரி பூஜைகளைச் செய்யும் போது அம்பிகையுடன் சேர்ந்து ஆண்டவனை வழிபடுகின்ற பெரும் பேற்றைப் பெறுகின்றோம்.
சப்த கன்னியர்களும், சப்த மாதாக்களும், நவதுர்கா தேவியர்களும் நவகன்னியர்களும் அகிலாண்டேஸ்வரியுடன் ஒன்று சேர்ந்து பரம்பொருளாம் சரபேஸ்வரரை வழிபடுகின்ற மிகமிகச் சிறப்பான காலமே நவராத்திரியின் 9 தினங்களாகும். நிறைந்த சுமங்கலித்துவத்தைத் தரக்கூடியது, கணவனுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஒழுக்கத்தையும் தர வல்லது, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ஒழுக்கத்தையும் தரக் கூடியது, குடும்பத்தில் மலிகின்ற சிறு, சிறு பிரச்னைகளைத் தீர்த்து நல்ல சாந்தமான வாழ்க்கை அமைவதற்கு உதவி புரிவது, வயதான பெரியோர்களுக்கும் வாழ்க்கையிலே ஒரு பிடிப்பைத் தந்து தம் பூஜைகளின் பலன்களையெல்லாம் இளைய தலைமுறைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தைத் தந்து அவர்களுடைய பூஜைமுறையை விருத்தி செய்வது. இவ்வாறு நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான பலவிதமான அனுக்ரஹங்களைத் தரவல்லது. நவராத்திரி பூஜையாகும்.
நவராத்திரி தினங்களில் அம்பிகையானவள் பலவிதமான ஜீவன்களில் ஆவாஹனம் கொள்கின்றாள். குறிப்பாக, 80 வயது நிறைந்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவற்றை முறையாகக் கொண்டாடிய, 60, 70, 80 ஆயிரம் சந்திர பிறைகளைக் கண்ட உத்தமப் பெரியோர்களின் திருமேனியில் ஆவாஹனமாகி அவர்களுக்கு நாம் பாத பூஜை செய்யும் போது, இறைவனுடைய பெறற்கரிய அனுக்ரஹத்தினைப் பெற்றுத் தருகின்றாள். எனவே நவராத்திரி நாட்களில் மிகவும் வயதான சுமங்கலிப் பாட்டிக்குப் பாத பூஜை செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இதில் சாதி மத வேறுபாடு கொள்ளாது எந்த ஜாதி, சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அந்த சுமங்கலிப் பாட்டிக்கு அருகிலேயே தாத்தாவை அமர வைத்துப் பாதபூஜை செய்து அவர்களை வணங்கி ஆசியைப் பெறுதல் வேண்டும்.
ஒவ்வொரு திதிக்கும் உரிய விதவிதமான சுமங்கலித்துவ விசேஷ அம்சங்கள் உண்டு. சுமங்கலித்துவம் என்பது ஒரு புனிதமான தெய்வீக அம்சமாகும். கணவன், மனைவியர் தம்பதி சமேதமாக 80 ஆண்டுகள் அன்புடன், நேசமுடன், மனித நேயத்துடன் ஒன்றாக வாழ்ந்து ஜீவிக்கின்றார்கள் என்றால், அது நிச்சயமாக இறைவனுடைய பெரும் கருணையால் ஆவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பெரும் பாக்கியமும் ஆகும். இதனால் அவர்களுக்கு ஒரு சுமங்கலித்துவ தெய்வீக சக்தி கிட்டுகின்றது. அதனைப் பலருக்கும் வினியோகித்தால் தான் பன்மடங்காகப் பெருகி அவர்களுக்கும் அருள்பாலித்திடும்.
மேலும் இத்தகைய வயதான சுமங்கலிக்குச் செய்த பாத பூஜையால் கிட்டுகின்ற வரங்களினாலும், அருள் சக்தியினாலும் பல கொடிய தீவினைகளையும் நாம் எளிதே வென்று விடலாம். இல்லாவிடில் இத்தகைய தீவினைகள் நம்மைப் பல கோடி பிறவிகளில் தொடர்ந்து வந்து நம்மைத் துன்புறுத்தும்.
பாதபூஜை என்றால் தம்பதிகளாக அமர வைத்து அவர்களுக்கு கங்கை, காவிரி போன்ற புனித நீரினால் கால்களைக் கழுவி தாமே அரைத்த மஞ்சள், குங்குமம் இட்டு அவர்களை 3 முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். ஏழை, நடுத்தர வர்கத்தினராக இருந்தால் அவ்வயதான தம்பதிக்குத் தேவையான அன்னதானம், ஆடை தானம், பொன்தானம், படுக்கை தானம், காலணி தானம் போன்ற விதவிதமான இயன்ற தானங்களை அளித்திட வேண்டும்.
நவராத்திரி பிரதமை திதியில்
மூன்று பெண் வயிற்றுப் பேத்திகளை உடைய சுமங்கலிப் பாட்டிக்குப் பாத பூஜையுடன் இன்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து ஆனந்தப்படுத்தி ஆசிகளைப் பெறுதல் வேண்டும். இப்பாத பூஜையால் கணவன், மனைவியிடையே உள்ள மனக் கசப்புகளும் சந்தேக மனப்பான்மைகளும் நீங்கி வாழ்க்கை சுமூகமாக அமையும். மேலும், பிரிந்து வாழ்கின்ற கணவன், மனைவியர் ஒன்று சேருவதற்கு இப்பாத பூஜை பெரிதும் உதவும். ஏதேதோ காரணங்களுக்காக கணவனை விட்டுப் பிரிந்து வாழுகின்ற இல்லறப் பெண்மணிகளுக்கு இப்பூஜை நல்வழியைக் காட்டும்.
துவிதியை திதி
இன்று பிள்ளைகளின் மூலமாக 3 பேரன்களைப் பெற்றுள்ள சுமங்கலிப் பாட்டிக்குப் பாத பூஜை செய்ய வேண்டும். இதில் ஒன்றை மீண்டும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய சுமங்கலிப் பாட்டிகள் எந்த சாதி,இன, குல சமயத்தைச் சேர்ந்தவராகவும் இருந்திடலாம். இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது.
திருதியை திதி
தலா மூன்று பேத்திகளை உடைய, அக்கா, தங்கைகளாக இருக்கின்ற இரண்டு சுமங்கலிப் பாட்டிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியே குறைந்தது மூன்று பேத்திகளாவது இருத்தல் வேண்டும். இதனால் பாத பூஜை செய்கின்ற சகோதரிகளிடையே உள்ள மனவேற்றுமை நீங்கி, நல் உறவு தொடரும். மேலும் உறவு முறையில் உள்ள தடங்கல்கள், திருதியை தின பாதபூஜையால் நீங்கி, திருமணங்கள் நன்கு நடைபெறும்.
சதுர்த்தி திதி
இன்று 4 ஆண் பேரன்களை உடைய சுமங்கலிப் பாட்டிக்கு பாத பூஜை. இதனால் நல்ல அலுவலக வேலை இல்லாது தவிக்கின்ற குடும்பங்களுக்கு நிரந்தர வேலை கிட்டும். மேலும் பணக் கஷ்டங்களினால் துன்புறுகின்ற குடும்பங்களுக்கு இப்பாத பூஜை நல்வழியைத் தரும்.
பஞ்சமி திதி
தன்னுடைய ஆண் குழந்தையைத் தத்துக் கொடுத்த சுமங்கலிப் பாட்டிக்கு பாதபூஜை. இதனால் சந்தான பாக்கியம் கிட்டும். மேலும் ஆண் சந்ததியின்றி வாழ்ந்தவர்க்கு அத்தகைய குறைகள் நீங்கும் வண்ணம் தெய்வாதீனமாக சில நல்வழிகள் பிறக்கும்.
சஷ்டி திதி
தன் தங்கைக்கோ, அக்காவுக்கோ ஆண் பிள்ளையைத் தத்துக் கொடுத்த சுமங்கலிப் பாட்டிக்குப் பாதபூஜை. இப்பூஜையினால், தீயொழுக்கத்தால் சீரற்ற வாழ்க்கை வாழ்கின்ற ஆண்களுக்கு நல்ல புத்தி கிட்டி நன்முறையில் வாழ்க்கை தொடரும்.
பல கணவன்மார்கள், சீட்டு, குதிரை, ரேஸ் போன்ற பலவிதமான கூடா நட்பிற்கு ஆட்பட்டுத் தங்களுடைய வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்கின்றார்கள். இவர்களுக்கு நல்ல புத்தி கிட்டுவதற்காக இந்த சஷ்டி தின பூஜை உதவுகிறது. மாதந்தோறும் இந்த சஷ்டி தின பூஜையை மேற்கொள்வது சிறப்புடையது.
சப்தமி திதி
காதலித்து நன்முறையில் மணம் புரிந்து நல்வாழ்க்கை வாழ்கின்ற 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பாட்டிக்கு இன்று பாத பூஜை. காதல் என்றால் உண்மையான அன்புப் பரிமாற்றமே! இதனால் மருமகளை சரியாக நடத்தாத மாமனார், மாமியாருடைய துன்பங்களிலிருந்து தன்னுடைய மகளுக்கு விடிவு கிட்டுவதோடு நல்வாழ்க்கை அமைவதற்கு இது பெரிதும் உதவும்.
அஷ்டமி திதி
எந்த குடும்பத்திலேனும் எவரேனும் சந்நியாசம் பூண்டிருந்தால் அந்த குடும்பத்திலுள்ள 60, 70, 80 வயது நிரம்பிய சுமங்கலிப் பாட்டிக்கு பாத பூஜை. இதனால் பிள்ளைகளும், பெண்களும் பிரம்மச்சரிய நல்ஒழுக்கத்தில் நன்முறையில் பக்தியுடன் வாழ்வார்கள்.
நவமி திதி
சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடிய பெண் வழக்கறிஞர்களுக்குப் பாத பூஜை. வழக்கறிஞர் துறை என்பது சட்டப் படிப்புப் படித்தால் மட்டும் வருவதன்று. வாக்தேவியான ஸ்ரீசரஸ்வதி தேவியின் பரிபூரண அனுக்ரஹம் இருந்தால்தான் ஒரு பெண்மணி வழக்கறிஞராக முடியும். இதனால் வாக் சித்தி கிட்டுவதோடு நற்கல்வியும் பிள்ளைகளுக்கு அமையும்.
தசமி திதி
வீணை இசைக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சுமங்கலிப் பாட்டிக்கு பாத பூஜை, குறைந்தது 40 வருடங்களேனும் வீணை இசையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதனால் வாழ்வில் மன அமைதி கிட்டும். வறுமையிலும் வளப்பத்திலும் மனசாந்திதானே தேவை!
இத்தகைய பாதபூஜை மட்டுமல்லாது நவராத்திரியின் ஒவ்வொரு தினத்திலும் அம்பிகையானவள் விதவிதமான யோக நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். இதனைப்பற்றி சித்புருஷர்களின் கிரந்தங்கள் மிகவும் அற்புதமாக விவரிக்கின்றன.
அமரந்த கோலம்
அமாவாசையில், குறிப்பாக மாளய பட்ச அமாவாசையில், அமர்ந்த கோலத்தில் உள்ள அம்பிகையை தரிசிப்பது மிகவும் சிறப்புடையதாகும். அம்பிகையை தரிசித்தல் என்றால் அர்ச்சனை ஆராதனை செய்வது மட்டுமல்லாது அடிப்பிரதட்சிணம் செய்து அம்பிகையை வணங்குதல் வேண்டும். இயன்ற வரையில் தாமே அரைத்த மஞ்சள், சந்தனத்தை, குங்குமத்துடன் ஏழை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் வேண்டும். நவராத்திரி தினங்கள் அனைத்திலும் கண்ணாடி, சீப்பு, பூ, பழம், வளையல், தாலி சரடு போன்ற மங்களகரமான பொருட்களைத் தானமாக ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்து வருதலால் பலவிதமான தேவசக்திகளும் பூஜாசக்திகளும் கிட்டுகின்றன. காஞ்சீபுரம், திருவாரூர் போன்ற தலங்களில் அம்பிகை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றாள்.
நின்ற கோலம்!
நின்ற கோலத்தில் உள்ள அம்பிகையை நவராத்திரியின் பிரதமை திதியன்று பூஜித்தல் சிறப்புடையதாகும். இந்நாளில் அம்பிகைக்கு அணிவிக்கப்பட்ட 8 மற்றும் 9 கஜ சேலைகளை இறைப் பிரசாதமாக ஏழை சுமங்கலிகளுக்கு அளித்தால், தோல் சம்பந்தமான பல வியாதிகள் தீரும், கர்ப்பப் பை கோளாறுகளுக்கும் நிவர்த்தி உண்டாகும்.
இடப்புற அம்பிகை!
பல திருத்தலங்களிலும் சுவாமிக்கு இடப்புறம் அம்பிகை அருள்பாலிக்கின்றாள். இவ்வாறாக, இறைவனுக்கு இடப்புறமாக அமைந்து அருள் பாலிக்கின்ற ஈஸ்வரிக்கு, நவராத்திரி துவிதியை அன்று பூஜை செய்து வணங்கிடில் பல அற்புதமான அனுக்ரஹங்கள் கிட்டுகின்றன. பல கணவன்மார்களும் தன் மனைவியானவள் எதிர்த்துப் பேசி dominate செய்வதாக வருந்துவதுண்டு. பணிவின்மை, கர்வம், அகங்காரம், செல்வம் காரணமாகப் பல பெண்களும், கணவனை அறியாமையினால் சற்று மட்டமாக நடத்துவதுண்டு. இத்தகைய பிரச்னைகளிலிருந்து கணவன்மார்கள் விடுபடுவதற்குத் துவிதியை தின வழிபாடு பெரிதும் உதவுகின்றது.
இதேபோன்று கணவனுடைய அட்டகாசத்தினால், தீயொழுக்கத்தால் அவதியுறுகின்ற பெண்களும் உண்டு. அவர்களும் இத்தகைய பூஜையை மேற்கொண்டால் கணவனின் மனம் திருந்தி சாந்தம் தழுவும் நல்வாழ்வைப் பெறலாம். மனைவி சார்பாக, கணவனும் இப்பூஜையை மேற்கொள்ள முடியும்! ஆண்களும் நிச்சயமாக நவராத்திரி அம்பிகையை சேவிக்கலாமே! மேற்கண்ட குறைகளை உடைய தன்னுடைய சகோதரர்களுக்காக, சகோதரிகளுக்காக வழிபட்டிடலாமே!
நான்கு கரத்தினள்!
நான்கு கைகளுடன் அருள்பாலிக்கின்ற அம்பிகையை நவராத்திரி சதுர்த்தி நான்காம் நாளன்று போற்றி வழிபடுவதால் சிறப்பான பலன்கள் கிட்டுகின்றன. பல குடும்பங்களில் பிள்ளைகளுடைய ஆரோக்யமற்ற நிலையைக் கண்டு பல இல்லறப் பெண்மணிகள் வருந்துகின்றனர். அடிக்கடி குழந்தைகள் நோய்வாய்ப்படுவதால் வீட்டிலும் அமைதியின்றி ஏனோதானோவென்று வாழ்க்கை நடைபெறுகின்றது.
நவராத்திரி சதுர்த்தி தின பூஜையினால் குழந்தைகளுக்கும் வளர்ந்த ஆண், பெண் பிள்ளைகளுக்கும் நல்ஆரோக்கியம் கிட்டும். இதனைச் சதுர்த்தி திதி தோறும் தொடர்ந்து செய்வது சிறப்புடையதாகும். சதுர்த்தி திதியன்று நான்கு கைகளுடைய அம்பிகையின் திருப்பாதங்களில் வளையல் களைச் சார்த்தி, ஏழைப் பெண்களுக்கு தானமாக அளித்திட வேண்டும். நவராத்திரி பஞ்சமி திதியன்று, தன் திருப்பாதங்களை முன் வைத்த கோலத்தில் அருள்பாலிக்கின்ற அம்பிகையை வழிபடுவது விசேஷமானதாகும். உதாரணமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகை தன்னுடைய பாதத்தை முன் வைத்து அருள்பாலிக்கின்றாள்.
பஞ்சமி திதியன்று அம்பிகையின் திருப்பாதங்களில் வெள்ளி மெட்டிகளை சமர்ப்பித்து, அதனை ஏழைபெண்களுக்கு தானம் அளித்திட வேண்டும். திருதியை திதியன்று அம்பிகைக்குப் பச்சை நிறப் புடவையைச் சார்த்தி, இதனை கன்னிப் பெண் களுக்கும் இல்லறப் பெண்களுக்கும் தானமாக அளித்திடல் வேண்டும்.
ஒன்றே தெய்வம்!
சஷ்டி திதியில் பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கின்ற அம்பிகைக்குப் பூஜை செய்து வழிபடுவது சிறப்புடையதாகும். இன்று முழுத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தலால் பெரும் பலன்களைப் பெற்றிடலாம். பெரும்பாலும் அனைத்துச் சிவாலயங்களிலும் லஷ்மி தேவியானவள் பத்மாசனமிட்டு அமர்ந்திருப்பாள். அம்பிகையென்றால் நவராத்திரியின் போது, பார்வதி தேவியை மட்டும் தான் வழிபடவேண்டும் என்பதில்லை . கெளரி, ஈஸ்வரி, லஷ்மி தேவி, துர்காதேவி, சரஸ்வதி தேவி, சந்தோஷிமாதா, காமாட்சி என எந்த அம்பிகையையும் வழிபடலாம், பட்டாடைகளைச் சார்த்தி ஏழை சிறுமியர்க்கு தானமாக அளித்திட வேண்டும். இதனால் பெண் குழந்தை இல்லாது ஏங்குகின்ற பெற்றோர்க்கு நல்வழி கிட்டும். இந்த ஏக்கங்கள் பெண் குழந்தையைப் பெறுவதால்தான் நிவாரணம் அடையும் என்று எண்ண வேண்டாம். இதற்கு ஈடான பல அம்சங்களையும் அம்பிகை அளித்திட வழி உண்டு. சப்தமி திதியன்று சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படுகின்ற அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்தல் மிகமிகச் சிறப்புடையதாகும். அதெப்படி சூரிய, சந்திர கிரணங்கள் அம் பிகையின் மேல் விழமுடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா?
உண்மையில் கோயமுத்தூர் அருகே வெள்ளலூரில் ஸ்ரீ தேனீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள அம்பிகையின் மேல் வருடத்தில் சில நாட்கள் சூரிய, சந்திர கிரணங்கள் படுகின்றன. இதே போன்று அற்புதமான சில ஸ்தலங்கள் உள்ளன. அவற்றை நன்கு தீர விசாரித்து பெறுதற்கரிய இப்பூஜையை இப்போதே செய்து பலன் அடையுங்கள், ஏனெனில் லட்சத்தில் ஒரு சிலரே இத்தகைய அரிய பூஜைகளைக் கடைபிடித்து மிகவும் மகத்துவம் வாய்ந்த அற்புத சக்திகளைப் பெறுகின்றார்கள், இதற்கெனவே நவராத்திரியின் சப்தமி திதிக்காகக் காத்திருப்பவரும் உண்டு. இதனால் ஏற்படுகின்ற பலன்கள் எண்ணற்றவை, எழுதினால் எத்தனையோ புராணங்களாக விரியும்.
கல்வியில் மேன்மை அடைவதற்காகவும், பெறற்கரிய பல விருதுகளைப் பெறுவதற்காகவும், தொழில், விஞ்ஞானம் மற்றும் அணுவியல் துறையில் சிறப்பான ஆராய்ச்சிகளையும், பட்டங்களையும் பெற்று உலகம் போற்றும் வண்ணம் சிறந்து விளங்கவும் இத்தகைய வழிபாடு பெரிதும் உதவுகின்றது. எனவே இந்த நவராத்திரி சப்தமி திதி பூஜையை விட்டு விடாதீர்கள். பலன்களை அள்ளிச் செல்லுங்கள்,
நவராத்திரியின் தசமி திதியன்று இரு அம்பிகைகள் அருள்பாலிக்கின்ற ஆலயத்தில் பூஜைகளைச் செய்வது விசேஷமானதாகும். இன்று இத்தகைய ஆலயங்களில் நன்னீர் விட்டுக் கழுவி, தூய்மை செய்து, ஆலயம் முழுதும் கோலங்களிட்டு, நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைப்பது மிகவும் சிறப்புடையதாகும். இதனால் பல ஆண்டுகளாகத் திருமணத் தடங்கல்களால் வருந்துகின்ற கன்னிப் பெண்களுக்கு நன்முறையில் திருமண வாழ்க்கை அமையும்.
திருச்சி அருகே திருப்பைஞ்ஞலியில், உய்யக்கொண்டான் மலைத்தலத்திலும் இரு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். இது மட்டுமல்லாது நவராத்திரி தினங்களில் வெள்ளிக் கிழமை கூடுமானால் அந்த வெள்ளிக் கிழமையன்று எட்டு கரங்களுடைய அம்பிகைக்கு, பெரும்பாலும் ஸ்ரீ காளி தேவிக்குப் பூஜை செய்வது சிறப்புடையதாகும். இதனால் ராணுவம், வெளிநாடு, கப்பல் துறை, பாய்லர் துறை போன்ற ஆபத்தான தொழில்களில் உள்ள கணவன்மார்கள் நன்முறையில் வேலை முடிந்து ஆபத்துகளிலிருந்து மீள்வதற்கு இப்பூஜை பெரிதும் உதவுகிறது. மேலும் தன்னுடைய மகளுக்கு நல்முறையில் வாழ்க்கை அமையவில்லை என்று வருந்துகின்ற இல்லறப் பெண்மணிகள் பலரும் உண்டு, வறுமை, வேலையின்மை, கணவனின் தீயொழுக்கம் போன்றவற்றால் வாடுகின்ற பெண்களுக்கு நற்கதியைப் பெற்றுத் தர, வெள்ளிக்கிழமையன்று 18 கரங்களுடைய அம்பிகைக்குத் தொடர்ந்து பூஜை செய்வது சிறப்புடையதாகும். கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் 18 கைகளுடைய ஸ்ரீ மஹாகாளி அருள் பாலிக்கின்றாள்,
எல்லாவற்றையும்விட பகுதான்ய வருடத்தின் நவராத்திரி 9 தினங்களிலும் காமதேனுவையே வாகனமாக உடைய அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை பூஜைகளை செய்து வருவதால் மேற்கண்ட பலன்களை விட மேலான பலன்களைப் பெற்றிடலாம். இந்த பகுதான்ய வருட நவராத்திரி 9 நாட்களிலும் காமதேனுவை வாகனமாகக் கொண்ட அம்பிகைக்குப் பூஜை செய்கின்ற பாக்கியத்தைப் பெற்றோர், மேற்கண்ட அனைத்து விதமான ஒன்பது விதமான பூஜைகளை சேர்ந்து செய்த பலன்களை ஒட்டு மொத்தமாகப் பெற்றிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கு இந்த பாக்கியம் கிட்டுகின்றதோ, இறைவனே அறிவான்!.
ஏன் நீங்களும் ஒருவராக இருத்தல் கூடாது ?
அமுத தாரைகள் |
வெள்ளை வேம்பு மாரியம்மன்
அபூர்வமான வெள்ளை வேம்பு இலைகளை உடைய வெள்ளை வேம்பு விருட்சமும் இதனடியில் அருள்பாலிக்கும் ஆதிபராசக்தியின் அம்சமான வெள்ளை வேம்பு மாரியம்மனும் விளங்கும் திருத்தலம் திருவாவடுதுறை அருகே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மாயூரம் - கும்பகோணம் இடையே, திருவாலங்காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவு.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, மகம், சித்திரை, தைப் பொங்கல், ஆடிப் பூரம் போன்ற நாட்கள் வெள்ளை வேம்பு மாரியம்மனுக்கு மிகவும் விசேஷமானவை! அம்பிகைக்குத் தாமே அரைத்த மஞ்சள், சந்தனக் காப்பிட்டு (பவுடரைக் கரைத்தல் கூடாது) சாதி, சமய வேறுபாடின்றி ஏழைகளுக்கு கண்ணாடி, சீப்பு, வளையல், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை அளித்துவர கடுமையான தோல் நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். வெள்ளை வேம்பு இலைகளைப் பறித்தல் கூடாது. கீழே விழுந்து கிடக்கும் இலைகளை எடுத்துத் தூய்மை செய்து அம்மனின் திருவடிகளில் சமர்ப்பித்து, தக்க உண்டியல் காணிக்கையைச் செலுத்தி, வேப்பிலைப் பிரசாதத்தைத் தினந்தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சிறிது உண்டு வந்தால் எத்தகைய (நாள்பட்ட) தோல் நோய்களுக்கும் நிச்சயமாக நிவாரணம் கிட்டும்.
நியாயமான முறையில் கிட்ட வேண்டிய பதவி உயர்வைப் பெறுதற்கும், பதவி நிரந்தரமாவதற்கும் வெள்ளை வேம்பு மாரியம்மனுக்குரிய இயன்ற ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு எட்டுத் திக்குகளிலும் செவ்வாய் தோறும் தேங்காயெண்ணெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.
தீர்த்த கண்டி பூஜை
தீர்த்த கண்டி என்பது பலயுகங்களுக்கு முன் சிறப்புற்று விளங்கிய, அதி அற்புதமான பலன்களையும் காரிய சித்திகளையும் பெற்றுத் தரவல்ல சக்திவாய்ந்த திருவிளக்கு பூஜை, எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் பிரசித்தி பெற்று விளங்கியது. நம்முடைய நல்வாழ்விற்காக, சித்புருஷர்களின் கிரந்தங்களிலிருந்து இவ்விளக்கங்களை கிரஹித்து நமக்குத் தந்தருள்கின்றவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ! இஃதோடன்றி மிகவும் தெய்வீக சக்தி நிறைந்த கபிஸ்தலக் காவிரித் திருமண்ணில் இவ்வழகிய தீர்த்தகண்டியையும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள்.
நவராத்திரி தினங்களில் இல்லறப் பெண்மணிகள் சத்சங்கமாக ஒன்று கூடி, பலவித புண்ய நதி/கோயில் தீர்த்தங்களை இத்தீர்த்த கண்டியில் இட்டு, கண்டியின் மேலும் சுற்றிலும் 1+7 அகல் தீபங்களை ஏற்றி இறைத் துதிகளை ஓதி பூஜித்தலால் நற்பலன்கள் கிட்டும்.
ஒரு நுனிவாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி அதில் பிள்ளையார் சுழியை இட்டு குலதெய்வத்தைப் பிரார்த்தித்து, அரிசியின் மேல் புண்ய தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த கண்டியை வைத்து, பழுத்த சுமங்கலிகள் மூலம் முதலில் அகல் விளக்குகளை ஏற்றி பிறகு இதனைச் சுற்றி எத்தனை வட்டங்கள் அகல் விளக்குகளை ஏற்ற முடியுமோ, அனைத்தையும் சாதி பேதமின்றி ஏனையோரும் ஏற்றி அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ர நாமம் போன்ற துதிகளை ஒதி அல்லது
ஓம் பராசக்தியே போற்றி,
ஓம் சர்வேஸ்வரியே போற்றி,
ஓம் சிவ, விஷ்ணு, பிரம்ம சக்தியே போற்றி
என்று நாமாக்களையோ, தாம் அறிந்த ஏனைய இறைத் துதிகளையோ ஓதி எளிய முறையில் வழிபட்டிடுக! தீர்த்த கண்டியினைச் சுற்றி முதல் வட்டத்தில் ஏழு அகல் விளக்குகளையும் (கண்டியின் மேல் ஒரு விளக்கு ஆக எட்டு), பிறகு இரண்டு, மூன்று என ஏனைய வட்டங்களிலும் பங்கு கொள்கின்றவர்களின் வசதியைப் பொறுத்து எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் அழகாக ஏற்றிடலாம். எவ்வளவுக்கெவ்வளவு தீபங்கள் ஏற்றுகின்றோமோ அந்த அளவிற்கு இத்தீர்த்த கண்டியில் ஆவாஹனமாகின்ற நதி தேவதைகளின், தீர்த்த தேவதைகளின், போற்றித் துதிக்கின்ற அம்பிகையின் நல்வரங்கள் பல ஜோதிகளின் மூலமாக நிரவி அனைவர்க்கும் கிட்டுகின்றன.
இது மிகச் சிறந்த சமுதாய பூஜை!
நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் இத்தீர்த்த கண்டிகள், பெளர்ணமி தினங்களில்கிடைக்கும். இதனை, குத்து விளக்கு போல எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம்.
உலோக, கல் சிலா மூர்த்திகளை விட மண்ணாலான சுதை மூர்த்திகளில் தெய்வ சக்தி அபரிமிதமாகக் கணிந்து அருள் கூட்டும். சென்னை ராயபுரம் கல் மண்டபம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, கும்பகோணம் நாகேஸ்வர ஆலய அம்பிகைகளும் சுதை மூர்த்திகளே! இதேபோல் ஒரு தீர்த்த கண்டி திருவிளக்கு பூஜையானது எதனையோ உலோக விளக்கு ஜோதிகளின் பலாபலன்களைப் பெற்றுத் தரக்கூடிய தெய்வீக சக்தியை உடையதாகும்.
விளக்கு பூஜைக்குப்பின் தீர்த்தத்தை அனைவரும் உண்டு, வீடு, நிலம், அலுவலகம் பிரசாதமாக என அனைத்து இடங்களிலும் மாவிலைகளால் தெளித்திடில் பலவித தோஷங்கள் நீங்கும்.
திருவள்ளுரில் மாளய அமாவாசை
சென்னை திருவள்ளூர் பெருமாள் ஆலயத்தில் மாளய அமாவாசை மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. இவ்வாலயத் திருக்குளத்தில் இன்று கோடிக்கணக்கான பித்ரு தேவர்கள் சூட்சும ரூபத்திலும் அருவமாகவும் பிற வடிவுகளிலும் நீராடி, ஆசி தந்து அருள்பாலிக்கின்றனர். மாளய அமாவாசையன்று இவ்வழகிய தீர்த்தத்தில் ஆயிரக் கணக்கானோர் முடியெடுத்து, நீராடி, தர்ப்பணம் அளிக்கின்ற திவ்யமான காட்சி என்றும் மனதை விட்டு அகலாது! கலியுகத்தில் பக்தி யோகம் தழைக்கின்றது என்ற உன்னத உணர்வின் மூலம் நம்மை தெய்வீகத்தில் மேலும் முழு மூச்சுடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கான உத்வேகத்தைத் தரக் கூடிய அற்புதமான உற்சவம் இங்கு நடைபெறுவதைப் பலர் அறியார்!
சர்வேஸ்வரப் பரம்பொருளாம் ஸ்ரீ வீரராகவப் பெருமாளின் அரும்பெருங் கருணையால் கடந்த பல ஆண்டுகளாக, மாளய அமாவாசை தோறும் இத்திருத்தலத்தில் பத்தாயிரம் உணவுப் பொட்டலங்களுக்கு மேல், நம் ஆஸ்ரமம் சார்பாக, அன்னதானமாக, அடியார்கள் மூலமாக அளிக்கப்பட்டு வருகின்றது! பித்ருக்களின் சங்கமமாகத் திகழ்கின்ற இவ்வரிய மாளய அமாவாசைத் திருவிழாவில் அற்புதமான இத்தீர்த்தத்தில் தர்ப்பண பூஜை செய்து சாதி, இன வேறுபாடின்றி ஏனையோர்க்கும் இலவசமாக தர்ப்பண பூஜைகளைச் செய்வித்து/செய்ய உதவி செய்து தர்மமிகு இறைத் திருப்பணியில், மக்கள் சேவையே மஹேஸன் சேவையென உணர்ந்து, செயலாற்றுங்கள்!
ஜயம் தரும் ஜடாயு குண்ட விபூதி !
பல காரியங்கள் தெய்வத்தின் அருளால் தான் நிறைவேறுகிறது. சாதாரண மனிதன் தன் முயற்சியால் பல காரியங்களைச் சாதிக்க முற்படுவான். ஆனால் அனைத்துக் காரியங்களையும் சாதிப்பதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம்! உடல் நலம் குறைந்து விட்டால் எந்த சாதனையாளரும் சோதனைக்குள்ளாகி விடுவார். ஆகவே உடல் பலம் பெருகுவதற்கும், முக்கியமான காரியங்களில் இறைவனே உடனிருந்து உதவுவதற்கும் ஒரு அற்புதமான வழியுண்டு. ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஜடாயு குண்டம் திருச்சாம்பலை தினமும் தேகமெங்கும் இட்டு வருவதால் ஸ்ரீராமரே உடனிருந்து காரிய சித்திக்கு உதவுவார் என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
வியாதிகளை குணமாக்கும் அற்புத தீர்த்தம்
வைத்தியராலும் கைவிடப்பட்ட நோயாக இருந்தாலும் கிரகத்தின் சஞ்சாரத்தால் ஏற்படுகின்ற நோயாக இருந்தாலும், மாற்று மருந்துகளுக்காக நாம் நாடுவது வைத்தியர்களை அல்ல. இறைவனைத் தான் தேடி ஓடி வருகின்றோம்! வைத்தியர்களே சில நேரங்களில், “தெய்வம்தான் உங்களைக் காப்பாற்ற முடியும்!” என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள். இத்தகைய மோசமான நிலைக்கு எந்த மனிதனும் போய்விட வேண்டாம். வாழ்வில் யாங்கனும் காக்கும் மருந்து ஒன்று உண்டு. இதை இறையடியார்கள் கடை பிடித்திடில் ஒருபோதும் நோயே வராது! அந்த ஆன்மீக வழிதான் வைத்தீஸ்வரன் கோயிலில் தென்பகுதியில் உள்ள சித்தாம்ருத தீர்த்தம், இத்தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. மருந்துகளுக்கெல்லாம் மூலக் கரு ரகசியம் அறிந்த தெய்வமாகிய “மகாஸேன ஜனகாய தன்வந்த்ரி” செவ்வாய்க் கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் தானே நேரில் வந்து இதில் ஸ்நானம் செய்து பல அபூர்வ மூலிகைகளைக் கலந்து அன்று தீர்த்தம் கொடுத்து சூட்சுமமாக அருள்பாலிக்கின்றார் என்பது சித்தர்கள் வாக்காகும். இந்நாளில் சித்தாம்ருத தீர்த்தத்தில் தீர்த்தமாடி தக்காளி சாதம் தானம் செய்திடில் தவறான மருந்துகளை உபயோகித்ததால் வருகின்ற நோயிலிருந்தும் பக்க விளைவுகளிலிருந்தும் கடுமையான ரோகங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு
அறுவை சிகிச்சை செய்யும் வைத்தியர்கள் (self confidence) தன்னம்பிக்கையுடன் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆன்மீகத்தில் ஒரு வழியுண்டு. செந்தாமரைக் கொட்டையினால் ஜபமாலை செய்து கழுத்தில் அணிந்து சூரிய காயத்ரீ மந்திரத்தை 28 லட்சம் முறை ஜபித்து சர்க்கரைப் பொங்கல் தானம் அறுவை சிகிச்சை செய்திடில், வெற்றிகரமாக சிகிச்சை அமையும்! நோயாளிகள் அற்புதமான முறையில் குணமடைவர்.
குகை சித்தர்களின் ஆசி பெற
குகை சித்தர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். திருஅண்ணாமலை பிரான்மலை, செஞ்சிமலை, திருமூர்த்தி மலை, திருக்கோயிலூர்மலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை போன்ற இடங்களில் துருத்திப் பூஞ்செடி என்ற தெய்வீக மூலிகை மீது பட்டு வருகின்ற சக்தி வாய்ந்த மூலிகைக் காற்றினை சுவாசித்து சித்தி பெறுகின்ற குகைச் சித்தர்கள் இன்றும் உண்டு. இவர்களுடைய ஆசி கிடைப்பதால் தனிமையில் வருகின்ற ஆபத்துகள் விலகும். இவர்களிடம் ஆசி பெற வேண்டும் என்றால் ஆன்மீகத்தில் அதற்கு ஒரு வழியுண்டு. அது என்னவென்றால் வெல்லமும் சாதமும் பிசைந்து கீரிப்பிள்ளைக்கு அளித்திடில் குகைச் சித்தர்கள் வசிக்கின்ற இடத்து மணலில் உருண்டு புரண்டு ஆனந்தமடையும்! அதனால் அவர்களுடைய வெந்நீர் புகை ஓட்ட சுவாச ஓட்ட ரகசியங்களில் வெந்நீர் புகை ஓட்ட கலையால் பல சித்திகளைப் பெறுவர். இவ்வாறு அவர்கள் தரும் ஆசியால் தனிமையில் வரும் ஆபத்துகள் எளிதில் விலகும்.
பணக் கஷ்டம் தீர எளிய வழிபாடு :
எப்பொழுதுமே சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். நாம் என்ன செய்தோமா அதுதான் ஒன்றுக்கு நூறாகப் பலன்களைத் தரும். ஆகவே சிறிது பணமும் மனமும் உள்ள போதே தான தர்மங்களைச் செய்து விட வேண்டும். பணக் கஷ்டம் வந்தால் கடவுளிடம் பேரம் பேச வேண்டாம். “என் கஷ்டத்தைத் தீர்த்து வைத்தால் உனக்கு இந்த நேர்த்தியைச் செய்து முடிக்கிறேன்” என்று கடவுளிடம் கணக்கும் பேச வேண்டாம், பாராயண வரவு என்று ஒரு சித்த ரகசியம் உண்டு. அது என்னவென்றால் , வைராக்கிய சித்தத்துடன் வள்ளி, தெய்வயானையுடன் அருள்பாலிக்கும் முருகன் முன்னால் தர்பைப் பாயில் அமர்ந்து, பசுநெய் விளக்கேற்றி மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை அல்லது காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த பாராயண வரவு மந்திரமாகிய “ஸ்ரீம் சரவணபவ” என்று விடாமல் தொடர்ந்து ஜெபித்திடில் பணக் கஷ்டம் விரைவில் தீர்ந்து விடும். பத்மாசனமிட்டுச் செய்தல் விசேஷமானது. கஷ்டங்கள் தீர்ந்தவுடன் நன்றியறிதலாக செவ்வாய் தோறும் இயன்ற எளிய தான, தர்மங்கள், உதவிகளை, இறைப்பணிகளைச் செய்து வரவேண்டும்.
குடும்ப நலம் சிறக்க.....
தாய் தந்தையரின் மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகாமல் இருந்திடில் குழந்தைகளுக்கும் சஞ்சல புத்தி வராது. சஞ்சலத்தால் மனம் பாதிக்கப்பட்டு அதனால் தான் நோயே வந்து விடுகிறது. இதை “நினைவு சஞ்சலம்” என்று அழைப்பதுண்டு. இந்த நினைவு சஞ்சலத்தைத் தவிர்க்க தினமும் இரவு உணவு உண்ட பிறகு அல்லது படுக்கும் முன் தங்கள் குழந்தைகளோடு கூடி ஒருவர் கையை ஒருவர் பற்றித் தொடராக அல்லது வட்டமாக அமர்ந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து “கெளம் சரவணபவ” என்று தொடர்ந்து ஜபித்திடில் குழந்தைகளின் மனநலனும், தாய் தந்தையரின் மன நலமும் உடல் நலமும் சிறப்புறும். இம்மந்திரத்திற்கு “ஸ்கந்த பீஜம்” என்று பெயர்.
நித்ய கர்ம நிவாரணம் |
1.9.1998 – ஏழை மாணவர்களுக்குப் பல் துலக்குவதற்கான வேப்பங்குச்சி, பற்பொடி, பேஸ்ட், அளித்தல் – தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
2.9.1998 – ஏழைகளுக்கு உள் ஆடைதானம் – நீர் சம்பந்தமான நோய்களிலிருந்து நிவர்த்தி
3.9.1998 – ராஜ கோபுரத் திருப்பணிக்காக இயன்ற பொன், பொருள் அளித்தல் – உத்தியோக உயர்வு பெறவழி பிறக்கும்.
4.9.1998 – இலவச கால்நடை மருத்துவ பணிக்கு உதவி – கணிப் பொறியியல் (computer) சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும்.
5.9.1998 – சுமங்கலியாக வாழ்கின்ற பாட்டிக்கு பேரன், பேத்திகள் பாதபூஜை செய்தல் – படிப்பில் முன்னேறுவர்.
6.9.1998 – ஏழைகளுக்குப் பாய், படுக்கை தானம் – கடன் கொடுத்தவர் பணத்தைத் திரும்பப் பெறுவர்.
7.9.1998 – திருவாசி இல்லாத கோயில்களுக்கு திருவாசி அளித்தல் – வேலை மாற்றத்தை மனதிற்குத் தகுந்தவாறு ஏற்படுத்தித் தரும்.
8.9.1998 – தினமும் நெற்றிக்குத் திருமண் இடுகின்ற நற்பண்பை உடையோர்க்கு வயிறார உணவளித்தல் – அலுவலக வேலையில் வலுச் சண்டை வராது – பகைமை தீரும்.
9.9.1998 – மண்பாண்டம் செய்கின்றவர்களுக்குப் புது ஆடைகள் அளித்தல் – நல்ல வரன் அமையும்.
10.9.1998 – பிள்ளையாருக்கு பிள்ளையார் துண்டு அணிவித்தல் – சுபமங்கள செய்திகள் கூடி வரும்.
11.9.1998 – ஆறடி உயரமுள்ளவருக்கு அன்னதானம், காலணி தானம் – உறவினர்களின் மூலமாக ஏற்பட்ட ஆழமான வடு தீரும்.
12.9.1998 – பாத்திரம் செய்கின்றவர்களுக்கு வஸ்திர தானம் – சம்பந்தி வீட்டாருடன் கெட்டியான உறவு ஏற்படும்.
13.9.1998 – மீன்களுக்குப் பொரி அளித்து வந்திடில் நல்லவர்களைப் பழித்த தீய கர்மந் தீரும்.
14.9.1998 – கூரையில்லாத பள்ளிகளுக்குக் கூரை போடுதல் – ஆசிரியர் பணி கிடைக்க வழி பிறக்கும்.
15.9.1998 – துளசி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு வஸ்திர தானம் – வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
16.9.1998 – காட்டுவாசிகளுக்கு கனமான போர்வைகள் தானம் – ஜுர நோய்கள் தீரும்.
17.9.1998 – வெங்கடாத்ரி, சேஷசாயி, வீரராகவன் போன்ற பெருமாள் பெயருடையோர்களுக்கு உணவு தானம் – குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீரும்.
18.9.1998 – கார்த்திகேயன், கந்தசாமி, கலியபெருமாள் போன்ற முருகன் பெயருடையோர்களுக்கு அவர்தம் மனைவியர் பாத பூஜை செய்திடில் கணவன்மார்களின் பல நாள் மன ஏக்கங்கள்/ வேதனைகள் தீரும்.
19.9.1998 – இல்லறப் பெண்மணிகள் கன்னிப் பெண்களுக்கு வாசனைப்பூ ஜடை அளித்திடில் – வேலை பிரச்னைகளுக்கு விடிவு பிறக்கும்.
20.9.1998 – பள்ளி செல்கின்ற மாணவர்களுக்கு சைக்கில் (bicycle) தானம் – பழைய நண்பர்களின் உதவியால் பண வரவு.
21.9.1998 – ஏழை மாணவர் மாணவியர் விளையாடுவதற்கான ஊஞ்சல் தானம் - உயர்ந்தோர் உறவைப் பெற்றுத் தரும்.
22.9.1998 – முருகனின் பெயரைப் பூண்டவர்களுக்குப் பூஜைக்கான வாசனைத் திரவியங்கள் அளித்தல் – அவர்கள் வீட்டு பச்சைக் குழந்தைகள் மகிழ்வு பெறுவர்.
23.9.1998 – நாய்களுக்குப் பொறை பிஸ்கட், ரஸ்க் அளித்தல் – அடிபடும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவர் – பைரவ வழிபாட்டிற்குரிய நாள்.
24.9.1998 – புல்லாங்குழல் வாசிக்கின்றவர்களுக்கு உரிய உதவி – காரியத் தடைகள் விலகும்.
25.9.1998 – ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு exam pad தானமாய் அளித்தல் – மேலதிகாரியின் ரிப்போர்ட் உங்களுக்கு சாதகமாய் அமையும்.
26.9.1998 – ஏழைகளுக்கு இளநீர் தானம் – எல்லை அம்மனின் அருள் பெறலாம். நிலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.
27.9.1998 – ஏழை/நடுத்தர வைத்தியர்களுக்கு stethoscope தானம் – இருதய சம்பந்தமான நோய்களிலிருந்து நிவர்த்தி.
28.9.1998 – சந்தனத்தால் செய்த ஓரடிக்கு குறையாத இறை விக்கிரகங்களை தினமும் பூஜிக்கின்றவர்களுக்கு உதவி- சொல் பேச்சுக் கேட்காமல் சென்ற மனைவி திரும்பி வருவாள்.
29.9.1998 – லிகித ஜபம் (இறை நாமம் எழுதுதல்) செய்கின்றவர்கள் இறைநாம நோட்டுக்கான கோயிலில் தெய்வபிரதிஷ்டை, ஜீவசமாதி பிரதிஷ்டைகளுக்காக அளித்தல் – வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படும்.
30.9.1998 – கல் உடைக்கின்றவர்களுக்கு அன்னதானம் – ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம்.
ஓம் ஸ்ரீ குருவே சரணம்