மைசூர் பஜ்ஜி |
அன்று ஞாயிற்றுக் கிழமை.
ஞாயிற்றுக் கிழமை என்றாலே சிறுவன் மிகவும் குதூகலமாக இருப்பான், ஏனென்றால், அன்றுதான் அவன் பெரியவரிடம் நாள் முழுவதும் அற்புதமான ஆன்மீக விஷயங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். மேலும் பல வெளியூர் திருத்தலங்களுக்கு அவனைக் கூட்டிச் செல்வார். பெரும்பாலும் இத்தகைய வெளியூர்ப் பயணங்கள் எல்லாம் நடந்தே செல்லும்படி அமைவதால் சிறுவனுக்கு மிகவும் குஷியாக இருக்கும்.
வழியெங்கும் பல சித்தர்கள், மகான்கள் செய்த அற்புதங்கள், தியாகங்களைப் பற்றி எல்லாம் பெரியவர் மிகவும் சந்தோஷமாக விளக்கிக் கொண்டே வருவார். அங்காங்கே இளநீர், நுங்கு, கடலை, பரோட்டா, குண்டு மிட்டாய் போன்ற தின்பண்டங்களும் சிறுவன் வயிற்றை நிரப்பி விடுவதால் சிறுவன் எப்போது ஞாயிற்றுக் கிழமை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பான்.
அச்சிறுவயதில் சிறுவனுக்கு நடப்பது என்றால் என்னவென்றே தெரியாது. எப்போதும் ஓட்டம், ஓட்டம்தான். அதுவும் பெரியவரைப் பார்த்தவுடன், குதூகலம் அதிகமாகவே ஓட்டமும் அதிகம் ஆயிற்று. காலையில் அம்மா கொடுத்த பழைய சாதத்தில் ஒன்றிரண்டு கவளங்களை வேக வேகமாக வாயில் போட்டுக் கொண்டு அது வயிற்றைச் சென்றடையும் முன்னரே, வழக்கம் போல ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி விட்டு சிறுவனின் அப்பா வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து வீட்டை விட்டு வெளியே சிட்டாகப் பறந்து வந்து அங்காளி கோயிலை வந்தடைந்தான்.
அக்காலத்தில் அங்காளி கோயிலில் முன்பக்க மெயின் கதவு கிடையாது. அதனால் எப்போது வேண்டுமானாலும் சிறுவன் கோயிலுக்குள் நுழைந்து அங்காளியைச் சுற்றிக் கொண்டு இருப்பான்.அன்றும் வழக்கம்போல் சிறுவன் ஆயிரத்தெட்டு முறை அங்காளியைச் சுற்றி வந்து விட்டான். ஆனால், பெரியவரின் தரிசனம் கிடைக்க வில்லை. ஒரு புறம் வாய் பெரியவர் சொல்லித் தந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க மனமோ ஏன் பெரியவர் இன்னும் வரவில்லை என்ற ஏக்கம், நேரம் செல்லச் செல்ல கோபமாக மாறி விஸ்வரூபம் எடுத்து அவனை வதைக்கத் தொடங்கியது. காலையில் சரியாகச் சாப்பிடாததால் வயிற்றுப் பசி வேறு அடிவயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.
நண்பகல் சுமாருக்குத்தான் பெரியவர் வந்தார்.
பெரியவருக்குத் தன்னுடைய வணக்கத்தை வழக்கமான ஓங்கார மந்திரத்துடன் தெரிவித்த சிறுவன் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டும் முன் பெரியவர், “என்னான்னு தெரியலடா, காலேலிருந்து ரொம்பப் பசிக்குது. பஜ்ஜி சாப்பிட்டா தேவலை போல தெரிகிறது. இந்தா ஒடனே மைசூர் பஜ்ஜி வாங்கி வா என்று சொல்லி கோவணத்திலிருந்து ஒரு புதிய பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
சிறுவனுக்கு ஒரு புறம் மகா சந்தோஷம், “ஆகா நம் பசியை எப்படியோ பெரியவர் புரிந்து கொண்டு பஜ்ஜி வாங்கித் தருகிறார் என்று நினைத்து சந்தோஷம். ஆனால், மறுகணமே, “இவர் வெறுமனே பஜ்ஜி என்று சொல்லியிருந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப் போய் அரை மணியில் பஜ்ஜி வாங்கி வந்து விடலாம். இவரோ பஜ்ஜி என்று சொல்லாமல் மைசூர் பஜ்ஜி என்று எதையோ சொல்கிறாரே. அது எப்படி இருக்கும்? எங்கே கிடைக்கும்? எங்கெல்லாம் அலைய வேண்டுமோ? என்றெல்லாம் மனத்தைப் போட்டு குழப்பிக் கொள்ள ஆரம்பித்தான்.
அப்போது அங்கு ஒரு நடுத்தர வயதுடையவர் வந்தார். உடம்பு முழுவதும் கட்டுக் கட்டாக விபூதி, திறந்த மேனியில் ஒரு பட்டு அங்க வஸ்திரம், தங்கப் பூண்கள் போட்ட ருத்ராட்ச மாலை, காதுகளில் கடுக்கன்கள், பஞ்ச கச்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம். காண்போர் கையெடுத்து வணங்கும் கம்பீரமான தோற்றம். அவர் பெரியவரைக் கண்டவுடன் அவரை வணங்கி மிகவும் பவ்யமாக நின்றார்.
பெரியவர் என்ன விஷயம் என்பது போல் அவரைப் பார்க்க வந்தவர் கூறினார். “சுவாமி, நான் மைசூர் மகாராஜாவின் தலைமை சமையல்காரனாகப் பணி புரிந்து கொண்டிருக்கிறேன். எக்குறையும் இல்லாமல் மகாராஜா என்னைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் சமீப காலத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பூசலால் எனக்குத் தொடர்ந்து அங்கு பணி புரிய விருப்பமில்லை. எனக்குத் திருமணமும் ஆகவில்லை. நான் பணியிலிருந்து விலகி வந்து இங்கு ஏதாவது ஒரு ஹோட்டல் நடத்தலாமா என்று யோசிக்கிறேன். மைசூர் மகாராஜாவிடமே திறமையான சமையல்காரன் என்று பெயர் வாங்கி இருப்பதால் ஹோட்டல் துறையிலும் சிறப்பாக முன்னேறும் வாய்ப்பு இருக்கும் என்று எண்ணுகிறேன். இது சம்பந்தமாக தங்கள் அறிவுரை எதுவாக இருந்தாலும் ஏற்றுச் செயல்படுத்த சித்தமாக உள்ளேன், என்று கூறினார்.
அவருடைய வார்த்தைகளில் தான் மகாராஜாவின் அபிமானம் பெற்றவன் என்ற பெருமை மிளிர்வதை சிறுவன் கண்டு உள்ளூர சிரித்துக் கொண்டிருந்தான். பெரியவர் அமைதியாக அந்த சமையல்காரர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, “ஏம்பா, மைசூர் மகாராஜாவுக்கு சமச்சுப் போட்டதை ஏதோ வசிஷ்ட மகரிஷிக்குச் சேவை செஞ்ச மாதிரி சொல்றயே என்று சொல்லி புன்முறுவல் பூத்தார். வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. “சுவாமி, என்று கூவிக் கொண்டே பெரியவரின் காலில் விழுந்தார். பெரியவர் “அடடா, இந்தக் கிழவன் காலில் எல்லாம் விழக் கூடாது. அங்காளி ஒருத்தி காலில்தான் நீ விழ வேண்டும்...,” என்று சொல்லி அவரைத் தேற்றினார்.
வந்தவர் கண்ணீர் மல்க எழுந்தார். “சுவாமி, நான் வசிஷ்ட கோத்திரம் என்பது தங்களுக்கு எப்படித் தெரியும்?” பெரியவர் முகத்தில் மீண்டும் ஒரு புன் சிரிப்பு. அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் பெரியவர் தொடர்ந்தார், “நீ உயர்ந்த குலத்தில் பிறந்தவன். வேதத்தை ஓதி, வேதத்தைக் காப்பாற்ற வேண்டிய குலத்தில் உதித்த நீ, சமையல் செய்து பிழைக்கலாமா? ஹோட்டல் தொழிலில் நாட்டம் கொள்ளலாமா? எந்தத் தொழிலும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ஆனால், அவரவர் குலத் தொழிலை மறக்கக் கூடாது அல்லவா? எனவே, நீ மகாராஜாவிடம் முறையாக உத்தரவு பெற்றுக் கொண்டு வந்து ஒரு வேத பாடசாலையை விரும்பிய இடத்தில் அமைத்துக் கொள். சாதி, மத, இனம் பாராட்டாது அங்கு வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கெல்லாம் நீ வேதம் கற்பிக்க வேண்டும். இதுவே என்னுடைய அன்புக் கட்டளை. மேலுலகத்தில் உன்னுடைய மூதாதையர்களும் இதைத்தான் இரவு பகலாக இறைவனிடம் வேண்டி வருகிறார்கள். இதுவே நீ உன் குலகுருவான வசிஷ்ட மகரிஷிக்குச் செய்யும் தொண்டு ஆகும்,” என்றார்.
வந்தவர் முகத்தில் இனந்தெரியாத அமைதி குடி கொண்டது. “சுவாமி, என் கண்ணைத் திறந்தீர்கள். வழி தடுமாறி எப்படியோ போக இருந்தவனுக்குச் சரியான வழிகாட்டி விட்டீர்கள். உங்களை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்...,” என்று நா தழுதழுக்க கூறி விடைபெற்றுக் கொண்டார்.
சிறுவன் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். எதையோ சொல்ல வாயெடுத்தவனைத் தடுத்து பெரியவர், “எங்கேடா மைசூர் பஜ்ஜி?” என்றார்.
சிறுவனுக்கு அப்போதுதான் பெரியவர் கேட்டது நினைவுக்கு வந்தது. “ஆஹா, சரியான சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே. அந்த சமையல்காரரிடம் கேட்டிருந்தால் மைசூர் பஜ்ஜியைப் பற்றிச் சொல்லியிருப்பாரே. இப்போது எங்கே போய் மைசூர் பஜ்ஜியைத் தேடுவது...,” என்று மனம் தடுமாறி நின்றான். அவன் மன ஓட்டத்தை அறிந்த பெரியவர், “எங்கேயும் அலைய வேண்டாம், ராஜா. எதுத்தாப்பல இருக்காளே ஒரு கிழவி. அவகிட்ட கேளு, அவ சுட்டுத் தர்ரறுதுதான் மைசூர் பஜ்ஜி.”
சிறுவன் குஷியானான். “அப்பாடா ஒரு வழியாய்த் தப்பித்தோம். எங்கே இந்த மண்டையை உடைக்கும் வெயிலில் காலில் செருப்பு வேறு இல்லாமல் அலைவது என்று நினைத்தோம். பெரியவருக்கு இன்று பெரிய மனசு போல இருக்கிறது. நமக்கு ஒரு சிரமமும் கொடுக்காமல் பக்கத்திலேயே வழிகாட்டி விட்டார்,” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான்.
ஆனால், விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்ததை அவன் அப்போது அறியவில்லை.
பத்து ரூபாய் நோட்டைப் பத்திரமாக கையில் மடித்து வைத்துக் கொண்டு கோயிலுக்கு வெளியில் வேகமாக விரைந்தான். கோயில் எதிரிலேயே ஒரு பாட்டி பஜ்ஜிக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டருந்தாள். யாத்ரிகர்கள் அதிகம் கோயிலுக்கு வராத காலம் அது. ஏதோ ஒரு சில பலகாரங்களைச் சுட்டு வியாபாரம் செய்து தன் பிழைப்பை நடத்தி வந்தாள்.
சிறுவனைப் பார்த்ததும் அந்தப் பாட்டி கேட்டாள். “என்ன பேராண்டி, கிழவன் மைசூர் பஜ்ஜி கேட்டானா?” சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், அதிசயம். நம் இருவருக்கும் மட்டுமே நடந்த உரையாடல் இந்தக் கிழவிக்கு எப்படித் தெரியும்? அதற்கு பதில் அளிப்பதுபோல கிழவி சொன்னாள். “நீ வர்ற வேகத்தப் பாத்தாலேதான் தெரியுதே. நீ அந்தக் கிழவனுக்குத்தான் ஏதோ வாங்க வர்றேன்னு.”
பெரியவர் அடிக்கடி சொல்வதுண்டு. “துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போல குருவின் ஆணையை நிறைவேற்ற சீடன் பறக்க வேண்டும்.” அவனையும் அறியாமல் சிறுவன் புயல் வேகத்தில் பறந்து குருவின் ஆணையை நிறைவேற்ற அந்தப் பாட்டி முன் நின்ற விதமே அவளுக்குச் சிறுவனுக்குத் தன் குருவின் மேல் இருந்த பக்தியை நிலையை உணர்த்தி விட்டது. சிறுவன் தன்னுடைய சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்டான். “அது சரி பாட்டி, பெரியவர் பஜ்ஜிதான் கேட்பார் என்று உனக்கு எப்படித் தெரியும்? அதுவும் மைசூர்பஜ்ஜிதான் கேட்பார் என்று உனக்கு எப்படித் தெரியும்? ”
பாட்டி, “இதில் என்ன ஆச்சரியம்?” என்பது போல் சிறுவனைப் பார்த்து, “ஏண்டாப்பா, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒரு லிங்கம் இருக்கே. உனக்கு தெரியுமில்ல. அந்த லிங்க சாமிக்கிட்ட கேட்டா தினம் தினம் பிரகதீஸ்வரருக்கு என்ன நைவேத்ய பிரசாதம் படைக்க வேண்டும் என்று அது சொல்லுமில்ல. இப்போ யார் அதைக்கேட்டு செய்யறாங்களோ தெரியாது. ”
சிறுவன் ஆமோதித்தான். சில வருடங்களுக்கு முன் நடந்த நிழச்சிகள் சிறுவன் கண் முன் விரிந்தன. பெரியவருடன் ஒரு முறை அவன் தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றபோது, “ஏண்டா நாம் இந்தக் கோயிலில் திருப்பணி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”
“ஆமாம், வாத்யாரே, ரொம்ப நல்லாயிருக்கும். ”
“ரொம்ப நல்லது, சரி போய் ஒரு 300 அடியாரைக் கூட்டி வர்றயா?”
“முன்னூறா....?” சிறுவன் விழித்தான். சென்னையில் வசித்த சிறுவனுக்குத் தஞ்சாவூரில் யாரைத் தெரியும். யார் காலிலாவது விழுந்து ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு வரலாம். 300 பேரை, அதுவும் அரை மணி நேரத்தில் கூட்டி வா என்றால் என்ன செய்வது. சிறுவன் செய்வதறியாது விழித்தான்.
அவன் விழிப்பதைப் பார்த்த பெரியவர், “சரி சரி ரொம்ப சீன் குடுக்காத...” (பெரியவர் இவ்வாறு அவ்வப்போது நாம் கூறும் சொல் பதங்களை கூறி மகிழ்விப்பதும், சீண்டுவதும் உண்டு),
“நான் பார்த்துக்குறேன்....” என்று சொல்லி விட்டு வேகமாக கோயிலுக்கு வெளியே சென்றார். சென்றவர் சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தார். சுமார் 300 அடியார்கள் விளக்குமாறு, குடம், வாளி, குவளை, சீயக்காய் பொடி, தண்ணீரை பீச்சி அடிக்கும் குழாய் வசதிகள், நீர்த்தாரைகள் அடைப்பை நீக்கும் கம்பிகள் என பல்வேறு உபகரணங்களுடன் அவருடன் வந்தனர்.
சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள். ஒருவேளை தேவ லோகத்திலிருந்து பெரியவர் இவர்களை வரவழைத்திருப்பாரா என்ற சந்தேகமும் வந்தது. ஆனால், இவர்களைப் பார்த்தால் நம்மவர்களைப் போல்தானே இருக்கிறார்கள். இவ்வளவு நாள் நாம் இவர்களைப் பார்த்ததில்லையே என்று பலவித குழப்பங்களுடன் போராடிக் கொண்டிருந்த சிறுவனை யாரோ தோளில் தட்டுவது போல் தெரியவே சட்டென்று சுயநினைவு பெற்றான். பெரியவர்தான் கடுமையான முகத்துடன் அவனைத் தோளில் தட்டி சுயநினைவுக்குக் கொண்டு வந்தது போல் தெரிந்தது.
பெரியவர், “என்னடா ஒரு சின்னத் திருப்பணி செய்யலான்னு பாத்தா ஆளையும் கூட்டி வரமாட்டேங்கிற, சரி அதான் போகட்டுன்னு இந்தக் கிழவன் ரோடு ரோடு, தெருத் தெருவா திரிஞ்சி நாலு பசங்களைக் கூட்டி வந்தா அவனுங்களோட சேர்ந்து திருப்பணி செய்ய மாட்டாங்கிறியே...,” என்று ஒரு அதட்டல் போட்டார்.
சிறுவன் ஒருவாறாக ஆச்சரியத்திலிருந்து மீண்டு சுறுசுறுப்பாக அப்புது அடியார்களுடன் திருப்பணியில் ஈடுபடலானான். பெரியவர் அடிக்கடி ஸ்ரீபிரகதீஸ்வரரைக் கிண்டலாகச் சொல்வதுண்டு, “..ம் அவனுக்கென்னடா மாடி வீட்டுக்காரன்.” (மாடிப் படிபோல் படிகள் வழியாக ஏறிப் போய் ஸ்ரீபிரகதீஸ்வர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் பெரியவர் இவ்வாறு சொல்வார்.). அந்த மாடி வீட்டுக்காரன் வசித்த கருவறையில் இருந்த எண்ணெய்க் கசிவுகளை எல்லாம் அகற்றி, செங்கற்களைக் கொண்டு தரையைத் தேய்த்து, சோப்பு நீர் விட்டு சுத்தமாக அலம்பினர். இவ்வாறு ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள ஒட்டடைகள், எண்ணெய்ப் பிசுக்குகளை எல்லாம் சுத்தம் செய்து சோப்பு நீர் விட்டு அலம்பினர்.
பெரியவர் அழைத்து வந்த அடியார்கள் அனைவரும் ஏற்கனவே அவருடன் பல வருடங்கள் பழகியவர்களைப் போலவும் பல கோயில் திருப்பணிகளிலும் அவருடன் பங்கெடுத்து வந்தது போலவும் பழகிய விதம் சிறுவனுக்கு ஒரு புறம் ஆச்சரியத்தைத் தந்து எரிச்சலை ஊட்டினாலும் மறுபுறம் இந்த அடியார்கள் இல்லை என்றால் தானும் பெரியவர் மட்டுமே சேர்ந்து அந்தப் பிரம்மாண்டமான சிவாலயத்தின் ஒரு சன்னதியைக் கூட சுத்தம் செய்திருக்க முடியாதே என்பதை உணர்ந்து பெரியவரின் முன்யோசனையை மிகவும் சந்தோஷமாக மனதினுள் பாராட்டிக் கொண்டிருந்தான்.
கோயில் அலம்பும் திருப்பணி நிறைவேறியவுடன் பெரியவர் கோயில் முழுவதும் அடர்த்தியாகச் சாம்பிராணி தூபக் காப்பு இட்டார். பெரியவர் இடும் சாம்பிராணி தூபக் காப்பு என்பது ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும். சுத்தமான சாம்பிராணியைப் பொடி செய்து, அதைத் தூய்மையான வெள்ளை வேஷ்டியில் சலித்தெடுத்து, அதனுடன் உயர்தர சந்தனத் தூள் கலந்து தணலில் சாம்பிராணி தூபம் இடுவார். தூபமோ மிகவும் அடர்த்தியாக இருக்கும். அந்நிலையில் இறை மூர்த்திகளைப் பார்க்கும்போது நாம் கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ வந்து விட்டோமோ என்றே அனைவரையும் எண்ணத் தூண்டும். தூபத் திருப்பணியின்போது நிகழும் இன்னும் ஒரு அற்புத நிகழ்ச்சி என்னவென்றால் பெரியவர் திருப்பணி செய்யும் கோயிலின் பண்டைய வரலாறுகள் பற்றியும், அங்கு குடியிருக்கும் சித்தர் பெருமக்களைப் பற்றியும், அவர்களின் தியாகமயமான லீலைகளைப் பற்றியும், ஒவ்வொரு தூணிலும் உறையும் மகான்களின் தெய்வீக மாண்புகளைப் பற்றியும் பெரியவர் விளக்கிக் கொண்டே தூபத் திருப்பணியிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்ட வண்ணம் இருப்பார்.
அவ்வண்ணமே தஞ்சை பெரிய கோயில் பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்களின் மேன்மைகளைப் பற்றி விளக்கிக் கொண்டே பெரியவர் தூபக் காப்பையும் இட்டு வந்தார். இவ்வாறு நூற்றுக் கணக்கான சிவலிங்க மூர்த்திகளைப் பற்றி பெரியவர் அளித்த ஆயிரமாயிரம் தெய்வீக விளக்கங்களைச் சிறுவனின் சிறு மூளையில் நிலைநிறுத்தி அரும்பாடு பட்டும் தோல்வியே அடைந்தான். இதைப் பற்றி பெரியவரிடம் வாய் விட்டு கேட்டே விட்டான்.
“என்ன வாத்யாரே, நீ பாட்டுக்கு இவ்வளோ விஷயங்களைச் சொல்லிக் கிட்டே போறியே. என்னாலே எப்படி இவ்வளவு விஷயத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியும்? ”
ராம நாமத்தை கொம்புகளில்
சேகரிக்கும் நந்தீஸ்வரர்
பெரியவர் வழக்கம்போல் ஒரு தெய்வீக புன் சிரிப்பை உதிர்த்து விட்டுச் சொன்னார். “டேய், இந்த விஷயங்களை எல்லாம் நான் உனக்காகவா சொல்லிக்கிட்டு வர்றேன். இல்லைடா, கண்ணு. நீயும் ஒரு காலத்துல என்ன மாதிரி நூற்றுக் கணக்கான அடியார்களுடன் இந்த மாடி வீட்டுக்காரன் குடித்தனத்தை (பெரியவர் பாணியில் தஞ்சை பெரிய கோயில்) சுத்தம் செய்வே. அப்போ இந்தச் சிவலிங்க மூர்த்திகளோட பேரு, அவங்க எதுக்காக இங்கே வந்தாங்க, உலக ஜனங்களுக்கு அவங்களால என்ன பிரயோசனம் என்ற விஷயம் எல்லாம் பளிச்சுனு உனக்கு ஞாபகம் வரும், ராஜா,” என்றார். பெரியவர் இது போன்ற பல விஷயங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
ஓட்டை டிராயருடன் சல்லிக் காசிற்கு வழியில்லாமல் இருக்கும் தான் நுõற்றுக் கணக்கான அடியார்களுடன் வந்து தஞ்சைப் பெரிய கோயிலில் திருப்பணி செய்வது சாத்தியமானதா என்று வியந்தவாறே சிறுவன் பெரியவர் தொடர்ந்து சொன்ன செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால், பெரியவரின் வாக்கியங்கள் வேத வாக்கியங்கள் அல்லவா? சில வருடங்களிலேயே பெரியவர் கூறியபடியே திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர் என பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான அடியார்கள் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட் குடைக் கீழ் தஞ்சைப் பெரிய கோயிலில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டியது. அப்போது பெரியவர் சிறுவனான வெங்கடராம சுவாமிகளுக்கு எடுத்துரைத்த எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியவே அதை அப்படியே அடியார்களுக்கு விளக்கினார்கள். தஞ்சைப் பெரிய கோயில் நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் பற்றிய இரகசியங்களையும், பிரகாரத்தில் உள்ள சிவலிங்க மூர்த்திகளின் மகிமைகளையும் விளக்கினால் அதுவே ஒரு புராணமாக விரியும்.
அவ்வாறு அங்கு உழவாரப் பணி செய்யும்போதுதான் கோவணாண்டிப் பெரியவர் பிரகாரத்தில் உள்ள ஒரு சிவலிங்க மூர்த்தியிடம் தினந்தோறும் ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதைக் கேட்டால் அவரே சொல்லுவார் என்று சொல்லியிருந்தார். ஸ்ரீராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய பின்னர் அவ்வண்ணமே இந்தச் சிவலிங்க மூர்த்தியைக் கேட்டே கோயிலில் உள்ள மூர்த்திகளுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல பக்தியும் நம்பிக்கையும் குறையவே சிவலிங்க மூர்த்தியும் நேரில் பேசும் தன்னுடைய தெய்வீக இயல்பையும் மறைத்துக் கொண்டார்.
இந்தச் சிவலிங்க மூர்த்தியைப் பற்றித்தான் அந்தக் கிழவி சொல்கிறாள் என்பதைக் கேட்ட சிறுவனுக்கு ஆச்சரியம் பெருகியது. பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இந்தக் கிழவிக்கு எப்படித் தெரியும்? அப்படியானால் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் நம்முடன் திருப்பணி செய்வதற்காக பெரியவர் அழைத்து வந்த நூற்றுக் ணக்கான புது அடியார்களில் இந்தக் கிழவியும் ஒருவேளை இருக்கலாமோ என்னவோ? எப்படி இருந்தாலும் பெரியவருக்கு பஜ்ஜி சுட்டுத் தருவதென்றால் நிச்சயம் அது ஏதோ ஒரு பூர்வ ஜன்ம புண்ணியத்தால்தான் என்ற முடிவுக்கு வந்த சிறுவன் பாட்டி சுட்டுத் தரும் பஜ்ஜியை வாங்கிக் கொண்டு போவதற்குத் தயாரானான்.
அப்போதுதான் பாட்டி தன்னுடைய முதல் அஸ்திரத்தை எடுத்தது. “ஏம்பா, காலையிலே போட்ட பஜ்ஜி எல்லாம் தீர்ந்து போச்சு. அந்தக் கிழவனுக்குப் புதுசா போட்டுத் தர்றேன். நீ போய் கடலை பருப்பு வாங்கிட்டு வர்றயா?” சிறுவன் அதிர்ந்து போனான். இனிமேல் கடலை பருப்பு வாங்கி அதை மாவாக்கி, அதில் பஜ்ஜி சுட்டு, அதை பெரியவரிடம் கொடுத்து, அதற்குப் பின் அவர் தரும் பாக்கி பிரசாத பஜ்ஜி நாம் எப்போது சாப்பிடுவது...?” என்று நினைத்தவுடன் மனம் மிகவும் சோர்வடைந்து விட்டது.
காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் மிகவும் களைப்படைந்த நிலையில் சிறுவன் இருந்தான். இருந்தாலும் பெரியவர் சாப்பிடுவது என்பது மிகவும் அபூர்வமான விஷயம். அவரே இன்று பஜ்ஜி சாப்பிடுகிறேன் என்று சொல்லும்போது அதை நிறைவேற்றுவது தன் கடமை அல்லவா என்று அந்த சிறு வயதிலும் கூட கடமை உணர்வால் உந்தப்பட்ட சிறுவன் கடைத் தெருவை நோக்கி ஓடினான்.
பஞ்சலிங்கங்கள் ஒசூர்
கடையிலிருந்து கடலைப் பருப்பு வாங்கிக் கொண்டு மீண்டும் பாட்டி கடைக்கு வேகமாக ஓடி வந்து சேர்ந்தான். சிறுவன் பெரியவரிடம் இருந்த காலம் முழுவதும் எப்போதும் ஓட்டம்தான் நடை என்பதே என்னவென்று தெரியாத சுறுசுறுப்பான நிலையிலேயே பெரியவர் அவனை வைத்திருந்தார் என்றும் சொல்லலாம். அந்தக் கிழவியும் கடலைப் பருப்பை கல், மண் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலம்பி பக்கத்தில் இருந்த ஒரு பாறை மேல் போட்டு காய வைத்தது. சிறுவனிடம். “நல்ல பாத்துக்கோ கண்ணு, காக்கை ஏதும் வந்து தின்னுவிட்டுப் போயிடப் போறது ...”
சிறுவனும் மிகவும் கவனத்துடன் கடலைப் பருப்பை வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தான். பருப்பு நன்றாக காய்ந்தவுடன் அதை ஒரு பையில் அள்ளிப்போட்டு, “சீக்கிரம் இதை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டு வாப்பா,” என்று கிழவி சிறுவனிடம் பையைக் கொடுத்தாள்.
சிறுவன் மிரண்டே விட்டான், போகிற போக்கைப் பார்த்தால் இந்தக் கிழவி பஜ்ஜி சுடுவதற்குள் நம்மை பஜ்ஜி போட்டுவிடும் போல் இருக்கிறதே என்று நினைத்தவனாய்ப் பையைக் கையில் வாங்கிக் கொண்டு சிட்டாய்ப் பறந்தான் மாவு அரைக்கும் மெஷினை நோக்கி. “தம்பி, பெரியவருக்கு நீளமான பஜ்ஜிதான் ரொம்ப பிடிக்கும். அதனால நல்ல நீளமான வாழைக்காயா பாத்து மார்க்கெட்ல வாங்கிட்டு வாப்பா. ”
“அப்படியே நல்ல எண்ணெயா பாத்து வாங்கிட்டு வந்துடு ...” என்ற கிழவியின் வார்த்தைகளையும் போகும் அவசரத்தில் காதில் வாங்கிக் கொண்டான். ஒரு பக்கம் என்ன இந்தக் கிழவி ஒரு பஜ்ஜி கேட்டால் ஒரு மளிகைக் கடையையே கேட்கிறதே என்ற எண்ணம் வந்தாலும் மறு பக்கம் வாத்யாருக்கு ஒரு பஜ்ஜி சுட்டு தந்தால் கூட அது எவ்வளவு சுத்தமாக சிறப்பாக அமைய வேண்டும் என்ற கிழவியின் ஆர்வம் சிறுவனை ஆச்சரியப்படுத்தியது.
தான் ஒருவன்தான் வாத்யார்மேல் அளவு கடந்த அன்பைப் பொழிகிறோம் என்ற எண்ணமும் தவறானதோ என்றும் நினைக்கத் தூண்டியது அந்தப் பாட்டிக்கு பெரியவர் மேல் இருந்த அளவுகடந்த அன்பு. கோடைக் காலமாக இருந்ததால் வெயில் சுள்ளென்று தகித்தது. ஒரு வழியாக மாவு அரைக்கும் மெஷினைத் தேடி மாவை அரைத்துக் கொண்டு வரும் வழியில் எண்ணெயும், காய்கறி மார்க்கெட்டில் கிழவி கூறியபடியே நீளமான வாழைக்காய் மூன்றும் வாங்கிக் கொண்டு வந்தான். காலையிலிருந்து பஜ்ஜி சுட்டு சுட்டு எண்ணெய் பழசாகிப் போயிருக்கும். அதனால் பெரியவருக்கு புது எண்ணெயில் சுட்டால்தான் பஜ்ஜி ருசியாக இருக்கும் என்று சிறுவன் பின்னால் தெரிந்து கொண்டான்.
பஜ்ஜிக்குத் தேவையான எல்லா பொருட்களும் சரியாக வந்து விட்டதா என்று உறுதி செய்து கொண்ட பாட்டி மளமளவென்று வாழைக்காயைச் சுத்தமாக சீவி பஜ்ஜி போட ஆரம்பித்தாள். சிறுவனும் பெரியவர் முன்னர் சொல்லியபடி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு காயத்ரீ சொல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் சூடாக ஆறு பஜ்ஜிகளைப் போட்டு ஒரு வாழை இலையில் வைத்து மிகவும் சந்தோஷமாக சிறுவனிடம் அந்தப் பாட்டி கொடுத்தாள். சிறுவனும் உலக மகா சந்தோஷத்துடன் பஜ்ஜியைக் கையில் வாங்கிக் கொண்டு பெரியவரிடம் கொடுக்க அங்காளி கோயிலை நோக்கி ஓடினான்.
சஞ்சித வினையைக்
களையும்
ஸ்ரீகோமதீஸ்வரர்
பெரியவரைக் கண்டவுடன் அவரிடம் தான் கஷ்டப்பட்டு மார்க்கெட்டிற்கு ஓடி ஓடிச் சென்று பஜ்ஜிக்கு வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கிக் கொடுத்த புராணங்களை விளக்கமாகச் சொல்லி அவர் பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஒரு ஆசையும் சிறுவன் மனதில் ஒரு மூலையில் இருக்கத்தான் செய்தது. இதையும் பெரியவர் எதிர்பார்த்திருப்பவர் போல சிறுவனைப் பார்த்ததும் அவன் பேசுவதற்குச் சந்தப்பம் கொடுக்காமலே இலையைக் கையில் வாங்கிக் கொண்டு, “ஆங், இதுதாண்டா மைசூர் பஜ்ஜி, மைசூர் மகாராஜாகிட்ட சமையல்காரனா இருந்தவன் தயார் செய்யற பஜ்ஜி மைசூர் பஜ்ஜி இல்ல. இந்தக் கிழவி குடுத்த பஜ்ஜிதான்டா மைசூர் பஜ்ஜி...”
“இந்தக் கிழவி நீ நெனக்கிற மாதிரி சாதாரண கிழவி இல்லே. அந்த மைசூர் சாமுண்டி தேவியை நடந்து போய், மலை ஏறி அறுபது வருடம் தரிசனம் பண்ணிருக்கா. ஆயிரம் பிறை கண்டவள்,” என்று சொல்லி விட்டு நேரே கோயிலினுள் சென்று அங்காளியிடம் பேச ஆரம்பித்து விட்டார்.
சிறுவன் வாயடைத்து நின்றான்.
“இந்தக் கிழவி ஆயிரம் மூன்றாம் பிறைகளைத் தரிசனம் செய்தவள் என்று பெரியவர் சொல்கிறார். இப்படி ஆயிரம் பிறை கண்ட மூதாட்டியிடம்தான் உதிர்ந்த பிட்டைப் பெற்று சிவபெருமான் மதுரையில் வைகைக் கரையில் மண் சுமந்து திருவிளையாடல் செய்தார். அப்படியானால் நமது பெரியவர் சிவபெருமான்தானோ? நாம்தான் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ?” என்று நினைத்து கோயில் உள்ளே பெரியவர் என்ன செய்கிறார் என்று பார்வையைச் செலுத்தினான்.
அங்கே பெரியவர் அங்காளியிடம் பேசியவாறே அந்த மூதாட்டி தந்த பஜ்ஜியை அங்காளிக்கு நைவேத்தியம் செய்து கொண்டிருந்தார். அங்காளியிடம் பெரியவர் பேசும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். பெரும்பாலும் பெரியவர் பேசும் மொழி முற்றிலும் யாருக்கும் புரியாததாக இருக்கும். சில சமயங்களில் அம்மா குழந்தையிடம் நிலாவைக் காட்டி பால் சோறு உண்ணச் சொல்லுவது போல் அன்பு நிரம்பிய வார்த்தைகளாக இருக்கும்.
எப்போதாவது சில சமயங்களில் அங்காள பரமேஸ்வரியின் தேனினும் இனிய குரலும் கேட்கும். ஆனால், அது மொழி, வார்த்தையைக் கடந்த ஒரு இனிமையான குரலாக ஒலிக்கும். அந்தக் குரல் ஒரு தெய்வீகக் குரல் என்பதை மட்டுமே உணரும் தன்மையில் இருக்கும். பெரியவர் அம்பாளுக்கு உணவு நைவேத்யம் செய்த அழகில் அனைத்தையும் மறந்தவனாய் நின்று கொண்டிருந்தான் சிறுவன்.
ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!
வெகு நேரம் கழித்து பெரியவர் வெளியே வந்து வழக்கமாகத் தான் அமரும் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அப்போதுதான் சிறுவன் தன்னிலைக்கு மீண்டான். உடனே காலையிலிருந்து அவனைத் துரத்திய பசியும் இப்போது மிகவும் வேகமாகத் தலை காட்டத் தொடங்கியது. ஆனால், எப்படியும் இதோ பெரியவர் தனக்கு ஒரு பெரிய பஜ்ஜியைக் கட்டாயமாகத் தருவார் என்று மனது சமாதானம் சொன்னாலும் இது போன்ற பல சமயங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் யாராவது அதிதிகள் வந்து தனது பங்கை வாங்கிக் கொண்டு மறைவதை பல தடவைகள் பார்த்து பார்த்து சிறுவன் ஏமாந்து போயிருக்கிறான் அல்லவா?
அதனால் அந்த மாதிரி யாராவது தனது பங்கிற்கு போட்டியாக வருகிறார்களா என்பதையும் ஒரு முறை ஓரக் கண்ணால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். ஆனால், நல்ல வேளை கண்ணுக்கு எட்டிய வரையில் யாரும் அங்காளி கோயிலைச் சுற்றி வரவில்லை என்பதைப் பார்த்து உறுதி செய்த கொண்டவுடன்தான் சிறுவன் மனதில் ஒரு புதுத் தெம்பு வந்தது. அவன் மனப் போராட்டத்தைச் சிறிதும் சட்டை செய்யாத பெரியவர் அமைதியாக ஒவ்வொரு பஜ்ஜியாக எடுத்து மெதுவாக சுவைத்து சுவைத்து உண்ணத் தொடங்கினார்.
முதல் பஜ்ஜியைக் கையில் எடுத்தவுடன் சில மந்திரங்கள், காயத்ரீ ஓதினார். பிருத்வி தேவதையே போற்றி போற்றி என்று சொல்லி பஜ்ஜியை வாயில் போட்டு இரசித்து உண்டார். இரண்டாவது பஜ்ஜிக்கும் அவ்வாறே மந்திரங்கள், காயத்ரீ ஜபித்து அப்பு தேவதையே போற்றி போற்றி என்று சொல்லி பஜ்ஜியை சாப்பிட்டார். இவ்வாறு அடுத்த மூன்று பஜ்ஜிகளையும் அக்னி, வாயு, ஆகாய தேவதைகளுக்கு ஆஹூதியாக அளித்தார்.
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
“என்னடா இது, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இந்த வேகாத வெயிலில் நாயாக அலைந்து திரிந்து கடலை பருப்பு, வாழைக்காய் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வெயிலில் உட்கார்ந்து காவல் காத்து பஜ்ஜி தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தால் இந்தப் ‘பெரிசு’ நம்மைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லையே. உடனே பெரியவரிடம் கேட்டு விடுவோமா,” என்று நினைத்தான்.
இருந்தாலும் கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போமே என்று ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு பெரியவர் இரசித்து ரசித்து பஜ்ஜி சாப்பிடுவதைப் பார்த்தான். வரிசையாக ஐந்து பஜ்ஜிகளையும் சாப்பிட்ட பின்தான் சிறுவனைப் பார்த்தார்.
“இந்த பாருடா. இந்த உடம்பு பஞ்ச பூதத்தால் ஆனது. பிருத்வி, அப்பு, அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை தினமும் ஒவ்வொரு மனிதனும் வணங்கணும். அதுங்களுக்குனு உரித்தான ஆஹூதியை முறையாக அவ்வப்போது கொடுக்கனும். அப்போதான் பஞ்ச பூதத்தாலான இந்த உலக இயக்கமும் சீராக இருக்கும். இதை எல்லாம் யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. இன்று ரங்க பஞ்சமி இல்லயா? பஞ்ச பூதங்களும் ரங்கநாதரை தரிசனம் பண்ணி தங்கள் மேல் படியும் தோஷங்களை எல்லாம் இன்று நீக்கிக் கொள்ளும். ”
“அதனால இன்று பஞ்ச பூத வழிபாடும், ஆராதனைகளும், அந்த தேவதைகளுக்கு ஆஹூதியும் அளிக்கறது ரொம்ப விசேஷம். வெங்கடராமன்னு அந்தப் பெருமாளோட பேர நீ வச்சிறக்கறதால உன் கையால வாங்கின பஜ்ஜியை வச்சு அந்த ஆஹூயை கொடுக்கனும்னு மெத்த மேலே சொல்லிட்டாங்க ...” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினார்.
சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். “ஆஹா, இப்படி எல்லாம் நமக்கு அனுகிரகத்தை வாரித் தர்ற பெரியவரைப் பத்தி என்னெவெல்லாம் தப்பு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறோமே,” என்று மனம் நொந்தவனாக பெரியவர் அடுத்து கூறப் போவதைக் கூர்ந்து கவனிக்கலானான்.
பெரியவர் தொடர்ந்தார். “தினமும் சாப்பிடும்போது காக்கைக்கு இறைப் பிரசாதங்களை வைப்பது போல் உணவு உண்ணும் முன் இலையில் சிறிது பிரசாதத்தைத் தனியாக எடுத்து வைத்து இதை உணவு உண்ட பின் இலையோடு வெளியே போட்டு விட வேண்டும். இதுவே பஞ்ச பூதங்களுக்கு உரிய ஆஹூதியாக அமைந்து இந்தப் பஞ்சப் பூதத்தினாலான உடலுக்கு நல்ல கதி கிடைக்க அன்னபூரண தேவியின் அருளாசி கிடைக்கும். இப்போ இப்படி செய்யறது ரொம்ப கொறஞ்சி போச்சு. எல்லாரும் எச்சில்பட்ட மிஞ்சின சாதம், காய், கறியைத்தான் இலையுடன் வெளியே எறிகிறார்கள். அதனாலத்தான் நாங்க அப்பப்ப இந்த பஞ்ச பூத தேவதைகளையும் கவனிச்சுக்க வேண்டி இருக்கு.“
“சில சமயம் அன்னதானம் செய்யும்போது சாப்பாடு தீய்ந்து போய், வேறு பாத்திரத்திற்கு மாற்றும்போதோ பரிமாறும்போதோ கீழே விழுந்து உணவு வீணாவது போல் தோன்றும் அல்லவா? அந்த உணவு வீணாவதில்லை. நாங்களே ஒரு கணக்கு வைத்து பஞ்ச பூத ஆஹூதியாக அதைப் பிரதான பஞ்ச பூதமான பூமியில் அதாவது தரையில் சேர்த்து விடுகிறோம். அதனால் இறைவன் படைப்பில் எதுவும் வீணாவதில்லை. நீ பெரியவனாய் வளர்ந்து லட்சக் கணக்கான பேருக்கு அன்னதானம் செய்யும்போது எவ்வளவோ சாப்பாடு, சமையல் பதார்த்தம் எல்லாம் தரையில் விழுந்து வீணாவதுபோல் தோன்றும். அவை எல்லாம் பஞ்ச பூத ஆஹூதிதான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.”
சிறுவன் பெரியவரை விநோதமாகப் பார்த்தான். “நீ நினைப்பது சரிதான்,” என்று சிறுவனின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த பெரியவர் தொடர்ந்தார். “என்னடா, இந்தக் கிழவன் ஒரே குழப்பாக குழப்புகிறானே என்றுதானே யோசிக்கிறாய்? ”
சிறுவனும் ஆமாம் என்பது போல மெதுவாகத் தலையாட்டினான்.
சிறுவன் குழப்பத்திற்கு காரணம் இதுதான். முன்பு ஒரு முறை ஹோமத்தைப் பற்றிப் பெரியவர் சொல்லும்போது உலகில் இறைவன் படைத்த எல்லாப் பொருட்களும் சற்றும் வீணாகாமல் உரியவரிடம் போய்ச் சேருமாறு செய்வதே சித்தர்கள் செய்யும் ஹோமத்தின் குறிக்கோளாகும் என்று சொல்லியிருந்தார். இப்போது எதுவும் வீணாகாது என்றால் எதற்காக அப்படி ஹோம சங்கல்பம் செய்ய வேண்டும்?
வழக்கம்போல் பெரியவர் கேள்வியோடு நிறுத்திக் கொண்டார். இதற்கு உங்கள் பதில் என்ன? சற்று யோசித்துதான் பாருங்களேன்.
பெரியவர் ஐந்து பஜ்ஜிகளையும் சாப்பிட்ட பின் ஆறாவது பஜ்ஜியை கையில் வைத்துக் கொண்டு சிறுவனைப் பார்த்தார். சிறுவன் வாயெல்லாம் பல்லாக பெரியவரைப் பார்த்தான். சிறிதுநேர மௌனத்திற்குப் பின் ஏதோ முடிவுக்கு வந்தவராக வேகமாக அந்தப் பஜ்ஜியை இலையில் வைத்து மடித்து எடுத்துக் கொண்டார்.
“சரி வாடா, போகலாம்...” என்று சொல்லி வேகமாக எழுந்து கோயிலுக்கு வெளியே நடக்க ஆரம்பித்தார். சிறுவன் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததாலும், வெயிலிவ் அலைந்த களைப்பாலும் தள்ளாடியபடியே பெரியவரைப் பின் தொடர்ந்து ஓடலானான். ஆனால், அந்தக் களைப்பிலும் சிறுவனுக்கு ஒரு விஷயம் பளிச்சென ஞாபகம் வந்து ஆறுதலை அளித்தது. தான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. இருந்தாலும் பெரியவர் பஜ்ஜி சாப்பிடும் வரை தான் அதில் சிறிதாவது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையே. இது என்ன ஆச்சரியம்? இதுதான் உண்மையில் அடிக்கடி பெரியவர் குறிப்பிடும் அடிமை கண்ட ஆனந்தமா?
சிறுவனின் எண்ண ஓட்டத்திற்குப் பெரியவரின் குரல் அணை போட்டது. “என்னடா, கொஞ்சம் கூட சுதாரிப்பே இல்லாம இருக்கியே. இந்தக் கிழவன் இந்தப் பஜ்ஜியை சுமந்துகொண்டு எவ்வளவு தூரம் வர்றதுடா. யாருக்காவது இதைத் தானம் கொடுக்கனுங்கற எண்ணமே இல்லாம இருக்கியே...?”
சிறுவன் அப்போதுதான் கவனித்தான். பெரியவர் பின்னாலேயே பசியுடன் ஓடி வந்ததால் தான் அங்காளி கோயிலிலிருந்து வெகு தூரம் வந்து விட்டதை கவனிக்கவே இல்லை. சிறுவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“நான் காலையிலிருந்து பச்சை பட்டினியாக் கிடக்கிறேன். என்னை விட்டுட்டு வேற யாருக்கு இப்ப தானம் கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லையே?” என்று சிறுவன் மனம் ரீங்காரமிட்டது. தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரு ஈ, காக்கை கண்ணில் தென்படவில்லை. பெரியவரின் அடுத்த நடவடிக்கைக்குத் தன்னை தயாராக்கிக் கொண்டான். பெரியவர் வெள்ளைச் சட்டை, சிறிய தாடி, தலையில் ருத்ராட்ச மாலை என்று ஏதாவது அங்க அடையாளத்தைச் சொல்லி அவருக்கு இந்தப் பஜ்ஜியைக் கொடு என்று சொல்லப் போகிறார். இன்றைக்கு ஏதோ நல்ல முகத்தில் விழித்தோம் போல் இருக்கிறது. அலைச்சலோ, அலைச்சல் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.
“நீ எந்த அடையாளத்தையும் வச்சிக்கிட்டு தேட வேண்டாம், ராஜா... காலையிலேருந்து இந்தக் கிழவன் பஜ்ஜி சாப்பிடனும்னு அலையா அலஞ்சிருக்கே. நேரே கொண்டு போய் இந்தப் பஜ்ஜிய அந்த அங்காளி கோயில் வாசல்லே ஒரு கிழவன் உட்காந்திருந்தானே அவன்கிட்டே குடுத்துட்டு அவன் பேரையும் கேட்டுகிட்டு வா...”, என்று பெரியவர் சொல்லவே சிறுவன் ஓரளவு சமாதானம் ஆனான். அதே சமயம் மீண்டும் இவ்வளவு தூரம் ஓடிப் போய் விட்டு வரவேண்டும் என்ற கவலை வந்து விட்டது. மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியது. பஜ்ஜியைத் தந்து விட்டு பெரியவரைப் பார்த்தால் இரவு சாப்பாடாவது அவரைக் கேட்டுச் சாப்பிடலாமே என்று எண்ணினான்.
பசியும் ஆன்மீக அனுபவங்களும் சிறுவனை மாறி மாறித் துரத்திக் கொண்டே இருந்தன. இதனால்தான் ராமலிங்க அடிகள் பசித்திரு என்று சொன்னாரா என்று ஆத்ம விசார கேள்வி ஒன்றைக் கேட்டு அதற்கு விடை காண முயன்று கொண்டிருந்தான் சிறுவன். பெரியவர் கோயிலை விட்டு வரும்போது அந்தப் பிச்சைக்கார கிழவன் கோயில் வாசலில்தானே இருந்தான். அங்கேயே கொடுத்து விட்டு வந்திருக்கலாமே. இவ்வளவு தூரம் நம்மை அலைய விட்டு வேடிக்கை பார்க்கிறாரே என்று நினைத்தவுடன் மீண்டும் பெரியவர் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
கோபக் கனலோடு பஜ்ஜியை வாங்கிக் கொண்டு அங்காளி கோயிலை நோக்கி சிறுவன் ஓடினான். பாதி வழியில் சிறுவனுக்கு இன்னொரு பயம் தொற்றிக் கொண்டு விட்டது.
“பெரியவர் எப்போதுமே எளிமையாகத் தானத்தைக் கொடுக்க மாட்டாரே. கிழிந்த கோவணம் உள்ள கிழவனைப் பிடி, கறுப்பு மூக்கும் வெள்ளை வாலும் உள்ள நாயைத் தேடு என்றெல்லாம் சொல்லி நம்மைப் பாடாய்ப் படுத்துவாரே. இப்போது நாம் தினமும் காணும் பிச்சைக்கார கிழவனுக்குத் தரச் சொல்லி இருக்கிறாரே. ஒரு வேளை நாம் போய்ச் சேரும் முன் அந்தக் கிழவன் எங்காவது கிளம்பி விட்டால் நாம் அவனைத் தேடி அலைவதற்குள் நம் பாடு திண்டாட்டமாகி விடும்...”, என்று எண்ணியதுதான் தாமதம் சிறுவன் ஓட்டத்தை மிகவும் துரிதமாக்கிச் சிட்டாய்ப் பறக்க ஆரம்பித்தான்.
எல்லா சாமியையும் வேண்டிக் கொண்டே ஒரு வழியாக அங்காளி கோயிலை வந்தடைந்தான். நல்ல வேளை. அந்தப் பிச்சைக்கார கிழவன் கோயில் வாசலிலேயே அமர்ந்திருந்தான். மிகவும் சந்தோஷத்துடன் பஜ்ஜியை அந்தக் கிழவனிடம் கொடுத்து விட்டு, “பெரியவரே உன் பேரு என்ன?” என்று கேட்டான்.
அந்தக் கிழவனோ பஜ்ஜியை வாங்கியவுடன் சிறுவனைக் கண்டு கொள்ளவே இல்லை. சந்திர மண்டலத்திலிருந்து வந்த ஒரு புதிய பொருளைப் பார்ப்பது போல அந்தப் பஜ்ஜியைப் பார்த்த அவன் வேகமாக கடித்து கடித்துச் சாப்பிட ஆரம்பித்தான். மிகவும் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்ததால் பஜ்ஜி தொண்டையில் சிக்கிக் கொண்டு அதை விழுங்க முடியாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டான்.
பசியின் வேதனையையும் கொடுமையையும் மிகவும் அருகில் அன்றுதான் பார்த்தான் சிறுவன். ஒரு பஜ்ஜிக்காக எவ்வளவு நாள் இந்தக் கிழவன் ஏங்கியிருப்பான்? இன்று நாம் கொடுப்பது அல்லவா உண்மையான தானம். இந்த மாதிரி தேவை அறிந்து தானம் செய்வதென்றால் அது நம்முடன் இருக்கும் பெரியவரைத் தவிர வேறு யாரால் இதுவெல்லாம் சாத்தியம் ஆகும்? இவ்வாறு மீண்டும் மீண்டும் பெரியவர் மேல் தனக்கிருந்த அன்பு பெருகி ஆறாக ஓடுவதை அனுபவித்து அனுபவித்துத் தன்னுடைய பசியை முழுவதுமாக மறந்தே போனான் சிறுவன்.
ஒருவாறாக அந்தக் கிழவன் பஜ்ஜியை சாப்பிட்டு முடித்தவுடன், “தாத்தா, உங்க பேர் என்ன?” என்று மீண்டும் கேட்கவே அப்போதுதான் முதன் முதலாக அந்தக் கேள்வியைக் கேட்பது போல் கேட்டு, “என் பெயர் சுப்பிரமணி,” என்று யோசித்து மெதுவாகச் சொன்னார். இப்போதைக்கு இது போதும் என்று அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு பெரியவர் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான். திரும்பும்போது, “எப்படியும் இந்தத் தடவை பெரியவரிடம் கேட்டு விடுவோம். ஏன் தேவை இல்லாமல் நம்மை அலைக்கழிக்கிறார். ”
“கோயிலை விட்டுப் போகும் முன் நம்மிடம் சொல்லியிருந்தால் அப்போதே இந்தப் பஜ்ஜியைத் தானம் கொடுத்திருக்கலாம். பெரியவருக்கும் இதை இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் இல்லை. பசியோட இருந்த அந்தப் பிச்சைக்கார கிழவனும் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே தன்னோட பசியை ஆற்றிக் கொண்டிருப்பானே. இந்தச் சின்ன விஷயம் கூட நம்ம வாத்யாருக்குத் தெரியவில்லையே...,” என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே சென்றான் சிறுவன்.
சிறுவனைப் பார்த்தவுடன் பெரியவர், “ஏண்டா கண்ணு, அந்த ஒரு பஜ்ஜியைக் கொடுத்து விட்டு வர்றதுக்கு இம்மா நேரமா? நான் எவ்வளவு நேரமா உனக்கு பரோட்டா ஆர்டர் பண்ணி விட்டு காத்துக்கிட்டு இருக்கேன் ... ” என்று பெரிய சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு பெரியவர் கேட்டார்.
அப்போதுதான் பெரியவர் ஒரு டீக்கடை அருகில் நிற்பதைச் சிறுவன் பார்த்தான். தன்னிடம் பெரியவர் பஜ்ஜியைக் கொடுத்து அங்காளி கோயில் பிச்சைக்காரனிடம் தரச் சொன்னபோது பெரியவர் நின்ற இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே தென்படவில்லை. இப்போது இந்த டீக்கடை எல்லாம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லையே ஒரு புதுக் குழப்பத்தில் சிறுவன் ஆழ்ந்தான். ஆனால், சிறுவன் காலையிலிருந்து பசியாலும் களைப்பாலும் சோர்வடைந்திருந்ததால் இந்தக் குழப்பத்தை அப்புறம் பார்ப்போம், முதலில் பரோட்டாவை ஒரு கை பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தான்.
மூணு பரோட்டா குடுப்பா என்று டீக்கடைக்காரனிடம் பெரியவர் சொன்னவுடன் சிறுவனுக்கு முகம் தொங்கிப் போய் விட்டது. “யானைப் பசிக்குச் சோளப் பொரியா? காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லையே. நம்முடைய அகோரப் பசிக்கு மூன்று பரோட்டா எம்மாத்திரம்? பரவாயில்லை. இப்போது இது கிடைத்ததே அண்ணாமலையார் கருணை. நாம் ஏதாவது கேட்கப்போய் பெரிவயவர் சரிடா வேறு ஒரு இடத்தில் நிறைய பரோட்டா வாங்கி தருகிறேன் என்று சொல்லி பத்து பதினைந்து மைல் நடக்க வைத்து விட்டால் என்ன செய்வது?” என்ற பலவாறாக சிந்தித்தவாறே சிறுவன் கையைச் சுத்தமாக அலம்பி விட்டு சாப்பிடத் தாயாரானான்.
பெரியவர் சொல்லியபடி சுடச்சுட மூன்று பரோட்டா சிறுவனுக்கு பரிமாறப்பட்டது. வழக்கமாக பெரியவர் வாங்கித் தரும் பரோட்டா மிகவும் பழசாக, காய்ந்து போய்தான் இருக்கும். ஒரு பரோட்டாவை மெல்வதற்குள் வாயில் பல்லெல்லாம் கழன்று விழுந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒரு பரோட்டாவைக் கூட முழுதாக கடித்துச் சாப்பிட முடியாது.
இன்றோ அதிசயத்திலும் அதிசயமாக இலவம் பஞ்சு போல் அவ்வளவு மென்மையாகவும் சூடு பறக்க பரோட்டாவும் குருமாவும் இருந்தது கண்டு சிறுவனுக்கு மிகவும் சந்தோஷம். ஒரு பரோட்டா சாப்பிடுவதற்குள் வயிறு திம்மென்று ஆகிவிட்டது. இரண்டாவது பரோட்டாவை கஷ்டப்பட்டு விழுங்கினான். மூன்றாவது பரோட்டாவில் பாதிதான் உண்ண முடிந்தது. மீதியை நைசாக இலையில் வைத்து சுருட்டி எடுத்து எச்சில் கூடையில் போட்டு விட்டான்.
அன்று சிறுவன் சாப்பிட்டதுபோல் அவன் என்றுமே அத்தகைய மிருதுவான பரோட்டாவை சாப்பிட்டது கிடையாது. தனக்கு வேண்டியதை வேண்டியபோது வேண்டிய இடத்தில் பெரியவர் தருவார் என்பதை ஆயிரத்தோராவது முறையாக சிறுவன் அப்போது உணர்ந்தான். சாப்பாட்டிற்குப் பின் வழக்கம்போல் பெரியவர் முன் செல்ல சிறுவன் அவர் பின்னே ஓட்டமும் நடையுமாக அவரைத் தொடர ஆரம்பித்தான்.
பெரியவர் சிரித்துக் கொண்டே கேட்டார். “சுப்பிரமணி நல்லா பஜ்ஜி சாப்பிட்டானா?”
அப்போதுதான் சிறுவனுக்குத் தன்னுடைய பழைய சங்கல்பம் ஞாபகம் வந்தது. “ஆகா, பரோட்டா ஆசையில் பெரியவரிடம் கேட்க நினைத்ததை மறந்து விட்டோமே?” கஷ்டப்பட்டு கோபத்தை வரவழைத்துக் கொண்டு சிறுவன், “எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே, ஏன் வாத்யாரே இப்படி நாடகம் ஆடி என்ளை இவ்வளவு தூரம் பசியோட அலைய விட்டே?”
பெரியவர், “அவசரப்படாதேடா. நாங்க செய்ற எல்லா காரியத்துக்கும் ஆயிரமாயிரம் காரணம் இருக்குன்னு உனக்கு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். இன்றைக்கு என்ன கிழமை?”
“ஞாயிற்றுக் கிழமை.”
“ரொம்ப சரி, நாம் கோயிலை விட்டுப் புறப்படும்போது என்ன நேரம்?”
“அஞ்சரை மணி, ராகு காலம்.”
“இப்போ சொல்லு, அந்தப் பிச்சைக்காரன் பேரு சுப்பிரமணி என்று நீதானே கேட்டுட்டு வந்தே.. சுப்பிரமணி என்று பேர் வச்சவன் ராகு காலத்தில் கடலை மாவில் போட்ட பஜ்ஜியைச் சாப்பிடலாமா?”
சிறுவன் வெட்கத்தால் தலை குனிந்தான். பெரியவர் ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறார். சுப்பிரமணி என்று பெயர் வைத்தவர்கள் ராகு கால நேரத்தில் கடலை மாவில் செய்த பலகாரங்களைச் சாப்பிடக் கூடாது.
“இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ள முயலவில்லையே. பெரியவர் நினைத்திருந்தால் மீண்டும் ஒரு முறை போய் அவன் பெயர் என்ன என்று கேட்டு வரச் சொல்லி அனுப்பி இருக்கலாமே? இல்லை, நாமாவது புத்திசாலித்தனமாக இவர் ஏன் ஒரு பிச்சைக்காரனோட பெயரைக் கேட்கிறார் என்றால். அவனுக்கும் பஜ்ஜிக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு நிமிடம் யோசித்திருக்கலாமே? சரியான மக்கு மடையன் நான். ஒரு சாதாரண பஜ்ஜி தானம் என்று நினைத்தால் அதில் எத்தனை எத்தனை ஆன்மீக இரகசியங்களை உள்ளடக்கி இந்த வாத்யார் வைத்திருக்கிறார். இவரை விட ஒரு ஆன்மீகப் பொக்கிஷத்தை எந்த உலகத்திலும் நாம் காண முடியாது போல் இருக்கிறதே. என்னே நமது பாக்கியம்,” என்றெல்லாம் நினைக்க நினைக்க அந்தச் சிறுவனின் முகத்தில் ஆனந்த அலைகள் பெருக்கெடுத்து ஓடின.
அடுத்த விநாடி வழக்கம்போல் தனது அடுத்த குழந்தைத்தனமான கேள்வியையும் கேட்டு விட்டான்.
“ஏன், வாத்யாரே, நீ இவ்வளோ பெரிய கில்லாடியா இருக்கியே. நான்தான் எப்போ பாத்தாலும் உன் கூடயே சுத்துறனே. நான் மட்டும் ஏன் இன்னும் சாப்பாட்டு ராமனா, மக்கு மன்னாராட்டமே இருக்கேன்.”
சிறுவனின் அப்பாவித்தனமான ஆனால், நியாயமான இந்தக் கேள்வியைக் கேட்டு பெரியவர் அட்டகாசமான சிரிப்பொன்றை உதிர்த்தார்.
“டேய், நானே அரைகுறை. என்னோட சுத்துனா நீயும் அரைகுறையாத்தானடா இருப்பே,” என்று சொல்லிக் கண் சிமிட்டவே சிறுவனும் பெரியவரின் சிரிப்பில் சேர்ந்து கொண்டான். இந்த அடிமைகளின் ஆனந்தச் சிரிப்பு வெள்ளத்தில் நீங்களும் சேர்ந்து நீந்தலாமே.
ஓம் குருவே சரணம்