மனிதனும் இறைவனாகலாம் மனமிருந்தால் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அண்டமி திருத்தல மகிமை

தஞ்சை மாவட்டம் மன்னார்குடி மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த தலமே அண்டமி ஆகும். இறைவன் திரு அண்ணாமலையார் இறைவி திரு உண்ணாமுலை அம்மன்.
மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாக தரிசிப்போர்க்கு அனைத்து நலன்களும் பெருகும் என்பது நாம் அறிந்ததே. பழநி முருகன், சமயபுரம் மாரியம்மன் என்று ஒவ்வொரு திருத்தலமும் அத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் நாமத்தையும் அத்தலத்தின் பெயரையும் கொண்டிருப்பது இயல்பு. இதற்கு விதி விலக்காக அண்டமி திருத்தலத்தின் நாமம் அத்தலத்தில் அமைந்துள்ள தீர்த்தத்தின் பெயரை விளக்குவதாக அமைந்திருப்பதே அத்தீர்த்தத்தின் பெருமையை பறைசாற்றுவதாக உள்ளது.
கடல், வானம், மலை, காடு என விரிந்து பரந்துள்ள இந்த உலகம் மட்டுமல்லாமல் சூரியன், நட்சத்திரங்கள் என அண்டசராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் சுருக்கி நெருக்கி ஒரே ஒரு துளியாக அமைத்தால் அப்போது இறை சக்தியின் வெளிப்பாடாக அமையும் அந்த இறைப் பெருங் கருணைக்கு சித்தர்கள் கொடுத்த நாமமே அண்டமிகு தீர்த்தம் என்பதாகும். இந்த பெயரே பிற்காலத்தில் அண்டமி என அழைக்கப்பட்டது.
எனவே இறைவனின் பூரணமான வெளிப்பாடே அண்டமி திருத்தலமாகும். ஏன் இறைவன் நீர்த் துளி வடிவில் காட்சி தர வேண்டும் என்ற சந்தேகம் வரலாம். எம்பெருமான் மற்ற எந்த பூத வடிவில் தன்னுடைய திருக்காட்சியை நல்கினாலும் அதை தரிசிக்கும் அளவிற்கு தூய்மையான உடலை மனிதர்கள் பெறாததே காரணம் ஆகும்.
நாயனார், ஆழ்வார்களைப் போல் மனிதர்களும் தூய்மையான மனதுடன் திகழ்ந்தால் அவர்களுக்கு செந்தழல் மேனியனாய் இறைப் பரம்பொருள் காட்சி அளித்ததுபோல மனிதர்களுக்கும் அவன் தன்னுடைய திருக்காட்சி அளிக்க சித்தமாகத்தான் இருக்கிறான். ஆனால் அத்தகைய திருக்காட்சியை கண்ணிமைக்கும் நேரம் பெற்றால் கூட மனிதன் பஸ்மமாகி விடுவான்.
எனவே மனிதர்களின் மேல் உள்ள பெருங்கருணையால்தான் எம்பெருமான் அசரீரியாகவும், நீர்த்துளி வடிவிலும் தன்னுடைய ஒளி ரூபத்தை வெளிப்படுத்துகின்றான்.
கோடிக் கணக்கான யுகங்கள் பஞ்சாக்னி நடுவில் தவமியற்றிய சூரபத்மனுக்கு கூட சிவபெருமான் இவ்வாறு ஒரு துளி நீர் வடிவில்தானே காட்சி நல்கினார் ?

சிருஷ்டி இரகசியங்கள்

இறைவன் எப்படி உலகமாகவும் உயிர்களாகவும் தோற்றம் கொண்டான் என்ற அடிப்படை இரகசியத்தை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் திருக்கோயில்களின் மகத்துவத்தைப் பற்றி ஓரளவாவது புரிந்துகொண்டு பயன் பெறுவதுடன் மக்கள் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் மனிதர்கள் செயலாற்ற முடியும்.
ஆதி அந்தமில்லாத இறைவன் தன்னை மூன்று சக்திகளுடன் கூடிய ஒளி வடிவமாக முதலில் எழுந்தருளினான். இதையே பல மதங்களும் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு அறிவித்து வருகின்றன. சைவ சித்தாந்த்த்தில் இதை பதி பசு பாசம் என்று குறிக்கிறோம்.
இந்த மூன்று அடிப்படை சக்திகளை உஜ்ஜீவ சக்திகள் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்கள் பற்றிய விளக்கங்களுக்கும் ஆன்மா இறைவன் என்ற அனைத்து தத்துவங்களுக்கும் சித்தர்கள் விளக்கமே முதலும் முடிவுமாகும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டால்தான் தெய்வீக விளக்கங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். சித்தர்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களே அசைக்க முடியாத தெளிவான ஞானத்தைப் பெற முடியும்.

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீசக்கரம் சிதம்பரம்

இந்த அடிப்படை சக்திகள் அடங்கியதே முக்கோண வடிவம். எனவே உஜ்ஜீவம் என்பது மூன்று சக்திகளின் பரிமாணம், முக்கோணம் என்பது இந்த அடிப்படை சக்திகள் அடங்கிய வடிவம். அடிப்படையான இந்த மூன்று சக்திகளும் வட்டமாக சுழலும்போது உண்டாகும் வடிவமே நாகரம் என்ற சதுரமாகும்.
இதிலிருந்து முக்கோணம், வட்டம், சதுரம் என்ற மூன்று வடிவங்களே இந்த பிரபஞ்சத்தின் மூலாதார வடிவங்கள், ஜீவ சக்திகளின் மூலத் தோற்றங்கள் என்பது புரிகின்றது அல்லவா ? அதனால்தான் இறைத் தத்துவத்தை விளக்கும் யந்திரமான ஸ்ரீசக்கரம் இந்த மூன்று வடிவங்களுடன் பொலிகின்றது.
இறைத் தத்துவங்கள் பூரணமாகப் பொலிபவையே திருத்தலங்கள். எனவே திருத்தலங்கள் எல்லாம் இந்த மூன்று வடிவங்களை அடிப்படையை வைத்து எழுந்தவையாக உள்ளன.
அடிப்படை வடிவங்களான முக்கோணம், வட்டம், சதுரம் தோன்றிய திருத்தலமே அண்டமி திருத்தலம் என்றால் அதன் தொன்மையை விளக்க இதை விட வேறு என்ன சான்று வேண்டும் ?
இந்த அடிப்படை வடிவங்கள் தோன்றிய வரலாறே அண்டமி திருத்தலத்தின் வரலாறு என்பதால் அதைப் பற்றி இங்கு விவரிக்கின்றோம்.
இறைவன் தன்னை முதலில் உஜ்ஜீவ சக்தியாகத்தானே வெளிப்படுத்தினான். இந்த உஜ்ஜீவ சக்திகள் அண்டமி திருத்தலத்தில் திருக்குளமாக வியாபித்துள்ளது. ஆம், இறைவன் ஆதியில் இந்த பிரபஞ்சத்தில் உஜ்ஜீவ சக்தியாக கொண்ட  தோற்றமே அண்டமி திருத்தலத்தில் சிவகங்கை என்னும் நாமத்துடன் பொலிகின்றது.
இந்த பூவுலகம் தோன்றிய பின்னர் பகீரதனின் பெருமுயற்சியால் தேவலோகத்திலிருந்து கங்கை பூமிக்கு பாய்ந்து வந்தாள். அவ்வாறு பாய்ந்து வந்த கங்கையின் வேகத்தை பூலோகம் தாங்காது என்பதால் சிவபெருமான் அதைத் தன்னுடைய ஜடாமுடியில் தரித்துக் கொண்டார். சிவனின் சடையிலிருந்து கீழே விழும் கங்காதாரையை தாங்குவதற்கும் சக்தி வேண்டுமே ? அதற்கு என்ன செய்வது ?
அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல எம்பெருமானின் சக்தியை எம்பெருமான்தானே தாங்க வேண்டும். எனவே வருண சக்திகள் பொலியும் எம்பெருமானின் மேற்கு நோக்கிய முகமான வாமதேவம் என்ற முகமே வாமதேவ ரிஷியாக தோற்றும் கொள்ள வாமதேவர் தன் கமண்டலத்தில் சிவபெருமானின் ஜடா முடியிலிருந்து பொங்கி வழிந்த கங்கையை ஏற்று அதை அண்டமி திருத்தலத்தில் சிவகங்கை தீர்த்தமாக நிலை நிறுத்தினார்.

சிவகங்கை அண்டமி

எனவே இந்த உலகத்தில் உள்ள அனைத்து நதி தீர்த்தங்களும், திருஅண்ணாமலை, லால்குடி போன்ற புனிதத் தலங்களில் பொலியும் சிவகங்கை என பெயருடைய அனைத்து புனிதத் தீர்த்தங்களும் தோன்றிய தலமே அண்டமி சிவத்தலம் ஆகும்.
எனவே அண்டமி திருத்தல தீர்த்தம் வாமதேவ தீர்த்தம் என்றும், சிவகங்கை தீர்த்தம் என்றும் சித்தர்களால் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு உஜ்ஜீவ சக்திகள் தோன்றிய பின்னர் அந்த சக்திகளை உலக ஜீவன்களுக்கு அளிக்க வேண்டுமே. இதற்காக சித்தர்களும், மகரிஷிகளும் பல விக்ரக பிரதிஷ்டை முறைகளைக் கையாளுகின்றனர். இறை விக்ரகங்கள் மூலம் இறை சக்தியை மக்களுக்கும் மற்ற ஜீவ ராசிகளுக்கும் அளிப்பதே இறை சக்தியைப் பெறும் எளிய முறையாக இருப்பதால் இம்முறையே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இறை சக்திகளின் பெட்டகமாக திருக்கோயில்கள் விளங்குவதால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழியும் நடைமுறைக்கு வந்துள்ளது.

அண்டமி திசைகளே ஆதி திசைகள்

கோயில்களை நிர்மாணிக்கும்போதும் அந்த  கோயில்களில் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்யும்போதும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது அடிப்படை திசைகளும் உஜ்ஜீவ புள்ளிகளும் ஆகும்.
அடிப்படை திசைகளை எப்படி கண்டு பிடிப்பது ? சூரியனை வைத்து சரியான திசையை அறிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் கிழக்கு திசையில் உதிப்பது சூரிய பகவானின் நித்ய கடமைகளுள் ஒன்றே தவிர சூரியன் உதிப்பதால் அது கிழக்கு திசை ஆகாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
எனவே திசைக்கு அடிப்படை சூரியன் கிடையாது என்பதை சித்தர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஒவ்வொரு லோகத்திற்கும் உரிய வாஸ்து பகவான் சயனிக்கும்போது அவர் தலை இருக்கும் திசையே கிழக்கு திசையாகும். எனவே ஒரு லோகத்திற்கு உரிய கிழக்கு திசையானது மற்றோர் லோகத்திற்கு வேறு திசையாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்லாமல் உதாரணமாக நாளைக்கே வாஸ்து பகவான் தன்னுடைய சயன நிலையை வேறொரு திசைக்கு மாற்றிக் கொண்டால் அவர் தலை வைக்கும் திசைதான் கிழக்கு. சூரிய பகவான் அந்த திசையில்தான் உதிக்க வேண்டும் !
வாஸ்து பகவான் முதலில்  தோன்றிய திருத்தலமே அண்டமி திருத்தலமாகும். எம்பெருமானின் நடராஜ கோலங்கள் அறுபத்து நான்கையும் தன்னுடைய அம்சங்களாக ஏற்றுக் கொண்டு 64 திசைகளுடைய வாஸ்து மூர்த்தியாக தோற்றம் கொண்டார் வாஸ்து பகவான் அண்டமி திருத்தலத்தில்.

அடிப்படை திசைகள், புள்ளிகள்

இந்த 64 திசைகளை மிகவும் துல்லியமாக கணக்கிட வேண்டி உள்ளதால் அனைவருக்கும் உதவக் கூடிய வகையில் பத்து திசைகளாக இத்தல மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார் வாஸ்து மூர்த்தி. அந்த பத்து திசைகளே அண்டமிகுதீர்த்தம் என்றவாறாக அண்டமி திருத்தல நாமமாக அமைந்துள்ளது. கிழக்கு, தென்கிழக்கு போன்ற எட்டு திசைகளுடன் பாதாளம், ஆகாயம் என்ற பத்து வாஸ்து திசைகளை துல்லியமாக கணக்கிடக் கூடிய திருத்தலமே அண்டமிகுதீர்த்தம் என்னும் அண்டமி ஆகும்.
அண்டமி என்னும் சொல் கிழக்கு முதலான நான்கு அடிப்படை திசைகளையும் அண்டமிகுதீர்த்தம் என்ற சொல் பத்து திசைகளையும் குறிக்கும்.
ஒரு சமயம் பூத கணங்கள், தேவ கணங்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் திருக்கைலாயத்தில் ஈசனை ஆராதித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கடுங் குளிரால் வாடுவதைக் கண்ட அன்னை தேவலோக சிற்பி மயனை அழைத்து அவர்களுக்கு ஒரு அற்புதமான குளிர் காப்பகம் ஒன்றைக் கட்டித் தரும்படி ஆணையிட்டாள்.
முக்காலமும் உணர்ந்த எம்பெருமான் மயனுக்கு நாகரம் என்ற வடிவத்தை அனுகிரமாக அளித்தார். நாகரம் என்பது சதுர வடிவம்.
எம்பெருமானிடமிருந்து நாகர வடிவ அனுகிரகத்தைப் பெற்ற மயன் முதலில் அதை எம்பெருமானுக்கு அர்ப்பணித்து அந்த வடிவத்தின் மேல் ஒரு திருக்கோயிலை நிர்மாணிக்க நினைத்தான். மானிடர்கள் நிறைவேற்றும் ஷோடோபசார பூஜையே இறைவனை மகிழ்விக்கும் என்பதால் பூலோகத்தில் அத்தகைய உபசாரங்கள் நிறைவேற்றக் கூடிய உத்தம தலமாக அண்டமி தலத்தை தேர்ந்தெடுத்து அதில் எம்பெருமானுக்கு ஒரு ஆலயத்தை எழுப்ப நினைத்தான் மயன்.
கோயில் கட்டுவது என்பது பரம்பொருளை எழுந்தருளச் செய்வதற்காகத்தானே. அதனால் அந்த பரம்பொருளிடம் தன்னுடைய அபிலாஷையை வெளியிடவே எம்பெருமானும் மயனின் முன் யோசனையைப் பாராட்டி மயன் எழுப்பும் திருத்தலத்தில் தான் எழுந்தருள அங்கீகாரம் தெரிவிக்கவே மயன் அற்புதமான கோயிலை முதன் முதலாக அண்டமி திருத்தலத்தில் நிர்மாணித்தான்.
எனவே இப்பூவுலகில் முதன் முதலாக எம்பெருமானுக்காக மயனால் அமைக்கப்பட்டதே அண்டமி திருத்தலமாகும். இறைவன் தனக்கு அளித்த நாகரம் என்ற சதுரவடிவ மேடை மேல் திருத்தலத்தை அமைக்க அதன் மேல் இனிதே எழுந்தருளினார் எம்பெருமான். தேவர்கள் பூமாரி பொழிய அனைத்து கோடி ரிஷிகளும் தேவர்களும் முனி சிரேஷ்டர்களும் அத்தருணத்தில் தோன்றி அண்டமி திருத்தலத்தின் புனிதத்திற்கு மேலும் புனிதம் கூட்டினர்.

மயன் நாகரம் அண்டமி

இங்கு நீங்கள் காணும் சதுர வடிவ பீடமே சில வருடங்களுக்கு முன்வரை அண்டமி தலத்தை அலங்கரித்த தேவலோக சிற்பி மயனின் நாகர அலங்கார பீடமாகும். காலத்தின் கோலத்தால் அந்த நாகர பீடம் தற்போது மண்ணில் மறைந்து விட்டாலும் அந்த நாகர சக்திகள் இன்றும் சூட்சும கோலத்தில் தோன்றி சிவனருட் சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதன் பின்னர் பார்வதி தேவியின் உத்தரவின்படி கைலாயத்தில் எம்பெருமான் தரிசனத்திற்காக மயன் ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டினான். ஆனால், விதி வசத்தால் அது சில காலத்திலேயே பார்வதி தேவியின் திருக்கரங்களினாலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதுவே எம்பெருமான் உயிர்கள் மேல் கொண்டுள்ள கருணைக்கு சான்று.
கைலாயத்தில் மயன் எழுப்பிய மண்டபம் பார்வதி தேவியால் அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் பூலோகத்தில் எழுந்த அண்டமி திருத்தலமோ இன்றும் மக்களுக்கு சிவபெருமானின் கருணையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இது பூலோக மக்களின் பெருந் தவப் பயனன்றோ ? அதனால்தான் எந்த தவமாக இருந்தாலும் பூஜையாக இருந்தாலும் அதை நிறைவேற்ற தேவர்களும் அசுரர்களும் பூமிக்கு ஓடோடி வருகின்றனர். ஆனால் பூமி வாழ் மக்கள்தான் பூலோகத்தின் அருமை பெருமையையும் மானிடப் பிறவியின் மகத்துவத்தையும் புரிந்து கொள்ளாமல் போய் விடுகிறார்கள்.

உலகை ஆளும்
உஜ்ஜீவ புள்ளிகள்

அண்டமி திருத்தலமே பூமியில் எழுந்த முதல் திருத்தலம் என்பதால் அக்கால ஸ்தபதிகளும் சிற்பிகளும் அண்டமி திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள திசையை அடிப்படையாக வைத்து தங்கள் ஊரில் உள்ள திருக்கோயில்களை நிர்மாணிப்பார்கள். அப்போது பொலிந்த மயன் மேடையின் நான்கு மூலைகளை திசைகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டு தங்கள் ஊரில் அமைக்க வேண்டிய திருத்தல திசை நுணுக்கங்களைப் பற்றி கணக்கிட்டுக் கொண்டனர்.
பூமியில் உள்ள எல்லா திருத்தலங்களும் மூன்று அடிப்படை திசை நுணுக்கங்களை கொண்டவையாக இருக்கும்.
1. அண்டமி திசைகள் நான்கு
2. அண்டமிகு தீர்த்த திசைகள் பத்து
3. உஜ்ஜீவ சக்தி புள்ளிகள் 24
திசைகள் நீங்கள் அறிந்ததே. உஜ்ஜீவ சக்தி புள்ளிகள் என்பவை இறை சக்திகள் பரிணமிக்கும் குறிப்பிட்ட புள்ளி ஆகும். உதாரணமாக ஒரு திருத்தலத்தின் மூல சிவலிங்கத்திடமிருந்து நந்தி மேற்கு திசையில் 12 அடியில் எழுந்தருளி இருந்தாலும் 24 அடி தூரத்தில் இருந்தாலும் நந்திமூர்த்தியின் திசை சக்தியில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், உஜ்ஜீவ சக்தியில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையே.

ஒரு ஆலயத்தின் நிர்மாணத்திற்கு எந்த அளவிற்கு துல்லியமாக திசைகள் அமைய வேண்டும் என்கிறோமோ அதே அளவிற்கு இந்த உஜ்ஜீவ நாகர புள்ளிகள் மிக மிக துல்லியமாக அமைய வேண்டும் என்பது முக்கியம். முற்காலத்தில் எழுந்த தொன்மையான திருத்தலங்களை நிர்மாணித்தவர்கள் இத்தகைய அண்டமி திசைகளையும், அண்டமிகு தீர்த்த திசைகளையும், உஜ்ஜீவ நாகர புள்ளிகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார்கள்.
ஆனால் தற்போது ஆலயத்தை நிர்மாணிப்பவர்களுக்கு இத்தகைய திசை ஞானம் தெளிவாக இல்லாததால் பண்டைய கோயில்களை புனரமைக்கும்போது விக்ரகங்களை, மூல மண்டபங்களை சற்றும் இடம் பெயராமல் வைத்துக் கொண்டால்தான் அந்த தலத்தின் புனிதத் தன்மையை முழுமையாகப் பாதுகாக்க முடியும்.

எதற்காக திசைக்கும் புள்ளிகளுக்கும் இத்தகைய முக்கியத்துவம் நம் முன்னோர்கள் அளித்து வந்தார்கள் என்றால் திருக்கோயில்களில் மூல மூர்த்தியின் அனுகிரக சக்தியை முழுமையாகப் பெறுவதற்கு இத்தகைய திசைகளும் புள்ளிகளும் அத்தியவசியமானவை என்பது மட்டுமல்லாமல் இந்த திசைகளில், கோணத்தில், புள்ளிகளில் நூற்றில் ஒரு மடங்கு கணிப்பில் தவறு ஏற்பட்டால் கூட அதனால் ஏற்படும் விபரீதங்களை மனிதர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.
உதாரணமாக கிழக்கிலிருந்து வடக்கு திசையில் 15 டிகிரி கோணத்தில் அமைவது ஒரு முக்கியமான ஜீவ சக்திகள் நிறைந்த உஜ்ஜீவ நாகர புள்ளி. இந்த புள்ளியின் கோணம் ஒரு அணு அளவு மாறி அதில் மூலவர் அமைந்தால் அந்த மூலவரின் ஆகர்ஷண சக்தியால் மூலவர் மேல் சூரிய ஒளிபடும்போது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி தேள்களும் நட்டுவாக்கிளிகளும் அத்தலத்தைச் சுற்றி தோன்றும். அதே போல் அந்த புள்ளி இடது பக்கம் சற்றே நகர்ந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி டன் தங்கமும் மாணிக்க கற்களும் அங்கு பொழியும்.
ஆனால், மனித சமுதாயத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே பலவிதமான விபரீதங்களை உருவாக்கி விடும். எனவே கோயில்களை புனருத்தாரணம் செய்பவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம்.
ஒருவேளை எதிர்பாராத வகையில் சரியான உஜ்ஜீவ புள்ளியில் அமைந்திருக்கும் ஒரு சிவலிங்கத்தையோ அல்லது சண்டேச மூர்த்தியையோ கோயிலைத் திருத்தி அமைக்கும்போது மாற்றி விட்டால் என்ன செய்வது ?
அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த திருக்கோயிலை பராமரித்து வரும் சித்தர்கள் இறை மூர்த்திக்கும் அந்த உஜ்ஜீவ புள்ளிக்கும் உள்ள தொடர்பை துண்டித்து விடுவார்கள். இதனால் மனித சமுதாயம் பெரும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்படும் என்றாலும்  அந்த மூர்த்தியை வணங்கி பெற வேண்டிய அனுகிரக சக்திகள் பக்தர்களுக்கு கிடைக்காமல் போய் விடும். இதற்கும் ஆலயத்தை திருத்தி அமைத்தவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் கவனமாக செயல்படா விட்டால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த கதையாகி விடும்.
உஜ்ஜீவ நாகர புள்ளி என்பது மிகவும் அற்புதமான ஜீவ சக்திகளைக் கொண்டிருப்பதால் அதைப் பற்றி மேலும் சில விளக்கங்களை அளிக்கிறோம்.

சந்தான விருத்தி
இரகசியங்கள்

திருச்சி உய்யக்கொண்டான்மலை திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் கிழக்கிலிருந்து வடக்காக 15 டிகிரி கோணத்தில் வடக்கிலிருந்து கிழக்காக 75 டிகிரி கோணத்தில் மிகவும் துல்லியமாக அமைந்துள்ளார். அதன் பயனாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகளை வர்ஷிக்கும் அண்ணலாக அருள்புரிந்து வருகின்றார்.
உஜ்ஜீவ நாத ஜீவ சக்தியே இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஜீவன்களும்  தோன்றுவதற்கு இன்றியமையான ஜீவ சக்தியாகும். கணவன் மனைவி சங்கமத்தில் கணவனிடமிருந்து மனைவியின் கர்ப்பப் பையை அடையும் விந்து சக்தியால் சந்தானம் என்ற குழந்தை தோன்றுவதாக எண்ணுகிறோம்.
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தாம்பத்ய உறவு கொள்ளும் அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும் அல்லவா ? ஆனால் நடைமுறையில் முறையான தாம்பத்ய உறவு கொள்ளும் எத்தனையோ தம்பதிகள் சந்தான பாக்கியம் கிடைக்காமல் வாடுகின்றாகள் அல்லவா ? எனவே ஆணின் விந்து என்பது இந்த உஜ்ஜீவ சக்திகளை தாங்கிச் செல்லும் ஒரு உபாயமே ஆகும். எனவே சுக்கில சக்திகள் நிறைந்த விந்துவுடன் குரு பிரசாதமான உஜ்ஜவ சக்திகளும் சேர்ந்தால்தான் சந்தான பாக்கியத்தைப் பெற முடியும்.
எல்லா ஜாதகங்களிலும் குரு பார்வை இருக்கிறதா என்பதை சந்தான பாக்கியத்திற்காக உறுதி செய்து கொள்வது இந்த காரணம் பற்றியேதான். குரு பார்வை என்பது உஜ்ஜீவ சக்திகளை அந்த தம்பதிகள் பெறும் வாய்ப்பைக் குறிக்கிறது.
மேலும் இந்த உஜ்ஜீவ ஜீவ சக்தியை விந்து மட்டுமல்லாமல் ஏனைய உபாயங்களாலும் மாற்றலாம். உதாரணமாக மயில் இனத்தில் உடலுறுவு கிடையாது. ஆண் மயில் பெண் மயிலை காமக் கண் கொண்டு பார்க்கும்போது அதற்கு இணங்கும் பெண் மயில் கரு தரிக்கும் பக்குவத்தைப் பெறுகிறது. இவ்வாறு ஆண் மயில்கள் உஜ்ஜீவ சக்தியை தங்கள் பார்வை மூலமே பெண் மயில்களுக்கு விநியோகிக்கும் அற்புத தெய்வீக சக்தியைப் பெற்றிருக்கின்றன.
சந்தான விருத்திக்கு அத்தியாவசியமான இந்த ஜீவ சக்தியை சந்தான பாக்கியம் மூலமே சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க முடியும் என்றாலும் இதில் மற்ற தெய்வீக இரகசிய தாத்பர்யங்களும் உள்ளன. உதாரணமாக சன்னியாசிகள் திருமணம் ஆகாமலே இருக்கும்போது அவர்கள் ஜீவ சக்தி விரயமாகி விடும் அல்லவா ? அதனால் அவர்களுடைய ஜீவ சக்திகளை சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் பல உபாயங்களை இறைவன் அளித்துள்ளான்.

எதையும்
சாதிக்கும் உஜ்ஜீவம்

சந்தான பாக்கியம் பெறாத பலரும் மகான்களை நாடி வரும்போது அவர்கள் தங்களுடைய உஜ்ஜீவ சக்திகளின் மாற்றத்தால் அவர்களுக்கு சந்தான பாக்கியம் பெற இறையருளைப் பொழிகிறார்கள். இந்த ஜீவ சக்தி மாற்றத்தை அவர்கள் நேரிடையாகச் செய்தால் சமுதாயத்தில் பல குழப்பங்கள் ஏற்படும் என்பதால் அவர்கள் குறித்த தீர்த்த நீராடல்கள், குறித்த பூஜைகள், குறித்த ஹோம வழிபாடுகள், திருத்தல பாதயாத்திரை போன்றவைகளை மேற்கொள்ளும்படி பணித்து அந்தத் தல இறை மூர்த்திகள் மூலமாகவே தங்களுடைய ஜீவ சக்தி மாற்றங்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் அத்தம்பதிகளுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் பிரசாதமாகவே அமைகிறது. இதில் ஈடுபடும் மகான் ஒரு கருவியாக, ஒரு சாதாரண மீடியமாக மட்டுமே செயல்படுகிறார்.
இந்த உஜ்ஜீவ சக்தி மனிதர்கள், தாவரங்கள், மூலிகைகள், தங்கம், மாணிக்கம் போன்றவற்றையும் உண்டாக்க வல்லது, சிருஷ்டிக்க வல்லது. புட்டபர்த்தி சாய்பாபா பல பக்தர்களுக்கு விபூதி, மாங்கல்ய சரடு, சிவலிங்கம், கைகடிகாரம், வைர மோதிரம், தங்க செயின் போன்ற பல பொருட்களை தன்னுடைய வெறுங்கையை அசைத்து பக்தர்களுக்கு அளித்தார் அல்லவா?
அவை அனைத்தும் இத்தகைய உஜ்ஜீவ சக்தியிலிருந்து தோன்றியவையே. எனவே உஜ்ஜீவ சக்திகளைக் கையாளும் சக்தி உடையவர்கள் எதையும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றவர்களாக இருப்பதால் அவர்களை இறைவனாக நினைத்தே வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள். இதில் எவ்வித தவறும் கிடையாது.
சிலர் குறிப்பிட்ட மந்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு உச்சாடனம் செய்து அதன் சக்தியால் தாங்கள் எங்கோ மறைத்து வைத்திருக்கும் இறை உருவங்களை பக்தர்கள் முன்னிலையில் தருவித்து தங்கள் இறை சக்தியால் சிருஷ்டித்ததுபோல் காட்டுவதும் உண்டு. அது வெறும் மந்திர ஜாலமே, அதில் உஜ்ஜீவ சக்தியின் பங்கு எதுவும் கிடையாது, அதனால் அந்த சக்திகள் நிலையானவை அல்ல, தெய்வீக குணங்களும் அதில் நிலைபெறாது.

பதியைக் காட்டும்
பதினைந்து

உய்யக்கொண்டான்மலை திருத்தலத்தில் உள்ள உஜ்ஜீவ சக்திகள் இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால் அந்த ஜீவ சக்திகளை மனிதர்கள் பெறும் பொருட்டு ஒரு அற்புத உபாயத்தை சித்தர்கள் இத்தல வழிபாட்டில் அமைத்து உள்ளார்கள்.
ஸ்ரீஉஜ்ஜீவநாத திருத்தலம் உஜ்ஜீவ நாகர புள்ளிகள், அண்டமிகு தீர்த்த கோணங்களுடன் விளங்குவதால் இந்த இரண்டு சக்திகளை பெறுவதற்காக இத்தல ஈசுனை வணங்குவதற்கு முன் உள்ள படிக்கட்டுகளில் பதினைந்து படிகளை நிர்மாணித்து உள்ளார்கள். மூல சிவலிங்கம் கிழக்கிலிருந்து 15 டிகிரி கோணத்தில் பொலிவதால் ஒவ்வொரு கோணத்தில் உள்ள உஜ்ஜீவ சக்தியைப் பெறுவதற்காக இந்த 15 படிகளிலும் பதினைந்து விதமான உஜ்ஜீவ சக்தி யந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

உஜ்ஜீவ நயனமே உலக நயனம்
என்ற 15 அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை ஓதிக் கொண்டே படிகளில் ஏறிச் சென்று ஈசனை வணங்குவதால் உஜ்ஜீவ ஜீவ சக்திகளை பக்தர்களின் சூட்சும சரீரம் எளிதில் கிரகிக்க முடியும்.
ஈசனை தரிசித்த பின்னர் கீழே இறங்கி வரும்போது படியின் வலது புறத்தில் எழுந்தருளியுள்ள குருசுக்ர ஆஞ்சநேய மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். 15 படிகளுக்கு மேல் மூன்று படிகள் ஏறிச் சென்றால் கிடைப்பது இந்த ஆஞ்சநேய மூர்த்தியின் தரிசனம். அவ்வாறு மூன்று படிகளை ஏறிச் செல்லும்போது
ஸ்ரீராம் சிவராம் ஸ்ரீராம்
என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு ஏறிச் சென்று ஸ்ரீகுருசுக்ர ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும், ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்த பின்னர் கீழே இறங்கி வரும்போது
ஹரி ஓம் சிவ ஓம் ஹரி ஓம்
என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு மூன்று படிகளில் இறங்கி வர வேண்டும்.
மீண்டும் 15 படிகளில் கீழிறங்கி வரும்போது
சஜ்ஜீவ கமலமே சலித கமலம்
என்ற 15 அட்சர மந்திரத்தை ஓதிக் கொண்டே வர வேண்டும். இதனால் ஸ்ரீஉஜ்ஜீவநாத சிவலிங்க மூர்த்தியை தரிசனம் செய்ததால் கிடைத்த உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகளை நம் உடலும் மனமும் முழுமையாக கிரகிக்கும்.

உஜ்ஜீவ சக்தி படிகள்
உய்யக்கொண்டான் திருமலை

ஸ்ரீகுருசுக்ர ஆஞ்சநேய மூர்த்தி
உய்யக்கொண்டான் திருமலை

இந்த தரிசனத்திற்குப் பின்னர் கோயிலை வலமாக வந்து ஓங்கார பிரகாரத்தை வலம் வந்த பின்னர் கொடி மரத்திற்கு கீழே உள்ள குழந்தையானந்தா ஜீவ சமாதியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
குழந்தையானந்தா ஜீவ சமாதியில் இயற்றப்படும் வழிபாடுகள் சந்தான சக்திகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீஉஜ்ஜீவ நாதரை வழிபட்ட பக்தர்கள் பெற்ற உஜ்ஜீவ நாத பிரசாதம் வெகு காலம் சூட்சும சரீரத்தில் தங்கி பலனளிக்க உறுதுணையாக இருக்கிறது.
உய்யக்கொண்டான்மலையில் ஈசனை தரிசனம் செய்ய செல்லும் 15 படிகள் சுக்ர சக்தியுடனும், ஆஞ்சநேய மூர்த்திக்கு முன் உள்ள மூன்று படிகள் குரு சக்திகளுடனும் பொலிவதால் இந்த ஆஞ்சநேய மூர்த்தி குருசுக்ர ஆஞ்சநேய மூர்த்தி என்று சித்தர்களால் புகழப்படுகிறார். தினமும் கைலாயத்திற்கும் வைகுண்டத்திற்கும் சென்று அங்கிருந்து உஜ்ஜீவ சக்திகளைப் பெற்று இத்தலத்தில் நிரவி வருகிறார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.
1992ம் ஆண்டு சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் உய்யக்கொண்டான்மலை திருத்தலத்தில் உழவாரப் பணி நிறைவேற்றி உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகளை புனருத்தாரணம் செய்தார்கள் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும்.
சனிக் கிழமை சனி ஹோரையில் சிம்ம லக்ன முகூர்த்தத்தில் எட்டாம் அதிபதியான குரு லக்னத்தில் வீற்றிருக்க பத்தாம் இடமான ரிஷப ராசியில் சூரியன், சுக்ரன், புதன் எழுந்தருள பரணி நட்சத்திரத்தில் உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகளை நிரந்தரமாக உய்யக் கொண்டான் திருமலை தலத்தில் ஸ்தாபனம் செய்து அற்புத மகேசன் சேவையை நிறைவேற்றினார்கள் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்.
இத்தகைய உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகள் முதன் முதலில் பரிணமித்த தீர்த்தமே அண்டமி சிவகங்கை தீர்த்தமாகும். இத்தீர்த்தத்தில் பொலியும் ஜீவ சக்திகளை அண்டமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பதே இத்தீர்த்தத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ள பித்ரு படிக்கட்டுகளாகும். 

அகிலம் ஓங்கிய
அண்டமி படித்துறை

நமது மூதாதையர்களான பித்ரு மூர்த்திகள் பல நிலைகளில் பல லோகங்களில் சஞ்சாரம் செய்கின்றார்கள். அவர்களுள் விஷ்ணு அம்சம் பூண்டு அதி உன்னத நிலையில் இருக்கும் ஆதித்ய பித்ரு மூர்த்திகளே அண்டமி சிவகங்கை தீர்த்த்த்தில் பித்ருக்களாகவும் பித்ரு பத்னிகளாகவும் எழுந்தருளி உள்ளனர். அவர்களின் நாமங்களை போற்றும் திவ்ய துதிகளை இங்கு அளிக்கிறோம்.
பித்ரு தேவர்கள் நாமாவளிகள்
1. ஓம் க்ரீம் ஹர ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
2. ஓம் க்ரீம் கேசவ ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
3. ஓம் க்ரீம் பத்மநாப ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
4. ஓம் க்ரீம் வாமன ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
5. ஓம் க்ரீம் வேதகர்ப்ப ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
6. ஓம் க்ரீம் மதுசூதன ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
7, ஓம் க்ரீம் வாசுதேவ ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
8. ஓம் க்ரீம் வராஹ ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
9. ஓம் க்ரீம் புண்டரீகாக்ஷ ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
10. ஓம் க்ரீம் ஜனார்த்தன ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
11. ஓம் க்ரீம் கிருஷ்ண ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
12. ஓம் க்ரீம் ஸ்ரீதர ஆதித்ய பித்ரு மூர்த்தியே போற்றி
பித்ரு பத்னிகள் நாமாவளி
1. ஓம் ரீம் ஹர ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
2. ஓம் ரீம் கேசவ ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
3. ஓம் ரீம் பத்மநாப ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
4. ஓம் ரீம் வாமன ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
5. ஓம் ரீம் வேதகர்ப்ப ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
6. ஓம் ரீம் மதுசூதன ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
7. ஓம் ரீம் வாசுதேவ ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
8. ஓம் ரீம் வராஹ ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
9. ஓம் ரீம் புண்டரீகாக்ஷ ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
10. ஓம் ரீம் ஜனார்த்தன ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
11. ஓம் ரீம் கிருஷ்ண ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
12. ஓம் ரீம் ஸ்ரீதர ஆதித்ய பித்ரு மூர்த்திக்கு இனியாளே போற்றி
அண்டமி திருத்தல தீர்த்தத்தில் கிழக்கு பக்கம் அமைந்துள்ள இரண்டு படித்துறைகளில் வடக்கு திசையில் உள்ள படித்துறை பித்ரு தேவர்களுக்கு உரித்தானதாகும். தெற்கில் உள்ள படித்துறை பித்ரு பத்னிகளுக்கு உரித்தானதாகும்.
முதலில் பித்ரு தேவர்களுக்கு உரித்தான படித்துறையில் இறங்கி தீர்த்தத்தில் கால் படாமல் தீர்த்தத்தால் முகத்தை கழுவிக் கொண்டு தலையில் சிறிது தீர்த்தத்தை தெளித்துக் கொண்டு அதன் பின்னரே கால்களை தீர்த்தத்தில் வைத்து இறங்கி தீர்த்தத்தில் நீராடலாம். அதன் பின்னர் பித்ருதேவர்களுக்கு உரித்தான மந்திரங்களை ஓதி வணங்கி மேலே சென்று அதன் பின்னர் மேற்கூறிய முறையில் பித்ரு பத்னிகளுக்கு உரித்தான படித்துறையில் முகம் கழுவி தலையில் தீர்த்தம் தெளித்து அதன் பின்னரே பத்தினி படித்துறையிலும் நீராட வேண்டும். அதன் பின்னர் பத்னி தேவிகளுக்கு உரித்தான நாம மந்திரங்களை ஓதி அவர்களை வழிபடவும். இதுவே இந்த இரு பித்ரு படிக்கட்டுகளையும் வழிபடும் எளிய முறையாகும்.
இந்த வழிபாட்டிற்குப் பின் கன்னி மூலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅகமர்ஷண விநாயகரைத் துதித்து அதன் பின்னர் மூல மூர்த்தியான ஸ்ரீஅண்ணமலையாரைத் துதித்தால்தான் அண்டமி சிவகங்கை தீர்த்தத்தில் பொதிந்துள்ள உஜ்ஜீவ சக்திகளை பக்தர்கள் முழுமையாகப் பெற முடியும்.
அண்டமி தலத்திற்கான ஒரு சிறப்பு தர்ப்பண முறையையும் சித்தர்கள் அருளியுள்ளனர்.
இத்தர்ப்பணத்தை இத்தல பித்ரு படித்துறையில் அல்லது இத்தலத்தில் எந்த ஒரு பகுதியில் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.
24 அரச இலைகளை நுனிகள் உள்வட்டமாக அமையும்படி வைக்கவும். இதன் மேல் 12 செந்தாமரை மலர்களையும் 12 வெண் தாமரை மலர்களை ஒன்றையடுத்து ஒன்று இருக்குமாறு வட்டமாக வைத்து நடுவில் அமையும் காலியான வட்டத்தின் மேல் தர்ப்பை சட்டத்தை வைத்து தர்ப்பணம் இடுதலே அண்டமி தலத்திற்கான சிறப்பான தர்ப்பண வழிபாடாகும்.
இந்த தாமரை மலர்களில் பித்ரு தேவர்களும் பித்ரு பக்திகளும் ஆவாஹனம் பெற அண்டமிகுதீர்த்தம் என்ற தீர்த்த சக்திகளும், 24 அரச இலைகளில் பித்ரு படித்துறையில் உள்ள 24 படிகளில் பொதிந்துள்ள விஷ்ணு சக்திகளும் ஆவாஹனம் பெற இது கிடைத்தற்கரிய மிகச் சிறந்த பாக்கியமாக அமைகின்றது. பித்ருதேவர்களும் பித்ரு பத்னிகளும் மகிழ்ந்து நேரிடையாகவே தங்கள் தர்ப்பண சக்தியைப் பெறும் அதியற்புத தர்ப்பண முறை இதுவாகும்.

பௌர்ணமி படிக்கட்டு பூஜை

பௌர்ணமி தின ஆதித்ய படித்துறை பூஜை
பௌர்ணமி தினங்களில் இந்த ஆதித்ய படித்துறையில் நிறைவேற்றப்படும் பூஜைகள் நிலைத்த செல்வத்தையும் குருவருளையும் பெற்றுத் தரும் தெய்வீக வழிபாடாக அமைகிறது. பூரண சந்திரனின் அமுத சக்திகளையும் சஞ்சீவ சக்திகளையும் முழுமையாகப் பெறும் அமிர்த சக்தி வழிபாடு இது.
ஆதித்ய படித்துறைகளை நன்றாக நீர் விட்டு அலம்பி அதில் இரு பக்கங்களிலும் பச்சரிசி மாவால் கோலமிட்டு ஒவ்வொரு படியிலும் தாமே அரைத்த மஞ்சள் குங்குமத்தால் பொட்டிட்டு அலங்கரிக்க வேண்டும்.

ஒரு தாமரை அல்லது வாழை இலையில் கீழ்க் கண்ட பித்ரு பிரசாதங்களை கீழிருந்து மேலாக வைக்க வேண்டும்.

ஹரித்ராநதி மன்னார்குடி

1. வெல்லம் .. 100 கிராம்
2. துவரம்பருப்பு .. 100 கிராம்
3. புளி .. 100 கிராம்
4. பச்சரிசி .. கால் கிலோ
5. சர்க்கரை ... 300 கிராம்
6. ஆப்பிள் .. 3
7. பேரீச்சம்பழம் .. 3
8. முழுமுந்திரி .. 100 கிராம்
9. காய்ந்த திராட்சை .. 100 கிராம்
10. டைமண்ட் கல்கண்டு .. 100 கிராம்
11. மிளகு சீரகம் .. 100 கிராம்
12. ஏலக்காய் .. 10
இவ்வாறு படியின் இரண்டு பக்கங்களிலும் வைத்து ஒவ்வொரு இலையிலும் இரண்டு வாழைப்பழங்களையும் மூன்று வெற்றிலை இரண்டு கொட்டைப் பாக்கு அல்லது இலைப் பாக்கு வைக்கவும்.
இதே போல் பித்ரு பத்தினி படிகளிலும் இரண்டு பக்கமும் வைத்து மேற்கூறிய பித்ரு மூர்த்திகள், பித்ரு பத்னிகளின் நாமங்களை கூறி மணமுள்ள வாசனை மலர்களால் அர்ச்சித்து தூப தீப நைவேத்யம் படைத்து வழிபடுவதே பௌர்ணமி தினத்தில் ஆற்ற வேண்டிய சிறப்பான பித்ரு படிக்கட்டு வழிபாடாகும்.

மேற்கூறிய மூலிகை பொருட்கள் படிக்கட்டு பூஜைக்குத் தேவையான குறைந்த பட்ச பொருட்களின் பட்டியலாகும். விருப்பம் உள்ளவர்கள் இதில் மற்ற மூலிகை திரவியங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, காய்ந்த திராட்சையுடன் அத்திப் பழத்தை சேர்க்கலாம், பேயன்வாழைப் பழத்தை வட்டத் துண்டுகளாக நறுக்கி எல்லா இலைகளிலும் வைக்கலாம்.
இதனால் அனைத்து செல்வங்களும் வளங்களும் பெருகி அண்டமி திருத்தலம் மட்டுமல்லாது இந்த உலகம் முழுவதுமே அமைதியும் ஆனந்தமும் பெருகும் என்பது உண்மை. சுமார் நூறு வருடங்கள் முன்பு வரை மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இந்த அண்டமி படித்துறை பூஜை காலப் போக்கில் மறைந்து விட்டது.
அண்டமி படித்துறையை முன்னுதாரணமாக கொண்டுதான் மன்னார்குடி ஹரித்ரா நதி போன்ற பிரம்மாண்டமான படித்துறைகளிலும் படித்துறை பூஜைகள் நிகழ்ந்து வந்தன. சமுதாய அமைதியை நிலைப்படுத்தி இயற்கைச் சீற்றங்களையும் தணிக்கவல்லதே அண்டமி தலத்தில் நிறைவேற்றப்படும் பௌர்ணமி தின படிக்கட்டு பூஜையாகும்.
அண்டமி தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தை எம்பெருமானின் வாமதேவ முக சக்திகளால் வாமதேவ முனிவர் ஏற்றதால் சிவகங்கை தீர்த்தத்தில் எம்பெருமான் திருவதனத்தில் பொலியும் முக்கண் சக்திகளும் பரிணமித்துள்ளன. ஆனால் அந்த முக்கண் சக்திகள் சாதாரண மனிதர்களும் உணரும் வகையில் பரிணமிப்பதுதான் விந்தையிலும் விந்தையாகும்.
ஆம், இந்த சிவகங்கையில் உள்ள தீர்த்தம் மூன்று விதமான உஷ்ண சக்திகளுடன் திகழும். எப்படி நாகப்பட்டினம் சீயாத்தமங்கை திருத்தலத்தில் உள்ள தீர்த்தம் சூரிய சந்திர சக்திகளுடன் விளங்குகிறதோ அதுபோல அண்டமி திருத்தல சிவகங்கை தீர்த்தமும் மூன்று விதமான உஷ்ண சக்திகளுடன் பொலிவது இன்றும் நேரில் கண்டு அனுபவிக்கக் கூடிய ஒரு அதிசயமாகும்.
எந்த சீதோஷ்ண நிலையிலும் இந்த தீர்த்தத்தின் மேற்பரப்பு சாதாரண உஷ்ண நிலையிலும் நடுப்பகுதி மிதமான வெப்பத்துடனும் தரைப் பகுதி நல்ல குளிர்ச்சியுடனும் இருப்பதை இன்றும் ஸ்பரிசித்து உணரலாம் என்பது அண்டமி தீர்த்தத்தின் தனி சிறப்பாகும். அதனால் இந்த தீர்த்தத்தை முக்கண் சக்தி தீர்த்தம் என்றும் சூரிய சந்திர ஞான தீர்த்தம் என்றும் அழைப்பது வழக்கம்.
இதில் உள்ள சூரிய சக்தி பித்ரு தேவர்களின் ஆசியை அளிக்கும் சந்திர குளிர்ச்சி சக்தி பித்ரு பத்னிகளின் ஆசியை அளிக்கும். மிதமான சூடு என்ன அனுகிரகத்தை அளிக்கும்? கூர்மதி என்னும் ஞான சக்தியை அளிப்பதே அண்டமி சிவகங்கையின் மிதமான சூட்டில் பொலியும் தீர்த்த சக்தியாகும்.

சுகமுனி அளிக்கும்
கூர்மதி ஞானம்

திருஅண்ணாமலையில் ஏக முக தரிசனப் பகுதியை அடுத்து வருவதே சுகமுனி தீர்த்தம் என்ற மூலிகை சக்தி நிறைந்த தீர்த்தமாகும். மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமாக இருப்பதால் இதை சித்தர்கள் மறைபொருளாய் வைத்துள்ளனர். ஆனாலும் இதன் பலன்கள் பலரையும் சென்றடையும் பொருட்டு இந்த தீர்த்த சக்திகளை பல திருத்தல தீர்த்தங்களுடன் இணைத்து வைத்துள்ளார் வியாசரின் மைந்தரான சுகமுனி.  கூர்மதி என்னும் ஞான சக்தியை அனுகிரகமாக அளிக்கவல்லவரே கிளியின் கூரிய மூக்குடன் திகழும் உத்தம மகரிஷி சுகமுனி.

கூரூர் துர்கை

கூர்மதி சக்திகள் நிறைந்த கூரூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய துர்கையின் இடது கரத்தில் கிளி ரூபத்தில் திகழும் சுகமுனியை இன்றும் தரிசனம் செய்து கூர்மதி சக்திகளைப் பெறலாம். கும்பகோணம் நன்னிலம் சாலையில் உள்ள இத்தல இறைவன் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர். மாம்பழம் கூர்மதி என்னும் சக்தியையும் செல்வ வளத்தையும் அளிப்பதாகும். எனவே கூரூர், மாந்துறை திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆம்ரவனேஸ்வர மூர்த்திகள் செல்வ வளத்தையும் கூர்மதியையும் ஒருங்கே அருளும் அனுகிரக மூர்த்திகளாய்த் திகழ்கின்றனர்.

நமது பூமி தோன்றுவற்கு முன் ஜலந்தராசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவனுடைய மனைவி என்று மாற்றானை நினைக்கிறாளோ அன்றுதான் அவனுக்கு மரணம் ஏற்படும் என்ற வரத்தை பிரம்மாவிடமிருந்து பெற்றிருந்தான். ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தை உத்தம பதிவிரதை. பிருந்தை கனவிலும் மற்ற ஆண்களை  நினைக்க மாட்டாள் என்ற அகம்பாவத்தில் திளைத்த ஜலந்தராசுரன் தேவர்களுக்கும் நல்லவர்களுக்கும் பல துன்பங்களையும் அநீதிகளையும் இழைத்து வந்தான்.
இவ்வாறு பல துன்பங்களை அனுபவித்து வந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடவே எம்பெருமானும் தேவர்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று ஜலந்தாரசுரனை அழிக்க எண்ணினார். அதனால் எம்பெருமான் சிருஷ்டித்த ஆயுதமே சக்கரமாகும்.

ஸ்ரீஅகமர்ஷண விநாயகர்

அண்டமி திருத்தலத்தில் தற்போது ஸ்ரீஅகமர்ஷண விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் எம்பெருமானே தன்னுடைய திருக்கரங்களால் தரையில் ஒரு வட்டத்தை வரைந்தார். அந்த வட்டத்தை அகழ்ந்தெடுக்க அதுவே சக்கராயுதமாக மாறி ஜலந்தராசுரனின் கழுத்தை அறுத்து அவனை சம்ஹாரம் செய்தது.
இவ்வாறு இந்த பூமியில் முதன் முதலில் வட்டம் என்ற வடிவம் தோன்றிய இடமே அண்டமி திருத்தலமாகும். ஜலந்தராசுரனின் அசுர சக்திகள் மாய்ந்ததால் பூமி தேவர்களுக்கு உகந்த திருத்தலமாக மாற அங்கு கன்னி மூலையில் ஸ்ரீஅகமர்ஷண விநாயகர் எழுந்தருளினார்.
இறைவனின் ஆதி சக்தியான உஜ்ஜீவ சக்தியின் ஒலி வடிவமே பிரணவமாகும். அந்த பிரணவம் சமட்டி பிரணவம் வியட்டி பிரணவம் என்ற இரு இயக்கங்களாக இந்த பிரபஞ்சத்தை வலம் வந்தபோது எம்பெருமானும் பராசக்தியும் அந்த இரு பிரணவங்களை ஒன்றாக இணைத்து பிள்ளையார் சுழி என்ற ஆதி இயந்திரத்தை தோற்றுவித்தனர்.
அந்த ஆதி இயந்திரத்தின் தெய்வீக மூர்த்தி வடிவமாகத் தோன்றியவரே அண்டமி திருத்தலத்தில் ஸ்ரீஅகமர்ஷண விநாயகராக எழுந்தருளினார். இவரே விநாயக மூர்த்தியின் ஆதிமூல வடிவம். இந்த மூர்த்தி வடிவிலிருந்தே மற்ற விநாயக மூர்த்திகள் தோன்றினர் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.
எந்த காரியமாக இருந்தாலும் ஸ்ரீஅகமர்ஷண விநாயகரையும் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷியையும் வணங்கி ஆரம்பித்தால் அது நல்லவிதமாக முடியும் என்ற காரிய சித்தி வழிபாடு முதன் முதலில் தோன்றியதும் அண்டமி திருத்தலத்தில்தான். ஸ்ரீஅகமர்ஷண விநாயகரின் தொப்புளில் எழுந்தருளி உள்ள உத்தம மகரிஷியே ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி.

ஸ்ரீஅகமர்ஷண விநாயகர்
அண்டமி

முதன் முதலில் எம்பெருமான் தன் திருக்கரங்களால் ஸ்பரிசித்த அந்த மண் பூமியை இன்றும் நாம் தரிசனம் செய்யும் வண்ணம் எழுந்தருளிய மூர்த்தியே ஸ்ரீஅகமர்ஷண விநாயகர் ஆவார். எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவது என்ற நிலைக்கு பூலோக மனிதர்கள் இறங்கி விட்டதால் எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் தன் திருக்கரங்களால் தொட்டு சக்கரத்தை உருவாக்கிய அந்த திருமண் இன்றும் புற்று வடிவில் ஸ்ரீஅகமர்ஷண விநாயகர் சன்னதியை அலங்கரிக்கின்றது.
இந்த புற்று மண்ணின் தரிசனமே சாட்சாத் சிவபெருமானின் தரிசனத்திற்கு இணையானது என்றால் அண்டமியை விட சக்தி வாய்ந்த ஒரு தெய்வீக திருத்தலத்தை வேறெங்காவது காண முடியுமா ?
இந்த புற்று மண்ணின் தரிசனமே எத்தனையோ நோய்களை தீர்க்கும் நோய் நிவாரண சக்திகளைக் கொண்டது. ஒரு நொடி நேர புற்று தரிசனமே ஆயிரக் கணக்கான பிறவிகளை மாய்க்கவல்லது.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமோ அற்புதமே அண்டமி திருத்தல ஸ்ரீஅகமர்ஷண விநாயக தரிசனம்.
எம்பெருமானின் ஸ்பரிசம் பட்ட பிருத்துவி சக்திகள் நிறைந்த திருமண் என்பதால் பூலோக ஜீவன்களை படைக்கும்போது பிரம்மா முதன் முதலில் இந்த அண்டமி திருமண்ணை எடுத்து அதில் சிவகங்கை தீர்த்தத்தை கலந்து குழைத்துத்தான் மனிதர்கள், விலங்குகள், பாம்பு, பல்லிகள் போன்ற ஜீவன்களின் உருவங்களை சிருஷ்டித்தார்.
அவரவர் தலை எழுத்தை அவரவரே உணர்ந்து கொள்ளும் அனுகிரகத்தை அளிப்பதே அண்டமி திருத்தலத்தில் இயற்றும் வழிபாடு என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ?
சிவபெருமான் சக்கர ஆயுதத்தை உருவாக்கிய தலம் என்பதால் சக்கரத்தை அடிப்படையாக உடைய அனைத்து தொழில் அதிபர்களும் பணியாளர்களும் வழிபட வேண்டிய தலமாக அண்டமி பொலிகிறது. சக்கரம் பயன்படுத்தாத தொழில், துறை, வாகனம், எந்திரம் என்று ஏதாவது உண்டா ? From pin to plane என்பதாக குண்டூசி முதல் ஆகாயவிமானம் வரை அனைத்து வாகனங்களுக்கும் உபகரணங்களுக்கும், அனைத்து இயக்கங்களுக்கும்  சக்கரமும் வட்ட சுழற்சியும் அடிப்படையாக அமைந்துள்ளதால் பூமியில் தோன்றிய மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுமே வழிபட வேண்டிய திருத்தலம் அண்டமி ஆகும்.
அண்டமி திருத்தலம் பற்றி குறிப்பிடும்போது கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனிடம், “நைனா, காக்கா வடை தின்னா கூட அதுக்கும் அண்டமி ஈசனோட அருள் வேணும். ஏன்னா பாரு வடை வட்டம் ... அது சுடுற சட்டி, வடையை எடுக்கற கரண்டி கூட வட்டம்தானே,” என்று விளையாட்டாக கூறினாராம்.

சதுரம் சாதிக்கும்

உஜ்ஜீவ நாத ஜீவ சக்திகள் என்று குறிப்பிட்டோம் அல்லவா ? இந்த ஜீவ சக்திகளை திசைக்குள் அடக்க முடியாது. வடிவங்கள் கடந்து நிற்பது. எனவே பூலோக மக்களுக்குப் பயன்படும் வகையில் திருவுள்ளம் கொண்ட எம்பெருமான் இந்த உஜ்ஜீவ சக்திகளை வட்ட வடிவில் சுழற்ற அதிலிருந்து குஞ்சரா முக்கோணம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததே நாகரமாகும்.
நாகரம் என்பது நாற்கோண சக்தி. சதுரம் என்பது அதன் வடிவம். இந்த நாகர வடிவத்தையே மயனுக்கு அனுகிரகமாக எம்பெருமான் அளித்தார். அன்று முதல் சதுரமே எல்லா கட்டிடங்களும் அடிப்படையாக அமைந்தது. இரண்டு சதுரங்களை இணைப்பதால் ஏற்படும் செவ்வகமும் சதுர வடிவமாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆனால், இறைசக்தியை வெறும் நான்கு திசைகளில் மட்டுமே நிலைநாட்ட முடியாது என்பதால் இந்த நான்கு அடிப்படை திசைகளுடன் நான்கு கோண திசைகளை அமைத்து எட்டு திசைகளாகவும், அத்துடன் ஆகாயம் பூமி எனற திசைகளையும் இணைத்து பத்து திசைகளாகவும் எம்பெருமான் அண்டமி தலத்தில்தான் முதன் முதலில் சிருஷ்டித்தார்.
இவ்வாறு பத்து திசை சக்திகளுடன் பொலியும் அண்டமி சக்திகளையே அண்டமிகு தீர்த்தம் என்று குறிக்கின்றோம். மாடக் கோயில்கள், மலைத் தலங்கள், பாதாள மூர்த்திகள், தீர்த்த சக்திகள் இத்தகைய அண்டமிகு தீர்த்த சக்திகளுடன் அதாவது பத்து திசை சக்திகளுடன் பொலிகின்றன. இந்த பத்து திசைகளுக்கும் ஆதாரம் அண்டமிகு தீர்த்தம் என்னும் அண்டமி திருத்தலமே.
இவ்வாறு உஜ்ஜீவ நாத சக்திகளை நாகரத்தில் சுழல விட்டபோது அதில் தோன்றியவையே 24 உஜ்ஜீவ நாகர புள்ளிகள். இந்த சுழற்சிக்கு அடிப்படையாக அமைவதும் எம்பெருமான் அண்டமி தலத்தில் நிர்மாணித்த சக்கர சுழற்சியே ஆகும். முக்கோண உஜ்ஜீவ சக்திகளை குஞ்சரா முக்கோணத்தில் அமைத்து சுழற்றியதால் அதன் நடுவே அமைந்த சதுரம் குசா என்னும் நற்பண்பு சக்திகளுடன் பொலிகின்றது. இதுவே பூபுரம் என ஸ்ரீசக்கரத்தில் மையம் கொண்டுள்ளது.

தாமரையைப் போற்றினார்
தரணி போற்றினாரே

எந்த அளவு இந்த அண்டமி திருத்தலத்தில் உள்ள உஜ்ஜீவ சக்திகளை பராமரிக்கின்றோமோ அந்த அளவிற்கு அண்டமி திருத்தலத்தில் மட்டும் அல்லாது இந்த உலகம் முழுவதுமே அமைதியும் ஆனந்தமும் பெருகும். இத்தல தீர்த்தத்தில் செழிக்கும் தாமரை மலர்களே எந்த அளவிற்கு நாம் இந்த தீர்த்தத்தை தெய்வீகமாக வழிபடுகிறோம் என்பதை குறிக்கும் அளவு கோலாக அமைகின்றன.
அண்டமி திருத்தல தாமரை மிக மிகத் தூய்மையானது. ஒவ்வொரு தாமரையும் ஒரு சூரியனுக்கு இணையான தெய்வீக சக்தியுடன் பொலிவது. இத்தல தாமரைகளை வெறுமனே தரிசனம் செய்து வந்தால் கூட போதும், கண் நோய்கள் கனவிலும் அண்டாது.
எனவே தாமரை செழிப்பே அண்டமி செழிப்பு, அண்டமி செழிப்பே தெய்வீக செழிப்பு, இறைவனின் செழிப்பு, தெய்வீக செழிப்பே நிலையான செழிப்பு, அதுவே உண்மையான செழிப்பும் கூட.
மனிதனாய் வந்த மாதவன்
இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதி தலம் என்பதால் இங்கு எழுந்தருளி உள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி கல்லால மரமின்றி சனகாதி முனிவர்கள் இன்றி இரண்டு கரங்களுடனே அருளாட்சி செய்கிறார். வேறெங்கும் காண முடியாத எளிமை கோலம்.

ஸ்ரீதீர்த்தமாதவ தட்சிணாமூர்த்தி
அண்டமி திருத்தலம்

நேருக்கு நேர் பேசக் கூடிய பிரத்யட்ச மூர்த்தி. சுந்தர மூர்த்தி நாயனார் மிகவும் நெருங்கி நேசித்த மூர்த்தியே இவர். தான் இறைவனிடம் கொண்ட நெருக்கத்தைப் பற்றி பாடும்போதெல்லாம் இந்த மூர்த்தியின் உருவமே அவர் கண் புருவமத்தியில் தோன்றுமாம்.
“தீர்த்தமே தில்லையம்பலம் ...” என்று ஆரம்பிக்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த இத்தலப் பதிகம் அண்டமி திருத்தல தீர்த்த நீர் சிவகங்கை தீர்த்தத்தின் ஐந்தாவது படியை அடையும்போது உரியவர்களால் பெறப்படும் என்று அகத்திய நாடி உரைக்கின்றது. பொறுத்தார் பூமி ஆள்வார்.
ஸ்வர்ண வில்வம்
அண்டமி தலத்தின் தலமரம் கல்லால மரம். சாட்சாத் எம்பெருமான் திருஅண்ணாமலை மலை உச்சியில் மனிதர்களைப் போல பூத உடலில் எழுந்தருளி இருப்பது கல்லால மரத்தின் கீழ்தான். இவ்வாறு திருஅண்ணாமலை அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் ஆலயத்திற்கு முன்பே தோன்றியதால் அண்டமி திருத்தலத்திற்கு கல்லால மரமே தலவிருட்சமாக அமைகின்றது.
ஆனால், கல்லால மரத்தின் தரிசனமே சாட்சாத் சிவபெருமானை மனித உருவில் காட்ட வேண்டும் என்ற இறை நியதி இருப்பதால் அண்டமி திருத்தல தரிசன பலன் அனைவரையும் சென்றடைய அண்டமிக்கு வடக்கில் உள்ள திருஅண்ணாமலையின் குபேர திக்கு சக்திகளை கிரகிப்பதாக ஸ்வர்ண வில்வம் என்ற அபூர்வ வில்வத்தை கலியுக நியதியாக அண்டமி திருத்தலத்திற்கு தலவிருட்சமாக அருளியுள்ளார் ஸ்ரீஅகத்திய பெருமான்.

அகத்திய மரபில் வந்தவர்களே இந்த ஸ்வர்ண வில்வத்தை இனம் கண்டு கொள்ள முடியும்.  வில்வ மரங்களில் ஆயிரத்தில் ஒரு மரம் விபூதி சக்திகளுடனும், லட்ச மரங்களில் ஒன்று தீர்த்த சக்திகளுடனும், கோடி மரங்களில் ஒரு மரம் ஸ்வர்ண சக்திகளுடனும் பொலியும் என்பது அகஸ்திய நாடி. எனவே அகத்திய குலத் தோன்றல்களை நாடி இத்தகைய ஸ்வர்ண வில்வ மரங்களை தேடிக் கண்டு பிடித்து அண்டமி தலத்தில் எழுந்தருளச் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இதனால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
இந்த ஸ்வர்ண வில்வத்தின் ஒரு இலையை அண்டமி ஈசனுக்கு அர்ப்பணித்தால் 12 கிராம் எடையுள்ள ஒரு அபராஞ்சித தங்க நாணயத்தால் அர்ச்சித்த பலன் கிட்டும்.

ஞானப் பாலின்
நிறம் என்ன?

அண்டமி திருத்தல அம்பிகை ஸ்ரீஉண்ணாமுலை அம்மன். ஆதிபராசக்தியே இத்தலத்தில் உண்ணாமுலை அம்மனாக எழுந்தருளி உள்ளாள். அன்னை பார்வதி தேவி தன் அன்புக் குழந்தைகளுக்கான கணபதிக்கும், முருகப் பெருமானுக்குமே அளிக்காத முலைப் பாலை இறையடியார்களுக்கு ஞானப் பாலாக அளிப்பதால் இத்தல அம்பிகை ஞானாம்பிகை என சித்தர்களால் புகழப்படுகிறாள்.
ஞானப் பால் என்று உண்மையிலேயே உண்டா, அதைப் பார்க்க முடியுமா என்றெல்லாம் பலருக்கும் ஐயம் ஏற்படுவது இயற்கையே. ஞானப் பால் என்ற ஒன்று நிச்சயமாக உண்டு, அதைப் பார்த்தவர்கள், பருகியவர்களும் ஏராளமாக உண்டு என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் உண்மையாகும்.
ஞானப் பால் என்று ஒன்று இருந்தால் அதன் நிறம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது  அல்லவா ? ஞானப் பாலின் நிறம் சிவப்பு என்பதே சித்தர்கள் கூறும் பதில். புராண வரலாற்றில் இந்த ஞானப் பாலை லால்குடி திருத்தல தட்சிணா மூர்த்தியும் உண்ணாமுலை அம்மனும் பலருக்கும் அளித்துள்ளார்கள்.
ஸ்ரீலால்குடி வீணாதட்சிணா மூர்த்தி கணபதி மூர்த்திக்கு அளித்த ஞானப் பால் சிவப்பு நிறத்தில் இருந்ததால் திருத்தவத்துறை என்ற சிவத்தலம் சிவப்பு நிறத்தில் உள்ள ஞானப் பாலைப் பருகு என்ற அர்த்தம் தொணிப்பதாக லால்குடி என்று ஆயிற்று.

குஞ்சரா குரங்குகள் திருப்பதி

அதே போல உண்ணமாமுலை அம்மன் அளிக்கும் ஞானப் பால் கல்யாண முருங்கைப் பூவின் செந்நிறத்தை உடையதாக இருக்கும் என்று சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்டமி திருத்தலத்தின் தல விருட்சம் ஸ்வர்ண வில்வம் என்று தெரிவித்தோம் அல்லவா ? இந்த ஸ்வர்ண வில்வம் தற்போது அமையாததால் அது செழிக்கும் வரை இத்தலத்தில் உள்ள கல்யாண முருங்கை மரங்களை மஞ்சள் குங்குமம் பூசி வழிபட்டு வருவதால் ஞானப் பால் திரட்சியை உணரும் பக்குவத்தை சாதாரண மனிதர்களும் அடையலாம்.
குலு மணாலி போன்ற இமாலயப் பகுதிகளில் உள்ள பசுக்கள் இன்றும் செந்நிற பாலை அளிக்கின்றன என்பதை ஒரு சிலரே அறிவர். இதுவும் ஞானப் பாலின் ஒரு வகையாகும். நுண்ணறிவையும் ஞானத்தையும் அளிக்கக் கூடியதே இவ்விடங்களில் பெறும் பசும்பாலாகும். இவ்விடங்களுக்கு திருத்தல யாத்திரையாக செல்லும் இறையடியார்கள் முடிந்த போதெல்லாம் அங்கு கிடைக்கும் பசும் பாலையும் ஆட்டுப் பாலையும் பருகி வருவதால் தெய்வீகப் பாதையில் விரைவில் முன்னேறும் வாய்ப்பு பெருகும்.
கம்பளி ஆடைகள் தயாரிக்கும் சில கம்பெனிகள் இவ்வாறு இமாலயப் பகுதிகளில் வளரும் ஆடுகளின் ரோமத்தைக் கொண்டு ஆடைகளையும், கம்பளிப் போர்வைகளையும் தயார் செய்கிறார்கள். இத்தகைய கம்பெனிகளை நன்கு விசாரித்து அறிந்து கொண்டு அவர்களிடம் மப்ளர், போர்வை, பாண்ட், சட்டை போன்ற கம்பளி ஆடைகளை வாங்கி குளிரால் வாடும் ஏழைகளுக்கும் முதியவர்களுக்கும் தானம் அளித்தலால் முதிய வயதில் பிறர் ஆதரவில் வாழும், வாடும் நிலை ஏற்படாது. பாயில் கிடந்து நோயில் மருகும் வேதனைகளைத் தவிர்க்கலாம்.
இமாலயப் பகுதிகளில் பால் தானம் மிகவும் சிறப்புடையதாகும். ஞானத்தை தானம் அளிக்கும் அளவிற்கு நாம் முன்னேறவில்லை என்றாலும் ஞானப் பாலை தானம் அளிக்கும் பாக்யத்தையாவது பயன்படுத்திக் கொள்ளலாமே.
ஞானப் பால் அளிக்கும் ஞானத்தைப் பெறவும் பித்ரு தேவர்களின் அனுகிரகத்தைப் பெறவும் அண்டமி தலத்தில் நிறைவேற்றும் பித்ரு ஹோமம் உதவிபுரிகின்றது. பித்ரு ஹோமத்திற்கு உரிய சிறப்பான தலமே அண்டமி ஆகும். பித்ரு தர்ப்பணங்கள் அளிப்பதற்கு முன் இத்தகைய ஹோமத்தை நிறைவேற்றுதல் சிறப்பாகும். அவரவர் பித்ருக்கள் இறந்த திதி நாட்களிலும், அவர்கள் பிறந்த நாள், நட்சத்திர நாட்களிலும் அண்டமி சிவகங்கை தீர்த்தக் கரையிலோ, படித்துறைகளிலோ அல்லது திருத்தலத்தின் எப்பகுதியில் வேண்டுமானாலும் இந்த ஹோமத்தை நிறைவேற்றி பலன் பெறலாம்.
பித்ருக்களின் நேரடி வாரிசுகள் அல்லாதோரும் ஏனையோரும் இறந்த ஒருவரின் நல்வாழ்விற்காக பாடுபடும் எவரும் பித்ரு ஹோமத்தை நிறைவேற்றலாம்.

பித்ரு ஹோம வழிபாடு

பித்ரு ஹோம குண்டத்தை ஆறு செங்கற்கள் கொண்டு அமைக்கவும். முக்கோணமாக அமைந்த மூன்று கற்களின் மேல் குறுக்காக மேலும் மூன்று கற்களை முக்கோண வடிவில் அமைப்பதே எளிமையான பித்ரு ஹோம குண்ட அமைப்பாகும். சரவணபவ சக்கர வடிவில் இந்த குண்டம் அமையும். முதலில் அமைத்த முக்கோண நுனி அண்டமி சிவகங்கையை நோக்கி அமையுமாறு ஹோம குண்டத்தை அமைக்க வேண்டும்.
ஹோம கர்த்தா தென்கிழக்கு திசையில் அமர்ந்து கொண்டு சுத்தமான பசு நெய், அரசு, கல்யாண முருங்கை, நாயுருவி, ரோஜா இதழ், சுத்தம் செய்த நெருஞ்சி வேர், வில்வ மர சமித்துகளை ஆஹூதியாக அளிக்க வேண்டும்.
ஹோம நிறைவில் குறைந்தது ஆறு செவ்வாழை பழங்களை பசுவிற்கு அளிக்க வேண்டும். சாதி, மத, இன பேதமின்றி அனைவருமே இந்த பித்ரு ஹோம வழிபாட்டை நிறைவேற்றி நற்பலன் பெறலாம்.

ஸ்ரீமணவாள மயூரநாதன்
வாஸ்து மூர்த்தியின் அவதாரத்திற்கு முன் தோன்றிய தலம் என்பதால் அண்டமி திருத்தல முருகப் பெருமான் அபூர்வமாக நான்கு கைகளுடன் தரிசனம் அளிக்கின்றார். அ ண் ட மி என்ற நான்கு திசை வேத சக்திகளை தன் கையில் ஏந்தி வாஸ்து பகவானின் பொறுப்பை ஏற்று அருள்பாலிக்கும் முருகப் பெருமானே அண்டமி மயில்வாகன மூர்த்தி ஆவார்.

ஸ்ரீமணவாள மயூரநாதன்
அண்டமி

பொதுவாக மயில் வாகனங்கள் வலது பக்கம் நோக்கியோ இடது பக்கம் நோக்கியவாறோ இருப்பதுண்டு. அபூர்வமாக அண்டமி முருகப் பெருமானின் வாகனம் முருகப் பெருமானையே பார்த்தவாறு எழுந்தருளி உள்ளது.
இத்தகைய வாகன அமைப்பு குடும்ப ஒற்றுமையை வளர்ப்பதுடன் செய்நன்றி மறவாத குணத்தை அனுகிரகமாக அளிப்பதாகும். கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் துறையில் பணி புரியும் பலரும், அமர்ந்தே பணியாற்றும் வாகன ஓட்டுநர்களும் முதுகு, கழுத்து சம்பந்தமான பிரச்னைகளால் அவதியுறுகின்றனர். கடந்த கால வேதனையான பிரிவு, துரோகம் போன்ற பல காரணங்களால் தூக்கம் வராமல் அவதிப்படுவோரும் உண்டு. இத்தகையோர் இத்தல முருகப் பெருமானை வழிபட்டு செவ்வாய்க் கிழமைகளில் தேனபிஷேகம் நிறைவேற்றி வருவதால் கழுத்து, முதுகு சம்பந்தமான நோய்களின் வேதனையிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.
சிறப்பாக முதுகுத் தண்டு நோய்களுக்கு நிவாரணம் அளிப்பவரே அண்டமி திருத்தல முருகப்பெருமான் ஆவார். நான்கு கரங்களிலும் நான்குவேத சக்திகளுடன் பொலிவதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெற இத்தல முருக வழிபாடு பெரிதும் துணை புரியும்.
கழுத்தைப் பற்றியவாறு இருக்கும் ஸ்வெட்டர், டீ சர்ட், பனியன்கள், ஸ்கார்ப் போன்றவற்றை தானமளித்தல் சிறப்பாகும்.

ஷன்னாவதி நந்தி மூர்த்தி
அண்டமி தலத்தில் திரு அண்ணாமலையார் எழுந்தருள திருவுள்ளம் கொண்டபோது ஈசனுக்கு நந்தியாக யார் அமர்வது என்ற சர்ச்சை சித்தர்களிடையே ஏற்பட்டது. ஒவ்வொரு தலத்திற்கான திசை சக்திகளையும், கோண சக்திகளையும், பரிவார தேவதைகளின் பட்டியலையும் தயாரிப்பவர்கள் சித்தர்கள் ஆதலால் இது பற்றிய விவாதம் சித்தர்களிடையே தோன்றியபோது அண்டமி திருத்தல நந்தியாக அமர அப்போது தகுதி வாய்ந்த எவரும் அமையவில்லை.
உலகில் முதன்முதலில் தோன்றிய தலம் என்பதால் வேறு எந்த தலத்திலும் தவங்கள், இறைசேவை புரிந்து இறைவனின் வாகனமாக அமைய விருப்பம் கொண்டவர்கள் எவரும் தோன்றவில்லை.
அந்நிலையில் ஸ்ரீஅகத்தியர் தனது அன்பு தனயனான ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகரை அழைத்து தகுதி வாய்ந்த ஒரு நந்தி மூர்த்தி அமையும் வரை அண்டமி திருத்தல நந்தி மூர்த்தியாக பணிபுரியும்படி கேட்டுக் கொண்டார்.
அண்டமி புனிதத்திலும் புனிதமான தலமாக விளங்கியதால் வேறு எந்த லோகத்திலும் அண்டமியில் உள்ள தாமரை மலர்களை தரிசனம் செய்யும் அளவிற்கு கூட புனிதம் வாய்ந்த தேவர்களோ கந்தர்வர்களோ தோன்றவில்லை. அப்படிப்பட்ட அண்டமி திருத்தலத்தில் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களை சர்வ சாதாரணமாக நாம் தரிசனம் செய்கின்றோம் என்றால் நமது மூதாதையர்கள் எந்த அளவிற்கு புண்ணிய காரியங்களை நிறைவேற்றி நமக்கு ஞான சக்தியை அளித்துள்ளார்கள் என்று புரிந்து கொண்டால் நாம் என்றென்றும் நமது மூதையர்களுக்கு நன்றி உடையவர்களாகத் திகழ்வோம்.

ஜீவ துத்தி உஜ்ஜீவ துத்தி

ஜீவ சக்திகள் செறிந்த மூலிகைகளில் ஒன்றே துத்தியாகும். ஜீவ சக்திகள் மிகுந்த அண்டமி திருக்குளக் கரையிலும் உய்யக் கொண்டான் மலை பிரகாரத்திலும் பொலியும் இந்த துத்தி மலர் தரிசனத்தைப் பெறுவதற்கு மட்டுமே காமதேனு லோகத்தைச் சேர்ந்த கந்தர்வர்கள் திருஅண்ணாமலையில் ஓராண்டு காலம் கிரிவலம் வர வேண்டியுள்ளது. அப்படியானால் அண்டமி தல தாமரை மலர்களின் தரிசனம் எத்துணை அரிதானது, அபூர்வமானது, மகத்துவம் வாய்ந்தது ?
எனவே புனிதத்திலும் புனிதமான ஸ்ரீஸ்ரீஸ்ரீஇத்மாலக மகராஜ் அண்டமி தலத்தின் முதல் நந்தீஸ்வரராகப் பொறுப்பேற்றார். பல லட்சம் ஆண்டுகள் அண்டமி திருத்தலத்தில் உஜ்ஜீவ சக்திகளை நிறுவி அற்புத சேவைகள் புரிந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீஇத்மாலகரை எம்பெருமான் வேறு ஒரு பொறுப்பிற்கு மாற்றி விடவே கலியுக நியதியாக நைஷ்டிக பிரம்மசாரியான பீஷ்மாச்சாரியார் அண்டமி திருத்தலத்தின் நந்தி மூர்த்தியாக செங்கோல் ஓச்சினார்.
இத்தருணத்தில் கலியுலகில் பல உத்தம பக்தர்கள் தோன்றலாயினர். அண்டமி திருத்தலத்திலேயே விவசாய குடும்பத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்த ஒரு பக்தி செறிந்த தம்பதியருக்கு பகுதாயன் என்ற பக்தர் குழந்தையாகத் தோன்றினார்.
சிறு வயதிலேயே விளையாட்டு, பொழுதுபோக்கு என்ற அம்சங்களை சிறிதும் அறியாது சதாசர்வ காலமும் இறை சிந்தனையிலேயே ஈடுபட்டு வந்த சிறுவன் பகுதாயன் தன்னுடைய மூதாதையர்களுக்கு ப்ரீதியான ஷன்னாவதி தர்ப்பணத்தை முழு மனதுடன் நிறைவேற்றி வந்தான். அதனால் அந்த பிறவி முடிவுற்றபோது அவனுக்கு பித்ரு தேவர் நிலையை அளிக்க முன்வந்தார் எமபகவான். எத்தனையோ லட்சம் பிறவிகளில் அரும்பாடு பட்டு பெறும் பித்ரு மூர்த்தி பதவியை ஒரே பிறவியில் பெறும் தகுதியைப் பெற்றிருந்தான் பகுதாயன்.

ஸ்ரீபகுதாய நந்தீஸ்வரர்
அண்டமி

ஆனாலும் அந்த பித்ரு மூர்த்தி பொறுப்பைப் பெற விரும்பாமல் மீண்டும் மனிதப் பிறவியை அதுவும் அண்டமி திருத்தலத்திலேயே வேண்டிப் பெற்றான். அவ்வாறு மீண்டும் கிடைத்த மனிதப் பிறவியில் அண்டமி திருத்தலத்தில் ஷன்னாவதி தர்ப்பணத்தை மிகவும் சிரத்தையாக அனுஷ்டித்து வந்தான் பகுதாயன்.
இதனால் பிரம்மா விஷ்ணு போன்ற அற்புத நிலைகளுக்கும் உயர்ந்தான். பல கோடி ஆண்டுகளின் கடுந் தவத்தால் விளையக் கூடிய இத்தகைய அரிய பெரிய பதவிகளை எல்லாம் மனித உடல் கொண்டே ஒரு சாதாரண மனிதனாக ஆற்றிய தர்ப்பணத்தின் மகிமையாலேயே பெற்று விட்டான் பகுதாயன்.
இவ்வாறு 9600 மனிதப் பிறவிகள் எடுத்து அனைத்து பிறவிகளிலும் ஷன்னாவதி தர்ப்பணத்தை முறையாக நிறைவேற்றியதால் அண்டமி ஈசன் மகிழ்ந்து பகுதாயனுக்கு ஈஸ்வர பட்டம் அளித்து தன்னுடைய வாகனமாக ஸ்ரீஷன்னாவதி நந்தீஸ்வர மூர்த்தி என்ற பதவியை அளித்து ஏற்றுக் கொண்டார் !
இந்த பூலோகத்தில் ஈஸ்வர பட்டம் பெற்ற முதல் நந்தீஸ்வர மூர்த்தி இவரே. அதுவும் ஒரு மனிதன் முதன் முதலாக ஈஸ்வர பட்டம் பெற்ற வரலாறும் இதுவே.
ஒரு சாதாரண மனிதன் பெற்ற மிகப் பெரிய கௌவரம், பதவி இது. மக்களுக்கு அளப்பரிய ஊக்கத்தை அளிப்பதே பகுதாயன் வரலாறு.
பகுதாயன் என்றால் நல்லது தீயதைப் பிரித்து, நல்லதைப் பெருக்கி அளிப்பவன் என்று பொருள். அதாவது நீங்கள் பகுதாயன் நந்தீஸ்வர மூர்த்தியை வணங்கினால் உங்களுடைய நல்ல குணங்கள் தீய குணங்கள், செயல்கள் அனைத்தையும் பிரித்து உங்களிடம் உள்ள தீய குணங்களையும், செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டு உங்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பெருக்கி அதை மீண்டும் உங்களுக்கு இறைப் பிரசாதமாக அளிக்கும் கருணா மூர்த்தியே பகுதாய நந்தீஸ்வர மூர்த்தி.

மண்ணளந்தான்
அளித்த மாவரம்

ஜலந்தராசுரனை அழிக்க சிவபெருமான் தரையில் ஒரு வட்டம் வரைந்து அதை அகழ்ந்தெடுத்து சக்கராயுதத்தை சிருஷ்டித்தார் என்று கூறினோம் அல்லவா ? ஜலந்தராசுரனின் சம்ஹாரத்திற்குப் பிறகு மகாவிஷ்ணு அந்த சக்கரத்தை வேண்டினார். அதற்காக தினமும் ஆயிரம் மலர்களை ஈசனுக்கு அர்ப்பணித்து பிரார்த்தித்து வந்தார். ஒரு முறை ஆயிரம் மலர்களில் ஒரு தாமரை குறைந்தபோது தன்னுடைய கண்ணை அகழ்ந்தெடுத்து ஈசனுக்கு அர்ப்பணிக்கவே ஈசனும் மகிழ்ந்து சக்கராயுதத்தை பெருமாளுக்கு அளித்து கருணை புரிந்தார்.
இந்த புராண வைபவம் அனைவரும் அறிந்ததே. ஈசன் அளித்த சக்கராயுதத்தால் பெருமாள் பல அசுர சக்திகளை மாய்த்து பல உத்தம பக்தர்களுக்கு எத்தனையோ அனுகிரகங்களையும் அந்த சக்கராயுதம் மூலமாக அளித்து வந்தார். ஆம், வெறுமனே அழிப்பதற்காக மட்டும்  தோன்றியது கிடையாது ஈசன் அளித்த சக்கரம். அந்த சக்கரத்தை தரிசனம் செய்வதால் கிட்டும் பலன்களே எத்தனையோ பிறவிகளில் நமக்கு வரும் ஆபத்துக்களை களையும் சக்தி பெற்றது.

சக்கராயுத பீடம் பெரும்புலியூர்

ஒரு முறை துர்வாச முனிவரை துரத்தி வந்த சக்கராயுதத்திலிருந்து தப்பிக்க அவர் பெரும்புலியூர் ஈசனை சரணடைந்தபோது அச்சக்கரம் துர்வாசரை அணுக முடியாமல் பெரும்புலியூர் சிவத்தலத்திலேயே எம்பெருமானுக்கு பீடமாக நிலைகொண்டது. புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இத்தல ஈசனை வணங்கி ஈசனுக்கு பீடமாக நிலைகொண்ட சக்கராயுதத்தை வணங்கி அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
இவ்வாறு மகாவிஷ்ணு பல நற்காரியங்களை இயற்றினாலும் இழந்த அவருடைய வலது கண்ணை மீண்டும் பெற முடியவில்லை. இதற்காக அவர் கண்வ மகரிஷியை அணுகி ஆலோசனை கேட்டார். கண் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்க வல்லவரே ஸ்ரீகண்வ மகரிஷி. கண்வ மகரிஷி பெருமாள் கூறிய விஷயங்களைக் கேட்டு, “பகவானே, ஒருவர் அறியாமல் தவறு செய்து அதனால் அவர் தன்னுடைய கண் பார்வையை இழந்திருந்தால் அதை மீண்டும் பெற அடியேன் உதவி செய்வேன். ஆனால், தாங்களோ ஒரு சக்தியைப் பெறுவதற்காக தங்கள் வலது கண்ணை இழந்தீர்கள். அவ்வாறு பெற்ற சக்தியால் நீங்கள் அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது உண்மை என்றாலும் அறிந்தே செய்த தவறுகளுக்கு அடியேனால் எந்த பிராயசித்தமும் அளிக்க முடியாது.” 
“இருந்தாலும் அடியேனுக்கு தெரிந்த உபாயத்தை உங்களுக்கு கூறுகிறேன். அந்த சக்கராயுதம் தோன்றிய இடத்திற்கு சென்று நீங்கள் பிரார்த்தனை செய்தால் இழந்த கண் சக்தியைப் பெறலாம்,” என்று பதிலளித்தார்.
பெருமாளும் அவ்வாறே அண்டமி திருத்தலத்தை அடைந்தார். இதற்குள் யுகங்கள் பல கடந்து விட்டன. சிவபெருமான் சக்கரத்தை அகழ்ந்து எடுத்த இடத்தில் தற்போது ஸ்ரீஅகமர்ஷண விநாகர் எழுந்தருளிவிட்டார். பெருமாள் ஸ்ரீஅகமர்ஷண விநாயகரை வணங்கி தன்னுடைய வலது கண்ணைப் பெறும் உபாயத்தைக் கேட்டார்.
ஸ்ரீவிநாயகப் பெருமான், “மகாவிஷ்ணுவே, உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள். உங்களுடைய பணிவைக் கண்டு பேரானந்தம் அடைகிறேன்,” என்று கூறி ஒரு குறும்புப் பார்வையை வீசினார். மாயக் கண்ணன் அல்லவா ? ஒன்றும் அறியாதவர் போல பெருமாளும், “கணபதியே, தங்கள் குறும்பு பார்வையின் பொருளையும் நீங்களே விளக்க வேண்டும்,“ என்று கேட்டுக் கொள்ளவே பிள்ளையார் தொடர்ந்தார்.
“எம்பெருமான் அளித்த சக்கராயுதம் பெற கோடானு கோடி இறை மூர்த்திகளில் தாங்கள் ஒருவரே தகுதி வாய்ந்தவர் என்பதால் ஈசன் அதை தங்களிடம் அளித்தார். சக்கராயுதத்தின் மகிமையை பூரணமாக உணர்ந்த உத்தமர் நீங்கள். உங்களுக்கு கண் பார்வை வேண்டும் என்று அந்த சக்கராயுதத்திடம் கேட்டிருந்தால் அது உங்களுக்கு ஒரு நொடியில் இழந்த நேத்ர சக்திகளை அளித்திருக்கும். இல்லாவிட்டாலும் அந்த சக்கராயுதத்தை உங்கள் கண்மேல் கண்ணிமைக்கும் நேரம் வைத்திருந்தால் கூட உங்களுக்கு நேத்ர சக்திகள் பூரணமாகக் கிடைத்திருக்கும். இந்த விவரங்களை தாங்கள் தெளிவாக அறிந்திருந்தாலும் சிவ பிரசாதமான சக்கராயுதத்தின் அணு அளவு சக்தியைக் கூட சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தால்தான் நீங்கள் அண்டமி தலத்தை நாடி வந்திருக்கிறீர்கள். உங்கள் தியாக உள்ளத்திற்கு மீண்டும் என்னுடைய வணக்கங்கள்,” என்று கூறி மீண்டும் ஒரு முறை பெருமாள் மூர்த்திக்கு சிரம் தாழ்த்தி தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார் ஸ்ரீஅகமர்ஷண விநாயகர்.
அதன் பின்னர் தன்னுடைய துதிக்கையால் அண்டமி திருமண்ணை சிறிதளவு எடுத்து அத்துடன் சிவகங்கை தீர்த்தத்தை சேர்த்து குழைத்து அதை பெருமாளின் வலது கண் மேல் பூசினார். மறுகணம் பெருமாள் தன்னுடைய வலது கண் சக்தியைப் பெற்றார். அவருடைய கண்களும் முன்பு இருந்ததை விட பன்மடங்கு பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. தேவர்கள் அனைவரும் பெருமாளை செந்தாமரைக் கண்ணன் என்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
எனவே மகாவிஷ்ணு செந்தாமரைக் கண்ணன் என்ற நாமத்தைப் பெற்றதும் அண்டமி திருத்தலத்தில்தான்.
பெருமாள் விநாயக மூர்த்திக்கு நன்றியைத் தெரிவித்து, “தங்களுடைய பெருங்கருணயால் என்னுடைய வலது கண் சக்தியை மீண்டும் பெற்றேன். இதற்கு நன்றிக் கடனாக இத்தலத்தை தரிசனம் செய்யும் இறையடியார்களுக்கு ஒரு வரத்தை அளிக்க விரும்புகிறேன். எவர் ஒருவர் ஸ்ரீஅகமர்ஷண விநாயகரை வணங்கி சிவகங்கை தீர்த்தத்தில் முறையாக பித்ரு வழிபாடுகளை மேற்கொள்கிறார்களோ அவர்களுடைய பன்னிரெண்டு தலைமுறைகள் சந்தான பாக்கியங்களுடனும் குறைவிலாத நேத்ர சக்திகளுடனும் திகழும் என்ற வரத்தை மனமுவந்து அளிக்கிறேன்,” என்று கூறி விநாயகரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார் மகாவிஷ்ணு.
அண்டமி தலத்தைப் பற்றி மேலும் விளக்கங்கள் பெற விரும்பும் ஆன்மீக அன்பர்கள் ஸ்ரீஅகத்திய பெருமான் அளித்த
உஜ்ஜீவ நயனமே உலக நயனம்
சஜ்ஜீவ கமலமே சலித கமலம்
என்ற நாடிப் பாடலை தியானித்து ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

உண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam