முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பெண் தலைமுறை தோஷங்கள்

பிரதோஷமும், மாத சிவராத்திரியும் குருவார நாளில் வந்து அமைவது எண்ணற்ற பலாபலன்களையும், நல்வரங்களையும் தர வல்லதாம். இவ்வாறு பிரதோஷ நாளில் இத்தகையத் தெய்வீகக் கால சக்தி அம்சங்கள் இணைந்து வருவது சிவசூடபலப் பிரதோஷ தினம் ஆகும்.
உயர்ந்த ஆன்மீக நிலைகளில், சிவசூடபல தினப் பிரதோஷ பூஜை, (மாத) சிவராத்திரி பூஜைகளை ஆற்றுவதானது, தர்மம், சத்யம் இரண்டும் இணைந்த தார்மீகக் குணங்கள் நிறைந்த உத்தம நிலைகளை மென்மேலும் கூட்டித் தருவதாகும். இதனால்தாம் மஹரிஷிகளின் போக்குவரத்து இத்தகையப் பிரதோஷ நாட்களில் சுயம்பு மூர்த்தித் தலங்களில் மிகவும் அதிகமாக இருக்குமாதலின், மஹரிஷிகள் ஆற்றும் பிரதோஷ பூஜைகளில் பங்கு பெற்றுப் பயனடையவேனும் இந்நாளில் சுயம்பு மூர்த்திச் சிவத் தலங்களுக்குச் சென்று வழிபடுக!
இல்லறத்தார் சிவசூடபல தினப் பிரதோஷ பூஜை, (மாத) சிவராத்திரி பூஜைகளை ஆற்றுவதானது பல தலைமுறைகளாக விடுபட்டுப் போன சிவபூஜைகள், விரதங்களுக்கான நிவர்த்திகளைத் தருவதாகும். மேலும், அடிக்கடி ஏதேனும் துன்பங்கள் சூழ்ந்து வந்து அவதியுறுவோர்க்கும் உளுந்து சம்பந்த வகை உணவு வகைகளின் அன்னதானம் கூடிய சிவசூடபல தினப் பிரதோஷ பூஜை நன்கு பயனளிக்கும்.

ஸ்ரீசதாதப சித்தர் கண்டியூர்

இவ்வாறாக, குறித்த சில பூஜைகளை, வழிபாடுகளை வாழ்நாள் முழுதும் ஆற்றி வருதலால், பல உத்தம நற்குணங்கள் நன்கு வந்து பதியும், சந்ததிகளுக்கும் இவை இயற்கையாகவே வந்தமையும். குறிப்பாகப் பெண்களுக்குக் கற்புக் கவசமாயும், மங்களப் புல நல்வரங்களாயும் வந்தமையும். நவராத்திரி போல, மாசி மாத மஹாசிவராத்திரி போல, பெளர்ணமி இரவு கிரிவலம் போல, மாத சிவராத்திரி நாளில் இரவில் வீட்டில் அல்லது ஆலயத்தில் சிவ பூஜைகளை (அர்ச்சனை, சிவகவசம், சிவபுராணம், தமிழ் மறைகளை ஓதுதல்) ஆற்றுதல் வேண்டும்.

வளர்பிறைப் பிரதோஷம், தேய்பிறைப் பிரதோஷம் இரண்டிலுமே, சுயம்புத் தலங்களில் பூஜித்து வருதல்,
தேய்பிறைப் பிரதோஷத்தை அடுத்து வருவதான மாத சிவராத்திரி நாளில் அருணாசல கிரிவலம் போன்று மலைத் தலங்களில் கிரிவலம் வருதல் இதில் பிரதோஷ நாளிலும் அல்லது மறு நாளிலுமாக மாத சிவராத்திரி வந்தமைவதாக இரண்டு வகைகள் உண்டு. இவற்றின் பலாபலன்கள் மிகவும் சிறப்புடையவை! வாழ்வில் பலத்தத் துன்பங்களுடன் வாழ்வோர் இவ்வழிபாடுகளை மிக மிக எளிமையான வகையில் தொடர்ந்து கடைபிடித்தால் கூட, அபரிமிதமான பலன்கள் வந்தமைந்து மிக எளிதில் துன்ப நிவர்த்திகள் கிட்டும்.
தேய்பிறைச் சதுர்த்தசித் திதியாகிய மாத சிவராத்திரி நாளை அடுத்து வரும் அமாவாசை நாளில், பெருமாள் தலத் தீர்த்தங்களில் மூதாதையருக்கான பூஜைகளை அன்னதானத்துடன் நிகழ்த்துதல்
வளர்பிறைச் சதுர்த்தசியில் கஜ பூஜை ஆற்றுதல்
வளர்பிறைச் சதுர்த்தசியை அடுத்து வரும் பெளர்ணமி நாளில், அருணாசல கிரிவலம் போன்று மலைத் தலங்களில் மலைவலம் வருதல்
- ஆகிய ஐந்து வகைப் பூஜைகளுக்கு பஞ்ச ஸ்ரீசிவதளப் பூஜைகள் என்று பெயர்.
வில்வ இலையின் பின்புறம் திருமகள் உறைவதால், ஸ்ரீதளம் என்பது தர்மமும், சத்தியமும் நிறைந்த விலவார்ச்சனைப் பலன்களுடன் அருள்வதாகும். ஒவ்வொரு குடும்பத்தாரும் வருடத்தில் ஒரு முறையாவது பஞ்ச ஸ்ரீசிவதளப் பூஜைகளை நிகழ்த்திட வேண்டும்.

ஸ்ரீஔஷதபுரீஸ்வரர் திருத்தலம்
திருத்துறைப்பூண்டி

வியாழனன்று அமையும் பிரதோஷ பூஜையில் தர்ம, சத்திய நெறிகள் தழைப்பதற்கான அனுகிரக சக்திகள் பல்கிப் பெருகி கூடிவரும். சதாதபஸ் சித்தர் காளஹஸ்தித் தலத்தில் இன்றளவும் தினமுமே தூல, சூக்கும வடிவுகளில் நித்யப் பிரதோஷ பூஜைகளைத் தினசரி மாலையில் கடைபிடித்து வழிபட்டு இதன் பலாபலன்களைப் பூவுலகில் பல்வகைகளில் நிரவி அளிக்கின்றார் என்பது பலரும் அறியாததாகும்.
எப்போதும் எந்நேரமும் தவத்தில் திளைக்கும் சதாதபஸ் சித்தர், நித்தியப் பிரதோஷப் பூஜைக்காகக் காளஹஸ்தித் தலத்திற்குப் புறப்படும் இடமே தஞ்சாவூர் கண்டியூர் சிவாலயமாகும். இங்கு குருவாரப் பிரதோஷ பூஜைகளை ஆற்றி வழிபடுதலால் பெண் சந்ததிகளில் வரும் தலைமுறை தோஷக் குற்றங்களைப் போக்கிட உதவும்.

குருவாரமாகிய வியாழனன்று அமையும் பிரதோஷ நாளில், சதாதபஸ் சித்தரின் காளஹஸ்தித் தலத்திற்கான வான்வெளிப் பயணம், குருமூர்த்த சக்தித் தலங்கள் கூடிய மார்கத்தில் அமையும். சூரியனார் கோவில், ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித் திட்டை, காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, குருவாயூர் போன்ற குருத் தலங்கள் வழியே இவருடைய வான்வெளிப் பயணம் அமையும்.
குருவாரத்தில் மருத்துவ சக்திகள் நிறைந்த ஆயில்ய நட்சத்திர நாளில் பிரதோஷம் வந்து சேர்கையில் மருத்துவ சக்திகள் நிறைந்த மருந்தீஸ்வரர், ஒளஷதபுரீஸ்வரர் போன்ற ஆலயங்களில் வழிபடுதல் நன்று. இந்நாட்களில் பிரதோஷ நேரத்தில் மூலிகைகளான திரவிய வழிபாடு, மங்கள மூலிகைக் கீரை வகைகள் நிறைந்த அன்னதானம் மிகவும் விசேஷமானது.
இந்நாளில் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவி கை முதல் பாதம், முழுங்காலுக்கு எண்ணெய் தேய்ப்பது, நீரருந்துவது, சாப்பிடுவது என அனைத்திலும் சிறிது மூலிகையை சேர்த்துக் கொள்ளவும். மூலிகைத் தழைகளைப் பசுக்களுக்கு அளித்திடுக. மூலிகைத் தாவரங்களுக்கு நீர் ஊற்றி நன்கு உரமிடுவதும் நல்ல அறப்பணிப் பூஜையாகும். ஒரு ஏழை கர்பிணிக்காவது நல்ல டானிக்குகள், மருந்துகளைத் தானமாக அளித்திடுக. சந்ததிகள் நன்கு தழைக்க உதவுவதே குருவாரப் பிரதோஷ வழிபாடாகும்.

கலச பூஜை சக்திகள்

தினந்தோறும் நாம் நன்கு வாழ்வதற்குத் தேவையான ஜீவ சக்திகளைத் தர வல்ல சூரிய கிரகமும், நல்ல புத்திக்கான அனுகிரக சக்திகளைத் தரும் புத கிரகமும், நல்ல மன நிலைகளுக்கு அருளும் சந்திர கிரகமும், சூரிய ஆட்சிப் பீடமான சிம்ம ராசியில் கூடிக் குழுமி அருளுவது பெரும் பாக்யமே.
சிம்ம ராசி சந்திர கிரகத்திற்கும், புதன் கோளுக்கும் நட்பு வீடாயும் அமையும் இத்தகைய முக்கோணக் கிரக முடிச்சிற்கு, த்ரிகோண கிரந்திக்கு திரிகலசாம்ருதம் என்று பெயர். கலம் என்றால் ஒரு வகை அளவை என்று பொருளல்லவா!
கலசம், கலவை என்ற பெயரில் (கலசப்பாக்கம்) சில அற்புதமான இறைசக்தித் தலங்கள் உள்ளன. இத்தலங்கள் கிரகக் கலவை சக்திகளைப் பூண்டவை! இத்தலங்களில் இருந்து வானியல் கிரகங்களை, நட்சத்திரங்களைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். இத்தகைய கலச சக்தித் தலங்கள் தியான, யோகப் பூஜைகளுக்கு மிகவும் ஏற்புடைய தலங்கள்.
இவ்வகைத் தலங்களில் இருந்து மூன்றாம் பிறைத் தரிசனம், கிரக தரிசனங்கள், நட்சத்திரத் தரிசனங்களை மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உடனேயே காத்திருந்து வானைப் பார்த்துப் பெறுதல் மிக மிக விசேஷமானதாகும். குடும்பப் பகைமை தீர உதவும் அற்புதத் தலங்கள் இவை!

ஸ்ரீருத்ர தீர்த்தம் குருவாயூர்

தஞ்சாவூர் சமஸ்தானத்தில் கலாலங்காரம் என்ற வண்ணக் கலை பிரசித்தி பெற்று விளங்கியது. வண்ணக் கலைத் துறையில் உள்ள ஓவியர்கள் வாரந் தோறும் கலச பூஜைகளை ஆற்றித் தினமுமே வானில் கிரக, நட்சத்திரத் தரிசனங்களைப் பெற்று வருதலால், கூரிய கண் பார்வையையும், நல்ல சிந்தனா சக்திகளையும் பெறுவர்.
கலசம் எனப்படும் (புண்ணிய நதித் தீர்த்தம் நிறைந்த) செம்பில், பலவிதமான அனுகிரக சக்திகள் வித்யை சக்திகளாக நிரவி வரும். கலந்தும், கலவா கலாஞ்சனம் என்பதான எட்டுத் (அஷ்டத்) தைல சக்திகள் பூண்ட விசேஷமான (அஞ்சனம்) மை ஒன்று உண்டு. விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், கரிசலாங் கண்ணித் தைலம், மருதாணித் தைலம், பொன்னாங் கண்ணித் தைலம் போன்ற எட்டு வகை நேத்ர சக்தித் தைலங்களை வைத்து உருவாக்கப் பெறும் இத்தகைய மிகவும் சக்தி வாய்ந்த மையை, (அஞ்சனம்) வெற்றிலையில் ஒற்றி எடுத்து வைத்து ஆஞ்சநேயருக்கு இட்டுப் பூஜித்து ஆக்கப் பெறும் கலாஞ்சனம் எனப் பெறும் விசேஷமான மை குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்தக் கலாஞ்சனத்தினால், கலசத்திற்கு எட்டுத் திக்குகளிலும் 64 வகைப் பொட்டுகள் இட்டு, ஸ்ரீகார்த்த வீர்யாஜுன சுவாமிக்கான கலச பூஜைகளை இத்தகைய மூன்று கிரக சங்கம நாட்கள், புதன் கிழமை அல்லது புத ஹோரை தோறும் ஆற்றி வந்தால்,
காணாமற் போன பத்திரங்கள், நகைகள், பொருட்கள் கிட்ட வழி பிறக்கும்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

காணாமற் போனோரைப் பற்றிய செய்தி கிட்டலாகும்.
சிறு வயதுக் குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டு இடப்படுவதை நன்கு அறிவீர்கள் அல்லவா! கண் திருஷ்டித் தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல மை வகைகளும் உண்டு. நல்ல சுத்தமான அகல் விளக்கில், நல்ல துணித் திரி வைத்து, மேற்கண்ட வகைத் தைலங்களை நிரவி விளக்கேற்றி, இதன் புகைப் படிவினை ஒரு சுத்தமான தாம்பாளம் அல்லது கொட்டாங் கச்சியில் படிய வைத்து, இதனை வழித்து எடுத்து, மை தயாரித்து, அஞ்சனா மைந்தனான அனுமாருக்கு அர்ப்பணித்துப் பிரசாதமாகப் பெறுவர். இந்த அஞ்சனம் கண்களுக்கு நல்ல தீர்கமான பார்வை சக்திகளைத் தருவதாகும். காணாமல் போனவர்களை, தொலைந்து போன பொருட்களைக் கண்டு பிடிக்கவும் உதவும் பூஜா பலன்களைத் தர வல்லதாகும்.
இத்தகைய மூன்று கிரக சங்கம நாட்களில் முக்கலச கிரக பூஷண பூஜையை ஆற்றுதல் நன்று. நன்கு நூல் சுற்றிய செம்புகளுக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்திடுக! மூலிகைத் தைலங்களாலான எட்டு விளக்குகளை எட்டுத் திசைகளிலும் ஏற்றி, இந்த மூன்று செம்புகளில் (கலசங்கள்) புனித நதித் தீர்த்தங்கள் அல்லது நல்ல நீரை வைத்து நிரப்பி, முதல் செம்பில் வில்வம், இரண்டாவதில் துளசி, மூன்றாவதில் வேப்பிலைகளை வைத்திடுக!
மூன்றிலும் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காயைப் பொடி சேர்த்து வைத்துக் கலசத்தினை மாவிலை, தேங்காய் வைத்து அலங்கரித்திடுக! பிறகு கலசங்களுக்குப் பூக்களால் அர்ச்சித்திடுக!
ஓம் காவிரி தேவி போற்றி
ஓம் கங்கா தேவி போற்றி
என 32 / 64 /72 நதி தேவதைகளின் பெயர்களை ஓதி, மூன்று கலசங்களிலும் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆவாஹனமான பாவனை கொண்டு , மூன்று கலசங்களையும் புஷ்பங்களால் அர்ச்சித்திடுக! பூஜையின் நிறைவில், பாயசம், பானகம், பழரசம் போன்ற நீர் வகைப் பண்டங்களைப் பிரசாதமாகப் படைத்திடுக.
கலச பூஜை முடிந்த பிறகு, சிறிது பிரசாதமாகக் கலச நீரை அருந்தி, கலச நீரை வீடு முழுதும் தரையிலும், வானிலும், சுவர்களிலும் மாவிலைகளால் தெளித்து வழிபாடு செய்தலே கலச பூஜையாகும்.

இத்தகையக் கலச பூஜை என்பது ஒவ்வொருவர் இல்லத்திலும் நிகழ்ந்திடுதல் வேண்டும். வாரம் ஒரு முறையேனும் இதனை ஆற்றிடுக! இதனை ஒரு கலச பூஜையாகவும் மிகவும் எளிமையாகவும் ஆற்றிடலாம். பூஜையறையின் தரையைப் பசுஞ்சாணியில் மெழுகி நன்கு கோலமிட்டு, இதன் மேல் பலகையை வைத்து, இதிலும் கோலமிட்டு, நூல் சுற்றிய செம்பினைக் கலசமாக வைக்க வேண்டும். செம்பினுள் தீர்த்தம் இட்டு இயன்றால் கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தம் சேர்த்து, சிறிது பொடி செய்த ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகளை இட்டு மாவிலைகளால் மூடி, மாவிலைகளின் மேல் நல்ல தேங்காய் வைத்து, செம்பிற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு ஒரு கலசத்தை வைத்தும் பூஜிப்பதும் எளிமையான கலச பூஜையே!
உங்களுக்குத் தெரிந்த நதிகளின் பெயர்களை எல்லாம் சொல்லி அர்ச்சனை செய்திடுக, இதனால் நதி தேவதைகளின் புண்ய சக்திகளும் வந்தடையும். பிறகு, ஓம் வருணா போற்றி என்று 108 முறையும், ஜல தேவதைகளே போற்றி என 108 முறை அர்ச்சித்து, பாயசம் போன்ற நீர் வகைப் பண்டங்களைப் படைத்து வழிபடுக. பிறகு கலசத் தீர்த்தத்தினைச் சிறிது அருந்தி, வீட்டின் எட்டுத் திசைகளில் தெளித்து எஞ்சியதைப் பசுவிற்கு, பட்சிக்கு அளித்திடுக.
உங்கள் வீட்டு மாடியிலோ, ஜன்னலிலோ பட்சிகள் வந்தமர்ந்து அருந்துமாறு தீர்த்தம் வைத்திடுங்கள். இதனைத் தினந்தோறும் மாற்றிட வேண்டும். இதில் கலசத் தீர்த்தத்தைச் சேர்த்தலும் பட்சி இனங்களுக்கும் கலச பூஜை சக்திகளை நிரவி, குடும்ப சந்ததிகள் தழைக்க நன்கு உதவும் மிகவும் விசேஷமான அருட்பணியாகும். வசதி உள்ளவர்கள் வீட்டு மாடியில் நல்ல நீண்ட சதுரச் சட்டத்தில் நீருற்றிப் பறவைகள் நன்கு நீராடுமாறு வசதி செய்திடுக! இது சந்ததி தழைப்பிற்கு மிகவும் உதவும்.

தூண்கள் தரும் தூய்மை

இறைவனுடைய அருளுக்கு நாம் நன்கு பாத்திரமாக வேண்டும். ஆலயத்திலும் இறைவன் நமக்காக, பெரிய பெரிய பாத்திரங்கள் நிறைய அருளை அள்ளித் தரக் காத்திருக்கையில், நாமோ ஒரே ஒரு ஸ்பூனை மட்டும் எடுத்துக் கொண்டு, கோயிலுக்குச் சென்றால் என்ன செய்வது? அதாவது மகத்தான அருளை இறைவன் அள்ளித் தரக் காத்திருக்கையில், எனக்கு இந்தப் பிரச்னை தீர வேண்டும், கடன் தீர வேண்டும், எனக்கு டிரான்பர் வேண்டும் என்று சிறிய பலனை மட்டும் வேண்டி வருகின்ற மனித மனப்பான்மை நிலவுவதால்தான், மிகவும் குறுகிய சுயநலமான மனப்பாங்கில் இருந்து கலியுக மனிதன் மீள முடியாது பெரிதும் தவிக்கின்றான்.
இங்கு பாத்திரம் என்பதற்குத் தூய மனம் என்றும் பொருள் கொண்டு மீண்டும் படித்துப் பாருங்கள். அற்புதமான விளக்கங்கள் உங்களுக்குள்ளேயே தோன்றும். மனப் பாத்திரத்திலும், உள்ளமாகிய பாத்திரத்திலும் அருள் சுரந்து நிறைவதற்கான அம்சங்களைப் பூண்டிட வேண்டும். ஆனால் இப்பாத்திரங்களில் எல்லாம் தேவையற்ற எண்ணங்கள்தாமே நிரம்பி வழிகின்றன. இதனால் அருளாசிகள் புகவே இடமில்லேயே!
எனவே, இறைவனுடைய அருளுக்கு நாம் நன்கு பாத்திரமாக வேண்டும் எனில் என் செய்ய வேண்டும். ஒன்றும் அறியாப் பாமரர்களுக்கு எத்தகைய அறிவுப் பூர்வமான விளக்கங்களே தேவை இல்லை. அவர்களுடைய சுத்தமான பக்தியை அனுசரித்து, இறைவனே எவ்வித விளக்கமும் இன்றித் தடுத்தாட் கொள்வான் அன்றோ! பாமரர்கள் தீய அறிவுரைகளின்பால் மாய்ந்து விடாது காக்க வேண்டியது நல்லோர்களின் கடமையாகும். இதற்கான நல்வழி முறைகளே பகுபத பாத்திரங்கள் ஆகும்.
எத்தகைய உயர் படிப்பைப் படித்தவர்களும், நல்ல முதிய அறிவு உடையவர்களும், வயதான பின், முதுமையில் பல உடல் சக்திகளையும் இழந்து, குழந்தைத்தனம் உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். பாமரர்களுக்கும், ஏழைகளுக்கும் எவ்விதத்திலேனும் பொருளினாலோ, உடையாலோ, அறிவாலோ, உணவாலோ, அறிவுரையாலோ எவ்வகையிலேனும் சேவை ஆற்றி வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்வு ஆகும். இதுவே மனப் பாத்திரத்தை நன்கு விரிவுபடுத்தித் தரும். ஏனைய வகை சுயநல வாழ்வு பயனற்றதே.

உலகில் உயர்ந்த தூண்
இது ஒன்றே !

காலையில் எழுந்து பச்சரிசி மாக்கோலம் இடுவது முதல், ஏழைகளுக்கு அன்னம் இடுதல், காக்கைக்கு உணவு, பசுவிற்குப் புல், பழம், தாவரங்களுக்கு நீர், இரவில் நாய்க்கு உணவு, நம் முன்னோர்கள் தினமுமே பல ஜீவன்களுக்கும் பயன்படும்படியாக வாழும் வாழ்க்கை முறையை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் காலத்தை ஒட்டியே மனிதனுடைய தினசரி வாழ்க்கை அமைவதால், அந்தந்த நாளில் ஆற்ற வேண்டிய நற்காரியங்களையும் கால அம்சங்களுக்கு ஏற்ப நம் முன்னோர்கள் பகுத்து அளித்துள்ளனர். பஞ்சபாத்திரம் என ஐந்து வகைப் பாத்திரங்கள் பூஜையில் பயனாவது போல, பஞ்சாங்கத்திலும் ஐந்து வகைக் காலப் பாத்திரங்கள் அமைந்து நமக்கு உதவுகின்றன. எனவே, பஞ்சாங்கம் என்பது நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என ஐந்து வகைகள் கூடிய காலப் பெட்டகப் பாத்திரமே!
இதில் பெளர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பிரதமைத் திதி என்பது மனித மனத்தளவில் நிறைய ஆன்ம சக்திகள் தங்குவதற்கான பாத்திர சக்திகளைத் தருவிக்கும் கால சக்திகளைக் கொண்டதாகும். புத்தி, மனம் மூலமாகத்தானே ஒவ்வொரு மனிதனும் தினமும் காரியங்களைச் செய்து வாழ வேண்டி உள்ளது. இதனால்தான் மனதைத் தியான பாத்திரம், யோகப் பாத்திரம் எனப் பகுத்து உரைத்துள்ளனர்.
மனதை விரிவு படுத்துவதற்கான மார்கத்தைப் புலப்படுத்துவதற்கான ஆன்ம சக்திகள் பிரதமை தோறும் திளைக்கின்றன. சூரிய மூர்த்திக்கு உரிய ஞாயிறன்று ஆக்கப் பூர்வமான ஜீவ சக்திகள் நன்கு கிளைப்பதால் பிரதமைத் திதி கூடும் ஞாயிறு, மன நல் விரிவுக்கு ஏற்ற தினமாகும். சித்சுத் சக்திகளைக்கொண்டதாக, உடல், உள்ளம், மன சுத்திக்கு உதவும் புனித நதி நீராடலுக்கு ஏற்ற பாத்ரபத சுத்தத் திதி சக்திகளுடன், பத நட்சத்திர அம்சங்களும் ஞாயிறுப் பிரதமையுடன் பூரிப்பதால், இது மனப் பாத்திரம் விரிவடையும் ஆக்கப் பூர்வமான தினங்களுள் ஒன்றாகும்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள கரப்பாத்திர சித்தர் ஜீவாலயத்தில், பிரதமைத் திதி தோறும் பாத்திரங்கள் நிறைய அன்னதானத்துடன் வழிபடுவது, மனக் குற்ற தோஷங்களைப் போக்க உதவும். சந்ததிகளைக் காக்கத் தேவையான சித்சுத்தி ரட்சா சக்திகளை அளிக்கும்.
பல கிண்ணங்களில் நீரை ஊற்றி, மெல்லிய கோலை வைத்துத் தட்டி இசை எழுப்பும் இசை வண்ணத் துறையே ஜலதரங்கம் என்னும் இசைத் துறையாகும். பிரதமை அன்று ஜலதரங்கக் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களுடைய கச்சேரிகளுக்கும் ஆவன செய்திடுக.
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
தொனியும் நாடியும் நாளமும் கரணமும்
கனியும் இடமாய்ச் சிதம்பரப் பரலாய்
பனித்த சடையன் பரிபுவனப் பாலிப்பாய்
இனித்த இசையே அருள் செய்
என்றவாரான இசைவளத் துதிகளை ஓதி, இன்று ஆலயத்தில், குறைந்தது ஏழு தூண்களையாவது தக்க அனுமதியுடன் சுத்திகரித்து இறையருள் பெறுக. இசைத் தூண்கள் உள்ள தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

மாயையை வெல்ல முடியுமா ?

சந்திரக் கலைகள் ஒளிர்ந்து பூரித்துப் பிரகாசிக்கின்றன என்று சொல்வதன் பொருள் யாது? சந்திர மூர்த்தி, ஏன் ஒளிக் கலைகளுடன் பிரகாசிக்க வேண்டும்? சந்திர கிரகம், சூரியக் கோளத்தில் இருந்து ஒளியைப் பெறுவதால், சூரியனுக்கும் ஒளிக் கலைகள் இருக்க வேண்டும் அல்லவா? சந்திரனைப் போலச் சூரியனுக்குக் கலைகள் கிடையாதா? இத்தகைய கேள்விகள் முரண்பாடானவை அல்ல! இவ்வாறு கேள்விகள் மனஉட்புறத்தில் எழுவதும் நன்றே! ஏனென்றால் இவ்வாறு கேள்விகள் எழுந்து, எழுந்து, விடை காண முயல்வதும், ஓர் அற்புத வழிபாடாக, ஆத்மவிசாரமாக, மகத்தான மனவழிப் பூஜையாக மலர்கின்றது. இதன் மூலமே ஆறறிவுப் பகுத்தறிவு நன்கு விருத்தியாகும்.
உத்திர நட்சத்திரம் திங்கள் கிழமை இணையும் நாளில் சூரியக் கோளில் இருந்து விசேஷமான சசிப்புலக் கதிர்கள் சந்திரனை அடைகின்றன. இவை மனோதிடத்தை அளிக்க வல்லவை. ஒரு முறை சசிப்புல சக்திகள் நிறைந்த மூன்றாம் பிறையை தரிசித்திடில் இதன் சக்திகள் ஒரு மண்டலத்திற்கு நிலைத்து நிற்க வல்லதாகும். இதனைத் தக்க முறையில் யோகப் புல, தியானபலப் பூஜைகள் மூலம் நன்கு விருத்தி செய்து கொண்டால் மேலும் நெடுங் காலத்திற்கு நீடித்து வைத்துப் பலன் பெற முடியும்.
மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில், சந்திரன் மூன்று கலைச் சக்திகளுடன் பிரகாசிக்கின்றார். ஈஸ்வரனே மூன்றாம் பிறைச் சந்திரனைத் தன் முடியில் தரித்துள்ள கோலமே, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமாகும் என நாமறிவோம். அதாவது, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் ஈஸ்வரனின் சிரசு தரிசனமாக மலர்கின்றது. எனவே, நமக்குக் கடவுள் தரிசனம் கிட்டவில்லையே என ஏங்காதீர்கள்! மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மகத்தான கடவுள் தரிசனமே!

ஐயர்மலை குளித்தலை

கடவுள் தரிசனம் கிட்டிய பின் என்ன நிகழ்கிறது என்பதே மிகவும் முக்கியமானது. சிவதரிசனம் பெற்ற ராவணனும், பிரம்ம தரிசனம், பெருமாள் தரிசனம் பெற்ற ஹிரண்யன், பத்மாசுரன் போன்றோரும் என்ன வரம் கேட்டார்கள் என நாமறிவோம்! அவர்கள் முக்தி, மோட்சத்திற்கான நல்வழிகளையா நாடினார்கள்? வாய் குழறி, நித்யத்வம் என்பதற்கு பதில் நித்திரைத்வம் (தூங்குதல்) வேண்டுமென வரம்கேட்ட கும்பகர்ணனின் கதி என்ன? எனவே, வெறியோடு கடுந்தபசில் இறங்குவதை விட, தக்க சத்குருவின் வழிகாட்டுதல் மற்றும் அருளோடு கூடிய தவமே மாசு மருவற்றதாகும்.
மனித குலமே, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன மகிமையை ஒரு சிறிதும் உணராது இருக்கின்றது. ஆனால், இதே சமயத்தில், உண்மையில் மூன்றாம் பிறைத் தரிசனத்தில் கிட்டும் கோடானு கோடிப் பலா பலன்களையும், இவற்றை முறையாகப் பெற்றிட, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் ஆற்ற வேண்டிய பூஜா முறைகளையும், உலகத்தார் அனைவருமே சிரத்தையுடன் நன்கு அறிந்தால், உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் வரிசைக் கட்டிக் கொண்டு மூன்றாம் பிறையைத் தரிசிப்பர் அன்றோ! இதனை அறிய உணராது இருப்பதும் மாயைப் பூர்வத்தால்தானே! மாயையை வெல்ல உதவும் மார்கங்களில் மூன்றாம் பிறைச் சந்திரத் தரிசன வழிபாடும் ஒன்றாகும்!
தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகே உள்ள தாழமங்கை, தஞ்சாவூர் அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ள மகிமாலை, முசிறி, திருவக்கரை, மானாமதுரை, சந்திரசேகரபுரம், மதுரை, திருப்பதி போன்ற சந்திர சக்தித் தலங்களில், பக்தர்கள் சத்சங்கமாகச் சேர்ந்து, சந்திரத் தரிசனம் பெற்று, முந்திரி, ஏலக்காய், கற்கண்டு, தேன் கலந்த பாலை வானில் சந்திர மூர்த்திக்கு நைவேத்யம் செய்து, ஏழைகளுக்கு அளித்தல் மிகவும் விசேஷமானகும். பிள்ளைகளைப் பற்றி, குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பற்றிய மனபீதிகள் தணிய உதவும்.
பிள்ளைகள் ஞாபக மறதியால் தவித்தல், எவ்வளவு படித்தாலும் மனதில் ஏறவில்லையே என்று அலுத்துக் கொள்வது போன்ற குறைகளை நிவர்த்தி செய்து, பிள்ளைகள் நல்ல நினைவாற்றலுடன் கல்வியில் நல்ல கவனம் பெற, மாதந்தோறும் பிள்ளைகளுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெற்றுத் தருக! சந்திரனின் மூன்றாம் பிறை சிறிது நேரமே வானில் தெரியும் என்பதால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாம் பிறை வானில் தெரிகின்ற போது, நன்கு நிமிர்ந்து நின்று, பின்காலை உயர்த்தி, மூலபாத யோக நிலையில் நின்று மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று,
சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர பாஹிமாம்
சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர ரட்சமாம்
என்று 36 முறை ஓதி, தன்னையே 10 முறையேனும் ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வருதல் வேண்டும்.

ஸ்ரீசந்திர பகவான்
ஐயர்மலை

ஒன்றுள் ஒன்றியே ஒன்றில் ஒன்றாகி
ஒன்றென ஓதியே மூன்றில் ஒன்றாகி
ஒன்றில் ஒன்றிய ஒன்றுடையான்தனை
ஒன்றி ஒன்றுவோம் மூன்றில் ஒன்றாய்
என்ற சந்திர சக்தித் துதிகளை ஓதுதல் மிகவும் விசேஷமானதாகும்.
சந்திர மூர்த்தி, தம் பத்னியுடன் அருளும் தலங்களில் இன்று மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். பொதுவாக, ரோஹிணி, கார்த்திகை நட்சத்திர தேவியருடன் சந்திர மூர்த்தி அருள்வதையே ஆலயங்களில் காண இயலும். ஏனைய 25 நட்சத்திர தேவியரும் ரோஹிணி, கார்த்திகை தேவியரின் மகத்தான சக்திகளை உணர்ந்து அவர்களே விரும்பிப் பெற்றதே ரோஹிணி, கார்த்திகை தேவி சமேத சந்திர மூர்த்தித் தரிசனம் ஆகும். திருச்சி குளித்தலை அருகே அய்யர்மலையில், திருவாதிரை தேவியுடன் சந்திர மூர்த்தி விசேஷமாக அருள்கின்றார்.
பொதுவாக, மனஅமைதிக்கு மூன்றாம் பிறைத் தரிசனம் நன்கு வழி வகுக்கும். தர்பைப் பாயில் அமர்ந்து, மூன்றாம் பிறையை வானில் நோக்கி, 27 நட்சத்திரங்களையும் வரிசையாக மனதில் எண்ணி, சந்திர மூர்த்தி சகிதம் அனைவரையும் வழிபடுவதாகவும்,
சந்திர மெளீஸ்வரராக ஈஸ்வரன் அனைவருக்கும் காட்சி தருவதாகவும் பாவனை செய்து, சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குவதும் சிறப்பான மனயோக வழிபாடாகும். பாற்கடலில் தோன்றிய சந்திரமூர்த்தி, அமிர்த சக்திகள் நிறைந்தவராதலின், இயற்கையிலேயே அமிர்த சக்திகள் நிறைந்த பால், கற்கண்டு கலந்த உணவுப் பண்டங்களைத் தானமாக அளிப்பதும், மூன்றாம் பிறைத் தரிசன வழிபாடுகளில் ஒன்றாகிறது.
மூன்றாம் பிறைத் தரிசன நாளில் சந்திர மூர்த்தியின் முன்னாக, மதிசுத்திக்கான ஆத்மவிசார பூஜைகளை நிகழ்த்துவதால், மனஅமைதி நன்கு விருத்தியாவதை, நேரடியாகவே மூன்றாம் பிறைத் தரிசன நாளில் நன்கு உணரலாம்.

வக்கீல்கள் ஆற்ற வேண்டிய பூஜை

கலியுகத்தில் கல்கிப் பெருமாள், பலராமப் பெருமாள், ஜேஷ்டா தேவி போன்ற தெய்வ வழிபாடுகளை மனித சமுதாயம் மறந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இதனால்தான் இந்தத் தெய்வ வழிபாடுகள் மூலம் பெற வேண்டிய பலன்களைக் கலியுக மனிதன் பெற முடியாமல் போய் விடுகிறது. மேலும், இவ்வழிபாட்டுப் பலன்களால் தீர்வு பெற வேண்டிய பல துன்பங்களும், அப்படியே மனித சமுதாயத்தில் மண்டிக் கிடக்கின்றன.
அப்படியானால், கலியுகத்தில் மகத்தான தெய்வ வழிபாடுகள் வெறுமனே துன்பங்களைப் போக்குதற்கு மட்டும்தானா? இன்ப துன்பங்களைக் கடந்த உத்தம நிலைகளைப் பெற்றுத் தர வல்லவையே தெய்வ வழிபாடுகள் எனினும், கலியுக மக்கள் இதனை நன்கு உணரும் வகையிலா இறைப் பகுத்தறிவுடன் பண்பட்டு இருக்கின்றார்கள்?
மனித குலத்திற்கென இறைவன் அளித்துள்ள ஆறாவது பகுத்தறிவானது பூரணம் அடையாமையால்தானே, வெறும் துன்பங்களைத் துடைக்க உதவுவதாக தெய்வீக வழிபாடுகளை மனிதன் வைத்துக் கொண்டு உள்ளான். உண்மையில், தெய்வீக வடிவுகள் யாவும் அவரவருள் ஒளிரும் ஆத்ம சக்தியின் வடிவுகளேயாம். அதாவது, தன்னுள் ஒளிரும் ஆத்மப் பிரகாசத்தையே, பலவிதமான தெய்வப் பிரகாச வடிவுகளாகக் காண்கிறோம். ஆனால், இதெல்லாம் ஏட்டுப் படிப்பாகவே, தத்துவமாகவே பலரும் உணர்வர். ஏனெனில், இன்றையப் பொழுதில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளனவே, இதற்குப் பிறகுதானே உத்தம நிலை போன்றதெல்லாம் என்றே பலரும் எண்ணி, தெய்வீகத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். இதுவே இன்றைய கலியுகச் சராசரி மனித குணமாகி வருகிறது!

ஸ்ரீஞானாம்பிகை குடவாசல்

தசாவதாரங்களுள் ஒரு பெருமாள் மூர்த்தியாகத் துலங்கும் பலராமப் பெருமாள், சத்திய சக்திகளாகவும், பிருத்வி சக்திகளாகவும், பிரேம சக்திகளாகவும், நீதி சக்திகளாகவும் தெய்வானுக்ரக அனுகிரக சக்திகளை அருள்பவர் ஆவார். பலராமர் அவதார சரித்திரம் மகாபாரதத்தோடு முடிவு பெற்று விட்டது என எண்ணாதீர்கள். தசாவதார மூர்த்திகள் என்றென்றும் அருள்பவர்கள்.
மேலும், நம் பூலோகம் மட்டும் அல்லாது எத்தனையோ பூமிகள் உண்டு. அவற்றில் பலவற்றிலும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் போன்றவை தற்போது நிகழ்ந்து வருகின்றன. மனித விஞ்ஞானப் புலனுக்கு எட்டாத வகையில் மனிதர்கள் வாழும் வேறு பல பூமிகளும் உண்டு. இவற்றில் இன்றும் பலராம அவதாரம் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. மேலும், பலராம அவதார நிகழ்ச்சிகளை, மகாபாரதத்தில் வரும் புராண சம்பவங்களோடு முடிந்திடவில்லை! பலராம அவதாரிகைகளுள் மஹாபாரதத்துள் நாம் காண்பது ஒரு துளியே! எனவே, இவற்றை மட்டுமே வைத்து பலராமப் பெருமாள் புராண அனுபூதிகளாக அறிதல் கூடாது.
மானுட வடிவில், ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் நிகழ்த்திக் காட்டிய வைபவங்களில் ஒரு சிறிதே இவற்றில் வருகின்றன. பலராம மூர்த்தியின் இறை லீலைகள் இன்னமும் எண்ணற்றவை உள்ளன. பலராம லோகத்தில் உறையும் ஸ்ரீமன் பலராமப் பரந்தாமப் பெருமாளை உபாசனை கொண்டு வழிபடும் சித்தர்களும் மகரிஷிகளும் நிறையவே உண்டு.
எனவே, பலராம அவதார மகிமைகளை உணர்ந்து இனியேனும் பக்தர்கள் செயல்படுதல் வேண்டும். பொதுவாக, விவசாயத் துறை, மரத் தச்சுத் தொழில் துறை, வேதத் துறை, நாட்டின் ஆட்சித் துறையில் இருப்பவர்களுக்கும், நீதித் துறைக்கும் பலராமப் பெருமாள் வழிபாடு மிகவும் துணை புரியும். பலராமப் பெருமாள் ஆலயம் தற்போது தென்னாட்டில் அதிகமாக இல்லையாயினும், வருங்காலத்தில் பலராமர் வழிபாடு விரிவுடன் மீண்டும் மஹிமை பெரும்.
வடபாரதத்தில் பல பகுதிகளில் பலராமர் வழிபாடு நிறைந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரியில் பலராமப் பெருமாள் வழிபாடு விசேஷமாகக் கொண்டாடப் படுகின்றது. இன்றும் தமிழகத்தில் பெருமாள் ஆலய மூலக் கருவறையில், முதன்மை மூர்த்தியோடு பலராமரும் சேர்ந்து அருள் புரியும் தலங்களும் உண்டு.
இந்நாளில் பலராமப் பெருமாள் ஆலயத்தில் சென்று வழிபடுக! பலராமர் சன்னதி இல்லாத பெருமாள் ஆலயமெனில், தசாவதார சன்னதிகளில் வழிபடுக! ஆலய விமானத்திலும் பலராமர் தரிசனம் கிட்டும். இங்கு பலராமருக்கு உரிய துதிகளை ஓதி வழிபடுவதுடன், ஏழை விவசாயி ஒருவருக்காவது கலப்பை போன்ற விவசாயக் கருவிகளைத் தானமாக அளித்துச் சேவை புரியுங்கள். வக்கீல்களும், நீதிபதிகளும் அவசியம் பலராமப் பெருமாள் பூஜைகளை ஆற்றிட வேண்டும்.

அடி பிரதட்சிணம்
தரும் அரிய பலன்கள்

விநாயகச் சதுர்த்தி நாளில், நாள் முழுதும் சதுர்த்தித் திதி, புதன் கிழமையில் முழு முதல் சதுர்த்தித் திதியாக வந்தமைவது மிகவும் அற்புதங் கலந்த அபூர்வக் காலசக்தித் திருநாளாகும். 
சங்கல்பம் என்றால் என்ன? இன்ன மந்திரத்தை, இன்ன பூஜையை, இன்ன காரணத்திற்காக ஓதுகிறேன், நடத்துகின்றேன், என்று முன்னரேயே நிர்ணயம் செய்து கொண்டு, நற்காரிய இறைப்பணியை நிகழ்த்துவதாகும். இறைவனிடம் மனமானது சில நற்காரிய வேண்டுதலை வைத்து, இதற்காகச் சில பூஜைகளை, நேர்த்திகளை ஆற்றுகின்றார்கள் அல்லவா! இவ்வாறு, இறைவனின் முன்னர், பூஜைக்கு முன் தேவையான வேண்டுதல்களை அர்ப்பணித்தல் சங்கல்ப முறை ஆகும்.
இறைவனுக்கான பூஜையில் / வழிபாட்டு நேரத்தில், மேற்கண்ட வகையிலானதைத் தவிர, இறைவனிடம் முன் வைக்காது, மனதினுள் பதுங்கி இருக்கும் ஆசைகளை என்னென்பது? ஆசைகள் முறையானவையாகவும், அதர்மமானதாகவும், அளவுக்கு அதிகமானதாகவும், நிராசையாகவும், பேராசையானதாகவும், பலவிதங்களில் ஆசைகள் இருந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் இருத்தல் கூடாது. ஒரு விருப்பம் நிறைவு பெற்றால், அடுத்த ஆசை வந்தமர்ந்து கொண்டு, கலியுக மனித மனத்தில் நிறைய முளைத்துக் கிளை விட்டு, ஆசைகள் வளர்ந்து கொண்டே போகின்றன.

ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார் பெருமாள்மலை

காளான்கள் போல், முளைத்துக் கொண்டே இருக்கும் ஆசைகளைக் கட்டுப்படுத்தவே, இன்னதுக்காக இன்ன பூஜை எனச் சங்கல்ப வைராக்யம் பிறந்தது. எவ்வளவு ஆசைகள், முறையான விருப்பங்கள் இருந்தாலும், அவற்றுள் தேவையானவற்றை, முறையானவற்றைப் பொறுக்கி எடுத்து, இதனை பூஜையில் சங்கல்பம் செய்து கொள்ளும் போது என்ன நிகழ்கிறது? இதுவே ஓர் அற்புத ஆசாரமாகத் திகழந்து ஒவ்வொரு மனிதனும் தன் ஆசைகளை, விருப்பங்களையே எடை போட்டு, அவற்றுள் முறையானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஆத்மவிசாரப் படலின் முதல் பாகமாக சங்கல்பம் துலங்குகின்றது.
முறையான விருப்பங்கள், ஆசைகள் ஏற்புடையவே! விரலுக்கு தகுந்த வீக்கம் என்பது போல, அவரவருடைய பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே நியாயமான விருப்பங்கள் இருந்திட வேண்டும். அடைய முடியாதவற்றுக்காக அநாவசியமாக ஏங்குதல் கூடாது. இந்நாள் போல, 60 நாழிகையும், நாள் முழுதுமாக, சதுர்த்தித் திதி நிறைந்திருக்கும் நாளில் கணானச் சதுர்த்தப் புலம் என்ற வகையிலான, நான்கு வகைச் சங்கல்ப விருத்தி சக்திகள் பூஜா பலன்களாகப் பூரிக்கின்றன.
நான்கு என்ற எண்ணின் சக்திகள், சதுர்த்தி நாளில் நன்கு விருத்தி பெறுகின்றன. நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்ற சொல் வழக்கைப் போல, நான்கு என்ற எண்ணின் தேவ சக்திகளை உணர்த்த வல்லவையான சங்கதிகளும், நான்கின் எண் சக்தி மகத்துவங்களும் மனித வாழ்க்கையில் நிறையவே உண்டு. மனித உடலில் ஒவ்வொரு எண்ணின் சக்திகளும் உடலின் பல அங்கங்களில் பதிந்து உள்ளன. இவற்றைப் பண்படுத்தி ஆக்கப்படுத்த வல்லவையே வளர்பிறை, தேய்பிறைச் சதுர்த்தித் திதிப் பூஜைகளாகும்.
ராகு கிரகத்திற்கு உரிய எண் 4 ஆகும். ராகு சக்திகள், சதுர்த்தி நாளில் நன்கு ஆக்கம் பெறுகின்றன. சதுர்த்தித் திதி நாளில், ராகு மூர்த்தி, கணபதியை வழிபட்டுத் தம் பூஜா பலன்களை பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றார்.
சதுர்த்தித் திதி நாள் முழுதும் துலங்கிப் பூரிக்கும் தினங்களில், அபிஷேகம், அர்ச்சனை, காப்பு, ஹோமம் ஆகிய நான்கு வகைகளிலும் கணபதி வழிபாடுகளை ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழ்த்த வேண்டும். கணபதி ஹோமத்தை நிகழ்த்த இயலாதோர், ஹோமம் நிகழும் இடங்களில், குறிப்பாக ஆலயத்தில், ஹோமத்திற்கான திரவியங்களை அளித்தல் வேண்டும். குறைந்தது ஒரு நாழிகையேனும் (24 நிமிடங்ககள்) அரிய மூலிகா ஹோமப் புகையைக் குடும்பத்தோடு நுகர்தல் என்ற சங்கல்பத்தை மேற்கொள்க! அன்னதானத்துக்காக சங்கல்பம் செய்து சமைத்தலும் விசேஷமானது. காரணம், அன்னதானத்தில் மேற்கண்ட நான்கும் அடங்கும்.

ஸ்ரீசக்கர விநாயகர் பெருங்குடி

கொழுக் கட்டை, மோதகம் போன்றவற்றை ஏழைகளுக்குச் செய்யத் தெரியாது ஆகையால், இந்நாளில் நன்கு சூடாக, ருசியோடு இருக்கும் போதே இவற்றை ஏழைகளுக்கு அளிப்பது எனச் சங்கல்பம் செய்து சமைப்பதும் சிறப்பான அன்னவிநாயக வழிபாடாகும்.
தும்பிக்கை ஆழ்வார் என்ற பெயருடன் பெருமாள் தலங்களில் குடி கொண்டிருக்கும் பிள்ளையாரப்பனைத் தரிசித்து, நின்று, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு வகைக் கோலப் பெருமாள் மூர்த்திகளைத் தரிசித்தல் வேண்டும். இதே போல, நீரில் வளர்வது, நிலத்தில் படர்வது, கொடி வகை, மரம் என நான்கு வகை நிலைகள் கூடிய பூக்கள், காய்கறிகள் உண்டு. இந்நாளில் பெருமாள் ஆலயத்தில் தும்பிக்கை ஆழ்வாரையும், சிவாலயங்களில் விநாயகரையும், நீர், நிலம், கொடி, மரம் ஆகிய நான்கு வகைத் தாவரப் பூக்களால் அர்ச்சித்தலும், அலங்கரித்தலும் விசேஷமானது.
இதே போல அமர்ந்த கோலம், நின்ற கோலம், நடன கோலம், சயனக் காலம் (ஸ்ரீரங்கநார் போல் யோகப் படுக்கைக் கோலம்) ஆகிய நான்கு வகை பிள்ளையார் மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறுதலும் மஹா விசேஷமானதே. நான்கு என்பது மிகவும் சக்தி வாய்ந்த எண் துறை இறைஆக்கங்களைக் கொண்டதாகும். நான்கு என்பதை சக்கரப் புலத்தார் எனச் சித்தர்கள் உரைக்கின்றனர்.
நின்று, இருந்து, கிடந்து, நடந்த திருமேனிகளில் அருளும் விநாயக மூர்த்திகளுக்கு, மேற்கண்ட வகையில் நான்கு வகை நிலைப் பூக்களால் ஆன மலர்க் கிரீடம் சார்த்தி, பிள்ளையாருக்கு உரிய நான்கு வகை இனிப்புக்களைத் தானமாக அளிப்போர்க்கு, பல்வகைத் தடங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நற்காரியம் நிறைவேறிட அருள் சுரக்கும். கிடந்த கோலத்தில் (சயனக் கோலம்) விநாயகரைத் தரிசித்தல் அபூர்வமானது. இதற்காக சக்கர விநாயகரைத் தரிசித்திடலாம்.
சக்கரங்கள் நான்கு பக்கங்களைத் தழுவி அமைகின்றன அல்லவா. எனவே, நான்கு துறைகள் உள்ள தீர்த்தக் குளம், நான்கு புறமும் கோபுரங்கள் உள்ள தலங்கள், நான்கு விமானங்கள் உள்ள தலங்கள், நான்கு விநாயக மூர்த்திகளுக்கு மேல் உள்ள தலங்கள், நான்கு தீர்த்தங்கள் உள்ள தலங்களில் இந்நாளில் வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். இவ்வகையில்தாம் எண் சக்திகள் நம்முள் தழைக்கின்றன.
நாலு தப்படி எடுத்து வைத்தல் என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. தப்பல் + அடிப்பாதம் - அதாவது நான்கு தப்படி எடுத்து வைத்தால், உடலில் ஆகர்ஷண நிலை சற்று மாறுபடும். இவ்வாறு ஒவ்வொரு நாலு தப்படிக்கும், மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள மின் சக்திகள், ஆகர்ஷண சக்திகள் நன்முறையில் மாற்றங்கள் பெறும். இவைதாம் மனம், உள்ளம், உடல் ஆரோக்யத்திற்கு மிகவும் உதவும். இதனால்தான் அடிப் பிரதட்சிணம் மேன்மை பெறுகிறது. எனவே இந்நாளில் நிறைய அடிப் பிரதட்சிணம் செய்திடுக!

நெருப்பால் இறந்தோர்க்கு நற்கதி

கோளங்கள் எனப்படும் வானியற் கிரகங்கள் அனைத்துமே வெம்மை (உஷ்ண) சக்திகளைப் பூண்டவையா? சூரியன், செவ்வாய், பூரம், விசாகம் போன்ற உஷ்ண சக்திக் கிரகங்களும், நட்சத்திரங்கள் பலவும், குறித்த நாட்களில் சீதள (குளுமையான) சக்திகளைக் கொள்கின்றன. இந்நாட்களில், பூவுலகில் உள்ள உஷ்ண ஊற்றுக்களில், அபூர்வமான தெய்வீக சக்திகள் பூரணித்து, நோய் நிவாரண சக்திகளும் நன்கு பரிமளிக்கின்றன.
இவ்வாறு அக்னிக் கோளமான சூரியக் கிரணங்கள், அக்னி திதியான சஷ்டித் திதியில், அக்னி நட்சத்திரமான பூரத்தோடு சேர்ந்து சிறப்புடன் பரிமளிக்கும்போது பூவுலகில் அபூர்வமான அக்னிப் புராந்தக சக்திகளைத் தோற்றுவிக்கின்றன. அக்னிப் புராந்தக மஹரிஷி எனும் மஹரிஷி, இத்தகைய அக்னி சக்தி நாட்களில் பூவுலகில் அக்னீஸ்வரர் (வயலூர்), வெம்மையப்பர், தீயாடியப்பர் (திருக்காட்டுப் பள்ளி) என இறைவன் அருளும் தலங்களில், மானுட வடிவில் பூஜிக்கின்றார். கைகளிலும், இடுப்பிலும் எருக்கு போன்ற அக்னி வகை சமித்துக்களைத் தாங்கி வலம் வரும் இவரை பாக்யம் உள்ளவர்கள் தரிசிக்கலாம்.

சகஸ்ர லிங்கம் பேரளம்

சஷ்டித் திதி மகத்தான சஷ்டபுல அக்னி சக்திகள் நிறைந்த அக்னி சக்தித் திதியாகவும் பரிணமிக்கின்றது. வெப்பம், நெருப்பு, வெம்மை என்றவாறாக அக்னி சக்திகள், நம் உடலில் பல வகைகளிலும் குறித்த அளவில் இருந்தால்தான் உயிர் ஜனிக்கும் என்பதாலும், மருத்துவப் பூர்வமாகவும், உடலில் அமைய வேண்டியதாகக் குறித்த அளவு வெப்ப நிலை உணர்த்தப்படுவதாலும், உடலுக்குத் தேவையான திவ்யமான, தேவையான அக்னி சக்திகளைப் பெற்றிட, அக்னி வகைக் கிழமை நாட்களில் (செவ்வாய்), அக்னி சக்தித் திதிகளில் (சஷ்டி), அக்னிப் பரல்பாத நட்சத்திரங்களில் (கார்த்திகை, பூரம்), அக்னிப் பூர்வ யோக, கரண நாட்களில் ஆற்றப் பெறும் பூஜைகள் மிகவும் உதவுகின்றன.

திருக்காட்டுப்பள்ளி

வெப்ப நோயை அக்னி சக்திகள் நிறைந்த மருந்துகளால்தான் நன்கு நிவாரணப் படுத்த முடியும். கடும் காய்ச்சலில் கூட, சித்த, ஆயுர்வேதப் பூர்வமாக, காராக்னி சக்தி நிறைந்ததும், ஆனால் சீதள (குளுமை) சக்திகளை உடையதுமான மிளகுக் கஷாயம், மிளகு ரசம் போன்றவை உதவுகின்றன அல்லவா! எனவே, வெம்மையில் சீதளமும் (குளுமையும்), சீதளத்தில் வெம்மையும், ஆன்மீகத்தில்தான் தக்க முறையில் பரிமாற்றம் பெறுகின்றன.
இத்தகைய அக்னி சக்தி நாட்களில் திரளும் தெய்வீக சக்திகள், உடல், மனம், உள்ளத்தில் படிந்துள்ள தீவினைக் கதிர்களை, தீய தோஷங்களை நன்கு பஸ்மமாக்கித் தீர்க்க வல்லவை! எனவே, இத்தகைய அக்னிகள் நிறைந்து வரும் பூஜைகளை, வாழ்வில் நன்முறையில் பயன்படுத்திக் கொள்க!

சூரிய சஷ்டியுடன் கூடி வரும் வெள்ளிக் கிழமைகளில் தாமரைத் திரியுடன், பஞ்சுத் திரியும் சேர்த்து, மஞ்சள், ஜவ்வாது தடவி, எட்டு விதமான கூட்டுத் தைலங்களால் விளக்கை நிரப்பி, எட்டுத் திக்குகளிலும் எட்டுத் திரிகள் அல்லது எட்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, அகல் விளக்குகளை எட்டு முறை வலம் வந்து வணங்கிடுக.
ஆலயத்தில் இதற்காகத்தான் எட்டுத் திக்குகளிலும் எப்போதும் தெய்வ மூர்த்திகள் உறைந்து அருள்வர். ஒரே இடத்தில்தான் ஆலயங்களில் விளக்குகளை ஏற்ற வேண்டுமெனில், எட்டுத் திக்குகளையும் நோக்கியபடி எட்டு விளக்குகளை ஏற்றிடுக. அஷ்ட திக்கு பாலகர்கள் அருளும் தலங்களில் வழிபடுதல் நன்று.
திருச்சி அருகே உள்ள சூரியூரில் வைதிருதி யோகநாள் தோறும், சூரிய ஒளி பட அமர்ந்து, தர்ப்பணம் அளித்து, சூரிய கிரகத்திற்கு உரிய கோதுமை உணவுப் பண்டங்களைப் படைத்துத் தானமளித்து வருதலால் நெருப்பு சம்பந்தப்பட்ட காரணங்களாலும், வெம்மை நோய்களாலும் இறந்தோர்க்கு நற்கதி கிட்ட மிகவும் உதவும்.

ஸ்திர சக்தியும் ஸ்திர சப்தமியும்

தொன்று தொட்டு, குறித்த கிரக வரிசையில் ஆதிவாரமாகிய ஞாயிறு முதல் கடைவாரமாகிய சனிக்கிழமை வரை, வரிசைக் கிரமமாக கிழமைகள் அமைந்த கால த்வனியை ஆன்மீக ரீதியாக ஆய்தல் வேண்டும். ஆன்மீக ரீதியாக ஆய்தல் எனில், ஏன் இவ்வாறு வந்தமைந்தது என்பதை விட, இறையருளால், உத்தமர்கள் இவ்வாறு அமைத்துத் தரக் காரணமென்ன, என்ற பணிவுடைப் பாங்கே சாலச் சிறந்ததாகும்.
இன்று உலகமெங்கும் நிலவி வரும், ஞாயிறு முதல் சனி வரையிலான, ஏழு கிழமைகளின் வரிசைக் கிரம அமைப்பானது, பண்டைய பாரத ஜோதிடப் பூர்வத்தில் இருந்து தோன்றியதாகும். இதில், ஏழு என்ற எண்ணிக்கையில் ஒரு வாரச் சுற்று ஏற்படுவதற்கும், எண்ணற்ற வகையிலான ஆன்மீகக் காரணங்கள் உண்டு. இதே போல, தினசரியுமே, சூரிய ஹோரை, சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, சந்திரன் ஹோரை, சனி ஹோரை, குரு ஹோரை, செவ்வாய் ஹோரை என்ற வகையில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஹோரை மாறும் வரைமுறையும், பலத்த ஆன்மீகக் காரணங்களையும் கொண்டுள்ளதாகும்.
இந்த வகையிலான ஏழு கிரக ஹோரை அமைப்பு வரிசைக் கிரமமானது, வானத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பு வரிசையைக் குறிக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமானதாகும். பண்டைய விஞ்ஞானம் இவ்வாறு ஸ்திரமான, சாசுவதமான, பக்க விளைவுகள் அற்ற வகையில், விஞ்ஞானத்தில் மேன்மை பெற்றுப் பொலிவதற்கான மூத்த காரணம், பண்டைய விஞ்ஞானத்தில் நன்கு பூத்திருந்த இறைமைப் பண்பாகும்.

ஸ்ரீசப்தகணபதி மூர்த்திகள் லால்குடி

இறையருளால்தான் அனைத்துமே அறிய வல்லவை, இறைவனே தேவையானவற்றைத் தேவையானவர்கள் மூலம் மனமுவந்து அருளுவார், எனினும் அனைத்திற்கும் மானுட உடல், மனம், புத்தி ரீதியான மனித முயற்சிகளும், கடுமையான உழைப்பும் தேவை என்பதாக, விஞ்ஞான அறிவானது, ஆய்வானது, அடிப்படை சத்தியக் கோட்பாட்டை ஒட்டி அமைந்து வந்ததாகும்.

ஆனால், தற்போது விஞ்ஞானிகள் பலரும் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். மேலும் விஞ்ஞானி எனில், இறைமையில் நம்பிக்கை கொள்ளலாகாது என்ற தவறான அணுகுமுறையும் உள்ளது. உள்ளூரக் கடவுளை நம்பிடினும், வெளியுலகப் பார்வைக்காக நம்பிக்கை இன்மைப் போர்வை விஞ்ஞானத்தில் அநாவசியத் தேவையாகி விடுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற மேல் நாட்டு விஞ்ஞானிகள் பலரும் இறைவனை வேண்டியே ஆராய்ச்சிகளைத் தொடங்கினர். இன்றும் தொடர்கின்றனர் என்பது பரமானந்தச் செய்தியாகும்.
ஜோதிடக் கணிப்புகள் பலவும், (சனிக்கிழமையான) ஸ்திர வார நாளில், நன்கு வலுவான ஸ்திர சக்தி கூடிய நல்வரங்களைப் பெறுவதால், ஜோதிடர்கள், சனிக்கிழமை தோறும் ஸ்திர சக்திகளுக்கான பூஜைகளை மேற்கொள்தல் வேண்டும்.
மனம், புத்தி, உள்ளம் ஸ்திரமாக இருந்தால்தான், நல்லறிவும் ஸ்திரமாக வந்து சேரும். ஆயுள் ஸ்திரம், ஆரோக்ய ஸ்திரம், புத்தி ஸ்திரம் என்று முக்கியமான ஏழு ஸ்திர சக்திகள், ஜீவிதத்திற்கு மிகவும் தேவையானதாகும்.

வாரத்தின் இறுதி நாளாகத் துலங்குவதால், பலவற்றையும் நிறைவு செய்யும் நாளாகவும் சனிக் கிழமை விளங்குகிறது. ஞாயிற்றம்பலச் சித்தர் எனும் உத்தமச் சித்தர்பிரான், ஞாயிறு தோறும் ஆக்கப் பூர்வமான ஏழு வகையான நூதன சூரியக் கிரணங்களை, ஏழு பூமி மண்களாலான ஏழு அகல் விளக்குகளில் திவ்யமான ஏழு சுடர்களை தீபச் சுடராக ஏந்தி, பல பாஸ்கர சக்தித் தலங்களிலும் வழிபட்டு வருவார். இதற்கான ஆதார பூஜைகளை அவர் சனிக்கிழமை அன்று தொடங்கும் தலமே, ஞாயிற்றம்பல பகவதித் தலமாகும்.
சப்தமி என்பது ஏழாம் திதி நாளாக அமைந்து, மனிதனின் ஜீவசக்திக்கான ஆதார நிலைகளுள் ஒன்றாகத் துலங்குகிறது. ஏழு விதமான சப்தப் புலன்களைச் சீரமைத்து தரும் திதியாக, வாரத்தின் ஏழாம் நாளில் வந்தமையும் சப்தமித் திதியானது, ஜீவன்களில் நாளங்களில் ஸ்திர சக்திகளை நன்கு மேம்படுத்துகிறது.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

நாட்டின் பாதுகாப்புக்கான படைத் துறையில் கூட, ஏழாம் படை என்று தற்போது கேலியாகச் சொல்லும் ஏழாம் படையான துறையும், படைக்கு ஸ்திர சக்திகளைத் தருவதாக உதவுவதாக அமைந்தது. ஏழு தலைமுறைக்குச் சொத்துத் தேறும் என்ற சொல் வழக்கும் ஏழின் ஸ்திர தன்மைகளை குறிக்கிறது.
திதிகளுள் ஸ்திரத் தன்மை கொண்டது சப்தமித் திதியாகும். தர்ப்பண சக்தியும், ஆசிகளும் ஏழேழு தலைமுறைக்குத் செல்லும், என்ற சொல் வழக்கும் ஏழு தலைமுறைகளின் ஸ்திரக் கூட்டமைப்பை உரைக்கின்றது. ஏழுர் நாட்டாண்மை என்பதாக ஒரு சமுதாயப் பகுதிக்கு ஸ்திரம் சேர்க்க, ஏழு ஊர்களின் சத்சங்க அமைப்புத் தேவைப்படுகிறது என்பதைக் குறிப்பதாகும்.
இவ்வாறாக, தற்போதைய கலியுகத்திற்குத் தேவையான மனோதிட ஸ்திர சக்திகள் பூரிக்கும், சனிக் கிழமையும், சப்தமியும் சேர்ந்து வரும் நாளில் ஏழு கனிகளாலான மாலை, பஞ்சாமிர்தத்தை (சப்தாமிர்தம்), ஏழு சிவமூர்த்திகள், ஏழு பெருமாள் மூர்த்திகள், சப்த மாதர்கள், சப்த கன்னியர்களுக்குப் படைத்திடுக!
உதி மாநெருப்பு என்பதாக, எப்போதும் அக்னி இருந்து கொண்டிருக்கும் தலங்களில் (ஷிர்டி, மயிலாப்பூர் ஷிர்டி பாபா ஆலயம் போன்றவை), ஏழு வகைச் சமித்து குச்சிகள், ஏழு வகை மூலிகை விறகுகளை இடுதல் / அளித்தல் விசேஷமானதாகும்.  

இதயத்திற்கு பலம்

மனமும், இருதயமும் பலவீனமாக உள்ளவர்கள், மூல நட்சத்திர நாள் முழுதும், ஸ்ரீஆஞ்சநேயத் துதிகளை ஓதி, பானக தானம் செய்து வந்தால், நாம் பலவீனமாக இருக்கிறோமோ என்ற பீதி அகன்று, வாழ்க்கையைச் சமாளிப்பதற்கான மனோ வைராக்யமும், திடகாத்திரம் வந்து சேரும்.
மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு, என்பது முத்தான காயத்ரீ மந்த்ர ஜப வாக்ய நியதிகளில் ஒன்றாகும். இதற்கான ஆன்மீகச் செறிவு நிறைந்த அர்த்தங்கள் பற்பல!
பூணூலைப் பிடித்தவாறுதானே ஸ்ரீகாயத்ரீ மந்த்ர ஜபம் நிகழ்கிறது. ஸ்ரீகாயத்ரீ மந்த்ரம் உலகப் பொது மந்திரம் என்பதனால், தினமுமே மூன்று வேளையும் ஜாதி, மத, பேதமின்றி யாவரும் ஸ்ரீகாயத்ரீ மந்த்ர அர்க்யத்தை நிகழ்த்துதல் வேண்டும். தினமுமே மூன்று வேளையும் ஆற்ற இயலாவிடில், மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு, என்ற மறைவாக்யத்திற்கு ஏற்ப, மாதந்தோறும் மூல நட்சத்திர நாள் முதல் அவிட்ட நட்சத்திர நாள் வரை ஐந்து தினங்களுக்கேனும், தினமும் மூன்று வேளையும் ஸ்ரீகாயத்ரீ மந்த்ர அர்க்யத்தை நிகழ்த்துதல் வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் ஒரு வேளை உணவு, நீராகாரம் மட்டும் என்பதாக, நல்விரதம் மேற்கொண்டு, ஆவணி மாதம் அவிட்ட நாளில் விரதத்தை நிவர்த்தி செய்தும் சங்கல்பச் சித்சக்திகளை அளிப்பதாகும்.
மேலும், பன்னெடுங் காலம் ஆலயத் திருப்பணிகளையும், அன்னதானத்தையும் நிகழ்த்தியும், இவற்றை நடத்திட உறுதுணையாக இருந்தும், தீதும் நன்றும் பிறர் தர வாரா, தன் கர்ம வினைகளின் விளைவுகளே இன்ப துன்பங்கள் என உணர்ந்து, தன்னை ஆழ்ந்த பக்தியுடன் பூஜிப்பவர்களுக்கு, சனீஸ்வரர் தன் தசா, புக்தி, அந்தரப் பீடிப்புக் காலத்தைச் சற்றே தணித்துக் கொண்டு, ஆவணி மாத மூலத்தில் பீடித்து, ஐந்து நாட்களுக்கு மட்டும் தன் பிடிப்பை வைத்துக் கொள்கிறார் என்பதும் மகத்தான பாக்யம்தானே! இந்த ஐந்து நாள் காலம் சனீஸ்வர லோகத்தின் காலக் கணக்கில் அரை நாழிகை ஆவதால், இதனை அரை நாழிகைச் சனிப் புலம் எனச் சித்தர்கள் உரைக்கின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை

இந்த ஐந்து நாள் மாதாந்திர விரதத்தில், ஒவ்வொருவரும் எவ்வகையிலேனும் ஏதேனும் ஒன்றை விட்டு விரதம் இருக்க வேண்டும். அதாவது, ஆவணி மூல நட்சத்திர நாளில் தொடங்கி ஆவணி அவிட்ட நட்சத்திரம் வரையும், மாந்தோறுமாகவும்,
இனிப்பு, புளிப்பு, உப்பு என்ற மூன்றினுள் ஏதேனும் ஒன்றை முழுமையாகத் தவிர்த்து உணவருந்தி விரதம் ஐந்து நாட்களுக்கு விரதம் இருத்தலால்,
எத்தகைய குடும்பச் சுமைகள், பணக் கஷ்டங்களின் ஊடேயும் ஆண்டவன் எத்தகைய சிக்கல்களில் இருந்தும் நம்மை நிச்சயமாகக் காப்பார் என்ற வைராக்யச் சித்தமும் காரண மஹரிஷியின் ஆசியாகக் கிட்டும்.
காரண மஹரிஷிப் பெம்மான் மாதந்தோறும், மூலம் முதல் அவிட்டம் நட்சத்திரம் வரையான காலத்தில் மானுட வடிவில் காரண சக்தித் தலங்களில் பூஜிக்கின்றார். காரண சக்தித் தலங்கள் யாவையோ? புராண ரீதியாக விநாயகர், முருகன், பெருமாள், சிவன், அம்பாள் இறை மூர்த்திகளாலேயே பலவற்றுக்கும் காரணங்கள் கற்பிக்கப் பெற்றவையே காரண மஹரிஷி தினமும் பூஜிக்கும் காரண சக்தித் தலங்களாகும். (உ.ம் முருகனே ஓங்காரத்தை விளக்கிய சுவாமிமலை, பேரள மஹரிஷிக்கு இறைவன் நாமசக்திகளை உணர்த்திய திருத்துறைப் பூண்டி அருகே உள்ள பேரளம் சிவத்தலம்)
ஆவணி மூல நாளில் மலைக் கோட்டைப் பிள்ளையாரைக் கிரிவலம் வருதல் விசேஷமாகக் கருதப்படுவதற்கான காரணத்தையும் காரண மஹரிஷியே விளக்குகிறார்.
காரணத்தான் காரணக் கரணப் பெருமான் எனப் போற்றப் பெறும் விநாயகருக்குரிய ஹரிபாவனத் தோப்புக் கரணம் இட்டு, விபீஷணாழ்வார் விநாயகரிடமே பல போதனைகளைப் பெற்ற அனுபூதியைத் தாங்கி வருவதன்றோ மலைக் கோட்டை விநாயகப் புராணம்.
மேலும், ஆத்ம விசார ஞானகாரண சக்திகள் நிறைந்த ஞான தட்சிணாமூர்த்தி, ஞானாம்பிகை, ஞான சரஸ்வதி, ஞானேஸ்வரி போன்ற ஞான சக்தி மூர்த்திகள் அருளும் தலங்களும் (காளஹஸ்தி, கோயம்பேடு, கூத்தனூர், உத்தமப் பாளையம்) காரண சக்தித் தலங்களாகின்றன.
ஸ்ரீகோபால கிருஷ்ண பாரதியாரின் “காரணம் கேட்டு வாடி ....” என்ற  பூர்வி கல்யாணி ராகத்தில் உள்ள அற்புதமான தமிழ் கீர்த்தனை ஒன்று உண்டு.

காரணம் கேட்டு வாடி (சகி)
காதலன் சிதம்பரநாதன்
இன்னும் வாராத
காரணம் கேட்டு வாடி!

பூரண தயவுள்ள
பொன்னம்பலத் துறையும்
என் பொறுமையைச்
சோதிக்க மறைமுகமானதன்
காரணம் கேட்டு வாடி!
கல்லாலும் வில்லாலும்
கட்டி அடித்தேனோ
கண்ணப்பன் செய்ததைக்
கனவில் நினைத்தேனோ
செல்லா மனைக்குத்
தூது சென்றுவா என்றேனோ
செய்யாத காரியம்
செய்ய முன் நின்றேனோ
காரணம் கேட்டு வாடி!
இத்தகைய பூர்வி ராகத் துதிகளை, மூல நட்சத்திர நாளில் பாடுவது மிகவும் விசேஷமானது. மனதை உறுத்திக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்கு சுமுகமாகத் தீர்வுகளைப் பெறுவதற்கு பூர்வி கல்யாணி ராகப் பாடல்கள் உதவும்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

திருச்சி மலைக் கோட்டை கிரிவலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைவதால் காரணம், காரியம் இன்றி தான் குடும்பத்தில், அலுவலத்தில், தொழிலில் தண்டிக்கப்பட்டதாக எண்ணி குமுறிக் குமுறி வாழ்வோருக்கு, நல்லப் பரிகாரங்களைப் பெற்றுத் தரும் மகத்தான வழிபாடாகவும், ஆவணி மூல நட்சத்திர நாளிலான திருச்சி மலைக் கோட்டை கிரிவலம் அமைகிறது.
எனவே ஆவணி மூல நட்சத்திர நாளில் தொடங்கி வரும் ஐந்து நாட்களிலும்
1. பொய் பேசுவதில்லை
2. உப்பு, காரம், புளி இதில் எதேனும் ஒன்றைச் சேர்ப்பதில்லை
3. காபி, டீ அருந்துவதில்லை
4. புலால் உண்பதில்லை
5. பிறர் மேல் குறை காண்பதில்லை
6. காலில் பாதணிகள் அணிவதில்லை
என்ற வகையில் அவரவர் தினசரி வாழ்க்கைக்கு ஏற்ப, ஏதேனும் ஒரு சங்கல்பத்தை ஏற்று நடத்தி, அருகில் உள்ள மலை, குன்று தலத்தில் வலம் வந்து அல்லது ஆலயக் குளத்தையும் கோயிலையும் சேர்த்து ஆறு முறை வலம் வருக. தினமும் தேனில் ஊறிய நெல்லிக்காய் தானம் மிகவும் விசேஷமானதாகும். இருதயத்திற்கு பலமூட்ட வல்ல வழிபாடு.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam