அமிர்தத்தைப் படைத்த ஈசன்தான் ஆலகால விஷத்தையும் படைத்தான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்திருவிசயமங்கை சிவத்தலம்

சுவாமிமலை அருகிலுள்ள திருவிசயமங்கை சிவத்தலம் அர்ச்சுனம் பாசுபத அஸ்திரம் பெற்ற சிறப்பான தலமாகும். அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் அளித்ததோடு திருவிஜயமங்கை ஈசனின் பணி முடிந்து விட்டதா ? இல்லையே. அதற்கு முன்னும் பின்னுமாக ஈசனின் அருட்பணிகள் எத்தனையோ. ஆனால், இது போன்ற புராண சம்பவங்கள் ஈசனின் அருட் பாங்கினை குறிப்பதால் நமக்குத் தேவைப்படும் அருட்சக்திகளை அந்தந்த திருத்தலஙகளிலிருந்து பெற நமக்குத் துணை புரிவதால் நாம் இத்தகைய இதிகாச, புராண சம்பவங்களை நினைவு கூர்கின்றோம். நாம் எடுக்கும் எந்த காரியத்திலும் நமக்கு வெற்றியைத் தேடித் தருவதே விஜயமங்கை ஈசனின் அருள் வழங்கும் தன்மையாக இருந்தபோதிலும் இந்த வெற்றி தரும் ஈசனை பூலோகத்தில் நாடுவோர் கிடையாதே ஏன் என்ற எண்ணம் இவரை தரிசிக்கும் பலருக்கும் தோன்றுவதே இயல்பே. இதற்கு காரணம் நல்ல குறிக்கோள்களுக்கு மட்டுமே திருவிஜயமங்கை ஈசனின் அருள் சுரக்கும் என்பதே உண்மை. இதை பலரும் உணர்ந்துள்ளதால் திருவிஜயமங்கையை நாடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.


ஸ்ரீவிஜயநாதர் திருவிசயமங்கை
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்லாம். நல்ல காரியம் நிறைவேற இறைவனை நாட வேண்டுவதன் அவசியம் என்ன ? நல்ல காரியம் என்றாலே அது இயற்கையாகவே வெற்றியைத் தானே தர வேண்டும் என்று தோன்றலாம். உண்மையில் நல்ல காரியமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த காரியமாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எத்தனையோ தடங்கல்களும் போராட்டங்களும் வரும் என்பது இயற்கையே. நல்ல காரியம் என்பதால் மட்டும் ஒரு காரியத்தை சுலபமாக நிறைவேற்றிவிட முடியாது என்பதை உணர்த்துவதும் திருவிசயமங்கையின் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். உண்மையில் தவறான ஒரு காரியத்திற்கு கை கொடுக்கும் தேவதைகளின் எண்ணிக்கையை விட நல்ல காரியத்திற்கு துணை நிற்கும் தேவதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். உதாரணமாக நீங்கள் தெரியாத ஒரு ஊரில் சாராயக் கடைக்கு வழி கேட்டால் உடனே அதற்கு வழி சொல்ல பலர் முன் வருவார்கள். ஆனால், ஒரு சிவாலயம் என்றால் அதைத் தங்கள் முதுகுப் பின்னால் வைத்துக் கொண்டே அப்படி ஒரு கோயில் அங்கு இல்லவே இல்லை என்று சாதிப்போரும் உண்டு. விஜயம் என்றால் வெற்றி. இவ்வாறு வெற்றியை தன் பெயரிலேயே உடைய திருத்தலமே திருவிஜயமங்கையாகும். இத்தல ஈசனை தரிசிப்பவர்கள் அனைவரும் தங்களுடைய நியாயமான பிரார்த்தனையில் வெற்றியை அடைவார்கள் என்பது உறுதி. அர்ச்சுனன் விஜயன் என்ற திருநாமத்தை இத்தலத்தில் பெற்றதால் தான் எடுத்த எந்த காரியத்தையும் வெல்லும் வெற்றி வீரனாகத் திகழ்ந்து எம்பெருமானான பசுபதியிடமே பாசுபத அஸ்திரத்தைப் பெறும் தகுதி பெற்றவனானான்.


ஸ்ரீதுவார சக்தி கணபதி விசயமங்கை
துவார சக்தி அம்பிகை என்று சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருத்தலம் போன்ற சில குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே எழுந்தருளிய தெய்வ மூர்த்திகள் உண்டு. இத்தகைய துவார சக்தி அம்பிகைகள் பெண்கள் பூப்பு அடைதல் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தருபவர்களாக அமைகிறார்கள். இவ்வாறு துவார சக்தி அம்பிகைகள் எழுந்தருளாத திருத்தலங்களில் இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகளே பெண்களின் பூப்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூர்த்திகளாகத் துலங்குகிறார்கள். எனவே கன்னிமூலை கணபதி, நர்த்தன கணபதி, ஆதிரை கணபதி, ஆநிறைகொண்ட கணபதி என்றவாறாக ஒவ்வொரு கணபதி மூர்த்தியின் அனுகிரக பாங்கும் வித்தியாசம் உடையதே. திருச்சி நாகநாத சுவாமி கோயில் போன்ற திருத்தலங்களில் உள்ள துவார சக்தி கணபதி மூர்த்திகள் இத்தகைய விசேஷ சக்திகளுடன் துலங்குகிறார்கள். அனைத்து விதமான நாகதோஷங்களுக்கும் நிவாரணம் அளிக்கவல்லவர் திருச்சி ஸ்ரீநாகநாதர் என்றாலும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதுவார கணபதி மூர்த்தியை வணங்கினாலே எல்லாவிதமான நாக தோஷங்களுக்கும் தீர்வளிப்பதுடன் எத்தகைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற வல்லவர்களே இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகள். உண்மையில் இத்தகைய துவார சக்தி மூர்த்திகள் உள்ள திருத்தலங்களில் மூலவரிடம் சுயநலமற்ற பொது பிரார்த்தனையை சமர்ப்பிப்பதே உசிதமானது. மற்ற பிரார்த்தனைகளை இந்த கணபதி மூர்த்திகளே செவிமடுத்து நிறைவேற்றி விடுகின்றனர் என்பது இவர்களின் சிறப்பு அம்சமாகும். பெண்களில் சில குழந்தைகள் 6, 7 வயதில் பூப்பு அடைந்து விடுவர். ஆனால் அவர்களுடைய உடல் மன வளர்ச்சியோ போதுமான அளவில் இல்லாததால் இது குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் அக்குழந்தைகளுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை கொள்வர். சில பெண் குழந்தைகள் 15, 20 வயதாகியும் பூப்பு அடையாமல் பெற்றோர்களுக்கு மிகவும் மன வேதனையை அளிப்பது உண்டு. இவ்வாறு பூப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் மூர்த்தியே இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகள் ஆவர். சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் தேங்காய் துருவல் கலந்த நீர்க் கொழுக்கட்டையை தானமளித்தலால் இத்தகைய பிரச்னைகளுக்கு அது ஒரு தீர்வாக அமையும்.


அர்ச்சுன தீர்த்தம் திருவிசயமங்கை
இங்குள்ள திருக்குளம் அர்ச்சுன தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. கரப்பான் பூச்சி, சுண்டெலி என்று எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் தன்மை உள்ளவர்கள் ஏராளமாய் உண்டு. இத்தகையோர் இங்குள்ள அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடி வியாழக் கிழமைகளில் அவித்த சுண்டல் தானம் செய்து வந்தால் எடுத்த காரியத்தை மன தைரியத்துடன் நிறைவேற்றி காரிய சாதனை படைப்பார்கள். பல அற்புத மரங்கள் கொண்ட இத்தலத்தில் தலவிருட்சம் ஒன்றும் அமையவில்லை. மருத மரமே இத்தலத்திற்கு உரிய தலவிருட்சமாக சித்தர்கள் அறிவிக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட பக்தர்கள் மருத மரத்தை இத்தல விருட்சமாக நட்டு பாதுகாத்து வந்தால் திரு விஜயமங்கை ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவார்கள். அர்ச்சுனன் இறைவனிடமிருந்து பெற்ற பாசுபத அஸ்திரமானது பொதுவாக அந்த அஸ்திரத்தைப் பெற்றவர்களைத் தவிர பிறர் கண்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்லாமல் அந்த அஸ்திரத்தின் கிரணங்களே மற்றவர்களை அழிவிலிருந்து காக்கும் தன்மை உடையது என்பது உண்மை. அதனால் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனன் தன்னுடைய மற்ற திவ்ய அஸ்திரங்களை விராடபுர அஞ்ஞான வாசத்தின்போது ஒரு மரப்பொந்தில் மறைத்து வைத்து அந்த அஸ்திரங்களைக் காக்க அங்கு தொங்கிய சடலத்தை அந்த மரப் பொந்தின் முன் வைத்து விட்டான். அப்போது பாசுபத அஸ்திரம் பிறர் கண்களுக்குத் தெரியாது என்பதால் அந்த அஸ்திரத்தை கழற்றாமல் விராடபுர அஞ்ஞான வாசத்தின்போதும் தன்னிடமே வைத்திருந்தான். அதனால்தான் ஒரு முறை விராடபுர ராஜா நகுலனுடன் ரதத்தில் பயணம் செய்தபோது குதிரைகள் சட்டென ஓரிடத்தில் நின்று விட்டன. காரணம் கேட்டதற்கு அதனருகில் சென்ற நகுலன் குதிரைகளின் மொழியை அறிந்திருந்ததால் சற்று நேரத்தில் சுமார் மூன்று ஆள் உயரத்திற்கு அதாவது 18 அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம் வரும் என்பதை உணர்ந்து ராஜாவுடன் அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி உயர் தப்பினான். இவ்வாறு அரண்மனையில் மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனன் அணிந்திருந்த பாசுபத அஸ்திரத்தின் மகிமையால் நகுலன் மட்டுமல்லாது விராட தேசத்து மன்னன், குதிரை அனைவரும் காட்டாற்று வெள்ளத்திலிருந்து உயிர் தப்பினர். இவ்வாறு 18 உயரத்திற்கு எழுந்த காட்டாற்று வெள்ளத்தைப் பற்றி பேசப் புகுந்தால் அதுவே பெரியே புராணமாக மாறும் என்பது சித்தர்களின் குறிப்புரை.


ஸ்ரீமங்களநாயகி திருவிசயமங்கை
பாரதப் போரில் தர்மத்தைக் காக்க விஜயனின் ஆயுதங்கள் பயன்பட்டதால் அந்த அஸ்திரங்களைக் காத்த எதற்கும் பயன்படாத சடலமும் அந்த பட்டமரமும் உய்வடைந்து விராட பூமியிலிருந்தே மறைந்து விட்டன. நல்ல காரியத்திற்காக பயன்படும் எந்தப் பொருளுமே உய்வடையும் என்பதே உண்மை. இதை தெளிவுபடுத்துவதும் திருவிசயமங்கை ஈசனின் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். விராடபுரத்தின் அருகில் உள்ளதே தற்போதைய சஞ்சீவராயர் மலை அமைந்த பாடலூர் திருத்தலமாகும். அத்தல ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை தரிசனம் செய்து விட்டு தன்னுடைய துணைவியாருடன் திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீஅகஸ்திய விஜய அடியார் ஒருவர். அவர் சாலையைக் கடக்கும்போது சுமார் 150 கிமீ வேகத்தில் வந்த ஒரு ரேஸ் பைக் அவர்கள் மேல் மோதாமல் எவ்வாறோ அவர்களைக் கடந்து சென்று அம்மூவரும் காப்பாற்றப்பட்டனர். எனவே திருவிசயமங்கை, விராடபுரம், பாடலூர் இவையெல்லாம் பார்த்து தரிசனம் செய்து அனுபவிக்க வேண்டிய திருத்தலங்களாகும். உயிர்காக்கும் உத்தம தலங்களிவை. திருவிசயமங்கை தலத்தின் முகப்பு வாயிலில் ஸ்ரீநிருத்த கணபதி எழுந்தருளி இருப்பது அபூர்வமான ஆயத்த கோலமாகும். பொதுவாக இறைச் சன்னதிகள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ எழுந்தருள்வது உண்டு. கிழக்கு திசையே எல்லா திசைகளுக்கும் ஆரம்ப திசையாக இருப்பதால் புதிதாக வேலைக்கு அமர்தல், தேர்வுகள் போன்று புதிதாக ஆரம்பிக்கும் காரியங்களுக்கு முன்னால் இவ்வாறு கிழக்கு நோக்கிய மூர்த்திகளை தரிசனம் செய்தல் சிறப்புடையதாகும். மேலும் தெற்கு நோக்கும் ஸ்ரீநிருத்த கணபதி இத்தலத்தில் கோயில் வாயிலிலேயே ஆயத்தமாக எழுந்தருளி இருப்பது எத்தகைய நற்காரியங்களுக்கும் காரிய சித்தியை தரவல்ல தன்மையைக் குறிப்பதால் இவர் கிடைத்தற்கரிய தரிசன மூர்த்தியாக அமைகிறார்.


ஸ்ரீதட்சிணாமுர்த்தி திருவிசயமங்கை
நிருதி கணபதி வேறு நிருத்த கணபதி வேறு என்பதை இறையடியார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நிருதி மூலை என்னும் கன்னி மூலையில் தென் மேற்கு திசையில் எழுந்தருளியுள்ள கணபதி மூர்த்தியே கணக்கு, விஞ்ஞானம் போன்று மனதில் பதிய வைக்க கடினமான பாடங்கள கிரகிக்கவல்ல மனோ சக்தியைத் தரவல்லவர். திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரபிரசாதியாக அமைவதால் கன்னி மூலை கணபதி என்றும் போற்றப்படுகிறார். நிருத்த கணபதி மூர்த்தி என்பவர் பொதுவாக கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ள கணபதி மூர்த்தி ஆவார். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். இரு கால்களையும் சமநிலையில் வைத்து நாட்டிய கோலத்தில் அருளும் தெய்வமே நிருத்த கணபதி ஆவார். நாட்டியம் மட்டுமல்லாமல் கராத்தே, குங்பூ போன்ற சண்டை பயிற்சிகளிலும் திடமான ஆரம்பநிலை பயிற்சியாக அமைவதும் நிருத்த நிலையே ஆகும். நிருத்த கணபதி என்பவர் நவமி என்ற ஒன்பதாம் திதிக்கு உரிய மூர்த்தி ஆவார். ஒன்பது என்பது பூரண எண்ணாக அமைவதால் இவர் பூரணத்தைக் குறிக்கும் கணபதி மூர்த்தியாகவும் அருள்கிறார். எனவே இந்த நிருத்த கணபதியை தரிசனம் செய்த அர்ச்சுனன் பூரண இறையம்சம் கொண்ட சிவபெருமானை வேடனாக சந்தித்து அவருடன் போரிட்டு பாசுபத அஸ்திரம் பெற்றது அதிசயம் அல்லவே.


திருவிசயமங்கை
வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி அர்ச்சுனனுடன் மல்யுத்தம் புரிய வேண்டிய அவசியம் என்ன உங்களுக்குத் தோன்றலாம். மனித உடல் பஞ்ச பூதத்திலானாது. பஞ்ச பூதத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உருவில் அர்ச்சுனனுடன் போரிடும் கோலத்தில் அவனுக்கு அனுகிரகத்தை அளித்தால்தான் பஞ்ச பூத உடலைப் பெற்ற அர்சசுனனால் இறை சச்தியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதும் ஒரு காரணம். இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறோம். துர்கை என்ற ஒரு அடியார் இருந்தார். திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். ஒரு முறை அவர் ஒரு மகானைச் சந்திக்க நேர்ந்தது. பூர்வ ஜன்ம தொடர்பினால் துர்கையை ஆட்கொள்ள நினைத்த அந்த மகான் துர்கையிடம், “நான் உன்னைக் காதலிக்கிறேன்,” என்றார். அந்த மகானின் தூய அன்பைப் புரிந்து கொள்ளாமல் சாதாரண மனித நிலையில் இருந்த அந்த பக்தை திருமணமான தன்னை எப்படி ஒருவர் காதலிக்க முடியும் என்று வியந்தாள். உண்மையில் அந்த மகான் ஆண் பெண் என்ற நிலையைக் கடந்த இறை நிலையில் இருந்தார்.


காரைக்கால் சிவாலயம்
கோயிலில் நாம் காணும் லிங்க வடிவம் என்பது ஆண் பெண் என்ற நிலையைக் கடந்த நிலையில் உள்ள இறை நிலையே. மேல் நாடுகளில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையைக் கொஞ்சம்போது, "I love you, darling!" என்று தங்கள் அன்பைத் தெரிவிப்பதுண்டு. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரும் தின்பண்டம், ஆடைகள், வசதிகள் போன்றவற்றில் தங்கள் அன்புப் பரிமாற்றத்தைத் தெரிவிப்பதால் இவ்வாறு வார்த்தைகள் மூலம் தங்கள் தூய அன்பை வெளிகாட்ட வேண்டிய அவசியல் இல்லாது போய்விடுகிறது. இவ்வாறு இறைநிலையில் இருந்த மகான் தன்னுடைய தூய அன்பை வெளிப்படுத்தினாலும் அதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அந்த பெண் அடியார் இருந்ததால்தான் அந்த மகான் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டி வந்தது என்பது இப்போது ஓரளவு புரிகின்றது அல்லவா ? ஆனால் ஒரு பெண்ணிற்கோ ஆணிற்கோ எது ஒருவருடைய மறைமுக ஆசை, எது ஒருவருடைய யதார்த்தமான அன்பு மொழிகள் என்பதை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியாது. இறைவனின் அன்பிற்காக ஏங்கும் பலரும் தங்களுடைய பொருளை, கற்பை மற்றவர்களிடம் பறிகொடுத்து விட்டு பரிதவித்து நிற்பதையும் நாம் இன்று சமூகத்தில் பல இடங்களில் காண்கிறோம். இறைவனின் தூய அன்பிற்காக ஏங்கும் எவரும் எந்த ஆணிடமோ பெண்ணிடமோ ஏமாற வேண்டிய அவசியம் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவதே, தொட்டுக் காட்டுவதே திருவிசயமங்கை திருத்தல சிறப்பாகும். இறை அன்பிற்காக ஏங்கும் ஆணோ பெண்ணோ திருவிசயமங்கை ஈசனை நாடி வலம் வந்து அவர் உத்தரவை ஏற்று அதை மட்டும் நிறைவேற்றுவதால் இறைவனின் திருப்பாதங்களை அடைவர் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு இறைவனின் திருப்பாதங்களை அடைந்த விசயமங்கைகளில் ஒருவரே ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆவார்.


காரைக்கால் சிவாலயம்
இறையருளால் ஒரு பெண்ணுக்குரித்தான சர்வ அங்க லட்சணங்களையும் முறையாகப் பெற்ற புனிதவதி என்ற மங்கை காரைக்கால் அம்மையாராக உருவாவதற்கு உதவிய தலமே திருவிசயமங்கை எனலாம். எனவே அர்ச்சுனன் விசயனாக மாறியது மட்டுமல்லாமல் பெண் குலத் தோன்றலான புனிதவதியார் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் என்ற புனித பட்டம் பெறுவதற்கு உதவிய தலமும் திருவிசயமங்கை என்பதைப் பலரும் உணர்ந்திருக்க நியாயமில்லை. புனிதவதியார் தன்னுடைய கணவனை இறைவனுக்காக பிரிந்தபோது சர்வ அங்க லட்சணங்களும் முறையாகப் பெற்ற ஒரு பெண் இந்த சமுதாயத்தில் சுதந்திரமாக இறைவனுக்காக கூட வாழ முடியாது என்பதை உணர்ந்ததால் தன்னுடைய இயற்கை அழகை இறைவனிடம் அர்ப்பணித்து பேயுருவத்தை பெற்றுக் கொண்ட தலமே திருவிசயமங்கை ஆகும். அதனால்தான் சாதாரண மங்கையாக இருந்த புனிதவதியார் ஸ்ரீகாரைக்கால் அம்மையாராக உயர்ந்து தாயும் தந்தையும் அற்ற இறைவனாலேயே “தாயே” என்று அழைக்கப்படும் பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு மட்டுமல்லாமல் 63 நாயன்மார்களில் அமரும் தகுதியைப் பெற்ற ஒரே பெண் திலகமும் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆவார்.


நந்தியுள் நந்தி விசயமங்கை
அர்ச்சுனம் என்றால் பொன்மயமான, வெண்மை என்றெல்லாம் பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள அர்ச்சுன தீர்த்தத்தில் அர்ச்சுனன் நீராடியதால் இத்தீர்த்தத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது என்ற காரணம் கிடையாது. உண்மையில் அர்ச்சுனன் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதே இத்திருத்தலத்தில் உள்ள அர்ச்சுன தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் குழந்தையைப் போன்ற வெண்மையான, பொன்னைப் போன்ற தூய்மையான மனதையும் பெறுவர் என்பது இத்தீர்த்தத்தின் சிறப்பாகும். எனவே ஒருவர் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை இப்பிறவியில் பெறுகிறார் என்றால் அவர் ஏதோ ஒரு பிறவியில் நிச்சயமாக இத்திருக்குள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டிருக்கிறார் என்பது பொருளாகும். எனவே ஒருவர் இப்பிறவியில் இந்த அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடினால் அவருடைய கர்ம வினைகளைப் பொறுத்து அவர் இப்பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளிலோ நிச்சயம் பொன்னைப் போல், குழந்தை மனம் பெற்றவராய் மாறுவார் என்பது உறுதி. அதனால்தான் என்னவோ தற்போது இத்தீர்த்தம் வறண்டு கிடப்பது போல் தோன்றுகிறது. வறண்டிருக்கும் இத்தகைய சமயங்களில் தங்கள் இல்லங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து இங்கு தர்ப்பணம் அளிப்பதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இவ்வாறு பொன் மனச் செம்மலாய் மாறியவர்களே, “பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டெனில் உனை என்றும் மறவாமை வேண்டும்,” என்று இறைவனை நோக்கிப் பாடும் மனம் பெற்றவர்களாய் மாறுகின்றார்கள். இறைவனைத் தவிர, இறைச் சுவையைத் தவிர வேறு எதையும் பெற விரும்பாதவர்களாய் ஆகிறார்கள். அத்தகைய பேற்றைத் தரக் கூடியதே அர்ச்சுன தீர்த்த நீராடலாகும்.


ஸ்ரீபைரவமூர்த்தி திருவிசயமங்கை
பலரும் ஆலயங்களில் தரிசனம் செய்யும் அர்த்தநாரீஸ்வர சொரூபத்தை சரியாகப் புரிந்து கொள்வது கிடையாது. மக்கள் வழக்கில் ஆணும் பெண்ணும் கலந்த பிறவியை அலி பிறவி என்று சொல்கிறோம். இது மனிதர்களிடையே காணக் கிடைப்பது. ஆனால் இறைவனின் அர்த்தநாரீஸ்வர சொரூபம் என்பது ஆண் பெண் தத்துவத்தை தாண்டி நிற்பது. இந்த அர்த்தநாரீஸ்வர தத்துவ பிறவியை அனுகிரகமாக பெற்றவன்தான் அர்ச்சுனன். அதனால்தான் ஆண் பெண் தாண்டிய மறுபிறவியில் வேடர் குலத்தில் கண்ணப்ப நாயனாராக பிறவி கிட்டியது. உண்மையில் கண்ணப்ப நாயனார் என்ற பிறவி ஆண் பெண் தத்துவத்தின் இறுதியில் அமைந்ததே. சித்தர்களும் மகான்களும்தான் கண்ணப்ப நாயனாரின் பிறவி இரகசியம் பற்றி முழுமையாக அறிந்தவர்கள். திருவிசயமங்கை தீர்த்தத்தில் நீராடி இறைவனை முறையாக வழிபாடுவோர்க்கே இத்தகைய ஆண் பெண் தாண்டிய பிறவி கிட்டும் என்பதையே அர்ச்சுனன் வரலாறும், புனிதவதி காரைக்கால் அம்மையாரின் வரலாறும் சுட்டிக் காட்டும் உண்மையாகும். அர்ச்சுன தீர்த்த மகாத்மியம் சொல் பொருள் கடந்த அற்புதமாகும். ஆழ்ந்து, மூழ்கி, மீண்டும் மீண்டும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷமாகும். வைரத்தில் உள்ள தோஷத்தை நீக்க யாராலும் முடியாது என்பது உண்மையே. ஆனால், தோஷமுள்ள வைரத்தை இரண்டு துண்டுகளாக்கி விட்டால் அந்த இரண்டு துண்டுகளையும் தனித் தனியாக பயன்படுத்தலாம். அவ்வாறு இரண்டாகப் பிரிக்கும்போது அந்த வைரம் இரண்டாகப் பிரியுமா அல்லது பொடியாகி விடுமா என்பதை யாராலும் கூற முடியாது. ஆனால், இந்த அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடி இறை நம்பிக்கையோடு செயல்பட்டால் வைர வியாபாரிகளும் தங்க நகை வியாபாரிகளும் பயனடைவர். விசய மங்கை என்ற பதத்தில் இந்த தோஷத்திற்கான, பிரிவிற்கான இரகசியங்கள் பதிந்துள்ளன.


திரிபுரசம்ஹாரம் திருவதிகை
பசுபதியான சிவபெருமானிடமிருந்து அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற்றபோது அதை சிவனும் அர்ச்சுனனும் மட்டுமே பார்க்க முடிந்தது. காரணம் இங்கு அஸ்திரத்தை கொடுப்பவர், அதைப் பெறுவபவர் இருவரைத் தவிர வேறு எவரும் பாசுபத அஸ்திரத்திதைப் பார்க்க முடியாது என்பது இறைநியதி. எனவே பாசுபத அஸ்திரம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் வர்ணிக்க இயலாது. ஆனால், பாசுபத அஸ்திரத்தைப் பெறுபவர் அதை தன்னுடைய மனத்தால், வார்த்தைகளால், கண்களால், வில்லால் இயக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். அதனால்தான் விஜயன் ஜயத்ரதனைக் கொல்ல எண்ணி பாணத்தை எய்யும் முன்னால் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திரத்தை மனதில் எண்ணிக் கொள்ளுமாறு கூறினார். இதன் பொருள் என்ன ? ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய மைந்தன் அபிமன்யுவைக் கொன்றதால் ஜயத்ரதனை அன்று சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக பிரதிக்ஞை எடுத்திருந்தான் அர்ச்சுனன். அர்ச்சுனன் போன்ற ஒரு வீரன் பிரதிக்ஞை எடுப்பது தவறு கிடையாது. ஆனால், தன்னுடைய மைந்தனைக் கொன்றவனை சூரிய அஸ்தனமனம் ஆவதற்குள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வீரனுக்கு ஏற்புடையது அல்லவே. எனவே பாசுபத அஸ்திரத்தை மனதில் எண்ணினாலே போதும் அது பழி வாங்கும் எண்ணத்தையும் பழிக்குப் பழி என்ற தவறான சபதத்தையும் வேரறுக்கும் என்பதால் அர்ச்சுனனை பாசுபத அஸ்திரத்தை நினைவுக்குக் கொண்டு வருமாறு கூறினார் கீதை நாயகன்.


திருவதிகை வீரட்டானம்
பாசுபத அஸ்திரத்தின் நினைவே பழிக்குப் பழி என்ற தவறான எண்ணத்தையும் காலப் பதட்டத்தையும் வேரறுக்கும் என்றால் பாசுபத அஸ்திரம் எத்தகைய தூய்மை உடையதாக இருக்கும். அதனால்தான் அத்தகைய தூய்மையான அஸ்திரத்தை தாங்கும் நிலைமை யாருக்கும் ஏற்படவில்லை. எனவேதான் மகாபாரத யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனன் பெற்றிருந்தாலும் அதை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பமே அர்ச்சுனனுக்கு கிட்டாமல் போய் விட்டது. இதை உணர்ந்தவன் பகவான் கிருஷ்ணன். அதனால்தான், “மனம்தான் தருவேன் மகாதேவா !” என்று கூறினார் கிருஷ்ணர். பாசுபத அஸ்திரத்திற்கு மகாதேவ அஸ்திரம் என்ற நாமமும் உண்டு. மகாதேவன் என்ற பதத்தின் அருமையையும் பெருமையையும் உணர்ந்தவன் கிருஷ்ணன் ஒருவன்தான். (கிருஷ்ணனை ஏகவசனத்தில் பயன்படுத்துவது சிலரின் மனதை பாதிக்கலாம். சற்குரு பயன்படுத்தியே அதே பதங்களை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு என்ற நோக்கில் பார்த்தால் இதன் சுவையை அறியலாம்) பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற அர்ச்சுனனும் அந்த மனத்தைப் பெறவே அதை உரிய நேரத்தில் நினைவு கூறச் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். இல்லாவிட்டால் பாசத்தால் உந்தப் பெற்று அர்ச்சுனன் தவறுக்குக் காரணமாக மாறி இருப்பான். எப்போதோ ஒரு காலத்தில் அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திர தலத்தை நாம் இன்று வணங்குவதால் என்ன பயன் என்று நினைப்பவர்களுக்கு ஜயத்ரதன் வதம் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு க்ஷணப் பொழுதில் அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திரத்தின் பின்னணியில் இத்தனை இறை இரகசியங்கள் மறைந்திருக்கும், பொதிந்திருக்கும் என்றால் யுக யுகமாக விசயமங்கையில் வீற்றிருக்கும் ஈசனின் திருக்கூத்தின் மகிமையை மனிதர்கள் விண்டுரைக்கத்தான் முடியுமா ?


ஸ்ரீசண்டிகேஸ்வரர் திருவிசயமங்கை
பெண்களின் அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லைதான். அந்த பேரழகையே இறைவனின் காலடியில் சமர்ப்பித்து பேயுருவைப் பெற்றாள் என்பதால்தான் புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்றெல்லாம் அழைக்காமல் பேயார் என்றார் சேக்கிழார் பெருமான். எனவே தியாகத்தின் சின்னமாக இன்றும் விளங்குவதே திருவிசயமங்கை திருத்தலமாகும். பாசுபத அஸ்திரத்தால் யாரும் அழிக்கப்படவில்லை என்றால் அந்த அஸ்திரத்தைப் பெற ஸ்ரீகிருஷ்ண பிரான் அர்ச்சுனனை ஏன் தூண்டினார் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இங்கு வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஒரு விஷயத்தைப் பெறுவதால் அந்த விஷயத்தைப் பெறுபவர்க்கு என்ன பயன் என்று யோசிப்பதை விட அந்த விஷயம் மற்றவர்களிடம் சிக்கினால் பலருக்கும் ஆபத்து விளையும் என்பதால் நல்ல மனம் படைத்த ஒருவர் அதைப் பெற்று பயன்படுத்தாமலே தன்னிடம் வைத்துக் கொள்வதும் ஒரு யுத்த தந்திரமாகும். இவ்வகையில் அமைந்ததுதான் ஏகலவனுடைய கட்டை விரலை குருதட்சணையாக துரோணர் கேட்டுப் பெற்றதாகும். அது போல பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனன் பெற்றிருக்காவிடில் கருணைக் கடலான சிவபெருமான் அதை யாருக்காவது தாரை வார்த்து அளித்திருக்கலாம் அல்லவா ? அவ்வாறு அஸ்வத்தாமா பெற்ற பிரம்மாஸ்திரம் வாங்கிய பழி நாம் நன்கு அறிந்ததே.
விஜயம் என்றால் வெற்றி, மங்கை என்றால் 12, 13 வயதுடைய பெண் என்று பொருள். எனவே வயது வந்த பெண்கள் தங்கள் உத்தம மணாளனாக வரிக்க வேண்டிய தெய்வம் முருகன், கண்ணன், ராமன் என்ற தெய்வங்களே என்ற உண்மையை உணர்த்தும் தலமே திருவிசயமங்கை ஆகும். ஆண்கள் வெற்றி தரும் மங்கையை தங்கள் மணவாட்டியாக நினைக்க வேண்டும் என்று உணர்த்துவதும் திருவிசயமங்கையின் சிறப்பாகும். இத்தகைய சிறப்பைப் பெற்றவரே 14 வயதில் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களை மணாளனாக வரித்த அவர் துணைவியாவார். இது பற்றியே தமிழ்நாட்டில் பல ஊரின் பெயர்கள் தாழமங்கை, அரியமங்கை என்ற நாமத்துடன் விளங்குகின்றன. இந்த ஒவ்வொரு நாமத்திற்கும் பல தெய்வீக தாத்பர்யங்கள் உண்டு. அதனால்தான் ஊர் பெயர்களின் மேல் போஸ்டர்களை ஒட்டி அதன் பெயர்களை மறைத்து வீண் பழிக்கு ஆளாக வேண்டாம் என்று நம் பெரியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருமணமானபோது அவருக்கு வயது 23 அவருடைய துணைவியாரின் வயது ஐந்து. அதனால்தான் அவர்கள் மனம் ஒருமித்த தம்பதிகளாய் வாழ முடிந்தது. தற்போதோ இரண்டு மங்கை வயதையும் தாண்டிய பெண்களைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் சுவைக்கவில்லை என்றால் அது யாருடைய தவறு ?


குருவாய் வருவாய் குகனே திருவிசயமங்கை
அனைத்து யோக நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணர் நிர்விகல்ப சமாதி நிலையை அடைய அவருடைய குருநாதர் ஸ்ரீதோத்தாபுரி எவ்வளவோ முயற்சி செய்த போதும் ஸ்ரீராமகிருஷ்ணரால் காளியின் நினைவிலிருந்து மீள முடியவில்லை. அப்போது ஸ்ரீதோத்தாபுரி ஒரு கண்ணாடியால் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெற்றியைக் கிழிக்கவே ஸ்ரீராமகிருஷ்ணரின் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தவுடன் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சமாதி நிலை கூடியது என்பதைப் பலரும் அறிவர். ஆனால் இந்த நிர்விகல்ப சமாதி கூடிய இரகசியத்தை முழுவதுமாக அறிந்தவர்கள் சித்தர்களே. ராமகிருஷ்ணரிடமிருந்த காளி என்ற பக்தி நிலை என்ன முயற்சி செய்தும் ராமகிருஷ்ணரால் அழிக்க முடியாத ஒரு ‘நான்’ என்ற நிலையாகவே இருந்தது. அதை அறிந்த சற்குரு உடைந்து கிடந்த கண்ணாடி துண்டு ஒன்றின் மூலம் ’நான் காளியின் பக்தன்’ என்று ராமகிருஷ்ணரின் இரத்தத்தில் ஊறிக் கிடந்த நான் என்ற எண்ணத்தை வெளியேற்றி ராமகிருஷ்ணருக்கு சமாதி நிலையைக் கூட்டினார். பின்னர் சமாதி நிலையிலிருந்து வெளியில் வருவதற்கும் ஸ்ரீதோத்தாபுரிதான் ஓங்காரத்தை மூன்று முறை ஸ்ரீராமகிருஷ்ணரின் காதில் ஓதி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். இவ்வாறு குருவே அனைத்து நிலைகளையும் கூட்ட வல்லவர் என்ற குருபக்தியை வளர்ப்பதும் விசயமங்கையின் தரிசனப் பலன்களில் ஒன்று என்பது இத்தல ஈசனை தரிசித்தால்தான் புரிய வரும்.


திருவிடைமருதூர் சிவாலயம்
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’, என்று ஒரு மகான் கூறியதாக முன்னர் தெரிவித்தோம். இது இறை பக்தியின் ஆரம்ப நிலை. கடவுள் தேடலின் முதன் நிலை இது. பக்தியின் இறுதி நிலையாக வருவதே, ‘நான் என்னைக் காதலிக்கிறேன்,’ என்பதாகும். இந்த நிலையில்தான் ஒருவர் தன்னுடைய பெயரையே சுயநாமம் என்ற இறைநாமமாக ஜபிப்பதன் அர்த்தம் புரிய வரும். இவ்வாறு பக்தியின் இறுதி நிலையில் இருப்பவர்களே சித்தர்கள். ஆரம்ப நிலையில் பக்தன் வேறு, இறைவன் வேறாகத் தோன்றுகிறான். இறுதி நிலையிலோ பக்தனும் கடவுளும் ஒன்றாகத் தெரிகின்றார்கள். இந்த இறுதி நிலையில்தான் ஒருவன் இல்லறத்தை துறக்க முடியும். அதனால்தான் சித்தர்கள் இல்லறத்தையே நல்லறமாகப் போதிக்கிறார்கள். ஆரம்ப நிலையில் கணவனாகத் தெரியும் மனிதனே இறுதி நிலையில் கடவுளாகத் தெரிகின்றான். ஆனால், இந்த சம்சார சாகரமோ மற்றவர்களுக்குத் தெரியாது. அந்த குறிப்பிட்ட கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த இல்லற தர்மமாகும். இந்த இல்லற தர்மத்தில் ஊறி நின்றவர்களே ஸ்ரீஅகத்தியர் போன்ற சித்தர்கள். இது அத்வைத தத்துவத்தின் ஆரம்ப நிலையாகும்.


திருவிடைமருதூர்
சப்த புஜங்களும் கலசங்களும் கலந்து நிற்கும் அற்புதம் !
அத்வைத தத்துவத்தின் உச்சக் கட்டத்தில் நின்ற ஸ்ரீரஜனீஷ் ஒரு இளஞ் ஜோடியை கடவுள் தரிசனத்திற்காக தயார் செய்ய முயன்றார். அவர்களை நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற ஆரம்ப தத்துவத்தில்தான் நிற்கச் சொன்னார். ஆனால், அவர்களால் அது முடியாமல் ஒருவர் மற்றொருவரின் உடலைக் காதலிக்க ஆரம்பித்ததால் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டார்கள். இந்த தத்துவத்தை செயல்படுத்த முயன்ற மகான் ஸ்ரீரஜனீஷ் தன்னுடைய சொந்த லோகத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. எனவே அத்வைதம் என்ற பக்தியின் உச்சக்கட்டத்தை திருவிடைமருதூர் திருவிசயமங்கை திருத்தலங்கள் குறிப்பதால் திருவிசயமங்கையில் அர்ச்சுனம் என்னும் மருதமரத்தை தலவிருட்சமாக வைத்துப் பாதுகாக்குமாறு கூறுவதன் மகத்துவம் இப்போது புரிந்திருக்கும். திருமணமான ஐந்து ஆண்டு காலத்திற்குள் இந்த அத்வைத அதாவது பிரிக்க முடியாத ஒருமித்த மனோ நிலையை தம்பதியர்கள் பெற வழிகோலுவதே விசயமங்கை திருத்தலமாகும். தானும் ஈசனும் வேறு அல்ல என்ற நிலையில் கிருஷ்ண பரமாத்மா திகழ்ந்ததால்தான் அவர் பாசுபத அஸ்திரத்தை மனதில் நினைத்துக் கொள்ளுமாறு அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறினார். ‘அத்வைதம் சத்யம்’ என்று மூன்று முறை ஈசனே சிவலிங்கத்திலிருந்து ஓதி முழங்கியதால் அத்வைத ஞானத்தைப் பெறக் கூடிய தலமாக திருவிடைமருதூரும் திருவிசயமங்கையும் திகழ்கின்றன. குருநாதடைய திருப்பாதங்களையோ, திருப்பாதுகைகளையோ, திருஅர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் திருவடிகளையோ மனதில் தியானித்து வருதலால் தன்னுள் முழுமை அடையும் பாங்கிற்கு உறுதுணை செய்யும்.


ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருநறையூர் சித்தீச்சரம்
ரிஷி பஞ்சமி தினங்களில் (உதாரணமாக 14.9.2018) இவ்விரு தலங்களையும் வழிபடுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். வெள்ளிக் கிழமையுடன் வளர்பிறை பஞ்சமி திதி சேர்வதும் சித்த யோகம் 60 நாழிகைக்கு மேல் மூன்று தினங்களுக்கு நிரவி நிற்பதும் எம்பெருமானின் கருணையையே குறிக்கிறது. இடைமருதூரும் விசயமங்கையும் ஆறு எழுத்துக்களுடன் சுக்ர சக்திகளுடன் பொலிவது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது என்று எண்ண வேண்டாம். அனைத்திற்கும் தெய்வீக காரிய காரணங்களை நிரம்ப உண்டு. இத்தகைய தலங்களில் தேங்காய், பழம், பொன் மாங்கல்யம் அல்லது மாங்கல்ய சரடு, பூ, வெள்ளி மெட்டி போன்ற மங்கள, மாங்கல்ய பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தலால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். மேலும் சற்குருவின் பாதக் குறடுகளும் அர்த்த நாரீஸ்வர தத்துவமும் தம்பதிகளைக் குறிப்பதால் இம்மூர்த்திகளுக்கு செய்யும் பூஜைகள், வழிபாடுகள் அற்புத பலன்களை வர்ஷிக்கின்றன. இத்தகைய வழிபாடுகளின்போது தம்பதியர் பஞ்சகச்ச மடிசார் முறையில் ஆடை அணிந்து பூஜைகளை மேற்கொள்வது சிறப்பான பலன்களை நல்கும் என்பது உண்மையே. தங்கள் குழந்தைகள் Blue Whale Challenge, Momo போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க விரும்பும் பெற்றோர்கள் இத்தகைய சுக்ர சக்தி நாட்களில் உரிய தான தர்மங்களுடன் வழிபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என்பது உறுதி. இதனால் அக்குழந்தைகள் போதை, குடிப்பழக்கம் போன்ற தவறுகளுக்கும் ஆட்படமாட்டார்கள் என்பது திண்ணம்.
14.9.2018 அன்று சந்திர பகவான் துலா ராசியில் ஆட்சி பெறும் சுக்கிரன், பிரஹஸ்பதி இவர்களுடன் கலந்து துலங்குவதால் இன்று காரட் துருவல், காய்ச்சின பசும்பால், தேன் கலந்த தானம் மிகவும் சிறப்பாக வலியுறுத்தப்படுகிறது.

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam