வாக்கு நாணயம் வாழ்வின் நாணயமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்


ஸ்ரீபைரவர் ஒழுகமங்கலம்
பைரவ சக்திகள் கோடி கோடியே. இதில் ஒழுகமங்கலத்தில் எழுந்தருளி உள்ள பைரவ மூர்த்தியே திரிகூட்டு பிராண சக்திகள் என்ற மூவகை உயிர் கிரண சக்திகளுடன் எழுந்தருளிய மூர்த்தி ஆவார். சாதாரணமாக நாம் நினைக்கும் ஜனன ஜாதகங்களில் உள்ள நவகிரகங்கள் அனைத்தும் ஒன்றிற்கொன்று இணைந்து பிணைந்து அருள்பாலிக்கின்றனர். இவ்வாறு இருக்கும்போது திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளைப் பற்றி என்ன கூற முடியும் ? ஆனால், இந்த மூர்த்திகளின் தெய்வத் தன்மைகளை ஓரளவு சாதாரண பக்தர்களும் புரிந்து கொள்ள அருள் புரிவதும் அவர்களை வழிபட்டு தெய்வ அனுகிரக சக்திகளை வாரிக் கொள்ள அருள்புரிவதும் சித்தர்களின் வழிகாட்டுதலே ஆகும். இவ்வகையில் ஒழுக என்ற எழுத்துக்கள் ஒ, உ, அ என்ற உயிர் எழுத்துக்களின் ஈற்றைக் கொண்டு அமைவதாலும், இந்த மூன்று எழுத்துக்களின் இடையில், நடுநாயகமாக உ என்னும் கணபதி அட்சரம் விளங்குவதாலும் ஒழுகமங்கலம் ஸ்ரீபைரவ மூர்த்தி திருச்சி உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதரைப் போல் மூன்று சக்திகள் இணைந்த, நிறைந்த உயிர்க் காப்பு சக்திகளுடன் துலங்குகின்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். சில குடும்பங்களில் ஆண்கள் விழிப்புணர்வுடனும் சில குடும்பங்களில் பெண்கள் விழிப்புணர்வுடனும் செயல்பட்டு வீட்டின் உடைமைகளைப் பாதுகாப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். தற்காலத்தில் பெண்களும் வேலைக்குப் போவதால் உத்யோகம் பார்க்கும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தன்னையும் குடும்பத்தையும் பாதுகாக்க இடப் புறம் வாகனம் பார்க்கும் நிலையில் எழுந்தருளி உள்ள ஒழுகமங்கலம் போன்ற திருத்தலங்களில் எழுந்தருளி இருக்கும் பைரவ மூர்த்தியின் வழிபாடு பெண்களுக்குத் தேவையான அதிகப்படியான பாதுகாப்பை வழங்குகிறது. இத்தகைய பாதுகாப்பைப் பெற விரும்பும் பெண்களும் ஆண்களும் சுத்தமான பசு நெய்யால் ஆலயம் முழுவதும் குறைந்தது 108 தீபங்களை ஏற்றி பாம்பன் சுவாமிகள் அருளிய பகைகடிதல் பதிகத்தை ஓதி வருதல் நலம்.


தலவிருட்சம் புன்னை ஒழுகமங்கலம்
ஸ்ரீபைரவ மூர்த்தி மட்டும் அல்லாது இந்த உயிர்க்காப்பு சக்திகளுடன் இணைந்து செயல்படுவதே இத்திருக்கோயிலின் தலவிருட்சமான புன்னை மரமாகும். புன்னை மரத்தில் கோபுரப் புன்னை, ரட்சைப் புன்னை, கருவளர் புன்னை என்ற பலவிதங்கள் உண்டு. இதில் கோபுரப் புன்னை என்ற அபூர்வமான புன்னை மரம் இத்தலத்தில் தலவிருட்சமாகத் தோன்றியுள்ளதே பூலோக மக்களின் அருந்தவப் பயனாகும். இந்த தலமரத்தின் புன்னை கேடயங்கள் என்று வழங்கப்படும் இந்த மரத்தின் காய்களை உற்றுக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். தற்போது திருப்பணியை எதிர்பார்த்து இத்தல இறை மூர்த்திகள் அமைந்துள்ளதால் செம்பருத்தி, கரிசலாங்கண்ணி என்ற தைலங்களால் இங்குள்ள அனைத்து இறை மூர்த்திகளுக்கும் காப்பு நிறைவேற்றி தலவிருட்சம் புன்னையை வலம் வந்து வணங்குதலால் எத்தகைய நோய் நொடி, எதிர்பாராத விபத்துக்களிலிருந்தும் பக்தர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள் என்பது உறுதி.


அபூர்வமாக ஒழுகமங்கலம் திருத்தலத்தில் செம்பாதி என்ற நாமத்துடன் தீர்த்தம் அமைந்துள்ளது. இதுவரையில் முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கும் வழக்கமில்லாத பெண்களும் இத்தீர்த்தத்தில் முகம் நிறைய மஞ்சள் பூசி நீராடுதலால் பெண்களுடைய உடல் சம்பந்தமான பல குறைபாடுகளும் நிவர்த்தியாகும். பல பெண்களுக்கும் உடல் சம்பந்தமான, வெளியே சொல்ல முடியாத பல பிரச்னைகளும் சேர்ந்து அவர்கள் இல்லற பந்தங்களை நிறைவேற்ற முடியாமல் செய்வதுண்டு. அத்தகையோர் பிரச்னை எதுவாக இருந்தாலும் இந்த செம்பாதி தீர்த்தத்தில் மஞ்சள் நீராடலை நிறைவேற்றி வந்தால் தங்கள் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரண வழிகள் காட்டப் பெறுவர். நீங்கள் அறிந்த கண்ணகி முற்பிறவி ஒன்றில் செம்பாதி தீர்த்தத்தில் நீராடியே கற்புக்கரசியாக விளங்கினாள். தற்காலத்தில் பல பெண்களும் ஏங்கிப் பெறக் காத்திருக்கும் அளவுக்கு மீறிய செல்வ செழிப்புடன் விளங்கிய கண்ணகி இத்தகைய செல்வச் சீமாட்டியாகத் துலங்கியதற்கு இந்த செம்பாதி தீர்த்த நீராடலே முக்கிய காரணமாகும். பாண்டிய நாட்டின் மகாராணியே முத்துக்கள் பதித்த சிலம்பை அணிந்திருந்தபோது கண்ணகியானவள் மாணிக்கப் பரல்கள் நிரம்பிய சிலம்பை அணியும் அளவிற்கு செல்வப் சிறப்புடன் விளங்கினாள் என்பது நீங்கள் அறிந்ததே. அது மட்டுமல்லாமல் கோவலனைக் கொண்டு வா என்று சொல்வதற்குப் பதிலாக கொன்று வா என்று வார்த்தை தவறி கூறி விட்டான் பாண்டிய மன்னன் என்ற தவறைச் சுட்டிக் காட்டும் முகமாக கண்ணகி கால் சிலம்பிலிருந்த மாணிக்க பரல் ஒன்று தெறித்து மன்னனின் உதடுகளில் பட்டு சிதறிக் கீழே விழுந்தது என்பதை அறியும்போது கண்ணகி உடல் முழுவதும் “நேர்மை” சுட்டிக் காட்டும் ஆபரணங்களுடன் திகழ்ந்தாள் என்பதையும் நாம் அறிய முடிகிறது அல்லவா ? இத்தகைய நாணயத்தையும் பக்தர்களுக்கு அனுகிரகமாக அருளவல்லதே ஒழுகமங்கலம் தீர்த்த நீராடல் ஆகும். முகப் பருக்கள், சரும நோய்கள், உடலில் நாற்றம் போன்ற காரணங்களினால் திருமணம் தடைபட்டுள்ள பெண்கள் இந்த செம்பாதி தீர்த்தத்தில் மஞ்சள் அரைத்து முகத்திற்கு பூசி நீராடுதலால் குறைகள் நீங்கி முகம் வசீகரம் பெறும். தொடர்ந்த வழிபாடு அவசியம்.


ஸ்ரீகணேச மூர்த்திகள் ஒழுகமங்கலம்
கருப்பு என்பது இரவு தத்துவத்தையும் வெள்ளை என்பது பகல் தத்துவத்தையும் குறிப்பதால் கருப்பு நிறத்தில் முகத்தையும் வெள்ளை நிறத்தில் வாலையும் கொண்டிருக்கும் நாய்கள் பகல் இரவு தத்துவத்தைக் கொண்டுள்ளவையாக மதிக்கப்படுகின்றன. அதிலும் சிறப்பாக இத்தகைய பைரவ சக்தித் துலங்கும் தலங்களில் கிட்டும் பலன்களைப் பற்றிக் கூற வேண்டுமா என்ன ? இத்தகைய ஓர் அபூர்வ தரிசனத்தை இங்கு நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் மூதாதையர்களுக்கு நன்றி கூறும் முகமாக இந்தக் கட்டுரையை படித்த பின்னர் ஒழுகமங்கலம் ஸ்ரீபைரவரைத் தரிசனம் செய்தோ அல்லது உங்கள் ஊரில் உள்ள பைரவரைத் தரிசனம் செய்தோ முந்திரிப் பருப்பு கலந்த இனிப்பை தானமாக அளித்தலால் இரவில் பாதுகாப்பின்றி பணி புரிய வேண்டி உள்ளோரும், இரவில் தக்க துணை அமையாமல் பணி புரியும் நிலையில் உள்ள பெண்களும் பாதுகாப்புப் பெறுவர்.


ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஒழுகமங்கலம்
இரட்டைப் பிள்ளையார் மூர்த்திகளைப் பலரும் தரிசனம் செய்து இருப்பார்கள். ஆனால், இவ்வாறு ஒவ்வொரு பிள்ளையார் மூர்த்தியும் தங்கள் திருவடியில் எழுந்தருளியுள்ள ஐந்து தலை நாகங்களுடன் துலங்குவது என்பது ஒழுகமங்கலம் திருத்தலத்தில் மட்டுமே விளங்கும் சிறப்பாகும். தற்காலத்தில் தங்கள் ஜாதகத்தில் நாக தோஷங்கள் இல்லாமல் இருப்பது என்பது ஒரு அரிதான விஷயமாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் 2020 வருடம் முதற் கொண்டு பெரும்பாலான கிரகங்கள் ராகு கேது என்ற மூர்த்திகளின் பிரவாகத்தின் இடையே சிக்கி கால சர்ப்ப தோஷம் கொண்டு விளங்குவதால் அனைவரும் கண்டிப்பாக இவ்வாறு கணேச மூர்த்திகளின் பாதங்களில் அடைக்கலம் கொண்டுள்ள இந்த ஐந்து தலை நாகங்களை வணங்கி வழிபடுதல் சிறப்பாகும். பாதாம் கொட்டையை ஊற வைத்து அரைத்து அதை பாலில் கலந்து காய்ச்சி பாதாம்பால் தயார் செய்து தானம் அளிப்பதே நாக தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்களிலிருந்து விடுபடும் தான தர்ம முறையாகும். பட்டு வேஷ்டி, பட்டு புடவை வஸ்திரம் இந்த கணேச மூர்த்திகளுக்கு சார்த்தி வழிபடுவதும் சிறப்பே. கணேச மூர்த்திகளுக்கு வஸ்திரம் அணிவித்து சம்பங்கி மலர் மாலைகளைச் சூட்டி 21 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்குவதால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் தடை நீங்கி விடிவு பெறும்.


செம்பாதி தீர்த்தம்
ராவணன் நவகிரகங்களைப் படிகளாக்கி அந்த நவகிரகப் படிகளின் மேல் ஏறிச் சென்றுதான் தன் சிம்மாசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் ராவணனிடம் சிக்கிய நவகிரகங்கள் தாங்கள் இலங்கையை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருந்தாலும் தங்கள் சக்தியின் ஒரு பகுதியை மக்களுக்காக அனுகிரகமாக வழங்கிக் கொண்டுதான் இருந்தன. தற்போது திருவிழாக்களின் போது உற்சவ மூர்த்தி திருக்கோயிலின் வெளியே பவனி வந்தாலும் மூலவரின் சக்தி சற்றும் குறைவதில்லையோ அதுபோலவே நவகிரகங்களின் அருட்பாங்கும் சற்றும் மங்காது வெளிப்பட்டன என்பது உண்மையே. அத்தகைய சமயத்தில் தோன்றிய திருத்தலங்களில் எல்லாம் நவகிரக சக்திகள் சூட்சுமமாகவே பொலியும். அத்தகைய திருத்தலங்களில் ஒன்றே ஒழுகமங்கலம் ஆகும். அந்த நவகிரகங்களின் சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி பாதுகாத்து அருட்சேவை புரிந்து வருபவரே, இன்றும் இத்தகைய நவகிரக சக்திகளின் இருப்பிடமாக இருப்பவரே இங்குள்ள ஸ்ரீகாலபைரவ மூர்த்தியாவார். எனவே இந்த திருத்தலத்தில் நவகிரகங்கள் அமையவில்லை. நவகிரக மூர்த்திகளை பிரத்யட்சமாக வழிபட விரும்புவோர் ஸ்ரீபைரவ மூர்த்தியை வழிபட்டே தாங்கள் விரும்பும் அனுகிரகங்களை பெற்று விடலாம் என்பதே ஒழுகமங்கல பைரவரின் கருணை கடாட்சமாகும்.


ஒழுகமங்கலம்
ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தனான ராவணனை சம்ஹாரம் செய்து சீதையை மீட்டார் என்பதோடு மட்டுமல்லாமல் ராவணனின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த நவகிரகங்களும் விமோசனம் பெற்றன என்பதும் ராமாவதாரத்தின் சிறப்பாகும். ஒழுகமங்கலம் திருத்தலத்தில் நவகிரகங்கள் இல்லையென்றாலும் நவகிரக சக்திகள் இத்தலத்தில் சூட்சுமமாகப் பொலிவதால் இத்திருத்தலத்தில் மட்டுமல்லாது மற்ற எந்த திருத்தலத்திலும் கிரிவலப் பாதையிலும் நவகிரகங்களை வழிபடுவதற்கு இத்தகைய சூட்சும சக்திகள் வழிகாட்டும் என்பதே ஒழுகமங்கலத்தின் தனிச் சிறப்பாகும். எங்கெல்லாம் இவ்வாறு 9, 18, 108 நெய் தீபங்கள் ஏற்றப்படுகின்றனவோ அங்கெல்லாம் நவகிரக சக்திகள் பல்கிப் பெருகும் என்பதற்கு சான்றாக அமைவதே ஒழுகமங்கல நவகிரக சக்திகள் ஆகும். ஹோம வழிபாடுகள் இயற்றுபவர்கள் இவ்வாறு ஒழுகமங்கல நவகிரக தேவதைகளை தியானித்து ஆஹூதி அளித்தலால் நவகிரக சக்திகளுடன் இத்தல பைரவ மூர்த்தியின் காப்பு சக்திகளும் அனுகிரகமாகக் கிட்டும் என்பதே இத்தகைய சூட்சும நவகிரக சக்திகளின் தன்மையாகும்.


செம்பாதி சக்திகள் பொலியும் ஒழுகமங்கலம்
செம்பாதி என்பது நீர் சக்திகள் மட்டுமல்லாது அக்னி என்னும் பஞ்சபூத சக்திகளில் ஒன்றாகவும் திகழ்வதால் ஒழுகமங்கல திருத்தலத்தில் மட்டுமே இத்தகைய “செம்பாதி” சக்திகளைப் பெற முடியும் என்பதை இங்குள்ள படத்தைப் பார்த்தே பக்தர்கள் உறுதி செய்து கொள்ளலாம். சீதை, கண்ணகி போன்ற கற்புக்கரசிகளின் பத்னி சக்திகளின் ஒரு அம்சமே செம்பாதி அக்னிக்கோள சக்தியாகும். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய செம்பாதி சக்திகள் சமுதாயத்தில் தீவிரமாகக் குறைந்து வருகின்றது என்றாலும் மாதா அமிர்தானந்தா போன்ற அவதார மூர்த்திகள் இத்தகைய செம்பாதி சக்திகளை சமுதாயத்தில் நிலைநாட்ட அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நம் சற்குருவின் அடிச்சுவட்டில் நடக்க விரும்பும் நாமும் இத்தகைய செம்பாதி சக்திகள் பொலியும் ஒழுகமங்கலம் திருத்தலத்தில் இயன்ற வழிபாடுகளை இயற்றுவதே இத்தகைய அரிதிலும் அரிய செம்பாதி சக்திகளை நிலைநாட்ட, விருத்தி செய்ய வழிகோலும். தற்போது வெகுவேகமாகப் பரவி வரும் தொற்றுநோய்களுக்கு இத்தகைய செம்பாதி சக்திகளின் குறைபாடே முக்கிய காரணம் என்பதே சிக்கர்களின் அறிவுரையாகும்.


ஒழுகமங்கலம்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள், உண்மையில் இந்த பழமொழி இன்றும் புத்துயிர் பெற்று விளங்குவதே இவ்வாறு தலமும் தீர்த்தமும் பாதி பாதியாக இணைந்து இறை சக்திகளை முழுமையாகப் பெற உதவும் ஒழுகமங்கலம் திருத்தலமாகும். பிரம்ம முகூர்த்தத்தில் ஒழுகமங்கலம் திருத்தலத்தையும் தீர்த்தத்தையும் வேகமாக நடந்தோ, ஓடியோ வலம் வந்து வணங்குவதால் கிட்டும் பலன்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்பதே இத்திருத்தலத்தின் மகிமையாகும். மிகவும் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு செயற்கையாக மூச்சுக் காற்று அளித்து சிகிச்சை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் சகஜமாக மூச்சு விடும் நிலைக்குத் திரும்பிய பின்னர் செயற்கை சுவாச உபகரணங்களை நீக்கி விட்டு இயற்கையாக மூச்சு விடும்படி மருத்துவர்கள் இன்றும் சிபாரிசு செய்கிறார்கள் அல்லவா ? இதற்குக் காரணம் மனிதர்கள் இயற்கையாக சுவாசிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஒருவித சஞ்சீவி சக்திகளை செயற்கை உபகரணங்களின் மூலம் பெறவே முடியாது. இதுவே ஒழுக சக்திகள் என்பவையாகும். இந்த ஒழுக சக்திகள் மிகுந்த திருத்தலமே ஒழுகமங்கலம். இந்த ஒழுக சக்திகளை பிரம்ம முகூர்த்தத்தில் இயற்றும் வேகமான நடை, ஓட்டம் மூலம் மட்டுமே பெற முடியும் என்பதே இத்தகைய ஒழுக சக்திகளின் தன்மையாகும். இத்தகைய ஒழுக சக்திகளை கிரகிக்கக் கூடிய இடமே மனிதர்களின் பிடரி பாகம் என்னும் பின்கழுத்துப் பகுதியாகும். இதற்காகவே பெண்கள் தங்கள் கூந்தலை நறுக்கக் கூடாது என்றும் கூந்தலில் நறுமணம் கமழும் வாசனை தைலங்களைத் தடவி அவசியம் தலை வார வேண்டும் என்றும், கூந்தல் பறக்காமல் அவற்றை மூன்று பிரிவுகளகாப் பிரித்து தலை பின்னிக் கொள்ள வேண்டும் என்ற நியதிகளை எல்லாம் நம் முன்னோறர்கள் வகுத்துத் தந்தனர். இந்த முறைகள் அனைத்துமே ஒழுக சக்திகளைப் பெருக்கி, பிடரி பாகம் நற்சக்திகளை ஈர்த்தலால் உடலும் மனமும் ஆரோக்யத்துடன் திகழ்கின்றன. தலை முடியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கும்போது அந்த ஒவ்வொரு கற்றையும் ஒ ழு க, ஒ உ அ என்ற உயிர் சக்திகளைப் பெறும் என்பது மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சிரஞ்சீவி தத்துவ கோட்பாடுகளாகும். இவ்வாறு நன்கு பராமரிக்கப்பட்ட ஒரே ஒரு மயிர்க் கற்றையால் இந்த உலகையே தாங்கி நிலை நிறுத்த முடியும் என்றால் சூரியனின் கதியையே நிறுத்திய நளாயினியின் சாதனை ஒரு சாதனையா என்ன ?


ஸ்ரீதிருமேனிநாதர் ஒழுகமங்கலம்
ஒழுகுதல் என்றால் உரிய முறையில் நடத்தல் என்ற பொருளும் உண்டல்லவா ? இவ்வாறு தன்னைப் பற்றி, தன்னுடைய நடத்தைகள் பற்றித் தெரிந்து கொண்டு அதை உரிய முறையில் சீர்திருத்திக் கொள்ள உதவும் தலமே ஒழுகமங்கலம் ஆகும். நம்முடைய உடலுக்கு சொந்தக்காரர் நாம்தான் என்று உரிமை கொண்டாடும் நாம் அந்த உடல் எப்போது தூங்கப் போகிறது, எப்போது சிறுநீர் கழிக்கும், எப்போது மலத்தை வெளியேற்றும் என்று துல்லியமாகக் கூற முடியுமா ? இத்தகைய அதீத சக்திகள் படைத்தவர்களையே நாம் மகான்கள் என்று கூறுகிறோம். கனிந்தகனி என்று சித்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் இத்தகைய சக்திகளுடன் திகழ்ந்தார். இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்குச் சென்றாலும் விடியற்காலை சரியாக மூன்று மணிக்கு அவர் உறங்கும் பெட்டியிலிருந்து முதல் நாள் இரவு வாங்கி வைத்திருந்த சாவியை வெளியே கொடுப்பார். அதைக் கொண்டுதான் சுவாமிகள் உறங்கும் சிறிய பெட்டியின் வெளியே உள்ள பூட்டைத் திறக்க சுவாமிகள் அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறி தன்னுடைய காலைக் கடன்களுக்காகச் செல்லுவார். இவ்வாறு தன்னைப் பற்றி, தன்னுடலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் மூர்த்தியே ஒழுகமங்கலம் ஸ்ரீதிருமேனிநாதர் ஆவார். இவ்வாறு தன்னுடலை நேரந் தவறாது உரிய முறையில் பேணுபவர்களின் உடலே திரு மேனியாகப் பொலியும் என்பதை உணர்த்துவதே ஒழுகமங்கலம் ஈசனின் அனுகிரகங்களில் ஒன்றாகும்.


அரவணைக்க ஒரு தாய் போதாதோ ? ஒழுகமங்கலம்
முதல் கட்டமாக ஒவ்வொருவரும் தாங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கும் நேரம், மலஜலம் கழிக்கும் நேரம், சிறுநீர் கழிக்கும் நேரம் என்ற இந்த மூன்றையும் சரியான காலத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் அவர்கள் திருமேனி நாதரின் அனுகிரகத்தைப் பெற்று விட்டார்கள் என்று அர்த்தம். என்னதான் ஒரு மனிதன் முயன்றாலும் நிச்சயமாக அவனால் இந்த மூன்று செயல்பாடுகளின் நேரத்தை அறிய முடியாது. இதை தெளிவாக உணர்ந்தால்தான் ஒரு சற்குருவின் வழிகாட்டுதல் எந்த அளவிற்கு அவசியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு சற்குரு வேட்கையில் மிளிரும் ஒருவனுக்கு, குருவைத் தேடி அலையும் மேனிக்கு சற்குரு என்னும் மேனியைக் கருணை கொண்டு அளிப்பவரே திருமேனி நாதர் ஆவார். இவ்வாறு தன்னுடைய உடலைப் பற்றிய அறிவை விருத்தி செய்து கொண்டவர்களே அடுத்த கட்டமாக ரமண மகரிஷி கூறும் “நான் யார் ?” என்ற ஆத்ம விசார சிந்தனைக்கு உரிய விடையைக் காண இயலும். ஒழுகமங்கல ஈசனை ஸ்ரீதிருமேனி நாதர், திரு திருமேனி நாதர் என்றெல்லாம் அழைக்கின்றோம். இந்த “ஸ்ரீ, திரு” என்ற பதங்களுக்கு எல்லாம் அவரவர் அறிவின் திறனை வைத்து பொருள்களை கூறிக் கொண்டே போகலாம் என்பார் மாதா அமிர்தானந்தா அவர்கள். சுருக்கமாகக் கூறுவது என்றால், “தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ...”, என்பது போல எத்தகைய துயரத்தில் ஆழ்ந்திருந்தாலும், கட்டுக்கடங்கா பசியோடு இருந்தாலும், கவலையோடு களைத்திருந்தாலும் தாயின் மடி அளிக்கும் அமைதிக்கு ஈடு இணை இல்லை அல்லவா ? அந்த அமைதியை இன்றும் மக்கள் அனுபவிக்க வழிகாட்டுவதே ஸ்ரீதிருமேனி நாதரின் அரவணைப்பு. இதை அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை.


ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜப் பெருமான் திருத்தவத்துறை லால்குடி
பொதுவாக, நடராஜப் பெருமான் மூர்த்திகளையோ, கன்னிமூலை கணபதி மூர்த்திகளையோ வலம் வருவது இயலாத காரியம். காரணம் இந்த மூர்த்திகள் திருக்கோயில் சுவற்றுடன் சேர்ந்து எழுந்தருளி இருப்பதே காரணம். இத்தகைய மூர்த்திகளை வலம் வர வேண்டும் என்றால் ஆலயத்தை வலம் வந்து வணங்கியே இந்த மூர்த்திகளுக்கான வலத்தை சமர்ப்பிக்க இயலும். லால்குடி திருத்தலத்தில் மட்டுமே இவ்விரு மூர்த்திகளையுமே வலம் வந்து வணங்க முடியும் என்றால் இது நடராஜ மூர்த்தியின் கருணையா இல்லை கன்னி மூலை கணபதியின் கருணையா இல்லை இருவரின் இணைந்த கருணையா ? சிறப்பாக லால்குடியில் எழுந்தருளி இருக்கும் நடராஜப் பெருமான் கன்னிமூலை கணபதியை நோக்கி உயர்ந்த மேடையில் எழுந்தருளி இருப்பதும் இந்த சிறப்புகளுக்கு அணி சேர்ப்பதாகும். இந்த இரு அனுகிரக கனிகளுடன் இணையும் மூன்றாவது அனுகிரக கனியே இந்த மூர்த்திகளுடன் சேர்ந்து மூலவர் ஸ்ரீசப்தரிஷீஸ்வரரும் அளிக்கும் ஓங்கார வல கனியாகும். லால்குடி திருத்தலத்தில் மட்டுமே இத்தகைய அரிதிலும் அரிய ஓங்கார வலத்தை நிறைவேற்ற இயலும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் ஓங்கார இரகசியமாகும். முதலில் கொடிக்கம்பத்தை வணங்கியவுடன் ஆலயத்தின் உள்ளே சென்று ஸ்ரீஆதிரை கணபதியை வணங்கி விட்டு பின்னர் நடராஜ பெருமானை வலம் வந்து வணங்கி, அப்படியே பிரதட்சிணமாக வலம் வந்து கன்னி மூலை கணபதியை வலம் வந்து வணங்கி கொடி மரத்தை அடைந்தால் இது ஒரு ஓங்கார வலம் நிறைவேற்றிய பலனைக் கொடுக்கும். இத்தகைய ஓங்கார வலங்களை பன்னிரெண்டின் மடங்காக 12, 36, 108 என்றவாறு இயற்றுதல் நலமே.


ஸ்ரீசுப்ரமண்யசுவாமி லால்குடி
இந்த வருடம் திருமண சம்பந்தங்கள் விரைவில் எளிதாக கைகூடி வரும் என்றாலும் போலி ஜாதகங்களைக் கொடுத்தோ அல்லது தவறான உத்யோகம், தகுதி போன்றவற்றின் மூலமாகவோ இத்தகைய நிரந்தர உறவுகளிலும் தவறுகள் நடக்க இருப்பதால் பக்தர்கள் மேற்கண்ட ஓங்கார வலத்தை அவரவர் சக்திக்கு ஏற்ற முறையில் குறிப்பாக வியாழக் கிழமைகளில் நிறைவேற்றி வருதலால் நற்பலன் பெறுவார்கள். கொடிமரத்தின் மேல் விதானத்தில் நவகிரக மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதால் தவறான ஜாதகங்களை நம்பி பக்தர்கள் ஏமாறாமல் காக்கப்படுவர் என்பதும் இத்தகைய ஓங்கார வலங்களின் சிறப்பாகும். ஸ்ரீநடராஜ பெருமானின் பின்னழதை தரிசிக்கும் முகமாக இங்கு வலம் வந்து வணங்கும் வகையில் எழுந்தருளி இருப்பது மட்டும் நாம் பெறும் பாக்கியமல்ல சுவாமியின் பின்னழகும் வேறெங்கும் தரிசிக்க முடியாத எழிலுடன் துலங்குவதும் நாம் பெற்ற பேறுதானே.


திருமணமானவர்களும் பெண்களின் அழகை இரசிக்கும் செய்கைகளில் ஈடுபடுவது தற்காலத்தில் எங்கும் நடைபெறும் ஒரு தவறாக இருப்பதால் இத்தகைய தவறுகளுக்கு பிராயசித்தத்தை அளிக்கும் திருத்தலங்கள் எழுந்தருளி இருப்பது மட்டும் அதிசயமல்ல இந்த அற்புத திருத்தலங்களைப் பற்றி எடுத்துரைத்து மக்களுக்கு நல்வழி காட்டும் நம் சற்குரு போன்றோரின் வழிகாட்டலும் நமக்கு கிடைத்திருப்பதுதான் அற்புதம். லால்குடி திருத்தலத்தில் பக்தர்கள் நிறைவேற்றும் ஒரே ஒரு ஓங்கார வலத்தில் மட்டுமே 16 கணபதி மூர்த்திகளை தரிசனம் செய்ய இயலும் என்றால் இத்தகைய வலத்தின் பெருமையைப் பற்றி என்ன கூற இயலும் ? இத்தகைய ஓங்கார வலத்திற்குப் பின் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மாங்கல்ய சரடு, கண்ணாடி வளையல் போன்று அவரவரால் இயன்ற 16 மங்களப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும். இதனால் 16 மங்களப் பேறுகளை அடைய இந்த தானங்கள் உறுதுணையாக நிற்கும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam