ஆணவத்தை அழிக்கும் ஆலய வலம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மாறன் மயிலே வா !
(பின்னவாசல் திருத்தல மகிமை)

திருச்சி லால்குடி அருகே காட்டூர் செல்லும் வழியில் பின்னவாசல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளதே ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீகைலாசநாதர் திருத்தலமாகும்.
நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய இப்புராதன சிவாலயத்தின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இத்தலத்தின் மகிமையை உணர
கால சுழற்சியில் சற்றே பின் நோக்கி செல்வோம்.

அங்கே வெகு தொலைவில் நாம் காண்பது என்ன ? சூரபத்மன் என்ற மிகவும் சக்தி வாய்ந்த அசுர குல வேந்தன் தன்னைச சுற்றிலும் கொழுந்து விட்டு எரியும் நான்கு அக்னி குண்டங்களை எழுப்பி அதன் நடுவே அமர்ந்து கொண்டு தலைக்கு மேல் பிரகாசிக்கும் சூரிய பகவானின் தீச்சுடர் நடுவே அன்னம், நீர், ஆகாரமின்றி பஞ்சாக்னி தபஸ் என்ற கடுந் தவத்தை இயற்றிக் கொண்டிருக்கிறான். எதற்காக ?
பரம்பொருளின் தரிசனத்தை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்பதற்காக மண்ணோரு விண்ணோரும் அருகில்கூட செல்ல நினைக்க முடியாத கோர தவத்தை மேற்கொண்டு ஒற்றைக் காலில் தவத்தில் ஆழ்ந்துள்ளான் சூரபத்மன்.
யுகங்கள் உருண்டு மறைந்தன. ஒருவர் தனது தவ பலத்தைக் கொண்டு அடுத்த அடுத்த பதவிக்கு தயார் ஆகிறார். எனவே ஒருவர் குறிப்பிட்ட காலம் தவம் இயற்றி விட்டால் அவர் இந்திர பதவிக்கு தகுதி படைத்தவர் ஆகி விடுகிறார். அப்போது இந்திர பதவியில் இருக்கும் தேவர் அவ்வாறு தவம் இயற்றுபவர் வேண்டும் வரத்தை தந்தாக வேண்டும் அல்லது அந்த தபசியின் வேண்டுகோளை நிறைவேற்றியாக வேண்டும். இல்லா விட்டால் அந்த தவம் இந்திர பதவிக்கு ஆபத்தாகி விடும்.
இவ்வாறு எத்தனையோ இந்திரர்கள் சூரபத்மன் முன் தோன்றி சூரபத்மன் வேண்டும் வரத்தைத் தர முன் வந்தார்கள். ஆனால், சூரபத்மன் சாதாரண உப்பு சப்பில்லாத எந்த வரத்தையும் பெற விழையவில்லை. மாறாக பரம்பொருளின் தரிசனத்தையே கேட்டான். இது சாட்சாத் அந்த பரம்பொருளைத் தவிர வேறு யாராலும் தர முடியுமா ?
எனவே சூரபத்மனுடைய தவத்திற்கு தலை வணங்கி அவன் இருக்கும் இடத்தை விட்டு சந்தடியில்லாது நகர்ந்து விட்டனர்.
அது போல இந்திரர்களை அடுத்து பிரம்ம மூர்த்திகள் சூரபத்மனை நோக்கி படையெடுக்க வேண்டிய நிலை உருவானது. அவர்களுக்கும் இதே கதிதான். எவராலும் பரம்பொருளின் தரிசனத்தை வரமாக அளிக்க இயலாத நிலையில் அவர்கள் சூரபத்மனுக்கு வணக்கம் தெரிவித்து மறைந்து விட்டனர்.

ஸ்ரீஆதிமூலப் பெருமாள் திருத்தலம்
நத்தம், புள்ளம்பாடி

இப்போது விஷ்ணு மூர்த்திகள் சூரபத்மன் முன் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்தது. காரணம் அந்த அளவுக்கு சூரபத்மனின் கடும் தவம் யுகக் கணக்கில் தொடர்ந்து கொண்டே இருந்தது.
வேறு வழியின்றி விஷ்ணு மூர்த்தி சூரபத்மன் முன் சென்று அவன் வேண்டும் வரத்தை கேட்டபோது சூரபத்மன் சிரித்து, “நீ எத்தனையாவது பெருமாள் ?” என்று ஏளனமாகக் கேட்டானாம்.
வைகுண்டத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு மூர்த்தியினுடைய ஆயுளும் இத்தனை யுகங்கள் என்ற கணக்கு உண்டு. அந்த யுகக் கணக்கு முடிந்தவுடன் அவர் எம்பெருமானிடம் ஐக்கியம் கொள்ள அடுத்த பெருமாள் மூர்த்தி வைகுண்டத்தில் பதவி ஏற்பார். இதற்கிடையே அவர்களுடைய சயன மூர்த்தியான ஆதிசேஷன் என்ற பதவியிலும் எவ்வளவோ பேர் வந்து போயிருப்பார்கள்.  
மாறுபாடு இல்லாத மாண்பு மிகு மூர்த்தி எம்பெருமான் சிவன் ஒருவனே.
இவ்வாறு பெருமாள் மூர்த்திகளாலும் சூரபத்மனுடைய தவத்திற்கு உகந்த வரத்தை அளிக்க முடியாமல் போனதால் இறுதி கட்டமாக எம்பெருமான் சிவபெருமானே சூரபத்மன் முன் தோன்றி அவனுடைய தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
அப்போது சூரபத்மன் இறைவனை நோக்கி, “பரம்பொருளே நான் உங்களை காண விரும்புகிறேன்,” என்று கூறினான். அதற்கு இறைவன் பரம்பொருளின் அதீத சக்தியைக் காணும் சக்தி எவருக்குமே கிடையாது. நீ வேண்டும் வரத்தைக் கேள். அதை தருகிறேன்,” என்றார்.

சூரபத்மன் பிடிவாதமாக, “சுவாமி, பரம்பொருளான தங்களால் முடியாதது என்று ஒன்று உண்டா ? தாங்கள் மனம் வைத்தால் நிச்சயமாக தங்களைக் காணும் சக்தியை எனக்குத் தரலாம் அல்லவா ?” என்று கேட்டான்.
அவனுடைய வேண்டுகோளைக் கேட்ட இறைவன், “என்னுடைய காட்சியை தருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், இறைக் காட்சியில் ஒரு அணுவுக்கு அணு கீற்று ஜோதியை நீ தரிசனம் செய்தால் கூட உன்னுடைய உடல் பஸ்மமாகி விடும். எத்தனை கோடி ஆண்டுகள் தவம் செய்தாலும் இறைக் காட்சியை எந்த உடலாலும் தாங்க முடியாது.”
“ஆனால், நீ இந்த அளவிற்கு இறைக் காட்சிக்காக பிடிவாதமாக இருப்பதால் இறை சக்தியை ஒரு துளி நீராக்கி உனக்கு அளிக்கிறேன்,” என்று கூறி எல்லையில்லாப் பரம்பொருள் தன்னுடைய இறை சக்தியை ஒரு சிறு துளி நீராக்கி நீர்த்துளி வடிவில் சூரபத்மன் முன் தோன்றியதாம்.

அந்த இறைக் காட்சியைக் கண்டு பரமானந்தம் அடைந்தான் சூரபத்மன். இறைவன் முன் மண்டியிட்டு வணங்கினான். பின்னர், “சுவாமி, தங்களுடைய தரிசனத்தைக் கண்டு பேரானந்தம் அடைகின்றேன். தாங்கள்தான் நான் விரும்பும் வரத்தை அருள வேண்டும்,“ என்று பிரார்த்தித்தான்.
இறைவன் தொடர்ந்து, “நீ விரும்பும் வரத்தைத் தெரிவிப்பாயாக,” என்றார். சூரபத்மன், “சுவாமி, இதுவரை தோன்றிய எவருமே நிலையாக இருந்ததில்லை. இந்த விதிக்கு மாறாக நான் ஒருவனாவது நிலையாக இருக்கும் வரத்தை அதாவது இறவா வரத்தைப் பெற விரும்புகிறேன்,” என்றான்.
இறைவன், “நீயே தோன்றிய பொருள் மறைய வேண்டும் என்பது விதி என்பதை ஒப்புக் கொள்கிறாய். அவ்வாறிருக்க எப்படி இறவா வரத்தை அளிக்க முடியும். விதியை மீறி எந்த வரத்தையும் யாம் அளிப்பதில்லை. வேறு யாதாவது வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்,” என்று பதிலளித்தார்.
சூரபத்மன் சற்று நேரம் யோசித்து, “அப்படியானால் ஆண் பெண் சக்திகளின் சங்கமத்தில் தோன்றிய எவராலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற வரத்தையாவது அவசியம் நீங்கள் தந்தருள வேண்டும்,” என்று பிரார்த்தித்தான்.
பரம்பொருளும், “அப்படியே ஆகட்டும்,” என்று கூறி மறைந்தது. வரகுண வித்தகனாக மிளிர்ந்த சூரபத்மன் தேவர்கள் அனைவரையும் தன்னுடைய அடிமையாக்கி அண்டங்கள் அனைத்தையும் ஆள ஆரம்பித்தான். இப்போது சூரபத்மனுக்கு இணையான தவ சீலன் யாருமே இல்லை அல்லவா ?
கால சுழற்சியில் யுகங்கள் கடந்து மறைந்தன. 108 அண்டங்களை 1008 யுகங்களில் ஆட்சி செய்தான் சூரபத்மன். சூரபத்மனின் அட்டகாச செயல்களை தாங்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால், சூரபத்மன் பெற்ற வரத்தின் காரணமாக பரம்பொருளும் அவனுடைய புண்ணிய சக்திகள் முழுவதும் கரையும் வரை பொறுத்திருந்து பின்னர் முழுக்க முழுக்க ஆண் சக்தியால் எம்பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவ ஜோதியில் சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறுமுகப் பெருமான் மூலம் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.
இதுவரை நடந்த வரலாறு பலரும் அறிந்திருக்கலாம்.
இனிவரும் சம்பவங்கள் சித்தர்கள் பாரம்பரியத்தில் வந்த தெய்வீக முத்துக்கள்.

வலமான வலமே வலம்

முத்துக் குமாரசுவாமி சூரபத்மனை போர்க்களத்தில் எதிர் கொள்கிறார். சக்தி ஆயுதத்தால் அவன் உயிரை பறிப்பதற்காக வேலாயுதத்தையும் கையில் ஏந்தி விட்டார்.
அப்போது முருகப் பெருமான் மனதில் ஒரு எண்ணம். “ இங்கு நிற்கும் சூரபத்மன் ஒரு சாதாரண அசுரன் கிடையாது. எத்தனேயோ பிரம்ம மூர்த்திகளையும் பெருமாள் மூர்த்திகளையும் தரிசனம் செய்த கனிந்த இறை பக்தி உடையவன். தவ சீலன். விதி வசத்தால் தேவர்களை சிறை பிடித்து ஆணவத்தால் அழியும் நிலைக்கு வந்து விட்டான். இருப்பினும் இறுதியாக இவன் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை அளித்துப் பார்ப்போம்,”

இவ்வாறு எண்ணிய முருகப் பெருமான் தன்னுடைய விஸ்வ ரூப தரிசனத்தை சூரபத்மனுக்கு காட்டி அருளினார்.
பார்த்தான் சூரபத்மன். மண்ணுக்கும் விண்ணுக்கும் வியாபித்து நின்ற முருகக் குழந்தையின் தெய்வீக காட்சியில் தன்னை மறந்தான். தன் முன் தோன்றிய அனைத்து காட்சிகளும் மறைந்தன. எங்கும் முருகன், முருகன், முருகனே. மெல்ல மெல்ல அவன் காட்சி முருகப் பெருமானை நோக்கி நகர்ந்தது.
விஸ்வரூப தரிசனத்தை மீண்டும் பெரிதாக்கிக் கொண்டே சென்றார் முருகப் பெருமான். நிலை தடுமாறினான் சூரபத்மன். மெய் வாக்கு கடந்த தெய்வீகப் பரவச நிலையில் மிதந்தான், பறந்தான், அனைத்தையும் மறந்தான்.
முருகப் பெருமானின் உடலில் தோன்றிய மயிர்க் கால்களைப் பார்த்தான். அதில் ஒரு மயிர்க்காலின் நுனியில் சூரபத்மனின் அனைத்து தலைமுறையினரும் கோடி கோடி வாரிசுகளும் ஒரு சிறு தூசி அளவில் ஒட்டி இருப்பதைப் பார்த்தான்.
“ஆஹா, என்னே அற்புதம். இவர் அல்லவோ எம்பெருமான். பரம்பொருளும் காட்டாத இறைப் பெரு நிலையை இந்த பாலன் நமக்கு அளித்து விட்டானே. இந்த தெய்வக் குழந்தையையா நாம் எதிர்க்கத் துணிந்தோம். என்னே எனது மடமை,” என்று தன்னைத் தானே நொந்து கொண்டான் சூரபத்மன்.

லட்சுமி தீர்த்தம், நத்தம்

கண்கள் நீரைச் சொரிந்தன. கண்ணீர் வெள்ளம் கரை புரண்டது. பக்தி மேலீட்டால் இரு கரங்களையும் குவித்து தன் தலை மேல் வைத்துக் கொண்டு ஆறுமுகப் பெருமானை அப்பிரதட்சிணமாக வலம் வந்து அவர் முன் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினான்.
வணங்கி மீண்டும் எழுந்த சூரபத்மனைப் பார்த்தார் முருகப் பெருமான். அவனுக்கு அளித்த தெய்வீக கண்களையும் சத்துவ குணத்தையும் மீண்டும் பெற்றுக் கொண்டு அவனை அவனுடைய பழைய நிலைக்கு கொண்டு வந்தார் எம்பெருமான்.
அவ்வளவுதான். அடுத்த கணம் முருகப் பெருமானை பார்த்த சூரபத்மன், ”இந்த சிறுவனையா நான் வணங்குவது, என்ன முட்டாள்தனம். உன்னை விட்டேனா பார்,” என்று சொல்லி வாளுடன் அவர் முன் பாய்ந்தான் சூரபத்மன்.
பரம்பொருளின் விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த முருகப் பெருமான் சற்றும் தாமதிக்காது சூரபத்மன் மேல் வேலாயுதத்தை எய்து அவனுடைய உயிரைக் கவர்ந்தார்.
வேலாயுதம் சூரபத்மன் உடலை சேவல், மயில் என இறு கூறாக்கியது. சூரபத்மனின் அகந்தை அடங்கியது.
முருகப் பெருமான் இவ்வாறு சூரபத்மனின் அகந்தையை அடக்கி ஆட்கொண்டார். முருகப் பெருமானுக்கு வாகனமாக சூரபத்மன் அமையும் பாக்கியத்தை பெற்றாலும் அவன் மனதில் ஒரு குறை இருந்து வந்தது.
அது என்ன ?
பொதுவாக, நாம் இறைவனை ஆலயங்களில் தரிசிக்கும்போது பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குகிறோம். அதனால் நாம் இறைவனிடமிருந்து சக்தியைப் பெறுகிறோம். அந்த இறை சக்தியால் நம்முடைய ஆணவம் என்னும் மாயை நாளடைவில் அழியும் என்பதற்காக பெரியோர்கள் இந்த வழிபாட்டு முறையை தொன்று தொட்டு வலியுறுத்தி வருகிறார்கள்.
நமது வெங்கடராம சுவாமிகள் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தனது குருநாதரான இடியாப்ப சித்த சுவாமிகளைத் தரிசனம் செய்தபோது அவர் முதன் முதலில் சிறுவனுக்கு அளித்த ஆன்மீக போதனையே ராயபுரம் அங்காள பரமேஸ்வரியை ஆயிரம் முறை தினம் வலம் வருவதுதானே. இந்த பிரதட்சிணத்தை இன்றும் நமது வெங்கடராம சுவாமிகள் மானிட வடிவில் நிறைவேற்றி வருகிறார்கள் என்பது நம்மை வியக்க வைக்கும் ஆன்மீக இரகசியம் ஆகும்.
இந்த திருக்காட்சியை கண்ணார கண்டு தரிசனம் செய்தவர்கள் ஏராளம். ஏன் இதைப் படிக்கும் நீங்கள் கூட அந்தப் பலரில் ஒருவராக இருக்கலாமே.

பிரதட்சிணமாக வலம் வருவதற்குப் பதிலாக அப்பிரதட்சிணமாக வலம் வந்தால் நம்மிடமிருந்து இறைவனுக்கு சக்தி செல்வதாக அர்த்தம். ஆணவத்தை அதிகப்படுத்துவதே அப்பிரதட்சிண வலமாகும். எனவே, குருநாதரின் தெளிவான உபதேசம் இருந்தாலொழிய எவரும் திருக்கோயில்களிலோ, திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களிலோ அப்பிரதட்சிணம் செய்யக் கூடாது என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனத்தை அப்பிரதட்சிணமாக வலம் வந்த சூரபத்மன் மீண்டும் ஒரு முறையாவது பிரதட்சிணமாக பக்தியுடன் வலம் வர வேண்டும் என்பதே சூரபத்மனின் விருப்பமாகும்.
பணிந்தவனே பக்தன். பணிவுடன் வலம் வர வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை சூரபத்மன் முருகப் பெருமானிடம் தெரிவித்தபோது முருகப் பெருமான் புன்முறுவலுடன், “சாகா வரத்தைக் கூட எளிதில் பெற்று விடலாம். ஆனால், இறைவன் மீது உண்மையான பக்தியைப் பெறுவது என்பது மிக மிக அரிதான காரியம். ஆனால், உறுதியுடன் முயற்சி செய்தால் எதையும் நிறைவேற்றலாம்.“
“உன்னுடைய எண்ணம் பாராட்டுதலுக்குரியது. அதை நிறைவேற்ற வேண்டுமானால் விடா முயற்சி வேண்டும். எல்லையில்லா பணிவும் கூடவே வேண்டும். இரண்டும் சேர்ந்தால் தெய்வீக காரியம் எதையும் நிறைவேற்றி விடலாம். கவலை வேண்டாம்.“
“கடந்த காலத்தை நினைத்துப் பார். உன்னுடைய தவத்தின் உச்ச நிலையில் நீ பிரம்ம மூர்த்திகளையும், விஷ்ணு மூர்த்திகளையும் உதாசீனமாகப் பார்த்து அவர்களை கேலியும் பேசினாய். அதற்கு பிராயசித்தம் செய்ய நீ விரும்பினால் அதற்கான பிறவியை உனக்கு அளிப்போம். அந்த பிராயசித்தம் நிறைவேறினால் இயல்பாகவே அப்போது உனக்கு பணிவு வந்து சேரும். பணிவு என்ற ஆபரணத்தை நீ பூண்டு விட்டால் பின் பக்தி என்ற கனி தானாகவே கனிந்து விடும், “ என்று திருவாய் மலர்ந்து அருளினார் முருகப் பெருமான்.
முருகப் பெருமான் அளிக்கும் எந்தவித பிராயசித்தத்தையும் நிறைவேற்ற தயாராக இருப்பதாக சூரபத்மன் வாக்குறுதி அளித்தபின் முருகப் பெருமான் அவனை முதலையாகப் படைத்து நத்தம் திருத்தலத்தில் உள்ள லட்சுமி தீர்த்தத்தில் மறைத்தார்.

பிராயச்சித்தம் அளிக்கும் நீர்

யுகங்கள் கடந்தன. சூரபத்மன் சதாசர்வ காலமும் இப்போது நாராயணா நாராயணா என்று பெருமாள் நாம கீர்த்தனையை பாடியவாறே நத்தம் திருத்தலத்தில் தவம் இயற்ற ஆரம்பித்தான்.
திருச்சி லால்குடி அருகே உள்ள நத்தம் என்னும் பெருமாள் தலம் ஒரு காலத்தில் நந்துமாங்குடி என்றும் நந்தீ கிராமம் என்ற பெயர்களில் எல்லாம் விளங்கியது. நந்தி மாங்குடி என்றால் பணிவை வளர்க்கும் சிறந்த திருத்தலம் என்று பொருள். எனவே, சூரபத்மனுக்கு பணிவைப் பெற்றுத் தருவதற்காகவே முருகப் பெருமான் அவனை லட்சுமி தீர்த்தத்தில் மறைத்து வைத்தார்.
இக்காரணம் பற்றியே ஆயிரம் பிறவிகள் ஒருவன் பெருமாள் சேவையில் ஊறித் திளைத்திருந்தால்தான் நத்தம் திருத்தலத் தீர்த்தத்தை கண்ணால் காண முடியும் என்று சித்தர்கள் உரைக்கிறார்கள். அந்த அளவிற்கு பெருமை பொருந்திய தலமே நத்தமாகும். இந்த அற்புத தலத்தில் பல யுகங்கள் முதலையாக வாழ்ந்து அற்புத பக்தியை வளர்த்துக் கொண்டான் சூரபத்மன்.
முருகப் பெருமான் எதற்காக சூரபத்மனை முதலையாகப் படைத்தார் ? தெய்வ மூர்த்திகளின் ஒவ்வொரு காரியத்திலும் ஆயிராமாயிரம் காரண காரியங்கள், தெய்வீக இரகசியங்கள் இருக்கும். பரம்பொருள் சூரபத்மனுக்கு ஒரு சிறு நீர்த் துளி வடிவில்தானே காட்சி அளித்தார்.
பிராயசித்தம் அளிக்க வல்லது நீர். அதனால்தான் நமது மூதாதையர்களை மகிழ்விக்கவும், அவர்களை மறந்து போன தவறுக்கு பிராயசித்தமாக நீர் வார்க்கும் அர்க்ய பூஜைகளை மேற்கொள்கிறோம். நீர் மூலமாகவே மந்திர சக்திகளை கிரகிக்கவும் பிரயோகம் செய்யவும் முடியும்.

இறைவன் தான் எதையுமே செய்யாதவர். எல்லாக் காரியங்களிலும் அவர் ஒரு சாட்சி மட்டுமே. இறைவனுக்கு நாம் நைவேத்யம் செய்யும்போது பூமியில் ஒரு துளி நீர் விடுகிறோம். நாம் செய்யும் காரியத்திற்கு நீர் ஒரு சாட்சியாக, இறைவனைப் போல் ஒரு சாட்சி பூதமாக மட்டும் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

நீர் என்னும் பஞ்ச பூதத்திற்கு அதிபதி வருண பகவான். அதனால், முதலைகளுக்கு உணவிட்டால் வருண பகவான் மகிழ்வதால் மழைப் பொழிவு ஏற்படும்.

சித்தரை சோதிக்கலாமா ?

இது தொடர்பான ஒரு சுவையான நிகழ்ச்சியைக் காண்போம். தொழுப்பேடு சித்தர் என்னும் ஒரு அற்புதமான சித்தர் இருந்தார். ஒரு முறை ஒரு முரட்டு ஆசாமி அந்த சித்தரை சோதிக்கும் பொருட்டு தன்னுடைய கார் நிறைய அயல்நாட்டு மதுவகையான விஷ்கி பாட்டில்களுடன் வந்து அவரிடம், “சுவாமி, கொஞ்சம் குளிர் பானங்கள் பாண்டா ஆரஞ்ச் வைத்திருக்கிறேன், தரட்டுமா ?” என்று கேட்டான். சித்தருக்குத் தெரியாத இரகசியமா ? இருந்தாலும் அவர் ஒன்றும் அறியாதவர்போல், ”பாண்டா ஆரஞ்சா, ஒடச்சி குடுடா,” என்று கூறவே எல்லா சாராய பாட்டில்களையும் ஒவ்வொன்றாக உடைத்துக் கொடுக்க கொடுக்க அவரும் தொடர்ந்து குடித்து பாட்டில்களை காலி செய்து கொண்டு வந்தார்.
பாட்டில்களை திறந்து கொடுத்த அந்த ஆசாமி ஒரு கட்டத்தில் மலைத்து போய் ஒன்றும் பேசாமல் அயர்ந்து போய் நின்று விட்டான். ஆனால், சித்தரோ, “எங்கேடா நைனா, பேண்டா. ஒடச்சி குடுடா, இப்போ தாகம் ஜாஸ்தி ஆய்டிச்சி,” என்றார்.
அவன் பயத்தால் வெலவெலத்து நடுங்கி விட்டான். நெடுஞ்சாண்கிடையாய் அவர் காலில் விழுந்தான். “சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். அவை எல்லாம் விஷ்கி, அயல்நாட்டு சாராயம். உங்களை சோதிப்பதற்காக ஏதோ தவறு செய்து விட்டேன். பெரியவர் நீங்கள் தயவு செய்து என்னுடைய இந்த மட்டமான செயலை மன்னித்து விடுங்கள்,” என்று மன்றாடி கேட்டுக் கொண்டான்.
சித்தர்பிரானும் ஒன்றும் அறியாதவர் போல், “அப்படியா, அது எல்லாம் கூல் ட்ரிங்ஸ் இல்லையா, பரவாயில்லை, கண்ணு.” என்று அன்புடன் அவனுக்கு ஆறுதல் அளித்தார்.
வந்த ஆசாமி, “சுவாமி, நீங்கள் மன்னிப்பு அளித்து விட்டாலும். நான் செய்தது தவறு அல்லவா. அதற்கு ஏதாவது பிராயசித்தம் செய்தால்தான் என்னுடைய மனது ஆறும். தாங்கள் தயவு செய்து இந்த தவறுக்கு ஏதாவது பிராயசித்தத்தை சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று பிராயசித்தத்திற்காக வேண்டி நின்றான்.

ஸ்ரீகணேச மூர்த்தி
பின்னவாசல், லால்குடி

கருணைக் கடலான தொழுப்பேடு மகானும், “என்ன நைனா, இது ஒரு பெரிய தப்பு இல்ல. இருந்தாலும் நீ கேட்குற. வர அமாவாசை நாள்ல ஒரு பத்தாயிரம் பேருக்கு நல்ல வட பாயசம் சாப்பாடு இங்க போட்டுடு போதும்,” என்று அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.
அவனும் சித்தர் கூறியது போல் அடுத்து வந்த அமாவாசை திதியில் பிரமாதமாக வடை பாயசம் கூட்டு பலவகை கறியுடன் சமையல் செய்து முழு வாழை இட்டு பத்தாயிரம் பேருக்கு மேல் வரவழைத்து வெட்ட வெளியில் தொழுப்பேடு சித்தர் முன்னிலையில் உணவு பரிமாறினான். அனைவரும் உணவருந்த அமர்ந்து விட்டனர்.
ஆனால், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதுவரை எந்த அறிகுறியும் இல்லாத வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து உடனே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து சித்தர்பிரான் முன் வரப் போகும் மழையைக் குறித்து தெரிவித்தார்கள்.
தொழுப்பேடு சித்தர் பெரும்பாலும் தலையைக் குனிந்த நிலையில்தான் இருப்பார். எனவே அவர்கள் மழையைப் பற்றி அவரிடம் தெரிவித்தபோது அப்பாவித்தனமாக, “அப்படியா, மழை பெய்யப் போகிறதா. வருணன் எங்க இங்க வந்தான்,” என்று கேட்டாராம்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் குறிப்பிடும்போது, “பாருங்கள் சார், சுவாமி (தொழுப்பேடு சித்தர்) கேட்டாராம். வருணனா…. ? அவன் எங்க இங்க வந்தான் ….., அப்படீன்னு. நீங்களும் நானும் இந்த கேள்வியைக் கேட்க முடியுமா ? அதனால்தான் அவர்களை மகான்கள் என்று சொல்கிறோம்.”

தலையைக் குனிந்து கொண்டே இருந்த சித்தர் வானைத்தைப் பார்த்து கை விரலால் ஒரு கோடு போட்டார். அவ்வளவுதான். அங்கே வானத்தில் மின்னலைப் போல் பளீரென ஒரு கோடு விழுந்தது. கோட்டின் இரண்டு பக்கத்தில் இருந்த கருமேகங்கள் நொடியில் நகர்ந்து மறைந்தன. கண் முன் நடந்த அந்த அற்புத செயலைக் கண்டு வந்திருந்த அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். பின்னர் அமைதியாக உணவருந்த ஆரம்பித்தனர்.
அனைவரும் உணவருந்திய பின் அடியார்களும் அந்த முரட்டு ஆசாமியும் சித்தருக்கு நன்றி தெரிவித்தனர். “சுவாமி, ஒரு மழை துளி கூட இல்லை. அனைவரும் உணவருந்தி முடித்து விட்டனர்,”.
“அப்படியா,” என்று சொல்லி வானத்தை பார்த்து தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டினார் சித்தர். மீண்டும் எங்கோ சென்று மறைந்த கார் மேகங்கள் ஒன்று சேர்ந்தன, மழை வெள்ளமாய்ப் பொழிந்தது. அடியார்களின் பிரசாத இலைகள் அனைத்தும் அந்த தெய்வீக மழைப் பொழிவில் கரைந்து மறைந்தன.
எனவே அனைத்தையும் ஆக்க வல்லதும், தவறுகளுக்கு பிராயசித்தம் தர வல்லதும் நீரே ஆகும்.

எல்லாம் ஈசன் செயல்

இவ்வாறு இறை நாமத்துடன் லட்சுமி தீர்த்தத்தில் தவமியற்றிக் கொண்டிருக்கும்போது கஜேந்திரன் என்ற யானை லட்சுமி தாயாரின் பூஜைக்காக தாமரை மலர்களைப் பறிக்க அந்த தீர்த்தத்தில் இறங்கியது. முதலை வடிவில் இருந்த சூரபத்மன் அந்த யானையில் காலைக் கவ்வினான்.
யானையின் பலம் அசாத்தியமானது. ஆனால், அந்த முதலையின் பிடியிலிருந்து யானையால் தப்பிக்க முடியவில்லை. இது எதைக் குறிக்கிறது ? இந்த நிகழ்ச்சி பல உண்மைகளைச் சுட்டிக் காட்டுகிறது. அதில் ஒன்று அவரவர் சூழ்நிலையில் அவரவருக்கு பலம் அதிகம். தரையில் யானைக்கு பலம் அதிகம், நீரில் முதலைக்கு பலம் அதிகம். இது லௌகீகமான பதில்.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

தெய்வீகமாகப் பார்த்தால், முதலையின் அதி தேவதை வருண பகவான் என்று ஏற்கனவே கூறினோம். எனவே முதலை தண்ணீரில் இருக்கும்போது அதாவது தன்னுடைய அதிதேவதையுடன் இருக்கும்போது அதை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. குருவை நம்பிய சீடனை, குருவுடன் இருக்கும் சீடனை, இறைவனுடன் இருக்கும் பக்தர்கனள யாராலும் வெற்றி கொள்ள முடியாது.
இதற்கு உதாரணமாக அமைந்ததே மார்க்கண்டேயர், பிரகலாதனின் சரித்திர உண்மைகள்.
எப்போது சூரபத்மன் முருகப் பெருமானை சரணடைந்து விட்டானோ அப்போது அவனுடைய அனைத்து தவறுகளுக்கும் பிராயசித்தம் அளிக்க வேண்டியது குக குருநாதனின் பொறுப்பாகி விடுகிறது அல்லவா ? சூரபத்மன் பிரம்ம, விஷ்ணு மூர்த்திகளை மட்டும் நிந்திக்கவில்லையே. இந்திரர்களையும் துச்சமாகத்தானே மதித்தான் சூரபத்மன்.
யானை வடிவில் வந்த இந்திரனின் காலை ஆயிரம் ஆண்டுகள் முதலை வடிவில் சூரபத்மன் கவ்விப் பற்றிக் கொண்டதால் தேவர்கள் அனைவரையும் நிந்தித்த தவறுக்கு ஒரு பிராயசித்தமாகவும் அவன் செய்கை அமைந்து விட்டது.
இதிலிருந்து என்ன தெரிகிறது ? அனைத்து கேள்விகளுக்கும் தெய்வீகத்தில் ஒரே பதில்தான். ஏ மனமே அஞ்சாதே எல்லாம் ஈசன் செயல்.
முதலை யானையின் காலைப் பற்றிய உடனேயே பெருமாள் மூர்த்தி தன்னுடைய சக்கராயுதத்தால் முதலையை வீழ்த்தி யானையைக் காப்பாற்றி இருக்கலாமே என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கலாம். அது போன்ற பல கேள்விகளுக்கு கஜேந்திர மோட்சம் ஒரே விடையாக அமைந்துள்ளது என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இப்போது மோட்சம் பெற்றது கஜேந்திரன் மட்டும் அல்ல, சூரபத்மனும்தானே. ஆனால், சூரபத்மனின் தவம் இத்தோடு முடிந்தபாடில்லை. அடுத்து முருகப் பெருமானின் தரிசனத்திற்காக அந்த தீர்த்தத்திலேயே தன்னுடைய தவத்தை தொடர்ந்து கொண்டிருந்தான் சூரபத்மன்.

உலகம் உருண்டை

ஒரு நாள் விடியற்காலையில் தொழுப்பேடு சித்தர் பெருமாள் பக்தர் வடிவில் அக்குளத்தில் நீராடி உடல் முழுவதும் நாமங்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தார். அப்போது தொழுப்பேடு சித்தரின் திருநாமம் நத்தத்துறையான் சித்தர் என்பதாகும். அவருடைய தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு அவர் பாதங்களை வணங்கி சூரபத்மன் தன்னுடைய நிலையை அவரிடம் விவரமாக எடுத்துரைத்தான்.
சித்தர்பிரான் பொறுமையாக அதை முழுமையாகக் கேட்டு விட்டு,  “உலகம் உருண்டை”, என்று சொல்லி அங்கிருந்து மறைந்து விட்டார். சூரபத்மன் யோசித்தான். உலகம் உருண்டை என்றால், என்ன அர்த்தம் ? உருண்டையான ஒரு பொருள் மேல் நடந்து கொண்டே இருந்தால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குத்தானே வருவோம். இதுவே ஒரு வேளை அந்த மகானின் வழிகாட்டுதலாக இருக்குமோ என்று நினைத்து அங்கிருந்து பாத யாத்திரையாக கிளம்பி ஒவ்வொரு இறைத்தலமாக தரிசனம் செய்து கொண்டே வந்தான் சூரபத்மன்.
தொடர்ந்து பல வருடங்கள் யாத்திரை நிறைவேற்றிய பின் மீண்டும் நத்தம் திருத்திலத்திற்கே வந்து விட்டான் சூரபத்மன். அங்கே புன்முறுவலுடன் சூரபத்மனின் வரவிற்காகக் காத்திருந்தார் நத்தத்துறையான் சித்தர்.

பேருவகையுடன் அவர் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் சூரபத்மன். தாயைக் கண்ட சேயைப் போல இருந்தது அவனுடைய நிலை. சித்த மூர்த்தியும் அவனை அரவணைத்து, “ சூரனே, உன்னுடைய பக்தி கனியும் காலம் வந்து விட்டது. அடுத்து நீ செல்ல வேண்டிய இடத்தையும் குறிப்பால் உணர்த்துவோம்.
அன்னை அளிப்பாள் அருளமுதம்
நந்தி நல்குவான் நனிசீர்கொடை
ஈசநிலை பூண்டோர் ஈவதோ ஈடிலா தவம்
இதுவே நீ தவம் இயற்ற வேண்டிய தலமாகும் என்று கூறி சூரபத்மனுக்கு ஆசி அளித்து அவனுக்கு விடை கொடுத்தார் சித்தபிரான்.
சூரபத்மன் மீண்டும் யாத்திரையைத் தொடர்ந்தான். தற்போது பின்னவாசல் திருத்தலம் உள்ள இடத்தை அடைந்தபோது அங்கு ஒரு அற்புத காட்சியைக் கண்டான். ஒரு சிறிய மணல் குன்று. அதன் நடுவில் ஒரு பிரகாசமான சிவலிங்கம். மாலை மயங்கும் அந்தி நேரம். அந்த இனிய வேளையில் ஒரு பசு மாடு தன்னுடைய பாலைச் சுரந்து அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகமாக அளித்துக் கொண்டிருந்தது.
அந்த தெய்வீகக் காட்சியில் தன்னை மறந்தான் சூரபத்மன். தேவலோக காமதேனு கூட அந்த அளவிற்கு தெய்வீகப் பொலிவுடன் இருக்குமா என்று சந்தேகப்படும் நிலையில் அந்த பசு தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
ஆனால், அந்த தெய்வீக காட்சிகள் ஒரு சில நொடிகள் நீடித்தன. காற்றில் கரையும் மேகக் கூட்டம் போல் விரைவில் அந்த காட்சிகள் அவன் கண் முன்னால் மறைந்து போய் விட்டன. ஆனால், அவனுக்கு தான் இயற்ற வேண்டிய தெய்வீகப் பணி, நிறைவேற்ற வேண்டிய தவம் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகப் புரிந்து விட்டது.
ஆம், இந்த இடத்தில் சுவாமியின் அருள் சக்தி சூட்சும்மாக உள்ளது. அதை காமதேனுவின் பாலபிஷேகம் மூலம் உலகிற்கு வெளிக் கொணர வேண்டியதே நமது கடமை என்று தனது தெய்வீகப் பணியைப் பற்றிப் புரிந்து கொண்டான் சூரபத்மன்.
ஆனால், பசு தானாக பால் சுரக்குமா ? அதை எப்படி ஒரு சாதாரண அசுரன் நிறைவேற்ற முடியும். பசுவை வாங்கலாம், பாலை வாங்கலாம் ஆனால், பசுவைப் பால் சுரக்க வைக்க முடியுமா ? இது எப்படி சாத்தியமாகும். அதைப் பற்றி பன்னெடுங்காலம் சிந்தித்து அவ்விடத்திலேயே அமர்ந்து முருகப் பெருமானை தியானிக்க ஆரம்பித்தான் சூரபத்மன்.

பரிபூர்ண நட்சத்திரங்கள்

அப்போது அவன் காதுகளில், “பரிபூர்ணம், பரிபூர்ணம்,“ என்ற வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்டான். பூர்ணம் என்றால் முழுமையானது. பரிபூர்ணம் என்றால் முற்றிலும் முழுமையானது. முழுக்க முழுக்க முழுமையானது எது ? யோசித்தான் சூரபத்மன்.

பூஜைகளுக்கு உகந்தது நட்சத்திரம். அந்த நட்சத்திரம் பரிபூரணமாக இருந்தால் பூஜையும் முழுமையாக இருக்கும். இதுவே எம்பெருமான் உணர்த்துவது என்று தெளிந்தான்.
நட்சத்திரங்களில் முழு நட்சத்திரங்கள், தலை இல்லா நட்சத்திரங்கள், கால் இல்லா நட்சத்திரங்கள், உடல் இல்லா நட்சத்திரங்கள் என்ற பிரிவுகள் உண்டு.
அஸ்வினி, பரணி, ரோஹினி போன்ற 18 நட்சத்திரங்கள் முழு நட்சத்திரங்கள் ஆகும். இவற்றைப் பூரண நட்சத்திரங்கள் என்று சொல்வதுண்டு. இவற்றில் பூசம், ஆயில்யம், மகம், பூரம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் என்ற எட்டு நட்சத்திரங்களையும் பரிபூரண நட்சத்திரங்கள் என்று அழைக்கிறோம்.
இவற்றால் என்ன பயன் ? திருமணம், கிரகப்பிரவேசங்கள் போன்ற காரியங்களுக்கு சுப நட்சத்திரங்கள் எதில் வேண்டுமானாலும் அந்த நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால், சீமந்தம், வாசல் நிலை வைத்தல் போன்ற காரியங்களுக்கு முழு நட்சத்திர நாட்கள் மட்டுமே உகந்தவை.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி
பின்னவாசல், லால்குடி

வாசல் நிலை வைத்தல் என்பது அஸ்திவாரம் என்ற காரியத்திற்குப் பின் அமைந்து வீடு முழுமையாக அமையும் முன் உள்ள நிலை. அது போல சீமந்தம் என்பது குழந்தை கரு தரித்த பின் ஆனால் குழந்தை பிறக்கும் முன் உள்ள நிலை. இது போன்ற நடுத்தர ஆனால் முழுமை அடைய வேண்டிய காரியங்களுக்கு முழு நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஜோதிட விதி.
இதில் மேலும் பல ஜோதிட விளக்கங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.
இவ்வாறு பரிபூரண நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய பூஜையைத் தொடர்ந்தான் சூரபத்மன். எப்படி ? ஒவ்வொரு பரிபூரண நட்சத்திர நாளிலும் ஒன்பது பசு மாடுகளை கன்றுடன் நிற்க வைத்து அவற்றிற்கு அந்தந்த நவகிரகத்திற்கு உரித்தான வண்ண ஆடைகளை பசுவிற்கும் கன்றிற்கும் அணிவித்து அவைகளை சாட்சாத் நவகிரஹ மூர்த்திகளாக பாவித்து பூஜித்தான்.
நவகிரகங்களுக்கு உரித்தான திசைகள் யுகத்திற்கு யுகம் மாறுபடும். இவ்வகையில் சூரபத்மன் காலத்தில் உள்ள நவகிரகங்களுக்கு உரிய திசைகளே தற்போது நீங்கள் பின்னவாசல் சிவாலயத்தில் காண்பது.
இவ்வாறு ஒரு லட்சம் ஆண்டுகள் தவம் இயற்றினான் சூரபத்மன். ஆனால், ஒரு முறை பூஜித்த பசு கன்றுகளை மீண்டும் பூஜிக்காது ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக கன்றுகளையும் பசுக்களையும் தேடித் தேடி பூஜித்து வந்தான் சூரபத்மன்.
காலச் சக்கரம் சுழன்றது. சூரபத்மனின் தவம் கனிந்தது. தவ முடிவில் மீண்டும் நத்தத்துறையான் சித்தரின் தரிசனம் பெற்றான் சூரபத்மன். சித்தர் சூரபத்மனை அன்புடன் நோக்கி, “உன்னுடைய தவத்தின் பலன் கிட்டும் தருணம் வந்து விட்டது. நீ இனி செய்ய வேண்டியது இதுதான். உன்னுடைய கோமாதா பூஜையால் மகிழ்ந்த காமதேனு தன்னுடைய சக்தியை பசுக்கள் மூலமாக அளிக்க சித்தம் கொண்டுள்ளாள். எனவே பசுக்கள் நீ விரும்போது எல்லாம் பால் தரும். அந்த பாலிலிருந்து தயிர் பெற்று, வெண்ணெய் ஆக்கி, அதிலிருந்து கிட்டும் நெய்யை இந்த புன்னாகபுரியிலுள்ள பரிபூரண ந்ந்தி மூர்த்திக்கு அபிஷேகித்து வந்தால் உன்னுடய எண்ணம் நிறைவேறும்,” என்று அருளினார்.
பின்னவாசல் திருத்தலத்தின் பண்டைய பெயர்களே புன்னாகபுரி, புன்னைவாசல், புன்னாகவாசல் என்பவை. இப்பெயர்கள் எல்லாம் இறைவனின் பெயரான புன்னாகபுரீசன், புன்னை வாசன், புன்னை நலன் என்பவற்றை அனுசரித்து ஏற்பட்டவையே.

சித்தர் சூரபத்மனிடமிருந்து விடைபெற்றுச் சென்ற மறுகணமே புன்னாகபுரியில் உள்ள நவகிரக மூர்த்திகள், பரிபூர்ண நந்தி மூர்த்தியின் திருஉருவங்கள் சூரபத்மனின் கண்களுக்குத் தெளிவாக காட்சி அளித்தன. வியந்தான் சூரபத்மன். “ஒரு லட்சம் ஆண்டுகள் இத்தலத்தில் சேவை  செய்து வந்தும் என்னால் இந்த மூர்த்திகளை இந்நாள் வரை காண முடியவில்லையே,” என்று யோசித்தான் சூரபத்மன்.

எதுவும் உரியவர்களால் உரிய நேரத்தில்தான் கிடைக்கும் என்ற இறைவனின் திருக்கூத்தை அப்போது உணர ஆரம்பித்தான் சூரபத்மன்.
மீண்டும் தவத்தைத் தொடர்ந்தான் சூரபத்மன். ஆனால், என்ன அதிசயம். இப்போது பசு மாடுகளைத் தேடி சூரபத்மன் செல்ல வேண்டிய அவசியம் இல்லாது போய் விட்டது. பசு மாடுகளே புன்னாகபுரி தலத்திற்கு வர ஆரம்பித்து விட்டன. அது மட்டுமல்லாமல் அவற்றிடமிருந்து பாலைக் கறக்க வேண்டிய சிரமமும் ஏற்படவில்லை. அவைகளாகவே சூரபத்மன் காட்டும் கலயத்தில் கலயம் நிரம்பும் வரை பாலைக் கறந்து சென்றன. இறைவனின் பெருங் கருணையை வியந்தவாறே அந்த பசும்பாலிலிருந்து நெய் தயார் செய்து பரிபூரண நந்தி மூர்த்திக்கு தினமும் காப்பிட்டு வந்தான் சூரபத்மன்.
இவ்வாறு மீண்டும் ஒரு லட்சம ஆண்டுகள் கடந்தன. முழுமையாக அறுபது நாழிகைகளும் வியாபித்து நின்ற ஒரு அனுஷ நட்சத்திர தினம். வழக்கம்போல் பரிபூரண நந்தி மூர்த்திக்கு பசு நெய் காப்பிட்டு விட்டு ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்தான். சரியாக தற்போது சுப்ரமண்ய சுவாமி சன்னதியைத் தாண்டிய உடன் அங்கிருந்து நந்தி மூர்த்தியைப் பார்த்தான்.

மாறன் மயிலும் வந்தது

நந்தியெம்பெருமான் பரிபூரண நந்தியெம்பெருமானாக காட்சி அளித்தார். அதாவது ஆனந்தவல்லி தாயின் வாகனமாக, நத்தத்துறையான் சித்தர் உருவமாக, தர்ம ஜோதியாக வானளாவ நின்றார் நந்தி மூர்த்தி. சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கினான் சூரபத்மன்.
தரிசனங்கள் தொடர்ந்தன. நவகிரக மூர்த்திகள் தங்கள் பத்தினிகளுடன் அருள் காட்சி நல்கினர். பேருவகை பெற்றான் சூரபத்மன். அவனை ஆனந்தத்தின் உச்ச நிலைக்கே கொண்டு சென்றது அடுத்து அவன் கண்ட காட்சி.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

அது என்ன ? சூரபத்மன் லட்சக் கணக்கான ஆண்டுகளாக கண்ட கனவு அவன் கண் முன் அப்போது நனவானது. அத்தல மணற் குன்றின் மேல் காமதேனு லிங்கப் பெருமான் மேல் பால் சுரந்து கொணடிருந்தாள். முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், யட்சர்களும் கந்தர்வர்களும் அங்கே பிரசன்னம் ஆனார்கள்.
ஜோதி ஜோதியாய் ஆனந்த ஜோதியாய் பிரகாசம் வெள்ளம் அங்கே பொங்கிப் பாய்ந்தது. அந்த பேரொளி பிரகாசத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வ யானை சமேதராய் எழுந்தருளினார். அந்த அற்புத திவ்ய பேரொளி பிரவாகத்தில் சூரபத்மனை தன்னுடைய மயில் வாகனமாக ஏற்றுக் கொண்டார். ஆனால், இப்போது சூரபத்மன் தம்பதி சமேதரான சுப்ரமண்ய சுவாமியை மயில் வடிவத்தில் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கினார். அந்த அற்புத தேவ காட்சியே இன்று நீங்கள் பின்னவாசல் திருத்தலத்தில் காண்பதாகும்.
பொதுவாக திருத்தலங்களில் காண்ப்படும் சுப்ரமண்ய சுவாமியின் மயில் வாகனம் சுவாமியின் இடது பக்கம் தலையை வைத்திருப்பது சூரபத்மன் முருகப் பெருமானை அப்பிரதட்சிணமாக வலம் வந்ததைக் குறிக்கிறது.
சுப்ரமண்ய சுவாமி சன்னதி அருகிலிருந்து அம்பாளின் ந்ந்தி மூர்த்தியை தரிசனம் செய்வதே பரிபூரண நந்தி தரிசனம் ஆகும். சூரபத்மன் பூஜித்த முறையில் இந்த நந்தி எம்பெருமானுக்கு பசு நெய் அபிஷேகம் செய்து அனுஷ நட்சத்திர தினத்தன்று பரிபூரண ந்ந்தி தரிசனம் பெற்றிடில் அது நூறு பிரதோஷ தரிசனப் பலன்களை நல்கும் சக்தி உடையதாகும்.
ஒரு நந்தி மூர்த்தியை தரிசனம் செய்வதால் எப்படி நூறு பிரதோஷப் பலன்கள் கிட்டும் என்று கேட்கத் தோன்றும் அல்லவா ? ஒரு திருத்தலத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளின் பின்னால் கோடி கோடி இரகசிய சக்திகள் உண்டு. இவற்றை சாதாரண மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் சில சக்தி நுணுக்கங்கள் மனித அறிவால் கிரகிக்க்க் கூடியவையே.

ஈச நிலை பூண்ட நவகிரக மூர்த்திகள்

எம்பெருமான் சிவன் ஒரு தலத்தில் குடி கொள்ளும்போது அவரைச் சுற்றி கோடிக் கணக்கான இறை சக்திகளும் சேர்ந்து ஐக்கியம் பெறுகின்றன. அவ்வாறு ஐக்கியம் பெறும் நவகிரக மூர்த்திகள் ஈசான்ய மூலையில் நிலைகொண்டால் அவை ஈச நிலை பெற்ற மூர்த்திகளாக அமைகிறார்கள். ஈசான்ய திசை மிகவும் புனிதமான திசையாக இருப்பதால் அவர்கள் புனிதமான மூல மூர்த்திகளாகவே ஆக்கம் பெறுகிறார்கள்.

பொதுவாக நவகிரக மூர்த்திகள் அபரிமிதமான சக்திகளுடன் விளங்கும்போது அவர்களை தனித்து வலம் வருவது கிடையாது இறை மூர்த்திகளுடன் சேர்த்தே வலம் வருதல் மரபு. சில திருத்தலங்களில் அவர்களை தனியாக வலம் வர முடியாத நிலையிலேயே அமைத்து விடுவதும் உண்டு. உதாரணமாக இடையாற்று மங்கலம், திருவையாறு போன்ற தலங்கள்.

மேலும் ஈசான்ய திசைக்கு உரித்தான எண் ஒன்பதாக இருப்பதால் அது நவகிரகங்களுடைய எண் சக்திகளுடன் ஒன்றிப் போய் விடுகிறது. இவ்வாறு நவகிரக மூர்த்திகள் ஈச நிலை பூண்டிருக்கும்போது அவர்களை மூல மூர்த்திகளுடன் சேர்த்து வலம் வந்தால் ஒரு முறை அங்கு வரும் வலம் ஒன்பது தடவை வலம் வந்த பலனைத் தருகிறது.
உதாரணமாக, பின்னவாசல் திருத்தலத்தை ஒரு முறை சுற்றி வலம் வந்தால் அங்குள்ள நவகிரக மூர்த்திகளையும் மூலவர், அம்பாள், கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமண்யர், துர்கை என ஒவ்வொரு மூரத்தியையும் ஒன்பது முறை வலம் வந்து வணங்கிய பலன் கிட்டும். என்னே நவகிரக நாயகர்களின் அருள் கடாட்சம்.
நவநாயகர்கள் மற்றுமோர் அற்புத சேவையையும் சாதிக்கின்றனர். பொதுவாக, திருக்கோயில்களில் நடைசார்த்தி இருந்தால் அத்தல கொடி மரத்தையோ, தல விருட்சத்தையோ தரிசனம் செய்தால் மூலவரை தரிசனத்தை பலன் கிட்டும்.
ஆனால், பின்னவாசல் திருத்தலத்தைப் போல் கொடி மரமோ தல விருட்சமோ இல்லாத ஆலயங்களில் என்ன செய்வது ? அந்நிலையில் ஈசநிலை பூண்ட நவகிரக மூர்த்திகளை தரிசனம் செய்தால் மூலவரை தரிசனம் செய்த பலனைப் பெறலாம்.
புன்னாகபுரீசர்

புன்னாகமாக மாறிய புனிதவதி

எம்பெருமான் சிவபெருமானுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் நந்தி மூர்த்திகள, வாகனங்கள் உண்டு. எருது என்பது ஒரு வகை வாகனம் மட்டுமே. இது போல் மான், மயில், யானை என்று வகை வகையான வாகனங்கள் எம்பெருமானுக்கு உண்டு. இவை அனைத்திற்கும் உள்ள பொதுவான பெயரே நந்தி ஆகும். அதனால் இறைவனையே நந்தி என்று அழைக்கிறோம்.
அதுபோல் சிவபெருமானின் உடலில் தங்கி விளையாடும் நாகங்கள் ஒரு கோடிக்கு மேல். இவை அனைத்தும் விதவிதமான சக்திகளுடன் திகழ்பவை. இவ்வாறு சிவபெருமானின் இடுப்பில் தவழும் நாகமே புன்னாகம் என்பதாகும்.
புன்னாகத்தை இறைவன் தரித்த வரலாறும் சுவையானதே.
ஒருமுறை தாருகா வனத்து ரிஷிகள் கர்வம் மேலோங்கி நின்றனர். தங்களை விட வேள்வியில் சிறந்தவர்கள் யாருமில்லை என்று இறைவனையே எதிர்க்கும் நிலைக்கு ஆளானபோது அவர்களை தன்னிலைக்கு மீட்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடன கோலத்தில் தாருகா வனத்திற்கு வந்தார்.
பெருமாளின் தசாவதாரங்களில் மிகவும் அழகானதே நரசிம்ம மூர்த்தியின் அவதாரமாகும். ஆனால், அந்த நரசிம்ம அவதாரமும் பிட்சாடன கோலத்தின் சுண்டு விரலின் நகத்திற்கு ஈடாகாது என்பது சித்தர்களின் கூற்று.

ஸ்ரீதுர்கா தேவி
பின்னவாசல், லால்குடி

மனம் வாக்கிற்கு அப்பாற்பட்ட எம்பெருமானின் பிட்சாடன கோலத்தைப் பின் யாரால்தான் வர்ணிக்க முடியும் ?
சிவபெருமான் தாருகா வனத்திற்கு எழுந்தருளப் போகும் எண்ணத்தைத் தன் தேவியிடம் வெளியிட்டபோது, அன்னை தானும் பெருமானுடன் வருவதாகக் கூறினாள். இதற்குக் காரணம் அன்னைக்கு உயிர்கள் மேலுள்ள கருணையே.

அகந்தை கண்ணை மறைக்கும்போது யாருக்கு என்ன தோன்றும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது அல்லவா ? ஒருவேளை தாருகா வனத்து ரிஷிகள் தங்களை அறியாமல் எம்பெருமானைப் பற்றி சற்றே ஏளனமாகப் பேசி விட்டாலும் அவர்கள் நிலை என்னவாகும். பெருமானின் நெற்றிக் கண் சுடருக்கு முன் அவர்கள் நிற்க முடியுமா என்று அன்னை நினைத்துக் கலங்கியதே அன்னையின் முடிவுக்குக் காரணம்.

அன்னையின் வேண்டுகோளைக் கேட்ட பெருமான், “தேவி நானோ அவதூத கோலத்தில் ஆடை ஏதுமற்ற நிலையில் அங்கு செல்வதாக உள்ளேன். இந்நிலையில் உன்னை எப்படி உடன் அழைத்துச் செல்வது ?“ என்று வினவினார்.
பார்வதி தேவி மறு விநாடியே, “பிராண நாதா, நீங்கள் அறியாததா ? கொம்பைச் சுற்றும் கொடி போல் அடியேன் உங்கள் அன்பைச் சுற்ற மாட்டேனா?“ என்றோர் எதிர்க் கேள்வியை விடுத்தாள்.
எம்பெருமான் தேவியின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்டார். ஆனந்தவல்லி என்பது பார்வதி தேவிக்கு அமைந்த பல பெயர்களில் ஒன்று. கொடி போல் இறைவனைச் சுற்றி அன்பைச் செலுத்துபவள் என்று அதற்குப் பொருள். இதைத்தான் மறைமுகமாக அன்னை இறைவனிடம் தெரிவித்தாள்.
அன்னை விருப்பப்படியே இறைவன் இறைவியை புன்னாகம் என்னும் நாகமாக மாற்றி தன்னுடைய இடுப்பில் அணிந்து கொண்டு தேவி ஆபரணம் என்னும் நாகாபரணம் உடலில் அலங்கரிக்க தாருகா வனம் புகுந்தான் ஈசன்.
இறைவனின் பிட்சாடன கோலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது ஏன் என்பதை தாய்மார்கள் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். அவதூத கோலத்தில் மனிதனின் அழகு முழுமை பெறுகிறது. அதனால்தான் இன்றும் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை குளிப்பாட்டிய பின்னர் பிறர் கண் படாமல் தாங்களே தங்கள் குழந்தைகளின் பிறந்தமேனி கோலத்தை சில நிமிடங்களாவது ஆசை தீர கண்டு விட்டு பின்னரே குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பர்.

தம்பதியரிடையே ஒற்றுமை ஓங்குக

சாதாரண மனிதனுடைய கோலமே இவ்வாறு என்றால் சாட்சாத் பரம்பொருளின் அவதூத தரிசனம் எல்லையில்லா ஆனந்த்த்தை அளிப்பத்தில் வியப்பில்லையே.
இறை மூர்த்திகளுடைய இத்தகைய தரிசனங்களை நிர்மால்ய தரிசனம் என்று கூறுவதுண்டு. திருமலை வெங்கடஜாலபதி, குருவாயூரப்பன் போன்ற மூர்த்திகளின் நிர்மால்ய தரிசனம் உலகப் பிரசித்தம் என்பது நீங்கள் அறிந்ததே.
பேரெழில் கோலத்தில் உலாவிய பிட்சாடன மூர்த்தியைப் பார்த்த ரிஷி பத்தினிகள் அனைவரும் தங்களை மறந்து அவர் அழகில் மயங்கி எம்பெருமானின் பின் செல்ல ஆரம்பித்தனர். அதனால் தாருக வன ரிஷிகள் வேள்வி செய்து சக்தி வாய்ந்த மான், அக்னி போன்ற பல ஆயுதங்களை சிவபெருமான் மீது செலுத்தினர். அவை அனைத்தையும் எம்பெருமான் சாந்தப்படுத்தி தனது உடலில் அலங்கார சாதனங்களாக ஏற்றுக் கொண்டார்.
இறுதியில் தங்கள் தவறை உணர்ந்து அந்த ரிஷிகள் அனைவரும் இறைவனைச் சரணடைந்து தங்கள் தவறுகளைப் பொறுத்தருளுமாறு வேண்டினர். கருணா மூர்த்தியான சிவ மூர்த்தியும் அவர்களை மன்னித்து காத்தருளினார்.
அத்தருணத்தில் ரிஷிகள், “சுவாமி, எங்கள் பத்தினிகள் அனைவரும் தங்களுடைய அவதூத கோலத்தைக் கண்டு கற்பிழந்து தவறிழைத்து விட்டனர். இறைவனைக் கண்டு தங்களை மறப்பது இயற்கையே ஆயினும் பெண்கள் பிற ஆண்களின் அழகில் மயங்குவது தவறு என்ற உலகக் கண்ணோட்டத்திலிருந்து தவறு செய்த பெண்களுக்கு பிராயசித்தம் அளிக்குமாறு வேண்டுகிறோம்,“ என்று வேண்டினர்.

ஈசநிலை நவகிரக மூர்த்திகள்
பின்னவாசல், லால்குடி

இறைவனும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று, “எத்தகைய சூழ்நிலையிலும் கணவனை விட்டு பிரியக் கூடாது என்ற நியதிக்குச் சான்றாக பார்வதிதேவி புன்னாக உருவில் என்னுடைய இடுப்பைச் சுற்றி நின்று என்னுடன் தாருகா வனத்திற்கு வந்தாள். எனவே தன்னிலை மறந்த உங்களுடைய பத்தினிகளுக்கு பிராயசித்தம் அளிப்பதற்காக யாம் ஆனந்தவல்லி சமேதராய் புன்னாகபுரியில் எழுந்தருள்வோம். அக்காட்சியை காணும் உங்கள் பத்தினிகள் தங்கள் சாபத்திலிருந்து மீண்டு நன்னிலை பெறுவார்கள்,” என்று அருளினார்.
இவ்வாறு தாருகா வனத்து ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் சாபம் விமோசனம் பெற்ற தலமே புன்னாகபுரி என்ற பின்னவாசல் திருத்தலமாகும். இறைவனின் இடுப்பை புன்னாக நாக வடிவில் அலங்கரித்த பார்வதி தேவி இங்கு ஆனந்தவல்லி அம்மனாய் இறைவனுக்கு இடப்புறம் எழுந்தருளி உள்ளாள். அனைவரும் தரிசித்து அனைத்து நலன்களையும் பெற்று வாழ உதவும் அற்புத தரிசனம்.

பொதுவாக ஆனந்தவல்லி என்ற பெயரில் அம்பாள் துலங்கும் தலங்கள் நாக சக்திகள் மிகுந்தவையாக இருக்கும். திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் தீராத நாக தோஷங்களே கிடையாது. இத்தலத்தில் எழுந்தருள உள்ள சசபிந்து மகரிஷி எத்தகைய நாக தோஷங்களுக்கும் பரிகாரம் அளிக்கக் கூடிய அற்புத மகரிஷியாவார்.
அதே போல திருச்சி அருகே உள்ள பழையூரில் எழுந்தருளி இருக்கும் ஆனந்தவல்லி அம்மனும் தம்பதிகளுக்கு ஏற்படக் கூடிய நாக தோஷங்களை களையும் அன்னை ஆவாள்.
ஏற்கனவே கூறியது போல இறை மூர்த்திகள் மட்டும் அல்லாது சுக பிரம்ம ரிஷி, ஜடபரதர், கலைகோட்டு முனிவர், கசவனம்பட்டி சித்தர் போன்ற சித்தர்களும் மகான்களும் அவதூத கோலத்தில் மக்களுக்கு முழுமையான இறை ச்க்தியின் மகத்துவத்தை வெளிப்படுத்தி அருந்தொண்டு ஆற்றி வந்துள்ளனர்.
கலியுகம் கண்ட ஈடில்லா ஏற்றமிகு ஈசசித்தர் வெங்கடராம சுவாமிகளும் தான் உடல் நலம் குன்றியுள்ளதாக ஒரு காரணத்தை முன் வைத்து  நெருங்கிய பல சீடர்களுக்கும் தன்னுடைய அவதூத கோல தரிசனத்தை, நிர்மால்ய அனுகிரகத்தை வாரி வழங்கி உள்ளார்கள் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்.
இறைவனும் மகான்களும் எப்போதும் பாரபட்சமாக செயல்படுவது கிடையாது அல்லவா ? எந்த அனுகிரகமாக இருந்தாலும் அது ஏழைகளுக்கும் தனவந்தர்களுக்கும் படித்தவனுக்கும் பாமரனுக்கும் சம்மாக பங்கிடப்பட்டு அளிக்கப்படும் அல்லவா? இம்முறையில் திருப்பதி வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், தத்தாத்ரேயர் போன்ற மூர்த்திகளின் நிர்மால்ய தரிசனப் பலன்களை நாடும் பக்தர்கள் சுத்தமான பசு நெய்யினால் பின்னவாசல் பரிபூரண ந்ந்திக்கு காப்பிட்டு அனுஷ நட்சத்திரம் பூரணமாக உள்ள நாட்களில் வழிபட்டு வந்தால் நிச்சயமாக இறை மூர்த்திகளின் நிர்மால்ய தரிசனப் பலன்கள் கிடைக்கும் என்று சித்தர்கள் உறுதி அளிக்கிறார்கள்.
முயற்சி செய்வீர்களாக ! வெற்றி அடைவீர்களாக !!

நாகத்தை மயக்கும் ராகங்கள்

புன்னாகவராளி, தோடி, ஹனுமத்தோடி, ஆனந்த பைரவி போன்ற ராகங்களில் பாடினால் நாகங்கள் மயங்கும் என்ற பொதுவான கருத்து உண்டு. இங்கே நாகங்கள் என்பது நாகப் பாம்பை குறிக்காது. சில சந்தர்ப்பங்களில் இந்த ராகங்களில் வாசிக்கப்படும் இடங்களில் நாகங்கள் சஞ்சாரம் செய்வது உண்டு என்றாலும் அவை சப்தத்தால் ஈர்க்கப்படுபவை கிடையாது. அந்த ராகங்கள் வாசிக்கப்படும்போது அங்கே ஓர் வசீகர சக்தி உருவாகும். அந்த வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்டுதான் நாகங்கள் அங்கே வருகின்றன.
எனவே தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் எம்பெருமானின் அழகால் ஈர்க்கப்பட்டு எம்பெருமான் பின் சென்றாலும் அந்த அழகிற்கு மெருகூட்டியது அவர் இடுப்பில் அணிந்திருந்த புன்னாக நாகத்தின், பார்வதி தேவியின் ஈர்ப்பு சக்தியும் என்பது நாம் நினைவு கூற வேண்டிய உண்மையாகும்.

ஸ்ரீசசபிந்து மகரிஷி

எனவே ஆண்களை, பெண்களை, மனைவியை, கணவனை அன்பால் வசியம் செய்ய நினைத்தால் அவர்கள் தோடி போன்ற ராகங்களில் அமைந்த இறை கீர்த்தனைகளை பின்னவாசல் தலத்தில் பாடி வந்தால் அல்லது அந்த ராகங்களில் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்து வந்தால் அற்புத வசிய சக்திகளைப் பெறுவர்.
அரசியல், ஆன்மீகம், நடிப்புத் துறை போன்ற துறையில் உள்ளவர்களுக்கும் நியாயமான முறையில் வசிய சக்தியை பெற்றுத் தரக் கூடியதே மேற்கூறிய வழிபாட்டு முறையாகும்.
இந்த வழிபாட்டின் பலனை கைமேல் காண முடியும். முதன் முதலில் நீங்கள் இத்தலத்தில் வழிபாடு முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் உங்கள் இடப் புறத்திலிருந்து வலப்புறமாக செல்லும் நாகப்பாம்பின் தரிசனம் உங்களுக்குக் கிட்டும்.
கனவில் அல்லது நனவில் நாகப் பாம்பை அடிக்கடி தரிசனம் செய்பவர்கள் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றி வருவதால் அவர்கள் நாகங்களைக காணும்போது அதை ரசிக்கலாமே என்ற எண்ணம் தோன்றுமே தவிர அதைக் கண்டு பயப்படும் நிலை ஏற்படாது. இதுவே நீங்கள் கைமேல் காணும் பலன்.

ஒரு முறை முயன்று பாருங்களேன்.
ஒரு காகிதத்தின் மேல் ஒரு பூதக் கண்ணாடியை நாள் முழுவதும் வைத்திருந்தாலும் அந்த காகிதம் ஒன்றும் ஆவதில்லை. ஆனால், அந்த பூதக் கண்ணாடியால் சூரிய ஒளியை குறிப்பிட்ட இடத்தில் குவித்தால் சில நொடிகளில் காகிதம் எரிந்து சாம்பலாகி விடும். இதிலிருந்து என்ன தெரிகிறது ?
சக்தி இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி எங்கு குவிக்க வேண்டும் என்று அறிந்தால்தான் அந்த சக்தியால் பலன் ஏற்படும். அது போல் ஒவ்வொரு திருத்தலத்திலும் சக்திகள் குவியும் இரகசியங்கள் உண்டு. பெரும்பாலும் இந்த இரகசியங்களை பெரியோர்கள் வெளியிடுவதில்லை. அந்த சக்திப் பரிமாணத்தை வைத்து பல தீய காரியங்களையும் சாதித்து விடலாம் அல்லவா ?
ஆனால், சக்தி குவியும் இரகசியமும் இறை சக்தியை உணர்விப்பதே என்பதால் பின்னவாசல் திருத்தல மகிமையை ஓரளவு இங்கு விளக்கியுள்ளோம். அத்தல சக்திகள் அனைத்தும் அம்பாள் திருமுன் நந்தீஸ்வர மூர்த்தியின் மேல் குவிவதால் அவரை பரிபூரண நந்தீஸ்வர மூர்த்தி என்று அழைக்கிறோம். அதனால்தான் அவரை குறித்த முறையில் தரிசிக்கும்போது நூறு பிரதோஷங்களை தரிசித்த பலனும் கிட்டுகிறது.

காமதேனு கலசம்

பின்னவாசல் சிவத்தலத்தில் காமதேனுவே சிவலிங்க மூர்த்திக்கு தனது அமுத சக்தியை பாலாக அபிஷேகம் செய்யும் அற்புத தெய்வீக காட்சியை சூரபத்மன் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றான் அல்லவா ? இது ஒரு முறை மட்டுமே சூரபத்மனுக்குக் கிடைத்த காட்சி கிடையாது.
என்றும் தொன்று தொட்டு நிலவும் ஆன்மீக அதிசயமே காமதேனு சிவ லிங்க மூர்த்திக்கு பாலமுத்த்தால் அபிஷேகிக்கும் அற்புதமாகும். தினமும் குறித்த அமிர்த நேரத்தில் பின்னவாசல் திருத்தலத்தில் இந்த அதிசயம் நிகழ்கிறது. ஆனால், தெய்வீக கண் உடையவர்களே இந்தக் காட்சியை காண முடியும்.
இத்தகைய தெய்வீக கண் சாதாரண மனிதர்களுக்கு நிச்சயமாக கிடையாது. அப்படியானால் மனிதர்களின் நிலை என்ன ? சாதாரண மனிதர்களும் காமதேனுவின் பாலபிஷேக பலன்களைப் பெற சித்தர்கள் அளித்துள்ள அனுகிரகமே காமதேனு கலசமாகும்.
பின்னவாசல் திருத்தலத்தில் தினமும் காமதேனு அபிஷேகம் செய்யும் பால் பிரசாதம் கோமுகம் வழியாக பொழிவதில்லை. ஏறகனவே கோயில் அமைவதற்கு முன் காமதேனுவின் அபிஷேக பால் மணற் குன்றிலிருந்து வழிந்து ஈசான்ய மூலையில் தற்போது நவகிரகங்கள் எழுந்தருளியுள்ள இடத்திற்குமுன் ஒரு சிறு குட்டையாக தேங்கி இருந்த்து. அந்த குட்டையே தற்போது ஒரு கிணறாக நமக்கு காட்சி அளிக்கிறது. இதுவே காமதேனு கலசமாகும்.

ஸ்ரீகைலாசநாதர் பின்னவாசல்

அற்புத காமதேனு சக்தி வாய்ந்த தீர்த்தக் கிணறு இது. கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனு என்றால் கேட்ட வரங்களை எல்லாம் அளிப்பதுதானே காமதேனு கலசம்.
கற்பனைக்கெட்டாத பலவித வேதனைகளுடன் வாழும் கலியுக மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளே மக்களின் துயர் துடைக்க காமதேனு கலச இருப்பிடத்தை தற்போது மக்கள் சேவையாக அர்ப்பணித்துள்ளார்கள். இதை முறையாகப் பயன்படுத்தி வாழ வேண்டியது மக்கள் கடமையாகும்.
அற்புத நோய் நிவாரண சக்திகளும், லட்சுமி கடாட்ச சக்திகள் மட்டும் அல்லாது பலவிதமான வாஸ்து தோஷங்களையும் குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடியதே காமதேனு கலசமாகும்.
உரிய காணிக்கையை கோயிலில் செலுத்தி விட்டு அவரவர் வலது உள்ளங்கை கொள்ளும் அளவிற்கு மட்டுமே இந்த காமதேனு கலசத்திலிருந்து தீர்த்தம் பெற்று அதை தங்கள் இல்லங்களில், தொழிற்சாலைகளில், வியாபாரத் தலங்களில், வாகனங்களின் மேல் தெளித்து வந்தால் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.

பொதுவாக வீடு கட்டும்போது முதலில் ஈசான்ய மூலையில் கிணறு வெட்டி அதிலிருந்து பெற்ற நீர் மூலமே வீட்டைக் கட்ட வேண்டும் என்பதே அடிப்படை வாஸ்து நியதியாகும். ஆனால், நவீன குடியிருப்புகளில் (Flat system) இந்த முறையை எதிர்பார்க்க முடியாது. எனவே காமதேனு கலசத்திலிருந்து பெற்ற தீர்த்தத்தை வீடெங்கும் தெளித்து அத்தகைய வீடுகளில் குடியேறுவதால் இந்த அடிப்படை வாஸ்து நியதியை மீறியதால் ஏற்படும் விளைவுகளை அது ஓரளவு தணிக்கும்.

உள்ளங்கை அளவு தீர்த்தம் எத்தனையோ விதமான தோஷங்களை நீக்கும் என்றால் நிறைய தீர்த்தத்தை எடுத்துச் சென்று பயன்படுத்தினால் நிறைய தோஷங்களை நீக்கலாமே என்று பலரும் எண்ணக் கூடும். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
சித்தர்களின் ஆன்மீகப் பெட்டகங்களில் மட்டுமே காணக் கூடிய சில அற்புத தீர்த்த இரகசியங்களை குரு அருளால் இங்கு தெரியப்படுத்துகிறோம்.
கோயில் திருக்குளங்கள், தீர்த்தங்கள், பொய்கைகள், கலசங்கள் என்று தீர்த்த சக்திகள் பலவாறாக உலகில் வியாபித்துள்ளன. கங்கை நதி என்று சொல்லும்போது அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை ஆயிரக் கணக்கான மைல்களுக்கு விரிந்து பரந்து வியாபித்துள்ளது.
எனவே நதி, ஆறு என்பது மிகவும் அதிகமான நீர் பரப்பை உடையது. அடுத்து வருவது குளம். கோயில் தெப்பக் குளங்கள் ஆறுகளை விட குறைந்த அளவே உடையது. பெரும்பாலான கோயில் திருக்குளங்கள் இவ்வகையைச் சேர்ந்தவையே.

கங்கை நதியா, தீர்த்தமா ?

குளத்தை அடுத்து தீர்த்தம். இது பொதுவாக ஒரு மனிதன் நீராடும் அளவே உள்ள நீர்ப் பரப்பை உடையது. இதை சற்று விளக்குவோம். கங்கை நதி காசியில் ஓடினாலும் அங்கு வருண தீர்த்த கட்டம் முதலாக அசி தீர்த்த கட்டம் வரை 64 தீர்த்த கட்டங்களில் பாய்கிறது. எல்லா தீர்த்த கட்டங்களிலும் ஒரே கங்கைதானே பாய்கிறது. அவ்வாறிருக்க ஏன் இத்தனை தீர்த்த கட்டங்கள்.
ஒவ்வொரு தீர்த்த கட்டத்தில் நீராடும்போதும் ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்படும் என்பதைத்தானே இது குறிக்கிறது. ஹரிச்சந்திரா தீர்த்த கட்டத்தில் குளிப்பதால் கிட்டும் பலன் வேறு, மணிகர்ணிகா தீர்த்த கட்டத்தில் வரும் பலன் வேறு. ஆனால், இந்த இரு தீர்த்த கட்டங்களிலும் பாய்வதோ ஒரே கங்கை.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
பின்னவாசல், லால்குடி

இங்குதான் சற்குருவின் வழிகாட்டுதல் எந்த அளவிற்கு அவசியம் என்பது புரிய வரும். சற்குரு இல்லாத ஒரு மனிதன் நிச்சயமாக எந்த தீர்த்த கட்டத்திலும் முறையாக நீராட முடியாது. அவன் கங்கையில் நீராடலாம், ஆனால் தீர்த்த கட்டத்தை அவனால் இனம் கண்டு கொள்ள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த அற்புத ஆன்மீக உண்மையை இறை அடியார்களுக்கு நேரடியாகவே தொட்டுக் காட்டிய வித்தையாக உணர்த்தியவரே நமது வெங்கடராம சுவாமிகள்.
ஒருமுறை காசி தீர்த்த யாத்திரைக்கு அடியார்களை அழைத்துச் சென்ற ஸ்ரீவெங்டராம சுவாமிகள் அயோத்தியா புனித பூமியை அடைந்தார். அங்கு சரயு நதியில் நீராடுவதற்காக நதிக் கரையில் சென்று கொண்ருந்தார். அப்போது அடியார்கள் பல இடங்களையும் குளிப்பதற்காக சுவாமிகளிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் பதில் பேசாமல் நதிக் கரையில் சென்று கொண்டே இருந்தார்.
நதியில் ஒரு குறித்த இடம் வந்தவுடன், “இங்கே அமைதியான சூழ்நிலை இருக்கிறது. அனைவரும் இங்கே நீராடலாம்,“ என்றார். அவ்வாறே அடியார்களும் சுவாமிகளும் நதியில் இறங்கி நீராட ஆரம்பித்தனர். சில நொடிகளில் அவர்கள் நீராடிக் கொண்டிருந்த இடத்திற்கு சற்று தொலையில் இரண்டு பெரிய மீன்கள் நீர் மட்த்தின்மேல் துள்ளிக் குதித்து விளையாடுவதைக் கண்டனர்.
ஆனால் அவைகளின் உருவமோ மிகவும் பெரியதாக இருந்தது. மனித உருவத்தை விடவும் பெரிதாக இருந்த அந்த கருமையான மீன்களைப் பார்த்தவாறே அடியார்கள் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் கோடைக் காலமாக இருந்த்தால் நீர்ப் பெருக்கு குறைவாகவே இருந்தது.
எப்படி அந்தக் குறைந்த நீரோட்டத்தில் அவ்வளவு பெரிய மீன்கள் அங்கு வந்தன என்று ஒரு புறம்ஆச்சரியமாக இருந்தாலும் அந்த மிகப் பெரிய மீன்கள் அருகிலேயே இருந்ததால் அவற்றால் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன், பெரியவர்களுக்கும் கூட ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயம் மறுபுறம் சூழ சரயு நதியில் நீராடிக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீஆனந்தவல்லி பின்னவாசல்

சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்த பின்னர் அனைவரும் நீராடுவதை முடித்துக் கொள்ளும்படி சுவாமிகள் கூறவே அடியார்கள் நீரிலிருந்து வெளியே வந்தனர். பின்னர் அந்த நிகழ்ச்சியைப் பற்றி கேட்டபோது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் புன்முறுவலுடன், “நீங்கள் பார்த்த அந்த இரு மீன்கள் சாதாரண மீன்கள் அல்ல. அவை சாட்சாத் ராம பிரானும் லட்சுமண சுவாமியும் ஆவார்கள்.
எந்த இடத்தில் ராமர் சரயு நதியில் மூழ்கி ஜல சமாதி பூண்டு தன் உடலை ராமாயண புராண இறுதியில் மறைத்துக் கொண்டாரோ அதே இடத்தில்தான் சுவாமி அன்று மீன் வடிவில் காட்சி கொடுத்தார்.
உங்கள் மூதாதையர்கள் செய்த பெரும் பாக்கியத்தால் உங்களுக்கு ராம லடசுமண மூர்த்திகளின் தரிசனம் கிடைத்தது,“ என்று சரயு தீர்த்த நிகழ்ச்சியைப் பற்றி விளக்கினார்கள் சுவாமிகள்.
இதுவே தீர்த்த இரகசியம். சரயு தீர்த்தத்தில் மூழ்கிய மறு நொடியே பெருமாள் மூர்த்தியின் தரிசனம் அடியார்களுக்குக் கிடைத்தது. இதுதான் சற்குரு நாதர் தன் அடியார்களுக்கு மறைமுகமாக அளிக்கும் ஆன்மீக அனுகிரக சக்தி. சற்குரு ஒருவரால்தான் ஒரு நதியில் உள்ள தீர்த்த இரகசிய இடத்தை அறிய முடியும்.
ஆனால், பணிவே உருவான வெங்கடராம சுவாமிகள் அடியார்களின் மூதாதையர்களால்தான் அந்த இறை தரிசன பாக்கியம் கிடைத்தது என்றார்கள். இது அடிப்படையில் உண்மையான காரணமாக இருந்தாலும் சற்குருவின் கருணையே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
ஏற்கனவே சுவாமிகள் கூறியுள்ளது போல் இறை தரிசனம் பெற்றால் மட்டும் போதாது. இறைவனை உணர்ந்து கொள்வதுதான் அவசியம். மேற் கூறிய நிகழ்ச்சியில் அடியார்கள் இறைவனை, சாட்சாத் ராமச்சந்திர மூர்த்தியையும் லட்சுமண சுவாமியையுமே தரிசனம் செய்தாலும் அவர்கள் மீன்கள் என்றுதானே நினைத்து அச்சமடைந்தார்கள்.
ஒரு கோயிலில் இறை தரிசனத்திற்காக நாம் சென்றிருக்கும்போது திடீரென மின்சாரம் நின்று விட்டால் உடனே நாம் நம் குழந்தைகளையும் உடமைகளையும் பாதுகாக்கத்தானே முயற்சி செய்வோம். இறைவன் சன்னதியில் இருக்கிறோம், நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை என்று நிச்சயமாக நினைக்க மாட்டோம்.
அவ்வாறு நினைத்தவர்களே இறைவனை உணர்ந்தவர்கள். ஆம், மார்க்கண்டேயர் மேல் எமன் பாசக் கயிற்றை வீசியதும் சிவலிங்கம் கல் கிடையாது உயிருள்ள ஈசன் என்ற எண்ணம் பூரணமாக இருந்ததால்தான் அவர் இறைவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

ராமேஸ்வரம் திருக்கோயிலின் எதிரே உள்ள கடல் அக்னி தீர்ததம் என்று வழங்கப்படுகிறது. நூற்றுக் கணக்கான மைல் பரப்பளவு உள்ள இத்தீர்த்தத்தில் இரவு பகலாக லட்சக் கணக்கான பக்தர்கள் நீராடுகிறார்கள். இவ்வாறு கங்கை, ராமேஸ்வரம் போன்ற பல தீர்த்தங்களிலும் தினமும் லட்சக் கணக்கான மக்கள் நீராடினாலும் நாட்டில் பாவச் செயல்களும், கொடிய குற்றச் செயல்களும் குறைந்ததற்கான சுவடே தெரியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? தினமும் லட்சக் கணக்கான மக்கள் கங்கை நதியிலும் ராமேஸ்வர கடலிலும் நீராடுகிறார்கள். ஆனால், கங்கை தீர்த்தத்திலும் அக்னி தீர்த்தத்திலும் நீராடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காரணம் லட்சத்தில் ஒருவருக்கே குருவின் வழிகாட்டுதல் கிடைக்கும். அதிலும் கோடியில் ஒருவருக்கே வெங்கடராம சுவாமிகளைப் போன்ற உத்தம சற்குருவின் ஆசி கிட்டும். அவர்கள் மட்டுமே தீர்த்தத்தை அடையாளம் கண்டு அதில் நீராட முடியும்.

அன்னமாம் பொய்கையின் அற்புதம்

தீர்த்தத்தை விட அளவு குறைந்ததே பொய்கை. கிட்டத்தட்ட இரு கைகளால் அள்ளி எடுக்கும் அளவில் அமைந்த நீர் பரப்பே பொய்கை ஆகும். தீர்த்தத்தை விட பொய்கையில் புண்ணிய சக்தியின் கூறுகள் அதிகம்.
உதாரணமாக, ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிட்டும் புண்ணிய சக்தியை பூமியில் ஓரிடத்தில் ஆவாஹணம் செய்தால் அங்கே ஒரு தாமரைக் குளம் தோன்றும். அவ்வாறு ஒரு தாமரைக் குளத்திற்கான புண்ணிய சக்தியைப் போல் லட்சம் மடங்கு புண்ணிய சக்தியை ஒருமித்து உருவாக்கிய பொய்கையே திருச்சி திருவாசி திருத்தலத்தில் அம்பாள் சன்னதி எதிரே உள்ள அன்னமாம் பொய்கையாகும்.
பொய்கையின் தெய்வீக சக்தி என்ன ? இறைவனின் திருப்பாதங்களில் பக்தியை வளர்க்கும், குருவின் மேல் நம்பிக்கையை திடமாக்கும். இக்காரணம் பற்றியே திருவாசி திருத்தலத்தில் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நடராஜபெருமானின் விக்ரஹத்தில் முயலகனுக்குப் பதிலாக நாகம் அவர் பாதத்தை அலங்கரிக்கிறது. இது திட நம்பிக்கையின் சின்னம்.
இதைத்தான் அப்பர் பெருமானும், “மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே“ என்று பொய்கையின் சக்தியை குறிப்பால் உணர்த்துகிறார். திருவடிகளின் நீர் அளவை உடையது பொய்கை என்பது அவர் கூறும் குறிப்பு. எனவே இரு கைகளாலும் அள்ளி எடுக்கக் கூடிய பொய்கை தீர்த்தத்தால் முகம் கழுவலாம், தலையில் தெளித்துக் கொள்ளலாம், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.

எம்பெருமானின் முக்கண் ஜோதியில் தோன்றிய சரவணப் பொய்கையும் இத்தகைய தெய்வீக சக்தியில் மிளிர்வது என்பது இனி உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும்.
பொய்கையை விடவும் சிறிய நீர் பரப்பை உடையதே கலசம். திருக்கோயில்களில் வில்வ, துளசி தீர்த்த பிரசாதங்களைப் பெறும்போது அதை எப்படி பெறுகிறோம்? இடது உள்ளங் கையின் மேல் ஒரு சிறு துண்டு அல்லது கைக்குட்டையை வைத்து அதன் மேல் வலது கையை குவித்து வைத்துதானே கலச தீர்த்தத்தைப் பெறுகிறோம். கலச தீர்த்தத்தில் ஒரு துளியைக் கூட வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடு. அப்படியே விரல் இடுக்குகள் வழியே நீர் வழிந்து வந்தாலும் நம்முடைய உடமையான துண்டின் மேல் அது விழட்டும் என்பதற்காக துண்டு அல்லது மேலாடையைப் பயன்படுத்துகிறோம்.
கலசம் என்ற வார்த்தை மிகவும் ஆழ்ந்த அர்த்தம் உடையது. “பைம்பொற் கலசம்“ என்ற திருஞான சம்பந்த மூர்த்தி பெருமானின் இரு வார்த்தைகளைப் புரிந்து கொள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு குறைந்தது நூறு ஆண்டுகள் தேவைப்படும் என்று நமது வெங்கடராம சுவாமிகள் கூறுவார்கள்.

மருதமலை

  கலச தீர்த்த சக்திகளை அடுத்து வரும் தீர்த்த சக்திகள் சூட்சுமமாகப் பொலிபவை. அவற்றை தூலக் கண்களால் காண முடியாது. உதாரணமாக, வாவி, மருதம், பட்டி, கயிலை, கந்தம் போன்றவை அதீத சூட்சும தீர்த்த சக்திகள். இவை குறித்த சில சுவையான விஷயங்களை அறிவிக்கிறோம்.
வாவி சக்திகள் என்பவை கோயம்புத்தூர் அனுவாவி மலையில் பொலிபவை. ஏழு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளால் உணரக் கூடிய தீர்த்த சக்திகள் இவை. இந்த வயதில் உள்ள குழந்தைகள் அனுவாவி திருத்தலத்திற்கு சென்றால் அவர்கள் தங்களை அறியாமல் ஒரு உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் அனுபவிப்பார்கள். அனுவாவி மலையில் பொலியும் வாவி தீர்த்த சக்திகளே அவர்கள் குதூகலத்திற்குக் காரணம்.
நீர்வீழ்ச்சியைப் போல மேலிருந்து கீழே விழும் தன்மையை உடையதே வாவி தீர்த்தமாகும். சமீப காலத்தில் மக்களின் நலனுக்காக வாவி தீர்த்த சக்திகளை அர்ப்பணித்தவர்களே கனிந்த கனி பரமாச்சாரயார் சுவாமிகளும், ரமண மகரிஷியும் ஆவார்கள்.
அதே போல மருத மலையில் பொலிபவை மருத தீர்த்த சக்திகள். நல்ல பாம்பு நெளிந்து செல்வதைப் போல இந்த தீர்த்த சக்திகள் நெளிந்து நெளிந்து பரிணமிக்கும். அந்த சக்திகளை இனங்கண்டு அதை மக்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்திய சித்தர் பிரானே பாம்பாட்டி சித்தர் ஆவார். பாம்பாட்டி என்பது பாம்பு போன்ற மருத தீர்த்த சக்தியை உணர்ந்த சித்தர் என்ற காரணப் பெயரால் அமைந்ததே.
அடுத்து பட்டி தீர்த்த சக்திகள். பேரூர் திருத்தலத்தில் பொலிபவை. பசுக்களுக்கு மடிப் பால் தானம் அளித்து மறுநாள் காலையில் அப்பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிஷேகம் அளிக்கும்போது தோன்றுபவையே பட்டி தீர்த்த சக்திகள். வீடு, மனைகளில் ஏற்படும் எத்தகைய கொடிய தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவையே பட்டி தீர்த்த சக்திகள்.
திருக்கயிலாய மலையில் மானசரோவர் தீர்த்தத்திற்கு மேல் பொலிபவை கயிலை தீர்த்த சக்திகள்.
வெள்ளியங்கிரி மலையில் பொலிபவை கந்த தீர்த்த சக்திகள். வெள்ளியங்கிரியில் சந்தன மழைப் பொழிவு ஏற்படும்போது அப்போது தோன்றும் சக்திகளே கந்த தீர்த்த சக்திகளாகும்.
இவ்வாறு தீர்த்த சக்திகள் ஆயிரமாயிரம் இருந்தாலும் சற்குரு அருளால் மட்டுமே அவற்றைப் பற்றி அணு அளவாவது உணர்ந்து கொள்ள முடியும் என்பதே உண்மை.
கோ அயம் புத்தூர் என்ற வார்த்தைகளிலேயே வாவி, மருதம், பட்டி என்ற தீர்த்த சக்திகளின் ஒரு கூறு மறைந்துள்ளது. எனவே கோயம்புத்தூர் வாசிகள் அனுவாவி மலை, மருதமலை, பேரூர் திருத்தலம் இவற்றை முறையாக தரிசித்து வந்தாலே அவர்களுக்குத் தேவையான அனைத்து தீர்த்த சக்திகளையும் பெற்று விடலாம்.

சரவணபவ போல் பின்னவாசலும் ஆறு எழுத்தே !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam