ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
திரு அருணகிரி நாதர் அருளிச் செய்த திருத்தவத்துறை திருப்புகழ்
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள் பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார் நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல் நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள் வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக் கதித்த பத்தமை சாலடி யார்சபை மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர் கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ வரைத்த நுக்கரர் மாதவ மேவின ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ ருரைத்து ளத்திரு வாசக மானது மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத் திரைக்க டற்பொரு காவிரி மாநதி பெருக்கெ டுத்துமெ யாய்வள நீர்பொலி செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம் வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே. |
எத்தகைய ஆண்மகனையும் மனம் சலிக்க வைக்கும் பெண்களைப் பற்றிய மேற்கண்ட வர்ணனைகள்.
ஆனால் எத்தகைய காம சுகமும் முருக பக்தர்களை நெருங்காது என்னும் உண்மையை உறுதிப்படுத்துவதாகவே மேற்கூறிய திருப்புகழ் வரிகள் அமைந்துள்ளன. மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதற்கு காம வர்ணனைகள் போன்று தோற்றமளிக்கும் இந்த வரிகள் தம்பதிகளுக்கு இடையே உள்ள எத்தகைய மன வேற்றுமையையும் களைந்து அவர்களை அழியா பேரின்ப லோகமான கந்த லோகத்திற்கு இட்டுச் செல்லும். அதனால்தான் அருணகிரி முருக பக்தர்களுக்கெல்லாம் தலைவர் என்ற பொருளில் நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசிப்பதை விட தந்தைக்கும் மகனுக்கும் உள்ள தெய்வீகப் பிணைப்பை வெளிப்படுத்துவதே பிரணவ உபதேசம் என்பதை தெளிவுபடுத்துவதே இந்த திருப்புகழ், அதை உறுதி செய்வதே திருத்தவத்துறை திருத்தலம்.
பிரணவ உபதேசமா இல்லை பிதாவிற்கு உபசாரமா ?
அறுபடை வீடும் ஆதிரை தலமும் இணையும் அற்புதம் !
முந்தையது மழலையால் விளைந்த பேருவகை அடுத்ததோ மௌனத்தில் தோன்றிய மகாகாவியம் !
ஓம் குருவே சரணம்