குலத்தைக் காக்கும் குங்குமம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பரிவாதிணி பரந்தாமன்

திருச்சி புலிவலம் முசிறி சாலையில் தண்டலை என்னும் இடத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளதே தொன்மைவாய்ந்த திருத்தலையூர் என்னும் சிற்றூர். திருச்சி துறையூர், முசிறி ஆகிய இடங்களிலிருந்து நகர பேருந்து வசதிகள் உண்டு. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு சிவ மூர்த்தியே ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆவார்.
ரிஷி தவம், முனி தவம், மோன தவம், யோக தவம், யாக தவம், புங்கவ தவம், அசுர தவம், ராட்சஸ தவம் என்று தவங்களில் பல வகையான தவங்கள் உண்டு. இதில் பங்க தவம் என்ற ஒரு அற்புத தவத்தை மேற்கொள்ள உகந்த இடத்தைத் தேடி அலைந்தான் ராவணன்.
தன் உடலின் அங்கங்களை ஒவ்வொன்றாக வெட்டி யாக குண்டத்தில் அளிப்பதே பங்க தவமாகும். மிகவும் கடுமையான மன வைராக்யத்தை உடையவர்களால் மட்டுமே நிறைவேற்றக் கூடிய தவ முறையாகும் இது.

ஸ்ரீருத்ரபசுபதி ஸ்ரீஅகோர வீரபத்ரர்
ஸ்ரீவிக்னகணபதி திருத்தலையூர்

எதற்காக இப்படி ஒரு தவத்தை மேற்கொள்ள நினைத்தான் ராவணன் ? மரணம் இல்லாத நித்திய ஜீவ வாழ்வைப் பெற வேண்டும் என்று எத்தனையோ மானிடர்களும், அசுரர்களும், தேவர்களும் நினைப்பதைப் போலவே ராவணனும் எண்ணி எப்படியாவது கால தேவனின் பிடியிலிருந்து தப்பிக்கும் மார்கத்தை தேடி அலைந்தான்.
இவ்வாறு வான மார்கமாக பல தலங்களைத் தேடி வந்து கொண்டிருந்த இராவணன் கைலாய மலையை ஒத்த வெண்மேக படலங்கள் சூழ்ந்த ஒரு இடத்தைப் பார்த்தான். நெருங்கி அவ்விடத்தை அடைந்தபோது அவை மேகக் கூட்டங்கள் அல்ல. சப்தரிஷிகள் நிகழ்த்திய யாகக் குண்டங்களிலிருந்து எழுந்த வேள்விப் புகையே மேகக் கூட்டம் போல் அவ்விடத்தைச் சூழ்ந்துள்ளது என்பதை அறிந்து பேராச்சியம் அடைந்தான்.
தன்னுடைய புஷ்பக விமானத்தை அவ்விடத்தில் இறக்கி சப்த ரிஷிகளையும் பக்தியுடன் தொழுது வணங்கினான். அவர்களும் ராவணனுக்கு உரிய ராஜ உபசாரங்களை முறையாக அளித்து கௌரவித்தனர்.
சப்த ரிஷிகள் திருக்கைலாயம் போல் யாகப் புகை சூழ அக்னி குண்டங்களை நிரவிய அத்தலமே திருத்தலையூர் ஆகும்.
சப்த ரிஷிகள் அனைவரும் தத்தம் பத்தினிகளுடன் எழுந்தருளி இருந்தார்கள். ராவணன் பத்தினியான மண்டோதரியும் அம்முனிகளை தம்பதி சமேதராய் தரிசித்து அனைவரின் மனமார்ந்த ஆசிகளைப் பெற்றாள்.
அதன் பின்னர் இராவணன் சப்த ரிஷிகளிடம் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அந்த வரத்தைப் பெறும் தவ முறையை தெரிவிக்கும்படி சப்த ரிஷிகளும் வேண்டிக் கொண்டான்.
பெருந்தபோ பலம் உடையவர்கள் சப்த ரிஷிகள். சப்த ரிஷிகளில் நிரந்தரத்துவம் பெற்ற ஸ்ரீவசிஷ்டர் ராவணனிடம், ”ராவணா, இந்த இடத்தில் எவர் இறைவன் ஸ்ரீசப்த ரிஷியை வேண்டினாலும் அவர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பான். ஆனால், உனக்கு எது நல்லதோ அதை வேண்டிப் பெறுவாயாக,” என்று கூறி அவ்விடத்தை விட்டு தங்கள் திருப்பணியைத் தொடர மற்ற சிவத்தலங்களுக்கு யாத்திரையைத் தொடர்ந்தனர்.

ராவணன் பங்க தவம்

அத்தருணத்தில் ஸ்ரீவசிஷ்டரின் தர்ம பத்தினியான அருந்ததி மண்டோதரிக்கு பல பூஜைகளைப் பற்றி விளக்கி தீர்க சுமங்கலித்துவத்தைப் பெறும் வழி முறைகளையும் எடுத்துரைத்து அவளை வாழ்த்தி விடைபெற்றாள்.
ராவணன் தம்பதியர் திருத்தலையூர் சிவத்தலத்திலேயே தங்கினர். ராவணன் தான் யாகம் இயற்றுவதற்கு உகந்த தலமே இது என்று முடிவு செய்தான். சப்த ரிஷிகளின் மகிமையைப் பற்றியும் அவர்களின் தபோ சக்திகளைப் பற்றியும் ராவணன் நன்றாக அறிந்திருந்ததால், சப்த ரிஷிகளே இத்தலத்தில் தங்கி யாகங்களைச் செய்தார்கள் என்றால் நிச்சயம் இந்த திருத்தலத்தில் நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்று நினைத்து மிகவும் ஆனந்தம் அடைந்தான்.
ஆனால், வசிஷ்ட மகரிஷி கூறிய, ”உனக்கு எது நல்லதோ அதை மட்டுமே கேட்டுப் பெறுவாய்,” என்ற அறிவுரையை மறந்து மரணத்தை வெல்வதிலேயே குறியாக இருந்தான் ராவணன்.
யாக குண்டத்தை நிர்மாணித்து பங்க வேள்வியை ஆரம்பித்தான் ராவணன். மண்டோதரி தேவி கோவில் திருக்குளக் கரையில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்துக் கொண்டு அதில் இருந்தபடியே அருந்ததி தேவி அளித்த சுமங்கலிப் பூஜைகளை ஆற்றி வந்தாள்.
இவ்வாறு ஒரு யுக காலம் யாகம் நிறைவேற்றியும் எந்த வித இறைக் காட்சியும் கிடைக்காததால் பங்க வேள்வியின் உச்சகட்டமாக ராவணன் தன்னுடைய உடல் உறுப்புகளை வாளால் வெட்டி யாக குண்டத்தில் ஆஹூதியாக போட ஆரம்பித்தான்.
எந்த மனைவியாவது தன்னுடைய கணவன் உடல் உறுப்புகளை வெட்டிப் போடுவதைப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பாளா ? எனவே மண்டோதரி உத்தம பத்தினிக்கு உரிய பாங்கில் ராவணின் செய்கைக்கு எந்த மறுப்பும் கூறாமல் பர்ணசாலைக்கு வெளியே வராமல் தன்னுடைய சுமங்கலி பூஜைகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன்
திருத்தலையூர்

ராவணன் முதலில் தன்னுடைய வலது காலை வெட்டி யாகத்தில் ஆஹூதி இட்டான். கால் யாக அக்னியில் எரிந்து சாம்பல் ஆனதே தவிர அதை எந்த தேவ மூர்த்தியும் ஏற்று அவனுக்கு வரம் அளிக்க முன் வரவில்லை.
அடுத்து ராவணன் தன்னுடைய இடது காலை வெட்டி யாக குண்டத்தில் வீசினான். அப்போதும் எந்த தேவ மூர்த்தியும் வரவில்லை.
படிப்பதற்கு இது கதை போல் தோன்றினாலும் ராவணன் என்ன வேதனையை அடைந்திருப்பான் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால், அவன் அடைந்த வேதனையை விட சாகா வரம் பெற வேண்டும் என்ற அசுர எண்ணம் மேலோங்கி நின்ற காரணத்தால் உடல் வலியைப் பொருட்படுத்தாது உடல் அங்கங்களை வெட்டிப் போடத் துணிந்தான் ராவணன்.
இப்போது யாக குண்டத்தை விட்டு நகர முடியாத சூழ்நிலையில் தன்னுடைய வலது கையால் இடது கையை வெட்டி யாக குண்டத்தில் போட்டான் ராவணன். அந்த கொடுமையான வேதனையிலும் எந்த தெய்வமும் ராவணனுக்கு காட்சி அளிக்கவில்லை.
கடைசியில் ராவணனிடம் எஞ்சி இருந்தது ஒரு கை மட்டுமே. அதையும் இழக்கத் தயாரானான் ராவணன். தன்னுடைய வலது கையை ஹோம குண்டத்திற்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு அந்த கையால் வாளைப் பற்றிக் கொண்டு தன் கரத்தை வெட்டினான். அந்த கரமும் அக்னியில் விழுந்து சாம்பலானது.

பரிவாதிணி தந்த பரமன்

கை, கால்கள் இல்லாமல் வெறும் சதைப் பிண்டமாகக் கிடந்த ராவணன் எவ்வளவோ வேதனையுடனும் மன ஏக்கத்துடனும் யாக குண்டத்தை உற்று நோக்கினான்.
ஊஹூம் ....
எந்த தேவதையும் தெய்வமும் அங்கே பிரசன்னமாகவில்லை.
இப்போது என்ன செய்வது ? தீவிரமாக சிந்தித்தான் ராவணன். இனி வேறு வழியில்லை. இருக்கும் தலையையும் ஆஹூதியாக அளித்து விடுவோம் என்ற முடிவுடன் யாக குண்டத்தின் மேல் தலையை வைத்து அதை ஆஹூதியாக அளிக்கத் தயாரானான் ராவணன்.
மீண்டும் தான் முன்பு கண்ட கைலாயத்தை ஒத்த அற்புத வெண் மேகக் கூட்டங்கள் சூழ்ந்தன. அந்த வெண் மேகக் கூட்டங்கள் இடையே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது.
வெண் மேகங்கள் இடையே அதைவிட வெண்மையான காளை வாகனத்தின்மேல் எம்பெருமான் சிவபெருமான் அழற் பிழம்பாய் காட்சி அளிக்க எம்பெருமான் அருகில் பேரொளிப் பதுமையாய் அன்னை குங்கும சௌந்தரி அம்மன் நாமத்திற்கு ஏற்ற நங்கையாய் செந்தாமரை வண்ணத்தில் பூத்துக் குலுங்கினாள்.
என்னே அழகு, என்ன அற்புத திவ்ய திருக்காட்சி.

திருத்தலையூர் சிவத்தலம்

தன்னை மறந்தான் தன் இஷ்டமான உடலையும் மறந்தான். யுகங்கள் நொடிகளாய்க் கரைந்தன.
செம்பவள வாய் திறந்து பெருமான் ராவணனின் விருப்பத்தைக் கேட்க ராவணன், ”இறைவா, பரம்பொருளே, உன்னருளால் சாவா வரத்தைப் பெற விரும்புகிறேன்,” என்றான்.
பரம்பொருள் புன்னகைத்து, ”ராவணா, சாகா வரம் என்பது இயற்கைக்கு புறம்பானாது. விதியை மீறியது. இயற்கையும் இறையும் வேறல்ல. விதியும் பரமும் வேறல்ல. எனவே வேறு ஏதாவது வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
ஆனால், ராவணன் தன் வரத்தில் பிடிவாதமாகவே இருக்கவே, இறைவனும், உன்னுடைய பக்தியை மெச்சி உனக்கு வரம் தரலாம் என்று இருக்கிறேன். உன்னுடைய விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளும் வரத்தை உனக்கு அளிக்கிறேன். அதாவது உன்னுடைய மரணத்தை நீயே நிர்ணயித்துக் கொள்ளும் வரத்தை அளிக்கிறேன்,” என்றார்.
ராவணன் ஆனந்தம் வானளாவ பெருகியது. எம்பெருமான் அளித்த வரத்தின் சூட்சுமக் கருத்தை அசுரனான ராவணன் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, எம்பெருமான் ஆணைக்கு இணங்கி தன்னுடைய விதியை தானே நிச்சயித்துக் கொள்ள இசைந்தான் ராவணன். அங்குதான் விதி விளையாடியது. இல்லை ... இறைவன் விளையாடினார்.
அப்போது ராவணின் பக்தியைப் பாராட்டும் செயலாக பரிவாதிணி என்ற அற்புத வீணையை ராவணனுக்கு அளித்தார் எம்பெருமான். ஆயிரம் நரம்புகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த சிவ பிரசாதமான அற்புத வீணையைப் பெற்ற ராவணன் இறைவனுக்கு நன்றி செலுத்தினான்.
” உன்னுடைய மரணத்தைப் பற்றிய செய்திகளையும் எதிர்கால சம்பவங்களைப் பற்றியும் குறிப்பால் உணர்த்தும் சக்தி பெற்றதே இந்த வீணையாகும். இதை முறையாகப் பயன்படுத்தினால் நீ மரணத்தை நிச்சயம் வெல்வாய்,” என்று ராவணன் கேட்ட வரத்தை சூட்சுமமாக அளித்தார் எம்பெருமான்.
இதற்கிடையே மண்டோதரியின் பிரார்த்தனை பூஜைகளும் நிறைவேற ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மனும் ஸ்ரீசப்த ரிஷீஸ்வர மூர்த்தியும் மண்டோதரிக்கும் தங்கள் திருக்காட்சியை நல்கினர்.
அப்போது இந்தப் பிரபஞ்சத்தில் எந்த சுமங்கலிப் பெண்ணுக்கும் கிடைத்தற்கரிய ஒரு அற்புத தெய்வ, தெய்வீக பிரசாதத்தை அம்பிகையிடம் இருந்து பெற்றாள் மண்டோதரி.

பஞ்ச கன்னிகளின் பரபக்தி

நீங்கள்தான் புத்திசாலி ஆயிற்றே. மண்டோதரி பெற்ற பிரசாதம் என்ன என்பதை நொடிப் பொழுதில் யூகித்திருப்பீர்களே.
உங்கள் ஊகத்திற்கு நூறு மார்க். உங்கள் ஊகம் சரிதான். ஆம். மண்டோதரி ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மனிடம் இருந்து குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்றாள்.
இவ்வாறு ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மனின் மங்கல, மாங்கல்ய, சௌபாக்ய பிரசாதத்தை தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள் மண்டோதரி. இதுவே மண்டோதரி, ”அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்ச கன்யா ஸ்மரேந்நித்யம் மகா பாதக நாசனம்,” என்ற பஞ்ச கன்யா சுமங்கலி தோத்திரத்தில் இடம் பெறக் காரணமாக அமைந்தது.
தலையை ஆஹூதியாக அளித்த ராவணன் திருத்தலையூர் திருத்தல ஈசனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒரு சிவ லிங்கத்தை நிர்மானித்தான். ராவணன் வழிபட்ட சிவ லிங்கமே இன்று ராவண லிங்கமாக வழிபடப்படுகிறது. மண்டோதரியுடன் தம்பதி சமேதராய் மேலும் ஒரு யுக காலத்திற்கு இறைவனை வணங்கி தினமும் எம்பெருமான் அளித்த பரிவாதிணி வீணையால் பாடி இறைவனை மகிழ்வித்தான் ராவணன்.
பின்னர் லங்காபுரியை அடைந்து அரசாட்சியைத் தொடர்ந்தான் ராவணன். சிவபெருமானிடமிருந்தே வரம் பெற்றதால் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற அகந்ததையால் பல தேவ லோகங்களுக்கும் ஏன் யம லோகத்திற்கும் கூட சென்று வெற்றிக் கொடி நாட்டினான் ராவணன்.
காலம் கடந்தது ... ...

திருத்தலையூர் சிவாலயம்

ஒரு முறை ராவணனின் அரசவையில் நாரதர் எழுந்தருளினார். திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷியின் வரவு குறித்து ஆனந்தம் அடைந்த ராவணன் அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான். ராவணனுக்கு ஒரு முறையில் அவன் எதிர்பார்த்த ஒரு கனவும் இப்போது பலித்தது.
பரிவாதிணி வீணையாலும் திருத்தலையூர் ஈசனுக்கு ஒரு யுக காலத்திற்கு வீணை மீட்டி இசை சேவை செய்ததாலும் தான் பெற்ற இசைத் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பது ராவணன் விருப்பம். ராவணனின் தோள் வலிமையை அறிந்த உலகம் அவன் இசைத் திறமையையும் பாராட்ட வேண்டும் என்பது அவனுள் மறைந்திருந்த மற்றொரு அவா.
நாரதர் அவன் மன விருப்பத்தை அறியாதவரா ? ராவணன் எதுவும் சொல்வதற்கு முன்னரே நாரதர், ”ராவணா, மூவுலகிலும் உன்னுடைய இசை ஞானத்தைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள். அடியேனும் உன்னுடைய வீணா கானத்தை பரிவாதிணியில் ஒலிக்கும் பாங்கை கேட்கத்தான் ஓடோடி வந்தேன்,” என்றார்.
பெருமகிழ்ச்சி அடைந்தான். வீணை அரசவைக்கு கொண்டு வரப்பட்டது. அவையோர் அனைவரும் மகிழும் வண்ணம் அற்புதமாக வீணையை மீட்டி இசைத்தான் ராவணன்.
நாரதர் பேருவகை கொண்டு, ”அதிஅற்புதம், ராவணா. ஆனால் ,,,, ” என்று மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
நாரதரின் அந்த சற்று நேர மௌனத்தைக் கூட ராவணனால் பொறுக்க முடியவில்லை.
”ஆனால் என்ன நாரதரே. சொல்ல வந்ததைத் தயங்காமல் சொல்லி விடுங்கள்,” என்று கூறவே நாரதரும், ” நீ இசைத்த வீணா கானம் மிகவும் இனிமையாகத்தான் இருக்கிறது. அதில் சந்தேகமில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் பொதியமலை சென்று அகத்திய பெருமானை சந்தித்தேன். அப்போது சுக்ல பட்ச பிரதோஷ காலம். திருவாதிரை நட்சத்திரம். அந்த அற்புத முகூர்த்த வேளையில் அகத்திய முனி வீணை மீட்டி அற்புதமாக சங்கராபரண கீர்த்தனைகளை ஒலித்தார். அந்த கீர்த்தனைகளே இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த இசை மயக்கத்தில் அவ்வப்போது என் தம்புராவை மீட்டுவதைக் கூட மறந்து போய் விடுகிறேன் என்றால் அந்த இசையின் இனிமையைப் பார்த்துக் கொள்,” என்று கூறி விட்டு மீண்டும் அமைதியில் ஆழ்ந்தார் நாரதர். தான் வந்த வேலை முடிந்து விட்டது என்ற திருப்தி அவர் கண்களில் பளிச்சிட்டது.

அகத்தியருடனா போட்டி ?

யோசித்தான் ராவணன். நாரதருக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசித்தான் ராவணன். தன்னுடைய இசை ஞானம் மூவுலகிற்கும் தெரிய வேண்டுமானால் அகத்தியரை இசையால் வென்றால்தான் அது சாத்தியம் என்ற சிறுபிள்ளைத்தனமான முடிவிற்கு வந்து பொதியமலையை அடைந்தான் ராவணன்.
பொதுவாக, பொதியமலை என்பது தற்போது நாம் காணும் தாமிரபரணியின் கோமுக தலமாக இருந்தாலும் உண்மையில் ஸ்ரீஅகத்தியர் மகரிஷி வாழும் பொதியமலைப் பகுதியை எவராலும் நெருங்க முடியாது. அதற்கு எவரும் முயற்சியும் செய்ய வேண்டாம் என்று சித்தர்கள் அன்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி
திருத்தலையூர் சிவாலயம்

நமது பூமியை விட வயது முதிர்ந்த எத்தனையோ கிரகங்களும் கோள்களும் உள்ளன. அந்த கிரகவாசிகள் மற்ற கிரகங்களுக்கு செல்ல அதிநவீன பறக்கும் தட்டுகளைத்தான் உபயோகிக்கிறார்கள். அந்த பறக்கும் தட்டுகள் பூமியை நோக்கி வரும்போது பல லட்சம் மைல்களுக்கப்பால் அந்த பறக்கும் தட்டுகள் இருக்கும்போதே திருஅண்ணாமலை இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி திருஅண்ணாமலை என்று சொல்லாமல் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஆகர்ஷண சக்தி அவ்விடத்தில் நிலவுகிறது, அங்கு சென்றால் இந்த வாகனம் தூள் தூளாகி விடும் என்ற எச்சரிக்கை அலார்ம் சிக்னல் ஒலிக்கும்.
உடனே அவர்கள் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்று விடுவார்கள். அது போல அகத்தியபிரான் வாழும் பொதியமலையின் ஆகர்ஷண தெய்வீக சக்தியை மனிதர்களால் தாங்க முடியாது. நாம் அறிந்து சமீப காலத்தில் பொதியமலையை அடைந்தவர் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் மட்டுமே. அவரும் கல்யாண அருவியை அடைந்ததும், ”போதும், இதற்கு மேல் செல்ல வேண்டாம்,” என்ற எச்சரிக்கை அசரீரியாக ஒலிக்கவே அவ்விடத்திலேயே தரையில் மண்டியிட்டு அகத்தியை முனியை மானசீகமாக தொழுது நன்றி செலுத்தி விட்டு மேலே செல்லாமல் திரும்பி விட்டார்.
எனவே காற்றோ, மழையோ, வெயிலோ, பனியோ எதுவும் அகத்திய பிரானின் அனுமதி இல்லாமல் பொதியமலையை நெருங்க முடியாது. அவ்வாறிருக்க ராவணன் எப்படி பொதியமலை அடைந்தான்.
அதற்கு பல முக்கிய காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவன் சிவபெருமானால் பிரசாதமாக அளிக்கப்பட்ட பரிவாதிணி வீணையை வைத்திருந்தான். இரண்டாவதாக, பரிவாதிணி என்ற வார்த்தையில் வல்லினம், மெல்லினம் இடையினம் என்ற மூன்று இன தமிழ் அட்சரங்க.ளும் அமைந்து அது தமிழின் முழுவடிவமாகத் திகழ்ந்தது. தமிழை மதிப்பவர்தானே அகத்திய முனி, தமிழ் மொழிக் கடவுளான குகனைக் கொண்டாடுபவர்தானே அப்பெருமான்.
அகத்திய குடில் என்பது வெறும் தென்னை ஓலைகளாலும் மூங்கில்களாலும் வேயப்பட்ட ஒரு சிறு குடிசையே ஆகும். ராவணனின் வரவை சீடர்கள் அகத்திய முனிக்கு அறிவிக்க அவர் குடிலுக்கு வெளியே வந்து, ”வீணைக் கொடி வேந்தே வருக வருக, ” என்று வரவேற்றார்.

அகத்தியரின் ராஜ உபசாரத்தைக் கண்டு பெரிதும் உவகை பூத்த ராவணன் அகத்தியரின் அன்புக்கு அடிமையானான். அகத்தியரின் வரவேற்போ அன்பில் பொழிந்த அமுத மழை.
தன்னை சக்ரவர்த்தியாக அகத்தியர் அங்கீகரித்ததே தன்னுடைய வெற்றிக்கு ஒரு நல்ல சகுனம் என்று நினைத்தான் ராவணன். ஆனால், சித்தர்களின் பரிபாஷையை சித்தர்கள் மட்டும்தான் அறிவார்கள்.
”வீணைக் கொடி உடைய வேந்தே,” என்றால் ராவணன் தன்னுடைய ஆட்சிக் கொடியில் வீணையை வைத்திருந்தான் என்பது மேலோட்டமான பொருள்.
சித்தர்கள் பாஷையில், ”கொடி கட்டுவது,” என்றால் வெளிப்பகட்டுடன் காரியங்களைச் செய்வது என்று பொருள். உதாரணமாக, ஒருவன் பக்திக் கொடி கட்டுகிறான் என்று சித்தர்கள் சொன்னால் அதன் பொருள் அவன் பக்தனாக வேஷம்தான் போடுகிறான். உண்மையில் அவன் பக்தன் அல்ல,” என்பதாகும்.
எனவே, ”வீணைக் கொடி உடைய வேந்தே,” என்றால், ” நீ வீணையை  கொடியில் வெறுமனே வரைந்து வைத்து விட்டு பெரிய இசை மேதை என்று சொன்னால் என்ன பிரயோசனம், உண்மையில் அதை வைத்து இறைவனுக்கு சேவை செய்வதுதான் அந்த வீணைக்கும் பயன், உனக்கும் பெருமை,” என்று சொல்லாமல் சொன்னார் அகத்திய பெருமான்.
இதுபற்றி குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் சுமார் 20 வருடங்களுக்கு முன் கூறிய அறிவுரை. புதிதாக ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு அறிமுகமான ஒரு அடியார் சுவாமிகளிடம், ”வாத்யாரே, நான் இறைவனைப் பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். இது சாத்தியமா ? ” என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீசுவாமிகள், ” ஆமாம் .. ராவணனும் சாட்சாத் சிவபெருமானை நேரில் பார்த்தவன்தான் அவரும் அவன் இசையில் மகிழ்ந்து எத்தனையோ அனுகிரகங்களை வாரி வழங்கினார். ஆனால், என்ன பிரயோசனம். கடைசியில் அடுத்தவன் பெண்டாட்டியை கையைப் பிடித்து இழுத்தான். எனவே ராவணனை ஒரு மனிதனாகவே மதிக்க முடியாது என்றால் அவனை எப்படி பக்தன் என்று சொல்ல முடியும், ”
” எனவே கடவுள் பக்தி என்பது கடவுளைப் பார்ப்பதால் மட்டும் வந்து விடாது. அதற்கு மேல் ஒரு மனிதன் அடையக் கூடிய தெய்வீக நிலைகள் எவ்வளவோ உள்ளன. நீ அடியேனுடன் இருந்து அடியேன் சொல்லும் நல்ல காரியங்களை முடிந்த வரைக்கும் செய்து கொண்டிருந்தால் கடவுள் அருளால் நீ பல உயர்ந்த தெய்வீக நிலைகளை அடையலாம்,” என்று பக்தியின் இலக்கணத்தை மிகவும் எளிய முறையில் போதித்தார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
ராவணன் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தான். அகத்தியரோ, ”ராவணா நீ சிறந்த சிவ பக்தன். எம்பெருமானை உன்னுடைய பக்தியால் மகிழ்வித்து அவரிடமிருந்து பெறற்கரிய இறைப் பிரசாதமான பரிவாதிணி வீணையைப் பெற்று விட்டாய். இதை விடச் சிறந்த அங்கீகாரம் உனக்கு என்ன வேண்டும்?” என்று பதிலளிக்கவே ராவணன் பெரிதும் ஏமாற்றம் அடைந்தான்
அகத்தியருடைய வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலை அளித்தாலும் நாரதருடைய வார்த்தைகள் அவனுடைய காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததால் எப்படியாவது அகத்தியரை போட்டிக்கு அழைக்க வேண்டும் என்று உள்மனது திட்டம் தீட்டத் தொடங்கியது.
இதுவும் இறைவனின் லீலையே என்று உணர்ந்த மாமுனியும் ராவணனை வற்புறுத்தாது ராவணனுடன் போட்டியிட இசைந்தார்.
இப்போது இந்தப் போட்டிக்கு யாரை நடுவராக வைத்து தீர்ப்பு பெறுவது. ஒரு புறம் தேவ லோகங்களை வெற்றி கொண்ட அரக்க சக்கரவர்த்தி. மறுபுறம் சிவபிரானின் இதய நாயகன் அகத்தியர். இவ்விருவர் இடையே நடுவராக அமர்ந்து அவர்கள் இசையைக் கேட்டு தீர்பபளிக்கும் வல்லமை, தகுதி யாருக்கு இருக்கிறது ?

எவர் வென்றார் எவர் கூறுவார் ?

அந்த இக்கட்டான சூழ்நிலையில் அகத்தியரே ஒரு ஆலோசனையையும் அளித்தார். ” ராவணா, நீ அதிதியாக இங்கு வந்துள்ளாய். அதிதியைக் கௌரவிப்பதே முனிவர்களின் தர்மம். எனவே இப்போட்டியில் எவர் வென்றார் என்று தீர்ப்பளிக்கும் பொறுப்பையும் நீயே வைத்துக் கொள். அதில் எவ்வித தவறும் கிடையாது. உன் விதியை நீயே தீர்மானிக்கும் தகுதியைப் பெற்றுள்ளாய் என்று எம்பெருமானே உனக்கு வரம் அளித்துள்ளார் அல்லவா ?”
ராவணன் குழப்பத்தில் தத்தளித்தான். முக்காலமும் உணர்ந்த இந்த மாமுனி முன் எதற்காக இப்படி ஒரு போட்டிக்காக வந்தோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.
”இனி வேறு வழியில்லை. முன் வைத்த காலை பின் வைப்பது வீரனுக்கு விவேகம் அல்ல,” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு போட்டிக்குத் தயாரானான்.
அகத்திய பிரானும் தொடர்ந்து, ”இளையவருக்கே முதலிடம் என்ற பண்பாட்டின்படி நீயே முதலில் போட்டியைத் துவக்குவாய்,” என்றார். ராவணனுக்கு நடக்கப் போவது என்னவென்பது ஓரளவிற்குப் புரிந்து விட்டது. வயதில் மட்டும் அல்ல இசை ஞானத்திலும் தான் ராவணனைவிட பெரியவன் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் அல்லவா அகத்திய மகாபிரபு.
வீணையை மீட்ட ஆரம்பித்தான். காம்போதி களை கட்டியது. இசை கூட்டியது. பொதியமலையே இசையால் நிறைந்தது. ராவணன் தொடர்ந்து வீணையை மீட்டிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் இயற்கையே சில நொடிகள் ஸ்தம்பித்து அசைவற்று நின்று விட்டது. ராவணன் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான்.
”அசையும் பொருட்களும் அசையாமல் நிற்கும் என்றால் இதை விட அற்புத இசையை மூவுலகில் எவராலும் அளிக்க இயலாது. வீணைக் கொடி வேந்தனின் வெற்றி உறுதி,” என்ற மனதிற்குள் களிப்பெய்தினான் ராவணன். வீணையை சாந்தம் செய்தான்.
இப்போது அகத்தியரின் முறை. லோபாமாதா வீணையை குடிலிலிருந்து எடுத்து வந்து அகத்திய பெருமானின் முன் வைத்து விட்டு பணிவுடன் சற்று தள்ளி நின்று கொண்டாள். அகத்திய மகரிஷி இறைவனை தியானித்து தன்னுடைய வீணைக்கு சித்த பாரம்பரிய முறைப்படி விழுந்து வணக்கம் செலுத்தினார்.

ராவண லிங்கம் திருத்தலையூர்

ராவணன் ஆச்சரியம் அடைந்தான். சாட்சாத் எம்பெருமானுக்கு அளிக்கும் மரியாதையையும் வணக்கத்தையும் உயிரில்லாத இந்த வீணைக்கு அளிக்கிறாரே என்று நினைத்து அகத்தியரின் செயலைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்.
அகத்தியர் வீணையை மீட்ட ஆரம்பித்தார். பிரபஞ்சமே இசை வெள்ளத்தில் ஆழ்ந்தது. மூவுலகும் அமுத இசையால் நனைந்தது.
தேவர்கள், கந்தர்கள், ஞானியர், யோகியர், இந்திரன், சந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்கள் என பிரபஞ்சமே அங்கு கூடியது. நாரதர், தும்புரு என அவைரும் வந்து குழுமினர். ரம்பை, ஊர்வசி போன்ற நடன மங்கைகள் தோன்றி நறுமண மலர்களை எங்கும் தூவி அந்தச் சூழ்நிலைக்கு மேலும் சுவை கூட்டினர். மும்மூர்த்திகள் பிரசன்னமாயினர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக எம்பெருமான் உமா மகேஸ்வரராக வெள்ளிப் பனிமலை ஒத்த வெண்விடை மேல் எழுந்தருளினார்.
அகத்தியர் எம்பெருமானைத் தொழுது வணங்கினார். அனைவரும் எல்லையில்லாப் பரமானந்தம் அடைந்தனர். ராவணன் வெட்கித் தலை குனிந்தான்.
நாணத்தால் அகத்தியரை நோக்க இயலாமல் ராவணன் எம்பெருமானை நோக்கினான். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பெருமானும், ” சிவபெருமானே கொடுத்த வீணையை வைத்துப் போட்டியிட்டாலும் எப்படி இந்தப் போட்டியில் நீ தோற்றாய் என்பதுதானே உன்னுடைய மனதில் எழும் வினா. அதற்கு எளிமையான பதில் இதோ. ராவணா, நீ வீணையை வாசித்தாய். எம் அகத்தியன் வீணையை வணங்கினான். நீ கானத்தை மீட்டினாய், எம் அகத்தியன் கானம் ஆனான். நீ அகத்தியனை போட்டிக்கு அழைத்தாய், ஆனால் எம் அகத்தியனோ போட்டிக்கு சாட்சி ஆனான். இதுவே அகத்தியன் பெற்ற வெற்றியின் இரகசியம்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
எம்பெருமானின் தேவ மொழிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சற்றே அத்வைத தத்துவத்தை அலசிப் பார்க்க வேண்டும். சிவபெருமான் பிட்டுக் மண் சுமந்தபோது வந்தி கொடுத்த உதிர்ந்த புட்டை சிவபெருமான் உண்டு
சுவைத்து, ஆனந்தம் அடைந்தான். பாண்டிய மன்னன் சிவபெருமானை முதுகில் சாட்டையால் அடித்தபோது பாண்டிய மன்னன், மாணிக்கவாசகர், வந்தி உள்பட அனைவர் முதுகிலும் அந்த சாட்டை அடி விழுந்தது.
சிவபெருமான் சாப்பிட்ட புட்டு அனைவருக்கும் ருசிக்கவில்லை. ஆனால் அவர் முதுகில் பெற்ற சாட்டையடி அனைவருக்கும் வலித்தது. இது எப்படி என்ற கேள்விக்கு சித்தர்கள் அளிக்கும் பதிலோ, சிவபெருமான் வந்தியின் புட்டை உண்டபோது கண்டு நின்றான், சாட்டை அடி வாங்கும்போது காணா நின்றான் என்பதாகும்.
அதுபோல போட்டி என்று வரும்போது அதில் இரண்டு என்ற தத்துவம் வந்து விடுகிறது. முதிர்ந்த பக்தியில் விளைவது ஒன்று என்ற பேருண்மையே.
இதை சுவையாக விளக்குவது ஏற்கனவே நாம் விவரித்திருந்த ஒரு திருஅண்ணாமலை சம்பவம். ஒரு கார்த்திகை தீபத் திருவிழாவின்போது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுடன் ஒரு அடியார் சேர்ந்து இருவரும் கார்த்திகை தீபப் பிரசாதங்களைத் தயார் செய்ய விபூதி, குங்குமத்தை  சிறிய பேப்பர் கவர்களில் போடும் பணியைச் செய்து கொண்டிருந்தனர்.

ஒன்றை நன்றாய்க் காட்டிய உத்தமன்

ஒரு தட்டில் குவியலாக வைத்திருந்த விபூதி குங்குமத்தை ஒரு ஸ்பூன் மூலம் பாக்கெட்டில் போட்டு பாக்கெட் கவரை மடித்து மூடி அந்த பாக்கெட்டுகளை ஒரு இரும்பு ட்ரேயில் வைத்து விட வேண்டும். இதுவே அவர்கள் இருவரும் செய்து கொண்டிருந்த திருப்பணி.
ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் விபூதி பாக்கெட்டுகளையும் அந்த அடியார் குங்கும பாக்கெட்டுகளையும் தயார் செய்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் பார்த்தால் விபூதி பாக்கெட்டுகள் நிறைவாகவும் குங்கும பாக்கெட்டுகள் குறைவாகவும் இருந்தன.
அடியார் திகைத்தார். இருவர் செய்வதும் அச்சாக ஒரே மாதிரியான பணிதான். ஆனால், வாத்யார் நிறைய பாக்கெட்டுகளைப் போடுகிறார். ஆனால், அடியாரால் அந்த அளவிற்குப் பாக்கெட்டுகளைத் தயார் செய்ய முடியவில்லை. அடியார் வாத்யார் செய்கையைக் கவனித்துப் பார்த்தார், ”வாத்யார் ஏதாவது புது டெக்னிக்கில் (யுக்தியில்) பாக்கெட்டுகளைத் தயார் செய்கிறாரா ?”
இல்லை. வாத்யார் செய்வது வழக்கமான பாணியில்தான். இப்போது அடியார் தன் மனதிற்குள் ஒரு போட்டியை ஏற்படுத்திக் கொண்டார். போட்டி இருந்தால்தானே எதுவுமே சுவைக்கும் ?
வாத்யாரைப் பார்த்துக் கொண்டே அந்த அடியார் வேகவேகமாக குங்குமத்தைப் பாக்கெட்டுகளில் நிரப்பலானார். வாத்யாரோ வழக்கம்போல் பொறுமையாக விபூதியை பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டிருந்தார்.
மேலும் ஒரு மணி நேரம் ஆயிற்று. என்ன ஆச்சரியம். விபூதி பாக்கெட்டுகள் குறைந்ததாகவோ, குங்குமப் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவோ தெரியவில்லை.

திருத்தலையூர் சிவாலயம்

அடியாருக்கு ஒன்றும் புரியாமல் இது பற்றி வாத்யாரிடம் வாய் திறந்து கேட்டே விட்டார்.
அதற்கு வாத்யார், ”அது ஒன்னும் இல்ல, ராஜா. அய்யாவுக்கு அம்மா அடக்கம் என்பதை இது மூலம் காட்டுறாங்க. அவ்வளவுதான்,” என்றார்.
இதுதான் பணிவைக் காட்டிய பரந்தாமமோ ?
இதையே எம்பெருமான், ”நீ போட்டியிட்டாய், அகத்தியன் போட்டிக்கு சாட்சி ஆனான்,” என்று அமுதமாய் அள்ளித் தெளித்தார்.
ராவணன் பரிவாதிணி வீணை பெற்ற இடமாதலால் இசைக் கலைஞர்கள் இத்தலத்தில் இசைக் கருவிகளை மீட்டி இறைக் கீர்த்தனைகளைப் பாடுவதால் தங்கள் துறையில் நற்பெயரும் கீர்த்தியும் பெறுவார்கள்.
இசைத் துறை சம்பந்தமான பாட்டு, நடனங்கள், கச்சேரிகள், அரங்கேற்றம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் இத்தலத்தில் நிறைவேற்றுதல் சிறப்பாகும்.


தற்கால இசைக்கு சப்த ஸ்வரங்களே ஆதாரமாக இருப்பதாலும் இத்தல மூர்த்தி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் என்ற நாமத்தைப் பூண்டிருப்பதாலும் சப்த ஸ்வரங்கள் அமைந்த சம்பூர்ண மேளகர்த்தா ராகங்களில் இறைக் கீர்த்தனைகளைப் பாடுதலும் இசைக் கருவிகளில் சம்பூர்ண ராகப் பாடல்களை இசைத்தலும் சிறப்பாகும்.
சப்தமி திதிகள், ஞாயிற்றுக் கிழமைகளில் இயற்றப்படும் வழிபாடுகள் வழிபாட்டின் பலன்களைப் பன்மடங்காகப் பெருக்குகின்றன.
இறை மூர்த்திகளுக்கு ஏழு வண்ணங்களால் ஆன மணமுள்ள மலர் மாலைகளைச் சூட்டி வழிபடுங்கள்.
பொங்கல், தயிர்சாதம், தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரிஞ்சி போன்ற வாரத்தின் ஏழு நாட்களுக்கான ஏழு வண்ண சித்ரான்னங்களை இத்தல ஈசனுக்குப் படைத்து அன்னதானமாக அளித்தலால் நீண்ட நாட்கள் மூதாதையர்களுக்கு திவசம் படையல் போன்ற வழிபாடுகளைச் செய்யாத குறை தீரும்.
மண்டோதரியின் வழிபாடு
ஸ்ரீசப்தரிஷீஸ்வரரும் ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மனும் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் காட்சி அளித்தார்கள் அல்லவா ? ராவணனோ தன்னுடைய உடல் உறுப்புகளை வெட்டி அக்னியில் இட்டு தன்னுடைய பக்தியை வெளிகாட்டினான். இந்த தரிசனத்தைப் பெற மண்டோதரி என்ன தவம் இயற்றினாள் ?
ராவணன் உடல் உறுப்புகளை அறுத்து கடுமையான தவத்தை இயற்றினாலும் அவனுடைய தவத்திற்கு சாகா வரம் பெற வேண்டும் என்ற சுயநல எண்ணம் மேலோங்கி நின்றது. ஆனால், மண்டோதரியோ பிறர் நலத்திற்காக தன்னை அர்ப்பணித்து பூஜைகளை நிறைவேற்றியதால் எளிய பூஜை முறைகளிலேயே விரைவில் இறை தரிசனத்தையும் எவர்க்கும் கிட்டாத குங்குமப் பிரசாதத்தையும் அம்பிகையின் திருக்கரங்களிலிருந்து நேரடியாகப் பெறும் பாக்கியத்தை அடைந்தாள்.
அப்படி என்னதான் சேவை செய்தால் மண்டோதரி ?

மண்டோதரியின் மகத்தான சேவை

மண்டூகம் என்றால் தவளை என்று பொருள். தாயானவள் குழந்தையைத் தன் வயிற்றில் வைத்துக் காப்பது போல் மண்டோதரி திருத்தலையூர் திருத்தலத்தில் உள்ள தவளை இனங்களை தன் வயிற்றின் மேல் வைத்து காப்பாற்றினாள். உதரம் என்றால் வயிறு. மண்டூகத்தை உதரத்தில் வைத்ததால் மண்டோதரி ஆனாள்.
திருத்தலையூர் திருக்குளம் அகோராக்னி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டாலும் மண்டூக தீர்த்தம், மண்டோதரி தீர்த்தம் என்ற பெயர்களும் பிரசித்தம். தவளைக் குட்டிகள் பிறந்தவுடன் அவற்றை தாய்த் தவளைகள் மண்டோதரி தேவியின் பொறுப்பில் விட்டு விடும். அத்தவளைக் குஞ்சுகளை பாம்புகள், பருந்துகள், பூனை போன்றவைகளிலிருந்து காப்பாற்றி வந்தாள் மண்டோதரி.

ஸ்ரீசப்தரிஷீஸ்வரர்
திருத்தலையூர் சிவத்தலம்

தாய்த் தவளைகளுக்கு தங்கள் குஞ்சுகளைப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். மண்டோதரி நாள் முழுவதும் ஓலைக் குடிசையில் இருந்த வண்ணம்,
சிவயசிவ ராவணாய நமஹ
சிவசிவ ராவணாய நமஹ
நமசிவாய ராவணாய நமஹ
சிவாயநம ராவணாய நமஹ
என்ற சித்தவேத சூக்த மந்திரங்களை பக்தி சிரத்தையுடன் ஓதிக் கொண்டே இருப்பாள். இந்த மந்திரங்களை மண்டோதரிக்கு உபதேசித்தவளே வசிஷ்டரின் பத்தினியான அருந்ததி தேவி ஆவாள். மிகவும் சக்தி வாய்ந்த சுமங்கலிப் பிரார்த்தனா மந்திரமாகும்.
இத்தகைய சுமங்கலி மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தவளைகளும் தங்கள் கணவன்மார்களின் பெயர்களை ஓதி பூஜைகள் செய்ய ஆரம்பித்தன.
உதாரணமாக ஒரு தவளையின் கணவனின் பெயர்
பக்தவத்சல யதுசேகர யோகமார்த்தாண்ட பசுபதி விருத்தம் என்றால் அது சிவயசிவ பக்தவத்சல யதுசேகர யோகமார்த்தாண்ட பசுபதி விருத்தம்
சிவசிவ பக்தவத்சல யதுசேகர யோகமார்த்தாண்ட பசுபதி விருத்தம் நமசிவாய பக்தவத்சல யதுசேகர யோகமார்த்தாண்ட பசுபதி விருத்தம் சிவாயநம பக்தவத்சல யதுசேகர யோகமார்த்தாண்ட பசுபதி விருத்தம்
என்று ஓதி தியானிக்கும். தவளைகளுக்கும் நம்மைப் போல் ராமகிருஷ்ணன், குழந்தைவேல் என்றெல்லாம் பெயர்கள் உண்டா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் எல்லா ஜீவன்களுக்கும் பெயர்கள் நிச்சயமாக உண்டு.
தவளைகளுக்கு மட்டும் அல்ல இத்தலத்தில் உள்ள நாகலிங்க மரத்தில் உள்ள இலைகளுக்குக் கூட ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இதில் மனித சக்தியால் புரிந்து கொள்ள முடியாத மிகவும் அற்புதமான அதிசயம் என்னவென்றால் மனிதர்களில் எத்தனையோர் குப்புசாமி, கோவிந்தசாமி, கருப்பன் என்று பெயர் வைத்திருப்பார்கள். லட்சக் கணக்கான ராமர்கள், கிருஷ்ணர்கள் உண்டு.
ஆனால், ஈ, எறும்புகள், நாய், பூனை போன்ற மிருகங்களின் பெயர்கள் ஒரு விலங்கிற்கு உள்ளது நிச்சயமாக மற்றொரு விலங்கிற்கு இருக்காது. Except human beings, the names of all other living beings are unique
மேலும் மனிதர்களைத் தவிர மற்ற ஜீவன்கள் தங்கள் இனத்தாரை அவற்றின் பெயரைச் சொல்லித்தான் அழைக்கும். யாரும் அவர்களின் பெயர்களைச் சொல்லி அறிமுகப்படுத்தத் தேவையில்லை. இதுவே இறைவனின் கருணை.

மேலே குறிப்பிட்ட ஆண் தவளையின் மனைவியின் பெயர் குலவாதிணி நீலவண்ண குசுமப்ரிய குவிசாகர குலாவீ என்பதாகும். இந்த தவளை தம்பதியினரே மண்டோதரி தேவியிடம் ஆசி பெற்ற முதல் தவளைத் தம்பதிகள் ஆவர். இந்த தெய்வீக தம்பதிகளின் வழித்தோன்றல்கள் இன்றும் இத்தல திருக்குளக் கரைகளில் வாழ்கின்றனர்.
பாக்கியம் உள்ளோருக்கு திருவாதிரை நட்சத்திர நாட்களில் இத்தவளைகளின் தரிசனம் கிட்டும். நீல வண்ணமுடைய இத்தவளைகளின் நிறத்தில் ஒன்பது கஜ புடவையை இத்தல பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயாருக்கு சாற்றி சனிக் கிழமையும் திருவோண நட்சத்திரமும் கூடும் நாட்களில் வழிபட்டு வந்தால்  leukemia, osteosarcoma போன்ற கடுமையான புற்று நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும்.

ஸ்ரீலஸ்ரீ சதாதப சித்தர்

உண்மையில் மேலே உள்ள தவளையின் பெயர் ஸ்ரீசதாதப சித்தர் பிரானால் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும். காரணம், மனிதனுக்கு தமிழ்,  ஆங்கிலம் போன்ற மொழிகள் இருப்பதுபோல மற்ற ஜீவன்களுக்கும் அவைகளுக்குரித்தான நாய் பாஷை, கோழி பாஷை போன்றவை உண்டு. இவ்வாறு எந்த விலங்கு, தாவரம் போன்ற உயிரினங்கள், பிற லோகத்தில் உள்ள பாஷைகளை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்து அளிக்கக் கூடிய சித்தர்பிரானே ஸ்ரீசதாதப சித்த மகரிஷி ஆவார்.
இவரே சுஜனி என்ற சனீஸ்வர லோகத்தில் போற்றப்பட்ட ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை தமிழ் மொழியில் அளித்த பெருமான் ஆவார்.
இவற்றை விளக்க முற்பட்டால் மனித ஆயுள் போதாது என்பதால் மொழியைப் பற்றிய விளக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறோம்.
இவ்வாறு திருத்தலையூர் திருக்குள தீர்த்தத்தில் இருந்த தவளைகள் அனைத்தும் இறை தியானத்துடன் கூடிய சுமங்கலிப் பிரார்த்தனையில் ஈடுபட்டு தங்களை முற்றிலும் மறந்த நிலையில் இருந்ததால் அத்தவளைகள் தங்கள் குஞ்சுகளைப் பராமரிக்க முடியாமல் போயிற்று என்பதே ருசிகரமான தகவல் ஆகும்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். மண்டோதரியின் உயரம் நாம் நினைப்பது போல் நான்கடி, ஐந்தடி கிடையாது. அசுர குலத்தைச் சேர்ந்த மங்கையாக மண்டோதரி இருந்ததால் அவளுடைய சகஜ உருவம் என்பது மூன்று பனை மரங்களின் உயரத்தை ஒத்திருக்கும். ஆனால், அசுரர்கள், அரக்கர்கள் தங்கள் உருவத்தை வேண்டும் அளவு பெருக்கவோ, சுருக்கவோ, தேவர், மனிதர், கந்தர்வர் போன்ற மற்ற உருவங்களை எடுக்கக் கூடிய சக்தியும் பெற்றிருந்ததால் அவர்களுடைய உண்மையான உருவம் பெரும்பாலும் எவருக்கும் புரியாது.

ஸ்ரீசதாதப சித்தர், கண்டியூர்

அப்படியானால் சிரஞ்சீவியான மார்கண்டேயரின் உருவம் எப்படி இருக்கும் ? எத்தனை யுகங்களாக இந்த பூமியில் பவனி வந்து கொண்டிருக்கிறாரே. மார்கண்டேய மகரிஷியின் உயரம் எட்டு பனை மரம் உயரம் ஆகும். இதன் ஆன்மீக ரகசியங்களை நீங்களே ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அசுரர்கள் தாங்கள் தவம் இயற்றும்போது தங்கள் உருவங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்றாலும் மண்டோதரி தன்னுடைய உருவத்தை சகஜ நிலையில் வைத்துக் கொண்டு தன்னுடைய வயிற்றில் ஒரு லட்சம் தவளைக் குட்டிகளை வைத்து அவைகளை இறை நினைவுடன் காப்பாற்றி அற்புத சேவை ஆற்றி வந்தாள்.
திருஅண்ணாமலையில் தவம் புரிந்த தவளைப் படுக்கை சித்தரும் இவ்வாறு தவளைகளுக்கு இறை உணர்வை ஊட்டி இறுதியில் அருணை ஜோதியில் ஐக்கியமான அற்புதத்தை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
மண்டோதரி இத்தலத்தில் பெற்ற அனுகிரகத்தில் ஒன்று எதிர்காலத்தை அறிவதாகும்.
ஒரு நாள் விடியற்காலையில் தன்னுடைய கணவனுக்கு ஆற்ற வேண்டிய பாத பூஜைகளை நிறைவேற்றிய மண்டோதரி பூஜையின் நிறைவாக கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமத்தை அலங்கரித்தபோது தன்னுடைய குங்கும பாக்கியம் விரைவில் பறிபோகும் என்பதையும் அதன் காரணத்தையும் தெளிவாக உணர்ந்தாள்.
ஆனால், முக்காலத்தை உணரும் சக்தி பெற்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதோ, அதைப் பிறருக்கு பறை சாற்றுவதோ, அந்த ஞானத்தைக் கொண்டு தன்னுடைய கணவனின் பக்தி நிலையை, ஞான நிலையை குறைவாக எடைபோடுவதோ உத்தம மனைவியின் இலக்கணம் ஆகாது.

உத்தமியின் உயர்சேவை

அதே சமயம் வரப் போகும் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பது மனைவியின் கடமை அல்லவா, அது அவளின் தர்மமும் ஆகுமே.
அன்று அரண்மனை சபை கூடி ராஜாங்க காரியங்கள் நிறைவேறிய பின்னர் மண்டோதரி ராவணனின் வீணை இசையைக் கேட்க தான் விரும்புவதாகக் கூறினாள். சபையிலிருந்த மற்றவர்களும் அதை ஆமோதிக்கவே ராவணன் வீணையை மீட்டி அற்புத கானங்களை இசைத்தான்.
ஆனால், திடீரென்று வீணையின் தந்தி ஒன்று அறுந்து விழுந்து விட்டது. இது அபசகுனமே. சபையினர் பேச்சிழந்தனர். ராவணன் மனம் தடுமாறினான். மண்டோதரியோ வீணை புகட்டும் பாடத்தை ராவணன் புரிந்து கொள்ள இறைவனை வேண்டினாள்.
அக்கணமே சூர்ப்பனகை அங்கு வந்து தனக்கு நேர்ந்த அவமானத்தைக் காரணம் காட்டி அதன் மூலம் ராமனைப் பழி வாங்க ராவணனைத் தூண்டினாள். அந்தத் தூண்டிலுக்கு உணவாக சீதையின் பேரழகை வர்ணித்தாள். காமத் தீக்கு இரையானான் ராவணன்.
இங்குதான் சிவபெருமானின் வார்த்தைகள் விளையாடின. ராவணன் சீதையை அடைவதும் மறுப்பதும் அவன் கையில்தானே இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பொறுப்பும் கிடையாது. எனவே ராவணனின் மரணம் எம்பெருமான் வரத்தின்படி அவன் நிர்ணயித்துக் கொண்டதே. பரிவாதிணி பரந்தாமனின் சாட்சியாக நின்றது. அவ்வளவே.
இவ்வாறு பஞ்ச மாதர் அனைவருமே பலவித தியாகங்களைப் புரிந்து மாபெரும் மகேசன் சேவை ஆற்றியவர்களே.
ராமர் தோன்றுவதற்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் பெருமையை உணர்ந்து, ராம பிரானின் திருவடி ஸ்பரிசம் பெற்று, ராம நாம சேவையைச் செய்வதற்காக காத்திருந்தாள் அகலிகை. அத்தகைய தீர்க தரிசனம் பெற்ற தேவி இந்திரனைப் பற்றி அறியாமலா இருப்பாள் ? எனவே ராம பிரானின் திருவடி மகிமையை உணர்வதற்காக, உணர்த்துவதற்காக கௌதம மகரிஷி, இந்திரன், அகலிகை, விஸ்வாமித்திரர் அனைத்திற்கும் மேலாக ராம பிரான் என அனைத்து தேவதா தெய்வ மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய நாடகமே அகலிகை சாப விமோசன காண்டமாகும்.
அது போல ராம பிரானும் சுமங்கலித்துவ சக்திகளை அகலிகைக்கு மட்டுமல்லாது அனைத்து உலகத்தில் உள்ள கோடி கோடி சுமங்கலிகளுக்கும் பிரசாதமாக அளிக்கவே சீதையுடன் பூமியில் அவதாரம் கொண்டார். பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தில் எத்தனையோ திருத்தலங்களை, தீர்த்தங்களை, முனி புங்கவர்களை தரிசனம் செய்து, ஹோம வேள்வி தர்ப்பணங்கள் இயற்றி அந்த பலன்களை எல்லாம் ராம பாணத்தில் நிரவி ராவணன் மேல் எய்திட அதை மண்டோதரி தேவி பெற்று அனைத்துக் கோடி சுமங்கலிகளுக்கு அளித்தாள் என்னும்போது அதில் சீதையில் கற்புக் கனலும் சேர்ந்திருந்தது.

சீதையின் கற்புக் கனலை வேறு எந்த சக்தியாலும் தாங்க இயலாது. அக்னியே குளிர்ந்தது என்றால் சீதையின் கற்புக் கனலுக்கு முன்னால் எது நிற்க முடியும், ராம பாணத்தைத் தவிர. எனவே ராம பாணம் என்பது ஒரு உயிரைக் கவரும்ஆயுதம் அல்ல. ஒரு தீர்க்க சுமங்கலி தேவியின், கற்புக்கரசியின் கற்புக் கனலையும், ஏக பத்னி விரத யோகாக்னி சக்திகளையும் ஒருங்கே இணைக்கக் கூடிய அற்புத தவ சாதனமாகும். அதை சாதனத்தைக் கையாளும் தகுதி பெற்றவர் ராம பிரான் ஒருவர் மட்டுமே.
சீதைக்கும் ராமருக்கும் இடையே 108 ஜாதகப் பொருத்தங்கள் இருந்ததாம். அத்தகைய அன்யோன்ய துணைவியாய், பேரழகுப் பதுமையாய் மிளிர்ந்த சீதாப் பிராட்டியுடன் ராமர் பல்லாயிரம் ஆண்டுகள் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அப்பேரொளிப் பிழம்பை ராமர் ஒரு முறையே அறிந்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால் ராவணன் ராம பிரானால் சம்ஹாரம் செய்யப்பட்டான் என்றாலும் அதனால் மண்டோதரி பெற்ற அனுகிரகங்கள் அற்புதம், அற்புதம்.
ராம பாணத்திற்கு ஈடு இணை கிடையாது. ராம பாணத்தின் அக்னி சக்திகளை எவராலும் தாங்க முடியாது, அதன் தெய்வீக இரகசியங்களை யாராலும் புரிந்து கொள்ளவும் முடியாது. எனவே ராம பாணத்தின் அனுகிரக சக்திகளை இந்தப் பிரபஞ்சம் எங்கும் நிரவி அனைவரும் வியக்கும் அற்புத சேவையை சாதித்தவளே மண்டோதரி ஆவாள்.
ராம ராவண யுத்த மகாத்மியங்களை முழுவதுமே உணர்ந்தவர்கள், அதன் தெய்வீக இரகசியங்களை உரைக்கவல்லவர்கள் சித்தர்களே.
லங்காபுரியின் யுத்த களத்தை உங்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள். ராம பிரான் ராம பாணத்தை ராவணன் மேல் எய்து விட்டார். ராவணனின் உயிரைக் கவர்ந்து செல்ல பாய்ந்து செல்கிறது ராம பாணம். உத்தம பத்தினி என்பவள், குங்கும சௌந்தரியின் பூர்ண அனுகிரகத்தைப் பெற்ற மண்டோதரி தன் கணவனின் உயிர் பிரியப் போகிறது என்பதை அறிய மாட்டாளா.
ராம பாணம் ராவணனின் மார்பைத் துளைக்கும் முன் அதன் அக்னி சக்திகள் அனைத்தையும், ராம ஏக பத்னி விரத சக்திகள் அனைத்தையும்,  பூர்ணமாய் தான் ஏற்று அந்த விஷ்ணு சக்திகள் அனைத்தையும் உலகத்தில் உள்ள சுமங்கலிகள் அனைவருக்கும் அளித்து மறைந்தாள் மண்டோதரி, இல்லை ... இல்லை ... அனைத்துச் சுமங்கலிகளின் உள்ளம் எங்கும் நிறைந்தாள்.
ராம பாணத்தின் அக்னி சக்தியைத் தாங்கும் சுமங்கலித்துவ மங்கள அக்னி சக்தி மண்டோதரியைத் தவிர இப்பிரபஞ்சத்தில் எவருக்கும் இல்லை, எவருக்கும் இல்லை. ஜெய் மண்டோதரி மாதா கீ ஜெய்.

தல விருட்சம் மருதமரம்
திருத்தலையூர் சிவத்தலம்

மண்டோதரியின் தெய்வீக சேவையால் முக்தி நிலையை அடைந்த தவளைகள் இன்றும் இத்தல திருக்குளத்தில் வாழும் தமது சந்ததியினருக்கு அவர்கள் நன்னிலை அடைய வழிகாட்டி வருகின்றனர்.
முக்கி நிலை அடைந்த மனிதர்கள் குல தெய்வம், குல மாமுனி, கோத்ர ரிஷியாக வாழ்ந்து தங்கள் வழித் தோன்றல்களை கரையேற்றுவதைப் போல இத்திருக்குளத்து தவளைகள் தங்கள் வழித் தோன்றல்களுக்கு ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி தம்பதி மூர்த்திகளால் மண்டோதரிக்கு அளிக்கப்பட்ட சுமங்கலி பூஜை முறைகளை தவளை இனத்திற்கு எடுத்துரைத்து அத்தவளைகளும் சுமஙகலிப் பூஜைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.
எனவேதான் இத்திருக்குளத்தில் நீர் நிரம்பி இருக்கும் காலங்களில் கூட தவளைகள் குளத்து நீரில் தஞ்சம் கொள்வதில்லை. நீரில் மூழ்கி விட்டால் பூஜையை எப்படித் தொடர முடியும் ?
மனித உள்ளங்கையை விட சிறிய அளவில் உள்ள தவளைகளின் உள்ளம் எத்துணை பெரியது பார்த்தீர்களா ? இனி மனிதர்கள் இத்தலத்தில் ஆற்ற வேண்டிய சுமங்கலிப் பூஜையைப் பற்றி விளக்க வேண்டுமா என்ன ?
மண்டோதரியால் தவளைகளுக்கு உபதேசிக்கப்பட்ட மேற்கூறிய சுமங்கலித் துதிகளை சுமங்கலிப் பெண்கள் இத்தலத்தில் ஓதி அற்புதமான பலன்களைப் பெறலாம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தாமே சுத்தமாக தயார் செய்த குங்குமத்தால் இத்தல தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்யப் பொருட்களை தானமாக அளித்தலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி போன்ற நவராத்திரி தினங்களில் இத்தலத்தில் அளிக்கப்படும் தானப் பலன்கள் ஆயிரமாய்ப் பல்கிப் பெருகும்.
தவளைகள் அகோராக்னி தீர்த்தத்தில் பிரவேசிக்காமல் இருப்பதற்கு மற்றொரு ஆன்மீக காரணமும் உண்டு. அகோர அக்னி என்பதே அகோராக்னி ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த அக்னி சக்தி என்று இத்தீர்த்தத்தை அழைப்பர். மனித மூளையால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முயற்சி செய்தாலும் ஒரு திருக்கோயிலின் தீர்த்த சக்திகளை புரிந்து கொள்ளவே முடியாது. உதாரணமாக, திருத்தலையூர் அகோராக்னி தீர்த்தத்தின் ஒரு துளி நீரில் விரவியுள்ள அக்னி சக்தியைக் கொண்டு சென்னை மாநகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் மூன்று வேளை உணவு சமைத்து விடலாம் என்றால் இதன் மகிமையை எப்படி மனித மனம் ஏற்கும் ?
எனவே இவ்வளவு அக்னி சக்தி உள்ள தீர்த்தத்தில் தவளைகள் பிரவேசித்தால் அக்னியின் உஷ்ணத் தன்மை குறைந்து விடும். சூடு குளிர்ச்சி தத்துவத்தை முழுமையாக உணர்ந்த ஜீவன்களே தவளைகளாகும். எனவே மண்டோதரி தவளைகளுக்கு சேவை செய்தாள் என்றால் வெறும் மந்திரங்களை ஓதி தவளைகளை வயிற்றின்மேல் வைத்துக் கொண்டாள் என்று பொருள் கொள்வதை விட தவளைப் படுக்கை சித்தரைப் போல தவளைகளின் உதவியால் லட்சக் கணக்கான கோயில் தீர்த்தங்களில் உள்ள உஷ்ண நிலையை சமன் செய்து அதனால் கோடிக் கணக்கான ஜீவன்களின் நோய் நிவாரணத்திற்கு உதவினாள் என்பதே சித்தர்கள் புகட்டும் உண்மையாகும்.

தவளைகளின் தெய்வீகத் தொண்டு

தவளைகளின் நோய் நிவாரண சக்திகளை வெளியிட்டால் மனித குலம் தவளைகளைக் கொன்று வியாபாரப் பொருளாக்கி தவளை இனத்தையே அழித்து விடும் என்பதால் சித்தர்கள் தவளைகளின் பெரும்பாலான தெய்வீக அருட்சக்திகளை வெளியிட விரும்புவதில்லை.
ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். அனைவருக்கும் குலகுரு உண்டு. குல தெய்வங்கள் உண்டு. கோத்ராதிபதிகள் உண்டு. இவர்களைப் பற்றி அறியாதோர் தங்கள் இஷ்ட தெய்வத்தையே கோத்ராதிபதியாக குலகுருவாக, குருவாக, வழிகாட்டியாக எண்ணி வழிபடலாம்.
ஒரு முறை ஒரு அன்பர் வாத்யாரிடம் வந்தார். அவருக்கு இரத்த மூலம். அதாவது வெறுமனே அமர்ந்திருந்தால் கூட உடலிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். அவர் பார்க்காத வைத்தியம் கிடையாது. மூன்று முறை அறுவை சிகிச்சையும் செய்து பார்த்து விட்டார். எந்தப் பயனும் ஏற்படவில்லை.
ஆனால், அவர் தொடர்ந்து தன்னுடைய இஷ்ட தெய்வமான பழநி ஆண்டவரைப் பிரார்த்திக் கொண்டே இருந்தார். எந்த அவசரமான வேலையாக இருந்தாலும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பழநி ஆண்டவரை தரிசனம் செய்து அதன் பின்னரே உணவேற்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் பணியாற்றும் இடமோ சென்னை. ஆனால், தன்னுடைய வழிபாட்டை கைவிட்டதே கிடையாது.
இந்நிலையில் அவர் நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டவே அவர் நிலையை அறிந்த சுவாமிகளும் குறிப்பிட்ட ஒரு கோயிலைப் பற்றி கூறி அக்கோயிலுக்கு அடுத்த செவ்வாய்க் கிழமை அன்று சென்று சுவாமி தரிசனம் செய்து வருமாறு கூறினார்.
அந்த அடியாரும் ஸ்ரீவாத்யார் கூறிய முறையில் சென்று இறை தரிசனம் பெற்று திரும்பினார். மறுநாள் காலையில் மூலத்தின் மூலமே தெரியவில்லை. இதுவே சற்குருமார்கள் ஆற்றும் அற்புதம்.
ஆனால், இந்த அற்புதத்தின் பின்னால் மறைந்த ஆன்மீக இரகசியம் என்ன ?

ஸ்ரீகருடாழ்வார்
திருத்தலையூர் பெருமாள் கோயில்

ஸ்ரீவாத்யார் அவர்கள் அந்த அடியார் வந்து போனதிலிருந்து ஐந்து நாட்களுக்கு தூங்கவே இல்லை. இரவில் கூட சற்று கண்ணயர்வது கிடையாது.
அந்த அடியார் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர். பாரத்வாஜ கோத்ராதிபதியான ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வாத்யார் குறிப்பிட்ட கோவிலுக்கு அடுத்த செவ்வாய்க் கிழமை வரப் போகிறார் என்ற இரகசியத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீவாத்யார் அவர்கள். இப்போது பாரத்வாஜ கோத்ரத்தில் அமைந்த மற்றொருவருக்கு வாத்யாரிடம் வந்த அடியார் சில கர்ம பாக்கிகளை வைத்துள்ளார். அந்த கர்ம பாக்கி தீர்ந்தால் அடியாரின் மூல வியாதி தீர்ந்து விடும். ஆனால் அந்த மற்றோருவரோ தவளையாக அமெரிக்காவில் உள்ள பனாமா தீவில் இருக்கிறார்.
எனவே அந்த குறிப்பிட்ட செவ்வாய்க் கிழமை அன்று ஸ்ரீபரத்வாஜர் முன்னிலையில் அந்த அடியாரும் பனாமாவில் உள்ள தவளையும் இறைவனை தரிசனம் செய்தால் இவர்கள் இருவரின் கர்ம பாக்கியும் நேராகி விடும். அந்த தவளையை இங்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு வாத்யார் தலையில் விழுந்ததால் அதை இங்கு அழைத்து வருவதற்காக ஐந்து நாட்கள் உறக்கமின்றி வாத்யார் அவர்கள் அந்தத் தவளையுடன் போராட வேண்டி வந்தது.
காரணம் தவளை பனாமா தீவில் ஒரு வாழை மரத்தின் ஒரு இலை அடுக்கில் ஹாயாக அமர்ந்து கொண்டு சந்தோஷமாக இருந்ததாம்.
வாத்யார் அழைத்தால், ”Don't disturb me. It is cool here. I am very happy." என்று ஆங்கிலத்தில் பதில் அளித்ததாம். ”எனவே அந்த தவளையிடம் ராஜா, கூஜா என்று எதையோ சொல்லி சமாளித்து அதை விமானத்தில் பயணம் செய்யும் மூலம் அவருக்குத் தெரியாமல் அவருடன் அனுப்பி பல கஸ்டம் செக் போஸ்டுகளைத் தாண்டி இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது,” என்று பல நாட்கள் கழித்து தன்னுடைய முயற்சிகளைப் பற்றி சுவையாக விவரித்தார் குருமங்கள கந்தர்வா.
இதுவே சற்குருவின் அருட்பணி. ஆமாம், அந்த அற்புதம் நடந்த கோயில் எது என்பதை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாமே.

தலை விருட்சமா தல விருட்சமா ?

திருத்தலையூர் சிவத்தலத்தின் தலவிருட்சம் மருத மரம் ஆகும். இப்பிரபஞ்சத்தில் எங்கும் காண இயலா அற்புத தல விருட்சம் இதுவாகும். இம்மரத்தை தல விருட்சம் என்பதை விட பிரம்ம மூர்த்திகளின் சந்தனக் கூடு என்பதே பொருத்தமான பெயராகும்.
சிவபெருமானின் தோற்றத்தை எவராலும் பூர்ணமாக உணர இயலாது. அதி உன்னத நிலையில் உள்ள சித்தர்களே எம்பெருமானின் தோற்றத்தில் அணுவிலும் அணுவாக உணர்ந்து அதை மக்களுக்காக வர்ணித்து உள்ளார்கள்.
காவிரி, கங்கை, ஏழு கடல்களில் உள்ள மணல் துகள்களைக் கூட எண்ணி விடலாம் ஆனால், ஆதி அந்தம் இல்லாத இறைவனின் சிருஷ்டிக் காலத்திலிருந்து தோன்றிய பிரம்ம மூர்த்திகளை எண்ண முடியாது என்று பெரியோர்கள் இறைவனின் சிருஷ்டி ரகசியத்தை வர்ணிக்கின்றனர். ஆனால், எண்ணிறந்த இத்தனை கோடி பிரம்மாக்களும் எம்பெருமான் சர்வேஸ்வரனின் வலது கால் நகத்தில் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டுள்ள துகளே என்றால் சர்வேஸ்வரனின் உருவம், ஆயுள், தோற்றத்தைப் பற்றி என்ன கூற முடியும் ?
இத்தனை கோடி கோடி பிரம்மாக்களும் தாங்கள் இறைவனின் வலது காலில் ஐக்கியம் ஆவதற்கு முன் திருத்தலையூர் சிவத்தல மருத மரத்தில்தான் வீற்றிருக்கிறார்கள். ஒரு பிரம்ம மூர்த்தியின் ஆயுள் சுமார் 365 லட்சம் கோடி ஆண்டுகள். அப்படியானால் இந்த சிவத்தல மருத மரத்தின் ஆயுள்தான் என்ன ?
இந்த அற்புத தல விருட்சத்தை நாம் இன்று தரிசனம் செய்கிறோம் என்றால் நமது மூதாதையர்கள் எத்தனை கோடி ஆண்டுகள் புண்ணியம் செய்திருப்பார்கள் ? யார் அறிவார் ? இந்த மருத மரத்தின் ஒவ்வொரு முடிச்சுமே ஒரு பிரம்ம மூர்த்தியின் கபால ஐக்கியமாகும்.
அது மட்டுமல்லாமல் மணிவாசகப் பெருமான் எம்பெருமானை பழமைக்கும் பழையவன், புதுமைக்கும் புதியவன் என்று வர்ணிக்கிறார். இதன் பொருள் என்ன ? மிக மிகப் பழமையான ஒரு பொருள் எது என்றால் அது இறைவனே, அதே போல மிக மிக சமீபத்தில் தோன்றிய புதிய பொருள் எது என்றால் அதுவும் இறைவனே. முன்னுக்குப் பின் முரணாவது போல் தோன்றும் இந்த தெய்வீக பேருண்மையை நன்றாக ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.
அது ஒரு புறம் இருக்க, சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. தான் படைப்புத் தொழிலைச் செய்வதால் தானே பெரியவன் என்ற அகந்தைபால் பட்டதால் சிவபெருமான் வீரபத்திரரைக் கொண்டு பிரம்மாவின் தலையைக் கொய்தார் அல்லவா ?

பிரம்ம சந்தனக் கூடு

வீரபத்திரரால் கொய்யப்பட்ட அந்த ஐந்தாவது தலை என்னவாயிற்று ? எந்தப் பொருளாக இருந்தாலும் அது அழியும்போது தோன்றிய இடத்திற்குத்தானே செல்ல வேண்டும். பிரம்ம மூர்த்திதான் அனைவரையும் படைக்கிறார். பிரம்மாவைப் படைத்தது யார்? சந்தேகம் என்ன ? சாட்சாத் இறைவன்தான் பிரம்மாவையும் படைத்தார். அப்படியானால் வீரபத்திரரால் கொய்யப்பட்ட அந்த ஐந்தாவது தலை எங்கு செல்லும், எங்கு செல்ல முடியும் ? ராம பிரானின் அம்பாரத் துணியிலிருந்து விடுபட்ட ராமபாணம் மீண்டும் ராம பிரானிடம் அடைக்கலம் கொள்வது போல இறைவனிடமிருந்து தோன்றிய பிரம்மனின் ஐந்தாவது தலை இறைவனிடம்தானே திரும்ப வர வேண்டும்.
அவ்வாறு வீரபத்திர சுவாமியால் கொய்யப்பட்ட பிரம்ம மூர்த்தியின் ஐந்தாவது தலை திருத்தலையூர் சிவத்தலத்தில் மருத மரத்தில் அடைக்கலம் பெறுகிறது.
மேலும் வீரபத்திரர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார் என்பது எப்போதோ எங்கோ நடந்த செயல் கிடையாது. இறைவன் முன்னை பழமைக்கும் பழையன், பின்னைப் புதுமைக்கும் புதியன். எனவே அகங்காரம் கொண்ட பிரம்மாவின் தலையை கொய்யும் அட்டகாசச் செயல் எத்தனையோ கோடி கோடி லோகங்களில் கோடி கோடி யுகங்களாக நடந்து கொண்டிருக்கும் இறைவனின் அற்புத திருவிளையாடலாகும், சிவ லீலா விநோதமாகும்.
எப்படி ராவணன் மேல் எய்யப்பட்ட ஒரு ராம பாணம் மண்டோதரியின் தியாகத்தால் கோடி கோடி சுமங்கலிகளுக்கு சுமங்கலித்துவ சக்திகளை வாரி வழங்கியதோ அது போல வீரபத்திர சுவாமியால் கொய்யப்பட்ட பிரம்ம கபாலமானது கோடி கோடி மக்களுக்கு நல்வழி காட்டி இறுதியில் திருத்தலையூர் மருத மரத்தில் ஐக்கியம் அடைகிறது. அப்படியானால் பிரம்ம கபால ஓடு என்பதை விட சந்தனக் கூடு என்று அழைப்பது பொருத்தம்தானே ?

எனவே பிரம்ம மூர்த்திகளின் திருத்தலை ஓடுகளின் சங்கமமாகத் திகழ்வதும் இவ்வூருக்கு ஒரு பெயர்க் காரணமாக அமைந்தது.

மண்டையில் களி மண்ணா ?

முட்டாள் தனமான காரியங்களை யாராவது செய்தால் அவர்களைப் பார்த்து, ”அறிவிலி, உன்னுடைய மண்டையில் களி மண்ணா இருக்கிறது?” என்று கேட்பது வழக்கம். உண்மையில் அவர்களை அறியாமல் அவர்கள் உதிர்க்கின்ற பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை. உண்மையில் சிருஷ்டியின்போது பிரம்ம மூர்த்தி திருத்தலையூர் திருக்குள மண்ணைப் பிடித்துத்தான் உயிர்களின் வடிவங்களை அமைக்கிறார்.
பொதுவாக, வடிவங்கள் அமைப்பதற்கு களி மண் மிகவும் உகந்ததாகும். மனிதர்கள் தங்கள் கடைசி பிறவியில் மண் பானைகள், சட்டிகள், இறை மூர்த்திகள் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக சித்தர்கள் உரைக்கிறார்கள். மனது நினைப்பதை உடல் உறுப்புகள் நிறைவேற்ற உறுதுணை புரிவதே களி மண் ஆகும்.
மனதிற்கும் உடல் உறுப்புகளுக்கும் உண்மையான பாலமாகச் செயல்படும் தெய்வீக சக்தியைப் பெற்றதே களி மண் ஆகும். எனவேதான், ”திருநீலக் கண்டத்து குயவனார்க்கடியேன்,” என்று இறைவன் மக்களை ஆட்கொள்ளும் பிரார்த்தனையை முன் வைக்கிறார் சுந்தர மூர்த்தி நாயனார் பெருமான்.

அகோராக்னி தீர்த்தம்
திருத்தலையூர்

இன்றும் கார் போன்ற வாகனங்களை வடிவமைக்க புகழ் பெற்ற அமெரிக்க கார் கம்பெனிகளில் முதலில் களி மண்ணில் பிடித்துதான் டிசைன் ஏற்படுத்துகிறார்கள். எண்ணிய வடிவம் எண்ணிய முறையில் தோன்ற களி மண்ணே உதவும் என்பதை அறியாத வடிவமைப்பாளர்கள் கிடையாது.
களி மண்ணிற்கு உள்ள மற்றொரு அபூர்வமான சக்தி உஷ்ணத்தைத் தாங்குவதாகும். இரும்பு, பொன், பஞ்சலோகங்களை உருக்கி ஊற்றி உருவங்கள் தயாரிக்கும் அச்சுகள் களி மண்ணைக் கொண்டுதான் அமைக்கப்படுகின்றன. இத்தகைய கொதிக்கும் நிலையில் உள்ள உலோகங்களில் உள்ள உஷ்ணத்தை களி மண்ணைத் தவிர வேறு எந்த உலோகத்தாலும் தாங்க முடியாது.
இதனால் நமக்கு என்ன பயன் ? எவ்வளவுதான் சிந்தித்தாலும் மூளை சூடு அடையாமல் இருக்க வேண்டுமானால் அது களி மண் மூளையாக இருந்தால்தானே சாத்தியமாகும். எனவே மனித மூளைக்கு, மனித தலைக்கு பாதுகாப்பளிப்பது இத்தல தீர்த்தமும், கபாலச் சந்தனக் கூடான தல விருட்சமே என்பது உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்குமே.
நவீன கம்ப்யூட்டர்களில் உள்ள பிராசஸர்கள் என்பவை என்ன களிமண் சட்டங்கள்தானே. அந்த பிராசர்கள் அருகில் உள்ள விசிறியை சில நிமிடங்கள் நிறுத்தி வைத்துப் பாருங்கள். கம்ப்யூட்டர் நின்று விடும். எனவே நம்முடைய களிமண் மூளை எளிதில் சூடு அடைந்து பழுதாகி விடாமல் நன்றாக செயல்பட வேண்டுமானால் களிமண் சிறக்கும் திருத்தலையூர் ஈசனை வணங்கித்தான் ஆக வேண்டும்.
களி மண்ணிற்கு இன்னொரு சிறப்புத் தன்மையும் உண்டு. புல்டோசர், மிலிடரி டாங்க் போன்ற கனரக வாகனங்கள் அதிக எடையுடன் இருப்பதால் அவைகளின் அசைவு பாகங்களை லூப்ரிகேட் செய்ய, வழவழப்புத் தன்மையை ஊட்ட களி மண்ணாமல் மட்டுமே இயலுமே. சாதாரண எண்ணெய் ஒரு பயனையும் தராது. அது போல் திருத்தலையூர் திருக்குள மண்ணுடன் இத்தல தவளைகளின் பூஜை சக்திகள் சேர்வதால் எத்தகைய மூளை நோய்களும், கபால நோய்களும் நிவாரணம் பெற இத்தல வழிபாடு பெரிதும் துணை புரிகின்றது.

வசிஷ்ட ஔஷதம்

இறைவன் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்று சொல்வது ஏதோ ஒப்புக்காக சொல்வது போல்தான் தோன்றும். எதையும் ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்த ஆன்மீக வாக்கியத்தின் பொருள் புரியும்.
திருக்குளத்தில் நீர் இல்லாமல் வறண்டு விட்டால் அதில் நீராட முடியாமல் பலருக்கும் தீர்த்த சக்திகள், அத்தல இறை மூர்த்திகளின் அனுகிரக சக்திகள் கிட்டாமல் போய் விடுகின்றன என்பது உண்மையே. ஆனால், அதே சமயம் இதனால் எத்தனையோ அற்புத அனுகிரகங்களும் கிட்டுகின்றன.
உதாரணமாக, திருத்தலையூர் அகோராக்னி தீர்த்தம் பல விதமான உஷ்ண நோய்களை தீர்க்கக் கூடிய தன்மை உடையது. இக்குளத்தில் உள்ள மண்ணிற்கு வசிஷ்ட ஔஷதம் என்று சித்தர்கள் பெயர் சூட்டி உள்ளார்கள். இது சித்தர்களின் பரிபாஷை வார்த்தையே. இந்த தீர்த்தத்தில் அடியில் படிந்துள்ள மண்ணின் இயற்பெயரை ஒரு முறை கூறினாலே ஒரு மனிதன் நூறு பிறவிகளில் சேர்த்து வைத்த கர்ம வினைகள் தீர்ந்து விடும் என்றால் இந்த தீர்த்தத்தின் மகிமையைப் பற்றி எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியும்.

ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில்
திருத்தலையூர்

சக்தி வாய்ந்த இந்த தீர்த்தக் குள மண்ணை வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலால் மட்டும் எடுத்து அதை வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் எத்தனையோ தீராத வியாதிகள் தீரும். இதன் தரிசனமே பல தோஷங்களை தீர்க்கவல்லது.
குளத்தில் நீர் நிறைந்திருக்கும் சமயங்களில் இந்த மண்ணை நாம் பெற முடியுமா ? எனவே யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல இக்குளத்தில் நீர் இருந்தாலும் மக்களுக்கு ஏராளமான பலன்கள், குளத்தில் நீர் இல்லாமல் வறண்டு போனாலும் ஆயிரமாயிரம் பலன்கள்.
திருக்குள மண்ணை நீரில் கரைத்து பஞ்சாட்சரம் அல்லது சம்பந்த மூர்த்தி நாயனாரின் திருநீற்றுப் பதிகம் அல்லது அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகம் போன்ற துதிகளில் ஏதாவது ஒன்றை ஓதி அந்த தீர்த்தத்தை அருந்தி வந்தால் எத்தகைய கடுமையான நோய்களும் விலகும்.
இக்குள மண்ணில் சிறிதளவே நெற்றிக்கு இட்டு வந்தால் காத்து கருப்பு சேட்டைகள் அண்டாது. குழந்தைகளுக்கு வயிற்றில் தடவினால் உடல் பிணிகள் நீங்கும்.
இக்குள மண்ணில் ஒரு சிட்டிகை அதாவது வலது கட்டை விரல் ஆள் காட்டி விரலால் எடுக்கும் அளவே எடுத்து ஒரு தங்கச் சிமிழில் வைத்து வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும், லட்சுமி கடாட்சம் பெருகும்.
மேற்கூறிய முறையில் அர்ச்சித்த வெள்ளைத் தாமரைகளை சுடுநீரில் போட்டு வடித்தெடுத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்தி வந்தால் மந்தமான குழந்தைகள் படிப்பில் சிறப்படையும், ஞாபக மறதி அகலும். பெண்களுக்கு ஏற்படும் உடல் அசதி நீங்கும்.
இக்குள பிரசாத மண்ணை எடுக்கும் முன் இத்தல இறைவனுக்கு உரிய காணிக்கையை செலுத்த வேண்டும் என்பது அவசியம். ஒரு சிட்டிகை மண்ணும் சிவன் சொத்தே. கவனம் தேவை.

ரஜ்ஜுப் பொருத்தம்

தற்காலத்தில் மாப்பிள்ளை, பெண்களின் ஜாதகங்களைப் பொருத்தி திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது அவற்றில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம் முதலான பத்துப் பொருத்தங்களில் ஏதோ ஐந்து அல்லது ஆறு பொருத்தங்கள் இருந்தால் கூட, பத்துக்கு ஆறு என்றால் அது 60 சதவீதம் என்று கணக்கிட்டு பரீட்சை போல பாஸ் போட்டு விடுவார்கள்.
இது தவறான அணுகு முறையாகும். கலியுக நியதிப்படி மற்ற பொருத்தங்கள் எப்படி இருந்தாலும் ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம் இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டும் பொருந்தா விட்டாலும் அந்த ஜாதகங்கள் பொருந்தாது என்றே முடிவு செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் அறிவுரை.
அறிந்தோ அறியாமலோ திருமணத்திற்குப் பின் இத்தகைய பொருந்தாத ஜாதகங்களுடன் வாழும் தம்பதிகள் என்ன செய்வது ? அவர்களுக்கு உதவுவதே திருத்தலையூர் சிவத்தல வழிபாடாகும்.
திருத்தலத்தில் ஏதாவது ஓரிடத்தை நன்றாக சுத்தம் செய்து, முடிந்தால் பசுஞ் சாணத்தால் அவ்விடத்தை மெழுகவும். முடியாதபோது சுத்தமான கங்கை, காவிரி நீரால் அல்லது இத்திருக்குள நீரை தெளித்து அதன் மேல் 36 புள்ளிகள் உடைய பச்சரிசி மாக்கோலம் இடவும்.
தரையை கைகளால்தான் தூய்மை செய்ய வேண்டும். விளக்குமாறு, துடப்பம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
கோலத்தின் நடுவில் இரண்டு செந்தாமரை மலர்கள் அல்லது இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வைக்கவும்.
கோலத்தின் நான்கு திக்குகளிலும் திக்கிற்கு ஒன்பது தீபங்களாக சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது பசு நெய் கொண்டு 36 தீபங்களை ஏற்றவும்.
மாக்கோலம் முன் அமர்ந்து,
1. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அஷ்ட வக்ராய நமஹ
2. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அணிருத்ராய நமஹ
3. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அசலாமுகீஸ்வராய நமஹ
4. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அம்பல தேசிகாய நமஹ
5. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அருநந்தி கூபாய நமஹ
6. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அறவாண சித்தாய நமஹ
7. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆருநாராயணாய நமஹ
8. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அணிகல்பாய நமஹ
9. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆசிதராய நமஹ
10. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அவுண ரட்சகாய நமஹ
11. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆடிண்யாய நமஹ
12. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அர்க்யாய நமஹ
13. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அசலாய நமஹ
14. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆர்ப்பதரிதராய நமஹ
15. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆங்கிரசாய நமஹ
16. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் அடலாய நமஹ
17. ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஆரண்யாய நமஹ
18. ஓம் ஹ்ரீம் ரீம் ஆத்ம சயனேஸ்வராய நமஹ
என்ற 18 தீர்த்த நாமங்களை் தம்பதிகள் இருவரும் பூஜை செய்வதாக இருந்தால் மூன்று முறையும், கணவனோ மனைவியோ தனித்து பூஜை செய்தால் ஆறு முறையும் ஓதி வழிபடுக.
வழிபாட்டிற்குப் பின் இயன்ற உணவு, மங்கலப் பொருட்களை தானம் அளித்தல் சிறப்பாகும். இதனால் ரஜ்ஜு தோஷங்கள் அல்லாது தம்பதிகள் இடையே நிலவும் எத்தனையோ கருத்து வேற்றுமையை ஏற்படுத்தும் தோஷங்கள் விலகுகின்றன.
சித்தர்கள் அளித்துள்ள இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டை தங்கள் சொந்த நலனுக்காகவோ, சமுதாய நலனுக்காகவோ மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இதை வியாபார ரீதியில் நிறைவேற்றுவதைத் தவிர்க்கவும்.

தீர்த்த புங்கவ பூஜை

மேற்கூறிய பூஜையை சமுதாய பூஜையாக ஏற்று நடத்தினால் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு நீரினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும். கொசு, பன்றி, ஈ என சமுதாயத்திற்கு நலம் பயக்கும் ஜீவன்களை மனித குலத்தின் எதிரிகளாகக் கருதி அவைகளை ஒழிக்க முற்படுவதை விட நோய்களை உருவாக்கும் எதிர்வினை சக்திகளை அழிப்பதே ஆறறிவு உடைய மனிதனின் பகுத்தறிவு செயலாகும்.
இத்தகைய சமுதாய தீர்த்த பூஜைகளே தீர்த்த புங்கவ பூஜைகளை எனப்படுகின்றன.
தற்போது திருமழபாடி, நத்த மாங்குடி போன்ற காவிரிக் கரையில் உள்ள திருக்குள தீர்த்தங்கள் கூட வறண்டு போய் உள்ளதைக் காண்கிறோம். இத்தகைய வறட்சியான குளங்களை மேற்கூறிய முறையில் கையினால் மட்டுமே தூய்மை செய்து தீர்த்த பூஜைகளை நிறைவேற்றுவதால் திருக்குளங்களில் நீர் பெருகி சமுதாயத்திற்கு நற்பலன்கள் குவியும்.

திருக்குளத் தீர்த்தங்களில் உள்ள புல், பூண்டு குப்பைகளை அகற்ற மண்வெட்டி, களை கொட்டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. விளக்குமாறு பயன்படுத்துவதை மட்டும் தவிர்க்கவும். திருக்குளமும் கோயிலின் ஒரு அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்கூறிய பூஜையுடன் சுபாஸ் பூஜை என்னும் சுமங்கலி பாஸ்கர பூஜைகளை நிறைவேற்றுவதால் பலன்கள் பன்படங்காகப் பெருகும்.

வக்ர ராகங்கள்

ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் என்னும் நாமத்துடன் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் சப்தஸ்வர சக்திகள் இயற்கையாகவே பெருகி இருக்கும். எனவே இத்தகைய திருத்தலங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி இறை கீர்த்தனைகளைப் பாடுவதும், நாதஸ்வரம், தவில், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், வயலின் போன்ற இசை வாத்தியங்களை வாசித்து இறைவனுக்கு சேவை ஆற்றுதலும் மிகவும் நலமாகும். இத்தகைய சேவைகளில் சம்பூர்ண ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை இசைப்பதே நன்மை பயக்கும்.

திருஅண்ணாமலை, பழநி, பர்வதமலை, ஐயர்மலை போன்ற மலைத் தலங்களை கிரிவலம் வரும்போதும் திருககோயில்களில் இறைவனை வலம் வரும்போதும் பிரதட்சிணமாகவே வலம் வர வேண்டும். கோயில்களில் நவகிரக மூர்த்திகளை வலம் வரும்போது ஏழு முறை பிரதட்சிணமாகவும் இரண்டு முறை அப்பிரதட்சிணமாகவும் வலம் வருதல் சிறப்பு. ஒன்பது முறையும் பிரதட்சிணமாக நவகிரக மூர்த்திகளை வலம் வருவதும் ஏற்புடையதே.

ஆனால், திருக்கோயில்களிலும், மலைத் தலங்களையும் குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே, குறித்த சில காரியங்களுக்காக மட்டுமே அப்பிரதட்சிணமாக வலம் வர வேண்டும். சற்குருவின் வழிகாட்டுதலின்படியே இத்தகைய அப்பிரதட்சிண கிரிவலங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல தியாகராஜ பாகவதர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் போன்ற அருளாளர்கள் ராக, ஸ்வர விதிகளைக் கடந்து பல கீர்த்தனைகளை இறைவனுக்காக பாடி சேவை சாதித்துள்ள வரலாறு நீங்கள் அறிந்ததே. இம்முறையில் ராகு காலம், கூடா நாட்கள், கிரகங்களின் வக்ர கதி காலங்களில் வக்ர ராகங்களில் அமைந்த கீர்த்தனை இசைப்பது ஏற்புடையதே. சொல்லப்போனால் இத்தகைய காலங்களில் வக்ர ராகங்கள் அமைந்த இறை கீர்த்தனைகள் வழிபாட்டின் பலன்களை பன்மடங்காக அதிகரித்து சமுதாயத்திற்கு அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்

கிரகங்கள் வக்ர கதியை மேற்கொள்ளும் காலங்களில் ஆனந்த பைரவி, குந்தளவராளி போன்ற ஆரோஹண வக்ர ராகங்களையும், கிரகங்கள் வக்ர கதியிலிருந்து மீளும்போது சாரங்கா போன்ற அவரோஹண வக்ர ராக கீர்த்தனைகளையும் இசைத்தல் சிறப்பாகும். ரீதி கௌளை போன்ற வக்ர ராகங்கள் ராகு காலம், கூடா நாட்கள் போன்ற காலங்களில் பாடுவதற்கு ஏற்றவையாகும்.

வக்ர ராக கீர்த்தனைகளை இசைத்த பின்னர் வெண்டைக்காய் போன்ற வக்ர இன காய்கறி வறுவல் சேர்த்து தயிர் சாதம் அன்னதானம் அளித்தலால் கிரகங்களின் வக்ர கதியால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam