அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நட்சத்திர சகாய திரட்டு

ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு
1. வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே
  வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே போற்றி!
2. கண்டமர் கருணைத் திருஒளியே
  காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே போற்றி!
3. எங்கும் தீபச் சுடர் ஒளியே
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே போற்றி!

ஸ்ரீசுயம்புநாதர் பேரளம்

4. தாயாய் வந்த அருள் ஒளியே
  தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே போற்றி!
5. வேதம் ஆனாய் பேரொளியே
  வெற்றி யருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே போற்றி!
6. நாதம் ஈந்த நாரிமணியே தினம்
  நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே போற்றி!
7. பாதம் தந்து காத்திடுவாய்
  பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே போற்றி!
8. வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
  வணங்கிடயென் பூச பொற்பாதமே போற்றி!
9. உள்ளம் கனிய உன்புகழ் பாடும் கள்ளமற்ற
   உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்யப் பொற்பாதமே போற்றி!
10. கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
   கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே போற்றி!
11. உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து
   உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே போற்றி!
12. தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
   தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே போற்றி!
13. ஆரா அமுதாய் ஆனவளே அடியேனுக்கு
   ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே போற்றி!
14. கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
   காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே போற்றி!
15. கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
   கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே போற்றி!
16. எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே போற்றி!
17. பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம் பொற்பாதமே போற்றி!
18. உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே போற்றி!

19. உன்புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே போற்றி!
20. உன்னை நினைக்கும் என் மனமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே போற்றி!
21. நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே போற்றி!
22. நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத் திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே போற்றி!
23. மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய் அவிட்ட பொற்பாதமே போற்றி!
24. தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே போற்றி!
25. சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே போற்றி!
26. வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே போற்றி!
27. தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே போற்றி!

வில்வ மர ஆசி

வில்வ மர ஆசியைப் பெற்றிடுங்கள்!
பின் அட்டைப் பட விளக்கம் – ஆசீர்வாதம் பெறுதல் என்றால் பெரியோர்களிடமிருந்தும், மஹான்களிடமிருந்தும் மட்டுமே என்பதல்ல. ஓர் எறும்பின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் என்றால் ஐந்து மாத வயதை உடைய ஓர் எறும்பும், 80 வயது நிறைந்த பெரியோர்களுக்கு உரித்தான ஆசீர்வாத சக்தியைப் பெற்றிருக்கின்றது! எறும்புகளில் பிள்ளையார் எறும்பு வகையானது மிகுந்த புண்ய சக்தியைக் கொண்டதாகும். எறும்புகளுக்குரிய மூலமூர்த்தி திருச்சி திருஎறும்பூரில் அருள்புரியும் மலைச் சிவத்தல ஸ்ரீஎறும்பீஸ்வரர் ஆவார். எறும்பு, நண்டு, யானை, ஆமை, சிலந்தி, புனுகு பூனை, கொக்கு போன்ற உயிரினங்களும் இறைவனை வழிபட்டு முக்கி பெற்ற திருத்தலங்களும் உண்டு. மனிதனுக்குரிய ஆறறிவு, செல்வம், வாகன வசதிகள், புத்தக அறிவு, பகுத்தறிவு, மூர்த்தி, தீர்த்த, தல வழிபாடுகள் இவற்றில் எதுவுமின்றி சாதரண எறும்பு கூட முக்திக்கு வித்திடுகின்றது என்றால் மோகம், முறையற்ற காமம், பேராசை, கேளிக்கைகள், வஞ்சம், பகைமை இவற்றுடன் மட்டுமே வாழத் துடித்துப் பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்ற தீய மனிதர்களுக்கு எறும்புகளின் வாழ்க்கை ஒரு நல்ல பாடமாகும் தானே!
இதேபோல பல மரங்களும் (விருட்சங்கள்) உத்தம இறைநிலைகளைப் பெற்று, பூர்வ ஜென்ம தெய்வீக சக்திகளின் அருளாலும், மஹரிஷிகளின் ஆசியாலும், தெய்வமூர்த்திகளின் அருட்கடாட்சத்தாலும், ஆலயத் தல விருட்சங்களாக அன்றும், இன்றும், என்றும் அருள்பாலிக்கின்றன.

நகர் வில்வ மரம்

சகஸ்ரலிங்கம் நகர்

இவ்வகையில் திருச்சி அருகே நகர் கிராமத்தில் ஸ்ரீஅப்பிரதட்சணேஸ்வரர் சிவ ஆலயத்தில் உள்ள வில்வமரம் எத்தனையோ யுகங்களாக அருள்புரிந்து வருகின்றது. ஒரு தலவிருட்ச வழிபாடே நம்முடைய பலவிதமான கர்மவினைகளைத் தீர்த்து, காரிய சித்திகளையும், நல்வரங்களையும் தரவல்லது என்பதைப் பன்முறை விளக்கி வந்துள்ளோம். சாதாரண மனிதக் கணக்கிலும் விஞ்ஞானப் பூர்வமாகவும் 1000 வருடங்களுக்கும் மேலான பழமையானதாக விளங்குகின்ற இவ்வரிய வில்வ மரத்தை ஸ்ரீபரமாச்சார்யாள் போன்ற மஹான்கள் தரிசித்து, தியானித்த இந்த திவ்யமான வில்வ மரமானது சித்புருஷர்களால் “முள்ளில்லா முக்தி விருட்சம்“ எனப் போற்றப்படும் அரிய மரமாகும். முள் என்றால் வினை என்ற பொருளுமுண்டு. எவ்வித வினையுமாய் இல்லாத பரிசுத்தமான, பவித்ரமான (வினை தீர்க்கும்) வில்வ மரம்!
இந்த வில்வமரத்தின் எதிரே அபூர்வமான சஹஸ்ர லிங்க மூர்த்தி தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றார்.
பொதுவாக ஒரு சஹஸ்ர லிங்கத்தில் 1000 லிங்க மூர்த்திகள் இருப்பதால் ஒரு முறை சஹஸ்ர லிங்கத்தை வலம் வந்தால் ஆயிரம் லிங்க மூர்த்திகளை வலம் வந்த பலாபலன்கள் கிட்டும். ஆனால் இவ்வாறு சஹஸ்ர லிங்க மூர்த்தியை வலம் வருகையில் தோன்றும் எண்ணங்கள் நல்லனவாயின் அதுவும் ஆயிரம் மடங்காகும். தீயனவாயின் அதன் பலாபலன்களும் ஆயிரமாயிரமாகும். இதே போலத்தான் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில் ஸ்ரீகோடீஸ்வர லிங்க மூர்த்தி, ஸ்ரீகோடி விநாயகர் அருள்பாலிக்கின்றனர். அனைத்தையும் கோடி மடங்காய் ஆக்கும் சக்தி வாய்ந்த மூர்த்திகள்! ஆனால்... இங்கு வலம் வருகையில் நல்லதோ, தீயதோ எந்த எண்ணம் வந்தாலும், அவையும் கோடி மடங்காகி விடும்! மனமோ எதை எண்ணுமோ, எப்படி எண்ணுமோ என் செய்வது? இந்நிலையில் ஸ்ரீசஹஸ்ர லிங்க மூர்த்தியையோ, ஸ்ரீகோடீஸ்வரரையோ வலம் வந்து அவர்களுடைய அனுகிரகத்தையும் பெற மனம் விழைகின்றது.. அதே சமயம் ஏதேனும் விபரீதமாக நம் மனம் எதையேனும் எண்ணிவிட்டால்.. இந்த பயமும் வந்து விடுகின்றதே. என் செய்வது? இத்தகைய இக்கட்டான நிலை வருவதாகச் சொன்னால்தானே, இதனை நாம் அறிய வந்தால் தானே சற்குருவின் அருளால் தக்க ஆன்மீகத் தீர்வைத் தரமுடியும்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு கல்லில் இரண்டு கனிகளைப் பெற்றிட, “அப்பனே! இறைவா! என் மனதைப் பற்றி நானே ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அது எப்போது எதை எண்ணுமோ தெரியாது. கோடீஸ்வர மூர்த்தியாகிய உன்னை, சஹஸ்ர லிங்க மூர்த்தியாகிய உன்னை வலம் வருவதற்கு நீ எனக்கு பாக்யம் அளித்தாயே, அதுவே எனக்குக் கிட்டிய கோடி கோடியான, ஆயிரமாயிரமான பாக்யம் தான்!”

நகர் சிவாலயம்

“எனவே, உன்னை நான் வலம் வரும்போது என்னுள் எழுகின்ற, அறிந்தோ, அறியாமலோ, உதிக்கின்ற அத்தனையையும், நல்லதோ, கெட்டதோ எல்லாப் பிராத்தனைகளையும் உன்னிடமே அர்ப்பணம் செய்து விடுகின்றேன். மேலும் உன்னை வலம் வருகின்றதனால் வருகின்ற தெய்வீக சக்தியையும், புண்ய சக்தியையும், மேலும் கெடுதலான எண்ணங்களால், மற்றும் நல்ல பிரார்த்தனைகளால் வருகின்றதையும் எல்லாவற்றையும் உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன். எதுவும் என்னுடையதல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா! அருணாசலா!”  என்று சங்கல்பம் செய்துவிட்டு வலம் வந்து பாருங்களேன்! அப்போது உணர்வீர்கள் அதன் மகிமையை!
எனவே, திருச்சி அருகே நகர் கிராமத்தில் உள்ள அற்புதமான ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள ஆயிரமாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட, (தலவிருட்சமான) வில்வ மரத்தை அடிப் பிரதட்சிணம் செய்து, இத்தெய்வீக விருட்சத்திற்கு (தானே அரைத்த) மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு நல்ல புதுவஸ்திரம் சார்த்தி வழிபட்டு வருதலால் நல்வரங்களைப் பெற்றிடலாம். பொதுவாக பித்ரு சாபங்களால் தான் திருமணத் தடங்கல்களும், குழந்தை பாக்யமின்மையும் ஏற்படுகின்றன.

மேலும், கணவன்/மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்றோர்களை /மாமியார், மாமனாரைத் துரத்திய / துன்புறுத்தியவர்களும் / பிரிந்தோரும் உண்டு. அறிந்தும், அறியாமலும் செய்கின்ற இத்தகைய துன்பங்கள் தாம் அவர்களுக்கு மனவேதனைகளைத் தந்து அவர்கள் இறந்த பின் அவ்வேதனைகளே சாபங்களாக மாறிப் பல குடும்பங்களை வதைக்கின்றன. இதேபோல மருமகளை/மாப்பிள்ளையைக் கொடுமைப் படுத்துவோரும் கூட கலியுகத்தில் சகஜமாகி விட்டனர். வயதான பெரியோர்களே, பிறருக்கு வழிகாட்ட வேண்டியவர்களே இவ்வாறு செய்வதுதான் வேதனை அளிக்கின்றது. ஆனால் வீட்டுக்கு விடு வாசற்படி! அவரவர் இல்லத்தில் ஆயிரமாயிரம் தனிப்பட்ட பிரச்னைகள்! இதற்கெல்லாம் பரிஹாரமாக, திருச்சி அருகே நகர் கிராம சிவன் கோயில் வில்வ விருசத்தை ஏகாதசி, அமாவாசை நாட்களில் அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வந்து மூதாதையர் படையலுக்குரிய (அதிதி போஜனம் எனப்படுவது) புடலங்காய், பிரண்டை, வாழைக்காய் போன்ற உணவுப் பொருளை அன்னதானமாக அளித்துவர மேற்கண்ட துன்பங்களுக்குத் தக்க பிராயச்சித்தம் கிட்டும். குடும்பத்தில் சச்சரவு, சொத்து தகராறுகள் தீர்ந்து அமைதி ஏற்படும்.

புத்தாண்டு வழிபாடு

ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும், ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நுழைகின்ற நேரத்தைப் பொறுத்து தான், மாதப் பிறப்பு கணிக்கப்படுகிறது. இவ்வகையிலே திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 14.4.1999 அன்று காலை 11 மணி 16 நிமிடத்திற்கு சூரிய பகவான் மேஷ ராசியில் தன் திருப்பாதங்களை எடுத்து வைக்கிறார்.
முதலில் விநாயகர் வழிபாடு,
ஓம்ஸ்ரீகணபதியே நம: || ஓம் ஸ்ரீகணபதியே போற்றி!! திரயோதசி கூடும் புதன்கிழமையாதலின் இந்நாளுக்குரிய விநாயகரை ஸ்ரீமஹா கணபதியே போற்றி! | ஸ்ரீமஹா கணபதியே நம: || ஸ்ரீவிஜய கணபதியே நம: | ஸ்ரீவிஜய கணபதியே போற்றி! என்று மூன்று முறை துதிக்கவும்.
பின் அவரவரின் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும், வாழ்வில் நிச்சயமாக ஒரு இஷ்ட தெய்வத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு மிகவும் பிடித்த தெய்வம் ஸ்ரீமுருகன் என்றால், ஸ்ரீசுப்ரமண்யாய நம: ஓம் ஸ்ரீசுப்ரமண்ய மூர்த்தியே போற்றி என்று ஓதிடுக..! பின் ஒரு வெற்றிலையில் காம்புப் பகுதி கிழக்கோ (அ) வடக்கோ நோக்கி இருக்குமாறு வைத்து அதில் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து “ஸ்ரீமஹா கணபதி ஆவாஹயாமி, அல்லது ஸ்ரீமஹா கணபதியே எழுந்தருள வேண்டும்”! என்று வேண்டிடுக.
இதன் பிறகு பஞ்சாங்கத்தில் சித்திரை மாதப் பக்கத்தை வைத்துக் கொண்டு இருகரங்களாலும் தொட்டுக் கும்பிட வேண்டும், ஏனெனில் பஞ்சாங்க தேவதைகள் ஆவாஹனம் ஆகும் தருணமிது! கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஒரு நாளுக்குரிய ஐந்து கால அங்கங்களும், ஐந்து கால தேவதைகளைக் குறிப்பதால் தான் இதற்கு பஞ்ச அங்கம், பஞ்சாங்கம் எனும் பெயர் வந்தது. எனவே இன்றைய புத்தாண்டு தினத்திற்குரிய ஐந்து கால தேவதைகளையும் பிரார்த்தனை செய்திடுக!
கிழமைக்கான பூஜை :- ஓம் ஸ்ரீபுத தேவாய நம: || ஓம் ஸ்ரீ புதமூர்த்தியே போற்றி || புதனுக்குரிய அதிதேவதை ஸ்ரீவிஷ்ணு : ஓம் ஸ்ரீவிஷ்ணுவே போற்றி! புதனுக்குரிய பிரத்யதி தேவதை ஸ்ரீபுருஷோத்தமன், ஸ்ரீபுருஷோத்தமாய நம: | ஸ்ரீ புருஷோத்தமனே போற்றி!!
புதனுக்குரிய பூதாதிபதி பிருத்வி :- “ஸ்ரீபிருத்வி தேவதாய நம:” | ஸ்ரீ பிருத்வி தேவதையே போற்றி || ஸ்ரீபுதன் தேவருக்கான வாகனம் குதிரை, ஸ்ரீபரிதேவதா போற்றி!! | ஸ்ரீ பரிதேவாய நம” புதன் கிரஹத்திற்குரிய சமித்தாகிய நாயுருவியைக் கையில் எடுத்துக் கொண்டு “ஸ்ரீபுத மூர்த்திக்குரிய இந்த நாயுருவி மூலிகையானது பிரபஞ்சமெங்கும் நல்ல அருளையும், நல்ஆரோக்கியத்தையும் தருவதாக!! என்று வேண்டி, பின் புதனுக்குரித்தான மரகதக் கல் இருக்குமாயின், அம்மரகத மோதிரத்தை/கல்லைக் கையில் வைத்துக் கொண்டு, “இம் மரகதக் கல்லானது உலகிற்கு நல்லவை எல்லாம் தர அருள் புரியுமாறு வேண்டுகிறேன்” என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். புதன் கிரஹத்திற்குரிய வெண்காந்தன் என்ற புஷ்பம் உண்டு. இதனைத் தக்க பெரியோரிடம் கேட்டு அறிந்து பெற்று, பூஜிப்பதால் மிகச் சிறந்த பலனைப் பெறலாம். வெண்காந்தள் புஷ்பத்தைக் கையில் வைத்துக் கொண்டு “ஸ்ரீ புதமூர்த்தியின் திருமேனியை அலங்கரிக்கும் இப்புஷ்பமானது உலகிற்கும், பிரபஞ்சத்திற்கும், ஸ்ரீபுத பகவானின் ஆசியைப் பெற்றுத் தருவதாக” என்று வேண்டிடுக..

சகஸ்ர லிங்கம் பேரளம்

திதி பூஜை :- இன்று திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் இருக்கின்றன.  ஓம் ஸ்ரீதிரயோதசி திதி தேவதாய நம: || ஓம் ஸ்ரீ திரயோதசி திதி தேவதையே போற்றி!!” || ஓம் ஸ்ரீசதுர்த்தசி திதி தேவதாய நம: ; ஓம் ஸ்ரீசதுர்த்தசி திதி தேவதையே போற்றி!
நட்சத்திர பூஜை :- இன்று பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்கள் அமைவதால். ஓம் ஸ்ரீபூரட்டாதி தேவதையே போற்றி! ; ஓம் ஸ்ரீபூரட்டாதி தேவதையே நம: || ஓம் ஸ்ரீஉத்திரட்டாதி தேவதையே போற்றி! ; ஓம் ஸ்ரீஉத்திரட்டாதி தேவதையே நம: என்று வணங்கிடுக! பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை குபேரன் ஆதலின், ஓம் குபேர தேவமூர்த்தியே போற்றி! ஓம் குபேராய நம: உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை காமதேனுவாதலின் ஓம் ஸ்ரீகாமதேனு தேவதையே போற்றி! ஓம் ஸ்ரீகாம தேனவே நம: பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய விருட்சம் தேமா உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய விருட்சம் வேம்பு. ஆதலால்.. தேமா, வேம்பு விருடங்களின் பூவோ, பழமோ, இலையோ கிடைக்குமாயின் ஸ்ரீபூரட்டாதி தேவதையே போற்றி! ஸ்ரீஉத்திரட்டாதி தேவதையே போற்றி! என இந்த நட்சத்திரங்களை பூஜிக்கும் போது தேமா, வேம்பு இவற்றின் பூ, இலையை வைத்து அர்ச்சிக்கலாம்..
யோக தேவதை பூஜை :- இன்று பிராம்ய யோகமும், மாகேந்திர யோகமும் அமைவதால், ஓம் பிராம்ய தேவதா மூர்த்தியே போற்றி! ; ஓம் பிராம்ய தேவதாய நம: || ஓம் மாகேந்திர யோக தேவதாய நம: ; ஓம் மாகேந்திர யோக தேவதையே போற்றி என்று துதித்து யோக தேவதைகளை வணங்கிடுக!
கரண தேவதை பூஜை :- இன்று வணிசை கரணமும், பத்ர கரணமும், பவ கரணமும் அமைவதால், ஓம் வணிசை கரண தேவதையே போற்றி! ஓம் பத்ர கரண தேவதையே போற்றி!
கூடுதல் கிரஹ வழிபாடுகள் :- யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்றுமே கிரஹ தேவதா மூர்த்திகள்தாம். காலப்போக்கில் இவர்களுடைய வழிபாடும் கலியுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படும். இவர்களுக்கும் பல பரிபாஷை நாமங்கள் உண்டு. புத்தாண்டில் இவர்களுடைய வழிபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓம் ஸ்ரீகலியன் மூர்த்தியே போற்றி! (யுரேனஸ்) ; ஓம் ஸ்ரீநெடுமால் மூர்த்தியே போற்றி! (புளூட்டோ) ; ஓம் ஸ்ரீ நிஷ்காம்ய மூர்த்தியே போற்றி! (நெப்டியூன்)
கிரஹ, ராசி பூஜை :- இத்துடன் கிழமை, திதி, நட்சத்திர, கரண, யோக ஆகிய பஞ்சாங்க கால தேவதை பூஜை முடிகின்றது. பிரமாதி ஆண்டு சித்திரை முதல் தேதியில் எந்த ராசியில் எந்தெந்த கிரஹாதிபதிகள் உள்ளனரோ அவர்களுக்குரித்தான பூஜையைச் செய்தல் வேண்டும். பிரமாதி வருடத்திற்குரிய நவநாயகர்கள் வழிபாடு
நவநாயகர்கள் :- ராஜா – ஸ்ரீகுரு ; மந்திரி – ஸ்ரீபுதன் ; சேனாதிபதி – ஸ்ரீஅங்காரகன் (செவ்வாய்) ; அர்க்காதிபதி – ஸ்ரீசெவ்வாய் ; சஸ்யாதிபதி – ஸ்ரீசனீஸ்வரன் ; ரஸாதிபதி : ஸ்ரீசூரியன் ; தான்யாதிபதி – ஸ்ரீகுரு ; மேகாதிபதி – ஸ்ரீசெவ்வாய் ; நீரஸாதிபதி – ஸ்ரீசுக்கிரன்
பிரமாதி வருட நவநாயகர் ராஜா ஸ்ரீகுருவே போற்றி!
பிரமாதி வருட நவநாயக மந்திரி ஸ்ரீபுதனே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீசேனாதிபதி அங்காரகனே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீஅர்க்காதிபதி செவ்வாயே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீசஸ்யாதிபதி சனீஸ்வரனே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீரஸாதிபதி சூரியனே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீதான்யாதிபதி குருவே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீமேகாதிபதி செவ்வாயே போற்றி!
பிரமாதி வருட நவநாயக ஸ்ரீநீரஸாதிபதி சுக்ரனே போற்றி!
நவகிரஹ சக்கரம் :- ஒரு மரப்பலகையில் (மா, பலா, தேக்கு போன்ற புனிதமான மரப் பலகைகள், வில்வ மரப் பலகை விசேஷமானது). பச்சரிசி மாவினால் கீழ்க்கண்ட நவகிரஹ ராசிச் சக்கரத்தை வரைந்து அந்தந்த ராசியில் உள்ள கிரஹங்களின் பெயர்களையும் பச்சரிசி மாவினாலேயே எழுதிடுங்கள். கிரஹங்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும். சுக், சந், அங் என்று கிரஹங்களின் நாமங்களைச் சுருக்காதீர்கள். இந்த நவகிரஹ ராசிச் சக்கரத்தைச் சுற்றி தீபங்களை ஏற்றி நவகிரஹத் துதிகளை ஓதி வழிபடுக!
நவகிரஹ ராசிச் சக்கரம் (பிரமாதி – சித்திரை முதல் தேதி கிரஹ சஞ்சாரப் படலம்) மீண்டும் பஞ்சாங்கத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு, கிரஹ தேவதா பூஜையைத் தொடரவும்.
மேஷ ராசியில் ஸ்ரீசூரிய பகவானும், ஸ்ரீசனீஸ்வர பகவானும் சஞ்சரிக்கின்றனர்.
மேஷ ராசியில் சஞ்சரிக்கும் ஸ்ரீசூரிய பகவானே போற்றி!
மேஷ ராசியில் சஞ்சரிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானே போற்றி!
ரிஷப ராசியில் ஸ்ரீசுக்ரபகவான் சஞ்சரிப்பதால் ரிஷபராசியில் சஞ்சரிக்கும் சுக்ர பகவானே போற்றி!
கடக ராசியில் ஸ்ரீராகுபகவான் சஞ்சரிப்பதால் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஸ்ரீராகு பகவானே போற்றி!
துலா ராசியில் ஸ்ரீஅங்காரக பகவான் சஞ்சரிப்பதால் துலா ராசியில் சஞ்சரிக்கும் ஸ்ரீஅங்காரக பகவானே போற்றி!
மகரத்தில் ஸ்ரீகேது பகவான் சஞ்சரிப்பதால் மகர ராசியில் சஞ்சரிக்கும் ஸ்ரீகேதுவே போற்றி!
மீன ராசியில் ஸ்ரீபுத, ஸ்ரீகுரு, ஸ்ரீசந்திர பகவான் சஞ்சரிப்பதால்
மீன ராசியில் அருட்புரியும் ஸ்ரீபுத பகவானே போற்றி!
மீன ராசியில் அருட்புரியும் ஸ்ரீகுருபகவானே போற்றி!
மீன ராசியில் அருட்புரியும் ஸ்ரீசுந்திர பகவானே போற்றி!
இதன் பின் 12 ராசிக்குரித்தான தேவ மூர்த்திகளை நாம் வணங்குதல் வேண்டும்.
ஓம் ஸ்ரீமேஷ பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீரிஷப பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீமிதுன பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீகடக பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீசிம்ம பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீகன்னி பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீதுலாம் பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீவிருச்சிக பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீதுனுசு பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீமகர பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீகும்ப பகவானே போற்றி!!
ஓம் ஸ்ரீமீன பகவானே போற்றி!!
சூரியன் முதல், ராகு, கேது வரை அனைத்து கிரஹங்களையும் வழிபடும் போது அவர்கள் எந்தந்த ராசியில் உள்ளனவோ அந்தந்த ராசியை கோலச் சக்கரத்தில் வலது மோதிர விரலால் தொட்டுக் கொண்டு ஓம் ஸ்ரீசூரியனே போற்றி! ஓம் ஸ்ரீசந்திரனே போற்றி! என ஓதிடல் வேண்டும்.!
ஓம் ஸ்ரீகலியன் மூர்த்தியே போற்றி (யுரேனஸ்)
ஓம் ஸ்ரீநெடுமால் மூர்த்தியே போற்றி (புளூட்டோ)
ஓம் ஸ்ரீநிஷ்காம்ய மூர்த்தியே போற்றி (நெப்டியூன்)
இவ்வாறு அந்தந்த ராசியில் உள்ள கிரஹமூர்த்திகளை வழிபடவும்! இந்த ஏப்ரல் 1999 மாதத்திற்குரிய ஸ்ரீஅகஸ்திய விஜயம் அட்டைப் படத்தில் ஸ்ரீஅகஸ்திய நட்சத்திர யோக ரோகிணி சக்கரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 27 நட்சத்திரங்கட்கும், உரித்தான நட்சத்ரத் துதிகள் வட்டமாக, (ஆரமாக) பதிக்கப் பெற்றுள்ளன. இப்படத்தை வைத்துக் கொண்டு (ஏப்ரல் இதழ் 1999) ஸ்ரீஅகஸ்திய நட்சத்திரப் பொற்பாதத் திரட்டின் 27 துதிகளையும்  27 முறை ஓதுதல் மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில் உங்கள் குடும்பத்தில், பாரம்பரியத்தில் 27 நட்சத்திரத்திற்கும் உரித்தானவர்கள் இருக்கக் கூடுமல்லவா? எனவே உங்கள் குடும்பப் பூஜையாக மட்டுமின்றி சமுதாயத்தில் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் தாங்கியுள்ளோரின் நல்வாழ்விற்காக இந்தப் பொற் பாதத் திரட்டையும், 27 முறை ஓதுதல் சிறப்பான சமுதாய பூஜையாகும்.
ஒவ்வொரு துதிக்கும் ஒரு புஷ்பமாக, தாம்ரை, மல்லி, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, பன்னீர், சங்கு, தும்பை போன்ற விதவிதமான மணமுள்ள பூஜைக்குரித்தான புஷ்பங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு புஷ்பமாக அர்ச்சிக்கவும். உங்கள் குடும்பத்தில், உறவினர், குழந்தைகள் என அனைவரும் ஒவ்வொரு புஷ்பத்தையும் ஒவ்வொரு முறையும் அர்ச்சிப்பதால் ஒரே நட்சத்திரத்திற்கு பலவித புஷ்ப அர்ச்சனைகள் அமைந்து நல்ல பலன்களாகப் பல்கிப் பெருகுமல்லவா?
சித்திரை மாத தேவி பூஜை :- இன்று சித்திரை மாதத்திற்குரிய தேவி ஸ்ரீசித்திரை தேவி! எனவே, இதில் ஸ்ரீசித்திரா தேவியையும் பிரார்த்தித்துக் கொள்ளவும். ஸ்ரீசித்திரா தேவ்யை நம: ஸ்ரீசித்திரா தேவியே போற்றி!
புண்ய/அயன கால தேவதா பூஜை :- உத்ராயண புண்ய காலத்தில் சித்திரை அமைவதால், ஸ்ரீஉத்தராயண தேவ மூர்த்தியே போற்றி! | ஸ்ரீஉத்தராய புண்யகால தேவ மூர்த்தியே நம:
ருது தேவதா மூர்த்தியே கால பூஜை :- வஸந்த ருது காலத்தில் சித்திரை மாதம் பிறப்பதால் ஓம் வஸந்த ருதே தேவதாய நம: | ஓம் ஸ்ரீவஸந்த ருது தேவதையே போற்றி
வருட தேவதா பூஜை :- இவ்வருடத்திற்குரிய பிரமாதி தேவதையையும் வணங்கிட வேண்டும். ஓம் ஸ்ரீபிரமாதி தேவதாய நம: | ஓம் ஸ்ரீபிரமாதி தேவ மூர்த்தியே போற்றி!
பின் கலியுகத்தில் நாம் வாழ்வதால் கலியுக புருஷனுக்கு நாம் வந்தனம் அளிக்கும் பொருட்டு ஓம் ஸ்ரீகலியுக புருஷனே போற்றி ! ; ஓம் ஸ்ரீகலியுக புருஷாய நம : என்றும் துதிக்க வேண்டும். நேத்ரம், ஜீவன் என்பது ஒவ்வொரு நாளிலும் மாறுபடும். ஆதலின், நேத்ர மூர்த்தியையும், ஜீவ மூர்த்தியையும் வணங்கிட வேண்டும்..
ஸ்ரீநேத்ர, ஜீவ, யோகினி, சூல தேவ மூர்த்தி பூஜை :
ஓம் ஸ்ரீநேத்ர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஜீவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீயோகினி தேவதையே போற்றி!
ஓம் ஸ்ரீசூலினி தேவதையே போற்றி
ஓம் ஸ்ரீஅமிர்த யோக தேவதையே போற்றி!
ஓம் ஸ்ரீசித்த யோக தேவதையே போற்றி
ஓம் ஸ்ரீவிஷுபுண்ய கால தேவதையே போற்றி!!
நவக்கிரஹங்களின் அனுக்கிரஹத்தால் தான் நம் ஒவ்வொரு நாளும், வினாடியும் நடப்பதால் அனைத்து நவக்கிரக தேவதை மூர்த்தியையும், அவரவர்க்குரிய அதி, பிரத்யதி தேவதைகளுடன் வணங்குதல் நலம்.. அதுவும் புத்தாண்டு தினத்தில் நவகிரஹங்களை வழிபடுவது எனில், எத்தகைய பாக்கியம் அது!

நவகிரஹக மூர்த்திகள்

அதி தேவதை

பிரத்யதி தேவதை

சூரியன்

ஸ்ரீஅக்னி

ஸ்ரீருத்ரன்

சந்திரன்

ஸ்ரீஈஸ்வரன்

ஸ்ரீகௌரி

செவ்வாய்

ஸ்ரீபூமாதேவி

ஸ்ரீசுப்ரமணியர்

புதன்

ஸ்ரீவிஷ்ணு

ஸ்ரீபுருஷோத்தமன்

குரு (வியாழன்)

இந்திரன்

பிரம்மன்

சுக்கிரன் (வெள்ளி)

ஸ்ரீசசி தேவி

இந்திரன்

சனி

ஸ்ரீபிரஜாபதி

ஸ்ரீயம மூர்த்தி

ராகு

ஸ்ரீ காலமூர்த்தி

ஸ்ரீசர்பேஸ்வரர்

கேது

ஸ்ரீபிரம்ம மூர்த்தி

ஸ்ரீசித்ரகுப்த மூர்த்தி

எனவே ஒவ்வொரு கிரஹத்தையும் அந்தந்த அதி, பிரத்யதி, தேவதைகளுடன் சேர்த்துத் துதித்துப் போற்றி பிரார்த்திக்கவும்.
ஸ்ரீபைரவ வழிபாடு :- புத்தாண்டு அன்று மட்டுமின்றி தினந்தோறும் வழிபட வேண்டியவரே ஸ்ரீகால பைரவ மூர்த்தியாவார். வெளியூருக்குப் பயணம் செல்லும் முன் நற்பயணத்தோடு பயணமும், காரிய சித்தியடையவும், இரவு நேரப் பயணத்திற்கு முன் ஸ்ரீகால பைரவருக்குப் புனுகு சார்த்தி முந்திரிப் பருப்பாலான மாலையைச் சார்த்தி வழிபடும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. மூடு மந்திர வித்து என சித்புருஷர்கள் முந்திரியைக் குறிக்கின்றனர். மூடு மந்திரம் என்பது பரிபாஷையில் வேதமந்திரங்களைக் குறிக்கும்.

வேத மந்திரங்கட்கு எல்லையே கிடையாது! அனைத்து வேத மந்த்ரங்களை, பரிபூரணமாக அறிந்து நமக்கு உணர்த்துவோர் யாருளார்? அந்த அளவிற்கு பிரபஞ்சமெங்கும் விரவிக் கிடப்பதே வேத மந்திரம் ஆகும். அனாதியாக பரவெளியிலிருந்து மந்திர ஒலியாக எழுபவையே வேதமந்திரங்கள், இதைப் புத்தகத்தில் வைத்துப் படிப்பதை விட குருவாய் மொழியாகத் தக்க பெரியோர்கள் சொல்லக் கேட்டு அறிதலே சிறப்பானதாகும். எவ்வித வேறுபாடுமின்றி யாவரும் வேத மறையை ஓதலாம். இறைவனின் இரு கண்களே தமிழ் மொழியும், வடமொழியுமாகும். தமிழிலுள்ள தேவார, திருவாசக, திருப்புகழ், திவ்யபிரபந்த மறைகளும், வடமொழி மந்திரங்களின் சக்தியைக் கொண்டுள்ளனவயே! எனவே, ஸுக்த மந்திரங்களும், ருத்ரம், சமகம், சூரிய நமஸ்காரம் போன்ற அரும்பெரும் மந்திரங்களின் சக்தியையும் தன்னுள் கொண்டதே தேவார திருவாசகத் திருப்புகழ், திவ்ய பிரபந்த தமிழ் மறைகளாகும். இத்தகைய அருந்தமிழ், வடமொழி மறைகளை இன்று ஓதி வாழ்வில் நற்கதி அடைவோமாக!
இறைவனிடம் எவ்வித பேதமும் கிடையாது. அனைத்து மந்திரங்களும், கலைவாணியின் நாவினின்று வெளி வந்ததே! ஒவ்வொரு மொழிக்கும் உரித்தான வேத மந்திரங்கள் உண்டு. அவரவருக்குரிய அவரவரறிந்த அந்தந்த மந்திரங்களை அந்தந்த மொழியில் ஓதி இறையருள் பெற்று உய்வோமாக! பல மொழிகளை அறிதல் என்பது கலைவாணியின் அதிஅற்புத அருளைப் பெற்றதையே குறிக்கிறது. பூர்வ ஜென்ம புண்யமாகக் கலைவாணியை உபாசனை செய்தோர்களால் தான் இப்பேற்றைப் பெற இயலும். இத்தகையோர் பன்மொழிகளிலுமுள்ள வேதமந்திரங்களை ஓதி, பிறரையும் அறியும்படி செய்து, சமுதாயத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற்றிட தியாகமனப் பாங்குடன் செயலாற்ற வேண்டுகிறோம். தன்னளவில் இறைமந்திரம் ஓதுதலை விட, பிறருக்கும் அதை உணர்வித்து, பயிற்றுவித்து அனைவரும் சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக இறை மந்திரங்களை ஓதுதலால் தான் சமுதாயத்தில் தெய்வீகமான சாந்தம் நிலவும்.

திருஷ்டி தோஷ நிவாரணம்

திருஷ்டி தோஷ நிவாரண தீப வழிபாட்டு முறை
திருஷ்டி என்பது என்ன? பொறாமை, பகைமை, விரோதம், குரோதம் போன்ற பலவிதமான தீவினை சக்திகளின், தீய எண்ணங்களின் எழுச்சியால் ஏற்படுகின்ற, தோஷங்கட்கே திருஷ்டி என்று பெயர். பிறருடைய பொறாமைக் கண்கள் நம்மை பாதிக்குமா? ஆம் நிச்சயமாகப் பாதிக்கும்... “இவன் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிவிட்டானே” என்று உங்களுடைய உறவினரோ அல்லது நண்பர்களோ எண்ணினால் கூட அது உங்களையும் உங்கள் வீட்டையும் நிச்சயமாகப் பாதிக்கின்றது. எவ்வாறு ஒருவர் உங்களை அடித்தால் வலி ஏற்பட்டு நீங்கள் உணர்கின்றீர்களோ, பாதிக்கப்படுகிறீர்களோ, அதே போல் பிறருடைய கண் பார்வையின் தீய விளைவுகளாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
கொள்ளிக் கண், பிசாசுக் கண், ஊழிக்கண், தாழிக் கண், கோழிக் கண், முட்டைக் கண் என்று பலவிதமான கண் தோஷங்கள் உண்டு. பிறருடைய வளர்ச்சியையும், செல்வத்தையும், முன்னேற்றத்தையும் கண்டு எப்போதும் பொருமுகின்றவர்களும், பொறாமையடைபவர்களும் நிறைய உண்டு. இவர்கள் எப்போதுமே தீய எண்ணங்களின் உருவமாக  ஒட்டு மொத்தமாக விளங்குவதால், இவர்கள் பேசுகின்ற பேச்சிலும், பார்க்கின்ற பார்வையிலும் எப்போழுதுமே தீய தன்மைகள் தான் நிறைந்து இருக்கும். இவையே தோஷங்களாக மாறி திருஷ்டி தோஷங்களாக நம்மை பாதிக்கின்றன. இதற்காகத்தான் புது ஆடையோ, வீடோ அல்லது வாகனமோ வாங்கப்பட்டால் / கட்டப்பட்டால் கிரஹப் பிரவேசம், வாகன பூஜை என்று பலவித வழிபாட்டை மேற்கொண்டு அவ்வீட்டிற்கோ, வாகனத்திலோ ஏற்படக்கூடிய தீமையான திருஷ்டி தோஷங்களிலிருந்து காத்துக் கொள்வதற்காக ஒரு ரட்சையாக ஒரு சிறப்பான வழிபாடு உள்ளது. அது யாதோ?
ஏஞ்சல் என்று சொல்லப்படும் தேவதைகளில் நல்ல தேவதைகளும், தீமை பயக்கும் தேவதைகளும் உண்டு. கொள்ளைக்காரனாகவும், திருடனாகவும், லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டுப் பொதுச் சொத்தைச் சூறையாடுபவர்களும் இறப்பிற்குப் பின் பேயாகவும், பிசாசுகளாகவும், தீய தேவதைகளாகவும் பிறப்பெடுத்து அல்லல்படுகின்றனர். ஆனால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் மனிதர்களிலே மிகவும் கொடுமையான, குரூரமான செயல் தாம் இவ்வாறு பேய், பிசாசுகளாகப் பிறப்பெடுப்பர். எனவே, பேய், பிசாசு பிறவியானது மிகவும் மோசமான பிறவியாகும். எனவே, இப்பிறவியிலேயே தீய வழக்கங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்கு ஆவன செய்யுங்கள்.
ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிகரெட், பீடி, சுருட்டுகளைப் புகைத்து கோடிக்கணக்கான மக்களின் நுரையீரல்களைச் சிதைக்கிறீர்கள், விஷத்தைப் பாய்ச்சி வதைக்கின்றீர்கள், அல்லவா? இதன் விளைவாகத்தான் எப்போதும் புகை படிந்திருக்கும் மயானங்களிலும், தொழிற்சாலைகளிலும், புகைப் பிசாசுகளாய் பிறவியெடுத்து வாடநேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்! ஊதி ஊதிப் பேய்ப் பிறவியையா சம்பாதித்துக் கொள்வது? இது போலத்தான் பிறருடைய பொறாமையாலும், விரோதத்தாலும் ஏற்படுகின்ற எண்ணம் செயல், தீய பார்வையானது, திருஷ்டி தோஷங்களாக நம்மைப் பாதிக்கின்றன. எவ்வாறு இத்தகைய தீய எண்ணங்கள் நம்மைப் பாதிக்க முடியும்? இது உண்மையெனில் எல்லோரும் தீயவற்றையே எண்ணி எளிதில் பிறரை வதைத்து விடுவார்களே என கேட்கத் தோன்றுகிறதல்லவா? எவ்வாறு திருஷ்டி தோஷங்களில் தீய பார்வைகள் பங்குபெறுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்கினால் நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்.
உதாரணமாக நீங்கள் ஒரு ஸ்கூட்டர் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் அக்கம்பக்கத்தாரும், உங்கள் சக ஊழியர்களும் இது பற்றிப் பொறாமைப்பட வாய்ப்புண்டு. பொறாமைப்படுதல் என்பது மிகப் பெரும் பாவமாகும். “இவன் ஸ்கூட்டர் வாங்கிவிட்டானே, நம்மால் வாங்க இயலவில்லையே”– என பிறர் எண்ணுவது உங்களை எவ்வாறு பாதிக்கின்றது தெரியுமா? என்னதான் நீங்கள் சொந்தக் காசு போட்டோ, பிற கடன், வங்கிக் கடன் பெற்றோ நீங்கள் வாங்கி இருந்தாலும், உங்கள் உண்மையான உழைப்பில் ஸ்கூட்டர் வாங்கியதாக உறுதியாகச் சொல்ல முடியாது. “என்ன இது நாம் ஒன்றும் தீயவழியில் சம்பாதிக்கவில்லையே? நம் சம்பளத்தின் மூலமும், சேமிப்பின் மூலமாகவும், கடன் மூலமாகவுந்தானே இதை வாங்கினோம் என்றுதானே எண்ணுகின்றீர்கள்?”
சற்றே உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக உழைக்கின்றீர்களா?  7 மணி நேரம் அலுவலக நேரம் எனில் அதில் எவ்வளவு நேரம் உங்களுடைய சுய காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள்? வீணே பேசி, அரட்டை அடிப்பதற்கும், வெளியில் சென்று பொருட்களை வாங்குவதற்கும் எவ்வாறு அலுவலக நேரத்தைக் கழிக்கின்றீர்கள் என்பதைச் சற்றே சிந்தியுங்கள். மேலும் வங்கி, எல்.ஐ.சி நகைக் கடை போன்ற இடங்களில் நீங்கள் வாடிக்கையாளரிடம், அன்பாகவும், பண்பாகவும், பேசி ஆற்ற வேண்டிய காரியங்களை எவ்வளவு கோபத்துடனும், வீண் பேச்சுடனும் பேசி விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றீர்கள். இவ்வாறாகப் பொறாமைப்படக் கூடிய அளவில் நீங்கள் செய்யும் செயலிலும், வாங்கும் பொருட்களிலும், உங்களுடைய பல தவறான அணுகு முறைகளும், தோஷமாக கொஞ்சமேனும் கலந்திருக்குமல்லவா?
இவற்றுடன் தான் அதாவது இந்த கொஞ்ச, நஞ்சம் உங்களுடன் ஒட்டி இருக்கின்ற தீய எண்ணங்கள் சேர்ந்து தான் பிறருடைய பொறாமை எண்ணங்களும் செயலாற்றுகின்றன. எனவே திருஷ்டி தோஷங்களில் உங்களின் பங்கும் உண்டு என்பதை உணருங்கள். எனவே, நாமே உழைத்துச் சேமித்து, சம்பாதித்தது என்று எண்ணினாலும் கூட அவ்வுழைப்பு உண்மையானதா? நேர்மையானதா? மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வந்ததா என்பதை நீங்களே உள்ளுணர்வுடன் அறிந்து கொள்ளுங்கள். ஒரு சின்ன விஷயம் ! நீங்கள் உங்கள் அலுவலகத்திலிருந்து உங்கள் சுயகாரித்திற்காக எவ்வளவு ,முறை அலுவலக டெலிபோனை உபயோகித்திருப்பீர்கள் என்பதை உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.
ஒரு மாதத்தில் 50 டெலிபோன் கால்களை நீங்கள் அலுவலகக் கணக்கில் ஓசியில் பேசினால் அந்த அளவிற்கு உங்கள் சம்பளத் தொகையானது, தோஷம் நிறைந்ததாக அமைகின்றது அல்லவா! அதே போல் நீங்கள் செய்யும் வியாபாரத்திலும், தில்லுமுல்லு இல்லையென்றால் கூட மிகவும் நேர்மையான முறையில் நடந்து கொண்டால் கூட உங்களையும் அறியாமல் தராசிலோ, எடை இயந்திரத்திலோ 5 அல்லது 10 கிராம் எடை குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது அல்லவா? மேலும், காய்கறிகளில் செய்கின்ற மளிகை, காய்கறிகளில், பொருட்களில் படிந்துள்ள தோஷங்கள், உரத்தின் விஷம், பூச்சி, அழுகல், கெட்டுப் போனவை, கல், மண், பொருட்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்!  எனவே கலியுகத்தில் எந்த வேலையைச் செய்தாலும், எவ்வளவு மிகவும் கவனமாக இருந்தாலும், சில தவறுகள் ஏற்பட்டு அதன் மூலம் தோஷங்கள் நிச்சயமாக வருகின்றன.
ஓட்டல் தொழில்களில் உள்ளோர்கட்கும் இத்தகைய தோஷங்கள் மிகவும் அதிகம். ஏனென்றால், நீரில், உணவில், அழுக்கு, ஈ, சேர்வது முதல், அழுகிய காய்கறிகளும், தூசியும், கல், மண்ணும் அறியாமல் சேர்வதிலிருந்து ஆயிரக்கணக்கான வழிகளில் தோஷங்கள் சேர வாய்ப்புண்டு. இப்போது ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா? தோஷங்கள், திருஷ்டி தோஷங்களின் மூலக் கருவின் மூலம் நம்மால் தான் உருவாக்கிக் கொள்ளப்படுகின்றது. இதைப் பார்த்தால் திருஷ்டித் தோஷம் என்பது கூட இறைவனின் லீலையே! நம்முடைய தவறுகளை நாமே உணர்வதற்கும் திருஷ்டி தோஷம் மிகவும் பயன்படுகிறது. இதனை உத்தம இறை நிலையில்தான் நன்கு உணர இயலும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
எனவே பிறருடைய பார்வையால் ஏற்படுகின்ற தோஷ விளைவுகளெல்லாம் நம்முடைய தவறுகளுடன் சேர்ந்துதான் திருஷ்டி தோஷமாக மாறுகின்றன. உண்மையில் பிறருடைய தீய எண்ணங்கள் நம் மீதோ, நம் பொருட்களின் மீதோ படிவதற்கான இடமாகத் தான் நம்முடைய தவறுகள் அமைகின்றன. நீங்கள் பரிசுத்தமானவராக ஒரு மஹானைப் போல் விளங்கினால், உங்களை தீய எண்ணங்கள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உங்களிடமே சில தவறுகள் இருக்குமாயின், அத்தவறுகளில் தான் பிறருடைய தீய எண்ணங்கள் வந்து குடி கொண்டு ஒரு ஆட்டம் ஆடிவிட்டுச் செல்கின்றன. இப்போது திருஷ்டி தோஷம் பற்றி நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இதுவரையில் நன்றாக, நன்முறையில் நேர்மையாகப் பிறருக்கு எவ்விதத் தீங்குமின்றி தானே சம்பாதித்துக் கொண்டுள்ளோம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருக்க கூடும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில புதிய கோணங்களிலிருந்து, நீங்களே உங்கள் வாழ்க்கையை அலசி, ஆராய்ந்து பார்த்தீர்களானால், நீங்கள் அறியாமல் செய்கின்ற தவறுகளை, குற்றங்களை உங்கள் மன சாட்சிக்கு விரோதமற்ற நிலையில் ஆராய்ந்து பார்த்தால் தான் உங்களுடைய பரிசுத்த நிலையை நீங்களே எடை போட்டுக் கொள்ள முடியும். எனவே, திருஷ்டித் தோஷங்கள் எனப்படுவது நம் தவறுகளுடன் பிறருடைய பொறாமையாலும், விரோதத்தாலும், துரோகத்தாலும் கூடி வரக் கூடியவை என்பது இதனால் புரிகின்றது அல்லவா? இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் விதத்திலும், நாமே நம்மையறியாமல் செய்யும் தவறுகட்குப் பிராயச்சித்தமாகத்தான், திருஷ்டித் தோஷ நிவாரண வழிபாட்டை நாம் மேற்கொள்கிறோம்.
திருஷ்டி, தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளப் பலவித வழிபாட்டு முறைகள் உண்டு. நம் வீட்டு வாசலில், ஒரு கறுப்புக் கயிற்றில், சங்கு, மிளகாய், படிகாரம், ஊமத்தைக் காய் போன்ற பல பொருட்களைச் சேர்த்து, திருஷ்டிக் கயிறாகக் கட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவைகளுக்கெல்லாம் திருஷ்டித் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய, தீய எண்ணங்களை தாமே கிரஹித்து வீட்டினுள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தக் கூடிய தெய்வீக சக்திகள் உண்டு. மேலும், எலுமிச்சைக் கனி, கண் உள்ள தேங்காய் போன்றவற்றிற்குப் பலவிதத் திருஷ்டித் தோஷங்களைக் களையக் கூடிய நேத்ர பாவன சக்தியுமுண்டு. எலுமிச்சைக் கனியானது திருஷ்டித் தோஷங்களைத் நன்றாகத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. இரண்டு, அல்லது மூன்று கண்களையுடைய தேங்காய்களை சிதறு காய்களாக உடைத்துத் திருஷ்டித் தோஷத்தை விலக்குகின்ற முறையும் ஒன்றுண்டு.
பிறர் கண்படா கவின்மிகு தீர்த்தம்!
தேங்காயில் உள்ள கண்கள், பலவித விசேஷ தெய்வீக சக்தி வாய்ந்தவை. எவர் கண்ணும் படாத இனிய நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்த அபிஷேகங்களுள்  ஒன்றாய் விளங்குகிறது. காரணம், இளநீர் அபிஷேகத்தில் இளநீரானது. எவர் கண்ணும் படாத தீர்த்தமாக இருப்பதால், இளநீருக்கு சிறு துவாரம் செய்து எவர் கண்ணும் படாமல் அதை நேரடியாக தெய்வமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதால் எத்துணையோ அரிய காரிய சித்தி கிட்டுவதோடு, திருஷ்டியையும் எளிதில் நீக்கி விடலாம்.. கண்படாத தீர்த்தமாய் விளங்குகின்ற தேங்காய் நீருக்கும். இதே வல்லமையுண்டு. திருஷ்டிக் கழிப்பு என்னும் விதத்தில், ஒரு பசு விரட்டியில் அக்னி வைத்து வீதி மண், மிளகாய் போன்ற பல பொருட்களைச் சேர்த்து, வீட்டிற்கும், வீட்டில் இருப்போர்க்கும் திருஷ்டி சுற்றி விரட்டியை அக்னியுடன் வீதியில் சேர்ப்பார்கள். இதில் பொசுங்கிய வாடை வீசுகின்றதை நாம் நன்கு உணரலாம்.
காரணம் இதில் பலவித திருஷ்டி தோஷ தீய சக்திகள் பஸ்மம் பகவானுக்குரிய செவ்வாய்க் கிழமையில் இத்தகைய பசுவிரட்டி, அக்னி திருஷ்டி தோஷ வழிபாடு  மிகவும் சிறப்புடையதாகும். வெள்ளிக் கிழமையானது, சுக்ர பகவானுக்குரிய நாளாதலாலும், மேலும், சுக்ராச்சாரியார் தம் இழந்த கண்களை வெள்ளிக்கிழமை விரதத்தின் மூலம் தான் பெற்றார் என்பதால், வெள்ளியன்று திருஷ்டி கழித்தல் மிகவும் சிறப்புடையதாகும்.
இவ்வாறாக திருஷ்டித் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்குப் பலவிதமான வழிபாட்டிற்கான ஒவ்வொரு பூஜை முறையும் ஒவ்வொருவித தோஷத்தை நிவர்த்தி செய்கின்றது. அனைத்துவிதத் திருஷ்டி தோஷங்களையும் முழுமையாக நீக்க உதவுவதே தீப வழிபாடாகும். ஏனெனில், அக்னியில் தான் அனைத்து தோஷங்களும் பஸ்மம் செய்யப்படுகின்றன. இதற்காகப் பல யுகங்களுக்கு முன் திருஷ்டித் தோஷ நிவர்த்திதனை தீப வழிபாடாக, தீர்த்த கண்டியினைப் போல கண்டிகை வழிபாடும் இருந்து வந்தது. காலப் போக்கில் இது மறைந்து விட்டது. இத்தீபவழிபாட்டு முறையை சித்புருஷர்களின் சிறந்த வழிபாட்டு முறைப்படி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், இந்த தீப வழிபாட்டை மீண்டும் மக்களுக்கு எடுத்துரைத்து தீப வழிபாட்டு முறையை உணர்த்திட விழைகின்றார்கள்.
தீப வழிபாட்டின் மிகச்சிறந்த அம்சம் என்னவெனில், காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை நாம் ஜோதி ரூபத்தில் தரிசிப்பதோடு மட்டுமின்றி, இறைவனுடன் அளவாளவுதற்கும், நம்முடைய பிரார்த்தனைகளைச் செலுத்தி அதன் பலனை நாம் பெற்றுய்யவும் ஒரு இடைக்கருவியாக, மீடியாவாக அக்னி சொரூபமான தீபம் விளங்குகின்றது என்பதே! ஜோதிகளில் பலவித வகையுண்டு. சத்சங்க வழிபாட்டில் ஒவ்வொருவரும் ஏற்றும் தீப ஒளியானது. ஒவ்வொரு விளக்கிலும் மாறுபடுவதை நாம் கண்கூடாகக் காணலாம். கூட்டு விளக்கு வழிபாட்டில் உயரமாகவும், அகலமாகவும், பலவிதத் துடிப்புடனும், துடிப்பின்றி சாந்தமாகவும், பக்கத்தில் சற்று வளைந்தோ விதவிதமாக ஒவ்வொரு விளக்கின் ஜோதியின் உருவம் மாறுகின்றது. இது அவரவரின் உள்ளக் கிடக்கை, பிரார்த்தனை, மனப் பக்குவம், இறைநிலை இவற்றைப் பொறுத்தே அமைகின்றது. ஜோதி எரிகின்ற பாங்கைப் பொறுத்து, காரிய சித்தியின் பலாபலன்களைக் கணிக்கின்ற தீப ஜோதிட கணித முறை ஒன்றும் உண்டு.. ஜோதியைப் பார்த்தே அருள்வாக்கைக் கூறும் பெரியோர்கள் இன்றும் உண்டு. ஏனெனில் இந்தவிதத் ஜோதியில் தான் பலவித தேவதைகளும், தெய்வ மூர்த்திகளுடன் பித்ரு தேவர்களும் வந்து ஆவாஹனம் ஆகி அவரவர்க்குரித்தான காரிய சித்தியையும், தோஷ நிவர்த்தியையும் சூட்சுமமாய் அளிக்கின்றனர்.

லிங்கத்தின் மேல்படும் சூரிய கிரணங்கள்

குழந்தை பாக்யம் தரவல்ல செட்டிக்குள சிவாலய பாஸ்கர பூஜை, இசைத் துறையோர் வளம் பெற அருளும் செட்டிகுள சூரிய பூஜை.. லிங்கத்தின் மேல் படுகின்ற சூரிய கிரணங்களே, சூரிய பகவான் தன் ஆத்ம் கிரண புஷ்பமாக ஈஸ்வரனுக்குச் செய்கின்ற ஸ்ரீபாஸ்கர பூஜையாகும். லிங்கத்தின் திருமேனியின் மேல் பட்டு பிரதிபலிக்கின்ற சூரிய கிரணங்களுக்கு அற்புதமான நோய் தீர்க்கும் சக்திகள் உண்டு. சாதாரணக் கண்களால் பார்க்க இயலாத சூரிய கிரணங்கள் லிங்கத் திருமேனியின் மேல் பட்டு பிரதிபலிக்கின்ற போது மகத்தான இறை சக்தியைப் பெற்று நமக்குத் தெய்வத் திருவருளை ஊட்டுகின்றன. லட்சக்கணக்கான ஆலயங்கள் பொலிவுடன் தமிழ்நாட்டில் புனிதப் பேரருளை நமக்கு வழங்கக் காத்திருக்க, இவற்றில் ஒரு சில ஆலயங்களில் மட்டும் தான் சூரியனுடைய கதிர்கள் ஆண்டில் சில நாட்களில் மூல மூர்த்தியின் மேல் தோய்கின்றன. இது விஞ்ஞானத்தின் எல்லைக்கும் அப்பாற்றபட்ட மெய்ங்ஞான அற்புதமாகும். எத்துணையோ கோடானு கோடி யுகங்களாக, ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற இத் தெய்வத் திருநிகழ்ச்சியின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இறைவனால் படைக்கப்பட்ட விஞ்ஞானமானது மெய்ங்ஞானத்தின் ஒரு கூறாக விளங்குகின்றது என்பதேயாகும்.

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சிவத்தலம்
செட்டிக்குளம்

இவ்வகையில் சூரிய கிரணங்கள் மூலஸ்தான மூர்த்தியின் மேல்படுகின்ற சில அபூர்வமான தலங்களைப் பற்றி நாம் நன்கு எடுத்துரைத்து வந்துள்ளோம். சேலம் அருகே ஏத்தாப்பூர் ஆலயம், சென்னை குன்றத்தூர் ஆலயம், கும்பகோணம் அருகே திருச்சேறை, மாயூரம் அருகே வைத்தீஸ்வரன் கோவில், விழுப்புரம் அருகே பனங்காட்டூர், அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம், திருச்சி மலைக்கோட்டை இவ்வாறாக எத்தனையோ ஆலயங்களில், நிகழும் ஸ்ரீபாஸ்கர பூஜையின் புனித தத்துவத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம்.
திருச்சி அருகே செட்டிகுளத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 19, 20, 21 தேதிகளில் மூலவராம் ஸ்ரீஏகாம்பர லிங்க மூர்த்தியின் மீதும், அம்பிகையாம் ஸ்ரீகாமாட்சி அம்மனின் திருஉருவத்தின் மீதும் சூரிய கிரணங்கள் படுகின்றன.  காலப்போக்கில் எத்தனையோ தெருக்களின் அமைப்பு மாறுபட்டு உயர்ந்த கட்டிடங்கள் எழும்பி இருப்பினும், மூல மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் படுகின்ற தெய்வீக  அற்புதமானது பல ஆண்டுகளாக ஏன், யுகங்களாகவோ நிகழ்ந்து வருகிறது. இதனை அற்புதம் என்று சொல்வதை விட ஸ்ரீசூரியபகவானே நேரில் வந்து ஈஸ்வர மூர்த்திக்குச் செய்கின்ற பூஜை என்று சொல்வதே பொருத்தமானதாகும். ஏனென்றால் தேவாதி தேவ மூர்த்திகள் கூட இறைப் பரம்பொருளை நிர்க்குண உபாசனை எனப்படும் உருவமற்ற வழிபாட்டை உய்த்துணர வைக்கின்ற லிங்க மூர்த்திகளின் பூஜையை மேற்கொண்டு அதன் பலாபலன்களை ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்பதே புராணந்தொட்டு நாம் அறிகின்ற தெய்வ சத்தியமான உண்மையாகும். எல்லா இடத்திலும் சூரியகிரணங்கள் ஒரே மாதிரியில் தோய்வது கிடையாது. மேலும், ஒவ்வொரு ஆலயத்திலும் சூரிய பகவானின் கதிர்கள் மூலமுர்த்தியின் மேல் தோய்வதற்கான பல தெய்வீகக் காரண காரியங்களும் உண்டு. இவையெல்லாம் எத்தனையோ யுகங்களில் ஏற்பட்ட புராண வைபவங்கள் ஆகும். கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம் மட்டுமல்லாது கலியுகத்திலும் இத்தகைய பாஸ்கர பூஜை நிகழ்வது நாம் பெற்ற பெரும் பாக்கியமே!
செட்டிகுளத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் லிங்க மூர்த்தியின் மீதும் அம்பிகையாம் ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதும் மேற்கண்ட பங்குனி 19, 20, 21 தேதிகளில் ஆண்டு தோறும் தோய்கின்ற சூரிய கிரணங்களுக்குரிய மகத்தான தெய்வீகச் சக்தியைப் பற்றி சித்புருஷர்களின் கிரந்தங்கள் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. செட்டிகுளத்தின் மிகவும் விசேஷமான அம்சம் என்னவென்றால் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்ற லிங்க மூர்த்திக்கு எதிரே குன்று தோறாடும் குமரனாக ஸ்ரீமுருகப் பெருமான் கையில் செங்கரும்பு ஏந்தித் தந்தையைத் தரிசித்த வண்ணம் நமக்கும் அருள்பாலிக்கின்றார். முருகப் பெருமானின் திருமேனியின் மீதும் கூட ஆண்டு தோறும் மாசி மாதம் 19, 20, 21 தேதிகளில் சூரிய கிரணங்கள் படுகின்றன என்றால் செட்டிக்குளத்தின் மகிமையை எவரால் எட்டிப் பிடிக்க முடியும்?
தொட்டதையெல்லாம் துலங்க வைக்கும் செட்டிகுளப் பெருமானின் மகிமையே மகிமை! இவ்வாறாக சூரிய கிரணங்கள் உறைந்து பாஸ்கர வழிபாடு நிகழ்கின்ற ஆலயங்களின் விசேஷ தெய்வீக சக்திகள் எல்லாம் அந்தந்த ஆலயத்தின் எப்போதும் குடியிருக்கின்ற, வலம் வருகின்ற சித்புருஷர்களின் மகரிஷிகளின் மேன்மை, அங்கே விளங்குகின்ற மூலிகைகளின் மகத்தான சக்தி, தீர்த்தங்களின் இறை அருட்பாங்கு, ஸ்தல விருட்சத்தின் உத்தம தெய்வீக சக்திகள் போன்றவற்றைப் பொறுத்து அந்தந்த சூரிய வழிபாட்டின் பலாபலன்கள் வேறுபடுகின்றன.. இவ்வகையிலே செட்டிகுளத்தில் ஆண்டு தோறும் பங்குனியின் மூன்று நாட்களிலும் ஸ்வாமியின் மீதும், அம்பிகையின் மீதும் தோய்ந்து பிரதிபலித்து வருகின்ற கிரணங்களை நாம் தரிசிக்கின்ற, காண்கின்ற, நம்முடைய உடலில் படுகின்ற பாக்கியத்தைப் பெறுவோமானால், அதற்குரிய சில விசேஷ தெய்வீகச் சக்திகளையும் நாம் பெறுகின்றோம்.

காரணம் இக்கோயிலின் திருமண்ணிலே தோன்றுகின்ற “குல்சபந்துருணி” என்ற மூலிகையானது பெறுதற்கரிய மூலிகையின் சக்தியாகும். மூலிகை என்றால் கீரை போல உடனே பறித்து எடுத்து வந்து, அரிஷ்டமாகவோ, லேகியமாகவோ, பஸ்மமாகவோ செய்து பயன்படுத்துதல் என்று பொருளல்ல. ஒவ்வொரு மூலிகைச் செடிக்கும் காப்பு மந்திரக் கட்டுகள் உண்டு. எந்த மூலிகையையும் வளர்பிறையோ, தேய்பிறையிலோ எந்தத் திதியில், எந்த நட்சத்திரத்தில், எந்த ஹோரை நேரத்தில் பறித்திடல் வேண்டும் என்ற முறைகளும் உண்டு. இதை முறையாகக் கடைபிடித்தால்தான் அந்த மூலிகைச் செடியும் கண்ணுக்குத் தென்படும் என்பது மட்டுமல்லாமல் அதனுடைய பலாபலன்களும் பரிபூரணமாக நமக்கு வந்து சேரும்.
கொல்லி மலைப் பகுதிகளில் சுமார் 10 கி.மீ கீழ் அடிவாரத்தில் அமைந்துள்ள கோரக்கர் குகைக்கு அருகே நேத்ரபுஷ்பம் என்ற ஓர் அருமையான மூலிகைச் செடி இன்றும் காணப்படுகின்றது. இந்த மூலிகைச் செடியின் சாறை உரிய முறையில் பதனப்படுத்தி சூரியோதய நேரத்தில் காடராக்ட் நோய் உள்ளவர்க்கு கண்களில் இட்டு/கட்டி வந்தால் காடராக்ட் நோய் அறவே மறைந்து விடும். ஆனால் இந்த நேத்ர புஷ்ப மூலிகையைப் பறிப்பதற்கான கால வரையறைகளும் உண்டு. இதனைத் தக்க சித்த குருமார்களின் மூலமாகப் பெற்று அறிந்திட வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு தெய்வீக ரகசியத்தையும் எளிமையாகத் தந்து விட்டால் அதை வைத்து வியாபாரம் செய்து செல்வம் சேர்க்கின்ற சுயநலமான அவலம் நிறைந்த புத்திதான் பலரிடம் காணப்படுகின்றது. சித்த வைத்தியம் என்பது மக்களுக்கு இலவசமாகச் செய்ய வேண்டிய அரிய இறைப் பணிகளில் ஒன்றாக விளங்குகிறது.
தவிர மூலிகையை வைத்துக் கொண்டு பிழைப்பது, பெரும் செல்வம் சேர்ப்பது என்ற குறுகிய நோக்கம் தெய்வச் சாபத்திற்குத்தான் வழிவகுக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குல்சபந்துருணி என்ற இந்த அரிய மூலிகையானது சிசிர ருதுக் காலத்தில் தான் விளைகின்ற ஒன்றாகும். இதற்கு பிருத்வி பூத சக்திகள், அதாவது பிருத்வி பூதம் என்றால் நமது சுவாசத்தை இடகலை, பிங்களை, சுழுமுனை என்று மூன்று வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள், இரண்டு நாசிகளிலும் ஓடுகின்ற இந்த மூன்று வகை சுவாசங்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு. நம்முடைய நாசியின் இரு துவாரங்களிலும், ஒவ்வொரு நாசிப் பகுதியிலும், பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாசம் என ஐந்து விதமான பூத சக்தி முடிச்சுகள் உள்ளன. அதாவது மூச்சின் வலது பக்கத்திலுள்ள ஐந்து முடிச்சுகளின் வழியே நாம் சுவாசத்தை செலுத்தப் பழகிக் கொண்டோமேயானால் பலவிதமான சித்திகளை எளிதில் பெற முடியும்.
இதைத்தான் யோகிகளும் சுவாச யோக இலக்கணம் என்று கூறுவார்கள். குல்சபந்துருணி என்ற அந்த சூட்சுமமமான மூலிகையை தரிசிக்கின்ற பாக்கியத்தைப் பெற வேண்டுமானால் பரிபூர்ணமான குரு கடாட்சத்தைப் பெற்று இருக்க வேண்டும். சுவாச யோகத்தில் நிலை பெறுகின்ற யோகியாகத் திகழ வேண்டும். இதெல்லாம் நம்மால் முடியுமா என்று தோன்றுகின்றதல்லவா? இவற்றை நம்மால் கடைபிடிக்க இயலாவிட்டாலும் இத்தகைய சக்திகளைப் பெற்று தருகின்ற ஸ்ரீஏகாம்பர லிங்கத்தின் மேல் பட்டு பிரதிபலிக்கின்ற சூரியக் கதிர்களை பங்குனி மாதத்தின் மேற்கண்ட மூன்று தினங்களிலும் தரிசித்து நம் உடலில் படுகின்ற பாக்கியத்தையாவது எளிதில் பெறலாம் அல்லவா? வடை சுடத் தெரியாவிட்டாலும் செய்து வைத்த வடையைச் சுவைப்பதும் இறையருளால் ஒரு பாக்கியம் தானே!!
குழந்தை பாக்ய ஜீவ அணுவிருத்தி : குல்சபந்துருணி என்ற மூலிகைக்குரிய, விசேஷமான தன்மை என்னவென்றால் இதற்கு ஜீவ அணுக்களை விருத்தி செய்கின்ற, வளரச் செய்கின்ற பாங்கு இதற்கு நிறைய உண்டு. காரணம், இக்கோயிலின் திருமண் பரப்பானது அதி அற்புத பிருத்வி சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தின் மகத்துவமோ சொல்லில் அடங்காது. குல்சபந்துருணி மூலிகையின் ஜீவ அணுவிருத்தி சக்தியானது மேற்கண்ட சூரிய கிரணங்கள் ஸ்வாமியின்/அம்பிகையின் மேல்படுகின்ற நாட்களில், வாயுப் பரிமாணமாக வெளிவந்து, சூரிய கிரணங்களில் கலந்து லிங்கத்தின் மேனியைத் தழுவி அம்பிகையின் திருமேனியிலும் தோய்த்து பிரதிபலித்து, அன்று அங்கு இவ்வரிய காட்சியைத் தரிசிக்கின்ற பாக்கியத்தைப் பெற்றோருக்கு, அரும் பெரும் தெய்வீகத் திருச்சக்தியாக குல்சபந்துருணி மூலிகை சக்தி கிட்டுகின்றது.
இது மட்டுமல்லாது இந்த குல்சபந்துருணி மூலிகையின் தெய்வீகச் சக்திகள் பாஸ்கர கிரணங்கள் பரிணமித்து இக்கோயில் திருமண்ணிற்குரிய பிருத்வி சக்தியுடன் சேர்ந்து ஆண்டு முழுவதும் இங்கு நிரவி இருப்பதால் இக்கோயிலில் அரிய இறைத் திருப்பணிகளைச் செய்கின்ற திருவாய்ப்பைப் பெறுகின்றோர்க்கெல்லாம் இந்த சக்தி தேகத்தில் சேர்கின்றது.. ஜீவ அணுக்களை விருத்தி செய்கின்ற சக்தி இந்த மூலிகைக்கு உண்டு என்பதால் எவ்வாறு ஆயுர்வேத மருத்துவ முறையில் அரிஷ்டமோ, கஷாயமோ, குறிப்பிட்ட பக்குவத்தில் செய்யப்படுகின்றதோ அதைப் போல “குல்சபந்துருணி” மூலிகை பந்தனா சக்திகள் யாவும் சூரியக் கிரண ஒளிகளில் பல சித்தர்களால் அரும்பெரும் மருந்து சக்தியாக உருவாக்கப்படுகின்றது.
சூரியக் கிரணங்களில் கலந்து இறைத் திருமேனிகளை சார்ந்து இது பிரதிபலித்து வருகின்ற பொழுது மேற்கண்ட மூன்று தினங்களிலும் இவ்வரிய காட்சியைக் காணுகின்ற பாக்கியம் பெற்றோர்களுக்கெல்லாம் ஜீவ சக்தியாக மலர்ந்து அருள்பாலிக்கின்றது. இன்றைக்கும் பல குடும்பங்களில் குழந்தைப் பிராப்தம் இல்லாமல் பல இல்லறப் பெண்கள் ஏங்குகின்றனர். வேதனைப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் அமைவதோ, அமையாததோ அவரவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மவினைகளின் பாங்கே என்றாலும் அதற்குரிய மருத்துவ முறைகளையும் மணி, மந்திர, ஔஷத வழிமுறைகளையும் மனித முயற்சியாக நிச்சயமாகக் கடைபிடித்தல் வேண்டும்.
ஜீவ அணுக் குறைவினால் பல தம்பதியருக்குக் குழந்தைப் பேறு கிட்டுவதில்லை. இத்தகையோர் செட்டிகுளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் மேற்கண்ட பங்குனி 19, 20, 21 ஆகிய மூன்று தேதிகளிலும் இவ்வாலயத்தில் மூலமூர்த்திகளின் மேல் தோய்கின்ற சூரிய கிரணங்களைத் தரிசித்து வழிபட்டு சூரியகிரகத்திற்கு உரித்தான கோதுமையினால் ஆன உணவுப் பண்டங்களையும் ஆரஞ்சு வர்ண ஆடைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். இந்த தான, தர்மங்களின் சக்தியே நம்முடைய தேவமூர்த்திகளாக விளங்கும் மூதாதையர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என்ற தெய்வீக உணர்வுடன் ஆண்டு தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வருதல் சிறப்புடையதாகும்.
 ஜீவ அணுக்கள் விருத்தி என்பது சந்தான பாக்கியத்திற்கு மட்டுமல்லாது நல்ல ஆரோக்கியத்திற்கும், தீர்க்கமான ஆயுளைப் பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது. கலியுகத்தில் நாம் உண்கின்ற உணவு பலவிதமான இராசயன மாறுதல்களுக்கு, விளைவுகளுக்கு உட்பட்டு வருவதால் நம்முடைய பெரியோர்களுக்குக் கிட்டியதைப் போல சத்தான உணவு நமக்குக் கிட்டுவது கிடையாது. என்னதான் டப்பாவில் அடைத்து வருகின்ற வைட்டமின்கள் நிறைந்த சத்துப் பொருளானாலும், டானிக் ஆனாலும் அதிலும் இரசாயன விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகையில் நம் உடலானது கலியுகத்தில் பெருகி வருகின்ற நோய்களை எதிர்த்து ஆரோக்கியத்துடன் உடலைத் தற்காத்துக் கொள்வதற்கான எதிர்ப்பு சக்தியையோ நோய் எதிர்ப்புச் சக்தியையோ முழுமையாகப் பெறவில்லை.
இதற்காகத்தான் தினந்தோறும் துளசி, வில்வம், அருகம்புல், வல்லாரை, பொன்னாங்கண்ணி, புதினா, கருவேப்பிலை போன்ற மூலிகைக் கீரைகளில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டு வந்தால் தான் நம் உடலில் இயற்கையாகக் கலக்கின்ற மூலிகைச் சக்தி மூலமாகத்தான் நம்மால் எத்தகைய நோய்களையும் எதிர்த்து உடலைக் காக்கின்ற நல்சக்தியைப் பெற இயலும். எனவே, குழந்தை பாக்கியம் உள்ளோரும் கூட ஜீவ அணுக்களை ஆரோக்கியப் பராமரிப்பின் மூலமாக திடகாத்திரமான உள்ளத்தையும் ஆரோக்கியமான உடலையும் தீர்க்க ஆயுளையும் பெறுவதுடன், இல்லறப் பெண்மணிகள் மிகவும் போற்றுகின்ற தீர்க்க சுமங்கலித்துவத்தைப் பெறுவதற்கும் செட்டிகுள ஸ்ரீஏகாம்பர ஆலய சூரிய வழிபாடு பெரிதும் உதவுகின்றது. மேலும், கர்ப்பமாய் இருக்கின்ற பெண்மணிகள் இக்கோயிலை அடிக்கடி அடிப்பிரதட்சிணம் செய்து வருவதால் இக்கோயிலில் பங்குனியில் உதித்து எப்போதும் நிரவியிருக்கும் குல்சபந்துருணி மூலிகா சக்தியினால் கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு நல்ல இறையருளும் தீர்க்கச்சக்தியும் கிட்டுகின்றது...
அபூர்வ இசைத் தூண்கள்!
மேலும் இக்கோயிலில் உள்ள இசைத்தூண்கள் பலவிதமான ஸ்வர தொனிகளை எழுப்புகின்ற சக்தியைப் பெற்றுள்ளன. ஆலயத்தில் உள்ள இசைத் தூண்கள் என்றாலே நம்முடைய உடனடியான பழக்கம் என்னவென்றால் அவற்றைத் தட்டிப் பார்ப்பது ஆகும். இவ்வாறு செய்தல் கூடாது. ஏனென்றால், இசைத் தூண்கள் இருக்கின்ற ஆலயங்கள் அபூர்வமாக ஒரு சிலவே, மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், செட்டிகுளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம் போன்று ஒரு சில ஆலயங்களில் தான் இனிய நாதத்தை எழுப்பக் கூடிய ஸ்வரத் தூண்கள் அமைந்துள்ளன. இவ்விதமான இசைத் தூண்களைத் தட்டவும் கூடாது. ஆனால் அதில் இனிய ஸ்வர நாதங்கள் எழும்புகின்றது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
இதற்காகத்தான் அக்காலத்தில் சந்தனக் குச்சி, கீழே விழுந்து கிடக்கும் வில்வமரக் குச்சி, அரசு ஆல சமித்துக் குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு தான் இசைத் தூண்களைத் தட்டிப் பார்க்கும் நற்பழக்கத்தை வைத்திருந்தார்கள். ஆனால் “டப்டப்“ என்று இன்றைக்குப் பலரும் இசைத் தூண்களைத் தட்டிச் செல்வதால், அதிலுள்ள இசைக் கந்தர்வ தேவதைகள் வேதனையுற்று வெளிக்கிளம்பி விடுகின்றன.. எனவே, மேற்கண்ட தெய்வீகச் சக்திகள், நிறைந்த, பொருட்களில் தான் இசைத்தூண்களைத் தட்டிப் பார்க்க வேண்டுமே தவிர, முட்டியால் தட்டி, ஓங்கி அடித்துப் பார்ப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுதல் வேண்டாம். இது இசை தேவதைகளின் சாபத்தையே பெற்றுத் தரும்.
இக்கோயிலின் நடுமண்டபத்தில் இருமருங்கிலும் உள்ள இசைத் தூண்கள் பலவிதமான ஸ்வரங்களை எழும்பும் தன்மை உள்ளவை. நாம் மொத்தமாக ஏழு ஸ்வரங்கள் தாம் உள்ளன., என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஏழுக்கும் அப்பாற்பட்ட எண்ணற்ற ஸ்வரநாதங்கள் கந்தர்வ லோகத்திலிருந்து இன்னமும் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. கந்தர்வ லோகத்திலிருந்து வருகின்ற, பக்தி நிறைந்த கந்தர்வர்களால் போற்றி வழிபடப்படுகின்ற இந்த இசைத் தூண்கள் சில ஆலயங்களில் தான் அமைந்துள்ளன. இசைத் துறையில் பேரும் புகழும் கீர்த்தியும் தன் ஜீவிதமாகக் கொண்டிருப்பவர்களும் இசைக்கெனத் தம்மை அர்ப்பணித்திருப்போரும் திருச்சி அருகே செட்டிகுளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து இந்த இசைத் தூண்களைப் பன்னீரால் நன்கு கழுவி, தாமே அரைத்தச் சந்தனம், மஞ்சள், குங்குமம், இட்டு வலம் வந்து வணங்குதல் வேண்டும். பஞ்சமி திதியிலும் ஸ்வாதி நட்சத்திர நாளிலும் இந்த இசைத் தூண்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வது சிறப்புடையதாகும்.
ஜோதிடத்தைப் போலவே இறையருளால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள பெரும் பொக்கிஷமான இசையை பேரம் பேசி விற்று செல்வத்தைச் சேர்க்க, எண்ணுதல் கூடாது. மேலும் கச்சேரிகளை மேற்கொள்கின்றபோது இறைப் பாடல்களைத் தான் துதிக்க வேண்டுமே தவிர, முறையற்ற, காமத்தையும் உணர்ச்சிகளையும் தூண்டி விடக் கூடிய வகையில் பயனற்ற பாடல்களைப் பாடுதல் பெரும் சாபமுடையதாகும்.. இசையை அளித்தவன் இறைவனே! எனவே இந்த இன்னிசையில் இறைவன் நாமம் தான் ஒலிக்கப்பட வேண்டுமே தவிர முறையற்ற வார்த்தைகளுக்கு அங்கு இடமேது! மேலும் இசை கொண்டு பயனற்ற வசைபாடும் வகையில் பெருஞ்செல்வம் சேர்த்தோர் ஏதேனும் பிராயச்சித்தம் தேடியாக வேண்டுமல்லவா?
அவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து தங்களால் ஆன இயன்ற உடலுழைப்பாக  சரீர சேவையாக இறைத் திருப்பணிகளையும் செய்து இவ்வாறு சேர்க்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு இவ்வாலயத்தில் பலவித இறைத் திருப்பணிகளையும் ஏழைகளுக்கு தான, தருமங்களைச் செய்து வருவார்களேயானால் இசையைத் தவறான முறையில் பயன்படுத்திச் செல்வம் சேர்த்ததற்கான பாவங்களிலிருந்து விடுபட தக்க பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம். எனவே, இக்கோயில் திருமண்ணிற்குரிய அரிய பிருத்வி சக்திகளும் குல்சபந்துருணி மூலிகையும் ஜீவ அணுவிருத்தி சக்தியும் இசைத் தூண்களிலிருந்து எப்போதும் எழும்புகின்ற ஸ்வர நாதக்கதிர்களும் நன்கு இணைந்து ஜீவ விருத்தி பரிமாணக் கதிர்களை ஆலயமெங்கும் பரப்புகின்றன.
குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிரிந்து வாழும் தம்பதியர்க்கும், ஏனையோர்க்கும் நல்ஆரோக்கியத்தையும் நல்ஆயுளையும் தருகின்ற வகையில் பங்குனி மாதத்தில் வருகின்ற பாஸ்கர பூஜை வழிபாட்டு தினங்களை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு எல்லாம் வல்ல செட்டிகுளம் ஸ்ரீகாமாட்சி சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் பெருமானின் திருவருளை உய்த்திட வேண்டுகின்றோம்.

சிறப்பான வழிபாடுகள்

பிரமாதி வருடத்திற்கான சிறப்பான வழிபாடுகள்
பிரமாதி வருடமானது எத்தனையோ முறை வந்து சென்றிருக்கின்றது. 60 தமிழ் வருடங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாகும். ஏனென்றால் எத்தனையோ புராண வைபவங்களும், தெய்வ அவதாரங்களும் இறைவனுடைய லீலைகளும் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் நிகழ்ந்துள்ளன. எவ்வாறு பகுதான்ய ஆண்டில்தான் பெரும்பான்மையான ஸ்தல விருட்சங்கள் தோன்றி நமக்கு இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனவோ அதே போல் பிரமாதி வருடத்திற்கு உரிய தெய்வீகமான சிறப்பு அம்சங்களும் உண்டு.
பிரம்மம் என்றால் முதலானது என்றும் பொருள் உண்டு அல்லவா! இதனால் பிரம்ம ரூப ஆதி மூர்த்திகளான அதாவது எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்ற பரம்பொருளாம் கடவுளின் பல அம்சங்களும் பல ஆதி மூர்த்திகளாகத் தோன்றிய ஆண்டே பிரமாதி வருடமாகும். கடந்த பல எண்ணற்ற கோடானுகோடி யுகங்களில் பிரமாதி ஆண்டில் தான் பலவித அம்மன் தேவதைகளும், காவல் தெய்வங்களும், குலதெய்வ மூர்த்திகளும் தோன்றின. எனவே வர இருக்கின்ற பிரமாதி தமிழ் ஆண்டானது குல தெய்வ மூர்த்தி வழிபாடு, அம்மன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீஐயனார், எல்லை தேவதா மூர்த்திகள், காவல் தெய்வ மூர்த்திகள் போன்ற பலவிதமான ஆதி பிரம்ம மூர்த்திகளின் வழிபாட்டு ஆண்டாகச் சிறப்புடன் விளங்குகின்றது.
ஸ்ரீஐயனாரையோ, ஸ்ரீமுனீஸ்வரரையோ சாதாரண தேவமூர்த்திகள் தேவதைகள் என்று எண்ணிவிடாதீர்கள். எந்த இறைவனை துய்த்து உணர வேண்டி இப்பிறவியை எடுத்தோமோ அதனையே மறந்து சுயநலத்துடன் செல்வத்தைச் சேர்ப்பதற்காக மிகமிகக் குறுகிய எண்ணங்களுடன் வாழ்கின்ற இந்த மனித சமுதாயத்திற்கு ஒரு பாடத்தைப் புகட்டும் வண்ணம் தானே எல்லை தெய்வங்களாகவும், காவல் தெய்வ மூர்த்திகளாகவும் மனித மனத்திற்கேற்ப இறைவனே மனமுவந்து அவரவர் ஊர் எல்லையிலேயே வந்து அருள்பாலிக்கின்றான். சர்வேஸ்வரனுடைய இவ்வகையான அவதார மூர்த்திகளை நாம் முறையாக போற்றி வழிபடுகின்றோமோ?
உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள். சாலைகளில் செல்லும் வழியில் உள்ள கருப்பன், மாடன், கருப்பண்ண சுவாமி போன்ற மூர்த்திகளின் வழிபாட்டிற்காக, அனைவரும் வண்டியிலிருந்து இறங்கி வழிபட்டுச் செல்வதைக் காண்கின்றோம். இதன் பொருள் என்ன? பலவிதமான தெய்வ மூர்த்திகளின் வழிபாடு ஏற்பட்டது ஏன்? எங்கே சென்றாலும் நம்மை இறைவன் வழி நடத்தக் காத்திருக்கின்றான். இறைப் பரம்பொருளின் அருளால்தான் நம்முடைய ஒவ்வொரு கண் இமையின் அசைவும், விரல் அசைவும், கை அசைவும் ஏற்படுகின்றது என்பதை உணர்த்தும் முகமாகத்தான் எங்கு சென்றாலும் இறைவனின் அருள் வேண்டும் என்பதை உணர்விப்பதற்காகத்தான் ஆங்காங்கே வழித்துணை மூர்த்திகளாகப் பல வடிவங்களில் பரம்பொருளே நம்மைக் காத்தருள்கின்றார்.
இன்று பாரத பூமியெங்கும், மூலை முடுக்குகள் எல்லாம் பிள்ளையாராகவும், முனீஸ்வரராகவும், ஐயனாராகவும், ஆங்காங்கே இறைப் பரம்பொருளின் எல்லையில்லா அருள் தன்மையை உணர்த்துகின்ற தெய்வீகப் பாரம்பரியம் நம் பாரத நாட்டிற்கே உரித்தானது அல்லவா! எவ்வாறு சூரிய மூர்த்தியானவர் உலகெங்கும் பிரகாசித்து எவ்வித ஜீவ பேதம் கூட இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும், தாவரங்களானாலும் சரி, மனித குலமானாலும் சரி, நீர்வாழ் இன உயிரினங்களானாலும் சரி, எவ்விதப் பாகுபாடும் இன்றி அருள் பாலிக்கின்றாரோ அது போலத்தான் இறைவனின் திருக்குழந்தைகளாக விளங்குகின்ற நாம் அனைவரும் சாதி, மத, இன, குல பேதமின்றி நம் அம்மை அப்பனாக விளங்குகின்ற ஈஸ்வரனைப் பலவிதமான வடிவங்களில் கண்டு, போற்றி, தரிசித்து மகிழ்கின்றோம்.
பலவித தெய்வ வழிபாடு ஏற்படுவதன் காரணமே மனிதனுடைய ஆழ்ந்த நம்பிக்கை இன்மைதான். இறைவனுக்கு அடுத்ததாக அம்மை அப்பனாக விளங்குகின்ற பெற்றோரும், சற்குருவும்தான் மனித சமுதாயத்தைப் பேணுபவர்களாக அமைந்தனர். ஆனால் நாளடைவில் பெரியோர்களை, பெற்றோர்களை, மஹான்களை, சற்குருமார்களை மதித்து நடக்கின்ற பண்பாடு குறைந்து விட்டமையால் தான் பல தெய்வமூர்த்திகளின் வழிபாடு மீண்டும் பல்கிப் பெருகியுள்ளது. இதுவும் நன்மைக்கே. ஏனென்றால் அக்காலத்தில் சற்குருவின் வார்த்தையை மதித்து நடந்து அவர் எதைச் செய்ய சொன்னாலும் சரி அதை உறுதியுடன் செய்வோம் என்ற நம்பிக்கை ஆழ்ந்து வேரூன்றி விளங்கிற்று. ஆனால் காலப்போக்கில் உபயோகமற்ற கல்வி முறைகளினாலும், தீய பழக்க வழக்கங்களினாலும், ஒழுக்கக் குறைவினாலும், மனித சமுதாயத்தின் சாந்தமான, பக்தி நிறைந்த மனத் தூணே, உள்ளமே ஆட்டம் கண்டு விட்டது.
தற்காலத்தில் இறை வழிபாடு, பல்கிப் பெருகுவதை நாம் நன்கு உணர முடிகின்றது. நாம் அடிக்கடி வலியுறுத்தி வருவதைப் போல வெறும் கடவுள் நம்பிக்கை மட்டும் போதாது. வயதாக, வயதாக அது வேரூன்றி ஆழ்ந்த நம்பிக்கையாக வளர்ந்தால் தான் எத்தகைய துன்பம் வந்தாலும் அதைச் சமாளித்து மனம் இறைநெறியில் நிலைத்து, திளைத்து நிற்கும், இதற்கு முந்தைய யுகங்களில் ஒரு தெய்வ வழிபாடு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அரும்பெரும் இறை இலக்கணம் தான் பரிணமித்து விளங்கிற்று, பல தெய்வ வழிபாட்டு முறையும் இறுதியில் நமக்கு எடுத்துரைப்பது இறைவன் ஒன்றே என்ற அருமறை இலக்கணந்தான்!
இதற்காகத்தான் ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீபரத்வாஜர் போன்ற எத்தனையோ மகரிஷிகளும், வடலூர் ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் போன்ற எண்ணற்ற மகான்களும், அவ்வப்போது கலியுகத்தில் தோன்றி நமக்கு நல்லுரை தந்து, நன்னெறி காட்டி, இறை நம்பிக்கையை வலுப்பெறச் செய்கின்றனர். ஏனென்றால், மகானானாலும் சரி, மகரிஷியானாலும் சரி கலியுகத்தில் எதையும் கண்ணால் கண்டால் தான் நம்பும் வழ்க்கத்தைத்தான் மனிதன் ஏற்படுத்திக் கொண்டு விட்டான். ஆனால் கலியுக நியதிகளுக்கு ஏற்ப இவையெல்லாம் நிகழும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த மகான்கள் தான் ஆதிபிரம்ம மூர்த்திகளாகப் பல தெய்வ மூர்த்திகளின் வழிபாட்டை நமக்கு தந்துள்ளனர். குறிப்பாக பிரம்மாதி ஆண்டில் இத்தகைய தெய்வ மூர்த்திகளின் வழிபாடு சிறந்து விளங்குவதற்கு நாம் ஆவன செய்தாக வேண்டும். ஏனென்றால் இன்றைக்கும் எத்தனையோ இலட்சக் கணக்கான கிராமங்களில் சுதை ரூபத்தில் பல இறை மூர்த்திகள் கவனிப்பாரற்று உள்ளனர்..
இராஜ கோபுரங்களுடன் விளங்கும் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் விளங்குகின்ற ஈஸ்வரனோ, பெருமாள் மூர்த்தியோ அல்லது சாதாரண குக்கிராமத்தில் வெய்யிலில், மழையையும் பொருட்படுத்தாது சுதை மூர்த்தியாக விளங்குகின்ற ஐயனார் சுவாமியும் ஒன்றே. இதனுள் பொழி(லி)ந்து கிடக்கின்ற இறை சாந்நித்யமும் ஒன்றே. இறைப் பரம்பெருளும் ஒன்றே. கல், உலோக விக்கரகங்களை விட சுதை மூர்த்திகள் தெய்வீக சக்தி மிகுந்து விளங்குகின்றன. இன்றைக்கும் இலட்சக்கணக்கான ஆலயங்களில் ஒரு சில ஆலயங்களில் மட்டும் தான் சுதை ரூபத்தில் நீங்கள் தெய்வ மூர்த்திகளைக் காண முடியும்.
சுயம்பு மூர்த்திகளைத் தவிர, அதாவது தானாக பூமியிலிருந்து இறைச் சக்தியால் வெளிப்பட்ட சுயம்பு மூர்த்திகளைத் தவிர சுதை மூர்த்திகள் தான் ஆதிகாலம் தொட்டே வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்துள்ளன. உலோகக் கல் விக்கரகங்கள் எல்லாம் பிற்பாடு ஏற்பட்டவை தாம்! பிரம்மாதி ஆண்டில் பல யுகங்களுக்கு முன் தோன்றிய மூர்த்திகள் தாம் ஸ்ரீஐயனார், ஸ்ரீமுனீஸ்வரர், எல்லை தெய்வ மூர்த்திகள், காவல் தெய்வ மூர்த்திகள், சாஸ்தா மூர்த்திகள், மாடன், கருப்பன், கருப்பண்ண சுவாமி, பேச்சியம்மன், மருத்தி, சூல மூர்த்திகள், வேல் மூர்த்திகள், காடன், பரமபத மூர்த்திகள், துவார பால மூர்த்திகள் – இவ்வாறாக எத்தனையோ தெய்வ மூர்த்திகள் பாரதமெங்கும் இலட்சக் கணக்கான கிராமங்களில் உண்டு..
பிரமாதி வருடம் பூக்கின்ற நாளான தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மேற்கண்ட முறையில் விளங்குகின்ற ஆதிபிரம்ம சுதை ரூப மூர்த்திகளுக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்தல் மிகவும் சிறப்புடையதாகும். இது மிகச் சிறந்த சமுதாய பூஜை.  சென்னையிலிருந்து திருச்சி செல்கின்ற சாலையில் வழியில் ஆயிரக்கணக்கான மூர்த்திகள் காணப்படுகின்றனர். இதே போன்று நாடெங்கும் உண்டு. இவையெல்லாம் இவ்வழியில் தினந்தோறும் பயணம் செல்கின்ற லட்சக்கணக்கான ஜீவன்களுக்கு அருள்பாலிக்கின்ற மூர்த்திகளாவர். உங்கள் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப உங்கள் கிராமத்திலோ, அல்லது உங்கள் சொந்த ஊரில் உள்ள சுதை மூர்த்திகளுக்கான வழிபாட்டை இந்த ஆண்டின் வைராக்ய வழிபாடாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு இம்மூர்த்திகளை முழுவதும் சிறப்புடன் வழிபட்டு வாருங்கள்.  சுதை ரூப மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்வது கிடையாது. சில இடங்களில் மட்டும் புனுகு சாற்றுவார்கள். எனவே அந்தந்தப் பகுதியில் உள்ள ஆலய வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப ஆதிபிரம்ம மூர்த்திகளாக விளங்குகின்ற மேற்கண்ட மூர்த்திகளுக்குப் புத்தாண்டு தினத்தன்று உரிய பூஜைகளை மேற்கொள்தல் வேண்டும்.
உதாரணமாக, பெரும்பாலும் மேடைகளை/ படிக்கட்டுகளை மட்டுமே கொண்டுள்ள இவற்றிற்கு வெள்ளைச் சுண்ணாம்பு மற்றும் காவி அடித்து இறை அம்சம் பொழி(லி)யச் செய்யுங்கள்.
ஏனென்றால் சுண்ணாம்பும், காவியும் அடித்தலால் பலவிதமான தீவினை சக்திகள் நீக்கப்படுகின்றன. இன்றைக்கும் பெரிய ஆலயங்களில் மதிற்சுவர்களில் சுண்ணாம்பும், காவியும் தீட்டப்பட்டிருக்கின்ற காட்சியே கண் நிறைந்து விளங்குவாதாகக் கண்டிருப்பீர்கள். காரணம் அப்பகுதியில் உள்ள தீயோழுக்கங்களினாலும், தீயோர்களினாலும், தீயோர்களின் சேர்க்கையினாலும், பரவெளியில் எழுப்பப்படுகின்ற பலவிதமான தீவினை சக்திகளை எல்லாம் இந்த காவி, சுண்ணாம்பு பட்டைகள் தம்முள் ஈர்த்து அவற்றை பஸ்பம் செய்து விடுகின்றன. எனவே தான் போகி அல்லது பொங்கல் அன்று சுண்ணாம்பு , காவி அடித்து வீட்டை மிளிரச் செய்கின்ற பண்பாடு இன்றைக்கும் நம்மிடையே உண்டு.
வெறும் சாலையோர தெய்வ மூர்த்திகள் என்று இம்மூர்த்திகளை ஒதுக்கி விடாதீர்கள். உங்களுடைய கலியுக வாழ்கையே பல விதமான பிரயாணங்களுக்குள் தான் நிகழ்ந்து வருகின்றது. எங்கு சென்றாலும் உங்களுக்கு இறையருள் கூட வேண்டும் அல்லவா! அதை உணரும்படியாக கலியுக நியதியாகத்தான் சாலையோர மூர்த்திகளாகப் பல்வேறு தெய்வ மூர்த்தி வழிபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று வேல், சரம் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்திடுக (தேங்காய் நார், சீயக்காய்ப் பொடி, எலுமிச்சை, புளி போன்றவற்றைப் பயன்படுத்திடலாம். ஆஸிட், சோப்பு போன்ற இரசாயனக் கலவை கூடவே கூடாது.) பலரும் ஒன்று கூடி சத்சங்க வழிபாடாக இதனை மேற்கொள்க. இத்தகைய சமுதாய பூஜைதான் சமுதாய ஒற்றுமைக்கும், நல்லிணத்திற்கும், மனித நேயத்திற்கும், அனைவரும் இறைநெறியில் பக்தியுடன் திளைப்பதற்கும் பெரிதும் உதவும் ஆதிமூல மூர்த்திகளின் வழிபாடுதான் பிரமாதி ஆண்டின் சிறப்பான, தலையாய வழிபாடாகும்.
பிரமாதி வருடப் புத்தாண்டு வழிபாடு

அறுபது தமிழ் ஆண்டுகளில் ஒவ்வொன்றும் தன்னுள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது... ஒருவருடைய வாழ்வில் 60 வருடங்கள் என்பது ஒரு ஆயுள் சக்கரமாக அமைகின்றது. இதில் பிரமாதி வருட ஆரமானது ஆதிமூலத் தெய்வ வழிபாட்டிற்கு உரியதாக அமைகிறது. இறைவன் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், பல விதமான தெய்வீகப் பண்புகளை இணைத்துள்ளான்.
பிறந்த குழந்தைப் பருவத்திலிருந்து, வயதான முதிய பருவம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் புரிந்து கொள்ள இயலாத ஒரு பிரம்மத் தத்துவத்தில் தான் இயங்குகிறது.. இதனால் காலத்தின் மஹிமையை உணராமல் நாம் எத்துணையோ மணித் துளிகளை ஏன் மாதங்களை, வருடங்களை ஏதேதோ கேளிக்கைகளிலும், உபயோகமற்ற விஷயங்களிலும், தீய, பழக்க வழக்கங்களிலும், ஆடம்பரத்திலும், செலவழித்து விட்டு, முதிய பருவத்தில் இறைச் சிந்தனையின்றி உழல்கின்றோம். இந்நிலைமாறி இப்போதே இளமையும், வலிவும், ஆரோக்யமும், வசதியும், செல்வமும் உள்ள போதே வாழ்க்கையை இறைப் பாதையில் செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
பகுதான்ய ஆண்டில் ஸ்தல விருட்ச வழிபாடு, தான்ய வழிபாடு போன்றவை எவ்விதம் முக்கியத்துவம் பெற்றனவோ, அது போல பிரமாதி ஆண்டில் ஆதிமூல தெய்வ மூர்த்திகளின் வழிபாடு மிகச் சிறப்புடையதாய் அமைகிறது. எனவே, பிரமாதி பிறக்கின்ற புத்தாண்டு நன்னாளில் இவ்வருடத்திற்குரிய சில சங்கல்ப முறைகளையும், சில விசேஷ பூஜை முறைகளையும், நாம் இங்கு காண்போம்.
வருடந்தோறும், தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்திட வேண்டிய அரிய பூஜை முறைகளை நாம் அளித்து வருகின்றோம். பல இல்லங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்பட்டுள்ளவற்றை அப்படியேப் படித்துப் பஞ்சாங்க பூஜையாக மலரச் செய்து கடைபிடிக்கின்றனர் என்பதையும் மகிழ்வுடன் அறிகின்றோம். புத்தாண்டு தினத்தன்று தீபாவளியைப் போல் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது நலம், பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலையில் செய்ய வேண்டிய பூஜைகளுக்கு அபரிமிதமான பலன்களும், புண்ணிய சக்தியும் உண்டு. ஆனால் விஞ்ஞான மயமான இன்றைய உலகில் இயந்திர கதியில் வாழப்பழகி விட்ட நமக்குக் காலையில் எங்கு நேரம் இருக்கின்றது.? என் செய்வது? இந்த விசேஷப் பண்டிகை நாட்களிலாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை செய்தால் தானே நாம் மறந்துவிட்டு, இழந்து நிற்கின்ற பல அரிய பூஜைகளின் பலாபலன்களை ஈடுசெய்ய ஓரளவேனும் இத்தகைய பிரம்ம முகூர்த்தப் பூஜை முறைகள் உதவும்.
இன்று உங்களுடைய பூஜை அறையையோ, அல்லது பூஜைக்குரிய பகுதியையோ நன்கு பசுஞ்சாணம் வைத்து மெழுகித் தூய்மை செய்திடுக. 21, 30, 48 என மூன்று என்ற எண்ணிக்கை வரும் வகையில் புள்ளிகளை வைத்துப் பச்சரிசி மாவினால் மாக்கோலம் இட்டிடுக! (மொக்கு மாவு எனப்படும் கல்பொடியால் கோலம் இடுதலால் எவ்விதப் பயனும் இல்லாமற் போவதோடு மட்டுமின்றி, பலவித சாபங்களே கிட்டும்) நாம் ஏற்கனவே பலமுறை வற்புறுத்தி வருவது போல மாக்கோலத்திற்குப் பலவித தெய்வீக சக்திகள் உண்டு. மேலும், மாக்கோலத்தில் உள்ள அரிசி மாவினை உண்டு மகிழும் எறும்பும் தன் பசியாறி நம்மை வாழ்த்தும் போது அவற்றின் ஆசிர்வாதத்தால் நமக்கு நல்ல வளமான வாழ்வும், தரித்திரம் அற்ற செழிப்பும் கிட்டும்.
ஏனெனில் தற்காலத்தில் பெரியோர்களையும், மஹான்களையும் உத்தம இறைநிலையுடன் கூடியோரை மதிக்கின்ற நிலை மறைந்து வருவதால், பண்பாடும் இல்லாமற போனதாலும், நாம் பல்வேறு முறைகளில் தான் ஆசீர்வாதங்களைப் பெறவேண்டிய நிலையிலுள்ளோம். இவ்வகையில் ஒரு சிறு எறும்பு உணவுண்டு அளிக்கும் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு எத்துணையோ நன்மைகள் கிட்டுகின்றன என்பதை மறவாதீர்!
ஒரு பசுவிற்கு நீங்கள் ஒரு வாழைப்பழம் அளித்தால் கூட அது உங்களை மகத்தான முறையில் ஆசீர்வாதம் அளிக்கின்றது என்பதை நினைவில் நிறுத்துங்கள் மேலும், புதன், வெள்ளி, சனி, சதுர்த்தசி, சதுர்த்தி மற்றும் ஹஸ்தம் போன்ற தினங்களில் நீங்கள் யானையை தரிசனம் செய்வதும், யானைக்கு வாழைப் பழமோ, உணவுப் பொருட்களோ, கவளச் சோற்றுருண்டைகளோ அளித்து அதன் ஆசியைப் பெறுதல் மிகவும் சிறப்புடையது என்பதையும் உணருங்கள். எப்பொழுதுமே சுழுமுனையில் சுவாசிக்கும் ஒவ்வொரு யானைக்கும் அற்புதமான பிராணாயாம சக்தி உண்டு..எதிர்வரும் துன்பங்களை உணரவல்லதே யானைப் பிறவியாகும்.
பக்தி நிறைந்த ஆசீர்வாதம் உடைய ஓர் அற்புதமான ஜோதிடரைக் காட்டிலும், எதிர்வரும் இன்ப, துன்பங்களை உணரும் சக்தியைக் கொண்டதே யானையாகும். எனவே, யானையின் ஆசீர்வாதத்தை வாரம் ஒரு முறையேனும் நாம் பெற்றால் தான் நமக்கு வரவுள்ள துன்பங்களை முன்னமேயுணர்ந்து அவற்றைக் களைகின்ற அல்லது எதிர்நோக்கும் ஆன்ம பலத்தைப் பெறலாம். யானையைக் காண முடியாதவர்கள், அல்லது குக்கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் யானையைக் காண இயலாதோர், என் செய்வது?
பச்சரிசி மாக்கோலமிட்டு எறும்புகளின் ஆசியைப் பெறலாம். கீரை, புல், பழங்களைத் தானமாக, ஆடு, மாடுகட்கு உணவாக அளித்து, அவற்றின் ஆசியைப் பெறுவதோடு மட்டுமின்றி, சதுர்த்தி, சதுர்த்தசித் தினங்களில் யானை இருக்கும் ஆலயங்களுக்கோ, மிருகக் காட்சி சாலைக்கோ சென்று யானைக்கு உணவளிக்கும் பெறும் பாக்கியத்தைத் தாமே உருவாக்கிக் கொள்ளுங்கள்.. அல்லது உங்கள் உறவினரோ, நண்பரோ அத்தகைய இடங்களுக்கருகில் இருந்தால் அவரிடம் முன்னரேயே பணத்தைக் கொடுத்து வைத்து இத்தர்மத்தைத் தொடர்ந்து செய்யுமாறும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக உலகில் ஒரு முறையில் ஏதேனும் ஒரு மூலையில் உங்கள் பெயரில் ஏதேனும் ஒரு தர்மகாரியம் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையை இனியேனு உருவாக்கிக் கொள்ளுங்கள். இதற்காகத்தான் மாதந்தோறும், பௌர்ணமியன்று அன்னதானமளிப்பது, எத்துணையோ ஆயிரமாயிரம் பலன்களையும், புண்ணிய சக்தியையும் அளிக்கிறது. அதுவும், திருஅண்ணாமலை, காஞ்சிபுரம், கும்பகோணம், சக்கரப்படித்துறை, மாயூரம் பூந்தோட்டம், அருகிலுள்ள திலதைப்பதி என்ற பித்ருத் தர்ப்பணத் தலம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள இடும்பாவனம், தஞ்சாவூர் அருகிலுள்ளத் திருச்சோற்றுத்துறை போன்ற புண்ணியத் தலங்களில் அன்னதானம் அளித்தலால், அன்னதானத்தின் மஹிமை பன்மடங்கு பெறுகுகிறது.
முதலில் உங்க்ளுடையப் புத்தாண்டுப் பூஜைக்குரித்தான பூஜைப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு தினத்தன்று நாமே சந்தனமும், மஞ்சளும் அரைத்தாக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சந்தனக் கல்லும், கட்டையும், கட்டாயம் பூஜையறையில் இருந்திட வேண்டும்.. ஏனெனில் நாம் பன்முறை வலியுறுத்தி வருவது போல் நம் மூதாதையரான நம் பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வந்து நமக்கு ஆசியளிக்கும் பொருட்டு விஜயம் செய்யும் போது, அவர்களுடைய ஜோதி மயமான சூட்சும சரீரமானது. தங்கக் கூடிய புனிதமான பொருட்களாக விளங்குபவைதான் சந்தனக் கல், சந்தனக் கட்டை, ருத்திராட்சம், வில்வம், துளசி, பூஜைமணி போன்றவையாம்.

அமாவாசை விளக்கங்கள்

ஒவ்வொரு அமாவாசைக்கும் தனிமகத்துவம் உண்டு. சூரிய, சந்திர கிரஹங்களின் சங்கமம் தானே அமாவாசை! இருட்டுத் தன்மையில் பல வகைகள் உண்டு. இயற்கையான இருளிலிருந்து செயற்கையான (Camera room) இருள் வரை எத்தனையோ வகைகள்! சித்புருஷர்களின் கிரந்தங்களில் இருளைப் பற்றிய அரிய விளக்கங்கள் காணப்படுகின்றன.. அம்பிகையானவள் ஈஸ்வரனுடைய திருக்கண்களைப் பொத்திய போது பிரபஞ்சமே இருளில் மூழ்கியதன்றோ! அந்த இருட்டிற்கும் பல சிறப்பம்சங்கள் கூடியுள்ளன.. நம் கண்களை நாமே மூடிக் கொண்டால் ஒருவிதமான இருட்டு ஏற்படுகின்றதல்லவா! சாதாரண முறையில் கண்களை மூடும் போது ஏற்படுகின்ற இருட்டிற்கும் உறக்க நிலையில் கண்களை மூடுகையில் அமைகின்ற இருட்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன!
வெயிலை கதவுகளைக் கொண்டு மறைப்பதனால் உண்டாகும் இருட்டும் உண்டு பொதுவாக இருளில் தான் பலவித தீயசக்திகள் உருவாகின்றன/ செயல்படுகின்றன என்பதை நாமறிவோம். எனவேதான், இருளிலும், நன்மை செய்யும் இருளென்றும், தீமை செய்யும் இருளென்றும், சமநிலைக் காரிருள் எனப் பலவகைகளைச் சித்தர்கள் பகுத்துள்ளனர்.. ஒரு பகுதியில் பகல் நேரத்தில், வெளிச்சத்தில் நிகழ்கின்ற (உயிரினச் செயகைகளின் விளைவைப் பொறுத்தே அன்றைய இரவின் தன்மை அமைகின்றது. இது நாளுக்குநாள் மாறுபடும் இருளின் தன்மையிலும் முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என்றும் சில வகைகளுண்டு. காலத்தை நிர்ணயிக்கின்ற ஸ்ரீகாலபைரவ மூர்த்திக்கு அர்த்த சாம பூஜையாக, இரவில் நடை சார்த்துகையில் கருமையான புனுகுப் பொட்டு இட்டு ஆலயத்தில் அந்நாளுக்குரிய பூஜையை நிறைவு செய்வதைப் பார்த்திருப்பீர்கள்! காலத்தை மூடித் திறக்கும் கவின்மிகு மூர்த்தி! இவ்வாறாக இருளைப் பற்றிய எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன..
ஆனால் இதில் முக்கியமானது என்னவெனில் இருளை நம் வாழ்க்கைக்கு எவ்வாறு தெய்வீகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதேயாம். இதற்கான இரவு நேர தியானங்களும், பூஜைகளும் உண்டு. ஆனால் யார் இதனைத் தற்காலத்தில் கடைபிடிக்கின்றார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். பலருக்கும் தாங்கள் மனித சமுதாயத்தின் ஓர் தெய்வீக அங்கமென்பதையும், தான் வாழும் இச்சமுதாயத் திருப்பணிகளுக்காகத் தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதையே மறந்து விடுகின்றார்கள். மனிதர்கள் பெரும்பான்மையான தவறுகளை, பாவங்களை இரவு நேரத்தில் தான் செய்து ஏகப்பட்ட கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றார்கள்! இதற்குப் பிராயச்சித்தமாக அமைவதே பிரம்ம முகூர்த்த (இரவு 3.00 முதல் 5.00 மணி) நேர பூஜைகளாகும். இரவிற் சேர்த்த தீவினைக் கர்மங்களுக்கு இரவு நேர பூஜை முறைகளில் தான் பொதுவாகப் பிராயச் சித்தத்தைப் பெற முடியும். அமாவாசை வழிபாட்டிற்குரிய சிறப்பான மூர்த்திகள் உண்டு. நாம் இருளில் செய்யும் மாபெரும் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தருவதும், அமாவாசை பூஜாபலன்களுள் ஒன்றாகும்.

ஆக்ஞா கணபதி அருள்

யோக சித்திகளைத் தரவல்ல கணபதி குண்டலினி யோக முறைகளில் இரு புருவங்களுக்கிடையே உள்ள சூட்சும யோகச் சக்கரத்திற்கு ஆக்ஞா சக்கரம் என்றும் கூறுவதுண்டு. பிள்ளையாரின் பெருவயிற்றில் எப்போதும் நிரஞ்சன யோகம் பூண்டு விளங்குபவரே ஸ்ரீஅகமர்ஷண மாமுனி! ஸ்ரீஆக்ஞா கணபதியை உபாசித்து அவர்தம் தரிசனத்தை ஆக்ஞா யோக சக்கர உருவில் பெற்றுத்தான் அவர் வலஞ்சுழிக் கைலாய கஜதந்தப் பகுதி வழியாக விநாயகரின் திரு உதரப் பெரும் லோகத்தை அடைந்தார்.
மாட்டு வண்டிகளில் சக்கர அச்சைப் பார்த்திருப்பீர்கள். மாட்டுப் பொங்கலன்று வண்டிகளுக்கு வண்ணப் பூச்சு இட்டு, வண்டிக்கான பூஜையில் (சக்கர) அச்சிற்குத் தான் முதலில் மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டுக் கணபதியைப் பிரார்த்தித்துத் தான் வாகன பூஜையும், நவராத்திரி ஆயுத, வாகன பூஜையையும் தொடங்குவார்கள். திரிபுர தகனப் புராண வைபவத்தில் ஈஸ்வரனின் தேர்ச் சக்கர அச்சு முறிந்து “அச்சது பொடி செய்த அதி தீரரே” ஸ்ரீஆக்ஞா கணபதி!
இதன் உட்பொருள் என்ன? ஸ்ரீஆக்ஞா கணபதி வலம்புரியாக துதிக்கையை வலப்புறம் திருப்பி அச்சைப் பதித்து நற்காரியத்தைத் தொடங்கி வைத்தார். இதனால் தான் வலம்புரி விநாயக மூர்த்தியானவர் நற்காரியத்திற்கு நல்வழி காட்டும் முதற் பூஜை மூல மூர்த்தியாகின்றார்.. இது மட்டுமல்லாது எத்தனையோ இல்லங்களில் மூதாதையர்கள் விட்டுச் சென்றுள்ள யந்திரங்கள், தெய்வப் படங்கள், சாளகிராம மூர்த்திகள், சிறு விக்ரஹங்கள், ருத்ராட்ச மணி, மாலைகள், விளக்குகள் போன்றவை இருக்கும். இவற்றிற்குத் தினந்தோறும் நைவேத்யம் காட்ட வேண்டும்.. ஊர்ப் பிரயாணம், நோய், மாத விலக்கு, தடைப்பட்டிருக்கும். பூஜைகளுக்குப் பிராயச்சித்தமாக ஸ்ரீஆக்ஞா கணபதிக்கு (திருவிடைமருதூர்) சூரிய, சந்திர மூர்த்திகள் சேரும் ஆக்ஞா திதியான அமாவாசையன்று கலவை சாதமான எலுமிச்சை, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் படைத்து அன்னதானமளித்திட நைவேத்ய தோஷங்கள் அகலும், ஸ்ரீஆக்ஞா கணபதியானவர் மன்னர் கால ஆட்சியில் பல அரசியலாட்சி மாறுதல்களினால், மருதூரில் பூஜை தடைப்பட்டபோது, ஸ்ரீஆக்ஞா கணபதியே சிவலிங்கப் பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தார். எனவே, அன்ன தோஷங்களையும் அகற்றி குழந்தைகளுக்கு வரும் பிரைமரி காம்பளக்ஸ், இழுப்பு நோய், நரம்பு/கபால வியாதிகளைத் தீர்த்தருள்பவரே ஸ்ரீஆக்ஞா கணபதி!

திருக்கச்சூர் கிரிவலம்

சித்தர்களின் நடமாட்டம் நிறைந்த தலங்களுள் ஒன்றாக விளங்குவதே சென்னை சிங்கப்பெருமாள் கோயில் தலமருகே உள்ள திருக்கச்சூர் சிவத்தலமாகும். மலைக் கோயில், தாழக் கோயில் என இரு சிவாலயங்களைக் கொண்ட அதிஅற்புதத் தலம். இங்குள்ள சிறு மலையானது சித்தர்களுக்குப் பேருவப்பான அருட்தலமாகும்.. பல யோகாத்ம அனுபூதிகளுக்கு உரித்தான உத்தமமான திருத்தலம், சஞ்சீவி மலை, திருஅண்ணாமலை, கொல்லி மலை, சதுரகிரி மலை போன்று மூலிகை சக்திகள் நிறைந்த அற்புதமான மலை!
சித்தர்களின் பதியன் சித்தர்கள் என்ற ஒரு பிரிவினர் இத்தகைய மலைத் தலங்களிலும், ஆலயத்தலங்களிலும், விருட்சங்களிலும், மூலிகைகளையும், மூலிகா சக்திகளையும் பதியினிட்டு ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவே பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மூலிகைகட்கும் அதிபதியாக விளங்குகின்றார். இவர்தம் அருமைச் சீடரான, பழநியில் ஜீவாலயங் கொண்டுள்ள ஸ்ரீபோகர் சித்தருடன், ஸ்ரீஅகஸ்திய சித்புருஷர் குறித்த திதிகளிலும், நட்சத்திரங்களிலும், சூட்சுமமாக கிரிவலம் வருகின்ற புனிதத் தலங்களுள் திருக்கச்சூர் மலையும் ஒன்றாகச் சிறப்புடன் விளங்குகின்றது. ஸ்ரீஅகஸ்தியர் மூலிகா சிகிச்சை இலக்கண தெய்வீக இரகசியங்களை இறைவனிடமே உபதேசமாகப் பெற்ற திருத்தலமே சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயமென நாம் நன்கு அறிவோம்! பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி மூலிகா ரகசியங்களையும் திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வர சிவபெருமானிடம் நேத்ர தீட்சையாகப் பெற்று, தேஜோமய, ஜோதிப் பிரகாச சித்புருஷராய் வலம் வந்த மலைத் தலங்களுள் திருக்கச்சூர் மலைக்கோயில் முதன்மை பெறுகின்றது.
எனவே, பௌர்ணமி செவ்வாய் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திர தினங்களிலும் இம்மலையை கிரிவலம் வருதலால் நோய் நிவாரணமும், நல்ஆரோக்யமும், மனசாந்தியும் கிட்டும்.. குறிப்பாக நோய் நிவாரணத்திற்குரிய மருந்துகளை உண்பதற்கான க்ஷிப்ர நட்சத்திர நாட்கள் உண்டு. அஸ்வினி, பூரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் க்ஷிப்ர நட்சத்திர நாட்களாக, மருந்துகளை உண்பதற்கேற்ற சிறந்த நாட்களாக விளங்குகின்றன.. எனவே, மேற்கண்ட மூன்று க்ஷீப்ர நட்சத்திர நாட்களில் ஜாதி, குல பேதமின்றி பழுத்த சுமங்கலி தம்பதிகட்குப் (80 வயது நிறைந்தவர்களாக இருப்பது சிறப்புடையது) பாத பூஜை செய்து அவர்களிடமிருந்து மருந்தை (மாத்திரைகள், டானிக்குகள் etc,,,) பெற்று இத்திருத்தலத்தின் உண்டியலில் தக்க காணிக்கைகளைச் செலுத்தி இறைவனை (ஸ்ரீமருந்தீஸ்வரர்) வேண்டி அனுமதியும், ஆசியும் பெற்று ஸ்ரீநந்தி எம்பெருமானிடம் ஒரு கடுகளவு எடுத்து (நிறைய எடுத்தல் கூடாது, கடுகளவுதான் எடுக்க தெய்வ அனுமதி உண்டு. இதற்கே மிகுந்த தெய்வீக சக்தியுண்டு.) மருந்து, திருமண்ணைத் தாங்கி திருக்கச்சூர் மலையை கிரிவலம் வந்து மீண்டும் வணங்கி இறைவனை வேண்டி மருந்து உட்கொள்வதைத் தொடரவேண்டும்.
இங்கு ஸ்ரீநந்தீஸ்வரரிடம் உள்ள ஸ்ரீபுட்குழிப் பூமண்ணானது மூலிகா சக்திகளும், பிருதிவி சக்திகளும் நிறைந்ததாக விளங்குகிறது.. நோய், நிவாரண தேவ மூர்த்திகளாக விளங்குகின்ற ஸ்ரீஅஸ்வினி தேவர்கள் நிகழ்த்துகின்ற ஸ்ரீதன்வந்திரி ஹோம குண்டத்தின் “பஸ்ம தண்டல” பூமியாக இப்பூட்குழிப் பூமண் விளங்குகின்றது. இதனருகே அமர்ந்து ஸ்ரீஅபிராமி அந்தாதி, விநாயகர் அகவல், ஸ்ரீஇந்திராக்ஷீ கவசம், ஸ்ரீகணபதிக்குரித்தான ருணஹரத் தோத்திரம் போன்ற நிவாரணத் துதிகளாய் ஓதி வருதலால் கொடிய நோய்கட்கும் நிவர்த்தி கிட்டும். குறிப்பாக வயிறு, குடல், கர்ப்பப்பை வியாதிகளுக்கு அற்புத நிவாரணந் தரவல்ல திருக்கோயில். இங்கு அவரவர் வசதிக்கேற்ப உழவாரத் திருப்பணிகளைச் செய்து வருவோர்க்கு இறையருளால் நோய் தீரும் நல்வழி நல்வரங்களாகக் கிட்டும்.
கோவிந்தா, கோவிந்தா என்பதை கிண்டல் செய்யாதீர்கள்!
உருவினும் பெரிதே உத்தம நாமம்! உத்தம இறைப் பெருவழிகளில் உருவ வடிவிலான விக்கிரஹத்தைக் காட்டிலும் இறைநாமத்திற்கு மாபெரும் சக்தி உண்டென அறிவுறுத்துகின்றார்கள். எனவேதான், உருவமற்ற இறைவழிபாடுதான் உத்தமமானது ஆகும். ஆனால் இக்கலியுகத்தில் இந்த உத்தம உயர்நிலையை உணர்வதோ, அடைவதோ எளிதில்லையே! எனவே தான், கணபதி, சிவன், பார்வதி, பெருமாள், லட்சுமி, முருகன், பைரவர் எனப் பல உருவங்களில் தெய்வத்தை வழிபட்டு எளிய உருவ, தீப, ஹோம, அர்ச்சனை ஆராதனை, அபிஷேக, ஜோதி வழிபாடுகள் மூலமாக ஒன்றே இறைவனென்பதை உணர்கின்றோம்.
கண்ணால் கண்டு நம்பி உணர்ந்து உய்வதை விட,  காதால் கேட்டு உய்த்து உணர்ந்தால் அதற்கு மகத்வம் அதிகம் தானே! எனவே தான், உருவத்தினுல் உயர்ந்தது உத்தம இறை நாமமென உரைத்தனர். ஒருமுறை ஸ்ரீதுர்வாசருக்கு அறுசுவை விருந்து படைத்து அவருடைய அரிய தெய்வீக உபதேச மொழிகளில் பெற்ற, (எளிய வாழ்க்கை வாழ்ந்த உத்தம) கோபியர்கள், திரும்பி வருகையில் யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டோடிட திகைத்த ஸ்ரீதுர்வாசரை அபயம் வேண்டி நின்றனர்.. வெறும் அருகம்புல்லை உண்டு வாழும் இந்த துர்வாசன் வழிபடும் கடவுள் மீது ஆணையெனக் கூறும் எளிய மந்திரத்தை, இறை நாமத்தை ஓதிட, ஆழ்ந்த நம்பிக்கையுடன் அதை கடைபிடித்து ஓதியே கோபியர்கள் நதி வெள்ளத்தைக் கடந்தனர்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள்..வயிறு நிறைய அறுசுவை உண்ட ஸ்ரீதுர்வாச மாமுனி கூறியதோ, “வெறும் அருகம்புல்லை உண்டு வாழும் இந்த துர்வாசன்....” என்னே முரண்பாடு! இதுவே மஹரிஷியின் லீலை! மஹான் தரும் சோதனை! ஸ்ரீதுர்வாசரிடமிருந்து, வெறும் காதுகளால் கேட்டு ஒரு சிறிய இறை நாம மந்திரத்தை நம்பி, கோபியர்கள் தங்கள் உத்தம பக்தியை நிலைநாட்டினர்... ஏன் இதனை மீண்டும் எடுத்துரைக்கின்றோம் என்றால் தற்காலத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் “கோவிந்த” நாமத்தின் மஹிமையை உணராது “நன்றாக நாமம் போட்டு விட்டான் கோவிந்தா, கோவிந்தா” என்று ஏளனமாக சொல் வழ்க்கில் பேசப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.. தயவு செய்து இந்தத் தவறான, இதயத்திற்கு வேதனையளிக்கும் சொல் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இவ்வாறு சொல்பவர்களையும் திருத்திட வேண்டும் தமிழகத்தில் இந்தத் தவறான் வழக்கு திறுத்தப்படுமாயின் இதுவே மிகச் சிறந்த தெய்வீகத் தொண்டுகளில் ஒன்றாக மலரும்!
“ராம, ராம” என்ற சிறிய ஈரெழுத்து நாமந்தானே ஸ்ரீவால்மீகியை நமக்குப் பெற்றுத் தந்ததும்.!

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்
சென்னை வியாசர்பாடியில் கரப்பாத்திர சித்தருடைய ஜீவாலயம் அமைந்துள்ளது பற்றிப் பலருக்கும் தெரியாது, பெரியவர் சிறுவனைப் பன்முறை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நிலவுகின்ற பரிபூரண சாந்த யோகத்தை உய்த்துணரச் செய்திருக்கின்றார். “அன்னதானம்.. செய்யறவங்க பல சித்தர்ங்களோட, ரிஷிங்களோட பரிபூரண ஆசீர்வாதத்தை வாங்கிகிட்டே இருந்தாத்தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் விடாம நல்ல முறைல தொடர்ந்து அன்னதானம் செய்யற பாக்யம் கெடைக்கும்பா! அதுவும் இந்த கரபாத்திர சித்தர்.. ஒரு பெரிய சித்புருஷர்... இவரோட ஆசீர்வாதம் கெடைச்சா எத்தனையோ லட்சம் பேருக்கு அன்னதானம் பண்ற நல்ல பாக்யமும் புண்ய சக்தியும் கெடைக்கும்.. மெற்றாஸ்ல ஏதோ ஒரு மூலைல அடக்கமா உக்காந்துகிட்டு உலகத்துக்கே புண்யத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கறதுக்கு இவரு காத்துகிட்டு இருக்காரு.. ம்....ம்..ம்.ம் எவ்வளவு பேரு எதிர்காலத்துல இதப் புரிஞ்சிக்கிட்டு இங்க வந்து அவரோட தரிசனத்தை வர்றப் போறங்களோ.... ரொம்ப பாக்யம் செஞ்சவங்களுக்குத்தான் இது கெடைக்கும்..!”
சிறுவன் கரபாத்திர சித்தருடைய ஜீவாலய லிங்கத்தைச் சுற்றி வந்து சாம்பிராணி தூபமிட்டு நிறைய அகல் விளக்குகளை ஏற்றினான்..
“இந்த மாதிரி பெரியவங்களோட ஜீவாலயத்தில் எவ்வளவுக்கெவ்வளவு சாம்பிராணி தூபம் போடறோமோ அந்த அளவுக்கு சாந்த சக்தியைப் பரப்பலாம்டா சமுதாயத்துக்கு! அதுவும் எவ்வளவு அகல் விளக்கு ஏத்தறோமோ அத்தனை ஜோதியிலும் அவங்க ஆவாஹனமாஹி ஜோதி மூலமா அவங்களோட தபோபலன் எல்லாத்தையும் ஆசியா, வரமா, கார்ய சித்தியா நமக்குத் தர்றாங்க!...”
அப்புறம் அங்கிருந்து திருவொற்றியூருக்கு ஒரு நடை.. அப்பப்பா எவ்வளவு தூரம்..! வெயிலோ... மழையோ... பனியோ.... எதுவும் பாராமல்... கால்களில் செருப்பின்றி.... கிழிந்த பெரிய அரை டிராயருடன்...! டிராயரை ஒரு கையால் பிடித்துக் கொண்டே சிறுவன் பெரியவர் பின்னால் ஓடுவான்.. அவர் நடந்தாலே விறுவிறு எக்ஸ்பிரஸ் நடைதான்..!
பல ஆண்டுகளுக்கு நிகழ்ந்தவை இவை...
அக்காலத்தில்... ! மக்கள் புனிதமான துறவியர்களையும், பெரியோர்களையும் நடமாடுந் தெய்வமாக விளங்கும் சித்புருஷர்களையும், ரிஷிகளையும் நன்கு போற்றி மதித்த காலமது! திருவொற்றியூரில்... அரும்பெரும் மஹானான பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் ஜீவாலய தரிசனம்! மிகவும் சக்தி வாய்ந்த இடம் இது! கழுத்து, நெஞ்சு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் பெற இங்கு அன்னதானம் செய்வது சிறப்பானது என்று பெரியவர் அடிக்கடி சொல்வார்...
 ஒரு நாள்.... அன்று பெரியவர் சற்று ப்ரீயாகவே இருந்தார்... சிறுவனுக்கே சற்று ஆச்சரியமாகவே இருந்தது.. ஏனென்றால் அவனை ஒரு நிமிடம் கூட உட்கார விடமாட்டார். ஏதேனும் வேலை கொடுத்துக் கொண்டே இருப்பவர் அன்று அவனைக் கண்டு கொள்ளவில்லை! அதற்காகச் சிறுவன் ஒன்றும் சும்மா இருக்கவில்லை! அவர் சொல்லிக் கொடுத்த “ராமர்” சக்கரத்தையும், “நமசிவாய” சக்கரத்தையும் கை விரல்களால் பழகிக் கொண்டிருந்தான்.
“இப்படி சின்ன வயசிலேயே இந்த விரல் சக்கரமெல்லாம் பழகிட்டா வயசான காலத்துல கை ஆடறது, நரம்புத் தளர்ச்சி, ஸ்ட்ரோக்ல ஒரு பக்கமே போயிடறது... இந்த மாதிரி எதுவும் வராதுடா! ஏன்னா இது வெறும் வெரலுக்கான எக்ஸர்ஸைஸ் இல்லடா, நாடி நரம்புல எல்லாம் சுவாமி பேரை ஏத்தி அதுக்கு தெய்வீக சக்திய ஊட்டி விட்டாக்க கடைசி காலத்துல அதுதாண்டா பேசும், காப்பாத்தும்!
அப்போது.... யாரோ.. ஒரு பெண்மணி அங்கு வந்திட.... நல்ல நிறைமாத கர்ப்பிணி! பெரியவர் ஏழை, எளியவர்களுடன் எப்போதுமே அன்புடன் பேசி நல்ல தெய்வீக விஷ்யங்களையெல்லாம் அவர்களுக்குப் புரியும்படியெல்லாம் சொல்வதைக் கண்டு சிறுவன் அசந்திருக்கிறான்!
ஹார்பரில்.. “தஸ்ஸுபுஸ்” ஸென்று பிரெஞ்சும், இங்கிலிபீஸுமாக... (அவர் அப்படித்தான் சொல்வார்!) ஏதேதோ அயல்மொழிகளில் வெளுத்துக் கட்டும் பெரியவர் இங்கு மெட்ராஸ் தமிழில் ஏழை ஜனங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு மிகவும் பரிவுடன் அவர்களுடைய கஷ்டங்களைத் தீர்ப்பது கண்டு வியந்து நிற்பான் சிறுவன்!
“வாம்மா.... என்னிக்கி பிரசவம்?”
“அதான் உங்கிட்ட சொல்லிட்டுப் போவலாம்னு வந்தேன்... இதுவரைக்கும் அஞ்சு பிரசவத்துக்கும் உங்கிட்ட விபூதி வாங்கிட்டுப் போவேன். நீயும் அங்காளி ஆத்தாவை சுத்திட்டுப் போவச் சொல்லுவியே! எல்லாம் நல்லபடியா சுகப் பிரசவம் ஆச்சு! குழந்த குட்டியே இல்லாம இருந்த எங்க குடும்பத்துக்கு நீ ஆசீர்வாதம் பண்ணி எங்க குடும்பம் நல்லா முன்னுக்கு வந்துடுச்சு...” அக்காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஐந்தாறு குழந்தைகள் என்பது சர்வசகஜம்!
.”அதுக்கென்னா இப்போ.. நீ அங்காளிய நல்லா நம்பி வேண்டிகிட்டே.... அங்காளி ஆத்தா கண்ண தொறந்துட்டா.... ம்...ம்..ம் வந்த விஷயத்தைச் சொல்லு!”
“ம்..ம்.. இப்பதான் சோதனை மாதிரி... டாக்டரு சொல்றாரு.. ஆப்ரேஷன் பண்ணித்தான் கொழந்தைய எடுக்கணுமா... என்ன செய்றது...?”
“...ஆங் ... கொழந்தை மேல ஒரு பிட்டு கூட கத்தி, கித்தி படக்கூடாதுமா” 
“ எங்க... டாக்டரு சொல்றதையில்ல நம்ப கேக்க வேண்டியதாயிருக்கு... அடுத்த வாரம் ஆபரேஷனுக்கு வரச் சொல்றாரே...”
பெரியவர் நெடுநேரம் யோசித்தார்... ஆபரேஷன் என்பதையே அவர் ஒத்துக் கொள்வதில்லை! ‘முடிந்தவரை இயற்கையுடன் இணைந்து போராடு! இறைவனைப் பரிபூரணமாக நம்பு!” – இதுவே பெரியவரின் உபநிஷத்!
 “சரி..சரி. நீ.. என்னா பண்றே.... அங்காளியை ஒரு ஒம்போது சுத்து சுத்திட்டு நேரே ஆஸ்பத்திரில போய் படுத்துக்க! எனக்கு ஆபரேஷன் இப்பவே பண்ணணுன்னு அடம் பிடிச்சுடு... அப்புறம் கதையப் பார்க்கலாம்...” அப்பெண்மணி அங்காளி அம்பிகையைச் சுற்றி வரப் புறப்பட்டு விட்டாள்...
பெரியவர் தன் கையை விரித்து அதனையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இதுதானே எதிர்காலத்தை உணரும் அவருடைய பாணி!
பிறகு திடீரென்று, “ஏண்டா .. அஞ்சாறு மணி நேரமா என்னடா பண்ணிகிட்டு இருந்தே?”
சிறுவன் மாட்டிக் கொண்டு விழித்தான். “நீ ஒண்ணும் வேலை கொடுக்கலையே  வாத்யாரே!” என்று சொல்ல நினைத்த சிறுவன் டக்கென்று வாயை மூடிக் கொண்டான்..
“ஏண்டா வேலை இல்லைன்னா என்ன, அங்காளியைச் சுத்தி வரலாமில்ல, சும்மா என் வாய பார்த்து நின்னா என்ன பிரயோஜனம்?”
அதற்குள் அந்த ஏழைப் பெண்மணி மீண்டும் வரவே சிறுவன் தப்பித்தான்!
“உனக்கென்ன நல்லபடியா பிரசவம் நடக்கணும் அவ்வளவுதானே! அங்காளியச் சுத்திட்ட இல்லே நேரே ஆஸ்பத்திரில நில்லு, மத்தத அப்புறம் பார்க்கலாம்.. டாக்டர்கிட்ட ஆப்ரேஷன் பண்ணித்தான் குழந்தை வரணும்னு பிடிவாதமா இருந்டுடு!”
“ என்ன இது? ஆப்ரேஷன் வேண்டாம் என்று சொல்பவர் இப்போது புரட்டிச் சொல்கிறாரே?”
சிறுவன் விழித்தான்! புரியாத புதிர் அவர்! இதுதான் சித்தர்களின் இலக்கணமே!  ஏழை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் பெரியவரின் மேல் அங்கு அனைவர்க்கும் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவியது. எனவே அவர் எதைச் சொன்னாலும் செய்து விடுவார்கள்.. அதனால் தான் அந்த நம்பிக்கையால் தான் எல்லாம் நன்றாக நடந்தது!
Online solutions ! விவாகரத்து வரையில் சென்ற எத்தனையோ குடும்பங்களுக்கு இல்லற தீபமாய் விளங்கி நல்வழி காட்டியவரே பெரியவர்! அவரிடம் எத்தனையோ விதவிதமான பிரச்னைகள் தீர்வுக்கு வரும்.. அவற்றையெல்லாம் அநாயசமாக தமக்கே உரித்தான பாணியில் எளிதில் தீர்த்து வைப்பார்!
கத்தி, கபடாவுடன் எதிரும், புதிருமாய் நிற்கும் இரு அணிகளிடையே பிரமாதமாக வியூகம் வைத்து நடுவில் நன்கு புகுந்து விளையாடி அவர்கள் பாணியிலேயே பேசி சுமுகமாகத் தீர்த்து வைப்பார். பிரிந்த குடும்பங்கள் எத்தனையோ அவரால் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டன!
காணும் பொங்கலன்று அவர் எங்கிருப்பினும் தேடி ஓடி வந்து விடுவார்கள்!
“காணும் பொங்கல்னா உன்ன மாதிரிப் பெரிய மனுஷனை, மஹானைப் பார்க்கணும், அதுதானே விசேஷம்!” என்று சொல்லிக் கொண்டே அவரிடம் ஓடி வந்து விடுவார்கள்.. பெரியவரும் அண்ணாமலையோ, ஆவுடையார் கோயிலோ எங்கிருந்தாலும் காணும் பொங்கலன்று அங்காளி கோயிலுக்கு வந்துவிடுவார்! காணும் பொங்கலன்று யார் எந்தப் பொங்கலைக் கொடுத்தாலும் “ரொம்பப் பிரமாதம்” என்று சுவைத்துச் சாப்பிடுவார்.. ஏழைக் குடிசைக் குடும்பங்களாதலால் விறகுப் புகையுடனும் தான் பொங்கல் இருக்கும்!
“இதுதாண்டா உண்மையான அன்பு! நல்லாச் சமைக்கிறவங்க செய்யற பொங்கலை விட இந்த மாதிரிப் பொங்கலுக்குத் தாண்டா பவர் ஜாஸ்தி!”
கோயில் வளாகத்தின் பின்புறத்தில் ஆங்காங்கே மூணு செங்கல், ஆறு செங்கல் வைத்துப் பலரும் பொங்கல் படைக்கும் போது ஏதேனும் ஒரு அடுப்பில் போய் பெரியவர் உட்கார்ந்து விடுவார். யார் வீட்டு அடுப்போ அவருக்கு அன்று முதல் செல்வம் கொழிக்கும்! இதனால் “நம் அடுப்பில் பெரியவர் வந்து உட்கார மாட்டாரா” என்று பலரும் ஏங்குவர்... ஒரு முறை.. ஒரு வயதான கிழவி....! அங்காளி கோயிலில் தினமும் கோலம் போட்டுக் கொண்டிருந்த கிழவி, திடீரென்று இறந்து விடவே, எல்லோரும் வந்து பெரியவரிடம் அதைப் பற்றிச் சொன்னார்கள்! சிறுவனும் பெரியவரிடம் வந்த புதிதில் அந்தக் கிழவியைப் பார்த்திருக்கிறான்...
“...........ஏன் வாத்யாரே! அந்தப் பாட்டியப் பத்தி ஒண்ணும் சொல்லலியே..”
“அது எங்கடா போகப் போகுது! இது வழியாத்தாண்டா போயாகணும்..... அப்ப பார்ப்போம்! ...”
“ ஒரு வேளை அந்தக் கிழவியின் இறுதி ஊர்வலம் இந்த வழியாகச் செல்லப் போவதைத் தான் சொல்கிறாரோ?” – சிறுவன் சற்றே யோசித்தான்....
கத்தியின்றி.... ரத்தமின்றி..... ஆமாம். பிரசவத்திற்கு சென்ற பெண்மணி என்ன ஆனாள்? சில நாட்கள் கழித்து.... “சாமீ.... உன்னோட பேரப் புள்ள வந்துடிச்சு....” மகிழ்ச்சிப் பெருங்குரல் கொடுத்துக் கொண்டே பச்சிளங் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அப்பெண்மணி வந்திட.....
“அடிசக்கை... கார்லயே வந்துட்டியா.. நடக்கிற காலம் அதுக்குள்ள போயிடுச்சா!”
“எல்லாம் உன்னோட நல்ல ஆசிர்வாதம் தான் சாமி.. கொழந்தயத் தூக்கிட்டு வெயில்ல ரோட்ல வந்தப்போ இந்தக் கார்ல வந்த புண்யவான் ஏத்திக்கிட்டு வந்து இங்கவிட்டாரு...”
“ பெரியவர் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை..
அவர் கவனமெல்லாம் காரிலேயே இருந்தது! சிறுவனும் அவரையே, அவர் பார்த்ததையே பார்த்துக் கொண்டிருந்தான்! “என்ன சாமி, கொழந்தைக்கு விபூதி வச்சுக் கொடு! நீ என்ன, ஆஸ்பத்திரிக் கதையக் கேக்காம எதையோ பார்த்துக்கிட்டே இருக்கயே...” அந்தப் பெண்மணி புகார் கூறிடவே....
“... யார் சொன்னா, நீ போய் முரண்டு பிடிச்சு ஆஸ்பத்திரில படுத்துக் கிட்ட.. டாக்டரு பயந்து போய்ட்டாரு... அந்த டாக்டரம்மா அது பேரு என்னா? சுகுமாரி அம்மாதானே அது... அதுவே இங்க வந்துடுச்சே.... அதுகிட்டே நல்லபடியா வர்ற குழந்தைக்கு, கத்தி போர்ஜப்னு (forcep என்பதை அப்படித்தான் சொல்வார்!) போட்டு வதச்சுடாதேன்னு சொல்லி அனுப்பிச்சேனே.. அதுக்கப்புறம் தான் ஆயுதம் இல்லாம நல்லபடியா முடிஞ்சுடிச்சுன்னு உன்னோட நாத்தனா சொல்லிட்டுப் போச்சே...”
“பெரியவர் கதை விடுகிறாரா, அல்லது உண்மையாகவே நடந்ததா.. நமக்குத் தெரிந்த வரைக்கும் டாக்டர்  சுகுமாரின்னோ, நாத்தனாரோ வந்ததாகத் தெரியவில்லையே! எப்படி நடந்ததை எல்லாம் சொல்கிறார்? சிறுவன் ஏதேதோ எண்ணுவதற்குள், பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கண்ணடித்தார்! சிறுவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது..
“இவரால் எப்படி கொஞ்சமும் அலட்டிக்காம இந்த அற்புதங்களையெல்லாம் செய்ய முடிகிறது”.
“யார் யாரோ ஏதோ சின்ன சின்ன சித்தியெல்லாம் செய்துவிட்டு எப்படியெல்லாம் அலட்டிக் கொள்கிறார்கள். இவர் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகையே ஆட்டிப் படைக்கும் சக்தியை வைத்துக் கொண்டு கோவணாண்டியாக இருக்கிறாரே!” அப்போது தான் சிறுவன் ஒன்றைக் கவனித்தான்... பெரியவர் இவ்வளவு பேசினாலும் அவர் காரின் மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை! என்ன மாயமோ!
திடீரென்று ... விருட்டென்று கார் புறப்பட்டது. அதனுள் உட்கார்ந்திருந்த ஒரு சிறுமியின் முகம் நன்கு தெரிந்தது... சிறுவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. அச்சிறுமியை ஒரு க்ஷணமே சிறுவன் பார்த்தானென்றாலும்.... அங்காளி கோயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாளே... அக்கிழவி போய்ச் சேர்ந்து சில வருடங்களாகி விட்டன.. ஆனால் அக்கிழவியின் ஜாடை போலவே அச்சிறுமி இருந்தாள்... ஒரு வேளை அக்கிழவியே இப்பிறவி எடுத்து.. சிறுவனுக்கு டக்கென்று உதித்தது...
வாத்யார் அப்போதே சொன்னாரே..... “அது எங்கடா போகப் போகுது? இது வழியாத் தாண்டா போகணும், அப்ப பார்ப்போம்...”
சிறுவன் மெதுவாகக் கண்களைத் திருப்பி ஆராய்ச்சி நிறைந்த அர்த்தபுஷ்டியான பார்வையுடன் பெரியவரை உற்று நோக்கிட... அவரும் நமட்டுச் சிரிப்புடன் தலையாட்டி அதை ஆமோதித்த அடுத்த நிமிடமே, அப்பெண்மணியைப் பார்த்து, “இந்த பாரு மொதல்ல அங்காளி ஆத்தா பாதத்துல குழந்தைய வச்சுட்டு வா... போ!” என்று அருளாணை இட..... அதே வேகத்தில் இவன் பக்கம் தலையத் திருப்பி “பாத்தியாடா, இந்தக் கோயில்ல, ஒரு நாலஞ்சு வருஷம் ஏதோ சின்சியராகக் கோலம் போட்டதுக்கே என்ன ரிவார்ட் (reward) பாத்தியா? உடனே கார்ல போற பணக்காரப் பெறவி கெடச்சுடிச்சு! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க ஏழையா இருந்த வரைக்கும் அந்தக் கிழவி இந்தக் கோயில்ல கோலம் போட்டிச்சு! ஆனால் கார்ல போற பணக்காரியா வாழ்வு வந்துச்சு... ஆனா காரை விட்டுக் கீழ கூட இறங்கலை, இதுதாண்டா மாயை!”

பிரதோஷ கால நரசிம்மர்

பிரதோஷ கால ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பூஜா மகிமை
விஷ்ணுவுக்கும் பிரதோஷ கால பூஜை உண்டே! பிரதோஷ நேரமானது சிவபூஜைக்கு மட்டும் அல்லாது பெருமாள் பூஜைக்கும் மிகவும் சிறப்பானதாகும். பிரதோஷ நேரத்தில் தான் பரபிரம்மமான ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அவதரித்தார். பிரதோஷ நேரத்தில் ஸ்ரீநரசிம்ம சுவாமிக்குப் பூஜை செய்வதனால் அபரிமிதமான பலன்களைப் பெற்றிடலாம். பிரதோஷ நேரம் என்பது ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீநரசிம்ம அவதாரங்கள் ஏற்பட்ட காலமாதலின் பலகோண வழிபாடாக மிகச் சிறப்புடன் பிரதோஷ நேர பூஜை விளங்குகின்றது.
பிரதோஷ பூஜை என்றால் சிவபெருமானுக்காக மட்டுமே என்று நாம் எண்ணி வந்துள்ளோம் அல்லவா! பலருக்கும் பிரதோஷ நேரத்தில் தான் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அவதாரம் ஏற்பட்டது என்பது தெரியாது. இதனால் தான் பெரும்பாலும் தூண்களில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு எதிரில் உள்ள தூணில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும் எழுந்தருளியிருப்பார். ஸ்ரீசரபேஸ்வர அவதார புராணத்தின்படி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின், உக்ர சக்தி அதாவது அருள் வெம்மை சக்தியானது, பிரபஞ்சத்திற்கே அருட்பெரும் ஜோதியாகப் பெருகிய பொழுது சர்வேஸ்வரனே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாக அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்மருடைய உக்ரத்தைத் தணித்தார்.
ஸ்ரீநரசிம்மருடைய உக்ரத்தை தணிப்பதற்காகத் தேவாதி தேவ மூர்த்திகளும், தேவதைகளும், ஸ்ரீமகா லக்ஷ்மி தேவியும், திருமாலின் சகோதரியான ஸ்ரீபார்வதி அம்பிகையும் பலவிதமான பூஜைகளை மேற்கொண்டனர். எனவே, பிரதோஷமானது மனித சமுதாயத்திற்கு உரித்தான பூஜை நேரமாக மட்டும் அல்லாது தேவாதி தேவ மூர்த்திகளின், பல அவதார மூர்த்திகளின் பூஜை நேரமாகவும் அமைந்திருப்பதனால் தான் பிரதோஷ நேர பூஜையானது மிகுந்த மகத்துவம் பெற்று விளங்குகின்றது. எவ்வாறு நவராத்திரியின் பொழுது ஸ்ரீஅம்பிகையே சர்வேஸ்வரவனுக்குப் பூஜையை மேற்கொள்வதால் ஆண்டவனை வழிபடுகின்ற அம்பிகையை நாம் வழிபடுவதற்காகவே நவராத்திரி பூஜை அமைகின்றது அல்லவா! இது போலத்தான் பல தெய்வ மூர்த்திகளும் பிரதோஷ நேரத்தில் ஸ்ரீநரசிம்மரை வழிபடுகின்ற பொழுது நாமும் அவரை பூஜிக்கின்ற பாக்கியம் பெறுகின்றோம் என்றால் என்னே மகிமை வாய்ந்தது இந்த பிரதோஷ நேர பூஜை!
அனைவர்க்குமாம் அனைத்திற்குமாம் இறை வழிபாடு! பல பெருமாள் தலங்களில் பிரதோஷ பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் . ஸ்ரீரங்கம் அருகே உள்ள காட்டுஅழகியசிங்கர் பெருமாள் ஆலயத்தில் இன்றைக்கும் பிரதோஷ பூஜையானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு பிரதோஷ தெய்வ பூஜைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. உலகத்தில் உள்ள ஜீவன்கள் எறும்பு, யானை, ஆமை அல்லது மனிதனோ ஒவ்வொன்றும் பலவிதமான இன்ப, துன்பங்களையும் அனுபவித்துத்தான் வருகின்றன. தாவரங்கள் கூட தங்களுக்கு நல்வாழ்வு வேண்டி இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றன என்பதைக் கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! சிறு தாவரங்களுக்காகப் பெரிய தாவரங்கள் கூட தியாக மனப்பான்மையில் தான் இறைவனை வழிபடுகின்றன.

ஸ்ரீநரசிம்மர் தேவர்மலை, கரூர் அருகே

உதாரணமாக வேப்பமரம், ஆலமரம், அரசமரம் போன்ற இறைவன் வழிபாட்டிற்கு உரித்தான பல மரங்கள்யாவும் தங்களுடைய சக ஜீவன்களான ஏனைய தாவரங்களுடைய நல்வாழ்விற்கு மட்டுமின்றி தங்களைச் சுற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடுகின்ற மனிதர்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்கின்றன என்பது இன்றைக்கு நிகழ்கின்ற நிதர்சன உண்மையாகும்.  உதாரணமாக ஒரு அரச மரத்தடியில், வீற்றிருக்கும் பிள்ளையாரை நீங்கள் மரத்துடன் சேர்த்து வலம் வருகின்ற பொழுது அந்த மரமானது. “தன்னை இம்மனிதர்கள் வழிபடுகின்றார்களே! எவ்வித அருகதையும் இல்லாத தனக்கு இந்த நல்வாழ்க்கையைத் தந்த இந்த விநாயகப் பெருமானுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றோம். எனவே, விநாயகர் இங்கிருப்பதனால் தானே நமக்கு இந்தப் பெருமை வந்தது. இதனால் தானே மனித குலம் நம்மைச் சுற்றி வந்து வழிபடுகின்றது. எனவே இறைவா என்னையும் சேர்த்து வலம் வருகின்ற  இவர்களுடைய துன்பங்களைக் களைந்து அவர்களுக்கு நல்வழிகளைக் காட்டுவாயாக!” என்று 24மணி நேரமும் பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த மரமங்கள் வாழ்கின்றன என்பது நீங்கள் அறியாத தெய்வீக இரகசியமாகும்.
ஆனால், எந்த மனிதன் 24 மணி நேரமும் பூஜை செய்கின்றான், சொல்லுங்கள் பார்க்கலாம்! உண்மையாகவே பிறருக்காகத் தங்கள் வாழ்க்கை வசதிகளைத் துறந்து ஏழை, எளியோர் மற்றும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபடுவோர்கள் தான் இவ்வாறு தெய்வ மூர்த்திகள் வீற்றிருக்கின்ற இடங்களில் மரங்களாக பிறப்பெடுக்கின்றார்கள் என்பது ஆனந்தம் அளிக்கக் கூடிய ஆன்மீக இரகசியமாகும். இவ்வகையிலேயே பார்த்தோமேயானால் ஒரு மனிதப் பிறவியை விட தெய்வமூர்த்திகள் வீற்றிருக்கின்ற மரப் பிறவியானது எத்தனையோ உத்தம இறை நிலைகளைத் தன்னுள் கொண்டதாகும். எனவே, அருகம்புல் என்றோ, நாய் என்றோ, பன்றி என்றோ எதனையும் வெறுத்து ஒதுக்கி விடாதீர்கள். மனிதப் பிறவி மகத்தானது என்பது உண்மையே. இந்த மனிதப் பிறவியைக் கொண்டுள்ளோர் பிற பிறவிகளை இழிவாக கருதுதல் கூடாது என்ற உத்தம மனப்பான்மையை பெறுவதற்காகத் தான் பகுத்து அறியவுந்தான் இந்த மனிதப் பிறவி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறாக, தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளும் வண்ணம் ஆத்ம விசார மனப்பான்மையைத் தரவல்லதே ஸ்ரீநரசிம்மருடைய பிரதோஷ கால வழிபாடாகும். மேலும், எத்தனையோ தேவாதி,  தேவ மூர்த்திகளும், தேவதைகளும் ஸ்ரீநரசிம்மருடைய அவதாரத்திற்காகப் பல கோடி யுகங்களாகத் தவம் கிடக்க, பிரகலாதனுக்குத்தான் ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கின்ற முதல் பாக்கியம் கிட்டியது. இறைவனை நிந்தித்த அவனுடைய தந்தையான இரணியகசிபுவிற்கும் ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கின்ற பாக்கியம் எவ்வாறு கிட்டியது என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா! ஆனால் பிரகலாதன் தரிசித்த ஸ்ரீநரசிம்ம அவதாரமானது பரிபூரண பரம்பொருளின் விஸ்வரூப தரிசனமாகும். ஆனால் இரணியகசிபுவின் கண்களுக்கு ஏதோ மனிதனும், மிருகமும் சேர்ந்த ஒரு புதுப் பிறவியாகத்தான் தோன்றியதே தவிர அவனுக்கு எதிரில் இருப்பது இறைவன் என்ற உணர்வு தோன்றவில்லை. அதில் நம்பிக்கையும் ஏற்படவில்லை. மேலும் இரணியகசிபு என்று நாம் எண்ணுகின்ற அரக்கப் பிறவியானது பூர்வ ஜென்மத்தில் வைகுண்டப் பெருமாளின் துவார பாலகராய் இருந்த பாக்கியத்தை பெற்றவரே என்பதையும் நாம் மறத்தல் கூடாது.. இதிலிருந்து நாம் அறிவது என்ன?
எத்தகைய உத்தம இறைநிலைகளை அடைந்தாலும் அங்கு அகங்காரம், ஆணவம் வருமாயின் இறைவன் அதற்குத் தக்க தண்டனையை அளித்துவிடுகின்றான் என்பதை உணர்தல் வேண்டும். எனவே, இறைவனை அடைவதற்கான உத்தம நிலைகளில் கூடப் பலவிதமான சோதனைகள் எதிர்ப்படும். தொடர்ந்து பூஜைகள், ஹோம வழிபாடுகளையும், யந்திர, சக்கர பூஜைகளையும் மேற்கொள்கின்றபொழுது பலவிதமான சித்திகளை இறைவன் பரிசாக அளிக்கின்றான். ஆனால் அவற்றிலெல்லாம் மனதை ஈடுபடுத்தாது இந்த மாயைகளை எல்லாம் வென்று “இறைவா! உன் திருவடி நிழலே சரணம்!” என்று இறுதி வரை இறைவனின் திருப்பாதங்களை நோக்கிப் பயணம் தொடர வேண்டும் என்பதை உணர்த்துவது தான் பிரகலாத சரித்திரமாகும்.
பிரதோஷ நேரத்தில் ஸ்ரீநரசிம்ம அவதாரம் ஏற்பட்டதல்லவா! இரணியகசிபு தன்னுடைய சாகாவரத்தைப் பெறுவதற்காக விதித்த நிபந்தனைகளுள் ஒன்றுதான் பகலிலோ, இரவிலோ பிறந்த எவராலும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்பதும்! எனவே தான் பகலும் அல்லாது இரவும் அல்லாது இரண்டும் இருக்கின்ற மாலை பிரதோஷ நேரத்தில் தான் ஸ்ரீபிரம்ம மூர்த்தி அவதாரம் செய்தார்..
ஸ்ரீநரசிம்மர் பூஜை முறை :- பிரதோஷ நேரத்தின் போது அவதரித்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை அவருடைய அவதார நேரத்திலே வழிபடுவது மிகவும் சிறப்புடையது தானே! உக்ர மூர்த்திக்கு பிரதோஷ நேரத்தில் இளநீர் அபிஷேகம், மஞ்சள் நீர், திருமஞ்சனம், பழச்சாறு அபிஷேகம், சந்தன அபிஷேகம், தேன் அபிஷேகம் போன்ற அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனம் சாற்றி வழிபடுவதனால் நிலபுலன் சொத்துத் தகராறுகள் தீர்வு பெறும். கணவன், மனைவி, சகோதரர், குழந்தைகள், பிள்ளைகளிடையே குரோத மனப்பான்மை நீங்கி ஒற்றுமை பெருகும் . ஸ்ரீநரசிம்மருக்கு சாற்றப்படுகின்ற சந்தனத்தைக் கடையில் பவுடராக வாங்கி உபயோகிக்கக் கூடாது. உண்மையாகவே பக்தியுடன் ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை ஓதி சந்தனத்தைத் தாமே தம் கரங்களால் அரைத்து சுவாமிக்குச் சாற்றிட வேண்டும்..
எங்கெல்லாம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கின்றாரோ அங்கெல்லாம் பிரதோஷ நேரத்தின் போது திருமஞ்சன வழிபாடும், தைலக் காப்பு, சந்தனக் காப்பு, பழக் காப்பும் இட்டு எலுமிச்சைக் கனிமாலை சாற்றி வழிபட்டு வந்திடில் தன்னுடைய பதவி, செல்வம், அந்தஸ்து, வலிமை, கௌரவம் காரணமாகப் பலருக்கும் துன்பங்களைக் கொடுத்துக் குடும்பங்களை சிதைத்தமைக்கான கொடிய பாவங்களுக்கான ஓரளவு பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம். எவரெல்லாம் தம் வாழ்க்கையில் பல கொடூரங்களை இழைத்ததை மனப்பூர்வமாக உணர்ந்து இப்பிறவியிலேயே மன்னிப்புப் பெற வேண்டுகின்றார்களோ அவர்கள் பிரதோஷ நேரத்தில் ஸ்ரீநரசிம்ம சுவாமிக்கு உரித்தான வழிபாடுகளை மேற்கொண்டு மனதார வேண்டி தம்முடைய கொடும் செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரித்தான நிவாரண உதவிகளைச் செய்து பிரதோஷ கால நரசிம்ம வழிபாட்டை முறையாக மேற்கொண்டு வந்தால் இறையருளால் நல்வழி கிட்டும்.
ஏனென்றால் கொடிய பாவச் செயல்களைச் செய்தோருக்கு பேய், பிசாசு, கொள்ளிப் பிசாசு போன்ற பிறவிகள் தாம் கிட்டி எப்போதும் வதைபட நேரிடும். பலருக்கும் தாம் இழைத்த தவறுகள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அன்பு மனைவி, ஆர்வலராம் குழந்தைகள், உற்ற பெற்றோர்கள் உள்ளிட்ட எவரிடமும் இதனை எடுத்துரைக்க இயலாத நிலையில் ஸ்ரீநரசிம்மரே கதி என்று அவருடைய திருப்பாதங்களைப் பற்றி ஸ்ரீநரசிம்ம சுவாமிக்கு முறையான பிரதோஷ வழிபாடுகளை மேற்கொண்டு வந்தால் பெருமாளின் திருஅருளால் அவருக்கு நற்கதி கிட்டும். தம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகள் அனைத்தும் செய்தால்தான் இத்தகைய நற்கதிக்கான நல்வழியைப் பெருமாள் பெற்றுத் தருவார் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
பிரிந்த குடும்பங்களும், தம்பதியரும் ஒன்று சேர்வதற்கு பிரதோஷ கால நரசிம்ம வழிபாடு பெரிதும் உதவுகின்றது. பிரகலாதன் கூட ஸ்ரீநரசிம்ம தரிசனத்தைப் பெற்றதும் முதலாகப் பெற்ற வரம் என்னவெனில் தன்னுடைய தந்தை நல்வாழ்வு பெற வேண்டும் என்பதுதான். பலவித மனக் கசப்புகளினாலும், செல்வச் செழிப்பினாலும், அடாத காரியங்களினாலும் பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வதற்குப் பிரதோஷ கால நரசிம்ம வழிபாடு பெரிதும் உதவுகின்றது. எவ்வாறு சிவாலயங்களில் இன்றைக்கு பிரதோஷ வழிபாடு மகத்தானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றதோ இதே போல அவரவர் ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் பிரதோஷ கால ஸ்ரீநரசிம்ம மூர்த்தி வழிபாட்டிற்கு அனைவரும் ஆவன செய்து இது மிகச் சிறந்த சமுதாய பூஜையாக மலர்ந்திட மாபெரும் இறைப்பணியைச் செய்திட வேண்டும்.
ஹரியும், ஹரனும் ஒன்றே! சிவனும், விஷ்ணுவும் சேர்ந்த ஹரி ஹரனின் அருளின்றி இந்த பிரபஞ்சமே இயங்காது. எனவே, ஹரிக்கும், ஹரனுக்கும் உரித்தான பூஜையாக பிரதோஷ பூஜை விளங்குவதால் அனைத்து வைணவ ஸ்தலங்களிலும், சிவ ஸ்தலங்களிலும் பிரதோஷ பூஜையானது மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட பக்தகோடிகள் அனைவரும் ஒன்று கூடிப் பாடுபடுதல் வேண்டும். நரசிம்ம மூர்த்திகளிலே பலவிதமான அவதார மூர்த்திகள் உண்டு. ஏனென்றால் பிரகலாதனுக்கு காட்சியளித்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி உக்ரத்தின் உச்சியில் இருந்தார். அதன் பிறகு பலவிதமான தேவாதி தேவ மூர்த்திகளும் பலவிதமான வழிபாடுகளையும், திருவடி பூஜைகளையும் மேற்கொண்டிடவே அவருடைய உக்ரமானது பன்முறை தணிந்தும், உயர்ந்தும், உச்சத்திற்குச் சென்றும் பரிணமித்து பல ஸ்ரீநரசிம்ம அவதார ரூபங்களாயிற்று.
பலவிதமான கோணங்களில் நடனமாடி தன்னுடைய அவதார மகிமையை உலகத்திற்கு உணர்த்தினார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி. இவ்வாறாக ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர், ஸ்ரீஉக்ர நரசிம்மர் என்றும் ஸ்ரீசிம்ம நரசிம்மர் என்றும் பலவிதமான நரசிம்ம மூர்த்திகள் உண்டு. எந்த நரசிம்ம அவதார மூர்த்தியாயினும் சரி, பிரதோஷ பூஜையானது அவருக்கு உரித்தான, சிறப்பான பூஜையாகும். பிரதோஷ காலத்தில் ஸ்ரீநரசிம்மருக்கு வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிப்பது பெரும் பேறாகும். இதனால் பிறருடைய குரோத, விரோத, பகைமை மனப்பான்மைகளினால் பழிவாங்கப்பட்டோர், தாம் இழந்த பதவி, சொத்து உரிமைகளை மீண்டும் நன்முறையில் பெற்றிட பிரதோஷ காலை ஸ்ரீநரசிம்மருக்கான வெண்ணெய் உருண்டை அர்ச்சனை பூஜை பெரிதும் வழிவகுக்கும். ஸ்ரீநரசிம்மருக்கு உரித்தான பானகத்தை பிரதோஷ நேரத்தில் சுவாமிக்கு அர்ப்பணித்து அதனை ஏழைகளுக்கு தானமாக அளித்து வர வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான பலவிதமான நோய்களுக்கு நிவாரணத்தைப் பெற்றிடலாம். நோய், நிவாரணங்களைத் தீர்க்கும் மூர்த்தியாக மட்டுமின்றி தரித்திரம், வறுமையைத் தீர்த்து ஐஸ்வர்ய கடாட்சத்தையும் பெற்று தருபவராகவும், பிரிந்தவரை ஒன்று சேர்ப்பதற்காகவும் அருள்பாலிக்கின்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் பெருமை சொல்லவும் பெரிதே!

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
லால்குடி

ஸ்ரீலக்ஷ்மியின் பிரதோஷ நேர பூஜை! ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிலா விக்ரகமாகவோ, உற்சவ மூர்த்தியாகவோ அல்லது தூணிலே எழுந்தருளியிருந்தாலும் எவ்வித நரசிம்ம மூர்த்தியாய் இருந்தாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஒவ்வொரு நரசிம்ம மூர்த்தியின் வழிபாட்டிற்கும் விசேஷமான பலன்கள் உண்டு. ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தைத் தணிப்பதற்காக அவர் ஆனந்த உக்ர நடனமூர்த்தியாகப் பல லோகங்களையும் வலம் வந்த பொழுது ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியானவள் பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டவாறே ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருவடிகளைத் தொடர்ந்திட ஓரிடத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியின் நிழல் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் மேல்பட அதனுடைய குளுமையால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சற்றே சாந்தமுற்றார்.
இந்த இடம் தான் திருநெல்வேலி தென்காசி அருகில் உள்ள புளிங்குடி திருத்தலம் ஆகும். இவ்விடத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வதால் மிகவும் அற்புதமான பலாபலன்களைப் பெற்றிடலாம். பிரதோஷ நேரத்தில் இப்பெருமாள் மூர்த்திக்கு (மகாலக்ஷ்மி எப்போதும் உறைகின்ற வில்வ இலையான) வில்வ தளங்களால் அர்ச்சித்து, ஸ்ரீமகாலஷ்மிக்கு ப்ரீதியான முழுத் தாமரை மலர்களால் ஆன மாலையிட்டு, சர்க்கரைப் பொங்கலமுதும், பானகமும் படைத்து இவ்வாலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து பானகம் ஏழைகளுக்கு தானமாக அளித்துவர பலவிதமான வியாபார நஷ்டங்களாலும், சொத்து, நஷ்டங்களாலும், பூச்சி, அரிமானம் போன்றவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கும் நல்ல நிவராண வழிகள் கிடைக்கும். ஸ்ரீமஹாலக்ஷ்மியே ஸ்ரீநரசிம்மரை பூஜித்த நேரமாதலின் பொதுவாக வியாபார நஷ்டத்திலிருந்து மீண்டு நன்னிலை அடைவதற்கு பிரதோஷ நேர நரசிம்ம பூஜை இதற்கு பெரிதும் உதவுகின்றது. பல ஆலயங்களிலும் பிரதோஷ நேரத்திற்கு உரித்தான ஸ்ரீநரசிம்ம வழிபாடு தொடங்கப்பட வேண்டும்.
எனவே, அனைத்து வைணவத் தலங்களிலும், கோயில் அதிகாரிகளுடனும், வைணவப் பெரியோர்களுடனும், ஆசாரிய சீலர்களின், பெரியோர்களின் ஆசியுடன் பூஜை முறைகளை வகுத்து பிரதோஷ கால நரசிம்ம வழிபாட்டை மேற்கொள்ள வேண்டுகின்றோம். பிரதோஷ காலத்தில் ஸ்ரீநரசிம்மர் உலா வருதல் விசேஷமான பூஜையாகும். ஸ்ரீநரசிம்மரைத் தாங்கி வருவதற்கு நாம் பெரிதும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். எனவே, ஸ்ரீநரசிம்ம உலாவுலுடன் பானகம் தானத்துடன் பிரதோஷ கால ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் வழிபாட்டை நன்முறையில் கொண்டாடி மகிழ்ந்து இதனை மிகச் சிறந்த சமுதாய பூஜையாக மலர்ந்திட அனைவரும் ஒன்றுபட்டு அரும் பெரும் இறைப்பணியைச் செய்தல் வேண்டும்.
ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவி ஸ்ரீநரசிம்மரின் உக்ரம் தணிவதற்காகப் பலவித பூஜைகளை மேற்கொண்டாள். இவையெல்லாம் பிரதோஷ பூஜைகளுள் அடங்கும். இது மட்டுமின்றித் தாயாரின் வேண்டுகோளுக்கேற்ப ஸ்ரீபார்வதி தேவியும், ஏனைய தேவிகளும், தேவாதி தேவ மூர்த்திகளும், ஸ்ரீநரசிம்மரின் உக்ரம் தணிய வேண்டி தீர்த்த பூஜை, புஷ்ப பூஜை, பல(ழ) பூஜை என எத்தனையோ வகையான பூஜைகளுடன் சர்வேஸ்வரப் பிரார்த்தனை செய்தனர். ஒரு வகையில் ஸ்ரீநரசிம்மரின் உக்ரத் தாண்டவம் கூட ஒரு நன்மையான இறைலீலை தான். ஏனெனில், பல கோடி அரக்கர்களுடைய தீங்குகளால் எத்துணையோ கோடி லோகங்களில், பலவிதமான அழிவுகள் ஏற்பட்டு யாங்கனும் கொடியவர்களின் ஆதிக்கமே நிரவி இருந்தது. மேலும் பூலோகம் மட்டுமல்லாது, பல லோகத்து வாசிகளும், ஸ்ரீநரசிம்மருடைய திருவடிகள் தம் லோகத்தில் படிந்திடாதா? அதனால் விமோசனம் ஏற்படாதா என்று ஏங்கிக் கிடந்தனர்.
எனவே உக்ர மூர்த்தியாக ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, எங்கெங்கோ உக்ரத் தாண்டவம் ஆடியதால் தான், பல கொடிய அரக்கர்களுடைய தீய அம்சங்கட்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. இது மட்டுமல்லாது, பல இராட்சசர்கள் அழிந்த போதிலும், அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட கொடுங்குணங்கள் ஆங்காங்கே துளிர்விட்டிருந்தன. ஸ்ரீநரசிம்மரின் உக்ரஹ நடனத்தில் ஏற்பட்ட தெய்வாக்னியே இத்தீய சக்திகளை பஸ்மம் செய்து நல்வழியை மீட்டுத் தந்தது. கலியுகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அக்கிரமங்களையும், வன்முறைகளையும் நாம் அறிவோம் நம் மூதாதையர்கள் காலத்தில் நிலவி வந்த தெய்வ பக்தியும், சமுதாய அமைதியும் தற்போது மங்கி வரும் இச்சூழலில் ஆழ்ந்த இறை நம்பிக்கையொன்று தான், கலியுகத்தின் கொடூரங்கட்கு ஒரு முற்றுப்புள்ளியைத் தரும். ஆனால், நம்பிக்கையைக் கைவிட வேண்டாம்.
எப்பொதெல்லாம் கொடுமைகள் நிகழ்கின்றனவோ, அப்பொழுதெல்லாம், சித்புருஷர்களும், யோகியரும், மஹான்களும் தோன்றி சமுதாயத்திற்கான நல்வழியை நிச்சயம் பெற்றுத் தருவார்கள்.. கலியுக நியதியாக நிலவி வருகின்ற, பெருகி வருகின்ற அமைதியின்மை, வன்முறை, கொலை, கொள்ளை, போன்ற கொடூரச் செயல்களினின்று நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், சமுதாயத்திற்கு ஒரு தெய்வீக அமைதியைப் பெற்றுத் தருவதற்கும், பிரதோஷ காலத்தில் ஸ்ரீநரசிம்மரின் வழிபாடு பெரிதும் உதவுகிறது. ஆகையால் பக்த கோடிகள் அனைவரும், தங்கள் ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் பிரதோஷ காலை ஸ்ரீநரசிம்ம பூஜையைச் சிறப்புடன் மேற்கொண்டு பரம்பொருளாம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அருளை யாவரும் பெற்றுய்ய வழி வகுத்திட வேண்டும்.. இதுவே மாபெரும், சமுதாய இறைப்பணியாகும்.
ஸ்ரீசரபேஸ்வர மஹிமை

எத்துணையோ தெய்வாவதார மூர்த்திகளை நாம் பார்த்து ஆனந்தித்திருக்கிறோம். பிள்ளையாரின் அழகான ரூபம் முதல் சுந்தரவதனத்துடன் திகழ்கின்ற ஸ்ரீமுருகப் பெருமானின், எழில் கொஞ்சும் திருவுருவில் ஸ்ரீராமன், மிக அழகுடன் நல்வரமருளும் ஸ்ரீவரதராஜப் பெருமாள், கம்பீரமான அழகுடன் தியான நிலையிலுள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி இவ்வாறாக எத்துணை, எத்துணை தெய்வாவதாரங்கள் நம் அலைபாயும் மனத்திற்கு சாந்தத்தையும், மனோதிடத்தையும் அள்ளித் தருகின்றன. இவ்வகையில் ஸ்ரீகாளிமாதேவி, ஸ்ரீஉக்ரப் பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசூலினி தேவி, ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீஉக்ர நரசிம்மர் போன்ற தெய்வ மூர்த்திகளின் உருவங்கள் சற்று வித்யாசமாக இருப்பதை நாம் காண்கின்றோம் அல்லவா?
பரமஹம்சர் ஸ்ரீராமகிருஷ்ணர் காளி தேவியுடன் ஆனந்தத்துடன் உரையாடி மகிழ்ந்த போது, ஸ்ரீகாளி தேவியின் அச்சம் தரும் உருவமானது அவருக்கு அன்புடையதாகத்தானே, பரமானந்தம் அளிப்பதாகத் தானே தோன்றியது. எனவே, இறை உருவம் எல்லாம் நம்முடைய கண் பார்வைக்கும், மனப் பார்வைக்கும், உள்ளப் பார்வைக்கும் உரித்தானதே தவிர இறைவன் உருவமற்ற பரஞ்ஜோதியே! ஸ்ரீசரபேஸ்வரருடைய உருவமே முற்றிலும் வித்யாசமானதாகக் காணப்படுவதன் காரணமென்ன?
ஸ்ரீநரசிம்மரின் உக்ரத்தைத் தணிப்பதற்கு மட்டுந்தான் ஸ்ரீசரபேஸ்வரர் அவதாரம் ஏற்பட்டது என நாம் கருதுகிறோமல்லவா! இதன் பின்னணியில் ஆயிரமாயிரம், தெய்வீக இரகசியங்கள் உண்டு. அரக்கர்களும், அசுரர்களும், இராட்சர்களும் கிருத யுகத்திலும், துவாபர யுகத்திலும், திரேதா யுகத்திலும் தான் இருந்தனர் என நாம் எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் கலியுக வாழ்வில் நடந்து வருகின்ற வன்முறைச் செயல்களை, கொலை, கொள்ளை, வழிப்பறி, போர், விபத்துகள், தீச்சேதங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, கலியுகத்திலும், அசுர குணங்களும், ராட்சஸக் குணங்களும், அரக்கக் குணங்களும் மனிதரிடையே பரவித்தானுள்ளன. உருவ, அளவில் மனிதனாகத் தோன்றிடினும், உள்ளத்தால் காமாந்தராக, துரோகிகளாக, கொடியவராக, பகைவராக, விரோதிகளாக, பொறாமைத் தீ உடையவராக எத்துணை எத்துணை கொடிய அரக்கர்கள் மாந்தரிடையே இன்றும் வாழ்கின்றனர்.
முந்தைய யுகங்களில் அரக்கரோ, அசுரரோ அச்சடித்து வார்த்தது போல் தங்கள் உருவின் மூலம் தம் கொடிய தன்மையைக் காட்டிக் கொண்டனர். அவர்களுக்கு எந்த உருவை எடுக்கும் வல்லமை இருந்தாலும், அரக்க உரு எடுப்பதிலேயே அவர்கள் மகிழ்ந்தனர். பிறவி என்பது ஒருப் பெருங்கடல் தானே! இன்று நாம் புராணத்தில் படிக்கின்ற அத்துணை அசுரர்க்ளும், இன்று பல மனிதர்களின் உருவிலே, மறுபிறவி கொண்டு நம்மிடையே, சமுதாயத்தில் தீயவராக, விலங்குகளாக உலா வருகின்றனர்..
முந்தைய யுகங்களில் அரக்கரையும், அசுரரையும் அழிப்பதற்காக இறைவன் பலவித தெய்வ அவதாரங்கள் மேற்கொண்டான். அவ்வாறு கலியுகத்தில், அத்தகைய தெய்வாவதாரங்கள் ஏற்படாதா என்ற வினா நமக்கு எழுகிறது. முந்தைய யுகங்களில் நிகழ்ந்து வந்த வாழ்க்கை முறைகள் வேறு, அப்போது இறை நம்பிக்கை நன்கு வலுத்து இருந்தது. சற்குருவின் மஹிமையை அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆனால், இறைவனை வழிபடுதலின் மூலம் கிட்டிய சக்தியையும், பலாபலன்களையும், தீய வழியில் பலவிதமாகப் பயன்படுத்தத் துவங்கியதால் தான் அசுரர்களாகவும், அரக்கர்களாகவும் மாறினர். ஆனால் கலியுகத்தில் ஒருபுறம் இறைவழிபாடு பெருகி வந்தாலும், மறுபுறம் அந்த இறை நம்பிக்கையானது ஆழ்ந்து வேரூன்றி நிற்காமல், மேலெழுந்த வாரியாகத்தான் நிலவுகிறது.
துன்பங்கள் அதிகம் ஏற்பட்டால் அதைத் தம்முடைய கர்மவினைகளாக ஏற்கும் தன்மை மறைந்து எதையாவது செய்து துன்பத்தைப் போக்கிக் கொண்டால் சரி எனும் எண்ணமே நிலவுகிறது. நூறு கைகளையுடைய அரக்கனை வெல்ல வேண்டுமெனில் அவனை விட ஒரு பயங்கர உரு எடுத்தால் தானே அவனுக்கு ஆட்டம் ஏற்படும். துர்சக்திகள் எல்லாம் அழிவிற்குத் தானே பயன் பெறும், ஆக்கப் பூர்வமாக எதற்கும் பயன்படாதே! எனவே, முந்தைய யுகங்களில் ஏற்பட்டுள்ள தெய்வ அவதாரங்களே இன்று நமக்கு இக்கலியில் வித்யாசமான உருவத்தில் அருள்புரியக் காத்துள்ளனர்.
உருவ வழிபாடு என்பது கலியுகத்திற்கே உரித்தான மிகச் சிறந்த வழிபாடாகும். இந்த சமுதாயத்தில் விஷக் கிருமிகளாகப் பரவிக் கிடக்கின்ற  பகைமை, குரோதத் தன்மைகளை அழிக்கவும். முறையற்ற காமம், பிறர் சொத்துக்களைக் கவர்தல், பிறரை ஏமாற்றி வதைத்தல், திருடு, கொலை, கொள்ளை சூது, மது போன்ற பலவித தீவினைச் சக்திகளைக் களைவதற்காகத்தான் ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கலியுகத்தில் ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டின் பலாபலன்களைப் பற்றி நாம் இங்கு அளிக்கின்றோம். பல குடும்பங்களிலும், முறையற்ற காமம், தீயொழுக்கம், மது போன்ற கேளிக்கைகளால், வழிதவறி நடந்து, வாழ்க்கையையே பலர் மோசமாக்கிக் கொள்கின்றனர். இதனால் எவ்விதத்திலும் அமைதி என்பது எவருக்குமே, குழந்தைகட்கு கூட இல்லாமற் போய் விடுகின்றது.
இத்தகைய வாழ்க்கைச் சீரழிவினின்று, மீண்டு நல்வாழ்க்கையைப் பெறுவதற்கு சரபேஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகிறது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளது போல ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தைத் தணிப்பதற்காக மட்டும் ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் ஏற்படுத்தப்படவில்லை. வரும் யுகங்களில் அரக்கத்தனமான குணங்களும், எண்ணங்களும், செயல்களும், சேர்ந்து வன்முறை, தீயொழுக்கங்கள் போன்ற பலவற்றிலும் ஈடுபெற்று மனித குலமே அழியும் நிலை ஏற்படும் என்ற தீர்க்க தரிசனத்தால் தானே ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் முன்னமேயே ஏற்பட்டது போலும்! மிருகத்தனமான செயல்கள், குணங்கள், அசுரத்தனமான தீச்செய்யல்கள், இவையெல்லாம் தான், மனித குலத்தின் இல்லற வாழ்வைப் பாழாக்குகின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கிடையாதா என்று எத்துணையோ இல்லறப் பெண்மணிகள் ஏங்குகின்றனர்.
ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் எந்த நற்காரியங்களையும் எளிதில் நடத்திடலாம். ஆனால் இதற்குப் பொறுமையும், விடாமுயற்சியும், தளராத நம்பிக்கையும் தேவை. இம்மூன்றையும் அளிக்க வல்லதே ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு, அதற்காகத்தான், பறவை, மிருகம், மனித அம்சங்களுடன் ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் ஏற்பட்டது. சரபேஸ்வர ரூபத்திற்கு, ஆயிராமாயிரம், தெய்வீக விளக்கங்களுண்டு. ஹிரண்யகசிபு என்ற அரக்கனை வீழ்த்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிங்கமுகம் பூண்டவராய் அதி அற்புதமான அவதாரம் கொண்டாரல்லவா? இதேபோல் தான் நரசிம்மரின் உக்ரத்தைத் தணிப்பதற்கு மட்டுமின்றி, எதிர்வரும் யுகங்களில் ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்கள் மிகுந்திடுவர். தீயகுணம், தீய செயல்களால் உலகமே பாழாகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் இவற்றை வெல்வதற்காக ஏற்பட்டது.
இத்தகைய வினோதமான ஆனால் சக்தி வாய்ந்த அது அற்புத உருவுடன் ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் அமைந்தது ஏன்? ஸ்ரீசரபேஸ்வரரின் தெய்வீக உருவை சற்று உற்று நோக்கினால், நம் கண்ணில் கோணப் பார்வைகள் அடிக்கடி மாறுவதை உணரலாம். உண்மையில் நம்முடைய பெரும்பாலான காரியங்களில் மன ஓட்டங்களும், எண்ணங்களும், இந்த தேகம் மூலம் ஆற்றப்படும் காரியங்களும், கண் பார்வையின் விளைவுகளும், தொகுப்பும் தானே! ஏதேனும் ஒரு பொருளைக் கண்டவுடன் அதைப் பற்றிய எண்ணம் தானே உடனே ஆக்கிரமிக்கின்றது மனதை. உதாரணமாக நூறு ரூபாய் கட்டைப் பார்த்து விட்டால் மனம் என்ன பாடுபடுகின்றது? இதற்குக் காரணம் அப்பார்வை தானே, எனவே, நம் பார்வையிலுள்ள பல தோஷங்களையும், எண்ணக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொள்வோமாயின் பலவித அபசாரங்களின்றும், பாவங்களின்றும், நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீசரபேஸ்வரர் அவதார ரூபத்தை நாம் கண்டு தரிசிக்கும் போது வினோதமான கோணங்களில் நம் பார்வை தெய்வமூர்த்தியின் மீது செலுத்தப்படுகின்றது. இதனைச் சித்புருஷர்களின் பரிபாஷையில் கண்ணோட்டக் கழல் எனக் குறிப்பிடுகின்றனர்... சில யோகப் பயிற்சி முறைகளிலே குறிப்பாக ஸ்ரீகாய்த்ரீ தபஸ் எனும், நம் ஆஸ்ரமத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூலில் கண்ணோட்டத்தைக் கைவிரல் முத்திரைகள் மூலம் செலுத்தி மனத்துள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறு செய்யப்படுகின்றன ஸ்ரீகாயத்ரீ முத்ரா யோக விதானம் பற்றி நாம் நன்கு விளக்கியுள்ளோம்.
நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவ குருமங்கள கந்தர்வ ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர் சுவாமிகளிடம் பெற்ற அரிய தெய்வீக முத்திரைகள் இவை. இம்முத்திரைகள் யாவும் கண்ணோட்டக் கழல் யோக பாணியில் அமைந்தவை. நம்முடைய கண் பார்வையின் குணாதிசயங்கள் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். எந்தக் காரியமாயினும், அது நம் கண்பார்வை மூலமாகத்தானே நிகழ்கிறது. எந்த ஒரு பொருளையும் நாம் முறையாகப் பார்த்து பழகிக் கொண்டோமானால், அக்காரியத்தில் எவ்விதத் தோஷமும் நமக்கு ஏற்படாது.
உதாரணமாக நீங்கள் ஒரு பள்ளிக்குச் செல்கின்றீர்கள் என்றால் ஏதேனும் இறைநாமத்தை, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உள்ளூர ஒலித்த வண்ணம், நீங்கள் காணும் ஒவ்வொரு பள்ளிக் குழந்தைக்கும், எவ்வித வேறுபாடுமின்றி, ஜாதி, மத, இன, குல பேதமின்றி அந்த ஒரு காயத்ரீ மந்திரத்தினை ஜபித்த பலாபலன்களை அக்குழந்தைக்கு அர்ப்பணியுங்கள். “ஏதோ பள்ளிக்குச் சென்றோம். நம் குழந்தைகளை விட்டு வந்தோம்”, என்று சாதாரணச் செயலாக அதைச் செய்யாது “இன்று பள்ளி சென்றோம், நம் கண்ணால் கண்ட சில குழந்தைகளுக்காவது, ஒரு காயத்ரீ மந்திரப் பலனையாவது அர்ப்பணிக்க முடிந்தது. அக்காயத்ரீ மந்திரமானது அக்குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதற்குரிய பலாபலன்களைத் தந்தருள வேண்டும்”, என்றவாறு பிரார்த்தனை செய்யுங்கள்.
அடுத்தபடியாக ஒரு மாட்டு வண்டியில் மிகுந்த கடுமையான, கடினமான பாரத்தை அந்த மாடுகள் மிக வேதனையுடன், வலியுடன் சுமந்து செல்வதாக நீங்கள் கண்டீர்களெனில் குறைந்த பட்சம் 12 முறை காயத்ரீ மந்திரங்களையாவது ஓதி, “அம்மாடுகளின் நல்ஆரோக்கியத்திற்கு, இந்த காயத்ரீ மந்திரப் பலன்கள்யாவும் சென்று அம்மாடுகட்கு எது நன்மையோ அது கிட்டுவதாக”, என சங்கல்பம் செய்து அர்ப்பணித்து மனமாற வேண்டுங்கள். ஒரு ஆஸ்பத்திரி வழியே நீங்கள் செல்ல நேரிட்டால், அதைத் தாண்டும் வரை எவ்வளவு காயத்ரீ மந்திரம் ஜபிக்க இயலுமோ அதை ஜபித்து, அதன் பலன்கள் யாவும், இங்கு நோயால் வாடுகின்றோர்க்கு நல்ல ஆரோக்கியத்தைத் தந்தருள்வதாக என்று வேண்டிடுக.
சாலைகளில் நீங்கள் நிற்க வேண்டிய நிலை வந்தால் ஸ்ரீகாயத்ரீ மந்திரம்தனை ஜெபித்து இங்கு இதன் பலனானது, இத்துணை வண்டிகளினின்றும் வருகின்ற நச்சுப் புகையினால் ஏற்படும் தீங்கினின்றும் இப்பகுதியில் வாழும் மக்களைக் காப்பாற்றட்டும் என வேண்டி சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்வீர்களாக! இவ்வாறாக உங்கள் கண்பார்வையில் தென்படும் நிகழ்ச்சிகைல் இறைமையையும், தெய்வீகத்தையும் புகுத்தப் பழகுவீர்களாயின், உங்கள் மனமானது கெட்ட எண்ணங்களில், துன்பங்களில் எக்காலத்திலும் ஈடுபடாது. உங்கள் வாழ்வும் மிகவும் சாந்தமாக அமையும். இதற்கு உதவுவதே கண்பார்வை கழல் நோக்கு வழிபாடு எனப்படும் ஸ்ரீசரபேஸ்வர வழிபாடாகும்.
ஏனெனில் ஸ்ரீசரபேஸ்வர தெய்வமூர்த்தியின் வினோதக் கோணமானது. நம்முடையக் கண்பார்வையில் ஏற்படும் தோஷங்களை அகற்றுகிறது. கண்பார்வை எனில் கண்ஒளி என்பது மட்டும் பொருளல்ல. நாம் பார்க்கின்ற பொருள்களின் மீது எத்தகைய தவறான மோக, பேராசை உணர்ச்சி ஏற்படாதிருக்க, முறையற்ற எண்ணங்களில் செல்லாதிருக்க தீய எண்ணங்கள் உருவாகாமல் இருப்பதற்காக கண்ணொளிக் கழல் வழிபாடாக ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அமைகிறது என்பதை மறவாதீர்கள். ஏனெனில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் சிரம், கால், பாதங்கள், உடல் இவற்றையெல்லாம் மாறி மாறிப் பலவிதக் கோணங்களில் உங்கள் கண் பார்க்கும் போது, இவை மிகச் சிறந்த நேத்ர யோகமாக அமைகிறது. எனவே தான் ஸ்ரீசரபேஸ்வர தரிசனமே எத்தனையோ பலாபலன்களுடையதென மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.

ஸ்ரீஐயப்ப மகிமை

கடந்த பல இதழ்களாக ஸ்ரீஐயப்ப விரதத்தில் நடைமுறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அவற்றை நிவர்த்திச் செய்யும் முறைகளை அளித்து வருகிறோமல்லவா! சர்வேஸ்வரனாம் ஸ்ரீஐயப்ப வழிபாடு நாளுக்கு நாள் சிறப்புப் பெற்று விளங்குவது குறித்து ஒரு புறம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், எத்தகைய கடுமையான விரதங்களுடன் ஸ்ரீஐயப்ப விரதம் மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அவையெல்லாம் தற்பொழுது சிறிது சிறிதாக மாறி பல இடங்களிலும் அவரவர் மனம் போன போக்கில் அமைகின்ற விரதமாக மாறிவிட்டதை நீங்களே அறிவீர்கள்.
சபரிமலைக்கு விரதம் பூண்டவர்கள் பலர் புகைபிடிப்பதுடன , மது போன்ற தீச் செயல்களில் ஈடுபடுவதும், வாய்க்கு வந்தபடி பேசுவதும், நிலவி வருவதை எவராலும் மறுக்க முடியாது. இதற்குக் காரணம், சபரிமலைக்கு விரதம் மேற்கொள்வதற்காக விரத முறையை எடுத்துக் கூறும், ஐயப்ப குருமார்கள் ஸ்ரீஐயப்ப அடியாரிடம் கடுமையான விரதங்களை மேற்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை நன்கு வலியுறுத்தாமையே., முறைப்படி விரதம் பூண இயலாதவர்களுக்கு விரத மாலையை அளித்தல் கூடாது. சனிக் கிழமையானது சபரிகிரீசனுக்கு மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக விளங்குகிறது.
சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டோர் யாத்திரையை நன்முறையில் நிறைவு செய்து நன்முறையில் திரும்பிட இல்லறப் பெண்களும், குடும்பத்தினரும்  சனிக் கிழமை விரதம் மேற்கொள்ள வேண்டும். சனிக் கிழமையன்று 108 மலர்களால் (பவளமல்லி) பத்துச் சரங்களாலான மாலையாக்கி, சேர்த்து ஸ்ரீசபரிகிரீசனுக்குச் சார்த்தி அதனை இறைப் பிரசாதமாக அவரவர் வீட்டுப் பூஜையறையில் வைத்து பின் நிர்மாலயப் (வாடிய) பூக்களை ஓடும் நதியிலோ, கடலிலோ சேர்த்திட வேண்டும். சனி ஹோரை நேரத்தில் உண்ணாவிரதம் தொடங்கி மாலையைத் தொடுக்க ஆரம்பித்து சனி ஹோரையிலே முடித்து சுவாமிக்கும் சார்த்திட வேண்டும். இதனால் கணவனுடைய தீய ஒழுக்கங்கள் தீர்ந்து அவர் நன்னிலை அடையவும் சாஸ்தாவிற்கான சனிக் கிழமையிலான சனி ஹோரை வழிபாடு பெரிதும் அருள்வழிபுரிகின்றது. இன்று கருநீல, கருமை நிற உணவு, பழங்களை ஸ்ரீஐயப்பனின் சந்நிதியில் படைத்து, அன்னதானம் செய்தபின் விரதத்தை நிறைவு செய்வதால் சாஸ்தா விரதப் பலன்கள் பல்கிப் பெருகுகின்றன.

அமுத தாரைகள்

1. ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி
பின்புற அட்டைப் படத்தில் கையில் வீணையை ஏந்தியவாறு தரிசனம் தருகின்ற ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி குழந்தைகளுக்குக் கல்வி செல்வத்தைத் தரும் கடவுளாகப் பரிமளிக்கின்றார். எங்கு? திருச்சி அருகே லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வர் சிவாலயத்தில்! வியாழனன்று குரு ஹோரை நேரத்தில் ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து குரு கிரஹத்திற்குரிய கடலை சேர்ந்த உணவைப் படைத்து அன்னதானம் செய்து வரபிள்ளைகள் மனோதைரியத்துடனும் திகழ்ந்து கல்வியில் பிரகாசிப்பர்.

ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி
லால்குடி

2. பஞ்சாங்கப் படன பூஜை :
பஞ்சாங்க படனம் என்ற சிறப்பான புத்தாண்டு வழிபாட்டை நம் பெரியோர்கள் அளித்துள்ளனர். இது இன்றும் பல ஆலயங்களில் சிறப்புடன் புத்தாண்டு தினத்தில் நடக்கிறது. தக்க பெரியோர்கள் மூலம் புத்தாண்டு தினத்தின் அம்சங்களையும், குணாதிசயங்களையும், நவக்ரஹ, திதி, கிழமை, நட்சத்திரம், யோக, கரண தேவதைகளின் தெய்வ அம்சங்களையும் நம் பெரியோர்கள் எடுத்துக் கூறிட, அதை நம் காதால் கேட்டு அறிதல் பெறுதற்கரிய பாக்யம். ஆனால் தற்காலத்தில் இதன் மஹிமையை அறியாது பலரும். இதனை விட்டுவிடுகின்றார்கள். புத்தாண்டு தினத்தன்று காலத்தை ந்டத்துகின்ற ஸ்ரீகால பைரவருக்கு வழிபாடு செய்தல் மிகச் சிறப்பானதாகும். ஸ்ரீபைரவரும், ஸ்ரீகால பைரவரும் கோயிலின் ஏதோ ஒரு தனி சந்நிதியில் எழுந்துள்ளமையால் அவர்தம் மகத்துவம் அறியாது பலரும் ஏதோ ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து விடுகின்றனர். புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு புது ஆண்டு சௌபாக்யமாக அமைய வேண்டிடுக! திருப்பத்தூர் [காரைக்குடி – மதுரை சாலை] அருகே வைரம்பட்டியில் உள்ள ஸ்ரீபைரவரை பிரமாதி புத்தாண்டில் மறைகள் ஓதி, வழிபட்டு, புனுகு சார்த்தி முந்திரிப் பருப்பு மாலையிட்டுப் பிரசாதமாக அதனை தானமளித்திட, வியாபார நஷ்டங்கள், அலுவலகத் துன்பங்கள், இல்லறக் கஷ்டங்கள் தணியும்.
3. ஸ்ரீஅய்யர் மலை கிரிவலம்
பல அற்புதமான சித்த வைத்ய மருந்து சக்திகள் நிறைந்த விருட்சங்களையும், தீர்த்தங்களையும் கொண்டதே திருச்சி குளித்தலை அருகே உள்ள ஸ்ரீஅய்யர்மலை, நம் கண்ணுக்குத் தெரியாத சூட்சும மூலிகைகள் பல இங்கு உண்டு. கண்ணுக்குத் தெரிந்தாலும் அவற்றிற்குரிய கட்டு மந்திரங்களை விடுவித்து குறித்த திதி, நட்சத்திர, ஹோரை நேரத்தில் குருவருளுடன் மூலிகையைப் பறித்துப் பதங்கட்டினால் தான் அதன் அற்புதப் பலன்கள் கைகூடும்! ஆனால் நடைமுறையில் இது சாத்யமா?

ஸ்ரீபைரவர்
வைரவன்பட்டி

4. சிறு தொழிலில் பெரு முன்னேற்றம்!
பொதுவாக அச்சுத் தொழில், கலர் ஆப்செட் பிரிண்டர்ஸ், மல்டி-கலர் பிரிண்டர்ஸ், ஸ்கீரின் பிரிண்டர்ஸ், போட்டோ எடுத்தல், Computer Aided Designs [Auto CAD, etc..], போட்டோ காமெரா, ரிப்பேர், இறைப்படங்கள் வரைவோர், Arts, Crafts இவர்களெல்லாம் தங்கள் தொழிலில் பேராசை கொள்ளாமல் தெய்வீகத்திற்கு நியாயமாக உதவிடுதல் வேண்டும். அவ்வாறு உதவுவோர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு முன்னுக்கு வரவேண்டும் என்றால் ஆன்மீகத்தில் பல வழிகள் உண்டு. அதில் முக்கியமாக சிறப்பாக வாழ வேண்டுமென்றால் கருடாழ்வார் நிழல்பட்ட மண்ணை எடுத்து சின்ன சந்தன மரப் பேழையில் இட்டு அந்தச் சிறிய பேழைக்குச் சந்தனம், குங்குமம் இட்டு இம்மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் 48 நாட்கள் ஜபித்து தான தர்மம் செய்து வர வாழ்க்கையில் நன்முறையில் முன்னுக்கு வந்திடலாம்..
மந்திரம் : “ஓம் தத்புருஷாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”
இந்த மரப் பேழையை [மர டப்பா] பத்திரமாக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு எடுத்துச் சென்று பெருமாளுடன் சம ஆசனம் கருடாழ்வாருக்குத் தரப்பட்டுள்ள இடத்தில் வைத்துப் பிரார்த்தனை செய்து அடிப்பிரதட்சிணம் தொடர்ந்து செய்து தான தர்மம் செய்து வந்திடில் நல்ல மாற்றம் காணலாம்.
5. மனக் கோல மண வாழ்வு சிறந்திட
திருமணங்கள் யாவும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதைப் பலரும் வாயளவே பேசுவார்கள். பெற்றோர்கள் இஷ்டப்படி திருமணங்கள் நடக்கும் போது மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதைப் பலர் உறுதிபட பேசுவர். இதில் ஏதோ சுயநலம் இருக்கிறது என்பதைப் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் விதிப்படிதான் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடந்த திருமணங்களைப் பெரும்பாலான பெற்றோர்களோ, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, உறவினர்களோ ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு போராட்டங்களிடையே திருமணம் நடைபெற்ற இளம் தம்பதியர் தங்கள் வாழ்நாளில் நன்றாக வாழ்ந்து அனைவர் மத்தியிலும் பொறாமைக் கண்கள் நடுவிலும் கை தட்டி சிரிக்கக் காத்திருப்பவர் நடுவிலும் முன்னேறி வாழ்ந்து காட்ட ஆன்மீகத்தில் பலவழிகள் உண்டு. அதில் முக்கியமாக மன்னார்குடியில் நாச்சியார் சந்நிதிக்கு எதிரில் கருடனுடைய தாயாகிய “வினதை” என்ற தேவி திருக்காட்சி கொடுத்து இளம் தம்பதியரை வாழ வைக்க அருளும் தெய்வம். இத்தெய்வத்திற்கு நேர்த்தி வைத்து இளம் தம்பதியினர் வேண்டினால் வாழ்க்கையில் முன்னேறலாம்..
6. அதிர்ச்சி நோய்கள் வராமலிருக்க...
சிலர் நம்மைத் தகாத சொற்களால் புண்படுத்தலாம். சிலர் நம்மை அலட்சியப் படுத்தலாம். சிலர் நம் உதவியை, நட்பை உதாசீனப்படுத்தலாம். ஏதாவது ஒரு முக்கிய வைபவத்தில் நாம் கலந்து கொள்ளச் செல்லும் போது நம்மை வரவேற்காமல் போகலாம். நம்மைக் கண்டு கொள்ளாமல் இருந்து வேதனை தரலாம். நாம் கேலி செய்யப்படலாம். இதனால் நமக்கு இரத்தக் கொதிப்போ, இருதய வலியோ, நரம்புக் கோளாறோ வர சந்தர்ப்பம் உண்டு. இது போன்ற சந்தர்ப்பங்கள், அதிர்ச்சிகள் நம் வாழ்நாளில் வராமல் இருக்க வேண்டுமென்றால் அதற்குப் பல வழிகள் இருந்தாலும் ஒரு முக்கிய வழியை இங்கு தெரிவிக்கின்றோம். ஆனைமலையில் உள்ள ஆலயத்தில் அருள்மிகு மாசாணியம்மன் முப்பது அடி நீளத் திருமேனியுடன் சயனித்த கோலத்தில் அருள்புரிகிறார். அந்தத் தாயிடம் முறையிட்டு “மானத்திற்கு பங்கம் வராமல் அருள வேண்டும், அம்மா!” என்று கதறி அழுது வேண்டி, தான, தர்மம் தொடர்ந்து செய்திடில் நல்ல மாற்றம் காணலாம்.
7. நல்ல வேலை கிட்டிட
இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வரக் காரணம் யாது எனில் அவரவர் விருப்பப்படி வேலை வேண்டும் என்று நினைப்பது தான் முக்கிய காரணமாகும். வேலையே செய்யாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற கற்பனையைப் பலவித சூழ்நிலை, சந்தர்ப்ப தொடர்புடைய சக்திகள் ஏற்படுத்தி விட்டதும் காரணமாகும். “எந்த நேர்மையான வேலை கொடுத்தாலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வேன்”, என்ற உறுதிப்பாடு இளைஞர்களிடம் வரவேண்டும். இவ்வாறு நல்ல வேலை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் இம்மந்திரத்தை விடாமல் தினமும் 1008 முறைக்குக் குறையாமல் 48 நாட்கள் ஜபித்து வருவதுடன் வேலை பாக்யம் தரும் செவ்வாய் பகவானின் வாகனமான ஆடுகளுக்கு வேர்க்கடலை அளித்து வரவேண்டும்.
மந்திரம் “யாதேவி சர்வ பூதேஷு சுபர்ணீ ரூபேணே சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :”
8. உரிய சொத்தைப் பெற...
சில குடும்பங்களில் முதல் தாரத்திற்குப் பிறந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுவர். இரண்டாம் தாரத்திற்கு பிறந்த குழந்தைகளை நன்றாக கவனித்து சொத்து, நில புலன்களைத் தருகின்ற தாயாரோ, தந்தையாரோ முதல் தாரக் குழந்தைகட்குத் துரோகம் செய்வதுமுண்டு. இவ்வாறு துன்பப்படும் பிள்ளைகள் தங்களுக்கு உரித்தான சொத்துக்களோ, உரிமைகளையோ பெற வேண்டும் என்றால் இரண்டு தலவிருட்சம் உள்ள கோயிலுக்குச் சென்று தல விருட்சங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு தல விருட்சங்களை வலம் வந்து அன்னதானம், வஸ்திர தானம், தர்மம்தனைத் தொடர்ந்து செய்து வந்திடில் நல்ல மாற்றம் ஏற்படும்.
9. தொடரும் மரண தோஷங்கள் நீங்கிட ...
பல குடும்பங்களில் குறிப்பிட்ட நாள், கிழமை, நட்சத்திரங்களில் இறந்தவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதே கிழமை, நட்சத்திரம், திதிகளில் இறப்பதும் உண்டு. அதோடு மட்டுமல்லாமல் இவ்வாறாக இறப்பதால் சொத்துக்களை யார் அனுபவிப்பது என்று தெரியாமல் பலர் திக்கு முக்காடுவதும் உண்டு, இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்த வீட்டார் நல்வழி காண ஒரு மார்க்கம் உண்டு. எமதர்மராஜனே வாகனமாய் அமர்ந்த ஸ்ரீவாஞ்சினாதருக்கு அபிஷேக ஆராதனை, தான, தர்மம், வஸ்திர தானம் செய்து தொடர்ந்து நேர்த்தி வைத்திடில் சொத்துக்களை முறையாக பாகம் பிரித்து அனுபவிக்க வழி பிறக்கும். இந்த இடம் குடவாசல் அருகிலுள்ள திருவாஞ்சியம் திருத்தலம் ஆகும்.

10. கணவன் மனைவியிடையே பேதங்கள் அகல
வாழ்க்கையில் திருமணம் நடந்து உண்மையான அன்பு நிறைந்த கணவன் மனைவியைத் தற்காலத்தில் காண்பதே மிக அரிதாக இருக்கின்றது. ஏனென்றால் தற்காலத் திருமணங்கள் பலவித சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு நடைபெறுவதே காரணமாகும். இவ்வாறு நடைபெற்ற திருமணங்களால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி ஒருவருக்குள் ஒருவர் பேசாமல் இருப்பது உண்டு. கணவன் மனைவி சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவு வெற்றியடைய வேண்டுமென்றால் திருகோடிக்கா என்ற தலம் சென்று முக்கோடி தீர்த்தத்தில் மூழ்கி சிவனை மன்றாடி வேண்டி அன்னதானம், தான, தர்மங்கள் செய்திடில் கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை வளரும்.
11. மூன்றும் ஒன்றாய் நன்றாய் இடுக!
பரம்பொருளாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் பிரியமான நெற்றித் திருநாமத்தை இடுகையில் தற்காலத்தில் நெற்றியில் நடுச் சிவப்பு நிறத் திருச்சூர்ணத்தை மட்டும் இடுகின்றார்கள். இது தவறான பழக்கமாகும். பாற்கடலில் இருந்து அவதரித்த தாயாரே மஹாலட்சுமி ஆதலின் பாற்கடலைக் குறிக்கும் இருவெள்ளித் திருநாமங்களுக்கிடையே ஸ்ரீமஹாலட்சுமியைக் குறிக்கும் சிவப்பு நிறத் திருச்சூர்ணத்தை இடுவது தான் சிறப்புடையதும், சரியானதுமாகும். எனவே, ஸ்ரீமஹா விஷ்ணுவிடமிருந்து ஸ்ரீமஹாலட்சுமியைப் பிரிப்பது போலான, நெற்றியில் வெறும் சிவப்பு நிற நாமத்தை இடுவதைத் தவிர்த்து, சர்வேஸ்வரனாம் திருமாலின் பரிபூரணமான திருவருளைப் பெற்றிட இரு வெண்நாமங்களிடையே சிவந்த திருச்சூர்ண நாமமிட்டுத் தெய்வீகத்தைப் பெருக்குங்கள்! வெறும் சிவப்புக் கோடிட்டுச் சுருக்கி சாபத்திற்குள்ளாகாதீர்கள்!
12. ஸ்ரீஅய்யர் மலை கிரிவலம்
சாதாரணப் பாமரரும், அறிவாளியாக இருந்தும் அகங்காரத்தால் ஆணவ தாண்டவமாடும் அறிவு ஜீவிகளும், நடுத்தர மக்களும் பயன்பெறும் பொருட்டுத்தான் பௌர்ணமி தோறும் சித்புருஷர்களும், யோகியரும் அரிய மூலிகைகளின் சாரத்தை அய்யர்மலை மேல் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் சேர்க்கின்றனர். கால்படக் கூடாத உத்தம தெய்வீக தீர்த்தம். இதனருகே உள்ள குகையில் தாம் உத்தம பஞ்சநத சித்தர்கள் யோக தவத்தில் சூட்சும ரூபத்தில் தியானிக்கின்றனர்.. அமிர்தத்தை, சித்தாமிர்தத்தை அருந்தும் வல்லமை உடைய பதினாறு கலைகளில் தேர்ந்தவரே ஸ்ரீசந்திர பகவான், பௌர்ணமியன்று ஸ்ரீசந்திர பகவான் தம்முடைய அமுத கிரணங்களால் சித்தாமிர்த தீர்த்தச் சாரத்தையும், சித்த மருந்துப் பாறைகளின் திரவியச் சக்தியையும் ஈர்த்து பௌர்ணமி அமிர்த கிரணங்களாக இங்கு கிரிவலம் வருவோர்க்கு அளிக்கின்றார். எனவே, பௌர்ணமியன்று ஸ்ரீஅய்யர் மலையை கிரிவலம் வருவோர்க்கு நோய் நிவாரண சக்தி அபரிமிதமாகக் கிட்டுகின்றது. குழந்தைகள் நன்முறையில் ஒழுக்கத்துடன் வளர்வதற்கு ஸ்ரீஅய்யர் மலை கிரிவலம் பெரிதும் நல்வரங்களைத் தரும்.
முக்கிய பண்டிகைகள் – ஏப்ரல் 1999
ஏப்ரல் 14 – பிரமாதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தினம்  
ஏப்ரல் 18 – அட்சய திருதியை ( இன்று சிவலிங்கத்திற்கு அன்னம் படைத்து அன்னாபிஷேகம் செய்து (நெய் சேர்த்து) அன்னலிங்கம் செய்து பூஜித்து அன்னலிங்கத்தையே பிரசாதமாக (சாம்பார், பொடி, ரசம் etc. சேர்த்து) அன்னதானம் செய்திடுக. அன்னதானத்திற்கான தரித்திர நிலை வராதிருக்க உதவும் இறைச் சமுதாய வழிபாடு இது. பிரமாதி வருடத்தில் உணவுப் பண்டங்களில் விலை கூடும் என்ற சோதிட கணித நியதி இருப்பதால் இறையருளால் இதற்கான நிவர்த்தியாக பரிஹாரத்தைப் பெற்றிட அட்சய திருதியை அன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்து கூட்டு வழிபாடும், ஏழைகளுக்கு அன்னதானமும் செய்திடல் வேண்டும். ஸ்ரீஅன்னபூரணியாய், அம்பிகை பரிமளிக்கின்ற, பிரபஞ்சத்தின் லிங்காத்ம அன்னசாரமாய் பரிணமிக்கின்ற, தஞ்சாவூர் அருகே உள்ள திருச்சோற்றுத்துறை சோற்றுறைநாத லிங்க மூர்த்திக்கு இன்று அன்னாபிஷேகம் செய்து அன்னதானம் செய்திட குடும்பத்தின் வறுமையும், வியாபார, சொத்து நஷ்டங்களால் ஏற்பட்டுள்ள தரித்திர நிலையும் தீரும்.
ஏப்ரல் 29 – சித்திரா பௌர்ணமி திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், தாந்தோன்றிமலை (கரூர்), பழனி, திருச்சி மலைக்கோட்டை, அய்யர்மலை, குன்றக்குடி, சென்னை அருகே திருக்கச்சூர், பர்வத மலை போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் வருவதற்கு விசேஷமான திருநாள், ஸ்ரீசந்திர பகவான் தன்னுடைய பதினாறு கலைகளுடன் பரிணமிக்கின்ற மகத்தான நாள். ஔஷதாதிபதியாக விளங்குகின்ற ஸ்ரீசந்திர பகவானை மூலிகா தேவதைகளும், நோய் நிவர்த்தியளிக்கும் அசுவினி தேவர்களும் துதிக்கும் விசேஷமான நாளிது. நோய் நிவர்த்தி தரும் முக்கியமான பௌர்ணமி!
ஏப்ரல் 29 – இன்று மாலை 6.15 முதல் 30.4.1999 இரவு 8.24 வரை திருக்கணித முறைப்படி பௌர்ணமி திதி நிரவியுள்ளது. பௌர்ணமி கிரிவல நாள்.
நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாட்டு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணம் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.4.1999 – பாதாளத்தில் (பள்ளத்தில்) இருக்கின்ற தெய்வங்களுக்கு கிழங்கு நைவேத்யம் வைத்து தான, தர்மம் செய்திடில் – சுரங்கத் தொழிலில் ஈடுபட்டோர் நலம் பெறுவர்.
2.4.1999 – வீடு இல்லாதோர், அடிமைத் தொழில் செய்வோர் , நித்திய வேலைக்காக ஏங்குவோர் இன்று கருடன் நிழல் பட்ட மணலை எடுத்து வைத்து பூஜித்தால் – நலம் பெறுவர்.
3.4.1999 – மோட்டார் வைண்டிங், (Fan repairs), காயில் ரிப்பேர், லேத் பட்டறை (Heavy Lathe works) வேலை செய்வோர் இன்று ஆமைக்கு உணவிட்டு பூஜித்தால் – தொழிலில் நலம் பெறுவர்.
4.4.1999 – இன்று மயில்களுக்கு உணவிட்டு பூஜித்தலால் – மருந்துக்கடை (நாட்டு மருந்து, ஆங்கில மருந்து) வைத்திருப்பவர்கள் நலம் பெறுவர்.
5.4.1999 – வெள்ளாட்டினை (தலைமை ஆடு) குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் இட்டு, நல்ல தழை உணவினை அளித்து பூமாலை இட்டு வலம் வந்து வணங்கிடில் – செவ்வாய் தோஷ பெண்ணுக்கும், ஆணுக்கும் தோஷ நிவர்த்தி (தொடர்ந்து செய்திடில்) கிட்டும்..
6.4.1999 – உடல் முழுவதும் கருப்பாகவும், நெற்றியில் மட்டும் வெள்ளை நிற நாமம் உடைய நாய்க்கு பொறை, பிஸ்கட், பால், அளித்திடில் – வீட்டில் தொலைந்து போனவர்கள் விவரம் தெரியும்.
7.4.1999 – பச்சை கிளிக்கு கோவைப்பழம், கொய்யாப்பழம், நெல் தானமாய் அளித்திடில் – குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவர்.
8.4.1999 – வயதான பல் இல்லாதவர்களுக்கு இளம் நுங்கு தானம் – வயிறு சம்பந்தமான நோய்களுக்குப் பரிகாரம் ஆகும்.
9.4.1999 – ஆளைப் பார்த்தவுடன் அவர்கள் உருவத்தை வரைகின்ற ஒவியர்களுக்கு (Artists) அன்னதானமும், வஸ்திர தானமும் அளித்திடில் – வரவேண்டிய கடன் தொகை திருப்பி வரும்.
10.4.1999 – புளி, உப்புதனை ஏழை குடும்பங்களுக்கு தானம் அளித்திடில் – மறைத்து வைக்கப்பட்ட குடும்ப ரகசியங்கள் வெளியில் வரும்.
11.4.1999 – காரம் பசுவிற்கு அல்லது கறுப்பு நிறப் பசுவிற்கு வயிறார கோதுமை, தவிடு, புல்கட்டு தானமாய் அளித்திடில் – வீட்டிற்குள்ளேயே உறவாடி கழுத்தறுப்பவன் வெளிச்சத்துக்கு வருவான்.
12.4.1999 – கேஸ் (Gas) எடுத்துக் கொண்டு Supply, செய்கின்ற ஆண்களோ, பையன்களைளோ அழைத்து வயிறார உணவளித்து வஸ்திர தானம் அளித்திடில் – கேஸினால் (வாயுவால்) இருதய நோய் வருவதைத் தவிர்க்கலாம்.
13.4.1999 – செருப்பே இல்லாது இருக்கின்ற தன் மனைவிக்கு புதிய செருப்பு வாங்கித் தருதல் – நாயினால் வருகின்ற துன்பம் போகும்.
14.4.1999 – இன்று கீரிப்பிள்ளைக்கு உணவளித்து தொட்டுத் தடவி வணங்கிடில் – பகைவனால் வருகின்ற துன்பம் தீரும்.
15.4.1999 – கருங்குருவ , கரடி, காராம் பசு ஏதேனும் கருமை நிற உயிரினத்திற்கு உணவளித்தல் – உறவினர்களுக்குள் உள்ள வேற்றுமை நீங்கும்.
16.4.1999 – காலணி செய்யும் தொழிலாளர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் – தேடிப் போன பொருள் தானே வரும்.
17.4.1999 – தீட்சிதர் பாணியில் குடுமி வைத்துள்ள நல்ல தியாக மனப்பான்மை உள்ளவர்க்கு, நல்பக்தி, உடையோர்க்கு அன்னதானம் /வஸ்திர தானம் – மனம் வெறுத்துப் போன மகன் தானே திரும்பி வருவான்.
18.4.1999 – கோவில் கதவுகள் சீரமைப்பு, வண்ணம் பூசுதல் – இக்கைங்கர்யத்தால் வேண்டாம் என ஒதுக்கிய திருமணம் வேண்டி திரும்ப நடக்கும்.
19.4.1999 – மலைவாழ் ஏழைகட்கு கம்பளி தானம் – வீடு/அலுவலக இடமாற்றம் நல்லதாய் அமையும்.
20.4.1999 – பசுக்களைப் பராமரிப்போர்க்குப் பசுவிற்கான புதுக்கயிறு வாங்கித் தருதல் – வீட்டில் தம்பதியர்க்கிடையே ஏற்படும் சிறு சண்டைகள் நிவர்த்தியாகும்.
21.4.1999 – கருடாழ்வார் அமர்ந்த நிலையில் உள்ள விஷ்ணு கோயில்களில் திருப்பணி – பல நாட்களாயுள்ள உடல் உபாதை குறையும்.
22.4.1999 – ஏழை மாணவர்கட்கு இலவசப் பாடபுத்தகம், நோட் வாங்கி தருதலால் – குடும்பத்தில் அமைதி நிலவும்.
23.4.1999 – வாஸ்து பூஜை முறையாகச் செய்து அன்னதானம் – குடும்பத்திலுள்ள குழப்பம் தீரும்.
24.4.1999 – புறாக்களுக்கு உணவிடுதல் – நல்ல செய்திகள் வந்து சேரும்.
25.4.1999 – பசுக்களுக்குப் புல், அகத்திக் கீரை உணவாக அளித்தலால்  குடும்பத்தில் கலகம் செய்பவர்களிடமிருந்து விடுதலை.
26.4.1999 – பெருமாள் கோவிலில் தேங்காய் சாதம் தானம் – எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களால் வரும் துன்பம் நீங்கும்.
27.4.1999 – பள்ளிகட்கு மர, இரும்பு பெஞ்சு தானமாக அளித்தல் – வீட்டில் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்..
28.4.1999 – கோவிலில் வாத்யம் வாசிக்கும் ஏழைகட்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்தலால் – குடும்பத்தில் மங்களகரமான காரியம் நடக்கும்.
29.4.1999 – வயதானவர்களுக்கு வயிராற உணவிட்டு வணங்குதல் – மனைவிக்கு ஏற்படும் உடல் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
30.4.1999 – மின்சார விளக்கில்லா வீடுகட்கு மின் ஒளி பெற உதவுதல் – தீராத கடன் தீரும்.
ஒரு முக்கிய அறிவிப்பு – ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், கிரிவலப் பாதை, காஞ்சி ரோடு, ஆடையூர், திருஅண்ணாமலை – 606604.
ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்ற இறைத் திருப்பெயரில் திருஅண்ணாமலையில் உள்ள எங்களுடைய ஆஸ்ரமம் மற்றும் அலுவலகத்தைத் தவிர வேறு எங்கும் எங்களுக்கு எந்த விதமான கிளையோ, அலுவலகமோ, உபஆஸ்ரமமோ, கிடையாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதுடன் அன்பர்களை மிகவும் கவனத்துடன் செயல்படும்படியும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.... ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் (சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசன இடத்தில்), ஆடையூர் , திருஅண்ணாமலை – 606 604.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam