தொட்டுக் காட்டிய வித்தை ... |
“தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது”, என்பது சித்தர்கள் வாக்கு. எந்த வித்தையாக இருந்தாலும் அதை முறையாகக் கற்றுக் கொள்ள ஒரு வழிகாட்டி தேவை. நல்ல காரியமாக இருந்தாலும், வேறு காரியமாக இருந்தாலும், எல்லா காரியங்களுக்கும் ஒரு முன்னோடி இருந்தால்தான் அதை சிரமமில்லாமல் நிறைவேற்ற இயலும்.
கார் ஓட்டுவது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். அதுவே யாருடைய உதவியும் இன்றி ஒருவர் தானாகவே காரை ஓட்ட ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறிருக்க உலகிலேயே மிகவும் கடினமான பாடமான ஆன்மீகப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கு நிச்சயமாக ஒரு வழிகாட்டி தேவை அல்லவா? இதைத்தான் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது”, என்று அனுபவத்தின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
நமக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுக்கும் ஒருவரை வழிகாட்டி, முன்னோடி, ஆசிரியர் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். கடவுளை நமக்குக் காட்டக் கூடிய ஒருவரையே நாம் குரு, சற்குரு என்று அழைக்கிறோம். எல்லோரும் குருநாதர் ஆகிவிட முடியாது. கடவுள் தரிசனம் பரிபூரணமாகப் பெற்ற ஒருவர்தான் மற்றவர்கள் கடவுளை அடைய வழிகாட்ட முடியும். கடவுள் அனுபவம் முழுமையாக வாய்க்கப் பெற்றவர்களைத்தான் சற்குரு என்று அழைக்கிறார்கள்.
கலியுக மக்கள் பெற்ற செல்வங்களில் மிகப் பெரிய அனுகிரகமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் அது திரு வெங்கடராமன் அவர்கள் பூமியில் மனித வடிவில் எடுத்த அவதாரமே ஆகும். இறை பக்தியில் இமயமென உயர்ந்து, குருமங்கள லோகத்தில் திருஆட்சி செய்யும் அவர் நமக்காக மிகவும் கீழிறங்கி பூலோகத்திற்கு வந்து குழந்தையின் கையைத் தந்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்குச் சொல்லித் தருவதைப் போல ஆன்மீகம் என்னும் மிக மிகக் கடினமான பாடத்தை மிக எளிய முறையில் அப்பெருமான் நமக்குப் பயிற்றுவித்தார். “சுவாமிஜி, குருநாதர், ஆசான் என்ற எந்த மரியாதைப் பட்டங்களாலோ, தகுதி உடைய வார்த்தைகளாலோ யாரும் தன்னை அழைக்க விரும்பாதவர். எல்லோரும் தன்னை “வாத்யார்” என்று அழைப்பதையே மிகவும் அன்புடன் ஏற்றுக் கொள்வதால் இத்தொடரில் நாம் அவரை வாத்யார் என்றே குறிப்பிடுகிறோம்.
பெற்ற தாயினும் சாலப் பரிந்து அன்புடன் தமது சீடர்களுக்கு அவர் ஆன்மீகப் பொக்கிஷங்களை அள்ளி வழங்கிய விதம் கேட்க, கேட்க தெவிட்டாத அமுதமாகும். அந்த இனிய அமுதப் பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இத்தொடரில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் யாவும் 1993 முதல் 2008 வரையிலான 15 வருட இடைவெளியில் திரு வெங்கடராமன் அவர்களுடன் குருகுல வாசத்தில் நெருங்கிப் பழகிய அடியார்களால் வெளியிடப்பட்டவையே.
கடவுள் தவறு செய்தால் ? |
1994ம் வருடம். கடுமையான கோடை காலம் அது. திருஅண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமக் கட்டுமானப் பணிகள் பாதி நிறைவேறிய நிலையில் இருந்தன. அப்போது கட்டிட வேலைகள் அனைத்தையும் நமது ஆஸ்ரம அடியார்களே மிகவும் ஆர்வமுடன் நிறைவேற்றி வருவர். மணல், செங்கல் சுமப்பது, சிமெண்ட் கலவை போடுவது, கிணற்றில் நீர் இறைப்பது, தரையில் ஜல்லி நிரவுவது போன்ற எந்த வேலைக்கும் கூலி ஆட்களை நியமிப்பது கிடையாது. இந்த ஒவ்வொரு வேலையிலும் ஈடுபடும் ஒவ்வொரு அடியாருக்கும் அற்புதமான ஆன்மீகப் பாடங்கள் நமது சற்குருநாதர், திரு வெங்கடராமன் அவர்கள் மூலம் கிட்டும்.
அடியார்கள் அனைவரும் அரசு நிறுவனங்கள், வங்கிகள், என்ஜினியரிங், மருத்துவம் என பல துறைகளிலும் பணிபுரிபவர்கள். கடுமையான உடல் உழைப்பிற்குப் பழக்கமில்லாதவர்கள். ஆனால், ஆஸ்ரமத் திருப்பணி என்று வரும்போது அனைவரும் தங்களை மறந்து கட்டிட வேலைகளில் ஈடுபடும்போது அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாகவும், உற்சாகவும் இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில் வெயிலில் செங்கல் சுமக்கும் அடியார் ஒருவர் வாத்யாரிடம் வந்து, “வாத்யாரே, வெயில் மிகவும் கடுமையாக இருக்கிறது. அடியேனுக்கு ஒரு தொப்பி கொடுத்தால் வெயிலின் கடுமை தெரியாமல் இருக்கும்”, என்று கூறினார். வாத்யார், “அப்படியா, வெயில் மிகவும் கடுமையாகத்தான் இருக்கிறது. ஒன்றிரண்டு தொப்பிகள்தான் இருந்தன. அதை மற்ற அடியார்கள் வாங்கிப் போய்விட்டனர். நம்மிடம் இன்னும் நிறைய தொப்பிகள் இருந்தன. அவற்றை எங்கு வைத்தேன் என்று ஞாபகமில்லை. முடிந்தால் அப்புறம் தேடித் தருகிறேன். நீங்கள் வேண்டுமானல் இப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பொழுது சாய்ந்தபின் வேலையைத் தொடரலாம்”, என்று பதிலளித்தார்.
அப்போது தொப்பி, மளிகை சாமான், மண்வெட்டி, கடப்பாறை போன்ற பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கும் பொறுப்பில் இருந்த அடியார் வாத்யார் அருகில் இருந்தார். அவர் வாத்யார் கூறிய வார்த்தைகளை நன்கு ஆராய்ந்து பார்க்காமல், “வாத்யாரே, அடியேனுக்குத் தொப்பிகள் இருக்கும் இடம் தெரியும். அடியேன் கொண்டு வந்து கொடுக்கட்டுமா?” என்று கேட்கவே வாத்யாரும் மிக்க மகிழ்ச்சியுடன் “அப்படியா, ரொம்ப சந்தோஷம். எங்காவது ஒரு தொப்பி இருந்தால் அதை நமது நண்பரிடம் கொடுத்து விடேன்”, என்று சொன்னார். சிறிது நேரத்திற்குப் பின் தொப்பியைப் பெற்றுக் கொண்டு அந்த அடியார் செங்கல் சுமக்கும் பணிக்குத் திரும்பி விட்டார்.
அவர் சென்ற பின் வாத்யார் தொப்பியைத் தேடிக் கொடுத்த அடியாரிடம், “ரொம்ப புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்து விட்டாயே”, என்று சொல்லவே தொப்பியைக் கொடுத்த அடியார் உஷாரானார். அவர் செய்த காரியத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை வாத்யார் பேசிய விதத்திலிருந்து ஓரளவு தெரிந்து கொண்டார். அதை உறுதி செய்வது போல் வாத்யார் தொடர்ந்தார், “ஏம்ப்பா, நாங்க ஒன்னு சொன்னா, அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். இது ஏன் உங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் எதையும் மறப்பது கிடையாது. அவ்வப்போது மறப்பது போல் சில காரணங்களுக்காக நாடகமாட வேண்டியிருக்கும். அதுதான் உண்மை.
“இப்படித்தான் ஒரு தடவை அடியேன் என்னோட வாத்யாரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். (வாத்யாரும் தன்னுடைய குருநாதரை வாத்யார் என்றே அழைப்பார். எனவே, நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்களை வாத்யார் என்றும் அவருடைய குருநாதரை பெரிய வாத்யார் என்றும் அழைப்பது நமது ஆஸ்ரமப் பாரம்பரியம்.) ஒரு நாள் பெரிய வாத்யார் என்னிடம், “ஏன்டா, இட்லி, ஏதோ ஒரு சமயம் கடவுள் தெரியாமல் ஒரு தப்பு பண்றார்ருன்னு வச்சுக்கயேன். அப்போ அத தப்புன்னு கொல்லுவியா, ரைட்டுனு சொல்லுவியா?” என்று கேட்டார். (பெரிய வாத்யார் நமது வாத்யாரை அடிக்கடி செல்லமாக அழைக்கும் பெயர்களில் ஒன்று “இட்லி” என்பது. வாத்யாருடைய மூலாதார லோகமான குருமங்கள கந்தர்வ லோகம் இட்லி வடிவில் இருப்பதால் அவரை இப்படி பெரிய வாத்யார் அழைக்கிறார் என்பதை பின்னாட்களில்தான் நமது குருநாதரே உணர்ந்து கொண்டாராம்.).
“ஆஹா, நம்ம வாத்யாருக்கே ஒரு சந்தேகம் வந்து அதற்குப் பதில் நம்மைக் கேட்கிறார் என்றால் ரொம்ப கரெக்டா சொல்லனுமே என்று பலமாக மூளையைக் குடைந்து யோசித்து ஒரு புத்திசாலித்தனமான பதிலைச் சொன்னேன். தப்புன்னா, யார் தப்பு பண்ணினாலும் அது தப்புதான். கடவுளே தப்பு செய்தாலும், தப்பு தப்புதான், வாத்யா....” அடியேன் பதிலைச்சொல்லி முடிப்பதற்குள் அடியேனுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது. அப்படி ஓர் அறையை அடியேன் வாழ்நாளில் வாங்கியதே கிடையாது. அடியேனுடைய ஸ்கூல் வாத்யார்கள், அடியேனுடைய அப்பா என்று பலபேரிடம் அடி வாங்கி, வாங்கியே புண்ணான உடம்புதான் இது.”
“ஆனால், எப்போதுமே அன்பொழுக பேசும் பெரிய வாத்யார் அடியேனை அடித்ததே கிடையாது. அதுதான் அடியேன் அவரிடம் வாங்கிய முதல் அறை. அடியேனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணில் பூச்சி பறப்பது போல் தோன்றியது. தலையைச் சுற்றி மயக்கம் வந்து விட்டது. கண்களில் நீர் தாரை, தாரையாக வழிந்தோடியது. வலி தாங்காமல் கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டேன். ஆனால், அந்த அறை வாங்கியவுடன்தான் அடியேனையும் அறியாமல் என்றும் உள்ள நித்தியமான உண்மை வார்த்தைகளாக வெளி வர ஆரம்பித்தது.”
“விக்கி விக்கி அழுது கொண்டே சொன்னேன், வாத்யாரே, கடவுள் தப்பே செய்ய மாட்டார். கடவுள் தப்பே செய்ய மாட்டார்.” பெரிய வாத்யார் சிம்மம் கர்ஜிப்பது போல் குரல் கொடுத்தார், “அப்படி வா வழிக்கு, ஏன்டா நாயே, எவ்வளவு தைரியமிருந்தால் கடவுள் தப்பு செய்தாலும், தப்பு தப்புதான்னு சொல்லுவ. இப்படி கடவுளைப் பத்தி அவதூறு பரப்பறதுக்குதான் ஒன்ன ராவா, பகலா கோயில், குளம்னு கூட்டிக்கிட்டு அலஞ்சனா, மகான்களோட ஜீவ சமாதி எல்லாம் கூட்டிக் கொண்டுபோய் காம்பிச்சனே. இப்படி கடவுள் மேலே நம்பிக்கை இல்லாம பேசறதுக்காடா இந்த தள்ளாத வயசுல ஒன்னோட மைல் கணக்குல நடந்து வந்தே கடவுளோட அருமை பெருமைகளைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கேன்”, என்று பொரிந்து தள்ளினார். அடியேனாலே ஒன்னும் பதிலே சொல்ல முடியவில்லை. ஆனால், அன்று அடியேன் கற்றுக் கொண்ட பாடம் இன்று வரை என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது என்பது உண்மையே.”
“இதிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்? கடவுள் எப்படித் தப்பு செய்ய மாட்டாரோ அதே போல் குருவும் தப்பு செய்ய மாட்டார், எதையும் மறக்கவும் மாட்டார். அப்படித் தப்பு செய்வது போல் தோன்றினால் அது உங்களிடம் உள்ள குறைபாடே தவிர, குருநாதருடைய குறைபாடாகாது. இப்போது இந்த தொப்பி நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அந்த அடியார் இன்றைக்கு இரண்டு மணி நேரம் வெயிலில் வேலை செய்தால் அதனால் கிடைக்கும் புண்ணியம் அவருடைய குடும்பத்திற்குப் போதும் என்ற தெய்வீகக் கணக்கை நாங்கள் அறிந்திருப்பதால், அவருக்குத் தொப்பி தராமல் அதைக் காரணம் காட்டி அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லுகிறோம்.”
“ஆனால், உன்னுடைய புத்திசாலித்தனத்தினால் நீ தேடிக் கொடுத்த தொப்பியைப் போட்டுக் கொண்டு அவர் இன்னும் இரண்டு மணி நேரம் வேலை செய்து மேற்கொண்டு புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த அதிகப்படியான புண்ணிய சக்தி அவர் தன்னுடைய தொழிலில் செய்யும் தவறுகளிலிருந்து காப்பாற்றுவதற்கு அவருக்கு உதவுவதால் மேலும் விபரீதமான பல தவறுகளைச் செய்ய முயற்சிப்பார். அதனால் வரும் தண்டனைகளுக்கு யார் பொறுப்பேற்பது?” என்று கூறி அடியாரைப் பார்க்க அடியார் தன்னுடைய அதிகப் பிரசங்கித் தனத்தை எண்ணி வெட்கித் தலை குனிந்தார்.
நாட்கள் சில சென்றன..
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த ஒரு அடியார் குடும்பத்துடன் திருஅண்ணாமலை கிரிவலம் செல்ல புறப்பட்டார். வாத்யார்தான் அவரை கிரிவலம் சென்று வருமாறு கூறியிருந்தார். வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. அவர் வாத்யாரிடம் வந்து, “வாத்யாரே, வெயில் அதிகமாக இருக்கிறது. அடியேனுக்கு ஒரு தொப்பி கொடுத்தால் அதை கிரிவலம் வந்து திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றார். வாத்யார் அருகில் நின்ற அடியாரைப் பார்த்து, “ஏன் சார், நம்மிடம் ஏதாவது தொப்பி இருக்கிறதா?” என்று கேட்டார். அந்த அடியார்தான் ஏற்கனவே வாத்யாரிடம் தொப்பி பாடம் கற்றவர். எனவே, இந்த முறை ஜாக்கிரதையாக, “வாத்யாரே, தொப்பி இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னால் அடியேன் பார்த்து விட்டு வருகிறேன்”, என்று சிக்கல் ஏற்படாதவாறு ஒரு பதிலை யோசித்துச் சொன்னார்.
வாத்யார் சிரித்துக் கொண்டே, “பரவாயில்லை, பாடத்தை நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறாயே”, என்று சொல்லி, “இவர் ரொம்பவும் சீனியர் அடியார், அடியேனுடன் பல கோயில்களுக்கு வந்து திருப்பணிகளில் ஈடுபட்டவர், அவர் கேட்கும்போது நாம் இல்லை என்று சொல்ல முடியாது, எங்காவது தேடி நாலு தொப்பி எடுத்துக் கொண்டு வந்து கொடு”, என்று சொன்னார். அந்த அடியாருக்குத் தொப்பி இருந்து இடம் நன்றாக தெரியுமாதலால் தொப்பியை எடுத்துக் கொண்டு வந்து வாத்யாரிடம் கொடுக்க, வாத்யாரும் அதை தன் கையாலேயே அந்த அடியார், அவருடைய மனைவி, இரு குழந்தைகளுக்குக் கொடுத்து, “நல்லபடியாக கிரிவலம் சென்று வாருங்கள். கிரிவலம் முடிந்த பின் தொப்பியை இவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் அடுத்து முறை ஆஸ்ரமத்திற்கு வரும்போது இதேபோன்ற தொப்பிகளில் நான்கு டஜன் வாங்கி வாருங்கள். அப்போதுதான் அதை வசதி இல்லாதவர்கள் கேட்கும்போது கொடுக்க முடியும்”, என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அந்த குடும்பத்தினர் கிரிவலம் சென்று மாலையில் திரும்பினர். வாத்யார் சொல்லியபடி அவர்கள் திருப்பிக் கொடுத்த நான்கு தொப்பியையும் மற்ற தொப்பிகளுடன் சேர்த்துப் பத்திரமாக வைத்து விட்டார் தொப்பி பொறுப்பில் இருந்த அடியார். மறுநாள் காலை கிரிவலம் சென்ற குடும்பம் தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டது. வாத்யார் தொப்பி பொறுப்பில் இருந்த அடியாரிடம், “அந்த நாலு தொப்பிகளை எங்கு வைத்திருக்கிறாய்?” என்று கேட்க அடியாரும் அவற்றை மற்ற தொப்பிகளுடன் வைத்திருப்பதாகக் கூறவே வாத்யாருக்குக் கோபம் வந்து விட்டது. “அதை ஏன் மற்றத் தொப்பிகளுடன் வைத்தாய்? சரி சரி, உடனே போய் அந்த நாலு தொப்பிகளையும் எடுத்து நெருப்பில் போட்டு விடு”, என்று கூறினார்.
அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர் ஓடோடிச் சென்று அந்தத் தொப்பிகளை எடுத்துக் கொண்டு போய் அன்னதானத்தில் மீந்த எச்சில் இலைகளை ஒன்று சேர்த்து எரிக்கும் தணலில் போட்டு எரித்து விட்டு வாத்யாரிடம் வந்தார். வாத்யார் தொடர்ந்தார், “அந்தத் தொப்பிகளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. இங்கு வந்த அடியார் பலரிடம் “தொப்பி போட்டே” (ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றி) தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டவன். பல லட்சக் கணக்கான ரூபாயை லஞ்சமாகச் சம்பாதித்தவன். கடுமையான கர்ம பாக்கியைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான். ”
“இருப்பினும் அவன் அடியேனை நம்பி வந்து விட்டதால் முடிந்த மட்டும் அவன் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்மாவை நாங்கள் குறைக்க முயற்சி செய்கிறோம். அதனால்தான் இந்தக் கொழுத்தும் வெயிலில் அவனையும் அவன் குடும்பத்தாரையும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரச் செய்து இந்தப் புனிதமான ஆஸ்ரமத்தில் சில மணி நேரம் தங்க வைத்து கர்ம வினைகளின் வேகத்தை ஓரளவிற்குக் குறைத்து அனுப்புகிறோம். அதே சமயம் நல்ல உள்ளம் படைத்த பல அடியார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு இருப்பதால் கடுமையான கர்ம வினைப் படிவுகள் தோய்ந்த அந்தத் தொப்பிகளை நெருப்பில் இட்டுப் பொசுக்கி விடுகிறோம்.”
“நெருப்பு ஒன்றுதான் எந்தவித கர்ம வினைகளையும் பொசுக்கும் தன்மை உடையது. அதனால்தான் அக்னித் தலமான இந்தத் திருஅண்ணாமலையில் எல்லா உயிரினங்களின் கர்ம வினைகளையும் அகற்றும் திருப்பணியை நமது முன்னனோர்கள் காட்டிய வழியில் அன்னதானம் மூலம் நிறைவேற்றி வருகிறோம். பசி என்னும் அக்னிக்கு அன்னம் என்னும் ஆஹூதியை இந்த அக்னித் தலத்தில் அளிக்கும்போது கிட்டும் பலன்கள் மனித மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. இந்த அபரிமிதான புண்ணிய சக்தியை அடியார்களின் நல்வாழ்விற்காக பகிர்ந்தளிக்கிறோம். இதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்.”
“மேலும் அவனிடம் பல புதிய தொப்பிகளை வாங்கி அதை இங்கு திருப்பணி செய்யும் அடியார்கள் பயன்படுத்தும்போது இன்னும் கணிசமான அளவில் அவனுடைய கர்ம வினைகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் இப்பிறவிகளில் செய்யும் காரியங்கள் உங்களுக்கு நன்றாக நினைவில் இருப்பதால் அதைக் கழிப்பதற்காக நாங்கள் சொல்லும் பரிகாரங்களை உடனடியாக ஏற்று நிறைவேற்ற நீங்கள் முழு மனத்துடன் ஒத்துழைப்பீர்கள். ஆனால், முற்பிறவிகளில் நீங்கள் சேர்த்துக் கொண்ட சஞ்சித கர்மா உங்கள் நினைவுப் பெட்டகத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவதால் அதைக் கழிப்பதற்கு நிச்சயமாகத் தகுதி வாய்ந்த ஒரு குரு தேவைப்படுகிறார். முக்காலமும் உணர்ந்த சற்குரு ஒருவரே சஞ்சித கர்மாவை கணக்கிடும் தகுதி பெறுகிறார். ”
“உலகத்தில் கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள உதவும் புனிதமான இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் இந்த அகஸ்திய ஆஸ்ரமும் ஒன்று என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.”
விழித்திரு .. விழித்திரு |
இப்பிறவியில் நாம் அனைத்து சுகங்களையும் பெற்று வாழ உதவி செய்வதே நம் முன்னோர்கள் வகுத்த 32 அறங்களாகும். அன்னதானம், ஆடை தானம் போல் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகள், உயிர் காக்கும் மருந்துகள் அளித்தல் போன்ற சேவைகளையும் நாம் அவசியம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இலவச மருத்துவ வசதி என்னும் அறத்தை நிறைவேற்றுவதற்காக வாத்யார் அவர்கள் சென்னை, திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வந்தார்கள். இங்கெல்லாம் தகுதி, திறமையுடன் சேவை செய்யும் அன்புள்ளம் கொண்ட மருத்துவர்களும், சிறப்பு பிணி வல்லுநர்களும், நர்சுகளும் ஒத்துழைப்பு நல்கினர். சுவாமிகள் மேற்பார்வையிலேயே ஏழைக் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயால் வாடுவோர் பரிசோதிக்கப்பட்டு தகுந்த மருந்துகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த இலவச மருத்துவ முகாம்களில் எல்லாம் திரு வெங்கடராம சுவாமிகள் ஒரு சாதாரண அடியார் போல் எந்த வித படாடோபமும் இல்லாமல் தூய வெண்ணிற சீருடை அணிந்து, அடியார்களுடன் சேர்ந்து அடியார்களில் ஒருவராய் சேவை ஆற்றுவது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதனால் மற்ற அடியார்களுக்கு ஊக்கமும் சேவையில் ஆர்வமும் பெருகுவதைக் கண் கூடாகக் காணலாம். இத்தகைய முகாம்கள் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியே இங்கு விவரிக்கப்படுவதாகும்.
உலகில் ஏற்படும் விபத்துக்கள் யாவுமே ஒரு கண நேர அசிரத்தையால் விளைபவையே என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, நாம் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வாத்யார் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்துவார். ஒரு சிறிது அஜாக்கிரதையாக இருந்தால் கூட அது மிகப் பெரிய வேதனையை, ஆபத்தை அளித்து விடும் என்று அடிக்கடி அடியார்களை எச்சரித்துக் கொண்டே இருப்பார். சாதாரண மனிதர்களை விட இறை நம்பிக்கை கொண்டுள்ள சத்சங்க அடியார்களுக்கு சமுதாயத்திற்காக சேவை ஆற்ற வேண்டிய மிகப் பொறுப்பு இருப்பதால் அவர்கள் எல்லா விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மற்ற மகான்களும், மகரிஷிகளும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நமக்குப் பாடமாகப் புகட்டியுள்ளார்கள். அவற்றில் ஒன்றே ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் அமுத நீர் பாய்ச்சிய வரலாறாகும். சென்னை அருகே உள்ள திருநீர் மலையில் மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தபோது இடைவேளை உணவருந்துவதற்கு முன் வாத்யார் சிறுநீர் கழிக்க வேண்டி வெளியே சில அடியார்களுடன் சென்றார். அவர் பெரும்பாலும் சாதாரண மனிதர்களைப் போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பது கிடையாது. வெகுநேரம் தேடி அலைந்து யாரும் எதிர்பார்க்காத ஓரிடத்தில் சிறுநீர் கழிப்பது வழக்கம்.
இதற்கான ஆன்மீக காரணங்கள் ஆயிரம் இருக்கும் என்பதை உடனிருந்த அடியார்கள் உணர்ந்திருந்தாலும் யாரும் இதைப் பற்றி வாத்யாரிடம் கேட்டது கிடையாது. இதற்கான தெய்வீக காரணத்தை அப்போது வாத்யாரே வெளியிட்டார். நாங்கள் எப்போதும் எந்த விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்களுக்கு இது சின்ன விஷயம், அது பெரிய விஷயம் என்ற பாகுபாடு கிடையாது.எல்லாம் அருணாசல ஈசனின் திருஉள்ளப்படி நடப்பதால் நாங்கள் எல்லா உயிரினங்களையும், எல்லா விஷயத்தையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். இதில் சிறிது தவறு ஏற்பட்டால் கூட அதனால் பெரும் குழப்பங்கள் ஏற்படும். இது சம்பந்தமாக ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவே தன்னுடைய அனுபவத்தால் எல்லோருக்கும் ஒரு நல்ல படிப்பினையைப் புகட்டியுள்ளார்.
ஒரு முறை ஸ்ரீஅகஸ்தியர் வயல்கள் சூழ்ந்த ஒரு சிற்றூர் வழியே சென்று கொண்டிருந்தார். பஞ்ச பூதங்களும் அதன் தேவதைகளும், அந்த தேவதைகளின் அதிதேவதைகளுமே ஸ்ரீஅகஸ்தியரின் அருளாணைக்கு உட்பட்டவையே. ஸ்ரீஅகஸ்தியர் மேல் தென்றல் வீச வேண்டும் என்றால் கூட அது ஸ்ரீஅகஸ்தியரின் உத்தரவு இருந்தால்தான் நிகழும். மழை அவர் மேல் பொழிய நினைத்தால் ஸ்ரீஅகஸ்தியர் எத்தனை மழைத் துளிகள் தன் திருமேனியைத் தழுவ வேண்டும் என்று நினைக்கிறாரோ அத்தனை மழைத் துளிகள் மட்டுமே அவர் திருமேனி மேல் துõவ இந்திரன் ஆணை இடுவார். இத்தகைய மகா வல்லமை பெற்ற மகரிஷி அந்த ஊர் வழியே சென்று கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்க நினைத்தார்.
ஸ்ரீஅகஸ்தியர் போன்ற மகரிஷிகள் மலம், மூத்திராதிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் அவர்கள் பூலோகத்தில் சஞ்சரிக்கும்போது பூலோக ஜீவன்களில் குறிப்பிட்டவர்களின் கர்ம வினைகளை ஏற்று வருவதால் அத்தகையோருக்காக மலம், மூத்திராதிகளைக் கழிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உண்பதும், உறங்குவதும், நடப்பதும், நிற்பதும் மக்களின் நன்மைக்காகவே என்பதைப் புரிந்து கொண்டால்தான் அவர்கள் செய்கைகளின் தன்மை ஓரளவிற்காவது நம்முடைய குருவி மூளைக்கு எட்டும்.
வழக்கம்போல் மிகவும் ஜாக்கிரதையாக ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனை வேண்டி சிறுநீர் கழித்து விட்டு அவ்வூரை விட்டுச் சென்று விட்டார் ஸ்ரீஅகஸ்தியர். சில மாதங்கள் கழித்து ஒரு நாள் தேவ துõதன் ஒருவன் ஸ்ரீஅகஸ்தியர் முன் தோன்றி அவருக்கு முறையாக வணக்கம் தெரிவித்து விட்டு, “சுவாமி, அடியேன் சித்ரகுப்த லோகத்திலிருந்து வருகிறேன். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்க எனக்கு அனுமதி கொடுங்கள்”, என்று வேண்டி நின்றான். ஸ்ரீஅகஸ்தியர் அனுமதி வழங்கவே வந்தவன் தொடர்ந்தான், “சுவாமி, தங்களுக்குத் தெரியாத விஷயம் இப்பூவுலகிலும், ஈரேழுலகிலும் இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தை எங்கள் மகாராஜா, சித்ரகுப்த மகாபிரபுவின் உத்தரவின்படி தங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,” என்று மிகவும் பணிவுடன் பேசி மேற்கொண்டு பேசுவதற்கு தயக்கம் காட்டினான் அந்த தூதுவன். அந்த அளவிற்கு ஸ்ரீஅகஸ்தியர் மேல் அனைத்து லோக வாசிகளும் மரியாதை கொண்டிருந்தனர்.
ஸ்ரீஅகஸ்தியரும், “தூதனே சொல்ல வந்த விஷயத்தைத் தைரியமாக எடுத்துச் சொல்,” என்று அவனுக்கு ஆறுதலாகச் சொல்லவே அவன் தொடர்ந்து, “சுவாமி, தாங்கள் சில மாதங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் அமுத நீர் பாய்ச்சினீர்கள் அல்லவா? (மகான்கள், யோகிகள் சிறுநீர் கழிப்பதை அமுத நீர் என்று தேவலோகத்தில் குறிப்பிடுவது வழக்கம்.) அந்த அமுத நீரில் ஒரு துளி தவறிப் போய் அங்குள்ள ஒரு சிறு நீரோடை வழியாகச் சென்று அருகில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்டது. அந்த கிணற்று நீரை இறைத்து ஒரு ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தில் பாய்ச்சிவிட்டான். பேராற்றல் மிக்க தங்களுடைய அமுத நீர் பிரவாகத்தால் பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே பருவத்தில் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்து விட்டன. இப்போது தகுதி இல்லாமல் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்த அதிகப் படியான நெற்மணிகளை எப்படி கணக்கில் வைப்பது என்று தெரியாமல் எங்கள் சித்ரகுப்த ராஜா குழப்பம் அடைந்துள்ளார். இந்தக் குழப்பத்திற்கு ஏற்ற தக்க தீர்வை நீங்கள் ஒருவர்தான் தரவல்லவர் என்பதால் தங்களை சரணடைந்துள்ளோம்,” என்று அந்தத் துõதுவன் பணிவுடன் கூறி விட்டு ஸ்ரீஅகஸ்தியரின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.
ஸ்ரீஅகஸ்தியர் ஒரு கணம் மலைத்து விட்டார். எவ்வளவோ கவனமுடன் இருந்தாலும் நம்மையும் அறியாமல் ஒரு சிறு தவறு மிகப் பெரிய விபரீதத்தைத் தோற்றுவித்து விட்டதே என்று நினைத்து மனம் வருந்தினார். பின் சற்று யோசித்து விட்டு அந்தத் தூதுவனிடம், “நீ உங்கள் சித்ரகுப்த ராஜாவிடம் சென்று அந்த ஏழை விவசாயினுடைய கர்மத்தை அடியேன் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிடு,” என்று சொல்லவே அந்த துõதுவன் அதைக் கேட்டு மனக் குழப்பம் நீங்கப் பெற்றவனாய் ஸ்ரீஅகஸ்தியருக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு உடனே அங்கிருந்து சித்ரகுப்த லோகத்திற்குத் திரும்பி விட்டான்.
ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!
இப்போது பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே ஆண்டில் விளைந்து விட்டதால் அந்த ஒன்பது ஆண்டுகளின் அதிகப்படி மகசூலை அந்த ஏழை விவசாயிடமிருந்து திரும்பப் பெறுவது முறையாகாது அல்லவா? எனவே அந்த அதிகப் படியான ஒன்பது வருட உழைப்பால் விளையக் கூடிய கர்மாவை ஸ்ரீஅகஸ்தியரே ஏற்றுக் கொண்டு ஸ்ரீலோபாமாதாவுடன் அந்த வயலில் ஒன்பது வருடங்கள் ஒரு சாதாரண பூலோக மனிதனைப் போல கலப்பை கொண்டு நிலம் உழுது, நீர் பாய்ச்சி, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, அறுவடை செய்து அயராது பாடுபட்டார். ஒன்பது வருடங்கள் அந்த வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து அந்த நெல்லை சித்ரகுப்தரிடம் அளித்து விட்டுத்தான் தன்னுடைய இருப்பிடம் திரும்பினார் ஸ்ரீஅகஸ்தியர்.
நமக்குப் பாடம் புகட்டுவதற்காக எவ்வளவு சிரமத்தையும், துன்பத்தையும் மகான்கள் ஏற்று அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? இதை உணர்ந்தாவது நாம் நம்முடைய காரியங்களில், அதுவும் இறை நம்பிக்கையை வளர்க்கும் சத்சங்கத்தில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பது ஸ்ரீஅகஸ்தியர் வரலாறு நமக்குப் புகட்டும் நீதியாகும்.
ஓம் குருவே சரணம்