எண் கணிதம் இறை கணிதமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

வழக்கம்போல், ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தூணருகே பெரியவர் கால் நீட்டி அமர்ந்திருக்க, சிறுவன் அருகில் ஏதோ சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். பெரியவரின் அருகில் ஒரு வாழை இலையில் விமுக்தி எனப்படும் அக்காலத்து (ஸ்வீட்) இனிப்பு வகைகள் நிறைய இருந்தன. ஆனால், ஒரு ஈ கூட இலைப்பக்கம் வரவில்லை. இதுவே சிறுவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது! ஆனால், அக்காலத்தில் மக்கள் பெரும் குடும்பமாக இருந்தாலும், கட்டுக்கோப்போடு வாழ்ந்தமையால் அநாவசியமான குப்பைகள் வீதியில் சேராது சுத்தமாகவே இருக்கும்.

‘பிடித்த’ அலைகள்

பெரியவரைப் போலவே சிறுவனுக்கும் விமுக்தி இனிப்பு என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஆசைப்பட்டால் அது விலகிப் போகும் என்பது தானே பெரியவரின் குருகுலவாச அகராதி! ஆனால், சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதாய் எந்தச் சமயத்தில் எதைக் கொடுப்பார், எதை மறைப்பார் என்பது பூடகமாகவே இருக்கும்.

“ஏண்டா, உனக்கு இந்த ஸ்வீட் ரொம்பப் பிடித்ததாச்சே! வாத்தியார் இன்னும் ஏன் எடுத்துத் தரலை, அப்படீன்னு யோசிக்கிறயா?”

சிறுவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. ‘மன அலையைப் படம் பிடித்தவருக்குப் பதிலையுமா படம் பிடிக்கத் தெரியாது!’ என்று எண்ணி விட்டானே!

“ஏண்டாப்பா, நாங்களே கேள்வி கேட்டு உன் மனசுலேந்து நாங்களே பதிலைப் பிடுங்கிக்கிட்டு வரணுமா? அப்படிச் செய்யணும்னு கட்டாயம் ஒண்ணுமில்லையே!”

ஆவுடைமேல் குமரசக்தி
மேலபரங்கிரி

ராவணன்
கலங்கியதைப் போல்
கலங்க வேண்டாமே!

சிறுவன் விழித்தான். ஏனென்றால் இப்போது எந்த பதிலைச் சொன்னாலும் அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் போகலாம். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் சிறுவனை மாட்டி விடுவது என்றால் அவருக்குத்தான் வெல்லக் கட்டி ஆயிற்றே!

“ஏண்டா, வெள்ளியங்கிரி போகணும்னு ரொம்ப நாளாச் சொல்லிக்கிட்டிருக்கியே, இப்ப உனக்கு ஸ்கூல் பரீட்சை எல்லாம் ஒண்ணும் இல்லையே!” என்று சிரித்தவாறே கேட்டார். சிறுவன் அவரை விநோதமாகப் பார்த்தான்.

“என்ன இது, துவாரகா, பத்ரிநாத் போகும் போதெல்லாம் ஸ்கூல் இருக்கா, இல்லையா எனச் சற்றும் கவலைப்படாதவர், தமிழ்நாட்டில் இருக்கும் வெள்ளியங்கிரிக்காக மட்டும் கேட்கிறாரே?”

“பாஸா, பெயிலா என்பதைப் பற்றியெல்லாம் ஒரு கடுகளவு கூட இதுவரையில் கவலைப்படாதவர் திடீரென்று விசனம் செய்வது ஏனோ?”

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘ஆமாம், இந்த விமுக்தி இனிப்புக்கும் வெள்ளியங்கிரிக்கும் என்ன சம்பந்தம்?”

நேரடியாக பதிலைச் சொல்ல முடியாததால், தம் மனதுக்குள்ளேயே எண்ணப் பந்து விளையாட்டை ஆடிக் கொண்டான் சிறுவன்.

குருவிளையாடல்

“இந்தா, இந்த இலையைப் பிடி! கொஞ்ச நேரம் கழிச்சு வெள்ளியங்கிரிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு தானாகவே தெரிய வரும்!” – என்ற புன்முறுவலுடன் கூறிய பெரியவர், விமுக்தி இனிப்புகள் நிறைந்திருந்த பெரிய, இலையை அவன் கையில் கொடுத்தார். இங்குதான் பெரியவரின் வழக்கமான திருவிளையாடலும் குரு விளையாடலாய்த் தொடர்ந்தது!

ஸ்ரீசனீஸ்வர பகவான்
மேலபரங்கிரி

கீழ்க்கண்ட மந்திரத்தை 21 முறை ஓதி சூரிய பகவானை சூரிய உதயத்திற்கு முன் நமஸ்கரித்து வந்தால் செல்வம் நிலைத்து நிற்கும்.
ஸோனேஸ்வர ஸ்வரூபம் மங்கள ப்ராப்திரஸ்து
சுபேஸ்வர ஸ்வரூபம் ஸ்ரீ ப்ராப்திரஸ்து
சுப்ரஸன்ன ஸ்வரூபம் ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து
மஹேஸ்வர ஸ்வரூபம் பூர்ணாரோக்ய ப்ராப்திரஸ்து
நமஸ்கரோமி நமஸ்கரோமி பாஸ்கர ஈஸ்வராய நம:
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

இலையைக் கையில் வாங்கிய சிறுவன், நல்ல வேளை, சற்றே யோசித்தான். வழக்கமான விளையாட்டுத்தனம் அவனிடம் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு பிடி இனிப்பைத் தன் வாயில் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால், கடந்த சில வருடங்களாகப் பெரியவரிடம் இருந்து பெற்ற குருகுலவாசத்தில் நிகழ்ந்த அனுபூதிகள், பெற்ற தண்டனைகள், அழுத்தமான சம்பவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கோடிக் கோடியாய்க் கொட்டினாலும் பெற இயலாத இறை அனுபூதிகளில் கிட்டிய பரமானந்தம் அவனை இப்போது சற்றே சிந்திக்க வைத்தது. அவசரப்பட்டு எதையாவது செய்து மாட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.

“சபாஷ்! பரவாயில்லையே! நிறைய விஷயங்களை நல்லாவே தெரிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கியே!” என்று எங்கோ நோக்கியவாறு பெரியவர் சொன்னாரே தவிர, சிறுவன் தன் கையில் நெடுநேரம் வாழை இலையை வைத்திருந்தும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

ஏதோ நினைத்தாற் போல் சிறுவன், “ஏன் வாத்யாரே! இதை அங்காளிக்கு நைவேத்யம் பண்ணிடட்டுமா!” என்று குறுக்குக் கேள்வி கேட்டு சஸ்பென்ஸை முடிப்பதற்கு எத்தனித்தான்.

“சபாஷ்டா கண்ணு!. பரவாயில்லையே அடுத்த ஸ்டெப் என்னன்னு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டியே!”

பிரசாதக் கணக்கு

பெரியவரின் சபாஷ் கூடிய பதில் சிறுவனுக்கு ஆச்சரியமான வியப்பதைத் தந்தது. பெரும்பாலும் பிரசாத நைவேத்யம் என்றாலே அதன் அடுத்தக் கட்டம் சாப்பிடுவதாகத்தானே இருக்கும். இந்தச் சாப்பாட்டுக் கணக்கு சிறுவனுக்குப் பரிச்சயமானது தானே. ஆனால், இதை இப்படி நினைத்தால், “அதை அப்படியா நினைக்கிறாய்? இதை இப்படியே வைக்க மாட்டோம்!” என்று பெரியவர் பாட்டுக்கு வேறு கணக்குப் போட்டு விட்டால்...

ஏற்கனவே சிறுவனுக்குக் கணக்கு என்றாலே எட்டிக்காய், வேப்பங்காய், புளியங்காய்! எனினும் வரப் போகின்ற அனுபூதிக் காலத்தைச் சுருக்கி முன்னரேயே வரச் செய்ய இதனை இப்போதே முடிக்க வேண்டும் என்பதற்காக சிறுவன் இலையை எடுத்துக் கொண்டு, வெகு வேகமாக அங்காளி சன்னிதி நோக்கி விரைந்தான்.

மூலத்தான வாசற்படிக்குச் சற்று உள்ளே இலையை வைத்து “அங்காளித் தாயே, அங்காளி அம்மா, பரம்பொருள் தாயே, ஆதிபராசக்தி தாயே! என்னைப் பெற்றவளே, பிரசாதத்தை ஏற்றுக் கொள் அம்மா!” என்றதோடு, பெரியவர் சொல்லிக் கொடுத்த, “அன்னபூர்ணே சதா பூர்ணே...” – மற்றும் சில மந்திரங்களை ஓதி கை கட்டி, வாய் பொத்தி அமர்ந்தான்.

சூரியனும் சந்திரனும் இணையும்
சுவை என்ன சுவையோ
மேலபரங்கிரி

திடீரென்று பெரியவரின் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.

ஸ்ரீதத்தாத்ரேயர் காயத்ரீ
ஓம் தத் புருஷாய வித்மஹே
புத்தி விருத்திகராய தீமஹி
தந்நோ தத்தாத்ரேய ப்ரசோதயாத்

“ஏண்டா, இப்படி வச்சா அங்காளி எங்கே வந்து சாப்பிட போறான்னு நினைக்கிறயா, நிஜமாவே சாப்பிட்டுட்டா என்ன பண்ணுவே?”

சிறுவனுக்கு அவர் சொன்ன விஷயத்தில் கவனம் இல்லை, காரணம், பெரியவரின் உச்சஸ்தாயிக் குரலில் இருந்த அக்னிதான் அவனுக்கு மிகுந்த பயத்தைத் தந்தது. இப்போதோ இலையை உள்ளே வைத்து விட்டு உடனேயே அவரிடம் போக முடியாது. பூனை, எலி வந்து விடும். அவரே தானாக எழுந்து வந்து இங்கு சொல்ல வேண்டியதைச் சொன்னால் பரவாயில்லையே!’ என்றுதான் அவன் நினைத்தான்.

சுரீரென்று பெரியவரின் அடுத்தடுத்த வாக்கியங்கள் பறந்து வந்தன..

“ஏனப்பா, எத்தனை நாளைக்குதான் நானும் இந்த வயசான காலத்துல உன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வர்றதாம். நீயா என்னைக்கு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கப் போறே?”

சிறுவனால் ஒன்றே ஒன்றைத்தான் இப்போது செய்ய முடிந்தது. பேசாமல் பத்மாசனம் போட்டு, நன்கு ஹாய்யாக அங்கேயே உட்கார்ந்து கொண்டு விட்டான். ஏனென்றால் போகிற போக்கைப் பார்த்தால், பெரியவர் இந்த விஷயத்தைத் தற்போது முடிப்பதாக இல்லையே!

“ஏண்டா கண்ணு, இப்படிக் கண்ணை திறந்துக்கிட்டு பத்மாசனம் போட்டுக்கிட்டு உட்கார்ந்தா அங்காளி எப்படி முன்னாடி வந்து சாப்பிடுவா?“

சிறுவன் மூலத்தானத்தின் மூலையை நோக்கி கண்களைச் செலுத்தினான், ஏன் என்றால் அடுத்த பதிலும் அங்கிருந்து வந்து விடுமே!

இல்லறத்தார் சொல்ல வேண்டிய ஸ்ரீஐயப்பன் காயத்ரீ மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சபரிகிரி வாசாய தீமஹி
தந்நோ பூரண புஷ்கல ப்ரசோதயாத்

ஆம், பதிலும் வந்தே விட்டது!

உண்ணாமுலை உண்டாள்!

இப்போது பெரியவர் நன்கு உரக்கக் கத்தியவாறு, “சீக்கிரமா ரெண்டு கண்ணையும் மூடிக்கோடா, அங்காளி ஆத்தா பிரசாதம் சாப்பிட வந்துக்கிட்டிருக்கா! அவளோட திவ்ய ஜோதி தரிசனத்தை நம்மால பார்க்க முடியாதுடா! சட்டுன்னு கண்ணை மூடிக்கோ!”

ஸ்ரீமுருகப் பெருமான்
மேலபரங்கிரி

அவனுக்குப் பயத்தில் உடனே வியர்த்து விட்டது. ஒரு வேளை இதுதான் பயபக்தியோ! சிறுவன் டக்கென்று கண்களை மூடிக் கொண்டான். தப்பித் தவறி கண்களைத் திறந்து விடக் கூடாது என்பதால், தன் கண்களை இரு கைகளாலும் பொத்திக் கொண்டான்.

“ஜல், ஜல்“ என்று இனிய சலங்கை நாத ஒலி கேட்டது. சர்ரென்று இலையை இழுக்கின்ற சிறு ஒலி கூட, மிகவும் ஸ்பஷ்டமாகக் கேட்டது. ஒரு சில நிமிடங்கள் கழிந்தன..!

“ஜல், ஜல்“  என்று சப்தம் மீண்டும் எழுந்தது. அந்த சப்தம் கொஞ்சம், கொஞ்சமாகய் நகன்று, நகன்று .. சற்றுத் தொலைவில் சென்று மறைந்தது. ஆனால் சிறுவன் இப்போதைக்குக் கண்களைத் திறப்பதாக இல்லை.

பெரியவர் உள்ளே வந்து அவனை எழுப்பி விடுவார், என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர் வந்த பாடில்லை, வருவதான சுவடும் அவனுக்குத் தெரியவில்லை.

திடீரென்று பெரியவர் நன்கு சப்தம் போட்டுக் கத்தினார்.

ருத்ராட்சம் அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
சிவாய நம சித்தி மூர்த்தி
அபாய நிவர்த்திகராய நம:

“அந்த இலையை அப்படியே மடிச்சுக் கொண்டு வா, அங்காளி ஆத்தா பிரசாதம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிட்டா!”

சிறுவன் கண்களைத் திறக்கத் தயாராக இல்லை, ஏனென்றால் “கண்களைத் திற” என்று அவர் சொல்லவில்லையே!

இருந்த போதிலும் தட்டுத் தடுமாறி இலையை வைத்த இடத்தை இருட்டில் ஓரளவு அனுசரித்து உணர்ந்து இலையை எடுத்துக் கொண்டு மெதுவாகச் சற்றே வெளியே வந்ததும்தான்,

“ஏண்டா கண்ணு, நல்லா கண்ணை முழிச்சுப் பார்த்தே வரலாமேடா!”

பெரியவர் மிகவும் வினயத்துடன் சொல்லிடவே, கண்களுக்குள்ளேயே சிறுவன் அவரைப் பார்த்து முறைத்தான்! பிறகு ஒரு வழியாய்க் கண்களைத் திறந்தான். ஆனால், அப்போதும் கூட அவனுக்கு உள்ளூர ஒரு பயம்தான்.

“ஏண்டா, ரெண்டு கண்ணையும் திறந்தே?” – என்று பெரியவர் கேட்டு ஏதேனும் தண்டனை கொடுத்துவிட்டால் என் செய்வது?

ஆனால் இந்த எண்ணத்தையும் “பிடித்தார்“ பெரியவர்! அவருடைய “பிடித்த பத்திற்குத்தான்” எல்லை இல்லையே!

ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்
மேலபரங்கிரி

“இதோ பாருடா கண்ணு, தண்டனைங்கறது சித்தர்களோட அகராதிலேயே கிடையாது. நாங்க யாரையும் தண்டிக்கிறதுக்காகப் பூமிக்கு வருவதும் கிடையாது. எல்லோரையும் திருத்தறதுக்காகத்தான் பூமிக்கு வரோம். இதை முதல்லே நல்ல புரிஞ்சுக்கோ, சரி, சரி வேகமா வா, எத்தனையோ நல்ல காரியங்களை நடத்த வேண்டி இருக்கு!”

பிரசாதம் உண்டோ ஐயா?

ஆனால் சிறுவன் அவசரப்படுவதாக இல்லை. “அம்பாள் கைப்பட்ட பிரசாதம்” ஆயிற்றே. மிகவும் பக்தியுடன் பவ்யமாக அவருடைய காலடியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தான். அவர் அவன் தலையைத் தடவி எழுப்பி விட்ட பிறகுதான் கண்களை முழுமையாகத் திறந்து பார்த்தான்.

முன்னே... வாழை இலையில் ஒரு சில விமுக்தி இனிப்புகளே இருந்தன. அனைத்திலும் ஒரு திவ்யப் பிரகாசமான ஜோதி ஒளிர்வதைக் கண்ணாரக் கண்டான். சுற்றிலும் இலையில் இப்போது சில ஈக்கள் பறந்தவாறு தென்பட்டன. ஆனால் ஒன்றும் அமரவில்லை!

“இந்த ஈயெல்லாம் ஈங்கோய் மலைச் சித்தர்களப்பா! அண்ணாமலை கிரிவலம் போல அம்பாள் உண்டு மிஞ்சிய பிரசாதத்தைக் கைலாய மலைப் பிரதட்சணம் மாதிரிச் சுத்தி சுத்தி வந்து நமஸ்காரம் பண்றாங்க. அப்படீன்னா எவ்வளவு உத்தமத் தெய்வீக பிரசாதத்தை நீ கையில தாங்கி வந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கோ. இதுவே பெரும் பாக்யம்! இதைவிட வேறு என்னடா உனக்கு வாழ்க்கையில வேணும்..?”

சமராதித்ய கிரணங்களை வர்ஷிக்கும்
ஸ்ரீமல்லிகார்ஜூனேஸ்வரர்
மேலப்பரங்கிரி

“என்னடா, மௌனியா இருக்கே?”

“இதுவே பெரும் பாக்யம்! இதைவிட வேறு என்னடா உனக்கு வாழ்க்கையில வேணும்?” என்று அவரே சிக்கென உரைத்த பின்னர், சிறுவன் என்ன சொல்வதென்று தெரியாமல், வெகு வேகமாக,

“நீ வாங்கிக் கொடுத்த இந்த பாக்யம் போதும் வாத்யாரே! வேற ஒண்ணும் வேண்டாம்!” என்று தலையசைத்து, வாயாரப் பதில் கொடுத்தான்.

மனக் கணக்கும் ஆனந்தக் கணக்கும்

ஆனால் உள்ளூர அவன் வேறு மனக் கணக்கைப் போடலானான். தனக்கு முழு விமுக்திப் பிரசாதம் கிடைக்குமா அல்லது ஒரு சிறிது எடுத்து இவன் வாயில் பெரியவர் போடுவாரா அல்லது எல்லாவற்றையும் “நீயே சாப்பிடு!” என்று சொல்லுவாரா என்பதே அந்த மனக் கணக்கு! சிறுவன் ஆனந்தக் கணக்கும் போடலானான். ஆனால் கணக்கு என்றாலே வேப்பங்காயாய்க் கசந்தவனுக்கு, மனக்கணக்கு மட்டும் எப்படிச் சரியாய்ப் போட வரும்?

“ஏண்டாப்பா, நீதான் ‘நீ வாங்கிக் கொடுத்த இந்த பாக்யம் போதும் வாத்யாரே! வேற ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டியே, அப்புறம் உனக்கு இது எதுக்கு?” – என்று சொல்லியவாறே

தினமும் சூரிய பகவானுக்கு அர்க்யம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஜபாகுஸும ஸங்காஸம் காச்யபேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்

பெரியவர், இலையில் மிஞ்சிய அனைத்து விமுக்தி இனிப்புகளையும் ஒரேயடியாய் வழித்துத் தம் வாயில் போட்டுக் கொண்டு விட்டார்.

சிறுவன் திகைத்து மலைத்துப் போனான். இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்களில் நீர் தேங்கி நின்றது ஆனால், பெரியவரோ அதனைச் சிறிதும் சட்டை செய்யவில்லை.

விமுக்தி தரும் முக்தி!

“ஒண்ணு தெரிஞ்சுக்கோடா, உனக்கு எது புரியது, எது புரியலையோ நாம கொடுக்கற பிரசாதத்தை அம்பாளே, தானே நேரே வந்து ஏத்துக்கிறதுதான் புனிதமான வெள்ளியங்கிரி யாத்திரைக்கு முதல் அனுமதி! “விமுக்தி தந்து வெள்ளியங்கிரி முக்தியைக் காண்” அப்படீன்னு சித்தர்கள் பாஷையிலேயே, அங்காளி அம்பாள் சொல்லாமல் சொல்லும் அனுமதி வாக்யம்டா இது!”

“சரி, சரி அப்படியே ஜடமா நிக்காம, சாய்ந்தரம் நாலு மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்!” என்று சொல்லிவிட்டு, பெரியவர் விடுவிடுவென்று வெளியே நடந்தார்.

சிறுவனுக்குச் சற்று நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சித்தன் போக்கும் சமயத்தில் புரிந்து ஜம்மென்று விமுக்தி இனிப்பாய் அமிர்தமாய் இனிக்கின்றதே!

ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள்

திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் ஆலயம் – ஹ்ருத்தாப நாசினி புஷ்கரிணித் தீர்த்த மஹிமை!

தாரண வருடத்தில், தீர்த்த நீராடல் மிகவும் இன்றியமையாதலால், சில முக்கியமான தீர்த்தங்களைப் பற்றி விளக்க இருக்கின்றோம்.

சென்னை – அரக்கோணம் மார்கத்தில், திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் ஆலயம், 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகப் பரிணமிக்கின்றது.

அமாவாசையில் மற்றும் துவாதசியில் இங்கு கிட்டும் அன்னதான தான, தர்மப் புண்யமானது, பன்மடங்குப் புண்யசாகர சக்தியாக விருத்தி அடையும் தலம். பித்ருக்களுக்கு நாயகராகப் பொலியும் ஸ்ரீசூரியநாராயண மூர்த்தி அன்றும், இன்றும் என்றுமாகப் பித்ருக்களுக்கும் முக்தி அளிக்கும் பெருந்தலம்.

ஸ்ரீஅகோரவீரபத்திரர்
திருக்கழுக்குன்றம்

ஸ்ரீமுனீஸ்வரர் துதி
தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப் போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து
வாடிய பயிரையும் வளரச் செய்யும் முனீஸ்வரனே போற்றி !

எத்தகைய கொடிய நோய்களையும் தணிக்க வல்ல ஹ்ருத்தாப நாசினிப் புஷ்கரிணி (திருக்குளம்) இங்கு அமைந்துள்ளது. இவ்வாலயக் கொடிக் கம்பம், பல அபூர்வமான ஆலய கோபுர தரிசன பலன்களைத் தரவல்லதாம். அமாவாசை, மாதப்பிறப்பு, விஷ்ணுபதி, மனு மற்றும் யுகாதி நாட்கள், வைதிருதி யோக நாட்கள், சூரிய, சந்திரக் கிரஹண நாட்கள் போன்ற (ஆண்டின்) 96 நாட்களில் இங்கு (ஷண்ணாவதி = 96) தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

பிள்ளைப் பேறு இல்லாதோர் இவ்வூரில் குடி இருந்து, வருடம் 365 நாட்களும், இத்தீர்த்தத்தில் பக்தி சிரத்தையுடன் நீராடி, குறித்த தான, தர்மங்களுடன், தினசரித் தர்ப்பணம் ஆற்றி, குழந்தைப் பேறு பெற்ற, தெய்வ வர அனுபூதிகளும் உண்டு. ஆண் வாரிசு, பெண் வாரிசு இல்லாதோர் முறைப்படி, இங்கு நித்யத் தர்ப்பணத்தை பக்தியுடன் நிறைவேற்றி வர, தக்க நல்வழிகள் காட்டப் பெறுவர்.

பெருமாள் இவ்வாறு “வைத்யர்” என்ற தெய்வப் பட்டத்துடன் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாளாகத் துலங்குவது மிகவும் அபூர்வமே! பூமியில் தோன்றும் போதே ஜீவன்களுக்கு அபரிமிதமான தேவ புண்ய சக்திகளுடன் தோன்றும் தலங்களுக்குப் புண்யவர்தத் தலங்கள் என்று பெயர். இத்தலங்களில் ஆற்றப்படும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், தான தர்மங்கள், தர்ப்பணம் யாவும் ஒன்றுக்குப் பன்மடங்குப் புண்ய, புண்யாதி புண்யசாகர சக்தியாய் விருத்தி ஆகும் அதியற்புதப் புண்யா வர்தத் தலங்களுள் ஒன்றே வீரராகவப் பெருமாள் ஆலயமாகும்.

பெருமாள் புஜங்க சயன யோகம் கொண்டிருக்கும் இத்தலத்தில், இங்கு பெரிய படி மற்றும் கை நிறைய அள்ளி, அள்ளி, “போதும், போதும்” எனப் பெறுபவரே சொல்லும் அளவில் தானமளிப்பதால் கொடிய நரம்பு வியாதி, stroke, Parkinson disease, பாரிசவாயு போன்றவற்றால் கை இயக்கங்கள் பாதிக்கப்பட்டோர் நல்ல நிவாரணங்களைப் பெறுவர். இங்குள்ள விஜய கோடி விமான தரிசனமானது, குறித்த தான, தர்மங்களை மேற்கொண்டிடில், துர்ஆசை, பேராசைகளினால் (சூது, பந்தயம், ரேஸ், சீட்டு, காமாந்தர எண்ணங்கள்) ஏற்பட்ட நஷ்டங்களைப் போக்கும்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

இத்தலத்தில் அமாவாசை தோறும் நிறைய (புது) ஆடைகளைத் தானம் செய்து, கோபுர தரிசன கைவிரல் முத்திரை மூலமாக விஜய கோடி விமானத்தைத் தரிசிப்பதால், ஆசை மூலமாக வந்த நஷ்டங்கள் தீர வழி பிறக்கும். பெண்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியவாறு இங்கு அடிப் பிரதட்சிணம் வந்து, விளக்கு தீபத்தின் இடையே விஜய கோடி விமான தரிசனம் பெற்றுவர, மூர்க்கமான குணங்களை உடைய கணவன் நன்கு திருந்தி சீரான வாழ்க்கையைப் பெறுவார்.

மேலும் காரிய சித்திகளைத் தருவதும் விஜயகோடி விமான தரிசனமாகும். வளர்பிறைச் சந்திர ஹோரையில் விஜய கோடி விமானத்தை வடக்கில் இருந்து ஒரு நாழிகை நேரம் (24 நிமிடங்கள்) தரிசித்து, பிறகு பெருமாளை அபிஷேக ஆராதனைகளுடன் தரிசிப்பதால் காரிய சித்தி கிட்டும். பல்லாண்டுகள் தடங்கலாகி வரும் காரியங்கள் நன்முறையில் நிறைவேற இது உதவும்.

பொதுவாக, இருக்க இடமின்றி, படுக்க இடமின்றி நல்ல வாடகை வீடு, நல்ல சொந்த வீடு கிட்டாமல் தவிப்போர் இத்தலத்தில் செவ்வாய் தோறும் பெருமாளுக்கு ஆறடித் துளசி மாலை சார்த்தி, சிகப்பு நிற உணவு வகைகளைத் (தக்காளி சாதம், சாம்பார் சாதம், சிகப்பு நிறக் கனிகள்) தானமாக அளித்துவர வேண்டும். ஞானமுத்திரை கொண்டவராகவும் சாலிஹோத்ர மாமுனிக்கு “வழுத்திய உபதேசமும்” தந்த கோலத்தில், பெருமாள் துலங்குவதால் புதன் கிழமை தோறும், இங்கு பிள்ளைகளைப் பெருமாளைத் தரிசிக்க வைத்து

“நாராயண பரோ ஜோதிராத்மா நாராயண: பர:
நாராயண பரம் பிரம்மம் தத்வம் நாராயண: பர:

தமிழ் மந்திரம்

அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியா அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்

-என்ற மந்திரத்தை ஓதியவாறு, பெருமாளை அடிப்பிரதட்சிணமாக வலம் வரச் செய்தலால், நல்ல கல்வி ஞானம் உண்டாகும். தாயார் கனகவல்லித் தாயார் என்ற பெயர் பூண்ட ஸ்ரீமகாலட்சுமி அவதாரிகை! வெள்ளிக் கிழமை தோறும் “விமல ஹ்ருதயாசன வீரவைத்ய நாராயண நமோ நம:” என்று 1008 முறை ஓதியவாறு தீபங்களை ஏற்றி வழிபடுவதுடன், ஏழைச் சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டிகளை தானமாக அளித்து பக்தியுடன் வழிபட, ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருளுக்குப் பாத்திரமாக்கும் அற்புதத் தலம்.

எத்தனையோ தலங்களில் பாவ வினைகள் கழிதலும், தணிதலும் உண்டு. ஆனால் பாவ வினைகள் மீண்டும் தலை தூக்காது நசித்து, பஸ்மமாக்குகின்ற விசேஷமான தலங்களுள் இதுவும் ஒன்று.

ஹரிபசலி

சூரிய கிரணங்கள் ஒரே மாதிரியாக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தலத்திலும் பொலிவதில்லை. அதே போல் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் பொலியும் சூரிய கிரணங்களும் வேறு வேறு திருநாமங்களுடன் பொலிகின்றன. இந்த பாஸ்கர சக்திகளை ஸ்ரீபாஸ்கரராயர், சூரிய நாராயணப் பெருமாள் அனுகிரகமாக பெற்ற தலமே திருவள்ளூராகும். மகா விஷ்ணுவே பித்ருக்களுக்கெல்லாம் தலைவராக விளங்கி சூரிய அம்சங்களுடன் துலங்குவதால் இந்த சூரிய நாராயண தெய்வீக அம்சங்களைக் கொண்டவர்களாக ஸ்ரீசாலிஹோத்ர மகரிஷியும் ஸ்ரீபாஸ்கரராயரும் திருவள்ளூர் திருத்தலத்தில் பொலிவது நம் கலியுக மக்கள் பெற்ற பெரும்பேறே.

ஸ்ரீபாஸ்கரராயர்
திருவள்ளூர்

தலவிருட்சம் பாரிஜாதம்
திருவள்ளூர்

ஒவ்வொரு அமாவாசை அன்றும், தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற பித்ருக்களுக்கு உரிய தினங்களில் லட்சக் கணக்கான மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்ட சிறப்புகளுடைய பித்ரு முக்தி தீர்த்தத்தில் இன்று பக்தர்கள் கால் வைக்கக் கூட முடியாத நிலை உருவாகும் என்பதை அறியாதவர்களா மகான்கள் ? அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வேறு எங்கும் பெற முடியாத, திருவள்ளூர் திருத்தலத்தில் மட்டுமே பொழியும் ஹரிபசலி என்ற பாஸ்கர சக்திகளை விஜயகோடி விமானம், தலவிருட்சமான பாரிஜாதம் போன்ற தெய்வீக நிலைக்கலன்களில் ஈர்த்து பக்தர்களுக்கு பயன்படும் விதமாக அருள்புரிந்தனர். ஸ்ரீபாஸ்கரராயரின் தெய்வீக அனுகிரக சக்திகளை பூரணமாக அறிந்து கொள்ள முயலும் பக்தர்கள் கஞ்சனூர் திருத்தலம் அருகில் பாஸ்கரராயபுரத்தில் ஸ்ரீபாஸ்கர ராயரின் ஜீவ சமாதி தரிசனத்தைப் பெற்று பின்னர் திருவள்ளூரில் ஸ்ரீபாஸ்கரராயரின் தரிசனத்தைப் பெறுதல் சிறப்பாகும்.

மூலவர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் சாலிஹோத்ர மகரிஷிக்கு அருள்புரியும் நிலையில் விஜயகோடி விமானத்தில் எழுந்தருளி இருப்பதால் இந்த மூவண்ண தெய்வீக சக்திகள் குருவையும் குறிப்பதால் விஜயகோடி, சாலிஹோத்ர, இராகவன் என்ற ஐந்தெழுத்து நாமங்கள் எல்லாம் இணைந்த குருக்ஷேத்திரமாகவும் திருவள்ளூர் பொலிகின்றது. பாரிஜாதம் தலவிருட்சமானது ஹரிபசலி என்று ஐந்தெழுத்து ஹரிபசலி சக்திகளை மக்களுக்கு, பக்தர்களுக்கு சூரிய நாராயண பிரசாதமாக அருள்கின்றது என்பதே திருவள்ளூர் திருத்தலத்தின் மகிமையாகும். இத்தகைய அபூர்வ சக்திகளைப் பெற விரும்புவோர் ஹிருத்தாபநாசினி தீர்த்தத்தையோ அல்லது தலவிருட்சம் பாரிஜாதத்தையோ ஒரு நாழிகை நேரமான 24 நிமிடங்களுக்குக் குறையாமல் வலம் வந்து வணங்குதல் சிறப்பாகும். எவ்வுஉள் என்பது இத்தலத்தின் நாமம் என்றாலும் காலப்போக்கில் இது திருஎவ்வுள் என்று மாறி கனகவல்லி தாயாருக்கு உரியதாக அமைகிறது. கனகவல்லி என்றால் தங்கக்கொடி, பொற்கொடி என்றுதானே பொருள் ? கொம்பைச் சுற்றும் கொடியாக, கணவரைச் சுற்றும் மனைவியாக அமைவதே இத்தல ஸ்ரீகனகவல்லி அம்பிகையின் அருட்சக்தி. ஆதலால் தம்பதிகள் இடையே நிலவும் எத்தகைய மனவேற்றுமைகளும் இத்தலத்தில் மறையும் என்பதில் ஐயமில்லை.

அநாத ரட்சகன், ஆபத்பாந்தவன் என்று இறைவனை அழைக்கிறோம். எளியவனுக்கும் எளியவனாக இறைவன் விளங்குவதால் இத்தனை சக்திவாய்ந்த ஹரிபசலி சக்திகள் பூரிக்கும் திருத்தலத்தில் இந்த நோய் நிவாரண சக்திகளை எப்படிப் பெறுவது ? வைத்ய வீர ராகவன் என்ற ஒன்பது எழுத்து மந்திரத்தை வாய் விட்டு, அல்லது மனதிற்குள் ஓதியவாறே திருவள்ளூர் திருத்தலத்தை, ஹிருத்தாபநாசினி தீர்த்தத்தை அல்லது பாரிஜாத தல விருட்சத்தை வலம் வந்தாலே போதும் அனைத்து நோய் நிவாரண சக்திகளையும் அடியார்கள் பெற்று விடுவார்கள். ஆரஞ்சு வண்ண ஆடைகளை, இனிப்புகளை இத்தலத்தில் அல்லது தங்கள் ஊரில் தானம் அளிப்பதால் தங்களுடைய பிரச்னைகளை “நாசம்” செய்து தீர்த்து வைத்த இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்தியவர்கள் ஆவோம்.

ஸ்ரீதாந்த்ரேயச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து  சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தாந்த்ரீகம், மாந்த்ரீகம், வாமனம் போன்ற பல்வகை மந்திரச் சித்சக்திகள் உண்டு. ஆனால், முதலில் தம் குடும்பக் கஷ்டங்களின் நிவர்த்திக்காக மந்திர வழிபாடுகளைக் கொண்ட மனித சமுதாயம், காலப்போக்கில் இவற்றைச் சுயநலமாகவும், பிறருடைய வாழ்க்கையைப் பாதிக்கும்படியும் தவறாகப் பயன்படுத்துகின்ற துர்குணமாகக் கலியுகத்தில் பெருகி விட்டது. இதனால் மந்திரங்களும் பெருமளவில் தாமாகவும் மறையலாயின.

வேண்டாமை வேண்டுதல் வேண்டும்!

அது எப்படி, சில மந்திர சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தலாகும். அப்படியானால் மந்திர சக்திகள் தவறான விளைவுகளை ஏற்படுத்துமா?

மந்திரங்கள் எப்போதும் நற்பலன்களைத் தாம் தரும். “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரமும், “ஓம் நமோ நாராயணாய” எனும் அஷ்டாட்சர மந்திரமும் முக்தி, மோட்ச நிலைகளைத் தர வல்லவைதாம். ஆனால் நடப்பு உலகிலோ, இந்த மந்திரங்களை ஓதி ஆலயங்களை வலம் வந்து, கிரிவலத்தைக் கடைபிடித்துத் “தனக்கு வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நன்கு நடைபெற வேண்டும், வீடு வாசல் அடைய வேண்டும்!” என்ற பிரார்த்தனைகளுடன் தாமே பலரும் இம்மந்திரங்களை ஓதி வருகின்றார்கள். குடும்பக் கஷ்டங்கள் நிவர்த்தியானால்தான் ஒருவரால் தெய்வீகத்தில் நன்கு ஈடுபட முடியும் என்பது உண்மையே! எனவே, “வேண்டுதல் வேண்டாமையாகிய முக்தி நிலை வேண்டுகிறேன்!” என்று இறைவனிடம் கேட்டு வழிபடுகின்ற உத்தம நிலை அமைவதும் கடினமே! அப்படித் தோன்றினாலும் சில நாட்களில் மறைந்தும் விடும்!

எனவே மந்திரத்தை ஓதுவதால் கிட்டும் புண்ணிய சக்திகளை, அவரவர் தமக்கேற்ப சுயநலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர, மந்திரத்தின் மேல் எவ்விதக் குறைபாடும் கிடையாது. துன்பங்கள் பெருகி வரும் கலியுகத்தில், தம் நியாயமான குறைகளைத் தீர்க்க வேண்டி, மந்திரங்களை ஓதிக் கடவுளிடம் வேண்டுவதில் தவறு கிடையாது.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

ஆனால் காலப்போக்கில் இதுவே பிறருக்குத் துன்பங்களை விளைவிக்கும் வேண்டுதலாக மாறி வருவதுதான் வேதனைகளைத் தருவதாகும். திருப்பதியில், பலரும் தங்கள் வியாதிகள் தீர வேண்டும் என்று வேண்டிட, அதே சமயத்தில் மெடிக்கல் கடைக்காரர் தன் வியாபாரம் பெருகி, நஷ்டம் தீர வேண்டும் என அதே நேரத்தில் வேண்டுகையில், பிரபஞ்ச ஜீவன்கள் அனைத்திற்கும் முக்தி அளிக்க வல்ல திருப்பதிப் பெருமாளின் திருச்சந்நிதியில் எத்தகைய மனித சமுதாய வித்யாசமான பிரார்த்தனைகள் நிகழ்கின்றன? எனவே தாம் சித்தர்களின் மாமறை வாக்கான “சங்கல்பங்கள் எல்லாம் சங்கல்பங்கள் ஆவதில்லை!” என்பதின் படி, தமக்குக் கர்ம ரீதியாகவே, தாம் செய்த வினைகளின் விளைவுகளாகவே துன்பங்கள் ஏற்பட்டுள்ளன என உணர்ந்தால்தான் பிரார்த்தனைகள் சீர்மை பெறும்.

நன்மை செய்யவே மந்திர சக்திகள்

மேலும் அசுரத் தன்மைகள் கூடிய பல துர்தேவதைகள் உண்டு. தீய மனிதர்களைப் போல இந்த துர்தேவதைகளும் எப்போதும் தீமைகளைத்தான் செய்து கொண்டிருக்கும். மந்திரங்களை உச்சரிக்கும் அல்லது பிரயோகிக்கும் முறைகளை அறியாது, அரைகுறையாகக் கடைபிடிக்கும்போது, மந்திர சக்திகளில் எழும் விளைவுகள், பல பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர, மந்திர சக்தியில் எக்குறையும் கிடையாது.

கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி சுமங்கலிகளுக்கு குங்குமம் அளித்து வந்தால் மங்கல சக்திகள் இல்லத்தில் பெருகும்.
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால்
புற்றாடரவா புக்கொளியூர் அருணாசலமே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே
ஹரித்ரா குங்கும தேவ்யை நம:
மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம்
பக்தி ஹீநம் ஹரித்ரா
குங்குமாயை நம:
யத் பூஜிதம் மயாதேவி
பரிபூர்ணம் ததஸ்துதே
அநயா பூஜயா ஸ்ரீஹரித்ரா
குங்கும தேவி ப்ரியதாம்
யாதேவீ ஸர்வ பூதேஷு ஹரித்ரா குங்கும ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எவ்வாறு வியாபாரத்தில் ஒரு நல்ல பொருளுக்குப் போட்டியாகப் போலிப் பொருட்களைத் தயாரிக்கின்றார்களோ, இதே போல, தம்முடைய எதிரிகளாகக் கருதுபவர்களை அழிப்பதற்காக, மந்திர சக்தியில் கிட்டிய வல்லமைகளைத் தவறாகப் பயன்படுத்துகின்ற அசுர குணமும் கால, யுக மாற்றங்களில் எழுந்தன. சில மந்திர சக்தி விளைவுகள் அரிவாள் போன்று, பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்துப் பயனாகும். இது பயன்படுத்தல் முறைக் குறை மனித சமுதாயப் பெருங் குற்றமே தவிர, மந்திரங்களில் எவ்விதத் தவறும் கிடையாது.

மேலும், குறித்த சில சக்தி வாய்ந்த மந்திரங்களை முறையாகப் பிரயோகம் செய்யாவிடில், தவறான பிரயோகங்களால், தவறான, சில சமயங்களில் விபரீதமான பலன்களே உண்டாகும் என்பதால், தக்க சற்குரு, சான்றோர்கள் மூலமாகவே மந்திர உபாசனையைப் பெறுதல் வேண்டும்.

பீஜாட்சரங்களில் உற்பவிக்கும் மந்திரங்கள்

ஆதிமுதலில் ஹ்ரீம், க்லீம், ஷ்ரீம் போன்ற பீஜாட்சரங்களே மூல மந்திரங்களாக இருந்தன. ஆனால் இவற்றில் சித்தி பெற கடுமையான தவத்துடன், பயில்வதற்கும் பல்லாண்டுகளும் ஆயின. அதுவரையில் ஆயுளைப் பெருக்க, விசேஷமான தவம் தேவைப்படலாயிற்று.

ஆனால் ஆயுளைப் பெருக்கும் மந்திரத் தவத்தில் கை கூடிய மந்திர சித்திகளால் ஆயுள் கூடியவுடன், “தான் மரணத்திற்கு அப்பாற்பட்டவன்” என்ற மமதை பெருகி, அசுர குணமாகி, இறையவதாரத்தையே எதிர்க்கும் கொடிய அரக்கர்கள் பெருகினர். சுயநலத்தின்பால் மந்திர சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதங்கள் தாமே இவையாவும்!

உண்மையில், சித்தர்களும், மகரிஷிகளுமே, பீஜாட்சரங்களில் இருந்து தெய்வ சக்திகளை கிரகித்து, மந்திரங்களாக மாற்றியமைத்து, மக்களை நல்வழிப்படுத்திட, இறை மார்க்கத்தில் செலுத்துகின்ற தெய்வீக சாதனங்களாக அருளினர். இவ்வாறுதாம் (பீஜாட்சர) மந்திரங்களுக்கு முன்னால் “ஓம்” எனும் கட்டுப்பாட்டு ஆதிப் பிரணவம் சேர்ந்தது.

மந்திரக் காப்பு சக்திகள்

மேலும், போற்றி, நம: ஸ்வாஹா:, தர்ப்பயாமி – ஆகிய கடைவழி மந்திர சித்சுத்திகளும் நிர்ணயிக்கப்பட்டு, மந்திரங்களின் முன்னும், பின்னுமாக அமைந்து, மக்களுக்கு லௌகீகமாக நன்மை பயக்கும் வகையில் அமைத்துத் தரப்பட்டுள்ளன.

எனவே “ஓம்காரப் பிரணவமே”, மந்திர சக்திகளை நன்மை தரும் வகையில் தீயவற்றிற்கு மந்திர சித்திகளைச் செலுத்தாத முறையில் பண்படுத்திக் காப்பாற்ற உதவுகின்றது. இத்துறையில் மந்திரங்களை ஜீவன்களுக்கு நன்கு உதவும் வகையில், ஆக்கப்படுத்தித் தந்தவரே ஸ்ரீதாந்த்ரேய மகரிஷி ஆவார். இவர்தான் பல கோடி மந்திரங்களிலும் பீஜாட்சர சக்திகளைத் துய்த்தவர்.

ஸ்ரீநந்தீஸ்வரர்
சித்துக்காடு

இவர் யோகதவம் பூண்டு உலவிய இடங்கள் யாவுமே சித்துக்காடு எனப் பெயர் பெற்றன. சென்னை – பூந்தமல்லி அருகே உள்ள ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் ஆலயத்தில் தூய, தாந்த்ரீயம், தாந்த்ரீகம், தந்த்ரம், தாந்த்ரேயம் ஆகிய “தகர” வகை மந்திர சக்திகளில் வல்லமை பெற்றவர்.

“தகர” வகை மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எத்தகைய துர்வினைகளையும், துர்சக்திகளையும் மாய்க்க வல்லவை. அகர சக்தி, மகர சக்தி, உகர சக்தி ஆகிய முக்குண ஓங்கார சக்திகளின் ஞானத்தை அடைந்தவர். தகர சக்திக்கு ஸ்ரீதாந்த்ரேயச் சித்தர் வல்லுனராக விளங்குகின்றார். திருச்சி அருகே உள்ள வல்லம் திருத்தலத்தில் உலா வந்த ஸ்ரீவல்லபச் சித்தரின் தலைமைச் சீடரும் ஆவார்.

ஈசானம், தத்புருஷம், வாமனம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து வகை ஈசான்யத் தத்துவங்களில் வாமன முகசக்தியில் திளைக்கும் தாந்த்ரேய மந்திரங்களைத் திரட்டித் தந்தவரே ஸ்ரீதாந்த்ரேயச் சித்தராவார்.

அபூர்வ யோகங்கள் தந்த தாந்த்ரேயர்

சில ஆலயங்களில் இரண்டு கால்களையும் கழுத்தைச் சுற்றி வைத்திருக்கின்ற பாணியிலே, ஒரு தாந்த்ரீக யோக வடிவில் இச்சித்தரை இன்றும் தரிசித்திடலாம். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, கழுத்திற்கு மேல் இரண்டு கால்களை உயர்த்தி முகத்தை நேரே வைத்துப் பார்க்கும் மூஷிக தாந்த்ரேய யோகத்திலும் இவர் வல்லவர்.

“ஐயைந்தின் அப்புற யோகத்தில் எப்புறமும் கண்டு விண்டார்” என்பது இவருக்கு உரிய மாமறை அடைமொழியாகும். அதாவது ஐயைந்தாகிய (5x5) 25 மகேஸ்வர வடிவங்கள் காட்டும் யோகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை இறைவனிடம் பரிசாகப் பெற்று அடைந்தவரே ஸ்ரீதாந்த்ரேயச் சித்தர். இவர் கிரிவலம் வரும் திருநாளே தாரண வருடச் சித்திரை மாதச் சிவராத்திரி திருநாளாகும்.

வல்லம் சிவத்தலம்

மந்திரப் பணி ஆற்றுவோர் வருக வருகவே!

பீடாதிபதிகள், நாடி படிப்பவர்கள், ஜோதிடர்கள், எண் கணிதத் துறையினர் (numerologists), அர்ச்சகர்கள், அனைத்து மூர்த்தி உபாசகர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பண்டார சந்நதிகள், தமிழ்மறை வித்வான்கள், வைத்தியர்கள், சாஸ்திரிகள், மந்திரக் கர்த்தாக்கள், நல்ல நெறிகள் பயின்று குறி சொல்பவர்கள், மிகுந்த பக்தி சிரத்தையுடன் அருள்வாக்குத் தருவோர், பஞ்சாங்கம் கணிப்பவர்கள் – போன்று மந்திரங்களைக் கொண்டு சமுதாயப் பூஜைகளில் ஈடுபடுவோர், இந்நாளில் கண்டிப்பாக அருணாசல கிரிவலம் வர வேண்டும்.

ஸ்ரீஇத்மாலக ரிஷி காயத்ரீ
ஓம் தத் புருஷாய வித்மஹே
ப்ரபஞ்ச யாக யக்ஞ சித்திகராய தீமஹி
தந்நோ அகஸ்திய புத்ர ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இத்மாலக ரிஷி ப்ரசோதயாத்

ஏனென்றால் அஷ்டோத்திரங்கள், ஹோம மந்திரங்கள், பிரயோக மந்திரங்கள், பரிகார மந்திரங்கள் போன்றவற்றில் அஷ்ட ஸ்துதி நியதிகள் (எட்டு) நிரவி இருக்க வேண்டும். மந்திர உச்சாடனம், அர்த்த புஷ்டி, ஹஸ்த முத்திரைப் பிரயோகம் போன்ற இந்த எட்டில் ஏதேனும் குற்றம், குறைகள் இருப்பின் இவை மந்திர சித்சக்திகளைக் குறைத்து விடும், கூறும் பலாபலன்களும் தவறும்.

மேலும் ஜாதி, மத பேதமின்றி, மக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஆன மந்திர சக்திகளை, ஆலய பூஜைகள், பரிகாரப் பூஜைகள், இல்லறக் கர்மாக்கள் போன்றவை மூலம் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பில் இவர்கள் இருப்பதால், அறிந்தோ, அறியாமலோ இவர்கள் எத்தகைய தவறுகளும் ஏற்படாமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏற்படும் தவறுகளுக்கு உரித்தான பிராயசித்த ஹோமங்கள், அக்னி பூஜைகளும் உண்டு. இவற்றையும் தக்க சற்குருவிடம் அறிந்து கடைபிடிக்க வேண்டும்.

பிரபஞ்ச மந்திர கர்த்தாவாக தாந்த்ரேய மகரிஷி, அருணாசல கிரிவலம் வருகின்ற தாரண வருடச் சித்திரை மாத சிவராத்திரி கிரிவலத்தில் தாம் இவற்றிற்கு ஓரளவு பிராயசித்தங்களைப் பெற முடியும். எனவே இவர்களோடு ஏனையோரும் தக்க மந்திர சக்திகளை அடையும் வழிமுறைகளை அடைவதற்கு இம்மாத கிரிவலம் உதவும்.

தாரண சக்திகள்

தாரண வருடம் பற்றி இதுவரையில் ஜோதிட ரீதியாக அறிந்திருப்பீர்கள். இங்கு நாம் அளிப்பது சித்தர்கள் அளிக்கின்ற கர்ம பரிபாலன ரீதியான விளக்கங்கள் ஆகும்.

கர்ம வினைகளின் பெருக்கத்தால் எப்படி எப்படியோ வாழ்கின்ற மனிதர்களுக்கு, கர்ம வினை சக்தியை உணர்விப்பது தாரண சக்தியே! கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் நன்றாய் உணர வைக்க வல்ல ஆன்ம சக்தியையும், காலங் கடந்த யோக நிலையையும் தருவதே தாரண காரண சக்திகளுள் ஒன்றாம்.

கீழ்க்கண்ட சுதர்சன மந்திரத்தை தினமும் 21 முறை கூறி வருவதால் வலுச்சண்டைகள் வராது.
ஜ்வாலா சக்ரம் ஸகஸ்ரபாஸ்கர கோடி துல்யம்
ருத்ராக்னி ப்ரபாவம் ஸுதர்ஸனம் சரணம் ப்ரபத்யே

பல ஜன்மங்களாக உலவி ஒட்டி வருகின்ற எத்தகைய கர்ம வினைகளையும் நன்கு அறிந்து, இவற்றைக் கடப்பதற்கான வழிமுறைகளை அறிய வைப்பதும் சித்தர்களின் வழிமுறைகளே! இவற்றை நிவர்த்திபதற்கான பரிகாரங்களையும், தாரண நீராடல் வழிபாட்டு முறையால், கபால தாரண சக்திகளின் துணையாகச் சித்தர்கள் அளிக்கின்றார்கள். ஆம், தாரணத் தமிழ் ஆண்டில் நீங்கள் நிறையத் தீர்த்த நீராடல்களை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் நீர்ப் பஞ்சம் நிலவிடினும், எங்கு ஆறு, நதி, கிணறு, குளத் தீர்த்தம் நன்கு உள்ளதோ, அவ்விடத்தில் இறை வழிபாடுகளையும், தான தர்மங்களையும் மேற்கொள்தல் தீர்த்தங்களிலும் சங்குத் தீர்த்தம் (திருக்கழுக்குன்றம்), சங்கு வடிவக் குளத் தீர்த்தம் (காரைக்குடி அருகே உள்ள மானகிரி), அஷ்டக் கோண, எண்கோணத் தீர்த்தங்கள் (மணமேல்குடி பெருமாள் ஆலய தீர்த்தம்), நந்தி வாய்த் தீர்த்தம் (ராமகிரி), 16 துறைத் தீர்த்தம் (திருவள்ளூர், மஹாமகக்குளத்தில் இவை முன்பு இருந்தன) போன்ற சிறப்பான வகைகள் நிறையவே உண்டு. இவற்றைப் பற்றிப் பலரும் அறியச் செய்ய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உண்டு. தீர்த்த நீராடல்களினால் பெரும் பாவ சக்திகள் நீங்குவதால் சந்ததிக் குறைகள் ஏற்படாது இவை காக்கும்.

இவ்வாண்டில் காரண சக்தி நிறைந்த ஸ்ரீகாரணீஸ்வரர் ஆலயம் (சென்னை), ஸ்ரீதிருமூலநாதர் (பூவாளூர்), ஸ்ரீசாரங்கபாணி போன்ற காரண, சாரண, தாரண சக்திகள் நிறைந்த ஆலயங்களில், பட்சத்திற்கு (15 நாட்கள்) ஒரு முறையேனும் வழிபட்டு வருதல் வேண்டும். இதனால் இனம் புரியாத கவலைகள், பீதிகள் மனதை ஆக்ரமிப்பது தணியும்.

தாரண ஆண்டில் தர்பைகளை வைத்து நிறையப் பூஜிக்க வேண்டும். (ஹோமம், அர்ச்சனை கிரீடம், தர்ப்பண்ம்).

பெருகி வரும் திருடர்கள், தீயவர்கள், அகங்காரம், ஆணவம் மிகுந்தவர்கள் மூலமாக ஏற்படும் பொருள் இழப்பைத் தணிக்கத் தாரண சக்திகளும் பெரிதும் உதவும். ஆலயங்களை ஒட்டி உள்ள கழிவறைகள் நீக்கப்பட்டு ஆலயத் தீர்த்தங்களைப் புனிதப்படுத்தும் அறப் பணிகளையும், அவ்வப்போது உள்ளூர் ஆலயக் கோமுகங்களையும் (அபிஷேக நீர் வெளிவரும் தாரை) சுத்திகரிக்கும் உழவாரப் பணிகளையும் நிறைய ஏற்று நடத்த வேண்டும். இதனால் சமுதாயத்தில் அவமானப்படுவதான பெரும் பிரச்னைகள் தீர்வு பெற நல்வழிகள் கிட்டும்.

நந்திவாய் தீர்த்தம்
தேவர்மலை கரூர்

இவ்வாண்டு முதல் இரவில் நெடுநேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து, இரவு 9 மணிக்குள் உணவு உண்ணல் மற்ற காரியங்களை முடித்து, உறங்கி விடியற்காலை 4 அல்லது 5 மணிக்குள் எழும் ஆரோக்கியமான வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அன்னதானம், சத்சங்க இறைக் காரியங்களில் இந்நியதி தளர்த்தப் பெறும்.

தாரண சக்திகளில் ஒரு வகையான சந்த்ர தாரண சக்தியானது குழந்தைகள், பிள்ளைகளுக்கு நிறையத் தேவை. குறைந்தது 8 மணி நேர உறக்க ஓய்வு பிள்ளைகளுக்குத் தேவை. இந்த ஓய்வின் நிறைவிற்காகவும், பிள்ளைகளின் உடலில் வித்யா சக்திகள் நிறைந்த 24 சுழிகளில் தேவசக்தி நிரவி, ஞாபக சக்தி விருத்தியாகி, கடவுள் பக்தி பெருகிடவும், காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பரவெளியில் நிரவும் வித்யப் பிரகாச சக்திகளைப் பெறுதல் வேண்டும். சூரிய உதய நாழிகைக்கு முன்தான் இது பரவெளியில் நிரவும். காலையில் தாமதமாக எழும் வழக்கத்தால் பிள்ளைகளுக்கு இவை கிட்டாது மனசஞ்சலங்கள் பெருகுகின்றன.

வயது பேதமின்றி அனைவருக்குமே சூரிய உதயத்திற்கு முன் பரவெளியில் நிரவும் ஸ்வேதக் கிரண சக்திகள் நிறையத் தேவை! ஆனால் கலியுகத்தில் பலரும் இதனைப் பெறுதல் கிடையாது.

ஸ்ரீசரஸ்வதி தேவி
கொடுமுடி

தாரண, காரண சக்திகளை உற்பவிக்கும் கிரணங்கள், பொதுவாக விடியற்காலையில் மூன்று மணிக்கு, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே உருவாகின்றது. பிள்ளைகளுக்கான மஸ்திஷ்காதம் என்ற மூளைப் பகுதியில் நல்ல, அமிர்த சக்திச் சுடர் நிலவும் நேரமிது! கலியுகத்தில் காலை 3 மணி முதல் 5 மணி வரை பரவெளியில் தோன்றுகின்ற பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுரக்கும் அமிர்தக் கதிர்கள் உலக மக்களால் துரதிருஷ்டவசமாகப் பெற இயலாமல் விடுபட்டு வருகின்றது. இதனால் தாம் அவரவரை நல்வழிப்படுத்துகின்ற கபால சக்திகள் மங்கிப் போயுள்ளன.

தாரண வருஷத்திலாவது இவற்றை ஓரளவேனும் பெற்றுக் கபால சக்திகளை விருத்தி செய்து கொள்ள மனித சமுதாயம் முயற்சிக்க வேண்டும். இதற்காக ஸ்ரீஆர்த்ர கபாலீஸ்வரர் (கொடுமுடி), ஸ்ரீகபாலீஸ்வரர் (சென்னை மயிலாப்பூர்), ஸ்ரீகுடுமீஸ்வரர் (குடுமியான்மலை), ஸ்ரீஉஜ்ஜீவநாதர் (உய்யக் கொண்டான்மலை) போன்ற கபால சக்தித் தலங்களில் தர்பை மற்றும் மலர்க் கிரீடங்கள் சார்த்தி அபிஷேக, ஆராதனைகளை ஆற்றிட வேண்டும்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி எழுந்தருளும் ஆலயங்களில் சிதறுகாய் நேர்த்தி வைத்துப் பிரதோஷ நாளில் வழிபட்டு வருவதால், மூளைத் திறன் மங்கல், ஞாபகமறதி, மந்த புத்தி போன்றவை நிவர்த்தி பெற மிகவும் உதவும்.

மேலும் தாரண ஆண்டில் மஞ்சளும், பச்சையும் கலந்த வண்ணங்களில் அளப்பரிய தெய்வீக சக்திகள் நிறைந்து விளங்குவதால், மஞ்சள் நிற வாசனைப் புஷ்பங்கள், துளசி, வில்வம், வன்னி, மரிக்கொழுந்து போன்ற பசுந் தளங்களால், அமர்ந்த நிலையில் உள்ள மூர்த்திகள் வழிபாடு சிறப்பானது. இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

ஸ்ரீஅகோரவீரபத்திரர்
ஏத்தாப்பூர்

இவ்வாண்டில் தூண்டா விளக்கு போல எப்போதும் தீபம் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆலய விளக்குகளுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு எண்ணெய், விளக்குத் திரிகளை அளித்திட வேண்டும். இதனால் தக்க சமயத்தில் பருவம் அடையாத பெண்களுக்குத் தக்க நிவர்த்தி கிடைக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியால் அவதியுறுவோரும் நல்ல நிவர்த்திகளைப் பெற சப்த மாதர்களுக்கு (திருத்தணியில் விசேஷமாக சப்தமாதர்கள் அருள்கின்றனர்) மஞ்சள் மற்றும் பச்சை வண்ண ஆடையைச் சார்த்தி வழிபட்டு வர வேண்டும்.

தாரண வருடத்தில் தலையில், முதுகில் அடிபட்டுக் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஸ்ரீவீரபத்திர மூர்த்திக்கு, திருவாதிரை, திங்கள், சஷ்டி நாட்களில் வில்வ தளத்தால் ஆன ஆடையை (வேப்பிலை ஆடை போல்) சார்த்திப் பாதங்களுக்கு மஞ்சள் காப்பிட்டு வழிபட வேண்டும்.

பிள்ளைகளுக்கு படிப்பைத் தவிர மிகச் சாதாரண விஷயங்களிலும் நிறைய ஞாபக மறதி உண்டாவதால் பல சங்கடங்கள் ஏற்படும். இவர்கள் தாரண ஆண்டில் தினந்தோறும், நின்ற நிலைப் பிள்ளையாருக்கு 21 முறை தோப்புக் கரணமிட்டு வழிபட்டு வருவதால், கால் நரம்புகளும், பாத ரேகைகளும் மேம்பட்டு, ஞாபக சக்தி விருத்தியடைய வழி பிறக்கும். ஆம், ஞாபக சக்திக்கான கிரண ரேகைகள் பாதங்களில் தாம் உள்ளன.

பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறைச் சதுர்த்தசித் திதியானது விருத்தி அம்சங்களோடு துணை புரிவதால், நின்ற நிலையில், வால் உயரே தூக்கி உள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுதலும் தாரண சக்திகளை மேம்படுத்தும்.

நெடுநாளாகத் தங்கி உள்ள நேர்த்திகளைக் கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டிய தாரண ஆண்டு இது. கலியுக சமுதாயத்தில், பல துன்பங்களுக்கு மூல காரணமே, குலதெய்வ வழிபாடு, நேர்த்திகள் நிறைவேற்றப்படாததே ஆகும். குலதெய்வம் மற்றும் எல்லைக் காவல் தெய்வ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள இடங்களில் சுண்ணாம்பு, செம்பட்டை, செங்காவி அடித்துத் தர உதவுதல் சிறப்புடையது. வழிபாட்டுக் குற்றங்கள், பிரார்த்தனைக் குறைகளுக்கு இப்பணிகள் ஓரளவு நிறைவு தரும்.

இதுவரையில் வாழ்வில் பிறரிடம் சொல்ல இயலாத வகையில் தாங்கள் செய்த தவறுகளுக்கு, பிராயச்சித்த வழிகள் பெற வேண்டிய நல்வாய்ப்பினைத் தாரண வருடம் பெற்றுத் தருகின்றது. இதற்கு அரசமரத்தடித் தர்ப்பண சக்திகள் துணை புரியும். அரசு, ஆல், வேம்பு போன்ற மரத்தடியில் அருளும் பிள்ளையாருக்கு அடிக்கடி பூணூல், வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் தக்க நிவர்த்தி வழிகளைப் பெற்றுத் தரும்.

பலவகை ஸ்ரீரங்கநாத மூர்த்திகளுள் தாரண ஆண்டில் குறைந்தது 13 ரங்கநாத மூர்த்திகளுக்கு தர்ப சயனத்திற்கான தர்பைப் பந்தல், தர்பை வஸ்திரம் போன்றவற்றை அளிப்பதும் மிகவும் சிறந்தது. உறவில் எழும் பகைமை, விரோதம், குரோதத்தைத்  தீர்த்து அமைதி காக்க வல்ல சக்தி வாய்ந்த தர்ப்பை வழிபாடு இது.

ஸ்ரீஅகோர வீரபத்திரர்
திருத்தலையூர்

இவ்வாண்டில் தனியாகப் பயணம் செய்வதை விட பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்கப் பூர்வமாக நிறைய இறைவழிபாடுகளுடன் பிரயாணம் செய்வதே நல்லது. முடிந்தவரை நெடுந்தூரப் பயணத்தை இவ்வாண்டில் தவிர்ப்பது நல்லது.

தோல் சம்பந்தமான நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளதால் ஏழைகளுக்குக் கம்பளி ஆடைகளை தானம் செய்ய வேண்டிய ஆண்டு. இவ்வாண்டு கூடிய வரை பருத்தி ஆடைகளையே பயன்படுத்துதல் வேண்டும். இதனால் சுவாச யோக சக்திகள் விருத்தி அடையும்.

குரங்கு, கிளி, பூனை, கீரி, பாம்பு போன்றவற்றை அடைத்து வைக்கும் நிலை மாற, இவற்றை விலை கொடுத்தேனும் வாங்கிச் சுதந்திரமாக நடமாட வழிவகை செய்வதால், பொறாமை காரணமாக அடிக்கடி துன்பம் தருபவர்களுடைய தொல்லைகள் நீங்க வழி பிறக்கும்.

இவ்வாண்டில் ஆடவர்கள் உடல் முழுதும் 18 இடங்களில் திருநீறிட்டு வழிபடுதல் விசேஷமானது. இதனால் நல்ல எண்ணங்கள் பரிமளிக்கும். நாட்டுச் சமுதாயத்தில் சாதி, மத ஒற்றுமையின்மை அகன்றிட, தாரண ஆண்டில் பட்டைகளுடன் இருக்கும் பட்டை தாரண லிங்க வழிபாடு (புதுக்கோட்டை குழிபிறையை அடுத்துள்ள செவலூர் பட்டுக்கோட்டை அருகே திருக்கடிக்குளம், திருநாவலூர் பட்டைலிங்கம்) விசேஷமானது.

அஷ்டகோண திருக்குளம்
மணமேல்குடி

தாரண வருடம் பற்றிச் சித்புருஷர்கள், ஞானபத்ர கிரந்த வாரியாக உரைக்கின்ற விளக்கங்கள் இவ்விதழில் அளிக்கப்பட்டுள்ளன. இவை யாவையும் ஜோதிடப் பூர்வமானதாகக் கருதாமல், கர்ம பரிபாலனத் துறை விளக்கங்களாக உணர்தலே நன்று. காரணம், ஜோதிடம் என்றாலே வரும் காலத்தை உணர்த்துதல் என்று மட்டுமே தவறாகப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால், சித்தர்கள் ஜீவன்களுடைய இருவகைக் கர்ம நிலைகளைக் கருத்தில் கொண்டு, அந்தந்த ஆண்டில் ஜீவ சமுதாய நிலைகளை உரைக்கின்றனர். அதாவது, மனித சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தன் வினை நிலைகளோடு, தன் வினைகளின் விளைவுகளால் சமுதாய வாழ்விலும் விளைவுகளை ஏற்படுத்துவதே இந்த இருவகை கர்ம நிலைக் கோட்பாடாகும். கர்மா, தர்ப்பணம் என்றும் அழுத்தமாகக் குறிப்பிடுவதைப் பற்றிப் பலரும் வியக்கின்றனர். ஆத்மா என்பது அனைத்து ஜீவன்களிடம் அன்பு அம்சமாக இணைந்திருந்தாலும், பரிசுத்தமாக, அந்த அன்பினை உணர விடாமல் மறைப்பதே அவரவர்களுடைய கர்ம வினைகளின் விளைவுகளாகும். நீங்கள் ஒருமுறை வீட்டிலிருந்து புறப்பட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை, உடலால் மட்டும் இன்றி உள்ளத்தாலும், அதைவிடப் பெருமளவில் மனத்தாலும் எத்தனையோ கர்மங்களைச் (காரியங்களை) செய்து விடுகின்றீர்கள்! எண்ணுவதும் ஒரு மனக் காரியம் தானே! அனைத்து எண்ணங்களுக்கும் நீங்கள் தானே பொறுப்பு! இதனால் தான் எந்த ஒரு நிமிடமுமே மனிதனின் கர்ம வரைவு கோல் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதால்தான், ஜோதிடப் பூர்வமாக பலவற்றைச் சரியாக எடுத்துக் கூற இயலாத நிலை ஏற்படுகின்றது. ஏனென்றால் ஜாதகம் பார்த்த சில நாட்களிலேயே பலத்த கர்ம வினைகளை மனிதனிடம் கூடுதலாகச் சேர்ந்துக் கொள்கின்றமையால், அதுவரையில் வந்த கணிப்பு நிறைவேறாது மாறிவிடும்.!

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி
திருநல்லூர்

தாரணப் புத்தாண்டு 13.4.2004 செவ்வாய் கிழமை மாலை 6.2 மணிக்கு, சூரிய பகவான் மேஷ ராசியில் அசுவினியின் முதல் பாகத்தில் பிரவேசிக்க, தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. இந்நாளுக்கான கிரகங்களின் வடிவை, அமைப்பை பஞ்சாங்கத்தில் பார்த்து, பச்சரிசி மாக்கோலத்தில் ஒரு வாழை இலையில் வரைந்து சுற்றிலும் பதினாறு வகை தானியங்களை வைத்து வழிபடவும். நடுவில் மூன்று விளக்குகளை ஏற்றிப் பூஜிக்கவும்.

தர்ப்பணம்

அடியார்: குருவே! தர்ப்பணம் என்பது இறந்தவர்களின் நலனுக்காக அளிக்கப்படுவதா? இருப்பவர்களின் நலனுக்காக அளிக்கப்படுவதா?

சற்குரு: இரு வகையினரின் நலன்களுக்காகவும் அளிக்கப்படுவதே தர்ப்பணமாகும். இறந்தவர்கள் அனைவருமே பிறவியற்ற உத்தமப் பெருநிலைகளான, முக்தி, மோட்ச நிலைகளை அடைந்திடுவது கிடையாது! மேலும் இறந்த உடனேயே மறு பிறவிகளை அடைவதும் கிடையாது. இறந்த பிறகு, மறு பிறவி நிர்ணயம் ஆகும் வரையில், பரவெளி பூமியில், சாயா உரிமம் எனும் சரீரத்தில் இருந்தாக வேண்டும். அதாவது, அடுத்த பிறவி நிலை அமையும் வரை, இறந்தவர்கள் யாவரும் சாயா உரிமம் எனும் ஒரு வகை உடலைப் (ஆவி வடிவு போன்ற நிலை – இதில் எண்ணற்ற வகைகள் உண்டு) பெறுகின்றனர். இச்சரீரத்திலும் இன்ப, துன்பச் சுமைகள் நிறையவே உண்டு.

எனவே இறந்தவர்களும் சாயா உரிமத்தில் இருந்து விடுபட்டு நற்பிறவிகளை, நன்னிலைகளை அடைய வேண்டியும், அவர்களுடைய சந்ததிகளால் தர்ப்பணப் பூஜை நிகழ்த்தப் பெறுகின்றது.

நம் மூதாதையர்கள் வழி வந்தமைக்காக, நாமளிக்கும் இந்தத் தர்ப்பண நன்றிப் பிரார்த்தனை, அவர்களுக்கு நன்னிலை தந்து, அவர்களும் சாயா உரிம உடலில் இருந்து மீளவும் உதவுவதால், அவர்களும் ஆனந்தித்துச் சந்ததிகளை வாழ்த்துகின்றனர். இதுவும் சந்ததிகளுக்கு நல்ஆசிகளாக வந்து சேரும்.

பித்ருக்கள் போன்ற உத்தம இறைநிலைகளை அடைந்திருப்போருக்கு அளிக்கும் தர்ப்பண சக்தியால், பித்ருக்களுக்கும் மென்மேலும் உத்தம நிலைகள் கிட்டுகின்றன. இதனாலும் தேவ அனுகிரகமாக, பன்மடங்கு ஆசிகளாகச் சந்ததிகளுக்கு நல்வரங்களாக வந்தடையும்.

தர்ப்பண சக்தி பல்வேறு பிறவிகளுக்கும் செல்லுமாம்!

அடியார்: இறந்தவர்கள் ஈயாகவோ, எறும்பாகவோ, தாவரங்களாகவோ, மனிதராகவோ வேறு பிறவிகளை எடுத்திருந்தால் தர்ப்பணப் பூஜை அவர்களை எவ்வகையில், எவ்வாறு சென்றடையும் குருதேவா?

சற்குரு: அவர்கள் எப்பிறவி கொண்டுள்ளார்களோ அந்தப் பிறவியின் நலன்களுக்கு மட்டுமல்லாது, தர்ப்பணப் பூஜையில் செறியும் பக்தி, சிரத்தை, சத்ய நிலையைப் பொறுத்து, பூர்வ ஜன்ம வினைத் தீர்வுகளுக்கும் தர்ப்பண சக்தி உதவிடும்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி
ஆமூர்

உதாரணமாக, ஒருவருடைய பாட்டனார், தற்போது ராஜஸ்தானில் விவசாயியாகப் பிறந்திருந்தால், அவருடைய பேரனால் அவருக்கு இங்கிருந்து இங்கு அளிக்கப்படும் மாதாந்திரத் தர்ப்பணப் பூஜா பலன்கள், அந்த ராஜஸ்தான் விவசாயியின் குடும்ப மேன்மைக்கான நல்வரங்களாக விருத்தியாகி நன்கு பலன்களைத் தரும்.

எனவேதான் தர்ப்பணப் பூஜை, தேசிய பூஜையாக, உலக சமுதாயப் பூஜையாகப் பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த நாட்டிலும் காண முடியாத வகையில், லட்சக் கணக்கான சுயம்பு லிங்க மூர்த்திகளுடன் துலங்கும், பூவுலகின் ஆன்மீக மையமான புண்ணிய பாரதத்தில் நாம் மிக மிகப் புனிதமான மனிதப்பிறவி கொண்டுள்ளமையால், நம் உலக சகோதர மக்களின் மேன்மைக்காகவும், சக அகில மக்கள், சக ஜீவன்கள், தாவரங்கள், விலங்கினங்கள் சார்பாகவும், அதியற்புத சனாதனக் கடமையாகவும், தர்ப்பணம் பற்றி அறிந்தோர், அறியாதோர், நம்பிக்கை இல்லாதோர், மானுடர், தாவர, விலங்கின பேதமின்றியும், அனைத்துலக ஜீவன்களின் சார்பிலும், தர்ப்பண பூஜை ஆற்ற வேண்டிய பிறவி லட்சியக் கடமை அனைத்து பாரத மக்களுக்கும் உண்டு.

உலகில் உள்ள அனைத்து மதங்களிலும், தர்ப்பணப் பூஜை வெவ்வேறு முறைகளில், வடிவுகளில் கடைபிடிக்கப் படுகின்றன. இத்தர்ப்பணப் பூஜா பலன்கள் மூதாதையர்களின் பூர்வ ஜன்ம வினைகளையும் மற்றும் இறந்த பின், (தற்போது) பிறவி கொண்டுள்ளோரின் பூர்வ ஜன்ம வினைகளையும் தீர்க்கவும் மிகவும் உதவும்.!

அடியார்: வெறும் எள் கலந்த நீருடன் தர்பையில் வைத்து அளிக்கப்படும் தர்ப்பணத்திற்கா இவ்வளவு மகத்துவம் குருவேதா?

சற்குரு: சிவ, சிவா! வெறும் எள், வெறும் நீர் என்று சொல்லலாகுமா? வெறும் தர்பை தானே என்று அலட்சியமாக எண்ணுதல் கூடாது! கும்பாபிஷேகம் முதல், சுயம்பு மூர்த்திகளுக்கான பூஜைகள், புனிதமான கொடிக் கம்பம் என அனைத்திலும் பயன்படும் புனித தர்பை ஓர் அற்புதமான தேவ மூலிகை! தர்பையைத் தொட்டு ஸ்பரிசிப்பதற்கே ஒருவர் மகா புண்ய பலா பலன்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தர்பை நம் நாட்டில் மிகவும் தாராளமாகக் கிடைப்பதால், அதன் தெய்வீக மகத்துவத்தை நாம் நன்கு உணரவில்லை. ஆனால் புராண காலங்களிலும், பிரளய காலத்திலும் ஒரு கட்டுத் தர்பை கூடக் கிட்டாது, பெரும் மகரிஷிகளும் ஆங்காங்கே காடுகளில் தேடிக் கண்டனர். தினமும் தர்பை மாலையை ஆலயத்திற்கு அளித்தலும் மகத்தான புண்ய காரியமாகும். தினமும் தர்பைப் பாயில் அரைமணி நேரமாவது அமர்ந்து பூஜிக்க, தியானிக்க வேண்டும்.

எள்ளில் எழும் ஏகாந்த சக்திகள்

எள் என்பது ஸ்ரீதிருமாலின் திருமேனியில் உதித்தத் தான்யமாகும். ஆயுள் விருத்தியைத் தரவல்ல மந்திர சித்சக்தியைக் கொண்டிருப்பதால், ஆயுள்காரகரான ஸ்ரீசனீஸ்வரருக்கும் மிகவும் ப்ரீதி அளிப்பதுவே எள் ஆகும்!

தர்ப்பணம் அளிப்பதற்கான நீரை, கங்கை, காவிரி, போன்ற புண்ய நதி நீர், மஹாமகத் தீர்த்தம், கோமுகத் தீர்த்தம், நல்ல கிணறு அல்லது ஊற்று நீர் போன்றவற்றில் இருந்து பெறுகையில், நன்முறையில் தர்ப்பணத் தீர்த்தமாகப் பயன்படுவதால் நீர் தரும் அவற்றின் மேன்மையும் புனிதமாய்ப் பெருகுகின்றது. அந்தந்தத் தீர்த்த தேவதைகளும் இதனால் பயன் பெறுகின்றன.

ஸ்ரீபட்டைலிங்க மூர்த்தி
திருநாவலூர்

மேலும் அமாவாசைத் தர்ப்பணத்தில் பித்ரு மூர்த்திகள், பித்ரு நாயகர்கள், பித்ரு பத்னிகள், பித்ரு கணங்கள், தர்ப மூலிகா தேவதைகள், தீர்த்த தேவதைகள், மந்திர தேவதைகள், தான்ய தேவதைகள், திலதேவதைகள் எனப் பல தேவதா சக்திகளின் நல்வரங்கள் ஒன்றாய்க் கூடுகின்றன. இதன் புனிதம் கருதியே நம் கிராம மக்கள் அமாவாசையன்று புலால் உண்பதை முற்றிலும் தவிர்ப்பர்.

அடியார்: மும்மூன்று தர்பைகளை வைத்துத் தர்ப்பணம் அளிப்பதன் மகத்துவம் யாதோ குருதேவா?

தர்பைச் சட்டம் அமைப்பதில் பல வகைகள் உண்டு. பொதுவாக, சந்ததி விருத்திக்காக, பித்ரு சாப நிவர்த்திக்கான தர்ப்பணத்தில் புத்ர காமேஷ்டித் தீர்த்தத்தால், 96 விஷ்ணு தர்பைகளை ஷட்கோணத் தர்பைச் சட்டமாக்கி வழிபட வேண்டும். எந்த ராசியில் அமாவாசைக்கான சூரிய ,சந்திர சங்கமம் நிகழ்கின்றது என்பதைப் பொறுத்துத் தர்ப்பண தர்பைச் சட்ட வகைகள் மாறுபடும்.

மூன்று என்பது முக்கோண யந்திர சக்திகளை உடையது. கும்பகோணம் அருகே கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் சிவாலய நவகிரகப் பிரதிஷ்டையில், அந்தந்த நவகிரகச் சக்கரத்திற்கான வட்டம், சதுரம், நீள்சதுரம் போன்ற வடிவுகளில் பின் சக்கரங்களுடன் தோன்றுவதைக் கண்டு தரிசித்திடலாம்.

முக்கோண வடிவில், யந்திரச் சக்கர சக்திகள் பன்மடங்காய் வலுக்கும். இதிலும் பல கோணங்களை உருவாக்கும் மூன்று தர்பைகளாலான தர்ப்பைச் சட்டச் சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது.

இதனால்தான் ஜீவன்களுக்கு வலுவான ஆன்மசக்தி அளிக்கும் குருவிற்கு உரிய எண்ணும் மூன்றாக அமைந்துள்ளது. இப்பூவுலகில் முக்கூட்டு ஆன்மீகத் திரவியங்கள் நிறைய உண்டு. இவற்றுடன் சில மூலிகைகளைச் சேர்த்துப் பந்த(ன)ளமாக்குகையில், அவை மாமருந்தாய், ஹோம சமூலங்கள் ஆகின்றன. ஹோம சமூலங்கள் யாவும் ஹோமாக்னி சக்திகளை கிரகிக்க வல்லவை!

இவ்வகையில் தேவ மூலிகையான தர்பை, எள், தர்ப்பணத் தீர்த்தம் ஆகிய த்ரயம்பக தாரண சக்திகளைக் கொண்டதாகின்றது.

கொட்டையூர்

அதாவது நிலம், நீர், ஆகாசமாகிய, திரயம்பக ஆன்ம சக்திகளை நிரவும் தன்மை, இம் மூன்றும் இணையும் தர்ப்பண சாசனத்திற்கு உண்டு. இம்மூன்றும் கூடிய கலவை, மந்திர சித்தி, ஆகாச வள சக்தி, ஜலாக்னி ஆகிய பல்வகை தேவ சக்திகளை உத்பவிக்க வல்லதாகும். அமாவாசையன்று இத்தகைய சமூலங்களை, ஆஹூதிகளாக (ஹோம நெருப்பில் படைத்தல்) அளித்து ஹோம பூஜைகளை ஆற்றுவது பித்ரு சாபங்களை நிவர்த்தி செய்யப் பெரிதும் உதவும்.

அமாவாசைப் சக்திப் பரிபூரணத் தலங்கள்

சூரிய மூர்த்தியும், சந்திர மூர்த்தியும் இணைகின்ற அமாவாசைத் திதி தருகின்ற தெய்வீக சக்திகளைப் பரிபூரணமாகப் பெறுவதற்கான வழிமுறைகளை என்றேனும் கடைபிடித்துப் பலாபலன்களை முழுமையாக அடைய முயற்சி செய்திருக்கின்றீர்களா? அமாவாசைத் திதியின் நல்வர சக்திகளை பரிபூரணித்துத் தரும் திருஅண்ணாமலை பித்ரு முக்தித் தீர்த்தம், பூவாளூர், நெடுங்குடி, தேனிமலை, திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கயா, காசி, பிரயாக் போன்ற சில தலங்களும், மஹாமகத் தெப்பக் குளம், தேனிமலைத் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் உண்டு.

பலரும் அமாவாசை என்றால் பித்ருக்களுக்கு உரிய தர்ப்பண நாள் வீடு ரிஜிஸ்ட்ரேஷன், குடி புகுதல் போன்ற நற்காரியங்களுக்கு நல்ல நாள் என்று எண்ணுவதோடு சரி! மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து நிமிடத் தர்ப்பணம், கொஞ்சம் அன்னதானம், அவ்வளவு தான், இதோடு அமாவாசைத் திதி கணக்குப் பலருக்கும் முடிந்து விடுகின்றது.

பித்ருக்கள் அளித்துள்ள ஆசிகளின் பலன்களால் விளையும் மூதாதையர்களின் சொத்து, பணம், வீடு, வாசல் என சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டு, ஒரு ஐந்து நிமிடம் எள் நீரை அமாவாசையன்று வார்த்து விட்டால் போதுமா? ஆனால் சிரத்தை இல்லாது செய்கின்ற இந்த சில நிமிடத் தர்ப்பணத்திலும் அபரிமிதமான பலன்கள் தாமாகவே விளைகின்றன என்றால், இதில் அமாவாசையின் மகிமையை உணர்ந்து, பித்ரு பக்தியும் கூடுமாயின் எவ்வளவு சிறப்பாக இருக்கும், நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!

ஸ்ரீசுப்ரமண்ய பெருமான்
கீழப்பூங்குடி

மனத் தெளிவு தரக்கூடியவை ஹோம வழிபாடுகள் மட்டுமே. கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி வருதலால் கண் திருஷ்டி விலகும். பிணப் பூ மிதித்தல், பிண தோஷங்கள், துர்மரணங்களைப் பார்த்த, அவற்றில் கலந்து கொண்ட தோஷங்கள் விலகும். மரண பயம் விலகும்.
சூலடங்க பாசதண்ட பாணிமாதி காரணம்
ஸ்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
தேவதேவ தேவதேவ காலபைரவம் பஜே
ஓம் தத் புருஷாய வித்மஹே
காலபைரவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

நாளவளத் திருநாளும் அமாவாசையே!

அமாவாசை அன்று மனித உடலில் உள்ள 72000 நாடி நாளங்களிலும், தர்சனத் தீர்த்தவாரிப் படனம் என்ற ஒரு வகை ஆன்ம நீரோட்டம் ஏற்படுகின்றது. இதனால்தான் எவ்வளவு கடுமையான நோய்ப் பிணிகளின் ஊடேயும் அமாவாசையன்று அனைவரும் தலைக்கும் சேர்த்து நீராடி விடுவர்.

உண்மையில் ஒவ்வொரு அமாவாசையும் ஒரு சூரிய கிரகண அம்சமே! அமாவாசை அன்று, சூரிய ஒளியில், சுபதாரை என்ற விசேஷமான பாற்சுடர்க் கிரண சக்திகள் உண்டாகின்றன. மற்றைய நாளை விட, அமாவாசையன்று சூரியக் கிரணங்களின் தன்மைகள் மாறுபடும். இதனால் தான் கொல்லி மலை, பொதிய மலை போன்ற மூலிகை வாசத் தலங்களில், அமாவாசையில் தோன்றும் குறித்த சில மூலிகைகளையும் தரிசித்து, தக்கக் கட்டு மந்திரங்களை ஓதி எடுப்பார்கள். சூரியபாளம், பரிதிகூளம் போன்ற பல சூரிய மூலிகைகள், அமாவாசையன்று விசேஷமான மருத்துவ சக்திகளைப் பெறுகின்றன.

அமாவாசையன்று இரவில், சந்திர கலைகள் பரிணமிக்காதது போல் தோன்றிடினும், இன்று சோமபூர்வ நட்சத்திரங்கள் விசேஷமான ஒளியைப் பரப்புகின்றன. இவை யாவும் நம் கை மற்றும் கால் ரேகைகள் மூலமாக உடலை அடைந்து கபால நாடிகளைச் சுத்திகரிக்கின்றன. எனவேதாம் அமாவாசை அன்று புனிதமான கடலில், புண்ணிய நதி, ஆலயக் குளத் தீர்த்தத்தில் நீராடி, ஆற்று, கடல், நதி மண்ணால் பாத ரேகைகள், கை ரேகைகளை நன்கு அழுத்திச் சுத்தம் செய்து நீராடுவர். இதனால் அமாவாசையில் பாத ரேகையில், கை ரேகையில் படிந்து கிரக சக்திகள் நாள நாடிகளுக்கு விரவுகின்றன.

அன்னச்சார அமாவாசை! பெரும் புண்யம் தரும் பிண்ட தர்ப்பணம்!

பிண்ட தண்டம் என்ற பித்ரு லோக சடாட்சரக் கழி ஒன்று உண்டு. இது அன்னத்தால் ஆனது. சடாட்சரக் கழி எனும் தேவ அனுகிரக சக்திக் கோல் பிரம்ம லோகம் உட்பட அனைத்து லோகங்களிலும் உண்டு. பித்ருக்களின் அதிபதியான ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்தியின் பித்ரு மண்டலங்களில், சடாட்சரக் கழி மூலமாக அனைத்துப் பித்ருக்களும் ஆசி பெறுகின்றனர்.

ஸ்ரீமிளகாய் சித்தர்
ஜீவாலயம் கீழப்பூங்குடி

அதாவது பித்ருக்கள் அனைவரையும் நாராயண லோக மூர்த்திகள் ஆசீர்வதிக்கின்ற திருநாளாகும். பொதுவாக, திங்கள் அன்று அமாவாசை கூடுவது பிரதட்சிண அமாவாசை ஆகும். சூரிய மூர்த்தியும், சந்திர மூர்த்தியும், மேஷ ராசியில் இணைந்து அமாவாசைத் திதியை உற்பவிக்கின்றனர். அன்னச்சாரம் நிறைந்த அமாவாசை இது.

இது போல திலச் (எள்) சாரம், தைலச்சாரம், தீர்த்தச் சாரம் போன்ற பல்வகைச் சார அமாவாசைகளும், எந்த அமாவாசையில் எந்தச் சாரத் தலத்தில் வழிபடுவது விசேஷமானது என்ற விளக்கங்களும் உண்டு. இந்த அன்னச்சார அமாவாசையில் பித்ருக்களுக்கு, “பிண்டம்” எனப்படும் அரிசிச் சாத உருண்டையை, அக்னியின் முன் வைத்து அக்னி சாட்சியாய், அன்னச்சாரப் படையலின் மூலமாகப் பித்ருக்களைப் போற்றுவது பிண்டச்சார அமாவாசைப் பூஜையாகும்.

தர்பை வகைகளில் விஷ்ணு தர்பை, சிவதர்பை என்பவை மிகவும் முக்கியமானவை, இந்த அன்னச்சார அமாவாசைப் பூஜையில் 36, 24, 12 என்ற எண்ணிக்கையில், அரிசிச் சாத உருண்டைகளை (பிண்டங்களை) வைத்து, அவற்றின் மேல் எள் தெளித்து, ஒவ்வொரு பிண்டத்தையும், (விஷ்ணு) தர்ப்பையால் இரண்டு அரை வடிவங்களாக்கிப் பிண்டங்களில் பித்ரு பூஜை செய்வர்.

பித்ருக்களின் கடுமையான உழைப்பு!

பித்ரு நிலையை அடைபவர்களுக்கு, பல அண்டங்களையும் இருந்த இடத்தில் இருந்தே நோக்கும் விசேஷமான பவதீர்க நேத்ர சக்தி கிட்டுகின்றது. மனித உடல் போல பித்ருக்களுக்கும், தாரண யோக வகை சரீரம் (உடல்) ஒன்று உண்டு. ஒளி வடிவிலானது இது. இதன் மூலம் எந்த லோகத்திற்கும் எந்நேரத்திலும் சென்று வரைக் கூடிய மகத்தான சக்தியை அவர்கள் பெறுகின்றனர். இருப்பினும், எந்தப் பித்ரு, எத்திதியில், எந்நேரத்தில், எந்த லோகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நியதிகளுக்குக் கட்டுப்பட்டே அவர்கள் பூமிக்கான மற்றும் பிற லோக யாத்திரைகளை மேற்கொள்கின்றார்கள்.

பிரதட்சிண அமாவாசை

பித்ரு நிலை என்பதே மிக மிக உயர்ந்த நிலை என்றாலும், ஊன், உறக்கம், பசி மூன்றும் இல்லாது யோகமய ஜோதித் திருமேனி என்றாலும், ஒவ்வொரு பித்ருவிற்கும் அவரவருடைய சந்ததியில் முன்னும், பின்னுமாகப் பல யுகங்களில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான சந்ததிகளில், குறித்த தொகையினரை மிகவும் உத்தமமாக தெய்வீக நிலைக்குக் கொணர்ந்திடவும். ஏனைய சந்ததியினரை இயன்ற அளவு நல்வழிப்படுத்தியும், மிகவும் கடுமையாக உழைத்து ஒவ்வொரு விநாடியும் பாடுபடவேண்டும்.

ஸ்ரீஜூரஹரேஸ்வரர்
கரந்தை தஞ்சை

இதற்காகவே காலப் பெட்டகத்தின் முன்னும், பின்னும் சென்று பார்த்து வரும் விசேஷமான யோக சக்தியை அவர்கள் பெறுகின்ற நன்னாளே பிரதட்சிண அமாவாசைத் தினமாகும். பித்ருக்களிலும், வசு, ருத்ர, ஆதித்யர்கள், தரணி பந்துகள், ஜெயக்ஷீராஸ், முகுந்த வர்த்தனர்கள் எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு பித்ருவும், மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இருக்கின்ற உத்தமப் பித்ருக்களுக்கு அர்க்யம் அளித்து வழிபடும் திருநாளே பிரதட்சிண அமாவாசை ஆகும்.

பித்ருக்களுடைய ஒளி உடலுக்குப் பசியுணர்வு இல்லை என்றாலும், பித்ரு மண்டலங்கள் யாவுமே, ஜலமண்டலமாக, நீர் சூழ்ந்து அமைந்திருப்பதாலும், குறித்த அளவு நீர் மட்டத்தை (ஜலசுபானம்) நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பும் உண்டு,

பித்ருக்களுக்கான தாகசாந்தி!

தங்களுடைய சந்ததியினருக்காக நல்வரங்களைப் பித்ருக்கள் அளித்திடும் போது பித்ரு மண்டல நீர்மட்டமானது சற்றே குறைகின்றது. இதனை நிறைவு செய்வதே பித்ரு தாக சாந்தி என நமக்குப் புரிவதற்காக உரைக்கின்றோம். இக்குறைவை நிறைவு செய்ய உதவுபவையே சந்ததியினர் அளிக்கின்ற தர்ப்பணங்களில் தோன்றுகின்ற ஜல தோளிக சக்தியாகும்.

இன்று அரச மரத்தடியில், பித்ருக்கள், தர்ப்பைப் பாயில் அமர்ந்து, பூஜித்து, பிரண்டைக்ருதம் எனும் பிரண்டை மூலிகையான நெய்யைப் பசு நெய்யுடன் சேர்த்து ஹோமம் வார்த்து, தங்களுடைய பித்ரு லோகங்களில் ஆத்மப் பிரதட்சிணம் செய்கின்றனர். இதனால்தாம் பூலோகத்திலும் அமாவாசைத் தர்ப்பணம் முடிந்ததும் அவரவர் தம்மைத் தாமே சுற்றி வருவதான 12 முறை ஆத்மப் பிரதட்சிணமும் நிகழ்கின்றது.

மேலும் இந்தப் பிரதட்சிண அமாவாசை நாளில், எந்த ராசி மண்டலத்தில் சூரிய, சந்திர மூர்த்திகள் சேர்கின்றார்களோ, அந்த ராசி மண்டலத்தில் பித்ருக்கள் வலம் வந்து வணங்குகின்றனர். இதை ஒட்டித்தான் மேற்கண்ட வகையில் அன்னப் பிண்டங்களை, விஷ்ணு தர்ப்பையால் இரண்டால் வகுத்துப் பிரித்து, சிறிது ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு, காக்கைகளுக்கும் அளித்து வழிபட வேண்டும்.

இவ்வாறு அரிசிச் சாத உருண்டைகளாலான பிண்டங்களையே, பிரதட்சிணமாக சாஸ்திர ரீதியாக, 12 முறை வலம் வருதலும் உண்டு. அரச மரத்தில் ஸ்ரீவிஷ்ணு அம்சம் பொலிவதால் இன்று, பிரதட்சிண அமாவாசை நாளில், அரச மரத்தைப் பன்முறை வலம் வந்து வணங்குதல் மன அமைதியைத் தரும்.

எளிமையான பிண்டத் தர்ப்பணம்

இந்நாளில் அன்னப் பிண்டங்களை வீட்டிலேயே தயாரித்து, 12 பிண்டங்களை (அன்ன உருண்டைகள்) ஒரு வாழை இலையில் வைத்து வலம் வந்து வணங்கிட வேண்டும். பிறகு, தன்னையும் ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வந்து,  இவற்றை சாட்சியாக வைத்துத் தர்ப்பணமும், இயன்றால் ஹோமத்தில் ஆஹுதியாகவும் காக்கைகளுக்குப் பிரசாதமாகவும் அளித்து அரச மரத்தை வலம் வந்த பிறகே உணவு ஏற்றலும் ஒரு அமாவாசை விரத முறையாகும். எனவே தர்ப்பணத்தோடு நிறுத்தி விடாது. இத்தகைய விசேஷமான கூடுதல் பூஜைகளையும் அமாவாசையன்று கைக் கொண்டு வர வேண்டும்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
நகர் லால்குடி

மௌன விரதம்

மதிகாரகராகிய சந்திர மூர்த்திக்கு உரித்தான திங்கட் கிழமையில் அமாவாசை கூடுவதாலும், அமாவாசையன்று சந்திர மூர்த்தி மறைகிரகமாக இருப்பதாலும், இன்று மௌனமாக இருத்தல் மிகவும் விசேஷமானது. மௌனம் எனில் உள்ளூர எப்போதும் இறைநாமத்தை ஒலித்தல் மௌன சக்தியை மேம்படுத்தும். பொதுவாக, குறைந்தது 12 லிங்க மூர்த்திகள் உள்ள ஆலயங்களில் இன்று மிகவும் மௌனமாக, உள்ளூர இறைமந்திரங்களை ஓதி அடிப் பிரதட்சிணம் செய்வது நன்று.

சகஸ்ர லிங்கத்தை வலம் வரும்படியாக உள்ள தனிச் சன்னதிகளில், குறித்த மந்திரத்தை ஓதி வழிபடுதல் விசேஷமானது.. திருச்சி இலால்குடி மார்க்கத்தில், மாந்துறை அருகில் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅப்ரதீஸ்வரர் ஆலயத்தில், தனிச் சன்னிதி கொண்டிருக்கும் ஸ்ரீசகஸ்ர லிங்க மூர்த்தியைப் பன்முறை மௌனமாக மனதினுள்  மந்திரம் ஓதி அடிப் பிரதட்சிணம் செய்து வழிபடுதலும், தர்ப்பணப் பூஜை அளித்தலும் மிகவும் விசேஷமானது.

இன்று ஸ்ரீசந்திர பகவான் சூரிய சக்திகளைப் பெற்றுத் துலங்குவதால், மறைக்கோளாக அமாவாசையன்று பொலியும் சோம அனுகிரகத்தைப் பெறவும் தர்ப்பண சக்தியும், அமாவாசை நீராடலும் உதவுகின்றன. மாறிக் கொண்டே இருப்பதே மாயை! உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது மாற்றங்களுக்கு ஆளாகின்றது. ஆனால் ஸ்ரீராமரும், ஸ்ரீதிருஞான சம்பந்த மூர்த்தியும் வழிபட்ட மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் போன்ற சுயம்பு மூர்த்திகள் தாம் பிரபஞ்சத்திலேயே நிரந்தரத் தன்மையன. இதை உணரும் பகுத்தறிவே தாரண சக்தி!

லால்குடி அருகே நகர் சிவாலயம்

அதாவது மாறுகின்ற மாயையில் ஊடே மாறாத மறைபொருளாம் பரம்பொருள் தரிசனத்தைப் பெற்றுத் தருவதே தாரண சக்தியாகும். பலவகை தாரண சக்திகளுள் அன்னச்சார தாரண சக்தி பொழிகின்ற நன்னாளும் திங்களுடன், அமாவாசை கூடும் பிரதட்சிண அமாவாசையாகும். அதுவும் தாரண ஆண்டில் இது அமைவது நமக்குப் பெரும் பாக்யமே!

ஜலதோஷம்

நோய் வந்திட்டால் ...

ஜலதோஷம், உடல் வலி, தலைவலி, பேதி, சிறு காய்ச்சல் எனச் சிறு சிறு நோய்கள், வாரந்தோறும், குடும்பத்தில் எவருக்கேனும் வருவது மிகவும் சகஜமாகி விட்டது. இதற்கான விஞ்ஞானப் பூர்வமான – அசுத்தம், உடல் பலவீனம், நோய்க் கிருமிகள் – என மருத்துவக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளே இவையாவும் என்பதே உண்மையாகும்.

கர்ம வினைகளின் விளைவுகளே பணத் தட்டுப்பாடு, பணக் கஷ்டம், பண நஷ்டம், பண இழப்பு, சிறு நோய்கள், பெரு நோய்கள், விபத்து, அலுவலக, வியாபாரப் பிரச்னை போன்றவையாக முளைக்கின்றன. இவற்றில் சிறு நோய்கள் வரக் காரணங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஓரளவு விவரித்து வந்துள்ளோம்.

திருமழிசை சிவாலயம்

நோய் வந்தவுடன் என்ன செய்வது? நெஞ்சு நிறையச் சளி அடைத்திருக்க, மூக்கில் நீர் வடிய, அவரவர் கர்ம வினைகளின் விளைவுகளையா எண்ணி உட்கார்ந்து வெறுமனே இருக்க முடியும்? உடனடியாக டாக்டரைப் பார்த்து மாத்திரை, மருந்துகளை உள்ளே தள்ளுவதில்தான் மனம் நாடும். இறைவனிடம் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் நன்கு பரிணமிக்கும் வரை, வழிபாடுகளும், மருத்துவ ரீதியான நோய்த் தீர்ப்பு முறைகளையும் நாடித்தான் ஆக வேண்டும்.

ஆனால் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படும்போது மனம் சக்தியின்றி, மிகவும் பலவீனமடைவதையும், உள்ளூர ஒரு வகை அச்சம் எழுவதையும் நன்கு உணர முடிகின்றது அல்லவா! ஒரு முறையாவது இச்சமயங்களில் மனதில், தோன்றும் எண்ணங்களைக் குறித்து வைத்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் பல தெய்வீக ரகசியங்கள் புலனாகும். இவைதாம் மனதுக்கு உண்மையான தைரியத்தை, வைராக்யத்தை அளிக்க வல்லன.

சில சமயங்களில், இவ்வாறு சிறு காய்ச்சல், உடல் வலி, தலை சுற்றலின் போது, ஒரு குறித்த இடம், சம்பவம், குறித்த மனிதர்களைப் பற்றிய எண்ணம் சுழன்று, சுழன்று மனதில் உருவகித்து வந்தால் இவைதாம் இச்சிறு நோய்களுக்குக் காரணம் என அறிந்திடலாம். இதற்காக எவரையும் தவறாக எடை போடாதீர்கள். அனைத்தும் காரண, காரியங்களுடன் தான் நிகழ்கின்றன என்பதை உணர்த்திடவே இவ்விளக்கம் தரப்படுகின்றது.

அனைத்தையும் விட நோய்த் தற்காப்பு சக்திகள் என நாம் கூறுவதாவது, தன்வந்த்ரீ அனுகிரக சக்திகள், வைத்யநாதக் காப்பு சக்திகள், அங்காரக சக்திகள் போன்றவை மங்கி உள்ளமையால், இவற்றை உடனடியாகப் பெற இறைவழி முறைகளை ஆற்றிட வேண்டும் என்பதையும் இது குறிக்கின்றது.

திருமழிசை சிவாலயம்

எனவே ஆன்மீக ரீதியாக தற்காப்புச் சக்திகளைப் பெறுவதற்குத் தினமும் செவ்வாய் ஹோரை நேரத்தில் ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீவைதீஸ்வரர், ஸ்ரீமுருகர், ஸ்ரீஜுரஹரேஸ்வரர், ஸ்ரீஅங்காரக மூர்த்திகளுக்கான மந்திரங்களை ஓதி வரும் வழக்கத்தைக் கொண்டிட வேண்டும். இதற்காக அலுவலகத்திலும் சட்டைப் பை, கைப் பையில் தினசரி ஹோரை நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, அந்தந்த ஹோரையில் அதனதற்கான தெய்வீக மந்திரங்களை ஓதி வழிபடுதலால் எப்போதும் இறைவளச் சிந்தனையை வாழ்க்கையில் கைக்கொள்ள முடியும்.

ஜலதோஷம் என்பது சீதளம் எனும் குளுமையாலும் மற்றும் பல காரணங்களாலும் வருகின்றது. இதன் பின்னணியிலும் கர்ம வினை விளைவுகளே, காரணமாகின்றன. சூரபத்மனுடன் போரிடுகையில் ஸ்ரீமுருகப் பெருமான், தனக்கு ஏற்பட்ட ஜுரத்தை நீக்கிட, ஆதிபராசக்தி அம்சமாம் ஸ்ரீசீதளா தேவியை வழிபட்டமையால், செவ்வாயன்று செவ்வாய் ஹோரை, சனிக்கிழமை சனி ஹோரையில் ஸ்ரீசீதள நாயகி வழிபாடு ஜுரத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சென்னை – திருமழிசை – ஸ்ரீகுளிர்ந்த நாயகி (சீதள நாயகி சமேத ஸ்ரீஒத்தாண்டேஸ்வரர் ஆலயம்)

ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு (பவானி, தஞ்சாவூர் – கருந்தட்டாங்குடி) அவ்வப்போது, மஞ்சள், சந்தனக் காப்பிடுதலும், சமுதாயத்திற்கு மிகவும் நலன் பயப்பதோடு அடிக்கடி சிறு, சிறு நோய்களால் அவதியுறுவதும் தணியும்.

கீழப்பூங்குடி

உத்திராட நட்சத்திரத்தார்க்கான ஆயுட் கால வழிபாட்டுத் தலம்! புஷ்ப அர்ச்சனை சக்திகள் பிரபஞ்சத்தில் தழைத்தோங்கும் திவ்யத் தலம்! தெய்வ மூர்த்திகளின் புஷ்ப ரதம் வந்திறங்கும் புராண தேவ சக்திகள் பூரிக்கும் தலம்!

உத்திராட நட்சத்திரத் தலம் கீழப்பூங்குடி ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம்! மேலூர் – சிவகங்கை மார்கத்தில், சிவகங்கையில் இருந்து 5 கி.மீ தொலைவில் கீழப்பூங்குடி உள்ளது.

பங்குனி உத்திரம் பரம்பொருளாம் ஈஸ்வரனின், பரந்தாமனாம் பெருமாளின், பார்வதி புத்திரராம் திருமுருகனின் கல்யாண உற்சவத் திருநாள் என நாமறிவோம். ஆனால் ஸ்ரீமீனாட்சி அம்பிகையின் திருமண உற்சவ நாளே சித்திரை உத்திரத் திருநாள் எனப் பலரும் அறியார்.

ஸ்ரீசுந்தரேசப் பெருமான்
கீழப்பூங்குடி

மானுட ரூபத்தில் மீனாட்சியாய், மஹேஸ்வரனை ஆலவாயாம் மதுரையில் மணம் புரிந்த மீனாட்சி தேவி, ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் எனப் பெம்மானே திருநாமம் சூடி, நாமசக்தி ரீதியாக அர்த்தநாரீஸ்வர அட்சர சக்திகளை உலகிற்கு அளிக்க வேண்டும் என மீனலோசனியாய் வேண்டிட்டாள். ஞாயிற்றம்பலச் சித்தர், மிளாபூதிச் சித்தர் போன்றோரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவ சக்திகளை அட்சரமாகிய எழுத்து வடிவில், அட்சர சக்திகளுடன் ஆக்கித் தர வேண்டினர். இதற்காகவே, அம்பிகையின் திருநாமம் கூடியதாகத் தோன்றி அருளிட, திருஆலவாய்ப் பெம்மானை வேண்டினர்.

இறைவனும் அம்பிகையின், அடியார்களின் கோரிக்கையை ஏற்று, அதுவரை தெய்வ வடிவில், சிலா ரூபத்தில் அர்த்த நாரீஸ்வரராய்த் (சிவனும் பார்வதியும் இணைந்த வடிவம்) தோன்றிய சிவபெருமான், சித்திரை மாத உத்திராட நாளில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராய்ப் பல தலங்களில் அட்சர சக்திகள் பூத்த ஆண்டவனாய் அன்னை மீனாட்சியுடன் தோன்றி அருள்பாலித்தார்.

ஞாயிற்றம்பலச் சித்தர் போன்ற சித்தர்பிரான்களின் பக்திப் பெருக்கால் மகிழ்ந்த ஆதிசிவன் ஞாயிறும், உத்திராடமும், சித்திரையும் கூடும் திருநாளில், மகத்தான புஷ்ப தாரண சக்திகளுடன் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராய்த் தோன்றிய புண்ணிய பூமிகளுள் ஒன்றே கீழப்பூங்குடிச் சிவத்தலமாகும்.

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில், மணவாளன் ஈஸ்வரனின் திருக்கரங்களால் மீனாட்சி தேவிக்கு மாங்கல்யம் அணிவிக்கப் பெறுகையில், ஆயிரக் கணக்கான இல்லறப் பெண்கள் உத்தம பக்தியுடன் இதே நேரத்தில் புது மாங்கல்யச் சரடினை அணிந்து கொள்ளும் சுபமங்கள வைபவம் ஆண்டு தோறும் மதுரையில் நிகழ்ந்து வருகின்றது.

மதுரைக்கு நேரில் சென்று, பெருமானே மீனாட்சிக்கு மங்கள நாண் சூட்டும், சுப நேரத்தில் புது மாங்கல்யச் சரடு அணியும் பாக்கியத்தைப் பெற இயலாதோர், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி மூலமாக இக்குறித்த நேரத்தை அறிந்து இத்தருணத்தில் அனைத்து இல்லறப் பெண்மணிகளும் தங்கள் இல்லத்தில் இதே சுபநேரத்தில் புது மாங்கல்யச் சரடு அணிதல் மிகவும் புனிதமானதாகும். தீர்க சுமங்கல்யத்வமும், கணவனுக்குத் தீர்க ஆயுளையும், நல்ஆரோக்யத்தையும் அருள வல்லது. தொலைக் காட்சியில் இந்நாளில் நேரடி ஒளிபரப்பு (live telecast)  கண்டு இதே நேரத்தில் மாங்கல்யம் அணிவோரும் உண்டு.

ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரராய் இறைவன் அருளும் தலங்களிலும் இதனை மகத்தான வைபவமாகக் கொண்டாடுதலால் சமுதாயத்தில் சாந்தம் பெருகும். அந்தந்த ஊர் ஆலயத்திலும், ஸ்ரீராதா கிருஷ்ண உற்சவம் போல், ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை நிகழ்த்தி, ஜாதி, மத, குல, பேதமின்றி ஏழை, நடுத்தர மக்களும் சித்திரை உத்திரத்தில் சுபமாங்கல்ய சக்திகளை பெற சத்சங்க ரீதியாக ஒன்று கூடிப் பாடுபட வேண்டும்.

இவ்வாறு மானுட உருவில் மீனாட்சித் தாய் அணியும் மாங்கல்யத்தின் தெய்வீக அனுகிர சக்திகள் பலவும், மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக, ஸ்ரீசுந்தரேஸ்வரராகச் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர அட்சர சக்தி பூண்டு அருளும் ஆலயங்களில் சித்திரை உத்திராட நட்சத்திர நாளிலும் நன்கு திரண்டு பொழிந்து அருள்பாலிக்கின்றது.

ஸ்ரீமீனாட்சி அம்மன்
கீழப்பூங்குடி

இவ்வாறு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராய், ஸ்ரீசுந்தரேஸ்வரராய் இறைவன் மீனாட்சித் தாயுடன் இணைந்து தேவாதி, தெய்வ மூர்த்திகளுக்கும், சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் அருளிய சக்தித் தலங்களில்தான் இன்றும் சுயம்புவாகவும், தேவ பிரதிஷ்டையாகவும், ஆகமப் பிரதிஷ்டையாகவும், மானுடப் பிரதிஷ்டையாகவும் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரராக இறைவன் அருள்கின்றான்.

இவ்வாறு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக இறைவன் எழுந்தருளிய 1008 தலங்களில், சிலவற்றில் ஆலயங்கள் எழுந்தன. பலவும் மறைந்துள்ளன. பலவும் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றும்.

1008 விதமான மாங்கல்ய சக்திகள் உண்டு. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக இறைவன் எழுந்தருளும் தலங்களில் இவை பலவும் நிறைந்திருக்கும். குறிப்பாக உத்திராட நட்சத்திர நாளில் இவை இத்தலங்களில் நன்கு பரிணமிக்கும். இவற்றில் ஆழ்ந்த பக்தியுடன் பூர்வ ஜன்மங்களிலும், தற்போதும் பூஜிப்பவர்கள்தாம், தீர்க சுமங்கலியாக நல்வரம் பெறுகின்றனர். இவற்றுள் மாங்கல்ய தாரணக் காலத்தில் உற்பவிக்கும் புஷ்ப தாரண சக்திகளை அருளும் தலமே மதுரை மேலூர் அருகே உள்ள கீழப்பூங்குடி சிவத்தலமாகும்.

கீழம் என்றால், எப்போதும் தோன்றிக் கொண்டிருப்பது, மறைவில்லாதது என்று பொருள். இதனால்தான் சூரிய மூர்த்தி கிழக்கில் தோன்றுகிறார். சூரியன் தோன்றுவதால் இது கிழக்குத் திக்கு எனப் பெயர் பெறவில்லை. சூரிய மூர்த்தி கிழக்கில் தோன்றிட நல்வரம் பெறப் புஷ்ப யாகம் புரிந்த புஷ்பாக்னித் தலங்களுள் கீழப்பூங்குடியும் ஒன்று!

பூங்குடி என்பது கிழக்கில் பூரித்துப் பூக்கும் பூக்களின் ஆலயவளாகம் என்பதாகும். இது கீழப்பூங்குடியின் ஆன்மீகத் தாத்பர்யங்களுள் ஒன்றாகும். அதாவது திருமண தம்பதியர்க்கு, திருமண நாளில் கிழக்கில் பூக்கும் பூக்களைக் கொண்டு தொடுத்த மாலைகளைச் சார்த்துவது மிகவும் தெய்வீகமானதாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கீழப்பூங்குடி

ஒரு யுகத்தில் கிழக்குத் திக்கில் பூக்கும் 1008 வகை பூலோக, தேவலோகப் புஷ்பத் தாவரங்கள் நிறைந்த புஷ்பலோக நந்தவனம் இங்கு பூரித்தது. தன்னுடைய நித்தியக் கர்ம பூஜைகளுள் ஒன்றான காலை சந்தியான வந்தன பூஜையை கிழக்கில் மலரும் பூங்குடி ஊடே சூரிய மூர்த்தி நிதமும் ஆற்றும் அற்புதப் புஷ்பவளத் தலம். புஷ்ப ரதங்களுடன் ஒரு யுகத்தில் பொலிந்த இதன் மகிமைகள் காலப் போக்கில் மறைந்துள்ளன.

அனைத்து வகை நறுமணப் பூத்தாவரங்களும் நிறைந்த நந்தவனம் இங்கு ஒரு யுகத்தில் புலர்ந்து அனைவரையும் ஆனந்தமுறச் செய்தது. புஷ்பவன தேவதைகள் வழிபடும் புண்ணியத் தலம்! தேவாதி தேவ மூர்த்திகளின் புஷ்பக விமானம் தங்கிய தெய்வீகத் தலமாகப் பொலிந்த தலம்.

உத்திராட நட்சத்திரத்தில் சுபமுகூர்த்தம் வைப்பவர்கள் இத்தலத்தில் ஸ்ரீமீனாட்சி அம்மனுக்குப் பூச்சொரியல் இட்டு, புஷ்ப, வஸ்திர அலங்காரங்களும் ஆற்றி வழிபட்டுச் செல்வர். ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். இதனால் தான் ஆடல்வல்லானாக இறை நாட்டியத்தின் ஆதிமுதலோனாக ஸ்ரீநடராஜ மூர்த்தி விளங்குகின்றார். 27 நட்சத்திரங்களில் உத்திரத்திற்கும் மூத்தவளாக உத்திராட நட்சத்திர தேவி மூர்த்தி பொலிகின்றாள்.

பண்டைய காலத்தில் 27 நட்சத்திரங்களுக்குமான மரங்கள் நிறைந்த நட்சத்திரப் பூங்குடியாக, நட்சத்திரத் தோட்டமாக ஒரு யுகத்தில் இது பொலிந்தது. தற்போது 27 நட்சத்திர லிங்கங்கத் தலங்கள் அமைந்திருப்பது போல (திருவிடைமருதூர், சென்னை திருவொற்றியூர்) பல்லாண்டுகளுக்கு முன் கீழப்பூங்குடியானது நட்சத்திர விருட்சத் தலமாகப் பொலிந்தது.

உத்திரப் புத்திரை முத்திரைப் பூவடி
சித்தி புத்தி கணபதித் திருவடி
உத்திரை நட்சத்திரை ஊர்மிள பூஜையும்
சித்தனும் மிளகாயன மேதினி மேவலே

-என்பது இத்தலத்திற்குரிய, சித்தர்களின் உத்திராட நட்சத்திர ஆவணப் பரிபாஷைப் பரிபாடல், உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தோர், இங்கு இத்துதியையும், 27 நட்சத்திரங்களுக்கான அகஸ்தியர் நட்சத்திர வாக்கியங்களையும் ஓதி, அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும். (எங்கள் ஆஸ்ரம வெளியீடு – “ஜெயந்தி தரும் ஜெயம்”)

உத்திராட நட்சத்திரத் துதி

சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே

ஸ்ரீகன்னிமூலை கணபதி
கீழப்பூங்குடி

தமிழ் மந்திரம்

நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராடப் பொற்பாதமே போற்றி!

கரங்களில் நிறைய நறுமணப் பூக்களைத் தாங்கி,

அஸ்வினி ஆயதனம் , பரணி ஆயதனம், கிருத்திகை ஆயதனம் ... ரேவதி ஆயதனம்..
என்று அனைத்து 27 நட்சத்திர நாமங்களையும் புஷ்ப ஆயதனப்படுத்தி வழிபட்டு, உத்திராட நட்சத்திர நாமம் வருகையில்

உத்திராடம் அகிலாயதனம்
உத்திராடம் போதாயதனம்
உத்திராடம் அக்னிசிக்ஷாயதனம்

என்று ஓதி

உத்திராடம் உலகுயர் ஓங்குக!
உத்திராடம் கோனுயர் ஓங்குக!
உத்திராடம் மீன்ஒளி பொங்குக!

-என்று ஓதி, இங்கு நட்சத்திர வழிபாட்டை நிகழ்த்துதல் வேண்டும். மீனாட்சியாய் அம்பிகை தோன்றும் முன்னரேயே மீனலோசனியாய் அம்பிகை தோன்றி, இங்கு (கேரள புனித பூமியில் பிரகாசித்த) ஞாயிற்றம்பலச் சித்தருக்குக் காட்சி தந்தாள். எனவே கேரளாவில் எர்ணாகுளம் வைபீன் தீவு அருகில் உள்ள ஸ்ரீஞாயிற்றம்பல பகவதியைத் தரிசிக்கும் முன், இங்கு ஸ்ரீமீனாட்சியை வழிபட்டுச் செல்வது பரசுராம சுதகல்ப நியதிகளுள் ஒன்று.

இவ்வாறாக, ஞாயிறும், உத்திராடமும், சித்திரையும் கூடும் மகத்தான தாரண சக்தித் தலங்களுள் கீழப்பூங்குடியும் ஒன்றாகும். வரும் சித்திரை மாதம், மே மாதம் 2004ல் இங்கு நடக்க இருக்கும் உத்திராட நட்சத்திர குரு பூஜை நாள் பற்றி அறிந்து வழிபடவும்.

திருக்கழுக்குன்றம் ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்

திருக்கழுக்குன்றத்தில் சங்குத் தீர்த்தம் அருகிலுள்ள ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்தது. பலரும் அறியாதது. கோடிக் கோடிச் சித்தர்களும், மகரிஷிகளும், மிகுந்த பக்தியுடன் கோடிக் கோடி முறை, ருத்ர மந்திரங்களை, கோடிக் கோடி மஹா சிவராத்திரி நாளில் (ஒன்றுக்குப் பிறகு 14 பூஜ்யங்கள்) ஓதி வழிபடும் புண்ய பூமியில் இவ்வகையில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் தோன்றுகின்றாரெனில் என்னே இதன் மஹிமை!

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம்
ஞாயிற்றம்பலம்

ருத்ரம், சமகத்திற்கு ஈடான தேவாரத் தமிழ் மறைகளும் உண்டு. ஆனால், இவற்றிற்கு ஈடான தமிழ் மறைகளை முழுமையாக மிகுந்த பக்தியுடன் ஓதுவோரும் அருகி வருகின்றனர். கலியுகத்தில் இவ்வாறு நிகழலாகும் என்பதால்தான் கோடி ருத்ரர்களும் இணைந்து, பல கோடி ருத்ர மந்திரங்களை ஓதி ருத்ரகோடீஸ்வர மூர்த்திகளைச் சுயம்புச் செல்வங்களாக சில இடங்களில், சித்தர்கள், மஹரிஷிகளின் பக்திப் பாங்குடன் உற்பவிக்கச் செய்துள்ளனர்.

அக்காலத்தில் ஒவ்வொரு ஊரின், ஒவ்வொரு தெருவிலும் ருத்ரம், சமக மந்திரங்களை உலக ஜீவன்களின் நலத்திற்காக ஓதிடும் சான்றோர்கள் இருந்தனர். சமுதாயத்திலும் இவர்களை மதித்துப் போற்றிக் காத்தமையால் தர்மம் சிறந்து விளங்கியது. ஆனால் அனைத்து ஜீவன்களையும் வாழ வைக்கும், ஜாதி, மத, குல, இன பேதமின்றி அனைவர்க்ககும் உரித்தான வேதசக்தியைக் கலியுகத்தில் இகழ்வதால்தான் அதர்மம், சமுதாய ஒற்றுமை இன்மை, காமத் தீயொழுக்கங்கள், வன்முறை, போன்றவை அதிகமாகி வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய வல்லதே இவ்வழிபாடு. சூரிய, சந்திர, நட்சத்திர என அனைத்து லோகங்களிலும் ஸ்ரீருத்ர கோடீஸ்வர மூர்த்தி வழிபாடு உண்டு.

தலைமை ருத்ர மூர்த்தி

பூலோகத்தில் அனைத்து ஆலய ருத்ர கோடி மூர்த்திகளுக்கும், தலைமைத் தெய்வ மூர்த்தியாகத் துலங்குபவரே திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஸ்ரீருத்ர கோடீஸ்வரச் சுயம்பு லிங்க மூர்த்தி. தாரண ஆண்டின் மாதந்தோறும் வரும் மாத சிவராத்திரித் தலமாகச் சித்தர்கள் இதனைப் போற்றுகின்றனர். இங்கு மாத சிவராத்திரி நாளில் ருத்ரம், சமகம், குறித்தத் தமிழ் மறைகளை 1008 முறையேனும் ஓதி, 64விதமான திரவியங்களால் அபிஷேகித்து வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

ஸ்ரீருத்ர கோடீஸ்வர லிங்க மூர்த்தியின் மகிமை யாதெனில், இக்கடவுள் முன் பக்தியுடன், குருவருளால் ஒரு முறை ருத்ர, சமக மந்திரங்களை ஓதிட, ஒரு கோடி முறை ஓதியதன் பலாபலன்களை அளிப்பதாகும். அவரவர் கர்ம வினைகளின் பளுவைப் பார்க்கும்போது, குறைந்தது ஒரு கோடிப் பிறவிகளேனும் எடுத்திருக்க வேண்டும் அல்லவா! எனவே மாத சிவராத்திரி நாளில் பக்தியுடன் சற்குருவுடன் இங்கு ருத்ரம், சமகம், தமிழ் மாமறைகளை ஓதிட, குறைந்த பட்சம் ஒரு கோடிப் பிறவிக் கர்ம வினைகளையும் மேம்படுத்த வல்லதும் ஆகும். இதை விடப் பெரும் பாக்யம் கலியுகத்தில் என்ன வேண்டும் ஐயா?

நடுத்தர வயதைத் தாண்டியும் வீடு பாக்யம் அமையாதோர், சந்ததிகள் இன்றிப் பிறர் தயவில் வாழ்வோர், சகோதர, சகோதரிகளைக் கடமை நிமித்தமாகப் பேணுவதால் இல்லத்தில் பல கஷ்டங்களுக்கு ஆளாவோர், இத்தகைய கஷ்டங்கள் தீர்ந்து குடும்பம் சுமுகம் பெற இங்கு மாதந்தோறும் சிவராத்திரியில் கிரிவலமும், ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில், மாத சிவராத்திரி அபிஷேக, ஆராதனைகளையும் ஆற்றி வருதல் வேண்டும்.

அனைத்தும் கோடி மடங்காய்ப் பெருகும் தலமாதலின், பண்டைய யுகங்களில், இங்கு லட்சக் கணக்கானோர் மாதசிவராத்திரி, மாதப் பௌர்ணமியில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை வணங்கி, கிரிவலம் வருதல் மகத்தான உற்சவமாகத் துலங்கிற்று. இதனை மீண்டும் புதுப்பிக்க வேண்டியது இறையடியார்களின் கடமையாகும்.

ஸ்ரீமிளகாய் சித்தர்

மேலூர் – சிவகங்கை மார்கத்தில் சிவகங்கையில் இருந்து 5 கி.மீ தொலைவில் கீழப்பூங்குடியில் உள்ளது ஸ்ரீமிளகாய் சுவாமி சித்தர் ஜீவாலயம்.

சித்தர்கள் பூணுகின்ற காரணப் பெயர்கள் யாவும் ஆயிரமாயிரம் தெய்வீகக் காரணங்களைக் கொண்டிருக்கும். எச்சில் பொறுக்கி சித்தர், கரலாக் கட்டைச் சித்தர், படேசாஹிப், தலைமேல் கால் தூக்கிச் சித்தரென ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தங்கள் நிறையப் பொதிந்திருக்கும்.

இதில் நாம் ஆனந்தப்படும் வண்ணம் நிறைவது அந்தந்த சித்தர்களைப் போற்றி வணங்குபவர்களே தகுந்த காரணப் பெயரைச் சூட்டி அவர்களை அழைத்து மகிழ்வதாகும். மிளகாய்ச் சித்தர் என இச்சித்தர் பிரான் பெயர் கொள்ளப் பல காரணங்கள் உண்டு. பல இடங்களிலும் ஒரே சமயத்தில் தோன்றி எண்ணற்றோருக்கு நல்வாழ்க்கை அமைய அருள்வழி காட்டிய இச்சித்தர் பிரானை, சிலர் மிளகாய்க் கிடங்கில் பூட்டி வைத்து அடைத்துக் கிடங்கிற்கு தீ வைத்திட்டபோது சிரித்தவாறே கிடங்கிலிருந்து வெளி வந்தமையால் மிளகாய்ச் சித்தர் ஆனார் என்ற நேர்த்தியான அனுபூதியும் உண்டு. மிளாகபூதி அக்னிப் பூஷ்ப யோகத்தில் வல்லவரே இச்சித்தர் மஹாபிரபு. இதுவே மிளகாய் சுவாமி ஆனதென ஆன்ம விளக்கமும் உண்டு.

ஸ்ரீமிளகாய் சித்தர்
ஜீவாலயம் கீழப்பூங்குடி

நாரதர், வசிஷ்டர், மார்கண்டேயர் போன்ற மகரிஷிகளும், சித்தர்களும் புஷ்பாசுத பூமி பூஜை செய்து, நந்தவனங்களை எழுப்பி, பூச்சொரியல்களை நிகழ்த்தி இறைவழிபாடுகளை ஆற்றிய தலமே கீழப்பூங்குடி ஆகும். மலர்களில் கிழக்கில் பூக்கும் புஷ்பங்கள் மிகுந்த யோகஜோதி சக்தி வாய்ந்தவை. உதயநேரத்தில் சூரியனிடம் கிளைக்கும் பிறர் கண்படா ஆதிமூலச் சூரியக் கிரணங்களுக்கு மிளாக மித்ரம் என்று பெயர். பல கோள்கள், நட்சத்திரங்களிடம் இருந்து ஆதித்யமிளம், சோமமிளம், ச்ரவணமிளம், சுக்ரமிளம் போன்ற யோகஜோதி சக்திகளை கிரகித்து, வண்ணங்கள், நறுமணம் மூலமாகப் பூக்கள் அளிக்க வல்லவை ஆதலின், கடவுள் வழிபாட்டில் பூக்கள் தரும் புனிதங்கள் எண்ணற்றவை!

சூரியன் உதிக்கையில் ஆதித்ய மிள சக்திகளைப் பெற பாசாங்குலி எனும் விரல் முத்திரைகளால் சூரியனைத் தரிசித்தல் ஸ்ரீகாயத்ரீ மந்திர வழிபாட்டு அங்கங்களுள் ஒன்றாம். ஸ்ரீராமரின் இளவலாம் ஸ்ரீலட்சுமணரின் பத்னியான ஊர்மிளை, ஊர்மிளா என்று அழைக்கப் பெற்றமைக்குக் காரணமே மிளாகம் எனப்படும் கூட்டு லிங்க வழிபாடுகளில் சிறந்து விளங்கியமையால்தான் அதாவது அஷ்டசத லிங்கம் (108 லிங்க மூர்த்திகள்), ஏகாதச ருத்ர லிங்கங்கள் (11லிங்க மூர்த்திகள் – ராமேஸ்வரம்), ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் (திருக்கழுக்குன்றம்), ஸ்ரீகோடீஸ்வரர் (கும்பகோணம் அருகே கொட்டையூர்) போன்றவை கூட்டு லிங்க மூர்த்தி வழிபாட்டுத் தலங்கள். ஊர்மிளை, 1008 மணமுள்ள புஷ்பங்களை வைத்து கூட்டு லிங்கங்களை அர்ச்சித்து, இவ்வழிபாட்டில் தலை சிறந்தவளாய் விளங்கினாள். இன்றும் துலங்குகின்றாள். இதில் அரிதிலும் அரிதாக ஐந்நூற்று லிங்கம் என்று 500 லிங்கங்கள் அமைந்த கூட்டுலிங்கத்தை நாம் கீழப்பூங்குடியில் மட்டுமே தரிசிக்க இயலும் என்பதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

வனவாசத்தில் கண் துஞ்சாது ஸ்ரீராமரைக் காத்த ஸ்ரீலக்ஷ்மணர் அயோத்தி மாநகர் ஏகி, பல்லாண்டுகள் நீண்ட யோக சயனம் கொண்டபோது, ஊர்மிளை கண் துஞ்சாது அருகிலிருந்து சேவை செய்து காத்தனள். இதற்கான மிளாபூஷண ஆத்மவள சக்தியை ஊர்மிளா பெற்றது மிளாகபூதி எனப்படும் கூட்டு லிங்க வழிபாடு மூலமாகவே ஆகும். தாரண ஆண்டில் இத்தகைய மிளாகபூதிக் கூட்டு லிங்க வழிபாடுகள் பன்மடங்கு சக்திகளைத் தருகின்றன.

ஊர்மிளை வழிபட்டக் கூட்டு லிங்க வடிவுகளில் ஒன்றினை, சென்னை – கோயம்பேடு ஸ்ரீகுசலபுரீஸ்வரர் ஆலய சுவாமி உற்சவ மண்டபத்தின் முன் நிலையில் வலப்பக்கம் கீழ்ப் பகுதியில் தரிசித்திடலாம். இத்தகைய மிளாகபூதி லிங்க யோக வழிபாட்டில் தலைசிறந்தவரே மிளகாய்ச் சித்தர் ஆவார். மிளாமித்ர யோகப் பூர்வமாக ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றி எண்ணற்றோர்க்கு அருளியவர்.

ஸ்ரீஐநூற்றேஸ்வரர்
கீழப்பூங்குடி

இந்தக் கூட்டு லிங்க வழிபாட்டில் ஒவ்வொரு லிங்கத்திற்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம், திருநீறு, செந்தூரம் போன்றவற்றை இட்டு, குறைந்தது 108 விதமான நறுமணப் புஷ்பங்களால் பூஜிக்கும் மிளாகபூதிப் புஷ்ப பூஜையில் வல்லவரே மிளகாய்ச் சித்தர். பூக்களில் இருந்து இயற்கையாகவே நறுமண அத்தர் தயாரிக்கும் அபூர்வ முறைகள் உண்டு. தற்போது வருவது போல செண்ட், ஆல்கஹால் போன்ற ரசாயனக் கலவை இன்றி இந்த இயற்கை அத்தர் நறுமண தூபம், பல மாதங்களுக்கு ஆலய வளாகத்தில் நறுமணம் தர வல்லது. இச்சேவையைப் புனிதகரமாகப் புரிந்து பரவெளியையும் புனிதப் படுத்தி, மக்களுக்கு நல்வழி புகட்டியவரே மிளகாய் சுவாமிச் சித்தர். இவர் ஜீவாலய தரிசனமே மகத்தான மன அமைதியையும் தருவதாகும்.

இவ்வாறு பூக்கள் தரும் புனிதங்களைச் சிறப்புற அறிந்து கடைபிடித்து நன்கு வழிபட்ட மிளகாய்ச் சித்தர் சுவாமிகள் எண்ணற்றோர்க்கு நோய் நிவாரணங்களை அளித்துள்ளார். குறிப்பாக அலர்ஜி, வயிற்று வலி நோய்களுக்கு இவர் அளித்த மருந்துகள் துரிதமான, நிரந்தரமான தீர்வுகளைத் தந்துள்ளன.

உத்திராடம் நட்சத்திரம் தோறும் இவரைத் தரிசிக்க எண்ணற்ற ஜனங்கள் கூடுவர். உத்திராட நட்சத்திரத்தில்தான் சாகம்பரி தேவி புதுப் புஷ்பங்களைப் படைத்தாள்.

மிளகம் என்பது ஒருவகை யோகம். ஆயம் என்பது அந்த யோகாக்னி சக்திகளை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துவதாகும். அக்னி யோக வகையான அதுவே மிளகாய அனுபூதி ஆகும்.

வியாழன், திரயோதசி, உத்திராட நட்சத்திர நாளில் இங்கு ஜீவாலயத்தில் அத்தர், புனுகு, ஜவ்வாது இட்டு அபிஷேகம் செய்து வழிபடுவதால் வயிறு, கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். பிரிந்த குடும்பங்கள், தம்பதியினரை ஒன்று சேர்க்க வல்ல மிகவும் அபூர்வமான ஜீவாலயம். பிறருடைய வாழ்வைக் கெடுக்கும் வண்ணம் வாழ்ந்தோர் இங்கு வழிபட்டு உள்ளம் உருக உண்மையிலேயே திருந்தி வாழச் சங்கல்பம் செய்து வேண்டிடில் கருணையுடன் சித்தர் கனிந்திடுவார். கெட்ட பழக்க, வழக்கங்களுக்கு ஆளானோர் இங்கு பௌர்ணமி தோறும் வழிபட்டு வர, வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

வாஸ்து நாள்

வாஸ்து பூஜைகளைப் பற்றிச் சித்தர்கள் உரைக்கின்ற அபூர்வமான விளக்கங்களை நாம் பலமுறை அளித்துள்ளோம். இது சம்பந்தமான இரு அரிய நூல்களும் அவரவருக்கான ராசிவாரியாக நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டிலும் குறித்த எட்டு வாஸ்து நாட்கள் உண்டு. குறித்த சில நாட்களில் வாஸ்து சக்திகள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூத வெளிகளிலும் அபரிமிதமாக நிரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் எட்டு வாஸ்து நாட்களும் அஷ்ட குணபாட சக்திகளைக் கொண்டவையாம். அதாவது பூமி வாஸ்து (புல வாஸ்து), ஜல வாஸ்து, ஆகாய வாஸ்து, பிராண வாஸ்து, அக்னி வாஸ்து ஆகிய ஐந்து பஞ்ச பூத வாஸ்து நாட்களுடன், அந்தர வாஸ்து, பூம்யாதி வாஸ்து, சுந்தர வாஸ்து என எட்டு வகைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதிருமகள் கீழப்பூங்குடி

இந்த எட்டு வகை அஷ்ட குணப் பாடங்களில் திளைக்கும் வாஸ்து சக்திகளை வெளிவிடும் நாட்களே வாஸ்து சக்தி நாட்களாகத் துலங்குகின்றன. இவற்றில் வரும் 22.4.2004 நாளன்று அமையும் வாஸ்து நாள் ஆகாச குண வாஸ்து நாளாகத் துலங்குகின்றது. இவற்றிற்கான குறித்த அஷ்ட வாஸ்து குணப் பாடத் தலங்களும் பல உண்டு. கடந்த இதழில், பூராட நட்சத்திரத் தலமாகப் போற்றிச் சித்தர்களால் அளிக்கப் பெற்ற கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் தலமே ஆகாச வாஸ்து குணபாட சக்திகளைக் கொண்டதாகும்.

பூமா தேவி, பூமியைத் தம் தெய்வ சக்தியால் தாங்குகின்றாள். பூமியைத் தாங்குதல் என்றால் பூமியின் எடையை மட்டுமே தாங்குதல் எனப் பொருளன்று. பூமியோடு இணைந்த பகுதிகளே பூமி அண்டமாகும். இந்த பூமி அண்டத்தின் மையைப்பகுதியே பட்டுக்கோட்டை அருகே அண்டமி எனும் தலமாக உள்ளது.

மேலும், நாம் விழித்திருக்கும் நிலையில் மட்டுமே பூமியில் இருப்பதை உணர்கின்றோம். உறங்கும் போது பூமியில் இருக்கின்றோம் என்ற உணர்வே எழுவதில்லை. உணர்வால் அறிந்துதாம் உலக இயக்கங்கள் பெரும்பாலும் அமைகின்றன. நாம் பொதுவாக எண்ணுவதைப் போல வெறும் மண், கல், பாறை மலைகளால் மட்டுமே ஆனதாக பூமியைக் கருதக் கூடாது பலவகை பூமிதள வகைகளைக் கொண்டதே நம் புனித பூமி.

கண்களுக்குப் புலனாகும் உணர்வுப் பொருட்களால் மட்டுமே பூமி ஆனதில்லை. கண்களை மூடினால் நம் பூமியில் இருக்கின்ற தன்மையை உணர்ந்தாலும் ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் தோன்றுகிறது அல்லவா. அப்படியானால் உடல் பூர்வமாக உலகில் இருந்தாலும், மனப் பூர்வமாக வேறு உலகில் இருக்கின்றோம். இதைத்தான் ஆகாச வாஸ்து பூஷண அம்சங்கள் என்று சொல்கின்றோம்.

22.4.2004 அன்று வரும் வாஸ்து நாள் ஆகாச வாஸ்து பூஷண நாளாகவும் அமைகின்றது. அதாவது வாஸ்து மண்டலத்தில், பூமி சக்தியையும், ஆகாச சக்தியையும் இணைக்கின்ற சிறப்பான நாளாகும். பழைய வீடுகளில் வீட்டின் முன்னால் அல்லது முற்றத்தில் மரப் பிளாச்சுகளால் பந்தல் கட்டி, மல்லி போன்ற பூக்கொடிகளை நிரவி, வளர விட்டிருப்பார்கள். இதுவும் ஆகாச வாஸ்து சக்தியை பூமிக்குப் பெற்றுத் தரும் முறையாகும். மேலும் பூமியிலிருந்து ஒரு கயிற்றை மாடிக்குக் கட்டி அதில் குறித்த மூலிகைக் கொடியை மாடி வரைக் கயிற்றிலேயே வளரும்படி படர விடுவார்கள். பூமியில் துளசிச் செடியை வைத்து அதன் சந்ததியை மாடியில் வைத்து வளர்த்துப் பூஜிப்பதும் உண்டு. சந்ததிகள் கொழுந்து விட்டுப் படர வேண்டும் என்ற ஐதீகத்தை இது குறிக்கின்றது.

ஸ்ரீவிஷ்ணு துர்கை
கீழப்பூங்குடி

இவ்வாறு பூமி சக்திகளும், ஆகாச வாஸ்து சக்திகளும் இணைந்தால்தான் கட்டிடம் ஸ்திரமாக இருக்கும். குறித்த அளவுக்கு மேல் உயரமாகக் கட்டிடங்களைக் கட்டக் கூடாது. நற்காரியங்கள், சமுதாய நலன்கள், நாட்டுத் தற்காப்பு போன்ற பல முக்கியக் காரணங்களுக்கு மட்டுமே உயரமான கட்டிடங்கள், உயர் அமைப்புகள் ஆன்மீக ரீதியாக ஏற்கப்படுகின்றன.

என்றுமே, எங்குமே ஆலய விமானத்திற்கு மேல் கட்டிடங்கள் அமைதல் கூடாது. ஆலய ராஜ கோபுரத்திற்கு மேல் நிச்சயமாகக் கட்டிடங்கள் எழுதல் கூடாது. ஆஸ்ரமங்கள், அன்னதானக் கைங்கர்யங்கள், ராஜ்யத்தை நிர்வகிக்கும் ராஜ்ய பரிபாலனம், தெய்வீக நினைவு ஸ்தூபிகள் என்ற உயர அமைப்புகளுக்கான இலக்கணங்களும் உண்டு.

ஆகாச வாஸ்து சக்திகள் நிறைந்த தலங்களுள் ஒன்றே திருவையாறு அருகே உள்ள கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் தலமாகும். மிகவும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவோர் பல நிலதோஷங்களுக்கு ஆளாகின்றனர். இவற்றிற்குப் பிராயசித்தம் தருவதுதாம் கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் தலமாகும். இங்கு அனைத்து (எட்டு) வாஸ்து நாட்களிலும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

சிதிலமைடந்து காணப்படும் இந்த ஆலயத்தின் ராஜ கோபுரம், முற்காலத்து கோபுரங்களுக்கான வாஸ்து லட்சணங்களைக் கொண்டதாகும். Flat promoters ஒன்று கூடி இதன் கும்பாபிஷேகப் பணிகளை எடுத்து நடத்துவது தொழிலில் நல்ல மேன்மைகளைத் தரும்.

எப்போதும் யோக சயன நிலையில் இருக்கும் ஸ்ரீவாஸ்து பகவானுக்கு ப்ரீதி தரக் கூடியதே அனைத்து வகைத் தானியக் காப்பு ஆகும். இங்கு வாஸ்து நாளில் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக் காப்புச் சார்த்தி, துவரை, உளுந்து, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக் கடலை, ராஜ்மா தானியம், பாதாம் பருப்பு, எள் என அனைத்து வகைப் பருப்புகளையும், தானியங்களையும் பதித்து சகஸ்ரநாம (1008 போற்றிகள்) ஆற்றுதல் சிறப்புடையது.

இவ்வகையில் 22.4.2004 அன்று வரும் வாஸ்து நாள் ஆகாச சக்திகள் நிறைந்த தினமாதலின் சாகம்பரீ தேவி பூஜை போல், காய்கறிகள், பழங்கள், அனைத்து வகைத் தானிய முடிச்சுகளைப் பந்தலாக இங்கு ஆலயத்தில், அந்தரத்தில் (பந்தலில்) வைத்துக் கட்டி வழிபட்டு அனைத்தையும் ஏழைகளுக்கு இயன்றால் உணவாக்கித் தானமளித்தல் மிகவும் விசேஷமானதாகும். அனைத்து வகைக் காய்கறிகளும், கனிகளும் வானத்தில் அந்தரமாகக் காய்ப்பதால்தான் வாஸ்து பகவானும் வாஸ்து அந்தர சந்தரச் சக்கர யோகம் பூண்டு இதன் சக்திகளைத் தாவரங்களுக்கு அருள்கின்றார்.

கடுவெளி மிகவும் பழமையான தலம். இப்போது ஒரு வேளை பூஜையைக் கூட நிகழ்த்த இயலாத நிலை, பக்தர்கள் இங்கு திரண்டு வந்து இப்பூவுலகின் ஆகாச வாஸ்து தலமாக பண்டைய காலம் போல் இத்தலம் சிறந்து விளங்கிட அரும்பணி ஆற்ற வேண்டும்.

கூந்தலூர்

ஸ்ரீசீதாதேவி கும்பகோணம் அருகே கூந்தலூரில் ஸ்ரீஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தின் லக்ஷ்மி தீர்த்ததில் நீராடிய போது, திருமகளின் ஸ்வரூபமான சீதையின் ஏழு கூந்தல் முடிகள் உதிர்ந்தன! அவற்றைத் தாங்கியவாறே பூமாதேவி, பூமியடியில் லக்ஷ்மி கடாட்சம் பொங்கும் ஏழு சுனைகளை எழுப்பினாள். இவை பூமியடி நீரோட்டமாய்ப் பல பகுதிகளில் தீர்த்த ஊற்று நீராய்த் தோன்றின.

இச்சுனைகளில் தோன்றிய ஒரு பகுதி நீரே – கும்பகோண – சாக்கோட்டை அருகே உள்ள திருநல்லம் சப்தசாகரத் தீர்தத்திலும், ஸ்ரீசப்தரீஷ்ஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கும் தலங்களில் (லால்குடி) உள்ள தீர்த்தங்களிலும் மற்றும் லக்ஷ்மி தீர்த்தங்களிலும் இணைகின்றது. இவ்வாறு தோன்றிய ஏழு முக்கியமான தீர்த்தங்கள் உண்டு.

சப்தசாகர தீர்த்தம்
திருநல்லம்

சிவகங்கை
லால்குடி

இந்த ஏழு தீர்த்தங்களிலும் ரோமச முனிவர், ஜம்பு முனிவருடன் நீராடும் பாக்யத்தைப் பெற்றவரே சப்த கந்த லிங்க அடியார் சித்தர் ஆவார். இறைவனுடைய திருச்சடையில் உதிக்கும் கங்காதேவி தினமும் சிவனைப் பூஜிக்கும் தலங்களில் கூந்தலூரும் ஒன்றாம். ரோமச மகரிஷியும் தினமும் சுவாமியை இங்கு பூஜித்து, பெறுதற்கரிய கபாலஜீவ சக்தியை, முடி சக்திகளாக ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கும் தலம்.

பெண்களுக்குக் கூந்தல் மூலம் திரள்கின்ற சுமங்கலித்வ சக்தியை அளிக்கின்ற மிகவும் அரிய திருத்தலம். சுமங்கலித்வ சக்திகள் குங்குமம், வஸ்திரம், வளையல்கள், மாங்கல்யம், தோடுகள், மூக்குத்தி, மெட்டி, கண் மை, மஞ்சள், மருதாணி போன்ற பல சுபமங்கள திரவியங்களில் திரள்கின்றது. பெண்களுக்கான எண்ணெய் நீராட்டல் நாட்களான செவ்வாய், வெள்ளியில் இத்தலத்தில் பூரிக்கின்றது.

தலைமுடி யோக சக்திகள் திரளும் வெள்ளி, செவ்வாய், துவாதசியில் இங்கு ஆலயத்தில் சுவாமி, அம்பிகைக்கு ஏழு விதமான தைலங்கள் சேர்ந்த தைலத்தால் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிகளுக்கு எண்ணெய், மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்யச் சரடு, வெள்ளி மெட்டிகள், வளையல்கள் போன்ற ஏழுவிதமான மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வர, கூந்தல் மூலம் திரளும் சுமங்கலித்துவ சக்திகள் நல்வரமாகக் கிட்டி கணவன் தீர்க ஆயுளுடன் திகழ்வார்.

மேலும் அக்னி பகவான் அகஸ்தியர் அருளியபடி “பல்பிதம்“ எனப்படும் சீதாப் பழங்களை ஹோம ஆஹூதியாக இத்தலத்தில் அளித்து, சத்தியத்தின், நேர்மை, நாணயத்தின்பால் எழும் அக்னிப் பிரகாச தேஜஸ், ஜோதிகளையும் தாங்கும் வல்லமை பெற்றார். இங்கு ஹோமம் ஆற்றிய பலாபலன்களாகவே ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூர் திருத்தலத்தில் அக்னி பகவான் மேலும் பல விசேஷமான அக்னி அனுகிரக சக்திகளைப் பெற்று, சீதாப் பிராட்டி அக்னிப் பிரவேசம் செய்தபோது அழகிய சந்தனச் சிம்மாசனத்தில் தாயாரை அமர்த்தி ஸ்ரீராமரிடமே சீதையை ஒப்படைத்தார். கலியுகத்திற்குத் தேவையான அக்னி சக்திகளையும் அக்னி பகவான் இத்தலத்தின் சில வழிபாடுகளின் மூலமாகவே பெற்றார்.

கூந்தலூர்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகுமே!

எண்கள் யாவும் யந்திர வடிவுகளே! கலியுகத்தில் சத்சங்க சக்திகளைக் கொண்டவையாகவும் எண்களை இறைவன் படைத்துள்ளான். ஒரு மனிதன் தன் தினசரி வாழ்க்கையில் எதனுடன் நிறையப் புழங்குகின்றானோ, அவை யாவும் அவனுடைய வாழ்வில், அவனையும் அறியாமல் பல விளைவுகளைத் (effects) தருகின்றன.

இவற்றில் அவரவருடைய வாழ்க்கை அமைப்பைப் பொறுத்து பெயர், தினமும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள், எண்கள் போன்றவை ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக பெரிய வகை அதிகாரிகள் தினமும் நிறையக் கையெழுத்திட வேண்டும். எழுத்தர்கள் நிறைய எழுத வேண்டும். காஷியர்கள் எண்களுடன் பிணைய வேண்டும். ஆனால் நாம் அட்சர, எண் சக்திகளை இவ்வாறாக நம் வாழ்க்கையில் உணர்வதில்லை!

இறைவனுக்கான மந்திரங்களை, அர்ச்சனைத் துதிகளை நாம் ஓதி பூஜிக்கும் போது, எழுத்துக்களில் பதிந்துள்ள பீஜாட்சர சக்திகளை நாம் பெறுகின்றோம். நல்லதை எண்ணிட, நல்லதைச் செய்திட நன்மை பெருகும் அன்றோ! இதே போல் நாமாவளி, பஜனை, அர்ச்சனைத் துதிகளில் என்றும் சிரஞ்சீவித்வ நல்மறை பொருளாம் இறைமையைப் போற்றுவதால், இவை நல்லவற்றையே எப்போதும் விருத்தி (positive energies) செய்வதாகின்றன. வள்ளுவர் பகன்றது போல் “எண்ணும், எழுத்தும்” ஜீவ வாழ்க்கையில் கண்கூடாகக் கண் கண சக்திகளாக ஆகின்றன.

கடிகார மணி, தேதி, வயது, பணம், டிக்கெட் எண், வங்கிச் செக், சம்பளம், பொருட்களின் விலை என நம் வாழ்வின் தினசரிக் காரியங்களில் எண் இல்லாத இடமே இல்லையே!

லட்சுமி தீர்த்தம்
திருமழபாடி

அலுவலகங்களில் கூட இயன்ற மட்டும் ரப்பர் ஸ்டாம்பைப் பயன்படுத்தாமல் கையாலேயே எண்களை, தேதியை எழுதுவது, ஒன்று முதல் 0 வரை அனைத்து எண்களையும் தினசரி வாழ்வில் பயன்படுத்துவது என்பதையே எண் வழிபாடாக உள்ளுக்குள் கொணருங்கள்.

எண்ணுக்குப் பல வடிவங்கள் உண்டு. அதாவது ஆன்மீகத்தில், “எண்ணின் ஆன்மீக சக்தி” பல வடிவங்களில் நமக்கு வருகின்றன. தற்போது வழக்கில் உள்ள 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 போன்ற எண்கள், மேல்நாட்டு முறை எனக் கருதுகின்றோம். இதுவும் ஆதிகால பாரத வழக்கில் நிலவிய வடிவங்களே! மொழி எழுத்துக்கள் போல, அந்தந்த மொழிக்கான எண்ணின் அட்சர வடிவுகளும் உண்டு. பிற மொழிகளிலும் எண்ணின் வடிவங்கள் மாறும். தூய தமிழில் கூட, அ, உ, க என்ற வகையில் 1, 2, 3 ஐக் குறிக்கும் வகையில் மிகவும் அபூர்வமான யந்திர சக்திகள் நிறைந்த கோணாட்சர எண் பிம்பங்கள் வழக்கில் இருந்தன. ஸ்ரீஅகஸ்தியர் பிரானால் அளிக்கப் பெற்ற இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆனால் விதிவசத்தால் நாம் இவற்றை மறந்து அரிய பல எண் யந்திர சக்திகளையும் இழந்து விட்டோம்.

எண்ணில் பொலிந்துள்ள ஆன்ம சக்திகளை எவ்வாறு பெறுவது? எண்ணின் சக்திகளை எவ்வாறு பெறுவது? எண்ணின் சக்திகளை வண்ண வடிவங்கள் மூலமாகவும் பெறலாம்.

1. ஞாயிறு – ஆரஞ்சு
2. திங்கள் – வெண்மை
3. செவ்வாய் – சிகப்பு
4. புதன் – பச்சை
5. வியாழன் – மஞ்சள்
6. வெள்ளி – கத்தரிப் பூ வகை நீலம்
7. சனி – கருப்பு

என அந்தந்த நாளுக்கு உரிய வண்ண, ஆடைகளை அணிவதால் கிரக சக்திகள் எண் சக்திகளோடு கூடி வரும். எண், கிரக வார கணித முறைகளும் உண்டு, உதாரணமாக 26.8.2003 செவ்வாய் எனில் 2+6 =8, 2+6+8+2+3 = 3 செவ்வாய் = 9 எனில் (செவ்வாய் = சிகப்பு) (சனி 8 = கருப்பு) (குரு 3 = மஞ்சள்) என கணித்து, அந்தந்த வண்ண ஆடை, நிறக் கனிகள், நிற உணவுகள் எனப் பகுத்து, அந்நாளில் அனைத்து எண்களின் ஆன்ம சக்திகளைப் பெற்றுக் காரிய சித்திகளை அடைந்திடலாம்.

ஹோம குண்ட அடி மண்ணில் எண் இயந்திரங்களை வரைந்து, 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 என்ற வகையில், ஆஹுதிகளை அளித்தும் எண் சக்திகளைப் பெற்றிடலாம்.

ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்
கடுவெளி

எண்களுக்கும் நம் தினசரி வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு. ஆனால் எண்களின் சக்தியை நாம் முழுவதுமாகப் பெற இயலவில்லை. வெறும் பெயரை மாற்றுவது மட்டும் நியூமராலஜி ஆகி விடாது. எண்களின் மகிமையை உணர்ந்து அவற்றை நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கடைபிடிப்பது தான் உண்மையான நியூமராலஜி. நவகிரகங்களுக்கு நிறைய உபகோளங்கள் (satellites) உண்டு. இவை மூலமாகவே நவகிரகங்கள் எண்களின் சக்திகளை நமக்கு அளிக்கின்றார்கள். நட்சத்திரங்களில் உள்ள பாதங்களுக்கும், கிரக உபகோள்களுக்கும் நிறைய ஆன்மீகப் பிணைப்புகள் உண்டு.

இத்தகைய கடினமான ஜாதகக் கணக்குகளைக் கொண்டு எவ்வகையில் தினந்தோறும் எண் சக்திகளைப் பெறுவது? விரல்களில் உள்ள கணுக்கள், நிறைய எண் சக்திகளைப் பெற்றவை. கட்டைவிரலால் மோதிர விரலின் இரண்டாவது கணுவில் இருந்து தொடங்கி கீழ்க்கணுவை அடைந்து சுண்டு விரல் கணுக்கள் வழியே செல்லும் காயத்ரீ ஜப எண்ணிக்கை முறை ஒன்று உண்டு. இதன் விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் பெறவும். ஒவ்வொரு கணுவையும் கட்டைவிரல் நுனியால் தொட்டவாறு நவகிரகங்களை,

எண்ணுள் எண்ணெயாய்
எண்ணூர் அமுதன்
எண்ணில் முழையான்
எண்ணில் விழையான்
எண்ணில் எண்ணியும்
எண்ணியத்து ஏறியே
என்னப்பன் என்னுள்
வெண்ணெயாய் நுண்ணுகவே!

எனக் குறைந்த்து 36 முறையேனும் ஓதி வருதல் வேண்டும்.

திருப்பாற்கடல்

அம்பிகைக்கு வளையல் இட்டு வழிபட வேண்டிய மற்றொரு அற்புதத் தலம் திருப்பாற்கடல் ஸ்ரீவளையல் நாயகி . சென்னை – ஸ்ரீபெரும்புதூர் – காஞ்சிபுரம் – காவேரிப்பாக்கம் – ராணிப்பேட்டை – வேலூர் பஸ் மார்கத்தில் காவேரிப்பாக்கத்தில் இறங்கி 4 கி.மீ உட்செல்ல வேண்டும். இவ்வூருக்கு பஸ் வசதிகள் குறைவு. ஆட்டோவில் செல்ல வசதிகள் உண்டு.

கங்கணம் என்றால் அணிகின்ற ஆன்ம வளைசாதனங்கள் என்று பொருள். நம் பாரதத் திருநாட்டில் பன்னெடுங்காலமாக மஞ்சள், குங்குமம், வளையல்கள், தோடுகள், மூக்குத்தி போன்றவை பெண்களுக்குப் புனிதம், காப்பு சக்தி, மங்களம் தருகின்ற சுபகரமான பொருட்களாகத் துலங்கி வருகின்றன. விரிந்து விருத்தியாகி, பொங்கிப் பெருகுகின்ற இறை அம்சங்களைப் பூண்டவையே மங்களப் பொருட்கள் ஆகும்.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் விரதம், பண்டிகைகள், திருவிழாக்கள், பூஜைகள், ஆலய வழிபாடுகள் மூலமாகப் பெறும் புனிதமான மங்கள சக்திகளை நம் பாரதப் பெண்கள் பேணி வருவதை நாம் மகிழ்வுடன் காண்கின்றோம். எனவே அதர்மமும், வன்முறையும் பெருகி வரும் கலியுகத்தில் சுபமங்களப் பொருட்களை ஏழைகளுக்கு அளிக்கும் தான தர்ம சக்திகள் தாம் சமுதாயத்தைக் காக்கும் ஆன்ம சக்திகளைத் தருபவையாம்.

சுபமங்கள சக்திகளைச் சமுதாயத்தில் விருத்தி செய்வதில் வளையல்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. எப்போதும் வட்டமான பொருளுக்குத் தெய்வீக சக்திகளை ஈர்த்து விருத்தி செய்து வளம் கூட்டும் சக்திகள் உண்டு. வட்டமான, வளைவான, பொருட்களுக்கு ஆகர்ஷண சக்திகள் அதிகம். இதனால்தாம் பூஜ்யம் எனப்படும் 0 (zero) பெரும் சக்தி வாய்ந்த எண்ணாக விளங்குகின்றது. ஆனால் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த வடிவம் எது தெரியுமா? பாண லிங்க வடிவமே (ஆவுடை இல்லாத லிங்க அமைப்பு) மிகவும் ஆத்ம சக்தி, ஆன்ம சக்தி பொதிந்த வடிவாகும். இதனை அம்பிகை உலகிற்கு உணர்த்திய தலங்களுள் ஒன்றே திருப்பாற்கடல் ஆகும்.

உத்தம சிவபக்தனாகிய வாலி தன் குடும்ப சகிதம் வழிபட்ட மிகவும் தொன்மையான ஆலயம். அக்காலத்தில் ஸ்ரீகரம், கரபுரம் என்றே பெயர் பெற்றிருந்தது. இங்கு ஸ்ரீகரபுரீஸ்வரர் ஆலயமும், ஸ்ரீவாலீஸ்வரர் ஆலயமும் உண்டு. திருப்பாற்கடல் ஒரு யுகத்தில் பல ஆலயங்களுடன் புகழ்பெற்ற தலம். தற்போது மிகவும் பழமையான இரு சிவன் கோயில்கள், இரு திருமால் ஆலயங்களுடன் பரிமளிக்கின்றது.

கரவானக் கற்பம் என்ற யுகக் காலத்தில் அம்பிகை, இங்கு மானுட வடிவில் லக்ஷ்மி, சரஸ்வதியுடன் இணைந்து நவராத்திரி விரதம் பூண்டு இல்லறப் பெண்களுக்கு வளையல்களைத் தானமாக அளித்துத் தவம் புரிந்த தலம்.

வாலி வழிபட்டமையால் வாலீஸ்வரர் என்று தற்போது பெயர் பெற்றுள்ளது. இறைவன் தாமே வளையல்களையும், கங்கணங்களையும் அளித்தமையால் ஸ்ரீமங்களேஸ்வரர், ஸ்ரீகங்கண நாதர் என்ற நாமங்களைப் பூண்டு அருள்பாலித்தவர் ஆவார். பல நவராத்திரிக் கற்பங்களிலும் மகரிஷிகள், மகரிஷிகளின் பத்னியர்கள், சித்தர்கள் சித்தர்களின் பத்னியரும், பித்ரு பத்னியரும் அம்பிகைக்கு வளையல் சார்த்தி வழிபட்ட தலம். இங்கு நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகைக்கு வளையல் சார்த்தி வழிபடுவது போல் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

திருப்பாற்கடல்

அபர்ணா சக்திகள்

என் கடன் (இறைப்) பணி செய்து கிடப்பதே!

காசி, ராமேஸ்வரம், திருவேணி சங்கமம், பத்ரிநாத் போன்ற தலங்களுக்குச் செல்ல இயலாதவர்களுடைய பித்ருக் கடன்களை எவ்வாறுதான் தீர்ப்பது? பித்ரு கடன் என்றால் பித்ருக்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணம், படையல்களை முறையாக அளிக்காமையும் ஆகும். மூதாதையர்களுடைய நிறைவேறாத விருப்பங்களாலும் – உண்டியல் நேர்த்தி, தலைமுடிப் பிரார்த்தனை, தீர்த்த நீராடல் நிறைவேறாமையாலும் – பித்ரு, கடன்கள் பெருகும். இவ்வகையில் மேலும் பலவும் உண்டு.

மூதாதையர்கள் அளித்த சொத்து வசதிகளுடன் வாழ்ந்து, அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தாது சுயநலமாக வாழ்தலும் முறையானதா? இவ்வாறுதான் பித்ருக் கடன்கள் பெருகுகின்றன.

குருவாரமாகிய வியாழனன்று அமிர்த யோக நேரத்தில் கிரிவலம் வருதல், பாத யாத்திரை போன்ற வழிபாடுகள் அபரிமிதமான அபர்ணா ஞானக் கிரணங்களைப் பொழிய வல்லன, கை ரேகைகளில் விசேஷமான ஸ்வர்ண ரேகை நாளங்களும் உண்டு. தங்க மோதிரம் அணிகையில், இதன் ஸ்பரிசத்தால் பல நுணுக்கமான கை ரேகைகள் அபர்ணா சக்தியை ஆக்கப்படுத்துகின்றன. இவ்வகை அபர்ணா குருவார விரத பூஜை பல புராணங்களிலும் தெய்வ மூர்த்திகளாலேயே கடைபிடிக்கப் பட்டுள்ளது.

திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் மானுட வடிவில் தோன்றி அருள்பாலித்த காலை, தம் திருமணத்திற்கான திரவியங்களை, பொருட்களைப் பெற, குபேரனிடம் சென்றார். குபேரனும், பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியால், அவர் வந்த காரணம் அறியாது திகைத்து, அவருக்கு முதலில் அர்க்ய, ஷோடசோபசார பூஜைகள் செய்து ஆராதித்தார். கடன் வாங்குதற்கும், திருப்பி அளிப்பதற்கும் ஜோதிட ரீதியான நாள் கணித முறைகள் உண்டே!

ஸ்ரீஅகஸ்திய மகரிஷி பெருமாளையே அபர்ணா குருவார விரதம் பூணச் செய்து, குபேரனிடம் சென்றிட, வேண்டிடவே ஸ்ரீனிவாசப் பெருமாளும் அபர்ணா குருவார விரதம் பூண்டு குபேரனிடம் திரவியங்கள், செல்வம், ஐஸ்வர்யங்களைப் பெற்று ஸ்ரீபத்மாவதித் தாயாரை மணந்து இன்றளவும் குபேரனுக்கு சம்பத்வ காணிக்கையை மறக்காமல் அளித்துக் கொண்டிருக்கின்றார். இதனால் தான் குபேரருக்கு சங்க நிதி, பதுமநிதி போன்ற அனைத்தும் நிலைக்க நல்வரங்கள் பலவும் பிறந்தன. எனவே வாங்கிய கடனை நேர்மையாக அளிப்பதும் சத்தியப் புண்யத்தை அளிக்கும். இந்த அனுகிரகம் ஏழைகளுக்கும், நடுத்தர வர்கத்திற்கும் ஓர் அழகிய நல்வரமாகும்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாற்கடல்

எனவே வாங்கிய கடனை முறையாக அளித்திடவும். சில வகை குபேர கடாட்சம் கிட்டும் நன்னாளே அபர்ணா குருவாரம். இதுவும் எப்போதாவது மலர்வது எனினும் இதனை நாம் பெற்றிடவும் சில பூஜைகளை மேற்கொள்வது நன்று. வியாழன் தோறும் நீர் மட்டும் அருந்தி விரதமிருந்து

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்ரீமன் நாராயண பாத சேவகாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

எனும் அபர்ணாங்க்ருத கருட காயத்ரீ மந்திரத்தை நாள் முழுதும் ஓதி, பெரிய திருவடியாரை (கருடாழ்வார்) வழிபட்டு வர, கடன் அடைக்கும் அபர்ணா சக்திகள் விருத்தியாகும் நன்னாளில் பூஜிக்கும் பாக்யத்தைப் பெற நல்வரங்கள் கிட்டும்.

பாணலிங்கம்
திருமங்கலம் லால்குடி

மக நட்சத்திர நீராடல்

நமது பாரத தேசத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளாட்சி புரிந்த துவாரகை நகரானது, நவ துவார சக்திப் பீடங்களில் ஒன்றாகச் சித்தர்களால் குறிக்கப்படுகின்றது. நம் புண்ணிய பாரதத்தில் உள்ள அனைத்து நவ துவார ஜலசக்திப் பீடங்களுக்கும் தலைமையகமாக விளங்குவதே, கும்பகோணத்தில் உள்ள மஹாமகத் தீர்த்தக் குளம் ஆகும். நவநதி தேவதா மூர்த்திகளும் மாதந்தோறும் மக நட்சத்திர நாளில் வழிபடும் திருக்குளம். இங்கு மஹாமகத் தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், மிகவும் அபூர்வமாக கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய ஒன்பது தீர்த்த தேவமூர்த்திகள் சிலா மூர்த்த வடிவம் கொண்டு அருள்கின்றனர்.

மானுட சரீரதத்தில் துலங்கும் நட்சத்திர சக்திகள்

சூரிய ஒளியின் ஜீவஜோதி சக்தியால்தான், பூவுலகில் ஜீவன்கள் தழைக்கின்றன. இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகத்தான், பெறுதற்கு அரிய மானுடப் பிறவியை, அற்புதமான பகுத்தறிவோடு பெற்ற மனித குலத்திற்கு, சக ஜீவன்களின் நல்வாழ்விற்காகவும், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைத் தினமும் ஜபிக்க வேண்டிய நியதி, நித்தியக் கடமையாக உள்ளது. மஹாமகத் தீர்த்தக் கரையில் ஆற்றும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபப் பலன்கள், 66 கோடித் தீர்த்த சக்திகளினால் பன்மடங்காக விருத்தி அடைகின்றன.

27 நட்சத்திர தேவியர்களும், சந்திர மூர்த்தியின் பத்தினிகளாகத் துலங்குவதாலும், ஜீவன்களுடைய மனதிற்கு அதிபதியாகச் சந்திர மூர்த்தி விளங்குவதாலும், சூரிய ஒளிப் பிரகாசமே ஜீவன்களின் ஆன்ம சக்திக்கு மூலாதாரமாக இருப்பதாலும், உலக ஜீவன்களுடைய வாழ்க்கையிலே சூரிய, சந்திர கிரகங்களின், நட்சத்திர ஜோதிகளின் ஜீவாதார சக்திகள்தாம் நம்மைக் காக்கும் சக்திகளாக விளங்குகின்றன. சூரிய சந்திர, நட்சத்திரத் தீர்த்தங்களும் மஹாமகத் தீர்த்தத்தில் நிறைந்துள்ளமையால் நல்ல ஆயுள், நல்ல ஆரோக்யத்தோடு, ஒவ்வொரு ஜீவனுள்ளும் உள்ள ஒன்பது சரீரங்களின் ஆன்ம வளத்திற்கும் மாதந்நோறும் மக நட்சத்திர நீராடல் துணை புரிகின்றது.

27 நட்சத்திரங்களைச் சந்திர மூர்த்தியின் பத்தினி தேவிகள் என்று குறிக்கும்போது, பூலோக சமுதாய வாழ்க்கையிலே நிலவுகின்ற குடும்ப, இல்லற அம்சங்களையே எண்ணுதல் கூடாது. ஆதிமூலச் சந்திர மூர்த்தியின் திருப்பாதங்களை வேண்டி, பூஜித்துத் தவமிருந்து உத்தம முக்தி நிலைகளை அடைந்த சந்திர பாலச் சித்தர், சோம காண்டச் சித்தர் போன்ற சித்தர்களும் உண்டு. சிவமயமான சந்திர ஜோதியும், சந்திர வழிபாடும் உத்தம முக்தி, மோட்ச அனுகிரக நிலைகளைத் தரவல்லதாம். எனவே சந்திர மூர்த்தியையும், சந்திர மூர்த்தியின் 27 நட்சத்திர தேவிமார்களையும் – பூவுலகில், ஆண், பெண், மனிதர்கள், தாவரங்கள் என்ற ஜீவ பேதங்களைக் களையும் மனோ சக்திகளை அருளும் அற்புத மூர்த்தங்களாகப் – போற்றி வழிபடுதலே சாலச் சிறந்ததாம்.

மனித சமுதாயத்திற்கு நல்வரங்களை அருளிடவே சூரிய மூர்த்தி, சந்திர மூர்த்தி போன்ற நவகிரக மூர்த்திகளும், நவகிரக தேவதைகளும், மகரிஷிகளும், சித்தர்களும் பல தூல, சூட்சும, காரண, காரிய வடிவுகளில், பூலோகத்திற்கு வருகின்றனர். சிருஷ்டியானது முதன் முதலாகக் கும்பகோணத்தில் தோற்றுவிக்கப்படுவதால், இவர்கள் ஜீவசமுதாயத்தில் பல வடிவுகளையும் கொண்டு, இறை லீலைகளை நிகழ்த்துதற்கு முதலில் மஹாமகக் தீர்த்தத்தில்தாம் அஹமர்ஷண சங்கல்ப மந்த்ர நீராடலை மாதந்தோறும் மக நட்சத்திர நாளில் மேற்கொள்கின்றனர்.

அபூர்வமான “பூர்வபல சாதக மூலிகை”

ஒவ்வொரு சித்தரும், தாம் பெற வேண்டிய, ஒவ்வொரு சித்த மூலிகைக்காக, எத்தனையோ கடுமையான தவங்களை மேற்கொள்கின்றார்கள். உதாரணமாக, சுபானு ஆண்டில், மஹாமகத் தீர்த்தத்தில் சேர்வதற்கான “பூர்வபல சாதகம்” என்ற தேவ மூலிகை ஒன்று உண்டு.

1008 ராகங்களில் இசைக்கப் பெற்ற கீர்த்தனங்களின் விளைவாக ஏற்படும் ஆன்ம நீர்ப் புலங்களில் உற்பவிக்கின்ற தேவ நீர்த் துளிகளைக் கொண்டு இவை வளர்ந்து ஆக்கப்படுவதாகும். இவற்றில் பூலோக ராகங்களும், தேவலோக ராகங்களும் அடக்கம், பிரபஞ்சத்தில் இசையம்சங்கள் திரண்டு பொழியும் தலங்களில் இருந்து, சித்த புருஷர்களால் பூர்வபல சாதக மூலிகை தேர்ந்தெடுக்கப்படுகின்றது.

இந்த இலையின் ஒவ்வொரு நரம்பும், பாகமும் ஒவ்வொரு ராகத்தால் உருவாக்கப்படுவதாகும். எனவே 1008 ராகங்களின் பரிமாணமாக, இந்தப் பூர்வபல சாதக மூலிகை தோன்றுவதால், இசைபாவனங்கள் நிறைந்த மஹாமகத் தீர்த்தம் போன்றவை மூலமாகவே இம்மூலிகையின் பலாபலன்களைப் பெற முடியும். வீணையில் ஒரு ராகத்தை மீட்டும் போது, இந்த இலையின் ஒரு நரம்புப் பகுதி உண்டாகின்றது. இவ்வாறு தாள வாத்தியக் கருவிகள், வாய்ப்பாட்டு மூலமான இறை மறைக் கீர்த்தனங்களை, 1008 ராகங்களில் இசைக்க வைத்து, இந்த மூலிகை தோற்றுவிக்கப்படுகின்றது.

பிரசத்தி பெற்ற பாடல் பெற்ற தலங்களில், இறைத் துதிகளை (மட்டும்) ஓதும் இசை நிகச்சிகளை நடத்தும் போது, அருகருகே உள்ள பூர்வபல சாதகம், மாராகணம் போன்ற அபூர்வமான மூலிகைகளின் ஒரு சில நரம்புகள், இலை பாகங்கள் உற்பவிக்கப்படுகின்றன. இவை யாவும் வான நீரோட்டங்களில் கலந்து கடுவெளி ஆறு, சித்ஆகாச நதி, ஸ்வர்ண நட்சத்திரத் தீர்த்தம் மற்றும் பல நட்சத்திர ஆகாசத் தீர்த்தங்களில் கலந்து மஹாமகத் திருநாளில், மாதாந்திர மக நட்சத்திர நாளில் நதி தேவதைகளால், இங்கு மஹாமகத் தீர்த்தத்திற்குக் கொணரப் பெறுகின்றன.

திருஅண்ணாமலையில் கும்பகோணம் தரிசனம்

கும்பகோணம் மஹாமகத் திருக்குளத்திற்கு ஒரு மண்டல காலத்திற்குள்ளும் செல்ல இயலாதவர்கள் என் செய்வது? பிற ஜீவன்களின் மேன்மைக்காக, நல்வாழ்விற்காக, ஒவ்வொருவரும், மாசி மகப் பௌர்ணமி அன்று, குறைந்தது 10,000 பேர்களுக்காவது எவ்விடத்திலாவது அன்னதானம் செய்யும்போது, அந்த அன்னதானச் சக்தியில் மஹாமக நீராடல் சக்திகள் சேர்வதற்காக மஹாமக யாத்ரா தேவதைகள் சேவை ஆற்றுகின்றனர். திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற போது, தெற்கு கோபுரத்தில் இருந்து திருமஞ்சன வீதி வழியாக, கற்பக விநாயகர் கோயிலைக் கடந்து செல்கையில், மலையில் ஒரு கோடியில் கும்ப வடிவில் காணப்படுகின்ற தரிசனமே அருணாசல மஹாமக தரிசனம் அல்லது கும்பகோண தரிசனம் எனப்படுவதாகும். இத்தரிசனத்தை மிகுந்த பக்தியுடன் பெற்று 10000 பேருக்கு அன்னதானம் செய்பவர்களுக்கு, மஹாமக சக்திகள் கணிசமாகக் கிட்டுவதற்காக இறைவன் அருள்புரிகின்றான். எனவே ஒவ்வொரு மாசி மகத்தன்றும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, பிறகு கும்பகோணம் சென்று, மஹாமகக் குளத்தில் நீராடுவதும் அல்லது மஹாமகக் குளத்தில் நீராடிய பின்னர் அருணாசல கிரிவலம் வருவதும் அபரிமிதமான பலன்களைத் தருவதாகும். சந்ததி விருத்திக்கு இது துணை புரியும். தொடர்ந்து 12 மாத மாசி நாட்களில், கும்பகோணம் மஹாமகத் திருக்குளத் தீர்த்தத்தில் நீராடி வருவோருக்கு இது மிகச் சிறந்த பிரார்த்தனையாக, நேர்த்தியாக அமைந்து, வாழ்க்கையில் பெருந் தடங்கல்களாக உள்ள இன்னல்கள் தீர்வதற்கும் துணை புரியும்.

“இனி, என் வாழ்வில் எவ்விதப் பாவத்தையும், அறிந்தும், அறியாமலும் செய்ய மாட்டேன்!” எனும் சங்கல்பம் கொண்டு நீராடி விட்டு, மீண்டும் அதே பாவச் செயலைத் தொடர்ந்தால், பெரும் தண்டனையாக, இரட்டிப்பு முறையில் பாவ விளைவுகள் பெருகுமே! நம் சங்கல்பத்தை நம்பி, நம் பாவங்களைக் களையத் துணை புரிந்த நதி தேவதைகளின் சாபமும் கூடுதலாக வந்து சேரும்! பல்லாயிரக்கணக்கான நதி தேவதைகள், மாதந்தோறும் மக நட்சத்திர நாளில் நீராடுகின்ற கும்பகோணம் மஹாமகத் தீர்த்தத்தில், நாமும் நீராடுதல் மகத்தான பலன்களைப் பெற்றுத் தருவதோடு, நதி, தீர்த்த தேவதைகளின் மேற்கண்ட வகையான சாபங்களிலிருந்து மீட்பும் தரும்!

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திர மகிமை

உத்திராடம் நட்சத்திரம் சுபமுகூர்த்த நட்சத்திரங்களுள் ஒன்றாகப் பொலிகின்றது. சந்திர கிரகப் பாதையில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானவைகளுள் 27ம், மனித உலகின் ஜாதக அம்சங்களைக் கொண்டிருப்பதாக அமைந்துள்ளன. “மூன்றின் மும்மடங்கே முப்பெரும் முக்தி” என்பது சித்தர்கள் அளிக்கும் முக்திக்கான பரிபாஷை விளக்கத்தில் எண்ணற்ற, அர்த்தங்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் பொதிந்துள்ளன.

முக்தியில் உள்ள மூன்று உத்தம நிலைகளை அடைய மூன்றின் மும்மடங்கான (3 x 3 x 3) 27 நட்சத்திரங்களில் பிறப்பு அடையும் தன்மை கொண்ட மானுடப் பிறப்பு பெருந்துணை ஆகின்றது என்பதும் இதன் ஒரு பொருளாகும். இது மனிதப் பிறப்பின் விசேஷங்களைப் போற்றிப் பகர்வதாகும். அ, உ, ம ஆகிய மூன்று மூலாதார பீஜாட்சரங்களைக் கொண்ட ஓம் எனும் மாமந்திரம் முக்தி நிலையை அடைய உதவும். இறைப் பணிகளை ஒருவர் மும்மடங்காய் ஆக்கி வாழ்ந்தாலே போதும் மூன்றே பிறவிகளில் முக்தியை அடையலாம் என்பது மற்றொரு பொருள்.

உத்தம், திரம், ஆடதனம் ஆகிய மூன்று முக்தி நிலைகளை உணர்விப்பதே உத்திராடம் ஆயிற்று. மேலும் உத்திரம் என்பது வடக்குத் திசையில் கிட்டும் அற்புதமான புண்ய நிலையும் ஆகும். இதனால் தாம் உத்திராயணப் புண்யகாலத்தில் வாழ்வு முடிவது சிறப்பை அடைவதாக ஆக்கும் யோகப் புல உத்தம நிலைகளும் உண்டு.

மேலும் உத்திர ஆடன நிலை என்பது உத்தம நிலைகளில், உத்திரம் போன்ற சாசுவதமாக நிலைப்பதைக் குறிக்கின்றது. இதனாலேயே உத்திரம் என்ற பெயரைக் கொள்வதும் நடைமுறையில் இருக்கின்றது. உத்திராடம் என்பது மனித வாழ்வின் முக்கியமான நிலைகளைக் குறிக்கின்றது. ‘உ’ என்று சொல்லும் போது வாய் திறக்கும். இது பிறப்பு அம்சத்தைக் குறிக்கின்றது. த், தி, ரா, ட ஆகிய நான்கையும் உச்சரிக்கையில் நாக்கு வளைகின்றது. காலத்தோடு வாழ்ந்து வளைவதையே இது குறிக்கின்றது. ஆடதனம் என்றால் நன்னெறிகளையே, நற்சக்திகளையே அளிப்பது, எப்போதும் நன்னெறிகளையே நிரவுவது எனப் பொருளாகும். நாக்கு என்பது இதில் ஜீவ சக்தி ஆகும்.

ஸ்ரீபோடா சுவாமிகள்

‘உ’ எழுத்தை ஓதி வாயைத் திறக்கும் போதும், ‘ம்’ என முடியும் போதும் வாய் மூடி, வாழ்க்கையின் தோற்ற முடிவைக் குறிக்கின்றது. பண்டைய காலத்தில், இதற்காகவே சித்தர்களைத் தூல உருவில் தரிசித்து ஆசி பெற்றிட உத்திராட நாளை மிகவும் ஏற்றதாக வைத்துள்ளனர். உத்திராட நட்சத்திர நாளில், போடா சுவாமிகள், காஞ்சிபுரம் பரமாச்சாரியார், சதாசிவ பிரம்மேந்திரர், குழந்தையானந்த சுவாமி, சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி போன்ற சித்தர்களின், மகான்களின் ஜீவ சமாதியைத் தரிசத்தலால் ஜீவ சக்திக்கு ஆக்கம் கிடைக்கும். வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடலாமா என மன சஞ்சலம் அடைவோர், மன ஆக்கம் பெற்று நன்னிலையை அடைய, உத்திராட நட்சத்திரத்தில் ஜீவ சமாதி தரிசனம் பெறுதல் மிகவும் விசேஷமானது.

பஞ்சபாண்டவர்களும் புராண இறுதியில் வடவாக்கம் என்ற முறையில் ஊன், உணவு, உறக்கம் இன்றி வடக்கு நோக்கி யோகநடை கொண்டு முக்தி நிலைகளை அடைந்தனர். திருமணம் போன்ற பல்வகை சுபமுகூர்த்தங்களுக்கும் உத்திராடம் மிகவும் விசேஷமானதாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் உத்திராட நட்சத்திரம் தோறும் வடக்கு நோக்கி அமர்ந்து ஹோம பூஜைகளை நிகழ்த்துவர்.

அடக்கின் மிடக்கும் ஒழுக்கம்
வடக்கில் மடக்கித் தொடக்கம்
அடக்கம் நடக்கும் குடக்கில்

– என்பது வடதிசை யோகம் பற்றிச் சித்தர்களின் பரிபாஷை, அதாவது தர்பைப் பாயில் வடக்கு நோக்கி, (கால்களை மடக்கி) பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சை அடக்கி, யோகம் தொடங்கிட, மன உடலில் நடக்கலாகி, குடகமாகிய கும்ப வயிறு தாங்கிய உடலில் பஞ்ச வாயுக்களும் அடங்கி, ஒடுக்கமாகிய யோகத்தில் மிதக்கும் (மிடக்கும்) என்பதான திருமூல சக்திகளை அளிப்பதே இதுவாம். கோயிலில் கொடி மரத்தை நோக்கியவாறு, அதன் வடிவை மனதினுள் கொணர்ந்து யோகம் பயின்று வருதல் சிறப்புடையது. இத்துதியை மனதினுள் ஓதி வர, மனஓடையில் இந்த மன ஒடுக்கச் சூத்திரத் துதி ஓடிக் கொண்டிருக்க, யோகத்தில் ஒடுங்கும் உத்தம நிலையைப் பெறலாம்.

ஏப்ரல் 2004 பௌர்ணமி நாள் : 4.4.2004 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.42மணி முதல் 5.4.2004 திங்கட்கிழமை மாலை 4.33மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 4.4.2004 ஞாயிற்றுக் கிழமை இரவு

17.4.2004 சனிக்கிழமை மாலை 5.11மணி முதல் 18.4.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.42 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சித்திரை மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 17.4.2004 சனிக்கிழமை இரவு

அமுத தாரைகள்

அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, கும்பகோணம் – வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசந்திரசேகரர் ஆலயத்தில் சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து பெறுதலால், இல்லத்திலும் சமுதாயத்திலும் சாந்தம் உண்டாகும்.

தாமரைத் தண்டுத் திரி, பஞ்சதீப எண்ணெய், அந்தந்த கிழமைக்கு, திதிக்கு உரித்தான விளக்கு ஏற்றுவதற்கான எண்ணெய் வகைகள், அவரவர் நட்சத்திரத்திற்கு உரித்தான மூலிகைக் கூட்டு எண்ணெய் வகைகளைக் கொண்டு விளக்கு பூஜைகளைக் கடைபிடித்து பணப் பிரச்னைகள், மனக் குழப்பங்கள், குடும்பத்தில் பிள்ளை, கணவருடன் உள்ள பிணக்கு போன்றவற்றிற்குத் தீர்வையும் பெற்றிடுங்கள். மேற்கண்ட மூலிகை எண்ணெய் வகைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலங்களில் கிடைக்கும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
சந்திரசேகரபுரம்

சித்தர்கள் காட்டுகின்ற புனிதமான முறையில் சபரிமலை விரதம் பூணும் அரிய விரத முறைகளை பம்பை நதிக் கரைத் தர்ப்பண விளக்கங்களுடன் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் தம் குரு அருளால் மொழிந்துள்ள “வா வா ஐயா ஐயப்பா” என்ற தெய்வீக நூலில் கண்டு கடைப்பிடித்திடுக!

மாதாந்திர மக நட்சத்திர நீராடல்

தீர்த்த தேவதைகள் வழிபடுகின்ற தினங்களே, பஞ்சாங்கத்தில் பலவிதமான தீர்த்த வாரிப் பண்டிகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறாக, பஞ்சாங்கத்தில், ஒவ்வொரு தினமும் வருகின்ற பண்டிகைக் குறிப்புகள் பலவும், ஜல தேவதைகள், பூமி தேவதைகள், ஆகாய தேவதைகள், நீர் தேவதைகளுடைய வழிபாடு அல்லது பூஜை அம்சங்களையே நமக்குத் தருகின்றன. இவை அனைத்தையும் பெற்று வந்து, மஹாமகத் திருக்குளத்தில் சேர்க்கும் போது, அனைத்து தேவதா மூர்த்திகளையும் அவர்கள் பிரார்த்தனை செய்வதால், வானுலகிலே அனைத்து தெய்வ மூர்த்திகளும் ஒரு சேர நின்று அவர்களை ஆசீர்வதிக்கின்றார்கள். இத்திருக்காட்சியை குருவருள் பூண்டவர்கள் நிச்சயமாக, மாதாந்திர மக நட்சத்திர நாளிலும் நன்கு உணர்ந்திடலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் மக நட்சத்திர நாளிலும், பௌர்ணமித் திதியிலும் கும்பகோணம் மஹாமகத் திருக்குளத்தை திருஅண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போல் 16 முறை தீர்த்த வலம் வந்து அளப்பரிய பலாபலன்களைப் பெறுவீர்களாக! பிரபஞ்சத்தில் உள்ள பல கோடித் தீர்த்தங்களை வலம் வந்த பலாபலன்களைப் பெற இந்த மஹாமகத் தெப்பக் குளத் தீர்த்த வலம் துணை புரியும்.

ஜாதகத்தைப் பலரும் சோம்பேறித்தனம் காரணமாக ஜெராக்ஸ் காபி எடுத்து அனுப்புகின்றனர். எதற்குக் கறுப்பு மை பயனாக வேண்டும், எதற்கு சிகப்பு மை உபயோகப்படுத்த வேண்டும் என்ற நியதிகள் உண்டு., தயவு செய்து கறுப்பு மையால் ஜாதகத்தை எழுதாதீர்கள். சிகப்பு மையையும் தவிர்க்கவும். ஒவ்வொரு முறையும் ஜாதகத்தை எழுதும்போது சலித்துக் கொள்ளாமல் கிரகங்களின் நாமங்களை எழுதும் புனிதமான வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்ந்து எழுதிடில் கோள்கள் துணை புரியும். கம்ப்யூட்டர் பிரிண்ட் என்றால் சற்றுச் செலவானாலும், நீல, பச்சை வண்ணங்களில் எடுத்திடுங்கள். கறுப்பு மைதான் பிரிண்ட் வரும் என்றால் காகிதத்தின் மேலும் கீழும் நீல மையால் ஸ்ரீபத்ரிகாபரமேஸ்வரர் துணை என எழுதிடுக! அவரவருடைய தசா, புக்தி, அந்தர அம்சங்களைத் தெரிந்து கொண்டு அந்தந்த நட்சத்திர மரங்களைத் தினமும் வணங்கி வர வேண்டும். பொதுவாக தினமும் மா, பலா, வாழை, துளசி, வன்னி, அரசு, ஆலமரம், புரசு ஆகிய ஒன்பது விருட்சங்களைத் தரிசிப்பதும் தரிசித்த பின் ஜாதகம் எழுதுவது விசேஷமானது.

ஸ்ரீஅஞ்சனாட்சி பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை

தாயைப் போல் கோமாதாவும் தாயின் ஸ்தானத்தைப் பெறுகின்றாள். அம்பா எனப்படும் அடுத்த தாய் ஆபத்து வேளையில் எங்கிருந்தாலும் காக்கின்ற தாய் ஆவாள். இதனையே அம்பாள் என்று போற்றுகின்றோம். இரண்டு அம்பிகைகள் உள்ள சன்னதிகளில் அனுஷ நட்சத்திர நாளில், ஒரே வண்ண வஸ்திரம் சார்த்தி, கொலுசு இட்டு அம்பா, அம்பா அம்பா சரணம் என்று ஓதி வழிபட்டு வர புகுந்த வீட்டில் தன் பெண் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற தாய்க்கு நல்ல மனநிம்மதி கிட்டும்படி நல்வழிகள் பிறக்கும்.

சுயம்பு லிங்கம் தவிரவும் தேவாதி தேவ மூர்த்திகளால் மற்றும் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் தவிர க்ஷணிக லிங்கம் எனப்படும் 12 வகை லிங்கங்கள் உண்டு. மாவு, பூமி மண், அரிசி, ருத்ராட்சம், தர்பை, புஷ்பம், வெல்லம், சந்தனம், வெண்ணெய், கோமியம், புனித நதி மண், விபூதி இவற்றால் செய்யப்படும் லிங்க மூர்த்திகளும் உண்டு. இவையாவும் பிடித்த பன்னிரு லிங்கம் எனப்படும். இவை நல் விருப்பங்களை நிறைவேற்றக் கூடியவை. 108 அஷ்டசத லிங்கம் (ஊர்மிளா லிங்கம்) பாபநாசத்தில் 108 லிங்கம் – ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்தது, சகஸ்ர லிங்கம், சிக்கல் நவநீத வெண்ணெய் லிங்கம் போன்றவை இவற்றில் அடக்கமாகும். திருவாதிரை நட்சத்திர தினத்தில், இந்த 12 க்ஷணிக லிங்கங்களையும் இன்று நேரில் செய்து பூஜித்து வந்தால் – பெரிய தவறுகளைச் செய்து இறந்தவர்கள் மேலுலகில் வாடுகின்ற தன்மை தணிய உதவும். மேலும் திருவாதிரை தோறும் 12 விதமான உணவுப் பொருட்களை அன்னதானம் செய்து வரவேண்டும்.

ஸ்ரீநவநீத பெருமான்
சிக்கல்

ஆர அட்டிகை, கண்டிகை ஆபரணம், ஆலாலவிடம், ஸ்படிக மணி, நாகம், முத்துச் சரம், அர்க்கரம் ஆகிய எட்டையும் கண்டமாகிய கழுத்தில் அணிந்த சிவபெருமானே கண்டீஸ்வரர் ஆவார். ஆலகாலவிடம் சிவபெருமானுடைய கழுத்தைத் தாண்டிச் செல்லாமல் தன் வளையல் கரங்களால் கண்டத்தைப் பற்றியதோடு, அமிர்தத்தைப் படைக்க மறந்த தேவர்கள் மீண்டும் அமிர்தத்தைக் கொணர்ந்த போது சங்கில் ஊற்றி அளித்த அம்பிகை அவதாரமே கண்டவளை தேவி ஆவாள். இக்கோலத்தில் இறைவன் எழுந்தருளியுள்ள லிங்க வடிவத் தலமே காரைக்குடி, தேவகோட்டை அருகில் உள்ள மானகிரி சிவத்தலம் ஆகும். இங்கு சங்கு வடிவில் குளம் உள்ளது. தற்போது நீர் இல்லாவிடினும் வழிபாடுகள் முறையாக நடக்காவிடினும் இங்கு பிரதோஷ பூஜைகளை ஏற்று நன்கு நடத்தி வர, பல திசைகளில் இருந்தும் அதிகமான கஷ்டங்களால் பாதிக்கப்பட்டு மீண்டு வெளி வர இயலாது தத்தளிப்போர் நன்னிலை பெற உதவும் வழிபாட்டுத் தலம். நன்கு விசாரித்துச் சென்று வழிபட்டுப் பயன் அடையவும்.

அடிக்கடி கை, கால்களில் அடிபடுவது குறிப்பாக சர்க்கரை வியாதியினர் அடிபடுவது என்பது பல குடும்பங்களை வாட்டுகின்றது. பொதுவாக குடும்பத்தில் எவரேனும் பெரியோர்களை, சான்றோர்களை அவதூறாகப் பேசுவதால் வாக்கு தோஷங்கள் ஏற்பட்டுச் சில நாளங்களை பாதித்து அடிக்கடி அடிபடும். இதனைத் தவிர்க்க ஆலயங்களில் நன்கு சப்தமாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்யப் பிரபந்தம் மற்றும் தேவமொழி, தமிழ் மறை ஓதுதற்குச் சத்சங்கமாக ஏற்பாடு செய்து குறைந்தது மூன்று மணி நேரம் பாராயணம் செய்தல் வேண்டும்.

ஸ்ரீராமநாத சுவாமி
பாபநாசம்

கூந்தலூரில் ஸ்ரீமுருகன் சன்னிதி முன் ஸ்ரீசனீஸ்வரர் எழுந்தருள்வது மிகவும் விசேஷமானது. நாடகம் மற்றும் சினிமாத் துறையினர் wigsகளை மாட்டிக் கொண்டு, பலவிதமான கூந்தல் தோஷங்களுக்கு ஆளாகி, சொல்ல முடியாத வேதனைகளுக்கும், நோய்களுக்கும் ஆட்படுவதும் உண்டு. அவர்கள் இத்தலத்தில் நல்ல இறைப் பணிகளை ஆற்றித் தக்க நிவாரணம் பெற்றிட வேண்டும்.

கும்பகோணத்தில் மகாமகத் தெப்பக்குளத்தில் மாதந்தோறும் மக நட்சத்திர நாளிலும், பௌர்ணமியிலும் தீர்த்த வலம் வருவீர்களாக! கரூர் அருகே தேவர்மலை (ஆந்திராவில் உள்ள) ராமகிரி, தக்கோலம் போன்ற நந்திவாய்த் தீர்த்தங்கள் பலவற்றிலும் ஜீவ ஊற்றுத் தீர்த்தப் பொழிவு தற்போது மறைந்து வரினும், இவற்றை நன்கு ஆக்கப்படுத்திட, தக்க சற்குருவை ஆன்மீகப் பெரியோர்களை நாடி, அவர்கள் அருளும் இறைவழி முறைகளில்,

மாதந்தோறும் மக நட்சத்திர நாளிலும்,
வருடாந்திர மாசி மக நட்சத்திர நாளிலும்,
கும்பகோணத்தில் மஹாமகத் தீர்த்தத்தில்
புனித நீராடல்,
16 வகை ஷோடச லிங்க பூஜை
ஒனபது நதித் தீர்த்த தேவதா பூஜை
தீர்த்தக் குளத்தை மக நட்சத்திர நாட்களில் 16 முறை அண்ணாமலை கிரிவலம் போல் தீர்த்தவலம் வருதல்
அன்னதானம் – ஆகியவற்றைப் பலரும் ஒன்று சேர்ந்து, சத்சங்கப் பூர்வமாக நிகழ்த்தி வருதல் வேண்டும்.

தொடரும் ஆனந்தம் ...

பல மாமியார்கள் புதிதாக தங்கள் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அரிசியில் வேண்டுமென்றே பொடி பொடி கற்களைக் கலந்து அந்த அரிசியை கல் நீக்கி சுத்தம் செய்து தரும்படி கூறுவார்களாம். இது எந்த அளவிற்கு தற்போது நடைமுறையில் பயன்படும் என்றாலும் இதைப் போல் ஆயிரம் மடங்கு தெய்வீக சக்திகளையும், குருவருளையும் பெற்றுத் தருவதே நம் சற்குரு தம் அடியார்களை தங்கள் மூளையை ஏதாவது ஒரு தெய்வீக விஷயத்தில் ‘கசக்கிக் கொண்டே’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகும். பிலவ என்ற மூன்றெழுத்து வருடமும் 2022 என்ற மூன்று இரண்டுகளைக் கொண்ட வருடமும் இதற்கு உறுதுணையாக அமைகின்றது. இதன் தொடர்பாகவே ஒவ்வொரு நாளும் அமையும், நம் சற்குரு இப்பூலோகத்தில் மனிதனாகத் தோன்றிய புதன் கிழமை காலை 10.30 மணி என்ற புனிதமான நேரத்தில் சாஸ்வதமான எந்த நற்காரியத்தையும் இயற்றி பயன்பெறும்படி நம் அடியார்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதில் மறைந்திருக்கும் சில ‘கணக்கு’ அம்சங்களை இங்கு குறிப்பிடுகிறோம்.
      3 x 1 = 3 ஒரு குரு, பிரஹஸ்பதி அம்சம்
      3 x 2 = 6 கந்தர்வ அம்சம், சுக்ர பகவானுக்கு உரியது, இரு குரு அம்சம்
      3 x 3 = 9 மங்கள அம்சம், செவ்வாய் பகவானுக்கு உரியது, மூன்று குரு அம்சம்
இதுவே குரு மங்கள கந்தர்வா என்ற அம்சமாக, சற்குருவாக நம் பூமியில் தோன்றினார் என்பதே நம்மை மெய்மறக்கச் செய்யும் தெய்வீகம். சற்குருவின் புனித ஜனன நேரமான 10.30 என்பது 1 + 5 = 6 என்றபடி சுக்கிரனுக்கு உரியதாக அமையும். இந்த குரு மங்கள கந்தர்வ அம்சங்களும் சுக்ர அம்சமாக இவ்வருடத்திற்கு உரியதாக (1 + 2 + 3 = 6 = 2022) அமைவதும் ஒரு அமிர்த சுவைதானே. மேலும் இது செவ்வாய் பகவானுக்கு உரித்தான ஒன்பது என்ற எண் சக்திகளைக் கொண்ட ஹோரை நேரமாக அமையும். இது ஜனன நாளான புதன் கிழமைக்கு நட்பாக அமைவது. இந்த அனைத்தையும் இணைத்தால் நாம் பெறுவதே பூஜ்யஹரம் என்ற முகூர்த்த நேரமாகும். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை விடியற்காலையிலும் சூரிய உதயத்தை ஒட்டி அமைவது இந்த அற்புத பூஜ்யஹரம் என்ற முகூர்த்தம் என்றாலும் ஒவ்வொரு நாளுமே காலை 10.30 மணி நேரத்திலும் பூஜ்யஹர முகூர்த்தம் இந்த பிலவ ஆண்டிலும், 2022 ஆங்கில ஆண்டிலும் இணையும் என்பதே நம் சற்குரு நமக்காக நமக்காக பரிந்தளிக்கும் குருவருளாகும்.

      3 x 4 = 12 = 1+2 = 3
     3 x 7 = 21 = 2+1 = 3

ஸ்ரீபூஜ்யஹர மூர்த்தி
மேலப்பரங்கிரி

இதில் 4 என்பது ராகுவிற்கு உரியது, 7 என்பது கேதுவிற்கு உரியது. ராகுவிற்கும் கேதுவிற்கும் இடையே காலசர்ப்ப யோகத்தில் தடுமாறும் ஜீவன்களைக் கடைத்தேற உதவுவது குருவின் அரவணைக்கும் உதவிக் கரங்கள் என்பதை உணர்த்துவதும் இந்தக் கணக்கே. அது சரி, சாதாரண மனம் இந்தக் கணக்கு விஷய நுணுக்கங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று நீங்கள் நினைப்பது சரியே. மூன்றின் மடங்காக இளநீர்களை எவ்விடத்திலும் எந்நேரத்திலும் நம் சற்குருவின் தியானத்துடன் பக்தர்களுக்கு, அடியார்களுக்கு தானமாக அளிப்பதால் இந்த பூஜ்யஹரம் என்ற சக்திகளை, குரு மங்கள கந்தர்வ சக்திகளைப் பெறலாம் என்று வழிகாட்டுவதும் நம் சற்குருவின் முக்கண் சக்தியே, அல்லது சக்திகளாகும்.

நம் ஆஸ்ரமத்தில் நம் சற்குரு இவ்வாறு பூஜ்யஹர சக்திகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது அதைக் கேட்ட யாருக்குமே புரியவில்லை என்பதை அவர்கள் முகபாவமே காட்டியது. இதை அறியாதவரா நம் சற்குரு ? புதிதாக திருமணமாகி தம் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை நோக்கி, “என்னம்மா நீ என்ன நினைக்கிறாய் ?” என்று ஒன்றுமறியாதவர் போல் கேட்டார். அந்தப் பெண்மணி ஒன்றும் கூறவில்லை, ஒன்றும் கூற முடியவில்லை என்பதே உண்மை. சற்று நேர அமைதிக்குப் பின் நம் சற்குரு தொடர்ந்து, “அது ஒண்ணுமில்லை அம்மா, உனக்கும் உன் ஆத்துக்காரருக்கும் பலத்த சண்டை என்று வைத்துக் கொள் ... அதை எப்படி தீர்ப்பது ? நீ அவருக்கு விட்டுக் கொடுத்தாலோ, அவருக்காக நீ விட்டுக் கொடுத்தாலோ பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா ? இதுதான் பூஜ்யஹரம் ...”, என்றாரே பார்க்கலாம்.

“நீ அவருக்கு” = 6 = பூஜ்யஹரம் ?!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam