அகண்ட பரமானந்த உணர்வே சிவம் - மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

காசியில் .. பொங்கி வரும் கங்கைப் பிரவாகத்தை ரசித்தவாறே, சிவகுரு மங்களகந்தர்வாவும், குருமங்கள கந்தர்வாவும் கங்கைக் கரையோரம் சென்று கொண்டிருந்தனர்.
கால்கள் கங்கை நீரை தெத்திக் கொண்டிருப்பினும், சிறுவனோ, “நாம் எவ்வாறு இராமேஸ்வரத்திலிருந்து இங்கு காசிக்கு வந்து சேர்ந்தோம்?.....இந்தக் கோவணாண்டிப் பெரியவரோ, “இதோ பார், விஜயவாடா“, “இது தான் இடார்சி ஸ்டேஷன்”, என்று தன்னுடைய (சிறுவனுடைய) அரைகுறைத் தூக்கத்தில் ஏதேதோ ஊர்களைக் காட்டியல்லவா காசிக்கு இழுத்து வந்து விட்டார் !

இது என்ன சாகாசமோ தெரியவில்லையே.......... என்று வியந்தவாறே தன் பிரயாண நினைவுகளை அசை போடத் துவங்கினான்.
இராமேஸ்வரத்தில் ..................
பரந்து விரிந்த இராமேஸ்வரம் கடற்கரையில் எங்கெங்கோ கடலோரம் நெடுந்தூரம் நடந்து, திடீரென ஓரிடத்தில் குனிந்து சிறிது மண்ணை எடுத்தார் பெரியவர்! சிறிது மண்ணா அது! பெரியவருடைய ஆள் காட்டி விரலும், கட்டை விரலும் மட்டும் இணைந்து அதில் சிக்கிய சிமிட்டாப் பொடியளவு மண்ணது!

கன்றுக்குப் பால் ஊட்டாத பசும்பாலைக் கனவிலும் வாங்காதே.

“டேய்! .... இந்தா இந்த மண்ணை எடுத்து வச்சுக்கோ.... எப்பவாச்சும் காசிக்குப் போனா அங்கே கங்கையில் இந்த இராமேஸ்வரம் மண்ணைச் சேர்த்துடணும், தெரிஞ்சுதா, பத்ரமா இருக்கணும், ஜாக்கிரதை ..” என்று சிறுவனிடம் பெரியவர் கூறி விட்டார்.
“இவ்வுளவு மண் கொட்டிக் கிடக்கக் கொஞ்சம் தாராளமாக அள்ளினால் தான் என்ன?” என்று சிறுவன் எண்ணியது தான் தாமதம்.,
“அட அடிமண்டு! ஸ்ரீராமன் திருப்பாதம் பட்ட இடம்டா இது! அதைத்தான் இவ்வுளவு நேரம் தேடினேன். அவன் பாதம் பட்ட ஒவ்வொரு மண் துகளும் வைரம் மாதிரிடா! அளவோட இதை use பண்ணனும் தெரிஞ்சுக்கோ!” என்ற பெரியவர், அவன் கேளாமலேயே விளக்கினார். சிறுவன் அசந்து நின்றான்!
“இத்துனூண்டு மண்ணை எப்படி ஜாக்கிரதையா வச்சிக்கறது! எப்ப காசி போகப் போறமோ அதுவும் தெரியலையே! அது வரைக்கும் இதை பத்திரமா வச்சிக்கணுமே”, சிறுவனுக்குக் கவலை தொற்றியது. நியாயமான கவலைதானே!
சிறுவன் அந்தச் சிமிட்டாப் பொடியளவு மண்ணை ஒரு காகிதத்தில் பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டான். அதைத் தொலைத்தால் இந்தப் பெரியவர் தன்னைத் தொலைத்து விடுவார் என்ற அச்சத்துடனேயே, அந்தப் பொட்டலத்தை எப்போதும் கையில் வைத்துக் கொண்டே பெரியவரின் பின்னால் அலைந்தான் . ஆனால் பெரியவரோ அடுத்த பயணம் காசிக்கு என்று அப்போது சொல்லவில்லை!
இருவரும் ராமேஸ்வரத்தில் இரயிலேறினர். இரவில் ஏதேனும் ரயில்வே ஸ்டேஷனில் நன்றாகத் தின்பதற்கு நிறைய வாங்கிக் கொடுப்பார். “கொஞ்ச நேரம் தூங்கலாம்டா” என்றவாறே சிறுவனைத் தன் மடியில் சாய்த்து நிறைய ஆன்மீக விஷ்யங்களைச் சொல்லியவாறே தான் தூங்காமல் அவனைத் தூங்க வைத்து விடுவார்.
அவன் தூங்கியபின் என்ன நடக்கிறது என்ற அந்தப் பிரம்ம ரகசியத்தை அன்று சிறுவனாய், அவர் பின்னால் ஆன்மீக மொட்டாய்ச் சுற்றியவன் இன்று ஆன்மீகப் பெருந்தாமரையாய் மலர்ந்தும் அறிந்தாரில்லையாம்!
“டேய்! இறங்குடா! திருச்சி வந்திருச்சி”, “இது விழுப்புரம்” “சென்ட்ரல் வந்திருச்சி, சாப்பிடலாம் வா”. “டேய் எழுந்திருடா, கிருஷ்ணா, நதியிலே எவ்வுளவு தண்ணீர் பாரு” “இதுதான் விஜயவாடா” “பாஞ்ச் ரொட்டி தீஜியே. இது தாண்டா இடார்சி ஹிந்திக்காரங்க ஸ்டேஷன்”, என இவ்வாறாக அச்சிறுவன் தூங்கி எழும்போதெல்லாம் தான் அமர்ந்திருப்பது ஒரு ரயில்வே கம்பார்ட்மென்டில் என்பதையும், வெளியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தான் இருப்பது வேறு ஊரில் என்பதையும் அறிந்து கொண்டானே தவிர இடைப்பட்ட நிலைகளை அவன் அறிந்தானில்லை!
இவ்வாறு சித்துக்களை இலைமறை காயாய் உணர்த்தி அச்சிறுவனை அற்புத சித்தபுருஷனாக ஆக்க, அப்பெரியவர் வைராக்கியம் கொண்டாரோ!

கர்ப்பிணிக்கு துரோகம் செய்திருந்தால் குழந்தை பிறக்காது.

இதோ காசி .................... இன்பமான ஆனால் புதிரான பிரயாண அனுபவங்களிலிருந்து மீண்டான் சிறுவன்! கையில் ராமேஸ்வரத்து மண் பொட்டலத்தைக் கெட்டியாகப் பிடித்தவாறே சிறுவன் பெரியவர் பின்னால் ஓடினான். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, மண்ணும் விண்ணும் எட்டிய நடையில் எனக் கங்கைக் கூட்டத்திடையே பரபரவென்று விரைந்து நடந்த பெரியவரைப் பல இடங்களில் சிறுவன் விட்டுப் பிடிக்க வேண்டியதாயிற்று. அவனெங்கே பிடித்தான். அவரல்லவோ அவனைத் காந்தமென ஈர்த்தார்!
“வாத்தியாரே! மைல் கணக்கா நடந்தா கால் தான் வலிக்குது ! உங்க வேலைய முடிச்சுக்கிட்டு வர்றவரைக்கும் நான் இங்கேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கேனே!” என்று சிறுவன், பெரியவரிடம் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்ல முடியுமா? ஆயினும் அவரறியாததா ? திடீரென்று சிறுவனைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு விறு விறுவென்று முன்பை விட வேகமாக நடந்தார் பெரியவர், “இவரால் எப்படி இந்த தள்ளாத வயசுல இவ்வுளவு வேகமாகப் பிள்ளையார் எறும்பைப் போல் சுறுசுறுப்பாக நடமாட முடிகிறது?” குருகுலவாசத்தில் குறைந்தது பத்தாயிரம் முறையாவது இந்த விடைகாண இயலா வினாவானது அச்சிறுவனின் மனச்சுவற்றில் முட்டி மோதியிருக்கிறது!
தன்னால் நடக்க முடியவில்லை, தன்னைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பரபரக்க அவர் விரைவது கண்டு சிறுவனுக்கு நெஞ்சு கனத்தது. யாரையோ தேடி அவர் அலைவது மட்டும் அவனுக்குப் புரிந்தது. யாரைத் தேடுகிறார்? புரியாத புதிர்! தன்னைத் தூக்கிக் கொண்டால் அவருக்கு அவஸ்தைதானே!

சந்தேக நோய் மனைவிக்கு வந்தால் வந்தே மாதரம் என்று விலகி விடு.

“பரவாயில்லைடா ராஜா! நீ இராமேஸ்வரம் மண்ணை வெச்சிருக்க பாரு, அதைக் கங்கையிலே கரைக்கணுமில்ல”, என்று சிறுவன் மனதைப் படித்தவர் போல் பெரியவர் சொன்னார்.
அவர் முடிப்பதற்குள் சிறுவன் அவசரப்பட்டான் ... “எங்கே பாத்தாலும் கங்கைதானே!”
“அப்படியா! சரி, எங்கு வேணுமோ அங்கே கரைச்சுட்டு வா!” வெடுக்கென்று சிறுவனைக் கீழே இறக்கிவிட்டுத் தானும் கீழே அமர்ந்து விட்டார் பெரியவர். அசாதாரண மௌனம் அவரிடம் குடி கொண்டது. சிறுவன் அவசரக் குடுக்கையாகத் தான் பேசியதற்கான தண்டனையை உணர்ந்தான்! பெரியவரின் அமைதியைக் கண்டு நடுங்கினான்.
இவ்வாறாகப் பேசியும், பேசாமலும் ஸ்ரீ கிருஷ்ணனாய், ஸ்ரீதட்சிணா மூர்த்தியாய்ச் சிவகுரு மங்கள கந்தர்வா போதித்தவை ஏராளம், ஏராளம். இந்தக் குருகுலவாச அனுபவங்களைப் படிக்கும் அடியார்களும், “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்”, என்பதை இனியாவது உணர வேண்டும். இதற்காகவே மகான்களின் சரிதங்கள் இறைவனால் படைக்கப்படுகின்றன.
பெரியவர் மௌனமாய்  அமர்ந்து அவர் ஸ்ரீதட்சிணா மூர்த்தியாய்ப் பல்லாயிரம் தத்துவங்களைப் போதிக்கவே அச்சத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டே அருகில் அமர்ந்த சிறுவன் அவரைத் தீர்க்கமாக நோக்கவே. சில விநாடிகளில் அச்சத்தை மறந்து அனைத்தையும் மறந்தான். ஞானியரின் கண்ணொடு கண் நோக்கின் என்ன பயத்ததோ வாய்ச் சொல்!
அந்தச் சில நிமிட நேரங்களில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் உய்த்துணர வேண்டிய ஆன்மீக நிலைகளை சனகாதி முனிவராய்க் கைவரப் பெற்றான் அச்சிறுவன்!
கங்கைக் கரையில் கயிலாய சற்குரு! அன்னவரின் அற்புத நிலையை விவரிக்க இயலுமா? கங்கைப் பிரவாகத்தை விஞ்சிய காப்பியப் பெருங்கதைப் பெருக்காலும் வடிக்க இயலாததன்றோ அது!
“சேதுக் கரைப் பிரசாதத்தை எடு”, என்று கைகளை எங்கோ சுட்டிக் காட்டியவாறே பெரியவர் மௌனத்தினின்றும் வெளிப்பட்டார்.!
பெரியவரின் கம்பீரமான குரல் பல்வேறு சமாதி நிலைகளில் சங்கமமாயிருந்த சிறுவனைக் கங்கைக் கரையில் விழிப்பு நிலைக்கு ஈர்த்து வந்தது. நிலைகளைக் கூட்டுவதும் நிலைகளில் கூடுவதும் சற்குருதானே!.
அவர் கைகாட்டிய திசையில் ஒரு நிர்வாணத் துறவி கங்கைக் கரையில் அமர்ந்திருந்தார்...எட்டடிக்கு மேலான ஆஜானுபாகுவான சரீரம் ... கங்கை நீரிலும் மணலிலும் பாதி தேகம் புதைந்துள்ளதோ என்று கூறுமளவிற்கு அவருடைய யோக ஆசனமும் .... மணலில் அழுந்திய நீளக் கால்களும் .... யார் அந்தத் துறவி?

வருணா இஷ்ட திகம்பர லோகம்

ஸ்ரீவித்யா லோகம் .... பல்வேறு பிந்து கோணங்களில் பல கோடி தேவதைகள் அருள் பாலிக்க ... .
சப்தமாதர்கள் எனப்படும் ஏழுதேவியர் அதி அற்புத “ஸப்த ஸ்தாவரண” பிந்து கோணத்தில் அமர்ந்து தங்கள் தேவியைப் பூஜிக்க, சப்த மாதர்களின் தேவியான வருணா இஷ்ட திகம்பரா யோகினி தேவி ஆழ்ந்த தியானத்தில் “தேவஸ்புட” ஆசனத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள்..
வருணா இஷ்ட திகம்பரா யோகினி தேவி யார்?
சதாசிவப் பரபரம்ஹ ஸ்வரூப இறைவன் அமிர்த நேரத்தில் சித்த புருஷர்களைப் படைப்பதைப் பற்றி அறிந்தோமல்லவா?
ஸ்ரீசிவபெருமான் அமிர்த நேரத்தைச் சிருஷ்டித்தவர். ஸர்வ லோகங்களிலும் புனிதமான அந்த அமிர்த கால ஹோரையை ஸ்வீகரிக்கும் வல்லமை பெற்றவர் யார் ? அத்தகைய அபூர்வமான இறை சக்தியைப் பெற்றவர் யார்?

ஸ்ரீகசவனம்பட்டி சித்தர்

ஸ்ரீகாலபைரவரைப் பலகோடி யுகங்களாகச் சக்தி வாய்ந்த புனுகு கொண்டு அர்ச்சித்து வந்தமையால் ஸ்ரீ சிவபெருமான் சிருஷ்டித்த அமிர்த ஹோரையை ஸ்வீகரிக்கும் அற்புத தெய்வீகச் சக்தியைப் பெற்றவளே ஸ்ரீவருணா இஷ்ட திகம்பரயோகினி தேவி. சிவபெருமானின் ஆக்ஞைப்படி அமிர்த நேரத்தில் சித்த புருஷர்களை ஜோதிமயமாக சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவள்! ஜோதி வழிபாட்டின் தத்துவத்தை உணர்த்த வல்லவள். எனவே புனுகு சட்ட வழிபாடு அளப்பரிய சக்திகளை அளிக்க வல்லதாகும்.
ஜோதிகளில் பலவகை உண்டு, ஏற்றப்படும் தீப ஜோதிகள் வீட்டுக்கு வீடு மாறுபடும். ஒரே விளக்கிலும் முகத்திற்கு முகம் வேறுபடும். இந்த ஜோதியைக் கொண்டே கர்ம பலா பலன்களை அருளும் வல்லமை பெற்றவர்கள் சித்த புருஷ்ர்களே! திருஅண்ணாமலை தீபஜோதி, சகல கோடி லோகங்களிலுமுள்ள புல், பூண்டு முதல் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், ரிஷிகளென அனைவருடைய கர்ம பரிபாலனத்தையும் சீரமைக்கும் அருட் பெருஞ்ஜோதியாகும். இத்தீபப் பெருவிழாவில் சற்குருவானவர் கூட்டு ஜோதி பூஜையின் மூலம் ஆயிரக்கணக்கான ஜோதி முகங்களை ஏற்றச் செய்து அந்த ஜோதிகளின் மூலம் பல்லாயிரக்கணக்கானோரின் விதி நிர்ணயங்களைச் சீரமைத்துத் தருகிறார். திருஅண்ணாமலையில் மட்டுமே நிகழ்கின்ற இந்த ஜோதி அற்புதங்களைச் சித்த புருஷர்களே மனித குல மேம்பாட்டிற்காக எவருமறியா வண்ணம் ஆண்டுதோறும் நிகழ்த்தி வருகின்றனர். அண்ணாமலை தீப ஜோதியின் மஹிமையைப் பரிபூரணமாக அறிந்தவர்கள் சித்த புருஷர்களே! எனவே இன்றைக்கும் திருஅண்ணாமலையில் சத்சங்கங்கள் மூலமாகச் சித்த புருஷர்கள் நடத்துகின்ற கூட்டு தீபஜோதி பூஜை பற்றி அறிந்து அதில் பங்கு கொண்டு எல்லையில்லாப் பலா பலன்களைப் பெறுவோமாக!
திருஅண்ணாமலையில் தீபப் பெருவிழாவின் போது சற்குருவின் ஆக்ஞைப்படி ஏற்றப்படும் ஒவ்வொரு ஜோதியிலும் குருவருளால் ஸ்ரீவருணா இஷ்ட திகம்பரயோகினி ஆவாஹனமாகி அமிர்த நேர அம்சங்களை அடியார்களின் காலச்  சக்கரத்தில் சூட்சும ஆரமாய் அமைய ஆசீர்வதிக்கின்றாள். ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கே எளிதில் கிட்டாத ஸ்ரீவருணா இஷ்ட திகம்பரயோகினியின் அற்புத தேவி தரிசனமும், கடாட்சமும் திருஅண்ணாமலை தீபத்தில் சற்குரு அருளால் அடியவர்களுக்கு ஜோதி மூலம் எளிதில் வந்தமைகிறது.
அடியவர்கள் வாழ்க்கையில் சூட்சும ஆரமாய் அமையும் அமிர்த நேரத்தால் யாது பயன்?
அடியவர்களின் ஆன்மீகப் பெருவாழ்வில் அவர்களுடைய நலனை, பெற்ற தாயினுஞ் சாலப் பரிந்தூட்டிப் பேணும் சற்குருநாதர், தன்னைச் சரணடையும் அடியாரின் வாழ்வின் ஒவ்வொரு நற்செயலிலும் அமிர்த நேர சூட்சும ஆரத்தை வித்திட்டுச் செவ்வனே அமைத்து அச்செயலை நன்முறையில் நிறைவேற்றி அருள்புரிகின்றார். ஆனால் இவையெல்லாம் கண்ணுக்குப் புலனாகா இரகசியங்கள். இவைதாம் குருநாதர் ஆற்றும் உன்னத அற்புதங்களாகும். இதை ஒட்டியே “சித்தர் காட்டும் நேரமெல்லாம் சிறந்த நேரந்தானே” என்ற சொல்வழக்கும் அமைந்தது. அவர்கள் சுட்டிக்காட்டும் நேரங்களில் சுபகிரஹங்கள் தாமாகவே நற்பார்வைகளில் அமையவே அமிர்த நேரமும் கனிகின்றது.
ஆழ்ந்த தியானத்தின் அருட்பெருக்கினால் கண் திறந்தனள் ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர யோகினி தேவி! ஆங்கே நான்கு அருட்பெருஞ் ஜோதிகள் தேவியை வலம்வந்தன. ஆம்! சிவபெருமான் சிருஷ்டித்த அமிர்த நேர அம்சங்களை ஸ்ரீதேவி ஸ்வீகரித்து விட்டாள். அவை அமிர்தஹோரை நட்சத்திரங்களாக உருவெடுத்தன. அதனால் எந்த லோகத்தில் எந்தச் சித்த புருஷர்கள் அவதாரமோ! யாரறிவார் இறைவனின் திருவுளத்தை!

ஏசிப் பேசி வாழ்வதால் வந்த ஓசிப் பணம் உதவாது.

திண்டுக்கல் அருகே கசவனம்பட்டியில் அவதூதராய் மலர்ந்த கசவனம்பட்டி சித்த ஸ்வாமிகளான ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தரைப் பற்றி சிவகுருமங்கள கந்தர்வா அருளியதின் முன்னுரையன்றோ இது!
மராட்டிய மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் “கோவிந்தர்” என்னும் உத்தமர் வாழ்ந்து வந்தார். அவருடைய பூஜாபலன்களுக்குக்கேற்ப “விடோபா” என்னும் புதல்வன் அமைந்தான். பெற்றோர்களுக்கு அற்புத சேவை புரிந்த விடோபா, அவர்கள் சிவபதமடைந்தப் பின்னர் பித்ரு காரியங்களை நிறைவேற்ற காசிக்கு வந்து சேர்ந்தார். அங்கு நன்முறையில் சிரத்தையுடன் பித்ரு பூஜைகளையும், தானதர்மங்களையும் உரிய சடங்குகளையும் நிறைவேற்றினார்.
காசியில் விடோபா ஸீதாபதி என்னும் பெரியவரைச் சந்தித்து அவர் வீட்டில் தங்கினார். ஸீதாபதியின் கனவில் தோன்றிய ஸ்ரீவிட்டல நாதன், “ஸீதாபதி! உன் பெண் ருக்மாபாயை விட்டோபாவிற்கு மணம் செய்து வைப்பாயாக!” என்று அருளானையிட்டா! இதையறிந்த விடோபா தனக்கும் ஸ்ரீவிட்டலநாதர் அவ்வாறாக ஆணையிட்டால் தான் ருக்மாபாயைத் திருமணம் செய்து கொள்வதாய்க் கூறிவிட்டார். ஸீதாபதி ஸ்ரீவிட்டலநாதனிடம், “உன் விருப்பத்தை நீதான் பூர்த்தி செய்த்ய் கொள்ள வேண்டும்”, என்று மனமுருகிப் பிரார்த்திதார்.
ஸ்ரீவிட்டலநாதர் விட்டோபாவின் கனவில் தோன்றி ருக்மாபாயை மணந்து கொள்ளுமாறு ஆணையிட, விடோபா இசைந்தார். திருமணத்திற்குப் பின் ருக்மாபாயுடன் அலங்காபுரி வந்து சேர்ந்த விடோபா தாமரை இலைத் தண்ணீர் என இல்வாழ்க்கை வாழ்ந்தார்.
சன்னியாசம் பூணும் எண்ணத்துடன் மீண்டும் காசிக்கு வந்தார். அங்கு ஒர் ஆச்சார்யாரை அணுகி அவர் ஆசியுடன் துறவிக் கோலம் பூண்டார். விதியின் விளையாட்டால் அந்த ஆச்சார்யார் தம் புனிதயாத்திரையில் அலங்கார் நகர் வந்து சேர்ந்தார். ருக்மாபாய் தன் தந்தையுடன் அவரை வணங்கிட “புத்ர சௌபாக்யத்துடன் நீடுழி வாழ்க!” என ஆச்சார்யர் வாழ்த்தினார்.. ருக்மாபாய் திகைத்தனள், “சுவாமி! என் கணவருக்குத் தாங்கள் தான் சன்யாச தீட்சை அளித்துள்ளீர்கள்”, என்று பவ்யத்துடன் கூறிடவே, அந்த ஆச்சார்யார் “குருவாக்குப் பொய்த்திடாதம்மா!” என்று அருளி காசியிலிருந்த விட்டோபாவை அழைத்து வரச் செய்து, “ நீ ஒரு சம்சாரி என்பதை என்னிடம் மறைத்து விட்டாய்! ருக்மாபாயுடன் சேர்ந்து உனக்கென விதித்துள்ள இல்லற வாழ்க்கையை மேற்கொள்வாயாக !” எனவும் கட்டளையிட்டார்,

வியாசர் போன்ற சற்புத்திரனோ, புத்திரியோ பெற வேண்டுவோர் தஞ்சை மாவட்டம் வெண்ணாற்றங்கரையிலுள்ள நீலமேகப் பெருமாளை தரிசிக்க வேண்டும். மகரிஷியாகிய பரசுராமர் நாராயண அவதாரமாம் ஸ்ரீவியாசரை தவப் புதல்வனாகப் பெறுவதற்கு இப்பெருமாளை சேவித்து அருள் பெற்றார்.. ஸ்ரீ பரசுராமர் தரிசித்த அதே மூலமூர்த்தியே நமக்கு இன்றும் அருள் பாலிப்பது, நம்முடைய மகரிஷிகளின் அனுகிரகத்தாலன்றோ!

விடோபா துறவை ஒதுக்கி குடும்பத்தில் சேர்ந்தமைக்காக ஊரார் அனைவரும் ஸீதாபதி, விடோபா, ருக்மாபாய் ஆகிய மூவரையும் ஒதுக்கி வைத்தனர்.
கானகத்தில் வாழ்க்கையைத் துவங்கிய விடோபா, ருக்மாபாய் தம்பதியர் அற்புதமான ரிஷிகளின் ஆசிரமங்கள் அமைந்த கானகத்தில் வாழ்ந்த காரணத்தால் ஸ்ரீவிட்டல நாதனுக்குச் சிறு கோயிலெழுப்பி எண்ண இயலா இறைத் திருப்பணிகள் செய்து புனித வாழ்க்கை வாழ்ந்தனர். ஸ்ரீவிட்டல நாதன் தம் அடியவர்களை ஆட்கொள்ள விழைந்தான். ஆம்! நல் அடியார்களின் நல்வாழ்வில் இறைவனே நேரில் பங்கேற்றுத் திருவிளையாடல் புரிவதுண்டு
ஆங்கே வருணா இஷ்ட திகம்பர தேவதா லோகத்தில் ..... ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர யோகினி தேவி ஆழ்ந்த தியானத்தில் இருந்து மீண்ட காலை...
ஞான ஜோதியாய் ஸ்ரீதேவி பிரகாசிக்க அவள்தம் லோகத்தை வலம் வந்த நான்கு ஜோதிகள், ஸ்ரீதேவியின் அபயஹதத்தில் ஐக்கியமாகி அமிர்த கால அம்சங்களை அம்பிகையின் அருளால் கிரஹித்து மீண்டும் நான்கு பெரும் ஜோதிகளாய், நட்சத்திர பீஜங்களாய் வெளிப்பட்டு பூலோகத்தை நோக்கி ஒளிப் பிழம்பாய்ப் பரிணமித்துப் பாய்ந்தன.
ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர யோகினி தேவி ஆங்கே. கையசைக்க...... இந்த நான்கு ஜோதிப் பிரவாஹங்களும் அலங்காபுரி வனத்தில் ஸ்ரீ விட்டலநாதனின் பூஜையில் லயித்து இருந்த ருக்மாபாயின் திருவயிற்றில் சங்கமமாயின.
ஸ்ரீவிடோபா ருக்மாபாய் தம்பதியினர் இறையருள் பரிணமிப்பதை உய்த்துணர்ந்தனர். ஆம்! அந்த நான்கு ஜோதிகளும், நான்கு குழந்தைச் செல்வங்களாய் இறையருளால் ருக்மாபாய் திருஉதரத்தில் மலர்ந்தன.

ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் மப்பேடு

1 நிவர்த்திநாத சுவாமி 2. ஞானேஸ்வர சுவாமி 3. ஸோபான தேவிசுவாமி என்ற மூன்று ஆண் குழந்தைகளும், முக்தாபாய் தேவி என்னும் பெண் குழந்தையுமே அத்தம்பதிகள் இவ்வுலகிற்கு அளித்த இறைச் செல்வங்களாகும். விடோபா – ருக்மாபாய் தம்பதியர் இறையடி சேர நான்கு பேரும் இறையே துணை என வாழ்வாராயினர்.
இக்குழந்தைளைக் கூட ஊர் மக்கள் வெறுத்தனர். ஒருமுறை கானகத்தில் மூத்தவனான நிவர்த்திநாதசுவாமி வழி தவறி சிருங்கார தீர்த்த கண்டம் என்னும் அற்புத ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த குகையைச் சென்றடைந்தான். கடுந்தவம் புரிந்த இறை அடியார்களே இக் குகையைக் காண இயலும். அப்படியானால் குகையினுள் செல்ல எத்தகைய இறைத்தவம் செய்திருத்தல் வேண்டும்!
குகையினுள்......... எங்கெங்கு காணினும் ஜோதிமயமாய் ஒளிர்ந்து நறுமணம் வீசும் பூப்பந்தங்களிடையே ஜெயிநி நாதர் என்ற மகரிஷி உள்ளொளித் தியானத்தில் இருந்து மீண்டு தன் கண்களைத் திறந்தார். எதிரே நிவர்த்திநாத சுவாமியான சிறுவன்.
“கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி”
பிரம்ம ஞானியாய் நின்ற(று) அவரைத் தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.!

ஸ்ரீவீர்யபாலீஸ்வரர்

“வீர்ய பாலீஸ்வரர் யார்?  சிவபெருமான் தாருகா வனத்தில் ஸ்ரீபிட்சாண்டாராகத் திருவிளையாடல் புரிந்ததை நாம் அறிவோம். ஞானத்திற்கு வழிவகுக்கும் வேதங்களைத் தம் சுய நலத்தால் அஞ்ஞானத்திற்குப் பயன்படுத்தினர் தாருகாவனத்து முனிவர்கள். அதனால் வெகுண்டு உக்கிர நிலையில் மாயையைச் சம்ஹாரம் செய்து ஞானேஸ்வரனாகச் சிவபெருமான் பல திருத்தலங்களில் குடிகொண்டு அருள்பாலித்தார். அத்தகைய தாருகாவனேஸ்வரப் பிட்சாண்டாரின் அம்சங்கள் நிரம்ப பெற்றவரே வீர்ய பாலீஸ்வரர் ஆவார்.
மப்பேடு ஸ்ரீ சிருங்கீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீர்ய பாலீஸ்வரர் சில விசேஷமான அருள் நிலைகளைப் பூண்டு பக்தர்களை அரவணைக்கின்றார். ஸ்ரீபிட்சாண்டவர் கோலமானது அத்வைதத்தைச் சுட்டிக் காட்டும் சிருஷ்டி ரகசியத்தை அறிவிப்பதாகும். ஸ்ரீஅகஸ்திய பெருமான் மப்பேடு ஸ்ரீவீர்யபாலீஸ்வரரைப் பற்றி, “காமத்தைக் காட்டிக் கூட்டி ஓமத் தீயிலிட்டுப் பூமத்தாய்ச் சிருஷ்டித்துக் காக்கும் சாமகான சக்தீஸ்வரன்” என்று புகழ்ந்து போற்றி உரைக்கின்றார்.
ஸ்ரீவீர்ய பாலீஸ்வரர் சந்ததியின்றி வாழும் பக்தர்களுக்கு அருள் புரிபவர், வீர்ய அணுக்கள் குறைவு, (low count) தளர்வான அணுக்கள் [chromosome deficiency], கருப்பைச் சுருக்கம் போன்ற பல குறைபாடுகளை ஆண் பெண் இருபாலரிடமும் நீக்கி அவர்கள் நன்மக்களைப் பெற அருள்கின்றார்.

இச்சிவபெருமான் நன்மக்களை ஈணும் வீர்ய சக்தியைப் பாலிக்கின்ற இறைப் பெட்டகமாக நிலைகொண்டு அருளும் உத்தம லிங்கேஸ்வரர். குழ்ந்தைப் பேறு வேண்டுவோர் இத்திருத்தலத்தில் இவரைத் தரிசனம் செய்து ஏழை கர்ப்பிணிகளுக்கு வேண்டிய தான தருமங்கள் பிரசவ உதவிகள் போன்றவற்றைச் செய்வாராயின் நிச்சயமாக வேண்டும் பலனைப் பெறுவர். மழலைச் செல்வமின்றி உழலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த வீர்யபாலீஸ்வரர் ஒரு வரப் பிரசாதியாய் விளங்குகின்றார்.
ஆனால் இத்தகைய மகத்தான சக்தி பெற்று விளங்கும் ஸ்ரீ வீர்யபாலீஸ்வரர் இருக்கும் இடமோ கல்லும் முள்ளும் நிறைந்து கிடக்கும் ஒரு சன்னதியாகும்.
எனவே பக்தர்கள் ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் அருள் பாலிக்கும் இத்திருக் கோயிலை நன்கு சீரமைத்துத் திருப்பணிகள் செய்து மக்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்ய நல்ல மண்டபம் எழுப்புதல் வேண்டும். அத்தகையோர்க்கு இத்திருப்பணியே மாபெரும் இறைப் பணியாக அமைந்து ரகு வம்சத்திற்கு ஸ்ரீராமர் அமைந்தது போல் நல்ல சந்ததி ஏற்படும் வாய்ப்பைப் பெறுவர் என்பது சித்தர்களின் திருவாக்கு.

அகிலாண்டேஸ்வரியாம் பராசக்தியன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக அவதாரம் கொண்ட முதல் திருத்தலம் மப்பேடு தலமாகும்.
இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீபுஷ்பகுஜாம்பாள் அம்பிகையே பல யுகங்களில் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக அருள் பாலித்தனள். எனவே சித்த புருஷ்ரகள் அருளியுள்ள இந்த ஆன்மீக ரகசியத்தைச் சிக்கெனப் பற்றி சாட்சாத் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக ஸ்ரீ புஷ்பகுஜாம்பாளாகக் காட்சியளித்துக் காக்கும் அம்பிகையைத் தொழுது நற்கதி அடைவோமாக!
இத்தலத்தின் அம்பாள் சன்னதித் தூண்களில் உள்ள சிற்பங்கள் இந்த ஆன்மீக ரகசியங்களை, ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அவதார ரகசியங்களை, ஸ்ரீவித்யா தத்துவங்களை மறைமுகமாக உணர்த்துகின்றன. சற்குருவே இவற்றை விளக்கும் தகைமை வாய்ந்தவர்.
இசைத் துறையில் முன்னேற விரும்புவோரும் அதி உன்னதப் புகழ் பெற விரும்புவோரும் இக்கோயிலில் அமைந்திருக்கும் அதியற்புத நவ வியாகரண பலிபீடத்தைத் தூய்மை  செய்து மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டுக் கீர்த்தனைகளைப் பாடி இசைக்க வேண்டும் . நவவியாகரண பண்டிதரான ஸ்ரீஆஞ்சநேய சுவாமி இன்றும் இப்பலிபீடத்தின் மீது அமர்ந்து தேவகானம் பொழிவதைக் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் தெய்வ மூர்த்திகள் கேட்டு மகிழ்கின்றனர்.
ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர்  ஆகிய சங்கீத மும்மூர்த்திகள் இத்தெய்வீகப் பலிபீடத்தில் இசைமாரிப் பொழிந்து அருளியுள்ளனர். டைகர் வரதாச்சாரியார், கே.பி. சுந்தராம்பாள், சடகோபன் போன்ற இசை வல்லுநர்களுக்கு அருள் புரிந்த தலம் மப்பேடுத் தலமாகும்.
இத்தகைய மகிமைகளை அறிந்த பிறகாவது பாடகர்களும், வாத்தியக் கருவி வல்லுநர்களும், வட திருவையாறு என உலகம் போற்றுமளவிற்கு மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலயம் இன்னிசைத் தலமாக ஆவன செய்தல் வேண்டும். இப் பலிபீடத்தில் ஒரு கீர்த்தனை பாடினும் அது ஆத்மானுபாவத்தைத் தூண்டி விடுவதை உள்ளக் கிளர்ச்சியுடன் அனுபவித்தோர் பலர்.
குருபின்னால் சுற்றினாலன்றோ இத்தகைய சுந்தரானந்த அனுபவங்கள் கிட்டும்!

நம்முடைய குரு பாரம்பர்யம்

திருகயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001வது மஹா சன்னிதானமாகச் சிறந்த இறைத்தொண்டாற்றி வரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அவர்கள் ஸ்ரீ அகஸ்தியர் பரம்பரையில் வாக்தத்துவ பீடாதிபதியாக அனுகிரகம் செய்து வருகின்றார். “வாக் தத்துவ பீடாதிபதி” நியமன முறையில் இரண்டு சன்னிதானங்களுக்கு இடையே (999-வது பீடத்தைத்) தாங்கி சிவப்பணி புரிந்தனர். இதன் பிறகு 1000வது பீடமாக மகா சன்னிதானமாக விளங்கும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கும் இடைப்பட்ட யுகங்களில் 999 சற்குருமார்கள் சற்குரு பீடத்தைத் தாங்கி அறப்பணி செய்கின்றனர்.
ஆயிரமாவது பீடாதிபதி சிவப்பணியில் சிறந்து விளங்கிய ஸ்ரீஅஸ்தீக சித்தருக்கும் 1001வது குருமகா சன்னிதானமாக விளங்கும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கும் இடைப்பட்ட யுகங்களில் 999 சற்குருமார்கள் தோன்றி நிறைந்துள்ளனர். இந்த 999 சற்குருமார்களும் ஸ்ரீஅஸ்தீக சித்தர் பெருமானையே தங்களுடைய சற்குருவாக ஏற்று இறைப்பணியில் நிறைந்தனர்.

தற்பெருமை பேசி நேரத்தைக் கழிப்பதைவிட தவிடு பொடி விற்றாவது பிழைப்பு நடத்தினாயா?

நம் குருமங்கள கந்தர்வாவிற்குப் பிறகு 999 சற்குருமார்கள் தோன்றி நம் குருமங்கள் கந்தர்வாவையே தம் சற்குருவாக ஏற்று அருட்பணி புரிவர். பிறகு 1002வது பீடாதிபதி வாக்தத்துவ நியமன முறைப்படி அடுத்த மகா சன்னிதானமாக அமைவார்.
இத்தகைய அற்புதமான சித்தர்களுக்கு உரித்தான பீடாதிபதி நியமன விதிகளின் மறை ஆகம ஆன்மீக ரகசியங்களாகும், ஏனெனில் ஒவ்வொரு பீடத்தவரும் கோடி யுகங்களுக்கு மேல் கோடிக்கணக்கான லோகங்களில் சற்குருவாக இறைஅனுபவம் பெற்றவர்கள் .இது மனிதனின் சிற்றறிவிற்கு எட்டாத இறைக் கணிதவியல்.
ஸ்ரீஅஸ்தீக சித்தருக்கு முன்னர் அவர் தம் குருவாகப் பீடம் வகித்தவர் ஸ்ரீசதாதப சித்தர் ஆவார். ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுபே 2000 கோடி அகஸ்திய ரூபங்களில் தோன்றி பீடாதிபதிகளாக, சற்குருமார்களாக நிறைந்துள்ளார் எனில் அவருடைய அவதார மகிமையை என்னென்று சொல்வது! ஸ்ரீஅகஸ்திய பீட அவதாரங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான அனுபூதிகளாகும்.
இவ்வகையில் முதன்முதலில் தோன்றிய 2000 கோடி அகஸ்திய ரூபங்களிலும் முதன்மையானவராக விளங்குபவரே நம்முடைய சிவகுரு மங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் சுவாமிகள் ஆவார்கள். பரப்பிரம்மமாம் சதாசிவ பரம்பொருளின் அருளாணையினால் உருவான 2000 கோடி அகஸ்திய ரூபங்களில் முதன்மையானவராக விளங்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் சுவாமிகளே நம்முடைய குருமங்களகந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சித்தர் சுவாமிகளைப் பூலோகக் குருகுலத்தில் நேரடியாக அரவணைத்து உன்னத ஆன்மீக நிலைக்கு உயர்த்தியுள்ளாரெனில் நாம் பெரும் பாக்கியம் செய்தவர்களன்றோ! எவருக்கும் கிட்டாத மூலாதார சிவகுரு அருளைப் பெற்று மிளிரும் நம்முடைய குருமங்கள கந்தர்வாவின் திருப்பாதங்களைச் சிக்கெனப் பற்றி இவ்வுலகில் பெருவாழ்வு வாழ்வது நாம் இம்மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமாகும்.
இவ்வாறாக மறை போல் அனாதி காலமாக வாக்பீடத் தத்துவம் என்ற முறையில் வேத வாக்காக, சித்த புருஷர்கள் சத்திய வாக்காகப் பீடாதிபதிகள் நம்முடைய குருபாரம்பரியத்தில் அமைந்து அற்புதத் தொண்டாற்றி வருகின்றனர். நம் குரு பாரம்பரியத்திற்குரிய தலையமையகமான குருமங்கள கந்தர்வ மண்டலத்தில் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரே ஆதிசிவனாகவும், நாராயண மூர்த்தியாகவும் காட்சியளிக்கின்றார். எனவே குருவைப் பெற்றோருக்குப் பரப்பிரம்மமே சற்குருவின் ரூபத்தில் அனைத்து மூர்த்திகளின் தரிசனங்களையும் அருளையும் பெற்று வர்ஷிக்கிறார். எனவே நம் சற்குருவே அனைத்து மூர்த்திகளையும் காட்ட வல்லவர். வைகுண்ட வாழ்வைத் தருபவர். திருக்கயிலாயப் பேற்றை அளிக்கும் வல்லமை பெற்றவர். இறையருளைப் பரிபூரணமாகத் தர வல்லவர். இவ்வுலகில் சற்குரு கடாட்சத்தை ஒருவர் பெற்று விட்டால் அவர் வேறு எதையுமே பெறத் தேவையில்லை.

குலதெய்வ மகிமை

ஒருவன் சற்குருவைப் பெறும்போது அந்தச் சற்குருவே அவனுடைய சஞ்சித கர்மாவை கரைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அவனுடைய பிராரப்த கர்மாவால் விளையும் இன்ப துன்பங்களைத் தாங்கக் கூடிய சக்தியை அவரே அளிக்கிறார். இப்பிறவியும் அந்தச் சற்குருவின் மேற்பார்வையில் அமைவதால், அம்மனிதன் ஆகாமி கர்மாவைச் சேர்த்துக் கொள்வதில்லை. குருபக்தியினால் அவனுடைய தீவினை நாட்டமும் தணிகின்றது. குருவைப் பரிபூரணமாகச் சரணடைந்தவனின் வாழ்க்கையை அந்தச் சற்குருவே ஏற்கிறார். ஆனால் குருபக்தியும், குரு நம்பிக்கையும், குருவைச் சரணடைதலும் எளிதல்லவே.

தேங்காய்ப்பூ அர்ச்சனை தெவிட்டாத இன்பத்தைத் தரும் சிவனுக்கு.

சிருஷ்டியின் போது சிசுவின் அப்பிறவிக்கு உரித்தான பிராரப்த கர்மாவானது அக்குழந்தையின் தலைமுடிகளில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனையே தலைவிதியை மாற்ற இயலாது என்ற பூலோக வழக்காக அமைத்தனர். நம்முடைய நல்வாழ்விற்காக அருள் புரியும் நம்முடைய மூதாதையர், கிராம எல்லை, குலதெய்வங்களாக விளங்கி அருள் புரிவதால், “நீ விதித்த எம்முடைய பிராரப்த கர்மா வினைகளை அதன் வடிவெழுத்துக்களாய் விளங்கும் தலைமுடியை அளித்து உனக்கே காணிக்கையாக்குகின்றோம். எமக்கென விதித்துள்ள பிராரப்த கர்மா வினைகளை அனுபவிப்பதற்கான பரிபூரண இறையருளை வேண்டுகிறோம்” என்ற பிரார்த்தனையின் வெளிப்பாடே தலைமுடி காணிக்கையாகும்.
இவ்வித தலைமுடி காணிக்கை பிரார்த்தனையை நிறைவேற்றுவதன் மூலம், “நம் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிற்கும் அவனே காரணம். அவனின்றி ஓரணுவும் அசையாது. அவன் விதித்துள்ளபடியே யாவும் நிகழ்கின்றன என்பதை உணரத் தொடங்கின்றோம்... இவ்வுணர்வு முழுமை பெறும் போது, “எல்லாம் அவன் செயல், ஊனுக்குள் உயிராக இவ்வுடம்பை இயக்குபவன் இறைவன்” என்ற ஞானத்தைப் பெறுகிறோம்.
மண், காற்று, நீர், அக்னி, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூத தத்துவங்களால் ஆனதே நம்முடல், இதில் பிருத்வி தத்துவமாக நமக்குரிய கிராமத்துப் பூமியைக் குறிக்கும் பூமாதேவியாக நம்முள்ளிருந்து நம்மைக் காப்பவர்களே குலதெய்வங்கள். எனவே அவர்கள் ஆட்சி புரியும் கிராம பூமியில் சென்று ஐக்கியமாக வேண்டியது அந்தந்தக் குழந்தையின் தலைமுடியாகும். கிராம பூமியின் பிருத்வி அம்சத்தைத் தாங்கி பிறவி கொண்டுள்ள அக்குழந்தையின் முடி அதே பூமிக்குச் செல்வது விசேஷமல்லவா? இது கருதியே அவரவர் கிராமத்திற்குச் சென்று முடி காணிக்கையளிக்கும் அற்புதமான குல வழக்கம் நிலவி வருகிறது. பிராரப்த கர்மாவின் அணுக்களாக விளங்கும் முதல் தலைமுடிக் கற்றைகளை அந்தக் கிராம தெய்வமே ஏற்று அக்குழந்தையின் எதிர் கால வாழ்வைப் பேணும் கடமையை ஏற்று அருள் பாலிக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் ஹோமங்கள், யாகங்கள் வடிவில் தேவர்களுக்கும், நித்யவழிபாடுகள், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் வடிவில் ரிஷிகளுக்கும், பித்ரு தர்ப்பணங்கள், அமாவாசைத் தர்ப்பணங்கள், திதி-திவசங்கள் வடிவில் பித்ருக்களுக்கும் தன் பிறவிக்குரித்தான கடமைகளைச் செய்தல் வேண்டும். இதுவே தேவ கடன், பித்ரு கடன், ரிஷிகடன் என்பதாகும்.

தாலி கட்டும் முன்னே கால் ஊனம், கை ஊனம் பார்த்தாயே, கட்டிய பிறகு ஏற்பட்டால் என்ன செய்வாய்?

தேவகடன், ரிஷி கடன், பித்ரு கடன் மூன்றையும் நிவர்த்தி செய்யும் குல தெய்வ வழிபாட்டால் வாழ்க்கையின் பெரும் துன்பச் சுமை குறைந்து இறையருளைப் பரிபூரணமாகப் பெறலாமல்லவா? இத்தகைய குலதெய்வ வழிபாட்டு மஹிமையை நம்முடைய குரு சிவகுரு மங்களகந்தர்வாவின் திருவருளால் நமக்கு வழங்கி அருள் புரிபவர் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்.
சில குடும்பங்களுக்குச் சமயபுரம் மாரியம்மன், திருப்பதி வெங்கடாசலபதி மூர்த்தி, வைத்தீஸ்வரன் கோயில் முருகப் பெருமான் போன்ற தெய்வ அவதார மூர்த்திகளே குல தெய்வங்களாக அமைவது உண்டு.
அருணகிரி நாதர், வள்ளிமலை சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற யோகியரும், ஞானியரும் திருமுருகனின் திருமேனியில் ஐக்கியமாயுள்ளனர், அதுபோல ஆயிரக்கணக்கான கிராம எல்லை தேவதையரும், தெய்வாம்சங்களும்ம் சிவன், நாராயணன், முருகன், பராசக்தி போன்ற பரம்பொருள் தத்துவங்களில் உயர் நிலைகளில் ஜோதியாகக் கலந்து ஐக்கியமாவர். எனவே குலதேவதை, தெய்வ மூர்த்தி என்று பாகுபாடு கொள்ளாது ஆழ்வார்கள் பாடியது போல தொண்டனுக்குத் தொண்டனாக ஆண்டவன் சேவையினும் அவனடியவன் சேவை உயர்ந்தது எனத் தெளிதல் வேண்டும்.

பெண்களுக்கான நல்வழி

ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்
பெண்கள் தங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற துன்பங்களையும், சச்சரவுகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள் எனில், அவைகளின் விளைவுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலுமல்லவா? ஆனால், இது நடைமுறையில் சாத்தியமானதா என்ற கேள்வி எழலாம்.
இதற்கென வரும்முன் காக்கும் நல்வரத்தைச் சீதா தேவி ஒரு நல்வழியென அருளியுள்ளார். விதேக முக்தராய், இளமையில் ஞானம் பூத்த சுகப்பிரம்ம ரிஷியின் அருள் ஒளி பூண்ட ஜனக மஹாராஜா சீதா தேவியிடம், “ஹே சீதே! கலியுகத்தில், குடும்ப பெண்கள் பற்பல துன்பங்கட்கு ஆளாக உள்ளனர். கணவனுடன் மனஸ்தாபம், மாமியார் பிரச்சனைகள், சந்ததியின்மை, பண விரயம், பற்பல நஷ்டம், பொருள் இழப்பு, கன்னிப் பெண்களுக்குத் திருமணம் ஆகாதிருத்தல், வேலையின்மை போன்ற எண்ணற்ற துன்பங்களில் உழல்கின்றனர். இவற்றிலிருந்து முழு விடுதலை பெற இயலாவிடினும், ஓரளவேனும் இவைகளை எதிர் நோக்கி, பெண்கள் தம்மைக் காத்துக் கொள்ள ஒரு நல்வழி காட்டுவாயாக” என்று வேண்டினார்.

ஸ்ரீசீதாராம ஜனன ஜாதகம்

விதேக முக்தரான ஜனகர் அறியாததொன்றா! அவரே சீதா தேவியின் அருளுரையை வேண்டினாரென்றால், சீதாபிராட்டியின் தவப்பெரு நிலையை எடுத்துரைக்க இயலுமா?
சீதாதேவி தன் தோழியருடன் அரண்மனையில், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கருகில் பூப்பந்தாடுதல் வழக்கம். அவள் நூற்றுக்கும் மேற்பட்ட பூப்பந்துகளை இமைக்கும் நேரத்தில் விண்ணில் எறிந்து கோர்வையாகத் தொடுத்து எறியும் விளையாட்டில் வல்லவள். அவள் பூப்பந்துகளுடன் விளையாடுவது அதிஅற்புத தேவ நடனம் போல் காட்சியளிக்கும்.
ஸ்ரீமகள் சீதாதேவி இவ்வாறு விளையாடும்போது வாயு பகவான் அவள்தம் திருக்கரம் பட்ட அப்பந்துகளைத் தழுவிச் சென்று மேலும் புனிதப்படுத்திக் கொள்வார். பூக்களின் நறுமணத்துடன் வாயு பகவானின் ஸ்பரிசம் தோய்ந்து தட்சிணாமூர்த்தியின் சிலாரூபத்தைத் தழுவி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் பிரபஞ்ச குருத் தத்துவத்தைக் கிரஹித்து வரும் தென்றல் காற்று மீண்டும் பூப்பந்துகளைத் தழுவும்.
ஸ்ரீவாயுபகவான்  அப்பூப்பந்துகளின் கருவில் தோய்ந்த ஸ்ரீதட்சிணா மூர்த்தி கடாக்ஷத்தை ஸ்வீகரிக்க .... ஸ்ரீ வாயுபகவானின் அருட்கடாட்சம், ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பரப்பிரம்ம குருகடாட்சம் ஆகிய இவற்றைத் தாங்கி வரும் பூப்பந்து திருமகளாம் சீதையின் தேவி கடாட்சமும் பெற்று மிளிர்ந்தது.

“தனக்கு மிஞ்சித்தான் தான தருமம்” இதன் உண்மையான விளக்கம்  என்ன? தருமம் செய்வதற்கு எல்லையே கிடையாது ‘தனக்கு மிஞ்சித்தான் தான தருமம்’ என்பது ஒருவன் தன்னை மிஞ்சிய நிலையிலும், அதாவது தன்னால் தானம் செய்ய முடியாத நிலையிலும் செய்கின்ற தான தருமத்தை குறிப்பது. தன்னை மிஞ்சி தானம் செய்தனர் பாரேன் நாயன்மார் ஆகி நின்றனரே - குரு மங்களகந்தர்வா

குரு உபாசனை, தேவி உபாசனை,  இவற்றின் ஒருமித்த கோளாம் பூப்பந்துகளின் ஸ்பரித்தால் பெற்ற இறையருளால் ஸ்ரீவாயு பகவான் பிரபஞ்சமெங்கும் ஆனந்தமாக உலாவ, கோடி கோடியாம் நக்ஷத்திரப் பகுதிகளும், கோள்களும், லோகங்களும் புனிதம் பெற்றன.
இறைவனின் ஒவ்வோர் அசைவிற்கும் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு. சீதா தேவி சாதாரண பூப்பந்துதான் ஆடினாளா? இல்லை ... இல்லை.... அண்டசராசரங்களைப் புனிதப்படுத்தும் பெரும் திருவிளையாடலன்றோ அது.. இதற்கு  வாயுபகவான் ஒரு கருவியாக நிற்க, சிவபெருமான் குரு தட்சிணாமூர்த்தியாய் திருவிளையாடலை நடத்தி வைத்தான். அப்போது விந்தையென ஒரு பூப்பந்து விண்ணிலே நின்றது. வாயுபகவான் திகைத்து நிற்க, ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் பிம்பத்திலிருந்து கிளர்ந்த ஜோதியொன்று மின்னல் வேகத்தில் அப்பூப்பந்தினுள் சென்று மறைந்தது ... அப்பந்து மெதுவாகக் கீழிறங்கி தங்கி ஸ்ரீசீதா தேவியின் சிரசில் ஜடைபில்லைய்யாய் மலர்ந்து விரிந்தது ..
பஞ்ச பூதங்களில் ஒன்றாம் ஸ்ரீவாயு பகவான் பிரபஞ்சத்தையே புனிதமாக்கும் இறையருள் தமக்கு கிட்டக் காரணமாயிருந்த ஸ்ரீசீதா தேவியைத் தொழுது, “அம்பிகே! வரவிருக்கும் யுகங்களில், குறிப்பாகக் கலியுகத்தில் தீயசக்திகளே உலகைச் சூழ்ந்து கொள்ளும். அப்போது தேவி உபாசனை செய்வோர் அருகி விடுவர். உன்னைத் துதித்து குடும்ப பெண்கள், எதிர்வரும் துன்பங்களை முன்னரே அறிந்து தம்மைக் காத்துக் கொள்ள நல்வழி தரவேண்டி பிரார்த்திக்கிறேன்”, என்று வேண்டினார்.
ஸ்ரீசீதா தேவி தன் தலையில் இறையருளால் பொருந்திய ஜடைபில்லையைத் தொட்டு வணங்கியவாறு கூறலானார், “எட்டுத் திக்குகளிலும் மிதந்து வரும் வாயு அணுக்கள் எதிர்வரும் துன்பங்களை  முங்கூட்டியே அருளும் வல்லமை உடையன. நிகழவிருக்கின்ற ஆபத்து, பண நெருக்கடி, எதிரிகள் வரவு மட்டுமன்றி அனைத்துத் துன்பங்களோடு இனிய செய்திகளையும் முன் கூட்டியே தெரிவிக்கும் ஆற்றலைக் கொண்டவையே சுவாஸ அணுக்களாகும். இதனையே பரப்பிரம்ம குரு தட்சிணாமூர்த்தி வாயு பகவானாகிய தங்களுடைய அருட்சக்தி மூலமாகப் பூப்பந்து விளையாட்டினால் உலகிற்கு அருளியுள்ளார் எனவே எல்லாப் பெண்களும்
மாமாத்ய தேவோ வடமூல வாஸிம்
க்ருபா விசேஷாத் க்ருதஸன்னிதான :
ஓம்கார ரூபாம் உபதிஸ்ய வித்யாம்
அவித்ய கத்வாந்தம் அபாகரோது.
என்ற ஸ்லோகத்தைத் தினமும் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்து வருதல் வேண்டும். இந்த ஸ்லோகமானது ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் குருபிரம்ம அனுக்ரகத்தால் ஸ்ரீவாயு பகவானின் அருளோடு எட்டுத் திக்குகளிலுமிருந்து வருகின்ற துன்பங்களை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனத்தைத் தருகிறது. இச்சுலோகத்தை உச்சரிப்பவர் இல்லத்தில் சுற்றுப்புற சூழ்நிலையின் தீய சக்திகள் தணிகின்றன. இந்த ஆன்மீகச் சூழ்நிலையில் இந்த சுலோகத்தின் மஹிமையால் நமக்கு வரவிருக்கின்ற பிரச்சனைகளை, மனோரீதியில் முன்னரே அறியும்  [TELEPATHY] மன ஆற்றல் உருவாகிறது.               
இவ்வாறு மனோரீதியாக உணர்ந்தபின் நம்முடைய பூஜைகளை நெறிப்படுத்தி ஜப தப முறைகளைப் பெருக்கி, அவற்றை எதிர்கொள்ளத் தயாராகிறோம். இது அபரிமிதமான மனோ வலிமையையும், எத்துயர்வரினும் சாந்தத்துடன் அணுகும் தன்மையையும் அளிக்கின்றது. இதனால், உயர் குறை இரத்த அழுத்தம் [High & Low Blood Pressure] நரம்புத் தளர்ச்சி [ Nervous Weakness] குடல் வீக்கம், மாரடைப்பு, [Heart Attack] போன்ற நோய்களையும் அறவே தடுக்கலாம். இந்த எளிதான ஸ்லோகம் கலியுகப் பெண்களுக்கு நலன்கள் அனைத்தையும் தரவல்ல ஒரு வரப்பிரசாதமாகும்.
சீதாதேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜபித்துப் பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சனைகள் தீர நல்வழி காணுவார்களாக!

ஆத்ம விசார வினா விடை

வினா : இறைத் திருவுருவங்கள் சிலவற்றிற்குச் சதுர்புஜம் அமைந்திருப்பது ஏன்?
விடை : வாழ்க்கையில் சிலர் கேள்வி கேட்பதற்கென்றே இருக்கிறார்கள். சிலர் வாழ்க்கை பதில் சொல்வதெற்கென்றே அமைந்து விடுகின்றது. வேறு பலர் வாழ்க்கையோ கேள்விக் குறியாகவே ஆகிவிடுகின்றது. எப்போது கேள்வியும், பதிலும் இல்லாத  நிலை வருகின்றதோ அங்குதான் குருஅடிமை எனும் வாழ்வு தொடங்குகிறது.. சிலர் எப்போதுமே கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கேனும் அவர்கள் பதில் தர முன் வருவதில்லை.
மனிதன் இரண்டு கரங்களால் பல வேலைகளைச் செய்கிறான்., பலர் “அதிக வேலை செய்ய எனக்கென்ன நாலு கையா இருக்கு” என்று கேட்பதுண்டு. “நாலு கை இருந்தால் தேவலை” என்றும் கூறிக் கொள்வர். நாம் ஒன்றை உணர வேண்டும். “மனிதனாகிய நீ எதைச் செய்தாலும் அதைப் போல் தெய்வம் பன்மடங்கு செய்யும். உன்னை விட அதிகமாகச் செய்யும் சக்தியை அந்தவொன்று பெற்றுள்ளது. ஆகவே நீ கர்வம் கொள்ளாதே” என்பதைக் காட்டுவது தான் சதுர்ப்புஜம் அமைப்பு.

திருஅண்ணாமலையில் அன்னதான உலை ஆவியே சுவாமிக்கு ப்ரீதி அளிக்கக் கூடியது ஆகும். எனவே, அன்ன தானமே மிகச் சிறந்த சரீர சேவையாகும்.

தெய்வத்தின் திருக்கரங்கள் அவற்றின் உட்புற ஆற்றலின் விஸ்தரிப்புகள் என்றும் கரங்களில் உள்ள கருவிகள் அகில அண்டத்திலுள்ள பல்வேறு சக்திகளின் சின்னங்கள் என்றும் முனிவர்கள் அருளியுள்ளனர்.
சக்தியாம் அம்பிகை, சிவன், விநாயகன் முதலான கடவுளர்களுக்குச் சதுர் புஜமுண்டு. பல ரிஷிகள் தம் குடும்பத்துடன் தாருகா வனத்தில் வசித்து யாகங்கள் பல செய்து இறைத்தொண்டு புரிந்து வந்தனர். தவ வலிமை அதிகரிக்கவே ரிஷிகளுக்குத் “தான்” என்ற அகம்பாவமும், அகந்தையும் மிகுந்தன. இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவன் தாமும் ஒரு தவசி போல் மானிட உருதாங்கி தாருகாவனம் வந்தமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.. சிவனின் தவச்சிறப்பையும்,, வலிமையையும் குறித்து ரிஷி பத்தினிகள் உயர்வாகப் பேசிக் கொண்டனர்... “நமக்கே உரியது என்று கருதிய வனத்தில் வேறொருவன் வருவதா?” என்று நினைத்த ரிஷிகள் இறைவனிடம் வாதாடியும், பலவித திறமைகளைக் கையாண்டு அவரை விரட்ட நினைத்தும் சிவபெருமான் அசையவில்லை.

சதுர்புஜ முருகன் அண்டமி

கோபத்தில் ரிஷிகள் ஒன்று கூடிப் பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். தீவிர வேகத்துடன் செய்யப்பட்ட அந்த யாகத்தில் மகிழ்ந்து தேவனொருவன் தோன்றினான். “ரிஷிகளே! உங்கள் யாகத்தால் யாம் மகிழ்ந்தோம்.. தங்களுக்கு யாது வேண்டுமானாலும் தருகிறேன்.., கேளுங்கள்” என்றான். பெருங்களிப்படைந்த ரிஷிகள் தம் எதிரி  அழிந்தான் என்று கருதி அவனைக் கொல்ல “மழு” என்ற ஆயுதத்தை வேண்டினர். தேவன் அதை வழங்க ரிஷிகள் தவத்திலிருந்த சிவன் மீது அதை ஏவினர். நடப்பதை அறிந்த சிவன் லாவகமாக அம்மழுவைத் தம் கையிலேந்திக் கொண்டு தவத்தைத் தொடர்ந்தார். பின் ரிஷிகள், சாதுவானாலும் மானம் பெரிதெனக் கருதும் மானை அவர்மீது ஏவ, சிவன் அதையும் தம் கையில் கொண்டார்.
“இவன் மந்திர வித்தை அறிந்த மாயாவியோ?” என்று எண்ணிய ரிஷிகள் யாகக்குண்டத்திலிருந்து வந்த தேவனிடம் சீற்றம் மிக்க புலியை அனுப்ப வேண்டினர். பெரும் உறுமலுடன் பாய்ந்து வந்த புலியைத் தாக்கிக் கொன்று அதன் தோலை தம் இடுப்பு ஆடையாக அணிந்து கொண்டு விட்டார் சிவன். இப்பொழுதுதான் ரிஷிகளுக்கே மனத்தில் அச்சம் தோன்றி விட்ட்து. இறுதி முயற்சியாக கொல்லுகின்ற வேகமுடைய யானையைச் சிவபெருமான் மீது ஏவி விட பரம்பொருளாகிய சிவனோ அதையும் கொன்று அதன் தோலைத் தம் மீது போர்த்திக் கொண்டார்.
தம் முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்ததைக் கண்ட ரிஷிகள் வந்தவன் மானிடனல்லன், இறைவனே என உணர்ந்து தம் கர்வம் நீங்கிச் சிவபெருமானைப் பணிந்தனர்.. ஆகவே கர்வம் மனிதனுக்கு எல்லை மீறும்போது இறைவன் தக்க சமயத்தில் அதை அடக்குகிறான் என்பதை நாம் உணர வேண்டும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam