ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அடிமை கண்ட ஆனந்தம் |
நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!
ஒருநாள்..... சிறுவன் அங்காளியை வலம் வந்த களைப்பில் பெரியவர் வழக்கமாக அமரும் தூண் அருகில் சற்றே ஆயாசமாக அமர்ந்திருக்க.. அவன் மனக் கண் முன் பெரியவர் ஆங்கே சித்த சாம (ராம) ராஜ்யம் பூண்டிருந்த இனிமையான அமிர்தமய நாட்களை எண்ணி எண்ணி ஏங்கினான்! காரணம்.....? இப்போதெல்லாம் பெரியவர் முன்பு போல் அடிக்கடி பூலோகம் வருவதில்லை! நேரிலும் அவ்வளவாக உரையாடுவதில்லை.! ஆனால் எங்கிருந்து பேசினாலும் அவர் பேசுவது மட்டும் காதில் விழும்! பெரியவர்தாம் DIVINE VISUAL & SOUND CORD SOFTWARESஐ மாற்றி சிஸ்டத்தையே update செய்து விட்டாரே!
மேலும் அவர்தான் அப்பட்டமாகவே சொல்லி விட்டாரே..! “சிக்கெனப் பிடித்தால் சிக்குவேன்!”
“டேய்! இனிமேல் என்னை physical bodyல பூலோகத்துல ரொம்ப எதிர்பார்க்காதே...! உனக்காக நாங்க எங்களோட ஒளிமயமான Splendorous divine shell லிருந்து மாத்தி இந்த கோவணாண்டி ரூபத்துல நுழைஞ்சு வர வேண்டியதா இருக்கு! இனிமே நாங்க நெனச்சா வருவோம்.. போவோம்..! இனிமே என்னை மனுஷ உருவத்துல பார்க்கறதுக்கு ஏங்காதே ராஜா..! அர்ஜுனன்னும் இதே தப்பைச் செஞ்சான்! ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மான்னு புரிஞ்சுக்காம அவரை சகஜமா friendly யாப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போய்.... ஒரு ரெண்டு மணி நேரம் அவரைக் காணலைன்னா பதறிடுவான்! காரணம் பரமாத்மாவை ஒரு மனுஷ உருவத்துல அடைச்சுப் பார்த்ததோட விளைவுதான் இது..! உன் கிட்டேயும் இங்கே அதே கூத்துதான்.! நீயும் ஸ்ரீகிருஷ்ணர் கையில ஒரு யுகத்துல ஸ்ரீசுதர்ஸன சக்கரமா நின்றவன்தானே! சரி... சரி.. அதுக்குத் தான் சொல்றேன்,
“நேரே என்னைப் பாக்க ஆசைப் படாதே, என்னை உன்னோட உள்ளத்துல புடின்னு.. இதுதான் நெலைச்சு நிக்கும்...!” ... சிறுவனின் கண்கள் கலங்கின..!
பிரம்ம கபாலத்தில் பிரம்மாண்ட தர்ப்பணம்..! இப்படித்தான் ஒரு முறை.... பெரியவருடன் பத்ரிநாத் சென்றிருந்த போது...
அங்கு பிரம்ம கபாலம் என்ற ஒரு பாறை உண்டு... அதைச் சுற்றி எப்போதும் ஆற்று நீர் வேகமாக வந்து சுழலாய் அடித்துக் கொண்டேயிருக்கும்.. அந்த பிரம்ம கபாலத்தின் மீது ஏறி அமர்ந்து தர்ப்பணம், ஆத்மத் தர்ப்பணம், பிண்டத் தர்ப்பணம் செய்வார்கள்...! பெரியவர் சிறுவனை பிரம்ம கபாலத்திற்கு அழைத்துச் சென்றார்.. அந்தக் காலத்தில் அங்கு போதிய பாதுகாப்பு கிடையாது.. கம்பிகளும் இல்லை! வழுக்கிய பாறையில் தட்டுத் தடுமாறி விழுந்து புரண்டு ஏறிய பெரியவர் அதன் மேல் ஏறிக் கொண்டு, சிறுவனையும் கையைப் பிடித்து இழுத்தார்..! ஆனால் பாறையின் வழுக்கலைக் கண்டு அஞ்சிச் சிறுவன் வர மறுத்து விட்டான்.!
சற்றுத் தள்ளி நின்று கொண்டு அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டு, அவர் செய்வதையும் பார்த்தான்! பஞ்ச பாத்திரம் (தாமிரத் தம்ளர்), உத்தரிணி, தர்பை, எள்... இன்னமும் ஏதேதோ கொண்டு தர்ப்பணம் செய்தார் பெரியவர்! மிகவும் ஸ்பஷ்டமாக மந்திரங்களை ஓதினார்! வெறுங்கையராய், கோவணாண்டியாய்ப் பாறையில் ஏறியவரிடம் எள், உத்தரிணி, பஞ்ச பாத்திரம் இத்யாதிகள் எல்லாம் எங்கிருந்து வந்தன..! வழக்கம் போல் விடையில்லா வினாக்கள் இவை.!
“இந்த மாதிரிக் கேள்வி எல்லாம் நின்னாத் தாண்டா குருபக்தி நல்லா வளரும்! இல்லாட்டி ஏதாச்சும் சித்தி பண்ண மாட்டாங்களான்னு புத்தி அடிக்கடி ஏங்கும்.!”
“நான் ஒண்ணும் உன்னை எதுவும் கேட்கலையே வாத்யாரே..!”
“வாய் திறந்து கேட்காட்டினாலும் மனசு ஏதாச்சும் கேட்கணும்னு அடிச்சுக்குது இல்ல! அது போதுமே!”
“சித்புருஷரான இவர் ஏன் தர்ப்பணம் இட வேண்டும்?”
தர்ப்பணத்தில் ஜல தாண்டவம்!
ஆங்கே ஓர் அற்புதத்தையும் சிறுவன் கண்டான்! ஒரு சிறிய தாமிரத் தம்ளரான பஞ்ச பாத்திரத்தில் இருந்து அவர் கட்டை விரல், ஆள்காட்டி விரலிடையே தீர்த்தத்தை ஊற்றித் தர்ப்பணம் வார்த்தபோது மடமடவென்று தாமிரத் தம்ளரிலிருந்து அருவி போல் நீர் கொட்டிக் கொண்டே இருந்தது கண்டு சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது..! அதுவரையில் பெரியவர் ஒவ்வொரு முறையும் குனிந்து குனிந்து கீழேயிருந்து பஞ்ச பாத்திரத்தில் நீர் எடுத்தவர், அதன் பிறகு தம்ளரைச் சாய்த்திட குற்றால நீர் அருவி போல் அதிலிருந்து கொட்டிக் கொண்டேயிருந்தது, சிறுவனுக்குப் பெரியவரின் கண்களைப் பார்ப்பதற்கே சக்தியில்லை!
இதற்கான விளக்கங்களைப் பின்னால் பெரியவர் தந்த போதும், இந்தத் தர்ப்பண அர்க்ய நீர்ப் பிரவாகக் காட்சி அவன் கண்களை விட்டு இன்னமும் அகலவில்லை..!
“நாங்கள் perennial riverடா! தெய்வீக விஷயங்களும் அருளும் எப்பவுமே இறையருளால் எங்க கிட்டேந்து கொட்டிக் கிட்டேயிருக்கும்..! இந்த அமிர்தத்தை அள்ளிப் பருகிப் பயன் பெறுவது உன் கையில்தான் இருக்கு..!” இதுதான் பெரியவர் அடிக்கடி உதிர்க்கின்ற குருவாய் மொழி வேத சூத்திர வாக்குக் கீற்றுகள்..! உங்களுக்கும்தான்!
உரைப்’பேன்’ மறைத்தேன்!
“இந்த பிரம்ம கபாலத்தில் தர்ப்பணம் செய்வதால் என்ன பிரயோஜனம் வாத்யாரே?” என்று சிறுவன் பெருங் குரலிட்டுக் கேட்டான்.. ஏனென்றால் நீர் அலை பாயும் வேகத்தில் அவருக்குக் காதில் விழுமோ, விழாதோ என்று எண்ணி உரத்தக் குரலில் வினவினான்..! பெரியவர் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு,
“இங்கே தர்ப்பணம் பண்ணினா தலையில பேன் தொந்தரவு தீரும்!” என்று சொல்லிட சிறுவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “நாம் எவ்வளவு சீரியஸாக ஒரு கேள்வியைக் கேட்கிறோம், இவரோ இதைப் புரிந்து கொள்ளாமல் சற்றும் சட்டை செய்யாமல் பேன் தொல்லை வராது எனச் சொல்லி விட்டாரே! ஒரு வேளை அவர் அழைத்தும் தான் பாறை மேல் செல்லாத கோபமோ!” என எண்ணி அஞ்சினான்..! எனினும் மறுநாள் மற்றொரு வாய்ப்புக் கிட்டியபோது பெரியவரின் ஆணையை நிறைவேற்றி விட்டான்..! ஆனால் பேன் தொல்லை தீரும் எனும் வாக்யம் அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது! தன்னைக் கிண்டல் செய்து விட்டாரேயென மிகவும் பொருமிக் கொண்டிருந்தான்! இவ்வாறு பொருமிப் பொருமியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன! இன்னமும் பொருமல் தீர்ந்த பாடில்லை!
“பத்ரிநாத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் இட்டால் பேன் தொல்லை தீரும் என்று யாரேனும் சொன்னால் கேட்போர் கை தட்டிச் சிரித்து கேலிக் கூத்து ஆக்கி விட மாட்டார்கள்! மேலும் முதுகில் நையப் புடைத்துத் துரத்தி விடுவார்களே..!” பெரியவரின் இளக்காரமான பதிலை நினைத்து நினைத்து இம்மாதிரி எண்ணத்தால் சிறுவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது! திடீரென்று ஒரு பெருங் குரல் அவனை உலுக்கியது..!
செவ்வாய்ச் சித்தரின் “DIVINE MARS CODE!”
“என்னடா இது, பொம்பளையாட்டம் அழுதுகிட்டு!... ஏந்திரி .. ஏந்திரி..... நெஜமாவே நான் இன்னிக்கு பூலோகத்துக்கு வர்ற ஐடியாவே இல்லை..! ஏதோ செவ்வாய் லோகத்துல ஒரு பிரதோஷ டூட்டின்னு அடியேனுக்குப் போட்டிருந்தாங்க! ... திடீர்னு புலிப்பாணி சித்தர் கூப்பிட்டு பூலோகத்துல கொஞ்சம் காரியம் இருக்கு., போய் கவனின்னாரு..! ஓடியாந்து பார்த்தா இங்க நீ கண்ணைக் கசக்கிக்குனு உக்காந்துருக்கே! தைரியமா இருடா! நீ தெய்வீகத்துல நெறய சாதிக்க வேண்டியதிருக்குடா! இந்த மாதிரி கோழையா இருக்கறுதுக்கா உன்னைக் கூட்டிக்கிட்டு இத்தனை வருஷம் மாங்கு மாங்குன்னு பாரதம் ஃபுல்லா, பூலோகம் ஃபுல்லா அண்ணாமலை, இமயமலை, பர்வத மலை, மேரு மலை, ஆல்ப்ஸ், அண்டார்டிகானு சுத்தோ சுத்துனு சுத்தி கோடி கோடியா தெய்வீக விஷயங்களை அள்ளி அள்ளி ஐஸ்வர்யமாக் கொட்டினேன்?”
திடுதிடுவென்று அங்கு வேகமாக வந்த பெரியவர் படபடவென்று பொரிந்தார்.! “டேய்! கொஞ்சம் தள்ளி உக்கார்ந்துக்கோ! இடத்தை சுத்தம் பண்ணு! பேன் குடும்பம் வருது! அவங்கள இன்னிக்கிக் கொஞ்சம் கவனிச்சாகனும்... அதுக்குத்தான் லொங்கு லொங்குனு அங்காரக லோகத்துலேந்து ஓடியாறேன்...!”
Siddha’s divine “pane”
பெரியவர் என்றுமில்லாப் படபடப்புடன் கூறிடவே சிறுவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்!.. பேன் குடும்பம் என்றவுடன் எறும்பு பாஷை, கிளி பாஷை என அனைத்திலும் சகல கலா வல்லவரான பெரியவரைப் பார்க்க ஒரு பேன் பட்டாளமே வருகிறதெனவே முதலில் சிறுவன் நினைத்தான்! அத்தகைய பரபரப்பைச் சிறுவன் முதன் முதலாக அப்போதுதான் அவரிடம் காண்கின்றான்! எவ்வளவோ பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்ட போதெல்லாம் உலக மகா அமைதியுடன் எதையும் சாந்தமாக எதிர்நோக்கும் பெரியவர் அன்று மிகவும் பரபரத்தது அவனுக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது!
“யாரிந்தப் பேன் குடும்பத்துக்காரர்கள்? நம் வாத்தியாரையே செவ்வாய் லோகத்திலிருந்து கிளப்பிக் கூட்டிக் கொண்டு வருவதென்றால்... எவ்வளவு சக்தி வாய்ந்த பித்ருக்களின் ஆசிகள் அந்தக் குடும்பத்திற்கு மேலுலகத்தில் இருக்க வேண்டும்! பெரியவருக்குத்தான் பித்ருக்கள் என்றாலே மனம் இளகி விடுமே! ஏன் வாத்யார் இன்று இந்தப் பறப்பு பறக்கிறார்? ஒன்றும் புரியவில்லையே?”
திகைத்த சிறுவன் அவர் போட்ட முதல் அதட்டலிலேயே விடுவிடு என எழுந்து, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினான். பெரியவர் வழக்கம் போல் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்..! கோயிலுக்குள் ஒரு பெரிய பட்டாளமே வந்தது. தாத்தா, பாட்டி, பெரிய மகன், மருமகள், நடுமகன் மற்றும் இரண்டு மகள்கள், மாப்பிள்ளைகளுடன் ஒரு பெரிய குழுவே வந்து விட்டது. கிட்டத் தட்டப் பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் அது! அவர்கள் நேரே ஆலயத்தின் உள்ளே சென்று அங்காளியை வலம் வந்து விட்டு, பெரியவரிடம் நேரடியாக வந்து ஏதோ முன்னரே பரிச்சயம் ஆனவர்கள் போல நின்றார்கள்!
பெரியவரோ ஒன்றும் புரியாதவர் போல் கண்களை மூடிக் கொண்டார்! அக்குடும்பத்தின் மூத்த மகன் போல் இருந்த ஒருவர் பேச ஆரம்பித்தார்.
“சாமி! உங்களைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டோம்! சுத்தி வளைக்காம எங்க பிரச்னைக்கு நேர வரேன்! எங்க குடும்பம் முழுக்க ஆணோ, பெண்ணோ அனைவருக்குமே, தலை நிறைய பேன் வந்து அவஸ்தைப்படறோம்! ரொம்ப வருஷமா சந்ததி சந்ததியா இந்தப் பேன் தொல்லை இருந்து கிட்டு வருது! கபால நோய், தலை நோய், தலைக் கடுப்பு, கடுந் தலைவலி, எல்லாமே இந்தப் பேன் கடியால் வருது, உறவினர் எல்லோரும் எங்களைப் பேன் குடும்பம்னு சொல்லி ரொம்பக் கிண்டலும் இன்சல்ட்டும் பண்றாங்க.. வெளில தலை காட்ட முடியலை! பொறந்த குழந்தைக்குக் கூட பேன் அடை அடையாப் பத்திக்குது! வயசானவங்களுக்கும் இருக்கற கொஞ்சம் நஞ்சம் மயிர்லேயும் தொத்திக்குது!”
“எங்க குடும்பம் தலைமுறை தலைமுறையாகத் தான தர்மம் செய்து வர்ற குடும்பம்! அத நாங்க வெளில சொல்லிக் காட்டக் கூடாது, இருந்தாலும் பெரியவங்களுக்குத் தெரியறதுக்காகச் சொல்றேன்..”
Lice for a (karmic) price! எதனால குழந்தையிலேந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் இப்படிப் பேன் மண்டுதுன்னு எங்க குடும்பத்துக்கே புரியலே! நாடி ஜோஸ்யத்துலேந்து அருள்வாக்கு வரைக்கும் எல்லாம் பார்த்தாச்சு! நாங்களும் தலைமுறை தலைமுறையாக சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் எல்லாம் பண்ணிப் பார்த்துட்டோம், இங்கிலீஷ் வைத்தியம் போறதுக்கு இஷ்டமில்லே! அதனால இருக்கற தலையும் சொட்டையாகிப் புதுசு புதுசா வியாதிகள் கெளம்பும்! நீங்கதான் இதுக்கு ஏதாவது பிராயச்சித்தம் காட்டித் தரணும்! ஏதோ பூர்வ ஜென்ம கோளாறு காரணமாகத்தான் இந்தப் பேன் தொல்லை வந்திருக்குன்னு நம்பறோம்!”
“இதப் பாருங்க! இந்த 90 வயசுப் பாட்டியிலேந்து என்னோட ரெண்டு வயசுப் பேத்தி வரைக்கும் கிட்டத் தட்ட 15 பேருக்கு மேலே ஆணு, பொண்ணு எல்லோருக்குமே தலையில நிறைய பேன் வந்து அவஸ்தைப்படறோம். சரியான தூக்கம் கிடையாது. புதுசா புதுசா தலையில நோய்கள் வருது! இதுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சாமி!” வந்தவர் ஓவென்று கதறி அழுது விட்டார். குடும்பமே ஒட்டு மொத்தமாக அழுதது.
பெரியவர் ஒன்றும் பதில் பேசவில்லை. நெடுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார்.. வந்தவரோ கதை கதையாகச் சொல்லத் தொடங்கினார்..! “நாங்களும் இதுவரை மாசத்துக்கு ஒரு முறையாவது திருப்பதி, திருச்செந்தூர், திருத்தணி, பழனி, குணசீலம், வைதீஸ்வரன் கோயில்னு எல்லா இடமும் போய் குடும்பமாவே மொட்டை அடிச்சிக்கிட்டோம்.. இன்னும் சொல்லப் போனா போன வருஷம் சேர்ந்து பல கோயில்களுக்குப் போய் கிட்டத்தட்ட ஒரு 500 மொட்டையாச்சும் ஒட்டு மொத்தமா அடிச்சிருப்போம்.. ஆனா திருப்பி ஒரே மாசத்துல தலையில எல்லாருக்கும் பேன் புழுத்திடும்.! சாமிதான் ஏதாவது பரிகாரம் சொல்லணும்!”
“நீங்க என்ன பரிகாரம் சொல்றீங்களோ அதை அப்படியே ஒரு இஞ்ச் கூட மாறாமச் செய்யத் தயாராக இருக்கோம். எங்க மொத்த சொத்தையும் அம்பாளுக்கு எழுதச் சொன்னாக் கூட அதுக்கும் தயார்.. சொந்த பங்களாவை விட்டுட்டு நாங்கள் வாடகை வீட்டுக்கும் போகத் தயார்! எங்க கஷ்டம் எங்களோட போகட்டும்! இனிமே வரப் போற எங்க சந்ததியாவது இந்தப் பேன் தொல்லையால் அவஸ்தைப் படக்கூடாது அப்படீங்கறதுதான் எங்களோட பிரார்த்தனை! ஆசையும் கூட! தோப்பு, தொரவு, நிலம், புலம், நஞ்சை, புஞ்சை எல்லாம் எங்களுக்கு நிறைய உண்டு! எல்லாத்தையும் சாமி கிட்ட ஒப்படைச்சிடறோம்..! நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்..! ஏன்னா எங்க குடும்பத்துல ஒரு வார்த்தை சொன்னா அதைக் காப்பாத்தும் நாணயம் உள்ள குடும்பம்! ஒரு போதும் வாக்கை மீற மாட்டாங்க! அந்த மாதிரிப் பெரியவங்க எங்களை பக்தியோட வளர்த்து வச்சிருக்காங்க..! தரோம்னு சொன்னா, அதைத் தந்து செஞ்சப்புறம்தான் உயிரையே விடுவோம்! இதை அங்காளி ஆணையாகச் சொல்றோம்! பெரியவங்க தான் பெரிய மனசு பண்ணனும்!”
வந்தவர் மிகுந்த வேதனையுடன் அழுகையினூடே தன் குடும்ப அசௌகரியங்களை விலாவரியாக உரைத்தார்! ... “ஆனா இன்னொன்னையும் சொல்லணும் சாமி! இந்தப் பேனைத் தவிர எங்களுக்கு வாழ்வில் எந்தக் கஷ்டமும், குறையும் கிடையாது... ஆண்டவன் எங்களுக்கு எல்லா சுகமும் கொடுத்திருக்கான்! எல்லாரும் தெய்வீகத்துல இருக்கோம்! ஒரு கெட்ட வழக்கம் கூடக் கிடையாது! நாங்க மனசறிஞ்சு யாருக்கும் துன்பம் செஞ்சது கிடையாது.. எங்கள் வேலைக்காரங்களோ, சொந்தக்காரங்களோ, நண்பர்களோ, எல்லாரையும் நல்ல முறையில் வச்சிருக்கோம்! எங்களுக்குத் தெரிஞ்சு இந்தத் தலைமுறையில நாங்க எந்தத் தப்பும் மனசறிஞ்சு பண்ணல, இனி பண்ணவும் மாட்டோம்!”
பித்ரு சக்தி பேரண்டம் பாயுமே! சிறுவன் மிகவும் ஆச்சரியப்பட்டான், “இவ்வளவு விஸ்தாரமாகப் பேசும் குடும்பம் நிச்சயம் நல்ல குடும்பமாத்தான் இருக்க வேண்டும்.. பக்தியில் திளைக்கும் குடும்பமாய்த்தான் பார்த்தால் தெரிகின்றது.. அதனால்தான் பெரியவர் பதைபதைத்து ஒரு நல்ல குடும்பத்துக்காரர்களைச் சந்திக்கிறோம் எனும் ஆர்வத்தில் செவ்வாய் லோகத்தில் இருந்து பறந்து இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு விட்டாரோ?” யாரோ ஒருவர் வருகின்றார் என்று தன்னை இவ்வளவு பதட்டத்தில் அவர் தயார் செய்து கொள்வது இதுவே முதன்முறை, என்ன காரணமாக இருக்கும்? ” எனச் சிறுவன் சற்று யோசித்து ஒரேயொரு முடிவுக்கு வந்தான்!
பெரியவர் எப்போதுமே பித்ருக்களிடம் மிகுந்த பக்திப் பிரியம் கொண்டவர்! வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்கள் எவரேனும் பூமிக்கு வருகின்றார்கள் என்றால் விழுந்து அடித்துக் கொண்டு ஓடி அங்கு அவர்களை வணங்கி அழைத்துக் கொண்டு வருவார்..! சிறுவனின் கண்களுக்கு ஒன்றும் தெரியாது! ஆனால் அவர்கள் பேசுவது மட்டும் மிகவும் நன்றாகக் கேட்கும்! வந்திருந்த பேன் குடும்பத்தாரிடம் பேசுவதற்காகப் பெரியவர் இப்போதுதான் வாயைத் திறந்தார்..!
“நீங்க பத்ரிநாத்துல பிரம்ம கபாலத்துல தர்ப்பணம் பண்றது பேன் தொந்தரவுக்கு ஒரு பரிகாரம்!” என்று சொல்லிக் கொண்டே பெரியவர் சிறுவனைப் பார்த்தார்! அவர் கண்களில் தெரிந்த பரிகாசம் (அல்லது பிரகாசமோ?!) பத்ரிநாத்தில் பிரம்ம கபால நிகழ்ச்சியை நினைவுறுத்தியது.!
“அடடடா! எவ்வளவு மடத்தனமாக வாத்யாரின் பதிலைக் கேவலமாக நாம் எண்ணி விட்டோம்! இன்றைக்குத் தலைமுறை தலைமுறையாக இருக்கும் பிரச்னைக்குப் பரிகாரம் தரக்கூடிய ஒரு பிரம்ம கபாலப் பாறையை அவ்வளவு தொலைவில் இறைவன் கொண்டு வைத்துள்ளான் என்றால் எத்தகைய மகத்தான சக்தி வாய்ந்த பாறை அது..! இப்பிரம்ம கபாலம் பற்றி எத்துணையோ பிரம்ம ரகசியங்களை பின்னாளில் சிறுவனுக்கு அவர் எடுத்துக் கூறினாலும், சிறுவனின் மனம் மட்டும் ஆறவில்லை..! அவர் எப்படிக் கிண்டலாகப் பதிலளித்தார் என்பது தான் அவனுடைய கோபத்திற்கு மூலாதாரமாக இருந்தது.. ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் அதன் தாத்பர்யத்தை சிறுவன் உணர்ந்து தெளிந்தான்... பெரியவருடைய தீர்க்க தரிசனம் அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
“நாங்க சொல்ற ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும், வார்த்தைக்கும் ஆயிரமாயிரம் அர்த்தம் இருக்கும்டா! இனி மேலாவது தெரிஞ்சுக்க..!” என்று சிறுவனைப் பார்த்து ஆயிரமாவது முறை கூறிய பெரியவர் அவர்களை நோக்கி, .. “வர அமாவாசை அன்னிக்கிக் காலைல பத்து மணிக்கு எல்லாரும் இங்க வந்து சேருங்க! இன்னிக்கி வந்தவங்க எல்லாரும் கண்டிப்பா வந்தாகணும்..! ஒருத்தர் கூட மிஸ் பண்ணக் கூடாது!” எனச் சொல்லி விருட்டெனப் பெரியவர் எழுந்து சென்று விட்டார்.
Faith only Delivers! பெரியவர் எழுந்து பளிச்சென்று மறைந்தால் கூட குடும்பத்தார் அனைவரும் அவர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கித் தரையில் விழுந்து விழுந்து வணங்கினர்..! அக்காட்சியைக் கண்டு சிறுவனுக்குப் பெருமிதத்தால் புல்லரித்தது! “பார்த்தியாப்பா! ஒரு பெரிய சித்தர் நறுக்குனு நாலு வார்த்தை சொல்லிட்டுப் போயிட்டார்..! இந்த நாலு வார்த்தையே போதும் நாலு வேத வாக்யத்துக்குச் சமம்! நம்ம குடும்பத்துக்கு, ஏன் பல தலைமுறைக்கே இந்த சித்தர்னால ஒரு விடிவு மோட்சம் கெடச்சிடிச்சு, எல்லாரும் வாங்க, வர்ற அமாவாசை அன்னிக்கி சாமிகிட்ட மற்றதைக் கேட்டுக்கலாம்..!” அனைவருமே குதூகலத்துடன் புறப்பட்டனர்..!
பல தலைமுறைகளுக்குப் பின் அந்தக் குடும்பத்தில் ஆனந்தம் கரை புரண்டது! ஆழ்ந்த நம்பிக்கையே, குருவின் திருவருளே, பித்ருக்களின் ஆசியே இதற்குக் காரணம்! இத்தனைக்கும் பெரியவர் அவர்களுக்குப் பரிகாரமோ, ஆறுதலோ, பிராயச்சித்தமோ இன்னமும் எதுவும் சொல்லவில்லை...! நறுக்குத் தெரித்தாற்போல் சொன்ன நாலு வார்த்தைகளில் அவர்களுக்கு அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை என்றால்.... சிறுவன் வியந்து கொண்டான்...! “இவரைப் பற்றி நாம் என்ன கணக்குப் போட முடியும்? பிரம்ம கபாலத்தையே பேன் தொல்லை தீர்க்கும் பெரும் பாறையெனச் சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டு அதன்பின் பொதிந்து கிடக்கும் ஆயிரமாயிரம் இறை இரகசியங்களை உணர்த்துபவர் ஆயிற்றே.! பிரம்ம கபாலத்தையே தலையில் மாட்டிக் கொண்டு வந்தவராயிற்றே! இவரைப் பற்றி நாம் என்ன உணர முடியும்? என்ன சொல்ல முடியும்?
அக்குடும்பத்தைப் பார்த்து விட்டு உள்ளே சென்ற பெரியவர் மீண்டும் திரும்பி வருவார் என்று சிறுவன் நின்று.. நின்று பார்த்தான்..! நான்கைந்து மணி நேரம் கழித்தும் பெரியவர் திரும்பவில்லை! எங்கு போனார் என்றும் தெரியவில்லை! சிறுவனுக்குக் கிலி பிடித்தது! நாம் ஏதேனும் தவறாக எண்ணினோமா, குற்றமாகப் பேசி விட்டோமா? பத்ரிநாத்தில் பிரம்ம கபாலக் கரையில் கொண்ட கோபத்தைக் கொண்டு அவரே கோபம் கொண்டு சபித்து விட்டாரோ? சிறுவன் தானே குழம்பிக் குழம்பி அஞ்சினான்! தளர்ந்த மனதுடன் வீடு திரும்பினான்! மீண்டும் காலையும் மாலையும் வந்தான்! பெரியவரைக் காணவில்லை.! மறுநாளும் இப்படியே பெரியரைக் காண முடியாது திரும்பினான்.. இவ்வாறாக ஒரு வாரம் ஓடியது! காலையும், மாலையும் வேகவேகமாக வந்தோடின..!
அமாவாசை நாளும் வந்தது, சிறுவன் மிகவும் உஷாராகி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே (காலை 4 மணி) ஆலயத்திற்குச் சென்று வாசலில் அமர்ந்துகொண்டான்.. பெரியவரைக் காணோம்..! ஆனால் அந்தப் பேன் குடும்பமோ ஒன்பது மணிக்கே வந்து உள்ளே போய் அமர்ந்து கொண்டது... நேரம் மெதுவாக ஊர்ந்து வந்து மணி பத்தாயிற்று..! பேன் குடும்பத்தைவிடப் பெரிதும் துயரம் கொண்டவன் போல் ஆனான் சிறுவன்! உள்ளே ஏதோ குரல் கேட்டிடவே சிறுவன் ஆலயத்திற்குள் வந்து பார்த்தான்..! ஆங்கே பெரியவர் கையில் ஏதோ ஒரு மூலிகையுடன்... “தன்னையும் அறியாமல் இவர் எப்படி உள்ளே வந்தார்?” சிறுவன் அதிசயித்தான்..!
விஷ்ணுபதி புண்ய காலம் |
முறையற்ற காமக் குற்றங்களுக்குப் பரிகார வழிகளை நல்கும் அலவந்திபுரம் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை! கணவன், மனைவியிடையே சத்தியம் பூரிக்கும் நிரந்தரமான அன்பு நிலவ உதவும் அலவந்திரபுரம் விஷ்ணுபதி வழிபாடு! செல்வம், நல்ல வியாபாரம், இனிய குடும்பம் இருந்தும் பல காரணங்களால் மன அமைதி இல்லையே என்று ஏங்குவோர்க்கு அற்புத தெய்வீக மன சாந்தம் தரு அலவந்திபுரம் விஷ்ணுபதி புண்யகால உற்சவம்! எப்போதும் குந்திதேவி போல் துன்பங்களிலேயே உழன்று கொண்டிருப்போர்க்கு சாந்தம், அமைதி, நிம்மதி கிட்டிட அருள்பாலிக்கும் அலவந்திபுரம் ஸ்ரீவிஷ்ணுபதி தரிசனம்! அலைபாயும் மனம் அடங்கும் அற்புத விஷ்ணுபதி ஸ்தலமே அலவந்திபுரம்! அலவந்திபுரம் ஸ்ரீகாளிங்க நர்த்தனப் பெருமாளின் மஹிமை!
வ்ருஷ (விஷு) வருடம் ஆவணி மாத (16.8.2001) விஷ்ணுபதி ஸ்தலமாகப் பொலிவது கும்பகோணம் சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரம் ஸ்ரீகாளிங்க நர்த்தனப் பெருமாள் ஆலயமாகும்.! இ(எ)ன்றும் சாந்தம் தவழும் புண்ய பூமி! கொள்ளிடம் காவிரி இடையில் அமைதிச் சாரல் பூரிக்கும் அற்புத பூமி! பிரச்னைகள், பிரச்னைகள் என்று பிரச்னை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மனதிற்கு மாமருந்தாக, மஞ்சுள சாந்தத்தை, சந்தன நறுமண அமைதியை இன்றும் மகிழ்வுடன் அள்ளித் தந்திடும் ஸ்ரீகிருஷ்ணத் திருத்தலம்..! ஒரு யுகத்தில் பிரம்மாண்டமான ஆலயமாய்ப் பொலிந்த அலவந்திபுரம் ஸ்ரீகாளிங்க நர்த்தனப் பெருமாள் ஆலயம் இன்று ஒரு சிறுமுகப்பு மண்டபத்துடன் எளிமை பூரித்து விளங்குகின்றது..!
ஸ்ரீகாளிங்கநர்த்தன பெருமாள்
அலவந்திபுரம்
கடந்த சில ஆண்டுகள் வரை தொன்மையின் சிகரமாய், பழமையான கற்களுடன் பழசாய்ப் பொலிந்த ஆலயம் இன்று நல்லோர்களுடைய பித்ருக்களின் ஆசியாய் ஒரு சிறு முகப்பு மண்டப விரிவுடன் பரமாத்மாவாகிய ஸ்ரீகிருஷ்ணனின் பரந்த அருளை இந்தப் பிரபஞ்ச மண்டபத்திற்கே வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது..! விஷம் தீண்டாப் புண்ய பூமி இது.! பூவனூர் போல் இங்கு எவரையும் விஷ ஜந்துக்கள் தீண்டாது! லக்ன தியாஜ்ய கண்டத்தால் தசரதருக்கு ஒரு முறை ஆறு நாழிகை விஷக் கண்டத்தால் ம்ருத்யு தோஷம் ஏற்பட்ட போது, ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீராமருடன் தசரதர் இங்கு வந்து வந்தி மூலிகையின் வடக்கு வேரின் பால் ஆறு நாழிகை யோகத்தில் அமர்ந்து ஸ்ரீவந்தி யோகம் புரிந்தமையால் விடக் கண்டம் நீங்கியது..! இன்றும் என்றும் விஷம் தீண்டாத வேத பூமியாக விளங்குவதே அலவந்திபுரம்..!
வந்தி மூலிகை தந்திடும் வரங்கள் ! நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமே விஷ அம்சங்கள் நிறைந்த தீவினைக் கர்மங்கள் தாமே! நோய்களை நீக்கும் திருத்தலமாக மட்டுமன்றி மனக் கலக்கங்கள், கொந்தளிப்புகள், சலனங்கள், எண்ண ஓட்டங்கள், தடுமாற்றங்கள் போன்ற பல மனத்தின், உள்ளத்தின் இன்னல்களையும் தீர்க்கின்ற வந்தி மூலிகை சக்திகள் நிறைந்த ஸ்தலம்! மனித வாடை கண்டாலே நிலத்தினுள் புரண்டு புதைந்து மறையும் தன்மை உடைய நிலம் புரண்டி மூலிகை போல் வந்தி மூலிகையானது ஒரு துளியேனும் தீய எண்ணம் கூடப் பதிந்திடாதப் புண்ய ஆத்மாக்கள் இத்தலத்திற்கு வரும்போதுதான் தாமே பூமிக்கு மேலெழுந்து வந்து காட்சி தருகின்ற புனிதத் தன்மையை உடையதாகும்..!
மேலுலகங்களிலும் ஒருவருடைய புனிதத்தைச் சோதித்திட.. “அலவந்திபுரத்தில் ஆட்பட்டுப் பார்” என்று ஆணையிடுவார்கள்..! அவர் இங்கு வரும்போது வந்தி மூலிகை நிலத்தின் மேலே எழுமானால் அவர் புனிதமான, புண்யமான ஆத்மா என்று புலனாக்குவார்கள்..! பவள வந்தி, கீழ் வந்தி, சூரிய வந்தி, காளிங்க வந்தி என்று 24 தலைமுறைகளுக்கான வந்தி வகை மூலிகைகள் உண்டு..! இதில் காளிங்க வந்தி மூலிகா சக்திகள் நிறைந்த புண்ய பூமியே அலவந்திபுரமாகும்..! பிரளய ஆழிச் சுழல்களின் போது சர்வேஸ்வரன் ஆழிச் சக்கரத்தை இங்குதான் நிலை நிறுத்தி பிரளயத்தைச் சாந்தப்படுத்துவார்.!
துவாபர யுகத்தில் அதர்மக் காரியங்கள் தலை தூக்கியபோது ஸ்ரீகிருஷ்ணன் தம் சுதர்சனச் சக்கரத்தை இங்குதான் தேவ மையமாகக் கொண்டு அதர்ம அலைகளை அடக்கினார்..! மேலும் காளிங்கனுடைய விடத்தால் ஆயர்பாடி நீர்த் தடாகத்தில் விஷத் தன்மைகள் மண்டி, பேரலைகளும் பெருகி அண்டத்தையே ஆட்டிய போது ஸ்ரீகாளிங்க நர்த்தனப் பெருமாளாக, பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடியில் காளிங்க நடனம் ஆடினாரல்லவா! இதற்குப் பின், கோளங்களெங்கும் பொங்கிய விஷ வாயுச் சூறாவளியைப் போக்கி, அண்ட சராசரங்களிலும் ஆத்ம சாந்திப் பிரவாகத்தை மையமாக ஊட்டிட, க்ஷண நேரத்தில் மற்றுமொரு சாந்த காளிங்க நடனமாடிக் காட்சி தந்த திருத்தலமே அலவந்திபுரம்.!
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
அலவந்திபுரம்
இந்திரன் சாந்த யோகம் பெற்ற தலம்! காமக் குற்றங்களால் மேனியெங்கும் யோனிக் கண்களைச் சாபமாகப் பெற்று இமயத்தில் தடாகத்தில் மறைந்து வாழ்ந்த இந்திரன் யோனிக் கண் பெருக்கால் ஆத்ம சாந்தியை இழந்து வருந்திய போது வந்தி வரத சித்தர் பெருமானை தரிசித்தான்! சித்தர்பிரான் தந்த பிராயச்சித்தத்தின்படி சாந்தம் தவழும் புண்ணிய பூமியைத் தேடி, அலவந்திரபுர தேவபூமியை அடைந்து வந்தி மூலிகையின் வடதிசை வேரின் பால் அமர்ந்து யோகம் பூண்டு புனிதம் பெற்றான்.! முதலில் தேவேந்திரனுக்கு புனித பங்கம் இருந்தமையால் வந்தி மூலிகையின் இருப்பிடமே தெரியவில்லை..!
இந்திரன் இல்லாது முப்பத்து முக்கோடி தேவலோகங்களும் ஸ்தம்பித்தமையால் வந்தி வரத சித்தர் தேவர்களுடைய பிரார்த்தனைக்காக திருமாலின் உத்தரவின்படி வந்தி மூலிகையின் வடக்கு வேர் இருக்குமிடம் மட்டும் குறிப்பால் உணர்த்தி இந்திரனை யோகத்தில் ஆழ்த்தி அவனுடைய மனக் கொந்தளிப்புகளைச் சாந்தமடையச் செய்து சாப விமோசனம் பெற உதவினார்...! இவ்வாறாக தேவ, அசுர, மானுட லோகங்களில் காமக் குற்றங்களினால் பெருகுகின்ற மனச் சஞ்சலங்களுக்கும், அங்கக் குற்றங்களுக்கும் வந்தி மூலிகையின் ஔஷத சக்தியால், ஸ்ரீவந்தீயப் பிராயச்சித்த முறைகளை வந்தி வரத சித்தரின் தவப் பலன்களாகப் பெற்றுத் தருவதே அலவந்திபுரத் திருத்தலமாகும்! மேலும் வந்தி மூலிகைச் செடியானது இயற்கையிலேயே உஷ்ணம் நிறைந்ததாகும். ஆனால் வேர்ப் பகுதி மட்டும் பனிக் கட்டி போல் ஜில்லென்று குளுமையாக இருக்கும்.. இலைகள், தண்டுகள், பூக்கள் சற்றே உஷ்ணமாகக் காணப்படும்.!
நல்வரவழி தரும் வந்தி வரத சித்தர்! பூலோகத்திலும், மேலுலகங்களிலும் வந்தி மூலிகைகள் மிக மிகக் குறைந்த இடங்களிலேயே காணப்படுகின்றன.! வந்திச் செடி வேரின் கீழ் இறை ஆணையால் தோன்றியவர் ஆதலாலும், வந்தி மூலிகைக்கான காப்பு, கட்டு, இரட்சா மந்திரங்களில் நல்லுபதேசம் பெற்றுக் கரை கண்டவர் ஆதலாலும் வந்தி வரத சித்தர் என்ற காரணப் பெயரைப் பூண்டார்.. திருமாலுடைய அனைத்து அவதாரங்களிலும் ஜீவன்களுக்கு நல்வரம் நல்கும் மூர்த்தியே ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆவார்.! ஸ்ரீவரதராஜ மூர்த்தியிடமிருந்தே வந்தி மூலிகையின் ஔஷதப் பரிபாலன நல்வரங்களைப் பெற்றமையாலும் வந்தி வரத சித்தர் ஆனார்.! ஒரு யுகத்தில் வந்தி மூலிகை வகைகள் பலவும் கொழித்திருந்த புண்ய பூமி இது! எத்தகைய நோய்களுக்கும், காமப் பாவங்களுக்கும் இன்றும் பிராயசித்தப் பரிகார முறைகளைத் தருகின்ற மூலிகை! பிழை செய்து பரிகாரம் தேடி மீண்டும் பிழை செய்கின்ற கோணல் புத்தி கலியில் பெருகி வருவதால் பலரும் வந்தி மூலிகையைத் தவறாகப் பயன்படுத்துவர் என்பதால் ஸ்ரீசாகம்பரி தேவியே இம்மூலிகையை கலியுகத்தில் மாமறைபோல் இப்புண்ய பூமியின் நிலத்தின் கீழ் மறைத் தாவரமாக ஆழ்நிலையில் வைத்துள்ளாள்..! புனித ஆத்மா வருகையில் இன்றும் வந்திச் செடி இங்கு நிலம் மேல் தோன்றும்..!
காளிங்கன் நாகத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.! யமுனை நதியில் காளிங்கன் நாகன் பதுங்கி வாழ்ந்த போது அதன் சுவாசத்தால் அப்புனித நதியில் விஷ சக்திகள் கலந்தன! புனித நதியாக வழிபட்டு நீராடிப் பலரும் கழித்த பாவச் சுமைகளுடன், காளிங்கனின் விஷ ஜுவாலைகளையும் யமுனா தேவி ஏற்று ஜீவன்களுக்கு நல்லருள் புரிந்தாலும் தன்னுடைய தேகத்தில் தாங்கொணா காளிங்க உஷ்ணத்தை ஏற்றமையால் பரிதவித்துப் போனாள்..! ஸ்ரீகிருஷ்ணனின் வாக்குப்படி அவரே வந்து புனித நீராடித் தன் உஷ்ணச் சுமையைப் போக்குவார் என்று எண்ணினாள் யமுனை தேவி! ஸ்ரீகிருஷ்ணனோ இறை லீலையாக அவளுடைய பக்தியைச் சோதிக்கும் பொருட்டு வேண்டுமென்றே தன் வருகையைத் தாமதப் படுத்தவே யமுனையும் கோபத்தால் பொங்கி விட்டாள்..!
கும்பகோணத்தில் மகாமகத் தீர்த்தத்தில் ஒவ்வொரு மாதத்தின் மக நட்சத்திர நாளிலும் அனைத்துப் புண்ய நதி தேவதைகளும் தங்கள் பாவச் சுமைகளைக் கழித்துப் புனித நீராடி இதனுள் சூட்சுமச் சக்கரங்களாகப் பதிந்துள்ள ஸ்ரீகும்பேஸ்வர கலசங்களின் மூலமாகப் பெறுதற்கரிய புனிதச் சுடர்கலை ஏற்றுச் செல்வர்..! அலவந்திபுர பூமியின் புண்ணிய நீரோட்டங்கள் பலவும் மகாமகக் குளத்தின் கும்ப ராஜ சக்தி நீரோட்டத்துடன் தெய்வீகத் தொடர்பு கொண்டவை.! வந்தி மூலிகா சக்தியும், அலவந்திபுர ஆழ்நிலை நீரோட்டம் மூலமாக மகாமகத் தீர்த்தத்தை வந்தடைந்து பலகோடி மனிதர்களும் பல புண்ய நதிகளில் கரைத்த காம சம்பந்தப்பட்ட பாவச் சுமைகளிலிருந்து நதி தேவதைகளைக் காக்கின்றது..!
ஸ்ரீசீதாதேவி ஸ்ரீலட்சுமணர் சமேத
ஸ்ரீபெருமாள் அலவந்திபுரம்
யமுனையின் துயர்தீர்த்த அலவந்தி : யமுனை நதி தேவி இங்கு வந்து நீராடியபோது அலவந்திபுரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் காட்சி தந்து யமுனா தேவிக்கு வந்தி மூலிகா வேர் மாலையை அணிவித்திட, அதனுடைய வேரின் அதியற்புத சீதளத் தன்மையால் யமுனையில் பதுங்கிய போது காளிங்கன் சுவாசத்தால் வெளியிட்ட விஷ ஜுவாலைகளின் பெரும் வெப்பம் யமுனையின் திருமேனியிலிருந்து உடனேயே மறைந்தது..!! இன்றைக்கும் கும்பகோணம் மகாமகக் குளக் கரையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஸ்ரீயமுனா தேவியின் திருஉருவத்தைத் தரிசித்து வந்தி மூலிகையின் மகத்தான சக்தியை உணர்ந்து யமுனா தேவியின் ஆசியுடன் காமக் குற்றங்களுக்குத் தக்கப் பிராயச்சித்த வழிமுறைகளைப் பெற்றிடுவீர்களாக.! இவ்வாறு யமுனா தேவியை பீடித்திருந்த காளிங்கன விஷ சக்திகள் தீர்வு பெற்று யமுனா தேவி ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்ற புனித நேரமே விஷ்ணுபதி புண்ய காலமாகும்..!
கற்புக்கனல் பானுமதி தேவி! : துரியோதனனுடைய பத்னியான பானுமதி தேவி கற்பிற் சிறந்த பதிவிரதை, அவள் பலவிதமான சுமங்கலி பூஜைகளைப் பக்தியுடன் கடைபிடித்து வந்தாலும் துரியோதனனோ பாண்டவர்களை வதைப்பதிலும், இராஜ்யத்தைப் பெருக்குவதிலும் தன் கவனத்தைச் செலுத்தியமையால் பானுமதியின் உண்மையான அன்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனை நல்ல இறைநெறிகளில் செலுத்த அவள் முயன்றும் துரியோதனன் அசட்டையாகவே இருந்தான்..!
தன்னுடைய பவித்ரமான அன்பைப் புரிந்து கொண்டு துரியோதனன் நல்வாழ்வு பெறத் தக்க வழிபாட்டு முறைகளை அறிவதற்காகப் பல தலங்களை தரிசித்து வந்த பானுமதி தேவி மகாமகத் தீர்த்தத்தில் நீராடிய போது அலவந்திபுர வந்திப் பூவின் தெய்வீக ஒளியாலும் தேவ நறுமணத்தையும் உணர்ந்து இத்திருத் தலத்தைத் தரிசித்திட ஓடோடி வந்தாள்..! பொதுவாக, புனிதம் உடையோர்க்குத்தானே வந்தி மூலிகையே தென்படும்.! ஆனால் அதன் நறுமணத்தையே தொலைவில் இருந்தவாறு நுகர்வதெனில் என்னே அவள் பதிவிரதா தன்மையின் மகிமை, பானுமதியின் புனிதமான, பதிவிரதா தீர்க லட்சணங்களைக் கண்டு ஆனந்தித்த வந்தி வரத சித்தர், அவளுடைய கடினமான பிரார்த்தனையை தீர்க தரிசனத்தால் உணர்ந்து கொண்டார்..!
வந்தி வரத சித்தரை வீழ்ந்து வணங்கிய பானுமதி தனக்குரிய பூஜா முறைகளை உபதேசிக்க வேண்டினாள்! வந்தி வரதரோ முக்காலமும் உரைக்கும் மாமுனிச் சித்தர்! துரியோதனனின் விதியை நன்கு உணர்ந்தவர்..! எனினும் இக்கட்டான சூழ்நிலைகளில் பானுமதியின் பதிவிரதா பூஜைகளின் பலன்களாக பானுமதிக்கு வந்தி மூலிகை வடக்கு வேர் பூஜை முறையுடன் வந்தி மூலிகையின் வடக்கு வேர்க் கீற்றுக்களையும் அவர் பானுமதிக்கு அளித்து, “ஒரு மண்டலம் இதை வைத்துப் பூஜித்துப் பாலில் ஊற வைத்து, துரியோதனனுக்கு அளித்திடுவாயாக,,! மதி பிழையாது இருப்பின் விதிப் பிழை நடக்கும்”, என்று பரிபாஷை தொனியில் ஆசிகளைப் பதித்து அவளை வழியனுப்பினார்.!
மதியா விதியா, விதியில் மதியா?
மதி பிழையாது இருப்பின் விதிப் பிழை நடக்கும் என்ற சித்தருடைய வாக்கியத்தில்தான் விதிக் கட்டுச் சுருள் நிறைந்திருப்பதை பானுமதி உணர்ந்தாலும், “தன் முயற்சியைச் செய்வோம்.!” என்று மனம் தேறி பூஜையை நன்முறையில் முடித்தனள்.. வந்தி வேர் ஊறிய பாலைப் பிரசாதமாக எடுத்து வைத்துத் துரியோதனனுக்கு அளிப்பதற்காகக் காத்திருந்தாள்..! அப்போது துரதிஷ்டவசமாக மதுவால் அறிவு மயங்கி வந்த துரியோதனனின் மதி பிழை செய்தமையால் அவன் பிரசாதப் பால் பாத்திரத்தைத் தட்டி விடவே பால் தரையில் கொட்டியது.! பானுமதி வருந்தினாள்..! மதியின் பிழையால், விதிபிழை செய்யாது, விதி விதித்தபடியே நடந்தது..! போதாக் குறைக்கு தன் வருத்தச் சுவட்டில் பானுமதியும் கொட்டிய பாலைப் பத்திரப் படுத்த மறந்தமையால் அவள் மதியும் பிழை செய்தது, ஏனெனில் அதில் ஒரு துளியையாவது துரியோதனனுடைய நாக்கில் தேன் மருந்து போல் தடவியிருந்தால் ஆங்கே தேவ அற்புதங்கள் நிகழ்ந்திருக்குமே! ஆனால் விதி வலியதன்றோ! விதி பிழை செய்யாதே! இவையெல்லாம் இருடிகளின் மகாபாரதத்தில் அருமையாகக் விளக்கப்பட்டுள்ளன!
நாகங்களுக்கு ஏற்பட்ட சாபங்களால் அவைகளுடைய தேவதையான கார்க்கோடகனுக்குத் தன்னுடைய குலத்தைப் பலவிதமான சாபங்களிலிருந்து மீட்க வேண்டிய தேவ கடமை உண்டாயிற்று..! உண்ணா நோன்பிருந்து கார்க்கோடகன், கற்பில் சிறந்த காரிகையின் திருவடி தரிசனத்தை தினந்தோறும் பெற்று கற்புக்கரசி நைவேத்யம் செய்கின்ற பிரசாதத்தை உண்டு நாகங்களுக்குக் சாப விமோசனம் பெற்றுத் தரவேண்டும் என்பதே கார்க்கோடகன் தன் குலத்தைக் காக்கப் பெற்ற வரமாகும்..! எனவேதான் கார்க்கோடகன் யாவரும் அறியா வண்ணம் கற்புக்கரசியாம் பானுமதியின் திருவடி தரிசனத்திற்காகத் துரியோதனின் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு புற்றில் குடிகொண்டு பூஜை செய்து வந்தது..!
இறை லீலையாக பானுமதி பூஜித்து வைத்த பிரசாதப் பாலானது துரியோதனனால் தட்டி விடப்பட்டுக் கீழே சிந்திடவே, அங்கு நடந்த இறை லீலைகளை அறியாத கார்க்கோடக நாகம் சிந்திய பாலைப் பிரசாதமாக ஏற்றுத் தன் விஷ நாக்கினால் நக்கி அதனை அருந்திடவே அதன் விஷ ஜுவாலைகள் தணிந்தது, ஆனால் பூஜையின் சங்கல்பம் காரணமாக அதற்கு பானுமதியின் மேல் தீரா மோகமும் ஏற்பட்டு விட்டது.! பானுமதி கற்பில் சிறந்து விளங்கியமையால் கார்க்கோடக நாகம் அவளிடம் தோன்றிய கற்புக் கனலுக்கு அஞ்சியது..! அவ்விடம் சிந்திய பாலை அறியாமையால் அருந்தியதால் தனக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள மோக நிலையைத் தெரிவித்திட, பானுமதி பெருங்கவலை கொண்டாள்! பூஜை முறை என்று வரம் கேட்காமல் நேரடியாகவே பலன்களைக் கேட்டிருக்கலாமே என்று அவள் எண்ணினாள்! அவள் மதியும் அங்கு பிழை செய்ததே! ஆனால் ஸ்ரீகிருஷ்ண லீலைகளை எவர்தான் பகுத்துணர முடியும்.! ஒன்றினுள் பலவாக அவர் பின்னுகின்ற இறை லீலைகள்தாம் எத்தனை? எத்தனை? இதற்குள் துரியோதனனும் மயக்கம் தெளிந்து நிலையை உணர்ந்து மிகவும் கவலையுற்றான்.! தீய வழியில் சென்று தன் மதி பிழையுற்றதால் உத்தம பத்தினியான பானுமதிக்கும் சோதனை ஏற்பட்டுவிட்டது கண்டு மனம் துடித்தான்..! நடந்தது, நடந்து விட்டது, இப்போது என்ன செய்வது?
நாக பூஜையே நாகத்திற்கும் நற்பரிகாரம்! நாக தேவதா அம்சம் பொருந்தியதாலும், நாக சித்தர்களின் தரிசனம் பெற்றிருந்தமையாலும் கார்க்கோடக நாகமே இதற்கு ஒரு பிராயச்சித்த வழியைத் தந்திட்டது! பௌர்ணமி தோறும் துரியோதனனும் பானுமதி தேவியும் சேர்ந்து கார்க்கோடக நாக பூஜையைப் பல தலங்களில் செய்து வழிபட வேண்டும் என்பதே அந்தப் பரிகார வழிமுறையாகும்..! இவையாவும் இறைலீலைகள் தாமே.! ஏனென்றால் கார்க்கோடகனுடைய விஷ ஜுவாலைகளுடன் காமத் தீயும் பல்கிப் பெருகியிருந்தால், இந்தப் பிரபஞ்சமே கடும் காமாக்னியால் தகித்திருக்கும்தானே..!
வந்தி வரத சித்தர் அருளிய ஸ்ரீவந்தி மூலிகா பூஜை முறையால் அவளுடைய பதிவிரதப் புண்ய சக்தியால், ஒவ்வொரு பௌர்ணமி நாக பூஜையின் பலன்களாக கார்க்கோடகனின் விஷ ஜுவாலைத் தன்மைகள் பரவெளியில் தணியலாயின! ஆனால் துரியோதனனின் மதி மீண்டும் பிழை செய்தமையால் ஒரு குறிப்பிட்ட பௌர்ணமியில் பங்கு பெறத் தவறியதால் பூஜா பலன்களை இழந்தான்.! ஆனால் இறைச் சங்கல்பத்தின்படி கார்க்கோடக நாகத்தின் அபரிமிதமான் விஷத் தன்மைகள் தணிக்கப்பட்டு காமத் தீச்சுடர்கள் அணைக்கப் பெற்று பரவெளி தூய்மை பெற வேண்டும் என்பதற்காகவே பதிவிரதா தேவியாம் பானுமதி தேவி மூலமாக இந்த இறை லீலை நடந்தது..! மேலும் வந்தி மூலிகையின் மகத்துவமும் பானுமதி தேவி மூலமாக பிரபஞ்சத்தில் பல அண்டங்களிலும் உணரப் பெற்றது..! இவ்வாறாக பானுமதி தேவி துரியோதனனுடைய தீய சக்திகளையும், விஷ ஜுவாலைகளின் தன்மைகளையும் தன் பதிவிரதா தன்மையால், வந்தி மூலிகா பூஜையால் தணித்தாள்..!
அலவந்திபுரம்
அலவந்தியில் ஆதவன் பெறும் அற்புத சக்தி! பானுமதியின் கற்புக் கனல் கிரணங்களால் சூரிய பகவானே பல சக்திகளைப் பெற்றார்.! இதுவே கற்புக்கரசிகளின் பெரும் பாக்யமாகும்.! பானுமதி மூலமாகவே சூரிய பகவான் வந்தி மூலிகையின் மகா சக்தியை உணர்ந்து அந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் பல மகரிஷிகளுடனும் ஸ்ரீகிருஷ்ணனை இத்தலத்தில் தரிசித்து அன்றிலிருந்து விஷ சக்திகளை நிவர்த்தி செய்கின்ற விசேஷமான சூரிய கிரணங்களை இத்தலத்திற்குச் செலுத்தலானார்..! இன்றைக்கும் அலவந்திபுரத்தில் திகழ்கின்ற் தேவ சூரிய கிரணங்கள் விஷ சக்திகளை நீக்கும் தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன என்பது இறை அற்புதங்களில் ஒன்றாகும்.! மற்ற இடங்களில் போல் அல்லாது இறையற்புதமாக இங்கு சூரிய கிரணங்கள் முதலில் பூமியில் பட்டு வந்தி மூலிகைகளின் சக்திகளைக் கிரகித்து பிரதிபலிக்கப்பட்டு விஷ சக்திகளை நீக்கும் விமலச் சுடர்களாகப் பரிமளிக்கின்றன என்பதை ஸ்ரீகிருஷ்ணன் பிரபஞ்சத்திற்கு உணர்வித்த காலமும் விஷ்ணுபதி புண்ய காலமாகும்..!
மேலும் துரியோதனனுடைய சாம்ராஜ்யத்தில் தான தர்மங்களைப் பரந்த அளவில் நிகழ்த்தி நாட்டில் தர்மம் நிலவச் செய்தவளும் பானுமதி தேவியே ஆவாள். கார்க்கோடகனுக்கு அளித்த வாக்குப்படி அதன் மனதில் எழுந்த முறையற்ற காம மோகத்தைத் தணிப்பதற்காகப் பௌர்ணமியில் தம்பதி சகிதம் நாக பூஜை செய்து வந்த பானுமதிதேவியின் வந்தி மூலிகைப் பூஜா சக்தியே கார்க்கோடகனுக்கும் சென்றடைந்திடவே நாகமும் இதன் பலன்களால் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்றது! பானுமதியின் ஸ்ரீவந்தீய பூஜையால் கார்க்கோடகன் மற்றும் அதன் வம்ச நாகங்களின் கொடிய விஷ சக்திகள் தணிக்கப் பெற்று ஆகாசமும் தூய்மை பெறத் தொடங்கியது. நாகங்களுக்கு ஏற்பட்ட சாபமும் தீர்ந்தது! இவ்வாறாகக் கார்கோடக நாகத்தின் விஷ ஜுவாலைகள் தணியப் பெற்றுப் பிரபஞ்சமே காமத் தீயினால் பாதிக்கப்படாது காக்கப்பெற்றுப் பல புனித வைபவங்கள் நிகழ்ந்த நேரமே விஷ்ணுபதி புண்ய கால நேரமாகும்! இவ்வாறாக புண்ய காலத்தில் அலவந்திபுரத் திருத்தல மகிமையாக எண்ணற்ற தேவ சம்பவங்களையும், பூலோக நற்காரியங்களையும் புனிதப்படுத்திய நேரமே விஷ்ணுபதி புண்ய காலமாகும்..!
காளிங்கன விடச் சுழல் கரைந்(த்)த கிருஷ்ணத் தலம்! காளிங்கனுக்குப் பல ஆயிரம் தலைகள் உண்டெனினும் அவை ஐந்தாய் மாறி பிரபஞ்சத்தில் பஞ்ச பூத வாயுக்களில் விஷத்தைப் பரப்பியது.! ஆயர்பாடி மடுவில் உள்ள நீரும் விஷ உஷ்ணத்தால் தகித்தது.! காளிங்கன் பெருக்கிய விஷ ஜுவாலைகளால் சுவாசச் சுழல்கள், அக்னிச் சுழல்கள், நீரோட்டச் சுழல்கள், நீர்ச் சுழல்களாகப் பெருகிப் பூலோகத்தின் பல இடங்களிலும் ஆழிச் சுழல்களைப் பெருக்கியது.! இவையெல்லாம் அடங்கிய இடமே அலவந்திபுரம் ஆகும்..! மேலும் பானுமதி தேவியின் பதிவிரதாப் பௌர்ணமிப் பூஜையால் வந்தி மூலிகா பூஜா பலன்களால் இங்குதாம் கார்க்கோடகனின் அனைத்து விஷத் தன்மைகளும் அடங்கின. ஸ்ரீகிருஷ்ண் பரமாத்மா பலவிதமான நாக பூஷண நாட்டியங்களை ஆடி, பிரளயத்தின் எஞ்சிய ஆழிச் சுழல்களையும், கார்க்கோடகன் மற்றும் காளிங்க நாகங்களின் விஷ ஆழிச் சுழல்களையும் அடக்கிப் பிரபஞ்சத்தைக் காத்த நேரமே ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலமாகும்!
தீயோரைத் திருத்தும் திருமால் திருத்தலம்! மேலும் ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனின் சிரசு மீது ஏறி நடனம் புரிவது என்பதும் காளிங்கன் நாகத்திற்கு ஒரு பாக்யமாக அமைந்ததுதானே! மக்களைத் துன்பப்படுத்திய காளிங்கனுக்கு இது எப்படி சாத்யமாகும்? நல்லதும் கெட்டதும் பிரபஞ்சத்தில் ஒன்றாய்த்தான் உலகில் நிரவியிருக்கும்..! உத்தமத் தெய்வீக நிலைகளில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது.. அனைத்துமே அவரவர் கர்ம வினைப்படி நடக்கும் என்பதையே இறைப் புராணங்கள் உணர்த்துகின்றன.. இவை யாவும் சித்தர்களுடைய இருடிகள் ராமாயணம், இருடிகள் மகாபாரதம், இருடிகள் பாகவதம் போன்ற எழுதாக் கிளவி குருவாய் மொழிகளாக உணர்விக்கப்படுபவை ஆகும்!
காளிங்கனுக்கு ஸ்ரீகிருஷ்ண நடன பாக்கியம் கிட்டியது வந்திய மூலிகா சக்தியால்தான்! யமுனை நதியில் பதுங்கியமையால் புண்ய நதியில் நீராடிய புண்யத்தால் அவதார மூர்த்தியின் திருவடிகளை சிரசில் தாங்கும் பாக்யம் பெற்றான்! என்னே புனித நதிகளின் மகத்வம்! காளிங்கனும் தன் விஷ ஜுவாலைச் சக்திகளையெல்லாம் ஆயர்பாடி மடுவில் கக்கிட, அவற்றை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா திரட்டி இவையாவையும் தன்னுள் தாங்கிப் புனிதம் செய்யும் ஒரே தலம் வந்தி மூலிகாச் சக்திகள் நிறைந்த அலவந்திபுரம் என்பதால், இங்குதான் மற்றொரு காளிங்கன் சாந்த நடனக் கோலம் மூலம் அந்த விஷவாயு சக்திகளை அடக்கி அனுக்கிரக நடனக் கோலம் பூண்டார்..! இறைத் திருவடிகள் பட்டு, புனிதம் பெற்ற காளிங்கன், ஸ்ரீகிருஷ்ணனிடம் காளிங்கன வதை நடனம் இல்லாது, காளிங்கன வதன நடனம் வேண்டிப் பிரார்த்தனை செய்த இடமும் இதுவே.!
விடந் தீர்த்த விடங்க நடனம்! காளிங்கனுடைய விஷ ஜுவாலைகள் அலைகளாகத் திரண்டு வந்து அந்திமம் (முடிவு) அடைந்த புரமே அலவந்திபுரம் ஆகும்..! எப்போதுமே விஷத்தை விஷத்தாலும், அக்னியை அக்னியாலும் தான் தீர்வு பெற முடியும்.. ஆயிரமாயிரம் கரங்களை அற்புத வரங்களால் பெற்றுத் தவறான முறையில் அவற்றைப் பயன்படுத்திய அசுரர்களை வதைக்க அம்பிகையும் மஹிஷாசுரமர்த்தினியாய், துர்கையாய், காளிதேவியாய்ப் பல்லாயிரம் கரங்களுடன் ஆயுதங்களைத் தாங்கினள்..! இதேபோல காளிங்கனுடைய விஷ ஜுவாலையில் உள்ள வெப்பத்தைத் தணிப்பதற்கு வந்தி மூலிகையில் நிறைந்துள்ள அலகாக்னி என்ற ஒருவித அக்னி சக்தியே உதவியது..! இந்த அலகாக்னி சக்தி நிறைந்திருப்பது வந்தி மூலிகையில்தானே..! எனவே வந்தி மூலிகை குடி கொண்டிருக்கும் இடமே அலகாக்னிவந்திபுரமாக, அலவந்திபுரமாக ஆயிற்று., வந்தி வரதச் சித்தர் தம்முடைய ஹோம வேள்வி யாகங்களில் வந்தி மூலிகைச் செடியில் உள்ள அக்னியையே எடுத்து ஹோமத்தில் அவர் இடுகின்ற ஒரே ஆகுதியும் வந்தி சமித்துகள் ஆகும்..! இதனால் அலகாக்னி சக்திகள் நிறைந்த வந்தி வரத சித்தரின் இருப்பிடமே அலவந்திபுரமாயிற்று.!
நரசிம்மர் உக்ரம் தீர்த்த சீ(ஸ்ரீ)தள வந்திய நாட்டியம்! காளிங்கனுடைய விஷ வாயுக்கள் அலைபோல் வந்து அடங்கிய இடமும் அலவந்திபுரமே..! இங்கு மூலவராய் ஸ்ரீலட்சுமிநாராயணர் காட்சி தருவதன் காரணமென்ன? தம்முடைய நரசிம்ம அவதார அக்னியைத் தணித்திட நரசிம்மபுரத்தில் ஸ்ரீநரசிம்மர் பலவித நடனங்களைப் புரிந்து உஷ்ணத்தைத் தணிக்கும் சீதள வந்திய நாட்டியத்தை தரிசித்த தலமும் இதுவே! பொதுவாக சீதள வந்திய நாட்டியம் என்பது தம்பதி இருவரும் சேர்ந்து ஆடுகின்ற நடனமாகும். ஸ்ரீநரசிம்மருடைய அக்னி சக்தியைத் தணித்திட ஸ்ரீலட்சுமி சமேதராய் ஸ்ரீநாராயண மூர்த்தி இங்கு தோன்றி வந்தி செடி நிழலில் காட்சி தந்து சீதள வந்திய நாட்டியத் தாத்பர்யங்களை ஸ்ரீநரசிம்மருக்கு ஓதுவித்தார். இதனால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியினுடைய அதிஉக்ர வெப்ப சக்திகள் பலவும் பெருமளவிற்குத் தணிந்தன.! இந்த இறை லீலைகள் யாவும் நிகழ்ந்த புனிதமான நேரமே விஷ்ணுபதி புண்ய கால நேரமாகும்.!
எனவே வர இருக்கின்ற விஷ்ணுபதி புண்ய காலத்தின் விஷ்ணுபதிப் புண்ய ஸ்தலமாக விளங்குகின்ற அலவந்திபுரத்தில் 15.5.2001 புதன் கிழமை பின்னிரவு 1.30 மணி முதல் 16.8.2001 வியாழன் காலை 10.30 மணி வரை விஷ்ணுபதிப் புண்ய காலத்தை அபிஷேக ஆராதனைகளுடன், வஸ்திர தானம், அன்னதானம், மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான தர்மங்களுடன் கொண்டாடுவோர்க்குப் பல அற்புதமான பலன்கள் கிட்டுகின்றன.! சித்த திருக்கணித முறைப்படி ஆடி மாதத்திற்கு 32 தினங்கள் அமைவதால் பிற பஞ்சாங்கக் கணித முறைகளில் 31 நாட்கள் இருப்பதால் மேற்கண்ட விஷ்ணுபதித் தேதி வித்தியாசங்களை நன்கு கவனித்துப் பூஜைகளை மேற்கொள்ளவும்! நாம் இங்கு சித்தர்கள் உரைக்கின்ற சுத்தத் திருக்கணித முறையைக் கடைபிடிக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.! வரும் விஷ்ணுபதிப் புண்ய காலத்தை அலவந்திப்புரம் ஸ்ரீகாளிங்கன நர்த்தனப் பெருமாள் ஆலயத்தில் கொண்டாடுவதல் கிட்டுகின்ற பலன்களைப் பல காண்டங்களாக விரித்திடலாம் எனினும் சிலவற்றை மட்டும் இங்கு அளிக்கின்றோம்.!
விஷ்ணுபதிப் பூஜாப் பலன்கள்!
1 பில்லி, சூன்ய வசிய மந்திரங்களால் அவதிப்படுவோர் இங்கு விஷ்ணுபதிப் பூஜையைக் கொண்டாடிட, வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.. தீவினைச் சக்திகள் நிச்சயமாக அகன்று நிம்மதி உண்டாகும்.!
2. திருமணம் ஆகியும் பிற கன்னிப் பெண்கள் மீது மோகம் கொண்டு முறையற்ற காம எண்ணங்களில், காமத் தீயச் செயல்களில் ஈடுபடுவோர் தக்கப் பிராயச்சித்தம் பெற இங்கு வழிபட வேண்டும். பௌர்ணமிதோறும் இங்கு வழிபடுவது சிறப்பானது..! அருகம்புல், விளாமிச்சை வேர் ஊறிய பாலால் அபிஷேகிப்பதால், காமக் குற்றங்கள் தீர வழியுண்டு.! ஆனால் தன்னால் பாதிக்கப் பட்டோருக்குத் தக்க நிவாரணங்களை அளித்திட வேண்டும்.
3. திருமணமாகியும் திருமணம் ஆனோர் மீது இச்சை கொண்டு, காமக் குற்றங்களைச் செய்வோர், இங்கு விஷ்ணுபதிப் பூஜையையும், பௌர்ணமிப் பூஜையையும் நிகழ்த்துவதோடு சித்த மூலிகையான முத்தாரிப் பூ ஊறிய பசும் பாலால் அபிஷேகம் செய்து வருதல் வேண்டும்..! வறுமையால் வெறும் தாலிச் சரடையே கொண்டுள்ள ஏழை தம்பதியருக்கு பொன் மாங்கல்யம் அளித்தலால் இத்தகைய காமக் குற்றங்களுக்குத் தக்கப் பிராயச்சித்த வழிகள் கிட்டும்.!
4. திருமணம் ஆகாதோர், திருமணம் ஆனவர்கள் மீது முறையில்லாத விருப்பம் கொண்டு, காமப் பிழைகளைச் செய்வோர் இங்கு பௌர்ணமிதோறும் வழிபட்டு, இப்பிறவியிலேயே பிராயச்சித்தம் பெற விழைதல் வேண்டும்.! சித்த மூலிகா திரவியமான காட்டு மஞ்சள் அரைத்துக் கலந்த பசும்பாலால் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளித்து வருதல் வேண்டும்..!
பொதுவாக, காமக் குற்றங்கள் பெருக்கெடுக்கின்ற இப்பூவுலகில் காம எண்ணங்களே காளிங்கனுடைய, கார்க்கோடகனுடைய விஷ ஜுவாலைகள் போல் பெருகி வருவதால் இவற்றை நிவர்த்தி செய்யவல்ல அலவந்திபுரத்தில் அமைகின்ற, வருகின்ற விஷ்ணுபதிப் பூஜை (16.8.2001) பெறுதற்கரிய பாக்யமாகும். இத்தகைய காமக் குற்றங்களுக்குக் கலியுகத்தில் மிக மிக அரிதாகவே பிராயச்சித்தங்கள் தரப்படுவதால் இந்த அரிய தெய்வீக பூஜையை நழுவ விடாது நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் எத்தனை காலம் ஆனாலும் காமக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தங்களைப் பெறவே முடியாது.!
வந்தி வரத சித்தர் சூட்சுமமாகவோ, பல வடிவுகளிலோ நித்திய பூஜை செய்யும் ஸ்தலமே அலவந்திபுரம். மேலும், பல கோடி யுகங்களில் பல் விஷ்ணுபதி பூஜைகளில் இத்தலத்தில் நிகழ்ந்த இறை லீலைகளைக் கண்டு ஆனந்தித்தவர் ஆதலாலும் பாக்கியம் உள்ளோருக்கும், பித்ருக்களின் ஆசி பெற்றோர்க்கும், குருவருள் கூடியோர்க்கும் உண்மையிலேயே மனதார வருந்தித் தம்முடையக் காமக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் தேடத் துடிப்போர்க்கும் அலவந்திபுர விஷ்ணுபதி புண்ய காலப் பூஜையே மாமருந்தாக அமைந்து வந்தி வரத சித்தரை ஏதேனும் ஒரு வடிவில் தரிசிக்கும் பாக்கியம் நிச்சயமாகக் கிட்டும்.!
பலவிதமான விஷக்கடி நோய்களால் வருந்துவோர், ரசாயனம் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்போர், நாகம், வண்டு, பூச்சிகள் நிறைந்த இடங்களில் பணிபுரிவோர், விஷம் போன்ற பகைவர்கள், விரோதிகளினூடே வேலை செய்வோர், ராணுவ வீரர்கள் போன்றோர் நன்முறையில் அமைதியுடன் வாழ்க்கை நடத்திட அலவந்திபுர விஷ்ணுபதி புண்ய காலப் பூஜை பெரிதும் உதவும்.! நீல நிற ஆடைகள், உணவு வகைகள், பழங்கள், நவரத்தினக் கற்கள் போன்றவற்றை இங்கு தானமாக அளித்தலால் தம்பதிகளிடையே நம்பிக்கையின்மை, உண்மையான அன்பில்லாமை போன்றவை தீர்ந்து சுமுகமான உறவு ஏற்படும்..! பொதுவாக தம்பதியினரிடையே பரிபூர்ணமான தெய்வீக அன்பு நிலவிடவும் இத்தலப் பூஜைகள் பெருந் துணை புரிகின்றன.! எனவே அலவந்திபுரம் ஸ்ரீகிருஷ்ணனை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தால், ஓய்வு பெற்று இல்லத்தில் இருந்து கொண்டு தெய்வீக விஷயங்களில் ஈடுபாடு கொள்ள விரும்புவோர் முதலில் தங்கள் உடலில், உள்ளத்தில், மனதில் இத்தனை வருடங்களாகத் தேக்கி வந்த விஷ எண்ணங்கள், விஷக் காரியங்களை நீக்கிப் புனிதம் பெறலாம்..!
வந்தி மூலிகா பலன் தந்திட தாந்த்ரீய ஹோமம்!
விஷ்ணுபதி நாளில் மட்டுமன்றி ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரியமான தினங்களில் இங்கு பாகம்பிரி, மஞ்சால் இலை, அச்சுமாரி வேர், ஷண்பக மொக்கு, காட்டு மஞ்சள், வலம்புரி, இடம்புரி, கார்போகம், மண்ணாளங் கிழங்கு, உளுமான் வேர்ப்பட்டை, சனிக் குதம்பை, உ(ளு)ந்துருணி மரப் பட்டை, பேய்ச்சிப் பொடுகு, வெள்ளருக்குக் காளான், சீந்திலான் கொடி, அருகுக் குடுவை வேர், பொருமி அரிசி, முத்தாரிப் பூ, வெண்ணாக் கடுகு போன்ற ஹோமத் திரவியங்கள், சமித்துக்களைக் கொண்டு இந்த ஆலயத்தில் ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீசுதர்சன ஹோமங்களை நிகழ்த்தினால், இவ்வரிய மூலிகைப் புகை பரவெளியில் பரவி உலகெங்கும் பரவும், காமக் குற்றங்களைத் தணிக்கும், குறிப்பாக இளைய சமுதாயம் தீய ஒழுக்கத்தின்பால் செல்லாமல் தடுக்கப்பட்டு, சமுதாயமே புனிதம் பெறும்..! வந்தி மூலிகையின் தரிசனம் தற்போது அரிதானது. எனவே மேற்கண்ட மூலிகைகள் கூடிய ஸ்ரீவந்திய ஹோமத்தை 8-ம் தேதி (ஆங்கிலத் தேதி, தமிழ்த் தேதி), அஷ்டமி, ரோகிணி, பானு வாரமாகிய ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌர்ணமித் திதிகளில் குருவருளுடன் முறையாக நிகழ்த்தி வந்தால் வந்தி மூலிகையின் பலன்களை ஓரளவேனும் பெற்று நாட்டிலும், உலகிலும் காமக் குற்றங்களைத் தணிக்கும் மகத்தான இறைச் சமுதாய பூஜையாக அமைகின்றது..! ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் புனிதமான உள்ளத்துடன் வாழ்ந்து உலகத்தில் புனிதம் பெருகிட, இந்த ஸ்ரீவந்திய ஹோம பூஜை பெரிதும் உதவும்.. இறைவழிபாடுகளால் தான் மனித சமுதாயத்தைப் புனிதமாக்க முடியும்.. இதற்குப் பெரிதும் துணை புரிவதே அலவந்திபுர ஸ்ரீகிருஷ்ண வழிபாடு.!
ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை |
ஸ்ரீஅருணாசலப் பெருமானின் இறைத் துணை அவதாரமாய்ப் பிரபஞ்சத்திற்கே அருள்பாலிக்கும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை! திருஅண்ணாமலையில் குடிகொண்டு பிரபஞ்சத்திற்கே அருள்பாலிக்கும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகையை அனைவரும், அனைத்து ஜீவன்களும் அறிந்தாக வேண்டும், அறிந்தும் உள்ளோம்! ஆனால் இறைப் பகுத்தறிவால் உணரப்படவில்லை! சகல லோகங்களுக்கும் ஜீவ ஜோதி விருட்சங்களைத் தந்து தாவரங்களைப் படைத்து உயிர்ச் சக்தி அளிக்கின்ற ஸ்ரீசாகம்பர்ய அம்பிகைக்கு முன் தோன்றியவள்! கருப்பை உயிர்க்கும், கல்லுறைத் தேரைக்கும் உணவூட்டும் சிவனின் துணையாம் அன்னபூரணிக்கும் ஆதியாய்த் தோன்றியவள்!
இறைவனுடைய ஒவ்வொரு அவதாரத்திற்கும் இறைவியாய் வடிவெடுத்து அவதாரக் கிருத்தியத்திற்குத் துணை புரிதல் என்பது எளிதல்லவே! செருக்கைத் தலத்தில் புஷ்பவல்லியாய், கூந்தலூரில் ஆனந்த வல்லியாய், இன்னம்பூரில் நித்ய கல்யாணியாய், சாக்கோட்டையில் உய்யவந்த அம்பாளாய் இன்னோரன்ன அவதாரங்கள் ஆவதற்கு ஆதி பராசக்தியே சாதாரண மனிதர் போல் பூஜித்து வாழ்ந்து, மஹரிஷியர் போல் கடுந்தவம் புரிந்து, யோகியர் போல் உடல் வருத்தி யோகம் புரிந்து, சித்தர்கள் போல் எந்நேரமும் ஜீவன்களுக்கும், பரப்பிரம்மத்திற்கும் இறைத் தொண்டுகளாற்றியே இறைவியாய்ப் பல அவதாரங் கொண்டனள்.! தவம் என்றால் ஓராண்டா, ஒரு நூறு ஆண்டா! பல கோடி சதுர்யுகங்களாய்த் தவம் பூண்டால்தான், அதுவும் இறைவனே மனம் வைத்தால்தான், இறைமணம் புரிந்து அவதாரமாய் மலர்தல் முடியும் என்ற இறைப் பெரு நியதியினின்று சற்றும் வழுவாத மாதவம்!
கோடித் தவம் பூண்டு கூடிய அவதாரம்! எல்லாம் வல்ல அருணாசலப் பெருமானின் இறைத் துணை ஆகுதற்காக எத்தனையோ கோடிச் சதுர்யுகங்களாய்ச் சாதாரண மனுஷியாய்த் தவம் பூண்டனள் அன்னை பராசக்தி! பிரபஞ்சத்தின் அருட்பெருஞ்ஜோதி மலை ஆதலின் ஒவ்வொரு சதுர் கோடி யுகத்திலும் விதவிதமான தவங்களைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று! ஒரு கோடி சதுர் யுகத்தில் அக்னி மேல் ஊசி முனையில் நின்றும், கொட்டும் மழையிற் கோடி யுகத் தவமும், பிரளய ஆ(ஊ)ழியில் ஆடாது அசங்காது (பல பிரளயத் தவம்), அங்க அசைவின்றி, பாத அசைவுகளுடன் மட்டும் கிரிவலம் பூண்டுப் பற்பல சதுர்ச் சதுர்க் கோடி ஆண்டுத் தவம், மஹரிஷியர்க்கும், ரிஷி பத்னியர்கட்கும் பாத பூஜை செய்து பல கோடி ஆண்டுத் தவம், 32 விதமான அறங்களை 32000 கோடி லோகங்களிற் செய்து பெருந்தவம்!
ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மண்டபம்
திருஅண்ணாமலை
இவ்வாறாகப் பலவிதமான தவங்களைச் செய்தே அம்பிகை அருணாசலப் பராசக்தியாக, உண்ணாமுலை அம்பிகை ஆகிட சதாசிவன் அருள் கூட்டினன் எனில் உண்ணாத நோன்பு பூத்து யாவர்க்கும் உணவளிக்கும் அமிர்த நாயகியாய் ஆயினள் என்று தானே பொருள்! இன்று ஒவ்வொரு வேளையும் நமக்கு மட்டும் அல்லாது ஒவ்வொரு ஜீவனுக்கும் தான் உண்ணாதிருந்து தம் முலைப் பராசக்தித் திருஅருளால் அன்னம் பாலிக்கும் ஆதிபராசக்தியே ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை! முலைப் பால் அன்னம் என்பது குழந்தைப் பருவத்தில் பெறுதற்கரிய பாக்யம்! தன்னுடைய புனிதமான முலைப் பாலைக் குழந்தைக்கு ஓர் உத்தமத் தாய் ஊட்டுகையில் க்ஷீரதேவதைகள் ஒன்று கூடித் தாய்மைக்குப் பாத பூஜை செய்கின்றன. எனவேதாம் முலைப் பால் ஊட்டுதலானது கருவறைப் பூஜையாக, புனிதக் காப்பாகப் போற்றப்படும் நற்காரிய வைபவமாகும்..! காமதேனுவின் சந்ததியான பசுக்களின் மடிக்காம்புப் பாலும் புனிதம் உடையதே.! தாய்ப்பாலின்றி வாடுவோர்க்குத் தாய்தாமே பசுக்கள்..!
முலை என்பது மிகவும் பவித்ரமான தெய்வீக அங்கமாகும்! ஆனால் தற்காலத்தில் இதனை ஆபாசப்படுத்தி வருவது மிகவும் வேதனைக்குரியது ஆகும்.! தாய்ப் பால் உண்டு புனிதமாக வளர்க்கப் பெற்ற மனித சமுதாயம் ஆசாபாசங்களுக்கு அடிமையாகி, கொச்சைப்படுத்திய அதர்மங்களுக்கு கொடுமையான பாவங்களையே சந்திக்க நேரிடும்!
அருணை கிரிவலம் கற்பின் புனிதங் காக்கும் மகா ரட்சையாம்! புனிதமான பெண் குலத்தை அவமதிப்போர் முறையற்ற காமத் தீயொழுக்கங்களுக்கு ஆட்படுத்துவோர், தாமே அந்த இழிநிலைகளுக்கு ஆட்பட்டு ஆவிகளாய், பிசாசுகளாய்ப் பிறப்பெடுத்து அவதியுற நேரிடும்! எனவே புனிதமான கற்பு நெறியைப் போற்றினால்தான் நாட்டில் மழை வளமும், நீர் வளமும், நில வளமும் உண்டாகும். வன்முறை, நீர்ப் பஞ்சம், போர் அபாயங்கள், உள்நாட்டுக் கலவரங்கள், பூகம்பங்கள், வறட்சி போன்றவை நாட்டில் நிலவுமாயின் அதற்கு முதற் காரணம் பெண்களின் புனிதமான கற்பைக் களங்கப்படுத்துவதேயாம்! உலகில் யாங்கணும் புனிதமான கற்பு நெறி துலங்கிட, மா(ந்)தர்கள் யாவரும் அருணாசல கிரிவலம் வருதல் வேண்டும்! ஆண்களும் இதற்கான கிரிவல சங்கல்பம் கொண்டு இதற்கு இறைப் பெருந் துணையாய் பக்தியுடன் பொலிந்திட பெருந் துணையாய் பக்தியுடன் பொலிந்திட அருணாசல கிரிவலம் வருதல் வேண்டும்!
உண்ணாமுலை அம்பிகை எனப் பெயர் பூணப் பல காரணங்கள் உண்டு.. ஸ்ரீஅபீத குஜாம்பாளாக, ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை இறைவனாலேயே பெயர் சூட்டப்பட பல காரணங்கள் உண்டு! ஸ்ரீஅருணாசலப் பெருமானின் இறைவியாய் மலர ஆதி பராசக்தி பல வடிவங்களில் பூஜித்த போது பசு வடிவிலும் க்ஷீராம்பிகையாய்ப் பூஜித்தாள்! சுயம்புக் காராம் பசு வடிவில் உண்ணா நோன்பு பூண்டு பிரபஞ்சமெங்கும் உள்ள அனைத்துக் கோடி சுயம்பு லிங்கங்களுக்கு தம் மடிப் பாலைச் சொரிந்து பூஜித்தாள்..! இதனால் பூலோக மாதர்களுக்கு புனிதமான தாய்ப் பால் தத்துவம் பொ(ப)திந்ததுடன் அம்பிகை வார்த்த பால் அபிஷேகத்தால் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களுக்குமான தாவர மற்றும் அனைத்து உணவு சக்திகளும் கிட்டி அன்னபூரணி, சாகம்பரி அவதாரிகைகளும் கைகூடின.!
தாம் உண்ணா நோன்பிருந்து தெய்வீகப் பசுவாய் பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி லிங்கங்களுக்கும் பால் சொரிந்து அபிஷேகித்துச் சகல உலகங்களுக்கும் அன்ன சக்தி அளிக்கின்றமையால் உண்ணாமுலை அம்பிகையாய் இன்று பிரபஞ்சத்தின் பராசக்தித் தாயாய் அருள்பாலிக்கின்றாள்!
திருஅருணை கிரிவலம்
காத்துக் கொள்வீர் திருஅண்ணாமலை கிரிவல சக்திகளை! நிலைபெறட்டும் உங்களிடம் கிரிவல சக்திகள்! அறிந்திடுவீர் இதற்கான இறை வழிமுறைகளை!!! சுமார் நான்கு லட்சத்திற்கும் மேலான இறை அடியார்கள் மாதந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள் என்றால் என்னே இதன் தெய்வீக மகத்துவம்! உலகில் வேறு எங்குமே காண இயலாத வகையில் மிகவும் அற்புதமான, ஈடு இணையற்ற மாபெரும் சத்சங்கப் பௌர்ணமி பூஜையாக இன்றைக்குத் திருஅண்ணாமலையில் மாதாந்திரப் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்று வருகின்றது.. இந்த இறை அற்புதமே, இப்பூவுலக தெய்வீக சாதனையாக, பாரதத்தின் புனிதத்துவத்தையும், பிரபஞ்சத்திற்கு ஆன்மீக ரீதியாக பாரத மக்கள் ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடைமைகளையும் ஊட்டி உணர்விக்கின்றது! மாதந்தோறும் பௌர்ணமி அன்று நான்கு இலட்சம் இறை அடியார்களை ஈர்க்கின்ற புனிதம் பொங்கிப் பூரிக்கும் பெறுதற்கரிய புண்ணிய பூமி என்றால் திருஅண்ணாமலையின் மகத்துவம்தான் என்னே, என்னே!
பித்ரு சக்தியே கிரிவல பாக்யமாம்! அவரவருடைய பித்ருக்களின் ஆசீர்வாதம் இன்றி எந்த ஒரு மனிதனுமே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திட இயலாது.. ஒவ்வொரு நாளும் எத்துணையோ கொடும் பாவங்களையும், தீங்குகளையும் இழைக்கின்ற, எண்ணுகின்ற மனிதனுக்கு வாழ்வின் எந்தப் பருவத்திலும் திருந்தி வாழ்வதற்கான நல்வழிமுறைகளையும், தக்க பிராயச்சித்தங்களையும், கிரிவல புண்யசக்தி அம்சங்களாக, ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு கிரிவல அடியார்க்கும் திருஅண்ணாமலை தந்து கொண்டுதான் உள்ளது..!
தாம் செய்த தவறுகளுக்கான தண்டனைகளைப் பெறுவதுதானே தர்மச் சட்டம்! இதிலிருந்து எவரும் தப்ப இயலாது.. தப்பவும் முடியாது! மன்னிப்புத் தரும் சக்திகளும், இதற்கான தேவ ஆணை உரிமையும் தர்ம தேவதைகளுக்குத்தாம் உண்டு! சற்குருமார்கள்தாம் மனிதப் பிழைகளை மன்னிப்புக்குத் தகுந்ததாக மாற்றி இத்தேவதைகளிடம் சமர்ப்பிக்கும் இறைத் தகுதி உடையோராவர்!
திருஅண்ணாமலை கிரிவல சக்தியானது காரிய சித்திகளையும், கேட்கும் நல்வரங்களையும் தருவதோடு நாம் செய்த பாவங்கட்கும், தவறுகளுக்கும் நாம் கேளாமலேயே தக்க பிராயச்சித்த வழிகளைக் காணும் நல்வழி முறைகளையும் அவரவருடைய பக்தி மனோநிலைகளைப் பொறுத்துப் பெற்றும் தருகின்றது! நம் பித்ருக்களுக்கும் நம் கிரிவலப் புண்ய சக்தியின் ஒரு பங்கு சென்றடைவதால் அவர்களுக்கும் மேலுலகங்களில் பல அரிய உன்னத நிலைகளும் கிட்டுகின்றன! இவ்வாறாக நம்மையும் அறியாமல் நாம் பெறுகின்ற, நம் வாழ்க்கையில் அருட்பங்கு பெறுகின்ற கிரிவல சக்திகள் அபரிமிதமாக உண்டு! இவையெல்லாம் தேவ ரகசியங்கள்! இறைப் பகுத்தறிவால் சற்குரு மூலமாக உய்த்து உணரப்பட வேண்டியவை!
மேலும் வெறும் பிராயச்சித்தங்களோடு மட்டுமன்றி அவற்றை நிறைவேற்றுவதற்கான மன பலமும், ஆக்கமும் தருவதோடு, உண்மையாகவே தம் தவறுகளுக்கு மனமார வருந்துவோர்க்குத் தண்டனைகளைக் குறைத்துப் பிறருக்குச் சேவை ஆற்றுகின்ற தியாக மனப்பாங்கையும் அருட் பரிசாக அளிப்பதும் அருணை கிரிவலமே! இவ்வாறாக ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலால் கேட்கும், கேளாமலும் எத்துணையோ ஆயிரம் மடங்கு புண்ய சக்திகளையும், நல்வரங்களையும் நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்திடுங்கள்..!
ஏனிந்தப் புண்ய சக்தி இழப்பு?
ஆனால் ...... .... “இவ்வாறு ஒரே ஒரு கிரிவலத்தின் மூலமாகக் கூட அண்ணாமலையார் கொட்டிக் குவிக்கின்ற கிரிவலப் பலன்களை எல்லாம் அடியார்கள் பலவிதமான வழிகளில் உடனடியாக இழந்து விடுகின்றனரே!’‘ என்பதைக் கண்டு உள்ளம் வேதனை அடைகின்றது! இப்புண்ய சக்திகளைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை, நல்வழிமுறைகளை ஒருவர் அறிந்து கடைபிடித்தலால் நிச்சயமாகப் பல காரிய சித்திகளையும், நல்வரங்களையும் துரிதமாகப் பெற்றிடலாம்.! ஆனால் ஆழ்ந்த நம்பிக்கைதாம் கிரிவலத்தின் பரிபூரணமான முழுப் பலன்களையுந் தரும்!
கடன்காரர்களை ஏமாற்றுதல், முறையற்ற காமச் செயல்கள், காம எண்ணங்கள், நாணயமின்மை, தீய பழக்கங்கள் போன்றவற்றால்தாம் கிரிவலப் புண்ய சக்திகள் வெகு விரைவில் கரைந்து இழக்கப்படுகின்றன! உண்மையில் ஒருமுறை கிரிவலத்தில் கிட்டுகின்ற புண்ய சக்திகளை இழந்திடாது பரிபூரணமாகக் காத்திட அடுத்த முறை நீங்கள் வரும் கிரிவலப் புண்ய சக்திதாம் பெரிதும் துணை புரிகின்றது! எத்தனையோ முறை கிரிவலம் வந்தும் காரியம் சித்தி ஆகவில்லையே என்று ஏங்காதீர்கள்!
அருணை கிரிவலத்தில் அடக்கமே மாமேரு கிரிவலம்! கிரிவலம் வரும்போது நல்லதோர் ருத்ராட்ச மாலையைத் தரித்திடுங்கள்! கிரிவலம் வந்தவுடன் ருத்ராட்ச மாலையைப் பூஜை அறையில் வைத்து ருத்ராட்ச மாலையின் மேருப் பகுதியையே (மணிகள் சேரும் கீழ்ப் பகுதி) திருஅண்ணாமலையாக பாவித்துத் தினந்தோறும் 21முறை சுற்றி வந்தால் கிரிவலப் புண்ணியங்கள் விரயமாகாது காத்திட இது உதவும்! மேலும் ருத்ராட்சமானது உங்களால் கிரகிக்கப்பட இயலாத பல அரிய தேவ சக்திகளையும் அருணாசல மலையில் இருந்து பெற்றுத் தருவதால் ருத்ராட்சத்தில் அடைக்கலமாகி உள்ள பல அரிய கிரிவல பலாபலன்கள் உங்கள் உடல் நாளங்கட்கு இந்த ருத்ராட்ச மேரு வலத்தின் பலாபலன்களாக நன்முறையில் செலுத்தப்படுகின்றன..! 21 ருத்ராட்ச மணிகள் நிறைந்த ஒரு ருத்ராட்ச மாலையை ஒருவர் அணிந்து கிரிவலம் வருவாரெனில், 21000 முறை மானுட உடலில் கிரிவலம் வருதலால் கிட்டும் பலாபலன்களின் பல அம்சங்களை அப்புனிதமான ருத்ராட்ச மாலை பெற்று விடுகின்றது..! ஆனால் ருத்ராட்ச மணிகளில் நிறைந்துள்ள கிரிவல நல்வர சக்திகளை விரயமாக்கிடாது நீங்கள் முறையாகப் பெற்றிட ருத்ராட்ச மாலைக்குரிய மேரு பிரதட்சிணம், கல்ப ஆரத்தி போன்ற பூஜைகளைத் தினந்தோறும் நீங்கள் முறையாகச் செய்து வருதல் வேண்டும்..!
பொதுவாக ருத்ராட்சத்தை எப்போதும் அணிவோர் புனிதமாக வாழ்தல் வேண்டும்! பூஜையின் போது அணிதல் மிகவும் சிறப்புடையதாம்! கிரிவலத்தில் அணிந்து வந்த ருத்ராட்ச மாலையை இல்லம் திரும்பியவுடன் ஒரு சந்தனப் பேழையிலோ, அல்லது அரசு, ஆல், புரசு, வேம்பு போன்ற புனிதமான மரப் பெட்டிகளிலோ, மல்லிகைப் பூவுடன் வைத்துத் தினந்தோறும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு ஓம் அருணாசலேஸ்வராய நம: (ஓம் ஸ்ரீஅண்ணாமலையானே போற்றி) என 108 அல்லது 1008 முறை ஓதி, ஒலித்துப் பூஜிக்க வேண்டும்..! ருத்ராட்ச மணி மாலையையே திருஅண்ணாமலையாக பாவித்து ஒரு பலகையிலோ அல்லது மஞ்சள் துணியிலோ மலைபோல் வைத்து 21 முறை வலம் வர வேண்டும்.. இதற்காக ருத்ராட்ச மாலையை வலம் வந்துவிட்டால் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தது போல் ஆகிவிடும் என்று உங்கள் கிரிவல சகாப்தத்தை எளிமையாக்கி விடாதீர்கள்! மாதம் ஒரு முறைதான் கிரிவலம் வரமுடிகிறது என்று எண்ணுவோருக்கும், கிரிவலத்தின் முழுப் பலன்களை அடைவதற்கான நல்வழிமுறைகளை நாடுவோர்க்கும் இந்த பூஜை பெருந்துணை புரியும்!
இந்த ருத்ராட்ச மாமேரு மலையைச் சுற்றி பிரதட்சிணம் வர மற்றோர் காரணம் இந்த ருத்ராட்ச மணிகளில் பதிந்துள்ள திருஅண்ணாமலை கிரிவலப் புண்ணிய சக்திகளை முறையான பூஜைகளால் காத்துப் பெற்றிடவே! ஒவ்வொரு முறையும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது இதே ருத்ராட்ச மணிமாலையை அணிந்து வாருங்கள்.! இவ்வாறு 108 முறை அணிந்து கிரிவலம் வந்த அற்புத ருத்ராட்ச மணிமாலைகளை வைத்துப் பூஜிப்போர் பலரும் உண்டு..! இவற்றின் தரிசனமே பல பாவங்களைப் போக்கும்!
மணிக்கட்டில் மணிஹாரம்! அணி சேர்க்கும் கிரிவலத்திற்கு!
ம்ருதுள மணி ஹாரம் எனப்படும் துளசி மணி மாலைகளால் ஆக்கப்பட்ட மணிக்கட்டில் அணியும் மாலை ஒன்றும் உண்டு.. இதனை வலது மணிக்கட்டில் கடிகாரம் போல் அணிந்து கொண்டு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வாருங்கள்! ருத்ராட்ச மணி மாலைகள் எவ்வாறு திருஅண்ணாமலையிலிருந்து பல அற்புத தெய்வீக சக்திகளை கிரகித்துக் கொள்கின்றனவோ இதேபோல் துளசி மணி மாலைகளுக்கும் திருஅண்ணாமலையின் பல்வேறு வகையான தெய்வீக சக்திகளைப் பெறும் விசேஷ சக்தியும் உண்டு. இரண்டு மணிக் கட்டுகளிலும் ம்ருதுள மணி மாலைகளை அணிந்து கொண்டு கைகளைக் கூப்பிக் கும்பிட்ட வண்ணம் கிரிவலம் வருதலால், சாதாரண முறைகளால் பெற இயலாத பல அற்புத கிரிவல புண்ய சக்திகளையும், நல்வரங்களையும், இம்மணி மாலைகள் பெற்று அவ்வப்போது நம் உடலில் 72,000 நாடி நரம்புகளுக்கும் செலுத்தி காரிய சித்திகளையும், பல அற்புத வரங்களையும் பெற்றுத் தருகின்றன.!
தாவர புண்ய சக்தி தரும் கிரிவலம்! இதே போல் உங்கள் இல்லத்தில் துளசிச் செடி, நந்தியா வட்டை, செம்பருத்தி போன்ற செடிகளை நட்டு வளர்ப்பதாக இருந்தால் அவற்றின் பதியன்களைத் தாங்கிய வண்ணம் திருஅண்ணாமலை, குன்றத்தூர், திருப்பரங்குன்றம், குன்றக்குடி, தேனிமலை போன்ற இறைத் தலங்களைக் கிரிவலம் வந்து பின் செடிகளை உங்கள் வீட்டில் நடுதலால் கிரிவல சக்திகளை உணர்விக்கும் சக்தி ஒவ்வொரு இலையிலும், மலரிலும் நிரவும்! இதனால் பரிமளிக்கும் கிரிவல சக்திகள் மகத்தான முறையில் விண்ணிலும் மண்ணிலும் பரவுகின்றன.! இதுவும் உலகிற்கு நீங்கள் ஆற்றும் உத்தம இறைச் சமுதாயப் பணிகளில் ஒன்றாகும்..!
மங்களத்திற்கும் மங்களம் சேர்க்கும் மகத்தான கிரிவலம்! திருமணத்திற்கான அல்லது மாற்ற இருக்கின்ற மாங்கல்யம், குங்குமம், மஞ்சள், புத்தகங்கள், சுவாமிப் படங்கள் போன்றவற்றையும் தாங்கிக் கிரிவலம் வந்திடில் மங்கள சக்தி பெருகும்! இவ்வாறாக அருணை கிரிவலம் வராத பொருளே உங்கள் வீட்டில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இல்லத்தில் எங்கு நோக்கினும் அருணை வளம் பொழியட்டும்! இதே போன்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களோடு கிரிவலம் வருகையில் நல்தான்ய மணிகளையும் ஒருவர் மாற்றி ஒருவராக, விதை மூட்டைகளைச் சுமந்து கிரிவலம் வந்து பின் விளைவிப்பீர்களாயின் பயிர் விளைச்சல் நன்முறையில் பெருகுவதோடு, உருவாகின்ற உணவு வகைக்கும் புனிதம் பெருகி ஒவ்வொரு நல்மணியும், தான்யமணி வித்தும் கிரிவல சக்திகளை பூமிக்கும், காற்று மண்டலத்திற்கும், பரவெளிக்கும் செலுத்தி புனிதத்தைப் பெருக்குகின்றது.. இம்முறையில் நல்விருட்ச நாற்றுகளையும், விதை மணிகளையும் தாங்கி கிரிவலம் வருதல் மிகச் சிறந்த பூமி பூஜைகளில் ஒன்றாம்!
கிரிவலம் வருவதற்கென்றே பச்சை, மஞ்சள், நீலம், கருப்பு நிறங்களில் சட்டை, வேஷ்டி என்று குறித்த வண்ண ஆடைகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அவற்றை அணிந்து கிரிவலம் வந்து, பிறகு இல்லத்தில் தனியாக எடுத்து வையுங்கள்! ஓடும் நீரில் அல்லது, நீர்வீழ்ச்சி, புனிதமான கடல், புண்ய ஆறு போன்ற நீர் நிலைகளில் இதனைத் துவைத்து உலர்த்தி அடுத்த முறை கிரிவலத்திற்குப் பயன்படுத்துங்கள்!
காவி துறவியர்க்கே! இல்லறத்திற்கு அல்ல!
இல்லறத்தில் இருப்போர் ஒருபோதும் காவி அணியக் கூடாது.. சபரி மலை விரதத்திற்கு, தைப் பூசத்திற்கென்று மட்டும் காவி அணிவோர் உண்டு.. இவையெல்லாம் மிகவும் தவறான வழிமுறைகளாகும்! இல்லறத்தில் இருந்து கொண்டு காவி அணிதல் பலத்த தோஷங்களையும், சாபங்களையும் பெற்றுத் தரக் கூடியதாம். காவி தேவதைகள் மிகவும் பவித்ரமான புனிதத்தையே கோருவதால் அவை ஒரு சிறு மாசையும், குறைபாடையும், மன அழுக்கையும், தீய முறையற்ற எண்ணத்தையும் கூட ஏற்காது! எனவே விரத நாளில் மட்டும் காவி அணிந்து பிறகு சாதாரண ஆடை அணிதல் என்பது காவியின் புனிதத்தை இழிவு படுத்துவதாகும்! விரதத்திற்கும் பங்கம் சேர்ப்பதாம்! குடும்பப் பெண்மணிகளும் இவ்விஷயத்தில் கண்டிப்புடன் இருந்து தத்தம் கணவன்மார்களைத் திருத்திட வேண்டும்.! ஏனெனில் காவியை அணிந்தால் ஒரு சிறு தவறான எண்ணம்கூட மனதில் புகுதல் கூடாது.. அந்த அளவிற்குப் புனிதம் நிறைந்தவர்களே காவியை அணியலாம்! இல்லறத்தார் வெண்ணிற வேட்டியைப் பஞ்சகச்ச முறையிலோ அல்லது காவியைத் தவிர்த்து, கருநீலம், கறுப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண ஆடைகளையோ கிரிவலத்திற்கென விசேஷமாக அணிந்திடலாம்!
திருஅண்ணாமலையில் திருவெண்டயத்துடன் கிரிவலம்! பெண்கள் நாட்டியத்தின்போது சலங்கை, சதங்கை அணிவது போல், கால்களில் திருவெண்டயம் அணிந்து திருஅண்ணாமலையில் ஆண்கள் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.! அக்காலத்தில் மகத்தான சிவனடியார்களாக விளங்கிய மாமன்னர்களும், அமைச்சர்களும், சேனாதிபதிகளும் திருவெண்டயங்களை அணிந்து விரதம் பூண்டு கிரிவலம் வந்து பெரும் புண்ய சக்தி சேர்த்து நாட்டிற்கு நல்லறம் நல்கினர். எனவே ஆண்கள் திருவெண்டயம் அணிந்து கிரிவலம் வருதல் கிரிவலப் பலன்களைப் பெருக்கும் அறவழியாம்!
பெண்களாயின் நெற்றிக்கு நல்ல குங்குமமிட்டு, மஞ்சள் பூசி, கண்ணாடிக் கை வளையல்கள் நிறைய அணிந்து காலில் மெட்டி, கொலுசு, மண் தாலி, ம்ருதுள மணிஹாரத் துளஸி மாலை அணிந்து வலம் வருதலால் இவ்வணிகலன்களெல்லாம் திருஅண்ணாமலையின் மகத்தான தெய்வீக சக்தியைக் கிரகித்து, உடலின் 72000 நாளங்கட்கும் செலுத்துகின்றன.. அவர்கள் பாதுகாப்புடன் நல்ல எளிமையான, அணிகலன்களை அணிந்து கொள்ள வேண்டும்.. ஆண்களாயின் திருவெண்டயம், சதங்கை, சலங்கை, ருத்ராட்ச, துளசி மாலைகள், கடுக்கன், இடுப்பில் கறுப்பு அல்லது கருநீலக் கயிற்றாலான அரைஞாண் கயிறு போன்றவற்றை அணிந்து கிரிவலம் வருதலால் கிரிவலப் பலன்களை நன்முறையில் நிலை பெறச் செய்யலாம்.!
குடும்பத்துடன் கிரிவலம் வருவீர்! பொதுவாக குடும்பத்துடன் கிரிவலம் வருதலால், குடும்பத்தின் ஒவ்வொருவரும் நிறையப் புண்ய சக்திகளைச் சேர்த்துக் கொள்வதால் குடும்பத்தை ஒட்டு மொத்தமாகப் பாதிக்கின்ற வறுமை, பணக் கஷ்டம், நோய் போன்றவை தீர்ந்திடப் பலவிதமான புண்ணிய சக்திகளை ஒன்று திரட்டிப் பிராயச்சித்தம் பெறவும் நல்வரங்களைப் பெறவும் இந்த குடும்ப சக்தி கிரிவல நல்வரங்கள் பெரிதும் உதவும். மேலும் கிரிவலம் வரும்போது, உடலெங்கும் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக் கிரிவலம் வருதலால், இந்த இறைச் சின்னங்கள் யாவுமே சாதாரண அங்கங்களால் பெற இயலாத திருஅண்ணாமலையின் தெய்வீகச் சக்தியைக் கிரகித்து, உடலின் பல திசுக்களுக்கும் தேவ நாள சக்திகளாக மாற்றித் தருகின்றன!
எனவேதான் கிரிவலம் துவங்கு முன் நன்முறையில் நீராடி உடலெங்கும், சிவ அல்லது வைணவச் சின்னங்கள் தரித்துக் கிரிவலம் வரும் நற்பண்பாட்டை நம் பெரியோர் ஏற்படுத்தியுள்ளனர். நெற்றியில் நீண்டதாகச் சந்தனம் தரித்தலால் கபால வடி நாடிகள் / நாளங்களுக்கு தேவ சக்திகளின் ஆக்க நீரோட்டங்கள் ஏற்பட்டு அச்சக்திகள் மூளைச் செல்களுக்குக் கிட்டும்!
சுமை நீக்கும் இறைச் சின்னங்கள்! குறித்த சக்கரங்கள், யந்திரங்கள் போன்றவற்றை மஞ்சள் துணியில் சுமந்து கிரிவலம் வருதலும், வீட்டில் பூஜிக்கப்பட வேண்டிய தெய்வ உருவப் படங்களையும் மிகவும் கவனமாகப் பாதுகாப்புடன் சுமந்து கிரிவலம் வந்து அவற்றை இல்லத்தில் வைத்தலும் பூஜா பலன்களைப் பெருக்கும். நீங்கள் அணிய உள்ள விபூதி, குங்குமம், சாந்துப் பொட்டு, புது ஆடைகள் ஆகியவற்றையும் தாங்கி கிரிவலம் வந்து அணிதலால், எத்துணையோ தெய்வீக சக்திகளைப் பெறலாமே! நீங்கள் அணியக் கூடிய பூணூல், வீட்டில் உள்ள சந்தனக் கட்டை, கல் போன்ற இறைப் பொருட்கள் அனைத்தையும் பூஜையில் வைக்கும் முன் மஞ்சள் பை, துணியில் வைத்துச் சுமந்து அருணாசல கிரிவலம் வந்து பயன்படுத்தினால், உங்களுடைய பூஜை அறையே புனிதப் பொலிவுடன் விளங்கும் அல்லவா?
பள்ளிகள் திறந்தாகி விட்டனவே, உங்கள் குழந்தைகளுக்கான சிலேட்டு, பென்சில், பேனா, புத்தக, நோட்டுப் புத்தகங்களைத் தாங்கி கிரிவலம் வந்திடலாமே! இவ்வாறு உங்கள் குழந்தைகள் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு கல்விப் பொருளும் திருஅண்ணாமலையைத் தரிசனம் செய்திட்டால் அதன் பலாபலன்கள் பள்ளிப் பருவம் முழுதும் நிரவி, பின் தொடர்ந்து, பெரும் இறைத் துணைச் சக்தியாக, விளங்குமல்லவா! பௌர்ணமி அன்று மட்டுமன்றி எந்நாளிலும் அண்ணாமலையை கிரிவலம் வந்திடலாமே! இவ்வாறாக திருஅண்ணாமலைக் கிரிவலப் புண்ணிய சக்தியைப் பெருக்கும் அம்சங்கள், வழிமுறைகள் நிறையவே உண்டு..!
நீங்கள் எப்போதும் பணத்தை வைக்கின்ற பணப் பெட்டி, கல்லாப் பெட்டி, பர்ஸ் (தோல் பர்ஸ் கூடவே கூடாது). இல்லம், வியாபாரங்களில் பயன்படுத்தும் Accounts நோட்டுப் புத்தகங்கள் ஆகிய அனைத்தையுமே கிரிவலத்தில் கொணர்ந்து இவ்வாறு திருஅண்ணாமலை தரிசனம் செய்யாத (பெறாத) பொருளே எதுவுமில்லை என்று சொல்லுமளவு அருணாசல கிரிவல சக்திகள் நிறைந்ததாக உங்கள் இல்லத்தை மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது!
சமீபத்தில் கூட நம் குருமங்கள கந்தர்வா அவர்களுடைய அருளாணையின்படி, தாம் வாங்கிய புது சைக்கிளை ஒருவர் தள்ளியவாறு (கிரிவலத்தில் கார், சைக்கிளை ஓட்டி வரக் கூடாது) கிரிவலம் வந்து தன் பையனுக்குப் பிறந்த நாள் பரிசாக அளித்தார்..! ஒரு சைக்கிள் கூட கிரிவலம் வந்து விட்டது! இக்காட்சி என்றும் மறக்க இயலாத ஒன்று! தான் வளர்க்கவுள்ள ஒரு நாயுடன் இன்றைக்கும் கிரிவலம் வருவோரும் உண்டே! வீட்டில் உள்ள நாய் கூட திருஅண்ணாமலை தரிசனம் செய்துவிட்டது என்றால், என்னே புண்ணியம் அது செய்திருக்க வேண்டும்! இசை, நாட்டியம், ஓவியத் துறையில் விளங்குபவர்களும் தங்களின் நட்டுவாங்கக் கோல், மிருதங்கம், கஞ்சிரா, வயலின், வீணை, கிடார், பிரஷ், தூரிகை போன்ற அனைத்து இசைக் கருவிகளையும், உபகரணங்களையும் தாங்கியவாறு கிரிவலம் வருதலால் அந்த இன்னிசை மற்றும் கலைக் கருவிகள் எவ்வளவு பரமானந்தம் அடையும் தெரியுமா? மெகானிக்குகளும் அந்தந்தத் துறையினரும் தம் தொழிலுக்கு உரிய கருவிகளை, புத்தகங்களைச் சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும்!
யாவர்க்கும், யாவற்றிற்குமாம் கிரிவலப் பலன்கள்! நம் மனித உடலால் கிரகிக்க இயலாத பல தெய்வீக சக்திகளை எல்லாம் உயிரற்ற பொருட்கள் என்று நாம் கருதுகின்ற பலவும், மனிதன் தன் இறைப் பகுத்தறிவால் பெற இயலாத பல அரிய இறைச் சக்திகளையும் பெற்று, அவற்றை நமக்கு கிரிவலப் புண்ய காரியம் மூலமாக கிரகித்துத் தருகின்றன என்பதை இனியேனும் உணருங்கள்! மருத்துவர்களெனில் தம் துறையில் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப், மற்றும் அனைத்து மருத்துவக் கருவிகளையும் தாங்கியவாறு அஸ்வினி நட்சத்திர நாள், செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரை நேரத்தில் கிரிவலம் துவங்கி நிறைவேற்றுதலால், பல அரிய மருத்துவ சக்தி கிட்டுவதுடன் திருஅண்ணாமலையைத் தரிசித்த மருத்துவக் கருவி கொண்டு மருத்துவத் தொழிலையோ, ஆபரேஷனையோ செய்தலும் மகத்தான தெய்வீக மருத்துவ குண சக்தியை அளித்திடும் அல்லவா!
இவ்வாறாக, பெறுதற்கரிய கூடுதல் புண்ய சக்திகளை அடைந்து பெறுகின்ற புண்ய சக்திகளை விரயம் செய்யாது நன்முறையில் இல்லத்திலும் உடலிலும், நிலை நிறுத்துதற்கும், அவற்றை விருத்தி செய்யவும், எத்துணையோ நல்முறைகளைச் சித்தர்களின் ஞானபத்ர கிரந்தங்களில் நாம் காணலாம்..! இவற்றையெல்லாம் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் போன்ற சற்குருமார்களின் குருவாய் மொழியாக நாம் கேட்டுப் பெற்று நன்முறையில் கடைபிடித்து அற்புதமான பலாபலன்களைப் பெற முடியும்! எத்துறையைச் சார்ந்தவர்களும் தம் தொழில் துறையிலும், இல்லத்திலும், அனைத்துப் பொருட்களிலும் அருணாசல கிரிவலப் புண்யசக்தி மிளிரும் வண்ணம் செய்வது அவரவர் முயற்சியின் திருவினையாக, நற்காரியமாக மலர்கின்றது..!
பேன்களின் படைப்பு |
பேன்களின் படைப்பு ரகசியம்
தலையைப் படாதபாடு படுத்துகின்ற பேன்களை negative forces என்றுதானே நாம் கருதுகின்றோம்! பேனும் பிரம்ம சிருஷ்டியே என்பதால் அப்படைப்பிலும் பல இறை இலக்கணங்கள், படைப்பு ரகசியங்கள் உண்டுதானே! பேன்களால் பலவிதமான கர்ம வினைகளைக் கழிக்கும் வாய்ப்பையும், மனித குலம் பெறுகிறது என்பது மிகவும் ஆச்சரியமான ஆனால் சத்தியமான உண்மையாம்! பேன்கள் மட்டும் படைக்கப்படாவிடில், குறித்த பல கர்மவினைகளைக் கழிக்க இயலாமலேயே மனித குலம் துடித்துக் கொண்டிருக்கும்!
கோடானு கோடி உயிரினங்களில் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டு எத்தனையோ உயிரினங்கள் இருக்கத்தான் செய்கின்றன.! திருஅண்ணாமலை, கொல்லிமலை, அமேசான் காடுகள், அஸ்ஸாம் காடுகள், இமய மலை, ஆல்ப்ஸ் மலை போன்றவற்றில் பூமிக்கு அடியிலும், மேலும், நீரிலும், கடலிலும் எத்தனையோ கோடி உயிரினங்கள் இன்னமும் விஞ்ஞானத்தால் வகுக்கப்படாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன!
டினோசார் (Dinosaur) என்ற விலங்கினம் மறைந்து விட்டதாக விஞ்ஞானத்தால் எழுதப்பட்டு விட்டாலும், டினோசார் இன்றும் வாழ்கின்ற காடுகள் உண்டு. ஆனால் அவற்றை ஆன்ம பூர்வமாக உணர்த்தி விட்டால் உடனேயே அங்கு விஞ்ஞானப் படை சென்று அவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து கூண்டுகளில் அடைத்து விலங்கியல் பூங்காவில் காட்சிப் பொருட்களாக ஆக்கிடும்.. எந்த ஒரு ஜீவனையும் சுயநல நோக்கோடு காண்பது கலியுகச் சுயநல மனித சமுதாயத்தின் சீர்கெட்டு வரும் பண்பாட்டையே குறிக்கின்றது!
டினோசார் விலங்கினமானது இப்பிரபஞ்சத்திற்கு ஆற்றுகின்ற தெய்வீகப் பணிகள் ஏராளம்! ஏராளம்! டினோசார் விலங்கினத்தின் உடலிலுள்ள சில குறிப்பிட்ட வண்ணங்கள் இன்றைக்கு பூலோகத்தில் எங்குமே காண முடியாது. இத்தகைய வர்ணங்கள் தாம் பிரபஞ்சத்தில் நிலவி இருக்கின்ற பிரளய கார்த்தீப பீஜாட்சரக் கதிர்களை ஈர்த்து பூலோகத்திற்குப் பரப்புகின்றன. இப்பீஜாட்சரக் கதிர்களின் மகிமையால்தான் நாம் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றப்படுவது மட்டுமல்லாமல்., எரிமலை, காட்டுத்தீ போன்ற கடுமையான அக்னியில் ஏற்படுகின்ற உஷ்ணக் கலவைகளும் பிரபஞ்சத்தில் கலந்து காற்று மண்டலத்தை மாசுபடுத்தாமலும் காப்பற்றப்படுகின்றது என்பதை இனியேனும் தெரிந்து கொள்ளுங்கள்.. எனவே டினோசார் என்ற உயிரினம் நிச்சயமாக இன்றும் உண்டு! Very Much Extant, Indeed! எதிர்கால விஞ்ஞானம் அவற்றை உணர்ந்து கூண்டுகளில் அடைக்கத்தான் போகின்றது! மேலும் டினோசாரின் சுழுமுனை சுவாச சக்திகள் காற்று மண்டலுத்தினுள்ளிருந்து நமக்குத் தேவையான தசவாயு சக்தியை ஈர்த்துப் பிராண, அபான வாயுக் கலவையாகத் தருகின்றது!
இதேபோல் நுண்ணிய உயிரான பேன்களை இறைவன் உலகில் படைத்திருப்பதற்கும் நிறைய காரணங்கள் உண்டு! பணியாட்களை வதைத்துக் கர்ண கொடூரமாக வேலை வாங்கி, தக்க கூலிகளைக் கொடுக்காமலும், அவர்களை ஏசியும், உதைத்தும், வதைத்தும், பெரும் பாவங்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் தாம் பேன்களாகப் பிறக்கின்றார்கள்.! பொதுவாக ஈவு இரக்கம் இன்றிக் கடுமையாகப் பேசுகின்றவர்கள் பேனாகவே வாழ்ந்து பிராயச்சித்தம் பெறுதல் வேண்டும்!
பிறவித் தளையில் பேன்கள் எங்ஙனம்? உடல் சக்திக்கு மீறிக் கடுமையாக உழைக்கச் செய்து வேலைகளை வாங்கி அவற்றிற்கு உரித்தான ஊதியத்தில் 100ல் ஒரு மடங்கு கூட அளிக்காது ரத்தத்தைச் சுண்டி இழுப்பது போல வேலை வாங்குபவர்களும் பேன்களாகப் பிறப்பு எடுக்கின்றார்கள்.!
நல்லதும் கெட்டதும் நம் பார்வையில்தான்! பேனாகப் பிறப்பு எடுத்துத் தலைச் சீப்பினால் வாரப்பட்டு, நசுக்கப்பட்டு மடிந்து மேற்கண்ட கொடிய கர்மவினைகள் கழிவதற்கு பேன் பிறவி ஓர் பெரும் துணையாக இருக்கின்றது என்பது உண்மைதானே! எவ்வாறு? பேன்கள் தலையில் இருப்பதால் நோய்களும், துன்பங்களும்தானே ஏற்படுகின்றன! ஆகையால் அவை அழிக்கப்பட வேண்டிய தீவினை சக்திகள் (Negative Forces) தானே என்று எண்ணிடலாம்.. பேன் பிறவி இல்லை எனில் இக்கர்ம வினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பது எப்படி? எனவே உலகில் நல்லதும், கெட்டதும் நம் மனப் பார்வையில்தான் விளங்குகின்றது..
புரியாப் புதிர்..... .... புரிந்த விடை!
ஒரு புலி, மானை அடித்துக் கொல்வது ஓர் ஜீவ ஹிம்சை என்று நமக்குத் தோன்றினாலும், பல மாதங்களாகப் பட்டினி கிடக்கின்ற புலியானது தன்னுடைய உணவிற்காகத்தானே ஒரு மானைக் கொன்று தின்று பசியாறுகின்றது! கொசு மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிசாவிட்டால் அதுவும் பசியால் மாண்டுவிடும்தானே! எனவே இறைவனுடைய படைப்பு ரகசியங்களைத் தோண்டித் துருவி ஆராய்ந்து அனைத்தையும் புரிந்து கொண்டால்தான் பிறப்பு, இறப்பு என்பது ஒரு மாயையே, எந்த ஜீவனுமே படைக்கப்படுவதில்லை , எந்த ஜீவனுமே மரணம் அடைவதில்லை என்ற புரியாப் புதிரானது அவையவைகளுடைய பூர்வ கர்ம வினைகளின் divine settlement தான் பிறவித் தளைகள் என்ற புரிந்த விடையாக நல்ல இறைத் தெளிவைத் தரும். அதுவரையில் கலியுக மனோநிலைகளுக்கு ஏற்ப கேள்விகளைக் கேட்டும், ஏதேதோ பதிகளை அறிந்தும் குழம்பிக் கொண்டுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கும். தக்க சற்குருவைப் பெறுவீர்களேயானால் எதனால் இது நடந்தது. எதனால் இது முடிந்தது என்ற மனத் தெளிவைப் பெற்றிடுவீர்கள்.. எதுவும் விதிப்படியே நடக்கும், ஆனால் நன்முயற்சி என்பது எல்லா ஜீவன்களிலும் இருந்திடுதல் வேண்டும் என்பதும் புரியவரும்.!
மூட்டைப் பூச்சிகள் உடலிலுள்ள இரத்தத்தையும், பேன்கள் தலையில் உள்ள இரத்தத்தையும் உறிஞ்சியே உயிர்வாழ்கின்றன.. தலையில் இருக்கின்ற பேன் உடலில் வந்து கடிப்பதில்லை, நம் உடலில் வாழ்வதில்லை, ஏன்? இவையெல்லாம் இறை சங்கல்பங்கள்! கபாலம், தலை, தலைமுடி, காது சம்பந்தப்பட்ட பலவிதமான கர்ம வினைகளைப் பலரும் சேர்த்துக் கொள்வது உண்டு. நாய், பசு போன்ற வாயில்லா ஜீவன்களைத் தலையில் அடித்துத் துரத்துதல், பிறருக்குத் தலை வெடிக்கும் அளவிற்குத் தேவையில்லாத துன்பங்களைத் தொடர்ந்து தந்து கொண்டு இருத்தல், அநாவசியமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசி பிறர் மனதைப் புண்படுத்துதல், ஜீவஹிம்சை செய்தல் போன்ற பலவிதமான பாவச் செயல்களைச் செய்பவர்களும் தலைப் பேனாக உருவெடுக்கின்றார்கள்.!
பேனானது ஒருவருடைய தலையைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதால் அதற்குப் பசிதானே ஆறுகின்றது.. அதனுடைய துன்பங்களுக்கு எவ்வாறு பேன் பிறவி ஒரு தண்டனையாக அமையும் என்று எண்ணிடலாம். எந்தச் சமயத்தில் எந்த சீப்பினால் குத்திக் கிழிக்கப்படுவோமோ, எந்தச் சமயத்தில் தலையிலிருந்து எடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில்தான் ஒவ்வொரு பேனும் ஒவ்வொரு விநாடியும் அஞ்சி அஞ்சிச் செத்துச் செத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எத்தகைய பெரும் துன்பங்களை, பணக் கஷ்டங்களை, நோய்த் துன்பங்களை மனிதன் பெற்றாலும் ஒரு பத்து நிமிடமாவது அவன் உறங்குவான் தானே! ஆனால் பேனுக்கு உறக்கம் என்பதே கிடையாது.. மரண பயத்திலேயே வாழ்ந்து, வாழ்ந்து ஒவ்வொரு வினாடியும் அது அச்சத்தால், மரண பயத்தால் வாழ வேண்டியுள்ளது!
அஞ்சி அஞ்சித் துஞ்சியே......
எவ்வாறு இன்று போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் நாமும் அஞ்சி அஞ்சியே நடந்தோ, அல்லது வண்டியில் சென்று கொண்டு இருக்கின்றமோ, இதே போலத்தான் ஒவ்வொரு பேனும் எந்த நிமிடத்திலும் நம்மைக் கொல்வதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள் என்ற மரண பயத்திலேயே வாழ்ந்து கொண்டு எவ்வித இறை நினைவும் இல்லாமல் அவலமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன என்றால் பிறரை வதைத்து, துன்புறுத்தி வேலையைப் பெற்றவர்கள் அதே வேதனைகளை வேறுவிதமாகப் பெற்று இப்பொழுது பேன் பிறவி பெற்று அல்லல்படுகின்றார்கள். பேன் பிறவி இரகசியங்கள் உண்டு.. அவற்றை உணர்த்துவது என்றால் பேனைப் பற்றிய பெரும் காவியமே படைத்திட வேண்டியிருக்கும்.! எனவே இறைவனுடைய படைப்பில் ஒவ்வொரு ஜீவனும் பல காரண காரியங்களைக் கொண்டுள்ளது என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.
நுண்ணுயிர்க்கும் முக்திக்கு வழி! மொட்டையடிக்கும்போது அனைத்துப் பேன்களுமே மண்ணோடு மண்ணாய் ரோமத்தோடு ரோமமாய்க் கலந்து மறைந்து விடுகின்றனவே, இது எவ்வகையில் பிறவிப் பயனாகிறது என்ற ஆன்மீக வினா எழும்.. பொதுவாக மொட்டை அடித்தல் என்ற பிரார்த்தனை ஒரு கோயிலில்தானே நிகழ்கின்றது! எந்தப் பேனுமே பல அவஸ்தைகளுக்கு உள்ளாகும்போது அவற்றுள் உண்மையிலேயே பல தம்முடைய பூர்வ ஜென்ம நினைவுகளைப் பெறுகின்றன.. பிராயச்சித்தம் தேடி நேர்த்திக் காரியத்தில் ஆலயத்தை அடைகிறது.! நாம் தலைக்குத் தடவுகின்ற மூலிகைத் தைலங்கள், தலையில் படுகின்ற சூரிய, சந்திர, நட்சத்திர ஒளிகள், பெரியோர்கள் ஆசியாய் வழங்கித் தலையில் படும் அட்சதைகள், பெருமாள் ஆலயத்தில் தலையில் இறை ஆசியாகப் படும் சடாரி போன்றவை பேன்களுக்கு ஆன்ம ஞானத்தை அளிக்கின்றன!
‘எத்தனையோ பேர்களுடைய வாழ்க்கையில் பல துன்பங்களைத் தந்து வதைத்துள்ளோம் அல்லவா, அதன் பிறவிப் பயனாகத்தான் நாம் இந்த பேன் பிறவி எடுத்து ஒவ்வொரு விநாடியும் மரண பயத்தால் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இறைவா என்னுடைய பிழைகளை, தவறுகளை உணர்ந்துவிட்டேன் நன்முறையில் பிராயச்சித்த முறைகளைக் காண்பிப்பாயாக’, என்று உண்மையிலேயே பிரார்த்தித்து ஏங்குகின்ற பேன்களுக்கு நற்கதியைத் தரும் பொருட்டுத்தான் மொட்டையடிக்கும் பிரார்த்தனை என்ற இறை லீலையை இறைவன் உருவாக்கி அவற்றைத் தம்முடைய திருத்தலங்களுக்கு அழைத்து அத்திருத்தலத்தின் பூமியை அப்பேன்கள் தழுவுமாறு செய்து அவைகளுக்கு நற்கதியைத் தருகின்றான்!
எனவே ஒரு சாதாரண மொட்டையடித்தல் என்ற பிரார்த்தனையானது தலையில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரிகின்ற பேனுக்கும் ஈறுகளுக்கும், கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நுண்ணிய கிருமிகளுக்கும் நன்னெறி புகட்டி நற்கதியைத் தருகின்றன என்றால் இறைவனுடைய சாம்ராஜ்யத்தை அறிவதற்கு நம்முடைய சாதாரண பகுத்தறிவால் முடியுமா, சற்றே சிந்தித்துப் பாருங்கள்! சற்குரு காட்டும் வழியே நம் இறைப் பகுத்தறிவை மேம்படச் செய்யும்! பேன் கிழக்கு ஏறாது என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்பப் பேன் எப்போதும் கிழக்காகச் செல்லாது, சென்றால் குறிப்பிட்ட இல்லத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்விக்கும் சாஸ்திரமும் உண்டு! வேண்டுமானால் பேன் எந்த திசையில் செல்கிறது என்று சோதனை செய்து பாருங்கள்! ஆனால் ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையே நன்மை தரும்! அநாவசியமான சோதனை வேதனைகளையே தரும்!
இரும்பு, பிளாஸ்டிக் சீப்புகளை விட மரச் சீப்பே சிறப்பானது! நம் பெரியோர்கள் கூட மரச் சீப்பினால் தலையை வாரிப் பேனை எடுத்து உடனே நசுக்கி விட மாட்டார்கள்.. அதனைக் கீழே விட்டு அது செல்கின்ற திசையைப் பார்த்துக் கொள்வார்கள்! பேன் தனியாக வருகின்றதா, ரோமத்தில் ஒட்டி வருகின்றதா, கருப்பு அல்லது வெள்ளை ரோமத்தில் அப்பி வருகின்றதா- போன்றவற்றால் நடக்க இருக்கும் சில சகுன சாஸ்திர ரீதியான நிகழ்ச்சிகளை உணர்ந்து கொள்வார்கள்.!
எனவே, பேன்கூடத் தன் பங்கிற்கு சில சாஸ்திர உண்மைகளை நமக்கு உணர்விக்கின்றது! மேலும் எத்தனையோ புனித தீர்த்தங்களில் நீராடும்போதெல்லாம் அப்புனித நீரானது அப்பேனையும் நீராட்டுகின்றதல்லவா? எனவே எப்புனித நீராடலும், நம்மைச் சார்ந்து வாழ்கின்ற ஜீவன்களுக்கும் நன்னிலைகளை அளிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..! எனவே தலதரிசனம், புனித நதி நீராடல் போன்றவை பல்லாயிரம் ஜீவன்களுக்கு நற்கதிகளைத் தரும் மகத்தான சேவை என உணருங்கள்!
முற்பகல் செய்யின்... . ... பேன் கடியில் அவஸ்தைப்படுவர்களுக்கு பேன் பற்றிய ஆன்ம விளக்கங்கள் ஒரு படிப்பினையாக அமைகின்றது! பிறருடைய வேதனைகளுக்கு எல்லாம் காரணமானவர்கள் தாம் பேன் கடியால் துன்புறுகிறார்கள்.. எனவே பேன் கடித் தொல்லைகள் காரணமாக அவர்கள் தாங்கள் பிறருக்கு இழைத்த வேதனை பற்றிய பாடங்களை இறைவன் புகட்டுகின்றான்..! மனிதனுடைய மூளையில் பல லட்ச மூளைச் செல்கள் உள்ளன. நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அடிக்கடி விளக்கி வருவது போல எந்த ஒரு மேதாவியும் கூட தம்முடைய மூளைச் செல்லில் ஐம்பது அல்லது அறுபதையோதான் பயன்படுத்துகின்றார்..! எனவே ஒரு மனிதன் இறக்கும்போது தனக்கு இறைவன் அளித்த பல லட்ச மூளைச் செல்களைப் பயன்படுத்தாமலேயே வாழ்க்கையை வீணாய்க் கழித்து விடுகின்றான். இதனால் என்ன பயன்? இறைவனைப் பற்றிய ஆத்ம விசாரம் செய்யும் போதுதான் மூளைச் செல்கள் அதி அளவில் செயல்படுகின்றன.. மேலும் ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த நீராடுதல், அன்னதானம், தான தர்ம காரியங்கள் செய்யும்போதெல்லாம் இவற்றில் விளைகின்ற நல்ல புண்ய சக்திகளைக் கிரகிப்பதற்கும் அவற்றைக் காரிய சித்திகளாக மாற்றுவதற்கும் பல்லாயிரக்கணக்கான மூளைச் செல்கள் தாமாகவே activate ஆகும்!
கபாலக் கழிவடிநீர் .... ... எனவே தான் ஒருவன் தன் வாழ்க்கையில் அன்னதானம் செய்து வந்தாலும் சிறந்த ஞானியாக மாறுவதற்கான தெய்வீக வாய்ப்புகள் நிறைய உண்டு..! கபாலக் கழிவடிநீர் என்ற ஒன்றை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தீய நெறிகளால் சேர்த்துக் கொள்கின்றான்.. இந்த கபால கழிவடிநீர் என்பது ஒரு மனிதன் தனக்கு இறைவன் அளித்த ஆறாவது பகுத்தறிவையும் பல லட்சக்கணக்கான மூளைச் செல்களையும் பயன்படுத்தாதபோது கபாலத்தில் இந்தக் கழிவடிநீராகச் சேர்கின்றது.! எவ்வாறு கழிவறையிலோ, நீர்த்தாரையிலோ உள்ள கழிவு நீரானது உடனடியாகச் சுத்தப் படுத்தப்படாவிட்டால் தேங்கித் தேங்கி நாற்றம் அடிக்கின்றதோ இதேபோல கபால வினைக் கழிவுகளை அவ்வப்போது கழித்தால்தான் கபால நாடிகள் சுத்தமாகப் புனிதத்துடன் இருக்கும்.. ஆனால் தீய எண்ணங்கள், தீய சக்திகளுடன் திரிந்து கொண்டு இருந்தால் கபாலத்தில் தீவினை நீரோட்டங்கள் பெருகி அவை கபாலக் கழிவடிநீராக மாறி விடுகின்றன.. அப்போதுதான் மூளைக் காய்ச்சல், மனநோய்கள், கோமா, தலையில் நீர் கோர்த்தல், கண் வியாதிகள், மூளை அயர்ச்சி நோய், மூளை பிசகுதல், பைத்தியம் பிடித்தல் போன்ற கபால சம்பந்தப்பட்ட எத்தனையோ நோய்கள் உண்டாகின்றன.. இந்த கபால கழிவடிநீரை இயற்கையாகப் போக்குகின்ற வடிகாலாக இறைவன் பேன்களைப் படைத்துள்ளான்.. எப்படி?
உண்மையில் பேன்கள் தலைப் பகுதியில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்தாலும் கூட அவை இந்தக் கபால கழிவடிநீரையும் உறிஞ்சி மனிதனைப் பலவிதமான தீவினைகளிலிருந்து காப்பாற்றுகின்றன. எனவே மனித குலத்தின் எதிரிகள், negative forces, பகைவர்கள் என்று பேன்கள் ஏசப்பட்டாலும், அவை கபால கழிவடிநீரை அருந்தி மனிதனைப் பலவிதமான துன்பங்களிலிருந்து காக்கின்றன.. மேலும் கபாலத்தில் எத்தனையோ ஆயிரம் நாளங்களும், நாடிச் சுடர்களும் உள்ளன.. எவ்வாறு கழனியை ஏர் கொண்டு உழுதால் அதிலுள்ள நல்சக்திகள் வயல் முழுவதும் நிரவுகின்றனவோ, இதே போல கபாலத்திலுள்ள கபால நாடிகளை உழுது ஆக்கப்படுத்தினால்தான் கபாலச் சுடரொளி யோக சக்திகள் உண்டாகும்.. இதற்கு இடையூறாக இருப்பதே கபாலக் கழிவடிநீராகும்!
அகங்காரம், ஆணவம், மமதையாலும் கபாலக் கழிவடிநீர் ஊறிடும்! இதற்காகத்தான் காலை, மாலையில் தலை வாருதல் என்ற பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்... அதாவது குறித்த சில மரத்தால் செய்யப்பட்ட சீப்புகளைக் கொண்டு மட்டுமே தலை வாருதல் வேண்டும்.. ஆனால் தற்காலத்தில் பிளாஸ்டிக் சீப்பு நடைமுறைக்கு வந்துவிட்டது... இதனால் தான் நரையும், திரையும், வழுக்கையும், பலவிதமான தலைத் துயரங்களும் உண்டாகின்றன... மரச் சீப்பு என்பது நடைமுறையில் இல்லாமலே போய்விட்டது.!
கபாலத்தை ஆ(ஊ)க்கப்படுத்துங்கள்! சந்தனம், வேங்கை போன்ற சீப்பு செய்வதற்கான சில குறித்த மர வகைகள் உண்டு... இவை கபால நாள வடிவுகளை ஆக்கப்படுத்தும் மூலிகைச் சக்திகளை கொண்டவையாகும்.. வெள்ளிக்கும், தங்கத்திற்கும் கபால நாடிகளை ஆக்கப்படுத்தும் சக்தி உண்டு.. எனவேதான் தலைச் சிக்கலை எடுப்பதற்காக வெள்ளி, தங்கக் கம்பிகளைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு.. எனவே இயன்ற வரையில் குறித்த சில மர வகைச் சீப்புகளை பயன்படுத்துவதால் அவை நம் தலை மயிர்ப் பாளத்தை வாரும் போது பலவிதமான கபாலச் செல்கள் ஆக்கப்படுத்தப்படுகின்றன... பேன் சீப்பு என்று மிகவும் நுண்ணிய பற்களுடன் கூடிய மரச் சீப்புகள் உண்டு.. பேனை எடுக்க நாம் இவற்றைத் தலையில் பயன்படுத்தும் போது பலவகைக் கபால நாளங்கள் ஆக்கப்படுத்தப்படுகின்றன..!
எனவே பேன்கள் தங்களை அழித்துக் கொண்டு தம் அழிவின் மூலமாக கபாலத்தின் நாள ஆக்கங்களுக்கும் ஒரு கருவியாக அமைகின்றன என்றால் எந்த ஒரு இறைவன் படைப்பும் வீண் போகவில்லை தானே! பேன்களைப் பற்றிய இன்னும் ஆன்மீக ரகசியங்கள் பல உண்டு. இவையெல்லாம் சித்புருஷர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களின் சித்தோபநிஷத் வாக்கியங்களாகத் துலங்குகின்றன.! பேனைப் பற்றிய ஒரு சிறிய ஆத்ம விசாரம் கூட எத்தனையோ இறை நன்னெறிகளுக்கும், ஞானத்திற்கும் வழிவகுக்கின்றது என்பதை இனிமேலும் புரிந்து கொள்ளுங்கள்.. இறைவனுடைய படைப்பில் எதுவும் வீண் போவதில்லை.. அனைத்தும் இறை ஆக்கத்திற்காகத்தான் செயல்படுகின்றன.. பேன் வந்து துன்புறுவோர் ஸ்ரீகபாலீஸ்வரர் (மயிலாப்பூர்), ஸ்ரீசிகைஈஸ்வரர் (புதுக்கோட்டை – குடுமியான்மலை), கும்பகோணம் செருக்கை ஸ்ரீபுஷ்பவல்லி போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு இத்தலங்களில் தைலக் காப்பு இட்டு வழிபட்டு ஏழைகளுக்கு மரச் சீப்பு, தலை எண்ணை, சீயக்காய் போன்றவற்றைத் தானமாக அளித்து வந்தால் பேன் துன்பங்கள் தணிவதோடு ஒற்றைத் தலைவலி, கபாலச் சூட்டு நோய்களும் நிவர்த்தியாகும்!
பிரம்மஹத்தி தோஷம் |
பிரம்மஹத்தி தோஷத்தால் பல மஹரிஷிகளும், மன்னர்களும், பெரியோர்களும் அவதியுற்றுப் பலவிதமான பிராயச்சித்தங்கள் செய்து தீர்வு பெற்றதாக நாம் பல புராணங்களிலும், வரலாறுகளிலும் காண்கின்றோம்.. பிரம்மஹத்தி தோஷத்தால் அவதியுற்ற மன்னன் ஒருவன் திருவிடைமருதூர் ஆலயம் வந்தடைந்து பிரம்மஹத்தியிடமிருந்து தக்க கழிவு பெற்றதால் அவனைப் பீடித்திருந்த இப்பிரம்மஹத்தியை இன்றைக்கும் ஆலய கோபுரத்தின் உள் மூலையில் இருப்பதைக் காணலாம்.. கலியுகத்தில் திருவிடைமருதூரில் இன்றும் அம்மன்னன் திரும்பி வருவானெனக் காத்திருந்தவாறு பிரம்மஹத்தி அமர்ந்திருப்பதால் அக்கோபுரத்தின் வழியாகச் செல்வோர் வேறு கோபுரத்தின் வழியாக வரவேண்டும் எனும் நியது உள்ளது... மன்னன் மறைந்திட்டாலும் வேற பிறவி கொள்ளலாமன்றோ! ‘என்ன இது நிஜமா?...’ எனப் பலரும் வியந்து வினவுகின்றனர்.. ஆம், அங்கு பிரம்மஹத்தி என்பது நிச்சயம் உண்டு, இவையாவும் உண்மையே! இதில் நிறைய தேவ ரகசியங்கள் உள்ளன! பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கிட, இங்கு பக்தர்கள் உப்பை இறைத்துச் செல்வர்..!
ராவண வதத்தில் ஸ்ரீராமருக்கும் கூட இத்தகைய தோஷம் ஏற்பட்டு அவற்றிற்கானப் பிராயச்சித்தம் பெற அவர் பல ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்டார்.. அவதார மூர்த்திகளே இறைவனாய்த் தாமே நியதியாக்கி உள்ளவற்றை மீறுவதில்லை! ‘பிரம்ம ஹத்தி உள்ள திருவிடைமருதூர் ஆலயக் கோபுரம் வழியே செல்வோர் வேறு கோபுரம் வழியாகத்தான் திரும்பி வரவேண்டும் என்ற நியதி அம்மன்னனுக்குத்தானே பொருந்தும் நமக்கு ஏன்? இது நம்மை எப்படிப் பாதிக்கும்?”
மக்கள் குற்றம் மன்னன் தலையில் விடியும் என்பதால் மக்கள் சார்பாகவும் அம்மன்னன் பல கர்ம வினைகளை ஏற்றுக் கொண்டான்! அவன் ஆட்சியில் பிரஜையாக இருந்தோர், அவன் ஆட்சியில் பிரம்மஹத்தி ஏற்படுவதற்கான கொடு வினைகளைப் புரிந்தோர் மறுபிறவிகளாக இப்போதும் வாழலாம் அல்லவா! கோயிலுக்கும் வரலாம் அல்லவா! தரிசனத்திற்கு உள்ளே வருபவர்களை பிரம்மஹத்தி பீடிப்பதில்லை! தரிசித்துத் திரும்பும்போது, திரும்பவும் பீடிக்கும் உரிமை அதற்கு உண்டு..!
ஏன் இந்த தோஷம்? கலியுகத்திலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டா? நிச்சயம் உண்டு. அக்காலத்தில் பிரம்மஹத்தி தோஷமானது தெய்வீகமாய் வாழும் அந்தணரைக் கொன்றவர்களைப் பீடிக்கும்! அறிந்தோ, அறியாமலோ மன்னர்கள் பலரையும் தண்டிக்கும் போது மிகவும் புனிதமான ஒரு அந்தணனைத் தண்டிக்க நேரிட்டால் அவர்களுக்கு அத்தோஷம் ஏற்பட்டுப் பலவகைகளில் பாடாய்ப்படுத்தும். அக்கால ராஜ குருமார்கள் மிகவும் பக்தியும், புனிதமும் உடையவர்களாய் இருந்தமையால் அவர்கள் தெய்வீக சக்தி மிக்கவர்களாக நியாயம், நேர்மை, சத்தியம் ஆகியவற்றைக் கடைபிடிப்பவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக விளங்கியமையால், மன்னர்களுடன், அமைச்சர்களுடனும் இறைவனே நேருக்கு நேர் பேசி அருளாணையிட்டு வந்தார்!
தற்காலத்திலும் பிரம்மஹத்தி தோஷங்கள் நிச்சயமாக உண்டு. புனிதமாக வாழ்வோரைக்‘குடுமி வைத்துள்ளான்.. கடுக்கன் அணிந்துள்ளான்., நாமம் இட்டுள்ளான்..! வேத மந்திரங்களை, ஓதும்போது ‘ஏதோ உளறுகிறான்‘ என மிகவும் புனிதமாக வாழ்வோரைக் கிண்டல் செய்வதால் இத்தோஷம் ஏற்படும்! மேலும் நியாயமாக, நேர்மையாக வாழ்வோரை மிரட்டி, பதவி, அந்தஸ்து, பண பலத்தால் அதர்மத்தினின்று பிறழ்ந்து பிறரை வதைப்பதும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தரும்... உண்மையாயுள்ள ஒரு அதிகாரியை வதைத்துத் தன் சுயநலத்திற்குத் துணை போகச் செய்வதும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தரும்!
இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது பிரம்மஹத்தி அமர்ந்துள்ள ஆலய வாயில் வழி செல்லாது, கோபுர வாசல்களில் ஏதேனும் ஒரு வழி சென்று வரலாமே என எண்ணலாம்.. இது தவறான எண்ணமாகும். பிரம்மஹத்தி உள்ள வாயில் வழி சென்று சில மந்திரங்களை ஓதி உப்பைக் காணிக்கை ஆக்கிச் செல்வதுதான் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பிரம்மஹத்தி தோஷங்கள் விலகச் செய்து அப்பிரம்மஹத்தியிடம் போய்ச் சேர்கின்றன..! இவ்வாறு அத்தோஷங்கள் அகலாவிடில் அவற்றை அகற்றும் வேறு வழிமுறைகளே கிடையாது! கோடானுகோடி ஜென்மங்களாய் அதே பிரம்மஹத்தித் தோஷத்துடன் அலைந்து துன்புற வேண்டிவரும்..!
எனவே பலவித பயங்கரமான தீவினை தோஷங்களின் ஒட்டு மொத்த உருவமாக உள்ள பிரம்ம ஹத்தி உள்ளக் கோபுரவாயில், வழியாகச் செல்வதில் நிறைய நன்மைகள் உண்டாகின்றன..! ஏனெனில் ஈர்க்கும் சக்தியுடைய காற்று, நீர், வெப்பம் ஆகியவற்றையுடைய உப்பை பிரம்ஹத்திக்கு காணிக்கை ஆக்கிச் செல்லும்போது உங்களுடன் அறிந்தோ, அறியாமலோ ஒட்டியுள்ள பிரம்மஹத்தித் தோஷத்தை பிரம்மஹத்தி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. ஒரு விதத்தில் பிரம்மஹத்தி, மறுபுறம் வேறு எவராலும் தீர்க்க இயலாத பிரம்மஹத்தி தோஷத்தை தன்னுள் ஈர்த்து நல்ல தீர்வையுந் தருகின்றதுதானே!
பிரம்மஹத்தி உள்ள வாயில் வழியாகச் சென்று, அதே வாயிலில் திரும்பி வரும்போது அத்தோஷங்கள் நம்முடன் திரும்பிவந்து விடும் என்பதால்தான் வேறு வழியாகச் செல்கிறோம். இவ்விதம் செய்வதால் பிரம்மஹத்தியை ஏமாற்றுவது ஆகாதா? எவ்வாறு ஒரு பிரம்மஹத்தியானது ஒருவரின் பிரம்மஹத்தி தோஷத்தை மட்டும் ஈர்க்கிறதோ, அந்த அடியார் வேறு வழியாகச் சென்று விடுவதால் அவை அதனிடமே தங்கிவிடும் என்ற அறிவு அப்பிரம்மஹத்திக்கு எட்டாதா என நீங்கள் எண்ண நேரும்..!
தெளிவு அம்சத்திற்காகத் தோஷம் ஒட்டும் என விளக்கம் கூறப்படினும், உண்மையில் நீங்கள் அதே ஆலயத்தில் கூட்டிய இறை சக்தி பிரம்மஹத்தி தோஷத்தால் சிதறாதிருக்க வேறு வாசல் வழியாகத் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் வேறு வழி செல்ல வேண்டுமென்ற நியதி விதிக்கப்பட்டுள்ளது. இந்நியதியை அறியாதோர் அதே வாயில் வழி சென்று அதே வாசல் திரும்பினால் என்ன நடக்கும்? அவருக்கு நிச்சயமாக அவரிடம் உள்ள பிரம்மஹத்தித் தோஷம் அவரிடமே மீண்டும் வந்து சேரும் என்பதுதான் உண்மை.. இதையே சற்றே புரியும் வண்ணம் பிரம்மஹத்தி மீண்டும் பிடித்துக் கொள்ளும் என்று சொல்கின்றோம்!
மாளாத் துயருக்கும் மீட்சி உண்டு! எனவே இறைவனே பெரியோர்கள் மூலமாக ஒரு நல்வழியை அருளி இருக்கும்போது ஏன் இவ்வாறு செய்யக் கூடாதென்ற வாதப் பிடிவாதத்துடன் துன்பங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? மேலும் பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய ஒரு ஆலயமே இவ்வாறு அபூர்வமாக அமையும் போது அதை நன்முறையில் பயன்படுத்தி கர்மநிவாரணம் தேடுவதே விவேகமானதாம்! இதேபோல்தான் பிரம்மஹத்தி தோஷங்கள் பொங்கி வழியும் அளவிற்குத் துன்பங்கள் நிறைந்துள்ளபோது அவற்றை நிவர்த்தி செய்யத் தூயவழி கிட்டும்போது தோஷம் நிறைந்த அவ்வழியே ஏன் செல்ல வேண்டும்?
பிரம்மஹத்தி உள்ள வாயில் என்றால், ஆலயத்தின் அந்த வாயில் முழுதும் தோஷங்கள் கொண்டது என்பது பொருளல்ல! அவ்வாயில் வழியே பிரம்மஹத்திக்கு உப்பிட்டுச் செல்வதால் அறிந்தோ, அறியாமலோ பாரம்பரியத்திலோ, நடப்பிலோ குடும்பத்தில் ஒட்டி இருக்கும் பிரம்மஹத்தி தோஷமும், எதிர்காலச் சந்ததியினருக்கு பிரம்ஹத்தி தோஷம் ஏற்படாமல் இருக்கவுமே லவண சங்கல்பமாக, லவண கல்பச் சூர்ண நேர்த்தியாக உப்பிட்டு பிரம்மஹத்தி தோஷத்தை விடுத்துச் செல்லும்போது நீங்கள் அதனின்றும் விடுபட்ட புனிதத்துடன் திகழும் பிராயசித்த நிலையைப் புகட்டவே இந்நியதி!
அறிந்தோ, அறியாமலோ நம் உடலிலும், குடும்பத்திலும், சந்நிதியிலும், வசிக்குமிடத்திலும் ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷங்களை ஒரு வழியாக நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் சேற்றையும், அழுக்கையும் ஏன் உடலில் பூசிக் கொள்ள வேண்டும்? இன்றைக்குத் திருவிடைமருதூர் ஆலயத்தில் காணும் பிரம்மஹத்தியானது, பலகோடி ஜீவன்களின் பிரம்மஹத்தித் தோஷத்தைத் தாங்கி விளங்குகின்றது... இதுவும் தமக்குரியப் பிராயச்சித்தத்தை எவ்வாறேனும் பெற்றாக வேண்டும்தானே!
எவ்வாறு? உலகில் பிரபஞ்சத்தையே அருளாட்சி செய்து விளங்கும் ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் குடி கொண்டிருப்பதே பிரம்ஹத்திக்குப் பெரும் பேறன்றோ! இதுவரை எவரும் செய்திடாத பெரு இறைப்பணியை பிரம்மஹத்தி செய்து வருகின்றது.. அதாவது இறைவனை வணங்க வருகின்ற அடியார்களின் பிரம்ஹத்தி மூலமாகத் தியாக சீல வாழ்க்கையின் கீர்த்தியையும் இறையருளாள் நாம் உணர்தல் வேண்டும்!
அமுத தாரைகள் |
1. ஸ்கந்த சஷ்டி அம்சங்கள் நிறைந்த சங்கின் மஹிமை !! சஷ்டாம்ஷ ஹஸ்த ரேகைகளைக் கொண்ட சில அபூர்வமான சிருஷ்டிகளை ஆண்டவன் படைக்கின்றான். அதாவது ஆறுவகையான ஸ்பரிச தாத்பர்யங்களைக் கொண்டதே இது.. கதிர்காமக் கொண்டைச் சங்கு எனப்படும் இச்சங்கின் மூலத் தேவதா மூர்த்தி கதிர்காம முருகப் பெருமாளின் நவாம்ச வீர மூர்த்தியின் அம்சங்களைக் கொண்டவராவார். ஆறு கார்த்திகைப் பெண்டியர்கள் தாங்கள் ஸ்கந்த மூர்த்தியாகிய முருகனை வளர்க்கும் பேற்றைப் பெற்றிட, கதிர்காம க்ஷீரக் கிரணங்கள் பொலிகின்ற விஸ்வரூபம் கொண்ட சங்கின் ஆறு நுனிகளிலும் அக்னித் தாண்டவம் பூண்டு தவமிருந்தனர்.. எனவே கார்த்திகைப் பெண்டியருடைய அனுகிரஹம் பெற்ற சங்கு ஆதலால், இதைக் கொண்டு இல்லத்திலோ ஆலயத்திலோ ஆறு வேளையும் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனக் குழம்பு மற்றும் மஞ்சள் திரவிய நீர் கொண்டு அபிஷேகித்து வந்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.
குழந்தைகளைத் தத்து எடுத்தவர்கள்.., பிறர் குழந்தைகளை வளர்ப்பவர்கள், குழந்தைக் காப்பகங்களை நடத்துவோர் இச்சங்கினை வீட்டில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்திடில் குழந்தை பாக்கியம் கிட்டுவதோடு மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மைக் கொண்டவர்களுடைய தொண்டிற்கும் நல்வரங்களைக் கனியச் செய்து இறையருளைப் பெற்றுத் தரும்.. குழந்தையைத் தொட்டிலில் இடும் முன்னர் இச்சங்கினைப் பூஜித்து சங்கினைத் தொட்டிலில் இட்டு, பிறகு குழந்தையைத் தொட்டிலில் இடுவதால் குழந்தையை எவ்விதத் தோஷங்களும் அண்டாது.. செவ்வாய்த் தோஷம், ஜாதக தோஷங்கள், திருமணத் தடங்கல்கள் உள்ளோர் தினமும் சந்தனம் அரைத்து இச்சங்கிற்கு சந்தனக் காப்பிட்டு வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி நல்ல திருமண வாழ்வு அமைந்திட கார்த்திகைப் பெண்டிர் அருள்புரிவர்.
பொதுவாக மகப்பேறு மருத்துவர்கள் (GYNAECOLOGISTS) தங்கள் இல்லத்திலும், மருத்துவ மனைகளிலும் வைத்துப் பூஜிக்க வேண்டிய மிகவும் முக்கியமான சங்கு., தங்களுடைய சொந்த மருந்துவமனையில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அடர்த்தியாகச் சாம்பிராணித் தூபமிட்டு தங்கத்தட்டு அல்லது வெள்ளித் தட்டு அல்லது சந்தன மரப்பலகையில் அல்லது உத்திராணி முத்திரை பாதத் தட்டு, உத்திராணி நாம பாதத் தட்டு, உத்திராணி பாதத் தட்டு போன்ற மரத் தட்டுகளின் மேல் இச்சங்கில் புண்யத் தீர்த்தம் வைத்து மருத்துவமனை எங்கும் சுற்றி வந்து மாவிலைகளால் இச்சங்குத் தீர்த்தத்தை தெளித்துவர சகல விதமான தோஷங்களும், பொறாமை, குரோத, விரோத எண்ணங்களும் நீங்கி மருத்துவ குணச் சக்திகள் பெருகிட நல்வரங்கள் உண்டாகும்!
ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை இன்னம்பூர்
2. அருணையிலிருந்து இன்னம்பூர் வரை... : எத்தனையோ கோடிப் பிறவிகளைத் தாண்டி, அதிலும் புண்ணிய பாரதத்தில், அதிலும் தென்னாடுடைய சிவனின் தமிழ் நாட்டில் பெறுதற்கரிய மானுடப் பிறவி கொண்டுள்ளோம் என்பதே மகத்தான பாக்யம் என்பதை ஒரு சிறிதேனும் உணர்ந்தால்தான் அண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வருதலால் பெறுகின்ற நல்வரசக்திகளின் அளப்பரிய சக்திகளை ஓரளவேனும் உணர முடியும்! மேலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற பெரும் பாக்யம் அவ்வளவு எளிதில் எவருக்கும் கிட்டுவதில்லை.... ‘நான் மாதந்தோறும் சர்வ சாதாரணமாக அருணாசல கிரிவலம் வந்து கொண்டு உள்ளேன், பஸ்ஸில் ஏறினால் போய் இறங்க வேண்டியதுதானே’ என அறியாமையால் எண்ணுவோரும் உண்டு.. தயவு செய்து இந்தத் தவறான எண்ணத்தைத் திருத்திக் கொள்ளுங்கள்! எந்நாட்டவராயினும் சரி, பித்ரு தேவர்களின் அனுகிரகம் மூலமாகத்தான், அனுமதியுடன்தான் அண்ணாமலையின் எல்லையையே எவரும் தொட்டிட இயலும்! உங்களை ஒருமுறை கிரிவலம் வரச் செய்வதற்காக எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னதாகவே திட்டமிட்டு உங்கள் பித்ருக்கள் மேற்கொள்கின்ற அரும்பெரும் முயற்சிகள் ஏராளம்! ஏராளம்!! மிகப் பெரிய மூலத்தானக் கருவறையைக் கொண்ட கும்பகோணம் அருகில் இன்னம்பூர் சிவாலயத்தில் மூலத்தானத்தில் இருந்தே ஸ்ரீஅட்சரபுரீஸ்வரரான ஆதிசிவமூர்த்தியே சித்தர்களின் அய்யனாம் ஸ்ரீஅகஸ்தியர்க்குத் தெய்வீக இலக்கண ரீதியாக அருணாசலப் புராணத்தை ஓதுவித்திட, இன்றும் ஸ்ரீஅருணாசல மஹிமையைப் படைத்து வருகின்றார் ஸ்ரீஅகஸ்திய மாமுனி! அண்ணாமலையை கிரிவலம் முடித்த கையோடு இங்கு வந்து ஸ்ரீஎழுத்தறிநாதரை தரிசித்து ஏழைகளுக்கு முந்திரி கலந்த உணவினை தானமளித்து வரப் பிள்ளைகள் நன்கு படிப்பர்!
3. திருமணப் பத்திரிக்கையை திருவேடகம் ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகா சமேத ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பதோடு திருமண ஆசீர்வாத மங்கள அட்சதைகளையும் இறைவன் இறைவி திருவடிகளில் சமர்ப்பித்து பிறகு எடுத்து வந்து திருமணப் பத்திரிக்கை விநியோகித்தலிலும், திருமணத்திலும் உபயோகிக்க வேண்டும்..! இந்த நடைமுறைப் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்ததே! இனியேனும் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும்.!
4. ஞானம் ஊட்டும் ஞானாம்பிகைக்கு திருதியை பூஜை : ஒவ்வொரு பட்சத் திருதியைத் திதியின் போதும் மற்றும் வருடாந்திர அட்சய திருதியை தினத்தன்றும் கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே முழையூர் ஞானாம்பிகை சமேத பரசுநாதர் ஆலயத்தில் தேங்காய் எண்ணெய்க் காப்பு சார்த்தி 108,1008 கை முறுக்குகளைத் தானம் அளித்து வந்தால் அட்சய வட சக்திகள் மிகுந்து குழந்தைகளுக்குத் தேவையான ஞானத்தை ஸ்ரீஞானாம்பிகையே பெற்றுத் தருவாள்.! திருதியைத் திதியிலும், அட்சய திருதியை தினத்தன்றும் அனைத்துக் குழந்தைகளும் தரிசிக்க வேண்டியா முக்கியமான லிங்க மூர்த்தியும் அம்பிகையும் இவர்களே! இந்த லிங்கத்தின் அமைப்பே பரந்த ஞானத்தைத் தரவல்லதாகும்! வேறு எங்கும் காண முடியாத அதியற்புத தரிசன சூட்சும நெடுஞ்சுடர் ஒளியைக் கொண்டிருப்பதாகும். அட்சய திருதியை மற்றும் ஒவ்வொரு திருதியை திதி அன்றும் இந்த லிங்கத்தை தரிசனம் செய்து கை முறுக்குகளைக் குறைந்தது 108 ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்து செம்பருத்தித் தைலம், கரிசலாங் கண்ணித் தைலம், மருதாணித் தைலம், ஆகிய மூன்றும் கலந்து முக்கூட்டுத் தைலக் காப்பு விளக்கு ஏற்றி வழிபடுபவர்களுக்குக் குழந்தைகள் பற்றிய கவலைகள் தாமாகவே தணியும்.! உங்கள் குழந்தைகள் சீரிய வாழ்வை அடைய ஞானாம்பிகை அருள் செய்வாள்! பரசுநாதர் உங்களுடைய கவலைகளைத் தணிப்பார்!
ஸ்ரீஞானாம்பிகை முழையூர்
5. பிளைகளைப் பற்றிய கவலைகள் நீங்கிட.... : பல பிள்ளைகள் ஏதோ ஐம்பது மதிப்பெண் பெற்று ஓரளவு பாஸ் செய்து விடுகின்றார்கள்..! “சராசரி மார்க்குகளை வைத்துக் கொண்டு அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை, பணி எவ்வாறு அமையப் போகிறதோ.!” என்று அப்பிள்ளைகளுடைய பெற்றோர்கள் குழந்தைகளுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே பத்துப் பதினைந்து வருடங்களுக்கு இந்தக் கவலையைச் சுமந்து வாழ்கின்றார்கள்..! இதுவே அவர்களுக்கு இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, வயிற்று வலி, நெஞ்சுவலி, மூட்டுவலி என்று பலவிதமான நோய்களைத் தந்துவிடுகின்றன..! ஆனால் இவ்வாறு கவலைப்படுவதால் என்ன பயன்? பெற்றோர்கள் சராசரிப் படிப்பு, புத்தி உடையவர்களாக இருந்தால் பிள்ளைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது நியாயமாகுமா?
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? அப்படியானால் இதற்குரிய தெய்வீகத் தீர்வுதான் என்ன? நம்முடைய முயற்சிகளை எடுப்போம், வருகின்ற விளைவுகளை நம் கர்ம வினைப் பயன்களாக ஏற்போம் என்ற தெளிந்த மனப்பக்குவம் வருவதற்குரிய குறித்த வழிபாடுகளை பெற்றோர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கண்டிப்பாகக் கடைபிடித்து வந்தால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் மறந்துவிடும்.! நல்ல ஒழுக்கத்துடன், நல்ல பக்தியுடன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோருடைய லட்சியமாக இருக்க வேண்டும்..! 90, 95 என்று மார்க்கை வாங்கிக் கொண்டு ஒழுக்கமற்றவனாக பீடி, சிகரெட் பிடிப்பவனாக, மது அருந்துபவனாக வாழ்க்கை நடத்தினால் என்ன பிரயோஜனம்? எனவே இத்தகைய கவலைகளிலிருந்து விடுபடவும் பெற்றோர்கள் குழந்தைகளுடைய ஆரம்பக் கல்வி அல்லது மத்திய பள்ளிப் பருவத்திலிருந்தே தங்கள் இல்லத்தில் ஒரு துளசிச் செடி வைத்துக் குழந்தைகளை தினந்தோறும் அதற்கு சந்தனம் அரைத்து எட்டுத் திக்குகளிலும் இட்டு வரச் செய்திடல் வேண்டும்..! வீட்டில் துளசிச் செடி வைக்க வசதியில்லை என்றால் அருகில் உள்ள பிள்ளையாருக்குத் தினந்தோறும் சந்தனம் அரைத்துத் தருகின்ற நற்பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.! ஒவ்வொரு தினமும் குறிப்பாக வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களிலாவது அருகிலுள்ள பழமையான ஆலயங்களில் குறிப்பாக..
இரட்டை பிள்ளையார் – மனோ சக்திக்கு
ஆஞ்சநேயர் – புனிதமான பிரம்மச்சர்யம்
ஜேஷ்டாதேவி – அதைர்யம், சோம்பல் நீங்க
காசி விஸ்வநாதர் விசாலாட்சி – பித்ருக்களின் ஆசிக்கு
சங்கர நாராயணர் – நல்உடல் ஒழுக்கத்திற்கு
தட்சிணாமூர்த்தி – சீரிய ஞானத்திற்கு
சித்தி புத்தி விநாயகர் – கல்வியில் நல்ல புத்தியுடன் மேன்மை பெற ...
போன்ற தெய்வ மூர்த்திகள் உள்ள ஆலயங்களில் தினமும் பிள்ளைகள் 12 முறை அடிப் பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும்.! ஆலயங்களில் எப்போதும் வலம் வரும் ஞானிகளின் திருப்பாத தூளி ஆசிகளைப் பாத ரேகைகள் மூலம் பெற்றிடவே அடிப்பிரதட்சிணம்! பிள்ளைகள் குறைந்தது 11 கோபுரக் கலசங்களுக்கு மேல் உள்ள ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமைதோறும் அடி பிரதட்சிணம் செய்து ஆலயக் கலசங்களைக் குறைந்தது 15 நிமிடங்கள் உற்று நோக்கி சூரிய காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வருதல் வேண்டும்.! சூரிய காயத்ரீ மந்திரம்
ஓம் ஆதித்ய ஹ்ருதயாய வித்மஹே ராம மகுட தளகுண தீமஹி
தந்நோ ரவீஸ்வர பிரசோதயாத்!
குழந்தைகளுடைய நட்சத்திர நாள் மற்றும் ஒவ்வொரு சனிக் கிழமையும் பாணலிங்க தரிசனம் செய்து ஏழைகளுக்குப் புளியோதரை தானம் செய்து வருவதால் பித்ருக்களுடைய ஆசிகள் கூடி பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கம், பக்தி ஏற்படும்.! இதை முறையாக நீங்கள் செய்து வந்தால் பிள்ளைகளைப் பற்றிய கவலையும் தானாகவே தணியும்.!
ஸ்ரீபரசுநாதர் முழையூர்
கணவனின் ஆரோக்ய வாழ்விற்காக....
ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள இயற்கையான கவலை தன்னுடைய கணவனைப் பற்றியுள்ள நோய் நொடிகள், தீய பழக்க வழக்கங்கள் ஆகும்.! நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்றாலும் கர்ம வினைகள் பெருக்கெடுக்கும்போது அவைதாம் கடும் நோய்களாகின்றன! இதைத்தாம் கலியுகத்தின் நியதிகளாக இறைவன் விதித்துள்ளான்..! வறுமை அல்லது நடுத்தரமான குடும்பம், பணவசதியின்மை, நேரம் இல்லாமை, “மருந்துகள் நிறைய உண்டும் நோய்கள் குணமாகவில்லையே’ என்ற வெறுப்பும் விரக்தியும் உடைய நிலை போன்றவை இன்றைக்கு பல குடும்பங்களில் காணப்படுகின்றன..! வேறு வழி இல்லை, இத்தகைய வியாதியோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்ற விரக்தியான நிலைக்குப் பலரும் தள்ளப்படுகின்றனர்..!
நாம்தாம் எவருக்கும் கெடுதல் நினைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமே, நம் குடும்பத்துக்கு ஏன் இத்தகைய வியாதிகள் வந்து சேர்கின்றன என்று பல இல்லறப் பெண்மணிகள் எப்போதும் நினைத்து வாழ்வது உண்டு.! முற்பிறவியில் செய்த கர்ம வினைகளின் பலாபலன்களைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற வேத வாக்கியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்போர்க்கும் கூட அடிக்கடி சந்தேகங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றது.! இருப்பினும் இருக்கின்ற நோய் நொடிகளோடு நல்ல முயற்சிகள் எடுத்து நோய் நொடிகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கான மனோதிடத்தையும், தைர்யத்தையும் பெற்றிட இல்லறப் பெண்கள் குறித்த சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்..!
இந்திராக்ஷி கவச பூஜை! : தினந்தோறும் செவ்வாய் ஹோரை நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த்ராக்ஷி கவசம் என்ற துதியைப் பாராயணம் செய்து நோய் தீர்க்கும் சக்தியை நிரம்பக் கொண்டுள்ள இஞ்சியால் ஆன உணவுப் பண்டங்களை ஆக்கி (இஞ்சித் துவையல், ஊறுகாய், இஞ்சிரசம்) போன்றவற்றை அன்னத்துடன் தானமாக அளித்துவர வேண்டும்..! இன்றைக்கு மருத்துவர்கள் அறியாத பல காய்ச்சல் வகைகளையும் கலியுக எதிர்காலத்தில் வர இருக்கின்ற நோய் வகைகளையும், தீர்வுகளையும் இந்த்ராக்ஷி கவசத்தில் காணலாம்! இதைக் கொண்டு முறையாக ஹோமம் வளர்க்கும் வழிமுறைகளையும் இவ்வரிய ஹோமத்திற்கான விசேஷமான, சக்தி வாய்ந்த மூலிகை ஆஹுதி வகைகளையும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலங்களில் பெற்றிடலாம்!
இந்த்ராக்ஷி கவசத்தைப் படிக்க இயலாதோர் திருஞான சம்பந்தர் பெருமான் அருளிய திருநீற்றுப் பதிகம் ஓதி அரிய மூலிகை ஆஹுதிகளால் ஹோமம் வளர்த்து வழிபட்டிடில் மருத்துவ குணம் நிறைந்த ஓமப் புகை 72000 நாடிகளிலும் நிரவி வியத்தகு குணங்களைத் தந்தருளும்! இந்த ஹோம பஸ்ம விபூதியைத் தினந்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் நெற்றிக் கபால வடி நாடிகள் சீர் பெற்று ஆரோக்யம் தரும்! திருநீற்றுப் பதிகம் ஓதுவதோடு மாவால் ஆகிய உணவுப் பண்டங்கள் (சப்பாத்தி, பூரி, பரோட்டா, உப்புமா, கொழுக்கட்டை) ஆகியவற்றையும் தானமாக அளித்து வர தசவாயு அம்ச தேவதைகள் நல்ல தேக நலத்திற்கு நல்வரங்களை அருள்கின்றனர்!
இந்த்ராக்ஷி கவசம் அல்லது திருநீற்றுப் பதிகம் ஓதி மாவுப் பண்ட உணவு வகைகளைப் பிரசாதமாக அளித்தல் புண்ணிய சக்தியைத் தசவித வாயுக்களில் நிரவச் செய்து, அன்னதானம், மந்திரம், ஹோமம் ஆகிய முக்கூட்டு வழிபாட்டால் நோய் நிவாரணமும் துரிதமாகும்.!
பிரம்ம முகூர்த்தத்தில் ஸ்ரீவைத்ய நாதாஷ்டகம்! மருந்துகள் உட்கொண்டும் நோய்க்குத் தீர்வு கிட்டவில்லை என்றால் நம் கர்மவினைகளே பெருங்காரணமெனப் பரிபூரணமாக உணர்ந்து பௌர்ணமிக்குப் பிறகு வருகின்ற தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே அமாவாசை வரை உள்ள 15 திதிகளிலும் தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து நீராடி வைத்யநாத அஷ்டகம் என்ற சிவத்துதியை 12 முறை ஓதிவருக! ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியைத் துதித்து மருத்துவ தேவர்களின் நோய் நீர்க்கும் த்ரிபர்ணவ மண்டல காலம் பரந்து விரிந்திடும் விடியற்காலை வேளையில், நெடுநாள் நின்றுய்யும் வகை உணவு திரவியங்களாக அமைகின்ற சிறு திராட்சை (கிஸ்மிஸ்), முந்திரி, கருப்பு திராட்சை, கருப்பு கிஸ்மிஸ், கிராம்பு போன்றவை கலந்த நல்ல உணவு வகைகளை காலைச் சிற்றுண்டியாக காலை 7.30 மணிக்குள் அன்னதானமாக அளித்துவர வேண்டும்!
ஏனென்றால் இரவில் பலலோகப் பயணங்கள் புரிந்திருக்கும் தேகத்தின் முதல் பசி தீர்க்கும் முதல் உணவிற்கு மகத்தான அன்னதானப் பலன்கள் உண்டு.! இவை மேற்கண்ட பர்ணவ சத்துள்ள உணவெனில் இவற்றிற்கு நோய் தீர்க்கும் சக்திகள் அதிகமாகும்.! தேய்பிறை என்பது நோய் தீர்ப்பதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டிய மகத்தான காலம் என்பதாலும் விடியற்காலை செய்கின்ற பூஜைகளுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு என்பதாலும் நீண்ட நெடுங்கால் வியாதிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக இந்த வைத்யநாதாஷ்டக பூஜை பெரிதும் உதவுகின்றது!
திருவேடகம்
பொதுவாக ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ கரங்களில் இருக்கின்ற அமிர்தக் கலசத்தில் தேய்ப் பிறைக் காலங்களில்தான் அமிர்தத்தின் சுரப்பு மிகுதியாக இருக்கும். ஏனென்றால் அஸ்வினி தேவர்கள், மருத்துவ தேவர்கள் போன்ற பிரபஞ்சத்தில் உள்ள நோய்களைத் தீர்க்கின்ற அதியற்புத தேவதா மூர்த்திகள் பௌர்ணமியன்று 16 (முழுக்) கலைகளுடன் பிரகாசிக்கும் சந்திர பகவானிடமிருந்து அமிர்த சக்தியைப் பெற்றுக் கொண்டு அவற்றைத் தன்வந்த்ரீ மூர்த்தியின் அமிர்த கலசத்தில் இருக்கின்ற அமிர்தத்துடன் சேர்த்து நிரப்பிக் கொண்டு பிரபஞ்சத்தில் பவனி வந்து ஹோமங்கள், யாகங்கள், கலச பூஜைகள், புனித தரிசனங்கள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டு நோய் நிவர்த்திக்கான அமிர்த சக்திகளை ஊட்டுகின்றார்கள்.!
இவற்றோடு பிரம்ம முகூர்த்த கால பூஜைகளில் மட்டும் பூலோகத்திற்கு வந்து பூஜை செய்து பொலியும் ஔஷத பித்ருக்கள், விஜய பித்ருக்களும் சேர்ந்து கொள்கின்றார்கள்..! இந்த ஔஷத பித்ருக்கள் தாம் பூலோகத்திலுள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் பல வடிவங்களைப் புனைந்து கொண்டு மருந்துகள், ஊசிகள் மூலமாக அமிர்தத்தைக் குறித்த நோயாளிகளுக்கு அளிக்கின்றனர்! இவ்வாறு ஔஷத பித்ருக்கள் மற்றும் அஸ்வினி மருத்துவ தேவர்களின் அமிர்த மருந்துகள் கிட்டுவதால்தான் பலரும் கடும் நோய்கள், விபத்துகளில் இருந்து பிழைத்து வருகின்றார்கள்.
ஆனால் கலியுகத்தில் ஔஷதப் பித்ருக்கள் மிக மிக அபூர்வமாகவே வருகின்றனர்! மிகவும் நோய்வாய்ப் பட்டு அல்லது வாகன விபத்துக்கள், இயந்திர விபத்துக்கள் போன்றவற்றில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடும்போது அவர்கள் குடும்பத்தினர் பலவிதமான பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள் அல்லவா! அப்போது அவர்களுடைய 24 தலைமுறைக்கான பித்ருக்களும் பித்ரு மண்டபத்தில் ஒன்று கூடி அஸ்வினி தேவர்களிடமும், நோய்களைக் குணமாக்கும் மற்ற தேவதா மூர்த்திகளிடமும் பிரார்த்தனை செய்து மன்றாடி வேண்டுவார்கள்.!
உயிர்காக்கும் மா மருந்தே சர்வ ஜனார்தனப் புண்ய சக்தி! எங்கள் சந்ததியைச் சார்ந்த ஒருவர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கின்றார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவார்கள்.. ஆனால் அங்கெல்லாம் புண்ய சக்திகளின் வகைகளுள் ஒன்றான சர்வ ஜனார்தனப் புண்ய சக்தி என்ற அபூர்வமான புண்ய சக்திதான் இச்சமயத்தில் தக்க உதவி செய்யும், அன்னதானம், ஏழைக்கான இலவச மருத்துவ உதவி, இலவச திருமண உதவி, இலவசக் கல்வி போன்ற பலவிதமான இறை சமுதாய சேவைகளில் ஒருவர் ஈடுபடும்போது இந்த சர்வ ஜனார்தனப் புண்யசக்தி நிறைய உருவாகின்றது.!
இவ்வரிய புண்ய சக்தியே ஔஷதப் பித்ருக்களால் நன்முறையில் சேகரிக்கப்பட்டு அந்தக் குறிப்பிட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்தம் பித்ரு மண்டல பூஜாபல புண்ய சக்தியின் உதவியால் பலவிதமான மருத்துவ லோகங்கள், ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ லோகத்திற்கும் சென்று அங்கு சுரக்கின்ற அமிர்தத்தைப் பலதேவதா மூர்த்தியின் அருளால் பெற்று வந்து மருத்துவ சாலைகளிலோ, ஆபரேஷன் தியேட்டர்களிலோ, தானே மருத்துவர்கள் வடிவிலோ, நர்ஸ் வடிவத்திலோ இந்த அமிர்தத்தைப் புகட்டிட அவர்கள் உயிர் பிழைத்திடுவார்கள்..!
எவ்வாறு மின்சக்தியானது அணு உலையிலிருந்தும், நிலக்கரியிலிருந்தும் பல வகைகளில் தோன்றுகின்றதோ, இவ்வாறுதான் ஒருவரின் உயிரைக் காப்பாற்றத் தேவையான ஔஷதாம்ருத சக்தியைப் பெறும் பலவகைகளில் அன்னதானத்திலிருந்து கிட்டுகின்ற ஒருவித விசேஷமான புண்ய சக்தியே உயிர் காத்திடப் பெரிதும் உதவுகின்றது.. இதற்காகத்தான் அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் அன்னதானத்தை நாம் எப்போதும் தினந்தோறும் செய்து கொண்டிருக்க வேண்டும்.. அல்லது அன்னதானத்தை திறம்படச் செயற்படுத்தும் ஆஸ்ரம, சத்சங்க இறைப் பணிகளில் சரீர சேவையாகவோ, பொருட்சேவை மூலமாகவோ அடிக்கடி பங்கு பெறவேண்டும்.!
அன்னதானம் எவ்வகைகளில் எல்லாம் செய்யப் படுகின்றதோ அவை 5 வயது முதல் ஆயுள் முடியும் வரையும் அதற்கு மேலும் உதவுகிறது என்பதை இனியேனும் உணருங்கள். அன்னதானம் செய்ய வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் நழுவ விடாதீர்கள்..! இதற்காகத்தான் ஒரு நாளில் நீங்கள் உறங்கச் செல்லுமுன், குறைந்தது ஒரு உணவுப் பொட்டலமேனும் அன்னதானம் செய்தபின் மட்டுமே அந்நாளை முடிப்பது என்பதை வைராக்யமாகக் கொள்ளுங்கள்..! நீங்கள் அலுவலக்த்திற்கு எடுத்துச் செல்லும் சாப்பாட்டுப் பையில், காரியரில் அன்னதானத்திற்கென ஒரு பொட்டலத்தை எடுத்துச் சென்று தானமாக அளித்து விடுங்கள். இது ஒன்றும் கடினம் கிடையாது...! இவ்வாறு சிறுகச் சிறுக நீங்கள் சேர்க்கும் அன்னதானப் புண்ய சக்தியே உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் அபாயமான கட்டங்களில் மிகவும் மோசமான, கவலைக்கிடமான நோயினின்றும், விபத்திலிருந்தும் கட்டாயம் காப்பாற்றும்.!
ஔஷதாம்ருதப் பூஜை! இன்றைக்கும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் மீண்டும் பிழைக்கக் காரணமே இந்த ஔதப் பித்ருக்கள் நோயினின்று விடுபடத் தக்கத் தருணத்தில் வந்து அந்த அமிர்தத்தை ஊட்டுவதேயாகும்..! இந்த ஔஷதாம்ருதப் புண்ய சக்தியைப் பெறவே தேய்பிறை நாட்களில் மேற்கொள்ளும் பூஜையை சித்புருஷர்கள் அறிவுறுத்துகின்றனர்..! ஏனெனில் தேய்பிறையில் பூலோகத்தில் அசுவினி மருத்துவர்கள் இவ்வமிர்த சக்தியுடன் பூமியை வலம் வரும் நேரமே பிரம்ம முகூர்த்த நேரமாகும்..! அவர்கள் பூமியில் உலா வரும்போது நம்முடைய பூஜா மந்திர சக்தியும், மணி ஒலியும் அவர்தம் செவிகளில் விழுமாயின் நிச்சயமாக உங்களுடைய நாளங்களில் இவ்வமிர்த சக்தியை ஏற்றிடுவர் அல்லது பூலோகத்தில் இந்த சக்தியை ஏற்கும் சக்தியுடையவர் என்ற பட்டயத்தை உங்கள் கபாலத்தில் ஊட்டி விடுவர்.. கடுமையான மாரடைப்பு, விபத்துகள் ஏற்பட்டால் அச்சமயம் கபாலத்திலுள்ள பட்டயத்தை ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரி லோகத்திலுள்ள ஔஷதப் பித்ருக்கள் கண்டு உடனடியாக அமிர்த மாமருந்தினை அளிப்பர், எனவே வீட்டில் அனைவரும் ஆரோக்யமாக உள்ளோமே, நாம் ஏன் உடலை வருத்திப் பூஜைகளைச் செய்ய வேண்டும்’ என எண்ணாதீர்கள்.. உங்களுடைய எதிர்காலத்திற்கும், சந்ததியினருக்கும், சமுதாய இறைச் சேவையாகப் பிறருக்கும் இது பெரிதும் துணை புரியும்தானே! இந்த அமிர்த வர்ஷிதப் பட்டயம் தேய்பிறையின் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் செய்யும் அமிர்த தன்வந்திரி பூஜையால் மட்டுமே கிட்டும். அமாவாசையோடு இந்தப் பூஜையை நிறுத்திவிட வேண்டுமா என்றுக் கேட்கத் தோன்றும்.. அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையில் பூஜை முறைகள் மாறும்! தக்க சற்குருவிடம் ஏனைய விளக்கங்களை அறியவும்!
உங்கள் குடும்பத்தில் இத்தகைய நிலை ஏற்படாதிருக்கவும் இத்தகைய கவலைக்கிடமான நிலைகள் ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கு நீங்கள் இந்த அமிர்த சக்தி பெற்று ஜீவன்கள் பிழைத்தெழவும் நீங்கள் ஆற்றும் மகத்தான இறைப்பணி என உணர்ந்தாவது இதனைச் செய்திடுங்கள்.. தேய்பிறைக்குரித்தான பூஜைகளில் குறித்த சில புண்ய சக்திகள் கிட்டும்! இவற்றை எப்போதும் பெறலாம் என எண்ணாதீர்கள்..! இந்தத் தேய்பிறைக்கான ஔஷதாம்ருதப் பூஜையின்போது உருவாகும் அமிர்தச் சுரப்பானது நம் நாள நரம்புகளில் இருப்பதால்தான் ஊசியேற்றிட டாக்டர்கள் இரத்த நாளங்களைத் தேடி மணிக்கட்டு முதல் முழங்கை வரை தேடுகின்றனர்..! காலம், சமயம், சந்தர்ப்பம், வாய்ப்பு ஆகியவை அமையும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.! இத்தேய்பிறை ஔஷதாம்ருதப் பூஜையின்போது வலக்கையில் துளசிமணி மாலை எனப்படும் ம்ருதுள மணிமாலையைக் கட்டிக்கொண்டு பூஜிப்பது மிகவும் சிறப்பானதாகும்!
நட்சத்திர தாரண பிரதோஷம் |
நித்ய நட்சத்திரதாரண பிரதோஷம்
பிரதோஷ பூஜையைப் பற்றி எத்தனையோ விளக்கங்கள் வந்துள்ளன..! நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம வெளியீடான பிரதோஷ மகிமை என்னும் அரிய நூலில் சித்தர்கள் காட்டுகின்ற பிரதோஷ கால அற்புத விளக்கங்களை அளித்துள்ளோம்.!
பிரதோஷ பூஜையின் பலாபலன்களைப் பலவிதமான முறைகளில் பெற்றிடலாம்.. இவற்றில் ஒன்றுதான் நித்ய நட்சத்திரதாரண பிரதோஷம் எனப்படுவதாகும்.! நாமெல்லாம் பொதுவாக நினைப்பது போல 15 நாட்களுக்கு ஒருமுறை வளர்பிறை, தேய்பிறைத் திரயோதசி திதிகளில் மட்டும் வருவது பிரதோஷம் என்பதன்று. 15 திதிகளுக்கு ஒருமுறை வருவதால் இது பட்சப் பிரதோஷமாகின்றது. உண்மையில் தெய்வீகத்தில் தினசரி பிரதோஷ வழிபாடாக மாலை 4.30 – 6.30 சாயரட்சை நேரம் அமைகின்றது.. நித்யப் பிரதோஷமான இதில் ஒருவகைதான் நித்ய நட்சத்திர தாரணப் பிரதோஷமாம்.. இதனைச் சித்புருஷர்களின் ஞான பத்ர விளக்கங்களில் காணலாம்!
பொதுவாக ஆலயங்களில் ஸ்ரீபிள்ளையார், மூலவர், முருகன், அம்பிகை, குரு, நவகிரக மூர்த்திகளுக்குத்தான் அர்ச்சனை செய்கின்ற பழக்கம் நிலவுகிறது..! ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநந்தீஸ்வரர், ஸ்ரீபிரம்மா போன்ற தெய்வ மூர்த்திகளை வெறுமனே கை எடுத்துக் கும்பிடுவதோடு சரி! இம்மூர்த்திகளுக்கான அபிஷேக ஆராதனை பற்றி எவரும் சிந்திப்பது கூடக் கிடையாது! நந்தீஸ்வரருக்காவது பிரதோஷ தினத்தன்று மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்... ஆனால் புண்ய சக்தியின் மகிமையை அறிந்தவர்கள் பலரும் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீஅதிகார நந்தி, கோஷ்ட மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பெரும் பலன்களை அடைவர்.! கோயிலளவில் தினமும் ஒரு குடம் நீர் ஊற்றி வஸ்திரம் சார்த்துவது மட்டுமே என்ற நிலையெனில் ஸ்ரீசண்டிகேஸ்வரருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் செய்து விசேஷமாக நைவேத்யம் படைப்போர் கடைசியாக முறையான பூஜைகள் எப்போது நிகழ்ந்தனவோ அதிலிருந்து பல ஆண்டுகளுக்கான ஒட்டு மொத்தப் புண்யத்தையும் அப்படியே அள்ளிச் சென்று விடுகின்றார்கள்! எனவேதான் மிகவும் பழமையான ஆலயங்களில் ஸ்ரீபிட்சாட்சனர், ஸ்ரீகங்காதரர் போன்ற அரிய மூர்த்திகளை வழிபடுவோர்க்குப் பல ஆண்டு பூஜா புண்ய சக்திகள் திரண்டு குவிந்து உடனடியாக நற்காரிய சித்திகள் கிடைக்கப் பெறுகின்றனர்!
தினசரி பிரதோஷ பூஜையே நட்சத்திரதாரண பிரதோஷம்! : நித்ய நட்சத்திரதாரண பிரதோஷம் என்பது அனைவராலு மிக எளிதில் கொண்டாடப்படக் கூடிய குறித்த நட்சத்திர நித்ய பிரதோஷ பூஜையுமாகும்! உதாரணமாக உங்களுடைய நட்சத்திரம் விசாகம் எனில் அந்த மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திர நாளன்று பிரதோஷ நட்சத்திரதாரண பிரதோஷமாகக் கொண்டாடிடுங்கள்.. அதாவது தினசரி பிரதோஷமானது விசாக நட்சத்திர நாளன்று விசாக நட்சத்திரதாரண பிரதோஷமாக அமைகின்றது..! எனவே அவரவருடைய நட்சத்திர நாட்களில் மாதந்தோறும் நட்சத்திரதாரண பிரதோஷமாகக் கொண்டாடுவது சிறப்பானதாகும்! இந்நாளில் மாலையில், பிரதோஷ நேரத்தில் நித்ய பிரதோஷ பூஜையாக ஸ்ரீநந்தீஸ்வரருக்குப் பூஜை செய்து அருகம்புல், காப்பரிசி இட்டுத் தக்க நைவேத்யம் படைத்து மூலவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து பிரதோஷம் போலவே உங்கள் நட்சத்திர நாளில் நித்யப் பிரதோஷ வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தல் மகத்தான பலன்களைத் தரும்!
இவ்வகையில் ஒவ்வொருவரும் நட்சத்திரதாரண பிரதோஷ வழிபாட்டிற்கு ஆலயங்களில் ஏற்பாடு செய்வதாலும் ஆலயங்களிலும் நட்சத்திரதாரண (நித்ய) பிரதோஷக் கட்டளைகளை ஏற்படுத்துவதாலும் இறையருளால் தினசரி நித்ய பிரதோஷ வழிபாட்டிற்கும், பக்தி நிலை உயர்வதற்கும் பெரும் பணி ஆற்றலாமன்றோ!
திருமணப் பத்திரிக்கை |
திருமண அழைப்பிதழுக்குப் புனிதம் சேர்க்கும் இறை வழிமுறைகள்! இல்லறமாம் நல்லறத்திற்கு இனிய திறவுகோலாக விளங்குவது திருமண ஓலையாகிய புனிதமான அழைப்பிதழே! ஆயிரக் கணக்கான, நூற்றுக்கணக்கான நண்பர், உறவினர் குழாமின் பார்வையை அடைவதால் திருமணப் பத்திரிக்கை தெய்வீகமாய்ப் பொலியும் வண்ணம் அமைத்திட்டு இல்லறத்திற்குப் பல அற்புத தெய்வீக சக்திகளை அளிக்கலாம்! எவ்வாறு?
திருமணப் பத்திரிக்கை என்பது சுபமங்களக் கிரணங்களைப் பல இடங்கட்கும் நிரவிச் செல்கின்றது..! இல்லறமாம் நல்லறத்திற்குத் திருமணப் பத்திரிகையின் தரிசனமே நல்ல சகுனமாகப் போற்றப்படுகின்றது..! அதனால்தான் திருமணப் பத்திரிக்கைகளை இல்லத்தில் நூல் கயிற்றில் கோர்த்து மாட்டி வைத்திருப்பார்கள்..! எந்த அளவிற்குத் திருமணப் பத்திரிக்கைகளை நாம் தினந்தோறும் தரிசிக்கின்றோமோ அந்த அளவிற்கு நம் கண்களுக்குச் சுபமங்கள சக்தி பெருகும்!
நூற்றுக் கணக்கான திருமணப் பத்திரிக்கைகள் இல்லத்தில் இருப்பதால் அவற்றினின்று சுபமங்களக் கிரணங்கள் எப்போதும் பொழிந்து கொண்டிருக்கும்! அவற்றைக் கம்பியில் கோர்ப்பதைவிட ஒரு மரக் குச்சியில் கோர்த்தல் மிகவும் சிறப்பானதாகும்! கூடிய வரை எதிலும் இரும்பைத் தவிர்த்திடுக! மரமே சிறப்பானது! அல்லது வசதி உள்ளோர் வெள்ளிக் கம்பியில் கோர்க்கலாம். 1920, 1930 என்று கிட்டத்தட்ட 70, 80, 90 ஆண்டுகளைக் கண்ட திருமணப் பத்திரிக்கைக்கு அதிமங்கள சுப சக்திகள் உண்டு..! இவையெல்லாம் காணுதற்கரிய அரிய பொக்கிஷங்கள் ஆகும்.. இவற்றின் தரிசனமே பல திருமண தோஷங்களைப் போக்கும்!
முதலில் திருமணப் பத்திரிக்கைகளை அச்சிடும் புனித முறையை அறிவோமா! திருமணப் பத்திரிக்கை எப்போதும் நமது பண்டைய முறையில் வெளி அட்டை இளம் சிவப்பிலும் உட்புறம் மஞ்சளாகவும் இருக்க வேண்டும்! ஏனெனில் விவாக தேவதைகளின் லோகமானது இளஞ் சிகப்பு வண்ண ஒளிக்கதிர்களையே பரப்புகின்றன..! சுபமுகூர்த்த தேவதைகளும் இளஞ் சிகப்பு நிறத்தில்தான் பொலிகின்றனர்!
மேலும் மங்கள தேவதா லோகம் என்ற ஒன்று உண்டு..! இங்குதான் மங்களாம்பிகை, மங்களாம்பாள் என்ற மங்களப் பெயர்களைச் சூடிய அம்பிகைகள் அருள்பாலிக்கின்றனர்..! இது ஸ்ரீசக்ர லோகத்தின் அங்கமாகும்..! இங்குள்ள சூரியனும், சந்திரனும் மஞ்சள் நிற ஒளிக் கிரணங்களைப் பாய்ச்சுகின்றனர்.! இங்கு மழைப் பொழிவும், சந்திர ஒளியும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும்..! திருமண அழைப்பிதழின் உட்பக்கம், வெளிப்பக்க அச்செழுத்தினைப் பொதுவாக பச்சை நிறத்தில் அச்சிடுவது புனிதமானது! திருமணப் பத்திரிக்கையின் உட்புறத்தில் முதலில் பிள்ளையார் சுழியை அடியில் இரண்டுபீடக் கோடுகளுடன் இட்டுப்பின் குலதெய்வப் பெயரும், இஷ்ட தெய்வத்தின் பெயரும் இருத்தல் வேண்டும்..! மாப்பிள்ளை, பெண் இருவீட்டார், குல, இஷ்ட தெய்வ மூர்த்திகளும் இணைந்து இருத்தல் சிறப்பானதாகும்...!
இதோடு அனைத்துப் பத்திரிக்கைகளிலும் “ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் துணை!” அல்லது “திருஏடகப் பெருமான் போற்றி!” என்றும் எழுதிட வேண்டும்! திருமணப் பத்திரிக்கையில் தனித்திருக்கும் மூர்த்திகளின் படங்களில் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி போன்ற தெய்வங்களை நின்ற கோலத்தில் பதித்தல் கூடாது! அமர்ந்த கோலத்தில் உள்ள இறைத் திருவுருவங்களையே பொறித்தலே வேண்டும்! கும்ப வடிவை அச்சிட்டால் ஒற்றையாக இல்லாது நிறைவாக இரண்டோ அல்லது அதற்கு மேலோ கும்பங்களை அச்சிடுங்கள்! திருமணப் பத்திரிக்கைகளில் எப்போதும் நாம் காண்கின்ற இரண்டு சுபமுகூர்த்த தேவதைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.! இவர்கள் எப்போதும் வானில் சஞ்சரித்துக் கொண்டு எங்கெல்லாம் சுபநிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ, சதாஸ்து என்று எப்போதும் ஆசி அளித்துக் கொண்டிருப்பவர்கள்..! இவர்களே சுபமுகூர்த்த நேரத்தின் அமிர்த நேரத்தில் பிரசன்னமாகி சற்குரு மூலமாக தேவ அருளாசிகளைப் பெற்றுத் தருவதற்கு மூலாதார தேவதா மூர்த்திகளாக இருப்பவர்கள்!
தற்காலத்தில் நாகரீகம் கருதிப் பல வண்ணங்களில், பலமொழிகளில் wedding cards அச்சடித்தாலும், நம் தொன்மையைக் காக்கும் பொருட்டு பண்டைக் கால முறையில் இளஞ் சிகப்புக் காகிதத்தில் (உட்புறம் மஞ்சள் நிறம்) பச்சை எழுத்துக்களாலான பத்திரிக்கைகளைக் கண்டிப்பாக அச்சிட வேண்டும்.! முதல் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்..! உங்கள் குலதெய்வம் பழனி முருகன் என்றால், பழனி தேவாலயத்தில் நேரடியாகவே முதல் பத்திரிக்கையைச் சமர்ப்பித்தல் சிறப்புடையது... அல்லது பழனி முருகன் தேவாலயத்திற்கு அஞ்சலில் அனுப்பிடுக! இரண்டாவதாக எங்கு திருமணம் நடக்கின்றதோ அந்த இடத்தின் பிரதான அல்லது எல்லை, காவல் தெய்வ மூர்த்திக்குப் பத்திரிக்கையை அர்ப்பணிக்கவும்! உதாரணமாக, காஞ்சியில் திருமணமெனில் ஸ்ரீகாமாட்சிக்கும், மதுரை எனில் ஸ்ரீமீனாட்சிக்கும், கும்பகோணம் எனில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீகும்பேஸ்வரருக்கும், சுவாமிமலை எனில் ஸ்ரீசுவாமிநாத முருகப் பெருமானுக்கும், காரைக்குடியெனில் ஸ்ரீகொப்புடை நாயகி அம்பிகைக்கும், திருப்பதி எனில் ஸ்ரீவெங்கடாசலபதிக்கும் அர்ப்பணிக்க வேண்டும்.!
தமக்கென ஒரு இஷ்ட தெய்வத்தை ஒவ்வொருவரும் தினமும் கண்டிப்பாகப் பூஜிக்க வேண்டும்.. மூன்றாவது பத்திரிக்கை இஷ்ட தெய்வத்திற்கு! இஷ்ட தெய்வ மூர்த்தி யார் எனத் தெரியவில்லை, அல்லது இன்னமும் முடிவு செய்யவில்லை எனில் சாக்கோட்டை ஸ்ரீஉய்யவந்த அம்பிகைக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ பத்திரிக்கையை அனுப்பி வைக்கவும்! பெரும்பாலும் அந்தந்த தெய்வ மூர்த்தியின் ஆலயத்திற்கு நேரடியாகச் சென்று பத்திரிக்கையைச் சமர்பித்தல் மிகவும் உத்தமமானது!
நான்காவதாக உங்கள் சற்குருவிற்குப் பத்திரிக்கையை அர்ப்பணியுங்கள்! சற்குரு யார் எனத் அறியவில்லை எனில் அவரவர் விரும்பிப் போற்றுகின்ற மஹான், சித்தர், யோகியருக்கு நான்காம் பத்திரிக்கையை அர்ப்பணியுங்கள்.. உதாரணமாக ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகள், ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், காஞ்சி ஸ்ரீபோடா சித்த சுவாமிகள், மதுரை ஸ்ரீகுழந்தையானந்த சித்த சுவாமிகள், மதுரை ஸ்ரீநடனகோபால சுவாமிகள் என்று உங்களுக்கு எந்த மஹான் மீது ஈடுபாடு உள்ளதோ அவர்தம் ஜீவாலயத்திற்கு ஒரு பத்திரிக்கையை அர்ப்பணியுங்கள்..! இதன் பின்னர்தான் வீட்டில் பெரியோருக்கும், மற்றோருக்கும் அளிக்கலாம்!
ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரருக்கு ஒரு பத்திரிக்கை : அனைவரும் மிக முக்கியமான ஒன்றைச் செய்வது கிடையாது..! சிவபெருமானே ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் எனும் நாமம் தாங்கி மதுரை – சோழவந்தான் அருகே திருவேடகம் சிவாலயத்தில் அருள்பாலிக்கின்ற தலத்தில் திருமணப் பத்திரிக்கைகளைச் சமர்ப்பிப்பது ஆகும்! இது பற்றிய விளக்கங்களை ஏற்கனவே நாம் அளித்திருந்தாலும் ஆண்டுகள் கடந்து விட்டமையால் புது வாசகர்களும் இதை அறியவும், அனைவருக்கும் நினைவுறுத்தவும், மேலும் சித்தர்கள் அளிக்கின்ற கூடுதல் விஷயங்களை எடுத்து உரைத்திடவும், தற்காலத்தில் நவீனம் எனும் பெயரில் புனிதத்தை மாசுபடுத்தும் வகையில் திருமணப் பத்திரிகைகள் வர ஆரம்பித்து விட்டமையால், இல்லறத்தின் புனிதமும் பாதிக்கப்படுகிறது என்பதைச் சுட்டி நிவர்த்தி செய்யவும் இவற்றை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்..!
திருஞானசம்பந்தப் பெருமான் வைகை ஆற்றில் இட்ட திருப்பதிகமானது, மிதந்து சென்று திருவேடகத்தில் சிவலிங்கத் திருவடிகளை அடைந்து அருள் கூட்டிய தலம்! எனவே திருமணப் பத்திரிக்கைகளில் ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் துணை என எழுதுவது மிகவும் சிறப்பானதாகும்! ஏனெனில் இன்றைக்கும் முப்பத்து முக்கோடித் தேவலோகங்களிலும் நிகழ்கின்ற சுப வைபவங்களில் மஹரிஷிகளுடைய, சித்தர்களுடைய, யோகிகளுடைய லோக சுபவைவங்களில் ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரரின் நாமமும் நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும்!
Press வைத்திருப்போரும், வியாபாரிகளும் விளம்பர போர்டுகள், வியாபார போர்டுகள், கணக்குப் புத்தகங்கள், letter pad ஆகிய அனைத்திலும், ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகா சமேத ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் துணை என எழுதுவது மிகவும் சிறப்பானதாம்! வியாபார நல்விருத்தியும் பெறவும் இது உதவும்! பலரும் அறியாத தெய்வீக இரகசியங்களுள் இதுவும் ஒன்றாகும்.! பத்திரிக்கைகளை (books, news-papers) வெளியிடுவோர் கூட ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் துணையெனச் சிவபெருமானைத் துதித்துப் பத்திரிக்கையை அச்சடித்தல் உத்தமமானதாம்! திருமணப் பத்திரிக்கையை அச்சடிக்கும் போது, நீங்கள் proof பார்த்து எடுத்து முதல் பத்திரிக்கையை நேரடியாகவே திருவேடகத்திற்கு எடுத்துச் சென்று ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரனுக்கும் சமர்ப்பித்தல் மிகப்புனிதமான நற்காரியமாகும்.! ஒரு கோடி பேர்களில் பத்துபேர் கூட இந்நற்செயலைச் செய்வது கிடையாது!
அற்புதத் திருப்பணி! : இதனை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஓர் இறைத் திருப்பணியாகக் கைக் கொண்டு எவர் வீட்டில் எல்லாம் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடைபெறுகின்றனவோ, அப்பத்திரிக்கையை திருவேடகம் ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரரின் ஆலயத்தில் சமர்ப்பிப்பதை ஒரு மாபெரும் இறைச் சேவையாகச் செய்து வந்தால் இது பல உத்தம தெய்வீக நிலைகளைத் தந்தருளுமே! எனவே ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வர மூர்த்தியிடம் கல்யாண சுப முகூர்த்தப் பத்திரிகை, சீமந்தம், உபநயனம், கிரகப் பிரவேசம் என அனைத்து சுபமங்கள பத்திரிக்கைகளையும் சமர்ப்பிக்கும் புனித வைபவத்தை இந்த இதழில் கண்டாவது இப்புனிதமான காரியத்தைத் தம் வாழ்க்கை வைராக்கியமாகச் செய்து வரவும்..! மகத்தான புண்ய சக்திகளைப் பெற்றுத் தரும் நற்காரியமிது!
பாண்டவர்கள் பாஞ்சாலியை மணக்கும் முன் வனவாசத்தில், பாண்டவர்களுக்கு ஒரு சோதனையாக பீமசேனனுக்கும், புருஷா மிருகத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டது.. இதுவும் ஸ்ரீகிருஷ்ண லீலையாகத்தான்! அப்புருஷா மிருகத்தைத் துரத்தி ஓடிய பீமசேனன் காடு, மேடெல்லாம் சுற்றி இறுதியில் திருமழபாடியை அடைந்தான். ஆனால் அதற்கு முன் மதுரையில் பல வனங்களில் எல்லாம் புருஷா மிருகத்தைத் துரத்த வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது.. அப்போதுதான் ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரரைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றான்.. எனவே இந்த புருஷா மிருகத் திருவிளையாடல் மூலமாக இறைவனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே பீமசேனனுக்கு ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரரின் தாத்பர்யத்தை உணர்த்தியமையால், பஞ்ச பாண்டவர்கள் அனைவருமே மறைந்து வனவாசம் வாழ்ந்த போதும் கூடத் தங்களுடைய சுபமங்கள லிகிதங்களை ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகா சமேத ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரரிடமே நேரடியாகச் சமர்ப்பித்து ஸ்ரீகிருஷ்ண தரிசனத்துடன் மங்கள ஆசி பெற்றனர்.! சுபமங்கள பத்திரிக்கை எழுதும்போதும் நல்ல ஹோரை, நேரம் பார்த்து எழுதி நன்னேரத்தில் அச்சகத்தில் கொடுங்கள்..!
திருமணச் சடங்கில் இமாலயத் தவறா..! Reception எனும் பெயரில் தாலி கட்டும் வைபவத்திற்கு முன்னரேயே தம்பதியரை ஒருசேர அமர வைக்கும் தவறான வழக்கத்திற்குத் தயவு செய்து இடம் கொடுக்காதீர்கள்! தற்காலத்தில் பல சௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இத்தவறான வழக்கம் நடைமுறைக்கு வந்திருப்பது மிகவும் வேதனைக்கு உரியதாகும்.. இதனால் பலவிதமான எண்ணங்களின் பார்வை தோஷத்திற்கு திருமணம் காணும் தம்பதியரை இலக்காகச் செய்து அவர்களின் இல்லறத்திற்கு இன்னல்களை உருவாக்காதீர்கள்! தாம்பத்யப் பிணைப்பு உருவாவதே மாங்கல்யம் ஏற்ற பின்னரேதான்! மாங்கல்ய தாரணத்தின்போது ஏற்படுகின்ற அக்னிச் சுடர் சக்திகள், முறையாகத் தயாரிக்கப்பட்ட மாங்கல்யச் சரடின் பஞ்சபூத சக்திகள் மற்றும் மந்திர பீஜாட்சர சக்திகள் மூலமாகத்தான் தம்பதிகட்குப் பின்னர் ஏற்படும் பலவிதமான தோஷங்களுக்கும் உரிய நிவாரணக் காப்பு கிட்டும்.!
ஆனால் இக்காப்பு ரட்சா மந்திரச் சடங்குகள் நிகழ்வதற்கு முன் இருவரையும் ஒருசேர அமர்த்தி reception நடக்குமேயானால் அப்போது அவர்கள் மீது படுகின்ற தோஷங்களும், குரோத பொறாமைப் பார்வைகளும் கழிக்க முடியாமலேயே அவை தம்பதியர்களின் மேல் உறைந்து அவர்களுடைய திருமண வாழ்வில், பல பெரும் பிரச்னைகளாக உருவாகிடும்! திருமணத்திற்கு அடுத்த நாளே பல பிரச்னைகளைக் கண்டு அவதியுறும் குடும்பங்கள் நிறைய உண்டு. இதற்குக் காரணம் முறையான மாங்கல்ய தாரணத்திற்கு முன்னரே தவறான முறையில் reception வைத்து மணமக்களைச் சேர்த்து உட்கார வைத்தலாகும்.. தற்போது நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து வருகின்ற இத்தவறான வழக்கத்தை இனியேனும் தொடராமல் கைவிடுங்கள் எனக் கைகூப்பி பணிவன்புடன் வேண்டுகிறோம்.! கணவன், மனைவியெனும் உத்தம பந்தமே தாலி கட்டுவதற்குப்பின் ஏற்படுவதுதான்! இல்லப் பெரியோர்களும் இதன் தாத்பர்யத்தை உணர்ந்து, நன்முறையில் அறிவுறுத்த வேண்டுகிறோம். மண்தாலி பூஜை மேற்கண்ட தோஷங்களை ஓரளவு தீர்க்க வல்லதாம்.!
இறைவனின் முன் பொலியட்டும் இனிய திருமணம்! சித்தர்கள் பெரிதும் வற்புறுத்துவது போல் திருமணங்களில் தாலி கட்டும் வைபவம், இறைச் சந்நதியில் நிகழ்வதுதான் சிறப்பானது, ஏனெனில், முறையான மந்திரங்கள், ஹோமங்கள் இல்லாவிடில் அல்லது முறையாக நிகழாவிடில் ஏற்படும் அனைத்து விதத் தோஷங்களையும் நிவர்த்தி செய்யவும், நன்முறையில் பூஜிக்கப்படாத மாங்கல்யத்தில் நிறைந்திருக்கும் பலவிதத் தோஷங்களுக்கு நிவர்த்தியாகவும் இறைத் திருச்சந்நதியின் முன் நிகழும் திருமணத்தில்தான் நன்முறையில் பரிகாரம் பெற இயலும்.. மேலும் பித்ரு மூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகிகளும், சித்புருஷர்களும் எப்போதும் வலம் வருகின்ற புனிதத் தலங்களாக ஆலயங்கள் திகழ்வதால் இங்கு திருமணம் நடைபெறும்போது இறைப் பெரும் பாக்கியமாக ஏதேனும் ஒரு மஹரிஷியின் திருப்பார்வைபட்டால் கூடப் போதும், மகத்தான ஆசீர்வாதங்களும், தெய்வீகச் சக்திகளும் பெருகுமல்லவா!
ஆலயங்களில் திருமணத்தை நடத்துவதை கௌரவக் குறைவாகப் பலர் கருதுகின்றனர்! என்னே விபரீத எண்ணம்! எந்த இறைத் திருவருளால் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்கின்றோமோ இதனை மறந்து கோயிலில் திருமணத்தை நடத்துவது என்பது பிச்சைகாரத்தனமானது எனும் எண்ணமே இழிவானதே தவிர ஆலயத்தில் திருமணம் நடத்துவது மிகவும் உத்தமமானதாம்.. திருஞான சம்பந்தப் பெருமானே சிதம்பரம் அருகே ஆச்சாள்புரத்தில்தானே தம் திருமணத்தைக் கொண்டார்! எனவே சத்திரம், சாப்பாடு, ஆடம்பரங்கள் அனைத்தையும் திருமண மண்டபங்களில் செய்தாலும் மாங்கல்ய தாரணம் எனும் புனித வைபவமாவது இறைத் திருச்சந்நதியில் மட்டுமே அமையுமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.!
கால தேவதைகளின் அருள் கனியும் திருமணப் பத்திரிக்கை! திருமணப் பத்திரிக்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் எனில் திருமணப் பத்திரிக்கை என்பது தெய்வீக இல்லறத்திற்கு வழி வகுப்பது மட்டுமின்றி, உத்தமமான புனித நேரத்தை அறிவிக்கின்ற மகத்தான அருள்முகப் பெட்டகமாகவும் விளங்குகிறது.. இந்நாள், யோகம், நட்சத்திரம், ஹோரை என மிகமிகப் புனிதமாக கால அளவீடுகளைக் குறிப்பதால் திருமணப் பத்திரிக்கையில் அனைத்துக் கால தேவதா மூர்த்திகளுமே பிரசன்னம் ஆகின்றனர்! நாம் சிவன், பெருமாள், பார்வதி என்று ஈசனின் பல அம்சங்களாக எத்துணையோ இறைமூர்த்திகளைத் தரிசித்து இருந்தாலும், யோக கால தேவதை, தாரா மூர்த்தி, யோக, கர்ண மூர்த்திகள், சுப லக்ன மூர்த்தி, நட்சத்திர தேவதா மூர்த்தி, ஹோரை தேவதா மூர்த்தி போன்ற பல காலதேவதா மூர்த்திகளை நாம் தரிசித்ததில்லை! இவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவுமில்லை.! ஆனால் எப்போதும் இவர்களுடைய திருவருளால் வாழும் நாம் இவர்கள் அனைவருமே ஒருமித்து ஆசீர்வதிக்கின்ற புனித நேரமே சுபமுகூர்த்த நேரம் என்பதை உணர்தல் வேண்டும்! அச்சுபமுகூர்த்த நேரத்தை அறிவிக்கின்ற திறவுகோலாக கால தேவதா மங்கள மூர்த்திகளுடைய ஆசீர்வாதம் பெற்றதாகத் திருமணப் பத்திரிக்கை விளங்குகிறது.!
அட்சதைகள் தாங்கி வரும் ஆசி அருட்சக்தி! இதற்காகத்தான் அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகச் சென்று, கல்யாணப் பத்திரிக்கையின் மேல் மங்களகரமான மஞ்சள் அரிசி மணி அட்சதைகள் வைத்துத் தருவார்கள்.. அந்த அட்சதைகளை பத்திரமாக வைத்துப் பூஜித்து கூடுதலாக அட்சதைகளைச் சேர்த்து அவற்றைத் திருமணத்தன்று எடுத்து வந்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும்.. ஆனால் இந்நடைமுறைப் பழக்கத்தைப் பலரும் மறந்துவிட்டனர்.. அட்சதைகளை வைத்து எவரும் திருமண இதழை அளிப்பதும் கிடையாது!
எனவே இனியேனும் நன்கு பழுத்த 80 வயது நிறைந்த சுமங்கலி மற்றும் அவர்தம் கணவர் திருக்கரங்களால் நல்முழுமையான பச்சரிசி மணிகளை மஞ்சள் பூசி நல் அட்சதைகளாகச் செய்து இதற்குப் பயன்படுத்த வேண்டும்.. திருமணத்திலும் ஆசீர்வாத அட்சதையை இவ்வாறே தயார் செய்து உபயோகிக்க வேண்டும்.. 80 ஆண்டுகள் நிறைந்து சதாபிஷேகம் செய்த தம்பதிகள் கையால் ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம், ஸ்ரீஅபிராமி அந்தாதி, ஸ்ரீமாங்கல்ய ஸ்தவம் ஓதி அட்சதை தயார் செய்தல் உத்தமமானதாம்.. இவ்வகையில் தயாரிக்கப்பட்ட மங்கள அட்சதைகளை மேலும் பூஜித்து அளிப்பதும் ஓர் அற்புதமான கைங்கர்யமே!
சூரிய வெப்பம் தகிப்பதில்லை |
சூரிய வெப்பம் சுட்டுப் பொசுக்குகின்றது! உஷ்ணம் நிறைய இருக்கின்றது என்று நாம் கதறுகின்றோமே, உண்மையில் சூரிய பகவான் இத்தகைய உஷ்ணத்தைப் பொழிவதால் தான் கழிவு நீரோட்டத்திலுள்ள தீய சக்திகளும் பஸ்மம் ஆக்கப்பட்டு உலகம் சுத்தமாக்கப்பட்டு வருகின்றது. நமக்குக் கண்ணொளி தந்து, ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி கொடுத்து, ஞானத்தைத் தரக் கூடிய சூரிய பகவான் நம்மைத் தன் கிரணங்களால் சுட்டுப் பொசுக்குவானா, சற்றே சிந்தித்துப் பாருங்கள்..! எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் சூரிய பகவான் நமக்குத் துன்பங்களைத் தருவது கிடையாது.. நம்மால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை என்பது நம்முடைய குறைபாடே தவிர சூரியனுடைய குறைபாடு அன்று.
நமக்கு நன்மை தரவே சூரிய வெப்பம்! இன்றைக்குப் பரவெளியில் ஒவ்வொரு மனிதனும் எழுப்புகின்ற மிகக் வேவலமான தீய எண்ணங்களையும், தீய சக்திகளையும் பஸ்மம் செய்வதற்காகவும் சூரிய ஒளிச் சுடர்கள் மகத்தான இறைத் தொண்டாற்றுகின்றன! எனவே நிச்சயமாக சூரியக் கதிர்கள் அளவுக்கு மீறிய வெப்பத்தைக் தருபனவே அல்ல! ஒரு தேவ ரகசிய உண்மையைச் சொன்னால் உங்கள் மனம் ஏற்காது! அதாவது, புல், புழு முதல் தாவரம், பிறந்த குழந்தை, பெரிய மனிதர் வரை சூரிய பகவான் அவரவர் தேக நிலைக்குத் தகுந்தவாறு தான் உஷ்ணத்தை மாற்றி மாற்றி அளித்துக் கொண்டிருக்கின்றார்! ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி என்றால் உடனடியாக அவருக்கு ஏற்றாற் போல் சூரிய கிரணக் கதிர்கள் அவர் மீது படும்! எனவே நீங்கள் சூரிய வெப்பம் மிகவும் தகிப்பதாக உணர்ந்தால் அதற்குக் காரணம் நீங்களும் பரவெளியில் தீய எண்ணங்களைக் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதே பொருளாகும்.! 24 மணி நேரமும் இறை நாமங்களைக் கூறி இயற்கையைச் சுத்தப்படுத்த வேண்டிய மனிதன் முறையற்ற காம எண்ணங்களையும், குரோத, விரோத, பொறாமை எண்ணங்களையும் பெருக்கிக் கொண்டு பரவெளியைச் சூடாக்கிக் கொண்டு வருவது நம் மதியின் பிழையே, ரவியின் பிழையன்று!
மேலும், சாதாரண அக்னியால் கூட பொசுக்கப்பட முடியாத அளவிற்கு மனிதன் தீய சக்திகளையும், தீய வினைகளையும், தீய காம, மோக எண்ணங்களையும் பரவெளியில் கலப்பதால் தான் பல கோடி அக்னிக் கோளங்கள் சேர்ந்த சூரிய பகவானே தன்னுடைய கிரணங்களால் சமுதாயத்தில் பெருக்கெடுத்து ஓடும் தீய சக்திகளை தினமும் பஸ்மம் செய்து வருகின்றார்..! எனவே நாம் தாங்க முடியாத சூடு என்றும், தகிக்கும் உஷ்ணம் என்றும் சொல்வது பரவெளியில் மிதந்து கிடக்கின்ற அளவிற்கு மீறிய தீய சக்திகளின் உஷ்ணத்தைத்தாம்! புகை பிடிப்பதாலும், மது பானங்களை அருந்துவதாலும், முறையற்ற தீய செயல்களில் ஈடுபடுவதாலும்தாம், புனிதமான கற்பை அவமதிப்பதாலும்தாம் மனித சமுதாயத்தால் பரவெளி சூடாக்கப்பட்டு வருகின்றது..! இது மனித சமுதாயத்தின் கேடாக, தீய மனிதர்கள் உருவாக்கிய உஷ்ணமாக, மற்றோரும் தம் தீய எண்ணங்களால் கிளப்பிய வெப்பமே தவிர, சூரிய பகவான் ஒரு காலத்திலும் வெப்பத்தை நம்மால் தாங்க இயலாதவாறு ஒரு போதும் கொட்டுவதில்லை.. லாட்டரிச் சீட்டு ஒன்று போதுமே ஒன்றுமறியாப் பாமர மக்களிடமும், நடுத்தரக் குடும்பங்களிலும் பேராசைத் தீயைக் கிளப்பிட! பின் ஏன் அய்யா பரவெளி சுடாது? இத்தகைய பேராசை, பகை, குரோத, விரோத வெப்பத்தை மட்டும் சூரிய பகவான் தம் கிரணங்களால் உறியாவிடில் எத்தனையோ உடல், மன நோய்களுக்கு மனித குலம் அகப்பட்டுக் கிடக்கும்.! எனவே சூரியன் சுடுவதில்லை! இது நான்மறைத் தீர்ப்பு!
கர்மவினை கழிக்கும் கடவுள் களத்தில் கழிப்பிடக் கர்மங்களா? கர்மம், கர்மம்! கதிரவன் கதிர்களே காக்கும்! தற்காலத்தில் கழிப்பறைகள் யாவுமே பூமியைப் பாதிப்பது மட்டுமல்லாமல் கடலுக்கும் அசுத்தம் சேர்க்கின்ற அவல நிலையைக் காண்கின்றீர்கள்! விஞ்ஞான மயமாக்கப்பட்ட கழிப்பறைத் திட்டத்திலிருந்து மனிதன் இனிமேல் விடுபடுவது மிகக் கஷ்டம், கிராமப் புறங்களில் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இயற்கைக் கழிப்பிடங்கள் தாம் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாகும்.! நவீனக் கழிப்பறைகள் என்ற பெயரில் ஆலயங்களைச் சுற்றி நாறடித்துக் கோயில் தீர்த்தங்களைப் பாழடித்து வரும் மனித சமுதாயம் ஆலயத்தின் புனிதமான சூழ்நிலையையே நாற்றங்களாலும், துர்கந்தங்களாலும் அழித்து வருகின்றபோது, சூரிய பகவான்தானே தம் கிரணங்களால் இதற்கெல்லாம் நிவாரணம் தேடித் தருகின்றார்!
நீர்ப் பஞ்சம், அகல, ஆலயத் தீர்த்தங்களை புனிதத்தைப் பாழாக்கும் ஆலயம் அருகில் உள்ள கழிப்பறைகளை அகற்ற வேண்டும். இக்கழிப்பிடங்களால் ஆலய பூமிநீர் தன் சக்தியை இழந்திடும்! நீரோட்ட தேவதைகள் வேதனையுறுவதால் நீர்ப் பெருக்கும் குறையும்! ஆதலால் ஆலயத்தைச் சுற்றி உள்ள கழிப்பிடங்களை அகற்றிப் பாருங்கள். உடனடியாக நீரோட்ட தேவதைகள் மகிழ்ந்து துர்கந்தம் வீசிய இடங்களில் நறுமணம் வீசுவதைக் கண்கூடாகக் காணலாம்.! எனவே வாஸ்து பூஜை அன்று ஆலயங்களைச் சுற்றியுள்ள கழிப்பிடங்களை அகற்றுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.! இன்னும் சொல்லப்போனால் ஆலயங்களில் உள்ளேயே கழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. இத்தகைய வேதனைகளை மனித சமுதாயம் பூமாதேவிக்குத் தரும்போது எப்படி நாம் நல்ல நீரோட்டத்தைப் பெற முடியும்? வாஸ்து நாள் பூஜையால் நல்ல நீரோட்டத்தைக் கொணர முடியும்! இதற்காக நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பிரார்த்தனைகளும், பூஜை முறைகளும் எப்படி அமைய வேண்டும் தெரியுமா ?
வாஸ்து பூஜை முறைகள் : வாஸ்து நாளாகிய இன்று உங்கள் இல்ல, அலுவலக நிலை வாசல் படிகளிலும், ஆலயங்களிலும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்டி மண்டியிட்டுப் பிரார்த்தித்து புனித நதி தேவதைகளையும், நீரோட்ட தேவதைகளையும், வாஸ்து தேவதைகளையும், வாஸ்து மூர்த்தியையும் ஆவாகனம் ஆகுமாறு வேண்டிடுங்கள்! இன்றைக்கு உங்கள் வீட்டில் வாஸ்து ஹோமம் வளர்ப்பது விசேஷமானதாகும்! அறிந்தோர் நன்முறையில் இதனைச் செய்திடுக! அறியாதோர் ஒரு கலசத்தில் கங்கை, காவிரி, கோதாவரி போன்ற தீர்த்தங்களுடன் வில்வம், துளசியிட்டு ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதி, இந்த தீர்த்தத்தை வீடு முழுதும் தெளியுங்கள்..!
நீரோட்டம் பெருகிட ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே பூர்ஸ்வஸ்தி ரூபாய தீமஹி
தந்நோ வாஸ்து மூர்த்தி பிரசோதயாத்
Flat வீடுகளில் இருப்பவர்கள் இத்தீர்த்தத்தை Flat முழுதும் தெளியுங்கள்.. வாஸ்து ஹோமம் மிக எளிமையான முறையில் கடைபிடித்திடலாம்.! வாஸ்து மூர்த்திக்கு உரித்தான எண் 9 என்பதால் நல்ல சுத்தமான தரையில் தூய மண்ணைப் பரப்பி எட்டுத் திக்குகளில் ஓம் எழுதி நடுவிலும் ஒன்பதாவது முறையாக ஓம் என்று எழுதி மண்ணைச் சுற்றி ஒன்பது செங்கற்களை வைத்துத் தெரிந்த முறையில் ஒரு எளிய ஹோம குண்டத்தைக் கட்டிக் கொள்ளுங்கள்..!
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
ஸ்ரீபூமிநாதேஸ்வரர் ஆலயம் செவலூர்
இதனுள் ஒரு பெரிய கற்பூரக் கட்டியை வைத்து அதன் மேல் அரசு, ஆல், புரசு போன்று சமித்துக் குச்சிகளை அடுக்கி வைத்திடுங்கள்... ஒரு மரக் கரண்டியில் தாமரைத் திரி அல்லது பஞ்சுத் திரி வைத்து ஹோமத்திற்காக பசு நெய் வைத்துக் கொண்டு திரியில் ஜோதி ஏற்றி முதலில் ஸ்ரீவிநாயக காயத்ரீ கூறி ஹோம குண்டத்தில் உள்ள கற்பூரத்தை ஏற்றிப் பிறகு உங்கள் குல தெய்வத்திற்கான காயத்ரீ, பிள்ளையார், சிவன், முருகன் போன்ற அனைத்து தெய்வ மூர்த்தியர்க்கான காயத்ரீ மந்திரம் கூறி அல்லது போற்றித் துதிகளை ஓதி பொரி போன்று எளிய ஆஹுதிகளை ஹோமத்தில் இட்டு ஹோம வழிபாட்டைத் தொடருங்கள்..!
ஆஹுதி என்றால் ஸ்வாஹா எனும் போது அக்னியில் அவசியம் நெய் வார்த்து பொரி, வெட்டிவேர், நவதான்யம் போன்றவற்றை அக்னியில் இடுவதுமாகும்.. அவரவர் வசதிகேற்ப எளிய வாஸ்து ஹோம பூஜையை நிகழ்த்திடுங்கள்..! ஏனைய எளிய வாஸ்து ஹோம வழிபாட்டு முறைகளை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.. நீங்கள் இன்று செய்கின்ற வாஸ்து ஹோமமானது நீரோட்டங்களைப் பாதிக்கும் வகையில் மனித சமுதாயம் ஈடுபடுகின்ற செயல்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்து நில தேவதைகளை ப்ரீதி செய்வதற்கான நல்வழிமுறைகளைக் காட்டுவதாகும்.! வாஸ்து பூஜைக்கான விசேஷ சமித்து வகைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலங்களில் கிடைக்கும்..!
ஆலயப் புனிதமே நீர்வளம் பெருக்கும்! வாஸ்து நாளாகிய இன்று (22.8.2001) நீர் வளம், பெருகிட, ஸ்ரீவாஸ்து மூர்த்தி, பூமாதேவிக்கு உரித்தான பூஜைகளைச் செய்திடல் வேண்டும்.. ஏழைகளுக்கு பூமி தானம் செய்வது சிறப்புடையது. பூமிதானம், அன்னதானம் என்றால் நிறைய பணம் செலவாகுமே, நம்மால் முடியுமா என்று அஞ்ச வேண்டாம்..! மிக எளிமையான பூமி தானமாக கூரை, மூங்கில், கம்பு வசதியின்றி வாழுகின்ற ஏழைகளுக்கு உங்களாலான கட்டிடச் சாமான்களை இலவசமாக வாங்கித் தாருங்கள்! வசதி இல்லை எனில் ஒரே ஒரு மூங்கில் கம்பை வாங்கிக் கொடுப்பது கூட மிகச் சிறந்த பூமிதானமாக அமையும்..!
பூமியின் நீர் தோஷங்களைப் போக்குவீர்! இன்று கிழங்கு வகை உணவுகளையும் நன்னாரி சர்பத் போன்ற பூமிக்குக் கீழ் வளர்கின்ற பொருட்களைத் தானமாக அளித்தல் நீர், நில வளத்தைப் பெருக்கும். அடுத்ததாக ஆலயச் சுற்றுப் புறங்களில் அமைந்துள்ள கழிப்பறைகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்காகப் பெரும் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் குடியிருக்கின்ற அல்லது சொந்த வீட்டிலுள்ள நிலதோஷங்களைப் போக்குவதற்காகக் குறித்த சில சங்கு வகைகள், கருப்புக் கயிறு, மிளகாய் வற்றல், படிகாரம் இவைகளாலான திருஷ்டி தோஷ பரிகார பூஜைகளைச் செய்வதற்கு உரித்தான நாளே ஸ்ரீவாஸ்து நாளாகும்..! இத்தகைய நில தோஷங்கள் நீங்கினால்தான் உங்கள் பகுதியில் நீர், நில வளங்கள் பெருகும்.! இன்றைக்கு அரசு, ஆல், வேம்பு போன்ற புனித விருட்சங்களை சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுதலால் நீரோட்ட தேவதைகள் ஆனந்தமடைந்து அதன் மூலம் நீரோட்ட தேவதைகளுடைய அனுகிரகத்தைப் பெற்றிடலாம்..!
ஸ்ரீபூமிநாதர் ஆலயம் மண்ணச்சநல்லூர்
ஸ்ரீவாஸ்து மூர்த்தி ப்ரீதி! ஸ்ரீஜகதீசர், ஸ்ரீஜகன்னாதர், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர் என்று பெயர் கொண்டுள்ள தலங்களிலும் உமாதேவி எழுந்தருளியுள்ள தலங்களிலும் இன்று ஆலயம் எங்கும் நீர்க்கோலம் இட்டு வழிபடுவதால் பூமாதேவி ப்ரீதி அடைந்து நில நீர் ஓட்ட தேவதைகள் மனமுவந்து தக்க நில வளத்தைப் பெற்றுத் தரும்.. இத்தகைய வழிபாடுகள் யாவும் ஒவ்வொரு வாஸ்து நாளிலும் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான வழிபாடுகள் ஆகும்..! தொட்டாற் சுருங்கி மற்றும் தூங்கு மூஞ்சி மரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்..! இவை இரண்டும் மகத்தான இறைச் சக்திகள் கொண்டவை. ஆகும்.! இன்றைக்கு எங்கெல்லாம் தொட்டாற் சுருங்கி தாவரங்கள் இருக்கின்றதோ அவ்விடத்தில் துளசி மற்றும் வில்வ தீர்த்தம் தெளித்து இச்செடிகளுக்கு அருகில் பசுக்களை அழைத்து வந்து பூஜை செய்வது சிறப்பானதாகும்.. இதுவும் ஒருவகை ஸ்ரீவாஸ்து பூஜையே..! எங்கெல்லாம் தூங்குமூஞ்சி மரமும் தொட்டாற் சுங்கியும் இருக்கின்றதோ அவ்விடத்தில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அனுகிரகம் சிறப்பாக இருக்கும்.!
எனவேதான் இந்தத் தாவரங்கள் உள்ள இடங்களில் பலரும் தங்கள் வீட்டு மனையைத் தேர்ந்து எடுப்பார்கள்..! தூங்கு மூஞ்சிமரத்தின் அடியில் பசுக்களுக்கு நீராட்டிப் பூஜை செய்வதும், யானைகளை நீராட்டிப் பூஜை செய்வதும், யானைகளை வரவழைத்துக் கஜ பூஜை செய்து யானைகளுக்கு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவு, கரும்பு, தழை, புல் கொடுப்பதும் ஸ்ரீவாஸ்து பகவானை ப்ரீதி செய்வதாகும்.. ஏதோ ஒரு சாதாரணத் தாவரம் என்று நம் வாழ்க்கையில் எண்ணி வந்த தொட்டாற் சுருங்கியும், தூங்குமூஞ்சி மரமும் வாஸ்து சக்தியை நிரம்பப் பெற்றிருக்கின்றது என்பதை இனிமேலாவது உணர்ந்திடுங்கள்! இவ்விரண்டு தாவரங்களும் உள்ள மனை அமையுமானால் அவை நில விருத்தியும் நீரோட்டமும் பெற்றிருக்கும்..! உங்கள் ஊர்ப் பகுதிகளில் ஆலயத்தில் குளமிருந்தால் அவற்றை நன்முறையில் தூர்வாருவதற்கான இறைச் சமுதாயப் பணிகளை வேலைகளை மேற்கொள்ளுங்கள். தூர்வாருவதென்றால் பல்லாயிரக் கணக்கான ரூபாய் செலவு ஆகுமே என்று அஞ்சாதீர்கள்.. உங்களால் முடிந்த அளவு 10, 15 பேர் சேர்ந்து தக்க அனுமதி பெற்று சிறிது சிறிதாகக் கோயில் குளத்தைச் சீரமைத்திடுங்கள்.. இறையருளால் குளச் சீரமைப்புக்கு நல்வழி பிறக்கும்தானே! இவையெல்லாம் நீரோட்ட தேவதைகளை ப்ரீதி செய்வதாம்! ஆலயக் குளத்தைச் சீர்படுத்துவதும் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு மிகவும் பிரியமான பூஜைகளில் ஒன்றாகும்..!
ஸ்ரீவாஸ்து பூஜைத் தலம் – செவலூர் ஸ்ரீபூமிநாதேஸ்வரர்! புதுக்கோட்டை – பொன்னமராவதி மார்க்கத்தில் குழிபிறை மார்கத்தில் உள்ள செவலூர் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ உட்புறத்தில் ஸ்ரீபூமிநாதேஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது.. வாஸ்து சக்தி பொங்கிடும் திருத்தலம்! இவ்வாலாயமும், திருக்குளமும் ஸ்ரீவாஸ்துவுக்கு உரித்தான விசேஷ பூமி என்று ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் திறம்பட விளக்கியுள்ளோம்..! இன்றைக்கும் சித்புருஷர்கள் ஸ்ரீவாஸ்து நாளில் பூஜிக்கின்ற மகத்தான பட்டை லிங்க மூர்த்தி, சிவலிங்கத் திருமேனியில் காணப்படுகின்ற பட்டைகள் யாவுமே பூலோகத்தின் நீரோட்டத்தைக் குறிப்பன ஆகும்.. இந்தப் பட்டை லிங்க ருத்ர சக்திகள் ப்ரீதி பெற்றால்தான் பூலோகத்தில் நீர்வளம் பெருகும்.. ஏதோ ஒரு குக்கிராம மூலையில் தன்னந் தனியராய் அருள்பாலிக்கின்ற ஸ்ரீபூமிநாதேஸ்வரர்தான் வாஸ்து நாளன்று பூஜிக்கப்பட்டு பூலோகத்தில் நீரோட்டம் பெற்றுத் தரவல்ல மூர்த்தி!
ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒரே ஒரு முறை ஸ்ரீவாஸ்து பூஜையை பக்தியுடன் இங்கு நிகழ்த்தினால் கூட சிறப்பான பலன்களைப் பெற்றிடலாம்.! அந்த அளவிற்கு மகத்துவம் பெற்றது இந்த ஸ்ரீபூமிநாதேஸ்வரர் வழிபாடு! பக்தர்களுடைய அசிரத்தையால் நன்முறையில் ஒருவேளை பூஜை மட்டும் நடக்கின்ற இத்தலத்திற்கு பக்த கோடிகள் ஆக்கப்பூர்வமாக நிவாரணப் பணிகளைச் செய்தருளி பூலோகத்தின் முக்கியமான வாஸ்து பூஜை நடக்கின்ற இடமாகச் சிறப்படையச் செய்ய வைப்பது பக்தர்களுடைய கடமையாகும்..! இந்த ஆலயத்திற்குரிய பூஜை வழிபாட்டு நேரத்தைத் தேனிமலை முருகத் தலத்திலிருந்து பெற்றிடவும்..! பூஜைக்கான நேரங்களை முன் கூட்டியே தேனி மலைக்குச் சென்று அறிந்து கொள்ளவும்..! கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள், Flat Promoters, Builders, Construction Engineers, பத்திரம் பதிவு சம்பந்தப்பட்ட வக்கீல்கள், Sub-Registrars எல்லோரும் வாஸ்து நாளன்று ஸ்ரீபூமிநாதரைக் கண்டிப்பாக வழிபட வேண்டும்... கட்டிடத் தொழில், நிலம் சம்பந்தப்பட்ட மூர்த்தி ஆதலால் நீரோட்ட வளம், நில வளத்திற்கு அனுகிரகம் செய்கின்ற பூமிநாதருக்கு கண்டிப்பாக வாஸ்து நாள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் உரிய வழிபாடுகளைச் செய்யவும்..!
நித்ய கர்ம நிவாரணம் |
1.8.2001 – அலிகளுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்திடில் முற்பிறவியில் செய்த சில தீய கர்மங்கள் விலக வழியுண்டு..!
2.8.2001 – கூலிக்கு மூன்று கால் சக்கர வண்டிகள் ஓட்டுகின்ற ஏழைக்கு வஸ்திர தானம் செய்தால் Clinical Lab Technicians (மலம், மூத்திரம், இரத்த பரிசோதர்கள்) நலம் பெறுவர்..!
3.8.20001 – வரட்டி தட்டி விற்கின்ற ஏழைகளுக்கு உணவு உடை அளித்து உதவிடில் பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாத புதிய நண்பருக்கு கட்டாயப்படுத்தி பீடி, சிகரெட் குடிக்க வைத்த தோஷம் ஓரளவு குறையும்.!
4.8.2001 – நீண்ட நாளாக கண்ணாடி மாற்றாமல் இருக்கின்ற ஏழைகளுக்குக் கண் பரிசோதனை செய்து மாற்றுக் கண்ணாடி வாங்கி ஏழைகளுக்கு உதவிடில் வேலையில் இருக்கலாமா விட்டு விடலாமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றவர்களுக்கு தெளிவு பிறக்கும்..!
5.8.2001 – பழைய இரு சக்கர வாகனங்களை பத்தாண்டுகளுக்குக் குறையாமல் வைத்திருந்தால் அந்தப் பழைய வாகனத்தை தகுதி உடைய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தானமாய் அளித்து புதிய வாகனம் வாங்கும் நாளிது... பாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.!
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் முசிறி
ஸ்ரீகற்பகாம்பாள் முசிறி
6.8.2001 – ஸ்ரீசந்திர மௌலீஸ்வர சுவாமிக்கு வெள்ளிப் பூண் போட்ட முத்து மாலை அணிவித்து தயிர் சாதம் அன்னதானம் செய்திடில் செருப்பு, ஷூ வியாபாரம் செய்கின்றவர்கள் தொழிலில் புதிய திருப்பம் காணும் நாளிது..!
7.8.2001 – பரம்பரை பரம்பரையாய் சித்த வைத்தியம் செய்கின்றவர்கள் காட்டுக்குள் இருக்கும் ஸ்ரீஅகோரவீரபத்திர சுவாமிக்கு செம்பருத்தி தைலத்தால் காப்பிட்டுக் காய்கனிகளால் நைவேத்தியம் செய்து வணங்கிடில் வைத்தியத் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பர்..!
8.8.2001 – ஸ்ரீசண்டிகேஸ்வரர் சன்னதியைச் சுத்தப்படுத்தி நிர்மால்யங்களை கோயில் பூந்தோட்டத்தில் இடுக! சுவாமிக்குத் தைலக்காப்பிட்டு புது வஸ்திரம் சிவன் பாதத்தில் வைத்து எடுத்து அதை சுவாமிக்குச் சார்த்தி வணங்கிடில் புதிய வீட்டிலோ அல்லது பழைய வீட்டிலோ சலங்கை ஒலி, குழந்தை அழு ஒலி, குறட்டை ஒலி கேட்டு நிம்மதியில்லாமல் வாழ்கின்றவர்களுக்கு விடிவு பிறக்கும்..!
9.8.2001 – இளமைத் திமிறால் மனைவியை அடித்து, காதைச் செவிடாக்கியவர்கள் மறுபிறவியில், பிறவியிலேயே காது கேளாத நிலைக்கு ஆளாக வழியுண்டு..! இவ்வாறு செய்தவர்கள் கைதேர்ந்த ENT வைத்தியர்களை வைத்துக் காது கேளாதோர்க்கு இலவச வைத்தியமும் செய்து, காதுக் கருவிகளையும் தானமாய் அளித்திடில் முன் வினையில் செய்த தவறுகளுக்கு ஓரளவு பிராயசித்தம் கிடைக்கும்!
10.8.2001 – மனைவியையோ, தாய் தந்தையையோ, கணவனையோ கன்னத்தில் அறைந்து இரத்தக் காயங்கள் ஏற்படுத்தியவர்களுக்கு வாய் சம்பந்தமான, பேச்சு சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுவதற்கு வழியுண்டு.. ஏழைகளுக்கு இலவசமாகப் பல் வைத்தியம் செய்து, பேச்சுப் பயிற்சி (Speech Therapy) அளிக்கின்ற மருத்துவர்களை (Physiotherapists) வைத்து மருத்துவ உதவி செய்திடில் ஓரளவு பரிகாரம் காணலாம்.
11.8.2001 – கோமேயத்தைப் பாத்திரத்தில் பிடித்து மா இலை கொண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் தலையில் தெளித்துக் கொண்டு, வீடு பூராவும் எல்லா மூலைகளிலும் தெளித்துக் கோமேய பூஜை செய்து பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை இன்றிலிருந்து 12 நாட்களுக்கு அளிப்பதால் வக்கீல் தொழில் செய்கின்றவர்களுக்கும், நீதிமன்றங்களில் வேலை செய்கின்றவர்களுக்கும், நீதிபதிகளுக்கும், மாஜிஸ்ரேட்டுகளுக்கும் இரகசிய எதிரிகளால், பகைகளினால் வருகின்ற பாதிப்பு மறையும்!
12.8.2001 – தலையில் தேங்காய் எண்ணெய் வைத்துத் தலை வார முடியாத நிலையில் உள்ள ஏழைகளுக்குத் தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்க்க தானம் செய்வதால் தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும்..!
13.8.2001 – இலவசப் பிரசவ மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு Sanitary Napkins இன்று தானமாய் அளித்திடில் மாதவிடாய்க் கோளாறுகள் நிவர்த்தியாக வழியுண்டு.!
14.8.2001 – மருதாணி இட்டுவிடும் பெண்களுக்கு இன்று வயிறார உணவளித்து தட்சிணை அளித்திடில் வெளிநாடுகளில் இருக்கும் கணவனிடமிருந்து ஆறுதலான கடிதம் வர வழி செய்யும் நாளிது.
15.8.2001 – கறவை ஒடுங்கி நிராகரிக்கப்பட்ட பசு மாடுகளுக்கும், வயதான காளை மாடுகளுக்கும் வயிறாரப் புல் கட்டு அளித்திட, வராமல் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.!
16.8.2001 – கூடை, பாய் பின்னுகின்றவர்களுக்கு அன்னதானம் செய்திடில் – நியாயமற்ற வீண் பழி சுமத்தப்பட்டோர் மீதான பழி விலகும் நாளிது.
17.8.2001 – வீடு கட்டும் காய்ந்த ஓலை கூரை முடைவோர்களுக்கு (பாய், பந்தல்) அன்னதானம் செய்திடில் – நியாயமற்ற வீண் பழி சுமுத்தப்பட்டோர் பழி விலகும் நாளிது... உறவினர்களிடையே ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் நாளிது..!
18.8.2001 – துப்புரவுத் துறைத் தொழிலாளர்களுக்கு அன்னதானம் செய்து விஷவாயு தாக்காத முக கவசம் தானமாக அளித்திடில் ஆஸ்துமா நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.!
19.8.2001 – தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஏழைச் சிறுவர்களுக்குக் கல்வி கற்க வசதி செய்து கொடுத்தால் ஆசிரியர் பணியில் நிரந்தரம் பெறலாம்.
20.8.2001 – கிராமங்களில் தபால் கொண்டு செல்லும் ஏழைத் தபால்காரருக்கு இன்று சைக்கிளைத் தானமாய்த் தந்திடில் காணாமல் போனவர் திரும்பி வர வழியுண்டு.!
21.8.2001 – பதவி பலத்தாலும், பண பலத்தாலும் தெருவில் வாழுகின்ற ஏழைகளைத் துன்புறுத்தியதற்கும் மானபங்கம் செய்ததற்கும் தண்டனையாக இன்று ஒரு பேராபத்து சூழும். இதிலிருந்து மீளத் தன்னால் தவறிழைக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தந்து அவர்களுடைய மன வேதனைகளை நீக்கிடில் ஓரளவு பிராயச்சித்தம் காணலாம்.
22.8.2001 – ஆலயங்களில் குறிப்பாகப் பெருமாள், பிள்ளையார் ஆலயங்களில் அரசு, வன்னி செடிகளை வைத்து நந்தவனம் மலர்ந்திட ஆவன செய்திடில் சுமுகமான வேலை மாற்றங்கள் கிட்டும்..!
23.8.2001 – பித்தளை விளக்குகளில் நகாஸ் வேலை செய்கின்ற தொழிலாளிகளுக்கு அன்னதானம் செய்திடில் – பயத்தால் வரும் உடல் நடுக்கம் தீரும் நாள் இது.!
24.8.2001 – கண் வைத்தியர்கள் இன்று கண் ஆபரேஷன் எதையும் செய்யாமல் முழுத் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்துத் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தானமாய் அளித்து மறுநாள் ஆபரேஷனை செய்திடில், நல்மருத்துவ குணத்தோடு பெரும் நஷ்டத்தையும் தீர்க்கும் நாளிது.
25.8.2001 – இன்று பசுமாடுகளையோ காளைமாடுகளையோ கன்றுக் குட்டிகளையோ அடித்தல் பெரும் பாவமாகும்.. அவ்வாறு செய்திடில் அடிப்பவர்களுடைய கை கால்களுக்கு ஆபத்து வரும். கவனம் தேவை..!
26.8.2001 – சடகோபன், சுதர்சனம், வரதன், மாதவன், நரசிம்மன் போன்ற பெயருடைவர்களோடு இன்று நிதானமாய் நடந்து கொள்ள வேண்டும்... இல்லையெனில் மேற்சொன்ன பெயருடையவர்களால் துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.
27.8.2001 – இன்று மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கும் விசைப் படகு (motor boat) தொழிலாளர்களுக்கும் மனவேற்றுமையால் துன்பம் வரும் நாளிது.. கவனமாய் இருத்தல் நலம்.
28.8.2001 – புகையிலைத் தோட்டது முதலாளிகளுக்கும், தோட்டப் பணியாளர்களுக்கும் பெரிய துன்பம் வருவதற்கு சிறு தகராறு புகை புகையும் நாளிது.! கவனம் தேவை.
29.8.2001 – வங்கித் தொழிலாளர்களுடைய காரியங்கள் இன்று தங்கி வேடிக்கை பார்க்கும் நாளிது., கவனம் தேவை..!
30.8.2001 – தங்க வியாபாரிகள் வியாபார நிமித்தமாகத் தங்கம் எடுத்துச் செல்லும்போது துன்பம் வர வழியுண்டு..! கவனம் தேவை.
31.8.2001 – ஆட்டோ ஓட்டுநனர்கள் அல்லல்படும் நாளிது.. கவனம் தேவை..!
பௌர்ணமி நாள் : 3.8.2001 வெள்ளிக் கிழமை காலை 9.09 மணி முதல் 4.8.2001 சனிக் கிழமை காலை 11.26 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.. கிரிவலநாள் : 3.8.2001 வெள்ளிக் கிழமை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்