இரவும் பகலும் மனதில் தோன்றும் மாயையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விஷ்ணுபதி

விஷ்ணுபதி புண்ய காலப் பூஜை கண்டிரமாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில்!

தெற்கு நோக்கி நிற்கும் ஸ்ரீராமரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தரிசித்தது தான் உண்டா? ஆம், கும்பகோணம் அருகே கண்டிரமாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தான் ஸ்ரீகோதண்டராமர் மிகவும் அபூர்வமாகத் தெற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கின்றார்.

விஷ்ணுபதி புண்ய காலப் பூஜைத் தலம்!

மிகவும் அபூர்வமான, தெற்கு நோக்கிய ஸ்ரீராமர் தலம்!
அமாவாசை தோறும் பூஜிக்க வேண்டிய பித்ரு முக்தித் தலம்!

தெற்கு நோக்கி அருளும்
ஸ்ரீராமர் கண்டிரமாணிக்கம்

ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயமாகவும், ஸ்ரீகோதண்டராமர் ஆலயமாகவும் போற்றப்படுகின்ற கண்டிரமாணிக்கம் பெருமாள் ஆலயமே நடப்பு சித்ரபானு ஆண்டின் ஆவணி மாத விஷ்ணுபதி புண்ய காலத் தலமாகச் சித்புருஷர்களால் போற்றப்படுகின்றது. ஸ்ரீராமர் உற்பவித்த திரேதா யுகத்திற்கு முன்னரேயே எழுந்த ஆதிமகாவேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் மூர்த்தியே கண்டிரமாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆவார். கஞ்சி வரதர், சுவாமிலை வரதர் என வரதராஜ மூர்த்தங்களிலேயே பல உள்ளமையால் கண்டிரமாணிக்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு, ஆதிமகாவேத வரதராஜப் பெருமாள் என்று பெயர். தெய்வ மூர்த்திகளுக்கு எல்லாம் நல்வரங்களை அள்ளித் தருகின்ற மகாவேத வரதராஜப் பெருமாள் ஆதலால் திருமால் மூர்த்தியின் திருஅவதாரங்களின் அனைத்து நல்வர சக்திகளையும் பூண்டு இங்கு கண்டிரமாணிக்கத்தில் அருள்பாலிக்கின்றார்.

தெற்கு நோக்கிய ஸ்ரீராமர்....!

இந்தத் தலத்தின் பிறிதொரு மகிமை என்னவென்றால் இங்கு தான் ஸ்ரீசீதாதேவி சமேத‌ ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தெற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கின்றார்!  ஆம், தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்ற ஸ்ரீராமரைக் காணுதல் மிக மிக அரிதானதாகும். வனவாசத்தில் இராவணனிடம் சிறைப்பட்ட சீதாதேவி, தென் இலங்கையில் எண்ணற்ற துன்பங்களை அடைந்தமையால், ஸ்ரீராமர் தெற்கு நோக்கிப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு பலத்த வேதனைகளும், சோகச் சுழல்களும் மனதில் நிரம்பி விடும். இலங்கை அசோகவனமே, சோகவனமாக ஸ்ரீராமருக்குக் காட்சி தந்தமையால் தெற்கு நோக்கிடில் ஸ்ரீராமருக்குச் சோக நினைவுகள் ஏற்பட்டு விடும் என்பதால் தான் ஸ்ரீராமரைத் தெற்கு நோக்கி வைத்து பூஜித்தல் கூடாது என்ற இறைப் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கண்டிரமாணிக்கத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீகோதண்டராமரோ தெற்கு நோக்கி நின்ற மூர்த்தமாக மிகவும் அபூர்வமாகத் திகழ்வது ஏனோ?

ஸ்ரீவரதராஜ பெருமாள்
கண்டிரமாணிக்கம்

ஸ்ரீராமர் இங்கு தெற்கு நோக்கி நின்று அருள் புரிவதால், ஆரண்ய காண்டத்திற்கு முந்தைய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக, அயோத்தியா காண்ட ராமராஜ்யங் கண்ட தொன்மையான ஸ்ரீராமராக, ஆதிமூல தட்சிண பாவன ஸ்ரீராமராக இங்கு உற்பவித்து அன்றும், இன்றும், என்றும் அருள்பாலித்து வருவதால் இந்த ஆலயத்தின் ஆதிப் பழமையை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

எனவே இத்தலத்தில் வரும் விஷ்ணுபதி புண்ய கால விசேஷ தினத்தில் விடியற்காலை 2 மணி முதல் பகல் 10.30 மணி வரை விஷ்ணுபதி புண்யகால புனித நேரம் அமைவதால் இங்கு அபிஷேக ஆராதனைகளை, ஹோமங்கள், அன்னதானம், வஸ்திர தானங்களுடன் பித்ரு காரியங்கள், தர்ப்பணங்களையும் நிகழ்த்துதல் பிரதோஷம் போல் பன்மடங்குப் பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.

அமாவாசைத் திதி வழிபாட்டுப் பித்ரு முக்தித் தலம்!

இங்கு உத்தராணி மரத் தாம்பாளம், வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலை, வாழை இலை, தாமரை இலை போன்றவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து கங்கை, காவேரி போன்ற புண்ய தீர்த்தங்களால் நம் மூதாதையருக்குத் தர்ப்பணம் அளிப்பதும் பால ஆஞ்சநேய மூர்த்திக்கு, அனைத்து விதமான காப்புகளையும் இட்டு வழிபடுதலும் மகத்தான பலாபலன்களையும் தந்திடும்.

தெற்கு திசையாகிய தென்புலமே பித்ருக்களுக்கு உரியது ஆகையால் அமாவாசை சித்தரும், வசுருத்ராதிய மஹரிஷியும் மற்றும் பல எண்ணற்ற பித்ரு மூர்த்திகளும் வழிபடுகின்ற பித்ருக்களுக்கும் முக்தி அளிக்கும் தெற்கு நோக்கிய ஸ்ரீராமர் தலமாதலாலும் அமாவாசை தோறும் இங்கு வழிபடுதலால் பித்ரு மண்டலத்திலிருந்து அனைத்துப் பித்ருக்களும் இங்கு ஏகி நல்லாசியை அருள்கின்றார்கள்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

சித்தர்கள் அளிக்கின்ற குருகுலவாசமே மிகவும் கடுமையானதாம்!  ஆனால் இதில் விளைகின்ற உத்தம தெய்வீக நிலைகளோ கோடி கோடியாம்! அதே சமயத்தில் இதனூடே கிடைக்கின்ற பரமானந்த அனுபூதிகளும் அலாதியானதுதாம்!  சித்தன் போக்கு சிவன் போக்கு ஆதலின் எந்தச் சமயத்தில் சித்த சற்குருமார்கள் எதைச் செய்வார்கள், என்ன சொல்வார்கள், எங்கு செல்வார்கள் எனப் புரிபடாத "திக் திக்" கின் இடையே தான் சிறுவனாம் வெங்கடராமனின் குருகுலவாசமானது, பிரபஞ்சத்தின் அஷ்ட"திக்"கிலும் சித்தர்களின் இறைவளம் பரப்பும் அதிஅற்புத சித்த சற்குருவாம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரிடம் நன்கு கனிந்தது! அந்த "திக் திக்" வெறும் பயமல்ல சுவாமி! எட்டுத் "திக்குகளிலும்" இறையருளைக் காண வல்லவராம் தன் சற்குரு இட்ட பணிகளைச் செவ்வனே ஆற்ற வேண்டுமே என்ற நல்லெண்ணங்களின் பரிமளமே அவை! மேலும் மக்கள் செய்யும் பாவம் மன்னனைச் சாரும் என்பது போல, தகுதி வாய்ந்த சிஷ்யர்களாக ஏற்கப்பட்டவர்கள் ஏதேனும் சிறு தவறு செய்திட்டால் கூட அது குருவைச் சார்ந்து அவரைப் பாதிக்குமே என்ற நியாயமான மனோபயமும் சிறுவனுக்குள் எழுந்து அவனுக்குள் "திக்திக்"காய் நிரம்பியது!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

இவ்வாறு யோகமய, தியானவள, மனம் ஒருமித்தமான, சிரசு முதல் பாதம் வரை அசாத்யமான கவனம் கூடியதுமான சிறுவன் ஆற்றிய குருகுலவாசத் தொண்டுகளே, இன்று கலியுகத்தில் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனாக, நம்மிடையே சிறுவனைப் பரிணமிக்கச் செய்து நம்மைச் சித்த இறைநெறியில் பீடு நடை போடக் கனிய வைத்துள்ளது. கலியுகத்தில், குரு இல்லாது வாடும் "திக்"கற்றவர்களுக்கென, ஞானகுருவான இறைவன் அளித்துள்ள அரும்பெரும் பொக்கிஷம்தானே இந்த குருகுலவாசப் பரமானந்த அனுபூதிகள் யாவும்! கூடவே "த்ருக் த்ருஸ்டி விவேகம்" எனும் மிக, மிகக் கடினமான அத்வைத ஞான விளக்கத்திற்கு, சித்தர்கள் அளிக்கும் மிக மிக எளிமையான பாஷ்யமே, சிறுவன் "திக் திக்"குடன் பெற்ற குருகுலவாச அனுபூதிகளாம்!

பறவைகள் பன்மொழிப் புலவர்களே!

"ஏன் வாத்யாரே!  இந்தக் குருவி, காக்கா, கிளி எல்லாம் கியா மியா, கீய்ங், கூய்ங்ன்னு கத்துதுங்களே, இதுக்கெல்லாம் ஏதாச்சும் அர்த்தம் உண்டா?" சிறுவனின் அர்த்தமுள்ள கேள்வியிது!

"ஏண்டா கிடையாது? நிச்சயமா உண்டு! மனுஷங்க மாதிரி பறவைங்க, விலங்குகள் எல்லாம் அவங்களுக்குள்ள ஏதாவது பாஷையில பேசுணுங்கற அவசியமே கிடையாது! பறவைங்க பேசறதே நமக்காகத்தானே! பறவைங்க எல்லாம் அதுகளுக்குள்ள மனசுனாலேயே எல்லாத்தையும் பேசி, அறிஞ்சு, தெரிஞ்சுக்கும்!  வாயைத் திறக்காம மன பாசையிலேயே (telepathy) எல்லாத்தையும் முடிச்சுடும்! உலகத்துல இருக்கற எல்லா மொழிங்களும் அதுங்களுக்கு அத்துப்படின்னு உனக்கு நிறைய தடவை சொல்லி இருக்கேனே!"

அருணாசல புனித பூமியில், பெரியவரும் சிறுவனும் பரிபூரணித்த, குரு-சிஷ்ய பாவன கிரிவலத்தில் பரிமளித்த சம்பாஷணைப் பரல்களிவை!

எவருக்கு அர்க்யமோ, அவரே வருவார்!

திருஅண்ணாமலையில் பெரியவரும், சிறுவனும் கிரிவலம் வந்த அந்தக் காலத்தில் ....தற்போதைய அபய மண்டபமானது.....சர்வேஸ்வரராம் அருணாசலேஸ்வரர் கிரிவல உலாவில் சற்றுத் தங்கி தரிசனம் தரும் பெரிய மண்டபமாக இருந்தது!  இதற்கு முன்பாகத் தான் தற்போது பித்ரு முக்தித் தீர்த்தம் உள்ளது. மிகவும் தொன்மையான இந்தத் தீர்த்தக் கரையில் உட்கார்ந்து கொண்டுதான், கிரிவலம் வரும் போதெல்லாம், பெரியவர் அழகாக, ஸ்பஷ்டமாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே எத்தனையோ மகரிஷிகளுக்கும், சித்தர்களுக்கும் அர்க்யம் அளிப்பார்!

அரிக்கேன் விளக்குச் சித்தர், சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர், கொடுக்குவால் குடுமிச் சித்தர் (கோயம்பேடு ஆலயத் தூணில் உய்பவர்), மனம் சுமந்தான் சித்தர்.....எனப் பலரும் அறியாத சித்தர்களின் மகரிஷிகளின் பெயர்களைச் சொல்லியவாறே அர்க்யம் அளிப்பார்!  ஆனால் நெடுங்காலங் கழித்துத்தான் சிறுவன் ஒன்றை அறிந்து கொண்டான்!

என்ன இறை ரகசியம் அதுவோ?

எந்த மகரிஷியின், சித்தரின் பெயரைச் சொல்லிப் பெரியவர் அர்க்யம் அளிக்கின்றாரோ, அன்றைய தினம் அந்த சித்தர், மகரிஷி நிச்சயமாகத் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றார் என்று!

இயற்கை தரும் ஆன்மீக வரவேற்பு!

ஒருமுறை....சிறுவன் பெரியவருடன் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகையில்....இடி, மின்னலுடன் கனத்த மழையும் கூடி வந்தது!

"வாத்யாரே!  இப்படி கன மழை பெஞ்சா ஜனங்க இந்த சனிப் பிரதோஷத்துல எப்படி கிரிவலம் வர்றது? கடவுளா பார்த்து கிரிவலத்துக்குன்னு காத்து, மழையை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணக் கூடாதா, என்ன?"

"சிவ, சிவ சிவ!  உண்மை தெரியாம அப்படிப் பேசக் கூடாதுடா ராஜா! இதுதாண்டா அண்ணாமலையாரோட திருவிளையாடல்! இன்னிக்கு ரொம்ப, ரொம்ப அபூர்வமா ஜடாமுடிச் சித்தர்னு ஒரு சித்தர், இந்த சனிப் பிரதோஷத்துல அண்ணாமலையைக் கிரிவலம் வராரு! அவரு எப்பவும் நதிக்கு நடுவுல, ஜலத்துக்குள்ளேயே ஜலபாவன யோகத்துல இருந்து ஜீவ சமாதி ஆனவரு! அவரு இன்னிக்கு சூட்சுமமா கிரிவலம் வர்றதுனாலே அருணாசலப் பெருமானே, அவருக்காக "சீதளமா", குளிர்ச்சியா இருக்கணும்னு வருணன், இந்திரனைக் கூப்பிட்டு இப்படி நல்ல இடி மழையா ஆக்கித் தர்றாரு! சம்பந்தருக்கும், அப்பருக்கும், முத்துப் பந்தல் போட்டுக் கொடுத்தவர்தானே நம் சிவபெருமான்!"

(குறிப்பு: இதே போல், ஜடாமுடிச் சித்தர் அண்ணாமலையில் தூல, சூக்கும வடிவங்களில் கிரிவலமாக வந்த கடந்த வைகாசி மாத சிவராத்திரியின் போது (9.6.2002) இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது! இதைக் கண்கூடாகக் கண்டோர் பலரும் உண்டு. ஆனால் கனமழை என்று "கிரிவலத்தைக் கைவிட்டு", கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல கிரிவலம் வராது, அன்று ஜடாமுடிச் சித்தரை தரிசிக்கும் பாக்யத்தை விட்டவர்களும் உண்டு!)

இதன்பிறகு தான், திருஅண்ணாமலையில் மழைச் சாரல் ஏற்படுவதெல்லாம், உத்தம சித்தர்களையும், மகரிஷிகளையும் வரவேற்கும் முகமாகத்தான் எனச் சிறுவன் உணர்ந்தான்! இதன்பிறகு அடைமழையாய் எத்தகைய கன மழை பெய்தாலும் சிறுவன் கிரிவலத்தில் எங்கும் ஒதுங்குவதும் கிடையாது. காரணம், உத்தம சித்தர்களின், மகரிஷிகளின் தரிசனத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற பயமே!

பறவைகளுடன் பரந்த பேச்சு!

....அபய மண்டபத்தைத் தாண்டி....

அப்போதைய சந்திர லிங்கம் இருந்த பகுதியில்....மாலை நட்சத்திர தரிசனம் கண்ட பெரியவர்....தற்போது ஆஸ்ரமம் உள்ள பகுதியில் இருந்த சுமை தாங்கிக் கல் அருகே அமர்ந்தார்!

அப்போது....மின்கம்பியில் வந்து அமர்ந்த சில பறவைகள் "கீய்ங், கீய்ங், குய்ங், குய்ங்" எனக் குரல் கொடுத்தன. அவற்றுடன் பெரியவரும் கீய்ங், கீய்ங் குய்ங், குய்ங் எனப் பேச ஆரம்பித்து விட்டார். நடுவில் தமிழிலும் அவைகளுடன் பேசலானார். அரைமணி நேரத்திற்கு மேல் பறவைகளுடனான உரையாடல் தொடர்ந்தது. சிறுவன் கண் கொட்டாது வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்!

ஒரு குருவியிடம் அவர், "ஏம்மா உன் வீட்டுக்காரன் தான் சரியா வீட்டுக்கு வரலைன்னா, நல்ல பழம், கொட்டை, விதையா எடுத்து வச்சுப் பரிமாறி அன்பாப் பேசணும்தானே!" என்றிட, அக்குருவியோ மிகவும் கோபத்துடன் வாலாட்டி, ஆக்ரோஷத்துடன் பதிலளித்தது!

"ஆங்....அவரு மட்டும் என்னவாம்? எனக்கு எதுவும் தராம எல்லாத்தையும் தானே தின்னுட்டு வந்துடறாரே!" என்று அப்பறவை பதிலளித்திட,

......இவ்வாறான சில உரையாடல்களைப் பெரியவர் சிறுவனுக்குத் தமிழில் விவரிப்பார்!

பெரியவர் - பறவை உரையாடல் தொடர்ந்திட, இறுதியில் அவர் இரண்டிற்கும் "பஞ்சாயத்து" செய்து வைக்க, இரண்டு குருவிகளும் சந்தோஷமாய் ஒன்றாய்ப் பறந்தோடின!

"இந்த சேவைக்காகவும் நாங்க பூலோகத்துக்கு வந்திருக்கோம்னு நல்லாத் தெரிஞ்சுக்கடா!" பெரியவர் அமைதியாகச் சொல்லிட, சித்தர்கள், எவ்வித பேதமுமின்றி, அனைத்து ஜீவன்களிடமும் காட்டும் பரந்த கருணையை எண்ணி எண்ணிச் சிறுவன் அதிசயித்தான்!

அக்னி லோகப் பறவைகள் அண்ணாமலை வந்தனவே!

சற்று நேரத்தில்....ஏழெட்டுப் பறவைகள் ஒன்றாக வந்து மின்கம்பியில், தரையில், மரக் கிளைகளில் அமர்ந்து, நடந்து பெருங் குரல் கொடுத்தன!

அவை உரத்த குரலில் பெரியவரை நோக்கிக் கத்துவதைக் கண்டு முதலில் சிறுவன் பயந்து போய் விட்டான்! ஆனால் அவை வந்ததின் காரணத்தைப் பெரியவர் அழகாக நன்கு விளக்கினார்.

"இந்தப் பறவைங்க சொல்றது ரொம்பவும் முக்கியமான விஷயம்தாண்டா! இன்னிக்கிப் பிரதோஷ நாளாச்சே!  அதுவும் சனிப் பிரதோஷ நாள்! குபேர லிங்கத்துக்கிட்டேயே நம்ம பிரதோஷ பூஜையை முடிச்சுக்கலாம்னு பார்த்தேன்! ஆனா இன்னிக்குப் பிரதோஷ கிரிவலத்துக்கு வர்றதா அடியேன் சொன்ன ஜடாமுடிச் சித்தர் மாதிரி, இன்னொரு முக்கியமான சித்தர் பிரதோஷ கிரிவலம் வராராம்! நீங்க அவரை தரிசனம் பண்ணப் போகலையான்னு நம்பளைப் பாத்து இவங்க கேட்கறாங்க!"

சிறுவன் பெரியவரையும், அந்த பறவைகளையும் வியப்புடன் மாறி மாறிப் பார்த்து வியந்திட்டான்!

திடீரென்று...துறவிகள் போல் இருந்த பத்துப் பதினைந்து பேர்கள் மேலே கைகளைக் கூப்பியவாறு கேதார்நாத்தில் மலை ஏறுகையில் வட இந்திய யாத்ரீகர்கள் கூவ‌வுவது போல் "ஜெய் மகாதேவ், ஜெய் மகாதேவ்" என்று மலையே எதிரொலிக்கும் வண்ணம் உரக்க ஒலித்துக் கொண்டே, அருகே கிரிவலப் பாதையில் செல்வதைச் சிறுவன் பார்த்தான். அவர்கள் சற்று தூரம் செல்லும் வரை, பறவைகளும் மௌனமாக இருந்து, பிறகு பெரியவருடன் பேச்சைத் தொடர்ந்தன!

"என்னே பறவைகளின் பகுத்தறிவு?" சிறுவன் ஆச்சரியப்பட்டான்!

"ஏன் வாத்யாரே! இன்னிக்கு அந்தச் சித்தர் அண்ணாமலைக்கு வர்றார்னா இந்தப் பறவைங்க சொல்லித் தான் உனக்குத் தெரியுமா? உனக்கா இதுக்கு முன்னாடி தெரியாதா?"

மாமுனிப் பறவைகளாம்!

பெரியவர் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, அப்பறவைகள் இருந்த பக்கம் நோக்கிச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தார்! பறவைகளில் யார் யாரென்று தெரியாதாகையால் "அப்போதைக்கு இப்போதே வீழ்ந்து நமஸ்கரித்து வைப்போம்" என்று நினைத்துச் சிறுவனும் அவ்வாறே செய்தான்!

"யார் யார் ரூபத்துல, கடவுள் எந்த விஷயத்தைக் கொடுப்பார்....எந்த ரூபத்துல சித்தர்கள், மஹரிஷிகள் வருவாங்க...இதெல்லாம் தெய்வீகத்துல எப்பவுமே ஒரு புரியாப் புதிர்தாண்டா! ஞானிகளுக்கும் கூட ஆண்டவன் தேவ மாயைன்னு ஒண்ணு வச்சிருக்கார்னா நாமெல்லாம் எந்த மூலைக்கு? தெய்வீகம்கறது நிக்க வச்ச கத்தி மேல நடக்கற மாதிரின்னு நான் உனக்கு அடிக்கடி சொல்லி இருக்கேனே!  பக்தி, ஒழுக்கம், கற்பு, புனிதம், அடக்கம், பணிவு இதெல்லாம் பக்காவா, கொஞ்சம் கூடப் பிறழாம இருந்தாத்தான் பெரிய பெரிய மகரிஷியா ஆகலாம்! ஆனா....கரணம் தவறினா....அதள பாதாள பிறவிக் குழிதான்!  சரி....சரி....இந்தப் பறவைங்க ஸப்ஜெக்ட்டுக்கு வருவோம்! ...." என்று கூறிச் சற்றே மௌனம் கொண்ட பெரியவர் மேலும் தொடர்ந்தார்!

"நிஜமாவே அடியேனுக்குத் தெரியாததைத்தாண்டா இந்தப் பறவைங்க சொல்லுதுங்க! அப்ப நம்மை விட தெய்வீகத்துல இந்தப் பறவைங்க எல்லாம் தெய்வீகத்துல எவ்வளவோ உயர்ந்தவங்கதானே! இதெல்லாம் சாதாரணப் பறவைங்க இல்லைடா ராஜா! பல மாதங்களுக்கு முன்னாடியே கருட லோகம், அக்னி லோகம், புதன் கிரகம், தன்வந்த்ரீ லோகன்னு பல லோகங்கள்லேந்து புறப்பட்டு...பல மாசங்கள் சோறு தண்ணி இல்லாம, விரதம் இருந்து, லட்சக்கணக்கான மைல்கள் பறந்து வந்து....இன்னிக்கு சரியா பிரதோஷ நேரத்துக்கு அருணாசலத்துக்கு, அண்ணாமலைக்கு வர்றாங்கன்னா....அதுவும் இன்ன பிரதோஷத்துக்கு, இன்ன சித்தர், மகரிஷி வருவார்னு சொல்ற பக்தி நிலையில் இருக்காங்கன்னா, அவங்க சாதாரணப் பறவைங்களா, கொஞ்சம் யோசிச்சுப் பாருடா! அத்தனையும் வசிஷ்டர், ச்யவனர் மாதிரி பெரிய பெரிய மகரிஷிங்க நிலையில் இருக்கறவங்க, தெரியுமா?”

சிறுவனுக்கு உள்ளூர் ஒரே பரமானந்தம்! ஏனோ? இன்றைக்கு நிறைய மகரிஷிகளின் தரிசனம் கிடைத்து விட்டதே!

பெரியவர் சிறுவனின் காதைத் திருகினார்! "கூட ஒரு வார்த்தை சேர்த்துக்கோடா! சற்குரு பக்கத்துல இருந்தாத்தான் இந்த பாக்யம் கிடைக்கும்னு! அப்பத்தான் கர்வம் வராது! அப்படி மனப்பூர்வமாக நினைச்சாத்தான் மகரிஷிகளோட தரிசனப் பலனும், புண்யமும் நல்லாவே நிலைச்சு நின்னு விருத்தியாகும்!"

யார், யார், யாரவர்?

ஆனால்...சிறுவனுக்குள் ஒன்று முளைத்தது! என்ன "ஆனால்" அது? .....சற்று முன் தான் குடும்ப விவகாரம் என்று சொல்லிக் குருவிகளுக்குப் பஞ்சாயத்து வைத்த பெரியவர், திடீரென்று சிலவகைப் பறவைகளைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிக்கின்றாரே! எது, எது, என்னவென்று எப்படிப் புரிந்து கொள்வது?"

இந்த எண்ண ஓட்டத்தைப் பெரியவர் அறியாரா என்ன?

"அதெல்லாம் வகை பிரிச்சு தெரிஞ்சுக்கணும்னா இப்படிக் குறுக்குக் கேள்வி போடாம, சற்குரு பின்னாடி, ஒழுங்கா பக்தியோட குறைஞ்சது முப்பது வருஷம் சுத்தணும்டா! அப்பத்தான் எது எது, என்னன்னு புரிய வரும்!"

எங்கே? ஏன்? எதற்கு? எல்லாமே தானே அறிவாய்!

நல்ல சப்ஜக்டை "டொக்கென்று" முடித்து விட்டு எழுந்த பெரியவர், விருட்டென்று எழுந்து, "விறு விறு" என்று நடந்து, நடந்து.....எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்! சிறுவனால் தான் அவரை விரட்டிப் பிடிக்க முடியவில்லை! ஓடி, ஓடியே களைத்து விட்டான்!  எங்கு போகின்றார் என்று தெரிந்தால் தானே துரத்தாமல் சாவகாசமாகச் செல்லலாம்!

ஆனால்....சித்தன் போக்கு.... கோயிலுக்கா? எந்தக் கோயில்? எந்த சந்நிதி? அல்லது மீண்டும் கிரிவலமா? சென்னையை நோக்கி ராயபுரப் பயணமா? .....என்ன ஏதென்று தெரியாது அவனால் என்னதான் செய்ய முடியும்?

எங்கு போகின்றார் என்றும் புரியாததாக ....ஓடி ஓடி.... இரைத்து இளைத்து...ஒரு வழியாய் இங்கு தான் போயிருப்பார் என்று ஊகித்துச் சிறுவன் அருணாசலேஸ்வரர் கோயிலை அடைவதற்குள்....பிரதோஷ பூஜை கிட்டத்தட்ட முடிந்தும் விட்டது!  கோயிலினுள்...உள்ளுக்குள்...அருணாசலப் பெருமானின் மூலத்தானத்தில்....கால பைரவர்...கல்யாண சுந்தரர்...என எங்கெங்கோ பெரியவரைத் தேடி அலைந்து திரிந்த சிறுவன்...மிகவும் களைப்புற்று....வெளியே வந்து....பாதாள லிங்க மண்டப வாசற்படியில் சற்றே சாய்ந்த போது...

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

உள்ளே ஏதோ சரசரவென்று ஏதோ சப்தம் கேட்டிட....

அக்காலத்தில் பாதாள லிங்கப் பகுதி அவ்வளவாகச் செப்பனிடப் படவில்லை! போதிய வெளிச்சமின்றி, சற்றே இருளாக இருக்குமாதலால் பக்தர்களின் நடமாட்டமும் அங்கு மிக மிகக் குறைவாகவே இருக்கும்! பயத்துடன் சிறுவன் உள்ளே சென்று எட்டிப் பார்த்தான்!

ஆம், அங்கே பெரியவர் பத்துப் படிகள் கீழே...பாதாள லிங்க நந்தி அருகே அமர்ந்திருந்தார்! சிறுவன் பெரிய, பெரிய கோபத் திவலைகளுடன் அவரிடம் பாய்ந்து சென்ற போது,

"அந்தச் சித்தர் அப்பவே பூஜையை முடிச்சுட்டுப் போய்ட்டார்டா கண்ணு! நீதான் ரொம்ப, ரொம்ப லேட்!" என்று சொல்லி டப்பென்று முடித்த பெரியவர் திடுதிப்பென்று வெளியே வந்து விட்டார்!

மொழி தெரியாத் திண்டாட்டம்!

"பறவைங்க பாஷையைக் கத்துக் கிட்டிருந்தா அந்தச் சித்தர் யாரு, அவரு பிரதோஷ நேரத்துல எந்த லிங்கத்துக் கிட்ட இருப்பாரு, எங்க பூஜை பண்ணுவாருன்னு எல்லாம் தெரிஞ்சுக்கலாம்தானே! இப்படிக் கோயில் புல்லா அலைஞ்சு திரியாம, லேட் பண்ணாம நேரே இங்கேயே வந்திருந்தா அந்த சித்தரை தரிசனம் பண்ணியிருக்கலாம் தானே! குரு பக்கத்துல இருந்தாக் கூட இப்படிக் குருட்டு வாழ்க்கை நடத்தினா என்னடா பண்ண முடியும்? சரி, சரி.....விடு விடு! உன் தலையில அவ்வளவு தான் எழுதியிருக்கு போல இருக்கு! எல்லாம் விதிதான்! கலியுகத்துல ஓவராப் புண்யத்தை அள்ளிக் கொடுக்காதேன்னு எங்க குரு அடிக்கடி சொல்வாரு!" என விர்ரென்று பேசி முடித்த பெரியவர், கிழக்குக் கோபுரம் தாண்டி வெளியே வந்து விட்டார்!

விளக்கம் வராத வேளைகள்!

"இன்று ஏன் இவர் இப்படி வெடுக்கென்று, "டப் திப்" என்று பேசி முடித்து விடுகிறார்? நாம் பேசுவதற்குக் கொஞ்சம் கூடச் சான்ஸே கொடுக்கவில்லையே!” சிறுவன் மனதினுள் புலம்பினான்!

பெரியவர் சம்மட்டி அடித்தாற்போல் ஊசிப் பட்டாஸாய்ப் பேசிட...சிறுவன் குலுங்கிக் குலுங்கி அழலானான்! பெரியவரோ அழுது, கிறங்கி நிற்கும் சிறுவனைச் சற்றும் சட்டை செய்யவில்லை! அவர் இன்னும் வெகு வெகுமாக நடந்து, தேரடிப் பக்கமாக வெகுவெகுமாக விரைந்திடவே....சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டே அவர் பின்னால் ஓடலானான்!

"நேரா ராயபுரம் அங்காளி சன்னதியில....ஒரு வேளை நான் அங்கே இருந்தா..வந்து பார்!"

அவ்வளவு தான்....நறுக்குத் தெரித்தாற்போல் எங்கேயோ அவர் குரல் கேட்டிட... வழக்கம் போல் சிவன் போக்காய்ப் பெரியவர் மாயமாய் மறைந்து விட்டார்!

இவ்வாறாக இறுதி வரை "ஏன், இப்படிச் செய்தார்?" என அறியாது சிறுவன் தத்தளித்துத் திகைத்த கால கட்டங்களும் குருகுல வாசத்தில் நிறைய உண்டு. இவ்வகையில் பெரியவர் தானாக எவ்வித "விளக்கம்" ஒன்றும் தாராது "மனமுவந்தளித்த" குருகுலவாச அனுபூதிகளையும் சிறுவன் கடந்திட்டான்! தானாக ஞானப் பூர்வமாக உணர வேண்டிய இத்தகைய நிலைகள் பலவும் அவனுக்கு குருகுல வாசத்தில் ஏற்பட்டதும் உண்டு!

வேளை வந்தால் விளக்கமும் வரும்!

மனம் ஒடிந்தவனாய் வருத்தத்துடன் தன்னந் தனியனாய்க் கிரிவலம் வந்து பூதநாராயணன் சந்நிதி வாயிலில் முடித்து....கையில் காசு இல்லாமல் என்ன செய்வது, ஏது செய்வது? என்று தெரியாமல்....மிகுந்த களைப்புடன்.....கிழக்கு கோபுர வாசலுக்கு முன் அப்போதிருந்த பெரிய மண்டபத் தூணில் சிறுவன் சற்றே அயர்ந்து சாய்ந்திட.... உறக்கம் அவனையும் மீறி, பீறிட்டுக் கொண்டு வந்தது!

தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால்...தான் சாய்ந்திருந்த தூண் வேறு மாதிரியாக இருக்கவே....கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான் அவன்!  அது....அது...ராயபுரம் அங்காளி கோயில் தூணல்லவா!

சிறுவன் வியந்து போய்...."தான் எங்கிருக்கின்றோம்? எப்படி இங்கே வந்தோம்?" என்று எண்ணித் திகைத்திட....

அப்போது பக்கத்தில் "க்ளுக்"கென்று பரிச்சயமான சிரிப்பு கேட்டிடவே...

சிறுவன் திரும்பிப் பார்த்தான்...அருகே...பெரியவர் வழக்கம் போல்....அவருக்கு மிகவும் ப்ரீதியான ராயபுரம் அங்காளி ஆலயத் தூணில் சாய்ந்து, காலாட்டிக் கொண்டு சிரித்திட்டார்!

"எட்டுத் "திக்"குகள்லேந்து பறவைங்க, மரங்கள், காற்று, பிராணிகள் மூலமா வர்ற செய்திகளை அறிஞ்சு, அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக் கிட்டா இப்படி "திக் திக்குன்னு" ஆகாதேடா கண்ணு!"

சிறுவன் வியப்பால் விரிந்தான்!

"அப்பப்பா, சித்தர்களிடம் குருகுலவாசம் என்றால் பின்னி எடுத்து விடுவார்கள் போலிருக்குதே!" என்று உங்களைப் போலவே சிறுவனும் எண்ணியதும் உண்டு!

சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர்

திருஅண்ணாமலைச் சித்தர்கள் சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர் திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவல மகிமை

பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

எண்ணற்ற சித்தர்கள் இன்றும் என்றும் பல வடிவுகளிலும் கிரிவலம் வருகின்ற அருணாசலப் புண்ய பூமியில், பௌர்ணமி கிரிவலம் போல, மாத சிவராத்திரி கிரிவலமும் மகத்தான பலன்களைப் பெற்றுத் தருவதுடன், அம்பிகையாம் பராசக்தியே மாதந்தோறும் எண்ணற்ற சித்தர்கள், மகரிஷிகள், ஞானிகள், யோகியர் சகிதம், மாத சிவராத்திரியில் மானுட, தூல, சூக்கும வடிவுகளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அபரிமிதமான பலாபலன்களை, ஜீவன்களின் மேன்மைக்காக, திருஅண்ணாமலையில் மாத சிவராத்திரியில் கிரிவலம் வருவோரின் நலன்களுக்காக அர்ப்பணிக்கின்றார் எனில் என்னே அருணாசல மாத சிவராத்திரி கிரிவல மகிமை!

சித்ரபானு ஆண்டின் ஆடி மாதத்தின் மாத சிவராத்திரித் திருநாளே சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர் என்பார், பலருக்கும் அவரவருடைய பக்தி நிலைக்கு ஏற்ப உணரும் வகையில் தூல, சூக்கும, பாவன, அருவ வடிவுகளில் கிரிவலம் வருகின்ற அதியற்புதத் திருநாளாம்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட வடிவில் பரிமளித்து இன்றும் அன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் மிளிர்பவரே, அஷ்ட கர்ம விளக்கங்களை அறிந்த, அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்ற, அஷ்ட நாத பாவனங்களில் தலை சிறந்த சீனந்தல் சிவப் பெருவாளச் சித்தர்!  ஸ்தம்பனம், மோகனம், வசியம், உச்சாடனம், மாரகம், உத்வேஷணம், கல்பம், மகா உத்தி ஆகிய எட்டு கல்ப சூத்திர நெறிகளின் படி, மிகவும் அரிய மருந்துகளைத் தயாரித்து மக்களுக்கு அளித்துத் தீராத நோய்கள் தீரப் பெருஞ்சேவை ஆற்றியவர். கிரிவலத்தில் பக்தர்கள் காலில் நசுங்கிய சிறு எறும்புகளின் குரலைக் கூடக் கேட்டு அவைகளுக்கும் சிகிச்சை அளித்து வந்த மகா காருண்யச் சித்தர்!

ஒரு பட்சத்தில் தயார் செய்த மருந்துகளை, பூக்குடலை, உத்தராணி மரத்தட்டு, தர்பைச் சுருள், தாமரை இலை, வாழையிலை போன்றவற்றில் வைத்து, தலையில் தோளில் சுமந்து வந்து தம்மை நாடும் அடியார்களுக்கு அளித்திடுவார்.

ஒரு முறை.....அருணாசலேஸ்வரராம் அண்ணாமலையாரே மானுட வடிவில் வந்து ஒரு மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது சீனந்தல் சிவப் பெருவாளச் சித்தரைச் சந்தித்து, "எனக்கு அடங்கா கோரப் பசி வந்துள்ளது! அதை அடக்க மருந்து வேண்டும்!" என்று கேட்டிட, சித்தரும் அவருடைய கை மணிக்கட்டு நாடியைப் பரீட்சித்தார். பல கோடியில் ஒருவருக்கே வரும் வாள (நாடி)த் துடிப்பு, அவரிடம் இருப்பதை நாடி மூலமாக அறிந்து, "இந்த வாளத் துடிப்பால் அடக்க முடியாப் பெரும் பசி ஏற்படும், இதைத் தீர்க்க வேண்டும் என்றால் திருஅண்ணாமலையில் பல கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தவருடைய கரங்களால் உணவு சமைத்து எடுத்து வந்தால் அந்த உணவில் அடியேன் தரும் பெருவாள பஸ்மத்தினைக் கலந்து மருந்துணவாக ஏற்றால் வாளத் துடிப்புப் பசி அடங்கிடும்!" என்றார். உடனே அண்ணாமலையார், பைரவ மூர்த்தியிடம் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் கோடிப் பேர்களுக்கு அன்னதானம் இட்டவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டிடவே, "தற்போது இங்கு இப்போது மனித வடிவில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இதுவரையில் பல கோடிப் பேர்களுக்கு அன்னமிட்டு வருபவரே அக்னி பகவான்!" எனக் கூறி அவரை ஆங்கே அழைத்து வந்திட்டார்!

சிவபெருமானுக்கு ஆஹூதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் வேள்விக்கு ஆதாரமாய் நின்று பங்கு கொண்டமையால் தம்முடைய அக்னிப் பிரகாசம் குறைந்தமையால் அதற்குப் பரிகாரம் நாடித் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கோடிக் கணக்கானோருக்கு அன்னதானம் செய்து வருவதாக அக்னி பகவான் கூறிடவே பைரவரும், மானுடராக வந்த அண்ணாமலையாரை யாரென உரைக்காது அவருக்கு உணவாக்கித் தருமாறு கூறிட, அக்னி பகவானும் மகிழ்ந்தார். வந்தவர் யாரென்று அறியாது, கிரிவலப் பாதை ஓரத்திலே, நான்கு வேதங்கள் கற்களாக, அசுவினி, மருத்துவ தேவர்கள் விறகுகள் ஆகிட, அன்னபூரணி அரிசி வார்த்திட, சாகம்பரி தேவி பொருட்களை அரிந்து தர.....பிரம்மா வேதாக்னி தந்திட....உணவு தயாராயிற்று! அதில் சித்தர்பிரான் பெருவாள பஸ்பத்தைக் கலந்து தந்து, அதனை ஏற்ற சர்வேஸ்வரனுக்கு வந்த தீராப் பசியைத் தீர்த்திட்டார். அப்போது அசரீரியாய் அருணாசலப் பெருமானே, "சிவப் பெருவாளச் சித்தரே! எம்மை ஜோதியாய் அடைவீர்!" என்று அருளி ஆட்கொண்டார்.

அன்னதான மார்கத்தில் சிறப்புற்றிருப்போரும், அன்னதான சத்சங்கப் பணிகளில் ஈடுபடுவோரும் கட்டாயமாக வலம் வர வேண்டிய சித்திரபானு வருட ஆடி மாத சிவராத்திரி! அன்னதான சிவன், அக்னி பகவான், சீனந்தல் சிவப் பெருவாளச் சித்தர் போன்றோர் கிரிவலம் வருகின்ற, மிகவும் அபூர்வமான கிடைத்தற்கரிய மாத சிவராத்திரி! மாதா அன்னபூரணி தேவியே சிவப் பெருவாளச் சித்தரை ஆசீர்வதித்த திருநாள்!  ஹோட்டல், மளிகை, காய்கறி, பால் இனிப்பு வகைகள் போன்றவை சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளோர் வளம் பெற இம்மாத சிவராத்திரியில் கிரிவலம் வந்திட வேண்டும். வயிறு சம்பந்தமான நோய்களால் வாடுவோர்க்குத் தக்க நிவர்த்திகளைத் தரும் மாத சிவராத்திரி! பொதுவாக அன்னதானமே கலியுகத்தில் ஹோம, பூஜா, தியான, யோக, யாக, வேள்விப் பலன்களை எளிமையாகத் தர வல்லமையால் அன்னதான சக்தி பெருகி பூமியில் சாந்தமும் கூடி அனைத்துத் துறைகளும் வளம் பெற உதவும் சிவராத்திரி.

பொதுவாக, அன்ன துவேஷத்தால் சரியாகச் சாப்பிட முடியாதவர்களுக்கு அன்ன துவேஷங்கள் நீங்கியும், குழந்தைகள் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் தக்க நிவர்த்திகளையும் பெறவும் உதவும் சிவராத்திரி. வைத்ய நாத தூபம், சிவராத்திரி தூபம், தன்வந்த்ரீ தூபம் ஏற்றியவாறு கிரிவலம் வருதலால் பல நோய்களுக்கும் தக்க தீர்வுகள் கிட்டும்.

சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவேஸ்வரர்

மெய்காப்பான் சினம் சுமந்தான் பைரவ வாகன மூர்த்தி மகிமை

மகத்தான கால பைரவ க்ஷேத்திரமான சக்குவாம்பாள்புரம் (அம்மாசத்திரம்) சிவாலய பைரவரே ஸ்ரீபைரவேஸ்வரர் ஆவார்!  பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் சர்வேஸ்வரரே பைரவபுர ஸ்ரீபைரவேஸ்வரர்!

துன்பங்களில், மனக் குழப்பங்களில் வேதனையுடன் உழலும் கலியுகக் குடும்பப் பெண்களுக்கு, பெண் பிள்ளைகளைப் பெற்றோர்க்கு மனோதைர்யமும், ரட்சா சக்திகளையும் தந்து பகைமை, விரோத சக்திகளை வென்றிடத் துணை புரிகின்ற அதியற்புத பைரவ மூர்த்தி!

ஈஸ்வரப் பட்டம் பெற்றிட சனிபகவானுக்குப் பெரிதும் துணை புரிந்த ஸ்ரீபைரவேஸ்வரர் ஆதலால் பைரவ சக்தியுடன், சனீஸ்வரரின் அருளும் திரண்டு வரும் அதியற்புத ஆலயம்!

கடந்த ஜுன் மாத ஸ்ரீஅகஸ்திய விஜய மாத இதழின் அட்டைப் படத்தில் சத்யசாகம்பர பைரவ வாகன மூர்த்தி எனப்படும் மெய்காப்பான் சினம் சுமந்தான் பைரவ வாகன மூர்த்தியினை தரிசித்திருப்பீர்கள்! சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவேஸ்வரருக்கு வாகனமாக விளங்குபவரே மெய்காப்பான் சினம் சுமந்தான் பைரவ வாகன மூர்த்தி!  பகைமையைக் களையவல்ல பைரவரின் நல்வரங்களை எளிதில் நமக்குப் பெற்றுத் தருகின்ற பைரவ வாகனர்! பண்டைய காலத்தில் "பைரவபுரம்" எனப் பிரசித்திப் பெற்ற, தற்போதைய சக்குவாம்பாள்புரப் புனித பூமியில் உள்ள ஸ்ரீஞானாம்பாள் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் சிவாலயத்தில் அருள்புரியும் ஸ்ரீபைரவேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்! முந்தைய யுகங்களில் மகத்தான கால பைரவத் தலமாகப் பிரகாசித்த இங்கு தாம் கலியுக ஜீவன்களை ரட்சிக்கும் அதியற்புத பைரவேஸ்வர மூர்த்தியாகக் காலபைரவர் அருள்புரிகின்றார்!  வன்முறைகள், தீய சக்திகளை வென்றிட அருள்புரியும் அற்புத பைரவேஸ்வரர்! முறையாக வழிபட்டு வந்தால் உலகில் தீய சக்திகளை அறவே மாய்த்து சாந்த பூமியாக்க வல்ல பைரவத் தலம்!

பூவுலகின் பைரவபுர பூமி இதோ! இங்கே!

இங்குள்ள சனி பகவான், ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்டு ஈஸ்வரப் பட்டத்திற்கான பைரவ கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றார்!  ஸ்ரீபைரவர், நாயையே தன் வாகனமாகப் பூண்டுள்ளார் என்றால் இறைமையானது அனைத்து ஜீவன்களிடம் ஆத்ம சஞ்சாரம் கொண்டு இருப்பதை உணர்த்திடவும் தானே!

கடந்த ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில், பைரவ வாகன மூர்த்திகளின் மகிமைகளைப் படங்களுடன் நாம் வெளியிட்டு வருவதற்குக் காரணங்கள் பல உண்டு. காலத்தால் மறைந்திருக்கின்ற பைரவ வழிபாட்டின் மகத்துவத்தை இறையருளால் மீண்டும் மலர வைத்திட வேண்டும் என்பது சித்தர்களின் திருவுளம்!  மனித குலத்தின் பேராசை, பகைமை, பக்தியின்மையால் ஏற்கனவே மனித சமுதாயத்தில் நாளுக்கு நாள் தீவினைகள் பெருகி வருகையில், வரும் கலியுக ஆண்டுகளில் வன்முறைகள், தீய சக்திகளின் ஆதிக்கமும் மேலும் பெருக இருப்பதால், ஸ்ரீபைரவரின் அருட் சக்தி, ஸ்ரீம்ருத்யுஞ்ஜயரின் திருவருள், ஸ்ரீசரபேஸ்வரருடைய தெய்வ சக்தியுடன் தான் மனித குலம் அனைத்து விதமான தீய சக்திகளை வெல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திடுதலும் சற்குருமார்களின் தலையாய இறைப்பணியாம்!

அஷ்டமி வழிபாடு கஷ்டங்களைப் போக்கும்!

பிரபஞ்சத்தின் பைரவ பூமியாக விளங்குகின்ற நம் புனித பாரதத்தில் அதுவும் குறிப்பாக தெய்வத்திருத் தமிழ்நாட்டில் பைரவ வழிபாடுகள் குறிப்பாக அஷ்டமித் திதி நாளில், இதிலும் மிக மிக விசேஷமாக, பௌர்ணமிக்குப் பிறகு வரும் (தேய்பிறை) அஷ்டமித் திதியில் இனியேனும் கண்டிப்பாக அனைத்து ஆலயங்களிலும் பரிபூரணமாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடவுமே நாம் பைரவச் சிறப்பிதழ்களை வெளியிட்டு வருகின்றோம்!

எனவே எம பயத்தைப் போக்கவல்ல, கடுமையான நோய்களுக்குத் தீர்வுகளைத் தரவல்ல மிகவும் சிறப்பான பைரவ வாகனமாகிய மெய்காப்பான் சினம் சுமந்தான் மூர்த்தியை வழிபடுதல் மிகவும் விசேஷமானது அன்றோ!

இங்கு நாம் குறிப்பிடும் மெய்காப்பான் சினம் சுமந்தான் என்ற வகையான பைரவ வாகன மூர்த்திகளின் அம்சங்கள், ஜூன் மாத அட்டைப் படத்தில் உள்ளது போல், உலகெங்கும் காணப்படும் குறித்த ஸ்வர்ண ஆகர்ஷண வகை நாய்களிடம் காணப்படுகின்றன. எனவே நாய்களில் உள்நாட்டு வகை, வெளி நாட்டு வகை என்று இனம் பிரிப்பது மனித குலத்தின் மாபெரும் தவறே!

பல ஆலயங்களில் உள்ள பைரவ மூர்த்திகளுக்கான வாகன மூர்த்திகள் ஒரே வடிவமாக இருப்பது போலத் தோன்றினாலும், இவற்றுள் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு நாழிகைக்கும் வெவ்வேறு விதமான பைரவ வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீகாலபைரவர் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார்.

காலம், ஸ்ரீபைரவரின் காலடிகளிலே!

காலத்தைப் படைத்து, காலம் சுழல உலகங்களைப் படைத்து, அவற்றில் வாழ அனைத்துக் கோடி ஜீவன்களின் வாழ்க்கையையும் படைத்துத் தந்த ஸ்ரீகாலபைரவ மூர்த்தியை வழிபடுவதே மனித குலத்தின் முதன்மையான இறைலட்சிய வழிபாடுகளில் ஒன்றாகின்றது!

காலபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர, சர்வேஸ்வரராகிய ஸ்ரீபைரவேஸ்வர சக்திகளைக் குறித்த சில காலபைரவ க்ஷேத்திரங்களில் மட்டுமே பெற்றிட முடியும்! ம்ருத்யு தோஷங்களை அகற்றி, ஆயுள் சக்திகளை நல்வரங்களாக நல்கும் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி லோகம், ஸ்ரீசனீஸ்வர லோகம், ஸ்ரீபைரவ மண்டலம், ஸ்ரீசரபேஸ்வரப் பேரருள் ஆகியவற்றில் எழும் தேவஜீவ ஜோதி சக்திகளை ஒன்று திரட்டி அளிப்பவரும் பைரவபுர ஸ்ரீபைரவேஸ்வர மூர்த்தியே!

பைரவபுரத்தில் உலக நலன்களுக்காகப் பொங்கும் ஸ்ரீபைரவேஸ்வரப் பேரருள்!

பைரவ சக்திகளின் மிக முக்கியமான தன்மைகளுள் ஒன்றே பகைமையை, ம்ருத்யு தோஷங்களை வென்று தீர்க்கமான ஆயுள் சக்தியைத் தருவதாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 120 ஆண்டுகள் தீர்க்கமாக வாழ்ந்திட வேண்டும். ஆனால் மனிதனோ தன்னுடைய பலவிதமான கர்ம வினைகளாலும், கடவுள் நம்பிக்கைக் குறைவாலும், சற்குருவை மதியாமையாலும், யோகம், தியானம், ஹோமம் முதலியவற்றை முறையாகப் பயிலாமையாலும், மது, புகை போன்ற சுகாதாரமற்ற, முறையற்றத் தீய பழக்க வழக்கங்களினாலும், தீர்கமான தன்னுடைய 120 வருட ஆயுளை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகின்றான்.

சனீஸ்வர சக்தி தீர்கமான ஆயுளையும், சுமங்கலித்வத்தையும் தருவதாகும். பைரவ சக்தியுடன் சனீஸ்வரரின் அருளையும் அள்ளித் தருகின்ற அபூர்வமான கால பைரவ க்ஷேத்திரங்களுள் ஒன்றாக விளங்குவதே சக்குவாம்பாள்புரம் சிவாலயமாகும். இங்கு சப்தரிஷிகளும் பூஜித்து நவகிரக சக்திகளைத் திரட்டித் தருகின்றமையாலும், நவகிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற திவ்யமான தேவ மூர்த்திக் களையோடு இங்கு சனீஸ்வரர் திகழ்வதாலும், இவ்வாலயத்தில் தனியாக நவகிரக சக்திகள் அமைந்திடாது,  சனீஸ்வரரே பைரவ சக்தியோடு, ஆயுள் சக்தி, நவகிரக சக்திகளை இணைந்து அளிப்பவராய்த் தனிச் சந்நதி கொண்டு மிளிர்கின்றார். ஈஸ்வரப் பட்டம் பெற்று இங்கு ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்ட சனீஸ்வரருக்குள் அனைத்து நவகிரக நாயக மூர்த்திகளின் அருளம்சங்களும் பொங்கித் திரள்கின்றன!

மெய்காப்பான் சினம் சுமந்தான் என்ற பைரவ வாகன மூர்த்தி நாமத்திற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சினம் என்பது ஒருவிதத்தில் தீவினைகளையும் குறிக்கின்றது. ஜீவன்களுடைய தீவினைகளைத் தம்முள் தாங்கி, துன்பங்களிலிருந்து விடுவிக்கச் செய்து, ரட்சித்துக் காப்பாற்றுகின்ற மூர்த்தியே மெய்காப்பான் சினம் சுமந்தான் தேவ மூர்த்தி! ஒருவரிடம் உள்ள நல்ல விதமான புண்ய சக்திகள், தேவ சக்திகள் ஐஸ்வர்யம், நற்செல்வம், லக்ஷ்மி கடாட்சம் அனைத்தையும் காத்து ரட்சிக்கின்ற, பெற்றுத் தருகின்ற பைரவ வாகன மூர்த்தி!

சனீஸ்வரருக்கு அருளிய ஸ்ரீபைரவேஸ்வரர்!

சப்தரிஷிகளும், நவகிரக அனுகிரக சக்திகளை ஸ்ரீபைரவேஸ்வரரின் திருவருளாகப் பெற்று, அவருடைய திருவடிகளிலேயே அனைத்துப் பலாபலன்களையும் அர்ப்பணித்து, இவற்றையே மெய்காப்பான் சினம் சுமந்தான் பைரவ வாகன வழிபாட்டுப் பலன்களாக நமக்கு அளிக்கின்றார்கள்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தாம் பெற்ற ஈஸ்வரப் பட்டத்தோடு முதன் முதலாக இங்கு ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்டுத் தம் ஆயுள்காரக சக்தியை விருத்தி செய்து கொண்ட தலமாதலால் மிகச் சிறந்த பைரவாமிர்த சனீஸ்வரத் தலமாகவும் சக்குவாம்பாள்புரமான பைரவபுரம் விளங்குகின்றது. இங்கு மீண்டும் பைரவ பூஜைகளைப் பரிணமிக்கச் செய்து பண்டைய யுகங்களில் பரிமளித்த "பைரவபுரம்" போல் பொலியச் செய்வது பக்தர்களின் கடமையாம்.

இங்கு மெய்காப்பான் சினம் சுமந்தான் என்ற பைரவ மூர்த்தியை வாகனமாகக் கொண்டுள்ள ஸ்ரீபைரவேஸ்வரருக்கு வளர்பிறை, தேய்பிறை அஷ்டமித் திருநாட்களில் (கையால் அரைத்த) சந்தனக் காப்பு இட்டு வழிபடுதல் விசேஷமானதாகும்.

ஆசிகளைப் பெருக்கும் காசிக் கயிறு!

இங்கு பைரவபுரத்தில், ஸ்ரீபைரவேஸ்வரரின் திருவடிகளில் 108, 1008 என காசிக் கயிறுகளை அர்ப்பணித்து கால பைரவாஷ்டகம், கால பைரவர் துதிகள், கால பைரவ அஷ்டோத்திரங்களை ஓதி, பூஜித்து தன்னுடைய குடும்பத்தினர்கள், உற்றம், சுற்றம் மட்டுமல்லாது பாமரர்களுக்கும், ஜாதி பேதமின்றி யாவர்க்கும் காசிக் கயிறுகளை தானமாக அளித்து அனைவரும் வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுமாறு செய்தல் மனித சமுதாயத்திற்கே மகத்தான பைரவ சக்திகளைப் பெற்று தருகின்ற அரும்பெரும் சமுதாய இறைப் பணியாகும்! இதனால் வன்முறைகள், தீய சக்திகள், தீவினைகளை, சத்சங்க பக்தி மார்கம் மூலமாக வென்றிடலாம்.

காசிக் கயிறு எனப்படும் இந்த கருப்புக் கயிற்றின் தத்துவத்தில் பரிபூரணிப்பது யாதோ? ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஸ்ரீசனீஸ்வரர் தம்மை வணங்கிய போது, ஸ்ரீபைரவேஸ்வரரும், "சனீஸ்வரா, நீ மட்டும் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஆனந்தம் அடைந்தால் போதுமா? எதிர்வருகின்ற யுகங்களில், குறிப்பாக கலியுகத்தில் பலவிதமான கர்ம வினைகளால் மனித சமுதாயமே பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட இருக்கின்றது. அப்போது நவகிரக அதிபதிகளான நீங்களே, ஒன்பது கோள் மூர்த்திகளே, மனித சமுதாயத்தின் கர்ம வினைகளைப் பரிபாலிக்கின்ற பெரும் பொறுப்பை ஏற்க இருக்கின்றீர்கள்!  ரட்சாபாவன மூர்த்தமாக காசியாகிய வாரணாசியில் கால பைரவ மூர்த்தியாக யாம் அருள்பாலிக்கின்றோம். புண்ய க்ஷேத்திரமாகிய‌ இந்த பைரவபுரம், இராமேஸ்வரம், காசி ஆகிய மூன்றுக்கும் இடையே திரிபுடை மாலைமணிகளாக இடையே 108 பைரவ கிரந்த முடிச்சுத் தலங்கள் உள்ளன. இந்த 108 பைரவ கிரந்திகள் யாவுமே மனிதனுடைய கர்ம வினை முடிச்சுகளை முழுதுமாகத் தீர்க்க வல்லவையாகும்."

காசிக் கயிறு தானம் வாசி யோகப் பலனளிக்கும்!

"உன்னிடம் பூரிக்கும் ஈஸ்வரப் பட்ட பரமானந்த அனுபூதிகள் என்றும் உன்னிடம் நிலைத்து நின்றிடவும், ஜீவன்களுக்கு மகத்தான தீர்க ஆயுள் சக்தியை நல்வரங்களாக அளித்திடவும் உனது திருமணிக்கட்டில் தேவதா மூர்த்தங்களுக்கு உரிய 108 பைரவ நாளங்களைக் குறிக்கின்ற பைரவ ரட்சையை யாம் அளிக்கின்றோம்! எனவே பைரவ சக்திகளைத் தருகின்ற இந்த 108 முடிச்சுகளைக் கொண்ட காசிக் கயிற்றின் மூலமாக, ஆயுள்காரகராகப் பொலிகின்ற உன்னுடைய சனீஸ்வர சக்திகளும் இணைந்து மனித குலத்திற்கு நல்ல மன தைரியத்தையும், தீவினைகளை வெல்கின்ற மன வைராக்கியத்தையும், நல்பக்தியையும், கர்ம வினைகளைக் களைகின்ற பரிகாரத் தன்மைகளையும் பெற்றுத் தருவதாக!" என்று கூறி ஸ்ரீசனீஸ்வரரை ஆசீர்வதித்தார்!

பிறகு ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு வலது மணிக்கட்டில் 108 முடிச்சுகளை உடைய கருப்புக் கயிற்றை ஸ்ரீபைரவேஸ்வரரே அணிவித்தார்! எனவே அக்காலத்தில் காசிக் கயிறு கட்டிக் கொண்டு வருபவர்கள் காசியிலிருந்து திரும்பி வந்தவுடன், சில கால பைரவ க்ஷேத்திரங்களில் குறிப்பாக இங்கு வந்து ஸ்ரீபைரவேஸ்வரரிடம் நிறைய காசிக் கயிறுகளை அர்ப்பணித்து அவற்றை இல்லத்திற்கு எடுத்துச் சென்று உற்றம், சுற்றம், ஊர் மக்கள் என ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் தானமாக அளித்து வந்தார்கள். காசிக் கயிறினை நாடி சக்திகள் நிரம்பி உள்ள மணிக்கட்டில் கட்டிக் கொள்வதால் நாள, நாடி, வாசி யோகப் பலன்களைப் பெற்றிடலாம்.

எனவே பைரவபுரமாகிய இத்தலத்தில் ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்டு, காசிச் சொம்பு, காசிக் கயிறு, கங்கை தீர்த்தம் ஆகியவற்றை, ஜாதி, மத பேதமின்றிப் பலருக்கும் தானமாக அளிப்பதால் சனி புக்தி, சனி தசை, சனி அந்தரங்களில், அவரவர் கர்ம வினைகளால் ஏற்படுகின்ற பணக் கஷ்டம், மனக் கஷ்டம் போன்ற துன்பங்களிலிருந்து காத்து அருள்பவரே ஸ்ரீசனீஸ்வரர் பூஜித்த சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆவார்.

திருமங்கலம் ஸ்ரீமங்கள பாணலிங்கம்

திருச்சி லால்குடி அருகே திருமங்கலம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீமங்கள பாண லிங்க மகிமை

சரும நோய்களைத் தீர்க்கும் ஸ்ரீமங்கள பாண லிங்க பூஜை!

கடந்த மார்ச் 2002 ஸ்ரீஅகஸ்திய விஜய இதழின் பின்பக்க அட்டைப் படத்தில் ஒளிரும் திருமங்கலம் ஸ்ரீமங்கள பாண லிங்கத்தைத் தரிசித்தீர்களா? ஆவுடை லிங்கங்களிலும் (லிங்க அடிப்பகுதி), பாண லிங்கங்களிலும் (லிங்க மேற்பகுதி) பல வகைகள் உண்டு. சதுர ஆவுடை, செவ்வக ஆவுடை, வட்ட ஆவுடை, காஷ்ட பாணம், சௌபாக்ய பாணம், சோபன பாணம் என்றவாறாக லிங்காதி வடிக சூத்திரங்களில், லிங்க அமைப்பின் மேலே உள்ள பாணலிங்கம், கீழே உள்ள ஆவுடையின் உயரம், பருமனுக்கேற்ப லிங்க சக்திகளை வகைப்படுத்தி உள்ளனர்.

த்ரைலிங்க சுவாமிகள் பாணலிங்க வழிபாட்டுச் சித்தர்!

ஒரே நேரத்தில் பல இடங்களிலும் தோன்றும் ஆற்றல் பெற்ற த்ரைலிங்க சித்தர் சுவாமிகள் "லிங்க சூத்திர கிரந்தங்களில்" கரை கண்ட சித்தராவார். இவர் பூலோகத்தில் தரிசிக்காத, அபிஷேகிக்காத லிங்க மூர்த்திகளே இல்லை என்று சொல்லும் வண்ணம், திருக்கயிலாய ஆணையாக அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக வழிபாட்டில் இல்லாத, சிதிலமடைந்த ஆலயங்கள் மற்றும் கேதார்நாத், பத்ரிநாத், பர்வதமலை, சபரிமலை போன்ற இடங்களில் நடை சார்த்தும் காலங்களில் இன்றும், என்றும் ஜீவன்களின் நல்வாழ்விற்காக, சூட்சுமமாக வழிபாடுகளை ஆற்றி வருகின்றார்.

திருமங்கலம் சிவாலயம்

ஆவுடையின்றி அருள்பாலிக்கும் பாண லிங்கம் பல அரிய சக்திகளைக் கொண்டதாம்! பண்டைய யுகங்களில், ஆலயங்கள் எழாத காலத்தில், ஆங்காங்கே பிரளயத்திற்கு முன்னும், இடையிலும், பின்னும் சுயம்பு லிங்க மூர்த்திகள் தோன்றியும், மறைந்தும், மீண்டும் தோன்றியும் பிரகாசித்துக் கொண்டிருந்தன! தற்போதும் நிகழ்கின்றன! பிரளயங்களில் பல வகைகள் உண்டு. ஒரு வகைப் பிரளயத்தில் பூமியின் ஒரு பகுதியில் மேலே உள்ளவை யாவும் கீழே அமிழ்ந்து, கீழே உள்ளவை யாவும் மேலே வரும். எங்கெல்லாம் சுயம்பு லிங்க சக்திகள் மிகுந்துள்ளனவோ அங்கு பாண லிங்கங்கள் தோன்றும். பாண பட்டர், பாணாழ்வார், பாணாயிரர் போன்றோர் பாண லிங்க வழிபாட்டில் தலை சிறந்தவர்கள்.

திருச்சி அருகே திருமங்கலம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள பாண லிங்க மூர்த்தி ஸ்ரீமங்கள பாவன வகையைச் சார்ந்ததாம். திருமாலின் மார்பில் உறைந்து விஷ்ணுவை விட்டுப் பிரியாது பரந்தாமனிடம் என்றும் நிலை நின்றிட, ஸ்ரீலக்ஷ்மிதேவியே பூஜித்த 1008 சகஸ்ர பாணப் பீடங்களுள் இதுவும் ஒன்றாம். முருகப் பெருமான், திருமகள், கலைவாணி, பிரம்மா போன்ற தெய்வ மூர்த்திகள் யோகப் பூர்வமாகத் தவம் புரிகையில் அவ்விடங்களில் தேவ மூர்த்த யோகாக்னி சக்தியால் பாண லிங்கங்கள் தாமாகவே தோன்றும்! திருமகளே பிரபஞ்சத்தில் உள்ள மங்கள தீர்த்தங்கள் அனைத்திலும் பெற்ற தீர்த்தங்களைக் கொண்டு வழிபட்டமையால் இந்த ஸ்ரீமங்கள பாண லிங்கத்திற்கு கங்கை, காவிரி, கோதாவரி போன்ற பல தீர்த்த அபிஷேகம் செய்து வர பலவிதமான மனக் கஷ்டங்கள் நீங்கிடும்!

கணவனுடைய நோய்களைக் கர்ம பூர்வமாக தீர்த்து, தீர்க சுமங்கலித்வத்தைத் தரவல்ல பாண லிங்க மூர்த்தியே திருமங்கலம் ஸ்ரீமங்கள பாண லிங்க மூர்த்தியாவார்! வெள்ளிக் கிழமையில் சுக்ர ஹோரையில் இந்த பாண லிங்கத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வந்திட, பணக் கஷ்டங்கள் தீர நல்வழிகள் பிறக்கும்!  செவ்வாய் மற்றும் பிரதோஷ நாளில் இலுப்பெண்ணெய்த் தைலமிட்டுப் பூஜித்திட எத்தகைய சரும நோய்களும் தீரும்.

தேன்கூடு

தேன்கூடு கட்டுதலும், காணுதலும் சுபசகுனமா? வீட்டிலோ, தோட்டத்திலோ தேனீக்கள் கூடு கட்டினால் என்ன செய்திட வேண்டும்? இல்லத்திலோ, அலுவலகத்திலோ நம்முடைய தினசரி வாழ்க்கைக் காரியத்திற்கு தேன்கூடு இடைஞ்சலாக இருப்பதாக எண்ணினால் அந்தத் தேன் கூட்டை என்ன செய்ய வேண்டும்?

சிரஞ்சீவித்வம், நிரந்தரத் தன்மை கூடிய, அழியாத தன்மையும், தொன்மையும் கொண்ட பொருட்கள், திரவியங்கள் பலவும் ஸ்ரீஆயுர்தேவி உற்பவித்த கிருதயுகம், ஸ்ரீராமர் காலத்திய திரேதா யுகம், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் துவாபர யுகம் வரை உலகப் புழக்கத்தில் நிறைய இருந்தன. இவற்றின் தரிசனத்தைத் தினமும் மக்கள் பெற்றமையால் தீர்கமான ஆயுளும், மங்கள சக்தியும் அந்த யுகங்களில் தார்மீகமாக நிறைவளத்துடன் நிரவின. ஆனால் கலியுகத்திலோ, ஒரு புறம் ஆலய தரிசனம், கிரிவல வழிபாடுகள் பெருகி வந்திடினும், உண்மையான பக்தி சிரத்தை குறைந்து வருவதால், இத்தகைய அமிர்தமயமான சிரஞ்சீவித்வப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தற்போது மறைந்து வருகின்றன. இதனால் கலியுகத்தில் மங்கள சக்தியும் பெரிதும் மங்கி வருகின்றது.

ஸ்ரீபாணலிங்க மூர்த்தி
திருமங்கலம்

சிரஞ்சீவித்வ அமிர்தப் பொருட்களைச் சரியாக மனித குலம் மதியாமையால், அவை தாமாக மறைந்து வருவதாலும் தான் புனிதமான கற்பு நெறிகள், நல்ஒழுக்கம், சுமங்கலித்வம் போன்றவை தற்போது குறைந்து வன்முறைகளும், தீய சக்திகளும், மது, புகைப் பிடித்தல் போன்ற தீய பழக்கங்களும், முறையற்ற காமச்செயல்களும் உலகெங்கும் பெருகி வருகின்றன.

அமிர்த சக்தி உடைய பொருட்களைச் சுய நலமாகத் தவறான வழியில் மனித குலம் பயன்படுத்துதல் ஆகாது என்பதற்காகவே இத்தகைய அமிர்தப் பொருட்கள் பலவும் தற்போது கலியுகத்தில் மரங்களிலும், பூமிக்கு அடியிலும், மலைகளிலும், மூலிகைகளிலும், மலை தரிசனங்களிலும், கடலின் உள்ளுமாகப் பல இடங்களிலும் சற்குருவின் அருள் மூலமாகப் பரிபூரணமாகப் பெறுவதாகவே, சூட்சுமமாக மறைந்துள்ளன. தேவ சிரஞ்சீவித்வம் கொண்ட இவற்றை முறையாகப் பேணாமையாலும், சற்குருவை நன்முறையில் ரட்சித்துப் போற்றாமையாலும் தான் சர்க்கரை நோய், கொழுப்பு வகை போன்ற தேன் போன்ற அமிர்த சக்தி எதிர்ப்பு நோய்கள் கலியுகத்தில் பெருத்து விட்டன. மக்களுடைய கர்ம வினைகளைத் தீர்த்திட சற்குருமார்களே இத்தகைய பல அமிர்த சக்தி எதிர்ப்பு நோய்களையும், துன்பங்களையும் தாமே ஏற்று, அனுபவித்துத் தியாகப் பிரகாசராய்க் கலியுகத்தில் துலங்குகின்றார்கள். ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருவை நாடினால் தானே மக்கள் நற்பலன்களை அடைந்து வாழ்வில் கடைத்தேற முடியும்!

பூவுலகில் சிரஞ்சீவித்வ அமிர்த திரவியங்களைப் பராமரிப்பதற்காகவே மார்கண்டேய மகரிஷி, நாரத மகரிஷி, காரண மகரிஷி, கார்ஜினி மகரிஹி, சுபோதன மஹரிஷி, தேனீச் சித்தர், தேனிமலை பெருமானந்த சித்தர், பாற்கடல் சித்தர், தம்பிக் கலையான் சித்தர் போன்ற சித்புருஷர்களும் மஹரிஷிகளும் இறைப் பெருஞ் சேவைகளைப் புரிந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி ஆலம்பாடி அருகே உள்ள திருச்சிற்றேமம் சிவாலயத்திலுள்ள தேன்கூடு மகத்தான தெய்வீக சக்திகள் வாய்ந்தது. குழந்தைகளுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீஆணி மாண்டவ்ய மஹரிஷி தினமும் தேனீ வடிவில் வந்து வழிபடும் திருத்தலம்.

நாம் வசிக்கின்ற கலியுகத்தில், தேனானது அமிர்தத்வம், சிரஞ்சீவித்வம் நிறைந்ததாகவும் விளங்குவதுடன், அதிர்ஷ்டவசமாக, எங்கும் எளிதில் கிடைப்பதாகவும் விளங்குவது நம் பாக்யமே! சுத்தமான, புனிதமான தேனானது அழிவுறாது எக்காலத்தும் நன்றாகவே இருக்கும்! எனவே தான் தேனபிஷேகமானது கலியுகத்தில் சிரஞ்சீவித்வத்தை விருத்தி செய்யும் அற்புத வழிபாடாகின்றது! இத்தகைய சிரஞ்சீவித்வ, அமிர்தத்வம் பூரிக்கும் தேனைச் சேகரிக்கின்ற தேனீக்களின் அளப்பரிய ஆன்மீக சக்தியை என்னென்றுதான் உரைப்பது? தற்போது செயற்கைத் தேனும், கொதிக்க வைத்த தேனும் வழக்கத்தில் பரவி விட்டதால் தேனின் இயற்கையை மாசுபடுத்தித் தேனுக்கும் கூட "expiry date" வைக்கின்ற அவல நிலை கலியுகத்தில் வந்து விட்டது!

மனித குலத்திற்கு வேத சக்திகளை அளிக்கும் தேனீக்கள்!

தேனைத் தருவதற்கு மட்டும் தேனீக்கள் படைக்கப்படவில்லை, தேன் சேகரிப்பது மட்டுமே தேனீக்களின் வாழ்க்கைப் பணியும் கிடையாது. உண்மையில் தேனீக்கள் உலகில் படைக்கப்பட்டதின் காரணமே மனித குலத்திற்குப் பலவிதங்களில் ஆன்மீக ரீதியாகவும் துணை புரிய வேண்டும் என்பதற்குமாகவே! எவ்வாறெனில், தேனீக்களுடைய ரீங்காரமானது மனித குலத்தால் மறக்கப்பட்டுள்ள வேறு முறைகளில் அடைய இயலாத, பல அபூர்வமான வேத மந்திர ஒலிகளை எழுப்புவதாகும். தேனீக்கள் ஒலிக்கின்ற பல அபூர்வமான வேதமொழி பீஜாட்சர நாத ஸ்வரங்கள் மகத்தான வேத சக்திகளைத் திரட்டித் தருபவை! தேனீக்களின் ரீங்கார வேத ஸ்ருதிகள் பலவும் மனிதனுடைய காதால் கேட்க இயலாத அளவிற்கு மிக மிகக் குறைந்த அளவு சப்த நாடிகளை உடையதாம்!  ஆனால் மனிதனைத் தவிர அனைத்து ஜீவராசிகளும், விலங்கினங்களும், தாவரங்களும் தேனீக்கள் எழுப்புகின்ற வேத மந்திர உச்சாடனங்கள் பலவற்றை மிகவும் நன்றாகவே கேட்டு, உய்த்து, உணர்ந்து நற்பலன்களை அடைகின்றன.

தேன்கூடு சுபசகுனமே!

இல்லத்திலோ, தோட்டத்திலோ தேனீக்கள் கூடு கட்டுவது என்பது மிகவும் நல்ல சகுனமாகும். ஆனால் நற்காரியங்கள் ஆற்றப் பட வேண்டிய இடச் சூழ்நிலையில் தேன் கூடானது இடைஞ்சலாக இருப்பின் என்ன செய்ய வேண்டும்? அமிர்த சிரஞ்சீவித்வ சக்திகள் நிறைந்த தேன் கூட்டினை இடையூறு எனக் கூறுதலே தவறானதாம். உதாரணமாக ஓரிடத்தில் ஹோம பூஜைகளும், விளக்கு பூஜைகளும் நடைபெறுவதாக இருக்கும் போது அல்லது பள்ளியிலோ, பலரும் வந்து செல்லும் அலுவலகப் பாதையிலோ தேன்கூடு இருக்குமானால் அது ஓர் இடையூறாகத் தோன்றும்தானே! இந்நிலையில் குறித்த சில வழிமுறைகளைக் கடைபிடித்த பின்னர் தேன்கூடானது நன்முறையிலே இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆன்மீக ரீதியாகத் தேன்கூட்டை அகற்றுவீர்!

இப்பூவுலகில் ஆழ்ந்த நம்பிக்கை கூடிய பிரார்த்தனையால் எந்த நற்காரியத்தையும் சாதித்திடலாம்! தேனீக்களின் சற்குருவான மருதமலைச் சித்தரை தியானித்து, மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து தேன் கூடு முன் மண்டியிட்டு வேண்டினால் தேனீக்கள் தாமாகவே எவ்விடத்தை விட்டும் அகன்று விடும். தீப்பந்தம், நெருப்பு, தடி கொண்டு தேனீக்களைத் துரத்தி வதைத்திடக் கூடாது. இது சந்ததிகளையே பாதிக்கும் கொடூரமான செயலாகும். தேனீக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, தேனீக்களின் தலைவியான இராணித் தேனீயைப் பத்திரமாக எடுத்து மற்றொரு மரத்தில், இடத்தில் சேர்த்து விட்டால், பிற தேனீக்கள் தாமாகவே அவ்விடத்தை விட்டு அகன்று விடும். பாம்பைச் சற்றும் இம்சிக்காது பாம்பைப் பிடித்து வெளியில் தன்னிச்சையாக விடுகின்ற கை தேர்ந்த பாம்புப் பிடாரர்கள் இருப்பது போல தேனீக்களை இம்சிக்காது, தேன்கூட்டைச் சேதப்படுத்தாது, தேனீக்களை அகற்றுகின்ற தோட்டக்காரர்கள் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களுடைய சேவையைப் பயன்படுத்தித் தேனீக்களுக்கும் இம்சை இன்றி, தேனையும் விரயம் செய்யாது தேன் கூடுகளை அகற்றிடலாம்!

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

தேன் கூட்டை விஸர்ஜனம் செய்யும் முறை!

தேனீக்களை அகற்றிய பின் தேன் கூட்டில் இருந்து கிடைக்கின்ற தேனை முதலில் சுவாமிக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தி அருகில் உள்ள கோயிலில் தக்க பணத்தைச் செலுத்தி விட்டு மிஞ்சும் தேனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேனையும், தேனீக்களையும் அகற்றியவுடன் எஞ்சுவது தேன்கூடாகிய தேன்மெழுகு மட்டுமே! நாட்டு மருத்துவப் பயன்களுக்காகத் தேன் மெழுகை அளித்திடலாம். தேன் கூட்டில் புழுக்களும் எஞ்சி இருந்தால் அந்தத் தேன் கூட்டினை வாழைப் பூவின் மடல்களுக்குள் வைத்து வாழை நாரால் நன்கு சுற்றிக் கட்டி கடல் மற்றும் ஓடுகின்ற ஆற்று நீரில் இடுதல் வேண்டும் அல்லது தென்னை மரம், பனை மரங்களின் அடியில் வேர்ப் பகுதியில் நீர் விட்டு மண்ணுக்குள் நன்கு புதைத்து விட வேண்டும்.

மனிதர்கள் வசிக்கின்ற இடத்தில் தேனீக்கள் தேன் கூட்டைக் கட்டினால் அங்கு சிரஞ்சீவித்வத்தைத் தரக் கூடிய நற்காரியங்கள் நிகழ இருக்கின்றன, வருகின்ற நல்வாய்ப்புகளைக் கைவிடாது நன்முறையில் பேணுதல் வேண்டும் என்பதே அந்த தேன்கூடு காட்டும் சுபசகுன அறிகுறிகளாகும். மேலும் வாஸ்து சாஸ்திரப்படி சில நிலைகள் இருப்பதை அங்கீகரிப்பதாகவும் சிலவற்றைத் திருத்தி அமைக்கப்பட வேண்டியதையும் தேன் கூடு காட்டும்!  ஆனால் வடகிழக்கு திசையில் தேன் கூடு இருந்தால் தான் இவ்வாறு பொருள் கொள்ள முடியும்!  இவ்வாறு தேன் கூடு அமைப்பிற்கும் வாஸ்து சாஸ்திர நியதிகள் உண்டு.

எனவே தேன் கூடு கட்டிய இடத்தில் விருத்தியாகக் கூடிய பல நற்காரியங்கள் நிகழ இருக்கின்றன என்பதும் நற்சகுனப் பொருளாகும். தேன்கூடு எந்தத் திசையில், எந்தக் கோணத்தில் கட்டப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் சில சகுன சாஸ்திரப் பலன்களை எளிதில் அறிந்திடலாம்.

மேலும் பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற நேர்த்திகளையும் தேன் கூடு சுட்டிக் காட்டுவதும் உண்டு. எனவே எந்த இடத்தில் தேன் கூடு கட்டப்படுகின்றதோ அவ்வீட்டில் உள்ளோர் (பாக்கியாக உள்ள) நேர்த்தியை உடனடியாக நிறைவேற்றுதல் வேண்டும். எனவே சுபசகுனத்தை நல்வரமாகத் தருகின்ற தேன் கூட்டினை, அந்த இல்லத்திலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ தேனீக்கள் தாமாக விலகும் வரை அப்படியே விட்டு விடுவதே காருண்ய தர்ம காரியமாகின்றது.

தேனீக்கள் நிவர்த்தி செய்யும் நில தோஷங்கள்! வாஸ்து ப்ரீதியைத் தரும் தேனீக்கள்!

எனவே சுபசகுனத்தைக் கா(கூ)ட்டுகின்ற தேன் கூட்டினை இயன்ற வரையில் அகற்றாமல் தேனீக்கள் தானாக விலகும் வரை பொறுத்தே இருப்பதே தார்மீகமானதாம். அக்காலத்தில் நம் பெரியோர்கள் தேனீக்கள் கூடு கட்டவும், புறாக்கள், காக்கைகள் தங்குவதற்கும் மச்சு வீடுகளில் சிறு அறைகளைத் தனியாக ஒதுக்கி வைப்பார்கள். இவை ஜீவ காருண்ய வாஸ்து தர்மங்களாக அமைகின்றன. நாம் பலமுறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வலியுறுத்தி வந்துள்ளது போல புதிதாக பிளாட் வாங்குபவர்கள், கட்டுபவர்கள், தனித்த வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களுடைய மாடிப் பகுதிகளில் பறவைகளுக்காகப் "பட்சித் தீர்த்தக் கிண்ணமும்", பட்சிகள் தங்கிடச் சின்னக் குச்சு அறையும், தேனீக்கள் கூடு கட்டத் தக்க அமைப்பும் ஏற்படுத்தித் தருதல் ஜீவ காருண்ய தர்மத்தில் அடங்கும். இவை சக்தி வாய்ந்த புண்ய சக்திகளைப் பெற்றுத் தருவதுடன் நில தோஷங்களையும் நீக்கி வாஸ்து சாஸ்திரத் தன்மைகளையும் சுபமங்களகரமாக நிரவுகின்றன.

முதல் தேன் மூலவர் அபிஷேகத்திற்கே!

வீட்டில், தோட்டத்தில் கட்டப்படுகின்ற தேன் கூட்டிலிருந்து எடுக்கப்படுகின்ற தேனை முதலில் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக அர்ப்பணிப்பதும், அன்னதானத்தில் சேர்ப்பதும் மகத்தான புண்ய சக்திகளைப் பெற்றுத் தருவதாம். மேலும் தேனை எங்கும், எவரிடம் இருந்தும் இலவசமாகப் பெறக் கூடாது. அதற்கு உரித்தான தொகையைக் கொடுத்து நல்ல தேனை வாங்குவதும் அல்லது தக்க தொகையை உண்டியலில் சேர்ப்பதும் தான் தேனின் மருத்துவ, சிரஞ்சீவித்வ, அமிர்த சக்திகளை நமக்குப் பெற்றுத் தரும். தேனுள் நிறைந்திருக்கின்ற அமுத, அமிர்த, வேதமய ஆன்மீக சக்திகள் நிறைய உண்டு. கூட்டில் ஒரு சொட்டுத் தேனைச் சேகரிப்பதற்காக ஒரு தேனீ அலைகின்ற அலைச்சலை, மேற்கொள்கின்ற உழைப்பை நீங்கள் மானசீகமாக நினைத்து, உணர்ந்து பார்த்தால் தான் தேனீயினுடைய உழைப்பையும், சுயநலமில்லாத இறைப் பணியையும், அதன் படைப்பின் ரகசியத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தேனீக்கும் உண்டே குருகுலவாசம்!

தேனீக்கள் மிகச் சிறப்பாக குருகுல வாசத்தைக் கடைபிடிப்பவையாம். தேனீக்கள் ஆயிரக்கணக்கான இருந்தாலும் அவை ஒரே ஒரு இராணித் தேனீயைத் தலைமையாகக் கொண்டு அது இடும் கட்டளைகளைச் சற்றும் மீறாது அனைத்தும் மிகமிக ஒற்றுமையுடன் மகத்தான சத்சங்க இறை பாவனையுடன் செயலாற்றுகின்றன. எனவே ஒவ்வொரு விநாடியும் பிறருடைய நல்வாழ்விற்காகவே நம்மை அர்ப்பணித்துப் பாடுபடுகின்ற தியாகமய வாழ்வைக் கொண்டவையே தேனீக்கள் ஆகும்.

தேன் கூட்டில் இருந்து நேரடியாகப் பெற்ற தேனின் ஒரு பகுதியை பத்திரமாக வைத்திருந்து, செவ்வாய்க் கிழமை மற்றும் முருகனுக்கு உரிய நாட்களிலும், பௌர்ணமியிலும் (புதுக்கோட்டை அருகில் உள்ள) தேனிமலையில் தேன் காவடியாகச் சுமந்து, தேனிமலையைக் கிரிவலம் வந்து தேனிமலை முருகனுக்கு அபிஷேகித்துச் சர்க்கரைப் பொங்கலில் தேன் கலந்து அன்னதானம் செய்து வந்தால் செவ்வாய் தோஷங்களுக்கு நல்ல தீர்வுகள் கிட்டி எத்தகைய திருமணத் தடங்கல்களும் நீங்கும். செவ்வாய் சக்திகள் நிறைந்த தலமாதலாலும், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் ஆதலாலும் இங்கு கிரிவல மற்றும் முருக வழிபாடுகளின் பலன்களாக வீடு கட்டுதல் சம்பந்தமான பல இன்னல்களும் தீரும்! இங்கு மலைப் பாறைத் தேன் கூடு தரிசனம் பெறுதற்கு அரியது ஆகும்!  செவ்வாய் கிரகச் சித்தர்கள் அடிக்கடி கிரிவலம் வந்து வழிபடும் புண்ணிய பூமியே தேனிமலையாம்.

அறிந்தோ அறியாமலோ தம் வாழ்க்கையில் தேன் கூட்டைக் கலைத்தவர்கள், கலைக்கச் செய்தவர்கள் தேனீச் சித்தர்கள் நடமாடும் புனித மலையான தேனிமலையில் தேனைச் சுமந்தவாறு அடிப்பிரதட்சிணமாகக் கிரிவலம் வந்து தேனிமலையானுக்குத் தேனபிஷேகம் செய்து வழிபட்டு உளமாரப் பிராயச்சித்தம் வேண்டிப் பெற வேண்டும்.

குறட்டை

குறட்டை என்பது ஒரு வகை அபந்த வகை சப்த மொழியாகும்!

அனைவரும் குறட்டை விடுகின்றார்கள்! ஆனால் மனிதனின் காதுகளுக்கு எட்டா சப்த அலைகளில் பல குறட்டைச் சப்தங்கள் இருக்கின்றன!

பலத்த குறட்டை விடுபவர்கள் தீய சக்திகளுக்கு எளிதில் இலக்காகி மனக் குழப்பத்தில் அடிக்கடி சிக்கிக் குடும்பத்தில் பிறரையும் நன்கு குழப்பி விடுவார்கள்! இவர்கள் சப்த மாதா மூர்த்திகளுக்கு வாரந்தோறும் திங்களன்று தேனபிஷேகம் செய்து வர வேண்டும்!

மெய்ஞான விஞ்ஞானிகளான சித்தர்களின் விளக்கப்படி, குறட்டை என்பது ஒரு (இயற்கையாக உருவான) அபந்த மொழியே!  எவ்வாறு computer துறையில் high level and low level languages என்று வகை பிரிக்கப்படுகின்றதோ, இது போல் குறட்டை என்பது sound oriented not lipi or sign oriented subtle body language அதாவது அதூல அங்க மொழி ஆகும். பல நடப்பு ரகசியங்களை, நடக்க இருப்பதை குறட்டை சப்தங்களின் அர்த்தங்கள் மூலமாகத் தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்திடலாம்.

அனைத்து மக்களுமே குறட்டை விடுகின்றார்கள்!  ஆம், இது உண்மையே! ஆனால் பலரும் எழுப்புகின்ற குறட்டை சப்தமானது மனிதக் காதுகளை அடைய முடியாத மிகவும் குறைந்த சப்த நாளங்களாக (in low decibles) இருக்கின்றன. குறட்டை சப்த மொழி அர்த்தங்களை நன்கு அறிவதன் மூலம் எதிர் வரும் பூகம்பம், புயல், பெருமழை போன்றவற்றையும் பல நிகழ்ச்சிகளையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். குறட்டை என்றால் என்ன? விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் குறட்டைக்கு விளக்கங்கள் தரப்பட்டாலும் அவை உண்மைக்கு அப்பாற்பட்ட நிரூபணங்களாகவே காலப் போக்கில் மாறி, மாறி, நிரந்தரமற்றுக் கரைந்து போய் விடுகின்றன!

உறக்க நிலை மொழியே குறட்டையாம்!

சித்புருஷர்கள் குறட்டையை உறக்க நிலையில் வழக்குப் பெறும் "தூலாப்யாச அபந்த மொழி" என்றே விளக்குகின்றனர். உறக்க நிலை என்பது மனிதனுடைய வாழ்க்கையின் மற்றோர் கால அங்கம் என்பதை நாம் ஆன்மீக ரீதியாக ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் எடுத்துரைத்து வருகின்றோம்! மனிதனுடைய ஆயுளில் கிட்டத்தட்ட பாதி காலம் உறக்கத்தில் கழிவதால், உறக்க நிலையிலான மனித வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவரும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதாவது உறக்க நிலைகளிலும் மனிதன் கண்ணுக்குத் தெரியா சூட்சும உடல்கள் மூலம் காரியங்களை ஆற்றிக் கொண்டு இருக்கின்றான்! இதை விஞ்ஞானம் என்று உணரப் போகின்றதோ, தெரியவில்லையே! எனினும் உணரும் காலமும் வரும்.

விழிப்பு நிலை தாண்டிய மனித வாழ்வு ஒன்று அனைவருக்கும் உண்டு! இதில் உள்ளவையே குறட்டை, கனவு, விண்வெளி யாத்திரை (astral travel) போன்றவையாம்! இத்தகைய மெய்ஞான இரகசியங்களை அறிய, உணர இறைவனால் மனிதனுக்குப் படைத்து அளிக்கப்பட்டதே ஆறாம் அறிவாகிய பகுத்தறிவாம். குருவே பகுத்தறிவுக் கண்களைத் திறக்கும் பகலவன்!

மனித வாழ்க்கை என்பது தலை முதல் பாதம் வரையில் உள்ள அங்கங்களால் நடைபெறும் காரியங்கள் மட்டுமல்ல! கிட்டத்தட்ட பாதி வாழ்க்கை நேரம் உறக்க நிலையாவதால், நெடுஞ்சாண் கிடையாக மரம் போல் மனித சரீரம் (உறக்க ரீதியாகப்) படுத்திருந்தாலும் மனிதனுக்குள் உள்ள சூட்சும சரீரங்களிலும் உறக்க நிலையில் நிகழ்த்தப்படுகின்ற பல சூட்சும மனித வாழ்க்கை நிலைகளை ஒவ்வொருவரும் ஆறாம் அறிவாம் பகுத்தறிவு மூலமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

விழிப்பு நிலை வாழ்க்கைக்கு அப்பால் உறக்கத்தில் கூடும் வாழ்க்கை நிலைகள்!

எனவே உறக்கம் என்பது வெறும் ஓய்விற்காக மட்டும் அல்ல!  ஒவ்வொருவரும் இந்த பூலோகத்தில் மட்டும் வாழ்ந்திடவில்லை! அவரவர்க்கு உரித்தான அவரவர் கர்மவினைகளின் படி, உறக்க நிலையில் மனிதன் தன்னுடைய சூட்சும சரீரங்கள் மூலமாகப் பல பூமிகளூக்கும், எண்ணற்ற லோகங்களுக்கும் சென்று பலவிதமான வாழ்க்கை நிலைகளில் காரியங்களைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றான். ஆனால் பிற லோக வாழ்க்கை பூலோக வாழ்க்கையை விட முற்றிலும் மாறுபடும்! ஆதலால் இந்த உறக்க நிலை வாழ்க்கையை "அபந்த வாழ்க்கை" என்று என்கிறோம்! அதாவது "பந்த வாழ்க்கை" என்பது  மனித சரீரத்தில், விழிப்பு நிலையில் நடைபெறுவது, அபந்த வாழ்க்கை என்பது உறக்க நிலையில் நிகழ்வதாம்!  அபந்த வாழ்க்கையானது, உறக்க நிலையில், மனித சரீரத்தின் உள்ளே உள்ள பல சூட்சும சரீரங்கள் மூலமாக நிகழ்வதாகும். பிறவி நிலைகளைப் பற்றி உணர்த்தும் ஞான பூர்வ நிலையில் மட்டுமே உணரக் கூடியதாகும்.

ஸ்ரீகபர்தீஸ்வரர் திருவலஞ்சுழி

கபந்த மொழி வகையே குறட்டை சப்த த்வனிகள்!

பந்த வாழ்க்கை, அபந்த வாழ்க்கை என்ற இரண்டில் எது உண்மையான சரீர வாழ்க்கை? இரண்டுமே உண்மையான மாயச் சரீர வாழ்க்கைகள் தாம்! அபந்த வாழ்க்கையில் இருக்கின்ற மனிதன், பந்த வாழ்க்கையை உறக்க நிலையாகக் கொள்கின்றான். எனவே ஒன்றுக்கு மற்றொன்று உறக்க நிலையிலான சூட்சும வாழ்க்கையாக ஆகி விடுகின்றது! உறக்கத்தில், அபந்த நிலையில், அமைகின்ற மொழிகளில் ஒன்றே குறட்டை சப்த நாடிச் சுவடிகளின் பரிமாற்றம் பெரும்பாலும் இரவில் தான் நிகழும்!

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருப்பது போல், அபந்த வாழ்க்கையில் இவ்வளவு மொழி பேதங்கள் கிடையாது.  குறட்டையில் எழுகின்ற சப்த நாளங்களின் இலக்கண வடிவை "கபந்த மொழி" என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றார்கள். பெரும்பாலான மனிதர்கள் அறியாத அவர்களுக்கு உரித்தான உறக்க நிலையிலான அபந்த வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தை உணர்விப்பவர்தாம் "கபர்தீஸ்வரர்" ஆக திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கின்ற சிவமூர்த்தி ஆவார்.

சப்த சக்திகள் நிறைந்த பூச நட்சத்திர மண்டலம்!

உறக்க நிலையிலான மொழிகளுக்கு "கபந்த மொழி, பூச மொழி" என்று பல பெயர்கள் உண்டு. 27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திர லோகமானது ஜீவன்களுடைய அபந்த வாழ்க்கை நிகழ்கின்ற பிரதான லோகங்களுள் ஒன்றாகும். எனவே பூச நட்சத்திரக்காரர்கள் இரவு நேர வழிபாடுகளை பக்தியுடன் மேற்கொண்டால் குறித்த சில லலாடங்க யோகம் போன்ற சப்த வடியோகங்களில் மற்றும் சப்தம், ஒலி சம்பந்தப்பட்ட (audio, sound) துறைகளில் தலைசிறந்து விளங்குவர். குறிப்பாக மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, விஷ்ணுபதி புண்யகாலம், ஏகாதசி, ராத்திரி ஸூக்த மந்திர வழிபாடுகள், இரவு நேர கால பைரவ வழிபாடு, பௌர்ணமி கிரிவலம், சத்ய நாராயண பூஜை போன்ற பலவிதமான இரவு நேர வழிபாடுகள் பூச நட்சத்திர தேவதா மூர்த்திக்கு மிகவும் ப்ரீதி உடையவை ஆகும். அதாவது பூச நட்சத்திரக்காரர்கள் செய்கின்ற இரவு வழிபாடுகளுக்குப் பன்மடங்கு பலா பலன்கள் உண்டு. இவர்கள் அர்த்த ஜாம பூஜைகள், பள்ளியறை வழிபாடுகள், சிவ பாத பூஜை போன்றவற்றுடன் நட்சத்திர தரிசனம், சந்திர தரிசனம், இரவு நேர கிரிவலத்துடன் இல்லத்திலும் நிறைய பூஜைகளைச் செய்திடலாம். அனைவரும், குறிப்பாக பூச நட்சத்திரக்காரர்கள் மாதந்தோறும் கண்டிப்பாக மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை மேற்கொள்ளுதல் வேண்டும்.

சந்திர பகவான் தானிழந்த பதினாறு கலைகளையும் பெற வேண்டி அதற்கு உரித்தான சில வழிபாடுகளையும், பிராயச்சித்தப் பரிகாரங்களையும் தம்பிக் கலையான் சித்தர், பூசக் கலையான் போன்ற கலைவழி யோகச் சித்தர்களிடம் இருந்தே பெற்றிட்டார்.

சோம சூரியச் சித்தர்கள்!

இச்சித்தர்கள் யாவருமே சோமசூர்யக் கலை மண்டலத்தைச் சார்ந்தவர்கள். ஸ்ரீசந்திர பகவான் தாமிழந்த பதினாறு கலைகளையும் மீண்டும் பெறுவதற்கான அனைத்து விதமான யோக, தான, இயந்திர, சக்கர வழிபாடுகளை இவர்களே ஸ்ரீசந்திர பகவானுக்கு உணர்த்திட்டார்கள். இச்சித்தர்கள் யாவருமே சோம, சூரிய யாகத்திலும் யோகத்திலும் தலைசிறந்தவர்கள் ஆவர்.

சோமசூர்ய மண்டலத்தைச் சார்ந்த இவர்கள் தாம் நட்சத்திரம் மற்றும் சூரிய மண்டலத்தில் இருந்து சந்திரன் மற்றும் ஏனைய மண்டலங்களுக்குத் தேவையான ஒளித் தன்மைகளைப் பெறுவதற்கான அனைத்து விதமான ஜோதி வழிபாடுகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

இரவு நேர வழிபாட்டின் அம்சங்களைத் தேவாதி தேவ மூர்த்திகளுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் அளித்தவர்களே சோம சூரிய மண்டலத்தைச் சார்ந்த சித்தர்கள் ஆவர். இரவு நேர வழிபாட்டில் தலை சிறந்தவர்கள்! இவர்கள் உறையும் சோமசூர்ய மண்டல கிரகத்தின் தேவ சப்த மண்டபத்திலிருந்து பிறப்பவைதாம் பூலோகத்தில் நாம் இன்று கேட்கின்ற பலவிதமான ஒலிகளாகும். இதில் அபந்த சேகரம் என்ற சப்த வளாக மண்டபத்திலிருந்து தான் குறட்டை சம்பந்தமான "அபந்த மொழி" கிரந்த சாகரங்கள் உருவாகின்றன. இன்றைக்கு விஞ்ஞான பூர்வமான செய்தித் தொடர்புச் "satellites" யாவும் இவற்றின் சப்த ஒளிச் சக்திகளால் தாம் இயங்குகின்றன!

எனவே குறட்டை என்பது சூட்சும ரீதியாக அமைந்த ஒருவித அபந்த மொழியாகும். குறட்டைகளின் தன்மை, குணாதிசயங்களைக் கொண்டு நிலநடுக்கம், சூறாவளி போன்ற நிகழ்ச்சிகளைத் தீர்க்க தரிசனமாக முன்னரேயே அறிந்திடலாம்.

திருக்காட்டுப்பள்ளி

"ஓலக்காள ஒலி" வருவதை முன் உணர்த்துமே!

உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் கிலடின் என்ற ஒரு பயங்கரமான யந்திரக் கருவிக்குப் பலரும் பலியாகும் முன்னர், அப்பகுதியில் பல இடங்களில் முன்னிரவில் "ஓலக்காளம்" என்ற வகையிலான பல குறட்டைச் சப்தங்கள் கேட்டன. இந்த "ஓலக்காளக் குறட்டை சப்தம்" மூலமாக எதிர் வருகின்ற வன்முறைத் தீவினைகளை முன் கூட்டியே நன்மக்கள் பலரும் அறிந்து எடுத்துரைத்தாலும் அப்போது எவரும் நம்பவில்லை. தற்போதும் நம்புவதில்லை. இப்போதும் கூட குறட்டை சப்தம் கொண்டு எதிர் வருகின்றவற்றை எடுத்துச் சொன்னாலும் விஞ்ஞானப் பூர்வமாக ஏற்க மறுத்து விடுவதால் தான் - பலவிதமான ஆன்மீக சக்திகளை குறிப்பாக எதிர்காலத்தை உணரும் சக்திகளை நாம் இழந்து வருகின்றோம்.

எங்கு ஆன்மீக சக்திகள் மதிக்கப்படுகின்றனவோ, அங்கு மட்டும் தான் ஆன்மீக சக்தியின் தன்மைகள் உணர்த்தப்படும். அதை விஞ்ஞானப் பூர்வமாக மறுத்து, மூட நம்பிக்கை என்று பலரும் அறியாமையால் அதனை நம்பாத போது நல்லோரும், பக்தியுடைய ஆன்மீகவாதிகளும் இத்தகைய தெய்வீக சக்திகளை நம்பிக்கை உடையவர்களுக்கும், பாமரர்களுக்கும், பக்தர்களுக்கும் மட்டுமே உரைவித்து நன்மைகளைப் பெறச் செய்கின்றார்கள். எனவே ஆன்மீகச் சக்தி தான் நிரந்தரமானது, நிலையானது, ஜீவன்களை என்றும் காப்பது என்பதை ஆழமாக நம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிலதுவாரத்தில் கொழிக்கும் அற்புத சப்த நாள சக்திகள்!

அங்க "அபந்த மொழியாகிய" குறட்டை மூலம் ஏற்படுகின்ற பலவிதமான சப்தங்களையும் உணர்த்த வல்ல இறைசக்திகள் நிறைந்த தலமாகிய திருவலஞ்சுழியில் சுவாமியே கபர்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

வலஞ்சுழி விநாயகருக்கு சப்த லோக சக்திகளை நிரவி அருள்பாலிக்கின்ற தன்மைகள் நிறைய உண்டு. அபந்த மொழி சக்திகளைப் பெற்று உணர்ந்தவர்களிலே தலைசிறந்தவர்களாக விளங்குபவர்கள் ஹேரண்ட மகரிஷி, ஆத்ரேய மகரிஷி, தம்பிக் கலையான் சித்தர், பூசக் கலையான் சித்தர் போன்றோர் ஆவர். இவர்கள் இன்றைக்கும் சூக்குமமாகத் தினந்தோறும் பூமிக்கு வந்து வழிபடுகின்ற தலங்களுள் சிலவே பிலதுவாரம் உடைய திருவலஞ்சுழி, பிலதுவார சக்திகள் நிறைந்த பில(லா)வடி நிலப்பகுதி (அதாவது கும்பகோணம் அருகே பிளாவடி), திருக்காட்டுப்பள்ளி போன்றவையாம்!

பலரும் திருவலஞ்சுழியிலே ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் எனப்படும் ஸ்ரீஸ்வேத விநாயகரை (வெள்ளைப் பிள்ளையாரை) மட்டும் தரிசித்து வந்து விடுகின்றார்கள். ஸ்ரீவிநாயகருக்கு முன் அமைந்து இருக்கும் அபூர்வமான பலகணிச் சக்கர அமைப்பைப் பலரும் காண்பது கிடையாது! இதன் மூலமாகத்தான் இன்றைக்கு பல அபூர்வமான சப்த சக்திகளை விண் உலகங்களிலிருந்து நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அபந்த மொழி சக்திகள் நிறைந்திருப்பதே இப்பலகணிகள் ஆகும்.  ஸ்ரீகபர்தீஸ்வரராகிய சிவலிங்கத்தில் இருந்து எழுகின்ற ஏழு விதமான சப்த கந்த லிங்க சக்திகள், ஸ்ரீஸ்வேத வெள்ளை வாரணப் பிள்ளையாரால் கிரகிக்கப் பெற்று இப்பலகணிகள் மூலமாகப் பூவுலகை அடைகின்றன.

குழந்தைகளின் கிறுக்கலா? அல்ல, அல்ல கோடி ஞான லிபிகள் அவை!

எனவே குறட்டை என்பது அபந்த மொழி சக்தி நிறைந்ததாம். குறட்டை மூலமாகப் பல மனிதர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மூன்று வயது உள்ள சிறு குழந்தைகள் சிலேட்டிலோ, காகிதத்திலோ கிறுக்குவதைப் பார்த்திருப்பீர்கள்! நாம் இவற்றை சாதாரணமாக "வெறும் கிறுக்கல்" என்று உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ளி விடுகின்றோம். உண்மை அதுவல்ல! நான்கு வயது வரை குழந்தைகள் பரிபூரண தெய்வீக நிலையில் இருப்பதால் அவர்கள் வரைகின்ற படங்கள், எழுதுகின்ற மொழி (இனம் புரியா) அட்சரங்கள், சட்டங்களும், வரைவுகளும் ஆய்ந்த ஆன்மீக மொழியான அபந்த மொழியின் அட்சர வகைகளாம்.

சிறு குழந்தையிடம் சிலேட்டையோ, காகிதத்தையோ கொடுத்தால் அது வளையம் வளையமாக, சுழியம் சுழியாக எதையோ வரைவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு வளையம் மற்றொரு வளையம் போல் இருப்பது கிடையாது! இவை அனைத்துமே அபந்த மொழி கிரந்த வாக்கியங்களாகும்.

குழந்தையின் கிறுக்கல்கள் அபந்த மொழி கிரந்தங்களே!

Mandarin எனப்பட்டும் சீன மொழியில் இருபதாயிரத்துக்கும் மேலான அட்சரங்கள் உள்ளன. இந்த அட்சரங்களை முழுமையாகப் பயன்படுத்துவோர் ஒரு சிலரே! ஆனால் உலகத்தில் எந்த மூலையிலும் இருக்கின்ற இரண்டு, மூன்று வயது நிரம்பியுள்ள தெய்வீகம் நிரம்பிய குழந்தைகள் யாவருமே இந்த இருபதாயிரம் அட்சரங்களையும் நன்கு உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஏன், நாம் கூடச் சிறு குழந்தையாக இருந்தபோது பல அபந்த மொழி அட்சரங்களை உணர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றோம். ஆனால் கர்ம வினைகளின் கூட்டால் நாம் ஐந்து வயது வரை கொண்டிருந்த அபந்த மொழி தெய்வீகத்தை இழந்து இப்போது கர்ம பந்தக் குழிகளிலே சிக்கிக் கொண்டு இருக்கின்றோம்.

எனவே சிறு குழந்தைகள் கிறுக்குவதாக நாம் எண்ணுகின்ற எழுத்துக்கள் யாவையுமே அபந்த மொழி வகைக் கிரந்தங்களாகும். இவற்றைக் கொண்டும் குறட்டையின் தன்மைகளை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாக, குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கும் ஒருவரின் அருகிலே மூன்று வயது குழந்தையிடம் ஒரு குச்சியையோ, பலப்பத்தையோ கொடுத்து சிலேட்டு காகிதத்தில் அதனை இயற்கையாக எழுத வைத்தால் அந்த குறட்டையில் உள்ள அபந்த மொழி கிரந்தங்களை அந்த குழந்தை அழகாக எழுதித் தந்து விடும். ஆனால் அது நமக்கு வெறும் கிறுக்கல்கள் போலத் தோன்றும்!

இவ்வாறாக நாம் உயர்ந்த விஞ்ஞானம் என்று கருகின்ற பல விஞ்ஞானச் சிறப்புகள் யாவுமே மூன்று அல்லது நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தெய்வீகத் தன்மைகளில் நிரம்பி இருக்கின்றன. எனவே உண்மையான ஆன்மீக விஞ்ஞானிகள் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளே ஆவார்கள். இவர்களே அபந்த மொழி ரகசியங்களை உணர்ந்தவர்கள்! எனவே உங்கல் வீட்டிலேயே அபந்த மொழி அறிந்த நான்கு வயது குழந்தைகள் நிறைய இருக்கின்றார்கள். உங்களுக்கு ஆன்மீக சக்திக‌ள் நிறைந்து இருக்குமேயானால் அவர்களிடம் இருந்தே நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம்.

எனவே குறட்டை என்பது ஒருவகையான அபந்த மொழி என்பதையும் எதிர்வருகின்ற பலவிதமான இன்ப, துன்பங்களை விளக்கவல்லது என்பதையும் இனியேனும் மனித உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்டிரமாணிக்கம் விஷ்ணுபதி

பிரிந்து இருக்கின்ற கணவனோ, மனைவியோ மீண்டும் ஒன்று சேர்ந்து நன்முறையில் வாழ்வதற்கு மற்றொரு அரிய தெய்வீக சந்தர்ப்பத்தை வாழ்நாளில் நல்வரமாகத் தந்து அருள்கின்ற விஷ்ணுபதித் தலமே தெற்கு நோக்கி ஸ்ரீராமர் நின்று அருளும் கண்டிரமாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயமாகும்.

திருமணம் ஆனவுடன், பெற்றோர்களைச் சரியாக மதிக்காது, பாதுகாக்காது, போஷிக்காது சுயநலமாகத் திரிந்து தம்பதியர் சேர்த்த பெரும் பாவங்களுக்கு வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் தக்க பரிகாரங்களைத் தந்து அருள்கின்ற- தெற்கு நோக்கி ஸ்ரீராமர் அருளும் விஷ்ணுபதித் தலமே கண்டிரமாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயமாகும்.

ஸ்ரீலட்சுமி தேவி
கண்டிரமாணிக்கம்

ஸ்ரீராமருக்கு உரித்தான திரேதாயுகத்தில் பரிமளித்த "அறம் கண்ட மாணிக்கம்" என்பதானது 32 அறங்கள் பரிபூரணித்த, ராமராஜ்ய சக்திகள் செறிந்த, திவ்யமான திருமால் தலமே இன்று கண்டிர மாணிக்கமாகப் பெயர் திரிபடைந்து உள்ளது. கும்பகோணம் நன்னிலம் பஸ் மார்கத்தில், கூகூரை அடுத்து பிளாவடியில் இறங்கினால் அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்டிரமாணிக்கம் சிற்றூரை அடைந்திடலாம்.

ஒவ்வொரு திருத்தலத்திலும் குறித்த சில சித்புருஷர்களும், மஹரிஷிகளும் இன்றும், என்றும் வந்து வழிபட்டு, தங்களுடைய, யோக, தியான, பூஜா, தபோபலன்களை அந்தந்தத் தலங்களில் பதித்துச் செல்வதால் அங்கு வந்து வழிபடுகின்ற பக்தர்களுக்கு, தெய்வ கடாட்சத்துடன், அங்கு உத்தம பக்தியுடன் வழிபடும் மகான்களுடைய, சித்புருஷர்களுடைய அருட்பலன்களும் நல்வரங்களாக அபரிமிதமாகக் கிட்டுகின்றன. இவ்வகையில் கண்டிரமாணிக்கம் ஆலயத்தில், தினமும், அமாவாசை, விஷ்ணுபதிதோறும் தூல, சூட்சும வடிவுகளில் வந்து வழிபடுகின்றவர்கள் அமாவாசைச் சித்தர், வசுருத்ராதித்ய மகரிஷி, பிலவடிச் சித்தர், ஹேரண்ட மகரிஷி, ராமானந்தர், சஞ்சீவி மலைச் சித்தர், சகஸ்ரபாத மகரிஷி, கேசவ சித்தர், ஆத்ரேய மகரிஷி, வால்மீகி மகரிஷி போன்றோராவர்.

அர்ச்சாவதார சக்திகளைத் தரும் ஸ்ரீஆதிமகாவேத வரதராஜப் பெருமாள்!

தற்போது பல ஆலயங்களில் தினசரி ஆறு வேளைகளிலும் பூஜைகள் முறையாக நடைபெறாது, அல்லது ஒரு வேளை பூஜை கூட இல்லாமலோ, ஒரு வேளை பூஜை மட்டுமோ நிகழ்கின்ற ஆலயங்களில் இன்றைக்கும் சூட்சுமமாக, தெய்வீக ரீதியாக, சித்புருஷர்களுடைய, மஹரிஷிகளுடைய ஆறு கால பூஜைகள் மிகவும் திவ்யமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனிதக் கண்களுக்குத் தாம் இவை புரிபடவில்லை! இத்தகைய உத்தம தேவ அனுபூதிகள் யாவும் சற்குருவின் அருட்புனலில் மட்டுமே, குருவருளால் தரிசிக்கக் கூடியதாம்!

தசரதர் நல்லாட்சி புரிந்த, ராமராஜ்யம் நிலவிய அயோத்யா காண்டக் காலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சீதாதேவியுடன் எட்டுத் திக்குகளிலும் நின்று பலவிதமான தரிசனங்களைத் தந்து மக்களுக்குப் பரமானந்தத்தைப் பெற்றுத் தந்தார். இத்தகைய பலதிசைக் கோலங்களுள் ஒன்றாக ஸ்ரீராமர் தென் திசை பார்த்த கோலமே நாம் இன்று கண்டிர மாணிக்கத்தில் காண்கின்ற ஸ்ரீகோதண்டராம மூர்த்தியின் தெற்கு நோக்கிய அர்ச்சாவதார ரூபமாகும்.

ஸ்ரீராமர் கண்ட ஆத்மராம தரிசனம்!

இராமாயணத்தின் யுத்த காண்டத்திற்குப் பிறகு, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தெற்குத் திசை நோக்கும் போதெல்லாம், சீதை பட்ட துன்பங்கள் யாவும் சோக நினைவுகளாக முளைத்திட்டன! அயோத்தியில் எட்டுத் திசைகளிலும் சீதாதேவியுடன் நின்ற சாந்தமான காட்சிகளை அப்போது ஸ்ரீராமர் மனத்தளவில் கொண்டு வந்து அச்சோக நினைவுகளைக் களைந்து மீண்டும் தன்னிலைப் பெறுவார். அப்போது "தென் திசை நோக்கி, தாம் எவ்வகையில் நின்றோம்" என்று ஸ்ரீராமர் தன்னைத் தானே இத்தலத்தில் கண்டு கொண்டதையே சித்தர்கள் "ராம ஆத்ம தரிசனம்" எனச் சிறப்புடன் போற்றுகின்றனர்.

ஒரு விஷ்ணுபதி புண்ய காலத்தில், ராமாயண இறுதிக் கட்டத்தில் இவ்வாறு பெருஞ்சோகத்தில் இருந்து மீள, ஸ்ரீராமர் தம்மைத் தாமே கண்ட ஆத்ம பரமாத்மக் கோலமே, அதாவது ஆத்ம தரிசனம் பெறத் துணை புரிந்த அதியற்புதத் திருத்தலமே கண்டிரமாணிக்கம் ஆகும்!

ஸ்ரீராமரின் சோகங் களைந்திட, அந்த யுக ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தில், அயோத்யா காண்ட ஆனந்தத் தோரணையில் கொண்ட, தம் தெற்கு நோக்கிய திருவுருவைத் தமக்குத் தாமே கண்டிட, ஸ்ரீவரதராஜப் பெருமாளால் உற்பவிக்கப்பட்ட திருத்தலமே கண்டிர மாணிக்கமாகும். இவ்வாறு பல அரிய விஷ்ணுபதி இறைலீலைகளைக் கொண்டதே கண்டிரமாணிக்கம் பெருமாள் ஆலயமாகும்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
கண்டிரமாணிக்கம்

24000 மடங்கு பித்ரு பூஜா பலன்கள் தரும் பித்ரு முக்தித் தலம்!

இராம ராஜ்யமானது இங்கு 32 அறங்களையும் கண்டதாகும்! "கண்டு அற(ம்) மாணிக்கம்" அதாவது 32 அறங்களையும் கண்டு, கடைபிடித்து 32 அற ஆரப் பலன்களால் விளைந்த மாணிக்கச் சுடர்களின் ஊடே ஒரு யுகத்தில் பொலிந்த அறவளத் தலமே கண்டிர மாணிக்கம் ஆகும். எனவே 32 விதமான அறங்களுக்கான முக்கியமான தலங்களுள் ஒன்றாக, காஞ்சீபுரம், திருஅண்ணாமலையுடன் சேர்ந்து அறத்தால் மாணிக்கமாகப் பொலியும் தலங்களுள் ஒன்றாக கண்டிரமாணிக்கம் விளங்குகின்றது.

ஸ்ரீராமருடைய தெற்கு நோக்கிய திருவருளால், இங்கு பித்ரு மூர்த்திகளின் கருணைக் கடாட்ச நல்வர சக்திகள் பொங்கிச் சிறப்படைகின்றன! பித்ரு மூர்த்திப் பேரருள் என்பது இருபத்து நான்கு தலைமுறைகளைக் கடையேற்றுவதைக் குறிக்கின்றது. அமாவாசையில், விஷ்ணுபதி புண்ய காலத்தில் பித்ருக்களுக்கே முக்தி அளிக்கும் இந்த பித்ரு முக்தித் தலத்தில் - பிதுர் ராஜ பரிபாலன மூர்த்தியாகவும் தெற்கு நோக்கிய ஸ்ரீராமர் அருள்பாலிக்கின்றார். எனவே இங்கு விசேஷமாகக் கிட்டும் பிதுர் ராஜ மூர்த்திப் பேரருளாக, 24 சகஸ்ரத் தலைமுறைகளுக்கு (24 x 1000 தலைமுறைகள்) முக்தி கிட்டுவதால், இங்கு செய்யப்படும் பித்ரு தர்ப்பணங்கள், ஹோமங்கள், பூஜைகள், தான தர்மங்களுக்கு 24000 மடங்கு (24 சகஸ்ரங்கள்) பலன்கள் பல்கிப் பெருகும் என்பது சகஸ்ரபாதச் சித்தரின் திருவாக்காகும்.

பல யுகங்களிலும், காருண்ய ராமர், பட்டாபிராமர், ஸ்ரீசாயிராமர், கோமளராமர் எனப் பலவகையான ராம நாமங்களைப் பூண்ட கண்டிர மாணிக்கம் ஸ்ரீகோதண்ட ராமருடைய ஆதிமூலப் பெயர் பிதுர்ராஜ பரிபாலன மூர்த்தி என்பதாகும். ஆம், தெற்கு திசை என்பது  பித்ருக்களின் லோகங்கள் உள்ள திசைதானே!  இங்கு தெற்கு நோக்கி நின்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபாட்டில் விசேஷமான இருவகை "தேவதேவாதிப் பித்ரு பூஜா" பலன்களும் நமக்குக் கிட்டுகின்றன. எவ்வாறு?

மகாசதுர்வேத சடாட்சர ஸ்தம்பம்

வடக்கு திசையில் உறையும் முப்பத்து முக்கோடி தேவர்களும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிப்பதற்காக சீதா தேவி சமேதராக, தெற்கு நோக்கி நின்று ஆதிராமாயண காலத்திலேயே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தரிசனம் தந்திட்டார். மேலும் ஸ்ரீராமர் சூர்ய வம்சத்தைச் சார்ந்தவராதலாலும், பித்ரு தேவர்களின் அதிபதியே ஸ்ரீவிஷ்ணு அம்ச சூரிய நாராயண மூர்த்தி ஆதலாலும் ஸ்ரீராமரின் அனைத்து திசை விஸ்வரூப தரிசனங்களையும் பெறுவதற்காகப் பித்ருக்கள் வெகு காலமாக ஏங்கி வந்தனர்! அவதார மூர்த்திகளின் மூலாதாரப் பகுதியில் இருந்து (மூல முதுகுத் தண்டு வடம்) ஜீவாத்ம சக்திகளுக்கான தேவாக்னி எழுவதால் அனைத்துப் பித்ருக்களும் ஸ்ரீராமாவதார மூர்த்தியின் முதுகுத் தண்டு வடம் எனப்படுகின்ற "மகா சதுர்வேத சடாட்சர ஸ்தம்பத்தில்" எழும் 24 விதமான ஈஸ்வராக்னி ஜோதி தரிசனங்களுக்காக ஏங்கினர்.

இத்தகைய அபூர்வமான தரிசனங்களை அவதார மூர்த்திகளின் பாதாதி கேசம், கேசாதி பாத தரிசனங்களுடன் எண்திசைக் கோலங்களிலும் காணும் பாக்கியம் பெற்றவர்தாம் திருமழிசை ஆழ்வாராவார். திருப்பெரும்புலியூர் ஆலயத்தில் சுந்தரராஜப் பெருமாள் மூர்த்தி, ஆழ்வாரைத் தாமாகவே ஆட்கொண்டு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்றவாறாக எட்டுத் திசைகளிலும் திரும்பித் திரும்பி, தன் திருமுகத்தைத் திருப்பித் திருப்பி அவருக்குத் தம்முடைய திவ்யமான எண்திசை தரிசனங்களை அளித்திட்டார். அர்ச்சுனனுக்குக் கூட ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனம் அளித்திட்ட போது நேருக்கு நேரான முன்புற விஸ்வரூப தரிசனமே கிட்டியது. ஸ்ரீஅகஸ்தியர், திருமழிசைப் பிரான், ஆதிமூல வசு ருத்ர ஆதித்யப் பித்ரு மூர்த்திகள், அமாவாசைச் சித்தர், சகஸ்ரபாதச் சித்தர், நாரத மகரிஷி போன்றோருக்கு இறைவனுடைய எண் திசைத் திருமேனி விஸ்வரூப தரிசனங்கள் கிட்டின!

கண்டிரமாணிக்கம்

இருபுறமும் நமஸ்கார பூஷண தரிசனாதி தரிசனக் கோலமாம்!

ஒருபுறம், ஸ்ரீராமரை வட திசையிலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கிட, பின்புறம் தென் திசையிலிருந்து பித்ருக்கள் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்திட, இந்நிலையில் தெற்கு நோக்கிய ஸ்ரீராமர் அந்த யுக விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் கொண்ட அபூர்வமான திருக்கோலமே இன்று கண்டிரமாணிக்கத்தில் தெற்கு நோக்கிய ஸ்ரீகோதண்டராமராக நாம் தரிசிப்பதாகும்.

குறிப்பாக அமாவாசை, புதன், சனி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் விஷ்ணுபதிப் புண்ய காலநாள், பெருமாளுக்கு விசேஷமான திருவோணம், ஸ்ரீராமருக்கான புனர்பூசம் மற்றும் நவமி நாட்களில் இங்கு தெற்கு நோக்கிய ஸ்ரீராமருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் நிலவுகின்ற எத்தகைய சோகங்களுக்கும் நல்ல தீர்வுகள் ஏற்படும்.

பல விஷ்ணுபதி அனுபூதிகள் ஒருங்கே குவிந்த உத்தமத் தலமாம்!

இந்திராணியைப் பிரிந்த இந்திரன் பல இடங்களில் தன் பத்னியைத் தேடி அலைந்த போது தெற்கு நோக்கிய இந்த ஸ்ரீராமரையே வழிபட்டு, இந்திராணியை மீண்டும் அடைகின்ற பாக்கியத்தைப் பெற்றதும் ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் தான்! சம்க்ஞை தேவியைப் பிரிந்த சூரியமூர்த்தி பல வழிபாடுகளைக் கைக்கொண்டு, ஒருவரையொருவர் தேடி வர, இங்கு இருவருமே எவரெவரென தேவமாயையால் அறியாது கண்டு, மண்டலா பூஜைகளை மேற்கொண்டு இருவருமே தக்க அக்னி சக்திகளைப் பெற்று மீண்டும் இணைவதற்கான அருள்வழி முறைகளையும் இத்தலத்தில் தான் பெற்றனர். இவ்வனுபூதிகள் இத்தலத்தில் நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தாம்!

இவ்வாறாக, கண்டிரமாணிக்கத்தில் நாம் காண்கின்ற ஸ்ரீராமரின் அர்ச்சாவதாரத் திருமேனியின் கண் பல விஷ்ணுபதி புண்ய கால அவதாரத் திருக்கோலங்கள் பதிந்து, பொதிந்து, கனிந்து இருப்பதால் கலியுகத்தில் இத்திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திசையில் நாம் ஸ்ரீராமரின் தரிசனத்தைப் பெறுதல் மானுட வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாகும்.

ஞானிகளும் அறியா மெய்ஞான ராமதரிசனம்!

ஒரு முறை பல ஞானிகளும், மஹரிஷிகளும் ஸ்ரீஅகஸ்தியரிடம், "சுவாமி! இராமாயண யுத்த காண்டத்திற்குப் பின் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தெற்குத் திசை நோக்கினாலே, பல வித சோக நிலைகள் அடையப் பெற்று மிகவும் வருத்தமுற்றுக் காணப்படுகின்றாரே! பிரபஞ்சத்தையே காக்கும் பரந்தாமரான, மகத்தான அவதார  மூர்த்தியான ஸ்ரீராமர், இத்தகைய கவலைகள், வருத்தங்களுக்குள் தோயப் பெறுதல் எங்ஙனம்?" என்று வினவினர். ஸ்ரீஅகஸ்தியப் பெருமானும், "இதற்கரிய காரண காரியங்களை மகாஞானிகளாகிய தங்களாலேயே அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் யாம் யாதறிவோம் முனிவர்காள்? எனினும் இத்தகைய வினாக்கள் ஞானிகள், மகரிஷிகள் மூலமாகப் பிற்காலத்தில் எழும் என்பதால் தான், மிகவும் தீர்க தரிசனமாக, இராமாயண ஆரம்ப காலத்திலேயே உணர்ந்தவராய், ஸ்ரீராமரே தெற்கு நோக்கிய மூர்த்தியாக நின்ற கோலத்தில் ஓர் அரிய தலத்தில் காட்சி தருகின்றார். அங்கு சென்று தெற்கு நோக்கும் ஸ்ரீராமரின் திவ்யமான தரிசனம் பெற்று உங்களுடைய ஐயத்திற்கான தக்க விளக்கங்களைப் பெறுவீர்களாக!" என்று கூறிட, "தெற்கு நோக்கிய ஸ்ரீராமரா?" என ஞானிகளும், மாமுனிகளும் அதிசயித்து அவ்வரிய தலத்தைத் தேடி வரலாயினர்.

ஆஞ்சநேயர், ஞானிகளுக்கு உணர்த்திய ஞானப் பிரகாசம்!

அப்போது ஓரிடத்தில் ஸ்ரீஆஞ்சநேய மகாபிரபு, ஸ்ரீபால ஆஞ்சநேயராக கிழக்கு நோக்கி வழிபட்டுக் கொண்டு இருக்கும் அதியற்புத நிலையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ராமநாமத்தில் சதாசர்வ காலமும் திளைக்கும் ஸ்ரீஆஞ்சநேய மகாபிரபுவை, மகத்தான விஸ்வரூபம் பூண்ட பிரம்மாண்டமான திருக்கோலத்திலேயே அவர்கள் இதுவரையில் கண்டமையால், அவருடைய இவ்வளவு அழகிய "பால ஆஞ்சநேயக் கோலம்" கண்டு அவர்கள் மிகவும் வியந்தனர்.

மேலும் பால ஆஞ்சநேயரோ கை கூப்பி வழிபட்ட நிலையில் இருக்க..."அருகில் ஸ்ரீராமரைக் காணவில்லையே!" என்றும் அவர்கள் ஆச்சரியத்துடன் எண்ணிய போது, ஆங்கே வந்து சேர்ந்த ஸ்ரீஅகஸ்தியர், “முனிவர்காள்!  ராமநாமம் ஜ்வலிக்கும் இடமெல்லாம் பால ஆஞ்சநேயர் திளைக்கும் இடம்தானே! பரந்தாமராம், சர்வேஸ்வரராம் ராமருக்கே சோகமா என்ற வினா தேவ மாயையால் தங்களுள் எழுந்தமையால், தாங்களனைவரும் தேவ ஞானமாயைக்கு ஆட்பட்டுத் தங்களுக்கு ஸ்ரீபால ஆஞ்சநேயர் அருகில் தெற்கு நோக்கித் திருக்கோலம் பூண்டிருக்கும் ஸ்ரீராமதரிசனம் புலப்படாமற் போயிற்று போலும்! தங்களுடைய ஞானம் இன்னும் பிரகாசிக்க வேண்டும் என்பதே பால ஆஞ்சநேயரின் திருவுளம் போலும்!" என்றுரைத்திட ஞானிகளும், மகரிஷிகளும் நாணினர்.

அப்போது ஸ்ரீபால ஆஞ்சநேயர் ஞானிகளை வணங்கி, "ஒரு சிறு விண்ணப்பத்தை அடியேன் உரைக்க வேண்டியுள்ளது. ராமச்சந்திர பிரபுவின் ராம நாம சக்தியின்றி அடியேன் எங்கும் ஒரு விநாடி கூட இருக்க இயலாதே! அடியேன் கிழக்கு நோக்கி இங்கு பூஜிக்கின்ற போது அடியேனுக்கு இடப்புறத்திலே, தெற்கு நோக்கி அல்லவா ஸ்ரீராமர் வீற்றிருக்க வேண்டும் என்பது தாங்கள் அறியாததா என்ன?"

ஞானிகளே பெற்ற ஞானப் பிரகாசம்!

"தெற்கு நோக்கிய ஸ்ரீராமரின் திவ்யமான தரிசனம் கிட்டிடத் தேவையான ஞானப் பிரகாசத்தைத் தாங்கள் யாவரும் இத்திருத்தலத்தில் பெற வேண்டும் என்பதுதானே ஸ்ரீராம லீலை! அது தான் இங்கு ராம ஆக்ஞையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது! தாங்கள் அனைவரும் புனிதமான நைஷ்டிக பிரம்மச்சாரிகள் ஆதலின் பித்ரு பூஜைகளைக் கடந்தவர்களாகி விட்டீர்கள்! ஆனால் பித்ருதேவ மூர்த்திகளின் ஆசிகளுடன்தான் தெற்கு நோக்கிய ராமதரிசனம் புலனாகும் என்பது தெய்வ நியதியாகும்! பித்ரு தேவர்களுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமகாவிஷ்ணுவின், ஸ்ரீசூரிய நாராயண அம்ச மண்டலப் பகுதியில் பித்ருக்கள் வாசம் செய்வதால் சூரியநாராயணப் பிரகாசமும், ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திர சித்தியும் கிட்டினால் தான் தங்களுக்குத் தெற்கு நோக்கிய ஸ்ரீராமரின் ஞான தரிசனம் கிட்டும்! எனவே தாங்கள் இங்குள்ள சூரிய நாராயண தீர்த்தத்தில் நீராடி, சூரிய நாராயணப் பிரகாச ஞானம் பெற்றிட்டால் தெற்கு நோக்கிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்ய தரிசனம் தங்களுக்குப் புலப்படும்!" என்று கூறிடவே அவ்விடத்திலேயே ஞானிகள், மகரிஷிகளும் அருகில் இருக்கும் சூரிய நாராயண தீர்த்தத்தில் நீராடி, ஞானம் கூடியவர்களாகிட, அவர்களுக்குத் தெற்கு நோக்கிய ஸ்ரீராமரின் தரிசனம் கிட்டியது!

அப்போது அங்கே பிரசன்னமாய் இருந்த அகஸ்தியரும், ஸ்ரீராமர் இட்ட ஆணையின்படி ஞானிகளுக்கும், மகரிஷிகளுக்கும் ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரப் பொருளை எடுத்துரைத்தார். இதன் பிறகு ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் தெற்கு நோக்கிய ஸ்ரீராமரின் வேறு வகையான திவ்ய தரிசனமும் இதே இடத்தில் கிட்டியது. அப்போது தான் அவரவர் பக்தி நிலைக்கு ஏற்ப தெற்கு நோக்கிய ஸ்ரீராம தரிசனங்கள் மாறுபடும் என்ற ஞானத்தையும் அவர்கள் பெற்றனர்.

கலியுகத்தில் நமக்காக எளிமையான ஸ்ரீராமதரிசனம்!

அப்போது ஸ்ரீபால ஆஞ்சநேயரும், ஸ்ரீராமரிடம், "சுவாமி! தங்களுடைய திருவடிகளிலே எப்போதும் உறையும் ஞானிகளுக்கே, மகான்களுக்கே தங்களுடைய தெற்கு நோக்கிய திருவடி தரிசனம் கிட்டுவதற்கு, சூரிய நாராயணப் பிரகாசமும், ஸ்ரீஆதித்ய ஹிருதய மகாமந்திர உபதேசமும் வேண்டிட எதிர்வரும் யுகங்களில், குறிப்பாக கலியுகத்தில் பாமர மக்களும், ஆதித்ய ஹிருதய மாமந்திரங்களைப் பற்றி அறியாமல் இருப்பார்களே! அவர்களும் தங்களுடைய தெற்கு நோக்கிய திவ்ய தரிசனத்தைப் பெறுவதற்குத் தாங்கள்தான் அருள்வழி காட்ட வேண்டும்!" என்று மஹரிஷிகளுடன் சேர்ந்து வேண்டினர்!

ஸ்ரீராமரும், "ஆஞ்சநேயா!  மாமுனிவர்காள்! ஆதித்ய ஹிருதயம் என்ற திவ்யமான தோத்திரமானது, ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியால் அடியேனுக்குப் பல திதிகளிலும், பல தலங்களிலும் உபதேசிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு திதியிலும், ஹோரையிலும், ஓதுகின்ற ஆதித்ய ஹிருதய மந்திரத்திற்கு விதவிதமான மகத்தான பலாபலன்கள் உண்டு. அமாவாசைதோறும் சூரியனும், சந்திரனும், எண்ணற்ற பித்ரு தேவ மூர்த்திகளுடன் சேர்ந்து வந்து இங்கு சூரிய நாராயணத் தீர்த்தத்திலும் நீராடி, சூரிய நாராயணப் பிரகாசத்தின் மேன்மையை விருத்தி செய்வதால், அமாவாசை திதிதோறும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தை ஸ்பரிசித்து, பித்ருகளுக்குத் தர்ப்பண பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்திட்டு இத்திருத்தலத்தில் ஸ்ரீபால ஆஞ்சநேயரையும், என்னையும் பக்தியுடன் வழிபடுவோர்க்கு ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திர பலாபலன்கள் முழுமையாகக் கிட்டுவதுடன் தெற்கு நோக்கிய எம் தரிசன பலாபலன்களையும் பரிபூரணமாகப் பெறுவார்கள்!" என்று கூறி அருளினார்.

மனிதன் பித்ருக்களின் ஆசியால், தவத்தால் தன்னுடைய கர்ம பந்தங்களைக் களைந்து ஞானப் பிரகாசத்துடன் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு அனைவருடைய சோகங்களையும் தம்முள் ஏற்று அருள்பாலிக்கும் தெற்கு நோக்கிய ஸ்ரீராமராக அருள் பொழிகின்றார். இதனை உலகம் அறியச் செய்தவரே ஸ்ரீபால ஆஞ்சநேயர் ஆவார்.

ஸ்ரீராமர் சாதாரண மனிதன் போலவே வாழ்ந்து தனக்கு ஏற்பட்ட சாயாஹத்தி, பிரம்மஹத்தி, வீரஹத்தி ஆகிய மூன்று விதமான (ஹத்தி) தோஷங்களையும் சாயாவனம், பட்டீஸ்வரம், சாக்கோட்டை போன்ற இடங்களில் வழிபட்டுக் களைந்து, திலதைப்பதி, இடும்பாவனம், பரிதிநியமம், தீயத்தூர், திருப்புனவாசல், ராமேஸ்வரம் போன்ற பல இடங்களிலும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தப் பூஜைகள், சிவலிங்க பூஜைகளைக் கடைபிடித்து, சந்தியாவந்தனம், ஏகாதசி விரதம் போன்ற நித்ய வழிபாடுகள், விரதங்களையும் கடைபிடித்து, சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்து காட்டினார். எனவே மனிதன் பரிபூரண மனிதனாக இறைபக்தியுடன் வாழ, வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிரமாணிக்கம் திருத்தலத்திற்கு வந்து தெற்கு நோக்கிய ஸ்ரீராமரை பக்தியுடன் வழிபட்டிட வேண்டும்.

பெருமகளூர் ஸ்ரீசோமநாதர்

சந்திராஷ்டம தினங்களைப் பாராமல் செய்த காரிய விளைவுகளுக்கான பிராயச்சித்தங்களைத் தரும் சந்திரத் தலம்!

சரும நோய்களைத் தீர்க்கும் பஞ்சபூத ஜல சக்தித் தலம்!

சந்திராஷ்டம தினங்களில் அமையும், தவிர்க்க முடியாத காரியங்களுக்குத் தக்க பரிகாரங்களைத் தரவல்ல பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் வழிபாடு.

பாலச்சந்திரன், சந்திரசேகர், சிவச்சந்திரன், சந்திரா, சந்திரமதி, கலைவாணி, கலைமணி, ஹேமச்சந்திரன், சந்திரகாந்தா, ராமச்சந்திரன், சந்திரபாபு, சந்திரன், சோமன், சோமயாஜுலு, சந்திரபாலா, சோமசேகர், சோமசுந்தரம், சோமராஜ், சோமு போன்ற சந்திரன் மற்றும் சோமன் சம்பந்தமான பெயரை உடையோர் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் (சோமன் - சந்திரன்).

வளர்பிறை அல்லது தேய்பிறையில் சந்திராஷ்டம தினங்கள் ஒருவருக்கு அமையலாம்! இரண்டு பிறைச் சந்திராஷ்டமங்களுக்கும் தனித் தனிப் பரிகார வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் வளர்பிறை, தேய்பிறை இரண்டு வகைச் சந்திராஷ்டம தினங்களுக்கும் ஒரே இடத்தில் தக்க பரிகாரங்களைத் தருவதே பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் ஆலய வழிபாடாகும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை காரைக்குடியில் இருந்து பல மார்கங்களில் பேராவூரணியை அடைந்திடலாம். பேராவூரணி - மீமிசல் பஸ் தடத்தில் பேராவூரணியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருப்பதே பெருமகளூர் ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசோமநாதர் (ஸ்ரீசோமேஸ்வரர்) சிவாலயமாகும். மேற்கண்ட சந்திரன் மற்றும் சோமன் வகைப் பெயர் வகைகளைக் கொண்டோர் தம் வாழ்நாள் முழுதும் தரிசிக்க வேண்டிய தலங்களுள் ஒன்றே பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் சிவாலயமாகும்.

என்னதான் ராகுகாலம், கரிநாள், எம கண்டம்,  சந்திராஷ்டம நாட்களைக் கணித்து அறிந்து செயல்பட முற்பட்டாலும், பல தவிர்க்க முடியாத காரியங்கள் இந்நாட்களில் வந்து சேர்ந்து விடும். நற்காலம் பாராது செய்கின்ற காரிய விளைவுகளுக்குப் பரிகாரம் காணுதல் கடினம் என்றாலும், இத்தகைய நாட்களில் சட்டப்பூர்வமாகத் தேர்வுகள், ரிஜிஸ்ட்ரேஷன், அரசு அலுவலக உத்தரவுகள் வந்து விட்டால் என்ன செய்வது? ஒவ்வொன்றிற்கும் விசேஷமான பரிகார வழிபாட்டு முறைகள் உண்டு என்றாலும் நல்ல நாள் பாராது, கூடா நாள் (பிரபலாரிஷ்ட நாள்) போன்ற நாட்களில் செய்யும் காரியங்களில் வரும் எதிர்வினைகளை அகற்றுதல் மிக மிகக் கடினமே!

பெருமகளூர் சிவாலயம்

பலரும் தங்கள் நட்சத்திரத்திற்கு உரிய சந்திராஷ்டம நாட்களை அறியாது, அந்நாட்களில் பல காரியங்களை வைத்துக் கொள்வதால் தாம் எதிர்பாராத வகையிலான எண்ணற்ற தடங்கல்கள், பிரச்னைகள், நஷ்டங்கள், இழப்புகள் ஏற்படுகின்றன. தவிர்க்க முடியாதபடி வியாபாரப் பயணங்கள், தேர்வுகள், அரசு அலுவலக் காரியங்கள், பிரயாணங்கள் போன்றவையும் அவரவர் ராசிக்கான சந்திராஷ்டம நாட்களில் அமைந்து விட்டால் என்ன செய்வது?

ஸ்ரீசனீஸ்வர பகவான்
நல்லாடை

இவை முன்னரேயே அறிவிக்கப்பட்டு விடுவதால் தெரிந்த நாள் முதலேயே, முன்னரேயே "பூர்ண சந்திரப் பரிகார" வழிபாடுகளைத் தினந்தோறும் சந்திர ஹோரையில் குறித்த சந்திர சக்தித் தலங்களில் செய்து வர வேண்டும். சந்திராஷ்டம நாட்களில் வரும் காரியத் தடங்கல்களின் வேகத்தைத் தணித்திட பெருமகளூர் ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசோமநாதர் (ஸ்ரீசோமேஸ்வரர்) சிவமூர்த்தி வழிபாடு பெரிதுந் துணைபுரியும்.

கோபூஜையில் கோடி முக்திப் பிரவாகம்!

உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத "தாமரைத் தண்டினால்" ஆன அதியற்புதச் சிவலிங்க மூர்த்தியாக‌ப் பெருமகளூரில் ஈஸ்வரன் அருள்பாலிக்கின்றார்! ஆதிமுதலில் சிவபெருமான், சந்திரருக்குப் பதினாறு பரிபூரணக் கலைகளைத் தந்திடும் முன்னர், தாமளிக்கும் பதினாறு கலைப் பூரணப் பிரகாசத்தைத் தாங்கவல்ல பதினாராயிரம் இதழ்களை உடைய கமல ஜோதி சக்திகளை முதலில் பெற்றிடுமாறும், இதற்கு மூலபூஜையாக "ஸ்ரீகோமுக்தீஸ்வர சக்தி" நிறைந்த தலத்தில் முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்துக் "கோ பூஜை" செய்திடவும் பணித்தார்.

இதைக் கேட்டு சந்திர பகவான் உள்ளூர நகைத்திட்டார்! ஒரு மானுடனால் கூட மிகவும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தக் கூடிய மிக மிகச் சாதாரணமான கோ பூஜை (பசுவிற்கான பூஜை) ஆயிற்றே, இது என்ன கஷ்டமான பணியா என்ன? இவ்வளவு எளிமையான பணியை சிவபெருமான் நமக்கு ஏன் அளித்திட்டார்?" என்று உள்ளூர் மௌனமாக, சந்திரர் சற்றே அகங்காரமாகவே எண்ணிட்டார்!

சந்திரரும் கோபூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்திட்டார்! ஸ்ரீகோமுக்தீஸ்வரச் சிவலிங்கத்தின் முன், காமதேனு மற்றும் காமதேனுவின் புத்திரிகளான பட்டீ, சபளி, விமலை போன்ற தேவ பசுக்களின் முன்னிலையில் நிகழ்ந்த பூஜை ஆதலால், அந்தந்த நாளில் கோபூஜை செய்யப்பட்ட அனைத்துப் பசுக்களுக்கு பூஜை முடிவிலேயே நல்முக்தி கிடைத்தது. ஒரு குடும்பத்தில், குலத்தில் ஒருவர் உத்தம நிலைகளை அடைந்திடில் அவருடைய இருப்பத்து நான்கு தலைமுறைகளும் மோட்சம் பெறுவர் என்பதால், சந்திரரின் கோபூஜையால், அதுவும் ஸ்ரீகோமுக்தீஸ்வரர் முன் நிகழ்ந்த மகத்தான கோபூஜா பலன்களால் பல லட்சக்கணக்கான பசுக்களின் தலைமுறைகளுக்கு முக்தி நிலை கிட்டிட, பூலோகத்தில் பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது! சந்திரருடைய பதினாறு நாள் கோ பூஜைக்கே பசு கிட்டாமல் போயிடுமோ என்ற நிலை உருவாயிற்று!

மகா சர்வ கோதூளிப் பிரகாசம்!

மேலும், உத்தம தேவ மூர்த்திகளுக்கான மகா அவதார சக்திகள் திரளும் கோபூஜை ஆகையால் சந்திர பகவானுக்கும் உத்தம அவதார மூர்த்த நிலைகள் செறிந்திடவே...இறைவனின் மாபெரும் லீலையாக, சந்திரரால் ஒரு நாள் கோபூஜையின் பலனான மகா சர்வ கோதூளிப் பிரகாசத்தையே தாங்க இயலாது தவித்திட்டார். இருப்பினும் இறைவனை வேண்டி அவர் தொடர்ந்து பூஜித்திட, சந்திரருக்கும் அவதார மூர்த்த தேவசக்திகள் பெருகப் பெருக....கர்வமும் கூடியது! தாம் நவகிரக மூர்த்தியாகத் துலங்க இருக்கிறோம் என்ற கர்வமும் சற்றே தலைதூக்கிட...கர்வபங்கம் காரணமாக சந்திரரின் மனம் தடுமாறிட....எட்டாம் நாள் பூஜையிலேயே அவருடைய மனம், உடல் இளைத்தது! அவதார மூர்த்த சக்திகள் பெருகப் பெருக கூடவே, கர்வமும் கூடிட, மனம் தளர்ந்திட்ட சந்திரர் தம் எட்டாம் நாள் கோபூஜையிலேயே நிறையத் தவறுகளைச் செய்யலானார்.

இதனால் தாம் ஒருவருடைய ராசியின் எட்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும் போது செய்யும் காரியங்களில் மனம் தளர்ந்து, தவறுகள், குழப்பங்கள், துன்பங்கள் உண்டாகின்றன! இந்த இரண்டே கால் சந்திராஷ்டம நாட்களும் அந்தந்த ராசிக்காரருக்குச் சந்திராஷ்டம நாட்களாக அமைகின்றன. அதாவது அவரவருடைய நட்சத்திர மூலப் புள்ளியின் அட்டத் தூரத்தில் மனதிற்கு அதிபதியான சந்திரர் இருக்கும் போது மனமானது பல கொந்தளிப்புகளுக்கு ஆளாகி நிறைத் தவறுகள் ஏற்படும். அமைதியான மனம் இருந்தால் தானே ஆணித்தரமான நல்ல வைராக்யம் கூடிய முடிவுகளை எடுக்க முடியும். சந்திராஷ்டம விளக்கங்கள் மேலும் பல உண்டு!  தக்க சற்குருவை நாடி அறியவும்.

பிறைகள் பிறந்தன!

தமக்கேற்பட்ட கர்வ பங்கத்தால் தம் தேவ வழிபாட்டில் தவறுகள் பெருகுவதைக் கண்டு கலக்கமுற்ற சந்திரர் தன் கர்வத்தை உணர்ந்து ஈஸ்வரனிடம் மன்னிப்பு வேண்டி சரணடையவே....அதுவரையில்...சந்திரர் எட்டு நாட்களில் செய்த பூஜா பலன்களாக- கர்வ பங்கத்தால் மெலிந்திருந்த சந்திரர் தாங்கும் வண்ணம் எட்டுக் கலைகளை மெல்லிய தாமரைத் தண்டுக் கீற்றுக்களால் ஆகிய அரை வட்டப் பிறையாக ஆக்கி ஈஸ்வரன் அளித்திட்டார்.

ஏனைய எட்டுக் கலைகளைப் பெற்றிடச் சந்திரர் நல்வழி கேட்டிடவே...பல யுகங்கள் அருணாசலத்தைக் கிரிவலம் வந்திட்டு...அடுத்த பூஜையில் கர்வ பங்கமும், குறைகளும் வாராதிருக்க, கோபூஜையைத் தம்பதிகள் சகிதமாக அக்காலத்திய கோமுக்தித் தலமான பெருமகளூரில் செய்தலே உத்தமமானது என்று ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் அருளியபடி, தம் 27 நட்சத்திர தேவியருடன் சந்திர பகவான் கோ பூஜைகளைத் தொடர்ந்து பெருமகளூரில் நிகழ்த்திட்டார்.

கமலஜோதித் தாமரைப் பிறை!

ஏற்கனவே கர்வ பங்கத்தால் இளைத்திருந்த சந்திரர் தாங்கும் வண்ணம் மிகவும் மெலிதான "கமலக் கதலி" எனப்படும் தேவகமலத் தாமரைத் தண்டுக் கீற்றுகளைப் பிறையாக வடிவமைத்துப் பொருத்தி, மேலும் எட்டு சோமப் பிரகாசக் கலைகளாகப் பதித்து, சந்திரருக்கு ஒளிப் பிரகாசம் தந்திட்டார் ஈஸ்வரன். இதற்குப் பிறகே சந்திரர் பல வழிபாடுகளை மேற்கொண்டு தம் முழுமையான பதினாறு கலைகளிலும் பரிபூரணப் பிரகாசத்தைப் பெற்றார்.

ஆனால் சிவபெருமானுக்கு ஆஹூதி அளிக்க மறுத்த தட்சனின் ஹோமத்தில் பங்கு பெற்றதாலும், தட்சனின் சாபத்தாலும் சந்திரர் பெற்ற கலைகள் யாவும் மீண்டும் சோமநாத லோகத்திற்குள் சென்று மறைந்திட.... சிவனருளால் ஒரு பட்சம் வளர்வதாகவும், மறு பட்சம் தேய்வதாகவும் அக்கலைப் பிரகாசங்கள் மாறின!

அனைத்தும் இறை லீலைகள்தாமே! சிவபெருமான் ஆதிமுதலில் தாமரைத் தண்டால் ஆக்கிய எட்டு ஆரக் கலைகள் வளர்பிறை நாட்கள் ஆயின!  பின்னது சந்திர கமலக் கதலியால் ஆனவை தேய்பிறை நாட்கள் ஆயின!  அதுவரையில் பிலவடி ஜலத்தினுள் அமிழ்ந்திருந்த சுயம்பு லிங்கம், தாமரைத் தண்டாலான ஸ்ரீசோமநாதராகக் காட்சி அளித்தது!


சக்திபர ஊர்த்துவ தாண்டவ ஸ்ரீநடராஜப் பெருமான் நல்லாடை

சந்திராஷ்டம தின வழிபாடுகள்!

எனவே சந்திராஷ்டம நாட்களுக்கு முன்னரேயே அல்லது சந்திராஷ்டம நாட்களில் பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில் ஜலத்வீப சக்திகள் நிறைந்த வாழைத் தோரணங்களை இட்டு வாழைப் பூக்களை அரை வடிவப் பிறைபோல் வளைந்த வடிவில் வைத்து முன் வாயிலை அலங்கரித்து தாமரைத் தண்டால் ஆன ஸ்ரீசோமநாத லிங்கத்திற்கு வெண்பட்டு ஆடைகளைச் சார்த்தி வழிபட்டு பால் பாயசம், வெண் பொங்கல், பால் கோவா, தயிர் சாதம் போன்ற (சந்திர பகவானுக்கு ப்ரீதி தரும்) வெண்ணிற உணவு, ஆடை வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர மனக் குழப்பங்கள், மனக் கொந்தளிப்புகள், எந்த முடிவை எடுப்பது என்ற மனத் தடுமாற்றங்கள் நீங்கி நல்ல முடிவுகளுக்கான மனத் தெளிவு பிறக்கும். குறிப்பாக, திருமண சம்பந்தம், வியாபார முடிவுகள், திருவுளச் சீட்டு போடலாமா, வேண்டாமா என யோசித்தல் போன்ற விஷயங்களில் தீர்கமான முடிவெடுக்க பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் வழிபாடு பெருந்துணை புரியும்!

சோமன், சந்திர வகைப் பெயர்களை உடையோர் தம் வாழ்நாளில் வழிபட்டு வர வேண்டிய தலம்! மன சாந்தியைத் தரவல்ல மதிகாரராம் சந்திர பகவானுக்கு உரிய நவகிரகத் தலம்! உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத தாமரைத் தண்டினால் ஆன லிங்க மூர்த்தி! ஒரு யுகத்தில் மகத்தான சந்திரத் தலமாகப் பொலிந்த தலம்! பஞ்சபூத சக்தித் தலங்களில், திருவானைக் கோயில் போல ஜலத்வீப சக்திகள் நிறைந்த நீர்த் தலம்! இவ்வாறாக, பெருமகளூர் சிவாலய மகிமை சொல்லவும் பெரிதே!

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

இத்தொடரில் குருவருளால், சித்தர்கள் அருளியபடி அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்களைப் பற்றிய விளக்கங்களை அளித்து வருகின்றோம்

நல்லாடை:  மயிலாடுதுறை - திருவிளையாட்டம் - கொடவிளாகம் அருகே உள்ளதே பரணி நட்சத்திரத்தை உடையோர் தம் வாழ்நாளில் மிகவும் விசேஷமாக வழிபட வேண்டிய நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயமாகும்.

ஸ்ரீஅக்னீஸ்வரர் நல்லாடை

அக்னியில் பல வகைகள் உண்டு. ஒளி, ஜோதி, நெருப்பு, தீ, வளி எனப் பலவகை அக்னி வகைகள் விளக்கு, சாம்பிராணி, பத்தி, கற்பூரம், சமையல், மின்னல் என்றவாறாகப் பல விதங்களில் பயனாகின்றன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களில் ஒளிப் பிரகாசத்தைத் தருவதும் ஒரு வித அக்னியே, அக்னிகளில் பரணி என்பது ஒரு வகை ருத்ராக்னி ஆகும். எங்கு ஹோம வழிபாடு செய்தாலும், முதன் முதலில் ஹோமத்தில் எழும் அக்னி வகையே பரணி ருத்ராக்னியாகும். இந்த நல்வரமானது அக்னி பகவானுக்காக, மிருகண்டு மகரிஷி, ஸ்ரீருத்ராக்னி லிங்க மூர்த்தியிடமிருந்து பெற்றுத் தந்த அரும்பெரும் நல்வரமாகும். இதனால் தான் அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழாவில், அருணாசல மகா தீபத்தன்று காலையில் முதலில் பரணி தீபமும் மாலையில் மலையில் அருணாசல தீபமும் ஏற்றப்படுகின்றன.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி
திருப்பூந்துருத்தி

வயலூர், திருக்காட்டுப்பள்ளி, அன்னியூர், கஞ்சனூர், நல்லாடை, வன்னி வேலம்பட்டி, திருக்கானூர் போன்ற தலங்களில் ஸ்ரீஅக்னீஸ்வரராக ஈஸ்வரன் தோன்றி, பிரபஞ்சத்திற்குத் தேவையான அனைத்து விதமான அக்னி சக்திகளையும் இன்றும், என்றும் அளித்துக் கொண்டு தாம் இருக்கின்றார். 1008 வகையான அக்னிகள் கலியுக ஜீவன்களில் வாழ்க்கைக்கென அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தலையானவைகளில் ஒன்றான பரணி அக்னி சக்தி மிகுந்ததே பரணி நட்சத்திர மண்டலமாகும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வழிபாடுகளில் விளக்கு பூஜை, ஊதுபத்தி தூபம், தூபக் காப்பு, சாம்பிராணிக் காப்பு, தீபஜோதி, ஹோமம் போன்ற அக்னி வகை பூஜைகளைக் கடைபிடித்தல் சிறப்பானதாம். வாரம் ஒரு முறையேனும் இவர்கள் ஹோம வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பரணி தரணி ஆளும் என்பது முதுமொழி. அதாவது பரணியாக்னி சக்தியே உலகெங்கும் பலவகைகளில் காஸ், மின்சக்தி, எரிபொருள், ஒளி போன்றவையாக பூஜை, உணவு, தொழில் எனப் பல துறைகளில், பல வகைகளிலும் நிரவியுள்ளதாம்.

நல்லாடை சிவத்தலத்தில் தாம் பரணி வகை அக்னி சக்திகள் விருத்தியாகிப் பிரபஞ்சத்திற்கும் நிரவி அருள்புரிவதால் பரணி நட்சத்திரத்தார் தம் வாழ்நாள் முழுதும் இங்கு விசேஷமான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீசுந்தரநாயகி நல்லாடை

புனிதமான முறையில் ஹோமம் நடத்திடப் புனிதமான அக்னியைப் பெற வேண்டும். நெருப்புக் குச்சி, லைட்டர், காஸ் லைட்டர் போன்றவை யாவும் ரசாயனக் கலப்பாதலின் இவற்றால் எழுவது தூய அக்னி ஆகாது. ஆனால் எவ்வகை அக்னியையும் தூபம், பத்தி, சுத்தமான கற்பூரத்தால் சுத்திகரித்திடலாம்.

பரணி அரணி எனப்படும் ஒரு வகையான அக்னியே புனிதமான அக்னி வகைகளுள் ஒன்றாகும் இது அக்னி பகவானுடைய லோகத்திலிருந்து எழுவது!  அரணிக் கட்டை எனப்படும் அரசங் கட்டையை வேகமாகக் கடைந்து ஏற்படும் தீப்பொறியை, இலவம் பஞ்சில் பற்ற வைத்து, அரசு சமித்துக் குச்சிகளைப் பசுஞ்சாண விராட்டியில் வைத்துச் சிறிது சிறிதாக அக்னியை எழுப்புவது மிக மிகப் புனிதமான அரணிப் பரணி அக்னி வகைகளுள் ஒன்றாம். இவ்வாறு தீக்குச்சி இல்லாது தூய அரணிக் கட்டையில் எழும் அக்னியில் முறையாக, சுயநலமின்றி, பக்தியுடன், குருவருளுடன் நிகழும் ஹோமத்தில் கிட்டும் பலன்களோ கோடானு கோடி! தெய்வீக நல்வரங்களைப் பெற்றிட இத்தகைய அரணிக் கட்டையால் அரணிப் பரணி அக்னியை எழுப்பி ஹோமம் செய்வோர், தீபம் ஏற்றுவோர் தற்போது மிக மிக அரிதாம்.

இத்தகைய பரணி அக்னி எழும் தலமே நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயமாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் முழுதும் விசேஷமாக வழிபட்டு அளப்பரிய நற்பலன்களைப் பெற வேண்டிய தலமுமாகும்.

ஊதுபத்திகள், சாம்பிராணி, தூபங்கள் யாவுமே அக்னி வகை வழிபாடுகள் ஆதலால் பரணி நட்சத்திரத்தாரும் ஏனையோரும் இங்கு பல வகையான தூபங்களை ஏற்றி, தூபம் சாந்தமாகும் வரை அடிப்பிரதட்சிணம் செய்து வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

பௌர்ணமி திதி நேரம்: 22.8.2002 வியாழன் விடியற்காலை 2.40 மணி முதல் 23.8.2002 வெள்ளிக்கிழமை விடியற்காலை 3.59 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 22.8.2002 வியாழக்கிழமை இரவு.

7.8.2002 புதன் கிழமை விடியற்காலை 5.27 மணி முதல் இதே நாள் பின்னிரவு 3.22 மணி வரை திருக்கணித பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது

ஆகஸ்ட் 2002 மாத சிவராத்திரி கிரிவல நாள்: 7.8.2002 புதன் கிழமை இரவு.

அமுத தாரைகள்

பைரவ வாகனத்தின் ஆன்ம சக்தி!

பைரவரின் வாகன மூர்த்தியை வெறும் "நாய் தானே" என்று எண்ணி, நாய்க் குலத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்! எம பகவான் மற்றும் எம தேவதைகள், எம தூதுவர்களின் தரிசனத்தை அனைத்து வகை நாய்களும் பெறுகின்றன என்றால் என்னே நாய்களின் ஆன்ம சக்தி? ஆனால் சராசரி மனிதனோ மரணம் என்றாலே அஞ்சி, அஞ்சி ஓடுகின்றானே! எனவே மரண பயத்தைப் போக்க வல்லதே நாயை வாகனமாகக் கொண்ட பைரவரின் வழிபாடு! பைரவ உபாசனையானது மார்க்கண்டேயர், நசிகேதன், சத்தியவான் சாவித்திரி போன்றோர் பெற்ற புனிதமான தேவநிலைகளைப் போன்று, எம பகவானின் தரிசனத்தைப் பெற்றுத் தந்து இறவா நிலையான சிரஞ்சீவித்வத்தில் பல உத்தம‌ நிலைகளைப் பெறத் துணை புரியும்!

அபூர்வ அமர்ந்த கோல
ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்லாடை

கோடி மடங்குப் பலனளிக்கும் ஸ்ரீபைரவேஸ்வரர்!

தேய்பிறை அஷ்டமித் திதி, செவ்வாய், சனி ஹோரைகளில் இங்கு ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாம். பலவிதமான கடுமையான நோய்கள், கழுத்தைப் பிடிக்கின்ற அளவிற்கு இருக்கும் கடன் தொல்லைகள், சொல்லொணாக் குடும்பக் குழப்பங்கள், மனக் கொந்தளிப்புகள் அனைத்தையும் தீர்த்திட வல்ல கால பைரவத் தலம் இதுவே! சக்குவாம்பாள்புரம் சிவாலயத்தில், ஒவ்வொரு அஷ்டமியிலும், குறிப்பாக, பௌர்ணமிக்குப் பிறகு வருகின்ற தேய்பிறை அஷ்டமி நாளில் சனி ஹோரை நேரத்தில் ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபடுதல் பல கோடி மடங்குப் பலன்களை அளிப்பதாம்! ஏனெனில் ஸ்ரீசனீஸ்வரரே, ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபடுகின்ற அபூர்வமான நேரமே தேய்பிறை அஷ்டமியின் சனி ஹோரை நேரமாகும்!

சனி தசைக் காலத்தை நல்விதமாக்கும் ஸ்ரீபைரவேஸ்வரர்!

பொங்கு சனி, தங்கு சனி, மங்கு சனி ஆகிய சனி தசை, சனி புக்தி, சனி அந்தரங்களில் இருப்போர், சனீஸ்வர பகவானுடைய முழுமையான, பரிபூரணமான தீர்க்க சக்திகளைப் பெறுவதற்கு சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவேஸ்வரருடைய பேரருளைப் பெற்றுத் தருகின்ற திவ்யமான சனீஸ்வர மூர்த்தியையும், காலபைரவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரராக அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவேஸ்வரரையும் வழிபட்டுப் பெறுதற்கரிய பைரவ சக்திகளைத் தமக்கும், தம் சந்ததிகளுக்கும், மகத்தான சமுதாய இறைப்பணியாக அனைவருக்கும் பெற்றுத் தந்து தீவினைகளையும், தீய சக்திகளையும் வென்று நல்வாழ்க்கையைப் பெறுவார்களாக!

ஸ்ரீபிரார்த்தனா தட்சிணாமூர்த்தி
நாகத்தி

ஏகபத்னி விரதராய், புனிதக் கற்புடையோராய்ப் பிரகாசித்து தம்பதியர் இடையே மகத்தான தெய்வீக அன்பு கூடுதற்கு மங்கள வாரமாகிய செவ்வாய், வெள்ளி தோறும் பாண லிங்கத்திற்கு புனுகு, கஸ்தூரி கலந்த இலுப்பை எண்ணெய்க் காப்பு இட்டு, அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.

ஆதித்ய ஹிருதய மந்திரம் தரும் அற்புத ஸ்ரீராம தரிசனங்கள்!

இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் அகஸ்தியர், ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹிருதய மந்திரங்களை உபதேசித்ததாக நாம் கண்டாலும், மேலும் பல தலங்களிலும் இதன் பல அனுவாகங்களை, பல திவ்யமான ஹோரை நேரங்களில் திருப்புனவாயில், திருநின்றவூர் போன்ற பல தலங்களில்- ஸ்ரீராமருக்கு அகஸ்தியர்பிரான் உபதேசித்தார். எவர் ஒருவர் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உபதேசமாகப் பெற்று நன்முறையில் ஓதி வருகின்றார்களோ அவர்களுக்கு, தெற்கு நோக்கிய ஸ்ரீராமரின் திவ்ய தரிசனமானது, சாதாரணமாகக் கிட்டும் தரிசனத்தை விட மாறுபட்டதாக, ஞானப் பிரகாச வடிவுடையதாகக் கிட்டும். பொதுவாக, இத்தகைய ஞான தரிசனம் பெறுவோர் அடக்கத்துடன் துலங்கி, எதையும் வெளிக்காட்டுவதில்லை! ஆதித்ய ஹிருதயத் தோத்திரத்தை கண்டிரமாணிக்கத்தில் பக்தியுடன் ஓதி ஸ்ரீராமஞான தரிசனம் பெற்றோர் இன்றும் உண்டு!

தீய பழக்கங்களில் இருந்து விடுபட....

சில குடும்பங்களில் உள்ள மிகவும் முக்கியமான பிரச்னை என்னவென்றால் சூது, மது, குதிரைப் பந்தயம் போன்றவற்றிற்குக் கணவன் அடிமைப்பட்டு, பல தீய வழக்கங்களுக்கு ஆளாகி, குடும்பமே அவ்வப்போது கொந்தளிப்பில் கொதித்துக் கிடப்பதாகும். தன் கணவன் இவ்வாறு தீய வழக்கங்களில் சிக்கிக் குட்டிச் சுவராகிப் போகின்றாரே என்று மனம் நோகும் இல்லறப் பெண்மணி, தனக்கு இத்தகைய துன்பமயக் குடும்ப வாழ்வு அமைவதற்குத் தன் முன் வினைகளும் காரணமாகும் என முதலில் உணர்தல் வேண்டும். இவ்வகையான முன்வினைக் கர்ம கழிவுகள் முழுமையாகக் கழிந்தால் தான் தக்க தீர்வுகள் கிட்டி, பரிகாரப் பிராயச்சித்தங்களும் நன்கு ஆக்கம் பெற்றுக் கணவன் முழுமையாகத் திருந்துவார்.

தீய வழக்கங்களுக்கு அடிமையாக முதற்காரணமே ரோகச் சாயை என்ற வகையில் முற்பிறவியில் வாக்கால், செல்வத்தால், காரியத்தால், அழகால், அறிவுப் பூர்வத்தால் பிறரை மயக்கி, ஏமாற்றிப் பாழாக்கிய வல்வினைகளின் பிரதிபலிப்பாம்!  இவ்வாறான முன்வினைக் குற்றங்களின் விளைவுகளாக வரும் தீய வழக்கங்களால் பாழடைந்த மன இருட்டில் இருந்து நன்முறையில் வெளிவந்து திருந்திட கும்பகோணம்-வலங்கைமான் வழியில் மருதாநல்லூர் அருகில் உள்ள கருக்குடிச் சிவாலயத்தில் ஸ்ரீஅத்வைத நாயகி சமேத ஸ்ரீசற்குண நாதருக்குத் திங்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் தேன் கலந்த பால் பாயசம் படைத்து, அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து பாயசத்தை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் கணவன் மகத்தான நல்மன மாற்றங்களைப் பெற்றுத் திருந்துவதை கண்கூடாகக் கண்டிடலாம்.

ராகு, கேதுத் தலமே திருக்கோளக்குடி மலைத்தலம்!

ராகு, கேது கிரகங்கள் போல திருக்கோளக்குடியில் அப்பிரதட்சிணமாக கிரிவலம் வருவீர்!

பொன்னமராவதி திருமயம் பாதையில் உள்ள திருக்கோளக்குடியில் மிகவும் அபூர்வமாக பாறையில் உள்ள தேன்கூடுகளில் இருந்து தேனானது தானாகச் சுனையில் சொட்டி, சுவாமிக்கு அபிஷேகத்திற்கான தீர்த்தத்தில் சேர்வது காணுதற்கு அரிய அபூர்வமான தெய்வத் திருக்காட்சியாகும். இங்கு ஸ்ரீநாகேஸ்வரராக அருள்பாலிக்கும் ஸ்ரீநாகநாத சுவாமிக்குத் தேனபிஷேகம் செய்து தேன் கலந்த உணவுப் பண்டங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதலால் ராகு, கேது மூர்த்திகளின் மகத்தான அனுகிரகத்தைப் பெற்றிடலாம்!

திருக்கோளக்குடி

திருக்கோளக்குடியானது பண்டைய யுகங்களில் பிரசித்தி பெற்ற ராகு, கேது தலமாதலாலும், ராகு, கேது கிரகங்கள் இங்கு ஸ்ரீநாகேஸ்வரராகிய ஸ்ரீநாகநாதரை வழிபட்டு மலையை அப்பிரதட்சிணமாக வலம் வந்து நவகிரக மூர்த்திகளாகும் பாக்யம் பெற்றமையாலும், நவகிரகங்களில் ராகு, கேது கிரகங்கள் வானில் அப்பிரதட்சிணமாக வலம் வருவதாலும் திருக்கோளக்குடியில் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், சனிக் கிழமைகளில் அப்பிரதட்சிணமாக (இடவலமாக) கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் எத்தகைய திருமணத் தடங்கல்களும் நீங்கும். வெளியில் சொல்ல முடியாத வேதனைகளுக்குத் தக்க தீர்வுகள் கிட்டும்! இங்கு பிரதோஷ நாட்களில் சோம சூக்த முறையில் கிரிவலம் வருதல் மகத்தான காரிய சித்திகளைத் தரும்.

பேச இயலாதோர் வாக் சக்தி பெற....

குழந்தைகல் நன்கு பேசுவதற்குத் தேவையான சப்த நாளங்கள் சோம சூரியக் கலை மண்டல சப்த சாகர மண்டப தளத்தில் தான் உருவாகின்றன. இங்கு தான் அனைத்துச் சித்தர்களும் (வீணை ஏந்திடா) ஸ்ரீஞான சரஸ்வதியை வழிபட்டு, பூலோக ஜீவன்களுக்கும் வாக்சக்தியைப் பெற்றுத் தருகின்றார்கள். திருச்சி அருகே திருவாசி சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபேச்சியம்மன், பேச்சு சரியா வராத குழந்தைகளுக்கும், பல வியாதிகளால் திடீரெனப் பேசும் சக்தியை இழந்தோர் மற்றும் ஊமைகளுக்கும் அருள்பாலித்து வாக் சக்தியை அளிப்பவள்!  சோம சூரியச் சித்தர்களின் உபாசனா மூர்த்தியே ஸ்ரீபேச்சியம்மன்!  தாங்க இயலா குறட்டைச் சப்தத்துடன் உறங்குவோர் திருவாசி பேச்சியம்மனுக்கு நேர்த்தி செய்து வழிபட்டு வந்திடில் தக்க தீர்வுகள் கிட்டும்.

வல்லபை அநாதி லக்ஷ்மி ஆகிய இரண்டு தேவியருடன் அருள்பாலிக்கின்ற திருவலஞ்சுழி ஸ்ரீகணபதிக்கு சர்க்கரை கலந்த வெண்ணெயை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு தானமளித்திட, இறைவனே அந்தந்த குழந்தை/ பிள்ளைக்குரிய பாடத்தைத் (subject) தேர்ந்தெடுக்குமாறு செய்திடுவார்.

பிள்ளைகளுக்கு நற்பண்புகள் விருத்தியாக....

கணவனைப் போல் தன் பிள்ளைகள் புகைபிடித்தல், சூது, மது, முறையற்ற காமக் குற்றங்களுக்கு, தீய வழக்கங்களுக்கு ஆகாமல் காப்பாற்றிடப் பல தாய்மார்கள் இராப் பகலாக இறைவனை மன்றாடி வேண்டி வருகின்றார்கள். ஆழ்ந்த நம்பிக்கை கூடிய பிரார்த்தனைகளுக்கு மகத்தான சக்தி உண்டு என்பது சத்தியமான வாக்கே!  பிரார்த்தனை சக்திக்கு மேலும் வலுவூட்ட சில ஆன்மீக சாதனங்களை கடைபிடித்து வர வேண்டும்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளயைர் திருவலஞ்சுழி

கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு, தமிழ்மறை, தேவமொழி மறைகளை தினசரி ஓதுதல், மிருதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற வாத்யப் பயிற்சி, தினமும் ஆலயத்தில் அடிப்பிரதட்சிணம் அல்லது நமஸ்காரப் பிரதட்சிணம், தம் கையால் சந்தனம் அரைத்து, பூக்கள் தொடுத்து சுவாமிக்கு அளித்தல், ஆலயத்தில் குப்பைகளைப் பொறுக்கி சுத்தப்படுத்துதல் போன்ற இறைக் காரியங்களில் சிறு வயதிலேயே பிள்ளைகளைப் பழக்கி வருதல் வேண்டும்.

வாரம் ஒரு முறையேனும், குறிப்பாக புதன், சதுர்த்தி, சதுர்த்தசி நாட்களில் இரட்டைப் பிள்ளையாருக்கு (இரண்டு விநாயக மூர்த்திகள் சேர்ந்திருப்பது) இரட்டை வஸ்திரங்கள் சார்த்தி, ஏழைப் பிள்ளைகளுக்கு வாழை இலையில் கொழுக்கட்டை, இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகும் உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வருதலால் தீவினைகள் பஸ்மமாகி, நற்பண்புகள் நிரவும். கும்பகோணம்-திருநல்லூர் அருகே மாளாபுரத்தில் உள்ள முப்புரி (மூன்று) விநாயக மூர்த்திகளை அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வர, எவ்விதத் தீய பழக்கங்களும் பிள்ளைகளையும் கணவனையும் அண்டாது காப்பாற்றிடலாம்.

சப்த சக்திகள் நிறைந்த தலங்கள்!

குறட்டை என்பதை அபந்த மொழியாக உணர்ந்து ஆன்ம நம்பிக்கை கொண்டு, இதை பூலோக மக்களுக்குப் பயன்படும் வகையிலே இறைப் பூர்வமாக ஆக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதூல சப்த மொழிகளாகிய அபந்த மொழி, கபந்த மொழி, சுபந்த மொழி சக்திகள் நிறைந்த இடங்கள் உலகில் பல உண்டு. ஜாலியன் வாலாபாக், தனுஷ்கோடி, ஆப்கானிஸ்தான், திபெத், சில பிரெஞ்சு தேசப் பகுதிகள் போன்ற சப்த சாகர சக்திகள் நிறைந்த இடங்களில் நன்முறையில் ஜீவன்களுக்குப் பயன்படும்படியான சப்தம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் சப்த சக்திகளை ஆன்மீக ரீதியாக ஜீவன்களின் மேன்மைக்காகப் பயன்படுத்த முடியும்.

ஆராய்ச்சிகள் என்றால் பாம்பு, எலி போன்றவற்றிற்குப் பல ரசாயனங்களைக் கொடுத்து அவற்றின் உயிர்களை வதைப்பது கிடையாது! இவை யாவும் பாவகரமான செயல்கள். இவ்வகை ஆராய்ச்சி செய்வோர்க்கும், சந்ததிகளுக்கும் இப்பிராணிகளினாலேயே தீங்குகள் நேரும். குறட்டை மொழி, ஒரு காலில் நிற்கும் எறும்பின் தியானம், கொசுவின் வேத ரீங்காரங்கள், சிங்கத்தின் பாத அடிகளில் ஏற்படும் அரிய நில ஊற்றுத் தன்மை, பல்லியின் ஆன்ம குணங்கள், எப்பொருளிலும் மறைந்துள்ள ஆன்ம சக்திகளை உணர்தல், அந்த ஆன்ம சக்திகளை ஆக்கப் பூர்வமாக உலக ஜீவன்களின் நன்மைக்குப் பயன்படுத்தல் என்றவாறாக ஆன்மீகத்தை நம்பி அவற்றை ஜீவன்களுக்கு பயன்படுத்துதலே எந்த ஆராய்ச்சியின் நோக்கமாகவும் மேலும் தக்க சற்குருமார்கள் மூலமாக நடத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும்.

கருப்புப் பெட்டி காட்டும் கபந்த மொழி சப்த இரகசியங்கள்!

Black box எனப்படும் விமான ஓட்டியின் அறையில் இருக்கின்ற சப்த அதிர்வு உறைப் பெட்டியின் அமைப்பும் அபந்த மொழி சப்த வகை நாளங்களே ஆகும். பிரான்ஸ் நாட்டில் கிலடின் யந்திர வேதனையில் பெருகிய ஆவிகள் இன்றும் அங்கே பரிசமாகி ஓலக்காள சக்திகளைப் பராமரிப்பதாலும், "ஓலக்காள சப்த சக்தி" மிகும் பகுதிகள் நிறைந்தமையாலும் Black box நாள அதிர்வுகளைப் பண்பிரிக்கும் துறையில் பிரான்ஸ் பெரிதும் முன்னேற்றம் பெற்றுள்ளது. சப்த நாளங்கள் சீர் பெறும் அபூர்வமான நீரோட்டங்களைக் கொண்டது பிரான்ஸ் ஆகும்.

ஸ்ரீஞானசரஸ்வதி வேதாரண்யம்

பிள்ளைகளின் அறிவு சிறந்திட!

சில குடும்பங்களில் எவ்வளவுதான் படிப்பு, புத்தகங்கள், டியூஷனுக்காகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் பிள்ளைகள் சுமாராகவே படித்துச் சராசரி மார்க்குகளே பெறுவதைப் பார்த்து வேதனை அடைகின்ற பெற்றோர்கள் நிறைய உண்டு. ஒரு புறத்தில் பெற்றோர்களே சராசரி அறிவு கொண்டிருக்க, பிள்ளைகளிடம் பேரறிவை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்றாலும் படிப்பில் மந்தமாக இருப்பதற்கான ஆன்மீகக் காரணங்களை அறிந்து அவற்றிற்காகத் தீர்வுகளையும் தெய்வீக ரீதியாகப் பெற முனைவது மூலமாகவே, மேற்கண்ட குழப்பங்கள், வேதனைகள் தீர நல்வழிகள் எளிதில் பிறக்கும்.

திருவையாறு அருகே நாகத்தி சிவத் தலத்தின் மிக அபூர்வமான பிரார்த்தனா தட்சிணாமூர்த்தி, திருப்பூந்துருத்தி, லால்குடித் தலங்களின் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி, கோயம்பேடு, வேதாரணயம் வீணை ஏந்திடாத ஞான சரஸ்வதி போன்ற ஞான மூர்த்திகளை, திங்கள், புதன், நவமி, புனர்பூசம் மிகவும் அரிதிலும் அரிதான நவமி கூடிய புனர்பூசம், வியாழன் நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சார்த்தி எலுமிச்சை அன்னதானமும், சரஸ்வதிக்கு வெண்பட்டுப் பாவாடை, கத்தரிப் பூ நிறப் புடவை சார்த்தி, சுண்டல் நைவேத்யம் மற்றும் தானமும் அளித்து வந்தால் பிள்ளைகள் நன்கு படிப்பர். இல்லத்தில் தினந்தோறும் புனுகில் குழைத்த ஜவ்வாதினை ஊதுபத்தியில் தோய்த்து ஏற்றி வந்தால் இல்லத்தில் ஞான சக்திகள் பெருகும். பிள்ளைகள் அசமந்தமாக இல்லாது நன்கு படிப்பர்.

வாழ்வில் சோகங்கள் மிகும் போது கண்டிர மாணிக்கம் ஸ்ரீகோதண்டராமரை தரிசித்து நற்காரியங்களை ஆற்றிவர, ஸ்ரீராமரும், ஸ்ரீபால ஆஞ்சநேயரும் நம்முடைய சோகத் திவலைகளைத் தியாகமயமாகத் தம்முள் ஏற்பதால், வாழ்வில் சோகங்கள் கரைந்திடும்!

கண்டிரமாணிக்கத்தில் ஸ்ரீஆஞ்சநேய மகாபிரபு, பால ஆஞ்சநேயராக, கிழக்கு நோக்கியவாறு, பாஷ்பவாரி பரிபூரண லோசனனாகச் சேவித்திட, சீதா-லெட்சுமண சமேதராக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இங்கு தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். எவ்வாறு திருவையாற்றிலே சிவபெருமான் தன்னுடைய ஸ்படிக சிவலிங்க உருவையே அர்ச்சகர் வடிவில் பூஜித்து "சிவ ஆத்ம தரிசன பூஜையாக" பிரபஞ்ச ஜீவன்களுக்கு அர்ப்பணித்தாரோ அதேபோல, தெற்கு நோக்கிடுகையில் தென் இலங்கைச் சோகம் சூழ்ந்த பொழுது, அதைக் களைய ஸ்ரீராமரே, ஸ்ரீராம ராமேதியராய், ரமே ராமேயராக, மனோரமேயராய், ராமநாம வராணனாகத் தம்மைத் தாமே பரந்தாம, பரமாத்ம தரிசனமாகக் கண்டு கொண்ட திருக்கோலமே இங்குள்ள சுயம்பு அர்ச்சாவதார மூர்த்தியான ஸ்ரீகோதண்டராமர் ஆவார்.

பிரிந்த தம்பதியர் இணைந்திட நல்லதோர் நல்வாய்ப்பு தரும் விஷ்ணுபதிப் புண்யகாலம்

எத்தகைய கடுமையான பகைமைகள், மனஸ்தாபங்களாலும் பிரிந்து இருக்கும் கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைவதற்குப் புது நல்முயற்சியைத் திருவருளால் பெற்றுத் தருகின்ற மகத்தான விஷ்ணுபதித் தலமாகவும் கண்டிரமாணிக்கம் விளங்குகின்றது. விஷ்ணுபதி, அமாவாசைத் திதி, திருவோணம், மூல நட்சத்திர நாட்களில் இங்கு அமாவாசைத் திதி தூபம், அந்தந்த நட்சத்திர தூபங்களை ஏற்றி, தூபம் சாந்தமாகும் வரை ஆலயத்தை வலம் வந்து வழிபட்டிட பிரிந்த தம்பதியர் ஒன்று சேர நல்வழி பிறக்கும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

"வாதுல்ய தரணி பந்து" பித்ரு மூர்த்திகள் தரும் நல்வரங்கள்!

அமாவாசை நாட்களில் தக்க மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகளை (afflicted with Down’s syndrome) இத்தலத்திற்கு அழைத்து வந்து ஆலயம் அருகில் உள்ள சூரிய நாராயண தீர்த்தத்தை ஸ்பரிசித்து ஸ்ரீராமரை வழிபட வேண்டும். தலைக்கான தைலங்கள், சமையலுக்கான பாத்திரங்கள், காய்கறிகளை இயன்ற அளவில் ஏழைகளுக்கு அளித்து, தெற்கு நோக்கிய ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீபால ஆஞ்சநேயரை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டு வர பித்ரு சாபங்களால் ஏற்பட்ட குறைகள் தீர்வதற்கு "வாதுல்ய தரணி பந்துக்கள்" எனும் விசேஷமான பித்ருக்கள் கடுமையான தவங்களை மேற்கொள்வர். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எந்த நற்பிரார்த்தனையையும் நிறைவேற்றித் தரும்.

அமாவாசைத் திதி வழிபாட்டுத் தலம்

சூரிய, சந்திரர்கள் கிரகப் பூர்வமாகக் கூடும் அமாவாசை தோறும் சூரிய, சந்திர மூர்த்திகளே நேரில் வந்து வழிபடும் தலமாதலால் இங்கு கண்டிரமாணிக்கத்தில் தெற்கு நோக்கி நின்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருச்சன்னதியில் ஸ்ரீராமரையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் அமாவாசையன்று வழிபடுவது அளப்பரிய, மிகவும் உத்தமமான பலாபலன்களைத் தருவதாகும். இவ்வாறு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே தன் திருவாக்கினால் மறைஓதி ஞானிகளுக்கு அருள்புரிந்த திருநாளும் அந்த யுகத்தின் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமாகும். எனவே அமாவாசை தோறும் எண்ணற்ற மஹரிஷிகளும், சித்புருஷர்களும் இத்திருத்தலத்தில் சூட்சும, தூல வடிவுகளில் தெற்கு நோக்கிய ஸ்ரீராமரை வழிபட்டு, பலாபலன்களை பூலோக ஜீவன்களுக்கு நல்குவதால் அமாவாசை வழிபாடு இத்தலத்தில் பெறுதற்கரிய நல்வரங்களைத் தரும். நீண்ட நாள் காரியத் தடங்கல்கள் நிவர்த்தியாகி, நற்காரியங்கள் சித்தியாகும்.

கண்டிரமாணிக்கம் பெருமாள் ஆலயத்தில், தீர்த்தக் கரையில் தர்ப்பண பூஜைகள், பித்ரு ஹோமங்கள், ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள், திருஷ்டி தோஷ நிவாரண தீப பூஜை, அன்னதானம், மாங்கல்யச் சரடு போன்ற 32 விதமான தான தர்மங்களை நிகழ்த்தி தெற்கு நோக்கிய ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீவரதராஜப் பெருமாளை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டிட, 24 சகஸ்ர தலைமுறைகளுக்கான (24 x 1000) உத்தமநிலைகள் கிட்டிட, ஜெயக்ஷீராஸ் வகைப் பித்ருக்கள் கடும் தவம் புரிகின்றனர். இந்த விஷ்ணுபதி கால தான, தர்ம பூஜா பலன்கள் 24000 மடங்காகப் பெருகிட, அமாவாசைச் சித்தர், சகஸ்ரபாத மகரிஷி போன்றோர் நல்வரங்களை அளிக்கின்றனர்.

மானுட சமுதாய சோகத்தைத் தம்முள் ஏற்று அருளும் தெற்கு நோக்கிய ஸ்ரீராமர்!

முழுமையான மானுட உத்தம நற்குணங்களுடன், இறைலட்சியங்களுடன் ராமாயணத்தை நடத்தித் தந்தவரே ஸ்ரீராமர் ஆவார். ராமாயண அங்கத்தின் எந்த ஒரு கட்டத்திலும் ஒரு விநாடி கூடத் தம்முடைய அவதாரத் தன்மைகளை வெளிக்காட்டாது பரிபூரணமான தெய்வீக மனிதனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர் என்பதால்தான் சாதாரண மனிதன் போல், தான் தெற்கு நோக்கும் போதெல்லாம் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை நினைத்து வருத்தமுறுகின்ற பாங்கும் ஸ்ரீராமருக்கு இயல்பாகவே வந்தது. எனவே பெறுதற்கு அரிய ஆறாம் அறிவாம் பகுத்தறிவை முழுமையாகப் பெற்று, மனிதன் பரிபூரணமாக வாழ உதவும் தலமே கண்டிரமாணிக்கம் பெருமாள் தலமாகும். கலியுகத்தில் எப்போதும் சோகங்களுக்கும், வருத்தங்களுக்கும், கவலைகளுக்கும் ஆட்பட்டவனாய் இருக்கின்ற மனிதன், இவற்றையெல்லாம் களைவதற்கான பரிகாரப் பிராயச்சித்தங்களை மேற்கொண்டால் தெற்கு நோக்கிய ராமரே அவனுடைய சோகத் திவலைகளைத் தம்முள் ஏற்றுக் காப்பாற்றும் தலமே கண்டிரமாணிக்கம் திருத்தலமாகும். எனவே எதிர்வரும் யுகங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் சந்திக்கும் சோகங்களைத் தம்முள் ஏற்றுக் காத்திடவே, ஸ்ரீராமர் தெற்கு நோக்கிடில் அவர் சோகமுறும் இறைலீலையும் அமைந்தது என்பதைக் கண்டிரமாணிக்கத் தல அனுபூதிகள் நன்கு விளக்குகின்றன!

கமலச் சந்திர ஜோதி தீர்த்தம்
பெருமகளூர்

மனக்கிலேசங்களை, சரும நோய்களைத் தீர்க்கும் பெருமகளூர் "கமலச் சந்திர ஜோதித் தீர்த்தம்"

தாமரை மலருக்கு கமல ஜோதிப் பிரவாகத்தையும், ஜலத்வீப சக்தியையும் இணைத்துக் கமல ஜோதியை, தாமரைத் தண்டு மூலமாக நீருக்குள் இணைத்து வர்ஷிக்கும் தெய்வீக சக்திகள் நிறைய உண்டு. திருக்கயிலாயத்தில் உள்ள "கமலாலயத் திருக்குளத்தின்" அம்சங்களை, நல்வரங்களாக வர்ஷிக்கும் அபூர்வ சக்திகளைக் கமல ஜோதித் தாமரைகள் பெற்றுள்ளன. கமல ஜோதித் தாமரை பூக்கும் தடாகங்கள் பூலோகத்தில் ஒரு சிலவே உள்ளன. அவற்றுள் ஒன்றான, பெருமகளூர் ஆலயத்தின் அற்புதமான தாமரைத் தடாகத்திற்கும் "கமலச் சந்திர ஜோதித் தீர்த்தம்" என்று பெயர். சரும நோய்களைத் தீர்க்கும் சக்திகளைக் கொண்டது. மனக் கிலேசங்களை அகற்றி சோகங்களைத் தணிக்கும். இத்தலத்திற்கான மாணிக்கவாசகருடைய திருப்பதிகம் எதிர்காலத்தில் தக்க மகான்கள் மூலமாகக் கிட்டிடும்.

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெற எண்ணற்ற மகரிஷிகளும், சித்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் சூட்சுமமாகவும், தூலமாகவும் குழுமி வழிபடுகின்ற அதியற்புதத் தலமே பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் ஆலயம்! சந்திர தரிசனப் பலன்களைப் பன்மடங்காக்கும் தலம்!

பரணி ஹோமம் தரும் தரணியளவு செல்வம்!

பல கோடி மடங்கு பலன்களைத் தரும் நல்லாடை ஆலய ஹோம பூஜைகள்

மிருகண்டு முனிவர் பரணி நட்சத்திரம் அன்று பரணி அரணை எனும் அரிய அரசங் கட்டையைக் கடைந்து அரணைத் தீ எனும் மிகவும் புனிதமான அக்னியை எழுப்பி, ஹோமம் புரிந்து வருகையில், தனக்கென அரசர் அளித்த பட்டு வஸ்திரங்களை அவர் ஹோமத்தில் இட்டிட, அரசன் வெகுண்டிட, ஹோம அக்னியில் மகரிஷி ஆஹூதியாக இட்டு பஸ்மமான பட்டாடைகள், ஸ்ரீஅக்னீஸ்வரரின் மேல் சார்த்தி இருப்பதைக் கண்டும், பரணி நட்சத்திரந்தோறும் ஸ்ரீஅக்னீஸ்வர லிங்கத்தின் மேல் ஹோமத்தில் இட்ட பட்டாடைகள் தோன்றுவதைக் கண்டும் அரசன் மகரிஷியின் மேன்மையையும், பரணி அக்னி தீபத்தின் சிறப்பையும் நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரரின் மகத்துவத்தையும் அறிந்து உலகுக்கும் உணர்த்தினான். திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி, கார்த்திகை தீபம் போல, மாதந்தோறும் பரணி நட்சத்திர நாளிலும், கார்த்திகை மாதத்தில் பரண நட்சத்திர தீபமும் ஏற்ற நல்லாடை ஆலயத்தில் ஆவன செய்தலால் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகளின் ஆசிகள் பெருகி நல்ல சந்ததிகள் தழைக்கும்! எனவே பரணி நட்சத்திரத்தில் சத்சங்கமாகப் பலரும் குருவருளுடன் தகுந்த சுப ஹோரை, லக்னத்தில் இங்கு ஹோமம் நிகழ்த்திட, இத்தலத்தில் திரளும் பரணியாக்னியின் ருத்ர சக்திப் பிரவாகத்தால் பல கோடி மடங்காக ஹோம பூஜா பலன்கள் பெருகி, திருமகளின் திருவருளைப் பெற்றுத் தரும்.

நித்ய கர்ம நிவாரணி

1.8.2002 - பயணங்களில் கவனம் தேவை. முக்கியமாக இருந்தால் சரபேஸ்வர தூபம் சரபேஸ்வரருக்கு ஏற்றி அன்னதானம் செய்து புறப்படலாம்.

2.8.2002 - ஸ்ரீஹயக்ரீவர் தூபம் ஏற்றி காயத்ரீ ஜபித்து அன்னதானம் செய்து மௌனமாய் இருப்பது நல்லது.

3.8.2002 - இன்று விருத்தி யோக நேரத்தில் நல்ல காரியங்களை அன்னதானத்துடன் ஸ்ரீஹயக்ரீவர் தூபம் ஏற்றித் தொடங்குதல் நலம் தரும்.

4.8.2002 - இன்று சர்க்கரைப் பொங்கல் தானம் செய்து சூரிய நாராயணனை வணங்கி ஸ்திரமான முடிவுகள் எடுக்க, கூட்டு முயற்சிகள் செய்வது நலம்.

5.8.2002 - இன்று விஷ ஜந்துக்களால் ஆபத்தை அடையாமல் இருக்க பெருமாள் கோயில்களில் மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் ம்ருத்யுஞ்ஜய தூபம் ஏற்றி அன்னதானமும் செய்தல் நலம்.

6.8.2002 - மாலையில் சிவன் கோயில்களில் பிரதோஷ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்க வழியுண்டு.

7.8.2002 - தொழிலாளர்கள் முதல் வீட்டில் உள்ளோர் வரை ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. ராமர் கோவிலில் புனர்பூச நட்சத்திர தூபம் ஏற்றி நெய் கலந்த வெண் பொங்கல் தானம் நலம் தரும்.

8.8.2002 - எத்தொழிலில் உள்ளோரும் தங்கள் திறமையைப் பயன்படுத்தும் நாளிது. அன்னதானத்துடன் பூச நட்சத்திரம் தூபம் ஏற்றி அம்பாளை வழிபட்டிடில் நலம் பெறலாம்.

9.8.2002 - இன்று கவனக் குறைவால் காயம்படும் நாளிது. ஜய கணபதி தூபம் ஏற்றி நிதானமாக செயல்பட்டு காயத்ரீ மந்திரத்தை அதிகமாக உபாசித்தல் நலம் தரும்.

10.8.2002 - அவரவருடைய தாழ்வு மனப்பான்மையால் பிரச்னைகள் வரும் நாளிது. ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றி தர்மம் செய்திடில் நலம் பெறலாம்.

11.8.2002 - இன்று சிவன் கோயிலில் ம்ருத்யுஞ்ஜய தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் உள்ளத்து பயம் விலக வழியுண்டு.

12.8.2002 - கணிதத் துறையில் திறமையோடு செயல்படும் நாளிது. மாணவ, மாணவிகள் கணக்கு ஆசிரியர்களிடம் இருந்து கடினமான கணக்குப் பாடங்களில் தெளிவு பெற உதவும் நாளிது. 12 பிள்ளையார் கோவிலில் ஜெய கணபதி தூபம் ஏற்றுவது நலம் தரும்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

13.8.2002 - எத்துறையில் உள்ளோரும் புகழும் காரியங்களை சாதகமாக்கிக் கொள்ளும் வழிகளை அறியும் நாளிது. பஞ்சமி திதி எண்ணெய் தூபம் அம்பாளுக்கு ஏற்றி அன்னதானம் செய்திடில் நலம் பெறலாம்.

14.8.2002 - காவல் துறையில் இருப்போர் பஞ்சாட்சர தூபம் சிவன் கோவிலில் ஏற்றி அன்னதானம் செய்திடில் தலைக்கு வந்த துன்பம் தலைப்பாகையோடு போகும்.

15.8.2002 - தான் செய்கிற காரியங்கள் சரியாக வரமால் போய்விடுமோ என்ற பிரமையோடு இருக்கும் நாளிது. விசாக நட்சத்திர தூபம் ஏற்றி முருகன் கோயிலில் அன்னதானம் செய்யவும்.

16.8.2002 - எட்டு பெருமாள் கோயில்களில் அஷ்ட லக்ஷ்மி தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் சுய தொழிலிலும், உத்தியோக துறையிலும் இருக்கும் பெண்கள் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

17.8.2002 - இன்று வீட்டில் இருக்கும் முக்கியஸ்தர்கள், உயர் அதிகாரிகள் மனம் குழம்பி பலவாறாகப் பேசியும், செயல்படும் நாளிது. 10 கோயில்களில் சரபேஸ்வர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் அமைதியை அடைய வழியுண்டு.

18.8.2002 - இன்று மூல நட்சத்திர தூபம் 21 அனுமார் கோயில்களில் ஏற்றி அன்னதானம் செய்து "புத்திர் பலம்" என்று தொடங்கும் தோத்திரம் விடாமல் ஜபித்திடில் மனதில் உருவாகும் பீதி விலகும்.

19.8.2002 - இன்று மனதிற்கு பிரியமானவர்களை சந்தித்து அவர்களுக்கு பவித்திரா ரோபண விரதப் பிரசாதம் அளித்து சந்திர பகவான் உள்ள கோயில்களில் ம்ருத்யுஞ்ஜய தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் காரிய சாதனைக்குப் பிரியமானவர்கள் உதவியாய் இருப்பர்.

20.8.2002 - இன்று ஆயுர்தேவியை வழிபட்டு ஆயுஷ்ய ஹோமம் செய்து அன்னபூரணி கோவிலில் அன்னதானமும் பஞ்சாட்சர தூபம் ஏற்றி வழிபடுவது நலம் தரும்.

21.8.2002 - இன்று பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர தூபம் ஏற்றி 21 பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை அளித்து வேண்டிடில் ஸ்ரீஹயக்ரீவர் அருளைப் பெறலாம்.

22.8.2002 - இன்று பௌர்ணமி திதி எண்ணெய் தீபம், பௌர்ணமி தூபம், பெருமாள், சிவன் கோயில்களில் ஏற்றி அன்னதானத்துடன் வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

23.8.2002 - இன்று வயதானவர்கள் கவனமாய் இருத்தல் நலம். சிறுவர்களும், நடு வயதோரும் கூட்டு வழிபாட்டில் சத்சங்கமாய் ஈடுபட்டு தெய்வ நினைவோடு கழித்தல் நலம் தரும்.

24.8.2002 - இன்று பிள்ளையார் கோயில்களில் பிடி கொழுக்கட்டை மாலை அணிவித்து கொழுக்கட்டை தானம் செய்திடில் அண்ணன் தம்பி உறவுகள் வலுப்படும். ம்ருத்யுஞ்ஜய தூபம் ஏற்றுவது நலம் தரும்.

25.8.2002 - தொழிலில் சம பங்கு வைத்து வியாபாரம் செய்வோர் நட்பில் பிளவோ சந்தேகமோ ஏற்படாமல் நம்பிக்கையை வளர்க்க சிவன் கோவில்களில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

26.8.2002 - பயணங்களில் கவனம் தேவை. பொருட்களைத் தொலைப்பதற்கு உரித்தான நாளாகும். குலதெய்வ வழிபாட்டுடன் அன்னதானம் செய்திடில் நலம் பெறலாம்.

27.8.2002 - 12 விநாயகர் கோவில்களில் ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஜெய கணபதி தூபத்தை ஏற்றி அன்னதானம் செய்திடில் வருமானம் அதிகரிக்கும்.

28.8.2002 - பஞ்சமி திதி தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் துணிக்கடை வைத்திருப்போர் நலம் பெறுவர்.

29.8.2002 - முருகன் கோயிலில் கிருத்திகை தூபம் ஏற்றி இனிப்புப் புட்டு தானம் செய்திடில் அச்சுத் தொழிலில் உள்ளோர் நலம் பெறுவர்.

30.8.2002 - இன்று சப்தமி திதி தீபம் ஏற்றி சிவன் கோவிலில் அன்னதானம் செய்திடில் Sound and Scientific Instruments -ல் வேலை செய்பவர்கள் நல்ல இட மாற்றம் பெறுவர்.

31.8.2002 - சிவன் கோவிலில் ரோகிணி நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் A.G.S. Office, Finance Dept இல் வேலை செய்வோர் சம்பள உயர்வு பெற வழியுண்டு.

குருவுடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனை நெருங்கும் !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam