ஜீவன் இறைவனின்று சற்றும் மாறுபட்டவன் அல்ல !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவெண்டயம்

* திருவெண்டயம் தரித்து கிரிவலம் வந்திடில் சப்தா வர்ண பீஜாட்சர சக்திகள் அவரவர் உடலிலும், பரவெளியிலும் பெருகும்! ஓங்கார சக்திகளை உடல், மனம், உள்ளத்தில் கூட்டிடும்.

* திருவெண்டயம் அணிந்து ஆலயங்களில் அடிப் பிரதட்சிணம் செய்திடக் காரியத் தடங்கல்கள் நீங்கிக் காரிய சித்தி ஆகும்! திருமணம், நல்ல வேலை வாய்ப்பு போன்ற நற்காரியங்களும் எளிதில் கை கூடும்!

 *திருவெண்டயம் அணிந்து பூஜித்தலும், கிரிவலம் வருதலும் சப்த மாங்கல்ய பூஜை வகையாகும்! சப்த (ஏழு) ரிஷிகளும் திருவெண்டய சப்த நாள கர்த்தாக்கள் ஆவர்!

திருவெண்டயம் என்பது சதங்கை போன்று காலில் துலங்கும் அணிகலன்! மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டது! ஆண்களுக்கு விசேஷமாக உள்ள அணிகலன்! பொதுவாக வலது காலில் சலங்கை போல் அணியப் பெறுவது! நடராஜப் பெருமானின் திருநாட்டியத்தில், இறைவனின் திருக்கால்களில் பொலியும் திருவெண்டய அணிகல நாதத்திலிருந்து எழும் வேத சப்த பீஜாட்சர ஒலிகளைத் தொகுத்துப் பகுத்தே ஸ்ரீபிரம்மா சிருஷ்டியை வகுக்கின்றார்! முதன் முதலில் இதனைச் சிவபெருமானிடம் இருந்து சிருஷ்டிப் பணிக்காகப் பெற்று பிரம்ம மூர்த்தி அணிந்தமையால் அயன் - பிரம்மா; வெண்டம் - சிருஷ்டிச் செல்கள் ஆகத் திருவெண்டயம் எனப் பெயர் பெற்றது. ஆம், மூளைக்கு ஊக்கம் அளித்து, சிருஷ்டியில் உ(ப)தித்த மூளைச் செல்கள் நன்கு இறைநெறியில் வளர உதவும் மூலிகையே வெண்டைக்காய் அன்றோ. எனவே திருவெண்டயத்தைக் காலில் அணிந்து அதன் பீஜாட்சர சப்தத்தில் திளைப்பதால் புத்திக் கூர்மைக்கான நல்ல grasping power,  துரித உணர்வு, ஈர்ப்பு புத்தி, கற்பூர புத்தி நன்கு விருத்தியாகும். படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் திருவெண்டயம் அணிந்து பூஜித்த‌ல், அடிப் பிரதட்சிணம் செய்தல் மற்றும் கிரிவலம் வருதலால் மூளையின் "வெண்டயச் செல்கள்" விருத்தியாகி நல்ல ஞானம் உண்டாகும்!

"முன்னரே திருவெண்டயம், பின்னரே திருப்பாதம்" என்பது மறைவாக்கு! பல அர்த்தங்கள் பொதிந்த வேதவாக்கு இது! அதாவது திருவெண்டய ஒலியை ஒட்டியே பிறகு மானுட அவயங்கள் சிருஷ்டி கொண்டன. இறை தரிசனத்தில் முதலில் இறைவனின் திருவெண்டய தரிசனம், பிறகே திருப்பாத தரிசனம் கிட்டும்! இதில் எழும் அயன நாத பீஜாட்சர சப்த ஒலிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை மூளைச் செல்களை இறைவழி முறையில் ஆக்கப் படுத்த வல்லவை!

திங்களூர் சிவாலயம்

திரிபுர சுந்தரிக்கே முதல் திருவெண்டயத் திருஒலி!

திருஅண்ணாமலையில், பராசக்தியாம் பார்வதி தேவி அருணாசலப் பெருமானுக்கு இறைத் துணைவியாய் ஆகுதற்குத் தற்போதைய உண்ணாமுலைத் தீர்த்தம் இருக்கும் இடத்தில் பல கோடி யுகங்கள் தவம் இருந்தாள். அப்போது பிரபஞ்சத்திலேயே முதன் முதலாகத் திருவெண்டயம் அணிந்தவாறாக ஸ்ரீசதாசிவப் பெருமான் பிருத்வி நந்தியின் மேல் கிரிவல பவனி வந்தார். அந்தத் திருவெண்டய பீஜாட்சர ஒலிகள் உண்ணாமுலை அம்மன் தீர்த்த வளாகத்தில் ஒலித்து கொண்டே இருந்தன. இவ்வொலியே அம்பிகையின் பல கோடி யுக ஊசி முனைத் தவத்திற்கு நிறைவைத் தந்தது. இவ்வாறாக உண்ணாமுலை அம்மனுக்குத்தான் முதன் முதலில் சிவபெருமான் திருவெண்டயம் அணிந்த சிவபாத தரிசனம் தந்திட்டார்.
சிவபெருமானைத் தொடர்ந்து வந்த பிரம்ம மூர்த்தி அடிஅண்ணாமலை அருகே இறைவனால் விசேஷமாக அருள்பாலிக்கப் பட்டார். அப்போது சிவபெருமான் பிரம்மாவின் சிருஷ்டிப் பணி எவ்விதத் தடங்கலுமின்றிச் சிறப்புற நடைபெற அவருக்குத் தக்கதோர் திருவெண்டயத்தினை அளித்தார். எனவே காலில் திருவெண்டயம் அணிந்து புனிதமான பக்தியுடன் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றவர்கள் பிரம்ம நிலைகள் பலவற்றைப் பெறுகின்றார்கள். பின்பு ஒரு யுகத்தில் சந்திர பகவான் தன்னுடைய கலைகள் தேய்வதால் வருத்தமுற்றுக் கயிலாயத்தில் சிவ தரிசனம் பெற்று முறையிட்டார். ஈசனும் "சந்திரா! தக்கதோர் தலத்தில் திருவெண்டயத்தை எம்மிடம் பெறுவாயாக! அதனை அணிந்து அருணாசலத்தைக் கிரிவலம் வந்து உன் வருத்தம் தீர நல்வழி காண்பாயாக!" என்று அருளினார்.

திருவெண்டயத்தைப் பெறுவதற்காகச் சந்திரன் திங்களூரில் யோக நிலை பூண்டு ஈசனை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். அமுதவனின் தவத்தை மெச்சிய இறைவன் அதிகார நந்தியிடம் தனது திருப்பாதத் திரட்டில் இருந்து திருவெண்டயத்தை எடுத்துச் சந்திரனுக்கு அளித்திடச் செய்தார். சந்திரனும் மிகவும் மகிழ்வுற்று ''நந்தியெம்பிரானே! சிவபெருமான் தம் திருவடியில் கொண்டதை அடியேன் அணிந்திடத் தகுதி உளதா?” எனப் பணிவுடன் கேட்டார். அதற்கு அதிகார நந்தியும், "சந்திரரே! முதலில் இறைவனின் திருவெண்டயத்தைச் சிரசில் தாங்கித் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவீர்களாக! எப்போதும் சிவ நாத பிரம்ம பீஜாட்சரம் ஒலித்துக் கொண்டிருக்கும் உத்தம அணிகலனிது! எங்கு இதன் ஒலியைத் தாங்கள் உணர்கின்றீர்களோ, அந்நேரத்தில், அதே இடத்தில் இருந்து திருவெண்டயத்தை அணிந்திடுக!" என்று விளக்கம் தந்தார்.

சந்திர பகவான் திருஅண்ணாமலையில் கால் தே(தோ)யப் பல கோடிச் சதுர் யுகங்கள் கிரிவலம் வந்தார். இவ்வாறு இடைவிடாது அருணாசலப் புனித பூமியை அவர் கிரிவலம் வருகையில், ஒரு நாள் ...... கிரிவலப் பாதையில் ஸ்ரீகாயத்ரீ தீர்த்தத்திற்கு முன் உள்ள சதுர்முக தரிசனத்தில் அவர் தம் சிரசில் தாங்கி இருந்த திருவெண்டயத்தின் பீஜாட்சர ஒலி சந்திரனுக்குச் செவியின் கண் புலனாயிற்று! சிவபெருமானும் அசரீரியாய் "சந்திரா! திருவெண்டயம் அணியத் தகுதி பெற்றாய்!" என்று அருளாசி வழங்கித் திருவெண்டயத்தைச் சந்திரனுக்கு அணிவித்தார். இதன் பிறகே தம் சிரசில் சந்திரனைச் சூடிட, பிறை சூடிய பெம்மானிடம் சந்திரன் ஒன்றினார்.

எனவே வலது காலில் திருவெண்டயம் அணிந்து திருவெண்டய ஒலி சப்த தியானத்துடன் கிரிவலம் வருகையில் மனம் ஒன்றுதல் சிறப்படைவதால் காரிய சித்திக்கும், அரிய மந்திர சித்திக்கும், உத்தம இறை நிலைகளைப் பெறுவதற்கும் திருவெண்டயந் தரித்த அருணாசல கிரிவலம் பெரிதும் துணை புரியும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வாவிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

புராணங்களில் வேத நெறிகளின்படிப் பரிமளித்த குருகுல வாசமானது, கலியுகத்தில் எப்படிப் பரிணமிக்கும் என்பதை ஆன்மீக வேட்கையுடன், சிஷ்ய பாவத்துடன், குருவை நாடும் சிந்தனையுடன், பக்தி பூர்வத்துடன், நல்ஆர்வத்துடன், வாசித்து அறியும் புத்தக நாட்டத்துடன் இவ்வாறு பல காரண வகைகளில் அறிந்திடத் துடிப்போர் நிறைய உண்டு! கால வர்தமான நிலைகளுக்கு ஏற்ப, அந்தந்த யுகங்களுக்கு உரிய வகையில், குருகுலவாச அமைப்பும், சற்குரு வழங்கும் அனுபூதிகளும் அமைகின்றன.

பல யுகங்களிலும் ஜடாமுடி, கமண்டலத்துடன் பரிணமித்த மஹரிஷிகள், சித்தன் போக்குச் சிவன் போக்காக எவ்வடிவும் பூண்டிடும் சித்தர்கள், யோகிகள், ஞானிகள் யாவரும் கலியுகத்தில் எவ்வடிவிலும் சற்குருவாய்த் தோன்றிடலாம்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பாண்ட், கோட், டை அணிந்து ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ அறுவை சிகிச்சைப் பிரிவில் தக்க நேரத்தில் தோன்றிப் பல வடிவுகளில் பல பக்தர்களைக் காப்பாற்றுகின்ற ஷீர்டி சாய்பாபா, பூண்டிச் சித்தர், கசவனம்பட்டிச் சித்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற சித்தர்கள், மாமுனிகள், யோகிகளின் லீலா அனுபூதிகளும் கலியுகத்தில் நிறைய நடக்கின்றன! விமான ஓட்டியாய், கார் டிரைவராய் யூனிபாரம் அணிந்து காக்கின்ற மஹரிஷிகளும், சற்குருமார்களும் இன்றும் உண்டு.

எனவே கலியுக குருகுலவாச அனுபூதிகள் எவ்வாறு பூத்துப் பரிமளிக்கும் என்பதை உணர்த்துவதே அடிமை கண்ட ஆனந்தத் தொடரில் ஜனிக்கின்ற பள்ளிச் சிறுவனாம் வெங்கடராமன், பரம்பொருளின் இறைத் தூதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசரிடம் புனைந்து கொண்ட குருகுலவாச அனுபூதிகள் யாவும்! கலியுக மனித பாவனை இலக்கணத்தில் ஊறிய மகத்தான நடைமுறை குருகுல சம்பவங்கள்! கலியுக மனித உலகிற்கென இறைத் தூதுவராம் சித்த சற்குருவால் அருளப்படுகின்ற அருள்வளம் கொழிக்கும் அனுபூதிகளிவை!

சார புஷ்பத்தின் சாரமே “மின்சாரம்”!

“கரண்ட்டே வராத அந்தப் பழைய கோயில்ல நீ plug pointல் கை வச்சதுமே லைட் எரிஞ்சுச்சே...! அதைப் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலியே, வாத்யாரே!”

எப்போதோ நடந்த சம்பவத்தை சற்றே அசை போட்டுச் சிறுவன் கிண்டிக் கிளறியபோது பெரியவர் பெரிதாய்ச் சிரித்திட்டார்!

“சித்தர்கள் நாங்கள் எப்பவுமே action replay போடறதே கிடையாதேடா! நாங்க சொல்றதை, செய்யறதை நம்பறதுல தாண்டா நாங்க தெய்வீக டெஸ்ட் வைப்போம்! சித்தர்களோட பாதைல ஆழ்ந்த நம்பிக்கைதாண்டா மின்சாரம்! ஒண்ணு தெரிஞ்சுக்க... நீ பார்க்கற இந்த மின்சாரம் கொஞ்ச வருஷத்துல இந்த உலகம் பூரா பரவப் போற கம்ப்யூடர், சமையல் காஸ் எல்லாம் விஞ்ஞானத்தோட புதுக் கண்டுபிடிப்புன்னு நினைச்சுக்காதே ராஜா! ராக்கெட், அணுகுண்டு, கம்ப்யூட்டர், ஹெலிக்காப்டா் எல்லாமே உங்களுக்குத் தாண்டா புதுசு! நாங்க இதை விட advanced கலியுகத்தை எல்லாம் பார்த்துக்கிட்டு வர்றோம்டா! எங்களுக்கு இப்ப இந்த உலகத்துல இருக்கறது எல்லாமே outmoded தான்! பட்டப் பழசுதான்! ஏன்னா எல்லாமே கடந்த கலியுகங்களில் வந்து போய் நாங்கள் பார்த்துப் பார்த்துப் புளிச்சுப் போனதுதான் இப்ப இந்த பூமியில புதுக் கண்டுபிடிப்பா வருது! நீயும் நானும் சேர்ந்தே இதையெல்லாம் ஆயிரம் கலியுகங்கள்ல பார்த்தாச்சு! நானும் கோடி முறை பூலோகத்துக்கு சற்குருவா வந்து வந்து திருந்தாத, திருப்திப்படாத மனுஷங்களைப் பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போயிட்டேன். போதும்பா இது பூமி வாழ்வுன்னு எங்க குரு கிட்டச் சொல்லி இனிமே பூலோகப் பயணமே வேண்டாம்னு சொல்லிட்டேன்....!”

சிறுவன் அவரை வேதனையுடன் வெகு விநோதமாகப் பார்த்தான்!

"கர்ம வினைகளில் புரண்டு கோடிக் கணக்கான பிறவிகளில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களிடையே பூலோகத்திற்கு வருவதாக இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்பவர் எத்தகைய பிரம்மாண்டமான தெய்வீக அருளைப் பூண்டிருக்க வேண்டும்?"

சிறுவன் இதனை எண்ணி எண்ணி, வியந்து வியந்து களைப்படைந்தும் விட்டான்!

புண்ணியமே வீட்டு வசதிகள் யாவும்!

“ஒண்ணு தெரிஞ்சுக்கடா! ஒவ்வொருத்தர் வீட்டுல லைட் எரியறது. ரேடியோ பாடறது, டீவி ஓடறது... எல்லாமே அவங்கவங்க புண்ய சக்தியை வச்சுத்தான்! அனல் மின்சாரம், அணு மின்சாரம் எல்லாம் ஒரு விஞ்ஞானக் கூத்து!  உண்மையிலேயே ஒளி உலகின் "சார புஷ்பம்" மூலமாத்தான் நமக்கு மின்சாரமே கிடைக்குது! இந்த தெய்வீக ரகசியத்தை அறிஞ்ச நாங்க பூமிக்கு வந்து இங்கே இருந்துக் கிட்டே அந்த தேவ லோகப் புஷ்பத்தைச் சூட்சுமமாக் கொஞ்சம் தொட்டாப் போதும் அங்கே மின்சார சக்தி உடனே வந்துடும்...”

பெரியவர் விவரித்துக் கொண்டே சென்றார். அவன் வேறு சிந்தனைத் திரைக்கு ஓடி விட்டதால் அவர் அதன்பிறகு கொட்டிய ஆன்மீக ரகசியங்களை அவன் அறியவில்லை! அல்லது சிந்தனையைத் திருப்பி அவர்தாம் அறிய விடவில்லையோ.... யாரறிவர் பராபரமே!

பெரியவர் நறுக்கென்று குட்டிடவே... தன் நிலைக்கு வந்த சிறுவன் "கவனிப்பு" இல்லாமையால் தன் பெரும் பிழை மூலம் இவ்வுலகம் "இழந்த" குருவாய் மொழிப் பொக்கிஷங்களை எண்ணி வருந்தினான்.

“எங்க சித்தர்கள் பாரம்பரிய தெய்வீகத்துல sorryங்கற வாரத்தையே கிடையாதப்பனே! ஒண்ணை விட்டா, விட்டதுதான்! திருப்பிப் புடிக்க முடியாது!”

பெரியவரின் wonted குருவாய் மொழிகள்! மிகவும் வேத சத்தியமானவை, சாசுவதமானவை! Very powerful Siddha verses indeed, impregnated with absolute divinity!

கண்டங் கத்தரி களையும் கண்டங்கள்!

திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய், “ஏன் வாத்யாரே! ஒரு நாளைக்கு தர்ம சேவையா ஒரு ஏழையோட பிணத்தை சுடுகாட்டுல எரிக்க உதவி செஞ்சப்போ மறுநாள் நீ பால் வார்க்கப் போகும்போது கையில கண்டங் கத்திரினால மோதிரம் மாதிரி போட்டுக் கிட்டியே எதுக்கு?” என்று அப்பாவித் தனமாகச் சிறுவன் கேட்டிட,

“என்னடா இது, காலா காலம் தெரியாம ஏதேதோ கேள்வி கேட்டுக்கிட்டு! ...கலியுகத்துல எல்லாருக்கும் கேள்வி தாண்டா கேட்கத் தெரியும்! அதுவும் நான் பதில் கொடுத்துக்கிட்டே இருந்தா, நீ கேள்வி மழையாய்க் கொட்டிக்கிட்டே இருப்பியே! இப்ப, அந்த கண்டங் கத்தரி மூலிகை ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டு நீ என்னதான் பணணப் போற?”

சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்!

“வெறும் கேள்வி கேட்டு என்னடா பிரயோஜனம்? பதிலைத் தெரிஞ்சுக்கிட்டா ஏதாவது usefulஆ பண்ணனும்! கண்டங் கத்தரியை விரல்ல மாட்டிக்கிட்டுத் தாண்டா மயானத்துல பால்ல எலும்பைக் கரைக்கணும! எலும்பு விஷத்துக்கு அதுதாண்டா மாமருந்து! எப்படி எலும்பு பஸ்மமாகுதுன்னு பார்த்துச் செத்துவங்களோட ஆன்மீக நிலையைத் தெரிஞ்சுக்கலாம்! சரியா எலும்பு வேகலைன்னா எந்தப் பகுதி வேகலையோ அதுனால நிறைய பாவம் பண்ணி இருக்காங்கன்னு அர்த்தம்! நெருப்பு எரிச்ச அஸ்தியோட முழு வடிவத்தை வச்சே அந்த ஆளோட கர்ம வினை பாக்கியையும், பரிகாரத்தையும் நல்லா புரிஞ்சுக்கலாம்! இதுக்கெல்லாம் கண்டங் கத்தரி மூலிகை ஞானம்தாண்டா உதவி செய்யும்.”

இவர்தாமே ஆன்மீக பொக்கிஷம்!

“இதுனாலத்தான் தன்வந்த்ரீ ஹோமம், மிருத்யுஞ்ஜயர் ஹோமத்தை ஆயில்ய நட்சத்திரத்துல குறித்த ஹோரை லக்னத்துல கண்டங் கத்திரியோட ஒரு அபூர்வமான சமூலம் சேர்த்து ஆஹூதி கொடுத்து ஹோமம் செஞ்சா, சாகப்போறவன் கூட எழுந்திருச்சு நடமாடுவான்! ஆனா இப்படி மூலிகை சக்தியினால பிழைச்சு வெறுமனே நடமாடி என்ன பிரயோஜனம்? செத்துப் பொழைச்சவன் மனம் திருந்தி அதுக்கப்புறமாவது உருப்படியா, பலருக்கும் பயன்படும்படி வாழணும்! இதுவும் கண்டங் கத்தரி மூலிகை ஞான ரகசியம்தான்!”

"எப்படி இவரால் எதைக் கேட்டாலும் இவ்வளவு தெய்வீக ஐஸ்வர்ய விஷயங்களைக் கொட்ட முடிகின்றது? பிரபஞ்சம் பூராவுக்குமே ஆன்மீகப் பொக்கிஷமா இருக்கற இவரே நமக்குக் குருவாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்யம்!"

அவன் எண்ணியதை எண்ணியாங்கு உணர்ந்த அவர் உடனேயே, “இதப் பாருடா! எனக்குத் தமிழ்ல நாலு வார்த்தை கூட ஒழுங்கா, கோர்வையா பேசத் தெரியாது, எழுதப் படிக்கவும் தெரியாது! ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயமாத் தெரியும்! குரு பக்தி வந்துடிச்சுன்னா எதிர்காலத்துல அவரே எல்லா ஞானத்தையும் கொடுப்பார்னு நீ புரிஞ்சுக்க! இதையெல்லாம் நீ எதிர்காலத்துல எழுதி நிறையப் பேருக்குச் சொல்லியாகணும்!”

“கண்டங் கத்தரி மூலிகைக்கு விஷத்தை பஸ்மமாக்குற சக்தி உண்டு. கர்ம தோஷங்களை நீக்கற powerful மூலிகை இது! மயானத்துல சஞ்சயனம்கற பால் ஊத்தற சடங்குல கண்டங் கத்தரில நூல் கட்டி மோதிரமாப் போட்டுக்கிட்டு எலும்பை எடுத்துப் பாலோட சேர்க்கணும்! இதெல்லாம் மூட நம்பிக்கை கிடையாதுடா! மெய்ஞ்ஞான விஞ்ஞானம் பவித்ரமான மூலிகையான கண்டங் கத்தரிதான் தன்வந்த்ரீ ஹோமத்துல ரொம்ப முக்கியமான மூலிகை ஆஹுதி.....!” என்று நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வந்த பெரியவர்...

திடீரென்று மௌனமானார்! அவர் மெளனத்தைக் கடைபிடிக்கிறார் என்றாலே இப்போதெல்லாம் சிறுவன் உஷாராகி விடுவான்! ஏனென்றால் மெளனத்தின் பின்னணியில் நிறைய இறைத் திருவிளையாடல்கள் நிகழ்வதைக் கண்டிருக்கிறான் அல்லவா.....!

அவருடைய மௌன‌த்தைத்தானே ஆராய்வதாக எண்ணிய சிறுவன் அப்படியே சிறிது அயர்ந்து விடவே... பெரியவர் மாயமாய் மறைந்து விட்டார்! மீண்டும் விழிப்பு வந்த போது மறுபடியும் சிறுவன் spiritual treasureஐச் சற்றே இழந்ததாய் உணர்ந்தான்! What to do?

God vs Godliness!

“ஏன் வாத்யாரே! நீ கடவுளோட நேரே பேசுவியா?”

“கேள்வியே தப்புடா! கடவுள்தான் பேசுவார்! நம்மைப் பேசவும் வைப்பார்! ...ம்...ம்...ம் நல்லாப் பேசுவேனே!”

“எப்படி? தமிழ்ல தான் பேசுவியா?”

“ஆமாம் கடவுள் நமக்குத் தெரிஞ்ச பாஷையில நல்லாவே பேசுவாரு!”

“அப்ப அவர்கிட்ட முக்தி, மோட்சம் பத்தி பேசுவியா, இல்லாட்டி அவரும் சாதாரண மனுஷங்க மாதிரி பேசுவாரா?”

“ஒண்ணு தெரிஞ்சுக்கடா! இந்த மனுஷப் பிறவி எடுத்ததே கடவுளோட லீலைகளை மனுஷ ரூபத்தில் ரசிச்சு, மனுஷ மொழியிலேயே பேசி, ஆனந்தமா இறைவனை அனுபவிக்கத் தாண்டா இந்த மனிதப் பிறவி! நீயும் நானும் இப்ப பேசற மாதிரி கடவுள் சாதாரண dialogue பேசுவாரு! ஒளவையார், நம்ப பழைய ராஜாக்கள் இப்படித்தான் கடவுள்கிட்ட நேருக்கு நேரா பேசினாங்க.”

“எனக்கு அந்த மாதிரி ஒரு வாட்டி கடவுள் கிட்ட நேரேயே பேசிக் காமியேன்!”

பெரியவர் மிகவும் சந்தோஷம் கொண்டவராய் சிறுவனைக் கூட்டிக்கொண்டு சந்து பொந்தெல்லாம் கடந்து ஒரு கோயிலருகே நின்றார். மிகவும் பழமையான கோயில்! அவ்வளவாக பக்தர்கள் நடமாட்டமில்லை! உள்ளே நுழைந்த பெரியவர் அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டு மூலவரிடம் பேச ஆரம்பித்தார்!

சிறுவனுக்கு நடப்பது கனவா, நனவா என்றே புரியவில்லை! ஏதோ இரண்டு போ் கோயிலில் பேசிக் கொள்வது போல் அவனுக்கு தெய்வீகமய உரையாடல் நன்றாகவே கேட்டது! கண்கள் விரிய விரிய... அவன் திகைப்பில் ஆழ்ந்து விட்டான்.

கண்டவர் விண்டிலர், உண்டு கண்டவர் உண்டே!

திடீரென்று பெரியவர் வெளியில் வந்தார்.

“டேய் சுவாமிக்கு ரொம்பவே பசிக்குதாம்! இப்ப லட்டு வேணுமாம்! அவருக்கு லட்டு ரொம்பப் புடிக்குமாம்!'' என்று சொல்லிக் கொண்டே வந்த பெரியவர் விடுவிடு வென்று வெளியே சென்று ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்தார்!

“ஏதாச்சும் திருவிழா, பண்டிகைன்னு நடத்தினாத்தானே சுவாமிக்கு நெறைய வகையில நைவேத்யம் கிடைக்கும்! தினசரி நைவேத்தியமே சரியா இல்லாம கடவுளுக்கு வெறும் சாதமே படைச்சா உலகத்துல எப்படிடா உணவு விருத்தியாகும்... கடவுள் இதையெல்லாம் ஏத்துப்பாரா, சாப்பிடுவாரான்று சில பேர்கள் கேட்பார்கள்! கடவுள் மட்டும் தனக்குப் படைக்கறதை எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சா உலகத்துல சுவாமிக்கு நைவேத்யம் செய்யறதையே நிறுத்திடுவாங்க! எதையும் எதிர்பார்க்காமக் கொடுத்தா குசேலரோட அவல் பிரசாதம் மாதிரி, சுவாமியும் சாப்பிட்டு அவரே நமக்கு மிச்சப் பிரசாதமும் கொடுப்பாரு!”

பெரியவர் அர்த்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ சுலோகங்கள் ஓதி, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடி நைவேத்ய வட்டிலைத் திறந்தார்.

சிறுவன் மகத்ததான இறைலீலையைக் காணத் தயாரானான்!

டக்கென்று துணித் திரை போடப்பட்டது!

பெரியவருடைய இறை உரையாடல் மட்டும் சிறுவனுக்கு நன்கு காதில் விழுந்தது! திரையின் ஊடே தீபாராதனை ஒளி தெரிந்திடவே, சிறுவன் சுறுசுறுப்புடன் எழுந்தான்! திரை அகன்றது!

எதிரில் பெரியவர் நெக்குருகி நின்றிட நைவேத்ய வட்டில் காலியாக இருந்தது!

“ஒண்ணு புரிஞ்சுக்கடா... சுவாமிக்கு ஒரு வேளைக்கு ஒரு நாலு லட்டுகூட நைவேத்யம் பண்ணினாப் போதும் அன்னிக்குப் பொழுதுக்கு உலகம் புல்லா 40 லட்சம் லட்டு ஜனங்களுக்குப் போய்ச் சேரும்! இது தாண்டா சுவாமி சாப்பிடறதுக்கும் மனுஷன் சாப்பிடறதுக்கும் உள்ள வித்யாசம்!

சிறுவன் பெரியவருடன் வெளியே வந்தவுடன்….. ஒரு கார் வந்து நின்றது!

பளபள சட்டையுடன் இறங்கிய ஒருவர், “இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்.... பெருமாள்தான் குலதெய்வம்! ஒரு ஆயிரம் லட்டு தானமாக் கொடுக்கணும்........ எங்க கொடுக்கறது?” என்று சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க ...

பெரியவர் பீடு நடைபோட்டுக் கொண்டிருந்தார்! சிறுவன் ஆச்சரியத்துடன் அவரைத் தொடர்ந்தான்! சொன்னால் நம்ப மாட்டீர்கள் ...அதன் பிறகு அவனாலேயே நம்ப முடியாத உணவு வகைகளை எல்லாம் அவர் கடவுளுக்குப் படைத்து “வட்டில் காலியான” அற்புதங்களை அவன் கண்டு ரசித்து ஆனந்தித்துள்ளான்!

Eternal continuity!

“ஒண்ணைப் புரிஞ்சக்கடா? இதெல்லாம் miracles கிடையாது! அற்புதங்கள்னு நினைச்சு மலைச்சு நிக்காதே! துவாபர யுகத்துல நீயும் நானும் கிருஷ்ணனோட கூட இருந்து அவருக்கு நிறைய வெண்ணெய் கொடுத்த சந்தோஷம் நமக்கு கிடைச்சது! அதோட Continuationதான் இது!”

ஒரு மகத்தான சித்தரின் கலியுக வடிவுதானே இவ்வாறு powerful ஆக உரைக்க வல்லதாம்!

“Continuation” என்ற அந்த வார்த்தையில் கோடி அர்த்தங்கள் "லட்ட"' முத்துக்களைப் போல் பதிந்திருப்பதைச் சிறுவன் உணர்ந்தான். நீங்களும்தானே! அதில்தானே குருகுல வாச அனுபூதியின் ஆனந்தப் பிரகாசம் திகட்டாத தெய்வீக லட்டாய் “இனித்துக்” கொண்டிருக்கிறது!

ஊட்டத்தூர்

ஊட்டத்தூர் - ஸ்ரீ கால பைரவ மூர்த்தி மகிமை

ஊட்டத்தூர் ஸ்ரீபைரவ மூர்த்தி ஆதிசிவனின் அதியற்புத அம்சமாவார். ஸ்ரீஸ்வரண பைரவர், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீவடுக பைரவர், ஸ்ரீஅஷ்டாங்க பைரவர் என கால பைரவ மூர்த்திகளில் பல ரூபங்கள் உண்டு. காலத்தைப் படைத்து, நிர்ணயித்து, காலாதி காலனாய், காலத்தை வென்றவனாய் விளங்குபவரே ஆதிசிவனின் அம்சமான ஸ்ரீகால பைரவ மூர்த்தியாவார். கலியுகத்தில் ஸ்ரீகால பைரவ மூர்த்தி வழிபாடு, மிகவும் முக்கிய இடம்பெறக் காரணமே, மானிட உலகமானது தன் ஆயுட்காலத்தை முறையாகப் பயன்படுத்தாமையே! சோம்பேறித்தனம், பயனற்ற கேளிக்கைகள், முறையற்ற காமம், பாவச் செயல்கள், வீணே பொழுது போக்குதல், அரட்டை, பயனற்ற டீ.வி. நிகழ்ச்சிகள் போன்ற இவ்விதமாக நேரத்தைக் கழிப்பதால் பயனுள்ள இம்மானுடப்பிறவியில் இறைவனை நோக்கிக் காலத்தைப் பயன்படுத்துவோர் மிக மிக அரிது.

ஸ்ரீபஞ்சநதன நடராஜப் பெருமான்
ஊட்டத்தூர்

புண்ய சக்திக் கழிப்பே இரவு நேரப் பயணம்!

ஆலயங்களிலும் பைரவ சன்னதியில் ஏதோ சல்யூட் அடிப்பதுபோல் எவ்வித சிரத்தையுமின்றி, வணங்கும் வழக்கமே நிலவுகிறது. மேலும் கலியுகத்தில் இரவுப் பயணங்கள் பெருகி விட்டதால், அனைத்து மனிதர்களுமே தூக்கத்துடன் தூக்கமாக பயணத்தைக் கழித்து விடுவோமென்று இரவிலேயே அனைத்துவிதப் பயணங்களையும் மேற்கொள்வதால், தீவினை சக்தி நிறைந்த இரவு நேரத்தில் தன்னுடைய புண்ய சக்திகளைக் கழித்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றான். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க இயலாவிடில், ஸ்ரீகால பைரவரை வணங்கிப் பயணம் துவக்கப்படவேண்டும்.

உறக்கத்தை எதிர்கொள்ளும் உன்னத வழி!

தினந்தோறும் இரவில் ஸ்ரீகால பைரவ மூர்த்தியை வணங்கி, விழிப்புணர்வுடன் கூடிய இப்பகல் பொழுதை நன்முறையில் கழிக்காமைக்குப் பிராயச்சித்தம் வேண்டியும், விழிப்பற்ற உறக்க நிலையில் கழியும் இரவுப்பொழுது நன்முறையில் சீராகச் செல்லவும் வேண்டித் துதிக்க வேண்டும். தூக்கம் வருகின்றது என்று உடனே தூங்கிவிடக் கூடாது அல்லது தூக்கம் வரும் வரை நாவல்களைப் படித்து, டிவியைப் பார்த்துப் பொழுதைக் கழிக்காது, ஸ்ரீகால பைரவத் துதிகளுடன், ராத்திரி ஸுக்த வழிபாட்டுடன் உறக்க தேவதையை வரவேற்க வேண்டும். மரணத்தின் ஒத்திகையே உறக்கம் என்று சித்தர் வாசகமும் உரைப்பதால் உறக்கத்திலுள்ள தெய்வீக ரகசியங்களை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். இதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு மிகவும் இன்றியமையாததாகும்.

“காலன்” நேர கால பைரவ பூஜை!

திருச்சி அருகேயுள்ள ஊட்டத்தூர் பல அற்புத மூர்த்திகளைக் கொண்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ பைரவ மூர்த்தி வடுக பைரவ மூர்த்தி அம்சங்கள் கொண்டவர் ஆவார். ஒவ்வொரு மனிதனும் இரவில் பலவித குற்றங்கள், பாவச் செயல்களைப் புரிவதால், இரவை தெய்வீகமாகக் கழிப்பது மட்டுமன்றி இரவில் செய்யக் கூடாத செயல்களைச் செய்து பாவ வினைகளைக் ௯ட்டிக் கொண்டதற்கானப் பிராயச்சித்தம் பெற உதவுவதே ஊட்டத்தூர் ஸ்ரீபைரவர் வழிபாடாகும்.

ஊட்டத்தூர்

காலன் நேர அட்டவணை

கிழமைகள்        காலன் பகல் (முதல்/வரை)
ஞாயிறு                    6-7:30
திங்கள்                    3-4:30
செவ்வாய்             1:30-3
புதன்                        12-1:30
வியாழன்               10:30-12
வெள்ளி                   9-10:30
சனி                           7:30-9

இராகுகாலம், எமகண்டம் குளிகன் போல, காலன் என்ற ஒரு நேரப் பகுப்பும் உண்டு. இராகு காலம் போல குறித்த ஒன்றரை மணி நேரத்திற்கு இக்காலன் நேரம் அமைகிறது. மரண பயம் தீரவும், ஸ்ரீமிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் அருளைப்பெறவும் இக்காலன் நேரத்தில் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவரை வழிபடுதல் மிகவும் சிறப்பானதாகும். மரணத்திற்கு அஞ்சி வாழ்வோர், கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர், இருதய நோயால் அவதியுறுவோர் காலன் நேரத்தில் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவருக்குச் சந்தனக் காப்பிட்டு இதில் மாதுளை முத்துக்களைப் பதித்து, ஸ்ரீகாலாஷ்டகத்தை ஓதியும், கால பைரவருக்குப் ப்ரீதியான முழு முந்திரியால் அர்ச்சித்தும், முழு முந்திரி கலந்த உணவை தானமளித்தலாலும் மேற்கண்ட குறைகளுக்குத் தக்க நிவர்த்தி கிட்டும்.

காலன் நேரம் பற்றிய அட்டவணையை இங்கு அளிக்கின்றோம். பொதுவாக அடிக்கடி இரவுப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியோர் இரவு நேரத்தில் அலுவலகப் பணிகளைப் புரிவோர், ஊட்டத்தூர் ஸ்ரீபைவரை அடிக்கடி தரிசித்து வரவேண்டும். ஏனென்றால் இரவில் தீய சக்திகள் பெருக்கெடுப்பதாலும் அவற்றினின்று தம்மைத் தற்காத்துக் கொள்ளும் புண்ய சக்தியயைப் பெற்றிருப்போர் ஒரு சிலரே என்பதாலும், ஸ்ரீகால பைரவருக்குரித்தான அஷ்டமித் திதியில் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவருக்கு ஆராதனை செய்து வழிபடுதலால் இரவு நேரத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விபத்துக்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

பந்தணைநல்லூர் விஷ்ணுபதி

பந்தணை நல்லூரில்‌ பவித்ரமான விஷ்ணுபதி புண்ய கால வைபவம்! (13-02-2002) கும்பகோணத்தில்‌ இருந்து 24 கி.மீ தொலைவில்‌ திருப்பனந்தாள்‌ அருகே உள்ள பாடல்‌ பெற்ற தலமான பந்தணை நல்லூர்‌ சிவாலய வளாகத்தில்‌ ஸ்ரீபரிமளவல்லித்‌ தாயார்‌ சமேத ஸ்ரீஆதிகேசவப்‌ பெருமாள்‌ ஆலயம்‌ அமைந்திருப்பது நமக்குப்‌ பெரும்‌ பாக்யமேயாம்! வ்ருஷ ஆண்டு மாசி மாத (13-2-2002) விஷ்ணுபதிப்‌ புண்ய கால வைபவத்‌ தலமாக பந்தணை நல்லூரைச்‌ சித்தர்கள்‌ அருள்கின்றனர்‌.

* கொடூரமாய்‌ நடத்துகின்ற கணவன்‌, மனைவி, மற்றும்‌ மாமனார்‌, மாமியார்களைத்‌ திருத்தி அவர்தம்‌ கொடுமையினின்று மீண்டு நல்வாழ்வு பெற உதவும்‌ உத்தம விஷ்ணுபதி புண்ய காலம்!

பந்தணைநல்லூர்

* அலுவலகம்‌, வியாபாரம்‌ காரணமாகப்‌ பல இடங்களுக்குச்‌ சென்று நிலையற்ற வாழ்வு கொண்டுள்ளோர்‌ நன்முறையில்‌ ஓரிடத்தில்‌ நிலையாக வாழ்க்கையை அமைத்துக்‌ குடும்பத்துடன்‌ சேர்ந்து வாழ உதவும்‌ விஷ்ணுபதி புண்ய காலம்‌!

* தகாத வழிகளில்‌ சொத்து, பணம்‌, பதவி உயர்வு, சந்ததி போன்றவற்றை அடைந்தோர்‌ இவற்றால்‌ பாதிக்கப்பட்டோர்க்குத்‌ தக்க உதவிகளுடன்‌ கூடிய பரிகாரம்‌ செய்திடவும்‌ இவற்றால்‌ விளையும்‌ தீவினைகளிலிருந்து நன்முறையில்‌ தற்காத்துக்‌ கொள்ளவும் துணை புரியும்‌ அரிய விஷ்ணுபதிப்‌ புண்ய காலம்‌.

* கர்ம வினைகளின்‌ பிரதிபலிப்பாக அமையும்‌ தசா, புக்திகளின்‌ பலன்களாக ஏற்படும்‌ பல தாமதங்கள்‌, நஷ்டங்கள்‌, துன்பங்களில்‌ இருந்து தற்காத்துக்‌ கொள்ளவும்‌ இவற்றுக்குத்‌ தீர்வு பெறவும்‌ உதவும் "கோளிலித் தல" (நவகிரகங்கள்‌ ஓரே திசையை நோக்குதல்‌) விஷ்ணுபதி புண்ய காலம்‌.

பந்தணை நல்லூரில்‌ ஸ்ரீஆதிகேசவ விஷ்ணுபதி புண்யகால பூஜை!

கும்பகோணம்‌ அருகே பந்தணை நல்லூரில்‌ உள்ள ஸ்ரீபசுபதீஸ்வர சிவ ஆலயத்தினுள்‌ தனிக்‌ கோயில்‌ கொண்டு அருள்பாலிக்கும்‌ பரந்தாமனாம்‌ ஸ்ரீ‌ஆதிகேசவப்‌ பெருமாள்‌ ஆலயமானது சிவனும்‌, விஷ்ணுவும்‌ ஒன்றான பரமாத்ம ஸ்வரூபம்‌ என்பதை உணர்த்திடுவதாம்‌! பணக்‌ கஷ்டம்‌, மனக்‌ கஷ்டம்‌, வியாபார நஷ்டத்தைத்‌ தீர்க்க வல்ல ஏகாதசி, துவாதசி விரதங்களைத்‌ துவங்கி, முடிப்பதற்கான உத்தமத்‌ தலம்‌!

அப்பர், சம்பந்தர்‌ பெருமான்‌ இவ்விருவரின்‌ பாடல்‌ பெற்ற சிவத்தலம்‌. நடப்பு விருஷ ஆண்டின்‌, மாசி மாதத்திற்குரிய விஷ்ணுபதிப்‌ புண்ய கால பூஜைக்கான பெருமாள்‌ ஆலயமாக பந்தணை நல்லூர்‌ ஸ்ரீபரிமளவல்லித்‌ தாயார்‌ சமேத ஸ்ரீஆதிகேசவப்‌ பெருமாள்‌ ஆலயம்‌ சிறப்புடன் விளங்குகின்றது.

ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதி நாதர்‌ அருள்பாலிக்கின்ற தேவாரப்‌ பாடல்‌ பெற்றத்‌ தலமான இச்சிவாலயத்தின்‌ தல புராணங்களுடன்‌ இணைந்ததாகவும்‌ ஸ்ரீஆதிகேசவப்‌ பெருமாள்‌ ஆலயத்தின்‌ தல புராணமும்‌ சிறக்கின்றது. சிவ, வைணவ பேதமின்றி மனித குலம்‌ பரம்பொருளைத்‌ துய்ப்பதற்குப்‌ பெரும்‌ துணை புரியும்‌ உத்தமத்‌ திருத்தலம்‌ இதுவேயாம்‌. சைவ, வைணவ ஒற்றுமையைத்‌ துவேஷிப்பவர்களுக்கு, துவேஷத்தை நிவர்த்தி செய்து சிவனே பரந்தாமன்‌, பெருமாளே சிவன்‌ என்பதை உணர்ந்தால்தான்‌ பரம்பொருளின்‌ திருவடி கிட்டும்‌ என்பதையும்‌ நிலை நிறுத்தும்‌ சிவ ஐக்ய வைணவத்‌ திருத்தலம்‌!

வேதசக்தி யாவர்க்குமே..........!

ஜாதி, மத, இன, குல பேதமின்றி மனிதர்கள், விலங்குகள்‌ எனும்‌ பேதமும்‌ யாதுமின்றி வேதங்கள் யாவுமே அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தானவையே! மகரிஷிகள்‌ பூலோகத்திற்காக நான்கு வேதங்களைப்‌ பகுத்துத் தந்தாலும் வேதங்களின்‌ எண்ணிக்கை அளவிலாததாம்! விண்வெளியிலும்‌, உத்தம  தெய்வீக லோகங்களிலும்‌ மனிதப்‌ பகுத்தறிவு கொண்டு கணக்கிட இயலா வகையில்‌ வேத வகைகள் நிறைந்துள்ளன. எனவே வேத சக்தியால்தான் இப்பிரபஞ்சமே இயங்குகின்றது.

பந்தணைநல்லூர்

பூமியைத்‌ தாங்குகின்ற ஆதிசேஷன்‌, பூமியின் பாரத்தைத்‌ தாங்குவதற்குத்‌ தேவையான தெய்வ வலிமையை வேதங்களின்‌ மூலமே பெறுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சுவாசத்திலும்‌ வேத காரண சக்தியை உள்ளிழுத்தே வேத காரணீய சக்தியாக வெளி விடுகின்றோம்‌. எனவே இப்பிரபஞ்சத்தில்‌ எங்கும்‌ நிறைந்திருப்பதும்‌ வேத மகா இறைச்‌ சக்தியே! ஆனால்‌ ஒளிமயமான இவ்வேத சக்தியை உணர விடாது தீய சக்திகள்‌ மறைத்துக்‌ கொண்டுள்ளன. அதாவது கலியுகத்தில்‌ மனிதனுக்கு என விசேஷமாக அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவால்‌ தாமாக உணரும்படியே வேத சக்திகள்‌ அமைந்துள்ளன!

மேலும்‌ மனிதனுக்கு இறைப் பரிசாக அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவானது கலியுகத்தில்தான் மிகுந்த பிரகாசம்‌ கொண்டிருக்கும்‌. ஆனால், இறைவனை உணர மனித குலம்‌ இப்பகுத்தறிவைத்‌ தக்க வழிகளில்‌ பயன்படுத்தினால்தான்‌ பிறப்பு இறப்பற்ற முக்தி, மோட்ச நிலையைப் பெற இயலும்‌.

எப்பகுத்தறிவால்‌ இறைவனை உய்த்துணர வேண்டுமோ, அதைத்‌ தவறான வழிகளில் செலுத்தினால்‌ துன்பங்களும்‌, நோய்களும்‌, மனக் கவலைகளும்‌, பிறவிகளும்‌, சமுதாய வன்முறைகளும்தான் கோடி கோடியாய்ப் பெருகும். வேதத்தை உணரும்‌ பாங்கு மறைந்து வருவதால்‌ துன்பச்‌ சுழல்கள்தாம்‌ கலியுகத்தில்‌ மிகுந்திருக்கும்‌ என்பதால்‌ இறைவனாம்‌ ஸ்ரீபசுபதீஸ்வரர்‌, உமையவள்‌ மூலம்‌ ஒரு திருவிளையாடலைப்‌ புனைந்து பூமிக்கு வேத சக்திகளை நிரவிட விழைந்தார்‌.

அம்பிகையின்‌ வேத யோகப்‌ பந்தாட்டம்‌!

பந்தணை நல்லூர்‌ ஸ்ரீபசுபதீஸ்வரர்‌ தல புராணத்தில்‌ அம்பிகை வேதங்களைப்‌ பந்தாக்கி விளையாடிய ஓர்‌ அற்புதப்‌ புராண அனுபூதி விளக்கமுண்டு. பந்தாடுதல்‌ என்பது நாம்‌ நினைப்பது போல கால்‌ பந்து, கூடைப்‌ பந்துபோல வெறுமனே பந்தைத்‌ தட்டுவது அல்ல! கண்களுக்கு யோகப்‌ பயிற்சிகள்‌ தருவதே நம்‌ பண்டைய கல்லாட்டம்‌, பாண்டியாட்டம்‌, பந்தாட்டம் போன்றவையாம்! அம்பிகையானவள்‌ வேதங்களைப்‌ பந்தாய்த்‌ திரட்டி நான்கு வேதங்களையும்‌ பந்து போல்‌ ஆடினள் என்றால்‌ என்ன பொருள்‌? அக்காலத்தில்‌ ஆகாசப்‌ புலரி எனும்‌ வகையில்‌ நான்கு வேதக்‌ கருக்களைப்‌ பந்து போல்‌ கோள்களாக்கி மேலும்‌, கீழும்‌ எழுப்பி வேதசக்திகளைப்‌ பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள்‌ என்பதே தெய்வீக விளக்கங்களுள்‌ ஒன்றாம்‌.

பந்தணைநல்லூர் சிவாலயம்

உலகத்தை இயக்கும்‌ அம்பிகையானவள்‌ பூலோகத்திற்குத்‌ தேவையான நான்கு வேத சக்திகளையும்‌ நான்கு கோள்களாக்கி (பந்துகளாக்கி) இடைவிடாமல்‌ தம் திருக்‌ கரங்களால்‌ இயக்கிக்‌ கொண்டிருந்த பாவனையையே "அம்பிகை பந்தாடினாள்" என்று நமக்குப்‌ புரியும்‌ தொனியில்‌ புராணத்தில்‌ எளிமை கருதி விளித்துள்ளனர். பிரபஞ்சத்தையே தாங்கும்‌ கோடானு கோடி மகத்தான வேத சக்திகள்‌ நிறைந்த நான்கு வேதங்களையும்‌ பந்தாக்குதல்‌ என்பது எத்தகைய மாபெரும்‌ இறைத்‌ திருவிளையாடல்‌!

வேத சக்தியை மீட்போம்‌!

கலியுகத்தில்‌ கிட்டத்தட்ட அனைத்து வேதங்களையும்‌ மனித குலம்‌ போஷிக்காமல்‌ விட்டு விட்டதால்‌ கலியுகத்தில்‌ வேத சக்திகள்‌ மிகவும்‌ குறைந்து வருகின்றன. வேத சாரமாக, தமிழ்‌ மாமறையாக தேவாரம்‌, திருவாசகம்‌, திருப்புகழ்‌, திவ்ய பிரபந்தம்‌, திருவருட்பா தோன்றியும்‌ இறைப்‌ பகுத்தறிவுடன்‌ அவற்றை உணர்ந்து ஓதுவார்‌ அரிதே! வேத சக்திகள்‌ மங்கிட மங்கிடத்தான்‌, மனிதன்‌ புகை பிடித்தல்‌, மது, சூது, காமக்‌ கேளிக்கைகள்‌ போன்ற தீய பழக்கங்களுக்கு மயங்கி அடிமையாகின்றான்‌. எனவே கலியுகத்தில்‌ விரைவாக மங்கி வருகின்ற வேத சக்திகளை ஓரளவேனும்‌ நிலைநிறுத்தி ஜீவன்கள்‌ காக்கப்பட வேண்டும்‌ என்பதற்காகவே அம்பிகையானவள்‌ கோடி கோடியாம்‌ சூரியப்‌ பிரகாசம்‌ நிறைந்த வேத சக்திகளை நான்கு பந்துகளாக்கி அவற்றை வானில்‌ தட்டித்‌ தட்டித்‌ தன்‌ உள்ளங்கை விரல்களில்‌ பொழிகின்ற ஓங்காரப்‌ பிரணவ சக்தியுடன்‌ பரவெளியில்‌ நிறைந்துள்ள பரம்பொருட்‌ சக்தியைப்‌ பிணைத்துப்‌ பரவெளியில்‌ தெளித்து வந்திட........

ஸ்ரீசரஸ்வதிதேவி பந்தணைநல்லூர்

வேத கோளங்களைத்‌ தட்டும்போது எழும்‌ பீஜாட்சர சக்தி, மேலே சென்று மகேஸ்வர சக்தியைத்‌ தழுவி வந்திட............

இதனை அம்பிகை தம்‌ மூன்றாம்‌ நேத்திரத்தால்‌ (நெற்றிக்‌ கண்‌) நோக்கும்போது எழுகின்ற பஞ்சாட்சரப்‌ பூரண சக்தி வேத சக்திகளுடன்‌ வான்வெளியை நிறைத்திட......

இவ்வாறு பரவெளியில்‌ வேத சக்தியைப்‌ பரப்பிக்‌ கொண்டுள்ள இறைவியின்‌ திருவிளையாடலையே நாம்‌ “அம்பிகை பந்தாடினாள்‌” என்று தல புராணத்தில்‌ காண்கின்றோம்‌.

வேத பந்தமே சாந்த சந்தம்‌!

இதைத்‌ தவிர அம்பிகை வேதங்களைப் பந்தாக்கி விளையாடினாள்‌ என்பதற்குப்‌ பல தெய்வீக அர்த்தங்களும்‌ உண்டு. எங்கு வேதம் நிறைந்துள்ளதோ அங்கு மகத்தான இறைப் பேரொளி தானே நிறைந்து இருக்கும்‌. மேலும் அம்பிகை நான்கு வேதங்களையும்‌ சூரியனைவிட பிரம்மாண்டமான பந்துகளாக ஆக்கினள்‌ என்றால்‌, அவ்விடத்தில்‌ எத்தகைய வேதப்‌ பிரகாசம்‌, ஞானப் பிரகாசம்‌, ஓங்காரப்‌ பிரகாசம்‌ நிறைந்திருக்கும்‌ என்று நம்மால்‌ பகுத்து உணரத்தான்‌ முடியுமா? இம்மூன்றும்‌ நிறைந்த சிவப்‌ பிரகாசமானது எவ்வாறு பரிணமித்து விளங்கும்‌ என்பதை சற்குருவின்றி நம்மால்‌ உணர இயலாது. இந்த மகத்தான வேதப்‌ பிரகாசத்தைக்‌ கண்டு அதிசயித்த சூரிய பகவான் "இவற்றின்‌ முன்‌ தன்‌ சூரிய ஒளி கடுகினும்‌, அணுவினும்‌ சிறிய பங்காயிற்றே" ௭ன‌ மலைத்தமையால்‌, சூரியன்‌ மறையும்‌ நேரம்‌ சற்றே மாறிடவே, உலகில்‌ நடைபெற வேண்டிய சாயங்‌ காலப்‌ பூஜைகள்‌ சற்றே ஸ்தம்பித்தன.

புராண வரலாற்றை நோக்குங்கால்‌ அம்பிகை வேதங்களைப்‌ பந்தாடியதால்‌, அம்பிகையின் திருச்செயலுக்கு எவ்வித இடையூறும்‌ இழைக்கக் கூடாது என்பதற்காகச்‌ சூரிய பகவான்‌ தன்னுடைய சூரிய அஸ்தமன நேரத்தைத்‌ தள்ளி வைத்தார்‌ என்று வரும்‌. இவ்விளக்கங்கள்‌ அனைத்தும்‌ சத்தியமான பொருள்‌ பொதிந்தவையே! அவரவருடைய தெய்வ நம்பிக்கை, இறைப்‌ பகுத்தறிவு நிலைக்கேற்ப விளக்கங்களும்‌ விரிவு படும்‌! மேலும்‌ இவற்றின்‌ பின்னணியில்‌ அளப்பரிய தெய்வீக இரகசியங்கள்‌ நிறைந்துள்ளன. இவற்றை உணரக்‌ கோடானு கோடி சதுர் யுகங்கள்‌ கூடப்‌ போதாதே!

ஸ்ரீஅன்னபூரணி பந்தணைநல்லூர்

இறைவனே மீட்டுத் தந்த வேத சக்தி!

பூலோகத்தில் வேத சக்திகள் மிகவும் மங்கியமையால்‌, பரிபூரண வேத சக்திகள்‌ நிறைந்த தெய்வ அவதார மூர்த்தியைப்‌ பூமியில்‌ உலா வரச்‌ செய்தால்தான்‌ பூலோகமெங்கும்‌ வேத சக்திகள்‌ ஓரளவேனும்‌ நிலைக்கும்‌ என்பதற்காகவே சிவபெருமான் ஒரு திருவிளையாடலைப்‌ புனைந்திட்டார்‌! என்னவாம்‌ அது?

நான்கு வேதங்களையும்‌ கோளப்‌ பந்துகளாக்கி யோகமாய்‌ ஆடிக்‌ கொண்டிருந்த அம்பிகை.... சூரிய அயன மாற்றத்தால்‌ சினமுற்று நேரில்‌ வந்த சிவபெருமானைக்‌ கண்டு திகைத்து நின்றிடவே அந்நான்கு பந்துகளும்‌ அப்படியே வானில்‌ அந்தரங்கத்தில்‌ ஸ்தம்பித்து விட்டன.

சிவ பாதமே வேதப்‌ பிரவாகம்‌!

சிவபெருமானின்‌ திருப்பாதங்களில்தாமே அனைத்து வேதங்களும்‌ உறைகின்றன. எனவே தம்‌ திருப்பாதங்களால்‌, அந்நான்கு வேதக்‌ கோளங்களையும்‌ த்ரிவிக்ரமர்‌ போல ஈஸ்வரன்‌ உயர்த்திடவே அங்கு நான்கு வேத சக்திகளும்‌ ஒன்றாகி, பூலோகத்தில்‌ பிரம்மாண்டமான ஒரு வேத கோளமாய்‌ பூமியை வந்தடைந்தது. இதனையே புராண விளக்கத்தில் "சிவபெருமான்‌ சினத்தால்‌, பந்தை உதைத்திட அது பூலோகத்தில்‌ வந்து விழுந்தது" என்று சொல்வர்‌.

பிரபஞ்சத்தின்‌ வடிவாய்‌ உள்ள பரம்பொருளுக்கு சிரசு ஏது? பாதம்‌ ஏது? அவர்‌ பாதம்‌ பட்டாலே பெரும்‌ பாக்யம்‌ என்றால்‌, உதைத்தால்‌ என்னே தெய்வ பாக்யம்? எனவே மனிதனின்‌ குறுகிய அறிவிற்கு ஏற்பவே சிவபுராண விளக்கங்கள்‌ நடைமொழி வார்த்தைகளாக அளிக்கப்படுகின்றன. அவற்றில்‌ பதிந்துள்ள தெய்வீக விளக்கங்களைத்‌ தக்க சற்குரு மூலமாக நாம்‌ அறிந்து கொண்டால்தான்‌ ஒவ்வொரு திருத்தலத்தின்‌ மகிமையையும்‌ நம்மால்‌ ஓரளவேனும்‌ உணர இயலும்‌. எனவே தலச்‌ சிறப்பை உணர்த்திடச்‌ சற்குரு அன்றி தக்க பரிபூரண இறைத் துணையைப்‌ பிரபஞ்சத்தில்‌ எங்கும்‌ காண இயலாது.

ஆதிசிவனும்‌ அம்பிகையைப்‌ பூலோகமெங்கும்‌ தம்‌ புனிதமான பாதங்களால்‌ பாத யாத்திரை புரியச்‌ செய்திட விருப்பம்‌ கொண்டார்‌. இதற்காகவே அம்பிகை நான்கு வேதங்களைப்‌ பந்தாடிய இறைத்‌ திருநிகழ்ச்சி அமைந்திட்டது. “ஆதிபராசக்தியாய்‌, வேதப்‌ பந்தாட்டம்‌ ஆடி, வேதப்‌ பிரகாச சக்திகளைப்‌ பரப்புவதுடன்‌ ஞானப்‌ பிரகாசமாய்‌ அனைத்துக் கோடி தெய்வ மூர்த்திகளும்‌ நிறைந்துள்ள ஓர்‌ அரிய தெய்வீகப்‌ பசுவின்‌ வடிவில்‌ பூலோகம்‌ செல்வாயாக! வேதப்‌ பந்தாட்டம்‌ மூலம்‌ திரட்டிய வேத சக்திகளை உன்‌ புனிதமான பாதங்கள்‌ மூலம்‌ பூலோகமெங்கும்‌ பரப்பிடுவாயாக!'' என இறைவன்‌ ஈஸ்வரிக்கு அருளாணையிட்டார்‌!

கொன்றை நிழலில் ஸ்ரீகொன்றைநாயகர்
பந்தணைநல்லூர்

இதனை நம்‌ பூலோகச்‌ சிற்றறிவிற்குப்‌ புரியும்‌ வண்ணமாகவே அம்பிகையின்‌ வேதப்‌ பந்தாட்ட அனுபூதியை நிகழ்த்தி, சூரியனை ஸ்தம்பிக்கச்‌ செய்து, இது சூரிய வலத்துக்கு இடையூறாக இருந்தமையால்‌, “அம்பிகையைப்‌ பசுவாகக்‌ கடவது!” என இறைவன்‌ சபித்ததாகப்‌ புராண விளக்கங்கள்‌ கூறும்‌. அனைத்தும்‌ வேத வாக்கே! அவரவர்‌ இறைப்‌ பகுத்தறிவிற்கேற்ப ஞானம்‌ பரிமளிக்கும்‌.

பசு என்பது, சிவன்‌, நாராயணன்‌, பிரம்மா, பராசக்தி, சரஸ்வதி, இலக்குமி என அனைத்துக்‌ கோடி தெய்வ மூர்த்தங்களும்‌, மகரிஷிகளும்‌, சித்தர்களும்‌ ஒருங்கே திரண்ட உண்மையான, பூரணமான, புனித வடிவல்லவோ! எனவேதான்‌ இத்தகைய அனைத்து மூர்த்திகளும்‌ ஒருங்கே நிறைந்த ஒரு புனிதமான பசுவின்‌ வடிவின்‌ மூலம்தான்‌ பூலோகத்தில்‌ மங்கி வரும்‌ வேத சக்திகளுக்குப்‌ புத்துயிர்‌ ஊட்ட இயலும்‌ என்பதை அறிந்தே இறைவன்‌ அம்பிகையை பூலோகத்திற்குப்‌ பசுவாக அனுப்பி வைத்தார்.

பசுவாய்ப் பராசக்தி! பரிபாலனனாய்ப் பரந்தாமன்‌!
பசுபதியாய்ப்‌ பரம்பொருள்‌!
அனைத்தும் பக்திநிறை பந்தணைநல்லூரில்‌!

பூலோகமெங்கும்‌ ஆதிபராசக்தியும்‌ பசுவாய்‌ இறை ஆணைப்படி உலா வர விழைந்தனள்‌. ஆனால்‌ வேத சக்திகளை பூமியில்‌ பரப்புவதோடு, காக்கும்‌ கடவுளாம்‌ திருமாலின்‌ ரட்சா சக்திகளும்‌ கூடினால்தானே வேதங்கள்‌ காக்கப்படுவது மட்டுமன்றி வேத சக்திகளும்‌ வெளிப்பட்டு அவற்றை ஜீவன்கள்‌ கிரகிக்கும்போது ராவணனைப்‌ போல் தவறான வழிகளில்‌ பயன்படுத்தாது நல்வழி கொண்டு தக்க அருளைப்‌ பெறுவர்‌! இவ்வாறு வேத சக்திகள்‌ நிலை நின்றிட, வேதத்தை அரக்கர்களிடம்‌ இருந்து காத்த ஸ்ரீவராஹ மூர்த்தியின்‌ பரந்த அம்சங்களுடன்‌ காக்கும்‌ கடவுளாம்‌ திருமாலும்‌, நந்த கோபாலனாய்ப்‌ பூமிக்கு வந்திட்டார்‌.

கொன்றை இளவனார்சூரக்கோட்டை

வேத சக்திகளைப்‌ பூலோகத்தில்‌ நிரவுவது என்றால்‌ நாம்‌ நினைப்பது போல நாம்‌ வாழும்‌ பூலோகத்தில்‌ மட்டும்‌ பரப்புவது கிடையாது. சித்தர்களின்‌ குருவாய்மொழிகளாய்‌ ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில்‌ நாம்‌ அடிக்கடி விளக்கி வருவது போல்‌, நம்‌ பூமி போல கோடானு கோடி பூலோகங்கள் உண்டு. அனைத்து பூமிகளிலும்‌ கிருத யுகம்‌, திரேதா யுகம்‌, துவாபர யுகம்‌, கலியுகம்‌ என்ற நான்கு யுகங்களும்‌ மாறி மாறி வந்து கொண்டுள்ளன. இன்றைக்கும்‌ இராமாயணம்‌ ஒரு பூலோகத்தில்‌ நடந்து கொண்டுள்ளது. பிறிதொரு பூமியில்‌ மகாபாரதம்‌ நிகழ்கிறது. ஸ்ரீகிருஷ்ண லீலைகள்‌ பாகவத அனுபூதிகளாகப்‌ பிறிதொரு பூலோகத்தில்‌ நடந்து கொண்டும்‌ உள்ளன.

மேலும்‌ அனைத்துக்‌ கோடி பூலோகங்களிலும்‌ தேவாதி தெய்வ மூர்த்திகள்‌ உலா வந்து கொண்டு இருப்பதால்‌, தம்மால் பாத யாத்திரையாகவே பிரம்மாண்டமான பூமியெங்கும்‌ நான்கு வேத சக்திகளையும்‌ பரப்ப முடியுமா என்று எண்ணி அஞ்சிய உலக அன்னையானவள்‌, தமக்குத்‌ துணை பரியும்‌ பொருட்டுத்‌ தம்‌ சகோதரனாம்‌ திருமாலை அழைத்திடவே அவரும்‌ நந்தகோபாலனாய்‌ பூலோகத்தில்‌ பசுவுடன்‌ பவனி வந்தார்‌. வேதத்தை வராக மூர்த்தியாய்த்‌ தாங்கியவராதலின்‌ அவர்‌ பாதம்‌ பட்ட இடமெங்கும்‌ வேத சக்தி பூரித்தது! இதுதானே சிவனின்‌ விருப்பமும்‌!

ஈஸ்வரனே தம்‌ திருப்பாதத்தால்‌ ஒன்று திரட்டியமையால்‌ நால்வேதங்களும்‌ மாபெரும்‌ வேதப்‌ பிரகாசக்‌ கோளமாய்‌ பூலோகத்தை நோக்கிக்‌ காற்றினும்‌ கடுகி விரைந்தன! சிவபெருமானின்‌ வேத சக்திகள்‌ நிறைந்த திருப்பாத ஸ்பரிசம் பெற்றமையால்‌ அக்கோளம்‌ (பந்து) எங்கு வீழ்ந்ததோ அத்தலத்தில்‌ வேத சக்திகள்‌ நன்கு வேரூன்றும்‌, எனவே அவ்விடத்தை அறிந்து அடைதற்காக, அம்பிகையும்‌ பசு வடிவில்‌ திருமாலுடன்‌ பூலோகம்‌ வந்தடைந்தாள்‌. அம்பிகை வேதப்‌ பந்தைத்‌ தேடினாள்‌ என்பதைவிடச் "சிவபெருமானின்‌ திருப்‌ பாதங்களில்‌ இருந்து உதித்த அவ்வேதக்‌ கோளப்‌ பிரகாசத்தைத்‌ தரிசிப்பதற்காகவே, சிவப்பிரகாச வேத பாத சக்திகளைப்‌ பெறவே பூலோகமெங்கும்‌ அம்பிகை பசுவடிவில்‌ திருமாலாம்‌ நந்த கோபனுடன்‌ வலம்‌ வந்தனள்" என்று உணர்தலே தெளிவைத்‌ தரும்‌. இவ்வாறு அம்பிகையின்‌ வேதப்‌ பந்தாட்ட இறை லீலை பல அர்த்தங்கள்‌ பொதிந்ததாம்‌.

ஓங்கார வேத வடிவே கொன்றை மரம்‌!

கொன்றை மரம்‌ என்பது ஓங்கார சக்திகளைத்‌ தன்னுள்‌ நிறைத்துக்‌ கொண்டிருப்பதாகும்‌. இதில்‌ சரக்‌ கொன்றை என்பது அந்தந்த யுகத்திற்கு, அந்தந்த உலகிற்குத்‌ தேவையான வேத சக்திகளைத்‌ தன்னுள்‌ திரட்டிப்‌ பரிமளிப்பதாம்‌. கொன்றை மரத்தின்‌ விசேஷ அம்சம்‌ என்ன? சிருஷ்டி யோக இயக்கத்தின்போது இறைவனின்‌ வலது திருப்பாதத்திலிருந்து பசுமையான இலைகள்‌ பூக்கள்‌ போல்‌ சொரிந்தன. இவைதாம்‌ கொன்றை இலைகளாகும். இவ்விலைகளை வைத்துக்‌ கொண்டு அம்பிகை கொன்றை மரத்தைப்‌ படைத்தாள்‌! இறைவனின்‌ வலப்‌ பாதத்திலிருந்து கொன்றையும்‌, இடப்‌ பாதத்தினின்று சரக்‌ கொன்றையும்‌ தோன்றியமையால்‌ இறைவனின்‌ இடப்‌ பாத வேதசக்தி கொண்டதே சரக்‌ கொன்றை மரமாகும்‌. எனவே பெரும்பாலும்‌ இறைவனுக்கு இடப்‌ புறத்தில்‌ சரக்‌ கொன்றை அமையும்‌.

திருப்பைஞ்ஞீலி

மந்தாரையே வேத தளம்‌!

தாவரங்களைப்‌ படைத்த ஸ்ரீசாகம்பரீ தேவி முதன்முதலாய்த்‌ தன்‌ படைப்பிற்குப்‌ பரம்பொருளின்‌ ஆசீர்வாதம்‌ பெறும்‌ பொருட்டு ஆதி சிருஷ்டிகளாக இறைவனே முதலில்‌ தந்து அருள்பாலித்த தேங்காய்‌, அருகம்புல்‌, வில்வம்‌, துளசி போன்றவற்றை ஒரு மந்தாரை இலையில்‌ வைத்து அன்னத்துடன்‌ நைவேத்யமாக இறைவனின்‌ திருமலர்ப்‌ பாதங்களில்‌ சமர்ப்பித்தாள்‌. ஆம், இவ்வாறு அனைத்துவித வேத சக்திகளும்‌ நிறைந்ததே மந்தார இலையாம்‌. எனவேதான்‌ வேத சக்தி பரிணமித்திடச்‌ சில தலங்களில்‌ இறைவன்‌ ஸ்ரீமந்தார வனேஸ்வரராகவே அருள்பாலிக்கின்றார்‌.

எங்கெல்லாம்‌ ஸ்ரீமந்தாரவனேஸ்வரராக, சிவபெருமான்‌ அருள்‌ பாலிக்கின்றாரோ அத்தலத்தில்‌ சிவனுக்கு உரித்தான திங்கள்‌, திருவாதிரை, பிரதோஷம்‌, மகம்‌ போன்ற நாட்களில்‌ சர்க்கரைப்‌ பொங்கல்‌, வெண்‌ பொங்கல்‌, எலுமிச்சை சாதம்‌, புளியோதரை ஆகிய நான்கு வகையான (வேத நெறி சார்ந்த முழு முந்திரியுடன்‌) உணவு வகைகளை வேதப்‌ பொறிகளாக பக்தியுடன்‌ இறைவனுக்குப்‌ படைத்து மந்தாரை இலையில்‌ அன்னதானமாக இடுவதால்‌ இல்லம்‌, கடை, வியாபாரம்‌, நிலம்‌, கட்டிடம்‌ போன்றவற்றில்‌ எழும்‌ பகைமை, குரோதம்‌, தகராறுகள்‌ நன்முறையில்‌ தீர்வு பெறும்‌. காரணம்‌, வேத சக்திகள்‌ நிறைந்த மந்தாரை இலையில்‌ வைத்து அன்னதானம்‌ செய்வதால்‌ கிட்டும்‌ அன்னவேதப்‌ பலாபலன்கள்‌ பகைமையைக்‌ களைந்து சாந்தத்தைப்‌ பொழிய வல்லவையாம்‌! அப்பர்‌, சுந்தரர்‌ போன்ற உத்தமர்களுக்கு இறைவன்‌ பொதி சோறு அளித்தபோது (திருப்பைஞ்ஞீலி, திருக்கச்சூர்‌), அவற்றை மந்தாரை இலையில்‌ வைத்தே அருள்பாலித்தார்!

எனவே தேங்காய்‌ போன்ற ஆதிமூலப்‌ பொருட்களுடன் ஆதிகால சிருஷ்டியில் முதன்முதலாக உருவானதே மந்தாரை இலையாம்‌. எனவே இறைவனுக்கும்‌ அம்பிகையானவள்‌ குறித்த ஹோரை நேரத்தில்‌ மந்தாரை இலையில்‌ தினமும்‌ உணவு படைக்கின்றாள்‌.

வேதமே பூமி பாரம்‌ தணிக்கும்‌!

வேதத்தைக் காத்து ரட்சிப்பவராக, வேத மூர்த்தியாக இருக்கின்ற சாட்சாத்‌ வராஹ நாராயணப்‌ பரம்பொருளும்‌, ஸ்ரீகிருஷ்ண வடிவில்‌ நந்தகோபாலனாக பூலோகத்தில்‌ பவனி வந்தமையால்‌ பூமா தேவி மேலும்‌ மகிழ்வுற்றாள்‌. ஜீவன்களின்‌ தீவினைக்‌ கர்ம வினைச்‌ சுழல்களால்‌ பூமியின்‌ பாரம்‌ நாளுக்கு நாள்‌, நொடிக்கு நொடி அதிகரித்ததால் மிகவும்‌ வருத்தமுற்ற பூமாதேவியும்‌, ஆதிசேஷனும்‌ திருமாலிடம்‌ முறையிட அவரும், "பூமாதேவி! வேத சக்திகளைக்‌ காத்து இரட்சிப்பது என்பது ஒரு மாபெரும்‌ அவதார இறைத்‌ திருப்பணி! சாட்சாத்‌ உமையவளே பசு வடிவில்‌ வேதமாக்‌ கோள சக்திகளைத்‌ தாங்கி பூமியில்‌ வலம்‌ வரும்போது வராஹ மூர்த்தியின் அவதார அம்சங்களுடன்‌ அடியேனும்‌ நந்த வராஹ கோபாலனாகப்‌ பூமியில்‌ கூடவே காப்பாக வலம் வருகையில்‌ உன்‌ பெரும்‌ பாரம்‌ தணியும்! அதுவரையில்‌ ஜீவன்களின்‌ நல்வாழ்விற்காக இப்பெரும்‌ பாரத்தைச்‌ சுமந்து நிற்பாயாக!" என அருளினார்.

ஸ்ரீபரிமளவல்லி தாயார் சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள்
பந்தனைநல்லூர்

இறைவனின்‌ திருப்பாதங்களின்று பட்டு அவதரித்த வேதக்‌ கோளமான பந்தினைத்‌ தேடியவாறு திருமாலும்‌, அவர்தம்‌ திருத்தங்கையாம்‌ பரமேஸ்வரியும்‌ பூலோகமெங்கும்‌ வலம்‌ வந்தனர்‌ அல்லவா! வேதத்தைக்‌ கோளங்களாக்கித்‌ தம்முடைய திருக்கரங்களால் "பூ வளை பூபால பூஜை" செய்தமையால்‌, அம்பிகையிடம்‌ திரண்டு கூடியிருந்த வேதமகா சக்திகள்‌ யாவும்‌ பசு வடிவில்‌ அம்பிகை பூலோகமெங்கும்‌ நடந்த போது பசுக்‌ குளம்பின்‌ மூலமாய்ப்‌ பூமியில்‌ பதிந்து வேத சக்திகள்‌ பூலோகத்தில்‌ நிறைவடைவதைக்‌ கண்டு பூமாதேவியே அகம்‌ மகிழ்ந்தாள்‌.

பந்தணை நல்லூரில் விஷ்ணுபதி
நரசிம்ம உக்ரம் தணித்த நாகாபரணன்!

அம்பிகை பசு வடிவில் பூமியில் பல வகைகளில் பாதம் பதித்தமையால் பூமியைத் தாங்கும் பூமா தேவிக்கும், ஆதிசேஷனுக்கும் பூ பாரமும் தணிந்தது! இவ்வாறாக இறைவனுடைய ஒரு காரியத்தில் கோடானு கோடி பலன்கள் கூடிடுமே!

ஸ்ரீகாமதேனு பந்தணைநல்லூர்

இப்படியும் வீசும் குருபிரசாதம்
ஸ்ரீகருடாழ்வார் பந்தணைநல்லூர்

மேலும் நரசிம்மரின் அதிஉக்ரத்தால் பூலோகத்தில் பல இடங்களில் அக்னிக் கோலங்கள் உருவாகின. ஆங்காங்கே காட்டுத் தீயும், நில அடிக்கடி உஷ்ணமும் பெருகியமையால் திருமாலே, தாமே ஒரு சரக்கொன்றைக் குச்சியைத் தாங்கிக் கொண்டு பசுவைக் காக்கும் நந்த வராஹ கோபாலனாய் பூலோகத்தில் அவதாரம் எடுத்திட்டார்! அச்சரக் கொன்றைக் குச்சி பூமியில் படுவதால் அதில் எழுகின்ற சீதளமானது நரசிம்ம அக்னி உக்ரத் தன்மையைத் தணித்து நல்மழையையும் வர்ஷித்தது! இவ்வாறு சரக் கொன்றை குச்சியை தரையில் ஊன்றி பெருமாள் பூமியெங்கும் சீதள சக்திகளை நிரவியது என்றோ நடந்த ஒரு பெருமாள் லீலை கிடையாது. அது இன்றும் பக்தர்கள் அனுபவிக்கும் பரமானந்த பெருமாள் குளிர்ச்சியே என்பதை நிரூபிப்பதே இங்கு நீங்கள் காணும் ஆதித்ய சேவையாகும். சூரிய கிரணங்கள் ஸ்ரீஆதிகேசவ திருச்சன்னிதியிலும் ஸ்ரீபரிமளவல்லித் தாயார் சன்னதியிலும் ஒளி வீசுவதை இங்கு பக்தர்களின் நலனுக்காக அருளியுள்ளதே சற்குருவின் பெருங்கருணையாகும். இவ்வாறு பல புராண சம்பவங்கள் பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கூடியதே பந்தணைநல்லூர் சிவ வைணவத் தலங்களின் சிறப்பாகும்.

மேலும் ஸ்ரீசரபேஸ்வர மூர்தியாய்ச் சிவபெருமான், நரசிம்மரின் உக்ரத்தைத் தணிப்பதற்குப் பவவிதமான இறை லீலைகளைப் புனைந்திடுகையில்....... ஒரு முறை சரக்கொன்றை மலர்களை ஆழி போல் குவித்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணித்தார். மற்றொரு முறை மந்தாரை இலையில் நரசிம்மரை அமர வைத்து, வேறு பல உக்ர சக்திகளை அடக்கினார்! இவ்வாறாக சரபேஸ்வரமூரத்தி எத்துணையோ இறைவழி முறைகளைக் கையாண்டு ஸ்ரீநரசிம்ம மூத்தியின் பலவிதமான உக்ரங்களைத் தணித்த கோல வடிவங்களே இன்று பலவித நரசிம்ம மூத்திகளாய், சரபேஸ்வர மூர்த்தங்களாய்ப் பல ஆலயங்களிலும் தூண்களிலும் பொலிந்து அருள் புரிகின்றனர்.

ஸ்ரீநரசிம்மருடைய உக்கிரத்தை ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி பல யுகங்களில் தணித்தார் என்றால், எவ்வளவு கோடி அர்ச்சாவதார அம்சங்கள் அதில் தோன்றி இருக்கும் என்பதை விண்டுரைக்க இயலுமா என்ன? இத்தகைய அரிய, அபூர்வ தேவ இரகசியங்களையெல்லாம், கலியுகத்தின் விஞ்ஞானப் பகுத்தறிவால் ஒரு சிறிது கூட உணர இயலாது. மெய்ங்ஞான விஞ்ஞானியாம் சற்குருவே இவற்றை உணர்த்த வல்லார்.

பந்தணைநல்லூர்

ஓதிய வேதத்தோடு மோதிய ராவணன்!

ஒரு முறை.... இராவணனிடம் ஆட்பட்ட நவகிரக மூர்த்திகள் பலத்த துன்பங்களுக்கு ஆளாயினர். வேதங்களில் மகா வல்லமை பெற்ற இராவணன் தனக்கு இறையருளால் கிட்டிய வேத சக்திகளையெலாம் மிகவும் தவறான வழிமுறையில் பயன்படுத்தினான். தன்னுடைய வேத சித்சக்தி, சித்திகளைத் தன் அகங்காரத்தாலேயே இழக்கலானான்! தன் வலிமையைப் பூவுலகிற்கு உணர்த்தும் பொருட்டு அவன் நவகிரக மூர்த்திகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களைத் தன் அரியாசனத்திற்குச் செல்லும் படிகளில் படுக்க வைத்து மிதித்துச் சென்று இம்சைப் படுத்தினான். அவர்களும் அவனுடைய வேத சக்திக்குக் கட்டுப்பட்டவர்களாய் மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு இருந்தனர்.

நவகிரக மூர்த்திகள் இவ்வாறு பெருந் துன்பத்திற்கு ஆளானபோது அவாகள் திருமாலிடம் தமக்குத் தக்க நிவர்த்தியளிக்குமாறு வேண்டவே காக்கும் கடவுளாம் திருமாலும், "ஆதிகேசவ அவதார லட்சணங்களோடு கோகர்ஷண சக்தி பூண்டு யாம் கோபாலனாய் பூமியில் வலம் வரும்போது வேத சக்திகள் மீண்டும் பூமியில் தழைத்திடும்! வெறும் தரையில் நீங்கள் படுத்திருப்பதால் அப்போது அச்சக்தி உங்கள் மேனியைத் தழுவும்போது செவ்வாய், சனீஸ்வர மூர்த்திகளால் நீங்கள் அனைவரும் பெரும் நன்மை அடைவீர்கள்!" என அருள்பாலித்தார்.

நவகிரஹங்களுக்கு அருள்பாலித்த ஆதிகேசவர்

ஆதிகேசவன் எனும் அவதாரத் தத்துவமானது, மஹாவிஷ்ணு அவதாரத்தின் ஆதிமூல நிலையை ஒட்டியதாம். ஆதி என்றாலே பழமையான முதல் பெரும் பொருள் என்று அர்த்தம்! நாராயணப் பரம்பொருளின் ஆதிமூல அர்ச்சாவதாரமும், அம்பிகையின் ஆதி பராசக்தி மூலமும் பூலோகத்தில் உலா வந்தால் என்னே உத்தம யுகம் அது! பூலோகத்தின் எங்கோ ஒரு மூலையில் நந்த கோபாலனாக திருமால் ஆதிகேசவத் தத்துவத்துடன் ஆதி பராசக்தி அம்சப் பசுவுடன் இணைந்து வந்த உத்தம காலமது! வேத சேகராகிய திருமாலின் சக்தியும், அனைத்துக் கோடி மூர்த்திகள் உறையும் பசு வடிவான ஈஸ்வரியின் சக்தியும் ஒன்று சேர்ந்து பிரபஞ்சமெங்கும் இந்த வேத சக்தியானது பரவி இராவணனிடம் அடிமைப்பட்டுப் படிகளில் வீழ்ந்து கிடந்த‌ நவகிரக மூர்த்திகளையும் ஸ்பரிசித்திடவே அவர்கள் புத்துணர்வு பெற்றனர். அவர்களிடமும் வேத சக்திகள் நிரம்பின.

ஒளியில் நாயன்மார்களா ?
பந்தணைநல்லூர்

மேலும் நாரதர் ராவணனிடம், "ராவணா!  குப்புறக் கிடந்து அவர்களை மிதித்துச் செல்வதை விட அவர்களை மல்லாக்க நிமிரப் படுக்க வைத்து அனைத்து லோகங்களும் அறியும்படி நெஞ்சில் மிதித்துச் செல்! அப்போதுதான் உன் ஆதிபத்ய ஏக்க தாகம் அடங்கும்!'' என்று கூறித் தம் லீலையைப் புனைந்திட்டார்! இவ்வாறே ராவணன் செய்திட, குப்புறப் படுத்திருந்த செவ்வாயும், சனியும் நிமிர்ந்து படுத்துக் கொக்கரித்துச் சிரிக்கும் ராவணனைப் பார்த்திட.......

நவகிரகங்கள் பிரார்த்தித்த ஆதிகேசவப் பெருமாளின் அனுகிரகத்தால்.........

மேலும் நாரத லீலையும் கூடிட……

பூமியில் பரவிய வேத சக்தியையும் செவ்வாயும், சனியும் பெற்று இருகோள் கூட்டுப் பார்வையுடன் மிகுந்த சக்தியுடன் பொலிந்திடவே......

இது ராவணனுடைய வேத சக்திக்கு ஈடாக அமைந்திட......

குப்புறக் கிடந்த நவகிரக மூர்த்திகள் நிமிர்ந்ததால் சனீஸ்வர பகவானின் பார்வை பட்டு இராவணனின் அகங்காரம் பொசுங்கிய லீலையை நாம் நன்கு அறிவோம். இதைத்தானே நாரத மகரிஷி எதிர்பார்த்தார்! வேத சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியமையால் ராவணன் சனியின் பார்வை பட்டுத் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான்!

இதன் பின்னர் அனைத்து நவகிரக மூர்த்திகளும் தம்மை ராவணனின் பிடியில் இருந்து விடுவிக்கத் துணை புரிந்த ஆதிகேசவப் பெருமாளைத் தரிசிக்க விரும்பி பூலோகத்தை வலம் வந்த போதுதான் பந்தணை நல்லூர் திருத்தலத்தில் அம்பிகையும் திருமாலும் ஒருசேர சரக்கொன்றை மரத்திடையில் ஸ்ரீபசுபதீஸ்வர நாதனைப் பூஜிக்கும் திருக்கோலம் கண்டு உளம் பூரித்து அனைவரும் ஒன்றாய் நின்று வணங்கினர்.

கோபாலத் தலமே கோளிலித் தலம்!

இவ்வாறு கோளிலிக் கோலத்தில் நவகிரகத் தல புராண வைபவங்களுள் இதுவும் ஒன்றாம்! இவ்வாறாக ஒவ்வொரு ஆலயத்திற்கும் வெவ்வேறு யுகங்களில் நிறைய புராணச் சம்பவங்கள் நிறைந்திருக்கும். தக்க மகரிஷிகள், சித்தர்கள், சற்குரு மூலமாகத் தக்கத் தருணத்தில் அவை பிரபஞ்சத்திற்கு அருளப்படும்! எனவே இது கோளிலித் தலமாக அதாவது நவகிரக மூர்த்திகள் அனைவருமே ஒருசேர, ஒரே பக்கம் நோக்கி நின்று அருள்பாலிக்கின்ற மகத்தான பேற்றை இங்கு பெறலாம்!

ஸ்ரீகைலாசநாதர் பந்தணைநல்லூர்

இவ்வகையிலான கோளிலித் தலங்களின் த‌த்வார்த்தம் என்னவெனில்... மனிதனுடைய தினசரிக் கர்ம வினைகளின் பிரதிபலிப்பே கோள்களின் சஞ்சார நிலைகளாகும்! ஒரு மனிதனின் ஜாதகத்திலுள்ள கிரக மூர்த்திகளின் அசைவும் அந்தந்த ஜீவனின் கர்ம வினைகளின் பிரதிபிம்பமாகத் திகழ்வதால் கிரக சஞ்சாரமற்ற கர்மவினைகள் நம்மைத் தொற்றாத வகையில் அக்கர்ம வினைகளுக்குத் தக்க பரிகாரம் பெறுவகற்கு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தரிசனம் மிகவும் இன்றியமையாததாகும்.

கோதூளி மூர்த்த வழிபாடு கோடி பலன்கள் தரும்!

லிங்கங்களில் கல் வடிவம், சுதை வடிவம், பிருத்வி வடிவம் எனப் பல உண்டு. இவற்றில் கோதூளி எனப்படும் "பசுவின் குளம்படி மண்" வடிவைப் பூஜித்தல் என்பது மிக மிக அரிய பாக்யமாகும். பசு வடிவில் அம்பிகை பூமியை வலம் வந்தபோது அப்போது பசுவின் குளம்படியில் திரண்ட தெய்வீக சக்திகள் நிறைந்த கோதூளிகளை ஸ்ரீலக்ஷ்மி தேவி திரட்டி கிடைத்தற்கரிய கோதூளி சிவலிங்க பூஜை செய்து ஸ்ரீஆதிகேசவ மூர்த்தியை இத்தலத்தில் மணந்தனள்! சொல்லவும் பெரிதே சுதை மூர்த்திகளின் மகிமை என்பதாக இத்தலத்தில் ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி என்ற இம்முப்பெரும் தேவியர்களுமே சுதை ரூபம் கொண்டு அருள்பாலிப்பது இத்தலத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றது. தங்கள் வீடுகள், அலுவலங்களில் வாஸ்துக் குற்றங்கள் அமைந்துள்ளதை அறிவோர் இந்த சுதை மூர்த்திகளை வணங்கி கிழங்கு வகைகளால் செய்த உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் தக்க பரிகாரங்களைப் பெறுவர். உதாரணமாக, தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் சமையல் அறை அமைவதும், வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையில் கிணறுகள் அமைவது என்பதும் சர்வசாதாரணமாக பல இல்லங்களில் காண முடியாத வாஸ்து தோஷங்கள்தானே ? இவற்றிற்கு ஓரளவிற்குப் பரிகாரமாக அமைவதும் ஒழுக்கம் தவறிய குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பதும் இத்தலத்தில் இயற்றும் சுதை மூர்த்திகளின் வழிபாடுகள் ஆகும்.

கோதூளி லிங்கம், கோதூளி கிருஷ்ணர், கோதூளி அம்பிகை வடிவங்கள் பிரபஞ்சத்திலேயே பெறுதற்கு அரியவையாம்! உமையவளும் திருமகளிடம் இருந்தே கோதூளிகளைப் பெற்று லிங்கமாக்கி அதியற்புத பூஜைகளைக் கடைபிடித்து மஹேஸ்வர வேத சக்திகளைப் பெற்றனள்! இவை அனைத்தும் நிகழ்ந்த தலமே பந்தணை நல்லூராம்!

இவ்வாறாகக் கோதூளியின் பரிமளத்தைப் பிரபஞ்சத்திலேயே முதன் முதலாகப் பரிபூரணமாக முழுமையாக அனுபவித்தமையால் திருமகளே பரிமளவல்லித் தாயார் என்ற நாமம் பூண்டு கல்யாண‌ சுந்தரரின் திருச்சன்னதியில் ஸ்ரீஆதிகேசவ பெருமாளை மணந்து அவரது திருமார்பில் எப்போதும் உறையும் பாக்யம் பெற்றுத் திருமண‌ தோஷங்களை நிவர்த்தித்துத் திருமணம் கை கூடிடும் திருமால் தலமாயும் பந்தணை நல்லூர் அமையப் பெருமையூட்டினாள்.

ஸ்ரீவிஷ்ணுதுர்கை பந்தணைநல்லூர்

எனவே பலவிதமான தோஷங்களால் திருமணம் தடைபடுவதால் வருந்துவோர் பந்தணைநல்லூர் சிவாலயத்தில் கல்யாண சுந்தரராகத் திருமண கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீபார்வதி ஸ்ரீபரமேசுவரரைத் தரிசித்து பரிமளவல்லித் தாயார் சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும் வழிபடுவோர்க்கு எத்தகைய திருமணத் தோஷமும் நிவர்த்தியாகித் திருமண பாக்யம் கைகூடும்.

தம்முடைய திருமணத்தில் ஏற்பட்ட தடைகளுக்குத் தீர்வாக திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை இங்கு வழிபட்டு ஸ்ரீபத்மாவதித் தாயாரை மணம் புரிந்தார்! எனவே திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளே வழிபட்ட முக்கியத் தலமாக விளங்குவதே பந்தணை நல்லூர் சிவ, வைணவத் தலமாகும். இங்குள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் மூர்த்தி! இவருக்குக் கல்யாண உற்சவம் நிகழ்த்துதல் மகத்தான காரிய சித்திகளைத் தருவதாகும். இவ்வாறாக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வ மூர்த்திகளுள், கேட்கும் நல்வரமெல்லாம் அருளும் கருணா மூர்த்தி!

ஒரு காலத்தில் பேரும், புகழும், பிரசித்தியும் பெற்றுப் பலவித உற்சவாதிகள் நடந்த இந்த ஆலயமானது தற்போது எளிமையுடன் விளங்குகின்றது. எனவே ஜாதி, இன பேதமின்றி பக்த கோடிகள் ஒன்று கூடி விஷ்ணுபதி பூஜைத் தளமாக மீண்டும் இதனைப் பிரசித்தி பெறச் செய்தல் சமுதாயத்தின் இறைப்பெரும் கடைமையாகும்.

குரு அறிவார் கர்மக்கழிவு இலக்கணம்!

வைகுண்டத்தின் துவார பாலகர்களான ஐய, விஜயன் பலவித சாபங்களால் பூலோகத்தில் பல பிறவிகளை ஏற்க நேர்ந்தபோது, அச்சாபங்கள் நிறைவேறும் முன் நாரத மஹரிஷியின் அறிவுரைப்படி பூலோகத்திற்கு வந்து ஸ்ரீஆதிகேசவப் பெருமாளைத் தரிசித்து தங்களுக்கு இடப்பட்டுள்ள சாபங்கள் நன்முறையில் கழிந்து, மீண்டும் பெருமாளின் சரணக் கமலம் கிட்ட ஆதிகேசவப் பெருமாளே அருள்புரியவேண்டும் என வேண்டி அருள் பெற்றனர். எனவே அவரவர் தத்தமது கர்மவினைகளை நன்முறையில் கழிப்பதுதான் முக்தி, மோட்ச நிலை பெறுவதற்கான ஆரம்ப உத்தம வைராக்ய நிலையாகும்.

கர்மங்களை பஸ்மம் செய்வதென்பது எளிதன்று. இறைவனின் தூதுவர்களாய் விளங்கும் சற்குருமார்கள் கூடத் தம் உத்தம அடியார்களின் கர்ம வினைகளைப் பஸ்மம் செய்வது கிடையாது. மாறாக அவர்கள் தங்கள் உடலில் அவற்றை ஏற்று அனுபவித்துக் கர்ம வினைகளைக் கழிக்கின்றனர். எனவே ஜய, விஜயர்களின் சாபத் தீர்வுக்குப் பெருந் துணைபுரிந்தவர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆவார்.

ஸ்ரீபைரவர் பந்தணைநல்லூர்

வரும் 12-2-2002 செவ்வாய் நள்ளிரவு. 1-30 மணி முதல் 13-2-2002 புதன் கிழமை காலை 10-30 மணி வரை விஷ்ணுபதி புண்யகால.நேரம் நிரவுவதால் பந்தணைநல்லூர் பரிமளவல்லித் தாயார் சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் விஷ்ணுபதி பூஜையை அபிஷேக ஆராதனைகளுடன், அன்னதானத்துடன் மகத்தான முறையில் கொண்டாடிப் பெறுதற்கரிய பேறுகளை வேத சக்திகளாகப் பெறுவீர்களாக!

இவ்வாலயத்தின் முன் மண்டபமானது வைகுண்டத்தின் ஆதி உலா மண்டபத்தின் அமைப்பானதாம். இத்தகைய அரிய ஆராதனை மண்டபமானது மகத்தான வேத, யந்த்ர, மந்தர, தந்த்ர சக்திகளைக் கொண்டதாம். இம்மண்டபத்தில் அமர்ந்து பெருமாளைத் தரிசிப்பது வைகுண்ட ஆராதனைபோல் உள்ளத்தில் இறை பக்தியை உணர்விப்பதாகும்! வாழ்வில் பெறுதற்கரிய பேறு இது! இந்த ஆதியுலா மண்டபத்தின் மேல் வளைவானது "வாலசாங்க்ய வைகுண்ட மண்டப நெறிப்படி” அமைந்து திருக்கோண வடிவுகள் வைகுண்டத்தினின்று அட்சர சக்திகளைக் கிரகித்து நம் உடலின் 72,000 நாளங்களுக்கும் பரப்புகின்றன. எனவேதான சந்திர காந்தக் கல் கூட்டு மண்டபம் போல், சற்றே உஷ்ணமும், சற்றே குளுமையும் கூடிய ஆதியுலா மண்டப அமைப்பும் தட்பவெப்பமும் நம் உடலுக்கு அதியற்புத தெய்வீக ஆரோக்ய சக்திகளை அளிக்கின்றன. இதில் உள்ள வண்ண ஒவியங்கள் யாவும் வேத சக்திகள் பூரித்தவையாய் வைகுண்டத்தின் வேத மண்டப அமைப்பாய் உள்ளன.

விஷ்ணுபதி விரிக்கும் அருள்வரவெளி!

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் எனும் திருப்பெயரில் ஆதி என்ற சொல்லுக்கான பொருளை, வார்த்தைகளால் விளக்க இயலாது. திருமாலின் பல அவதார மூர்த்தங்களுக்கும், அர்ச்சாவதார அம்சங்களுக்கும் ஆதிமூலமாகத் திகழ்கின்ற பரம்பொருளே ஸ்ரீஆதிகேசவப் பெருமாளாவார். பெருமாளுக்கு உரித்தான புதன், சனிக் கிழமைகளில் இங்கு மிகவும் பெரிதான வைகுண்ட வேத சாகரத் திருவுண்ணாழி எனப்படும் பெரும் பிரகாரத்தை அடிப் பிரதட்சிணம் செய்து பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான பெருந் தோசை, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், லட்டு, தயிர் சாதம் படைத்து ஏழைகளுக்குத் தானம் அளித்தலால் பெரிய வியாபார முதலீடு மற்றும், பெரிய சம்பந்தங்களினால் அல்லல்படுவோர், நன்முறையில் அவற்றிலிருந்து மீண்டு நல்வாழ்வு பெற இத்திருவுண்ணாழி அடிப் பிரதட்சணம் அருள் கூட்டும்.

சூரிய தீர்த்தம் பந்தணைநல்லூர்

பிரகார வலம் தரும் பிரத்யட்சப் பலன்கள்!

அம்பிகையும், நந்தகோபப் பெருமாளும் நடந்த புனித பூமி அல்லவா! இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்வதால் கிட்டும் பலாபலன்களைப் பல கோடிப் புராணங்களாக விவரிக்கலாம்! பசுவாய் வலம் வந்த அம்பிகையின் கோதூளி சக்திகள் (பசுவின் புனிதமான காலடி மண்), மற்றும் நந்த கோபாலப் பெருமாளின் திருப்பாதங்கள் பட்ட பூமி, வேத சாரமான சரக் கொன்றைக் கோல் தழுவிய புனித பூமி என்றால் எத்தகைய புனிதப் பிரகாரமிது! தற்போது நெருஞ்சி முள் நிறைந்து இருப்பதால் பக்த கோடிகள் இதனைச் சீரமைப்பதை அரும் பெரும் திருப்பணியாகப் பெரும் புண்ணிய காரியமாக அமைகின்றது!

நாழிகைக்கு நாழிகை இடம் மாறும் நாரத மகரிஷியே சூட்சுமமாகவும், தூலமாகவும் அடிக்கடி பிரகார உலாவரும் உத்தமத் தலங்களுள் இதுவும் ஒன்றாம்! ஆதியுலா மண்டபத்தையும் சேர்த்து வலம் வரும்போது, நாராயணப் பரம் என்ற வேதப் பிரகாச சக்திகள் நமக்குக் கிட்டுவதாக அனைத்து சித்தர்களும், மகரிஷிகளும் போற்றுகின்றனர்.

திருமாலே அருளிய கோதூளியாலான பெருமாளின் திருவடிவைத் திருமகள் பூஜித்துப் பரிமளவல்லித் தாயாராக அருள்பாலிக்கும் தலம்! எனவே இங்கு ஸ்ரீபரிமளவல்லித் தாயாருக்கு கோ ரக்ஷண சக்திகள் நன்கு பரிமளிக்கின்றன! எனவே கறந்த பசும் பாலின் இளஞ் சூடு ஆறும் முன்னரே, அதாவது பசும் பாலைக் கறந்த மூன்று நிமிடத்திற்குள் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும். ஸ்ரீபரிமளவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்வதால், எத்தகையத் துயரங்களையும் தீர்த்து அருள்பாலிக்கின்ற கருணை நாயகியாக தயாசாகரியாக தாயார் பரிணமிக்கின்றாள்!

பஞ்சகவ்ய அபிஷேகம் தரும் பரந்தாமன் தரிசனம்!

ஸ்ரீமுருகப் பெருமான் பந்தணைநல்லூர்

பத்ரிநாத் சாளக்ராம மூர்த்தி போல பிரபஞ்சத்திலேயே கோதூளி மூர்த்தியாக திருமாலைப் பூஜிக்கும் பாக்கியம் பெற்ற அவதார மூர்த்தமாக இங்கு ஸ்ரீபரிமளவல்லித தாயார் விளங்குவதால் இங்கு தாயாருக்குப் பவித்ரமான பஞ்ச கவ்ய அபிஷேகம் (புனிதப் பசுவின் 5 அம்சங்கள் சோந்தவை) செய்தல் அனைத்துத் கோடி புண்ய நதிகளில் நீராடிய பலாபலன்களைத் தந்து பரந்தாம தரிசனத்தையும் அருட்பரிசாக அளிக்கும். இது வ்ருஷ வருட மாசி மாத விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் மட்டும் கிட்டும் பாக்யமாகும்! இதை விட்டால் அடுத்த அறுபது ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும்.

கோதூளி அபிஷேகத்தால் கால் மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் வாடுவோர்க்கு நல்ல நிவாரணம் கிட்டும்! மேலும் நல்ல வேலை, தொழில் கிட்டாது, வாழ்வில் நிலை பெறாது வருந்தும் தம்பதியர் நல்ல குடும்ப நிலையுடன் வாழ ஸ்ரீபரிமளவல்லித் தாயார் அனுகிரகம் அருள்கின்றாள். புதன் கிழமைகளில் தாயாருக்குப் பச்சை நிறத்திலும், சனிக்கிழமைகளில் கருநீல வண்ண வஸ்திரங்களும் சார்த்தி ஏழைகளுக்கு இவ்வண்ண ஆடைகளைத் தானமாக அளித்தலால் மனக் கசப்புடன் வாழ்வு நடத்தும் தம்பதியர்க்கு மன ஒற்றுமை ஏற்பட்டு வாழ்வு நன்கு அமையும். மாமியார், மருமகள் கொடுமைகளால் வாடுவோர் இங்கு விரதமிருந்து அடிப் பிரதட்சிணம் செய்து மனமுருகிப் பிரார்த்தித்து வருதல் வேண்டும்.

பலரும் பல ஆலயங்களுக்கு முடி காணிக்கை மற்றும் பல நேர்த்திகள் வைத்துக் கொள்வார்கள். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் சரியின்றி, வேண்டிய குறிப்பிட்ட கால கட்டத்தில் முடி செலுத்த அல்லது நேர்த்தி அளிக்க இயலாது, மறந்துபோய், அல்லது பதவி, அந்தஸ்து காரணமாய் முடி காணிக்கை, பிற நேர்த்திகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்பர், தவற விட்டிடுவர். இதற்க்கெல்லாம் தக்க சற்குருவின்றிப் பிராயச்சித்தம் பெறுவது க‌டினம். வேதசக்திகள் நிறைந்த தளம் என்பதால் வேத ரட்சகராக, வராஹ  அம்சங்களுடன் ஸ்ரீஆதி கேசவப் பெருமாளாக விளங்குவதாலும் இத்தலத்தில் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு ஒன்பது திரிகளால் விளக்கேற்றி, பெரிய பிரகாரத்தில் அடிப்பிரதட்சிணம், இயன்றால் அங்கப் பிரதட்சிணம் செய்து தம்முடைய முடிப் பிரார்த்தனையை, பிற நேர்த்திகளை நிறைவேற்றாமைக்காக மனதார வருந்தி அதற்கு வட்டியும் முதலுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சங்கல்பம் செய்து கொண்டு தாம் நேர்ந்து கொண்ட அந்தந்த ஆலயத்தில் தத்தம் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றினால் நேர்த்தியைக் காலதாமதம் செய்ததால் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பிராயச்சித்தம் கிட்டும்.

ஸ்ரீநர்த்தன கணபதி பந்தணைநல்லூர்

கோளிலித் தலமாக விளங்குவதால் ஒன்பது சாளரங்களை உடைய திருஷ்டி தோஷ நிவாரண தூப தீபக் கண்டி அல்லது விளக்குகளை இவ்வாலயத்தில் ஏற்றி ஆலயத்திற்கு ஒளி ஊட்டி அத்தீபக் கண்டியை இல்லத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டு வந்தால் எத்தகைய திருஷ்டி தோஷங்களையும் தீர்க்கும் சக்தியை இத்தீபக் கண்டி அல்லது அகல் வடிவம் பெறுகிறது.

நவ சாளரதீப வழிபாடு தரும் நற்செல்வம்!

வைகுண்டத்தில் ஆதியுலா எனப்படும் மண்டபமானது ஒன்பது சாளரங்களை உடையதாகும். இந்த ஒன்பது சாளரங்கள் மூலமாக வைகுண்டப் பிரகாச தீபம் தரிசித்த பின்னரே இறைவனின் திருப் பாத தரிசனம் நித்ய சூரிகளுக்குக் கிட்டும். எனவே நவகிரக மூர்த்திகள் யாவருமே ஒன்பது சாளரமுடைய ப்ருத்வி தீபமேற்றிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீகிருஷ்ண தரிசனம், ஸ்ரீவராஹ தரிசனம்,ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் போன்ற திவ்ய மூர்த்தி தரிசனங்களைப் பெற்றனர்.

எனவே ஒன்பது சாளரங்களையுடைய தீபங்களை வைத்து வணங்குதலும், ஒன்பது திரிகளை இட்டு விளக்கேற்றுதலும் பெரும் வரங்களைத் தருவதாகும். எல்லாவற்றையும் விட ஒன்பது சாளர தீபங்களைத் (எண்ணெயுடன்) தானமாக அளிப்பது பிரார்த்தனா பலன்களைத் துரிதமாக்கும்! காரிய சித்திகளைத் தரும்!

சனிக்கிழமை தோறும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் ஒன்பது திரியிட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளின் லோகத்தில்தான் நவநாத சித்தர்கள் தினந்தோறும், பிரம்ம முகூர்த்தப் பூஜையை நிகழ்த்தி பல கோடி லோகங்களுக்கும், திருமாலின் சங்கு, சக்கர அனுகிரக சக்திகளைப் பெற்றுத் தருகின்றனர்.

எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தன்று இங்கு பலவிதமான அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்துவதோடு வஸ்திர தானம், பொன் மாங்கல்ய தானம், மாங்கல்யச் சரடு தானம், அன்னதானம், காலணி தானம் போன்ற ஒன்பது வகை தான தருமங்களுடன் இவ்வாலயத்தில் விஷ்ணுபதி கொண்டாடுவோர்க்கு மகத்தான பலன்களை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் அருள்கின்றார். ஒன்பது சாளரங்களை உடைய திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி நவச் சாளர விளக்கு அல்லது ஒன்பது பெரிய அகல் விளக்குகள் தானம் தரும் நற்சக்திகள் இங்கு சக்தி வாய்ந்தவையாகத் திகழ்கின்றது. இங்கு ஹோமம் நிகழ்த்துவோர் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான நவ தான்யங்கள், நவப் பூ சமூலம் மற்றும் பல ஹோம மூலிகைகளுடன் நவகிரக ஹோமம் செய்தல் நல்வரங்களைத் தந்து நற்காரிய சித்தியையும் தரும்.

ஸ்ரீநந்தி பகவான் பந்தணைநல்லூர்

நவகிரக விதானம் பந்தணைநல்லூர்

திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரும் என்பார்கள் பெரியோர். இது உண்மையே. அதே போல ஆடும் மனமும் அடங்கும் என்பதை பந்தணைநல்லூர் விஷ்ணுபதி புண்ணிய காலம் உணர்த்துகிறது. எப்போதோ நிகழ்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் பயனை நாம் இப்போது எப்படிப் பெறுவது என்று பல அடியார்கள் எண்ணலாம். தெய்வீகம் என்பது என்றும் நிலைபெற்று இருப்பது, அது புதியதே அல்ல என்பதற்கு பந்தணைநல்லூர் வழிபாடு ஒரு உதாரணம் ஆகும். இன்றும் பந்தணைநல்லூரில் தெய்வ மூர்த்திகளை தரிசனம் செய்து அவரவரால் இயன்ற தான தர்மங்களைச் செய்து குறைந்தது இரண்டரை நாழிகை நேரம் அதாவது ஒரு மணி நேரம் இத்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இறைவனைக் குறித்தோ அல்லது தங்களை வாட்டும் பிரச்னைகள் குறித்தோ வெறுமனே சிந்தித்துக் கொண்டிருந்தால் கூட ஒரு பேரமைதி மனத்தில் நிரவ உள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழிவதைக் காணலாம், உணரலாம். இதுவே பந்தணைநல்லூரில் பந்தாடிய இறைவி, இறைவனின் திருவிளையாடலின் மகிமை. உணர்ந்து பாருங்கள், உன்னதம் பெறுங்கள். அபூர்வமாக இங்கு இறைவி ஸ்ரீவேணுபுஜாம்பிகை கொடிமரம் தாண்டி அருள்பாலிக்கின்றாள். இதனால் திருத்தலத்தில் தண்டம் சமர்ப்பிப்பவர்கள், அதாவது கீழே விழுந்து இறை மூர்த்திகளை நமஸ்கரிப்பவர்கள் ஸ்ரீவேணுபுஜாம்பிகை அம்பாளுக்கோ, காளி தேவிக்கோ எதிரில் தங்கள் கால்களை நீட்டும் சந்தர்ப்பம் ஏற்படுவதால் இது குறித்து பலரும் குழப்பமடைவது இயற்கையே. இறைவனே எங்கும் நிறைந்துள்ளான் என்பதை உணர்ந்தால் இதில் எவ்விதக் குழப்பமும் ஏற்படாது. ஜீவ சமாதிகளில் அஷ்ட நமஸ்காரமோ அல்லது திருத்தலங்களில் எவ்விடத்தில் நிறைவேற்றும் நமஸ்கார முறையிலும் சித்தர்கள் அறிவித்துள்ள நேர்கோட்டு வந்தன முறையிலோ அல்லது ஸ்வஸ்தி நமஸ்கார முறையிலோ வழிபடுவதால் இதில் கால்கள் எந்த இறை மூர்த்தியையும் நோக்கி நீளாது என்பதே இத்தகைய நமஸ்காரங்களின் சிறப்பாகும். இத்தலத்தில் அம்பிகை சன்னதிக்கு எதிரே விதானத்தில் நவகிரக மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். இத்தலம் கோளிலி தலமாக விளங்குவதால் நவகிரக மூர்த்திகளுடன், சூரியன், சந்திரன் என்ற தேவ மூர்த்திகளும், ஸ்ரீகணபதி மூர்த்தியுடன் ஒரே திசையில் இறைவனைப் பார்த்தவாறு எழுந்தருளி உள்ளனர். ராஜகோபுரம் தாண்டி ஸ்ரீகணபதி மூர்த்தி எழுந்தருளி இருப்பதும் இத்தகைய காலால் புரிந்த தவறுகளுக்கு பிராயசித்தம் நல்கும் கருணையை வழங்குவதற்காகவே. (அடியார்களின் நன்மைக்காக நந்தி நோக்கு பெரிதாக்கப்பட்டு உள்ளது).

ஸ்ரீகல்யாண சுந்தரரேசுவரர்
பந்தணைநல்லூர்

காலால் எத்தகைய பொருளையுமே உதைக்கக் கூடாது என்பதால் அத்தகைய தவறு செய்தவர்கள் குறிப்பாக கால்பந்து விளையாட்டு வீரர்கள், பெரியோர்களை, சிறுவர்களை தெரியாமலோ தெரிந்தோ மிதித்து அவமதித்தவர்கள் இத்தலத்தில் வழிபடுதலால் தாங்கள் அறியாமல் செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் பெறுவார்கள். இவ்வாறு உயிர்களுக்கெல்லாம் தாயான தயாநிதி உயிர்கள் செய்த தவறு அனைத்தையும் ஏற்று அவர்களுக்கு, அவைகளுக்கு பிராயசித்தம் நல்குவதாகவே தன்னுடைய கால் பந்தாட்ட விளையாட்டு என்னும் திருவிளையாடலைப் பரிந்தாள் என்பதும் நாம் அறிந்து ஆனந்திக்க வேண்டியதாகும். இத்தகைய மிதி தவறுகளுக்கு பிராயசித்தம் அளிக்கும் திருத்தலம் இது ஒன்றே என்பதை நினைவில் கொள்க. பந்தணைநல்லூர் என்பதற்கு பல பொருள் பொதிந்த அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்றே பந்தம் அணையும் நல்லூர் என்பதாகும். தீப்பந்து, பகைமை பந்து என்றவாறு பெருமளவில் தீய சக்திகள், அழிவு சக்திகளின் பெருக்கத்தையும் பந்தம் என்றுதானே குறிக்கின்றோம். இத்தகைய பகைமை விளைவுகளைத் தணிப்பதே பந்தணைநல்லூரில் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். உறவுகளிடையே, முதலாளி தொழிலாளிகளிடையே, அண்டை நாடுகளிடையே ஏற்படும் எத்தகைய பகைமை விளைவுகளையும் தணிப்பதே இத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளின் சிறப்பம்சமாகும். சரக் கொன்றை தல விருட்சமாக அமைந்த இத்தலம் குறிக்கும் தலையாய சிறப்பு இதுவே ஆகும். ஒருமுறை நம் சற்குரு ஒரு திருமண வைபவத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மண மக்களை அட்சதையுடன் ஒரு பூச்சரத்தை வைத்துத்தான் ஆசி அளித்தார்கள் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்தச் சர மலர்கள் உணர்த்தும் உண்மை இதுவே. எத்தகைய உறவுப் பகையையும் வேரறுக்க வல்லதே இத்தல சரக் கொன்றை மரமாகும். இத்தல விருட்ச நிழலில் இறைவி இறைவனை மணந்து திருக்கல்யாண கோலத்தில் அனைவருக்கும் அருளாட்சி வழங்கியதன் பின்னணி இதுவே. இத்திருத்தலத்தில் கல்யாண கோலத்தில் இறைவனும் இறைவியும் இடப்புறத்தில் மங்கள நாயகி எழுந்தருளிய வண்ணம் அருள் வழங்குகின்றனர். இதே முறையில் இலக்குமி தேவியும் ஆதிகேசவ பெருமாளும் இத்தலத்தில் எழுந்தருளி உள்ள கோலமே எத்தகைய திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் பாங்கிற்கு எடுத்துக் காட்டாக அமைகிறது. இது என்றோ, எந்த யுகத்திலோ நடந்த வரலாறு, புராண நிகழ்ச்சி கிடையாது. இன்றும் எத்தகைய திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியே இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும். இங்கு கல்யாண திருக்கோலத்தில் எழுந்தருளிய இறைமூர்த்திகளைத் தரிசிக்கும்போது அவர்களை நவசாளர தீப மண்டபத்தில் எழுந்தருளியவர்களாக சற்குருவின் கருணை உங்களுக்கு அமைத்துத் தந்துள்ளது. அதாவது நீங்கள் இந்த படத்தில் அமைந்துள்ள சாளரங்களை எண்ணிப் பார்த்தால் அவை நான்கிற்குள் இணைந்த ஐந்தாய், ஒன்பதை, ஒன்பது மாங்கல்ய இழைகளைக் குறிக்கும் மாங்கல்ய தத்துவமாக அமையும் என்பதே இந்த மங்கள சாளரத்தின் அமைப்பு. எனவே திருமணங்களை இந்த மங்கள சாளரங்களின் மேல் அமைத்துக் கொள்வதும், திருமணமானவர்கள் தங்கள் திருமண நாளிலோ அல்லது தங்கள் பிறந்த நாளிலோ இந்த நவசாளர மண்டபத்தின் மேல் (தரையில்) மாங்கல்யங்கள் மாற்றிக் கொள்வதால் எத்தகைய திருமண தோஷங்களும் நிவர்த்தியாகும்.

லட்சுமி தீர்த்தத்தில் லட்சுமி
திருமழபாடி

புற்று நோய்க்கு சிறிய அளவில் பாம்பு விஷத்தை மருந்தாக அளிப்பதை நீங்கள் அறிவீர்கள். இது எதைக் குறிக்கிறது ? பிறரை பழி வாங்க வேண்டும் என்ற விஷ எண்ணத்தால் தோன்றும் நோயே புற்று நோயாக இருப்பதால் இந்த விஷ எண்ணத்தை மாய்க்க, குணப்படுத்த நாம் பாம்பின் விஷத்தை பயன்படுத்துகிறோம். அது போலவே மனிதன் என்பவன் பந்தமில்லாமல், எந்த உறவும் இல்லாமல், பற்று இல்லாமல் வாழ முடியாது. இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்த பந்தம் அனைத்தையும் களையும் முகமாக திருமண பந்தம் என்ற ஒன்றை ஏற்படுத்தித் தந்தார்கள் என்பதே நம்மை வியக்க வைக்க உண்மையாகும். இந்த உண்மையை உணர வைக்கும் தலங்களுள் முதன்மையானதே பந்தம் அணையம் நல்லூர், பந்தம் களையும் நல்லூர், பந்தம் மாய்க்கும் நல்லூர் என்ற பந்தணைநல்லூராகும். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம் அல்லது குழப்புவோம். திழமழபாடி திருத்தலத்தில் திருப்பணி இயற்றும்போது நம் அடியார்கள் அனைவருக்கும் லட்சுமி கடாட்ச சக்திகளை அளிப்பதற்காக இங்குள்ள அம்பாள் சன்னதி எதிரில் உள்ள லட்சுமி தீர்த்த நீரால் அனைவருக்கும் அபிஷேகித்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவருமே இந்த அனுகிரகத்தைப் பெற்றார்கள் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். இது என்றோ நடந்த சற்குருவின் அரவணைப்பு கிடையாது என்பதே இங்கு நீங்கள் காணும் லட்சுமி தேவியின் அனுகிரக சக்தியாகும். லட்சுமி பூஜை காலத்தில், லட்சுமி தீர்த்தத்தில் குடும்ப ஒற்றுமை என்ற மாங்கல்ய சக்திகளை லட்சுமி தேவியுடன் இணைந்து அளிப்பவளே திருமழபாடி ஸ்ரீசுந்தராம்பிகை அம்மன் ஆவாள். (இங்குள்ள படத்தை பெரிதுபடுத்திப் பார்த்தால் லட்சுமி தேவியின் திருஉருவமான அரவத்தைக் காணலாம்.) எனவே பந்தம் அணையும் நல்லூர் என்பது அனைத்து பந்தங்களையும் இறைவனுடன் இணையும் பக்தன் அடிமை என்ற பந்தமாக மாற்றும் சிறப்பைக் கொண்டது என்பதே பந்தணைநல்லூர் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளின் மகிமை ஆகும். இதுவே இத்தலத்தின் தற்போதைய திருப்பெயரான பந்தநல்லூர் உணர்த்தும் மகிமையாகும், அதாவது பந்தம் அனைத்தும் நன்மைக்கே, இறைவனை அடைவதற்காகவே, இறைவனால் ஏற்படுத்தப்பட்டதே பந்தம் அனைத்துமே. இத்தகைய அபூர்வமான “பந்த” சக்திகளை அனுகிரகமாகப் பெற விரும்பும் பக்தர்கள் திருமழபாடி திருத்தலத்திலோ, பந்தணைநல்லூர் திருத்தலத்திலோ வெற்றிலை பாக்கு தேங்காய் மணம் உள்ள மலர்ச்சரம் இவற்றுடன் குறைந்தது ஒன்பது குண்டு மஞ்சள் கிழங்குகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் நலம். அமிர்தானந்தா மயி அன்னை அனைவரையும் “அணைப்பதன்” பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக இரகசியம் எவ்வளவு சுவைக்கின்றது பார்த்தீர்களா ? அன்னையின் அரவணைப்பே பந்தம் அணையும் நல்லூர் திருத்தல அனுகிரகமாக முகவுரை அளிக்கின்றது.

ஸ்ரீசட்டைநாதர் பந்தணைநல்லூர்

எங்கும் இல்லாத அதிசய கோலமாய் ஸ்ரீசட்டைநாதர் வண்ண உருவில் சிறுகுழந்தை வடிவில் இங்கு அருள்பாலிக்கிறார். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதோர் இறைவனை வணங்கி ஸ்ரீசட்டைநாதருக்கு நேர்த்தி வைத்து ஆலயத்தை அடிபிரதட்சிணம் வந்து வணங்குதலால் நற்பலன் பெறுவார்கள். கணவன் மனைவியைப் பிரிந்து வாழும் தம்பதிகளுக்கும், தன்னை விட படிப்பு, செல்வம், அந்தஸ்து, கௌரவம் இவற்றில் உயர்ந்து விளங்கும் கணவனோ மனைவியோ இத்தகைய வழிபாடுகளால் தாழ்வு மனப்பான்மை நீங்கி இல்லம் இல்லறமாக சிறப்படைய இத்தல வழிபாடு பெருந்துணை புரியும். குறிப்பாக திருமணமான பெண்களோ அல்லது திருமணமாகி தனித்து வாழும் பெண்களோ ஸ்ரீசட்டைநாதரின் திருவுருவத்தை கண் முன் கொண்டு தியானித்தலால் நன்னிலை பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 63 நாயன்மார்களில் அமர்ந்து அருளாட்சி அளிக்கும் தகுதி பெற்ற காரைக்கால் அம்மையார் இந்த தகுதியைப் பெற உதவியதே ஸ்ரீசட்டைநாதர் வழிபாடு என்பதே சித்தர்கள் உரைக்கும் தெய்வீக இரகசியம். திருமணம் என்ற பந்தம் வண்ணம் அளிக்கும் கோலமா அல்லது பல வண்ணங்களின் மாயமா என்பதைத் தெளிவாக உணர்த்துவதே இத்தல ஸ்ரீசட்டைநாதரின் வழிபாடாகும். தான் என்ற அகந்தை அகலும் வரை இத்தலத்தை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குதலால் எத்தகைய பந்தமும் நீங்கி இறைவனின் அடிமை என்ற பந்தமே மேலோங்கி நிற்க துணை புரிவதே இத்தல ஸ்ரீசட்டைநாதர் வழிபாடு ஆகும். நம் சற்குரு பல வியாதிகளால் துன்புற்றபோது உடலில் எவ்வித ஆடையுமின்றி பல நெருங்கிய அடியார்களுக்கு காட்சி அளித்தது இத்தகைய “சட்டைநாத” அனுகிரக சக்திகளை அளிப்பதற்காகப் புணைந்த குரு கருணையே என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? இந்த சட்டைநாத அனுகிரகமே நம் அகங்காரம் என்னும் சட்டையைக் கழற்றிப் போட உறுதுணையாக நிற்கும் குரு பிரசாதமாகும். இறைவனின் திருவுருவத்தை தியானிக்கும்போது திருவடிகளில் ஆரம்பித்தலே சிறப்பு. இத்தலத்தில் அருளும் ஸ்ரீசட்டைநாதர் தன் இடது கரத்தில் ஏற்று அருள்புரியும் தக்கோலம் என்னும் கதையிலிருந்து தியானத்தை ஆரம்பித்து, திருவடிகள், திருத்தொடைகள், திருபந்தம், திருஉந்தி, திருமார்பு, திருக்கரங்கள், திருமுகம், திருக்கண்கள் என்றவாறாக தியானத்தை தொடர்தல் நன்று. இந்த தியானத்தின் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்களை அவரவரே ஆழ்ந்து சிந்தித்து முன்னேறுதலே சிறப்பாகும்.
தன்னை அறிந்தால் தன்னலம் புரியும்
தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம்
என்று தேனினும் இனிய தன் குரலால் நம் சற்குரு அடிக்கடி பாடிக் காட்டுவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தோர் பலர், ஆனால், இதனினும் நம் சற்குருவின் தன்னலமற்ற தியாகத்தால் பெரும் பேரின்பம் பெற்ற இறை அடியார்கள் கோடி கோடியே. இத்தகைய பேரின்பத்தை அளிக்கவல்லதே இத்தல ஸ்ரீசட்டைநாதரின் வழிபாடாகும்.

ஸ்ரீசட்டைநாதர் பந்தணைநல்லூர்

மூலவர் ஸ்ரீபசுபதீஸ்வரர் வெண்ணிறத்துடன் பசுவின் குளம்படி பதிந்த கோலத்துடன் அருள்புரிகின்றார். இத்தகைய எழிற்கோலம் எத்தகைய கண்புரை நோய்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாகும். சுவாமியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் முகமாக ஸ்ரீகண்வ மகரிஷி பல உன்னத அடியார்களின் கண் நோய்களை ஏற்று இத்தலத்தில் சுயம்பு இறை மூர்த்தியை வழிபட்டு தன் கண் கோளாறுகள் அனைத்திற்கும் நிவாரணம் பெற்றார். இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி நாமும் பெருமாள் சன்னிதியில் அமைந்துள்ள நவசாளர சக்கரத்தில் ஒன்பது தீபங்களை (மூன்று நல்லெண்ணெய் தீபம், மூன்று தேங்காய் எண்ணெய் தீபம், மூன்று விளக்கெண்ணெய் தீபம்) ஏற்றி அல்லது நவசாளர திருஷ்டி நிவாரண தூப தீப கண்டியை ஏதாவது ஒரு எண்ணை கொண்டு ஏற்றி வழிபடுவதால் எத்தகைய கண் கோளாறுகளையும், கண் திருஷ்டி தோஷங்களையும் நீக்கலாம். தமிழ் அல்லது ஆங்கில மாதம் வரும் 21ம் தேதி, வியாழக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலமே. இத்தல நாயன்மார்களுக்கு 21 நாயன்மார்களுக்கு ஒரு எண்ணெய் அமையுமாறு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணையால் தீபமேற்றி வழிபடுதலும் நலமே. வழிபாட்டின் நிறைவில் சாரைப் பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகள் பதித்த இரண்டு பால் பேடா இனிப்புகளை ஒவ்வொரு பக்தருக்கும் தானம் அளித்தல் நலம். இந்த இரண்டு பேடாக்கள் இரண்டு கண் விழிகளைக் குறிப்பதாக அமையும். மாறு கண் தோஷங்களால் நின்று போன திருமணங்களும், தள்ளிப் போகும் திருமணங்களும் இத்தகைய வியாழக் கிழமை வழிபாடுகளால் சீர்பெறும். காமதேனுவாக வழிபட்ட அன்னை பார்வதி தேவியின் வழியில் நின்று நாமும் பாலின் கறந்த சூடு ஆறும் முன் அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதால் எத்தகைய வறுமை நிலையும் மறையும், செல்வம் விருத்தி ஆகும். இத்தலத்தில் சூரிய தீர்த்தம் கிழக்கு திசையில் அமைந்துள்ளதால் இங்கு அளிக்கப்படும் தர்ப்பண வழிபாடுகள் கண் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிப்பதுடன் நிலம், வீடு சம்பந்தமான எத்தகைய கோர்ட் வழக்குகளும் நல்ல முறையில் தீர்வு பெற இது உதவி செய்யும். குறைந்தது 12 ஆரஞ்சுப் பழங்களின் சாட்சியாக எந்நாளிலும் தர்ப்பணம் அளித்து அந்தக் கனிகளை தானமாக அளித்தலால் சொத்து சம்பந்தப்பட்ட தகராறுகள், பாகப் பிரிவினை குழப்பங்கள் தீர்வு பெறும். குழந்தை பாக்கியம் அற்றோரும், தங்கள் குழந்தைகள் நல்லவிதமாய் வளர வேண்டும் என்று எதிர்பார்ப்போரும் 12 செவ்வாழைப் பழங்களுக்குக் குறையாமல் வைத்து அவற்றின் சாட்சியாக தர்ப்பணம் அளித்து அந்தப் பழங்களை இங்குள்ள பசுக்களுக்கோ அல்லது பக்தர்களுக்கோ தானமாய் அளித்தலால் நலம் பெறுவர். பாக்கி உள்ளவர்களே நம்மிடம் தானம் பெறுவர் என்ற உண்மையை உணர்த்தும் தலம் இதுவே என்பதை அவரவர் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து இரசிக்கலாம்.

உறங்காப்புளி ஆழ்வார்திருநகரி

இங்குள்ள சரக்கொன்றை தல விருட்சம் படர்கொன்றை வகையைச் சார்ந்ததாகும். ஆழ்வார் திருநகரியில் உள்ள உறங்காப் புளி மரம் எத்தனையோ ஆண்டுகளாக நிலைத்து நிற்பது. உத்தம வைணவ பக்தரான நம்மாழ்வார் தோன்றிய அற்புத விருட்சம். ஒரு முறை மதுரகவி ஆழ்வார், "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று அவரைக் கேட்க "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார். நம்மாழ்வார் தோற்றத்திற்கு முன் செழித்து இப்புளிய மரம் நம்மாழ்வார் மறைந்த பின்னும் இன்றும் அவர் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் இது உறங்கா புளியா, மற்றவர் அறிவிற்கு விளங்கா புளியா ? இந்த உறங்கா புளி மரத்தைப் போலவே பந்தநல்லூரில் விளங்கும் சரக்கொன்றை மரமும் பல்லாண்டுகளாக செழித்து வளர்ந்துள்ளது. தங்கள் வம்சம் தலைமுறை தலைமுறைகளாகச் செழித்து வளர வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த தலவிருட்சத்தின் கனகசபேச நிழலிலோ அல்லது திருத்தலத்தின் ஏதாவது ஒரு அமைதியான இடத்திலோ பத்மாசனம் இட்டு குறைந்தது ஒரு மணி நேரம் அமர்தல் நலமே. முடியாதவர்கள் இங்கு கண்ணயர்தலும் சிறப்பே. மனதை வாட்டும் பிரச்னைகள், வியாதிகளால் உறக்கம் வராமல் தவிப்போர்கள் இந்த சரக்கொன்றையை வலம் வந்து வணங்குதலால் நல்லருள் பெறுவர். முறையாகக் கிட்டும் இரவு உறக்கத்திற்கும், பிரயாணம், சோம்பேறித்தனம் போன்ற காரணங்களினால் தோன்றும் பகல் உறக்கத்திற்கும், இறை நாமங்களை தொடர்ந்து ஓதுவதால் தோன்றும் உறக்க நிலைகளுக்கும், திருத்தலங்களில் கண்ணயறும்போது கிட்டும் உறக்கபாவனை நிலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை, யோக நிலைகளை தெளிவாக உணர்த்துவதே சரக்கொன்றை நிழல் தரும் மகாத்மியமாகும். கோபுரக் கலசங்களைப் போலவே குறித்த காலம் (சுமார் 12 ஆண்டுகள்) முடிந்த பின் தவம் இயற்ற சென்று விடும் கலச தேவதைகளைப் போல் சில திருத்தலங்களில் விளங்கும் தலவிருட்ச தேவதைகள் தலவிருட்சத்தையே விட்டு அடுத்த பல உயர்நிலைகளுக்காக சென்று விடுவது உண்டு. அத்தகைய தருணங்களில் அந்த தல விருட்சங்கள் பட்டுப் போய் அந்த இடத்தில் வேறு ஒரு தலவிருட்சம் தோன்றுவது உண்டு. வாலிகண்டபுரம் குருவில்வம் தலவிருட்சம் இவ்வகையைச் சார்ந்தது. இத்தகைய தல விருட்சங்கள் தரிசனம் கோயில் கும்பாபிஷேகப் பலன்களை அளிக்கக் கூடியவையே. நிழல் நிஜம் பற்றிய அறிவைப் பெற விரும்புவோர் இத்தல கொன்றை மர நிழலிலோ அல்லது இந்த நிழலை விட்டு விலகி கொளுத்தும் வெயிலில் அமர்ந்து தியானம் இயற்றுவதோ நலம். இந்த இரண்டு நிலைகளும் ஒன்றே என்பதை உணரும்போதுதான் நிழல் நிஜம் பற்றிய ஞானம் சித்திக்கும்.

திருத்தெங்கூர்

தேங்கிய பாவங்களைத்‌ தீர்க்கும்‌ திருத்தெங்கூர்‌ ஸ்ரீவெள்ளிமலை நாதர். அவரவருடைய சத்தியமான மனசாட்சியை விட உத்தமமான, புனிதமான உச்ச நீதிமன்றம்‌ ஒன்றை வேறெங்கும்‌ காண முடியாது. எவ்வளவு தீயவராக ஒருவர்‌ இருந்தாலும்‌ வாழ்க்கையின்‌ ஏதேனும்‌ ஒரு காலத்தில்‌ அவர் செய்த தவறுகளும்‌, பாவங்களும்‌ நிச்சயமாகக்‌ கண்‌ முன்‌ வந்து நிற்கும்‌. நல்ல மனம்‌, நல்ல புத்தி இரண்டையும்‌ மீறி‌ தீய சக்திகள் செயல்படும்‌ போதுதான்‌ மனிதன்‌ அளவுக்கு மீறிய குற்றங்களை, பாவங்களைப்‌ புரிகின்றான்‌. ஆனால்‌ கலியுகத்தில்‌ நடுத்தர வயது மற்றும்‌ வாழ்க்கையின்‌ இறுதி கட்ட காலத்தில்தான்‌ ஒவ்வொருவருக்கும்‌ தான்‌ செய்த பாவங்கள்‌, கொடுவினைகள்‌, தீவினைகள்‌ அனைத்தும்‌ சுற்றிச்‌ சுற்றி வந்து கோழைத்‌ தனத்தையும்‌, மரண பயத்தையும்‌ தந்து அல்லல்‌ படுத்துகின்றன.

ஸ்ரீவெள்ளிமலைநாதர் திருத்தெங்கூர்

எவ்வளவு பாவங்களைச்‌ செய்தாலும்‌ அவற்றிற்கு உரித்தான தண்டனைகளை ஏற்று அனுபவிக்கின்ற மன, உடல்‌ பக்குவத்தை ஒருவர்‌ பெற்றால்தான்‌ எவருக்குமே பாவ நிவர்த்திக்கான பரிகார, பிராயச்சித்தங்கள்‌ தரப்படுகின்றன. வெறுமனே பரிகாரங்களை மட்டும்‌ செய்து விட்டால்‌ பாவங்கள்‌ தீர்ந்து விடாது. மீண்டும்‌ அத்தவறுகளைச்‌ செய்யாதிருக்கவும்‌ வேண்டும்‌. ஆனால்‌ மறுபடியும்‌ தீவினைகளைச்‌ செய்திட்டால்‌ பரிகாரங்களும்‌ தம்‌ சக்திகளை இழந்து, பழையபடி தீவினைக்‌ கர்ம வினைகள்‌ சூழ்ந்து விடும்‌. ஏனென்றால்‌ எந்தப்‌ பரிகாரமுமே குறித்த நியதிகளுக்கு ஆட்பட்டே பலன்களை அளிக்கும்‌. தாமிழைத்த தவறுகளால்‌, அதர்மச்‌ செயல்களால்‌ எவரெல்லாம்‌ பாதிக்கப்பட்டார்களோ அவர்கள்‌ தக்க நிவாரணம்‌ பெறும்‌ வரை, பாதிப்புகளில்‌ இருந்து மீளும்‌ வரை, துன்பம்‌ அடைந்தவர்களே அவர்களே மன்னித்து, மன ஆறுதல்‌ அடையும்‌ வரை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள்‌ நிவர்த்தியாகும்‌ வரை எவரும்‌ தாம்‌ செய்த பாவங்களின்‌ விளைவுகளில்‌ இருந்து தப்பவே முடியாது.

திருத்தெங்கூர் சிவனிடம்‌ தவறுகளை மனதார ஒப்புவிப்பீர்‌!

எனினும்‌ குறித்த கால கட்டத்திலே தன்னுடைய பாவ வினைகளை எவரிடமாவது மனதார ஒப்புவித்து அதற்கு உரித்தான தண்டனைகளைப்‌ பெறுவதற்காக ஒருவர்‌ தன்னைத்‌ தயாராக்கிக்‌ கொள்வதற்கும்‌ அருள்‌ புரிகின்ற தலமும்‌ இறையருளால்‌ உண்டு. நல்ல இறைநெறிகளைத்‌ தழுவிய வாழ்க்கையைப்‌ பேணுவோரக்குத்‌ தாம்‌ எத்தகைய பாவத்திற்கான பரிகாரத்தைப்‌ பெறுவதற்குமான நல்வழி முறைகளும்‌ உண்மையாகவே ஆன்மீகத்தில்‌ எளிதில்‌ கிட்டுகின்றன!

திருத்துறைப்‌ பூண்டிக்கு அருகே உள்ள தெங்கூர்‌, தேங்கூர்‌, வெள்ளிமலை எனப்படும்‌ திருத்தெங்கூரில்‌ உள்ள ஸ்ரீவெள்ளிமலை நாதர்‌ சிவாலயமே எத்தகைய பெரும்‌ பாவங்களுக்குமான தண்டனைகளை உண்மையான மனசாட்சியுடன்‌ உறுதியான மன வைராக்கியத்துடன்‌ ஏற்பதற்கான நிலையைத்‌ தந்து தக்கப்‌ பிராயசித்தங்களையும்‌ பெற்றுத்‌ தர வல்ல மிக மிக அற்புதமான சிவத்‌ தலமாகும்‌.

கங்கையைப்‌ புனிதமாக்கும்‌ வெள்ளிமலையான்‌ சிவகங்கை தீர்த்தம்‌!

தன்னுடைய புனித நீரிலே தினமும் லட்சக் கணக்கான மக்கள் நீராடிக்‌ கழித்த பாவங்களை, கர்ம வினைகளை எல்லாம்‌ கங்கா தேவி தன்னுள்‌ மனதார ஏற்றுக் கோடானு கோடி பாவங்களுக்கு விமோசனம்‌ அளித்து வருகின்றாள்தானே! இவ்வாறாகத்‌ தாமேற்கும்‌ ஜீவன்களின்‌ தீவினைக்‌ கர்மங்களின்‌ பெருஞ்சுமை தாங்காது வருந்திய கங்காதேவி இறைவனிடம்‌ தம்‌ துயர்கள்‌ தீர நல்வரம்‌ வேண்டினள்‌. இறைவன்‌ அருளியபடி இத்தலத்‌சிவகங்கை தீர்த்தத்தில்‌ தேவ நீராடி, சுங்கா தேவியே தன்னைத்‌ தூய்மைப்‌ படுத்திக்‌ கொள்கின்ற நித்தியப்‌ புண்ணிய நதி வழிபாட்டுத்‌ திருத்தலங்களுள்‌ ஒன்றாகத்‌ திருத்தெங்கூர்‌ சிவகங்கை தீர்த்தம் விளங்குகின்றது. (கும்பகோணம்‌ மகாமகத்‌ தீர்த்தம்‌, திருவிடைமருதூர்‌ பித்ருமுக்தி தீர்த்தம்‌, ராமேஸ்வரம்‌ அக்னித்‌ தீர்த்தம்‌, நாச்சியார்கோவில் அஹோராத்ரீ தீர்த்தம்‌ போன்றவை பிற தீர்த்தங்களாம்‌). திருக்குளத் தீர்த்தங்கள் சிவகங்கை என்ற அபூர்வமான திருநாமத்துடன் அருள்பாலிப்பது மிகவும் அரிதாகும். திருஅண்ணாமலை, திருத்தவத்துறை என்னும் லால்குடி இத்தகைய சிவகங்கை தீர்த்தங்கள் கொண்டு விளங்குகின்றன.

ஸ்ரீபெரியநாயகி திருத்தெங்கூர்

இச்சிவத்‌ தலத்தில்‌ தை அமாவாசை, சனிப்‌ பிரதோஷ நாள்‌, மாத சிவராத்திரி, திருவாதிரை நட்சத்திர தினம்‌, திங்கட்‌ கிழமையில்‌ சந்திர ஹோரை நேரம்‌ போன்ற புனிதமான நாட்களில்‌ கடைபிடிக்க வேண்டிய விசேஷமான வழிபாட்டு முறைகளும்‌ உண்டு. இந்நாட்களில்‌ திருத்தெங்கூர்‌ ஸ்ரீவெள்ளிமலை நாத சுவாமியை வேண்டி, இங்கு மனதார‌ தாம்‌ செய்த பெரும்‌ பாவங்களையெல்லாம்‌ சிவனிடம்‌ உள்ளம்‌ உருகி ஒப்புவித்து, சிவபெருமானுக்குப்‌ புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, பக்சைக் கற்பூரம்‌, அத்தர்‌ ஆகிய பஞ்ச பூஷண தேவ திரவியக்‌ காப்பாகச்‌ சந்தனத்துடன் சேர்த்துக்‌ காப்பிட்டு, அபிஷேகித்து வழிபட்டு அடிப்‌ பிரதட்சிணம்‌ செய்திட வேண்டும்‌. தம்‌ பாவங்களுக்கான தக்கப்‌ பரிகாரங்களைப்‌ பெறுவதற்கான பூஜா பலன்களைத்‌ தருபவையே இத்தலத்தில்‌ கொண்டாடப்படும்‌ தை அமாவாசை மற்றும்‌ பிரதோஷ பூஜை வழிபாடுகளாம்.

தர்ம சக்தியே நற்பரிகாரம்‌ தரும்‌!

ஒன்பது நவகிரக மூர்த்திகளும் வழிபட்ட அபூர்வமான லிங்கங்கள்‌ இலங்குவது இத்தலத்தின்‌ விசேஷமான அம்சமாகும்‌. சுவாமிக்கு இலுப்பை எண்ணெய்‌, தேங்காய்‌ எண்ணெய்‌, நல்லெண்ணெய்‌, விளக்கெண்ணெய்‌, பசு நெய்‌ ஆகிய பஞ்சக் கூட்டு எண்ணெய்த்‌ தைலக்‌ காப்பு மற்றும்‌ தீபங்கள்‌ இட்டுக்‌ குறைந்தது ஒன்பது விதமான தான தர்மங்களைச் செய்து வருதல்‌ வேண்டும்‌. ஏழைகளுக்கு உணவிடுதல்‌, உடை அளித்தல்‌, மாங்கல்யச் சரடு மட்டும்‌ அணிந்திருக்கின்ற ஏழைச்‌ சுமங்கலிகளுக்குப்‌ பொன்‌ மாங்கல்யம்‌ அளித்தல்‌, பாதணிகள்‌ தானம், தலைக்கு எண்ணெய் கூட இல்லாத பாமர மக்களுக்கு எண்ணெய்‌ அளித்தல், தம்‌ குடும்ப சகிதம்‌ இவ்வாலயத்தில்‌ மலர்களைத் தொடுத்து ஏழைச்‌ சுமங்கலிகளுக்குப் புஷ்பங்களை அளித்தல்‌, ஊனமுற்றோர்க்கு உதவுதல்‌, கண்‌ பார்வையற்றோர்க்கும்‌ தக்க உதவிகளைச்செய்தல்‌ போன்ற ஒன்பது வகையான தான தர்மங்களை அவரவர்‌ வசதிக்கேற்பச்‌ செய்து வர வேண்டும்‌. ஒரு புது சிறு துண்டை அவரவர் வசதிக்கு ஏற்ப தானமாக அளிப்பது வஸ்திர தானத்தில் அடங்கும். இத்தகைய நவதான தர்ம சக்திகள் பரிபூர்ணமான பலன்களைத் தருவதாக விளங்குகின்ற‌ அபூர்பமான தலங்களுள் ஒன்றாகக் கலியுகத்தில் திருஅண்ணாமலை, திருவிடைமருதூர், ராமேஸ்வரம் போன்று திருத்தெங்கூரும் விளங்குவது நம் பெரும் பாக்கியமே! ஏனென்றால் ஒவ்வொரு வகை தான சக்தியையும் பரிபூரணமாகப் பெற அந்தந்தக் குறித்த தலத்திற்குச் செல்ல வேண்டியதிருக்கும் அல்லவா!

இவ்வகையில் திருத்தெங்கூர் நாதரை முறையாக வழிபட்டு வருவோர்க்கு அவரவருடைய தீய கர்ம வினைகளால் விளைந்த துன்பங்களுக்கான தண்டனைகளை மனதார ஏற்று, அனுபவித்து அவற்றிற்கானப் பிராயச்சித்த வழிகளைப் பெறுவதற்கு ஸ்ரீகெளதம மாமுனிவரே தம் பத்னியாம் அகல்யையுடன் முன் வந்து இத்தலத்தில் துணை புரிகின்றார். ஆம், ஜீவன்களுடைய பாவ நிவர்த்திக்கான பரிகாரங்களைப் பெற அகல்யா தேவியுடன் கெளதம முனிவரும் மூர்த்தி, தீர்த்த, தல வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான நாளான தை அமாவாசையன்று இங்கு இறைவனை வழிபட்டுத் தம் தபோபலன்களை இங்கு பதிக்கின்றனர்.

ஆம், இன்றும் ஒவ்வொரு விநாடி நேரமும் வசிஷ்டர், கெளதமர் போன்ற மகரிஷிகள் தவம் புரிந்து கொண்டு ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தங்கள் தபோ பலன்களைப் பல்லாயிரம் தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும் பக்தியுடன் அர்ப்பணித்தவாறு, நித்ய சிரஞ்சீவிகளாக ஜீவன்களின்   மேம்பாட்டிற்காகத் தம்மைத் தியாகம் செய்தவாறு உள்ளனர்.

திருமகளே மனமுவந்து திருவருள்கூட்டும் திருத்தலம்!

சிவகங்கை தீர்த்தம் திருத்தெங்கூர்

திருமகள் வழிபட்ட தலம் என்பதோடு நவ கிரக மூர்த்திகளும் நவ லிங்கங்களை சனிப் பிரதோஷ தினத்தன்று வழிபட்ட தலமும் திருத்தெங்கூர்தான்! மேலும் இத்தலத்தின் முக்கியமான தெய்வீக பாக்கியம் மற்றொன்றும் உண்டு! தனக்கு எவ்வித வழிவகையும், வசதிகளும் இல்லையே, எவ்வாறு பிராயச்சித்த முறைகளை நிறைவேற்றுவது என்று எண்ணித் திகைப்போர்க்கும், எத்தகைய பரிகாரங்களையும் நிறைவேற்றுவதற்குத் திருமகளும், நவலிங்க சக்திகளும் உதவுகின்ற இறைஅனுபூதிகளை அவரவர் கண்கூடாக தாமாகவே உணரப் பெறுவர்! இத்தகைய சக்தி வாய்ந்த சிவத் தலமிது!

கடுமையான சச்சரவுகள், வாய்ச் சண்டையால் பகைமையால் உண்டாகிப் பிரிந்த குடும்பம் ஒன்று சேர இங்கு சனிப் பிரதோஷ வழிபாட்டை நிகழ்த்தித் தங்களால் இயன்ற அளவிற்கு ஒன்பது வகையான தான தர்மங்களைச் செய்து வரத் தேவையற்ற பகைமை நீங்கிக் குடும்பம் ஒன்று சேரும். சொத்து சம்பந்தமாக விரோதம் ஏற்பட்டுப் பிரிந்தோர் ஒற்றுமையுடன் சேர்ந்திடவும். வியாபாரக் கூட்டில் ஏற்படும் மனக் கசப்புகள் தணிந்து நன்முறையில் வியாபாரம் மலர்ந்திடவும் இங்கு தை அமாவாசை அன்று அதிதிப் படையலாக வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலையில் பாகற்காய், புடலங்காய், வாழைக்காய், பிரண்டை, சேப்பங் கிழங்கு போன்ற பித்ரு சக்தி நிறைந்த காய்கறிகள் கலந்த உணவை தானமாக அளித்து வருதல் வேண்டும். திருத்தெங்கூர் திருத்தலத்தின் புராதனப் பெயர் திருத்தேங்கூர் என்பதாகும். ஊழிக் காலத்திலும் கடல் நீரில் மூழ்காமல் இத்தலம் தூய்மையான நீர் தேங்கி அருள்புரியும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் நவகிரக மூர்த்திகள் இத்தலத்தில் லிங்க மூர்த்திகளை அமைத்து வழிபட்டதால் நவகிரக சக்திகள் நிரந்தரமாகத் தேங்கி அருள்புரியும் திருத்தலம் என்ற பெயரும் உண்டு.

திருத்தெங்கூர்

இது இன்றும் நடக்கும் இறை லீலை என்பதற்கு சாட்சியாக ஒவ்வொரு வருடமும் குருவிற்கு உரிய பங்குனி மாதத்தில் ஏழு நாட்களும் சூரிய பகவான் தன்னுடைய பொற்கிரணங்களால் இறைவன் ஸ்ரீவெள்ளிமலை நாதரை தரிசிக்க அந்த ஏழு நாட்களிலும் வரிசைக் கிரமமாக அதாவது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனீஸ்வரன், குரு, செவ்வாய் என்ற வரிசையில் அனைத்து நவகிரக மூர்த்திகளும் வெள்ளிக் கிரணங்களின் ஊடே இறைவனை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். எனவே பங்குனி மாதத்தில் அமையும் இந்த ஏழு நாட்களிலும் இறைவனை தரிசித்து வழிபடுதலால் கிட்டும் பலன்கள் அமோகம். சிறப்பாக கண் சம்பந்தப்பட்ட எத்தகைய நோய்களும் தீர்வதுடன், எத்தகைய வறுமை நிலையும் குருவருளால் சீர்படும் என்பதே அனுபவத்தில் அனைவரும் உணரக் கூடிய ஆனந்தமாகும். காலவர்த்தமான சூழ்நிலைகளால் இந்த சூரிய பூஜையை நாம் தரிசிக்க முடியாமல் போனாலும் பங்குனி மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை அமையும் எந்த ஏழு நாட்களிலும் திருத்தெங்கூர் சிவங்கை தீர்த்தத்தில் நீராடி திருத்தலத்தில் இறை மூர்த்திகளை வழிபடுவதால் மேற்கண்ட பலன்கள் கனியும் என்று சித்தர்கள் உறுதியளிக்கின்றனர். ஒரு முறை பெருமாள் வாமன வடிவில் தோன்றி மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை யாசகமாக கேட்டார் அல்லவா ? பெருமாளின் லீலையிடமிருந்து தன் அருமைச் சீடனான மகாபலிச் சக்கரவர்த்தியைக் காக்க சுக்ராச்சாரியார் வாமன மூர்த்தியின் தீர்த்த கண்டியை வண்டு வடிவில் சென்று அடைத்து விட்டார். இதை அறியாதவரா பெருமாள் ? ஒரு தர்ப்பையைக் கொண்டு தீர்த்த கண்டியைக் குத்தவே சுக்கிராச்சாரியார் வலி பொறுக்க முடியாமல் தன்னுடைய கண் பார்வையையும் இழந்து கண்டியிலிருந்து வெளியேறினார். சீடனைக் காக்க தானிழந்த கண் பார்வையைப் பெற பல திருத்தலங்களிலும் இறை மூர்த்திகளை வணங்கி வழிபட்டு வந்தார். அவ்வாறு வழிபட்டு வந்த சுக்கிராச்சாரியார் அடைந்த திருத்தலமே திருத்தெங்கூர் ஆகும். ஸ்ரீவெள்ளிமலை நாதர் சுக்கிராச்சாரியாருக்கு காட்சி அளித்து அவர் திருஅண்ணாமலையை வலம் வந்து கண்பார்வை பெறுமாறு வழிகாட்டினார். எனவே கண் பார்வைக் கோளாறு உள்ளவர்களும், ஜாதக ரீதியாக சுக்கிரபகவான் நீச்சமாக அமைந்தவர்களும் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமே திருத்தெங்கூர் ஆகும்.

நாய் பெற்ற தெங்கம்பழம் என்ற ஒரு பழமொழி உண்டு. தெங்கம் என்றால் தேங்காய். தேங்காயை வைத்துக் கொண்டு உருட்டி விளையாட முடியுமே தவிர அதை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை ஒரு நாயால் சுவைக்க முடியாது என்று மேலோட்டமாக இந்த பழமொழிக்கு பொருள் கூறினாலும் உண்மையில் நாய்க்கு உள்ள நன்றி உணர்வு வேறு எந்த ஜீவ ராசிக்கும் கிடையாது என்பதைப் பலரும் தங்கள் அனுபத்தால் உணர்ந்திருப்பர். பற்பல சூழ்நிலைகளால் தம்மை ஆதரித்த குருநாதரை உதாசீனப்படுத்தியவர்கள், குருவருளை முறையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் காலம் கடந்த நிலையிலும் தங்கள் தவறை உணர்ந்து அவர்கள் நன்னிலை அடைய வழிகோலுவதே தென்னை மரத்தை தலவிருட்சமாக உடைய திருத்தெங்கூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். தேங்காய் சாதமும், நாரத்தை ஊறுகாய் தானமும் இத்தலத்தில் அன்னதானமாக அளித்தலால் எத்தகைய நன்றி கொன்ற தவறுக்கும் தக்க பரிகாரம் சுட்டிக் காட்டப்படும். கவனிக்க, பரிகாரம் மட்டுமே சுட்டிக் காட்டப்படும்.

ஏனோதானோ என்று இயந்திர கதியில் வாழ்ந்தது போதும்! இனியேனும் வாழ்வில் செய்த தவறுகளுக்குத் தேவ மன்னிப்பைப் பெறும் இறைவழி முறைகளைக் கையாண்டு நியாயமான, தார்மீக ரீதியான வழியிலான அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்களாக!

ஸ்ரீநீலகண்ட சித்தர்

ஸ்படிக சக்தி பெருகும் பிரதோஷ, மூல நட்சத்திர நாட்கள்!

நல்ஒழுக்கத்திற்கு நீலகண்டச் சித்தர் அருளும் பிரதோஷ கிரிவல கோளினா ஸ்படிக மணி சக்தி!

ஆஞ்சநேயருக்கு உரித்தான மூல நட்சத்திர நாளில் ருத்ராட்ச மணி, ஸ்படிகம் தாங்கி அருணாசல கிரிவலம் வந்து தீய வழக்கங்களுக்குத் தீர்வு காண்பீர்!

பாற்கடலில் தோன்ற இருக்கின்ற ஆலகால விஷத்தை ஏற்பதற்கான அற்புதமான திருவிளையாடலைப் புனைந்திடவே, பாற்கடல் தோன்றிய வைபவத்திற்குப் பல கோடி யுகங்களுக்கு முன்னரேயே, சிவபெருமான் திருநீலக்குடி, ஆலங்குடியிலும் மற்றும் பல தலங்களிலும் சித்தர்களை நவபூஷண யோகங்களை மேற்கொள்ளச் செய்து தாமே முன் நின்று வழி நடத்தியும் சிறப்புக் கூட்டினார். இந்த அரிய யோகத்தின் மகத்துவம் யாதோ?

திருநீலகண்டன் திருவடிவாழ் திவ்யச் சித்தர்!

ஸ்ரீமகாகணபதி திருத்தெங்கூர்

நீலகண்டச் சித்தர் என்பார் எப்போதும் சிவனுடைய திருவடிகளிலேயே திளைத்திருப்பவர். தினமும் சூரிய உதயத்தின்போது இவர் சிவபெருமானுடைய தொண்டைப் (கண்டப்) பகுதியைத் தரிசித்து அதன் பின்னரே தன்னுடைய இறைப் பணிகளைத் தொடங்குவார். இறைவனுடைய திருவடிகளிலேயே எப்போதும் உய்த்திருந்தவாறே இறைவன் அளிக்கின்ற ஆணைகளை எல்லாம் இன்றும் சிரமேற்கொண்டு நடத்தி முடித்துத் தருபவரே நீலகண்ட சித்தர் ஆவார்.

முதலில் இவா் இறைவனுடைய திருவடிகளைப் பற்றிய போது எவ்வித காரணப் பெயரும் இவருக்குக் கிடையாது. ஆனால் பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை இறைவன் உண்டபோது அவருடைய கண்டப் பகுதியானது நீலநிறமாக இருந்ததை, உமையவள் காணும் முன்னரேயே முதன் முதலாக சிவபெருமானே அருளிய நவபூஷண யோக சக்தியின் வலிமையால் ஆதி சிவனின் திருநீலகண்ட அவதாரக் கோலத்தை இச்சித்தர்பிரானே முதன்முதலாக தரிசித்தமையால், சித்தர்களுக்கே உரித்தான காரணப் பெயர் சாங்கியப்படி இவருக்கு நீலகண்ட சித்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

விடகண்ட வைபவத்தில், தம் திருக்கர‌ங்களால், சிவபெருமானின் கண்டப் பகுதியைப் பிடித்துக் கொண்டமையால் அம்பிகையால் முதலில் சிவபெருமானுடைய ஸ்ரீநீலகண்டேஸ்வர அவதாரக் கோல தரிசனத்தைப் பெறமுடியவில்லை!  இச்சித்தர்பிரானுக்குப் பிறகே அம்பிகை சிவனின் நீலகண்ட அவதாரத்தைத் தரிசித்தனள். இவரிடமிருந்தும் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி ரசமணிகளை உருவாக்கும் பல யோக சித்திகளைத் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் பெற்றார். இன்றைக்கும் பாக்யம் உள்ளோர்க்கு சிவபெருமான் நீலகண்ட அவதாரம் பூண்ட பிரதோஷத் திதி நேர கிரிவலத்தில், அருணாசல மலையில் குறித்ததோர் தரிசனமானது நீலகண்ட தரிசனமாக விளங்குகின்றது. நீலகண்ட சித்தர் தூலமாகவோ, குட்சுமமாகவோ இந்நேரத்தில் இத்தரிசனத்தைக் கண்டு தற்போதைய கலியுகத்திலும் வழிபடுகின்றார்.

இறைவனுடைய திருக்கண்டத்தில் விஷ மணிகள் தோன்றும் என்பதை தீர்க்க தரிசனமாக அறிந்த நீலகண்ட சித்தர் தன்னுடைய நவபாஷாண பூஷண தபோ பலன்களையெல்லாம் ஒன்று திரட்டி அவற்றை ஸ்படிக நீலகண்ட மணிகளாக்கி, தம் யோகப் பின்னல்களால் திருமாமணி (ஸ்படிக) மாலையுமாக ஆக்கிச் சிவபெருமானுடைய திருக்கண்டப் பகுதியிலே பெரு மகிழ்வுடன் சூட்டினார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருத்தெங்கூர்

கோளினா மாலையாம்!

கோளினாமாலை என்பதானது நீலகண்டச் சித்தர் அருளியபடி கழுத்தில் தொண்டைக் குழியை ஒட்டி ருத்ராட்சத்தை வைத்து அணிவதாகும். இன்றைக்குப் பலரும் கோளினா யோக முறையில் கழுத்தின் உப்பிய தொண்டைக் குழாயைத் தொடும் வகையில் ருத்ராட்சத்தினை கட்டியிருப்பார்கள். அதாவது ருத்ராட்சத்தை மாலை போல் அணியாது கழுத்தைச் சுற்றி தொண்டைக் குழியில் ஒரே ஒரு ருத்ராட்சமோ, ஸ்படிக மணியாகவோ அணிவதற்குக் கோளினாமாலை என்று பெயர். இதனை முதன் முதலாக யோக பாவனையாகச் சிவபெருமானிடம் இருந்து பெற்று உலகிற்கு உணர்த்தியவரே நீலகண்ட சித்தர் ஆவார். நவகிரக மூர்த்திகள் ஒரே திசையில் நின்று இறைவனுடைய திருக்கண்டத்தில் பொலியும் கோளினா ஸ்படிக மணியை தரிசித்த தலங்களே இன்று "கோளிலித் தலங்களாக" விளங்குகின்றன! (பந்தணை நல்லூர், திருக்குவளை, வைதீஸ்வரன் கோயில்)! ஒரே திசை நோக்கி இறைவனை வணங்கும் நவகிரக மூர்த்திகளுக்கு காஞ்சனாதி ஸ்படிகம் அணிவித்து சனிப் பிரதோஷ நாளன்று வழிபட்டு இல்லத்தில் வைத்து பூஜித்தலால் கோள் தசா, புக்தி விளைவுகள் நன்முறையாக அமையும்!

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்கின்ற திருக்கோலம் திருப்பாற்கடல் வைபவமாக ஏற்படும் என்பதை அறிந்தே எத்தகைய கொடிய விஷத்தையும் தன்னுள் தாங்கி அதனை நீலமணிகளாக்கும் வல்லமை கொண்ட நீலகண்ட மணிகளைத் தன்னுடைய யோக சக்தியால் நீலகண்ட சித்தர்பிரான் உருவாக்கினார். இம்மாதவ ஸ்படிக மாமணிகளையே நீலகண்ட சித்தர் சிவபெருமானுடைய தொண்டைக் குழிப் பகுதியில் ஸ்படிக மணிகளாக்கிச் சூட வைத்தார். ஆலகால விஷத்தை இறைவன் உண்ட போது அவருடைய கண்டப் பகுதியில் சற்று நேரம் தோன்றிய நீலகண்ட விஷமானது இந்த யோக ஸ்படிக மணிகளால் உறிஞ்சப் பெற்று விஷமும் நற்சக்தியாய் மாறிற்று.

சிவத் திருக்கண்டத்தில் பவசிவ திருமாமணிகள்!

ஸ்படிகத்திற்குத் "திருமாமணி" என்ற பெயரும் உண்டு. நீலகண்ட சித்தரால் யோக பூர்வமாக உருவாக்கப் பெற்ற ஒரு வகை விசேஷ ஸ்படிக மணிகளை இறைவனே தம் திருக்கரங்களால ஏற்று அணிந்தமையாலும் இறைவனுடைய திருக்கண்டத்திற்கு மேல் விடம் செல்லலாகாது என்பதற்காகப் பார்வதி தேவியும் தம் திருவிரல்களால் ஸ்பரிசித்தமையாலும் இந்த நீலகண்ட மணிகள்தாம் "பிரபு கண்ட மணிகளாக" மாறி அர்த்த நாரீஸ்வரத் தத்துவத்தையும், பார்வதி பரமேஸ்வரத் தத்துவத்தையும் கொண்டு விளங்குகின்றன. இச்சீரிய பிரபு கண்ட மணிகளையே நீலகண்ட சித்தரானவர் ஸ்ரீபால ஆஞ்சநேயப் பெருமானுடைய ப்ரதான அம்ச தூளிகா தொட்டிலில் பிரபு கண்ட மணிகளாக ஆக்கித் தொகுத்துத் தந்தார்.

திருத்தெங்கூர்

ஸ்ரீபால ஆஞ்சநேயருடைய புனிதமான தொட்டிலில் பிரபு கண்ட மணிகள் தொகுக்கப்பட்டுள்ள சங்கிலி கோர்க்கும் முறையும் கோளினா யோகச் சங்கிலி முறையைச் சார்ந்ததாம். வேத அக்னி சக்திகளை உடையது. இதனையும் உருவாக்கித் தொகுத்து தந்தவரே நீலகண்ட சித்தர் ஆவார். இவ்வாறாகச் சித்தர்கள் இறைவனுடைய பல அவதாரங்களிலும் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்கள். இச்சங்கிலியுடன் கூடிய பிரபு கண்ட மணி அமைந்துள்ள தொட்டிலில் சயனிக்கும் பாக்யம் பெற்றோர்க்கு ஒவ்வொரு விநாடியும் வேத பாஸ்கரச் சக்திப் பொழிவு ஏற்பட்டு இறையருவியாய்ப் பொழிந்து கொண்டே இருக்கும். இச்சங்கிலிகள் யாவும் அனைத்து விதமான நவரத்தினக் கற்களாலும் குறிப்பாக மாணிக்கக் கற்களாலும் தாமாகவே சுயம்புவாகவே நிரப்பப் பெற்றவையாம்.

ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி எவரும் அண்ட முடியாத பெரும் உஷ்ணம் கொண்ட சூரிய மண்டலத்தில். சூரிய பகவானிடம் இருந்தே அனைத்து வேத மந்திரங்களையும் கற்ற போது, சூரிய பகவானுடைய ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் ஓடுகின்ற வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறே அவரும் ஒவ்வொரு விநாடியும், சூரிய பகவானைத் தொடர்ந்து விரைந்து சென்று பல அரிய வேத மந்திரங்களைக் கற்றார். பூலோகத்தில்தாம் நாம் நான்மறையென வேதங்களை நான்காய்க் காண்கின்றோம். வேதங்களுக்கு மூலாதாரமாக‌ விளங்குகின்ற சூரிய மண்டலத்தில் நாம் அறியாத எத்தனையோ வேதங்கள் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

சூரிய பகவானுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறு செல்ல வேண்டி இருந்ததால் ஸ்ரீயாக்ஞவல்கிய மாமுனியால் சில வேத மந்திரங்களைச் சூரிய பகவானிடமிருந்து கிரகிக்க முடியாமல் போயிற்று. அந்த அளவிற்கு யோக சக்திகளை மிகவும் துரிதமாகக் கிரகித்துத் திரட்டி சென்றால் தான் அத்தகைய விஸ்வாம்பர வேத மந்திரங்களை, சூரிய பகவானிடமிருந்து கிரகித்துக் கொள்ள முடியும். ஏனென்றால் அந்த வேத மந்திரங்களை ஓதும் போதெல்லாம் அவற்றின் அதி உஷ்ண பீஜாட்சர சக்தியால் சூரிய பகவானுடைய ரதமானது மிக மிக விரைவாகச் சென்று விட்டமையால் ஸ்ரீயாக்ஞ வல்கியரால் தொடர்ந்து செல்ல முடியாமல் போயிற்று.

தூளியிற் பொலியும் துதி மறைப் பேரொலி!

இதனால் கவலையுற்ற யாக்ஞவல்கிய மாமுனியும், ஸ்ரீஅகத்திய மாமுனிவரை நாடிட அவரும், "மாமுனியே! ஸ்ரீஆஞ்சநேயருடைய பிறப்பின் போது அவருடைய பிரதான அம்ச தூளிகா தொட்டில் சக்கரத்தின் மேல் பிரகாசிக்கும் அபூர்வமான ஞானச் சங்கிலியில் தொங்கிப் பிரகாசிக்கும் பிரபு கண்ட மணியை முதலில் தரிசித்தல் வேண்டும்! சூரியச் சக்கரங்களினால், கோளினா யோகச் சுருள் (முறையினால் ஆக்கப்பட்ட அந்தச் சங்கிலியில் எவரெல்லாம் யோக பூர்வமாக அமர்கின்றாரோ, அவருக்கு வேறு முறைகளால் கற்க முடியாத) அபூர்வ ஞான வேத சக்திகளெல்லாம் தாமாகவே கிட்டும்!" என்று உரைத்திட்டார். ஸ்ரீபால ஆஞ்சநேயருடைய தூளியில் பிரபு கண்ட மணியைத் தாங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியில் ஸ்ரீயாக்ஞவல்கிய மாமுனி அமர்ந்தவுடனேயே அவருக்குப் பலவிதமான ஞான சித்திகள் கை வரப் பெற்றன. இவற்றை அவர் மூல நட்சத்திர கிரிவல பலன்களாக மக்கள் பெறுவதற்காகத் திருஅண்ணாமலையில் மூல பாத தரிசனத்தில் பதித்தார்.

இவ்வாறாக ஸ்ரீபால ஆஞ்சநேயப் பெருமானின் தோற்றத்தில் பல அவதார லீலைகளும், சித்தர்கள், மகரிஷிகளின் அனுபூதிகளும் நிறைந்துள்ளமையால் ஸ்ரீஆஞ்சநேய வழிபாடு பல தெய்வ மூர்த்திகளின் அனுகிரகங்களையும், மகரிஷிகளின், சித்தர்களின் ஆசிகளையும் பொழிகின்றது! எனவே ஆஞ்சநேயருக்கு உரித்தான மூல நட்சத்திர நாளில் மணி, சலங்கை, ஜால்ராவை ஒலித்தவாறும், காலில் சதங்கை, திருவெண்டயம் அணிந்து இவற்றின் அரிய வேத பீஜாட்சர ஒலிகளோடும் திருஅண்ணாமலை, நெடுங்குடி, மலைக் கோட்டை போன்ற தலங்களில் கிரிவலம் வருவோர்க்கு மகத்தான வேத சக்திகள் கிட்டுகின்றன.

புகை பிடித்தல், மது போன்ற தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டோர் நன்னிலை பெறுவதற்குத் திருஅண்ணாமலையில் கழுத்தில் கோளினா முறையில் ஸ்படிக மணி, ருத்ராட்சம் தரித்தும், கைகளில் ருத்ராட்சம், ஸ்படிகம், ம்ருதுள மணி கங்கண் தாங்கியும், அணிந்தும் மலைத் தலங்களில் மூல நட்சத்திர நாளில் கிரிவலம் வருத‌ல் வேண்டும். சிறுவர்கள், பிள்ளைகள், இளைஞர்கள், கன்னிப் பெண்கள் தங்கள் இளமைப் பருவத்தை பிரம்மச்சர்ய தேவ சக்தியுடன் கொண்டு திருமண வாழ்வில் புனிதமான கற்பினைப் பேணிடவும், சாந்தமான வாழ்வு அமைந்திடவும் ஸ்படிகம் தரித்தவாறான மூல நட்சத்திர நாளிலான திருஅண்ணாமலை கிரிவலம் அருள் புரியும்.

அம்மி மிதித்தல்

அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்த்தல்

* திருமண நாளன்று அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரத்தை தரிசித்தல் மட்டும் போதாது. தினந்தோறும் தம்பதியினர் வானில் அருந்ததி நட்சத்திரத்தைத் தரிசித்து வருதல் வேண்டும். இதனால் இல்லறத்தில் தெய்வீக சாந்தத்தை, நல்அமைதியை நன்கு நிலை நாட்ட முடியும்.

* அருந்ததி நட்சத்திர தரிசனமானது கலியுகத்தில் எண்ணங்களில் புரண்டு நாறிடும் மனதைக் கழுவித் தூய்மைப்படுத்த பெரிதும் உதவும் இயற்கையான இறை உபகரணமாகும்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்ற சொல் வழக்குத் திருமண வைபவத்தில் பிரதானமாக விளங்குகின்றது. ஆனால் தற்காலத்தில் யார்தான் முறையாக அம்மி மிதித்து, அருந்ததி (நட்சத்திரத்தைப்) பார்க்கின்ற நல்வர மங்களக் காரியத்தைக் கடைபிடிக்கின்றார்கள்?

திருமணத்தில் தாலி கட்டும் சடங்கிற்குப் பின்தான் தம்பதிகள் ஒன்று சேர்ந்து அமர வேண்டும் என்ற தர்ம நியதி இருக்கும்போது தற்காலத்தில் பலவிதமான நவீனமய காரணங்களுக்காக‌ முறையற்ற வகையில் திருமணத்திற்கு முந்தைய நாளிலேயே reception (வரவேற்பு) என்ற ஒன்றை. வைத்து மாப்பிள்ளையையும், பெண்ணையும் சேர்த்து அமர வைக்கின்ற தவறான வழக்கம் இருந்து வருகின்றது. இதனாலும் பலவிதமான தோஷங்கள் ஏற்பட்டுத் திருமண வாழ்வில் தம்பதிகளுக்குப் பல துன்பங்கள் உண்டாகும்.

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி
கரந்தட்டாங்குடி தஞ்சாவூர்

திருமணத்தின் நம் பாரதப் பண்பாட்டின்பண்பை அர்த்தமுள்ள நியதிகள் யாவுமே மாப்பிள்ளை, பெண் இருவருடைய உடல் நாளங்களில் பல அரிய தெய்வ சக்திகளையும் தேவ சித்திகளையும் உருவாக்கி அதன் பின்னரே புனிதமான தாம்பத்யப் பிணைப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன! மகத்தான பாரம்பரியம் மிக்க "அம்மி மிதித்தல்" (அம்மியிற் பாதம் செறிதல்) வைபவமும் இதிலொன்றாம்.

திருமணச் சடங்கில் கூடும் திவ்யமான மங்கள ரேகைகள்!

அம்மி மிதித்தலுக்கும், அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்ப்பதற்கும் என்ன தொடர்பு? கணவன் மனைவி என்ற ஒரு அரிய தெய்வீகப் பிணைப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருவருமே பூமியிலிருந்தும், வானிலிருந்தும் பலவிதமான விசேஷமான மங்கள ரேகைகளை கிரகித்துப் பெறுதல் வேண்டும். எத்தனையோ விதமான மங்கள ரேகைகள் உண்டு. சுமங்கலித்வ ரேகைகள், தீர்த்த ரேகைகள், சாணக்கிய ரேகைகள், தீர்க ரேகைகள், யோக பாவன ரேகைகள் போன்ற திருமண நல்வாழ்விற்குத் துணை புரிகின்ற சுமங்கலித்வ ரேகைகள் இவை அனைத்தையும் பூமியிலும், வானிலும் இறைவன் நிறைத்திருக்கின்றான். இவற்றை பூஜைகள், ஹோமம், வழிபாட்டு முறைகள், வேத மந்திரங்கள் போன்றவை மூலமாகவே பெற முடியும்.

எனவே இவற்றைத் தக்க சற்குரு, பெரியோர் மூலமாகப் பெற்றால்தானே இல்ல(ற)த்தில் சாந்தம் நிலவும்! இதற்காகத்தான் பலவிதமான நியதிகள், பூஜைகள், வழிபாடுகள் மூலமாக இந்த சுமங்கலித்துவ ரேகைகளை நாம் பெறுவதற்காகவே இறைவன் பல இறைவழிகளை, பண்டிகைகளை, தான தர்ம, ஹோம வழிமுறைகளை வகுத்துள்ளான். சில குறித்த வகை ஹோமங்களில் சகஸ்ர பத்மம் போன்ற அரிய ஹோம சமூலத் திரவியங்களை ஆஹூதியாக அளித்திடில் அருந்ததி மற்றும் எண்ணற்ற நட்சத்திர ஒளிக் கிரணங்கள் ஹோமாக்னியில் தாமாகவே தோன்றி ஆசீர்வதிக்கின்றன!

ரேகைகள் ஈர்க்கும் மங்கள சக்தி!

இவ்வாறு கை ரேகைகள், பாத ரேகைகள், நெற்றி ரேகைகள், தலைச் சுழிகள், மச்சங்கள் மூலமாக வானிலும், பூமியிலும் நிரவியுள்ள சுமங்கலித்துவ ரேகைக் கிரணங்களை கிரகித்துப் பெற்றிடலாம். இவற்றை நல்கும் பூஜைகளையும் தக்க சற்குரு, பெரியோர்கள் மூலமாக அறிந்து கடைபிடிக்கும் போது சுமங்கலித்வ ரேகைகள் இல்லறத்தில் விருத்தியாகி குடும்ப ஒற்றுமைக்கு, மன சாந்திக்கு, கணவனின் ஆரோக்யத்திற்கும், நீண்ட ஆயுளுக்குமான நல்வரங்களைத் தரும். இவற்றில் உள்ளங்கால் பாத ரேகைகளும் பூமியில் நிறைந்துள்ள சுமங்கலித்வ ரேகைகளை ஏற்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மிகவும் சக்தி வாய்ந்த புனிதத் தீர்த்தமாகிய மங்களத் தீர்த்தங்கள் சில ஆலயங்களில் உண்டு. இந்த மங்கள தீர்த்த தேவதைகளின் மாபெரும் இறைப் பணி என்னவென்றால் மாங்கல்ய சக்திகளையும், மங்கள சக்திகளையும் பூமியின் நீரோட்டங்களிலும் மேலும் பல இடங்களிலும் நிரவுவதாகும்.  இச்சக்திகளை நாம் பெறுவதற்காகத்தான் பூமியில் பாத யாத்திரையாகத் திருஅண்ணாமலை கிரிவலம், சபரிமலை நடையாத்திரை போன்றவற்றையும், திருவெண்டயம் அணிந்து கிரிவலம் வந்து பூஜித்தல், பாத யாத்திரை, கிரிவலம், ஸ்படிக வழிபாடு, குரு பாத பூஜை போன்ற பாதம் சம்பந்தப்பட்ட பல பூஜைகளையும் நாம் மேற்கொள்கின்றோம்.

ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் சிவாலயம் கரந்தை தஞ்சை

அம்மியில் பொழியும் அமிர்த மங்கள மஞ்சள் ரேகைகள்!

திருமணத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்ற அம்மியானது பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்து லட்சக்கணக்கான மஞ்சள்களை அரைக்கும் நல்தெய்வீக உபகரணமாக அமைந்து மஞ்சளின் மங்கள சக்திகளை, மாங்கல்ய ரேகைகளை நன்கு பூண்டு இருக்கும். எனவே அம்மியின் ஒவ்வொரு பொழிவும், அருள் பொழியும் மங்கள தீர்த்தமாக விளங்குகின்றது.

இதற்காகத்தான் மஞ்சளை அரைக்கும்போதும் அதனை வழித்து நன்றாகக் கழுவி அதன் ஒரு துளியைக் கூட விடாமல் இல்லத்தில் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். எனவே இல்லறத்திற்கு அதியற்புத மாங்கல்ய சக்திகளை, மங்கள சக்திகளை அளிப்பதாக அம்மி விளங்குகின்றது. உங்கள் வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் இருந்தாலும், ரிஷி பத்னியாம் அருந்ததி தேவியின் ஆசியைப் பெற்றுத் தரும் மாங்கல்ய சக்திச் சின்னமாக, மங்களச் சின்னமாக ஓர் அம்மியை வைத்திருங்கள். அதுவும் வழிவழியாக வந்த அம்மி என்றால் மிகவும் சிறப்புடையதாகும். லிங்கம் போல் பூமியில் எப்போதும் நிலைத்து நின்று அருள்பாலிப்பது அம்மியாம். "அம்மி" என்பதே அகார பீஜாட்சர சக்திகள் நிறைந்த தெய்வீகச் சொல்லாம்!

ஸ்ரீகைலாச நாதர்
ஆலம்பாக்கம்

 ஆண்டாண்டு காலமாக அம்மி ஒரே இடத்தில் இருப்பதைப் பழைய வீடுகளில் நீங்கள். பார்த்திருப்பீர்கள். அம்மியை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர நியதியும் உண்டு. பொதுவாக மங்களம் பெருகுகின்ற கிழக்கு, மேற்கு அல்லது வடக்குப் பகுதியில் அம்மியை வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு ஒரே இடத்தில் நிலைத்திருக்கின்ற அம்மியானது நம்முடைய மூதாதையர்களின், தீர்க சுமங்கலிகளின் திருக்கரங்கள் பட்டு, ஒரு அம்மி லிங்கமாகவே மலர்ந்து மங்கள சக்திகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றது. இத்தகைய நல்வரங்களால் ஆகி வந்த அம்மியைத்தான் திருமண வைபவத்தில் பயன்படுத்துவார்கள்.

எதையும் மிதித்திடில் அதன் புனிதம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றோம் அல்லவா. அப்படியானால் அம்மி மிதித்தல் என்று சொல்வதேன்? திருமணச் சடங்கில் அம்மியை மிதிக்கும்படியாக ஒரு வைபவம் ஒன்று அமைவதேன்? பெண்ணின் பாதங்களுக்கு மருதாணி இட்டு, மஞ்சள் பூசி, மெட்டிகளை இட்டுத் தக்க மந்திரங்களை ஓதிப் பாதங்களை புனிதப்படுத்தி, பாத நாள நரம்புகளில் மங்கள‌ சக்திகளை ஊடுருவச் செய்து அப்புனிதமான பாதத்தினை அம்மி மீது வைத்திடும் போது அம்மியில் நிறைந்திருக்கின்ற மங்கள, மாங்கல்ய சக்திகள் யாவும் பாத ரேகைகள் மூலமாகத் மணப் பெண்ணை அடைந்து கணவனையும் சேர்கின்றது.

மேலும் திருமண மந்திர வரிகளில் தத்வார்த்தமாக மாப்பிள்ளையை ஸ்ரீவிஷ்ணுவாகவும், பெண்ணைத் திருமகள் ரூபமாகவும் வரிப்பதால் பெண்ணிற்குத் தன லக்ஷ்மி கடாட்ச ரூபம் பொங்கிடவும், மங்கள லக்ஷ்மி லாவண்யம் நிறைந்திடவும், சீதாலக்ஷ்மி வடிவில் மாங்கல்ய சக்திகளைப் பெறவும், அம்மியிற் பொலியும் ஸ்ரீஹரித்ரா (மஞ்சள்) லக்ஷ்மியின் திருவடிகளை உய்த்திட வேண்டுமன்றோ! அம்மியில் சுமங்கலி தேவதைகள் எப்போதும் நிறைந்திருப்பதால் லக்ஷ்மியாக வரிக்கப்படும் திருமணப் பெண்ணின் பாதங்களுக்கு, மெட்டிகள் மூலம் அரிய சுமங்கலிச் சக்திகளை மந்திர சக்திகள் மூலமாக அளிக்கினறனர். எனவே அம்மி மிதித்தல் என்பதை விட "அம்மியின் மேல் (திருப்) பாதம் படிதல்" என்பதே சரியானதாம்.

அருந்ததிக்கு அம்மியே ஹரித்ரா (மஞ்சள்) லிங்கம்!

வசிஷ்ட மாமுனியின் பத்தினியாகிய அருந்ததி அம்மையார் மஹரிஷிகளுள் ஒருவராகவே அமையும் தெய்வத் தன்மைகளைப் பெற்றவர். நான்கு வயதுச் சிறுமியாக இருக்கும்போதே நாள் முழுதும் ஸ்ரீவசிஷ்டரின் பாண சாலையிலே அம்மியில் மஞ்சள் அரைத்துக் கொண்டு ஆலயங்களுக்கும், பூஜைகளுக்கும், பசுக்களுக்கும், சுமங்கலிகளுக்கும் எப்போதும் வழங்கிக் கொண்டே இருப்பார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெய்வீக மூர்த்திகளை ஸ்ரீவசிஷ்ட மாமுனியின் பர்ண சாலையிலே சிஷ்யர்களும், பக்த கோடிகளும் கொண்டு வந்து  வைத்திருந்து பூஜித்தமையால் அனைத்து மூர்த்திகளுக்கும், தெய்வ வடிவங்களுக்கும் மஞ்சள் இடுவதிலேயே அருந்ததியின் தினப்பொழுது மங்களகரமாக நிறைந்து விடும்.

மஞ்சள் மாதாவையே, மங்களா அம்பிகையையே இஷ்ட தெய்வமாகப் பூஜித்த ஸ்ரீஅருந்ததி தேவியார் மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் பூவிலும், மஞ்சள் பூஜைகளிலும் தோய்ந்து பிரகாசித்து, மங்கள மஞ்சுள மஞ்சள் மஹரிஷினியாகவே பரிணமித்துப் பிரகாசிப்பதால்தான் ஸ்ரீஅருந்ததி தேவியார் இன்றைக்கு மஞ்சள் நட்சத்திரமாக, அருந்ததி நட்சத்திரமாக விண்ணிலே துலங்குகின்றார்.

திருமண நாளன்று அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற வைபவத்தை அனைவரும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். ஆனால் நவீன காலத்தில் இதனுடைய அருமையைப் பலரும் உணராததால் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற பாக்கியத்தைப் பல தம்பதியினர் பெறாமல் இருக்கின்றனர். இதனால்தான் சுமங்கலித்துவ சக்தி பெரிதும் பாதிக்கப்படுவதுடன், கணவனுக்கும் பலவித நோய்கள் உண்டாகி வாழ்க்கையில் சாந்தமே பாதிக்கப்படுகின்றது. தீர்க சுமங்கலித்வமே அரிதாகி வருகின்றது.

ஆலம்பாக்கத்தில் அருளும் ஸ்ரீஅருந்தவ அம்மன்!

எனினும் அறிந்தோ அறியாமலோ அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற பாக்கியத்தைப்பெற இயலாதோர் ஒரு சிறிதேனும் பிராயச்சித்தம் பெற வேண்டுமல்லவா? இப்பரிகாரம் பெற்றால்தான் இல்லற வாழ்வில் சாந்தம் நிறையும். தக்க சற்குருவே இதற்கான தான, தர்ம சக்தி வழி வகைகளை உணர்த்துபவர் ஆவார். இதற்காக அம்பிகையே ஸ்ரீஅருந்தவ அம்மனாக அருள்பாலிக்கின்ற பழமையான சிவத்தலம் ஒன்று உண்டு. திருச்சி புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் ஸ்ரீஅருந்தவ அம்மன் சமேதராக ஸ்ரீகைலாசநாதர் அருள்பாலிக்கின்றார். இங்கு ஸ்ரீஅருந்தவ அம்மனுக்குத் தாமே கையால் அரைத்த மஞ்சள் காப்பிட்டும், பாதங்களுக்குச் சந்தனக் காப்பிட்டும் வழிபடுக! தற்போது இடிபாடுகளுடன் விளங்கும் இவ்வாலயம் மீண்டும் பிரகாசம் பெற உதவுவோர்க்கு வாழ்வில் மங்களம் பெருகும்! சுமங்கலித்வம் தழைத்திட உதவும் பண்டைய ஆலயம் இடிபாடுகளாகி விட்ட இவ்வாலயத்தைச் சீர் செய்து பராமரித்திடப் பக்த கோடிகள் முன் வந்து உதவ வேண்டும்.

ஸ்ரீஅருந்தவ அம்மன்
ஆலம்பாக்கம்

ஸ்ரீஅருந்தவ அம்மன் துதியை 21 முறை ஓதி இங்கு ஒதி வழிபட்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வந்திட்டால் திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற பாக்கியத்தைப் பெறாதோர்க்கும் தக்க பிராயச்சித்தம் கிட்டும். ஒரு யுகத்தில் அருந்ததி தேவி அம்பிகையாகவும், பிறிதோர் யுகத்தில் அருந்தவ அம்பாளாகியும் அருளும் உலக அன்னை!

ஸ்ரீஆயுர்தேவி தரிசனத் தலம்!

இங்குதான் வசிஷ்டரின் பத்னியாம் அருந்ததி தேவியார் ஆதிபராசக்தியை, அருந்தவ தேவியாக, மஞ்சள் மாதாவாக, ஸ்ரீஆயுர்தேவியாகப் பொன்னிற மஞ்சள் பொலிவில் கண்டு தரிசிக்கின்ற பாக்கியத்தை பெற்றார். ஸ்ரீஆயுர் தேவி காட்சியளித்த அருந்தலங்களில் இதுவும் ஒன்றாம்! எனவே இங்கு ஸ்ரீஆயுர் தேவி பூஜை மிகவும் விசேஷமானதாம். தம்பதிகள் சேர்ந்து ஸ்ரீஆயுர்தேவி பூஜை செய்வதால் குழந்தை பாக்யம் கிட்டும், சமங்கலித்வ சக்தி கூடிடும், தம்பதிகளிடையே தெய்வீக அன்புப் பரிமாற்றம் உண்டாகும். வசிஷ்டர் பத்னியாம் அருந்ததி தேவி இங்கு பராசக்தியை தரிசித்த பின்னர்தான் ஸ்ரீவசிஷ்டருக்கே இவ்வம்பிகையின் தரிசனம் கிடைத்தது.

இங்கு வசிஷ்டரின் பத்னியாம் அருந்ததிக்கு நட்சத்திர தாரகையாகப் பொலியும்படி ஆதிசிவன் நல்வரம் அளித்ததுடன் உமையவளுக்குத் திருமணக் கோலத்தில் அருந்த‌தி தரிசனத்தைப் பெற்றுத் தந்த இடமும் இதுவே!  முதன் முதலாகப் பிரபஞ்சத்தில் தம் அருந் தவத்தால் அருந்ததி நட்சத்திர தரிசனம் கண்ட கோலத்திலேயே தம்மிடம் உறைந்த ஈஸ்வரனும் அருந்தவ அம்பிகை என்றும் பெயர் சூட்டி வசிஷ்டர் பத்னியாம் அருந்ததியின் சிறப்பினைப் பிரபஞ்சத்திற்கு உணர்த்தினார் அதாவது கற்புக்கரசியாய்ப் பிரகாசிப்பவர்களே அருந்தவம் பூண்டோரே திருமண நாளுக்குப் பிறகு தினமும் அருந்ததி நட்சத்திரத்தைக் காண இயலும் என்ற நியதி இருந்த காலமது! முப்பத்து முக்கோடி தேவா்களும், தேவ பத்தினியரும் இங்கு பூஜித்து அருந்ததி நட்ச‌த்திரத்தை அனைவரும் குறிப்பாகக் கலியுகத்தில் பூலோகத்தினரும் தரிசித்துப் புனிதம் பெற்றிட நல்வரம் பெற்ற சிவத் தலமும் இதுவே! எனவே இது அமரேஸ்வரம் எனவும் பெயர் பெற்று நாம் தினமும் அருந்த‌தி நட்சத்திர தரிசனம் பெற்றுச் சுமங்கலித்வத்தைப் பேண உதவும் தலமாகவும் பொலிகின்றது!

சுமங்கலித்வம் தரும் ஸ்ரீஆயுர்தேவி பூஜை!

திருமண நாள் (marriage day), அனுஷம், சுவாதி, வெள்ளிக் கிழமை நாட்களில் இங்கு அம்பிகையின் திருவடிகளில் ஸ்ரீஆயுர் தேவி படத்தை வைத்து அருள் பெற்று இல்லத்திற்கு எடுத்துச் சென்று பூஜித்திடில் தம்பதியரிடையே தெய்வீகமான அன்பு நிலவிடும்! குடும்பத்தில் சாந்தம் பொங்கும்!

திருமணம் முடித்த கையோடு ஆலம்பாக்கம் ஸ்ரீஅருந்தவ அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் சந்நதிக்கு திருமணத் தம்பதிகள் வந்து அபிஷேக‌ ஆராதனைகளுடன் இச்சிவாலயத்தில் வழிபாடு நடத்தினால் நல்ல தெய்வீகமான மன‌ ஒற்றுமையுடன் நன்முறையில் இறுதி வரை பக்தி நெறியுடன் வாழ்ந்து நல்ல சந்ததியுடன் இறைமையில் தழைப்பர்!

சந்தன மங்கள மஞ்சள் பூஜை

* மனைவியின் பூஜா பலன்கள் மனைவிக்கே சேரும்! கணவனின் பூஜா பலன்களில் பாதிப் பங்கு மனைவியைச் சாரும்! படைப்பு  நியதியான இவ்வேத வாக்கினை உணர்கின்ற தம்பதிகளே உன்னத தெய்வீக  வாழ்வைப் பெறுகின்றனர்!

* பாத பூஜையின் மகத்துவத்தைக் கலியுகம் இழந்து வருவது வேதனைக்குரியது! இன்று உலகின் ஒவ்வொரு இல்லத்திலும் மனைவி, கணவனுக்கு நன்முறையில் பாத பூஜை செய்திடில் புகை பிடித்தல், மது, முறையற்ற காமத் தீயொழுக்கங்கள் போன்ற அனைத்துத் தீவினைகளையும் உலகிலிருந்து அறவே அகற்றிடலாம்! பூவுலகில் வன்முறை, தீயொழுக்கங்களை முற்றிலும் தீர்த்துத் தெய்வீகப் பேரமைதி நிலவச் செய்திட பாத பூஜை, பசு பூஜை, ஸ்படிக குரு பாத பூஜை போன்றவைதாம் கலியுகத்தில் பெரிதும் உதவும்!

*சந்தன மங்கள மஞ்சள் பூஜையானது தம்பதிகளின் சாந்தமான வாழ்விற்குப் பெரிதும் துணை புரியும் அரிய இறைச் சாதனமாகும்!

ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீமங்களநாதர் செருகுடி சிவாலயம்

கணவன் மனைவியிடையே மன ஒற்றுமை பெருகவும், சுமங்கலித்வ சக்தியும், மாங்கல்ய சக்தியும் வளம் பெறவும் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப, மனைவி கணவனுக்குப் பாத பூஜை செய்து வருதல் வேண்டும். ஆனால் கலியுகத்தில் தற்காலத்தைய விஞ்ஞானமய சமுதாயத்தில் உண்மையான அன்பினை, தெய்வீகம் நிறைந்த பண்பினை மாசுபடுத்துகின்ற அகங்காரம், ஆணவம் தம்பதிகளிடையே பெருகி விட்டமையால் பாத பூஜையின் மகிமையைப் பலரும் உணரவில்லை! பாத பூஜை என்றாலே முகம் சுளிக்கும் நிலையும் வந்து விட்டது! மேலும் ஆண் வர்க்கமும் புகை பிடித்தல், போதைப் பொருட்கள், மது, முறையற்ற காமம் மற்றும் பல தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டு வருவதால் குடும்பத்தில் கொந்தளிப்புகள் பெருகி, ஆணினமும் புனிதத்தையும், ஆன்மீக நற்குணங்களையும், நன் மதிப்பையும் இழந்து வருவதால் பாத பூஜைக்கான அருகதையும் கணவனுக்கு இல்லாமல் போய் விடுகின்றது. கணவன் தீய வழக்கங்களுடன் கொடியவனாக இருந்தால் தக்க குரு பாத (ஸ்படிக) பூஜை, காஞ்சனாதி ஸ்படிகம், கணவனின் நட்சத்திரத்திற்குரிய ஸ்படிக ராசிச் சக்கரம், ஸ்படிக குரு பாதம் ஆகியவற்றைத் தாங்கி அருணாசல கிரிவலம் வருதல் போன்ற பூஜைகளின் பலன்கள் கணவனைத் திருத்தப் பெருந் துணை புரியும்! மனைவி திருந்திடவும் கணவன் இவ்வகை பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஸ்ரீமங்கள விநாயகர் செருகுடி

தம்பதிகள் இருவருமே அலுவலகத்திற்குச் செல்கின்ற வழக்கம் நிலவுவதால் தற்காலத்தில் அந்தஸ்துப் போராட்டம் ஏற்பட்டுக் குழந்தைகளுக்கும் உண்மையான அன்பும் மரத்துப் போய் விடுகின்றது. நம் பாரதத் தமிழ்ப் பண்பாட்டின் பண்டைய தெய்வீக அன்பும் மறைந்து தம்பதியினரிடையே பெருத்த மன வேறுபாடுகள் உண்டாகின்றன. குழந்தைகளுக்கு எதிரிலேயே கணவன், மனைவி இருவரும் சண்டை இட்டுக் கொள்கின்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டு விடுகின்றது.

இத்தகைய கர்ம வினைகளைப் பூஜா பலன்களால்தான் தம்பதிகள் நிவர்த்தி செய்ய முடியும். எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் நிறைய இறைத் தத்துவங்களைப் படித்தாலும், புண்ய சக்தி, பூஜா சக்தி, தான தர்ம சக்தி, பாத பூஜை போன்றவற்றால்தான் கணவன், மனைவியிடையே தார்மீக ஒற்றுமையைப் பேண முடியும், இல்லறத்தைத் தழைக்கச் செய்ய முடியும். குடும்பத்தில் சாந்தம் நிலவுவதற்காகக் குழந்தைகளும், தம்பதியர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கலியுகப் பூஜை முறைகளுள் ஒன்றே சந்தன மங்கள மஞ்சள் பூஜையாகும்.

இல்லறப் பெருவரந் தரும் செருகுடி மங்கள நாதர்!

சந்தனத்திற்கு இயற்கையிலேயே தேவ மங்கள சக்திகள் உண்டு! மங்கள நாயகியாய் அம்பிகையே தம் திருக்கரங்களால் அரைத்த சந்தனத்தால் ஆண்டவனுக்குச் சந்தனக் காப்பு, சந்தனாதித் தைலம் இட்டு வழிபட்ட இறைவனே ஸ்ரீமங்கள நாதராய் கும்பகோணம் திருப்பாம்புரம் அருகே சிறுகுடி (செருகுடி) சிவாலயத்தில் அருள்பாலிக்கின்றார். மங்கள நாதர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம், மங்கள வில்வம், மங்கள லிங்கம் என அனைத்துமே மங்களகரமாய்த் திகழ்கின்ற இச்சிவாலயத்தில் சிவபெருமானுடைய மகத்தான தழுவக் குழைந்த தரிசனமே (விளக்கம் ஸ்ரீ அகஸ்திய விஜயம் டிசம்பர் 2001 இதழில்) தம்பதியர்களுக்கு மனசாந்தியைத் தர வல்லதாகும்.

மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமையிலும், மங்களத்தைப் பொழிகின்ற வெள்ளிக் கிழமையிலும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுடன் இத்திருத்தலத்திற்கு வந்து இயன்றளவில் சுவாமிக்குச் சந்தனாதித் தைலம், புனுகுச் சட்டம் சார்த்தி 108 மஞ்சள், 1008 மஞ்சள், 100008 மஞ்சள் என அவரவர் வசதிக்கு ஏற்ப சுமங்கலிகளுக்கு முழு மஞ்சள் தானம் தருவதாகச் ச‌ங்கல்பம் செய்து கொண்டு இச்சிவாலயத்திலேயே ம‌ஞ்சள் தானத்தைத் தொடங்கிட்டுச் சங்கல்ப, எண்ணிக்கையின் முதல் தானத்தை இங்கு தொடங்கி ஏழைச் சுமங்கலிகளுக்கு மஞ்சளை தானமாக அளிக்க வேண்டும். பல சுமங்கலிகளாகிய இல்லப் பெண்கள் ஒன்று சேர்ந்தும் இதனைப் பெருமளவில் நன்கு நிறைவேற்றிடலாம்.

ஸ்ரீமங்கள வில்வம் செருகுடி

இதன்படி ஒவ்வொரு சுமங்கலி இல்லப் பெண்ணுக்கும் ஒரு பிடி அல்லது ஒரு படி நிறைய மஞ்சளை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து இவ்வாறு 1008, 10008, 100008 மஞ்சள் எண்ணிக்கை வரும் வரை இந்த மஞ்சள் தானம் தொடரும். இதற்குப் பல வாரங்களோ, ஒரு மண்டலமோ, ஒரு சில மாதங்களோ ஆகிடலாம்!  இறுதியில் நிறைவாகும் மஞ்சள் தானத்தையும் சிறுகுடி (செருகுடி) ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீம‌ங்கள நாதர் சிவாலயத்திலேயே முடிப்பது சிறப்பானதாம்! இவ்வாறு செய்து மரணப் படுக்கையில் தன் கணவரை மீட்ட உத்தமச் சுமங்கலிகள், பத்தினிகள் இன்றும் நம் நாட்டில் உண்டு!

எனவே தம்பதிகளிடையே குடும்பத்தில் ஒற்றுமையும், மனசாந்தியும் நிலவிடவும் கடுமையான நோயில் வாடுகின்ற கணவன் அல்லது மனைவி நன்முறையில் மீண்டும் புனா்வாழ்வு பெற்றிடவும், சிறுகுடிச் சிவத்தலத்தில் மஞ்சள் தான‌ சங்கல்பம் செய்து கொண்டு தழுவக் குழந்தை நாதராக அம்மையைத் தழுவிய கோலத்தில் உள்ள ஸ்ரீசந்திரசேகரர் சன்னதியில் மஞ்சள் தானத்தைத் துவக்கி, முடிப்பதும் கலியுகத்தின் கண் கண்ட வரப் பிரசாத நற்காரியமாக, மகா சக்தி வாய்ந்த இறைவழிபாடாக விளங்குகின்றது.

செவ்வாய் பகவானின் உஷ்ணம் தணித்த சிவநாதர்!

நரசிம்ம அவதாரிகையின்போது செவ்வாய் கிரகத்திலும் அக்னிப் பிரவாகம் பெருகிடவே, தம் அக்னிக் கோளத்தின் உஷ்ணத்தையே தாங்க இயலாது செவ்வாய் பகவானே இங்கு தழுவக் குழைந்த நாதராய்ப் பொலியும் சிவநாதரைச் சரணடைய, இறைவனும், "அங்காரகா! உன் கிரகத்தின் அக்னி உடனடியாகத் த‌ணிக்கப்பட வேண்டும் என்று எண்ணிடாதே! இத்திருவிளையாடல் மூலம் நீ உணர வேண்டியது யாதெனில் இதுவரை நீ அறிந்திடா மங்கள சாந்தி அக்னியை பிரபஞ்சத்தின் மிக முக்கியமான அக்னிக் கோளங்களில் ஒன்றாக விளங்கும் உன்னுடைய லோகத்தில் கூட இவ்வகை அக்னியைக் காண இயலாது. இத்தெய்வீக ரகசியங்களை இனியேனும் நீ அறிந்து அடைந்திட வேண்டும் என்பதே எம் லீலையாகும்! இந்த அரிய மங்கள சாந்தி அக்னியானது உனக்குப் பெறுதற்கரிய சீதனத்தையும், சீதளத்தையும் தரும்!” என்று இறைவனே முன்வந்து அருள் கூட்டிச் செவ்வாய் பகவானுக்கு மங்கள சாந்தி அக்னியைத் தந்த அருமையான தலமே செருகுடிச் சிவாலயமாகும்.

மேலும் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே, த‌ம்பதியர்களிடையே ஒற்றுமையில்லாது பிணக்குகள் இருப்பின் இத்திருத்தலத்திற்கு வந்து மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமையன்று (முழு) மஞ்சள் தானத்தைத் தொடங்குதல் வேண்டும். பொதுவாக "லட்சம் மஞ்சள் தானத்தை" ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்கள்) நிறைவு செய்தல் துரித வகையிலான காரிய சித்தியைத் தரும்!

சந்திர சாந்த சந்ததி பூஜை

ஸ்ரீ அகஸ்திய விஜயம் (டிசம்பர் 2001) இதழில் அடுத்த 60 ஆண்டுகளுக்கான கோள் சஞ்சார நிலைகளைக் கருத்தில் கொண்டு வெளி நாட்டில் வசிப்போர் அவரவர் தத்தம் தாய்நாட்டிற்கு நிரந்தரமாகத் திரும்பி உலக அமைதிக்காகவும், உலக சாந்தத்திற்காகவும் பல அரிய பூஜைகளைத் தம் தாய் மண்ணில் நிகழ்த்திட வேண்டும் என்று சித்புருஷர்களுடைய ஞானபத்ர‌ கிரந்த அருள் மொழிகளிலிருந்து திரட்டிச் சில விளக்கங்களை அளித்திருந்தோம். மேலும் பலவற்றை இங்கு தொடா்கின்றோம்.

ஸ்ரீமங்கள தீர்த்தம் செருகுடி

ஸ்ரீசந்திர சாந்த சந்ததி பூஜை என்றால் என்ன? சந்திர பகவான்தான் ஜீவன்களின் மதிகாரகர் ஆவார். ஆனால் என்னதான் நல்மதி செயல்பட்டாலும் புத்தி நல்ல இறை வழிகளிலே ஆக்கப்படுத்தப் பட்டாலும், மனமானது காமம், பொய், அசத்தியம், பேராசை, குரோதம் மற்றும் அதர்மமான வழிகளை நாடி ஈடுபட்டு நல்புத்தியையும், நல்மதியையும் செயலிழக்கச் செய்து விடுகின்றது. இதனால்தான் பலரும் சிறுவயதிலேயே, இளம் வயதிலேயே மது, புகை பிடித்தல், முறையற்ற காமம், தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்கின்றனர். இது மட்டுமல்லாது அடுத்த 60 ஆண்டுகளில் பகைக் கோள்களின் ஆதிக்க சக்தி பெருக இருப்பதால் பகைமை உணர்வுகள் மிகுந்து, மக்களிடையே குரோத, விரோத, பொறாமை, பகைமை குணங்கள் பெருக இருக்கின்றன.

இப்போதே பல நாடுகளிடையே கடுமையான பகைமை ஏற்பட்டுப் போர்கள் நிகழ்ந்து வருவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். பகைமை, குரோதம், விரோத தீய சக்திகள் கட்டுப்பாடின்றிப் பெருக்கெடுத்து விட்டால் அங்கு பகைமை வெடித்து வன்முறைதானே பெருகும். எனவே உள் நாட்டவர், அயல் நாட்டவர் என்ற பகைமை உணர்ச்சி பெருக்கெடுத்தால் உலக மக்கள் சமுதாயமே விரோதத்தால், பகைமையால் அழுகிவிடும் அல்லவா? எனவே தற்போதைய‌ ஜீவன்கள் மட்டுமல்லாது அவர்களுடைய‌ சந்ததியினரும் தக்க ஆத்ம சாந்தியைப் பெற்றிடவும், உலக சாந்தத்திற்காகவும், உலக‌ அமைதிக்காகவும், தெய்வீக ரீதியாக நல்ல இறைப் பணிகளையும் கடைபிடித்திட வேண்டும்.

இதற்காகவே அவரவர் தத்தம் தாய் நாட்டிற்குத் திரும்பித் தாய் மண்ணிலிருந்து இறை வ‌ழிபாடுகளை நிகழ்த்துவதுதான் சிறப்புடையதாகும். ஏனென்றால் எந்தத் தாய் மண்ணில் பிறந்தார்களோ, அதற்கும், அவரவருடைய தேகத்தின் 72000 நாடிகளுக்கும் நெருங்கிய ஆன்ம பந்தம் உணடு. அவரவர் தாமிருக்கும் அயல் நாட்டிலிருந்து வழிபாடுகளைச் சிறப்பாக மேற்கொள்ளலாகாதா என்ற கேள்வி எழலாம். பக்தி சிரத்தையுடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருவைச் சரணடைதல் என்ற வைராக்கியத்துடன் பூஜைகளை மேற்கொண்டால்தான் பூரணமான பலன்களைப் பெற முடியும். இத்தகைய இறை நியதிகள் அவரவருடைய தாய் மண்ணில்தான் சிறப்பாக அமைந்து செயல்படும். உடல் சுத்தி, மன சுத்தி, உள்ள சுத்திக்கும் தாய்மண்ணில் நிகழும் பூஜைகளே சக்தி வாய்ந்தனவாகத் திகழ்கின்றன!

ஸ்ரீமங்கள பகவான் செருகுடி

ஆதியில் உலகம் ஒரே நாடே!

மகா சிருஷ்டிக் காலத்திலே இந்த உலகம் அனைத்துமே ஒரே சனாதன தர்ம நாடாக இருந்தது. இப்போது இருக்கின்ற அனைத்து நாடுகளின் மக்களும் ஒன்றாக அந்த ஆதி மூல (ஒரே) தர்ம நாட்டின் பிரஜைகளாகப் புனிதத்துடனும், இறை பக்தியுடனும் வாழ்ந்தனர். அப்போது அருள்பாலித்த மூர்த்திகளே இன்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீஆதி பராசக்தியாக, ஸ்ரீஆத்மநாதராக அருள்பாலிக்கின்றார்கள். இத்தலங்கள் யாவும் சந்திர சாந்த சந்ததி பூஜைக்குச் சிறப்புடையவையாம். காலப் போக்கில் மனிதனுடைய சுயநலம், பேராசை காரணமாகவே தற்போது உலகில் உள்ளபடி நாட்டின் பிரிவுகள் எல்லாம் ஏற்பட்டு உலகமே மனித குலச் சுயநலச் சின்னமாகத் துண்டு துண்டாகி விட்டது.

எனவே மீண்டும் நம் உலகம் பண்டைய சனாதன தர்ம நாடாக மாறி “யாதும் ஊரே, யாவரும் கேளிர், யாம் அனைவரும் இறைவனுடைய குழந்தைகள்" என்னும் தார்மீக எண்ணத்துடன் செழித்திட இப்போதிருந்தே அதற்கு உரித்தான இறை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நாட்டு மக்களும் வழிபடும் வண்ணம் பாரத நாடு தெய்வீகச் சுரங்கமாக, தேவ வளம் பொலிந்ததாக விளங்குவதே நம் நாட்டின் மகத்தான தெய்வீகப் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது! உலகத்தின் ஆன்மீகப் பீடமாக நம் பாரத நாடு ஜ்வலிப்பதால் சந்திர சாந்தி பூஜையை அனைத்து நாட்டினரும் இங்கு கடைபிடித்திடலாம் என்ற விசேஷமான தெய்வீக நியதியும் உள்ளது.

எல்லா நாடுகளுக்கும் ஆன்மீகத் தீர்வுகள் புனித பாரதத்தில்!

சனாதன தர்ம நாட்டின் தலைமைத் தலம் பாரதமன்றோ! இன்றைக்கும் இந்த உலகிற்கு மட்டும் அல்லாது பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாகப் (Universal Spiritual Epicentre) புனித பாரதம் பொலிகின்றதே! இதற்குக் காரணமும் உண்டு! இன்றைய உலகின் ஒவ்வொரு நாட்டின் தெய்வீக வள‌த்திற்கும் அருள் தர வல்ல ஆலயங்கள் பாரதமெங்கும் நிரவி உள்ளன! எந்தத் தலம் எந்த‌ நாட்டின் தெய்வீக வளத்திற்கு அருள்பாலிக்குமோ அந்த ஆலயம் அமைந்துள்ள கிராமத்தின், நகரத்தின் மக்களாக அந்நாட்டவர்கள் ஒரு யுகத்தில் ஒன்றாய் வாழ்ந்திருப்பர். இன்றைக்கும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் வெளிநாட்டவர்கள் பூர்வ ஜன்மத்தில் இங்கு வசித்தவர்களே. இந்த சந்ததிக் கட்டுப் பிணைப்பே நம் நாட்டின் ஈடு இணையற்ற தெய்வீகச் சிறப்பாம்.

உலக சாந்தத்திற்கு உத்தமச் சந்திர சாந்த சந்ததி பூஜை!

மதி பிறழ்ந்தால்தானே பகைமையும், தீய குணங்களும் ஆங்கே கொப்புளிக்கின்றன! ஆன்மீக‌ மாமருந்தாம் புனிதமான அன்பைக் கொண்டுதாம் நாடுகளிடையே உள்ள பகைமையை மாய்க்கச் செய்ய முடியும். இதற்கு உதவுவதும் சந்திர சாந்த சந்ததி பூஜையேயாம்!

மேலும் இரு நாடுகளிடையே உள்ள பகைமையோடு, இன்றைய உலகில் ஒரே நாட்டு மக்களிடையே கூடப் பல பேதங்களும், பகைமையும் உள்நாட்டு விவகாரமாக நிலவி வருவதைக் காண்கின்றோம். எனவே முதலில் அவரவர் தேகத்திலும், தேசத்திலும் உள்ள குறை குற்றங்களைக் களைந்து புனிதமடையச் செய்தால்தான் பவித்ரமான உலகச் சமுதாயம், உலக அமைதி, உலக சாந்தத்திற்குமான‌ மூலாதாரமான இறை வழிபாடுகளை நன்கு தொடர‌ முடியும். சீரற்று உதிக்கும் எண்ணங்களே, காமத்தால், பேராசையால் உந்தப்பட்டுத் தீய‌ செயல்களாக உருவாகிப் பல தீவினைகளுக்கும் வித்திடுவதால் சந்திர சாந்தி சந்ததி பூஜையானது எண்ணங்களை நன்னெறிப்படுத்தி மனிதனுடைய தீய செயல்களைக் களைவதற்கும் பெரிதும் துணை புரிகின்றது.  அவரவர் தாய்மண்ணிற்கும் அவரவர் பாத ரேகைள், கை ரேகைளுக்கும் ஆன்மீக ரீதியான ஆகர்ஷண சக்திகள் நிறைய உண்டு. இக்காரணங்களுக்காகவும் அவரவர் தாய்நாட்டில் வழிபடுவதே உத்தமமானது.

உலகளாவிய மனித சமுதாய பூஜையிது! நம்முடைய சந்ததிகளுக்கான சுயநல பூஜை என்று மட்டுமே பொருள் கொள்ளாதீர்கள். உலக சிருஷ்டியின்போது இறைவனின் படைப்பாக ஒரே ஒரு தேசமாக விளங்கிய சனாதன தர்ம நாட்டின் சமாதானப் பிள்ளைகளாக நாமனைவரும் ஆதி யுகங்களில் விளங்கியமையால் இன்று உலகெங்கும் அனைத்து நாட்டவரும் ஒருவருக்கொருவர் சந்ததிகளாகவே ஆகின்றார்கள். உலக மக்களாகிய நாமனைவரும் பல மகரிஷிகளின் வழி வந்த சந்ததிமார்களே!

தார‌மங்கலத்தில் திவ்யமான சந்திர பூஜை!

இன்றைக்கும் நாம் வாழ்கின்ற பூமியின் சுழற்சிக்கும் சந்திரனின் 27 நட்சத்திரப் பாதைக்கும் தெய்வீகப் பிணைப்பு உண்டு. இம்மாபெரும் இறைநல்வரத்தைச் சந்திர பகவான் பெற்ற தலமே தாரகைமங்கலம் (தாரகை - நட்சத்திரம்) ஆகும். இது சந்திர சாந்தி பூஜைக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலமாகும்! 27 நட்சத்திரங்களும் இன்றும் சந்திர பகவானுக்குப் பூஜை செய்து வழிபடும் உத்தமத் தலம்! சந்திர பகவான் தம் பத்னியருடன் சிவனை நித்திய பூஜை செய்யும் அதிஅற்புதத் தலம்!

இங்கு சந்திர தரிசனமும், சந்திர சாந்தி பூஜை செய்தலும் இல்லத்தின், சமுதாயத்தின், நாட்டின், உலகத்தின் சாந்தத்திற்கு அருள்வழி காட்டும்! தாரகைமங்கலமே (சேலம் அருகே) தாரமங்கலமாக மருவியுள்ளது!

ஸ்ரீசந்திர பகவான் திருந்துதேவன்குடி

பரவட்டும் சந்திர சாந்தம்!

உலகில் எந்நாட்டிலும், எவ்விடத்திலும் தெரிபவை சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்கள் ஆதலின் பூமியில் இருந்தவாறு உலகின் எப்பகுதிக்கும் அவரவர் நட்சத்திரக் கிரணங்கள் மூலமாக இறைக் காரியங்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ளும் தேவ சக்திகளும் உண்டு! இதனைத் தரும் வல்லமை உடையதே சந்திர சாந்தி சந்ததி பூஜையாகும்! இப்பூஜையில் பல கட்டங்கள் உள்ளமையால் அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவற்றை மனமகிழ்வோடு செய்திடலாம்! உலகெங்கும் ஆன்ம சாந்தி நிலவுவதற்கு மகத்தான அளவில் இது பெருந் துணை புரியும்.

இங்கு அளிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கட்ட இறைவழி முறைகளைக் கடைபிடித்திடில் உடல், மனம், உள்ளம் புனிதம் பெற்று முழுமையான சந்திர சாந்த சந்ததி பூஜைக்கு உங்களைப் பரிபூரணமாக ஆயத்தப்படுத்தும்.

* நவகிரக மூர்த்திகளாகச் சூரிய, சந்திர மூர்த்திகள் திகழ்ந்தாலும் ஞாயிறு, சூரியனார் கோயில் போன்ற இடங்களில் தனியாக எழுந்தருளி இருக்கும் சூரிய, சந்திர மூர்த்திகள் விசேஷமான தன்மையுடன் அருள்பாலிக்கின்றாாகள். எனவே இவ்வாறு தனித்து அருள்பாலிக்கின்ற சந்திர மூர்த்திக்குத் தினமும் வஸ்திரம் சார்த்திட வழிவகை செய்து திங்கட் கிழமை தோறும், தினந்தோறும் சந்திர ஹோரை நேரத்தில் சந்திர பகவானுக்கு உரித்தான வெண்மை நிறத்தாலான பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதானமும் செய்து (வெண்ணெய், பால், தயிர், வெண்பொங்கல், தேங்காய் சாதம், தேங்காய் பர்பி) வெண் பட்டாடைகளைச் சார்த்தி, உணவு மற்றும் பட்டாடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் சந்திர சாந்த சந்ததியின் ஆரம்பக் கட்டப் பூஜைகளுள் ஒன்றாம். இவற்றில் எழும் ஸ்வேத சாந்தக் கதிர்கள்தாம் பகைமையை தெய்வீக அன்பால் வெல்லும் சக்தியைப் பெற்றுத் தரும்! அன்னாபிஷேகம் போல சந்திரனுக்கு வெண்ணிற கேசரி இனிப்புக் காப்பு இட்டு வழிபடுதல் மிகவும் விசேஷமானதாம்!

பெறுவீர் ஸ்வேத சந்த்ர சக்திகளை!

 * பெளர்ணமி தினத்தில் ஸ்ரீசந்திர பகவானுக்கு 27 நெய் தீபங்கள் ஏற்றி, 27 வெண்ணெய் உருண்டைகளைப் படைத்துத் தானமாக அளித்திடுதல் வேண்டும். பெளர்ணமியில் சந்திரனுக்குக் குடம் குடமாகப் பால் அபிஷேகம் செய்தலால் பூமியில் சாந்த‌ சக்திகள் நிரவிப் பெருகி பூலோகத்தில் சந்ததிகள், எவ்வித இடையூறும் இன்றித் தழைப்பர். அபிஷேக‌ நீரைப் பிரசாதமாக அருந்திப் பிறருக்கும் அளிப்பதுடன் நறுமணப் பூச்செடிகளுக்கு, நன்னீரை வார்த்தும் வருதல் வேண்டும். இறை நற்கதிர்களைப் பரவெளியில் பரப்புவதில், பூக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன!

ஒரு பாரிஜாதப் (பவளமல்லி) பூவானது பத்து லட்சம் ஜீவன்களுக்குத் தேவையான "மந்திர புஷ்ப" சக்தியை அளிக்க வல்லதாம்! ஆனால் ஆலயத்தில் இறைவனுக்குச் சூட்டும் மனப்பான்மை ஏற்பட வேண்டுமே!

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருத்தலம்
முசிறி

சந்திரப் பிரகாசம் பெருகட்டும்!

* மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தின் மகிமையைப் பலரும் தற்போது உணரவில்லை. அமாவாசையிலிருந்து மூன்றாவது திதியில் வானில் ஒரு சில நிமிடங்களுக்கே சந்திரப் பிறை தரிசனம் தோன்றி மறைந்திடும் இந்த அரிய காட்சி பெறுதற்கரிய பாக்கியமாகும்! எனவே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுகையில் கண்ணொளியில் அபூர்வமான சந்திரப் பிரகாசம் கிட்டுகின்றது. ஸ்ரீசந்திர மெளளீஸ்வரர் அருள்பாலிக்கும் தலங்களில் (முசிறி, திருவக்கரை, ஹோசூர்) ஆழ்ந்த பக்தியுடன் தரிசித்து மூன்றாம் பிறை தரிசனத்தைப் பெறுவோர் இதனைத் தாமாகவே நன்கு உணர்ந்து உய்த்திடலாம்!

எங்கும் சந்திர பிலாகாச ஒளி பிரகாசிப்பதாக!

சூரிய உதயத்திற்கு முன், கதிரவன் மேலெழும் முன்னரே சூரிய ஒளியின் செவ்வண்ணம் ஊடுருவதை அறிவீர்கள், இதற்குச் சூரியப் பிலாகாசச் சுடர் என்று பெயர். இதே போல சந்த்ரப் பிலாகாசச் சுடரும் உண்டு! காணுதற்கு அரியதாம்! இதிலும் நிறைய ஆன்மீக ரகசியங்கள் உண்டு. கண்களுக்கும், மூன்றாம் பிறைச் சந்திர பிலாகாசச் செல்களுக்கும் நெருங்கிய ஆன்மத் தொடர்பு உண்டு. ஆனால் தற்காலத்தில் யோகம், ஆசனம், தாரணம், முத்திரைகள் போன்ற யோக வழிமுறைகளைப் பலரும் முறையாகக் கடைபிடிக்காததால் மூளைச் செல்களுக்கும், கண் நாளங்களுக்கும் இடையே உள்ள அபூர்வமான சந்திர பிலாகாசப் பாதை அடைபட்டுள்ளது. இதனால் கண்களால் காண்கின்ற காட்சிகளால் மனதில் தீய எண்ணங்களும், காம எண்ணங்களும் தோன்றுவதைத் தடுக்க இயலாமல் போகின்றது.

ஆலயங்களில் இறைவனைச் சுற்றி உள்ள திருவாசியைக் கண்டிருப்பீர்கள். இதில் சூரியப் பிறை, சந்திரப் பிறைத் திருவாசிகளும் உண்டு.கோயில்களுக்கு சந்திரப் பிறைத் திருவாசி செய்து அளிப்பது மகத்தான திருப்பணியாம்! சந்ததி விருத்திக்கும் பெண் வாரிசுகளை மட்டும் பெற்று வருத்தம் கவலை கொண்டு இருப்போர்க்குக் கவலையைத் தீர்த்து நல்வழி காட்டும் திருப்பணி!

சந்திர பிலாகாச யோகப் பாதையை நன்கு புனிதப்படுத்தித் தியான, யோக வழிகளில் நன்முறைப் படுத்துவோர் எத்தகைய காட்சிகளைக் கண்டாலும் நல்ல தெய்வீக எண்ணங்கள் உதித்து, உத்தம தேவ சித்தியுடன் ஆத்ம சாந்தியுடன், தேஜஸுடன் விளங்குவார்கள். புனிதமான காட்சிகளைக் காண, தூய எண்ணங்கள் பரிமளிக்கவே கண்களின் கீழ் (சந்திரப்) பிறை வடிவில் கண் மை (அஞ்சனம்) இடுகின்றோம்!

 * மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தால் அவரவர் கண் நாளம், நெற்றிப் பட்டை, கபாலம், விண்ணில் அவரவர் நட்சத்திரப் பரல் வழியே சந்திர மண்டலத்தை அடையும் சந்திர பிலாகாசப் பாதை நன்கு தூய்மை பெறும், புனிதமடையும்.  ஸ்ரீசந்திர மெளளீஸ்வரச் சக்கர சக்திகள் நிறைந்த புனிதத் தலங்களில் சந்திரனின் மூன்றாம் பிறையைத் தரிசித்து இதன் பின் ஆறு நிமிடங்களுக்குள் ஆலயத்தினுள் ஸ்ரீசந்திர பகவானை அபிஷேக ஆராதனைகளுடன் தரிசிப்பவர்க்கும் மகத்தான கண்ணொளிப் பிரகாசம் ஏற்படுவதுடன் ஜெயக்ஷீராஸ் என்ற அபூர்வமான பித்ரு மூர்த்திகளுடைய ஆசியும் கிட்டிடும்.  இவ்வகையில் தரிசனம் பெறுவோர்க்குக் கிட்டும் சந்த்ர பிலாகாசக் கிரண சக்திகள் வானில் அவரவர் நட்சத்திரம் மூலமாக உலக மக்களுக்கும் இந்நல்வரப் பலாபலன்களை மகத்தான சமுதாய இறைச் சேவையாக அளிக்கின்றார்கள்!

எனவே பிறருடைய நன்மைக்காகவேனும் ஓர் அரிய சமுதாயச் சேவையாக மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைக் கண்டு தரிசித்திடுக! மூன்றாம் பிறை நேரும் நேரத்தில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதலால் பலாபலன்கள் ஆயிரம் மடங்காய்ப் பெருகுகின்றன. பொதுவாக மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளைப் பெற்றோர் மூன்றாம் பிறை தரிசனத்தோடு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் இறையருளால் தக்க தீர்வுகளைப் பெறுவர்! ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து கிரிவலம் வருதல் வேண்டும்!

* மூன்றாம் பிறைச் சந்திர ஒளியைத் தரிசிப்பதற்காகவே கோடானு கோடி ஜெயக்ஷீராஸ் பித்ரு மூர்த்திகள் பூலோகத்தில் கூடுகின்றனர்.

* சோமநாதர், சோமேஸ்வரர், சோமச்சந்திரர், சந்திர மெளலீஸ்வரர், சோமசுந்தரம், சந்திரசேகரர் போன்ற சந்திர நாமங்களை உடைய சிவாலயங்களில் மூன்றாம் பிறைச் சந்திரனை தரிசித்த உடனேயே ஸ்ரீசந்திர மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து பூஜித்தலால் பிரகாசமான கண்ணொளி ஏற்பட்டு, கண்ணால் கண்ட காட்சிகளினால் முறையற்ற தீய எண்ணங்கள் ஏற்படுவதையும் தடுத்து நல்வழிப்படுத்தி, வம்சாவளியும் நன்கு இறைநெறிகளில் பிரகாசித்திட வழி வகுக்கும்.

* உங்கள் குழந்தைகளுக்கும் மூன்றாம் பிறை தரிசன மகிமையை உணர்த்தி சிறு பிராயத்தில் இருந்தே தரிசனம் பெறச் செய்யுங்கள். இப்போதே தொடங்கினால்தான் 80 வயதை ஒட்டி இறையருளால் 1008 மூன்றாம் பிறைகளை இடைவிடாது தரிசித்த மகரிஷி நிலையைப் பெற்றிடலாம்! பொதுவாக 1008 பிறை தரிசனம் பெற்றவர்களே 80 வயது சதாபிஷேகத் தகுதி பெறுகின்றனர்! இவ்வாறு 1008 பிறை தரிசனத்துடன் தம்பதி சகிதம் 80 வயதுக்கான சதாபிஷேகத்தைப் பெறுவோர்க்கு மகரிஷிகளாலும் காணுதற்கு அரிய ச்யவன மகரிஷியே நேரில் வந்து ஆசிர்வதிக்கின்றார்!

* புனிதமான பீடாதிபதிகள் வட்ட வடிவில் நெற்றியைச் சுற்றி ருத்ராட்ச மாலை அணிந்து புனிதமான எண்ணங்களை விருத்தி செய்வர்!

* சந்திர பகவானுக்கு உரித்தான திங்கட் கிழமை தோறும் வெண்ணிற ஆடைகளை நாள் முழுதும் தரித்து சசிமுத்து போன்ற சந்திரனுக்கு உரித்தான வெள்ளை நிற அணிகலன்களை அணிந்து ஸ்ரீசந்திர பகவானுக்குரிய மந்திரங்களை ஓதுதலால் மதிகாரகராகிய சந்திர பகவானின் அருளால் நல்புத்தியோடு மனிதன் துலங்குவான். இல்லற சுமங்கலிப் பெண்கள் திங்கட் கிழமை நாள் முழுதும் வெள்ளை நிறக் கற்கள் கூடிய தோடுகள், மூக்குத்திகள், மல்லிகை, சம்பங்கி, போன்ற வெண்ணிறப் புஷ்பங்கள், ஸ்படிக மாலை, காஞ்சனாதி ஸ்படிகம், சசிமுத்துக் கல் போன்ற வெண்மை கூடிய அம்சங்களை அணிந்து பூஜித்திடலாம்.

வெண்ணெயில் உதிக்கும் சந்திர சாந்தம்!

* திங்கட் கிழமை தோறும் சூரிய உதயத்திற்கு முன் ஒரு பெரிய வெண்ணை உருண்டைக்குள் ஸ்படிக லிங்கம், ஸ்படிகப் பிள்ளையார், ஸ்படிகப் பெருமாள், சாளக்கிராமம் போன்ற ஸ்படிக தெய்வ மூர்த்தியை உள்வைத்து "நவநீத சிவச் சந்த்ர மூர்த்தி" பூஜையாக

ஓம் நவனீத ஸ்படிக ரூபாய நம:
வெண்ணெய் வடப்பரி மூர்த்தியே போற்றி!

என்று 1008 முறை ஓதி அர்ச்சித்துச் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சந்திர தரிசனத்துடன் அல்லது அருந்ததி நட்சத்திர தரிசனத்துடன் பூஜையை நிறைவு செய்து வெண்ணெய்ப் பிரசாதத்தை ஏற்று விரதத்தையும்‌ பூர்த்தி செய்து பிறருக்கும்‌ அளிக்க வேண்டும்‌. இது மன அடக்கத்திற்கு வழி வகுத்துப்‌ பரவெளியில்‌ சந்திர சக்திகளைப்‌ பெருக்கி எதிர்‌ கால சந்ததிகளைப்‌ பாதுகாக்கும்‌. இவை யாவும்‌ சந்திர சாந்த சந்ததி பூஜைகளின்‌ முதல்‌ கட்ட வழிபாடுகளாம்‌!

வெண்ணெயை உண்ட கண்ணனின்‌ திருவாயினுள்‌ அண்ட சராசரமே அடக்கமான திவ்யமான காட்சியைக்‌ காணும்‌ பேறு பெற்றவர்களில்‌ ஒருவரே ஸ்ரீவசிஷ்ட மகரிஷியாம்‌! காரணம்‌ வெண்ணெயாலான லிங்கத்தை அவர்‌ வழிபட்டதேயாம்‌! மேலும்‌ பிரபஞ்ச பஞ்ச பூத சக்தி நிறைந்த திரவியமே வெண்ணெய்‌ ஆதலின்‌ இதனுள்‌ நெய்‌ போல்‌ உறையும்‌ மூர்த்தி வழிபாடு தெய்வீக சாந்தத்தை உருவகிக்கும்‌! எனவே வெண்ணெய்‌ லிங்க பூஜைக்குப்‌ பிரசித்தியான சிக்கில்‌ திருத்தலமும்‌ சந்திர சாந்த சந்ததி பூஜைக்கு ஏற்ற தலமாம்‌!

ஜாதி, மத, இன பேதமின்றிச்‌ சத்சங்கப்‌ பூஜையாகப்‌ பலரும்‌ ஒன்று சேர்ந்து பூஜித்தல்‌ அபரிமிதமான பலன்களைத்‌ தரும்‌. பூவுலகின்‌ அனைத்து நாடுகளுக்கும்‌ வழிகாட்டும்‌ உன்னத, உத்தம உலக சமுதாயப்‌ பூஜையாம்‌!

ஸ்ரீஜுரஹரேஸ்வரர்

தமிழகத்தின்‌ பல்வேறு ஆலயங்களில்‌ (பவானி, தஞ்சாவூர்‌ சங்கர நாராயணர் கோயில்‌) ஸ்ரீஜுரஹரேஸ்வரரைத்‌ நீங்கள்‌ தரிசித்து இருப்பீர்கள்‌! கலியுகத்தில்‌ தீயொழுக்கங்களால்‌, புகைபிடித்தல்‌ மற்றும மது வகைகளால்‌ உஷ்ண சம்பந்தமான நோய்கள்‌ பெருகும்‌ என்பதால்தான்‌ மகரிஷிகளின்‌ விருப்பப்படி ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி விசேஷமாக நோய்‌ நிவாரண மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். குறிப்பாக பவானி சிவாலயத்திலுள்ள ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி மிகவும்‌ சக்தி வாய்ந்தவர்‌ ஆவார்‌.

தஞ்சாவூர்‌ கரந்தட்டாங்குடி சிவாலயத்தில்‌ லிங்க மூர்த்தியாகவே ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி எழுந்தருளி இருப்பது நம்‌ பெரும்‌ பாக்யமே! மிகவும்‌ உஷ்ண காலமான (அக்னிக்‌ கோளமான செவ்வாய்‌ பகவானுக்கு உரிய) செவ்வாய்‌ ஹோரை நேரத்திலும்‌, இராகு காலத்திலும்‌, (கையால்‌ அரைத்த சந்தனத்தால்‌) இம்மூர்த்திக்குச்‌ சந்தனக்‌ காப்பிட்டு வழிபடுவோரக்கு மூலம்‌, வயிற்று வலி, கண்‌ வீக்கம்‌, acidity எனப்படும்‌ குடல்‌ நோய்கள்‌ போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்களுக்குத்‌ தக்க நிவாரணம்‌ கிட்டும்‌. ஜுரஹரேஸ்வரர்‌ என்றாலே வெப்பம்‌ சம்பந்தப்பட்ட நோய்களை மட்டுமே தீர்ப்பவர்‌ என எண்ணாதீர்கள்‌! சினம்‌ போன்ற மன உஷ்ணத்தாலும்‌ குடும்பப்‌ பிரச்னைகளையும்‌ தீர்ப்பவர்‌!

ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
வைத்தீஸ்வரன் கோவில்

ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்தியின்‌ மஹிமை என்ன? பாற்கடலில்‌ விளைந்த விஷமானது தேவர்களைத்‌ துரத்தியபோது, அவர்கள்‌ நேரே சிவனிடம்‌ சரணடைந்திருந்தால்‌ பாற்கடலினின்று அவ்விஷப்‌ பாதை திருக்‌ கைலாயத்துடன்‌ நின்றிருக்கும்‌. ஆனால்‌ இவர்கள்‌ பல கோடி லோகங்கட்கும்‌ அஞ்சி அஞ்சி ஓடியமையால்‌ அங்கெல்லாம்‌ அவ்விஷம்‌ துரத்திடவே இந்த அபரிமித உஷ்ணமானது பல லோகங்களையும்‌ தாக்கியது. இவ்வுஷ்ணத்தால்‌ மிகவும்‌ பாதிக்கப்பட்டது பூமியேயாம்‌! இந்த உஷ்ணம்‌ நிறைந்த இடத்திலெல்லாம்‌ பூமியில்‌ எரிமலை காட்டுத்‌ தீ, உப்புத்‌ தண்ணீர்‌, விஷச்‌ செடிகள்‌ கொடிய விலங்குகள்‌, விஷம்‌ பாய்ந்த முட்கள், விஷம்‌ தோய்ந்த ஆயுதங்கள்‌, விஷக்‌ கிருமிகள்‌ போன்றவை தோன்றின. இதற்குப்‌ பின்‌ ஏற்பட்ட விளைவுகளால்‌, தேவர்கள்‌ தங்களால்தானே எங்கும்‌ விஷப்‌ பாதை ஏற்பட்டுப்‌ பல லோகங்களுக்கும்‌ தீய விளைவுகள்‌ ஏற்பட்டன என்று வருந்தி இறைவனிடம்‌ பிராயச்சித்தம்‌ வேண்டியபோது, விடத்தை உண்ட நீலகண்டனாகிய சிவபெருமாள்‌ ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்தியாகக் காட்சியளித்தார்‌. உடனே நாரத முனிவரும்‌ மற்ற மஹரிஷிகளும்‌ இச் ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்கத்தைப்‌ பூலோகத்தில்‌ பிரதிஷ்டை செய்தால்தான்‌ இதன்‌ பலாபலன்கள்‌ யாவும்‌, அனைத்து லோகங்களையும்‌ சென்று ஆலகால விட உஷ்ணம்‌ அடங்கும்‌ என்று கூறிடவே, அனைவரும்‌ அந்த ஸ்ரீஜுரஹரேஸ்வர மூத்தியைப் பெயர்த்தெடுக்க முற்பட்டனார். ஆனால்‌ இறைவனின்‌ திருவிளையாடலின்‌ அற்புதமாக அந்த ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்தியின்‌ அடிப் பீடத்தண்டு தளமானது, பல கோடி லோகங்கட்டும்‌ படர்ந்து சென்று ஆதியும்‌, அந்தமும்‌ இல்லாத ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தியாகப்‌ பல தலங்களில் உறைவது கண்டு அனைவரும்‌ அதிசயித்து ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தியை வணங்கினர்.

எனவே எங்கெல்லாம்‌ இந்த ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்தியின் அடித்தள நாளம் சென்றதோ அவ்விடத்தில்‌ ஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்திகளும்‌, அர்ச்சாவதார‌ மூர்த்திகளும்‌ (பவானி மூர்த்தியைப்போல) பூலோக வழி‌பாட்டிற்காகத்‌ தாமாகவே தோன்றினர்‌. மேலும்‌ சித்புருஷர்களும்‌, மஹரிஷிகளும்‌ எந்த பூலோக நாளத்தின்‌ வழியாக ஆதிமூல ஸ்ரீஜுரஹரேஸ்வரரின்‌ அடிப்‌ பீட சக்தி விரவியதோ அங்கெல்லாம்‌ ஸ்ரீஜுரஹரேஸ்வரரைப்‌ பிரதிஷ்டை செய்தனர்.

எனவே ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க வடிவானது, ஜுரம்‌ சம்பந்தப்பட்ட நோய்களைத்‌ தீர்ப்பது மட்டுமன்றி, உஷ்ண சம்பந்த நோய்களையும்‌, தேவர்களுடைய மன உஷ்ணத்தையும்‌ தணித்தது போல்‌ பிற மக்களின்‌ சினம்‌, பொறாமை, பகைமை, திருஷ்டி போன்றவற்றால்‌ விளையும்‌ இல்லறக்‌ கொந்தளிப்புகளையும்‌ தீர்க்க உதவும்‌!

எனவே எங்கெல்லாம்‌ இந்த ஆதிமூல ஜுரஹரேஸ்வர மூர்த்தி லிங்கத்தின்‌ அடித்தளம்‌ சென்றதோ அவ்விடத்தில்‌ ஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்திகள்‌ வழிபாட்டிற்காக மானுடப்‌ பிரதிஷ்டையாகவும்‌ தோன்றின.

எந்தெந்த ஹோரையில்‌ எந்ததெந்த முறையில்‌ காப்பிட்டு ஸ்ரீஜூரஹரேஸ்வர லிங்கத்தை வழிபடவேண்டும்‌ எனும்‌ வைத்ய சாஸ்திர விதிமுறையும்‌ உள்ளது. சந்திர ஹோரை நேரத்தில்‌ வெண்ணெய்க்‌ காப்பிட்டு வழிபடுதலால்‌ ஆஸ்த்மா ச‌ம்பந்தப்பட்ட நோய்களுக்குத்‌ தீர்வு கிட்டும்‌. ஆழ்ந்த நம்பிக்கையுடன்‌ தொடர்ந்து செய்திடல் வேண்டும்‌.

ஆஸ்த்மா மற்றும்‌ இருதய நோய்‌ காரணமாக இறந்தோரின்‌ ஆத்மா நன்முறையில்‌ சாந்தியடைய அவர் தம் திதியன்று ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்கத்திற்குத்‌ தூய எள்‌ சேர்ந்த வெண்ணெய்க்‌ காப்பிட்டு எள்‌, வெல்லம்‌, பிரண்டை, புடலங்காய்‌ போன்ற பித்ரு சக்தி நிறைந்த உணவைத்‌ தானமளிக்க வேண்டும்‌.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் அருளும் கரந்தை சிவாலயம்

அதிஉஷ்ணம்‌ காரணமாய் மாதவிடாய்க்‌ கோளாறுகளால்‌ அவதியுறும்‌ பெண்கள்‌ செவ்வாய்‌ ஹோரை செவ்வாய்க்கிழமைகளில்‌ உடல்‌ சுத்தியுடன்‌ ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்க மூர்த்திக்கு வெண்ணெயுடன்‌, மிளகு‌, சந்தனம்‌ சேர்த்துக்‌ காப்பிட்டு வழிபடல்‌ வேண்டும்‌.

மின்சாரம்‌, தீ சம்பந்தப்பட்ட ரண காயங்களால்‌ அவதியுறுவார்‌, தீப்புண்களால்‌ தோலின்‌ நிறம்‌ பாதிக்கப்பட்டோரும்‌, ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்குச்‌ செவ்வாய்க்‌ கிழமை இராகு கால நேரத்தில்‌, பசு நெய்க்‌ காப்பிட்டு சப்பாத்தி, தோசை, போளி போன்ற வட்ட வடிவ உணவுப்‌ பொருட்களைத்‌ தானமாக அளித்திட வேண்டும்‌.

நெடு நேரம்‌ அமர்தல்‌ போன்று தசை, எலும்பில்‌ கூடும்‌ அபரிமித உஷ்ணத்தால்‌ முதுகு வலி ஏற்படுதலால்‌ திங்கள்‌ கிழமைகளிலும்‌, திருவாதிரை நட்சத்திர நாட்களிலும்‌ சனி ஹோரை நேரத்தில்‌ ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு வெண்ணெயுடன்‌ வெற்றிலையால்‌ காப்பிட்டு நீள்வகைக்‌ காய்கறிகள்‌ (முருங்கை, புடலை) கலந்த உணவைத்‌ தானமளித்தலால்‌ நலம்‌ பெறலாம்‌.

நமக்கு வருகின்ற வியாதிகள்‌ யாவுமே நம்‌ கர்மவினைகளின்‌ விளைவு என்பதை ஒவ்வொருவரும்‌ உணர வேண்டும்‌. என்னதான்‌ மருந்துகள்‌ உண்டாலும்‌. குறித்தக்‌ கர்மவினை தீரும்‌ வரை அந்நோய்‌ உடலில்‌ இருந்து கொண்டிருக்கும்‌. ஸ்ரீஜுரஹரேஸ்வர வழிபாடானது எக்கர்மவினையால்‌ நோய்‌ ஏற்பட்டதோ அக்கர்மவினைகளை முதலில்‌ நிவர்த்தி செய்வதால்‌, நோய்‌ நிவாரணம்‌ துரிதமாகிறது.

ஸ்ரீகுதம்பைச் சித்தர்

ஸ்ரீகுதம்பைச்‌ சித்தர்‌ பொருதலை விருட்சத்தின்‌ அடியில்தாம்‌ மோகனத்‌ தம்பம்‌ என்னும்‌ வாசியோகக்‌ கலை பயின்று தவம்‌ புரிகின்றார்‌. தகுதியுள்ளோர்க்கு, அதுவும்‌ இந்த யோகப்‌ பலன்களை உலகிற்கு அர்ப்பணிப்போர்க்கு இதனை உபதேசிக்கின்றார்‌. அட்டைப்‌ படத்தில்‌ ஸ்ரீகுதம்பைச்‌ சித்தர்‌ அட்சர பட்சியாகிய நீல வண்ண (யோகிக்‌) குருவிக்கு மோகனத்தம்ப வாசி யோகத்தை உபதேசிக்கின்ற திருக்காட்சியைக்‌ காணலாம்‌. ஒவ்வொரு விலங்கும்‌ ஒவ்வொரு யோகத்தில்‌ சிறந்து விளங்குகின்றது. இவ்வாறாக வரிக்‌ குதிரையும்‌ மோகனத்தம்ப யோகம்‌ பயின்று மக்களின்‌ விதிக்கு ஏற்றபடி இந்த வாசி யோக பலன்களைக்‌ கருவண்ணக்‌ கோடுகளாக உடலில்‌ தாங்குகின்றது. வரிக்‌ குதிரைக்கு வரிக்‌ குதிரை உடல்‌ கோடுகள்‌ மாறுபடும்‌. எனவே இவைகட்கு சனிவட்ட குதிரா கோடு என்ற பெயரும்‌ உண்டு. சனீஸ்வர லோகத்தைதச்‌ சார்ந்த வரிக்‌ குதிரைகளைச்‌ சனி ஹோரை, மற்றும்‌ சனிக்கிழமைகளில்‌ கண்டு உணவு அளிப்பது சிறப்புடையது.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் சங்கரநாராயணர் ஆலயம் தஞ்சாவூர்

பொங்கு சனி, தங்கு சனி, மங்கு சனி என்ற மூன்று வகைப்‌ பிரிவுகள்‌ ஒவ்வொருவருக்குமான கோசாரத்தில்‌ உண்டு. இதில்‌ பொங்கு சனியில்‌ சனீஸ்வரர்‌ மோகனத்தம்ப வாசி யோகம்‌ பூணும்‌ (வரிக்‌) குதிரையை வாகனமாய்‌ ஏற்பார்‌. எனவே பொங்கு சனியில்‌ இந்த மோகனத்தம்பன யோக நிலையில்‌ உள்ள வரிக்‌ குதிரையின்‌ படத்தை வைத்துக்‌ கொண்டு அதன்‌ கருங்கோடுகளில்‌ சனிவிரலான நடுவிரலின்‌ உள்‌ (வளைய) ரேகைகள்‌ பதியுமாறு வைத்து ஸ்ரீசனீஸ்வர காயத்ரீ மந்திரத்தை ஓதி ஜபித்திடப்‌ பொங்கு சனி நற்பலன்களைத்‌ தந்திடும்‌. இதுவே ஸ்ரீகுதம்பைச்‌ சித்தரின்‌ அருள்மொழிகளாம்‌. அட்சர பட்சியாகிய நீலவண்ணக்‌ குருவியும்‌ பொருதலை மரத்தில்‌ அமர்ந்து யோகம்‌ பயிலும் வெள்ளி, சனிக்‌ கிழமைகளில்‌ இந்த அக்ஷர பட்சியைத்‌ தியானித்து,

“யாதேவீ ஸர்வ பூதேஷு அக்ஷர பக்ஷி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம”

என்று ஓதி ஐபித்திடில்‌ நற்செய்திகள்‌ வரும்.

ஸ்ரீகுதம்பைச்‌ சித்தரின்‌ பாதத்தின்‌ கீழ் “சங்கிணி” என்ற புனிதமான அணில்‌ “முத்துழுவம்" என்ற சிகப்பு நிறக்‌ காயகல்பக்‌ கனியை உண்டு‌ கொண்டிருக்கின்றது. யோக சித்தியில்‌ “சங்கணி வாச சுவாசம்‌'' அடைவோர்க்கே ஒளிப்‌ பிழம்பின் ஊடேதான்‌ ஸ்ரீகுதம்பைச்‌ சித்தர் "வழுவக்காடு" என்றும்‌ உருவ மாற்ற தேவ ரகசிய சித்சக்தி வித்தையை உபதேசிப்பார்‌. இதனைப்‌ பெறுகின்ற அணில்‌ மரத்துக்கு மரம்‌ தாவும்‌ போது எழும்‌ உஷ்ணத்தால்‌ யோக பாளம்தனை வாயில் உருவாக்கி நல்லோர்‌ இல்லங்களில்‌ குரல்‌ எழுப்பிப்‌ பரப்பும்‌. இதற்குக்‌ ''கூத்துருவ'' வேத வாக்கியம்‌ என்று பெயர்‌. இதனை ஓதும்போது மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரெண்டு முறை இருகால்களையும்‌ தூக்கிக்‌ குரல்‌ கொடுக்கும்‌. இதுவே நற்செய்திகளுக்கு நல்ல சகுனம்‌. இவ்வாறு அணில்‌ குரல்‌ கொடுத்திடில்‌ இடமாற்றம்‌, வீடு மாற்றம்‌ செய்வோர்‌ நன்கு யோசித்து நிதானமாக முடிவெடுத்தல்‌ வேண்டும்‌.

யானைகளில்‌ பல வகைகள்‌ உண்டு. இதில்‌ அட்டைப்‌ படத்தில்‌ உள்ளது ''விந்தியமலை யானை” வகையாம்‌. இவை வருண ஜப யோகத்தில்‌ சிறந்தவை. ஸ்ரீகுதம்பைச்‌ சித்தர்தாம்‌ இவற்றிக்கு வருண ஜப மந்திரங்களை "கும்பேந்த்ர” வாசியோக‌ முறையில்‌ உபதேசிக்கின்றார்‌. சாம கானத்தைச் சேர்ந்த இந்த யோகத்தில்‌ அமிர்தம்‌ வர்ஷிக்கும்‌ விந்தியமலை யானைகள்‌ பிளிறினால்‌ அமிர்தம்‌ கூடிய நல்ல மழைப்‌ பொழிவு ஏற்பட்டுப்‌ பயிர்கள் செழிக்கும்‌, இது வெறும்‌ இயற்கைக்‌ காட்சி அன்று. இவ்வாறான பலவகையான ஜீவயோக சக்திகள் நிறைந்த ஸ்ரீகுதம்பைச்‌ சித்தரின்‌ யோக அமர்வு கோலம்‌ கூடிய திருக்காட்சியை முறையாக வழிபட்டிடில்‌, குருவருள்‌ கூடி முன்னேறுவா்‌.

அமுத தாரைகள்

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கான கவின்மிகு திருத்தலம்!

கார்த்திகை நட்சத்திரத்தை உடையவர்கள் வழிபட வேண்டிய அற்புதமான சிவத்திருத்தலம் ஒன்று உள்ளது. அக்னி நட்சத்திர வகையை சார்ந்த கார்த்திகை முருகப் பெருமான் உறையும் ஸ்கந்த லோகத்துடன் தொடர்புடையதாகும். தினந்தோறும் முருகப் பெருமானின் திருவடி தரிசனங்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற கார்த்திகை நட்சத்திர மூர்த்திகள், முருகப் பெருமானின் திருவடி தரிசனம் பெறுதற்கு காஞ்சனாதி ஸ்படிகத்தைத் தாங்கியவாறு அனைத்து நட்சத்திர கோடி ஒளிப் பிரவாகத்தையும் தாங்கி சுந்தரனாய் பொலிந்த சிவபெருமானை வலம் வந்தனர். இக்கார்த்திகைச் சுந்தர சிவ மூர்த்தி, மயிலாடுதுறை அருகே கஞ்சனாகரம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கின்றார். காஞ்சனா அகரம் அதாவது காஞ்சனா சக்தியில் முதன்மை பெற்ற அணிமணி என்ற பொருளில் இது கஞ்சனகரமாக மருவிற்று. கார்த்திகை நட்சத்திரத்தில் இங்கு நிறைய அகல் விளக்குகளில் தீபமேற்றி, பட்டாடைகள் ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால் வசதிகளிருந்தும் முன்னிற்கு வராதோர் நல்வழி பெறுவர். கார்த்திகை நட்சத்திரம் ஒளிபெற்ற சிறப்புடையதால் இங்கு கார்த்திகை நாளில் வந்து வழிபடுவது சிறப்புடையது.

கானாட்டம்புலியூர் சிவாலயம்

ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி

ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாம்பணை தானே ஸ்ரீஆதிசேஷன்! பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனின் திருமேனியைத் தாங்கும் பாக்யம் பெற்றவர் என்பதால், ஆதிசேஷனின் அவதாரமாக விளங்குகிற ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி காண்பதற்கரிய மஹரிஷியன்றோ! நாம் பதஞ்சலி முனிவர் என்றால் ஏதோ ஒரு யுகத்தில் வாழ்ந்து அருள்பெற்றவர் என்று எண்ணாதீர்கள்! ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீபரத்வாஜர், ஸ்ரீபதஞ்சலி போன்ற மஹரிஷிகள் நித்ய சிரஞ்சீவிகள். அனைத்து யுகங்களிலும், அனைத்து அண்டங்களிலும், பல லோகங்களிலும் இன்றும், என்றும் உலா வந்து கொண்டிருப்போர் ஆவர். ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி தினந்தோறும் வழிபடுகின்ற திருத்தலங்களும் உண்டு. திருஅண்ணாமலையில் நடன காலமாகிய சந்தியா வேளையில் இன்றும் சூட்சுமமாகவும் கிரிவலம் பூண்டு வருகின்றார். சிதம்பரத்திலுள்ள இளமையாக்கினார் கோயிலில் இறைவனை வழிபட்டுப் போற்றும் நிலையில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் காட்சியளிக்கிறார். பீஜாட்சர நாட்டியத்தில் பிரும்மாண்டமான பிரும்மஞானம் பெற்றவர். நடராஜரின் நடனக் கோலத்தை காரைக்கால் அம்மையார் போல் எப்போதும் காணும் பேறுபெற்றவர். பல தெய்வ மூர்த்திகளுக்கும் நடன தரிசனம் அளித்தவர். இத்தகைய கீர்த்தி பெற்ற பதஞ்சலி முனிவரைத் தரிசிப்பதால் என்ன பலன் நமக்குக் கிட்டும்? மகரிஷிகளின் தரிசனம் பெற, அரிய பூஜைகளை நடத்திட இவர் அருள்புரிகின்றார். நாட்டியத் துறையில் மேன்மை பெற இவர் அருளாசி நிச்சயமாகத் தேவை!

ஸ்ரீகாத்ரசுந்தரேஸ்வரர்
கஞ்சனாகரம்

மூன்றாம்‌ பிறைச்‌ சந்திர தரிசனத்தைப்‌ பெற வேண்டிய விசேஷமான தலங்கள்‌ சில உண்டு. ஒரு சில நிமிடங்களே வானில்‌ தெரியும்‌ மூன்றாம்‌ பிறைச்‌ சந்திர தரிசனம்‌ (அமாவாசை நாளுடன்‌ சேர்த்து மூன்றாம்‌ நாள்‌ தெரிவது) மனதிற்குச்‌ சாந்தம்‌ தருவதாம்‌. பணம்‌, வசதி, வீடு, வாகனம்‌, பிள்ளைகள்‌ இருந்தும்‌ குடும்பத்தில்‌ சாந்தமின்றித்‌ தவிப்போர்‌ விழுப்புரம்‌ அருகே உள்ள வடகஞ்சனூர்‌ ஸ்ரீசந்திரசேகரர்‌ ஆலயத்தில்‌ மூன்றாம்‌ பிறை நாளில்‌ சுவாமிக்கு பால்‌ சாதக்‌ காப்பு இட்டு வழிபட்டு கையில்‌ அவரவர்க்கு உரிய ஸ்படிக ராசிச்‌ சக்கரம்‌ தாங்கி மூன்றாம்‌ பிறையை தரிசித்து அன்னதானம்‌ செய்திடில்‌ மனக்‌ குழப்பம்‌, சண்டைகளால்‌ அவதியுறும்‌ குடும்பத்தில்‌ சாந்தம்‌ உண்டாகும்‌. திங்கட்கிழமை சந்திர ஹோரையில்‌ இப்‌பூஜையைச்‌ செய்வதும்‌ சிறப்புடையதாம்‌. அம்பிகையே சிவனின்‌ சிரசில்‌ மூன்றாம்‌ பிறை தரிசனம்‌ பெற்ற அற்புதத்‌ தலம்‌! மூன்றாம்‌ பிறை தரிசனம் கிடைப்பதற்கு அரியது என்பதை நினைவில்‌ கொள்ளுங்கள்‌.

பிள்ளைகள்‌ நற்குணங்களுடன்‌ வாழ........

கணவனுக்குத்‌ தீய குணங்கள்‌, தீய பழக்கங்கள்‌ இருந்து பிள்ளைகளுக்கு அவை தொற்றக்‌ கூடாது என்று வருந்துகின்ற பெண்மணிகள்‌ நிறைய உண்டு. கும்பகோணம்‌ திருநல்லம்‌ அருகே உள்ள கருவிலி சிவாலயத்தில்‌ (கருவிலிக்‌ கொட்டிட்டை என்ற பெயரும்‌ உண்டு) ஸ்ரீசற்குணநாதச்‌ சிவலிங்கத்திற்குத்‌ தேன்‌, பாதாம்‌ பருப்பு, குங்குமப்‌ பூ கலந்த பசும்பாலால்‌ அசுவினி, ரோஹிணி, செவ்வாய்‌ நாட்களில்‌ அபிஷேகித்து பாலை ஏழைகளுக்குத்‌ தானமாக அளித்து வந்தால்‌ பிள்ளைகளுக்கு நற்குணம்‌ வாய்க்கும்‌. ஆழ்ந்த நம்பிக்கையுடன்‌ தொடர்ந்து செய்து வர வேண்டும்‌. பிள்ளைகளை இங்கு அங்கப்‌ பிரதட்சிணம்‌ செய்ய வைத்திட சர்வாங்க நாயகியாக அருள்பாலிக்கும்‌ அம்பிகையின்‌ திருவருளால்‌ அனைத்து நாள நாடிகளும்‌, உறுப்புகளும்‌ புனிதம்‌ அடைந்து தீய குணங்கள்‌ அண்டாதிருக்க அருள்வழி பிறக்கும்‌. ஸ்படிகச்‌ சங்கை அம்பிகையின்‌ திருவடிகளில்‌ வைத்து கையில்‌ ஸ்படிகச்‌ சங்குடன்‌ திருஅண்ணாமலையைக்‌ கிரிவலம்‌ வந்து இல்லத்தில்‌ பூஜிப்போர்க்குத்‌ தீய பழக்கங்கள்‌ மறையும்‌.

பேரையூர்

நாகப்பன், நாகசாமி, நாகராஜ், நாகமூர்த்தி, நாகலஷ்மி, நாகவல்லி, நாகேஸ்வரன், நாகேஸ்வரி, நாகேந்திரமூர்த்தி, நாகன், நாகேந்திரன், நாகமணி, நாகசுப்ரமணியன், நாகரத்தினம், நாகநாதன், நாகலிங்கம், நாகபூஷணம் போன்ற "நாகம்” சம்பந்தப்பட்ட பெயருடையோர் தம் வாழ்வில் அடிக்கடி வழிபடவேண்டிய தலமே புதுக்கோட்டை பொன்னமராவதி தடத்தில் (குழி பிறை வழியே) பேரையூர் ஸ்ரீ நாகநாதசுவாமி திருத்தலமாகும். நாக சக்திகள் நிறைந்த தலம். பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகங்களும் தங்களுக்குரிய ஜீவ பீஜாட்சரங்களை இங்குதான் பெறுகின்றனர். நாகங்களுக்கு அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅஸ்தீக சித்தர் தினமும் சூட்சுமமாக வழிபடும் தலம். தக்க காணிக்கை செலுத்தி இங்குள்ள நாக தீர்த்தத்தை ஒரு சிறிது மட்டும் எடுத்துச் சென்று (நிறைய அல்ல) தினந்தோறும் ஒரு துளியை மட்டும் வெற்றிலையில் இட்டு நாக்கால் தடவி அருந்தி வந்தால் எத்தகைய நாக தோஷத்திற்கும் நிவர்த்தி கிட்டும். பொதுவாக நாக தோஷங்கள் நாக்கு நரம்புகள், நாளங்களில்தான் இருக்கும். நாக சக்திகளும், நாக பீஜாட்சரங்களும் நாக வேத சக்திகளும் பூரிக்கின்ற ஸ்தலம். இங்கு பிரம்மாண்டமான மதிலில் எங்கு நோக்கினும் நாகங்கள் காட்சியளிப்பது இப்பூவுலகில் பெறுதற்கு அரிய பாக்கியமாகும். நாகம் சம்பந்தப் பெயருடையவர்கள் இங்கு வழிபட்டால் நாகம் சம்பந்தப்பட்ட எத்துன்பத்திற்கும் நிவர்த்தி கிட்டும். இவர்கள் சதுர்த்தி, சதுர்த்தசி தினங்களிலும் சுவாமிக்குப் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால் தானம் செய்து வருதல் வேண்டும்.

பலவிதமான மனக் குழப்பங்கள், இல்லறப் பிரச்னைகள், அலுவலகத் துன்பங்கள், பெரும்   நஷ்டங்கள், விபத்துக்கள் காரணமாகத் தினமும் தூக்கம் இல்லாமல் அல்லல்படுவோர் நிறைய உண்டு.  இவர்கள் சிவாலயங்களில் அர்த்த ஜாமத்தில் நடைபெறுகின்ற சிவ பாதபூஜை மற்றும் பள்ளியறைப் பூஜைக்குத் தேவையான திரவியங்கள், பால் மற்றும் நன்முறையில் சுத்திகரிக்கப்பட்ட புனிதமான இலவம் பஞ்சுத் தலையணைகளைப் பல கோயில்களுக்கும் வைராக்ய தானமாக அளித்து வர நன்முறையில் உறக்கம் ஏற்படும். தேவையில்லாத மரண பயம் அகலும். உறக்கம் என்பது உடலுக்குப்  புத்துணர்ச்சியைத் தருவதோடு, பல விண்ணுலக லோகங்களுக்கான பிரயாணத் தடமாகவும் அமைகின்றது. சிவபாத பூஜை மற்றும் பள்ளியறைப் பூஜைக்கான பால் மற்றும் திரவியங்கள், தலையணை ஆகியவற்றை அளிப்போர்க்குச் சுக்கிர பலன்கள் அபரிமிதமாகக் கிட்டுவதால், சுக்கிர பகவானே பல அயன சயன யோகங்களை தேவ ரீதியாக இவர்களுக்குத் தந்து அருள்கின்றார். நன்முறையில் உறக்கம் கை வரப் பெற முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களுடன் அவ்வப்போது சாந்தமாக அளவளாவி அவர்களுடைய மனச் சாந்திக்கு வழிவகுப்பதுடன், திருவாடானை அருகே உள்ள மிகவும் சக்தி வாய்ந்த பாகம்பிரியாள் ஆலயத்தில் ஓரிரவு தங்கியும் வழிபடுதலால் துரிதமான தீர்வுகளைப் பெறலாம்.

ஸ்ரீசெம்மேனிநாதர் திருக்கானூர்

அக்னிக் குற்றங்கள் அகல்வதாக!

அக்னிக் குற்றங்களுக்குப் பிராயசித்தம் பெற்றிடத் தஞ்சாவூர் அருகே திருக்கானூர் ஸ்ரீசெம்மேனி நாதேஸ்வரர் (ஸ்ரீஅக்னீஸ்வரர்) ஆலயத்தில் குறைந்தது மூன்று மணி நேரமாவது தொடர்ந்து சாம்பிராணி தூபம் இட்டு வழிபட்டு அக்னி ஹோமம் நிகழ்த்தி சீதாப் பழம், திராட்சை, மிளகு சாதம், இளநீர் போன்றவற்றைத் தானமாக அளித்து வரவேண்டும். தீயால் பாதிக்கப்பட்டவர்கள் அக்னி தோஷங்களில் இருந்து தீர்வு பெற உதவும் தலம். புகை பிடித்தலால் பரவெளியை நச்சாக்கிய பெரும்பாவத்திற்கு நிவாரணம் பெற இங்கு தொடர்ந்து சாம்பிராணி தூபக் காப்பு இட்டு வருதல் வேண்டும். சிவபெருமானே அக்னி ரூபத்தில் உமையவ‌ளுக்குக் காட்சி தந்த தலமாதலால் அக்னி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு, பாவங்களுக்குப் பிராயசித்தம் தரும் தலம். குறிப்பாகப் பெரும் தொழிற் சாலைகள், சிறு தொழில், பாக்டரி வைத்திருப்போர் கழிவு நச்சுப் புகை விண்ணில் கலப்பதால் ஏற்படும் பாவங்களில் இருந்து தீர்வு பெற இங்கு தொடர்ந்து பெருமளவில் ஜவ்வாது, புனுகு கலந்த சாம்பிராணி தூபம் இட்டும் வர வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

நாட்டியத்தில் சிறப்புடன் பொலிய....

இறைவனே போற்றுகின்ற நாட்டியத் துறையில் இருப்போர் இறைப் பாடல்களுக்கு மட்டுமே நாட்டியம் ஆடிப் புனிதமாக வாழ வேண்டும். புகழ், போட்டி, பொறாமை, பண வளத்திற்கு இடையே நாட்டியத் துறையில் பக்தி, எளிமை, பணிவு, அடக்கம், புனிதத்துடன் பிரகாசிப்பது கடினம் போல் தோன்றும்! ஆனால் இச்சற்குணங்களுடன் நாட்டியத் துறையில் புனிதமாகத் துலங்கி நல்ல புகழ், கீர்த்தி பெற்றிடச் சிதம்பரம் அருகே உள்ள கானாட்டு முள்ளூர் சிவத் தலத்தில் ஸ்ரீபதஞ்சலி நாதேஸ்வரரை முறையாக வழிபட்டு வருதல் வேண்டும். எப்போதும் சிவனாரின் நாட்டிய ஒலியைக் கேட்கும் பாக்கியத்தைப் பதஞ்சலி மாமுனி நல்வரமாகப் பெற்ற தலமாதலால் நாட்டியப் புனிதக் கிரணங்கள் தவழும் அற்புதத் தலம்! சிதம்பரத்தில் நாட்டியத்தை அரங்கேற்றிய பின் இங்கு ஸ்ரீபதஞ்சலி நாதேஸ்வரரைத் தரிசித்தலே நாட்டியக் கலையில் ஈடுபட்டுள்ளோர்க்குப் புனிதமான பவமான பாத நாட்டிய சக்திகளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும்!

சப்தாமிர்த மிருதங்க ஒசை புவனத்தில் மிளிர்ந்திட.....

மிருதங்கம், தபேலா, கடம் போன்ற தாள வாத்யங்களை வாசிப்போர் சீர்காழி அருகே திருக்கோலக்கா என்னும் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசப்த புரீஸ்வரர் ஆலயத்தில் சப்தமி திதி தோறும் வழிபட்டு வாத்யங்களை வாசித்து வந்தால் பெறுதற்கரிய வாத்ய சித்திகளைப் பெறுவர். ஓசை கொடுத்த நாயகியாய் அம்பிகை அருளும் தலம்! திருஞான சம்பந்தர் அம்பிகையிடம் இருந்து பொன் தாளங்களைப் பெற்ற திவ்யமான தலம். பொற்றாள ஓசை சூட்சுமமாகப் பரிணமிக்கும் தலம்! காது மந்தமாக உள்ளவர்கள் இங்கு இறைப் பாடல்கள் மட்டுமே கூடிய இன்னிசைக் கச்சேரிகளுக்குப் பொறுப்பேற்று இங்கு நிகழ்த்தி வருதலால் மனக்குறைகள் தீர்வு பெறும். வசதியற்ற, பிறரால் ஒதுக்கப்பட்டு வாய்ப்புகளை இழந்த ஏழை, நடுத்தர வசதியுள்ள இசைக் கலைஞர்களை ஊக்குவித்தல் புண்ய சக்தி நிறைந்த‌தாம்.

பௌர்ணமி நாள்: 26.2.2002 செவ்வாய்க்கிழமை 6.36 மணி முதல் 27.2.2002 புதன்கிழமை மதியம் 2.47 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 26.2.2002 செவ்வாய்க் கிழமை.

நித்ய கர்ம நிவாரணம்

1.2.2002 யானைக்கு வயிறு நிறைய உணவு அளித்தல் - அதிக வேலை பளுவைப் பகிர்ந்து கொள்ள உதவியாளரைப் பெறும் நாளிது.

2.2.2002 இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் அவசரம் வேண்டாம்.

3.2.2002 கவனக் குறைவால் வக்கீல்களுக்குச் சோதனை வரும் நாள். ஸ்ரீஹயக்ரீவருக்குச் சாமந்திப் பூ (ஜவ்வந்தி அல்ல) மாலை இட்டு அன்னதானம் செய்தல் நலம்.

4.2.2002 வங்கியில் வேலை செய்பவர்களுக்குத் திடீர் இடமாற்றல் ஏற்படும் நாளிது. ஸ்ரீலக்ஷ்மீ பூஜை செய்து அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

5.2.2002 ஓவியர்கள் கவனமாய் இருக்க வேண்டிய நாளிது. அவசரப்பட்டுப் படங்களை விற்க வேண்டிய நிலை வரும். சுக்கிரன் வழிபட்ட கோயிலில் அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

6.2.2002 சண்டைப் பயிற்சியாளர்கள் (Stunt Masters) கவனமாய் இருக்க வேண்டிய நாள். விளையாட்டாக ஆபத்து வரும். அனுமார் கோயிலில் அன்னதானம் செய்வது நலம் தரும்.

7.2.2002 பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் பொறுமையை இழக்கும் நாள். ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டு அன்னதானம் செய்தல் நலம்.

8.2.2002 காதல் விவகாரத்தால் நல்ல நண்பர்கள் சண்டை இடும் நாள். ஸ்ரீஇராமர் கோயிலில் அன்னதானம் நலம் தரும்.

9.2.2002 "நான்" என்ற அகந்தை அவரவர் உள்ளத்தில் தலை விரித்தாடும் நாளிது. பத்தாயிரம் முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை விடாமல் ஜபித்தல் நலம் தரும்.

10.2.2002 வேலைக்குச் செல்லும் பெண்கள் மன சஞ்சலம் அடையும் நாளிது. குலதெய்வ வழிபாடும் அன்னதானமும் செய்தல் நலம் தரும்.

11.2.2002 நண்பர்களிடையே உலவும் துரோகிகளின் முகமூடி கிழியும் நாளிதும். ஸ்ரீஇராமர் கோயிலில் அன்னதானம் செய்திடில் நல்ல நண்பர்கள் பிரிய மாட்டார்கள்.

12.2.2002 பெருமாளையே இஷ்ட தெய்வமாய்க் கொண்டு வழிபடும் அடியார்களுக்கு வேலையில் சிக்கல் வரும் நாளிது. ஸ்ரீபூவராக சுவாமி கோயிலில் அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

அக்னி தீர்த்தம் வயலூர் திருச்சி

13.2.2002 குழந்தைகள் சண்டையைப் பெரியவர்கள் பெரிதாக்கிடும் நாளிது. பெரியவர்கள் பொறுமையாய் இருந்து ஏழைக் குழந்தைகளுக்குப் பழங்களை தானம் செய்திடில் துன்பத்தைத் தவிர்க்கலாம்.

14.2.2002 அவரவர் வாகனத்தைப் பராமரிக்க வேண்டிய நாளிது. சரியான இடத்தில் கொடுத்துப் பழுது பார்த்து அன்னதானம் செய்திடில் நலம் பெறலாம்.

15.2.2002 ஏலச் சீட்டுத் தொழிலைச் செய்பவர்கள் தங்கள் தொழிலை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அப்புத் தலத்தில் அன்னதானம் நன்முறையில் செய்து விட்டு ஏலச் சீட்டு தொழிலை மாற்றி விடுவது நலம் தரும்.

16.2.2002 பேப்பர் ஏஜெண்டுகள் குடும்பத்தில் பிரச்னைகள் வரும் நாளிது. மதுரை திருவேடகம் ஸ்ரீபத்திரிகா பரமேஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் செய்து நலம் பெறலாம்.

17.2.2002 வைத்தியர்கள் தங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடத்தில் ஏமாறும் நாளிது. ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி பூஜை செய்து அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

18.2.2002 மின்சாரத் துறையில் வேலை செய்பவர்கள் நம்பிக்கை துரோகிகளால் நல்வாழ்க்கையை நழுவ விடும் நாளிது. அக்னித் தீர்த்தம் உள்ள கோயிலில் அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

19.2.2002 தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். காமுகர்களால் துன்பங்கள் வரும். வேறு வேலை தேடிக் கொள்வது நலம் தரும். ஸ்ரீபைரவர் கோயிலில் அன்னதானம் செய்வது நலம் தரும்.

திருவேடகம்

20.2.2002 பாதாளச் சாக்கடைகளில் வேலை செய்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. தற்காப்புக் கருவிகள் இல்லாமல் வேலை செய்திடில் ஆபத்துகள் வரும். ஸ்ரீபூவராக சுவாமி கோயிலில் அன்னதானம் நலம் தரும்.

21.2.2002 இன்று பெண்கள் விளக்கு ஏற்றும் போது கவனமாக இருத்தல் நலம்.

22.2.2002 அலுவலகப் பணி புரியும் மனைவியிடத்தில் வேலைக்குப் போகாத கணவன்மார்கள் தகராறு செய்யும் நாளிது. ஆண்கள் பொறுமையாய் இருத்தல் நலம் தரும்.

23.2.2002 குடும்பத்து ரகசியங்கள் கூடத்திற்கு வரும் நாளிது. மௌனமாய் இருந்து சிவன் கோயிலில் அன்னதானம் செய்வது நலம் தரும்.

24.2.2002 நாட்டியக் கலையில் உள்ள பெண்களுக்குத் திடீர் அதிர்ச்சி தரும் நாளிது. நடராசர் கோயில்களில் அன்னதானம் செய்தால் நலம் பெறலாம்.

25.2.2002 VRS வாங்கியவர்கள் மனம் குழம்பும் நாளிது. நல்ல வழிகாட்டியின் துணையுடன் ஸ்ரீவரதராஜ சீனிவாசன் கோயிலில் அன்னதானம் செய்திடில் நலம் தரும்.

26.2.2002 குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்குப் பெண்கள் மூலமாகத் துன்பங்கள் வரும் நாளிது. வாய் வார்த்தை, செயல்களில் கவனமாய் இருத்தல் நலம் தரும்.

27.2.2002 தொலைபேசித் துறையில் வேலை செய்யும் பெண்களுக்குச் சோதனையான நாளிது. ஸ்ரீஅனுமார் கோயிலில் அன்னதானம் நலம் தரும்.

28.2.2002 மனிதனை வாகனமாய் உடைய தெய்வத்தை வணங்கி அன்னதானம் செய்ய வேண்டிய நாளிது. இவ்வாறு செய்திடில் இடமாற்றம் நலம் தரும்.

ஆடும் மனமும் அடங்குமே பந்தணைநல்லூரிலே !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam