அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ராம ராஜ்யம்

இராமராஜ்யம் ஏற்பட எந்தத் தெய்வத்தை, எந்த மஹரிஷியை வணங்க வேண்டும்?
ஸ்ரீமதுமான் மஹரிஷியையும் அவர்தம் தந்தையாம் ஸ்ரீசசபதி மஹரிஷியையும், நினைந்து தியானித்து இவ்விரு மஹரிஷிகளுக்கும் அருள்பாலித்த ஸ்ரீரெங்கநாதப் பெருமானையும் முறையாகப் பக்தியுடன் வழிபட்டு வந்தால் தர்மம் கொழிக்கும் ஸ்ரீராமராஜ்யம் நிச்சயமாக ஏற்படும், தனக்குப் பூஜை செய்வத்தை விட ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமின்றி ஒன்று கூடி நிகழ்த்தும் சத்சங்கக் கூட்டு வழிபாடு தான் உத்தமமான பலன்களை எளிதிலும், அபரிமிதமாகவும் தரவல்லதாம். மேற்கண்ட வழிபாடு எங்கெங்கு நிகழ்கின்றதோ, அப்பகுதியில் ராம ராஜ்யம் ஏற்படும். நாடு தழுவிய நிலையில் யாங்கணும் இத்தகைய கூட்டு வழிபாடு அமைந்தால் நாட்டில் நிச்சயமாக தார்மீகமான, அறநெறி பிறழாத, தர்மம் சிறந்து விளங்கும் ராமராஜ்யம் ஏற்படும்.
வினா : தவறு செய்பவர்களை கடவுள் ஏன் உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டு விடுகிறார் ? உண்மையாக இருப்பவர்களுக்கு கஷ்டங்களும், துன்பங்களும் ஏன் வருகின்றன?
விடை : அவரவர் முன்வினைக்கேற்பவே நல்லவை, தீயவை என அனைத்துக் காரியங்களும் நிகழ்கின்றன. ஆனால் இதை மனம் எளிதில் ஏற்பதில்லை. நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து நற்காரியங்களையே செய்ய ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்ய வேண்டும். “முயற்சி செய்வது நம் கடமை, விளைவுகள் தெய்வ சித்தம்” என்பதை உணர்ந்தால் நல்லவை, தீயவை, கடவுள் ஏன் தண்டிக்கவில்லை என்ற பேதங்கள் எல்லாம் ஏற்படாது. எல்லாம் இறை நியதிப்படியே நடக்கின்றது. செய்த தவறுகளுக்கு கடவுளின் தண்டனை நிச்சயம் உண்டு. ஆனால் புண்ய சக்தியின் உதவியால் தவறு செய்தவன் சில காலம் தப்பிப்பதுண்டு. திருடன் தப்பிப்பது அவன் செய்த ஓரிரு நற்காரியங்களின் புண்ய சக்தியினால் தான். உண்மையாக நடப்பவர்களுக்குப் பல பிறவி துன்பங்களை இறைவன் இப்பிறவியிலேயே அளித்து ஆயிரக்கணக்கான பிறவிகளைக் குறைத்து விடுகிறான். எனவே எதையும் “நம் கர்ம விதிப்படியே நிகழ்கின்றது, இதுவும் இறைவனின் விருப்பமே’ என்று ஏற்றிடில் அதுவே உண்மையான தெய்வ வாழ்வு!”
வினா : மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறக்கின்றன. இதை வைத்து ஜாதகமும் கணிக்கிறோம், இது சரியா?
விடை : புற உலகிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நேரத்தை நிர்ணயிப்பது போல் தோன்றினாலும் அதனதன் கர்ம விதிப்படிதான் குறித்த நேரத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கின்றது. எந்த நேரத்தில், எந்த டாக்டர் மூலமாக, எந்த மருத்துவமனையில், எவ்வித அறுவை சிகிச்சையின்படி, எந்தக் கத்தியின் பயனுடன்,  எந்தக் குழந்தை பிறக்க வேண்டும் என இவையனைத்தும் சிருஷ்டி விதியின்படியே நடக்கின்றன. மருத்துவரும் இறைவனின் கருவியாகவே செயல்படுகின்றார்.  இதுமட்டுமல்லாது ஒரு சிசு கர்ப்பப் பையில் எத்தனை, மாதங்கள், நாட்கள், மணி நேரங்களுக்கு தங்கியிருக்க வேண்டும் என்பதும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும். எனவே Pre-Mature Baby என்று குழந்தை மருத்துவ விஞ்ஞானம் விளக்கினாலும் இதுவும் இறை நியதியின்படியே நிகழ்கின்றது. எனவே அறுவை சிகிச்சையில் வெளிவரும் நேரத்தை ஜனன நேரமாகக் கொள்வது சரியானதே!
வினா : பூணூலின் தாத்பர்யம் என்ன? தள்ளிப் போன பூணூலை 20 வயதுக்கு மேல் போடலாமா? அநாவசிய செலவுகள் இல்லாமல், கூட்டத்தைக் கூட்டாமல் எளிதாக எப்படிச் செய்யலாம்?
விடை : வேதங்களின் சக்தியால் தான் உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் ஜீவிக்கின்றன. தேவமொழி மறைகள், இவற்றிற்கீடான தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்ற தமிழ் மறைகளின் பாராயணம் மறைந்து வருகின்ற நிலையில் வேதத்தின் சாரமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் விளங்குகின்றது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் அதியற்புத தெய்வீக சக்தியை (Powerful Current)  தாங்குமளவிற்குப் புனிதமான தேகத்தையும், தூய்மையான உள்ளத்தையும் மனிதன் பெறவில்லை. எனவே பஞ்சபூத சக்திகளின் தொகுப்பான “முப்புரி” நூலைப் பூணூலாக இடது தோளில் தாங்கி வலப்புறம் அணிந்திட ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தி இப்பூணூலில் தங்கி அவ்வவ்போது அவனுக்குத் தேவையான சக்தியை உடலுக்கும் உள்ளத்திற்கும் அளித்து இரட்சையாக, காப்பாக எப்போதும் உறுதுணையாக நிற்கின்றது.
ஒவ்வொரு ஆணுக்கும் வலது நாசியின் சூர்யகலை சுவாசமே பிரதானமாகும். வலதுபுறமாகப் பூணூலை அணிவதால் சூர்ய கலை சுவாசம் மேம்பட்டு எண்ணச் சிதறல்கள் முறைப்படுத்தப்பட்டு நல்லொழுக்கம் ஏற்படும். எனவே பூணூல் என்பது ஜாதி, இன பேதமின்றி அனைவர்க்கும் உரித்தானதாகும்.

ஸ்ரீஹேரம்ப கணபதி மூர்த்தி
திருவில்லிபுத்தூர்

தள்ளிப் போன பூணூலை 20 வயதிற்கு மேலும் போடுவதில் தவறில்லை. ஆனால் இவ்வயதில் காமம் உள்புகுந்திருக்குமாதலின் தினமும் குறைந்தது 10000 முறை ஸ்ரீகாய்த்ரீ மந்திரத்தை  ஜபித்தல் வேண்டும், எளிமையாக உபநயனம் நடத்த வேண்டுமெனில் நன்றாக வேதம் படித்தவர்களைக் கொண்டு வீட்டில் நிறைந்த வேத பாராயணங்களுடன் முக்கியமான உறவுகளுடன் செய்யலாம். இதுவும் முடியவில்லை என்றால் கும்பகோணத்தில் மகாமககுளம் அருகில் உள்ள ஸ்ரீயக்ஙஞோபவீதேஸ்வரரின் சந்நிதியில் ஸ்ரீஸ்வாமிக்குப் பூணூலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டு அப்பூணூலையே எடுத்து அணிந்து கொண்டு குறைந்தது 21 பேருக்கு அன்னதானம் செய்தல் வேண்டும்.
இது மிகமிக எளிமையான முறையாகும். யாவரும் இதைக் கடைபிடிக்கலாம் இதையே “ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடி” நன்கு விளக்குகிறது. 
“முப்புரி நூலை முனிபுங்கவ அருளால்
தப்பியே சென்றவர் மாசிமக நாதனிடத்தே
புரிநூல் ஈஸ்வரன்பால் அணிவித்தே அணிதல்
எளிமையிலும் எளிமையாமே”  --- ஸ்ரீஅகஸ்தியர் நாடி (திரிபுர காண்டம்) சுவடி-6, வரி-87
வினா : குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆவிகளோடு பேசித் தீர்வு காணலாம் எனச் சொல்கிறார்களே, அது சாத்தியமா?
விடை : சாத்தியமே, நல்ல ஆவிகளோடு பேசினால் தான் தீர்வுகள் கிட்டும். ஆனால் நடைமுறையில் நல்ல ஆவிகள் கிடைப்பது அரிது. கோடிக்கணக்கான தீய ஆவிகள், நல்ல ஆவிகளின் பெயர் கூறி ஏமாற்றும், அத்தீய ஆவிகளின் வசப்பட்டால் அவை நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.  எனவே ஆவியோடு பேசுதலில் தேர்ச்சி பெற்ற, தெய்வ நம்பிக்கை மிகுந்த, சுயநலமற்ற, நல்ல உள்ளம் கொண்டவர் மூலமாகவே இதனைக் கடைபிடிக்க வேண்டும். இத்தகைய பாங்குடையவரை காண்பதே அரிது! சிறந்த வழிகாட்டியின்றி ஆவிகளோடு பேசும் முறையில் இறங்கலாகாது!
வினா : நான் தினமும் பல மந்திரங்களை ஜபித்து தியானம் செய்து வருகின்றேன். எனக்குச் சரியான முறையில் தியானம் அமையவும், சற்குருவின் அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிட்டவும் நான் செய்ய வேண்டிய தியான முறைகளை விளக்குமாறு பிரார்த்திக்கிறேன்
விடை : உங்களுடைய தியானம் மேம்படுவதற்கு ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளைத் தியானித்து அவர் நாமத்தைத் தொடர்ந்து ஜபித்து, திருஅண்ணாமலையை முடிந்தபோதெல்லாம் கிரிவலம் வருதல் வேண்டும்.
ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் நாமத்தை ஜபித்தவாறே, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் உருண்டு, புரண்டு, நடந்து, ஓடி, ஆனந்தித்த திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற மிக எளிமையான ஆன்மீகப் பயிற்சியைச் செய்து வந்திடில் உன்னத தியான நிலை கூடுவதோடு குடும்பப் பிரச்சனைகளுக்கும் ஸ்ரீஅண்ணாமலையார் அருளால் சுமுகமான முறையில் தீர்வு கிட்டும். பொதுவாகத் தியான நிலை நன்கு கூடிட ஏதேனும் ஒரு நாமத்தில் ஈடுபடுதலே உத்தமமான பலன்களைத் தரும்.

ஆடிக் கிருத்திகை

முருகனுக்கு உரித்தான கிருத்திகை நக்ஷத்திரம் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாகும். மாலா, சங்கவி, மாளவிகா, பூப்பிரஸ்தினி, பஞ்சாதிகா, அமோகதிகா என்ற ஆறு நட்சத்திரங்களின் சங்கமத்தில் தான் கௌமார தத்துவம் பிறந்தது. இந்நாளில் கிருத்திகா சங்கம பூஜை என்னும் வழிபாடு சிறப்பானதாகும். ஆடிக் கிருத்திகைக்கு முன் ஐந்து நாட்களிலும் கிருத்திகா தேவ பூஜை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து (17.7.1995) துவங்கி ஐந்து நாட்களுக்கு கிருத்திகா தேவபூஜை தொடர்ந்து, ஆடிமாதம் ஆறாம் தேதியன்று (22.7.1995) கிருத்திகா சங்கம பூஜையாக மலர்கின்றது.
அதாவது பூரட்டாதி நட்சத்திரத்தில் துவங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை ஆறு தினங்களிலும் இதனை விசேஷமாகக் கொண்டாட வேண்டும்.

முதல் நாள் : (பூரட்டாதி) ஐந்து வயது ஏழைச் சிறுமியை மாலா கிருத்திகா தேவியாகப் பாவித்து எண்ணெய் ஸ்நானம் செய்வித்து புத்தாடை, இனிப்பு, உணவு, ஆபரணங்கள் (வளையல், கண்மை, ரிப்பன், etc..) அளித்து மகிழ்வித்தல், பச்சைநிற ஆடை அளித்தல் உத்தமமானதாகும்.

இரண்டாம் நாள் : (உத்திராட்டாதி) ஆறு வயது சிறுமிக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து நீல நிற ஆடைகள், உணவு, ஆபரணங்கள் அளித்து, சங்கவி கிருத்திகா தேவியாகப் பாவித்து ஆனந்தித்தல்.
மூன்றாம் நாள் :  (ரேவதி) ஏழு வயது சிறுமியை மாளவிகா கிருத்திகா தேவியாகப் பாவித்து மேற்கண்ட முறையில் சிவப்பு நிற ஆடை அளித்து ஆனந்தித்தல்.
நான்காம் நாள் : (அசுவினி) எட்டு வயது சிறுமியைப் பூப்பிரஸ்தினி கிருத்திகா தேவியாகப் பாவித்து மேற்கண்ட முறையில் மகிழ்வித்து மஞ்சள் நிற ஆடை அளித்து ஆனந்தித்தல்.
ஐந்தாம் நாள் :- (பரணி) ஒன்பது வயது சிறுமியை மேற்கண்ட முறையில் மகிழ்வித்து கத்திரிப்பூ நிற ஆடைஅளித்துப் பஞ்சாதிகா கிருத்திகா தேவியாகப் பாவித்து ஆனந்தித்தல்.
ஆறாம் நாள் : (கார்த்திகை) பத்து வயது சிறுமியை மேற்கண்ட முறையில் மகிழ்வித்து அமோகதிகா கிருத்திகா தேவியாய் பாவித்து வெண்பட்டு ஆடை அளித்து ஆனந்தித்தல்.
இந்த ஆடிக் கிருத்திகைக்குரிய கிருத்திகா தேவி வழிபாட்டினால்,
1. கிருத்திகை விரதத்தின் பரிபூரண பலன்கள் கிட்டும்.
2. ஆண் வாரிசு இல்லாதோர்க்கு இக்கிருத்திகை விரதம் நல்வழி காட்டும்.
3. ஸ்ரீமுருகனுக்குரிய நேர்த்திக் கடன்களைக் குறித்த காலத்தில் நிறை வேற்ற இயலாதோர் இந்த ஆடிக் கிருத்திகை வழிபாட்டுடன் அந்நேர்த்திக் கடன்களைப் பூர்த்தி செய்தால் இது சிறந்த பரிகாரமாக அமையும். இவ்வாறு ஆடிக் கிருத்திகையில் வழிபட வேண்டிய முறைகளைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இதனுடன் பால்குடம், காவடி எடுத்தல், தேர் இழுத்தல் போன்றவை சேர அபரிமிதமான புண்ணிய சக்தி விசேஷ பலனாக வந்து சேரும்.

ஆடி அமாவாசை

ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறுமாத கால தட்சிணாயன காலம் தேவர்களுக்கு ஒரு இரவு நேரமாகும். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத உத்தராயண புண்யகாலம் தேவர்களுக்கு ஒரு பகல் நேரமாகும். பொதுவாக ஆடி முதல் தேவர்களுடைய இரவுப் பொழுது தோன்றுகிறது. தேவர்களுக்கு ஊன், உறக்கம் கிடையாது. எனினும்  தேவப்ரீதிக்காகப் பல ஆஹுதிகளை உணவாக அவர்கள் ஏற்கின்றனர். இதேபோல் தேவதுயில் என்னும் தியான நிலையே தட்சிணாயனமாகிய அவர்தம் இரவுப் பொழுதைக் குறிக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் இரவு உறங்கச் செல்லும் முன் நெற்றிக்கு விபூதி/குங்குமம்/நாமம் இட்டு இறைவனை குறிப்பாக குலதெய்வம், இஷ்டதெய்வம், சற்குரு, பெற்றோர்களை வணங்கி அன்றைய தினம் செய்த நற்காரியங்களை எண்ணிட வேண்டும். பிழை இருப்பின் திருத்திக் கொள்ளுதல் வேண்டும். இதே போல் தேவர்கள் தங்களுடைய இரவுப் பொழுதாகிய தட்சிணாயணத்தில் தேவ துயில் ஏற்கும் முன் ஆடி மாதத்தில் பூவுலகிலுள்ள நல்லோர்களை எண்ணி அவர்தம் நல்வாழிற்காகத் தம் புண்ணிய சக்தியைத் தந்தருள்வதாக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். ஆடி அமாவாசையன்று அவர்தம் பிரார்த்தனை உன்னதமடைகிறது.
ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு “ஆடி அமாவாசையில் நாடிப் பாடு நல்லோர்களையே!” என்று அறிவுறுத்துகின்றார்.. ஆடி அமாவாசையாம் இந்நன்னாளில் வடமொழி, தமிழ்மறைகளை ஓதி பிறருக்கு இலவசமாகக் கற்றுந் தருவோர்க்கு இலவச மருத்துவ உதவி, அன்னதானம், ஆடைதானம் போன்ற தான, தருமங்கள், வயதான ஆதரவற்றோர்க்கு இல்லங்களமைத்தல், நோயாளிகளுக்குச் சரீரசேவை, அனாதைகளுக்கு உதவி புரிதல் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றுபவர்களுக்குத் தேவையான  சேவைகளைச் செய்து, அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுதலே ஆடி அமாவாசையின் பிரதான வழிபாடாகும்.
குழிபடல வழிபாடு :- ஆடி அமாவாசை தினத்தில், மரணத்திற்குப் பின் புதைக்கப்பட்டவர்களுடைய சமாதிக்குச் சென்று வெல்லம், எள், தர்ப்பை கலந்த நீர் வார்த்து, கிழங்கு வகை (உருளை, காரட்) உணவுகளைத் தானம் அளித்திட பித்ருக்களின் ஆசி அபரிமிதமாகப் பெருகும். இதற்கு “குழி படல வழிபாடு” என்று பெயர். பொதுவாக பால பருவத்தில் இறக்கும் குழந்தைகளைப் புதைப்பதுண்டு. அவர்கள் புதையுண்ட இடத்திற்குச் செல்ல இயலாவிடில், ஆடி அமாவாசையன்று அவர்களை மானசீகமாக நினைத்து அவர்களுக்குப் பிரியமான உணவினைத் தானமாக அளித்திட  அவர்கள் தம் விண்ணுலக வாழ்வில் நற்கதி பெறுவர். இவ்வாறாகப் புதைக்கப்பட்டோரின் நற்கதிக்காக ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, பித்ரு தர்ப்பணங்களையும் முறையாக நிறைவேற்றிட ஆடிஅமாவாசையின் பரிபூரண பலன்கள் கிட்டும்.

கல்கி ஜயந்தி

கலியுக முடிவில் வரவிருக்கும் ஸ்ரீகல்கி அவதாரத்திற்கு இப்போதே ஐயந்தி தினம் எவ்வாறு அமையும்? திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே ஸ்ரீராமநவமி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. எவ்வாறு?  முதலில் புனர்வசு பூஜையாக இருந்தது. ஸ்ரீராமர் அவதரித்த பின் ஸ்ரீராமஜயந்தியாக மலர்ந்தது. இதேபோல் ஸ்ரீகல்கி பகவான் ஐயந்தியும் இப்போதே முக்கியத்துவம் பெறத் தொடங்குகிறது.
ஸ்ரீகல்கி ஐயந்தியன்று ஸ்ரீகல்கி உருவம் அமைந்துள்ள கோயில்களில் அடிப்பிரதக்ஷிணம் செய்வதால், அலைபாயும் மனதை நல்வழிப்படுத்தலாம். இந்நாளில் குதிரைகளுக்குப் பிரியமான கொள் தீனியை அளித்தல் மன ஓட்டத்தை முறைப்படுத்தும். இந்நாளில் ரிக், யஜுர், சாம, அதர்வண, தமிழ் மறைகளை ஓதுகின்ற நல்லோர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும், ஸ்ரீகல்கி ஜயந்தி திருநாளில் ஏழை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் வேண்டும். இதனால் பலவித மனோபயங்கள் தடுக்கப்படுகின்றன. இந்நாளில் தசாவதரா மூர்த்திகளை ஒருசேர தரிசித்தல் மஹா விசேடமானதாகும்.
ஆடிசுவாதி : இந்நாளில் மனநிலை கோளாறுடையோர், சித்த சுவாதீனம், இல்லாதோர், பைத்தியம், பிடித்தோர் போன்றவர்களுடைய நல்வாழ்விற்காகக் கூட்டாகப் பிரார்த்திக்க வேண்டும். அவர்தம் நல்வாழ்விற்காக ஸ்ரீதுலாதேவியின் நாமத்தை 1008 முறை ஜபித்து மந்திரம் ஜபிக்கப்பட்ட கருப்புக் கயிற்றை அரசு, ஆல், வேம்பு போன்ற புனித விருட்சங்களில் கட்டுவதால் நல்வழி கிட்டும். இது மிகச் சிறந்த மக்கள் சேவையாகும். சுக்கிர தோஷத்தால் திருமணத் தடங்கல்கள் ஏற்பட்டிருக்குமாயின், அவர்கள் இந்நாளில் சுக்ர பகவான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் மல்லிகைப்பூ தானமளித்து வணங்க வேண்டும். (சென்னை மயிலை வெள்ளீஸ்வரர் ஆலயம்)

ரிஷி பஞ்சமி

எந்த ஒரு குடும்பத்திலும் 90 வயதுக்கு மேல் வாழ்ந்து சீலமான உத்தம வாழ்க்கை அடைந்தோரே  அக்குடும்பத்தின் ரிஷியாகக் கருதப்படுகின்றனர். வேறுபாடின்றி அத்தகு பெரியோர்களையே மஹரிஷியாக வரித்து ரிஷிபஞ்சமி நாளில் வழிபடுதல் சாலச் சிறந்ததாகும். தம் குடும்பத்தில் எத்தனையோ பெரியோர்களுக்குப் பல விசேட தினங்களில் கூட பித்ரு தர்ப்பணங்கள் செய்யாது, வாழ்க்கையை வீணே கழித்தவர்களுக்கு இந்த ரிஷிபஞ்சமி தினமானது ஓர் அதிஅற்புதப் பரிகாரத்தைக் காட்டுகிறது. இந்த ரிஷிபஞ்சமி நாளில் தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்து உய்வுற்ற முதியோர்கட்கு விசேஷத் தர்ப்பணங்கள் செய்து அவர்களுக்கு விருப்பமான ஆடை, உணவு வகைகளைத் தான, தருமம் செய்தல் வேண்டும். அவர்கள் உபயோகித்த பெட்டி, நாற்காலி, கைத்தடி போன்றவைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட வேண்டும்.
இந்த ரிஷிபஞ்சமி நாளில் சுமங்கலிப் பெண்கள் ஐந்தைந்து பேர்களாக ஒன்று கூடி, வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம் வைத்துப் புதுத் தாலிச் சரட்டிற்குப் பூஜை செய்து பெரியோர்களின் பாதங்களில் வைத்து வணங்கி அணிந்தூ கொள்ள வேண்டும். தொண்ணூறு வயதிற்கு மேற்பட்ட பெரியோர்கள் இருப்பின்  அவர்களுக்குப் பாதபூஜை செய்து வலம் வந்து வணங்கி ஆசிபெற வேண்டும். இதுவே ரிஷிபஞ்சமி விரதமுறையெனச் சித்தர்கள் அருள்கின்றனர்.

வியாச பூஜை

வேதபுரீஸ்வரர், வேதகிரீஸ்வரர், வேதவல்லித் தாயார் போன்ற வேத நாமம் பூண்ட சிவ, விஷ்ணுத் தலங்களிலும் திருமறைக்காடு, வேதபுரி போன்ற வேதம்/மறை நாமம் தாங்கிய திருத்தலங்களில் வடமொழி மற்றும் தமிழ் மறைகளை ஓதி சர்க்கரைப் பொங்கல் தானம் செய்தலால் முறையாக மறை ஓதும் புண்ணியம் கிட்டும். (திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், சென்னை - சைதை காரணீஸ்வரர் கோயிலிலுள்ள வேதபுரீஸ்வரர், திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம்) வேதங்களையொத்த திருவாசகம், திருப்புகழ், தேவாரம், திவ்வியபிரபந்தம் போன்ற தமிழ் மறைகளைப் பாராயணம் செய்திடில் அவை வேதபாராயணமாக மலர்ந்து திருவருளை அபரிமிதமாக வர்ஷிக்கின்றன.
பவானி அருகே ஸ்ரீவேத வியாசர், வேதத்தை நான்காகப் பகிர்ந்து நான்கு மஹரிஷிகளுக்கு  வழங்கிய தலமான வேதகிரி இம் மலையில் வடமொழி, தமிழ்மறை பாராயணத்துடன் மறை ஒதுகின்ற ஏழை எளியோர்க்கு உதவி புரிதல் மிகவும் உத்தமமானதாகும். வியாச பூஜையான இந்நாளில் அரக்கர்களிடமிருந்து வேதத்தை மீட்ட ஸ்ரீவராஹ மூர்த்தி எழுந்தருளியுள்ள (சென்னை திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் வராஹப் பெருமாள், கும்பகோணம் ஸ்ரீஆதிவராகப் பெருமாள்)  போன்ற திருத்தலங்களில் வேத தமிழ்மறை ஓதி தானதருமங்களுடன் கொண்டாடுதல் சிறப்பானதாகும். வேதம் ஓதிய புண்ணியத்தைப் பெறுவதால் யாது பலன்? பலவித கர்மவினைகளுடன் பிறப்பெடுத்துள்ள நாம் அவற்றைப் பலவிதங்களில் நோய் நொடிகளாகவோ, பணக் கஷ்டமாகவோ, விபத்து, இழப்பு, திருட்டு போன்றவை மூலமாகவோ அனுபவிக்க நேரிடுகிறது. சற்குருவின் அருட்கடாட்சத்தால் பல வித இறைப்பணிகள், தானதர்மங்கள், பரிகாரங்கள் மூலமாக விசேடமான புண்ணிய சக்தி பெற்று அவற்றின் மூலம் பலவித கர்மங்களைக் கழித்தோ அல்லது அக்கர்மங்களின் விளைவுகளைத் தாங்கும் சக்தியையோ பெற்றிடலாம்.
 இவ்வாறாக வேத, தமிழ் மறைகளை ஓதுவதனால் கிட்டும் ஆத்ம் புண்ணிய சக்தியால் கீழ்க்கண்ட கர்மவினைகள் தீர்க்கப்படுகின்றன.
1. பொய் சொல்வதால் ஏற்படும் பெரும் பிழைகள், பொய் சொல்லிப் பிறருக்கு இழைத்த இன்னலகள்.
2. கெட்ட வார்த்தைகளைக் கூறி பலரை வேதனைக்குள்ளாகுதல்
3. பெற்றோர், பெரியோர்களை இழித்துப் பழித்துப் பேசுதல்
4. கடவுளை நிந்தித்தல்
பல கொடிய கர்மவினைகளை, குறிப்பாக மேற்கண்டவற்றால் விளையும்/விளைவித்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தமாக வடமொழி, தமிழ் மறைகளை ஓதி, வியாச பூஜையன்று அன்ன தானத்துடன் சிறப்பாகப் பௌர்ணமி பூஜையைக் கொண்டாட வேண்டும்.
பொதுவாக, பௌர்ணமியன்று (புதிய) வேத பாடங்களைப் பாராயணம் செய்வதில்லை. எனினும் வியாச பூஜையன்று ஸ்ரீமந்நாராயணனனே வேதங்களை விரும்பிக் கேட்டு வியாச பகவானாக அனுகிரஹிப்பதால், இத்திருநாளில் மறை ஓதலுடன் கூடிய அன்னதானம் உத்தமமான நற்காரியமெனச் சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
வியாச பௌர்ணமியைச் சிறப்பாக நடத்த வேண்டிய திருத்தலங்களை நம் சிவகுருமங்கள கந்தர்வா அருளியுள்ளார்கள்.
1. இன்றும், தினமும் ஏதேனும் ஓர் உருவிலோ, அரூவமாகவோ ஸ்ரீவியாசபகவான் வந்து செல்லும் சென்னை வியாசர்பாடியிலுள்ள ஸ்ரீஇரவீஸ்வரர் ஆலயம்.
2. ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் (கரூர்-நெரூர்), ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீஅப்பர் சுவாமிகள் சமாதி கொண்டுள்ள சென்னை மயிலை ஸ்ரீஅப்பர் சுவாமி திருக்கோயில் போன்ற மறைகளைக் கட்டிக் காத்த மஹான்களின் ஜீவசமாதி.
3. திருவேடகம், திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌம்ய நாராயணப் பெருமாள் கோயில், திண்டுக்கல் – கொடைரோடு அருகிலுள்ள அம்மைய நாயக்கனூர் (சிவனும்-விஷ்னுவும் ஒரே மூல ஸ்தானத்தில் அருள் பாலிக்கும் இடம்) போன்ற திருத்தலங்கள், இந்நாளில் ரிக், யஜுர், சாம, அதர்வண, தமிழ்மறை ஓதுவோர்க்கு இயன்ற உதவிகளைச் செய்து ஆதரவளித்தல் ஸ்ரீவியாச பகவானின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும்.

தக்த யோகம்

தக்த யோகம், அமிர்த யோகம், சித்த யோகம், பிரபலாரிஷ்ட யோகம் போன்றவை தவிர இன்னும் பல யோக காலங்கள் உண்டு. ஆனால் பொதுவாக ராகு காலம், எம கண்டம், சூன்யதிதி, பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள், மரணயோகம், தீதுறு நட்சத்திரங்கள் ஆகியவற்றை மட்டும் கணித்து விட்டு சுபதினம் பார்க்கின்ற தவறான முறையே நிலவி வருகிறது. சுபதினம் சரியாகக் கணிக்கப்படாததினால் அந்நாளில் நடைபெறும் திருமணம், உபநயனம், கிருஹப்ரவேசம், அன்னபிராசனம், நாமகரணம், சாந்தி முகூர்த்தம், பும்ஸவனம், புதிதாகப் பள்ளியில், சேருதல், பணியில் சேருதல், வியாபாரம் தொடங்குதல் போன்ற வாழ்க்கையை ஒட்டிய நிகழ்ச்சிகளில் பலவித துன்பங்கள் ஏற்படுகின்றன.
தக்தயோக விளக்கம் : மேற்கண்ட யோகங்களைத் தவிர தக்தயோகம், நாசயோகம், மிருத்யுயோகம், உத்பாத யோகம், அக்னி யோகம் போன்ற விசேஷமான யோக கால நேரங்களும் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தேர்ந்தெடுக்க வேண்டிய தனித்தனி யோகங்களும் உண்டு. இவை காலப்போக்கில் மறைந்துவிட்டன அல்லது மறைக்கப்பட்டு விட்டன. தக்க சற்குருமார்களைப் பெறும் பாக்கியம் கிட்டியோர்க்கு இவை அனைத்தும் குருவருளால் நன்கு விளக்கப் பெறும்.
இவ்வகையில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இத்தகைய ஆன்மீக ரகசியங்களைத் தம் சற்குரு ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளிடமிருந்து பெற்ற பொக்கிஷங்களாக “ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழ் மூலம் எடுத்துரைக்கின்றார்.
காதலித்துப் பெண்களை ஏமாற்றுதல், காதல் நிறைவேறாமையால் (காதலித்த) பெண்களின் திருமண வாழ்வைக் குலைத்தல், அயலார் மனைவியருடன் தகாத உறவு, பொன், பணம், காமம், சொத்து காரணமாக பெண்களை வஞ்சித்தல், வரதட்சணைக்காக மனைவியை வதைத்தல், பலதார மணம் புரிதல், போதை மருந்து, மதுபானம் போன்றவற்றால் பெண்களை மயக்கி ஏமாற்றுவது, அதர்மமான முறையில் பிற பெண்கள் மீது ஆசைப்படுதல், குண்டான மனைவியை உடையோர் ஒல்லியான பிறர் மனைவியைப் பார்த்து அவர்களை அடைய நினைத்தல், கருப்பு நிற மனைவி உடையோர் நிறம் சிறந்த பெண்களை அடைய தவறான வழியில் அடைய திட்டமிடல் இவ்வாறான பல கொடிய கர்மங்களைச் செய்வோர் மனம் வருந்திப் பிராயச்சித்தம் தேடி அலைகின்றனர். இதற்கு மிகச்சிறந்த பரிகாரமாகத் தக்தயோக கால நேரம் சித்த புருஷர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தக்த யோக நாள்

கிழமை

திதி

ஞாயிறு

துவாதசி

திங்கள்

ஏகாதசி

செவ்வாய்

பஞ்சமி

புதன்

துவிதியை

வியாழன்

சஷ்டி

வெள்ளி

அஷ்டமி

சனி

நவமி

மேற்கண்ட கிழமை, திதி கூடிய நாளில் சூரியோதயம் முதல் ஆறு நாழிகை வரை அதாவது சூரியோதயத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு இந்தத் தக்தயோக நேரம் அமைகின்றது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தீய வினைகளைச் செய்த ஆண்கள், பெண்கள், ஞாயிறும் துவாதசியும் சேருகின்ற நாளிலும், திங்களும் ஏகாதசியும் சேருகின்ற நாளிலும், ஸ்ரீவிரதம் எனப்படும் முக்கியமான விரத, தான தர்மங்களைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் மேற்கண்ட  தீவினைகளுக்குக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. பல கொடிய பிறவிகளும், கேவலமான வாழ்க்கை முறையும், தீராத நோய்களும், எதிர்பாராத கோர விபத்துக்களும் எதிர் விளைவுகளாக வந்து சேரும். எனவே இவற்றிலிருந்து மீள தக்த யோக நாளன்று ஸ்ரீவிரதத்தை முறையாக அனுஷ்டிக்க வேண்டும்.

ஸ்ரீவிரத முறை
1. காமம், ஆசை காரணமாகப் பெண்களுக்கோ, ஆண்களுக்கோ மேற்கண்ட தீங்கிழைத்தோர் தக்த யோக நாளன்று, விடியற்காலையில் எழுந்து நீராடி, திருநீறு/சந்தனம்/குங்குமம்/நாமம் தரித்து தேங்காய் எண்ணெய் கொண்டு ஐந்து முக தீபம் ஏற்றி “ஓம் நமசிவாய //ஓம் நமோநாராயணா/ ஓம் சரவணபவ” என்ற மூன்று இறைநாமங்களையும், பிரம்ம முகூர்த்த நேரத்தில்  (காலை 3 மணி முதல் 5.30 வரை) தியானிக்க வேண்டும். ஒவ்வொரு நாமத்தையும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தியானித்தோ, அழுது கதறியோ, பூக்களால் அர்ச்சித்தோ வழிபடுவது உத்தமமானது.

2.  மேற்கண்ட ஸ்ரீவிரத நாம தியானத்திற்குப் பின் ஏதேனும் பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஆறுமுகப் பெருமானையோ அல்லது வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீமுருகனையோ வழிபட வேண்டும். புருஷ சூக்தம், திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகளின் பகைகடிதல் துதி போன்றவற்றை ஓதி, செவ்வாழைப் பழம், இனிப்புத் தினைமாவு, தேங்காய்சாதம் போன்றவற்றை ஏழைகளுக்குத் தானமளிக்க வேண்டும்.

3. தக்த யோகம் நேரமான காலை சுமார் ஆறு மணியிலிருந்து எட்டரை மணிவரை இறை நினைவுடன் கோயிலில் வழிபாடு, உழவாரத் திருப்பணி, தானதர்மம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுதல் மிகச் சிறந்ததாகும்.

4. ஞாயிறு துவாதசி, திங்கள்  ஏகாதசி இந்நாட்களுக்குப் பிறகு வரும் முதல் கார்த்திகை நட்சத்திர நாளன்று, பாடல் பெற்ற ஸ்ரீமுருகன் தலத்தில் 108 பசுநெய் தீபங்களை ஏற்றி, வழிபட்டு ஸ்ரீபாலதண்டாயுதாபாணி சுவாமியைத் தரிசித்து, ஏழைக் குழந்தைகளுக்குக் கீழ் ஆடைகளைத் தானமாக அளிக்க வேண்டும் வயதானோர்க்குக் கைத்தடிகள், குடைதானம் அளிப்பது சிறப்பானது ஆகும்.

5. மேற்கண்ட கார்த்திகை நட்சத்திர தீபவழிபாட்டுடன் ஸ்ரீவிரதபூஜை நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு தக்தயோகப் பிராயச்சித்த முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

தக்தயோகப் பரிகாரங்கள்

ஸ்ரீநடராஜ பெருமான்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீநடராஜ பெருமான்
சங்கரன்கோவில்

1. பெண்களுக்குத் தீங்கிழைத்த ஆண்கள் தங்களால் துன்பம் அடைந்தோர்க்கு நிவாரணம் அளித்தல் வேண்டும். உணவு, உடை, வீடு அளித்துப் புனர்வாழ்வு அளித்தலும் உத்தமமான பரிகாரமாகும்.

2. பலவித தோஷங்களாலும், கடன்களாலும் பாதிக்கப்பட்டுள்ள கன்னிப்பெண்களுக்கு நன்முறையில் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

3. அநாதை இல்லங்களில் வசிக்கும் அபலைப் பெண்களுக்கு உதவிகள் அளித்தல் வேண்டும்.
4. பிரிந்து வாழும் கணவன் மனைவியரை ஒன்று சேர்த்தல்.
5. விதவைகளுக்குத் தார்மீக முறையில் மறுவாழ்வு அளித்தல்.
6. ஏழ்மை காரணமாக தாலிச் சரடு மட்டும் அணிந்துள்ள ஏழைக் குடும்பப் பெண்களுக்கு இயன்றளவு பொன்னாலான மாங்கல்யம் அளித்தல்.
7. ஏழைக் குடும்பங்களில் நிகழும் திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல்
8. தன்னால் தீங்கிழைக்கப்பட்ட பெண்களின் கடிதம், புகைப்படம், பத்திரம் போன்ற தஸ்தாவேஜுகளை அழித்து விடுதல்.

மேற்கண்ட பரிகாரங்களை முடிந்தமட்டும் நிறைவேற்றி, தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை எக்காரணம் கொண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்யாது தீவிர வைராக்கியத்துடன் வாழ வேண்டும். மீறிடில் கடும் சாபங்கள் ஏற்படும். திருந்துவதற்கு மட்டும் வழி சொன்னார்கள் பெரியோர்கள்.. சாபத்தை நினைத்தால் மனம் மிகவும் வருந்தும். ஆகவே சாபத்தை விவரிக்கவில்லை இறையருளால்.

புருஷ விரதம்  : கணவருக்குத் துரோகம் செய்தல், ஆண்களை மயக்கி வஞ்சித்து ஏமாற்றுதல், காதலிப்பது போல் வாழ்ந்து கைவிடுதல் – போன்ற தீங்குகளைச் செய்கின்ற பெண்களுக்கும் மேற்கண்ட ஸ்ரீவிரதமுறைகளே, புருஷவிரத நெறியாக அளிக்கப்பட்டுள்ளன.,
பொதுவாக ஞாயிறு துவாதசி, திங்கள் ஏகாதசி கூடும் நாட்களில் பெண்கள் நாள் முழுதும் ஸ்ரீஅத்ரி ஸ்ரீஅனுசுயா தேவி மகரிஷி தம்பதிகளின் நாமத்தை உச்சரித்தவாறே இறைப் பணிகளில் ஈடுபடுவது நன்று. புருஷ விரதத்திலும் மேற்கண்ட பரிகார முறைகளே விதிக்கப்பட்டுள்ளன.
ஆணோ பெண்ணோ மற்றோருடைய திருமண வாழ்விற்கு எத்தகைய கேடு விளைவித்தாலும், அதற்கு மிகக் கொடிய தண்டனை உண்டு என்பதை உணர்ந்து தக்க பிராயச்சித்த முறைகளை மேற்கொண்டு நல்வழியைப் பெற வேண்டும்.

சஸபதி மகரிஷி – சஸபதி மகரிஷி என்பவருடைய தவம் மிகவும் அற்புதமானதாகும். தன்னுடைய ஒவ்வொரு நாளின் தவ, புண்ணிய சக்தி அனைத்தும், அந்நாளில், பிரபஞ்சத்தில் யாரெல்லாம் இறைநாமத்தைத் தியானித்தார்களோ அவர்கள் அனைவருக்கும் அந்த தபோசக்தி சரியாகப் பரிமாறப்பட வேண்டும் என்று இன்றைக்கும் நித்திய சங்கல்பம் செய்து சுயநலமற்ற தெய்வீக வாழ்க்கை வாழும் தியாகச் செம்மலாவார். இவர்தம் இறைவாழ்வின் சிறுவிளக்கத்தை “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” ஜூன் 1995 இதழில் அளித்திருந்தோம். இவ்வாறாக ஒவ்வொரு சித்தபுருஷரும் மகரிஷியும் பிறர்க்கெனவே வாழ்ந்து தம் உடல், பொருள், ஆவியைப் பிறருடைய நலனுக்காகவே ஈந்து தியாகச் சிகரமாய் நம்மிடையே வாழ்ந்து அருள் பாலிக்கின்றனர்.

சசபதி மகரிஷி

ஒரு யுகத்தில் பவ வருடத்திலிருந்து பிறிதொரு யுகத்தின் யுவ வருடம் வரை மாதவம் புரியும் சஸபதி மகரிஷி இன்றைக்கும் பூலோகத்தில், பவ வருட இறுதியில், யுவ வருட சஞ்சாரத்தின் தொடக்கத்தில் பல திருக்கோயில்களில் தரிசனம் தருகின்றார்.
எவ்வாறு மகரிஷிகளுக்கிடையில் தவத்தின் தன்மை மாறுபடுகின்றதோ, அதேபோல் அவர்களுடைய ஆசீர்வதிக்கும் தன்மையும் விதவிதமாக மாறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும், குப்பைச் சித்தர் என்பவர் அழுக்குக் கூளங்களுக்கிடையே, நாற்றமடிக்கும் இடத்தில் அமர்ந்து தம்மை அண்டி வருவோரின் கைகளில் தம் திருக்கரங்களால் தீண்டுவார். உடனே கமகமவென்று நறுமணம் எழும். கோவணாண்டியான அவருடைய அழுக்கடைந்த தேகத்திலிருந்து எழும் நறுமண தூபம் நம்மை வசீகரிக்கும். இதுவே அவர் நம்மை ஆசீர்வதிக்கும் முறை.
சஸபதி மகரிஷி தம்முடைய நேர்நோக்குப் பார்வையால், பக்தர்களை ஆசீர்வதிப்பார். படுக்கை சடை சித்தர் என்ற சித்தபுருஷரின் சிஷ்யரான ஸ்ரீசஸபதி மகரிஷி தம் சற்குருவைப் போலவே நீண்ட ஜடாமுடியை உடையவர். பலகோடி யுகங்களின் தபோசக்தியைத் தம் ஜடாமுடியில் தாங்கி வரும் ஸ்ரீசஸபதி மகரிஷி ஒவ்வொரு யுகத்திலும், பவ வருட இறுதியில் எந்த ரூபத்திலும் தரிசனம் தந்து ஆசி வழங்குகின்ற போது அதன் தெய்வீக சக்தி தரிசனத்தைப் பெறுகின்றவருடைய தலைமுடியில் பதியும்.

பவயுவ சங்கம ஜடை : ஒவ்வொரு யுவ வருடம் முழுதும், சற்குருவின் அருளாசியோடு சிகையை வளர்ப்போர்க்குச் சஸபதி மகரிஷியின் பரிபூர்ண ஆசி கிட்டும். இவ்வாறு யுவ வருடம் முழுதும் சிகையை வளர்ப்பதற்குச் சங்கல்பம் செய்து கொள்வோர்க்குப் பல விதங்களில் அருள்பாலிக்கின்றார். பவ வருடத்தில் சிகையை வளர்க்கத் தொடங்கி, யுவ வருடம் முழுதும் சிகையை வெட்டாமல் விட்டு விட்டால் சிகையில் சஸபதி மகரிஷியின் தபோபலம், அவர்தம் நேர்நோக்குப் பார்வையால் சிகையினுள் சென்று, அந்த இறையடியார்க்கு அளப்பரிய பலனைத் தருகின்றது.

சிகையின் தெய்வீக சக்தி : தலைமுடிக்குப் பல அற்புத தெய்வீகத் தன்மை உண்டு. மந்திரங்களை எளிதில் கிரஹிக்கும். இது கருதியே நம் பெரியோர்கள் காலை மாலையில் தலைவாரியவுடன் தலைமுடியைக் கால்கட்டை விரலில் அடுத்த கால் ஆள்காட்டி விரலில் செருகிப் பின் அனைத்து முடிகளையும் ஒரு பெட்டியில் சேர்த்து வைப்பார்கள். தலைமுடியைக் கொண்டு, பில்லி, சூனிய, ஏவல் மந்திரங்களை ஏவுவோர் உண்டு. எனவே எக்காரணங் கொண்டும் தலைமுடியையும் நகத்தையும் பிறர் காணும்படி வெளியில் எறியலாகாது.

சஸபதி மகரிஷியின் அருள் கடாட்சம் : படுக்கை ஜடை சித்தரின் சிலாரூபம் சென்னை பூந்தமல்லி அருகேயுள சித்துக்காடு ஸ்ரீதாந்திரீஸ்வரர் சிவாலயத்தில் அம்பாள் சன்னதியின் பின்புறம் வலப்புறத் தூணில் காணப்படுகின்றது. இவரே கால்கட்டை விரல்களில் தேகத்தின் எடையைத் தாங்கி, குதிகால்களை எழுப்பி பிரும்மச்சர்ய யோக நிலையை யாங்கணும் பரப்பி வந்தார். தம் ஜடையையே படுக்கையாக விரித்துப் பலவித யோக நிலையில் காட்சி தருவார். அவர் தம் அற்புத சிஷ்யரான ஸ்ரீசஸபதி மகரிஷி, பவயுவ சங்கம காலத்தில், இத்திருக்கோயிலில் தம் குருவைத் தரிசனம் செய்து ஏதேனும் ரூபத்தில் காட்சியளிக்கின்றார்.
யுவ வருடம் முழுதும் தம் குருநாதரிடம் குருகுலவாசம் பயின்ற ஸ்ரீசஸபதி மகரிஷி தம் சற்குருநாதர் திருவருளால், கலியுகத்தில், யுவ வருடத்தில் சிகையை வளர்ப்போர்க்குத் தம் அருட்கடாட்சத்தை வாரி வழங்குகின்றார்.

1. ஒவ்வொரு மனிதனும் தீட்சை (குடுமி) வைத்துச் செய்ய வேண்டிய பூஜைகள், ஹோமங்கள் பலவுண்டு. தீட்சை வைப்பதின் மகிமையைப் பற்றி, முந்தைய “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ இதழில் விளக்கியுள்ளோம். இவ்வாறு தவறவிட்ட பூஜை, ஹோம, யாக பலன்களைப் பெறுவதற்கு ஓர் எளிய வழிமுறையாக யுவ வருட சிகை வளர்ப்பு சித்தபுருஷர்களால் அளிக்கப்படுகின்றது. அதாவது அறிந்தோ அறியாமலோ யுவ வருடத்தில் சிகை வளர்ப்போர்க்குத் தீட்சையுடன் நித்திய கர்மாக்களைப் புரிந்த புண்ணிய சக்தி தானாகவே வந்து சேரும். எத்தகைய அற்புதமான பேறு! இந்த யுவ வருடத்தைத் தவறவிட்டால் அடுத்த அறுபது ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும்.

2. மனித வாழ்க்கையில் மிகவும் ஆபூர்வமான தருணமிது. எத்தகைய பாவமும் தீண்டாத திருமேனியையுடைய பரிசுத்த ஆத்மாவாகப் பிரகாசிக்கும் சஸபதி மகரிஷியின் அருளாசியினை எளிதாகப் பெற்றுத் தருகின்ற இந்த யுவ வருடத்தின் புனிதமான வாய்ப்பைத் தவற விடலாமா?

3. இதுவரையில் சஸபதி மகரிஷியின் மகிமையை அறியாதவர் கூட, இனியேனும் யுவ வருடம் முழுதும் சிகையை வளர்த்து ஒரளவேனும் மகரிஷியின் ஆசியைப் பெறுவார்களாக!

சிகையின் தத்துவங்கள்
தலைமுடியைப் பற்றிப் பல ஆன்மீக ரகசியங்கள் உண்டு. சிகையை அடிக்கடி வெட்டுவதால், உடல் சக்தியோடு, ஆன்மீக சக்தியும் குறைகிறது என்பது உண்மையே. இதற்காகவே “சவுண ரகசியங்கள்“ என்று ஒரு தனி தத்துவமே உண்டு. இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொன்றாகும். நாள், கிழமை பாராது தலைமுடி வெட்டுதல், சவரம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றால் உடல் சக்தி, புண்ணியசக்தி, தெய்வீக சக்திகளை இழப்பதோடன்றி, எண்ணற்ற பல தோஷங்களும், துன்பங்களும் ஏற்படுகின்றன. சசபதி மகரிஷியின் சிஷ்யரான சவுணமகரிஷி “சவுண ரகசியங்கள்“ என்ற தலைப்பில் எந்தெந்த நாளில் மட்டுமே தலைமுடி வெட்டுதல், சவரம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்யலாம் என்று விளக்கமாக எழுதியுள்ளார்.

தலைமுடி வெட்டுதல் கூடாத மாதங்கள் : ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி
தலைமுடி, நகம் வெட்டுதல், முகம் மழித்தல் செய்யக் கூடாத தினங்கள் : செவ்வாய், வெள்ளிக்கிழமை
நட்சத்திரங்கள் : பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் சூன்ய திதிகள், இதைப் பின்பற்றினாலே போதும், மனிதன் தன்னைப் பலவித பெரிய துன்பங்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

யுவ வருட சிகைக் காப்பின் பலன்கள் : சஸபதி மகரிஷி தரிசனம் தந்து காட்சி அளிக்கின்ற கலியுக யுவ வருடத்தில், தலைமுடியை வெட்டாது சிகை காத்தலால்,

1. இறை நம்பிக்கையும் , குருவின்மேல் பரிபூர்ணமான அன்பும் விருத்தி அடைய சஸபதி அருட்கடாட்சம் துணைபுரியும்.
2. அகங்காரம், கர்வம், மமதை போன்ற தீய குணங்களின் விளைவுகளைத் தடுத்திடலாம்.
3. சிகையில் தீட்சை (குடுமி) வைத்து, நிறைவேற்ற வேண்டிய யோக, யாக, வேள்விகள், ஹோமங்கள், வழிபாடுகள் பலவுண்டு. ஆனால் கலியுகத்தில் தீட்சை (குடுமி) வைப்பது அநாகரிகமாகக் கருதப்படுவதால், இதற்குப் பிராயச்சித்தமாக, யுவ வருடத்தில் சஸபதி மகரிஷியின் அருளுடன் சிகை கூட்டி, குறித்த சில ஹோமங்கள், மந்திர உச்சாடனைகள், பூஜைகள், அன்னதானம் செய்திட, தீட்சையின் அனுக்கிரகங்களைப் பரிபூரணமாகப் பெறலாம். இவற்றைத் தக்க சற்குருவை நாடி அறிய வேண்டும்.

4. சிகை வைத்து அதாவது குறைந்தது ஆறு மாதத்திற்கேனும் வெட்டாது சிகை வளர்த்து இதே நிலையில் காவேரிக் கரையில் உள்ள குறித்த சில கோயில்களில் உழவாரத் திருப்பணிகள் செய்திடில், சஸபதி மகரிஷியானவர் நாகம், மயில், பசு, மனித ரூபம், யானை போன்ற ரூபங்களில் நேரில் வந்து இத்தகைய இறைத் திருப்பணிகளைச் (சிகை வைத்து) செய்கின்ற அடியார்களை ஆசீர்வதிக்கின்றார். இது பெறற்கரிய பாக்கியமாகும்.

5. சற்குருவைப் பரிபூரணமாக நம்பி அவர் அருளாணைக்கேற்ப, யுவ வருடத்தில் சிகை வளர்த்து அவருடைய மேற்பார்வையில் இறை தரிசனம், தலயாத்திரை, கோயில் உழவாரத் திருப்பணி, ஹோமம், அன்னதானம் போன்றவற்றைச் செய்வோர்க்குச் சஸபதி மகரிஷியின் அருட்கடாட்சம். சற்குருவின் அருளால் பரிணமிக்கும். இது ஸ்ரீஅகஸ்திய மகா சித்த புருஷரின் சத்திய வாக்காகும்.

                       

யுவ வருடத்தின் தட்சிணாயன காலம் வரை கூட சில குடும்பங்களில் சிகை வளர்ப்பது இன்றைக்கும் பிரார்த்தனையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களுக்கும் சஸபதி மகரிஷியின் பரிபூர்ணமான குருவருள் நிச்சயமாகக் கிட்டும்.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. கேட்ட வரம் தரும் சித்தி விநாயகர். நற்காரியப் பிரார்த்தனைகளை உடனே சித்தி செய்து தருபவர். கலியுகத்தில் பிரத்தியட்ச மூர்த்தியாக விளங்கும் தெய்வ மூர்த்திகளில் உச்சிப் பிள்ளையாருக்குச் சிறப்பிடம் உண்டு. மலையின் மேல் அருளாட்சி புரியும் ஸ்ரீதாயுமானவசுவாமி ப்ரும்மாண்டமான லிங்க உருவத்தில் தரிசனம் தருகின்றார். பல ஆன்மீக ரகசியங்கள் செறிந்த மலைக்கோட்டையில், மலைவலம் பற்றி நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தசுவாமிகள் பல விளக்கங்களை அளித்துள்ளார். அவற்றை நம் குருமங்கள கந்தர்வா, தம் குருவாய் மொழிகளாக “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ் மூலம் கலியுக மக்களின் நல்வாழ்விற்கென எடுத்தருள்கின்றார்.

மலைக்கோட்டை தரிசனங்கள் : திருஅண்ணாமலையில் உள்ள மலை தரிசனங்கள் திருச்சி மலைக்கோட்டையின் மீது இருந்து தெரிகின்ற பல திவ்விய தரிசனங்களால் பலவித உடல் பிணிகள், மனக் கஷ்டங்கள், குடும்பப் பிரச்சனைகள், வியாபார நெருக்கடிகள் போன்ற வாழ்க்கைத் துன்பங்கள் எளிதில் தீர்கின்றன.
ஸ்ரீரங்க தரிசனம், பஞ்ச கோபுர தரிசனம், காவேரி தரிசனம், ஏழு பிள்ளையார் தரிசனம், நதிமூர்த்தி போன்ற பலவித தெய்வீக தரிசனங்கள் உண்டு. குறித்த திதியில், நட்சத்திரத்தில், ஹோரையில் குறித்த தரிசனத்தைக் கண்டால், கொடிய பிணிகள் கூட தீருகின்றன. ஆனால் இதற்கு ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும், குருவின் மேல் பேரன்பும் கொண்டிருக்க வேண்டும். சாட்சாத் உச்சிப் பிள்ளையாரின் தெய்வ கடாட்சமே சற்குருவின் குருவருளாகப் பரிணமித்து நம்மைக் காக்கின்றது தரிசன முறைகள், பல்வேறு மலை தரிசனங்கள் ஆகியவற்றைப் பின்னர் காண்போம். கிரிவல முறை மட்டும் சற்குரு அருளால் இங்கு விளக்கப்படுகின்றது.

மலைக்கோட்டை கிரிவல முறை - பலவித அற்புதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த மலைக்கோட்டை கிரிவலம் மூலம் எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மிக்ச் சுலபமாகத் தீர்வு பெறலாம். சிறிது தூரம் மட்டுமே உள்ள மலை வலத்தை 20 நிமிடத்திலிருந்து 25 நிமிடத்திற்குள் முடித்து விடலாம். எத்தகைய அரிய பாக்கியம்! கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல் இத்தகைய எளிமையான தெய்வத்  திருப்பணியை நிகர்த்த மலைவல வழிபாட்டு முறையை வைத்துக் கொண்டு அனைத்துத் துன்பங்களையும் தீர்த்து விடலாமே!
1. மலைக்கோட்டை கிரிவலத்தைக் கோயில் முகப்பில் உள்ள துவார பாலகர்களை வணங்கித் தொடங்க வேண்டும். கோயில் தரிசனத்திற்கும், கிரிவலத்திற்கும் இந்தத் துவார பாலகர்களின் அனுமதி மிகவும் முக்கியமானதாகும். இந்தத் துவார பாலகர்களை பக்தர்கள் அறவே மறந்து விட்டனர். கோயில் முகப்பிலிருந்தே கடைகளின் சஞ்சாரம் இருப்பதால் இச்சந்தடியில் துவாரபாலக மூர்த்திகள் மறைக்கப்பட்டு விடுகின்றனர்.
ஆனால்  ஸ்ரீதாயுமானவ சுவாமி, ஸ்ரீமட்டுவார் குழலி அம்பிகை, ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரின் பரிபூர்ண கடாட்சத்துடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளின் ஆசிர்வாதம் பெற்று உட்சென்றால் தானே கோயில் தரிசனமோ, கிரிவலமோ, பரிபூர்ணமடையும்! இது மட்டுமின்றி பாதணிகளை கழற்றி ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளை வணங்கி, காலணிகளைக் கையில் எடுத்துச் சென்று உள்ளே விட வேண்டும். ஆனால் நடைமுறையில் காலணிகளுடனேயே உட்செல்லும் தவறான முறை உள்ளது. திருக்கோயில் வளாகம், ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் முகப்பு வளைவிலிருந்தே தொடங்குகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

2. ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகள்  தரிசனம் ஸ்ரீமாணிக்க விநாயகர் தரிசனத்துடன் வெளிவந்த பின் கிரிவலம் தொடங்குகிறது.

3. ஸ்ரீமாணிக்க விநாயகர் திருச்சன்னதியில் ஊதுபத்தியினை ஏற்றி இந்த ஊதுபத்தி ஜோதியினைப் பிடித்தவாறே கிரிவலம் வர வேண்டும். இடையில் புதுபத்திகளை ஏற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

4. திருக்கோயில் தெப்பக் குளத்தையும் பிரதட்சிணமாக்ச் சுற்றி வலம் வர வேண்டும்.

5. சாஸ்திரோக்தமாகத் தயாரிக்கப்படும் ஊதுபத்தியில் மூலிகைகள் பூவிதழ்கள், ஜவ்வாது, கற்பூரம், அரக்கு அல்லது மெழுகு, பசுஞ்சாணம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் விசேஷமான ஆன்மீக குணங்கள் உண்டு. இவற்றிற்குப் பரவெளியை அதாவது வான்வெளியையும், நாம் இருக்கும் இடத்தையும் புனிதப்படுத்தும் சக்தியுண்டு. ஊதுபத்தி ஜோதியும் ஒருவகை ஜோதியே. வீட்டில் நறுமணம் கூடிய ஊதுபத்திகளை ஏற்றி வைத்தால் தீய எண்ணங்கள், தோஷங்கள், காற்று, கருப்பு, திருஷ்டி போன்றவை நிவர்த்தியாகி பூஜை அறையையும், இல்லத்தையும் புனிதப்படுத்துகின்றன. இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி வைத்தால் அதன் ஆன்மீக சக்தி மூன்று மணி நேரத்திற்கு இல்லத்தில் நிலவும். தாமரை நூல் ஜோதி ஏற்றி வழிபட்டால் அதன் ஆன்மீக சக்தி ஆறுமணி நேரங்களுக்கு நீடித்து நிற்கும். பசு நெய் தீபம் ஏற்றிடில், தீபம் குளிர்ந்தபின், பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு அதன் ஆன்மீக சக்தி நிரவி நிற்கும்.

6. ஊதுபத்தி ஜோதியுடன், ஸ்ரீவிநாயகரின் ஏதேனும் ஒரு நாமத்தைத் (சித்தி விநாயகா போற்றி, மகாகணபதி போற்றி, ஹேரம்ப கணபதி போற்றி, சக்தி கணபதி போற்றி”) துதித்தவாறே கிரிவலம் வர வேண்டும்.

7. கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, தேங்காய் சாதம், விளாம்பழம் போன்ற உணவு வகைகளை இல்லத்திலேயே தயாரித்து ஸ்ரீமாணிக்க விநாயகருக்குப் படைத்து, அவற்றைக் கிரிவலத்தில் உள்ள ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கிட அன்னதானத்தின் பலன்கள் பல்கிப் பெருகும்.

8. மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் இன்றைக்கும் பல மகான்கள், யோகியர், சாதுக்கள் ஏதேனும் ஒரு ரூபத்தில் வலம் வந்தவாறு இருக்கின்றனர்.

9. பஞ்சமி திதியில் ஸ்ரீநாகநாத சுவாமி ஆலயத்தில் உறையும் நாகதேவதைகள், நாக ரூபத்தில் கிரிவலம் வருகின்றன. எனவே பஞ்சமி திதியன்று கிரிவலம் வருகையில் ஸ்ரீநாகநாதசுவாமியைத் தரிசனம் செய்து, நாகதரிசனம் பெற்றிடில், நாக தோஷங்கள் நிவர்த்தியாகி புத்திரபாக்கியம் கிட்டும்.

10. ஊதுபத்தி ஜோதியைத் தாங்கியவாறே ஸ்ரீவிநாயகரின் ஏதேனும் ஒரு நாமத்தைத் துதிக்கையில் ஜோதியின் மூலமாக இறைநாமம் மலைக்கோட்டைப் பகுதியில் பரவி, புனிதமான மலைக்குன்றில் பிரதிபலித்து அதன் ஆன்மீக சக்தி பல்கிப் பெருகுகின்றது.

11. வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்பு நெடுந்தூரம் செல்லும். இதே போல் ஊதுபத்தி ஜோதிக்கு இறைநாமத்தை நெடுந்தொலைவிற்கு எடுத்துச் செல்லும் சக்தியுண்டு. இந்த ஆன்மீக சக்தியினால், தரிசனம் செய்ய வருபவர்கள், பக்தர்கள், மலைக்கோட்டைப் பகுதியில் வாழ்பவர்கள், வியாபாரிகள் போன்றோருடைய நல்லெண்ணங்கள் நிறைவேறுகின்றன. இறைவன் தன் திருவருளை இவ்வாறாகவே வர்ஷித்துத் தன் பக்தர்கள் ஆற்றும் நற்காரியங்களின் புண்ணிய சக்தியைக் கொண்டே ஏனைய பக்தர்களின் அபிலாஷைகளைத் தீர்த்து விடுகின்றான். அப்படியானால் ஒரு முறை மலைக்கோட்டையை ஊதுபத்தி ஜோதியைத் தாங்கி, இறைநாமம் துதித்தவாறே கிரிவலம் வந்திடில் அதன் பலன்கள் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைவதை உணர்ந்து விட்டீர்களல்லவா ! எத்தனைய மகத்தான கிரிவல மகேச சேவை ஜாதி மத பேதமின்றி மக்கள் சேவையாக மலர்கின்றது!

12. கிரிவலத்தில் நீர்மோர் தானம், அன்னதானம் ஆடைதானம், காலணிகள் தானம், படுக்கை தானம் போன்ற இதர தான தர்மங்கள் செய்திடில் மக்கள் சேவை பல்கிப் பெருகுவதுடன், அளப்பரிய புண்ணிய சக்தியையும் பெற்றுத் தருகின்றது.

13. ஏழைகளுக்குப் பாய், படுக்கை, தலையணை, போர்வை ஆகியவற்றைத் தானம் செய்வோர்க்குப் படுக்கையில் கிடந்து வாடி உயிர் போகும் நிலைமை ஏற்படாது. மருத்துவமனைகளில் அவதிப்பட்டு நெடுநாட்கள் படுக்கையில் கிடந்து படுக்கைத் தோல் நோய் (Bed Sores) உண்டாகி சீரழியும் நிலை நிச்சயமாக ஏற்படாது. தான தர்மங்களின் மகிமைகளைப் பார்த்தீர்களா! மனம், பணம், தெம்பு, ஆரோக்கியம் இருக்கும்போதே சற்குரு அளிக்கும் கிரிவல முறைகளைப் பின்பற்றி தக்க தான தர்மங்களைச் செய்து இப்பிறவியிலேயே நம் கர்மங்களைத் தீர்க்கும் நல்வழியைக் காண்போமாக!

14. கிரிவல முடிவில் மீண்டும் ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளைத் தொழுது, ஸ்ரீமாணிக்க விநாயகரைத் தரிசிப்பதுடன் கிரிவலம் பரிபூர்ணமடைகின்றது.

கிரிவல நாட்கள்

1. தின்ந்தோறும் கிரிவலம் வருவது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆன்மீக சக்தியையும், புண்ணியத்தின் திரண்ட அருளையும் பெற்றுத் தருகின்றது.

2, ஸ்ரீவிநாயகருக்குரித்தான சதுர்த்தி, சதுர்த்தசி, சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி, பிரதமை திதி, மூல நட்சத்திரம் ஆகிய விசேஷமான நாட்களில் கிரிவலம் வருதல் உத்தமமானதாகும்.

3. தனித்துக் கிரிவலம் வருதலை விட குடும்பமாக, சத்சங்கமாக, கூட்டாகக் கிரிவலம் வருதல் பன்மடங்கு பலனைத் தரும்.

4. கிரிவலத்தில் செய்யப்படும் தான தர்மங்களினால், புண்ணிய சக்தி மேலும் பன்மடங்காய்ப் பெருகுகின்றது.

5. பிறந்த நாள், திருமணநாள், இறந்தவர்களின் திதி போன்ற நாட்களில் மலைக்கோட்டையைக் கிரிவலம் வந்து, தானதர்மங்களுடன் கொண்டாடுதல் சிறப்பான மன நிறைவைத் தரும். இத்தகைய நாட்களில் குடும்பமாக கிரிவலம் வருதல் மன அமைதியையும் திருப்தியையும் அளிக்கும்.

பித்ரு தர்ப்பணம்

பித்ரு தர்ப்பணம் பற்றி, நம்குருமங்கள் எளிமையான பல விளக்கங்களை, இத்தொடரில் அளித்து வருகின்றார்கள். நாம் அனுபவிக்கின்ற நோய், நம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் துன்பங்கள், நம்முடைய பணக்கஷ்டங்கள், மனநிம்மதியின்மை வியாபார நெருக்கடிகள் போன்றவற்றிற்கான மூல காரணம், நம் பித்ருகளுக்குரித்தான பித்ரு பூஜைகளை முறையாக நிறைவேற்றாததே ஆகும். இதுவே பித்ரு சாபமாக மாறி அனைத்துத் துன்பங்களையும் தருகின்றது.

அடியார் : குருவே! பித்ரு தர்ப்பணத்தை எந்த நாட்களில் செய்ய வேண்டும்? மந்திரங்கள் தெரியாவிடில் என் செய்வது?

குரு : தினந்தோறும் காலையில்,நம் மூதாதையர்களை எண்ணி, அவர்கள் பெயரைச் சொல்லி, எள் கலந்த நீரை வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கும். கட்டை விரலுக்கும். கட்டை விரலுக்கும் இடையில் ஊற்றி தர்ப்பணமிடுதல் மிகச் சிறந்ததாகும்.

அமாவாசை, சந்திர, சூரிய கிரஹணம், மாதப் பிறப்பு, ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற மூதாதையர்களின் திதி நாட்களில் கட்டாயமாகப் பித்ரு தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும். உண்மையான உள்ளத்துடன், எவ்வித சுயநல, லாப எண்ணம் இல்லாது தர்ப்பணம் செய்து வைப்போரின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் அத்தகைய புனித உள்ளமுடையோர் கிடைப்பதரிது. தர்ப்பணம் செய்து வைப்பவர்கள் தினந்தோறும் 10000 முறையாவது காயத்ரி மந்திரம் ஜெபித்து மூன்று வேளை சந்தியா வந்தனம் போன்ற நித்திய கர்மாக்களைச்  சிரத்தையுடன் செய்பவராகவும், தீட்சை (குடுமி) வைத்துப் பஞ்சகச்சம் வேஷ்டி அணிபவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய பாங்குடையவரும் கிடைப்பதரிது. எனவே, சுயமாகத் தர்ப்பண பூஜை செய்வது மிகவும் உத்தமமான தாகும்.
அடியார் : குருவே! மேற்கண்ட ஆன்மீகத் தகுதிகள் தர்ப்பணம் செய்து வைப்பவருக்கு மட்டும்தானா? சுயமாகச் செய்பவருக்கு இவை பொருந்தாதா?

குரு : நிச்சயமாகப் பொருந்தும். ஆனால் சுலபமாக மந்திரங்களைக் கற்றுச் செய்கின்ற பொழுது நாளடைவில் தர்ப்பணத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு உள்ளத் தூய்மையுடன் பித்ரு பூஜை செய்கின்ற பாங்கு ஏற்படும். பிறர் செய்து வைத்தால், ஏனோதானோவென்று வாழ்க்கை முழுவதும் அப்படியே கழிந்து விடும். பின் என்றுதான் தர்ப்பணத்தைப் பற்றி அறிந்து கொள்வது? ஆன்மீகத் தகுதிகள் நிர்ணயிக்கப்படுவதின் தாத்பர்யம் என்ன? ஒருவன் எந்த அளவிற்கு ஆன்மீக நிலையில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே அது உணர்த்துகின்றது.
மேலும் சுயமாகத் தர்ப்பண பூஜை செய்கையில் அவர்தம் பித்ருக்கள், தம் வம்சாவழியினரின் பெருமுயற்சியால் செய்யப்படும் பித்ரு பூஜைகளை மனதார ஏற்கின்றனர்.

அடியார் : குருவே! ஆண்களில்லா குடும்பத்தில் பெண்கள் தர்ப்பணம் இடலாமா?

சற்குரு : ஆண்துணை இல்லா குடும்பங்களில் பெண்கள் தர்ப்பணம் இடலாம். இதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த ஸ்திரி தர்ப்பண முறையில் சில விசேஷ ப்ரயோக முறைகள் உண்டு.
கணவனை இழந்த பெண், தாய் தந்தையில்லாத பெண், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் கணவனை விட்டுப் பிரிந்து வாழும் (ஆண்) துணையற்ற பெண்கள், அலுவல், பிரயாணம் காரணமாக கணவன் வெளிச் சென்றிட, தனிக் குடும்பத்தை நடத்தும் பெண் போன்றோர் கூட அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற நாட்களில் தர்ப்பண பூஜை செய்திடலாம்.

1. கணவனை இழந்து தனித்தோ, குடும்பத்தோடோ ஆண் துணையின்றி வாழும் பெண், தன் கணவனுக்காகவும்

2. கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்ற பெண்ணிற்கு கணவனே கண் கண்ட தெய்வமாக இருப்பினும், கணவனிடமிருந்து எவ்வித உதவியும் இல்லாத நிலையில் அப்பெண் இறந்த தன் தாய் தந்தையருக்காகவும்

3. ஆண்துணையற்ற எந்தப் பெண்ணும் நன்றிக் கடனாகத் தனக்கு ஆதரவு அளித்து (இறந்த) எவருக்காகவு பித்ரு தர்ப்பணம் இடலாம்.

மேற்கண்ட பெண் வகையினர் மட்டுமின்றி எந்தவொரு பெண்ணும் இறந்த தன் கணவனுக்கும், இறந்த தன் ஆண், பெண் பிள்ளைகளுக்கும் (கணவனில்லாவிடில்) தர்ப்பணமிடலாம்.

4. நம்பிக்கையின்மை காரணமாகவோ அல்லது அசிரத்தையாலோ கணவன் பித்ரு தர்ப்பணத்தைச் செய்யாவிடில் மனைவியே அதனை ஏற்றுச் செய்யலாம். ஆனால் இதற்குக் கணவனின் முன் அனுமதி பெற்றிடில், தர்ப்பணத்தின் பரிபூர்ண பலன்கள் கிட்டும்.

5. எந்தவொரு பெண்ணும் காருண்ய பித்ரு தர்ப்பணமாகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன்னிடம் அபிமானம், அன்பு  கொண்டு இறந்த பெரியோர் எவரையும் காருண்ய பித்ருவாக வரித்துத் தர்ப்பணமிடலாம்.

ஸ்த்ரீ தர்ப்பண முறை
வெற்றிலை மூலிகைக்கும், பித்ரு லோகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. வெற்றிலையில் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்றவாறு பல வகைகள் உண்டு. நரம்புகள் நிறைந்துள்ள வெற்றிலை ஆண் வெற்றிலையாகும். பெண் வெற்றிலையில் நரம்புகள் குறைவாக இருக்கும்.
ஓர் ஆண் வெற்றிலையைச் சுத்தப்படுத்தி அதில் (அரைத்த) மஞ்சளைப் பிடித்து வைத்து, கூம்பு போல் அமைத்து அதனைத் தன் இறந்த கணவனின் பிம்பமாக நினைத்தல் வேண்டும். மஞ்சள் பிள்ளையார் போல் அமைந்திருக்கும் இந்தக் கூம்பு வடிவின் மேல் இறந்த தன் கணவனின் பெயரைச் சொல்லி ஆவாஹனம் ஆகும்படி அதாவது மஞ்சள் கூம்பில் பித்ரு ரூபத்தில் வந்து அமரும்படி பிரார்த்திக்க வேண்டும்.
கணவன் பெரியோர், பிள்ளை, பெண், காருண்ய பித்ரு இவர்களில் யாருக்காகத் தர்ப்பணமோ அவர்களுடைய பெயரைத் தியானித்து மஞ்சள் கூம்பில் பித்ரு ரூபத்தில் எழுந்தருளும்படி அவரைப் பிரார்த்திக்க வேண்டும்.
பிறகு இந்த மஞ்சள் பித்ரு பிம்பத்தின் முன், ஆறு தர்ப்பைகளைக் கொண்டு தர்ப்பைச் சட்டம் விரிந்து, அதன் மேல்

1. தர்ப்பண மந்திரம் அறிந்திருந்தால், அம்மந்திரம் சொல்லி வெறும் நீரையோ அல்லது எள் கலந்த நீரையோ வலது கட்டை விரல் ஆள்காட்டி விரல்களுக்கிடையில் நீரை வார்த்துத் தர்ப்பணமிட வேண்டும்.
2. தர்ப்பண மந்திரத்தை அறியாவிடில் இறந்தவர்களின் பெயரைச் சொல்லி மேற்கண்ட முறையில் தர்ப்பண நீரை வார்க்க வேண்டும். தர்ப்பைச் சட்டம், தர்ப்பணமிடும் முறைகள் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயம் மார்ச் 1995, மே 1995 இதழ்களில் விளக்கப்பட்டுள்ளன.

விஷ்ணு பிம்பத்திற்குத தர்ப்பணம் : சில குடும்பங்களில் நல்ல இறையனுபூதி பெற்று சிவபாதம் அடைந்தவர்களுண்டு. மகான், சன்யாசி, சாது, மட பீடாதிபதி, குடும்பத்திற்குக் குருவாக இருப்பவர் – இத்தகையோர்க்கும் அப்பெரியோர் சமாதியானபின் சற்குருவாக, கண்கண்ட தெய்வமாகத் தங்களை நல்வழிப்படுத்திய அம்மகானுக்கோ, பெரியோருக்கோ பெண்கள் தர்ப்பணமிடலாம். இது மிகவும் விசேஷமான தர்ப்பணமாகும்.
இதனால் குடும்பத்திற்கு அப்பெரியோரின், மகானின் ஆசிர்வாதம் நிறைந்து விளங்கும். இவ்வாறாகத் தர்ப்பணம் மூலமே பல குடும்பப் பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்க்கலாம். இதனை ஆண்களும் செய்யலாம்.

1. சமாதி பெற்ற பெரியோருடைய/மகானுடைய திதியை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, மகானாக கருதப்படுபவர்களுக்கு அவர்கள் ஜீவசமாதி கூடிய திதியே ஏற்கப்படினும் சில குடும்பங்களில் நட்சத்திரத்தையும் ஏற்பதுண்டு.
2. ஸ்த்ரீ தர்ப்பணம் போலவே இதிலும் ஆண் வெற்றிலையில் (அரைத்த) மஞ்சளால் கூம்பு அமைத்து இதில் விஷ்ணுவை ஆவாஹனம் ஆகும்படி வேண்டிப் பிரார்த்தனை செய்து இதன்முன் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணமிட வேண்டும். இத்தகைய பெரியோர்களுக்கு / மகான்களுக்குரித்தான தர்ப்பண பூஜையில் எள்ளிற்குப் பதிலாக துளசியும், கங்கை நீரும் வார்த்துத் தர்ப்பணமிட வேண்டும். ஜீவசமாதி அடைந்தோரின் ஆன்மீக நிலைக்கேற்ப வலது கை விரல்களின் நுனி வழியாகவோ, சுண்டு விரல் நுனி வழியாகவோ, உள்ளங்கையின் உட்புறமாகவோ, தர்ப்பண நீரை அர்க்கியமாகவோ அளிக்க வேண்டும். இந்த ஆன்மீக விளக்கங்களைத் தக்க சற்குருவிடமிருந்து பெற்றுத் தர்ப்பண பூஜையைப் பரிபூர்ணமடையச் செய்ய வேண்டும்.

அடியார் : குருவே! விஷ்ணு பிம்பம் அமைக்கப்படுவதின் பொருள் யாது?
சற்குரு : அனைத்துக் கோடி பித்ரு பித்ரு லோகங்களின் அதிபதி ஸ்ரீவிஷ்ணு ஆவார். ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் பல்வேறு அம்சங்களைத் தாங்கி பித்ருக்களின் நாயகராக ஸ்ரீவிஷ்ணு அருள்பாலிக்கின்றார். தெய்வீகத்தில் உயர்நிலை அடைவோர் மகான்களாக, யோகியராக, சற்குருமார்களாக வாழ்ந்து கோடிக்கணக்கான ஜீவன்களை உய்வித்து ஸ்ரீவிஷ்ணு லோகங்களில் ஐக்கியமடைகின்றனர். எனவேதான் விஷ்ணு பிம்பம் மூலம் இவர்களுடைய ஆவாஹன முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடியார் : குருவே! அத்தகைய உன்னத நிலை அடைந்தோர்க்குத் தர்ப்பணம் அவசியமானதொன்றா?
சற்குரு : அவர்களுக்கு எவ்வித பூஜையும் தேவையில்லை என்பது உண்மையே. ஆனால் குருபூஜை, குருஆராதனை, குருஜெயந்தி, பித்ரு தர்ப்பண பூஜை இவைகளைச் செய்வதால் அதன் பலன்கள் பூஜை செய்பவர்களுக்குத் தானே வந்து சேரும்! தெய்வ வழிபாட்டு முறைகளுள் ஹோமம், யாகம் போன்று பித்ரு தர்ப்பண பூஜையும் ஒன்றாக அமைவதால் இது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
மேலும் பித்ருக்களில் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்களைத் தவிர பல்வேறு வகையான பித்ரு நிலைகள் உண்டு. இவற்றை விளக்கினால், சாதாரண மனித அறிவினால் உணர்ந்து கொள்ள முடியாது. கோயில் உழவாரத் திருப்பணிகள், அன்னதானம் போன்ற தான தரும நற்காரியங்களில் கிட்டும் இறை அனுபவம் மூலமாகத்தான் ஆழ்ந்த நம்பிக்கை உருவாகி, அதன் மூலமே இவற்றைத் துய்த்து உணர முடியும்.

பெண்கள் ருது ஆதல்

கன்னிப் பெண்கள் ருது ஆதல் (வயதிற்கு வருதல்) அல்லது பருவமடைதல் என்பது ஒரு புனிதமான வைபவமாகும். இதனை நம் பெரியோர்கள் ருது கல்யாணம் என்றே அழைத்து இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர். ஆண்களுக்கு எவ்வாறு உபநயனம் அல்லது பூணூல் அணிதல் என்பதை மறு பிறப்பு என்று கூறுகின்றார்களோ அதேபோல் ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பின் மறு ஜென்மம் எடுக்கின்றாள். ருது ஆகின்ற இயற்கை நியதி எவ்வாறு அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானதோ, அதே போன்று பூணூல் அணிவதும் ஜாதி, குல, இனபேதமின்றி அனைவர்க்கும் உரித்தானதாகும். இதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

ருது காலநேரம் :  ஒரு ஜீவனின் பிறப்பு நேரத்தைக் கொண்டு ஜோதிட ரீதியாக லக்னம் அமைத்து கிரஹ ஸ்புடங்களை நிர்ணயிக்கின்றார்கள் அன்றோ? ருதுவாதலும் மறுபிறப்பல்லவா! எனவே ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் ருதுவான காலநேரத்தைக் கொண்டு, ருது லக்னம் அமைத்துக் கிரஹ சஞ்சாரங்களைக் கணிக்க வேண்டும். அதியற்புத ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த இந்த ருது ஜோதிடத் தத்துவங்கள் இன்று மறைந்து விட்டன என்றே சொல்லலாம். தக்க சற்குருவை நாடினால் ருது லக்னம், ருது சக்கரம் ஆகியவற்றை அமைக்கும் ஆன்மீக விளக்கங்களை அவரே எடுத்தருள்வார்.

ருதுஜாதகம் வரைதல் : ருது சக்கரத்தைக் கொண்டு ஒவ்வொரு கன்னிப் பெண்ணின்

1.  திருமண சாத்தியக் கூறுகள், தோஷங்கள், பரிகாரங்கள் ஆகியவற்றை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
2. சந்தான பாக்கியம் உண்டா? இல்லையெனில் எத்தகைய தோஷ நிவர்த்தி முறைகளைக் கையாள வேண்டும்?
3. எந்த வயதில், எவ்விடத்தில் திருமணத்தை நடத்தலாம்
4. அமைய இருக்கின்ற கணவனின் ஆயுள், தொழில், உத்தியோகம், புத்திர பாக்கியம் போன்றவற்றை கணிப்பதுடன் பிறந்த லக்ன ராசி, நவாம்ச சக்கரங்களின் துணையுடன் மிகத் துல்லியமாக அறிந்து ருதுவான காலம் முதலே தேவையான பரிகாரங்கள், பூஜைகள், பிரார்த்தனைகள், ஆகியவற்றை நிறைவேற்றி விடலாம். இவற்றை அறிந்து கொள்ள ருதுவான நேரம், இடம் ஆகியவற்றைப் பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் திருமண ஜாதகப் பொருத்தத்தைக் கணித்திடும் போது, பெண்ணின் ருதுலக்னம், ராசிச்சக்கரம், இரண்டையும் சேர்த்தே பொருத்தங்களைக் கணித்தல் வேண்டும். ஆனால் தற்காலத்தில் ருதுலக்னம், ருதுராசிச் சக்கரம் பார்க்கின்ற முறை  அறவே மறைந்து விட்டது. எனவே தான் தற்காலத் திருமணங்களில் பல வாழ்க்கைப் பிரச்சனைகள் மலிந்துள்ளதைக் காண்கிறோம்.

ருது நட்சத்திர பூஜை : பெற்றோர்கள் தம்முடைய பெண் ருதுவான நாள், நட்சத்திரம், திதி மற்றும் இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். மிக நுணுக்கமான ஆன்மீக மற்றும் ஜோதிட ரகசியங்கள் நிறைந்த ருது லக்ன கணிப்பு முறையைத் தக்க சற்குருவை நாடி அறிதலே உத்தமமானது. இதைத் தவறாகப் பயன்படுத்தினால் சாபங்கள் விளையும் என்பதால், சற்குருவை நாடியே அறிய வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது.
இக்கலியுலகத்தில் இலட்சக்கணக்கான மகளிர் திருமணமாகாமல் தவிக்கின்றனர். இவர்களின் நல்வாழ்விற்கென நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் அருளியுள்ள ருது கால தானதர்மங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் குருவாய் மொழியாக இங்கு காண்போம்.

ஒவ்வொரு பெண்ணும் தான் ருதுவான நட்சத்திர காலத்தையறிந்து, மாதந்தோறும் அந்த நட்சத்திர நாளில் குறித்த சில தானங்களைச் செய்தல் வேண்டும். பெற்றோர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துத் தம் புதல்வியர், ருதுவான நாள் முதலே அந்தந்த நட்சத்திரங்களுக்கென உரைத்துள்ள தான தர்மங்களை நிறைவேற்றி வந்தால், விரைவில் தக்க காலத்தில் திருமணமாதல், சந்தான விருத்தி, தீர்க்கமான ஆயுள், பரிபூர்ண சுமங்கலித்வம் போன்ற பாக்யங்களைத் தம் புதல்விகளுக்குப் பெற்றுத் தரலாம்.

ருதுவான அல்லது
பிறந்த நட்சத்திரம்

தான தர்ம பரிஹாரங்கள்

அஸ்வினி

ஆடு, மாடுகளுக்கு உணவளித்தல்

பரணி

யானைக்குக் கஜ பூஜை/உணவிடுதல்

கார்த்திகை

மயில், கோழி, சேவல் போன்ற பட்சிகளுக்கு உணவிடுதல்

ரோஹிணி

பாம்புப் புற்றிற்குப் பூஜை பால் ஊற்றுதல், ஏழைகளுக்குப் பால் தானம்.

மிருகசீரிஷம்

கூண்டில் அடைபட்ட பட்சிகளை விடுவித்து, பட்சிகளுக்கு உணவிடுதல்

திருவாதிரை

காளைகளுக்கு உணவிடுதல்

புனர்பூசம்

ராணுவம், காவல், பாதுகாப்புத் துறைகளைச் சார்ந்த ஏழைகளுக்கு உதவி புரிதல் (வாட்ச்மேன் சிப்பாய் etc..)

பூசம்

ஏழை காய்கறி வியாபாரிகள், அவர்களுடைய ஏழைச் சிப்பந்திகளுக்கு உதவியளித்தல்

ஆயில்யம்

எண்ணெய் செக்கு ஆட்டும் ஏழைத் தொழிலாளர்களுக்கு, இதர ஏழை வியாபாரத் தொழிலாளர்களுக்கு உதவி

மகம்

60, 70 வயது நிறைந்த வறிய தம்பதிகளுக்குப் பாதபூஜை மற்றும் உதவிகள்

பூரம்

கழைக் கூத்தாடிகள், ஏழை நடனக் கலைஞர்களுக்கு உதவி

உத்திரம்

துப்பரவுத் துறைப் பணியாளர்களுக்கு உதவி

ஹஸ்தம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி

சித்திரை

ஏழை மாணவர்களுக்கு உணவு, உடை, புத்தகங்கள் போன்ற உதவிகள்

சுவாதி

கோயில் சிப்பந்திகளுக்கு உதவி

விசாகம்

இலவசத் திருமணங்களுக்கு உதவி

கேட்டை

பக்தியைப் பரப்பும் ஏழை உபன்யாசகர்கள், நாட்டிய நாடகக் கலைஞர்களுக்கு உதவி

மூலம்

ஏழை விதவைகளுக்கு உதவி, கறவை நின்ற பசுக்களுக்கு உணவளித்தல், அவற்றைப் பராமரிக்க உதவிகள்

பூராடம்

உணவு எடுத்துச் செல்லும் ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவி (சாப்பாடு, டிபன் கேரியர் தூக்குவோர்)

உத்திராடம்

ஏழைக் கர்ப்பிணிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் அளித்தல், உணவுதானம்

திருவோணம்

விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதி பால்பாயசம் தானம்

அவிட்டம்

விவசாய ஏழைப் பெண் தொழிலாளர்களுக்கு உதவி, உணவு இடுதல்.

சதயம்

நீர்மோர் தானம்

பூரட்டாதி

ஏழை கர்ப்பிணிகளுக்கு பிரசவகால உதவி அளித்தல் (மருந்து, டானிக், உணவு, டாக்டர் பீஸ் போன்றவை)

உத்திரட்டாதி

ஆதரவற்ற வயதானவர்களுக்கு உதவி, உணவு, உடை,  இடம் வசதி  செய்தல்

ரேவதி

ஏழைகளுக்குப் பாய், தலையணைகள், போர்வை அளித்தல்

பொதுவாக ருதுவான சமயத்தில் உள்ள நட்சத்திரத்தைக் குறித்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை. இந்நிலையில் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் மாதந்தோறும் மேற்கண்ட நாட்களில் குறித்த தான தர்மங்களைச் செய்து வர, தக்க பருவத்தில் எவ்வித இடையூறுமின்றி திருமணங்கள் நிறைவேறும்.
அதாவது பருவமடைந்த நட்சத்திரத்தை அறிந்தால் அந்நாளிலோ அல்லது பருவமடைந்த நட்சத்திரம் தெரியாவிடில் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு மேலே கண்டவாறு அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளிலோ குறித்த தானதர்மங்களைச் செய்வது திருமண தோஷங்களாய் நிவர்த்தி செய்யும் மிகச் சிறந்த பரிகார முறையாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

குருவுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகிறான் சிறுவன். பிரம்ம லிங்கத்தில் ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. நாட்கள் பறந்ததே தெரியவில்லை. சுவையான புராணக் கதைகள், அவ்வப்போது, இனிய உணவு, சுகமான தூக்கம்.. இவ்வாறாக ஐந்து நாட்கள் ஒடியதை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த சிறுவனை அந்தக் குரல் நினைவுலகிற்கு அழைத்து வந்தது. “டேய்! சிவராஜா சிங்க தீர்த்தம் தெரியுமா?” என்ற குருவின் வார்த்தை சிறுவனைத் திடுக்கிட வைத்தது. உடனே சென்ற தடவை வந்த கிரிவல நினைவுகளும் அவர் கூறியிருந்தவைகளும் ஒன்றாக எண்ணத்தில் கூடிவர அதில் ஒன்று சிவராஜா சிங்க தீர்த்தம் என்பதும் நினைவிற்கு வந்தது.
“ஓம் வாத்யாரே! சிங்கம் வாயைத் திறந்திருக்க அதற்குப் பின் பக்கமாக ஒரு தீர்த்தம் – படிக்கட்டுகளுடன் இருக்கும் அதானே!” என்றான்..
“ம்ம், அதுதான் ., அதுபோல் அருகருகே இரண்டு சிங்க தீர்த்தத்திற்கும் நடுவில் சுகமுனி தீர்த்தம் உள்ளது. அதில் போய் உன் குருவிற்குச் சிறிது தீர்த்தம் எடுத்துவா! என்றார்.
“சரி வாத்யாரே!”.. சிட்டாகப் பறந்தான் சிறுவன். அவன் டக்கென்று நின்ற இடம் சிவராஜ சிங்க தீர்த்தம்! “குருவே சரணம்! அண்ணாமலையானுக்கு அரோகரா” என்று குரல் கொடுத்து விட்டு அடுத்ததாக ் சிங்க தீர்த்தத்தை தேடினான். அதுவும் உடனே கிடைத்து விட்டது. இந்த இரண்டிற்கும் நடுவே சுகமுனி தீர்த்தத்தைத் தேடினால்...... ஊஹும்..... ஒன்றும் தெரியவில்லை! வழியில் வருபவர்களை ஒருவர் விடாமல் கேட்டான். ஒருவருக்குத் தெரியவில்லையென்றாலும் மற்றொருவராவது சொல்ல்லாமே!  கேட்டுக் கேட்டு உடல் சோர்ந்ததுதான் கண்ட பலன்! நாழிகை கரைந்து கொண்டே இருந்தது...
வண்டிக்காரனை நிறுத்தி கேட்டான். லாரிக்காரனை மடக்கிக் கேட்டான்.
சைக்கிளில் சென்றவனையும் நடந்து சென்றவர்களையும், அருகில் வீடு கட்டி வாழ்ந்தவர்களையும் கேட்டான்! ஒருவருக்கும் தெரியவில்லை.
“சுகமுனி தீர்த்தமா? அப்படி என் வாழ்நாளில் கேள்விப்பட்டதே இல்லையே! “என்று தான் பதில்கள்! விடைகள் ஏறக்குறைய மாறாமல் இப்படியே தான் வந்தது. சிறுவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கண்களில் நீர் ததும்பத் தேம்பலுடன் நிற்கும் பையனைப் பார்த்துச் சிலர் விசாரித்தனர். இவன் அவர்களை விசாரித்தது போய், அவர்கள் நின்று இவனை விசாரிக்கலாயினர்! “அப்பா, அம்மாவைத் தொலைத்து விட்டானோ”!
“வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டானோ” – இதுதான் அவர்களுடைய கவலை! உதவ வந்தவர்களிடம், “சுகமுனி தீர்த்தம், சுகமுனி தீர்த்தம்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தான் சிறுவன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொருவராக விலகிச் சென்றனர்.
மீண்டும் திரும்பி விடலாமா! என்று நினைத்தவுடன் பயம் வந்து விட்டது! சொன்னதை செய்யாமல் குருவிடம் போய் நிற்பதை விட இங்கேயே தங்கிவிடலாம். என்ற முடிவுடன் தீர்மானமாக “அண்ணாமலையானுக்கு அரோகரா” என்று கதறி, அங்கேயே மலையை நோக்கி அமர்ந்து அழுது கொண்டிருந்தான். எத்தனை நேரம் அப்படி அழுதானோ அவனுக்குத் தெரியவில்லை. திடீரென்று அது நடந்தது. என்ன அது??
இருளில் திடீரென்று ஒரு நாய் தன்னைப் பார்த்துக் குரைப்பதைக் கண்டான் சிறுவன். அது தன்னைப் பரிகசிப்பதாக நினைத்துக் கோபம் வந்தது. இருந்தாலும் தனியாக இருட்டில் இருப்பதை உணர்ந்தான் தன்னை அடக்கிக் கொண்டான். அந்த நாயும் விடுவதாக இல்லை. குரைத்துச் சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து குரைத்தது. அப்போது தான் திடீரென்று தன் குரு தனக்கு நாய் பாஷை சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.
சற்று உற்று நோக்கினான் சிறுவன் . அது தன்னைக் கூப்பிடுவதைத் தெரிந்து கொண்டான். இந்த நாயை நம்பிச் செல்வதா, வேண்டாமா? யோசித்தான். அது தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. திரும்பவும் முடியாது, உதவவும் ஆளில்லை..
  
“சரி! நாய் சொல்வதைக் கேட்போம்” என்று அதன் பின்னே தயங்கி தயங்கித் நடந்தான். நாயின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க இச்சிறுவனும் ஓடினான். ஒரு காலில் மிக ஆழமாக முள் குத்தியது. அவனால் நடக்க முடியவில்லை. காலைத் தூக்கிக் கொண்டு ஓடியவனின் அடுத்த காலிலும் முள்!
“நாய்க்கு ஒன்றும் குத்தவில்லை., நமக்கு மட்டும் முள்ளா!” நாயை விட்டுவிட மனமில்லை. ஏனென்றால் திரும்பிச் செல்ல வழி தெரியவில்லை காலால் முன்னே செல்ல முடியவில்லை. என்ன செய்வான் சிறுவன்? இல்லை என்ன செய்தான் சிறுவன்? முழங்கால்களால் முட்டி தேய நடக்கலானான். இவ்வாறு சிறிது தூரம் சென்றவுடன் அந்த நாயைக் காணவில்லை. குரைக்கும் சப்தமும் வரவில்லை.
“இந்த நாயை நம்பி வந்தது தவறோ? என்ன முட்டாள் தனம் செய்தேன்!” என்று தன்னை நொந்து கொண்டான். அப்போது தனக்கு எதிரே ஓர் அரிக்கேன் விளக்கு ஒளி அசைவதைப் பார்த்தான். “ஆகா! யாரோ ஒருவர் விளக்குடன் நடக்கின்றார். அவரைக் கேட்கலாம்”. என்று எண்ணி அவரிடம் நெருங்கினான். இவன் நடந்தால் அந்த விளக்கும் நகர்ந்தது., இவனால் அதைப் பிடிக்க முடியவில்லை, இவன் நின்றால் அதுவும் நின்றது. இப்போது அதிக பயம் வந்துவிட்டது. பேய்.............. இந்த மாதிரி ஏதாவதா? பயத்தில் சிறுவனுக்கு உடல் நடுங்கியது!
உடனே ஒரு தைரியம்....”இது அண்ணாமலையானின் இடமல்லவா! இங்கு பேய் ஏது?” என்று தேற்றிக் கொண்டான். சற்று நின்று மீண்டும் விளக்கினைத் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றவுடன் விளக்கு அசைவு நின்றுவிட்டது. அருகில் சென்று பார்த்தால் ஒருவருமில்லை.

சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்தால் படிக்கட்டுகள் மங்கலாகத் தெரிந்தன. “ஓகோ! இது ஒரு தீர்த்தமா!” என்று நினைத்தவுடன் “இறைவனே சுகமுனி தீர்த்தத்தைக் காட்டியுள்ளார்” என்று அறிந்து கொண்டான். குனிந்து வணங்கி “அண்ணாமலைக்கு அரோகரா”, என்ற உடனே “அண்ணாமலைக்கு அரோகரா“, என்று பதில் குரல் கேட்டது. மீண்டும் சிறுவன் “இது குளம் தான்” என்று தைரியப் படுத்திக் கொண்டு அதனுள் ஒரு கல்லை எடுத்துப் போட்டான்.”டொளக்” என்று சப்தம் கேட்டது. “சரி! தண்ணீர் உள்ளது” என்று தீர்மானித்துக் கொண்டான்.
இப்போது தான் தண்ணீர் கொண்டு போக பாத்திரம் கொண்டு வராதது நினைவிற்கு வந்தது. அந்த அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு தகர டப்பா தெரிந்தது. அதனை எடுத்து அதில் உள்ள ஒரு சிறுதுளை வழியாக அருகில் கிடந்த தாவரக் கொடியினை முடிந்து, குளத்திற்குள் இறக்கினான். அது போய்க் கொண்டே இருந்தது. முற்றிலும் படுத்துக் கைகளைக் கீழே முழுவதுமாக இறக்கி நீரினைத் தொடமுறசித்தான்.
இன்னும் கீழே! இன்னும் கீழே!.... இப்போது தான் டப்பா தண்ணீரைத் தொட்டது. அசைத்து அசைத்து நீரை அதிலே நிரப்பி மேலே இழுத்துப் பார்த்தால் காலி...!! அது ஓட்டை டப்பா..!!
என்ன செய்வது! மீண்டும் சுற்றிலும் பார்வையை ஒட்டினான். அந்த டப்பாவின் மூடி அருகில் கிடைத்தது. அதனைப் போட்டு மூடி, தண்ணீருக்குள் முன்னே செல்லவிட்டு நீரைக் மொண்டு வந்தான் மேலே. புதுக்கவலை வந்துவிட்டது. எப்படித் திரும்பிச் செல்வது? வழி தெரியவில்லையே! ஒரு கையில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் கசியும் டப்பா! மற்றொரு கையில் அரிக்கேன் விளக்கும். இத்துடன் எதிரில் தெரிந்த வழியில் நடந்தான், நடந்தான், வாய் திறவாமல் மனதிற்குள்ளே “அண்ணாமலைக்கு அரோகரா” என்று உருகிக் கொண்டே நடந்தான். எப்படியாவது கிரிவலப் பாதையைப் பிடித்து விடலாம் என்பதே அவன் உள்ளத்தில் இருந்த உறுதி!
என்ன ஆச்சரியம்? வரும்போது பல மணி நேரம் நடந்தான் அல்லவா? ஆனால் இப்போதோ 10/15 நிமிடங்களில் கிரிவலப் பாதைக்கு வந்துவிட்டான். தான் எங்கிருக்கிறோம் என்று நிதானித்தான். அச்சமயம் தன் அருகில் கேட்ட குரலால் அதிர்ந்தான். அது அவனுக்கு மிகவும் வேண்டிய பழகிய குரல்.  ..
”எங்கேடா தீர்த்தம்?”
இவர் எங்கே இங்கு வந்தார்? என்ற வியப்புடன் சிறுவன் “இதோ வாத்தியாரே” என்று தீர்த்தத்தைத் தந்தான். எழுந்து நின்று வணங்கி மரியாதையுடன் அதனை வாங்கி ஒரு வாய் உண்டு விட்டு, சிறுவனுக்கும் ஊட்டினார் குரு. சிறுவன் அதை உண்டவுடன் அமிர்தத்தை உண்டது போல உணர்ந்தான். சிறுவன் மெதுவாக , “வாத்யாரே! இந்தத் தீர்த்தம் பற்றி” என்றான்.
“ம்ம்..! முக்கியமான  தீர்த்தமாக இல்லாவிட்டால் நீ இவ்வளவு கஷ்டப்பட்டு உன் குருவுக்காகக் கொண்டு வந்திருப்பியா? முக்கியம் தான், பலன் என்னென்னு கேக்காதே! பலனை எதிர்பாத்து ஒரு காரியம் செய்வதை விட, சொன்னதைச் செய்வது தான் நல்லது. ஏன்னா! அதில் இரண்டு பயன். பணிவு வளரும், பிரதி பலன் எதிர்பாக்காத பண்பு வளரும். சரியா!” என்றார்.
“குருவிடம் திட்டு வாங்கக் கூடாது” என்று தானே காரியங்களைச் செய்கிறோம், அதுவும் எதிர்பார்ப்பு தானா? சிறுவன் யோசிக்கிறான்..

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசில்லாமணீஸ்வரர்

ஆசாரம், அனுஷ்டானம் ஆண்டவனைக் காட்டுமா? இது கேள்வி.. ஐந்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டால் I.A.S பட்டம் கிடைத்து விடுமா! – இது பதில்....? ஆசாரத்திலே முக்கியத்துவம் உடல் தூய்மைக்குத் தரப்படுகிறது. 
உடல் தூய்மை என்கிறோம்.... “ஸ்நானம்” செய்வதால் உடல் நூறு சதவிகிதம் தூய்மை அடைந்து விடுகிறதா என்றால்.... “இல்லை” என்று அடித்துக் கூறுகிறார் நம் குருமங்கள கந்தர்வா.. எப்படி? குளிக்கும் போது நாம் எவ்வளவு கவனமாகத் தேய்த்துக் குளித்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறு அழுக்கைத் தக்க வைப்பதற்கென்றே ஓர் தேவதை இருக்கிறது... இதை உத்தம குருமூலமாக அடியேன் உணர்ந்தேன்” ..,என்றார்... அப்படியென்றால் “ நூறு சதவிதித முழுக்குளியல்” என்பதே கிடையாத ஒன்றாகி விடுகிறதல்லவா!
சந்தியா வந்தனம், பிரும்ம யக்ஞ்ம், சிரார்த்தம்.... இவையெல்லாம்.... “அனுஷ்டானம்” என்பதன் கீழ் வருவபவை.. இவைகளைப் பற்றியும் குருமங்களகந்தர்வா கூறுவது என்னவென்று பார்ப்போமா! “சந்தியாவந்தனம் போன்ற நித்ய கர்மானுஷ்டானங்கள் எல்லாமே எப்படித் தெரியுமா! .... நாம் பல்லை தேய்ப்பது போலத்தான் அவைகளும்... நீ பல் தேய்க்காவிட்டால் நாறப் போவது உன் வாய் தான். அதுபோல்  அனுஷ்டானங்களை ஒவ்வொரு மனிதனும் செய்துதான் தீர வேண்டும். இல்லையென்றால் அன்றாட வாழ்க்கையே ஆட ஆரம்பித்துவிடும். ஆகவே மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தான் அனுஷ்டானங்கள் பயன்படுகின்றன” என்று முடிக்கிறார்....
 ஆதிசங்கரர் நடந்து வந்து கொண்டிருக்கிறார்...அவர்மீது ஒரு சண்டாளன் மோதி விடுகிறான்...அதிர்ந்து போன சங்கரர் “தள்ளிப் போ” என்கிறார். “இந்த உடலையா அல்லது அதனுள்ளிருக்கும் ஆன்மாவையா....” என்று சண்டாளனாய் வந்த ஈசன் கேட்க, ஆதிசங்கரர் அதிர்ந்துவிடுகிறார்..... ஆசார அனுஷ்டானத்தின் எல்லையை உணர்ந்தும் விடுகிறார்..... அப்படியென்றால் எந்தத் தந்திரத்தின் மூலம் தான் நாம் ஈசனைக் காண்பது? இதற்கு மாணிக்க வாசகர் கூறுவார்...
 “இத்தந்திரத்தில் காண்டு மென்றிருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்..” என்கிறார் .ஆகவே எப்பாலவர்க்கும் அப்பாலான ஈசனைக் காண வழி... உத்தம குரு அருளுடன் கூடிய தெய்வத் தொண்டுதான். இதுவே உத்தம தந்திரமாகும்.....  அந்த அற்புத தந்திரத்தை, மாசிலாமணியாகிய ஈசன் திருமுல்லைவாயில் அற்புத தலத்தில் ஓர் உத்தமருக்கு அறிவித்தான். எப்படி ?
ஆசாரம், அனுஷ்டானமே ஆண்டவனைக் காட்டும்.... இதில் எள்ளளவும் ஐயமில்லை என்று உறுதி பூண்டு அந்த உத்தமர். நியம நிஷ்டைகளுடன் இறைவனிடம் அன்பும் பூண்டவராக, பல தலங்களுக்குச் சென்று இறைவனைக் கண் குளிரக் கண்டு மட்டும் வருகிறார். ஆனால் எவ்விதத் தொண்டும் செய்வதில்லை. .. ஆண்டுகள் பல உருண்டோடுகின்றன...........
கடுமையான ஆசார அனுஷ்டானத்துடன் கூடிய இறை தரிசனம், அந்த உத்தமருக்கு மன அமைதியை மட்டும் தரவில்லை. தெளிவு பிறக்காத மனதில் எப்படி அமைதி நிலவும்?.... மிகவும் வருத்தம் பூண்டவராகப் பல தலங்களுக்கு அலைந்து திரிந்து முடிவில்... மனத்துக் கண் மாசுகளை நீக்கும் மாசிலாமணி ஈசனின் திருச்சன்னிதானத்திற்கு வந்து சேருகிறார்...... ஈசனும் அந்த உத்தமருக்கு உண்மையான உத்தம வழியைக் காட்ட மனம் கொள்கிறான்...
ஆசார அனுஷ்டானங்களை முறையாக இயற்றி மாசிலாமணீசனை முறையாகத் தரிசித்து வலம் வருகிறார். அப்போது ஏழைப் பிச்சைக்காரன் ஒருவன் அவர்மீது பட்டு விடுகிறான். தன்னுடைய ஆசாரத்திற்குப் பங்கம் வந்துவிட்டது என்று உணர்ந்தவுடன் அந்தப் பிச்சைக்காரனைத் திட்டியவண்ணமாய் மீண்டும் குளத்தில் குளித்து அனுஷ்டானங்களை இயற்றியபடி மறுபடியும் ஈசனை வலம் வருகிறார். பல மாதங்கள் கழித்து மறுபடியும் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது!!
இப்பொழுது ஒரு நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த ஒருவர் அந்த உத்தமர் மீது பட்டுவிட அவருக்குச் சஹஸ்ரார்ச்சனையே செய்து விடுகிறார்..... எல்லாம் முடிந்தபின் மீண்டும் குளியல்! அனுஷ்டானங்களை முடித்துவிட்டு மறுபடியும் ஈசனை வலம் வருகிறார்... மீண்டும் பல வருடங்கழித்து .................. ஆனால் இந்த முறை மிகவும் உஷாராக....! என்னதான் உஷாராக இருந்தாலும் இந்த முறை, பட்டு பீதாம்பரம் தரித்த ஒரு ஜமீந்தார் அவர்மீது பட்டுவிடுகிறார்.!!..
கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட அந்த உத்தமர் வாய் திறக்கும் வேளையில் ஜமீன்தார் இடைமறித்து..... “வேண்டாம் சுவாமி! வேண்டாம்...அடியேனை சபிக்க வேண்டாம்.. முதன் முதலில் உங்கள் மீது மோதிய பிச்சைக்காரனே நான்தான்.. தாங்கள் திட்டியதால் ஆசார அனுஷ்டானத்தால் தாங்கள் அடைந்த புண்ணியத்தில் ஒரு பங்கு எனக்கு வந்து முதல் முறை ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக மாறினேன்......
“இரண்டாம் முறையாக நான் தங்கள் மேல் மோதி வசைகளைப் பரிசாகப் பெற்ற போது... உங்கள் புண்ணியத்தில் மற்றொருபங்கு என்னைச் சேர இப்பொழுது ஒரு ஜமீன்தாராக மாறியுள்ளேன்.... ஆகவே ஆசார அனுஷ்டானத்தினால் தாங்கள் சேர்த்த பெரும் புண்ணியங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைத் தரம் உயரத்தான் பயன்படுகிறதே  தவிர...தங்களுக்கோ அல்லது எனக்கோ தெய்வ அருளைப் பெற வழி செய்ததா?
புண்ணியங்களை சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் நீங்கள்....அந்தப் புண்ணியங்களை என்று தியாகம்..செய்யப்போகிறீர்கள்..? அப்படிச் செய்யும்போதுதான் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.. ஆகவே உங்கள் புண்ணியங்களை இறை சேவை மூலமாக ஆண்டவனுக்குக் காணிக்கையாக்குங்கள்...... இறைவனைக் காண்பீர்கள்.. என்று கூறியபடி நடந்து மூலஸ்தானம் சென்று மறைகிறார் அந்த ஜமீன்தார்.
வந்தவன் ஈசனே என்பதை உணர்ந்த பெரியவரும் ஈசனுடைய அருளாணையின்படி....... தன் தள்ளாத வயதிலும் தன்னால் முடிந்தவரை குடத்தில் நீர் எடுத்துக் கோயில் வாசல், தூண்கள், பிரகாரங்கள் முதலியவற்றை அலம்பி சுத்தம் செய்த வண்ணமாய்... மனத்துக்கண் மாசு நீங்கப் பெற்று, மாசில்லாமணியின்  அருளாசியையும் பெற்று, அன்னவருடைய திருச்சன்னிதானத்தின் ஒரு தூணிலேயே ஜீவசமாதி அடைந்து விடுகிறார்...
அவ்வுத்தமர் பெயர் “ஸ்திர ப்ரக்ஞ மார்கண்டேய மகரிஷி” அவர் ஜீவசமாதி ஆன இடமோ கிணற்றுக்கு எதிர்ப் புறத்திலிருக்கும் வாயிலில் நுழைந்தவுடன் இடது பக்கத்தில் உள்ள இரண்டாவது தூணாகும்.

ஸ்ரீகாயத்ரீ தபஸ்

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் முழுப் பலன்களையும் பரிபூரணமாக அடையும் நல்வழி முறைகளை ஸ்ரீகாயத்ரீ முத்திரைகளின் மூலமாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் எளிமையான முறையில் இத்தொடரில் எடுத்துரைத்து வருகின்றார்கள்.
ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்தவர் ஸ்ரீவிஸ்வாமித்ர மஹரிஷியாவார், வேதங்களைப் போற்றிப் பாதுகாக்கும் அறநெறி முறை காலப்போக்கில் மங்கும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த மஹரிஷிகள் வேதத்தின் சாரமாக இதையளித்தனர்.. அசுரர்களும், கொடியவர்களும் இம்மந்திர உச்சாடனத்தைத் தவறாகப் பயன்படுத்திடில் பெருகும் என அஞ்சிய மஹரிஷிகள் இதற்குத் தக்க உபாயம் கேட்டு ஸ்ரீகாயத்ரீ தேவியைச் சரண்டைந்தனர்.  

முருக பக்தர்கள் பலர் உண்டு. முருகபக்தியில் உயர்நிலை அடைய விரும்புவோர். திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் மேல கோபுரம் அருகில் மூலவருக்குப் பின்புறத்தில் உள்ள ஸ்ரீஅருணகிரி நாதரின் ஜீவசமாதியை அடிப்பிரதக்ஷிணம் செய்தும் திருப்புகழ் பாடி, தினை மாவினால் ஆன உணவினை ஏழைகளுக்கு அளித்துவர முருகபக்தியில் உன்னத நிலை அடையலாம். இங்கு ஸ்ரீஅருணகிரிநாதரின் ஜீவசமாதி ஒரு ஆன்மீக இரகசியமாகும். சற்றுக் குனிந்து பார்த்தால் தான் இவ்வற்புதமான ஜிவசமாதி புலப்படும். ஸ்ரீஅருணகிரிநாதர் சூட்சும சமாதி கொண்டு அருள் புரியும் உத்தம சன்னதி மிகச் சிறியதாக அமைந்து மிகவும் சக்தி வாய்ந்த, ஸ்ரீமுருகனின் பேரருளை வாரி வழங்கும் திருச்சன்னதியாகக் காட்சியளிக்கின்றது. உத்தம சற்குரு வாய்த்தால் தான் இத்தகு ஆன்மீகப் பொக்கிஷத்தைப் பெற இயலும்.

ஸ்ரீகாயத்ரீ தேவியோ, “எ(த)ம்மைத் துதிக்கும் எவரையும் காப்பாற்றுவதே காயத்ரீ மந்திரத்தின் விசேஷத் தன்மையாகும்.. எனவே யாம் இதில் ஒன்றும் செய்வதற்கில்லை. மேலும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் அதன் தீய விளைவுகளை நானும் அனுபவிக்க வேண்டிய தெய்வ நியதியும் உண்டு” என்று கூறிட மஹரிஷிகள் திகைத்தனர்.
வசிஷ்டர் மற்றும் பல பிரம்ம ரிஷிகள் ஒன்று கூடிக் கலந்தாலோசித்து பிரபஞ்சத்தின் நன்மை கருதித் தங்கள் தபோபலனைக் காணிக்கையாக வைத்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்குப் பல வியூகங்களையும் சட்ட திட்டங்களையும் வகுத்து, “இம்    முடிச்சுக்களை அவிழ்த்தாலன்றி ஸ்ரீகாயத்ரி  மந்திரம் முழுப் பலனும் தராது” எனச் சாபம் அளித்தனர். சாபம் என்று சொல்வதே தவறு! உலக நன்மைக்கென உத்தமர்கள் அளித்த விதிமுறைகளே பிற்காலத்தில் பல அற்புதமான முத்திரைகளுக்கும், யோக, யாக தந்திர, மந்திர, வேத அப்யாசங்களுக்கும் வித்திட்டன.
ஆம்! மஹரிஷிகள் இத்தகைய நியதிகளை விதித்திராவிடில் கலியுகத்தில் தீயசக்திகள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை குறுகிய நோக்கோடு பிரயோகம் செய்து வாழ்ந்திட சமுதாயத்தில் குழப்பங்களே விஞ்சி மிஞ்சி நிறைந்திருக்கும். பொதுவாக மஹரிஷிகள் நிர்ணயித்த விதிகள் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தின் பலன்களுக்கே பொருந்துமே தவிர நான்கு வேதங்களின் சாரமாக இன்றைக்கும் இம்மந்திரம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றது! குறித்த சில தாந்த்ரீக அனுஷ்டானங்கள், முத்திரைகள், யோக முறைகள், யாக, வேள்விகள் போன்றவற்றை முறையாக சில இறைத் தலங்களில் நிறைவேற்றினால் ஸ்ரீகாயத்ரி மந்திரம் அபரிமிதமான பரிபூரணமான பலன்களைத் தரக் கூடியதாகும்.  அத்தகைய தெய்வீக சக்தி மிகுந்த எளிமையான முத்திரைகளையே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் நம்முடைய நல்வாழ்விற்கென இங்கு அருளியுள்ளார்கள்.
 மிகமிக எளிமையான இம்முத்திரைப் பயிற்சிகளை முறையோடு பயின்று கடைபிடித்தால்
1. மனம் சாந்தமடையும், எண்ண ஓட்டங்கள் குறையும்.
2. தீய எண்ணங்கள் அறவே மறையும்.
3. உடல் திறனும் மனோசக்தியும் பல்கிப் பெருகும்.
4. இம்முத்திரைகளை முறையோடு கடைபிடித்து ஒரு முறை ஸ்ரீகாய்த்ரீ மந்திரத்தைத் துதித்தால் கூட அதன் ஆன்மீக சக்தி அலைகள் மூலாதாரத்தில் ஊடுருவிப் பாய்வதை உணரலாம்.
5. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூரண சக்தியைத் தாங்குமளவிற்கு உடலும் உள்ளமும் பக்குவப்படும். இது மட்டுமா? இம்முத்திரைகளைப் பயிலப் பயில விளையும் ஆன்மீக அனுபூதிகளும், அனுபவங்களும் பலப்பலவாய் விரிந்து குருவருள் கூடிய திருவருள் மேன்மையை நடைமுறை வாழ்க்கையிலேயே கண்கூடாகக் காட்டும். இதுவே இறை தரிசனத்திற்கு முதற்படி.
ஏக நாம ஸ்மரண கூட்டு தியானம் :- ஸ்ரீகாயத்ரி தபஸின் (ஸ்ரீகாயத்ரி மந்திர முத்திரையின்) முதல் அங்கமாகப் பலர் ஒன்று சேர்ந்து பிரணவமாகிய ஓங்கார ஒலியைக் கேட்டு அதில் மனதைச் செலுத்த வேண்டும்.
தியான முறை :
1) அனைவரும் பத்மாஸனத்தில் அமர்வது தியானத்தை மேம்படுத்தும்.
2. பத்மாஸனத்தில் அமர இயலாவிடில் சாதாரணமாக மண்டியிட்டு அமர்வதாகிய சுகாஸனத்தை மேற்கொள்ளலாம்.
3. குறைந்தது நான்கைந்து பேர்களுடன் கூடிய சத்சங்க தியான முறையில்தான், தியானத்தின் உத்தம நிலைகளை எளிதில் பெற இயலும். தனித்துப் பயில்வதைவிட, மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்தாவது முதலில் கூட்டாக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4. பத்மாஸனத்தில் அமர்ந்தபின் “ஓம்” என்னும் பிரணவ ஒலியை கண்களைத் திறந்தவாறோ அன்றி மூடியவாறோ ஒருவர் எழுப்பிட , மற்றவர்கள் அப்பிரணவ ஒலியில் மட்டும் தம் கவனத்தை செலுத்த வேண்டும்.
5. அதாவது, ஒருவர் எழுப்புகின்ற ஓங்கார நாதத்தை அனைவரும் பின் தொடர்ந்து உச்சரிக்காது, அவர் எழுப்புகின்ற ஓங்கார நாதத்தில் மட்டும் தம் மனதைச் செலுத்த வேண்டும்.
6. இந்த ஓங்கார ஏக நாம ஸ்மரணம் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கேனும் தொடர வேண்டும்.
7. முறை மாற்றி ஒவ்வொருவராக ஓங்காரத்தை ஒலிக்கலாம்.

நம் குருமங்கள கந்தர்வா பிரணவத்தைப் பற்றிய பல ஆன்மீக இரகசியங்களை விளக்கியுள்ளார்.
அலுவலக, இல்லறத் துன்பங்கள், மேலதிகாரிகளின் இன்னல்கள், வியாராச் சூழ்நிலை, பணக்கஷ்டங்கள் போன்ற பல இக்கட்டான, பல்வேறு  வகைப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து மனதை விடுவித்துத் தியானத்தில் செலுத்துவது எளிதான காரியமல்லவே! பல பிரச்சனைகளிலேயே சிக்கிச் சுழன்று வரும் மனமா எளிதில் தியானத்தில் லயப்படும்?
வெளியில் நிலவும் தீய சக்திகளின் (external vibrations) ஆதிக்கத்தினின்று மனதை ஓரளவேனும் விடுவித்து நல்ல எண்ணத்தை நோக்கிச் செலுத்துவதற்காகவே பத்மாஸனம்/சுகாஸனம் கூடிய ஓங்கார ஒலி தியானம், ஸ்ரீகாயத்ரீ தபஸின் முதல் அங்கமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரணவ ஒலிப் பிரவாகத் தியானத்தில் கைமுத்திரைகள் அமையாவிடினும் மனோ முத்திரையாக ஓங்கார ஒலியைக் கேட்டு அதன்பால் மனதைச் செலுத்துவது மிகச் சிறந்த தியானப் பயிற்சியாகும். இதனால் வெளி எண்ணங்களின் பால் உலவும் மனதை மிக எளிதிலும் விரைவிலும் கூட ஸ்ரீகாயத்ரீ தபஸிற்கான முத்ரா விதானங்களில் லயம் பெறச் செய்யலாம்.
அனைவரும் பத்மாஸனத்தில் அமர்ந்து சங்கிலி போல் ஒருவருடைய வலது கையுடன் அடுத்துள்ளவரின் இடது கையைப் பிணைத்து ஓங்கார ஒலியில் தியானம் கொண்டிட ஏக சிந்தனை வலுப்பெறும்.  “ஓம்” என்னும் பிரணவ வடிவில் அமர்ந்தோ, வட்டமாக, அமர்ந்தோ, ஓங்கார ஒலியில் மனதைச் செலுத்திட ஏக சிந்தனா சக்தி முறையாக நிலை பெறும்..
இதுவே முதல் படி!

ஆனித் திருமஞ்சனப் பௌர்ணமி

திருமஞ்சனம் என்றாலே ஸ்ரீபெருமாளுக்கு உரியது என்ற எண்ணம் ஏற்படுகின்றது அல்லவா? ஆனால் ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கும், ஸ்ரீமன் நாராயணமூர்த்திக்கும், ஸ்ரீமுருகனுக்கும் உகந்த திருநாளாகும்.
திருமஞ்சனம் என்றால் இறைவனுக்கு நீராட்டுவித்துப் புது வஸ்திரங்க்ளை அணிவித்தல் என்று பொருளாயினும் ஆனித்திருமஞ்சனப் பௌர்ணமிக்குரிய விசேஷம் என்னவெனில் சுவாமிக்கு நீராட்டி, ஆடை அணிவித்தபின் மூலிகைகளால் ஆன அஞ்சனத்தை அவர்தம் திருமேனியில் இடுவதாகும்.  செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் திருஷ்டி கழிப்பதற்காகக் கற்பூரத்தை ஏற்றிச் சுற்றுவது வழக்கம். திருஷ்டி, விஷப்பார்வை, சூன்ய திருஷ்டி, கண்ணேறு போன்ற பல தீய தோஷங்களைக் கற்பூர தீப ஜோதி மூலமே சுவாமியே தம் திருமேனியில் ஏற்று பக்தர்களைக் காக்கின்றார்.
பொறாமை, துவேஷம், குரோதம், பேராசை, நிராசை, போட்டி மனப்பான்மை எதிர்வினை எண்ணங்கள் இவைகளே பேய்க்கண், கொள்ளிக் கண், இழவுக் கண், பேராசைக் கண், நாறுக் கண், விழித்த கண், மொச்சைக் கண், முழித்த கண், மொக்கைக் கண், நக்கக் கண் போன்ற திருஷ்டிப் பார்வைகளாக மாறிப் பலவித நோய்களையும், துன்பங்களையும் தருகின்றன. கற்பூரம் ஏற்றி பூசணிக்காய், தேங்காய் உடைத்தலால் திருஷ்டி ஓரளவு நீங்குகின்றது என்பது உண்மையே! இவ்வாறு கழிகின்ற திருஷ்டியை ஸ்ரீநடராஜர் தம் திருமேனியில் ஏற்று அடியார்களைக் காக்கின்றார்.
திருஷ்டி கழித்தல் : திருஷ்டி கழிக்கும் போது இருகை விரல்களையும் தரையில் அழுத்தி பின் குதிகாலைச் சற்றே தூக்கி விரல்களை மடித்து “சொடுக்கு” விட்டு திருஷ்டி கழிப்பர். இதே போல் தேங்காயில் கற்பூரம் ஏற்றி உடைக்கும் போதும், திருஷ்டிப் பூசணிக்காயை உடைத்துச் சிதறும் போதும் ஒருவித நடனரூபத்தில் பின் கால்களை உயர்த்துவர். இவையெல்லாம் நடராஜ நடன தத்துவத்தில் வருகின்றன.
கால் கட்டை விரல்களை அழுத்தி உடலை மேல் எழுப்பும் போது சுவாச நிலை மாறி நெடுமூச்சு ஏற்பட்டு ஆயுள் வளரும். பிராணாயாமத்திற்கு இதுவே முதற்படி! அவரவர் நம்பிக்கைக்கேற்பவும், திருஷ்டி கழிக்கும் திசை, ஹோரை, காலநேரத்தைப் பொறுத்தும் இறைவன் அவரவர் திருஷ்டி தோஷங்களில் பலவற்றை நிவர்த்தி செய்கிறான். இதன் பிறகும் ஒருவன் திருஷ்டியின் தீய விளைவுகளால் பாதிக்கப்படுகின்றான் என்றால் திருஷ்டியின் முழுமையான தீய விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உணரலாம்.
 இறைவனுக்கு அஞ்சனம் :  இவ்வாறாக, பக்தர்களின் திருஷ்டி தோஷங்களைத் தாங்கும் இறைவனின் திருமேனியைப் புனிதமாக்க வேண்டாமா?  இதற்காகவே இறைவனின் திருமேனியில் படிந்துள்ள தோஷ மாயைகளைக் களைவதற்காக இறைவனே ஆனித் திருமஞ்சனத்தன்று தனக்கென விதவிதமான அபிஷேக ஆராதனைகளை ஏற்று பக்தர்களை மகிழ்விக்கின்றான். நீராடல் ஏற்று, வஸ்திரங்களை அணிந்து கொண்டு ஸ்ரீநடராஜப் பெருமான் பொன்னாங்கண்ணி, மருதாணி போன்ற மூலிகைத் தைலங்களை பசுநெய், தாமரைத் தண்டு திரி ஆகியவற்றின் மூலம், அகல் விளக்கின் புகை கொண்டு உருவாக்கப்படும் அஞ்சனத்தையும் (மை) ஏற்றுத் தம் தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொண்டு அடியார்களையும் காக்கின்றார்.

இறைவனுக்கு இவையெல்லாம் அவசியந்தானா? பரிசுத்தமான பரம்பொருளின் ஸ்தூல ரூபத்திற்கு இப்பூதவுடலால் இயன்ற சேவைகளைச் செய்வதற்காக இறைவனே மனமுவந்து அருளும் திருவிளையாடல்களிவை!
ஆனித் திருமஞ்சன அபிஷேகம்
எனவே ஆனித் திருமஞ்சனப் பௌர்ணமியன்று ஸ்ரீநடராஜருக்கு விதவிதமான அபிஷேகங்கள், ஆராதனைகள் நிகழ்த்தி அஞ்சனம் தயாரித்து இட்டு ஆனந்திக்க வேண்டும். பக்தர்களுடைய கண்திருஷ்டியைத் தன் தாண்டவத் திருமேனியில் ஏற்று அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் திருமேனியை அஞ்சனமிட்டு ஆராதிப்பது கிடைத்தற்கரிய பாக்கியமல்லவா! அஞ்சன மை சூத்திரத்திற்கு நாயகரான ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் இந்நாளில் மேற்கண்டவகையில் ஆனித் திருமஞ்சனப் பௌர்ணமியைக் கொண்டாடுவது மிகவும் விசேஷமானதாகும்!
ஆடிபூரம்
ஸ்ரீகோமதி அம்மன் ஆலயத்தில் வேர்க்கடலைப் பாயசம் நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஸ்ரீகருடபகவான், பெருமாளை ஸ்ரீசங்கர நாராயணனாக தரிசித்த திருநாளிது. இன்று கருடதரிசனம் நிறைந்த பாக்யங்களைத் தரும். இந்நாளில் ஸ்ரீஆண்டாளுக்கு பூக்கள், மாலைகள், துளஸி தளங்களால் நன்கு அலங்கரித்துக் கொண்டை கட்டிச் சேவிக்க வேண்டும். இப்புஷ்பங்களை ஏழைக் கன்னிப் பெண்களுக்குப் பிரசாதமாக அளித்திட அவர்களுக்கும் நற்பாக்கியங்கள் கிட்டுவதோடு அளிப்பவருடைய இல்லத்திலும் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகும்.

அருள்வழி காண திருஅருணாசலத்தை நாடு

“Birds of the Same Feather Flock Together” என்பது நாம் ஆங்கிலேயன் மூலமாக அறிந்த பழிமொழிதான் என்றாலும், அந்தப் பழமொழி முழுமையடையும் இடம் ஒன்று உண்டு தெரியுமா? அந்த இடம் தான் அருள்வழி காட்டும் திருஅண்ணாமலையாகும். எப்படி? மண்ணில் தோன்றிய மகான்கள் எத்தனையோ கோடி இருந்தாலும் அத்தனை கோடி மகான்களும் கூடுகின்ற ஓரே இடம் திருஅண்ணாமலையாகும். ஆகவே தான் நினைத்த உடன் முக்தி தரும் ஒரே இடம் திருஅண்ணாமலை என்றார்கள் பெரியவர்கள்.
அரனார் அழலுருவாய் நின்ற இடத்திலே மகான்கள் பலர் கூடினாலும் அங்கேயே வாழும் பேறு பெற்ற மகான்கள் பலருண்டு. அவர்களில் மிகவும் முக்கியமானவர் மக்களால் போற்றப்பட்ட ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். சித்தம் சிவமான நிலையில் அங்கு நடமாடிக் கொண்டிருந்தபோது மக்களால் முதலில் அவரை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆடிப்பாடி அன்னவர் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் போதெல்லாம் அவருடைய ஆசிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர். ஆகவேதான் வாழ்க்கை வளம்பெற கிரிவலம் மிகமிக அவசியம் என்றனர் பெரியோர்.

கோயில் கும்பாபிஷேகத்திற்காக, இறை மூர்த்திகளுக்குப் பாலாலயம் செய்யப்படுகையில் உற்சவ மூர்த்திகளுக்கு மூலவரின் சக்தியைப் பரிமாணம் செய்வதற்குத் “தரிசன மூர்த்தி ஸ்தம்பனம்” என்று பெயர். இச்சமயத்தில் பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்தி “சமாதி லிங்க ஸ்தம்பனம்” என்ற வகையில் யோக நிலையில் அருள்பாலிக்கின்றார். எனவே பாலாலய வைபவத்தில் இறை மூர்த்தி அருள்பாலிக்கும் முறை யோக நிலைக்கு மாறுகிறதே தவிர அம்மூர்த்தியின் சக்தி அனைத்தும் உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதாகவும் பாலாலய மூர்த்தி வெறும் கல் விக்ரகமாக இருப்பதாகவும் எண்ணுவது மிகவும் தவறாகும். எந்த இறைமூர்த்தியின் பேரருளையும் கணித்து அளவிடவா முடியும்? நம் மனித அறிவிற்கு எட்டுவதற்காகச் சில இறை அனுபூதிகளை, அனுபவ மொழிகளை மஹரிஷிகளும் சித்தர்களும் அருள்கின்றனர். எனவே பாலாலயத்தின் போதும் மூலவருக்கும் நைவேத்யம் அவசியம்.

அப்படி.... சேஷாத்ரி சுவாமிகள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் போதெல்லாம் ... ஒரு மூதாட்டியினுடைய வீட்டில் உணவு அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார் (என்ன காரணமோ!!) “உணவு அருந்துவது” என்றால்? அறுசுவை உணவா?... இல்லை இல்லை... “
பழைய சோறு தான் அது.... அதுவும் சிலசமயம் நான்கு அல்லது ஐந்து நாளைய பழையதாகக் கூட இருக்கும். நூலுக்குப் பஞ்சமில்லை!  அன்பெனும் பிடியுள் அகப்பட்ட அவர். சில காலங்கள் அந்த மூதாட்டியினுடைய உணவை ஏற்று வந்த வேளையிலே ஒரு நாள்.... சாப்பிட்டுக் கொண்டிருந்த மகானைப் பார்த்து.. “ஏனய்யா உன்னால் கடவுளைக் காட்ட முடியும் என்று சிலர் சொல்கிறார்களே.... எனக்கு நீ கடவுளைக் காட்டுவாயா? “ என்று கேட்க,
“அட.... உனக்கா....சாமியை....” என்று மகானும் சிரிக்க,,, அந்த மூதாட்டியோ... ஆமாம்ப்பா! இது என்னுடைய நெடுநாள் ஆசை...அதை நீ பூர்த்தி செய்துதான் தீரணும்” என்று தீர்க்கமாகச் சொல்ல...... மகானும் சிறிது நேரம் யோசிக்கிறார்.......
பின் ......”சரி. கடவுளைக் காட்டுகிறேன்.... ஆனால் நான் சொல்வது போல் நீ செய்ய வேண்டும். சிறிது நீ தவறினாலும் உனக்கு ஆபத்து வந்து விடும். சரியா?” என்று கேட்க மூதாட்டியும் ஒப்புக் கொள்கிறாள்.......
நான் சொல்லும் போது நீ கண்ணை மூடிக் கொள்ள வேண்டும். பின்பு.... நான் சொல்லும்போது தான் நீ கண்ணைத் திறக்க வேண்டும். இடையில் நீ கண்ணைத் திறந்துவிட்டால் நடப்பதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்” என்கிறார்.
மூதாட்டியும் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு கடவுளைக் காணத் தயாராகிறாள்! சேஷாத்ரி சுவாமியும் சிறிது நேரம் மவுனத்திற்குப்பின் ..சரி.... கண்களை மூடிக் கொள்” என்று சொல்ல  மூதாட்டியும்  செய்கிறாள்... .நடந்தது என்ன..? அடுத்த நொடியில் அந்த மூதாட்டி தன்னிலை மறந்தவளாக, “ஆஹா அற்புதம்.... ஆஹாஹஹஹா....என்ன சுகமான, காற்று! ஆஹா மனம் குளிர வைக்கும் மணம்! ஆஹா ஆனந்தமாக இருக்கிறதே! ...ஏதோ குதிரைச் சத்தம் கேட்கிறதே.... ஆஹா.... அற்புதமான வெள்ளைக் குதிரை தெரிகிறதே.. ஆஹா ..... என்ன அழகு! .... என்ன அழகு!.... அதோ இந்திரன் வந்துவிட்டான்”..... என்று சொல்லிக் கொண்டே கண்ணைத் திறந்து விடுகிறாள்....
கண்கள் இரண்டும் குருடாகிவிடுகின்றன. அதிர்ந்துபோய் விடுகிறாள் மூதாட்டி....... “நான் தான் சொன்னேனே..... நான் சொன்ன பிறகுதான் கண்ணைத் திறக்க வேண்டும் என்று.... உன்னை யார்... இடையில் திறக்கச் சொன்னார்கள்...? நன்றாக அனுபவி...” என்று கூறியபடி மகான் கிரிவலத்தில் மறைந்துவிடுகிறார்......

மூதாட்டியினுடைய உறவினர்களும் அவளுடைய நிலையைப் பார்த்து..... “மகானிடமே சென்று மன்றாடுவோம்” என்று சொல்லி கிரிவலம் வந்தவண்ணமாய் மகானைத் தேடுகிறார்கள்............ ஒரிடத்தில் இறையருளால் மகானைக் கண்டு, மூதாட்டிக்காகப் பரிந்துரை செய்ய..... மகானும் மனமிரங்கி .... “சரி....சரி...நாளைக்கு அவள் தூங்கி விழிக்கும் போது கண்கள் நன்கு தெரியும்” என்று அருள்பாலிக்கிறார்.
என்ன அதிசயம்........ மறுநாள் காலை தூங்கி விழித்தபோது மகான் சொன்னபடியே அம்மூதாட்டியின் கண்கள் ஒளி பெற்றுவிடுகின்றன.... என்னதான் அந்த மூதாட்டி இழந்ததைப் பெற்றாலும் மறுபடியும் அந்த மகானுக்கு உணவும் (பழைய சோறு) பரிமாற முடியவில்லை.... அவரைக் காணவும் முடியவில்லை..!
உத்தம நிலையை அடைவதற்கு மகான்கள் சந்தர்ப்பம் அளிக்கத்தான் செய்கிறார்கள்... அதை நாம் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது இல்லை... மகான்களுடைய விருப்பப்படி நாம் நடக்க வேண்டுமே தவிர..... நம் விருப்பங்களையெல்லாம் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.... ஏனென்றால் நமக்கு எது நல்லது என்பது நமக்குத் தெரியாது. இதையே மாணிக்கவாசகரும் ... இறைவனை “வேண்டத்தக்கது அறிவோய் நீ..... வேண்டமுழுதும் தருவோய் நீ,,,,என்கிறார் ....
அம்மூதாட்டி அமைதியுடன் இருந்திருந்திருந்தால்.. அவள் முடிவில் ..கடவுளை நிச்சயம் கண்டிருப்பாள்.... ஆகவே “பொறுமை கடலினும் பெரிது” என்பதை உணர்ந்து நாம் கிரிவலம் உத்தமமாய் வந்திடில் வேண்டத்தக்கது எது என்பதை ஈசனருளால் அறிந்து வேண்டும் முன்பாகவே அதை ஈசனருளால் பெற்று விடுவோம் என்பது உறுதி.
கிரிவலம் வருவோம் வரம் பல பெறுவோம்.
கிரிவலம் வரும் ஓர் அன்பருக்கு உணவு அளித்ததே கடவுளைக்காண வழி செய்தது என்றால் உத்தமமாய் கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு  நாம் அன்னதானம் செய்திட்டால் பலன்களை அளவிடத்தான் முடியுமோ..... ஆகவே அருள்வழிகாண வேண்டுமென்றால்... ஒரே வழி அருணாசலத்தை நாடுவது தான்...

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam