பூரு பூஜ்யம் தவிர்ப்பீர் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

எண்களின் தெய்வீகச் சிறப்பு

கலியுகத்தில் எண்களைத் தவறான முறையில் பயன்படுத்துவதால் எண்களின் சிறப்பான தேவ சக்திகளை நாம் இழந்து வருகின்றோம்! நம்முடைய வாழ்க்கையில் எண்கள் தெய்வீக ரீதியாகப் பெரும் பங்கை வகிக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!  தேதி, மணி முதல் பிறந்த தேதி, வயது, பயணம், விலை என இல்லம், அலுவலகம், வியாபாரம் இவ்வாறாக அனைத்திலுமே எண்கள் தாமே மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. எனவே சுவாசம் போல நம்முடைய லௌகீக வாழ்க்கையில் "எண்" பெரும் பங்கு பெறுகின்றது. கண், எலும்பு போன்று முக்கியமான பணிகளுக்கு ஆதாரமாகவும் உள்ளது. எனவே தாம் சூரிய சந்திரர்களாக, "எண்ணும் எழுத்தும் கண்களாகும்" என வேதமே உரைக்கின்றது. நம்முடைய தினசரி வாழ்க்கையிலே கம்ப்யூட்டர் நன்கு ஆதிக்கம் செலுத்தும் அளவில் நுழைந்து விட்டது என்பதை நன்கு அறிவீர்கள். ஆனால் computer-ன் பங்கு மனித வாழ்க்கையிலே பெருகப் பெருக, எண்களின் மகத்துவமும் மாசுபடுகின்றது என்பதை பலரும் அறிவது கிடையாது. இறைப் பகுத்தறிவு கொண்டே எண்களின் பரிபூரண புனிதத்தை உணர இயலும். மனித வாழ்க்கையிலே இறை நெறிகளுக்கு உட்பட்ட வகையிலே, பல விஞ்ஞானமய உபகரணங்களையோ கருவிகளையோ பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஆனால் புதிதாக ஒரு கருவி நுழையும் போது அது இயற்கையையோ, இறை நியதிகளையோ மாசுபடுத்தாது, பின்னப்படுத்தாது, காலம் காலமாக வந்தவற்றின் புனிதத்தை அவமதிக்காது நம் வாழ்வில் இழைந்து பங்கு பெற்றால் தான் மனித வாழ்க்கையும் சிறப்புறும்.

ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கைத் துவங்கினால் உடனே நீண்ட பெரிய இலக்கமாக 018757038138 என ஒரு நீளமான எண்ணைக் கொடுப்பார்கள். கோடி கோடியாய் மதிப்பைத் தரும் 12 அல்லது 18 இலக்க எண்களை ஒரு மனிதன் பயன்படுத்த வேண்டுமானால் அத்தகைய இலக்கங்களை உடைய எண்ணின் சக்தியை உணர்ந்தால் தான், தாங்க முடிந்தால் தான் அது பயன் தரும். ஏதோ வங்கித் துறையில் சிலவிதக் கணக்கு வகைகளைப் பகுத்தறிய பெரிய இலக்க எண்களைப் பயன்படுத்துவதாகச் சமாதானம் கூறினாலும் அதற்கு முன் வரை உள்ள இலக்கங்களை, எண்களை முறையாகப் பயன்படுத்தாதலால் அந்த இலக்க எண்கள் யாவற்றின் பலன்களையும், சக்திகளையும் நாம் இழக்கின்றோம் என்பது பலரும் அறியாததாகும்.

அணாக் கணக்கின் குணாதிசயம்!

அக்காலத்தில் பதினாறு அணா என்பது ஒரு ரூபாய் என்று அணாக் கணக்கு மூலம் மனித மூளைக்கு முக்கியத்துவம் கொடுத்து அணாக் கணக்கினால் மனித நினைவாற்றலைப் பெருக்கினார்கள். தற்போது பிரிட்டனில் இத்தகைய பண்டைய முறையே நிலவுகின்றது. பாரதத்திலோ அருமையான சிந்தனா சக்தியைப் பெருக்கவல்ல அணாக் கணக்கு போய், நூறு பைசா, ஒரு ரூபாய் என்று தசாம்ச முறை வந்த பிறகு தசாம்சத்தினால் தான் கணக்கு முறைகள் எளிதாக்கப்படுகின்றது என்று தோன்றினாலும் மனிதனுடைய மூளைத் திறனுக்கான வாய்ப்பு பெரிதும் குறைந்து பல அரிய எண்களின் சக்தியையும் நாம் இழந்து விட்டோம். மனிதன் சிந்திக்க, சிந்திக்கத்தான் அவனுடைய இறைப் பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் பெருகும். மூளையைத் திறம்படப் பயன்படுத்தாவிடில் உறுப்புகளில் தேக்கமும் ஏற்பட்டு, நோய்கள் பெருகுகின்றன. ஆயுள் சக்தியும் குறைகின்றது.

உதாரணமாக, ஒரு வங்கியின் கிளையிலே மொத்தம் 7000 சேமிப்பு கணக்குகள் இருக்கின்றன என்றால் 1 முதல் ஆரம்பித்து 7000 வரை அது வரிசையாக அமைந்தால் தான் அந்த எண்களின் ஆன்மீக சக்திகள் சிறப்புறும்படி நடைமுறையில் பயன்படும்.

வரிசையாக வாரீர்!  எண் வளம் பெருக்கிடவே!

ஆனால் எடுத்த உடனேயே 12 இலக்க எண்ணைக் கொடுத்தால் உதாரணமாக 187649385114 என்று சேமிப்பு கணக்கு எண்ணைக் கொடுத்தால் அதற்கு முந்திய எண் வரை 187649385113 வரை கணக்குகளின் எண்ணிக்கை இருந்தால் தான் அந்த எண் பயன் தரும். இல்லையெனில் அதுவரையிலான எண்களின் சிறப்பை நாம் உடனடியாக இழந்து விடுகின்றோம். அதாவது ஒரு லட்சத்து ஒன்று என்று சேமிப்புக் கணக்கை தொடங்கினால் ஒரு லட்சம் எண்ணிக்கையில் கணக்குகள் அங்கே இல்லாவிட்டால் அத்தகைய எண்களின் சக்தியை நம்மால் பெற முடியாது போய் விடுகின்றது. இதனால் பலத்த எண் தோஷங்கள் உருவாகின்றன!  இது சமுதாயத்தையே பாதிப்பதாகும்.

வரிசையாக எண்கள் வருவதே அனைத்து எண்களின் பலன்களையும் முழுமையாகத் தரும். எடுத்த உடனேயே ஆறு இலக்கங்கள், எட்டு இலக்கங்களுடன் தொடங்குதலால் ஈடு செய்ய முடியாத எண் சக்தி இழப்புகள் ஏற்படுகின்றன‌!  இதற்கான ஆன்மீகத் தீர்வு முறைகள் தாம் என்னே? முதலில் நன்றாக ஆத்ம விசாரம் செய்து எண்களின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கான தீர்வுகளை தக்கப் பெரியோர்களிடமிருந்து எளிதில் பெற்றிடலாம். தீர்வுகளை ஆன்மீக ரீதியாக அளித்தாலும் விஞ்ஞானம் ஏற்பதில்லை. இதற்காகவே வருடந்தோறும் computer துறைக்கான பூஜ்ய சக்திகளை நல்கிடும் ஆலய விளக்கங்களை நாம் குருவருளால் அளித்து வருகின்றோம். எளிய தீர்வாக எண்களோடு அட்சரம் சேர்த்து ரூபாய் நோட்டில் உள்ளது போல அ-116, ஆ-76 என்று வரிசையாக வைப்பது எண்களின் சக்தியோடு அட்சர சக்திகளையும் பெற்றுத் தருவதாகும். பிள்ளையார் சுழியை மேலே இடுதலால் எண் பின்ன தோஷங்கள் ஓரளவு தீர்வு பெறும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

அடிமை கண்ட பேரானந்தம்!

ஆம், நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள் தம் சற்குருநாதரிடம் பெற்ற அனுபூதிகளே அடிமை கண்ட பேரானந்தம் ஆகின்றன!  நவநாத சித்தர்கள், அகஸ்தியர், பதினெட்டுச் சித்தர்கள் முதல் சித்தர்குலச் செம்மல்கள் யாவரும் இறைவனின் அடிமைகளாகவே எப்போதும் துலங்குகின்றனர். யாம் தாம் தலைவர், யாம் இறை பூஜையில் சிறக்கின்றோம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவர்களிடம் தோன்றுவது கிடையாது. அடிமை கண்ட ஆனந்தம் எனும் இத்தொடரில் எம் சற்குருநாதராம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுல வாச அனுபூதிகளின் மூலம் வாசகர்களைச் சித்தர்கள் குழாமில் பொலிகின்ற குருகுலவாசத்திற்கு இட்டுச் செல்கின்றோம். பூர்வ ஜன்மப் புண்ய சக்திகள் நிறைந்தோர்க்கே இந்த அனுபூதிகளின் ஸ்பரிசம் கிட்டும். இதன் கனிந்த பலன்களாய்க் குருவைத் தேடுவதற்கான நெஞ்சு நிறைந்த அருட் சாரல்களும், மகத்தான நல்மாற்றங்களும் அவரவர் வாழ்க்கையில் கூடி வரும்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

யாரோ அவர் யாரோ?

"ஏன் வாத்யாரே, எவ்வளவோ தெய்வீக விஷயங்களை எனக்குச் சொல்லி இருக்கியே, ஆனா உன்னோட குரு யாருன்னு இதுவரைக்கும் சொன்னதே கிடையாதே!" என்று சிறுவன் அர்த்தமுள்ள கேள்விக் கணையத் தொடுத்திட, பெரியவர் வழக்கம் போல் சிரித்து மழுப்பினார்!  சிறுவன் விடாக் கொண்டனாய்த் தொடர்ந்தான்!

"இந்தக் கதையே வேண்டாம், வாத்யாரே! அப்படி, இப்படின்னு சப்ஜெக்டையே நைஸா மாத்திட்டு, இடத்தை விட்டு மெதுவா நழுவிடாதே!" என்று வசனம் பேசிய சிறுவன், தான் பிரபஞ்சத்தின் மகத்தான சித்தரிடம் இறைப் பெருங்கருணையால், பெறுதற்கு அரிய குருகுல வாசத்தில் திளைக்கின்றோம் என்ற பேருண்மையை உணராதவனாய் பெரியவரிடம் சர்வ சாதாரண முறையில் பேசிக் கொண்டிருந்தான்! என்ன இருந்தாலும் டிராயரை மாட்டிக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி வந்த பிஞ்சுச் சிறுவனாயிற்றே!

"ஒண்ணு புரிஞ்சுக்கடா!  நீ ஒரு அற்புதமான சிஷ்யனாவே ரொம்ப நல்லா டெவலப் ஆகியிருக்கே! ஆனா உனக்கு ஒரு சற்குருவா ஆகறதுக்கு அடியேனுக்கு இன்னும் தகுதி வரலியே ராஜா!  என்ன பண்றது?" ‍ பெரியவர் வருத்தமான தோரணையுடன் உதட்டைப் பிதுக்கினார்!

சிறுவன் அவரை மகா ஆச்சரியத்துடன் உன்னித்துப் பார்த்தான்! "இந்த மாதிரி சகலகலா அபிநயங்களை எல்லாம் எங்கு கற்றுக் கொண்டு நம்மை இப்படி நவரசக் கோலங்களுடன் ஆட்டி வைக்கின்றாரோ தெரியவில்லையே!  அறுபத்து நான்கு கலைகளிலும் எப்படி சுயம்பிரகாசச் சுயம்புவாய் இவரால் பிரகாசிக்க முடிகின்றது?" சிறுவன் எண்ணி, எண்ணி ரசித்து ஆனந்தித்தான்!

பெரியவர் தொடர்ந்தார்!

"இதே மாதிரி அடியேனுக்குன்னு ஒரு சற்குரு நிச்சயமா இருக்கார்!  ஆனா அவர் கீழ சிஷ்யனா இருக்கறதுக்கு அடியேனுக்கு யோக்யதை இன்னும் வரலையேடா! இப்படியும் இல்லை, அப்படியும் இல்லை! என்ன பண்றதுன்னு அடியேனுக்குப் புரியலை! ஏதோ இந்த அங்காளி அம்பாள்தான் எனக்கு நல்ல வழி காட்டணும்!  நீயும் எனக்காக அங்காளி கிட்ட பிரார்த்தனை பண்ணுவியா கண்ணு?"

என்ன பேரோ?

சிறுவன் தன் வலது காதைக் காண்பித்து "ஏன் வாத்யாரே! குத்தின காதுல எத்தனை தடவை காது குத்தறது? அது சரி, உன் குரு யாரு?" என்று கேட்டு ஒரு அண்ட மகாச் சிரிப்பை அர்த்த புஷ்டியுடன் உதிர்த்தான். இதைக்கேட்டுப் பெரியவருக்கே சிரிப்புத் தாளவில்லை! ஆலயமே எதிரொலிக்கும் படியான பலத்த சிரிப்புடன், சிறுவனை தெய்வீக அன்பு ரசம் பொழிய அணைத்துக் கொண்டார்!

"ஒரு தேவதையா, தேவாதி தேவர்களாகக் கூடா ஆனந்தமா இருந்திடலாம்!  ஒரு நாட்டோட ஜனாதிபதியாக் கூட சாந்தமா, சௌக்கியமா இருந்திடலாம்!  ஆனா சற்குருங்கற போஸ்ட் இருக்கே, ரொம்ப, ரொம்ப கஷ்டமான போஸ்ட்டுடா! ஏன்னா இந்த சாதகத்துல ஏறிட்டா இறங்க முடியாது, இறங்கவும் கூடாது! எண்ண முடியா கடல் மண் எண்ணிக்கை அளவுக்கு இந்திரர்கள் மாறி, மாறி வந்து போயிட்டாங்க!  பிரம்மன், இந்திரன், எமன் இவங்க கூட மாறிக்கிட்டே இருப்பாங்க!"

"ஆனால்....சற்குருன்னா என்னிக்குமே....always சற்குருதான்! அப்படிப்பட்ட புனிதமானவங்க, சிவ கடாட்சம் நிரம்பினவங்கதான் சற்குருவா, ஹரிபக்திப் பிரகாச ஜோதியா ஜ்வலிக்கிறாங்க! மாசு, மரு இல்லாம, தீர்க ஸ்புடம் போட்ட பொன் மாதிரி எந்தச் சமயத்திலும், புனிதத்துலேந்து ஒரு இம்மி கூடப் பிறழாதவங்கதான் சற்குரு ஆகறாங்க!  அதுவும் தானா ஆகறது கிடையாது ராஜா!  இறைவனா அளிக்கிற தகுதியப்பா அது! சிரஞ்சீவித்வமான உத்தம இறை நிலையடா கண்ணு அது!  அதைப் post, பதவின்னு சொல்றது கூடத் தப்புடா அம்பி! இந்தக் கலியுகத்துல ஒரு குதிரை வண்டிக்காரர், சமையற்காரர், தாசில்தாரர், போஸ்ட்மேன், கலெக்டர் மாதிரிக் கூட சற்குருமார்கள் வருவாங்க!"

"புராண யுகத்துல இருந்த சித்தர்கள், மகரிஷிகள், யோகிகள் தான் கலியுகத்துல நமக்காகவே வேற வேற ரூபத்துல, வெவ்வேறு வடிவத்துல பூண்டி மகான், ஷிர்டி சாயி பாபா, கசவனம்பட்டிச் சித்தர் மாதிரி வடிவம் மாறி, மாறி சற்குருவா நிறைஞ்சு நம்மைக் கடையேத்தற‌துக்காகவே பூலோகத்துக்கு வர்றாங்க!"

சிறுவனுக்குப் பொறுக்கவில்லை! என்னதான் தெய்வீகமானாலும் வழக்கம் போல் தான் கொண்டு வந்த சப்ஜெக்டை விட்டு விட்டுச் சாமர்த்தியமாய்த் தடம் புரண்டு செல்கின்றாரே!

"நீ தெய்வீக சப்ஜெக்ட்டை ஆழமாகப் பேசினாலே, நான் கொண்டு வந்த மேட்டரையே நானே மறந்துடுவேனே வாத்யாரே!  ஆனா நான் இன்னிக்கு உன்னை சும்மா விடறதா இல்லை! .....அது சரி, இப்பனாச்சும் சொல்லு, உன்னோட சற்குரு யாருன்னு?" சிறுவன் தான் இன்றும் சற்றும் அசருவதாக இல்லை என்று கங்கணச் சங்கல்பம் செய்து கொண்டு விட்டானே!  நவநாத சித்தர்கள், அகஸ்தியர், அவதூது மஹாபாபா, அஷ்டவக்ரர் மகரிஷி, த்ரைலிங்க சுவாமிகள் போன்ற கோடானு கோடி சித்தர்களை, மகரிஷிகளை உணர்விக்கும் பெரியவருடைய சற்குரு எப்படி இருப்பார் என்ற ஆவல் சிறுவனுக்கு ஏற்பட்டு விட்டது! உங்களுக்கும் தானே!

"அடியேனுடைய சற்குரு யாருன்னு தெரியணும்.....அவ்வளவுதானே...... அவர்தான்....." என்று சொல்லத் தொடங்கிய பெரியவர்.....தன்னை மறந்தவராய்க் கண்களைச் சற்றே மூடினார். வலது கையில் சின்முத்திரையையும் இட்டுக் கொண்டார். அவரிடம் காணக் கிடைக்காத, மிகவும் அபூர்வமான யோக, தியான பாவனை அது! சிறுவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து சின்முத்திரையில் இவ்வாறு அவர் லயித்த கோலத்தைப் பார்த்ததில்லை!

சிறுவன் மிரண்டிடத் திரண்டதே ஆன்ம மின்னொளி!

அதியற்புதமாய், சின்முத்திரையில் துய்த்த பெரியவருடைய கண்களில் இருந்து பொல பொலவென்று நீர் பெருகியது! ஓரிரண்டு துளிகள் சிறுவனின் உடலில் பட்ட போது "10000" வோல்ட் மின் அதிர்ச்சி பூண்டது போல் சிறுவன் புரண்டெழுந்தான்! ஆனால் பெரியவரோ இதனைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து கண்களை மூடியவாறு இருந்தார்! சிறுவனால் அந்த இறைப் பரமானந்தப் பெருந்தீப ஜோதியின் பிரகாசத்தைத் தாங்க இயலவில்லை!

இவ்வாறு பரமானந்தப் பெரு வெள்ளமாய்த் திரண்ட குருவருள் சக்தியை ஓரளவேனும் புரிந்து கொள்ளவே 10000 வோல்ட் மின்னணு திரண்டது போல என்று இங்கு சொல்கின்றோம்! ஆனால் சொற்பொருள் கடந்த அந்த ஜோதிப் பிரகாசக் குருவருட் கடாட்சத்தையே பெரியவர் இவ்வாறு உரையாது உரைத்திட்டுச் சின்மய முத்திரையில் உணர்வித்தாரோ! இன்னும் சொல்லப் போனால் 10000 வோல்ட் என்பதை விட, 10000 கோடிச் சூரிய மூர்த்திகள் ஒன்று சேர்ந்தால் என்ன இறைப் பிரகாசம் உண்டாகுமோ அதுவே அவனுடைய ஆத்ம சாம்ராஜ்யத்தில் தோன்றியது என்பதே உண்மையாம்! இவ்வகையில் தியானம் என்று சொல்லாமலேயே, தியானத்தில் அமர்ந்த அடுத்த தருணமே கோடி சூர்யப் பிரகாச உத்தம இறைநிலையைக் கூட்டுகின்றவர்தாமே புனிதமான சற்குரு!

திடீரென்று பெரியவர் வேதப் பிரவாகமாய்ப் பொழியலானார்!

இமயத்தில், சமயமான உமைய யோகத்தின் இமயம்!

"அடியேனுடைய ஆத்ம ஜோதிப் பிரகாசக் கூட்டை (innate divine shell யோக இமயம் எனப்படுவது) மேல விட்டுட்டு வந்து பல கோடி யுகங்களாச்சுப்பா!  இமய மலையில் அன்னபூரணா சிகரத்துல இன்னமும் யோகப் பூர்வமா அடியேனுடைய யோகவடி அப்படியே அங்கே தான் இருக்கு! தியான வடி இன்னோர் லோகத்துல!  வேதவடி மற்றொரு லோகத்துல இருக்கு!  அடியேனோட குரு ஆணையா, இதுவரைக்கும் கோடிக்கணக்கான வடிவங்கள் எடுத்து எத்தனையோ பூமிகள், உலகங்கள், லோகங்கள், நாடுகள்ல எத்தனையோ ஆயிரம் பேரை குருவருளால் தெய்வீகத்துல மலர வச்சு.....இந்தக் கலியுகத்துல, இப்ப இந்தக் கிழவன் வேஷத்துலேயும் வந்து உன்னை மாதிரி 10016 பேரை தெய்வீகத்துல செம்மையாக்கணும்னு, சித்தர்களுடைய நிலைக்கு உயர்த்தணும்னு அடியேனுக்கு குரு கட்டளை!"

பெயரில்லா, பெரியவரிலும் பெரியவர்!

.....பெரியவர் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! ஆனால் அவருடைய அக்காலத்துப் "palm top" ஆன தனது வலது உள்ளங்கையை விரித்துக் காட்டினார். அதில் அவருடைய "யோக பாவன" வடிவம் தெரிந்தது! (அகஸ்திய விஜயம் மே 2001 இதழ் அட்டைப்படம் காண்க!) அதைப் பார்த்ததுமே ....பெரியவருடைய சற்குருவைக் காண வேண்டும், அவரைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணமே சிறுவனை விட்டுப் பறந்தோடி விட்டது.  காரணம் என்ன?

அமிர்தத்தைப் பருகிய பிறகு அதற்கு மேல் பழரசம் என ஏதேனும் வேண்டுமா என்ன? ஆதிசிவனுடைய சடையிலிருந்து பெருகும் ஆகாச கங்கையில் நீராடிய பிறகு வேறு ஏதேனும் புனித நீராடல் வேண்டுமா? அனைத்துச் சித்தர்களின் ஆதிமூல சற்குருவாம் அகஸ்திய மாமுனிச் சித்தரின் தரிசனம் பெற்ற பிறகு, அதற்கு மேலும் ஒரு சித்தரின் தரிசனம் வேண்டுமா என்ன?

"மேலும் வாத்யாரின் (பெரியவர்) சற்குரு என்பவர் நம்மைப் போல் ஏதோ ஒரு மனுஷப் பெயரை வைத்துக் கொண்டு, நம்மைப் போல் இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு கண்களுடன் கூடிய ஒரு மனித உருவமாகவே பார்க்க எண்ணுவது எவ்வளவு பெரிய மகா மகா மடத்தனம்! சிறுவன் ஆத்ம விசாரக் கடலில் நீந்தித் திளைத்தான்.

இவ்வேத தீபத்தை உறைத்து, ஒளிர்விக்கத் தானே பெரியவராம் சற்குருவின் இந்த சின்முத்ரா யோக நிலை! சிறுவனுக்குள் ஆத்ம விசார ஊற்று பொங்கிப் பெருகியது!

ஆனால் பெரியவரோ, சிறுவன் கேட்ட கேள்விக்கான சூட்சும விடையாகத் தற்போது இதனை இங்கு, இவ்வாறு முடித்து விட்டு இதற்கான விசேஷமான பதிலை, சில மாதங்கள் கழித்து மற்றோர் இடத்தில் தொடரலானார்! அதுவும்.....சிறுவனே இதைப்பற்றி முற்றிலும் மறந்த பிறகு! சித்தன் போக்கு சிவன் போக்கு!

சித்தர்கள் கூடிக் கொலுவிருக்கும் கூலூ!

மற்றொரு சமயத்தில்...இமய மலையில் கூலூ என்ற மலைவாசத் தலத்திற்குச் சிறுவனை அழைத்துச் சென்றார் பெரியவர்!  பல ரயில்கள் மாறி.....நடையோ நடையென நடந்து...பலவிதப் பயணங்களின் நிறைவில் கூலுவை அடைந்தனர். ஆங்கே....கடுங்குளிரில்...உறைய வைக்கும் பனியில் நிர்வாண அவதூதர்களாக...இடுப்பில் வெறும் கோவணத்துடன், துண்டுடன்....விதவிதமான அங்கிகளுடன்...வலம் வரும் பல சித்தர்களையும் தரிசனம் செய்வித்தார்.

"இங்கே நிறையச் சித்தர்கள் அவங்க பாட்டுக்குத் தன் வழியில் போய்க் கிட்டே இருப்பாங்க! அடியேன் சைகையில அவங்களை அடையாளம் காண்பிச்சாக் கூட, நீ சாதாரணமா அவங்களை தரிசனம் பண்ணிக்கிட்டு, ரொம்ப, ரொம்ப அமைதியா என் கூடவே வந்துக்கிட்டு இருக்கணும்! தொப்புனு அவங்க பாதத்துல விழுந்து கும்பிட்டு நீ ரொம்ப அமர்க்களம் பண்ணினா உடனேயே அவங்க மறஞ்சுடுவாங்க! அப்புறம் அவங்க உலாத்தற இடத்தையே மாத்திட்டாங்கன்னா கூலூவில கிடைக்கற சித்தர்களின் தரிசனமும் நிறையப் பேருக்குக் கிடைக்காமப் போயிடும்!  இங்க இமாலயத்துல கிடைக்கற கொஞ்ச நஞ்ச சித்தர்களின் தரிசனமும் இல்லாமப் போயிடும்!" என்று பெரியவர் எச்சரித்திடவே சிறுவன் அங்கு எண்ணற்ற சித்தாதி சித்தர்களை தரிசித்ததால் விளைந்த ஆனந்த சாகரத்தை....மிகவும் பரிபக்குவமாகத் தன் உள்ளத்தினுள் அடக்கி நடந்து கொண்டான்!

அங்கு ஒரு மலைச் சரிவில்....பெரியவர் சிறுவனுடன் வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தார்! வழியில் நிறைய ஆப்பிள் தோட்டங்களின் நடுவே....

அந்த வளைந்த மலைப் பாதையில் வேலியைப் பிதுக்கிக் கொண்டு வந்தது அந்த அழகான ஆப்பிள் மரம்! தோட்ட வேலியைத் தாண்டி அதனுடைய கிளைகள் வெளி வர....

....பெரியவருக்கு ஏதோ பூர்வ ஞாபகம் வந்தவராய் திடீரென்று ஆவேசம் வந்தவர் போல் சொல்லலானார்!

"அன்னிக்கி என்னோட சற்குரு யாருன்னு கேட்டியே! இப்படித்தாண்டா...ரொம்ப காலத்துக்கு முன்னாடி...இந்த இடத்துக்கு அடியேன் வந்திருந்தப்போ....!" பெரியவர் சற்றே மௌனித்துத் தொடர்ந்தார்!

"....இங்க....இதே பாதையில பெரிய தோட்டம் இருந்தது!  அதுல நிறைய ஆப்பிள் மரங்கள்! கொத்து கொத்தாய் அதுல நிறைய ஆப்பிள் பழங்கள்...!

கனியில் "கனிந்த" விதி!

"அப்ப இந்த மலைச் சரிவுப் பாதையில ....ஒரு இளந் தம்பதிகள் வந்துக் கிட்டு இருந்தாங்க!  சமீபத்துலதான் கல்யாணம் ஆகியிருக்கும் போல இருந்தது!  நல்லா சிரிச்சுப் பேசிக்கிட்டே வந்தவங்க கண்ல இந்த ஆப்பிள் மரம் தென்பட்டது."

"ஆனா ....அப்ப....திடீர்னு எனக்குப் படபடன்னு உள்ளூற ஒரு பதை பதைப்பு வந்துடிச்சு! ஏன்னா சில எம தூதுவங்களோட நடமாட்டம் அந்த ஆப்பிள் மரத்துக் கிட்டே நல்லாவே எனக்கு தெரிய ஆரம்பிச்சுது! அந்த எம தூதுவங்களும் பேசறதும் எனக்கு நல்லாவே கேட்டது!"

"இந்தப் பொண்ணுக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஆயுள் முடியப் போகுது! அவளோட புருஷன் அந்த ஆப்பிளைப் பறிச்சுக் கொடுக்க.....அவள் ஆப்பிளைக் கடிச்சதும்...அது அவள் தொண்டையில சிக்கும்...அப்படியே சாஞ்சுடுவா!"

"தேவ மொழியில அந்த எம தூதுவங்க பேசறது எனக்கு நல்லாவே புரிஞ்ச உடனேயே எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு! ....எப்படியாச்சும் அதைத் தடுத்து நிறுத்தணும்னு ஒரு உத்வேகம்! அதனால நான் ரொம்ப வேகமா அந்த இடத்துக்கு ஓட யத்தனிக்க...அவங்களை எச்சரிக்கை பண்ண நினைக்க நினைக்க....ஊஹூம்...ஒரு ஸ்டெப் கூட கால் நகர மாட்டேங்குது! இருந்த இடத்திலேயே "ஸ்டாண்ட் போட்ட சைக்கிள்" மாதிரி கால் பாதம் பீட்டு போட்ட மாதிரி அங்கேயே தான் நிக்குது! கால் இருக்கற இடத்துலேயே சுத்துதே தவிர ஒரு அடி கூட என்னால் எடுத்து வச்சு நடக்க முடியலை!"

"வேண்டாம், நிறுத்து, நிறுத்து! அங்கே போகாதே, போகாதே!  Stop….! Stop…! ருகோ, ருகோன்னு பல பாஷைகள்ல நான் கத்தினேன்! ஆனா எனக்குக் குரலே எழும்பலை! வாய் ரொம்பக் குழறிப் போச்சு!"

ஏய்! விதியை மாற்றாதே!

"அப்ப...திடீர்னு....நச்சுனு எனக்கு மண்டையில் ஒரு கொட்டு விழுந்துச்சு! அப்பப்பா வலின்னா வலி அப்படி ஒரு மகா வலி! யாரோ வானத்துலேந்து பெரிய சம்மட்டிய வச்சு ஓங்கி அடிச்ச மாதிரி என் தலையில் ஒரு கொட்டு கொட்டினாங்க! உடனேயே வலி தாங்காம அம்மான்னு அலறிக்கிட்டே நான் அங்கேயே அப்படியே உட்கார்ந்துட்டேன்!"

"முட்டாள், விதியை மாற்ற முயலாதேடா மடையா!  பிறர் விதியில் குறுக்கிட நீ யார்?"

குருவாய் மொழியாய் யாரோ வானத்துலேந்து சொல்லிடவே...அந்த குருவாய்மொழி வேத வாக்கைக் கேட்டுக் கண்ணை முழிச்சுப் பார்த்தேன்! அதுக்குள்ளாற....அந்தப் பொண்ணு...சொல்லி வச்ச விதி மாதிரி...புருஷங்காரன் ஆப்பிளைப் பறிச்சு கொடுக்க...அவளும் அதை வாங்கிக் கொஞ்சம் கடிச்ச உடனேயே தொண்டையில் சிக்கிக்கிட்டுத் தொப்புனு தரையில விழுந்து சாய்ஞ்சுட்டா! எல்லாமே கொஞ்ச நிமிஷத்துல நடந்து முடிஞ்சு போச்சு!"

பெரியவர் தன் உள்ளங்கையை பிரித்துக் காட்டினார். மிகுந்த ஆவலுடன் சிறுவன் எட்டிப் பார்த்தான். அதில் அந்த ஆப்பிள் மர சம்பவம் அப்படியே வீடியோ போல் தெரிந்தது. அதனுள் சற்றுத் தொலைவில் பெரியவருடன் தானும் நிற்பது கண்டு அவன் மிகவும் அதிசயித்தான்.

அறிந்தும் அறியாமல் இரு!

பெரியவர் பழைய நினைவுகளைக் கூட்டிடவே....

"இப்படித் தாண்டா சற்குரு எத்தனையோ விஷயங்களை, அனுபூதிகளைக் கற்றுத் தரும் போது இறைச் சட்டங்கள், மனித விதி (தலையெழுத்து), சற்குருவோட அருள்மொழிகள் மூணுக்குமே கட்டுப்பட்டு, இம்மி கூட சித்தி செய்யாம, குரு காட்டுற வழியில பக்தியோட நடக்கும் போது தான் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூணுமே புரியற பக்குவம் கிடைக்கும். அதுக்குள்ளாற இப்ப நான் சொன்ன மாதிரி ஆயிரத்தெட்டு சோதனைகள் வரும்!"

"ஆனா எதையும் மாத்தறதுக்கு முயற்சிக்காம, விதிப்படி எல்லாம் நடக்கறதுக்கு ஒரு சாட்சி பூதமா இருக்கணும். அப்பத்தான் சற்குருவா ஆக முடியும்!  இறப்பு, பிறப்பு இரண்டு ரகசியங்களையும் சற்குரு உணர்த்தும் போதுதான் மரணம்கறது ஒரு துக்ககரமான சம்பவம் கிடையாது. ஒரு சரீரத்துல சட்டை மாத்தற விதிப்படியான அனுபூதின்னு புரிய வரும்! ஆனா இதெல்லாம் பெரிய பெரிய உத்தம நிலைகள் கூடும் போதுதான் தானா கனிஞ்சு வரும்! அதுவும் கடவுளாப் பார்த்துக் கொடுக்கறது!"

சிறுவனும் இந்த குருவாய்மொழி உபதேசங்களைக் கேட்டு ஆத்ம நெஞ்சார விழித்துக் கொண்டான்!

இதனை அடிமை கண்ட ஆனந்தம் என்பதா? அடிமை கண்ட பேரானந்தம் என்பதா! விதியால் புனையப்பட்ட அனுபூதி என்பதா? சிறுவன் ஆத்ம விசாரத் திருப்புட்குழியில் சஞ்சாரம் செய்திட, செய்திடத்தான்...ஞானப் பிரகாசம் அவனுள் தோய்ந்தது!

இறைத் தூதராம் சற்குருவின் தெய்வீக நிலை எப்படிப்பட்டது? ஒரு உண்மையான ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகத் தானே சற்குருவின் சற்குருவே தந்த இந்த குருகுல வாச அடிமையின் அடிமை கண்ட பேரானந்த அனுபூதியை உணர்தல் வேண்டும்!

மாத சிவராத்திரி

புனிதமான பொன்னாவாரை மண் பூமி!

ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் திருஅண்ணாமலையில் அருணாசலப் பெருமான் விதவிதமான அனுகிரகங்கள், நல்வரங்கள், காரிய சித்திகளைத் தருகின்றார். வருகின்ற வைகாசி மாதத்திற்கான மாத சிவராத்திரியின் போது அபரிமிதமான ப்ருத்வி சக்திகளைப் பரவெளியிலும், பூமியிலும், நீரிலும், ஜலத்திலும் நிறைத்துத் தருகின்றார். பிருத்வி வகைகளில்  பொன்னாவாரை மண் என்ற ஒருவகையானது மிகச் சிறப்பான இறைமணக் காப்பு பதிந்ததாம். திருக்கயிலாயத்திலிருந்து நேரடியாக வாயு பகவானால் பெற்றுத் தரப்படுகின்ற  பொன்னாவாரை மண் கூடிய திருத்தலங்கள் பூமியில் ஒரு சிலவே உள்ளன. திருஅண்ணாமலை, புதுக்கோட்டை கீழாநெல்லிக் கோட்டை அருகில் உள்ள நெடுங்குடி மண்குன்று, கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள த்ரிபங்கி மலை, நாகர் கோயில் அருகே மருந்துவாழ் மலை, செஞ்சி, சென்னை திருக்கச்சூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் மலை போன்ற தலங்கள் தாம் பொன்னாவாரை மண் வகையாம். இத்தலங்களில் உள்ள ஔஷத (நோய் நிவாரண) சக்திகளும், பித்ரு தர்ப்பண சக்திகளும், நாக தோஷ நிவர்த்தி சக்திகளும் திருஅண்ணாமலையில் உருவாகின்ற திருநாளே வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி தினமாகும் .

நெடுங்குடி

மருத்துவ சக்தி திரளும் வைகாசி மாத சிவராத்திரி!

எனவே இம்மாத சிவராத்திரித் திருநாளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்கு ப்ருதிவி சக்திகளும், அங்காரக சக்திகளும், நோய் நிவராண மருத்துவ சக்திகளும் கூடி காணி, தோட்டம், வீடு சம்பந்தப்பட்ட, நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும், நோய்களுக்கும் தக்கத் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகும். குறிப்பாக, கால், கை சம்பந்தப்பட்ட நோய்களால் வாடுவோர் தக்க நிவாரணங்களைப் பெறுவதற்குப் பொன்னாவாரை மண்ணின் மருத்துவ குண சக்தி பெருகுகின்ற வைகாசி மாத சிவராத்திரியன்று கிரிவலம் வருதல் வேண்டும். மற்றும் நவரக் கிழி, மண் குழைவு, மண் பூச்சு, மண் சிகிச்சை, வாழை இலை மண் படுகை போன்று மண் சம்பந்தமான ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகளை நாடுபவர்கள் வைகாசி மாத சிவராத்திரி நன்னாளில் திருஅண்ணாமலையை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வந்து மண் சம்பந்தமான இயற்கை சிகிச்சையை மேற்கொண்டிட, மிக துரிதமான முறையில் நோய் நிவாரணத்தைப் பெறுவார்கள்.

வைகாசியில் அருணையில் திரளும் பொன்னாவாரை மண் சுடர்!

பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அருட்புனல் வரங்களைத் திரட்டிய பால் வகைத் தல விருட்சங்களே மகத்தான தேவ சக்திகளைப் பெற்று இயற்கை முறைகளால் பூமியிற் புதைந்து, வராஹ மூர்த்தி, வராஹி அம்மனின் ஸ்பரிசம் பெற்றுச் சுயம்பு மூர்த்திகளாக ஆங்காங்கே எழுகின்ற போது அவற்றோடு மண்ணோடு மண்ணாக எழுவது தாம் பொன்னாவாரை மண் ஆகும். இவை திருஅண்ணாமலையில் பல கோடி யுகங்களுக்கு ஒரு முறை மாத சிவராத்திரியன்று தோற்றுவிக்கப்பட்டுப் பல இடங்களிலும் வாயு பகவானாலும், ஸ்ரீவாஸ்து மூர்த்தி மற்றும் பூம்ய தேவ மூர்த்திகளாலும் பல தலங்களுக்கும் நிரவப்படுகின்றது.

மாளாசாங்கிப் பித்ரு மூர்த்திகள் கிரிவலம் வரும் மாத சிவராத்திரி!

மாளாசாங்கிகள் எனப்படும் பித்ரு தேவ மூர்த்திகள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற நாளும் வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி தினமாகும். இவர்கள் மகத்தான பித்ரு சக்திகளைப் பெற்றுத் தருபவர்கள். ஏனென்றால் இச்சிவராத்திரிக்கு அடுத்த நாள் முக்கியமான மாளாசாங்க்ய அமாவாசையாக மலர்வதால் மாளாசாங்கிப் பித்ருக்களே நேரடியாக வந்து சிவராத்திரி கிரிவலத்தோடு மறுநாள் வரும் அமாவாசை கிரிவலத்தையும் மேற்கொண்டு ஜீவன்களுக்குப் பித்ரு சக்திகளை அளிக்கின்ற மகத்தான வைகாசி சிவராத்திரிப் புண்ய நாள் ஆகும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வந்து வழிபட்டிட, நல்ல சந்ததிகள் தோன்றுவதற்கு மாளாசாங்கிப் பித்ருக்கள் குருவருளால் அருள்பெருகும் நல்வரங்களைத் தருவர்.

சிவபுர பிரம்மாண்டச் சக்கரம் என்ற ஓர் அற்புத சிவயோகச் சக்கரமானது, வைகாசி மாதத்தின் மாத சிவராத்திரியில் தான் ஸ்ரீஅருணாசலப் பெருமானால் சித்தர்களுக்கு உபதேசிக்கப்படுகின்றது. மிகவும் பிரசித்திப்பெற்ற வடபுரை மூர்த்திகளும் தங்களுடைய தேவ லோகங்களுக்கு உரித்தான புனிதமான விருட்சங்களைப் பெறுகின்ற மாத சிவராத்திரியாகவும் இது அமைகின்றது. எனவே இந்த வைகாசி மாத சிவராத்திரியில் கிரிவலம் வருவோர்க்கு அளப்பரிய புண்ய சக்திகள் அருள் தரக் காத்துக் கிடக்கின்றன என்பதை உணர்ந்திடுங்கள்.

கொசுவின் படைப்பு

கொசுப் பிறவியின் படைப்பு ரகசியம்

கொசுக்கடியும் கர்ம வினைப் பயனாக ஏற்படுவதேயாம்!

கொசுக்களும் நம் கர்மவினைகளைக் கழிக்க நமக்குப் பெரிதும் உதவுகின்றன!  நம் உடலில் உள்ள தீவினைக் கர்மங்கள் கூடிய கெட்ட ரத்தத்தை உறிஞ்சி நம் கர்ம வினைகளைக் கழிப்பவையே கொசுக்களாம்!

ஸ்ரீமகா விஷ்ணுவின் திருச்செவிகளில் இருந்து புறப்பட்ட மது, கைடபர் அசுர அம்சங்களே மச்சாவதார காலத்தில் அழிக்கப்பட்டு மேதினியா ஜீவ வகைக் கொசுக்களாகப் பிறப்பு கொள்கின்றனர்!

இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து ஜீவன்களும் இறைவனால் சிருஷ்டிக்கப் பட்டவைதாமே!  இருந்தாலும் கொசு, கரையான், தேள், விஷப்பாம்பு போன்றவை மனித இனத்திற்கு விரோதிகளாய் (மனித குலத்தால்) கருதப்படுவது ஏன்?

பகைமை, விரோதம், குரோதம் என்பன எல்லாமே மனிதனின் சிருஷ்டியே தவிர இறைவன் படைப்பில் இவை தோற்றுவிக்கப்படவில்லை. மனிதன் தன் சுயநலத்தால் பலவிதமான இம்சைகளைச் செய்து, பாவங்களைக் கூட்டி, பல ஜீவன்களையும் விரோதமாக்கிக் கொண்டுள்ளான். புனிதமான அன்பு, நேயம் மறைந்து சுயநலமும், பேராசையும் பெருகும்போது தான் ஜீவன்களிடையே பகைமை உண்டாகின்றது.

மனிதனின் நில ஆக்கிரமிப்பு!

மனித குலம், தன் வாசத்திற்காக இருக்கின்ற வயல்களையும், காடுகளையும் அழித்து, சுயநலப் போக்கில் தனக்காக இல்லங்கள், சாலைகளை அமைத்துக் கொண்டால் பாம்புகளும், தேள்களும் நட்டுவாக்களிகளும், தாம் வாழ்வதற்காக மனித இல்லங்களை அண்டாது வேறு என்னதான் செய்ய முடியும்? பாம்புகள், புழு, பூச்சிகளுக்கென ஆண்டவன் வயல் வெளிகளை ஏற்படுத்தி இருக்க, மனிதன் அவற்றின் ஊடே வயல்களை அழித்துத் தனக்கென பிளாட்டுகள், தோட்டம், வீடுகளைக் கட்டிக் கொண்டு விட்டு, "பாம்பு, பூச்சி, பட்டைகள் வருகின்றனவே!" என்று முறையிடுதல் நியாயமாகுமா?

இறைவனின் படைப்பில் அந்தந்த ஜீவன்களின் நல்வாழ்விற்கென இறைவனே பல பகுதிகளைப் பிரித்துத் தந்துள்ளான். மீன்கள் எனில் நீரிலும், தவளைகள் என்றால் நீரிலும், நிலத்திலும், பறவைகளுக்கு மரங்களிலும், வானமுமெனவும், பல இடங்களில் பசு, நாய் போன்றவற்றிற்கும் மனித சமுதாய இணை வாழ்க்கையாகவும் இவ்வாறாக நிலவாழ்வுப் பரிமாணம் நன்றாகவே நடைபெற்று வந்தது. மனித குலம் சுயநலத்தின் உச்சத்திற்குச் செல்லும் வரை! மனிதனின் சுயநலப் போக்கே பலவிதமான ஜீவ இம்சைகளுக்கு வித்திட்டு மிருக இனம் மீது பகைமையை ஏற்படுத்திக் கொண்டு விட்டது.

கொசுக்கடி, கர்ம வினைகளின் விளைவே!

உலகில் மனிதனை விடக் கொசுக்களின் தொகை எத்துணையோ கோடி கோடிகளாக அதிகமாகவே உள்ளதை நாம் நன்கு அறிவோம். கொசுக்களால் மட்டுமே வியாதிகள் வருகின்றன என்றால் கொசு கடித்து இன்றும் உலகில் மனித குலமே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா!  எனவே அனைத்துக் கொசுக்களும் மனிதர்களை கடிப்பதில்லை! அனைத்துக் கொசுக் கடிகளாலும் மனிதனுக்கு நோய்களும் ஏற்படுவதும் இல்லை! பலவித காரண காரியங்களுக்காகவே கொசுக்களும் இப்பூவுலகில் படைக்கப்பட்டு உள்ளன. இன்றைக்குக் கொசுக்களாக நம்மைக் கடிப்பவற்றுள் சிலவும் நம் பூர்வ ஜென்ம உறவினர்களாகக் கூட இருந்திடலாம்.

எவருக்கெல்லாம் நாம் அடிக்கடி மனதால், உள்ளத்தால், உடலால் சிறு சிறு துன்பங்களை இழைத்தோமோ, அவர்களே கொசுக்களாக மாறி வந்து கடித்துத் தம் கர்ம வினை பாக்கிகளைப் போக்கிக் கொள்வதும் உண்டு. ஒவ்வொரு கொசுக் கடியாலும் நோய் தான் வரும் என்றால் உலகில் உள்ள அனைவருமே பலவிதமான கொசுக்கடி சம்பந்தமான நோய்களால் அல்லவா அவதியுற வேண்டும்! எனவே கர்ம வினைப்படியே கொசுக் கடிகளும் நிகழ்கின்றன!  அப்படியானால் வசதி உள்ளோர் பலவிதங்களிலும் கொசுக் கடி ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்கின்றார்களே, இது எப்படி? ஆம், வசதிகள் அமைவதும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்படிதானே! பூர்வ ஜன்மங்களில் நல்ல வகைகளில் தான தர்மங்களை மேற்கொள்வோர்க்கு இப்பிறவியில் நல்ல வசதிகளோடு வாழ்க்கை அமைந்து விடுவதும் உண்டு.

இம்சையின்றி இனப் பாதுகாப்பு!

எனவே, கொசுக்களை இறைவன் படைப்பதற்கான காரண காரியங்களை நாம் ஆத்ம விசாரம் செய்வதன் மூலமாகவே கொசுக்கள் போன்ற ஜீவன்களின் மேலுள்ள வெறுப்பு உணர்வு தணியும். இதற்காகக் கொசுக்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும் எண்ணாதீர்கள்! ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து விதமான வழிமுறைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும். எனவே கொசுக் கடியிலிருந்து விடுபட்டு மனிதன் நிம்மதியாய் வாழ, தக்க பாதுகாப்புச் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்வதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஆனால் தற்காலத்தில் இரசாயன மருந்து நிறைந்த ஒரு கலவையைத் தெளித்து, பரப்பி, ரசாயனக் கலவையை மின் சூடுபடுத்தி ஆவியாக்கி, காற்று மண்டலத்தின் புனிதத்தை மாசுபடுத்தி, கொசுவை விரட்டுவதாக நினைத்துக் கொண்டு விஷமான ரசாயனக் கலவைக் காற்றையே தினந்தோறும் சுவாசிக்கும் மனித குலத்தை என் சொல்வது? கொசுக் கடிக்குத் தப்பிப்பதாக எண்ணி ரசாயன வாயு நோய் நொடிக்கு அல்லவோ ஆளாகின்றனர்!

நம் மூதாதையர் காலத்தில் கொசுக்கள் இவ்வளவு இருந்தனவா, இல்லையே! இதற்குக் காரணமென்ன? முறையற்ற ஆசைகள் பெருகப் பெருக, உலகில் கொசுக்களும் பெருகுகின்றன! எனவே மனித குலத்தின் முறையற்ற  பேராசைகளின் பெருக்கையும் கொசு இனம் பிரதிபலிக்கின்றது. ஏனென்றால் கொசுப் படைப்பின் ரகசியமாக, ஆன்மீக ரீதியாக ஜீவன்களின் ரத்தத்தில் ஊறிக் கிடக்கும் முறையற்ற ஆசைகளை உறிஞ்சி அகற்றுகின்ற தியாகச் சேவையையும் கொசுக்கள் ஆற்றுகின்றன! ஆசைக் கழிவுகளை உறிஞ்சியதும் கொசுவிற்குக் கிட்டுவது என்ன? அடியும், நசுக்கலும், வதைபடுதலும், இறத்தலும் தானே! இது குறிப்பதென்ன? பேராசைப் பெருக்கால் இத்தகைய நசுக்கல், வதைகளை எல்லாம் கொசுக் கடிக்கு ஆளானோர் தம் வாழ்வில் சந்தித்திருக்க வேண்டும் என்பதேயாம்!

இதற்காகக் கொசுக் கடிக்காகக் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டல் கூடாது!  கொசுக் கடிக்கு இன்னும் பல ஆன்மீக விளக்கங்கள் உண்டு!  அனைத்தையும் அறிந்தால் தான் கொசுவின் படைப்பிற்கான காரண காரியங்கள் உணரப் பெறும்!

அப்பப்பா எவ்வளவு பொருட்கள் இல்லத்தில்...!

தற்காலத்தில் மனிதன் அளவுக்கு மீறிய பொருட்களைத் திரட்டிக் கொள்வதாலும், இவ்வகையில் குப்பை, கூளத்தைப் பெருக்கிக் கொண்டமையாலும் தான் அசுத்தமும் உலகில் பெருகி விட்டது. அக்காலத்தில் எளிமையாக, அதிக அளவு சாமான்கள் இன்றி சிக்கனமாக கட்டுக் கோப்புடன் மக்கள் வாழ்ந்ததால், அதிக அளவில் குப்பை கூளங்கள் சேராது, வீடு நிறைய புத்தகங்கள், பாத்திரங்கள், மேஜை, நாற்காலிகள், பொருட்கள் என மண்டிக் கிடக்காது வாழ்ந்திட்டனர். ஏதோ இரண்டு, மூன்று பலகைகள், அரிவாள் மனை போன்ற ஒரு சில கருவிகள் இவ்வாறு மிகச் சிறிய அளவிலேயே பயன்பாடும் வகையிலான பொருட்களே இருக்கும்.

ஆனால் தற்காலத்தில் எவ்வளவு பெரிய, சிறிய வீடாயினும் ஆங்காங்கே பொருட்கள் சிதறிக் கிடக்கும் வண்ணம், மனிதன் தன் தேவைகளைப் பன்மடங்காக்கி, அளவுக்கு அதிகமாக, தேவைக்கு மீறிய பொருட்களையும், திரவியங்களையும் பெருக்கிக் கொண்டு கொசு உற்பத்திக்கும் காரணமாகின்றன.

"ஏ மனிதா! ஏன் சுயநலத்துடன் தேவையற்ற முறையில், நிறையப் பொருட்களைச் சேர்த்துக் கொண்டு வாழ்கின்றாய்?" எனத் தலையில் குட்டிக் கேட்பது போல ஒரு கடி கடித்து நல் அறிவுரைகளைப் பகர்வனவும் கொசுக்களே!

நகரப் புறங்களில் கழிவுகளை இயற்கையாகக் காயவிடாது, வெளிச் செல்ல விடாது, பூமிக்குள் உலர விடாது தடுத்தும், கடலில் கழிவு நீரைப் பாய்ச்சிக் கடலையும் அசுத்தப்படுத்துவதுமாக இவ்வாறாக, கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கும் மனித சமுதாயம் தானே காரணம்! அக்காலத்தில் பாதாளச் சாக்கடையா இருந்தது? எல்லாவற்றிற்கும் மக்கள் பெருக்கத்தைக் காரணம் காட்டக் கூடாது!  ஏனெனில் உத்தம ஆன்மீக ஞான விளக்கத்தின்படி உலகில் எந்த ஜீவன்களின் எண்ணிக்கையும் கூடுவதோ, குறைவதோ கிடையாது! மக்கள் தொகையும் பூமியில் கூடுவதோ, குறைவதோ கிடையாது! ஆனால் ஆன்மப் பூர்வமான இந்த விளக்கத்தை விஞ்ஞானம் ஏற்காது!

அக்காலத்தில் இயற்கையாகவே, சூரிய வெளிச்சத்தில் காயும் வண்ணம் பரிபக்குவமாய்க் கழிவறைகள் இருந்தன. பொதுவாக வீட்டிற்குள் கழிப்பறை என்ற ஒன்றே இருக்காது! எல்லாம் இயற்கைப் பூர்வமாகவே நிகழும்! இயற்கையாகவே சுகாதாரம் வளம் தானாகவே அமைந்தது! அனைத்திற்கும் இயற்கையை நாடியதால் சமுதாய ஆரோக்யம் நன்கு இருந்தது. கொசுக்களும் ஏனைய ஜீவன்களும், வயல்வெளியென அவையவை இருக்க வேண்டிய இடத்திலேயே சௌக்கியமாய் இருந்தன.

ஜீவ காருண்யம் ஓர் உத்தம இறைநிலையே!

கொசுக்கள் மனிதனைக் கடித்தே உயிர் வாழ வேண்டுமென்றால் அனைத்து மனிதர்களும் கொசுக் கடியால் உடலெங்கும் வீங்கித்தான் இருப்பர். எனவே கொசுக்கள் உருவாகவும் நிறைய காரண, காரியங்கள் உண்டு என்பதை உணர்க!  அறிந்தோ, அறியாமலோ கொசுக்களை அடிப்பதால், நசுக்குவதால் கூடப் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. கடித்த கொசுக்களைக் கூட அடிக்காது, அவற்றை இம்சிக்காது பொறுமை நிறைந்த சாந்தத்துடன் வாழ்வதையும் ஆன்மீகத்தில் ஒரு நல்ல உத்தம நிலையாகவே ஏற்கின்றார்கள். அப்படியே அடித்தாலும் அறியாமையாற் செய்த பாவம் என இதற்கு மட்டும் சில பரிகாரங்களையும் தருகின்றார்கள்!

எனவே இதுவரை இத்தனை வருடங்களாகக் கொசுக்களை அடித்தமையால் ஏற்பட்ட தோஷங்களுக்கு நாம் நிச்சயம் பரிகாரம் பெற்றே ஆக வேண்டும். எத்துணையோ வகை ஜீவன்களை அடிக்கும் போது கம்பு, செருப்பு, துடைப்பம் போன்ற கருவிகளை மனிதன் பயன்படுத்தும் போது கொசுவிற்கு மட்டும் மனிதன் தன் கைகளையே பயன்படுத்துகின்றானே, காரணம் என்ன? கொசுவை அடிக்கையில் கொசு உறிஞ்சிய தன் இரத்தத்தைத் தன் புனிதமான கை விரல் ரேகைகளாலேயே துடைக்கும் நிர்பந்தமும் ஏற்பட்டு விடுகின்றது. கை விரல் ரேகைகள் பூர்வ ஜன்மங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகையால் கர்ம வினைப் பலனாகவே கொசுக்கடி நிகழ்கின்றது என்பது இதனால் புலனாகின்றது அல்லவா!

கொசுக்கடி விளைவுகள் கர்ம வினைப் பலன்களே!

மேலும் கொசுவை அடிக்கும் போது அதன் நுண்ணிய அங்கம் தோலுக்கு உள்ளேயே செருகிக் கிடந்து விடும். எனவே கொசு அடிக்கப்பட்டு இறந்தாலும், அதன் பின்னமுற்ற நுண்ணிய அங்கம் மனித உடலிலேயே, அவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் வரை தங்கியே இருக்கின்றது. இவை யாவும் ஒரு மனிதனை கடிக்கும் கொசுவிற்கும், அவருக்கும் பூர்வ ஜன்ம கர்ம வினைத் தொடர்பு நிறைய உண்டு என்பதை ஆன்மப் பூர்வமாக விளக்குகின்றன! சிறு தலைவலி வருவதற்கும் கர்ம வினை விளைவுகளே காரணம் எனும் போது கொசுக் கடி மூலம் நோய்கள் வருதற்கும் கர்ம வினைகள் தாமே காரணமாகின்றன! சில சமயங்களில் கொசுக் கடியால் கடுமையான துன்பங்கள் ஏற்படும் என்பதும் உண்மையே! கொசு மிகவும் குறைந்த வாழ்நாளை உடையதாக நம் (விஞ்ஞானக்) கணக்கில் தோன்றினாலும், ஒவ்வொரு கொசுவும் ஒரு மனிதனைப் போல 60, 70 ஆண்டுக்காலம் வாழ்வது போலவே தம் ஆயுள் காலத்தை உணர்கின்றன.

கொசுவின் பிரார்த்தனைகள்!

இரவில் மனிதனைக் கடிக்கும் கொசு பகலில் என்ன செய்கின்றது என எவரேனும் ஆத்ம விசாரம் செய்தது உண்டா? பகலில் ஏதோ அங்காங்கே குப்பை, கூளங்களில் கொசு தங்கியிருப்பது போல் தோன்றினாலும், கொசுக்களை உண்பதற்கென்று சில ஜீவன்கள் உள்ளன அல்லவா? இவ்வாறு ஜீவன்கள் ஒன்றுக்கு ஒன்று உணவாவதும் பூர்வ ஜன்ம விளைவுகளின் காரணமேயாம்! எந்தக் கோழியை ஒரு மனிதன் உண்கின்றானோ, அக்கோழியே மனிதனாகி அம்மனிதன் கோழியாகி மீண்டும் பிரதி பதிலாக உண்டு தீர்க்கும் வரை, காலப் பிறவிச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.

ஒரு சிறு கொசு ஓரிடத்தினின்று வேறிடம் பறந்து செல்வதற்குக் கூட ஆன்மீகக் காரணங்கள் உண்டு. மனிதர்கள், விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமா ஒரு கொசுவின் வாழ்க்கைப் பணி? மேலும் ஒரு கொசுவானது எப்போதும் மனிதர்களைக் கடித்துக் கொண்டே இருப்பது தான் அதன் வாழ்வா? அதன் வயிறு நிறைந்தவுடன் என்ன செய்யும்? இவ்வாறாக பல வினாக்களைக் கொண்டு நமக்குள் நாமே ஆத்ம விசாரம் செய்து வந்தால் தான் கொசுப் பிறவியின் ஆன்ம இரகசியம் புரியும்.

கொசுவிற்கும் உண்டே அறிவுத் தாள்!

மனிதனின் உடலில் இருந்து மருத்துவ சோதனைக்காக இரத்தம் எடுக்கப்படும் போது தக்க நாளம் கிட்டாமல் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் திணறுகின்றனர் அல்லவா! ஆனால் ஒரு கொசுவானது அந்த இடத்தை ஒரு விநாடிக்குள் கண்டறிந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றது என்றால் ஒரு கொசுவிற்கு உள்ள விஞ்ஞான அறிவு மனிதனுக்கு இல்லை என்பது புலப்படுகின்றது அல்லவா!  வந்து அமர்ந்தவுடனேயே உறிஞ்சுவதால் அதன் பகுத்தறியும் ஞானம் மனித குலத்துக்கு இல்லையே!

கொசுக்கள் பறக்கும் போது ஒரு வித ரீங்கார ஒலியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கொசுவானது மனிதனைக் கடித்துத் தன் வழியே செல்வதானால், அது ஏன் ரீங்காரமிட்டுத் தான் வருவதை நன்கு அறிவிக்க வேண்டும்? கொசுவின் ரீங்காரமானது அதன் சிறகுகள் காற்றில் விரைவாக அடித்துச் செல்வதால் வரும் ஒலி என விஞ்ஞானம் விளக்கம் அளித்தாலும், மெய்ஞான விளக்கமே அந்த ஜீவனின் பிறப்பின் ரகசியங்களை உணர்த்துவதாம்!

கொசுக்களும் ஆன்மீகம் அறியுமே!

தான் ஜீவிப்பதற்காக மனிதனைக் கடிக்கும் ஒவ்வொரு கொசுவும், தான் மனிதனுக்கு இழைக்கும் துன்பத்திற்காகப் பகல் நேரத்தில் பல பிராயச்சித்தங்கள் செய்கின்றன என்பதே ஆன்மீக உண்மையாம். அவை பகலில் பெரும்பாலும் வில்வம், அரசு, ஆல், வாழை, வேம்பு போன்ற நல்விருட்சங்கள், நல்ல புத்தகங்கள், நல்ல துணிகளில் அமர்ந்து தவம் புரியும்! இது கேட்பதற்கு ஏதோ சுவாரசியமானது போல் தோன்றும். ஆனால் இதுவே நடைமுறையில் ஆன்மீக ரீதியாக நிகழ்வதாகும். பூர்வ ஜென்மத் தொடர்பால் கொசுக்கள் சில வகை வேதங்களையும் ஸ்பரிசிக்கும் பாக்யம் பெற்றமையால் அவ்வேத சக்தியின் உதவியால் கொசுக்கள் தக்க பரிகாரங்களைப் பெறுகின்றன. எனவே தான் நம் மூதாதையர் குறித்த சில மந்திரங்களை ஓதியே சில விஷ ஜந்துக்களை அழிக்கும் பக்குவம் பெற்றிருந்தனர். சிவ சிவ, ராம ராம என்றே இன்றும் பலரும் கரப்பான், கொசுக்களை அடிப்பதுண்டு!  இறை நாமத்தைக் கேட்டவாறு அவை இறப்பதால் அவற்றிற்குச் சில நன்னிலைகள் கிடைக்கும்! சில சமயங்களில் கண்களுக்கு முன் பறக்கும் சிறு (பழக்) கொசுக்கள் அவ்வளவாகத் துன்பம் அளிப்பது கிடையாது. அவை பழங்கள், காய்கறிகள் போன்ற சதைப் பொருட்களில் அமர்ந்து சென்று விடும். காரணம் என்ன? அச்சிறிய நுண்ணுயிருக்கும் இறைவன் பல்லாயிரம் அவயங்களைப் படைத்து, அவற்றிற்கும் திறம்படப் படி அளக்கின்றார் என்றால் இறைவனின் சக்தியை எப்படித்தான் உணர்வது என்ற ஆத்ம விசார எண்ணங்களை எழுப்ப வல்லவையே சிறு கொசுக்களாம்!

கடோத்கஜன் பூஜை

அரிதிலும் அரிதாம் கடோத்கஜன் பூஜையும், பர்பரிகன் பூஜையும்!

கடோத்கஜ பூஜையும் பர்பரிகன் பூஜையும் நித்ய கர்ம நிவாரண சாந்தி பூஜைகளாக "ஸ்ரீஅகஸ்திய விஜயம்" இதழில் அளிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அறிந்து பலரும் நன்முறையில் இவற்றைக் கடைபிடித்தமை அறிந்து ஆனந்தம் அடைகின்றோம். ஏனென்றால் சித்புருஷர்களில் அருளப்பட்ட உலக சமுதாயப் பூஜையான கடோத்கஜன் பூஜையும், பர்பரிகன் பூஜையும், உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழ்நாட்டில் சிறு அளவில் நடைபெற்றாலும் இதனால் கிட்டும் அபரிமிதமான இதன் பலாபலன்கள் ஜாதி, மத, இன, குல பேதமின்றி உலக மக்கள் யாவருக்கும் உரித்தானதேயாம்!

மகாபாரதப் பாத்திரங்களுள் பீமரின் புத்திரனாம் கடோத்கஜனும், கடோத்கஜனின் புதல்வனாம் பர்பரிகனும் தம்முடைய உத்தம தபோ சித்திகளையும், யோக வல்லமைகளையும், மந்திரப் பாடல்களையும் கிஞ்சித்தும் தவறாகப் பயன்படுத்தாது, பிறருக்கு வெளிப்படுத்தாது அடக்கம், பணிவு, எளிமையுடன் துலங்கியமையால் தேவாதி தேவ, தேவ மார்த்தாண்ட மூர்த்திகளாக உத்தம நிலைகளைக் கொண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாம். பர்பரிகன் தன் தந்தையாம் கடோத்கஜனை விடப் பல்லாயிரம் மடங்குகள் ஆன்ம பலம், தபோ பலம், தேக பலம், யோக பலம் உடையவர்!  விண்ணுக்கும், மண்ணுக்கும் எழும் விஸ்வரூபத் தன்மையைக் கொண்டமையால் பர்பகரினுடைய பெயரை ஒவ்வொரு முறை பக்தியுடன் உச்சரித்தாலும், உச்சரிப்பிற்கு உச்சரிப்பு பல கோடி மடங்குத் தபோபலன்கள் ஓதுவோரை அடைகின்றன.

தேவாதி தேவ, தேவ மார்த்தாண்ட மூர்த்திகளாயினரே!

எனவே பர்பரிகனுடைய தோற்றம், பெயர் சூட்டல் முதல் கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரச் சுதர்சனத்தால் சிரஞ்சீவித்வ தேவ சகாயம் பெற்றது வரை பர்பரிகனின் ஒவ்வொரு விநாடிக் காரியமும் பெரிய மஹரிஷிகள், உத்தம  யோகியர் போல் மகா ப்ரளய இறைத் திருப்பணிகளைச் சார்ந்து அமைந்தமையால் நடமாடும் வீரயோகியாகவே பர்பரிகன் பொலிந்தார். எனவே தாம் கடோத்கஜன் மற்றும் பர்பரிகனுடைய அசாத்யமான தெய்வீக வர பலங்களைக் கண்டு வியந்த ஸ்ரீகிருஷ்ணர் அவற்றை துவாபர யுகத்தின் மிஞ்சிய காலத்திற்கும், எதிர்வரும் யுகங்களுக்கு அவை பயன்படும் வண்ணம் அவர்களுக்கு தேவாதி தேவ, தேவ மார்த்தாண்ட மூர்த்திகளாகப் பொலியும் சிரஞ்சீவித்வ தெய்வீகக் கீர்த்தியைத் தந்திட்டார்.

துன்பங்கள் நிறைந்த கலியுகத்திற்கும் மீண்டும் சுழன்று வரும் ஏனைய யுகங்களுக்கும் ஆகி, காலங்காலமாய் நிரவிடும் வகையில் அதியற்புதத் தெய்வீகத் தபோபலத்தை அவர்கள் கொண்டிருந்தமையால் ஸ்ரீகிருஷ்ணர் பர்பரிகனின் உடலில் இருந்து "அழியும் மானுட சரீர" அம்சங்களை அழித்து அழியாத தவச் செல்வ பலமாக சிரஞ்சீவிப் பேரொளியாக மாற்றி அமைத்தார். இதையே புராண சம்பவத்தில் வேறு விதமாகக் காண்கின்றோம்.

எனவே கடோத்கஜ பூஜை, பர்பரிகன் பூஜைகளை முறையாகக் குறித்த நாளில் நிகழ்த்துவோர்க்கு

பல குதிரை, யானை, பசு, நாய்களின் நல்வீர, தேவ, தர்ம, தார்மீக பலாதி பலா இறை நல்வர அம்சங்கள் அபரிமிதாகக் கூடுவதால் பலவகைத் திருட்டு, கொள்ளை வன்முறைத் தீய சக்திகள் நிலவுகின்ற இடங்களில், காலங்களில் நம்மையும், நம் தலைமுறைகளையும் தற்காத்துக் கொள்ளும் சக்திகளை அளிக்கும்.

பலரும் தினசரி பூஜைகளையும், பல விதமான விரதங்களையும், நோன்புகளையும் சரிவரக் கடைப்பிடிக்காமையால் தாம் அவரவர் உள்ளத்தில் ஓர் அச்சம் எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். இப்பூஜைகளில் பெறுகின்ற புண்ய சக்திகள் தாம் நல்ல மனோசக்திகளும், மன வலிமையையும் தரும்.

லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததே அரிசி மணிகளாம்!  இவ்வாறாக நிறைய அளவில் அன்னதானம் செய்கின்ற போது எழுகின்ற வீரலக்ஷ்மி, தைர்ய லக்ஷ்மி சக்திகளைக் கொண்டே நாம் அளப்பரிய மனோதைர்யத்தையும், மனவளமும் பெற்று தீய சக்திகளின் விளைவுகளைத் தாங்கும் நல்வரங்களைப் பெறுகின்றோம்! இதன் பிறகு இப்பூஜைகளைத் தொடர்தலே தீய சக்திகளை வெல்லும் திறனைச் சிறிது, சிறிதாகப் பெற்றுத் தரும். குறிப்பாக நம் சந்ததியினர் நன்கு பக்தியுடன் வாழ இவை பெருந்துணை புரியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரு பூஜைகளால் தாம் அசுர சக்திகளின் எதிர்ப்பைத் தாங்கும் அபூர்வ சக்திகளைப் பெற்றனர். ஆதலால் சற்குரு அளிக்கின்ற குறித்த நாளில் இப்பூஜைகளை ஆற்றினால் தான் இப்பூஜா பலன்களை பரிபூரணமாகப் பெற இயலும்.

மகத்தான தபோபலன்களை உடைய பர்பரிகனின் பெயரைச் சொல்லும் தகுதியைப் பெறவே இந்த பர்பரிகனின் பூஜை என்றால் அவர் தரும் தேவ நல்வரங்களைப் பெற்றுத் தரும் பூஜைக்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் அல்லவா!

கூடாநாள் விளக்கங்கள்

பூஜை, ஹோமம், ஆலய தரிசனம், மறைகள் ஓதுதல், தான தர்மங்கள் போன்ற வழிபாடுகளில், இறைப் பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டிய நாளே கூடா நாளாகிய பிரபலாரிஷ்ட நாளாம்!

யோகங்களில் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் தவிரப் பலரும் அறியாத, சரிவரக் கணிக்காத, கவனிக்காத, பலராலும் முறையாகக் கடைபிடிக்கப்படாத, பிரபலாரிஷ்ட யோகம் (கூடா நாள்) என்ற நேரமும் உண்டு! அதாவது எந்த நற்காரியத்திற்கும், சாதாரண நடைமுறைக் காரியங்களும் கூடச் செலுத்தக் கூடா(த) நாள்! மேலும் இறைவழிபாடு மட்டும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டிய நாள்!

அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் ஆகியவை குறித்த நாளுடன் குறித்த நட்சத்திரம் சேருவதால் ஏற்படுவை என நாம் அறிவோம்! பஞ்சாங்கங்களில் மேலும் விளக்கம் காண்க!

உதாரணமாக,

திங்கள்-ரோகிணி             அமிர்த யோகம்
திங்கள்-மிருகசீருஷம்      சித்த யோகம்
திங்கள்-பூராடம்                 மரண யோகம்

இறைவழிபாடுகளன்றி ஏனைய அனைத்துக் காரியங்களும் தவிர்க்கப்பட வேண்டிய தினமே கூடாநாளாம்!

ஞாயிறு-பரணி, திங்கள்-சித்திரை, செவ்வாய்-உத்திராடம், புதன்-அவிட்டம், வியாழன்-கேட்டை, வெள்ளி-பூராடம், சனி-ரேவதி ஆகிய அந்தந்தக் கிழமை, நட்சத்திரம் சேரும் நாட்களே பிரபலாரிஷ்ட யோக நாட்கள் எனப்படும் கூடா நாட்களாம். கூடாநாளில் ராகு காலம், எம கண்டம், கரிநாள் போல குடும்பம், அலுவலகம், வியாபாரம், தொழில், பண்டிகை என அனைத்துத் துறைகளிலும், எக்காரியத்தையும் மேற்கொள்ளாது பூஜை, ஹோமம், தான தர்மங்களிலேயே இந்நாளைப் பரிணமிக்கச் செய்திட வேண்டும்.

காலத்தையா கழிப்பது? சிவ சிவ....!

கால தேவதைகளால் உருவாக்கப்படும் நாளை, காலத்தைக் கழித்தல், செலவழித்தல் என்று சொல்வதும் கூடத் தவறானதே! ஒரு நாளை நற்காரியங்களில் பரிணமிக்கச் செய்திடல், பரிபூரணித்தல், முடித்தல், நிறைவு அடையச் செய்தல், ஆக்கப்படுத்துதல் போன்ற பதங்களே சரியானவையாம்! இறைவன் அளித்துள்ள பெறுதற்கு அரிய இம்மானுடப் பிறப்பின் ஒவ்வொரு விநாடிக் காலத்தையும் பொக்கிஷமாகப் போற்றி இறைச் சிந்தனையில், இறைக் காரியங்களில், இறை எண்ணங்களில் அல்லவா பரிணமித்திடச் செய்ய வேண்டும்!  சாதாரணமான, சராசரியான தினசரி வேலை என்றாலும், உள்ளூர மனதினுள் "ஸ்ரீகாயத்ரி மந்திர" ஓடை நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்தால்தான் ஓரளவேனும் நம் ஆயுட் காலமானது இறைச் சிந்தனை கூடியதாக மாறும்!

ஒவ்வொருவரும் பிறந்த நாளைக் கொண்டாடுகையில் "அவரவர் உண்மையாகவே தியாக மனப்பான்மையுடன், இறைச் சிந்தனையுடன் வாழ்ந்த நாள் எவ்வளவு" என்பதைச் சற்றே கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். மனிதனுடைய பரிபூரண ஆயுள் 120 வருடங்கள் எனச் சித்தர்கள் நிர்ணயிக்கின்றார்கள். சிறு குழந்தைப் பருவத்தில் நான்கு வயது வரை தெய்வீகம் முழுதுமாகப் பரிணமிக்கின்றது. இதன்பிறகு ஒன்பது வயது வரை ஓரளவு தெய்வீகம் இருந்து, பிறகு தெய்வீகத் தன்மை சிறிது சிறிதாக மறைந்து மனித உணர்வே மேல் எழும்! அச்சிறு தெய்வீக உணர்வும் சிறிது சிறிதாக மறைந்து, மனித வாழ்க்கையில் தெய்வீக உணர்வுகள் மறைந்து, மனித உணர்வே பெருகுகின்றது.

எனவே, தெய்வீகமான குழந்தைப் பருவம் தவிர, ஏனைய 116 ஆண்டுகளையும் ஒருவர் இறைமையில் நன்கு நிறைவேற்றப் பாடுபட வேண்டும். ஆனால் நடைமுறையில் இவ்வாறு முடிகின்றதா?

முறையற்ற காமச் செயல்கள், சூது, அரட்டை, ஆபாசமான திரைப்படம், உபயோகமில்லா டீவி நிகழ்ச்சிகள், வெறுமனே காலாட்டிப் பொழுதைப் போக்குதல், தேவையற்ற சோம்பேறித்தனமான உறக்கம், பொய், புரட்டு, பித்தலாட்டம், பீடி, மது, தீய மங்கை என பலவற்றில் பயனற்றுக் கழித்த நேரம் இவ்வாறாக ஒரு சராசரி மனிதன் வீணே கழித்த காலத்தைக் கணக்கிட்டால்- சராசரியாக 80 வயது வாழும் மனிதன், உண்மையாக இறைமையுடன் வாழ்ந்த நாள் மூன்று நாட்கள் கூடத் தேறாது!

கால சாரமும் கால போகமும்!

இவ்வாறு காலத்தை வீணாக்குபவர்கள், "கால சர்ப" வகை தோஷங்களுக்கு ஆளாகின்றார்கள். மனித உணர்வுடன் வாழும் ஏனைய ஆண்டுகளில் மிக மிக கவனமாக வாழ வேண்டும்!  நிமிடத்திற்கு நிமிடம் கர்ம வினைகள் பெருக்கப்படும் காலமிது!  தன் வாழ்வின் உணவு, காற்று, உணர்ச்சி, நாடிகளில் ஒவ்வொன்றிலும் புனிதத்தைக் கூட்டாது மனிதன் பல தீய கர்ம வினைகளைப் புரிந்து, 120 ஆண்டு ஆயுளை 60, 70, 80 ஆகக் குறுக்கி விடுகின்றான்.

பூஜை, தவம், யாத்திரை, புனித நதி, தீர்த்த நீராடல், தான தர்மம், பிறர் நல்வாழ்விற்கான சேவைகள் போன்ற இறைமை நிறைந்த காரியங்களில் நிரவிடும் நேரமே உண்மையாக, புனிதமாக வாழ்ந்த நேரமாகும். இவ்வாறு இறைப் பணிகளில் செலுத்தும் நேரத்தையே "கால சாரம்" என்பார்கள். இவற்றையே தத்தம் பிறந்த நாளில் ஆத்ம விசாரம் செய்து கணக்கிட்டுப் பார்த்து உணர வேண்டும்.

இவ்வாறாக நற்காரியங்களில் பரிணமிக்க வைக்கின்ற கால சாரமும், பயனற்ற காரியங்களில், வகைகளில், "கழிக்கின்ற" கால போகமும் தவிர இறைநியதிகளாக அமைகின்ற சில கால நியதிகளும் உண்டு.  இதற்குக் கால பாதம் என்று பெயர். ஜோதிட நவாம்ச நட்சத்திரப் பாதங்கள் இவ்வாறு தாம் தோன்றின. அதாவது இந்த நேரத்தில் இன்ன காரியத்தைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற "கால நியதிகளே" அவை!  இவ்வாறு செய்யாவிட்டால், அதாவது குறித்த காலத்தில் குறித்தவற்றைச் செய்யாவிட்டால், காலத்தை விரயமாக்கி நிந்தித்த தோஷங்களும் வந்து சேர்ந்திடும்.

நேரப் பண்பு அறிந்தால் கால சர்ப தோஷம் வாராதே!

எனவே கால தேவதா வழிபாட்டிற்காகவே மனிதன் அனைத்துக் காரியங்களையும் ஒத்தி வைத்து விட்டு ராகு காலம், எமகண்டம், கரிநாள், பிரபலாரிஷ்ட யோக நாள் (கூடா நாள்) போன்ற நேரங்களில், நாட்களில் இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுதல் வேண்டும். இவ்வாறு வழிபாட்டில் மட்டுமே பரிபூரணமாக ஈடுபட வேண்டிய ராகு காலம், எம கண்ட காலமே காலப்போக்கில், மனித குலத்தால் அசுப காலம், அசுப நேரமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. சாதாரண நாளில் ஒன்றரை மணி நேர பூஜையில் கிட்டும் பலன்கள், ராகு கால பூஜையில் பன்மடங்காகப் பெருகுகின்றது என்றால் ராகு காலத்தை "அசுப நேரம்" என்றா எண்ணுவது? பலன்கள் பல்கிப் பெருகும் "ஆண்டவனுக்கான பூஜா" வழிபாட்டு நேரமென உணர்ந்து, தக்க வகையில் ஒரு நேரத்தைப் பயன்படுத்துதல் தானே இறைப் பகுத்தறிவு! எந்த நேரத்தில் எந்தக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கால காரிய நியதிக்கு ஏற்பச் செயல்படுவதே மனிதப் பிறவி எடுத்ததின் காரண காரியங்களில் ஒன்றாம். இதுவே உண்மையான இறைப் பகுத்தறிவாம்!  இவ்வாறு எப்போதும் கால உணர்வுடன் பரிணமிப்பதே "அறிவு" என்பதாம்.

சுவாச இலக்கணங்களை அறிவீர்!

பிராண வாயு (oxygen) என்று சொல்லப்படுகின்ற "ஜீவ சக்தி வாயுவில் அமிர்த ஜீவ சக்தி" இருப்பதால் தான் நாம் ஜீவிக்கின்றோம். ஒவ்வொரு ஜீவனின் உடலில் உள்ளேயும் பிரகாசிக்கும் ஆத்மாவில் ஆத்ம அமிர்தம் சுரக்கின்றது. பரவெளியில் இருந்து நாம் பெறும் பிராண வாயுவில் இருக்கும் ஜீவ அமிர்தம், ஆத்ம அமிர்தத்தின் சக்தியோடு சேரும் போது, உடலில் (ஜீவ சக்தியின் வடிவில்) "உயிராகப்" பரிணமிக்கின்றது.

அமிர்த யோகம் என்பது பிரபஞ்சத்தில் வான்வெளியில், வாயு மண்டலத்தில், அமிர்த சக்தியின் வளம் பெருகும் நேரமாம்!  சித்த யோகம் என்பது ஆத்மம் உறையும் நம் தேகத்தினுள் நிறையும் உள் பிரபஞ்சத்தில் அமிர்த சக்தி வளம் பெருகும் நேரமாம்!

மரண யோக நேரம் என்பது மேற்கண்ட இரண்டு அமிர்த சக்திகளின் சக்தி மறையும் நேரமாம்! அதாவது அமிர்த, சித்த சக்திகள் மறைவு படும் காலமே மரண யோகமாகும்! இவ்வகையில் ராகு காலமும், எம கண்டமும், பிரபலாரிஷ்டமும், திதி சூன்ய நேரமும் ஜீவ சக்தி மங்கும் நேரமாகின்றது! உள் தேகப் பிரபஞ்சத்தின் ஆத்ம அமிர்தம் என்றும் வளம் குறையாத சிரஞ்சீவித் தன்மை கொண்டது என்றாலும் அழியும் தன்மை உடைய சரீரத்தில் (உடலில்) அமிர்த சக்தி ஓட்டம் நிகழ்வதால், உடல் உறுப்புகளின் ஆரோக்ய சக்தி குறைவதால், அமிர்த சக்திப் பரிமாணமும் தாமதமாகும். இதுவே நோயின் அறிகுறியாம்.

எனவே தான் மரண யோகத்திலும் எந்த சுப காரியத்தையும் செய்யாது, ஜீவாமிர்தச் சக்திகளைப் பெருக்கும் வழிபாடுகளை மேற்கொண்டு "ஜீவ அமிர்த சக்தி" குறைவுபடாது கவனிப்பாக இருக்க வேண்டும்.

கூடா நாளில் என்ன, ஏது செய்வீர்?

கூடா நாளில் சாதாரண காரியங்களை மேற்கொள்ளாது முற்றிலுமாக வழிபாடுகளிலேயே இந்த பிரபலாரிஷ்ட யோக நேரத்தை நிரவியாக வேண்டும். இன்னும் சொல்லப் போனால், கூடா நாள் வருவதை முன் கூட்டியே உணர்ந்து கூடாநாளில் "உப்பு, காய்கறி" போன்ற தினசரி பொருட்களை வாங்குவதைக் கூட தவிர்த்திடுதல் மிகவும் நல்லதாம். ஆபிஸிற்கு, வியாபாரத்திற்கு விடுமுறை தந்து பூஜைகளில் ஈடுபடுதலும் உத்தம சமுதாய சேவையேயாம்.

எனவே பிரபலாரிஷ்ட யோகம் தொடங்கும் நேரம் முதல் முடியும் காலம் வரை முழுதும் இறைப் பணிகளில், பூஜைகளில் ஈடுபட்டிருத்தலே உத்தமமானதாம்! கூடா நாளில் ஆற்றும் பூஜைகள் மகத்தான தேசியப் பணியாக, உலகளாவிய மக்கள் சேவையாகவும் அமைகின்றது. ஏனென்றால், இதைப் பற்றி உலகில் பலரும் அறியாது, அக்கறை கொள்ளாது ஆங்காங்கே சர்வ சாதாரணமாகப் பணிகள் நடப்பதால், நம் பூஜையின் பலாபலன்கள் பல்கிப் பெருகிப் பலரையும் காக்கின்றது. இதனால் கர்ம வினைகளின் வேகத்தையும், விளைவுகளையும் கூடா நாள் பூஜா பலன்கள் ஓரளவேனும் தணிப்பதோடு, பல நல்லோர்களும், பெரியோர்களும் பெரும் துன்பங்களில் இருந்து காப்பாற்றப்படுவர்.

கூடா நாளன்று பெருமாளுக்குரிய திவ்ய பிரபந்தம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற மந்திரங்கள், திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிகம், "வளர் சிகை" எனத் தொடங்கும் விநாயகர் அகவல், ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர், ஸ்ரீபைரவ மூர்த்திகளுக்கான காயத்ரீ மந்திரங்கள், துதிகளை இடைவிடாது ஓதி சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி வழிபடுதல் வேண்டும்.

கூடாநாளில் பிறந்த சித்ரபானு வருடம்!

சித்ரபானு வருடத்திலிருந்து மிகவும் முக்கியமாக தினமும் வழிபட வேண்டிய மூர்த்திகளாக, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீமிருத்யுஞ்ஜயர், ஸ்ரீபைரவ மூர்த்திகளைச் சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். எனவே கூடா நாளில் பிறக்கின்ற சித்ரபானு ஆண்டின் வருடப் பிறப்பில் முதல் 15 நிமிடங்களைத் தவிர, 14.4.2002 ஞாயிறு அன்று முழு நாளுமே கூடா நாளாக அமைந்து விட்டதால் எதிர்வரும் பல துன்பங்களை இது குறிக்கின்றது.

எனவே உலக ஆன்மீக மையமாக விளங்கும் புனிதமான பாரத நாட்டுப் பிரஜைகளாக நாம் விளங்குவதால் நாம் ஆற்ற வேண்டிய உலக பூஜைக் கடமைகளும் உண்டு. இதற்காகத்தானே வானளாவிய கோயில்கள் பாரதத்தில் உள்ளன!  நம் நாட்டையும் உலக நாடுகளையும், உலக ஜீவன்களையும் காத்து ரட்சிக்க வேண்டிப் பல சமுதாய வழிபாடுகளும் தான் ஆலயங்கள் மூலமாக உலக ஜீவன்கள் யாவர்க்கும், யாவைக்குமாய் நடைபெறுகின்றன!

"கூடா நாட்களாக வரும் குறித்த ஏழு நட்சத்திர, கிழமைக் கூட்டில், இந்த ஏழு, நட்சத்திரங்களின் மகிமை சற்றே மாசுபடுவது போல் எண்ணம் ஏற்படுகின்றதே" என்று நீங்கள் கேட்டிடலாம். 27 நட்சத்திரங்களுமே மிகவும் சக்தி வாய்ந்தவையாகவே விளங்குகின்றன. மக்களுடைய அறியாமையால் தாம் ஆயில்யம், கேட்டை எனச் சில நட்சத்திரங்கள் பற்றித் தவறான கருத்துகள், காலப் போக்கில் முளைத்து விட்டன. ஜோதிடர்கள் யாவரும் 27 நட்சத்திர வழிபாடுகளைத் திறம்பட எடுத்துரைக்க வேண்டும். நல்ல நட்சத்திரங்கள், தகாதவை என்ற பாகுபாடுகள் கிடையா!  சந்திர பகவானின் 27 நட்சத்திர மனைவி தேவ மூர்த்திகளும் ஒவ்வொரு ஜீவனாலும் தினமும் வழிபட வேண்டியவர்களே!

நட்சத்திரங்கள் நன்மையே பயக்கும்!

உதாரணமாக, எவ்வளவு கொடிய வியாதியாக இருந்தாலும், ஆயில்ய நட்சத்திர நாளில் மருந்து உட்கொள்ளத் தொடங்கினால் வியக்கத்தக்க முறையில் அதி விரைவில் குணம் பெற்றிடலாம். தேய்பிறை ஆயில்ய நட்சத்திர நாள் கிடைத்தற்கு அரிய மருத்துவ குண நாள், இந்நாளில் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி, ஸ்ரீம்ருத்யுஞ்ஜயேஸ்வரர், ஸ்ரீவைத்யநாதர், ஸ்ரீமருந்தீஸ்வரரைப் பூஜித்து வர நோய் நிவாரண குணங்கள் துரிதமாக வந்தடையும். பல சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் மருந்துகளைத் தயாரிக்க, மருத்துகளை அறிந்திட, குறித்த மூலிகைகளைப் பறித்திட தேய்பிறை ஆயில்ய நட்சத்திர நாளுக்காகக் காத்திருப்பர்.

மருத்துவர்கள் யாவரும் மருத்துவ தேவர்களுக்கு உரிய அஸ்வினி நட்சத்திர  நாளிலும், மகத்தான மருத்துவ சக்திகள் நிறைந்த ஆயில்ய நட்சத்திர நாளிலும் ஸ்ரீகருட காயத்ரீ மந்திரம் ஓதி வேம்பு, அரசு இணைந்த விருட்சங்களை 108 முறையேனும் சுற்றி வந்து வழிபட்டால் மருத்துவத் துறையில் அபாரமான சீரும் சிறப்பும் பெற்றுப் புகழுடன் விளங்குவர். இப்போதாவது தெரிகின்றதா ஆயில்யத்தின் மகிமை?

72000 நாடி, நாளங்களை உடைய மனித சரீரத்தில் மிகவும் முக்கியமான 27 நட்சத்திர க்ரந்திகள் (நாள முடிச்சுகள்) உள்ளன. இவை யாவும் ஜீவபாவன சந்திர முடிச்சுகள் எனப்படும். இவற்றை யோகப் பூர்வமாக இணைப்பவையே கை, கால்களில் உள்ள ரேகைகளும், தலைச் சுழியும் ஆகும்.

கூடா நாள் திருத்தப்பட்ட கர்ம வினைகள் மீண்டும் திரும்பும் நாள்!

கை, கால் ரேகைகள், கைகளுக்குக் கீழே உள்ள வளையங்கள், தலைச்சுழி இவற்றால் ஜீவன்களின் கர்மச் சுமைகளை ஓரளவு ஏற்று அனுபவித்துத் தணித்திடும் அதியற்புத நட்சத்திர மூர்த்திகள் எழுவர் உண்டு.  இவர்களே பரணி, சித்திரை, உத்திராடம், அவிட்டம், கேட்டை, பூராடம், ரேவதி ஆகிய ஏழு நட்சத்திர மூர்த்திகள் ஆவர். தியாக சீல நட்சத்திர மூர்த்திகள்!  இந்த எழுவரும் அனைத்து 27 நட்சத்திரக்காரர்களுடைய கர்ம வினைகளைத் தொகுத்து, வடித்து, பகுத்து பிரபலாரிஷ்ட யோக நாட்களில் ஜீவன்களுக்குத் திருப்பி அளிக்கின்றனர்.

இவ்வாறாக 27 நட்சத்திர தேவ மூர்த்திகள் ஜீவன்களுடைய கர்மச் சுமைகளைத் தாம் ஏற்று, தணித்து, சீரமைத்தி, சீர்திருத்தி, கழித்து, அடக்கியது போக மிஞ்சிய திருத்திய பதிப்பாக வருகின்ற கர்ம வினைகளையே மனிதன் தன் வாழ்க்கையில் தாங்க இயலாது "குய்யோ முறையோ" என அலறுகின்றான் என்றால் அவனுடைய கர்ம வினைகளின் முழு சுய ரூபத்தையும் அவனே கண்டிட்டால்.....என்ன ஆகும்!  சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

மனிதனுடைய தினசரி வாழ்வில் வார தேவதா மூர்த்திக்கான ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு கிழமைகளும், கர்ம பரிபாலனத்தில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. இவர்களுடைய அருட்பணிகளுடன் சேர்ந்தே இருப்பத்து ஏழு நட்சத்திர மூர்த்திகளும் நம் கர்மச் சுமைகளைத் தணிக்க அரும்பாடுபடுகின்றனர். எனவே தாம் வார நட்சத்திர இணைப்பாக சித்தயோகம் போன்ற யோக காலங்கள் உருவாகின.

திருக்கோளக்குடி

வாரதாரகர் சித்தர் பெருமான் தரும் பைரவ தபோ சக்திகள்!

வாரதாரகர் (வாரம்-கிழமை; தாரகை-நட்சத்திரம்) என்னும் ஓர் அற்புதச் சித்தர் பிரானே பைரவ மகரிஷிகளுக்கான சற்குரு ஆவார். இவர் தம் வழித்தோன்றல்களே காலவ மகரிஷி, அமாவாசைச் சித்தர் போன்றோர் ஆவர். வாரதாரகர், பூரண அமாவாசை தினத்தில் சூரிய கிரணத்தின் உச்சத்தில் சூரிய, சந்திர சங்கமக் கோளத்தில் பிறந்து, பிறந்த குழந்தையாகவே பலருக்கும் ஞானம் புகட்டியவர். பிரசித்தி பெற்ற ஞானேஸ்வர மகானுக்குச் சூட்சுமமாக ஞானோபதேசம் தந்த சற்குருமார்களில் ஒருவர். சூரிய, சந்திர கோளச் சங்கமத்தில் உதித்தவர். ஆதலால் அனைத்துக் கோடி சூரிய, சந்திர நட்சத்திரங்களையும், அனைத்துக் கோளங்களையும் பகலிலேயே தரிசிக்கும் நேத்ர சக்தி உடையவர். இவர்தாம் கோள்களின் சங்கமங்கள் போல கிழமையுடன் நட்சத்திர யோகச் சங்கமங்களை உருவகித்து, உருவாக்கி, பூலோகத்திற்கு ஏழு நாட்களாக வடித்துத் தந்தார். நாள், நட்சத்திர யோக கால சூத்திரங்கள் யாவும் இவர் வடித்தவையே. அற்புதமான ஸ்ரீகால பைரவர் உபாசகர்!

ஆரியபட்டர், வராஹ மிஹிரர் போன்றோர் வாரதாரகர் சித்தரின் தரிசனமும், ஆசியும் பெற்று வானவியல், ஜோதிட இயல்களின் நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கின்றார்கள். பிரபலாரிஷ்ட யோக நாளை, மனித குல நலனுக்காக வடித்துத் தந்தவரும் இவரே! எவ்வாறு? ஜோதிடர்களால் தினமும் வழிபடப்பட வேண்டிய கால தேவ லோகச் சித்தர் பிரானே வாரதாரகர் ஆவார். ஸ்ரீகால காளேஸ்வரர் மற்றும் கால பைரவர் மூல மூர்த்தியாய் உள்ள ஆலயத் தூண்களில் இவருடைய திவ்ய ரூபத்தைத் தரிசித்திடலாம். புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோளக்குடி ஆலயத்தில் தினமும் சூட்சும ரூபத்தில் தமது நித்ய வழிபாட்டைச் செய்கின்றவர். சென்னை அருகே கூவம் சிவாலயத்தில் (தீண்டாத் திருமேனியராக உள்ள) சிவலிங்கத்தைத் தினமும் சூட்சுமமாகப் பூஜிக்கும் அற்புதச் சித்தர்.

நம் கர்மச் சுமைகளைத் தணிக்க நட்சத்திரங்கள் பெற்ற நல்வரங்கள்!

ஒருமுறை அனைத்து நட்சத்திர மூர்த்திகளும் பிரபஞ்ச காலத்தைப் படைக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண கால பைரவரிடம் சரணடைந்து "சுவாமி!  எங்கள் நட்சத்திரங்களில் பிறப்போர், எதிர்வரும் பல யுகங்களிலும், குறிப்பாகக் கலியுகத்தில் பல கர்ம வினைகளினால் துன்பப்பட இருக்கின்றார்கள்!  புனித நதிகளுடன் சேர்ந்து நாங்கள் எவ்வளவுதாம் அவர்களுடைய கர்மச் சுமைகளை ஏற்றுத் தணித்தாலும் மனித குலத்தின் பலவிதமான கர்ம வினைகளை எங்களால் சற்றும் கூடத் தணிக்க இயலவில்லை. மேலும் அவற்றுள் பெரும்பாலானவற்றை நாங்கள் சுமக்க இயலாது தவிக்கின்றோம். தாங்கள் தாம் எங்களுடைய ஜீவ காருண்ய சேவையானது தடைபடாது தொடர்ந்திடவும் மானுடர்களின் கழிக்க இயலாக் கர்மவினைகளைக் கரைக்கவும் தக்க நல்வரங்களை அருள வேண்டும்!" என்றும் வேண்டினர்.

ஸ்ரீகாலபைரவரும், "நீங்கள் கேட்பதே விநோதமாக இருக்கின்றதே! அவரவர் கர்ம வினையை அவரவர் அனுபவிக்க வேண்டும் என்பது தானே சிருஷ்டி நியதி! அனைத்துக் கர்ம வினைகளையும், சற்குருமார்களும், நீங்களுமே ஏற்பதானால் தம் வினைகளை ஏற்கத்தான் பலர் உள்ளனரே என மனிதர்கள் பலரும் அசுர குணங் கொண்டு, தலைக்கு தலை அதர்மங்களைச் செய்ய ஆரம்பித்து விடுவார்களே! எனவே யாம் ஒரு தீர்வைத் தருகின்றோம்."

கால பைரவர் தந்த யோக காலக் கோட்பாடு!

"மனித குலத்தின் அனைத்துக் கர்ம வினைகளையும் எவராலும் தாங்கும் சக்தியை யாம் எவருக்கும் அளிக்கவில்லை! எனினும் மனித வாழ்வில் நட்சத்திரங்கள், நாட்களின் தன்மையும் பிணைந்து இருப்பதால், கடுமையான கர்ம வினைகளை நட்சத்திர மூர்த்திகளும், வார மூர்த்திகளும் சற்றே தாங்கி, சீரமைத்து, திருத்தி அளித்திடுவதற்கான வாய்ப்புகளை உங்களுக்கு நல்வரங்களாக அளிக்கச் சித்தமாயுள்ளோம்! மனித குலத்தின் சிலவகைக் கர்ம வினைகளை ஏற்றுத் தணித்தும், பக்குவப்படுத்தியும் பிறகு இவ்வாறு தங்கி உள்ளதைத் தக்க தீர்வுகளுடன், குறித்த நட்சத்திர, வார நாளில், மனித குலத்திற்கே திரும்பி அளித்திடும் சக்தியை உங்களில் வார தாரக சக்திகளை உடைய ஏழு நட்சத்திரங்களுக்கு அளிக்கின்றோம்! மனித குலம் தெய்வீக ரீதியாகத் தழைக்க சித்தயோகம், அமிர்த யோகம் போன்ற  யோக காலப் பாகுபாடுகளும் இதற்காக அளிக்கப்படும், கோடானு கோடி ஜன்மங்களாகக் கூடி வரும் தங்கள் வினைகள் யாவற்றையும் ஜீவன்களால் அனுபவிப்பது என்பது மிகவும் கடினம். எனவே தாங்கள் அனைவரும் அவற்றைச் சற்றே சுமந்து, சீர் செய்து, உங்களுடைய தவ நிலைகளால் தக்க ஆன்மத் தீர்வுகளோடு பாரம் சற்றே குறைந்த நிலையில் ஆக்கிடுக!"

"பிறகு குறித்த ஏழு நாட்களில் மனிதர்கள் அனுபவித்து அவற்றைக் கழித்திட, பிரபலாரிஷ்ட யோக (கூடா) நாட்களில் உங்களில் எழுவர் மனித குலத்திற்கு அவற்றை மீண்டும் திரும்பி அளித்திட வேண்டும்!  கர்ம வினைகளை நட்சத்திர மூர்த்திகளாகிய நீங்கள் சாரப்படுத்தித் திருப்பி அளிக்கின்ற அருந்தொண்டே பல விதங்களில் மனித குலத்திற்கே பெரும் பரிசாக ஆகின்றது!" என்ற தீர்வைத் தந்து அருளினார்.

இறைவன் படைப்பில் அனைத்தும் காரண, காரியங்களைக் கொண்டவையே! எனவே இவ்வாறாகக் கூடா நாட்கள் பிறந்ததும் நம் நன்மைக்காகவே!

தணிந்த கர்ம வினைகளைப் பணிந்து ஏற்று அனுபவித்தலே உத்தமமானது!

இவ்வாறாக நம்மால், மனித குலத்தால் தாங்கி அனுபவிக்க முடியாத கடுமையான கர்ம வினைகள் பல உண்டு. கோடானு கோடிப் பிறவிகளில் அவற்றை மாய்ப்பதும் கூடக் கடினமே! அந்த அளவிற்கு விநாடிக்கு விநாடி, எண்ணங்களாலும், செய்கைகளாலும் பலத்த கர்ம வினைகள் நமக்குக் கூடுகின்றன! எனவே ஏழு நட்சத்திர மூர்த்திகள், குறித்த வார (கிழமை) மூர்த்தியுடன் இணைந்து நல்வரங்களையும் கூட்டித் திருத்திய பதிப்பாக நம்முடைய "மனிதர்களுடைய" கர்ம வினைகளை நமக்கே மீண்டும் அளிக்கின்ற நாட்களே பிரபலாரிஷ்ட யோக நாட்களாகும். நட்சத்திர மூர்த்திகளின் பெருங்கருணையால் தாம் சுமை தணிந்ததாக, சீர்திருத்தப்பட்டதாக இவற்றை நாம் மீண்டும் பெறுகின்றோம்!  இல்லாவிடில் இக்கர்ம வினைகள் கூட்டு வட்டியாய்ப் பல்கிப் பெருகி, மீளாப் பிறவிப் பெருங்கடலில் நம்மை ஆழ்த்திடும்.

எனவே இத்தகைய கூடா நாட்களில் நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள் திருத்தப்பட்டதாக நம்மை வந்து அடைவதால் அதாவது மனம், உள்ளம், உடல் மூன்றிலும் கர்ம பாரம் கூடும் நாட்கள் ஆதலால் மனக் கொந்தளிப்பும், குழப்பமும் சற்றே கூடும். இவற்றோடு வேறு காரியங்களை நடத்தினால் இன்னல்கள் தாமே பெருகும்!  எனவே கூடா நாட்களில் அனைத்துக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். கூடா நாட்களில் மேற்கொள்ளப்படும் இறை வழிபாடுகளுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு! ஆதலால் நம் கர்ம வினைகள் நம்மை மீண்டும் அடையும் (கூடா) நாட்களில் மிக மிக கவனமாக இருப்பதற்காக இவை பெரிதும் துணை புரியும்.

எனவே 27 நட்சத்திரங்கள் மட்டுமன்றி எத்தனையோ கோடி நட்சத்திர தேவதைகள், 72000 நாடி தேவதைகள், 27 நட்சத்திர மண்டல மூர்த்திகள் போன்றவற்றின் ஆசியால் தாம் மனிதப் பிறவியின் ஒவ்வொரு விநாடி வாழ்க்கையும் அமைகின்றது.

தினந்தோறும் 24 மணி நேரமும் நட்சத்திர மூர்த்திகள் தாம் ஜீவன்களுடைய கர்ம வினைகளைத் தணித்தும், ஏற்றும், குணப்படுத்தியும் மனிதனைக் காத்து வருகின்றனர். ஆனால் இறை நியதிப்படி அவரவர் கர்ம வினைகளை அவரவர் கழிப்பதுதானே முறை!  புண்ய நதிகள் யாவும் தம்முள் நீராடும் ஜீவன்களின் கர்ம வினைகளுள் பலவற்றைத் தம்முள் ஏற்று அவ்வேதனைச் சுமைகள் அவர்களைத் தாக்காது அவர்களே இறைவனிடம் மன்றாடி வேண்டிப் பல தீர்த்தங்களிலும் நீராடித் தாம் ஏற்ற சுமையைக் கழிக்கின்றனர்.

ஆனால் கலியுக மனிதர்களில் பெரும்பாலோனோர் இவ்வாறாக புண்ய நதி தேவதைகள் மற்றும் 27 நட்சத்திர மூர்த்திகளாலும் முற்றிலுமாக திருத்திப் பதிக்கப்பட்ட, கழிபட வேண்டிய பெரும் பெரும் தீவினைக் கர்ம வினைகளை அல்லவோ மூட்டை, மூட்டையாகச் சுமந்து வாழ்கின்றனர்.

எனவே கூடா நாட்கள் வரும் போது, கர்மச் சுமை மிகுவதால் (கூடுதல் கர்மச் சுமை வருவது கிடையாது, கடுமை தணிக்கப்பட்டு நமக்கு வர வேண்டியதே, நாம் அனுபவிக்க வேண்டியதே நமக்கு மீண்டும் திரும்ப வருகின்றது) மிகவும் கவனமாக இருந்து, இயன்றால் ஆபீஸுக்கு, வியாபாரத்திற்கு விடுமுறை இட்டு, இந்த பிரபலாரிஷ்ட யோக நேரம், நாள் முழுதும் பூஜைகளால் தான, தர்மங்களால் நிறைத்தலே நமக்கு மிகவும் நல்லதாம்!  மேலும் இப்பிறவிக்குள் நாம் கழிக்க வேண்டிய கர்ம வினைகளை முறையாகக் கழித்தால்தான் அவையும் மேலும் தொடராது. இல்லாவிடில் வட்டியும் முதலுமாக அவை பல்கிப் பெருகிடும்.

பெருநோய்கள், ம்ருத்யு தோஷத்தால் இளவயது மரணம், ஊனம், புத்தி சுவாதீனம் இன்மை, தக்க வளர்ச்சியின்மை போன்றவற்றிற்கும் பலத்த கர்ம வினை விளைவுகளே காரணமாகின்றன. ஜாதி, மத, இன, குல பேதமின்றி இத்தகையோருக்கு அன்பு, கருணை, காருண்யம் கொண்டு காப்பது நம் கடமை ஆகும். ஒருவர் எவ்வகையிலேனும் துன்பம் அடைந்தால், "நீ உன் ஊழ்வினையை அனுபவிக்கின்றாய்!" என்று இடித்துச் சொல்லாது இவற்றின் தன்மையை முதலில் நாம் நன்கு உணர்ந்து கடவுள் நம்மை நன்றாகப் படைத்ததற்காக நன்றி சொல்லி இதற்கு நன்றிக் கடனாகப் பிறருடைய நல்வாழ்விற்காக அரும்பாடு பட வேண்டும். துன்பங்களைப் பற்றி நாமே நன்கு உணர்ந்தால் தானே பிறருக்கு உணர்த்த முடியும்!

கூடா நாளில் நிகழும் காரியங்களுக்குப் பரிகாரம் தற்போது கிடையாது!

எனவே மொத்தத்தில் பிரபலாரிஷ்ட யோக நேரம் துவங்குவது முதல் முடியும் வரை பூஜையிலேயே நேரத்தை நிரவிட வேண்டும். நடப்பு கணித முறையில், சுப முகூர்த்த நாட்களைக் கணிக்கையில், பிரபலாரிஷ்ட யோக நாட்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பலரும் இதனை மறந்து விடுகின்றார்கள். இதனால் எத்தனையோ விழாக்கள், திருமணங்கள், சீமந்தம் போன்ற நற்சடங்குகள் போன்றவை கூடா நாளில் நடந்து மனித குலத்திற்கும், மக்கள் சமுதாயத்திற்கும் பெருந் தீங்குகள் ஏற்பட வழிவகை செய்கின்றன. பல திருமணங்கள், கிரகப் பிரவேசங்கள், சீமந்த விழாக்கள் கூடா நாளில் இதுவரையில் நடைபெற்றுள்ளன என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். இவ்வாறு நடந்திருந்தால் தக்க சற்குரு, பெரியோர்களை நாடிப் பரிகாரங்களைப் பெறவும். கூடா நாட்களில் நடந்த காரியங்களுக்குப் பரிகாரங்கள் பெறுதல் மிக மிகக் கடினமாம்!

கடகடப்பை ஸ்ரீவைத்யராஜேஸ்வரர்

கடகடப்பை ஸ்ரீவைத்யராஜேஸ்வரர் கலியுகத்தின் பிரத்யட்ச நோய் நிவாரண மூர்த்தி!

மூங்கில் தாவரத்திலும் மற்றும் விளக்கு ஒளி, சூரிய ஒளி, சந்திர ஒளி முற்றத்தில், இல்லத்தில் பிரதிபலித்தல் போன்றவற்றிலும் நிறைய வேத சக்திகளை இறைவன் நிறைத்துள்ளான். மூங்கில் விருட்சமானது வாழை போல், நுனி முதல் அடிவேர் வரை வேத சக்திகளைப் பூண்டதாம். வெட்டிவேருக்கு பூமியில் அடியில் அதன் பாதாளத்தில் உள்ள வேத சக்திகளை கிரகித்து வெளிவிடும் தன்மைகள் நிறைய உண்டு. எனவேதாம் வெட்டிவேர் ஊறிய நீரானது வேத கங்கா சக்திகளை அளிக்க வல்லதாம். தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை ஸ்ரீவைத்யராஜேஸ்வரருக்கு (ஸ்ரீராஜ ராஜேஸ்வரருக்கு) வெட்டி வேர் தீர்த்தத்தால் தினமும் செவ்வாய் ஹோரை நேரத்தில் மூங்கில் கலசத்தில் (குவளையில்) வெட்டி வேர் ஊறிய தீர்த்தத்தை நிரப்பி, அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு இளநீர், நீர் மோர் தானமளித்து வர, கட்டிகள் மூலம் கான்சர் போன்ற உஷ்ண வகை நோய்களுக்குத் தக்க தீர்வுகள் கிட்டும்.

இறைவனுக்கு மூங்கில் குவளையால் அபிஷேகிப்பதும், தினமும் எப்போதும் மூங்கில் குவளையில் நீர் அருந்துவதும் மகத்தான வேத சக்திகளை அளித்திடும். காற்றடிக்கும் போது மூங்கிலில் இருந்து எழும் சப்தம் மூலமாக வேத விருட்சமான மூங்கில் வேத பந்தன சக்திகளைப் பரப்புகின்றது. மூங்கில் புதரில் உறையும் பாம்புகள் இந்த வேத சப்தங்களை கிரகித்து, புற்றினுள் யோகப் பூர்வமாக உறைந்து, தன் ஊர்தலாகிய பூமித் தரை நடமாட்டத்தால் இவ்வேத சக்திகளை பிற ஜீவன்களின் நன்மைக்காகப் பரப்புகின்றன!  எனவே தாம் புற்று மண்ணானது சித்த, வைத்ய, ஆயுர் வேத ரீதியாக மகத்தான வைத்ய குணங்களைக் கொண்டதாகப் பயன்படுகின்றது!

மூங்கில் சப்தம் வேத சப்தமே!

மேலும் இரு மூங்கில் கணுக்களுக்கு இடையே இருப்பது வெறும் வெற்றிடமல்ல!  மிகவும் அரிய வேத சக்திகள், மிகவும் நுணுக்கமான வேத சப்த நாள் வடிவுகளில் உள்ளே நிரப்பப்பட்டுள்ளன. வேத இசைவுகள்

கண்ணாடி வேத இழை
பன்னாகப் பாதஉறை
தண்ணாய் மூங்கிலின்கண்
கண்ணா! உன் திருவாயுறை!

- என்பது சித்தர்களின் பரிபாஷை! அதாவது கண்ணாடிக் குழியில் எவ்வாறு நுண்ணிழையாக வடிவங்கள் சேர்கின்றனவோ, அதே போல மூங்கிலின் அசைவு, மூங்கில் புதரில் வசிக்கும் நல்ல பாம்பின் அசைவுகள், ஸ்ரீகண்ண பரமாத்மாவின் திருவாயில் பரிமளிக்கும் புல்லாங்குழல் கீத அசைவுகள் யாவும் வேத சக்திகள் நிறைந்தவையாம்!

ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த ஆலயத்தில் ஸ்ரீவைத்யநாத தூபம் ஏற்றி வலம் வருதலால் பல கடுமையான நோய்களுக்கும் தக்க தீர்வுகள் கிட்டும்.

வேத சக்திகள் நிறைந்த அகத்தி, அரசு, புரசு, வாழை, ஆலமரம், வேம்பு, வல்லாரை, பொன்னாங் கண்ணி போன்றவற்றை வலம் வருதல், தரிசித்தல், தொட்டு வணங்குதல், உணவாக ஏற்றல் போன்ற பல வகைகளில் நாம் வேத சக்திகளைப் பெற்றால் தான் கலியுகத்தில் மங்கி வரும் வேத சக்திகளில் ஒரு சிறிதளவேனும் நாம் பெற முடியும். இன்றும் பல நாடுகளில் சட்டப்பூர்வமாக, காவல் துறை, ராணுவம், ஆட்சி முறை மூலமாகத் தீர்வே காண முடியாத வகையில் பெருகி வரும் வன்முறைகள், தீய சக்திகளுக்கு ஆன்மீக ரீதியாகத் தீர்வு காண தக்க சற்குருமார்கள் மூலம் வேத பூர்வமாகத் தக்க முடிவுகளைப் பெறுதலே சிறப்பானதாம். அனைத்து நாட்டு மக்களுக்கும் உரித்தானதே நம் ஆலய பூஜா பலன்களாம்.

வேதங்களை ரட்சிக்கும், வேத சக்திகளை அருளும் வேதபுரீஸ்வரியாகவும்,  தாவரங்களைப் படைக்கும் ஸ்ரீசாகம்பரீ தேவியாகவும், ஆதி பராசக்தி பல அவதாரங்களைப் பூண்டு நமக்கு அருள்புரிகின்றாள். குறிப்பாக, கலியுகத்தில் மனித குலம் வேத சக்திகளை அலட்சியப்படுத்தும். இதனால் உலகமளாவிய அளவில் பெருமளவு வேத சக்திகள் மறைவுபட்டுத் தீயொழுக்கமும், தீய சக்திகளும் பெருகும் என்பதால் தான் ஸ்ரீசாகம்பரி தேவி கலியுகத்திற்காகவே மூங்கில், அருகம்புல், வில்வம், துளசி, கொன்றை, சரக் கொன்றை போன்ற தாவரங்களிலும், மூலிகைகளிலும் வேத சக்திகளை நன்கு நிரவி உள்ளாள். இவற்றின் தரிசனமே பலவிதமான வேத சக்திகளைப் பெற்றுத் தருவதாம். எனவே இவை தல விருட்சங்களாக உள்ள ஆலயங்களில் நிறைய பூஜைகளை மேற்கொண்டால் பெருகும் வேத சக்திகள் மூலம் பல தீவினை சக்திகளை எளிதில் தணித்திடலாம்.

தூபங்களில் வேத சக்தி துரிதமாய் நிறையுமே, நிரவுமே!

சில வகை ஹோம, ஊதுபத்தி, சாம்பிராணி, தூபங்களில் மேற்கண்ட மூலிகைகளின் சாராம்சம் சேர்க்கப்பட்டு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவற்றில் அக்னி செறியும் போது அரிய வேத சக்திகள் இல்லம், ஆலயம் முழுதும் நிரவுகின்றன! இதனால் மனம், உள்ளம், உடலுக்கு எளிமையான வாயு பூர்வமாக வேத சக்திகள் கூடுவதுடன் தெய்வீகமான மன சாந்தத்தையும் அளிக்கின்றன. மயில் தோகை விரித்து ஆடுதல், காக்கைக் கூட்ட தரிசனம், ஒரு நாளில் குறைந்தது 21 கருடன்களின் தரிசனம், பச்சை நிற மரகத மீன் தரிசனம், இனிய நாதஸ்வர இறையொலி, குழந்தைகளின் பால் வடியும் முகம், அன்னதானத்தில் ஏழைகளின் முகத்தில் பொங்கும் ஆனந்தம் போன்றவற்றிலும் அம்பிகையானவள் வேத சக்திகளைப் பொழிந்து அருள்கின்றாள்.

சிவபுரி பைரவ மூர்த்தி

சிவபுரி ஸ்ரீஇடிகபாலந் தாங்கி சரகபால மாலா பைரவ மூர்த்தி!

தீய சக்திகள், வன்முறைகளில் இருந்து ஜீவன்களைக் காக்கும் பைரவ மூர்த்தி!

சாந்தம், இறைவளம் நிறைந்த புதுமை, அற்புத தெய்வீக சாதனைகளை அடைய வைக்கும் பைரவ மூர்த்தி!

கோயம்புத்தூர் அருகே வெள்ளலூர் சிவபுரியில் அமைந்திருக்கும் ஸ்ரீதேனீஸ்வரர் சிவாலயத்தில் அருள்பாலிப்பவரே ஸ்ரீஇடிகபாலந் தாங்கி சரகபால மாலா பைரவ மூர்த்தியாவார். சித்தர்களுடைய வழிபாட்டு பைரவ மூர்த்தி!

ஸ்ரீகல்யாண கணபதி வெள்ளலூர்

சித்ரபானு ஆண்டு வருடப் பிறப்பானது ஞாயிறும், பரணியும் சேர்ந்த பிரபலாரிஷ்ட யோக (கூடா நாளில்) அமைந்ததின் விளைவாக இவ்வாண்டில் உலகெங்கும் வன்முறைகள், கொடூரங்கள் அதிகம் நிகழும் ஆதலின் உலகைச் சூழும் வன்முறை தீய சக்திகளிடம் தற்காத்துக் கொள்ளவும், பைரவ ரட்சா சக்திகளைப் பெறவும் ஸ்ரீகால பைரவ வழிபாடு, ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி வழிபாடு, ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு ஆகிய மூன்றுமே முக்கியமானவையாம்.

மனிதன் முதலில் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான புண்ய சக்தியைப் பெற்றிருந்தால் தானே, தியாக சமுதாய இறைப்பணியாக பிறரையும் காப்பாற்றும் அற்புதமான தெய்வீகச் சேவைகளை ஆற்ற முடியும்! ஒவ்வொரு மனிதனும், தன் உடல், மனம், உள்ளத்தில் மூன்றிலும் தக்க இறை வளத்தைப் பெற கலியுகத்தில் உதவுவதே ஸ்ரீகால பைரவர், ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடுகளாம்.

சித்தர்களின் பைரவ கிரந்தங்கள்!

ஸ்ரீகாலபைரவ பூஜை பற்றியதான சித்தர்களுடைய அம்பலக் கட்டு, கிடுக்கு சூத்திரம், தும்புழா ஆகிய மூன்று பிரம்மாண்டமான கிரந்த நூல்கள் உண்டு. இவை தாம் பிரபஞ்சத்திலுள்ள பைரவ பூஜா தேவ ரகசியங்கள் பற்றி எண்ணற்ற காண்டங்களில் நன்கு விளக்குகின்றன. இவை மூன்றுமே கலியுகத்திற்கு உரித்தானதாக சித்புருஷர்கள் மூலம் உணரப் பெறுவதாக ஸ்ரீகாலபைரவ மூர்த்தியால் அளிக்கப்பட்டு உள்ளன. இவை தவிர மேலும் உள்ள 108 பைரவ சித்தாந்த பூஜா கிரந்தங்கள் யாவும் சித்தர்களின் வசம் உள்ளன. பைரவ உபாசனை என்பது கடினமான, மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு எனினும் அபரிமிதமான நல்வரங்களை மிக எளிதில் பைரவ வழிபாட்டின் மூலம் பெறலாம்.

பொதுவாக அஷ்டமி திதி, குறிப்பாக தேய்பிறை அஷ்டமி திதியானது, ஸ்ரீகால பைரவ வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமானதாகும். அதியற்புதத் தெய்வீக சக்திகளையும், நற்காரிய சித்திகளையும் பெற்றுத் தருவதுடன் துர்சக்திகள், தீயசக்திகளிடம் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகின்றன.

கலியுக நடப்பு காலத்திற்கான தும்புழா பைரவ பூஜை முறைகள்!

பைரவ வழிபாட்டு முறைகளில் தும்புழா பைரவ பூஜைகளே நடப்பு காலத்திற்கு மிகவும் ஏற்றதாகச் சித்தர்களால் அருளப்பட்டு உள்ளது. இவ்வுலக ஜீவன்கள் நன்கு ஜீவித்திடவும், உலக நாடுகள் நலம் பெறவும், உலக மக்கள் நன்முறையில் மனவளம், தைரியம், பெற்று பக்தியுடன் வாழவும், ஜீவ சுபிட்சம் பெருகுதற்குமான பல வழிமுறைகள் தும்புழா கிரந்தத்தில் அளிக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீஅகத்திய பெருமான் வெள்ளலூர்

தும்புழா பைரவ கிரந்தத்தில் சித்ரபானு ஆண்டு முதல் இப்பூவுலகில் மட்டுமின்றி இப்பிரபஞ்சத்திற்கு உரித்தான பைரவ தெய்வ மூர்த்தியாக "ஸ்ரீஇடிகபாலந் தாங்கி சரகபால மாலா பைரவர்" எனும் பெயருடைய மூர்த்தியை வழிபாட்டிற்காக நமக்கு அளிக்கின்றார்கள். தேய்பிறை அஷ்டமித் திதியில் ஸ்ரீசரகபால மாலா பைரவரை முறையாகத் துதிப்பதால் பல அனுகிரக வரங்களையும், சகாயங்களையும், அளப்பரிய பலாபலன்களையும் பெற்றிடலாம். மஹா புண்ய சக்திகளையும், நல்வரங்களையும் தரக் கூடிய ஸ்ரீசரகபால மாலா பைரவ வழிபாடே சித்ரபானு வருடத்தில் ஒவ்வொரு தனி மனிதனையும் நன்முறையில் காத்து ரட்சிக்கின்றது. மகத்தான இறைச் சமுதாயப் பணியாகவும் இவ்வழிபாடு அமைகின்றது.

பலவித கோர சம்பவங்கள், வன்முறைகள், கொலை, கொள்ளை போன்ற தீய சக்திகளிடம் இருந்து காத்து ஜீவன்களை ரட்சிக்கும் அற்புத பைரவ மூர்த்தி, எத்தகைய குழப்பங்கள், கலவரங்கள், தீய விளைவுகளிலும் இருந்து தனி மனிதனையும், சமுதாயத்தையும் காக்கும் பைரவ வழிபாடு இது!  சித்தர்கள் இட்ட அபூர்வமான இறைநாமத்தைத் தாங்கி அருளும் சிவபுரி ஸ்ரீஇடிகபாலந் தாங்கி சரகபால மாலா பைரவ மூர்த்தியே கலியுகத்தில் எத்தகைய பேராபத்துகளில் இருந்தும் பைரவ சக்தி மூலம் நம்மைக் காத்தருள்பவராம்!

ஒவ்வொரு அஷ்டமித் திதியிலும், குறிப்பாக, தேய்பிறை அஷ்டமித் திதியில் (அமாவாசையிலிருந்து எட்டாவது திதி)

சிவபுரி ஸ்ரீசரகபால மாலா பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும் செய்து, பைரவ தூபம் ஏற்றி, தூபம் முடியும் வரை வலம் வந்தும், அமர்ந்தும் வழிபடுவதாலும்,

இரவு பகலான இரு கால அம்சங்களைக் குறிக்கின்ற முழு முந்திரிப் பருப்புகளால் ஆன மாலைகளைச் சாற்றித் துதித்தலாலும்,

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் போன்றவற்றில் நிறைய முந்திரிகளைச் சேர்த்து ஏழைகளுக்குத் தானமளித்தலாலும் அபரிமிதமான பைரவ நல்வர சக்திகளைப் பெற்றுச் சாந்தமான நல்வாழ்க்கையைப் பெற்றிடலாம். வெளியில் சொல்ல இயலாதவாறான பெருந் துன்பங்களுக்கு ஆட்பட்டோரும் நல்ல தீர்வுகளைப் பெறுவர்.

சித்தர்கள் யுக யுகங்களாகப் பூஜித்த பைரவ மூர்த்தி!

வெள்ளலூர்

நவநாத சித்த லோகத்தைச் சார்ந்த ஆறு சித்தர்கள் ஐக்கியமாகி உள்ள பைரவ மூர்த்தியாதலாலும், சுருக்காட்டு ஆசான், உண்டிவில் சித்தர், கௌளிமுனிச் சித்தர் போன்ற ஆறு சித்தர்கள் இம்மூர்த்தியைப் பல கோடி யுகங்களாக தரிசித்தும், பூஜித்தும் காந்த ஒட்டம் எனும் வாசி யோகத்தில் அமர்ந்தபடி, பல கோடி யுகங்கள் பூஜித்தும் நமக்களித்த பைரவப் பெரு மூர்த்தியாம்!  ஸ்ரீசரகபால மாலா பைரவ மூர்த்தியின் திருவடிகளில் உய்ந்து பைரவ நல்வரங்களையும் அற்புத இறை சக்திகளையும் சித்தர்கள் பெற்றுத் தந்துள்ளார்கள். யாவரும் வரும் யுகங்களில், குறிப்பாகக் கலியுகத்தில், இந்த யுகத்தின் சித்ரபானு ஆண்டிலிருந்து பலவிதமான தீய சக்திகள் மக்களைத் துன்புறுத்தும் என்பதால் மக்களைக் காக்க பைரவ சக்தியே பெரிதும் துணை புரியும் என்பதற்காக இவ்வாறாக எத்தகைய பேராபத்துகளில் இருந்தும் நம்மை காக்கும் ஸ்ரீசரகபால மாலா பைரவ மூர்த்திக்கான அஷ்டமித் திதி வழிபாட்டை, அம்பாசமுத்ர புண்ய பூமிச் சித்தர்கள் அருளியுள்ளனர். எனவே சிவபுரி ஸ்ரீசரகபால மாலா பைரவரை அஷ்டமித் திதிகளில் வழிபட்டு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான சக்திகளைப் பெற்றிடுவோமாக!

சித்திரா தேவி பூஜித்த சிவபுரி பைரவர்!

பல கோடி யுகங்களாகச் சித்திரா தேவி சூரிய பகவானை நோக்கித் தவம் பூண்டு, சூரிய மூர்த்தியின் பேரருளால் சந்திர பகவானை மணம் புரிந்த சித்ரபானு ஆண்டு என்பதால் நல் உழைப்பிற்கும், தளராத மனவளத்திற்கும், இடைவிடாத நல்முயற்சிகளுக்கும் நற்பலன்களை அளிக்கும் ஆண்டு! பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிய போதிலும், தன் நன்முயற்சிகளைக் கைவிடாது நன்கு உழைத்து இறைப் பணிகளைத் தளராது ஆற்றிட வைக்கும் ஆண்டு! பைரவ பூஜா பலன்களாக, பெண்களுக்கு நல்வரங்களை அபரிமிதமாகப் பெற்றுத் தரும் ஆண்டு!

சூரிய பகவான், சித்திரா தேவிக்கு சந்திர பகவானை மணம் புரிய நல்வரம் அளித்த போது, "சித்திரா தேவி! இதற்குப் பிரதி பலனாக, உலக ஜீவன்களுக்கு நீ எத்தகைய அரும்பணி ஆற்ற வேண்டும் தெரியுமா! வரும் யுகங்களில் பிரபஞ்சத்தின் ஜீவ வாழ்வின் காலப் பகுப்பிற்காக ஏழு தினங்களைச் சிவபுரிக் கால பைரவ மூர்த்தி அளிக்க உள்ளார். அப்போது நீயும் வார தேவதா மூர்த்திகளுடன் சேர்ந்து, ஜீவன்களின் கர்மச் சுமையை ஏற்றுச் சீர்திருத்தி அமைப்பதற்கானத் தக்க நல்வரத்தை ஸ்ரீகாலபைரவரிடம் பெற்று உன் இறைப் பணிகளைத் தொடர்வாயாக!" என்று ஆணையிட்டார். சூரிய பகவானே பகுத்துரைத்த வண்ணம் இத்தகைய நல்வரங்களை அளிக்க வல்லவரே சிவபுரி ஸ்ரீசரகபால மாலா பைரவ மூர்த்தியாவார்.

வாழ்க்கையில் புதுமை புரிதல், சாந்தம் பெறுதல், அற்புதமான சாதனைகளை ஆற்றுதல் ஆகிய மூன்று நல்வரங்களையும் தர வல்ல சித்திரா தேவி இவற்றிற்கான நல்வர சக்திகளைப் பெறுவதற்காக சிவபுரி பைரவரை அஷ்டமித் திதி தோறும் வழிபட்டு வந்தனள். எனவே வாழ்வில் சாந்தமும் நிம்மதியும் தருகின்ற மூர்த்தியே ஸ்ரீசரகபால மாலா பைரவ மூர்த்தியாவார்.

மச்சமுனி சித்தர்

திருமால் மச்சாவதாரம் பூண்டபோது, உலகில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் அனைத்து நீர் நிலைகளிலும் தேவ சஞ்சாரம் செய்தார். அசுர சக்திகள் பரவெளியிலும், நில, நீர் நிலைகளிலும் வெளிப்படுத்திய தீய சக்திகள் யாவும் நீர் நிலைகளில் கரைந்திருந்த போது, அவற்றையெல்லாம் தன் மச்சாவதாரத் திருவுலா பவனி மூலம் சுவாமி சுத்தி செய்து புனிதமாக்கினார். மச்சமுனி எனும் மகத்தான சித்தர்பிரான் தம் சிந்தனையைத் திருமாலிடம் நிலைநிறுத்தித் திளைத்த சித்புருஷராவார். திருமாலின் மத்ஸ்ய அவதாரத்தை முதன் முதலாகத் தரிசித்துப் பெரும் பேறு பெற்றவரே மச்சமுனிச் சித்தர்!

பிரம்ம மூர்த்தி சிருஷ்டி இலக்கணத்திற்காகப் பலவிதமான பாடங்களை ஸ்ரீகிராத மூர்த்தியிடமிருந்து பெற்றார் அல்லவா! ஆதிசிவனும் பிரம்மரிடம் நீர் நிலைவாழ் ஜீவன்களின் படைப்பிற்கான ஏனைய பல சிருஷ்டிப் பாடங்களை ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் இருந்து பெற்றிடுமாறு கூறினார். பிரம்ம மூர்த்தியும் மச்சாவதாரத்துடன் பொலிந்த ஸ்ரீமகாவிஷ்ணுவை அணுகி ஜீவ இலக்கணத்திற்கு உரிய தேவ பாடங்களைத் தனக்கு உணர்த்துமாறு வேண்டினார்.

ஸ்ரீகிராதமூர்த்தி வடகொறுக்கை

அப்போது மச்ச மூர்த்தி, அனைத்து நீர் நிலைகளிலும், பிரம்ம தாமரையாகத் தன்னை தொடர்ந்து வந்து மேலும் பல ஜீவ ரகசியங்களைப் பெறுமாறு பிரம்மாவிடம் கூறினார். இவ்வாறு சகல சமுத்திரங்களிலும் மச்ச மூர்த்தி பவனி வந்த போது, பிரம்ம மூர்த்தியும் பிரம்ம கமலமாக (தாமரை) நீரில் தோன்றி, மச்ச மூர்த்தியைத் தொடர்ந்து சென்று நீர் நிலைவாழ் ஜீவன்களுக்கான சிருஷ்டியின் பல ஜீவ சக்திகளையும், தேவ ரகசியங்களையும் உணர்ந்தார். இதன் பிறகே கோடானு கோடி நீர்நிலை உயிரினங்கள் தோன்றின!

லவண சமுத்திரத்தில், கமல முத்திரை (பிரம்ம தாமரை) தோன்றியதால் இதனைக் கண்டு அதிசயித்த முப்பத்து முக்கோடி தேவ மூர்த்திகளும், மத்ஸ்ய மூர்த்தி அருளிய ஜீவ சிருஷ்டி ரகசியங்களை பிரம்ம கமலப் பிரகாசமாகக் கண்டு தரிசித்ததுடன், பிரம்ம கமலத்தின் ஒவ்வொரு இதழில் இருந்தும் வெளிப்பட்ட பீஜாட்சர சக்திகள் மூலமாகவும் மேலும் பல ஜீவ ரகசியங்களை உய்த்து உணர்ந்தனர்.

மச்சங்களின் மாதங்க குருவே மச்சமுனிச் சித்தர்!

மச்சமுனிச் சித்தர் மச்ச (மீன்) வடிவிலும், பலவிதமான வேறு ஜல ஜீவ வடிவுகளிலும் எண்ணற்ற நீர்வாழ் ஜீவன்களுக்கு அருள்வழி காட்டி வந்தார். இவர் பல்வேறு யுகங்களிலும், பல ரூபம் கொண்டு சித்தர்களுக்கே உரித்தான காரணப் பெயர் அம்சத்துடன் விளங்கினார். திருமாலின் பத்து அவதாரங்களையும், அந்தந்த அவதார யுக காலத்திலேயே கண்டு தரிசிக்கும் பெரும் பேறு பெற்றவர்களுள் மச்சமுனிச் சித்தரும் ஒருவராம்.

மேலும் மச்சாவதார உற்பவத்திலேயே ஸ்ரீஹயக்ரீவரின் உற்பத்தியும் நிகழ்ந்ததால், இவ்விரு மூர்த்திகளையும், ஒரே அவதார வைபவத்தில் காணும் பேறு பெற்றவரும் மச்ச மாமுனிச் சித்தர் ஆவார். நீர் வாழ் இனங்களுக்கு எல்லாம் சற்குருவாகத் திகழும் மச்சமுனிச் சித்தர், மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் எனும் பேதம் யாதுமின்றி அனைவருக்கும் அன்றும், இன்றும், என்றும் நல்வழி காட்டி வருபவராம்!  மச்ச மாமுனி எனும் காரணப் பெயரையே பூண்டு, ஸ்ரீஅகஸ்தியர் போல் எண்ணற்ற சித்புருஷர்களும், முனிவர்களும் தோன்றி உள்ளனர். எவ்வாறு அனைத்து நாகங்களுக்கு ஸ்ரீஅஸ்தீக சித்தர் சற்குருவாயும், பைரவ வாகன மூர்த்தியாய் விளங்கும் நாய்களுக்கு பைரவ மஹரிஷியும் சற்குருவாய் விளங்குகின்றனரோ, இதே போல் நீர்வாழ் உயிரினங்களுக்கு சற்குருவாக அருள்புரிபவரே மச்ச மாமுனிச் சித்தர் ஆவார்.

எம்பெருமானான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி பிரளய காலத்தில் சயனக் கோலம் பூண்டிருந்த போது, பெருமாளின் இரு திருச்செவிகளிலிருந்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தோன்றியதைப் பற்றி நாம் நன்கு அறிவோம். இவர்கள் தாம் பல லோகங்களிலும் அக்கிரமங்களைப் புரிந்து, நற்சக்திகளை நசித்து, நல்லோரைத் துன்புறுத்தி அதர்மத்தை நிலைநாட்ட முயன்றனர். இவர்களையும் வெல்லும் நாராயண இறை லீலையும் மச்ச அவதார காலத்தில் நிகழ்ந்ததேயாம்!

சோமுகன் எனும் அரக்கன் பிரமனிடமிருந்து நான்கு வேதங்களையும் கவர்ந்து சென்று கடலில் அடியில் பதுங்கி வைத்தான். எனவே வேதங்களை மீட்கும் பொறுப்பும் திருமாலுக்கு இதே மச்சாவதார வைபவத்தில் தான் வந்தது!  இதோடு ஹயக்ரீவன் எனும் குதிரை முக அசுரனும் பிரபஞ்சத்தையே படாத பாடு படுத்தியமையால் இவ்வரக்கனின் சம்ஹாரமும் மச்சாவதார கால லீலைகளில் நிகழ்ந்ததேயாம்!

சோமுக அரக்கனை வென்ற திருமாலின் அதே ஆயுதங்களே மது, கைடபரையும் வென்று, குதிரை முக ஹயக்ரீவனையும் அழித்து நிலை கொண்டது. பெருமாள் அவர்களை சுதர்சன அக்னியில் பஸ்மம் செய்திட்டாலும் இறை லீலையாக அரக்கர்களின் சிறு அணுத்துகள் அளவிலான சதையும், குருதியும் பூலோகத்தின் சமுத்திரத்தில் மிதந்து கிடந்திட்டது. அப்போது பிரம்ம கமலமாக மச்சாவதார மூர்த்தியைத் தொடர்ந்து வந்தார் பிரம்ம மூர்த்தி! மாய்ந்த அரக்க சக்திகளின் விஞ்சிய அணுத்துகள் பகுதிகள் அத்தாமரையைத் தொட்டிடவே, வேத வடி ஸ்பரிசத்தைப் பெற்ற காரணத்தால் பிரம்மா அவற்றை ஜீவ சக்தியை அடையுமாறு செய்தார்.

மேதினியா மேதினிக்கு வந்தனவே!

வெல்லப்பட்ட இவ்வரக்கர்களின் விஞ்சிய அணுக் கணுக்கள் இவ்வாறாக வேதக் கமலங்களைத் தொட்டு ஸ்பரிசித்தமையால் அரக்கர்களாக இருப்பினும் அவர்களிடம் பொதிந்திருந்த அணுத் துகள் வேத சக்திகள் ஜீவ சக்தியாக மாறி, பிரம்ம கமலத்தையும் மீண்டும் ஸ்பரிசித்து மஸ்லிஜம் எனப்படும் ஜீவன்கள் ஆயின. இவையே கொசு வகை ஜீவன்களாகும்.

திருமால் அசுரர்களை அழித்தபோது, அவர்களிடம் இருந்த தீய குணங்கள் அழிந்தனவே தவிர, அறிந்தோ, அறியாமலோ அவர்கள் நால்வேதங்களை ஒரு சிறிதேனும் ஓதி இருந்தமையாலும், ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருச்செவிகளில் உறைந்தமையாலும், வேதங்களைக் கவர்ந்த போது அவற்றை ஸ்பரிசித்தமையாலும் ஒரு சிறிது நற்சக்திகள் திளைத்தன. அவைதாம் பிரம்ம கமலத்தினின்று ஜீவ உருக்கொண்ட மேதினியா எனும் கொசு வகை ஜீவன்களாக உருவாகின!  மச்ச முனியின் ஆசியுடன் அவை திருமாலை நாடின.

திருமாலின் திருச்செவிகளில் தோன்றியமையால் இந்த ஜீவ சக்திகள் தோன்றிய உடனேயே ஒரு இறை தரிசனம் பெறுதல் என்பது பெறுதற்கரிய பெரும் பேறாகும். திருமாலின் திருவடி தரிசனமும், பிரம்மாவின் கமல தரிசனமும் பெற்றமையால் மேதினியா எனும் பெயர் கொண்ட இந்த ஜீவன்கள் தமக்கெனத் தனி சிருஷ்டி இலக்கணம் வேண்டினர். அப்போது பிரம்ம கமலத்தில் சரஸ்வதி தேவியும் பிரசன்னமாகி இருந்தமையால், அப்போது அந்த ஜலப் பிரளவாகத்தில் இருந்த அனைத்து ஜீவ கணங்கட்கும் கூடுதலாக வித்யா வாணி வேத சக்திகள் கிட்டின.

இந்த மேதினியா எனும் ஜீவன்கள், அசுர சம்பந்தத்தில் இருந்து வந்தமையால் தமக்குப் பரிகாரம் தருமாறு இறைவனை வேண்டின. "அரக்கர்களுடைய அம்சத்தினின்று தோற்றம் கொண்டாலும் நான்கு வேதங்களையும் ஸ்பரிசிக்கும் பாக்யம் கிட்டியமையால், நல்லது, கெட்டது இரண்டும் கலந்த ஜீவ சக்தியுடன், உலக ஜீவன்களூக்கு நல்லது எது, கெட்டது எது எனப் பகுத்துத் தருகின்ற வேத அறிவைப் பொழியும் சேவையை நாங்கள் புரிய வேண்டும். இதனால் நாங்கள் இழிவுபடினும் நாங்களும் குறித்த வகைகளில் ஜீவன்களுக்குத் தர்ம நெறி புகட்ட எங்களுக்கு அருள்புரிய வேண்டும்!" என வேண்டிட, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதிருமால் மூவரும் அவ்வாறே அருள் புரிந்தனர். இவ்வாறு பிறந்தவையே மேதினியா ஜீவ வகைகளாக கொசுக்களாகும். இதன் பின்னர் மேதினியா ஜீவ வகை இலக்கணத்தை பிரம்மா படைத்திட்டார்.

எனவே மது, கைடப அரக்கர்கள் திருமாலின் திருச்செவியினின்று தோன்றியதால், இன்றைக்கும் மேதினியா வகைக் கொசுக்கள் பறக்கும் போது நம் காதுகளில் வேத ரீங்காரம் ஒலிக்கின்றது. இது நான்கு வேதங்கள் இணைந்த த்வனியாகும். இதனை மானுட வடிவில் கூட எவராலும் ஓத இயலாது. நான்கு வேதத்திலும் கரை கண்டவர்களே இந்த த்வனி வேத சப்தத்தை ஓத இயலும். மனித குலத்தால் இழிந்த குணங் கொண்டதாகக் கொசுக்கள் கருதப்படினும், அவற்றிடமிருந்து எழுகின்ற அட்சரம் பிசகாத வேத நாத, ரீங்காரத்தை சக்தியை இப்போதாவது அறிந்திடுங்கள்!

மனிதனின் கர்ம வினைகள் அவனுடைய அங்கமெங்கும் விரவியுள்ளன. அவன் உடலில் ஓடும் இரத்தத்தில் கூட அவனுடைய தீவினைகள், தீய எண்ணங்கள் நிரம்பியிருக்கும். எனவே மனிதனின் உடலில், தீவினைகள் படிந்த இரத்தத்தை மட்டுமே கொசுக்கள் உறிஞ்சுகின்றன. நல்ல ரத்தத்தை அவை உறிஞ்சுவதில்லை! இதனால் தான் உலகமே பெரும்பான்மையான நோய்களில், தீவினை விளைவுகளில் இருந்தும் காக்கப்படுகின்றது. ஆனால் அதே சமயம் பூர்வ ஜென்மக் கர்ம வினைகளாக இதே கொசுக்கள் மூலம் நோய்களும் வருவதும் உண்டு. "நல்லதும், கெட்டதும், சேர்ந்தே விரவும்" எனும் இறை நியதி காரணமாகத்தான் இப்படி!  எத்தகைய கொடியவனாயினும் அவனிடம் சற்றே, கருணையும், பரிவும் மிளிருவது போல, கொசுக்களிடம் இருந்து வேத நாத ரீங்கார ஒலி ஏற்படுகின்றது. மேலும் மனிதனின் இரத்தத்திலுள்ள தீவினைக் கர்மங்களை உறிஞ்சிக் காப்பாற்றுவதுடன், அதே மனிதனுக்கு கர்ம வினைப் பயனாக நோயையும் அளிக்கும் வகையில் கொசுக்கள் அமைகின்றது! இவ்வாறாக கொசுக்களின் பிறப்பு இரகசியத்தை ஒருவர் குருவருள் தரும் ஞானத்தால் அன்றி வேறு எவ்வகையில் உணர இயலும்?

திருமாலின் (திருச்செவித்) தூதுவன்!

மேலும் மேதினியா வகை கொசு ஜீவன்களைத் திருமாலின் (திருச்செவித்) திருத்தூதுவன் எனவும் உரைப்பார்கள். ஏனெனில் திருமாலின் திருச் செவிகளில் உறைந்தவர்களாயிற்றே! இவை யாவும் நான்கு வேதங்களையும், திருமாலின் மச்சாவதாரத்தில், சக்கராயுதத்தைத் தழுவி வந்த அம்சங்களாகும். முருகனின் வேலால் துண்டாடப்பட்ட சூரபதுமன் அவருக்கே வாகனமாக அமைந்தது போல், திருமாலின் சக்கராயுதத்தால் தழுவப் பெற்றதால் அவற்றின் தீய சக்திகள் மாய்ந்தன. ஆனால் அவற்றில் நிறைந்திருந்த நற்சக்தியானது இறைவனின் சக்கராயுத ஸ்பரிசத்தால் நற்கதிர்களாக இன்றும் பல வடிவுகளில் மீண்டுள்ளன!

இராவணன் அழிந்த போதும் அவன் கற்ற வேத சக்திகள் மறையவில்லை. எனவே வேத சக்தியை எவராலும் அழிக்கவும் இயலாது. இவ்வாறாக அசுரர் வசம்பட்ட வேத சக்திகள் தத்தம் வேத லோகங்களுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் தூய்மை பெறும்.  எனவே எத்தகைய கொடியோராயினும் இறைவனின் திருப்பாதங்களைச் சரணடைந்தால் உய்வு பெறுவது நிச்சயம் என்பதையும் கொசுவின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஆன்மீக ரீதியாக உணர்த்துகின்றது.

சூரியூர் ஸ்ரீஆதிமூர்த்தி ஈஸ்வரர்

மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, நாராயண மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி போன்ற "மூர்த்தி" சம்பந்தமான பெயர்கள், ஆதி, ஆதிநாராயணன், ஆதிலக்ஷ்மி, ஆதிமூலம், ஆதிகேசவன், நித்யா, நித்தியானந்தம் போன்ற "ஆதி" மற்றும் "நித்யா" சம்பந்தமான பெயர்களை உடையவர்களுக்கு உரித்தான தலம்.

திருச்சி அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சூரியூர் என்ற சிறிய கிராமத்தில் ஸ்ரீஆதிமூர்த்தியாக பழமை வாய்ந்த சுயம்பு லிங்கச் சிவ மூர்த்தி அருள்பாலிக்கின்றார். சுயம்பு மூர்த்திகளுக்கு எல்லாம் ஆதிமூல மூர்த்திகளுள் ஒருவராக விளங்குகின்ற சூரியூர் ஸ்ரீஆதிமூர்த்தி ஈஸ்வரர் தாம் பல அவதாரங்களுக்குத் தக்க நாமங்களை (பெயர்களை) அளிக்கின்ற ஆதிமூர்த்தி ஆவார்.

எனவே மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ராம மூர்த்தி, நாக மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, கேசவ மூர்த்தி போன்ற "மூர்த்தி" சம்பந்தமான பெயர்களை உடையவர்கள், நித்தியானந்தம், நித்யா, ஆதிமூலம், முனுஆதி, ஆதிலக்ஷ்மி போன்ற நித்யத்துவமுடைய சிரஞ்சீவித்துவமுடைய "ஆதி" மற்றும் "நித்யம்" அட்சரப் பெயர்களை உடையோர்க்கும் அருள்பாலிக்கின்ற தலமாக இது விளங்குகின்றது.

எப்போதும் வைகுண்டத்தில் பரந்தாமனின் திருவடிகளில் உய்கின்ற உத்தம நிலைகளை உடையவர்களே நித்ய சூரிகள் ஆவர். நித்திய சூரிகள் இத்தகைய பிரம்மஞான இறை நிலைகளை அடைவதற்குக் காரணம் சூரிய நாராயண ஆதிமூர்த்தி வழிபாடேயாகும். எனவே மேற்கண்ட பெயர்களை உடையவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய தலமாக இச்சிறிய கிராமத்திலுள்ள பலரும் அறியாத மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலம் விளங்குகின்றது. தம்முடைய பிறந்த நாள், பிறந்த நட்சத்திரம் மட்டுமல்லாது மிக முக்கியமான விசேஷ தினங்களிலும் இவர்கள் இங்கு குடும்பத்தோடு வந்து வழிபட்டு அன்னதானம் செய்து சூரியூர் ஆதிமூர்த்தி ஈஸ்வரரின் அருட்கடாட்சத்தைப் பெறுவார்களாக.

பண்டைய யுகங்களில் இவ்வாலயத்தில் சிறப்பாக வழிபாடுகளை நடத்தியோர் தாம் இத்தகைய பெயர்களை பூமியில் தாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நித்தியத்துவம் என்பது இறைவனுடைய திருவடிகளில் இறைவனுடைய மூர்த்தியை, திருநாமத்தை எப்போது ஓதுகின்ற பாக்கியத்தை பெறுதலாகும். எனவே நித்ய சூரிகளாக உத்தம இறைநிலைகளைப் பெற விழைவோரும், மேற்கண்ட பெயர்களை உடையோரும், மேற்கொண்ட பெயர்களை உடையோரும் ஞாயிறு மற்றும் சூரிய நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்புடையதாகும்.

திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்

ஆயில்ய நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கான அற்புத ஆலயம்

திருந்துதேவன்குடி ஸ்ரீஅருமருந்துநாயகி சமேத ஸ்ரீகற்கடேஸ்வரர் சிவாலயம்

கற்கடம் என்றால் நண்டு, கடக ராசியைச் சேர்ந்த ஆயில்ய நட்சத்திரத்திற்கு மகத்தான மருத்துவ குணங்கள் உண்டு. இன்றைக்கும் பலரும் ஆயில்யம், கேட்டை, பூராடம் போன்ற நட்சத்திரங்களைப் பற்றித் தவறான எண்ணங்களைக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்து நட்சத்திரங்களுமே நம் வாழ்க்கையில் அதிஅற்புத சக்திகளைத் தந்து பங்கு கொள்கின்றன!  அவரவருடைய ஆத்ம ஜோதியும், சக்தியும் எந்த நட்சத்திர லோகத்தில் இருந்து மிளிர்கின்றனவோ அது தாம் அவரவர் நட்சத்திரமாக அமைகின்றது. இதில் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலமாக விளங்குவதே ஆதிபராசக்தியே அருமருந்து நாயகி என திவ்ய நாமம் கொண்டு அருளும் கும்பகோணம் திருவிசநல்லூர் அருகே உள்ள திருந்துதேவன்குடி எனப்படும் திருக்கற்குடி (அல்லது கற்குடி) ஸ்ரீகற்கடேஸ்வரர் ஆலயமாம். ஆயில்ய நட்சத்திரத்தவர்கள் நாம் வாழ்நாளில் அடிக்கடி இங்கு வழிபடுவது சிறப்பானதாம்.

27 நட்சத்திரங்களில் ஆயில்ய நட்சத்திரமானது புதுப் பாத்திரங்கள், வாகனங்கள், கலப்பை, அரிவாள், மண்வெட்டி, அரிவாள்மனை போன்ற ஆயுதங்கள், எண்ணெய் வகைகள், கதவுகள், ஜன்னல்கள் வாங்குவதற்கும், நவகிரஹ ஹோமங்களை ஆற்றுவதற்கும், ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி பூஜைக்கும், மருந்துகளை வாங்கி, பூஜித்து உட்கொள்ளவும் அதிஅற்புத நட்சத்திர நாளாகப் பிரகாசிக்கின்றது. அதிலும் குறிப்பாக தேய்பிறையில் வரும் ஆயில்ய நட்சத்திர நாள் மிக மிக அற்புதமான நோய் தீர்க்கும் சக்திகளை மனிதர்களுக்கு அளிக்கின்றது.

ஸ்ரீஅருமருந்துநாயகி சமேத ஸ்ரீகற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி

எனவே தான் தேய்பிறை ஆயில்ய நட்சத்திர நாளில் திருஅண்ணாமலை, நெடுங்குடி, திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், பர்வத மலை போன்ற இடங்களில் கிரிவலம் வருதலால் மகத்தான நோய் நிவாரண சக்திகளைப் பெற்றிடலாம். இதிலும் தேய்பிறை-ஆயில்யம்-அஷ்டமி சேரும் நாள் வாழ்நாளில் கிடைத்தற்கு அரிய நோய் நிவாரண நாளாம்!  அமாவாசை, செவ்வாய், சனி, ஆயில்யம், அஸ்வினி மற்றும் மூன்று சூரிய நட்சத்திர நாட்களில் திருந்துதேவன்குடி (கற்குடியில்) ஸ்ரீகற்கடேஸ்வரர் ஆலயத்தில் தங்களுக்கு உரித்தான மருந்துகளுடன் அடிப்பிரதட்சணம் செய்தும் வழிபடுதலால் மருந்துகளில் அபூர்வமான நோய் நிவாரண சக்திகள் கூடி எத்தகைய கடுமையான நோய்களுக்கும் தக்க நிவாரணம் கிட்டும்.

ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி திருந்துதேவன்குடி

எனவே ஆயில்ய நட்சத்திரமானது தெய்வீக ரீதியாக உடல், மனம், உள்ளத்தில் ஏற்பட்டுள்ள நோய்களையும், குழப்பங்களையும், துன்பங்களையும் தீர்க்கவல்லதாம். சிலருக்கு உடலில் நோய்கள் இல்லாவிட்டாலும் மனத்தளவில் நிறைய பிரச்னைகளும், துன்பங்களும், குழப்பங்களும் நிறைந்து மனதை அலைக் கழிக்கும். இவர்கள் ஆயில்ய நட்சத்திர நாட்களில் திருந்துதேவன்குடியில் அம்பிகைக்குப் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி, நெல்லி கலந்த நீலிபிருங்காதித் தைலக் காப்பு ஆகிய ஐந்து வகைத் தைலங்களைச் சேர்த்து பஞ்சத் தைலக் காப்பிட்டு வழிபட வேண்டும். காராம் பசுவிடமிருந்து கறந்த பாலின் இயற்கையான இளஞ்சூடு ஆறுவதற்கு முன்னரேயே, அதாவது பாலைக் கறந்த சில நொடிகளிலேயே காராம் பசும் பாலால் இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து மலைப் பூண்டு, கருவேப்பிலை, கீரை வகைகள் போன்ற மூலிகை கலந்த உணவு வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்துக் கடுமையான நோய்களுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றிடலாம்.

குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த வியாதி, புற்று நோய், மூலம், இருதய, சிறுநீரக நோய்கள், தீராத வயிற்று வலியால் அவதியுறுவோர் இங்கு ஆயில்ய நட்சத்திரத்திலும், அமாவாசைத் திதியிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து ஸ்ரீஅருமருந்து நாயகியை வழிபட்டு வருதலால் மகத்தான முறையிலே நோய் நிவாரணங்களைப் பெறுவார்கள்.

பொதுவாக ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கே நோய்களை தீர்க்கின்ற மருத்துவ ரீதியான குணங்கள் நிறைய உண்டு. எனவே இவர்கள் திருந்துதேவன்குடி ஸ்ரீஅருமருந்துநாயகி சமேத கற்கடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும், ஸ்ரீஅருமருந்து அம்பிகைக்கு குங்கும அபிஷேகமும் செய்து அந்த விபூதியையும், குங்குமத்தையும் பல ஆஸ்பத்திரிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு அன்னதானத்துடன் பிரசாதமாக அளித்து வந்தால் பலரும் நோய் நிவாரண சக்தியைப் பெற்று தந்திடலாம் அல்லவா! ஆயில்ய நட்சத்திரகாரர்கள் இதனைத் தங்களுடைய வாழ்க்கையின் பெரும் கைங்கர்யமாகக் கொண்டு இச்சேவையைத் திறம்பட ஆற்றி வருதல் வேண்டும்.  மேலும் அமாவாசை, செவ்வாய் மற்றும் தேய்பிறை ஆயில்ய நட்சத்திர தினத்தில் இங்கு குறைந்தது 36 முறையாவது அடிப் பிரதட்சிணம் செய்து நோய் நிவராண சக்திகளைப் பெருக்கிக் கொண்டு ஸ்ரீவைத்யநாத அஷ்டகம், திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம் போன்றவற்றை ஓதியவாறு வலம் வந்து அனைத்து ஆலயங்களுக்கும் அர்ச்சனைக்காக, காப்பிற்காக முறையாகத் தயாரிக்கப்பட்ட விபூதி, குங்குமத்தை அளிக்கின்ற கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்தல் சிறப்பானதாம். மூன்று சூரிய நட்சத்திர நாட்களான கார்த்திகை, உத்திரம், உத்திராட நாட்களில் இங்கு வலம் வந்து பிரார்த்தனை செய்து ஏழைகளுக்கு சூரிய சக்திகள் நிறைந்த கோதுமை, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி போன்ற காய்கறிகள் கலந்த உணவினை தானமாக அளித்து வருதலால் நோய் நிவாரண சக்திகளை துரிதமாகப் பெற்றிடலாம்.

திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான்

திருஅண்ணாமலை சித்தர்கள்

திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்பிரான்

ஜடாமுடிச் சித்தர் என்று அன்புடன் மக்களால் அழைக்கப் பெற்ற திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர். திருக்கோயிலூர் தென் பெண்ணையாற்றினுள் பொங்கி வரும் நீர்ப் பிரவாகத்தின் நடுவில் ஜலபாவன ஜடாம்பர யோகம் பூண்டு பலவிதமான முத்திரைகளுடன் அமர்ந்து அருணாசல மலையைத் தரிசித்தவாறே நீரினுள் அமிழ்ந்தே இருப்பார். யோகத்தில் கரை கண்டவராகவும் விளங்கிய சித்தரின் ஜடாமுடிச் சிகையின் கோபுர வடிவானது, ஆற்றில் எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தாலும், பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் நீர் மட்டத்தின் மேல் நன்கு புலப்பட்டது!

சித்தரின் இந்த யோகக் கோலம் கண்டு அதிசயித்து அனைவரும் தரிசித்து ஆனந்தம் அடைவர்!

வானம் பெய்யாது, மாதந்தோறும் மும்மாரி பெய்த, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னான அக்காலக்கட்டத்தில், தென் பெண்ணையாற்றில் நீர் வற்றுதல் என்பதே மிகவும் அரிதானதாம். நீரோட்டம் சற்றே குறைந்து ஜடாமுடிச் சித்தரின் முதுகில் சூரியக் கிரணங்கள் படியும் போதும், சமுதாயத்தில் துன்பங்கள் பெருகும் போதும், அருணாசலத் திருக்கோயில் உற்சவங்களின் போதும், பக்தர்கள் நெக்குருகிப் பெரிதும் வேண்டும் போதும், சித்தர்பிரான், பெண்ணையாற்றினுள் நீருக்கு அடியில் தாம் கொண்டிருந்த ஜலஜடாம்பர யோக நிஷ்டையில் இருந்து, தாமே மீண்டு எழுந்து வெளிவந்து திருஅண்ணாமலைக்கு நடந்து வந்து கிரிவலத்தை மேற்கொள்வார். ஜடாமுடிச் சித்தயோகியின் இந்த தரிசனத்திற்காகவே வழியெங்கும் பல்லாயிரக் கணக்கானோர் காத்திருப்பர்.

இவ்வாறாகக் குறித்த தருணங்களில் அருணாசலத்தைக் கிரிவலம் வரும் ஜடாமுடிச் சித்தர், எத்தனை முறை, எவ்வகையில் கிரிவலம் வருவார், எப்போது கிரிவலத்தை நிறைவு செய்வார் என்பதை எவரும் அறியார். ஆனால் கிரிவலத்தைப் பரிபூரணமித்து ஜடாமுடிச் சித்தர்பிரான் திருக்கோயிலூர் வந்து பெண்ணை நதியினுள் மீண்டும் யோக நிலை பூண்ட அடுத்த விநாடியே நதியில் வளமையுடன், நறுமணத்துடன் நீர் பெருகி, அவருடைய திரு உருவமே வழக்கம் போல, நீரினுள் மறைந்து அவர்தம் ஜடாமுடிச் சிகையே மேலே தென்படும்.

சித்தரின் பூத்த முக்திமய முத்திரை மொட்டுகள்!

மன்னர் ஆட்சிகள் நிறைந்த காலமாதலின் மன்னர்களின் இறைப் பணிகள் மற்றும் பூஜா, தான தர்ம புண்ய சக்திகளே மக்கள் சமுதாயத்திற்கு மகத்தான தர்ம ஆட்சியைத் தரும் என்பதை ஜடாமுடிச் சித்தர் நன்கு உணர்ந்து, மக்கள் ஆற்ற வேண்டிய இறைக்கடமைகளை மன்னர்களிடம் நேரடியாகவே எடுத்துரைப்பார். எவரிடமும் முத்திரைகள், சைகைகள் மூலமே எதனையும் உணர்வித்து மௌன பூஷணியாய்ப் பரிமளித்த அவர் ஒரு சிறிது பேசியதும் மாறு வேடத்தில் அண்ணாமலையை கிரிவலம் வருகின்ற அரசர்களிடம்தான்! அல்லது அவரிடம் பேசும் பாக்யம் பெற்றோர்க்கு அரச பீட பாக்யம் நிச்சயமாகக் கிட்டும்! பாஞ்சாலம், நைமிசாரண்யம், கலிங்கம் (ஒரிஸ்ஸா), வங்காளம், சிந்து, மௌர்யம் என்று பல நாடுகளில், ராஜ்யங்களில் இருந்து மாறு வேடங்களில் பற்பலப் பெரிய வேந்தர்கள் எல்லோரும் இவரைத் தேடி வருவர். அவர்களிடம் பன்மொழிகளிலும் ஆனால் ரத்தினச் சுருக்கமாக ஒரு சிறிதே பேசிடுவார்.

ஒருநாள் ......திருஅண்ணாமலையில்.....ஒரு மாத சிவராத்திரியின் போது.......கோயில் நந்தவனத்தைச் சார்ந்த புள்ளி மான் ஒன்று எவராலோ துரத்தப்பட்டுக் (கவண்) கல்லால் அடியுண்டு, அவதியுற்று ஒர் மடத்திற்குள் நுழைந்து தஞ்சம் புகுந்து விட்டது. ஆங்கே மாமன்னர் ஒருவர் மாறு வேடத்தில் திருஅண்ணாமலைக்கு வந்து மாத சிவராத்திரியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களுக்காக அறுசுவை உணவு தயாராக்கிக் கொண்டிருந்த அந்த மடத்தின் அன்னச்சாலையின் நடுவில் மகா வேதனையுடன் மான் வந்து கீழே விழுந்து வலியால் துடித்தது! அதனுடைய தொண்டைக்குள் பெரிய (கவண்) கல் பதிந்த நிலையில் அது உயிருக்குப் போராடியது.

இதுவல்லவோ காருண்ய சமுதாயப் பூங்கா!

அக்காலத்தில் பசு, மான், யானை போன்ற புனித ஜீவன்கள் அதுவும் கோயிலைச் சார்ந்த ஜீவன்கள் இறந்து விட்டால் கோயில் கதவுகளை "அடைத்து" புனர்சுத்தி, பிருத்வி சுத்தி பூஜைகள் செய்த பின்னரே ஆலய வழிபாடுகள் தொடரும்! மக்களும், மன்னரும் அந்த உயிருக்கான ஜீவ சுத்திக் காரியங்கள் முடியும் வரையில் மூன்று வேளையும் உணவு உண்ண மாட்டார்கள். ஒரு குவளை நீர் கூட எவரும் அருந்திடார்!  அந்த அளவிற்குச் சமுதாயத்தில் பக்தியும், தர்மமும், சாந்தமும், ஜீவ காருண்யமும் தழைத்திருந்தன.

அடிபட்ட மானுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், மாத சிவராத்திரி விரதத்திற்கு பங்கம் ஏற்பட்டு, ஆலய பூஜைகள் நின்றிட்டால் இது தேசத்திற்கே வரும் ஆபத்தை உணர்த்தும் பெரிய தீய சகுனம் ஆகிடும் அல்லவா! மன்னருக்கோ என்ன செய்வதென்று புரியாது உடனே ஜடாமுடித் தம்பிரான் சித்தரின் இருப்பிடம் நாடிக் கிரிவல நடை பாதையில் விரைந்திட்டார். இறையருளால் புள்ளிமான் கரடு என்னும் கிரிவலப் பகுதியில் சித்தர்பிரான் சென்று கொண்டிருப்பதைக் கண்டு பணிவுடன் வணங்கினார். மகாராஜாவின் வேதனை பொதிந்த முகத்தைக் கண்டு நிலைமையைப் புரிந்து கொண்ட ஜடாமுடிச் சித்தர் "பிரம்மஞான ரட்சா முத்திரைகளை" இட்டவாறே, அண்ணாமலையாரை நோக்கி உடனே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிட, அவருடைய உடல் பெருவலியால் துடி துடிக்க ஆரம்பித்தது! மானின் கழுத்திற் பதிந்த (கவண்) கல், சித்தரின் தொண்டையில் பதிந்து காணப்பட்டது. கழுத்து வீங்கி உடல் தளர்ந்தது.

சித்தரிடம் முகிழ்த்த உயிர் பரிணாம யோகம்!

ஆம், அடிபட்டுக் கிடந்த மானுக்குள் ஜடாமுடிச் சித்தர் தன் உயிரைச் செலுத்தி, அதன் உயிரைத் தன்னுள் ஏற்றிட்டார். இது நிகழ்ந்த உடனேயே....ஆங்கே மடத்திலோ....திடீரென்று எழுந்து குதித்த மான் நாலே துள்ளலில் வெளிப் பாய்ந்து ஓடி வந்து, கிரிவலப் பாதையில் விரைந்து சித்தரிடம் வந்து சேர்ந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களும் அதனைப் பின் தொடர்ந்து வந்து சித்தர் இருக்குமிடம் வந்து சேர்ந்தனர். சித்தர்பிரானோ இன்னமும் கடும் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்!

ராஜ பரம்பரைக்கான ராஜவைத்யரோ சித்தரின் கழுத்தில் இருந்து கல்லை அறுவை சிகிச்சை ரீதியாக வெளியில் எடுத்தால் அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் எதையும் சொல்ல இயலாது தவித்ததுடன் சித்தருக்கு வைத்யம் செய்யவும் மிகவும் தயங்கினார். ஆனால் நிலைமையைப் புரிந்து கொண்ட ஜடாமுடிச் சித்தர்பிரானோ மன்னரிடம், "இந்தச் சிறு நிகழ்ச்சியால் மாத சிவராத்திரி விரதம், ஆலய பூஜைகள், கிரிவல வழிபாடுகள் எதுவும் இந்த அருணாசலப் புனித பூமியில் தடைபட்டுப் பாதியில் நிற்கக் கூடாது!  மாத சிவராத்திரி பூஜைகள் தடைபட்டால் நாட்டிற்கே, உலகிற்கே பெரும் துன்பங்கள் ஏற்படும்!  அனைவரும், மாத சிவராத்திரி பூஜைகளையும், கிரிவல வழிபாடுகளையும் முறையாக பக்தி மேலோங்கிட முடித்து விட்டு வாருங்கள்! எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடக்கும்!" என்று உறுதியாகக் கூறிவிட்டார். மிகவும் தயங்கிய நிலையில் அனைவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர்.

இறையருளால் அந்த மாத சிவராத்திரி விரத முறைகளும், ஆலய பூஜைகளும், கிரிவல வழிபாடுகளும் நன்கு நடைபெற்றாலும் அனைவருக்கும் சித்தரின் உடல் நிலையே மனதைச் சூழ்ந்து மிகவும் வருத்தியது. மாத சிவராத்திரிக்கு அடுத்த நாள் அமாவாசை ஆதலால் "கண்டங்கள் நிறைந்த நாள் அமாவாசை ஆயிற்றே, என் செய்வது?" என்றும் மக்கள் வேதனையுற்றனர்.

மாத சிவராத்திரி வழிபாடு, கிரிவலம், அன்னதானம் முடிந்த உடன் மன்னனும், மக்களும் சித்தர் வீழ்ந்து கிடந்த இடத்தே நோக்கி விரைந்தனர்!  சித்தர்பிரான் இன்னமும் மயங்கிக் கிடந்தார். மெல்லிய இழையாக சுவாசம் ஓடிக் கொண்டிருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருதற்கும், ஒரு மானின் உயிரைக் காக்கவும் தன் உயிரையே தியாகம் புரிய முன்வந்த அந்த சித்தர்பிரான் துடித்துக் கிடப்பதைக் கண்டு அனைவரும் சொல்லொணா வருத்தத்தில் வாடி, வதங்கி, உருகி நின்றனர்.

மருந்தீசனாய் அருணை ஈசன்!

அப்போது மக்கள் வெள்ளத்தின் ஊடே இருந்து ஊர்ந்து முன் வந்த ஒரு கிராம வைத்தியர் தன்னை மன்னரிடம் அறிமுகம் செய்து கொண்டு "சுவாமி! இங்கு நடந்திருப்பது என்னவென்றால், சித்தரின் ஆத்மம் மானுள்ளும், மானின் உயிர் சித்தருள்ளும் பதிந்துள்ளன. யாருக்கு அடியேன் மருந்து கொடுப்பது, மானுக்கா, மகத்தான சித்தருக்கா? உயிருக்கா, உடலுக்கா?" என வினவிட மக்கள் விழித்தனர்!  ஆனால் பக்தியிற் சிறந்த மாமன்னனோ, வைத்தியராக வந்திருப்பது சாட்சாத் அருணாசலப் பெருமானே என்பதையும் உணர்ந்து கொண்டார். ஆனால் வைத்யராக வந்த இறைப் பரம்பொருளையும், மாறுவேடத்தில் உள்ள தன்னையும், வெளிக்காட்ட இயலா நிலை!

"இத்தலத்தில் சிகிச்சை என்பது பஞ்சபூத சக்திகளைக் கொண்டே நிகழ வேண்டும்! ஏனெனில் உயிர்ப் பரிமாற்றம் என்பது உத்தம தெய்வ மூர்த்திகளின் கருணையால் தாம் நிகழ முடியும்! கரணம் தவறினால் சித்தருக்கோ, மானுக்கோ பங்கம் ஏற்பட்டிடும். எனவே நீங்கள் அனைவரும் உங்களுடைய இந்த மாத சிவராத்திரி விரதம், பூஜைகள், கிரிவல வழிபாட்டுப் பலாபலன்கள் அனைத்தையும் அர்ப்பணித்தால்தான் அடியேனால் இறையருளால் துணிந்து சித்தருக்குச் சரியான சிகிச்சை செய்ய முடியும்!" என்றார் வைத்தியர்! என்னே பெருஞ் சோதனை மன்னனுக்கும், மக்கள் சமுதாயத்திற்கும்?

பக்த கோடிகள் திகைத்தனர்! சித்தரை இழக்கலாகுமோ? மான் இறந்தாலோ நாட்டிற்கே பெரும் கேடுகள் விளையுமே!  சித்தரின் தியாகத்தை எண்ணி அனைவரின் கண்களில் நீர் மல்கிட, அக்கண்ணீரையே சங்கல்ப தாரையாக வார்த்து, தங்கள் புண்ய சக்தி அனைத்தையும் வைத்தியரின் கமண்டலத்தில் அர்ப்பணித்தார்.

உடனே....அடுத்த தருணத்தில் ஜடாமுடிச் சித்தர்பிரான் எழுந்து கண்களில் நீர் மல்க வைத்யரின் திருவடிகளைப் பற்றி தொழுதிட, அவரும் அவருடைய காதுகளில் ஏதோ ஓதிட....சித்தர் மிக, மிக விரைவாக நடந்தார்....என்ன இறைமொழி உபதேசமோ, எவரறிவார் பராபரமே!

பிலத்துள் கலந்த சித்தர் பெம்மான்!

இதன் பிறகு.....மானையும் காணோம்....ஜடாமுடிச் சித்தரோ தென்பெண்ணை ஆற்றினுள் ஏற்பட்ட பிரம்மாண்டமான பேரொளி கூடிய பில துவாரத்திற்குள் சென்று மறைந்து விட்டார். அதன் பிறகு அவரையும் எங்கும் காண முடியவில்லை!

உயிர்ப் பரிமாற்றம், உயிர்ப் பரிணாமம், உயிர்ப் பரிபாலனம் ஆகியவற்றில் பரிபூரணம் பெற்ற அந்த உத்தம சித்தரைக் கலியுகத்தில் விட்டு வைத்தால், எதிர்காலக் கலியுக மனித சமுதாயம் தவறான வழிகளில் தங்கள் ஆயுளை நீடித்திடச் சொல்லி அவரைப் பிய்த்துப் பிடுங்கித் துன்புறுத்துவார்கள் என்ற காரணத்திற்காக இறைவன் அவரை அப்போதே தன்னுடன் ஈர்த்துக் கொண்டான்.

இச்சித்தர்பிரான் இன்றும் குறித்த சில விசேஷமான நாட்களில் சூட்சுமாகவோ, தூல வடிவிலோ அருணாசல கிரிவலம் பூண்டு அருள்வழி காட்டுகின்றார். இவற்றுள் ஒன்றே சித்ரபானு ஆண்டின் வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரித் திருநாள் ஆகும். இந்நாளில் ஜடாமுடிச் சித்தர் அருளிய ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை இட்டவாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவோர்க்கு எத்தகைய நோய்களுக்கும் தக்க தீர்வுகளைப் பெறுதற்கான நல்வழிகள் கிட்டும். பல்லாண்டு காலமாகப் பலவிதமான பிரச்னைகளால், நெடுங்கால நோய்களால் அவதியுறுவோர் இந்நாளில் கிரிவலம் வந்திடத் தக்கத் தீர்வுகளுடன் நல்வழிகளைப் பெறுவர்.

அமுத தாரைகள்

சோழபுரம் ஸ்ரீமார்த்தாண்ட சனீஸ்வரருக்குக் கரிநாள் பூஜை

ஷடசீதித் தர்ப்பணப் புண்ய காலம், ஆனி மாதப் பிறப்பு, சனிக்கிழமையுடன், கரிநாளும் சேர்ந்து அபூர்வமாக அமைந்து வருகின்ற சித்ரபானு ஆனி முதல் தேதி, சனீஸ்வர பகவானுக்கு உரித்தான நாளாகப் பிரகாசிக்கின்றது. சனீஸ்வர லோகத்தில், நல்ஆயுளை விருத்தி செய்கின்ற ஆயுஷ்யதனப் பித்ரு மூர்த்திகள் வாசம் செய்வதாலும் ஒவ்வொரு ஷடசீதிப் புண்ய காலத்திலும் ஆயுஷ்யதனப் பித்ருக்கள் பூலோகத்திற்கு வந்து சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தங்களில் நீராடுவதுடன், சனீஸ்வர சக்திகள் நிறைந்த தலங்களிலும் வழிபடுவதாலும் இக்கரிநாள் "மார்த்தாண்டக் கரிநாளாக" சித்தர்களால் போற்றப்படுகின்றது.

ஸ்ரீகைலாசநாதர் சோழபுரம்

இந்நாளில் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்திற்கு யானையை அழைத்து வந்து கஜ பூஜை செய்து யானைக்கு வயிறார கேழ்வரகு உணவு, கரும்பு, பழங்கள் அவித்த கொள் அளித்து ஸ்ரீசனீஸ்வரரை வழிபட்டிட உறவில் உள்ள நெடுங்காலப் பகைமை தீர்ந்து, உறவும் ஒன்று கூடி, நிலம், சொத்து தாவாக்கள் நன்முறையில் தீர்வு பெறும்.

இல்லறத்தில் இணைந்த இனிய தெய்வீகப் பணிகள் கூடிட....

பரிகாரங்கள், பிராயச்சித்தங்கள், பிரார்த்தனைகள், நேர்த்திகள் என்ற எண்ணங்களிலேயே ஆலயங்களில் வழிபட்டு வந்தால் என்று தான் உத்தம இறை நிலைகளுக்காக, பிறப்பு, இறப்பு அற்ற பெரு நிலையை அடைய, முக்தி, மோட்ச நிலைகளை அடைய வழிபடுவது? குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே முடித்துவிட்டுப் பிறகு இறைவழிக்குத் திரும்பலாம் என்றே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அதற்குள் வயதாகி, பல நோய்களும் வந்துவிட உண்மையாக வழிபட இயலாமல் போய் விடுகிறது. கர்ம வினைகள் கழிந்தால் தாம் எப்போதும் இறைச் சிந்தனையில் திளைக்க முடியும்! பள்ளிப் பிராயத்திலிருந்தே, இள வயதிலிருந்தே தேகத்தாலான திருப்பணிகள், கால்நடை யாத்திரைகள், மறை ஓதுதல், பிரதோஷ, விஷ்ணுபதி வழிபாடுகள், பைரவ பூஜை போன்ற பல வகை வழிபாடுகளை நெடுங்காலமாக ஆற்றி வந்தால் தான் ஓரளவு கர்ம வினைகளையாவது தீர்க்க முடியும். வயது, இளமை, ஆற்றல், வீரம், பண வசதி, வாகன வசதி, வீட்டு வசதி இருக்கும் போதே தினசரி வாழ்க்கை முறைகளோடு பலவிதமான இறைப் பணிகளையும் ஆற்றி வர வேண்டும். எனவே தெய்வீகத்தில் நாட்டம் பெருகுதற்கு சென்னை-வேலூர் சாலையில் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடலில் மிகவும் அபூர்வமாக ஆவுடையில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்குத் திருவோண நாள் மற்றும் புதன், சனிக்கிழமைகளில் தைலக்காப்பு இட்டு வழிபட்டு ஏழைக்குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் தானமளித்து வந்தால் தினசரி வாழ்க்கை முறைகளோடு தெய்வீகத்தில் நாட்டம் அடையப் பெருமாளே நல்ல வழிகளைக் காட்டிடுவார். எவர் மூலமேனும் அடிக்கடி இறை நற்காரியங்களை ஆற்றிட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

ஸ்ரீசிவபூரணி அம்பாள் சோழபுரம்

உறக்கத்தின் ஆன்மீக இலக்கணங்கள்!

உறக்க நேரம் எவ்வகையில் சேரும்? எப்படி, எவ்வாறு, எங்கே உறக்கம் நிகழ்கின்றது என்பதைப் பொறுத்தும், உறங்கும் முன், பின் உள்ள நிலைகளைப் பொறுத்தும் உறக்கத்தின் கால சார, கால போக விகிதாச்சாரம் அமையும். உறக்க நிலைக்கான யோக முறைகள், உறங்கும் முன் கடைபிடிக்க வேண்டிய வழிபாடுகள், உறங்கி எழுந்த பின்னர் ஏற்படும் சிந்தனை, எழுந்தபின் ஆற்றும் பூஜைகள் ஆகியவற்றைப் பொறுத்து உறக்க நேரம் கால சாரமா, கால போகமா என்ற காலப் பண்பு அமையும். எனவே ஒரு நாளில் உங்களுடைய ஒவ்வொரு நாளின் வாழ்க்கையின் கால சாரம், கால போக நிலைகளை நீங்களே அறிந்து கொள்ளவே உறக்கத்திற்கு முன் நீங்கள் நன்கு ஆத்ம விசாரம் செய்து வர வேண்டும். இதற்கு ராத்ரி சூக்தப் பாராயணம் உதவும் (ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஜனவரி 2002 இதழ் காண்க).

"தூக்கம் வந்து விட்டதே" என்று "தொபுக்" கென்று படுக்கையில் விழுந்து உடனே உறங்கிடுதல், பிரயாணத்தில் அமர்ந்த நிலையிலேயே தூங்குதல் போன்றவை எல்லாம் நல் உறக்கமாகாது. இவை மனோ நிலைகளையே பாதிக்கும்.

அடிக்கடி கார், பஸ், ரயில் விமானம் போக்குவரத்துக்க‌ளை மேற்கொள்ள வேண்டிய பணியில் உள்ளோர் பலர் உண்டு. எப்போதும் பயணம் என்பதால் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படுவதுடன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இவர்கள் ஸ்திரமான பணியைப் பெற்றிட நாரத மகரிஷி வழிபடுகின்ற தலங்களில் முதலில் நாரதரை வழிபட்டு வாழ்க்கையில் ஸ்திரத் தன்மை தருமாறு வேண்டி இறைவனிடம் விண்ணப்பிக்குமாறு பிரார்த்திட வேண்டும். பக்தியுடன் வேண்டுவோர்க்கு நாரத மகரிஷியே பரந்தாமனின் திருவருளுக்காக விசேஷமாக வேண்டுகின்றார். ஆனால் நாரதரோ ஓரிடத்தில் ஒரு நாழிகைக்கு மேல் தங்கலாகாது என்பது நியதி, ஒரு கஷ்டத்தை நன்கு உணர்ந்தவர்கள்தாமே, தீர்வுகளைப் பெற்றுத் தர முடியும்!

நாரத மகரிஷி வழிபடும் தலங்கள் ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுரட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயம், கேரளாவில் உள்ள திருவண்வண்டூர் (திருவமுண்டூர், வண்வண்டூர்) பாம்பணையப்பன் ஆலயம்.

கணிப்பில் பிழை காலத்தை மாசு படுத்தும்!

"பிரபலாரிஷ்ட யோகம்" (கூடா நாள்) பற்றிப் பல ஜோதிடர்களும், பஞ்சாங்கம் கணிப்போரும் அசிரத்தையாக இருப்பது வேதனையானது. "விஷ நேரம்" எனப்படும் லக்ன, நட்சத்திர, நாள் தியாஜ்யங்கள், அந்தந்த ராசிக்கு உரிய திதி சூன்யம், சந்திராஷ்டமம் போன்றவற்றையும் பார்த்து நல்ல நேரத்தை சேர்த்துப் பார்த்துக் கணிக்காது, பலரும் சுப முகூர்த்த நேரங்களைப் பஞ்சாங்கத்தில் பொதுப்படையாகப் போடுவதால், இவை சரியான கணிப்பு ஆகாது. திருமண சுப முகூர்த்தங்களைப் பஞ்சாங்கங்களில் இருந்து அப்படியே எடுத்துக் கொள்ளாது, அவற்றில் மேலும் பல கணித்தல்களைச் செய்து காலப் புனிதத்திற்கு மெருகேற்ற வேண்டும்! பல ஜோதிடர்களும், சுப நேர கணித்தலில் பிரபலாரிஷ்ட யோக நேரத்தை எடுத்துக் கணிக்காது விட்டு விடுகின்றார்கள். இதனால் சுப முகூர்த்த நாட்கள் கூடா நாட்களில் அமைந்து தம்பதிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பலத்த சோதனைகளை, சொல்லொணா வேதனைகளைத் தருகின்றன. இதற்கு ஜோதிடர்களும் பொறுப்பேற்றாக வேண்டும். இது ஜோதிடர்களையும், பஞ்சாங்கம் கணிப்போரையும் பலமாகப் பாதிக்கும். இந்நாளில் அமைகின்ற பல நற்காரியங்கள், விழாக்கள் போன்ற அனைத்திலுமே பெரும் இன்னல்கள் ஏற்படும்.

"தாரகா வடி" காரியங்களே கனவுகளாம்!

மனிதன் உறங்கும் போது காணும் பல கனவுகள் யாவும் மனிதனுடைய "தாரகா வடி" என்ற சூட்சும சரீரத்தின் மூலம் பல நட்சத்திர மண்டலங்களில் நிகழும் பிறவகை வாழ்க்கை நிகழ்ச்சிகளே ஆகும். ஒவ்வொருவருடைய தலைச் சுழியும் அவரவருடைய நட்சத்திர மண்டலத்துடன் எப்போது தொடர்பு கொண்டிருக்கும். எனவே தான் இரு கைகளையும் குவித்து, இரு கை ரேகைகள் ஒன்று சேரும் வண்ணம் தலை குனிந்து, தலைச் சுழியை உச்சியிலிட்டு இறைவனை வணங்குகின்றோம். ஒருவருடைய நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் சரி, மனித சரீரத்தில் உள்ள 27 நட்சத்திர கிரந்திகளிலும் 27 நட்சத்திர சக்திகள் அவரவர் கர்ம வினைப் பரிபாலன நியதிப்படி பதிந்திருக்கும். அந்த கிரந்திகளில் எது அவருடைய நட்சத்திர கிரந்தியோ அது உச்ச மாட்சிமை பெறும். எனவே ஒரு மனிதனை வாழ்விக்க 27 நட்சத்திரங்களும் அரும்பாடுபடுகின்றன. சில வகை கர்ம வினைகளை நட்சத்திர மூர்த்திகள் தாங்கிடுவர், பல கர்ம வினைகளின் கடுமையைத் தணிப்பர், சிலவற்றைக் கழித்துத் தருவர்.

ஸ்ரீபைரவ மூர்த்திகள் ஆவூர்

அஷ்டமி திதியில் பைரவருக்கு நடைபெற வேண்டிய பூஜையே அரிஷ்ட நிவர்த்தி பூஜை வகைகளில் ஒன்றாம். பலத்த கர்ம வினைகளைத் தணிக்க வல்லதாம். பைரவருக்குச் சந்தனக் காப்பு இட்டு முழு முந்திரிப் பருப்புகளைப் பதித்து, முழு முந்திரிகளாலான மாலை சார்த்தி வழிபட வேண்டும்!  பிறகு அனைவரும் வழிபட்ட பின் சந்தனக் காப்பில், முந்திரி மாலையில் உள்ள பைரவக் காப்பு சக்தி மிகுந்த முழு முந்திரிகளை சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் போன்ற உணவு வகைகளில் இட்டு தானம் அளிக்க வேண்டும்.

கும்பகோணம் அருகே ஆவூர் சிவாலயத்தில் உள்ள பஞ்ச பைரவ மூர்த்திகளுக்கு இவ்வகையில் பூஜித்து வந்தால் கொள்ளை, வன்முறை, தீ விபத்து, வாகன விபத்து, துர் மரணம், பிள்ளைகள், பெற்றோரின் திடீர் மரணம், தீடீர் நஷ்டங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே ஸ்தம்பித்து இருப்போருக்கு நல்ல தீர்வுகள் கிட்டும். ஒரே நாளிலோ அல்லது தினமும் ஒரு பைரவர் என ஐந்து நாட்களிலோ இத்தகைய பைரவருக்குச் சந்தனக் காப்புடன் பூஜை செய்ய வேண்டும்.

நமக்காக நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் "கங்கா ஸ்நானம்"!

நட்சத்திர மூர்த்திகள் ஒவ்வொருவரும் ஆகாச கங்கை, பாதாள கங்கை, பூம்ய கங்கையிலும், தமக்குரிய பூலோகத் திருத்தலங்கள், தீர்த்தங்களிலும் நீராடி, பூஜித்து, தரிசித்துத் தாம் ஜீவன்களிடம் இருந்து ஏற்ற கர்மச் சுமைகளைத் தணித்துத் தருகின்றனர். எனவே மந்தாகினி, துங்கபத்ரா, அலக்நந்தா, ருத்ர பிரயாகை போன்ற நதி நீராடல்கள், தல தரிசனங்களை நாம் மேற்கொள்ளாவிட்டாலும், நம் நட்சத்திர மூர்த்திகள் இவற்றை மேற்கொண்டு இவற்றின் நல்வரங்களை திருஅண்ணாமலைத் தரிசனங்கள் போன்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக, நிச்சயமாக வழிபட வேண்டிய தலங்களில் பதிக்கின்றனர்.

மூங்கில் தலவிருட்சம் பொழியும் நால் வேதரசம்

சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் சிவாலயத்தில் வேத சக்திகள் நிறைந்த மூங்கிலே தல விருட்சமாகத் துலங்குகின்றது. திருக்கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் உள்ள வேத வனங்களில் திளைக்கும் வேத மூங்கிலின் வம்சம் கூடிய இதில் எண்ணற்ற வேத நாத சித்தர்கள் குடி கொண்டுள்ளனர். பிள்ளைகள் நினைவாற்றல் மங்கி படிப்பில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர்களை இங்கு அழைத்து வந்து சிவனை வழிபட்டு கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரிய நட்சத்திர நாட்களில் விருட்சத்தை நோக்கியவாறு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதி, பஞ்சாட்சர தூபத்தை ஏற்றியவாறு ஆலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டிட, கல்வியில் சிறந்து விளங்குவர்.

சித்திரை நட்சத்திர தேவி வேண்டியபடி வாழ்க்கையில் சாந்தமும், மன நிம்மதியும் அடைதற்கு அஷ்டமி திதியிலும் சித்திரை நட்சத்திர நாளிலும் சிவபுரி சிவாலய ஸ்ரீசரகபால மாலா பைரவ மூர்த்திக்கு அஷ்ட பைரவ தூபமிட்டு, சாந்தமான நல்வரங்களைத் தரவல்ல, சாந்த சக்திகளை உடைய கோதுமை அல்வா, கேசரி போன்ற மென்மையான உணவுப் பொருட்களைப் படைத்து, வயதானோர்க்கும், சிறு குழந்தைகளுக்கும் தானமளிக்க வேண்டும்.

அலுவலகத்தில் ஒன்று மாற்றி ஒன்று பிரச்னைகளுக்குள் உழன்று கொண்டு தினமும் நிம்மதி இல்லாது வாழ்வோரும் உண்டு. பொதுவாக பூர்வ ஜன்மங்களில் ஊதியத்திற்கேற்ற உழைப்பு கொள்ளாதோர்க்கும், அலுவலகத்தில் பிறரை வதைத்தோர்க்கும் இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கு மேலும் பல காரணங்களும் உண்டு. ஊழ்வினைப் பயனை அனுபவித்தாலும், தங்கள் ஆன்மீக வாழ்க்கையை இவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும் தினசரி அலுவலக வாழ்வில் மனக் கொந்தளிப்புகள் அடங்கிட மாத சிவராத்திரி தினத்தில் திருஅண்ணாமலைச் சிவாலயத்தில் சிவ சந்நிதியின் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதூர்வாசர் சந்நிதியிலேயே கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும். அக்காலத்தில் அனைத்து மகரிஷிகளும் தங்களுடைய சிஷ்யர்களுக்குத் தற்காலத்து training போல அக்னி நட்சத்திரமாகிய கத்ரி காலத்தில் ஒரு மண்டலத்திற்குத் தூர்வாசரிடம் அனுப்பி வைப்பர். தூர்வாசரும் அனல் கக்கும் கத்ரி காலத்தில் அபிஜித் முகூர்த்த நேரத்தில், கோடை வெய்யிலில் திருஅண்ணாமலையை அவர்களுடன் கிரிவலம் வந்திட்டார். இதனால் சங்கிலித் தொடர்பாக வரும் துன்பங்களுக்குத் தீர்வுகள் கிட்டும்.

கும்பகோணம் அருகில் உள்ள சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் த்ரயம்பகேஸ்வர லிங்க மூர்த்தியை (முக்கண் மாலீஸ்வரர்) பூஜிக்கும் கோலத்தில் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி அபூர்வமாகக் காட்சி அளிப்பதால் இங்கு ஆனி மாதப் பிறப்பன்று கரிநாள் கூடுகின்ற திருநாளில் சனி பகவான் வழிபடுகின்ற த்ரயம்பகேஸ்வர லிங்கத்திற்கும், சனீஸ்வரருக்கும் வெண்ணெயும் எள்ளும் கலந்த காப்பிட்டு, தர்ப்பண பூஜைகளை நிகழ்த்தி, எள் உருண்டைகளையும், கறுப்பு மற்றும் கருநீல நிற ஆடைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் விசேஷமானதாகும். கருப்பையா, கருப்பன், கருப்பண்ணன், நீலா, நீலமேகம், நீலகண்டன் போன்ற "கருப்பு, நீலம்" சம்பந்தப்பட்ட பெயரை உடையவர்களுக்கோ அல்லது அவர்கள் மூலமாகவோ மேற்கண்ட தானங்களை அளித்திட, நல்ல நாள் பாராது செய்த காரியங்களில் ஏற்பட்டுள்ள பெரும் தடங்கல்கள் தீரும். குறிப்பாக, கோர்ட் வழக்குகள், சொத்து தாவாக்கள், பதவி உயர்வு கிட்டாமை போன்றவற்றிற்குக் காரணமே ராகு காலம், எம கண்டம், சந்திராஷ்டமம், சூன்ய திதி, த்யாஜ்ய நாட்கள் பாராது காரியங்களை நிகழ்த்துவதுதான்!  இத்தகைய நெடுங்காலக் குறைகள் தீர இந்த மார்த்தாண்ட கரிநாள் பூஜா பலன்கள் பெருந்துணை புரியும். நெடுங்காலக் கர்ம வினைகளைத் தீர்க்கவல்ல மார்த்தாண்ட சனீஸ்வரத் தலமாக, திருநள்ளாறு போல, சோழபுரம் சிவாலயமும் பொலிந்திட அமாவாசை, கரிநாள், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விசேஷமான பூஜைகளை நிகழ்த்தி வர வேண்டியது பக்தர்களுடைய கடமையாகும்.

திருக்கோவிலூரிலிருந்து கிட்டும்
திருஅண்ணாமலை தரிசனம்

மக்களே கட்டிக் காத்த இறைவள அருணாசலப் புனித பூமி!

திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்பிரான் மானுட சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அப்பால்தாம் நகர, கிராம சமுதாய வாழ்க்கை தொடங்கிற்று. கிரிவலப் பாதையின், சுற்றளவும் நன்கு விரிந்து 25 மைலுக்கும் மேலாகவே இருந்தது. அக்காலத்திய திருஅண்ணாமலையில் நிறைய பர்ணசாலைகளும், குருகுலவாச ஆஸ்ரமங்களும், 32 அறங்களை நன்கு பேணிய நற்சத்திரங்களும், மடங்களும், அன்னச் சாலைகளும் கொழித்து யாத்ரீகர்களுக்குப் பரந்த கருணையுடன், இறைப் பெருஞ் சேவைகளைப் புரிந்தன. புனிதமான சத்தியம் நிலை நின்று பூரித்த கலியுகக் காலமது! எண்ணற்ற மகான்கள், சித்தர்கள், புனிதமான துறவிகள் மானுட ரூபத்திலேயே உலா வந்த புனிதத் திருத்தலமாக அருணாசல மலை அப்போது பொலிந்தமையால் பூவுலகின் இறைவளச் சமுதாய நன்மை கருதி அக்காலத்தில் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று கூடி, அருணாசல புனித பூமியில் நிரவிய தெய்வீக சாந்நித்யத்தைக் கட்டிக் காத்திடப் பெருந்துணை புரிந்தனர். இன்றும் எண்ணற்ற சித்தர்கள், மகான்கள் பூரிக்கும் புனித பூமியே அண்ணாமலையாம்!  ஆனால் தற்காலத்தில் சத்தியம் மறைந்து வருவதால் இவ்வாறான அருணாசல உத்தம வளாக நிலையைத் தக்க பக்தியின்றி, குருவருள் இன்றித் தற்போது உணர இயலாது!

ஜடாமுடிச் சித்தருடைய காலமானது சத்தியமான அரசாட்சிகள் பலவும் பரிணமித்த காலமும் கூட! அக்கால மாமன்னர்கள் உத்தமச் சிவநெறி, அறநெறி, நல் உடல் நெறியில் பிரகாசித்தமையால் இறைவனுடன் நேருக்கு நேர் உரையாடும் உன்னத பக்தி நிலையைப் பெற்று இருந்தனர். இதனால் தாம் இன்றளவும் நம் காலத்திலும், சத்திய சீலனாக அரசாட்சி கொண்ட வல்லாள மகாராஜாவிற்கு, வருடந்தோறும், மாசி மகம் அன்று, ஈமக் கடனாகிய தர்ப்பணாதிகளை இறைப் பரம்பொருளாகிய அருணாசல ஈஸ்வரச் சிவமூர்த்தியே ஆற்றும் அரிய வைபவம் திருஅண்ணாமலை ஆலயத்தில் நிகழ்ந்து வருகின்றது! ஆனால் இன்றோ பலரும் கிரிவலத்தில் புகைப்பிடித்துக் கொண்டும், காலணிகள் அணிந்து இறைமையை மிதித்தும், பாத யாத்திரை அல்லாது வாகனங்களில் கிரிவலம் வந்தும் கிரிவலப் புனிதத்தை அவமதித்துச் சாபங்களைக் கட்டிக் கொள்கின்றனர் என்பது வேதனைக்கு உரியதாகும்.

முக்தி தரும் முத்ராவிதானச் சித்தராம் திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான்!

அண்ணாமலை கிரிவலப் பிரகாரத்தில் ஜடாமுடிச் சித்தர் எங்கும் அமர்ந்தோ, உறங்கியோ, அயர்ந்தோ எவரும் கண்டதில்லை. எப்போதும் பலவிதமான விரல் முத்திரைகளை இட்டவாறே மலை தரிசனங்களை வழிபட்டவாறே அருணாசலத்தைக் கிரிவலம் வந்திடுவார்! அவரவருடைய கர்ம நிலைகளுக்கு ஏற்ப ஒரு முறை, இரு முறை, மும்முறை எனக் குறித்த எண்ணிக்கையில் கிரிவலம் வருவோர்க்குக் குறித்த நேரத்தில் அவரே தானாகவே முன் வந்து நின்று, அவரவருக்கு உரித்தான மலை தரிசனப் பகுதியும் உணர்வித்து, அந்தந்த முத்திரையையும் பயிற்றுவித்து அருளிடுவார்! மிகவும் லாவகமாக, நளின லாவண்யத்துடன், அபிநய பாவத்துடன், அதிதுரிதமாக அவர் முத்திரைகளை மாற்றி, மாற்றி கிரிவலத்தில் அண்ணாமலையை வழிபடுகின்ற காட்சி அதியற்புதமானதாம்!

பல்லாயிரக்கணக்கான‌ முத்திரைகளுடன் அருணாசல மலை தரிசனங்களை அவர் வழிபட்டதுடன் அவற்றின் பலாபலன்களையும் தியாகமய உணர்வுடன் ஆங்காங்கே நமக்கெனப் பதித்துள்ளார்! அன்றும், இன்றும், என்றும் குறித்த முத்திரைகளுடன் மலை தரிசனங்களை வழிபடுவோர்க்கு அளப்பரிய நல்வரங்களும், பலாபலன்களும் கிட்டும்! அவரளித்த முத்திரை கூடிய கிரிவல தரிசன பூஜைகளைக் கடைபிடித்து எண்ணற்றோர் தம் நோய்களுக்கான நிவாரணம் பெற்று, தீ வினைகளைக் கழித்து, வாழ்வில் துயர்கள் களையப் பெற்று நல்வாழ்வு பெற்றுள்ளனர்! முக்தி தரும் முத்ராவிதானச் சித்தராக இன்றும் சித்தர்களின் லோகங்களில் பெரிதும் போற்றப்படும் அற்புதச் சித்தர்பிரான்!

ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை இட்டு மலை தரிசனங்களைக் கண்டு மாத சிவராத்திரி அருணாசல கிரிவலம் வாரீர்!

சூரிய பகவானைத் தரிசிக்க உதவும் "பாசாங்குலி" முத்திரை போல விரல்களில் பல யோகச் சங்கிலிகளாக, பல யோகக் கோணங்களில் அமைவதே பல்வேறு முத்திரைகளாம். ஆலய பூஜைகளில் இவை கடைபிடிக்கப்படுவதை இன்றும் நன்கு காணலாம்! சில முத்திரைகள் சகஸ்ரநாமம் (1008 போற்றிகள்) ஓதிய பலன்களைத் தருபவை! முத்திரைகளை இட்டவாறு கடவுளை, ஆலய கோபுரக் கலசங்களை வழிபடுதலால் சுவாச நாளங்கள் சீர் பெறுவதோடு, சுவாசமும் யோகமயமாகித் தீவினைக் கர்மங்கள் கழிந்து, காரிய சித்திகள் மிகும். முத்ராவிதான மாமுனிச் சித்தராகப் பொலியும் ஜடாமுடிச் சித்தர் தாமே தூல, சூட்சும வடிவில் கிரிவலம் வந்து அருள் புரியும் நாட்களில் வைகாசி மாதத்தின் மாத சிவராத்திரியும் ஒன்று ஆதலின் இந்நாளில் "ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன" முத்திரை இட்டவாறு கிரிவலம் வருதலும், இம்முத்திரையின் விரல்களின் கோண இடைவெளியின் ஊடே திருஅண்ணாமலையின் பல்லாயிரக்கணக்கான மலை முகடுகளை (அனைத்தும் சுயம்பு லிங்க அமைப்புகள்) தரிசித்தலும் ஜடாமுடிச் சித்தரின் மகத்தான ஆசிகளைப் பெற்றுத் தருவதுடன் அருணாசலப் பெருமானுக்கும் மிகவும் ப்ரீதி அளிப்பதாகும்.

நோய், நிவாரணத்திற்கும், நீண்ட காலப் பிரச்னைகள் தீர்ந்திடவும் இம்மாத சிவராத்திரி கிரிவலம் பெரிதும் துணை புரியும். ஸ்ரீகாயத்ரீ முத்திரை இட்டு மலை வடிவுகளை, ஆலய கோபுரங்களை, கோபுரக் கலசங்களை தரிசித்தலும் மிக மிக விசேஷமானதாம். ஜடாமுடிச் சித்தர் யோகங் கொண்ட புனிதமான திருக்கோயிலூர் தென்பெண்ணை நதித் தீர்த்தத்தை (மணல் ஊற்று நீரையாவது) சிரசில் தெளித்து இன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சாலச் சிறந்ததாம்! 

ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரையில் கிட்டும் தேவதா தரிசனங்கள்!

மலை தரிசனங்கள் மற்றும் கோபுரத்தில் உள்ள அனைத்து கோபுர தேவதைகளின், தேவ மூர்த்திகளின் தரிசனமும் நமக்குக் கிட்டுவது கிடையாது. காரணம், அவர்களுடைய புனிதமான வடிவைக் கண்டு தரிசிக்கின்ற அளவிற்குத் தூய்மையான உடல், மனம், உள்ளத்தை நாம் பெறவில்லை. எவ்வாறு ஒரு பைனாகுலர் வைத்துக் கொண்டு தொலைவிலுள்ள பல பொருள்களைப் பார்க்கின்றோமோ அதே போல இந்த ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை மூலம், விரல்களின் அபூர்வமான அமைப்புகளில் கிட்டுகின்ற கோணங்களில் மூலமாக மலை வடிவுகளை,  கோபுரத்தை தரிசிக்கின்ற போது நமக்குப் பல அரிய காட்சிகள் இறையருளால் கிட்டும். பாக்கியமுள்ளோர்க்கும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைப் பயின்று வருவோர்க்கும் பல தேவதா தரிசனங்கள் இம்முத்திரை மூலம் கிட்டும்.

பித்ரு சாபங்களைத் தணிக்கவல்ல அபூர்வமான முத்திரையிது. கணவனை, மனைவியை இழந்து வாடுபவர்கள், விரக்தியுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பேற்றி வருவோர் இந்த முத்திரா தியான வழிகளில் முறையாகப் பயின்று வர, நல்ல தீர்வுகளையும், நல்வழிகளையும் பெறுவர்.

பௌர்ணமி திதி நேரம்: 24.6.2002 திங்கள் அதிகாலை 4.23 மணி முதல் 25.6.2002 செவ்வாய்க் கிழமை அதிகாலை 3.12 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது

கிரிவல நாள்: 24.6.2002 திங்கள் கிழமை

வைகாசி (ஜூன்) மாத திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர் சிவராத்திரி நாள்

மாதந்தோறும் அமாவாசைக்கு முதல் நாளான தேய்பிறைச் சதுர்த்தசி திதியே அந்த மாத சிவராத்திரி நாளாகும். 9.6.2002 ஞாயிறு அதிகாலை 4.27 மணி முதல் 10.6.2002 திங்கள் அதிகாலை 5.07 மணி வரை (ஜூன்-வைகாசி) மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகிறது!

ஜூன் மாத சிவராத்திரி கிரிவல நாள்: 9.6.2002 ஞாயிறு

நித்ய கர்ம நிவாரணி

1.6.2002 - கோயில் தீர்த்தத்தில் உள்ள மீன்களுக்கு பொரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை உணவாக அளித்திடில் கணக்குப் போடுபவர்கள், கணக்கர்கள் தங்கள் வேலையில் தப்புத் தப்பாக கணக்கிட்டு மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.

2.6.2002 - இன்று ஏழு கோயில்களில் சூரிய நக்ஷத்திர ஊதுபத்திகளை ஏற்றி அன்னதானம் செய்திடில் - அரசாங்க உத்யோகஸ்தர்கள், நண்பர்களின் பேச்சைக் கேட்டு ஏமாற மாட்டார்கள்.

3.6.2002 - பூரட்டாதி நக்ஷத்திரக்காரர்கள் விரதத்துடன் எட்டு பெருமாள் கோயில்களில் பூரட்டாதி நக்ஷத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், நண்பர்கள் போல் நடித்து ஏமாற்றியவர்கள் விலகிப் போய் விடுவார்கள்.

4.6.2002 - ஐந்து சிவன் கோயில்களில் உத்திரட்டாதி நக்ஷத்திர தூபத்தை ஏற்றி விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து அன்னதானம், ஆடை தானம் செய்திடில் விதவைகளால் ஏற்படும் வாஸ்து தோஷம் விலகும்.

5.6.2002 - இன்று கரும்புத் துண்டுகளை (100 கரும்பு துண்டுகளையாவது) விநாயகருக்குப் படைத்து, பிறகு யானைக்கு உண்ண அளித்து, ஏழைகளுக்கும் தானம் செய்திடில் செங்கல் தொழிலாளிகளுக்கும், புதிதாகத் திருமணம் ஆனவர்களும், தனிக் குடித்தனம் நடத்தும் இளம் தம்பதியினரும் நலம் பெறுவர்.

6.6.2002 - "A" என்ற முதல் எழுத்துடைய பெயருடையோர் இன்று பெருமாள் கோயில்களில் ஏகாதசி திதி எண்ணெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், பெற்றோரின் மூலமாகப் பொருள் உதவி அடைவர்.

7.6.2002 - இன்று சுண்ணாம்பு அடிக்கும் தொழிலாளிகளுக்கு, Mosaic Tiles வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்திடில், Hardware வியாபாரம் செய்கின்றவர்கள் நலம் பெறுவர்.

8.6.2002 - நந்தீஸ்வரருக்குப் பிரதோஷ தூபம் ஏற்றி, கொப்பறைத் தேங்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வெல்லத்தில் புரட்டி எடுத்து, பசு மாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும் அளித்திடில், வருவாய்த் துறையிலிருந்தும், வணிகத் துறையிலிருந்தும் வருகின்ற துன்பங்கள் விலகும்.

9.6.2002 - சிவராத்திரி தூபம் அல்லது பஞ்சாட்சர தூபம் ஏற்றி கிரிவலம் வந்திடில், உணவில் கலப்படம் செய்வோர்க்கு வருகின்ற தோஷத்திற்குப் பரிகாரத்திற்கான வழி கிடைக்கும். ஆனால் மனம் திருந்தி வாழ வேண்டும்.

10.6.2002 - காமாட்சி அம்மன், திரிபுர சுந்தரி அம்மன் போன்ற அம்பாள் கோயில்களில் அமாவாசை திதி எண்ணெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் - பெண் வயிற்றுப் பேத்தி, பேரன்களுக்குக் கல்வியில் வரும் தடங்கல்கள் விலகும்.

11.6.2002 - மிருக சீரிஷ நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் தன்னுடைய தாய் தந்தையர்க்குப் பாத பூஜை செய்து அன்னதானம் செய்திடில், வீடு சம்பந்தமான நல்ல செய்திகள் வரும்.

12.6.2002 - இன்று மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசித்து ரோஹிணி தூபம் சந்திரனுக்கு ஏற்றி ஸ்ரீசந்திர காயத்ரீ மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் ஜபித்து அன்னதானம் செய்திடில், உண்மையான காதலுக்கு வருகின்ற தடங்கல்கள் விலகும்.

13.6.2002 - வராஹம் என்று சொல்லப்படுகிற பன்றிகளுக்கு முள்ளங்கி உண்ண அளித்து ஸ்ரீவராஹ ஸ்வாமிக்கு கிழங்கு நைவேத்யம் செய்து தானம் செய்திடில், வீட்டில் உள்ளவர்களால் "தண்டச் சோறு" என்ற பட்டத்தைப் பெறாமல் நல்லதொரு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

14.6.2002 - உமா மஹேஸ்வரர் கோயிலில் பூச நக்ஷத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் "B" என்ற முதலெழுத்துடைய பெயரையுடையவர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் கிடைக்கும்.

15.6.2002 - ஆயில்ய நக்ஷத்திர தூபத்தை சிவன் கோயிலில் ஏற்றி, அனாதை நாய் குட்டிகள் வளர்க்கும் இடத்திற்குச் சென்று, நாய் குட்டிகளுக்குச் சுட வைத்து ஆறிய தூய பாலைக் குடிக்க வைத்திடில், கூட்டுத் தொழில் உடையவர்கள் இடையே ஏற்படும் மனஸ்தாபங்கள் விலகும்.

16.6.2002 - முருகன் கோயில்களில் இருக்கும் மயில்களுக்கு தான்ய மணிகள் உண்ண அளித்து அக்கோயிலில் அன்னதானம் செய்திடில் காவல் துறையில் இருப்போர்க்குள் ஏற்படும் உட்பூசல் தீரும்.

17.6.2002 - பூர நக்ஷத்திர தூபம் ஏற்றி, ஸ்ரீகேசவ பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்திடில், பிறருக்கு உதவப் போய் வந்த துன்பம் தலைப்பாகையோடு போகும்.

18.6.2002 - ஸ்ரீகஜலக்ஷ்மி எழுந்தருளியுள்ள கோயில்களில் உத்திர நக்ஷத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டோர் நலம் பெறுவர்.

19.6.2002 - நவமி திதி எண்ணெய் தீபம் அனுமார் கோயில்களில் ஏற்றி வழிபட்டிடில் அல்பமான விஷயத்திற்கெல்லாம் மனதைக் குழப்பிக் கொள்வோர் குழப்பம் தீருவர்.

20.6.2002 – L.I.C தொழில் செய்வோர் மற்றவருடைய வீணான வார்த்தைகளைக் கேட்டு ஏமாறும் நாள் இது. கவனம் தேவை.

21.6.2002 - ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாதசி திதி எண்ணெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் Water works, P.W.D. போன்ற தொழில்களில் வேலை செய்வோருக்கு சுமுகமான இடமாற்றங்கள் ஏற்படும்.

22.6.2002 - பிரதோஷ தூபங்களை எட்டு நந்தீஸ்வரர்க்கு ஏற்றி எட்டு தேங்காய்களைத் துருவியெடுத்து, துருவலுடன் வெல்லம் சேர்த்து பசு மாடு, காளை மாடுகளுக்கு அளித்திடில், வேலைக்கு போக வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் உதவியோடு நல்லதொரு வேலை அமைய வாய்ப்புண்டு.

23.6.2002 - திரயோதசி திதி எண்ணெய் தீபம் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் கோவிலில் ஏற்றி கணவன் மனைவி சேர்ந்து சமைத்த உணவை அன்னதானமாக அளித்திடில் இல்லத்தில் பொருள் சேரும்.

24.6.2002 - கேட்டை நக்ஷத்திர தூபம் ஏற்றி பௌர்ணமி திதியில் கிரிவலம் வந்து "S" என்ற முதல் எழுத்துடைய பெயருடையவர்களுக்கு அன்னதானம் வஸ்திர தானம், புஷ்ப தானம், தாம்பூல தானம், மெட்டி தானம், மர வளையல் தானம் செய்திடில், மஹரிஷி சத்யவான் தம்பதிகளின் அருளாசி பெறலாம்.

25.6.2002 - ஸ்ரீமுனியாண்டி, ஸ்ரீமுனீஸ்வரர் போன்ற தேவதைகளுக்கு மூல நக்ஷத்திர தூபம் ஏற்றி, முந்திரி, திராட்சை கலந்த சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் செய்திடில், "மூலைக் குற்றம்" என்ற தோஷம் விலகி புதிய வாழ்க்கை அமையும்.

26.6.2002 - ஸ்ரீலக்ஷ்மி சந்நிதிகளில் துவிதியை திதி எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து நூலாடும் வகை உணவு (இடியாப்பம், நூடில்ஸ், சேவை, ஓமப்பொடி) நைவேத்யமும் தானமும் செய்திடில் வாழ்க்கையில் வருகின்ற சிக்கல்கள் சரியாகும்.

27.6.2002 - ஸ்படிக ஆமை பொம்மையை, வெள்ளிக் கிண்ணத்தில் வைத்துப் பால் வார்த்து, அதில் மூழ்க வைத்து, ஸ்ரீகூர்ம காயத்ரீயை 1008 முறைக்கு குறையாமல் ஜபித்து, அந்த பாலை குடும்பத்தில் உள்ள அனைவரும் பருகிடில் திடமான மனம் அமையும்.

28.6.2002 - வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர அட்டிகை, வைர மோதிரம் வைத்திருப்பவர்கள், இப்பொருட்களை சப்த நதிகளில் ஏதாவது ஒரு நதி தீர்த்தத்தால் சுத்திகரித்து, மஞ்சள் நீரால், துளசி நீரால் அலம்பி, இளநீரால் அபிஷேகித்து ஸ்ரீசுக்ர காயத்ரீ மந்திரத்தை 1005 முறை ஜபித்து புஷ்பத்தால் அர்ச்சித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து அப்பொருள்களை மறுபடியும் அணிந்து கொண்டால் பல ஆண்டுகளாய் தோஷம் ஏறியிருந்தால் அது குறைந்து நல்லோருக்குப் பயன்படும், தீயோரை விட்டு விலகிவிடும்.

29.6.2002 - அம்மன் கோயில்களில் பஞ்சமி திதி எண்ணெய் தீபம் ஏற்றி 5 விதமான காய்கறிகள் சேர்த்துச் செய்யப்பட்ட உணவை அன்னதானம் செய்திடில் காற்றில் அடித்து வந்த "புதை குழி மண்" தோஷம் விலக வழி உண்டு.

30.6.2002 - ஒன்பது கோயில்களில் ஸ்ரீசரபேஸ்வர தூபம் ஏற்றி ப்ருகு முனிவரின் காயத்ரீயை ஜபித்திடில் எதிரியால் குடும்பத்திற்கு வருகின்ற தோஷம் விலக வழியுண்டு.

கடவுள் நம்பிக்கை அற்றவனுக்கு கடவுள் நினைவு torture !
கடவுளை நம்புபவனுக்கோ கடவுளை நினைப்பதே treasure !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam