அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வாகன பூஜை

லாரி, வேன், பஸ், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்களை உடையோர் செய்ய வேண்டிய எளிய நித்ய வழிபாடு

கிழமை

தெய்வமூர்த்தி

வேண்டிய மாலை, பூ வகை

 ஞாயிறு

ஸ்ரீநந்தீஸ்வரர்

அருகம்புல்

திங்கள்

ஸ்ரீகணபதி

வெண்ணிறப் பூக்கள் (சம்பங்கி, மல்லிகை etc)

செவ்வாய்

ஸ்ரீமுருகன்

செந்நிறப் பூ (அரளி, செம்பருத்தி etc)

புதன்

ஸ்ரீசக்கரத்தாழ்வார்

வெண்மை + செந்நிறம் கலந்தது (பிச்சிப்பூ, பவளமல்லி etc)

வியாழன்

ஸ்ரீஅம்பிகை அம்பாள் தாயார்

மஞ்சள் நிறம்

வெள்ளி

நவகிரஹங்கள்

நீலம்+வெண்மை கலந்தது
(சங்கு புஷ்பம் etc)

சனி

ஸ்ரீஆஞ்சநேயேர்

சிகப்பு நிறம்

 1. அந்தந்த நாளில் அதற்குரித்தான நிறப் பூக்களை அந்தந்த தெய்வமூர்த்திக்குச் சாற்றுதல் விசேஷமானதாகும்.
 2. டிசம்பர் பூ, கனகாம்பரம் , ஜவ்வந்தி, காட்டுமல்லி போன்ற மணமற்ற பூக்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
 3. உதிரிப் பூக்கள், முழம்பூ மாலையாகச் சார்த்தலாம்
 4. ஊர்தியை எடுக்குமுன் “வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்” என்று 18 முறை ஜபித்து யாத்திரையைத் துவக்க வேண்டும்.
 5. ஆம்னிபஸ், லாரி, வேன் போன்ற அனைத்து வாகன அதிபர்கள், உரிமையாளர்கள் மேற்கண்ட முறையில் பூக்களினால் ஆன வழிபாட்டினை தினசரி மேற்கொள்ள

தோஷம் ,விபத்து, வாகனம் பழுது ஆதல், பிரயாணத் தடை, சகுனத் தடை. போன்ற்றவற்றிலிருந்து தற்காத்துக் கொண்டு பாதுகாப்பான பிரயாணத்தை இறையருளால் பெறலாம்.

ருத்திராதிபதி பௌர்ணமி

எப்போதும் பங்குனி மாத உத்திர நக்ஷத்திரத்தன்று அமைகின்ற பங்குனி பௌர்ணமிக்கு உத்திராதிபதி பௌர்ணமி என்று சித்த புருஷர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இறைவன் சிவபெருமான் பல்வேறு விசேஷ தினங்களில் பலவிதமான நாட்டியங்களை ஆடி பிரபஞ்சம் உய்வதற்கு வழிவகை செய்கின்றான். பொதுவாக உத்திர நக்ஷத்திரம் ஸ்ரீஅம்பாளுக்கு உரித்தான நக்ஷத்திரம் ஆகும். உத்திர நக்ஷத்திரத்திற்குரிய ஸ்ரீஅம்பிகைக்கு அதிபதி சிவபெருமான் தானே. எனவே அம்பிகையின் கனிந்த அருளையும் இறைவனின் பேரின்ப நிலையையும் தரவல்லதே உத்திராதிபதியாம் பௌர்ணமியின் சிறப்பு அம்சமாகும்.
பௌர்ணமியன்று துறவிகள் தன் சிரசினை மழிப்பது உண்டு. பிரபஞ்சத்தின் பலகோடி லோகங்களிலும் பலவித லோகங்களிலும் பௌர்ணமியன்று குருபூஜை கொண்டாடப்படுகின்றது.
எத்தனையோ மகரிஷிகள், ஞானிகள், யோகியர், மகான்கள், முமூக்ஷுகள், சித்தர்கள், சற்குருமார்களாகப் பல லோகங்களிலும் பவனிவந்து கோடிக்கணக்கான ஜீவன்கள் கடைத்தேற நல்வழி காட்டியுள்ளனர்.
இவர்கள் தங்கள் சற்குருமார்களுக்காகவும், இவர்களுடைய சிஷ்ய கோடிகளும், நிகழ்த்துகின்ற பௌர்ணமி குருபூஜையில் திரண்ட குருவருளும், திருவருளும் பூரணச் சந்திரனின் நிலவொளியில் பரிணமிக்கும் கிரணங்கள் மூலம் பூலோகம் உள்ளிட்ட பல லோகங்களை அடைந்து அருள் பாலிகின்றது
பௌர்ணமியின் விசேஷ சக்திகள்
சக்திமிகு இக்கிரணங்கள் தேகத்தால் கிரஹிப்பதற்காகவே பௌர்ணமியன்று மாலைப் பொழுதில் பக்தர்கள் நீராடுகின்றனர். இந்நாளில் இல்லங்களில் நீரால் தரையைக் கழுவுவதும் உண்டு. நீர்த் திவலைகளில் சந்திர கிரணங்கள் ஊடுருவி சிரசினை மழித்துக் கபாலம் மூலம் நிலாக் கதிர்களை மூளைக்குள் செலுத்திப் புனிதமான தெய்வீக சக்தியைப் பெற்று அதன் மூலம் தங்களை நாடிவரும் பக்தர்களுக்கு ஆசி அளிக்கின்றனர்.
இல்லற வாசியும் சிரசை மழித்தல் ஆகாதா? பிரம்மச்சரியம், கட்டுபாடான உணவு, யோகாசன, தியானப் பயிற்சிகள், கடுமையான நியமநிஷ்டைகள், நித்ய பூஜைகள், ஆசார அநுஷ்டானங்கள் இவற்றின் ஒருமித்த தெய்வீக ஆற்றலுடன் துறவிகள் பரிணமிப்பதால் அவர்களால் சந்திரனிடமிருந்து நேரடியாகவே கிரணங்களின் அபரிமித சக்திகளைப் பெற இயலும். ஆனால் ஒரு சாதாரண இல்லறவாசி இத்தகைய சக்தி மிகுந்த கிரணங்களின் வீர்யத்தைத் தாங்கும் ஆன்மீக தேக அமைப்பை அமைத்துக் கொள்ளவில்லையாதலின் துறவிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் .
ஆயினும், இல்லறவாசிகளும் முழு நிலவின் சக்திமிகு கிரணசக்திகளைப் பெறுவதற்கான சில வழிமுறைகளை சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். மாலை நேர ஸ்நானம், இல்லங்களை நீரால் கழுவுதல், கூட்டு இறை நாம சங்கீர்த்தனம், பௌர்ணமி நிலவில் திருஅண்ணாமலை, பர்வத மலை, பழநி, காளஹஸ்தி, திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் கிரிவலம் வருதல், மலைக்கோட்டை, திருப்பதி, போன்ற இடங்களில் மலையேறுதல், கிரிவலம் வருவோருக்குச் சூடான உணவு, பானங்கள், கம்பளி ஆடை அளித்தல், குளிர் பானங்கள், விசிறி கொண்டு சிரமப்பரிகாரம் செய்வித்தல் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.
கூட்டு நாம சங்கீர்த்தனத்தின் போது எழுகின்ற இறை நாமங்கள் சந்திர கிரணங்களின் மூலம் வெளிப்படும் தெய்வீக சக்தியினைக் கிரஹித்து அடியார்களின் தேகத்தில் செலுத்துகின்றன. இது மட்டுமல்லாது நாம் சங்கீர்த்தன ஒலித் துகள்கள் விரவும் சுற்றுப்புறமெங்கும் தெய்வீக சக்தியினை யாங்கணும் பரப்புகிறது. மேலும்,  தான தர்மங்களின் புண்ய சக்தியுடன் லகுவாக நிலாக் கிரணங்களின் சக்தி இணைவதால் பௌர்ணமியன்று தர்ம தானம் மூலமாகவும் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.
திருஅண்ணாமலை பர்வத மலை, காளஹஸ்தி, திருக்கழுக்குன்றம் போன்ற மலை ஸ்தலங்களில் கிரிவலம் வருகையில் நிலாக் கிரணங்கள் இத்திருமலைகளின் மீது பட்டுப் பிரதிபலிப்பதால் மலைகளின் தெய்வீக அம்சத்தால் அதனுடன் இணைந்த நிலவின் சக்தி கிரிவலம் வருபவர்களின் தேகங்களில் படிந்து அளப்பரிய தெய்வீக ஆற்றலைத் தருகின்றது.
எனவே, மாதாந்திர பௌர்ணமி பூஜையை அனைவரும் நிச்சயமாக கொண்டாடுதல் வேண்டும். சற்குருமார்களின் அரவணைப்பில் நடைபெறும் சத்சங்கத்தில் இணைந்து கொண்டால் மாதந்தோறும் பௌர்ணமி பூஜையைப் பலருடன் கூடிக் கொண்டாடுகின்ற தெய்வீக வாய்ப்புக் கிட்டும்.
தனி மனித பூஜையை விட கூட்டு வழிபாட்டிற்கு மகத்துவமும் சக்தியும் அதிகம்.
உத்ராதிபதி (ருத்ராதிபதி) பௌர்ணமி
அம்பிகைக்குரிய உத்திர நக்ஷத்திரத்தில் அதுவும் சிவனுக்குரிய பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியே இப்பௌர்ணமி பூஜையை திருக்கயிலாயத்தில் முன்னின்று நிகழ்த்துகின்றாள். எனவே, உத்ராதிபதிப் பௌர்ணமியாகத் துவங்கும் பங்குனிமாத பௌர்ணமியில் ருத்ரஅம்சங்களுடன் சக்தியின் அம்சம் கூடிடும் போது ருத்ராதிபதி பௌர்ணமியாக மலர்கின்றது.
உத்ராதிபதிப் பௌர்ணமியன்றுதான் சிவபெருமான் ஜீவன்களின் விதிகளை நிர்ணயம் செய்கின்றனர் முந்தைய மாசி மாதத்தில் மகத்துடன் கூடிய பௌர்ணமியன்று கும்பகோணம் திருத்தலத்தில் ஆதி கும்பேஸ்வரராக பிரபஞ்ச சிருஷ்டிக்கு வித்திடும் இறைவன், பங்குனி உத்ராதிபதிப் பௌர்ணமியின் தேவியின் அருளைக் கூட்டி ஜீவன்களின் விதியினை நிர்ணயிக்கின்றார்.
எனவேதான், பங்குனி மாத உத்ராதிபதி பௌர்ணமியாகத் துவங்கி ருத்ராதிபதி பௌர்ணமியாகத் திகழ்கின்றது. இப்பௌர்ணமியன்று அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் தான தர்மங்களைச் செய்வது மிகவும் விசேஷமானதாக சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். சிவத்தலங்களில் மூலவருக்குப் பின் உள்ள கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரரோ ஸ்ரீமகாவிஷ்ணுவோ பெரும்பாலும் ஸ்ரீலிங்கோத்பவரோ எழுந்தருளியிருப்பர். கோஷ்ட மூர்த்தியாக ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் சிவத்தலத்தில் உத்ராதிபதிப் பௌர்ணமி கொண்டாடுவது சிறப்பானதே.
கல்விக்ரகமாக சிலாரூப வழிபாடு திருஅண்ணாமலை கல் மலையாகத் தோன்றிய பின் ஏற்பட்டதாகும். முந்தைய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திருஅண்ணாமலை, மரகத, மாணிக்க, பொன்மலையாகத் தோற்றமளிதத்து. ஆகவே, ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவன் கோவில் பொதுவாக திருஅண்ணாமலை கல் மலையாகத் தோன்றுவதற்கு முற்பட்டதாகும். ஸ்ரீலிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கும் கோவில்கள் பொதுவாக திருஅண்ணாமலை கல் மலையாகத் தோன்றியதற்குப் பின் ஏற்பட்டவையாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் சிவத்தலங்கள் தேவர்கள் அமுதம் பெறுகையில் பாற்கடலில் உதித்த திருமகளை ஸ்ரீமகாவிஷ்ணு ஏற்றுக் கொண்டபோது பூலோகத்தில் பல இடங்களில் எழுந்தருளினார். அக்காலத்தில் ஏற்பட்டவையே இத்தகைய சிவன் கோவில்கள்.
பங்குனி உத்திரத்தன்று சிவபெருமான் ஜீவன்களின் விதியை நிர்ணயம் செய்கின்றார் அல்லவா!

தலைச் சுழி இரகசியங்கள்
ஸ்ரீபிரம்ம தேவரே ஒரு ஜீவனின் விதியை இறைநீதிகட்கு ஏற்ப நிர்ணயிக்கையில் ஒரு சுழியுடன் அது பிறப்பெடுக்கின்றது. இச்சுழியே இறைவனின் கையொப்பமாகும். பிரம்மா நிர்ணயித்த தலை விதிமுறைகள் சற்றுக் கடினமாயிருப்பின் ஆதிசிவன் அதனைச் சற்று மாற்றி எழுதி வேறுவிதமாக விதியை நிர்ணயிப்பது உண்டு. அத்தகைய ஜீவன்கட்கு ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசிவனின் இருமுத்திரைகளும் இருசுழிகளாக தலைச் சுழிகளாகக் காட்டப் பெறுகின்றன. எனவே, இரட்டை சுழிக்காரர்கள் பொறுமை, அடக்கம், பணிவு இவற்றுடன் எக்காரியத்தையும் செய்தல் வேண்டும். இதனைப் பெற ஸ்ரீசிவன், ஸ்ரீபிரம்மா இருவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலங்களில் அடிக்கடி இறைதரிசனம், திருப்பணி, தான தர்மங்கள் செய்தல் வேண்டும்.

இரட்டைச் சுழிக்காரர்களுக்குத் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் ஸ்ரீபிரும்ம சிரஹரேஸ்வரர் ஆலயம் அளப்பரிய அனுக்ரஹங்களைத் தரவல்லதாகும். இவர்கள் இத்தலத்தில் திருவோடு தாங்கியோருக்கு அன்னமிடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
சிலருக்குத் தலையில் மூன்று சுழி இருக்கும். இதன் பொருள் யாதெனில் பிரும்மா நிர்ணயித்த விதியினை ஸ்ரீஅம்பிகை திருத்தி எழுதிட அதனைச் சிவபெருமான் மேலும் மாற்றி அமைப்பதால் முச்சுழி விதி நிர்ணயம் ஏற்படுகிறது. முச்சுழிக்காரர்கள் விருப்பு, வெறுப்புகளில் தீவிரத்தன்மை காட்டுவர். எனவே இவர்கள் அதிக கவனத்துடன் தங்கள் காரியங்களை நிறைவேற்றுதல் வேண்டும். இவர்கள் திருக்கோயிலூர் ஸ்ரீத்ரிவிக்ரம ஸ்வாமி, காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம், உத்தமர் கோயில், மும்மூர்த்திகள் திருத்தலம் போன்ற திருத்தலங்களில் இறைத் திருப்பணிகள், அடிப்பிரதக்ஷிணம், தான தருமங்கள் செய்துவர இறையருளால் நல்வாழ்வு பெறுவர்.
சுழிரட்சை
தீட்சை என்றழைக்கப்படும் குடுமிக்கு ‘சுழி ரட்சை’ என்று பெயர். அக்காலத்தில் நம் மூதாதையர் அனைவரும் ஜாதி, இன, பேதமின்றிக் குடுமி வைத்திருந்தனர். இது தலைச்சுழிக்கு ரட்சையாக அமைந்திருந்தது. இதனால் துர் எண்ணங்கள், உட்புகாது, முன்நெற்றி விபூதி, குங்கும, சந்தனச் சின்னங்கள் கூடுதல் ரட்சையாக அமைந்து நற்குணங்களைப் போஷிக்கின்றன. ஆனால் காலப்போக்கில் துரதிருஷ்டமாக ரட்சைமுறை மறைந்துவிட்டது. இதனால்தான் கலியுகத்தில் தீய எண்ணங்கள் பரவித் தீயவர்களின் ஆதிக்கம் பெருத்து வருகின்றது.
அடியார் : “குருவே! துறவிகள் மட்டும் சுழிப்பகுதியை மழிக்கலாமா?
சற்குரு : “இதைப் பற்றி முன்னரே விளக்கியுள்ளோம்! வெறும் கத்தி கொண்டு மட்டும் துறவிகள் சிரசை மழிப்பதில்லை. படிகார நீர், குப்பைமேனி போன்ற மூலிகைச் சாற்றினை சிரசில் தடவியே துறவிகள் சிரசை மழிக்கவேண்டும் என்ற நியதி உள்ளது. இதனால் சுழிப்பகுதி மேலும் சுத்தமடைந்து பௌர்ணமி கிரணங்களை நேரிடையாகப் பெற்று, அளப்பரிய ஆன்மீக ஆற்றலைப் பெறுகின்றது. ஆனால் கிருஹஸ்தர்கள் துறவிகளைப் போல் மாசற்ற வாழ்க்கையை நட்த்த இயலாது. எனவே இல்லறத்தார்க்குத் தீட்சை (குடுமி) முறை அளிக்கப்பட்டுள்ளது.”
அடியார்: “சிறு குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!”“
சற்குரு : “ஐந்து வயதுவரை குழந்தைகள் தெய்வப் பண்பு நிறைந்து விளங்குவதால் அவர்கட்கு தீட்சை பற்றிய இந்த விதிகள் கிடையாது.”“
“மேலும் குழந்தைகளோ பெரியவர்களோ நேர்த்திக் கடனாக இறைவனுக்கு முடியைக் காணிக்கையாகச் செலுத்துவது மிகச் சிறந்த இறைப் பணியாகும். இறைவனுடைய திருச் சன்னதியில் முடிநீங்கித் தலைச்சுழி திறக்கப்பட்ட இறைவனுடைய தீர்க்க கடாட்சப் பார்வை புனித தீர்த்தத்தின் சக்திகள் உட்செல்வதால் தலைமுடி காணிக்கை தலையாய பிரார்த்தனை முறையாகக் கருதப்படுகிறது
பங்குனி உத்திரத்தன்று அமையும் உத்திராதிபதிப் பௌர்ணமியன்று சிவபெருமான், பிரும்மா ஸ்ருஷ்டித்த ஜீவன்களின் கர்மபரிபாலனத்தை மேற்பார்வையிடுகிறார்.
சிறந்த தானதருமங்களுடன் சுயநலமின்றி வாழ்கின்ற இறையடியார்களின் கர்ம பரிபாலனத்தைப் பங்குனி உத்திரத்தன்று சிவபெருமான் மறுபரிசீலனை செய்து தியாக வாழ்விற்குத் தகுந்த இறையருளை ஐஸ்வர்யங்களாக அளிக்கின்றார், இதற்கு முன்னோடியாகவே ரதசப்தமியன்று எருக்க இலையைத் தலையில் வைத்து ரதசப்தமி பூஜை ஏற்படுத்தப் பட்டுள்ளது.
சிறந்த மூலிகையான எருக்க இலை சூரியனின் ஒளிக் கிரணங்களை பகுத்து அதிக சக்திவாய்ந்த சூரிய கிரணங்களைத் தக்க முறையில் உட்செலுத்திக் கபாலத்தை மேன்மைப் படுத்துகின்றது. இதனால் அறிவொளி கிட்டி புத்தி கூர்மையாகும்.
சற்குரு: “நல்ல வழக்கங்கள் மறைந்து வருவது கலியுகத்திற்குரிய இயல்புதானே! இது நல்லது. இது கெட்டது என்றுச் சுட்டிக்காட்டுவது பெரியோர்களுடைய கடமை. எனினும் இத்தகைய நிலை கலியுலகில் ஏற்படும் என்று கருதியே ரதசப்தமி ஸ்நானம், பௌர்ணமி பூஜை, பௌர்ணமியன்று கிரிவலம். தான தருமங்கள், கூட்டு நாம சங்கீர்த்தனம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையாவது கடைப்பிடித்தால் தீட்சை (குடுமி) நற்பயன்களை ஒரு துளியேனும் பெறலாமன்றோ!”
காம தகனம்
பங்குனி உத்திரத்தன்று மலரம்பு தொடுத்த மன்மதனை சிவன் எரித்திட்டு காம தகன சம்பவத்தை உருவாக்கினார். எரிந்தது மன்மதனா? அல்ல, முறையற்ற காமங்களே எரிக்கப்பட்டன. வெறுப்புகள், ஆசைகள். வேண்டுதல்கள் அனைத்தும் காமத்தின்பால் படும். இவற்றில் முறையற்றவற்றைக் காம தகனமாக விலக்கி எரித்துவிட வேண்டும். இதற்குக் காம தகனம் பண்டிகையுடன் இணைந்து வரும் உத்திராதிபதிப் பௌர்ணமி உதவுகின்றது.
சிவபெருமான், மலர்பாணம் எய்த மன்மதனை வீழ்த்தினாரல்லவா? வீழ்ந்தது மன்மதன் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளோம்.
ஸ்ருஷ்டி பரிபாலனத்திற்கும், சிவசக்தி ஐக்யத்திற்கும் இறைவனுடைய கருணைப் பார்வையைத் திருப்ப வேண்டும். என்பதே மன்மதனின் அவா! சிவன் வீழ்த்தியது மன்மதனுடைய இவ்விருப்பத்தைத் தான்! இவ்விருப்பமும் காமத்தின்பாற் பட்டது தானே!
காமத்திற்குப் பல அர்த்தங்கள் உண்டு. ஒரு மனிதன் இன்ன (முறையான) காமங்களை வைத்திருக்கலாம், எவ்விதக் காமங்களை அறுக்க வேண்டும் என்று காமத்தைக் கோடிட்டுக் காட்டி மனித வாழ்க்கையைப் பண்படுத்தும் ஆச்சார்யாரே காமகோடிப் பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்ந்து இன்று ஜீவசமாதியில் அருளாட்சி புரிந்துவரும் சங்கரஞானியே “கனிந்த கனி“ என்று சித்த புருஷர்களால் அழைக்கப் பெற்ற ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகள். அவருடைய ஜீவசமாதியைக் காஞ்சிபுரத்தில் தரிசனம் செய்யும் முறையைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். அதனைத் தக்க சற்குரு மூலம் அற்வீர்களாக!

ஸ்ரீரதி மன்மதன் திரைலோகி

ஸ்ரீரதி தேவியின் பூஜை
ஸ்ரீரதி தேவி, சிவபூஜையில் உத்தம நிலை பெற்றவள். குறிப்பாகப் பங்குனி உத்திரத்தன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து விசேஷமான பூஜைகள் செய்தமையால் தான் மன்மதன் சிவபெருமானின் கோபாக்னியினின்றும் வீழாது காப்பாற்றப் பெற்றான். இறைவனைக் கவர்ந்து விடலாம் என்ற அறியாமையால் ஆன அவனது எண்ணமே வீழ்ந்ததே தவிர ரதி தேவியின் சிவபூஜையினால் அவளுடைய மாங்கல்ய பாக்யம் ஸ்திரமடைந்து மன்மதன் உயிர் பெற்றான்.
சிவபெருமான் மீது மன்மத பாணம் எய்த பின்னர் மன்மதன் ரதி தேவி தம்பதியினர் சிவபெருமானைச் சரணடைந்து வணங்கி, “இறைவா! எமக்கு நேர்ந்த கதி எவருக்கும் ஏற்படலாகாது! எதிர்காலத்தில் ஜனங்களைக் காம, குரோதக் குற்றங்களிலிருந்து காப்பாற்றிட நல்வழி காட்டியருள்வீர்களாக! என்று வேண்டி நின்றனர்.
இறைவனும், “ரதி தேவி! நீ தினமும் பதினோரு முறை ஸஹஸ்ரநாமம் ஓதி ஸ்ரீஅம்பாள் பூஜையுடன் சிவபூஜையையும் நிகழ்த்தி வருகின்றாய்! இதே போல் எதிர்காலத்தில் மக்கள் நித்ய பூஜையாகப் பதினோரு முறை லலிதா ஸஹஸ்ரநாமம் ஓதி வந்தால் முறையற்ற காமங்கள் விலகிச் சிவதரிசனம் காணும் பாக்கியத்தைக் குருவருளால் பெறலாம். மேலும் அறியாமையினால் மலர்ப்பாணம் எய்து மறைந்த மன்மதன் உன் கண்களுக்கு மட்டும் புலப்படுவான். எதிர்காலத்தில் காமம் என்பது மறைபொருளாக ஆகட்டும்” என்று அருளிட, ரதிமன்மதன் இருவரும் மீண்டும் இணைந்தனர்.
அன்றிலிருந்து காமம் மறைபொருளாயிற்று.”
 எனவே காமதகனப் பண்டிகையுடன் ருத்ராதிபதிப் பௌர்ணமியன்று (பங்குனி மாதப் பௌர்ணமி) ஸ்ரீரதி தேவியை உபாஸித்து பதினோரு முறை லலிதா ஸஹஸ்ரநாமம் ஓதிட :

 1. காதல் முறையினால் உயிர் பிரிந்தோருக்கு நற்கதி கிட்டி அவர்களுடைய பிரிவினால் ஏற்படும் வேதனைகள் தீரும்.
 2. உள்ளன்போடு கூடிய காதல் திருமணங்கள் நிறைவேறும்.
 3. காதல் பிரச்சனையினால் பிரிந்தோர் ஒன்று கூடுவர். நமக்கு இவ்விதத் துன்பங்கள் இல்லை என்று எண்ணாமல் பிறருக்காகவும் காம தகனப் பண்டிகையைக் கொண்டாடும் முறையாகும். இது தவிர கிராமப் புறங்களில் புனிதமான மஞ்சள் நிற ஆடையுடன் மன்மதன் ரதி தேவி பூஜையாக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
 4. முறையற்ற காம உணர்ச்சிகள் தீரும்.

உத்திராதிபதிப் பௌர்ணமியைக் கொண்டாடும் முறையாவது :
1. முறையற்ற காமங்கள், எண்ணங்கள், ஆசைகள் நீங்கிட சிவன், அம்பிகைக்குப் புஷ்பாலங்காரம் செய்து புஷ்பத்தினை இறைப் பிரசாதமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.
2. பழனி, திருப்பதி, திருத்தனி, சமயபுரம் போன்ற இறைத் தலங்களில் இந்நாளில் முடிக்காணிக்கை செலுத்தும் ஏழைகளுக்கு இயன்ற பொருளுதவி, இலவச முடிகாணிக்கை உணவு, நீராட சுடுநீர், சீயக்காய் பொடி, ஸ்நானப் பொடி போன்றவற்றை அளிக்க வேண்டும்.
3. சப்தமாதாக்கள், கன்னிகள், பிரகார தேவதைகளுக்கு மஞ்சள் நிற வஸ்திரமளித்தல்.
இவ்வகையில் ஸ்ரீஉத்திராதிபதிப் பௌர்ணமியை காம தகனப் பண்டிகையுடன் கொண்டாடிட வேண்டும்.

நல்ல நேரம் பார்ப்பது ஏன் ?

ஒரு நாளுக்கு உரித்தான இருபத்தி நாலுமணி நேரத்தில் மனிதன் நல்ல, தீய எண்ணங்கள், செயல்களுக்கிடையே உழன்று வாழ்கின்றான். எப்போதுமே நற்காரியங்களையோ வேறு செயல்களையோ செய்து கொண்டே இருக்க முடியுமா?
மொத்தத்தில் அவரவர் கர்ம்வினைகட்கு ஏற்ப காரியங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதுவே சாதாரண மனிதனின் நிலை. ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளோர் வரவு, செலவு கணக்கினைப் போல் தங்கள் காரியங்களையும் முறைப்படுத்த விழைகின்றனர்.
இருபத்தி நாலுமணி நேரமும் காலம் பாராது நிறைவேற்றக் கூடிய ஒரே நற்காரியம் இறைவழிபாடு ஒன்றே. ஏனைய காரியங்கள் அனைத்தும் நாள் கிழமை பார்த்துச் செய்வதே.
காலத்தில் நல்லது, கெட்டது உண்டா? நம்முடைய தற்போதைய ஜன்மங்களின் கர்ம வினைகட்கு, ஏற்ப நாம் இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றோம். பணவரவு, உத்யோக உயர்வு, திருமணம் போன்ற இன்பங்களை அமுதினும் இனிதாய் ஏற்கும் மனம், சிறு எறும்பு, கொசுக்களின் கடியாம் சிறுதுன்பத்தைக் கூட ஏற்பதில்லை. சுகமான வாழ்வை எண்ணியே மனமும் தேகமும் ஏங்குகின்றது.
நல்லதோ கெட்ட்தோ, இன்பமோ துன்பமோ எதையும் இறைவனின் விருப்பமென ஏற்கும் உயரிய நிலை கொண்டோர் ஞானியர், யோகியர், மஹான் போன்ற உத்தம இறையடியார்களே.
காலமும் கர்ம வினைகளும்
நம்முடைய வினைகளின் வினைப் பயன்களே தோஷம், விபத்து, நோய், தரித்திரம், சோகம் போன்ற துன்பங்களாக அமைகின்றன. இத்துன்பங்கள் தாம் ஒவ்வொரு நாளும் குறித்த காலத்தில் நம்மைத் தாக்குகின்றன. இதைத் தவிர்க்க முடியாதெனினும், இன்ன நேரத்தில் துன்பம் விளையும் என்று  அறிந்து மனமும் தேகமும் அதை எதிர்கொள்ளுமாயின் துன்பத்தின் விளைவுகள் தாங்கக் கூடியவையாக அமையும். அதைக் குறிக்கும் வகையில் தான் ராகுகாலம், எமகண்டம், அர்த்தப் பிரஹரணன், காலன், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் போன்று பல நேரங்களில் நற்காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதன் காரணமென்ன?
நம் கர்மவினைகட்கேற்ப இன்ப துன்பங்களை அருள்பவை கிரக சஞ்சாரங்களே! சில அசுப கிரஹங்கள் துன்பங்களை அளிப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் நம் வினைகட்கேற்ப துன்பங்கள் ஏற்படப் போவதையே அவை குறிக்கின்றன. இதனால் அவற்றைத் தீய கிரஹங்கள் எனக் கணிக்கலாகாது. குற்றங்களுக்குத் தண்டனை தருவதால் ஒரு நீதிபதியைக் கெட்டவர் என்று கூறிடலாமா? தர்மம் தழைக்க நீதிபதி தேவையே; கர்ம வினைகளைப் பகுத்து இன்ப துன்பங்களைச் சற்றும் கிஞ்சித்தும் அறநெறி பிறழாது நிர்ணயிக்கும் நீதி தேவமூர்த்திகளே கிரஹதேவ மூர்த்திகள்.
எனவே , சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய காலங்களில் நம்முடைய கர்ம வினைகளுக்கேற்ப துன்பங்கள் நம்மைச் சூழும் என்று உணர்ந்து அந்நேரங்களில் எப்போதும் இறை நினைவுடன் சாதாரணமான நடைமுறைகளில் ஈடுபட வேண்டும்.
நல்ல நேரம் பார்த்திருந்தால் ஒரு காரியமும் நடைபெறாதே, என் செய்வது? உண்மையே! இன்பங்களையே பெறுகின்ற அளவிற்கு நம்மிடம் புண்ய சக்தி இல்லையே! அந்த அளவிற்குத் தீவினைகளை அல்லவோ நாம் பல பிறவிகளில் பெருக்கி வந்துள்ளோம்! இப்பிறவியில் நாம் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே என்று எண்ணினாலும், இதுவரைப் பல பிறவிகளில் கூட்டி வந்துள்ள வினைகளைக் குறைக்கும் தான தருமங்கள், மூர்த்தி, தீர்த்தம் , தல யாத்திரைகள், அருணாசல கிரிவலம், ஏழைகட்கான அறப் பணிகள் ஆகியவற்றைச் செய்யாது தானுண்டு, தன் வேலையுண்டு என்று வாழ்வதால் யாது பயன்? இவ்வாறு ஒரு ஜடமாக வாழ்வதும், பிறவிகளைக் குறைக்காது.
நல்ல நேரம் கணிப்பது எளிதல்ல.

ஸ்ரீசக்கரம்
அம்மன் சன்னதி திருவில்லிபுத்தூர்

உதாரணத்திற்கு 21.5.1995 (ஞாயிற்றுக்கிழமை) என்ற நாளை கொள்வோம்
சூர்யோதயம் – 5.46 am | ராகுகாலம் – 4.30 pm  - 6.00 pm | எமகண்டம் – 12.00 pm – 1.30 pm
அர்த்தப் பிரஹரணன் -10..30am – 12.00 | காலன் -6.00 am – 7.30 am |
இரவு நேர எமகண்டம் -6.00 pm – 7.30 pm | இரவு நேர ராகுகாலம் – 7 ½ pm - 9 pm
இவை தவிர லக்னத் த்யாஜ்யம், வாரத்யாஜ்யம், நக்ஷத்ர த்யாஜ்யம், திதித்யாஜ்யம் என ஒவ்வோரு நாளுக்கும் சுப காரியங்களை விலக்க வேண்டிய விஷ காலங்கள் உண்டு.
மேற்கண்ட ஞாயிற்றுக்கிழமைக்குரிய த்யாஜ்ய நேரம் மாலை 6.34 முதல் வரையாம். வாரத்யாஜ்யம் ஆதலின் இது சுபகாரியத்துக்கு ஏற்றதல்ல.
மேலும் 21.5.1995 க்குரிய தவிர்க்க வேண்டிய பிற லக்ன த்யாஜ்ய நேரங்களாவன :-
நாள் முழுதும் அமையும் இந்த லக்னங்களில் ஒவ்வொன்றிலும் 12 நிமிடம் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
மேஷம் – ரிஷபம் - மிதுனம் – கடகம் - சிம்மம் – கன்னி - துலாம் – விருச்சிகம் – தனுசு – மகரம் – கும்பம் – மீனம்
நக்ஷத்ர த்யா ஜ்யமாவது : அவிட்டம், சதயம்
திதி த்யாஜ்யம் : அஷ்டமி திதி
இது மட்டுமா , இதே நேரத்தில் சுபகாரியங்களுக்குத் தவிர்க்க வேண்டிய ஹோரை நேரங்கள் ;
சூர்ய ஹோரை : 5.46 am – 6.46 am | 12.46 pm – 1.46pm | 7.46pm – 8.46pm | 2.46 pm – 3.46pm
சனி ஹோரை - 9.46am – 10.46am | 4.46pm – 5.46pm | 11.46pm – 12.46pm
சந்திர ஹோரை (தேய்) - 8.46am – 9.46am | 3.46pm – 4.46pm | 10.46pm – 11.46pm
செவ்வாய் ஹோரை - 11.46am – 12.46am | 6.46pm – 7.46pm | 1.46pm – 2.46pm
மரண யோகம் – இரவு 11மணி வரை
இவ்வாறாக ராகு காலம், எமகண்டம், அர்த்தப் பிரஹரணன், பிரபலாரிஷ்ட யோகங்கள் என்று கணக்கிட்டால் நல்ல நேரம் என்பது சில நிமிடங்களே அமையலாம். இது தவிர சில காரியங்களுக்குச் சில லக்ன்ங்களே ஏற்புடையதாகும்
பார்த்தீர்களா, நல்ல நேரம் கணிப்பதென்பது எவ்வுளவு சிரம்மானது என்று!
தற்காலத்தில் இவை அனைத்தையும் கணித்துத்தான் சுப முகூர்த்த நேரங்கள் வைக்கப்பட வேண்டும் என்பதைச் சோதிட வல்லுனர்களும், ஏனையோரும் நன்கு உணர வேண்டும்.
சுபமுகூர்த்த நேரம் பார்த்தும், திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று வருந்துவோருமுண்டு. ஆனால் சுபமுகூர்த்த நேரங்களைக் கணிக்கையில் மேற்கண்ட அனைத்து நுணுக்கங்களையும் ஆராய்ந்து அமைக்க வேண்டும். இம்முறையில் கணித்தால் வருடத்திற்கு பன்னிரண்டு சுப நாட்கள் கூட அமையாதே எனலாம்.
மிகவும் அற்புதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த, தெய்வ கடாக்ஷம் நிரம்பப் பெற்ற ஜோதிட கலை நுணுக்கங்களை பக்தி, ஒழுக்கம், தார்மீக சிந்தனை நிரம்பியோர் சுயநலம் பாராது எவ்வித எதிர்பார்ப்புமின்றி இலவசமாக சேவை புரிந்திடில் வாக்குப் பலிதம் ஏற்படும்.
சுப முகூர்த்த நாட்களில் நுணுக்கமாகக் கணிக்க இயலாதபோது அதற்குரித்தான வேதமந்திரங்கள், ஹோமம், தானதர்மங்கள் சிறந்த பரிகாரங்களாக அடைந்து நம்மைக் காக்கின்றன.
அடியார் : “குருதேவா, ஒரு சுப முகூர்த்த நாளைக் கணிப்பதற்கு இவ்வுளவு ஜோதிடக் கட்டுப்பாடுகள் அமைந்துள்ளனவே! ஆனால் கலியுகத்தில் இவையனைத்தையும் சரியாகப் பார்க்கின்றார்களா? இவ்வாறு கணித்தால் ஒரு முழுமையான நல்ல நாள் அமைவது கூடக் கடினம் போலுள்ளதே!
ஆனால் சுப நாட்கள் என்ற பெயரில் ஏதேனும் கிருஹப்ரவேசம், சீமந்தம் என்றவாறாக ஏதேனும் சுப கார்யங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சுபநாட்களைச் சரியாக கணிகாததற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
இது பிழையானால் சுப கார்யம் செய்பவர்களைப் பாதிக்காதா ?
சற்குரு : ”மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர குரு சுக்ர மூடம், கிரஹ சஞ்சாரங்கள், தசா புத்தி அந்தரங்கள், சந்திராஷ்டமம், சூன்ய திதி, போன்றவையாக இன்னமும் பல்வேறு நியதிகள் உள்ளன.
“இவற்றை உண்மையாகவே நன்கு கணிக்கும் நேர்மையான, பக்தி நிறைந்த ஜோதிட வல்லுனர்கள் ஒரு சிலர் நிச்சயமாக இன்றும் இருக்கின்றனர். அவர்கள் இலை மறை காயாகத் தங்கள் ஞானத்தைப் பறைசாற்றாமல் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். சற்குருமார்கள் கூட இத்தகைய ஜோதிடர்களிடம் தான் பல காரணங்களுக்காகத் தங்கள் அடியார்களை அனுப்புகின்றனர் “.
இத்தகைய காலநிலை கணிப்புகளில் ஏற்படும் தவறுகளுக்குப் ப்ராயச் சித்தங்களாகவே சுபகாரியங்களில் நிறைய வேத மந்திரங்கள் ஓதப்பட வேண்டும். இதனை ஒதுகின்றவர்களும், ஒழுக்கம், நிறைந்த இறை பக்தி, நித்ய பூஜைகள், அனுஷ்டானங்கள், ஜாதி இன பேதமின்றி உண்மையான சேவை மனப்பான்மை இவற்றுடன் பரிணமித்தால் தான் அவர்கள் ஓதுகின்ற வேத மந்திரங்கள் முழுமையான பலனைத் தரும்.இவை தவிர ஹோமங்கள், யாகங்கள், ஏழை எளியோர்க்குத் தான தருமங்கள் , பசுபூஜை போன்ற இறை வழிபாடுகளும் கால நிர்ணயத்தின் குறைகளுக்குத் தக்க பரிகாரங்களாக அமைகின்றன.
ஆனால் தற்காலத்தில் க்ருஹப்ரவேசம் போன்றவற்றில் உறவினர்கள். பந்துக்கள் மட்டும் உண்டு விட்டுச் செல்வது என்ற தவறான நிலை பின்பற்றப்படுகிறது. உறைவினர்கள் உண்பதோடன்றி பொறாமை, குரோத மனப்பான்மையுடன் திட்டி விட்டிச் செல்வர். எனவே இத்தகைய சுப கார்யங்களில் மன நிறைவாகப் பல உணவுப் பொட்டலங்களைக் கோயில்களுக்கு எடுத்துச் சென்று கோயில் வாயிலில் ஏழைகளுக்கு விநியோகம் செய்தல் வேண்டும். அவர்கள் மனமார வாழ்த்தி ஆசீர்வதிப்பர். மேலும் கோயில்களில் தான் நம்முடைய பித்ருக்கள் வந்திருந்து இவ்வித தான தருமங்களைப் பல தர்ம தேவதைகளுடன் சேர்ந்து சாட்சியாக நின்று பரிபூரணமாக ஆசியினை வழங்குவர்.
ஹோமம்
சுப கார்ய ஹோமங்களில் கூட அரசு, ஆல், வேம்பு, புரசை, நாயுருவி, எருக்கு, தர்ப்பை, மா, பலா, போன்ற தெய்வீக குணங்கள்  பொருந்திய சமித்துக்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்குப் பதிலாகச் சவுக்கு, சிராத் தூள், புளிய மர விளார்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் பாபகரமான செயலாகும்.
பல தோஷங்களையும் வினைகளையும் திருஷ்டிகளையும் கழிக்க வல்ல ஹோமத்தில் மேற்கண்ட சமித்துக்கள், பசு விராட்டி, பசு நெய், போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். அடுப்புக்கு உபயோகமாகும் விறகுகள், சிராத் தூள்களைப் பயன்படுத்தினால் அவை சாபங்களாக மாறும்.
 எல்லாவற்றையும் விட ஜோதிட நுணுக்கங்களை நன்கு ஆராய்ந்து ஒரு சுப நாளைக் குறித்தல் கடினம் என்பதால் ஒரு சற்குரு மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டால் அவர் குறிக்கின்ற நேரத்தில், அனைத்தையும் நிறைவேற்றி விடலாம். ஏனெனில் சித்தர்கள் கூட்டும் நேரங்களனைத்தும் சுப நேரங்களே! சற்குரு மேல் கொள்கின்ற முழு நம்பிக்கையே சர்வேஸ்வரனின் அருளாகக் கனிவதால், கலியுக மக்கள் தக்க சற்குருவை நாட வேண்டும். இதுவே அவர்கள் உய்வதற்கான ஒரே நல்வழி.
வேதமந்திரங்கள், ஹோம, வேள்வி, யாகங்கள், இவற்றைச் சிறந்த ஒழுக்கம், தெய்வ சக்தி நிறைந்தவர்களே எவ்வித ஜாதி, இன பேதமின்றி எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்தால்தான் சிறந்த வாக்குப்பலிதமும், காரியசித்தியும் ஏற்படும். தங்களை இறைவனின் கருவியாக உணர்ந்து செயல்பட்டால் அவர்கள் உத்தம் இறையடியாகளாக, நாயன்மார்களாக, ஆழ்வார்களாக மலர்வர் என்பது திண்ணம்.
ஹோம, யாக பூஜை முறைகளில் வேத அக்ஷரப் பிழைகள், நியம நிஷ்டைகளில் குறைபாடுகள், பூஜை முறைகளில் குற்றங்கள் எற்படலாம். இதன் விளைவுகள் இதை நடத்திக் கொடுப்பவரையும், இதனை நடத்துபவர்களையும், கர்த்தாக்களையும் சாரும், இதற்கு முக்கியப் பரிகாரமாக அமைவது அன்னதானமே. எனவே தான் தானத்தில் சிறந்த்து அன்னதானமாகப் போற்றப்படுகிறது.
இத்தகைய சுபகாரியங்களில் எவ்வுளவு உறவினர்கள், நன்பர்கள், ஏனையோர் உண்டனரோ அவ்வளவு எண்ணிக்கையிலேனும் ஏழைகளுக்கு அன்றைய தினம் ஒரு சிறு உணவுப் பொட்டலமேனும் அளிப்பதால் இது மேற்கண்ட குறைகளுக்கு மிக்ச் சிறந்த பரிகாரமாக அமைவதோடு , அளவற்ற புண்ய சக்தியையும் பெற்றுத் தருகிறது. இப்புண்ய சக்தியினால் தான் கால நிர்ணய தோஷங்களிலிருந்து ஒருவரைக் காப்பாற்றமுடியும்.
மேலே குறிப்பிட்டுள்ள 21.5.1995 தேதிக்கான பலவித ஜோதிட நுணுக்கக் கால நேரங்களை ஓரளவு விளக்கியுள்ளோம். இந்நிலையில் கரிநாளும் சேர்ந்துள்ளது இதில் நல்ல நேரத்தை எவ்வாறு கணிப்பது?
பொறுமை, பணிவு, அடக்கம், எளிமை, தியாக மனப்பான்மை, பக்தி, சேவை மனப்பான்மை இவற்றுடன் ஒரு ஜோதிடர் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் சுபநாளைக் குறித்தால் தான் வாக்பலிதம் ஏற்படும். ஓரளவு தோஷங்கள் நிவர்த்தியாகும்!
இவ்வாறு சுப நாட்கள் கணிக்க பெறாமையால்தான் பல குடும்பங்கள் எண்ணற்ற துன்பங்களால் வாடுகின்றன. சற்குருவே மனமுவந்து நேரம் குறித்தால் அதில் சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி முறைகளை அவரே ஏற்று முறையாகச் செயல்படுகின்றார். தோஷத்தின் துன்பங்களையும் அடியார்களுக்காகத் தன் தேகத்தில் தாங்கித் துன்பப்பட்டு உத்தம தியாக வாழ்க்கை வாழ்பவரே சற்குரு!
எனவே குருமேல் மாறா அன்புடன் குறையா நம்பிக்கையுடன் குருவருளால் திறம்படி வாழ்வோமாக!!!

அடிமை கண்ட ஆனந்தம்

கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுடன் திருஅண்ணாமலையில் அடிக்கடி கிரிவலம் வருவது உண்டு! ஒரு முறை கிரிவலம் வர ஒரு மாதத்திற்கு மேல் ஆவதும் உண்டு! நிருதி லிங்கம். இந்திர லிங்கம் என்று ஆங்காங்கே தங்கி விடுவார்! ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் சிறிது தூரம் கிரிவலம் ஆன்மீகப் பயிற்சிகள்! இது மட்டுமா! நூற்றுக்கணக்கான மலை தரிசனங்கள், அவற்றின் விளக்கங்கள், ஒவ்வொரு தரிசனத்தையும் காண வேண்டிய முறைகள், தரிசன நேர கால, ஹோரை முகூர்த்தங்கள், சூரியோதய, அஸ்தமன காலங்களில் காண வேண்டிய தரிசனங்கள், கிரிவலப் பாதையில் ஓய்வெடுக்க வேண்டிய இடங்கள் போன்ற பல கிரிவல இரகசியங்களைப் பெரியவர் சிறுவனுக்கு போதித்தார்.
கிரிவலப் பகுதியில் ஐந்து தலை நாகங்கள், மாணிக்கக் கற்களைக் கக்கும் அபூர்வ நாகங்கள், பால், நீரைப் பிரிக்கும் அன்னப் பறவைகள், இராமாயணத்தில் வரும் ஆச்சா மர தரிசனம், திரேதா யுகத்து ராஜாளி கழுகு, வெண்ணிறக் காக்கை, பஞ்ச வர்ணக் கிளி, குரு நமசிவாயருக்குக் காவலாக இருந்த 18 அடி வேங்கை – போன்றவற்றையும் காணும் பாக்யத்தைப் பெற்றான் சிறுவன். இவையெல்லாம் இறை தியானத்துடன் கிரிவலம் வருவோருக்கு இந்த தேவதைகள் அனைத்து சகாயங்களையும் செய்கின்றன!
குபேர லிங்கம்
கிரிவலப் பாதையில் தசமுக தரிசனம், சிவசக்தி ஐக்ய தரிசனம் இவற்றிற்குப் பிறகு பஞ்ச முக லிங்கத்தினருகே உள்ள குபேர லிங்கத்தின் அருகில் குபேர தீர்த்தம் உள்ளது.
ஒரு நாள் பெரியவர் திடீரென்று வெகு விரைவாக கிரிவலப் பாதையில் நடந்திட, சிறுவன் வியந்தான்!
“என்னாயிற்று இவருக்கு! ஆமைபோல் மெதுவாக நடந்து ஒவ்வொரு தப்படிக்கும் மலையை தரிசனம் செய்தவாறு  நடக்க வேண்டும் என்று சொல்வாரே! இன்று ஏன் திடீரென்று இவ்வளவு விரைவாக ஓடுகின்றார்.? “ – சிறுவன் தலையைச் சொறிந்தவாறே பெரியவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அரைடிராயரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர் பின்னால் ஓடலானான்!
 “ஒண்ணுமில்லைடா! ஒரு முக்கியமான ஆளைப் பார்க்கணும் அவர் இன்னிக்குத் திருப்பதிக்குப் பொறப்படப் போறாராம்!”
சற்றும் களைப்படையாது நடந்த பெரியவர் குபேர லிங்கம் அருகே சற்று நிதானித்தார். அதற்குள் பையனுக்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது!
“வாத்யாரே! நான் மெதுவா வர்றேனே! என்னை வுட்டுடேன்”
“அட போடா மண்டு! நீ அவரைப் தெரிஞ்சுக்கறது நல்லதுதான்னு பார்த்தேன்! சரி சரி, பரவாயில்லை இங்கே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்! நீயும் சின்னப் பையன் தானே! என்ன பண்றது!”
சிறுவனுக்கு உதறல் எடுத்து விட்டது! புயலுக்கு முன் அமைதியா?
“வாத்யார் என்ன இன்னிக்கு இவ்வுளவு soft ஆக இருக்காரே!“ – சிறுவன் நினைத்ததுதான் தாமதம், பெரியவர் டக்கென்று

“ஏண்டா ராஜா! நான் என்ன அவ்வளவு கல் நெஞ்சக்காரனா!”“
“அப்பப்பா! எதையும் நெனைக்கக் கூடவிட்ட மாட்டேங்கறாங்களே இந்த சித்தருங்க, கப்கப்னு புடிச்சுடறாங்களே!“ – சிறுவன் மனதினுள் அங்கலாய்த்திட,
“என்னடா பண்றது , நாங்க கப்கப்னு புடிச்சாத்தான் உன்னை மாதிரி அடிமண்டெல்லாம் சிவனைச் சிக்குனு புடிக்கலாம்” எங்கோ பார்த்தவாறு பெரியவர் சொல்லிக் கொண்டே சிறுவனை குபேர லிங்கம் அருகே அழைத்துச் சென்று மர நிழலில் அமர்ந்தார்.
குபேர லிங்கத்தின் அருகே ஒரு தீர்த்தம் உண்டு! அன்று நீர் நிரம்ப இருந்தது.
“வாத்யாரே! ரொம்ப தாகமா இருக்கு! கொஞ்சம் தண்ணி குடிக்கலாமா”
அவர் இதனைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை! ஆறு கூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்து ஏதோ கர்மக் கணக்குடன் ஆட்டம ஆடிக் கொண்டிருந்தார்.
தொண்டை வறண்டு சிறுவன் தத்தளித்தான் “பெரியவருக்குத் தெரியாமல் நீர் மொண்டு குடித்தால் என்ன? “ என்று எண்ணுமளவிற்குக் கூடச் சென்று விட்டான். அவ்வளவு நா வறட்சி!
அழுக்கான தேகத்துடன் கந்தல் துணிகளுடன் அங்கு வந்த ஒருவர் தீர்த்தத்தில் இறங்கி நீராடிவிட்டு எழுந்தார்.
பிறகு அதே கந்தல் துணிகளை எழுத்து அணிந்து கொண்டு புறப்பட்டார்.
சற்று அயர்ந்து தூங்கியது போலிருந்த பெரியவர் திடீரென்று விழித்துக் கொண்டு “டேய் கிளம்புடா” என்று விடுவிடென்று நடக்கலானார்.
“வாத்யாரே, வாத்யாரே! குபேர லிங்கத்தைத் தரிசனம் பண்ணலியே” – சிறுவன் வேகமாக ஓடிப் பெரியவரின் கையைப் பிடித்து இழுத்து வந்தான்!
“ஏண்டா மடையா! ஸ்ரீகுபேர பகவானே வந்து ஸ்நானம் பண்ணிட்டுப் போய்ட்டார்! அவரை நமஸ்காரம் பண்ற சான்ஸை விட்டுட்டு லிங்க தரிசனம்னு சொல்றியே! உன்னைச் சொல்லி என்ன குத்தம்! கடவுளே நேரா வந்தாக் கூட நமப மாட்டாங்க, கலியுகமாச்சே!”
வந்தது ஸ்ரீகுபேர பகவானா! சிறுவன் திகைத்து நின்றான்.
“ஏன் வாத்யாரே முன்னாடியே சொல்லலை”
“சொன்னா என்னாயிருக்கும்! என்னை விட்டுட்டு அவர்கிட்டே ஓடி நமஸ்காரம் பண்ணி அதைக் கொடு, இதைக் கொடுன்னு அவரைப் பிடுங்கி எடுத்துடுவே! என் பேரும் ரிப்பேராயிருக்கும்!”
“நான் அப்படியா செய்வேன் வாத்யாரே! என் மேலே நம்பிக்கை இல்லையா?”
“எனக்குத் தெரியாம இந்த தீர்த்தத்துல இறங்கித் தண்ணி குடீச்சா என்னன்னு உனக்குத் தோணுச்சா இல்லையா?”
அவன் கண்ணில் நீர்த் திவலைகள் தளும்பின!
“.................அவ்வுளவு ......தா...........க........ம்....” சிறுவன் தேம்பித் தேம்பி அழுதான்...
பெரியவர் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.
“அழாதேடா ராஜா! உனக்கு ஒரு டெஸ்ட் வச்சே அவ்வுளவு தான்! நீ மட்டும் இந்த  தீர்த்தத்துல இறங்கித் தண்ணீ குடிச்சா என்னவாயிருக்கும் தெரியுமா?”
சிறுவனின் புருவங்கள் உயர்ந்தன!
“நீ டாடா, பிர்லாவா, இன்னொரு கோடீஸ்வரன் ஆகியிருப்பே!”
சிறுவன் விழித்தான்!
“ஆமாண்டா ஒவ்வொரு வருஷமும் குறிப்பிட்ட, நாள், திதி, நட்சத்திரம், ஹோரைல ஸ்ரீகுபேர பகவான் இந்த தீர்த்தத்துக்கு வந்து நீராடி ஸ்ரீஅண்ணாமலையை தரிசனம் செஞ்சு நேரே திருப்பதி போய் ஸ்ரீசீனிவாசப் பெருமாளிடம் நிதி பெற்றுக் குபேர லோகம் செல்கிறார். அந்த நாளில் ஸ்ரீகுபேர பகவானின் குபேர கடாட்சம் இந்த தீர்த்தத்துல ஒரு நாழிகைக்கு விசேஷமாப் பரவியிருக்கும்! இந்த நாளில் ஸ்ரீகுபேர பகவான் ஸ்நானம் செய்வதற்கு முன் அரை நாழிகை, பின் அரை நாழிகை நேரத்தில் யாரெல்லாம் இங்கு ஸ்நானம் செய்கின்றார்களோ அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்கள்! இன்றைக்குக் கோடீஸ்வரர்களாக இருக்கும் ஓனாஸிஸ், ராக்பெல்லர், டாடா, பிர்லா போன்றோரெல்லாம் இப்பிறவியிலோ முற்ப்பிறவியிலோ இந்த குபேர நாழிகை எனப்படும் திவ்ய நேரத்தில் இங்கு தீர்த்தமாடியவர்களே!“
பெரியவர் மேலும் பல விளக்கங்களை, குபேர நாழிகையைக் கணக்கிடும் முறை. திருஅண்ணாமலை – திருப்பதி கூட்டு தரிசனம் – இவ்வாறான பல ஆன்மீக இரகசியங்களை போதித்தார்.
பெரியவர் சிறுவனை ஓரக் கண்ணால் பார்த்தவாறே “உனக்குதான் தாகமாயிருக்கே., கொஞ்சம் தீர்த்தம் குடிச்சுட்டு வர்றியா ? – என்று கேட்டிட
சிறுவன் பெரியவரின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான்.
“வாத்யாரே ! ரொம்ப சோதிச்சுடாதே! மனசு கலங்கினாலும் கலங்காமக் கல்லா நின்னாலும் நீதான் காப்பாத்தனும்! உனக்கு அடிமையாகவே இருக்கறேன்!”
“இந்த எண்ணத்தை  கடைசி வரைக்கும் வச்சுக் காப்பாத்த முயறசி பண்ணுடா கண்ணு!!” என்று சொல்லிவிட்டு எதையும் கண்டு கொள்ளாமல் பெரியவர் தன் கிரிவலத்தைத் தொடர்ந்தார்!
அதற்கடுத்த வருடம்.......................
கிரிவலத்தில் குபேர லிங்கம் அருகே வந்தவுடன்,
“வாத்யாரே! குபேர தீர்த்ததுல தண்ணியே இல்லையே! வறண்டு இருக்கே” என்று சிறுவன் கூறிட,
“அப்படியா” என்றவாறே பெரியவர் தீர்த்தக் கரையருகே சென்று தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் கைளை ஆட்டிட “சல சல” வென்று சப்தம் கேட்டது. குளத்து நீரில் கைகளை ஆட்டினால் சப்தம் ஏற்படுமல்லவா அதே சப்தம்!
சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது!
“இப்படித்தான் இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், குபேர தீர்த்தம் மாதிரிப் பல அபூர்வ தீர்த்தங்கள் வறண்ட மாதிரி மனுஷங்க கண்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையில் எந்த தீர்த்தமும் வற்றவில்லை. இது தெய்வ ரகசியம்! குருபின்னாடி சுத்தினா அவரே எல்லாத்தையும் காட்டுவார். ஆனா அதுக்கு பொறுமை, நம்பிக்கை, தன்னால தான் இது நடந்தது அது நடந்ததுங்கற எண்ணமே கூடாது! நடப்பவை எல்லாம் நன்மைக்கே! எல்லாம் அருணாசல ஈஸ்வரனின் விருப்பப்படியே நடக்கின்றது”
இவைதாம் அச்சிறுவனுக்கு அளிக்கப் பெற்ற மிக எளிமையான பாமரர்க்கும் புரியக் கூடிய அருணாசல உபநிஷத்!

மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர்

நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுடன் 125 க்கும் மேற்பட்ட கோயில்களில் உழவாரத் திருப்பணி செய்யும் நல்பாக்யம் நம் அடியார்களுக்குக் கிட்டியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் உறையும் கோசாலையில் உழவாரத் திருப்பணி!
கோடானுகோடி பசு தேவதைகள் உறையும் பசுக்களுக்கு சேவை! அதுவும் கலியுகத்தில் 100 பசுக்களைச் சேர்ந்து பாப்பதே அபூர்வ தரிசனம். அவைகளுக்கு நீராட்டி மனிதர்களைப் போல் வாசனை சோப்பினால் தேகத்தை சுத்தம் செய்து , மஞ்சள், குங்குமம் இட்டு....
ஆஹா! நினைத்து, நினைத்து எண்ணிட மனதிற்கு ஆனந்தம் ஊட்டும் திவ்வியத் திருப்பணி.
நம்முள் ஒருவராக நம் குருமங்கள கந்தர்வாவும் களத்தில் இறங்கி பசுஞ்சாணம், வைக்கோல், கூளங்களை அள்ளி, வழுக்கும் தரையினை செங்கலால்  தேய்த்து, விளக்குமாறு கொண்டு தூய்மை செய்த காட்சி எப்பிறவியிலும் கிட்டிடா பேரின்ப அனுபவம்!
........இதே போல் எண்ணற்ற கோயில் தூண்களில் உறையும் எவரும் அறியா இறை மூர்த்திகள், சித்த புருஷர்கள் பற்றிய விளக்கங்கள், அரிய தியான நிலைகள்.... அபூர்வ யோகமுறைகள், காணக்கிடைக்கா இயந்திரங்கள்.......... போன்றவற்றிற்கான சித்த புருஷர்களின் விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா குருவருளாய்ப் பொழியும் இனிய அனுபவங்கள்.
இன்று வறண்டு கிடப்பதாய்த் தோன்றும், அல்லது பாசிபிடித்து அழுக்கடைந்தாற் போல் காணப்படும் தீர்த்தங்களின் மஹிமைகள், நாற்றம் அழுக்கு நிறைந்து இருந்தாற் கூட ஆழ்ந்த பக்தியுடன் தீவிர நம்பிக்கையுடன் அந்த தீர்த்தத்தினை எடுத்துப் பருகும் போது ஏற்படும் பேரானந்தம்!
சென்னைக்குள்ளேயே நம் கண்களுக்குப் பழக்கமான கோயில்களில் பல ஆன்மீக இரகசியங்கள் உண்டு. உதாரணமாக சென்னை பாடியில் உள்ள ஸ்ரீதிருவலியதாய நாதர் கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிராப்தம் உள்ளோர்க்கு கிட்டும் கரிய குருவியின் தெய்வீக தரிசனம்! உன்னத மஹரிஷியின் உத்தம வடிவமல்லவா அக்கருங்குருவி!
இவ்வாறாக எத்துணையோ கோயில்களில் நம் அடியார்கட்குக் கிட்டியுள்ள ஆன்மீக இறை அனுபூதிகளைச் சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம் பகுதியில் வழங்கி வருகின்றோம்.
அவற்றுள் ஒன்றாக இதோ..!!!
சென்னை – மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
சென்னை கேம்ப் ரோடு அருகில் மாடம்பாக்கம் எனும் ஒரு அழகிய கிராமத்தில் எழுந்தருளி ஆட்கொள்கிறார் ஸ்ரீதேனுபுரீஸ்வர சிவபெருமான்.
ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்துள்ள மிகவும் அற்புதமான கொம்பினாலான லிங்கம். முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் ஒன்றில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி – அத்தாணி சாலையிலுள்ள பெருமகளூர் ஸ்ரீசோமநாத லிங்கத்தைப் பற்றி விளக்கியிருந்தோம். கல்லினால் செய்யப்படாது தாமரைத் தண்டினால் அமைந்திருக்கும் மிக சக்தி வாய்ந்த லிங்க மூர்த்தி.
இதே போல் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் லிங்கமும் கல்லினால் ஆனதல்ல. பிரபஞ்சத்திலுள்ள கோடி கோடியாம் பசுக்களின் ஆதிமூல தெய்வமான ஸ்ரீகாம தேனுவின் குளம்பு பதிந்த தெய்வீகக்  கொம்பினால் ஆன லிங்க மூர்த்தியே ஸ்ரீதேனுபுரீஸ்வரர்.
ஸ்ரீகாமதேனு பசுவை தரிசிக்க ஏங்குவோர்க்கு இது உத்தம தரிசனம். இதன் தரிசனமே பலகோடி யுகங்களில் பல கோடி லோகங்களில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பசுக்களை ஒருசேர தரிசித்த பலன்களை தரவல்லதாகும்.
இங்கு எழுந்தருளியுள்ள நந்தீஸ்வரர் மிகவும் விசேடமானவர் ஆவார். இந்த நந்தீஸ்வர மூர்த்தியே ஆதி சிவனுக்கு முதன் முதலாய் அமைந்த வாகன மூர்த்தியாவார். இதன் காரணமாகவே உலகத்தின் எவ்வித முதல் மூலப்பொருளையும் இக்கோயிலில் சமர்ப்பிக்கும் வழக்கம் நிலவி வருகிறது.
புதிய தென்னை மரத்தின் முதல் இளநீர், முதல் காய், கனி, விஞ்ஞான கண்டுபிடிப்பு, முதல் வாகனம், வியாபாரத்தின் முதல் லாபம் போன்ற முதல் பொருட்களை ஸ்ரீதேனுபுரீஸ்வரருக்கு அர்ப்பணித்தல் ஸ்ரீஆதிமூல நந்தீஸ்வரரின் பேரருளைப் பெற்றுத்தரும். இதனால் திரவிய, பொருள், செல்வ விருத்தி ஏற்படும்.
அதோ.... நூபுர சித்தர் என்ற சித்த மஹாபுருஷர் ஆழ்ந்த தியானத்தில் திளைத்துச் சகடயோக நிலையில் அமர்ந்திருக்கின்றார். எப்போதுமே சித்த புருஷர்களின் தவமெனில் அதில் மஹாவிசேஷமிருக்கும். உலக ஜீவன்களின் நலத்திற்காகவும் இறைமூர்த்திகளைப் பற்றிய இறைப் பிரச்சாரத்திற்காகவும், ஏன் இறைமூர்த்திகளின் அவதாரத்திற்காகவும் மக்கள் சேவைக்காகவும் தியாகம் புரியும் தவநிலையே சித்தபுருஷர்களுக்குரித்தான விசேஷ நிலையாம்.!
நூபுரசித்தரின் தவம்
நூபுர சித்தரின் தவம் எதற்காகவோ!
பலகோடி சதுர்யுகங்களுக்கு முந்தைய காலமது!
யாங்கனும் சுயம்புலிங்கம் ஆங்காங்கே வயல் வெளிகளிடையே தோன்றி இருக்க........
கோயில்கள் பெறாக் காலமது!
ஆதி சிவன் தனக்கென வாகனம் கொண்டிரா காலம் எனில் சிருஷ்டியை ஒட்டிய காலமாக இருக்குமா? அப்படியாயின் விண்ணுலக, தேவயுகக் காலக் கணிப்பிற்கு அப்பாற்பட்டு இருக்குமன்றோ!
நூபுர சித்தரின் தவத்திற்கான காரணத்தை அறிவோமா?
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியாம் ஆதிசிவனுக்கு ஒரு வாஹனத்தைப் பெறவேண்டியே நூபுர சித்தர் தவமிருந்தார்.
சித்தர்களின் தவத்திற்கான காரணங்கள் வித்யாசமான விசேஷ அம்சங்களுடன் இருப்பது போல அவர்களுடைய தவ முறைகளும் மாறுபாடானதாகவே இருக்கும்.
சிரசில் லிங்கம்........
எங்கெல்லாம் சுயம்பு லிங்கம் எழுகின்ற இறை நியதிகள் தென்படுகின்றனவோ அவ்விடத்தில் சகடயோக நிலையில் பல அண்டுகள் அமர்ந்து விடுகின்றார். குறித்த காலத்தில் அவ்விடத்தில் சுயம்பு லிங்கம் எழுந்தவுடன் அதற்குரித்தான ஆகம, வைதீக பிரதிஷ்டை முறைகள் நிறைவேறும் வரை அந்த சுயம்புலிங்கத்தைத் தன் சிரசிலேயே தாங்கியிருப்பார்.
சில தருணங்களில் தக்க நாள், கோள் அமைப்பு, நட்சத்திர, லக்னத் தகுதிகள் அமையப் பல வருடங்களாகும். அதுவரையில் பெரிய பெரிய லிங்கங்களை ஆவுடைகளுடன் தன் சிரசிலேயே தாங்கி இருப்பார். என்னே தவம்!
இறைவன் தனக்கென ஒரு வாஹனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா என்ன? நல்ல கேள்விதான்!
எதிர் வரும் யுகங்களில் இறைமூர்த்திகளுக்குப் பிரதோஷ பூஜை, மற்றும் பலவித வழிபாடுகள், ஆராதனைகள் நிகழவிருக்கின்றன என்பதனையும் இறைவன் பல வாகனங்களிலும் பவனி வந்து பல விதங்களிலும் அருள்பாலிப்பான என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த நூபுர சித்தர் இறைவனுக்கென ஆதிமூல வாஹனம் ஒற்றைப் பெற வேண்டித் தவத்தில் ஆழ்ந்தார்.
இன்றைக்குப் பெரும்பாலான கோயில்களில் உள்ள சுயம்பு லிங்கங்கள் அனைத்தும் நூபுர சித்தர் தம் சிரசில் தாங்கியதாகும்! சுயம்பு லிங்க மூர்த்தியானது அதற்குரித்த யந்திர, தந்திர சக்கரங்கள், நவரத்தினங்கள் நிறைந்த பீடத்தில் தான் அமர வேண்டும். தரையில் படலாகாது என்பதற்காகத் தம் சிரசில் தாங்கி நிற்கும் நூபுர சித்தரின் சிவபக்தியை எடுத்துரைக்கத்தான் இயலுமா?
ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம்
தற்கால நடைமுறையில் ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெறும் கோயில்களில் இறைமூர்த்திகளுக்குப் பாலாலயம் செய்கையில் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நிகழ்கின்றன. ஆனால் பல இடங்களில் பாலாலயம் செய்யப்பட்ட மூல மூர்த்திகளுக்கு  நைவேத்யங்கள் கூட நிறுத்தப்படுகின்றன இது தவறாகும். எக்காரணம் கொண்டும் பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்திகளுக்குக் குறித்த வேளைகளுக்கான நைவேத்யங்களை நிறுத்தலாகாது. ஆகம நிபுணர்களும், சிவாச்சார்யார்களும், பக்தர்களும் இதற்கு ஆவன செய்தல் வேண்டும்.
மூலவரின் சக்தி ஆகம, வைதிக, மந்திர நெறிகளின்படி கும்பத்திலும் உற்சவ மூர்த்திகளிலும் ஆவாஹனம் செய்யப்பட்டு மாற்றப்பட்டு இருப்பினும் பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்திகளின் தெய்வாம்சம் உண்மையில் ஒரு சிறிதும் மறைவதில்லை. இதுவே நிதர்சன உண்மை. பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்திகளைத் தரிசனம் செய்வதிலும் தவறில்லை.
அஷ்ட பந்தன மருந்து சாற்றுகையில் நூபுர சித்தரின் நமஸ்மரணம், தியானத்துடன் சாற்றுவது அந்த இறைமூர்த்திக்கு மிகவும் ப்ரீதி அளிக்கக் கூடியதாகும்.
நூபுரசித்த மஹராஜ் கீ ஜெய்!
............அதோ..............
சென்னை -  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கத்தின் முன் நிஷ்டையில் ஆழ்ந்திருக்கின்றார் நூபுர சித்தர்!
“.............அம் .............மா...........” என்று ஒரு பசு அழைத்திட நூபுரசித்தர் கண்களைத் திறந்தார்.
.....ஆம் சாட்சாத் காமதேனுவே பிரசன்னமாகியிருந்தாள்!
இன்றைக்கும் தினமும் காமதேனு அரூவமாக வந்து ஸ்ரீமருந்தீஸ்வரருக்குப் பால் அபிஷேகம் செய்விக்கின்றாள். குருவருள் பெற்றோருக்கு இந்த பரிபூரணமான அனுக்ரஹம் காட்சியாகக் கிட்டும். தவத்திலிருந்து மீண்ட நூபுர சித்தர் காமதேனு காட்டிய வழியே நடந்தார்.
அதுவே ஆன்மீக இரகசியங்கள் நிறைந்த சுரங்கப் பாதை வழியாம்.
இன்றைக்கும் திருவான்மியூருக்கும் மாடம்பாக்கத்திற்க்கும் இடையே இரு கோயில்களையும் இணைக்கும் இரகசிய சுரங்கப் பாதை உண்டு! சித்த புருஷர்களும் மஹரிஷிகளும் அடிக்கடி வந்து செல்லும் சுரங்க வழி. இத்தகைய இரகசிய வழிப்பாதைகள் இன்றைக்கும் பல கோயில்களில் உள்ளன. இவற்றைச் சித்த புருஷர்களே அறிவர்.
திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வர சிவன்கோயிலில் உற்சவ மூர்த்திகள் உள்ள அறையில் பல படிக்கட்டுகளைக் காணலாம். ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் போன்ற மஹான்கள் இதன் வழியே சென்றுள்ளனர். இந்நிலவறையின் ஒரு பிரிவு அருகிலிருக்கும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்திற்கும் மற்றொரு பிரிவு திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ சுவாமி ஆலயத்திற்கும் செல்வதாக நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு அருளியுள்ளார்.
இதே போல் திருச்சி திருவெறும்பூர், திருஎறும்பீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுரங்கப் பாதை ஸ்ரீரங்கம் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது!
சற்குருவைப் பெற்றோருக்குத்தான் இத்தகைய ஆன்மீக இரகசியங்கள் உணர்த்தப் பெறுகின்றன.
.............காமதேனுவைத் தொடர்ந்து சென்ற நூபுர சித்தர் சுரங்கப் பாதை வழியே மாடம்பாக்கம் சென்றடைந்தார்.
அதோ தேனுபுரீஸ்வரர் காட்சியளிக்கின்றார்.
காண்பதற்கரிய லிங்கம்! முந்தைய யுகத்தில் காமதேனுவின் குளம்பு அமைந்த அற்புதமான கொம்பில் உருவான ஸ்வயம்பு லிங்கம்!
நூபுர சித்தர் ஸ்ரீதேனுபுரீஸ்வரரைத் தொழுதார்.
“இங்குதான் சாட்சாத் பரமசிவன் தன் முதல் வாஹனத்தைப் பெறப்போகிறார்” – சித்த புருஷரின் உள்ளுணர்வு அறிவுறுத்தியதோ!
ஆங்கே விண்ணளவு  ஒரு பெரிய நந்தி தோன்றியது!
தோன்றியதா, தோன்றி வளர்ந்து கொண்டேயிருந்தது!
வெள்ளை வெளேரென்று நந்தியின் தேகம்!
நூபுர சித்தர் இறைவனின் திருஆணைப்படி வெள்ளை நந்தியையும் காமதேனுவையும் இணைத்து வைத்துப் பூஜை செய்திட ..
அவற்றின் சங்கமத்தில் ஓர் அற்புதமான நந்தீஸ்வரர் தோன்றினார்.
நூபுர சித்தர் ஸ்ரீதேனுபுரீஸ்வரரை வேண்டிட, ஸ்வயம்பு லிங்கத்தினின்றும் எழுந்த சிவபெருமான் அந்த நந்தீஸ்வரரைத் தன் முதல் வாஹனமாக்கிக்  கொண்டார்.

காரடையான் நோன்பு

ஒருமுறை அருந்ததி, அநுஸுயா தேவி, லோபாமுத்திரை மூவரும் ஸ்ரீவித்யா லோகத்தில் ஒன்று கூடி ஸ்ரீவித்யா சக்கரப் பூஜையை நாற்பத்து மூன்று கோடி தேவியரைக் கொண்டு நிகழ்த்தினர். காரணம் யாதோ?
வரவிருக்கும் கலியுகத்தில் குடும்பப் பெண்களுக்கு நிறையத் துன்பங்கள் ஏற்படும். சக்தி வாய்ந்த பூஜைகள் மூலமாகத்தான் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலும். கணவன் ஆரோக்யமான நீண்ட வாழ்வைப் பெற்றுச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தால் தான் நல்ல இல்லற வாழ்க்கை அமையும். அதற்கான சிறந்த பூஜைகளைத் தந்தருளுமாறு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை வேண்டினர்.
ஸ்ரீஅம்பிகையின் பேரருளால் ஓர் அழகிய மேகம் ஸ்ரீவித்யா லோகத்தின் மத்தியிலிருந்து எழும்பி மூன்று ரிஷி பத்தினியரின் கைகளில் தவழ்ந்து நின்றது. அம்மேக்ச் சுருளிலிருந்து மூன்றுவித தான்ய மணிகள் உதிர்ந்தன.
அவற்றை இறைப் பிரசாதமாகத் தம் புடைவைத் தலைப்புகளில் மூவரும் ஏந்திப் பூலோகம் வந்தனர் அந்த தான்ய மணிகளில் ஒரு பங்கை அவர்கள் நாரதரிடம் அளித்துப் பல லோகங்களிலும் பயிராக்கி வளர்க்க ஆவன செய்யுமாறு வேண்டினர்.
புடவைத் தலைப்புகளில் தான்ய மணிகளைத் தாங்கி காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி சந்நதிக்கு எடுத்து வந்திட ஸ்ரீஅம்பாள் திருச்சந்நதியில் அக்னி ஏற்றப்படாமலேயே அத்தான்ய மணிகள் தினைமாவு போல் மாறி சிறு சிறு அடைகளாய் உருப்பெற்றன.
மேகமெனத் திரண்ட அவை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் பேரருளால் அடைகளாக உருக்கொண்டன.
மூவரும் ஸ்ரீதேவியின் நாமத்தைத் துதித்தவாறே காரடைகளைப் புடவைத் தலைப்புகளில் தாங்கி ஸ்ரீகாமாட்சி அம்மனின் பிரஹாரத்தை அடிப் பிரதட்சிணமாய் வலம் வந்தனர்.
ஸ்ரீஅம்பிகை காட்சியளித்துத் தன் திருநெற்றியிலிருந்து குங்குமத்தை எடுத்து அக்கார அடைகளின் மீது தெளித்து மூவரையும் ஆசிர்வதித்தாள்.
இன்றிலிருந்து இது காரடை நோன்பு என்று அழைக்கப்படும். இந்த நோன்பிற்காகவே ஸ்ரீவித்யா லோகத்திலிருந்து கம்பு, கேழ்வரகு, சோளம் எனப்படும் தானியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மங்களகரமான தானிய அடையாகும்.
ஸ்ரீமுருகன், ஸ்ரீவள்ளியை மணம் புரிந்து கொண்டபோது இத்தினைமாவையே ஸ்ரீவிநாயகப் பெருமானுக்குப் பிரசாதமாகப் படைத்திட எதிர் காலத்தில் மங்களகரமான பொருட்களில் ஏற்றதாய்த் திகழும். எனவே காரடையான் நோன்பு அன்று இம்மூன்றில் ஏதேனும் ஒரு மாவினால் செய்த அடையை எமக்குப் பிரசாதமாக அளித்து நோன்பு செய்பவர்கட்குத் தீர்க சுமங்கலி பாக்யம் கிட்டும்.
 இப்பிரசாதத்தினை யாவருக்கும் விநியோகம் செய்திட அதன் பலன்களை அனைவரையும் சென்றடையும், சுபமங்கள காரியங்கள் செவ்வனே நடைபெறும்,” என்று ஸ்ரீகாமாட்சி தேவி கூறி அருள்பாலித்தாள்.
அருந்ததி, அனுசூயா, ஸ்ரீலோபாமாதா மூவரும் கார அடையினை மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாமாட்சி தேவிக்கும், ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீஜேஷ்டா தேவிக்கும் படைத்துப் பூஜித்தனர்,
அடியார் : குருவே, ஸ்ரீஜேஷ்டா தேவியை வழிபடும் தாத்பர்யம் யாதோ?
சற்குரு : செல்வம் பெறுவதற்காக ஸ்ரீலக்ஷ்மியை வேண்டுகிறோமல்லவா? வறுமை, பஞ்சம், தரித்திரம் இவை நீங்குவதற்காக ஸ்ரீஜேஷ்டாதேவியை வணங்க வேண்டும். செல்வம் பெறுவது வேறு வறுமை நீங்குவது வேறு. ஒரு சிலருக்கு எவ்வுளவு செல்வம் பெறுவது இருந்தாலும் பணவிரயம் ஏற்பட்டு அவ்வப்போது தரித்திர நிலை ஏற்படும். லக்ஷ்மி கடாக்ஷம் என்பது ஆழ்ந்த தத்துவம் அடங்கியது. வீர லக்ஷ்மி, தைர்ய லக்ஷ்மி தேவிகளின் அனுக்ரஹங்களும் இருந்தால்தான் கிட்டிய செல்வம் திருடுபோகாது. அவ்வாறு திருடப் பெற்றாலும் தைரியத்துடன் மீட்டுவிடலாம்.
எனவே அஷ்ட லக்ஷ்மிகளுடன் ஸ்ரீஜேஷ்டா தேவியின் வழிபாடும் நிறைந்து பரிபூரணம் பெற்றால் தான் செல்வப் பெருக்குடன் அது நிலைத்து நின்று வளர்ந்து அருள் பாலிக்கும்.
 காரடையார் நேன்பு அன்று கம்பு, கேழ்வரகு, சோளம் மாவினால் கார அடை செய்து காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மனின் இருபுறமும்  மூலஸ்தான தூண்களிலுள்ள ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீஜேஷ்டா தேவி ஆகியோருக்குப் படைத்து, தேங்காய், பழ தாம்பூலத்துடன் ஏழை சுமங்கலிகட்கு அளித்திட செல்வ விருத்தி, தீர்க்க மாங்கல்ய பாக்யம் கிட்டும். ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்தருளியுள்ள தலங்களிலும் இவ்வழிபாட்டை மேற்கொள்ளலாம் (உதாரணமாக) பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோவில்.
சங்கடஹர சதுர்த்தி – சித்த புருஷர்களின் விளக்கம்
அந்த நான்கு நாய்களும் ருக், யஜுர், சாம அதர்வண வேதங்களாகக் காட்சியளிக்க ஆங்கே ஸ்ரீதத்தாத்ரேய மஹாபிரபு காட்சி தந்தார். ஆம் ஸ்ரீதத்தாத்ரேயரே அற்புத மஹரிஷியாக உருவம் கொண்டு யாவருக்கும் அருள்பாலித்து இறைநெறி பரப்பி வந்தார். ஸ்ரீதத்தாத்ரேயர் போஜராஜனிடம் “உன் குழந்தை குந்தி தேவி தெய்வானுக்ரஹம் நிரம்பப் பெற்றவள். எதிர்காலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் ஸ்ரீதுர்வாஸருக்குத் தொண்டாற்றும் அரிய வாய்ப்பைப் பெறவிருக்கிறாள். யாம் இந்த மஹரிஷி உருவத்தில் சில காலம் தலயாத்திரைத் தொடர உள்ளோம். எம்முடன் இந்த பாலகியாம் குந்தி தேவியை அழைத்துச் சென்று அவளுக்கு அரிய பூஜை ஒன்றை உபதேசிக்க உள்ளோம். பின்னர் அவள் இதனை உலகெங்கும் பரப்பும் திருப்பணியினை மேற்கொள்ளட்டும்” என்று அருளாசி கூறினார்.
பின்னர் ஸ்ரீதத்தாத்ரேய மூர்த்தி, குந்தி தேவிக்கு ஸ்ரீகணபதி அக்ரஹாரம் என்று தற்போது அழைக்கப்படும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகணபதி சந்நதியில் “சங்கடஹர சதுர்த்தி” பூஜை  நோன்பு முறையினை விளக்கமாக எடுத்துரைத்து உபதேசித்தருளினார்.
அடியார் : குருவே, ஸ்ரீகுந்தி தேவியின் வாழ்க்கையில் பல பெரிய சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததல்லவா?
சற்குரு : உண்மையே! “இறைவா! எதிர்காலத்தில் குறிப்பாகக் கலியுகத்தில் இறைபக்தி மங்கும் போது பெண்கள் பல விதமான் சொல்ல இயலாத வேதனைகளுக்கு ஆட்பட்டு வருந்துவர். எனவே எனக்குத் துன்பமயமான வாழ்க்கையைத் தந்து அதனிடையினும் உன் திருநாமத்தை விடாது ஓதும் பண்பையும் தருவாயாக. என் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும். இறைச் சிந்தனையால் எதனையும் ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறலாம். நடப்பதனைத்தும் நாராயணணின் செயலே என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று வேண்டி குந்தி தேவி அத்தகைய பிறவியினை கேட்டுப் பெற்றாள்.
மஹாபாரதத்தில் தன் பாத்திரத்தின் முடிவில் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனிடம், ஸ்ரீகிருஷ்ணா! இன்னல்மயமான வாழ்வையே எனக்குத் தந்தருள்வாயாக, அப்போது தான் உன் நினைவுடன் யான் வாழ முடியும், சுகபோகம் ஒரு சிறிதும் இருந்தால் கூட இறைநினைவு அற்றுப் போய்விடும், என்று வித்யாசமான முறையில் பிரார்த்தித்திட தேவாதி தேவதையினர் இதைக் கேட்டு வியந்து. ஆன்ந்தித்து குந்தி தேவியின் மாசற்ற பக்தியை போற்றினர்.
எனவே கலியுகத்தில் அளவற்ற துன்பச் சூழ் நிலைகளில் வாழும் பெண்கள் மேற்கண்ட குந்தியின் புராணத்தைத் தினந்தோறும் படித்துப் பாராயணம் செய்து வந்தால் துன்பங்களைத் தாங்குகின்ற மனோ சக்தியைப் பெறுவதோடு தங்கள் துன்பச் சுமைகளுக்கான காரணகாரியங்களை அறியும் வல்லமையையும் பெறுவர்.
அடியார் : குருவே! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தனக்குத் துன்பங்களையே தருமாறு குந்தி தேவி வேண்டினாள் அல்லவா? அதற்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பதில் யாதோ? இன்னமும் குந்தி தேவி இன்னல்களைத்தான் அனுபவிக்கின்றாளா?
சற்குரு (புன்முறுவலுடன்) இதற்கான பதில் சித்தர்களின் இருடிகள் மஹாபாரதத்தில் இருக்கின்றது. நாம் இன்று காண்பது உண்மையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியே!
இன்றைக்கும் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் லோகத்தில் எந்நேரமும் ஸ்ரீகிருஷ்ண நாமஸ்மரணையில் திளைத்துக் கொண்டிருக்கின்றாள். அளவற்ற துன்பச் சூழல்களால் அவதியுறும் பெண்கள் குந்தி தேவியை வேண்டிடில் அவர்களுடைய துன்பச் சுமைகளின் ஒரு கணிசமான பகுதியை குந்திதேவியே ஏற்று அந்தத் துன்பங்களின் விளைவுகளை அனுபவிக்கின்றாள். இதுவரை எவரும் வெளியிடாத ஆன்மீக இரகசியம் இது!
இன்றைக்கும் “சங்கடஹர சதுர்த்தி” விரதத்தினைச் சிறப்பாக அனுஷ்டித்து வரும் உத்தமியே குந்தி தேவி! அதனால் தான் பெண்களின் எத்தகைய சங்கடங்களையும் தன்னுள் ஏற்று அனுபவிக்கும் தெய்வீக சக்தியைப் பெற்றுத் திகழ்கின்றாள்.
எனவே குந்தி தேவி வேண்டியவாறே (பிற பெண்களுடைய) துன்பங்களை ஏற்று வாழும் அற்புதமான தெய்வீக ஆற்றலுடன் ஒளிர்கின்ற வரத்தை ஸ்ரீகிருஷ்ண பகவான் தந்தருளினார்.
அடியார்: குந்தி தேவிக்கு ஸ்ரீதத்தாத்ரேய மூர்த்தி உபதேசித்த சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறையாதோ? அது எத்தகைய சங்கடங்களை நிவர்த்திக்கின்றது குருதேவா?
சற்குரு: குந்தி தேவி எத்தகைய துன்பங்களுக்கு, சங்கடங்களுக்கு ஆட்பட்டாள் என்பதை நாமறிவோம். அவற்றைத் தாங்கும் மனோசக்தியை அவள் சங்கடஹர சதுர்த்தி பூஜை மூலமாகத்தான் பெற்றாள். சங்கடாஹர சதுர்த்தி பூஜையைச் சிறப்பாக செய்து வந்த குந்தி தேவிக்கு ஏன் அத்தகைய சோதனைகளை இறைவன் அளித்தான் என்ற கேள்வி எழலாம்.
பெரும்பாலான ஜீவன்கள் தங்களுடைய கர்ம்வினைகளுக்கேற்ப பிறவிகளைப் பெறுகின்றனர். ஆனால் குந்தி தேவியோ தன் பிறவிகளை இறையருளால் தானே நிர்ணயம் செய்யும் தெய்வீக உரிமையைப் பெற்றிருந்தாள். அவள் எண்ணியிருந்தால் சுகபோகமான வாழ்வைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தன் வாழ்க்கை மூலம்

 1. எத்தகைய பெரிய துன்பங்களைத் தங்கள் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்
 2. எவ்வித இன்னலகளுக்கிடையிலும் ஸ்ரீகிருஷ்ணனின் திருநாமம் ஓர் அருமருந்தாய் விளங்கி இறுதியில் இறைப் பேரின்பத்தை அளிக்கும்.
 3. அனைத்தும் இறைவன் செயலே! இறைவனே மனமுவந்து அளிக்கும் பேரின்பமே நிலையானது.
 4. எத்தகையப் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் உண்டு. இறையருளால் மனந்திருந்தி வாழ்ந்து பிறருக்குச் சேவை செய்யும் தியாக வாழ்வை மேற்கொண்டால் உத்தம இறையடியாராக மலர்ந்து உயர்நிலை பெறலாம்.

........... என்பதனை விளக்கி ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து காட்டியவளே குந்திதேவி.
இத்தகைய துன்பங்களை எதிர் நோக்கி இறுதியில் ஸ்ரீகிருஷ்ணனே மனமுவந்து குந்திதேவி! உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டருளும் அளவுக்கு இறைத் தியானத்துடன் வாழ்ந்தாள். பரமாத்மாவே நேரில் வந்து ஆட்கொள்ளும் தெய்வீக நிலையை குந்திதேவி பெற்ற காரணம் அவளது சங்கட ஹர சதுர்த்தி பூஜையே.
மஹாபாரதத்தில் சியமகந்த மணியைத் திருடியதாக அபகீர்த்தியை பெறவேண்டிய நிர்பந்தம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஏற்பட்டு அதற்கான பரிகாரத்தை ஸ்ரீகிருஷ்ணன் நாடியபோது ஸ்ரீவிநாயகப் பெருமான் ஸ்ரீகிருஷ்ணனைக் குந்தி தேவியிடம் அனுப்பினார்.
ஸ்ரீகுந்திதேவியோ, சங்கடஹர பூஜையின் மகிமையை ஸ்ரீகிருஷ்ணக்கு அறிவிக்க, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நன்முறையில் அதனை நிறைவேற்றி சியமகந்த மணியை மீண்டும் பெற்று அபகீர்த்திக்குப் பரிகாரம் தேடினார்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கே அருள் பாலித்த பூஜை எனில் சங்கட ஹர சதுர்த்திப் பூஜை மஹிமையை என்னென்று எடுத்துரைக்க இயலும்?

பித்ரு தர்ப்பணம்

அடியார் : குருவே, பித்ருக்கள் என்போர் யார்? மனிதர் மட்டுமன்றி அனைவருக்கும் பித்ருக்கள் உண்டா?
சற்குரு : இறந்தவர்கள் அனைவரும் பொதுவாக ஒளிப்பகுதி, இருள்பகுதி என்ற இரு பகுதிகட்கு அவரவர் செய்த பாவ, புண்ணிய கர்மவினைக்கு ஏறப செல்வர், நல்லவர்களுக்கு  ஒளிப்பகுதி கிட்டும். ஒளிப்பகுதியில் பித்ருக்கள் லோகம், தேவலோகம், கந்தர்வ லோகம், தேவதா லோகம், புண்ணிய லோகம், தீர்த்த லோகம் என்று பலவித நிலைகள் உண்டு. இறந்த நம் மூதாதையர்கள் ஒளிப் பகுதிக்குச் செல்லும் ஆன்மீக சக்தி பெற்றிருந்தால் அவர்களில் பலர் பித்ரு லோகத்தில் வசிப்பர். தூக்கம், பசி இரண்டுமற்ற நிலையில் மூதாதையர்களாம் நம் பித்ருக்கள், பித்ரு லோகத்திலிருந்து நம் நல்வாழ்விற்காகப் பூஜைகள், பிரார்த்தனைகள் போன்றவற்றைச் செய்து வருகின்றனர்.
அனைத்து ஜீவன்களுக்கும் பித்ருக்கள் உண்டு. ஒரு புல், பூண்டு கூட யானையாகவோ, எறும்பாகவோ, மனிதாகவோ, பித்ருவாகவோ நிலை, பிறவி பெறக் கூடும்.
பித்ரு பூஜை என்றால்............
அடியார் : பித்ரு நிலையே ஒளிப்பகுதியிலுள்ள ஒர் உயர் நிலை என்றால் அவர்கட்குப் பூஜை ஏன் குரு தேவா?
சற்குரு : கலியுகத்தில் ஒருவன் வெறும் பாவங்களைச் செய்து தீயவனாக வாழ்ந்தாலும் அவனுடைய மூதாதையர்களின் புண்ய பலனே அவனுடைய பலவித செல்வ சுகபோகங்களாகும். ஆனால் அவனோ இதனை மறந்து தீய இன்பங்களில் துய்த்து மகிழ்கின்றான்.
இவ்வாறு இல்லாமல் பித்ரு தர்ப்பணம் எனப்படும் பித்ரு பூஜையில் நம் மூதாதையர்கட்காக நன்றி செலுத்தி அவர்தம் நல்வாழ்விற்காகப் பிரார்த்திக்கின்றோம். உண்மையில் உயர்ந்த பித்ரு லோகத்தில் வாழும் அவர்களே நம்மை ஆசீர்வதிக்கும் வல்லமை பெற்றவர்கள். அப்படியானால் எதற்காக நாம் அவர்தம் நல்வாழ்விற்க்காகப் பிரார்த்திக்கின்றோம்?
பித்ரு தர்ப்பணமாகியப் பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் நாம் அனுபவிக்கின்ற சுகபோகங்கள் நம் மூதாதையர்களின் நற்கர்ம பலன்களினால் தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வலுத்து “நம்மால் எதுவும் நிகழ்வதில்லை. நடப்பது எல்லாம் ஸ்ரீநாராயணன் செயல்” என்ற இறை நம்பிக்கையாக அது மலரும்
இதையே எம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் “ஒரே ஒரு பித்ருவோட ஆசி கெடச்சா போறும்டா. எல்லோரையும் கரை ஏத்திடலாம்” என்று அடிக்கடி கூறுவார்.

தர்பை சட்டம் அமைக்கும் முறை

உண்மையில் பித்ரு தர்ப்பணத்தில் நம் மூதாதையர் அனைவருடைய நல் வாழ்விற்காகவும் பிரார்த்திக்கின்றோம் என்றாலும் அவர்கள் அனைவரும ஒளிப்பகுதிக்குச் செல்லும் ஆன்மீக சக்தியைப் பெறுகின்றனர்? இருள் பகுதியை அடைந்தோர்க்கே அப்பிரார்த்தனை.
அடியார்: பித்ரு பூஜை செய்யாவிடில் அதன் விளைவு யாது குருதேவா?
சற்குரு: தான் சம்பாதித்தது, தன்னால் உண்டானது, தன்னால் எதையும் சாதிக்கலாம், தன் முயற்சியால் எதையும் பெறலாம்  இவை போன்ற ஆணவ, அகங்கார எண்ணங்கள் ஏற்பட்டு மனிதன் தீயபழக்கங்கள். தீய வினைகளுக்கு ஆளாகி, வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்வான். இப்பெரும் மாயையிலிருந்து விடுபட ஒவ்வொரு மனிதனும் பித்ருக்கு உரித்தான தர்ப்பணங்களையும், அப்பூஜைக்குரித்தான தான தருமங்களையும்  செய்தே ஆக வேண்டும்.
மிகவும் எளிதான இந்தப் பித்ரு தர்ப்பணத்தைச் செவ்வனே ஒருவன் செய்து வந்தால் “நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அனைத்தும் பெரியோர் ஆசியால் நிகழ்வதே! அனைத்தும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது” “ என்ற தீர்க்கமான, தெளிந்த அறிவைப் பெறுகின்றான். இதுவன்றோ உண்மையான செல்வம்!
அடியார் : குருதேவா! பித்ரு தர்ப்பணம் செய்யாவிடில் பித்ருக்களின் சாபங்கள் உண்டாகும் எனில் உயர்ந்த ஆன்மீக நிலை உடையோர் அத்தகைய சாபங்களை அளிப்பார்களா?
சற்குரு : துர்வாஸர், வசிஷ்டர், ஆங்கிரஸர், பரத்வாஜர் போன்ற உயர்ந்த ரிஷிகள், உத்தம மஹரிஷிகள் எனினும், அவர்கள் தம் அடியார்களைத் திருத்தும் பொருட்டுச் சாபங்களை அளிக்கின்றனரல்லவா?
நம்முடைய  தர்ப்பண பூஜைகள், பிரார்த்தனைகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் பித்ருக்கள் இல்லை. ஒரு மனிதன் தன் நல்வாழ்விற்காகவே பித்ரு தர்ப்பணங்களைச் செய்து ஆகவேண்டும். ஒரு தாத்தா தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் இவர்கள் நல்வாழ்வைத் தானே விரும்புவார்? அதன்பின்தான் உற்றார், உறவினார், அக்கம்பக்கம் என்ற அவர்தம் மனநிலை பரந்து உயர்வடையும்!. இதேபோல் ஒவ்வொரு பித்ருவும் தன்னுடைய வம்சா வழியினர் நற்கதி பெறுவதை விரும்புவார் அன்றோ ?
ஒரு தந்தை தன் மகனை நல்வழிப் படுத்த கண்டித்து, அடித்து , உதைத்துத் திருத்துதல் போல், பித்ருக்கள் பல சாபங்கள் மூலம் பல கஷ்டங்களை அளித்துத் தம் வம்சா வழியினரைத் திருத்திக் கரையேற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் நடத்துவர்.
பித்ரு சாபங்களைத் தீர்க்கும் தானதர்ம பரிகார முறைகள் பல உள்ளனவே, அவற்றை முறையாகச் செய்தால் அச்சாபங்கள் தீரும் அன்றோ? உண்மையில் இதில் நடக்கும் ஆன்மீக விந்தை என்னவெனில் தம்முடைய வழிதோன்றலை பல தான தர்ம காரியங்களில் ஈடுபடுத்தச் சாபங்கள் மூலம் துன்பம் அளித்து, அவற்றினை நிவர்த்தி செய்யும் பொருட்டு பரிகார முறைகளையும், பிறிதொரு விதமாகப் பிறர் மூலம் பித்ருக்கள் உணர்த்துவதுண்டு.

பித்ருக்களுடன் தொடர்பு
அடியார் : பித்ருக்கள் தம் வம்சா வழியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாதா குருதேவா ?
சற்குரு : உத்தம இறை நிலை பூண்டுள்ள பித்ருக்கள் ஒளிமயமான தேகத்தைப் பெற்றவர்கள், எவ்வுருவையும் ஏற்கும் ஆன்மீக சக்தி உடையோர். ஆனால் தம் வம்சா வழியினர் என்றாலும் அவரவர் பாவ புண்ணிய கர்ம வினைகட்கேற்பவே பித்ருக்கள் அருள் வழங்குவர்.
பரிசுத்தமான தன் பித்ருவுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு அவர்தம் வம்சாவழியில் வரும் மனிதனுக்கு ஆன்மீக சக்திகள் இருப்பதில்லை.
எனவே, அவனைக் கரையேற்றுவதற்காக அந்தப் பித்ருக்கள், பூலோகத்திலுள்ள, தேவதைகள், மஹரிஷிகள் யோகிகள், சற்குருமார்கள், போன்றோரின் உதவியினை நாடுகின்றனர். இதில் சற்குரு விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடையில் ஓர் ஆன்மீகப் பாலமாக, பாதையாக விளங்குகின்றார்.
என்றைக்கு ஒரு மனிதன் தன்னுடைய பித்ருக்களுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு ஆன்மீக சக்தியைப் பெறுகின்றானோ அன்று முதல் அவன் பித்ரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய நியதி சற்று தளர்த்தப்படுகின்றது.
பித்ரு தர்ப்பணம் என்றால்.....
அடியார் : தர்ப்பணம் இடுதல் என்றால் என்ன குருதேவா?
சற்குரு : பொதுவாகப் பித்ருக்களுக்கு உறக்கம், பசி கிடையாது, எப்போதும் தம் வம்சாவழியினர் ஆன்மீக நிலையில் முன்னேற அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். உதாரணமாக ஒரு குடும்பத் தலைவன் காசி யாத்திரை சென்று அங்கு ஹோமங்கள், சிராத்தங்கள், திவசம், தீர்த்தஸ்நானம், அன்னதானம், வஸ்திரதானம், கங்காஸ்நானம் போன்றவை மூலமாக சில கர்மங்களைத் தீர்க்க வேண்டுமெனில் அவன் தன் ஊரிலிருந்து புறப்படுவது முதல் யாத்திரை சென்று திரும்பும் வரை அவனைப் பாதுகாக்கும் பொறுப்பினைப் பித்ருக்கள் ஏற்று அவனை எங்கும் காத்து அருள்கின்றனர்.
ஆனால், இப்புனிதமான காசியாத்திரையின் பலன்கள் அவனுக்குச் சென்றடையா வண்ணம் பல துர்வினை, எதிர்வினை (NEGATIVE FORCES) சக்திகள் ஒன்று சேர்ந்து அவனுக்குப் பலதுன்பங்களை, நோய், பிரயாணத் தடங்கல்கள் , விபத்து, களவு, மனசஞ்சலங்கள் போன்ற துன்பங்களாக அளிக்கின்றன. இவற்றைத் தனி மனிதனாக அவனால் எதிர்நோக்க இயலாது. ஆயினும் இது மிகச் சிறந்த நற்காரியம் என்பதாலும் பல தலைமுறைகளைக் கரையேற்றும் உத்தமச் சடங்கு என்பதாலும் அவன்தம் பித்ருக்கள் ஒரு அற்புதக் கவசமாக நின்று அனைத்துத் தடங்கல்களையும் வெல்கின்றனர்.
இதேபோல் அன்னதானம், கும்பாபிஷேகம், உழவாரப்பணி போன்ற இறைப் பணிகள், இலவச மருத்துவ உதவி, கல்விதானம், காலணி (செருப்பு) தானம், வஸ்திர தானம், மாங்கல்ய தானம், ஏழைகளின் திருமணங்களுக்கு உதவுதல், பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளுக்கு உதவி, ஏழைக் குடும்பங்களில் ஈமச் சடங்குகள் செய்ய உதவுதல் போன்ற மஹேசன் சேவையாம் மக்கள் சேவைக்குப் பித்ருக்கள் மிக்க ஆனந்தத்துடன் தங்கள் ஆன்மீக சக்தியையும், ஆசீர்வாதத்தையும் நல்குகின்றனர்.
 பித்ருக்களின் இத்தகைய ஆசீர்வாதமே தனபாக்யம், வீடு, வாகனம் அமைதல், திருமணங்கள் கைகூடுதல், பிள்ளைப் பேறு, பணவரவு, நோய்கள் நிவாரணம், குடும்பச் சண்டைகள் அகலுதல், இழந்த பொருட்கள் மீட்பு போன்ற அனுக்ரஹங்களாக மாறி நமக்கு அருள் பாலிக்கின்றன.
எனவே, தர்ப்பணம் இடுதல் என்றால் பித்ருக்களை நினைத்து அவர்களை முறையாக வணங்கி, ஆசி பெறுதல் என்று பொருளாகும்.
அடியார் : தர்ப்பை, எள் , நீர் கொண்டு தர்ப்பணம் இடுவது ஏன் குருதேவா?
சற்குரு:  மனிதன் உயிர் வாழ அன்னம் தேவை, தேவர்கள் அதனைத் தீ மூலமாகவும், கந்தர்வர்கள், பசுநெய் மூலமாகவும் பித்ருக்கள் நீர் மூலமாகவும், ஆஹுதிகளை உணவாக ஏற்கின்றனர். இவர்களுக்கு ஊன், உறக்கம் இல்லை என்பது உண்மையே. ஆனால், ஒரு பித்ரு தேவர் மேலும் நன்னிலையடைந்து, கைலாய, வைகுண்ட லோகங்களை அடைவதற்கு பல தியாகங்களையும் மேற்கொள்ள வேண்டும். எந்நேரமும் கடுமையாக உழைத்து எத்துணை ஜீவன்களுக்கு அவர்கள் நற்கதி அளிக்கின்றனரோ, அந்த அளவு பித்ருக்களுக்கு உயர்நிலை கிட்டும்.
பித்ரு நிலையே ஒர் உயரிய நிலை என்றாலும் பல்லாயிரக்கணக்காகப் பித்ரு லோகங்களில் விதவிதமான பித்ருக்கள் தங்களுடைய தினசரி பூஜையில் எள் தான்ய மணிகளைக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜிக்கின்றனர்.
மேற்கண்ட காரணங்களால் தான் தர்ப்பணப் பூஜைக்கு எள், நீர், தர்ப்பை பயன்படுத்தப்படுகின்றன. தர்ப்பை புல்லிற்கு மந்திரங்களை கிரஹிக்கும் அற்புதமான சக்தி உண்டு.
எளிய தர்ப்பண முறை – பொது விளக்கங்கள்
இன, ஜாதி மத பேதமின்றி யாவரும் தர்ப்பணம் அளிக்கும் முறையை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் விளக்குகின்றன. இத்தகைய ஆன்மீகப் பொக்கிஷங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சுவாமிகள், குருகுல வாசத்தில் தம் சித்தர் குலத் தோன்றலாம் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கு அருளினார்.
அனைத்துப் பாமர மக்களும் தர்ப்பண பூஜையின் மஹிமையினை உணர்ந்து யாவரும் பித்ருக்களின் ஆசிபெற்று உய்வடைய நம் குருமங்கள கந்தர்வா அருள்கின்ற தர்ப்பண முறையை இங்கு அளிக்கின்றோம்.
இந்த எளிய தர்ப்பண பூஜையை எவ்வித ஜாதி மத பேதமின்றி யாவரும் செய்து பயன் பெறலாம். இதற்குரிய கடினமான மந்திரங்களும் உண்டு. தக்க பெரியோர்களிடம் அவற்றைப் பயின்று அதற்குரித்தான முறையில் தர்ப்பணம் அளித்தால் அதற்குரிய விசேஷமான பலன்களும் உண்டு. மந்திரங்களை அறியும் பக்குவம் இல்லாவிடில் அதற்குரிய எளிய தான தர்மங்களுடன் தர்ப்பணங்களாய் நிறைவேற்றலாம்.
தர்ப்பண விதிமுறைகள் பல உண்டு! எளிதான ஒன்றை அளிக்கின்றோம்.
நம் மூதாதையர்களாகிய பித்ருக்களின் ஆசிர்வாதத்தைப் பல வழிகளில் பெற அவர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்படுகின்றது!
தர்ப்பைப் புல் மூலமாகவே தர்ப்பணம் அளிக்கப்படுகின்றது. தர்ப்பை தேவலோகத்து மூலிகை! அது எத்தகைய மின் சக்தியைத் தாங்கும் வல்லமை கொண்டது. கடும் மின்னல்களையும் ஏற்கும் ஆன்மீக சக்தி உடையது!
தர்ப்பணம் அளித்தல் என்றால்

 1. பித்ருக்களாம் மூதாதையரை தர்ப்பைப் புல்லின் மேல் அவர்களுக்குரிய சூட்சும தேகத்தில் ஆவாஹனம் பெறச் செய்தல்
 2. தர்ப்பைப் புல்லில் ஆவாஹனமாகும் பித்ருக்களுக்கு எள் கலந்த நீரை அர்க்யமாக அளித்து, எள் கலந்த நீரை, தர்ப்பை புல்லின் மேல் ஊற்றுதல்
 3. எள் கலந்த நீரை ஊற்றுகையில் மூதாதையரை அவர் நாமம் (தெரிந்தால்) அவர் கோத்திரத்தின் பெயர் சொல்லித் துதிக்க வேண்டும். கோத்திரம் தெரியாவிடில் சிவகோத்திரம், விஷ்ணு கோத்திரம் போன்றவற்றைச் சொல்ல வேண்டும்.
 4. மூன்று முறை எள் கலந்த நீரை தர்ப்பை புல்லின் மேல் வார்க்க வேண்டும். இதுவே எளிய தர்ப்பணமாகும்.

தர்ப்பண முறை – வம்சம் பற்றிய விளக்கங்கள்
தந்தை, தாய் வம்சங்களில் அவர்களுடைய அப்பா, அம்மா (தாத்தா , பாட்டி வரை) முறைகளில் 12 பேருக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். மூன்று தர்ப்பைகளை நேராக இடைவெளிவிட்டு இணையாகப் பரப்ப வேண்டும். இவை தந்தை வர்க்கத்தில் ஆறு பேர்களைக் குறிக்கின்றன.

தந்தை, தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் என்ற வகையில் இறந்த மூன்று பேர்களையும் அதே வரிசையில் குறிப்பதே இந்த மூன்று தர்ப்பைகளின் மேல் நுனிகளாகும். எவர் வாழ்கின்றாரோ அவரை விடுத்து அவர்தம் மூதாதையர்க்குத் தர்ப்பணம் அளிக்கவேண்டும்.
தந்தை வர்கத்தில் ஆறு பேர்களைக் குறிப்பதே இந்த மூன்று நேர் தர்ப்பைகளாகும். தந்தை, தாத்தா , பாட்டனார், முப்பாட்டனாருக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். தந்தை, தாத்தா இருவரும் இருப்பின், அவர்களுக்கு முந்திய மூவருக்குத் தர்ப்பணம் ஆகும். இறந்தவர்களுக்கு அளிப்பதே தர்ப்பணம் ஆகும்.
தர்பணத்தின் முதல் பகுதியில், தந்தை வர்கத்தில்
ஆண் வகை  :-  தந்தை , தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார்
பெண் வகை :- தாய், பாட்டி(தந்தை வழி) , கொள்ளுப் பட்டி(தந்தை வழி) எள்ளுப் பாட்டி(தந்தை வழி) ஆகிய ஆறுபேர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்பட வேண்டும்.
மூன்று நேர் தர்பைகளின் மேல் மூன்று நுனிகள் தந்தை வர்கத்தில் ஆண் வகையினரைக் குறிக்கின்றன, இம் மூன்று நேர் தர்பைகளின் கீழ் நுனிகள் தந்தை வர்கத்தில் பெண் வகையினரைக் குறிக்கின்றன. தாய் இருப்பின் (தந்தை வழிப்) பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி அல்லது முக்கொள்ளுப் பாட்டி என்றவாறாகத் தந்தை வர்கத்தில் மூன்று பெண்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
தர்ப்பணம் – இரண்டாம் நிலை
ஆண் வகை – தாத்தா , பாட்டனார், முப்பாட்டனார்
(தாய் வழி) பெண் வகை – பாட்டி, கொள்ளுப்பாட்டி, முக்கொள்ளுப்பாட்டி
இவ்வகையில் தாய் வர்கத்தினரின் ஆறு பேர்களுக்குத் தர்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறாக ஆறு கட்டை தர்பைகளை நேர், குறுக்காக அமைத்து 12 தர்பை நுனிகளில் எள் கலந்த நீரை, அந்தந்த மூதாதையரின் பெயரைச் சொல்லி ஊற்றுதலே தர்ப்பண பூஜையாகும்.
இவையெல்லாம் தர்ப்பணத்தின் பொதுநியதிகளாம், நேராகவும் குறுக்காகவும் தர்ப்பைகளை வைத்தபின் படத்தில் உள்ளவாறு ‘தர்ப்பண தர்பை சட்டம்’ அமையும். குடும்ப பெரியோர்களிடம் விசாரித்து முதலில் 12 மூதாதையர்களுடைய பெயர்களைத் தெரிந்து கொள்வது அவசியம். பெயர் தெரியாவிடில் அவர்களின் நினைவு அவசியமாகும். உருவத்தைப் பாத்திராமல், பெயரும், தெரியாவிடில் பாட்டி, கொள்ளுப் பாட்டி என்ற உறவையேனும் நினைவுகூறல் வேண்டும்.

கோத்திரம் என்றால் .... 64 வகையான கோத்திராதிபதிகள் உண்டு. அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர், ஆங்கீரஸர் என்றவாறாக 64 முக்யமான ரிஷிகள் . இவர்களின் வழித் தோன்றல்களே இன்று உலகெங்கும் பல நாடுகளில் பல மதங்களைச் சார்ந்து உலக மக்களாக வாழ்கின்றனர். ஜாதி, மத பேதமின்றி கோத்ர ரிஷிகள் அனைவருக்கும் உண்டு! அவரவர் குடும்ப சம்பிரதாயத்திற்கேற்ப கோத்திரம் மாறுபடும். கோத்திரம் அறிய சற்குருவை நாட வேண்டும், சற்குரு கிட்டும் வரை சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திர போன்ற ஒனறைக் குலத்திற்கேற்ப ஏற்க வேண்டும் .

சுமங்கலித்துவம்

நெற்றியில் குங்குமத்துடன் தீர்க்க சுமங்கலியாய்ப் போய்ச் சேர வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தன் கணவன் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்று தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றாள். சுமங்கலித்வம் பற்றிச் சித்த புருஷர்கள் அருள்வதென்ன ? கலியுகத்தில் கணவன், மனைவிடையே அடிக்கடி சச்சரவு வருகின்றதல்லவா? பெண்கள் உத்யோகத்திற்குச் செல்லும் நவீன காலம்! குடும்பச் சுமையைக் கணவனுடன் சேர்ந்து அவர்கள் தாங்கும் காலமிது.
உத்தம பக்தியில் திளைத்து, ஸ்ரீகாளியின் தரிசனத்தைப் பெற்றுக் கோடிக்கணக்கான இறையடியார்களுக்கு வழிகாட்டிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தம் பூதவுடலை உகுத்து ஜீவசமாதி ஏற்றபொழுது அவர்தம் உத்தம பத்தினியாம் ஸ்ரீசாரதா தேவி அக்கால நெறிமுறைகளுக்கு ஏற்ப தம் கைவளையல்களைக் கழற்ற முற்பட்ட போது ஸ்ரீராமகிருஷ்ணர் ஸ்ரீசாரதா தேவியின் முன் பிரசன்னமாகி, “யாமிட்ட இறைப் பணிகளைத் தொடர்வாயாக! என்று அருளாணையிட்டுச் சமயச் சின்னங்களைத் தொடர்ந்து அணியுமாறு ஸ்ரீசாரதா தேவியை அறிவுறுத்தினார். எனவே சித்த புருஷர்களின் அருள் முறைப்படி

 1. தன் கணவன் விட்டுச் சென்றுள்ள இறைத் திருப்பணிகளையும் மக்கட் சேவையையும் அமைதியாக இறைச் சிந்தனையுடன் நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க சுமங்கலியே! உலகத்தின் வெளிப் பார்வைக்கு இவர்கள் கணவனை இழந்தவர்களாகத் தோன்றிடினும் (இறந்த) கணவனின் நாம ஸ்மரணத்துடன் அவன் விட்டுச் சென்ற பிள்ளைகள், பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்வழியில் இட்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்து அவர்கள் மூலமாக அன்னதானம், மற்றும் ஏழைகளுக்குச் சேவைகளை நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு பெண்மணியும் சுமங்கலித்வம் பூண்டவள் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். அத்தகைய பெண்மணியை, இறப்பிற்குப் பின் அப்பிறவிக்குரித்தான கணவனே அரூவமாக வந்து நெற்றியில் குங்குமமிட்டு  ஒளிப்பகுதிக்கு அழைத்துச் செல்கின்றான்.
 2. கணவனால் நிறைவேற்றப்பட வேண்டிய கும்பாபிஷேகம், தான தர்மங்கள் போன்றவற்றை நிறைவு செய்தல், கணவனுடைய சொத்தினைப் பராமரித்து நற்காரியங்களுக்காக அதனைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுகின்ற மனைவியும் சுமங்கலித்வம் பூண்டவளே!

கணவனை இழந்தபின் மறுமணம் செய்து கொள்ளலாமா? ஆசை, காமம், சொத்தைப் பெறுதல், காதல் போன்ற அற்ப காரணங்களுக்காக அன்றி  உண்மையான பரஸ்பரமான அன்பு, ஆழ்ந்த நம்பிக்கை, மனப் பொருத்தம், ஜாதக ரீதியான மறுமண பாக்யங்கள் இவை காரணமாக மறுமணம் புரிந்து கொள்ளலாம். ஆனால் மறுமணம் புரிந்தபின் அக்கணவனையே கண்கண்ட தெய்வமாக வரித்து உத்தமமான மறுமண வாழ்க்கை வாழ்தல் வேண்டும் . இதனைக் கலியுகத்திற்குரித்தான நியதியென சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
பொதுவாக இந்த நியதிகளே மனைவியை இழந்த கணவனுக்கும் வலியுறுத்தப்படுகின்றன. மறுமணம் புரியும் பெண்கள் ஒழுக்கமான, உத்தமமான, இறைபக்தி மிகுந்த வாழ்க்கை வாழ்வதற்குரித்தான விசேஷமான பூஜை முறைகள், விரதங்கள், நோன்புகள் உண்டு. இவற்றைத் தக்க சற்குருமார்களிடம் கேட்டறிதல் வேண்டும். எத்தகையோரும் எத்தகைய நிலையிலும் இறைவனை உய்த்துணர பல அறவழிகள் உண்டு.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam