அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கடுக்கன் மகிமை

கடுக்கன் மஹிமை – தொடர் கட்டுரை (கடுக்கன் அணிவதன் மகத்துவத்தையும், அதன் தெய்வீக்ச் சிறப்பியல்புகளையும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் இத் தொடரில் எடுத்துரைக்கின்றார்கள்.)
கடுக்கன் அணிவது நவீனத்திற்காக (Fashion) அல்ல. நம் மூதாதையர்கள் நன்கு கைக்கொண்டிருந்த இந்த நற்பழக்கம்தனை தற்போது நாம் கைவிட்டு விட்டோம். முகத்திற்குத் தேஜஸான ஆத்ம சக்தியையும், தேகத்திற்கும், மனம் மற்றும் உள்ளத்திற்கும் நவரத்தினக் கற்களின், தங்கத்தின் அரிய காந்த, உலோக, தெய்வீக சக்திகளையும், சூரிய, சந்திர கிரணங்களிலிருந்து கிரஹிக்கப்பட்ட பாஸ்கர ஜீவித சக்தி, மற்றும் சோம சூர்ய விருத்தாக்னி சக்தியையும், மற்றும் வேறெவற்றிலிருந்தும் பெற இயலாத மனோசக்தி, இறைசக்திகளையும் தரவல்லவையே கடுக்கன்கள்! வாக்சுத்தியையும், சுவாசத்தில் நமக்குரிய சூர்ய, சந்திர சுழுமுனை மாற்றங்களையும் தந்து நம் உடலுக்கு இயற்கையாகவே யோக சக்தியைத் தரவல்லவையே கடுக்கன்கள்!
எவ்வாறு பெண்கள் வாழ்நாள் முழுதும் காதில் தோடுகளை அணிந்து பெறற்கரிய சாதுர்யம், சாத்வீக குணம், பொறுமை, வாக்கு சாதுர்யம் மற்றும் பல நற்குணங்களைப் பெறுகின்றார்களோ அதேபோல் ஆண்களும் கடுக்கன்களின் மூலம் பல தெய்வீக்ச் சிறப்பியல்புகளையும், உத்தம குணங்களையும் எளிதில் பெற்றிடலாம். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம் மற்றும் பல ஜாதக அம்சங்களைக் கணித்துக் காலையிலும், இரவிலும் அணிய வேண்டிய கடுக்கனுக்குரிய கற்களை அணிந்து வந்திடில் வியாபார முன்னேற்றம், குடும்பத்தில் அமைதி, அலுவலகத் துன்பங்களிலிருந்து நிவாரணம், நோய் நொடிகளிலிருந்து துரித குணம் ஆகியனவற்றைப் பெற்றிடலாம்.
அதாவது குருவை நாடி அவர்தம் அருள்வழிப்படி நடந்திடல் வேண்டும். அவரவர் நட்சத்திரம், ராசி, பிறந்த தேதிக்கேற்ப கடுக்கனின் கல் நிறத்தைத் தக்க சற்குரு மூலமாக அறிய வேண்டும். ஒன்று என்ற எண்ணிக்கையில் பிறந்த தேதி உடையவர்க்குப் பொதுவாக சூரியக் கதிரின் நிறத்தை ஒட்டிய கற்களே கடுக்கனுக்கு ஏற்றவையாகும். உத்தராயண, தட்சிணாயண மற்றும் இரண்டு மாதங்களுக்கொருமுறை மாறும் ருதுக்களுக்கேற்பவும் (வர்ஷ ருது, ஹேமந்த ருது etc.. ) கதிரவனின் ஒளிக் கிரண நிறங்கள் மாறுகையில் அந்தந்த நிறக் கற்களை அணிவது சிறப்புடையதாகும். ஏனெனில் உடலிலுள்ள எழுபத்தி இரண்டாயிரம் நரம்பு வகைகளில் அவரவருக்குரித்தான கிரஹத்தின் கிரணங்களின் வீச்சுகளும் நிறங்களும் தேக ரீதியாக பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. எனவேதான் தக்க சற்குருவின் வழிமுறைகளைப் பெறுதல் நலமென வலியுறுத்தி வருகின்றோம். ‘சற்குரு இல்லையே’ என்று ஏங்குவோர் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் தரப்படுவனவற்றை முறையாகக் கடைபிடித்திடலாம்.
தேன்நிறக் கற்கள் :  (sunstone etc) தேன் நிறத்தையுடைய கற்களாலான அழகிய கடுக்கன்களை அணிந்தால் நேத்திர தோஷங்களும், வியாதிகளும் நிவர்த்தியாவதோடு விந்துக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும். எப்போதும் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இதனை அணிந்து வந்திடில் வியாபாரத்திலும், அலுவலகத்திலும், கோர்ட்டு வழக்குகளிலும் ஏற்படுகின்ற குழப்ப நிலைகளிலிருந்து தீர்வு பெறுவர்.
தேன்நிறக் கடுக்கன் பூஜை முறை : சூரிய பகவான் மேஷம் அல்லது சிம்ம ராசியில் இருக்கின்ற நேரத்தில் தேன்நிறக் கடுக்கன்களைத் திரிதள வில்வம் (மூன்று இலைகளையுடைய வில்வம்) கலந்த பன்னீரில் இரவு முழுதும் வைத்திருந்து மறுநாள் காலையில் சூரியோதய சமயத்திலோ அல்லது சூரிய ஹோரை நேரத்திலோ பருகுவது மேற்கண்ட தோஷங்களிலிருந்து நிவர்த்தியளிக்கும்.
மாணிக்கச் சிவப்பு – மாதுளம்பழ நிறக் கற்கள் : இந்நிறக் கற்களையுடைய கடுக்கன்களுக்கு மிதமிஞ்சிய முறையற்ற கோப, தாப, காம உணர்வுகளைத் தணிக்கும் வல்லம் உண்டு. ரத்த அணுவிருத்திக்கும், வெள்ளை அணுவிருத்திக்கும் உதவுகின்றது. கண்ணேறு, திருஷ்டிகளைக் குறைக்கும் வல்லமை உடையவை. மூளையின் திறனை ஊக்குவிப்பவை.
பூஜை முறை :- மகரத்திலும் மேஷத்திலும் செவ்வாய் கிரஹம் இருக்கின்ற் பொழுது பன்னீர் இலை கலந்த நீரில் இரவு வைத்திருந்து மறுநாள் சூரியோதய நேரத்தில் அருந்திட வேண்டும்.
நீல நிறக் கற்கள் :- பல வகை நீல நிறங்கள் உண்டு. தடைபட்ட காரியங்கள் நன்முறையில் நிறைவேறுவதற்கும், தேவையற்ற தீய நட்புகள் நீங்குவதற்கும், வாகனங்கள் /நிலபுலன்கள்/ வீடு/ கட்டிடங்கள் நன் முறையில் அமைவதற்கும், வியாபார அபிவிருத்திக்கும் இவை ஏற்புடையவை! இந்நீலநிறக் கற்களை/கடுக்கன்களைச் சனிக்கிழமையன்று வெட்டிவேர் கூடிய நன்னீரில் ஓரிரவு வைத்திருந்து மறுநாள் சூரியோதயத்திற்கு முன் நீரைப் பருகிப் பின் கடுக்கன்களை அணிந்திட வேண்டும்.
ஆரஞ்சு நிறக் கற்கள் :- மாமனார், மாமியாரின் கொடுமைகள் தீர்வதற்கும், உயரதிகாரிகள் தரும் துன்பங்களிலிருந்து  மீளவும், மெலிந்த உடல்வாகு ஆரோக்கியத்துடன் வளம் பெறவும், ஆஸ்த்மா போன்ற சுவாச ரோகங்கள் தீரவும் ஆரஞ்சு நிறக் கடுக்கன்கள் பெரிதும் உதவுகின்றன. பூஜை முறை  ஞாயிறன்று வில்வம் கலந்த நீரில் கடுக்கன்களை ஓரிரவு வைத்திருந்து மறுநாள் சூர்யோதயத்தின் போது ஆரஞ்சு நிற ஆடைகளையணிந்து சூர்யனை நோக்கியவாறே இந்நீரை அருந்தி, பிறகு இக்கடுக்கன்களை அணிந்திட வேண்டும்.
வினா: அவரவர் நட்சத்திரம், ராசி பிறந்த தேதிக்கேற்ப அந்தந்த நிறக்கற்களை அணிய வேண்டுமல்லவா! அப்படியானால் இவ்வகையில் தேன் நிறக் கடுக்கன்களை அணிய வேண்டியவர் வீடு, நிலபுலன்களை அடைய நீலக்கல்லை அல்லவா அணிய வேண்டியதாகிறது?
விடை :- அவரவர் நட்சத்திரம், ராசி, பிறந்த தேதிக்கேற்ப் அவரவருக்குரித்தான நிறக் கற்களை உடைய கடுக்கன்களை எப்போதும் அணிந்திடல் வேண்டும். துரித காரிய சித்திக்காகவும், விசேஷமான பலன்களைப் பெறவும், அந்தந்த நற்காரியத்திற்குரித்தான நிறக் கடுக்கன்களையும் அணிந்திடலாம். ஆனால் அவரவர் தேக, மனோநிலைகளுக்கு அந்தந்தக் கற்கள் ஒத்து வருமா என்பதை அறியவே தக்க ஆன்மீக வழிகாட்டி தேவை! தக்க ஆன்மீக வழிகாட்டியெனில்.... இதிலும் குழப்பங்கள் ஏற்படலாம்! கற்களைத் தாமே சோதிக்க ஓர் எளிய வழியுண்டு! தீர்க்க ஓட்டம், ரேகை, நிறம், கிரணப் பிரதிபலிப்பு இவற்றைச் சரிபார்த்துக் கற்களைத் தேர்ந்தெடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்துக் கட்டி அந்தந்த நிறத்திற்குரிய கிரஹாதிபதியை 108 தியானித்து (பஞ்சாங்கத்தில் கிரஹத்திற்குரிய நிறத்தைக் காணலாம்) இரவில் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கிட வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது. அப்போது ஏற்படும் கனவுகளைக் கொண்டு கற்கள் ஏற்றவைதானா என்று தேர்ந்தெடுத்திடலாம்.
பயங்கரமான, அச்சுறுத்தலான, சம்பந்தமில்லாத, தேவையற்ற கனவுகள் வருமாயின் கற்களை விலக்கிடவும், சுபமான பொருட்கள் தோன்றிடில் கற்களை ஏற்கவும். எவ்வாறு அந்தந்தக் கிழமைக்குரிய நிற ஆடைகளை அணிந்திடில் கார்ய சித்தி ஏற்படுகின்றதோ அதைப் போன்றதே கடுக்கன்களின் நிறங்களும்! இன்றைக்கும் சில கோயில்களில் பூஜாரிகள், அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சார்யார்கள், சிவாச்சார்யார்கள் அந்தந்த தினத்திற்குரிய நிறங்களில் கடுக்கன்களை அணிந்து இறைவனுக்குப் பூஜைகளைச் செய்வதைக் கண்டிடலாம். இதனால் பூஜாபலன்கள் பன்மடங்கு விருத்தியாகும்!

திருப்பாற்கடல் மகிமை

திருப்பாற்கடல் பெருமாள் மஹிமை
ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம: திருமால் நெறி வாழி!                                                          திருத்தொண்டர் செயல் வாழி!
சென்னை வேலூர் சாலையில் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் ஊரில் ஆவுடைமேல்  பெருமாள் எழுந்தருளியிருக்கின்ற அற்புதமான கோலத்தைக் கண்டு துதித்து ஆன்ந்தித்து குறித்த வழிபாடுகளை, தானதர்மங்களை மேற்கொண்டு இறையருளோடு வேண்டுவனயாவற்றையும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வீர்களாக! குறித்த நாள்/நட்சத்திர நாட்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நைவேத்ய/பூஜா/தானதர்ம முறைகளைத் தொடர்ந்து கடைபிடித்திடில் பலன்களை எளிதில் அடையலாம். 

நைவேத்தியம் / தானம்

நட்சத்திரம் / நாள்

பலன்கள்

பூவன் பழம்

உத்திரம்

வேலை பளு குறையு, உயர் இரத்த அழுத்த (High BP) நோய்கள் தணியும்.

மொந்தன் பழம்

திருவாதிரை

வேலை மாற்றங்கள் அனுகூலமாய் முடியும்.

புளியோதரை

ரோஹிணி

IAS/IPS/IFS/MD/GM போன்ற உயரதிகாரிகளுக்கு ஏற்படும் வீண் தொல்லைகள் தீரும்.

எலுமிச்சை அன்னம்

மூலம்

விற்பனை, வருமான, ரெவின்யூ, வரித்துறையில் பணிபுரிவோரின் மன வேதனைகள் தணியும்.

தயிர் சாதம்

12 சனிக்கிழமைகள் – 8 முறை ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் / 1008 போற்றித் துதிகள்

வியாபாரம் நன்கு பெருகும் செல்வம் செழிக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

9 புதன்கிழமைகள் – புத ஹோரையில் துளஸி மாலை சாற்றி வழிபடுதல் – ஸ்ரீஹயக்ரீவ காயத்ரீ பாராயணம்

கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் ரசாயனம், கணிதத் துறைகளில் அபரிமித முன்னேற்றம்.

ஆவுடையிற் ஸ்ரீமந் நாராயணர்
பாற்கடலில் அமிர்தம் வந்த புராணத்தை நாம் நன்கறிவோம்! அமிர்தம் உண்ட ஆனந்தத்தில் பல யுகங்களுக்குப் பின்.... தேவர்கள் தங்களை மறந்து உற்சாகத்தில் மிதந்த போழ்து, நாரதர் ஆங்கே வந்து, அமிர்தம் வரகாரணமாயிருந்தோர்க்கு நன்றி கூறாது, செய்ந்நன்றி மறந்த அவர்கள் தம் நிலையை இடித்துரைத்தார்! தேவர்கள் தங்கள் பிழைகளையுணர்ந்தனர். மத்தைத் தாங்கி நின்ற கூர்ம விஷ்ணுவிடம் செல்வதா? ஆலகாலவிடம் உண்ட ஆலகால சோம சுந்தர சிவமூர்த்தியிடம் செல்வதா? நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும்! “ஹரியையோ ஹரனையோ பேதங்கொண்டு துதித்திடில் இருக்கின்ற அமிர்தத்தின் சக்தியையும் இழந்து விடுவீர்கள்!” – என்று நாரதர் எச்சரித்து விட்டுச் சென்றார். தேவர்கள் குழம்பி நின்றனர்.
எந்த தெய்வமூர்த்தியிடம் சென்று முதலில் நன்றி வழிபாட்டைச் செய்வது? தேவர்களுக்கு இத்தகைய குழப்பங்கள் நேரும் பொழுதெல்லாம் மகரிஷிகளிடமும் சித்த புருஷர்களிடமும் சென்று விளக்கங்களை வேண்டி நிற்பர். நற்கலகத்தை ஏற்படுத்திய நாரதரோ, “ஸ்ரீராம நாமத்தில் எந்நேரமும் திளைத்து இருப்பவரும், ஸ்ரீஅகஸ்திய மகரிஷியைப் போல் தினமும் வைகுண்டத்திற்கும், கைலாயத்திற்கும் சென்று வருபவரும், தினமும் சிவபூஜையில் ஆனந்தித்து நிற்பவரும் ஆகிய ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே உங்களுக்கு நல்வழி காட்டுவார்,” என்று ஆலோசனை கூறிச் சென்றார். சகலலோக சஞ்சாரியான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை எங்கு சென்று தேடுவது? தேவர்கள் ஸ்ரீராமகானம் பாடியவாறே ஸ்ரீஆஞ்சநேயர் இருக்குமிடத்தைத் தேடினர். பல திருத்தலங்களுக்கும் சென்ற போது சென்னை –ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் ஊரில் ஸ்ரீசிருங்கீஸ்வரர் சிவாலயத்தில் கொடிக் கம்பம் அருகே உள்ள ஓர் அரிய அற்புதமான நவ வியாகரண பலி பீடத்தில் அமர்ந்தவாறு ஸ்ரீஆஞ்சநேயர் கானமழை பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டனர். ஒன்பது வகையான வியாகரணங்களில் பரிபூரண நிலையடைந்தோர் ஒரு சிலரே. நவவியாகரணங்களிலும் பாண்டித்யம் பெற்று, இசையிலும் உன்னத நிலை பெற்றுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் இருகண்களிலும் தாரை தாரையாக நீர் வழிய தம்மை மறந்த நிலையில் ஸ்ரீராமகானம் பாடிக் கொண்டிருந்தார்.

இசைக் கலைஞர்கட்கு
பாடகர்களும், வீணை, வயலின் போன்ற இசைக்கருவி விற்பன்னர்களும், பின்னணிப் பாடகர்களும், இசை கற்று வருவோரும் நிச்சயமாகக் கண்டு தரிசிக்க வேண்டிய திருத்தலம் மப்பேடு சிவாலயமாகும். இங்கு நவவியாகரண பலிபீடமருகே அமர்ந்து இசையை ஸ்ரீஆஞ்சநேயருக்கு அர்ப்பணித்துப் பாடுவோர் இசைத் துறையில் உன்னதம் பெறுவர். ஸ்ரீஆஞ்சநேயர், தம் இசை தியானத்திலிருந்து மீண்டு தேவர்களைக் கண்டு வணங்கினார். “பிரபோ! அமிர்தம் பெற்றபின் இறைவனுக்கு நன்றிப் பிராத்தனை செலுத்த வேண்டும். தாங்கள் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும்!” என்று தேவர்கள் மனமுருகி வேண்டினர். துளஸி மாலையும், வில்வமாலையும் அணிந்து சங்கரநாராயண அம்சங்களுடன் பிரகாசித்த ஸ்ரீஆஞ்சநேயர், அமிருதவர்ஷிணி ராகத்தில் கானம் ஒன்றை இசைத்திடவே...., அப்போது தான் தேவர்கள் தாங்கள் அமிர்தம் உண்டதின் பரிபூர்ண ஆனந்தத்தை உயத்துணர்ந்தனர். தேவர்கள் அமிர்தவர்ஷிணி ராகத்தில் லயித்து இசையில் ஆழ்ந்து கண்களைத் திறந்திட..  தாங்கள் பாற்கடலின் முன் நிற்பதை உணர்ந்தனர். ..பாற்கடலினுள்.....

ஆவுடையின் மேல் ஸ்ரீமந்நாராயண மூர்த்தி எழுந்தருளினார். மகரிஷிகளோடும், யோகிகளோடும், ஞானியரோடும், சித்புருஷர்களோடும் கூடி நின்று தேவர்கள் ஆவுடை நாயகனை வணங்கினர். “சர்வேஸ்வரனே பரமசிவனாகவும், நாராயணனாகவும், அருள்பாலிக்கின்றார். எனவே ஹரிஹர பேதம் இன்றி பரம்பொருளை அடையும் பொருட்டு என்னைச் சங்கரனாகவும் சங்கரநாராயணனாகவும், ஹரிஹரனாகவும், ஹரஹரியாகவும், வழிபட்டு இறைவன் ஒருவனே, அவனுடைய வடிவமே இப்பிரபஞ்சமென உணர்ந்து உள்ளும் புறமுமாய் ஒளிர்விடும் சர்வேசுவரனைச் சரணடைவீர்களாக!” என்று திருப்பாற்கடலில் எழுந்தருளிய ஆவுடை நாயகன் அருளிட அனைவரும் ஆனந்தமடைந்தனர். அவரே இன்று புண்டரீகாட்ச மஹரிஷியின் அனுபூதியாக அருகே திருப்பாற்கடல் என்ற க்ஷேத்திரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்ற பெருமானாவார். திருப்பாற்கடல் க்ஷேத்திரத்தின் மகிமையை விவரித்திடில் பல புராணங்களாகப் பெருகும். சித்புருஷர்கள் மூலமாக சற்குருவின் அருளாசியுடன் நாம் அறிந்தவற்றை முறையாகக் கடைபிடித்துப் பரிபூரண பலனை எளிதில் பெறுவோமாக!

திருப்போரூர் மகிமை

திருப்போரூர் பங்குனி உத்திர ஓம்காரப் பிரணவ கிரிவல மஹிமை
(சென்னை அருகில் திருப்போரூரில் உள்ள ஓம்காரப் பிரணவகிரியாக அமைந்துள்ள மலைக் கோயிலின் மஹிமை திருப்போரூர் முருகன் கோயிலின் சிறப்புக் கட்டுரையின் நிறைவாக இங்கு அளிக்கப்படுகின்றது.)
வாழ்த்த வாயும், நினைப்பதற்கு நெஞ்சமும், வணங்கச் சென்னியும், கூப்பி வணங்கக் கரங்களும், இறைச் சேவை புரிய ஓடியலையக் கால்களையும் தந்த இறைவனுக்கு, அர்ப்பணிக்கப்படாமல் உண்ணும் உணவு வெறும் மலமே என்பது சித்புருஷர்களின் துணிவு . வெளியே ஹோட்டலில் உண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் “இறைவா! நின்னருளால் தான் இதைப் பெற்றேன்! நன்மையோ, தீமையோ உனக்கே அர்ப்பணம்” என்று மானசீகமாக இறைவனுக்கு அர்ப்பணித்து உணவேற்பீர்களாக! எப்போதெல்லாம் ஹோட்டலில் உணவேற்கின்றீர்களோ இரண்டு இட்லிகளையேனும் பார்ஸலாகக் கட்டியெடுத்து வந்து ஓர் ஏழைக்கு அளித்து வருவீர்களானால் இதனையே இறைவன் உண்மையான “பிரசாதமாக” ஏற்கின்றான்! இவ்வாறாக இறைவனை எண்ணாது நாம் எத்தனை வருடங்கள் உணவு உண்டுள்ளோம்? சோடா, கலர், குளிர்பானங்கள் என அவற்றை வாங்கி அருந்த அருள்பாலித்த ஆண்டவனை எண்ண மறந்தோம்! இத்தகைய குற்றங்களுக்கு “அன்னத்துவேஷம்” என்று பெயர். மிருகங்களைப் போல் கண்டதை, கண்ட இடங்களில் உண்ணும் நிலை மாறி, சாட்சாத் ஸ்ரீஅன்னபூரணி தேவி அளிப்பதே அன்னமென உணரும் உத்தம மனோநிலை ஏற்பட வேண்டும். இத்தகைய அன்னத்துவேஷ குற்றங்களுக்குப் பரிஹாரமாக அமைவதே பங்குனி மாதமாகும். ஏனெனில் தை முதல் ஆனி வரையிலான உத்தராயண காலம் தேவர்களுக்கான பகல் பொழுதாகும். இதில் பங்குனிமாதம் பகல் உணவு நேரமாக தேவர்களுக்கு அமைகின்றது!

திருப்போரூர்

உணவு உண்ணுமுன்...
நம் மூதாதையர்கள் அன்னத்தை இறைவனுக்குப் படைத்து, காக்கைக்கு இட்டு, அதிதியாக, விருந்தாளியாக வந்தவருக்கு உணவிட்டு, உண்ணுமுன் சில ஸ்லோகங்களை, மந்திரங்களை, இறைத் துதிகளை ஓதி, நீரால் இலையை உணவுத் தட்டினைச் சுற்றி சுத்திகரித்துப் பின்னரே உணவை உண்டனர். பசிக்கின்றதே என்று மிருகங்களைப் போல் “லபக் லபக்கென்று” அவர்கள் விழுங்கியது கிடையாது! எனவே காபி, டீ, குளிர்பானங்கள், டிபன், சாப்பாடு, நொறுக்குத் தீனி, பிஸ்கட், பழம், கடலை, சாக்லெட்.. எங்கு  எதுவாயினும் சரி, கீழ்க்கண்ட சிறு மந்திரத்தைச்  சொல்லி உண்பீர்களானால் அதில் படிந்துள்ள தீயசக்திகளும், தோஷங்களும் நீங்கி நாம் உண்ணுகின்ற  பொருள் ஓரளவு புனிதத்துவம் அடைந்து நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தியையும், ஆரோக்யத்தையும், தெய்வீக  எண்ணங்களையும் அளிக்கின்றது.  
“ஜகத் ப்ரம்ஹ விவர்தைக காரணே பரமேஸ்வரி!
நம: சாகம்பரி! சிவே! நமஸ்தே சதலோசனே!!”
அல்லது ஸ்ரீஆதிசங்கரர் அருளியுள்ள ஸ்ரீஅன்னபூரணித் துதியை ஓதிடுக! அனைத்து இடங்களிலும் மார்க்கெட் பகுதிகளில் வெல்லம், காய்கறிகள் போன்றவற்றைக் காலால் மிதித்து, நீரில் காலால் அழுத்தி சுத்தம் செய்வதை இன்றும் கண்டிடலாம். அழுக்கடைந்த மண்ணில் புரண்டு, கால் மிதிபட்டு, எதையெதையோ சுமந்த வண்டிகளில் ஏற்றி... அப்பப்பா, நாம் வாங்கும் பொருட்கள் நம்மை அடையுமுன்... எத்தனை எத்தனை இடங்களில் எத்தனை எவ்வகையான எண்ணங்களைச் சுமந்து வருகின்றது! குடிபோதையில் ஒருவர் மளிகைப் பொருளையோ, காய்கறியையோ, பூவையோ விற்றால் நிச்சயமாக அப்பொருளில் அவருடைய காம, தீய, போதையான, வஞ்சக், குரோத, எண்ணங்களின் சக்தி கூடி, அதை உண்பவரையும் பாதிக்கும். எனவே காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்கியபின் அவற்றை நன்றாக நீரால் கழுவி சுத்தம் செய்து இயன்றால் கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தத்தையோ அல்லது திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம், திருவிடைமருதூர், ஸ்ரீரங்கம், நாச்சியார் கோயில் (கும்பகோணம்) போன்ற புண்ணியத் தலங்களின் திருக்குள நீரைத்தெளித்து ஸ்ரீசாகம்பரி தேவியைத் தியானித்து ஸ்ரீசாகம்பரி காயத்ரீ மந்திரம் ஓதி அர்ப்பணித்து வழிபட வேண்டும்.

ஸ்ரீபாலாம்பிகை சமேத கைலாசநாதர் திருப்போரூர்

ஓம் சதாக்ஷ்யை ச வித்மஹே மஹா சக்த்யை ச தீமஹி
தந்நோ சாகம்பர்யை ப்ரசோதயாத்.
பலவகையான பச்சை காய்கறிகள், கனிகள், தாவரங்கள் போன்றவற்றின் சிருஷ்டியின் போது உத்திர நட்சத்திரத்தன்று ஸ்ரீசாகம்பரி தேவியின் திருமேனியின் அங்கங்களிலிருந்தே அவை உற்பத்தியானவை ஆதலின் காய்களுக்குரிய தெய்வ மூர்த்தி ஸ்ரீசாகம்பரி தேவியே ஆவாள். காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் ஸ்ரீசாகம்பரி தேவியின் படத்தைத் தங்கள் வியாபார இடங்களில் வைத்துப் பூஜித்த பின்னர் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிடில் நன்முறையில் வியாபாரம் அபிவிருத்தியாகும். விற்கின்ற பொருட்களும் புனிதமாகும். எனவே தேவர்களுக்குப் பகல் உணவு நேரமாக அமைகின்ற பங்குனி மாதத்தில் குறிப்பாக, ஸ்ரீசாகம்பரி தேவி தாவரங்களை உற்பத்தி செய்த, உத்திர நட்சத்திரத்தில் காய்கறிகள் கலந்த உணவினை தானமாக அளிப்பது, தேவர்களுக்குப் ப்ரீதியைத் தரும்.

திருப்போரூர்

தேவர்கள் தங்கள் பகல் நேர உணவினை ஏற்கின்ற பூலோகத் தலங்கள் பல உண்டு. எவ்வாறு மனிதர்கள் அன்னம் மூலமாகத் தங்கள் வாழ்க்கைக்குரிய உயிர்ச் சக்தியைப் பெறுகின்றார்களோ, கந்தர்வர்கள் நெய் மூலமாகவும், தேவர்கள் அக்னி மூலமாகவும் பித்ருக்கள் நீர் மூலமாகவும் தங்கள் உணவை ஏற்கின்றனர். மேலும் தேவர்கள் தங்கள் உணவை ஆஹுதிகளாக ஏற்கின்ற அக்னி மூலம் வளர்க்கப்படும் ஹோமங்களில் ஓங்காரம் சேர்ந்த மந்திரங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. பிரபஞ்சமே ஓங்காரமயமாக இருப்பினும் பல இடங்களில் ஓங்கார சக்தி மிகுந்திருக்கும். இவ்விடங்களில் தான் தேவர்கள் தங்களுடைய பூலோக சஞ்சாரங்களையும், தேவ பூஜைகளையும், ஆராதனைகளையும் நிகழ்த்தி உணவையும் ஏற்கின்றனர். திருஅண்ணாமலை, காளஹத்தி, திருக்கழுக்குன்றம், சுவாமிமலை, கும்பகோணம் மற்றும் ஓங்கார பிரணவ கிரிவலம், பிரதட்சணப் பாதை அமைந்துள்ள இடங்களான திருவிடைமருதூர் (ஓங்கார பிரணவ பிரகாரம்). திருச்சி உய்யக் கொண்டான் மலை, திருப்போரூர் ஓங்கார பிரணவ மலைகளில் தான் தேவர்கள் தங்கள் பகல் உணவை ஏற்கின்றனர். எனவே பங்குனி உத்திரத்தன்று மேற்கண்ட இடங்களிலும் குறிப்பாக திருப்போரூர் ஓங்கார, பிரணவ மலையைச் சுற்றி கிரிவலம் வருதல், பச்சை காய்கறிகள் கலந்த உணவினை அன்னதானம் அளித்தல், தேவர்களைத் துதித்து வணங்கி இத்தலத்தில் உறையும் சிவபார்வதி மூர்த்திகளை வணங்கிட, மனமும் அறிவும் தூய்மை அடையும். தன்னிலைப் பற்று குறைந்து, தியாக மனப்பான்மை பெருகி ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படும்.
பகல் நேர தத்துவம்
தை முதல் ஆனி வரை தேவர்களுக்குரித்தான பகல் நேரம் என்பதை விளக்கியுள்ளோம். பகலில்தான் பயம் விலகுகிறது. மனிதர்களாகிய நாம் உணவு உண்ணுமுன் அதிதி போஜனம் எனப்படும் பிறருக்கு உணவளித்து விட்டு , தாம் உணவேற்பது என்ற சங்கல்பத்தைக் கைக்கொண்டிட வேண்டும். குறைந்தது காக்கைகள், பசுக்கள், எறும்புகளுக்கேனும், உணவளித்த பின்னரே நாம் உணவேற்க வேண்டும். தேவர்களும் தங்கள் பகல் உணவை ஏற்கும் முன் அதிதிக்குரிய தானமாக மனிதர்களுக்கு காரிய சித்தியை அளித்த பின்னரே உணவேற்கின்றனர். ஆனால் தங்கள் தபோபலனிலிருந்து உருவாகின்ற காரிய சித்திதனை சுயநலமற்ற தியாக உணர்வுடன் நற்காரியம் செய்வோர்க்கே அதனை அளிக்கின்றனர். எனவே பங்குனி உத்திரத்தன்று திருப்போரூரில் .

திருப்போரூர்

1. ஓங்கார பிரணவ மலையைச் சுற்றி கிரிவலம் வருதல்.,
2. பசுங்காய்கறிகள் கலந்த உணவினை, பழங்களைத் தானமாக அளித்தல்,
3, பசுமை நிற ஆடைகளை தானம் அளித்தல்
4. சாதி, மத பேதமின்றி பச்சை நிற ஆடைகள், மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடுகளை ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்தல்
- போன்ற நற்காரியங்களைச் செய்திட இவை சுயநலமற்ற தியாகம் நிறைந்த இறைப்பணிகளாக அமைவதால் பங்குனி உத்திரத்தன்று உணவேற்க வரும் தேவ மூர்த்திகள் அளிக்கும் காரிய சித்தி அருள் எளிதில் கைகூடுகின்றது. இக்காரிய முறையாகப் பயன்படுத்திடில் ஒரு வருடம் வரை நற்பலன்களை அளிக்கும்.
ஓங்கார பிரணவ கிரியின் ஒளிக் கிரணங்கள்:
ஒவ்வொரு மாதமும் இம்மலையானது விதவிதமான தெய்வீக கிரணங்களை வெளிவிடுகின்றது.
1. தை மாதம் வெளிவரும் ஆக்ரக கிரணங்கள் மூலம் தரித்திர நிலையை வென்றிடலாம். ஆக்ரக கிரணங்கள் பிரகாசிக்கின்ற தை மாதத்தில் இம்மலையைக் கிரிவலம் வந்திடில் தீய வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திடலாம். தை மாதம் முழுதும் இயன்ற நாட்களெல்லாம் கிரிவலம் வருவது நலம் பல பயக்கும்.
2. மாசி மாதம் இப்பிரணவ மலையிலிருந்து வெளிவருகின்ற பிரஜாபதி கிரணங்களைக் கிரிவலம் வந்து சுவாசிப்பதால் சித்த விருத்திகளை எளிதில் பெற்றிடலாம். சித்த ஆயுர்வேத மருத்துவர்கள், சோதிடர்கள், கைரேகை நிபுணர்கள், சாஸ்திரங்கள் அறிந்தோர், தாந்த்ரீகர்கள், மாந்த்ரீகர்கள் – போன்றோர் வியாபார மற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணமில்லாது தங்கள் துறையில் சிறப்புப் பெற இம்மலையை மாசிமாதம் கிரிவலம் வந்திட சித்த விருத்திகள் கைகூடும். ஆனால் குறுகிய நோக்கமும் செல்வம் சேர்க்கும் எண்ணமும், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் மனப்பான்மையும் கூடினால் சாபங்களே ஏற்படும்.

ஸ்ரீசிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர்

3. பங்குனி மாத திருப்போரூர் பிரணவ மலை கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும். இதை உலகிற்கு எடுத்துரைத்தவர் ஸ்ரீவீராண பிரஜாபதியாவார். பிரஜாபதிகள் என்போர் சிருஷ்டி காலத்திற்கு முன் ஸ்ரீபிரம்ம தேவருக்கு மானசீகமாக ஏற்பட்ட புத்திரர்கள் ஆவர். பிரபஞ்சமெங்கும் விரவியுள்ள தெய்வ அருளை உத்தம ரிஷிகளால் தான் உய்த்துணர முடியும். சாதாரண பிரஜைகளும் அதனை அறிந்து தெளிந்திட பல பிரஜாபதிகள் பூலோகத்தில் பல இடங்களில் தெய்வ சக்தியினைத் திரட்டி மலை, நதி, விருட்சம், கோயில், குளம் எனப் பல்வேறு வடிவங்களில் அமைத்துத் தந்தனர்.
கைலாயக் குன்றுகள்
திருக்கயிலாயத்தில் உள்ள பல குன்றுகளில் சோம பத்திர குன்று, அட்சய தேவ குன்று, பிரணவாகார மூல குன்று என்று பல தெய்வீக ரகசியங்கள் நிறைந்த குன்றுகள் உண்டு. தெய்வ சாந்நித்யம் நிரம்பி வழிந்து என்றும் பிரகாசிக்கும் தெய்வீக ஒளிக் குன்றுகள் இவை. இதில் பிரணவாகார மூலக்குன்றில் உள்ள ஒரு சிறு பாறையாகிய சடாட்சர பாறையில் பல யுகங்கள் தவமிருந்து உத்தம தெய்வீக நிலையடைந்த வீராண பிரஜாபதி அந்தச் சடாட்சர பாறையைப் பூலோகத்திற்குக் கொண்டு வர விழைந்தார். இதற்காகவே திருக்கயிலாயத்திலேயே இப்பாறையைச் சுற்றி இரவும் பகலுமாக கிரிவலம் வந்து, இப்பாறையில் ஈசன் குடியேறிட வேண்டும் என்று விரும்பி வேண்டிப் பிராத்தித்தார்.
வீராண பிரஜாபதியின் கிரிவல முறை :
வீராண பிரஜாபதி சடாட்சர பாறையை சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களிலும் அடிப்பிரதட்சிணம், முட்டிப் பிரதட்சணம், நுனிக்கால் பிரதட்சணம், சிரசாசனப் பிரதட்சிணம் (தலைகீழாக நிற்றல்), அங்கப் பிரதட்சிணம், உதரப் ப்ரதட்சணம் (பக்கவாட்டில் வயிறு பூமியில் அழுந்துமாறு புரளுதல்) போன்ற பலவிதமான பிரதட்சிண முறைகளைக் கடைபிடித்து அதன் பலன்களையும் தீர்க்க தரிசனமாக உணர்ந்தார். சித்புருஷர்கள் அருள்கின்ற, வீராண பிரஜாபதி வலம் வந்த, முறைகளை விவரித்திடில் பல புராணங்களாக மலருமாதலின், பங்குனி மாத கிரிவல மகிமை பற்றி மட்டும் இங்கு விவரிக்கின்றோம். தம்முடைய லட்சக் கணக்கான ஆண்டுகள் கூடிய தபோ பலன்களினால் வீராண பிரஜாபதி புனிதமான திருக்கயிலாயத்திலிருந்து பிரணவாகார மூலக்குன்றின் மிகச் சிறிய பகுதியாகிய சடாட்சர பாறையினைப் பூலோகத்திற்கு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த இடமே திருப்போரூர் ஆகும். அதுவே இன்றும் ஓம்காரப் பிரணவ கிரிமலையாகப் பரிணமிக்கின்றது.

திருப்போரூர்

1. பங்குனி மாதப் பிறப்பன்று காலை, மதியம், மாலை என மும்முறையும் கிரிவலம் வந்திடில் நிரந்தர உத்தியோகம் அமைய நல்வழி உண்டு. இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் திருப்போரூர் திருத்தலம் பற்றிய புகைப்படங்கள் அனைத்துமே அனுஷம் நட்சத்திரம் சனிக் கிழமை இணைந்த நன்னாளில் அமைந்து உங்கள் தரிசனத்திற்காக அளிக்கப்பட்டுள்ளன என்றால் சற்குருவிற்கு தம் அடியார்கள் மேல் உள்ள கருணையை விளக்குவதற்கு இதை விடச் சிறந்த ஒரு சான்று தேவையா என்ன ?!
2. பங்குனி உத்திரத்தன்று வீராண பிரஜாபதி ஈசனை இந்த ஓம்கார மலையில் தரிசனம் செய்து, அற்புத வரங்களைப் பெற்றார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இன்று தம்பதி  சகிதமாய் அடிப்பிரதட்சிணம் செய்து கன்றுடன் கூடிய பசுவிற்குப் பழங்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உரிய சிறு ஆடைகள் அளித்துவர தக்க நல்வழியைக் காணலாம். மற்றும் திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி, பிரிந்த நட்பு கூடுதல், பணத்தடங்கல்களுக்கான நிவர்த்தி போன்றவற்றையும் அளிப்பதே பங்குனி உத்திரத்திற்கான மேற்கண்ட வழிபாட்டு முறை. மேலும் ஞான மார்க்கத்தில் உள்ளோர்க்கு அற்புத ஜோதி தரிசனங்களையும் பங்குனி உத்திர கிரிவலம் பெற்றுத் தரும். ஆனால் எக்காலத்தும் சுயநல உணர்வு தோன்றிடலாகாது.
நட்சத்திர கிரிவலப் பலன்கள் :
ஒவ்வொரு மாதத்திற்குரிய பலன்கள் மட்டுமின்றி பங்குனி மாதத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய பலன்களும் உண்டு. எனவே அந்தந்த நட்சத்திரத்தில் கிரிவலம் வந்து அரிய பலன்களைப் பெற்றுச் சிறப்புடன் வாழவேண்டுகிறோம்.
1. அஸ்வினியில் கிரிவலம் வர அஷ்டம, சூரிய சஞ்சாரத்தால் வரும் திடீர் தடங்கல்கள் விலகும். அடிப்பிரதட்சிணம்  சிறப்புடையது.
2. பரணி கிரிவலம் விரயஸ்தானத்தில் சனி, கேதுவினால் உண்டாகும் பண நெருக்கடிகள் தீரும். ஆங்காங்கே கிரிவலத்தில் பசுநெய் இட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறப்பைத் தரும்.
3. கிருத்திகை கிரிவலத்தால் அரசு மற்றும் வெளியிடங்கள் மூலமாக வர வேண்டிய கடன், PF போன்ற உதவிகள் கிட்டுவதில் உள்ள தாமதங்கள் தீரும். சிவப்பு நிற ஆடைகளைத் தானம் செய்தல் சிற்ப்பானதாகும்.

ஸ்ரீகுக்குடாப் ஜதரர் திருப்போரூர்

4. ரோகிணி கிரிவலம் திருமணத் தடங்கல்களை நீக்கும். மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் வருதல் உத்தமமானது.
5. மிருகசீரிஷ நட்சத்திர கிரிவலம் மாணவர்களுக்குக் கடுமையான உழைப்பையும், முன்னேற்றத்தையும், படிப்பில் கவனத்தையும் , நல்ல மதிப்பெண்களையும் பெற்றுத் தரும். இவர்கள் கோயிலிலுள்ள குப்பைகளைப் பொறுக்குதல், சந்நிதியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்குகளை அகற்றுதல், ஒட்டடை அடித்தல் போன்ற உழவாரத் திருப்பணிகளை மேற்கொள்தல் பலன்களைத் துரிதப்படுத்தும்.
6. திருவாதிரை கிரிவலம், செய்யும் தொழிலில் மந்த நிலையைத் தடுத்து நிம்மதியைத் தரும். சாம்பிராணி தூபம் இட்டவாறே அல்லது ஏற்றிய ஊதுபத்தியைக் கையில் ஏந்தியவாறே வலம் வருதல் நன்மையைத் தரும்.
7. புனர்பூச கிரிவலம் பிறர் ஆஸ்தியை, பிதுரார்ஜித சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலையை மாற்றி நல்ல நிலைமையை அளிக்கும். ஆனால் முதலில் குல தெய்வத்திற்குரிய வழிபாடுகளை முடித்திட வேண்டும்.
8. பூச நட்சத்திர கிரிவலம் பயணங்களில் உள்ள வீண் அலைச்சல்களைத் தடுக்கும். ஏழைகளுக்குக் காலணிகள் அளிப்பது சிறப்புடையது.
9. ஆயில்ய கிரிவலம் புதிய முயற்சிகளில் உள்ள சோதனைகளைத் தீர்க்கும். ஏழைப் பெண்களுக்கு ஆடைகளை அளித்திடுக!
10. மக கிரிவலம் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை அளிக்கும், கூடைகள், பிளாஸ்டிக் கூடைகள், ஒயர் கூடைகளைத் தானமளித்தல் வேண்டும்.
11. பூர கிரிவலம் உத்யோக இடமாற்றங்களால் ஏற்படும் துன்பத்தைத் தணிக்கும். தேவையான இடம் கிட்டும். தேங்காயெண்ணெய், தைலம் தானமாக அளித்தல் பலன்களைத் துரிதப்படுத்தும்.
12. உத்திரம் பல காய்கறிகள் கலந்த உணவு தானமிட்டு கிரிவலம் வர இல்லத்தில் நிகழும் கண்ணீர் சிந்தும் சம்பவங்கள் தீரும்.
13. ஹஸ்த கிரிவலம் கல்வி, வியாபாரம், அலுவலகத்தில் புதிய திருப்பங்களைத் தரும். புது திட்டங்களில் உண்டாகும் குறைபாடுகளைத் தீர்க்கும். கிரிவலத்தில் ஆங்காங்கே பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றுவது உத்தமம் (பசு நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்த தீபம்)
14. சித்திரை கிரிவலம் கமிஷன், காண்ட்ராக்ட் போன்றவற்றில் நல்ல லாபத்தைத் தரும். ஆங்காங்கே சிறிது தூரமேனும் அங்கப் பிரதட்சிணம் செய்வது சிறப்புடையது. இறைவனுக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி, புதிதாய்த் திருமணமாகிய ஏழை திருமணத் தம்பதிகளுக்கு அளித்திட வேண்டும்.
15. சுவாதி கிரிவலம் பயண சுகத்தைத் தரும். வெளியூர்/வெளிநாடு, காசி போன்ற தல யாத்திரை நன்கு முடியும். கங்கை/காவேரி போன்ற புனித தீர்த்தத்தைக் கோயில்களுக்கு அளித்திடுக!
16. விசாக கிரிவலம் அபாண்டமான பழிகளைத் தீர்க்கும். கும்பகோணத்திலுள்ள ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சார்த்தப்பட்ட பூணூல்களை ஏழைகளுக்கோ அல்லது பூணூல் அணிபவர்களுக்கோ, கோயில்களிலோ அளித்தல் மிகச் சிறந்த தானமாகும்.
17. அனுஷ கிரிவலம் காரியங்களில் உள்ள இழுபறி நிலைகளைச் சீராக்கும். கோயில், பள்ளி, அநாதை ஆசிரமங்களுக்கு வாளி, கயிறு, அளித்தல் சிறப்பானதாகும்.
18. கேட்டை கிரிவலம், பிடிக்காத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இடமாற்றங்களில் (வீடு, வேலை, வியாபாரம், etc… ) உள்ள துன்பங்களைப் படிப்படியாகக் குறைக்கும். இறைவனுக்கு விபூதி அபிஷேகம் செய்து அனைவர்க்கும் விபூதி தானமளித்தல் உத்தமமானது.
19. மூல கிரிவலம் பெண்களால் வரும் துன்பங்களை நிவர்த்தி செய்யும். ஏழைச் சிறுமிகளுக்கு வளையல், கொலுசு போன்றவற்றை அளித்திடுக.
20. பூராட கிரிவலம் உயர் அதிகாரிகளின் கடுமையைத் தணிக்கும். பூசனிக்காய் கலந்த உணவினை அன்னதானமாக அளித்திட தோஷங்கள் குறையும்.
21. உத்திராட கிரிவலம் வாகன மாற்றங்களினால் ஏற்படும் துன்பங்களைத் தணிக்கும். ஏழைப் பெண்களுக்கு வெள்ளி மெட்டி தானம் அளித்தல் சிறப்பானது.
22. திருஓணம் கிரிவலம் பங்காளிச் சண்டையால் உண்மையான உயிலை மறைத்துப் பொய் சொல்லி ஏமாற்றிய பாபத்தால் அனுபவிக்கும் துன்பத்திலிருந்து மீள்வதற்காகவும், திருப்போரூர் ஓங்கார மலையைக் கிரிவலம் வந்து உண்மையான உயிலைப் பங்காளியிடம் காட்டி சமாதானம் செய்துக் கொள்ள ஏற்ற தருணமாகும். அவ்வாறு கிரிவலம் வருதல் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு உதவி செய்தல் ஆகியவற்றாலும் பங்காளிக்குரிய முறையான பங்கைத் திருப்பித் தருவதாலும் பங்காளி சாபத்திலிருந்து குடும்பம் விடுபட ஏதுவாகும்.
23. அவிட்ட கிரிவலம் வேலைபளுவிற்கான உரிய பணவரவைத் தரும் (Overtime Allowances) காளை மாடு, குதிரைகளுக்கு லாடம் அடிக்க உதவி புரிதல் வேண்டும்.
24. சதய கிரிவலம் மறைத்து வைத்த இரகசியங்களால் வரும் துன்பங்களை நீக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கான உள்ளாடைகள், மருந்து, டானிக், பாய் போன்றவற்றைத் தானமளித்தல் சிறப்புடையது.
25. பூரட்டாதி கிரிவலம் கூட இருந்து குழி தோண்டி கவிழ்த்து விடுபவர்களிடமிருந்து காப்பாற்றும், கோயிலில் துளசி, வில்வம், நந்தியாவட்டை போன்ற மணமுள்ள பூச்செடிகளை வைத்திட உதவிடல் நலம்.
26. உத்திரட்டாதி கிரிவலத்தால் காதலுக்காகப் பெற்றோர்களின் சம்மதமின்றித் திருமணம் புரிந்து அல்லல்படுவோர் துன்பங்களிலிருந்து நியாயமான முறையில் விடுபடுவர். கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் ஆங்காங்கே பச்சரிசி மாவுக் கோலமிட்டு வரவும். (மொக்குமாவு எனப்படும் கல்மாவுக் கோலம் சாபத்தைத் தான் தரும்.)
27. ரேவதி கிரிவலம் வரதட்சிணைப் பிரச்சனைகளில்லாத வரன்களைப் பெற்றுத்தரும், புறாக்கள், விண்ணுலகங்கள் பலவற்றிற்கும் பறந்து செல்லும் தெய்வீகத் தன்மை உடையவை. புறாக்களுக்குக் கோயில் மாடங்களிலோ, வெளியிலோ நவதான்ய ரவை இட்டு வரவும்.
இவ்வாறாக வீராண பிரஜாபதி பல யுகங்கள், தாம் பூலோகத்தில் திருப்போரூரில், சுயம் பிரதிஷ்டை ஆகிய ஓம்கார கிரியை நாள்தோறும் கிரிவலம் வந்து பெறற்கரிய பலன்களைப் பெற்றார். ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் வேண்டுகோளின்படி இல்லறம் பூண்ட வீராண பிரஜாபதிக்கு அசிக்னி என்ற பெண் பிறந்தாள். அசிக்னி தேவியும் தம் வாழ்நாள் முழுவதும் இப்பிரணவ மலையைக் கிரிவலம் வந்து சகல சௌபாக்கியங்களையும், தரவல்ல தேவதா மூர்த்திகளின் நாயகியாக, என்றும் ஓம்கார பிரணவ மலையில் சூட்சுமமாக அமர்ந்து அருள் பாலிக்கின்றாள்.
இவளே பால்விருட்சங்கள், புனிதமான பூக்கள், தாம்பூலம் போன்ற சுபமங்களப் பொருட்களில் உறைந்து அருள்பாலிக்கும் உத்தம தேவியாவாள். எனவே பங்குனி உத்திரத்தன்று திருப்போரூரில் உள்ள ஓம்கார பிரணவ மலையை ஸ்ரீவீராண பிரஜாபதி, ஸ்ரீஅசிக்னி தேவி தியானத்துடன் வணங்கி வழிபட்டு மேற்குறித்த சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வீர்களாக!

திருப்பைஞ்ஞீலி மகிமை

சூர்ய கிரணம் படியும் லிங்க மூர்த்தி
சென்ற பிப்ரவரி 1997 இதழில் மாசி மாதம் சூரிய கிரணங்கள் படியும் லிங்க மூர்த்திகளில் மூன்றை மட்டும் விளக்கியிருந்தோம்! இவ்வரிய, அற்புதமான சிறந்த தரிசனத்தை, மூலஸ்தானத்திலிருக்கும் லிங்கத்தின் மேல், எங்கிருந்தோ வந்து சூர்ய கிரணங்கள் படியும் அற்புதக் காட்சியைக் கண்டு பெறற்கரிய புண்ணியத்தை இறையருளைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். வரும் பங்குனி மாதத்தில் பஞ்சாங்க நியதிப்படி 7, 8, 9 தேதிகளில் திருச்சி அருகே திருப்பைஞீலியில் உள்ள ஞீலிவனேஸ்வரர் சிவாலயத்தில், மூலஸ்தான லிங்க மூர்த்தியின் மேல் விடியற்காலையில் சூரிய கிரணங்கள் தோய்கின்றன என்பது பலரும் அறியாத தெய்வீக நிகழ்ச்சியாகும். இதற்கென சித்புருஷர்கள் அருளும் அற்புதமான விளக்கங்களை ஈண்டு காண்போமாக.

ஈஸ்வரப் பட்டம் பெறுவதில் சூரிய பகவானின் புதல்வர்களான எமதர்ம ராஜாவும், சனீஸ்வரரும் போட்டிப் போட்டுக் கொண்டு அரிய, பெரிய தவங்களை நிகழ்த்தினர். இதன் தவப்பலனாய் தேவலோகத்தில் உள்ள பல அற்புதமான விருட்சங்களுள் பைஞ்ஞீலி என்ற வாழை விருட்சத்தைப் பல மகரிஷிகளின் தபோபலத்துடன் சனீஸ்வரர் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். பைரவ பிரளய கதிர்களை வெளிவிட்டு பிரகாசிக்கும் பைஞ்ஞீலி விருட்சமானது ஜீவராசிகளின் ஆயுளை நீடிக்கச் செய்யும் தெய்வீக சக்தி கொண்டதாகும் . ஆனால் பூலோகத்தில் இதனை எங்கு வைப்பது? சாதாரண வாழை மரத்தைப் போல இதனை எங்கும் நட்டு வளர்த்திட முடியாதே, காரணம் பைஞ்ஞீலி வாழையின் அதிஉஷ்ணமான ஒளிக் கிரணங்களைத் தாங்கும் சக்தி எந்த நிலப்பகுதியில் உள்ளதோ அங்குதான் அதனை நட்டு வளர்த்திட முடியும்! பிருந்தாவன லோகத்தைச் சேர்ந்த பைஞ்ஞீலி வாழை விருட்சம் வெளிவிடுகின்ற, கண்ணுக்குத் தெரியாத சூட்சுமமான ஒளிக்கதிர்கள் அமிர்த சக்தி கொண்டவை ஆதலின் ஆயுளை விருத்தி செய்வதோடு பல்லாண்டுகளுக்கு நீடிக்கவும் செய்கிறது.

ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா

பிரளயங்களிலும், சிருஷ்டிகளிலும் பலவிதங்கள் உண்டு. மழை பெய்து ஓர் எறும்புப் புற்று சரிந்து அழியும் போது அதிலுள்ள எறும்புகள் பிரளயம் வந்து விட்டதாகவே எண்ணி, மாள்கின்றன. அவைகளைப் பெறுத்தவரை அது ஒரு பிரளயமே! வெள்ளமோ, பூகம்பமோ ஏற்பட்டு எண்ணற்ற மனிதர்களும் ஏனைய ஜீவராசிகளும் மாய்கையில் அதில் மாள்வோர் பிரளயம் வந்துவிட்டதாகவே பலரும் எண்ணுகின்றனர். எனவே பிரளயம் என்பது ஒட்டு மொத்தமாக, பூலோகமே அமிழ்ந்திடும் என்பதில்லை. மஹாப்பிரளய காலத்தில் தான் அவ்வாறு ஏற்படும். ஏனைய சிறுசிறு பிரளயங்களில் ஆங்காங்கே பல பகுதிகள் மறைகின்றன! இதற்கு பிச்சபிரளய ஸம்ஸ்காரம் என்று பெயர்.
அம்பிகையின் விருப்பம் :- சனீஸ்வர மூர்த்தி பைஞ்ஞீலி வாழை மரத்தை எங்கு வைப்பதென்று எண்ணி வந்தாரல்லவா! ஒரு யுகத்தில் பிரளய முடிவில் சர்வேஸ்வரன் அடுத்த சிருஷ்டிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது.... அம்பிகையான பார்வதி தேவியும் சிருஷ்டியில்  பங்குபெற விரும்பினாள். ஆனால் ஈஸ்வரனுடைய ஒவ்வொரு அவதார வைபவத்திலும் தெய்வ நாயகியாகத் திகழ்வதற்கு அம்பிகை அரும்பெரும் தவங்களை மேற்கொள்ள வேண்டுமே! அதுவும் ஈசனின் சிருஷ்டிப் பணியில் பங்கு பெறுவதென்றால் எத்தகைய தவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அந்தப் பரம்பொருள்தானே அறிவான்!
பிரளயத்திற்கு அடுத்த சிருஷ்டியின் தொடக்கமாகச் சர்வேஸ்வரன் எவரும் அண்ட இயலாத லோகத்தில் பரதீர்க யோக நிலையில் அமர்ந்திருப்பார். முதலில் அவருடைய தீட்சண்யத்தைப் பெறுவதற்கே பெருந்தவம் மேற்கொள்ள வேண்டும்! அம்பிகை சிந்தனையில் ஆழ்ந்தனள். “சிருஷ்டிக்குமுன் யோகேஸ்வரனாக அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் கடாட்சம் பெற தாம் தவத்தில் ஆழ்ந்தாலும், அத்தவம் முடிவதற்குள் சர்வேஸ்வரனின், சிருஷ்டி ஆரம்பித்து விட்டால் நம் தவத்தின் நோக்கம் எவ்வாறு நிறைவேறும்? எப்போதும் நான் விரும்புவதை அடைய, சர்வேஸ்வரனே யோக, தவ முறைகளை அளித்திடுவாரே? ஆனால் இப்போது பரதீர்க திருஷ்டாந்த யோகத்தில் ஆழ்ந்திருக்கும் இறைவனிடத்தில் எவ்வாறு தவமுறைகளைப் பெறுவது?”- என்று அம்பிகை திகைத்து நின்றாள்.
அனுசூயாவின் அனுபவம் – மகரிஷிகளுக்கு நிகரான தெய்வாம்சங்களுடன் விளங்கும் அனுசூயா தேவியிடம் அம்பிகை ஆலோசனை கேட்டிட, “ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாயே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, எனினும் யான் அறிந்ததை இறையருளால் கூறுகின்றேன். என்னுடைய கணவரான அத்திரி மகரிஷியும் உலக நலன்களுக்காக ஒருமுறை தவத்தை மேற்கொண்டார். அவர் தவத்தை முடிப்பதற்குள், அவர் வேண்டிய வரம் கைகூடுவதற்குள், பூலோகம் ஒரு பிரளயத்தில் அழிந்து விட்டது. அடுத்த பூலோகத்தின் சிருஷ்டியும் தொடங்கி விட்டது! ஆனால் ஒவ்வொரு சிருஷ்டியாலும் அத்திரி மகரிஷிக்குப் பல கடுமையான இறைப்பணிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு புறம் தம்முடைய தவத்தின் சங்கல்பம் முடியும்வரை தவத்தைத் தொடர்ந்தாக வேண்டும். மறுபுறம் ஒவ்வொரு சிருஷ்டியின் போதும் இறைவன் தமக்களித்துள்ள சிருஷ்டிக்குரிய இறைப்பணிகளையும் செய்தாக வேண்டும். நாங்கள் இருவருமே இந்நிலையில் திகைத்து ‘யாது செய்வது’ எனச் சர்வேஸ்வரனையே வேண்டிட..,,
..... கருணைக்கடலாம் இறைவனும்... “அத்திரி மகரிஷியே! தாங்கள் எந்த பூலோகத்தின் நலன்களுக்காகத் தவத்தை மேற்கொண்டீர்களோ, சிருஷ்டியின் சுழற்சியில் அதே வகையான பூலோகம் மீண்டும் வரும்வரை தவத்தைத் தொடர்ந்தாக வேண்டும். எனினும் தங்களுடைய தியாக வாழ்வைப் போற்றித் தங்களுக்கு நிகரான தபோபலன்கள் நிறைந்த மற்றுமொரு அத்திரி மகரிஷியின் வடிவை நான் அளிக்கின்றேன். அப்புதுவடிவில் தாங்கள் சிருஷ்டிப் பணிகளை, நூதன பூலோகத்தில் தொடர்வீர்களாக!” என்று கூறி அருள்பாலித்தார். அனுசூயாதேவி உமையவளிடம் மேலும் கூறியதாவது : “தாங்களும் சிருஷ்டிப் பணியில் பங்குபெற வரத்தைக் கேட்டு தவத்தைத் தொடர்வீர்களாக! இடையில் சர்வேசன் சிருஷ்டிப் பணியைப் பூர்த்தி செய்தாலும் கூட இறையருளால் நல்லதே நடக்கும்”. பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியுற்று தவத்தைத் தொடர்ந்தனள். எதற்கு? சர்வேஸ்வரன், கிராத மூர்த்தியாக சிருஷ்டியைத் துவக்குமுன் அவ்வரிய சிருஷ்டித் திருப்பணியில் பங்குபெற வேண்டும் என்ற வரம் வேண்டி!
உமையன்னை தவத்தில் ஆழ்ந்திட..   அன்னையின் அத்தவம் நிறைவு பெறுமுன்னரே புதிய சிருஷ்டிக்கான அமிர்த நேரம் பூத்துவிட்டது போலும்! இறைவனோ சிருஷ்டிப் பணியைத் துவங்கி விட்டார். அதற்குள் பலகோடி  யுகங்கள் கடந்துவிட்டமையால் ஆழ்ந்த யோகநிலையில் இருந்த அம்பிகையின் உக்ரக சக்தி பெருகியது. அம்பிகையின் உக்ரகத்தைப் பல லோகங்களால் தாங்க இயலவில்லை. தேவர்களும், மகரிஷிகளும், அனைத்துலக ஜீவராசிகளும் சர்வேஸ்வரனிடம் முறையிடவே, இறைவன் அம்பிகையின் முன் காட்சியளித்து, “தேவி! உன்னுடைய தவம் மேலும் பல கோடியுகங்களுக்குத் தொடர வேண்டியுள்ளது. அதற்குரிய நீண்ட, அவதார பரிபாலன ஜீவித கால சக்தியை நீ பெற்றாக வேண்டும். யாம் சிருஷ்டியின் ஆதியில் படைத்த சில தாவரங்களே ஆயுளை நீடித்து ஜீவித சக்தியைப் பெருக்கும் தெய்வீக சக்தி உடையவை. அவற்றுள் ஒன்றே பைஞ்ஞீலி வாழை விருட்சமாகும். ஆயுள் காரகனாகிய சனீஸ்வர மூர்த்தியே சாதாரண ஜீவன்களுக்கு மட்டுமின்றி தேவாதி தேவர்களுக்கும் அமிர்த ஜீவிதசக்தியை, அதாவது பிறப்பையும், சம்ஹாரத்தையும் தாண்டி நிற்கும் நீண்ட நெடும் ஆயுளைத் தரவல்லவர். சனீஸ்வர மூர்த்தியோ தற்போது ஈஸ்வரப் பட்டம் வேண்டிப் பல இறை, தியாகப் பணிகளில், தவத்தில், யோகத்தில் ஈடுபட்டு அதிஅற்புத சக்தி வாய்ந்த பைஞ்ஞீலி விருட்சத்தை எடுத்துக் கொண்டு பூலோகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.. எமதர்மராஜரும் உன் தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றார். நீயோ உன்பங்கினை ஆற்றிட வரம் கேட்டு நிற்கின்றாய்,. உன் உக்ரஹ சக்தியைத் தணிக்கின்ற பிரகாசமான ஒளிக் கதிர்களைக் கொண்டதும் பல யுகங்களுக்கு உன்னுடைய இந்த அவதார ஜீவிதத்தை அளிக்க வல்லதுமான பைஞ்ஞீலி ஸ்வஸ்த விருட்சயோக முறையை யாம் அங்கே உனக்களித்து எம் லீலைகளைத் தொடர்கின்றோம்” என்று அருள்பாலித்தார்.
முன்பு ஒரு முறை தசரத சக்கரவர்த்தி சனி கிரகத்தை அடைந்து வற்கடம் என்னும் கடும் பஞ்சத்தில் வாடும் தம் நாட்டைக் காப்பாற்ற ஸ்ரீசனீஸ்வரரைப் பிரார்த்தித்தார். வற்கடம் என்னும் பஞ்சமோ பலநூறு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடியது. அப்போது சனீஸ்வர தசரதரிடம், “வற்கடம் என்னும் பஞ்சம் தங்கள் நாட்டில் இருந்து மீள்வதற்குள் தங்கள் ஆயுள் முடிந்து விடும் போலிருக்கிறதே! யாம் ஆயுள்காரகனாக இருப்பினும் எம்முடைய சக்தி மட்டுமன்றி எமதர்ம ராஜனின் அனுக்கிரகமும் கூடினால் தான் மிருத்யுதோஷம்தனைத் தவிர்க்க முடியும். தங்கள் ஆயுளை நீடிக்கக்கூடிய சக்தியை அளித்து எவராலும் இது வரையில் வெல்லப்படாத வற்கடம் என்னும் பஞ்சம் தீர தங்களுக்கு அத்தகைய தெய்வீக சக்தியை இறையருளால் நாள்களிருவரும் சேர்ந்தே அளிக்கின்றோம்”, என்றார்.
நவக்கிரக மூர்த்திகளுக்குத் தனி மூர்த்தங்களும், சன்னதிகளும் தோன்றாத காலமது. அதாவது அந்த யுகத்துக்குரிய பூலோகத்தில் ஒரு சில தலங்களிலேயே ஸ்ரீபரசுராமர் நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்திருந்தார். ஏனைய தலங்களில் மூலமூர்த்தியே நவக்கிரகாதிபதிகளின் அருட்சக்தியைப் பெற்றிருந்தார்.. நவக்கிரக வழிபாடுகளுக்கு முன் ஏற்பட்ட, கோடிகோடியாம் யுகங்களுக்கு முன் தோன்றிய பழமையான ஆதி சிவ ஸ்தலங்களுள் திருப்பைஞ்ஞீலியும் ஒன்றாகும். தசரதருக்கோ, சனீஸ்வ்ர மூர்த்தியும், எமதர்மராஜாவும் சேர்ந்து அருள்பாலிக்கின்ற தலத்தோடு மட்டுமன்றி ஜீவித சக்தியைத் தரவல்ல மூர்த்தியையும் வழிபட அம்பிகையை வேண்டியவாறு பல இடங்களிலும் ஷேத்திராடனம் செய்து வாழை மரங்கள் நிறைந்த பகுதியான திருப்பைஞ்ஞீலிக்கு வந்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார்! ஈஸ்வரப் பட்டம் வேண்டி சனீஸ்வர மூர்த்தியும், எமதர்மராஜாவும் அரிய தவங்களை மேற்கொண்டனர் அல்லவா? ஈஸ்வரப் பட்டத்திற்குரிய தகுதிகளில் சக்தி உபாசானியில் ஈடுபட்டு சக்தி தரிசனம் பெற வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஆனால் அம்பிகையோ நெடுங்கால தவத்தின் பலனாய் உச்சமான உக்ரகத்தில் அமர்ந்திருக்கவே எவராலும் அம்பிகையைத் தரிசிக்க இயலவில்லை. பின்பு தேவர்களின், மகரிஷிகளின் பிரார்த்தனைக்கு ஏற்ப அம்பிகையின் உக்ரகத்தைத் தணிக்க வேண்டி சர்வேஸ்வரனே அம்பிகையின் முன் காட்சியளித்து அருளியதை ஏற்கனவே முற்பகுதியில் கண்டோம்.
திருப்பைஞ்ஞீலியில் சிவ லீலை
.............. இதோ நீண்ட தவத்தின் அக்னிப்ரவாகத்தோடு அதி உக்ரக மூர்த்தியாய் அம்பிகை பூலோகத்திற்கு விரைந்து வருகின்றாள். ... அக்னியின் உக்ரகத்தைத் தாளாது பல கோள்களும் இடம் மாறி நகர்ந்து உருண்டன! ஓர் இடத்தில்...... விண்ணில் பறக்கையில்........ அம்பிகை தன் திருமேனி திடீரென குளுமை பெறுவதை உணர்ந்தாள்..., அம்பிகை கீழே நோக்கிட.... அங்கே கண்ணுக் கெட்டிய தூரமெங்கும் கதலி வனம் எனப்படும் வாழைமரத் தோட்டங்கள் நிறைந்து காணப்பட்டன! நடுவில் ஓர் அழகிய சிவலிங்க மூர்த்தி! அவரே ஞீலிவனநாதர், திருப்பைஞ்ஞீநாதர்! அந்த ஜோதி வடிவ சிவலிங்கத்திலிருந்து ஓர் அழகிய வாழை விருட்சம் தோன்றி அருகில் நிலைத்து நின்றது. சர்வேஸ்வரன் அம்பிகையிடம் அசரீரியாய், “பைஞ்ஞீலியில் பாவயோகம் பூண்டிடுவாய்!” என்று அருளிட அம்பிகை கண் திறந்து பார்த்தனள். அம்பிகையின் உக்ராக்னிப் பிரகாசித்ததைவிட அந்தச் சிவலிங்க ஜோதியால் வந்த பைஞ்ஞீலி விருட்சப் பிரகாசம் கண்களைப் பறித்தது. அம்பிகையால் சிவலிங்கத்தையும், அந்தப் பைஞ்ஞீலி விருட்சத்தையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. அத்தகைய கோடி சூர்ய பிரகாசம் அங்கே குவிந்து கிடந்தது! அம்பிகையோ கண்களை இமைக்காது சிவலிங்கத்தை நோக்கி உற்று நோக்கிட அவள் கண்கள் விரிந்தன. கண்கள் விரிந்து விரிந்து பூலோகத்தையே வியாபித்தபோதிலும் அம்பிகையால் சிவலிங்க ஜோதியைக் காணமுடியவில்லை. அப்போதுதான் அகிலாண்டேஸ்வரியானவள்.
“அவனே ஆண்டுவந்து அரவணைத்தாலன்றி, யாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்பதை அறிந்து இறைவனை நோக்கும் தகுதியைத் தாம் பெறவில்லையே என்றுணர்ந்து தலை குனிந்தனள். இதுதானே சர்வேஸ்வரனின் லீலை!
உடனே சர்வேஸ்வரன் காட்சி அளித்தான். ‘விரிந்த கண்களையுடைய விசாலாட்சியே!” என்று விளித்து, ‘உன்னுடைய உக்ரஹசக்தியைத் தணித்து சர்வலோகங்களையும் காத்தருள இங்குள்ள பைஞ்ஞீலி கதலி விருட்சத்தின் அடியில் பாவயோகத்தில் அமர்ந்து பல கோடி யுகங்களுக்கு உன்னுடைய தவத்தைத் தொடர்வாயாக! அதன் பின்னரே நீ சிருஷ்டியில் பங்கு பெறும் பாக்கியத்தைப் பெறுவாய். எனினும் சக்தியின்றி சிவனில்லையன்றோ! ஈஸ்வரப் பட்டம் வேண்டி சனீஸ்வரனும், எமதர்மராஜாவும் சக்தி தரிசனத்திற்காக இங்கே வந்து கொண்டிருக்கின்றனர். உன்னுடைய உக்ரஹக் கோலத்தை அவர்களால் காண இயலாது. மேலும் சர்வலோகங்களிலும் அம்பிகையின் அருள் வேண்டி தரிசனம் பெறத் துடிக்கும் ஜீவன்கள் கோடானு கோடியாகும்!
“ஒன்றைப் புரிந்து கொள் தேவி!  தெய்வீகத்தில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. அவரவர்களுடைய பூஜா பலன்களுக்கேற்ப அவரவருடைய தெய்வீக சக்தி அமைகிறது. சிருஷ்டியில் ஸ்ரீமஹாலட்சுமி வகிக்கும் பங்கு சிறப்பாக அமைந்திருப்பதால் அதனைக் கண்டு நீயும் சிருஷ்டிப் பணியில் பங்கேற்க விரும்புகின்றாய்! ஆனால் அதற்குரிய தெய்வீக சக்தியைப் பெற வேண்டுமல்லவா! உன்னுடைய உக்ரகத்தைத் தணிக்க வல்ல பைஞ்ஞீலி வாழை விருட்சத்தை உன்னுடைய கண்களால் கூட தரிசிக்க இயலவில்லை! அத்தகைய தெய்வீக ஒளி பொருந்தியது பைஞ்ஞீலி வாழை விருட்சம்! ஆனால் இதனை விண்ணுலகத்திலிருந்து எடுத்துவரும் ஆன்ம சக்தியைச் சனீஸ்வரன் பெற்றிருக்கின்றானெனில் என்னே அவருடைய தபோ பலன்!” என்றார் ஈசன். அம்பிகை நாணித் தலைகுனிந்து நின்றாள்!
ஈசுவரன் மேலும் தொடர்ந்தார்.
“விசாலாட்சி! உன்னுடைய தவமோ திருப்பைஞ்ஞீலி வாழை விருட்சத்தின் அடியில் பல யுகங்கள் தொடருமல்லவா. அதுவரை சர்வலோகங்களுக்கும் சக்தி அம்சம் தேவையன்றோ! அதற்காகவே உன்னிடமிருந்து உக்ரஹ சக்தியையும், ரஜோ குணத்தையும், தபோ பலன்களையும் பிரித்து வாழைமரம் அருகில் தவத்தைத் தொடர்வாயாக! ‘உன்னுடைய சாந்தமான ஸ்வரூபத்திலிருந்து இன்னொரு அம்பிகையை இத்தலத்தில் உருவாக்கி இங்கு அமர்ந்து அனைவர்க்கும் அருள்பாலித்திட ஆக்ஞை செய்ய இருக்கிறோம்”, என மொழிந்தார். விசாலாட்சி தேவியிடம் இருந்து சாந்த சொரூபியாக ஓர் அம்பிகையானவள் தோன்றினாள். அந்த அம்பிகையினாலும் திருப்பைஞ்ஞீலியின் ஜோதி சொரூபத்தைக் காண இயலவில்லை. விசாலாட்சியைப் போலவே இந்த அம்பிகையையும் கண்களை விரித்து சுவாமியைத் தரிசிக்க துடித்தனள்!
இது  இறைவனின் நாடகமல்லவா! ஈசன் நெடுநேரம் சோதிக்கவில்லை! விரிந்த நெடுங்கண்களுடன் நெடுங்கண் நாயகி அனைவருக்கும் தரிசனம் அளித்தனள். நெடுங்கண்நாயகி  திருப்பைஞ்ஞீலிஸ்வரைப் பணிந்து வணங்கினாள்.. “ஸ்வாமி! அடியேனைத் தங்களுடைய சமேத மூர்த்தியாக ஏற்று அருள்பாலிக்க வேண்டும்”, என்று வேண்டினள். ஈஸ்வரன் புன்னகை பூத்தார் “தட்சயாகத்திற்குப்பின் என்னை அடைவதற்கு எத்தகைய கடும்தவத்தை மேற்கொண்டாய் என்பதை நீ மறந்துவிட்டாயா?’ நெடுங்கண் நாயகி மீண்டும் நாணத்தால் தலை குனிந்து நின்றிட சர்வேஸ்வரன் தொடர்ந்தார்! “எனினும் இத்தலத்தின் மஹிமையால் உனக்கு எளிமையான தவத்தையே அளிக்கின்றேன். இன்னும் சற்று நேரத்தில் சூர்ய பகவான் தம் குடும்ப சமேதமாக இங்கு வருகின்றார். இச்சிறப்புடைய பங்குனிமாதத்தில் சூரியனின் கிரணங்கள் எம்முடைய லிங்கத் திருமேனியில் பட்டுப் பிரகாசித்து எம்முடைய அமிர்தசக்தி, தீர்க்க சக்தி, ஜீவித சக்தி, ஔஷத சக்தி, ஆத்ம சக்தி, திவ்ய சக்தி, பஞ்சபூத சக்தி, நியாஸ சக்தி, ருத்ர சக்தி, அகோர சக்தி, பிரளய சக்தி, அக்னி சக்தி போன்ற அனைத்தையும் திரட்டித் தரும். இக்கிரணங்களை நீ உன்னிடம் ஏற்று, அன்று என்னை வழிபடுகின்ற அனைவருக்கும் மேற்கண்ட சக்திகளை அளித்து வருவாயாக!’
எம்பெருமான் அருளியவாறே சாந்தரூபிணியாய் நெடுங்கண் நாயகி தவமிருந்து பங்குனி மாதத்தில் திருப்பைஞ்ஞீலி லிங்கமூர்த்தி மேல் படியும் சூரிய கிரணத்தின் ஜீவித மற்றும் ஏனைய சக்திகளை அனைவருக்கும் குறிப்பாக கன்னியர், இளம்பெண்கள், சிறுமியருக்கு நல்லொழுக்கம், நாணம் , கற்பு நிறைந்த சிறப்பான வாழ்வைத் தந்து பல யுகங்களுக்கு அருள்பாலித்து வருகின்றனள். இறுதியில் ஸ்ரீவிசாலாட்சி தேவியின் தவமும் அபரிமிதமான ஜீவித பரிபாலன சக்தியுடன் முற்றுப் பெறுகையில் இருவரும் சேர்ந்து ஸ்ரீவிசாலாட்சி, நெடுங்கண்நாயகி சமேத திருப்பைஞ்ஞீலீஸ்வரராக இணைந்து அருள்பாலிக்கும் பெரும்பேறு பெற்றனர். எனவே நாம் இத்திருக்கோயிலில் ஈஸ்வரனின் இரு அம்பிகையரையும் தரிசித்திடலாம்!
சித்புருஷர்கள் அருளும் இப்புராண நிகழ்ச்சி இவ்வாறு விரிய....., சனீஸ்வர மூர்த்தி பைஞ்ஞீலி வாழை விருட்சத்துடன் பூலோகம் எங்கும் திருப்பயணம் செய்து வந்தாரல்லவா?..... கதலிவனம் எனப்படும் தலமான திருப்பைஞ்ஞீலி அருகே சனீஸ்வரர் வருகையில் அவர் தாங்கிவந்த  பைஞ்ஞீலி வாழை விருட்சம் ஜோதியாய் மாறி ஓரிடத்தில் சென்று மறைந்தது.... (இதுவே லிங்கத் திருமேனியில் வெளிப்பட்டதை நாம் முன்னரே அறிந்து விட்டோம்.) அவ்வொளியைத் தேடி சனீஸ்வரர் அவ்விடத்தை நோக்கிச் செல்ல..... ஈஸ்வரப் பட்டம் பெறுவதற்கான முக்கியத் தகுதிகளுள் ஒன்றான சக்தி தரிசனம் பெற எமதர்மராஜாவும் நெடுங்கண் நாயகியின் திவ்ய தரிசனத்திற்காக அங்கு வந்து சேர்ந்தார். ஏனெனில் அந்த யுகசிருஷ்டிக்குப் பின் அம்பிகை காட்சி தரும் முதல் தலமன்றோ! பல யுகங்களுக்குப் பின் கிட்டும் அம்பிகை தரிசனமல்லவா! இவ்வாறாக அம்பிகையின் தரிசனத்திற்காக சூரியபகவான் தம் குடும்பத்துடனும், எமதர்மராஜா மற்றும் சனீஸ்வர மூர்த்தியும், எண்ணற்ற மஹரிஷிகளும் திருப்பைஞ்ஞீலிக்கு வந்து சேர்ந்தனர்.

திருப்பைஞ்ஞீலி

இங்கு சக்தி தரிசனம் பெற்ற எமதர்மராஜா, “இந்த மூல பைஞ்ஞீலி விருட்சத்தைத் தரிசிப்போர்க்கு இயற்கையாகவே ஜீவித சக்தியையும், சாகா வரத்தையும், சிரஞ்சீவித் தன்மையையும் மரணமில்லாத பெருவாழ்வையும் பெற என் தபோபலன்களை அர்ப்பணிகின்றேன்”, என்று வரமளித்து விட்டார். ஒருவிதத்தில் திவ்யமான அனுக்ரஹம் என்றாலும் இதனால் ஏற்படும் விபரீதம் பற்றி சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இங்கு ஆயுள்காரகனாகிய சனீஸ்வர மூர்த்தியோ தாம் பெற்ற சக்தி தரிசனத்தால் ஆனந்தித்து, “சகல லோகங்களிலும் ஜீவித சக்தியைத் தரவல்ல இந்தப் பைஞ்ஞீலி வாழை விருட்சத்தைத் தரிசிப்போருக்கு நீண்ட ஆயுளைத் தருவதற்கு என்னுடைய தபோ பலனை அர்ப்பணிக்கின்றேன்”, என்று வரமளித்திட்டார். சூரிய பகவானோ, சம்க்ஞை தேவிக்குரிய அக்னிசக்தியைத் தரவல்ல ஸ்ரீவிசாலாட்சியின் தரிசனத்தைப் பெற்றமையால் மிக ஆனந்தத்துடன் , “என்னுடைய சூர்ய பிரகாசத்தின் ஜீவ சக்தியைப் பைஞ்ஞீலி விருட்சத்திடம் அர்ப்பணிக்கின்றேன். இதனால் இதைத் தரிசிப்போர்க்குக் கிட்டும் ஜீவசக்தி பன்மடங்காகப் பெருகட்டும்” என்று அருள்பாலித்தார்.
திருப்பைஞ்ஞீலியே தேவதேவாதி தேவர்களின் வரங்களால் அந்த யுகத்தில் பிரகாசமாய் ஜ்வலித்தது. ஆனால்...... மகரிஷிகளும், தேவர்களும் கவலையுற்றோர் ஆயினர்.,“என்ன விபரீதமிது! திருப்பைஞ்ஞீலி தலத்திற்கு வந்தாலே போதும், மரணமே இராது என்றால் இது வரும் யுகங்களில் எத்தனையோ விதமான பிரச்னைகளை உருவாக்குமே!

அரக்கர்களும், அசுரர்களும், ராட்சசர்களும், தீயவர்களும் இங்கு வந்து விட்டால் என்னாவது!
தேவர்களும், மகரிஷிகளும் இவ்வாறு நினைத்து முடிவெடுப்பதற்குள் பல யுகங்கள் கடந்து விட்டன. அவர்கள் எண்ணியது போலவே எல்லா அண்டங்களிலிருந்தும் சகல விதமான ஜீவன்களும், தேவாதி தேவியரும் அசுரர்களும் வந்து திருப்பைஞ்ஞீலியில் குடியேறினர். நெடுங்கண்நாயகியோ, ‘வரமளித்த மூவரும் வந்து சேர்ந்தால்தான் அதற்குரிய நல்வழி தரமுடியும்’, என்று அருளிடவே, அனைவரும் சூரிய, சனீஸ்வர, எமதர்மராஜ மூர்த்திகளை இங்கு எழுந்தருளுமாறு வேண்டினர்.
மூன்று மூர்த்திகளுமே திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளினர். நெடுங்கண்நாயகியும் அவர்களுடைய வரங்களால் ஏற்பட்டுள்ள நன்மை தீமைகளை விவரித்திட, “நாங்கள் அளித்த வரங்களை எவ்வாறு திரும்பப் பெறுவது?” என்று அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதுதான் நெடுங்கண்நாயகி அவர்கள் மூவருமே தங்கள் வரங்களுக்குரிய தபோசக்தியை பைஞ்ஞீலி விருட்சத்திடம் சமர்பித்து விட்டுச் சென்றதை நினைவு கூர்ந்தனள். எனவே, “பைஞ்ஞீலி விருட்சத்தினடியில் தவம்புரியும் விசாலட்சியே இதற்குரிய நல்வழியைக் காட்ட இயலும்”, என்று அருளினள். ஆனால் பைஞ்ஞீலி மரத்தின் அடியில் தவம்புரியும் விசாலாட்சி உக்ரஹ சக்தி பூண்டவள் அல்லவா! யாரால் அம்பிகையிடம் செல்ல முடியும் ?

திருப்பைஞ்ஞீலி

விசாலாட்சி அம்சங்கள் நிறைந்து, அவளிடமிருந்து தோன்றிய நெடுங்கண் நாயகியே, விசாலாட்சியிடம் செல்லும் வல்லமை பெற்றவளாகிட, அம்பிகையே, அன்னையிடம் அனைத்தையும் விவரித்திட, விசாலாட்சி அருளியதாவது, “சூரிய, சனீஸ்வர, எமதர்மராஜ  மூர்த்திகள் மூவரும் பைஞ்ஞீலி விருட்சத்திடம் அர்ப்பணித்த தபோபலன்களே மூன்று வரங்களுக்கும் மூல காரணமாகும். எனவே பைஞ்ஞீலி விருட்சமே மும்மூர்த்திகளின் வரங்களைச் செயலாக்கும் தெய்வீக சக்தியைப் பெற்றுள்ளது. பைஞ்ஞீலி விருட்சத்தின் ஜோதி சக்தியை எமதர்மராஜா, சனீஸ்வரரின் அருளோடு சூர்ய கிரணங்கள் மூலமாகத்தான் பெறமுடியும். எனவே இம்மூவரும் ஒன்று சேர்ந்து இங்கு மூலவரை வழிபடுகின்ற  நேரத்தில்தான் அவ்வரங்களின் பயன்களை முழுமையாகப் பெற முடியும், ஆனால் இது தேவ ரகசியமாகவே விளங்கும்”, என்று அருளினள். இவ்வாறகவே ஸ்ரீவிசாலாட்சி தேவியின் அருளாணைப்படி பங்குனி மாதத்தில் ஸ்ரீசூர்யபகவானின் கிரணங்கள் திருப்பைஞ்ஞீலி ஈஸ்வரரின் திருமேனியில்படுகின்ற அதாவது சூரிய பகவானே நேரில் வந்து பங்குனி மாதத்தில் சில நாட்கள் திருப்பைஞ்ஞீலியில் வழிபடும் நாட்களையே லிங்கத்தின் மேல் சூரியகிரணங்கள் படும் நாட்களாகக் கொண்டாடுகின்றனர்.
சூரியனின் புத்திரரான எமதர்மராஜா தம் குடும்பத்துடன் எழுந்தருளியுள்ள அபூர்வமான, விசேஷமான தலம் இது. பங்குனி மாதம் லிங்கத்தின் மேல் சூர்ய கிரணம் தோயும் நாட்களில் குறித்த ஒரு ஹோரை நேரத்தில் பைஞ்ஞீலி விருட்சத்திற்கும், மூலவருக்கும் விசேஷ பூஜையை எமதர்மராஜா தம் பிதாவான சூர்ய பகவானுடன் நிகழ்த்துகின்றார். இவ்வாறு சூரிய பகவான் ஈசனை மட்டும் தன் கிரணங்களால் தரிசிப்பதில்லை, தழுவுவதில்லை நவகிரக அம்சமான படிகளையும்தான் என்பதே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் நவகிரக அம்சமாகத் திகழும் ஆலய படிக்கட்டுகளாகும்.
பொதுவாக நவக்கிரகங்கள் இல்லாத பழமையான கோயில்களில் நவக்கிரஹ சக்திகள் ராஜகோபுரத்தில் கூடியிருக்கும். இதற்காகவே ஒன்பது கலசங்களையும் ராஜகோபுரத்தில் வைப்பதுண்டு. பாற்கடலில் அமிர்த தாரை ஏற்பட்ட காலத்திற்கு முந்தைய பழமையான கோயில் எனில் ஏழு கலசங்கள் (ராகு, கேது தவிர்த்து) அமைந்திருக்கும்.. சனீஸ்வர மூர்த்திக்குரிய வாகனம் காகம் எனினும் அவர் கழுகையும் வாகனமாக ஏற்பதுண்டு. வட இந்தியாவில் பட இடங்களில் சனீஸ்வரரின் வாகனமாகக் கழுகையே குறிப்பிடுகின்றனர். எனவே பங்குனியில் லிங்கத்தின் மேல் சூர்ய கிரணங்கள் படிகின்ற நாட்களில் குறித்த ஹோரையில் கழுகு வாகனத்தில் சனீஸ்வரர் எழுந்தருளி இங்கு மூலவரைப் பூஜிக்கின்றார். இச்சமயத்தில் ராஜகோபுரத்தையும் கழுகு சுற்றிப் பிரதட்சிணம் செய்யும். எனவே சூர்ய, எமதர்ம, சனீஸ்வர மூர்த்திகள் பூஜிக்கின்ற, சூர்ய கிரணங்கள் இங்கு லிங்கத்தின் மேல் படுகின்ற நாட்களில்,
1. பைஞ்ஞீலி தல விருட்சத்தைத் தரிசித்து, பச்சரி மாவுக் கோலமிட்டு, தாமே அரைத்த சந்தனம் , மஞ்சள், குங்குமமிட்டு வழிபடுதல்..,
2. சூர்ய கிரணம் படியும் நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் புரிதல்.
3. ஐந்து வகையான வாழைப்பழங்கள் சேர்ந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு அளித்தல்..
4. எமதர்மராஜ தேவப்ரீதியாக எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரையையும், பலாப் பழங்களையும், ஏழைகளுக்கு அகத்திக் கீரை உணவினையும் அளித்தல்,
5. சனீஸ்வர ப்ரீதியாக எள்ளுருண்டை நைவேத்யத்துடன், எள்பொடி சாத நைவேத்யம், அன்னதானம் செய்தல்.,
6. சூர்ய ப்ரீதியாகப் பொன்னிற உணவு, ஆடைகளைத் தானம் செய்தல்.
போன்ற சிறந்த வழிபாடுகளை மேற்கொண்டிட ..,
1. எத்தகைய கடுமையான நோய்களிலிருந்தும் நிவாரணம் பெற நல்வழிகள் கிட்டும்.
2. வெறும் மனிதனாக நெடுங்காலம் வாழ்ந்து பயனில்லை! நாம் இறைப்பணிகளையும், மஹேஸன் சேவையாம் மக்கட்பணியையும் இறையருளால் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுற வாழ்ந்து கழித்திடத் தேவையான மனோ வைராக்யத்தை, உறுதியான மனக் கோட்பாட்டை இங்கு பெற்றிடலாம். பங்குனி மாதத்தில் இங்கு தோயும் சூரிய கிரணங்களைத் தரிசித்து அபிஷேக ஆராதனைகளையும், குறிப்பாக மலைவாழை, செவ்வாழை, பேயன்வாழை என்றவாறாகக் குறைந்தது ஐந்து வித வாழைப்பழங்கள் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு அளித்துவர எவ்வித கடுமையான நோய்களிலிருந்தும் நிவாரண கிட்டும்.

பௌர்ணமி நேர பேதங்கள்


திருஅண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் வருவோர் பௌர்ணமி திதி காலம் பற்றிக் குழப்பம் அடைகின்றனர். பஞ்சாங்க கணிதத்தில் திருக்கணிதம், வாக்யம், சித்தம், ஆர்யம், சூர்யம், சித்தாந்தம் எனப் பலவகைப் பஞ்சாங்கங்கள் உண்டு. ஆனால் பொதுவாக, தற்போதைய வழக்கில் திருக்கணிதப் பஞ்சாங்கமும், வாக்யப் பஞ்சாங்கமுமே பிரசித்தி பெற்றுள்ளன . திருஅண்ணாமலையில் நம்முடைய ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜையும், அன்னதானமும், திருக்கணித முறையில் குறிக்கப்படும் பௌர்ணமி திதி நேரத்தை ஒட்டி அமைந்துள்ளன. மேலும் பௌர்ணமி  சந்திரன் இரவு நேரத்தில் தான் உச்ச சக்தியைப் பெறுவதால் எந்த இரவில் பௌர்ணமி திதி நேரம் இருக்கின்றதோ அந்நாளையே ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜைநாளாகக் கொண்டாடுகிறோம். திருஅண்ணாமலை கிரிவலத்தில் மலையின் தெய்வீக சக்தி மூலிகா சக்தி, அபூர்வமான கற்களின் நவரத்ன சக்தி போன்றவற்றை பௌர்ணமி நிலாக் கதிர்களின் பிரதிபலிப்பின் மூலமாகவே நம் உடலில் சேர்வதால் பௌர்ணமி உச்சமாக உள்ள இரவு நேரத்தில் கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானதாகும்.
கோயில்களில் பெரும்பாலும் வாக்யப் (பாம்பு பஞ்சாங்கம் போன்றவை) பஞ்சாங்க முறையே கையாளப் படுவதாலும், பகல்/மாலை நேர பூஜையே பௌர்ணமி பூஜையாகக் கொண்டாடப்படுவதாலும், பகல்/மாலையில் பௌர்ணமி திதி அதிகமாக உள்ள நாளே கோயில்களில் பௌர்ணமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனால் தான் பௌர்ணமி திதி நேர வேறுபாடுகளும் கிரிவலம் வருவோர்க்குக் குழப்பமும் ஏற்படுகின்றன.
1. எந்த இரவில் பௌர்ணமி சந்திரன் உச்ச சக்தியைப் பெற்றிருக்கின்றதோ அந்த நாளையே ஆஸ்ரமத்திற்குரிய பௌர்ணமி தினமாக அறிவிப்புப் பலகையில், ஆஸ்ரமத்தின் முன்னால், கிரிவலம் வரும் மக்களுக்காக நாம் குறித்து அளிக்கின்றோம்.
2. அருணாசல கிரிவலத்தின் பரிபூரணமான பலன்களைப் பெற ஆஸ்ரமத்தில் குறிக்கப்படும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலத்தை மேற்கொள்ள மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
பௌர்ணமி திதி நேரக் குழப்பங்களிலிருந்து தெளிவு பெற........
1. பௌர்ணமி திதி நேரத்தை முதலில் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். March 1997 முதல் ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழில் திருக்கணித முறைப்படியான பௌர்ணமி திதித் தொடக்க நேரமும், முடிவு நேரமும் தெளிவாகப் போடப்படும்.
2. கோயில்களில் குறிக்கப்படும் பௌர்ணமி திதிநேரம் கோயில்களுக்குரிய பூஜா, ஆகம வைதிக விதிகளின்படி நிர்ணயிக்கப்படுகின்றது.
3. வாக்யப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் இரண்டிலுமே கணித முறைகள் மாறுபடுவதால் பௌர்ணமி நேரங்களும் மாறுபடும். எனவே அவரவர் குடும்பப் பாரம்பரியத்திற்கு ஏற்பவும் பெரியோர்களின் அறிவுரைக்கேற்பவும் ஏதாவது ஒன்றை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். இக்கணித முறைகள் விளக்குவதற்கு மிகவும் கடினமாகையால் அன்பர்கள் இங்கு தரப்பட்டுள்ள பௌர்ணமி நேர பேதங்களுக்கான காரணங்களை நன்கு அறிந்து தெளிவு பெற வேண்டும்.
பௌர்ணமி நேர பேதம் – உதாரண விளக்கங்கள்
பௌர்ணமி நேர பேதத்திற்கு உதாரணமாக, தை மாதத்தில் (Jan’1997) பௌர்ணமி திதி நேரமானது, திருக்கணித பஞ்சாங்கப் படி 22.1.1997 மாலை 6.28pm  முதல் 23.1.1997 இரவு 8.40pm வரை அமைந்துள்ளது. இரண்டு நாட்கள் பௌர்ணமி திதி வந்திடினும் பௌர்ணமி சந்திரனானது 22.1.1997 அன்று தான் உச்ச சக்தியைப் பெற்றிருந்ததால் அன்று நம் ஆஸ்ரமத்தில் பௌர்ணமி கொண்டாடப் பெற்றது. ஆனால் கோயில்களில் பகல்/மாலை நேர பௌர்ணமி பூஜை கொண்டாடப்படும் பஞ்சாங்கத்திற்கேற்பவும் 23.1.1997 (மறுநாள்) அன்று பௌர்ணமி கொண்டாடப் பெற்றது. பௌர்ணமி திதி எந்நாளில் அதிகமாக விரவியிருக்கின்றதோ அதனையே சிலர் பௌர்ணமி தினமாக ஏற்பதும் உண்டு. எனவே திருஅண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலத்திற்கு முக்கியத்துவம் தரும் அன்பர்கள்.
1. பௌர்ணமி திதி அதிக நேரம் அமைந்துள்ள நாளிலும், குறிப்பாக பௌர்ணமி சந்திரன் உச்ச சக்தி பெற்றுள்ள நாளிலும் கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. இது பற்றி மேலும் அறிய விரும்புவோர் முன்னதாகவே கடிதம் மூலமாகவோ ஆஸ்ரமத்தில் நேரிலோ கேட்டுப் பயன்பெற வேண்டுகிறோம்.
திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவல மஹிமை
சொல்லவும் பெரிதே திருஅண்ணாமலை கிரிவல மஹிமை! கடந்த நான்கு ஆண்டுகளாக ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழில், சித்புருஷர்கள் அருளியபடி, திருஅண்ணாமலை கிரிவல மஹிமையைப் பற்றி இறையருளால் விளக்கி வருகின்றோம். ஆனால் இன்றும் ஸ்ரீநந்தீஸ்வரரே அருணாசல மஹிமையை விவரித்திட இதனை ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு எழுதி வருகின்றார் என்றால் அவர்கள் முன் நாம் எம்மாத்திரம்! அருணாசல மஹிமையென்பது தேவாதி தேவர்களுக்கும் தெய்வமூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டதாக விளங்குகின்றது. திருஅண்ணாமலை எத்தனையோ கோடி சித்புருஷர்களும், ஞானிகளும், மஹரிஷிகளும், யோகிரும் எப்போதும் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்ற புனித பூமி! பௌர்ணமியன்றோ கோடானு கோடி லோகங்களிலிருந்து பித்ருக்களும், தேவர்களும், கந்தர்வர்களும், பத்னி தெய்வங்களும் கூடி சர்வேஸ்வரனை, திருஅண்ணாமலையானாக வடிவு கொண்டுள்ள பரம்பொருளை வலம் வருகின்ற தெய்வீக பூமியிது.
பூலோகத்தில் மட்டுமின்றி சர்வலோகங்களிலுமுள்ள சகல மூலிகா சக்திகளும் திரண்டிருக்கும் புனித மாமலை திருஅண்ணாமலை. நாம் அறிந்தது ஒன்பது நவரத்தினங்கள் மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கான தெய்வீக சக்திகள் நிறைந்த கற்கள் திருஅண்ணாமலையில் உள்ளன. இக்கற்களின் ஒளியை மட்டும் உண்டு வாழ்கின்ற சில மூலிகைகளும் உண்டு. ஆனால் அம்மூலிகைகளோ அரிய தெய்வீக சக்திகள் கூடிய ஒளிச் சக்தியைத் தம்முடைய வளர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. பௌர்ணமியில் வீசுகின்ற ஒளியின் சக்தியை மேலும் பரப்புகின்றன அச்சமயம் கிரிவலம் வருபவரின் உடலில் அத்தெய்வீக ஒளிச்சக்தி பட்டு பல அனுக்கிரஹங்களைத் தருகின்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் விதவிதமான தெய்வீக சக்திகள் வெளிப்படுகின்றன. பல மகரிஷிமார்கள் தங்கள் தவத்தை நிறைவு செய்வதற்காக இங்கு கிரிவலம் வருகின்றனர். வெளிப் பார்வைக்கு குறிப்பிட்ட அடி உயரமாகத் தோன்றிடினும் உண்மையில் உச்சியானது பலகோடி லோகங்களையும் தாண்டிச் செல்கின்றது. திருஅண்ணாமலையின் உட்பகுதியிலோ அனைத்து அண்டங்களும் அடங்கியுள்ளன. ஸ்ரீரமண மகரிஷி தரிசித்த கல் ஆல இலையைப் பற்றி நாம் அறிவோம். ஸ்ரீதட்சிணாமூர்த்தி தியானம் செய்கின்ற கல்லால் மரமே இங்கு அமைந்துள்ளது என்றால், இதன் பெருமையை என்னென்று உரைப்பது! ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் குறித்த சில தெய்வீக சக்திகள் வெளிப்படுகின்றன.

மார்கழி பௌர்ணமி மகிமை

மார்கழி மாதப் பௌர்ணமி மஹிமை :-
சித்புருஷர்கள் பல பரிபாஷைகளில் ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் திருஅண்ணாமலையிலிருந்து வெளிப்படுகின்ற தெய்வீக சக்திகளைப் பற்றி  விளக்கியுள்ளனர். சுயநலமின்றித் தியாக உணர்வுடன் மக்கள் சேவையே மஹேசன் சேவையாக அன்னதானம், ஏழைகளுக்கான இலவச மருத்துவ உதவி, ஆடைதானம், வித்யாதானம் போன்ற இறைப் பணிகளில் ஈடுபடும் பொழுதே இப்பரிபூரண சக்திகள் கிட்டும். எனினும் தெய்வீக, ஆன்மீக உயர் நிலைகளுக்கான பலன்கள் மட்டுமின்றி நம்முடைய லௌகீக வாழ்க்கைக்காகவும், முறையான விருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் இவை உதவுகின்றன.
சித்தர் பரிபாஷை :- மார்கழி மாதத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் கிட்டும் தெய்வீக சக்தி பற்றி,
“செஞ்சாந்து துர்கைக்குக் கிழக்கே
மூஷிகை சிகரத்தில் முனிபுங்கவப் பள்ளம்
நாலிதழில் மலரும் நல்லதோர் மலர்
வாயுத் துளியுண்டு கவிழ்நிலை கூட்டிடவே
ஆயகல் ஒன்று அத்தனையும் தந்திடுமே”
என்ற பரிபாஷைப் பாடல் மார்கழியில் மலர்கின்ற ஜோதிமணி மூலிகையைப் பற்றி சிறப்புற வர்ணிக்கின்றது. அதாவது மார்கழி மாத பௌர்ணமி தினத்தில் திருஅண்ணாமலையில் துர்கை சந்நிதிக்குக் கிழக்கே உள்ள மூஷிக (மூஞ்சூறு) வடிவத்தில் உள்ள மலைக் குன்று அருகே மகரிஷிகள் யோக நிலையில் ஆழ்ந்திருக்கின்ற பள்ளம் ஒன்று உண்டு. இதில் வானை நோக்கி நான்கு இதழ்களுடன் விரிந்திருக்கும் ஜோதிமணி மூலிகையானது மார்கழிப் பௌர்ணமியில் குறித்த ஒரு ஹோரை நேரத்தில் வீசுகின்ற காற்றை மட்டும் சுவாசித்து திருஅண்ணாமலை உச்சியிலிருந்து தெளிக்கின்ற ஒரு நீர்த்துளியை உண்டு மலர்ந்து கவிழ்கின்றது. இப்புனிதமான நீர்த்துளியானது ஜோதிமணியாக மாறுகின்றது. அப்போது மலையிலிருந்து  வீசுகின்ற ஸ்ரீதனக் காற்றானது ஜோதிமணியைத் தழுவி அதனுடைய தெய்வீக அம்சங்களுடன் கிரிவலம் வருகின்ற உத்தமர்களை அடைகின்றது.
கயிலாயத்திலிருந்து சாமகண்ட சடையர்கள் என்ற உத்தம மகரிஷிகள் திருஅருணாசலத்திற்கு வந்து ஜோதி மணியின் பிரகாசத்தை ஸ்ரீதனக்காற்று மூலம் பெற்று இச்சக்தியோடு மார்கழிப் பௌர்ணமி அன்று பௌர்ணமி திதி இருக்கும் காலம் முழுவதும் மூன்று முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தவாறு இருக்கின்றார்கள். ராஜயோகிகளான இவர்கள் மணிமாதி என்னும் சூட்சும சரீரத்தைப் பெற்றிருப்பார்கள். இவர்களே ஜோதிமணி மூலிகைக்கான அதிபதிகளாவர். அவர்கள் மூன்றாவது முறை கிரிவலம் வருகையில் தான் ஜோதிமணியானது அவர்கள் தாங்கி வருகின்ற அட்சய பாத்திரத்தை அடைகின்றது. ஸ்ரீஅன்னபூரணி லோகத்திலிருந்து பெறப்பட்ட இம்மகரிஷிகள் தாங்குகின்ற அட்சய பாத்திரமானது கீசுகி பர்யந்தம் என்னும் அற்புதமான கல்லால் ஆன திருவோடு ஆகும். பிரம்மனுடைய கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு சிவபெருமான் காசியில் ஸ்ரீஅன்னபூரணியிடமிருந்து யாசித்து உணவைப் பெற்றார் அல்லவா! அப்போது சிவன் தம் கையில் தாங்கியிருந்த பிரம்ம கபாலமே கீசுகி பர்யந்த திருவோடாக மாறிற்று. சாமகண்ட சடையர்களான மகரிஷிகள் தாம் உலகெங்கும் அன்னதானம் செய்யும் இடங்களிலெல்லாம் பிரசன்னமாகி இவ்வரிய திருப்பணியைச் செய்வோர்க்கு அருள்பாலிக்கின்றனர். ஜோதிமணியைத் திருஅண்ணாமலையிலிருந்து மார்கழி பௌர்ணமியன்று பெறும் பாக்கியம் பெற்ற சாமகண்ட சடையர்கள் ஜோதிமணியை கீசுகி பர்யந்த திருவோட்டில் உராய்த்து அதன் துளிகளைக் கிரிவலம் எங்கும் உள்ள பாலுள்ள மரங்களிலும் (உதாரணமாக ஆல், அரசு , வேம்பு etc….) ஹோம சமித்துக்குரிய மரங்களிலும் (புரசை, வன்னி, நாயுருவி, etc…) தீர்த்தங்களிலும் சேர்க்கின்றனர். மார்கழிப் பௌர்ணமியில் குறிப்பிட்ட தீர்த்தங்களில் நீராடியோ அல்லது நீரைத் தலையில்  தெளித்துக் கொண்டோ சாமகண்ட சடையர்களைத் தியானித்து வழிபட்டிடில் பல அனுக்கிரக சக்திகள் கிட்டுகின்றன.

ஜோதிமணி தீர்த்த ஸ்பரிச பலன்கள்
மார்கழிப் பௌர்ணமியன்று ஜோதி மணியின் தெய்வீக சக்திகள் ஏற்றப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கும் அல்லது நீரைத் தலையில் தெளித்துக் கொண்டவர்களுக்கும் அன்றைய தினம் கிரிவலப் பாதையிலுள்ள அரசு, ஆல் போன்ற ஹோம சமித்துக்குரிய மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, கொம்பு மஞ்சள் கட்டிய சரடு சுற்றி வலம் வந்து வணங்கிடுவோர்க்கும் எந்த லோகத்திலும் கிட்டாத பல அரிய பலன்கள் கிட்டுகின்றன.
1. மறதியால் தொலைந்த, இழந்த செல்வம், பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை முறையாக மீண்டும் பெறுகின்ற வாய்ப்பு கிட்டும்.
2. பல ஆண்டுகளாகக் காணாமல் போனவர்களைப் பற்றிய நல்விவரங்கள் கிடைக்கும்.
3. அன்னதானத்திற்கு ஈடான தான தர்மம் எதுவும் இல்லை. ஆனால் வறுமையாலும், செல்வமிருப்பினும் குறுகிய மனத்தாலும், நம்பிக்கையின்மையாலும், அசிரத்தையாலும் பலர் அன்னதான கைங்கர்யத்தில் ஈடுபடுவதில்லை. காக்கை, பசு, எறும்புக்குக் கூட ஈயாத புல்லர்கள் இவ்வுலகத்தில் உண்டு. ஆனால் பலரோ தங்களிடம் பண வசதி, ஆன்மீக வழிகாட்டி இல்லாமையால் அன்னதானத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். உடலால், மனதால் செய்கின்ற பல பாவங்களுக்கு எளிய முறையில் பிராயச்சித்தம் தருவதே அன்னதானமாகும்.
மேற்கண்ட அனைத்து வகையினரும் அன்னதானத்தின் மகிமையை உணர்வதற்கும், அன்னதானம் செய்வதற்குத் தேவையான மனப்பக்குவமும் மற்றும் இதர வசதிகளைப் பெற்றுத் தருவதே ஜோதி மணிச்சுடரின் பலாபலன்களாகும்.
4. பலருக்கு ஜோதி தத்துவத்தில் ஈடுபாடு உண்டு. இவர்களும் யோக, ஞான, தாந்திரீக , மாந்திரீக முறைகளில் ஈடுபாடுள்ளோரும் குரு அருளுடன் உத்தம நிலைகளைப் பெற மார்கழிப் பௌர்ணமி கிரிவலமே மிகச் சிறந்ததாகும்.
5. Ozone எனப்படும் நல்வீரியக் காற்றணுக்கள் கலியுகத்தில் குறைந்து வருகின்றன. ஆனால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உகந்த மார்கழியில் தான் Ozone கதிர்கள் விண்வெளியில் நிறைந்து பரவிக் கிடக்கின்றன. ஜோதிமணி போன்ற மூலிகை விருட்சங்கள்தான் Ozone கதிர்களை ஈர்த்துத் தாங்கிப் பிரதிபலிக்கும் தன்மை பெற்றவை. பெட்ரோல், புகை இரசாயனப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்றவற்றால் சுற்றுப்புற சூழ்நிலையே குறிப்பாக நகரங்களில் பரவெளியே மாசுபட்டு விஷசக்திகள் சேர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம். விஞ்ஞானப் பூர்வமாகவே விண்வெளியின் Ozone அடுக்கு விரிசல் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் நகரத்தில் வாழ்வோர் கண்டிப்பாக மார்கழியில், குறிப்பாக மார்கழிப் பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவார்களேயானால் ஜோதிமணி ஸ்பரிச தீர்த்தத்தால், விருட்ச பூஜைகளால், (நகரங்களில் கிட்டாத) Ozone எனப்படும் ஆரோக்கியமான கதிர்களை எளிதில் பெற்றிடலாம்.
Ozone  என்று நாம் ஆங்கிலத்தில் கூறுகின்றோமே தவிர உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கின்ற தேவ மூர்த்திகளான அஸ்வினி தேவர்களின் தேஜோமயமான திவ்ய ஒளியையே, ஸ்வயம்பிரகாச சக்தியையே ஓஸோன் என்று அழைக்கின்றோம். மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (காலை 3 முதல் 5 மணிவரை) செய்யப்படுகின்ற அக்னி ஹோமங்களுக்கு Ozone கதிர்களின் சக்தியைப் பெற்றுத் தரும் வல்லமை உண்டு.
6. நமக்கு தினமும் அன்னத்தை அளிப்பவள் ஸ்ரீஅன்னபூரணியே, நம்முடைய மூதாதையர்கள் பரந்த மனப்பான்மையுடன் செய்த அன்னதானத்தின் பலன்களால் தான் நாம் இன்று மூன்று வேளையும் வயிறார உணவு உண்ணுகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. எங்கெங்கோ அலைந்து திரிந்து, கண்ட இடங்களில் உணவை உண்பதால்தான், நோய்களும் , தீவினைக் கர்மங்களும் சேர்கின்றன. எனவே ஒவ்வொரு முறையும் உணவு உண்ணு முன், ஸ்ரீஅன்னபூரணியைத் தியானித்து, நன்றிப் பிரார்த்தனை செலுத்திய பின்னர்தான் உணவை உண்டிடல் வேண்டும். திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற அடியார்களுக்கு உணவளிக்கின்ற கைங்கர்யம் பல பெறற்கரிய  புண்ணிய சக்தியையும், பெரியோர்கள் ஆசியையும், பித்ருக்களின் ஆசிர்வாதத்தையும் எளிதில் பெற்றுத் தருகின்றது. இதற்காக ஸ்ரீஅன்னபூரணியின் அருட்கடாட்சத்தைப் பெறவும், வறுமை நீங்கவும் சாமகண்ட சடைய மகரிஷிகளின் திருக்கரங்கள் பட்ட கீசுகிபர்யந்த அட்சய பாத்திரத்தின் பரிபூரண சக்தியைப் பெற்று அன்னதான வாய்ப்புகள் கிட்டிடவும் மார்கழி பௌர்ணமியில் அருணாசல கிரிவலமே உத்தமமானதாகும்.
அருணாசலத்தில் அற்புத மஹா சிவராத்திரி
திருஅண்ணாமலை தந்த புனிதப் பெருஞ்சித்புருஷராம் ஸ்ரீரமண மஹரிஷி தம்முடைய திவ்யமான மொழிகளில் ஸ்ரீஅருணாசல மஹாத்மியமாக, “மாசற்ற தனிபெருஞ்ஜோதியை” தேவர்களும், மஹரிஷிகளும், தரிசித்த நாளே மாசிமாத மஹாசிவ ராத்திரியெனப் போற்றுகின்றாரெனில் என்னே மஹா சிவராத்திரியின் மஹிமை! வந்து சென்ற மஹா சிவராத்திரிகள் ஒன்றா, இரண்டா அதன் மஹிமையினை விண்டுரைக்க! கோடிக்கணக்கான யுகங்கள் கண்டு ஆனந்தித்த பல கோடி கோடியாம் மஹாசிவராத்திரிகளில் நிகழ்ந்துள்ள எத்தனையோ நாம் அறிந்த, அறிந்திராத புராணப் பெரும் நிகழ்ச்சிகளை எடுத்துரைக்க யுகங்கள் போதா! இதனை விண்டவர் கண்டவர் விண்டிவர். திருஅண்ணாமலை திருக்காளஹத்தி, மேருமலை, இமாலயம், கைலாயம், திருவிடைமருதூர், இராமேஸ்வரம் , கேதாரம் போன்று எத்தனையோ திருத்தலங்களில் சென்ற இதழில் (பிப்ரவரி’1997 ஸ்ரீஅகஸ்திய விஜயம்) ஓரளவு விளக்கியுள்ள வரையில் நிகழ்ந்த, நிகழ்ந்து வரும் மஹா சிவராத்திரி இறை லீலானுபவங்கள், மஹாத்மியங்கள் எத்தனை, எத்தனை! சர்வேஸ்வரனே திருஅண்ணாமலையாக வீற்றிருக்கும், பூவுலகின் மிகப் பெரிய லிங்க மூர்த்தியாகத் திகழும் அருணாசலத்தில், மஹாசிவராத்திரியைக் கொண்டாடும் பேறு கிட்டிடில் அதைவிட வேறு எந்தப் பெரும்பாக்யமும் உளதோ!
தினமுமே மஹரிஷிகளும், யோகியரும், மூமுட்சுக்களும், ஞானியரும், சித்புருஷர்களும் கிரிவலம் வருகின்ற உத்தம பூமியே திருஅண்ணாமலை! கார்த்திகைத் திருநாளிலோ பல கோடி அண்டங்களிலிருந்தும் அனைவரும் திரள்கின்ற திருத்தலமே திருஅண்ணாமல , மாசி மாத மஹா சிவராத்திரியன்றோ பிரபஞ்சமெங்குமுள்ள உத்தம அடியார்கள். மேற்கண்ட இறைப் பெருஞ்சீலர்கள் குழுமி, கிரிவலம் வந்து தங்களுடைய பேரின்பத்தை, அருட்திரட்சியை வழங்குகின்ற புனிதப் பெருந்தலமே திருஅண்ணாமலை! மஹாசிவராத்திரியன்று மக்களோடு மக்களாய், மனித உருவம் மட்டுமின்றி ஏதேனும் வடிவெடுத்து நம்முடன் கிரிவலம் வருகின்ற உத்தமத் திருச்செல்வர்களோடு திருவுலா வருகின்ற பாக்யத்தை நாம் பெற எத்தகைய தவம் செய்திருக்க வேண்டும்? எப்போதும் எந்நேரமும் எங்கும் இறைச் சிந்தனையில் திளைக்கின்ற அவர்களுடைய திருப்பாதங்கள் பட்ட தூசி நம்மை உரசினால் கூட போதுமே! அவர்களுடைய தெய்வத் திருமேனியில் பட்ட காற்று நம்மைத் தீண்டினாற் போதுமே, நம் பாவ வினைகள் கரைந்திடுமே!
பத்மாசனப் பிரதட்சிணம் :-
சித்புருஷர்களும், மஹரிஷிகளும், யோகிகளும் எத்தனையோ விதமான அருணாசல கிரிவல முறைகளை நமக்கு அருளியுள்ளனர். நம் அங்கங்களாலும், எண்ணங்களாலும் நாம் தினந்தோறும் சேர்த்துக் கொள்கின்ற தீவினைகள் எத்தனையெத்தனை? முறையற்ற காம எண்ண ஓட்டங்களினிடையே சிக்குண்டு பொய், புரட்டுகளுடன் வாழ்ந்து, லஞ்சம், நயவஞ்சகம், பிறரை ஏமாற்றுதல், திருட்டு, பிறர் சொத்துகளைக் கவருதல், கோயில் சொத்துக்களைக் குறைந்த தொகையில் அனுபோகம் செய்தல், தனக்கென தன் குடும்பத்திற்கெனச் சுயநலமாக வாழ்தல், வெறும் பணம், சொத்துகள் சேர்த்து எவருக்கும் பயன்படாது வாழ்தல் – இவ்வாறாகத் தவறிழைக்காது எவர்தாம் உண்மையாக வாழ்கின்றனர்? இவற்றிற்குப் பரிஹாரமாகவே மஹாசிவராத்திரி போன்ற புண்ய சக்தியும், அருட்சக்தியும், தெய்வீக சக்தியும் பெருக்கெடுக்கின்ற நாட்களில் செய்ய வேண்டிய நற்காரியங்களைச் சித்புருஷர்கள் அருளியுள்ளனர். இவற்றை முறையாக கடைப்பிடித்திடில் மேற்கண்ட தீவினைகள் மட்டுமல்லாது சொல்லொணாப் பாவங்களும் தீருகின்றன.
மஹா சிவராத்திரிக்குரிய விசேஷ பூஜைகளுள் ஒன்றாக யோகியரும், சித்புருஷர்களும் அருளுவதே பத்மாசன கிரிவலப் பிரதட்சிணம் இது. ஹடயோகத்திற்குரிய சக்திகளைத் தரவல்லதாம். சனி மஹாதசையால் பீடிக்கப்பட்ட நள மஹா சக்ரவர்த்தியும், பீதாம்பர ஸ்வாமிகள் போன்ற ஹட யோகிகளும் கடைபிடித்த கிரிவலமுறையே பத்மாசன கிரிவலப் பிரதட்சிணம்!
விருட்ச யோக தாரணப் பலன்கள் -
1. ஹடயோகியர்களும், ஹடயோகம் பயில்வோரும் மஹாசிவராத்திரியன்று பத்மாசன முறையில் அமர்ந்தவாறே திருஅண்ணாமலையை முழுவதுமாக வலம் வர வேண்டும்.
2. சாதாரண மக்களுக்கு கிரிவலம் முழுதும் பத்மாசன முறையில் அமர்ந்து நகர்ந்து வருதல் மிகமிகக் கடினமென்பதால் சில எளிய பத்மாசன கிரிவல விதிகள், மஹாசிவராத்திரியின் பூர்ண பலன்களைப் பெறுவதற்காக அளிக்கப்படுகின்றன. தெற்கு கோபுரம் அருகே, பிரம்ம லிங்கம் அருகே உள்ள பெரியவிருட்சத்தின் அடியிலிருந்து பத்மாசனப் பிரதட்சிணத்தைத் தொடங்குதல் வேண்டும். பல மஹான்களும், யோகியரும் பத்மாசன நிலையில் தவம் பூண்ட புனித மரம் இது! இங்கிருந்து மலையைத் தரிசித்துக் கிரிவலத்தை தொடங்கி்டுக!
3. பத்மாசனமிட்டு, ஆசன நிலையிலிருந்து மாறாது கைகளை மட்டும், உட்கார்ந்த நிலையிலேயே தரையில் ஊன்றி நகர்தல் வேண்டும். சாதாரண மனிதர்கள், குறைந்தது 30 அடி தூரமேனும் தொடர்ந்து இப்பத்மாசனமுறை கிரிவலம் செய்திடல் வேண்டும். தர்பைப் பாய், கோரைப் பாய், வெள்ளைப் பாய், பருத்தித் துணி விரித்து அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து நகர்ந்தவாறு சென்றிடலாம்.
4. முதல் கட்டமான இதனால், ஹடயோகியர்க்குக் குண்டலினி முறை மாறாது நன்கு யோக வாசிகள் அமையும். விருட்ச யோக தாரணைப் பலனாகச் சாதாரண மக்களுக்கு இதனால் வீடு, நிலபுல பாக்யங்கள் கிட்டும். பிள்ளைகள், பெண்களுடன் உள்ள சச்சரவுகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
5. ஏனையோர் ஒவ்வொரு கட்டத்திலும் குறைந்தது 30 அடி தூரம் பத்மாசன முறை கிரிபிரதட்சிணத்தை மேற்கொண்டு, பிற இடங்களில் அடிப் பிரதட்சிணம், சாதாரண நடைப் பிரதட்சிணம் ஆகியன மேற்கொண்டிடலாம்.
2.  இரண்டாவது கட்டம் தெற்கு கோபுரத்திலிருந்து நேராக உள்ள வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் சந்நதியிலிருந்து தொடங்குகிறது. இங்கு பத்மாசன கிரிவல முறை பலனாகச் “சுக்த கண்டயோக தாரணை” கிட்டுகின்றது . ஹடயோகியர்க்கு இதனால் மூலாதாரச் சூடு, தேகப் பரிமாணத்திற்கு ஏற்றவாறு தணிந்து உடலுக்கு ஆன்மீக பலத்தை அளிக்கும். ஏனையோர்க்கு தந்தைக்கு, தாய்க்கு முதலில் உணவிடாது தான் உண்டதால் விளையும் சாபங்கள் தணியும், பெற்றோர்க்கு இழைத்த அநீதிகளால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.
3. மூன்றாவது  கட்டம் பெங்களூர் சாலை தொடங்கும் கூட்டு ரோடில் துவங்குகிறது. இதனால் ஏற்படும் சடசந்தியோக தாரணைப் பலன்களால்....
அ). ஹடயோகியர்க்கு மூலாதார அதிசூடு ஜோதிப்பிழம்பாக வெள்ளை நரம்பு வழியாக மேற்செல்ல, உரிய யோக வாசிகள் தானாகவே அமையும். யோகநித்திரையின் அடிப்படைப் பயிற்சி தொடங்கும் பருவமிது!
ஆ). ஏனையோர்க்கு நெருப்பை அறிந்தோ அறியமலோ வாயால் ஊதிய சாபங்கள் தீரும்.
இ). புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட இம்மூன்றாவது கட்டத்தில் பத்மாசனப் பிரதட்சிணம் நல்வழி காட்டும்.
ஈ.) இவ்விடத்திலிருந்து பத்மாசன முறையில் மலையைத் தரிசனம் செய்திடில் கிட்டுவது “அக்னி துருவ தரிசனம்.”
உ). புகைபிடிப்பதால் வரும் “பிரகண்ட தோஷத்தினால்” விளையும் தீவினைகள், தோஷங்கள், சாபங்கள் எத்தனையெத்தனையோ! இதையுணர்ந்து இனியேனும் பரிஹாரம் தேடிடுக!
4. நான்காவது கட்டமாக பத்மாசன கிரிவலம் அரசுப் பள்ளி அருகேயுள்ள மேற்கு கோபுரத்திலிருந்து வரும் சாலை கூடுகின்ற இடத்தில் உள்ள பழைய மண்டபத்திலிருந்து தொடங்குகின்றது. ஹடயோகியர் இதனால் ஏற்படும் குந்தளயோக தாரணைப் பலன்களாக எண்ணக் கட்டுப்பாடுகள் இயற்கையாகவே அமைகின்ற கரங்களின் உதவியின்றித் தானாகவே வாசி மாற்ற யுக்திகள் கிட்டுகின்றன. ஏனையோர்க்கு “ஒவ்வாமை” (Allergey) நோய்களுக்கு நிவாரணமும், பிறர் சொத்துகளை அபகரித்து அனுபோகம் செய்வதால் ஏற்படும் ரவ்யசம்வர்தன தோஷங்களையும் நிவர்த்தி செய்யும், சொத்தை இழந்தோர்க்குத் தக்க நிவாரணங்களை அளித்திட வேண்டும்.
வினா : மேற்கண்ட தரிசனங்களுக்கு எவ்வாறு இத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன?
விடை : மனிதனுடைய ஒவ்வொரு பாவத்தையும் நிவர்த்தி செய்வதற்கான நல்வழிகளைக் காண, பல்வேறு மஹரிஷிகள் கிரிவலத்தின் நோக்கி அமர்ந்து ஆழ்ந்த தவம் புரிந்தமையால் அந்தந்த தரிசனப் பகுதி குறித்த பாவதோஷங்களுக்கான பரிஹாரங்களைத் தரவல்லவையாம்!

ஐயர்மலை மகிமை

அய்யர்மலை ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் மஹிமை
குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும், ஏனையோர்க்கும் வயிறு முட்டப்பால் குடித்தது போன்ற திருப்தி ஏற்படவே, அவர்கள், “இவன் சாதாரணச் சிறுவன் இல்லை., இதில் ஏதோ விஷயம் இருக்கிறது,” என்று நினைத்தனர்.. பிள்ளையாரிடம், “தம்பி உன் பெயரென்ன ? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டனர்
“அடியேன் இரத்தினகிரி ஈசனின் அடிமை!” இதைக் கேட்டதும் வணிகர்கள் பேருவகை உற்றனர். “அடேயப்பா! இரத்தினகிரி ஈசன் இங்குதான் இருக்கிறாரா? அவரை வணங்க வேண்டுமே!” என்று கூறி, இரத்தினகிரி இருக்கும் இடத்தைக் காட்டும்படி பிள்ளையாரிடம் வேண்டினர்.
“இதோ! மேலே உயரமான மலை இருக்கிறதே, அதுதான் இரத்தினகிரி, வாருங்கள், அனைவரும் ! இரத்தினகிரி ஈசனைத் தரிசனம் செய்வோம்!” என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் சிறுவன் முன்னே சென்றான்.. நூற்றுக்கணக்கான ரதங்களும், மாட்டு வண்டிகளும், குதிரைகளும் வியாபாரப் பொருட்களைச் சுமந்தவாறே  அவர் பின்னே தொடர்ந்து  மலையடிவாரத்தை அடைந்தன. இவ்வளவு வியாபாரப் பொருட்களையும் பார்த்தான் மாறவர்மன், தன் கூட்டத்துடன் அவர்களிட நெருங்கி, “எல்லோரும் உங்களிடம் இருக்கும் பொருட்களையெல்லாம் கொடுத்து விடுங்கள்”, என்று உத்தரவிட்டான்.. எல்லா வியாபாரிகளும் நடுங்கி என்ன செய்வதென்று அறியாமல் பிள்ளையார்ச் சிறுவனை நோக்கினர்.

ஸ்ரீபாலூட்டி விநாயகர்
ஐயர்மலை

பிள்ளையார்ச் சிறுவனும் அமைதியாக மாறவர்மனிடம், “உன்னால் முடிந்தால் அனைத்தையும் நீயே வந்து எடுத்துக் கொள்!” என்றான்.. நூறு குதிரைத் திருடர்களும் கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்களால் குதிரையை விட்டு கீழே இறங்க முடியவில்லை. குதிரைகளும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை!.
பிள்ளையார் வணிகர்களிடம்,”நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தைரியமாகப் புறப்பட்டு மேலே செல்லுங்கள். அதற்குமுன் இங்கு அடிவாரத்தில் இருக்கும் பாலூட்டிப் பிள்ளையாரிடம் அடைக்கலம் அடைந்தால் அவர் உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார்” என்று கூறினார். எல்லா வியாபாரிகளும் பாலூட்டிப் பிள்ளையாரின் திருச்சந்நதியை அடைந்தனர். பிள்ளையாரைத் தரிசித்தவுடன் எல்லோரும் தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தார்கள்.. ஆனால் எல்லோருக்கும் தாகம் பசி ஏற்பட்டு வாடினர்... ஆனால் பிள்ளையார்ச் சிறுவனைக் காணாமல் ஏங்கினர். குதிரையிலிருந்து இறங்க முடியாமல் போகவே திருடர்கள் பயந்து அங்கிருந்து ஓடி விட்டார்கள்.. பசி, தாகத்தால் வாடும் வியாபாரக் குடும்பத்தாரைச் சிறுவன் அழைத்து., “எல்லோரும் பிள்ளையாரை வேண்டுங்கள்.. அவர் உங்களுக்குத் தேவையானதை அளிப்பார்”, என்று கூறவே அனைவரும் பாலூட்டிப் பிள்ளையாரிடம் மனமுருகிப் பிரார்த்தித்தனர்..,
பிள்ளையார் தந்தங்களிலிருந்து பால் வழிய ஆரம்பித்தது! இரண்டு தந்தங்களிலிருந்தும் வழிந்த பாலைக் குடங்களில் நிரப்பி அனைவரும் அருந்தி தேவாமிர்தம் உண்டது போல் பேருவகை அடைந்தனர்., பிள்ளையார்ச் சிறுவனும் பாலூட்டிப் பிள்ளையார் சந்நதியில் நுழைந்து பிள்ளையாரோடு ஐக்யமானான். அப்போது தான் வியாபாரிகள் நம்மைக் காக்க சிறுவனாக வந்தது பிள்ளையாரே என்றறிந்து ஆனந்தமடைந்தனர்.
பாலூட்டிப் பிள்ளையாருக்குப் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால்தானம் அளித்திட..,
1. இழந்த செல்வத்தை திரும்பப் பெறலாம்.
2. பொருட்கள் திருடு போகாமல் இருக்கும்
3. காணாமல் போனவர்கள் திரும்பி வர, இறையருள் கூடிவரும்.
கருப்பண்ண சுவாமி தரிசனம்
அய்யர்மலை கிரிவலத்தின் அடுத்த கட்டமாகப் பாலூட்டிப் பிள்ளையாரைத் தரிசித்தபின் அடிவாரத்தில் கருப்பண்ண சுவாமியைத் தரிசிக்க வேண்டும் இரத்தினகிரி முழுமையையும் காக்கின்ற தெய்வம் இவர். இவருக்குக் கரும்புச் சாறு நைவேத்தியம் வைத்து, “சுவாமி! இரத்தினகிரியை வலம் வரும் எனக்கு வழித்துணையாய் தாங்கள் வர வேண்டும்!” என்று பிரார்த்திக்க வேண்டும்.

ஏன் கரும்பு சாறு நைவேத்தியம்?
இரத்தினகிரியில் நம்பிநாதன் என்று பொற்கொல்லர் ஒருவர் இருந்தார். அவர் தான் செய்கின்ற பொன் ஆபரணங்கள் எல்லாவற்றையும் கருப்பண்ண சுவாமியின் திருவடிகளில் வைத்துப் பூஜை செய்து, யார் யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்து விடுவார்.. அவ்வாறிருக்குபோது, ஒரு முறை ஒரு பெரிய வியாபாரி நிறைய நகைகள் செய்து கொடுக்கும்படி நம்பிநாதனிடம் சொல்ல, அவரும் நகைகளைச் செய்து முடித்துக் கருப்பண்ண சுவாமி திருவடிகளில் சமர்ப்பித்து அந்த தனவந்தரிடம் கொடுத்தார்.. நகைகளைச் சரிபார்த்த தனவந்தர் சில நகைகள் குறைவதைக் கண்டார். நம்பிநாதன் தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றும் எல்லா நகைகளையும் தாம் செய்து கொடுத்ததாகவும் கூறினார். தனவந்தர் பொற்கொல்லரைத் தண்டிக்க எண்ணி அரசனிடம் கூட்டிச் சென்றார்.

நவசாளரங்கள்
ஐயர்மலை

ஸ்ரீரத்தினகிரீஸ்வரர்
ஐயர்மலை

வழக்கை விசாரித்த அரசன், “நீ திருடவில்லை என்பதற்கு யார் சாட்சி?”
“கருப்பண்ண சுவாமிதான் சாட்சி!” என்று நம்பிநாதன் பதிலுரைத்தார். அதைக் கேட்ட அரசன், சிரித்து, “நீ திருடவில்லை என்பதற்குக் கருப்பண்ண சுவாமிதான் சாட்சி என்றால் உனக்காகச் சாட்சி சொல்ல அவரை நீ இங்கு வரவழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக இந்தத் தங்கக் குவளையில் கரும்புச் சாற்றை வரவழைக்கச் சொல். அதுபோதும், நாங்கள் அவரே சாட்சி சொன்னதாக ஏற்றுக் கொள்வோம்!” என்று அறிவித்தான்..
பொற்கொல்லருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி, அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார், “கருப்பண்ண சுவாமி! எங்கே அரசன் உன்னை அரசவைக்கு வரச் சொல்வானோ என்று அடியேன் பயந்து கொண்டிருந்தேன். நான் அழைத்தால் நீ நிச்சயம் வருவாய், ஆனால் உனக்குத் தகுந்த மரியாதை அளிக்காமல் அரசன் இருந்து விட்டால் என்ன செய்வது என்று தான் மனம் குழம்பி இருந்தேன். இப்போது அந்த கவலையில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க இந்தத் தங்கக் குவளையில் கரும்புச் சாற்றை வரவழைக்க வேண்டும் சுவாமி!” என்று மனமுருகி பிரார்த்தித்தார்..
மறுகணமே தங்கக் குவளையில் கரும்புச் சாறு பெருகி வழிந்தது. அனைவரும் கருப்பண்ண சுவாமியின் அருட்கடாட்சத்தை எண்ணி வியந்தனர். நம்பிநாதனுக்கு அவரிடம் இருந்த ஆழ்ந்த பக்தியைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஸ்ரீகருப்பண்ண சுவாமி தரிசன பலன்
எனவே தவறு செய்யாதவர்கள் தேவையில்லாமல் தன்மேல் வீண்பழி சுமத்தப்பட்டிருந்தால் கருப்பண்ண சுவாமிக்குக் கரும்புச் சாறு நைவேத்யம் வைத்து வணங்கினால் அவதூறு பழி விலகி விடும். இரத்தினகிரியை வலம் வரும் பக்தர்களுக்கெல்லாம் இரவு, பகல் எந்த நேரத்திலும் வழித்துணையாய் வந்து பாதுகாக்கிறார் கருப்பண்ண சுவாமி, எனவே கிரிவலம் வருபவர்கள் கருப்பண்ண சுவாமிக்குக் கரும்புச் சாறு நைவேத்யம் வைத்து அவரை வணங்கியே கிரிவலத்தைத் துவங்க வேண்டும்.. கிரிவலம் துவங்கியவுடன் நேரே கோயில் தெப்பக்குளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள படிக்கட்டுகளில் திசைக்கு இரண்டு அகல்கள் வீதம் எட்டுத் திக்குகளில் 16 அகல் தீபங்களை ஏற்றி வைத்து அங்கிருந்து இரத்தினகிரி ஈசரைத் தரிசனம் செய்து வணங்க வேண்டும். இந்தத் தரிசனத்திற்கு மயிற்பீலி முக தரிசனம் என்று பெயர்.

மயிற்பீலி முக தரிசனம்
ஐயர்மலை

மயிற்பீலி முக தரிசன மகிமை
ஸ்ரீஇராமபிரானுக்குத் தேரோட்டியாக இருந்தவர் சுமந்திரன் என்ற உத்தமர். இவர் தசரத மகாராஜாவுக்கு மந்திரியாகவும் இருந்தவர். தசரதர் 60,000 ஆண்டுகள் அயோத்தியை ஆண்டார். ஆனால் அவருக்கு முன்னரேயே கிருதயுகத்தில் பிறந்த சுமந்திரர் ஸ்ரீஇராம பிரான் அரசாண்டயுகத்தில் 99,999 ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு லட்சம் ஆண்டுகள் முடிவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே பாக்கியிருந்தன. அப்போது யமதூதர்கள் சுமந்திரரின் உயிரைப் பறித்துச் சென்று விட்டனர். சுமந்திரரின் ஜாதகத்தைக் கணித்து அவர் ஆயுளைக் கணக்கிட்ட போது, அவருடைய ஆயுள் ஒரு லட்சம் ஆண்டுகள் என்று தெரிய வந்தது. ஆனால் ஒன்பது நாட்களுக்கு  முன்னரே அவருடைய உயிரை யமதூதர்கள் எடுத்து விட்டால் அது தவறல்லவா? இந்தச் செய்தி சக்கரவர்த்தி ஸ்ரீஇராமபிரானுக்கு எட்டியது. இராமர் பெருங்கோபம் கொண்டார். இராம ராஜ்யத்தில் இப்படி ஒரு பழி வரலாமா?
உடனே இராமர் யமலோகத்திற்குச் சென்று முறையிட, யமனோ, “ஸ்ரீராமனே தன்னிடம் வந்து விட்டார்” என்ற கர்வத்தில் அவரை மதியாது “தான் செய்தது சரியே” என்று வாதிட்டார். ஸ்ரீஇராமர் சூரிய பகவானிடம் முறையிட, அவர் ஓடோடி வந்து யமனுடைய தவறை நிவர்த்தி செய்யாவிடில் சனீஸ்வரனுடன் சேர்ந்து தாம் யமலோகத்தை முற்றுகையிடுவதுடன் தம் தபோபலத்தினால் வேறு எம தர்ம ராஜாவினை உருவாக்குவதாகவும் கூறினார். இதனால் எமனின் கர்வம் நீங்கி தம் பிழையினை உணர்ந்து திருத்திக் கொண்டார். இதனால் பூலோகத்தில் சுமந்திரர் உயிருடன் எழுந்தார். அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஆயுள் முடியுமுன் அவர் உயிர்போன காரணத்தைக் குறித்துக் கேட்டனர். சுமந்திரர் பதிலுரைத்தார், “நான் என் வாழ்நாள் முழுமையையும் இறைவனைத் தியானிப்பதிலும், அவனுக்காகத் தொண்டு செய்வதிலும் கழிக்காமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் சேர்ந்து சிறிது காலம் பொழுதைக் கழித்தேன், இறைவனுக்காக வாழாத நாட்களின் விளைவால் என் ஆயுள் குறைந்தது”, என்றார் சுமந்திரர்.
“குறைந்த ஆயுள் மீண்டும் அளிக்கப்பட்டதேன்?” எனக் கேட்டபோது சுமந்திரர், “நான் இரத்தினகிரியைத் தரிசனமும், கிரிவலமும் செய்து அங்குள்ள தெப்பக்குளத்துப் படிக்கட்டுகளில் தீபங்கள் ஏற்றி சுவாமியின் மயிற்பீலி முக தரிசனம் பெற்றேன். அதனால் குறைக்கப்பட்ட ஆயுள் மீண்டும் எனக்கு அளிக்கப்பட்டது”, என்றார்.
எனவே முறையான மயிற்பீலி தரிசனம்
1. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் சேர்ந்து வீண்பொழுது போக்குதல், இறை சிந்தனையோ, இறைச் சேவையோ, மக்கள் சேவையோ செய்யாது நேரத்தைச் செலவிடல் போன்ற தவறுகளுக்கு உன்னத பிராயச்சித்தமாக அமைந்து நீண்ட ஆயுளைப் பெறலாம்.
2. கிடைத்த ஆயுட்காலத்தை இறைவனுக்காகவும், அவன் படைத்த உயிர்களுக்குச் சேவை செய்து கழிக்கவும். ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. நீண்ட ஆயுள் நல்கும் உன்னத தரிசனம் மயிற்பீலி முக தரிசனம்.
நீண்ட ஆயுள் என்பது மனிதப் பிறவியைப் பொறுத்தவரை மனிதனின் உடலைப் பூத உடலைப் பொறுத்து, பௌதிக உடல் இருக்கும் காலத்தைக் குறிப்பதால் இந்த ஒன்பது உடல்களின் தொகுப்பைக் குறிப்பதாக ஸ்ரீரத்தினகிரீஸ்வர ஈசனின் எதிரே அமைந்துள்ள நவசாளரங்கள் வழியே சூரிய பகவான் சிவராத்திரி நாட்களை ஒட்டி இறைவனுக்கு தன்னுடைய பொற்கிரணங்களால் தழுவி, அபிஷேகிக்து மகிழ்கிறார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் இரகசியமாகும். இத்தகைய சூரிய பூஜைகளின் போது நாமும் தேன், பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஆயுளை வளர்க்கும் திரவியங்களால் இறைவனை அபிஷேகித்து மல்லிகை, முல்லை, பவளமல்லி போன்ற ஆயுளை வளர்க்கும் மலர்களால் அர்ச்சித்து வழிபடுதல் என்பது அரிதிலும் அரிதான ஒரு பாக்யமே.

திருஷ்டி விளக்கங்கள்

திருஷ்டி – சில ஆன்மீக விளக்கங்கள்
திருஷ்டி என்பது பேராசை என்னும் தீய சக்தியின் பிரதிபலிப்பாகும் பொதுவாக உணவு, உடை ஸ்பரிசம் போன்றவை மூலமாக மட்டுமின்றி பார்வை, மந்திர ஏவுசக்தி, (தலைமுடி, நகம் உடை, ஸபரிசம்  போன்றவை மூலமாக மட்டுமின்றி பார்வை, மந்திர ஏவுசக்தி (தலைமுடி, நகம், உடை, உணவு போன்றவை மூலமாகவும் தீய சக்திகளை ஏவுதல்) இவ்வாறாகத்தான் தீய சக்திகள் நம்மைப் பாதிக்கின்றன. திருஷ்டி எனப்படும் பேராசையின் தீய பார்வை ஏற்படக் காரணங்களாவன :-
1. நம்மால் முடியாதவற்றைப் பிறர் முடிக்கின்றார்களே என்று ஏங்குதல்,
2. தியாக வாழ்க்கையில் ஈடுபடாது பொன், பொருள், மங்கை, வாகனம், நிலம் போன்றவற்றைப் பிறர் பெற்றுவிட்டார்களே என்று வயிற்றெரிச்சல்படுவது.
3. பரிசுத்தமான மனம் இல்லாது பிறருடைய வாழ்க்கை வசதிகளைப் பார்த்து மனம் பொங்குதல்,
4. தனக்கு எதுவும் கிட்டாவிடில் பிறருக்கு எதுவும் கிட்டலாகாது என்று எண்ணி தடையாகத் தீய காரியங்களைச் செய்தல்.
5. மற்றவருடைய பொருளை அடைந்து, அனுபவிக்க வேண்டும் என்ற விஷ எண்ணங்களுடனே எப்போதும் வாழ்தல்.
6. எவ்வளவோ வசதிகள் இருந்தும் அதை எண்ணி மகிழாது பிறர்போல் தான் அனுபவிக்க முடியவில்லையே எனப் பொறாமைப்படுதல்.
7. தான் அடைய வேண்டியதைப் பிறர் அடைந்துவிட்டார்களே எனத் தவறாக எண்ணி குரோத உணர்ச்சியுடன் வாழ்தல்.
8. உடலால், பொருளால் அடைய முடியாதவற்றை அசூயையான மனதால் அனுபவிப்பது.
9. பொன், பொருள், செல்வத்தால், உடல் வலிமையால் பிறர் மனதை வசப்படுத்தி முறையற்ற வழிகளில் ஆசைகளை அனுபவித்தல், எண்ணங்களைப் பூர்த்தி செய்ய விழைதல்,
10. எதையும் அனுபவிக்கத் துடித்தல் – இது மிகவும் பயங்கரமான விஷத் தன்மையுடைய திருஷ்டியாகும்.
11. பில்லி, சூன்யம் , ஏவல் மூலமாகப் பிறருக்குத் துன்பம் விளைவிப்பது.
12. பிரார்த்தனைகள் மூலமாகப் பிறருடைய அழிவிற்கும், துன்பங்களுக்கும் காரணமாதல்,
இவ்வாறாக, சந்த திருஷ்டி, திருஷ்ண திருஷ்டி, பரம திருஷ்ண திருஷ்டி, தீட்சண்ய திருஷ்டி, சகுபரம திருஷ்டி, சூன்ய கேந்திர திருஷ்டி, சாட்சி கரணி திருஷ்டி, பூத சிருஷ்டி திருஷ்டி, நேத்ர திருஷ்டி, பஞ்ச ப்ரேத நேத்ர திருஷ்டி என்றவாறாகத் திருஷ்டிகள் பலவகைப்படும். 

திருஷ்டியின் சக்தி :-
திருஷ்டியின் சக்தி என்றால் பொதுவாகப் பார்வையால் ஆக்குதல் என்று பொருள். திருஷ்டி சக்தி எனப்படும் பார்வை மூலமாக நல்லது தீயது இரண்டையுமே சாதிக்கலாம். உதாரணமாக, சற்குருவின் நேத்ர கடாட்சம் கிட்டவேண்டுமென்று கூறுகையில், சற்குருவானவர் தம் தீட்சண்யமான பார்வையினால் தம் யோக, தப, ஜப பலன்களைப் நமக்கு அளிக்கின்றார் என்று பொருள்.. கோயில்களில் உற்சவ மூர்த்திகள் உலா வருவதற்குக் காரணமே இறைவனின் அருளும், விக்ரஹ பூஜா, அபிஷேக ஆராதனை சக்திகளும், இறைப்பார்வையாக நம்மீது படவேண்டும் என்பதற்காகவே! எனவே முறையாக, சற்குருவின் அறவழியில் நடந்திடில் நம் பார்வையின் மூலமாக நற்காரியங்களைப் புரிந்திடலாம். அதெப்படி, வெறும் பார்வையினால் திருஷ்டி ஏற்படுகின்றது?
விஞ்ஞானப் பூர்வமாகக் கண்களால் கண்ணாடித் தம்ளரை உடைப்பதாக நாம் படித்துள்ளோம். ESP (EXTRA SENSORY PERCEPTION) என்ற அற்புத சக்தி மூலம் சுவருக்கு அப்பால் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற முடியும்.  வெறும் வாய்ச்சொல்லால் எத்தகைய பிரச்சனைகள் உண்டாகின்றன என நாமறிவோம்! கண்களின் சக்தியை அளவிடவா முடியும்? அது மட்டுமா! கண்கள் காண்கின்ற காட்சிகள் தாமே பெரும்பாலான நம்முடைய தவறுகளுக்குக் காரணமாகின்றன. எனவே பார்வையின் சக்தியினால் நல்லதோ, தீயதோ விளைவிப்பது அவரவர் மனதைப் பொறுத்து அல்லவா!
நல்ல ஆடை, அணிகலன்களோடு, குழந்தை குட்டிகளோடு வெளியில் சென்று வந்தால் எத்தகைய திருஷ்டிகளுக்கு ஆளாகின்றோம்! ‘கலியுகத்தில் திருஷ்டித் துன்பங்கள் பெருகும். தீய நோக்குடையோரே பல்கிப் பெருகுவர் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த கோமுனி என்னும் மகரிஷி ஒரு சாதாரண மனிதனாகப் பிறப்பெடுத்துப் பலவிதமான திருஷ்டித் துன்பங்களைத் தாமே அனுபவித்து தம்முடைய தபோபலத்தினால், பலவிதமான திருஷ்டிகளுக்குப் பரிகாரங்களைத் தந்துள்ளார்! .
தோல் தடித்தல், கண்கள் வீங்குதல், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தம்பதிகளிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுதல், பொருட்கள் திருடு போதல், சிறு தீ விபத்துகள், மூச்சுக் குழாய் நோய்கள், பண இழப்பு, அழகிய பொருட்கள் உடைதல்/வீணாகுதல் – இவ்வாறாகத் திருஷ்டியால் ஏற்படும் துன்பங்களை எழுதி மாளாது. மாலை வரை நன்கு ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென்று மூச்சிரைத்துப் படுத்துவிடும். அழகிய கண்ணாடி ஜாடி போன்றவை விழுந்து உடையும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமும் பரிகாரமும் உண்டு. காரண காரியமின்றி எதுவும் இவ்வுலகில் நிகழ்வதில்லை. இதுமட்டுமா! எவ்வித முகாந்திரமும் இன்றி உடலில் தடிப்புகள் ஏற்படுதல், ஊசி போல் உடலில் குத்துவலி ஏற்படுதல். எவரைக் கண்டாலும் எரிந்து விழுதல் போன்று இனம் புரியாத துன்பங்களும் உண்டாகும். கோமுனியானவர் மேற்கண்ட திருஷ்டித் துன்பங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அனுபவித்து, அதற்குரிய பரிகாரங்களையும் நமக்குப் பெற்றுத் தந்துள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மக்களுடைய திருஷ்டித் துன்பங்களையெல்லாம் தாமே ஏற்று அவற்றைத் தீர்ப்பதற்குரிய பரிகாரங்களைப் பெற உடலை வருத்திக் கடும் தவமிருந்து யாங்கணும் திருஷ்டிப் பரிகார முறைகளைக் கோமுனி எடுத்துரைத்து வந்தார். கோயம்புத்தூர் அருகே பேரூர் சிவ ஆலயத்தில் பட்டிமுனியின் தரிசனம் பெற்றார். ஆயிரக்கணக்கான மக்களுடைய திருஷ்டித் துன்பங்களாக, உடல் உபாதைகளையும், நோய்களையும், தம் உடலில் ஏற்றமையால் கோமுனி கடும் நோய்வாய்ப்பட்டு உடல் தளர்ந்த நிலையில் தள்ளாடி நின்றார்.

இதனைக் கண்டு வருத்தமுற்ற பட்டி முனி அவருடைய தியாகத்தை மெச்சி, “இங்கு இறைவனே ஏர் பிடித்து நிலம் உழுகின்றான். நீ அந்நிலத்தில் உருண்டு புரண்டு நோய் நிவர்த்தி பெறுவதோடு உத்தம இறை நிலையையும் அடைவாயாக”, என்று ஆசி கூறினார். பட்டிமுனி அருளியவாறே இறைவன், ஏர்பிடித்து உழுத நிலத்தில், புரண்டெழுந்து தீர்க்காயுள் பெற்று முக்கண்ணனிடமிருந்தே கண் திருஷ்டிக்கும் பரிகாரங்களைப் பெற்று, பல சற்குருமார்கள் மூலம் பூலோக மக்களுக்கு எடுத்துரைக்கும்படி நற்பணி  ஆற்றி இறைநிலையை அடைந்தார் கோமுனி.

கண்டியூர் சிவாலயம்

கோமுனி அருளிய திருஷ்டிப் பரிகார முறைகள்.
1. முதலில் அவரருளிய சில எளிய திருஷ்டி பாதுகாப்பு முறைகளைக் காண்போமாக, வெளியில் செல்கையில் நெற்றியில் அவரவர் குல வழக்கத்திற்கேற்ப விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், கோபிச் சந்தனம், சிந்தூரம், சாந்துப் பொட்டு, திருமண், கண்மை, நாமம் இட்டுச் சென்றிட வேண்டும். கண் திருஷ்டி தாக்குமிடம் நெற்றியும், மார்பும், பாதங்களும் ஆகும். இதற்கான ரட்சையே நெற்றித் திலகம்.
2. கண்களுக்கு மை இடும் பழக்கம் சிற்ப்புடையதாகும். கண்மையில் உள்ள மூலிகா சக்திக்குத் தீய திருஷ்டிக் கதிர்களை எதிர்த்து நிற்கும் சக்தியுண்டு.
3. பெண்களெனில் நீராடிய மஞ்சள் முகத்துடனும், முன் வகிடு, நெற்றி, கழுத்து ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமம் இட்டுச் சென்றிட வேண்டும்.
4. ஒரு போதும் ஒட்டுப் பொட்டு ( Stickers) இடாதீர்கள். ஒட்டுப் பொட்டு தீய சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல துன்பங்களை உண்டாக்கும்.
5. மஞ்சளோ, அரைத்த சந்தனமோ இட்டு அதன்மேல் குங்குமம் இட்டிடில் நெற்றியில் புண் ஏற்படாது.
பெண்கள் கழுத்தில் எப்போதும் மாங்கல்யச் சரடை அணிந்திட வேண்டும். த்ற்போது மாங்கல்யச் சரடிற்குப் பதிலாகத் தங்கச் சங்கிலியில் மாங்கல்யத்தைக் கோர்த்து அணிகின்றனர். இது தவறு! மஞ்சள் பூசிய மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்சபூத சக்திகள் உண்டு! பெண்கள் தினமும் மாங்கல்யச் சரடிற்கு இடுகின்ற மஞ்சளும், குங்குமமும் தான் கணவனின் ஆயுளைத் தீர்க்கமடையச் செய்யும். குங்குமத்திற்குப் பல தெய்வீக சக்திகளைத் தன்னுள் நிலைநிறுத்தும் தன்மை உண்டு. மேலும் குங்குமத்தில் நல்ல எண்ணங்களே பதியுமாதலின் நெற்றியில் குங்குமமிட்டுச் சென்றிடில் அதுவே பெரும் ரட்சையாக அமைகின்றது. எனவே நல்ல குங்குமத்தை எப்போதும் நெற்றியில் தரித்திடுக!
பெண்கள் ஒட்டுப் பொட்டினை இடுவதால் கணவனின் ஆயுள் குறையும். வீட்டில் வறுமை பெருகும். அனைவரின் நெற்றியில் உள்ள யோகமயமான ஆக்ஞா சக்கரத்திற்கு நாம் செய்யும் பூஜையே குங்குமமிடுதலாகும்.

சூரிய பூஜை

லிங்கத்தின் மேல் படியும் சூரிய கிரணங்கள் – திருப்பைஞ்ஞீலியில் மட்டுமின்றி மாசி மாதத்தில் வேறு சில கோயில்களிலும் மூலவரின் மேல் சூரிய கிரணங்கள் படிகின்றன. 
தஞ்சை அருகே கண்டியூர் ஸ்ரீசிரகண்டீஸ்வரர் ஆலயம்
தங்க, வெள்ளி, நவரத்தின வியாபாரிகள் மாசி மாதம் கண்டியூரில் சிவன் கோயிலில் லிங்க மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் தோய்கின்ற புனிதமான நாட்களில் ( பிரதி வருடம் மாசி 13,14,15 தேதிகள்)
1. மூலவருக்கு ஸ்வர்ணாபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பொன்னிற ஆடைகள், உணவினை தானமளித்து வர வியாபார நஷ்டங்கள் தணியும். வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
2. ஏனையோர் வில்வார்ச்சனை செய்து ஏழைகளுக்குப் பாய், படுக்கை, போர்வை, தலையணைகளை அளித்து, பிரசாத வில்வத்தை இல்லத்திற்கு எடுத்துச் சென்று தினமும் சூரியோதய நேரத்தில் கிழக்கு நோக்கி நின்று சூரியனை தரிசித்து சிறிது வில்வதளம்தனை உண்டு வந்திடில் ஆரோக்யம் பெருகும். எத்தகைய கடுமையான ரோகங்களும் தணியும். பாயிற்படுத்து நோயிற் புரள்கின்ற வேதனைகள் இராது.
3. தம் குழந்தைகளின் படிப்பு நன்கு விருத்தியாக, மூலவருக்கு ருத்ராட்ச மாலைகளை அணிவித்து மணமுள்ள மலர்களைச் சூடி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு  ஏழை இசைக் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுக!
தஞ்சை ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் – (மாசி மாதம் 11,12,13 தேதிகள்.)
தஞ்சை வடக்குவீதி ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமியின் மேல் சூரிய கிரணங்கள் படிகின்ற நாட்களில் ..
1. மாணிக்கப் பரல்களாக விளங்குகின்ற சிவந்த மாதுளம்பழ முத்துக்களால் ஸ்வாமியை அலங்கரித்து வழிபட, இதுவரை தேங்கிக் கிடந்த முறையாக வர வேண்டிய செல்வம், கடன், கிட்டவேண்டிய உத்யோகம், உத்யோக உயர்வு தானே தேடி வரும். கறந்த பசும்பாலின் இயற்கையான இளஞ்சூடு தணியுமுன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்திட மெலிந்த, நோயுற்ற தேகம் ஆரோக்யம் பெறும் சவலைக் குழந்தைகள் நன்மை பெறுவர். மலைத் தேனால் அபிஷேகம் செய்து சிறுவர், சிறுமியர்க்குத் தானமளித்துப் பிரசாதமாக சிறிதளவு தேனை இல்லத்திற்கு எடுத்துச் சென்று தினமும் ஸ்ரீமஹாலட்சுமி அஷ்டோத்திரம்/போற்றிகள்/கனகதாரா ஸ்தோத்திரம்/ “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற தேவாரத் துதி ஓதி மூன்று துளித் தேனை அருந்தி வர, வியாபாரம் நன்கு பெருகி, லட்சுமி கடாட்சத்திற்கான நல்வழிகளைக் காணலாம். எந்த அளவிற்குத் தேனைப் பலருக்கும் தானமளிக்கின்றார்களோ அந்த அளவிற்கு அன்னம் குறைவின்றி வளரும்.
மரணமில்லாப் பெருவாழ்வு எனில்............
ஒரு யுகத்தில் திருப்பைஞ்ஞீலியில் வாசம் செய்தாலே போதும் மரணம் தீண்டாது என்ற சூர்ய, எமதர்ம, சனீஸ்வர மூர்த்திகள் தந்த வரத்தினால் ஏற்படும் விளைவுகளைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்! சுயநலக்காரர்களும், கொடியோர்களும், தீயோரும் திருப்பைஞ்ஞீலியில் வாசம் செய்திட விழைந்தனர். இதனால் அச்சமுற்ற தேவமூர்த்திகள் தக்க முறையில் அருள்பாலித்திட இம்மூர்த்திகளை வேண்டினர். மூவரும்  ஒருமித்தாக, இவ்விதி யுகத்திற்கு யுகம் மாறுபடும். பிரபஞ்சத்தில் பல பூலோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சூர்ய மூர்த்தி, எமதர்மமூர்த்தி சனீஸ்வர மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அவரவர் தெய்வ பக்திக்கேற்ப மரணமில்லா வாழ்வு அமையும். மரணமில்லாப் பெருவாழ்வு என்பது இந்த பூத உடலில் என்றும் நிலைத்திருப்பதல்ல, நீண்ட பல்லாயிரமாண்டு ஆயுள் பெற்றும் பல துன்பங்களை அனுபவித்த பீஷ்மரும் விதுரரும் தசரதரும் இங்கு வந்துதான் நற்கதி பெற்றனர். யோகிகள், ஞானிகள் நடமாடுந் தெய்வங்களாக அருள்பாலித்துத் தம்முடைய பூத உடலை விடுத்து சூட்சும சரீரத்தில் இன்றும் என்றும் அருள்பாலிக்கின்றனர். இதுவே மரணந் தீண்டாத அருட்பெரும் நிலை.
எனவே, மரணமில்லாப் பெருவாழ்வு என்பது மரணத்தை ஒட்டியதன்று! பிறப்பு இறப்பின் இரகசியங்களை அறிவதே அதன் உண்மைப் பொருள். ஏனெனில் அவற்றை குருவருளால் அறிவோர் மக்கள் சேவைக்காக மஹேஸன் சேவைக்காக, இறையாணைப்படி எத்தகைய பிறவியையும் எந்த லோகத்திலும் எடுக்கச் சித்தமாக இருப்பர். இதற்குரிய அருள்வழி காட்டுவதே திருப்பைஞ்ஞீலியில், பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மேல் தோயும் சூர்ய கிரண பூஜா வழிபாட்டு முறையாகும். எனவே இவ்வரிய தெய்வாற்புதத்தை விட்டுவிடாது திருப்பைஞ்ஞீலியில் லிங்க ஸ்பர்ஸ பாஸ்கர கிரணங்களை தரிசித்து, வாழ்க்கையில் அந்த ஒரு சில நிமிடங்களேனும் எம பயமின்றி குருவருளும் கொண்டிடில் முறையான பூஜைகளால் மரணமில்லாப் பெருவாழ்வும் பெற்றிடலாம் என்பது திண்ணம்.

அமுத தாரைகள்


1. உடலில் பன்னிரெண்டு இடங்களில் திருமண் இட்டு காதுகளில் கடுக்கனை அணிந்திருப்பவர்களை தரிசனம் செய்து தண்டம் சமர்ப்பித்திடில் சந்தியாவந்தனப் பலன்களைப் பெறலாம்.
2. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை மாலை நேரத்தில் தினமும் சேவித்தால் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், முறையான கடன் தொல்லைகள் நீங்கி சுகமடைவர்.
3. பெருமாளை அமர்ந்த கோலத்தில் காலை வேளையில் தினமும் சேவித்திடில் வேலை நிரந்தரம் (Confirmation) ஆகும்.
4. ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை சயன கோலத்தில் மதிய நேரத்தில் தினமும் சேவித்திடில் கணவன் சொல்லை மனைவி மீற மாட்டாள் ; கணவன் – மனைவி உறவு சுமூகமாகும்.
5. தெற்கு திசை நோக்கி இருக்கும் பெருமாளை தினமும் சேவித்து வந்தால் இல்லத்தில் பணக் கஷ்டங்கள் என்றுமே இராது,
6. சுரங்கம் (mines, piles foundation) பாதாள சாக்கடை (water & drainage board) புதை பொருள் ஆராய்ச்சி முதலிய துறையைச் சேர்ந்தவர்களு கட்டிட வல்லுநர்களும் (Civil Engineers) தினமும் காலை மதியம் இரவு மூன்று வேளைகளிலும் இடைவிடாது ஸ்ரீமுஷ்ணம் வராஹ காயத்ரியை ஜெபித்து வந்தால் காரிய வெற்றியைப் பெறலாம்.
வராஹ காயத்ரீ :- ஓம் தத்புருஷாய வித்மஹே பூவராஹாய தீமஹீ தந்நோ வராஹ : ப்ரசோதயாத்.
7. அரசாங்கத் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் வேலை செய்பவர்கள் தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் இடைவிடாது ஸ்ரீமன் ராஜகோபால சுவாமியின் காயத்ரீயை ஜெபித்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் பெருகும்.
ஸ்ரீமன் ராஜகோபால சுவாமி காயத்ரீ :- ஓம் தத் புருஷாய வித்மஹே சந்தான புத்ரானுக்ரஹாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்.
8. இராமதாசராகிய ஆஞ்சநேயப் பெருமானை அங்கப் பிரதட்சிணம் செய்து, கொண்டைக் கடலை சுண்டல் தானம் அளித்து வந்தால் சொத்து/வாடகை இடம் தங்குவதற்கு வசதி இருந்தும் அக்கம் பக்கத்தில் சுற்றி உள்ளவர்கள் தரும் துன்பத்திலிருந்து விடுதலை கிட்டும்.
9. புதன்கிழமைகளில் ஆஞ்சநேயரை முட்டிக் கால்களால் பிரதட்சிணம் செய்து வழிபட்டு, வடைமாலை சாற்றி வடை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி வந்தால் உயர் அதிகாரிகளால் வரும் துன்பம் விலகும்.
10. வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து எலுமிச்சை சாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்து அடிப்பிரதட்சிணம் செய்து கோயிலை வலம் வந்து வணங்கினால் எதிர்பாராத உத்தியோக உயர்வு தானாய் வந்து சேரும்.
11. வெள்ளிக்கிழமைகளில், ஆஞ்சநேயருக்கு வெளிர் நீல ஆடை அணிவித்து, அடிப்பிரதட்சிணம்  செய்து வணங்கி 80 வயது கடந்த தம்பதிகட்கு பாத பூஜை செய்து வணங்கினால் வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாய் அமையும்.
12. ஏகாதசி அன்று தாமே அரைத்த சந்தனத்தால் ஆஞ்சநேய சுவாமிக்கு கிரீடம் அமைத்து வழிபட்டால் வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை வீடு தேடி வரும். வெண்ணெய் தானம் உத்தமமானது.
13. தாமே அரைத்த சந்தனத்தை இராகு காலத்தில் எம்பெருமான் ஆஞ்சநேய சுவாமிக்கு இருதோள்களிலும் சாற்றி ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று 32 முறைக்குக் குறையாமல் ஜெபித்து பால் பாயசம் தானம் வழங்கினால் அறிவு பூர்வமான கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற நுண்கருவிகள் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், படிப்போரும் விருத்திக்கு வருவர்.
14. பிறந்த நாள் கேக் வெட்டும் முறை :- பிறந்தநாளன்று கேக் வெட்டுவது ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று நினைக்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வழகத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அவர்கள் இரும்பு போன்ற உலோகங்களினால் ஆன கத்தியைப் பயன்படுத்தியது கிடையாது. சந்தனத்தினால் ஆன கத்தியினால் கேக் வெட்டுவதே முறை, விளக்கை அணைத்து (மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து) கேக் வெட்டுவது தவறாகும். மங்களகரமான நேரத்தில் ஏற்றிய விளக்குகளை அணைக்கலாமா? சற்றே பகுத்தறிவுடன் சிந்திப்பீர் பசுநெய் விளக்கேற்றி ஆயுள் விருத்திக்கு வழி காண்பீர்களாக!
15. துவாதசி அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி கவசமிட்டு புளியோதரை தானம் செய்தால் தடங்கல்கள் நீங்கி திருமணம் விரைவில் கைகூடும்.
16. பெண் குழந்தைகள் நன்முறையில் பூப்படைய :- பெண்குழந்தைகளைப் பற்றி பெற்றோரின் முக்கிய கவலையே தங்கள் குழந்தைகள் தக்க பருவத்தில், நல்ல முறையில் பூப்படைய வேண்டும் என்பது தான். அத்தகையோருக்கென எளிய வழிபாட்டு முறை ஒன்று உண்டு. நாகப்பட்டிணத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், அருள்மிகு நீலாயதாட்சி அம்பிகைக்கு ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறை ஆடைகளையும், அதே வண்ண மலர்களையும் அணிவித்து வழிபட்டு அதனை ஏழைப் பெண்களுக்கு தானமளித்து வர பெண் குழந்தைகள் நல்ல முறையில் பூப்படைவர். ஆடிமாதத்தில் இக்கோயில் நடைபெறும் ருதுஸ்தான சம்பவ உற்சவத்தன்று வழிபடுவதும் சிறப்பானது.
17 வள்ளல் பெருமான் சனீஸ்வர பகவான்! சனீஸ்வர பகவான் என்றாலே துன்பத்தைத் தருபவர் என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. நவக்கிரகங்களில் ஈசுவரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவானின் மகத்துவத்தைப் பூரணமாய் உணர்ந்து அனுபவித்தவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தந்தை தசரத மகாராஜா ஆவார். தசரத மகாராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவான் நாகப்பட்டிணம் கோயிலில் இன்றும் அருளாசியை வாரி வழங்குகிறார். உரிய தான தருமங்களுடன் இவரை வழிபட்டால் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட்டு உயர்நிலையை அடையலாம்.
18. கன்னிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் :- தாய்மார்களின் பல பிரச்னைகளில் ஒன்று பூப்படைந்த தங்கள் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உடல் அழகையும், வளர்ச்சியும் பெறவில்லை என்பதே. உணவுகளும் மருந்துகளும் பலனளிக்காத நிலையில் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறாள் நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மன். ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் ஆயிரம் வில்வ தளங்களால் இத்தேவியை அர்ச்சனை செய்து வழிபட்டு அன்னதானம் செய்தால் எல்லாவித அனுக்கிரகத்தையும் பெறலாம். பூப்படைந்த பெண்கள் எல்லா அழகும் பெற்று மிளிர்வர். திருமணம் புரிய ஏற்ற உடல் ஆரோக்கியத்தையும் பெறுவர். மேலும் வியாழக்கிழமைகளில் தாமே அரைத்த சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டு எலுமிச்சை  சாதம் தானம் அளித்து வந்தால் பலன்கள் பல்கிப் பெருகும்.
19. பூக்கள் தரும் புனிதங்கள் – சூரிய லோகம், தேவலோகம் போன்றே மலர்களுக்கும் தனித் தனி லோகங்கள் உண்டு. மலர்களை இறைவழிபாட்டிற்காகப் பயன்படுத்தும்போது, மலர்களில் உள்ள தேவதைகள் எல்லையில்லா ஆனந்தம் அடைந்து வழிபடுவோருக்கு உன்னத அருளாசியை வழங்குகின்றன. இறைவனின் அனுக்கிரகத்தை நேரிடையாகப் பெறும் தூய்மையான உடலோ, உள்ளமோ, சக்தியோ மனிதனுக்கு இல்லை. எனவே மலர்களே இறைவனின் தூதுவர்களாக அமைந்து இறைவனின் ஆசியை மனிதனுக்கு வழங்குகின்றன. இறைவனின் திருமேனியை அலங்கரிப்பதற்காகவே பூமியில் பிறப்பெடுத்த மலர்கள் காசுக்காக விற்கப்படும்போது மிகவும் வருத்தமடைகின்றன. எனவே பூக்களைக் காசுக்காக விற்காதீர்கள். இறைவனுக்கே சூட்டுங்கள்., ஆண்டவனுக்குச் சூட்டிய மலரை அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.
20. பூத உடலுக்குப் பூ இடலாமா? – மனிதன் இறந்தபின் செய்யும் இறுதிக் கடன்களில் சவத்திற்கு மாலைகளையும், மலர்களையும் அணிவித்து வழியெங்கும் மலர்களைத் தெருவில் இறைத்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இது ஒரு தவறான வழக்கமாகும். மக்கள் சேவையாம் இறைசேவைக்காகத் தியாக வாழ்க்கை கொண்ட மஹான்களுக்கு மலர் சூட்டுவது சிறப்புடையதே. ,ஆனால் மஹான்கள் கூட பூக்களைச் சூடத் தயங்குவர்.
இறைவழிபாட்டிற்காகவே தங்களைத் தியாகம் செய்யப் பிறந்தவை மலர்கள்., சவத்திற்கு மலர்களைச் சூட்டினால் மலர்களில் வசிக்கும் தேவதைகள் சாபமிடுகின்றன. இறந்த மனிதனுக்கும் மாலை அணிவித்தவருக்கும் இதனல் துன்பமே விளையும். பூக்களை விடத் தூயவெண்மயான ஆடையை இறந்தவர்மேல் போர்த்தி மயானம் இட்டுச் செல்வதே முறையான இறுதி மரியாதையாகும்.
நித்ய கர்ம நிவாரண சாந்தி
(சற்குரு அருளும் எளிய நித்ய தான தர்ம பூஜா முறையை மேற்கொண்டு  தீவினைக் கர்மங்கள் களைய அருள்வழி காண்போமாக)

தேதி

 தான தர்ம பூஜா முறைகள்

 அருள் வழியாக கிட்டும் நிவாரண நலன்கள்.

1.3.1997

பஞ்சவாத்யம் வாசிப்போர்க்கு அன்னம், ஆடைதானம்

கணக்கு, தணிக்கைத் துறையில் இருப்போருக்கு அலுவலகப் பிரச்னைகள் தீரும்.

2.3.1997

நீரூற்று கண்டுபிடிப்போர்க்கு (water diviner) உரிய உதவிகள் அளித்தல்

 உயரியல் வேதியல் துறையைச் (Biochemistry) சார்ந்தோருக்குத் தேவையான வேலை மாற்றம் கிட்டும்.

3.3.1997

செருப்புத் தொழிலாளர்களுக்கு உதவுதல்

கட்டிட/பாலத்துறையைச் சார்ந்தோருக்குத் (PWD) தலைக்கு வருகின்ற துன்பங்கள், தலைப்பாகையோடு போகும்.

4.3.1997

தாச ஆஞ்சநேயருக்குத் தானே அரைத்த சந்தனத்தால் காப்பு

வெளியூர்/வெளிநாடு சென்றிருப்போர் பத்திரமாகத் திரும்புவர், வாழ்வர்.

5.3.1997

நல்ல உயரமான சிவலிங்க மூர்த்திக்குப் பஞ்ச (ஐந்து) வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஏழைச் சிறுவர்களுக்கு ஆடைதானம்.

தன்னைப் பிடிக்காதவர்களால் வருகின்ற ஆபத்துகள் நீங்கும்.

6.3.1997

சுயம்பு லிங்க மூர்த்திக்கு பால் அபிஷேகம்/பால் தானம்

துணிக்கடை முதலாளி/ தொழிலாளர்களுக்கு நன்னிலை கிட்டும்.

7.3.1997

மலை மீதுள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள். ஏழை மாணவர்களுக்குப் பொருட்கள் தானம்

மறைத்து எழுத்தப்பட்ட உயில் மூலம் நேர்மையான சொத்து கிட்டும்.

8.3.1997

மேற்கு பார்த்த சனீஸ்வரருக்கு புளியோதரை நைவேத்தியம்/தானம்.

Two Wheelers business – வியாபார அபிவிருத்தி.

9.3.1997

இரட்டைப் பிள்ளையாருக்கு சங்கினால் வாசனைத் திரவிய அபிஷேகம்

அற்த்துறையைச் சார்ந்தோருக்கு பகைவர்களிடமிருந்து ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

10.3.1997

ஸ்படிக லிங்கத்திற்குத் தானே அரைத்த சந்தனத்தால் அபிஷேகம், தயிர்சாத தானம்.

இசைத் துறையினர், குறிப்பாக வயலின் வாசிப்போர் சிறப்படைவர்.

11.3.1997

சந்தனத்தால் ஆன பிள்ளையாருக்கு வாசனை நிறைந்த மல்லிகைப் பூவால் அலங்காரம், 60 வயது நிறைந்த ஏழை சுமங்கலிகளுக்குத் தான தர்மங்கள்.

நெடுந்தொலைவில் உள்ள தம் பெண்கள் சுகவாழ்வு அடைவர்.

12.3.1997

நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ள தலத்தில் (வைத்தீஸ்வரன் கோயில், திருக்குவளை) சந்தன அபிஷேகம், எலுமிச்சை சாத தானம்.

IAS, IPS/GM/MD போன்ற உயர் அதிகாரிகளுக்கு வரும் ஆபத்துகள் நீங்கும்.

13.3.1997

திருப்போரூர் (சென்னை அருகே) ஓங்கார பிரணவ மலையைக் கிரிவலம், இயன்ற தான தர்மங்கள்.

ஆவினங்கள் நன்கு விருத்தியாகும்.

14.3.1997

தமிழ் அல்லாத வேறு மொழி பேசும் ஏழைகளுக்கு அன்னதானம்

மின்சாரத் துறையைச் சார்ந்தோருக்கு நல்ல இடமாற்றம்.

15.3.1997

புல்லாங்குழல் வாசிப்போருக்குப் பால் தானம்

ஆஸ்துமா நோய்கள் தணியும் (தொடர்ந்து செய்து வந்திடுக..)

16.3.1997

பெருமாளுக்கு (வெங்கடாசலபதி) வில்வார்சசனை

தேர்தல் துறையைச் சார்ந்தோருக்குப் பிறரால் ஏற்படும் பழி தீரும்.

17.3.1997

மக நட்சத்திரத்தில் சிவனுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் , செய்து தானம்

செய்யும் நற்காரியம்/தொழில் திறம்பட வெற்றி கரமாக முடியும்.

18.3.1997

பஞ்ச (ஐந்து) முக ஆஞ்சநேயருக்கு வடை மாலை  (உ.ம் , சென்னை மேற்கு மாம்பலம்)

கட்டிடத் துறையைச் சார்ந்தோர்க்குச் சிறப்பான முன்னேற்றம்.

19.4.1997

ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்குத் தாமே அரைத்த சந்தனத்தைப் பாதத்தில் சார்த்தி, பாத (துளசி) அர்ச்சனை செய்து 80 நிறைந்த ஏழைச் சுமங்கலிக்கு அன்ன, ஆடைதானம்

MD, ED, GM போன்ற உயரதிகாரிகளுக்கு ஏற்படும் துன்பங்கள் தணியும்.

20.3.1997

வங்கிக் காஷியர்கள்/ஏனைய காசாளர்கள்,, Shroffs இன்று (விடுமுறையெடுத்து) இல்லத்தில் 10000 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிட,,

ரூபாய் எண்ணிக்கையில் வரும் பெரிய துன்பங்களிலிருந்து தப்புவர்.

21.3.1997

பிரதோஷ நேரத்தில் (விளக்கு வசதியில்லாத) கோயில்களில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் தானம்

வியாபாரம் பெரும்.

22.3.1997

பஞ்சமுக விநாயகர் /கணபதிக்குக் கொழுக்கட்டை நைவேத்யம்/தானம்

பூசாரிகள், குருக்கள் /சிவாச்சாரியார்/ அர்ச்சகர்/ பட்டாச்சார்யார்களின் வாழ்க்கை வசதிகள் நன்முறையில் மேம்படும்.

23.3.1997

தீர்த்தபாலீஸ்வரர், வாலீஸ்வரர், விருட்சபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் வஸ்திரங்களை சமர்ப்பித்து முறையாக வேதம் ஓதி, இத்தகைய மந்திர பீஜாட்சரங்கள் படிந்த ஆடைகளை ஏழைகளுக்குத் தானம்

அர்ச்சகர்கள்/ பூசாரிகள்/ சிவாச்சாரியார்கள்/ குருக்களுக்கு இல்லத்தில் ஸ்வர்ண சம்பத்து விருத்தி.

24.3.1997

நாடியம்மன் கோயிலில் (உதாரணம் – பட்டுக்கோட்டை). பூவாடை சார்த்தி அன்னதானம்...

 செல்வம், அழகிருந்தும் தடைபட்ட திருமணங்கள் கைகூடும்.

25.3.1997

கை, கால்களில் மருதாணி இட்ட பெரியோர்களுக்குப் பாதபூஜை/ வஸ்திர தானம்

குழந்தைகள் நன்கு படிப்பர்.

26.3.1997

பழைய பாட்டில் விற்போர் மற்றும் பாட்டில் கம்பெனிகளில் உள்ள ஏழைகளுக்கு உரிய உதவிகளைச் செய்து வருதல்

தீய பழக்கங்கள் தணியும்.

27.3.1997

வெல்ல மண்டிகளில் பணிபுரியும் ஏழைகளுக்குத் தலைக்குச் சிவப்புத் துண்டு, மற்றும் வேட்டி, அன்னதானம் அளித்து வர

ஒவ்வாமை (Allergy) நோய்கள் நீங்கும்.

28.3.1997

மிளகாய் வியாபாரத்தில் உள்ள ஏழைத் தொழிலாளர்கட்குப் பன்னீர் அளித்து நீராட... வசதி செய்து தர..,

 மூச்சுக்குழல் நோய்கள் தீரும்.

29.3.1997

பன்னாரி அம்மனுக்குச் சிவப்பு வஸ்திரம் சார்த்தித் தக்காளி சாதம் தானம் அளித்துவர,

பால் சம்பந்தப்பட்ட துறையில் இருப்போருக்கு முன்னேற்றம் கிட்டும்.

30.3.1997

கேட்டை நட்சத்திரத்தில் கங்கையில் ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதர் கோயிலில் இயன்ற தான தர்மம் செய்து வர,

நீண்ட நாள் கவலைகள் படிப்படியாக குறையும்.

31.3.1997

மூல நட்சத்திரத்தில் அஷ்டாங்க விமானம் உள்ள கோயில் தரிசனம்

இயன்ற அளவு அன்னதானம் செய்துவர குடும்பத்தில் ஆரோக்யம் பெருகும்.

 

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam