வாழ்வின் திருப்புமுனை சபரிமலை யாத்திரை !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ஆரியங்காவு ஸ்ரீஐயப்ப சுவாமி திருத்தலம்

செங்கோட்டையிலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ளதே ஆரியங்காவு ஸ்ரீஐயப்ப சுவாமி திருத்தலமாகும். கலியுலகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவரே ஸ்ரீஐயப்ப சுவாமி. ஸ்ரீஐயப்ப சுவாமி அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழா, சபரிமலை, காந்தமலை என ஐந்து இடங்களில் தன்னுடைய பூரண கடாட்சத்தோடு விளங்குகிறார். இதில் சபரிமலையில் யோக நிலையிலும் காந்தமலையில் ஜோதி ஸ்வரூபமாகவும் ஸ்ரீஐயப்ப சுவாமி எழுந்தருளி உள்ளதால் இவ்விரு தலங்களையும் தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு மிகுந்த நெறிமுறைகளும் விரத கோட்பாடுகளும் விளங்குகின்றன என்பது உண்மையே. பொன்னம்பல மேடு எனப்படும் காந்தமலையில் ஜோதி ரூபமாக விளங்கும் ஜீவன்களே அனுமதிக்கப்படுவர் என்பதால் சதாதாரண மனிதர்களின் நடமாட்டம் இங்கு நிலவுவது கிடையாது. ஒரு மண்டல காலத்திற்கு விரத அனுஷ்டானங்களை மேற்கொள்பவர்கள் மட்டும் இருமுடியை தலையில் ஏந்தி சபரிமலையில் 18 படிகளை ஏறிச் சென்று ஸ்ரீஐயப்ப சுவாமியை தரிசிக்கலாம் என்பது விதி. இத்தகைய கோட்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் சித்தர்கள். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒரு மண்டல காலத்திற்கு தானே சமைத்த உணவை ஏற்று விரதமிருந்து ஒரே பசு மாட்டின் பாலைக் கறந்து தயாரிக்கப்பட்ட நெய்யில் இருமுடி கட்டி ஸ்ரீசபரிமலை செல்பவர்களுக்கு அந்த யாத்திரை அவர்களுடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பது உண்மையே.

ஆரியங்காவு திருத்தலம்

ஒரு முறை ஒரு பக்தருடைய மகன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதால் அவன் கோமா என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டான். கண்கள் கூட திறவாத நிலை. அந்த பக்தரும் ஒருவாறாக மனம் தெளிந்து ஐயப்ப சுவாமியே இதற்கு வழிகாட்ட வல்லவன் என்று திடமான முடிவிற்கு வந்து அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே ஒரு தனி அறையை தனக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டு தானாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு ஒரு மண்டல ஐயப்ப விரதத்தை மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மற்ற பெண்களை பார்க்காதது மட்டுமன்றி தன் மனைவியின் முகத்தைக் கூட விரத நாட்களில் அவர் பார்த்தது கிடையாது. விரத முடிவில் தானாக இருமுடியை தலையில் கட்டிக் கொண்டு ஐயப்ப சுவாமி கோயிலுக்கு யாத்திரையாகப் புறப்பட்டு விட்டார். சபரி மலையில் பசு நெய்யை சுவாமிக்கு அபிஷேகத்திற்கு அளித்து விட்டு பிரசாதத்தோடு வீட்டிற்குத் திரும்பினார் அந்த பக்தர். வீட்டில் தன்னுடைய வாய் திறவாத மைந்தனுக்கு பல்லைச் சற்றே விலக்கி ஸ்ரீசபரி நாதனின் பிரசாதத்தை துளி ஊட்டினார். அப்புறம் என்ன அவருடைய செல்ல மகன் கண்களை மெதுவாகத் திறந்து தந்தையைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதுடன் வாய் திறந்து இரண்டு வருடங்களுக்குப் பின் அப்பா என்று அழைக்கவும் செய்தான். இதுவே ஐயப்ப சுவாமியின் கருணை. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஐயப்ப சுவாமியின் திருத்தலங்கள் மிகுந்திருந்தாலும் மேற்கூறிய ஐந்து தலங்கள் சிறப்பாக மனித வாழ்வின் ஐந்து கட்டங்களை சுட்டிக் காட்டும் தலங்களாக உள்ளன என்பதே அவற்றின் சிறப்பாகும். பாலன், பிரம்மசாரி, குடும்பத் தலைவன், யோகி, மோட்சதாயி என்ற ஐந்து நிலைகளையும் குறிப்பதாகவே இந்த அச்சன்கோயில் ஆதியாக உள்ள ஐயப்ப தலங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஐந்து நிலைகளுக்கு உரியதாகவே தர்மசாஸ்தா, மணிகண்டன், பந்தளராஜா, பூதநாதன், பம்பாவாசன் என்ற ஐந்து ஐயப்ப நாமங்களும் அமைந்துள்ளன. அதே போல மந்தாரை மலர்கள் என்று அழைக்கப்படும் மலர்களும் ஐந்து நிலைகளில், வண்ணங்களில் நிலவி ஐயப்ப சுவாமியின் ஐந்து விதமான அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவையே. இதில் கொக்கு மந்தாரை என்ற வெள்ளை மந்தாரை பொலியும் தலமே ஆரியங்காவு திருத்தலமாகும். மந்தாரை மலர்களும் ஐந்து இதழ்களை உடையவையே என்பதும் ஐயப்ப சுவைக்கு மெருகூட்டும் மந்தாரை சுவையாகும். சிறு குழந்தைகள் தங்கள் கைகளை நீட்டி அதில் ஒவ்வொரு விரலாக காசி காவடி இந்து பால் என்று எண்ணி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். சிறுவர்களின் விளையாட்டு என்று எண்ணும் இந்நிகழ்ச்சி எத்தகைய பொருள் பொதிந்தது. மூன்றாம் பிறையை சூடிய சிவபெருமானை முறையாக தரிசனம் செய்தவதால் அமிர்த சக்திகளைப் பெறலாம் என்பதை இந்த விளையாட்டு மேலோட்டமாகக் குறிப்பிடுகிறது. இதுவே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். இவ்வாறு முறையாக மூன்றாம் பிறையை தரிசனம் செய்து அதன் பலன்களை எல்லாம் மக்களுக்கு, பக்தர்களுக்கெல்லாம் தம்முடைய அருள் பிரசாதமாக வழங்கியவரே கனிந்த கனி என சித்தர்களால் புகழப்பட்ட ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார் ஆவார். இத்தகைய பால் என்னும் அமிர்த சக்திகளில் ஒன்றை அனுகிரகமாக அளிப்பதே ஆரியங்காவு திருத்தலமாகும். இதைக் குறிப்பதாக விளங்குவதே இத்தலத்தில் மலர்ந்துள்ள கொக்கு மந்தாரைகளின் காட்சியுமாகும்.

பம்பை நதி

சந்திரனின் மூன்றாம் பிறை என்பது எத்தனையோ திருத்தலங்களில் உலகம் முழுவதும் தரிசிக்கக் கூடிய ஒரு திவ்ய தரிசனம் என்றாலும் ஒவ்வொரு பிறையையும் தரிசனம் செய்யும் திருத்தலத்தை சித்தர்களும் உயர்நிலையில் வாசம் செய்யும் ஸ்ரீபரமாச்சாரியார் போன்ற மகான்கள் மட்டுமே அறிவர். மூன்றாம் பிறை என்பது சாட்சாத் சிவபெருமானின் தரிசனமாகவே திகழ்வதால் ஒரு தூசி அளவு சுயநலம் அந்த தரிசனத்தில் கலந்திருந்தாலும் அதனால் தரிசனம் செய்யும் அடியார்களுக்குப் பல தீர்க்க முடியாத கர்மச் சுமைகள் மிகும் என்பதாலேயே இந்த தரிசனங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு மூன்றாம் பிறையையும் தரிசனம் செய்யும் திருத்தலத்தை அடைந்து அங்கிருந்து சிவபெருமானை ஆயிரம் முறை தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவரே கனிந்த கனி ஆவார். ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் இதற்காக இந்தியா முழுவதையும் இரண்டு முறை பாதயாத்திரையாகவே வலம் வந்து இவ்வாறு மூன்றாம் பிறைகளை தரிசனம் செய்து அதன் பலன்களை தாரை வார்த்து அளித்தார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். இத்தகைய மூன்றாம் பிறை சந்திர தரிசன பலனில் விளையும் அமிர்த சக்திகள் மனிதனுக்கு மட்டும் உரியவை அல்லவே. அனைத்து உயிரினங்களுக்கும் எம்பெருமான் அருளவல்லவர்தானே ? இவ்வாறு மூன்றாம் பிறை தரிசன சக்திகளை ஈர்க்கும் அருகம்புற்களை புள்ளிமான்கள் தங்கள் உணவாக ஏற்கின்றன. இத்தகைய மான்களை வேட்டையாடும் புலிகள் அந்த அமிர்த சக்திகளை பம்பை நதியில் சேர்க்கின்றன. இந்த நதியில் நீராடும் பக்தர்களும், இந்த நதி தீர்த்தத்தால் தர்ப்பணம் அளிக்கும் பக்தர்களும் பெறும் பயனை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ? அதனால்தான் பம்பா தீர்த்தத்தை மிகவும் புனிதமாக பராமரிக்கும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நதிகளில் புனிதமானது கங்கை நதி. காரணம் அது சிவபெருமானின் சிரசில் பொலிவது, பொழிவது. ஸ்ரீசபரிமலை ஈசனின் நாமமோ பம்பாவாசன் என்பது. அதாவது பம்பை நதியையே தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டவன் என்று பொருள். நீங்கள் பம்பை நதியின் ஒரு துளி நீரை தரிசனம் செய்தாலும் நீங்கள் அதில் உறையும் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பேறு பெறுகிறீர்கள் என்றால் இறைவனின் கருணைதான் என்னே. மக்கள் எந்த அளவிற்கு பம்பை நதியின் புனிதத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்போது புரிகின்றதல்லவா ? மான்கள் மூலம் பெற்ற அமிர்த சக்திகளை புலிகள் பம்பை நதியில் நிரவுவதுடன் சரஸ்வதி தேவியும் வளர் நவமி திதி அன்று கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் தன்னுடைய வித்யா சக்திகளை நிரவுகின்றாள் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியம் ஆகும். இவ்வாறு நதிகளில் பொலியும் சித்தாமிர்த சக்திகளைப் பற்றி சித்தர்கள் மட்டுமே அறிந்திருந்தாலும் பக்தர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை நவராத்திரி நவமி திதி அன்று துதித்து சர்வ வித்யா சக்திகளையும் பெறுவதில் யாதொரு தடையும் இல்லையே. அலகாபாத் திரிவேணி சங்கமம் போன்ற திருத்தலங்களில் சரஸ்வதி கங்கை, யமுனை போன்ற புனித நதி சக்திகளுடன் சேர்ந்து அந்தர்யாமியாக விளங்குகிறாள் என்று இந்த பால் போல் பொலியும் வித்யா சக்திகளையே குறிப்பிடுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகில் உள்ள ஜீவன்களில் சிவபெருமானின் சிரசில் பொலியும் சந்திர பகவான் அருளும் அமிர்த சக்திகளை மக்களுக்கு நிரவும் சக்தி படைத்த ஒரே ஜீவன் புலி என்பதையும் புலி மிகுந்த ஒரே நாடு நம் பாரதப் பூமி என்பதும் புலியை வாகனமாக உடைய மூர்த்தி ஸ்ரீஐயப்ப சுவாமி மட்டுமே என்பதே பக்தர்கள் உணர்ந்து இன்புற வேண்டிய சுவையாகும்.

யானை வாகன மூர்த்தி

புலியே சிறப்புடைய ஐயப்ப வாகனமாக இருக்க ஆரியங்காவில் அருள்புரியும் ஸ்ரீஐயப்ப மூர்த்தி யானை வாகனத்தின்மேல் பவனி வருவது ஏனோ என்ற கேள்வி முளைக்கின்றது அல்லவா ? பம்மை தீர்த்தத்தில் புலிகள் அமிர்த சக்திகளை நிரவுகின்றன என்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா ? இவ்வாறு புலி வாகனத்தின் மேல் அமர்ந்த ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதால் மட்டுமே தீராத பல நோய்கள் தீரும் என்பது உண்மையே. பலருக்கும் பம்பை நதியைப் பற்றியே தெரிந்திருக்க நியாயம் இல்லை அல்லவா ? அத்தகையோர் பம்பை நதியில் அமிர்த சக்திகளை நிரவும் புலிகளைப் பற்றி அறிந்திருக்க நியாயமில்லையே. அதனால் கருணைக் கடலான ஐயப்ப சுவாமியும் புலிமேல் அமர்ந்து பக்தர்களுக்கெல்லாம் ஏற்படும் கொடிய நோய்களைக் களையும் தன்வந்திரி மூர்த்தியாக அருள் வழங்குகின்றார் என்பதே புலி வாகன ஐயப்பன் மூர்த்தி உணர்த்தும் தரிசன பலனாகும்.

ஆரியங்காவு திருத்தலம்

ஆரியங்காவு திருத்தலத்தில் ஸ்ரீஐயப்பன் தன் தந்தை சிவபெருமானுடனும் புஷ்கலை தேவியுடனும் குடும்ப சகிதமான தரிசனத்தை அளிக்கிறார். எனவே குடும்பத்தைப் பராமரிக்கும் ஒருவருக்கு செல்வம் என்பது அவசியமான ஒன்றல்லவா ? இது ஸ்ரீசாஸ்தா யானை மேல் எழுந்தருளியதன் பின்னணியில் அமைந்த ஒரு காரணமாகும். இவ்வாறு சுவாமி ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்க விட்டிருப்பதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அவற்றை பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்தலே சிறப்பாகும். மூலஸ்தான கருவறையில் இவ்வாறு மூன்று மூர்த்திகள் எழுந்தருளி இருப்பது இந்த விகாரி வருடத்திற்கான சிறப்பான தரிசனமாகும். பொதுவாக யானை வாகனம் செல்வ விருத்தியை அளிப்பதால் வறுமை நிலையில் உள்ள எல்லோருமே இந்த தரிசனத்தால் நற்பலன் பெறுவார்கள் என்பதே ஸ்ரீஐயப்ப பகவானின் கருணை மழையாகும். பொதுவாக, திருத்தலங்கள் மலை உச்சிகளின் மேல், குன்றுகளின் மேலேயே அமைந்திருக்கும். இதற்கு எதிர்மறையாக காமாக்யா திருத்தலத்தைப் போல் பூமியின் அடியில் அமைந்திருப்பதே ஆரியங்காவு திருத்தல சிறப்பாகும். இத்தகைய திருத்தலங்கள் பக்தியைப் பெருக்கும் சக்தி கொண்டவையாகும். வீடுகளில், நில புலன்களில் ஈசான்ய மூலை மற்ற மூலைகளை விட தாழ்ந்து இருத்தலே சிறப்பான வாஸ்து சக்திகளை அளிக்கும். இத்தகைய வாஸ்து இலக்கணங்களை மீறிய வீடு மனைகளை உடையோர் ஆரியங்காவு திருத்தல மூர்த்திகளை தரிசனம் செய்து பேரீச்சம் பழம், தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானமாக அளித்தலால் இல்லங்களில், தொழிற்சாலைகளில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நீக்கும் அருமருந்தாக இத்தகைய வழிபாடுகளும் தான தர்மங்களும் அமையும். இத்தலத்தில் பொலியும் தீர்த்தம் ராஜகூபம் என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீராம பிரானின் பட்டாபிஷேகத்தின்போது கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்கள் மட்டுமல்லாது பாரத திருநாட்டில் பொலியும் ஆயிரக் கணக்கான ஆறுகளிலிருந்தும், திருத்தல தீர்த்தங்களிலிருந்தும், நீர்வீழ்ச்சிகளிலிருந்தும், சுனைகளிலிருந்தும், ராமேஸ்வரம் போன்ற கடல்களிலிருந்தும் புனித தீர்த்தங்கள் வேகமாகப் பாய்ந்து செல்லும் குதிரைகள் மேல் ஏற்றிச் செல்லப்பட்டு அயோத்தியை அடைந்தன என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இத்தகைய தீர்த்தங்களில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, தாமிரபரணி, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, காயத்ரீ, பல்குனி என்ற 12 நதிகளின் புனித தீர்த்தங்கள் ஸ்ரீராமருக்கும் ஸ்ரீசீதா தேவிக்கும் அபிஷேகமாக அளிக்கப்பட்ட பின்னர் மயிலாடுதுறையில் ஸ்ரீபரிமள ரெங்கநாதர் திருத்தல துளசி தீர்த்தத்தில் ஆரியங்காவு திருத்தல ராஜகூப ஆற்று நீரைக் கலந்து அபிஷேகம் நிறைவேற்றினர் என்பதே இத்தல தீர்த்த மகிமையாகும்.

இந்தலூர் திருத்தலம்

மயிலாடுதுறை இந்தலூர் திருத்தலத்தில் அருளும் பெருமாள் ஸ்ரீபரிமள ரெங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். தனது மனைவியைத் தவிர வேறு யாரையும் காமக் கண் கொண்டு நோக்காது இருக்கும் ஆண்களுக்கு இயற்கையாகவே உடலில் எழும் நறுமணமே பரிமளம் என்பதாகும். மனம் உடையவன்தானே மனிதன். இவ்வாறு தன் மனதினாலும் ஸ்ரீராமரைப் போல பிற பெண்களைத் தீண்டாத உத்தமர்கள் உடலில் தோன்றுவதே பரிமள ரெங்கமாகும். இத்தகைய அனுகிரக சக்தியை தன்னுடைய அருள் பிரசாதமாக அருளும் தெய்வ மூர்த்தியே ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆவார். ஆரியங்காவு திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீதர்மசாஸ்தா தேஜோ விடங்கம் என்ற அருள் சக்தியில் தோன்றியவர். எம்பெருமானின் முக்கண் ஜோதியின் ஒரு சக்தியே இந்த தேஜோ விடங்கமாகும். ஓரளவு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதானால் அனல் சக்தியிலிருந்து உஷ்ணம் என்னும் வெப்ப சக்தியைப் பிரித்து அதில் பிரகாசத்தை மட்டும் கொண்ட சக்தியே தேஜோ விடங்கமாகும். ஆரியங்காவு ராஜகூப தீர்த்தமே இத்தகைய தேஜோ விடங்க சக்திகளை சாதாரண பக்தர்களும் ஏற்கும் அளவிற்கு அவர்களைத் தயார் செய்கிறது. எனவே ஆரியங்காவு ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகூப தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீஐயப்பனை தரிசிக்கும்படி வலியுறுத்தப்படுகிறது. குறைந்த பட்சம் ராஜகூப தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டாவது உடல் நலம் குன்றியவர்கள் ஸ்ரீஐயப்பனை தரிசித்தல் நலமாகும். இத்தகைய தரிசனப் பலனால் சாதாரண மக்களும் ராஜ போக சக்தியை ஐயப்ப சுவாமி பிரசாதமாக பெறுவர் என்பது உறுதி. அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தும், வழிபாட்டின் வலிமையைப் பொறுத்தும் ராஜாவாகவோ, சக்கரவர்த்தியாகவும் மலரும் எதிர்காலத்தைப் பெறுவர் என்பதே இத்தல வழிபாட்டின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும். இவ்வாறு ராஜகூப தீர்த்தத்தில் இந்தலூர் பிரசாத துளசி தீர்த்தத்தை பட்டாபிஷேக தீர்த்தமாகப் பெற்ற ஸ்ரீராம பிரான் இறைவனின் இந்த அருட் பிரசாத செயலுக்கு நன்றி கூறும் முகமாக இந்தலூர் ஸ்ரீபரிமள ரெங்கநாத பெருமாளையும் ஆரியங்காவு ஸ்ரீஐயப்ப சுவாமியையும் தரிசனம் செய்தார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். இந்த இரகசியம் அறிந்த பக்தர்கள் இன்றும் மயிலாடுதுறை ஸ்ரீபரிமள ரெங்கநாதரின் தரிசனம் பெற்று ஆரியங்காவு ஸ்ரீஐயப்பனின் தரிசனம் பெறுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். இவ்விரு தீர்த்தங்கள் மகிமையால்தான் சீதா பிராட்டி லவன் என்ற மகவைப் பெற்றாள் என்பதும் அந்த தெய்வீகக் குழந்தையும் ஸ்ரீவால்மீகி முனிவரால் குசன் என்ற சகோதர சக்தியாக உருவாகியுது என்பதும் சித்தச் சுவடிகள் தெரிவிக்கும் இரகசியமாகும்.

தெய்வீகத் திருமணம்

வள்ளித் திருமணம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பல தெய்வீகத் திருமணங்களை அறிந்த பக்தர்கள் ஸ்ரீஐயப்ப சுவாமியின் திருமண வைபவத்தையும் தரிசிக்கும் பேறு பெற்ற திருத்தலமே ஆரியங்காவு ஆகும். ஸ்ரீஐயப்ப சுவாமி ஸ்ரீபுஷ்கலா தேவியின் திருமண வைபவம் இத்தலத்தில் நிகழும் தெய்வீகத் திருவிழாவாகும். திருமண தோஷங்களால் நீண்ட நாள் திருமணம் ஆகாமல் வருந்தும் ஆணும் பெண்ணும் இத்திருமண மண்டபத்தில் தங்கி வழிபாடுகளை இயற்றுதலால் நற்பலன் பெறுவார்கள். பொதுவாக பட்டு வஸ்திரங்களை பக்தர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும் திருமணம் போன்ற வாழ்வின் முக்கிய தருணங்களில் குறைந்தது மூன்று பேருக்கு பட்டு வஸ்திரங்களை தானமாக அளித்த பின்னர் பட்டு வேட்டியையோ, பட்டு சேலைகளையோ அணிந்து கொள்வதில் தவறு கிடையாது என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

காளி ஆசனம் ஆரியங்காவு
திருமண மண்டபம்

பட்டு வேட்டிகள் புடவைகளை இத்தல திருமண மண்டபத்தில் வைத்து வழிபட்டு நாச்சியார் திருமொழி பிரபந்த பாடல்களை ஓதி இத்தலத்திலோ அல்லது அவரவர் சொந்த ஊர் திருத்தலங்களிலோ தம்பதிகளுக்கு தானமாக அளித்தலால் திருமணமாகாதவர்கள் நற்பலன் பெறுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கும் தங்கள் இல்லற வாழ்வில் தோன்றும் பணக் கஷ்டம், மன வேறுபாடு, குழந்தையின்மை போன்ற பல தோஷங்களைக் களைந்து நல்வழி காட்டுவதே இத்தகைய வழிபாடும் தான தர்மங்களும் ஆகும். பெண் மருத்துவர்களும், குழந்தைப் பேறு வைத்தியர்களும் இத்தலத்தில் உறையும் ஸ்ரீஐயப்ப சுவாமியை வழிபட்டு வாரம் ஒரு நாளாவது இலவச வைத்திய சேவையை மேற்கொண்டு வருவார்களேயானால் அவர்கள் கைராசி பெருகும். அத்தகையோர் மருத்துவ மனைகளில் சிசேரியன் என்ற அறுவை சிகிச்சைக்கே இடமிருக்காது என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதி மொழி. பாகப் பிரிவினை, சொத்துத் தகராறு, காதல் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்கள் குழந்தைகள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் இத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாட்டால் சுமுகமாக தீர்வடையும். பருப்புத் துவையல் கலந்த தேங்காய் சாத தானம் சிறப்புடையது. பல திருத்தலங்களிலும் அரச மரமும் வேப்ப மரமும் இணைந்த கோலத்தை பக்தர்கள் தரிசித்து இருக்கலாம். எங்கும் காணாத அதிசயமாக சங்கர நாராயண கோலத்தில் பொலியும் அரச மரமும் மாமரமும் இணைந்த கோலத்தை ஆரியங்காவு திருத்தலத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். எத்தகைய திருமண தோஷங்களையும் சந்ததி தோஷங்களையும் மன வேறுபாடு கிலேசங்களையும் நீக்குவதே இத்தகைய சங்கரநாராயண பிரதட்சிண வழிபாடாகும். ஸ்ரீராமரும் ஸ்ரீசீதா பிராட்டியுமே இந்த சங்கரநாராயண சொரூபமாக விளங்கும் அரசு மா மரங்களை வலம் வந்து வணங்கினார்கள் என்றால் இதன் தொன்மைதான் என்னே. நிறைய வேலையாட்கள், பட்டு பீதாம்பர ஆடை அலங்காரம், கார் பங்களா, பணிப் பெண்கள், காவல் படை போன்ற ராஜ வம்சத்திற்கு உரிய வசதியான வாழ்க்கையை விரும்புவோர்க்கு அனுகிரகம் அளிப்பதே இந்த சங்கர நாராயண விருட்ச வழிபாடும் ராஜகூப தீர்த்த நீராடலுமாகும். ஸ்ரீஐயப்ப சுவாமி பக்தர்கள் இத்தகைய வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதை விரும்புகிறானா என்று கேட்கத் தோன்றும். ஆனால், இத்தகைய ராஜ வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அந்த வாழ்க்கை காட்டும் சுகத்தை அனுபவித்து பின்னர் இறைவனின் திருவடிகளே நிரந்தர இன்பத்தை அளிக்கவல்லவை என்ற உண்மையை மனதார உணர முடியும். வசதியுள்ளவர்கள் இந்த திருமண மண்டபத்தில் நாதஸ்வர கச்சேரிகளை ஏற்பாடு செய்தல் சிறப்புடையதாகும். இது ஒரு அற்புதமான சமூக சேவையே. குறைந்தது ஐந்து தவில், ஐந்து நாதஸ்வரம், மூன்று ஜால்ரா, வயலின் போன்ற இசைக் கருவிகளுடன் இந்த திருமண மண்டபத்தில் வாசித்தலால் எழும் மங்கள ஸ்வரம் பல லோகங்களைச் சென்றடையும். அபூர்வமாக தரை மட்டத்திற்குக் கீழ் அமைந்திருக்கும் இத்தகைய திருத்தலங்கள் அளிக்கும் இசை லாவண்ய சக்திகளை சதாராண மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இத்தகைய கச்சேரிகளை கேட்க பக்தர்கள் எவரும் திரளவில்லையே என்ற சிந்தனை எதுவும் இன்றி சிவ பிரானின் திருக்குடும்பம் இந்த நாதஸ்வர இசையைக் கேட்கும் என்பதை மட்டும் பக்தர்கள் புரிந்து கொண்டால் போதுமானது. ஸ்ரீராம பிரான் இத்தலத்திற்கு இறைவனுக்கு நன்றி கூற எழுந்தருளிய போது அவரை வரவேற்க 108 யானைகளும் 108 குதிரைகளும் 108 நாதஸ்வரங்களும் 108 தோல் கருவிகளும் (இக்காலத் தவில் போன்ற கருவிகள்) இன்னும் நாமறியா எத்தனையோ இசைக் கருவிகள் முழங்கின என்பதே இத்தல திருமண மண்டபத்தில் அரங்கேறும் மங்கள நிகழ்ச்சிகளின் சுவையாகும்.

அரசு மா இணைந்த
கோலம் ஆரியங்காவு

மணமாகாத இளம் பெண்களுக்கும் திருமணமான பெண்களுக்கும் திருமண பந்தமே பாதுகாப்பை அளிக்கும் என்பது உண்மையாயினும் பல்வேறு சந்தர்ப்பங்களால் பெண்கள் தனித்திருக்கும் சமயங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பை நல்குவது இத்தல ஐயப்ப தியானமே. ஸ்ரீஐயப்பன் இத்தலத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி உள்ளது பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவதற்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு இல்லாத பெண்களுக்கு உரிய பாதுகாப்பை நல்குவதற்காகவுமே. பாதுகாப்பில்லாமல் தனித்து வாழும் பெண்கள் எங்கிருந்தாலும் இத்தல ஐயப்ப சுவாமியை பிரார்த்தனை செய்தால் அவர்கள் உரிய பாதுகாப்பையும் மன உறுதியையும், தைரியத்தையும் பெறுவார்கள் என்பதே இத்தல யானை வாகன ஐயப்ப சுவாமி அருளும் அனுகிரகங்களில் ஒன்றாகும். சீதை அசோக வனத்தில் பெற்ற பாதுகாப்போ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பெற்ற பாதுகாப்போ நீங்கள் அறிந்ததே. ஸ்ரீஐயப்ப லீலையாக இத்தலத்திற்கு வியாபார நிமித்தம் வந்த ஒரு ஜவுளி வியாபாரியும் அவருடைய குமாரத்தியும் கொடிய மிருகங்களும் இருளும் சூழ்ந்த இவ்வனப் பகுதியில் தங்கி இறுதியில் ஸ்ரீஐயப்ப சுவாமியையே சரணடைந்து நலம் பெற்றதை இத்தல புராணம் உறுதி செய்கிறது. பணிந்தவனே பக்தன் என்ற சித்த மூதுரைக்கு சாட்சியமாக நிற்பது இத்தல சங்கரநாராயண விருட்சம் மட்டுமன்று இத்தலத்தில் ஐயப்ப சுவாமியின் திருவடிகளை வருடிச் செல்லும் ராஜகூப நதியுமாகும். கைலயங்கிரியில் பொலியும் மானசரோவர் திருக்குளத்தைப் போல பளிங்குபோன்ற தூய்மையுடன் விளங்குவதே ராஜகூப நதியின் தன்மையாகும். அது மட்டுமன்று. சக்கரவர்த்திகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் என்பவர்களின் மனதைப் போலச் சற்றும் சலனமற்று திகழ்வதே ராஜகூப நதியின் தன்மையாகும். இந்த நதி ஓடுகின்றதா இல்லையா என்றே அறிய முடியாதபடி சலனமற்று ஆனால் தூய்மையுடன் பளிங்குபோல் திகழ்வதே இந்த நதியின் தன்மையாகும். கங்கையில் நீராடும் பக்தர்களின் பாவச் சுமைகளை எல்லாம் ஏற்கும் கங்கா தேவியானவள் சுமக்க முடியாமல் தவிக்கும் தான் பெற்ற பாவங்களை எல்லாம் களைவதற்காக காவிரியில் நீராடி ஸ்ரீபரிமள ரெங்கநாதரின் அருளைப் பெறுகிறாளோ அவ்வாறே சுமக்க முடியாத பாவங்களை எல்லாம் சுமக்கும் தாயாக விளங்குபவளே சலனமற்று பாயும் ராஜகூபம் நதி தேவியாவாள். தலை முடியைப் பிய்த்துக் கொள்ளும் பொறுப்பு உடையவர்களும், உயர்ந்த அந்தஸ்து, பொறுப்பு உடையவர்களும் இத்தல ராஜகூப நதியில் நீராடி இந்த நதியை தரிசித்தவாறு அமர்ந்து தியானம் புரிதலால் அற்புத மன அமைதியைப் பெறுவார்கள். ராஜகூபம் அளிக்காத மன அமைதியை எந்த தீர்த்தமும் அளிக்க முடியாது என்பார் சற்குரு. சீதா தேவி ராமபிரானுடன் இத்தலத்திற்கு வருகை தந்தபோது இத்தீர்த்தக் கரையில் அமர்ந்து தான் ஸ்ரீராமபிரானைப் பிரிந்து வாழும் காலத்தை நினைத்து அதைச் சந்திப்பதற்கான மன அமைதியையும் உறுதியையும் பெற்றாள் என்பதே சித்தர்கள் உரைக்கும் இரகசியமாகும்.

வினை தீர்க்கும் வில்வம்

பொதுவாக லட்சுமி கடாட்சத்தை நல்கும் வில்வ மரத்தின் தன்மை பற்றி பக்தர்கள் நன்கு அறிவார்கள். வில்வ இலைகளில் லட்சுமி கடாட்சம் மிகுந்திருப்பதால் வில்வ மர தரிசனமும் வழிபாடும் செல்வ விருத்தியைத் தரும் என்பது உண்மையே. நமக்கு வரும் வினைகள் யாவுமே நம் பூர்வ ஜன்ம கர்ம வினைகளால் வருபவையே என்பதால் இந்த பூர்வ ஜன்ம வினைகளே நாம் இன்று அனுபவிக்கும் வறுமைக்கு காரணம் என்ற அறிவைத் தருவதும் வில்வ மரத்தின் அடியில் பெருங் கருணை கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகணபதி மூர்த்தியின் அனுகிரக சக்தியாகும். பல கிரகங்களிலும் உள்ள ஜீவன்கள் அங்குள்ள தலைமை விஞ்ஞானியையே தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து விடுகின்றனர். ஆனால் தமக்கு மேல் தெய்வம் என்ற உண்டு என்ற ஞானத்தைப் பெறவே அவர்கள் எத்தனையோ பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதையே அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற மூதுரை நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு இன்று நாம் அனுபவிக்கும் எல்லாக் குறைபாடுகளும் செல்வ விருத்தியும் இறைவனால் நம் கர்ம வினையின் பரிசாக அளிக்கப்பட்டவையே என்ற ஞானத்தை அளிப்பதே இவ்வாறு வில்வ மரத்தடியில் எழுந்தருளி உள்ள விநாயக மூர்த்திகளின் அனுகிரகப் பாங்காகும்.

ஸ்ரீகணபதி மூர்த்தி ஆரியங்காவு

பலருடைய ஜாதகங்களில் லக்னத்திலோ அல்லது ஏழாமிடத்திலோ ராகு, கேது மூர்த்திகள் எழுந்தருளி இருப்பது உண்டு. இதையே நாக தோஷம் என்ற அழைக்கிறோம். நாக தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் ஜாதகத்தின் மூலம் ஒருவர் அனுபவிக்க வேண்டிய நாக தோஷங்களை இத்தகைய அம்சங்கள் குறிக்கின்றன என்பதே உண்மை. ஆரியங்காவு திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீகணபதி மூர்த்தி இவ்வாறு இருபுறமும் நாக மூர்த்திகளுடன் எழுந்தருளி உள்ளதால் நாக தோஷங்களால் வாடும் ஆண்களும் பெண்களும் இத்தல பிள்ளையாரப்பனை வேண்டி வில்வ மரத்தை 21 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்குதலால் நற்பலன் பெறுவார்கள். எடுத்ததெற்கெல்லாம் சந்தேகமும் கோபமும் கொள்பவர்கள் அல்சர், குடல்புண் போன்ற நோய்களால் வாடுவது இயற்கையே. இதற்கு பூர்வ ஜன்ம காரணங்களும் பல உண்டு என்றாலும் இவ்வாறு வயிற்றுப் புண் நோய்களால் வருந்துவோர் இத்தல கணபதி மூர்த்தியை வணங்கி நற்பலன் பெறலாம். மாதவிடாய்த் துன்பங்களால் அவதியுறும் பெண்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். ஏக வில்வம், கோள வில்வம், சனாதன வில்வம் என்றவாறாக வில்வங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. எந்த வில்வத்தை எந்த வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற இரகசியம் உணர்ந்தோர்கள் சித்தர்கள் மட்டுமே. இவ்வகையில் ஆரியங்காவு திருத்தலத்தில் கோளவில்வம் மரத்தடியில் எழுந்தருளிய அண்ணலே ஸ்ரீகணபதி மூர்த்தி ஆவார். ஸ்ரீகணபதி மூர்த்தி இந்த நிலவுலகில் தோன்றியபோது களத்திர தோஷங்களைக் களைவதற்காகவும் அவருடைய அவதாரம் விளங்கியதால் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் சனி பகவானும் ராகுவும் துலங்குகிறார்கள் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டிய ஜாதக இரகசியமாகும். சனி என்றால் குளிர்ச்சி என்ற சீதளத் தன்மையையும் குறிப்பதால் வில்வதள நாயகனான இத்தல பிள்ளையார் மூர்த்தி திருமணமாகாமல் இருப்பதால் விளையும் மனக் கொந்தளிப்புகளையும் சாந்தப்படுத்தும் வள்ளலாக அமைகிறார். தாமதப்படும் திருமணங்களால் மன வேதனைப்படும் வரன்களும் பெற்றோரும் மன சாந்தியைப் பெற நாட வேண்டிய மூர்த்தியும் இத்தல விநாயகப் பெருமான் ஆவார்.

நீலமேக சியாமளா

தை மாதப் பிறப்பன்று சபரிமலையில் தோன்றும் மகர ஜோதியைப் பற்றி பல புராணங்களே எழுதலாம் என்றாலும் அவரவர் நம்பிக்கை, விரத அனுஷ்டானங்கள், பிரார்த்தனையின் தன்மை இவற்றைப் பொறுத்து இந்த மகர ஜோதியின் தன்மையும் மாறும் என்பதே சித்தர்கள் உரைக்கும் இரகசியம். திருக்கார்த்திகை அன்று திருஅண்ணமலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தை சாதாரண மனிதனைப் போல கிரிவலம் வந்து தரிசனம் செய்கிறார் சுவாமி ஐயப்பன் என்பதே இன்றளவும் நிகழ்ந்து வரும் தெய்வீக விந்தையாகும். இவ்வாறு பெற்ற கார்த்திகை தீப அனுகிரக சக்திகளையே காந்த மலையில் ஐயப்ப ஜோதியாக, மகர தீபமாக பிரகாசித்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார் இறைவன்.

லட்சக் கணக்கான மக்களின், பக்தர்களின் பிரார்த்தனைகளும் வெவ்வேறாக இருக்கும்போது அந்த பிரார்த்தனைகளை எல்லாம் தீர்க்கும் மகர ஜோதியின் வண்ணமும் பிரகாசமும் பல விதங்களில் ஜொலிப்பதில் அதிசயம் என்ன. இம்முறையில் மஞ்சள், வெள்ளை, வான நீலம் என்றவாறாக இந்த மகர ஜோதியின் நிறம் இருப்பதாக சித்தர்கள் உரைக்கின்றனர். பொதுவாக, தன்னலம் சிறிதும் இன்றி மற்றவர்கள் நலனுக்காக பரிபூரண நம்பிக்கையுடன் விரதமிருந்து மகர ஜோதியைத் தரிசிப்பவர்களுக்கு ஸ்ரீஐயப்பன் இங்கு நீங்கள் காணும் வீடியோ படத்தில் உள்ள பறவையின் நிறத்தை உடையவராக இருப்பார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். இந்த நீலமேக சியாமள மகர ஜோதியை தரிசனம் செய்வது என்பது பலருக்கும் சாத்தியமில்லை என்றாலும் இந்த வண்ண ஆடைகளையாவது மற்றவர்களுக்கு தானமாக அளித்து ஓரளவு மகர ஜோதி தரிசனப் பலனைப் பெறலாம் அல்லவா ? ஹரிஹர சுதனாக எழுந்தருளிய ஐயப்ப சுவாமி எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதியிலிருந்து ஒரு பரலாக தோன்றியுள்ளார் என்று விவரித்தோம் அல்லவா ? இந்த ஹரிஹர ஜோதியின் தேஜோ விடங்க வண்ணமே சபரி மலையில் மகர ஜோதியாகப் பிரகாசிக்கின்றது. இதன் ஒரு பரிமாணமே ஆரியங்காவு திருத்தலத்தில் ஸ்ரீஐயப்ப சாஸ்தாவாக பக்தர்களுக்கு அருள் விளக்குகிறது. தாம்பத்ய உறவு பிரச்னைகள், ஆண் பெண் குறிகளில் தோன்றும் வியாதிகள் போன்ற துன்பங்களால் வருந்துவோர் நீல வண்ண ஒன்பது கஜ பருத்தி அல்லது பட்டு புடவைகளை வாங்கி ஆரியங்காவு திருமண மண்டபத்தில் வைத்து திருஞானசம்பந்தரின் மந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப் பதிகத்தை குறைந்தது 11 முறை ஓதி ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வந்தால் நன்னிலை பெறுவர். குடும்ப ஒற்றுமையும் பெருகும்.

ராஜகூபம் ஆரியங்காவு

வனவாசத்தின் போது சீதையைப் பிரிந்த வேதனையில் ராமர் தான் செய்யும் காரியங்களில் பற்றில்லாது ஏனோ தானோவென்று நிறைவேற்றிக் கொண்டிருந்தார் அல்லவா ? அப்போது ஒரு நாள் காலையில் நீராடும்போது நதிக் கரையில் உள்ள மணல் படுக்கைமேல் வழக்கம்போல் தன்னுடைய அம்புகளை குத்தி வைத்து விட்டுச் சென்றார். நீராடி, அர்க்ய வழிபாடுகளை எல்லாம் நிறைவேற்றிய பின்னர் வந்து பார்த்தால் ராமபிரானுடைய அம்பில் இரத்தம் தோய்ந்து இருப்பதைக் கண்டார். திடுக்கிட்டு லட்சுமணனிடம் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கச் சொன்னார். அப்போது அம்புக் குத்திய இடத்தில் ஒரு தவளை இருந்து அது ராம பாணத்திற்கு பலியாகி இருந்தது. மிகுந்த வேதனை அடைந்த ராம பிரான் அன்புடன் அந்த தவளை தியாகியிடம், “ஏனப்பா, நானோ மனைவியைப் பிரிந்த வேதனையில் இருந்ததால் நீ இருப்பதைக் கவனிக்காமல் என்னுடைய அம்பைக் குத்தி உன்னுடைய உயிருக்கு துன்பம் இழைத்து விட்டேன். நீயாவது நான் அம்பைக் குத்தும் தருணத்தில் என்னைக் கூவி அழைத்திருக்கலாம் அல்லவா?” என்று அனைத்தும் அறிந்த ராமபிரான் ஒன்றும் அறியாதவர்போல் கேட்டாராம். அதற்கு அந்த தவளை, “ராமா, அடியேன் சதா சர்வ காலமும் ராமா ராமா என்று உன்னுடைய திருநாமத்தைத்தான் ஜபித்துக் கொண்டிருக்கிறேன். அந்த ராமனே ராம பாணத்தை அடியேன் மேல் பிரயோகம் செய்தால் அடியேன் யாரிடம் முறையிட முடியும் ?” என்று திருப்பிக் கேட்டதாம்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடமே ராஜகூப நதிக் கரை என்பது உங்களுக்குச் சொல்லாமேலே விளங்கி இருக்கும் அல்லவா ? ராமர் தன் தவறுக்காக மனம் வருந்தி, பின்னர் அந்த தவளைக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை அளித்தார். எப்படி ? இரத்தத்தால் ஏற்பட்ட வினையை இரத்த சம்பந்தத்தால்தானே களைய முடியும் ? எனவே சௌராஸ்டிரம் என்னும் சூரிய குல மன்னனாகத் தோன்றிய அந்த தவளைக்கு பெண்ணாகப் பிறந்த ஸ்ரீபுஷ்கலை என்ற தேவியை மணந்து தன் இரத்த சம்பந்த உறவை நிறைவு செய்தார் ராம பிரான் என்பதே சித்தர்கள் கூறும் இனிய காவியமாகும். அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது என்பதே இந்த சுவைக்கு மேலும் சுவை கூட்டுவதாகும். ராம பிரான் போன்ற சக்கரவர்த்திகளுடன் தொடர்பு கொண்டதே ராஜகூபம் என்றால் இதன் மகிமையை விளக்க முடியுமா ? ராஜகூபத்தில் நீராடி இத்தல ஐயப்ப சுவாமியை வழிபடுவதால் எத்தகைய தவறுகளுக்கும் பிராயசித்தம் கிட்டும் என்பதே இத்தல வரலாறு உரைக்கும் உண்மையாகும். கூபம் என்றால் கிணறு என்று பொருள். ஆற்றைக் கிணறு என்று அழைப்பதன் காரணம் என்னவோ என்று உங்களுக்குத் தோன்றலாம். கிணற்று நீரைப் போல் அசையாது இருப்பதே இந்த ராஜகூபத்தின் தன்மையாகும். அதனால்தான் தரைமட்டத்திற்கு கீழே அபூர்வமாக அமைந்திருக்கும் இத்தலம் பக்தியைப் பெருக்கும் கூபமாகத் திகழ்கிறது என்பதும் ஒரு இரகசியமாகும்.

ராமர் பரசுராமர்

ஸ்ரீராமபிரான் பூமியில் மனிதனாகத் தோன்றியபோது அவர் ராவணனை எதிர்கொள்ள வேண்டியதும் முக்கிய நோக்கமாக இருந்தது அல்லவா ? ஆனால் ஒரு அசுரனை எதிர்கொள்வது என்பது நிச்சயம் ஒரு மானிடனுக்கு சற்றும் இயலாத காரியம் என்பதால்தான் ராவணனே தனக்கு சாகாவரம் இறைவனிடம் கேட்டபோது மனிதர்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. பரசுராமர் போன்ற அவதார மூர்த்திகள் மனிதனின் இந்த குறைந்த சக்தியைப் பற்றி தெளிவாக உணர்ந்திருந்ததால் ராமபிரான் தோன்றுவதற்கு முன்னரே பன்னெடுங்காலம் தவம் இயற்றி அந்த தவத்தின் பலனாய் விளைந்த கனியை ராமர் தன்னை வெற்றி பெற்றதாக ஒரு நாடகம் நடித்து அவருக்கு வெற்றிப் பரிசாக அளித்தார். தன்னுடைய தவப் பயனை அளித்ததோடு மட்டுமல்லாமல் சபரிமலை போன்ற இடங்களில் ஸ்ரீஐயப்ப சுவாமியின் தெய்வீக சக்திகளையும் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய திருத்தலங்களுள் ஒன்றே ஆரியங்காவு ஆகும். மேலும் ராமபிரான் எதிர்காலத்தில் தன்னுடைய சொந்த குழந்தைகளை எதிர்த்துப் போரிட நேரும் என்பதையும் தன்னுடைய தவப் பயனால் உணர்ந்த பரசுராமர் கல்லடி என்ற மந்திரத்தையும் ராமபிரானுக்கு உபதேசமாக அளித்தார் என்பதே சித்தர்கள் கூறும் ராமகாவியமாகும்.

இந்தலூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதர்

ராஜகூப நதிக்கு அமைந்த மற்றோர் பெயரே, ராஜகூபம் சங்கமமாகும் நதியின் பெயரே கல்லடி என்பதாகும். கல்லடி மந்திரம் ஜபித்தால் மனம் கல்லாகி விடும். தன்னுடைய குழந்தைகளான லவனையும் குசனையும் எதிர்த்தபோது ராமர் இந்த பரசுராம மந்திரத்தையே பிரயோகம் செய்தார். ஆதியில் ஸ்ரீபரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சபரிமலை ஐயப்ப சுவாமி நவபாஷாணத்தில் உருவானவரே. அந்த நவபாஷாண சக்திகள் பரசுராமரைப் போன்ற நைஷ்டிக பிரம்மசாரிகளால் மட்டுமே பிரதிட்டை செய்ய இயலும். இந்த நவபாஷாண விக்ரஹங்களில் எழும் சக்திகளை பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர்களே கிரகிக்க இயலும் என்பதால்தான் சபரிமலை யாத்திரை செல்வோர் ஒரு மண்டல காலத்திற்கு பிரம்மசர்ய விரதத்தை ஏற்க வேண்டும், குளிர்ந்த நீரில் இருமுறையாவது நீராட வேண்டும் போன்ற பிரம்மசர்ய நியதிகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதே பக்தர்கள் தெரிந்து உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டியதாகும். இந்த நியதிகளை எந்த அளவிற்கு மதித்து பக்தர்கள் நிறைவேற்றுகிறார்களோ அந்த அளவிற்கு ஐயப்ப சுவாமியின் அனுகிரகமும் கனியும். ஸ்ரீபரசுராமர் பிரதிஷ்டை செய்த திருத்தலங்களில் எல்லாம் இத்தகைய பிரம்மச்சர்ய நியதிகள் விளங்கும் என்பதால்தான் ஆரியங்காவு திருத்தலத்தில் கூட வெகுகாலம் பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தலூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதரை வணங்கி உத்தரவு பெற்ற பின்னர் ஆரியங்காவு ஸ்ரீஐயப்ப சுவாமியை தரிசிப்பதால் அனைவரும் பரசுராமரின் அனுகிரகத்தைப் பெறுவார்கள், கூடவே அவர்களுக்கு ஸ்ரீஐயப்ப சுவாமியின் கருணையும் சுரக்கும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். இந்து என்றால் சந்திரன். சந்திர பகவான் தான் ரோகிணி மேல் கொண்ட அதிகப்படியான அன்பின் ஈர்ப்பால் தட்ச சாபத்திற்கு ஆளாகி தன் கலைகள் தேய்ந்தபோது முதலில் இந்தலூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதரையே வணங்கி தன்னுடைய சாபத்திற்கு விமோசனம் தேடத் தொடங்கினான். ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்கள் அடங்கிய நிகழ்ச்சியே சந்திர பகவானின் சாப விமோசன வரலாறு ஆகும் என்பதைப் பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஸ்ரீபரிமள ரெங்கநாதர் வழிபாடு சந்திர பகவானின் தபம் குறித்த சுவையான விஷயங்களை உணர்த்தும். அப்போதுதான் பெண்கள் மீதுள்ள மோகம் களையும், அதனால் உடலில் தோன்றும் நறுமணமே பரிமள ரெங்கமாகும். ஜாதகங்களில் சந்திர பகவான் மீது ஏற்படும் சனியின் பார்வை, சனி சந்திர சங்கமம் சபல குணங்களை ஏற்படுத்தும். இதற்கு பிராயசித்தமாக அமைவதே சனிக் கிழமை அன்று அமையும் ஸ்ரீபரிமள ரெங்கநாதரின் வழிபாடு. எல்லாம் அவன் செயல். பலருக்கும் குளித்த சில நிமிடங்களிலேயே உடலில் ஒருவிதமான துர்நாற்றம் ஏற்படும். என்னதான் வாசனைத் திரவியங்களை பூசிக் கொண்டாலும் இந்த துர்நாற்றம் நீங்காது. இத்தகையோர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் குங்குமப்பூ தைலத்தை கலந்து ஸ்ரீபரிமள ரெங்கநாதருக்கு வளர்பிறை சனிக் கிழமைகளில் அளித்து வந்தால் நற்பலன் பெறுவார்கள். காரணமில்லாமல் உடலில் ஏற்படும் அரிப்பு, சொரி சிரங்கு போன்ற தோல் வியாதிகளும் குணமாகும். நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், குங்குமப்பூ தைலம் இவை மூன்றும் கலந்த கலவையால் ஸ்ரீஅத்தி வரதர் போன்ற மரத்தால் உருவான தெய்வ மூர்த்திகளுக்கு காப்பிட்டு வணங்குவதால் அவர்களின் தெய்வீக சக்திகள் பெருகுவதுடன் அம்மூர்த்திகளின் அருள் சுரக்கும் பாங்கும் பெருகும் என்பது உண்மையே. பல வருடங்கள் அபிஷேக ஆராதனைகள் இன்றித் துலங்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு உரிய வழிபாட்டு முறையே இத்தகைய குங்குமப்பூ காப்பு ஆகும். மனிதர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் மர சாமான்களின் உழைப்புத் தன்மை போன்றதே இத்தகைய தெய்வ மூர்த்திகளின் அனுகிரக சக்தியும் ஆகும். உலா வரும் தெய்வ மூர்த்திகளைத் தாங்கும் பல்லக்கு போன்றவற்றிற்கும் இத்தகைய காப்பு சிறப்பே.

சகுனி தீட்டியது சதியா ?

மகாபாரதத்தில் கிருஷ்ண பகவானின் பாத்திரத்தைப் போல் குழப்பத்தின் சிகரமாகத் திகழ்வது சகுனியின் பாத்திரமும் ஒன்றாகும். கரணங்களில் சகுனி என்றால் காக்கை என்று பொருள். பிதுர் லோகங்கள் என்னும் மூதாதையர் லோகங்களுக்குச் சென்று மூதாதையர்களின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதில் காக்கைக்கு இணை எதுவும் இல்லை. அது போலவே தன் தந்தையின் அஸ்தியையே பகடைக் காயாக மாற்றி அதைக் கொண்டு பல வரலாற்று நிகழ்ச்சிகளை நிறைவேற்றியதில் வல்லவனாகத் திகழ்ந்தவனே சகுனி ஆவான். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பொருளை மாயக் கண்ணாடி காட்டியபோது கிருஷ்ண பகவானுக்குப் பிடித்தவனாக சகுனியே தோன்றினான் என்பதும் இங்கு நாம் நினைவு கூற வேண்டியதாகும். இந்தப் பரசுராம க்ஷேத்திரமாகிய ஆரியங்காவில் நாடகம் நடத்தியபோது அதில் நம் சற்குரு சகுனி வேடத்தையே ஏற்று நடித்தார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். அதே போல நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும் நம் சற்குரு சகுனியின் வேடத்தையே ஏற்று நடித்தார். இல்லை அனைவரையும் இறை வழியில் நடத்தினாரா என்பதே நாம் நம்மை அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். நாம் உடலைத் துறந்து மேலுலகம் செல்லும்போது நம்மை வழிநடத்த எந்த தெய்வமும் வருவது கிடையாது. இறந்த, நாமறிந்த தாய், தந்தையர், தாத்தா பாட்டி போன்ற பித்ரு மூர்த்திகளே நம்மை வழி நடத்திச் செல்வர் என்பதே உண்மை. எனவே முதலில் நாம் திருப்தி செய்ய வேண்டியது நம் மூதாதையர்களான பித்ரு தேவர்களையே. இவர்கள் திருப்தி அடைந்து விட்டால் நாம் அளிக்கும் தர்ப்பணங்களை நேரடியாகவே வந்து நம்மிடம் பெற்று விடுவார்கள். நம் சற்குருவைப் போல் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கே இது சாத்தியம் என்பதை உணரவும். அது வரையில் மனிதர்கள் அனைவரும் தர்ப்பணம் என்ற வழிபாட்டை நிகழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இதுவரையில் தமது மூதாதையர்களை தர்ப்பணம் போன்ற வழிபாடுகளால் திருப்தி அடையச் செய்யாதவர்கள் இனியாவது தங்கள் மூதாதையர்கள் வழிபாட்டை நிறைவேற்றத் துணைபுரியும் தலமே ஆரியங்காவு ஆகும். ராஜகூபம், கல்லடி, பம்பை நதி போன்ற தீர்த்தக் கரைகளில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றி உரிய தான தர்மங்களை நிகழ்த்துவதால் இதுவரை விட்டுப் போன பித்ரு வழிபாடுகளுக்கு இது பிராயசித்தமாக அமைந்து நம் மூதாதையர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என்பது உறுதி.

சுக்ரபல தீர்த்தம் ஆரியங்காவு

தற்கால திருமணங்களில் ஜாதகப் பொருத்தங்களுக்கு அந்த அளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை நிலவி அது விவாகரத்து என்ற பிரிவினை நிலையை அடைகிறது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது கணவன் மனைவி இடையே இருக்க வேண்டிய அன்யோன்யத்தில் காணப்படும் குறைபாடே ஆகும். முறையான ஜாதகப் பொருத்தங்களிலும் நம் சற்குரு வலியுறுத்தியதைப் போல திருமணத்திற்கு முன்னரே கணவன் மனைவி உடல் கூறு, ஆரோக்யம் பற்றிய மருத்துவ ஆலோசனையையும் பெறுதல் நலம். ஆனால் பற்பல காரணங்களினால் இவ்வாறு மருத்துவ ஆலோசனைப் பெற முடியாமலோ அல்லது முறையான ஜாதகப் பொருத்தங்கள் அமையாத ஜாதகங்களில் தம்பதிகள் இடையே அன்யோன்யம் குறைந்து பூசல்கள் நிறையும்போது இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. பொதுவாக, உடற்கூறு பிரச்னைகளால் தம்பதிகள் அதிருப்தி கொள்ளும்போது இத்தல சுக்ரபல தீர்த்தத்தில் நீராடி அவரவர் சக்திக்கு ஏற்ற்படி இத்தல திருமண மண்டபத்திலோ அல்லது தங்கள் ஊரில் உள்ள திருத்தலங்களிலோ மங்கள மாங்கல்ய பொருட்களைத் தானமாக அளித்து வருதலால் தம்பதிகள் சுகமடைவர். ஒரு முறை நம் சற்குருவை நம்பிய ஒரு அடியார் திருமண வாழ்வில் திருப்தி கொள்ளவில்லை என்று தெரிய வந்தது. அவர் சற்குரு கூறிய முறையில் திருமணத்திற்கு முன் தேவையான ஆரோக்கிய உணவுகளை உண்ணாததும் உடற் பயிற்சிகளை முறையாக நிறைவேற்றாததும் ஆகும் என்று பின்னர் தெரிய வந்தது. நடந்து முடிந்த கதையை திரும்ப நடிக்க முடியாதே, சற்குருதானே இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த சுக்ரபல தீர்த்தம் விட்டு உயிரெழுத்தை ஆரம்பமாக உடைய ஒரு மூலிகையை சற்குருவும் அவர் துணைவியாரும் ஆறு மணி நேரம் தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவராக அம்மியில் அரைத்து அந்த அடியாருக்கு அளித்து அந்த அடியார் வாழ்வில் சுக தீபம் ஏற்றினர். அந்த அடியாரோ இன்று பேரன் பேத்திகளுடன் நலமாக இருக்கிறார் என்பதே ஆரியங்காவு தீர்த்த மகிமையும் அதன் மகிமையை உலகிற்கு உணர்த்திய சற்குருவின் சேவையுமாகும்.

ஆரியங்காவு

ஒரு முறை இரு அடியார்கள் சற்குருவுடன் அவசர வேலை நிமித்தமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிரே வந்த மற்றோர் அடியாரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த அடியாரோ ஒரு சரியான “பிளேடு”. பேச ஆரம்பித்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசுவார். அடியார்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த அடியார் சற்குருவைப் பார்த்துப் பேச ஆரம்பித்து விட்டால் தாமதம் ஏற்பட்டு தாங்கள் செல்லும் காரியம் நிச்சயம் தடைப்படுமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்த அடியார், “எங்கே ரெண்டு பேரும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டீர்கள், நான் அவசரமாக வாத்யாரைப் (சற்குருவைக் குறிக்க அடியார்கள் பயன்படுத்தும் பட்டம்) பார்க்க போய்க் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லிக் கிளம்பி விட்டாராம். அந்த அடியார்களுக்கு கிடைத்த குரு தரிசனம், மூன்றாவது அடியாருக்குக் கிட்டவில்லை என்றால் இதுவே பரிமாணங்கள் (dimensions) காட்டும் பாடமாகும். இத்தகைய பரிமாணங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள உதவுவதே தரை மட்டத்திற்குக் கீழே நாம் காணும் ஆரியங்காவு, திருஅண்ணாமலை பாதாள லிங்கம் போன்ற திருத்தலங்களாகும். பிராணாயாமப் பயிற்சியில் சூரிய கலை, சந்திர கலை போன்ற கலைகள் பற்றிய அறிவையும் பூதங்கள் சுட்டிக் காட்டும் நிலைகளையும் புரிந்து கொண்டால் இந்த பரிமாணம் பற்றிய ஞானம் பெறுவதற்கு எளிதே. இதற்கு ஆரம்பப் பயிற்சியாக அமைவதே காயத்ரீ தியான முத்திரைகளாகும். தியோசாபிகல் சொசைட்டியின் தலைவியான அன்னி பெசண்ட் அம்மையாருக்கு குருவாக அமைந்தவரே சற்குருவின் தாத்தாவான ஸ்ரீகேசவசந்திரசேனர் ஆவார். இந்த விவரத்தை புத்தகங்கள் மூலம் அறிந்த ஒரு அன்பர் சென்னைக்கு வந்து நம் சற்குருவைத் தேட ஆரம்பித்தார். அந்தத் தேடல் பலனளிக்காத நிலையில் நம் சற்குருவின் ஒரு பழைய அடியாரைச் சந்தித்தார். அந்த அடியார் நான்காம் பரிமாணத்தில் (fourth dimension) சஞ்சரிக்கக் கூடியவர். அதனால் அவர் அந்த வெளிநாட்டு அன்பருக்கு ஆறுதல் அளித்து, “நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று மாலை தியானத்தில் அமர்ந்து நான்காம் பரிமாணத்தில் சஞ்சரித்து வெங்கடராமனை (சற்குருவின் திருநாமம்) பிடித்து விடுகிறேன்,” என்று கூறினாராம். அவர் தியானத்தில் அமர்ந்து நான்காம் பரிமாணத்தில் சஞ்சரித்தபோது சற்குருவைக் காண முடியவில்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். பரிமாணங்களைக் கடந்த பரிணாமத்தில் விளங்குபவரே சற்குரு என்ற பேருண்மையை அன்று உணர்ந்து கொண்டார். இவ்வாறு பரிமாணம் கடந்த அறிவைப் பெற விரும்புபவர்கள் ஆரியங்காவு திருத்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து தியானம் இயற்றுதலால் நற்பலன் பெறுவார்கள். தந்திர சாதனையில் முன்னேற விரும்புவோருக்கு நற்பலன் அளிப்பது இத்தகைய மேடு பள்ளமான இடங்களில் நிறைவேற்றும் வழிபாடாகும். மேடு பள்ளம் என்பதை எதிர்மறையான வார்த்தைகளாக எண்ணாமல் இரண்டின் குசா (மேடு) நான்கு (பள்ளம்) என்று உணர்வதே தந்திர வழிபாட்டில் முதல் படி. இதை உணர்ந்தால் சகுனியின் திட்டங்களும் புரிய வரும்.

கோபியர்களின் இதய கீதம்

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி அன்னதானம் நிறைவேறிய பின்னரும் சற்குரு சில சமயம் ஒருசில நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். ஒரு முறை அவ்வாறு தங்கி ஆஸ்ரமம் முன்னுள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது ரமணாஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு வனிதை சற்குருவிற்கு நமசிவாய என்று கூறி வணக்கம் தெரிவித்தாள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் கூறிய இறை நாமத்தைக் கேட்ட சற்குரு, “நமசிவாய என்று கேட்டவுடன் அடியேனுக்கு ஜில்லென்று ஆகி விட்டது,” என்றார். சற்குருவோ வழக்கம் போல் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிக்காட்டாது, “நீ யாரம்மா, அடியேனுக்கு வணக்கம் தெரிவிக்கிறாயே ?” என்று கேட்க அந்தப் பெண்ணும் ஆங்கிலத்தில், “உங்களைப் பல முறை இங்குள்ள புத்தக நிலையத்தில் பார்த்திருக்கிறேன். நீங்கள் பலரும் புடைசூழ அமர்ந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அருமையான பதில்கள் கூறுவதையும் நான் அவர்கள் அருகிலிருந்து கவனித்துக் கொண்டு வந்தேன். இன்றுதான் உங்களைத் தனியாக சந்திக்கும் பாக்கியமும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அவர்கள் உங்களிடம் காட்டும் மரியாதையிலிருந்தே தாங்கள் ஒரு பெரிய மகான் என்று தெரிய வருகிறது. என்னுடைய கணிப்பும் அவ்வாறுதான் உள்ளது,” என்று தன் நீண்ட நாள் அவாவைப் பூர்த்தி செய்து கொண்ட திருப்தியில் கூறினாள். சற்குருவின் மௌனத்தைச் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த மாது தொடர்ந்தாள், “நானாக எதையும் செய்வது கிடையாது. ஒரு காரை ஓட்டுவதாக இருந்தால் கூட அதை ரமண மகரிஷியே ஓட்டுவதாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் அவர் கைகளில் தவழும் ஒரு கருவி மாத்திரமே என்பதை உணர்ந்து கொண்டு விட்டேன்,“ என்றாள். சற்குருவோ தொடர்ந்து, “உன்னுடைய எண்ணம் சரியே, நீ அவரை குருவாக மதித்தல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், ஒரு சீடனுக்காக பெரிய பொறுப்பில் உள்ள சற்குருநாதர் கார் ஓட்டும் டிரைவர் பணியைச் செய்ய வேண்டுமா என்ன ?” என்று திருப்பிக் கேட்டார். சில நொடிகள் மௌனம் நிலவியது. ஆம், இப்போது அந்த மாது தன் தவறை உணர்ந்தாள். நீங்களும் இந்த உரையாடலின் பின்னணியில் அமைந்த குரு சீடன் உறவு முறையைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பீர்கள் அல்லவா ? நவசிவாய என்று சொல்லும்போது இதயத்தில் உருவாகும் குளிர்ச்சியை, நம் சற்குரு திருஅண்ணாமலையில் அனுபவித்த அந்த தெய்வீக குளிர்ச்சியை சாதாரண மக்களும் அனுபவிக்க கடவுளின் கருணையாகப் பொழிவதே ஆரியங்காவு ராஜகூபமாகும். ராஜகூபம் ஊட்டும் குளிர்ச்சியே தெய்வீக குளிர்ச்சி. இந்த தெய்வீக குளிர்ச்சியை இறை நாமங்கள் சொல்லும்போது ஒருவர் இதயம் உணர்ந்தால் அவர் தெய்வீகத்தில் நன்கு முன்னேறி விட்டதாக அர்த்தம். வனிதை என்றால் இளம் பெண் என்று பொருள், வனிதை என்ற சொல் மனைவியையும் குறிக்கும். அதாவது புஷ்கலை தேவி ஆரியங்காவு ஐயப்பனை தன்னுடைய கணவராக மனத்தில் வரித்தாள் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தெய்வீக சுவையாகும். தற்போது உள்ள கணவன் மனைவி என்ற உறவு முறைக்கு இது முற்றிலும் அப்பாற்பட்டதே. இந்த அற்புதமான வனிதை உறவைக் கொண்டவர்களே கிருஷ்ண பகவானுடன் விளையாடி மகிழ்ந்த கோபிகைகள். முழுக்க முழுக்க பக்தியில் பூத்த பரவச மலர்கள் அவை, காமம் என்பதற்கு துளியும் இடம் இல்லை அங்கே. கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்ட பக்தியைக் காட்டுபவளே இந்த வனிதை, கோபியர்கள் மேல் பகவானுக்கு உள்ள அன்பை வெளிப்படுத்துவதே சற்குருவின் செயல்.

சலனமற்ற சலனம்

நம்முடைய பூமி மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிமீ வேகத்தில் சூரியனைச் சுற்றி வருவதாகக் கூறுகிறோம். ஆனால் வீட்டிற்குள் அல்லது அலுவலகத்திற்குள் அமைதியாக அமர்ந்திருக்கும்போது பூமி அசைவதாகவே தெரிவதில்லையே. வானத்தில் உள்ள நிலா போன்றவற்றைப் பார்க்கும்போது ஒரு சிறிது அசைவைக் காண்கிறோம் அல்லது உணர்கிறோம். இதுவே தியானத்தில் இலயித்த மனதின் இயல்பு. தியானத்தின் இயல்பே இவ்வளவு வேகம் உடையதென்றால் மனதைத் தொலைத்த சித்தர்களின் மகான்களின் செயல் வேகம் எத்துணை சிறப்புடையதாக இருக்கும். இதையே நம் சற்குரு, “அடியேன் ஒரு நிமிடத்திற்கு சுமார் 50000 காரியங்களை இயற்றுகிறேன். பௌர்ணமி போன்ற நேரங்களில் இந்த அளவு ஒரு லட்சத்தைத் தொடும்,“ என்பார்கள். எப்படி சீரான இயக்கத்தால் ஒரு லட்சம் மைல் வேகத்தையும் நாம் உணர்வதில்லையோ அதே போல் இறைவனிடம் பக்தி கொள்ளும் மனம் சீரான வேகத்தில் இயங்கும்போது நாம் பற்பல காரியங்களை நிறைவேற்ற முடியும் என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் மனதின் திறனாகும். இதை ஓரளவு நாம் புரிந்து கொண்டு தியானம் செய்ய உறுதுணையாக நிற்பதே ராஜகூப நதியின் தன்மையாகும். இந்த நதி நிற்பதைப் போன்றே தோன்றுவதால் இதை கூபம், கிணறு என்று கூறுகிறோம்.

ஆரியங்காவு திருத்தலம்

ஆனால் நதி நிற்க முடியாதே. இதைப் புரிந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்தால் எண்ணெய் தாரை போன்று இறைவன் மேல் கொள்ளும் நினைவே தியானம் என்ற பொருளை நாம் உணர்ந்து தியானத்தில் பல படிக்கட்டுகளை மேலேறிச் செல்ல முடியும். அதற்கு உறுதுணையாக நிற்பதே ராஜகூப நதிக்கரையில் நாமியற்றும் வழிபாடும் தியானமும் ஆகும். அதன் மூலம் இந்தச் சலனமற்ற சலனம் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலை புரிந்தால்தான் மகர ஜோதியாக ஒளி விடும் ஐயப்ப சுவாமியின் கருணை நமக்குத் தெரிய வரும். ஐயப்ப ஜோதி தரிசனம் பெற்றால் அருணாசல ஜோதி மகிமையைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும். அருணை ஜோதியின் மகத்துவம் புரிந்தால்தான் நிரந்தர அழற் பிழம்பாய் பொலியும் திருஅண்ணாமலையாரைப் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒன்றிற்குள் ஒன்றாக, சுவைக்குள் சுவையாக ஒளிந்திருப்பவனே எம் ஈசன் இல்லை நம் ஈசன். சலனமற்ற சலனத்தின் தன்மையை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குவோம். பகவான் ரஜனீஷைப் பார்க்க ஒரு சென்னைவாசி சென்றிருந்தார். தான் தினந்தோறும் மயிலை கபாலி கோயில் சென்று சுவாமியைத் தரிசித்து வருவதாகவும், கட்டாயம் அங்கு சுவாமிக்கு நிகழும் தீபாராதனையை தரிசித்து வருவதாகவும் கூறினார். ரஜனீஷ் சிரித்துக் கொண்டே, “சுவாமியின் தீபாராதனைக்காக கோயிலுக்குச் செல்ல வேண்டுமா என்ன ? அதை இங்கிருந்தே நீங்கள் பெறலாமே,” என்று கூறி அந்த அடியாரை தன் இரு கைகளையும் கும்பிடுவதுபோல் குவித்து சேர்த்து வைத்துக் கொள்ளச் சொன்னாராம். அவர் அவ்வாறு கையை வைத்த பின் ரஜனீஷ் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடியாரை அருகில் நிற்கச் செய்தாராம். “இப்போது குவிந்த உங்கள் கையைப் பாருங்கள்,” என்றாராம் ரஜனீஷ். என்ன ஆச்சரியம், குவிந்த அந்த அடியாரின் கைகளுக்குள் கபாலி கோயில் இறைவனுக்கு நிறைவேற்றப்படும் மாலை தீபாராதனை தெளிவாகத் தெரிந்ததாம். அது மட்டுமல்லாமல் அந்த தீபாராதனையின் போது கோயில் அர்ச்சகர் ஒலித்த மந்திரங்களும் கோயில் ஆலய மணி ஓசையும் தெளிவாக அந்த அடியாருக்குக் கேட்டதாம். இதைப் பற்றி நம் சற்குருவிடம் விளக்கம் கேட்டபோது, “ரஜனீஷ் பலே கில்லாடி, அந்தப் பெண் இல்லாமல் அந்த அடியார் கபாலி கோயில் தீபாராதனையை தரிசித்திருந்தால்தான் அது விசேஷம்,” என்றார்.

சலனமற்ற சலனம்

இதுவே சலனமற்ற சலனம் கூறும் இரகசியம். இந்த இரகசியம் புரிந்தவர்களே பகவான் ரஜனீஷின் செயல்பாட்டையும் நம் சற்குருவின் பெருமையையும் சலனமற்ற சலனத்தின் தன்மையையும் புரிந்து கொள்ள முடியும். ஏதோ ஒரு பக்தருக்காக கபாலி கோயில் இறை மூர்த்தியின் தரிசனத்தை இருந்த இடத்திலிருந்தே ஒரு சற்குரு பெற்றுத் தருகிறார் என்றால் அந்தக் குருவானவர் எத்தனை இறை தரிசனங்களை ஒவ்வொரு விநாடியும் பெற்றுக் கொண்டிருப்பார் என்பதே நாம் உணர்ந்து இன்புற வேண்டிய சுவையாகும். இதற்கு அடிப்படையாக அமைவதே சலனமற்ற சலனம் சுட்டிக் காட்டும் தியான முறையாம். ஒருவர் காயத்ரீ மந்திரத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரத்தையோ இறை உருவம் ஒன்றில் ஒன்றி ஜபிக்கும்போது, காரிலோ ரயிலிலோ அந்த அடியார் பயணம் செய்தாலும், அங்கு உருவமும் மந்திரமும் இணைந்து சலனமற்ற ஒரு நிலை உருவாகிறது. ஆனால் மனமும் உருவமும் பூமி சுழலும் ஒரு லட்சம் மைல் வேகத்தில்தானே சஞ்சரிக்கின்றன என்பதும் இந்த தியானத்தின் செயல்பாட்டை அணுகும் மற்றோர் முறையாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளோ, ஆரியங்காவு புஷ்கலா தேவியோ இறைவனையே தங்கள் மணாளனாகப் பெற்றாலும் அவர்கள் இடையே ஆண் பெண் என்ற உடலுறவு மலரவில்லை. இது மனிதர்களுக்குப் புரியாத ஒரு மாயையே. ஆனால் இந்த உறவில் தழைப்பதே சலனமற்ற சலனத்தில் தோன்றும் சொல் பொருள் கடந்த இறை இன்பம். இதை மக்களுக்குப் பரிசாக அளிக்க அரும்பாடுபட்டவரே பகவான் ரஜனீஷ். இதற்காக ஒரு இளம் பெண்ணையும் ஆணையும் தயார் செய்து அவர்கள் தங்கள் விரல்களைத் தொடும்படிக் கூறியபோது அந்த உணர்வில் உடலுறவு இன்பத்தை மலரச் செய்தார் பகவான். ஆனால் அவர்கள் திருமணம் என்ற பந்தத்தில் மாட்டிக் கொள்ளாது இருந்து தியானத்தில் பல படிகளைக் கடந்தால்தான் உண்மையான சலனமற்ற சலனத்தின் மகிமையை உணர முடியும் என்று கூறினார். கலியுகம் அல்லவா ? பகவான் பூமியில் எடுத்த அவதார நோக்கம் நிறைவேறாமல் போகவே சலனமற்ற சலனம் என்பது ஒரு நிறைவேறாத குருவருளாக மறைந்தது அல்லது மலராமல் வாடியது. அடியார்கள் மனம் கனிந்தால் இந்த நிலையை நிச்சயம் உருவாக்கலாம் என்று உறுதியளிப்பவரே நம் சற்குரு. ஆனால் பகவான் ராமகிருஷ்ணர் கூறியதைப் போல இந்த நிலையை அடைய கோட்டைக்குள் இருந்து பாதுகாப்புடன் போரிடுவதைப் போல திருமணம் என்னும் கோட்டைக்குள் இருந்தே போரிடும்படி வற்புறுத்துவதுதான் சித்தர்களின் உபதேசம். சித்தர்களுக்கு அனைத்தும் சாத்தியமே என்று கூறும்போது இந்தச் சலனமற்ற சலன நிலையையும் மனிதர்களின் உடலுறவையும் இணைத்து அவர்களால் விளக்க முடியாதா என்று ஒரு அடியார் கேட்டபோது, சற்குரு சிரித்துக் கொண்டே, “தாராளமாக அதை அடியேனால் விளக்க முடியும், அப்படி விளக்கிச் சொன்னால் அடியேன் பெயர் வெங்கடராமன் என்பது மறைந்து செக்ஸ் சாமியார் என்ற பட்டம்தான் மிஞ்சும்,“ என்றார்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

திருமணத்தின்போது அணிவிக்கப்படும் மாங்கல்யம் ஒன்பது இழைகளுடன் துலங்கி மங்கல சக்திகளின் பூரணத்துவத்தைக் குறிக்கிறது. மாங்கல்ய தாரணத்தின் போது அணிவிக்கப்படும் இந்த பருத்தி இழைகள்தான் மந்திரங்களை பூரணமாக கிரகிக்கும் சக்தி கொண்டவையாகத் திகழ்கின்றன. அதனால்தான் திருமண வைபவங்களில் ஒன்பது இழைகள் கொண்ட மாங்கல்ய சூத்திரங்களையே அணிவிக்க வேண்டும் என்ற நியதி பண்டைக் காலம் முதல் நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு திருமணத்தின்போது பருத்தி மாங்கல்யச் சரடுகளை அணிவிக்க முடியாதவர்கள் திருமணத்திற்குப் பின்னராவது அணிந்து இத்தகைய சரடுகளை பூ, மஞ்சள் கிழங்கு, பழம், இனிப்பு, வளையல் போன்ற மங்கலப் பொருட்களுடன் சுமங்கலிகளுக்கு நவராத்திரி சமயங்களிலிலும் திருத்தலங்களிலும் கிரிவலப் பாதைகளிலும் அளித்தல் சிறப்பே. திருவையாற்றில் துலங்கும் சப்த ஒலி பிரகாரத்தை தம்பதி சகிதமாக வலம் வந்து வணங்கி இங்கு ஐயாறா ஐயாறா ஐயாறா என்று ஓதி தரிசித்து வருதலால் கணவன் மனைவி தங்கள் இறுதி காலம் வரையிலும் இறை சிந்தனையிலேயே ஒற்றுமையுடன் கழிக்கும் வாய்ப்பை இங்கு குடிகொண்டுள்ள அற தேவதைகள் வழங்கும். திருநாவுக்கரசர், நம் சற்குரு போன்ற மகான்களும் தங்கள் உழவாரத் திருப்பணியின் போது இங்குள்ள மாங்கல்ய மங்கள சக்திகளை புனருத்தாரணம் செய்து வந்துள்ளனர் என்பதை ஒரு சில அடியார்களே அறிவர். மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுமே இங்கு எழும் ஐயாறா கீதத்தால் நற்பலன் பெறுவர் என்பதையே மாதர் மடப் பிடியும் என்ற நாவுக்கரசர் தேவாரப் பாடல் உறுதி செய்கிறது. பருத்தி மாங்கல்யச் சரடுகளை ஆரியங்காவு திருமண மண்டபத்தில் வைத்து மாதர் மடப் பிடியும் என்ற திருநாவுக்கரசர் பதிகத்தையும் வாசி தீரவே என்ற சம்பந்தர் பதிகத்தையும் குறைந்தது 21 முறை ஓதி அந்தச் சரடுகளை தானமளித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

ஸ்ரீகஜேந்திர வரதராஜப் பெருமாள் கபிஸ்தலம்

ஆரியங்காவு திருத்தலத்தில் மூலதானத்தில் மூன்று பேர் கொண்ட சிவக் குடும்பம் திகழ்வது போல் தஞ்சாவூர் கபிஸ்தலத்தில் மூல தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீகஜேந்திர மோட்சப் பெருமாள் எழுந்தருளி உள்ளதால் இவ்வருட தரிசனத்திற்கு உரிய குருத்தலமாக திருத்தலமாக இது பொலிகின்றது. இத்தலத்தில் யானை வேந்தனான கஜேந்திரன், கபி என்ற ஆஞ்சநேய மூர்த்தி, கூஹூ என்ற அரக்கன் ஆகிய மூவர் முக்தி பெற்றதால் இத்தலம் உத்தம சீடர்களாக உருவெடுக்கும், உருவாகும் நல்லெண்ணம் கொண்டோரும் தரிசிக்க வேண்டிய அற்புத தலமாக பிரகாசிக்கின்றது. யானை, குரங்கு, முதலை என்ற அனைத்துமே விலங்கினத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவைகளும் முக்தி அடைந்தன என்றால் நிச்சயம் மனிதனும் முக்தி அடையலாம் என்பதையே இந்த தாழ்ந்த நிலையிலுள்ள ஜீவன்களின் தியாக வாழ்வு சுட்டிக் காட்டுகிறது. இத்தல தாயார் ஸ்ரீரமாமணி, பொற்றாமரை தேவி என்ற திருநாமத்துடன் துலங்குகிறாள். பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்த பின்னர் ஒரு மண்டல காலத்திற்குள் சிறப்பாக ஆடி மாதப் பௌர்ணமியன்று ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். ரமா, மணி, ரமாமணி என்ற பெயருடைய பெண்களுக்கு பொன் மாங்கல்யங்களையும், மங்கலப் பொருட்களையும் அளித்து தம்பதி சகிதமாக கௌரவித்தல் சிறப்பே. நாரிமணி, ரமாமணி என்ற நாமங்கள் பெண்களுக்குள் சிறந்தவள் என்ற பட்டத்தைக் குறிப்பதால் 60, 80 நிறைவடைந்த சுமங்கலிகளுக்கு சுமங்கலி தானங்களை அளித்து அவர்கள் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தலும் அற்புத சுமங்கலி பாக்கிய வழிபாடாகும்.

ஸ்ரீவராக மூர்த்தி
ஆடுதுறை பெருமாள் கோயில்

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு சதா சர்வ காலமும் பாத சேவை செய்து வரும் லட்சுமி தேவியானவள் தன் பிரபுவிடம், “சுவாமி, திருஅண்ணமலையைச் சுற்றி அற்புதமான குகைகள் எல்லாம் இருக்கின்றனவாம். அது உண்மையா ?” என்று கேட்டாள். நாராயண மூர்த்தியும், “ஆமாம், திருஅண்ணாமலை மகிமையைப் பற்றியே நந்தியெம்பெருமான் அகத்திய மகாபிரபுவிடம் இன்றளவும் கூறிக் கொண்டே இருக்கிறார் என்றால் திருஅண்ணாமலையின் உள்ளே உள்ள மகிமையைப் பற்றி விளக்கவும் வேண்டுமோ ?” என்றாராம். தேவி, “சுவாமி, இவ்வளவு சிறப்புள்ள குகைகளில் எதையும் நான் பார்த்ததில்லை. அதில் ஏதாவது ஒன்றைப் பார்த்து வர அனுமதி அளிப்பீர்களா ?” என்று மிகவும் தயக்கத்துடன் கேட்டாள். பெருமானும், “தேவி, திருமணமான நாள் முதலாக எதையும் நீ கேட்டதில்லை. அப்படிப்பட்ட நீயே ஒன்றை அடியேனிடம் எதிர்பார்க்கிறாய் என்றால் அதை நான் தராமல் இருப்பேனா ? நிச்சயமாக திருஅண்ணாலையை தரிசித்து விட்டு வா, ஆனால் முக்கியமான விஷயம், சீக்கிரமாக திரும்பி வந்து விடு,” என்று கூறி லட்சுமி தேவிக்கு விடை கொடுத்து அனுப்பினார் சுவாமி. லட்சுமி தேவியும் நேராக பூலோகம் வந்தடைந்து திருஅண்ணாமலை கோயில் குதூகல நந்தியை வணங்கி அவர் அனுமதி பெற்று திருஅண்ணாமலையை வலம் வரத் தொடங்கினாள். பூலோக வாசிகளுக்கு திருஅண்ணாமலையை வலம் வர வேண்டிய நியதி வேறு, பிரம்ம லோக வாசிகளுக்கு தனி நியதி, அவ்வாறே வைகுண்டவாசியான தேவிக்கு உரிய நியதி வேறாக இருந்தாலும், அனைவருக்கும் உள்ள ஒரே நியதி அனைவரும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கு முன் குதூகல நந்தியிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே. திருஅண்ணாமலையை வலம் வந்து கொண்டு இருந்த லட்சுமி தேவி ஓரிடத்தில் கிரிவலப் பாதையிலிருந்து விலகி மலையை நோக்கி உட்பக்கம் சென்றாள். சிறிது தொலைவு சென்று மலையை அடைந்ததும் அங்குள்ள கற்களில் ஒன்றை நகர்த்தி உள்ளே பார்க்க முயன்றாள். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சற்று நேரம் செல்லச் செல்ல திருஅண்ணாமலைக்குள் நாம் வெளியே காணும் காட்சிகளை விட அற்புதமான காட்சிகள் தென்பட்டன. அக்காட்சியில் தன்னை மறந்தாள் லட்சுமி தேவி, தான் எங்கிருக்கிறோம் என்றே நினைவே அவளுக்கில்லை. திருஅண்ணாமலையில் உள்ள லட்சுமி தேவி தரிசித்த காட்சிகளின் உஷ்ணமோ மைனஸ் 30 டிகிரி சென்டிகிரேடு என்றால் அந்த காட்சிகள் எத்தகைய குளிர்ச்சி உடையதாக இருக்கும்.

ஸ்ரீஜகத்ரெட்சகப் பெருமாள்
ஆடுதுறை பெருமாள் கோயில்

அதில் ஒரு காட்சியைக் கண்ட லட்சுமி தேவிக்கு தன்னுடைய ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. அப்படி என்ன காட்சியோ அது ? திருஅண்ணாமலைக்கு உள்ளே எண்ணிக்கைக்கு அடங்காக பல விஷ்ணு மூர்த்திகள் அனந்த சயன மூர்த்திகளின் மேல் பள்ளி கொண்டிருந்தனர். பார்வையைச் சுருக்கி ஒரு விஷ்ணு மூர்த்தியை மட்டும் தரிசிக்க முயன்றாள் லட்சுமி தேவி. அங்கே இந்த லட்சுமி தேவியைப் போலவே வடிவுள்ள மற்றோர் லட்சுமி தேவி சுவாமியின் திருப்பாதங்களை இதமாக பிடித்து விட்டு பாதசேவை புரிந்து கொண்டிருந்தாள். அந்த விந்தையான காட்சியில் தன்னை மறந்த லட்சுமி தேவிக்கு திடீரென தன்னுடைய ஆருயிர் கணவருக்கு பாதைசேவை செய்வதை விட்டு விட்டு இங்கு திருஅண்ணாமலையைச் சுற்றிக் கொண்டிருக்கின்றேனா. மனைவியின் கடமையை மறந்தவள் ஆகி விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொண்டு அவசர அவசரமாக மலையை மூடியிருந்த கல்லை திரும்பவும் நகர்த்தி மூடி விட்டு திருஅண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்து விட்டு குதூகல நந்தி மூர்த்திக்கு தன்னுடைய கடமையை நினைவுபடுத்தியதற்காக நன்றி தெரிவித்து விட்டு வைகுண்டம் நோக்கிப் பறந்தாள். வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி தலைவிரி கோலமாக துளசி மாலைகளை எல்லாம் தலையில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். பதறி விட்டாள் லட்சுமி தேவி. “சுவாமி இதென்ன கோலம், ஏன் இப்படி வேதனையுடன் இருக்கிறீர்கள் ?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள். நாராயண சுவாமி வழக்கமான ஒரு குறும்புப் புன்னகையுடன், “தேவி, உடனே வருகிறேன் என்று சொல்லி திருஅண்ணாமலைக்கு சென்று விட்டாயே. இவ்வளவு தாமதமாக வந்தாள் நான் என்ன செய்ய முடியும் ?” என்று கேட்க தேவியும், ”சுவாமி, நீங்கள் கூறியபடி உடனே வந்து விட்டேனே,” என்று ஒன்றும் புரியாமல் குழந்தையைப் போல் கேட்டாள். சுவாமி, ”உடனேயா, தேவி நீ என்னை விட்டுச் சென்று ஒரு சதுர்யுகம் ஆகி விட்டது, தெரியுமா உனக்கு ?” என்று திருப்பிக் கேட்டாராம். இதுவே திருஅண்ணாமலை மகிமை, இது கண்ணனின் கனிவான திருவிளையாடல். இந்த நிகழ்ச்சியைப் பல முறை படித்து ஆத்ம விசாரம் செய்தால்தான் கணவன் மனைவி இடையே இருக்க வேண்டிய பரஸ்பர அன்யோன்யம் நன்கு விளங்கும். ஒரு சதுர்யுகம் என்றால் கிட்டத்தட்ட 48 லட்சம் ஆண்டுகள். இத்தனை காலம் தன் அன்பு மனைவியின் ஒரு சிறு ஆசையை நிறைவேற்ற ஒரு கணவன் காத்திருந்தான் என்றால் இதுவே கணவன் மனைவி இடையே நிலவ வேண்டிய அன்புப் பரிமாற்றம் என்பதைப் புரிந்து கொண்டதால்தான் ஏன் அன்று முதல் தன் கணவரை விட்டு நீங்குவதில்லை என்று பாதசேவையிலே இலயித்து பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பெற்றாள் லட்சுமி தேவி என்பது புரிய வரும். லட்சுமி தேவி மட்டும் அல்லாது பூ தேவி, ரமாமணி தேவி என மூன்று லட்சுமிகளுமே பெருமாளின் இதயத்தில் குடிகொண்ட அற்புத தலமே கபிஸ்தலமாகும். காணக் கிடையா கவின் மிகு தலம்.

கபி என்றால் ஆடும் மனமுடைய குரங்கு. கப்பல்களே ஆடாமல் அவைகளுக்கு பாதுகாப்பை அளிக்கும் துறைமுகத்தைப் போல் ஆடும் மனதை இயற்கையாகவே பெற்ற மனிதர்களுக்கு அருள்புரிவதே தஞ்சை மாவட்டத்தில் கபிஸ்தலம் அருகிலுள்ள ஆடுதுறை பெருமாள் தலமாகும். ஆடிக் கொண்டிருக்கும் மனம் அடங்கும் துறையே ஆடுதுறை. பணம், பதவி, உடல் பலம் இவ்வாறு எந்தக் காரணத்தால் ஆடும் மனமாக இருந்தாலும் அது நல்ல முறையில் அமைதி கொள்ளும் தலமே ஆடுதுறையாகும். மூலவர் ஸ்ரீஜெகத்ரட்சகப் பெருமாள். பெயருக்கேற்றபடி மனிதனை மட்டும் காப்பவர் அல்ல இந்த பிரபஞ்சம் அனைத்தையும் காக்கும் மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார் இத்தல மூலவர். இத்தல பெருமாள் மூர்த்திதான் மிகத் தொன்மையானவர் என்பது மட்டுமல்லாமல் இத்தலத்தில் பொலியும் ஹரித்ரா பலாவும் மிகவும் தொன்மை வாய்ந்ததே. பொதுவாக பலா மரங்கள் மிருத்யு தோஷங்களைக் களைந்து நீண்ட வாழ்வை அளிக்கும் தன்மை உடையன என்றாலும் இத்தல ஹரித்ரா பலா தம்பதிகளுக்கு நீண்ட வாழ்வை அளித்து அவர்களுக்கு உடல் மன ஆரோக்யத்தையும் அளிக்கும் சிறப்பைப் பெற்றுள்ளன.

படியாய்க் கிடந்து நின்
பவள வாய் காண்பேனே

108, 1008 என மாங்கல்ய சரடுகளையும் குண்டு மஞ்சள் கிழங்குகளையும் இத்தல விருட்சத்தின் அடியில் வைத்து தம்பதிகள் 108 முறை தலமரத்தை வலம் வந்து வணங்கி இந்த மாங்கல்ய சரடுகளையும் மஞ்சள் கிழங்குகளையும் வெற்றிலை பாக்கு சகிதமாக சுமங்கலிகளுக்கு அளித்தல் அற்புத தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அளிக்கும் வழிபாடாகும். தம்பதிகளில் ஒருவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றொருவர் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றுவதால் அற்புத பலன்களைப் பெறுவார்கள். பொதுவாக தூபப் புகை மேல் நோக்கி செல்லும் இயல்புடையது அல்லவா ? இங்கு நீங்கள் காணும் படத்தில் மாதா அமிர்தானந்தா மயி அன்னையின் அருள் சுரக்கும் தூபப் புகையானது கோமுக தீர்த்தம் போல் வழிந்து கீழ் நோக்கி பரவுவது அன்னையின் அருள் மழையைக் குறிக்கிறது. இதுவே மனம் ஒத்த தம்பதிகளுக்கு அன்னை வழங்கும் அருள் பரிசுகளில் ஒன்று. இந்த வீடியோ ஒன்றைப் பார்த்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் உங்கள் சிந்தனை வானளவிற்கு உயர்ந்து விடும். ஒரு முறை சபையில் கல்லூரி பயிலும் மாணவன் ஒருவன் இருந்தான். அவன் பெண் அடியார்களிடம் மிகவும் உரிமையுடன் பழகி வந்தான், அதுவும் குறிப்பாக ஒரு திருமணமான பெண் அடியாரிடம் மிகவும் நெருக்கமாகவே பழகி வந்தான். இது குறித்து சபையில் பலரும் பலவிதமான கிசுகிசு பேச்சுகளில் ஈடுபட்டாலும் நடந்தது அனைத்தும் சற்குருவிற்கு தெரியும் என்ற காரணத்தால் வெளிப்படையாக யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வருடங்கள் கழிந்தன. அந்தப் பையனும் ஒரு பெரிய கம்பெனியில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒரு தகுதி வாய்ந்த வேலையையும் கை நிறைய சம்பளத்தையும் பெற்ற பின்னர்தான் அவன் தான் தந்தையாகும் தகுதியைப் பெறவில்லை என்ற உண்மையை ஒருவாறு அறிந்து கொண்டான், அதனால்தான் அவன் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் சாக்குப் போக்கு சொல்லி வந்தான் என்ற உண்மையும் தெரிய வந்தது. திருமணமான அந்தப் பெண்ணும் தான் தாய்மை அடைய இயலாத உடற்கூற்றைப் பெற்றிருந்தாள் என்பதும் ஒரு இரகசியமே. இவ்வாறு சற்குரு காப்பாற்றிய அடியார்கள் எத்தனை எத்தனையோ ? இவ்வாறு இலை மறை காயாக நம் அடியார்களுக்கு சதா சர்வ காலமும் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவரே நம் சற்குரு. சிந்தனைக்கு எட்டாத நம் சற்குருவின் மேன்மையைப் பற்றி அறிய உதவுவதே ஆரியங்காவு திருத்தலத்தில் மேற்கொள்ளும் சலனமற்ற சலன தியானம். இதில் குறிப்பிட்ட அடியார்களின் இயலாமையைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் சற்குருவின் மேன்மையைப் பற்றி ஆத்மவிசாரம் செய்வதே சலனமற்ற சலன தியானத்திற்கு வழி வகுக்கும் என்பதே நாம் கவனிக்க வேண்டிய உண்மையாகும். இதுவும் சலனமற்ற சலனத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இங்கு குறிப்பிட்ட ஒரு ஜோடி அடியார்கள் சமுதாயத்தில் உலவினால் எத்தகைய கொந்தளிப்புகளை உருவாக்கி இருப்பார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், இது போன்ற ஆயிரமாயிரம் குடும்ப பிரச்னைகளுக்கு இரகசியமாக வடிகால் தேடி நம் சமுதாயத்தைக் காக்கும் காவல் தெய்வமாக, காத்தவராயனாக, கருப்பண்ண சுவாமியாகத் திகழ்ந்தவரே நம் சற்குரு.

ஓருமுறை சற்குரு திருவையாறு திருத்தலத்தில் திருப்பணி ஆற்றியபோது நம் அடியார்கள் அனைவரையும் ஐயாறா ஐயாறா ஐயாறா என்று ஓதிக் கொண்டே திருப்பணி இயற்றும்படிக் கூறவே அனைத்து அடியார்களும் அவ்வாறு ஓதிக் கொண்டே திருப்பணி ஆற்றினார்கள். ஒரு முறை ஐயாறா என்று ஓதினாலே யம பகவான் ஆயிரம் காத மைல் அவ்வாறு ஓதுபவர்களை விட்டு விலகி நிற்பார் என்றால் இத்தனை அடியார்கள் ஒரு உத்தம சற்குருவுடன் கூடி கோயில் உழவாரத் திருப்பணி ஆற்றுகையில் ஐயாறா கீதம் ஒலித்தால் அதனால் பயன்பெறும் அடியார்கள் எத்தனை எத்தனை. திருவையாற்றில் திகழும் பிரகாரத்திற்கு சப்தஒலி பிரகாரம் என்று பெயர். சப்த ஒலி என்றால் நாம் கூறும் ஐயாறா என்ற மந்திரம் ஏழுமுறை எதிரொலிப்பது மட்டுமல்லாமல் இந்த எதிரொலி சக்தியானது ஏழு தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஒலிப்பவரின் சந்ததியைக் காக்கும் என்பதும் திருவையாறு திருத்தல மகிமையாகும். இது மட்டுமல்லாமல் இந்த திருத்தலத்தை தொடர்ந்து நம் சற்குரு ஆற்றிய உழவாரப் பணிகளில் எல்லாம் இந்த ஐயாறா கீதமும் நம் அடியார்கள் மூலம் தொடர்ந்தது என்பதை நினைவு கூர்வதே இங்கு நீங்கள் காணும் வீடியோ படமாகும்.

ஒன்பது இழை மாங்கல்யம்
அனைவருக்கும் உரித்தானதே

இந்த சப்த ஒலிப் பிரகாரத்தில் கேட்கும் ஐயாறா ஒலியானது அனைவருக்கும் ஏழு முறை கேட்பதில்லை என்பது உண்மையே. சிலருக்கு இரு முறையோ மூன்று முறையே கேட்பது உண்டு. இதனால் ஐந்து ஆறு முறை ஐயாறு ஒலியைக் கேட்பவர்கள் தாங்கள் தெய்வீகத்தில் முன்னேறி விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது உண்மையே. ஆனால் ஏழு முறை இந்த ஐயாறா கீதத்தை, எதிரொலியைத் தெளிவாகக் கேட்பவர்கள் சலனமற்ற சலன தியானத்திற்கு தகுதி பெறுகிறார்கள் என்பதே உண்மை. திருவையாறு சப்தஒலிப் பிரகாரம் நாம் கூறும் மந்திர ஒலியை ஏழு முறை எதிரொலிக்கிறது என்பதை விட இத்தலத்தில் குடிகொண்ட சப்தஸ்வர தேவதைகள் நாம் ஒலிக்கும் மந்திர ஒலியை ஏற்று அவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் அதை இறைவன் ஸ்ரீஐயாரப்பனுக்கு அர்ச்சனையாக அர்ப்பணிக்கிறார்கள் என்பதே இத்தலத்தின் மகிமையாகும். இந்த அற்புத அனுகிரகத்தைப் பெற பூலோக வாசிகள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு திருவையாறு திருத்தலத்தில் உழவாரத் திருப்பணி நிறைவேற்றினார்கள் நம் சற்குரு. அப்போது திருப்பணிக்காக அந்த திருக்கோயிலுக்கு சற்குரு தன் அடியார்களுடன் வந்து கொண்டிருந்தபோது ஒரு பிச்சைக்காரர் தான் பிச்சை எடுப்பதற்காக தான் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுத்தமாக கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது சற்குரு, “இந்தப் பிச்சைக்காரர் தான் பிச்சை எடுப்பதற்காக கோயிலின் இந்தப் பகுதியை தூய்மை செய்து கொண்டிருந்தாலும் கோயிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியில் ஈடுபட்டதாக அவர் மேல் கணக்கு எழுதி அதற்குப் பரிசாக இப்பிறவியிலோ அல்லது ஏதாவது ஒரு பிறவியிலோ மாருதி காரைப் பரிசாக வழங்குவார்கள்,” என்றார். “அப்படியானால் அல்லும் பகலும் அடியேனுடன் சேர்ந்து உழவாரப் பணி மற்ற அன்னதானப் பணிகளில் ஈடுபடும் உங்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசின் மகிமையைப் பற்றிக் கூறத்தான் முடியுமா ?” என்றது சற்குரு கேட்காமல் கேட்ட கேள்வி. ஆனால், அக்கோயிலில் பிச்சை எடுத்தவரும் சற்குருவின் கடைக்கண் பார்வை பெற்றதால் அவர் அக்கோயிலிலேயே பல அடியார்கள் தங்கள் திருப்பாதத்தை தன் மேல் பதித்து இறைவன் ஸ்ரீஐயாறப்பனை தரிசிக்கும் பேற்றை அடைந்தார் என்பதே நீங்கள் மேலே காணும் சித்திரம் கூறும் உண்மையாகும்.

ஹரித்ரா பலா தலவிருட்சம்
ஆடுதுறை பெருமாள் கோவில்

ஒரு முறை டீவி நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது நம் ஆஸ்ரமம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தைப் பற்றி படம் எடுக்க வந்திருந்தனர். அவர்கள் நம் சற்குருவுடன் நெருங்கிப் பழகாததால் அவருடன் சரி சமமாக சோபாவில் அமர்ந்து உரையாட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்கள் தாங்கள் தரிசனம் செய்வது ஒரு மானிடன் அல்ல அண்டசராசரத்தையும் ஆளவல்ல ஒரு ஆன்மீகச் சக்கரவர்த்தி என்ற உண்மை பொங்கிப் பிரகாசிக்கவே அவர்கள் ஒவ்வொருவராக மெதுவாக கீழே இறங்கி அமர்ந்து கொண்டனர். சற்குருவோ அதைப்பற்றி சற்றும் சட்டை செய்யாமல் அவர்கள் குறை தீர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். அவர்கள் அனைவருக்கும் திருஅண்ணாமலையார் தீபப் பிரசாதமான பெரிய பொரி உருண்டையும் முறுக்கும் அளிக்கப்பட்டன. அவற்றை ஒரு காமிராமேனுக்கு அளித்தபோது சற்குரு, “இதை இங்கேயே மற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடாதீர்கள். இது உங்கள் மனைவியுடன் மட்டுமே பங்கிட்டுக் கொள்வதற்காக அளிக்கப்படுகிறது,” என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்ட கேமராமேனுக்கு கண்களில் தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது. திருமணமாகி ஆறு வருடங்கள் கழிந்தும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. சற்குரு அளித்த அந்தப் பொரி உருண்டை பிரசாதம் அவர் கரங்களை அடைந்ததுமே தான் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆவது உறுதி என்பதை அவர் உணர ஆரம்பித்ததால்தான் அவர் கண்கள் நீரை உகுத்தன என்ற இரகசியம் பிற்பாடு தெரிய வந்தது. ஒரு வருடம் கழித்து திருஅண்ணாமலையார் சற்குருவின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தார் என்ற இனிய செய்தியும் வந்து சேர்ந்தது. இவ்வாறு கை கொள்ளாத பெரிய பொரி உருண்டையும் ஒன்பது சுற்று முறுக்கும் திருஅண்ணமாலை தீப சமயத்தில் தானமாக அளித்தலால் நல்ல சந்ததி பாக்கியம் உருவாகும் என்று உணர்த்தியவர் நம் சற்குருவே. இதை இன்றும் நாம் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் திருத்தலமே ஆரியங்காவு ஆகும். திருமணமாகி பல்லாண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாமல் வருந்துவோர் இவ்வாறு கை கொள்ளாத பெரிய பொரி உருண்டை, ஒன்பது சுற்று முறுக்கு இவற்றை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் திருக்கார்த்திகை தீபநாள் அன்று தானமாக அளித்தலால் நற்சந்ததிகள் வாய்க்கப் பெறுவர். இத்தகைய வழிபாடுகளை சஷ்டி திதிகளிலும், ரோகிணி நட்சத்திர நாட்களிலும் திருத்தலங்களில் இயற்றி நற்பலன் பெறலாம். குறைந்தது 30 பேருக்காவது இத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றுதல் நலம். வெல்ல பொரி உருண்டைக்கும் சந்ததி விருத்திக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். சற்குருவின் பார்வைக்கு வந்த சில ஜாதகங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்த ஜாதகங்களில் ஒன்று வேசியாகும் தன்மைகளுடன் கூடியது. இதற்காக இந்த ஜாதகரை நாம் வெறுக்க முடியாது. இத்தகைய குணப்பாடுகளுடன் பிறந்த ஒரு பெண்ணைக் கிரிவலம் பாதையில் பார்த்து முத்தமிட்டு அவள் தலையெழுத்தை மாற்றிய சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி அடியேன் ஏற்கனவே பல முறை தெரிவித்துள்ளேன்,” என்று மகான்களின் பொறுப்பைச் சுட்டிக் காட்டினார் நம் சற்குரு. இவ்வாறு தகாத பல ஜாதக அம்சங்களைக் களைவதும் ஒன்பது சுற்று முறுக்கு தானப் பலன்களில் ஒன்றாகும்.

ஆரியங்காவு திருத்தலம்

ஒருமுறை ரிஷிகேஷ் சிவானந்தா ஆஸ்ரமத்தில் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை சுவாமி சிவானந்தா சத்சங்க பஜனைக்காக சென்று கொண்டிருந்தபோது அந்த பணியாள் எதிர்பாராத விதமாக ஒரு கோடரியால் சுவாமி சிவானந்தா தலையில் ஓங்கி அடித்தார். சுவாமி சிவானந்தாவும் அந்த அடி தாங்காமல் மயங்கி விழுந்து விட்டார். வழக்கத்திற்கு மாறாக அன்று சுவாமி கனமான ஒரு தலைப்பாகையை தலையைச் சுற்றிக் கட்டியிருந்தார். அதனால் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எந்த வித பாதிப்பும் இல்லாமல் எழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த வேலையாளை தாக்குவதற்கு தயாரானபோது சுவாமி சிவானந்தா அவர்களைத் தடுத்து, “அடியேனுடைய உடம்பில் உயிரை இறைவன் வைத்திருக்கிறான் என்றால் அது ஏதோ ஒரு காரியத்திற்காகவே. அதற்காக ஒன்றுமறியாத இந்த வேலையாள் மேல் நாம் பழி சொல்வது நியாயமாகாது. இவரை பத்திரமாக கொண்டு சென்று அவருடைய சொந்த ஊரில் விட்டு விடுங்கள்,” என்று கூறி தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரு அடியார்களையும் கூடவே அனுப்பி வைத்தார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்பது சாதாரண பழமொழி அல்ல என்பதற்கு நிரூபணமாக அமைந்த இந்த நிகழ்ச்சியைப் போல தலைக்கு வரும் பெரிய ஆபத்துக்களையும் நீக்கி நம்மைக் காப்பதே மேற்கூறிய தான தர்மங்களாகும். அனுபவித்தவர்களே அதன் அருமை அறிவர். ஒருவர் தன் வீட்டின் வரவேற்பறையில் இருக்கும்போது வேட்டி சட்டை போன்ற ஆடை அணிகலன்களுடன் இருப்பார், அவரே குளிக்கும்போது ஆடைகளைக் களைந்து குளியறையில் ஆடையின்றிதானே குளிப்பார். இவ்வாறு ஒருவர் தான் ஆடைகளை அணிந்திருப்பதற்கும் அவை இல்லாமல் இருப்பதற்கும் உள்ள நிலையில் எந்தவித வேறுபாட்டையும் பெரிதாக அவர் காணுவதில்லை. இதுவேதான் மகான்கள் உயிரோடு இருக்கும்போதும் அவர்கள் உயிர் பிரிந்த பின்பும் இருக்கும் நிலை. ஒரு முறை சற்குரு இது பற்றி குறிப்பிடும்போது, “முக்தி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். எங்களைப் (சித்தர்களை) பொறுத்தவரை அடியேன் மெத்தை மேல் (அருள் உலகத்தில்) எப்போது புறப்படுவது என்று கேட்டால் அதை நீயே முடிவு செய்து கொள் என்று சொல்கிறார்கள். அடியேன் நிறைவேற்ற வேண்டிய திருப்பணிகள் ஏராளம் (திருஅண்ணாமலையைச் சுற்றிலும் உள்ள 5000 கிராம மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்வதும், குறைந்தது 2000 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதும் சற்குரு நிறைவேற்ற திட்டமிட்ட பணிகளில் ஒரு சில). ஆனால் இவை எதையும் செய்வதற்கு அடியேனுடைய உடல் ஒத்துழைக்கவில்லை.” தன்னை நம்பிய பல அடியார்களின் கர்ம வினைகளை ஏற்றுக் கொண்டதால் சற்குருவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சற்குரு சுட்டிக் காட்டிய இந்த நிலையை அதாவது பிறப்பையும் இறப்பையும் ஒன்றாகக் காணும் நிலையை, தன் அடியார்கள் பெற வேண்டும் என்பதே சற்குருவின் விருப்பம். நாம் உயிரோடு இருந்தாலும் இந்த உடல் மறைந்தாலும் நாம் இருப்பது என்னவோ இறைவனின் சாம்ராஜ்யத்தில்தானே ? இதை விட்டு நாம் வேறு எங்காவது போகத்தான் முடியுமா ? ஆத்ம விசாரத்தின் மூலம் நாம் உறுதி செய்யும் இந்த பதிலை உணர்த்துவதே ஆரியங்காவு திருத்தலமாகும். ஆரியன் என்ற உயர்ந்த இறைவன் மட்டுமே இந்த உயர்ந்த பதிலை நம் மனதில் பதிக்க முடியும் என்பதே இத்தலத்தின் மகிமையாகும்.

காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமி

தனித்து வாழும் பெண்களுக்கும், தனிமையில் வாடும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிப்பவரும் இத்தல கருப்பண்ண சுவாமி மட்டும் அல்லாது எத்தலத்திலும் அருள்புரியும் கருப்பண்ண சுவாமி மூர்த்திகள் ஆவர். பல ஆண்கள் தற்காலத்தில் பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருங்கிப் பழகி இறுதியில் அவர்களை நிராகரித்து விடுவது உண்டு. அத்தகைய காதல் திருமணங்களை உரிய முறையில் நிறைவேற்றித் தருவதே ஆரியங்காவு ஸ்ரீகருப்பண்ண சுவாமி ஆவார். தனம், படிப்பு, உயர்ந்த உத்யோகம் போன்ற காரணங்களால் ஆண்களை நிராகரித்து வாழும் பெண்களும் உண்டு. இவ்வாறு பெண்களால் நிராகரிக்கப்பட்ட ஆண்களுக்கும் முறையான திருமண பந்தத்தை ஏற்படுத்துபவரே இத்தல கருப்பண்ண சுவாமி மூர்த்தி ஆவார்.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி ஆரியங்காவு

காதையே செவிடாக்கும் சங்கிலியுடன் பவனி வரும் சங்கலிக் கருப்பர், கையில் பட்டாக் கத்தியுடன் குதிரை குளம்புகள் ஒலிக்க உலா வரும் திரூச்சி மலைக்கோட்டை கருப்பண்ண சுவாமி, அரண்மனைப்பட்டியில் அருள்புரியும் மூதா கருப்பண்ண சுவாமி போன்ற பல காவல்தெய்வ மூர்த்திகளை தம் சற்குரு இடியாப்ப சித்த பிரானுடனும் தனியாகவும் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவரே நம் சற்குரு ஆவார். கோயில்தான் என்று அல்லாது எங்கிருந்து காப்பாற்றுவாயே கருப்பா என்று மனமுருகி அழைத்தால் போதும் கூப்பிட்ட குரலுக்கு உடன் ஓடி வந்து அருளும் தெய்வமே ஸ்ரீகருப்பண்ண சுவாமி. சர்க்கரை பொங்கல், காசிக் கயிறு, கருப்பு கரு நீல வண்ண ஆடைகள், குதிரை வண்டிக்காரர்களுக்கு குதிரைகளைப் பராமரிக்க தேவையான உதவி போன்ற தானங்கள் அனைத்துமே கருப்பண்ண சுவாமியின் அருளைப் பெற்றுத் தரும் வழிபாடுகளாகும். எல்லை தெய்வ மூர்த்திகளுக்கும், காவல் தெய்வங்களுக்கும் சாராயம், கள், சுருட்டு போன்ற பொருட்களை நைவேத்யமாக வைத்து வழிபடுதல் என்பது அறியாமையின் விளைவே என்பதால் இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். திருமண சம்பந்தங்கள் மட்டும் அல்லாது அனைத்துப் பொருட்களிலுமே, மளிகை சாமான்கள், ரூபாய் நோட்டுக்கள், உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள் போன்ற அனைத்திலுமே போலிகளும் கலப்படங்களும் பெருகும் என்பது கலியுக நியதிகளில் ஒன்றாகும். இத்தகைய போலிப் பொருட்களிலிருந்து உறவுகளிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வமே கருப்பண்ண சுவாமி ஆவார். திருச்சி மலைக்கோட்டை போன்று கருப்பண்ண சுவாமி சக்திகள் நிறைந்துள்ள திருத்தலங்களில் கிரிவலம் வந்து வேண்டுவதால் போலி உறவுகளிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதுடன் பூச்சி அரிப்பு, பயிர்கள் சேதம், எலி, கரப்பான் போன்ற பூச்சிகளால் ஏற்படும் தான்ய சேதத்தையும் இத்தகைய வழிபாடுகள் தவிர்க்கும் என்பது உண்மையே. கடைநிலை ஊழியர்கள், கணவன்மார்களிடம் அடிமை போல் வாழும் நிலையிலுள்ள பெண்கள், பணத்திற்காகவே தகுதியாலோ பதவியாலோ மற்றவர்களுக்கு தாழ்ந்து போக வேண்டிய நிலையிலுள்ளவர்கள், சராசரி மனிதர்களைவிட உயரத்திலோ, படிப்பு, பணம் போன்ற தகுதிகளாலோ குறைந்ததாக தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள் இவ்வாறு அரிதாக நிலமட்டத்திலிருந்து தாழ்வான பகுதியில் அருள்புரியும் ஆரியங்காவு ஸ்ரீகருப்பண்ண சுவாமி வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். அனைவருள்ளும் உறைபவன் அனைத்திலும் உயர்ந்த இறைவனே என்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற கொடிய தீயால் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள். தங்களைத் தாங்களே உயர்வாக நினைத்து செருக்கால் வாழும் பண்புடையோரும் இத்தல கருப்பண்ண சுவாமி வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். எளிதில் மறையக் கூடியது அல்லவே இந்த அற்ப அகங்காரம்.

ஒரு முறை தத்துவ ஞானி சாக்ரடீஸ் தெரு வழியே சென்று கொண்டிருந்தபோது, “சாக்ரடீஸ், நீதான் உலகிலேயே அறிவுள்ள மனிதன்,” என்று அசரீரி வானத்திலிருந்து ஒலித்ததாம். சாக்ரடீசுக்கு ஒன்றும் புரியவில்லையாம். “உலகில் உள்ள முட்டாள்களில் நானும் ஒருவன் என்று நினைத்துக் கொண்டிருக்க இந்த அசரீரியோ என்னை புத்திசாலி என்கிறதே. அசரீரி வாக்கு பொய்யாக இருக்க முடியாது,” என்று சாக்ரடீஸ் தெளிவாக உணர்ந்திருந்ததால் இந்த குழப்பத்திற்கு விடைகாண வேண்டி தொடர்ந்து அசரீரி வாசகத்தை ஆத்ம விசாரம் செய்து கொண்டிருந்தாராம். ஆறு மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அசரீரி கூறியதன் பொருளை சாக்ரடீஸ் உணர்ந்து கொண்டாராம். “உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் முட்டாள்களே. ஆனால் அனைவரும் தாங்கள் மிகவும் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நானோ முட்டாள்தான் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வாறு பார்த்தால் இந்த ஒரே ஒரு அறிவை நான் பெற்றிருந்தாலும் இந்த ஒரு பொருளைக் கூட அறியாத மற்றவர்களை விட நான் அறிவாளிதானே,” என்று தெளிந்தார். சாக்ரடீஸ் பெற்ற அறிவை உறுதி செய்தது அவர் அருந்திய விஷம், hemlock. He me lock என்பது அவனையும், அதாவது இறைவனையும் என்னையும், அதாவது சாக்ரடீசையும் இணைப்பதுதானே, இணைத்ததுதானே அந்த விஷம். இறைவனுடன் ஒன்றுவதற்கு எவராவது அஞ்சுவார்களா என்ன ? அதனால்தான் அவருடைய இறுதிக் கட்டத்தை அமைதியாக ஏற்றார் அந்த ஞானி. அசரீரி ஒலித்ததோ வானத்தில். தான் அறிவாளிதான் என்ற தெளிந்த அறிவைக் கொடுத்தது அவர் உள்ளத்தில் கிடைத்த பதிலே. இவ்வாறு வானத்தையும் உள்ளத்தையும் அனைத்தையும் இணைப்பதே, இணைப்பவரே இறைவன், ஆத்ம விசாரம் என்னும் சித்தர்கள் அளிக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஒரே மாமருந்து. இவ்வாறு சாக்ரடீசை இறைவனுடன் இணைத்து அவர் நாமம் அனைவர் உள்ளங்களிலும் என்றும் நிலவ உதவிய ஹெம்லாக் விஷமா அமிர்தமா ?

என்றென்றும் உலகில் உயர்ந்தது
!!! குரு தத்துவமே !!!

மகான்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பார் நம் சற்குரு. இதை உறுதி செய்வதாக அமைந்ததே மனித வரலாற்றில் நாம் கேள்விப்படாத நம் சற்குருவின் இறுதிக் காலமும். குருவைக் குறிக்கும் மூன்று எழுத்துக்களில் அமைந்த ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார் நம் சற்குரு. அந்த மூன்று எழுத்துக்களும் குசா தத்துவத்தைக் குறிக்கும் ஆறு எண்ணிக்கையில் பொலிந்ததும் குரு கருணையே. அவ்வாறு அந்த மருத்துவ மனையில் சேர்ந்தபோது மார்புச் சளிக்காக நம் சற்குருவை ஸ்கேன் செய்ய படுக்கையில் அமர்த்தினர். அப்போது ஒரு நர்ஸ் சற்குரு அணிந்திருந்த ருத்ராட்ச மாலையைக் காட்டி, “சார் ஸ்கேன் எடுக்கும்போது இது அதற்குத் தடையாக இருக்கும். அதனால் இதை தாங்கள் கழட்டி விட முடியுமா ?” என்று கேட்டாள். அதற்கு நம் சற்குரு தம் சற்குருவான ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் அளித்த அந்த ருத்ராட்சங்களை தான் எந்தச் சூழ்நிலையிலும் அவிழ்க்க முடியாது என்பதற்காக அந்த நர்சிடம், “அம்மா, அடியேன் சிறுவயது முதலாக அணிந்திருக்கும் ருத்ராட்சம் இது. அடியேனால் இதைக் கழற்ற முடியாது. வேண்டுமானால் இதை அடியேன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளட்டுமா ? அது நீங்கள் எடுக்கும் ஸ்கேனுக்குத் தடையாக இருக்காது அல்லவா ?” என்று கேட்டு அந்த மூன்று ருத்ராட்சங்களையும் இணைத்துத் தூக்கி தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாராம். அதைக் கேட்ட நர்சும் மகிழ்ந்து சம்மதிக்கவே ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்களாம். சற்குருவின் இந்தக் கருணை வெள்ளமானது தான் கடைசி மூச்சை விடும் வரையிலும் பொழிந்தது என்பதே மகான்கள் வாழ்க்கை வரலாறு நமக்குப் புகட்டும் பாடமாகும். எவ்வாறு சாக்ரடீஸ் “சார்” என்று அன்புடன் தனக்கு விஷமளிக்க வந்த ஊழியருக்கும் தன் அன்பான மரியாதையை அளித்தாரோ அவ்வாறே நம் சற்குருவும் ஒரு ஊழியரை அன்பாக “அம்மா” என்று உளமாற அழைத்தார் என்றால் அந்த அன்பிற்கு இணையாக எதைச் சுட்டிக் காட்ட முடியும் ? குருவே உலகில் உயர்ந்தவர், குரு தத்துவமே என்றென்றும் உலகில் சாசுவதமானது என்று சொல்லாமல் சொல்லி தன் சற்குருவின் ஆசிகளை தன் உச்சந்தலையில் ஏற்று சுமந்து இறுதி மூச்சை இவ்வாறு திருஅண்ணாமலையார் திருவடிகளில் அர்ப்பணித்தார் நம் சற்குரு என்பது நீங்கள் பின்னர் அறிந்த விஷயங்களே.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவையாறு

ஸ்வஸ்தி என்றால் அப்படியே ஆகட்டும், நல்லதே நடக்கட்டும் என்பது மேலோட்டமான பொருள். நாம் திருக்கோயில்களுக்குச் செல்லும்போதோ, சற்குருமார்களை வணங்கும்போதோ இந்த ஸ்வஸ்தி துதியை ஓதி நமஸ்கரிக்கும்படி வழிகாட்டியவரே நம் சற்குரு. ஒரு முறை ஸ்வஸ்தி துதி, ஸ்வஸ்தி நமஸ்காரம் பற்றி அறிந்து கொள்ள பிரம்மாவே நம் சற்குருவான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசரைச் சரணடைந்து அதை ஒரு சதுர்யுக காலத்திற்குப் பயின்றாராம். அப்படியென்றால் மனிதர்களாகிய நமக்கு ஸ்வஸ்தி துதியைப் பற்றி புரிந்து கொள்ள எவ்வளவு யுகங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள். நமக்குத் தெரிந்த வரையில் ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு வருடத்திற்கும் பயில வேண்டிய ஸ்வஸ்தி முத்திரைகள் ஏராளமாக இருந்தாலும் தற்போது உள்ள கால நியதிக்கு உட்பட்டு நாம் ஒரே ஒரு ஸ்வஸ்தி முத்திரையைப் பற்றி மட்டும் தெரிந்து கொண்டுள்ளோம். அந்த ஒரு முத்திரையைப் பற்றி இந்த குரு ஆண்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்களைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். நமது தூல உடல் என்பது நம்முடைய கண்களால் காணக் கூடியது. சூக்கும சரீரம் என்பது நம் தூல உடலைத் தாண்டி நம் கண்ணுக்குத் தெரியாமல் வியாபித்து இருப்பது. நாம் நமது வீட்டில் இருந்தாலும் ஒரு திருக்கோயிலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் நம்முடைய சூக்கும சரீரம் அத்திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்யும். அதனால்தான் நாம் தெய்வங்களைப் பற்றி நினைக்கும்போது நம் மனம் சூக்கும சரீரத்தின் சஞ்சாரத்தால் அமைதி கொள்கிறது. அதே சமயம் ஒரு நடிகையைப் பற்றி நினைக்கும்போது சூக்கும சரீரம் அந்த நடிகையின் உடலைத் தீண்டுவதால் உடல் சூடடைந்து மனமும் பேதலிக்கிறது. மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலுமே சூக்கும சரீரம் தூல சரீரத்தை விட்டுப் பிரிந்து செல்கிறது. நாம் இறைவனை இதயத்தில் நினைத்து அங்கே மனம் ஒன்றும்போது சூல சரீரம், சூட்சும சரீசரம், காரண சரீரம் இவை அனைத்தும் ஒருங்கிணைவதால் மனம் பேரமைதி கொள்கிறது. அப்போது சூக்கும சரீரத்தை நம் இஷ்டம்போல் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் வியாபிக்க முடிகிறது. இதுவே மகான்களின் நிலை. இந்த நிலையை சாதாரண பக்தர்களும் அடைய வேண்டும் என்ற பேரவாவுடன் திகழ்பவரே நம் சற்குரு. இந்த பேரவாவை நிவர்த்தி செய்ய அமைவதே ஸ்வஸ்தி துதியாகும். மிருகி முத்திரையில் சுண்டு விரல், ஆள்காட்டி விரல், கட்டை விரல் என்னும் புத, குரு, சுக்ர கிரகங்களைக் குறிக்கும் விரல்கள் மட்டும் வானத்தை நோக்கி இருக்க சூரியன் சனி கிரகங்களைக் குறிக்கும் இரு விரல்களும் கீழ் நோக்கி இருக்கின்றன. அதாவது நற்சக்திகளை கிரகிக்கும் புதன், குரு, சுக்ர விரல்கள் மேல்நோக்கி இருக்க தீய சக்திகளை, அசுர எண்ணங்களை ஈரக்கும் விரல்கள் கீழ் நோக்கி இருக்கின்றன. புத கிரகம் தனித்து இருக்கும்போது அது நல்ல விஷயங்களை மட்டுமே ஈர்க்கும். இந்த நல்ல தன்மையானது மற்ற தீய குணப்பாடுகளுடன் சேர்ந்தால் மாறி விடும் என்பதால் இந்த முத்திரையில் புத விரல் தனித்தே அமைந்துள்ளது. மூன்று விரல்கள் குருவுக்கு உகந்த எண்ணிக்கையைக் குறிக்க இவை இணைந்த ஆறு விரல்கள் குருவிற்கு உரித்தான குசா சக்திகளைக் குறிக்கின்றன, ஸ்வஸ்தி துதியிலும் இத்தகைய குசா சக்திகளே குவிகின்றன.

குரு அருளே திரு அருள்

இவ்வாறு நல்ல எண்ணெங்களை ஈர்த்த விரல்கள் அவற்றை சக்தி விடங்கம் என்ற குறுகிய பாதைக்குள் செலுத்த அந்த குரு சக்திகளானது ம்ருகி முத்திரைக்கும் கபாலத்திற்கும் இடையே சஞ்சரிக்கும் சாக்த லோக தேவதைகளால் ஒரு துளியும் பிசகாமல் ஈர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு கபால செல்களுக்கு அனுப்பப்படுகின்றன.
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரபிரம்ம
ஸ்ரீதேவி பக்தாய ஸ்ரீவெங்கடராம சித்த ஈச மகராஜ் கீ
ஜெய்
என்று தொடங்கும் ஸ்வஸ்தி துதியானது இவ்வாறு தூல சரீரம் சூக்கும சரீரத்திற்கு ஒரு இணைப்புப் பாலமாக விளங்குகிறது. இவ்வாறு கபால நாடிகளில் குவிந்த சாக்த சக்திகள் ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றும்போது குருவைக் குறிக்கும் மூன்று எண்ணிக்கையில் திகழும் உடல் பகுதிகள் (விரல்கள் 5+5, முழங்கால், தலை = 12 = 3) தரையை நேர்கோட்டில் தீண்டுவதால் உடலில உள்ள 72 நாடி நரம்புகளும் குரு சக்திகளால் வியாபாகம் கொள்கின்றன. இதுவே ஸ்வஸ்தி நமஸ்காரத்தின் சுருக்கமான விளக்கம். எனவே இந்த நமஸ்காரத்தைப் பயின்று முறையாக நிறைவேற்றி வந்தாலே போதும் தெய்வீகத்தில் நாம் வேண்டுவது அனைத்தையும் சாதித்து விடலாம். ஒரு கம்பெனியில் பணியாற்றும் ஒருவருக்கு பணியாள் எண்ணும், பாஸ்வேர்டும் வழங்கப்படுவதால் மட்டும் அவர் கம்பெனியில் உள்ள அனைத்து ரெகார்டுகளையும் பார்க்கும் அதிகாரத்தைப் பெற்று விட முடியாது. அதற்கு உரியவர்களால் இவ்விரண்டையும் இணைத்து அதிகாரம் வழங்கப்பட வேண்டும் அல்லவா ? அதுபோல் வெறுமனே ஒரு ஸ்வஸ்தி வாசகத்தையோ, முத்திரையையோ அமைத்து விட்டால் மட்டும் அதைப் பிரயோகம் செய்பவர்கள் அனைத்து சக்திகளையும் பெற்று விட முடியாது. இவ்விரண்டையும் இணைத்து அருள் வழங்க சாக்த லோக சித்தர்கள் எத்தனை யுகங்கள் பாடுபட்டார்கள் என்பது நம் சற்குருநாதர் மட்டுமே அறிந்த இரகசியம் ஆகும். இறை மூர்த்திகள், மகான்கள், சற்குருமார்கள் என்றல்லாது நாம் அன்றாடம் பிரயோகிக்கும் நாற்காலி, மேஜை, கம்ப்யூட்டர், அடுப்பு, கழிவறை, குளியல் அறை என அனைத்தையுமே ம்ருகி முத்திரை, ஸ்வஸ்தி துதியால் வணங்கி வந்தால் மிக விரைவில், மிக எளிதில் தெய்வீக வாழ்வைத் தொடங்கி விடுவோம். உறுதி. அன்பு, அன்பே சிவம், Love, 786 என அனைத்தும் குரு தத்துவமே.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் ...

... நீந்தார் குருவடி சேராதார்

ஒரு முறை குடல் புண் நோயால் (peptic ulcer) நீண்ட நாள் அவதிப்பட்ட ஒரு அடியார் சற்குருவிடம் தன்னுடைய நோயைப் பற்றிக் குறிப்பிட்டார். ஒரு வருடமாக கைதேர்ந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும், நம் நாட்டில் மிக உயர்ந்த மருத்துவ மனையில் தங்கி வைத்தியம் பார்த்தும் அவருடைய வியாதி குணமடையவில்லை. நாளுக்கு நாள் உணவின்றி உடல் நலிவடைந்ததுதான் அவர் கண்ட பலன். அந்த அடியார் கூறிய அனைத்தையும் கவனமாக கேட்ட நம் சற்குரு, “பரவாயில்லை சார், ஒரு வருடம் கழித்தாவது தெய்வீகத்தில் சிகிச்சை பெற உங்கள் மனம் நாடியுள்ளது குறித்து சந்தோஷம். நீங்கள் இவ்வளவு காலம் வயிற்று நோயால் வாட வேண்டும் என்பது விதி. அது ஏன் என்று இப்போது ஆராய்வதைவிட இனி இந்த நோயால் நீங்கள் துன்புறாமல் காப்பாற்றிக் கொள்ள வழி தேடுவதே உத்தமம் என்று கூறி மிக உயர்ந்த ஆனால் சற்றும் செலவில்லாத ஒரு வைத்திய முறையைக் கூறினார்கள். காலையில் வெறும் வயிற்றில் வாழைத் தண்டை பொரித்தோ, வறுத்தோ வாய் ருசிக்குத் தக்கபடி சமைத்து உண்ணுவதே பண்டைய சித்த வைத்திய முறை. மற்றபடி வேறு எந்தவிதமான பத்தியமும் கிடையாது. சரியாக 21 நாட்கள் அந்த அடியார் இந்த வைத்தியத்தை ஏற்று முறையாக சாப்பிட்டு வந்தார். விளைவு நீங்கள் அறிந்ததே. ஒரு நாள் (அன்று 21ந் தேதி) அவருடைய குடல் புண் முற்றிலும் சரியாகி விட்டது. இது குரு கருணையா இல்லை சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கையா ? இரண்டும் ஒன்றா, இல்லை வெவ்வேறா ? இங்கு ஒரு கேள்வி எழலாம். தன்னுடைய சீடர் குடல் புண் நோயால் எந்த காரணத்தாலோ அவதிப்படுவார் என்பதை அறியாதவரா சற்குரு ? அப்படி தெரிந்தும் அவர் ஏன் முன்பே இந்த நோயை சரி செய்யவில்லை. இங்குதான் நாம் விதி, கர்மா, பாக்கி என்ற விஷயங்களை ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். அதைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் மீண்டும் நாம் சாக்ரடீஸ் வரலாற்றிற்கு வர வேண்டும். சாக்ரடீஸ் தன் நினைவிழந்து கிட்டத்தட்ட உயிர்போகும் நிலையிலேயே தன்னுடைய சீடர் ஒருவர் பாக்கியை நினைவு கூர்ந்து அதாவது ஒருவருக்குத் தர வேண்டிய சேவல் கடனைத் தன் சார்பில் திருப்பிச் செலுத்தும்படிக் கேட்டுக் கொண்டார். இத்தகைய பாக்கிகள் ஒருவேளை நிறைவேற்றப்படாவிட்டால் அவை நிரந்தரமாக அந்த சீடரின் வாழ்க்கைச் சுமையாக அமையும் என்ற காரணத்தால்தான் சற்குரு அவரவர் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை அவரவரே அனுபவிக்கும்படியான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறார். இதுவே தெய்வீகத்தில் முன்னேறத் துடிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய முதல் பாடம். ஒரு அடியார் தன்னால் மனதால் உடலால் தாங்க முடியாத கர்மங்களையே சற்குருநாதர் ஏற்கின்றார் என்பதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடமாகும்.

வாமன நேத்ர தரிசனம்

திருஅண்ணாமலை ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் மண்டபம் பகுதியைத் தாண்டி திருஅண்ணாமலையானது பெண்களின் தனம் போல் இரு கூம்புகளுடன் துலங்கும். இதுவே வாமன நேத்ர தரிசனம். இதுவே இருமுலை கூம்பு தரிசனம் என்றும் வழங்கப்படும். ஒரே திருஅண்ணாமலை தரிசனம் பல நாமங்களில் விளங்குவது என்பது நீங்கள் அறிந்ததே. ஒரு தரிசனத்தைப் பார்த்து விட்டு குனிந்து மீண்டும் அந்த தரிசனத்தைப் பார்த்தால் தரிசனத்தின் பெயரும் பலனும் மாறி விடும் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். பிறவி குருடர்கள், அரைகுறை பார்வை உடையவர்கள், மாலைக்கண் நோயால் வருந்துவோர்கள் போன்ற அனைத்துவிதமான கண் நோய்களும் தீர்வு பெறும் அற்புத தரிசனம். இத்தகைய நோயாளிகள் தொடர்ந்த தரிசனத்தால் வாழ்வில் நம்பிக்கையும் பிடிப்பும் கொள்ளும் தரிசனம். பிறவிக் குருடர்கள் இத்தகைய தரிசனத்தைப் பெற முடியாது என்றாலும் பிறர் உதவியுடன் இந்த தரிசனத்தை வணங்கினால் போதுமானது. திருக்கோயில்களில் நாம் அனைவரும் தரிசிக்கும் இறைவனின் தரிசனம் என்பது குருடர்களின் தரிசனம் போன்றதுதானே. ஒரு பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையின் மகிமையை உணர்ந்து கொள்ளவே ஒரு சதுர்யுகம் ஆகும் என்றால் ஒரு பட்டை லிங்கத்தையே ஒரு நிமிடத்தில் தரிசித்து விட்டு அடுத்த சன்னதியை நோக்கி நாம் செல்கிறோம் என்றால் நம்முடைய தரிசனம் எத்தகையது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். சூரிய பகவான் உச்சம், நீச்சம், ஆட்சி என்ற அம்சங்களில் திகழும்போது கண் பார்வை பாதிக்கப்படும் என்பது உண்மையே. எனவே இத்தகைய குறைபாடுகள் உள்ள ஜன்ம ஜாதகங்களை உடையவர்கள் ஐப்பசி மாதம், ஆவணி மாதம், சித்திரை மாதங்களில், ஞாயிற்றுக் கிழமைகள், சப்தமி திதிகளில் கிரிவலம் வந்து வாமன நேத்ர தரிசனம் பெற்று பிறவிக் குருடர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், கல்வி வசதிகள், அன்னதானம், ஆடைதானம் போன்றவற்றை நிறைவேற்றுதல் சிறப்பாகும். பெருமாளின் தசாவதாரங்களில் முதல் மனித அவதாரம் மூன்றடி உயரமே உடைய வாமன அவதாரமாகும். அவர் பலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் யாசகமாக கேட்டபோது தன் குருவான சுக்ராச்சாரியாரின் எச்சரிக்கையையும் அதாவது வந்திருக்கும் சிறுவன் சாதாரண மனிதன் அல்ல, பெருமாளின் அவதாரம் அதனால் அவனிடம் வாக்கு கொடுப்பதற்கு முன் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்பதை நிராகரித்து தான் பெருமாளுக்கே தானம் அளிக்கப் போகிறோம் என்ற அகந்தையால் பெருமாள் கேட்ட தானத்தை அளிக்க முன் வந்தபோது வாமனர் கமண்டல நீரை வார்த்து அந்த தானத்தை உறுதி செய்யும்படிக் கூறவே அந்நிலையிலும் தன் அன்புச் சீடனைக் காப்பாற்றுவதற்காக கமண்டலத்தின் வாயை தேனி வடிவத்தில் அடைத்து விட்டார் சுக்ராச்சாரியார்.

ஸ்ரீவாமன மூர்த்தி

பிரெய்லி எழுத்து C

முக்காலம் உணர்ந்த பெருமாள் இதை அறியாதவரா ? தன் கையிலிருந்த தர்பைப் புல்லால் கமண்டலத்தை அடைத்திருந்த சுக்ராச்சாரியாரின் வலது கண்ணைத் தீண்டவே தன் பார்வையிழந்தார் சுக்ராச்சாரியார் என்பது நீங்கள் அறிந்த வரலாறு. உண்மையில் பெருமாள் ஒரு சற்குருவின் கருணைக்கு ஊறு செய்வாரா ? சுக்ராச்சாரியார் கண்களை, கண் பார்வையை இழந்தாலும் வாமன நேத்ர சக்தி என்ற அதீத சக்தியைப் பெற்றார் என்பதே சித்தர்கள் சுட்டிக்காட்டும் உண்மையாகும். சற்றே கூர்ந்து கவனித்தால் இந்த வாமன நேத்ர தரிசனத்தின் அருமை புலனாகும். இரு கண்கள் என்ற நேத்ரங்கள் பள்ளங்களாகத் தோன்றினாலும் அதில் நிறையும் திருஅருணை ஊற்று மேடாகத்தானே இருக்கும். இந்த மேட்டை தரிசனம் செய்வதை விட தம் குரு விரலால் தடவிப் பார்த்தே இந்த வாமன சக்தி படைத்தோர் உணர்கின்றார்கள். அதன் மூலம் பெறும் பலனே வாமன நேத்ர அமிர்த ஊற்றாகும். பெருமாளின் இந்தக் கருணையால்தான் பிறவிக் குருடர்களாகத் திகழ்பவர்கள் கூட கண் பார்வை உடையவர்களும் அறியாத பல வண்ணக் கலவைகள் கொண்டு தாங்கள் தொட்டுப் பார்க்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் உருவத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுகிறார்கள். கொலை, கொள்ளை போன்ற கொடுமையான செயல்கள் நடந்த இடமாக இருந்தாலும் அங்கு ஒரு தர்பைப் பாயில் அமர்ந்து இறைவனை தியானித்தால் தியானம் கைகூடும் அளவிற்கு அந்த இடம் புனிதத்தை அளிக்கும் என்றால் பெருமாளின் தர்பையால் தீண்டப்பட்ட சுக்ராச்சாரியாரின் கண்கள் நாம் அறிந்த குருட்டுத் தன்மையை அடையுமா என்பதே நாம் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. ஸ்ரீஐயப்ப சுவாமி கார்த்திகை மாதத்தில் திருஅண்ணாமலையை வலம் வந்து அந்த தீப சக்திகளை எல்லாம் காந்தமலையில் ஜோதியாக வெளிப்படுத்தி ஐயப்ப பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார் என்பதை நாம் அறிவோம். இதே முறையில் சூரிய பகவான் நீச்சம் பெறும் ஐப்பசி மாதம் ஆரியங்காவு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து கார்த்திகை மாதம் திருஅண்ணாமலை ஜோதி தரிசனத்தைப் பெறுதல் கண் பார்வையை சீர்செய்யும் அற்புத வழிபாடாகும். பிரெயில் ஸ்லேட், ஸ்டைலஸ், ப்ரெயில் பேப்பர் போன்றவற்றை ஆரியங்காவு திருத்தலத்தில் அர்ப்பணித்து அவை திருக்கார்த்திகை தீப ஜோதி கிரணங்களைத் தரிசிக்குமாறு கிரிவலம் வந்து எழுது பொருட்களையும், பிரெயில் வாட்ச் போன்ற சாதனங்களையும் குருடர்களுக்கு, பார்வை குறைந்த மாணவர்களுக்கு அளித்தல் என்பது அற்புத சமுதாய சேவையாகும். நல்ல கண் பார்வை உள்ளவர்களும் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றுவதாலும், ராஜகூப தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீஐயப்ப தரிசனத்தையும் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதாலும் அற்புத பலன்களைப் பெறுவார்கள். மூன்று வயதில் கண்களை இழந்த லூயி பிரெய்லி முற்பிறவி ஒன்றில் குருடர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வாமன நேத்ர தரிசனம் பெற்றார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். அவர் நாமம் ஆறு எழுத்துக்களுடன் பொலிந்ததோடு மட்டுமல்லாமல் அவர் கண்டுபிடித்த பிரெய்லி முறையும் குருவின் குசாவுக்கு இணையான ஆறு மேடுகளுடன் துலங்குவதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

லூயி பிரெய்லி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பெற்ற தரிசனம் இரு மேடுகளாகத் தோற்றம் கொள்ள அவைகளே ஆங்கில எழுத்தான 'C' அதாவது பார் என்பதற்கு உரித்தானதும் குருவிற்கு உரித்தான எண் கணிதமாகவும் பிரகாசிக்கின்றது. இவ்வாறு அனைவரும் ஆறு அட்சரங்கள் மூலம் இறைவனை தரிசனம் செய்ய வழிவகுத்தவரே லூயி பிரெய்லி. இதுதானே ஆறுக்கு, ஆற்றிற்கு வழிவகுத்த சுக்ராச்சாரியாரின் பிரார்த்தனை. வாழ்க குரு நாமம். Love என்பது மட்டும் குருவைக் குறிக்கும் எண்ணிக்கையில் பொலிவது அல்ல Love என்பதைக் கூறும் பிரெய்லி மேடுகளும் மூன்றாகப் பொலிவதுதான் குரு கருணை. “ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ...” என்பது போல இறைவனின் சாம்ராஜ்யமாகத் திகழ்வதே குருடர்களின் அரங்கம். இங்கு அன்பு மட்டும் குரு மேடுகளுடன் திகழ்வதில்லை அதன் எதிர்வினையும் மூன்றைக் குறிக்கும் பள்ளங்களுடன் திகழ்வதே சிறப்பாகும்.

பலிச் சக்கரவர்த்தி ஸ்ரீவாமனருக்கு தானம் அளிக்க முன்வந்தபோது சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கண்டியின் வாயை அடைத்து விட்டார் அல்லவா ? சுக்ராச்சாரியார் ஏன் வண்டு வடிவம் எடுக்க வேண்டும். கண்டியின் துளையை எத்தனையோ முறைகளில் அடைக்கலாமே ? தேனீ என்பது குருவிற்கு உரித்தான தேனை உறிஞ்சும் தன்மை உடையது மட்டுமன்று அதன் கால்கள் குருவின் குசா சக்தி பொலியும் ஆறு எண்ணிக்கையில் திகழ்வதுதானே ? இந்த குசா சக்திகளே குருடர்களுக்கு அருள் பொலியும் பிரெய்லி எழுத்துக்களாக பின்னாளில் அமைந்தன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். அதனால் ஆறு எழுத்துக்களுடன் பொலியும் ஆரியங்காவு திருத்தலம் மட்டுமல்லாது சிதம்பரம், ஈங்கோய்மலை போன்ற தலங்களும் தரங்கம்பாடி போன்ற தலங்களும் குருடர் சேவையில் தம்மை அர்ப்பணிக்க எண்ணம் கொண்டோர்க்கு அருள்புரியம் திருத்தலங்களாகும். தரங்கம்பாடி திருத்தலத்தில் அலைகள் பாடும் தரங்க ஒலி மட்டும் அல்லாது இங்கு தேனீக்களின் ரீங்கார ஒலியும் இணைகின்றன என்பதே அதிசயமாகும். இத்துடன் தங்கள் இதய ஒலியையும் இணைக்க முடிந்தால் பக்தர்கள் பெறும் சப்த நாள அனுகிரக சக்திகளுக்கு அளவே இல்லை. குருடர்கள் தாங்கள் இழந்த ஒளி சக்திகளை இத்தலங்களில் இயற்றும் வழிபாடுகள் ஓரளவு நிவர்த்தி செய்து தரங்க ஒலி சக்திகளை அனுகிரகமாக அளிக்கின்றன.

நெடுங்குடி விஜய தரிசனம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது பழமொழி. இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து கோள்களின் சக்திகளும் நமது உடலில் வியாபித்துள்ளன என்பதே இதன் மேலோட்டமான பொருள். இவ்வாறு அண்ட சராசரத்தில் உள்ள சக்திகளைப் பற்றி நம்மால் அறிவது என்பது இயலாத காரியம் என்றாலும் நம் உடலில் உள்ள சக்திகளின் தன்மையைப் பற்றி ஓரளவாவது இந்தப் பிறவியில் அறிந்து கொள்ளலாம் அல்லவா ? அதற்கு உதவி புரிபவையே நாம் பூமியில் தரிசனம் செய்யும் வகையில் அமைந்துள்ள திருத்தலங்களாகும். பஞ்ச பூதங்களால் உருவான இந்த பூமியைப் போல்தான் நம் உடலும் பிருத்வி தத்துவம் என்ற தத்துவத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை உணர உதவி செய்வதே காரைக்குடி நேமத்தான்பட்டி அருகில் உள்ள நெடுங்குடி திருத்தலமாகும். இறைவன் ஸ்ரீகைலாச நாதர், இறைவி ஸ்ரீபிரசன்ன நாயகி. சமீப காலம் வரை நவகிரகங்கள் இல்லாமல் இருந்த திருத்தலம் இது. காரணம் இந்த நவகிரக தத்துவங்களை நம் உடலில் நிலவும் சுவாச இரகசியங்கள் மூலம் உணர உதவி செய்யும் திருத்தலமாக இது விளங்கியதால் நவகிரகங்களின் தூல வடிவம் இங்கு நிலைபெறவில்லை. ஆனால் மக்களின் அசிரத்தை காரணமாக நவகிரகங்களின் வெளித் தோற்றத்தையே புலன்களும் மனமும் நாடுவதால் தற்போது நவகிரகங்களின் பிரதிஷ்டை இத்தலத்தில் விளங்குகிறது.

நமது சுவாசத்தில் சூரிய கலை சந்திர கலை என இரு கலைகள் உண்டு. இந்த இரு கலைகளுக்கும் பிருத்வி, அப்பு, அக்னி, வாயு என்ற நான்கு பூதங்கள் உண்டு. இந்த பூதங்கள் அனைத்தும் ஆகாய தத்துவத்தில் நிலைகொள்கின்றன. இவ்வாறு எட்டு பூதங்களுடன் சுசும்னா நாடி சுவாசமும் இணையும்போது ஒன்பது நவகிரக சக்திகள் உருவாகின்றன. இவ்வாறு ஒன்பது நவகிரக சக்திகளை உணரவல்ல இடமே நெடுங்குடி ஆகும். சூரிய கலையில் சுவாசம் நிலைகொள்ளும்போது அந்த சுவாசத்தை பிருத்வி பூதத்தில் செலுத்தி பாணத்தை எய்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு தன் ஒவ்வொரு ராம பாணத்தையும் முறையாக செலுத்தியதால்தான் ராமர் விஜய ராமராகவே திகழ்ந்தார் என்று உரைப்பதே சித்தர்களின் மகா காவியம். தற்காலத்தில் எவரும் பாணம் எய்யப் போவதில்லை என்றாலும் வீடு, நிலங்கள், உத்தியோகம், புது உறவுகள் போன்ற காரியங்களில் எல்லாம் சூரிய கலையும் பிருத்வி பூதமும் இணையும்போது அக்காரியத்தில் வெற்றி நிச்சயம் நிலவும் என்பது உண்மையே. இந்த இரகசிய தந்திரத்தை சுவாச கலையில் வல்லவர்கள் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதற்கு உதவி புரிவதே நெடுங்குடி திருத்தலத்தில் நாம் புரியும் வழிபாடுகளாகும். நம் உடலில் அமைந்துள்ள கண்களால் பெறும் தரிசனம், சூக்கும சரீர தரிசனம், ஆத்ம தரிசனம் என்று தரிசனங்களில் அவரவர் நிலையைப் பொறுத்து எந்த தரிசனம் பக்தர்கள் பெறுகின்றார்களோ அந்த அளவிற்கு தரிசன பலனும் அமையும் என்பது உண்மையே. இத்தகைய தரிசன இரகசியங்களை உணரக் கூடிய திருத்தலமும் நெடுங்குடி ஆகும். நெடுங்குடி என்றால் பக்தர்கள் சந்ததிகள் வாழையடி வாழையாக வளரும் என்பது ஒரு பொருள் என்றாலும் இறை தரிசனம் இவ்வாறு தூல உடலிலோ சூக்கும உடலிலோ நெடுங்காலம் தங்கி அருள் புரியும் திருத்தலம் என்ற பொருளும் உண்டு.

ஸ்ரீகைலாசநாதர் நெடுங்குடி

பிருத்வி பூதத் தலமாக நெடுங்குடி விளங்குவதைப் போல ஆரியங்காவு திருத்தலம் மூன்று நாடிகளை வெளிப்படுத்தும் தன்மையுடனுடம் அப்பு பூதத் தலமாகவும் விளங்குகிறது. இதற்கு உதவி புரிவதே ஆரியங்காவு ராஜகூப நதியில் மேற்கொள்ளும் நீராடலும் வழிபாடும் ஆகும். இப்போது சிவன், புஷ்கலை தேவி, ஐயப்ப சுவாமி மூர்த்திகள் சூரிய, சந்திர, சுசும்னா நாடிகளின் வெளிப்பாடாகவே ஆரியங்காவு திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்கள் என்பது தெரியவரும் அல்லவா ? சிவனும் பெருமாளும் இணைந்த கோலமே ஐயப்ப கோலம் என்று மேலோட்டமாக கூறினாலும் சுசும்னா நாடியின் தரிசனமாக நாம் காண உதவி புரிவதே ஸ்ரீஆரியங்காவு ஐயப்ப தரிசனம் ஆகும். இவ்வாறு சலனமற்று ராஜகூப தீர்த்தம் காட்சி அளிப்பதன் காரணமே இந்த மூன்று நாடிகளின் சங்கமத்தால்தான் என்ற இரகசியத்தையும் தொடர்ந்த வழிபாட்டால் பக்தர்கள் உணர்ந்து கொள்ளலாம். நெடுங்குடி, ஆரியங்காவு இவ்விரு திருத்தலங்களுமே நாடி பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள பெரிதும் துணை புரிகின்றன. நெடுங்குடியில் உள்ள சர்ப்ப நதியில் இயற்றும் தர்ப்பண வழிபாடுகள் நம் முன்னோர்களின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதுடன் நாடிகளைப் பற்றிய அறிவையும் விருத்தி செய்கின்றன. சற்றே ஆத்ம விசாரம் செய்தால் சர்ப்ப நதியின் தன்மை புரிய வரும். இந்த நதியில் தற்போது நீர் இல்லை என்றாலும் நெடுங்குடி திருத்தலத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள செம்பலா தீர்த்தத்தில் கிட்டும் நீரைக் கொண்டு தர்ப்பணம் அளித்தல் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதி அளிக்கக் கூடியதே. இந்த தீர்த்தத்தை அளவோடு எடுத்து அன்னதான பிரசாதத்துடன் கலந்து அளிப்பதாலும் சுவாச நாடிகள் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். இந்த தீர்த்தத்தை தர்ப்பண வழிபாடுகளுக்கும் அன்னதானத்திற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மிக மிக முக்கியம். செம்பலா என்பது இத்தகைய தன்மையுடன் விளங்கும் ஒரு விசித்திரமான பலா பழமாகும். பல கோயில் பலா தல விருட்சங்கள் இத்தகைய செம்பலா சக்திகளுடன் விளங்குகின்றன. திருமங்கலம், ஆடுதுறை, குற்றாலம் போன்ற திருத்தலங்களில் பொலியும் பலா கனிகளும் இத்தகைய செம்பலா சக்திகளுடன் துலங்குபவையே. அதாவது இந்த பழங்களை இறைவனுக்காக அர்ப்பணிக்கலாமே தவிர சொந்த உபயோகத்திற்காக இவற்றைப் பறித்தால் அவை தீராத பல உடல் வியாதிகளை உருவாக்கும் என்பது உண்மையே. பல திருத்தலங்களிலும் இரு பாம்புகள் இணைந்த கோலத்தைக் காணலாம். சூரிய நாடி, சந்திர நாடி, சுசும்னா நாடி என்ற சக்திகளைக் குறிக்கும் வடிவங்களே இவை. உரிய அனுமதியுடன் இந்த நாக தேவதைகளை கங்கை, காவிரி போன்ற புனித நீரால் தூய்மைப்படுத்தி விபூதி, குங்குமம் இட்டு வணங்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் நாடிகள் பற்றிய அறிவு விருத்தியாகும். நாடிப் பொருத்தம் பார்க்காது விளைந்த திருமண உறவுகளால் சந்தான பாக்கியங்கள் உருவாகாதபோது இத்தகைய வழிபாடுகள் உறுதுணையாக அமையும். பாம்பின் வலது பக்க யெளிவு சூரிய நாடியையும் இடது பக்க யெளிவு சந்திர நாடியையும், நேரே செல்லும் இயக்கம் சுசும்னா நாடியையும் குறிக்கும். இந்த சுசும்னா நாடி அம்சம் தெளிவாக குறிக்கப்படாத விக்ரஹங்களில் இரு பாம்புகள் இணைந்த கோலம் இந்த மூன்று நாடிகளையும் குறிக்கும். வழிபடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது, எப்படி இந்த வழிபாடு நாடி வழிபாடாக அமைகிறது என்பதை அதற்குரித்தான தேவதைகள் கவனித்துக் கொள்ளும். கவலை வேண்டாம்.

ஸ்ரீகாசிவிஸ்வநாதர் நெடுங்குடி

மனிதப் பிறவியின் கர்ப்ப வாசம் 12 மாதங்கள். இதில் குசா மாதமான ஏழாவது மாதத்தில்தான் மனிதனுக்கு முதன் முதலில் சுவாசமும் சூரிய கலை முதலான மூன்று கலைகளும் உருவாகின்றன. இந்த சுவாசத்திற்கு அதிபதி புத கிரகமே, புதன் கிழமைக்குரித்தான குசா சக்திகள் மனிதனை நல்ல முறையில்தான் உருவாக்கி உள்ளன என்பதையே அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று கூறுகிறோம். இத்தகைய நல்ல பிறவியைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதே மனிதப் பிறவியின் நோக்கம். இந்த மனித நோக்கத்தை தெளிவாக உணர்த்துவதே நெடுங்குடி திருத்தல மகிமையாகும். சந்ததிகள் இன்றி வருந்துவோர் தம்பதி சகிதம் இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி நமஸ்கார பிரதட்சிண முறையில் இத்தலத்தை வலம் வந்து வணங்குவதால் எத்தகைய உடல் குறைபாடுகளும் நன்முறையில் சீரடையும் என்பது உண்மையே. ஒற்றைப்படை ராசியில், நவாம்சத்தில் அமைந்த சூரியன், சந்திரன், குரு இவர்கள் ஆண் சந்ததிகளை உருவாக்குவார்கள் என்பது ஜோதிட விதியாக இருந்தாலும் இந்த ஜோதிட விதியையும் மீறி ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் ஏராளம். இதற்கு உறுதுணையாக அமைவதே நெடுங்குடி திருத்தல வழிபாடாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இது விதியை மீறுதல் போல் தோன்றினாலும் நெடுங்குடி திருத்தலத்தில் உள்ள சில அபூர்வ விருட்சங்கள் ஆண் குழந்தைகளையோ அல்லது பெண் குழந்தைகளையோ தம்பதிகள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாற்றித் தர வல்லவையே. ஆனால், இத்தகைய மாற்றங்கள் உடலில் ஏற்படும் காலம் வரை வழிபாடுகளை இத்தலத்தில் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியம். அவரவர் குடும்ப பாரம்பரியத்தை ஒட்டி சீமந்தம், பும்சவனம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதே சிறப்புடையது என்றாலும் சித்தர்கள் அளிக்கும் முறையைத் தெரிந்து கொள்வது தவறு கிடையாது அல்லவா ? இத்தகைய சீமந்தம் நிகழ்ச்சிகளை ஏழாவது மாதத்தில் நிகழ்த்துவதே சிறப்பு. காரணம் அப்போதுதான் புத கிரக சக்தியால் உருவாக்கப்பட்ட நாடிகளும் சுவாசக் கலைகளும் முழுமை பெறுகின்றன. இதை முறைப்படுத்துவதற்காகவே அக்காலத்தில் முள்ளம்பன்றியின் உரோமத்தைக் கொண்டு பெண்களின் தலைக்கு வகிடு எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வகிடின் ஆரம்பத்தில் வைக்கும் குங்குமம் மஞ்சள், எலுமிச்சம் பழம் போன்ற குரு சக்திகளுடன் திகழ்ந்ததால் குரு அருளால் கிட்டும் மனிதப் பிறவி இறைவனின் திருவடிகளையே சிந்திக்கும் மனிதப் பிறவியாக உருப்பெற்றது. முள்ளம்பன்றியின் ரோமத்தின் தன்மை என்னவென்றால் அந்த ரோமத்தால் தலைக் கேசத்தை வகிடு எடுத்தால் அந்த வகிடு பிரியாது தெளிவாக இருக்கும் என்பதே. அதனால் கருவில் வளரும் குழந்தையின் சூரிய சந்திர சுசும்னா நாடிகள், அவற்றை உருவாக்கும் நாளங்கள் நன்முறையில் பதிக்கப்படும். முள்ளம்பன்றி என்ற ஏழெழுத்து ஏதோ தற்செயலாக ஏற்பட்டதல்ல. என்னே நம் மூதாதையர் அறிவுத் திறன். அதற்காகவே அந்தத் திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து திருமணமான மகளிர்க்கும் கை நிறைய வளையல்களைப் பூட்டி அவர்கள் வயிறு நிறைய உணவளிக்கும் முறை உருவானது. இதில் உறவினர், அல்லாதோர் என்ற பாகுபாடு கிடையாது.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி நெடுங்குடி

அனைத்து சுமங்கலிகளும் குழந்தைகளுக்கு மனதார ஆசி அளிப்பதால் அதாவது அவர்கள் வயிறு வாழ்த்துவதால் இந்த அனுகிரகம் இந்த பிறவிக்கு மட்டுமல்லாமல் பல பிறவிகளுக்கும் தொடரும் என்று உணர்த்துவதே நெடுங் ... குடி வழிபாடாகும். மேற்கூறிய முறையில் சீமந்தம், பும்சவனம் போன்ற சுபநிகழ்ச்சிகளை ஆரியங்காவு திருத்தலத்தில் நிகழ்த்தி சுமங்கலிகளுக்கு கைநிறைய வளையல்களும் வயிறு நிறைய உணவளிப்பதும் பக்தி நிறைந்த குழந்தைகளை உருவாக்கும் உத்தம வழிபாடுகளாகும். மனித வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான அங்கமாகத் திகழ்வதால் திருமண முகூர்த்தங்களை கணிக்கையில் சற்குருமார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள். சற்குரு பங்கேற்கும் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் பாக்கியசாலிகளே. சற்குரு பங்கேற்கும் திருமணங்களில் மாங்கல்ய தாரணம் என்ற வைபவம் சற்குரு சுட்டிக் காட்டும் முகூர்த்த வேலையிலேயே நடைபெறுகிறது. பொதுவாக இத்தகைய திருமணங்கள் கால வரையறைக்கு அப்பாற்பட்ட சற்குரு கணிக்கும் அமிர்த நேரமாகத் திகழ்கின்றன. சுமார் ஒரு நிமிடமே திகழும் இத்தகைய முகூர்த்த நேரங்கள் சற்குருவின் சுவாசமாக அமையும் சூரிய கலையில் பிருத்வி பூதத் தத்துவத்தில் அமைகின்றன என்பதே சித்த முகூர்த்த இரகசியமாகும். இதை நிறைவேற்றுவதற்காகவே சற்குரு பங்கேற்கும் மாங்கல்ய தாரண நிகழ்ச்சிகளின்போது சற்குருமார்கள் அருகிலிருந்து அதாவது 12 அடிக்குள் நெருங்கி இருந்து இந்த மாங்கல்ய தாரண சுப நிகழ்ச்சி நிறைவேற அருள்புரிகிறார்கள். சற்குருமார்கள் நிறைவேற்றும் மாங்கல்ய தாரண சுப நிகழ்ச்சிகள் மட்டும் என்றல்லாது அவர்கள் நிறைவேற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலுமே இந்த சுவாச கலை இரகசியங்கள் நிரம்பியிருக்கும். அடியார்கள் சற்குருமார்களைத் தேடி வந்து அவர்களின் அனுகிரகங்களைப் பெற விழையும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு விதமான சுவாச பந்தனங்களையும் கலை இரகசியங்களையும் பூத தத்துவங்களையும் கையாள வேண்டியிருப்பதால் மாதா அமிர்தானந்த மயி போன்ற குருமார்கள் அனைவருமே தாங்கள் நிறைவேற்றப் போகும் காரியத்திற்கு ஏற்ப சுவாச கலையும் பூத தத்துவங்களும் தம் உடலில் நிலைகொண்டுள்ளனவா என்பதைச் சரி பார்க்கும் பொருட்டு அடிக்கடி தங்கள் மூக்கைத் தடவுவது போலோ அல்லது தங்கள் கைவிரல்களைக் குறிப்பிட்ட முத்திரைகளில் வைத்தோ இருப்பதை சாதாரண அடியார்களும் கண்டு இன்புறலாம். இவ்வாறு சுவாசக் கலையை விரல்களை வைத்துத்தான் சரி பார்க்க வேண்டும் என்ற நிலையில் சற்குருமார்கள் திகழவில்லை என்பது உண்மையே என்றாலும் சாதாரண பக்தர்களும் அடியார்களும் தங்கள் சுவாசக் கலை அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சற்குருமார்கள் என்ன உயர்ந்த தெய்வீக நிலையில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாது சாதாரண மனிதர்களைப் போலவே தங்கள் சுவாசக் கலையை அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளும் முறையை சுட்டிக் காட்டும் பொறுப்பையும் அநாயசமாகக் கையாளுகிறார்கள் என்பதே சற்குருமார்கள் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

முக்குண முப்பரிமாண வழிபாடு

வெறுமனே ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கி விட்டால் மட்டும் அது பலனைத் தருவதில்லை. அது உரியவர்களால் தகுதி உடையவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இம்முறையில் சித்தர்களால் அங்கீகரிக்கப்பட்ட அற்புத மந்திர வழிபாட்டு முறையே இந்த குரு வருடத்திற்கு உரிய மேற்கண்ட வழிபாட்டு முறையாகும். நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரம், இதை மறுதலையாகக் கூறினால் யவாசிமந என்று வரும். இவ்வாறு இரு திசைகளில் ஒலிக்கப்படும் மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்திற்கும் பின்னணியாக வேறு ஒரு மந்திரத்தை ஒலித்தலே முக்குண முப்பரிமாண வழிபாடு ஆகும். இந்த இரு திசை மந்திரங்கள் சூரிய சந்திர நாடிகளைக் குறிக்க மூன்றாவது மானசீக மந்திரம் சுசும்னா நாடிக்கு உரியதாக அமைகிறது. உதாரணமாக பஞ்சாட்சர மந்திரத்தை கீழ்க் கண்ட முறையில் ஜபிப்பது ஒரு முறை.

ஸ்ரீதுர்காதேவி நெடுங்குடி

ந .. ஞானானந்த மயம் தேவம்
ம .. நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
சி .. ஆதாரம் சர்வ வித்யானாம்
வா .. ஹயக்ரீவம்
ய .. உபாஸ்மஹே

ய .. ஞானானந்த மயம் தேவம்
வா .. நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
சி .. ஆதாரம் சர்வ வித்யானாம்
ம .. ஹயக்ரீவம்
ந .. உபாஸ்மஹே

பஞ்சாட்சரத்தை பேப்பர் பேனா கொண்டோ, விரல்கள் உடல் அங்கங்கள் மீதோ, மேஜை நாற்காலிகளின் மீதோ எழுதிக் கொண்டிருக்க ஒவ்வொரு அட்சரத்திற்கும் ஹயக்ரீவ மந்திரத்தின் ஒரு பகுதியை மானசீகமாகவோ வாய்விட்டோ ஒலிப்பதே முக்குண முப்பரிமாண வழிபாட்டு முறையாகும். இம்முறையில் மந்திரத்தை ஜபிப்பதால் ஒரு முறை ஜபிக்கப்படும் மந்திரம் 300 மடங்கு பலன் உள்ளதாக அமைகிறது. “நீ என்ன ஜாம்பவானோ,” என்று மக்கள் வழக்கில் அடிக்கடி கேட்பதுண்டு. ஜாம்பவான் என்பவர் ராமர் காலத்தில் ராமருக்கு மூத்தவராகத் தோன்றி பெருமாளுடைய கிருஷ்ணாவதாரத்திலும் அவருடன் மல்யுத்தம் புரியும் பாக்கியம் பெற்றவர். யுகக் கணக்கில் இவ்வாறு ஜாம்பவான் மேற்கண்ட முறையில் மந்திரம் ஜபித்து வந்தார்.

நெடுங்குடி

ஓம் .. ஓம்
ந .. நாராயணாய
மோ .. வித்மஹே
நா .. வாசுதேவாய
ரா .. தீமஹி
ய .. தந்நோ
ணா .. விஷ்ணு
ய .. ப்ரசோதயாத்

ய .. ஓம்
ணா .. நாராயணாய
ய .. வித்மஹே
ரா .. வாசுதேவாய
நா .. தீமஹி
மோ .. தந்நோ
ந .. விஷ்ணு
ஓம் .. ப்ரசோதயாத்

இவ்வாறு ஜாம்பவான் மந்திரம் ஜபித்து வந்ததால் கிருஷ்ண பகவான் மந்திர ஒலிப் பிழம்பாக ஜொலித்த ஜாம்பவானுடன் போர் புரியும்படியான ஒரு திருவிளையாடலைப் புரிந்தார். இந்த மல்யுத்தம் அதாவது ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து போரிடும் விளையாட்டு 21 நாட்களுக்குத் தொடர்ந்தது. பெருமாளுக்கும் பெருமாளின் நாமத்திற்கும் நடந்த போரில் யார் ஜயிப்பார் என்பது நீங்கள் அறிந்ததுதானே. இறுதியில் தன்னுடன் மல்யுத்தத்தில் போரிடுபவர் சாட்சாத் பகவான் நாராயணனே எனத் தெளிந்தவுடன் ஜாம்பவான் சாஷ்டாங்கமாக ஸ்ரீகிருஷ்ண பகவானின் பாதங்களைச் சரணடைய பகவானோ அவரை வாரி எடுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டார். அது மட்டுமல்லாமல் ஜாம்பவான் வேண்டுகோளுக்கிணங்கி ஜாம்பவானின் அன்பு மகளான ஜாம்பவதியையும் மணந்து கொண்டார் என்பது நாம் அறிந்த கிருஷ்ண பகவான் ஜாம்பவதி திருக்கல்யாண வைபவமாகும். இந்த முக்குண முப்பரிமாண வழிபாட்டை எத்திருத்தலத்திலும் ஆரம்பித்து நிறைவேற்றி வரலாம் என்றாலும் ஆரியங்காவு, கபிஸ்தலம், நெடுங்குடி போன்ற திருத்தலங்கள் இத்தகைய வழிபாடுகளை ஆரம்பிப்பதற்கு உகந்த தலங்களாக திகழ்கின்றன. மேற்கண்ட மந்திர விதானத்தில் பஞ்சாட்சர மந்திரத்திற்குப் பதிலாக நெடுங்குடி, அண்ணாமலை, உண்ணாமுலை என்ற ஐந்தெழுத்து நாமங்களையோ, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணபகவான் என்ற எட்டெழுத்து மந்திரங்களையோ ஜபித்தலும் ஏற்புடையதே. இவ்வாறு எட்டெழுத்து மந்திரங்களை ஜபிக்கும்போது அவைகளை எட்டு திசைகளுக்கும் திசைக்கு ஒன்றாக நிரவி ஏதாவது உரிய மந்திரத்தை ஜபித்தலும் நலமே. உதாரணமாக,

பாலமரம் நெடுங்குடி

ஓம் .. அன்னபூர்ணே சதாபூர்ணே
ந .. சங்கர பிராண வல்லபே
மோ .. ஞான வைராக்ய சித்யர்த்தம்
நா .. பிக்ஷாந்தேஹி ச பார்வதி
ரா .. மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ
ய .. பாந்தவா சிவபக்தா ச ஸ்வதேசோ புவனத்ரயம்
ணா .. பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி
ய .. க்ருபா வலம்பனகரி மாதா அன்னபூர்ணேஸ்வரி

ய .. அன்னபூர்ணே சதாபூர்ணே
ணா .. சங்கர பிராண வல்லபே
ய .. ஞான வைராக்ய சித்யர்த்தம்
ரா .. பிக்ஷாந்தேஹி ச பார்வதி
நா .. மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ
மோ .. பாந்தவா சிவபக்தா ச ஸ்வதேசோ புவனத்ரயம்
ந .. பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி பிக்ஷாந்தேஹி
ஓம் .. க்ருபா வலம்பனகரி மாதா அன்னபூர்ணேஸ்வரி

என்று ஜபித்து எட்டெழுத்து மந்திரங்களுக்கு நிவேதனமாக மேற்கூறிய முறையில் அளித்தல் சிறப்பாகும். இந்த நிவேதனத்தை வலஞ்சுழியாகவும் இடஞ்சுழியாகவும் எட்டு திசைகளுக்கு அர்ப்பணித்தல் சிறப்பே. அமைதியாக அமர்ந்திருக்கும் சமயங்களிலும், பிரயாணங்களின்போதும், இரவில் படுப்பதற்கு முன்னும் சிறப்பாக இத்தகைய மந்திர கவசங்களை ஓதி சயனிப்பதால் சிறந்த பாதுகாப்பு கிட்டும். மந்திர அட்சரங்களை அவரவர் சுவைக்கு, விருப்பத்திற்குத் தக்கபடி தாராளமாக பிரித்துக் கொள்ளலாம். இதில் எவ்வித தடையும் சித்தர்கள் விதிக்கவில்லை. நெடுங்குடி திருத்தலத்தில் அபூர்வமாக வேறு எங்கும் தரிசிக்க இயலாத பால மரம் பொலிகின்றது. செல்வ விருத்திக்கு மட்டும் அல்லாமல் சந்தான விருத்திக்கும் இம்மர வழிபாடு பெருந்துணை புரிகின்றது. திருமகள் சன்னதியையும் சேர்த்து இம்மரத்தை வலம் வந்து வணங்குவதால் சந்தான விருத்தியும் செல்வ விருத்தியும் ஒருங்கே பெருகும் என்பது உண்மையே. இந்த சன்னதியில் முக்குண முப்பரிமாண வழிபாட்டை ஆரம்பித்தல் சிறப்பாகும். பாலன் என்பதற்கு குழந்தை என்ற பொருள் இல்லாமல் இருவரை இணைக்கும் பாலம் என்ற பொருளும் உண்டு அல்லவா ? பல குடும்பங்களில் கணவன் மனைவி, மாமனார் மாமியாருக்கிடையில் வெளியே சொல்ல முடியாத எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் அவர்கள் மனங்களை இணைக்கும் பாலமாக குழந்தைகள் விளங்குவதை நாம் அறிவோம். இவ்வாறு அலுவலகம், குடும்பம், சமுதாயம் இவை அனைத்திலும் தற்போது அருகிவிட்ட ஒற்றுமையை நிலைநிறுத்துவது இந்த பால மர சன்னதியில் நாம் நிறைவேற்றும் வழிபாடுகள் ஆகும். ஒரு ஆற்றின் வலது இடது கரைகளை, ஒரு இடத்தின் இரண்டு பக்கங்களை, சந்திர சூரிய நாடிகளை இணைப்பதுதானே பாலம். இந்த பால மரத்தடியில் பால வழிபாட்டை நிறைவேற்ற வழி வகுத்த சித்தர்களின் மேதா விலாசம்தான் என்னே.

குழல் ஊதி வா கண்ணா

முக்குண முப்பரிமாண வழிபாடு அடியார்கள் தங்களுக்கு விருப்பமான மந்திரங்களை ஓதி இஷ்ட தெய்வங்களை வழிபடும் முறையாக அமைந்துள்ளதால் சமுதாய ஒற்றுமைக்காக வழிபடும் அடியார்கள் நம் சற்குரு அருளிய ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு பதிகங்களை 3, 6, 9 ... என்றவாறு மூன்றின் மடங்காக இங்கு ஓதி வழிபடுதல் சிறப்பாகும். அவ்வாறு ஓதப்படும் துதிகள் எத்தனை மடங்கு பெருகி சமுதாயத்திற்கு அமைதியை அளிக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே அமைந்த இணைப்புப் பாலம்தானே தேவாரப் பெரியோர்கள் அனைவரும்.
பக்திக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர்களே ஆஞ்சநேயரும், ஜாம்பவானும், ஜடாயுவும். ஆஞ்சநேயருக்கு மூத்தவர் ஜாம்பவான், கழுகு அரசன் ஜடாயுவோ ஜாம்பவானுக்கும் மூத்தவர். இவர்கள் குரங்கு, கரடி, கழுகாக இருந்தார்கள் என்பதை விட இவர்கள் இறைவன் மேல் வெளிக்காட்டிய பக்தி என்றென்றும் நிலைத்திருக்கும் தன்மையாகத் திகழ்ந்ததே சிறப்பாகும். பக்தியின் பல நிலைகளை, படித்தரங்களை சுட்டிக் காட்டுவதே இவர்கள் வரலாறு. பக்ஷி ராஜன் ஜடாயு சூரிய குலத் தோன்றலாக இருந்தாலும் தன்னுடைய சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள தேர்ந்தெடுத்த இடமே நெடுங்குடி திருத்தலமாகும். அவ்வாறு சாப விமோசனத்திற்காக தவம் இயற்றிக் கொண்டிருக்கையில் அங்கு திரிலோக சஞ்சாரியான நாரதர் தோன்றி ராம பிரானின் பூலோக வருகையையும் அதில் ஜடாயுவின் பங்கையும் எடுத்துக் கூறி ராவணன் பெற்ற சந்திரஹாச வாளின் தன்மையையும் விளக்கிக் கூறினார். சூரிய சந்திர சக்திகளின் ஒருமித்த பிரம்மாண்ட மலையாக விளங்குவதே, பித்ருக்களின் ஒளிப் பிழம்பாக விளங்குவே நெடுங்குடி என்பதை ஜடாயுவுக்கு விளக்கி ராவணன் சந்திரஹாச வாள் பெற்ற வரலாற்றையும் விவரித்தார். அந்த வாள் இருக்கும் வரை யாராலும் ராவணனை வெல்ல முடியாது. அதை ராவணன் தன்னை விட பலத்தில் குறைந்த ஜீவன்களிடம் பிரயோகித்தால்தான் அந்த வாளின் சக்தி பயனற்றுப் போகும் என்று விளக்கி ஜடாயு ராவணனுடன் போரிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இவ்வாறு தியாகத்தின் சிகரமாக விளங்கியவரே ஜடாயு. அதற்கு துணை புரிந்தது அவர் நெடுங்குடியில் இயற்றிய தவமே என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது அல்லவா ? இவ்வாறு சூரிய சந்திர சக்திகளின் ஒருமித்த வல்லமை பொலியுமிடத்தில் தவமியற்றியதால்தான் சந்திரஹாச வாளை பயனற்றுப் போகச் செய்தது ஜடாயுவின் நெடுங்குடி தவம். பிருத்வி தத்துவத் தாரகையான சீதையின் வாழ்வைக் காக்க பிருத்வி தத்துவ தலத்தில் தவமியற்றி ராவணனின் வாளுக்கு பலியானார் ஜடாயு. ஜாம்பவானுடன் கிருஷ்ணர் 21 நாட்கள் போர் புரிந்தார் அல்லவா ? மூன்று நாட்களுக்கு ஒரு நிலை என்ற கணக்கில் ஜாம்பவான் உயர வேண்டிய ஏழு நிலைகளையும் அவருக்கு அளித்து இறுதியில் ஜாம்பவானை தன்னுடன் இணைத்துக் கொண்டார் ஸ்ரீகிருஷ்ண பகவான். கிருஷ்ண பகவானுடன் ஜாம்பவான் இணைந்து விட்டால் ஜாம்பவதியின் கதி என்னாவது ? இவ்வாறு ஜாம்பவதியையும் ஸ்ரீகிருஷ்ண பகவானுடன் இணைத்து இந்த இணைப்பிற்கு பரிசாக சியமந்தக மணியையும் அளித்த ஜாம்பவானுக்குத் துணையாக நின்றது இந்த முக்குண முப்பரிமாண வழிபாடே என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ?

எது மூன்றாம் பிறை ?

பிறர் மனதை திருடுவதில் வல்லவன் கண்ணன். காணாமல் போன சியமந்தகமணியை மீட்பதற்காக குகைக்குள் சென்ற கண்ணபிரான் ஜாம்பவான், ஜாம்பவதி என்ற இரு விலை மதிப்பற்ற மணிகளைத் “திருடிக் கொண்டு” வந்தான் என்றால் கிருஷ்ணனுக்கு நிகர் கிருஷ்ணனேதான். ஒருவர் தன்னைப் பற்றி விளக்கிக் கூறி விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியம் பரம்பொருளுக்குக் கிடையாது என்றாலும் பிரகாசம் தரும் தீபத்தில் அவ்வப்போது திரி, எண்ணெய் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது போல் அமைவதே சற்குருமார்கள், அவதாரங்களின் பணியாகும். இம்முறையில் குழலூதும் கிருஷ்ணனின் சித்திரம் ஆத்ம விசாரத்திற்கு வித்திடுவதே. பூர்ண அவதாரம் என்பது எண் ஒன்பதிற்கு உரியதாகிறது, கிருஷ்ணன் தன்னுடைய வலது காலை மடித்து இடது காலின் முன் வைத்து இருக்கிறார். இவ்வாறு எட்டு இடங்களில் மடிந்த அங்கங்கள் எட்டெழுத்திற்கு உரியதாகின்றன. பகவான் ஏந்தும் புல்லாங்குழல் ஏழு துளைகளுடன் பரிணமிக்கின்றது. கிருஷ்ணர் உண்மையில் தன் அதரங்களைப் பதித்து புல்லாங்குழலை ஊதுவது கிடையாது. அப்போது ஆறு துளைகளே பரிமாணம் கொள்கின்றன. இந்த கீதத்தை கேட்ட பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட ஜீவன்கள் தம்மை கிருஷ்ண கானத்தில் இணைக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு அட்சரமாக மறையும்போது, மாறும்போது இறுதியில் ஜீவன் இறைவனுடன் இணைகின்றான். இதைக் குறிப்பதே குழலூதும் கிருஷ்ணனின் கோலம். இதை வழிபாடுகள் மூலம் நிறைவேற்ற துணைபுரிவதே முக்குண முப்பரிமாண மந்திர நிவேதனம், ஆரியங்காவு, நெடுங்குடி போன்ற தலங்களில் இயற்றும் வழிபாடுகள்.

ஸ்ரீவராக பெருமாள்

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் முசிறி

அமாவாசையிலிருந்து மூன்றாம் நாளான துவிதியை திதி அன்று மாலையில் சூரியன் மறைவிற்குப் பின், அஸ்தமனத்திற்குப் பின் பெறும் சந்திர தரிசனமே மூன்றாம் பிறை தரிசனமாகும். இந்த மூன்றாம் பிறை தரிசனத்திற்கு ஏன் இத்தகைய மகத்துவம் என்று பலருக்கும் தோன்றலாம். மூன்றாம் பிறைச் சந்திரனையே சிவபெருமான் தன் ஜடாமுடியில் சூடி சந்திர பகவானுக்கும் அனைத்துக் கோடி தேவாதி தேவர்களுக்கும் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சந்திர மௌலீஸ்வரராக தரிசனம் அளித்ததால் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் என்பது சாட்சாத் சிவபெருமானின் தூல தரிசனக் காட்சியே. இதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடோ கிடையாது. ஆனால், இந்த மூன்றாம் பிறை தரிசனம் அமையும் நேரத்தில்தான் குழப்பங்களே. உதாரணமாக வரும் 31.8.2019 சனிக்கிழமை, 1.9.2019 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு தினங்களுமே முன்னணி பஞ்சாங்களால் மூன்றாம் பிறை தரிசனத்திற்கு உகந்த தினங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் சாட்சாத் சிவபெருமானையே தரிசனம் செய்த பேரின்பப் பலன், நான்காம் பிறையை தரிசனம் செய்தாலோ மனக் குழப்பத்தையும், அவச் சொல்லையும், துன்பங்களையும், திருட்டுப் பட்டம் போன்ற தேவையில்லாத அபகீர்த்தி நிலைகளையும் சந்திக்கும் நிலை. இந்த இரண்டு குழப்பங்களுக்கு இடையே பஞ்சாங்கத்தை மட்டுமே நம்பி வாழும் மனிதனின் நிலையை சிந்தித்துப் பாருங்கள். இந்தக் குழப்பத்தை ஒரு உதாரணம் மூலம் தீர்க்க முயற்சி செய்வோம். ஒரு முறை வராஹமிஹிரர் பூகோள உருண்டையை வைத்து கால நுணுக்கங்களைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது மாலை நேரம். சந்தியாவந்தனம் நிறைவேற்ற வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. மகான்கள் என்ன அவசிய வேலை இருந்தாலும், போர்க்களத்தையே சந்திக்க வேண்டியிருந்தாலும் சந்தி நேரத்தை தவற விடுவது கிடையாது. வராகமிஹிரரோ ஜோதிட நுணுக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தன்னை மறந்ததால் சூரியன் அஸ்தமனம் ஆகிறான் என்பதையும் கவனிக்கவில்லை. சீடர்களுக்கோ ஒரே குழப்பம், என்ன செய்வதென்று தெரியாத நிலை. அப்போதே சகஜ நிலைக்கு மீண்டு சந்தியாவந்தனத்திற்கு ஆயத்தமானார் வராகமிஹிரர். கடலில் மூழ்கிய சூரிய பகவான் வராகமிஹிரர் இவ்வாறு சந்தியாவந்தனம் இயற்றப் போகிறார் என்பதை உணர்ந்ததும் அவருக்கு உதவுவதற்காக தான் மீண்டும் கடலிலிருந்து எழுந்து வந்து அந்த ஒப்பற்ற ரிஷிக்கு காட்சி அளித்தானாம். வராகமிஹிரரும் ஒன்றும் அறியாமல் தன்னுடைய சந்தியாவந்தன வழிபாடுகளை நிறைவேற்றினாராம். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிவது என்ன ? எவர் ஒருவர் தன்னுடைய நித்திய கர்ம அனுஷ்டானங்களை முறையாக நிறைவேற்றுகிறாரோ, பிறர் நலத்திற்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்கிறாரோ அவருக்காக இயற்கையே தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதே. இவ்வாறு பூமி இயக்கத்தையும் அண்ட சராசர நிகழ்ச்சிகளையும் இணைப்பவைதானே பன்றிகள். இந்தப் பன்றிகளுக்கெல்லாம் உணவளித்து அவற்றை முறையாகப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செம்மையாக நிறைவேற்றி தம்மை அண்டி வாழ்ந்த சீடர்களுக்கு உத்தம வழிகாட்டியாக திகழ்ந்தவரே வராகமிஹிரர் ஆவார்.

வணங்கவும் வாழ்த்தவும்

மேஜை, நாற்காலி, சமையலறை, கழிவறை, மரம் செடி என அனைத்திற்கும் தன்னுடைய வணக்கத்தை சித்தர்களுக்கே உரிய முறையில் அளிப்பதை ஆதரிப்பவரே நம் சற்குரு. ரிஷிகேஷ் சிவானந்தாவும் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தன்னுடைய அன்பான வணக்கத்தை முதலில் தெரிவித்து விடுவார். அது பற்றிக் கேட்டபோது, “நான் ஒருவரை வணங்கும்போது அவர் என்னைவிட ஆன்மீகத்தில் தகுதி குறைந்தவராகவோ, ஆன்மீகத்தில் உயர்ந்தவராகவோ இருக்கும் வாய்ப்பு உள்ளது. என்னைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் அவருடைய ஆசியால் என் மனம் தூய்மை அடைந்து நான் நன்மை அடைவேன், ஒருவேளை என்னைவிட ஆன்மீகத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தால் என்னுடைய வணக்கம் அவரைத் தூய்மைப்படுத்தி அவர் நன்னிலை அடைய வழிகாட்டும். சமுதாயத்தைப் பொறுத்தவரை இரண்டும் வரவேற்கப்பட வேண்டியதுதானே, இரண்டும் நன்மை பயப்பவைதானே,” என்பார். அதுபோல் சமுதாய நன்மைக்காக நம் சற்குரு அணிந்திருப்பதே ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசனால் அளிக்கப்பட்ட மூன்று ருத்ராட்சங்கள் ஆகும்.

வணங்கவும் வாழ்த்தவும்
வந்த ஒரு கருவியே ருத்ராட்சம்

ஒரே வரிசையில் மூன்று தீபங்கள் பிரகாசிக்கும்போது நடுவில் உள்ள தீபம் குசா சக்தியைப் பெறுவதால் அது நன்மையே பயக்கும் என்ற விதிக்கு இணங்க மூன்று எண்ணிக்கையில் நம் சற்குரு அணிந்துள்ள ருத்ராட்சங்கள் தரிசனம் செய்பவருக்கு குசா என்னும் நற்சக்திகளையே அளிக்கும் என்பதே நம் சற்குரு அணிந்துள்ள ருத்ராட்சத்தின் ஒரு பண்பாகும். பொதுவாக ருத்ராட்சங்கள் என்றால் ருத்ர பகவானின் திருநேத்திரங்கள் என்று பொருள்படுவதால் இந்த ருத்ராட்சங்கள் எப்போதும் தாயைவிடச் சாலப் பரிந்து பக்தர்களுக்கு நன்மையை அளிக்கின்றன. சூரிய நாடி, சந்திர நாடிகளின் சக்தியை சுசும்னா நாடியில் பதித்தும், வலது இடது நேத்திரங்களின் சக்தியை ருத்ராக்னியில் இணைத்தும் இந்த ருத்ராட்சங்கள் அருள் வழங்கும் தன்மையை விவரிக்கப் புகுந்தால் அது புராணமாகவே மாறி விடும். சிவானந்தாவின் நமஸ்கார பாணியைப் போன்றே இந்த ருத்ராட்சங்கள் செயல்படுகின்றன. அதாவது ஒரு சாதாரண பக்தர் இவ்வாறு ருத்ராட்சங்களை அணிந்து இறை தரிசனம் பெறும்போது அந்த இறை தரிசனத்தால் கிட்டும் பலன்கள் ருத்ராட்சம் அணிந்திருப்பவரை புனிதப்படுத்துகின்றன. அதே அடியார் தன்னைவிட தெய்வீகத்தில் தாழ்ந்த ஒருவரைச் சந்திக்க நேரும்போது அந்த ருத்ராட்சங்களில் மிளிரும் தெய்வீக சக்தி அந்த மனிதரை புனிதம் அடையச் செய்கின்றன. எனவே ருத்ராட்சம் என்பது சமுதாயத்தில் புனிதத்தை மேம்படுத்தும் ஒரு இறை சாதனமே. இதைத்தான் ஸ்ரீஅகத்திய மகாபிரபு, “வணங்கவும் வாழ்த்தவும் வந்த ஒரு கருவியே ருத்ராட்சம்,” என்று பாராட்டுகிறார். இது குறித்தே ருத்ராட்சம், கடுக்கன், ஸ்திர கங்கன் போன்ற இறைச் சாதனங்களை மூன்றாம் பிறை நாளில் அணிந்து கொள்ளும்படி, அந்த நன்னாள் இத்தகைய நற்காரியங்களை ஆரம்பிக்க உகந்த நாளாக இருக்கும் என்று கூறுவார். மேலும் மூன்றாம் பிறை என்பது வளர்பிறையில் அமைவதுதானே. இத்தகைய நற்காரியங்கள் பெருகி அனைவருக்கும் நன்மை ஏற்படட்டும் என்று நினைப்பது சற்குருவின் முறையான எதிர்பார்ப்புதானே ? நம் சற்குருவை நேரே தரிசனம் செய்து குருவருளை அவர்தம் ருத்ராட்சங்கள் மூலம் பெற முடியாதவர்கள் என்ன செய்வது ? காலம் கடந்து நிற்பதே ருத்ராட்ச சக்திகள் என்பதால் இன்றும் நம் சற்குரு அளித்த ஏதாவது ஒரு வழிபாட்டு முறையை, தான தர்ம கைங்கர்யங்களை நிறைவேற்றி வருபவர்கள் நிச்சயமாக இந்த ருத்ராட்ச சக்திகளைப் பெறுவார்கள் என்பது உறுதி. இத்தகைய ருத்ராட்ச சக்திகள் அளிக்கும் பாதுகாப்பு சக்திகளோ அபரிமிதமானது. ஒரு முறை நம் அடியார் திருமணத்திற்கு வருகைபுரிந்து அங்கு சுதர்சன யாகம் ஒன்றை நிறைவேற்றினார் நம் சற்குரு. ஹோமத்தை விட சக்தி வாய்ந்தது யாகம். அந்த யாகத்தில் 1500 செங்கற்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட சுதர்சன சக்கரத்தில் ஆஹூதிகள் அடியார்களால் அளிக்கப்பட்டது. அப்போது நம் சற்குரு, “திவ்ய நேத்ரங்கள் வாய்க்கப்பட்டவர்கள் பகவானின் இந்த சுதர்சனச் சக்கரத்தைப் பார்த்தால் பயந்து ஓடி விடுவார்கள். காரணம் அதிவேகத்தில் சுழலும் இந்த சுதர்சன சக்கரம் வெளிவிடும் ஒளிக் கற்றைகளும் அதிஉஷ்ண ஜ்வாலைகளுமாகும்,“ என்றார். ஆனால் அந்த சுதர்சன சக்கரத்தின் அருகில் அமர்ந்து கொண்டுதானே அடியார்கள் ஆஹூதிகள் அளித்துக் கொண்டிருந்தனர் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். இவ்வாறு தாங்க முடியாத உஷ்ண சக்தியை கிரகிப்பதே நம் சற்குரு தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று ருத்ராட்சங்களுக்குக் கவசமாக அமைந்த ஆறு செப்பு வளையங்கள். இவை வெறும் கவச வளையங்கள் மட்டுமல்ல, குசா பரல்களே இவை அனைத்தும்.

சங்கு தீர்த்தத்தில்
சக்கரவர்த்தி திருமகன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுத்தாலும் அதைக் கீழே போட்டு, விசிறி எறிந்து உடைத்துக் கொண்டிருந்ததாம். பெற்றோர்கள் பல நாட்கள் யோசித்து இதற்கு ஒரு முடிவாக உடையாத ஒரு பொம்மையை அந்தக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்தார்களாம். அந்த குழந்தையோ உடையாத அந்த பொம்மையை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ள கண்ணாடி சாமான்கள், டீவி என எல்லாப் பொருட்களையும் உடைக்க ஆரம்பித்து விட்டதாம். அது போல் எந்தக் குழப்பத்திற்கும் விடை காண நாம் குருவின் அனுகிரகமாகத் திகழும் மூன்றாம் பிறை தரிசனத்தையே வலியுறுத்துகிறோம். அந்த மூன்றாம் பிறை தரிசனத்திலேயே குழப்பங்கள் என்றால் ... ? இருந்தாலும் ஆரியங்காவு, கபிஸ்தலம் போன்ற மூன்றாம் பிறைக்கு குசாவாகத் திகழும் தலங்களும் திருக்கழுக்குன்ற சங்கு தீர்த்த நீராடலும் மூன்றாம் பிறை தரிசனத்தைப் பற்றிய தெளிவைத் தரும். இங்கு அளிக்கப்பட்ட சங்கு தீர்த்தமும் சற்குருவின் ஆசியாக மலரும் அவர்தம் பிறந்த தேதியைக் குறிக்கும் பணமும் மூன்றாம் பிறைச் சக்திகளைப் பெற்றவையே. அடியார்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நன்முறையில் மூன்றாம் பிறை சக்திகளை விருத்தி செய்து கொள்ளுமாறும் சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். ஒருமுறை இறைவன் எதையும் செய்வான் என்று சற்குரு கூறிக் கொண்டிருந்தபோது விதண்டாவாதத்திற்காக ஒருவர் சற்குருவிடம், “அப்படியானால் நீ சும்மா இருந்தால் உனக்கு இறைவன் சோறுபோடுவானா ?” என்று கேட்க அதை உறுதி செய்வதாக சற்குருவும் திருக்கழுக்குன்ற சுவாமி சன்னதியிலேயே அமைதியாக இருந்து விட்டார். “அடியேன் யாரிடமும் எதுவும் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால் இறைவன் இந்த நாய்க்கும் (சற்குருவிற்கு) உணவளிப்பதை உன் கண்ணால் கண்டு உறுதி செய்து கொள்,” என்பதை தன் செய்கையால் உணர்த்தி அங்கேயே அமர்ந்து விட்டார். நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்த மனிதனோ வேண்டுமென்றே சற்குரு பார்க்குமாறு விதவிதமான தின்பண்டங்களை எல்லாம் வைத்துக் கொண்டு சற்குருவிடம் காண்பித்து காண்பித்து தின்று கொண்டேயிருந்தான். தன் சற்குருவான இடியாப்ப சித்தர், மலப்புழு சித்தர் போன்ற அற்புத சித்த முனிவர்களை எல்லாம் தரிசனம் செய்த திருத்தலமாக இருந்தாலும் சற்குருவோ யாருடைய உதவியையும் மனதால் கூட வேண்டவில்லை. மாலை மறைந்து இருள் சூழும் சமயம். அப்போதும் வயிற்றுப் பசியுடன் ஆனால் திடமான இறை நம்பிக்கையுடன் காத்திருந்தார் சற்குரு. எதிரே அமர்ந்திருந்த மனிதனின் உதட்டில் ஏளனப் புன்னகை தோன்றி அவன் உடல் முழுவதும் வியாபித்தது. ஆயிற்று, சுவாமிக்கு நைவேத்தியம் ஆன பின்னர் எங்கிருந்தோ வந்த ஒரு அடியார் சுடச்சுட நாம் கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு சுவையுடன் ஒரு வாழை இலையில் பிரிஞ்சி சாதத்தை வைத்து நம் சற்குரு முன் வைத்து, “சாப்பிடுப்பா,” என்று அன்புடன் கூறினார். நம் சற்குருவோ இறைவனுக்கு நன்றி கூறி இறை நம்பிக்கைக்கு சவால் விட்ட அந்த நபரை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அந்த பிரிஞ்சி பிரசாதத்தை இரசித்து உண்ணத் தொடங்கினாராம்.

ஸ்ரீசூரியபகவான் கோயம்பேடு

சற்குரு இவ்வாறு முக்குண முப்பரிமாண வழிபாடு முறையில் மந்திரம் ஜபிக்கும்போது அந்த மந்திரம் 300 மடங்கு பலனை வர்ஷிப்பதாக தெரிவித்தபோது ஒரு அடியார், “வாத்யாரே, நீங்கள் கூறும் வழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. இதே போல் ஒரு மந்திரத்தின் பலனை ஆயிரம் மடங்காகப் பெருக்க முடியுமா ?” என்று கேட்கவே சற்குரு சிரித்துக் கொண்டே, “அதைத்தான் சார் அடியேன் எப்போதும் கடவுள் அருளால் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்,” என்று அடக்கமாகக் கூறினார். ஆதித்ய வந்தனம் என்ற இந்த சிறப்பு மந்திரம் கூறும் முறையை அறிந்து கொள்வோமா ? ஆதித்ய வந்தனம் முறையில் மந்திரம் ஜபிக்கும்போது ஆயிரம் ஆயிரம் மடங்காக ஒரு மந்திரத்தின் பலனை பெருக்க முடியும். இம்முறையில் நாக்கை 360 டிகிரி கோணத்தில் கடிகார திசைக்கு எதிராக (anti-clockwise direction) திருப்பிக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருப்பிய நாக்கை மடித்து அப்படியே தொண்டைக் குழியில் வைத்து மந்திரத்தை மனதிற்குள் ஜபிக்க வேண்டும்.

சிறப்பாக முக்குண முப்பரிமாண வழிபாடு இந்த மந்திர ஜபத்திற்கு ஏற்றது. இவ்வாறு ஜபிக்கும்போது சூரிய கவசம் பெற்ற மந்திரமானது உடலை அடையும். இம்முறையில் சூரிய பகவானை காலை சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை கண்களால் தரிசித்து ஆதித்ய வழிபாட்டை நிறைவேற்றியவனே கர்ணன் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். சற்குரு கூறும் முறையில் ஆதித்ய வழிபாட்டை எத்தனை பக்தர்கள் நிறைவேற்ற முடியும் என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் சற்குரு மேற்கூறிய முறையில் நாக்கைத் திருப்பிய அழகை இரசித்த அடியார்கள் பலர் இன்றும் நம்மிடையே உண்டு. இத்தகைய ஆதித்ய வழிபாட்டைத்தான் ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தை ஆயிரம் முறை வலம் வரும்போது நிறைவேற்றினார் நம் சற்குரு என்றால் அது எத்தனை ஆயிரம் பேரை எத்தனை யுகங்களுக்குக் காக்கும் ஆதித்ய காப்பு சக்திகளைப் பெற்றிருக்கும் ?! அடியார்களிடமோ மற்றவர்களிடமோ பேசும் நேரம், உணவருந்தும் நேரம் போன்ற நேரங்களைத் தவிர, அதாவது நாக்கு பயன்படாத எல்லா நேரங்களிலுமே இத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களே நம் சற்குரு மட்டுமல்லாமல் அனைத்து குருமார்களும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியம் ஆகும். நம் சற்குரு கூறிய முறையில் நாக்கைச் சுழற்றி மடிக்க முடியாவிட்டாலும் வெறுமனே நாக்கை மடித்து தொண்டைக் குழிவரை வைத்து அமைதியாக மந்திரத்தை ஓதுவதாலும் மந்திர ஜப பலன்களை அதிகரிக்கலாம். ஆதித்ய ஹ்ருதயம் என்பது சூரியனை இதயத்தில் வைத்து வணங்கும் விஜய வழிபாடு, சூரிய சக்திகளை மையமாகக் கொண்ட வழிபாடு என்றெல்லாம் பொருள் உண்டு. மொத்தத்தில் மன தைரியத்தையும், வெற்றியையும் ஒருங்கே அளிக்கக் கூடிய சக்தி ஆதித்ய ஹிருதய மந்திரங்களுக்கு உண்டென்பதால் இந்த ஆதித்ய ஹிருதய வழிபாட்டை சதா சர்வ காலமும் இயற்றும் நம் சற்குருவின் தரிசன பலனே எத்தகைய சூரிய சக்திகளை, வெற்றி வாகைகளை பெற்றுத் தரும் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ?

கூடாநாளில் செய்யக் கூடிய
ஒரே காரியம்

மூன்றாம் பிறையைப் போன்றே சற்குரு குறிப்பிட்ட கூடாநாள் பற்றிய விளக்கங்களை மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள் என்பதால் கூடாநாள் பற்றி திரும்பவும் விளக்குகிறோம். சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் போன்று கூடாநாள் என்பதும் ஒரு வகை யோகமே. இது ஏதோ புதிதாக சித்தர்களால் அளிக்கப்பட்ட யோக முறை என்பது கிடையாது. முற்காலத்தில் பிரபலாரிஷ்ட யோகம் என்பதே தற்போது சித்தர்களால் கூடா நாள் என்று அழைக்கப்படுகிறது. யோகம் என்றாலே அது அதிர்ஷ்டத்தைத் தருவதாக, நல்லது செய்வதாக நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது. அவன் நல்ல யோகக்காரன் என்று மக்களால் பாராட்டப்படுவதிலிருந்து இதை நாம் அறியலாம். உண்மையில் யோகம் என்பது இரண்டு அல்லது மேற்பட்ட நேரங்களின் அல்லது பொருட்களின் இணைப்பே. நாம் குறிப்பிடும் கூடா நாள் என்ற பிரபலாரிஷ்ட யோக நேரத்தில் நாளும் கிழமையும் இணைகின்றன. எனவே இந்த இரண்டும் அதாவது ஞாயிற்றுக் கிழமை போன்ற கிழமைகளும் பரணி போன்ற நட்சத்திரங்களும் சேரும்போதுதான், இணையும்போதுதான் கூடா நாள் என்ற பிரபலாரிஷ்ட யோகமே பிறக்கிறது, உருவாகிறது. இந்த இணைப்பிற்கு முன்போ பின்போ கூடா நாள் கிடையவே கிடையாது. பிரபலாரிஷ்ட யோகம் என்றால் அதி பயங்கர விளைவுகளைத் தரும் யோக நேரம் என்று பொருள். ஆனால் யோகம் என்ற ஒரே ஒரு வார்த்தையைக் கொண்டு தீர்மானிக்கும் மக்கள் இது மிகுந்த நன்மை உடையது போல் இருக்கிறது என்று நினைத்து விட்டால் என் செய்வது என்று தாயினும் சாலப் பரிந்து கூடா நாள் அதாவது எந்த நற்காரியமும் செய்யக் கூடாத நாள் என்று கூடா நாள் என்று குழப்பமில்லாத ஒரு பெயரைச் சூடினார்கள் சித்தர்கள். உதாரணமாக, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 2.30 மணிக்கு பரணி நட்சத்திரம் தொடங்குவதாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமை சூரிய உதயத்திலிருந்து அஸ்வினி நட்சத்திரம் அமைவதால் ஞாயிற்றுக் கிழமை உதயம் முதல் அஸ்வினியும் ஞாயிற்றுக் கிழமையும் கூடும் சித்த யோக நேரமே நிலவும். அன்று மதியம் 2.30 மணிக்கே கூடா நாள் ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் திங்கட்கிழமை சூரிய உதயம் வரை இந்தக் கூடா நாள் விளைவுகள் வியாபிக்கின்றன. திங்கட் கிழமை பரணி நட்சத்திரம் வியாபித்தாலும் அப்போது திங்களும் பரணியும் இணையும் சித்த யோக நேரமே நிலவுகிறது. ஒரு கிழமை என்பது அன்றைய சூரிய உதயம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை அமைவது, நட்சத்திரம் என்பது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அமைவது, இந்த இரண்டும் கூடும் நேரமே கூடா நாள். எனவே கூடாநாள் நேரத்தில் மிக மிக அத்தியாவசியமான தினசரி காரியங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அதாவது கடவுள் பூஜை, நாம சங்கீர்த்தனம், மந்திர ஜபம், உண்ணுதல், உறங்குதல் போன்றவை. ஆனால் இதற்கான ஆயத்தங்களை அதாவது பிரயாணம், தலங்களை தூய்மை செய்தல், பொருட்களை வாங்குதல் போன்றவற்றை அதற்குரித்தான நல்ல நேரங்களிலேயே நிறைவேற்ற வேண்டும். இந்த அத்தியாவசியமான காரியங்களான உண்ணுதல், உறங்குதல், மல ஜலம் கழித்தல் போன்ற காரியங்களைக் கூட மரண யோகம், கூடாநாட்களில் தவிர்த்து அதனால் விளையும் விபரீத விளைவுகள் சமுதாயத்தைச் சேரா வண்ணம் தடுத்த பெருமை காஞ்சி கனிந்த கனி சங்கராச்சாரியார் பெருமானையே சாரும். எனவே கனிந்த கனியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டும் பாடம் கூடா நாட்களில் செய்யக் கூடிய ஒரே காரியம் கடவுள் பூஜை, இறை பிரார்த்தனை, பரம்பொருள் வழிபாடு மட்டுமே.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam