நல்லதே நடக்கட்டும் ! மங்களம் பொங்கட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆத்ம விசாரம்

மனம் உடையவன் மனிதன். மனிதனுடைய மனமானது சதா சர்வ காலமும் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கேள்விகளுக்குரிய விடைகள் மனிதனுக்குத் தெரிந்தால் மனித மனம் சமாதானம் அடைகிறது, அமைதி ஏற்படுகின்றது. விடை தெரியாதபோது குழப்பம் உருவாகிறது.

கேள்வியும் பதிலும் மனிதனின் அறிவு வளர்ச்சி அடையும்போது, கல்வி கற்க ஆரம்பிக்கும்போது அவனைத் தொடர்வதாக நினைக்கிறோம். உண்மையில்  தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே மனிதன் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறான். கர்ப்ப வாசம் ஆரம்பித்த ஒன்பதாவது மாதம் குழந்தைக்கு மனம் தோன்றி விடுகிறது.

உண்மையில் மனிதன் பிறப்பதற்கு முன்பே அவனிடம் சூட்சும வடிவில் மனம் இருக்கும். சூட்சும வடிவில் அமைந்த அந்த மனத்தின் செயல்பாட்டை தன்னுடைய ஒன்பதாவது மாத கர்ப்ப வாசத்தில் மனிதன் உணர ஆரம்பிக்கிறான். அப்போதே கேள்வியும் கேட்க ஆரம்பித்து விடுகிறான்.

ஆனால், குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதன் தேவ நிலையில் பரிசுத்தமாக இருப்பதால் அவனுடைய கேள்விகளுக்கான பதில்கள் அவனுக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை எந்த வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

தாயின் கர்ப்பத்தை விட்டு வெளியே வந்து இந்த உலகத்தைப் பார்த்தவுடன் குழந்தைக்கு தன்னுடைய ஆயுள் காலம் எவ்வளவு என்பது தெரிந்து விடுகிறது. தன் கடமை என்னவென்பதும் அக்குழந்தைக்குப் புரிந்து விடுகிறது. இறைவனை அடைவதே மனிதனின் குறிக்கோள் என்பதைத் தெளிவாக அச்சமயத்தில் குழந்தை உணர்ந்திருக்கும்.

ஆனால், இறைவனை உணரும் மகத்தான பணிக்கு அதற்கு விதிக்கப்பட்ட 50, 60 ஆண்டு கால ஆயுள் நிச்சயமாக போதாது என்பதும் அதற்குத் தெரிய வரும். அதை நினைத்துதான் குழந்தை அழுகிறது. பிறந்தவுடன் குழந்தை அழும் காரணம் இதுவே.

பிறந்த குழந்தை வளர வளர யுக நியதியால் அதன் தெய்வீகத் தன்மை குறைந்து போவதால் மனிதனுக்குத் தோன்றும் கேள்விகளுக்கு அவனால் பதில் ஏதும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

குழந்தை வளர்ந்து பள்ளிக்குச் சென்றவுடன் அங்கு வைக்கப்படும் தேர்வுகளுக்கு உரிய விடையைக் கூட, ஏற்கனவே படித்த பதில்களைக் கூட நினைவு கூர முடியாத நிலையை குழந்தைகள் அடையும்போது அவர்களுக்கு வேதனை ஏற்படுகிறது. எனவே கேள்வியும் பதிலுமே மனித வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் எந்த அளவிற்கு மனிதன் தான் சந்திக்கும் கேள்விகளுக்கு உரிய விடைகளைப் பெற முடிகிறதோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையை சந்தோஷமாக, நிம்மதியாகக் கழிக்க முடியும். அது முடியாதபோது அவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்.

கடன் தொல்லைகள் பெருகுதல், திருமணத்திற்கு முன் கர்ப்பம் தாங்குதல், வேதனை மிகுந்த நோய்கள் போன்றவற்றால் மனிதன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை அடைகின்றான். உண்மையில் இவை எல்லாம் விடை பெற முடியாத கேள்விகள் ஏற்படுத்தும் விளைவே.

எப்போது ஒரு மனிதன் தனக்குத் தோன்றும் அல்லது தான் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கு உரிய விடையை உடனே பெற முடிகிறதோ அப்போது அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் ஆகின்றான்.

எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடையை ஒரு மனிதன் பெற முடியுமா? நிச்சயமாக முடியும். அது இறை மார்கத்தில் மட்டுமே சாத்தியமாகும். அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே. மனிதன் என்பவன் இறைவனின் ஒரு துளியாக, ஒரு அம்சமாக படைக்கப்பட்டிருப்பதால் மனிதனும் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடையை தன்னிடமிருந்தே பெற முடியும். அதற்கு வழி வகுப்பதே ஆத்ம விசாரம் ஆகும்.

இந்த வினா விடை புதிரை மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால் அது இன்னும் சுவையாக இருக்கும். ஒரு மனிதனுக்கு இரண்டு சக்கர வாகனம் கிடைத்தால் ஆனந்தமாக இருக்கிறது. அதே மனிதனுக்கே ஒரு கார் கிடைத்தால் அவன் இன்னும் சந்தோஷம் அடைவான். அவனுக்கு காரும் வண்டியும் இருந்தாலும் அவன் வசிப்பதற்கு ஒரு வீடு இல்லையென்றால் நிச்சயம் அவன் அமைதியாக உறங்க முடியாது.

எனவே ஒரு மனிதன் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு சந்தோஷம் அடைவது என்பது இந்த உலகில் சாத்தியமில்லை. ஏனென்றால் எத்தனை கோடி பணம் சம்பாதித்தாலும் தனக்கு சுகமளிக்கும் எல்லாப் பொருட்களையும் எவராலும் வாங்க முடியாது.

இதை உணர்ந்த நமது முன்னோர்கள் போதும் என்ற மன நிறைவையே சந்தோஷமாக வைத்தார்கள். அதாவது வசதிகளைப் பெருக்கிக் கொள்வதால் கிடைக்கும் ஆனந்தத்தை விட வசதிகளைப் பற்றிக் கவலைப்படாத நிலையே ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதே உண்மையான நிம்மதி. மேலும் அதுவே நடைமுறையில் சாத்தியமானதும் கூட. அல்லவா?

இதே முறையில் ஆராய்ந்தால் ஒரு மனிதன் தனக்குத் தோன்றும் எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடையைத் தேடுவதை விடை கேள்விகளே தோன்றாத நிலையை, எந்தக் கேள்விக்கும் விடை தேட வேண்டிய அவசியம் ஏற்படாத ஒரு நிலை ஏற்பட்டால் அதுவே உத்தமமான நிலை அல்லவா?

மனதில் எந்தக் கேள்விகளும் எழாத நிலையில் இருப்பவர்களையே நாம் மகான்கள், ஞானிகள் என்று அழைக்கிறோம். ஏன் ஞானிகளுக்கு கேள்விகள் எழுவதில்லை? மனிதர்கள் கேள்வியையும் பதிலையும் இரண்டு வெவ்வேறு அம்சங்களாகக் கருதுகிறார்கள். ஆனால், ஞானிகளோ கேள்வியையும் பதிலையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கேள்வியும் பதிலும் ஒன்றே.

உதாரணமாக தேர்வுக்காக வினாத்தாள் தயாரிக்கும் ஒரு ஆசிரியர் என்ன செய்கிறார்?  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது என்று ஒரு கேள்வியை தேர்விற்காகத் தயாரிக்கிறார். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்ற விடை அந்த ஆசிரியரின் மனதில் தோன்றிய பின்தான் அதற்குரிய கேள்வியைக் குறிக்கிறார். எனவே இங்கு கேள்விக்கு முன் வருவது விடை. ஆனால், மாணவனுக்கு இதுவே விடை தெரியாத கேள்வியாக மாறி விடுகிறது.

இவ்வாறு கேள்வி பதில் என்ற இரண்டை ஒன்றாகப் பார்ப்பவர்கள் ஞானிகள். கேள்வியை மட்டும் சந்திப்பவன் மனிதன்.

எனவே மனிதனுடைய கேள்விகளுக்கு உரிய விடையைத் தன்னுள் எப்படித் தேடுவது என்பதை உணர்த்துவதே ஆத்ம விசாரம் என்னும் தெய்வீக கோட்பாடாகும். உண்மையில் இறைவனை உணர்வதும் ஆத்மாவை உணர்வதும் ஒன்றே.

இறைவனை இந்த பொருளைக் கொண்டு அறியலாம் இந்த வழியாகச் சென்று இறைவனை தரிசனம் செய்யலாம் என்று எந்த பொருளையும் வழி முறையையும் சுட்டிக் காட்ட முடியாது.
இந்த உண்மையை சற்றே ஆராய்ந்து பாருங்கள். உலகில் உள்ள எந்த பொருளைக் கொண்டு சூரியனை நீங்கள் பார்க்க முடியும்? இவ்வுலகில் ஒரு பொருள் இருக்கிறது என்று நாம் பார்ப்பதற்குத் தேவையான வெளிச்சமே சூரியனிடமிருந்துதான் வருகிறது எனும்போது சூரியனை எந்த ஒரு இரண்டாவது ஒரு பொருளைக் கொண்டு பார்க்க முடியும்?

நாம் ஒரு அறைக்குள் தாளிட்டுக் கொண்டு சூரியனைக் காணவில்லை என்று நினைக்கிறோம். அப்போது சூரியனைப் பார்ப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சி அறையை விட்டு வெளி வருவது ஒன்றுதான். வேறு எந்தப் பொருளும் சூரியனைக் காட்டாது.

அது போல இந்த உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே இறைவனின் பெருங் கருணையால் தோன்றியதே. எனவே இறைவனைக் காண நாம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இறைவனை மறைக்கும் பொருட்களைக் களைந்தால் போதும் மனிதனையும் இறைவனையும் மறைக்கும் மாயை என்னும் திரையை விலக்கினால் போதும். இறைவன் தன்னைத் தானே நமக்கு உணர்த்துவார்.  இறைவனைத் தவிர இரண்டாவது ஒரு பொருள் உலகில் இல்லாததால் இறைவன் அல்லாத இரண்டாவது ஒரு பொருளைக் கண்டு நாம் இறைவனை உணரவே முடியாது.

அப்படியானால் மாயை என்ற இரண்டாவது ஒரு பொருள் உண்டா என்ற சந்தேகம் ஏற்படலாம். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்ட மனிதன் இறைவன் மட்டுமே இருக்கிறான் என்று உணரும் போது இல்லாத ஒன்று எப்போதுமே இல்லாததாக போய் விடுகிறது. நீங்கள் இறை தரிசனம் பெறுகிறீர்கள்.    

இவ்வாறு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மாயை என்ற திரையைத் தோற்றுவிப்பது மனித மனமே. மனிதன் தான் இந்த உடல் என்ற எண்ணம் கொண்டு இயங்கும் வரை இறைவனை உணர முடியாது. உடம்பு என்ற கற்பனையைக் கடந்தால்தான் உண்மை விளங்கும்.

இறைவனை உணர்வதாக பெரியோர்கள் ஏற்படுத்தித் தந்த எல்லா வழிமுறைகளும் ஒரு விதத்தில் மனிதன் தன்னுடைய உடல் பற்றைத் தாண்டி செல்ல உதவும் வழி முறைகளே. இதற்கு எளிமையான உபாயமே ஆத்ம விசாரம் ஆகும்.

ஆத்ம விசாரம் மிக மிக எளிமையானது. மனிதனுடைய ஆத்மா என்பது இறை அம்சம் பொருந்தியது. இறைவனின் ஒரு பகுதி என்றும் ஆத்மாவைக் கூறலாம். அது அழிவில்லாதது. என்றும் எல்லையற்ற ஆனந்தத்துடன் இருப்பது. இதற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது. ஆனால், மனித உடலுக்கு பிறப்பு என்ற ஆரம்பமும் இறப்பு என்ற முடிவும் உண்டு.

அழிவில்லாத ஆத்மாவைப் பெற்ற மனிதன் தன்னை அழியக் கூடிய உடலுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு உணவு, காசு, பணம், பெண் என்று உடல் சுகத்தைப் பெருக்கிக் கொள்ளும்போது எல்லையில்லா ஆனந்தத்தில் நிலைக்க வேண்டிய மனிதன் வேதனையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இவ்வாறு மனிதனை நெறிப்படுத்தி என்றும் ஆனந்தமாய் வாழ பல வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர் சித்தர் பிரான்கள். சித்தர்களின் வழிமுறை நடைமுறைக்கு எளிதாக ஒத்து வரக் கூடியது. உடலைப் பெற்ற மனிதன் அதை முற்றிலும் மறந்து இறை மார்கத்தில் ஈடுபடுவது என்பது கலியுக நியதிக்கு ஏற்புடையது அல்ல.

கலியுகத்தில் எந்த சுகத்தையும் அனுபவித்து திருப்தி அடைந்தால்தான் மீண்டும் அந்த சுகத்தை மனித மனம் நாடாது என்பதே சித்தர்கள் தரும் நல்லுரை. எந்த விஷயத்தையும் அது எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக ஒருவர் மேல் திணித்தால் அதற்கு மதிப்பு இருக்காது. ஒருவருடைய மனப் பக்குவத்தைப் பொறுத்தே அவருக்கு இறை மார்கத்தில் நாட்டம் ஏற்படும்.

ஒரு மனிதனுக்குத் தேவையான எல்லா சுகங்களையும் முதலில் பெற வழி வகுப்பதே 32 அறங்களாகும். நமது முன்னோர்கள் வகுத்த 32 அறங்களையும் எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறோமோ அந்த அளவுக்கு மனித வாழ்க்கையில் அடையக் கூடிய எல்லா சுகங்களையும் பெற்று வாழ முடியும். இவ்வாறு எல்லா சுகங்களையும் அனுபவித்த மனம்தான் உடல் சுகங்களை நாடாது.

32 அறங்களையும் இயற்றும் வழிமுறைகளை அறியாதவர்கள் ஸ்ரீஅகத்தியர் அருளிய பன்னிரு திருமுறைகளை ஓதி பாடல் பெற்ற தலங்களில் அன்னதானம் அளித்து வந்தால் அவர்கள் ஒரு மனிதன் பெறக் கூடிய எல்லா சுகங்களையும் பெற்று வாழ்வார்கள்.

இவ்வாறு உடல் சுகங்களிலிருந்து விடுதலை பெற்ற பின் ஐம்புலன்களால் வரும் சுகங்களை தத்தம் பொறிகளில் நிலைநிறுத்தும் ஆற்றலைப் பெற முயற்சி செய்ய வேண்டும். புலன்களும் பொறிகளும் அமைதி பெற்றால் மனம் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வளவு காலம் உடல் சுகத்திற்காக வெளியே சென்று அலைந்த மனம் உள்நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.

இவ்வாறு உடலை விட்டு நீங்கிய மனம் மெல்ல மெல்ல ஆத்மாவில் ஒன்றும்போது தான் யார் என்ற உண்மை விளங்கும். தான் யார் என்ற நிலை தெரிய வரும்போது தான் எங்கிருந்து வந்தோம் என்ற சூட்சுமம் புரிய வரும். இதுவே ஆத்ம விசாரம் எனப்படும்.

அதை அடுத்த நிலைகள் குரு மூலமாக உணர வேண்டியவை ஆகும். இவ்வாறு ஆத்ம விசார நிலைக்குத் தயாரானவர்களை குருவே உடனிருந்து அடுத்து வரும் நிலைகளை உணர்த்துவார்.

இவ்வாறு 32 அறங்களை முறையாக இயற்றி சுகபோகங்களுடன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய ஐம்புலன்களையும் அடக்கி உள்ளத்தை நோக்கி முன்னேற உதவும் இறைத் தலங்கள் பல உண்டு. அவற்றுள் முதன்மையாகத் திகழ்வதே திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே கருப்பத்தூரில் திகழும் சிவாலயம் ஆகும்.

கருப்பத்தூர் திருத்தலம்

திருச்சி குளித்தலை அருகே கருப்பத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலம் ஆத்ம விசாரத்திற்கு வித்திடும் அற்புத சிவத்தலமாகும்.

அகண்ட காவேரியாக பொங்கிப் பாயும் புண்ணிய நதிக் கரையில் எழில்மிகு சூழ்நிலையில் அமைந்துள்ளதே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் ஆலயமாகும்.

தும்பிக்கையை வலம் சுழித்து அருள்பாலிக்கும் வலஞ் சுழி கணபதியைப் போல வலம்புரி சக்தித் தலங்களும் உண்டு. பொதுவாக, சுவாமிக்கு இடப் புறத்தில்தான் அம்பிகை எழுந்தருளியிருப்பாள். சிறப்பாக சில திருத்தலங்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்பிகை எழுந்தருளி இருப்பது உண்டு. அத்தகைய திருத்தலங்கள் வலம்புரி சக்தித் தலங்கள் எனப்படும்.
இத்தலத்தில் அம்பிகை ஸ்ரீசுகந்த குந்தளாம்பாள் சுவாமிக்கு வலப்புறம் எழுந்தருளி இருப்பதால் இது வலம்புரி சக்தித் தலமாகப் பொலிகிறது. வலம்புரி சக்தித் தலங்களுக்கு சில விசேஷ அனுகிரக சக்திகள் உண்டு. தங்கள் மனைவி பெயரில் வீடு, நிலங்கள் வாங்குவோர் இத்தகைய வலம்புரி சக்தித் தலங்களில் வாங்கினால் அத்தகைய நிலையான சொத்துகள் அக்குடும்பத்திற்கு பலவித நன்மைகளை ஏற்படுத்தும்.

மேலும், தங்கள் மனைவிக்கு தானமாக நிரந்தர சொத்துக்களை அளிப்போரும் இத்தகைய தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலம். மற்ற இடங்களில் வாழ்வோர் தங்கள் மனைவியின் பெயரில் நிலம், வீடு, தோட்டம் போன்ற நிரந்தர சொத்துக்களை வாங்க நினைத்தால் அவர்கள் இத்தல இறைவனிடம் அனுமதி வேண்டி அக்காரியங்களை நிறைவேற்றினால் அவை நலமாய் நிறைவேறும்.

தர்ம சக்கரம் பூண்ட தர்மசம்வர்த்தினி

ஸ்ரீசுகந்தகுந்தளாம்மனின் மற்றொரு திருநாமம் ஸ்ரீதர்மசம்வர்த்தினி என்பதாகும். மனிதர்களின் உடலைச் சுற்றி திருவாசி என்ற ஒளிவட்டம் இருப்பதைப் போல தெய்வங்களுக்கும் மகான்களுக்கும் திருவாசிகள் உண்டு. மேலும் இறை மூர்த்திகளுக்கும் மகான்களுக்கும் சக்கரங்கள் உண்டு. இச்சக்கரங்கள் அவர்களின் தலைக்குப் பின்னால் சுழலும். மனிதர்களுக்குச் சக்கரங்கள் கிடையாது.

பொதுவாக இத்தகைய சக்கரங்களை தர்ம சக்கரங்கள் என்று அழைத்தாலும் ஒவ்வொரு சக்கரத்திற்கும் சிறப்பான பெயர்கள் உண்டு. இம்முறையில் ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை தேவியின் தலைக்குப் பின் சுழலும் சக்கரத்திற்கு நவகோல தர்ம சக்கரம் என்று பெயர். இது வெண்ணிற வடிவில் இருக்கும்.

வெண்மை என்று இங்கே குறிப்பிடும் வண்ணத்தை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது.

பூமியைப் பொறுத்தவரை தூய வெண்ணிறம் கொண்ட பொருள்கள் கிடையாது. நாம் காணும் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்கள் அனைத்துமே ஏழு அடிப்படை வண்ணங்களால் உருவாக்கப்பட்டவையே. இந்த வண்ண இரகசியத்தை எந்த விஞ்ஞானத்தாலும் புரிந்து கொள்ள முடியாது. நமக்குத் தெரிந்த வெண்மை நிறம் கொண்ட பசும் பாலில் சிறிது மஞ்சள் நிறத்தின் கலப்படம் உண்டு. வெண்ணிற பருத்தியிலும், கொக்கின் சிறகிலும் சிறிது நீல நிறத்தின் கலப்படம் உண்டு.

முழுக்க முழுக்க வெண்மை என்று சொல்லக் கூடிய சங்கும் சூரியனின் ஏழு வண்ணக் கலவையால் ஆனதே. எனவே ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை தேவியின் பின் சுழலும் வெண்ணிற தர்மச் சக்கரத்தைக் காண வேண்டும் என்றால் தன்னுடைய ஆத்மாவின் தரிசனம் பெற்றவர்களுக்கே சாத்தியமாகும் என்று சித்த கிரந்தங்கள் அறிவிக்கின்றன.

அம்பிகை இந்த தர்மச் சக்கரத்தை பெறுவதற்குக் காரணமான ஒரு புராண வைபவம் உண்டு. மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தேவி கடுமையான விரதங்களை எல்லாம் நிறைவேற்றினாள் அல்லவா? இன்று நவராத்திரி விரதங்களாக தேவி அனுஷ்டித்த தவங்களை நாம் நினைவு கூர்ந்து வழிபட்டாலும் உண்மையில் அம்பிகை மகிஷாசுரனை அழிப்பதற்கு எத்தனையோ யுகங்களை எடுத்துக் கொண்டாள் என்பதே உண்மை.

அந்த யுக நியதிகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் பெரியோர்கள் நவராத்திரி என்னும் ஒன்பது நாள் மட்டும் அனுஷ்டிக்கக் கூடிய விரத முறையை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

அம்பிகை ஏற்ற விரதத்தில் ஒன்றே ஊசி முனைத் தவமாகும். அம்பிகை ஊசி முனையில் தவம் இயற்றினாள் என்று எளிமையாகச் சொல்லி விடுகிறோமே தவிர இத்தகைய தவத்தின் மகத்துவத்தைப் பற்றி நாம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் தேவியின் கருணை ஓரளவு புரிய வரும்.

ஆறு அடி உயரமுள்ள ஒரு மனிதனை மூன்று அடி உயரமுள்ள ஒரு அறையில் இருக்கச் சொன்னால் அது அவனுக்கு எத்தகைய வேதனையைத் தரும். அதுவே அவனுக்கு எல்லையில்லாத துன்பத்தைத் தரும் என்றால் அதே மனிதனை மூன்று அங்குள உயரம் உள்ள ஒருஅறையில் இருக்கச் சொன்னால் அது முடியுமா? நிச்சயம் அது சாத்தியப்படாது. அவ்வாறிருக்க அகிலாண்ட நாயகியான அம்பிகை தன்னுடைய பிரபஞ்ச சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு ஊசி முனையில் நிலை நிறுத்துவதென்றால் அது எத்தகைய தெய்வீக சாதனை ?

பல யுகங்கள் முயற்சி செய்தும் எம்பெருமான் விரும்பிய ஊசி முனை தவத்தை அம்பிகையால் நிறைவேற்ற முடியவில்லை. இறுதியில் பரமேஸ்வரனைச் சரணடைந்த அன்னை, ”பெருமானே, எவ்வளவோ முயன்றும் என்னுடைய பிரபஞ்ச சரீரத்தை ஊசி முனை அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. தாங்கள்தான் இதற்கு உரிய தவ முறையை எடுத்துக் கூற வேண்டும்,” என்று பிரார்த்தித்தாள்.

அம்பிகையே தன்னுடைய இயலாமையைத் தெரிவிக்கும்போது கயிலை நாதன் அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். இறைவன் புன்னகையுடன், ”தேவி கவலை கொள்ளாதே. ஒரு விஷயத்தை நீ மறந்து விட்டாய். நீ எதிர்கொள்ளும் அசுரன் எருமை வடிவத்தைக் கொண்டவன். முள்ளை முள்ளால் எடுப்பது போல மிருக வடிவம் கொண்டவனை மிருக தவத்தால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். எனவே எருமையை அழிக்கும் வல்லமை கொண்ட சிம்ம வாகனத்தை உனக்கு அளிக்கிறேன். அதை வாகனமாகப் பெற்று அதன் மேல் பவனி வந்து மகிஷாசுரனை அழிக்கும் ஊசி முனைத் தவத்தைப் பற்றி அறிந்து கொள்வாயாக,” என்று அருளினார்.

அவ்வாறு அம்பிகைக்கு சிம்ம வாகனம் அளித்து இறைவன் அருள் புரிந்த தலமே கருப்பத்தூர் திருத்தலமாகும். சிம்ம வாகனம் அருளிய பெருமான் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் என்று புகழப்படுகிறார்.

தங்கள் மனைவிக்கு வாகனம் வாங்கித் தருவோர் இத்தலத்தில் வழிபட்டு வாகனங்களை அளித்தால் அதனால் அது பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும். தற்காலத்தில் பெண்களும் பெருமளவில் வாகனங்களை ஓட்டி வருவதால் அவர்களுடைய பாதுகாப்பான பயணத்திற்கு இத்தல வழிபாடு அவசியமாகும்.
காட்டிற்கு ராஜாவான சிங்கத்திற்கு பல அற்புத தெய்வீக குணங்கள் உண்டு. விலங்குகளுக்கு தலைவனாகும் தகுதி சிங்கத்திற்கு எப்படி வந்தது? சிங்கத்தின் விரத பலமே அதற்கு தலைமைப் பொறுப்பைப் பெற்றுத் தந்தது. அஷ்டமி, பௌர்ணமி, ஏகாதசி, அமாவாசை போன்ற தினங்களில் நீர் கூட அருந்தாது விரதத்தை அனுஷ்டிப்பதே சிங்கம். எனவே தலைமைப் பொறுப்பில் சிறப்பாக செயலாற்ற விரும்புவோர் இத்தகைய நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீசிம்மபுரீஸ்வரரை வழிபடுவதால் உயர்ந்த பதவிகளைப் பெற்று வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெறுவார்கள்.

புலனடக்கத்தில் சிங்கத்தை யாராலும் வெல்ல முடியாது. ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டுமே உடலுறவு கொள்ளும் தவத்தன்மை பெற்றது சிங்கம். சமீப காலத்தில் சிங்கத்தைப் போல் புலனடக்கம் பெற்ற ராஜாவே வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆவான். இருபது பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத வாளைத் தன்னுடைய ஒரே கையால் ஏந்தி அதை மின்னல் வேகத்தில் சுழற்றக் கூடிய ஆன்ம பலம், பராக்கிரமம் பெற்றவனே வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவான்.

கட்டபொம்மன் கத்தியை சுழற்றும்போது அதன் வேகத்தைத் தாண்டி துப்பாக்கிக் குண்டுகள் கூட செல்ல முடியாது என்றால் அவனுடைய பிரம்மச்சர்யம் எத்தகைய சக்தி உடையது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

வீரம், பிரம்மச்சர்யம், தவம் இவற்றுடன் தர்ம எண்ணம் பெருகி நிற்பதும் சிங்கத்திடம்தான். தன்னுடைய உணவிற்காக அல்லாது எந்த மிருகத்தையும் சிங்கம் துன்புறுத்துவது கிடையாது. இந்த தர்மத்திலிருந்து சற்றும் விலகாத காரணத்தால் அதன் சிறப்பை பாராட்டும் பொருட்டு தர்மத்தை நிலை நாட்டி பெருமை கொண்ட அசோக சக்கரவர்த்தி சிங்கத்தை தன்னுடைய அரசு முத்திரையாகக் கொண்டார்.

தர்மத்தின் பிறப்பிடமாக, இருப்பிடமாகக் கொண்டாடப்படும் நமது புண்ணிய பாரதமும் சிங்கத்தின் தவத்தை மெச்சி அதன் உருவத்தை ரூபாய் நோட்டுகளில் பொறித்து தர்மத்தின் சின்னமாகக் கௌரவித்து வருகிறது.  

ஸ்ரீசிம்மபுரீஸ்வர பெருமானிடமிருந்து சிம்ம வாகனத்தைப் பெற்ற அம்பிகை தேவி அதன் மேல் பாரதமெங்கும் பவனி வந்தாள். தினமும் ஆயிரம் சுயம்பு லிங்க மூர்த்திகளை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வந்தாள் தேவி. இவ்வாறு பன்னிரெண்டு சதுர்யுகங்கள் தொடர்ந்து சுயம்பு மூர்த்திகளை வழிபட்ட பின்னரே ஊசி முனைத் தவத்தை நிறைவேற்றும் தெய்வீக அனுகிரகத்தைப் பெற்றாள் தேவி.

இத்தகைய அற்புதமான தபோ பல சக்திகளைப் பெற்று மகிஷாசுரனை வதம் செய்த காரணத்தால் இறைவன் மகிழ்ந்து அம்பிகைக்கு பல வரங்களைப் பரிசாக அளித்தார். அவற்றுள் ஒன்றே அம்பிகையின் தலைக்குப் பின்னால் சுழலும் வெண்ணிற தர்மச் சக்கரமாகும்.

ஊசி முனைத் தவமியற்ற உதவிய சிம்ம வாகனம் பெற்ற அதே திருத்தலத்தில்தான் அம்பிகை தன்னுடைய ஒப்பற்ற தர்மச் சக்கரத்தையும் பெற்றாள். எனவே ஸ்ரீதர்ம சம்வர்த்தினி என்ற புனிதப் பெயரால் தேவி இத்தலத்தில் போற்றப்படுகிறாள். <

காதல் திருமணங்கள் கை கூட

காதல் திருமணங்கள் தற்காலத்தில் பெருகி வருவது அனைவரும் அறிந்ததே. அன்பினால் இணையும் இல்வாழ்க்கைதான் சிறப்படையும். அன்பு என்பதை அறியாமல் காதல் கொண்டவர்கள் காமம், பணம், பதவி போன்ற காரணங்களால் திருமணம் செய்து கொள்ளும்போது அத்தகைய திருமணங்களில் வேதனையே மிஞ்சுகின்றன.

இத்தலத்தில் உறையும் தேவி இறைவனின் காதலியாக எழுந்தருளி உள்ளாள். அதாவது திருமண வைபவங்களில் மாங்கல்ய தாரணத்திற்கு முன்னால் மணப் பெண்ணை மணமகனின் வலது புறத்தில் வைத்து திருமணச் சடங்குகளை நிகழ்த்துவார்கள். திருமணம் நிறைவேறிய பின்னர் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற தெய்வீக சடங்குகளுக்குப் பின்தான் மணப் பெண்ணை மனைவியாக அங்கீகரித்து அவளை மணமகனின் இடது புறத்தில் அமர்த்துகிறார்கள்.

எனவே காதல் திருமணம் செய்து கொள்ள விழைவோரும், காதல் திருமணம் புரிந்து கொண்டவர்களும் இத்தலத்தில் வழிபாடுகளை நிகழ்த்துவதால் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். இல்லறம் நல்லறமாகும்.

இரட்டை குசா சக்தி

வலம்புரி விநாயகர், வலஞ் சுழித்த நதிகள் குசா சக்திகளை அளிக்கும். அது போல இறைவனுக்கு வலப் புறம் அம்பிகை எழுந்தருளி இருப்பதால் அன்னை குசா என்னும் நற்சக்திகளை தன் பக்தர்களுக்கு அள்ளி வழங்குகிறாள்.

இத்தலத்திற்கு இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. அம்பிகை இறைவனுக்கு வலப் புறம் எழுந்தருளி இருப்பதோடு மட்டுமல்லாமல் காவிரித் தாய் பாயும் திசைக்கும் வலப்புறம் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் இரட்டை குசா சக்தித் தலமாக விளங்குகிறது. அகண்ட காவிரி அளிக்கும் சக்திகள் பன்மடங்காய்ப் பெருகும் அல்லவா? எனவே இத்தலம் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த குசா சக்தி சக்தித் தலமாகப் போற்றப்படுகின்றது.

இரட்டை குசா சக்திகள் பெருகும்
ஸ்ரீ சிம்மபுரீஸ்வரர் திருத்தலம்

எண்ண அலைகள் நீரின் மேலும், கோலத்தின் அடியிலும், சுவாமிக்குப் பின்புறத்திலும் படியும் என்பது பெரியோர்கள் திருவாய் மொழி. அதனால்தான் அக்காலத்தில் யாராவது குடிக்க தண்ணீர் கொடுத்தால் பெரியோர்கள் அந்த நீரில் சிறிது தரையில் ஊற்றி விட்டு அருந்துவார்கள். இதனால் குடிநீரைக் கொண்டு வந்தவர்களின் எண்ணம் அவர்களைத் தாக்காமல் காத்துக் கொள்வார்கள்.

கோலம் போட்டவுடன் கோலத்தின் சக்தி கோலத்திற்குக் கீழே தரையில் உடனே படிந்து விடும். சிலர் கோலம் இட்டவுடன் அதன் மேல் குழந்தைகள் விளையாடி, மனிதர்கள், விலங்குகள் நடந்து, தண்ணீர் பட்டு கோலம் அழிந்து விட்டால் அதைக் கண்டு வருந்துவார்கள். உண்மையில் கோலத்தின் அடியில் நற்சக்திகள் படிந்து விடுவதால் அந்தக் கோலம் ஏதாவது காரணத்தினால் அழிந்து விட்டால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அதுபோல மனிதர்களுடைய பிரார்த்தனைகள், வேத சக்திகள், மந்திர சக்திகள் இறை மூர்த்திகளின் பின்னால் படியும். அதனால்தான் திருக்கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் மூலவர் சன்னதியின் பின்புறத்தைத் தொட்டு தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டு இறை சக்தியை எளிதாகப் பெற்று விடுகிறார்கள்.

இறை மூர்த்திகளுக்கு பின்னழகு விசேஷம். பின்னழகு விசேஷமாகப் பரிணமிக்கும் மூர்த்தியே திருச்சி லால்குடி நடராஜப் பெருமான். இன்றும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் நடராஜப் பெருமானின் ஆருத்ரா திருவிழாவின்போது எம்பெருமானின் பின்னழகைக் கண்டு தரிசித்து பயன்பெறும் பக்தர்கள் ஆயிரம் ஆயிரம்.

பசுவின் உடலில் ஆயிரக் கணக்கான தேவதைகள் உறைந்தாலும் அதன் பின்புற பிருஷ்டத்தில் உறையும் ஐஸ்வர்ய தேவதைகளைத் தொட்டு வணங்கி எவ்வளவு பக்தர்கள் பயனடைகிறார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.

இவ்வாறு ஸ்ரீசுகந்த குந்தளா அம்பிகையின் பின்னழகை ஆராதிக்கும் பொன்னி நதி குசா சக்திகளை வாரி வழங்கும்போது அதன் பலன் எத்துணை சிறப்பானதாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இங்கு பொலியும் குசா சக்திகள் ஸ்ரீமகாலட்சுமிக்கும் ஆராதனை செய்வது மற்றொரு சிறப்பம்சமாகும்.

அசுர சக்திகள் களையும் அன்னை

ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்குப் பின் உலகம் முழுவதும் சீதா ராமர் பவனி வந்து மக்கள் நலமாய் வாழ தீர்த்த பூஜைகளை மேற்கொண்டார். அவ்வாறு எகிப்து நாட்டில் ராமர் விஜயம் செய்யும்போது அங்கு அற்புத வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சீப்பை வாங்கினார். அந்த சீப்பைக் கண்டு சக்கரவர்த்தி ஜனக மகாராஜாவின் செல்லப் புதல்வியான சீதா தேவியே ஒரு கணம் பிரமித்து விட்டாள் என்றால் அது எவ்வளவு அழகுடன் பொலிந்திருக்கும்.

”சுவாமி, இவ்வளவு அழகான ஒரு சீப்பை நான் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது. எனக்கு இப்படி ஒரு சிறந்த பரிசை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை,” என்று தன்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினாள் அன்னை. ராமர் சீதையை சற்று நேரம் உற்று நோக்கி, ”சீதா, சதா சர்வ காலமும் மக்களின் நலம் காக்கும் நீ ஏன் இன்னும் எனக்கு, எனக்கு என்று ஒரு பொருளை நினைக்கிறாய். இந்த சீப்பை உனக்காக நான் வாங்கவில்லையே. இதன் மூலம் ஒரு தெய்வீக காரியம் நிறைவேற வேண்டி உள்ளது. அதற்காகத்தானே இவ்வளவு தூரம் தேடி வந்து சிரமப்பட்டு இந்தச் சீப்பைத் தேடி வாங்கினேன்.” என்றார்.

சீதை வெட்கத்தால் தலை குனிந்தாள். தன்னுடைய சுய நலத்தை நினைத்து அவள்  கன்னங்கள் அந்தி வானமாய் மாறின. ராமர் சீதையைத் தேற்றும் வார்த்தைகளாக, ”தேவி, இதற்காக வருந்த வேண்டாம். எல்லா காரியத்திற்கும் காரணம் உண்டு. நீ என்னதான் தேவ நிலையில் இருந்தாலும் ஒரு அசுரனின் இருப்பிடத்தில் சில காலம் இருந்த காரணத்தால் தான் என்ற சுயநலம் உன்னை சற்றே மாசு படுத்தி விட்டது. இதுவும் இறை லீலையே. அந்த எண்ணத்தை நீக்குவதற்கான உபாயம் உண்டு. நீ கவலை கொள்ளாதே,” என்று கூறி நேரே அங்கிருந்து புஷ்பவிமானம் மூலம் குளித்தலை வந்தடைந்தார்.

அஷ்ட லட்சுமி தேவிகள் பொலியும்
ஸ்ரீமகாலட்சுமி சன்னதி, கருப்பத்தூர்

மறுநாள் காலை சீதையுடன் புனிதக் காவிரியில் நீராடி அங்கு குளித்தலை திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகடம்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டுப் பின்னர் கால் நடையாகவே ஐயர் மலை சென்று மலை உச்சியில் அருள்புரியும் ஸ்ரீரத்தினகிரி ஈசனை வணங்கி வழிபட்டு பின்னர் காவிரியைக் கடந்து நடந்தே திருஈங்கோய் மலை சென்று அங்கு அருள்புரியும் ஸ்ரீஈங்கோய்நாதரை தரிசனம் செய்து பின்னர் கருப்பத்தூர் வந்தடைந்தார்.

ராம பிரான் திருஈங்கோய் மலை சென்றபோது ஸ்ரீஅகத்திய முனிவர் தன்னுடைய சீடர்களான போகர், புலிப்பாணி முதலியவர்களுடன் சீதாபிராட்டி சமேத ராமச்சந்திர மூர்த்தியை பூஜித்து பேருவகை எய்தினார். ஸ்ரீஅகத்தியர் நித்திய வழிபாடு இயற்றும் தலங்களுள் திருஈங்கோய் மலையும் ஒன்றாகும்.

ராமரும் சீதையும் கருப்பத்தூரை அடைந்தபோது அங்கு அர்த்தசாம பூஜை இனிதே நடந்து கொண்டிருந்தது. அந்த பூஜையில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்து விட்டு அத்திருத்தலத்திலேயே இரவு தங்கி இளைப்பாறினர்.

மறுநாள் காலை ஸ்ரீசுகந்தகுந்தளா தேவி ஒரு ஒன்பது வயது சிறுமி வடிவில் எழுந்தருளி சீதா பிராட்டியிடம் தனக்கு ஒப்பனை செய்யுமாறு வேண்டிக் கொள்ளவே உண்மையை உணர்ந்த ராம பிரான் சீதா தேவியிடம் எகிப்து நாட்டில் வாங்கிய சந்தன சீப்பை அளித்து சிறுமி வடிவில் வந்த அன்னைக்கு தலை சீவி அன்னைக்கு அற்புதமான ஒப்பனைகளை நிறைவேற்றுமாறு கூறினார். மேலும் அன்னைக்கு மணமுள்ள மலர்களைச் சூடி, வாசனைத் திரவியங்களைப் பூசி, பொட்டிட்டு மனம் மகிழ்ந்தனர். தனக்கு தலை வாரி ஒப்பனை செய்த சீதா தேவிக்கு அந்த சீப்பையே அன்புப் பரிசாக, அம்பிகை பிரசாதமாக அளித்தாள் ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை.

அப்போதுதான் எதையுமே இறைப் பிரசாதமாகப் பெற்றால்தான் அந்தப் பொருளுக்கு மதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்திய தன்னுடைய வல்லப ராமனை நினைவு கூர்ந்தாள்.  

அம்பிகை பிரசாதமான அந்த சீப்பைக் கொண்டு தலை வாரியதால் இலங்கையில் சீதையைப் பீடித்திருந்த ஒரு துளி அசுர எண்ணமும் முற்றிலும் நீங்கி சீதை அவதாரம் பூரணம் பெற்றது.

பூரண ஆயுளை நல்கும்
ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலம்

இதன் பின்னரே சீதா தேவி கர்ப்பமுற்று லவனைப் பெற்றெடுத்தாள். மேலும் அம்பிகையின் பிரசாதமான சீப்பைக் கொண்டு தன்னுடைய குழந்தைகளுக்குத் தலை வாரி வந்ததால் அவர்கள் எதையும் எளிதில் கிரகிக்கும் மனோ திடத்தைப் பெற்று இறுதியில் ராமரையே எதிர்த்து அவரை போரில் வீழ்த்தும் வல்லமையையம் பெற்றனர்.

இத்தலத்தில் மர சீப்புகளை அம்பிகைப் பாதத்தில் வைத்து வணங்கி அதைப் பிரசாதமாகப் பெற்று பயன்படுத்தி வந்தால் குழந்தைகளின் கிரகிக்கும் ஆற்றல் பெருகும். தலைப் பொடுகு, பேன்கள் நீங்கும். மனோ திடம் வளரும்.

பெண்கள் ஒரு போதும் தலை முடியை விரித்து போட்டு வைக்கக் கூடாது. இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம். இதுவரை தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய தவறுகளுக்கு ஆளானோர் அத்தகைய தோஷங்களிலிருந்து விடுபட மரச் சீப்புகளை அம்பிகை பிரசாதமாகப் பெற்று பள்ளிக் குழந்தைகளுக்கு தானமாக அளிப்பதால் நலம் பெறுவர்.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இலவசமாக அலங்கார ஒப்பனைகள் செய்து அவர்களை மகிழ்வித்தால் மான பங்கம் ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்புடன் வாழ வழி பிறக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அவசியம் இயற்ற வேண்டிய வழிபாடு இது.

அர்த்தசாம பூஜை

அர்த்தசாம பூஜைக்குரிய சிறப்புத் தலம் இதுவே. மேலும் பேரும் புகழும் பெறும் குழந்தை பாக்கியத்தையும் இத்தல அம்பாள் வழிபாடு பெற்றுத் தரும் என்பது சீதாப் பிராட்டியின் வரலாறு மூலம் நாம் உணரலாம்.

ராமபிரான் நிறைவேற்றிய வழிபாடே இன்றும் பக்தர்களால், ”காலைக் கடம்பர் மதியம் வாட்போக்கி அந்தி ஈங்கோய்நாதர்,” என்று முக்தி அருளும் தரிசன முறையாக பின்பற்றப்படுகிறது. இவ்வாறு மூன்று மூர்த்திகளையும் தரிசனம் செய்து நிறைவாக ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீசிம்மபுரீஸ்வரரை வணங்கி வழிபடுவதால் நீண்ட ஆயுளும் நுண்ணறிவும் கீர்த்தியும் நிறைந்த குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஸ்ரீராமர் அளித்த சதுர்த்தல தரிசன முறையை ஒரே ஒரு முறை நிகழ்த்தி அற்புதமான பலன் அடைந்தோர் ஏராளம். உதாரணமாக, ”க” என்ற எழுத்தில் தொடங்கும் பெயருடைய ஒரு பக்தர் ஒரே ஒரு முறை ஸ்ரீராமர் அருளிய சதுர்த்தல தரிசன முறையை மேற்கொண்டார். அதன் பலனால் அவர் பிற்காலத்தில் பெரும் நடிகராக மாறி சிம்மக் குரலில் பேசி ”சி” என்று தொடங்கும் பட்டப் பெயருடன் உலகப் புகழ் பெற்றார்.

ராமச்சந்திர மூர்த்தியின் செல்வங்களான லவனும் குசனும் 120 ஆண்டுகள் வாழ்ந்தனர். அந்த யுகக் கணக்கின்படி ஒரு ஆண்டு என்பது தற்போதைய மூன்று ஆண்டுகளுக்குச் சமம். எனவே அவர்களுடைய ஆயுளை நாள் கணக்கில் கூறினால் (365 x 3 x 120) 131400 நாட்களாகும். இதுவே ஒரு சாதாரண மனிதனுடைய பூரணமான ஆயுள் காலமாகும்.

ஸ்ரீராமர் உலகம் முழுவதும் சுற்றி வந்தபோது பல தீர்த்த பூஜைகளை மேற்கொண்டார் அல்லவா ? ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்திற்கு யாத்திரை செய்தபோது அங்குள்ள குசா சக்திகள் நிறைந்த அகண்ட காவிரி நீரை பொற்குடங்களில் நிரப்பி வெள்ளைக் குதிரைகளில் ஏற்றி அதை நைல், அமேசான், மிசௌரி மிஸ்ஸிசிப்பி நதிகளில் கலந்து அற்புத சேவைகள் புரிந்தார். காவிரி நீரில் தங்கம் கலந்திருப்பதால் அதை பொன்னி நதி என்று அழைக்கிறோம்.

இவ்வாறு பொன்னி நதியின் நீரை உலகெங்கும் உள்ள மக்கள் நீராட அளிப்பதால் குரு பகவானின் அனுகிரகத்தை உலக மக்களுக்கு வழங்கும் ஆன்மீகச் சேவையை ராமபிரான் மேற்கொண்டு உலகம் போற்றும் உத்தம ராஜாவாக விளங்கினார். இதற்குப் பின்னால் இன்னொரு ஆன்மீக இரகசியமும் உண்டு.

பெரும்பாலும் நீரை விரயமாக்குதல், நீரை காசுக்கு விற்றல், புனித நீரை அசுத்தமாக்குதல் போன்ற தவறுகளைப் புரிந்தோர் இறக்கும் தறுவாயில் விபத்து, நோய், இயற்கைச் சீற்றம் போன்ற காரணங்களால் ஒரு வாய் தண்ணீர் கூட கிடைக்காமல் தாகத்தாலேயே உயிர் துறக்கும் வேதனையான நிலை ஏற்படும். ஸ்ரீராமர் நிறைவேற்றிய இத்தகைய தீர்த்த பூஜைகளால் ராம ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் இத்தகைய தவறுகளைச் செய்திருந்தாலும் அந்த வேதனைகள் அவர்களைத் தாக்காமல் ஸ்ரீராமருடைய தீர்த்த பூஜை அவர்களைக் காத்து நின்றது.

எனவே தீர்த்த குற்றங்களிலிருந்து விடுபட இத்தகைய தீர்த்த பூஜைகளை மேற்கொள்தல் நலம். புனிதமான காவிரி நீரை உலகில் மற்ற இடங்களில் பாயும் நைல், அமேசான் போன்ற ஜீவ நதிகளில் சேர்ப்பது ஒரு அற்புத இறை சேவையாகவும் பொது நலம் பேணும் பூஜையாகவும் மலரும்.

அகண்ட காவிரியும் எழில்மிகு
திரு ஈங்கோய் மலையும்

நவீன உலகில் கூரியர் சேவை மூலமாய்க் கூட உலகில் பல இடங்களுக்கும் இங்குள்ள தீர்த்த நீரை அனுப்பி அற்புத தீர்த்த சேவைகளை நிறைவேற்ற முடியும். மனமிருந்தால் மார்கம் உண்டு.

விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்றபோது நமது புனித கங்காசாகரிலிருந்து பெற்ற தீர்த்தத்தை அங்குள்ள நதிகளில் சேர்த்து சகோதரத்துவத்தை வளர்த்தார் என்பது நீங்கள் அறிந்ததே.

காவிரி நதியில் பரிணமிக்கும் பொன் சக்தியை எப்படிப் பெறுவது? இறை மூர்த்திகளுக்கு மூங்கில் குவளைகளில் காவிரி நீரை நிரப்பி அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதால் காவிரி தீர்த்தத்தில் நிரவியுள்ள ஸ்வர்ண ரேகா சக்திகள் இறைப் பிரசாதமாக சாதாரண மக்களையும் சென்றடையும்.

காவிரி தீர்த்தத்தைப் போல காவிரி மணலுக்கும் அற்புத மூலிகை சக்திகள் உண்டு. காவிரி மணலில் குறிப்பாக வடகாவிரியான கொள்ளிடம் மணலில் நிலக்கடலையை வறுத்து வியாழக் கிழமைகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு தானமளித்தால் படிக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் பெருகும், மந்த புத்தி அகலும்.

சாசுவத பாத பூஜை

இத்தல அம்பிகை சுவாமியின் வலது புறத்தில் எழுந்தருளி இருப்பதால் இது நிரந்தர பாத பூஜை தலமாகவும் கொண்டாடப்படுகிறது. கணவன்மார்களுக்குப் பாத பூஜை நிறைவேற்றும்போது தர்மபத்தினிகள் அவர்களுக்கு வலது பக்கத்தில் அமர்ந்துதானே பூஜைகளை நிறைவேற்றுவார்கள்.

இதை மக்களுக்கு உணர்விக்கும்பொருட்டு அன்னையே இங்கு சுவாமியின் வலது புறம் எழுந்தருளி ஸ்ரீசிம்மபுரீஸ்வரருக்கு தினமும் பாத பூஜை நிகழ்த்தி பேருவகை பெறுகிறாள்.

தம்பதியர் இடையே ஒற்றுமையை வளர்க்க உதவும் மிகச் சிறந்த, மிகவும் எளிமையான பூஜையே பாத பூஜையாகும். இதை அனுபவித்தால்தான் இதனுடைய மகத்துவத்தை உணர முடியும். வெறும் வார்த்தைகள் அளவில் நிற்கும்போதுதான் இதனுடைய இமாலய சக்தியைத் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. உண்மையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பாத பூஜையின் மூலம் சாதிக்கலாம்.

கணவன் மனைவி இவர்கள் இடையே மட்டுமன்றி நாம் அன்றாடம் உலகில் சந்திக்கும் எந்த உறவையும் பாத பூஜை மூலம் நெறிப்படுத்தலாம், பலப்படுத்தலாம், ஒன்று கூடி உறவாடலாம்.

உதாரணமாக, உங்களுடைய முதலாளி உங்களை கொடுமையாக நடத்துகிறாரா, சம்பளம் தராமல் ஏமாற்றுகிறாரா? உங்களால் வேறு வேலையும் தேடிப் போக முடியாது. இந்நிலையில் உங்களுக்கு உதவுவது பாத பூஜையே. தினமும் நீங்கள் உறங்கும் முன்னால் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து உங்கள் முதலாளியின் பாதங்களை நீர் விட்டு அலம்பி, மலர் இட்டு வணங்குவதாக கற்பனை செய்து பாருங்கள். இது மனதில் நடக்கும், மானசீகமான ஒரு சாதாரண எண்ண ஓட்டம்தான். ‘

ஆனால், இதைத் தொடர்ந்து செய்து வந்தால் அற்புதமான, நம்ப முடியாத நல்ல மாற்றத்தை உங்கள் முதலாளியிடம் காணலாம்.

எத்தகைய கசப்பான உறவையும் பாத பூஜைகள் மூலம் சீர்படுத்தலாம். தங்கள் குழந்தைகள் புகை, போதை, சூது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதாகத் தெரிய வந்தால் அவர்களைத் திட்டி அடித்து திருத்தி முயற்சி செய்வதால் பெரிதாக பலன்கள் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் அத்தகைய தவறுகளை பெற்றோர்களுக்குத் தெரியாமல் தொடரவே சிறுவர்கள் முயற்சி செய்வார்கள். அத்தகைய சூழ்நிலைகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மானசீகமான பாத பூஜையைச் செய்து வந்தால் எத்தகைய கொடிய தீய பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டிருந்தாலும் மிக விரைவில் மன மாறி நல்வழியில் நடக்க ஆரம்பிப்பார்கள்.

யாருக்காக நீங்கள் மானசீகமான பாத பூஜையை நிறைவேற்றுகிறீர்களோ அவர்கள் அச்சமயத்தில் உறங்கிக் கொண்டிருந்தால் உங்கள் பாத பூஜையால் விளையும் பலன் அதிகமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சாசுவத பாதபூஜை தலத்தில் அருளும்
ஸ்ரீதட்சிணா மூர்த்தி

ஆனால், சொல்வதற்கு, கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இதை நடைமுறையில் கடைபிடிப்பதற்கும் ஓரளவு மன உறுதி தேவை. அத்தகைய மன உறுதியைப் பெற உதவுவதும் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

பாத பூஜையால் தம்பதியரிடையே ஒற்றுமை நிலவுவது மட்டுமல்லாமல் மற்றோர் அற்புத ஆன்மீக அனுகிரகமும் இப்பூஜை மூலம் பெறலாம். தொடர்ந்து 30 ஆண்டுகள் இத்தகைய பாத பூஜையை நிறைவேற்றும் தம்பதிகளுக்கு சிம்ம ஜோதி என்ற ஒரு ஜோதி இறைப் பிரசாதமாகக் கிட்டும்.

இவ்வாறு சிம்ம ஜோதியைப் பெற்றவர்கள் மீண்டும் மனிதப் பிறவியை எடுத்து சம்சாரச் சுழலில் சிக்குவதில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் சாரதா தேவி தனது கணவருக்கு நிறைவேற்றிய பாத பூஜைகளால் 12 ஆண்டு காலத்திலேயே இந்த சிம்ம ஜோதியைப் பெற்று சர்வ லோகமும் போற்றும் தெய்வீகத் தம்பதிகளாகத் திகழ்ந்தனர். ”பரமஹம்சர்” என்னும் பட்டம் ராமகிருஷ்ணருக்கு மனிதர்களால் அளிக்கப்பட்டது அல்ல. அது தெய்வ லோகத்தில் 12 ஆண்டு கால உத்தம தாம்பத்ய வாழ்க்கையின் பரிசாக சித்தர்களால் அளிக்கப்பட்டதே.

எனவே சம்சாரம் என்பது பந்தம் அன்று, அது ஒரு சிறப்பான இறை மார்கமே என்பதே ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை மூலம் நாம் உணரும் பாடமாகும். இவ்வாறு சிம்ம ஜோதியைப் பூண்ட கருப்பத்தூர் ஸ்ரீசிம்மபுரீஸ்வர மூர்த்தி எத்தகைய சம்சார பந்தத்திலிருந்தும் பக்தர்களைக் காத்து ரட்சிக்கும் கருணாகர மூர்த்தியாக விளங்குகிறார்.

சிம்ம ஜோதியைப் பெற்றவர்களே ஒரு மனிதனை கர்ம பந்தத்திலிருந்து, சம்சாரம் என்னும் தளையிலிருந்து விடுவிக்கும் சக்தி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.

இத்தகைய குருமார்களே தங்களுடைய எதிர்கால பிறவிகளில் ஜோதி கலை யோகம் என்ற யோக சாதனையைப் புரியும் தகுதி படைத்தவர்கள். ஒரு மனிதனுடைய பூர்விக கர்ம வினையை அவனுடைய ஜாதகத்தைக் கொண்டும், கை ரேகையைப் பார்த்தும், ஓலைச் சுவடி நாடிகள் மூலமாகவும், ஆகாஷிக் பதிவுகள் மூலமாகவும், திருவாசியைக் கொண்டும் இன்னும் பல சூட்சும இரகசிய முறைகள் மூலமாகவும் அறியலாம்.

ஆனால், ஜோதி கலை யோகத்தில் வல்லமை பெற்றவர்களே ஒரு மனிதனின் பூர்வீக பிறவி இரகசியங்களையும் சஞ்சித கர்ம வினைப் படிவுகளையும் அவனுடைய திருவாசியைக் கொண்டு கணித்துக் கூறும் சக்தி உடையவர்கள்.

இவ்வாறு சமீப காலத்தில் ஜோதி கலை யோகத்தில் வல்லமை பெற்ற மகான் ஒருவர் மக்களின் கர்ம வினைகளைக் களைந்து அருந் தொண்டாற்றினார். இவர் அமர்ந்த இடத்தில் ஒரு புனித ஜோதி தோன்றி அவரைச் சுற்றி ஆறு அடி சுற்றளவிற்குப் பிரகாசத்தை ஏற்படுத்தும். இதை ஜோதி மண்டலம் என்று அழைப்பர். இந்த ஜோதி மண்டலத்தில் பிரவேசிப்பவர்கள் தாங்கள் அதுவரை அனுபவித்திராத ஒரு அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்வார்கள்.

இந்த ஜோதி கலை மகானுடைய ஜீவ சமாதி திருச்சி விராலிமலை அருகே உள்ளது. முருகப் பெருமானுக்கு உரிய அபிஷேக ஆராதனைகளை இவருடைய ஜீவ சமாதியில் நிறைவேற்றி வழிபட்டு வந்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம். கர்ம வினை தீர்க்கும் அரிய சஞ்சீவி மருந்து போன்றவர்.

பிரதோஷ பாஸ்கர பூஜை

நமது பாரத பூமியில் உள்ள சிவலிங்க மூர்த்திகளைத் தழுவி பல திருத்தலங்களில் சூரிய பகவான் பாஸ்கர பூஜைகளை நிறைவேற்றுகிறார் அல்லவா? இத்தலங்களில் சிறப்பாக மிகவும் அபூர்வமாக பிரதோஷ நேரத்தில் பாஸ்கர பூஜைகள் நிகழும் தலமே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

பிரதோஷ நேரத்தில் சூரிய பகவான் தன்னுடைய பொற் கிரணங்களால் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி உள்ள சிவபெருமானையும் அம்பிகையையும் வணங்கி அருள் பெற்ற திருத்தலம் இதுவே.

இதற்குப் பின்னால் உள்ள புராண நிகழ்ச்சி சுவையானது.

ஒரு முறை சூரிய பகவானுக்குத் தன்னால்தான் உலகம் முழுவதும் பிரகாசம் அடைகிறது. தன்னுடைய ஒளி இல்லாவிட்டால் எந்த உயிரினமும் வாழாது, தாவரங்கள் மடிந்து விடும், பூலோகமே ஸ்தம்பித்து விடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சூரியனால்தான் உலக உயிர்கள் அனைத்தும் உயிர் பெற்று வாழ்கின்றன என்பது உண்மை என்றாலும் அவர் இத்தகைய சக்தியைப் பெற்றிருப்பதற்குக் காரணம் இறைவனே என்பதை மறந்து விட்டார்.

தான் இல்லாவிட்டால் உலகம் இயங்காது, அதனால் தான் படைப்புக் கடவுளான பிரம்மாவை விட உயர்ந்தவன் என்ற தலைக்கனம் சூரிய பகவானுக்கு ஏற்படவே அதை உணர்ந்த சூரிய பகவானின் பத்தினி ஸ்வர்ச்சலாம்பாள் சூரிய பகவானிடம், ”சுவாமி, தாங்கள் இவ்வாறு தலைக் கனத்துடன் திகழ்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்பவனைக் கூட இறைவன் மன்னித்து விடுவார். ஆனால், நான்தான் கடவுள் என்று சொல்பவனை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். தங்களுடைய தவறான அகம்பாவ எண்ணத்தை விட்டு விடுங்கள்,” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அந்த நல்லுரைக்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை சூரிய பகவான்.

இறுதி முயற்சியாக ஸ்வர்ச்சலாம்பாள் சூரிய நாராயணப் பெருமாளிடம் தன்னுடைய நிலையைத் தெரிவித்து தன் கணவனை பழியிலிருந்து காக்கும்படி வேண்டினாள். பெருமாளும், ”தேவி கவலை கொள்ளாதே. அமைதியாக இங்கிருந்து நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்,” என்று கூறவே தேவியும் நாராயண லோகத்திலேயே தங்கி விட்டாள்.

தேவியின் பிரிவால் சூரிய பகவானின் பிரகாசம் குறையத் தொடங்கியது. அவருடைய ஒளியில் கருமைப் படரத் தொடங்கியது. இருப்பினும் தன்னுடைய வல்லமையைக் காட்டும் பொருட்டு ஒரு வார காலத்திற்காவது தான் வெளியே வராமல் உலகம் எப்படி இயங்கும் என்பதைப் பார்ப்போம் என்ற எண்ணத்துடன் பூலோகத்திற்கு வராமல் தன்னுடைய சூரிய மண்டலத்திலேயே தங்கி விட்டார் சூரிய பகவான்.

ஒரு வார காலம் கழித்து பூலோகத்தில் ஏதாவது உயிர்கள் இருக்கிறதா, தன்னுடைய பிரகாசம் இல்லாத பூலோகத்தின் நிலை என்ன என்பதை அறிய பூலோகத்திற்கு வந்து பார்த்தார். ஆனால், என்ன ஆச்சரியம்? அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தன்னைவிடப் பிரகாசமான, வலிமையான கதிர்களை உடைய ஒரு சூரிய பகவான் பூலோகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தார்.

புதிய சூரியனின் உடலிலிருந்து எழுந்த திவ்ய ஒளிக் கிரணங்களைக் கண்டு சூரிய பகவானுடைய கண்களே ஒளியிழந்து விடும்போல் தோன்றியது. திகைத்தார் சூரிய பகவான். அவருடைய அகம்பாவம் அடியோடு களைந்தது. நடக்கவும் சக்தியற்றவராய் புதிதாய் எழுந்தருளிய அந்த சூரிய பகவானின் திருப் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

”சுவாமி தாங்கள் யார்? எந்த லோகத்திலிருந்து வருகிறீர்கள். சூரிய பகவானாய்த் திகழும் என்னுடைய கண்களே கூசும் அளவிற்கு திவ்ய கதிர் வீச்சை தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்?” என்று மிகவும் பணிவுடன் அங்கு நிலவிய புதிய சூரிய பகவானைக் கேட்டார்.

பங்குனி மாதத்தில் பாஸ்கர பூஜை
பெறும் ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி

பூலோகத்தில் புதிதாகத் தோன்றிய சூரிய பகவான் வேறு யாருமல்ல. திருக் கைலாய பொதிய முனிப் பரம்பரையில் தோன்றிய பிப்லாதர் என்னும் உத்தம மகரிஷியே சூரிய பகவான் மறந்த கடமையை நிறைவேற்றும் பொருட்டு சூரிய பகவானை விட புனிதமான, பிரகாசமான கதிர்களை பூமியின் மேல் பொழிந்து பூலோக ஜீவன்களைக் காத்து அருள் புரிந்தார்.

இவை அனைத்தையும் அறிந்த சூரிய பகவான் தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கோரினார். தன் தவறைக் களையும் பிராய சித்த வழிபாட்டைத் தந்தருளும்படியும் அப்பெருமானை வேண்டினார்.

பிப்லாத மகரிஷி பெரும் கருணையுடன், ”சூரிய மூர்த்தியே வருந்தாதே. தவறு ஏற்படுவது இயற்கை. தவறை உணர்ந்து கொண்டால் போதும். அதுவே உனக்கு வேண்டிய பிராயசித்த வழியைத் தந்து விடும்,” என்றார்.

தொடர்ந்து, ”பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அதாவது பின்னால் நடக்கப் போவதை உணரக் கூடிய தெய்வீகத் தன்மை உடையவளே பெண். ஆண்களைப் போல் ஏழு மடங்கு தவ சக்தி உடையவளாய் பெண் இருப்பதே இதற்குக் காரணம். அப்படிப்பட்ட உத்தம மனைவியின் வார்த்தைகளை மதிக்காததால் உனக்கு இத்தகைய தாழ்ந்த நிலை ஏற்பட்டது. உன்னுடைய கதிர்களும் செயலிழந்தன. கவலை வேண்டாம். எட்டால் எட்டிப் பிடி, கட்டிய மனைவி கிட்டுவாள்,” என்று நல்வழி காட்டினார் பிப்லாத மகரிஷி.

மகரிஷியின் வார்த்தைகளை மனதில் நிலை நிறுத்தி தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தார் சூரிய பகவான். ”எட்டால் எட்டிப் பிடி,” என்ற வார்த்தைகளின் உட்பொருள் அவருக்கு விளங்கவில்லை.

ஆனால், ஒரு விஷயம் அவருக்குப் புரிந்தது, தன்னைவிட தன் மனைவி ஏழு மடங்கு தபோ பல சக்தி உடையவள் என்பதே அது. அப்படியானால் தனக்குப் புரியாத ஒரு தெய்வீக விஷயம் தன்னுடைய மனைவிக்குத் தெரிந்திருக்கலாம் என்று உணர்ந்து சூரிய நாராயண லோகம் சென்று கோபத்துடன் சென்ற தன் மனைவியிடம் மன்னிப்புக் கோரி தன்னுடைய லோகத்திற்கு அழைத்து வந்தார் சூரிய பகவான்.

பிப்லாத மகரிஷி சூரிய பகவானுக்குத் தெரிவித்த பிராய சித்த வழிபாட்டு முறையை எடுத்துக் கூறி அதற்கான விளக்கத்தைக் கேட்டார். தேவி சிறிது யோசித்து விட்டு, ”தேவரீர், தங்களுடைய அகம்பாவத்தின் காரணமாகவே இந்தச் சாதாரண வார்த்தைகளின் பொருளை உங்களால் கிரகிக்க முடியவில்லை. உங்களின் சொந்த வீடான சிம்ம ராசியிலிருந்து அதன் எட்டாம் வீடான மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் ஒரு மாத காலத்திற்கு நீங்கள் அகம்பாவத்தை அழிக்கும் புனித நேரமான பிரதோஷ காலத்தில் சிவபெருமானைத் தரிசனம் செய்து பூஜித்தால் இழந்த சக்திகளைப் பெறலாம்,” என்பதே சித்தர் பெருமானின் வார்த்தைகளின் உட்பொருள் என்று விளக்கினாள். (கட்டிய மனைவி = பெற்றிழந்த சக்தி).  

தேவி கூறிய வண்ணம் பல யுகங்கள் இப்பூமியை வலம் வந்த பின்னரே தன்னுடைய பிரதோஷ பூஜைக்கேற்ற தலமான ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தை சூரிய பகவான் வந்தடைந்தார். அந்த வருட பங்குனி மாதத்தில் இறைவனை தன்னுடைய கிரணங்களால் தழுவி வழிபட்டு மகிழ்ந்தார். இவ்வாறு தொடர்ந்து 12 வருடங்கள் தன்னுடைய அற்புத பிரதோஷ வழிபாட்டை நிகழ்த்தினார்.

இதனால் சூரிய பகவான் தன்னுடைய இழந்த பிரகாச சக்திகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருட பாஸ்கர பூஜையின் நிறைவிலும் ஒரு புதிய சக்தி இறைவனிடமிருந்து தன்னுள் ஐக்யமாவதைக் கண்டார். இவ்வாறு சூரிய பகவான் பெற்ற புதிய சக்திகளே பிப்லாத ஐக்ய சித்த கிரணங்களாக மாறி அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தன.

இத்தகைய சித்த சக்திகளை சூரிய பகவான் தனக்காக வைத்துக் கொள்ளாமல் தன்னை வழி நடத்திய பிப்லாத மகஷியின் பாதங்களில் சமர்ப்பித்தார். மகரிஷி சூரிய பகவானின் தியாக மனப் பான்மையை பாராட்டி அச்சக்திகளை ஸ்ரீசிம்மபுரீஸ்வரரை வழிபடும் பக்தர்களின் நலனுக்காக வழங்கினார்.

இவ்வாறு சூரிய பகவான் அருளிய சித்த சக்திகளை சாதாரண மக்களும் பெற வேண்டுமானால் அவர்கள் ”சூரிய நமஸ்காரம்” என்னும் எமது நூலில் குறித்துள்ள பன்னிரெண்டு மந்திரங்களை ஓதி அதற்குரிய யோகாசனப் பயிற்சிகளுடன் இணைத்து சூரிய பகவானை வழிபடுதல் நலம்.

பிரதோஷ நேரத்தில் இத்தல நந்தி மூர்த்திக்கு சுத்தமான பசு நெய் காப்பிட்டு, தாமே அரைத்த சந்தனத்தால் கிரீடம் பதித்து, மஞ்சள் வண்ண ஆடைகள் சார்த்தி வழிபட்டால் பக்தர்கள் தாங்கள் இழந்த பதவி, அந்தஸ்து, கௌரவம் இவற்றைத் திரும்பப் பெற இத்தல இறைவன் அருள்புரிவார். கணவன் மனவி ஒற்றுமை பெருகும். வெளி நாடுகளில் பணி புரிவோர் பாதுகாப்புடன் திகழ இத்தகைய பிரதோஷ வழிபாடு பெரிதும் உதவி செய்யும்.

குறிப்பாக பங்குனி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தும் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பான பலன்களை அள்ளி வழங்கும்.

அஷ்ட லட்சுமிகள்

ஸ்ரீமகா லட்சுமி தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் இத்தலத்தில் அஷ்ட லட்சுமிகளும் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். ஸ்ரீமகாலட்சுமி சன்னதி விமானத்தில் அருள்புரியும் லட்சுமி தேவிகளை கோவிலின் வெளிப்புறத்தில் இருந்தே தரிசனம் பெறும் வகையில் எழுந்தருளி இருப்பது லட்சுமி தேவியின் பெருங் கருணையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொன், பொருள், போகம் போன்ற மாயைகளால் ஈர்க்கப்பட்டு அதை அனுபவிக்க ஆரம்பிக்கிறான். நாளடைவில் தற்காலிகமான அந்த சுகங்களை வெறுத்து இறைவனை அடைய முயற்சிக்கிறான். இவ்வாறு முதலில் மாயையில் மனிதனை ஆழ்த்துவதும், பின்னர் மாயையிலிருந்து மனிதனை விலக்கி அவனை இறைவன்பால் செலுத்துவதும் மனமே.

அதே போல மனிதனுக்குத் தேவையான எட்டுவித ஐஸ்வர்யங்களையும் செல்வங்களையும் அளிக்கும் அஷ்ட லட்சுமிகளும் பின்னர் மனிதனுக்குத் தேவையான வைராக்யம் என்னும் செல்வத்தையும் அளித்து அவனை இறை மார்கத்தில் செலுத்துகின்றனர்.

மனதிற்கு எட்டு விதமான செயல்பாடுகள் உண்டு. இந்த எட்டு விதமான செயல்பாடுகளையும் முறைப்படுத்தி இறைவன்பால் மனிதனை கொண்டு செல்வதும் அஷ்டலட்சுமி தேவிகளின் அனுகிரக சக்திகளில் ஒன்றாகும்.

அஷ்ட லட்சுமிகளில் சந்தான லட்சுமியும் ஒரு தேவி ஆவாள். இத்தலத்தில் சந்தான லட்சுமி நைதிருதி திக்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். நைதிருதி சக்தி குழந்தைகளுக்கு அறிவை வளர்ப்பதாகும். கணக்கு, விஞ்ஞானம் போன்ற எந்த கடினமான பாடத்தையும் கற்க நைதிருதி திக்கு உகந்தது.

குழந்தைப் பேறு தலமான இத்தல ஈசனின் கருணையால் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே அற்புத மன ஆற்றல், கீர்த்தி பெற்று வாழ நைதிருதி யாதுதானி தம்பதியரின் பிரார்த்தனையும் ஒரு காரணமாகும்.

அரிய மூலிகை கபால பாத்திரம்

சித்தர்கள் பரிபாஷையில் கபால பாத்திரம் என்ற மூலிகை ஒன்று உண்டு. கபால பாத்திரம் என்ற தமிழ் வார்த்தைக்கு 18 அர்த்தங்கள் உண்டு. இங்கு குறிப்பிடப்படுவது அகத்திய நாடியில் இடம்பெறும் தெய்வீக மூலிகை. நவபாஷாண விக்ரக பிரதிஷ்டை இரகசியங்களில் ஒரு அங்கமாக விளங்குவது.

நமது பூமியிலிருந்து 28000 லட்சம் மைல் தூரத்தில் தூர்வா லலாடம் என்ற ஒரு லோகம் உண்டு. இந்த லோகத்தின் சிறப்பு என்ன? நமது பூமியிலுள்ள மணல் துகளைப் போல் இங்கும் மண் உண்டு. அந்த மண்ணில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை நமது பூமியின் மேற்பரப்பின் மேல் வைத்தால் மறு விநாடியே அது பூமியைப் பிளந்து கொண்டு சென்று பூமியின் மறு பக்கம் வழியாகச் சென்று மறைந்து விடும். அவ்வளவு சக்தி வாய்ந்ததே அந்த லோகத்தில் உள்ள மண் துகள்.

ஆனால், அந்த மண் துகளை கபால பாத்திர மூலிகை இலையில் வைத்தால் அது இலையைத் துளைக்காமல் பத்திரமாக இருக்கும். அப்படியானால் கபால பாத்திர மூலிகையின் மகத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். இதனால் பூலோக மக்களுக்கு என்ன பயன்?

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருத்தவத்துறை லால்குடி

தூர்வா லலாட லோகத்திலிருந்து பெறப்படும் மண் துகள்களை கபால பாத்திர மூலிகை இலைகளில் தாங்கி அதைக் கொண்டு நவபாஷாண தந்திர முறையில் சிவலிங்கத்தை உருவாக்குகிறார்கள். அப்படி ஸ்ரீஅகத்தியரின் அன்புச் சீடரான போகரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் இன்றும் நமது புனித பாரத தேசத்தில் பூஜிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த சிவமூர்த்திகளைப் பற்றிய விவரங்கள் மட்டும் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.

இத்தகைய சிவலிங்க மூர்த்திகளால் மனிதர்களுக்கு கிடைக்கும் பயன் அதிஅற்புதமாகும். பொதுவாக, சற்குரு நாதர்களே இத்தகைய சிவ மூர்த்திகளால் நேரிடையாகப் பலன் பெற முடியும். சாதாரண மக்கள் தங்கள் சற்குருமார்கள் விரும்பும் பலனை மட்டுமே இச்சிவலிங்க மூர்த்திகள் தரிசனத்தால் பெற முடியும்.

நீர் வாழ் ஜீவியாக பிறப்பெடுக்கும் ஓர் உயிர் மனித நிலையை அடைவதற்கு 84000 யோனி பேதங்களைக் கடந்தாக வேண்டும். ஒவ்வொரு யோனி பேதத்திலும் கோடிக் கணக்கான பிறவிகள் பெருகும். ஆனால், ஒரு மனிதன் உத்தம சற்குரு ஒருவரை அடையும்போது அவர் தன்னுடைய சீடனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுடைய பூர்வ ஜன்ம கோடானு கோடி பிறவிகளைப் பற்றி இரகசியங்களை ஒரே நொடியில் உணர்ந்து கொண்டு விடுகிறார். இது எப்படி சாத்தியமாகிறது?

அந்த சக்தியைத் தருவதே இத்தகைய சிவலிங்க மூர்த்திகளின் வழிபாடாகும்.

மனித உடலில் இரத்தம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் வயதாக வயதாக உடலில் பலவிதமான நோய்கள் தோன்றுகின்றன. இவ்வாறு வயதான காலத்தில் குறையும் இரத்தத்தை விருத்தி செய்வது மிகவும் கடினமாகும். இதை ஓரளவு நிவர்த்தி செய்வதே சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் தங்க பஸ்பம் ஆகும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பத்தின் வீரியத்தை பெருக்கும் அகத்திய வாடக முறை உண்டு. அதன்படி தங்க பஸ்பத்தை கபால பாத்திர இலையில் சுருட்டி வைத்து அந்த இலையின் மேல் தினமும் காலை சூரியோதயம் முதல் ஒரு மணி நேரத்திற்கு சூரிய கதிர்கள் படும்படி 49 நாட்கள் வைத்திருந்தால் அற்புதமான முறையில் பஸ்பத்தின் வீரியம் பெருகும்.

இது அனைவருக்கும் சாத்தியமாகுமா? இவ்வாறு வசதி இல்லாதவர்களும் தங்க பஸ்பம் உண்ட பலனை பெறும் தான முறை ஒன்று உண்டு. அருகம்புல், அகத்திக் கீரை, பூசனி பத்தை (கீற்று) இவற்றுடன் சிறிது வெல்லம் சேர்த்து பசு மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தானமாக அளித்து வந்தால் தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன் ஏற்படும். இரத்தம் விருத்தியாகும். சிறப்பாக ஆண்களின் வீர்ய சக்தி பெருகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கபால பாத்திர மூலிகை வளர்ந்து செறிந்த திருத்தலமே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

குழலூதும் கிருஷ்ணன்

பொதுவாக 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்களும், அஷ்டமி திதிகளில் பிறந்தவர்களும், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், அஸ்தமனமாகாத குரு சூரியனுடன் ஒரே ராசியில் இருக்கப் பிறந்தவர்களும் (உதாரணம் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஜாதகம்), 5 அல்லது ஒன்பதாம் வீட்டுக்குடைய குரு பலம் பெற்ற சந்திரனுடன் சேர்ந்திருக்கப் பிறந்தவர்களும் (உதாரணம் ஸ்ரீராமபிரான் ஜாதகம்) இயற்கையிலேயே ஆத்ம விசாரத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். அத்தகையோர் அவசியம் வழிபட வேண்டிய தலமே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

இவ்வாறு ஆத்ம விசாரத்தில் வழிகாட்டியாக அனுகிரகம் பொழிய ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளும் கோலமே குழலூதும் கிருஷ்ணனின் உருவமாகும். இத்தகைய படத்தை அல்லது சித்திரத்தை வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் ஆத்ம விசாரத்தில் ஈடுபாடு மிகும்.

ஆத்ம விசாரத்திற்கு ஊக்கம்
தரும் குழலூதும் கிருஷ்ண பகவான்

எட்டாம் எண்ணுக்கும் ஆத்ம விசாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் எண் எட்டின் வடிவத்தை கோலமாக தரையின் மேல் வரைந்து அதன் மேல் நடந்து செல்வதாக நினைத்தால் நீங்கள் எட்டுத் திசைகளையும் இரண்டு முறை தரிசனம் செய்தவர்கள் ஆவீர்கள். இதனால் என்ன பயன்?

ஒரு மனிதனை உலக பந்தங்களில் ஈடுபடுத்தும் அதே மனம்தான் அவனை ஆத்ம விசாரத்தில் ஈடுபடுத்தி உலக பந்தங்களிலிருந்து விடுவித்து இறைவனை நோக்கி இட்டுச் செல்கிறது. உலக ஆசைகளின்பால் அவனை ஈர்க்கும் எண்ணங்கள் எட்டுத் திசைகளிலிருந்து உருவாகியே அவனை நிலைகுலையச் செய்கின்றன.

இவ்வாறு அஷ்டமி என்னும் எட்டாவது திதியில் பிறந்த கிருஷ்ண பரமாத்மா எட்டு துளைகள் கொண்ட புல்லாங்குழலை ஏந்தி, எட்டு வடிவில் காட்சி நல்கி எட்டு விதமான மனதின் செயல்பாடுகளை நெறிப்படுத்தி நம்மால் எட்ட முடியாத இறையின்ப நிலைக்கு இட்டுச் செல்கிறார்.

எங்கு ஆரம்பமோ அங்குதான் முடிவும் என்னும் இறை தத்துவத்தை விளக்கும் எண் எட்டின் வழிபாடாக அமைவதே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

காலைக் கடம்பர், மதியம் சொக்கர் அந்தி ஈங்கோய் நாதர் என்னும் மும்மூர்த்தி வழிபாட்டின் நிறைவாக அர்த்த சாமத்தில் ஸ்ரீசிம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்து ராமபிரான் இத்தல மகிமையை உலகிற்கு உணர்த்தினார் அல்லவா? அது போல ராமபிரானின் அடுத்த அவதாரமான பலராம அவதாரத்தில் பெருமாள் இத்தலத்தின் மகிமையை ஆத்ம விசாரத்திற்கு உரியதாக சிறப்பு கொள்ளச் செய்தார்.

அதாவது காலையில் கடம்பவனேஸ்வரர், மதியம் ரத்தினகிரீஸ்வரர், மாலை ஈங்கோய் நாதர், இரவு சிம்மபுரீஸ்வரர் இவர்களை தரிசனம் செய்த பின்னர் மறுநாள் காலை மீண்டும் கடம்பனேஸ்வரரை தரிசனம் செய்து வழிபாட்டை நிறைவு செய்தால் இது அத்வைத பிரயோகமாக அமையும். ஆரம்ப தலமான கடம்பவனேஸ்வரர் திருத்தலத்தில் நீங்கள் வழிபாட்டை நிறைவு செய்யும் போது எட்டு வடிவில் நான்கு தலங்களை தரிசனம் செய்தவர்கள் ஆவீர்கள்.

மிகவும் அற்புதமான இந்த வழிபாட்டு முறையை உலகிற்கு அளித்த பெருமாள் மூர்த்தியே பலராமர் ஆவார். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு சாரதியாக பணி புரிய இசைந்த போது பலராமரின் உதவியை கௌரவர்கள் நாடினர். பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருமே பலராமருக்கு மிகவும் நண்பர்களாக உறவினர்களாக இருந்ததால் எந்த பக்கமும் சேராமல் நடுநிலை வகித்து அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் பலராமர்.

அத்தகைய தீர்த்த யாத்திரையின் போதுதான் மேற்கூறிய அற்புத தரிசன வழிபாட்டு முறையை உலக மக்கள் நன்னிலை அடைய அருளினார். சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் போன்ற பல காரணங்களால் தொடர்ந்து இந்த நான்கு தலங்களையும் ஒரே சமயத்தில் வழிபட இயலாவிட்டாலும் ஒரு நாளைக்கு ஒரு தலமாக தரிசனம் செய்து வழிபாடுகளை மேற்கொள்வதாலும் ஆத்ம விசாரத்தில் தீவிரமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

நான்கில் தொடங்கி எட்டில் முடிவதே சிறப்பு

இவ்வாறு நான்கு தலங்களை தரிசனம் செய்யும்போது அது எட்டில் பூரணம் பெற்றால் அப்போது விபுலத்ரா என்னும் அற்புத இறை சக்தி பக்தர்களுக்குக் கிட்டும். கடம்பவன மூலிகை சக்தி, உச்சி வழுதி பர்வத சக்தி, மரகத ரத்தின சக்தி, சிம்ம ஜோதி எனும் நான்கு சக்திகளின் சங்கமத்தில் விளைவதே விபுலத்ரா என்னும் தெய்வீக சக்தியாகும். குசா சக்தியின் ஒரு அங்கமே விபுலத்ரா சக்தியாகும்.

விபுலத்ரா சக்தியின் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது எனினும் சுருக்கமாகச் சொன்னால் மானிட உடம்புடன் கைலாயம் செல்ல உதவுவது இந்த சக்தியின் தனித்தன்மையாகும். சேரமான், சுந்தரர், ஔவையார், தர்மராஜா போன்றோர் மானிட உடம்புடன் கைலாயம் செல்ல அவர்களுக்கு உறுதுணையாக நின்றதே இந்த விபுலத்ரா சக்தியாகும்.

மேலும் குசா தத்துவத்தின்படி எல்லாத விதமான தேடலுக்கும் நான்கில் தொடங்கி எட்டில் முடியும் வழிபாடு அற்புத பலன்களை நல்குவதால் மேற்கூறிய திருத்தலங்களை வளர்பிறை சதுர்த்தி திதியில் தொடங்கி சதுர்த்தி அன்று கடம்பவனேஸ்வரரையும், பஞ்சமி திதியில் வாட்போக்கி ஈசனையும், சஷ்டி திதியில் ஈங்கோய்நாதரையும், சப்திமி திதியில் சிம்மபுரீஸ்வரரையும் வழிபட்டு அஷ்டமி திதி அன்று மீண்டும் கடம்பவன ஈசனை தரிசனம் செய்து வழிபாட்டை நிறைவு செய்வதால் அற்புதமான விபுலத்ரா குசா சக்திகளை எளிதில் பெறலாம்.

அதே போல 4, 13, 22 என்னும் தமிழ் அல்லது ஆங்கில தேதிகளில் ஆரம்பித்து 8, 17, 26 தேதிகளில் மேற்கூறிய சதுர்த்தல வழிபாட்டை நிறைவு செய்வதும் சிறப்புடையதே.

இவ்வாறு ஆத்மாவைத் தேடும் முயற்சியில் பக்தர்களுக்கு உறுதுணையாக விளங்கும் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தில் தொடர்ந்து வழிபாடுகளை இயற்றி வர நாளடைவில் ஆத்ம விசாரம் முதிர்ந்து தான் யார் என்பது தெரியவரும். அப்போதுதான் ”எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா !!“ என்ற சித்த மாமந்திரத்தின் உண்மைப் பொருள் விளங்கும்.

அவிர்த்தல தட்சிணா மூர்த்தி

கருப்பத்தூர் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி பெருமானின் திருமேனி மிகவும் அரிதான அவிர்த்தலம் என்னும் கல்லால் உருவாகி உள்ளது இத்தலத்தின் சிறப்பாகும். அவிர்த்தலத்தால் உருவான தெய்வத் திருமேனிகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஓரளவு சிற்பக் கலையின் நுணுக்கங்களை அறிந்து கொள்வது அவசியம்.

நமது திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளை உருவாக்கித் தந்த சிற்பிகள் தெய்வ பக்தி நிறைந்தவர்கள், இறைவனுக்காகவே வாழ்ந்தவர்கள், எந்த எதிர்பார்ப்பும் அற்றவர்கள். அத்தகையோர் மட்டுமே இறைவனுக்கான திருமேனிகளை உருவாக்கித் தரமுடியும்.

ஒரு தெய்வத் திருமேனியை உருவாக்குவதற்கு முன் அதற்குத் தேவையான கல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்லில் உயிருள்ள கல், உயிரற்ற கல் என்ற பிரிவினை உண்டு. உயிருள்ள கற்களில் ஆண் கல், பெண் கல், அலிக் கல் என்ற பாகுபாடு உண்டு. சிவன், விஷ்ணு, முருகன் போன்ற ஆண் தெய்வங்களுக்கு உரித்தான விக்ரஹங்களை ஆண் கற்களிலும் அம்பாள், துர்கை, லட்சுமி போன்ற பெண் தெய்வ மூர்த்திகளை பெண் கற்களிலும் உருவாக்க வேண்டும்.

அப்படியானால் அர்த்தநாரீஸ்வர உருவத்தை எந்தக் கல்லில் உருவாக்குவார்கள்? அலிக் கல்லில் அர்த்தநாரீஸ்வர உருவத்தைச் செதுக்குவார்கள் என்று நினைக்கத் தோன்றும் அல்லவா? உண்மையில் ஆண் கல்லில்தான் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தைச் செதுக்குவார்கள். காரணம் எம்பெருமான் உமையம்மைக்கு தன்னுடைய ஒரு பாகத்தை அளித்த புராண வரலாற்றில் உருவாகியதுதானே அர்த்தநாரீஸ்வர திருஉருவம்.

பஞ்ச நதன சிலா மூர்த்தி
ஊட்டத்தூர் நடராஜ பெருமான்

எனவே இதை அடிப்படையாக வைத்து ஆண் கல்லில் அர்த்தநாரீஸ்வர உருவத்தை வடிப்பார்கள். அப்படியானால் இதில் பதிந்துள்ள சக்தி அம்சமான உமையம்பிகை எப்படித் தோன்றுவாள் எந்த சந்தேகம் எழலாம். இங்குதான் சித்தர்களின் தெய்வீகப் பணி வெளிப்படுகிறது.

ஒவ்வொரு தெய்வ ஆலயமும் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையுள்ள சித்தர்களின் மேற்பார்வையில் இருக்கும். உதாரணமாக, தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயில் கருவூர்ச் சித்தரின் மேற்பார்வையிலும், திருச்சி திருவாசி திருத்தலம் கரடி சித்தரின் கண்காணிப்பிலும், திருச்சி உஜ்ஜீவநாதர் திருக்கோயில் பராமரிப்பு ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகளின் ஆதிக்கத்திலும் இருந்து வருகிறது.

இத்தகைய இரகசியங்களை சித்தர்கள் மட்டுமே அறிவர். இவர்கள் அந்தந்த தலத்தில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வர திருமேனியில் அம்பிகை எழுந்தருள்வதற்குத் தேவையான சக்தி அம்சத்தைத் தோற்றுவித்து நிலைப்படுத்தி வருகிறார்கள்.

சில திருத்தலங்களில் ஒரு முறை மட்டுமே நிலைப்படுத்தப்படும் இந்த சக்தி அம்சமானது, குறிப்பிட்ட தலங்களில் தினமுமே இத்தகைய சக்தி அம்சங்கள் புனரமைக்கப்படுவதும் உண்டு. இத்தகைய திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வர திருமேனிகளின் தெய்வ சக்தி அபரிமிதமான அனுகிரகத்துடன் பொலியும்.

உதாரணமாக, திருச்சி லால்குடி திருத்தலம் சப்தரிஷிகளின் தெய்வீக மேற்பார்வையில் இருந்தாலும் அத்தல அர்த்தநாரீஸ்வர திருமேனியின் சக்தி அம்சத்தை புனரமைக்கும் தெய்வீகத் திருப்பணி அத்தல ஸ்ரீமாங்கல்ய ரிஷியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த தெய்வீக இரகசியமாகும்.  

இவ்வாறு உயிருள்ள கற்களைத் தேர்ந்தெடுக்கும் அற்புத வல்லமையைப் பெற்றிருந்ததால்தான் அக்கால சிற்பிகளை மன்னர்கள் இறைவனாக மதித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து வாழ்கை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து இறைவனுக்காக சேவை செய்வதை மட்டுமே அச்சிற்பிகள் நிறைவேற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள்.

மேலும் தியாகத்தின் சிகரமாகத் திகழ்ந்தவர்கள் சிற்பிகள். இத்தகைய சிற்பிகள் இன்றும் நமது பாரத நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள். உதாரணமாக, பூரி ஜகந்நாதர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகள் ஒரு அபூர்வமான மரக் கட்டையால் உருவாக்கப்படுகின்றன. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூரி தலத்தில் கடற்கரையில் இந்தக் கட்டைகள் ஒதுங்கிக் கிடக்கும்.

இந்த இரகசியத்தை அறிந்த பக்தர்கள் அக்கட்டைகளை மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் அனைத்து வாத்திய வேத கோஷங்களுடன் கொண்டு வந்து அந்தக் கட்டையிலிருந்து தெய்வத் திருமேனிகளை உருவாக்குகின்றனர். ஆனால், அந்தத் தெய்வத் திருமேனிகளை உருவாக்கியவுடன் அதை உருவாக்கியவர் இறைவனடி சேர்ந்து விடுவார். இதுவும் அனைவருக்கும் தெரிந்த இரகசியம்தான்.

ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள்
ஜீவ சமாதி, உய்யக்கொண்டான்மலை

இந்த இரகசியம் தெரிந்ததுதான் ஒவ்வொரு முறையும் பூரி ஜகந்நாத திருக்கோயில் சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது என்றால் இந்த சிற்பிகளின் தியாகத்தை எப்படிப் பாராட்டுவது?
அடுத்து கற்களின் கடினத் தன்மையின் அடிப்படையில் அவற்றை அவிர்த்தலம், பகிர்த்தலம், முகிழ்த்தலம் என்று பிரிப்பதுண்டு.

இந்த மூன்று பிரிவிற்குள் உட்பிரிவுகளும் உண்டு. முகிழ்த்தலம் என்னும் பிரிவின் உட்பிரிவைச் சேர்ந்த பஞ்ச நதனம் என்னும் கல்லால் உருவான தெய்வ மூர்த்தியே திருச்சி அருகே ஊட்டத்தூரில் அருள்புரியும் நடராஜ மூர்த்தி ஆவார். சிறுநீரகக் கல் போன்ற சிறுநீரக உபாதைகளைக் களையும் அனுகிரக மூர்த்தி.

ஒவ்வொரு வருடமும் வாஸ்து மூர்த்தி எட்டு மாதங்களில் மட்டுமே விழித்தெழுந்து நீராடுதல், உணவு ஏற்றல், தாம்பூல தாரணம் போன்ற பூஜைகளை நிறைவேற்றுகிறார் அல்லவா? அத்தகைய காலங்களில் மட்டுமே வீடு கட்டும் பணிகளை மேற்கொள்கிறோம்.

அது போல தெய்வத் திருமேனிகளை உருவாக்கப் பயன்படும் கற்களும் வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே விழித்திருக்கும். அத்தகைய காலங்களில் மட்டுமே அந்தக் கற்களைச் செதுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்த இரகசியத்தை நமது நாட்டு சிற்பிகள் மட்டும் அல்லாது எகிப்து, ரோம் போன்ற நாட்டைச் சேர்ந்த சிற்பிகள் கூட தெரிந்து வைத்திருந்தனர் என்பது உண்மையே.

உலகப் புகழ் பெற்ற ஏசுவும் மரி அன்னையும் என்ற சிற்பத்தைப் படைத்த மைக்கேல் ஆஞ்சலோ தன்னுடைய சிற்பத்தை பவிர்த்தலம் என்னும் கல்லால் உருவாக்கினார். பவிர்த்தலம் வகையைச் சார்ந்த கற்கள் உத்தராயண காலத்தில் மட்டுமே விழித்திருக்கும். மேலும் நான்கில் தொடங்கில் எட்டில் முடிக்கும் குசா தத்துவத்தை அறிந்த மைக்கேல் ஆஞ்சலோ தன்னுடைய சிற்பங்களை நான்காம் தேதிகளில் ஆரம்பித்து எட்டாம் தேதிகளில் முடித்தார் என்பதும் நீங்கள் இதுவரை அறியாத தெய்வீக இரகசியமாகும்.

இவ்வாறு விழித்திருக்கும் கற்களையும் கல்விக்ரஹங்களையும் தூங்கச் செய்யும் சித்திகளும் உண்டு. கற்களை எதற்காக தூங்க வைக்க வேண்டும். வேலூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரரின் கும்பாபிஷேகத் திருப்பணியின் போது அவரை மற்றோர் இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டது. அதனால் சுவாமியின் லிங்கத் திருமேனியை அகற்றுவதற்காக 300 பேர் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தும் அவரை ஒரு சிறிதும் அசைக்க முடியவில்லை.

அந்நிலையில் மயிலை சுந்தரராம் குருஜி அந்த தெய்வீகப் பணியை ஏற்று வெறும் எட்டே எட்டு அடியார்களை மட்டும் வைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியை வேறோர் இடத்திற்கு மாற்றி வைத்து விட்டு, திருப்பணி முடிந்த பின்னர் மீண்டும் பழைய இடத்திலேயே நிலைப்படுத்தினார்.

இது எப்படி சாத்தியாமாயிற்று? இதுவே தவளை சித்து என்பதாகும். இந்த சித்தியின் மூலம் கல் விக்ரஹத்தை தூங்க வைத்து விட்டால் அதன் எடை குறைந்த விடும். பின்னர் வேண்டும்போது கல்லின் உறக்க நிலையைக் கலைத்து அதன் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டால் கல்லின் இயற்கையான எடை திரும்ப கூடி விடும்.

பஞ்ப பூதங்களால் ஆனதுதானே இந்த உடல்? சில சமயம் மகான்கள் பஞ்ச பூதங்களை ஸ்தம்பனம்செய்து தங்கள் உடலின் அதிகமாக்கியோ குறைத்தோ லீலைகளைப் புரிவதும் உண்டு.

ஒரு முறை சௌகந்திகம் என்னும் தேவலோக மலரைப் பறிப்பதற்காக பீமன் சென்றபோது வழியில் அனுமார் வயதான குரங்கின் வடிவத்தில் தன்னுடைய வாலை நீட்டிப் படுத்திருந்தார். அவர் அனுமார் என்று அறியாத பீமன் அந்த குரங்கின் வாலை அப்புறப்படுத்த நினைத்தபோது அது முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமார் தன்னுடைய வாலில் உள்ள பஞ்ச பூத சக்திகளை ஸ்தம்பனம் செய்து வைத்ததே ஆகும்.

அதே போல சமீபத்தில் காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி. காஞ்சி மாமுனி சங்கராச்சாரியார் அவர்கள் நூறு வயதை அடைந்தபோது அவருடைய நடமாட்டம் குறைந்து போனதால் குளித்தல் போன்ற நித்திய அனுஷ்டானுங்களுக்காக அவரை மற்றவர்கள் சுமந்து சென்று வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு முறை அவரை மற்றோர் இடத்திற்கு மாற்றும்போது அவரை சாஷ்டாங்கமாக வணங்கி அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே அவர் திருமேனியைத் தூக்குவது வழக்கம். ஒரு முறை ஏதோ அசிரத்தை காரணமாக அவரிடம் அனுமதி கேளாமல் அவர் திருமேனியைத் தூக்க முயற்சித்தபோது அது இயலவில்லை. வழக்கமான இருவருக்கும் பதிலாக நான்கு பேர் சேர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போகவே, சிறிது நேர யோசனைக்குப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து அவரிடம் விழுந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். கண் சாடையால் அவர்களை மன்னித்து தன் திருமேனியைத் தொட அனுமதி வழங்கினார். அதன் பின்னர் அவரை வேறு இடத்திற்கு மாற்ற முடிந்தது.

இவ்வாறு மனித உடலில் உள்ள பஞ்ச பூத சக்திகளையும் ஸ்தம்பனம் செய்ய முடியும். பஞ்ச பூத சக்திகள் இயங்கும் வேகத்தை அதிகரிக்கும்போது உடல் எடை கூடுகிறது. அச்சக்திகளின் வேகத்தைக் குறைக்கும்போது எடை குறைந்து விடுகிறது. The kinetic energy of the elementary particles becomes zero.

பகிர்த்தல கல்லில் உருவான
மேரியும் ஏசுநாதரும்

திருப்பதி வெங்கடாஜலபதியின் திருமேனி அவிர்த்தலம் என்னும் கல்லால் உருவானதாகும். அவிர்த்தலம் வகைக் கல்லின் சிறப்பென்ன? ஒரு பாத்திரத்தில் 10 வாழைப்பழங்களை வைக்க முடியும் என்றால் அதே பாத்திரத்தில் 100 வாழைப் பழங்களை வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்க முடியும்.

ஆனால், ஒரு கிலோ வாழைப் பழம் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் 100 கிலோ வாழைப் பழத்தை வைக்கக் கூடிய சக்தியைப் பெற்றதே அவிர்த்தல கல்லின் மகிமையாகும்.

எனவே திருப்பதி திருத்தலத்தில் கிடைக்கக் கூடிய இறைப் பிரசாதமான லட்டிற்கு இணையான ஒரு பிரசாதத்தை உலகில் வேறு எந்த தலத்தில் இருந்தும் பெற முடியாது என்ற இறை இரகசியத்தின் பின்னணியில் அமைவதே ஸ்ரீவெங்கடஜல மூர்த்தியின் ஆதார நிலையான அவிர்த்தலமாகும்.

அவிர்த்தல கல்லின் கடினத் தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனினும் இதன் தெய்வீக சக்தியை தற்கால விஞ்ஞான கோட்பாட்டைக் கொண்டு ஓரளவு யூகிக்கலாம்.
அணு விஞ்ஞானத்தில் இடம் பெறும் Bose-Einstein condensate எனப்படும் BEC அணுத் துகளைப் போன்ற நுண் துகள்களால் உருவானதே அவிர்த்தல கல்லாகும். இத்தகைய அபூர்வ கல்லால் ஒரு இறைத் திருமேனி உருவாவதன் அவசியம் என்ன என்று கேட்கத் தோன்றும் அல்லவா?

இன்றைய உலகில் மனிதர்கள் எதற்காக இறைவனை நாடுகிறார்கள்? பொதுவாக, மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு பிரார்த்தனையை முன் வைத்தே இறைவனையும் திருத்தலங்களையும் நாடுகிறார்கள். அது சுயநல பிரார்த்தனையாக இருந்தாலும் சரி, அல்லது உலகளாவிய பொதுநல பிரார்த்தனையாக இருந்தாலும் சரி, இறைவன், வழிபாடு என்று வந்து விட்டால் அங்கு பிரார்த்தனையும் கூடவே வந்து விடுகிறது.

இவ்வாறு இறைவனை வழிபடும் மக்கள் கோடி, கோடியாக பெருகிறார்கள். இவர்கள் இறை மூர்த்திகளை வணங்கும் காலமும் கோடி கோடி ஆண்டுகளாக பெருகுகிறது. அப்படியானால் ஒரு இறை மூர்த்தியிடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எத்தனை கோடி சேர்ந்திருக்கும் என்று கணக்கிட்டால் அதன் எண்ணிக்கைய எந்த நவீன விஞ்ஞான பதம் கொண்டும் கூற முடியாது.

ஆனால், எத்தனை கோடி யுகங்களில் எத்தனை கோடி ஜீவன்கள் ஒரு இறை மூர்த்தியை வழிபட்டாலும் அவர்களின் பிரார்த்தனைகளை வகைப்படுத்தி முறைப்படுத்தி சேர்த்து வைக்கும் சக்தி உடையதே அவிர்த்தல கற்களின் மகிமையாகும்.

திருச்சி நாச்சியார் கோவில் தெப்பக்குளம்

இதை இன்னும் சற்று விளக்கினால், இன்றைய கம்ப்யூட்டர்கள் தகவல்களை இரட்டைப் பரிமாண சங்கேத முறையில் சேமித்து வைக்கின்றன அல்லவா? (Data base in rows and columns). நம்மைவிட 400 மடங்கு கம்ப்யூட்டர் துறையில் முன்னேறியுள்ள எறும்புகளோ முப்பரிமாண சங்கேத முறையைப் பயன்படுத்துகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுவே உண்மை.

முப்பரிமாண சங்கேத முறை இன்றைய கம்ப்யூட்டர் கேள்விப்படாத ஒரு விஷயமாகும். அதனால்தான் மனிதர்கள் பயன்படுத்தும் நினைவக கருவிகள் (memory devices) தட்டை வடிவில் அமைக்கப்படுகின்றன. எறும்புகள் பயன்படுத்தும் நினைவக நிலையங்கள் மூன்று பரிமாணங்களை உடைய மண் கோளங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

எறும்புகள் பயன்படுத்தும் ஒரே ஒரு மண் கோளத்தில் நமது இந்திய அரசாங்கத்திற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், பூலோக மக்களின் அனைத்து தகவல்களையும் பதித்து வைத்துக் கொள்ளலாம் என்றால் எறும்புகளின் நினைவக கோளத்தின் சக்தி எப்படி இருக்கும் என்று ஆராய்ந்து பாருங்கள்.

எறும்புகள் போல நமது மனித மூளை பயன்படுத்தும் நினைவக ஊடகங்கள் கோள வடிவில்தான் இருக்கும் என்பது இன்றைய விஞ்ஞானத்தால் உணர முடியாத உண்மை. எனவே நினைவுத் திறனை பெருக்கிக் கொள்ள வேண்டுமானால் பிஞ்சு வெண்டைக்காய்களை மாலையாகக் கட்டி பிரதோஷ நேரத்தில் நந்தி எம்பெருமானுக்கு மாலையாக அணிவித்து அந்த வெண்டைக்காய்களை மாடுகள், கழுதைகள் போன்ற நாற்கால் ஜீவன்களுக்கு அளித்து வந்தால் அற்புதமான முறையில் நினைவாற்றல் பெருகும்.

நினைவாற்றலின் மகிமையைப் பற்றி நாம் அவ்வளவாக சிந்திப்பதில்லை. உதாரணமாக, நீங்கள் அலுவலகத்திலிருந்து புறப்படும்போது உங்கள் வீட்டு விலாசம் மறந்து போய் விட்டால் உங்கள் நிலை என்ன என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். வேகமாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ப்ரேக் எப்படிப் போடுவது என்பது மறந்து போய் விட்டால் அங்கு என்ன நிகழும் என்பதைக் கூற வேண்டுமா?

எனவே நினைவு என்பது கடவுள் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய அனுகிரகம், செல்வம், வரப்பிரசாதம் என்பதை உணரும்போதுதான் அதை அளிக்கவல்ல தென்முகக் கடவுளின் வழிபாடு எவ்வளவு மகிமை பொருந்தியது என்பது தெரிய வரும்.

எறும்புகள் பயன்படுத்தும் மண் துகளால் உருவான நினைவக கோளத்தைப் போல் ஆயிரம் மடங்கு சக்தி உள்ளதே ஒரு அவிர்த்தல துகளாகும்.

இத்தகைய அபூர்வமான, அதியற்புதமான அவிர்த்தல கல்லால் உருவான மூர்த்தியே கருப்பத்தூரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணா மூர்த்தியின் திருஉருவமாகும். இத்தகைய தெய்வீகப் பேரம்சம் பொருந்திய மூர்த்திகளைப் பற்றி நாம் கேள்விப்படுவதற்கே பல கோடி ஜன்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தென்முகக் கடவுளுக்கு ஒரு கைக்குள் அடங்காத லட்டுகளைப் படைத்து அதை ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இனிப்பையே அறியாத ஏழைகளுக்கும் தானமாக அளிப்பதால் அற்புதமான நினைவாற்றலைப் பெறலாம்.

கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, வானியல், அணு விஞ்ஞானம் போன்ற அனைத்து விதமான நுணுக்கமான ஆய்வுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தேவையான நினைவாற்றலை அளிக்க வல்லதே அவிர்த்தல தட்சிணா மூர்த்தி பெருமானின் வழிபாடாகும்.

ஆஞ்சநேயரும் ஆத்ம விசாரமும்

இறை அனுபூதிகளுக்கு எல்லை என்பது கிடையாது. சிரஞ்சீவியாக மலர்ந்து, சொல்லின் செல்வராக உயர்ந்து, ஸ்ரீராமரின் பேரன்பிற்குப் பாத்திரமான ஆஞ்சநேய மகாபிரபுவிற்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் இருந்தது. அது என்ன ? மனிதன் அடையும் வேதனைகளுக்கு எல்லாம் காரணம் அவனை ஆட்டுவிக்கும் எண்ணங்கள்தானே. அந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிந்து கொண்டால் எண்ணங்களை எளிதாக விலக்கி வாழ்க்கையில் வெற்றி அடைந்து விடலாம் அல்லவா ? இதை கருத்தில் கொண்டு ஆஞ்சநேய மூர்த்தி எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவதற்காக பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டார். பல அற்புத தீர்த்தங்களில் எல்லாம் நீராடினார்.

ஸ்ரீஆத்ம விசார கணபதி
திருச்சி நாச்சியார் கோவில்

ஆனால், எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவ்வாறு மனம் வருந்திய நிலையில் இருந்த போது ஒரு நாள் ஸ்ரீஅகத்திய முனிவரின் தரிசனத்தைப் பெற்றார். முனிவரிடம் தன்னுடைய மனக் குறையைத் தெரிவித்தார். ஸ்ரீராமருக்கே ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் அளித்த மகா மூர்ததி அல்லவா ? அவர் ஆஞ்சநேய மூர்த்திக்கு மன தைரியம் அளித்து, "எண்ணங்களின் மூலத்தை அறிவது என்பது மஹரிஷிகளுக்கே மிகவும் கடினமான காரியம். இருப்பினும் ராமர் மீது பேரன்பு கொண்ட காரணத்தால் உனக்கு எண்ணங்களின் ரகசியத்தை அறியும் வழிமுறையைத் தெரிவிக்கிறேன். நீ தொடர்ந்து ஒரு லட்சம் ஆலயங்களில் திருக்குளங்களை தூய்மைப்படுத்தி திருப்பணி இயற்றி வந்தால் திருப்பணி நிறைவில் உன்னுடைய ராமபிரான் மகிழ்ந்து உறையும் திருத்தலத்தில் ஸ்ரீஆத்ம விசார கணபதி மூலம் உனக்கு திருவருள் கிட்டும்," என்று வரமளித்தார்.

ஸ்ரீஅகத்திய பிரான் அருளிய வண்ணம் ஆஞ்சநேய மூர்த்தியும் ஒரு லட்சம் தலங்களில் கோயில் திருக்குளங்களில் தூர் வாரி நீர் நிலைகளைச் சரிசெய்து திருப்பணி செய்து வந்தார். திருப்பணி நிறைவில் திருச்சி நாச்சியார் கோவிலை வந்தடைந்தார் அங்குள்ள அற்புத தீர்த்தத்தை தூய்மைப் படுத்தி திருப்பணியை நிறைவு செய்தபோது ஸ்ரீஆத்ம விசார கணபதி், ஸ்ரீராம பிரான், ஸ்ரீஅகத்திய மாமுனி புடை சூழ ஆஞ்சநேய மூர்த்திக்கு தரிசனம் அளிக்க ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி எண்ணங்கள் எங்கிருந்து வருகின்ற என்ற அற்புத ரகசியத்தை அறிந்து கொண்டார்.

இத்தகைய அற்புத மகிமைகள் வாயந்த திருச்சி நாச்சியார் கோயில் திருக்குளம் மிகவும் சக்தி வாய்ந்தது. இத்திருக்குளத்திலிருந்து நீர் எடுத்து இங்குள்ள நந்தவனத்திற்கு நீர் வார்த்து வந்தால் ஆத்ம விசாரம் எளிதில் கை கூடும். திருமணமாகாத கன்னிப் பெண்கள் இத்திருக்கோயில் வசந்த மண்டபத்தில் மாக்கோலம் இட்டு வணங்கி வந்தால் நல்ல மண வாழ்க்கை அமையப் பெறுவர்.

சூக்கும வடிவில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆத்ம விசார கணபதிக்கு தாமே அரைத்த மஞ்சளால் காப்பிட்டு வணங்கி வந்தால் பெண்களும் ஆண்களும் எதிர்பாராத விபத்துகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

ஸ்ரீசிரஞ்சீவி ஆஞ்சநேயர்
உய்யக் கொண்டான் மலை

ஆன்மீக முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது ஆத்ம விசாரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், அன்றாடம் மனிதன் நிறைவேற்ற வேண்டிய பல காரியங்களிலும் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. இத்தகைய எண்ணக் குழப்பங்களிலிருந்து மனிதனை விடுவிப்பதும் ஆஞ்சநேய மூர்ததியின் பெருங் கருணையே. உதாரணமாக, தன்னுடைய பெண்ணிற்கு நல்ல வரனைத் தேடும் பொறுப்பிலுள்ள தந்தையானவர் யாரிடம் அல்லது எந்த இறை மூர்த்தியை வணங்கி அந்த நற்காரியத்தை ஆரம்பிப்பது என்று சாதாரணமாக ஒரு குழப்ப சூழ்நிலையைச் சந்திக்கலாம்.

படிப்பு முடிந்து வேலை தேட ஆரம்பிக்கும் ஒரு மாணவன் எந்த வேலைக்கு முயற்சி செய்வது என்பது பொதுவாக அனைவரும் சந்திக்கும் ஒரு குழப்ப நிலையே. இவ்வாறு எந்தக் காரியத்தை எங்கு முதலில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிய மன நிலையில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும் தெய்வ மூர்த்தியே திருச்சி உய்யக் கொண்டான் திருக்கோயிலில் அருள் புரியும் சிரஞ்சிவி ஆஞ்சநேயப் பெருமான் ஆவார். தினமும் திருக்கைலாயத்திற்கும், வைகுண்டத்திற்கும் சென்று இறைமூர்த்திகளை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற ஆஞ்சநேய மூர்ததி தினமும் தன்னுடைய இந்தப் புனித கைலை வைகுண்ட யாத்திரையை இத்திருக் கோயிலிலிருந்தே துவங்குகிறார் என்பது இதுவரை நீங்கள் அறியாத தேவ இரகசியமாகும். எனவே, எந்தக் காரியத்தை எங்கு, எப்போது, எப்படி ஆரம்பிப்பது என்று மனம் குழம்பிய நிலையில் இருப்பவர்கள் சரியான வழிகாட்டுதலைப் பெற விரும்பினால் அத்தகையோர் திருச்சி உய்யக் கொண்டான் மலை ஆஞ்சநேய மூர்த்தியை வணங்கி தங்கள் கையால் செய்த தேன் குழல் முறுக்கு குறைந்தது 21 பக்தர்களுக்கு தானம் அளித்தலால் நலம் பெறுவர்,

ஓம் குருவே சரணம்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam