தங்கத்தையும் தகரத்தையும் ஒன்றெனக் காண்பது ஞானத்தின் முதல் நிலை !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஞான நிலைகள்

மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாக தரிசிப்போர்க்கு குருவருள் கிட்டும் என்பது பெரியோர்கள் வாக்கு.

தற்போது எங்கு நோக்கினும் விஞ்ஞான ரீதியான விஷயங்களுக்கே மதிப்பும் மரியாதையும் பெருகி வருகிறது. இதுதான் கலியுகத்தின் போக்கு. மதிப்பில்லாத பொருளுக்கு மதிப்பும், மதிக்க வேண்டிய பொருட்களுக்கு உதாசீனமும் ஏற்படும் என்பது கலியுக நியதி.

இவ்வகையில் மெய்ஞானத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையும் ஆதரவும் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஞானிகள், யோகிகள், மகான்களை மக்கள் மதிக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவதால் சுனாமி, எய்ட்ஸ், விஷக் காய்ச்சல் போன்ற கடுமையான தொற்று நோய்கள் அதன் விளைவுகளாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
விஞ்ஞானம் என்பது கண், காது என்ற புலன்களுக்கு உட்பட்டது. ஆனால், இறை ஞானமோ புலன்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் மைக்ராஸ்கோப், டெலஸ்கோப் போன்ற எந்த உபகரணங்களை வைத்தும் மெய்ஞ்ஞானத்தை அறிய முடியாது என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

நமது பூமியைப் போல பல்லாயிரக் கணக்கான லோகங்கள் உண்டு. அங்கும் மக்கள் வாசம் உண்டு. ஆனால், அங்குள்ள எவருக்கும் கடவுள் பற்றிய அறிவு சிறிது கூட கிடையாது. அந்த லோகங்களில் எல்லாம் விஞ்ஞானிகள்தான் தலைமை ஏற்று அங்கு ஆட்சி செலுத்துவார்கள். நமக்கு மேல் ஓர் உயர்ந்த சக்தி உண்டு என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு இறைவன் அவர்களை எல்லாம் மாயையில் ஆழ்த்தி வைத்துள்ளார்.

எனவேதான் நமது பாரத பூமியில் பிறவி எடுப்பது என்பது மிகவும் பாக்கியமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது. அது பற்றியே நமது பூமி புண்ணிய பூமி என்று மகான்களால் பாராட்டப்படுகிறது. மேலும் இங்கு மனிதப் பிறவி கிடைத்திருப்பது அரிதிலும் அரிதானதோர் வாய்ப்பே.

நமது பூமியை விட பன் மடங்கு விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் லோகங்களிலிருந்துதான் பறக்கும் தட்டுகள் வருகின்றன. பறக்கும் தட்டுகள் உண்மைதான். அவை கற்பனை அல்ல. ஆனால், அந்த லோகங்கள் எவற்றிலும் கடவுள் பற்றிய உணர்வு சிறிதும் கிடையாது. இருப்பினும் அத்தகைய லோகத்திலுள்ள ஜீவன்கள் அடிக்கடி நமது பூமிக்கு வந்து போகின்றனர்.

அவ்வாறு நமது பூமிக்கு வந்து செல்வதென்றால் ஒரு ஜீவனுடைய ஆயுள் முடிந்து விடும். இருந்தாலும் அந்த லோகத்து மக்கள் நல்வாழ்விற்காக அவர்கள் நமது பூமிக்கு வந்து போவதால் அவர்களுடைய அடுத்த பிறப்பு பூமியிலோ அல்லது வேறு கடவுள் நம்பிக்கை உள்ள லோகங்களிலோ அமையும்.

எனவே நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்ற அடிப்படை கடவுள் உணர்வு ஏற்படுவதற்குக் கூட மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்க வேண்டும் என்ற ஆன்மீக உண்மை இப்போது விளங்குகிறது அல்லவா? தியாகம் எத்தகைய அடிமட்ட ஆன்மீக நிலையில் உள்ளவரையும் கடவுளிடம் இட்டுச் செல்லும் சாதனமாகும்.

.ஒருமுறை நமது குருமங்கள கந்தவர்வா அவர்களிடம், ” பக்தி ஒருவரை கடவுளிடம் கொண்டு சேர்க்கும், இறை சேவை கடவுளைக் காட்டும் என்னும் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தியாகம் எப்படி கடவுளைக் காட்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே? ” என்று ஒரு அடியார் கேட்டார்.

அதற்கு பதிலாக குருநாதர் கீழ்க்கண்ட அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியை விவரித்தார்கள். சித்திரை  மாதத்தில் ஓர் நாள்... அக்னி நட்சத்திரம் தகிக்கும் உச்சி வெயில் நேரம்... சிறுவனான நமது குருமங்கள கந்தர்வாவும், சிறுவனின் குருநாதரான கோவணாண்டிப் பெரியவரும்  திருஅண்ணாமலையில் கிரிவலம் போய்க் கொண்டிருந்தனர். வழக்கமாக ‘அங்கொரு கால் இங்கொரு கால்’ என வைத்து ‘விறுவிறு’என நடக்கும் பெரியவர், அன்றைக்கு என்னவோ ரொம்பவும் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தார்.

சிறுவனுக்கோ காலைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சூடு! வலது, இடது கால்களை மாறி மாறிக் கீழே வைத்து, ஏதோ புதுவித நடனம் ஆடுபவன்போல, அங்குமிங்கும் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தான். சூடு போதாதென்று, அங்கங்கே குத்தும் முட்கள் வேறு. பெரியவரோ சிறுவன் படும் அவஸ்தையெல்லாம் பற்றி கவலையே படாமல், திருஅண்ணாமலையின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தார்.

“அண்ணாமலை என்னமோ ‘பாக்கறதுக்கு சாதாரண கல்லு மலை மாதிரி இருக்கே’ன்னு தப்புக் கணக்கு போட்டுடாதடா. ஒரு யுகத்துல இது மாணிக்க மலையா இருந்திச்சு. வேற ஒரு யுகத்துல இது ரத்தின மலை. போன யுகத்துல இது தங்க மலையா இருந்துச்சு...”

பெரியவர் பேசுவதையா கவனித்தான் நம் சிறுவன்? அவன் கவனமெல்லாம் காலைச் சுட்டுப் பொசுக்கும் வெயிலின்மேல்தான். ‘ஆமா. நானே இங்க சூட்டுல பொசுங்கிப் போயி, காஞ்ச கருவாடு மாதிரி ஆயிட்டேன். இந்த வாத்யாரு என்னடான்னா, நெலா வெளிச்சத்துல உலாவுறது மாதிரி, அன்ன நடை போட்டுகிட்டு... இதுல ‘தங்க மலை, வெள்ளி மலை’ன்னு லெக்சரு வேற. யாரு இப்ப இந்தக் கதையெல்லாம் கேக்கற நெலைமைல இருக்கா?’

இதற்குள் இருவரும் கிரிவலப் பாதையில் நடந்து நடந்து வெகு தூரம் வந்து விட்டனர். ஒரு பெரிய வேப்ப மரத்தின் அருகே வந்தவுடன், பெரியவர் அதன் நிழலில் சற்றே நின்றார். சிறுவனும் “அப்பாடா!” என பெருமூச்சு விட்டபடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அங்கிருந்து பார்த்தால் சற்று தூரத்தில் தென்பட்ட மலை அடிவாரத்தில் ஒரே மாதிரியாக சைஸ் பார்த்துப் பொறுக்கிக் கொட்டி வைத்ததுபோல, உருண்டை உருண்டையாக கற்கள் கிடந்தன. சிறுவன் அவற்றையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

காலப்போக்கில் பலப்பல புதிய கட்டிடங்கள் உருவாகி, சாலை அமைப்புகளும் மாறி விட்டதால், அடையாளமே கண்டுபிடிக்க முடியாதபடி மாறி விட்ட அந்தப் பகுதியில் தற்போது பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது.

“ஏண்டா, கிரிக்கட்டெல்லாம் வெளையாடுவியா நீ?” என்று கேட்டார் பெரியவர். 

“என்னா ‘திடீர்’னு வாத்யாரு சம்மந்தா சம்மந்தமில்லாம கிரிக்கட்டைப் பத்திப் பேசறாரு’ என வியந்து கொண்டே பதில் சொன்னான் சிறுவன். “ஓ! ஸ்கூல்ல பசங்களோட வெளையாடுவனே.”

“அப்டீயா? சரி. நீ என்னா பாட்ஸ்மேனா, பௌலரா?”

“ரெண்டுந்தான் வாத்யாரே. ஆனா, நானு பந்து போட்டேன்னு வச்சுக்க. ஒரு பய நிக்க முடியாது.”

சிறுவனை மேலும் கீழும் பார்த்தபடி ஏளனமாகச் சிரித்தார் பெரியவர். “ஏண்டா, தம்மாத்தூண்டு இருக்க. உன்னால அவ்ளோ வேகமா பந்து போட முடியுமா? யார் கிட்டடா கத வுடற?”

சிறுவனுக்கு ரோஷம் வந்துவிட்டது. “நம்பலைன்னா ஒரு நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து பாரேன்.”

“அதுக்கு ஏண்டா ஸ்கூலுக்கு வரணும்? எங்க, அதோ கெடக்குதே. அந்தக் கல்லுங்கள்ல ஒண்ண எடுத்து எறிஞ்சு காட்டு. பாக்கலாம் உன்னோட தெறமைய.”

சிறுவன் ஒடிப் போய் அந்தக் கற்களில் தேடி , நல்ல உருண்டையான கல்லாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தான். கிட்டத்தட்ட ஒரு பந்து போன்ற அமைப்பில் இருந்த அதைக் கையில் எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் பின்னால் நடந்து சென்றான்.

பெரியவரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சிறுவன் கல்லைக் கீழே வைத்து விட்டு--, தன் அரை டிராயரை இழுத்து இறுக்கக் கட்டிக் கொண்டான். ‘ஓடுறப்ப அவுந்து வுழுந்துருச்சுன்னா...’ பெரியவர் மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டு, சிறுவனின் செய்கைகளைப் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு, வேகவேகமாக ஓடி வந்து கையைச் சுழற்றி, தன் முழு பலத்தையும் பயன்படுத்தித் தூக்கி எறிந்தான். அந்தக் கல் கண்ணுக்கெட்டாத தூரத்தில் போய் விழுந்தது!

பெருமை தாங்கவில்லை நம் சிறுவனுக்கு. தலையை நிமிர்த்தியபடி ஸ்டைலாக நடை போட்டுக் கொண்டு பெரியவர் முன்னால் போய் நின்றான். ‘என்னா வாத்யாரே! இப்ப என்னா சொல்ற?’ என்ற கேள்வி, வாயைத் திறந்து கேட்காவிட்டாலும் அவன் கண்களில் தெரிந்தது. “ஏண்டா! அவசரக் குடுக்கை!! நீ எடுத்த அந்தக் கல்ல ஒரு தபா பாக்கணும்னு நெனச்சேன். நான் வாயத் தொறந்து சொல்றதுக்குள்ளாற தூக்கி எறிஞ்சுட்டியே. சரி சரி. சட்டுன்னு ஓடிப் போயி அந்தக் கல்ல எடுத்துட்டு வா.”

“வாத்யாரே, அது எங்க போய் வுழுந்துச்சோ, யாருக்குத் தெரியும்? சரி. ஒனக்குக் கல்லுதான வேணும். அதான் அவ்ளோ கல்லுங்க கெடக்குதே. வா. ரெண்டு பேருமே போயி எந்தக் கல்லு வேணுமோ, பாத்து எடுத்துக்கலாம்.”“அதெல்லாமில்லடா. நீ தூக்கி எறிஞ்ச பாரு. அந்தக் கல்லுதான் வேணும். தேடி எடுத்துட்டு வந்துடு. ”

சிறுவனுக்குப் புரிந்து விட்டது. ‘சரி. வாத்யாரு நம்மள டீல்ல வுட்டுட்டாரு. இன்னைக்கு நாம காலி!’ மெல்ல மெல்லத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, கல் விழுந்த பக்கமாக நடந்தான்.

“ராஜா. சுருக்கா எடுத்துட்டு வந்து சேர்ந்துடு. நானு மெதுவா கிரிவலம் போயிகிட்டே இருக்கேன்.” பெரியவரின் குரல் கேட்டதும் நாலுகால் பாய்ச்சலில் ஒடிப்போய் கல்லைத் தேட ஆரம்பித்தான். 

ஜன நடமாட்டம் அதிகமில்லாத அன்றைய காலத்தில் திருஅண்ணாமலையைச் சுற்றி வர, ஒரு ஒற்றையடி மண் பாதையைத்தான் கிரிவலம் செல்பவர்கள் பயன்படுத்தினர். மற்ற இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள்தான். --அதிலும் மலை அடிவாரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் புதர்கள் மண்டி, அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் காட்சி அளித்தது.

அதற்கு நடுவில்தான் சிறுவன் விட்டெறிந்த கல் போய் விழுந்திருந்தது. அருகில் சென்று பார்த்ததும் மலைத்துப் போய் நின்று விட்டான். ‘இவ்ளோ அடர்த்தியா இருக்கற செடிங்களுக்கு நடுவுல கெடக்கற கல்ல எப்டீ தேடி... எப்பக் கண்டுபுடிச்சு...’ சிறுவனுக்கு நம்பிக்கையே இல்லை.

இருந்தாலும் என்ன செய்வது? பெரியவரோ கல்லைத் தேடி எடுத்துவரச் சொல்லி விட்டு முன்னால் போய் விட்டார். சிறுவன் ஒவ்வொரு புதராக விலக்கி விலக்கிப் பார்த்துத் தேட ஆரம்பித்தான். 

குனிந்து குனிந்து தேடியதில் சிறுவனின் முதுகு வலி எடுத்ததுதான் மிச்சம். கல்லோ கிடைத்தபாடில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆன பின்னர் ஒரு செடி மறைவில் ஏதோ ‘பளபள’வென மின்னுவதைச் சிறுவன் கண்டான். என்னஏதென்று பக்கத்தில் போய், செடிகளை விலக்கிப் பார்த்தால் சிறுவன் தூக்கி எறிந்த அதே கல்!

‘அப்பாடா! ஒரு வழியா கல்லக் கண்டு புடிச்சாச்சுடா சாமி.’ என நிம்மதியாக மூச்சு விட்டபடி அதை எடுத்தான். கையில் எடுத்துப் பார்த்தபோது, அந்தக் கல் இன்னும் ‘பளிச்’சென இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால், மஞ்சள் நிறத்தில் தகதகவென அந்தக் கல் மின்னியது! முழுத் தங்கம்!!

சிறுவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ‘என்னடா இது அதிசயம்! சாதாக் கருங்கல்லத்தான நாம தூக்கி எறிஞ்சோம். இங்க வந்து பாத்தா தங்கக் கல்லாக் கெடக்குது. சரி சரி. எடுத்துகிட்டுப் போயி நம்ம வாத்யாருகிட்ட காமிப்போம்.’

யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக, கல்லை எடுத்துத் தன் டிராயரினுள் மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு கையால் இறுக்கப் பிடித்தபடி சிறுவன் வேகவேகமாக ஓடினான். தங்கக் கல்லைக் கண்டெடுத்த ஆச்சரியத்தில் சிறுவனுக்கு இதுவரை தேடி அலைந்ததில் ஏற்பட்ட களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.

பெரியவரைத் தேடியபடியே சிறுவன் கிரிவலப் பாதையில் ஓடினான். ரொம்ப நேரம் ஓடிய பின்னர், தூரத்தில் பெரியவர் நடந்து போய்க் கொண்டிருப்பது அவன் கண்களில் தென்பட்டது. அவரைப் பார்த்த சந்தோஷத்தில் சிறுவனின் ஓட்டம் இன்னும் சூடு பிடித்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி தன் முன்னால் வந்து நிற்கும் சிறுவனை வினோதமாகப் பார்த்தார் பெரியவர். “என்னடா கண்ணு. என்னாச்சு ஒனக்கு? ஏதோ காணாததைக் கண்ட மாதிரி இந்த ஓட்டம் ஒடியாற?”

ஓடி வந்த அசதியில் சிறுவனுக்குச் சரிவர பேச்சே வரவில்லை. மூச்சு வாங்கியதில் வார்த்தைகள் தடுமாறின. “ஹஹ... ஆமா... வாத்யாரே... ஹஹஹ...அந்தக் கல்லு...தங்கக் கல்லு...ஹஹஹ.”

இவ்வாறு ஏதேதோ உளறியபடியே சிறுவன் தன் டிராயருக்குள் மறைத்து, இறுக்கப் பிடித்திருந்த அந்தக் கல்லை எடுத்துப் பெரியவர் முன்னால் நீட்டினான். சிறுவனின் விரிந்த கைகளில் ‘பளபள’வென அந்தத் தங்கக் கல் மின்னியது.

“என்னடா, தங்கம் மாதிரி இருக்குது. எங்கேந்துடா தூக்கியாந்த?” பெரியவர் அந்தக் கல்லைத் தொடாமலே எட்ட நின்று பார்த்தார்.

“வாத்யாரே. நீதான ‘தூக்கிப் போட்ட கல்ல எடுத்துட்டு வாடா’ன்னு சொன்ன. இம்மா நேரம் படாத பாடுபட்டுத் தேடி எடுத்தாந்தா, இப்ப இதுமாதிரிக் கேக்கறியே? ஏன் எப்பப் பாத்தாலும் மாத்தி மாத்திப் பேசியே பேஜார் பண்ற?”

இப்போது பெரியவர் சிறுவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தார். “ஏண்டா. திருஅண்ணாமலை முன்னாடி தங்க மலையா, மரகத மலையா, மாணிக்க மலையா இருந்துச்சுன்னு சொன்னப்ப என்னா நெனச்ச? ‘வழக்கம்போல இந்தக் கெழவன் என்னமோ புருடா வுடறான்’னுதான. அதுக்காகத்தான் ஒரு கல்லத் தூக்கிப் போட வச்சு, உன்னையே அத எடுத்துகிட்டு வரச் சொன்னேன்.” சிறுவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பெரியவர் மேலும் தொடர்ந்தார். “இதாண்டா கலியுகத்தோட கோலம். கடவுளே முன்னாடி வந்து நின்னு ‘நாந்தாண்டா நீ கும்புடற சாமி’ன்னு சொன்னாக்கூட மனுஷன் நம்ப மாட்டான். ‘எவனாச்சும் காசு புடுங்கறதுக்காக வேஷம் போட்டுகிட்டு வந்து நிக்கறானோ’ன்னுதான் சந்தேகப்படுவான். அதுனாலத்தாண்டா இந்தக் காலத்துல யாரு கண்ணுக்கும் சாமி தெரியறதில்ல.”

“இந்தக் கல்லப் பாத்தியாடா. ஒரிஜினல் அபராஜிதத் தங்கம். அதாவது 24 காரட்டுங்கறாங்களே, அதையெல்லாம்விட சுத்தமான தங்கம். ஒரு யுகத்துல திருஅண்ணாமலையாரு முழுசுமே இப்டீத்தான் காட்சி கொடுத்தாரு. அந்த காலத்து ஜனங்களும் தங்க மலையத்தான் தெய்வமா நெனச்சு கிரிவலம் வந்து கும்புட்டாங்க.”

“இன்னைக்கெல்லாம் அதுமாதிரி தங்க மலையா இருந்தாருன்னா, இந்த காலத்துப் பசங்க ‘சாமியாச்சே’ன்னு சும்மா வுட்டு வைப்பானுங்களா? அதான் கோயில் சிலைங்க, நெலம், உண்டியல் காசு... எதையுமே சிவன் சொத்துன்னு பாக்காம வேட்டு வுடறானுங்களே. அதுனாலத்தான் அண்ணாமலையாரு கல்லு மலையாவே காட்சி தர்றாரு.”

“சரி சரி. வா. மீதி கிரிவலத்த முடிக்கலாம்.” எனப் பெரியவர் கிளம்பினார். சிறுவன் கையில் தங்கக் கல்லை வைத்துக் கொண்டு முழித்தான். “வாத்யாரே. என்னோட டிராயரு பாக்கெட்டுதான் ஓட்டையாச்சே. நீ வாங்கி பத்திரமா வச்சுக்கயேன்."

“எதுக்குடா?” என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பெரியவர். “என்னா வாத்யாரே எதுக்குன்னு கேக்கற? நாமதான் அடிக்கடி அன்னதானம் பண்றமில்ல. காசுக்காக அங்கயும் இங்கயும் அலையாம, அப்பப்ப இதக் கொஞ்சம்கொஞ்சமா வித்து அன்னதானம் பண்லாமே.”

“போடா முட்டாள். சாட்சாத் சிவபெருமானே திருஅண்ணாமலையாக் காட்சி தர்றாருன்னு இப்பதான சொன்னேன். அதுக்கு என்னா அர்த்தம்? இங்க கெடக்கற கல்லு, மண்ணு எல்லாமே சிவன் சொத்துடா. அதுலேந்து எதையுமே எடுத்துட்டுப் போற உரிமை யாருக்குமே கெடையாது. நல்லா ஞாபகம் வச்சுக்க.”

“அப்ப இத என்னதான் செய்றது?” சிறுவன் குழம்பி விட்டான். “பேசாமத் தூக்கி எறிஞ்சுட்டு வா. போயிகிட்டே இருக்கலாம்.” எனச் சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் பெரியவர் நடக்க ஆரம்பித்து விட்டார். 

கையில் பளபளவென மின்னும் அந்தத் தங்கக் கல்லைத் தூக்கி எறிய சிறுவனுக்கு மனமே வரவில்லை. ‘என்னா வாத்யாரு புரியாமப் பேசறாரு? இந்தத் தங்கக் கல்லு நம்ம கைல இருந்தா அவசர ஆத்திரத்துக்கு உபயோகப்படுமில்ல.’

இருந்தாலும் சிறுவனுக்குப் பெரியவரின் வார்த்தைகளை மீறுவதற்கு பயமாக இருந்தது. காரணம், அவர் கொடுக்கும் தண்டனைகள்! சற்று நேரம் யோசித்தபடி நின்ற சிறுவன் ‘சொன்னதச் செய்யாட்டீ, பெண்டக் கழட்டிருவாரே’ என நினைத்துக் கொண்டே அரைகுறை மனதோடு அந்தக் கல்லைத் தூக்கி எறிந்தான். 

அதுவும் எப்படி? ஏற்கனவே எறிந்ததுபோல இல்லை! சுற்றுமுற்றும் பார்த்தபடி, பக்கத்திலேயே இருந்த ஒரு மரமாகப் பார்த்து, மெதுவாக அதன் வேர்ப்பகுதியில் இருந்த அடர்ந்த புதருக்குள் எறிந்தான். ஒரு முறை சுற்றி வந்து அந்த மரத்தை நன்றாக அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டான். எதற்கு?

‘பின்னாடி தேவைப்பட்டுச்சுன்னா? யாரு இந்த அத்துவானக் காட்டுக்குள்ளாற வந்து கண்டுபுடிக்கப் போறாங்க? வாத்யாரு அன்னதானம் பண்றப்ப, இங்க வந்து எடுத்துக்கலாமில்ல.’

அதற்குள் பெரியவர் வெகுதூரம் நடந்து போய் விட்டார். சிறுவன் வேகவேகமாக ஒடிப் போய் அவரைப் பிடித்தான். எதுவுமே நடக்காததுபோல அவருடன் சேர்ந்து மௌனமாக நடக்க ஆரம்பித்தான். பெரியவரும் அவனுடன் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலேயே நடந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மைல் போனதும், சிறுவனைப் பார்த்துச் சொன்னார். “நீ சொன்னத நல்லா யோசிச்சுப் பாத்தேண்டா. நம்ம கைல அந்தத் தங்கக் கல்லு இருந்தா, இன்னம் நெறையா அன்னதானம் பண்லாமே.”

சிறுவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். “ஆமா வாத்யாரே. அதுக்குத்தான் அப்பவே சொன்னேன். கேட்டியா? நான் சொல்றத, என்னைக்கு நீ காதுல போட்டுகிட்ட?” 

“கரெக்டுடா. என்னா பண்றது? அப்பப்ப ஒன்னோட மூளையும் நல்லாத்தான் வேலை செய்யுது.” பெரியவர் சிரித்தார். “சரி. சடார்னு ஓடிப்போயி அந்தக் கல்லத் திரும்பவும் எடுத்தாந்துடு.”

சிறுவனுக்கு இந்த தடவை எந்தப் பிரச்னையும் இல்லை. வேகவேகமாக ஓடினான். இடையில் எங்குமே நிற்காமல் ஓடிப்போய், தான் அடையாளம் வைத்திருந்த மரத்துக்கு அருகே போய் நின்றான். யாரும் கவனிக்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே தென்படவில்லை. மாலை நேரம் முடிந்து லேசாக இருட்டவும் ஆரம்பித்து விட்டது. குனிந்து மெதுவாக அந்தப் புதருக்குள் கையை விட்டுப் பார்த்தான். கையில் கல் தென்பட்டதும், ‘அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சடாரென அதை எடுத்துத் தன் டிராயர் பாக்கட்டுக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.

எதுவுமே நடக்காததுபோல மெல்ல எழுந்து நடந்த சிறுவன் சற்று தூரம் வந்ததும் ஓட ஆரம்பித்தான். பெரியவர் பக்கத்தில் வந்ததும்தான் தன் வேகத்தைக் குறைத்தான். “என்னடா கண்ணு. கல்லு பத்ரமா இருந்திச்சா? யாரும் கௌப்பிட்டுப் போயிடலயே?”

சிறுவனுக்குப் பெருமை தாளவில்லை. “அதெல்லாம் அவ்ளோ ஈஸியா யாரும் கண்டுபுடிச்சு எடுக்க முடியாது. வாத்யாரே. செடிகொடிங்க நெறையா இருக்கற எடமாப் பாத்துதான கல்லத் தூக்கிப் போட்டேன்.”

“அது சரி. நீ மட்டும் எப்டீ ஒடனே எடுத்தாந்த?”

சிறுவன் இன்னமும் குஷியாகி விட்டான். “கரெக்டா எங்க போட்டமின்னு பாத்து வச்சுகிட்டனுல்ல. ஒரு மரத்த அடையாளம் வச்சுத்தான் தூக்கியே போட்டேன். பின்னாடி என்னைக்காச்சும் நிச்சயம் தேவைப்படும்னு எனக்குத் தெரியாதா?”

“படே கில்லாடிடா நீ. சரி சரி. வெளில எடுத்துராத. யாரு கண்ணுலயும் படாம பத்ரமா வச்சுக்க!” எனச் சொல்லிவிட்டுப் பெரியவர் கிரிவலத்தைத் தொடர, சிறுவனும் தன் டிராயர் பாக்கட்டை இறுக்கப் பிடித்தவாறே அவர் பின்னால் நடந்தான்.

நடந்து நடந்து இருவரும் ஒரு மண்டபம் அருகே வந்ததும் பெரியவர் சற்றே நின்றார். “ராஜா. அந்தத் தங்கக் கல்ல எடு. வித்தா எவ்ளோ தேறும்னு ஒரு கணக்கு பாக்கலாம்.” என்றபடி எதிரே இருந்த ஒரு மேட்டில் அமர்ந்தார்.

இதற்குத்தானே சிறுவன் இவ்வளவு நேரம் காத்திருந்தான்? ஏதோ பெரிய ரகசியத்தை வெளியிடுபவன்போல டிராயர் பாக்கட்டுக்குள் கையை விட்டு, மெதுவாக எடுத்தான். கைவிரல்களை இறுக்க மூடியவாறே பெரியவர் முன்னால் நீட்டி, பின்னர் மெல்ல விரல்களை விரித்துக் காட்டினான்.

“அட, ஒரு அரை கிலோ தேறும் போல இருக்கே.” என்றபடி குனிந்து பார்த்த பெரியவர் சிரித்தார். “என்னடா. எதையோ கருங்கல்லத் தூக்கிகிட்டு வந்து நிக்கற?”

சிறுவனுக்கு ஒரே அதிர்ச்சி! “என்ன வாத்யாரே சொல்ற?” கையில் இருந்த கல்லைக் குனிந்து பார்த்தான். அது பார்ப்பதற்கு சாதாரணக் கல்லைப் போலத்தான் இருந்தது.

‘நாமதான் அவசரத்துல வேற ஏதாச்சும் கல்ல எடுத்துட்டு வந்துட்டமோ?’ சிறுவன் குழப்பத்தோடு அந்தக் கல்லை நன்றாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கொஞ்சம்கூட பளபளப்பையே காணவில்லை.

“வாத்யாரே. எதுக்கும் நானு ஒரு தடவ போயி நல்லாப் பாத்து எடுத்துட்டு வந்துர்றேன்.” எனச் சிறுவன் கிளம்பினான். புறப்பட்ட சிறுவனைப் பெரியவரின் பலத்த சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

ஆம்! கோவணாண்டிப் பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கையை நீட்டியபடி, வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தார். “ஏண்டா. கைக்குக் கெடச்ச தங்கக் கல்ல எங்கயோ கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறியே? உன்ன மாதிரி மடையனப் பாத்ததே இல்லடா.”

சிறுவன் குழப்பத்தோடு பதில் சொன்னான். “ என்னா நடந்துச்சுன்னே புரியல வாத்யாரே. கரெக்டா வச்ச எடத்துலேந்துதான் எடுத்தாந்தேன். எப்டீ மாறிப் போச்சுன்னே தெரியல.”

“அது வேற ஒண்ணுமில்லடா. உன்னோட நம்பிக்கை மாறிப் போச்சுல்ல. அதுனால கல்லும் மாறிப் போச்சு.” பெரியவரின் சிரிப்பு இன்னும் அதிகரித்தது.

“நம்பிக்கையா? அதுக்கும் கல்லுக்கும் என்னா சம்பந்தம்?”

“ஆமா ராஜா. ‘இது தங்க மலைடா’ன்னு சொன்னப்ப நீ நம்பாம ‘வெறும் கல்லுதான’ன்னு நெனச்ச. அண்ணாமலையாரு தன்னைத் தங்கமாக் காட்டுனாரு. நீ ‘தங்கம்’னு நெனச்சு எடுத்தாந்தப்ப அதையே சாதாரணக் கல்லாக் காட்டுறாரு. அவ்ளோதான்... இத வச்சே உன்னோட குரு நம்பிக்கை என்னான்னு புரிஞ்சுக்க.

“வாத்யாரே...” எனச் சிறுவன் இழுத்தான். அவனைப் பேச விடாமல் பெரியவர் மேலும் தொடர்ந்தார். “என்னைக்கு வாழ்க்கைல ஒருத்தர வழிகாட்டின்னு ஏத்துக்கிட்டியோ, அதுக்கப்பறம்- அவரு சொல்றத முழுசா நம்பணும். செய்யணும். அதுதாண்டா தெய்வீகத்துல கடைத்தேற ஒரே வழி. அத வுட்டுட்டு இது மாதிரி அரைகுறையா அலைஞ்சா... என்னாத்த செய்றது?”

“நல்லவழி காட்ட ஒருத்தரு ரத்தமும், சதையுமா உடம்பெடுத்து கூடவே இருக்கறப்பவே இப்டீ இருந்தீன்னா... உனக்கெல்லாம் எப்டீடா கடவுள் காட்சி தருவாரு?”

சிறுவனுக்கு ஆவல் பிறந்து விட்டது. “வாத்யாரே. கடவுளப் பாக்கறதுன்னா என்னா? அது எப்டீ இருக்கும்?” 

“கடவுள் காட்சிங்கறது யாராலயுமே வார்த்தையால சொல்ல முடியாத ஒரு அனுபவம்டா. அனுபவிச்சவங்களாலத்தான் அத முழுசா உணர முடியும். எவ்ளோதான் சொன்னாலும் புரியாதுடா.” 

“கொஞ்சம் புரியற மாதிரித்தான் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான். “கோடிக்கணக்கான ஜீவனுங்கள்ல சாமியப் பாக்கறதுக்காக வாசல் வரைக்கும் போற தகுதி பத்து பேருக்குத்தான் கெடைக்குது. அந்தப் பத்து பேர்லயும் வாசலத் தாண்டி உள்ள போறவனுங்க அஞ்சே அஞ்சு பேருதான். அந்த அஞ்சு பேர்லயும் அதுக்கப்பறம் உள்ள போறவனுங்க ரெண்டு பேருதான். அந்த ரெண்டுலயும் ஒருத்தருதான் கருவறைக்குள்ளாற போறாரு.”

“மத்தவங்க ஏன் உள்ளாற போவல. வாத்யாரே?”

“அவங்களுக்கு அதுவரைக்கும் போகத்தாண்டா தகுதியே. போதாதா? அந்த நெலம வர்றதுக்கே என்னா பாடுபடணும்?”

“சரி வாத்யாரே. கடைசியா ஒருத்தரு உள்ளாற போனாரே. அவரு என்னா ஆனாரு? அவராச்சும் கடவுளப் பாத்தாரா?” சிறுவன் கேள்விக்கு மேல் கேள்விகளாக அடுக்கினான். 

“யாருக்குடா தெரியும்? உள்ளாறப் போன ஆளுதான் வெளியவே வரலயே. ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதுனாலத்தான் “சாமி அறிவாரடி. அதை சாமி அறிவாரடி”ன்னு பாடி வச்சாங்க பெரியவங்க.”

“ஒண்ணுமே புரியலயே. வாத்யாரே. எனக்குப் புரியற மாதிரி ஏதாச்சும் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.

“சரிடா. கேட்டுக்க. நாம சுத்தி வர்றமே. இந்த அண்ணாமலையாரு அடிமுடி காண முடியாத ஜோதிப் பிழம்பா ... அப்றம் தங்க மலையா, மரகத மலையா எல்லாம் காட்சி தந்தவரு. என்னைக்கு அதெல்லாம் தானாவே ஒனக்குத் தெரியுதோ, அன்னைக்குக் கடவுளப் பாக்கற தகுதி வந்துடுச்சுன்னு புரிஞ்சுக்க. ஏன், கடவுளப் பாத்ததாவே வச்சுக்கலாம்.”

“வாத்யாரே, எப்ப எனக்கு அந்த நெலம வரும்?”

“அதுவா? என்னைக்குக் கல்லு, மண்ணு, தங்கம், வைரம், நல்லது, கெட்டது எல்லாத்தையும் ஒண்ணாப் பாக்கற மன நிலை வருதோ, அன்னைக்குத் தானாவே வரும்.” என்ற பெரியவர் சற்று நிறுத்தி, சிறுவனை உற்றுப் பார்த்தார்.

“ஏண்டா, இம்மா துண்டு தங்கத்தப் பாத்ததுமே, மனசு எப்டீ எப்டீயெல்லாமோ மாறுதே. நாமல்லாம் என்னைக்குடா கடவுளப் பாக்கப் போறோம்?” பெரியவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான் சிறுவன்.

“சரி சரி. கைல இருக்கறத தூக்கிப் போட்டுட்டு வா. ஆரம்பிச்ச கிரிவலத்தையாவது முடிப்போம்.”

தனக்கு என்று எதையும் தேடாமல் இருக்கும் நிலையே ஞானத்தின் முதல் நிலையாகும். இந்த மனோ நிலையைப் பெற்றவர்களே கல்லையும் வைரத்தையும், தங்கத்தையும் தகரத்தையும் ஒன்றாய்க் காணும் நிலையை அடைவார்கள். எனவே தியாகம்தான் அனைத்திற்கும் அடிப்படை. தியாகத்தின் இன்பப் பேரூற்றாக இறைவன் இருப்பதால்தான் இறையை, இறைமையை, இறைவனை தியாகராஜன் என்று பாடிப் பரவி புகழ் மாலை சூட்டுறோம்.  

இவ்வாறு ஞானத்தில் ஆரம்ப நிலையை அடைந்தவர்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தவே சற்குருமார்கள் அத்தகைய அடியார்களைத் தங்கள்பால் ஈர்த்து அவர்களுக்கு உத்தம இறைநிலைகளை எல்லாம் உணர்த்துகிறார்கள். அப்போது அவர்கள் கடவுள் உண்டு என்பதை உறுதியுடன் கூறி அவ்வாறு கடவுளைத் தரிசிப்பதற்காக மூர்த்தி, தீர்த்தம், தல மகிமைகளை எடுத்துரைக்கிறார்கள்.

இங்கு தல மகிமை என்பது ஒவ்வொரு திருத்தலத்திலும் உள்ள தல விருட்சங்களையும் குறிக்கும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட திருத்தலத்தின் தல விருட்சத்தை மட்டும் முறையாக வழிபடத் தெரிந்தாலே ஞானத்தை எளிதாகப் பெற்று விடலாம் என்றால் தலவிருட்சத்தின் மகிமையை உரைக்க எத்தனை யுகங்கள் ஆகும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

தல விருட்சத்தின் காலக் கோட்பாடு

தல விருட்சத்தின் ஆயுள் பரிணாமத்தைப் பற்றியோ தோற்றத்தைப் பற்றியோ அறிந்து கொள்வது என்பது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட முயற்சியாகும். இருப்பினும் ஒரு திருத்தலத்தை அலங்கரித்தல் என்ற ஒரே ஒரு குணாதிசயத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு அதைப் பற்றி சித்தர்கள் அருளியுள்ள இரகசியங்களை அளிக்கிறோம்.

இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் மூலமாக அமைந்துள்ளது திருஅண்ணாமலையே. ஆதிரூப இறைவன் மலை வடிவமாக திருஅண்ணாமலை வடிவில் எழுந்தருளியுள்ளான். இந்த மலை வடிவத்தை எல்லா லோகங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் தரிசிப்பதற்காக பல லோகங்களிலும் லிங்க வடிவில் திருக்கோயில் கொண்டு இறைவன் எழுந்தருளி உள்ளான். இவ்வாறு திருஅண்ணாமலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தருளியுள்ள லிங்க மூர்த்திகளை நாம் சுயம்பு லிங்க மூர்த்திகள் என்று அழைக்கிறோம். இந்த சுயம்பு லிங்க மூர்த்திகள் எவ்வாறு பல்வேறு லோகங்களில் தோற்றம் கொள்கின்றனர்?

எவராலும் இறைவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், ஒரு ஜீவன் முழுமையாக இறைவனோடு ஒன்றிப் போய், இறைவனுடன் இரண்டற கலந்து, ஐக்கியமாகி விடலாம் அல்லவா? உப்பால் செய்யப்பட்ட பொம்மை கடல் நீர் அனைத்தையும் பருக முடியா விட்டாலும் கடலில் விழுந்து அதில் முழுமையாகக் கரைந்து விடலாம் அல்லவா ?

அது போல இறை சேவையில் முழுமையாகத் தங்களைக் கரைத்துக் கொண்டு இறைவனுடன் இரண்டறக் கலந்த பக்தர்களே, இறை அடியார்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகைய சித்தர்கள்   இறைவனுக்காக கதறி கதறி அழும் கண்ணீர்த் துளிகள் பூமியில் விழும்போது அங்கு முதன் முதலில் இரண்டு இளந்தளிர் இலைகளை உடைய தீர்க்க சுந்தர விருட்சம் என்ற ஒரு சிறு செடி பூமியிலிருந்து முளைத்தெழுகிறது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சித்தர்களின் பக்திக் கண்ணீரை மட்டும் உணவாக ஏற்று அந்த தீர்க்க சுந்தர செடி வளர ஆரம்பிக்கிறது. இவ்வாறு நூறு யுகங்கள் கடந்ததும் அவர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். நூறு யுகங்களுக்குப் பின் எந்த இறை அடியாரும் இறைவனிடமிருந்து தனித்து இயங்க முடியாது. அவர் இறைவனுடன் கலந்தே ஆக வேண்டும் என்பது இறை நியதி.

இவ்வாறு ஒரு சித்தர் இறைவனை அடைந்த பின் அடுத்து வரும் சித்தர் அந்தச் செடிக்கு பக்திக் கண்ணீரை மீண்டும் நூறு யுகங்களுக்குச் சமர்ப்பிக்கிறார். ஒருவேளை ஒரு சித்தபிரானின் இறை ஐக்கியத்திற்குப் பின் மற்றோர் சித்தர் அங்கு வரும் காலம் கனியவில்லை என்றால் அந்தப் பக்திச்  செடி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பக்திக் கண்ணீருக்காகக் காத்திருக்கும். சித்தர்களின் பக்திக் கண்ணீரைத் தவிர வேறு எதன் மூலமும் அந்தச் செடியை வளர்க்க முடியாது.

இவ்வாறு ஆயிரம் சித்தர்களின் பக்திக் கண்ணீரால் வளர்க்கப்பட்ட தீர்க்க சுந்தர செடியே ஒரு மரமாக வளர்ந்து, பூத்துக் குலுங்குகிறது. ஆயிரம் யுகங்கள் முடிவில் அந்தச் செடி ஒரு திருத்தலத்தில் சுயம்பு லிங்க மூர்த்தியாக தோற்றம் கொள்கிறது.

அவ்வாறு தோற்றம் கொள்ளும் திருத்தலத்தில் தீர்க்க சுந்தர விருட்சத்தின் தண்டு, வேர், கிளைப் பகுதிகள் அத்திருத்தலத்திற்கு உரிய சுயம்பு லிங்க மூர்த்தியாகவும், அதன் கனிகள் அத்தல இறைவனின் தல விருட்சமாகவும் அமைகின்றன. இங்கு மரத்திற்கும் அதன் கனிகளுக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றே. அதனால்தான் ஒரு திருத்தலத்தில் உள்ள மூர்த்தியைத் தரிசிப்பதும், அங்குள்ள தல விருட்சத்தை தரிசிப்பதும் ஒன்று என்று கொள்கையை நம் முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தனர்.

தீர்க்க சுந்தர விருட்சம் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு லோகத்திலும் வெவ்வேறு பெயர்களைப் பெற்று விளங்குகிறது. கலியுகத்தில் பூலோகத்தில் தீர்க்க சுந்தர விருட்சம் வேப்ப மரம் என்று பெயர் பெற்று விளங்குகிறது. இந்த தீர்க்க சுந்தர விருட்சத்தின் ரூப சக்தியைக் கொண்டு விளங்குவதே மாயவரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் தல விருட்சமான வேப்பமரம் ஆகும். இதன் தரிசனமே எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றது.


தலை எழுத்து, முதல் எழுத்து

கங்கை நீரையும் விட புனிதமானதே இறை அடியார்கள் இறைவனுக்காக சிந்தும் கண்ணீராகும். நந்தனார் சிதம்பரேசனைக் காண வேண்டும் என்று குடம் குடமாக பக்திக் கண்ணீர் பெருக்கினார் அல்லவா?. பல பிறவிகளிலும் இறை தரிசனத்திற்காக அவர் உகுத்த கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதன் விளைவாக நாலாயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் நெல் மணிகள் விளைந்து பெருகின. நந்தனார் காலத்தில் இந்த அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்தவர் பலர். அவர்களுள் ஒருவரே மாறன் பெருந்துறையான் என்னும் பக்தி மிகுந்த சோழ மன்னன் ஆவார்.நந்தனார் இறைவனுடன் ஒன்றிய பின் அவருடைய நிலக்கிழாரும் தன்னுடைய தவறை உணர்ந்து நந்தனாரைப் பின் தொடர்ந்து தில்லையில் அடைக்கலம் கொண்டார் அல்லவா

இந்நிலையில் நந்தனாருக்காக இறைவன் தோற்றுவித்த நெல் மணிகள் அனைத்தையும் மாறன் பெருந்துறையான் பெற்று அதில் ஒரு பகுதியை தான் ஆற்றி வந்த நவகிரக தான்ய பூஜைக்காகவும், திருக்கோயில்களில் உள்ள நெற்குதிர்களில் இறைவனின் நைவேத்திய பிரசாதத்திற்கு ஒரு பகுதியையும், எஞ்சிய நெல் மணிகளை கோயில் கொடி மரங்களிலும், கோபுர கலசங்களிலும் சேர்த்து தமிழகமெங்கும் பக்தி வேரூன்றி நிற்க அருந் தொண்டாற்றினார்.

அன்று முதல் கோயில் கொடிமரங்களில் நெற்கதிர்களைக் கட்டுவதும், நெல் தானிய மணிகளை கொடி மரக் கலசங்களில் சேர்ப்பதும், கோபுரக் கலசங்களில் நெல் மணிகளை நிரப்பி கோபுரங்களை நிர்மாணிக்கும் வழக்கமும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இறை ஆலயங்களில் குழந்தைகள் முதல் முதலாக நெல் மணிகள் மேல் எழுதும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்கித் தருவதால் அவர்கள் பக்தி மார்கத்தில் முன்னேறி தங்கள் தலை எழுத்தையே மாற்றும் வல்லமை பெறுகிறார்கள். நெல் மணிகளில் பிள்ளையார் சுழியிட்டு தங்கள் குல தெய்வத்தின் பெயரையும் இஷ்ட தெய்வத்தின் பெயரையும் எழுதுவதோடு மட்டுமல்லாமல் பக்திக்கு இலக்கணம் வகுத்து அருந் தொண்டாற்றிய நந்தனார் மூர்த்தி நாயனாரையும், பக்திப் பெருந்தகை மாறன் பெருந்துறையான் சோழ மன்னனையும் தியானித்து வணங்குவதால் வாழ்வில் நினைத்ததை முடிக்கும் நல்லாற்றலை குழந்தைகள் பெறுவார்கள் என்பது உறுதி.

பிற லோகங்களிலிருந்து பறக்கும் தட்டுகள் பூமிக்கு அடிக்கடி வருவதைப் பற்றிக் குறிப்பிட்டோம் அல்லவா?. இந்தப் பறக்கும் தட்டுகள் நமது  கங்கையிலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் உலகங்களில் உள்ள தீராத நோய்களைத் தீர்த்து வைக்கப்பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு கோடிக் கணக்கான மைல்கள் பறந்து செல்ல அவைகளுக்குத் தேவையான சக்தியை அவைகள் எங்கிருந்து பெறுகின்றன.?

இன்றைய விஞ்ஞானத்தால் இதற்கு பதில் கூற முடியாது. சித்தர்களே எந்த பிரபஞ்ச இரகசியத்தையும் உரைக்க வல்லவர்கள். இரயில் வண்டிகள் மின்பல்புகள், மின்விசிறிகளுக்குத் தேவையான மின்சக்தியை வண்டிகள் ஓடும்போது சக்கரத்தில் ஏற்படும் சுழல் சக்தியை மின் சக்தியாக மாற்றிப் பயன்படுத்துகின்றன அல்லவா? அது போல் அதிர்வு சக்திகளை மின்சக்தியாக மாற்றும் கோட்பாடு ஒன்று உண்டு. அத்தகைய அதிர்வு சக்திக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பறக்கும் தட்டுகள் பறக்கும்போது உண்டாகும் அதிர்வு வேக அலைகள் மின் சக்தியாக மாற்றப்பட்டு பல நூறு ஆண்டுகள் அவை வானில் பறக்கத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆனால், இந்த அதிர்வு சக்திகளை மின் சக்தியாக மாற்றுவதற்கு தேவைப்படும் கிரியா ஊக்கி சக்திகளை அளிக்க வல்லதே கங்கை நீரின் புனிதத்துவம் ஆகும். அதை வேறெங்கிருந்தும் பெற முடியாது.

இதன் மூலம் நீங்கள் அறியும் அற்புத செய்தி என்ன? கங்கை தீர்த்தம் இத்தகைய அற்புதத்தை ஆற்ற முடியும் என்றால் அதை விடப் புனிதமான பக்திக் கண்ணீரால் வளர்ந்த தல விருட்சத்தில் பொலியும் சக்திகளை மனித மூளையால், மனித மனத்தால் கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? மனித மூளையில் ஏற்படும் எல்லா செயல்பாடுகளும் அதிர்வு அலைகளைப் பயன்படுத்துவதால் முறையான தல விருட்ச வழிபாடு எத்தகைய அறிவு ஆற்றலையும் அளிக்கும் வல்லமை உடையதாகும். மனித அறிவை மேம்படுத்த இதை விடச் சிறந்த வழிபாடு வேறேதும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

ஞான நிலை இரண்டு


தகரத்தையும் தங்கத்தையும் ஒன்றாகக் காணும் ஞான நிலை பெற்றவர்களின் அடுத்த நிலை என்ன? ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காணுவதே ஞானத்தின் அடுத்த நிலையாகும். ஆண் பெண் என்பது ஒரு தத்துவமே. ஆனால், இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம். ஆண் பெண் தத்துவத்தைப் புரிந்து கொண்டவர்களே காமத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும். வேறெந்த இறை வழிபாடும் பூஜை முறைகளும் முழுமையான காம விடுதலையைத் தராது என்பது சித்தர்களின் வாக்கு.

சற்குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதன் மூலம் ஆண் பெண் தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை குரு பிரசாதமாகப் பெற முடியும். சிறுவனான வெங்கடராம சுவாமிகள் ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் கூறிய ஒரு திருப்பணி நிமித்தமாக காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு தன்னுடைய வேலை முடிந்ததும் சிறுவன் அருகிலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது அக்கோயில் மிகவும் குப்பை கூளங்கள் நிறைந்து விளங்குவதைக் கண்டான். உடனே அக்கோயில் அர்ச்சகரின் அனுமதி பெற்று அங்கிருந்த குப்பைகளை கோயிலிலிருந்த ஒரு தென்னை விளக்குமாறு கொண்டு பெருக்கி கோயிலை துப்புரவு செய்து விட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு சென்னை திரும்பினான்.

அடுத்த நாள் பெரியவரிடம் அவர் கொடுத்த காரியத்தை சரியாக நிறைவேற்றியதைக் கூறி விட்டு அவரிடம் சொல்லாமல் தான் ஓர் அற்புத கோயில் திருப்பணி செய்து விட்டதையும் விவரித்து விட்டு ஒரு பெரிய கோயில் கும்பாபிஷேகம் செய்து விட்ட பாணியில் பெரியவரைப் பார்த்தான். பெரியவர் என்ன பாராட்டு வார்த்தைகள் கூறப் போகிறார் என்ற ஆவல் சிறுவனின் கண்களில் பளிச்சிட்டது.

ஆனால், பெரியவரோ சிறுவன் சற்றும் எதிர்பாராத வகையில் முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு, ”அப்படியா, ரொம்ப சந்தோஷம்டா, எங்கே நீ செய்து விட்ட வந்த திருப்பணி எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது என்று பார்ப்பாமோ?” என்று கூறிக் கொண்டே தன்னுடைய வலது உள்ளங்கையை விரித்து சிறுவனுக்குக் காட்டினார்.

பெரியவரின் வார்த்தைகளில் தொக்கி நின்ற ஏளனம் சிறுவனை உலுக்கி விட்டது.  தன்னுடைய ”திருப்பணியில்” ஏதோ பிரச்னை நேர்ந்து விட்டதை உணர்ந்து கொண்டு மிகவும் கலங்கிய மனதுடன் பெரியவரின் உள்ளங்கையைப் பார்த்தான்.

பெரியவரின் உள்ளங்கையில் ஒரு சின்னத் திரையில் ஒரு வண்ணப்படம் காட்சி அளிக்கத் தொடங்கியது. அதில் சிறுவன் திருப்பணி செய்த கோயில் பிரகாரங்கள் தெளிவாகத் தெரிந்தன. அதைப் பார்த்தவுடன் சிறுவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மிகவும் சிரமப்பட்டு, அக்கறையுடன் கோயில் பிரகாரத்தில் உள்ள எல்லா குப்பைகளையும் அப்புறப்படுத்தி விட்டுதான் வந்தான். ஆனால், பெரியவர் கையில் தெரிந்த காட்சியில் கோயில் பிரகாரம் முழுவதும் ஏகப்பட்ட குப்பை கூளங்கள் பெருகிக் கிடந்தன.

அந்த குப்பைகளைப் பார்த்தால் பல ஆண்டுகளாகச் சேர்ந்த குப்பைகள் போல் தோன்றின.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கிருந்து அவ்வளவு குப்பைகள் வந்தன. ஒரே இரவுக்குள் எப்படி அவ்வளவு குப்பைகள் கோயிலுக்குள் வந்திருக்க முடியும்? என்று நினைத்து ஒரேயடியாகக் குழம்பிப் போனான் சிறுவன்.

பெரியவர், ”என்னடா கண்ணு, கோயிலைச் சுத்தம் பண்ணிட்டு வந்தேன், வாத்யாரே, என்று சொல்ற, ஆனா, கோயில் பிரகாரம் பூரா ஒரே குப்பையா கிடக்குதே. எங்கிருந்து இவ்வளவு குப்பையை கொண்டு போய் கோயிலில் கொட்டினாய்? என்று கேட்கவே சிறுவனுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.

திக்கித் திணறி, ”…. இல்லை வாத்யாரே, நான் கோயிலை நல்லா சுத்தம் செய்து விட்டுதான் வந்தேன். ” என்று நாக்குழற சொன்னான்.

பெரியவர், ”அப்போ இம்மா குப்பையும் எங்கே இருந்துடா வந்தது. சரியான சோம்பேறி நீ. ஒரு சின்னக் கோயிலைக் கூட சுத்தம் செய்ய உனக்கு பவிசு இல்ல. எப்படிடா ஆயிரக் கணக்கான கோயிலை சுத்தம் செய்யற திருப்பணியை நீ எதிர்காலத்துல செய்யப் போற ?” என்று கோபத்தில் பொரிந்து தள்ளினார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று வசமாக பெரியவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்து அமைதியாக பெரியவரின் வசை வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

சிறிது நேரத்திற்குப் பின், ” சரி, சரி, நடந்ததைப் பற்றி மறந்து விடு. மற்ற வேலைகளைக் கவனிப்போம்,” கூறவே சிறுவன் இப்போதைக்குத் தப்பித்தோம் என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு அங்காளியைச் சுற்றி வரச் சென்று விட்டான்.சில மாதங்கள் கழிந்தன…

ஒரு நாள் பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள போடா சித்தரை தரிசிக்கச் சென்றார். போடா சித்தரை தரிசனம் செய்த பின் இருவரும் அருகிலுள்ள, தற்போது செய்யாறு என்று அழைக்கப்படும் திருஓத்தூர் திருத்தலத்திற்கு நடந்து சென்றனர். திருஓத்தூரை அடையும்போது மாலை சுமார் நான்கு மணி இருக்கும்.

திருக்கோயில் அருகே அப்போது நிறைய பனை மரங்கள் நிறைந்திருந்தன. அவைகளில் நுங்குகள் காய்த்துக் குலுங்கின. பெரியவர் சிறுவனிடம் நுங்கு வேண்டுமா? என்று பரிவுடன் கேட்க சிறுவனுக்கு ஓரே ஆனந்தம். பெரியவர் எப்போதோ ஒரு முறைதான் இத்தகைய அமிர்தமயமான பதார்த்தங்களை வாங்கித் தருவார். பெரும்பாலான சமயங்களில் காய்ந்த பரோட்டாவும் தீய்ந்துபோன சுக்கா ரொட்டியும்தான் சிறுவனுக்கு சாப்பாடு.

சிறுவன் ஆமோதிக்கவே அருகிலிருந்த ஒரு மரம் ஏறுபவனைக் கூப்பிட்டு, ”ஏம்ப்பா நாலு நுங்கு வெட்டிப் போடேன்,” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கோவணத்திலிருந்து ஒரு பெரிய நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். அவனுக்கு ஒரே ஆச்சரியம் அவன் வாழ்நாளில் நூறு ரூபாய் நோட்டைப் பார்த்ததே கிடையாது.

மிகுந்த சந்தோஷத்துடன் அந்த நோட்டைப் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்டு வேகவேகமாக அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறப் போனான். அவனைத் தடுத்தி நிறுத்திய பெரியவர், ”கொஞ்சம் பொறு நைனா. இந்த மரம் வேண்டாம். நுங்கு நல்லா இல்லை,” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். அந்த மரமேறியும் பெரியவரைத் தொடர்ந்து சென்றான்.

ஒவ்வொரு மரமாக பெரியவர் ஆராய்ந்து கொண்டே வந்தார். அந்தத் தொழிலாளிக்கு, ”நமக்குத் தெரியாத விஷயம், இந்த கிழவனுக்கு என்ன தெரிந்து விடப் போகிறது?” என்று மனதிற்குள் நினைத்தாலும், நாம் ஏதாவது சொல்லப் போக அதனால் கொடுத்த நூறு ரூபாயைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டே ஒன்றும் பேசாமல் பெரியவருடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

சிறுவனுக்கு அதற்கு மேல் ஒரே ஆத்திரம். ” ஆஹா கைக்கு எட்டிய சந்தோஷம் வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே. பேசாமல் நம்மிடம் காசைக் கொடுத்திருந்தால் இந்நேரம் 100 நுங்கு சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கலாமே,” என்று மனதிற்குள் நொந்து கொண்டே அவனும் பெரியவரை தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் அலைந்து திரிந்து ஒரு மரத்தைத் தட்டிப் பார்த்த பெரியவர், ”சரிப்பா இந்த மரத்தில் ஏறி நுங்கு வெட்டிப் போடு,” என்றார். அந்தத் தொழிலாளியும் மளமளவென்று பெரியவர் சுட்டிக் காட்டிய பனை மரத்தில் ஏறி அதிலிருந்து எல்லா நுங்குக் குலைகளையும் வெட்டிப் போட்டான். பின்னர் பெரியவர் கூறியபடி சில பனை ஓலை மட்டைகளையும் வெட்டிக் கீழே போட்டான்.

கீழிறங்கி அந்த நுங்குகளை அரிவாளால் அகழ்ந்தெடுத்து சிறுவனுக்கும் பெரியவருக்கும் கொடுத்தான்.

மிகவும் அரிதாகவே பெரியவர் எதையும் ஏற்பது வழக்கம். இம்முறை பெரியவரும் சிறுவனுடன் சேர்ந்து சில நுங்குகளை ருசி பார்த்தார். பெரியவர் ஒவ்வொரு நுங்கையும் உண்ணும் விதமே பார்க்க ஆனந்தமாக இருக்கும். தன்னுடைய வலது கட்டை விரலால் இள நுங்குகளை வழித்தெடுத்து அவர் உண்ட பாங்கு சிறுவனின் மனத் திரையில் பல நாட்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் அளவிற்கு அற்புத விருந்தாக அமைந்தது. மரமேறி அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்ட பின் பெரியவர் அங்கேயே சம்மணம் போட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார்.

சிறுவனை ஒவ்வொரு பனை மட்டையையும் எடுத்துக் கொடுக்கச் சொல்லி அந்த மட்டைகளிலிருந்து பனை (குச்சி) நரம்பைப் பிரித்தெடுத்தார். இதற்குள் மாலை நேரம் கழிந்து இரவு வந்து விட்டது. ஆனால், அன்று பௌர்ணமியாக இருந்ததால் நிலவொளியில் எந்தவித சிரமமும் இல்லாமல் அந்த பனங் காட்டில் பெரியவர் அமைதியாக பனை ஓலைகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்.

எல்லா பனை ஓலைகளிலிருந்தும் திரட்டிய பனங் குச்சிகளைக் கொண்டு ஒரு விளக்குமாற்றை உருவாக்கினார் பெரியவர். அதை ஒரு பனை ஓலையால் இறுகக் கட்டி அதைச் சிறுவனிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படிக் கூறினார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு திருஓத்தூர் சிவத்தலத்தை அடைந்தனர். அதற்குள் இரவு நேர பூஜை முடிந்து கோயிலையும் சார்த்தி விட்டு அனைவரும் சென்று விட்டனர். கோயில் அருகே எவரும் இல்லாமல் பேரமைதி நிலவியது.

கோயிலின் வாசலுக்கு வந்தவுடன் சிறுவனைப் பார்த்து, ”என்னடா கோயில் சாத்திக் கிடக்குது, இப்போது என்ன செய்வது?” என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இரவு ஆகி விட்டால் நடை சார்த்துவது வழக்கம்தானே, ஏன் பெரியவர் ஒன்றும் தெரியாதவர்போல் ஒரு நாடகத்தை ஆடுகிறார்,” என்று மனதிற்குள் யோசிக்கத் தொடங்கினான்.
அதற்குள் அவன் மனதினுள் இன்னொரு குழப்பமும் உருவாகி விட்டது. கோயிலைத் திறப்பதற்காக கோயில் குருக்களை கூட்டி வர நம்மை அனுப்புவாரோ, அவர் எங்கிருக்கிறாரோ, அவரை எப்படித் தேடுவதோ?” என்று அடுத்தடுத்து சிறுவன் யோசிக்கத் தொடங்கவே அவன் மன ஓட்டத்தைத் தடுத்து நிறுத்திய பெரியவர், ” நீ எங்கேயும் அலைய வேண்டாம், ராஜா,” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கோவணத்திலிருந்து ஒரு சிறு வேரை எடுத்தார்.

” இதற்கு விஞ்ஞை விசுத்தி விருட்சம் என்று பெயர். இதை கையில் வைத்திருந்தால் ஆயிரம் டன் எடை உள்ள கல்லை கூட அந்தரத்தில் நிறுத்தலாம். சித்தர்களுக்கு மட்டும்தான் இந்த இரகசியம் தெரியும். அதுவும் அகஸ்திய முனி பரம்பரையில் வந்தவன்தான் இந்த வேரை கையில் தொட முடியும். உன்னுடைய குருவி மூளைக்கு எட்டும்படியா சொன்னால் இந்த வேரின் உஷ்ண நிலை 60000 டிகிரி சென்டிகிரேட். அதாவது நிர்விகல்ப சமாதியில் நிலை கொண்டிருக்கும் ஒரு சாதகனின் உஷ்ண நிலையைப் போல் இரு மடங்கு உஷ்ண நிலையில் பிரகாசிக்கக் கூடியது இந்த வேர்.

சிறுவன் ஒரு விநாடி பெரியவர் நிறைய நுங்கு சாப்பிட்டு விட்டு அந்த மயக்கத்தில் ஏதோ பிதற்றுகிறாரோ என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டான். ஒரு நொடிதான் அந்த எண்ணம். அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மடமையை நினைத்து தன் தலையில் மானசீகமாக ஒரு குட்டு கொட்டிக் கொண்டு தன்னிலை அடைந்தான்.

தொடர்ந்து பெரியவரின் வார்த்தைகளை காதை தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான்.

கருவூரார் (கரூர் சித்தர்) இந்த வேரை கையில் வைத்துக் கொண்டுதான் தஞ்சை பிரகதீஸ்வரர் சுவாமி கோபுரத்தில் இருக்கும் 80 டன் எடையுள்ள கல்லை கோபுரத்தின் உச்சியில் ஏற்றினார். சாரம் போட்டுக் கல்லை ஏற்றியதெல்லாம் மற்றவர் கண்களை மறைப்பதற்காக அவர் ஆடிய நாடகத்தின் ஒரு அங்கமே. இதை வருங்காலத்தில் உன்னுடைய சத்சங்க அடியார்களிடம் சொல்லு.

அது மட்டும் அல்ல. தஞ்சை பிரகதீஸ்வரர் கோபுரத்தில் உள்ளது வெறும் கருங்கல் அல்ல. சங்கம சித்தர்கள் என்ற ஒரு சித்தர் குழாம் உண்டு. சிலகாகித சித்தர் குழாமைப் போல சங்கம சித்தர்களும் ஆயிரக் கணக்கில்தான் ஓரிடத்தில் கூடுவர். திரிவேணி சங்கமம், காசி கும்பமேளா, கும்பகோணம் மாசி மகம் போன்ற தீர்த்த திருவிழாக்களில் இவர்களுடைய நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சங்கம சித்தர்களின் ஒரு தொகுதியே தஞ்சையில் நாம் காணும் கோபுரக் கலசக் கல் ஆகும். ஒளி உடம்பு பெற்றர்கள் ஆதலால் இவர்களுடைய நிழல் பூமியின் மேல் விழுவதில்லை. இதுவே தஞ்சை பிரகதீஸ்வரர் நிழல்விழா திருக்கோபுர தெய்வீக இரகசியமாகும்.

சிறுவன் கண் இமைக்காமல் பெரியவரின் அமுத மொழிகளைப் பருகிக் கொண்டிருந்தான்.

பின்னர் பெரியவர் திருக்கோயிலின் கதவை நோக்கி அந்த வேரைக் காட்டவே கடகடவென்ற சப்தத்துடன் கதவுகள் திறந்து கொண்டன. உள்ளே கண்ட காட்சியைக் கண்டு சிறுவன் ஒரு கணம் அயர்ந்து விட்டான்.

ஆயிரம் சூரிய பிரகாசத்துடன் திருக்கோயிலின் உள்ளே சுவாமியின் திருமேனி பிரகாசித்தது. சுவாமியின் இருபுறமும் பூத கணங்கள் புடை சூழ்ந்து நின்றன. ஒவொரு பூத கணமும் ஒரு சூரியனைப் போல் பிரகாசித்தது. பூத கணங்களின் அருகில் பலவிதமான தாடிகள், பல வண்ண ஜடா முடியை உடைய ரிஷிகள் சுவாமியை நோக்கி கை கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களை அடுத்து திருவிளக்கு ஏந்திய திருப்பாவைகள் இரு புறமும் புடை சூழ நின்றனர். அவர்கள் கையில் இருந்த விளக்குகள் அற்புத பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

சாவி கொடுத்த ரோபோக்களைப் போல் அந்தத் திருப்பாவைகள் ஒரு திக்கிலிருந்து எதிர் திக்கிற்கு நகர்ந்து கொண்டிருந்தன.

இவை அனைத்தும் நொடிப் பொழுதில் சிறுவன் கிரகித்த தெய்வீகக் காட்சிகள். அடுத்த விநாடி அவன் கண்ட அனைத்து தெய்வீக காட்சிகளும் மறைந்து விட்டன. அதற்கு பதிலாக வழக்கமாக தற்போதைய திருக்கோயில்களில் காணப்படும் இருளடைந்த பிரகாரமும், தூசி அழுக்கு படிந்த பாவை விளக்குகளும், வௌவால்கள் நடமாடும் விதானங்களும், ஒட்டடை மண்டிக் கிடந்த சுவர்கள்தான் உள்ள காட்சி தந்தன.

சிறுவன் அங்கு என்ன நடந்தது என்று பூகிப்பதற்குள் பெரியவரின் கணீரென்ற குரல் அவனருகே கேட்டது. என்னடா, ஒரு விநாடி ராக்கூத்தைப் பார்த்தே பிரமித்துப் போய் விட்டாயே. இதற்கே என்னோட ஒரு நாள் புண்ணியத்தை உனக்குத் தரை வார்த்துக் கொடுக்கும்படி ஆகிவிட்டது. மற்ற காட்சிகளை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் வந்த வேலையைக் கவனி,” என்று சொல்லி அவன் கையில் வைத்திருந்த பனை விளக்குமாற்றைச் சுட்டிக் காட்டினார்.

திருக்கோயிலில் திருக்கைலாய காட்சிகளைக் கண்டு அதில் இலயித்திருந்த சிறுவன் பனங்காட்டு நிகழ்ச்சிகளை முற்றிலும் மறந்தே போனான். அப்போதுதான் முதன் முறையாக விளக்குமாற்றைப் பார்ப்பது போல் பார்த்து அதை வைத்து என்ன செய்யச் சொல்கிறார், பெரியவர்?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

” ஏண்டா படுவா, ஒரு பாவை விளக்கைப் பார்த்தே இப்படி பிரமித்துப் போய் விட்டால் மத்ததெல்லாம் பார்த்தால் நீ எப்படி இந்தக் கோயிலை விட்டு விட்டு வருவாய். இந்தக் கோயிலில் மட்டும் அல்ல. எல்லாக் கோயிலிலும் நடக்கும் திருக்கூத்து இதுதான். இரவு அர்த்தசாம பூஜை முடிந்து நடை சார்த்தியதும் திருக்கோயிலில் உள்ள எல்லா இறை மூர்த்திகளும், ரிஷிகளும், நவகிரக தேவதைகளும், திருத்தூணில் குடிகொண்ட தேவதைகளும் உயிர் பெற்று எழுந்து மூலவரான இறைவனை ஆராதிக்கத் தொடங்குகின்றன.

திருவிளக்கு ஏந்திய பாவைகளில் உள்ள விளக்குகளில் தாமாக ஜோதி தோன்றி பிரகாசிக்கத் துவங்கி விடும். அதனால்தான் திருப்பாவைகளில் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றக் கூடாது என்ற விதியை ஆலயங்களில் விதித்துள்ளார்கள். இந்தத் திருப்பாவைகள் தங்களுடைய தூய்மையான ஜோதிப் பிரகாசத்தால் இறைவனை ஆராதிக்கும்போது பகல் நேரத்தில் அக்கோயிலில் விழைந்த மனிதத் தவறுகளால் நிறைந்த எண்ண தோஷங்களும், மந்திர, தந்திர தோஷங்களும், சங்கல்ப குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

எனவேதான் ஒரு கோயில் எவ்வளவுதான் குப்பை கூளத்துடன், எண்ணெய்ப் பிசுக்கு, ஒட்டடையுடன் காட்சி அளித்தாலும் இறைவனின் சான்னியத்தியம் என்பது சிறிதளவும் குறையாது. இரவு நேர தேவ பூஜையே மக்கள் தவறுகளை நிவர்த்தி செய்கிறது.

நீ விதைத்த தவறான திருப்பணி விதையை நீயே களைய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இந்த இரவு நேரத் திருப்பணிக்கு அழைத்து வந்தேன். இனியும் கால தாமதம் செய்யாமல் கோயிலை அந்தப் பனை விளக்குமாற்றால் கூட்டி திருப்பணியைச் சீக்கிரம் நிறைவேற்று,” என்று பெரியவர் உத்தரவிட்டார்.

அடுத்த விநாடி சிறுவன் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தான். பிள்ளையாரிடம் சித்த பாரம்பரிய நமஸ்காரத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து ஆரம்பித்து திருக்கோயிலை பன விளக்குமாற்றால் கூட்ட ஆரம்பித்தான் சிறுவன். எவ்வளவு நேரம் திருக்கோயிலை கூட்டிக் கொண்டிருந்தான் என்பதை சிறுவன் உணரவில்லை. இதனிடையே பெரியவர் எங்கு சென்று மறைந்தார் என்பதும் சிறுவனுக்குத் தெரியவில்லை.

பிரம்மமுகூர்த்த நேரத்தில் கோயிலை முழுவதுமாகக் கூட்டி முடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு கோயில் வாயிலை அடைந்தவுடன்தான் பெரியவரைப் பற்றிய எண்ணமே சிறுவனுக்கு எழுந்தது. ஒரு புறம் தன்னுடைய கோவணாண்டியைப் பற்றிக் கூட நினைக்காமல் கோயில் திருப்பணியில் மூழ்கி விட்டது பரமானந்தத்தைத் தந்தாலும் மறுபுறம் எந்த உத்தம நிலையிலும் குருவை மறக்கக் கூடாதே, எப்படி நம்முடைய பெரியவரையும் மறந்து திருப்பணியில் இலயித்தோம், அது தவறோ என்று மேலும் மேலும் குழப்ப அலைகளில் மூழ்கித் தவித்தான் சிறுவன்.

ஆனால், அந்தக் கோயில் திருப்பணியும் பெரியவரின் உத்தரவின்பேரில்தானே நிறைவேற்றினோம் என்று தன்னைத்தானே ஒருவாறாகச் சமாதானப்படுத்திக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தான்.

கோயிலின் வாயிலில் பெரியவர் சிறுவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். வெற்றிப் புன்னகையுடன் பெரியவரை நோக்கிய சிறுவனை பெரியவரின் புன்முறுவல் எதிர் கொண்டழைத்தது.

இப்படித்தான் திருப்பணி செய்யனும். இப்ப பாரு கையை என்று சொல்லி தன்னுடைய உள்ளங்கை டீவியைச் சிறுவனுக்குக் காட்டினார். பெரியவரின் உள்ளங்கையில் பார்த்தால் கோயில் பிரகாரம் மிகவும் சுத்தமாக புதுப் பொலிவுடன் காட்சி தந்தது. இப்பதாண்டா நீ ”கும்பாபிஷேகம்” பண்ணி இருக்கிற.”

சிறுவனுக்கு மனம் குறுகுறுத்தது. தான் பல மாதங்களுக்கு முன் பெரியவரிடம் சொல்லாமல் தன் மனதினுள் நினைத்த வார்த்தைகளை இன்று பெரியவர் நினைவு கூர்ந்த விதம் சிறுவனுக்கு ஒரு புதுவித குதூகலத்தை அளித்தது.

பெரியவர் தொடர்ந்தார், ..

” எப்போது ஒரு ஆலயத்தில் உள்ள தெய்வீக சக்திகள் புதுப்பிக்கப்படுகின்றதோ அப்போதுதான் அத்திருக்கோயிலில் உண்மையாகவே கும்பாபிஷேகம் நிகழ்வதாக அர்த்தம். இதற்காகவே ஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் போன்ற மகான்கள் திருக்கோயில்களுக்கு எழுந்தருளி அத்தல இறைவனை நோக்கி மனமுருகி தேவாரப் பாடல்களை இசைத்தனர். அவர்கள் எழுந்தருளிய திருக்கோயில்கள் எல்லாம் ஆயிரம் வருடத்திற்கு புனிதத்துவத்தைப் பெற்று விட்டன. அவர்களுடைய திருப்பாதங்களுக்கு அத்தகைய தெய்வீக சக்தி உண்டு. ”

(இக்காரணம் பற்றியே நமது குருமங்கள கந்தர்வா அவர்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஹோமமும், அன்னதானம், மாங்கல்ய தானம் போன்ற இறை வைபவங்களையும் நிகழ்த்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது,)

” இத்திருத்தலத்தில் பனை விளக்குமாறு கொண்டுதான் கோயில் துப்புரவு பணியைச் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உண்டு. அதனால்தான் உன்னை இங்கு கூட்டி வந்து இறையருளால் இந்தத் திருப்பணியை நிறைவேற்றினோம். ”

” அது மட்டும் அல்லாமல் திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார் இத்திருக் கோயிலில்தான் ஆண் பனை மரத்தை பெண் பனை மரமாக்கி ஒரு தெய்வீக அற்புதத்தை நிகழ்த்தினார்.”

இந்த அற்புதத்தின் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியத்தைப் புரிந்து கொள்வது கடினம். ஆண்மை, பெண்மை என்பது ஒரு தத்துவம்.

எதிர்காலத்தில் ஆண், பெண் உறவுகள் வரம்பு மீறிச் சென்று சமுதாயத்தில் பல துன்பங்களைத் தோற்றுவிக்கும் என்பதால்தான் திருஞான சம்மந்தர் போன்ற அருளாளர்கள் ஆண் பெண் தத்துவ விளக்கத்தை அளித்து எதிர்கால சமுதாயத்தை அழிவிலிருந்து மீட்க தங்களால் இயன்ற அருந் தொண்டை ஆற்றியுள்ளனர். மேலும் பனை மரம் என்பது சுயம்பாய்த் தோன்றுவது. எனவே இத்தகைய தத்துவ விளக்க அற்புதங்களை சுயம்பு விருட்சங்களைக் கொண்டு நிறைவேற்றுவதால் அவை பன்னெடுங்காலத்திற்குப் பரவெளியில் நிரவி நின்று நிரந்தரமாய் உண்மையை விளக்கும் ஞானப் பெட்டகங்களாய் நிலவும்.

மர நிழலையும் குறிப்பாக ஆலமர நிழலையும், கிணற்று நீரையும், பெண்களின் தனத்தையும் புரிந்து கொண்டால்தான் ஆண் பெண் தத்துவத்தை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும். மேற் கூறிய மூன்றுமே வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், பனிக் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

இந்த தத்துவ விளக்கங்களை இறை அவதாரங்களும், இறை அடியார்களும் தங்கள் உபதேசங்களின் மூலமாக மக்களுக்கு அவ்வப்போது அளித்து வருகின்றனர் என்பதும் உண்மையே.

ஆலமர நிழலில் தட்சிணா மூர்த்தி எழுந்தருளி இறை தத்துவத்தின் விளக்கமாய் காட்சி அளிக்கிறார். திருஅண்ணாமலையில் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு இத்தத்துவ விளக்கத்தை மௌனமாக உபதேசக்கிறார் அல்லவா? இதன் மெய்ப் பொருள் விளக்கமே நாம் திருக்கோயிலில் காணும் தட்சிணா மூர்த்தி கோலமாகும்.

உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்னும் தத்துவத்தையே மர நிழல் விளக்குகின்றது என்று முன்னர் கூறினோம் அல்லவா?

அதை அடிப்படையாகக் கொண்டு எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்தின் நிழல் எப்படி இருக்கும் என்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.  கல்லால மரத்திற்கு நிழல் உண்டா? நிச்சயமாகக் கிடையாது. நிழல் என்பது என்ன? மனிதர்களின் வினைத் தொகுதியே அவர்களின் நிழலாகக் காட்சி அளிக்கிறது. அதனால்தான் கர்ம வினைகள் சிறிதும் சாராத வள்ளலார் சுவாமிகள் போன்றோருக்கு அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை.

அதே வண்ணம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்திற்கும் நிழல் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
திருஅண்ணாமலையில் உள்ள கல்லால மரம் மட்டும் அல்லாது பூமியில் உள்ள ஆலமரம், அரச மரம், துளசிச் செடியும் கர்ம வினைகள் அற்றவையே. ஆனால், அவைகளின் நிழல் பூமியில் விழுவதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்ற கேள்வி எழலாம். உண்மையில் அவைகளுக்கும் நிழல்கள் கிடையாது. அந்த மரங்களின் நிழல்கள் என்று பார்ப்பது உங்கள் கர்ம வினைகளின் பிரதிபலிப்பே. எந்த அளவிற்கு இந்த நிழல் பிம்பங்களை நோக்கி ஆத்ம விசாரம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களைச் சார்ந்த கர்ம வினைகளை அறிந்து உங்களை நீங்களே தூய்மைப் படுத்திக் கொண்டு கர்ம வினைகளிலிருந்து முழுவதுமாக விடுதலை பெறுவீர்கள்.

கர்ம வினைகளிலிருந்து முழுவதுமாக நீங்கள் விடுபட்ட அடுத்த விநாடியே உங்களுக்கு எம்பெருமான் தரிசனம் கிட்டி விடும். இதுவே உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்பதன் தத்துவ விளக்கம்.

இன்றைய உலகில் சினிமா, டீவி திரைகளில் தோன்றும் நிழல் பிம்பங்களையும் நிகழ்ச்சிகளையும் நிஜம் என்று நம்பி தங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்வோர் ஏராளம். இதனால்தான் சித்தர்கள்,

‘’ நாங்கள் நிழல்களை நிஜங்களாகப் பார்க்கிறோம்

நிஜங்களை நிழல்களாகப் பார்க்கிறோம் ” என்று சித்த தத்துவ விளக்கத்தை நமக்கு அருளி உள்ளார்கள்.

மனிதர்கள் நிழல் படங்களை நிஜம் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள், ஆனால், சித்தர்களோ நிழல்களின் நிஜத்தை உணர்ந்து ஆத்ம ஞானம் பெறுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? நன்கு ஆத்ம விசாரம் செய்தால்தான் இதன் உண்மைப் பொருள் விளங்கும்.

உதாரணமாக, ஒரு மனிதனின் உருவம் உண்மை. அவனுடைய நிழல் ஒரு பிம்பம், அதாவது ஒரு மாயத் தோற்றமே. ஒரு மனிதனுடைய கர்ம வினைகளே நிழலாகத் தோற்றமளிக்கிறது என்று கூறினோம் அல்லவா? சித்தர்கள் மனிதனின் நிழல் என்ற மாயைக்குப் பின்னால் உள்ள கர்ம வினை என்ற உண்மையைப் பார்க்கிறார்கள். இது நிழலை நிஜமாகப் பார்ப்பதாகும்.அடுத்தபடியாக மனிதன் என்ற உண்மையும் இறைவனின் நிழல்தானே? இறைவனின் பிரதிபலிப்புதானே மனிதனின் ஆன்மா? இதுவே மனிதன் என்ற நிஜத்தை இறைவனின் பிரதிபலிப்பு என்ற நிழலாகப் பார்ப்பது. இதுவே சித்தர்களின் நிலை.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam