யாரையும் திருத்த வரவில்லை, அன்பை வழங்கவே வந்துள்ளேன் .. சற்குரு

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஐயர் மலை மகாத்மியம்

ரத்னகிரிமலை – ஐயர்மலை – வாட்போக்கி – சிவாயமலை
இவ்வரிய இறைப் பெயர்களைத் தாங்கி மக்களின் வழக்கில் அய்யர்மலை என விளங்கும் ரத்னகிரி மலை திருச்சி அருகே உள்ள சிறு நகரமான குளித்தலையின் அருகில் உள்ளது. “ஸ்ரீஅகஸ்தியர் மஹாபிரபு” காலையில், குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரரையும் மதியம் அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரரையும் மாலை குளித்தலைக் காவிரி ஆற்றின் பாலத்தின் எதிர்க் கரையிலுள்ள ஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரரையும் தரிசித்து
“முப்பது நாழியில் முப்பெரும் தரிசனம் தப்பாது தந்திடும் தகைமைச் சிவனடி” என்று அருளுரை தருகின்றார்! வேதம் கூட்டும் சத்யவாக்கு! கூட்டம் கூட்டமாக இன்றைக்கும் சித்புருஷர்கள் எப்போதும்ம் உலவுகின்ற உத்தமத் தலங்களுள் ஒன்றாக அய்யர்மலை விளங்குகின்றது எனில் என்னே அதன் மஹிமை! பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாய் விளங்குகின்ற ஈஸ்வரனின் திவ்யமான ஒளிப்பிரகாசத்தை ஒன்று திரட்டி, ஸ்ரீரத்னகிரீஸ்வரராகிய மூலமூர்த்தி தன்னுள் அடக்கியுள்ளாரெனில் இதன் ஜோதியை எவரால்தான் விளக்க முடியும்? ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் திருப்பாதங்கள் பட்ட புனிதமான படிகளில் நாமும் உருண்டு, புரண்டு, எழுந்து, நடந்தால் என்னே பெரும் பாக்யமது!

உலகில் மிகப் பெரிய சுயம்பு லிங்க மூர்த்தி திருஅண்ணாமலையே. அந்த சுயம்பு லிங்க மூர்த்தி பல கூறுகளாகப் பிரிந்து மக்களின் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களை இறைப் பேரின்பத்தில் நிலைநிறுத்தும் பொருட்டும் உலகின் பல இடங்களில் பல நாம ரூபங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார். அத்தகைய சுயம்பு மூர்த்திகளில் தலையாய இடத்தை வகிப்பது திருச்சி குளித்தலை அருகே உள்ள திருஇரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் அய்யர் மலையாகும்.

நமது குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் குருநாதர் சிவகுருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடம் குருகுல வாசத்தின் போது திருஇரத்தின கிரீஸ்வரரின் மகிமைகளை அறியும் பேற்றைப் பெற்றார்கள். அந்த அருள்மலை பொக்கிஷத்தின் ஒரு சிறு துளியை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் அறிந்து பேரின்பம் அடைய வேண்டி இங்கு திருஅருணாசல ஈசன் திருவருளால் சமர்ப்பிக்கின்றோம்.

பிரம்மாவின் சாப விமோசனம்

ஓங்கி அழலாய் நிமிர்ந்த எம்பெருமான் சிவபெருமானின் “அடி முடி” காணாது பிரம்மாவும், திருமாலும் தோல்வியடைந்து வருந்தினர். ஆனால் பிரம்மாவோ தன் தோல்வியை ஒப்புக் கொள்ள இயலாமல் தான் சிவபெருமானின் திருமுடியை தரிசித்ததாகப் பொய் கூறினார். பின்னர் தன்னிலை அடைந்து மூல முதல்வனிடமே பொய்யுரை கூறியதற்காக மனம் வருந்தி அதற்காகப் பிராயச்சித்தம் பெற எண்ணினார்.
திருஅண்ணாமலையில் “ஆதிஅண்ணாமலை” என்னுமிடத்தில் (தற்போது அடிஅண்ணாமலை என்று வழங்கப்படுகிறது) சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பலகாலமாக வழிபாடு செய்யலானார். தன் தவறுக்காக மனம் வருந்தி சிவபெருமானிடம் தொடர்ந்து பிரார்த்தித்தார். இந்த வழிபாடுகளினால் பிரம்மாவுக்குப் பூரண மனஅமைதி கிட்டவில்லை. அதனால் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பிராயச்சித்தம் காண முயன்றார். பல யுகங்கள் கிரிவலம் வந்த பின் ஒருநாள் திருஅருணகிரிஈசன், “நான்முகனே! நீ ஐயர்மலை செல்வாயாக! அங்கு உனக்கு அருணை கிரிவலப் பயனாக யாம் விமோசனம் அளிப்போம்! உன் மூலமாக ஐயர் மலையாம் இரத்தினகிரியின் மஹிமை எங்கும் பரவட்டும்!” என்று அசரீரியாக ஒலித்தார்.

மிக்க உவகையுடன் பிரம்மா ஐயர்மலையை அடைந்தார். இரத்தின கிரியில் (ஐயர்மலை) தற்போது உள்ளது போன்ற படிகள் அக்காலத்தில் கிடையாது. மிகவும் சிரமத்துடன் மலைமேல் சென்று அங்கு அருள்பாலிக்கும் பஞ்ச மகா சித்தர்களை தரிசனம் செய்து அவர்களின் அருளாசியைப் பெற்றார். ஆதி முதல்வனிடம் பொய்யுரை உரைத்ததையும், அதனால் தான் பெற்ற சாபத்தையும் அவர்களிடம் விவரித்து, அந்தச் சாபத்திற்கான பரிகாரம் பெறும் முறையைக் கேட்கலானார்.

பஞ்ச மகா சித்தர்கள் யாவர்?
அய்யர்மலையின் உச்சியில் அமைந்திருக்கும் சுனையில் பஞ்ச மகா சித்தர்கள் என்ற அற்புத சித்தர்கள் வாசம் செய்கின்றனர்.

 1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
 2. சதுர்முக சுரேஸ்வர சித்தர்
 3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்
 4. ஸ்கந்த பதும பலாதி சித்தர்
 5. திரிமதுர நீற்று முனீஸ்வர சித்தர்

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக சதாசர்வ காலமும் திருஇரத்தினகிரி ஈசனிடம் பிரார்த்திக் கொண்டிருக்கும் இந்த பஞ்சமகா சித்தர்களை தரிசனம் செய்யும் அளவிற்குக் கலியுக மக்கள் தூய மனதையோ, உடல் நிலையையோ, மன நிலையையோ பெறவில்லை. இருப்பினும் இந்த உத்தம சித்தர்கள் வாசம் செய்யும் சுனைத் தீர்த்தத்தைத் தலையிலும் உடலிலும் தெளித்துக் கொண்டு, உள்ளேயும் அருந்தினால் பல பிறவிகளின் கர்ம வினைகளை எளிதாகக் கழித்து விட முடியும். எனவே தூய்மையான இந்த சுனைகளை மக்கள் தங்கள் கால்களோ, பாதங்களோ படாமல் தீர்த்தத்தை எடுத்து உபயோகிக்க வேண்டும். இந்த சுனைத் தீர்த்தத்தால் திருஇரத்தினகிரி ஈசனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்வது பெறற்கரிய பாக்கியமாகும்.
இந்த பஞ்சமகா சித்தர்களுக்கு குருவாகத் தலைமை ஏற்றுள்ளவர் “அறுமுக சுரேஸ்வர சித்தர்” என்ற சித்த புருஷராவார். முழுக்க முழுக்கத் தூய்மையால் ஆன சரீரத்தையும், மனித சிற்றறிவிற்கு எட்டாத தவ வலிமையையும் பெற்றவர் அறுமுக சுரேஸ்வர சித்தர்.

இடி தாங்கும் சித்தர்

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்திர பகவான் திருஇரத்தினகிரி ஈசனுக்கு இடிபூஜை நிகழ்த்துகிறார். மிகவும் அபூர்வமான இந்த பூஜையைக் கண்டும் கேட்டும் பரவசமடைந்தவர்கள் இன்றும் உண்டு. இரத்தினகிரியில் நிகழும் இடிபூஜையை ஏற்று அருள்பாலிப்பவரே அறுமுக சுரேஸ்வர சித்தராவார். ஒரு இடியே பல கோடி மரங்களையும் காடுகளையும் ஒரு நொடியில் எரித்து சாம்பலாக்கக்கூடிய சக்தி உடையது. அத்தகைய சக்தி வாய்ந்த இடியைத் தம் திருமேனியில் தாங்கும் வல்லமை பெற்றவர் என்றால் அந்த சித்த புருஷரின் வலிமையையோ, தூய்மையையோ அளவிட்டுக் கூற முடியுமா?
இடியை ஏன் தாங்க வேண்டும்?
மக்கள் இயற்றும் தவறுகளில் சாதாரணமானவை முதல் மிகக் கொடிய பாதகங்களும் அடங்கும். கொடிய தவறுகளுக்கு தண்டனையும் மிகக் கொடியதாக இருக்கும் அல்லவா? இதை மனிதர்கள் ஏற்றுத் துன்புறுவதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த அறுமுக சுரேஸ்வர சித்தர் அத்தகைய கொடிய தவறுகளைத் தம் உடலில் ஏற்றுக் கொள்கிறார். இந்திரன் திருஇரத்தினகிரி ஈசனுக்கு நிகழ்த்தும் இடி பூஜையையும் இறைவன் அனுமதியுடன் தன் உடலில் ஏற்று அந்தத் தவறுகளை மின்னல் ஜுவாலைகளால் சாம்பலாக்குகிறார். எத்தகைய தியாகம் இது!

சித்தர்களின் கருணை மனித அறிவிற்கு எட்டாதது! தாயினும் ஆயிரம் மடங்கு உயர்ந்தது! இந்த உத்தம சித்தர்களையே நாடி வந்தார் பிரம்ம தேவர். பஞ்ச மகா சித்தர்கள் ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரின் அற்புதங்களை பிரம்மாவுக்கு எடுத்துக் கூறினர். இரத்தினகிரியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மகத்துவத்தையும் விரிவாக உரைத்தனர். அதுவே சகல சாபங்களையும் போக்கும் அருமருந்தென உணர்ந்தார் பிரம்மா.
பஞ்ச மகா சித்தர்கள் அருளிய முறையில் பிரம்மா இரத்தினகிரியில் (ஐயர்மலை) தீபம் ஏற்றி ஸ்ரீஇரத்தினகிரி ஈஸ்வரரை முறையாக வழிபட்டார். அதனால் பிரம்மாவின் சாபம் முழுமையாக நிவாரணம் அடைந்து எல்லா நலங்களையும் ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரின் திருவருளால் பெற்றார் பிரம்மதேவர்.

பிரம்மாவுக்குப் பின்னர் பல மன்னர்கள், சித்தர்கள் அருளிய தீப பூஜை முறையைத் தக்க குருநாதர்கள் மூலம் அறிந்து தொடர்ந்து இரத்தின கிரியில் கார்த்திகை தீபமேற்றி வழிபாடுகள் செய்து நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ சீரிய தொண்டாற்றினர். மன்னர்கள் மறைந்த பின் இரத்தினகிரியில் அகண்ட மலை தீபம் ஏற்றும் வழக்கமும் மறைந்து விட்டது. மக்கள் சேவையை மகேசன் சேவையாக எண்ணி அற்புதத் தொண்டாற்றி வரும் ஸ்ரீகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் பொது மக்களின் பேருதவியுடன் யுவ வருட கார்த்திகை தீபத்தை 1995ம் ஆண்டு ஐயர்மலையில் பஞ்சமகா சித்தர்கள் அருளிய வண்ணம் ஏற்றிடப் பெரிதும் விழைந்தார்.
ஸ்ரீகுருமங்கள கந்தர்வாவின் அருளாணையின்படி ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரம அடியார்கள் யுவ வருட கார்த்திகை தீபத்தைப் பொது மக்களின் பேருதவியுடன் இரத்தினகிரியில் ஏற்றி ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரின் திருவருள் அனைவரையும் சென்றடைய வழி செய்தனர். மிகப் பெரிய கொப்பரையை மலை மேல் ஏற்றி அதில் சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி சுமார் ஐந்து நாட்கள் தீபம் எரிய ஏற்பாடு செய்தனர். ஐயர் மலையிலும் அதைச் சுற்றிலும் உள்ள பல கிராமத்திலுள்ள மக்களும் தீபத்தை தரிசித்துப் பேரருள் பெற்றனர். 1995-ம் ஆண்டு துவங்கிய அய்யர்மலை கார்த்திகை தீபப் பெருவிழா இறையருளாலும், குருவருளாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் தவறாது கார்த்திகை தீபத்தன்று அய்யர்மலை சென்று, தங்களால் இயன்ற சேவை செய்து திருஇரத்தின கிரீஸ்வரரின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
பல யுகங்களுக்கு முன் ஸ்ரீ இரத்தினகிரி ஈஸ்வரரிடமிருந்து பிரம்மா பெற்ற திருவருளை இன்று கலியுகத்தில் வாழும் மக்களும் பெற்று வாழ பெருங்கருணை புரிந்து நம்மை வழி நடத்திச் செல்லும் ஸ்ரீகுரு மங்கள கந்தர்வாவுக்கு நன்றியை நவில வார்த்தைகளை எங்குதான் சென்று தேடுவது!

இரத்தினகிரியின் தோற்றம்

எம்பெருமானாகிய சிவபெருமான் உறையும் திருக்கயிலாயத்தில் உச்சிவழுதி என்ற மலைப்பகுதி உண்டு. அம்மலைப் பகுதியில் ஏராளமான ரிஷிகள் தவமியற்றிப் புனிதமான கயிலாயத்தை மேலும் புனிதமடையச் செய்திருந்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ‘உச்சி வழுதி’ மலையைப் புவிவாழ் மக்களுக்குக் கொண்டுவந்து அருள்பாலிக்க அங்குள்ள ரிஷிபுங்கவர்கள் விரும்பினர். ரிஷிகளின் தன்னலமற்ற தியாக உணர்வை அறிந்த சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று உச்சிவழுதி மலைப்பகுதியை பூலோகத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி அளித்தார். பூலோகத்தில் அம்மலையை எந்த இடத்தில் நிலைபெறச் செய்வது என்று அறிந்து வருமாறு ரிஷிகளைப் பணித்தார் சிவபெருமான். நினைத்தவுடன் காரியசித்தி அருளும் இடங்கள் பல பூலோகத்தில் உண்டு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான காரியங்கள் சித்தியாகும். தற்போது இரத்தினகிரி அமைந்துள்ள ஐயர்மலைப் பகுதியைக் காரிய சித்தி நல்கும் உன்னத இடமாகத் தேர்ந்தெடுத்து எம்பெருமானிடம் அறிவித்தனர் ரிஷிகள்.

மேலும் தேவலோகத்தில் ‘இரத்தின சிலாதரங்கள்’ என்ற அதிஅற்புதமான கற்கள் உண்டு. தேவலோக இரத்தின சிலாதரங்களைத் தம் கால்கட்டை விரலில் ஆபரணமாக அணிந்திருந்தார் சிவபெருமான் அந்தச் சிலாதர வளையத்தையும் பூலோக மக்களுக்கு அருள் வழங்க நல்குமாறு சிவபெருமானை ரிஷிகள் வணங்கிக் கேட்டனர்.

ஐயர்மலை

உலகத்தவர் உய்ய நஞ்சையே உண்ட நீலகண்டன் அல்லவா? ரிஷிகள் கேட்டவுடன் எம்பெருமானும் சிலாதர வளையத்தைக் கழற்றி பூமியில் விழச் செய்தார். சிவபெருமான் கட்டை விரலை அணி செய்த அந்த அற்புத இரத்தின சிலாதர வளையம், ரிஷிகள் தேர்ந்தெடுத்த பகுதியில் விழுந்தது. சிவபெருமான் ரிஷிகளைப் பணித்து உச்சி வழுதி மலையைச் சிலாதர வளையத்தின் மீது நிர்மாணிக்கும்படி கூறினார்.

கயிலாயம் பூமிக்கு வந்தால் பூமாதேவியால் அதைத் தாங்க இயலுமா? எனவே சிவபெருமானின் திருஆணைப்படி உச்சிவழுதி மலையை ரிஷிகள் தங்கள் தவ வலிமையால் இலேசான பொருளாக மாற்றி அதன் எடையைக் குறைத்து பூலோகத்திற்குக் கொண்டு வந்து, சிலாதர வளையத்தின் மீது பொருத்தினர். பின்னர் உச்சிவழுதி மலைமேல் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினர். ஆனால் உச்சி வழுதியைச் சிலாதர வளையத்தின் மீது பொருத்திய மறுகணமே சிலாதர வளையம் மலைக்கு மேல் வளர்ந்து, மலையை ஊடுருவி, தான்தோன்றி இலிங்கமாக, சுயம்பு மூர்த்தியாக, இரத்தினகிரீஸ்வர பிரானாக ஒளிர்ந்தது. தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். அண்ட சராசரத்திலுள்ள எல்லா ரிஷிகளும், முனிவர்களும், தேவாதி தேவர்களும் இரத்தினகிரி ஈசனை தரிசித்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

ஐயர்மலையில் இரத்தினகிரி லிங்க மூர்த்தி பட்டை லிங்க வடிவில் அமைந்திருக்கிறார். பூமியிலிருந்து மலையைக் கிழித்துக் கொண்டு வெளிவருவதற்கு ஏதுவாகக் கூர்மையான பிம்பத்தை உடையவர். இரத்தினம் என்றால் விலை மதிப்பற்றது, விலை மதிக்க முடியாதது என்று பொருள். தேவலோக சிலாதர ரகசியத்திலிருந்து உருவானதால் உலகில் உள்ள கோடானு கோடி இரத்தினங்கள் கொடுக்கக்கூடிய செல்வங்களையும், அனுகூலங்களையும், அனுகிரகத்தையும் அருளும் இரத்தின பாணலிங்கமாகக் காட்சியளிக்கிறார் இரத்தினகிரிப் பெருமான்.

சித்தர்கள் மட்டுமே அறிந்த சிலாதர ரகசியங்களைக் கலியுக மக்களும் உயத்துணரப் பெருங்கருணை கொண்டு எடுத்துரைத்து வருகின்றார்கள் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளாய் பவனி வரும் குருமங்கள கந்தர்வா அவர்கள்

இரத்தினகிரீஸ்வரர் தரிசன மஹிமை

ஒப்பற்ற இரத்தின சிலாதரங்களினால் ஆன சிவலிங்கமாய் இரத்தினகிரிப் பெருமான் அமைந்திருப்பதால் உயர்ரக இரத்தினக் கற்கள் அனைத்தையும் ஒருங்கே தரிசித்த பலனைப் பெறலாம். பூலோக மக்களின் ஊனக் கண்களுக்கு இரத்தினகிரி கல்மலை போல் தோன்றினாலும், சித்தர்களும், மகான்களும், ரிஷிகளும் இரத்தினகிரியை தரிசனம் செய்யும்போது அதிலிருந்து உயர்ரக இரத்தினக் கற்களிலிருந்து வரும் ஒளி வீச்சுக்களைக் காண முடியும். அந்த ஒளி வீச்சுக்கள் தங்களை தரிசனம் செய்வோர் உடலில் புகுந்து எண்ணற்ற உயர் தெய்வீக நிலைகளை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்றன.

ஸ்ரீஇரத்தினகிரீசர் ஐயர்மலை

ராஜ லிங்கம் :- இரத்தினகிரி லிங்க மூர்த்தியை “ராஜலிங்கம்” என்று அழைப்பதுண்டு. சாதாரண மனிதன் இரத்தினகிரி ஈசனை தரிசனம் செய்தால் ஈசனின் பேரருள் கடாட்சத்தால் அரசன் ஆகிறான். ஆனால் ராஜாக்கள் அவரை தரிசனம் செய்யும்போது ராஜாதி ராஜாவாக, மன்னர்களுக்கெல்லாம் மன்னராக ஆகிறார்கள். சிறு பதவிக்காரர் அடுத்த பதவிக்கு உயர்த்தப்படுகிறார். பெரும் பதவியில் இருப்பவர் பெரும் புகழை அடைகிறார். சாதாரண துறவி, சாந்தம் தரும் பெரும் துறவி ஆகிறார். சாதாரண வைத்தியர் பெரும் வைத்தியராய் (SPECIALIST) மாறுகிறார். சாதாரண வியாபாரி பெரும் வியாபாரி ஆகிறார். சாதாரண விவசாயி பெரும் பண்ணையாராக ஆகிறார். அப்படியானால் ராஜலிங்கத்தை தரிசனம் செய்யும் சாதாரண திருடன் பெரிய திருடனாக மாறுவானா என்ற கேள்வி எழலாம். சாதாரண திருடனும், பெரிய திருடனும் முறையான தரிசனத்தால் மனம் திருந்தி நல்ல மனிதர்களாய் மாறுவார்கள். இதனிலும் உயர்ந்த ஓர் அற்புதச் செயல் இருக்க முடியுமா?

இரத்தினகிரி பூமிக்கு வருவதற்கு முன் பூவுலகில் இரத்தினமே கிடையாது. எல்லா இரத்தினங்களும் எம்பெருமான் இரத்தினகிரி ஈசனிடமிருந்தே தோன்றின. எனவே குற்றமுடைய, தோஷமுள்ள இரத்தினங்களை அணிந்து கொண்டு அதனால் துன்புறும் மக்கள் இரத்தினகிரி ஈசனை அணுகிப் பரிகாரம் காணலாம். தோஷமுள்ள இரத்தினத்தை ஈசன் திருவடிகளில் சமர்ப்பித்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, வலம் வந்து வணங்கினால் இரத்தின தோஷங்கள் நிவர்த்தியாகும்.

இரத்தின வியாபாரிகளுக்கு ஒரு கண்கண்ட புண்ணியத் தலம் இரத்தினகிரி. முறையாக வழிபாடு செய்து, ஈசனை வலம் வந்து வணங்குவதால் அவர்கள் தங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடையலாம். தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.

N2023 ஆண்டில் ஐயர்மலையில்
சித்த குரு வேத சூக்த
மாமேரு தோற்றம்

கிரிவல மகிமை :- இரத்தினகிரியை வலம் வர உகந்த நாட்கள்

 1. பங்குனி உத்திரம்
 2. தைப்பூசம்
 3. மகா சிவராத்திரி
 4. கார்த்திகை தீபம்
 5. (அ) திரயோதசி திதி,

(ஆ) கார்த்திகை சோம வாரங்கள்,
(இ)திருவாதிரை நட்சத்திரம்,
(ஈ) மார்கழி மாதம் முழுவதும் (திருவெம்பாவை பாடிக்கொண்டே கிரிவலம் வருவது சிறப்பானது)
(உ) அவரவர் பிறந்த நட்சத்திர தினங்கள்
(ஊ) மூதாதையர் இறந்த திதிகள்
6. சிலருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்தோ, அல்லது மற்ற பாவ  கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் அதனால் சூரிய குற்றங்களும், தோஷங்களும் ஏற்படும். அத்தகைய துன்பத்திற்கு ஆளானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் வலம் வர துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
7. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் காலங்கள்
இவை தவிர ஒவ்வொருவருடைய தனிப்பட்ட காரிய சித்திக்கான வலம் வரும் முறைகளும், அற்புதமான நாட்களும் உண்டு. அம்முறைகளைத் தக்க குருவை நாடித் தெரிந்து கொள்ளவும்.

தலச் சிறப்பு சந்திர பகவான்

எங்கும் இல்லாத விதத்தில் இத்திருத்தலத்தில் சந்திர பகவான் சூரியனுக்குச் சமமான நிலையில் அருள்பாலிக்கிறார். பொதுவாக ஒரே பத்தினியுடன் காட்சி தரும் சந்திர பகவான் இங்கு திருஓணம் திருஆதிரை என்ற இரு தேவிகளுடன் அனுக்கிரக மூர்த்தியாய் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீமன் நாராயண மூர்த்திக்கு உகந்த நட்சத்திரம் திருஓணம்; சிவபெருமானுக்கு உகந்தது திருஆதிரை. இந்த இரண்டு ஒப்பற்ற தேவிகள் அளிக்கும் அருட்கடாட்சத்தை ஒருங்கே வழங்குகிறார் சந்திர பகவான். சரபேஸ்வரர், நரசிம்மர், உக்ரஹப் பிரத்யங்காரா, மாலினி, சூலினி, காளி போன்ற உக்கிரஹ மூர்த்திகளின் உபாசகர்களுக்கு பூஜா நியதிகளில் உத்தம நிலை அடையவும், சாந்தி பூஜைகளின் பலன்கள் அபரிமிதமாய்ப் பொழியவும் திருஆதிரை திருஓண தேவியர் சமேத சந்திர பகவான் தரிசனம் வழிவகுக்கிறது.

சோமநாதர் : - இரத்தினகிரி ஈசனின் அருள் ஆணைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரதிஷ்டா மூர்த்தி சோமநாதர், வருங்காலத்தில் சந்திரக் குற்றங்கள் நிறைய ஏற்படும் என்பதை உணர்ந்த சந்திரபகவான் கலியுக மக்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு இரத்தினகிரியில் சோமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். தண்ணொளியையும் மற்ற எல்லாவித சித்திகளையும் அனுக்கிரகமாகப் பெற்றார். தற்போது இத்தலம் கவனிக்கப்படாத நிலையில் இருந்தாலும், சித்தர்கள் அடிக்கடி வாசம் செய்யும் உன்னத உறைவிடமாக உள்ளது. சித்த மகாபுருஷர்கள் இங்கே தங்களுக்குள் அளவளாவி கலியுக மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்கித் தங்கள் அருட்கடாட்சத்தை எல்லாத் திக்குகளிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீசூரிய பகவான் ஐயர்மலை

ஸ்ரீசந்திர பகவான் ஐயர்மலை

வழிபாட்டு முறைகள் :- ஒப்புயர்வற்ற கருணாமூர்த்தியான இரத்தினகிரி ஈசன் அதிதீட்சண்ய சுயம்பு மூர்த்தி. எல்லா நலங்களையும் கேட்காமலே நல்கும் கருணைக் கடல். இத்துணை சிறப்புடைய தெய்வ மூர்த்தியை எவ்வாறு வணங்குவது? சித்தர்கள் அருளியுள்ள சில வழிபாட்டு முறைகளைக் காண்போம்.
இரத்தினகிரியில் சுமார் 1200 முதல் 1500 தேவ அசுரர்கள் படிகளாய் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இரத்தினகிரியில் அவர்கள் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற, ஒவ்வொரு படியிலும் மெதுவாக ஏறி, ஏதாவது ஒரு இறை நாமத்தை ஓதி (சிவாயநம, மகாதேவர், ராமா, முருகா போன்றவை) பின்னர் அடுத்த படியில் காலை வைக்க வேண்டும். எந்த ஒரு படியை விட்டு விட்டு ஏறினாலும் அந்தப் படியாய் அமைந்து அருள்பாலிக்கும் தேவ அசுரரின் அனுக்கிரகத்தை இழந்தவர்கள் ஆவோம். ஒவ்வொரு படியிலும் பச்சரிசி மாக்கோலம் இட்டு, முடிந்தால் மஞ்சள், குங்குமம், மலர்கள் கொண்டு அர்ச்சித்து செல்வது சாலச் சிறந்தது. இரத்தினகிரியில் 1500 படிகளில் மூன்று படிகள் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. அந்த மூன்று படிகள் அருளும் வரங்களாவன:
(அ) மனிதன் என்றால் எண்ணங்கள் உடையவன் என்று பொருள். எண்ணங்கள் இல்லாத மனிதனே கிடையாது. எண்ணங்கள் நல்லவையாக இருக்கலாம். கெட்டவையாக இருக்கலாம். சஞ்சலமுடைவையாக இருக்கலாம். இந்த பலதரப்பட்ட எண்ணங்களை எப்போதுமே உடையவனே மனிதன் “இப்படிப்பட்ட மனிதன் என்னை மிதித்து ஏறும்போது அவனுடைய சஞ்சலமான எண்ணங்களை நான் மாற்றி அருள வேண்டும்” என்ற தபசை ஏற்று அருள் பெற்ற பலகணி சித்ர சூரன் என்ற தேவ அசுரன் ஒரு படியில் அமர்ந்திருக்கிறார்.

(ஆ) மனிதனுடைய எண்ணங்களில் எது நல்லது, எது கெட்டது என்று முடிவெடுக்கும் திறமை அவனிடம் இல்லை. இது நமக்கு நல்லது என்று எண்ணி எடுக்கும் முடிவானது பிற்காலத்தில் அவனுக்குத் துன்பமாய் வந்தமைகிறது. எனவே “நல்லது கெட்டதை அறியாத மனிதன் என்னை மிதிக்கும் போது அவனுக்கு எது தகுதியோ, எது நன்மையோ அதை அளிக்கும் வரத்தை எனக்குத் தர வேண்டும்!” என்று ஈசனைப் பிரார்த்தித்து வரம் பெற்ற வலத்ரய புவிசந்திராசுரன் என்ற தேவ அசுரன் ஒரு படியில் அமர்ந்திருக்கிறார்.

(இ) “மனிதன் என்றாலே எண்ணங்களை உடையவன். அவை நல்லவையாகவோ, கெட்டவையாகவோ இருக்கும். அதனால் வரும் விளைவுகளை மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும். கடவுள் இதில் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார். மனிதனின் இப்போதைய நிலையைப் பற்றிக் கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை. பிறந்த மனிதனுக்கு இறப்பு நிச்சயம். எல்லோரும் ஆவி உலகை அடைந்தே தீர வேண்டும். எனவே என் படியை யார் மிதிக்கிறார்களோ அவர்களுக்கு இறந்தவுடன் ஆவியுலகில் நிம்மதியாய் வாழ நான் அனுக்கிரகம் செய்ய வேண்டும்!” என்ற வரத்தை எம்பெருமானிடம் வேண்டிப் பெற்றார் மூன்றாவதான கல்பணாத்ரய பஹுதாசுரன் என்ற தேவ அசுரன்.

படி தீப வழிபாடு : ஒவ்வொரு படியிலும் தீபமேற்றி வழிபடுவதால் கிட்டும் பலன்களோ ஏராளம். இந்த வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் :- தீபாவளி தினம், கார்த்திகை தீப தினம். 1500 படிகளிலும் தீபமேற்றி வழிபடும் சக்தி இல்லாதவர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ற அளவு தீபங்களை ஏற்றி இரத்தினகிரி ஈசனின் அருளைப் பெறலாம்.
முறையான படி தீப வழிபாடு

 1. பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது.
 2. பிரிந்த கணவன் மனைவியைக் கூட்டுவிக்கிறது.
 3. நியாயமாக ஒருவருக்குச் சேர வேண்டிய சொத்து எங்காவது தடைப்பட்டிருந்தால், தடை நீங்கி சொத்து உரியவரை வந்தடையத் துணை புரிகிறது.
 4. அலுவலகத்தில் ஒருவருக்கு நியாயமாக வர வேண்டிய பணம், ஏதாவது ஒரு காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் பணத்தைப் பெற வழி செய்கிறது.
 5. கார்த்திகை தீபத்தன்று மலையில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய், எண்ணெய், திரி போன்ற பொருட்களையும், சரீர சேவையையும் அளித்து இரத்தினகிரி தீபத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்களும் தரிசனம் செய்யத் துணை புரியும் பக்தர்களுக்கு இரத்தினகிரி ஈசனின் அருட்கடாட்சமும், பஞ்ச மகா சித்தர்களின் அனுக்கிரகமும், பிரம்ம தேவனின் அருளாசியும் கிட்டும் என்பது உறுதி. இங்கு கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்ய வரும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் அளிப்பதும் பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களில் இரத்தினகிரியை வலம் வரும் அடியார்களுக்கு உண்ண உணவும் குடிக்க நீர்மோர், பானகம் போன்ற “தாக சாந்திகளை” அளிப்பதும் பெறற்கரிய பேற்றைப் பெற்றுத் தரும்.
ஐயர்மலை கிரிவலமுறை

அய்யர்மலை கிரிவல முறை :- பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் காலத்தை ஒருநொடிப் பொழுதும் வீணாக்காது இறைசேவையில் செலுத்த வேண்டும். ஒரு மனிதன் இறைவனுக்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் வாழ்ந்த நாட்களையே அவன் உண்மையில் வாழ்ந்த நாட்களாக இறைவனால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றெல்லாம் வீணாகக் கழிந்த காலமே! ஐயர்மலை ஈசனை முறையாக கிரிவலம் வந்து கலியுக மக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற சித்தர்கள் அருளியுள்ள வழிமுறைகளைக் காண்போம்.

பாலூட்டிப் பிள்ளையார்
ஐயர்மலையில் கிரிவலத்தைத் துவங்குமுன் பாலூட்டி பிள்ளையாரை தரிசிக்க வேண்டும். மலையடிவார மண்டபத்தில் முதன்மையாக வீற்றிருக்கும் எழில் உருவம் கொண்ட அனுக்கிரக மூர்த்தியே பாலூட்டிப் பிள்ளையார் ஆவார். இவரை தரிசனம் செய்து கற்பூரம், பசு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அச்சன்னிதானத்தில் கிடக்கும் கற்பூரக் காகித உறையையோ, எரிந்த தீக்குச்சிகளையோ, தேங்காய் நார் போன்ற குப்பைகளையோ அகற்றி வழிபடுவது உத்தமமான வழிபாடாகும். அபார சக்திகள் உடைய திவ்ய மூர்த்தி இவர். பாலூட்டிப் பிள்ளையார் ஐயர்மலையில் தோன்றிய நிகழ்ச்சியே ஓர் அற்புத சரித்திரமாகும்.

ஸ்ரீபாலூட்டி பிள்ளையார் ஐயர்மலை

“லால்” என்றால் சிகப்பு என்று பொருள் “லால்குடி” என்றால் “செந்தாமரைச் சிகப்பாய் பூத்து இருக்கும் திவ்ய தேவ அமிர்தத்தைப் பருகு” என்று பொருள் அத்தகைய உன்னத அமிர்தத்தை, தான் பருக வேண்டி தன் தாயாகிய பிரவர்த்த ஸ்ரீமதி அம்மனைப் பிரார்த்தித்தார் பிள்ளையார்! எங்கு தெரியுமா? அதுவே திருச்சி அருகே உள்ள லால்குடி.

லால்குடியில் அருளாட்சி புரியும் ஸ்ரீமதி அம்பிகை, பிள்ளையாரின் வேண்டுகோளை ஆமோதித்து, “மகனே! ஞானப்பால் வேண்டுமென்றால் அமிர்தமய அமிர்தவர்ஷிணி ராகத்தில் நாதம் மீட்டும் தட்சிணா மூர்த்தியின் அனுக்கிரகம் வேண்டும். நாதத்தால் உருகிப் பாடி உன் தந்தையாகிய சிவபெருமானை மகிழ்விக்க வேண்டும்” என்று அமிர்தம் பெறும் வழியைக் கூறினாள். எம்பெருமானை கானத்தால் மகிழ்விக்க அற்புத வீணை வேண்டுமல்லவா! அதற்காக நல்லதோர் வீணையைத் தேடி அலைந்தார் பிள்ளையார். தீவிரமான முயற்சிக்குப் பின் சிறந்த வீணை ஒன்றைப் பெற்று அதில் அருமையான கீதங்களை இனிமையாக உள்ளம் உருகிப் பாடினார் மகாகணபதி! கணபதியின் கானாமிர்தத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு ஞானாமிர்தத்தை அளிக்க முன் வந்தார் வீணா தட்சிணாமூர்த்தியாக!
“அப்பா கணபதி! உனக்கு ஞானப்பாலை அளிக்கின்றேன். நீ இரத்தின கிரீஸ்வரர் மலைக்குச் சென்றுதான் இந்தப் பாலைப் பருக வேண்டும்!” என்று அருளாணையிட்டார் லால்குடி ஈசன். பிள்ளையார் அவ்வாறே ஞானப்பாலை எடுத்துக் கொண்டு இரத்தினகிரி அடிவாரம் சென்று அமர்ந்தார். அதே சமயம் பிள்ளையார் ஞானப்பால் பருகப் போவதை தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தங்கள் ஞானக் கண்ணால் கண்டு தாங்களும் அந்த தேவாமிர்தத்தில் ஒரு பங்கைப் பெற பேராவல் கொண்டனர். தங்கள் சுய ரூபத்துடன் நேராகப் பிள்ளையாரிடம் சென்றால் அவரிடமிருந்து பாலைப் பெற முடியாது என்று எண்ணிய அவர்கள் சிறுசிறு குழந்தைகள் வடிவெடுத்து இரத்தினகிரியை அடைந்து பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டனர்.

பலனூட்டும் பிள்ளையார் :- பிள்ளையார் அமிர்தப் பாலை வேண்டுமென்றே வழிய விட்டும் சிந்த விட்டும் மெதுவாக அருந்தத் தொடங்கினார். வாயில் இருந்து சிறிது பால் கீழே வழிந்தது. குழந்தை வடிவிலிருந்த தேவர்களும், ரிஷிகளும் “பாலை எனக்குத் தா! எனக்குத் தா” என்று அழுது அடம்பிடித்து அவர் திருவாயிலிருந்து வழிந்த பாலைப் பருகினர். பிள்ளையாரும் “சிறு பிள்ளைகள்தானே! பருகிவிட்டுப் போகட்டும்” என்று அவர்களைத் தடுக்காமல் விட்டு விட்டார். அன்றிலிருந்து இரத்தினகிரிப் பிள்ளையாருக்குப் “பாலூட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வழங்கலாயிற்று. இவருக்குப் பால் அபிஷேஷம் செய்து அந்தப் பாலை இங்கு ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளிப்பதால்

 1. குழந்தைகளின் ஆயுள் பெருகும்.
 2. ஆரோக்கியமான வாழ்வைக் குழந்தைகள் பெறுவர்.
 3. குழந்தைகள் சீரான உடல் வளர்ச்சியையும், மன வளர்ச்சியையும் பெறுவர்.
 4. மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் நன்னிலை பெறுவர்.

பாலூட்டிப் பிள்ளையார் ஞானப்பாலைத் தான் பருகியதோடு மட்டுமல்லாமல் எல்லாக் குழந்தைகளுக்கும் ஞானப்பாலை அளித்து அவர்கள் பேரானந்த நிலையை அடைய வழி காட்டினார். எனவே இந்த அற்புதக் கருணாமூர்த்தியின் திவ்ய தரிசனம் என்றும் உன்னத, பரந்த நோக்கை மனிதன் பெற வழிகோலுகிறது. ஞானப்பால் உண்டவுடன் தனது அற்புத வீணாகானத்தால் எம்பெருமானை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார் பிள்ளையார். பாலூட்டிப் பிள்ளையாரை தரிசிக்கும் முன் வீணாதட்சிணா மூர்த்தியை தரிசிப்பது பன்மடங்குப் பலன்களைத் தரும். வீணையை ஏந்திக் காட்சி தரும் வீணா தட்சிணா மூர்த்தியை லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் காணலாம்.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி
லால்குடி

பாலூட்டிப் பிள்ளையாரின் திருவிளையாடல் :- பத்ர ஜலன் என்ற மிளகு வியாபாரியும், அனந்த ஜயன் என்ற மிளகாய் வியாபாரியும்,  சித்ர விஜயன் என்ற புளி வியாபாரியும், சம்பரன் என்ற எண்ணெய் வியாபாரியும், காலவிதன் என்ற வெல்ல வியாபாரியும், தான விஜயன் என்ற அரிசி வியாபாரியும், சிகாமணி என்ற நவதானிய வியாபாரியும், மாசிலாமணி என்ற தங்க, நவரத்தின வியாபாரியும், தங்கள் குடும்பத்தோடும், பல குதிரைகள், மாடுகள் பூட்டிய வண்டிகளில் ஏற்றிய வியாபாரப் பொருட்களோடும் புதுச்சேரியிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
இதையறிந்தான் மாறவர்மன் என்ற கொள்ளைக் கூட்டத் தலைவன். இந்த விலையுயர்ந்த வியாபாரப் பொருட்களை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டான். எல்லாவிதப் போர் திறமைகளிலும் தேர்ந்த கொள்ளைக்காரர்கள் நூறு பேருக்குக் குறையாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சகல ஆயுதங்களுடன் குதிரைகள் மேல் அமர்ந்து இரத்தினகிரி அருகே பதுங்கி இருந்தான் கொள்ளையடிப்பதற்காக! இரத்தினகிரிக்கு அருகில் வந்த வியாபாரிகள் தங்கள் வண்டிகளை நிறுத்தி இரவு தங்குவதற்காகக் கூடாரம் அமைத்தனர். அவ்விடத்திற்கு ஒரு சிறுவனாக வடிவம் தாங்கி வந்தார் பாலூட்டிப் பிள்ளையார்!

கூடாரத்திலோ வியாபாரிகள் குழந்தைகள் பருகுவதற்காகத் தங்கக் கொப்பரைகளிலும், வெள்ளிக் கொப்பரைகளிலும் பால் நிரப்பி வைத்திருந்தனர். சிறுவன் வடிவில் வந்த பிள்ளையார் “பால் கொடுத்தால் பாதகம் வராமல் காப்பேன், பால் கொடுத்தால் பாதகம் வராமல் காப்பேன்” என்று கூவிக்கொண்டே ஒவ்வொரு கூடாரமாக வருகிறார். தங்கக் கிண்ணங்களிலும் வெள்ளிக் கிண்ணங்களிலும் பாலை ஊற்றிக் குழந்தைகளுக்குப் பருகக் கொடுத்தனர் தாய்மார்கள்!

பிள்ளையாராகிய சிறுவனைப் பார்த்த குழந்தைகள் அவருக்குப் பால் கொடுத்தால்தான் தாங்கள் குடிப்போம் என்று அடம் பிடித்தனர். தாய்மார்கள் “நீங்கள் பாலைக் குடியுங்கள் எஞ்சிய பாலை இந்தச் சிறுவனுக்குக் கொடுப்போம்” என்று சமாதானப்படுத்திப் பாலைப் பருகும்படிக் கூறினர். குழந்தைகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வேறு வழி இல்லாமல் எல்லா தாய்மார்களும் ஒன்றாகக் கூடி, “தம்பி! உனக்குப் பால் தருகிறோம். நீ பாலைக் குடித்துவிட்டு எங்கள் குழந்தைகளையும் பாலை அருந்தச் செய்யவேண்டும்” என்று பிள்ளையார் சிறுவனிடம் கேட்டுக் கொண்டனர்!

அதற்குப் பிள்ளையார் ஒரு நிபந்தனை விதித்தார் என்ன அது? “எனக்குத் திருப்தி ஆகும்வரை அருந்துவதற்குப் பால் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகளைப் பாலைப் பருகச் செய்வேன்” என்று தாய்மார்களிடம் கூறினார். தாய்மார்களும், “இவன் சிறுவன் தானே! எவ்வளவு பாலை குடித்து விடப் போகிறான்? அதிகபட்சம் ஐந்தாறு குவளைதானே குடிப்பான். நம்மிடமோ நூற்றுக்கணக்கான பசுக்கள் உள்ளனவே அதனால் கவலையில்லை” என்று நினைத்து பிள்ளையாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். எல்லாத் தாய்மார்களையும் ஒன்றாகக் கூடச் சொன்னான் சிறுவன்! “சொன்ன வாக்கு தவற மாட்டீர்களே?” என்று ஒவ்வொரு தாய்மாரிடமும் தனித்தனியாகக் கேட்டு உறுதி செய்து கொண்டான் பிள்ளையார் சிறுவன். விநாயகச் சிறுவனைப் பார்த்த எந்தத் தாயும் அவர் வார்த்தையை மறுக்க முடியாமல் “சரி” என்று ஒத்துக் கொண்டனர். அனைத்துக் குழந்தைகளும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகள் போல் பிள்ளையாரைச் சுற்றி அவர் பின்னாலேயே ஓடினர். இப்போது பிள்ளையார் மீண்டும் ஒரு நிபந்தனை விதித்தார்.“எனக்குப் பால் தர இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான் பிள்ளையாரின் அடுத்த நிபந்தனை … கணபதியைச் சுற்றியுள்ள குழந்தைகள் தங்கள் தகப்பனாரிடம் அடம் பிடிக்க ஆரம்பித்தனர். அனைத்து வியாபாரத் தந்தைமார்களும் ஒன்றாகக் கூடி சிறுவன் பிள்ளையாரின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டனர்.

“இப்போது எனக்கு முதலில் தங்கக் குவளையில் பால் வேண்டும்,” என்றான் சிறுவன்.. எல்லாக் குழந்தைகளும் தங்களிடமிருந்த தங்கக் குவளைப் பாலை பிள்ளையாரிடம் நீட்டி “இதை எடுத்துக் கொள், இதை எடுத்துக் கொள்” என்று போட்டி போட்டுக் கொண்டு கூறினர். கணபதி சிறுவனுக்கு மிக்க மகிழ்ச்சி! தாய்மார்களையும், தந்தைமார்களையும் தங்கக் குவளையில் பாலை ஊற்றச் சொன்னார் பிள்ளையார் அவர்கள் ஊற்றிய பாலை எடுத்துக் குழந்தைகள் பிள்ளையாரிடம் கொடுத்தனர்.

ஸ்ரீஸ்ரீமதி அம்மன் லால்குடி

பிள்ளையார் பாலைக் குடிக்க ஆரம்பித்தார்! குடம் குடமாய்ப் பாலைக் குடித்தார்! எல்லோரும் அசந்து விட்டனர். குடங்களிலிருந்த பால் எல்லாம் தீர்ந்து விட்டது! பிரமிப்பால் அனைவரும் செய்தறியாதிருந்தனர். பிள்ளையார் ஒரு சொட்டுப் பால் பாக்கியில்லாமல் எல்லாப் பாலையும் அருந்தித் தீர்த்து விட்டார். பிள்ளையார் பாலைக் குடித்தவுடன் குழந்தைகள் மட்டுமன்றி பெற்றோர்களுக்கும், ஏனையோருக்கும் தங்கள் வயிறு முட்டப் பால் குடித்தது போன்ற திருப்தி ஏற்படவே, அவர்கள் “இவன் சாதாரணச் சிறுவன் இல்லை. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது” என்று நினைத்தனர்.

பிள்ளையாரிடம் “தம்பி உன் பெயரென்ன? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டனர். “அடியேன் இரத்தினகிரி ஈசனின் அடிமை!” என்று பதிலளித்தார் பிள்ளையார். இதைக் கேட்டதும் வணிகர்கள் பேருவகை உற்றனர். “அடேயப்பா! இரத்தினகிரி ஈசன் இங்குதான் இருக்கிறாரா? அவரை வணங்க வேண்டுமே!” என்று கூறி, இரத்தினகிரி இருக்கும் இடத்தைக் காட்டும்படி பிள்ளையாரிடம் வேண்டினர். “இதோ! மேலே உயரமான மலை இருக்கிறதே, அதுதான் இரத்தினகிரி, வாருங்கள் அனைவரும்! இரத்தினகிரி ஈசனை தரிசனம் செய்வோம்!” என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு  பிள்ளையார்ச் சிறுவன் முன்னே சென்றான். நூற்றுக்கணக்கான ரதங்களும், மாட்டு வண்டிகளும், குதிரைகளும், வியாபாரப் பொருட்களைச் சுமந்தவாறே அவர் பின்னே தொடர்ந்து மலையடிவாரத்தை அடைந்தன. இவ்வளவு வியாபாரப் பொருட்களையும் பார்த்தான் மாறவர்மன். தன் கூட்டத்துடன் அவர்களிடம் நெருங்கி, “எல்லோரும் உங்களிடம் இருக்கும் பொருட்களையெல்லாம் கொடுத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான். எல்லா வியாபாரிகளும் நடுங்கி என்ன செய்வதென்று அறியாமல் பிள்ளையார்ச் சிறுவனை நோக்கினர். பிள்ளையார் சிறுவனும் அமைதியாக மாறவர்மனிடம், “உன்னால் முடிந்தால் அனைத்தையும் நீயே வந்து எடுத்துக் கொள்!” என்றான்.

நூறு குதிரைத் திருடர்களும் கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்களால் குதிரையை விட்டு கீழே இறங்க முடியவில்லை. குதிரைகளும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை! பிள்ளையார் வணிகர்களிடம், “நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தைரியமாகப் புறப்பட்டு மேலே செல்லுங்கள். அதற்கு முன் இங்கு அடிவாரத்தில் இருக்கும் பாலூட்டிப் பிள்ளையாரிடம் அடைக்கலம் அடைந்தால் அவர் உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார்” என்று கூறினார். எல்லா வியாபாரிகளும் பாலூட்டிப் பிள்ளையாரின் திருச்சன்னதியை அடைந்தனர். பிள்ளையாரை தரிசித்தவுடன் எல்லோரும் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் தாகம், பசி ஏற்பட்டு வாடினர். குதிரையிலிருந்து இறங்க முடியாமல் போகவே திருடர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். பசி, தாகத்தால் வாடும் வியாபாரக் குடும்பத்தாரைச் சிறுவன் அழைத்து, “எல்லோரும் பிள்ளையாரை வேண்டுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானதை அளிப்பார்,” என்று கூறவே அனைவரும் பாலூட்டிப் பிள்ளையாரிடம் மனமுருகிப் பிரார்த்தித்தனர்.

பிள்ளையார் தந்தங்களிலிருந்து பால் வழிய ஆரம்பித்தது! இரண்டு தந்தங்களிலிருந்தும் வழிந்த பாலைக் குடங்களில் நிரப்பி அனைவரும் அருந்தி தேவாமிர்தம் உண்டது போல் பேருவகை அடைந்தனர். பிள்ளையார்ச் சிறுவனும் பாலூட்டிப் பிள்ளையார் சந்நிதியில் நுழைந்து பிள்ளையாரோடு ஐக்கியமானான். அப்போது தான் வியாபாரிகள் தம்மைக் காக்க சிறுவனாக வந்தது பிள்ளையாரே என்றறிந்து ஆனந்தமடைந்தனர். பாலூட்டிப் பிள்ளையாருக்குப் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால் தானம் அளித்திட

 1. இழந்த செல்வத்தைத் திரும்பப் பெறலாம்.
 2. பொருட்கள் திருடு போகாமல் இருக்கும்.
 3. காணாமல் போன பொருட்களைத் திரும்பப் பெறலாம்.
 4. காணாமல் போனவர்கள் திரும்பி வர, இறையருள் கூடி வரும்.
ஸ்ரீகருப்பண்ண சுவாமி தரிசனம்

அய்யர்மலை கிரிவலத்தில் அடுத்த கட்டமாகப் பாலூட்டிப் பிள்ளையாரை தரிசித்த பின் அடிவாரத்தில் கருப்பண்ண சுவாமியை தரிசிக்க வேண்டும். இரத்தினகிரி முழுமையையும் காக்கின்ற காவல் தெய்வம் இவர். இவருக்குக் கரும்புச் சாறு நைவேத்தியம் வைத்து, “சுவாமி! இரத்தினகிரியை வலம் வரும் எனக்கு வழித் துணையாய்த் தாங்கள் வர வேண்டும்!” என்று பிரார்த்திக்க வேண்டும்.
கரும்புச் சாறு நைவேத்தியம் ஏன்? இரத்தினகிரியில் நம்பிநாதன் என்ற பொற்கொல்லர் ஒருவர இருந்தார். அவர் தான் செய்கின்ற பொன் ஆபரணங்கள் எல்லாவற்றையும் கருப்பண்ண சுவாமியின் திருவடிகளில் வைத்து பூஜை செய்து யார்யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்து விடுவார். அவ்வாறு இருருக்கும்போது ஒரு முறை ஒரு பெரிய வியாபாரி நிறைய நகைகள் செய்து கொடுக்கும்படி நம்பிநாதனிடம் சொல்ல, அவரும் நகைகளைச் செய்து முடித்துக் கருப்பண்ண சுவாமி திருவடிகளில் சமர்ப்பித்து அந்த தனவந்தரிடம் கொடுத்தார். நகைகளைச் சரிபார்த்த தனவந்தர் சில நகைகள் குறைவதைக் கண்டார். நம்பிநாதன் தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றும் எல்லா நகைகளையும் தாம் செய்து கொடுத்ததாகவும் கூறினார்.

தனவந்தர் பொற்கொல்லரைத் தண்டிக்க எண்ணி அரசனிடம் கூட்டிச் சென்றார். வழக்கை விசாரித்த அரசன், “நீ திருடவில்லை என்பதற்கு யார் சாட்சி?” என்று நம்பிநாதனிடம் கேட்டான். “கருப்பண்ண சுவாமிதான் சாட்சி” என்று நம்பிநாதன் பதிலுரைத்தார். அதைக் கேட்ட அரசன் சிரித்து, “நீ திருடவில்லை என்பதற்குக் கருப்பண்ண சுவாமிதான் சாட்சி என்றால் உனக்காகச் சாட்சி சொல்ல அவரை நீ இங்கு வரவழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக இந்தத் தங்கக் குவளையில் கரும்புச் சாற்றை வரவழைக்க சொல் அதுபோதும். நாங்கள் அவரே சாட்சி சொன்னதாக ஏற்றுக் கொள்வோம்!” என்று அறிவித்தான்.
பொற்கொல்லருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார். “கருப்பண்ண சுவாமி! எங்கே அரசன் உன்னை அரசவைக்கு வரச்சொல்வானோ என்று அடியேன் பயந்து கொண்டிருந்தேன். நான் அழைத்தால் நீ நிச்சயம் வருவாய். ஆனால் உனக்குத் தகுந்த மரியாதை அளிக்காமல் அரசன் இருந்து விட்டால் என்ன செய்வது என்றுதான் மனம் குழம்பி இருந்தேன். இப்போது அந்தக் கவலையில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க இந்தத் தங்கக் குவளையில் கரும்புச் சாற்றை வரவழைக்க வேண்டும் சுவாமி!” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். மறுகணமே தங்கக் குவளையில் கரும்புச்சாறு பெருகி வழிந்தது. அனைவரும் கருப்பண்ண சுவாமியின் அருட்கடாட்சத்தை எண்ணி வியந்தனர். நம்பிநாதனுக்கு அவரிடம் இருந்த ஆழ்ந்த பக்தியைப் போற்றிப் புகழந்தனர்.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி தரிசனப் பலன்கள் :- தவறு செய்யாதவர்கள் தேவையில்லாமல் தங்கள் மேல் வீண்பழி சுமத்தப்பட்டிருந்தால் கருப்பண்ண சுவாமிக்குக் கரும்புச் சாறு நைவேத்யம் வைத்து வணங்கினால் அவதூறு, பழி விலகி விடும். இரத்தினகிரியை வலம் வரும் பக்தர்களுக்கெல்லாம் இரவு, பகல் எந்த நேரத்திலும் வழித்துணையாய் வந்து பாதுகாக்கிறார் கருப்பண்ண சுவாமி, எனவே கிரிவலம் வருபவர்கள் கருப்பண்ண சுவாமிக்குக் கரும்புச் சாறு நைவேத்யம் வைத்து அவரை வணங்கியே கிரிவலத்தைத் துவங்க வேண்டும்.

மயிற்பீலி முக தரிசனம்
கிரிவலம் துவங்கியவுடன் நேரே கோயில் தெப்பக் குளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள படிக்கட்டுகளில் திசைக்கு இரண்டு அகல்கள் வீதம் எட்டுத் திக்குகளில் 16 அகல் தீபங்களை ஏற்றி வைத்து அங்கிருந்து இரத்தினகிரி ஈசரை தரிசனம் செய்து வணங்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு மயிற்பீலி முக தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீஇராமபிரானுக்குத் தேரோட்டியாக இருந்தவர் சுமந்திரன் என்ற உத்தமர். இவர் தசரத மகாராஜாவுக்கு மந்திரியாகவும் இருந்தவர். தசரதர் 60,000 ஆண்டுகள் அயோத்தியை ஆண்டார். ஆனால் அவருக்கு முன்னரே கிருதயுகத்தில் பிறந்த சுமந்திரர் இராமபிரான் அரசாண்ட யுகத்தில் 99,999 ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு லட்சம் ஆண்டுகள் முடிவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே பாக்கியிருந்தன. அப்போது யமதூதர்கள் சுமந்திரரின் உயிரைப் பறித்துச் சென்று விட்டனர். சுமந்திரரின் ஜாதகத்தைக் கணித்து அவர் ஆயுளை கணக்கிட்ட போது, அவருடைய ஆயுள் ஒரு லட்சம் ஆண்டுகள் என்று தெரிய வந்தது. ஆனால் ஒன்பது நாட்களுக்கு முன்னரே அவருடைய உயிரை யமதூதர்கள் எடுத்து விட்டால் அது தவறல்லவா? இந்தச் செய்தி சக்கரவர்த்தி ஸ்ரீஇராமபிரானுக்கு எட்டியது. இராமர் பெருங்கோபம் கொண்டார். இராமராஜ்யத்தில் இப்படி ஒரு பழி வரலாமா? உடனே இராமர் யமலோகத்திற்குச் சென்று முறையிட யமனோ, “ஸ்ரீராமனே தன்னிடம் வந்து விட்டார்” என்ற கர்வத்தில் அவரை மதியாது “தான் செய்தது சரியே” என்று வாதிட்டார்.

மயிற்பீலிமுக தரிசனம்
ஐயர்மலை

ஸ்ரீஇராமர் சூரிய பகவானிடம் முறையிட, அவர் ஓடோடி வந்து யமனுடைய தவறை எடுத்துரைத்து, யமன் தன்னுடைய தவறினை நிவர்த்தி செய்யாவிடில் சனீஸ்வரனுடன் சேர்ந்து தாம் யமலோகத்தை முற்றுகையிடுவதுடன் தம் தபோ பலத்தினால் வேறு எமதர்ம ராஜாவை உருவாக்குவதாகவும் கூறினார். இதனால் எமனின் கர்வம் நீங்கித் தம் பிழையினை உணர்ந்து திருத்திக் கொண்டார். இதனால் பூலோகத்தில் சுமந்திரர் உயிருடன் எழுந்தார். அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்,
ஆயுள் முடியும் முன் அவர் உயிர் போன காரணத்தைக் குறித்துக் கேட்டனர். சுமந்திரர் பதிலுரைத்தார். “நான் என் வாழ்நாள் முழுமையையும் இறைவனை தியானிப்பதிலும், அவனுக்காகத் தொண்டு செய்வதிலும் கழிக்காமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் சேர்ந்து சிறிது காலம் பொழுதைக் கழித்தேன். இறைவனுக்காக வாழாத நாட்களின் விளைவால் என் ஆயுள் குறைந்தது” என்றார் சுமந்திரர்.

“குறைந்த ஆயுள் மீண்டும் அளிக்கப்பட்டது ஏன்?” எனக் கேட்டபோது சுமந்திரர், “நான் இரத்தினகிரியை தரிசனமும், கிரிவலமும் செய்து அங்குள்ள தெப்பக்குளத்துப் படிக்கட்டுகளில் தீபங்கள் ஏற்றி சுவாமியின் மயிற்பீலி முக தரிசனம் பெற்றேன். அதனால் குறைக்கப்பட்ட ஆயுள் மீண்டும் எனக்கு அளிக்கப்பட்டது” என்றார். எனவே முறையான மயிற்பீலி முக தரிசனம் :-

 1. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் சேர்ந்து வீண்பொழுது போக்குதல்.
 2. இறைசிந்தனையோ, இறைசேவையோ, மக்கள் சேவையோ செய்யாது நேரத்தைச் செலவிடுதல் போன்ற தவறுகளுக்கு உன்னத பிராயச்சித்தமாக அமைகிறது.
 3. நீண்ட ஆயுளைப் பெறவும்
 4. கிடைத்த ஆயுட்காலத்தை இறைவனுக்காகவும், அவன் படைத்த உயிர்களுக்காகவும் சேவை செய்து கழிக்கவும் ஒருவரப்பிரசாதமாக அமைகிறது. நீண்ட ஆயுள் நல்கும் உன்னத தரிசனம் மயிற்பீலி முக தரிசனம்.

கிரிவலத்தில் அடுத்து வருவது பலசாலின நந்தி. இரத்தினகிரி கோயில் பிரதான மண்டபத்திற்கு எதிரே சற்று வலதுபுறம் தள்ளி இரத்தினகிரி ஈசனை தரிசித்தவாறே அமர்ந்திருக்கிறார். கடுமையான பல தவங்களை இயற்றி இரத்தினகிரி முன் அமரும் அனுக்கிரகத்தைப் பெற்றவர். மிகச் சிறந்த அனுக்கிரக மூர்த்தி. இவருக்கு எண்ணெய்க் காப்பிட்டு தூப தீபத்துடன் வழிபடுவதால் நற்பலன்களைப் பெறலாம். பலசாலின நந்தீஸ்வரரின் திருவருட் கண்நோக்கில் இரத்தினகிரி ஈசனை தரிசனம் செய்ய அது இஷ்டலிங்க மூர்த்தி இரத்தினகிரீஸ்வர முக தரிசனம் ஆகும்.

இஷ்டலிங்க மூர்த்தி இரத்தினகிரீஸ்வர முக தரிசனம்

பதினாறு ஆண்டுகள் மட்டுமே புவியில் வாழ வரம்பெற்றிருந்தார் மார்க்கண்டேயர். அவர் ஆயுள் முடியும் தருணத்தில் உயிரைக் கவர்ந்து செல்ல யமதர்மராஜா வந்தார். மார்க்கண்டேயரோ தன்னுயிர் மீது சிறிதும் பற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் ஈசன் மேல் கொண்ட பேரன்பால் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டார். சற்றே கவனக் குறைவால், “தன்னுடைய கடமையை நேரந் தவறாது செய்ய வேண்டும்” என்ற உத்வேகத்தால் யமதர்மராஜா வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழவே, சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை எட்டி உதைத்தார். யமனின் தண்டம் பறி போயிற்று. “தர்மராஜா” என்ற தன் பதவியை இழந்தார் யமன். தன் தவறை உணர்ந்து மனம் வருந்திப் பிராயச்சித்தம் நல்குமாறு இறைவனை வேண்ட சிவபெருமான் இரத்தினகிரியை வலம் வந்து பலசாலின நந்தியை வழிபடுமாறு கூறினார். யமனும் எம்பெருமான் பணித்த வண்ணம் நெடுங்காலமாக இரத்தினகிரி ஈசனை வலம் வந்தார். பலசாலின நந்தீஸ்வரருக்கு எண்ணெய்க் காப்பிட்டு வழிபாடுகள் செய்தார். சிவபெருமான் அவருக்கு தரிசனம் கொடுத்து யமதண்டத்தை அளித்து மீண்டும் பதவி அளித்தார்.
இஷ்டலிங்க மூர்த்தி இரத்தின கிரீஸ்வர முக தரிசனப் பலன்கள்: முறையான இந்த தரிசனத்தால்..

 1. இழந்த வேலையைத் திரும்பப் பெறலாம்.
 2. இதுவரை வேலையில்லாமல் அவதிப்படுவோர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
 3. செய்யும் தொழில் மந்தமாக, முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், தொழிலில் மாற்றமும் அதனால் சிறந்த முன்னேற்றமும் ஏற்பட்டுத் தொடர்ந்து அபிவிருத்தி ஏற்படும்.
 4. வைத்தியத் தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் தவறிழைக்காமல் சேவை செய்ய ஆசி கிட்டும். முடிந்த மட்டும் இலவச வைத்திய சேவை செய்ய வேண்டும். இதனால் அந்த வைத்தியர்களின் பிரச்னைகள் தீர்ந்து அவர்கள் குடும்பம் நன்னிலையை அடையும்.
 5. இரத்தினகிரி ஈசனை குல தெய்வமாக வைத்து வாழுகின்ற குடும்பங்கள் சிதறியிருந்தால், முறையான இத்தரிசனத்தால் ஒற்றுமை ஏற்பட்டு சுகமாக வாழ்வார்கள்..
 6. வெளிநாட்டில் வேலைக்காகச் சென்று தங்கியிருப்பவர்கள் நலமுடன் திரும்பி வருவதற்கும், அங்கே உள்ள நாட்களில் மன அமைதியுடன் பணியாற்றவும் இத்தரிசனம் வழி செய்யும். அயல்நாட்டில் இருப்பவர்களின் நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ அவர்கள் நன்மைக்காக இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
 7. எக்காரணம் கொண்டும் தாய் தந்தையர் அன்புடன் வைத்த பெயரைக் குறைக்கவோ, மாற்றவோ கூடாது. அவ்வாறு மாற்றினால் அதனால் பல துன்பங்களும் இடையூறுகளும் ஏற்படும். உதாரணமாக உலகத்திற்கே சக்கரவர்த்தியாக விளங்கிய “NAPOLEAN BONAPART” தன் பெயருடன் ஒரு “E” சேர்த்து ““NAPOLEAN BONAPARTE” ஆக மாற்றினான். அதனால் அடுத்து நடந்த வாட்டர்லூ யுத்தத்தில் நெல்சனிடம் தோல்வியுற்று அவமானமடைந்தான். இவ்வாறு பெயரை மாற்றிக் குறைத்தவர்கள் இரத்தினகிரியை வலம் வந்து பலசாலின நந்தீஸ்வரரை வழிபடுவதால் பிராயச்சித்தம் காணலாம்.
 8. அனைத்து விதத் தவறுகளாலும் பதவி இழந்தவர்களுக்கு அற்புதப் பலனளிக்கும் உன்னத தரிசனம். அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொண்டு இழந்த பதவியை மீண்டும் பெற்று இரத்தினகிரி ஈசனின் திருவருளைப் பெற வேண்டுகிறோம்.

நவரங்கா நுனிலிங்க தரிசனம்
இஷ்டலிங்க மூர்த்தி இரத்தினகிரீஸ்வர முக தரிசனத்தைத் தொடர்ந்து மேலே செல்லக் கிடைப்பது நவரங்கா நுனிலிங்க தரிசனம். தாராகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமியற்றினர். நீர், உணவு இன்றி வெயில் மழை பாராது இந்த அரக்கர்கள் இயற்றிய தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கினர். அனைவரும் தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியைச் சரணடைந்தனர். பிரகஸ்பதி அவர்களைச் சமாதானப்படுத்தி, “இந்திரன் முதற்கொண்டு அனைத்து தேவர்களுக்கும் இந்த அரக்கர்களின் கடுந்தவம் எந்தத் துன்பத்தையும் தராது. ஆனால் பிரம்மாதான் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார். அது என்ன?

அரக்கர்களின் தவம் கனிந்தால் படைப்புக் கடவுள் அவர்களுக்கு வரம் தர வேண்டும் என்பது இறைவனின் நியதி. எனவே அவ்வாறு வரம் அளிக்கும்போது பிரம்ம தேவர் மிகவும் கவனமாக சிந்தித்துச் செயல்பட்டால் தேவர்கள் எதிர்வரும் எந்த ஆபத்திலிருந்தும் மீளலாம் என்ற அரியதோர் உபாயத்தை அருளினார். தேவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். பிரம்ம தேவர் தனக்கு பிரகஸ்பதி அளித்த பெரும் பொறுப்பை உணர்ந்து உடனே இறைவனிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்து எம்பெருமானாகிய சிவபெருமானைப் பல்வேறு இனிய கீதங்களால் வாழ்த்தி வணங்கினார். ஈசன் மனம் மகிழ்ந்து “பிரம்ம தேவரே! கவலை வேண்டாம். கடுந்தவம் இயற்றும் இந்த மூன்று அரக்கர்களை திருப்திப்படுத்தவும், தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்காத வரங்களை அரக்கர்களுக்கு அளிக்கவும் வழிமுறையைத் தருவது பூலோகத்தில் உள்ள அய்யர் மலை கிரிவலமாகும்.” என்று இரத்தினகிரீஸ்வரின் மகிமைகளை எடுத்துரைத்தார் எம்பெருமான்.

பிரம்ம தேவரும் அவ்வாறே திருவாட்போக்கியாய் வானளாவி நிற்கும் இரத்தினகிரி ஈசனையும், இரத்தினகிரி மலையையும் வலம் வந்தார். மனம் ஒருமித்த தியானத்துடன் பலமுறை அய்யர் மலையை வலம் வந்தார். தவறான ஆசைகளை மாற்றி முறையான ஆசைகளை வளர்க்கவும், முடியாத காரியத்தை மீண்டும் மீண்டும் முயற்சிக்காமல் இருப்பதற்கும் தேவையான நல்வழியைப் பெறுவதற்கான உத்தம கிரிவலம்தான் அய்யர்மலை கிரிவலம் என்று பிரம்ம தேவர் மீண்டும் மீண்டும் வலம் வந்தார். ஒரு நாள் … பிரம்மா முன் சாலிஹோத்திர முனிவர் தோன்றினார். “பிரம்ம தேவரே! உமக்கு வந்தனங்கள்! அரக்கர்களின் கடுந்தவத்தால் ஏற்படக்கூடிய விபரீதமான விளைவுகளிலிருந்து உலகைக் காக்கத் தாங்கள் மேற் கொண்டிருக்கும் இந்த அரிய முயற்சி பாராட்டத்தக்கது. இந்த மூன்று அரக்கர்களும் சிவபெருமானால் அழிக்கப்படுவர். ஆனால் தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித ஆயுதங்களாய் மாறி அரக்கர்களை அழிக்கத் திருப்பணி புரிய வேண்டும்”, என்று அருளினார்.

மூன்று அரக்கர்களும் சாகா வரம் கேட்பார்கள் என்பதைத் தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த பிரம்ம தேவர் இக்கட்டிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்று வினவினார். சாலிஹோத்திர முனிவரும், “இந்த அரக்கர்கள் மூவரும் இரும்பு, வெள்ளி, பொன் இவற்றால் ஆன மதில்களை உடைய கோட்டைகளைப் பெறுவர். இந்த முப்புரங்களைப் பூண்டு ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் விரும்பும் இடத்திற்குப் பெயர்ந்து செல்லும் ஆற்றலையும் பெறுவர். புரங்கள் மூன்றும் ஒன்றுபட்டு சிவபெருமானால் ஒரே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறு யாராலும் அழிக்க முடியாது என்ற வரத்தைத் தந்து பிரம்ம தேவர் தன் இருப்பிடம் செல்லலாம்” என்று அருளினார்.

சாலிஹோத்திர முனிவர் அருளியவாறே பிரம்ம தேவர் அந்த அரக்கர்களுக்கு வரத்தை அளிக்க, அரக்கர்களும் இவ்வரத்தை சாகா வரத்திற்கு ஈடாக எண்ணி திருப்தி அடைந்தனர். இறை அருளால் பிரம்ம தேவர் நவரங்கா நுனிலிங்க தரிசனம் செய்து தேவர்கள் நலம் பெற வழிவகுத்தார்.

நவரங்கா நுனிலிங்க தரிசனப் பலன்கள் :-
மனிதனின் பெரும்பான்மையான துன்பத்திற்குக் காரணம் தவறான ஆசைகளும், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும், தனது சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டுத் தோல்வி அடைவதுமே ஆகும். எனவே இரத்தினகிரி ஈசனை தினமும் வலம் வந்து நவரங்கா நுனி லிங்க தரிசனம் பெற்றிடில்..

 1. தவறான ஆசைகளும், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் மறைந்து முறையான ஆசைகள் மலரும்.
 2. தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்து அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வி அடைவதைத் தவிர்க்கலாம்.

வியாழக் கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர தினங்களில் இரத்தினகிரியை வலம் வந்து எலுமிச்சை சாதம் தானம் அளித்து இத்தரிசனத்தைப் பெற்றால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

அஷ்டோத்திர லிங்க முக தரிசனம்

நவரங்கா நுனிலிங்க தரிசனத்தை அடுத்து கிரிவலத்தில் நாம் பெறுவது அஷ்டோத்திர லிங்க முக தரிசனம் ஆகும். பக்தர்கள் கூட்டமாக நின்று திருஇரத்தினகிரி ஈசனை தரிசிப்பது போல் தோற்றமளிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கல் பாறைத் தொகுதிகளைக் காணலாம். உண்மையில் உன்னத நிலையடைந்த சித்தர்களின் குழாமே நமக்குக் கல்பாறை வடிவில் தோற்றமளிக்கின்றது. இங்கிருந்து நாம் ஐயர்மலை ஈசனை தரிசனம் செய்ய அது 108 முனிலிங்க தரிசனம் எனவும் பெயர் பெறும். அறத்தைச் சுமந்து நிற்கும்போது ஆண் அழகு பெறுகின்றான். தர்மத்தைச் செய்யும்போதுதான் ஆணுக்கு அழகே பிறக்கிறது. ஆனால் தற்போது உடல் பலம் பெற்றவர்களையும், மாமிச மலையாய் இருப்பவர்களையும் ‘ஆண் அழகன்’ என்று அழைக்கும் வேதனையான நிலையே நிலவுகிறது.

தியாகத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் போதுதான் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறான். தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட மனிதர்களை ‘ரிஷிகள்’ என்று அழைக்கின்றனர் பெரியோர்கள். அத்தகைய உத்தம ரிஷிகளில் ஒருவரே “மதங்கர்” என்ற ரிஷியாவார். இவர் வாக்கிலும், வித்தையிலும், கல்வி கேள்விகளிலும் மிகச் சிறந்த நிலையை எய்திட பிரம்மாவை நோக்கி தவம் இருந்தார். இவர் தவத்தை மெச்சிய பிரம்மா மதங்க ரிஷிக்கு காட்சியளித்து, “தங்களின் அருந்தவத்தால் மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் விரும்பும் வரத்தைக் கேட்டுப்பெறலாம்.” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

மதங்க ரிஷி, “பிரம்ம தேவரே! படிப்பிலும், எத்தகைய உயர்கல்வியிலும், எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்ம ஞானத்திலும் சிறப்புற உத்தம வழியைத் தந்தருள வேண்டும்.” என்று வேண்டினார். பிரம்மாவும், “நீங்கள் கல்வியில், பிரம்ம ஞானத்தில் நல்நிலை அடைய வேண்டும் என்றால் ‘உச்சிஷ்ட மாதங்கி தேவியை’ உபாசிக்க வேண்டும். ஆனால் இந்த உச்சிஷ்ட மாதங்கி தேவியை உபாசிக்கும் தகுதியைப் பெற வேண்டும் என்றால் திருஅய்யர் மலை ஈசனான திருரத்தின கிரீஸ்வரனின் அருள் வேண்டும். ஆகவே திருஅய்யர் மலையை முறையாக கிரிவலம் வாருங்கள்!’ என்று அருளி, கிரிவலம் வரும் முறையையும் விளக்கி பிரம்ம தேவர் மறைந்தார்.

மதங்க மகரிஷியும் பிரம்ம தேவர் அருளிய வண்ணமே புதன்கிழமை தோறும் உண்ணாநோன்பிருந்து திரு அய்யர் மலையை காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் கிரிவலம் வந்தார். அய்யர்மலை அருகிலேயே ஓர் ஆஸ்ரமம் அமைத்து அனைவருக்கும் இலவசமாக போதித்தார். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதை விளக்கினார். அதாவது எண்ணிலடங்காத இறைவனின் லீலைகளை 108, 1008 என்ற எண்ணிக்கையில் இறை நாமங்களால் துதிப்பதும், இறை நாம எழுத்துக்களை தியானிப்பதும் அறிவுக் கண்களைத் திறக்கும் என்பதை மக்களுக்கு போதித்து வந்தார்.

இவ்வாறு அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளித்துத் தானும் உச்சிஷ்ட மாதங்கி தேவியை இடையறாது உபாசித்துக் கொண்டு திருஅய்யர்மலையை கிரிவலம் வந்த வண்ணம் இருந்தார். அவ்வாறு கிரிவலம் வரும்போது “அஷ்டோத்திர முகலிங்க தரிசனத்தில்” உச்சிஷ்ட மாதங்கி தேவியை தரிசித்து அருள் ஞானம் பெற்றார்.

அஷ்டோத்திர லிங்க முக தரிசனப் பலன்கள் :-
புதன்கிழமை தோறும் உண்ணா நோன்பிருந்து திருஅய்யர்மலையை காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் கிரிவலம் வந்து அஷ்டோத்திர லிங்கமுக தரிசனம் பெற்றால்

 1. கல்வி, கேள்விகளில் உயர்நிலையை அடைவார்கள்.
 2. B.E, M.B.B.S.., B.L. போன்ற உயர் கல்விப் பட்டங்கள் எளிதில் பெற வாய்ப்புண்டு.
 3. மந்த புத்தியுள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகளும் (MENTALLY RETARDED CHILDREN) நல்ல முன்னேற்றம் அடைவர்.
 4. பொறியியல், மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் துறையில் முன்னேற்றம் பெறுவர்.

பூரண உண்ணா நோன்பை மேற்கொள்ள இயலாதோர் துளசி தீர்த்தமும், சிறிது வெல்லம் கலந்த பாயசமும் அருந்தி கிரிவலத்தைத் தொடரலாம். புளியோதரை தானம், தரிசனப் பலன்களை மேம்படுத்தும்.

ஏக மூர்த்தி லிங்க தரிசம்

கிரிவலத்தில் அடுத்து வருவது ஏகமூர்த்தி லிங்க தரிசனமாகும். 108, 1008 என்ற நாமங்களால் வழிபடப்படும் ஈசன் ஒரே நாமத்தைத் தொடர்ந்து, முழு மனத்துடன் ஜபிக்க அதனாலும் ஆனந்தம் அடைகின்றான் என்பதை உணர்த்துவதே ஏக மூர்த்தி லிங்க தரிசனமாகும். சித்தர்களோ ஈசனை அரை மாத்திரையிலும் “அடக்கி” அன்பால் பிணைக்கின்றனர்.
திருவாவுக்கரசு நாயனாரும் “அரை மாத்திரையில் அடங்கும் அடி” என்றார். சித்தர்கள் பிராணாயாமத்தில் மூச்சுக் காற்றை அரை மாத்திரை உள்ளிழுத்து, அரை மாத்திரை தேக்கி, அரை மாத்திரை வெளியிட்டு இறையருளைப் பெற்று மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்கு நல்வழி காட்டி இறை நியதிகளை புகட்டி, இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலக்கிறார்கள். சித்தர்களின் பிராணாயாமம் ஏன் அரை மாத்திரையில் அடங்குகிறது? அது முழு மாத்திரையானால் அவர்கள் தேகம்  உடனே இறைவனுடன் கலந்து விடும். எனவே அவர்கள் சுவாசம் அரை மாத்திரை.

இவ்வாறு முறையான பிராணாயாமத்தால், சந்தியா வந்தனத்தால் (காலை, மாலை, அந்திநேர வழிபாடு) சிரஞ்சீவி வரத்தைப் பெற்றவரே மார்க்கண்டேய மகரிஷி . பல யுகங்களாக இப்புனித பூமியில் உலாவி வருபவர். அவரைச் சரணடைந்தார் துஷ்யந்தனின் மகன் பரதன். அதன் காரணம் என்ன?
பரத மகாராஜாவிற்கு நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அவர் பல யாகங்கள், பூஜைகள், தான தர்மங்கள் செய்தும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அதனால் மனம் மிக வருந்தினார் பரதன். இறுதியில் தன் குல குருவை நாடி இதற்குரிய வழியைக் கேட்கவே அவர் மார்க்கண்டேய மகரிஷியை தரிசனம் செய்து அவரிடம் குழந்தைச் செல்வத்தைக் கேட்டுப் பெறும்படி அருளுரை வழங்கினார். எனவே மார்க்கண்டேய மகரிஷியைத் தேடி அலைந்து அவரைச் சரணடைந்தார் பரதன்.
பரதனின் ஒப்பற்ற குரு சேவையால் மகிழ்ந்த மார்க்கண்டேய மகரிஷி, “பரதா! வருந்தாதே, நீ குழந்தையைப் பெற உத்தம வழி ஒன்று உள்ளது. உன்னுடைய குறையைத் தீர்க்க வல்லவன் இரத்தினகிரி ஈசனே! நீ இரத்தினகிரி சென்று முறையாக வலம் வருவாயாக!” என்று அருளினார்..

மார்க்கண்டேய மகரிஷியின் ஆணையின்படி பரதன் திருஅய்யர்மலையை அடைந்து ஈசனை தரிசனம் செய்து கிரிவலம் வந்தார். பல காலம் தொடர்ந்து கிரிவலம் வந்து மகரிஷி அருளிய முறையில் பற்பல தான தர்மங்களையும் தொடர்ந்து ஆற்றிவந்தார். இந்த வழிபாடுகளால் மகிழ்ந்த இரத்தின கிரி ஈசன் ஏக மூர்த்தி லிங்க தரிசனத்தில் அசரீரியாக ஒலித்தான்.. “பரதனே! உன்னுடைய அற்புத வழிபாடு எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நீ வேண்டும் குழந்தைச் செல்வத்தை உனக்கு அளிக்கிறேன். அக்குழந்தைக்கு “ஸூமதி” என்ற பெயர் இடுவாய். அவன் எதிர்காலத்தில் “புத்தர்” என்ற பட்டம் பெற்று பல யோக முறையைப் பயின்று உலகம் போற்றும் உத்தம குருவாக மலர்வான்!” இத்தகைய உத்தம குரு “புத்தர்” தோன்றிய இடம் தான் திருஅய்யர்மலையாகும்!

ஏக மூர்த்தி லிங்க தரிசனப் பலன்கள் : முறையான இத்தரிசனத்தால்..

 1. குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.
 2. பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இங்கு முறையாக கிரிவலம் வர குழந்தைகளின் ஆயுள் நீடிக்கும். சந்தியா கால ஜனன பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்க ஓர் உத்தம வழிபாடு திருஅய்யர்மலை கிரிவலமாகும்.
 3. வாசியோகம், ஹடயோகம், யோக ஆசனங்களில் உன்னத நிலையை அடையலாம்.
 4. எத்தகைய படிப்பிலும் முன்னேறி உயர் ஆசிரியர், பேராசிரியர், PRINCIPAL, DIRECTOR, DEAN, HEAD OF DEPT, VICE-CHANCELLOR போன்ற உயர் நிலைகளையும், பதவிகளையும் அடையலாம்.
 5. சந்தியா வந்தன வழிபாடுகளை மறந்தவர்களும், முறையாகச் செய்யாதவர்களும் இத்தரிசனத்தால் புது உற்சாகம் பெற்று தங்கள் வழிபாடுகளை மேம்படுத்த வாய்ப்புகள் உண்டு.

ஏழைக் குழந்தைகளுக்குப் பால் தானம் செய்தல் தரிசனப் பலன்களைத் துரிதப்படுத்தும்.

கோட்ட வடிவு லிங்க முக தரிசனம்
இசைச் கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் கோட்ட வடிவு லிங்க முக தரிசனமாகும். சங்கீத ராகங்களாகிய ஸட்ஜமம், மத்யமம், காந்தாரம், இவைகள் ஸட்ஜமக்ரமம், மத்யமக்ரமம், காந்தாரக்ரமம் என்று சொல்லப்படும் ஸ்தானங்களிலிருந்து உற்பத்தியாகிறபடியால், இந்த மூன்று க்ரமங்களும் பெண் வடிவெடுத்து திருஅய்யர்மலை ஈசனாகிய திருஇரத்தினகிரீஸ்வரரை வலம் வரத் தொடங்கினர். இம்மூவரும் கொம்பு மஞ்சளால் “ஸ்ரீம்” என்று ஜபித்து கிரிவலம் வந்து, கிரிவலம் வரும் சுமங்கலிகளுக்கு தானம் அளித்து தினமும் ஈசனை வழிபட்டனர்.
ராக தேவதைகளின் கிரிவலம் எதற்காக?
கீர்த்தனைகளையும், இறைத்துதிகளையும் ராகத்தோடு பாடும்போதும், வாத்தியங்களில் இசைக்கும் போது, நல்ல அதிர்வு அலைகள் ஏற்பட்டு (POSITIVE VIBRATIONS) பரவெளி தூய்மையாகிறது. தூய்மையான இடத்தில் இறைவன் குடியேறுகின்றான். நல்ல எண்ணங்கள் நற்செய்கைகளுக்கு வித்திட்டு எங்கும் நன்மையே ஏற்படுகிறது. நற்செய்கைகள் பெருகப் பெருக எங்கும் அமைதியே நிலவும். இந்த உன்னத அமைதியைத் தோற்றுவிக்கும் இறையருளை வேண்டியே ராக தேவதைகள் கிரிவலம் வந்தனர். ராகதேவதைகளின் தியாக வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன் அவர்களைப் பராசக்தியின் கழுத்தில் மூன்று ‘அம்ச பூரண ரேகைகள்’ ஆகுமாறு அருள்வரம் தந்தார்.

கோட்ட வடிவு லிங்க முக தரிசனப் பலன்கள் :
ராக தேவதைகள் கோட்ட வடிவு லிங்க முக தரிசனத்தால் அம்பிகையின் கழுத்து ரேகைகளாய் மாறியதால் இன்றும், என்றும் திருஅய்யர்மலையை முறையாக கிரிவலம் வந்து, கொம்பு மஞ்சளால் “ஸ்ரீம்” என்ற மந்திரம், ஸ்ரீஆயுர் தேவி காயத்ரி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதியைத் துதித்து சுமங்கலிகளுக்கு தானம் அளித்து கோட்ட வடிவு லிங்க முக தரிசனம் பெற்றிடில்.,

 1. இயல், இசை, நாடகம், வாத்தியம் போன்றவற்றில் நல்ல நிலையை அடையலாம்.
 2. ஆஸ்த்துமா, BRONCHITIS (மார்புச்சளி), TONSILITIS (தொண்டைச்சதை வீக்கம்) போன்ற மூச்சுக்குழல், தொண்டைக் கோளாறுகளால் வரும் வியாதிகள் தீரும்.
 3. திக்கு வாய்க் கோளாறுகள் குணமாகும்.
 4. பெண் குரல் உள்ள ஆண்களும், ஆண் குரல் உள்ள பெண்களும் தங்கள் குறை நீங்கப் பெறுவர்.

முப்புரி லிங்க முக தரிசனம்
கிரிவலத்தில் அடுத்து வருவது முப்புரி லிங்க முக தரிசனம். பிரம்மத்தை நன்றாகப் புரிந்து கொண்டால் ஆன்ம ஐக்கியம் ஏற்படும்.  ஆன்ம ஐக்கியம் என்றால் என்ன?
பிரம்மமும் ஆன்மாவும் ஒன்றே என்ற நிலையை அறிவதே ஆன்ம ஐக்கியமாகும். ஞானமே அதனை அடைய எளிய உபாயமாகும்.. இந்த ஞானத்தை அடைய வழி யாது?
நமக்குள் குண்டலினி என்ற ஒரு பெரிய சக்தி உண்டு. அனைவரிடமும் உள்ள இந்த சக்தியைத் தட்டி எழுப்பினால் மூலாதாரத்திலிருந்து ஸ்வதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் போன்ற பல இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவுகின்ற தேவியே ஸ்ரீநகுலேச்வரி.

 ஸ்ரீநகுலேச்வரி தேவியின் அருளைப் பெற விழைந்த கொங்கணவர் என்ற சித்தர், சித்தர் குல நாயகராம் ஸ்ரீஅகத்திய முனிவரை நாடி அவர்பாதம் பணிந்தார். ஸ்ரீநகுலேச்வரி தேவியின் தரிசனத்தைப் பெறும் வழியைக் கேட்டறிந்தார். என்றும் சிவபெருமானின் சித்தத்தில் உறைபவர்களையே சித்தர்கள் என்கிறோம். ‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தின் உட்கருவாய்த் திகழ்பவர்களே சித்தர்கள். இத்தகைய உன்னதப் பெருநிலையை அடைந்த சித்தமுனி கொங்கணவர் குண்டலினி சக்தியை மேலெழுப்பி அடையப் போகும் ஞானம் தான் என்ன? சிவத்தை மிஞ்சிய ஞானம் ஒன்று உண்டா? அன்பே சிவம், இதனினும் உயர்ந்த தத்துவம் ஒன்று உண்டா? எனினும் வருங்காலத்தில் குண்டலினி சக்தியின் மகத்துவத்தை உணராத மக்களுக்கு ஓர் நல்வழி காட்ட திருஉள்ளம் கொண்டதாலேயே கொங்கணவ சித்தர் ஸ்ரீஅகத்தியரின் அருளாணையின்படி திருஅய்யர்மலையை கிரிவலம் வந்தார். முப்புரி லிங்க முக தரிசன மகிமையால் ஸ்ரீநகுலேச்வரி தேவியின் தரிசனம் பெற்றார்.
முப்புரி லிங்க முக தரிசனப் பலன்கள் : காலை, மதியம், மாலை மூன்று வேளையும் திருஇரத்தினகிரி ஈசனை வலம் வந்து குறிப்பாக வியாழன் அன்று முப்புரி லிங்க முக தரிசனம் பெற்றிடில்

 1. எல்லா உயிர்களையும் சமமாக எண்ணும் உயர்ந்த ஞானத்தைப் பெறுவர்.
 2. ஜாதி, மத, இன வேறுபாடுகளால் மற்றவர்களுக்கு இழைத்த துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
 3. குண்டலினி யோகத்தை முறையாகப் பயிலாததால் உடல் சூடு அதிகமாகித் துன்புறுவோர், துன்பம் நீங்கிச் சுகமடைவர்.
 4. ஆயுர்வேத, நாட்டு மருந்து, சித்த வைத்தியர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர்.

கிரிவலம் முழுவதும் ஔவையார் அருளிய “சீதக் களப செந்தாமரை…..” என்னும் விநாயகர் அகவலை ஓதிக் கொண்டே வருதல் சிறந்த பலன்களைத் தரும். ஏழை மாணவர்களுக்கு சந்தனாதி தைலங்கள், பொன்னாங்கண்ணித் தைலம், மருதாணித் தைலம் போன்றவற்றை தானமாக அளிப்பதால் பலன்கள் துரிதமாகும்.
சிதாபாச சீர்முக லிங்க முக தரிசனம்
அடுத்து கிரிவலப் பாதையில் உள்ள உசில மரத்தின் அருகே இருந்து திருஇரத்தினகிரி ஈசனை தரிசனம் செய்ய அது சிதாபாச சீர்முக லிங்கமுக தரிசனம் ஆகும். “WORK IS WORKSHIP”, “செய்யும் தொழிலே தெய்வம்” அனைவரும் அறிந்த பழமொழிகள் இவை. நாம் நமது வேலையைச் செய்து கொண்டிருந்தால் போதும், கடவுளைப் பற்றி நினைக்க வேண்டாம் என்ற ஒரு தவறான கருத்தை இந்தப் பழமொழிகள் மூலம் போதித்து வருகின்றனர் சிலர். ஆனால் கடவுள் நினைவுடன் கடமையைச் செய், கடமையை மறந்தாலும் கடவுளை மறவாதே என்பதே ஆன்றோர் வாக்கு. கடவுள் நினைவு தீவிரமாகி அதனால் ஒரு பக்தன் தன் கடமையிலிருந்து தவறும் நிலை ஏற்படுமானால் கடவுளே அந்த பக்தனைக் காப்பாற்றுவார் என்பதையே நம் முன்னோர்கள் அன்றும், இன்றும் வலியுறுத்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றே விஜயாலய சோழன் வரலாறு.

உயர்ந்த பக்திமானாகிய விஜயாலய சோழன் என்ற அரசன் ஒரு சிறந்த வீரனும் கூட, எம்பெருமானாம் சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற காதலால் அரசியல் காரியங்களை மறந்து சிறிது ஒதுக்கி வைத்தான். அதனால் கடுமையான சோதனைக்கு ஆளானான். விஜயாலய சோழனின் நிலையை அறிந்த அவனுடைய எதிரிகள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த எண்ணினர்.

பல முனைகளிலிருந்தும் அவனுடைய நாட்டைத் தாக்கிக் கைப்பற்ற ஒரு திட்டமும் தீட்டினர். அச்சமயம் விஜயாலய சோழன் அரண்மனைக்கு சுந்தர ஜெயதேவ மகரிஷி என்ற சித்தர் விஜயம் செய்தார். அரசன் மகரிஷியைப் பணிந்து வரவேற்று அனைத்து உபசாரங்களையும் செய்து மகிழ்ந்தான். சுந்தர ஜெயதேவர் அரசனுக்கு எதிரிகளால் வருகின்ற ஆபத்துக்களை எடுத்துக் கூறி அவைகளைத் தடுக்கும் முறைகளையும் போதித்தார். அந்த சித்தரின் ஆணையின்படி விஜயாலய சோழன் திருஇரத்தினகிரியை அடைந்து முறையாக கிரிவலம் வந்தான். பல காலம் வந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று மலை உச்சியை தண்டனிட்டு வணங்கினான். அங்கிருந்து அசரீரி வாக்காக ஒரு ஒலி கேட்டது. “தஞ்சை பெரிய கோயிலில் நிசும்ப சூதனி என்ற தேவிக்கு சித்தர்கள் அருளிய முறைப்படி ஆலயம் அமைத்து வழிபட்டால் அனைத்து எதிரிகளின் துன்பமும் விலகும்.. அரசனே! நீர் இப்பொழுது தரிசித்த தரிசனம் சிதாபாச சீர்முக லிங்கமுக தரிசனம் ஆகும். இத்தரிசனத்தால் நிசும்ப சூதனி தேவி உனக்கு உதவுவார்!”

விஜயாலய சோழன் மிகவும் மகிழ்ந்து சித்தர்கள் துணைகொண்டு நிசும்ப சூதனி தேவிக்குத் தஞ்சை பெரிய கோயிலில் ஓர் ஆலயம் அமைத்து அன்னையை வழிபட்டான். அதனால் எதிரிகளின் சதி திட்டம் முறிந்து விஜயாலய சோழனும் நற்பேறு பெற்றான். அன்று விஜயாலய சோழன் தேவிக்கு சித்தர்கள் முறைப்படி அமைத்த ஆலயம் தஞ்சை பெரிய கோயிலில் இன்றும் உள்ளது. இத்தேவிக்கு ராகுகால வழிபாடு மிக மிகச் சிறந்தது. வியாழக் கிழமையில் இராகு கால நேரத்தில் மாலை (1.30 pm to 3.00 pm) நிசும்ப சூதனி தேவி வழிபாடு அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்.. பெண்கள் உரிய வயதில் பூப்படையாமை, திருமணத் தடங்கல், கர்ப்பக் கோளாறுகள் போன்ற துன்பங்களுக்கு உன்னத பரிகாரம் தரும் தேவியே நிசும்ப சூதனி ஆவாள். எலுமிச்சை சாத தானமும், மஞ்சள் நிற ஆடை தானமும், மாங்கல்ய தானமும் சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்.
சிதாபாச சீர்முக லிங்கமுக தரிசனப் பலன்கள்:- திருஇரத்தினகிரி ஈசனை முறையாக கிரிவலம் வந்து சிதாபாச சீர்முக லிங்கமுக தரிசனம் பெற்றால்,

 1. கண்ணேறு, திருஷ்டி, பில்லி, சூன்யம் போன்ற துன்பங்கள் மறையும்.
 2. வீட்டில் பொருட்கள் திருடு போதல், அடிக்கடி பொருட்கள் கீழே விழுந்து உடைதல், தீப்பற்றிக் கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
 3. எந்தக் காரணமும் இல்லாமல் நம் மீது சுமத்தப்படும் அவதூறுகள், பழிகள் நீங்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் போன்ற கவசங்களை ஓதிக் கொண்டே கிரிவலம் வருதலால் சிறந்த பலன்களைப் பெறலாம். குழந்தைகளுக்குப் பாலில் தேன் கலந்து தானமளித்தல் சிறப்பான பலன்களைத் தரும்.

வரம் ஈயும் தொடுமுக லிங்க திரிசனம்

பாண்டிய நாட்டை சர்வேஸ்வரனாகிய சோமசுந்தரப் பெருமான் தனது துணைவியராகிய தடாதகைப் பிராட்டி மீனாட்சியுடன் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இறைவனும் மனிதனைப் போலவே மனித நிலைக்கு இறங்கி இருந்தார். இவ்வாறு இருக்கையில் பராசக்தி மீனாட்சியைப் பெற்றெடுத்த தாயாராகிய காஞ்சன மாலையின் மனதில் மட்டும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. அது என்ன? தனது மகள் மீனாட்சி வயிற்றில் வாரிசு உருவாக வேண்டும் என்பதையே எண்ணி வந்தாள் காஞ்சனமாலை. அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே ஆண்டவனின் கருணை அன்றோ!
சோமசுந்தரம் என்று பெயர் சூடிய எம்பெருமானாகிய ஈசன் தன்னை மானிட வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டதால் பிறரைப் போலவே தானும் பல மகான்களையும், சித்தர்களையும் நாடி இதற்கு வழி தேடலானார். சர்வமும் தெரிந்த எம்பெருமான் ஒன்றும் தெரியாதவர் போல் நடிப்பதைப் பார்த்த சித்தர்கள், “எம்பெருமானே! தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த லீலையை நடத்துகிறீர்கள். ஆகவே நாங்களும் இதற்குப் பரிகாரம் கூறுகின்றோம்.. அதனை எங்களுக்காகவும், உலக மக்களுக்காகவும் தாங்கள் ஏற்று செய்ய வேண்டும்! திருஅய்யர் மலை என்னும் திருஇரத்தினகிரி ஈஸ்வரர் குடியிருக்கும் இடம் ஒன்று உண்டு. அந்த திருஅய்யர்மலைய முறையாக தாங்களும், தடாதகைப் பிராட்டியும் வலம் வருதல் வேண்டும். அப்போது வரம் ஈயும் தொடுமுக லிங்க தரிசனம் என்ற இடத்தை தரிசித்து திரு அய்யர்மலையை வலம் வருவீர்” என்று வேண்டினர்!

எம்பெருமானாகிய சோமசுந்தரப் பெருமானும், தடாதகைப் பிராட்டியும் திருஅய்யர்மலையைப் பலமுறை சித்தர்கள் அருளிய முறையில் வலம் வந்து அருளாசி பெற்றனர். திருஅய்யர்மலையின் கிரிவலத்தால் தடாதகைப் பிராட்டியார் கருவுற்றார். சோமசுந்தரப் பெருமான் பெருமகிழ்வுற்றார். முறையாகப் பத்து மாதம் சுமந்து மீனாட்சியம்மை அதி அற்புத பாலனான முருகனையே குழந்தையாகப் பெற்றெடுத்தாள். அந்த பாலமுருகனுக்கு ‘உக்கிரப் பெருவழுதி’ என்று பெயர் சூட்டினார் ஈசன். உக்கிரப் பெருவழுதி பாண்டிய நாட்டிற்குப் பல பெருமைகளைச் சேர்த்து தெய்வீகத்தோடு வாழ்ந்தான். மலைமகளும், கலைமகளும் காண இயலாத எம்பெருமான் ஈசன் திருவடிகள் நிலமகள் தோய நடந்து வலம் வந்த இடம் திருஅய்யர்மலை, மூவரும், தேவரும், யாவரும் தரிசனம் பெற சக்தியற்ற பராசக்தியின் பாதங்கள் தழுவிய இடம் திருஅய்யர்மலை. இப்புனித பூமியில் நமது பாதங்களை வைப்பதற்கே என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாமும், நமது மூதாதையர்களும்!’ என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள். பெறற்கரிய இம்மனித உடல் உள்ள மட்டும் திருஇரத்தினகிரி ஈசனை வலம் வந்து நம் பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு ஈசன் திருவருளைப் பெறுவோமாக!

வரம் ஈயும் தொடுமுக லிங்க தரிசனப் பலன்கள்:

 1. உத்தம குழந்தைப் பேறு கிட்டும்.
 2. காத்து, கறுப்பு சேஷ்டைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் விலகும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் தைரியம் அடைவர்.
 3. அறுவை சிகிச்சையின்றி நல்ல முறையில் பிரசவம் ஏற்பட வழிவகுக்கும்.
 4. மாமியார், நாத்தனார் போன்ற பெண் உறவு முறைகளால் ஏற்படும் துன்பங்கள் விலகும். திங்கட்கிழமை கிரிவலம் இவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
 5. குழந்தைகளின் தீய பழக்கங்கள் மறைந்து அவர்கள் ஒழுக்கத்துடன் வாழ வழி ஏற்படும்.

ஒன்பது கஜ சேலை தானமும், உள் ஆடைகள் தானமும் கிரிவலப் பலன்களை மேம்படுத்தும்.

பூரிவலர் லிங்கமுக தரிசனம்
பராசக்தி பார்வதி தேவியின் பாதச் சிலம்பிலிருந்து தெறித்த நவரத்தினங்கள் ஈசனுடைய ஒளிப்பிரவாகத்தால் அந்தந்த ரத்தினத்தின் நிறமும் நாமமும் கொண்ட நவசக்திகளாகத் தோன்றினர். நவசக்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீரப் புதல்வனாக ஒன்பது வீரர்களைப் பெற்றெடுத்தனர். அந்த தேவிகளுள் சிவப்பு மணியிலிருந்து தோன்றிய ரக்த வல்லியினிடத்தில் அற்புதமான அமர பராக்ரம வீரபாகு தேவர் தோன்றினார். நவசக்திகள் மேலும் பல லட்சம் வீரர்களை உருவாக்கிட அவர்கள் அனைவரையும் வீரபாகுவின் தலைமையின் கீழ் பணிபுரியும்படி ஈசனருளால் அளித்தனர். ரக்த வல்லியின் வீர மைந்தனான வீரபாகு தேவர் தன் தாயை நோக்கி, “அம்மா! அடியேன் செய்ய வேண்டிய முதற்கடமை யாது?” என வேண்டினார். அதற்கு ரக்த வல்லி “மகனே! நீ முதலில் உத்தம வரங்களைப் பெறவேண்டும். ஆகவே இரத்தினங்களுக்கெல்லாம் இரத்தினமாய் விளங்கும் ஸ்ரீஇரத்தினகிரி ஈசனை கிரிவலம் வந்து அருள் ஆசி பெறுவாய்!” என வாழ்த்தி வழி அனுப்பினாள். அன்னை காட்டிய வழியில் திருஅய்யர்மலையை கிரிவலம் வரத் தொடங்கினார் வீரபாகு தேவர்.

அவ்வாறு வலம் வரும்போது ஒரு முக்கிய இடத்தில் திருவாட்போக்கி மலை உச்சியை நோக்கினார். அந்த தரிசனம் தான் பூரிவலர் லிங்க முக தரிசனம் ஆகும். அந்த தரிசனத்தில் அற்புத ஜோதி ஒன்றைக் கண்டார். அந்த ஜோதியின் பலனால் பேராசை என்னும் நோயை அழிக்கும் வரத்தைப் பெற்றார் வீரபாகு. பூரிவலர் லிங்கமுக தரிசனம் மட்டுமன்றி இன்னும் பல தரிசனங்களைப் பார்த்து, தன் தாய் வழிநின்று வரங்கள் பல பெற்று திருக்கயிலாயம் அடைந்தார்.
பேராசையை வேரோடு அழிப்பீர் :- ஒரு சமயத்தில் நாரதர் இஷ்ட பூர்த்தியைத் தரும் வசந்தயாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகத்தில் சில தவறுகள் நடந்ததால் வேள்வியிலிருந்து ஒரு பெரிய ஆடு அரக்க குணத்துடனும், அனைவருக்கும் துன்பம் விளைவிக்கும் செயலுடனும் தோன்றியது.. இந்த ஆட்டிற்கு “காளைக் கும்பன்” என்று பெயர்.. காளைக்கும்பன் அளித்த துன்பங்களைத் தாங்க முடியாத வானவர்கள் முருகனிடம் முறையிட்டனர்..

முருகவேள் காளைக்கும்பன் தோன்றிய காரணத்தை விவரித்தார், “வேள்விகள் செய்யும்போது அளவுக்கு அதிகமான சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற பேராசையால் தவறுதலாக ஆஹூதி அளித்ததால் இந்த ஆடு தோன்றியது. பேராசையின் விளைவான இந்த ஆட்டை யாராலும் அடக்க முடியாது. வீரபாகு தேவரால் மட்டுமே அடக்க முடியும். ஆகவே அனைவரும் வீரபாகு தேவரை வேண்டுங்கள். அவர் ஒருவர்தான் திருஅய்யர்மலையை முறையாக வலம் வந்து பூரிவலர் லிங்கமுக தரிசனம் பெற்று பேராசையால் வரும் தீவினைகளைப் போக்கும் சக்தி பெற்றவர்!” என்று முருகப் பெருமான் கூற தேவர்கள் அனைவரும் வீரபாகு தேவரைச் சரணடைந்தனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று வீரபாகு தேவர் காளைக்கும்பனை அடக்கி அந்த ஆட்டையே முருகனுக்கு வாகனமாய்த் தந்தார்.

பூரிவலர் லிங்க முக தரிசனப் பலன்கள் : மனிதர்கள் அனைவருக்கும் ஆசை பொதுவானதே. நியாயமான ஆசைகளை மனிதன் வளர்த்தால் அதில் தவறேதும் இல்லை. பேராசையே மனிதனைத் துன்பக் கடலில் ஆழ்த்துகிறது. பூரிவலர் லிங்க முக தரிசனத்தால்

 1. அளவுக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்து வைத்திருந்தால் அதனாலேயே துன்பங்கள் வரும் என்பதால் தான தருமங்கள் செய்து நல்ல நிலையை அடைய அருள்வழி கிட்டும்.
 2. காணாமல் போன குழந்தைகளைத் திரும்பப் பெறலாம்.
 3. கோபத்தால் வீட்டைப் பிரிந்து சென்ற கணவனோ, மனைவியோ மனம் திருந்தி, திரும்பி வந்து ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும்.
 4. I.A.S, I.P.S அதிகாரிகள், படைத் தளபதிகள் போன்ற உயரதிகாரிகளுக்குத் தங்கள் பதவியை நிர்வகிப்பதில் உள்ள பிரச்சினைகள் தீரும்.
 5. இறைவனுக்கு முடி காணிக்கை போன்ற நேர்த்திக் கடன்களைச் செய்ய மறந்தவர்கள், தவறியவர்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

முடிந்த மட்டும் இறைவனுக்கான நேர்த்திக் கடன்களை ஒத்திப்போடாமல் உடனே நிறைவேற்றுதல் பல துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்.

ஆர்ஜவ சேவா லிங்க முக தரிசனம்

பராசக்தியின் அம்சமாக பூலோகத்தில் பராங்குசபுரம் என்னும் சிற்றூரில் ஓர் உத்தமி பிறந்தாள். பராங்குசபுரம் தற்போது ஒரகடம் என்று அழைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் உள்ளது. சக்தியின் அருள்பெற்ற அப்பெண்மணி தன்னுடைய தியாகத்தாலும், சொல்லாலும், செயலாலும், நேர்மை, சத்தியத்தைக் கடைபிடித்து அழியா நிலையை அடைந்தாள். அந்தப் பெண்மணியை மக்கள் “குளிந்தி” என்று அழைத்தனர்.

குளிந்தி அம்மன் ஆலயம்
ஒரகடம்

குளிந்தியின் கணவன் ஒரு வியாபாரி. அவன் வியாபாரத்தில் ஈடுபட்டுப் பெரும் பொருளைச் சேர்த்தான். அப்பொருளை மேலும் மேலும் சேர்த்து வைப்பதிலேயே கவனம் செலுத்தினான். ஆனால் மனைவி குளிந்தியோ இறை வழிபாடுகளில் மனதைச் செலுத்தித் தன் வாழ்நாளைக் கழிக்கலானாள். கணவனின் பணத்தை எடுத்து 32 அறங்களையும் முறையாகச் செய்து வந்தாள். இந்த தான தர்மங்களின் பலனால் வியாபாரம் மிகவும் செழிப்புற்றது. வருமானமும் பெருகியது. தன் மனைவி செய்கின்ற 32 அறங்களால்தான் தன் வியாபாரம் விருத்தி அடைகிறது, என்பதை அறியாத அவள் கணவன் தன் திறமையால் தான் வியாபாரம் பெருகுகிறது என்று ஆணவன் கொண்டான்.  ஆணவம் வந்தாலே அழிவுதானே! வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து ஊர் திரும்பினான். “ஊரில் நிறைய பணம் உள்ளது. இந்த நஷ்டத்தால் எனக்கு ஒன்றும் பாதிப்பு கிடையாது” என்ற எண்ணத்துடன் ஊர் வந்து சேர்ந்தான். இங்கு வந்து பார்த்தால் அவன் மனைவியோ அனைத்துப் பணத்தையும் தான தருமங்கள் செய்து கஜானாவைக் காலியாக்கி வைத்துள்ளாள். இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது வியாபாரிக்கு. நஷ்டம் வந்தால் கஷ்டம் வரும். கஷ்டம் வந்தால் கோபம் வரும். ஆகவே தன் மனைவி மீது கோபம் கொண்டு, “நீ எப்படியாவது பணத்தைக் கொண்டு வந்து தரவேண்டும். அதுவரை இந்த வீட்டில் இருக்காதே” என்று கோபத்துடன் மனைவியை வெளியே அனுப்பி விட்டான்.

“பெண்களுக்குக் கணவன்தான் தெய்வம்!” தெய்வமே வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னால் என்ன ஆவது? குளிந்தி மிக்க வருத்தத்துடன் வெளியே வந்தாள். ‘தருமம் தலை காக்கும், தக்க சமயத்தில் மானம் காக்கும்’ என்ற பெரியோர்களின் வாக்குப்படி ஈசன் திருவருளால் கமலமுனி என்ற உத்தம சித்தரை குளிந்தி முன் வரும்படிச் செய்தார் ஈசன். குளிந்தி கமலமுனியைக் கண்டு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள். அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு தன்னைப் பற்றித் தெரிவித்தாள். கமல முனி குளிந்திக்கு ஆறுதல் அளித்து, “கலங்காதே அம்மணி! உனக்கு ஒரு உபாயம் சொல்லுகிறேன். நீ அய்யர்மலை சென்று முறையாக கிரிவலம் வந்து திருஇரத்தினகிரி ஈஸ்வரரை தரிசிப்பாய். அதனால் உன் கணவன் அனைத்துப் பொருட்களையும் அடைவான். அவன் அகந்தையும் மாளும்!” என்று அருள்புரிந்தார்.

ஸ்ரீகுளிந்தி அம்மன்
ஒரகடம்

குளிந்தியும் திருஅய்யர்மலையை அடைந்து பல மாதங்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் கிரிவலம் வந்து ஈசன் கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து “திருரத்தினகிரீஸ்வரா! அருள வேண்டும்!” என்று மன்றாடி வேண்டினாள்.  நீண்ட நாள் பிரார்த்தனைக்குப் பின் ஒரு நாள் ஆர்ஜவ சேவா லிங்கமுக தரிசனம் செய்யும்போது ஓர் ஒளிப் பிழம்பு ஏற்பட்டு திருஅய்யர்மலையே லிங்கமாகக் காட்சி தந்தது. இறைவன் அசரீரி மூலமாய், “குளிந்தி தேவியே! நீ அனைத்தும் பெற்று பராங்குசபுர வரப்பிரசாதியாக ரகுநாத புஷ்கரணிக் கரையில் அமர்ந்து அருள்பாலிப்பாய்!” என்று வரம் அளித்தார்.

குளிந்தியின் கணவனுக்கு அனைத்துப் பொருட்களும் திரும்பி வந்து சேர்ந்தன. அவன் அறிவுக் கண்களும் திறந்தன. ஓடோடி வந்து குளிந்தி இருந்த இடமெல்லாம் தேடி அலைந்தான். இறுதியில் அய்யர்மலை சென்று பார்த்தபோது குளிந்தி என்ற உத்தமி “குளிந்தி அம்மனாக” மாற்றப்பட்டாள் என்ற செய்தி அறிந்து பராங்குசபுரம் விரைந்தான். அங்கே பராங்குசபுர ரகுநாத புஷ்கரணியில் குளிந்தி அம்மனாக கொலுவீற்றிருக்கக் கண்டான். கணவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. சோகமா, குதூகலமா என்று அறியாத நிலையில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. இரத்தினகிரி ஈசன் திருவிளையாடலை யார் அறிவார்?

ரகுநாத புஷ்கரிணி
ஒரகடம்

ஆகவே தொழிலோ, வியாபாரத்திலோ கஷ்டமும் நஷ்டமும் வந்தால் மனைவியைக் குறை கூறாதீர்கள். திருஅய்யர்மலை ஈசனான இரத்தினகிரீஸ்வரரை முறையாக வலம் வந்து நன்னிலை பெறுங்கள். செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஓரகடம் கோதண்டராமர் கோயில் உள்ளது. மூலவர் – ஸ்ரீரகுநாதப் பெருமாள் – ஸ்ரீராமர் வீராசனத்தில் அமர்ந்த கோலம்.

மோட்ச நிர்ணயஹ மூர்த்தி லிங்க தரிசனம்
கிஷ்கிந்தை என்ற இடம் மிக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இடமாகும். அங்கே மிக அற்புதமான மூலிலைகளும், பொய்கைகளும், தடாகங்களும், வண்ண வண்ண அற்புத மணம் பரப்பும் மலர்களும் நிறைந்திருந்தன. தேவலோகத்திலும் காணப்படாத அற்புதங்கள் நிறைந்த இடமாகும். ஆகவே இந்த இடத்தை வசப்படுத்திக் கொள்ள விரும்பினர் தேவர்களும் அசுரர்களும். பூலோகத்தைச் சார்ந்த இந்த மலைப்பகுதி அங்கு வாழ்கின்றவர்களுக்குத்தான் சொந்தம் என்று ஈசன் சொன்னதால் தேவர்கள் தங்களுடைய ஆசையை அடக்கி விலகினர். தேவர்கள் விலகியவுடன் அசுரர்கள் அந்த இடத்தை அடைய ஏற்பாடுகள் செய்து அங்கு சென்றனர். இச்செய்தியை தேவர்கள் பிரம்மாவிடம் தெரிவிக்க பிரம்மா கோபம் கொண்டு தன் கண்களிலிருந்து கிஷ்கிந்தா மலை மீது நெருப்பினைப் பொழிந்தார். இத்தீச்சுவாலைகளை அரக்கர்களால் தாங்க முடியாமல் விலகி ஓடினர்.

அந்த கிஷ்கிந்தா மலையில் தனுர்பாண சித்தர் குலத்தைச் சேர்ந்த வானரங்கள் அதிகமாய் இருந்தன. இந்த வானரங்களைக் கட்டிக் காக்க பிரம்மா ஒரு வானர மனிதனை உருவாக்கினார். அவன் பெயர் ரிஷன். ரிஷன் இந்த வானரங்களைப் பார்த்து அதிசயத்தால், “பிரம்ம தேவரே! இந்த வானரங்கள் எல்லாம் அம்பைப் போல் மிக வேகமாகத் தாக்கி உருண்டு மேலே ஏறி அற்புத சாகசங்களைப் புரிகின்றதே. இந்த அனைத்து வானரங்களை அடக்கி ஆள அற்புத வரங்களைத் தர வேண்டும்!” என்று வேண்டினார். “தனுர்பாண சித்தர் குலத்தைச் சேர்ந்த இந்த வானரங்களை அடக்கி ஆளும் திறமையை பெற வேண்டும் என்றால் நீ திருஅய்யர்மலையானை அதாவது திரு ரத்தின கிரீஸ்வரரை முறையாக வலம் வந்து அருள் பெறுவாயாக!” என்று பிரம்மதேவர் அருளினார். ரிஷனும் முறையாக காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களிலும் திருஅய்யர்மலையாம் திருஇரத்தினகிரீஸ்வரரை முறையாக கிரிவலம் வந்து ஆராதித்தார். அவ்வாறு திருஅய்யர்மலையை வலம் வரும்போது மோட்ச நிர்ணயஹ மூர்த்தி லிங்க தரிசனத்தில் ஓர் சுழல் காற்று உருவாகி அதில் ஜோதி தரிசனம் பெற்றார் ரிஷன். அப்பொழுது அசரீரியாய் இரத்தினகிரீஸ்வரர், “ரிஷனே! உனக்கு பலகோடி வானரங்களின் இனத்தை அடக்கி ஆளும் திறமையை அளித்தோம். நீ கிஷ்கிந்தைக்குப் போகலாம்!” என்று அருளினார். அவ்வாறு திருரத்தினகிரீஸ்வரரின் அருளைப் பெற்ற ரிஷனின் புத்திரர்கள் தான் வாலியும், சுக்ரீவனும்.

அரிய வீராசனக் கோலத்தில்
ஸ்ரீராமர் ஒரகடம்

மோட்ச நிர்ணயஹ மூர்த்தி லிங்க தரிசனப் பலன்கள் :- திருஅய்யர்மலையை முறையாக காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் கிரிவலம் வந்து வணங்குவதால்,

 1. IAS, IPS, ADMINISTRATIVE OFFICERS போன்ற தலைமைப் பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள், ராணுவத் தலைவர்கள், Labour Officers, தொழில் சங்கத் தலைவர்கள் போன்றோர் அனைத்து அருளையும் பெறலாம்.
 2. ரிஷனோடு வந்து கிரிவலம் வந்த வானரங்கள் இன்றும் திருஅய்யர்மலையில் குடியிருக்கின்றனர். பொது மக்கள் யாதொரு தீங்கும் செய்யாமல் அந்தப் புனித வானரங்களுக்கு உணவு அளித்திடில் தீய கனவுகள் வராமல் நலம் பெறுவர்.
 3. நிரந்தரமான தொழில், வியாபாரம் அமையாதோர் நலம் பெறுவர்.

நியாய சுதர்லிங்க தரிசனம்
கணேச உலகத்தில், கணபதி சித்தி,புத்தி சமேதராய்க் காட்சி அளித்தார். அவரைச் சுற்றி அனேக கணபதி அருள் பெற்ற சித்தர்கள் கூடி இருந்தனர். கஜரட்ச சித்தர், தும்பிக்கைப் பெருமுனிவர், தடியலங்கார கண முனிவர் போன்ற பெரிய சித்தர்கள் எம் பெருமானாகிய கணபதியைத் துதித்துப் போற்றினர். இத்தகைய மகிழ்ச்சியான நேரத்தில் நாரத முனிவர் சபையில் புகுந்தார். அனைவரும் நாரதரை வணங்கி வரவேற்றனர். நாரதர் பலமுறை கணபதியை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். கணபதியும், “நாரதரே! தங்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்று அன்புடன் நாரதரை வரவேற்றார். நாரதரும், “பெருமானே! தங்களுடைய குழந்தைகளைக் காண விழைகின்றேன்” எனக் கூறினார். “அவர்கள் இங்குதானே தாங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்!” என்றார் கணபதி. நாரதர் ஆச்சரியமடைந்தவராய், “அடியேன் அவர்களைப் பார்க்கவில்லையே! எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தார். குறும்புப் புன்னகையுடன் கணபதி தன்னுடைய குழந்தைகள் இருக்கும் இடத்தைக் காட்ட அப்பொழுது தான் நாரதர் கணபதியின் குழந்தைகளைத் தரிசனம் செய்தார்! கணபதியின் குழந்தைகளை தேவரிஷி நாரதராலேயே காண இயலவில்லை என்றால் கணபதியின் குழந்தைகள் எவ்வளவு அற்புதமான சக்தி படைத்தவர்கள் என்று நினைத்துப் பாருங்கள்! இதிலிருந்து என்ன தெரிகிறது? தெய்வ கடாட்சம் பெற்று இருந்தாலும் அதில் பல உயர்நிலைகள் உண்டு என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அரியாசனத்தில் வீராசனம்
ஒரகடம்

கணபதியும் நாரதரைப் பார்த்து. “நாரதரே! என்ன இன்று உமது திருவிளையாடல் குழந்தைகளிடம் ஆரம்பமாகிறதா என்று ஒன்றுமறியாதவர் போல் கேட்டார். நாரதர் பலமுறை வணங்கி, “பிரபோ! தாங்கள் அறியாதது ஒன்றும் கிடையாது” என்றார். கணபதியும், “சரி, சரி வந்த வேலையை சிறப்புடன் நடத்தும்,” என்றார். கணபதியின் குழந்தைகள் நாரதரைப் பார்த்தவுடன். “சுவாமி! எங்களுக்கு நல்ல கதை ஒன்று சொல்லுங்கள்,” என்று கேட்டனர். நாரதர் அதற்கு ஒப்புக்கொண்டு அக்குழந்தைகளை அழைத்துச் சென்றார். கணபதியின் குழந்தைகளின் பெயர் உலகுக்குத் தெரிய வேண்டுமே! ஆகவே நாரதர் குழந்தைகளைப் பார்த்து, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அக்குழந்தைகள் தங்களில் மூத்தவன் பெயர் “லாபன்” என்றும், இளையவன் பெயர் “லட்சன்” என்றும் கூறினர். இப்பொழுதுதான் நாரதர் தன் வேலையை ஆரம்பித்தார்.

“ஆமாம்! நீங்கள் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். பூலோகத்தில் யமுனை என்ற நதி ஓடுகிறது. அந்த நதியாக ஓடுகின்றவள் யமுனையாவாள். அவள் தன்னுடைய அண்ணனாகிய யமதர்மராஜாவை அழைத்து கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவிதியை அன்று விருந்து அளித்து ரக்ஷா பந்தன நூலைக் கையில் கட்டி நமஸ்கரித்தாள். அதனால் பெருமகிழ்ச்சி அடைந்த தர்மராஜன். “இந்த நாளில் யாராய் இருந்தாலும் சகோதரிகள் தங்கள் அண்ணனையோ, தம்பியையோ வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்து காப்பு நூலைக் கையில் கட்டினால் அவர்களை யமனாகிய நான் அவசரப்பட்டுத் துன்புறுத்த மாட்டேன் என்ற வரத்தை அளித்தார்,” என்றார் நாரதர். “இப்போது உங்களுக்கு ரக்ஷா பந்தனக் காப்பு நூலைக் கட்ட தங்கை இல்லையே? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று சூசகமாகத் தன் காரியத்தைக் குழந்தைகள் மனதில் பதித்து விட்டார் நாரதர். பிறகு தன் வேலை முடிந்த திருப்தியில் கணபதியிடம் விடை பெற்றுக் கொண்டு கணபதி உலகத்திலிருந்து திரும்பினார் நாரதர்.

கணபதியின் பிள்ளைகள் “நமக்கு ஒரு நல்ல தங்கை வேண்டும். அப்பாவிடம் கேட்போம்” என்று தந்தையாரைப் பார்க்கச் சென்றனர். கணபதியைப் பார்த்து, “அப்பா! அப்பா! எங்களுக்கு ஒரு தங்கை வேண்டும். எப்படியாவது உருவாக்குங்கள் அப்பா!” என்று மன்றாடினர். அதற்கு கணபதி, “இந்த நாரதர் தன் வேலையை நம்மிடமே காட்டி விட்டார்!” என்று யோசனை செய்ய ஆரம்பித்தார். குழந்தைகளோ தங்கைக்காகத் தீவிரமாய் அடம் பிடித்தனர். அப்பொழுது கணபதி சொன்னார் “சரி! உங்களுக்குத் தங்கை வேண்டும் என்றால் அதற்கு ஒரு உபாயம் சொல்லிகின்றேன். நீங்கள் இருவரும் பூலோகம் சென்று திருஅய்யர்மலையை முறையாக பக்தியோடு வலம் வந்து திருஇரத்தினகிரீஸ்வரரை வேண்டி தவமிருந்தால் ஈசன் வழிகாட்டுவார்.” என்றார்.

ஸ்ரீராமர் ஆலயம்
ஒரகடம்

கணபதி லோகத்திலிருந்து லாபனும் லட்சனும் தம் பரிவாரத்தோடு பூலோகத்திற்கு வந்து திருஅய்யர்மலையை வலம் வந்தனர். அவ்வாறு வலம் வந்தபோது நியாய சுதர்லிங்க தரிசனத்தைப் பெற்றனர் இருவரும். அப்போது மலை உச்சியில் பேரொளியுடன் அசரீரி ஒலித்தது. “ஆதிமுதல்வனாகிய கணபதியே உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” லாபனும், லட்சனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து திருஅய்யர்மலை ஈசனை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினர். அய்யர்மலையைச் சுற்றிப் பல தடாகங்கள் அமைத்து தான தர்மங்கள் செய்து திருரத்தினகிரி ஈசனுக்கு நன்றி செலுத்திவிட்டு கணபதி லோகம் சென்றனர். அக்குழந்தைகளின் தேஜஸிலிருந்து மகா கணபதி ஒரு சோதியை உருவாக்கித் தன்னுள் ஐக்கியப்படுத்தி, தன் உடம்பிலிருந்து நியாய சுதர் ஜோதியை வெளிக்கொண்டு வந்து புத்தி என்ற தன் மனைவியை ஒளி வடிவில் சேர்த்து சந்தோஷி என்ற பெண் தெய்வத்தைத் தோற்றுவித்தார். லாபனும், லட்சனும் அவள் கையால் ரக்ஷா பந்தனம் என்னும் காப்புக் கயிறைக் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் சந்தோஷி மாதாவை வணங்கி நலம் பெற வழி செய்தனர். ஆகவே அனைவரும் வாழ்க்கையில் சந்தோஷம் அடைய திருஅய்யர்மலையை விடாமல் கிரிவலம் வருதல் வேண்டும் என்று மகா கணபதியே அருள்வாக்களித்தார். இதுவரை எவருமே அறிந்திராத சந்தோஷி மாதா சரித்திரத்தை உலகுக்கு அளித்த ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கும், அவர்தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சுவாமிகளுக்கும், நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

நியாய சுதர்லிங்க தரிசனப் பலன்கள் :-

 1. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் இருத்தலே சிறப்பு என்பது சித்தர்கள் வாக்கு. பெண் குழந்தைகள் இன்றி வருந்தும் பெற்றோர்களுக்கு திருஅய்யர்மலை கிரிவலமும், நியாய சுதர் லிங்க தரிசனமும் அவர்கள் குறையை நிறைவு செய்யும் அருமருந்தாகும்.
 2. சகோதர சகோதரர்களிடையே உள்ள மனக்கசப்புகள், வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 3. கார்த்திகை மாதம், சுக்ல பட்சம் துவிதியை திதி அன்று திருஐயர்மலை கிரிவலமும், நியாயசுதர்லிங்க தரிசனமும் சிறப்பான பலன்களைத் தரும். சாதி, மத, இன பேதமின்றி இன்று அன்னதானம் செய்திடில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ ஸ்ரீஇரத்தினகிரி ஈசன் அருள்புரிவார்.
 4. சந்தோஷ், சந்தோஷி என்ற நாமம் உடையவர்கள் மேற்குறித்த நாளில் கிரிவலம் வந்து வணங்குதல் சிறப்பானது. அல்லது அந்த நாமம் உடையவர்களுக்கு அன்னதானமும் ஆடை தானமும் செய்தல் சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்.

வியாபாரப் பெருமக்கள் வியாபாரத்திற்காகப் பொருட்களை எண்ணும்போது “லாபம், இரண்டு, மூன்று..” என்று எண்ணுவதற்கு பதிலாக “ஓம் ஏகதந்தாய நமஹ, ஓம் இரண்டு, ஓம் மூன்று” என்று எண்ணுவார்களேயானால், தங்கள் வியாபாரத்தில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கி வியாபாரம் அபிவிருத்தியாக திருஇரத்தினகிரி ஈசன் துணைபுரிவார். கிரிவலப் பாதையில் சிறுமலைக் குளம் என்று தற்போது வழங்கப்படும் தீர்த்தத்தின் அருகில் இருந்து நமக்குக் கிடைக்கும் தரிசனமே நியாயசுதர் லிங்க தரிசனமாகும்.

நந்தி லிங்க முக தரிசனம்
நாம் இன்று சுழற்சி முறையில் கணக்கிடும் 60 ஆண்டுகள் அதாவது “பிரபவ முதல் அட்சய” வரை உள்ள (தமிழ்) ஆண்டுகள் தோன்றியது எவ்வாறு? தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வந்த அமிர்தத்தை அசுரர்கள் தேவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து தேவாமிர்தத்தை திரும்பப் பெற ஸ்ரீமன் நாராயண மூர்த்தி மோகினி அவதாரம் எடுத்தார். மோகினியின் பேரழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை நாராயண மூர்த்தியிடம் (மோகினியிடம்) கொடுக்க எம்பெருமானும் அமிர்தத்தை யாருக்கெல்லாம் அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு அளித்தார். காண்போர் வியக்கும் பேரழகு பூண்ட மோகினி அவதாரத்தைப் பார்த்த நாரதர் தானும் அத்தகைய அழகைப் பூண்ட ஓர் பெண்ணாக அமைய வேண்டும் என்று ஸ்ரீமன் நாராயணனை வேண்டினார்.

“நாரதா! நான் எடுக்கும் பூர்ண அவதாரமாகிய கிருஷ்ண அவதாரத்தின் போது உனக்குப் பெண் வடிவம் தருகின்றேன். ஆனால் நீ இந்த மோகினி வடிவையே பெற வேண்டும் என்றால் பூமியில் திருஅய்யர்மலையை முறையாக வலம் வந்து வணங்கிடில் அழகான பெண் வடிவைப் பெறுவாய். அப்பொழுது என்னை நீ வந்தடைவாய்., அதனால் பல நன்மைகள் விளையும்!” என்று அருளினார் நாராயண மூர்த்தி. நாரதர் முறையாக திருஅய்யர்மலையை வலம் வந்து மிகப் புனிதமான அழகுடைய மங்கையாய் மாறுவதற்கு அருள்புரிந்த இடம்தான் நந்திலிங்க முக தரிசனம் ஆகும். இத்தரிசனத்தால் நாரதர் பேரழகு உடைய பெண் வடிவம் பூண்டு ஸ்ரீகண்ணபிரான் இருப்பிடம் சேர்ந்தார்.. ஸ்ரீகண்ணபிரான் வந்திருப்பது நாரதர் என்று உணர்ந்து அவரையும் தான் மணந்து நாரதர் மூலமாய் 60 குழந்தைகள் பெற்றார். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள் தான் “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள 60 ஆண்டுகள் ஆகும். தமிழ் வருடங்களுக்கு இத்தகைய பெயர்கள் வருவதற்கு திருஅய்யர்மலை கிரிவலமே காரணமாகும்.
நந்திலிங்க முக தரிசனப் பலன்கள் : கிரிவலப் பாதையில் தற்போது சிறுமலைக் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தின் அருகிலிருந்து திருஅய்யர் மலையை தரிசனம் செய்ய அதுவே நந்தி லிங்கமுக தரிசனம் ஆகும். முறையாக திருஅய்யர்மலையை கிரிவலம் வந்து நந்தி லிங்க முக தரிசனம் பெற்றால்..

 1. விகாரமான முகத் தோற்றம் உடையவர்கள் சிறந்த அழகு பெறுவர்.
 2. அறுவை சிகிச்சை, தீப்புண் காயங்களால் ஆறாத வடுக்கள் உடையோர் வசீகரமான தோற்றத்தைப் பெறுவர்.
 3. செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற பல்வேறு தோஷங்களுக்கு எளிதில் பரிகாரம் கிட்டும். அத்தகையோர் வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வந்து மஞ்சள், வெற்றிலை பாக்கு, வளையல் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமளிப்பதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
 4. முறையான காதல் திருமணங்கள் கைகூடும். குறிப்பாக, பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற முறையில் கணவன்மார்களைப் பெறுவர்.

பொதுவாக அழகை விரும்பும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஓர் அற்புத கற்பக விருட்சமே திருஅய்யர்மலை கிரிவலமாகும். அய்யர்மலை ஈசன் அழகு தரும் ஈசன்!
வைராக்ய பிரகரண லிங்கமுக தரிசனம்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற கடவுள் அவனுக்கு சந்தர்ப்பங்களை நிச்சயமாக அளிக்கிறார். ஆனால் ஒரு சிலரே கிடைத்த சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு உறுதிப்பாட்டுடன் செயலாற்றி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைகின்றனர். சந்தர்ப்பங்கள் எப்போதுமே சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை. எனவே சந்தர்ப்பம் வரும்போது அதை இனம் கண்டு கொண்டு தீவிர வைராக்யத்துடன் செயலாற்ற திருஅய்யர்மலை ஈசன் நமக்கு அளிக்கும் நல்வரமே வைராக்ய பிரகரண லிங்க முக தரிசனம். சம்பவாணன் என்ற உத்தம அரசன் எக்காரியத்தை எடுத்தாலும் விடாமுயற்சியுடன் வெற்றிகரமாக முடிப்பார். வைராக்கிய சித்தம் உள்ளவர்.. ஒருவர் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெற்று விட்டால் ஒரு தனி அகந்தை வந்துவிடும். அதோடு மட்டுமல்லாமல் தோல்வியைக் கண்டவர் என்ன வேதனை அடைவார் என்பதை மனம் ஏற்க மறுக்கும். ஆகவே சம்வாணனுக்கு ஒரு சோதனையை வைத்தார் வசிஷ்டர், அது என்ன?

மாயையால் உருவாகும் அனைத்துமே மறைந்து விடும். ஆனால் சுயநலமற்ற தூய நினைவால் உருவாகும் அனைத்துமே மாயையை வென்றுவிடும்.. இதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் வைராக்கியம் பூண்டவனால் மட்டுமே சாதிக்க முடியும். வைராக்கியத்தின் பிடிப்பை சோதிக்க விரும்பி சம்வாணனை நீர் இல்லாத காட்டிற்கு கொண்டு சென்று அங்கே வேட்டையாட வைத்தார். சம்வாணனும் சோர்வு அடையாமல் வேட்டையாடிக் கொண்டே வந்தார். அவருக்கு மிகுந்த தாகம் எடுத்தது. அவர் குதிரையும் தாகத்தால் வீழ்ந்து மயங்கியது. தான் கற்ற வித்தையின் மூலமாய் நீர் ஊற்று இருக்கும் இடம் அறிந்து பாணம் எய்யலாம் என்று அம்பை எடுத்தார். ஆனால் இங்கு தான் மாயை விளையாடுகிறது! அவர் கண் எதிரே கானல் நீர் தெரிந்தது. சம்வாணரோ அருகிலேயே நீர் இருக்கும்போது எதற்காக சக்தி வாய்ந்த அம்பை எய்து வீணாக்குவது என்று தயங்கி நிறுத்தி விட்டார். இவ்வாறு பல இடங்களில் இவர் ஏமாந்து தடுமாறி நின்றார். தாகம் இவரை மயக்க நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. இப்பொழுது அவர் முன்னே ஒரு கன்னி தென்பட்டாள். அவளைப் பார்த்தவுடன் “தண்ணீர் வேண்டும்” என்றார். அக்கன்னியோ, “தண்ணீர் வேண்டுமா? இக்கன்னி வேண்டுமா? உங்களுக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறேன், இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் உங்களுக்கு உதவுவேன்.” என்றாள்..

“அது என்ன நிபந்தனைகள்?” என வினவினார் சம்வாணன். “நீங்கள் செய்த தான தருமங்களை எனக்குத் தாரை வார்த்துத் தந்தால் தண்ணீர் தருவேன்.. நீங்கள் செய்த தபோ பலன்களைத் தாரை வார்த்துத் தந்தால் நான் உங்களுக்கு மனைவியாய் வருவேன்!” என்றாள்… சம்வாணனோ மிகுந்த தாகத்தால் வருந்தினாலும் தன்னை ஏற்றி வந்த குதிரையின் மயக்கம் தீர தண்ணீர் பெற விரும்பினார். ஆகவே, “என்னுடைய தான தர்ம பலன்களைத் தருகிறேன்!” என்று சத்தியம் செய்தார்.. அம்மங்கை கொடுத்த நீரைப் பெற்று குதிரையின் வாயில் ஊற்றியவுடன் குதிரை திடீரென்று தர்மதேவதையின் வடிவம் எடுத்து நின்றது. சம்வாணனை நோக்கிய தர்மதேவதை “சம்வாண அரசரே! நீங்கள் வைராக்கியம் உடையவர்.. உங்களைச் சோதிக்கவே இவ்வாறு வந்தோம்.. மேலும் நீங்கள் பார்த்த உத்தம கன்னியை அடைய வேண்டும் எனில் நீங்கள் திருஅய்யர்மலையை முறையாக வலம் வந்து திருரத்தினகிரி ஈசனின் ஆசியைப் பெற்றால் தான் முடியும். மிகுந்த தபோபலனைப் பெற்று இருந்தால்தான் அந்தக் கன்னியை அடைய முடியும்” என்றார்.

சம்வாண மகாராஜாவும் திருஅய்யர்மலையை அடைந்து பல ஆண்டுகள் தொடர்ந்து முறையாக கிரிவலம் வந்தார்.. அப்பொழுது வைராக்யப் பிரகரண லிங்கமுக தரிசனத்தில் பெருஞ்சோதி தோன்றி, “சம்வாண அரசே! உமது வைராக்கிய தபசை மெச்சினோம்.. நீங்கள் விரும்பிய வண்ணமே சூரியனின் மகளான தபதியை வசிஷ்டர் முன்னிலையில் மணப்பீர்!” என்று அசரீரி ஒலித்தது. சம்வாண மகாராஜாவும், தபதியும், திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் குரு. இவர் மூலமாகத்தான் குருவம்சமே வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? தான தர்ம செய்கையால் ஆயுள் வளரும். வைராக்கியத்துடன் செய்கின்ற தபசால் நமக்கு நல்ல மனைவி அமைகிறாள். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் பெறுவதற்கு ஏற்ற இடம் திருஅய்யர்மலையே!

அனுபூதிப் பிரகாச லிங்கமுக தரிசனம்
பராசக்தியான பார்வதியின் பூதகண தேவதைகள் பலகோடி உண்டு. அனைத்து பூத கணங்களுக்கும் அடிக்கடி பராசக்தி பல சோதனைகளை வைப்பதுண்டு. ஏனெனில் சிறிய தவறுகள் கூட நடக்கக் கூடாத இடம் அல்லவா தேவி லோகம். அவ்வாறு தேவியின் திருவிளையாடல்கள் மக்களுக்கும் பல நல்வழிகளைக் காட்டிக் கொண்டே இருக்கும். ஒரு சமயம் “சித்திர நேமி” என்ற பூத கண தேவதைக்கு ஒரு சோதனையை வைத்தாள் ஜகன்மாதா. அது என்னவென்றால் “பிறர் பொருளை எடுத்து தர்மம் செய்வதால் பெரும்பலனா? அல்லது தானே உழைத்து சம்பாதித்த பொருளை தர்மம் செய்வதால் பெரும் பலனா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் போல் ஒரு வாதம் செய்ய வைத்தாள் பூத கணங்கள் இடையில், இதற்கு நீதிபதியாக சித்திர நேமியை நியமித்தாள் பராசக்தி.

சித்திர நேமி தன்னுடைய நெருங்கிய பல தோழிகளின் வாதத்திற்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து பாரபட்சமாக நடந்து கொண்டாள். இந்தத் தவறால் கோபம் கொண்ட அன்னை பராசக்தி சித்திர நேமிக்கு குஷ்டரோகம் வரும்படி சபித்தாள். சித்திரநேமி அன்னை பராசக்தியின் பாதங்களைப் பிடித்து சாபவிமோசனம் வேண்டினாள்.. அதற்கு அன்னை மனமிரங்கி, “நீ பூலோகம் சென்று திருஅய்யர்மலையில் குடியிருக்கும் திருஇரத்தின கிரீஸ்வரரை முறையாக விடாமல் கிரிவலம் வர வேண்டும். அப்பொழுது ஆவணி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமையில் சப்த கன்னிகைகள் வந்து திருஅய்யர்மலையில் வரலட்சுமி விரதம் கொண்டாடுவர். அந்த சப்தகன்னிகைகளின் ஆசியைப் பெற்றால் குஷ்டரோகம் தீரும்,” என்று வழி கூறினாள் அன்னை.

சித்திர நேமியும் பராசக்தி அருளியவாறே திருஅய்யர்மலையை விடாமல் வலம் வந்து அனுபூதிப் பிரகாச லிங்க முக தரிசனம் செய்யும்போது வானில் ஏழு சோதிகள் தோன்றி திருஅய்யர்மலையில் இறங்கின. அந்த ஏழு சோதிகளைத் தொடர்ந்து சென்றாள் சித்திரநேமி. அந்த ஏழு சோதிகளும் திருஅய்யர்மலையில் வீற்றிருக்கும் சப்த கன்னிகளுடன் ஐக்கியமாவதைக் கண்டு சித்திரநேமி சப்தகன்னிகளை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி அவர்களின் அருளாசியைப் பெற்றாள். உடனே குஷ்டரோகம் நீங்கப் பெற்று தேவி லோகம் திரும்பினாள்.
அனுபூதிப் பிரகாச லிங்க முக தரிசனப் பலன்கள் : ஆவணி மாதம் சுக்கில பட்சம் வெள்ளிக் கிழமை அன்று திருஅய்யர்மலையில் சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தல் வேண்டும். தாமே அரைத்த மஞ்சளால் (அம்மியில் மஞ்சளை அரைக்கவும் MIXIEல் அரைப்பதைத் தவிர்க்கவும். கடையில் வாங்கும் மஞ்சள் பொடியைத் தவிர்க்கவும்) மஞ்சள் நீராட்டு செய்வதும், மஞ்சள் நிற ஆடைகளை அணிவித்து, மல்லிகை மலர்களால் அர்ச்சித்து சப்த கன்னிகளை வழிபாடு செய்வது அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும். இதனால்..

 1. நீதிபதிகள், வக்கீல்கள், பொய்சாட்சி கூறியவர்கள். மனசாட்சிக்கு விரோதமாய் நடந்தவர்கள் நலம் பெறுவர். ஆனால் மீண்டும் இத்தகைய பாரபட்சமான செய்கைகளைச் செய்யாது தவிர்த்தலே நலம் பயக்கும்.
 2. தரித்திர நிலையில் உள்ளவர்களும், கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலையில் உள்ள துரதிர்ஷ்டசாலிகளும் படிப்படியாக வாழ்வில் முன்னேறி அவர்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
 3. இளம் வயது விதவைகள் மனசாந்தியும், அமைதியும் பெறுவர். அவர்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காண வழியுண்டு.

திருஅய்யர்மலையை மூன்று முறை தொடர்ந்து கிரிவலம் வந்து (இயன்றால் ஏழு முறை வலம் வரலாம்) மேற்கண்ட வழிபாடு செய்வதால் பூரணமான பலன்களைப் பெற திருஅய்யர்மலை ஈசன் அருள்புரிவார்.

இருதய முக கமல லிங்க தரிசனம்
‘அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க தனது உடல், பொருள், ஆவி அனைத்துமே இறைவனுக்காகவும், அவன் படைத்த உயிர்களுக்காகவுமே பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தைக் கொண்டோர் ஒரு சிலரே. அவர்களுள் வாலாசுரன் என்ற அசுரனும் ஒருவன். வாலாசுரன் சிவனை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். வாலாசுரனின் அற்புத தவத்தால் மனமகிழ்ந்த ஈசன் வாலாசுரன் முன் தோன்றி “குழந்தாய்!  இதுவரை எவரும் செய்திடாத அதிஅற்புத தவத்தால் யாம் மகிழ்ந்தோம். நீ வேண்டும் வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்!” என்று அருளினார். வாலாசுரன் “எம்பெருமானே! இறவாமை என்னும் வரத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்!” என்றான். சிவபெருமான் புன்முறுவல் பூத்தார். “பிறந்த உயிர்கள் இறப்பது இயற்கை., இறவாமை வேண்டும் என்றால் பிறவாமை வேண்டும்” என்றார் பரம்பொருள்..

“அப்படியானால் அடியேன் மீண்டும் பிறவாமல் இருப்பதற்கு வரம் தர வேண்டும், இறைவா!” 

“பிறவாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவன் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக, அவன் படைத்த உயிர்களின் நன்மைக்காக அர்ப்பணிக்க வேண்டும், அன்னவன் மீண்டும் பிறப்பதில்லை”

“பரம்பொருளே!  பிறந்தவன் இறக்க வேண்டும் என்றால் அடியேன் விரும்பும் வண்ணமே இறக்கும் வரத்தைத் தர வேண்டுகிறேன். மேலும் அவ்வாறு இறக்கும்போது என்னுடைய ரத்தம் மாணிக்கமாகவும், பற்கள் முத்துக்களாகவும், மயிர் வைடூரியமாகவும், தசை பவழமாகவும், கண்கள் நீலமாகவும், கோழை புஷ்பராகமாகவும் மாற வேண்டும். இந்த ரத்தினங்கள் அனைத்தும் தங்கள் திருமேனியை அலங்கரிக்க வேண்டும்!” என வேண்டினான் வாலாசுரன். என்ன அற்புதமான வரங்கள்! எத்தகைய உயர்ந்த தியாக உணர்வு! சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளினார். “வாலாசுரனே! உன் உடல் முழுவதும் ரத்தினங்களாய் மாற வேண்டும் என்றால் ரத்தினங்களுக்கெல்லாம் அதிபதியான இரத்தினகிரி ஈசனை முறையாக கிரிவலம் வந்து வணங்க வேண்டும்.”

வாலாசுரனும் அவ்வாறே இரத்தினகிரியை முறையாக வலம் வந்து இருதய முக கமல லிங்க தரிசனம் பெற்றான். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து அரிய நற்சேவைகளை இடையறாது ஆற்றி வந்தான். தொடர்ந்த சேவையால் தான் விரும்பிய வரங்களைப் பெற்றான் வாலாசுரன். தேவர்களை எல்லாம் வென்றான். தேவலோகமே அவனது அதிகாரத்தின் கீழ் வந்தது. இனி இறைவனை அடைய வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்ந்தான். தேவர்கள் தலைவனான இந்திரனை அழைத்தான். “இந்திரனே! தேவர்கள் கலங்க வேண்டாம். நான் இறைவனுடன் ஒன்றும் காலம் வந்துவிட்டது. என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் செய்யும் யாகத்தில் நானே ஆடாக மாறி வீழ்ந்து மடிவேன்!” என்று இந்திரனிடம் வாலாசுரன் உறுதியளித்தான். அவ்வாறே இந்திரன் செய்த யாகத்தில் பலி ஆடாக விரும்பி வீழ்ந்து மடிந்தான் வாலாசுரன். அவன் விரும்பிய வண்ணமே அவன் உடல் அனைத்துமே இரத்தினங்களாய் மாறின. அந்த இரத்தினங்களையெல்லாம் மணி மாலைகளாகத் திரட்டி திருஅய்யர்மலை ஈசனான திருஇரத்தினகிரீஸ்வரருக்கு அணிவித்து மகிழ்ந்தான் இந்திரன். தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.

இருதய முக கமல லிங்க தரிசனப் பலன்கள் : திருஇரத்தினகிரி ஈசனை கிரிவலம் வந்து வணங்கி ஈசனுக்கு இரத்தின மாலைகளை அணிவித்து வழிபடுவதால்

 1. அரசாங்கத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.
 2. பதவி உயர்வுகள் எளிதில் கிட்டும்.
 3. பதவி மாற்றங்களும் தொல்லையைத் தராமல் சாதகமான நிலையைத் தரும்.
 4. Temporary Employees, Suspended Employees உத்தியோகம் நிலைக்கப் பெறுவர்.
 5. இருதய நோய்கள் விலகும். இவர்கள் வளர்பிறை சனிக்கிழமைகளில் கிரிவலமும், தரிசனமும் செய்தல் நலம்.
 6. மது, மங்கை, சூதாட்டம் போன்ற கேளிக்கைகளால் பொன்னான நேரத்தை வீணாக்கியவர்கள் தங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பெறலாம். இறைவன் பால் பக்தியைத் தூண்டும் ஓர் ஒப்பற்ற தரிசனம் இது.

இரத்தின மாலைகள் அணிவிக்க இயலாதோர் இரத்தினத்திற்கு ஈடான மணமுள்ள பூமாலைகளை திருஇரத்தினகிரீஸ்வரருக்கு அணிவித்து மேற்கூறிய பலன்களைப் பெறலாம். திருஇரத்தினகிரியை கிரிவலம் வந்து மாலைகள் அணிவித்தலே உத்தமமான வழிபாடாகும்.
கேள்விக் குறியோட்ட முக லிங்க தரிசனம்
நமது அன்றாட வழிபாடுகளில் ஒன்று சந்தியா வந்தனமும் காயத்ரீ ஜபமும். சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் காயத்ரீ மந்திரம் ஜபித்தே ஆக வேண்டும். காயத்ரீ நான்கு வேதங்களின் சாரமாகும். நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி தூய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது (POSITIVE VIBRATIONS) காயத்ரீ ஜெபம். இது நாம் இறைவனுக்கும், நமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் செய்யும் ஓர் ஒப்பற்ற சேவையாகும். என்றும் இளமை மாறாமல், நோய்நொடிகள் தாக்காமல் நம்மைக் காக்கும் காயகல்ப சஞ்சீவியே காயத்ரீ. ஆனால் காலப்போக்கில் காயத்ரீ ஜெபிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து உலகில் தீய ஒழுக்கமும், கொடிய நோய்களுமே மலிந்திடும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த சூரிய பகவான் மக்கள் உய்வு அடைய வேண்டி திருஅய்யர்மலையை கிரிவலம் வரத் துவங்கினார். அவர் திருஅய்யர்மலையைச் சுற்றி வில்வமரத் தோட்டங்களையும், மணமுள்ள மலர்ச் செடிகளையும் அமைத்து வில்வ நந்தவனக் காற்று சுவாமி மீது பட வேண்டும் என்று இரவுபகலாக திருஅய்யர்மலையைச் சுற்றிலும் நந்தவனம் அமைத்து கிரிவலம் வந்தார். ஞாயிறுதோறும் விரதமிருந்து அய்யர்மலையில் இருக்கும் மூலிகைகளுக்கு “சுதாப் பிராண” அக்னி சுவாலைகளால் மூலிகைகள் மேலும் ஜீவ சக்தியைப் பெற பாடுபட்டார். இந்த சுதாப்பிராண அக்னி சுவாலைகளால் வளர்ந்த மூலிகைகள் திருஅய்யர்மலையில் இன்றும் இருக்கின்றன.

ஆகவே யாரெல்லாம் ஞாயிறு அன்று திருஅய்யர்மலையை கிரிவலம் வருகின்றார்களோ அவர்கள் இந்த சுதாப்பிராண சுவாலைகளால் செழிப்புற்ற மூலிகைகள் மீது வீசும் காற்றைப் பெற்று உடல் ஆரோக்கியம் எளிதில் அடையலாம். சூரிய பகவான் செய்த இந்தச் செய்கையால் மகிழ்ந்த இரத்தினகிரீஸ்வரர் சூரிய பகவான் ஜபாலா தீர்க்க தரிசனம் செய்யும்போது, சூரிய பகவானுக்குரிய அட்சரமான “க்ரீம்” என்ற அட்சர சித்தியைத் தந்தார்.

கேள்விக் குறியோட்ட லிங்க முக தரிசனமே ஜபாலா தீர்க்க தரிசனம் என்றும் வழங்கப்படும்.. ஜபாலா தீர்க்க தரிசனப் பலன்கள்: ஞாயிறு தோறும் திருஅய்யர்மலையை “க்ரீம்” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே கிரிவலம் வந்து ஜபாலா தீர்க்க தரிசனம் பெற்றிடில்..

 1. நோயில்லா பெருவாழ்வைப் பெறலாம் ஆயுள் விருத்தியாகும்.
 2. PILES (மூலம்), இரத்த பேதி, சோகை போன்ற நோய்களுக்கு சிறப்பான நிவாரணம் கிட்டும்.
 3. பற்பல பிரச்னைகளால் மனக் குழப்பமடைந்து தடுமாறுபவர்கள் தெளிந்த மனநிலையைப் பெற்று தீர்க்கமான முடிவுகளை எடுக்க இயலும்.

ஆரஞ்சு நிற உள்ளாடைகள் அணிந்து கிரிவலம் வருதலும், திருஇரத்தினகிரி ஈசனை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுதலும் பலன்களைத் துரிதப்படுத்தும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
ஐயர்மலை

படலேறு யானை லிங்கமுக தரிசனம்
சூரியபகவான் திருஅய்யர்மலை கிரிவலத்தால் தான் பெற்ற அட்சர சித்தியைப் பற்றி சந்திர பகவானுக்குச் சொன்னார். சூரிய பகவானை வணங்கி அருள் ஆசி பெற்று சந்திர பகவானும் திருஅய்யர்மலையை திங்கட்கிழமை விரதம் இருந்து சம்பங்கி மலர்த்தோட்டங்கள் அமைத்து திருஇரத்தினகிரீஸ்வரரை முறையாக வலம் வந்தார். மேலும் தன்னுடைய தண்மையான ஒளிக் கதிர்களில் “அம்ச பரிணமா” என்ற சீதள சுவாலையை அங்குள்ள மூலிகைகளின் மீது வீசி அய்யர்மலை மூலிகைகள் மேலும் மருத்துவ குணங்களைப் பெறும்படிச் செய்தார்.
தினமும் மலர் தொடுத்து மாலைகளை அணிவித்து திருரத்தினகிரீஸ்வரரை முறையாக வலம் வந்து வணங்கினார் சந்திர பகவான். திங்கள்தோறும் திருஅய்யர்மலையை வலம் வந்து வணங்கினால் இந்த “அம்சப் பரிணமா” சுவாலையைத் தாங்கிய மூலிகைகள் மீது பட்ட காற்று மக்கள் மீது படும்போது அவர்களுடைய மன சஞ்சலம் அகலுகிறது. இத்தகைய சேவையைச் சந்திர பகவான் செய்து கிரிவலம் வரும்போது படலேறு யானை லிங்க முக தரிசனத்தில் திருஅய்யர்மலை ஈசன் சந்திர பகவானுக்கு “ரீம்” என்ற அட்சரத்தை அளித்து ஆசி அளித்தார்.
படலேறு யானை லிங்க முக தரிசனப் பலன்கள் : திங்கட்கிழமை திருஅய்யர்மலையை “ரீம்” என்ற அட்சரத்தை ஜபித்துக் கொண்டே கிரிவலம் வந்து படலேறு யானை லிங்க முக தரிசனம் பெற்றிடில்..

 1. பெண்களால் வரும் ஆபத்துகள் நீங்கி நலம் பெறுவர்.
 2. பெண்கள் வலம் வந்து வணங்கினால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், கணவன் மனைவியரிடையே மன வேற்றுமைகள் மறையும்.
 3. குளிர்பானம், தண்ணீர் இறைக்கும் பம்புகள், Borewell, Fancy Shops போன்ற தொழிகளில் ஈடுபட்டுள்ளோர் முன்னேற்றம் காண்பர்.

முத்து மாலைகளை திருஇரத்தினகிரீஸ்வரனுக்கு அணிவித்தலும், ஈசனை வெண்மையான அல்லி மலர்களால் அர்ச்சித்து வழிபடுதலும் சிறப்பான பலன்களைத் தேடித் தரும்.

வந்தனைய வந்தமுக லிங்க தரிசனம்
சந்திர பகவான் தான் பெற்ற உச்ச அட்சர சித்தியால் பல அற்புதங்களைச் செய்வதைப் பார்த்த செவ்வாய் பகவான் திருஅய்யர்மலையைத் தானும் முறையாக கிரிவலம் வந்து திருஇரத்தின கிரீஸ்வரரின் அருளைப் பெற வேண்டி செம்பருத்தி மலர்த் தோட்டங்களை கிரிவலப் பாதையில் ஏற்படுத்தி சூலதேவரைத் தலையில் சுமந்து வலம் வரலானார். அவ்வாறு ஏற்படுத்திய மலர்த் தோட்டங்களில் தன்னுடைய தீட்சண்ய கிரணங்களாகிய சிந்தூரப் பிரஜா கிரண சுவாலைகளை அங்குள்ள மூலிகை மலர்கள் மீது வீசி திருஅய்யர்மலை மூலிகைகள் மேலும் புனிதமடையச் செய்தார்.

செவ்வாய்தோறும் திருஅய்யர்மலையை வலம் வருபவர்கள் மீது இந்தப் பூக்களின் காற்று படும்போது கண் திருஷ்டிகள் விலகச் செய்தார் செவ்வாய் பகவான். இப்புனித சேவையைச் செய்த செவ்வாய் பகவான் திருஅய்யர்மலையை கிரிவலம் வரும்போது வந்தனைய வந்தமுக லிங்க தரிசனத்தில் ஈசன் அவருக்கு “ஹ்ரீம்“ என்ற அட்சரத்தை அளித்து ஆசி தந்தார்.
வந்தனைய வந்தமுக தரிசனப் பலன்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் திருஅய்யர்மலையை “ஹ்ரீம்” என்ற அட்சரத்தை செபித்துக் கொண்டே கிரிவலம் வந்து வந்தனைய வந்தமுக லிங்க தரிசனத்தில் திருஅய்யர்மலை ஈசனை வணங்கிடில்..

 1. கண்ணேறுக் கோளாறுகள், திருஷ்டிகள் நம்மை விட்டுப் பறந்தோடும்.
 2. காவல் துறையினர், கார் டிரைவர்கள், தீயணைக்கும் படையினர் தங்கள் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கிச் சுகமடைவர்.
 3. பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகி கணவன்மார்கள் நீண்ட ஆயுளைப் பெறுவர். கணவன்மார்களின் தீய வழக்கங்கள் மறையும்.

ஆண்கள் சிவப்பு நிறக் கற்கள் பொருந்திய கடுக்கன்களுடன் கிரிவலம் வருவதலும், பெண்கள் தாமே தயாரித்த குங்குமத்துடன் மஞ்சள் கிழங்குகளை சுமங்கலிகளுக்கு தானமளித்தலும் மேற்கூறிய பலன்களைத் துரிதமாக்கும்.

திட்டு தேவதை எட்டுபரி தரிசனம்
தண்ணீரில் படகு செல்கிறது. அந்தப் படகின் மீது வீடு கட்டிச் செல்வதுண்டு. அதைப் “படகு வீடு” என்று அழைக்கிறோம். பெரிய நீர்த்தேக்கங்களில் உல்லாசப் பயணிகளுக்காக அவைகளை ஏற்பாடு செய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். தாங்க முடியாத அளவு மக்கள் ஏறினாலும், பாரம் ஏற்றினாலும் அந்தப் படகு தண்ணீரில் மூழ்கி விடும். அதைப் போலவே அளவுக்கு அதிகமான பாவங்கள் சேரும்போது நமக்கு சொல்லொணாத துன்பங்கள் வந்து சேருகின்றன. எனவே துன்பங்கள் நம்மை வந்தடைந்தால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? நாம் செய்த தவறுகளே நமக்குத் துன்பங்களாய் வந்து சேருகின்றன. இதை உணர்ந்தால் எந்நாளும் இன்பமே! துன்பமே இல்லை.

இவ்வாறு துன்பங்களைக் களைய வேண்டும் என்றால் நம்மை நாமே ஆத்ம விசாரம் செய்தல் வேண்டும். அவ்வாறு ஆத்ம விசாரம் செய்ய உகந்த உத்தம இடங்கள் பலவற்றுள் அமைதி நிறைந்த இடம் திருஅய்யர்மலையாகும்.. தெளிந்த நீரோடையில்தான் நம் உருவத்தைப் பார்க்க இயலும், அவ்வாறே அமைதியான இடத்தில்தான் நமது துன்பங்களுக்கான காரணத்தை ஆராய இயலும்.. திருஅய்யர்மலை போன்ற புனிதமான இடங்களில் தெய்வீக சக்திகள் பல மலைத் திட்டுகளில் வியாபித்திருக்கும். கிரிவலம் வரும்போது திட்டு தேவதைகளின் “சம்ஹார தீட்சண்ய சக்திகள்” கிரிவலம் வருவோரின் மீது தழுவி அவர்களின் மன வேதனையைக் குறைத்து சீர் செய்யும்.

இந்த திட்டு தேவதைகளின் அருள் தீட்சண்யத்தைப் பெற எட்டு திக்குகளின் யானைகளாகிய அஷ்டதிக் கஜங்கள் திருஅய்யர்மலையை வலம் வரத் தொடங்கின. இந்த எட்டு யானைகளும் தங்களுடன் புதன் பகவானையும் உடன் அழைத்து வலம் வந்தன. அவ்வாறு வலம் வரும்போது புத பகவான் அந்த எட்டு யானைகளுக்கும் உணவளித்து, நீர் அளித்து தேவையான சேவைகளைச் செய்தார். புத பகவானின் அற்புத சேவையால் மகிழ்ந்த திருஅய்யர்மலை ஈசன் அவருக்கு “சிரீம்” என்ற அட்சரத்தை திட்டு தேவதை எட்டுபரி தரிசனத்தில் அளித்து நல்லாசி வழங்கினார்.
திட்டு தேவதை எட்டுபரி தரிசனப் பலன்கள் :- திருஅய்யர்மலையை புதன்கிழமை தோறும் “சிரீம்” என்ற மந்திரத்தை செபித்த வண்ணமே கிரிவலம் வந்து நீர் மோர்தானம், அன்னதானம் செய்து திட்டு தேவதை எட்டுபரி தரிசனம் பெற்றிடில்..

 1. சொல்லொணாத் துன்பங்களால் மன அமைதி குலைந்து வருந்துவோர் துன்பங்கள் நீங்கி அமைதி பெறுவர்.
 2. உன்னத தியான நிலைகள் எளிதில் கைகூடும்.
 3. தீய சேர்க்கையால் வழி தவறிய சிறுவர்கள் திருந்தி நன்னிலை அடைவர்.
 4. தனியார் துறை கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோர், உரிமையாளர்கள் நலம் பெறுவர்.

கிரிவலத்தில் அடுத்து நாம் காண்பது ஓர் அரிய நாக தேவதையின் புற்று, கனக சுந்தராங்கினி என்னும் நாகதேவதையின் இருப்பிடமே இந்தப் புற்றாகும். பௌர்ணமி தோறும் கனக சுந்தராங்கினி திரு அய்யர்மலை ஈசனை கிரிவலம் வந்து வணங்கித் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறது.. பௌர்ணமிதோறும் இந்தப் புற்றை பசுஞ்சாணத்தால் மெழுகி, மஞ்சள் பொடி, பச்சரிசி மாவால் கோலமிட்டு வலம் வந்து வணங்கிடில் நாகதோஷங்கள் நீங்கி, திருமணம் எளிதில் கைகூடும்.. மஞ்சள் நிற ஒன்பது கஜ சேலைகளை கிரிவலம் வரும் சுமங்கலிகளுக்கு தானமளித்தல் சிறப்பானது.

ஸ்ரீசுப்ரமண்யர் ஐயர்மலை

ஏக விம்சதி பூரணி முக லிங்க தரிசனம்
வாழ்க்கையில் தனக்கென அல்லாது பிறருக்காக செய்கின்ற காரியங்கள் அனைத்துமே அளவற்ற புண்யங்களைத் தரவல்லதாகும். ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் செய்ய வேண்டிய கடமையை தெய்வங்களும், தேவதைகளும், கிரகங்களும், கிரக அதிபதிகளும் பூமியில் வந்து பல சேவைகளை மக்களுக்காக செய்து காட்டி “மக்கள் எல்லாம் இவ்வாறு செய்தால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்று எடுத்துக் காட்டுகின்றனர். ஒரு வாழை மரம் நட்டால் அது பல வாழை மரங்களாகப் பெருகுகின்றது. மேலும் வாழை மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மக்களுக்குப் பயன்படுகின்றன.. இவ்வாறு சாதாரண ஒரு மரமே தன் பழம், பூ, காய், தண்டு, இலை, கிழங்கு, மட்டை அனைத்தையுமே மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கிறதென்றால், ஆறறிவு படைத்த மனிதன் எப்படியெல்லாம் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும்! இத்தகைய பயன் தரும் மரங்களை திருஅய்யர்மலையைச் சுற்றி நட்டு பல பெரும் தோப்புக்களை உருவாக்கினார் தேவகுருவாக இருக்கின்ற வியாழ பகவான்.

வாழ்வு தரும் வாழை :- வாழை இலையின் இளங்குருத்தினைக் கொண்டு வந்து சிறு துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து சமைத்து அன்னத்தோடு சேர்த்து திருஅய்யர்மலையை கிரிவலம் வரும் அடியார்களுக்கு அன்னதானம் செய்தார். இவ்வாறு இளங்குருத்தைப் பருப்போடு சேர்த்துத் தருவதால் ஆசனக் கடுப்பு நோய்கள் நீங்கும்.. அடுத்து வாழைப்பூவினைப் பாதியாக அவித்து அதிலிருந்து பிழிந்த சாறுடன், கருவேப்பிலையை அரைத்து அதனுடைய சாற்றினையும் சேர்த்து இவ்விரண்டையும் ஒரு குவளை தயிருடன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் கொடுத்தால் சீதபேதி குணமாகும்.. வாழைப் பிஞ்சுகளை வற்றல்களாக ஆக்கி எண்ணெயில் பொரித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாக வழியுண்டு.

வாழைத் தண்டின் சாறு எடுத்து வெறும் வயிற்றில் அருந்துவதால் இரத்தத்தில் உப்பின் அளவு குறைந்து விடும்.., இதனால் உடலும் நலம் பெறும். வாழைப்பட்டையிலிருந்து சாறைப் பிழிந்து அதனுடன் சில மூலிகைகளைச் சேர்த்து குடிக்கக் கொடுத்தால் உடலில் உள்ள விஷத்தின் தீவிரம் குறையும். வாழைப் பூவை முறையாக சாறு எடுத்து அதனுடன் தேனும், நெய்யும் சேர்த்து குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் காசநோய் குறைந்து விடும். வாழைப் பழத்தில் வைட்டமின்கள் என்னும் உயிர்ச் சத்துக்கள் நிறைய இருப்பதால் ஆயுளை வளர்க்கும். ரஸ்தாளி, மலைப்பழம், நாட்டு வாழை, பேயன்வாழை, செவ்வாழை, பூவன், கற்பூர வல்லி, மொந்தன், நேந்திர வாழை போன்ற பலரக வாழை மரங்களை வியாழ பகவான் திருஅய்யர் மலையைச் சுற்றி நட்டு, பல தோட்டங்களை உருவாக்கி, மருத்துவம் செய்து தினமும் கிரிவலம் வந்தார்.

அவ்வாறு கிரிவலம் வரும்போது ஒரு நாள் ஏக விம்சதி பூரணி முகலிங்க தரிசனத்தில் அசரீரியாய், “வியாழ பகவானே! வாழை மரங்களை வைத்து அதனால் பலருக்கு மருத்துவ உதவிகள் செய்து எம்மை முறையோடு வலம் வந்ததால் உமக்கு  “ஒளம்” என்ற அட்சர ஒலியினை அளித்தோம்!” என்று ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் அருள்பாலித்தார்.
ஏக விம்சதி பூரணி முக லிங்க தரிசனப் பலன்கள் :-
வியாழன் தோறும் திருஅய்யர்மலை ஈசனை “ஒளம்” என்ற மந்திரத்தை செபித்த வண்ணம் கிரிவலம் வந்து வாழைப்பழங்களை தானமாக அளித்து ஏகவிம்சதி பூரணி முகலிங்க தரிசனம் பெற்றிடில்..

 1. நோய், நொடியில்லாத நீண்ட வாழ்வைப் பெறலாம். நோய்வாய்ப்பட்டு பாயில் கிடந்து வருந்தும் நிலைமை ஏற்படாது.
 2. குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 3. பைனான்ஸ் கம்பெனி, நகை வியாபாரிகள், வைர வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
 4. குழந்தைப் பேறு கிட்டும்.
 5. இளவயதிலேயே முடி நரைத்தல், தலை வழுக்கை குணமாக வாய்ப்புண்டு.

இருமுக சுந்தரலிங்க கூம்பு தரிசனம்
வியாழ பகவான் ஆற்றிய அரும் பெரும் தொண்டைப் பார்த்த அசுர குருவான சுக்ராச்சார்யார் மிகுந்த பயபக்தியுடன் திருஅய்யர்மலையை கிரிவலம் வரத் தொடங்கினார். சுக்ராச்சாரியாரின் கிரிவலம் ஏன்?

சுக்ராச்சாரியாரின் சீடனான மகாபலிச் சக்கரவர்த்தி குரு வார்த்தையை மீறி வாமன வடிவத்தில் வந்த மகாவிஷ்ணுவுக்கு மூவுலகங்களையும் தாரை வார்த்துக் கொடுத்தாரல்லவா? “குருவின் சொல்லை மீறிய சீடனுக்கு அனைத்து வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தோமே!” என்ற வருத்தத்தால் மனவேதனை அடைந்து அதற்குப் பரிகாரம் தேட திருஅய்யர்மலையை கிரிவலம் வந்தார் அசுரகுரு.

குரு வார்த்தையை மீறுகின்ற சீடனுக்கு வித்தைகளைச் சொல்லிக் கொடுப்பதால் “சிஷ்யமர்தக தோஷம்” குருவிற்கு வந்து சேரும். இதனால் மற்ற சீடர்களும் துன்புறுவர்.. ஆகவே இந்த தோஷத்திற்குப் பரிகாரம் தேடித் திருஅய்யர்மலையை கிரிவலம் வந்தார் சுக்ராச்சாரியார்.. இங்கே ஒரு சந்தேகம் வரலாம். குருவின் சொல்லை மீறினாலும் ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்குத்தானே மகாபலிச் சக்ரவர்த்தி மூவுலகங்களை அளித்தார். அது எப்படித் தவறாக இருக்க முடியும்? மகா விஷ்ணுவுக்கு மூன்றடி நிலம் அளித்தமைக்காக தான் கொடுத்த வாக்குறுதியை மீறாது இன்றும் மகாபலிச் சக்கரவர்த்திக்கு பாதாள லோகத்தில் ஸ்ரீநாராயண மூர்த்தி தரிசனம் அளித்தவாறு இருக்கிறார். ஆனால் குரு சொல்லை மீறியதால் சுக்ராச்சாரியார் தன்னுடைய சீடனுக்கு தரிசனம் தருவதில்லை.

இறைவனுக்கு இழைத்த அபராதத்திற்கு குருவிடன் பரிகாரம் தேடலாம்! ஆனால் குருவிற்கே அபராதம் என்றால் அதற்கு எவ்வுலகிலும் பரிகாரம் கிடையாது! எனவே சற்குருவைப் பெற்ற புனிதர்களே! உங்கள் குருவிடம் சரணடையுங்கள். அவர் காட்டும் வழியில் கண் மூடிச் செல்லுங்கள். “கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்” என்பது சித்தர்கள் வாக்கு. சற்குருவைப் பெறாதவர்கள் இறைவனிடம் மன்றாடி அழுது பிரார்த்தித்தால் அவர் நிச்சயம் உங்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பார்! அசுர குரு சுக்ராச்சாரியார் திருஅய்யர்மலையைச் சுற்றிலும் விதவிதமான வில்வ மரங்களை நட்டு, அம்மரங்களைப் பராமரித்து, வில்வ இலைகளால் மக்களுக்கு மருத்துவம் செய்தார்!

வீரியம் தரும் வில்வம் : இந்த உடலின் வளர்ச்சியே நாம் ஏற்றுக் கொள்ளும் உணவு வகைகளிலிருந்து பெறப்படுவதுதான். அவை முறையாகவும் முழுமையாகவும் உடலுக்குக் கிடைக்க வேண்டுமானால் உடலின் ஜீரண உறுப்புகள் நன்றாக இயங்க வேண்டும். குடல் பகுதிகளில் வசிக்கும் கிருமிகளையும், பூச்சிகளையும், புழுக்களையும் வெளியேற்ற வேண்டுமானால் தினமும் வில்வ இலைகள் ஐந்தினை மென்று விழுங்க வேண்டும்.. இதனால் நலம் பெறலாம். அடுத்து ஐந்து வில்வ இலைகளோடு, இரண்டு அத்தி இலை, இரண்டு வேப்பிலை இவற்றைச் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் குடல் புண்கள் ஆறிவிடும். மலச்சிக்கல் உடையவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வில்வ இலைகள் ஐந்தினை மென்று விழுங்கி வந்தால் மலச்சிக்கல் எளிதில் குணமாகும்..

இவ்வாறு வில்வ இலைகளைக் கொண்டு மற்ற இலைகளோடு சேர்த்து முறையாக அளித்து பலவிதமான கடுமையான நோய்களை நீக்கினார் சுக்ராச்சாரியார். தினமும் வில்வ இலைகளின் மகிமையினை திருஅய்யர்மலையை கிரிவலம் வருபவர்களுக்கு உபதேசித்து நல்வழி காட்டினார். தானும் திருஅய்யர்மலையை தினமும் முறையாக வலம் வந்து, தான் நட்ட சிறிய வில்வக் கன்றுகளெல்லாம் பெரிய மரங்களாகவும், தோப்புகளாகவும் ஆகும்படி செய்து, மக்களுக்குச் சேவை செய்து வரும் வேளையில் இருமுக சுந்தரலிங்க கூம்பு தரிசனத்தில் அசரீரியாய் திருஇரத்தினகிரீஸ்வரர், “சுக்ராச்சாரியாரே! உம்முடைய அரிய சேவையால் பெரிதும் மகிழ்வுற்றோம். உமக்கு “க்லீம்” என்ற அட்சரத்தை அளித்து சீடனால் வந்த தோஷத்தை விலக்கினோம்!” என்று அருளாசி வழங்கினார்.

இருமுக சுந்தரலிங்க கூம்பு தரிசனப் பலன்கள்: திருஅய்யர்மலையை வெள்ளிக்கிழமைகளில் “க்லீம்” என்ற மந்திர ஜபத்துடன் கிரிவலம் வந்து வில்வ இலைகளைக் கையில் வைத்து மாலையாகத் தொடுத்து திருஇரத்தினகிரீஸ்வரருக்கு அணிவித்தால்..

 1. கடுமையான புற்று நோய்கள் முதற்கொண்டு அனைத்து நோய்களும் நீங்கி நலம் பெறுவர்.
 2. ஆசிரியர்களாய் இருக்கின்றவர்கள் தகுதியற்ற மாணவர்களுக்கும், கீழ்ப்படியாத, மரியாதை செலுத்தாத மாணவர்களுக்கும் பாடம் சொல்லித் தருவதால் வருகின்ற தோஷங்கள் விலகும்.
 3. வேதம் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த வேதத்தை எக்காரணம் கொண்டும் பணத்திற்காக விற்கக் கூடாது. இலவசமாக மற்றவர்களுக்காக சாதி, மத, இனம் பாராது சொல்லித் தர வேண்டும். அவ்வாறு காசுக்காக வேதம் ஓதுவதால் விளையும் கடுமையான சாபங்கள் நீங்க அய்யர்மலை கிரிவலம் ஓரளவு உறுதுணை செய்யும். மற்ற விளக்கங்களை குருவை நாடித் தெரிந்து கொள்ளவும்.
 4. சிகை அலங்காரம், வாசனைப் பொருட்கள், சினிமா, நாடகம், போட்டோ, பிலிம் துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
 5. இரத்த சோகை, வெண்குஷ்டம், Leukaemia போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மும்மூர்த்திப் பதி முக லிங்க தரிசனம்
மனிதன் பிறக்கும்போதே தனக்குரிய கர்மாக்களைத் தேடிக் கொண்டுதான் வருகிறான். அதற்கேற்ப அவனுடைய வாழ்க்கையும் அமைந்து விடுகிறது. இவை அத்தனையும் ஆண்டவன் அருளால்தான் நடைபெறுகிறது. ஆகவே நாம் அனுபவிப்பதையெல்லாம் சிவார்ப்பணமாக சமர்ப்பித்து விடும்போது அந்தக் கர்மாக்கள் நம்மை பாதிப்பதில்லை வாழ்க்கையையும் விருப்பு வெறுப்பு இன்றி சீராக அமைத்துக் கொள்ள முடிகிறது. மனித இனத்தில் ஒருவர் வேறு ஒருவரிடம் வெறுப்போ, பகைமையோ காட்டுவதற்கு இடமே இல்லை என ஆகிவிடுகிறது. இவ்வாறு புரிந்து வாழ்க்கையை அனுபவிக்கும் மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

மக்கள் தங்களைப் புரிந்து கொண்டு நல்வாழ்வு வாழ ஸ்ரீசனீஸ்வர பகவான் தேவலோகத்திலிருந்து “சாந்தபுரி காந்த” கற்களை பூமிக்குக் கொண்டு வந்தார். பூமிக்கு அவர் வந்தபோது சந்தியா நேரம் நெருங்கி விட்டதால் காயத்ரி மந்திரம் ஜபிக்க காவிரி அருகில் பூசையில் அமர்ந்தார். அப்பொழுது அவர் கொண்டு வந்த கற்களை வாழை இலையில் வைத்து விட்டு, நீரில் இறங்கி பூசைகளை முடித்தார். பூசை முடிந்து வெளியில் வந்து பார்த்தால் அக்கற்களைக் காணவில்லை. என்ன செய்வது என்றறியாது திகைத்து அருகில் இருந்த திருஅய்யர்மலையை அடைந்து ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரை வேண்டித் திருஅய்யர்மலையை வலம் வந்தார்.

அவ்வாறு அவர் முறையாகப் பலமுறை கிரிவலம் வந்தபோது மும்மூர்த்திப் பதிமுக லிங்க தரிசனத்தில் இந்த சாந்தபுரி காந்தக் கற்கள் ஒளி விடுவதைப் பார்த்துவிட்டார். பெருமகிழ்ச்சி அடைந்து ஸ்ரீஇரத்தினகிரி ஈசனிடத்திலே இந்த அற்புதக் கற்கள் அமர்ந்திருப்பதால் யாரெல்லாம் திருஅய்யர்மலையை கிரிவலம் வருகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் யாரிடமும் விருப்பு, வெறுப்பு இன்றி அமைதியாகத் தங்கள் வாழ்நாளைக் கழிப்பர் என்று புரிந்து கொண்டார் ஸ்ரீசனீஸ்வர் பகவான். ஸ்ரீசனீஸ்வர பகவான் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்து தம்மிடம் சேர்ப்பித்த கற்கள் அருளால் கிரிவலம் வரும் அனைவரும் நலம் பெறப் போவதால் ஸ்ரீஇரத்தினகிரி ஈசனுக்கு அணிவித்து வழிபடுவதால்

 1. வைத்தியத்துறையில் உள்ளவர்கள் – DOCTORS, NURSES, PROFESSORS, LAB TECHNICIANS. PHARMACISTS Etc… நலம் பெறுவர்.
 2. எண்ணெய், பெட்ரோல், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள் நலம் பெறுவர்.

கொடுக்குவளை லிங்க முக தரிசனம்
மல்லிகை தனது மணத்தை மாற்றிக் கொள்ளவில்லை, காய், கனிகள், எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் தான் காய்க்கின்றன பழுக்கின்றன. புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை. பசு பால் கொடுக்கத் தவறுவதில்லை. இவையெல்லாம் கடவுள் அளித்த பண்புகளை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான், எதையும் உடுத்துகிறான்; எப்படி வேண்டுமானாலும் வாழ்கிறான். தனது உயர்மட்டத்திலிருந்து மிருக இனம் என்ற தாழ்ந்த மட்டத்திற்குப் போய்விட்டான். மிருகங்களுக்குப் பகுத்தறிவு இல்லை. ஆனால் அவை தமது வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டும் தன் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான்.

கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக இப்படி மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்வதைத் தடுத்து நிறுத்த இராகு பகவான் திருஅய்யர் மலையை முறையாக வலம் வந்து ஒரு அற்புத மார்க்கம் கிடைக்குமா என்று பிரயத்தனம் செய்தார். தொடர்ந்து இராகு பகவான் செய்த வழிபாட்டால் மகிழ்ந்த திருஇரத்தினகிரி ஈசன் கொடுக்குவளை லிங்க முக தரிசனத்தில் அசரீரியாய் ஒலித்தார். “ஒருவர் போட்ட விதையிலிருந்து வரும் செடியை இன்னொருவர் வளர்க்கிறார். ஒருவர் வளர்த்த செடியின் பலன்களான கனிகளை இன்னொருவர் பெறுகிறார். இராகு பகவானே! இவ்வாறு ஒருவர் மற்றவருக்காக வாழும் தன்னலமற்ற வாழ்க்கை நெறிதான் உயர்ந்தது. இதை மக்கள் அனைவருக்கும் அறிவிப்பாயாக!”

திருஇரத்தினகிரீஸ்வரர் அருளிய வண்ணமே இராகு பகவான் கருநாக வடிவம் எடுத்து கிரிவலத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். திருஆதிரை நட்சத்திரத்தன்று இராகுபகவான் திருஅய்யர்மலை கிரிவலப் பாதையெங்கும் மல்லிகைப் பூக்களைத் தூவி, சிவ நாமாவளியை ஓதிய வண்ணம் கிரிவலம் வந்தார். சுவாதி நட்சத்திரத்தன்று குழந்தைகளுகுப் பால் தானம் செய்து கிரிவலம் வந்தார் இராகு பகவான். சதய நட்சத்திரத்தன்று சந்தனம் தானம் செய்து கிரிவலம் வந்தார் இராகு பகவான். இராகு பகவானின் தன்னலமற்ற சேவையால் மகிழ்ந்த ஈசன் அவருக்கு “உத்ரௌம்” என்ற அட்சரத்தை கொடுக்குவளை லிங்க முக தரிசனத்தில் அளித்து நல்லாசி வழங்கினார்.

கொடுக்குவளை லிங்கமுக தரிசனப் பலன்கள்:- திருஆதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் திருஅய்யர்மலையை “உத்ரௌம்” என்ற அட்சரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்து, தாமே அரைத்த சந்தனத்தால் திருஅய்யர்மலை ஈசனாகிய திருஇரத்தினகிரி ஈஸ்வரருக்கு சந்தனக் காப்பு அணிவித்திடில்

 1. கடல் வாணிபம், இரும்பு சம்பந்தமான வியாபாரம், எண்ணெய் வித்துக்கள் வியாபாரம் செய்கின்றவர்கள் நலம் பெறலாம், வியாபாரம் செழித்தோங்கும்.
 2. அச்சுறுத்தும் தீய கனவுகளால் தொல்லை ஏற்படாது.
 3. தீய நண்பர்களால் மது, ரேஸ், சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அத்தகைய தீய நண்பர்களிடமிருந்து விடுதலை பெறுவர்.

பூத லிங்க முக தரிசனம்
அஸ்வினி, மகம், மூலம் – இம்மூன்று நட்சத்திரங்களில் கேது பகவான் செம்பாம்பு வடிவம் எடுத்து திருஅய்யர்மலையை வலம் வந்தார். கேது பகவான் எதற்காக வலம் வந்தார்? பிறவிகளில் உயர்வானதும், நல்லருள் பெறுவதற்கும் உகந்தது மனிதப் பிறவியே! சிறப்பு மிக்க இம்மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் நோய்நொடியில்லாமல் பூரண ஆயுள் பெற்றால்தான் இறைவனுக்காக சேவை செய்ய முடியும்! நீண்ட ஆயுள் பெற்றிருந்தால் மட்டும் போதுமா? இப்புனித பூமியில் நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியமல்லவா? எம்பெருமானாகிய அண்ணாமலை ஈசன் இந்த மனித உடலை நமக்கு அளிக்கும்போது நாம் இறைவனிடம் என்ன உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம்?

“அண்ணாமலையானே! பூமியில் இவ்வுடலைத் தாங்கும் காலம் முழுவதும் உன் நினைவில், உனக்காக, உன்னுடைய அடியார்களுக்காக, உன்னால் படைக்கப்பட்ட உயிர்களின் மேன்மைக்காக ஒரு நொடிப் பொழுதும் வீணாக்காமல் பாடுபடுவேன்”, என்று உறுதி மொழி அளிக்கிறோம். ஆனால் பூமிக்கு வந்தபின் எல்லாவற்றையும் மறந்து விட்டு, மனிதப் பிறவியின் மேன்மை உணராது காலத்தை வீணே கழிக்கின்றோமே! எனவே உடலைப் போற்றி, பொன்னான காலத்தைப் போற்றி மக்கள் அனைவரும் இறைச் சேவையில் நாட்டம் கொள்ள கேதுபகவான் திருஇரத்தினகிரி ஈசனை வேண்டி வலம் வந்து கொண்டிருந்தார். கேது பகவான் நெல்லிப்பூ, தூதுவளைப்பூ, ஆவாரம்பூ, முருங்கைப்பூ, செம்பருத்திப்பூ, வேப்பம்பூ, நாவல்பூ, ஆகியவற்றால் திருஇரத்தினகிரி ஈசனை அர்ச்சித்து அந்த மூலிகை மலர்ப் பிரசாதங்களை மக்களுக்கு அளித்து வந்தார்.

இதனால் மக்கள் அனைவரும் சிரசு நோய்கள், தலைவலி, மண்டைக்குத்து, கபால வாயு, கபால வலி, தலை பாரம் போன்ற கபால நோய்களிலிருந்து விடுபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்றனர். தொடர்ந்த மக்கள் சேவை, பிரார்த்தனையுடன் கிரிவலம் வந்த கேது பகவானுக்கு திருஇரத்தினகிரி ஈசன் “பூதலிங்க முக தரிசனத்தில்” அசரீரியாக ஒலித்து “சௌம்” என்ற அட்சர சித்தியை அளித்தார்.
பூத லிங்க முக தரிசனப் பலன்கள் :-
சனிக்கிழமைகளில் கேது பகவானை வேண்டி “சௌம்” என்ற அட்சர ஜபத்துடன் திருஅய்யர்மலையை வலம் வந்து வணங்கிடில்

 1. தலைக்கு வருகின்ற ஆபத்துகளெல்லாம் தலைப்பாகையோடு போகும்.
 2. BRAIN TUMOR, மூளைக் காய்ச்சல், CEREBRAL HAEMORRHAGE போன்ற வியாதிகள் நீங்க வழியுண்டு.
 3. “தலை நிற்காமல்” அவதியுறும் குழந்தைகள் நிவாரணம் பெறலாம்.

கிரிவலத்தில் கலவை சாதம் (VARIETY RICE) தானம் செய்வதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
தொடுவிடையான் லிங்க முக தரிசனம்
பூவுலகில் அன்றும், இன்றும், என்றும் எல்லோரும் பிறக்கிறார்கள். மக்கள் மனதிலே புகழ் பெறுகின்றவர்கள் ஒரு சிலரே. தெய்வ சக்தி என்பது அதீந்த்ர சக்தி! அதை உணர முடியாது. பூர்வீகப் புண்ணிய சுகிர்தம் எனப்படும் திருஞானசம்பந்தர் போல் கருவிலேயே திருஉடையவர்களாகப் பிறக்கிறார்கள் சிலர். அவர்கள் அக்காலத்திலும், இக்காலத்திலும், எக்காலத்திலும் கற்றோர்களாலும், மற்றோர்களாலும் போற்றும் மகான்களாக மக்கள் மத்தியிலே ஒருவராக வாழ்ந்து அனைவர் மனதிலும் நீங்காத இடத்தைப் பெறுகிறார்கள். இதைத்தான் பெரியவர்கள்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்        
தோன்றலின் தோன்றாமை நன்று
என்று உரைத்தனர்.
இப்படி ஓர் அற்புதக் குழந்தையை பெற்றெடுத்தல் வேண்டும் என்று காசிப முனிவர் திருஅய்யர்மலையை முறையாக கிரிவலம் வந்தார். திருஅய்யர்மலையைச் சுற்றிப் பதினெட்டு வகை துளசிச் செடிகளை நட்டு அற்புத துளசி வனங்களை உருவாக்கினார். மூன்று அல்லது ஐந்து துளசி இலைகளுடன் சிறிது இஞ்சித் துண்டு, இரண்டு மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்று (45 நாட்கள்) விழுங்கி வந்தால் ஆஸ்த்துமா, மூச்சிறைப்பு நோய்கள் குணமாகும். சகுன தோஷங்களை நிவர்த்தி செய்யும் அற்புத மூலிகை துளசி. துளசியுடன் மற்ற மூலிகைகளையும் சேர்த்து மக்களின் நோய்களை நீக்கி அருந்தொண்டாற்றி வந்தார் காசிப முனிவர். திருஅய்யர்மலை ஈசனையும் தொடர்ந்து கிரிவலம் வந்தவாறே இருந்தார்.

காசிப முனிவரின் அருந்தவத்தால் மகிழ்ந்த பிரம்ம தேவர் அவருக்கு “தொடு விடையான் லிங்க முக தரிசனத்தில்” சோதி வடிவில் தோன்றினார். பிரம்ம தேவரை தண்டனிட்டு வணங்கிய காசிப முனிவர். “பிரபோ! கருவிலே திருவுடைய மகவு ஒன்றைத் தாங்கள் அடியேனுக்குத் தந்தருள வேண்டும்!” என்று வேண்டினார். பிரம்ம தேவரும் ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரை தியானித்து அவர் அருளால் “பயோ விரதம்” என்னும் அற்புத விரதத்தை உபதேசித்தார். அதன் பயனாய் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியையே குழந்தையாகப் பெற்றார் காசிப முனிவர். இந்த பயோ விரதத்தைக் காசிப முனிவர் தன் மனைவி. அதிதி தேவிக்கு உபதேசிக்க அந்த தேவியும் அவ்விரதத்தை மிக்க சிரத்தையுடன் கடைபிடித்து ஆவணி மாதம் வளர்பிறை திருஓண நட்சத்திரத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியையே குழந்தையாகப் பெற்றெடுத்தாள். ஆகவே தொடுவிடையான் லிங்க முக தரிசனத்தால் காசிப முனிவர் இறைவனையே குழந்தையாக அடையும் பாக்கியத்தைப் பெற்றார்.

தொடுவிடையான் லிங்க முக தரிசனப் பலன்கள் :- ஆவணி மாதம் வளர்பிறை திருஓண நட்சத்திரத்தன்று திருஅய்யர்மலை ஈசனை கிரிவலம் வந்து சர்க்கரைப் பொங்கல் தானம் அளித்து வணங்கினால்...

 1. பிறவியிலேயே ஞானம் பெற்ற அற்புதக் குழந்தைகளைப் பெறலாம்.
 2. நற்பண்புகள் கூடிய மனைவியைப் பெறலாம்.
 3. பெண்களும் குணமுள்ள கணவன்மார்களை அடைவர்.

மிச்சப் பிழையறுக்கும் பேரருளாளன் முக லிங்க தரிசனம்
தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி மாவலி தலைமையிலான அசுரர்களின் தயவை வேண்டினர். அமிர்தம் கடைவதில் தாங்கள் தேவர்களுக்கு உதவினால் அமிர்தத்தில் பங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மாவலியும் அதற்கு ஒப்புக் கொண்டான். மாவலியின் உதவியால் அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் அதை அசுரர்களுக்குத் தராமல் தாங்களே வஞ்சகமாக அருந்தி விட்டதுடன் மாவலி உள்ளிட்ட அசுரர்களைக் கொன்றும் விட்டனர். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் தமக்கு மட்டுமே தெரிந்திருந்த சஞ்சீவி வித்தையைப் பயன்படுத்தி மாவலியையும், மற்ற அசுரர்களையும் உயிர்த்தெழச் செய்தார். மாவலிச் சக்கர்வர்த்தி தான் இழந்த அரசையும், ஆயுதங்களையும் திரும்பப் பெற வேண்டி குருவை நாடினான். அப்பொழுது சுக்கிராச்சாரியார்., “மாவலியே! நீ திருஅய்யர்மலை சென்று முறையாக கிரிவலம் வந்தால் திருஇரத்தினகிரீஸ்வரர் அருளால் ஆத்ம பலத்தையும், தேவர்களை வெல்லுகின்ற அற்புத ஆயுதங்களையும் பெறுவதற்கு உரித்தான யாகத்தையும் அறிந்து கொள்வாய்! அந்த யாகத்தால் நீயும் உன் குலத்தவரும் நல்நிலையை அடையலாம்!” என்று அருள்மொழி கூறினார்.

மாவலியும் முறையாக அய்யர்மலை ஈசனை வலம்வரத் தொடங்கினான். கிரிவலப் பாதையில் உள்ள பால் விருட்சங்களான ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களுக்கு நீர் வார்த்து மஞ்சள், குங்குமம் இட்டு அவைகளைப் பராமரித்து வந்தான். மாவலியின் இடையறாத சேவையாலும், கிரிவலத்தாலும் மகிழ்ந்த திருஅய்யர்மலை ஈசன் மிச்சப் பிழை அறுக்கும் பேரருளாளன் முக லிங்க தரிசனத்தில் அசரீரியாய் ஒலித்தார்.

“மாவலி அரசே! உமது தவத்தால் யாம் மகிழ்ந்தோம், மூவுலகையும் வெல்லக் கூடிய சக்தியைத் தரக்கூடியது “விஸ்வஜித்” என்ற அற்புத யாகம். உமது குரு சுக்ராச்சாரியார் அருளாசியோடு இந்த யாகத்தைச் செய்தால் இழந்த உன்னுடைய அரசைத் திரும்பப் பெறுவாய்! அந்த யாகத்திலிருந்து திவ்ய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்று மூவுலகையும் ஆள்வாய்!” என்று வாட்போக்கி நாதர் அருள்வாக்கு அளித்தார்.

ஈசன் அருளிய வண்ணம் ஆவணி மாதம் பூர்ண பௌர்ணமி அன்று தன் குருநாதரின் அருளாசியோடு விஸ்வஜித் யாகத்தைச் சிறப்பாக நிகழ்த்தி இழந்த தன் அரசை மீண்டும் பெற்றதோடு மூவுலகையும் ஆளும் திறனும் பெற்றான். “குரு அருளே திருஅருள்” என்பதை உணர்ந்தான்..
மிச்சப் பிழை அறுக்கும் பேரருளாளன் முகலிங்க தரிசனப் பலன்கள் :- ஒவ்வொரு மாதப் பௌர்ணமி அன்றும், குறிப்பாக ஆவணி மாதப் பௌர்ணமி அன்று திருஅய்யர்மலையை கிரிவலம் வந்து தங்களால் இயன்ற அளவு அன்னதானம் செய்து வணங்கிடில்

 1. முறையாக ஒருவர் அடைய வேண்டிய பொருளைப் பிறர் கவர்ந்து சென்று இருந்தால் இழந்த பொருளை மீண்டும் பெறலாம்.
 2. மூதாதையர்கள் ஆசியால் குழந்தைகள் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவர்.
 3. அண்ட சராசர குருமகா தேவதைகளின் அருளாசியால் தீவிர இறை நம்பிக்கையும், குருபக்தியும் ஏற்படும்.

மிச்சப் பிழை அறுக்கும் பேரருளாளன் முகலிங்க தரிசனத்திற்குப் பின் மேலே தொடர்ந்து சென்று ஐயர் மலையின் முன் மண்டபத்தை அடைகிறோம். அங்கே அமர்ந்திருக்கும் பாலூட்டிப் பிள்ளையாரை மீண்டும் தரிசனம் செய்து அவருக்கு நன்றி செலுத்தி கிரிவலத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலே குறித்த விசேஷ நாட்கள் அல்லாது எந்த நேரமும் இரத்தினகிரி ஈசனை வலம் வந்து நலம் பல பெறலாம்.

கிரிவல நியதிகள் – திருஇரத்தினகிரி ஈசனை வலம் வருகையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய நியதிகள் :-

 1. காலில் செருப்பு அணிந்து கொண்டோ, கையில் குடைபிடித்துக் கொண்டோ கிரிவலம் வருவதைத் தவிர்க்கவும்.
 2. ஆண்கள் வேஷ்டி அணிந்து கொண்டு, மேல்சட்டை இல்லாமல் வலம் வர வேண்டும். பஞ்ச கச்சம் அணிந்து வலம் வருவதால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மிக உயர்ந்த தெய்வீக சிலாதர இரத்தினக் கற்களால் ஈசன் அமைந்திருப்பதால் அக்கற்களிலிருந்து வீசும் தெய்வீக ஒளிக் கதிர்களைப் பெற்று, பலனடையவே ஆண்கள் மேல்சட்டை இன்றி வலம் வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 3. நறுமணமுள்ள ஊதுபத்திகளை ஏற்றிக் கையில் பிடித்தவாறே வலம் வருதல் வேண்டும்.
 4. கிரிவலம் வரும்போதோ அல்லது கிரிவலத்தை முடித்த பின்னரோ தங்களால் இயன்ற அன்னதானத்தைச் செய்வது, கிரிவலப் பலன்களைப் பன்மடங்காகப் பெருகச் செய்யும். எனவே கிரிவலம் செல்வோர் பழம், பிஸ்கட், பிரட் போண்ற உணவுப் பொருட்களைக் கையுடன் எடுத்துச் சென்றால் கிரிவலப் பாதையிலேயே அன்னதானம் செய்து கொண்டே கிரிவலம் வரலாம். தானதர்மங்களுடன் இணைந்த கிரிவலமே மேன்மை மிக்கது,

ராஜலிங்கமாக, இரத்தினகிரி ஈசனாக வானளாவி நிற்கும் எம்பெருமானை பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து வலம் வந்து வணங்கி எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறோம்.
ஸ்ரீஅய்யர்மலையில் கார்த்திகை தீப தானம்
எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் அக்னி தத்துவமாக திருஅண்ணாமலையில் எழுந்தருளியுள்ளார். ஒப்பற்ற அந்த அக்னி தத்துவத்தின் ஓர் அம்சமாக ஸ்ரீஅய்யர் மலையிலும் எம்பெருமானின் திருஅருள் குடிகொண்டுள்ளது. அற்புத இத்திருவருள் அனைவரையும் சென்றடைய வேண்டி எமது ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருஅய்யர்மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி வருகின்றோம். திருஅய்யர் மலையிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் பக்தர்களும், அடியார்களும் கார்த்திகை தீபம் சிறப்பாக நடைபெற அனைத்து உதவிகளையும் அளித்து வருவது மிகவும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
தீபத்தின் சிறப்பு : மனிதன் அன்றாடம் இயற்றும் செயல்களில் அறிந்தோ அறியாமலோ பற்பல பாவச்செயல்களும் சேர்ந்து விடுகின்றன. கோயில் வழிபாடு, அன்னதானம், முதியோர் சேவை, ஹோமம், சுமங்கலி பூஜை போன்ற பல்வேறு வழிபாடுகளால் மனிதனின் கர்மவினைகள் ஓரளவு குறைகின்றன. ஆனால் சில கொடிய கர்மவினைகள் இந்த சாதாரண வழிபாடுகளால் களையப்படுவதில்லை. அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் அக்னியே நம் கர்ம வினைகள் அனைத்தையும் களையக் கூடிய அருமருந்தாகும். திருஅய்யர்மலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபமானது மனிதனின் தீர்க்க முடியாத பல கர்ம வினைகளைக் களைந்து அவனை தெய்வீக வழியில் இட்டுச் செல்கின்றது.

அனைவருக்கும் அருள்வான் திருஅய்யர்மலையான் :- மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி, கொடிகள், ஊர்வன, பறப்பன என்றவாறாக திருஅய்யர்மலை தீபத்தைக் காணும் எல்லா ஜீவராசிகளும் தத்தம் நிலையிலிருந்து உயர்நிலையை அடைகின்றன. நம் கண்ணிற்கு புழு, பூச்சிகள் போன்று தோன்றினாலும் நமது மூதாதையர்களே இத்தரிசனத்தைப் பெற்று மேல்நிலை அடைய வாய்ப்புண்டு. அவர்கள் மேல்நிலை அடைய வழிவகுத்த நமக்கு அவர்கள் வழங்கும் ஆசீர்வாதம் நமது இன்னல்களைத் தீர்த்து சகல ஐஸ்வர்யத்தையும் நல்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் “கார்த்திகை தீப தானம்” என்னும் இந்த அரிய சேவையில் பங்கேற்று வளமுடன் வாழ வேண்டுகிறோம்.
அன்னதானம் காட்டும் அருள்வழி:- கார்த்திகை தீபத்தன்று நமது அஸ்ரமத்தின் சார்பில் பல வகையான உணவு வகைகள் தீப தரிசனம் செய்யும் அடியார்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தானமாக அளிக்கப்படுகின்றன. எமது ஆஸ்ரம அடியார்களே குடும்பத்துடன் வந்து திருஅய்யர்மலையில் தங்கி, இறை நாமத்தை ஓதியவாறே உடல் சுத்தத்துடனும், மனத் தூய்மையுடனும் உணவு வகைகளைத் தயார் செய்து திருஅய்யர்மலை ஈசனுக்கு நிவேதித்து, நைவேத்யப் பிரசாதத்தை தானமாக இறை அடியார்களுக்கு அளிக்கின்றனர். இதனால் நித்ய இறைநாமம், கோயில் வழிபாடு, தர்ப்பணம், காயத்ரீ, வேத மந்திரங்கள், ஹோமம் இவைகளை அறியாத ஏழை மக்களும் திருஅய்யர்மலை ஈசனின் திருஅருளைப் பிரசாதம் மூலம் பெற்று இறைநிலையை அடைய வழி பிறக்கிறது. மேலும் அன்னதானத்தில் வழங்கும் உணவு வகைகள் நமது அன்றாடப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்க்கும் சஞ்சீவி மருந்தாகவும் அமைகின்றன.

 1. கருவேப்பிலை சாதம் : கர்ப்பக் கோளாறுகள், இரத்த சோகை, மாதவிடாய்க் கோளாறுகள் இவற்றை நிவர்த்தி செய்கிறது. இராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வழிவகுக்கிறது.
 2. காலிபிளவர் கலந்த உணவு : கணவன், மனைவி, சகோதர,சகோதரிகளிடையே மனவேற்றுமையை நீக்கி குடும்ப ஒற்றுமையை வளர்க்கிறது.
 3. முந்திரிப் பருப்பு சேர்த்த பிரசாதம் : கடவுள் சேவையிலும் , மக்கள் சேவையிலும் நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்காது வீண் பொழுது போக்கியதற்குப் பிராயச்சித்தமாக அமைந்து கடவுள் சிந்தனையைப் பெருக்குகிறது.
 4. வாழைக்காய் சேர்த்த உணவு :- ஆசன நோய்களைத் தடுத்து பிதுர் தேவதைகளின் ஆசியைப் பெற்றுத் தருகிறது.

ஆடை தானத்தின் சிறப்பு: கார்த்திகை தீபத்தன்று திருஅய்யர் மலையில் ஏழை எளியவர்களுக்கு ஆடை தானங்களும் இறையருளால் வழங்கப்படுகின்றன. புத்தாடைகளுக்குரித்தான சிறப்பான பூஜைகளைச் செய்து திருஅய்யர்மலை ஈசனின் அருட்பிரசாதமாக இந்த ஆடைகள் அளிக்கப்படுவதால் அதைப் பெறுபவரின் நெடுநாளைய ஏக்கங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக “வடக்கே உள்ள கைலாயமலை, கேதார்நாத், காசி போன்ற திருத்தலங்களை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க மாட்டோமா” என்று ஏங்கும் நெஞ்சங்கள் பல, இமயமலையில் உலவும் ஆடுகளிலிருந்து பெறப்பட்ட உயர்ந்த ரக கம்பளி ஆடைகளை தானமாகப் பெறும்போது இத்தகைய ஏக்கங்கள் மறைந்து இறை தரிசனம் பெற்ற இறை ஆனந்தம் மேலிடுகிறது. என்ன அரிய தொண்டு! எல்லா மக்களும் இவ்வரிய சேவையில் ஈடுபட்டு பயனடையலாமே!
“பரமனடி நாடும் பக்தர்கள் கூடும் திருத்தலத்தில் படியாய்க் கிடப்பேனோ!” என வரம் வேண்டிப் பல்லாயிரம் மஹரிஷிகள் இம்மலையில் படிகளாகவும், பாறைகளாகவும் கிடக்கின்றனர். எதற்கு? பக்தர்களின் திருவடிகளைச் சுமப்பதற்கு! பல ஆண்டுகளுக்கு முன் இவ்வற்புதமான திருத்தலத்தில் தம், சற்குருநாதராம் ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடன் ஈசனை தரிசிக்கும் பாக்யத்தைப் பெற்றார். ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இளம் பள்ளிச் சிறுவனாய் இக்கோயிலில் உழவார்த் திருப்பணியைச் செய்யும் பெரும் பேற்றைப் பெற்ற ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், 1995ல் தன் ஆஸ்ரம அடியார்களுடன் மீண்டும் உழவாரத் திருப்பணியை இங்கு மேற்கொண்டது மட்டுமன்றி, உள்ளூர், சுற்றுப்புற கிராம மக்கள், கோயில் நிர்வாகத்தின் பேராதரவுடனும் பெரும் உதவியுடனும் கடந்த சில ஆண்டுகளாக அய்யர்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் கைங்கர்யத்தையும் இறையருளால் கூட்டி வருகின்றார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, ரத்னகிரீஸ்வரரின் பேரருளை, தீபஜோதி மூலமாகப் பெற்றுத் தரும் அதியற்புத கார்த்திகை தீப உற்சவம்! கார்த்திகை தீபத்தின் முன்னும் பின்னுமாக ஐந்து நாட்களுக்கு அன்னதானத்துடன் நம் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக நடைபெற்று வருகின்றது.

ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அருட்பெருஞ் சித்புருஷர்! பல்லாண்டுகளுக்கு முன் சென்னை- ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் முகப்புத் தூணில் கோவணாண்டிச் சித்தராய் அமர்ந்திருந்து ஆன்மீகச் சிகரமாய் தெய்வீகப் பெருமலையாய் நின்று சாதி, மத, குல, இன, பேதமின்றி யாவருக்கும் துணை புரிந்தவர்! தன் சீடனாகிய (பள்ளிச் சிறுவனாம்) வெங்கடராமனுக்கு அனைத்து ஆன்மீகத் துறைகளிலும் குருகுலவாசப் பயிற்சிகளை அளித்து யோகம், வேதம், மந்திரம், எந்திரம், ஆசனம், பிராணாயாமம், ஜபம், தியானம், உழவாரத் திருப்பணி, ஆகமம், மூலிகை வைத்யம், பூஜை முறைகள் எனப் பல்வேறு தெய்வீக நிலைகளின் உத்தம நிலைகளையும் படிப்படியாகப் பெற்றுத் தந்தவர்! திருஅண்ணாமலை, பர்வத மலை, தங்கால், பொதிய மலை எனப் பல மலைத் தலங்களின் மகிமைகளையும் கிரிவல விளக்கங்களையுந் தந்து இமாலயம், மானசரோவர், திருக்கயிலாயம், இராமேஸ்வரம் எனப் பலத் திருத்தலங்களுக்கும் இட்டுச் சென்று பல யோகியரின்,  சித்புருஷர்களின், மஹரிஷிகளின் தரிசனங்களையும் பெறற்கரிய இறை தரிசனங்களையும் குருவின் ஆசியாகக் கூட்டித் தந்தவர். இவ்வாறாக, கலியுகத்தில் ஒரு சித்புருஷரின் அரவணைப்பில் குருகுலவாசத்தில் பூத்துக் கனிந்து இன்று பல்லாயிரக்கணக்கானோர்க்கு அருள்வழிகாட்டி வருபவரே ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்!

ஸ்ரீசுரும்பார் குழலி அம்மன்
ஐயர்மலை

நமது சற்குரு திருச்சியில் உழவாரத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஐயர்மலையிலும் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றுவதற்காக ஐயர் மலைக்கு வருகை தந்தார்கள். நமது சற்குரு வருவதற்கு முன்னரே அவர் வருகையை எதிர்பார்த்து பல அடியார்களும் வழக்கம்போல் கோயிலுக்குச் செல்லாமல் வெளியிலேயே காத்திருந்தனர். அன்று முகூர்த்த தினமாதலால் ஏகப்பட்ட திருமணங்கள் திருக்கோயிலில் அரங்கேற அதைக் கொண்டாடும் முகமாக கோயில் வளாகத்தில் ஒரு ஒலி பெருக்கியும் அக்கால வழக்கப்படி ஒரு சினிமாப் பாட்டை முழக்கிக் கொண்டிருந்தது. அந்த பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த நம் ஆஸ்ரம அடியார்கள் (சென்னை, திருச்சி, தஞ்சாவூர் என்ற பல ஊர்களிலிருந்து வந்திருந்தவர்கள்) ஒரு ஆச்சரியமான சம்பவத்தை அனுபவித்து திகைத்தனர். என்ன அது ? அதுவரை சுமார் அரை மணி நேரம் சினிமாப் பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த ஒலி பெருக்கி நம் சற்குரு காரில் வந்து திருக்கோயிலில் இறங்கியதும் சட்டென நிற்க அந்த ஒலிப் பெருக்கியில் நாதஸ்வரக் கச்சேரி முழங்கத் தொடங்கியது. இது எவரும் எதிர்பாராதது மட்டுமல்ல, இதற்கான எந்த ஏற்பாடும் முன்னரே நம் அடியார்களாலும் செய்யப்படவில்லை என்பதே நம் அடியார்களின் ஆச்சரியத்திற்குக் காரணம் ஆகும். நம் சற்குரு காரில் இருந்து இறங்கியதும் அவரிடம் சுவையான இந்த செய்தி தெரிவிக்கப்பட்டாலும் நம் சற்குரு அதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் விடுவிடுவென உயர்ந்து ஓங்கி நின்ற படிகளில் ஏறத் தொடங்கி விட்டார்கள்.

அவ்வாறு படிகளில் மேலே ஏறிச் சென்றபோதும் பின்னர் உழவாரப் பணிகள் முடிந்த பின்னர் கீழே இறங்கி வந்தபோதும் ஒரு சிறிய மண் வெட்டியை ஒவ்வொரு 10, 20 படிகள் தாண்டியவுடன் ஒரு படியின் மேல் வைத்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின்னர் அந்த மண்வெட்டியை தோளில் சுமந்தவாறே வந்தார்கள். வழியில் எந்த அடியாராவது தான் அந்த மண்வெட்டியைச் சுமந்து வருவதாகக் கூறி கேட்டபோதும் அதற்கு ஒரு இனிய புன்னகையுடன் மறுத்து விட்டார்கள். உழவாரப் பணி அனைத்தும் நிறைவேறிய பின்னரே தன்னுடைய செயலுக்கான அற்புத காரணத்தை தனக்கே உரிய சுவையுடன் வெளியிட்டார்கள். “அது வேறு ஒன்றும் இல்லை, சார், அப்பர் பெருமான் இங்கே வந்தபோது எந்தப் படியில் எல்லாம் தன்னுடைய புனிதமான உழவாரப் படையை வைத்து எடுத்தாரோ அந்தப் படியில்தான் அடியேனும் இந்த மண்வெட்டியை வைத்து எடுத்தேன்...,” என்று கூறினார். இதன் பொருள் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் பாக்கியசாலிதான்.

ஐயர்மலை மேல் அம்மன் சன்னதி அருகில் உள்ள பஞ்சமகா சித்தர்கள் வசிக்கும் சுனைக்குச் செல்லும் வழி தற்போது பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. முன்பு அவ்வழி பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தது. அப்போது உழவாரப் பணிக்காக வந்த இரு சிறுவர்கள் அந்த மலைச் சரிவின் ஓரத்தில் நின்று சிறுநீர் கழிக்க சென்றனர். அதைப் பார்த்த நம் சற்குரு, “என்னப்பா ஊரில் இல்லாத அதிசயத்தை வைத்திருக்கிறீர்கள். இங்கேயே சிறுநீர் கழிக்கலாமே. உங்கள் கால் இடறி விட்டால் அதனால் எத்தகைய பிரச்னை ஏற்படும் ...”, என்று அவர்களை எச்சரித்து மேற்சென்றார்கள். சாதாரண ஒரு நிகழ்ச்சியாக இது படிப்பதற்குத் தோன்றினாலும் சற்றே கூர்ந்து கவனித்தால் இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு இங்கு அளித்துள்ள சற்குருவின் வழிகாட்டுதலின் பின்னணியில் மறைந்துள்ளது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அடிமை கண்ட ஆனந்தமாகும். அதை உணர்ந்தால் அது சாதாரண ஆனந்தமல்ல, அமிர்தானந்தம், பேரானந்தாம் என்பதை மறுக்க முடியாது !


உடல் உணர்வை கடந்த
தெய்வீக நிலையை
அளிப்பவரே
மாதா அமிர்தானந்தா !

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam