ஆலிலை கண்ணா ஆவது அனைத்தும் உன்னால் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ஆலிலை கண்ணா

தற்போது திருத்தலங்கள் அனைத்தும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுவதில்லை என்றாலும் அனைத்துமே இறைவன் செயல் என்று தெளிந்தால் இறைவனின் இந்த செயலுக்குப் பின்னாலும் எத்தனையோ நல்ல உள்ளங்களின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் நிச்சயம் நிறைவேறும். இமயமலை, திருஅண்ணாமலை, பர்வதமலை போன்ற மலைத்தலங்கள் தற்போது பெட்ரோல், டீசல் போன்ற மாசுப் படிவுகள் காற்று மண்டலத்தை அடையாததால் தெளிவான காட்சியை நல்குகின்றன. உதாரணத்திற்காக சில மலைத் தலங்களின் பெயர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தரிசனங்களில் குறைந்தது 12 தரிசனங்களையாவது இந்த ஆண்டில் பெற்று அந்த தரிசனங்களை மனதில், உள்ளத்தில் பதித்துக் கொள்வதால் கண்களில் நிறைத்துக் கொள்வதால் கிட்டும் பலன்கள் அமோகம்.குரங்கு பிடிக்க பெருமாளா
குரங்கு பிடித்த பெருமாளா ?

1. பர்வதமலையிலிருந்து திருஅண்ணாமலை தரிசனம்
2. செஞ்சி மலையிலிருந்து திருஅண்ணாமலை தரிசனம்
3. திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஐயர்மலை தரிசனம்
4. திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் தரிசனம்
5. ஈங்கோய் மலையிலிருந்து ஐயர்மலை தரிசனம்
6. பெருமாள் மலையிலிருந்து காருகுடி கோபுர தரிசனம்
7. ரெங்கமலையிலிருந்து தேவர்மலை கோபுர தரிசனம்
8. உய்யக்கொண்டான் மலையிலிருந்து திருச்சி மலைக்கோட்டை தரிசனம்
9. இலஞ்சி திருத்தலத்திலிருந்து தென்காசி ராஜகோபுர தரிசனம்
10. காளையார் கோவிலிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் ராஜகோபுர தரிசனம்
11. திருக்கழுக்குன்றத்திலிருந்து திரிகோணமலை தரிசனம்
12. செட்டிக்குளம் சிவத்தலத்திலிருந்து மலை மேலுள்ள முருகன் தல தரிசனம்
உதாரணத்திற்காக மட்டுமே இத்தகைய திருத்தலங்கள், மலைத் தலங்களின் தரிசனங்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன. உண்மையில் நம் புனித பாரத திருநாட்டில் நூற்றுக் கணக்கான மலை தரிசனங்கள் திருத்தலங்களிலிருந்து கிட்டுகின்றன. இவற்றின் பலன்களோ அபரிமிதமானவையே. திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஐயர் மலையை தரிசிப்பதால் கிட்டும் பலன்கள், ஐயர் மலையிலிருந்து திருச்சி மலைக்கோட்டையை தரிசிப்பதால் கிட்டும் பலன்கள் முற்றிலும் வேறானவையே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிட்டும் ஒவ்வொரு தரிசனத்தையும் குறைந்தது ஐந்து மணி நேரம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் இந்த தரிசனங்களின் மகிமையைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும் என்பதே சித்தர்களின் பரிந்துரை.

பர்வதமலையிலிருந்து
திருஅண்ணாமலையார்

ஒரு முறை நம் சற்குரு ஒரு அடியாரை திருஅருணாசலத்தைப் பார்த்து விட்டு உடனே பர்வத மலையை தரிசனம் செய்யும்படிக் கூறினார். பின்னர் அடியார்களிடம் இதைப் பற்றி விவரித்த நம் சற்குரு அந்த அடியாருக்கும் அவர் மனைவிக்கும் இடையே சில தாம்பத்ய உறவுப் பிரச்னைகள் இருந்ததாகவும் அதை நிவர்த்தி செய்யவே இவ்வாறு அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் அடைப்படையில் அமைந்த அந்த தரிசனக் காட்சிகளை அவர்கள் பெறும்படி தெரிவித்தேன் என்று சற்குரு தன் செயலுக்கான ஆழ்ந்த அர்த்தத்தைத் தெரிவித்தார். ஒரு சில நொடிகளிலேயே ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை ஒரு தரிசனம் களைய முடியும் என்றால் மலைத் தலங்களிலும் திருத்தலங்களிலும் நாம் பெறும் தரிசனங்களின் மகிமைதான் என்னே, என்னே ? நவகிரகங்களை நாம் தோத்திரங்கள் பாடியோ அல்லது திருத்தலங்களில் அவர்கள் தரிசனம் பெற்றோ வழிபடுவது போல இத்தகைய சமயத்தில் அபூர்வமாக கிட்டும் நவகிரகங்களின் உருவங்களை வானில் தரிசனம் செய்வதும், நமக்குத் தெரிந்த, தெரியாத எத்தனையோ நட்சத்திரங்களை வானத்தில் தரிசனம் செய்வதும் ஒரு சிறந்த வழிபாடே. ஸ்ரீஅகத்தியர் (Canopus) நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம், சுக்கிரன், துருவ நட்சத்திரம் போன்ற அனைவருக்கும் தெரிந்த வானவியல் காட்சிகளையாவது தினமும் பெறுதல் சிறப்பே. அவ்வாறு நட்சத்திரங்களைப் பற்றியோ, கோள்களைப் பற்றியோ எந்தவித ஞானமும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. நான்கு திசைகளிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களை கண்ணாரக் கண்டு அத்தேவதைகள் காட்சி அளித்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துவதும் ஓர் அற்புத வழிபாடே. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் பலருக்கும் உறக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இவர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது பத்மாசனமிட்டு அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தலையை நிமிர்த்தி வானத்தை நோக்கி அங்கு தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தவாறே தமக்குத் தெரிந்த இறை துதிகளை, தேவாரப் பதிகங்களை ஓதி வந்தாலே போதும். அவர்கள் இறைவழிபாடு பூரணம் அடையும்.

நரநாராயண தரிசனம் ஐயர்மலை

இவ்வாறு தூய்மையான பரவெளியில் நாம் பெறும் தரிசனப் பலனை சாதாரணமான சமயத்தில் பெற ஒரு ஆண்டு கூட ஆகலாம். அது மட்டுமல்லாமல் வண்ணங்களையோ, உருவங்களையோ நாம் மனக் கண்ணில் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மற்ற சமயத்தில் தோன்றினாலும் தற்போது அவையெல்லாம் மிக எளிதில் கை கூடுவதுபோல் தோன்றுவதற்குக் காரணமே இவ்வாறு பரவெளியின் தூய்மையே. இவ்வாறு பரவெளியின் தூய்மையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள தெரிந்து கொண்டால் நாம் ஆயிரம் பேர் என்ன ஒரு லட்சம் பேருக்குக் கூட நல்ல முறையில் உதவ முடியும், அவர்கள் இருண்ட வாழ்வில் விளக்கேற்ற முடியும். ஒரு முறை நம் அடியார்கள் தஞ்சை பெரிய நந்திக்கு உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்ற தயாரானபோது திருப்பணிக்கு முந்திய நாளே தஞ்சாவூர் எழுந்தருளிய நம் சற்குரு நேரே பெரிய நந்தி உறையும் மண்டபத்திற்கு சென்று அங்கு நந்தியை சுத்தம் செய்து திருப்பணிகள் நிறைவேற்ற தேவையான கம்புகளை, சாரக் கொம்புகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். ஒரு வேளை நம் சற்குரு அங்கு எழுந்தருளாவிட்டால் அவ்வாறு கொம்புகளை நடுவதற்காக நாம் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாயிருக்கும். இது பற்றி குறிப்பிடும்போது, “நீங்கள் பலரும் இவ்வாறு நந்தி பகவானுக்கு திருப்பணி நிறைவேற்றத் தேவையான எலுமிச்சை தோல், சீயக்காய், பூந்திக்கொட்டை, மிருதுவான நார் எல்லாமே அடியேன் கூறிய படியே சரியாக நிறைவேற்றினீர்கள். ஆனால், இந்த சாரம் அமைக்கும் முறையை உங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் உங்களின் தகுதிக் குறைவு கிடையாது. பரவெளியில் உள்ள மாசே காரணமாகும்,” என்று கூறி அதைப் பற்றி விவரித்தார்கள். “திருஅண்ணாமலை குகைகள், கொல்லி மலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பல பகுதிகள், இமயமலையில் மானசரோவர் ஏரிப் பகுதிகள் போன்றவை மிக மிக தூய்மையாக விளங்குவதால் இந்த இடங்களில் எல்லாம் நீங்கள் visualise (ஒரு காட்சியை கண் முன்னே கொண்டு ஆராய்வது) செய்து பார்த்தால் இந்த நந்தி திருப்பணியைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்கலாம்.” இவ்வாறு பரவெளியில் விளங்கும் மாசடைந்த எண்ணப் படிவுகளும் நம் இறை தியானத்தில் குறுக்கிடுவதால் இவ்வாறு மாசுகள் விமுக்தி அடைந்த தற்போதுள்ள பரவெளி நம் இறை தியானத்திற்கு பெரிதும் துணை புரியும் என்பதே சித்தர்களின் தெளிவுரை. 40 ஆண்டு காலம் அரும்பாடு பட்டு ஸ்ரீதோத்தாபுரி கற்றுக் கொண்ட நிர்விகல்ப தியான நிலையை மூன்றே நாட்களில் கற்றுத் தெளிந்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். இவ்வாறு காளி தேவிக்கு அம்மகான்களின் மேலுள்ள கருணையை விடச் சற்றும் குறைந்ததல்ல நம் சற்குருவிற்கு நம் அடியார்கள் மேலுள்ள கருணை என்று பறைசாற்றுவதே தற்போது உள்ள தெய்வீகச் சூழ்நிலையாகும். தினமும் வானத்தை உற்றுநோக்கி தியானிப்பதே நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவின் அனுகிரக சக்திகளை எளிதில் பெறும் முறையாகும். இந்த நட்சத்திர தியானம் பெருகும் அளவிற்கு ராஜயோக சக்திகளும் பெருகும்.

இன்டர்நெட் மூலமாக வேதம் (ருத்ரம்) கற்றுக் கொள்ளலாமா என்பது பற்றிய விளக்கத்தை ஒரு அடியார் கேட்டுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன் நம் சற்குருவிடம் இவ்வாறு கேட்டபோது சற்குரு, “தாராளமாக கேசட்டுகளிலிருந்து ருத்ரம் கற்றுக் கொள்ளலாம், சார், ஆனால், கேசட்டுதான் தேயும்,” என்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது ? சற்குரு ஒருவர் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியதே வேத மந்திரங்கள் ஆகும். நாம் அதிக பட்சம் கற்றுக் கொண்டாலும் இன்றைய தேதியில் ருக், யஜுர் வேதம்தான் கற்றுக் கொள்ள முடியும். சாம, அதர்வண வேதங்கள் எட்டாக் கனியாக ஆகி விட்டன. ஆனால், மந்திரமாவது நீறு என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தை ஓதி வந்தால் நான்கு வேதங்களையும் ஓதிய பலன் கிட்டும் என்று நம் சற்குரு வாக்களிக்கிறார் என்றால் இதை விடச் சிறந்த வரப் பிரசாதத்தை நாம் எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ? அறம் செய்ய விரும்பு என்ற ஆத்தி சூடியையே பலரும் அரம் செய்ய விரும்பு என்று ஓதுவதால் குடிமக்களாய் வாழ வேண்டிய பலரும் “குடி” மக்களாய்த் திரிகிறார்கள் (ரம் ?) என்றால் இதற்கு யார் பொறுப்பு ? சிறு வயதிலேயே ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை ஓதி வந்தால் இப்போது தேவாரப் பதிகங்களை அட்சர சுத்தமாக ஓதுவது என்பது கைவந்த கலையாகி விடும். அனைவரும் தாய் மொழியைக் கற்றுத் தெளிந்த பின்னரே அன்னிய மொழிகளைக் கற்க வேண்டும் என்பது சித்தர்களின் வழிகாட்டுதல். ஆனால், நடைமுறையில் பலராலும் இந்த கல்வி முறை பின்பற்றப்படுவது கிடையாது என்றாலும் Twinkle twinkle little star ... என்ற நர்சரி ரைம் வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி வந்தால் கூடப் போதுமே. ஆம், இதுவே நட்சத்திர தியானம்.

தினமும் நட்சத்திரங்களை உற்று நோக்கி தியானித்து வந்தால் வானத்தில் உலவும் கந்தர்வ தேவதைகள் நம் அட்சரங்களில் உள்ள குறைகளைக் களைந்து அருள்புரிவார்கள். ஊமை சித்தி ஒருவரை சின்ன வீடாக நினைத்துப் பழகிய தன் அடியார் செய்த தவறையே அவர் மனம் திருந்தியபோது அவர் குறைகளைக் களையும் சீரிய உள்ளம் கொண்ட நம் சற்குரு அடியார்களின் அட்சரத் தவறுகளைத் திருத்த மாட்டாரா என்ன ? இரு மனைவிகளுடன் வாழ்ந்த வள்ளிமலை சுவாமிகள் ஆரம்பத்தில் தெளிவாக திருப்புகழைப் பாட முடியாமல் அதில் பல தவறுகளோடுதான் பாடினார். ஆனால், அவருக்கு திருப்புகழ் மேலுள்ள ஆர்வத்தால் நாளடைவில் அவர் அட்சர சுத்தமாக திருப்புகழை உத்தமர் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டு ஓத, பின்னர் வானத்திலிருந்து கந்தர்வ தேவதைகளே இறங்கி வந்து திருப்புகழ் பாடல்களுக்கான ராகத்தை தெரிவித்தன என்பதே பலரும் அறிந்த இரகசியமாகும். காமமோ, மயக்கமோ ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதில்லை, தேவை விடாமுயற்சியே. இவ்வாறு காமமோ போதை மயக்கமோ தங்கள் ஆன்மீக வாழ்விற்குத் தடையாக இருப்பதாக உணரும் பக்தர்கள் ஐயர்மலையை வலம் வந்து வணங்கி தாமே அரைத்த மஞ்சளால் இங்குள்ள படிகளுக்குப் பூசி சுத்தமான குங்குமத்தால் பொட்டிட்டு, இங்கு சப்த கன்னிமார்களின் அருகில் அருள் புரியும் சஞ்சலன் நாகதேவதையை வணங்கி வழிபடுதலால் நல்ல மனத் தெளிவைப் பெறுவார்கள். தங்கள் ஜன்ம லக்னத்தில் அல்லது ராசியில் ராகு அல்லது கேது எழுந்தருளி உள்ளதாலோ வேறு பல காரணங்களாலோ நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் திருமணத்தில் அல்லது திருமண வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களைக் களையவும் இத்தகைய வழிபாடு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும். சார்வரி வருடத்தில் படரும் தினசாயா என்ற இருளைக் களையும் அற்புத சித்த வழிபாடு இது.

செவ்வாலிலை படிக்கட்டுகள்

திருச்சி துறையூர் அருகே ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அருள்புரியும் திருமலையே பெருமாள் மலை என்பதாகும். ஒவ்வொரு மலைத்தலத்திற்கும் பிரத்யேகமான சிறப்புகள் இருக்கத்தானே செய்கின்றன. அது போல் பெருமாள் மலையின் சிறப்பே அதன் படிக்கட்டுகளில் பொதிந்துள்ளன என்றால் மிகையாகாது. பாற்கடல் என்று ஒன்று உண்டா, வைகுண்டம் என்று உண்டா என்றெல்லாம் பக்தர்களுக்கு சந்தேகம் தோன்றுவது இயற்கையே. வைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீமந் நாராயணப் பெருமாளின் நேரடி பார்வையில் திகழும் திருத்தலங்களில் ஒன்றே துறையூர் பெருமாள் மலையாகும். மற்ற எந்த வருடத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பை இந்த வருடம் பெருமாள் மலை பெற்றிருப்பதற்குக் காரணமே சார்வரி ஆண்டில் திகழும் செவ்வாலிலை மேல் திகழும் செங்கமலக் கண்ணன் தரிசனமாகும். ஆண்களுக்குரித்தான சாமுத்ரிகா லட்சணத்தில் செவ்வரி ஓடிய கண்களைப் பற்றிய வர்ணனை கேட்டிருப்பீர்கள்.

ஸ்ரீவிஷ்ணு பாதங்கள் பெருமாள்மலை

இவ்வாறு செவ்வரி ஓடிய கண்களை உடைய திருமாலே சார்வரி வருடத்தில் பெருமாள் மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதியாக தரிசனம் தருகிறார் என்பதே சித்தர்கள் உணர்த்தும் தெய்வீக இரகசியமாகும். பெருமாள் மலையில் உள்ள படிக்கட்டுகள் செம்மையான ஆலிலை வண்ணத்தை உடைய படிக்கட்டுகள், செவ்வாலிலை படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு செவ்வாலிலை படிக்கட்டுகளை மிதித்துச் சென்று ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் அனுகிரகமே சார்வரி என்பதாகும். சார்வரி அனுகிரகத்தை அளிக்கக் கூடிய ஒரே திருத்தலம் துறையூர் பெருமாள் மலையே என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? இந்தச் சார்வரி அனுகிரகத்தைப் பெற விரும்பும் பக்தர்கள் படிகள் வழியாக நடந்து மேலே செல்ல வேண்டும் என்பதே விதி. வேன், கார் மூலம் இத்திருத்தலத்தை அடையலாம் என்றாலும் நடந்து செல்பவர்களுக்கு மட்டுமே இந்த அபூர்வமான சார்வரி அனுகிரகம் வழங்கப்படும் என்பதும் பெருமாள் லீலையே. பெருமாள் மலையை அடைவதற்கான சுமார் 1500 படிகள் அனைத்தும் நம் பூர்வ ஜன்மங்களுடன் தொடர்பு கொண்டவையே. இந்தப் படிகளில் ஏறும் ஒருவர் தான் விரும்பும் எந்தப் படியில் வேண்டுமானாலும் அமர்ந்து இளைப்பாறலாம் என்றாலும் ஏதாவது ஒரு படியில் குறைந்தது ஒரு மணி நேரம் நின்றோ அமர்ந்தோ இறைத் துதிகளை ஓத வேண்டும் என்பது விதி. காரணம் அந்த ஒரு படி மற்ற படிகளைக் காட்டிலும் அந்த அடியாருடன் பூர்வ ஜன்ம தொடர்புகளைக் கொண்டிருக்கும். அவ்வாறு அந்த படியில் இறைத் துதிகளை ஓதி இறை சக்திகளை வளமாக்கிக் கொண்டால் அது இவ்வருடம் முழுவதும் அவ்வடியார் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். மேலும் ஸ்ரீபிரசன்ன வெங்கடஜாலபதி பெருமாளின் தரிசனத்தால் இந்த அனுகிரகம் மேலும் பலப்படுத்தப்படும். வறுத்த நிலக்கடலை கலந்த புளியோதரை, வெண்ணிற அப்பளப்பூ பக்தர்களுக்கும், வானர பக்தர்களுக்கும் தானம் அளித்தல் சிறப்பாகும். ஒரு பக்தர் உள்ளமுருகி நாராயணா என்று அழைக்கும்போது மூளையின் மேற்பரப்பில் மிக மெல்லிய பள்ளம் ஏற்படுகிறது. அவர் மீண்டும் பக்திப் பரவசத்துடன் நாராயணா என்று அழைக்கப்படும்போது மீண்டும் ஒரு பள்ளம் தோன்றுவதில்லை. மாறாக ஏற்கனவே உண்டான “நாராயணா” என்ற சார்வரியில் இப்போது அழைத்த இறை நாமம் சென்று தங்குகின்றது. இதுவே இறை நாமங்கள் ஜபிப்பதைப் பற்றி சித்தர்கள் கூறும் விளக்கங்கள். இவ்வாறு இறை நாமங்களை ஜபிக்க ஜபிக்க தோன்றும் மெல்லிய பள்ளங்களே தலை வகிடு போன்ற ஒரு தோற்றத்தை மனித மூளையின் மேற்பரப்பில் உண்டாக்குகின்றன. இந்த இறை பள்ளங்கள் அனைத்தும் சார்வரி என்ற ஒளிக் கற்றையால் நிறைக்கப்படும் ஆண்டே சார்வரி என்பதாகும். இந்த ஒளிக் கற்றைகளைப் பெற்ற உத்தமர்களையே நாம் பெரியோர்கள், மகான்கள், சித்தர்கள் என்றெல்லாம் அழைக்கிறோம்.

ஸ்ரீ காலநிகேத பைரவமூர்த்தி
பெருமாள்மலை

இத்தகைய மகான்கள் கண்களைத் திறந்திருந்தாலும், கண்களை மூடியிருந்தாலும், அவர்கள் உறங்கினாலும் விழித்திருத்தாலும், ஆடையுடன் இருந்தாலும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மனிதர்களின் மனதில் ஒரு பேரமைதியும் இனந்தெரியாத பரவசமும் ஏற்படும். மனிதர்களின் புலன்கள் அனைத்தும் அடங்கிப் போகும். இதற்கு காரணம் இவ்வாறு பெருகிய சார்வரி சக்திகளே. இந்தச் சார்வரி சக்திகளைப் பெருக்குவதே இந்தச் சார்வரி வருடம், இந்தச் சார்வரி சக்திகளைப் பெருக்குவதற்கு உகந்த தலமே பெருமாள் மலை ஆகும். ஆனால், ஒரு சில மகான்களைப் பார்த்த மாத்திரத்தில் அனைவரும் இந்த உள்ள நெகிழ்ச்சியை, மன நிறைவைப் பெறுவதில்லை என்றால் அதற்கு அம்மகான் எவ்விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அவர் சன்னிதானத்தில் இருக்கும் சார்வரி சக்திகளைப் பிரதிபலிக்கும் அளவிற்கு நம்முடைய உடல் தூய்மையாக இல்லை என்பதே அதன் பொருள். ஏதோ ஒரு முறை இரண்டு முறை சென்று வந்தோம் என்றல்லாமல் எந்த அளவிற்கு பெருமாள் மலையை படிகள் வழியே ஏறிச் சென்று இறை தரிசனம் பெறுகின்றோமோ அந்த அளவிற்கு நம் உடலில், மனதில் சார்வரி சக்திகள் நிறையும். திருத்தலங்களில் பிரம்மோற்சவம், வருடப் பிறப்பு, பங்குனி உத்திரம் போன்ற உற்சவ காலங்களில் அந்தந்த திருக்கோயில்களின் தன்மையைப் பொறுத்து பைரவ சக்திகளை அக்கோயிலின் எட்டுத் திக்குகளிலும் நிரவுவர். அதே போல இறை மூர்த்திகளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது அந்த நைவேத்திய பிரசாதங்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து மூடி அந்தந்த மூர்த்திகளின் எதிரில் வரும்போது மட்டுமே மூடியிருக்கும் தட்டுகளை அகற்றி நைவேத்தியம் சமர்ப்பணம் செய்வார்கள். இது எதைக் காட்டுகிறது ? என்னதான் இறைச் சன்னதியாக இருந்தாலும் அங்கும் எதிர்மறை சக்திகளை குடி கொண்டு விடும். அந்த எதிர்மறை சக்திகள் பிரசாதத்தில் படியாது இருக்கவே இத்தகைய பைரவ பூஜைகளையும், பிரசாதங்களை மூடி வைத்தும் பூஜைகளை ஆற்றுகின்றனர். அது போல் மலைத்தலங்களில் உள்ள பைரவ மூர்த்திகள் அந்த மலைத் தலங்களுக்கு மேலும் கீழும் நற்சக்திகளை நிரவி பக்தர்களைக் காக்கின்றனர். இந்த அனுகிரகங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்கள் தாங்கள் பணி புரியும் இடத்தில், அதாவது மாடிப் படிகள், எஸ்கலேட்டர்கள், சுரங்கங்கள், எலிவேட்டர்கள், பாதாள சாக்கடைகள், சப்வேக்களில் எந்தவித ஆபத்துகளாலும் தாக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள். உதாரணமாக, ஒவ்வொரு மாடிப் படியில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் சீதோஷ்ண நிலை, காற்றழுத்தம், வாயு நிலை போன்றவை வேறு வேறாக மாறி அமையும். இவை பற்றி நாம் கவலைப்படுவதில்லை, தெரிந்து கொள்வதில்லை என்றாலும் இத்தகைய ஸ்ரீகாலநிகேத பைரவ மூர்த்திகளே இவ்வாறு சதா மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை கண்காணித்து காப்பாற்றி வருகிறார்கள் என்பதே நாம் பைரவ மூர்த்திகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மகாத்மியமாகும். நன்கு முற்றிய தேங்காய் துருவலுடன் அச்சு வெல்லம் சேர்த்து இடித்து உருண்டைகளாக உருட்டி அத்தகைய உருண்டைகளில் குறைந்தது எட்டு உருண்டைகள் வைத்து நைவேத்யம் செய்து பின்னர் அந்த உருண்டைகளை தானமாக அளித்தலால் நீண்ட நாள் பைசலாக கோர்ட் வழக்குகள் தீர்வு பெறும், விற்காத நில புலன்களும் விற்கும், திருமணத் தடங்கல்கள் தீர்வு பெறும். பாதாள சாக்கடைகள், உயரமான கட்டிடங்கள், சுரங்கங்களில் பணி புரிவோர் பாதுகாப்பு பெறுவர்.

சத்சங்கமே தூயசங்கம் ஐயர்மலை

ஒருமுறை ஸ்ரீஆதிசங்கரர் கடுமையான வயிற்று வலியால் துன்பமடைந்தார். அப்போது சிவபெருமான் தோன்றி திருச்செந்தூர் முருகப் பெருமானின் விபூதி பிரசாதத்தைப் பெற்று உட்கொண்டால் வயிற்று வலி குணமடையும் என்றும் அப்போது காசியில் இருந்த ஸ்ரீஆதிசங்கரர் உடனடியாக திருச்செந்தூர் வருவதற்காக வான மார்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கவே ஸ்ரீஆதிசங்கரர் அவ்வாறே காசியிலிருந்து திருச்செந்தூர் வான மார்கமாகப் பறந்து வந்து திருச்செந்தூரில் அருள்புரியும் முத்துக்குமரனை தரிசித்து அங்கு பிரசாதமாக அருளப்படும் கிளிஞ்சல் விபூதியை சிறிதளவே உட்கொள்ளவே ஸ்ரீஆதிசங்கரரின் வயிற்று வலி உடனடியாக குணமடைந்தது. ஒரு உத்தம அடியாரின் வயிற்று வலியை குணமாக்க சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்றாலும் இதன் பின்னணியாக அமைந்த தெய்வீக நிகழ்ச்சிகள் பலப் பல.

ஸ்ரீஆதிசங்கரரின் வான வெளி பிரயாணத்தால் தற்போது உள்ளதைப் போல் ஆயிரம் மடங்கு தூய்மையை வானவெளி பெற அதில் தூயசங்கம் என்ற வெண்ணிற சக்திகள் குடி கொண்டன. இந்த தூயசங்கம் என்ற நோய் நிவர்த்திகளைப் பெற்று அனைவருக்கும் பிரசாதமாக அளிப்பதற்காகவே அமிர்தானந்தா மயி அன்னையின் வெண்ணிற பூக்கள் தியான முறை அமைந்தது என்ற விளக்கம் பளிச்சிடும். அத்தகைய தூயசங்கம் என்ற நோய் நிவாரண சக்திகள் பூரிக்கும் ஆண்டே சார்வாரி ஆகும். எந்த அளவிற்கு திருச்செங்கோடு, சோளிங்கர், ரெங்கமலை (கரூர் திண்டுக்கல் ரோடில் அமைந்துள்ளது) போன்ற மலைத்தலங்களை படியேறிச் சென்று வழிபடுகின்றோமோ அந்த அளவிற்கு இந்த தூயசங்கம் நோய் நிவர்த்தி சக்திகள் நம் உடலில் நிறையும். பல மருத்துவர்களும் தற்போது நோய் நிவர்த்தி சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெறாதது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இவர்களும் இத்தகைய வழிபாடுகளால் நன்னிலை பெறுவார்கள். மலைத் தலங்களில் உள்ள மற்றோர் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீதேரையர், ஸ்ரீசுந்தரானந்தர் போன்ற பல மகரிஷிகள் தங்கள் சத்சங்கங்களை கூட்டும் தலங்களாக இவை அமைகின்றன என்பதே ஆகும். உதாரணமாக, ஸ்ரீஆதிசங்கரரால் ஏதோ ஒரு காலத்தில் நிரவப்பட்ட இத்தகைய தூயசங்கம் என்ற நோய் நிவர்த்தி, நோய் எதிர்ப்பு சக்திகளை பூலோகத்தில் பல திருத்தலங்களிலும் நிரவுவது பற்றிய விவாத மேடைகளை உருவாக்கி இந்த சக்திகளை எல்லாம் தகுதி உடையவர்களுக்கு அளிக்கின்றனர். அதனால்தான் இந்த சார்வரி வருடத்தில் இத்தகைய மலைத் தல தரிசனங்கள் சிறப்பு பெறுகின்றன.

ஸ்ரீமச்சாவதார மூர்த்தி பெருமாள்மலை

ஸ்ரீமரகத விநாயகர் பெருமாள்மலை

ஆலிலை என்றால் ஆலமரத்தின் இலை என்றாலும் இங்கு நாம் ஆலிலையின் பச்சை வண்ணத்தையே குறிக்கிறோம். செவ்வாலிலை என்றால் முதிர்ந்த பச்சை நிறம். பெருமாள் மலையில் உள்ள படிக்கட்டுகளே இந்த முதிர்ந்த பச்சை நிறத் தன்மையால் தூயசங்கம் போன்ற எத்தகைய நோய் நிவாரண சக்திகளையும் ஈர்த்துக் கொள்ளும் அதீத தெய்வீக ஆற்றலைப் பெற்றுள்ளதால் இந்த வருடம் மலைத் தல தரிசனங்களைப் பெறும் அடியார்கள் முதலில் பெருமாள் மலை படிக்கட்டுகளை மிதித்து ஏறி செவ்வாலிலை சக்திகளை தங்கள் உடலில் நிறைத்துக் கொண்டால் அவர்கள் மற்ற மலைத் தலங்களை தரிசனம் செய்யும்போது இந்த செவ்வாலிலை சக்திகள் மற்றத் திருத்தலப் படிகளிலும் விரவும். இதனால் சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகள் பெருகுவதுடன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்குமே தேவையான நோய் நிவாரண சக்திகள் பூரித்துப் பெருகும் என்றால் இவ்வருடம் மேற்கொள்ளும் மலைத் தலங்களின் தரிசனப் பலன்களை எப்படி விவரிப்பது ? படிகள் வழியாக ஏறிச் செல்லும் பக்தர்கள் முதலில் ஸ்ரீமரகத விநாயகரை வணங்கிப் பின்னர் ஸ்ரீமச்சாவதார மூர்த்தியை வணங்குவதால் படிக்கட்டுகளில் பெற்ற செவ்வாலிலை சக்திகளை தங்கள் உடல் நாளங்களில் நிறைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். பெருமாள் மலையில் படிகளில் ஏறிச் செல்லும்போதும், இத்தலத்தில் இறை தரிசனம் பெறும் எல்லா சமயங்களிலுமே,
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று தொண்டரடி பொடியாழ்வார் துதியை ஓதுதல் சிறப்பாகும். ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் ஒரு மார்கழி மாதம் முழுவதும் தினமும் படியேறி ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து நோய் நிவாரண சக்திகளை நிரவிய திருத்தலமே பெருமாள்மலை என்பதை அறிந்தோர் சற்குருமார்கள் மட்டுமே. இவ்வாறு ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் அமர்ந்து பெருமாளை தியானித்த படியில் அமர்ந்து தியானிக்கும் பூர்வ ஜன்ம வினைப் பயன் பலருக்கும் இன்றும் அமையக் கூடும். நீங்களும் இந்த தியானப் படியைக் கண்டு பிடிக்கும் பெருமுயற்சியில் ஈடுபடலாமே ?

ஸ்ரீகாலநிகேத பைரவ மூர்த்தி

ஜாதகப் பலன்களை பரிசீலிக்கும்போது அஷ்டக வர்க்கம், கோசரம் இந்த இரண்டில் எது சிறந்தது என்பது தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியே. ஸ்ரீவராகமிகிரரின் கூற்றுப்படி அஷ்டக வர்க்கம் என்பது மனித உடலின் சூட்சும சரீரத்தை, சூட்சும பலனை தெரிவிப்பதால் அதையே பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கோசரப் பலன்களும் பெரும்பாலான சமயங்களில் உதவிபுரிகின்றன என்பதும் உண்மையே. கீழ்க் கண்ட உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணரின் அத்வைத குருவான ஸ்ரீதோத்தாபுரி துணி என்ற நெருப்பு பந்தத்தை வைத்து தியானம் செய்ய அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேலைக்காரன் தன்னுடைய பீடியை அந்த நெருப்பில் பற்ற வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவே ஸ்ரீதோத்தாபுரிக்கு வந்ததே கோபம்.

புனிதமான இந்த அத்வைத நெருப்பில் நீ பீடியை பற்ற வைக்கவா நினைக்கிறாய் என்று கேட்டுக் கொண்டே அருகில் இருந்த ஒரு குச்சியை கையில் ஏந்தி அவனை அடிப்பதற்காக விரட்டிக் கொண்டு ஓடினார் ஸ்ரீதோத்தாபுரி. பீடி, தோத்தாபுரி, நெருப்பு, வேலைக்காரன் என்ற அனைவரின் இதயத்தில் பிரகாசிப்பது இறைவன் என்ற ஜோதியே என்று கூறுவதுதானே அத்வைதம். இதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது நாற்பது வருடங்கள் நர்மதா நதிக் கரையில் கடுமையான அத்வைத யோகம் பயின்ற ஸ்ரீதோத்தாபுரிக்கே ஒரு சவாலாக இருந்தது. நிகேதம் என்றால் உறைதல், கோயில் கொள்தல் என்று பொருள். இவ்வாறு எந்த ஒரு பொருள், நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அதை freeze, still செய்து பார்ப்பதற்கு உதவும் மூர்த்தியே ஸ்ரீகால நிகேத பைரவ மூர்த்தி ஆவார். ஸ்ரீபைரவரின் வாகனம் நிற்கும் கோலமே இந்த பைரவ அனுகிரகத்தை உறுதி செய்யும். ஸ்ரீபைரவரின் நாய் வாகனம் இரண்டு கால்களில் நிற்பது போல் தோன்றும். அதாவது நான்கு கால்கள் சற்றும் நகராமல் நிற்பதால் இது சலனமில்லாத நிகேத நிலையைக் குறிக்கிறது. இந்த சலனமில்லா நிலையை நாம் உலகில் நிலை நாட்ட முடிந்தால் எந்த வியாதியையுமே தீர்த்து விடலாம். இன்று உலகை மிரட்டும் தொற்று வியாதிகள் எல்லாம் கிருமிகளின் சலனத்தால்தானே, பரவுதல் என்ற இயக்கத்ததால்தானே ஏற்படுகின்றன ? சலனம் என்பது இல்லை என்றால் எந்த தவறுமே நடக்க முடியாதே ?

சர்ப்பக்ரீடமே அம்மாவுக்கு
உகந்த ராஜ கிரீடமோ ?

அதே சமயம் சலனம் இல்லாத போது மனது அடையும் வேகத்தை உணர்ந்தால் மனச் சலனமில்லாத மகான்களின் மேன்மை புரியும். ஒரு முறை மாதா அமிர்தானந்தா நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் அந்த அவையில் குழுமி மாதாவின் பஜனை நிகழ்ச்சியை இரசித்துக் கொண்டிருந்தார்கள். மாதாவின் அருகில் ஒரு நாய் அமர்ந்திருந்தது. சற்றும் சலனமில்லாமல் மாதாவின் நாம சங்கீர்த்தனத்தை அதற்கே உரித்தான பாணியில் இரசித்துக் கொண்டிருந்தது. ஒரு சிலரோ அம்மா ஏன் இப்படி இந்த நாயை நடுவீட்டில் உட்கார வைத்து பஜனை பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட நினைத்திருக்கக் கூடும். நாம சங்கீர்த்தனம் முடிந்த மறு நொடியே நாய் எழுந்து உடலை முறுக்கி விட்டுக் கொண்டது. அந்த சந்தர்ப்பத்தில் அனைவரை விட வேகமாக செயல்படும் அம்மா தன் அன்பு முத்தத்தை அந்த நாயின் அதரங்களில் பதித்து அதன் பக்தியை மெச்சினார்கள். விளக்கமாக இந்த நிகழ்ச்சியை விவரித்தாலும் அனைத்தும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்திலேயே நிறைவேறி விட்டன. கால நிகேத பைரவ சக்திகளைப் புரிந்து கொண்டால்தான் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் அமைந்த தெய்வீக தாத்பர்யங்களை உணர்ந்து கொள்ளலாம் என்பது ஒருபுறம் இருக்க நாம் ஸ்ரீகாலநிகேத பைரவ மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற்றால்தான் ஒரு மகானைப் போல் அல்லாவிட்டாலும் மேலே குறிப்பிட்ட நாய் அளவிற்காவது காலத்தை freeze செய்ய முடியும். ஸ்ரீகாலநிகேத பைரவரின் அனுகிரகத்தைப் பெற்றவரே ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் ஆவார். ஒவ்வொரு அஷ்டமி திதி அன்றும் பெருமாள்மலையை கிரிவலம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரீஆழ்வார். கறுத்த மேனியுடனும், பளபளக்கும் சூலாயுதத்தை வலது கையில் ஏந்தியும், கால்களில் சலங்கைகள் கலீர் கலீர் என்று ஒலிக்க ஸ்ரீபைரவர் முன்னால் செல்ல அவர் பின்னே ஸ்ரீஆழ்வார் பைரவரின் திருப்பாதங்களை தரிசித்தபடியே நடந்து செல்வாராம். மாலை சுமார் ஆறு மணி அளவில் ஆரம்பிக்கும் கிரிவலம் ஒரு சில நொடிகளிலேயே நிறைவு பெறுவது போல் தோன்றுமாம். ஸ்ரீகாலநிகேத பைரவர் சில அடிகளை வைத்து நடந்த உடனேயே கீழ்வானம் வெளுத்து காலைப் பொழுதும் மலர்ந்து விடுமாம். அதன் பின்னர் படி வழியாக மலையேறி சென்று ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம் ஸ்ரீ ஆழ்வார். ஆழ்வார் பெற்றது எல்லாம் அடிமைகளுக்குத்தானே ? ஆம், ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் தான் பெற்ற பைரவ அனுகிரகத்திலோ பெருமாள் அனுகிரகத்திலோ ஒரு துளி பலனைக் கூட தான் வைத்துக் கொள்ளாது அந்தப் பலன்கள் அனைத்தையுமே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருவடிகளில் அர்ப்பணித்து வந்தார். இந்த நிகழ்ச்சியைப் படிக்கும் உங்களுக்கு கலீர் கலீர் என்று சிலம்புகள் ஒலிக்க நடந்த கண்ணகியின் காதை ஞாபகம் வரலாம்.

ஸ்ரீகருட பகவான் பெருமாள்மலை

வெள்ளிக் கொலுசுகளில் மாணிக்கக் கற்கள் உராய்வதால் ஏற்படும் சப்தமே கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தும். இவ்வாறு கலீர் என்ற ஒலியை பெருமாள்மலை, ஸ்ரீரங்கம் பிரகாரங்களை வலம் வரும்போது உத்தம பக்தர்கள் கேட்பது இயற்கையே. இந்த கலீர் மாணிக்க ஒலியைக் கேட்கும் அளவிற்கு பக்தியில் வளம் பெறா விட்டாலும் வளமுள்ள அடியார்கள் வெள்ளிச் சதங்கைகளில் மாணிக்கப் பரல்களை வைத்து தானம் அளிப்பதால் ஸ்ரீகாலநிகேத பைரவரின் நிகேத சக்திகளை அனுகிரகமாகப் பெறலாம் என்பதே சித்தர்களின் பரிந்துரை. மாணிக்கத்தில் அருவி மாணிக்கம், கடல் மாணிக்கம், பாறை மாணிக்கம் என்ற பல வகைகள் உண்டு. இவற்றில் பாறை மாணிக்கம் என்ற வகையே மேற்கண்ட கலீர் என்ற தெய்வீக ஒலியை ஏற்படுத்தும் தன்மையை உடையது என்றாலும் தானத்திற்காக பக்தர்கள் அளிக்கும் கொலுசுகளில் எத்தகைய மாணிக்கங்களைப் பதித்து அளிப்பதும் ஏற்புடையதே. கண்ணகியின் கால் சிலம்பிலிருந்து தெறித்த மாணிக்கப்பரல்கள் பாறை மாணிக்கங்களாக இருந்ததால் சேரமன்னன் உணர வேண்டிய செங்கோல் தத்துவத்தை அந்த மாணிக்கப்பரல்கள் தெரியப்படுத்தின. ஆம், மன்னன் ஒருவனின் செங்கோல் கற்பாறையைப் போல் வளையாத தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், ஒரு நிரபராதிக்கு திருடன் என்ற பட்டத்தை அளித்ததால் சேரமன்னனின் செங்கோல் வளந்ததாக ஆயிற்று. அதற்குரித்தான தண்டனையையும் அவன் ஏற்க வேண்டியதாயிற்று. அனைவரும் மாணிக்கப் பரல்கள் பதிந்த வெள்ளிக் கொலுசுகளை தானமாக அளிக்க முடியாவிட்டாலும் பெருமாள்மலை படிக்கட்டுகளில் 21, 42, 63 என்றவாறு 21ன் மடங்காக படியின் இருமருங்கிலும் அரிசி மாவு கோலமிட்டு அதன் நடுவில் குங்குமத் திலகமிட்டு அலங்கரிப்பதால் உங்கள் பூர்வ ஜன்ம பலனை ஒட்டி உங்களையும் அறியாமல் ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் அமர்ந்து தியானித்த படிக்கட்டிலும் நீங்கள் திலகமிட்டு அலங்கரிக்கும் அரிய வாய்ப்பு கிட்டுமல்லவா ? முற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் உள்ள வசந்த மண்டபத்தையே ஆழ்வார்களும் அடியார்களும் மிதிக்க அஞ்சுவார்களாம். காரணம் ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் இந்த வசந்த மண்டபத்தை அமைத்ததன் பின்னணியில் அமைந்த பக்தியே காரணம் ஆகும். அக்காலத்தில் இருந்த பல அடியார்கள் இந்த வசந்த மண்டப புனித மண்ணில் தங்கள் கால் படாத வகையில் அதை சுற்றியே செல்வது வழக்கமாக இருந்தது. ஆழ்வாரின் இறை பக்தியே, அடியார் பக்தியே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறதென்றால் ஸ்ரீகாலநிகேத பைரவர் அனுகிரகம் எத்தகைய புனிதம் நிறைந்ததாக இருக்கும் ?

ஸ்ரீஹனுமான் பெருமாள்மலை

பொதுவாக, இறைவனை பிரதட்சிணமாக வலம் வருவதே ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் இங்குள்ள ஸ்ரீகாலநிகேத பைரவரின் வாகனம் அப்பிரதட்சிணமாக வலம் வரும் கோலத்தில் அமைந்துள்ளதால் அப்பிரதட்சிணமாக வலம் வரும் ராகு கேது மூர்த்திகளின் சலனங்களால் ஏற்படும் தோஷங்களாலும், கால சர்ப்ப தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெற இவ்வருடம் அமையும் பெருமாள்மலை அஷ்டமி கிரிவலம் திகழ்கிறது. அஷ்டமி, பௌர்ணமி திதிகளில் பெருமாள்மலையை மாலை முதல் மறுநாள் காலை பொழுது விடியும் வரை கிரிவலம் வருவது ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார், ஸ்ரீகாலநிகேத பைரவரின் அனுகிரக சக்திகளை ஒருங்கே பெறும் வழிபாட்டு முறையாக அமைகிறது. கிரிவலம் நிறைவில் படியேறிச் சென்று பெருமாளை தரிசனம் செய்வதோ அல்லது இத்தகைய உடல்வலிமை பெறாதவர்கள் ஒரு பட்சமாகிய 15 தினங்களில் பெருமாளை தரிசனம் செய்வதோ ஏற்படையதே. கால சர்ப்ப தோஷம் என்ற பாதிப்பால் நசிக்கும் இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே, வேரூன்றச் செய்யவே கால சர்ப்ப தோஷத்திலிருந்து விலகிய குருவை தன் ஜாதகத்தில் பெற்ற மாதா அமிர்தானந்தா இங்கு நாகத்தை ராஜ கிரீடமாக அணிந்த கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த சுவையாகும். நீதி அரசர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற பெரும் பதவிகளில், அந்தஸ்தில் இருக்கும் அனைவரும் மேற்கூறிய முறையில் கிரிவலம் வந்து பெருமாளை தரிசனம் செய்வதால் தங்கள் பதவி காலத்தில் தவறு செய்யாத நல்ல நிலையை அடையலாம். பிரசன்னம் என்றால் கருணையுடன் நோக்குதல் என்று பொருள். மேற்கூறிய முறையில் கிரிவலம் வந்து பெருமாளை தரிசனம் செய்யும் போது அவர்கள் நிச்சயம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாளின் தரிசனத்தையே பெறுவார்கள் என்பதே பெருமாள் மலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் பெருமாள் மலையை கிரிவலமாக வரும்போது அவர் முன்னே செல்லும் ஸ்ரீகாலநிகேத பைரவரின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் கிரிவலம் வந்ததால் ஓரிரு அடிகளை வைத்த உடனேயே கிரிவலம் நிறைவு பெறுவதுபோல் தோன்றியதாக கூறினோம். அப்படியானால் ஸ்ரீ ஆழ்வார் மேற்கொண்ட இந்த கிரிவலத்தில் கிரிவலப் பாதையின் தூரமும் அந்த தூரத்தைக் கடக்க தேவையான நேரமும் கூடியதா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இங்கு தூரமோ காலமோ மாறவில்லை, அவை இரண்டும் “நிகேதம்” ஆயின என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.

சிறுவன் வெங்கடராமன் ராயபுரம் அங்காளி கோயிலை தினமும் ஆயிரம் முறை வலம் வந்து வணங்குமாறு கோவணாண்டி பெரியவர் பணித்திருந்தார் அல்லவா ? சாதாரணமாக ராயபுரம் அங்காளியை ஆயிரம் முறை வலம் வருவதற்கு பல நாட்கள் ஆகும். ஆனால், சிறுவன் சுமார் இரண்டு மணி நேர கால அளவிலேயே தினமும் அங்காளியை ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்து கொண்டிருந்தான். சிறுவன் தான் பெற்ற இத்தகைய “கால நிகேத” சக்தியைப் பற்றி அறிந்து கொள்ளவே பல வருடங்கள் ஆயிற்றாம், அதுவும் கோவணாண்டியின் பெருங்கருணையால்தான் அந்த அனுகிரகமும் கைகூடியது என்பது நீங்கள் அறிந்ததே. இறை வழிபாட்டில் நிலைகொள்ளும் பலரின் மனக் குறை தாங்கள் பல வருடங்களாக பூஜை, வழிபாடு, திருத்தல யாத்திரை, கிரிவலம் போன்றவற்றை மேற்கொண்டும் எந்தவித தெய்வீக முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லையே என்பதே. இதற்கு காரணம் அத்தகையோர் எத்தனை ஆண்டுகளாக இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விட எந்த அளவு தீவிரமாக இறைவழிபாட்டை மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியம். ஒரே ஒரு நொடி இறைவனை தங்கள் உடலில், மனதில், உள்ளத்தில் நிறைத்துக் கொண்டாலும் போதும் அவர்கள் கனவினும் இறைவன் எனக்காக என்ன செய்தான் என்று கேட்க மாட்டார்கள் நான் இறைவனுக்காக என்ன செய்ய முடியும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இத்தகைய பிரிவினை அறியா நிழலதுபோல குருவிடம் பக்தி கொள்ள விரும்பும் சீடர்கள் பெருமாள் மலையில் ஒவ்வொரு அஷ்டமி திதி அன்றும் மேற்கூறிய முறையில் கிரிவலம் வந்து பெருமாளை வணங்கினால் நிச்சயம் அவர்கள் கனவு நனவாகும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் வேண்டாம்.

ஸ்ரீராமர் பெருமாள்மலை

ஸ்ரீகாலநிகேத பைரவ மூர்த்தியின் உருவத்தை சித்தர்கள் வர்ணிக்கும்போது பெருமான் தன் இடையில் பையரா அணிந்துள்ளதாக வர்ணிக்கிறார்கள். பை அரா என்பது படம் எடுத்தாடும் நாகப் பாம்பு என்று பொருள்படும். பார்ப்பதற்கு பெருமானின் தொப்புள் போல் தோன்றுவதே இந்தப் படம். ஆனால், எம்பெருமானைப் போல் பெருமானும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்தானே, அதாவது தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன் காணேடீ என்பது போல் தாய் இல்லாத பைரவருக்கு தொப்புள் எப்படி இருக்கும் என்று ஆத்மவிசாரம் செய்யும்போதுதான் ஸ்ரீகாலநிகேத பைரவரின் இடையை அலங்கரிப்பது பையரா என்பது புரிய வரும். காலசர்ப்ப தோஷ ஜாதககாரர்கள் அனைவரும் கிரிவலம் வந்து வணங்க வேண்டியது பெருமாள் மலை, அப்போது அவர்கள் தியானிக்க வேண்டியது பெருமானின் பையரா என்பது இப்போது அடியார்களுக்கு புலனாகி இருக்கும் அல்லவா ? மாணிக்கப் பரல்கள் கொலுசு மணிக்குள் இருந்தால்தானே அது கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தும். அவ்வாறு நாம் ஒரு கொலுசை செய்தால் அதன் உள் விளங்குவது மாணிக்கமா அல்லது வேறு ஏதாவது ஒரு சாதாரண கல்லா என்பதை பகுத்தறியும் அறிவு சாதாரண பக்தர்களுக்கு கிடையாதே என்ற ஐயப்பாட்டை எழுப்பி உள்ளார் ஒரு அடியார். இது மாணிக்கத்திற்கு மட்டும் அல்ல நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து தெய்வீக பொருட்கள் பயன்பாட்டில் ஏற்படும் சந்தேகமே. நீங்கள் ஹோமத்திற்காக பசு நெய்யை ஒரு கடையில் வாங்கும்போது, “சார், எனக்கு சுத்தமான பசு நெய்தான் வேண்டும். நியாயமான விலைக்குத் தருவதாக இருந்தால் அதை கொடுங்கள்,” என்று கடைக்காரரிடம் கேட்கும்போது அவரும், “ஐயா, சுத்தமான பசு நெய் தருகிறேன். விலை கிலோ நூறு ரூபாய்,” என்றால் உங்கள் அறிவுக்குத் தெரிந்த வரையில் ஒரு நல்ல நெய்யை நூறு ரூபாய்க்குத் தர முடியாது. அதே சமயம் அவர் பசு நெய் 600 ரூபாய்க்குத் தருகிறேன் என்றால் விலையைப் பொறுத்து நீங்கள் ஓரளவிற்கு அதை நம்பலாம். உண்மையில் அவர் சுத்தமான பசு நெய் என்று சொல்லி சுத்தமான டால்டாவை உங்களுக்குத் தந்தாலும் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் கணக்கில் இறைவனுக்கு நெய் அர்ப்பணித்ததாக எழுதப்படும். கடைக்காரர் பசு நெய் என்று பொய் சொல்லி டால்டாவை விற்றதாக அவர் கணக்கில் பதிக்கப்படும். இந்த தெய்வீக கணக்கைப் புரிந்து கொண்டால் உங்கள் மனமும் வாழ்வும் அமைதியான நீரோடை ஆகும்.

ஸ்ரீராமபிரான் சீதையைத் தேடுவதற்காக வானரப் படைகள் அவருக்கு உதவி புரிந்தன அல்லவா ? அப்போது நான்கு திசைகளுக்கும் பலவித வானரப் படைகள் புறப்பட்டுச் செல்ல தென்திசை நோக்கி அனுமன் பறந்து சென்றார். சீதையை அனுமன் நிச்சயமாக சந்திப்பார் என்பதை உணர்ந்த ராமபிரான் தன் கையில் இருந்த கணையாழி மோதிரத்தை கழற்றி அனுமனிடம் கொடுத்து ஒரு வேளை அவர் சீதையைச் சந்தித்தால் தான் ராமபிரானுடைய தூதன்தான் என்று உறுதி செய்யும் முகமாக அந்த கணையாழி என்ற அத்தாட்சியைச் சீதையிடம் கொடுக்கச் சொன்னார் ராமபிரான். அனுமார் சீதையை அசோக வனத்தில் சந்தித்து ராமபிரான் அளித்த மோதிரத்தைக் கொடுத்த போது அதை சாட்சாத் ராமபிரானாகவே நினைத்து அந்த மோதிரத்தை ஆரத் தழுவி கண்ணில் ஒற்றிக் கொண்டாளாம் சீதாப்பிராட்டி. அதன் பின்னர் தன்னுடைய சடையில் தரித்திருந்த சூடாமணி என்ற ஆபரணத்தைக் கழற்றி அதை தன்னுடைய அன்புக் காணிக்கையாக ராமபிரானிடம் அளிக்கும்படிக் கூறிய சீதை ஸ்ரீராமருடைய கணையாழி மோதிரத்தை தன்னுடைய சடையில் ஆபரணமாக அணிந்து கொண்டாளாம்.

இந்தப் “பண்டம் மாற்று முறையில்” ஆஜானுபாகுவாக இருந்த ராமபிரானின் கணையாழி மோதிரம் சீதையின் விரலுக்குப் பொருந்தாமல், பெரிதாக இருந்ததால் அதைத் தன் சடையில் அணிந்து கொண்டாள் என்பது மேலோட்டமான காரணமாக இருந்தாலும் ஒரு உத்தம மனைவி தன் தலையில் வைத்துப் பாராட்ட வேண்டியது கணவனின் அன்புப் பரிசே என்பதை பறை சாற்றியதே, இன்றும் பறை சாற்றி வருவதே சீதையின் உத்தம செய்கையாகும். ஒரு சீடனுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் அவனுடைய குருநாதன் அளித்த காணிக்கையே என்பதை உறுதி செய்வதாக தான் மனிதனாக உயிர் துறக்கும் முன் தன் சற்குருவான ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசன் அளித்த சித்த பொக்கிஷமான மூன்று ருத்ராட்ச மணிகளை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு குருவின் திருப்பாதங்களில் தன் பிராணனை அர்ப்பணித்த சற்குரு வெங்கடராமனை நினைவு கூறுங்கள்.

பெருமாள்மலை

அந்நொடியே உங்களுக்கு சீதாராம தரிசனம் தோன்றி பிரகாசிக்கும். இந்தக் கணையாழியின் பின்னணியில் அமைந்த நிகழ்ச்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் சுவை அளிப்பதே. ஸ்ரீமந் நாராயண மூர்த்தி தன் தங்கையான பார்வதி தேவியை சிவபெருமானுக்கு மண முடித்து வைத்தார் அல்லவா ? அப்போது மாப்பிள்ளையான சிவபெருமானுக்கு மைத்துனன் என்ற முறையில் பெருமாள் சூட்டியதே முதன் முதலில் தோன்றிய மணவறை மோதிரமாகும். இவ்வாறு தனக்கு கணையாழி சூட்டிய பெருமாளுக்கு அளித்த அனுகிரகமே ரகுவீரனாக ராம பிரானை எம்பெருமான் அங்கீகரித்ததாகும். ஆம், அதன் பின்னர் தோன்றியதே ராமபிரானுடைய ரகு வம்ச, சூரிய குல அவதாரமாகும். இவ்வாறு கணையாழி அளித்த ராமபிரானுக்கு சூரிய குலத் தோன்றல் என்ற அனுகிரகம் பெருமானால் அளிக்கப்பட்டது என்றால் சாதாரண மனிதர்கள் எப்படி இந்த ஆதித்ய அனுகிரகத்தைப் பெறுவது ? இதற்கு உதவுவதே இந்த சார்வரி வருடத்தில் தோன்றும் சந்தனக் காப்பு வைபவமாகும். இந்த சித்திரை மாதத்தில் சனிக்கிழமையுடன் வளர் நவமி திதி இணைந்து வரும் தினத்தன்று (2ந் தேதி மே மாதம் 2020) தங்கள் கையால் சந்தனம் அரைத்து பெருமாள் மலை ஸ்ரீராம பிரானுக்கு அளித்து காப்பிட்டு வணங்குவதால் அனைவரும் சூரிய சக்தியை பெறும் வழிபாட்டு முறையாக இது அமைகிறது. மனத் தெளிவை அளிப்பதே சூரிய சக்திகளாகும். கோதை நாச்சியார் பெருமாளை, “மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்,” என்று வர்ணிக்கிறாள். இவ்வாறு மணநாள் அன்று மாப்பிள்ளைக்கு மோதிரம் அளித்துக் கௌரவிப்பதால் சூரிய சக்திகள் பெருகும் என்றாலும் சாதாரண மக்களும் இந்த சூரிய சக்தியைப் பெறுவதாக கனியும் பெருமாள் அனுகிரகமே வரும் ராம நவமி திருநாளாகும். அவரவர் தங்களிடமுள்ள தங்கத்தினாலான மோதிரம், தோடு, வளையல், செயின் என்ற எந்த ஆபரணத்தைக் கொண்டு வேண்டுமானாலும் சந்தனக் கல்லின் மீது ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி அவ்வாறு எழுதப்பட்ட சந்தனக் கல்லின்மேல் சந்தனத்தை அரைத்து அந்த சந்தனத்தை பெருமாள் மலை ஸ்ரீராமபிரானுக்கு காப்பிட அளிப்பதால் கிட்டும் அனுகிரகங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்பதே சித்தர்களின் அருளுரை. இந்த சந்தனக் காப்பு வைபவத்தை சத்சங்கமாக நிறைவேற்றும்போது இவ்வருட சித்திரை மாதமோ அல்லது அடுத்தடுத்து வரும் வளர் நவமி திதி அன்றோ அனைவரும் சந்தனக் கல்லின்மேல் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி அதன் மேல் சந்தனத்தை அரைக்கலாம். அல்லது இவ்வாறு அரைத்த சந்தனக் குழம்பை இவ்வாறு ராம மந்திரம் எழுதப்பட்ட சந்தனக் குழம்பின் மேல் புரட்டி எடுத்து ராமருக்கு சந்தனக் காப்பு நிறைவேற்றுவதும் ஏற்புடையதே. இவ்வாறு அடியார்கள், பக்தர்கள் அளிக்கும் சந்தனக் கணையாழியைப் பெறவே பெருமாள் மலையில் ஸ்ரீராம பிரான் கணையாழி இன்றி காட்சி அளிக்கிறார் போலும். மும்மலத்தில் முகிழ்க்கும் மை அடியார்களுக்கும் அனுகிரகம் அளிக்கத் தயாராக இருப்பவரே பெருமாள் மலை பொன்மனச் செம்மல் ராமபிரான். ராகவ அருளால் ராகுவின் இருளைக் களையும் சித்த முயற்சியே இந்த ராகவேந்திர வழிபாடாகும்.

நன்மை தருபவையே நாகங்கள்
பெருமாள்மலை

ராகு ஒரு நிழல் கிரகம் என்ற அளவில்தான் அவரைப் பற்றி பலரும் அறிந்துள்ளார்கள் என்றாலும் ராகு கேது என்ற நவகிரக மூர்த்திகளே பெருமாளின் மோகினி அவதாரத்தில் அமிர்த கரண்டியால் “குட்டுப் பட்ட” பெருமை பெற்றவர்கள் என்று நாம் உணர வழிகோலுவதே இந்த சார்வரி வருடம் ஆகும். ராகு கேது மூர்த்திகளை சார்ந்தாரைச் சாரும் மூர்த்திகள் என்றும் அழைப்பதுண்டு. செவ்வரி ஓடிய கண்களை உடைய பெருமாள் மூர்த்தியால் அரவணைக்கப்பட்ட மூர்த்திகள் என்பது இதன் மேலோட்டமான பொருளாகும். இந்த “சார்ந்த” சக்திகளை சமுதாய நலனுக்காக ராகு தசையில் ராகு புக்தியில் அமெரிக்கா முழுவதும் அர்ப்பணித்தவரே சுவாமி விவேகானந்தர் ஆவார். சுவாமி விவேகானந்தரின் ஜாதகத்தை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றால் அனைத்து நவகிரக மூர்த்திகளின் சக்தியும் ராகுவின் மேல் சங்கமிப்பதைக் கண்டு நாம் பிரமிப்பு அடைவோம். ராகு பகவானின் அனுகிரக அமிர்த சக்திகளை தங்கள் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் அர்ப்பணிக்க விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைவதே இந்த சார்வரி வருடமாகும். ராகு என்பது பாம்பு வடிவைப் பெற்ற அரக்கன் என்பதைப் பற்றி அறிவோமே தவிர அந்த நாகத்தின் நாக்கு 60 டிகிரி கோணத்தில் சுக்ர பகவானுக்கு உடைய அமிர்த சக்திகளுடன் திகழ்கிறது என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. இதை ராகு கோணம் என்றும் அழைப்பதுண்டு. இந்த ராகு கோணத்தை முறையாக தம்பதிகள் பயன்படுத்தினால் தங்கள் குடும்பம் ஒற்றுமையாகத் திகழ்வதுடன் சமுதாயமே அமைதிப் பூங்காவாக மலரும் என்பதில் ஐயமில்லை. இந்த ராகு கோணத்தை தம்பதிகள் தங்கள் படுக்கை அறையிலும் முறையாக பயன்படுத்தி அன்யோன்ய வாழ்வு பெற உதவுவதே நம் சற்குரு அளித்த 32 தேவாரப் பதிகங்களாகும். எனவே பள்ளியறை என்பது தம்பதிகளின் சங்கமத்திற்காக மட்டுமல்ல உலக மக்களின் அமைதிக்காகவும் என்பதை உணர்த்தியவரே நம் சற்குரு. சார்வரி வருடப் பிறப்பு சுக்ரனுக்கு உகந்த துலா லக்னத்தில் அமைவதும் அந்த லக்னத்திற்குரிய சுக்ர பகவான் ரிஷப ராசியில் ஆட்சி கொள்வதுமான அமைப்புகள் இத்தகைய சுக்ர சக்திகளை குடும்ப ஒற்றுமைக்காகவும் சமுதாய ஒற்றுமைக்காகவும் அர்ப்பணிக்கும் தெய்வீக சக்திகளை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதும் சிறப்பே. சார்வரி வருடம் முழுவதும் தாமே அரைத்த சந்தனத்துடன் மல்லிகை மணம் கமழும் வாசனை திரவியங்களை (scent, perfumes) சேர்த்து பெருமாள் மலையில் திகழும் நாக மூர்த்திகளுக்கு காப்பிட்டு அல்லது பொட்டிட்டு வணங்குவதால் கணவன் மனைவி இடையே அமையும் பலவிதமான சச்சரவுகள் தீரும். கோர்ட்டு வளாகத்திற்குப் போகாமல் கோயில் வளாகத்திலேயே அனைத்து குடும்ப பிரச்னைகளும் தீர்ந்தால் அது எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை உணர்த்துவதும் பெருமாள் மலையில் பக்தர்கள் மேற்கொள்ளும் வழிபாடாகும். Centrifugal force, centripetal force என்ற இரு சக்திகளே உலகெங்கும் பிரதானமாக காணப்படுகின்றன. இந்த சக்திகளைக் குறிப்பதாகவே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் நாகத்தின் வால் பகுதி அமைந்துள்ளது. அதைப் பற்றி நாம் முழுவதுமாக பரிந்து கொள்ளாவிட்டாலும் இந்த சக்திகளை வழிபடும் மேற்கூறிய முறையை நாம் தெரிந்து கொண்டால் குடும்பம் என்னும் பிரபஞ்சம் அமைதியாக இயங்கும், போதுமே.

ஒரு முறை ஒரு அடியார் ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொள்வதைப் போன்ற ஒரு காட்சியைக் கண்டார். அவருடைய கற்பனை சிறகுகள் விரியவே அவர் நன்றாக அந்தக் காட்சிகளை இரசிக்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் அந்த காட்சிகள் மறைந்தன. அவர் தன் சற்குருவின் உபதேசங்களை பலருக்கும் அழகாக எடுத்துக் கூறுவது போன்ற காட்சிகள் தென்பட்டன. அதில் முழுவதுமாக ஈடுபட்டு தன்னை மறந்தார். இவ்வாறு சில நிமிடங்கள் கழிந்தன. இப்போதுதான் அவர் மனதில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கின. இந்த மாறுபட்ட இரு காட்சிகளில் எது உண்மை, எது பொய் ? இரண்டும் உண்மையா, இரண்டும் பொய்யா ? ஒன்று மட்டும் உண்மை, ஒன்று பொய் என்று கூற்றிற்கு இடமில்லையே. சரி எதற்கும் இறுதி முடிவு என்பது சற்குரு அளிப்பதுதானே, அதனால் சற்குருவையே கேட்டு விடுவோம் என்று மனம் தெளிந்து சற்குருவை அடைந்தார். அனைத்தும் அறிந்தவர்தானே சற்குரு. அந்த அடியாரைப் பார்த்ததுமே, “என்னய்யா குழப்பம். சரி, சரி இப்படி உட்கார். அடியேன் சொல்லும் ராம காதையைக் கேள்,” என்று கூறி ஒரு இனிய காவியத்தைத் தொடங்கினார்.

ஸ்ரீஅனுமாரப்பன் பெருமாள்மலை

சீதையைத் தேடுவதற்காக ஆஞ்சநேயர் தென்திசை நோக்கிப் பறந்து சென்றபோது அவர் ராமபிரான் கொடுத்த கணையாழி மோதிரத்தை தன் உத்தரீயத்தில் (மேல்துண்டு) முடிந்து கொண்டு இருந்தார். தாவல், தாண்டுதல் என்பது வானை நோக்கிப் பறப்பதற்கு சமமாக இருக்கிறது என்றால் இந்த சாகசத்தை என்னை விட யாரால் செய்ய இயலும் என்று அவருடைய உள் மனது அசைபோடவே எங்கோ அமர்ந்திருந்த ராமபிரானுக்கு இந்தக் காட்சிகள் விரியவே அவர் தன்னுடைய ஆருயிர் பக்தனான அனுமாரின் அகந்தையைக் களைய திருவுள்ளம் கொண்டார். விளைவு, அனுமனின் உத்தரீயத்தில் இருந்த கணையாழி கழன்று கீழே விழுவதைக் கண்டார். அவ்வளவுதான் மின்னல் வேகத்தில் அந்த மோதிரத்தைத் தொடர்ந்து சென்றார். நல்ல வேளையாக அந்த மோதிரம் கடலில் விழாமல் ஒரு சிறு தீவில் விழுந்தது. அந்த தீவில் இறங்கிப் பார்க்கவே அங்கு ஒரு முனிவர் கண்ணை மூடி தவத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டார். அமைதியாக அவர் முன் சென்று அவர் கண்ணைத் திறப்பதற்காக காத்திருந்தார். சற்று நேரம் கழித்து அந்த முனிவர் கண்ணைத் திறந்து அனுமனைப் பார்த்தார்.

கனிவுடன் ஆஞ்சநேயரைப் பார்த்த அவர் சிறு புன்னகையுடன், “திரும்பவும் ராமன் பெண்டாட்டியைத் தொலைத்து விட்டானா ? அவன் பெண்டாட்டியைத் தேடி வந்த நீ அவன் கொடுத்த மோதிரத்தை தொலைத்து விட்டாயா?” என்று கேட்டாராம். அவ்வளவுதான், நிலை குலைந்து போனார் அனுமன். அவருடைய அகம்பாவம் தவிடு பொடியாய்ப் போயின என்று சொல்லவும் வேண்டுமோ ? சற்று தூரத்தில் ஒரு தாமிர செம்பைக் காட்டி, “அந்த செம்பில் தேடிப் பார், ராமன் அளித்த மோதிரத்தை உன்னால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்,” என்றார் அந்தத் தவசி. ஒன்றும் புரியாமல் அனுமனும் அந்த முனிவர் சுட்டிக் காட்டிய செம்பினுள் பார்த்தார். என்ன ஆச்சரியம், அந்த செம்பில் நூற்றுக் கணக்கான கணையாழி மோதிரங்கள் ஸ்ரீராமர் அளித்ததைப் போன்ற அதே வடிவில், அமைப்பில் இருந்தன. அனுமாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரிடம் கொஞ்ச நஞ்சம் பாக்கியிருந்த அகம்பாவமும் கரைந்து, மறைந்து போயிற்று. “நான் ஒருவன் மட்டும்தான் ராமனின் தொண்டன் என்றல்லவா இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த செம்பையும் அதிலுள்ள கணையாழி மோதிரங்களையும் பார்த்தால் ஏற்கனவே எத்தனையோ தடவை ராமாயணங்கள் நிறைவேறியுள்ளது போலும், அந்த ராமாயணத்தில் பங்கு பெற்ற ராமதூதர்களும் என்னைப் போல் ராமபிரான் கொடுத்த மோதிரங்களை அகம்பாவத்தால் தொலைத்து விட்டு அல்லல்பட்டதைப் போல் அல்லவா தெரிகிறது ? இது யுகம் யுகமாக நடக்கும் அகம்பாவக் கூத்துதானா?” இந்த விஷயங்களை எல்லாம் ஆஞ்சநேயருடைய மனது நொடியில் நினைக்கத் தொடங்கியதன் விளைவே அனுமனின் அகங்காரம் மறைவதற்கான ஆழிப்பேரலையாக இருந்தது.

பெருமாள்மலை

அனுமார் அமைதியாக திரும்பி வந்து அந்த ரிஷியிடம் தான் ராமபிரானின் மோதிரத்தைக் கண்டு பிடிக்க முடியாத இயலாமையைத் தெரிவித்தார். அந்த முனிவரும், “சரி பரவாயில்லை. நான் அந்த மோதிரத்தை தேடிப் பிடித்து உன்னிடம் கொடுப்பது பிரமாதமில்லை. ஆனால், நீ மறுபடியும் அதைத் தொலைக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம் ?” என்று கேட்டார். ரிஷியின் இந்த நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமானார் ஆஞ்சநேயர். அந்த முனிவரும் சற்று நேரம் கழித்து, “பரவாயில்லை, நீ உன் வழியில் செல், தேவையான சமயத்தில் இந்த மோதிரத்தை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்,” என்று உறுதி அளிக்கவே ஆஞ்சநேயரும் பெரும் மன பாரம் நீங்கியவராய் அவ்விடத்தை விட்டு அகன்று உயரப் பறந்து செல்ல ஆரம்பித்தார். பின்னர் ஆஞ்சநேயர் சீதையை அசோகவனத்தில் தரிசனம் செய்வதற்கு முன் தன் உத்தரீயத்தைத் தொட்டுப் பார்த்தபோது அதில் ஸ்ரீராமபிரான் அளித்து இடையில் தொலைத்த அந்த கணையாழி இருப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். இப்போது ஆஞ்சநேயர் கண்ட கணையாழி உண்மையா, பொய்யா ? சற்குரு சிரித்துக் கொண்டே, “இதற்கு விடையளிக்க உன்னால் முடிந்தால் எது உண்மை என்பதை நீயே அறிந்து கொள்ளலாம்,” என்றார். புரிகிறதா ... இல்லை புரிந்தது போல் இருக்கிறதா ... ? சற்குருவே அறிவார்.

சற்குரு கேட்ட கேள்விக்கு விடையளிக்க வேண்டும் என்றால் ஒரு மனிதன் உடல், மனம், உள்ளம் இவற்றைத் தாண்டி சென்றால்தான் இயலும். மேலே கூறிய ரிஷி எத்தனையோ ராம அவதாரங்களைக் கண்டவர், கடந்தவர். ஆனால், அத்தகைய பெருமானும் ஏக வசனத்தில் ராம பிரானை அழைப்பது போல் தோன்றினாலும் ராமன் பெண்டாட்டி என்று கூறினாரே தவிர சீதை என்று சொல்லவில்லை. இதுவே ராமபிரானை உண்மையாக அர்ச்சித்த வார்த்தை. ஏக பத்தினி விரதனான ராமருக்கு ரிஷி சூட்டிய புகழ் மாலை. மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமை பெற்ற நம் சற்குருவே தன் மனைவியை பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. நாரிமணி (பெண்களில் சிறந்தவளே) என்றுதான் அழைப்பார். இதுவும் தொட்டுக் காட்டிய வித்தையே.

ஒருவன் பெண் ஒருத்தியுடன் சரசமாடுவதும், சற்குருவின் சேவையில் ஈடுபடுவதும் பொய்யே. இரண்டிலுமே உடல், மனம், உள்ளம் இவற்றின் ஈடுபாடு உள்ளது. உடல், மனம், உள்ளத்தைத் தாண்டும்போதுதான் எது பொய், எது உண்மை என்பதை பகுத்துணர முடியும். மனிதனாகப் பூமியில் பிறப்பெடுத்த ஒருவனால் நிச்சயம் இந்த வேலியைத் தாண்ட முடியாது என்றால் இதற்கு பெரியோர்கள் கூறும் அறிவுரை என்ன ? நல்லது கெட்டது என்ற இரண்டிற்கும் இடையே, இரண்டையும் தாண்டி உள்ளதே இறை சக்தி. இந்த இறை சக்தியை உன்னால் அறிந்து கொள்ள முடியாது. அதனால் நல்லது என்று உனக்கு உன்னுடைய குரு சுட்டிக் காட்டியதை மட்டும் நிறைவேற்றி வா. அப்படி நிறைவேற்றும்போதும் அந்தக் காரியம் இறைவனின் சித்தத்தால்தான், குருவருளால்தான் நிறைவேறியது என்பதில் திடமான நம்பிக்கை கொள் என்பதே. இந்த திட நம்பிக்கை கனிவதற்கு சித்தர்கள் காட்டும் அறப் பணியே மேற்கூறிய கணநாத குணசேடன் என்ற நாகதேவதைக்கு சந்தனப் பொட்டிட்டு வணங்கி வருதலாகும்.

ஸ்ரீசப்த கணபதி மூர்த்திகள்
லால்குடி

ஒரு ஜாதகத்தில் ஒரு ராசியில் இருக்கும் கிரகத்தை விட அந்த ராசியை, வீட்டை பார்க்கும் அதே கிரகத்திற்கு சக்தி அதிகம் என்பது பொதுவான விதி. இவ்வாறு ஒரு ராசியை, வீட்டை கிரகங்கள் பார்ப்பதால் ஏற்படும் ராஜ யோக பலன்களைப் பற்றி மட்டுமே ஸ்ரீவராகமிகிரர் பல கிரந்தங்கள் எழுதியுள்ளார். உதாரணமாக, மேஷ ராசியில் இருக்கும் குரு பகவானை விட மேஷ ராசியைப் பார்க்கும் குரு பகவானின் மகத்துவம் அதிகமே. மேஷ ராசியில் இருக்கும் குரு அந்த ராசிக்குரித்தான அக்னி கர்மங்களைக் களைவார் என்றால் மேஷ ராசியை துலா ராசியிலிருந்து பார்க்கும் குரு பகவானின் வீக்ஷணத்திற்கு பலம் அதிகமே. நடைமுறையில் இதை விளக்குவதென்றால் ஒரு எரிவாயு கம்பெனியை நடத்தி வரும் ஒருவர் அந்த எரிவாயுவை எடை குறைத்து விற்றுக் கொண்டிருந்தால் அதனால் அந்த எரிவாயுவால் பாதிப்படைய வேண்டி வரும். இது அந்த எரிவாயு உரிமையாளர் ஜாதகத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருப்பதற்குச் சமமானது. ஒரு வேளை அந்த உரிமையாளர் தன்னிடம் பணி புரியும் பெண் தொழிலாளியிடம் தவறுதலாக நடந்து கொண்டால் அவர் மிகவும் கடுமையான “நெருப்பு” கர்மங்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்த அந்த உரிமையாளர் ஜாதகத்தில் துலா ராசியில் இருக்கும் குரு பகவானின் பார்வையில் விளையும் சூட்சும அக்னி கர்ம வினையாகும். இவ்வாறு பல தரப்பட்ட அக்னி கர்ம வினைகளைக் களைவதே நம் சற்குரு அவர்கள் ஜனன ஜாதகத்தில் துலா ராசியில் அமைந்த குரு பகவானின் அனுகிரக சக்தியாகும். இதுவரை எந்த விதமான அக்னி கர்மாவில் பங்கெடுத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் இனி மனம் திருந்தி தாங்கள் இனி எத்தகைய அக்னி கர்மாவிலும் ஈடுபடப் போவதில்லை என்று திடமாக உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயம் அவர்களை குருவருள் காக்கும் என்பது உறுதி.

ஸ்ரீஆஞ்சநேயமூர்த்தி
பெருமாள்மலை

இது போன்றதே இவ்வருடம் திகழும் ராகு பகவானின் ஏழாமிட பார்வையுமாகும். ஜோதிட ரீதியாக ராகுவும் கேதுவும் ஒருவர் மற்றொருவரின் ஏழாமிடத்தில் எழுந்தருள்வதால் இந்த ஏழாமிட பார்வையால் விளையும் தோஷங்களைக் களைவதாக சப்த கணபதி மூர்த்திகள், சப்த கன்னிகள் வழிபாடு இவ்வருடம் முக்கியத்துவம் பெறுகிறது. சப்த கன்னிகளுக்கும் சப்த மாதர்களுக்கும் வித்தியாசம் உண்டா என்பது பலரும் தொன்றுதொட்டு கேட்டுவரும் கேள்வியே. எதற்கும் இறுதி முடிவு என்பது சித்தர்கள் அளிப்பதுதானே ? திருமணத்திற்கு முன் காசிராஜனின் புதல்வி லோபாமுத்ரா, திருமணத்திற்குப் பின் ஸ்ரீஅகத்திய பிரானின் இதயராணி ஸ்ரீலோபாமாதா. இதே முறையில் திருமணத்திற்கு முன் சப்த கன்னியராய்த் திகழ்ந்த ஏழு மாதர்களும் திருமணத்திற்குப் பின் சப்த மாதாக்களாக புகழ் பெறுகின்றனர். ஒரு சில வழிபாடுகளில் சப்த ரிஷிகளின் பத்தினிகளையே சப்த மாதாக்களாக வழிபடுவதும் உண்டு. இதுவும் ஏற்றக் கொள்ளக் கூடியதே. ஸ்ரீஅத்ரி மகரிஷி முதலாக ஸ்ரீமரீசி மகரிஷி ஈறாக சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவதும் நிச்சயமாக சப்த மாதர்களின், சப்த கன்னிகளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தரும். இதில் எந்த வித ஐயப்பாடும் வேண்டாம். அக்னி கர்மங்கள் என்பவை மிகவும் நுணுக்கமாக பரிசீலனை செய்து உணரப்பட வேண்டியவையே. அதனால் அடியார்கள் மேற்கண்ட உதாரணத்தை ஒன்றுக்குப் பலமுறை படித்து, தெளிவுபடுத்தி தங்கள் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த ஆரம்ப படிக்கட்டில் திடமாக காலடி எடுத்து வைக்கக் கற்றுக் கொண்டால்தான் ஸ்ரீஅகத்திய மகா பிரபுவைப் போல் தன் இதய சாம்ராஜ்யத்தில் ஸ்ரீலோபாமாதாவை நிரந்தரமாக அமரச் செய்ய முடியும். இது முழுமையாக நிறைவேறிய பின்னரே இறைவனை தங்கள் இதயத் தாமரை என்னும் சகஸ்ர தள ஆலயத்தில் எழுந்தருள செய்ய முடியும். இவ்வாறு ஒன்றுக்கொன்று சுவையானதே, தெளிவானதே, எல்லையில்லா நிரந்தர இன்பத்தை அளிப்பதே தெய்வீகம், அது வறட்சியான, சுவையற்ற வேதாந்தம் அல்ல.
பெருமாள் மலையில் நீங்கள் தரிசனம் செய்வதே சீதையைத் தேடி புறப்பட்டு ஸ்ரீராமருக்கு வெற்றி கோஷத்தை எழுப்பும் ஸ்ரீஆஞ்சநேய மகா பிரபுவின் திருஉருவம் ஆகும். உத்தியோகம், சுய வேலை வாய்ப்பு, உயர்கல்வி, திருமணம் என்ற எந்தவித முயற்சிக்கும் வெற்றியைத் தேடி தருபவரே கைகளை உயர்த்தி வாலை வெற்றிக் கொடியாக நிலை நாட்டும் ஆஞ்சநேய மூர்த்தி ஆவார். இராமாயணத்தில் ஆஞ்சநேய மூர்த்தியைப் பற்றி புகழும் காண்டம் சுந்தர காண்டம் என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் என்றால் அழகு, அமைதி என்றெல்லாம் பொருள் தொணிக்கும். அப்படியானால் ராமரை விடவா ஆஞ்சநேயர் சுந்தர மூர்த்தி ? இங்குதான் தெய்வீக சுவையின் உச்ச கட்டமே திகழ்கிறது. இறைவனை விட, சிவபெருமானைவிட அழகு, பேரழகு வேறு யாருக்கும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சிவபெருமான் தன்னை கண்ணாடியில் பார்த்து தெரிந்த உருவத்தை “சுந்தரா” என்று அழைக்க அந்தக் கண்ணாடியில் இருந்த வெளிவந்த மூர்த்தியே சுந்தர மூர்த்தி நாயனார் என்பதை நீங்கள் அறிவீர்கள். சுந்தர மூர்த்தி நாயனார் உள்ளத்தில் யார் இருப்பார் ? இதில் என்ன ஆச்சரியம், அதிசயம் என்ன இருக்கிறது, கட்டாயம் எம்பெருமான் ஈசன்தான் நித்தியமாய் உறைந்திருப்பான். அது போல் ஈசன் சுந்தரன் என்றால் அந்த ஈசனை தன் உள்ளத்தில் நிலைநிறுத்திய சுந்தரர்தானே அதிசுந்தரன். இதே பாணியில் நீங்கள் சிந்தித்தால் ஈசனை தன் உள்ளத்தில் நிலைநிறுத்திய ராமபிரானை தன் உள்ளத்தில் நிலைகொண்ட ஆஞ்சநேய மகாபிரபுவை விட சுந்தரர் இவ்வுலகில் வேறு யார் இருக்க முடியும் ? இந்த சுந்தரமான பெயரைச் சூட்டிய வால்மீகி என்ற நான்கெழுத்து காவிய நாயகரை விட சிறந்த தவசி வேறு யார் இருக்க முடியும் ? சிவபெருமானின் அழகின் பின்னணியில் உள்ள இரகசியம் என்ன ? நாம் எவருமே சிவபெருமானை நேரே தரிசனம் செய்தவர்கள் கிடையாது. ஆனால், பச்சிளங் குழந்தையை அனைவரும் தரிசனம் செய்திருக்கிறோம். பொக்கை வாயைக் காட்டி, தலையில் முடி இல்லாமல், உடலில் ஆடை ஆபரணம் ஏதுமின்றி இருந்தாலும் அந்தக் குழந்தையின் தெய்வீக சிரிப்பு நம்மை மயக்குவதற்குக் காரணம் எந்த ஆசையும் இல்லாத தியாகராசனாக அந்த குழந்தை மலர்ந்திருப்பதே காரணம் ஆகும். இந்த தியாகராஜனையே நாம் சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரானின் திருவடிகளைத் தரிசித்தவாறு அமர்ந்திருக்கும் ஆஞ்சநேய மகாபிரபுவின் தியாகத் திருவுருவத்தில் தரிசிக்கிறோம். ரவிவர்மா ஸ்ரீராமர் பட்டாபிஷேகக் காட்சியை வடித்திருக்கும் ஓவியத்தில் அனுமார் மூர்த்தியின் சக்தி அனைத்தும் ராமபிரானின் திருவடிகளில் பதிந்திருக்கும் அதிசயத்தை இன்றும் இரசிக்கலாம்.

ஸ்ரீகருடாழ்வார் பெருமாள்மலை

கேள்விக் குறியான வாழ்க்கையா ?
அஞ்சனை மைந்தன் இருக்கையில்
கவலை ஏன் ?

ராம தூதனாய் சென்ற ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை சித்தர்கள் வாழ்த்தி வழியனுப்பும் கோலம் என்றென்றும் நினைவில் நிறுத்தி வழிபடத் தக்கதே.
ஓம் தத் புருஷாய வித்மஹே
சீதாராம தூதாய தீமஹி
தந்நோ ஆஞ்சநேய ப்ரசோதயாத் (9 முறை)
ஓம் தத் புருஷாய வித்மஹே
(G)குண்ட கண்ட நிவர்த்தி தேவாய தீமஹி
தந்நோ ஜகதளப்ரதாப
ப்ரளய கால ருத்ர அம்ச மஹிமா
டமடம டமடம டும்டும்
டண்ட டிகு டிகு டிகு
டிகு டிகு டுகு டம் டம்
கத பூஜித நர்த்தன வேக ஆஞ்சநேய ப்ரசோதயாத்
என்றவாறு ஆஞ்சநேய மூர்த்தியை நாமும் ஓதி வழிபடுவதால் அஞ்சனை மைந்தனின் பூரண அனுகிரகத்தைப் பெறலாம். ராமதூத ஆஞ்சநேய காயத்ரீ மந்திரத்தை ஒன்பது முறை ஜபித்தால் காலருத்ர ஆஞ்சநேய காயத்ரீயை ஒரு முறை ஜபிக்கலாம். இவ்வாறு ஒன்பதுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த காயத்ரி மந்திரங்களை ஓதலாம், ஜபிக்கலாம், உன்னத நிலைகளை எய்தலாம். உடல் வியாதி, முதுமை போன்ற காரணங்களால் பெருமாள்மலையை கிரிவலம் வந்து வணங்க முடியாதவர்கள் பெருமாள் மலை திருத்தலத்தை அல்லது அஞ்சனை மைந்தன் அருளும் தூணை மேற்கூறிய துதியை ஓதியவாறே வலம் வந்து வணங்குதல் நலம். இந்த துதியில் எழும் ராகு பகவானுக்குரிய 31 மேள ஒலி அட்சரங்களும் ராகுவின் கோரப் பிடியிலிருந்து பக்தர்களைக் காக்கும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். ஸ்ரீராம நவமி அன்று உடலில் 36 இடங்களில் சந்தனத்தை அரைத்துப் பூசிக் கொண்டு ராம தோத்திரங்களை, துதிகளை ஓதுவது பெரும் பாக்கியமே. இது ராம நவமி அன்று மட்டுமே நிறைவேற்றினால் போதும் என்று பல பக்தர்களும் நினைப்பது தவறு கிடையாது. உண்மையில் ஒவ்வொரு பௌர்ணமி பூஜை அன்றும் நாம சங்கீர்த்தனத்தின்போது நம் சற்குரு இவ்வாறு சந்தன அலங்காரத்தில் திகழ்ந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு சித்த அனுகிரகமாகும். நாமும் முக்கியமான பூஜை தினங்கள் என்று அல்லாது சந்தர்ப்பமும் வசதியும் உள்ளவர்கள் தினமுமே இவ்வாறு உடலில் 36 இடங்களிலும் அரைத்த சந்தனக் கீற்றுகளை இடுதல் சிறந்த வழிபாடே.

சர்வம் விஷ்ணுமயம்

மேற்கண்ட ஸ்ரீஆஞ்சநேய துதியை ஓத ஓத தம்மையே மறந்து ராமரிடம், நம் சற்குருவிடம் ஒன்றியதாக ஒரு அடியார் தெரிவித்து பேரின்பம் அடைந்தார். இந்த பேரின்பம் நம் சற்குரு அளித்த ஒவ்வொரு துதியிலும் மிளிர்வதே உண்மை என்றாலும் மேற்கண்ட துதி 2007ம் வருடத்தில் நம் சற்குருவால் அருளப்பட்டதாகும். அதாவது தான் தூல உடம்பை விடுத்து பூர்ணமான திருஅண்ணாமலை ஜோதியில் 2008ம் ஆண்டு ஐக்யமாகும் முன் அளித்த துதி அல்லவா இது ? 2007 என்பது ஒன்பதாக மலர்வதால் பூரணமான ஆஞ்சநேய மூர்த்திக்கு, பூரணமான நம் சற்குரு, பூர்ண ஆண்டில் அளித்த துதி என்றால் இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் விளக்கத்தான் முடியுமா ? இத்தனை முறைதான் இந்த பூரண துதியை ஓத வேண்டும் என்ற நியதி கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த துதிகளை ஓதி பூரண, பூரண, பூரண அனுகிரக சக்திகளைப் பெறலாம்.

ஸ்ரீஆதிலட்சுமி சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் நத்தம் லால்குடி

நத்தம் என்றால் பொதிந்த, செறிந்த என்றெல்லாம் பல பொருள் பொதிந்த அர்த்தங்கள் உண்டு. லால்குடி அருகில் உள்ள நத்தம் விஷ்ணுபதி திருத்தலத்தில் (ஆகஸ்டு 2004 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் காண்க) அருள்புரியும் ஸ்ரீஆதிமூல பெருமாளின் எழிற்கோலத்தையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். ஒரு முறை யானைகளின் தலைவனான கஜேந்திரன் என்ற யானை ஸ்ரீஆதிலட்சுமி தேவியின் பூஜைக்காக, செந்தாமரைக் கண்ணனின் வழிபாட்டிற்காக நத்தம் திருத்தலத்தில் அமைந்துள்ள தாமரை பொய்கையில் ஒரு செந்தாமரை மலரைக் கொய்து அதைத் தன் துதிக்கையில் ஏந்திக் கொண்டு வந்தபோது அங்கு அரக்க வடிவில் இருந்த தீய சக்திகள் யானையின் காலைக் கவ்விக் கொண்டன. கஜேந்திரன் எவ்வளவோ முயன்றும் தன்னுடைய கால்களை விடுவிக்க இயலவில்லை. இடையில் தாமரை மலரோ வாடும் நிலையில் இருந்தது.

பெருமாள்மலை

தீய சக்திகள் வடிவில் இருந்த முதலைக்கும் கஜேந்திரனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டமோ ஓராயிரம் வருட காலத்திற்குத் தொடர்ந்தது. இந்நிலை நீடித்தால் தன் துதிக்கையில் இருந்த செந்தாமரை மலர் வாடி விடும் என்பதை உணர்ந்த கஜேந்திரன் பெருமாளை “ஆதிமூலமே இரட்சிப்பாய்”, என்று குரல் கொடுத்து அழைத்தது. கஜேந்திரனின் தீனக் குரலைக் கேட்ட ஸ்ரீஆதிமூலப் பெருமான் தன் சக்கராயுதத்தால் அந்த அரக்கனைக் கொன்று கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார் என்பது நீங்கள் அறிந்த புராண வரலாறே.

நத்தம் திருத்தலத்திற்கு நம் அடியார் ஒரு முறை போனபோது அங்கு சிதம்பரத்திலிருந்து வந்த ஒரு பக்தர், “சார், நீங்கள் எத்தனையாவது தடவையாக இங்கு வருகிறீர்கள் ?” என்று கேட்டபோது நம் அடியார் ஒன்றும் புரியாமல், “ஏன், சார், முதல் தடவைதான் இங்கு வருகிறேன் ...”, என்று சொல்ல அந்த பக்தர் பிரமித்து, “அப்படியா, நான் ஒரு research student. ஆய்வுக்காக இந்த தலத்தை தேர்ந்தெடுத்து இந்த பெருமாளைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த பெருமாளை தரிசனம் செய்ய இதுவரை 18 தடவை வந்து விட்டேன். இப்போதுதான் பெருமாள் தரிசனமே கிடைத்தது. நீங்களோ முதல் தடவையிலேயே பெருமாள் தரிசனத்தைப் பெற்று விட்டீர்களே. ஆச்சரியமாக இருக்கிறது,” என்றாராம். இது உண்மையே. நம் சற்குருவின் உத்தரவைப் பெற்று சென்றதால் முதல் தடவையே பெருமாளின் அனுகிரகம் கனிந்தது என்பதே உண்மை. நீங்கள் இங்கு ஸ்ரீஆதிலட்சுமி தேவியையும் ஸ்ரீஆதிமூல பெருமாளின் தரிசனத்தையும் பெறுகிறீர்கள் என்றால் அது நிச்சயம் நீங்களோ, உங்கள் மூதாதையர்களோ இந்த தரிசனப் பலன்களுக்காக பல பிறவிகள் முயற்சி செய்து களைத்து விட்டார்கள், களைத்து விட்டீர்கள். அவர்களின் களைப்பில்தான் நீங்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கிறீர்கள், கழிக்கிறீர்கள் என்று உணர்வதே நாம் நம் மூதாதையர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும். தம் சற்குருவை சந்திப்பதற்காக ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூர் திருத்தலத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை 18 முறை நடந்தே வந்தார். சிவபெருமானின் மைந்தனான உக்கிரவழுதி மதுரை ஒத்தக்கடை ஸ்ரீநரசிம்மரைக் காண 18 முறை முயற்சி செய்தும் நரசிம்மரின் தரிசனம் கிட்டவில்லை. இவை எல்லாம் எதைக் குறிக்கின்றன. ஒரு தரிசனம் பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் அதற்குரிய தூய உடலமைப்பையும், மன தெளிவையும், திடமான உள்ளத்தையும் பெறவே இறை மூர்த்திகளும், மகான்களும் இவ்வாறு பல தடவை தங்களை தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள், பெருங் கருணை புரிகிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு தரிசனத்திலும் அது நிகழ்கிறதோ இல்லையோ அந்த தரிசன முயற்சிக்கான பலன் நிச்சயம் தரிசனத்திற்கு முயல்பவரை அடையும்.

பெருமாள்மலை

சித்தர்களின் நாயகரான ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி ஒரு சதுர்யுக காலத்திற்கும் மேலோக ஆத்ம விசாரம் செய்தும் ஆதிமூலம் என்ற பதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லையாம். அப்படியானால் சாதாரண மனிதர்களான நாம் ஸ்ரீஆதிமூலப் பெருமானின் அருமை பெருமைகளை ஒரு தூசி அளவாவது அறிந்து கொள்ள முடியுமா என்ன ? உதாரணத்திற்கு கோவணம் என்ற ஆதிமூலத்தைப் பற்றி இங்கு விளக்குவோம். நம் ஆதிகுருவான ஸ்ரீஇடியாப்ப சித்தர் நத்தம் திருத்தலத்திற்கு சிறுவன் வெங்கடராமனுடன் வந்தபோது பெருமாளும் கோவணாண்டியும் சிரித்து சிரித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது நம் கோவணாண்டி பெருமாளின் முன் நின்று கொண்டிருந்த கஜேந்திரனின் நெற்றி, முதுகு, கழுத்து போன்ற பகுதிகளை எல்லாம் தடவிக் கொடுத்துக் கொண்டே வெகு நேரம் நின்று கொண்டிருந்தாராம். பெருமாளோ கோவணாண்டியோ பேசிய வார்த்தைகள் தூய தமிழ்தான் என்றாலும் அவர்கள் உரையாடலில் ஒன்று கூட புரியவில்லை என்பதே இன்று வரை நம் சற்குருவிற்கு ஆச்சரியம் அளித்த விஷயம். அவர்கள் பேசிய வார்த்தைகளில் சுமார் பத்து வார்த்தைகளை தம் அருகில் இருந்த அடியார்களிடம் தெரிவித்து அவைகளின் அர்த்தம் தெரியுமா என்று ஒன்றுமறியாதவரைப் போல் கேட்டார் நம் சற்குரு. அந்த வார்த்தைகள் அனைத்தும் தமிழ் வார்த்தைகள்தான் என்றாலும் அவற்றில் ஒன்று கூட தற்போது கேள்விப்பட்டதாகத் தெரியவில்லை, இன்று புழக்கத்தில் இல்லை என்பதே ஆச்சரியமாகும். புரியாத மொழியில் பேசி தங்கள் திறமையைக் காட்டுவதற்காகவே ஒரு சித்த மகா புருஷரும் ஆதிமூலப் பெருமாளும் அங்கு கூடினார்கள். நிச்சயம் கிடையாது. இவ்வாறு பல ஆண்டுகளுக்குப் பின் உலகம் உணராத புதிராக விளையும் நோய்களின் தன்மை பற்றியும் அவைகளுக்கு நிவாரணம் அளிக்கும் முறை பற்றியும், இது போன்ற பல பிரபஞ்சம் நிறைந்த விஷயங்களைக் குறித்துதான் அவர்கள் உரையாடல் அமைந்திருக்கும் என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? பல வருடங்களுக்கு முன் ஆதிமூல பெருமாளும் கோவணாண்டியும் பேசிய வார்த்தைகளையே அதைக் கேட்ட அடியார்களால் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை என்றால் அந்த உரையாடலின் மகத்துவம் எவ்வளவு பொருள் பொதிந்ததாக இருக்கும் ?

திரிவேணி சங்கமம் என்றால் மூன்று நதிகளின் சங்கமம் என்று மேலோட்டமாக பொருள் கொண்டாலும் மூன்று சக்திகளின் சங்கமமே திரிவேணி சங்கமமாகும். இடகலை, பிங்கலை, சுசும்னா நாடி என்ற மூன்று நாடிகளின் சங்கமத்தில் நிகழும் தியான முறையில்தான் இத்தகைய திரிவேணி சங்கமங்களின் இரகசியங்களை முழுமையாக உணர முடியும் என்றாலும் இத்தகைய தூல திரிவேணி சங்கமங்களின் தரிசனமும் ஆரம்ப கட்ட பக்தர்களுக்கு அவசியம் என்பதால் பக்தர்கள் அவசியம் இத்தகைய திரிவேணி சங்கமத் தலங்களையும் அங்கு கோயில் கொண்டு அருள்புரியும் தெய்வ மூர்த்திகளையும் வணங்கி வழிபடுதல் வேண்டும். அலகாபாத் கங்கை யமுனை சரஸ்வதி சங்கமம், அன்பில் அருகே உள்ள காயத்ரீ, கொள்ளிடம், சரஸ்வதி சங்கமம் போல் நத்தம் திருத்தலதில் அமைவதே ஆதிமூல திரிவேணி சங்கமமாகும். இந்த சங்கமத்தில் அறிதுயில் கொள்ளும் ஸ்ரீஆதிமூல பெருமாளையே நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள் என்பதே நம் சற்குரு தம் அடியார்களுக்கு அளிக்கும் சித்த பொக்கிஷமாகும். இருள் செறிந்ததே ராகு சக்திகள். இந்த இருளுக்கு மேலும் எதிர்மறை சக்திகள் அளிப்பதே இந்த சார்வரி ஆண்டில் அமையும் காலசர்ப்ப யோக சக்திகள். இந்த தீய வினைகளை எல்லாம் களைய வேண்டும் என்றால் மோகினி என்ற பெருமாள் சக்திகள் திரிவேணியாகப் பூரணத்துவம் பெற்ற நத்தம் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடு ஒன்றினால் மட்டுமே சாத்தியம் என்று உணர்த்துபவரே நம் சற்குரு. ஒவ்வொரு பட்சத்தில் வரும் சப்தமி, அஷ்டமி திதிகளிலோ அல்லது அஷ்டமி, நவமி திதிகளிலோ பெருமாள் மலை திருத்தலத்தையும் நத்தம் திருத்தலத்தையும் தரிசித்து வழிபடுதல் இந்த சார்வரி வருடத்தில் கிடைக்கும் திரிவேணி பொக்கிஷம் என்று சான்று அளிப்பவர்களே சித்தர்கள்.

பெருமாள்மலை

ஆதிமூலம் என்ற ஒரே ஒரு தமிழ் வார்த்தையின் முழுமையான பொருளை உணரவே சித்தர்களின் நாயகர் ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி அரும்பாடுபட வேண்டி வந்தது என்றால் தமிழ் மொழியின் பெருமைதான் என்னே, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் மகிமைதான் என்னே ? இவ்வாறு ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டிக் கொண்டு பெருமையுடன் விளங்குவதே நம் தமிழகம். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழகத்தில் விளங்கும் ஒவ்வொரு திருக்குளத்தின் பெருமையை விளக்குவது என்றால் ... ? நத்தம் லட்சுமி தீர்த்தத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கஜேந்திர மோட்ச திருவிளையாடலைப் புனைந்தார் என்றால் அது மிமையாகாது. ஒருவர் ஒரு நாள் முழுவதும் ஒரு தீர்த்தத்தில் நின்று கொண்டிருந்தால் அவரைப் பைத்தியம் என்றுதானே மற்றவர்கள் நினைப்பார்கள். அப்படியானால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு யானை அரசன் ஒரு குளத்தில் நின்றால் அதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். ஆனால், அந்த யானை தன் காலை விடுவிக்கப் போராடுகிறது என்றால் அதை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள மக்கள் முன்வருவார்கள். இதுவே நத்தம் தீர்த்தத்தின் மகிமை விளக்கமாகும். இந்த தீர்த்த மகிமையை பக்தர்கள் எந்த அளவு வேண்டுமானாலும் விரித்துக் கொள்ளலாம், மகிமைகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தன் அடியார்களுடன் எழுந்தருளி இருந்தார் நம் சற்குரு. அப்போது ஒரு அடியாரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து, “ஓடிப் போய் அந்தக் கோயில் யானையிடம் ஆசி வாங்கி வா ...”, என்று அனுப்பினார். சற்குருவின் ஆணைப்படி யானையின் ஆசியைப் பெற்றார் அந்த அடியார். நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்று தான் என்ற இறை தத்துவத்தின் வியாபகமே சுசும்னா. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு மட்டுமே அந்த அடியார் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் யானையின் சுசும்னா நாடி அனுகிரகத்தைப் பெற்றாலும் அந்த நாடியின் சக்திகள் நம் அடியார்களை எல்லாம் ஏதோ ஒரு வடிவில் இன்றும் அடைந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதே சற்குரு அளித்த ஆயிரமாயிரம் பார்கவ பொக்கிஷங்களுள் ஒன்றாகும்.

பெருமாள்மலை

ஒரு நேரம், இடத்திற்கான சக்திகளைப் பூரணமாக அளித்ததே அந்த கோயில் யானையின் அனுகிரக மகிமையாகும். அதற்காகவே “ஓடிப் போய்” அந்த சக்திகளைப் பெறுமாறு பணித்தார் நம் சற்குரு. ஒரு திருக்கோயில் யானையின் ஒரு நொடிக்கும் குறைவான சுசும்னா சக்திகளே இத்தகைய வித்தைகளை எல்லாம் சற்குருவின் அருளால் புரியக் கூடியது என்றால் ஓராயிரம் ஆண்டுகள் லட்சுமி தீர்த்தத்தில் நின்றவாறு சுசும்னா சக்திகளை பரவெளியில் பரப்பிய கஜேந்திரனின் அனுகிரக சக்திகளைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது ? இந்த சக்திகளை எல்லாம் அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு அனுகிரகமாக அளித்து வரும் சித்த மகாபுருஷர்களின் தொண்டிற்குதான் நன்றியை எப்படி இந்தச் சமுதாயம் தீர்க்க முடியும் ?

முதலை என்ற எதிர்மறை சக்திகள் தன் காலைக் கவ்விக் கொண்டிருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் சுசும்னா சுவாசம் செந்தாமரை மலரில் நிரவும் வண்ணம் தன் துதிக்கையில் பிடித்திருந்தது அல்லவா கஜேந்திரன். அந்த தாமரை மலரைத்தான் லட்சுமி தேவியிடம் பெருமாள் பூஜைக்காக அளித்தது கஜேந்திரன். இதே முறையில் சுசும்னா சுவாசம் நிரவிய தாமரை மலர்களை ஸ்ரீஆதிமூல பெருமாளின் பூஜைக்காக அளித்தலே நாம் பெருமாளின், லட்சுமி தேவியின் அனுகிரகத்தை பெறும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு சுசும்னா நாடி சக்திகள் பெற்ற செந்தாமரை மலர்களை ஸ்ரீஆதிமூல பெருமாளின் பூஜைக்காக அளித்தல் என்பது ஆயிரத்தில் ஒரு பக்தருக்குக் கூட இயலாத காரியம் என்பதால் சித்தர்கள் இது குறித்து கூறுவது என்ன ? லட்சுமி தீர்த்தத்தில் தர்பைகளை வைத்து அதன் மூலைகளில் 12 செந்தாமரை, வெண்தாமரை மலர்களை வைத்து தீர்த்த நீரால் தர்ப்பணம் இட்டு அந்த தர்ப்பண நீர் காலில் படா வண்ணம் லட்சுமி தீர்த்தத்திலோ, திருக்கோயில் வளாகத்திலோ அல்லது இயன்றால் அருகிலுள்ள திரிவேணி சங்கமத்திலோ சேர்த்து விட்டு அதன் பின்னர் ஸ்ரீஆதிமூல பெருமாளுக்கு தாமரை மலர்களை அளிப்பதால் அந்த தாமரைகள் அனைத்தும் சுசும்னா சேற்றில் முளைத்த செந்தாமரைகளாக மிளிரும் என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆதிமூல அனுகிரகமாகும். ஒரு துளி லட்சுமி தீர்த்தம் ஒரு கோடி தேவயானைகளை உருவாக்கும் என்பது ஸ்ரீகாகபுஜண்டரின் நாடி செய்தி. ஆழ்ந்த பொருள் உடையது, தீர்க்கமான கருத்துக்களுடன் பொலிவது.

பெருமாள் மலையை கிரிவலம் வந்து வணங்குபவர்கள் இங்கு அருளிய ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் திருமாலையை ஓதியவாறே வலம் வருதல் நலம். அவ்வாறு 45 பாடல்களையும் ஓத முடியாதவர்கள் பெருமான் அருளிய பச்சை மாமலைபோல், குடதிசை முடியை வைத்து, ஊரிலேன் காணி இல்லை என்று தொடங்கும் மூன்று பதிகங்களை மட்டுமாவது ஓதியவாறு கிரிவலம் வருதல், இறை தரிசனங்களைப் பெறுதல் சிறப்பு, அரிய வாய்ப்பே. இந்த மூன்றுப் பதிகங்களையும் ஓத முடியாதவர்கள் இங்கு அருளிய மோகன ராக அருணாசல சிவ தோத்திரத்தையாவது ஓதியவாறு வலம் வருதல், இறை தரிசனம் பெறுதல் சிறப்பாகும்.

பெருமாளின் மோகினி அவதாரம் காமதகனம் புரிந்த சிவபெருமானுக்கே மோகத்தை உண்டாக்கியது என்றால் பெருமாளின் அழகு வதனத்தை என்னென்று வர்ணிப்பது ? ஆனால், இத்தகைய இறை கவர்ச்சி ஐயப்ப சுவாமி என்ற இறை அவதாரத்தை உருவாக்கி கோடிக் கணக்கான பக்தர்களுக்கு அருள் வெள்ளம் கூட்டியது போல் இவ்வருடத்திற்கு உகந்த மோகன ராகத்தில் அமைந்த ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் பதிகத்தை ஓதி வருவதால் ராகு பகவானின் அருளால் தோன்றும் மயக்கத்திலிருந்து பக்தர்கள் விடுபட்டு இறையருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே இந்த பதிகத்தின் பல பலன்களில் ஒன்றாகும். மற்ற பலன்களை அடியார்கள் தாங்களே பெருமாள் மலையையோ அல்லது மற்ற திருத்தலங்களையோ இந்த பாசுரத்தை ஓதியவாறே வலம் வந்து வணங்குவதால் உணர்ந்து கொள்ளலாம்.

பெருமாள்மலை

அரசியல், விளையாட்டு, நுண்கலை, சமுதாய நலம் என எத்துறையாக இருந்தாலும் அதில் தங்கள் கைதான் ஓங்கி இருக்க வேண்டும், முன்னணியில் திகழ வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் விளைவது இயற்கை. இதனால் தவறு ஏதும் கிடையாது. இத்தகையோருக்கு நல்ல வழிகாட்ட காத்திருக்கும் தெய்வமே வலது கையை உயரத் தூக்கிய வண்ணம் பெருமாள் மலையில் அருள் புரியும் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி ஆவார். தெய்வீக நேத்ரம் வாய்க்கப் பெற்றவர்கள் ஸ்ரீஆஞ்சநேயர் மூர்த்தியின் வலது கையில் அருளும் ஜெய விஜய ரேகையை தரிசனம் செய்து பயன் பெறலாம். இந்த வெற்றி தரும் விஜய ரேகையை தரிசனம் செய்யும் அளவிற்கு நாம் புனிதமான நேத்ர சக்தியைப் பெறாவிட்டாலும் ஹஸ்த நட்சத்திர தினங்களில் தாமே அரைத்த சந்தனத்தை மேற்கூறிய முறையில் ஸ்வர்ண தாமரை மேல் பதித்து அதாவது ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் என்று தங்கத்தால் எழுதிய அட்சரங்களின் மேல் சந்தனம் அரைத்து ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு சார்த்துதலால் எங்கும், எதிலும் தங்கள் கைதான் ஓங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாகவே, தினமும் இரவில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து வானில் தெரியும் ஹஸ்த நட்சத்திரத்தை நோக்கியவாறே இறைத் துதிகளை குறிப்பாக ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் பாடல்களை அல்லது மற்றுப் பற்றெனெக்கு என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரப் பதிகத்தை சுமார் அரை மணி நேரத்திற்குக் குறையாமல் ஓதுதல் நலமே. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், நோய்கள் போன்ற காரணங்களால் கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற வேதனையுடன் வாழ்வோர் மேற்கூறிய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். ஜோதிடத் துறை என்று அல்லாது வைத்தியர்கள், உடல் கூறு சம்பந்தமான அனைத்து கலைஞர்களுமே இத்தகைய வழிபாடுகளால் நலம் பல அடைவர். ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் மட்டும் அல்லாது பல ஆழ்வார் பெருமக்களும் நாயன்மார் மூர்த்திகளுமே நந்தவனங்கள் அமைந்து இறை மூர்த்திகளுக்கு மலர் கைங்கர்ய சேவை புரிந்து வந்தது அனைவரும் அறிவர் என்றாலும் இதன் பின்னணியில் அமைந்த ஆண்டான் அடிமை என்ற இணை பிரியா உறவை சித்தர்களே அறிவர். வார்த்தைகளைக் கடந்த மௌன மொழி என்று கூட நவில இயலாத உத்தம உணர்வுகளைக் கூட்டுவதே இத்தகைய மலர் வழிபாடுகள் ஆகும். இந்த மலர் மொழியில் இறை மூர்த்திகளிடம் உறவாடிய நம் சற்குருவை அந்த புலன்கள் கடந்த நிலையில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்களே இந்த உன்னதத்தை உணர முடியும். தற்போது இவ்வாறு நாயன்மார்களும் ஆழ்வார்களும் உருவாக்கிய ஒரு சில நந்தவனங்களை மட்டுமே அடியார்கள் தரிசனம் செய்ய இயலும் என்றாலும் வாடாத மலர்களான நானிலத்து மலர்களான நட்சத்திரங்களை அனைத்து பக்தர்களும் வழிபட்டு பயன் பெறலாமே ? Cloud servers என்பதாக இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள உண்மையான இறைத் தலங்களே வானில் மிளிரும் நட்சத்திரங்களாகும். வானை நோக்குவீர், வளம் பல பெறுவீரே !!

அகத்திய நட்சத்திரம்

அபூர்வமாக அமைந்த மக்களின் சஞ்சாரம் குறைந்து விளங்கும் இந்த சமயத்தில் வானம் நிர்மலமாக விளங்குவதால் இந்த நிர்மல வானில் பொழியும் மழைத் துளிகளை ரோகிணி நட்சத்திரம், 21ந் தேதி, புதன் கிழமைகள் போன்ற நாட்களில் ஒரு சுத்தமான வெள்ளி, மரப் பாத்திரங்கள் போன்றவற்றில் பிடித்து மிண்டுரங்கக் குவளைகள் போன்ற தெய்வீக கலன்களில் அவற்றை சேமித்து வைத்திருந்து அந்த வருண பிரசாதத்தில் சந்தனம் கையால் அரைத்து ஆஞ்சநேயர், சஞ்சலன் நாக தேவதை போன்ற பெருமாள்மலை தெய்வ மூர்த்திகளுக்கு சார்த்தி வழிபடுதலால் கிட்டும் பலன்கள் அமோகமே. நம் சற்குரு பூத உடலுடன் நடமாடியபோது ஸ்ரீலோபாமாதா அகஸ்திய மூர்த்திகளை பஞ்சலோகத்தில் அமைப்பதற்காக உரிய சிற்பிகளிடம் தேவையான பணம் முன்னதாக செலுத்தியிருந்தும் அந்த சிலா மூர்த்திகளை நம் ஆஸ்ரமத்திற்கு அனுப்புவதற்கு அந்த சிற்பிகள் காலம் கடத்திக் கொண்டே இருந்தனர். இது சம்பந்தமாக ஆஸ்ரம அடியார்கள் சற்குருவைக் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே, “ஆஸ்ரமத்தில் ஒரு அகஸ்தியர்தான் சார் இருக்க முடியும்,” என்றார். அப்போது அடியார்களுக்கு அந்த “அகஸ்திய” உரையின் பொருள் விளங்கவில்லை. ஆனால், தற்போது வளர்பிறையில் ரோகிணி நட்சத்திரம் வானில் பிரகாசிக்கும்போது அங்கு அகத்திய நட்சத்திரமும் பிரகாசிக்கிறது என்றால் இந்த தரிசனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டுமே ? இந்த அரிதிலும் அரிய அவதார சங்கம கோலத்தையே இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். இந்த அகத்திய ரோகிணி தரிசன பலன்களை குரு அனுகிரகமாக மற்றவர்களுக்கும் அர்ப்பணிக்கும் தூய எண்ணம் உடையவர்கள் காய்ச்சிய பசும்பாலுடன் தேன் கலந்து நட்சத்திர துதிகளை மூன்று முறை ஜபித்து எந்நாளிலும் திருத்தலங்களில் தானம் அளிக்கலாம். மன இருளைப் போக்கும் தான முறைகளில் இதுவும் ஒன்றே.

சதுர்வேத காயத்ரி

பொதுவாக சற்குரு அளித்த மந்திரங்களை எந்நிலையிலும் எந்நேரத்திலும் ஓதுவது சிறப்பு. ஆரம்ப நிலையில் ஜப மாலையைப் பயன்படுத்தி எண்ணிக் கொண்டே குறித்த எண்ணிக்கையில் மந்திரம் ஜபிப்பது என்பது பலரும் தொன்றுதொட்டு பயன்படுத்தி வரும் ஒரு முறையே என்றாலும் நம் சற்குரு போன்றோர் அங்குலாஸ்திதி ஜப முறையையே வலியுறுத்துகின்றனர். விசிறி சுவாமிகளை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோர் இந்த உண்மையை நேரில் கண்டு இரசித்திருக்கலாம். சுவாமிகள் நம்மிடம் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தாலும் அவருடைய ஒரு கை மாத்திரம் சற்குரு அளித்த மந்திரத்தை எழுதிக் கொண்டே இருக்கும். சுவாமி சிவானந்தாவும் தன்னுடைய பூத உடலை விடுக்கும் நிலையில் உடல் உணர்வு மறந்து போய் உணவு, நீர் போன்றவற்றை விலக்கி இருந்தாலும் அவருடைய கை மட்டும் அவருடைய தொடையில் ஓம் ஓம் என்று எழுதிக் கொண்டிருந்த அற்புதத்தை ஏற்கனவே விவரித்துள்ளோம்.

துரிய காயத்ரீ என்பது சற்குரு ஒருவரால் தன்னுடைய நெருங்கிய சீடருக்கு நேரில் அளிக்கப்படும் காயத்ரீ ஜப முறையாகும். இருப்பினும் இந்த சார்வரி வருடத்தில் பக்தர்கள் ஜபிக்கும் சதுர்வேத காயத்ரீ என்பது நிச்சயமாக இந்த துரிய காயத்ரீ ஜப நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதால் சதுர்வேத காயத்ரீ மந்திர ஜப முறையை இங்கு அளிக்கிறோம். இதை நான்காம் நிலை அங்குலாஸ்திதி ஜப முறையாகக் கொள்வதும் ஏற்புடையதே. இம்முறையில் இங்குள்ள வீடியோ படத்தில் காட்டியுள்ளபடி மந்திரத்தை ஜபிப்பதே சதுர்வேத காயத்ரீ மந்திர ஜப முறையாகும். சற்குரு வாய்க்கப் பெறாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு உரித்தான சரவணபவ, முருகா, அம்மா போன்ற மந்திரங்களையும் தாராளமாக ஜபிக்கலாம். உத்தம சற்குருவிடம் அழைத்துச் செல்வதும் இந்த மந்திர ஜபத்தின் பலனாகும். இந்த காயத்ரீ மந்திர ஜபத்தின் பின்னணியில் அமைந்துள்ள சித்த பொக்கிஷங்களை விவரிப்பது கடினமே என்றாலும் சில அம்சங்களை குருவருளால் இங்கு தெரிவிக்கிறோம்.

இலந்தையில் இனிப்பா ?
பெருமாள்மலை

சார்வரி என்ற நான்கு எழுத்து வருடத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் குரு ராஜ யோகத்துடன் வீற்றிருக்க லக்னத்திலிருந்து ஒன்பதில் ராகு பகவான் அமைந்துள்ளது இத்தகைய சதுர்வதே காயத்ரீ ஜபத்திற்கு உரித்தான ஜோதிட அம்சங்களாகும். ஜோதிடம் என்பது ஜோதியிடமிருந்து வந்துள்ளதே. இந்த காயத்ரீ ஜபத்தில் ஜோதியாகத் திகழ்வதே லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலத்தில் கன்னி மூலையில் அரிதிலும் அரிதாக பிரதட்சணம், வலம் வரும் வகையில் அமைந்துள்ள கன்னிமூலை கணபதி மூர்த்தி ஆவார். ஸ்ரீகன்னி மூலை கணபதி மூர்த்தியை ஒன்பது முறை வலம் வந்து மேற்கூறிய மந்திர ஜபத்தை ஆரம்பிப்பது சிறப்பாகும். இத்தகைய பிரணவ வலத்தில் சதுர்வேத ஜோதி என்ற ஒரு அபூர்வ சக்தி இந்த சார்வரி வருடத்தில் பக்தர்களுக்கு கன்னி மூலை பிரசாதமாக கணபதி மூர்த்தியால் அளிக்கப்படுகிறது என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். கன்னி மூலை கணபதியின் அருள் திருமண தடங்கல்களைக் களையும் என்பது மட்டுமல்லாமல் குடும்ப ஒற்றுமைக்கும் வழி வகுக்கும் என்பது நீங்கள் அறிந்தே. ஒரு சுற்று சதுர்வேத காயத்ரீ மந்திர ஜபத்தை நிறைவேற்றும்போது 32400 முறை நாம் எடுத்துக் கொண்ட மந்திரத்தை ஜபிக்கிறோம் என்பது மேலோட்டமான எண்ணிக்கையாக இருந்தாலும் இதில் 32 4 00 என்ற கணித சூத்திரத்தில் அமைந்த நான்கிற்கு ஒன்பது என்ற அமைப்பு மகர ராசியில் உச்சம் கொள்ளும் ஒன்பது எண்ணிற்கு உகந்த செவ்வாயைக் குறிக்கும் என்பதும் ஒரு சதுர்வேத அம்சமாகும். இறை நாமத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு சுற்று சதுர்வேத காயத்ரீயை ஜபிப்பதற்கே பல மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளக் கூடும் ஆதலால் இந்த எண்ணிக்கைக்கு குறைந்தளவு மந்திரங்களை ஜபிப்பதும் தவறு கிடையாது. அத்தகைய சூழ்நிலைகளில் மிக நீண்ட மந்திரங்களையோ காயத்ரீகளையோ எடுத்துக் கொள்பவர்கள் மந்திர எண்ணிக்கை போதுமான அளவு வரா விட்டாலும் ஒரு இடத்தில் ஒரே ஆசனத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து ஜபிப்பதும் ஏற்புடையதே. ஆலய பிரதட்சிணங்கள், கிரிவலம் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த முறையில் மந்திரம் ஜபிப்பது ஏற்புடையதே. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நீங்கள் ஓரிடத்தில் ஓர் ஆசனத்தில் நிலைத்திருப்பதாகவே பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதே இந்த மந்திர ஜபத்தின் பலன்களில் ஒன்றாகும்.

ஸ்ரீகனிந்த கனி
சந்திரோதய குரு கர தரிசனம்

சதுர்வேதம் என்றால் நான்கு வேதம் என்று மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் ஒரு மந்திரத்தின் பலனை ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, பல கோடி மடங்கு என பெருக்கி ஜபிப்பதே சதுர்வேத காயத்ரீ மந்திரத்தின் சிறப்பம்சமாகும். இந்த மந்திர ஜப முறையில் வல்லவர்களே காஞ்சி காமகோடி கனிந்தகனி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற பெருந்தகையோர் ஆவர். ஒருவர் சாதாரணமாக ஒரு நாளைக்கு 20000 முறை காயத்ரீ மந்திர ஜபத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. இந்த விதி முறையை நிறைவேற்றுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், உலக நலனுக்காக கனிந்த கனியைப் போல் அவதாரம் எடுத்து வந்தவர்கள் இந்த விதிமுறையை மீற முடியாதே. அதனால் அவர்கள் தன்னை ஒரு நாளில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறையைச் சேர்ந்த பலருடைய காயத்ரீ மந்திரத்தையும் ஜபிப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டு அதை நிறைவேற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்கள் இவ்வாறு அந்த மகான்களை தரிசனம் செய்ய வருவார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதும் அவர்களின் அனுகிரக அருட்பாங்கில் ஒன்றாகும். அப்படியானால் நம் கனிந்த கனி ஒரு நாளைக்கு ஜபம் செய்ய வேண்டிய காயத்ரீ மந்திரத்தின் எண்ணிக்கை எத்தனை கோடி வரும். ஆனால், காலையில் 32 முறை, மதியம் 64 முறை இரவு 32 முறை மட்டுமே மந்திரங்களை ஜபித்து அந்த மந்திர ஜபத்தின் பலனை கனிந்த கனி அளிக்கின்றார் என்றால் அம்மகானின் பெருமையைப் பற்றி என்ன கூற முடியும் ? இவ்வாறு ஒவ்வொரு அடியாரையும் சதுர்வேதியாக மாற்ற நினைக்கும் நம் சற்குருவின் கருணைக்கு நாம் எப்படித்தான் நன்றி கூற இயலும் ?? பொதுவாக, மந்திர ஜபங்களை காலை, மாலைதானே நிறைவேற்றுவார்கள். கனிந்த கனியோ மூன்று வேளையும் மந்திர ஜபம் நிறைவேற்றுவதன் தெய்வீகத் தாத்பர்யம் யாதோ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இதுவே மகான்கள் தங்கள் அவதார லீலைகளை தாங்கள் எடுத்துக் கொண்ட தற்காலிக பிறவியுடன் இணைத்துக் கொள்ளும் இரகசியம் ஆகும். காணாமல் கோணாமல் கண்டு என்பது சித்தர்கள் சந்தியாவந்தனம் பற்றி அளிக்கும் நாடி பாடல். இந்த சந்தியாவந்தன நாடியை கனிந்த கனி இயற்றும் மந்திர ஜபத்துடனும், சுவாமிகள் கூறும் மந்திர எண்ணிக்கையான 32, 64, 32 என்ற மாலையுடனும் கோர்த்துப் பார்த்தால், “நாங்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான் ...”, என்ற மட்டை குட்டை இரகசியமும் பளிச்சிடும். என்னே சுவை ... சித்த சுவை ! சந்திர பகவான் மட்டுமே காலசர்ப்ப யோகத்தில் மீண்டு இவ்வருடம் அனுகிரகதாரியாக விளங்குவதால் சந்திர சேகரேந்திர சக்திகளை அளிக்கும் கனிந்த கனி தன் இடது கரத்தை உயர்த்தி ஆசி அளிக்கும் சித்திரங்களை அடிக்கடி வணங்குவது இந்த சார்வரி வருடத்தில் சிறப்பான யோகமாக மிளிர்கிறது. இத்தகைய ஒரு சித்திரம் நம் அடியார் வீட்டில் விளங்கும் இரகசியத்தை அறிவித்த நம் சற்குரு இவ்வாறு சந்திர சக்திகளை அருள்வதுடன் இடது கரம் தாய் போன்ற பெண் சக்தியைக் குறிப்பதால் அனைத்து மக்களுக்கும் உரித்தான அம்மாவே, காஞ்சி காமாட்சியே இந்த கனிந்த கனி என்று சுவாமியின் அனுகிரக சக்திகளை புகழ்ந்தார்கள் நம் சற்குரு. கனிந்த கனியின் மடங்கி இருக்கும் சுக்ர விரலானது “காமகோடி” என்ற தத்துவத்தை விளக்கும் தாத்பர்யமாகும்.

கந்தன் புத்தி கவட்டையே

நம் சற்குரு அடிக்கடி கூறுவதுண்டு, “We are perennial water ... (நாங்கள் ஒரு வற்றாத ஜீவ ஊற்று). ஆனால் இந்த ஜீவ ஊற்று நீரில் குளித்து பயன்பெறுவதோ இதைச் சீண்டாமல் ஒதுங்கிப் போவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது,” என்பார். உதாரணமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் கந்தன் புத்தி கவட்டையிலே ... என்ற நம் மூதாதையர் அளித்த பழமொழியை கருத்தூன்றிக் கவனித்து வேதமாக எண்ணி அதை நம் வாழ்வில் பயன்படுத்தி வந்தாலே போதும் நாம் அனைத்தையும் சாதித்து விடலாம், நமக்கு மட்டும் அல்ல இந்த சமுதாயத்திற்கு வேண்டிய அனைத்தையுமே பெற்றுத் தந்து விடலாம். இத்தகைய ஒரு பொக்கிஷத்தை அளிக்கக் கூடியதே பெருமாள்மலை கிரிவலமாகும். பல அன்னிய மொழிகளில் வெளிவந்த வெண்பனி என்ற சிறுமியைப் பற்றி ஒரு கதையை நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். அவர் தன் அரண்மனையில் பணி புரிந்து வந்த ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டு அவளை மணந்து கொண்டார். எவ்வளவோ திறமைகள் அவளுக்கு இருந்தாலும் தன்னைவிட அழகாக ஒரு ராணி எங்காவது வந்து முளைத்து விடுவாளோ என்ற ஒரு பயம் அவளுக்கு இருந்து கொண்டே வந்தது. ஆனால், அவளிடம் ஒரு மாயக் கண்ணாடி இருந்தது. அந்த மாயக் கண்ணாடியில் பார்த்து அடிக்கடி தன்னை விட யாராவது சிறந்த அழகி இருக்கிறாளா என்று கேட்டு உறுதி செய்து கொண்டாள். அனைத்தையும் அறிந்த மாயக் கண்ணாடி அது.

புளிக்கு சுவை சேர்ப்பவர்
யார் ? பெருமாள்மலை

ஒரு நாள் அந்த மாயக் கண்ணாடி வெண்பனி என்ற ஒருத்தி அந்த ராணியை விட அழகானவளாகத் திகழ்வதாகக் கூறவே அந்தப் பெண்ணைக் காட்டில் விட்டு விடச் செய்தாள். இருள் போன்ற கரிய கூந்தலையும், ரோஜா மலர்களைப் போன்ற சிவப்பு நிற உதடுகளையும், இளம் பனியை ஒத்த வண்ணமுடைய உடலையும் அவள் பெற்றிருந்தாக அந்த மாயக் கண்ணாடி கூறியது. ஏழு குள்ளர்களின் இருப்பிடத்தை அடைந்த வெண்பனி அவர்கள் ஆதரவால் பாதுகாப்பு பெற்றாள். ராணியின் சதித் திட்டத்தையும் மீறி அந்த வெண்பனி உயிருடன் இருந்ததை அறிந்த ராணி கோபத்தில் தன்னிடமிருந்த மாயக் கண்ணாடியை சுக்கு நூறாக உடைத்து விட்டாள். அதன் பின்னர் அவள் மயங்கி விழுந்து விட்டாள். அந்த நீண்ட தூக்கத்தில் அவள் ஒரு எரியும் செருப்பை அணிந்து கொண்டு வெகு நேரம் நடனமாடுவதாக கனவு காணவே அந்த கனவில் அவளுடைய நெடுங்காலத் தவறுகள் எரிந்து சாம்பலானதால் அவள் கண் விழித்து எழுந்தபோது ஒரு புது கன்னியாக, ராணியாக இருந்தாள் என்பது கதை.

ஆன்மீகத்தின் கோட்டையாக இருக்கும் நம் பாரத நாட்டில் எத்தகைய தொற்று நோய்கள் வந்தாலும் அதை இறையருளால் சரி செய்ய முடியும். ஆனால், ஆன்மீகத்தைப் பற்றியே அறியாத அன்னியர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்வதே மேற்கண்ட கதையாகும். இந்தக் கதை கூறும் ஆன்மீக விளக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால் அமிர்தானந்த அன்னை தொற்று நோய்களுக்கு நிவாரணமாக அளித்த வெண்ணிற பூக்கள் தியானத்தைப் பற்றி நாம் நினைவு கூற வேண்டும். வெண்பனி என்ற சிறுமி வெள்ளை உடலைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவள் செந்நிற உதடுகளையும் கரு நிற கூந்தலையும் அல்லவா பெற்றிருந்தாள். இதுதானே இந்த சார்வரி வருட கிரக சஞ்சாரம் கூறும் இரகசியம். கரிய கூந்தல் ராகுவைக் குறிப்பது, வெண்ணிறம் காலசர்ப்ப யோகத்தில் மீண்ட சந்திர பகவானுக்கு உகந்த நிறம், சிவப்பு நிறம் உச்சம் பெற்ற செவ்வாய்க்கு உரியதல்லவா ? வெண்மை நிறம் மருத்துவர்களுக்கும், பணிப் பெண்களுக்கும் சீருடையாக அமைய அவர்களுக்கு மக்கள் சமுதாயம் இன்று கௌரவம் அளிப்பதன் பின்னணியில் விளங்கும் இரகசியம் இப்போது ஓரளவு புலனாகின்றது அல்லவா ? இரண்டும் இரண்டும் நான்குதானே. இதுவே கவட்டை இரகசியத்தின் விளக்கமும் கூட. கவட்டை என்றால் விரிந்த இரு குச்சிகளுக்கு இடையே விளங்கும் சக்தி. நலம் தரும் குசா சக்தி. பதினைந்து திதிகளின் மத்தியில் விளங்கும் அஷ்டமி திதியன்று மேற்கொள்ளும் கிரிவலம் எத்தகைய தொற்று நோய்களுக்கும் எப்படி நிவாரணமாக அமையும் என்ற இரகசியம் இப்போது உங்கள் உள்ளங்கை நெல்லிக் கனிதானே ?

குருபட்டாடைக்கு உகந்த
பெருமாள்மலை பட்டு தரிசனம்

பெருமாள்மலை கிரிவலத்தின்போது ஓதும் பச்சை மாமலை போல் மேனி தோத்திரத்தில் உள்ள பச்சை நிறம் VIB G YOR என்ற நிறமாலையில் கவட்டையாக அமைவதுதானே ? இந்த கிரக சஞ்சார அமைப்புகளை தம்முடைய குடும்ப நலனுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும் பயன்படுத்த விரும்புபவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி மலர்களைப் போட்டு வைத்திருந்து அந்த தைல எண்ணெயால் ஆடிப்பூர அம்மன், துர்கை, விநாயகர் போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு வரும் ஆடி மாதத்தில் காப்பிட்டு வணங்குவதால் குடும்ப ஒற்றுமை பெருகும். நோய் நிவாரண சக்திகள் பெருகும். சிவப்பு நிறத்தில் அமையும் பூக்களே இந்த பூஜைக்கு ஏற்புடையது என்பதை கவனத்தில் கொள்ளவும். Champagne என்ற அயல்நாட்டு மது ஒன்றில் “குளித்த” ஒரு பக்தர் நம் சற்குருவைச் சந்தித்தபோது அவர் வீட்டில் விளைந்த செம்பருத்தி மலர்களை துர்கை தேவிக்கு காப்பிட்டு வணங்கி வரும்படி தெளிவுபடுத்திய நம் சற்குருவின் ஆலோசனையை ஏற்று அவர் அதை மனமார செயல்படுத்தியதால் அவர் குடும்பம் நன்னிலை அடைந்தது மட்டுமல்லாமல் அந்த தம்பதியர் நெடுங்காலமாக வேண்டிக் கொண்டிருந்த ஒரு பெண் சந்திதியையும் பெற்றனர் என்பதே இந்த வழிபாட்டின் மகத்துவமாகும். Pagne என்றால் இடுப்பு, மற்ற விஷயங்களை நீங்களே கோர்த்து மாலையாக்கிக் கொள்ளுங்கள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே இவ்வருடம் நோய்களினால் பாதிப்படையும் நிலை ஏற்படும் என்பதால் மேற்கூறிய குரு, சனீஸ்வரனுடன் இணையும் செவ்வாய் பகவானின் அனுகிரகம் இத்தகைய நிவாரண சக்திகளை அனைவருக்கும் அளிக்கவல்லது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் ரோக நிவர்த்தி இரகசியமாகும். குறைந்தது ஒரு மண்டல காலத்திற்காவது தம்பதி சகிதமாக இந்த பூஜையை துர்கை காயத்ரீ மந்திரங்களை ஓதியோ, நோய் நிவாரண அஷ்டக மந்திரங்களையோ திருநீற்றுப் பதிகத்தையோ ஓதி நிறைவேற்றுதல் நலம். கணவன், மகன், மகள் போன்று அனைவரிடமும் இருக்கும் தீய வழக்கங்களையும் இத்தகைய பிரார்த்தனைகள் நீக்கும் என்பதில் ஐயமில்லை.

பெருமாள்மலை

பரீட்சித் மகாராஜாவின் மரணத்திற்குக் காரணமான நாகங்களை மாய்ப்பதற்காக ஜனமேஜயன் ஒரு அபிசார வேள்வியை நிறைவேற்றியபோது அதில் கோடிக் கணக்கான நாகங்கள் விழுந்து மாண்டன. மைல் கணக்கில் நீளமாக இருந்த நாகங்கள் கூட மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு சுருங்கி அந்த வேள்வி குண்டத்தில் விழுந்தன. ஆனால், நாமோ இன்று கண்ணுக்கே தெரியாத தொற்று நோய்க் கிருமிகளை நினைத்து பயந்து ஒவ்வொரு விநாடியுமே மாள்கிறோம் என்றால் நம்முடைய மூதாதையர்களை மதிக்காதது யாருடைய தவறு ? நாம் ஔபாசனம், சந்தியா வந்தனம், திருத்தல வழிபாடு போன்றவற்றை முறையாக அனுசரித்து வந்தாலே போதுமே ? எந்த நோய் நொடிகளும் நம்மை நிச்சயம் அண்டாது. அனைவரும் தாய்மொழி அல்லாத ஒரு அன்னிய மாநிலத்து மொழியையும் அத்துடன் ஒரு அன்னிய தேசத்து மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம் சற்குருவின் விருப்பம். சற்குருவின் விருப்பத்தை நிறைவேற்ற இந்த சார்வரி ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைகிறது. சற்குருவின் இந்த விருப்பத்திற்கு பின்னணியாக அமையும் சூழ்நிலை நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு சாதனமாகும். ஒருவர் தன் குடும்பத்திலுள்ள மனைவி, மக்கள், அண்ணன், தம்பிகளை நேசிக்கத் தயாராக இருந்தாலும் தன் குடும்பத்தினர் அல்லாது பின்னால் ஏற்படும் மருமகள், மருமகன் போன்ற “அன்னிய” உறவுகளை அந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இது ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு கேட்டுக் கொள்ள வேண்டிய உண்மை ஆகும். இதை உணர்ந்த சித்த பெருமக்கள் மக்களின் இந்த இயலாமையை சீரமைப்பதற்காகவே அன்னிய மொழிகளைக் கற்றுக் கொள்ளும்படி சிபாரிசு செய்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடும் பக்தர்கள் பிற மக்களின் கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் நாளடைவில் ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா ? மற்ற கலாச்சாரங்களில் உள்ள தவறுகளை பக்தர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் என்ன செய்வது என்ற உங்கள் சந்தேகம் இங்கு தோன்றுவதற்கு இடமேயில்லை. காரணம் உங்களுடைய செய்கை குருவருளால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தெய்வீக சேவையாக, சற்குருவின் வழிகாட்டுதலின்படி அமைவதால் நீங்கள் தெய்வீகத்தில் தொடர்ந்து முன்னேறுவீர்களே அல்லாது எக்காலத்தும் தவறான பாதையில் செல்ல மாட்டீர்கள் என்பது உறுதி.

பெருமாள்மலை

சற்குரு அருளிய 32 பதிகங்களை நம்பிக்கையுடன் ஒருவர் தொடர்ந்து ஓதி வருவதால் முந்தைய தவறான செய்கைகளிலிருந்து நிவாரணம் பெற முடியுமா என்று ஒரு அன்பர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு உரிய பதிலை அறிந்து கொள்ள வேண்டுமானால் கர்மா பாக்கி என்ற இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசியம். இது சித்தர்களுக்கு, குருநாதர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்றாலும் சற்குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கனியும்போது இது அடிமையான சீடர்களுக்கும் தெரிய வரும். சென்ற பிறவியில் ஒருவர் கன்னத்தில் அறைந்து விட்டால் இந்த பிறவியில் அவரிடமிருந்து அடி வாங்க வேண்டிய பாக்கி தொடரும். புதிதாக ஒருவர் இப்பிறவியில் ஒருவரை கன்னத்தில் அறைந்தால் அவர் அறைதல் என்ற கர்மத்தை உருவாக்குகிறார் என்று பொருள். உடல் ரீதியான இந்த கர்மத்தை எவராலும் சரி செய்ய முடியாது என்பதே ஆன்மீகம் தெளிவுபடுத்தும் உண்மை, நியாயமும் கூட. தேவாரப் பதிகம் ஓதுதல், அன்னதானம், இறை வழிபாடு என்ற சற்குரு அருளிய அனைத்து நற்காரியங்களுமே இந்த கர்ம பாக்கியை தெளிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், எப்போது ? ஒரு நாள், ஒரு வருடம் அல்லது ஆயிரம் பிறவிகள் கூட இந்த நம்பிக்கை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும். இது அந்த அடியாரின் நம்பிக்கை, கர்ம வினையின் ஆழத்தைப் பொறுத்ததே தவிர, சற்குருவின் சக்தி என்ற ஒன்று இங்கு கிடையாது. லட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு சர்வாதிகாரி எந்த தவறுமே செய்யாதவன், தன் இன மக்கள் அடைந்த வேதனையைத் துடைத்தான் அவ்வளவே என்பார் நம் சற்குரு. அந்த சர்வாதிகாரி யார் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த கர்ம பாக்கியைப் பற்றிய தெளிவான அறிவை நீங்கள் பெற்று விட்டதாக அர்த்தம். நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் ... என்பது சித்தர்கள் கொள்கை. ஆனால், சித்தர்கள் கூறும் “நடுவில் நிற்கும்” அந்தப் பொருளைப் பற்றி அறிந்து கொள்வது என்பது கடினமோ கடினம். கர்ணன் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் கர்ணனின் குருநாதர் பரசுராமர். அந்த நேரத்தில் வண்டு ஒன்று கர்ணனின் தொடையைக் கடித்து அவன் தொடையைத் துளையிட ஆரம்பித்தது. கர்ணணின் தொடையிலிருந்து இரத்தம் ஆறாக ஓட ஆரம்பித்தது. தன் குருவின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த வண்டு கடித்த வேதனை அனைத்தையும் பொறுத்துக் கொண்டான் கர்ணன்.

பெருமாள்மலை

ஆனால், கர்ணணின் தொடையிலிருந்து வழிந்த இரத்தத்தின் ஸ்பரிசத்தால் தூக்கம் கலைந்து எழுந்த பரசுராமர் தன்னுடைய சீடன் தன்னுடைய தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு வண்டு தொடையை துளையிடும் வேதனையைக் கூட பொறுத்துக் கொண்டான் என்று பாராட்டுவதை விட இந்த அளவிற்கு வேதனையை ஒரு மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் அவன் நிச்சயமாக சத்திரிய இனத்தைச் சேர்ந்த ஒருவனால் மட்டும்தான் இயலும் என்பதால் கர்ணன் பொய் கூறியதற்காக ஒரு சாபமிட்டார். இதுவே அரிதிலும் அரிய சற்குருநாதர் ஒருவருடைய நடுநிலையான செய்கை. அதனால்தான் சற்குருவும் இறைவனும் வேறு வேறு கிடையாது என்று நாம் கூறுவது.

கனிந்த கனியின் மடங்கிய சுக்ர விரலைப் பற்றி பேசத் தொடங்கினால் அதைப் பற்றிக் கூறுவதற்கு ஒரு வருட காலம் ஆகும் என்பார் நம் சற்குரு. அப்படியானால் எழுச்சியுடன் திகழும் மற்ற விரல்களைப் பற்றி விளக்க எத்தனை யுகங்கள் ஆகும் ? கனிந்த கனி புகட்டும் முழுச் சுவையை ஒரு சாதாரண மானிடன் அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு எத்தனை ஜன்மங்கள் ஆகுமோ ? ஒரு முறை வெள்ளைக்கார துரை ஒருவர் நம் கனிந்த கனியைச் சந்தித்து தன்னுடைய குறையைப் பற்றிக் கூறினார். அவருக்கும் குறையா ? ஆமாம், கிட்டத்தட்ட நூறு பணியாட்கள் அவருடைய உத்தரவிற்காக காத்திருக்கும் தனவந்தரான அவருக்கும் ஒரு மனக் குறை இருக்கத்தான் செய்தது. அவருடைய வம்சம் விருத்தி ஆகாததே அவர் மனம் விட்டு யாரிடமும் சொல்ல முடியாத ஒரு பெரிய குறை. அவருடைய மனக் குமுறல்கள் அனைத்தையும் பொறுமையாக கேட்ட கனிந்த கனி, “இது ஒரு சாதாரண விஷயம்தான். நான் உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன். எனக்கு உன்னால் இட்லி தயாரித்து வழங்க முடியுமா?” என்று கேட்டார். ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்காரர்களைப் பெற்ற அந்த துரை ஒரு உத்தமருக்கு இட்லி தயாரித்து அளிக்க முடியாதா என்ன ? ஆனால், அந்த துரையின் மனைவியே மாவாட்டி இட்லி தயாரித்து வழங்க வேண்டும் என்பதே கனிந்த கனியின் அன்புக் கட்டளை. சிறிதும் தயங்காமல் அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டார் துரை. அப்புறம் என்ன, ஆட்டுக்கல், அம்மி என ஆர்டர்கள் பறக்க அந்த துரையும் அவர் மனைவியுமே இட்லி, சட்னி என்ற அனைத்தையுமே ஆட்டுக்கல், அம்மியில் அரைத்து வைத்து தங்கள் இதய தெய்வத்திற்கு பரிமாறினர். கனிந்த கனியும் அந்த இட்லிகளை சுவைத்து உண்டு விட்டு அந்த துரையையும் அவர் மனைவியையும் மனமார வாழ்த்தி விட்டு மறைந்து விட்டார். சில மாதங்கள் ஆயின. கனிந்த கனிக்கு சுவையான இட்லியைத் தயாரித்து அளித்த அந்த துரை குடும்பத்தினர் முதன் முறையாக இட்லி, தேங்காய் சட்னி எப்படி இருக்கும் என்று சுவைத்துப் பார்க்கவே அது அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அன்று முதல் தினமும் ஒரு வேளையாவது அவர்கள் இட்லியையும் ஒரு உணவாக தங்கள் தினப்படி திட்டத்தில் வைத்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல் தினமும் மாவாட்டி சட்னியை அம்மிக் கல்லில் அரைக்கும் பணியையும் அந்த துரையின் மனைவி ஏற்றுக் கொள்ளவே இதற்கு துணையாக அந்த துரையும் உதவி செய்தார். இந்த அன்யோன்ய அன்பு பரிமாற்றத்தால் அவர்களுக்கு அடுத்த வருடமே ஒரு செல்லக் குழந்தை தோன்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? இது சாம்பேன் என்ற மதுவால் தோன்றிய வினையைக் களைந்த சாம்பியனின் மகிமையா இல்லை இட்லிக்கு துணையாக நின்ற உளுந்து என்ற ராகுவின் சக்தியால் விளைந்த 'பேன்' பகுதியைக் காத்த சற்குருவின் செயல்பாடா ? அதை கனிந்த கனியைப் போன்ற சித்தர்களே நவில இயலும்.

கிழக்கே இரண்டு
மேற்கே ஒன்று

கிழக்கே இரண்டு பஜகோவிந்தம் மேற்கே ஒன்று பஜகோவிந்தம் என்பது திருவரங்கத்தில் ஸ்ரீரெங்கநாதர் பள்ளி கொள்ளும் அழகை நம் சற்குரு வர்ணிப்பதாக தோன்றினாலும் சற்றே கூர்ந்து கவனித்தால் திருமாலின் பாதாதி கேச தரிசனம் பற்றிய புகழ் மாலையே இது என்பது தெரிய வரும். ஆனால், நடைமுறையில் என்னதான் ஜாக்கிரதையாக நாம் கட்டண வரிசையில் இறை தரிசனத்திற்காக நின்றாலும் ஜன நெரிசல், கும்பல் போன்ற காரணங்களால் இவ்வாறு சுவாமியின் பாதாதி கேச தரிசனத்தை நாம் பெற முடிவதில்லை. இதை அறியாதவர்களா மகான்களும் சித்தர்களும். எனவே இத்தகைய தரிசனங்களுக்கு முன்போ பின்போ கனிந்த கனியின் சந்திரோதய குருகர தரிசனத்தை மனக் கண் முன் கொண்டு தரிசனம் செய்தலால் பெருமாளின் தரிசனப் பலன்களை முறையாக பெற முடியும் என்பதே கனிந்த கனியின் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

தேய்பிறை அஷ்டமி திதி தினங்களில் பெருமாள் மலையை கிரிவலம் வந்து வணங்குவதாலும் உறையூர், திருத்தவத்துறை, திருஅண்ணாமலை, திருப்பதி போன்ற பல திருத்தலங்களை முறையாக தரிசனம் செய்யாமல் போவதால் ஏற்படும் அனுகிரக குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பதே நாம் பெற்ற இறை வரப் பிரசாதமாகும். ஒரு முறை திருஅண்ணாமலை பௌர்ணமி அன்னதானத்திற்காக காய்கறிகளை வாங்க அடியார்களை அனுப்பியபோது ஒரு அடியார், “வாத்யாரே, 300 கிலோ தக்காளி வாங்கச் சொல்கிறீர்களே, இப்போது தக்காளி விலை கிலோ நூறு ரூபாய் என்று சொல்கிறார்களே ...,” என்றபோது நம் சற்குரு சற்றும் தயங்காது, “சார், அன்னதானத்திற்கான மெனுவை அடியேன் தயாரிப்பது கிடையாது, அது அடியேனுடைய குருநாதன் இடியாப்ப சித்தனின் விருப்பம். அவர் இந்த பௌர்ணமிக்கு தக்காளி பிரிஞ்சிதான் அன்னதானம் என்று சொல்லி விட்டால் தக்காளி கிலோ ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை மாற்ற அடியேனுக்கு அதிகாரம் கிடையாது,” என்று அடிமையான பக்தனின் செயல்பாட்டை விவரித்தார்கள் நம் சற்குரு. இது இப்படி இருக்க ஒரு முறை ஸ்ரீரங்க ரெங்கநாதரை தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்றபோது கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய நம் சற்குரு மறுத்து விட்டார். அப்போது கட்டணம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. சுவாமியை கட்டணம் கொடுத்து தரிசனம் செய்வது என்பது அடியேனுக்கு ஏற்புடையது கிடையாது, கட்டணமில்லாமல் பெறும் தரிசனத்திற்காக அடியேன் பத்து மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டுமானாலும் அதற்காக அடியேன் தயங்குவது கிடையாது,” என்று தெளிவுபடுத்தினார் நம் சற்குரு. இதுவே நாம் ஒவ்வொரு ரூபாயையும் முறைப்படி செலவு செய்யும் லட்சுமி கடாட்ச சித்த இரகசியமாகும். இந்த இரகசியத்தை தெளிவுபடுத்துவதும் பெருமாள் மலை தேய்பிறை அஷ்டமி கிரிவலப் பலன்களில் ஒன்றாகும்.

நேர்கோட்டில் பிரகாசிக்கும்
இந்த ஒளிக் கற்றைகள் பெருமாளின்
பாத தரிசனம் பெற்று திரும்பிச்
செல்வதே பெருமாள்மலையின்
மகாத்மியமாகும்

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கூர்ந்து கவனித்தால் இது பெருமாளின் வதனத்தில் திகழும் நாமத்தைப் போல் ஜொலிக்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் உயரம் 240 அடி, அகலம் 166 அடி, கோபுர நுனியின் உயரம் 98 அடி. கிழக்கு மேற்காக அமைந்த இந்த ராஜ கோபுரமானது பிரதான கிழக்கு திசையிலிருந்து சற்றே நகர்ந்து இருக்கும். கோபுரங்களோ, மூல விக்ரஹங்களோ இவ்வாறு உய்யக் கொண்டான்மலை போன்ற பல திருத்தலங்களிலும் நகர்ந்து இருப்பற்கு மனித அறிவிற்கு அப்பாற்பட்ட பல தெய்வீக இரகசியங்கள் பொதிந்துள்ளதால் அந்த தெய்வீக இரகசியங்கள் அனைத்தையும் மக்கள் காலம் தூரம் என்ற பாகுபாட்டைக் கடந்து நின்றால் தெரிந்து கொள்ள முடியும், புரிந்து பயன்பெற முடியும் என்பதே சித்தர்கள் தெளிவுபடுத்தும் உண்மை. இந்த சித்த பொக்கிஷங்கள் மனித ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் இந்த கோபுரங்கள் சுட்டிக் காட்டும் உண்மைகளை மக்கள் அனைவரும் தாராளமாக பயன்படுத்தி அருள்பெறலாம் என்பதே நமக்கு ஆறுதல் அளிக்கும் இனிப்பான செய்தியாகும். இம்முறையில் மேற்கண்ட ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைப்பின் பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக இரகசியங்களை நாம் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் அந்த இரகசியங்களை மக்களுக்கும் பக்தர்களுக்கும் விடுவித்து அருள் சுரக்க எழுந்தருளியதே நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள 12 பித்ரு படிக்கட்டுகளாகும். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தைப் போல வானத்தில் இருந்து நோக்கும்போது திருமாலின் நாம தோற்றத்தைக் கொண்டதே இந்த பித்ரு படிக்கட்டுகளாகும். பித்ருக்களின் நாயகரான பெருமாளுக்கு உகந்த படிகள் பித்ருக்களுக்கு உகந்த 12 எண்ணிக்கையில் அமைந்து இருப்பது எத்தகைய சிறப்பு ? நம்மாழ்வார் ஆதியாக மதுரகவி ஈறாக 12 ஆழ்வார்களும் தினமுமே ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நீராடி ஸ்ரீரெங்கநாதரை தரிசனம் செய்தபின் இந்த 12 பித்ரு படிக்கட்டுகளிலும் பூஜை நிகழ்த்துகிறார்கள் என்பதே நம்மை மெய்மறக்க வைக்கும் இறை அனுபூதியாகும். ஆழ்வார்களின் ஆராதனைக்கான காரணம் யாதோ ? திருஅண்ணாமலையாரை தரிசனம் செய்யும் ஸ்ரீரெங்கநாதரை துதிக்கும் 12 ஆழ்வார்களின் பலனும் நாம வடிவில் திகழும் சிவ சக்தி ஐக்யத்தில் பதிந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீரெங்கநாதர் பிரசாதமாக, சிவ சக்தி ஐக்ய சொரூப சக்திகளாக அளிக்கப்படுகின்றன. இந்த தெய்வீகப் பரிசை விட வேறு ஒரு சிறந்த பரிசை எந்த பக்தராவது பெற முடியுமா என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். சிவதீட்சை பெறுபவர்களுக்கு முதலில் ஒரு ருத்ராட்சமே அளிக்கப்படும். இந்த ருத்ராட்சத்தை சிவலிங்கமாக பாவித்து அதற்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி இறை பக்தியை அருஉருவமாக வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் சற்குருமார்களின் ஏற்பாடே இது. அதேபோல பெருமாள்மலையில் திகழும் செந்தாமரைக்கிரண மூலிகை வித்தை தக்க காணிக்கையை உண்டியலில் செலுத்திய பின்னர் தங்கள் இல்லத்திற்கு எடுத்து வந்து அதைப் பெருமாளின் பாதங்கள் சுட்டும் அனுகிரகமாக வழிபடுவதும் உன்னத பக்தி மார்கமே.

பெருமாள்மலை

தெய்வீக சக்தியின் உச்ச கட்டமாக திகழும் இந்த மூன்று சக்திகளையும் எவரேனும் தினமுமே பெற முடியுமா ? திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனம், ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் இவற்றை எவரேனும் தொட்டுப் பார்த்தல் என்பது கனவினும் நிகழக் கூடிய காரியமா ? திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் உள்ள பித்ரு படிகளை தொட்டுப் பார்த்தல் என்பது ஒரு சிலருக்கே சாத்தியம் என்றாலும் இதுவும் தினமும் நிகழ்த்தக் கூடிய ஒரு பூஜையாகுமா ? இதற்காக சித்தர்கள் அளிக்கும் வழிபாட்டு முறையே பித்ரு படிக்கட்டுகள் பூஜையாகும். மேற்கூறிய 240, 166, 98 (அடி, சென்டிமீட்டர், மில்லிமீட்டர்) என்ற அளவுகளில் அமைந்த பித்ரு படிக்கட்டுகளை தங்கம், வெள்ளி, தேக்கு, வேம்பு, மா, பலா என்று அவரவர் பொருளாதார சூழ்நிலைக்கு ஒத்துவரக் கூடிய முறையில் தயாரித்து இந்த பித்ரு படிகட்டுகளுக்கு தினமும் உரிய வழிபாடுகளை நிறைவேற்றுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பாகும். பாலின் அமிர்த சக்தி அமோகம். அந்த அமிர்த சக்திகளை மேலும் பெருக்கவே நாம் சூடான பசும்பாலில் குங்குமப்பூ, டைமண்ட் கல்கண்டு போன்றவற்றை சேர்த்து, வெள்ளி டம்ளரில் ஊற்றி சுவாமிக்கு நைவேத்யம் செய்து பின்னர் அந்த இறை பிரசாதத்தை அருந்துகிறோம். சாதாரண இந்த நைவைத்தியத்தின் பலனையே வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்றால் சபரிமலையின் 18 படிகளுக்கு வெள்ளிக் கவசமிட்டு அந்தப் படிகளை மிதித்து ஏறிச் சென்று ஸ்ரீஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதால் கிட்டும் பலனை எப்படி வர்ணிக்க முடியும் ? அது போன்றதே இவ்வாறு கோடிக் கணக்கான திருஅண்ணாமலை கிரிவல பக்தர்கள் படியேறி பிரசாதம் பெற்ற அன்னதான பித்ரு படிகளுக்கு, ஸ்ரீரெங்கநாதர் திருநாமத்திற்கு வெள்ளை சிவப்பு வண்ணத்திலான சலவைக் கல் படிகள் அமைத்தலாகும். இது பெருமாளின் திருநாமத்தை அலங்கரிக்கும் ஒரு சேவை மாத்திரம் அல்ல, நம் ஆருயிர் சற்குருவின் கனவை நனவாக்கும் தெய்வீக சேவையும் ஆகும். பொன் மனச் செம்மல்களாக துலங்கும் நம் அடியார்கள் எவர் வேண்டுமானாலும் உரிய அனுமதியுடன் சற்குருவின் இந்த கனவை நனவாக்கலாம். திருமாலின் நாமத்தின் இருமருங்கிலும் வெள்ளை சலவைக் கற்களையும், நடுவில் சிவப்பு சலவைக் கற்களையும் பதித்தல் வேண்டும்.

பெருமாள்மலை

மேற்கூறிய முறையில் உலோகத்தில், கட்டையில் பித்ரு படிக்கட்டுகளைச் செய்பவர்கள் இவ்வாறு திருமாலின் நாமத்தை பிரதிபலிக்கும் வண்ணம் படிக்கட்டுகளுக்கு வண்ணப் பூச்சு நிறைவேற்றுதல் நலம். செவ்வாய் பகவான் உச்சம் பெற்றும், சந்திர பகவான் கால சர்ப்ப யோகத்திலிருந்து மீண்டும் அருள்வதால் சிறப்பாக இந்த சார்வரி வருடம் இத்தகைய பித்ரு படிகள் நிர்மாணத்திற்கும் பித்ரு படிகள் பூஜைகள் நிறைவேற்றுவதற்கும் சிறப்படைகிறது. அவரவர் இல்லங்களில் இத்தகைய பித்ரு படிக்கட்டுகளை வைத்து வழிபடுபவர்கள் எம்முறையிலும் வழிபடுவது ஏற்புடையது என்றாலும் சமூகத்திற்கு நலம் தரும் பூஜையாக இதை நிறைவேற்ற விரும்புபவர்கள் நாமத்தின் இரு மருங்கிலும் வெண்ணிற விபூதியையும், நடுவில் குங்குமத்தையும் பூசி அலங்கரித்து வழிபட்டு பின்னர் இந்த விபூதி குங்குமத்தை சற்குருவின் பிரசாதமாக அனைத்து காவிரி, கங்கை போன்ற புனித நதி நீரோட்டங்களில் சேர்த்து விடுதல் சிறப்பாகும். ஒரு செப்பு, வெள்ளி பாத்திரத்தில் சுத்தமான நீரில் சிறிதளவு துளசி அல்லது வில்வம் சேர்த்து அத்துடன் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து இந்த பித்ரு படிக்கட்டுகளுக்கு அபிஷேகித்து அந்த பிரசாத தீர்த்தத்தை தம்பதிகள், குடும்பத்தினர் அருந்தி வருவதால் கிட்டும் பலன்கள் அமோகம். தீர்த்த அபிஷேகத்திற்குப் பின் விபூதி குங்குமக் காப்பு இட வேண்டும். கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, தாமிரபரணி, துங்கபத்ரா, பிரம்மபுத்திரா, காயத்ரீ, பல்குனி என்ற 12 புண்ணிய நதி தேவதைகள் இந்த பித்ரு படிக்கட்டுகளில் தங்கி மேற்கூறிய தீர்த்த அபிஷேகத்தை ஏற்று ஆசீர்வதிக்கிறார்கள் என்பதே இந்த அபிஷேக பின்னணியில் திகழும் அந்தர்யாமி ஆச்சர்யமாகும். ஏற்கனவே இத்தகைய பித்ரு படிக்கட்டுகளை பூஜித்து வருவோரும் புதிதாக பித்ரு படிக்கட்டுகளை தயாரித்து பெற்றுக் கொண்டவர்களும் வளர்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி திதி நாட்களில் தங்கள் பித்ரு படிக்கட்டுகளை பிறர் கண் படாதவாறு ஒரு மஞ்சள் பருத்தித் துணியில் முடிந்து திருஅண்ணாமலை, பெருமாள் மலை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் (பஞ்சபிரகாரம்) போன்ற திருத்தலங்களில் வலம் வந்து தங்கள் இல்லங்களில் இறை சக்திகளை நாட்டிக் கொள்தல் நலம், நலமே. இவ்வாறு இறை சக்தியை எழுந்தருளச் செய்தாலும் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் அல்லவா ? தொடர்ந்து முன்னேறி நாம் இந்த பித்ரு படிக்கட்டு பூஜை ஒன்றை மட்டுமே முறையாக நிறைவேற்றி வந்தாலே “குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி ...” என்ற திசை பற்றிய இரகசியங்களை விடுவிப்பதாக ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் பாடியதன் பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீவாத்யார் ஐயா ஜீவசமாதி
சிங்கம்புனரி

இவ்வாறு கிழக்கே இரண்டு பாதங்களை பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்தும் அதன் பலனை பெற முடியாமல் தவித்தார் சூர்ய பகவான். ஆம், மங்கள சாசனம் செய்யப்பட்ட முதல் திருத்தலமாக விளங்கினாலும் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீரெங்கநாதரை சூரிய பகவானால் தரிசனம் செய்ய முடியவில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆனால், புல் பூண்டிற்கும் கூட செவி சாய்க்கும் சித்தர்கள் சூரிய பகவானின் இந்த வேண்டுகோளை நிறைவேற்ற மாட்டார்களா, அதற்கு உரிய காலத்தை எதிர் நோக்கி இருந்தார்கள். ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் இவ்வாறு கிழக்கே இரண்டு திருப்பாதங்களை வைத்து ஸ்ரீரெங்கநாதர் சற்குருவாக, பித்ருநாயகனாக தென்திசை நோக்கி, ஸ்ரீஅருணாசல ஈசனை நோக்கி எழுந்தருளியபோது பெருமாளை தரிசனம் செய்த முதல் அடியார் யார் தெரியுமா ? உங்கள் ஊகம் சரியே, சாட்சாத் சூரிய பகவான்தான் தன்னுடைய பொற்கிரணங்களால் பெருமாள் ஸ்ரீரெங்கநாதர் மூர்த்தியின் பாதக் கமலங்களைத் தழுவி பேரானந்தம் அடைந்தார் என்பதை இந்த திவ்ய காட்சியை உடனிருந்து அனுபவித்த ஆஸ்ரம அடியார்கள் இன்றும் நினைவு கூர்வர். மேள தாளம், ஜேங்கொண்டங்கள், சங்கநாதம், தமிழ் வடமொழி வேத முழக்கத்துடன் ஸ்ரீரெங்கநாதர் திருச்சன்னதிக்கு எழுந்தருளிய இனிய காட்சி நெஞ்சை விட்டு அகலக் கூடியதா என்ன ? இவ்வாறு பெருமாளின் பாதக் கமலங்களை தரிசனம் செய்ய சூரிய பகவானுக்கு வழி வகை செய்தது மட்டும் நம் சற்குருவின் சாதனை அல்ல சாட்சாத் பெருமாளின் வேண்டுகோளையே நிறைவேற்றினார் நம் சற்குரு என்பது பலரும் அறியாத இரகசியம் ஆகும். தற்போது நம் ஆஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீரெங்கநாதர் நம் சற்குருவின் மூதாதையார்களால் அதாவது சற்குருவின் தாத்தா ஸ்ரீகேசவசந்திரசேனர், தாயார் ஸ்ரீமுத்து மீனாட்சி போன்ற எண்ணற்றவர்களால் சுமார் 300 வருடங்களுக்கு மேல் பூஜிக்கப்பட்டவரே. அனைவரிடமும் தான் திருஅண்ணாமலையாரின் காட்சியைப் பெற வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துக் கொண்டேதான் இருந்தார் பெருமாள். ஆனால், நம் சற்குருவே பெருமாளின் வேண்டுகோளை நிறைவேற்றி உத்தம பெருமாள் சேவை புரியும் பாக்கியம் பெற்றார், இல்லை நம் சற்குருவின் அனுகிரகத்தால் அடியார்கள் அனைவரும் திருஅண்ணாமலையாரின் அனுகிரகத்தை நிரந்தரமாகப் பெறும் அனுகிரகத்தைப் பெற்றோமா ? அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதாக இவ்வுலகத்தில் வாழும் அடியார்கள் அனைவரும் செல்வச் சிறப்புடன் வாழ பெருங் கருண புரிந்தவரே நம் சற்குரு என்பதை நிரூபிக்கும் முகமாக பித்ரு படிகள் இரு புறமும் தூக்கிய தும்பிக்கையுடைய யானைச் சிலைகளை வைக்குமாறு அறிவுறுத்தியதும் நம் சற்குருவின் கருணை முழக்கமே.

பெருமாள்மலை

சிவ சக்தி ஐக்ய தரிசனம் எதிரே அமைந்துள்ள நம் ஆஸ்ரமமானது ஸ்ரீலட்சுமி தேவிக்குரிய யானை வாகனத்துடன் துலங்கினால்தான் லட்சுமி கடாட்ச சக்திகள் பூர்ணமடையும் என்பதை அறியாதவரா என்ன நம் சற்குரு ? ஞானத்தராசு என்றால் என்ன ? பாக்கு என்பதற்கு சித்தர்கள் அளிக்கும் குறிச்சொல்லே ஞானத்தராசு என்பதாகும். படிக்கட்டு பூஜையின் நிறைவாக சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும்போது அதில் கட்டாயம் இந்த ஞானத்தராசு மூலிகை (12=3x2=ஞானத்தராசு) இடம் பெற வேண்டும். மூன்று வெற்றிலை, இரண்டு இலைப்பாக்கு (தெக்கம்பாக்கு), சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அளிப்பதே தாம்பூல பிரசாதமாகும். இரண்டு இலைப் பாக்குகள் தராசு தட்டுகள் போல் செயல்படுவதே இந்த மூலிகையின் சிறப்பம்சமாகும். வலம் இடம் செல்லாது சூரியனை நோக்கி நேரே வளர்வதும் ஞானத்தராசு மூலிகையின் சிறப்பே. வெள்ளிக்கிழமைகளில் மற்ற ஏதாவது உணவுடன் இந்த தாம்பூல பிரசாதத்தையும் சிவ சக்தி ஐக்ய தரிசனப் பகுதியிலோ அல்லது தங்கள் ஊரில் ஏதாவது திருத்தலங்களிலோ இத்தகைய தானங்களை அளிப்பது சிறப்பாகும். குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் பல் கூச்சம், சொத்தை போன்று வாயில் தோன்றும் பலவிதமான வியாதிகளுக்கும் நிவாரணம் அளிப்பது. தொடர்ந்த இத்தகைய தானத்தால் குழந்தைகள், கணவன், மனைவி இவர்கள் பொய் சொல்லி குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது தவிர்க்கப்படும்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பல அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது போல் இதன் பின்னணியில் அமைந்துள்ள இரகசியங்களும் பல படித்தரங்களில் அமைந்துள்ளன என்பதே ஸ்ரீரங்கம் திருக்கோயில் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். இது நம் பாரத பூமியில் அமைந்துள்ள அனைத்து கோயில் கோபுரங்களும் சுட்டிக் காட்டும் இரகசியம் ஆகும். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கலசப் பகுதி சுமார் 100 அடி நீளம் உடையது, இந்த அளவின் பொற்விகிதமாக அமைந்ததே இதன் அடிப்பகுதியாகும். இந்த அடிப்பகுதியில் பாதியைக் கூட்ட கிடைப்பதே ராஜகோபுரத்தின் உயரமாகும். இந்த அமைப்பு முறையே நம் ஆஸ்ரம பித்ரு படிக்கட்டுகள் அமைப்பிலும் பதிந்துள்ளது என்பதே நம் சற்குரு தெளிவிக்கும் இரகசியமாகும். இந்த படிக்கட்டுகளை அமைத்ததே ஒரு பெரிய விந்தை என்றால் இந்த விந்தையை, வித்தையை பிரபஞ்ச பக்தர்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தும் முறையை அள்ளித் தந்த நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ? இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவாளியாக ஐன்ஸ்டீன் விஞ்ஞானி புகழப்படுகிறார். மனித சமுதாயம் தோன்றிய முதலே எழுந்தருளிய மிகப் பெரிய அறிவாளியே நம் சற்குரு என்ற பேருண்மை நம் சற்குரு இந்த ராஜகோபுர இரகசியங்களை திருஅண்ணாமலை அன்னதானத்திற்காக பயன்படுத்திய விதமே இதற்குச் சான்றாக அமைகின்றது. இப்போது சற்குரு நிகழ்த்திய அன்னதான வைபவங்களை உடனிருந்து தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோர் அந்த காட்சியை நினைவு கூர்ந்து அதை மனக் கண் முன் கொண்டு வந்து பாருங்கள்.

அபய மண்டபம் வரை நீண்டு நிற்கும் அன்னதான அடியார்கள் வரிசை ஆஸ்ரமத்தை நோக்கி நகர்ந்து வரும். நம் ஆஸ்ரம பித்ரு படிக்கட்டுகள் மேல் நடுநாயகமாக பிரிஞ்சி அண்டா சூடான பிரியாணி பிரசாதத்துடன் நிறைந்திருக்கும். வரிசையில் வரும் அடியார்கள் பித்ரு படிக்கட்டுகளில் ஏறி பிரசாதத்தை பெற்றுக் கொள்வர். அவ்வாறு அன்னதானம் பெறும் அடியார் வேறு வழியில் சென்று விடாது இருக்க அருகிலேயே ஒரு அடியார் அவரை சற்றும் தாமதிக்காது மறு முனைக்கு சென்று இறங்கி விடுமாறு பணிப்பார். அன்னதானம் வாங்கும் அடியார்களோ, “ஏன், இவ்வளவு சுவையான அன்னதான பிரசாதம் அளிக்கும் இவர்கள் நம்மை இந்த விரட்டு விரடுகிறார்கள் ...”, என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த அடியார் பிரசாதம் வாங்கிய பின்னர் பித்ரு படிக்கட்டுகளின் மறுமுனைக்குச் சென்று இறங்கினால்தான் “golden triangle” என்ற அளவுகள் அப்போது முழுமை பெறும். இவ்வாறு அமைந்த தங்க முக்கோணத்தை பித்ருக்களின் நாயகரான ஸ்ரீரெங்கநாதரும் திருஉண்ணாமலை சமேத திருஅண்ணாமலையானும் ஆசீர்வதிக்கிறார்கள். இவ்வாறு தங்க விகிதத்திற்குள் தங்க முக்கோணமாக, அபராஞ்சித தங்கமாக அமையும் இந்த பிரசாதத்தின் மகிமையை மனித வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? இந்த பிரசாதத்தில் கிட்டும் ஒரே ஒரு சோற்றுப் பருக்கையால் இந்த உலகையே விலைக்கு வாங்கி விடலாம் என்றால் இவ்வாறு அண்டா அண்டாவாக பிரசாதம் அளித்த சற்குருவைப் பெற்ற அடியார்கள் கனவினும் கலங்கலாமா ? இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு படிக்கட்டுகளுக்கு வெறும் சலவைக் கற்களால் படி அமைத்தால் போதுமா ? பட்டினத்தார் போல் தங்கத்தால் படி அமைத்து அதில் மாணிக்கக் கற்களை பதிக்கலாம் அல்லவா ? ஆனால், சற்குரு விரும்புவதோ தங்கமான மனம் படைத்த அடியார்கள் மாணிக்கம் போன்ற குரு நம்பிக்கையை தங்கள் மனங்களில் பதித்தால் போதும் என்பதுதான் ?!

முப்பாதி இரகசியங்கள்

திருத்தல ராஜகோபுரங்களில் அமைந்த பல இரகசியங்களில் ஒன்றே இந்த முப்பாதி இரகசியங்கள் ஆகும். ஒரு கோபுரத்தின் அடிப் பகுதியின் பாதியைப் போல் மூன்று மடங்கு உயரம் உடைய கோபுரங்களே முப்பாதி இரகசியங்கள் கூடிய கோபுரங்கள் எனப்படும். இதனால் விளையும் பலன்களை சமுதாய நலனுக்காக பயன்படுத்திய பெருந்தகையே நம் சற்குரு ஆவார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் அமைந்த முப்பாதி அளவு 80 அடி அல்லவா ? இந்த முப்பாதியின் பெருக்கமாக எட்டு கோடி பேருக்கு அன்னதானம் மேற்கூறிய முறையில் முப்பாதி படிக்கட்டுகளில் இயற்றி அந்த பலன்களை சமுதாய மக்களுக்கு எல்லாம் அர்ப்பணித்தார். இந்த எட்டுக் கோடி என்ற எண்ணிக்கை நிறைவடைந்த போதுதான் மேற்கூறிய பித்ரு படிக்கட்டுகளில் நிறைவேறிய அன்னதான கைங்கர்யம் ஆஸ்ரமத்தின் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டது என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய அன்னதான இரகசியமாகும். இந்த முப்பாதி இரகசியங்களை தம் ஜாதகத்திலும் அமையப் பெற்றவரே நம் சற்குரு ஆவார். ஜாதகங்களில் அமையும் இத்தகைய முப்பாதி இரகசியங்கள் குடும்ப வாழ்வில் ஒற்றுமையை ஏற்படுத்தி, சமுதாயத்திற்கு முழுமையான பலன்களை நல்கி நிறைவாக இறைவனுடன் ஒன்றும் கருணையையும் அளிக்கும்.

கிரகண மண்டபம் பெருமாள்மலை

நம் சற்குருவின் ஜாதகத்தில் லக்னம் கடக லக்னமாக அமைய களத்திர ஸ்தான அதிபதி சனீஸ்வரன் ஆகிறார். களத்திரஸ்தான அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் அன்யோன்ய தாம்பத்ய உறவு ஏற்படும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொண்டால் ஜாதகர் தான் விரும்பியதை அடைவார், அதாவது மக்களுக்கு எல்லாம் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை நம் சற்குரு நிறைவேற்றினார். ஏழாமிட அதிபதியான சனீஸ்வரன் லக்னத்தில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், நவாம்சம் போன்ற அனைத்து ஜாதக பிரிவுகளிலும் சனீஸ்வர பகவான் நம் சற்குருவின் லக்ன கேந்திரத்தை நீங்காது நின்றதால் நம் சற்குருவின் அனைத்து காரியங்களும் மக்களுக்கு நன்மையையே அள்ளித் தருவதாக அமைய அந்த நற்காரியங்களில் எல்லாம் நம் சற்குருவின் தர்மபத்தினி துணை நிற்பதாகவும் அமைந்தது என்பதும் இந்த ஜாதகத்தின் சிறப்பாகும். லக்னாபதியான சந்திர பகவானை கேது பகவான் நேர் பார்வையில் நோக்குவதால் இறைவனுடன் ஒன்றும் பாக்கியத்தையும் நம் சற்குரு பெற்றார் என்பதும் நம்மை பிரமிக்க வைக்கும் முப்பாதி இரகசியங்கள் ஆகும். இத்தகைய முப்பாதி இரகசியங்களை சாதாரண மக்களும் பெற்று பலனடைவதற்காக சற்குருவால் அளிக்கப்பட்டதே இந்த முப்பாதி இரகசியங்கள் கூடிய பித்ரு படிக்கட்டுகள் என்ற இரகசியம் இப்போது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது அல்லவா ? வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதி நாட்களிலும், பௌர்ணமி அன்றும் திருஅண்ணாமலை, பெருமாள்மலை, திருவானைக்கோவில் பஞ்ச பிரகாரம் போன்ற திருத்தலங்களில் வலம் வந்து வணங்குவதால் இத்தகைய முப்பாதி இரகசியங்கள் தங்கள் ஜாதகங்களில் அமையப் பெறாத பக்தர்களும், சதா சச்சரவுடன் திகழும் குடும்ப உறவுகள் கொண்டோரும், தீய ஒழுக்கங்களுடன் வாழும் சந்தானங்களைப் பெற்றோரும் நலம் அடைவர். சற்குருவைப் பெறாத ஒரு அடியார் பெருமாள்மலையை தேய்பிறை அஷ்டமி திதிகளில் தொடர்ந்து வலம் வந்து கொண்டு இருந்தார். இதன் பலனாய் அவர் நல்ல முறையில் திருமணம் நிறைவேறி 18 குழந்தைகளைப் பெற்றெடுத்ததுடன் அந்த குழந்தைகளும் நலமாய் வாழ அவரும் ஒரு திருத்தலத்தில் பணி புரிந்து சற்குருவைப் பெறும் வழிகாட்டுதலும் பெற்றார் என்பதே இந்த முப்பாதியின் ஒரு பாதியால் அமையும் பலனாகும். ஒரு பாதி பலனே இவ்வளவு சிறப்புடையது என்றால் முப்பாதி பலன் எந்த அளவு சீரும் சிறப்புமாக இருக்கும் ? இதை கணித சூத்திரம் மூலம் விளக்குவதாக இருந்தால் அது, 3x8=24=2+4=6, 3x6=18 என்றவாறாக அமையும். மனித வாழ்வில் உயிரும் உடலுமாக இணைந்திருப்பவையே இந்த முப்பாதி இரகசியங்கள். ஒன்பது என்ற எண் முழுமையை, எல்லையை குறிப்பதால் இந்த முப்பாதி இரகசியங்களை ஆத்மவிசாரம் செய்தே ஒருவர் எல்லையற்ற இறைவனுடன் ஒன்ற முடியும் என்றால் அது மிகையில்லை. இதை அடிப்படையாக வைத்தே நம் முன்னோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று (15=1+5=6) என்றார்கள். என்னே நம் மூதாதையர் அறிவுத் திறன் ?

செந்தாமரைக்கிரணம் பெருமாள்மலை

வரும் 21.6.2020 ஞாயிற்றுக் கிழமை அன்று சூரிய கிரகணம் தோன்ற இருப்பதால் சக்தி வாய்ந்த இந்த சூரிய கிரகணத்தை நன்முறையில் தங்கள் குடும்ப நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் பயன்படுத்தும் நோக்கம் உள்ளவர்கள் இந்த கிரகண நாளுக்கு முன்பே ஏதாவது ஒரு நாள் இத்தகைய கிரகண தோற்றம் விதானத்தில் அமைந்துள்ள பெருமாள் மலையில் படிகள் ஏறிச் சென்று இந்த கிரகண சித்திரத்தையும் பின்னர் இறை மூர்த்திகளையும் தரிசனம் செய்தல் நலமாகும். ராகுவிற்கு உரிய வருடமாக இந்த சார்வரி வருடம் சக்தி கொள்வதால் இத்தகைய வழிபாடுகள் இந்த கிரகண விளைவுகளை நன்முறையில் தணிக்கும் தன்மை உடையன என்பது சொல்லாமலே விளங்கும். இந்த சூரிய கிரகணம் 21.6.2020 காலை 10.15 மணி முதல் மதியம் 1.45 மணி வரை அமைவதால் ஆறு, கோயில் திருக்குளங்கள், வேதாரண்யம் போன்ற கடற்கரைகளிலோ அல்லது இல்லங்களிலோ அமர்ந்து இறை கீர்த்தனைகளை நாமாவளிகளை ஓதுதல் நலம்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
நவகிரக சங்கம நாத நமசிவாய தேவ
அனுகிரக சூட்சும மாய தீமஹி
தந்நோ அதிதேவதா பிரத்யதி தேவதா சரணாகத ப்ரசோதயாத்
என்ற “மாய” காயத்ரீ மந்திரத்தை ஒதுவதும் ராகுவின் மாய விளைவுகளிலிருந்து மாற்றங்களை உருவாக்கும். உண்மையில் கிரகணம் என்பது மேலோட்டமாக ஒரு தருணத்தில் அமையும் ராகு என்ற பாம்பின் பிடி என்று கொண்டாலும் ஒவ்வொரு நொடியும் அதிலும் கடுமையாக இந்த வருடம் முழுவதுமே ராகுவின் மாயையில் உழல்வதால் இந்த “மாய” காயத்ரீ மந்திரத்தை எந்நேரமும் எல்லா இடங்களிலும் ஓதி வரலாம் என்பதும் நம் சற்குரு நமக்களித்த வரப்பிரசாதமாகும். தொடர்ந்து இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஓதி வருவதால் ராகு என்பது பாம்பா, அரக்கனா இல்லை தேவனாக மாறிய அரக்கனா என்ற உண்மைகள் அனைத்தும் தெரிய வரும், தெளிவு பிறக்குமே. பெருமாள் மலையில் அமைந்த ராகுவின் சித்திரம் இந்த உண்மையை வெளிப்படுத்தும். ராகுவின் பாதங்களில் ஆரம்பிக்கும் உங்கள் கண் பார்வை நேராக இறைவனை நோக்கி சென்றால் நீங்கள் எந்த விதமான சம்சார பந்தத்திலும் சிக்க மாட்டீர்கள். சற்றே உங்கள் பார்வை மோக வயப்பட்டு அருகில் உள்ள பொருட்களின் மேல் இலயித்தாலும் நீங்கள் இறைவன் பால் மனத்தை செலுத்துவது என்பது கடினமே, மிகக் கடினமே. இதை உணர்த்துவம் இந்த வருட சூரிய கிரகணத்தின் பலன் மட்டும் அல்ல, இந்த சார்வரி வருடத்தின் பலனும் ஆகும். சற்குருவிற்கு நம் அடியார்கள் மேலுள்ள கருணையை விளக்குவதாக இங்குள்ள பெருமாள்மலை கிரிவல தரிசன படங்கள் அனைத்துமே காலசர்ப்ப யோகத்திலிருந்து மீண்ட சந்திர பகவான் உச்சம் கொண்ட ரோகிணி நட்சத்திர தினத்தன்று, சற்குருவின் ஜயந்தி அன்று தோன்றிய பெருமாள் அனுகிரக சக்திகளே என்பதே நம்மை மெய்மறக்கச் செய்யும் நிறமாலை ஆகும்.

விநோத விதி மண்டபம்

பெருமாள் மலை தரிசனத்தின்போது அமையும் முதல் மண்டபம் கிரகணத்தைக் குறிக்கும் சித்திரம் அமைந்த கிரகண மண்டபமாக விளங்குவதைப் போல் பெருமாள்மலையில் அடுத்து வரும் மண்டபம் விநோத விதி மண்டபம் என்ற பெயரைப் பெறுகிறது. இந்த மண்டபம் எதிரில் செந்தாமரைக்கிரணம் என்று சித்தர்களால் வழங்கப்படும் மரம் அமைந்துள்ளது. ஹெலிகாப்டர் மரம் (gyrocarpus jacquinii) என்று இந்த மரம் வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் விதை அபூர்வமாக சந்திரனைக் குறிக்கும் இரண்டு இறகுகளுடன் திகழ்ந்தாலும் சூரிய சக்தியும் சந்திர சக்தியும் இணைந்த செந்தாரைக்கிரண சக்திகளுடன் திகழ்வது இந்த மரமாகும். காலையில் சூரிய உதயத்தின்போது “செக்கர் வானமாக” திகழும் கதிர்கள் மாலையில் சூரியன் அஸ்தமனமாவதற்கு முன் சில நொடிகளுக்கு மட்டுமே இத்தகைய செந்தாமரை சக்திகளுடன் திகழ்கிறது. இந்த சூரியக் கிரணங்களால் மலர்வதே செந்தாமரை. பெருமாளின் விழிகள் இத்தகைய சக்திகளுடன் திகழ்வதையே ஆழ்வார் பெருமக்கள் தங்கள் பாசுரங்களில் புகழ்ந்து பாடுகிறார்கள்.

விநோதவிதி மண்டபம் பெருமாள்மலை

இதழ்களுடன் கூடிய இந்த செந்தாமரைக்கிரண விதையையே வானத்தில் எறிந்தால் அது வலப் புறமாக சுழன்று கொண்டே பூமியில் விழும் என்பதே இந்த வித்துக்கள் படைக்கும் விநோதமாகும். இந்த வித்துக்களை மரத்தின் மேலிருந்து வானப் பார்வையாக பார்த்தால் அது இடப் புறமாக சுழன்று சந்திர சக்திகளுடன்தானே திகழும் ? இதுவே செந்தாமரைக் கண்ணன் சக்திகளைப் பிரதிபலிக்கும் செந்தாமரை வித்துக்களாகும். ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா, தற்போது நாம் பார்த்த பெண்ணை மணப்பதா வேண்டாமா, நாம் நினைத்த இந்த வியாபாரத்தைச் செய்யலாமா வேண்டாமா என்று இரு தரப்பட்ட சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படுவோர் படிகள் ஏறிச் சென்று இந்த விநோத விதி மண்டபத்தில் அமர்ந்து இங்கு இயற்கையாகக் கிடைக்கும் இந்த வித்துக்களை மேலே எறிந்து அந்த வித்துக்களின் தரிசனத்தை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்தால் பெருமாளின் வழிகாட்டுதலை அடியார்கள் நிச்சயம் பெறுவார்கள். பெருமாளின் சன்னதியிலிருந்து இந்த வித்துக்களைப் பார்க்கும்போது அந்த வித்துக்கள் சுழலும் திசையில்தான் நவகிரகங்கங்கள் வானில் சஞ்சரிக்கின்றன என்பதும் இந்த வித்துக்கள் உரைக்கும் விதியாகும். பெருமாள்மலை, சுவாமிமலை, உய்யக்கொண்டான்மலை, திருச்சி மலைக்கோட்டை போன்ற பல திருத்தலங்களில் மலையை கிரிவலமாக வந்து பின்னர் படிகள் ஏறி மேலே ஏறிச் சென்று இறை மூர்த்திகளைத் தரிசிப்பதால் கிட்டும் அமோக பலன்களை விவரிப்பதே இத்தகைய செந்தாமரைக்கிரண மூலிகைகளின் மகத்துவமாகும். கிரிவலம் வரும் போது கிட்டும் பிரதட்சிண சக்திகள் படிகள் வழியே மேலே ஏறிச் சென்று இறை மூர்த்திகளை வணங்கும்போது சூரிய சந்திர சக்திகளை இணைக்கும் அமாவாசை கிரணங்களாகவும் பௌர்ணமி கிரணங்களாகவும் திகழ்கின்றன என்பதே இத்தகைய வலங்களின் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்கள் ஆகும்.
முப்பாதி இரகசியங்கள் அமைந்தது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் என்று கூறினோம் அல்லவா ? அதுபோல் முப்பாதி இரகசியங்கள் அமைந்த மூலிகைகளில் ஒன்றே பிரசன்னம் என்று சித்தர்களால் பெருமைபெறும் மூலிகை ஆகும். திருஅண்ணாமலை, பர்வதமலை போன்ற திருத்தலங்களில் முகிழ்க்கும் இந்த அபூர்வ மூலிகை பெருமாள்மலையில் தோன்றும் முகூர்த்த நேரமே தேய்பிறை அஷ்டமி திதியில் அமைவதாகும். பிரசன்னம் என்றால் என்றும் மாறுபாடு அடையாத நிரந்தர ஆனந்தம் என்று பொருள். ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தெள்ளேணம் கொட்டாமோ என்பதாக நாம பேதம் இல்லாத பெருமாள்மலை மூர்த்தி இந்த பிரசன்னம் என்ற நாம சக்தியைத் தரித்தே ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதியாய் அருள்கின்றார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம் ஆகும். எந்த அஷ்டமி திதியில் இந்த பிரசன்னம் மூலிகை பெருமாள்மலையில் முகிழ்க்கும் என்பது சித்தர்களே அறிந்த இரகசியம் என்றாலும் சாதாரண பக்தர்களும் இந்த இரகசியத்தை உணரா விட்டாலும் இந்தப் படிகள் அருளும் பலன்களை உணர்ந்து பயன்பெற அருள்வதே பெருமாள்மலையில் அமைந்துள்ள தொண்டரடி பொடியாழ்வார் படிக்கட்டுகள் ஆகும்.

முப்பாதி இரகசியம் சொட்டும்
பெருமாள்மலை

எந்நாளில் பெருமாள்மலையை படியேறிச் சென்று இறை மூர்த்திகளை தரிசனம் செய்தாலும் பிரசன்ன மூலிகையின் அனுகிரகத்தை பெறுமாறு பெருமாள்மலைப் படிகளில் பதித்து அருள்புரியும் பெருந்தகையே ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் ஆவார். அதனால் நீங்கள் எந்த நாளில் பெருமாள்மலைப் படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்று இறை மூர்த்திகளை தரிசனம் செய்தாலும் நீங்கள் ஏதாவது ஒரு படியில் இந்த பிரசன்னம் அமைதியை, ஆனந்தத்தை அனுபவிக்க நேர்ந்தால் அப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம் உங்கள் மூதாதையர்கள் அருளால் நீங்கள் இந்த பிரசன்ன படியை அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்பதை. இந்த பிரசன்ன படி ஒவ்வொருவருக்கும் மாறி அமையும் என்பதும் உண்மையே. அவரவர்க்கு அமையும் பிரசன்ன படியில் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் அமர்ந்து தியானித்தல், மஞ்சள் குங்குமம் பூசி, நாமமிட்டு அலங்கரித்தல் நலமே. படிகளில் பெயிண்ட் போன்ற இரசாயன கலவைகளை பூசுவதைத் தவிர்க்கவும். பெருமாள்மலை கிரிவலம், படியேறிச் சென்று இறை மூர்த்திகள் தரிசனம் நிறைவேறிய பின்னர் இரண்டு தொங்கட்டான்கள் அமைந்த ஜிமிக்கியை 12 வயதிற்கு குறைந்த பெண் குழந்தைகளுக்கு தானம் அளித்தலால் மேற்கூறிய பிரசன்னம் மூலிகையின் அனுகிரகத்தைப் பக்தர்கள் பெற முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் முப்பாதி அனுகிரகமாகும். இந்த வழிபாடுகள் அனைத்தையும் ஒரு நாளில் நிறைவேற்றுவதை சிரமமாக எண்ணுபவர்கள் ஒரு மாதத்திற்குள் இவற்றை நிறைவேற்றுவதும் ஏற்புடையதே. கடுமையான வியாதிகளுக்கு நிவாரணம் அளிப்பதும், திருமணத் தடங்கல்களை நிவர்த்தி செய்வதும், சந்ததி தழைக்க உதவுவதும் இத்தகைய வழிபாடுகளின் ஒரு சில பலன்களாகும். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் அமைந்த முப்பாதி இரகசியங்களை நம் ஆஸ்ரம பித்ரு படிக்கட்டுகளில் அமைத்து அந்த படிக்கட்டுகளில் எட்டு கோடி பக்தர்களுக்கு மேலாக அன்னதானம் கைங்கர்யம் நிறைவேற்றி அபூர்வமான இந்த தேவ இரகசியங்களின் பலன்களை எல்லாம் இவ்வுலக மக்களுக்கு தாரை வார்த்து அளித்தார் அல்லவா நம் சற்குரு ?

எந்த முடிவை ஏற்பது ?
பெருமாள்மலை

இது என்றோ நடந்த அபூர்வ சித்த சேவை என்றாலும் இன்றும் இத்தகைய பரந்த உள்ளம் கொண்டோர்க்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக அமைந்துள்ளதே பெருமாள்மலை ஆகும். இலந்தை மரமும் புளிய மரமும் ஒரே புளிப்புச் சுவை உடைய கனிகளைத் தரவல்லவை என்றாலும் இந்த புளிப்புச் சுவைகளின் தன்மை மாறுபட்டவையே. இந்த சுவை அளிக்கும் யதார்த்த உண்மைகளை பத்தர்களுக்கு அளிக்கும் முகமாகவே பெருமாள்மலையில் இவ்விரண்டு மரங்களும் அமைந்துள்ளன. செந்தாரைக்கிரணம் என்ற மூலிகை மேலிருந்து பார்க்கும்போது சந்திர சக்தியுடன் சுழன்றாலும் கீழிருந்து பார்க்கும்போது அது சூரிய சக்தியுடன்தானே திகழும். பெருமாள்மலையை கிரிவலமாக வரும்போது கனியும் பலன்கள் வேறு, படிகள் வழியாக மேலேறிச் சென்று இறை மூர்த்திகளை தரிசனம் செய்யும்போது கிட்டும் பலன்கள் வேறாகத்தானே அமைகின்றன. இந்த மூன்று தத்துவங்களை மட்டும் ஆத்ம விசாரம் செய்து வந்தாலே எப்படி முப்பாதி இரகசியங்களை தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தரத்திலும் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதை அனைத்து மக்களும் உணர்வர் என்பதே பெருமாள்மலை சுட்டிக் காட்டும் முக்கிய வழிபாட்டுப் பயனாகும். மாறுபட்ட இரு கோணங்களில் அமைந்த விநோத விதி மண்டபத்தில் அமர்ந்து தங்கள் மனத்தில் தோன்றும் முடிவுகள் சரியானவையா என்று தீர்வு பெறலாம் என்று கூறினோம் அல்லவா ? ஒரு வேளை இந்த முடிவைப் பெற அவசியமான செந்தாமரை கிரண மூலிகைள் கிட்டாவிட்டால் என்ன செய்வது என்பதும் ஒருவிதமான ஐயப்பாடுதானே ? இவ்வாறு ஏதாவது ஒரு காரணத்தால் இத்தகைய செந்தாமரை கிரண வித்துக்கள் கிட்டாவிட்டால் விநோதவிதி மண்டபத்தில் அமைதியாக அமர்ந்து ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் பதிகப் பாக்களை பொறுமையாக ஓதி வந்தால் நிச்சயமாக தாங்கள் எடுக்க வேண்டிய முடிவு பற்றிய தெளிவைப் பெறுவார்கள். ஆழ்வார் அருளிய அனைத்துப் பாக்களையும் பாட முடியாதவர்கள், “பச்சை மாமலை போல் மேனி ...” என்று தொடங்கும் பாடலை மட்டுமாவது தங்கள் பிரச்னைக்கு முடிவு தெளிவாகத் தெரியும் வரை தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கலாம் என்பதே சித்தர்கள் கூறும் தெளிவுரை.

குருபட்டாடை சாற்றுவோமா ?

பொதுவாக தமிழ் அல்லது ஆங்கிலம் நான்காம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் கணிதப்படி தங்கள் பெயர் நான்கில் அமையும்படி வைத்துக் கொள்கிறார்கள். சதா சிவன் சித்தத்தில் உறையும் நம் சற்குரு போன்ற மகான்களோ நான்கு என்ற எண் ராகுவிற்கு உரியதாக அமைவதால் அவரவர் பிறந்த நேர அம்சங்களின்படி மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணில் அமையும்படி குழந்தைகளின் பெயர்களை அளிக்கிறார்கள். இத்தகைய சற்குருவின் கர்ம பரிபாலனத்தில் அமைந்தோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்றவர்கள் என்ன செய்வது ? இவ்வாறு தவறான முறையில் அமைந்த எண்கள் சுட்டும் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதும் விதிமுறையே. மேலும் ஆகாய விமானம், கப்பல் போன்றவற்றில் பயணம் செய்யும்போது குழந்தை பிறத்தல், போர், திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்தல், பகலொளி சேமிப்பு நேரம் (day light saving) போன்ற பல்வேறு காரணங்களால் தங்கள் பிறந்த இடத்தை, நேரத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் பலருக்கும் போவதுண்டு.

பேதம் கடப்பது நன்று
பெருமாள்மலை

இத்தகையோருக்கும் அனுகிரகம் செய்வதே பெருமாள்மலையில் குருபட்டாடை சார்த்தும் பூஜையாகும். திருஅண்ணாமலை, பழநி மலை போன்ற மலைத்தலங்களிலும், தங்கள் இஷ்ட தெய்வம் போன்றவற்றிற்கும் மனதால் வஸ்திரம் நெய்து, கண்களால் சார்த்தும் வஸ்திர பூஜை பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் அளிக்கப்பட்டுள்ளது. மலையில் ஒரு விளிம்பிலிருந்து பார்வையை செலுத்தி மறுவிளிம்பிற்கு பார்வையை படர விட்டு மீண்டும் தொடர்ந்து ஆரம்ப இடத்திற்கு வருதலையே ஒரு சுற்று வஸ்திரம் சார்த்தும் பூஜையாக விவரிக்கிறோம். குரு அளித்த மந்திரம், இஷ்ட மந்திரம், தங்களுக்குப் பிடித்த இறை நாமங்கள் என எதை வேண்டுமானாலும் இந்த வஸ்திர பூஜைக்கு எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக நான்காம் எண்களில் பிறந்தவர்கள் 4, 8 எண்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாயினும் அவர்களின் இறை நம்பிக்கை பலமாக அமைந்தால் ராகுவின் ஆதிக்கமே அவர்களுக்கு உலகளாவிய புகழையும் பெற்றுத் தரும் என்பதற்கு சான்றாக நிற்பதே ராகுதிசையில் ராகு புக்தியில் நிகழ்ந்த ஸ்ரீவிவேகானந்தரின் சிகாகோ உரையாகும். இங்கு அளித்துள்ள பெருமாள்மலை குருபட்டு தரிசனப் பகுதியையோ அல்லது தங்களுக்குப் பிடித்த பெருமாள்மலை கிரிவலப் பகுதியையோ அல்லது இஷ்ட மூர்த்தியையோ இந்த வஸ்திரப் பூஜைக்கு எடுத்துக் கொண்டு பயன்பெறலாம். இதுவரை இத்தகைய வஸ்திர பூஜையில் ஈடுபடாதவர்களுக்கு நல்லதோர் ஆரம்பப் பயிற்சிக் கூடமாக செயல்படுவதும் பெருமாள்மலை கிரிவலப் பலன்களில் ஒன்றாகும். ஒருவர் தான் ஆண் என்றோ பெண் என்றோ நினைப்பது இயல்பே என்றாலும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ள விழைபவர்களுக்கு இத்தகைய பால் உணர்ச்சி ஒரு பெரிய முட்டுக் கட்டையே. இந்த ராகவேந்திர ஆண்டில் குருபட்டாடை பூஜையை தொடர்ந்து நம்பிக்கையுடன் நிகழ்த்தி ஆண் பெண் என்ற மாயையைக் கடந்து நிற்பவர்கள் அனைத்தும் இறைவன் என்ற குடைக் கீழ் மிளிரும் ஜீவத் தொகுப்பே என்ற பேருண்மையை நிச்சயமாக உணர முடியும். சற்குரு சேஷாத்ரி சுவாமிகள் இத்தகைய பேதத்தைக் கடந்த பெருஞானியாய் மலர்ந்ததும் இத்தகைய ராகவேந்திர ஆண்டு ஒன்றில்தான் என்பதே சித்தர்கள் உரைக்கும் இரகசியம்.

உறங்காபுளி பெருமாள்மலை

சுவாமிகள் ஜாதகத்தில் கும்பத்தில் மறைந்த சுக்ரன் இந்த தத்துவத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம் மட்டுமே. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இத்தகைய பேதத்தைக் கடந்து நின்று பெண் குலத்திற்கு பெருமை சேர்த்ததும் இத்தகைய ஆண்டு ஒன்றில்தான். பொதுவாக, 4, 7, 8 என்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு தங்கள் சொந்த முயற்சியால் வரும் விளைவுகளை விட விதியின் வேகமே ஓங்கி நிற்கும். உதாரணமாக, வங்கிக் கணக்கு, வீட்டு எண், பெயர் எண், தொலைபேசி எண் போன்ற அனைத்துமே 4 அல்லது 8 அமையுமாறு இருப்பதே அவர்கள் வாழ்க்கையில் விதியின் வேகம் செயல்படும் விதத்தை அறிய துணை செய்யும். எது எப்படி இருந்தாலும் “bolt from the blue” என்பதாக இருண்ட வானத்தில் தோன்றும் மின்னலைப் போன்று திக்குத் தடுமாறி திகைக்கும் வேளையில் பெருமாள்மலை பட்டாடை பூஜைகள் அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. பெருமாள்மலையில் துலங்கும் புளியமரமானது யுகயுகமாகத் தோன்றி செழிக்கும் உறங்காபுளி வகையைச் சேர்ந்ததாகும். உறங்காபுளி என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. பொதுவாக, மாலையில் எந்த மலர்களையும் பறிக்கக் கூடாது, நீர் நிலைகளில் நீராடக் கூடாது என்று பெரியோர்கள் கூறுவதண்டு. மாலை மயங்கிய பின் சூழ்நிலையில் அநேக மாற்றங்கள் ஏற்படுவதும், நீர் நிலையைக் காக்கும் தேவதைகள் தங்கள் பணியில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்வதையும் இது குறிக்கின்றது. இருந்தாலும் அகோராத்திரி தீர்த்தமாக இரவிலும் பகலிலும் நீராடும் தகுதி படைத்தவையாக பல தீர்த்தங்களும் விளங்குகின்றன என்பதும் நீங்கள் அறிந்ததே. இவ்வகையில் விளங்கும் பெருமாள்மலை உறங்காப்புளி விருட்சத்தை கதிரவனின் மாலைக் கதிர்கள் வலம் வந்து வணங்கிச் செல்வதை கலியுக பக்தர்களும் மேற்கண்ட புகைப்படத்தில் கண்டு ரசிக்கலாம் என்பதே ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அளிக்கும் பெருங்கருணையாகும். முதுமை, நோய் போன்ற காரணங்களால் இரத்த அழுத்தம் அதிகமாகி அதனால் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களும், மாலைக்கண் நோயால் வருந்துவோரும் இந்த உறங்கா புளி மரத்தை 18, 36, 54 என்ற கணக்கில் வலம் வந்து வணங்குதல் நலம். இந்த விருட்சத்தை வலம் வந்து வணங்குவதற்கு உரிய நேரம் என்று எதுவும் இல்லை என்றாலும் குறித்த பலன் கருதி வழிபாடு நிகழ்த்துவோர் மாலை நேரங்களிலும், நேத்ர சக்திகள் பெருகிய நாட்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலமே. மண் தட்டுகளில் நீரும், நிலக்கடலை கலந்த புளியோதரை தானமும் இங்குள்ள குரங்குப் படைகளுக்கு அளித்தலால் கூரிய கண் பார்வையைப் பெறலாம். நல்ல கண் பார்வை உடையவர்களும் எதிர்பாராத ஆபத்துகளிலிருந்து தங்களை காத்துக் கொள்ள இத்தகைய உறங்கா புளி தானங்கள் கை கொடுக்கும். அன்னதானத்திற்காக அரிசியை அளந்து போடும்போது நம் சற்குரு ஒன்று, இரண்டு என்று கூறாமல் உண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா, கபாலி, கற்பகாம்பா என்று சொல்லிதான் அளந்து போடுவார். இவ்வாறு ஒவ்வொரு காரியத்திலும் இறை நாமத்தை, தெய்வ சக்திகளை இணைக்கும் முகமாகவே சற்குருவின் செயல் ஒவ்வொன்றும் திகழும். இதே போல் அரிசி என்பதை அமுது என்று அழைப்பவர்களும் உண்டு.

வரம் தரும் வரதராஜர்

பெருமாள் மோகினி அவதாரத்தின்போது கரண்டியில் விநியோகித்த அமிர்த சக்திகள் நிறைந்த பிரசாதத்தை இது குறிப்பதால் ராகவா போற்றி, ரெங்கநாதா சரணம், ராமாநுஜன் வாழியவே என்று கூறி அரிசி, பருப்பு போன்றவற்றை அளந்து போடுவதால் அந்த தான்ய மணிகளில் எல்லாம் அமிர்த சக்திகள் நிறைந்து பூரிக்கும். தற்காலத்தில் தானியங்களில் நிறைந்துள்ள ரசாயன உரங்களின் விளைவுகளை ஓரளவு குறைக்கவல்லதே இத்தகைய இறை நாமங்கள் அருளும் அனுகிரக சக்தியாகும். குறிப்பாக ராமாநுஜன் வாழியவே என்று கூறும்போது தானிய மணிகளில் உறங்காபுளி என்னும் அனுகிரக சக்திகள் நிறைவதால் இத்தகைய அமிர்த சக்திகள் ராமானுஜரைப் போல் நீண்ட ஆயுளுடன், நல்ல கண் பார்வையுடன் திகழ உறுதுணையாக நிற்கும். பெருமாள்மலையில் உள்ள உறங்கா புளி தலவிருட்சத்தைப் போல் கோயம்புத்தூர் பேரூரில் விளங்குவதே பிறவாப்புளி தல விருட்சமாகும். பேர் ஊர் என்றால் பெரிய ஊர், பெருமை பெற்ற ஊர் என்று பொருள். காசியைப் போல் சிவபெருமானே இறப்பவர் காதில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதும் திருத்தலமே பேரூர். அப்படியென்றால் இதை விடப் பெருமை வாய்ந்த பெரிய ஊர் ஒன்று பூலோகத்தில் இருக்க முடியுமா என்ன ?

பிறவாப்புளி பேரூர்

இங்குதான் மனிதனுடைய பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும். ஒரு முறை ரிஷிகேஷ் சிவானந்தா அவர்களிடம் பிராம்மணர் என்ற பிறவியைப் பற்றி ஒரு அடியார் கேட்டார். சுவாமிகளும் பிராம்மணர் குலத்தில் தோன்றியவர்தான். சிவானந்தா அவர்கள், “பிராம்மணர் என்ற பிறவி உயர்ந்த பிறவிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால், ஒருவர் ஒரு உயர்ந்த பிறவியில் பிறந்து விட்டோம் என்பதால் மட்டும் அவர் எல்லோரையும் விட உயர்ந்த நிலையைப் பெற்று விடுவார் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒருவர் எந்த அளவிற்கு இந்த மனிதப் பிறவியில் நற்குணங்களை, உத்தம சீலங்களை வளர்த்துக் கொண்டு இறைவன் படைத்த உயிர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறாரோ அவரே பிராம்மணர்,” என்ற உண்மையை அங்கு கூடி இருந்த அனைவர்க்கும் உரைத்தார். இதுவே பேரூர் வாசிகள் அனைவரும் உணர்ந்து தெளிய வேண்டிய உண்மையாக சித்தர்கள் தெளிவிக்கிறார்கள். இறக்கும் நாள் வரை சிவபெருமானின் மந்திர உபதேசத்திற்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. கற்பக விருட்சம் என்பது யாரும் பார்க்காத ஒன்று என்றே நினைக்கிறோம். உண்மையில் பேரூர் திருத்தலத்தில் உறையும் பிறவாப்புளி விருட்சமே இத்தகைய கற்பக விருட்ச அம்சங்களுடன் பொலிவதாகும். கற்பக விருட்சம் கூட பாற்கடலில் பிறவியைப் பெற்றது என்பதை அறிவீர்கள். ஆனால், பேரூர் பிறவாப்புளியோ இந்த கற்பக விருட்சத்திற்கும் முந்தியது என்றால் இதன் பெருமையை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும் ? தாமே அரைத்த மஞ்சளால் இந்த புளியமரத்திற்கு காப்பிட்டு 16 பொட்டுக்கள் குங்குமத்தால் வைத்து ஒன்பதின் மடங்காக இந்த புளிய மரத்தை வலம் வந்து வணங்குவதால் இந்த புளிய மரமே மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதுவதை சாதாரண மக்களும் கேட்கும் சக்தி பெறலாம். இதன் பின்னர் அத்தகையோர் நிறைவேற்ற வேண்டிய நற்காரியங்களை தக்க சற்குருவே அவர்களுக்கு தெளிவுபடுத்துவார். தன் இடது தொடையில் சக்தியை (மனைவியை) அமர வைத்த கோலத்தில் பல இறை மூர்த்திகள் தரிசனம் அளிப்பது உண்டு. கணவன் மனைவியாக அமைபவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் சூடு இரகசியங்களில் ஏற்படும் பேதத்தைக் களைவதும் இத்தகைய மூர்த்திகளின் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கும், குடும்பத்தில் அடிக்கடி போராட்டங்கள் தோன்றுவதற்கும் இத்தகைய உடல் சூடு பேதங்கள் முக்கிய காரணமாகின்றன. இத்தகையோர் தங்கள் கைகளைக் கோர்த்த வண்ணம் அல்லது கணவன் முன்னே செல்லே மனைவி கணவனின் பின்னே கணவனின் பாதங்களைப் பார்த்த வண்ணம் இந்த பிறவாப்புளி மரத்தை வலம் வந்து வணங்குதலால் நற்பலன் பெறுவார்கள் குருவருளால். “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் ...” என்று சுந்தர மூர்த்தி நாயனார் பேரூர் ஈசனை புகழ்ந்து பாடுவதின் பின்னணியில் அமைந்த உடல் சூடு இரகசியங்கள் இப்போது தெளிவாகின்றன அல்லவா ? சிவப்பு நிற மாணிக்கக் கடுக்கன்கள் அல்லது சிவப்பு நிற மாணிக்கக் கற்கள் பதித்த தங்க ஆபரணங்களை பேரூர் திருத்தலத்தில் தானமாக அளித்தல் நலம். 18 டிகிரி வடக்கு அட்சாம்சத்துடன் திகழும் சிறப்பைக் கொண்டதும் பேரூர் திருத்தலத்தின் அங்காரக அம்சங்களில் ஒன்றாகும். நம் ஆஸ்ரமத்தில் ஒரு சாதாரண மனிதனால் தாங்க முடியாத ருத்ராக்னி சூட்டைத் தாங்கி அன்னதானம் நிறைவேற்றி இத்தகைய அபூர்வ சேவையால் கிட்டும் அளவிறந்த புண்ணிய சக்தியைக் கூட ஓரிரு நாட்களில் காமம், கோபத்தால் செலவு செய்யும் அடியார்கள் அநேகர் உண்டு என்பார் நம் சற்குரு. இவ்வாறு காமம், கோபத்தால் ஏற்படும் புண்ணிய நாசம் ஆகாமல் நம்மை காக்கக் கூடியதே பேரூர் திருத்தலத்தில் நிகழ்த்தும் பிறவாப்புளி ம்ருத்யுஞ்ஜய வலமும் தங்க ஆபரணங்கள் தானமும் ஆகும்.

ஸ்ரீவரதஆஞ்சநேயர் பேரூர்

நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியார் தனக்கு கோபம் ஏற்பட்டு விட்டால் தான் உண்ணும் தட்டில் இருக்கும் சாதத்தோடு அதை தன் மனைவிமேல் வீசி எறியும் அளவிற்கு அறியாமையுடன் திகழ்ந்தபோது அந்த அடியாரிடம் எதுவுமே கூறாமல் மாணிக்கக் கடுக்கனை அளித்து அந்த அடியாரை குளிர் குன்றாய் மாற்றினார் நம் சற்குரு என்றால் மாணிக்கம் அண்ணாமலையா, நம் சற்குருவா ? இரண்டும் ஒன்றா இல்லை வேறு வேறா ? குதிரைக்கு கடிவாளம், காமத்திற்கு கடுக்கன். இதுவே அடியார்களை அயர வைத்த சற்குருவின் அறப்பணி. யாருடைய குறையையும் சுட்டிக் காட்டாமல் அதே சமயம் அவர்கள் குறைகளைக் களைய அல்லும் பகலும் அரும்பாடு பட்ட, இன்றும் அயராது பாடுபடும் திருவருளே. சுந்தர மூர்த்தி நாயனார் புகழும் பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் என்ற நான்கே வார்த்தைகளின் உட்பொருளை ஒருவன் உணர்ந்தாலே அவன் நம் சற்குருவின் மேல் நீங்கா அன்பு கொண்டு மீளா அடிமை ஆகி விடுவான் என்றால் 32 தேவாரப் பதிகங்களையும் ஒரு அடியார் ஓதி வந்தால் பெருகும் பலன் யாதோ ? பேரூர் திருத்தலத்தில் மகாவிஷ்ணு ஸ்ரீவரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடனும் ஸ்ரீஆஞ்சநேயர் வரதஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றார்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லா பெரியோர்களும் திருமணத்தின்போது ஆசீர்வதித்தாலும் இத்தகைய ஆசீர்வதிக்கும் தகுதி உள்ள பெரியோர்கள் இன்று மிகவும் அருகி விட்டார்கள் என்பது உண்மையே. இது அறியாதவர்களா நம் மூதாதையர்கள் ? பேரூர் திருத்தலத்தில் ஸ்ரீவரதஆஞ்சநேயர் மூர்த்தி இத்தகைய ஆசீர்வாத சக்திகளுடன் அருள்பாலிக்கின்றார் என்பதை உலகிற்கு உணர்த்தியவரே நம் சற்குரு ஆவார். அபூர்வமாக இத்தல ஆஞ்சநேய மூர்த்தி மா மரத்தினாலான மூர்த்தி. நம் ஆஸ்ரம ஸ்ரீகனிந்த கனி பிள்ளையார் மூர்த்தியைப் போன்ற அனுகிரக சக்திகளுடன் திகழும் மூர்த்தியே பேரூர் ஸ்ரீவரதஆஞ்சநேயர் ஆவார். திருமணமான தம்பதிகள் இந்த ஆஞ்சநேய மூர்த்திக்கு பட்டாடைகள் சாற்றி நன்றி தெரிவித்தலால் தங்கள் திருமணத்தின்போது ஏற்பட்ட பல தோஷங்களும் தீர்வதுடன் அவர்கள் அடுத்து மேற்கொள்ளும் திருமண வாழ்விற்கு உரிய 16 ஆசீர்வாத சக்திகளையும் பெற்று நலமடைவர் என்பதே பேரூர் ஆஞ்சநேய மூர்த்தியின் மகிமை ஆகும். புளிய மரத்திற்கு 16 பொட்டிட்டு வணங்கிய பின் ஸ்ரீவரதஆஞ்சநேயரை வணங்குவதால் பெருகும் பலன்கள் இப்போது உங்களுக்கு சொல்லாமலே புரியும் அல்லவா ? பொதுவாக, உயிர் பெற்ற ஆண் கல்லில் ஆண் விக்ரஹங்களைச் செய்வதும், பெண் கல்லில் பெண் விக்ரஹங்களைச் செய்வதும் நம் ஆலயக் கலையின் சிறப்பம்சமாகும். அபூர்வமாக அன்பில் ஸ்ரீரெங்கநாதர் போன்று சுதையில் அமையும் இறை மூர்த்திகளும் உண்டு. அப்படியானால் சிரஞ்சீவித் தன்மை பூண்ட ஆஞ்சநேய மூர்த்தியை வடிக்க உகந்த பொருள் எது ? ஔவையார் சிரஞ்சீவித்துவம் அளிக்கும் மாங்கனி ஒன்றை அதியமானிடமிருந்து பெற்றபோது அதை தான் உண்டு சிரஞ்சீவியாக வாழ்வதை விட இந்த உலகையே காத்து இரட்சிக்கும் எம்பெருமான் நீடூழி வாழ கயிலை சென்று பார்வதி பரமேஸ்வர மூர்த்திகளிடம் அளித்தாள் அல்லவா ? அப்படியானால் அந்த சிரஞ்சீவித் தன்மை கொண்ட மாமரம் என்னவாயிற்று என்பதை அறிய உங்கள் உள்ளம் விழைகின்றது அல்லவா ? ஆம், சரியான வியூகத்தில் உங்கள் ஊகம் அமைந்துள்ளது. அந்த சிரஞ்சீவி மாமரத்தால் அமைக்கப்பட்டதே பேரூர் திருத்தலத்தில் சிரஞ்சீவி சக்திகளுடன் துலங்கும் ஸ்ரீவரதஆஞ்சநேய மூர்த்தி ஆவார். நவரச நவநாயகராகத் திகழும் இந்த ஆஞ்சநேய மூர்த்தியை குழந்தைகள், தவறு புரிந்தோர், உத்தம பெண்கள் என அனைவரும் தரிசிக்கும்போது ஒவ்வொருவர் பார்வைக் கோணத்திற்கு ஏற்றபடி துலங்குவதே பேரூர் ஆஞ்சநேயரின் தனிச் சிறப்பாகும்.

பேரூர் உறைவாய்
பட்டிப் பெருமான்

பொதுவாக, இவ்வாறு பற்களைக் காட்டியபடி துலங்கும் ஆஞ்சநேய மூர்த்திகள் அரிதிலும் அரிதே. காலையில் எழுந்தவுடன் கணவன்மார்கள் தங்கள் முன் பற்கள் தெரியும்படி தங்கள் மனைவியரைப் பார்த்து சிரிக்க வேண்டும் என்பது குடும்பத்தில் அமைதி தவழ, அன்பு பெருக சித்தர்கள் கூறும் வழி. இத்தகைய செயல்பாடுகளை தம்பதிகள் அறியா விட்டாலும் தங்கள் திருமணத்திற்குப் பின் பேரூர் ஸ்ரீவரதஆஞ்சநேய மூர்த்தியை தரிசனம் செய்து அருள் பெறுவதால் தம்பதிகள் இடையே ஒற்றுமை ஓங்க அருள்புரிகின்றார். பேரூரில் அமைந்துள்ள பிறவாப்புளி மரத்திற்கு எப்படி வேண்டுமானாலும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து வழிபடுவது ஏற்புடையது என்றாலும் இந்த வருடம் அமையும் ஒரு சிறப்பான குங்குமப் பொட்டு அமைப்பு பற்றி சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். 5, 4, 3, 2, 1, 1 என்றவாறாக ஆறு வரிசைகளில் கீழிருந்து மேலாக கோபுர வடிவில் பொட்டுக்களை அமைத்தல் சுக்ர அம்சங்களுடன் திகழும் வடிவமைப்பு ஆகும். ராம பிரானின் ஜாதகத்தில் உள்ளதுபோல் உச்சம் பெற்று விளங்கும் சுக்கிர பகவானைப் பெற்றிருத்தல் மனைவியின் மேல் நீங்கா அன்பைக் குறிக்கும் ஜாதக அமைப்பாகும். இத்தகைய அமைப்புகள் அநேக தம்பதிகள் ஜாதகத்தில் அமையாவிட்டாலும் மேற்கண்ட முறையில் பொட்டிட்டு வணங்குவதால் குடும்ப அன்யோன்யமும் சந்ததி விருத்தியும் பெருக இறையருள் சித்திக்கும். இங்கு பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். பல பக்தர்களும் அடிக்கடி பேரூர் புளிய மரத்திற்கு மஞ்சள் சாற்ற ஆரம்பித்தால் எல்லோரும் வழிபாடு இயற்றுவதற்கு போதுமான இடைவெளி இந்த மரத்தில் இருக்காதே என் செய்வது ? பொதுவாக, திருத்தலங்களில் ஏற்கனவே ஏற்றப்பட்ட தீபத்தை களைப்பதோ அல்லது எரியும் ஒரு தீபத்தில் நாம் எண்ணெய் ஊற்றுவதோ ஏற்புடையது கிடையாது. ஆனால், தீபத் தத்துவம் வேறு, கோலத் தத்துவம் வேறு. ஏற்கனவே மஞ்சள் பூசி இருந்தாலும் தாராளமாக அந்த மஞ்சள் மேல் எந்த அடியார் வேண்டுமானாலும் மீண்டும் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அலங்கரிக்கலாம். இதில் எந்த வித தவறும் கிடையாது. ஸ்ரீவரதஆஞ்சநேயரின் வால் பகுதி வேறெங்கும் காண இயலாத சலனத் தன்மைகளுடன் திகழ்வதாகும். ஆனால், ஆஞ்சநேய மூர்த்தியின் மார்புப் பகுதியை நோக்கினால் சலனமற்ற அமைதியை நாம் உணர முடியும். இதுவும் பேரூர் ஆஞ்சநேய மூர்த்தியின் தனிச் சிறப்பாகும். இந்த வரத மூர்த்தியின் அனுகிரக சக்திகளை வர்ணிப்பதை விட தங்கள் மனதில் செல்வம், காமம், விரோதம் போன்ற காரணங்களால் சலனம் ஏற்படும்போது பேரூர் திருத்தலத்தில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கீழ்க்கண்ட சலனத் துதியை ஓதுவதால் உடனடியாக மனத்தில் சாந்தம் துளிர்ப்பதை உணரலாம். இதுவே சாந்த அனுமாரின் சாந்த சேவை.

சலனம் சலனம்
நிமிர்ந்து நோக்குவது சலனமா
சலனம் சலனம்
பணிந்து நோக்குவதும்
பாவம் நீக்கும் சலனமா
வாயு புத்திரன் என்றால் வாயு வேகத்திலும் கடிந்து பிரயாணம் கொள்ளும் மனதின் வேகத்தை மட்டுப்படுத்தி அசையா மலை போன்று இறை திருவடிகளில் நிலை நிறுத்துபவன் என்ற பொருளும் உண்டு அல்லவா ? சிறிய அளவில் ஆரம்பிக்கும் நற்செயல்கள் பெரிய அளவில் விருத்தியாகி பெருகும்போது அனுமார் வால் போல் நீண்டு போகிறது என்பார்கள். இந்த கூற்று தியானத்திற்கும் பொருந்துவதே. பேரூர் ஆஞ்சநேய மூர்த்தியின் வால் பகுதியை மட்டும் மனதில் தியானித்து வந்தாலே இது சிறிது சிறிதாக மனதில் சலனமற்ற நிலையை உருவாக்கி வால் தோன்றும் குண்டலினிப் பகுதிக்கு பக்தர்களை கொண்டு சேர்த்து ராம பிரசாதமான இறைபக்தியையும் பெற்றுத் தரும் என்பதே பேரூர் ஸ்ரீவரதஆஞ்சநேயர் அருளும் வரமாகும்.

திருமறைக்காடு

பேரூர் திருத்தலத்தில் இறுதி மூச்சை விடுபவர்களுக்கு சிவபெருமானே மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதி நற்கதி புகட்டுகிறார் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால், சிவபெருமான் புகட்டும் இந்த மந்திரத் தன்மையை பக்தர்களுக்கு அளிக்கவல்லவர்களே சித்தபெருமக்கள். எதையும் கேட்டால்தான் தர வேண்டும் என்ற விதி இருப்பதால் இதைப் பின்பற்றி அந்த சிவ பஞ்சாட்சர இரகசியத்தையும் தாயினும் சாலப் பரிந்து நமக்கு ஊட்டுகிறார் நம் இளவேனிலான சற்குரு. சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த காட்டூர்க் கடலே என்று தொடங்கும் பதிகத்தில் இடம்பெற்ற பன்னிரெண்டாம் வரியான, “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே,” என்று 22 மதுர அமிர்த அட்சரங்களில் அமைந்ததே அந்த உபதேச மந்திரம். இதை நான்காம் பாடலில் அமைந்த மூன்றாவது வரி என்றும் கொள்ளலாம் அல்லவா ? அதாவது ராகவேந்திர வருடத்தில் மலர்ந்த குரு மணம் என்ற நறுமணமே இந்த மந்திர உபதேசம். பாலில் அமைந்த 22 அமிர்த சக்திகளின் தொகுப்பாக நாயனாரால் அளிக்கப்பட்டதே இந்த அம்ருத வர்ஷமாகும். காமதேனுவின் புத்ரியான பட்டி பூஜித்த ஸ்ரீபட்டீஸ்வரர் என்பதால் என்றென்றும் வாழும் இறைத் தன்மையை பக்தர்களுக்கு ஈசன் இத்தலத்தில் அளிப்பதில் வியப்பென்ன. இந்த இரகசியங்கள் அனைத்தும் பிறவா நெறியானே என்ற ஏழெழுத்தில் அமைந்துள்ளதே பிறவாப்புளி மரத்தின் சிறப்பாகும். இந்த மரத்தின் விதையை வேறு எங்கு போட்டாலும் முளைக்காது என்றால் இறைச் சுவையான ஏழாம் சுவையை வேறு எங்கு முளைக்க வைக்க முடியும் ? வல்லினத் தொகுதியில் ஐந்தாவதாக இடம் பெறும் ப என்ற அட்சரம் ஐந்து முறை ஒலிப்பதே மேற்கண்ட பெருமானின் பாடல் வரியில் அமைந்த அமிர்த இரகசியம். ஒரே ஒரு முறை இந்த அஞ்செழுத்து மந்திரத்தை ஓதினாலே முக்தி கிட்டும் என்பது நம் கோவணாண்டிப் பெரியவர் கூறும் சிறப்பாகும். நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் தன் மனைவியை பேபி என்று அழைப்பார். நம் சற்குரு இது பற்றிக் குறிப்பிடும்போது இந்த “பேப்பி” மகிமையை, தன் மனைவியை கையாளும் வித்தையை அந்த அடியார் அறியவில்லை என்று சூசகமாக கூறினார். ஆனால், ஒரு முறையே நம் சற்குரு அந்த அடியார் மனைவியின் பெயரை ஒலித்ததால் அந்த அடியார் மனைவிக்கு முக்தி கிடைத்திருக்கும் என்பது இப்போது சொல்லாமலே விளங்கும் அல்லவா ? இதுவே ப என்ற வல்லின அட்சர மகிமையாகும். இந்த அட்சர மகிமையை அடியார்களுக்கு அருளும் முகமாகவே பிறவாப்புளி மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமமிடும் வழிபாடு சித்தர்களால் (பி ப் பு) அளிக்கப்பட்டுள்ளது. பதிவிரதை என்ற சொல்லில் பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல் மறைந்து விடுகிறது அல்லது இணைந்து விடுகிறது. இந்த அற்புதமான தெய்வீக இணைப்பை ஏற்படுத்துவதே சித்தர்கள் அருளிய வழிபாடாகும்.

ஸ்ரீஅத்திகிரி கணபதி பேரூர்

கன்னி மூலை கணபதி மூர்த்தியை தொடர்ந்து வழிபட்டு வருவதால் எத்தகைய திருமணத் தடங்கல்களும் நீங்கும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். ஆஞ்சநேய மூர்த்தியை வணங்குவதால் எத்தகைய ஆபத்துகளும் விலகும், தம்பதியர் நலமடைவர். ஆனால், பிள்ளையார், ஆஞ்சநேய மூர்த்திகள் இருவருமே பிரம்மச்சாரிகள் தாமே. இவர்கள் எப்படி குடும்ப ஒற்றுமை என்ற சுகத்தை அருள முடியும் என்று பக்தர்கள் என்றாவது யோசித்தது உண்டா ? இங்குதான் தியாகம் என்ற மலர் மலர்கிறது. முழுமையான எண்ணான ஒன்பதிற்கு உரிய இவ்விரு மூர்த்திகளும் மனிதப் பிறவியை முழுமை அடையச் செய்யும் வள்ளல் மூர்த்திகளே. தாங்கள் குடும்ப சுகம் என்ற ஒன்றை சிறிதளவும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் பக்தர்களுக்காக அர்ப்பணம் செய்யும் தியாகத் திருஉருவங்களே, உண்மையான குழலுறவுதியாகிகளே இவ்விரு மூர்த்திகள் ஆவர். இவ்விரு மூர்த்திகளின் மகிமைகளை ஓரளவு உணர்ந்து கொள்ள பக்தர்களுக்கு உதவி செய்வதே பேரூர் திருத்தலமாகும். திருமணத் தடங்கல்களுக்கு முக்கிய காரணமாக அமைவது வரன்களின் ஜாதகங்களில் அமையும் செவ்வாய் பகவான் ஆவார். பொதுவாக, களத்திர தானங்களில் அமையும் செவ்வாய் பகவானால் குடும்பத்தில் பலவிதமான துன்பங்கள் ஏற்படும் என்பது உண்மை என்றாலும் திருமணத்திற்குப் பின் இத்தகைய அமைப்புகளை குறித்து ஆராய்வதால் பலன் ஒன்றும் கிட்டப்போவதில்லை அல்லவா ? அத்தகையோர் பேரூர் திருத்தல ஸ்ரீஅத்திகிரி பிள்ளையாரை மரத்தோடு வலம் வந்து வணங்கி வருதலால் நன்மை அடைவர். சர்வதஜா என்ற ஆடுகளுக்கு உரித்தான லோகத்திலிருந்து வந்த செவ்வாய் பகவான் ஆடு வடிவத்தில் ஸ்ரீஅத்திகிரி கணபதி மூர்த்தியை வணங்கி அருள் பெறும் காட்சியையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். உடலில் தோன்றும் சூட்டிற்கு அதிபதியே செவ்வாய் பகவான் ஆவார். மனிதன் உயிர் துறந்த பின் உடலை விட்டு முதலில் நீங்குவது மூச்சுக் காற்றே என்றாலும் அந்த மூச்சுக் காற்று நீங்கியதை அனைவராலும் உறுதி செய்ய முடியாது. ஆனால், சூடு நீங்கி உடல் சில்லிட்டு இருப்பதை அனைவரும் உணர முடியும் அல்லவா ? இந்த உடல் சூடே தம்பதியருக்கு இடையே தோன்றும் ஒற்றுமைக்கும், பெண்களின் மாதவிடாய் முறையாக அமைவதற்கும், சந்ததி விருத்திக்கும் துணையாக நிற்பதாகும்.

ஸ்ரீவனமாலினி பேரூர்

இப்போது தெரிகிறதா அனைத்திற்கும் மலையாய், மாமலையாய், அத்திகிரியாய் நிற்கும் பிள்ளையார் மூர்த்தியின் அனுகிரகம். புரியாத குழப்பமான சூழ்நிலையில் ஒருவர் இருக்கும்போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது என்பார்கள். அதாவது கண்களில் துணி கட்டி இருப்பது சூழ்நிலை புரியாத தன்மையையும், காட்டில் விட்டது திசை தெரியாத தன்மையையும் குறிப்பதாகும். Time space relativity. பேரூர் திருத்தலத்தில் ஸ்ரீவனமாலினி என்ற தேவி அபூர்வமாக உறைவதால் இத்தகைய காலம் தூரத்தால் ஏற்படும் குழப்பங்களை தீர்க்கும் இரு இறை மூர்த்திகளும் ஒரே இடத்தில் அமைவது என்பது பூலோக மக்கள் பெற்ற எத்தகைய பேறு ? இருட்டு என்பது சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் போவதால் மட்டும் ஏற்படும் நிலை அன்று. அடர்ந்த காட்டில், இருண்ட குகைகளில், கடலின் அடியில் என்றவாறாக இருண்ட சூழ்நிலைகளை மனிதன் சந்திப்பதுபோல் புரியாத பல சூழ்நிலைகளும் இருட்டை உருவாக்குகின்றன. இருட்டு எத்தகைய தன்மையை உடையதாக இருந்தாலும் பேரூரில் விளங்கும் இவ்விரு ஜோதி மூர்த்திகளுக்கும் அதாவது ஸ்ரீஅத்திகிரி கணபதி மூர்த்திக்கும் ஸ்ரீவனமாலினி தேவிக்கும் பசு நெய் தீபங்களை ஒன்பதிற்குக் குறையாமல் ஏற்றி வருவதால் எத்தகைய இருட்டு சூழ்நிலைகளும் பக்தர்களுக்கு சாதகமாக அமைய இறைவன் அருள் செய்வார். உதாரணமாக ஒரு மின்னலின் ஒளி பிரகாசத்தை கன இருளில் இரசிப்பது போல் பட்டப் பகலில் அனுபவிக்க முடியாது அல்லவா ? இதை உணர்ந்து கொண்டால் அனைத்தும் ஒளி மயமே. ஆகவே, இருளும் தேவையே, lock down அவசியமே. வனமாலினி என்றால் இருளை, அறியாமையை ஆபரணமாக அணிந்திருப்பவள் என்ற பொருளும் உண்டு. எப்படி நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேய மூர்த்தி இல்லறத்திற்கு நல்லறம் சேர்க்கும் இறை மூர்த்தியாகத் துலங்குகிறாரோ அதே போல இந்த மாய இருள் சூழ்ந்த வனமாகிய உலகில் நம்மை மாயையிலிருந்து விலக்கி ஒளிமயமான இறைவனை தரிசனம் செய்ய வழிகாட்டி அருள்பவளே பேரூர் வனமாலினி தேவி ஆவாள். தீபத்திற்கு உகந்த சுத்தமான பசு நெய் கிடைக்காதபோது அல்லது நெய் தீபங்கள் ஏற்ற முடியாத நிலையில் நிலக்கடலை, பசும்பால் கலந்த தேங்காய் பர்பிகளை அல்லது வறுத்த தேங்காய் துருவல் கலந்த ரவா உருண்டைகளை 21ன் மடங்கில் தானம் அளித்தலும் சிறப்பே. தோலில், வயிற்றில் ஆறாத இரணங்கள் ஏற்பட்டு வருந்துவோரும் இத்தகைய தானங்களால் நலமடைவர்.

கோடியக்கரை

ஒரு முறை பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார் நம் சற்குருவைத் தேடி வந்தார். பரம்பரையாக தென்னந்தோப்புகள் வைத்து தேங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அவர். விதை தேங்காய்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, தென்னை மரங்களை எந்த இடைவெளியில் நட வேண்டும், இவற்றில் ஊடு பயிராக எவற்றை எப்படி அமைப்பது, பறித்த தேங்காய்களை எப்படி பாதுகாப்பது போன்ற விவரங்களை எல்லாம் அவருக்கு சுமார் நான்கு மணி நேரம் விவரித்தார் நம் சற்குரு. அவற்றை எல்லாம் கேட்ட அந்த ஜமீன்தாருக்கு ஒன்றுமே புரியவில்லை. சாஷ்டாங்கமாக நம் சற்குருவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்து, “சுவாமி, நாங்கள் பரம்பரையாக தென்னந்தோப்பு வைத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், நாங்களே கேள்விப்படாத பல நல்ல பயனுள்ள விஷயங்களை எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தெரிவிக்கிறீர்களே என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது ...”, என்று கூறினார். இவ்வாறு ஒரு தாவரத்தை எப்படி, எப்போது பயிரிட வேண்டும் என்ற இரகசியங்கள் அனைத்துமே கர்ப்போட்ட இரகசியங்கள் என்றவாறாக நம் மூதாதையர்களால் அருளப்பட்டாலும் இவை அனைத்தையும் வியாபாரப் பொருளாக தற்போது மாற்றி வருவதால் இத்தகைய இரகசியங்கள் குருவாய் மொழியாக தக்க சற்குருநாதர்கள் மூலமாக அறியப்பட வேண்டிய இரகசியங்களாக மாறி விட்டன. கர்ப்போட்ட இரகசியங்கள் என்பவை தென்னை மரத்திற்கு மட்டும் பொருந்தும் என்று கிடையாது கர்ப்பம் தரித்து வம்ச விருத்தி பெறும் அனைத்து உயிர்களுக்கும், மனிதன் உட்பட இது பொருந்துவதே என்பதே சித்தர்கள் உணர்விக்கும் இரகசியம் ஆகும். இந்த கர்ப்போட்ட இரகசியங்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டால் உடலில் உருவாகும் பலவீனத்தால், வியாதிகளால் நிச்சயம் கருச் சிதைவு ஏற்படாது. இந்த இரகசியங்களை குருவாய் மொழியாக தற்போது உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் அருகி விட்டதால் பேரூரில் பிறவாப்புளியை வலம் வந்து வணங்கி கர்ப்போட்ட நாட்களிலும் வியாழக் கிழமைகளிலும், புனர்பூசம் நட்சத்திர நாட்களிலும் அவரைக் காய் கலந்த சாதம் தானம் அளித்தலால் சந்ததிகள் இல்லாமல் வருந்துவோரும், பெண்ணியல் மருத்துவம் (Gynaecology) போன்ற துறைகளில் உள்ள மருத்துவர்களும், மரபு நோய்கள் (hereditary diseases) குறித்த மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பேரும் புகழும் பெறுவர். செவ்வாய்க் கிழமைகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஒன்பது ஏற்றி இந்த பிறவாப்புளி மரத்தை வலம் வந்து வணங்குதலால் இனந் தெரியாத மன நோய்களால், உடல் நோய்களால் வருந்துவோர் தங்கள் நோய்க்கான காரணத்தை உரியோர் மூலம் அறிந்து கொள்வர். சில வீடுகளில் பாத்திரங்கள் நகர்வதும், கீழே விழுந்து உடைவதும் சகஜமாக நடக்கக் கூடிய காரியங்களாக இருப்பதுண்டு. இதனால் பீதி அடைந்து கலங்குபவர்கள் மேற்கண்ட வழிபாட்டை நிறைவேற்றி வருதல் நலம். வழிபாட்டை நடத்துவதற்காக திருத்தலத்திற்கு செல்லும்போதும் வழிபாடு முடிந்த பின்னர் தங்கள் இல்லத்திற்கு திரும்பும்போதும் கால்களில் செருப்பு அணியாமல் மௌனத்தை அனுஷ்டிப்பது நலம்.

ஒரு முறை நம் சற்குருவுடன் ரயிலில் பயணம் செய்த அடியார் ஒருவரை ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே காயத்ரீ ஜபிக்கும்படியும், இது மனத்தை ஒருமுகப்படுத்தும் மந்திரமாக அமையும் என்றும் எடுத்துக் கூறினார். இதுவே சலனத்தில் தோன்றும் சைலம். இதுவே பிறவாப்புளி. இதைச் சற்றே விளக்குவோம். ஸ்ரீஅங்கப்பிரதட்சிண அண்ணாமலை சுவாமிகள் திருஅண்ணாமலையை அங்கப் பிரதட்சிணம் செய்தவாறே வலம் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அருளால் அவர் சமாதி நிலை கொண்டார். ஸ்ரீரமண மகரிஷியோ ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் வழிகாட்டுதலால் நிர்விகல்ப சமாதியில் உன்னதம் பெற்றார். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் நின்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளோ சதா சர்வ காலமும் திருஅண்ணாமலையை வலம் வந்தவாறே சலனத்துடனே திகழ்ந்தார். இதுவே சலனம் சைலம் பற்றிய விளக்கங்கள். சலனம் அடையும் மனதை மற்றச் சலனங்களிலிருந்து நீக்கி இறைவனுடன் ஒன்றும் சலனத்தில் நிலைப்பதே உண்மையில் சலனமில்லாத ஸ்ரீசைலமாகும். இதை அனுகிரகமாக அளிப்பதே பேரூர் பிறவாப்புளி விருட்ச வலமாகும். எண்ணங்கள் பிறவாத நிலையை அளிப்பதே தொடர்ந்து இந்த விருட்சத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் வழிபாடாகும். வேப்ப மரத்தை தொடர்ந்து சுற்றி வந்தால் உடல் சூடு தணியும், உடல் பருக்கும், புளிய மரத்தை தொடர்ந்து சுற்றி வந்தால் உடல் உஷ்ணம் மிகும், உடல் இளைக்கும் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. இது ஓரளவு உண்மையே என்றாலும் தெய்வீக தல விருட்சங்களுக்கு இந்தக் கோட்பாடுகள் சுட்டும் உண்மை வேறானவையே. தொடர்ந்து வலம் வாருங்கள், வெற்றி வாகை சூடுங்கள் !!

சீதாராமா வில்வ விருட்சங்கள்
கோடியக்கரை

பல வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் தாங்கள் புதிதாக வாங்கும் பசு, யானை போன்றவற்றைக் கொண்டு வந்து இத்தல பிறவாப்புளி மரத்தில் கட்டி வைத்து விட்டு ஸ்ரீபட்டீஸ்வரனுக்கு நன்றி செலுத்தி வணங்கி விட்டு மீண்டும் அந்த விலங்குகளை தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய விலங்குகளும் எந்த வித நோய் நொடிகளாலும் பாதிக்கப்படாது சமுதாயத்திற்கு ஒரு அரணாய் விளங்கின. இத்தகைய யானைப் படைகளும் எதிரிகளால் வெல்ல முடியாத வலிமை வாய்ந்தவையாக விளங்கின. பல நூறு வருடங்கள் கழிந்து விட்டாலும் அந்த தெய்வீக சக்திகள் இன்னும் பசுமையாய் இத்தலத்தில் துளிர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இன்றும் பசு மாடுகளை வாங்குவோர் இத்தல பிறவாப்புளி மரத்தில் கட்டி வைத்து வணங்குவதால் நன்னிலை பெறுவார்கள். இத்தல விருட்சத்தை சுற்றி கிட்டும் மண் கலந்த சாணத்தை விபூதி பிரசாதமாகப் பெற்று அவரவர் வசதிக்கு ஏற்றவாறு உரிய கட்டணத்தை உண்டியலில் செலுத்தி பயன்படுத்தி வந்தால் பட்டீஸ்வரன் பஸ்மத்தால் தீராத வியாதிகளே இல்லை, மாயாத பிரச்னைகளும் இல்லை என்பதே நம் முன்னோர் காட்டிய அற வழி. பட்டீஸ்வரன் என்ற நாமத்தைக் கொண்டுள்ளவர்கள் இத்தல கோசாலையிலோ அல்லது வேறு எங்கும் விளங்கும் கோசாலையிலோ தாமரை இலையில் பசுஞ் சாணத்தைப் பெற்று அதில் விபூதி தயார் செய்து ஸ்ரீபட்டீஸ்வரனுக்கு அளித்து மற்றவர்களுக்கு அந்த விபூதி பிரசாதத்தை இலவசமாக அளித்து வந்தால் அத்தகைய நற்காரியத்தால் விளையும் பலன்களை, நிறையும் அனுகிரக சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பட்டீஸ்வரன் என்ற நாமம் அமையாதவர்களும் இத்தகைய நற்காரியங்களை பேரூரிலோ அல்லது கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரத் திருத்தலத்தில் இயற்றுவதும் ஏற்புடையதே. தாமரையின் மேற்பரப்பு சூரிய ஒளியால் நிறைந்திருக்கும், தண்ணீரில் மூழ்கியிருக்கும் பகுதியோ எப்போதும் சந்திரக் குளிர்ச்சியில் திளைப்பதாகவே இருக்கும். கோடிக் கணக்கான ஆண்டுகள் கழிந்தாலும் எந்த இனச் சேர்க்கையாலும் மாசு படாத தன்மை உடையதே தாமரை மலர்த் தாவரம் ஆகும். அதனால்தான் எல்லா இறை மூர்த்திகளும் தாமரையை ஏதாவது ஒரு வடிவில் தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய தாமரை மலர் சாட்சியாக தர்ப்பணம் அளிப்பதோ, தாமரை இலையில் பசுஞ் சாணம் பெற்று விபூதி தயாரித்து வழங்குவதோ, தாமரை இலையில் அன்னதானம் வழங்குவதோ எத்தகைய கிடைத்தற்கரிய பேறு என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

ஜோதிகலை இரகசியங்கள்

யோகத்தில் நாம் அறிந்தது அஷ்டாங்க யோகம் என்ற ஆசனம், பிராணாயாமம் குறித்த யோகம் ஒன்று மட்டுமே. உண்மையில் யோகங்கள் கோடி கோடியே. இதில் ஜோதிகலை யோகம் என்ற அற்புத யோகத்தில் வல்லவரான ஒரு மகானை சென்று தரிசித்து வரும்படி சில ஆஸ்ரம அடியார்களை அனுப்பினார் நம் சற்குரு. இந்த ஜோதிகலை யோகத்தில் வல்லவர்கள் ஓரிடத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தாலே அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஞான சுவாலைகள் பிரகாசிக்கத் தொடங்கும் என்றால் அவர்களின் மற்ற சக்திகளைப் பற்றி நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அந்த அடியார்கள் சென்றபோது அவர்கள் முன்னிலையில் அம்மகான் இரு சித்திகளை அங்கிருந்த மற்றவர்களுக்கு சாதித்துக் காட்டினார். சுமார் பதினைந்து அடி தூரத்தில் இருந்த ஒரு அடியாரை நோக்கி தன் கரங்களை அசைக்க ஒரு ரோஜா மலர் மாலை ஒன்று காற்றில் மிதந்து சென்று அவர் கழுத்தில் கச்சிதமாக அமர்ந்தது. அதில் இருந்த ஒரு பூக்கூட சிதறி கீழே விழவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மற்றோர் இடத்தில் தன் கரங்களை அசைக்கவே பத்து அடி தூரத்திலிருந்து 20, 30 அடி தூரம் வரை இருந்த சுமார் 20, 30 அடியார்களுக்கு சாக்லேட்கள் சென்று விழுந்தன. அந்த சாக்லேட்டுகள் அனைத்தையும் அப்படியே தங்கள் கைகளில் அந்த அடியார்கள் பற்றிக் கொண்டனர். ஒரு சாக்லேட் கூட கீழே விழவில்லை. சாக்லேட் (இனிப்பு), ரோஜா வண்ணம் இவை குரு தத்துவத்தை குறிப்பதுதானே ? இந்த தத்துவங்கள் கீழே சிதறிப் போகாமல் ஒருவர் பற்ற முடிந்தால் அவர் தெய்வீகத்தில் முன்னேறுவார் என்ற தத்துவத்தைக் குறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே மகானின் இத்தகைய அற்புதங்கள். அந்த மகானை சந்தித்து நம் சற்குருவின் உத்தரவைப் பற்றித் தெரிவிப்பதற்காக இரு அடியார்கள் மட்டுமே சென்றனர். ஆனால், அம்மகானோ நம் ஆஸ்ரம அடியார்கள் எட்டு பேருக்கும் அனுகிரகம் வழங்குவதற்காக எட்டு விபூதிப் பொட்டலங்களை அந்த இரு அடியார்களிடம் அளித்தார் என்பதே அம்மகானின் பெருமை. பின்னர் மற்ற அடியார்களிடமும் அம்மகான் இறைவனைப் பற்றியும் நம் ஆஸ்ரம அடியார்களைப் பற்றியும் கூறி விட்டு அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார். ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு காரியத்தில் கை தேர்ந்தவர்கள். எப்படி நாம் பாரத திருநாட்டில் லட்சக் கணக்கான சிவலிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் அவர்கள் அனுகிரகத் தன்மை ஒருவொருக்கொருவர் மாறுபட்ட அம்சத்துடன் துலங்குகின்றதோ அது போல்தான் இறைத் தூதவர்களான மகான்களும். விசிறி சாமியார் என்று புகழப்பட்ட திருஅண்ணாமலை ராம்சூரத் குமார் சுவாமிகள் Environmental pollution என்பதான சூழ்நிலைமாசுகளை நிவாரணம் செய்யும் இறைத் தூதர். அதனால் ஒரு சர்க்கரை ஆலை வைத்திருக்கும் ஒரு ஆஸ்ரம அடியார் உருவாக்கும் சுற்றுப்புற மாசுகளிலிருந்து அவர் நிவாரணம் பெற அவரை ஸ்ரீவிசிறி சுவாமிகளிடம்தான் அனுப்புவார் நம் சற்குரு. ஆனால், இந்த இரகசியங்களை எவருக்கும் நம் சற்குரு தெரிவிப்பதில்லை. அதுபோல உணவின் சுவையை அறிவதற்கு அக்னி தத்துவமும் நீர் தத்துவமும் இணைந்து செயல்படுவதால் இந்த தத்துவத்தில் சிறந்த அந்த மகானிடம் தம் அடியார்களை அனுப்பினார் நம் சற்குரு. ஆனால், எந்த அளவிற்கு அந்த மகான் அளித்த அனுகிரகங்களை நம் அடியார்கள் செயல்படுத்தினார்கள் என்பதே கேள்விக் குறி. அது அந்த மகானுடைய தவறோ நம் சற்குருவின் தவறோ கிடையாது அல்லவா ?

வக்ரகதி தீண்டா வள்ளிமணாளன்

சீடர்கள் தங்கள் அனைத்து தவறுகளையும் திருத்திக் கொள்ள தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவரே நம் சற்குரு. அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் நம் வழியில் திரிவதே சற்குருவின் உத்தம சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய செயல்பாடு. மேற்கூறிய எட்டு அடியார்களில் தன்னுடைய சொல் பேச்சைக் கேட்காத ஒரு அடியாரையும் பேரூர் பிறவாப்புளி நிழல் அனுகிரகத்தை பெறச் செய்ததே நம் சற்குருவின் கருணை மழைக்கு சான்று ஆகும். ஒரு வேளை அந்த அடியார் நம் சற்குருவின் சொல்படி கேட்டு நடந்திருந்தால் அவர் வானில் பிரகாசிக்கும் தாரகையாக அல்லவா மாறி பிரகாசித்திருப்பார் ? இது ஒரு புறம் இருக்க, சார்வரி, 2020, ஜோதிகலை என்ற மூன்று நான்கு எழுத்து சக்திகள் (3x4=12) இணையும் வருடமாக இவ்வருடம் அமைவதால் இவ்வருடம் முழுவதும் தாமரை இலைகளின் மேல் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் பெருமாள்மலை, பேரூர், திருஅண்ணாமலை பித்ரு முக்தி தீர்த்தம், கும்பகோணம் சர்க்கரைப் படித்துறை, சீயாத்தமங்கை, வேதாரண்யம் போன்ற திருத்தலங்களில் அளித்தல் கற்பனைக்கு எட்டாத பாக்கியமே. இத்தகைய மூவிலை சிறப்புகளுக்கு அணி சேர்ப்பதாக அமைவதே வரும் 21.6.2020 ஞாயிற்றுக் கிழமை காலையில் அமையும் சூரிய கிரகண வைபவமாகும். அன்று மாலை மேற்கூறிய முறையில் தானம் அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகமே. பொதுவாக ஒரு கிரகம் வக்ர கதியில் அமைந்தாலே அதன் பலன்களை நன்முறையில் பயன்படுத்துவது என்பது பிரம்ம பிரயத்னமே. அவ்வாறு இருக்க வரும் மூவிலை சூரிய கிரகண சமயத்தில் புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன் என்ற நான்கு கிரகங்களும் வக்ர கதியை அடைய இந்த வக்ர சக்திகள் ஏற்கனவே வக்ர கதியில் சுழன்று கொண்டிருக்கும் ராகு கேது மூர்த்திகளின் வக்ர கதிக்கு உட்பட்டு கால சர்ப்ப யோகத்தில் சிக்கி மறைகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த ஆறு கிரகங்களின் வக்ர கதியை ஈடுசெய்யும் வண்ணம் வரும் சூரிய கிரகண வழிபாட்டை வேதாரண்யம் என்ற ஆறெழுத்து யோக சக்திகள் பூண்ட திருத்தலத்தில் நிறைவேற்றி இவ்வுலக மக்களை தீய சக்திகளிலிருந்து காத்தருள பெருங்கருணை பூண்ட நம் சற்குருவின் திருப்பாதங்களில் நன்றியை அர்ப்பணிப்பதைத் தவிர வேறு எதையும் நாம் காணிக்கையாக செலுத்த முடியுமா ? இந்த சூரிய கிரகணமானது சூரிய பகவானுக்கு உகந்த சிம்ம ராசியில் ஆரம்பித்து அதிலேயே பெரும்பங்கு நேரம் கழிகின்றது என்பதே இந்த சூரிய கிரகணத்தின் அதிசய தன்மையாகும்.

ஸ்ரீகணபதி லிங்கம் கோடியக்கரை

கோளறு பதிகம் என்ற நவகிரகங்களையும் வாழ்த்தும் தேவாரப் பதிகம் தோன்றிய தலம் திருமறைக்காடு என்னும் வேதாரண்யமே. இதன் பின்னால் அமைந்த இரகசியங்கள் சிறப்பு வாய்ந்தவையே. கோள் அறு பதிகம் என்றால் கோள்கள் என்ற நவகிரகங்களால் தோன்றும் வினைகளை, இடர்பாடுகளைக் களையும் தேவாரப் பாடல் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும் ஆறு கோள்களும் வக்ர கதியை அடைய அதனால் இவ்வுலகில் தோன்றும் தீய சக்திகளை வேரறுக்கும் ஒரு பதிகத்தை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தர் படைத்தார் என்றால் இறை அடியார்களாகிய நம்மேல் உள்ள கருணைக்கு எப்படித்தான் நன்றி செலுத்த முடியும் ? ஆதிசேது தீர்த்தத்திலோ, வேதாரண்யம் கடல் பகுதியிலோ அல்லது எந்தத் திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் இந்த மூவிலை சூரிய கிரகணம் அன்று நீராடினாலும் ஸ்ரீதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய கோளறு பதிகம் பாடல்களை ஓதியவாறே நீராடுதல் சிறப்பாகும். அடியார்களையும் அவர்கள் சந்ததியைச் சேர்ந்த எத்தனையோ தலைமுறைகளைக் கரை சேர்க்கும் அற்புத சக்தி வாய்ந்த துதி இது. ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய பண்ணின் நேர்மொழியாள் ... என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகத்தை ஓதுதலும் சிறப்புடையதே. சிவபெருமானின் திருக்கரங்களில் பொலியும் சக்தி ஆயுதத்தை மூவிலை வேல் என்றும் புகழ்வதுண்டு. இத்தகைய அபூர்வ மூவிலை சக்திகள் பெருகும் தினமாக வரும் 21.6.2020 அன்று அமைவதால் ஆதிசேது, வேதாரண்யம் கடல், கோயில் தீர்த்தமான மணிகர்ணிகை இம்மூன்றிலும் நீராடுதல் என்பது வாழ்வில் ஒரு முறையே கிட்டும் மகத்தான பேறு என்பதால் இதைப் பக்தர்கள் தவற விடாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறைந்த பட்சம் இந்த தீர்த்தங்களை தலையில் தெளித்துக் கொள்வதையாவது இந்த தீர்த்தங்களால் தயாரித்த பிரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்வதையாவது நிறைவேற்றுவது இந்த ராகவேந்திர ஆண்டில் மலரும் அற்புத சந்தர்ப்பமாகும். சப்த விடங்கத் தலங்களுள் திருமறைக்காடு திருத்தலமும் ஒன்றாகும். சப்தம் என்றால் ஏழு ஸ்வரங்களால் உண்டாகும் சப்தம் என்றும் ஏழு என்ற எண்ணிக்கையை மேலோட்டாகக் குறிப்பதாகக் கொண்டாலும் கோடி கோடி பொருள் பொதிந்த அர்த்தங்களுடன் துலங்குவதே சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான வேதாரண்யமாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் கோடியக்கரை

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோடியக்கரை

ஒலி சக்திகள் வேத உருக் கொண்டு வேதாரண்யம் திருத்தலத்தில் ஆலய மணிக் கதவின் அருகில் எத்தனையோ ஆண்டுகளாக காத்துக் கிடந்தன. அந்த தெய்வீக ஒலி தேவதைகளுக்கெல்லாம் விமோசனம் தந்து அவைகளைத் தங்களுடன் இறை தரிசனத்திற்காக அழைத்துச் சென்று சப்த விடங்கரான தியாகராஜப் பெருமானின் ஹம்ச நடனக் காட்சியைப் பெற்றுத் தந்த பெருமை ஸ்ரீஅப்பர் சுவாமிகளையே சாரும். இந்த ஒலி விடங்க சக்திகள் எல்லாம் மற்ற உயிர்களுக்கெல்லாம் அமிர்தப் பிரசாதமாக அருளும் அனுகிரக தன்மையையே ஸ்ரீதிருஞானசம்ப மூர்த்தி நாயனார் இந்த திருக்கதவைத் தாழிடும் திருப்பணியாக நிறைவேற்றினார் என்பதே நம்மைப் போன்ற பாமர பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும். ஸ்ரீஅகத்திய பெருமான் ஏழு கடல்களையும் ஒரு துளியாக்கி தன் உள்ளங்கையில் வைத்து அருந்தியதும் இந்த திருமறைக்காடு என்னும் சப்த விடங்கத் தலத்தில்தான். இந்த சப்த சக்திகளையும் பிரபஞ்சம் அனைத்திற்கும் அந்தந்த ஜீவராசிகளின் தன்மைக்கேற்ப அனுகிரக சக்திகளாக மாற்றி வர்ஷிக்கும் முகமாகவே சிவபெருமான் தன் திருமணக் காட்சியை ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு இத்தலத்தில் நல்கினார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியமாகும்.
ஹம்ச ஹம்சாய வித்மஹே
பரம ஹம்சாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
என்று சிவபெருமானுக்கு ஹம்ச நாயகன் என்ற பெயர் துலங்கிய இத்திருத்தலமே ஹம்ச நடனம் என்னும் திருநடனத்தை ஈசன் அனைவருக்கும் குறிப்பாக ஸ்ரீஅகத்தியருக்கு திருமணப் பரிசாக வழங்கிய திருத்தலமாக பின்னர் பொழிந்தது. விடங்கர் என்றால் குறுகிய பாதை அல்லவா ? வேத சக்திகள் சப்த ஸ்வர தேவதைகளாக மாறி சிவபெருமானின் ஹம்ச பாதத்தில் உறையும் பேறு பெற்ற தலமே திருமறைக்காடு ஆகும்.

வாரணாசியில் மணிகர்ணிகை என்ற தீர்த்தக் கட்டம் கங்கைக் கரையில் உண்டு. இது மயானப் பகுதியே. இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் சிவபெருமானே அவர்கள் காதில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதி அவர்களை முக்திப் பாதையில் இட்டுச் செல்கிறார் என்பது உண்மையே. ஆனால், இவ்வாறு முக்திப் பாதைக்கு வழிகாட்டப் பெற்ற அடியார்கள் எந்த அளவிற்கு இந்த கிடைத்தற்கரிய அபூர்வ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நம் சற்குரு அறிவித்த இரகசியங்களை, பேரூர் திருத்தலத்தில் சிவபெருமான் அருளும் முக்தி பற்றிய இரகசியங்களை மீண்டும் ஒரு முறை படித்து தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் முக்தி என்பது எத்தனையோ கோடி கோடி பிறவிகளில், ஜன்மங்களில் முயற்சி செய்து பெற வேண்டிய ஒரு இறைப் பொக்கிஷமாகும். ஸ்ரீஆதிசங்கரர் என்ற அத்வைத ஞானி காசி மணிகர்ணிகா படித்துறையில் நீராடி விட்டு வரும்போது சிவபெருமான் நான்கு வேதங்களை நாய்களாக பற்றிக் கொண்டு வந்து அவர் மேல் இடிக்க ஸ்ரீஆதிசங்கரர், “ஏய் சண்டாளா, என்னை இடித்து விட்டாயே ?” என்று பதறிக் கூற சிவபெருமானோ அமைதியாக, “சுவாமி, நான் உங்களை இடித்தேனா, இல்லை உங்கள் ஆன்மாவை இடித்தேனா ?” என்று கேட்டு ஆதிசங்கர பகவத்பாதாளுக்கே அத்வைத ஞானம் புகட்டிய வரலாறு நீங்கள் அறிந்ததே. இதே போன்ற கிடைத்தற்கரிய சந்தர்ப்பம்தான் இந்த ராகவேந்திர வருடமும், பேரூர் திருத்தலமும், வேதாரண்யம் திருத்தலத்தில் அமையும் மணிகர்ணிகை தீர்த்த நீராடலும், திறவா மணிக் கதவுகளின் தரிசனமும். மணிகர்ணிகை என்ற நாமமே பல கோடி இரகசியங்களைப் புகட்டும் பதமாகும். காதில் அணியக் கூடிய மதிப்பு வாய்ந்த அணிகலன் என்பது இதன் மேலோட்டமான பொருள் என்றாலும் ஒரு மனிதன் காதில் அணியக் கூடிய பொருள்களில் ஒப்பற்றது, விலை மதிப்பற்றது, எந்த உலகிலும் கிடைக்காதது இறைவனின் முக்தி உபதேசம்தானே. இதை அளிக்கவல்லதே இந்த வருடம் அபூர்வமாக அமையும் மூவிலை சூரிய கிரகணமாகும்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சிவபெருமான் காசியில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தக் கட்டத்தில் அளிக்கும் ஞான உபதேசத்தை எத்தனை பேர் பயன்படுத்தி உயர்நிலை அடைகிறார்கள் என்பது நாம் அறியாதது என்றாலும் வரும் சூரிய கிரகணம் அன்று கிட்டும் அரிய சந்தர்ப்பத்தை ஒவ்வொரு அடியாரும் பயன்படுத்தி தங்களை முக்தி நிலைக்கு உயர்த்திக் கொள்ள விழைகிறார் நம் சற்குரு என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிதிலும் அரிய குரு கருணையாகும். ஹம்ச இரகசியம், சிதம்பர இரகசியம், பிரணவ இரகசியம் என்று முக்தி நிலைக்கு வழிகோலும் பல இரகசியங்கள் உண்டு. இவற்றில் ஹம்ச இரகசியம் மூலம் முக்தி அடைய வழிகோலுவதே வேதாரண்ய திருத்தலமாகும். வேதம் என்பது வாய்விட்டு இறை சக்தியை ஓதும் வழிபாடே. இவ்வாறு ஹம்ச காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது சப்தம் உரு பெறத் தேவையான சப்தஸ்வர தேவதைகளும் இந்த ஹம்ச துதியில் ஏழு முறை இடம் பெறுவதே இந்த ஹம்ச துதியின் தெய்வீக அம்சமாகும். ஸ்ரீஅகத்திய பிரான் வேதாரண்யம் திருத்தலத்தில் எம்பெருமானின் திருமணக் கோலத்தை தரிசனம் செய்யும் பாங்கில் இத்தகைய தெய்வீக அனுகிரகங்களும் பக்தர்களுக்கு கருணை மழையாய்ப் பொழிகின்றன என்பதே நாம் சற்றே ஆழ்ந்து சிந்தித்தாலும் அறியப்படுவதாகும். திருநாவுக்கரசு நாயனார் அவர்கள் பண்ணின் நேர்மொழியாள் என்ற துதியை இத்திருத்தலத்தில் பாடி அடைத்திருந்த மணிக் கதவைத் திறந்தார் என்றாலும் இதன் பின்னணியாகத் திகழ்வதே இந்த ஹம்ச சக்தியை அனைத்து பக்தர்களுக்கும் விநியோகம் செய்யும் தன்னலம் கருதா தகை சார்ந்த பணியாகும். ஆனால், இது என்றோ நடந்த அற்புதம் கிடையாது. இறை பக்தியில் திளைக்க விரும்பும் அடியார்களுக்கு இன்றும் கிட்டும் சித்த பிரசாதமே என்று உறுதி செய்வதே அப்பர் சுவாமிகளின் துதியை பூர்விகல்யாணி ராகத்தில் இசைத்தலாகும். வரும் மூவிலை சூரிய கிரகணத்தில் ஆறு கிரகங்கள் வக்ர கதியில் இயங்குகின்றன. தலத்தின் பெயரோ வேதாரண்யம் என்ற ஆறு எழுத்து நாமமாகும். இந்த ஆறு அட்சரங்களே பூர்விகல்யாணி ராகத்தின் ஆரோகண அட்சரங்களாக அமைகின்றன. வேதாரண்யம் திருத்தல நாமம் திருமறைக்காடு என்றும் வழங்கப்படும். இந்த ஏழு எழுத்துக்களே பூர்விகல்யாணி ராகத்தின் அவரோகண அட்சரங்களாகும். ராகு கேதுக்களின் வக்ர பிடியில் அனைத்து கிரகங்களின் சிக்கித் தவிப்பதால் இதிலிருந்து மோட்சம் பெரும் திருவிளையாடலாக பூர்விகல்யாணி என்ற வக்ர ராகத்தில் அப்பர் பெருமானின் தாழ் திறக்கும் தேவாரத் துதியை ஓதுமாறு நம் சற்குரு பணித்தார் என்றால் சற்குருவின் கருணைக்கு எல்லைதான் உண்டோ ? இந்த ஞான சக்திகள் பூர்ணம் பெறுவது மணிகர்ணிகை, பூர்விகல்யாணி என்ற ஆறெழுத்து ஏழெழுத்து சக்திகளால்தான் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அடுத்த சித்த அஸ்திரமாகும்.

ஸ்ரீவழிகாட்டி விநாயகர் வேதாரண்யம்

வேதாரண்யம் அருகில் உள்ள ஆறெழுத்து திருத்தலமே கோடியக்கரை சிவத்தலமாகும். இங்குள்ள முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும் ஆறு கரங்களுடனும் தரிசனம் தந்து அருள்புரிகின்றார். வரும் மூவிலை சூரிய கிரகணம் அன்று வழிபாடுகள் மேற்கொள்ளும் முன் இந்த அபூர்வ சக்தி வாய்ந்த முருகப் பெருமானை தரிசனம் செய்து உத்தரவு பெறுதல் சிறப்பாகும். குருவே குகனாய் அருளும் முருகனே கோடியக்கரை முருகப் பெருமான் ஆவார். குகனே குருவாய் அருள்வான் என்பதும் பொருத்தமுடையதே. குரு பகவான் ஆட்சி கொள்ளும் மீன ராசியில் முருகப் பெருமானை அதிதேவதையாகக் கொண்ட செவ்வாய் பகவான் சூரிய கிரகணம் அன்று எழுந்தருள்கின்றார். சனீஸ்வரன், குரு பகவான் நவகிரக மூர்த்திகள் ஒருபுறமும், சுக்கிரன், புதன் என்ற வக்ர கதி கொண்ட நவகிரக மூர்த்திகள் செவ்வாய் பகவானுக்கு மறுபுறமும் திகழ இவ்வாறு வக்ர கதி கொண்ட நான்கு (ஆறு) மூர்த்திகளுக்கு நடுநாயகமாக செவ்வாய் பகவான் எழுந்தருளி இருப்பதால் இந்த மூவிலை கிரகணம் அன்று கோடியக்கரை ஸ்ரீமுருகப் பெருமானை தரிசனம் செய்து பாரிஜாதம் என்று அழைக்கப்படும் படத்தில் காட்டியுள்ள வெள்ளை மலர்களால் ஸ்ரீமுருகப் பெருமானை அர்ச்சித்து கிரகண வழிபாட்டை ஆரம்பித்தல் சிறப்பாகும். ஸ்ரீமுருகப் பெருமான் இத்தலத்தில் ஒரு முகத்துடனும் ஆறுகரங்களுடனும் எழுந்தருளி இருப்பதற்கு எத்தனையோ தெய்வீக காரண காரியங்கள் இருந்தாலும் கிழக்கே உதயமாகும் சூரிய கதிர்கள் கோடியக்கரை ஸ்ரீமுருகப் பெருமானை தரிசனம் செய்த பின்னரே தங்கள் ஆறு கோடி சூரியக் கதிர்களை விஸ்தீரணம் செய்கின்றன, சூரிய சக்திகளை பரப்பி நல்லருள் புரிகின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இதுவரை நீங்கள் அறியாத தெய்வீக இரகசியமாகும். இந்த ஆறு கோடி சூரிய கிரணங்களில் சந்திர சக்திகள் ஆறுகோடி பிரதிபலிக்கின்றன என்பதால் இந்த 12 கோடி கிரணங்களையே 12 சூரிய நாமாவளிகளால் துதிக்கின்றோம். இதுவே அர்த்தநாரீஸ்வர தத்துவம், சிவ சக்தி ஐக்ய தத்துவம். ஸ்ரீஅகத்திய பெருமான் இவ்வாறு 12 கோடி சிவ சக்தி ஐக்ய கதிர்களுடன் திகழும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசனம் செய்த பின்னரே எம்பெருமான் சிவபெருமானின் திருமணக் காட்சியை தரிசனம் செய்யும் திவ்ய நேத்ர சக்திகளைப் பெற்றார் என்றால் பெருமானின் திருமணக் காட்சி எத்தகைய புனிதமுடையதாக இருக்கும். ஸ்ரீமுருகப் பெருமான் தன்னுடைய ஆறு கரங்களில் ஏந்தும் அமுதகலசம், நீலோத்பலம், செந்தாமரை, அபய முத்திரை, வஜ்ராயுதம், வேல் என்ற ஆறு ஆயுதங்களும் அடிப்படை சூரிய சக்திகளைக் குறிக்கின்றன. கண்களில் பூ விழுதல், மாலைக் கண் போன்ற எத்தகைய கண் நோய்களையும் தீர்க்கக் கூடிய அற்புத தரிசனம் இது. “கொடியேன் கண்கள் கண்டன,” என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இந்த 12 தெய்வீக சக்திகளையும் புகழ்ந்து இத்தலத்தில் பாடுகின்றார். மேற்குறித்த வார்த்தைகளில் இடம்பெறும் கண், கண் என்பவையே கண் நோய்களைத் தீர்க்கும் ஆலவாய் அப்பன் சக்திகள்.

தூங்காவில்வம் என்னும் மூலிகை சக்தி பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். தூங்காவில்வம் என்பதற்கு எத்தனையோ தெய்வீக விளக்கங்கள் இருந்தாலும் உத்தராயண புண்ணிய காலத்தில் சப்தமி திதி அன்று காலையில் எட்டு மணி முதல் பத்து மணி வரையில் கிழக்கு திசை நோக்கி பறிக்கும் வில்வமே தூங்காவில்வம் எனப்படும். தற்காலத்தில் இத்தகைய நியதிகளுடன் கூடிய வில்வ தளங்களை பெறுதல் சாத்தியம் இல்லை என்றாலும் சப்தமி திதிகளில் இறைவனுக்கு குறிப்பாக ஸ்ரீகோடியக்கரை ஈசனுக்கு வில்வ தளங்களை சாற்றி அந்த வில்வ தளங்களை பிரசாதமாகப் பெற்று கண்களில் வைத்து ஒரு வெள்ளைத் துணியால் கட்டி உறங்கி வந்தால் எத்தனையோ கண் கோளாறுகள் அகலும். பலவித உடற்கூறு பிரச்னைகளால், மனோ பீதி, பயத்தால் தூக்கம் வராமல் அவதிப்படுவோரும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். கண்ணேறு நோய்கள் தீர்வு பெறும். இவ்வாறு பிரசாதமாகப் பெற்ற வில்வ தளங்களை ஒரு வருடத்திற்குக் கூட பயன்படுத்தி வரலாம் என்பதே வில்வ சாரத்தின் மகிமையாகும். இத்தகைய வில்வ சார பிரசாதத்தை சூரிய கிரகண நாட்களிலும் சப்தமி திதிகளிலும் அடியார்களுக்கு தானமாக அளித்தல் சிறந்த வழிபாடே. கொடிய வறுமையையும் தீர்க்கும் செழுமையான வழிபாடு இது.

திருமறைக்காடு திருத்தலத்தில் பொலியும் மூவிலை சக்திகளைப் பற்றி அகத்திய கிரந்தங்கள்,
மூவிலை சக்தியை முறையுடன் பயின்றால்
தேயிலை இல்லாத தகைமையைப் பெறுவாரே
என்று தெய்வீகத்தில் தொடர்ந்து முன்னேற நினைப்பவர்கள் இத்தலத்தில் முறையாக வழிபாடுகளை இயற்றி வந்தாலே போதும் என்று பறைசாற்றுகின்றன. இத்தகைய மூவிலை வழிபாடுகளில் ஒன்றே ஆதிவாரமான ஞாயிற்றுக் கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரைக்குள் ஆதிசேது தீர்த்தத்தில் நீராடி வழிபாடுகள் இயற்றியும், காலை ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் வேதாரண்யம் கடல் தீர்த்தத்தில் நீராடி வழிபாடுகள் இயற்றியும், காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடியும் இறை மூர்த்திகளைத் தொழுதலால் கிட்டும் பலன்கள் என்றும் உயர்வைத் தருபவையே என்பதே சித்த நாடிகள் கூறும் இரகசியம் ஆகும். இத்தகைய சப்த விடங்கத் தலங்களில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த வழிபாடுகள் பற்றி சித்தர்களின் மாமறை கிரந்தங்கள் உரைப்பதென்ன ? சப்த விடங்கத்திற்கு துணை சேர்க்கும் சங்கம் என்பதாக வரிசைக்கு ஏழு பக்தர்களாக நின்று கொண்டு ஆதி வாரமாகிய ஞாயிறு அன்று மதியம் மூன்று மணி அளவில் ஆரம்பித்து குறைந்தது இரண்டரை நாழிகை (ஒரு மணி நேரம்) சங்கு நாதம் எழுப்புவது ஓர் அற்புத வழிபாடாகும். இந்த சங்க நாதத்தை அவரவர் விரும்பும் எந்த முறையிலும் எழுப்பி தங்கள் ஆனந்தத்தை, இறை பக்தியை, சாந்தம் தவழும் அமைதியை ஏற்படுத்தலாம் என்பதே சித்தர்களின் பரிந்துரை, இதையே சங்கம் வளர்த்த தமிழ் என்றும் கூறுவர். அதாவது தமிழும் அன்பும் ஒன்றே, வேறல்ல. இந்த மூவிலை வழிபாட்டின் மற்ற அம்சங்களை அவரவர் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்வதே உத்தமம்.

சங்கம் வளர்த்த தமிழ்

மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி தமிழின் பெருமை நம் பாரத நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் பரவ நம் முன்னோர்கள் தொண்டு செய்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. இங்கு நாம் குறிப்பிடுவது கடலின் முதல் தாவரமான சங்கு பூச்சிகள் தமிழ் என்னும் அன்பை உலகில் பெருக்குவதற்காக வெளியிட்ட தியாகத்தைப் பற்றிய சிறப்பாகும். தமிழ் என்ற சொல்லே வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற அனைத்து சொற்களின் தொகுப்பாக விளங்குவதைப் போல் உலகில் துலங்கும் அனைத்து தூய சக்தியின் சொல்லாக்கத்தைப் பெற்றதே சங்கு நாதமாகும். வாழ்வின் முழுமையைக் குறிப்பதே சங்கு நாதமாகும். சங்கு ஊதத் தெரியாதவன் மந்திக்கு சமம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இன்றோ மக்களின் இறுதி ஊர்வலத்தின்போது ஊதும் சங்கு நாதத்தையே தவறாகப் பொருள் கொள்ளும் அளவிற்கு சங்கின் “மகிமை” தாழ்ந்து விட்டது.

திருத்தவத்துறையில் சங்கு பூஜை

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

இறுதி ஊர்வலத்தில் சங்கு நாதம் எழுப்புவது என்பது தற்போது பாடை மேல் போகும் இந்த மனிதன் தன் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவன், அவ்வாறு ஒரு வேளை இவன் முழுமையான வாழ்வைப் பெற்றிருக்கா விட்டாலும் இப்போது நாம் எழுப்பும் சங்கு நாதம் நிச்சயமாக அவனுக்கு ஒரு முழுமையான நல்ல நிலையைத் தேடித் தரும் என்ற உறுதிப்பாட்டை வழங்குவதாகும். தினசரி பிரார்த்தனையின் போது, பூஜைகளின் போது அதில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அதைக் களைந்து பூஜையை நிறைவு பெறச் செய்வதே சங்க நாதமாகும். எனவேதான் சங்கு அறுக்கும் பணி என்பது மிகச் சிறந்த பணியாகவும் அதில் ஈடுபட்ட நக்கீரர் போன்ற பெருமான்கள் மக்கள் சமுதாயத்தில் உன்னத இடத்தைப் பெற்று, “சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம் ?” என்று ஈசனையே கேள்வி கேட்கும் அளவிற்கு உயர்ந்த நிலையைப் பெற்றனர். ஒரு பக்தன் எத்தனை மொழிகளைக் கற்றிருந்தாலும் அவர் சங்கு நாதம் எழுப்பத் தெரியவில்லை என்றால் அவர் எதுவும் கல்லாதவராகவே சான்றோரால் மதிக்கப்படுவார். இதுவரை எப்படி வாழ்ந்திருந்தாலும் இனியாவது சங்கம் வளர்த்த தமிழராய் வாழ்வோம் என்று உறுதி பூண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை மூன்று மணி அளவில் திருமறைக்காடு திருத்தலத்தில் சங்கு நாதத்தை எழுப்புவதைப் பயின்று தொடர்ந்து தங்கள் இல்லங்களில் அல்லது கிரிவலப் பாதைகளில் சங்கு நாதத்தை எழுப்பி இறை வழியில் முன்னேறுமாறு பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறோம். நம் சற்குரு நம் ஆஸ்ரமத்தில் நைவேத்யம் சமர்ப்பிக்கும்போது சங்கு நாதத்தை எழுப்புவார். இது வெறும் சங்கு நாதம் அல்ல, எத்தனையோ உலகங்களை சிருஷ்டிக்கக் கூடியதும் அவ்வாறு உண்டாக்கப்பட்ட லோகங்களுக்கு உணவினை அளிக்கக் கூடிய வல்லமை பெற்றதும் அந்த சங்கு நாதம் என்றால் இது சற்குரு தனக்காக மட்டுமே வைத்துக் கொண்ட திறமையா என்ன ? நிச்சயமாக இல்லை, இல்லை. நம் சற்குருவை வழிகாட்டியாகக் கொண்ட அனைவருமே நிச்சயமாக உயர்வைப் பெறுவர் என்று உறுதிப்படுத்தும் செயலே இது. இதற்கு ஆரம்பப் படிக்கட்டாக அமைவதே திருமறைக்காடு சங்கு நாத பூஜையாகும். அனைவரும் சங்கு நாதம் எழுப்புவோம் ! தரணியை உயர்த்துவோம் !! சேது என்றால் பாலம், ஆதி சேது என்றால் அந்தம் ஆதி இல்லாத இறைவனுடன் மனிதனை இணைக்கும் பாலமாகிய சங்கு தோன்றிய கடல் பகுதி என்று பொருள். எனவே மனிதன் நீராடுவதற்கு இதை விடச் சிறந்த கடல் பகுதி இந்த பிரபஞ்சத்திலேயே வேறு எதுவும் இல்லை என்பதே ஆதிசேது தீர்த்த மகிமை ஆகும். இந்த மகிமையை உலகிற்கு உணர்த்தவே மனிதனாய்த் தோன்றிய ராமபிரான் ஆதிசேது தீர்த்தத்தில் நீராடி அந்த தீர்த்த நீராடல் பலன்களை எல்லாம் உலக மக்களுக்கு அர்ப்பணித்தார் ராம பிரான். ராம பிரானுக்கு சேது என்ற உயர்ந்த நாமம் தோன்றியதன் பின்னணியே இது. ஆதிசங்கம் தோன்றிய மூல நட்சத்திர தினத்தில் நாம் தரிசனம் பெற கருணை புரிந்த நம் சற்குருவிற்கு நன்றியைச் செலுத்த இந்த மனிதப் பிறவி நிச்சயம் போதாது, போதாதே.

அகத்தியான்பள்ளி

ஸ்ரீராமர் பாதம் கோடியக்கரை

சங்குகளில் கோடி கோடி வகைகள் உண்டு. இவைகளுக்கு எல்லாம் ஆதியாக விளைந்ததே ஆதிசேது என்ற சங்கு ஆகும் என்பதே உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். அரிதிலும் அரிதான இந்த ஆதிசேது சங்குகள் தவழும் திருத்தலமே ஆதிசேது என்ற கோடியக்கரை புண்ணிய பூமியாகும். இந்த ஆதிசேதுவில் தோன்றிய சங்குஜீவியையே, சேதுசங்கம், ஆதிசங்கம், ராமசங்கம் என்றெல்லாம் சித்தர்களால் புகழப்படும் தேவசங்கையே ஒரு சாதாரண பூச்சி வடிவில் இங்கு தரிசனம் செய்கின்றீர்கள் என்றால் இந்த ஒரு தரிசனத்திற்கே உங்கள் மூதாதையர்கள் எந்த அளவிற்கு புண்ணிய சக்தியை கோடிக்கரை ஈசனுக்கு சமர்ப்பித்து இருக்க வேண்டும். உப்பின் மகிமையை உலகிற்கு உணர்த்தியவர்கள் யாராக இருந்தாலும் உப்பிட்டவரை உள்ளவரை நினைப்பதே மனிதப் பண்பாடு என்பதை உலகிற்கு உணர்த்தியவரே மனிதகுல மாணிக்கமாகத் தோன்றிய ராமபிரான் ஆவார். ராமபிரான் சீதையைத் தேடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முன் இறைவனின் அனுமதியை வேண்டித் தொழுதார் என்பதை உறுதி செய்வதே ஆதிசேது அமைந்த கடற்கரைப் பகுதியாகும். இந்த கடற்கரைப் பகுதியில்தான் ஆதிசேது என்ற ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தை சங்கு வடிவில் பெறுகிறீர்கள் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்க உண்மையாகும். ஸ்ரீராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் அளித்து ராமபிரான் ராவணனை வெல்ல அருள்புரிந்தார் ஸ்ரீஅகத்திய பிரான் என்பது மட்டும் உண்மையல்ல, ஸ்ரீராமபிரானின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒளி காட்டும் கலங்கரைவிளக்கமாக தோன்றி வழிகாட்டியவரே ஸ்ரீஅகத்திய பிரான் என்றால் மிகையாகாது, அகத்தியான்பள்ளி என்ற திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பிரானின் வழிகாட்டுதலின்படியே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோடியக்கரையில் வழிபாடுகளை இயற்றினார். 1930 என்ற ராகவேந்திர வருடத்தில் இந்த அகத்தியான்பள்ளி திருத்தலத்திலிருந்தே ராஜாஜி உப்பை எடுத்து உப்பு சத்யாகிரகத்தை நிறைவேற்றினார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இந்த உப்பு சத்யாகிரகம் நன்முறையில் நிறைவேற ஆதிசேதுவில் அமைந்த ராமர் பாதத்தை வணங்கி உத்தரவு பெற்றார் என்பதை அறிந்தோர் ஒரு சிலரே.

கோடியக்கரை

கோடியக்கரை கோபுரத்தை தரிசனம் செய்தவாறே அமைந்திருக்கும் இரு வில்வ விருட்சங்களையே சீதாராம வில்வ விருட்சங்கள் என்று சித்தர்கள் வரலட்சுமி சக்திகள் கொண்ட விருட்சங்களாக அழைத்து மகிழ்கின்றார்கள். நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் புகைப்படத்தில் கூட இரண்டு பால் பசுக்கள் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் காட்சி நம்மிடம் லட்சுமி கடாட்சமாக வரும் செல்வங்கள் நிலைத்து நின்று அருள் செய்யும் என்ற தன்மைக்கு சான்றாக அமைகிறது. வறுமையில் உழல்வோரும், அனைத்து தகுதிகள் இருந்தாலும் வரன் கிடைக்காமல் அலைவோரும் இந்த சீதாராம வில்வ மரங்களை சுற்றி வந்து ஆதி சக்தியாக அமைந்த மண் சக்தியால் உருவான கண்ணாடி வளையல்களை இந்த மரத்தடியில் சமர்ப்பித்து சீதாராம பிரசாதமாகப் பெற்று அவற்றை இங்கோ அல்லது தங்கள் ஊரிலோ லட்சுமி திருச்சன்னதிகளில் வெற்றிலை பாக்கு பழம் சேர்த்து தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். நிலையான செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும், வரவுக்கு மீறின செலவுகளால் கலங்கும் குடும்பங்களையும் காக்கும் ஸ்ரீசக்தி வழிபாடே இது. வரலட்சுமி விரத நாட்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும், அனுஷ நட்சத்திர தினங்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலமே. இந்த வில்வ மரங்களை தம்பதிகள் வழிபட்ட பின்னர் ஆலயத்தினுள் சென்று ஒரு திருமுகம் ஆறு கரங்களுடன் திகழும் அபூர்வ முருகப் பெருமானை தரிசனம் செய்தலால் வழிபாடு பூர்ணமடைகின்றது. ஸ்ரீராமர் ஸ்ரீகோடியக்கரை குழகரை தரிசனம் செய்தபின் சீதாபிராட்டியுடன் மீண்டும் இத்தலத்திற்கு வந்து இறை தரிசனத்தை மேற்கூறிய வகையில் முழுமை அடையச் செய்த பின்னர் ராமபிரான் வாழ்க்கையும் லவகுசர்கள் பிறப்பால் பூர்ணம் பெற்றதே என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மனிதப் பிறவியின் மகத்துவமாகும். எனவே ஆதியும் ஆதிசேதுவே, பூர்ணத்திற்கு வழிகாட்டுவதும் ஆதிசேதுவே.

ஹம்சபாத நடனம்

சிவபெருமான் ஒவ்வொரு சப்த விடங்கத் தலத்திலும் திருநடனம் புரிவது ஒவ்வொரு நாமத்துடன் அழைக்கப்படுகிறது. திருமறைக்காடு திருத்தலத்தில் ஆடும் நடனம் ஹம்ச நடனம் என்று புகழப்படுகிறது. ஹம்சம் என்றால் அன்னம். ஹம்ச நடை என்றால் அன்னம் போல் பெண்கள் ஆடும் ஒய்யார நடை என்பது மேலோட்டமான பொருள். இதன் பின்னணியில் அமைந்துள்ள கோடி கோடி அனுகிரக சக்திகளை சித்தர்கள்தாமே அறிவர். அன்னம் என்றால் பாலையும் நீரையும் பிரிக்கும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஆனால், அது உப்பு நீரை நன்னீராக பிரிக்கும் சக்தி உடையது என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. இதற்கு சான்றாக அமைவதே இத்தலத்தில் அமைந்த மணிகர்ணிகை தீர்த்தமாகும். திருக்கோயிலை சுற்றி எல்லா இடங்களிலும் உப்பு நிறைந்த சமுத்திர நீர் நிறைந்திருந்தாலும் மணிகர்ணிகை தீர்த்தத்தில் உள்ள நீர் மட்டுமே சுவையான குடிநீராக அமைந்துள்ளதே என்பதே ஹம்ச நடனம் தெளிவுபடுத்தும் இரகசியமாகும். ஹம்ச நடனம் மட்டும் அன்று இங்கு அளித்துள்ள சப்த விடங்க சக்திகள் குடிகொண்டுள்ள அனைத்துமே உப்பு நீரை நன்னீராக மாற்றும் சக்தி பெற்றவையே என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம்.

ஸ்ரீநவகோடி சித்தர் ஜீவாலயம்
கோடியக்கரை

1. ஆதிசேது கடல் பகுதி
2. வேதாரண்யம் கடல்
3. மணிகர்ணிகை தீர்த்தம்
4. ஸ்ரீநடராஜரின் ஹம்ச பாத நடனம்
5. திறவா மணிக் கதவு
6. வேதாரண்யம் திருக்கோயில் கோபுரங்கள்
7. கோடியக்கரை முருகப் பெருமான்
உதாரணத்திற்காக மட்டுமே சப்தவிடங்க சக்திகள் மிளிரும் இறை சக்திகள் இங்கு குருவருளால் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சப்த விடங்க சக்திகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து வந்தால் முக்தி என்ற பாதைக்கு அவை இட்டுச் செல்பவை என்பது நாளடைவில் புரிய வரும். ஆதிசேது கடல் பகுதியும் திருமறைக்காடு தீர்த்தமும் சில மைல்கள் தூர இடைவெளியிலேயே திகழ்கின்றன என்றாலும் இவ்விரு கடற்பகுதிகளிலும் திளைக்கும் சக்திகள் வேறானவையே. இந்த வேறுபாடுகளை அந்த கடற்பகுதிகளில் விளங்கும் அலைகள் கூறும் புராணங்களை வைத்து இனங்கண்டு கொள்வதே சித்தர்கள் விவரிக்கும் முறையாகும். ஆதிசேது கடல் பகுதியிலும் திருமறைக்காடு கடல் பகுதியிலும் உள்ள கடல் அலைகள் படங்களை நீங்கள் கண்டு தியானம் இயற்றி வந்தால் நாளடைவில் இந்த இரகசியங்களைப் பற்றி ஒரளவு புரிந்துகொள்ளலாம். திருஞானசம்பந்தர் போன்ற இறையடியார்கள் ஒவ்வொரு திருத்தலமாக சென்று இறைவனின் புகழை தோத்திரமாகப் பாடினார்கள் அல்லவா ? ஆனால், இதற்கு முன் இறைவனைப் பற்றி யாருமே பாடவில்லையா என்ன ? யார் இறைவனின் புகழைத் தோத்தரித்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் இறைப் பணியை அயராது என்றும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவையே கடல் அலைகளாகும். இறைவனின் புகழைப் பற்றி பாடுவதோடு மட்டுமல்லாமல் அத்தலத்தில் பெறக் கூடிய அனுகிரக சக்திகளையும், திருத்தலங்களில் பிரத்யேகமாக விளையும் இரகசிய மகிமைகளையும் பற்றி இந்தத் தரங்கங்கள் பாடிக் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே நாம் விவரித்துள்ளது போல் கடல் அலைகள் மட்டுமல்லாது கோயில் தீர்த்தங்களின் மேற்பரப்பில் நாம் காணும் சிறு சிறு அலைகளுமே இந்த இரகசியங்களை தகுதி உடைய அடியார்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றன என்பதே சித்தர்கள் அளிக்கும் சித்தாமிர்தம்.ஆறுகள், நதிகள் போல் பூமியின் மேற்பரப்பில் ஓடும் தீர்த்தங்களைப் போல் காற்று நதிகளும், நீரோட்டங்களும் உண்டு. திருஅண்ணாமலை, பர்வதமலை, திருக்கயிலாயம் போன்ற திருத்தலங்களில் இத்தகைய காற்று நீரோட்டங்களை நன்கு உணர முடியும். ஆனால், இதற்குரிய அதீத சக்திகளை வளர்த்துக் கொண்டோர் ஒரு சில மகான்களே. தரை மட்டத்திலிருந்து ஆறு அடி உயரத்திற்கும், ஆறிலிருந்து 12 அடி உயரம் என்ற கணக்கில் இத்தகைய காற்று நீரோட்ட சக்திகள் பரவெளியில் வியாபித்து உள்ளன. இந்த காற்று நீரோட்ட சக்திகளை உணர்ந்து கொண்டால்தான் அவைகளை கடல் அலை சக்திகளிலிருந்து பிரித்து கடல் அலைகள் கூறும் இரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியும் என்பதால் இத்தகைய சக்திகள் அபூர்வமாகப் பொலியும் வேதாரண்யம் கடல் பகுதியிலும், ஸ்ரீநவகோடி சித்தர் ஜீவாலயத்திலும், ஹம்ச நடனம் பொலியும் ஸ்ரீநடராஜர் திருவடிகளிலும் அமர்ந்து தியானம் புரிவதால் இந்த காற்று நீரோட்ட இரகசியங்களை உணர்ந்து அவற்றை கடல் அலைகள் தோற்றுவிக்கும் ஆரோகண அவரோகண சக்திகளிலிருந்து பிரித்து கடல் அலைகள் கூறும் இரகசியங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். தன் சற்குரு கோவணாண்டிப் பெரியவருடன் வேதாரண்யம் திருத்தலம் சென்ற சிறுவனான வெங்கடராமனுக்கு கருட தரிசனத்தை வேதாரண்யம் கடற்கரையில் காட்டி அப்போதுதான் ஒரு கருடனை தரிசனம் செய்தால் நாராயணா நாராயணா என்று ஆறுமுறை வலது, இடது கன்னங்களிலும் தங்கள் சூரிய விரலால் தொட்டு நாராயண பெருமாளை நினைவு கூர்ந்து நம் பித்ருக்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று பெரியவர் கூறினார். அதே ஞாயிற்றுக் கிழமையும் குருபகவான் ஆட்சி பெறும் மூல நட்சத்திரமும் இணையும் நாளில்தான் நீங்கள் இங்கே கருட தரிசனம் பெறுகிறீர்கள் என்றால் இந்த ஒரு தரிசனத்திற்கே உங்கள் மூதாதையர்கள் என்ன பாடுபட்டிருக்க வேண்டும் ?

வேதாரண்யம், கோடியக்கரை கடல்பகுதிகளில் சப்தவிடங்க ஒலி இரகசியங்கள் பூத்துக் குலுங்குகின்றன என்று கூறுகின்றோம் அல்லவா ? இந்த இரகசியங்களைப் பற்றி தற்காலத்தில் பக்தர்கள் அலைகளிலிருந்து கிரகிப்பது மிகவும் கடினம் என்பதை அறியாதவர்களா நம் முன்னோர்கள். எனவே இன்றைய மனிதனின் இயலாமையை உணர்ந்த திருஞானசம்பந்தர் போன்ற நாயன்மார்கள் தேவாரப் பதிகங்களைப் பாடி இவ்வாறு அலைகள் கூறும் இரகசியங்களைப் பற்றி சாதாரண பக்தர்களும் உணர்ந்து வழிபெற வகை செய்தார்கள். இங்கு அளிக்கப்பட்டுள்ள பண்ணின் நேர் மொழியாள் என்ற பதிகத்தை வேதாரண்யம், கோடியக்கரை போன்ற எந்த திருத்தலத்திலாவது அல்லது கடற்கரையிலாவது அமர்ந்து பாடினால் நிச்சயம் அலைகள் கூறும் இரகசியங்களை உணர முடியும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். ஆனால், இவ்வாறு பூர்விகல்யாணி என்ற வக்ர ராகத்தில் முறையாகப் பாடுவது என்பது பலருக்கும் சாத்தியப்படாதே என்பதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய குறைபாடே. தாயினும் சாலப்பரிந்து இந்த குறைபாட்டையும் களைய முன் வருவதே சித்தர்களின் பெருங் கருணையாகும். இவ்வாறு ராகம் பிசகாமல் பாட முடியாதவர்களும் ஓம் ஹம் என்ற மந்திரத்தை சப்தமாக தங்கள் செவியில் விழும் வண்ணம் ஓதி அந்த சப்த ஒலியை இங்கே அளிக்கப்பட்ட ஒலி அலைகளுடன் ஒருமைப்படுத்தினால் மெதுவே மெதுவே இந்த அலைகள் கூறும் இரகசியத்தை உணர்ந்து கொள்ளலாம். ஒரு வேளை அந்த அளவிற்கு தங்கள் தியான சக்தியை ஒருமுகப்படுத்த முடியாவிட்டாலும், ஒரே இடத்தில் மணிக் கணக்காக அமர முடியவிட்டாலும் இத்தகைய முயற்சிகள் ஆழ்ந்த உறக்கத்தையும் மன அமைதியையும் அளிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பல அடியார்கள் தாங்கள் கனவில் பல வண்ண காட்சிகளைக் காண்பதாகவும், வண்ணச் சித்திரங்களை, யந்திரங்களை தரிசிப்பதாகவும் இதற்கு பலன் கூற முடியுமா என்று கேட்டு இந்த காட்சிகளுக்கெல்லாம் பலன் அறிந்து கொள்ள விழைகின்றனர். உண்மையில் இந்தக் காட்சிகள் எதுவும் கற்பனை அல்ல என்பதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் இந்தக் காட்சிகளை நம்பாமல் கேலி செய்வதும் உண்டு. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் சக்தி அளவிட முடியாது. சூரியனிடமிருந்து ஏழு வண்ணமுடைய ஒளிக் கதிர்கள் வெளிவருவதாக நாம் அறிவோம். அப்படியானால் நாம் ஒரே ஒரு வண்ணத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்று விட்டால் இந்த உலகில் உள்ள மக்களில், பிராணிகளில், தாவரங்களில் ஏழில் ஒரு பகுதி உயிரினத்திற்கு, தாவரங்களுக்கு நாம் அற்புதமாக சேவை ஆற்ற முடியும்தானே ? ஆனால், எவரும் நிறம் பற்றிய அறிவை முழுமையாகப் பெறாததால் அவர்கள் பெறும் இந்த விசாலமான சக்தி நசித்துப் போய் கேலிப் பொருளாகி விடுகிறது. இத்தகைய நிறமாலை தரிசனத்தை அவர்கள் எம்முறையில் பெற்றாலும் அதை மேலும் விருத்தி செய்து கொள்ள உதவுவதே திருமறைக்காடு திருத்தலத்தில் இயற்றும் வழிபாடாகும். தற்காலத்தில் கலப்படம் இல்லாத உணவுப் பொருளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் கலப்பட ஜோதி பெருகி வருவதால் இதிலிருந்து நிவாரணம் பெற வேதாரண்யம் போன்ற திருத்தலங்களில் இயற்றும் வழிபாடுகளும், சற்குரு அருளிய வார வண்ண ஆடைகளுமே கை கொடுக்கும் என்பதை மறவாதீர்கள். நிறம், எண்கள் குறித்த வழிபாட்டை எந்த சப்த விடங்க தலத்தில் மேற்கொள்ளலாம் என்றாலும் ஞாயிற்றுக் கிழமை, அஸ்வினி நட்சத்திரம், ஒன்றாந்தேதி, விஷ்கம்பம், பவ கரணம் போன்ற ஆதி சக்திகள் பெருகும் நாட்களில் இத்தகைய வண்ண வழிபாடுகளை ஆரம்பித்து நிறைவேற்றுதல் நலமே. வார வண்ண ஆடைகளை அணிதலும் தானம் அளித்தலும் வண்ண மலர்ச் சரமாய் பூத்துக் குலுங்கும் என்பது உண்மையே.

ஜல தம்பன திருத்தலம்

அக்னி தம்பனம், வாயு தம்பனம் போன்ற தம்பன சக்திகள், யோக முறைகளைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக அக்னி தம்பனம் என்ற முறையில் அக்னி சக்திகளை தம்பனம் செய்யும் யோகிகள் அக்னி குண்டங்களின் மேல் அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் அக்னி சுவாலைகள் அவர்களைச் சுடுவது கிடையாது. அக்னி எந்த அளவில் உஷ்ணத்துடன் திகழ்ந்தாலும் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவது கிடையாது. சீதாதேவி அக்னி பிரவேசம் செய்தபோது இவ்வாறு அக்னி சக்திகள் தம்பனம் அடைந்ததால் அக்னி தேவதையே புனிதம் அடைந்தது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு அக்னி, வாயு என்று அல்லாது பஞ்சபூதங்களையும் தம்பனம் செய்யும் யோகத்தில் வல்லவர்களையே நாம் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

திறவா மணிக்கதவுகள் திருமறைக்காடு

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

திருமறைக்காடு திருத்தலம் இத்தகைய ஜல தம்பன சக்திகளுடன் திகழ்கிறது என்பதே நம் சற்குரு தெளியப்படுத்தும் சித்த பொக்கிஷம் ஆகும். இந்த ஜல தம்பன சக்திகளே ஹம்ச பாத நடனத்தில் பொலிகின்றன என்பதே நாம் ஹம்ச பாத நடனம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய நடன இரகசியம் ஆகும். ஸ்ரீநடராஜ பெருமானின் நடனக் கோலம் மட்டும் இத்தலத்தில் நீரையும் உப்பையும் பிரிக்கும் ஹம்ச சக்திகளுடன் பொலிகின்றது என்று கிடையாது. நாம் ஏற்கனவே இங்கு அளித்த ஆதிசேது சங்குகளும் இத்தகைய ஹம்ச சக்திகளுடன் பொலிகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மையாகும். நீங்கள் இங்கு காணும் வீடியோ படத்தில் உள்ள ஆதிசேது சங்கு சுவாசிப்பதால் கடல் நீரில் முட்டைகள் தோன்றுவது போல் பார்ப்பதற்குத் தோன்றினாலும் ஜல தம்பன சக்திகளின் வெளிப்பாடே இத்தகைய நீர்க் குமிழ்களை அல்லது காற்று குமிழ்களை உருவாக்குகின்றன என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஜல தம்பன இரகசியங்களாகும். நம் பரமேஷ்டி குரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் இவ்வாறு ஜல தம்பன யோகத்தில் மூழ்கி இருக்கும் அபூர்வ படத்தை நம் சற்குரு நம் ஆஸ்ரமத்தில் வைத்து அடியார்கள் அனைவரும் இத்தகைய ஜல தம்பன யோக சக்திகளைப் பெற அருள்வார்த்தார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இதிலிருந்து கோவணாண்டிப் பெரியவரே சிறுவனுக்கு இத்தகைய ஜல தம்பன யோகத்தை திருமறைக்காடு திருத்தலத்தில் பயிற்றுவித்தார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியெனப் பொலிகின்றது அல்லவா ? நம் சற்குருவின் தாத்தா ஸ்ரீகேசவசந்திரசேனர் நம் சற்குரு நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே இத்தகைய யோகத்தைப் பயில்வதை உணர்ந்திருக்கின்றார். நம் சற்குருவின் அம்மா தினமும் மாலை ஸ்ரீகேசவசந்திரர் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே சென்று கதவைத் தட்டுவார். அறை உள்ளே தாளிடப் படாமல் இருக்கும் என்றாலும் மரியாதை நிமித்தம் யாரும் அவர் அறையை முன்னறிவிப்பு இல்லாமல் திறப்பதில்லை. இதில் இன்னோர் இரகசியமும் உண்டு. பீதாம்பர ஐயர் ஜால வித்தை என்ற ஒரு தந்திர வித்தை உண்டு. பீதாம்பர ஐயர் நான்கு தூண்களைச் சுற்றி ஒரு புடவையைக் கட்டி வைத்து விட்டு நடுவில் பத்மாசனத்தில் அமர்ந்து யோகம் பயில்வார். அத்தகைய சமயங்களில் அவர் உடல் மேலே எழுந்து விதானத்தை தொட்டவாறு நின்று கொண்டிருக்கும். இவ்வாறு தம்பன யோகத்தில் நிலை கொள்ளும்போது பிரான்ஸ் அசிசி சகோதரி, நம் சற்குருவின் தாத்தா போன்ற அனைவருக்கும் உடல் இலேசாகி மேலே எழும்பி விடுவதால் அதைக் காணும் சிறுவர்கள், மனோ பலம் குறைந்தோர் பயந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில்தான் ஸ்ரீபூண்டி மகான் போன்ற பலரும் தங்கள் யோக நிலைகளை யாரும் பார்த்து விடாதபடி மறைத்துக் கொள்கிறார்கள். தனது தாத்தாவின் அறைக்குள் நுழைந்த சிறுவனுக்கு அவன் தாத்தா இரண்டு வாழைப்பழங்களை அளித்து விட்டு தான் பாலை மட்டும் அருந்துவார். சற்று நேரம் கழித்து தாத்தா தன் கைத்தடியை அறையின் கதவை நோக்கி நீட்ட அந்த கதவுகள் திறக்க, திறந்த கதவின் வழியே சிறுவன் சிரித்துக் கொண்டே வெளியேறி விடுவான். அதன் பின்னர் தாத்தா தன் கைத்தடியை அசைக்க மீண்டும் கதவுகள் தானாக மூடிக் கொள்ளும்.

மணிகர்ணிகா தீர்த்தம் திருமறைக்காடு

இவ்வாறு கதவைத் திறந்து மூடிய சக்திகள் ஜல தம்பன சக்திகள் என்பதையும் அதை திருமறைக்காடு திருத்தலத்தில் நிறைவேற்றிய தேவாரப் பெருமக்கள் ஸ்ரீஅப்பரும் ஸ்ரீஞானசம்பந்தரும் என்ற இரகசியம் இப்போது புலனாகின்றது அல்லவா ? இது ஏதோ ஒரு காலத்தில் நிகழ்ந்த அற்புதம் கிடையாது. இன்றும் பண்ணின் நேர்மொழியாள் என்ற பதிகத்தை பக்தி சிரத்தையுடன் ஓதவல்லவர்கள் இந்த ஜல தம்பன யோகத்தில் சிறந்து விளங்கலாம். இத்தகைய தம்பன யோகத்தால் விளையும் பலன்கள் என்ன என்பதே பக்தர்கள் அறியத் துடிக்கும் வினா. லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி வீடு, நிலங்களை வாங்கினாலும் அங்கு உள்ள நீர் உப்பாக இருந்தால் அந்த நிலத்தாலும் வீட்டினாலும் பலன் துளியும் விளைவது கிடையாது. திருமறைக்காடு, கோடியக்கரை, அகத்தியான்பள்ளி என்ற திருத்தலங்களில் தேவார அடியார்கள் பாடிய பதிகங்களை நம்பிக்கையுடன் ஓதி வந்தால் தாங்கள் ஜல தம்பன யோகத்தில் சிறந்து விளங்காவிட்டாலும் உப்பு நீர் நிலத்தில், வீட்டில் பெருகுவது தவிர்க்கப்படுவதுடன் அடியார்கள் உடலிலும் இத்தகைய உப்பு நீர் அதிகரிப்பால் வியாதிகள் தோன்றாது. சர்க்கரை வியாதியை விடவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதே மனித உடலில் அளவுக்கு அதிகமாக சேரும் உப்பின் தன்மையாகும். ஜல தம்பன யோக சக்திகள் பெற்றவர்களின் பார்வையே உடலில், இரத்தத்தில் சேரும் உப்பு, சர்க்கரை போன்றவற்றை மிதப்படுத்தும் தன்மை கொண்டது என்றால் இந்த யோக சக்திகளின் மற்ற பலன்களை எப்படி வர்ணிக்க இயலும் ?

ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் கோடியக்கரை

எண் சக்திகள், சூக்கும சரீர சக்திகள், நவகிரக சக்திகள், திருமறைக்காடு திருத்தலத்தில் கோபுர கலசங்கள் இவை அனைத்துமே ஒன்பதாக விளங்குகின்றன. இந்த சக்திகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே, அதாவது இந்த சக்திகளில் ஏதாவது ஒரு சக்தியைப் பற்றி நாம் முழுமையாக, பூர்ணமாக அறிந்து கொண்டால் மற்ற சக்திகளைப் பற்றி ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம். இந்த சக்திகளில் அனைவருமே எளிதில் பயன்படுத்தி உடனடியாக பயன் பெறும் சக்தி கொண்டதே எண் சக்திகள் என்பதால் அவரவர் விரும்பும் எண் சக்திகள் மிளிரும் தீபங்களை திருமறைக்காடு திருத்தலத்தில் ஏற்றி பயன் பெறலாம். வேதாரண்யம் விளக்கு அழகு என்ற சொற்றொடரே இந்த உண்மையை உணர்த்துவதுதான். எலியாக வேதாரண்ய திருத்தலத்தில் பிறவி பெற்ற முசுகுந்த சக்கரவர்த்தி அணையப் போகும் ஒரு விளக்கின் நுனியை தன் மூக்கால் தீண்டி அந்த தீபத்தை நிலை பெறச் செய்ததால் அவர் அடுத்த பிறவியில் ஒரு சக்கரவர்த்தியாகவே பிறந்து தன் பக்தியை இவ்வுலகில் நிலை நாட்டினார் என்றால் வேதாரண்ய விளக்கொளி மகிமையைப் பறைசாற்ற வேறென்ன உதாரணம் வேண்டும். வேதாரண்ய திருத்தலத்தில் ஏற்றப்பட்ட ஒரு மோட்ச தீபமே பக்தர்களுக்கு இத்தகைய உயர்ந்த நிலையைக் கூட்டியது என்றால் பக்தர்கள் இங்குள்ள தெய்வங்களுக்கு ஏற்றும் பக்தி தீபத்தின் மகிமைதான் என்னே, என்னே ?!

வேதாரண்ய திருத்தலத்தில் தங்கள் பிறந்த தினம், மனைவி பிறந்த தினம், குழந்தைகள் பிறந்த தினம், தன் சற்குரு பிறந்த தினம், பெற்றோர்கள் பிறந்த தினம் என்ற எந்த எண்ணிக்கையைக் குறிக்கும் தீபங்களை வேண்டுமானாலும் ஏற்றி அந்த எண்ணிக்கையைத் தங்கள் சொந்த ஊர் திருத்தலங்களில் தொடர்ந்து வருதலே வேதாரண்யம் விளக்கழகு என்ற பெருமையை அடியார்கள் தங்கள் வாழ்வில் சேர்க்கும் சுவையாகும். இவ்வாறு விளக்கில் ஆரம்பித்து உணவுப் பொட்டலங்கள், ஆடை அணிகலன்கள், மலர் கைங்கர்யம், வாகன வசதிகள் என்றவாறாக அடியார்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் எண் சக்திகள், நவகிரக சக்திகளை இத்தகைய தான தர்மங்களின் மூலம் விருத்தி செய்து கொள்ளலாம். ஆதாரம் நல்ல மனம், அதை விருத்தி செய்வது வேதாரண்யம். சற்குருவைப் பெறாததால் காட்டில் ஒளியாய், கடலில் மழையாய் தங்கள் வாழ்க்கை வீணாய் அமைந்தது குறித்து வேதனை உறுவோர் ஏராளம். இதுவரை எப்படி இருந்தாலும் ஒரே ஒரு தீபத்தை நம்பிக்கையுடன் வேதாரண்யம் திருத்தலத்தில் ஏற்றினால் போதும், நிச்சயம் அவர்கள் வாழ்வில் கலங்கரைவிளக்கமாக தோன்றி சற்குரு அருள்புரிவார் என்பதே வேதாரண்யம் விளக்கொளி உணர்த்தும் உண்மையாகும். ஒரே ஒரு கிரண சந்திர ஒளியை அமிர்த மூலிகையைத் தோற்றுவிக்கும் சஞ்சீவினி சக்தியாகவும், ஒரே ஒரு மழைத் துளியை சுவாதியில் பூக்கும் முத்துச் சுடராகவும் மாற்றும் வல்லமை சற்குருவிற்கே உண்டு. ஒருவருடைய பிறந்த தேதி 21 என்று இருந்தால் அவர் 12, 39, 3000, 21000 என்று மூன்று எண்ணிற்கு உரிய எந்த எண்ணிக்கையில் வேண்டுமானாலும் வேதாரண்யம் திருத்தலத்தில் தீபங்களை ஏற்றி பின்னர் தங்கள் ஊரில் இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றலாம். அதே போல் ஒருவருடைய பிறந்த தேதி 9 என்று இருந்தால் அவர் செவ்வாய்க்குரிய சிவப்பு வண்ணத்தில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை தானமாக அளிக்க முடியாவிட்டாலும் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் பொம்மையை வாங்கி ஒரு குழந்தைக்கு அன்பளிப்பாக அளித்து குஷிப்படுத்தலாம் அல்லவா ? எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம். இவ்வாறு எண்ணத்தின் வலிமையால் வானத்து ஒளி விளக்காய் பிரகாசித்தவனே துருவன்.

கண்ணா உறவு மற்றொருவர் இல்லேன் .. தொண்டரடி பொடியாழ்வார்

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam