நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சற்குருவின் கர்ம பரிபாலனம்

பரிபாலனம் என்பதில் எத்தனையோ விதங்கள் உண்டு. குழந்தை பரிபாலனம், விருட்ச பரிபாலனம், கர்ம பரிபாலனம் என்ற பரிபாலனங்களில் மிகவும் சிரமமானது கர்ம பரிபாலனமே. இந்த கர்ம பரிபாலனம் என்ற கடினமான வித்தையிலும் தேர்ச்சி பெற்று அதைச் செவ்வனே பரிபாலித்தவரே நம் சற்குரு என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் செய்தியாகும். இதைப் பற்றிக் கூறுகையில் நம் பரமேஷ்டி குரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் பிரான், “மெத்த மேலே கர்ம பரிபாலனத்திற்கான நிறைய சீட் காலியாய் இருக்குடா, ஏன்னா, இந்த சீட்ல உட்காரதுக்கு தகுதியான ஆள் கிடைக்காததே காரணம் ...”, என்பார். உதாரணமாக, ஒருவர் நிறைய புண்ணிய சக்திகளை சேர்த்துக் கொண்டதால் அவர் ஒரு ஜமீன்தாரராக அடுத்த பிறவியில் பிறப்பெடுப்பதாக வைத்துக் கொண்டால் அவர் அந்த பிறவியில் வெறுமனே தான் பெற்ற புண்ணியத்தைக் கரைத்தால் போதும், அவர் அதற்கு அடுத்த உயர்ந்த நிலையை அடைந்து விடுவார். ஆனால், ஜமீன்தாரராக வாழும்போது நூறு ஏக்கர் நிலம், நான்கு கார்கள், 50 வேலையாட்கள் போன்ற வசதிகளுடன் வாழும் புண்ணிய சக்தியைப் பெற்றிருந்தாலும் இதற்கு அதிகப்படியாக அவர் சொத்துக்களை சேர்த்துக் கொள்ள முற்படுவதோ, சுக போகங்களை பெருக்கிக் கொள்ள விழைவதோ இயற்கையே. இத்தகைய சுக போகங்கள் பெருகும்போது அவர் இந்த அதிகப்படியான வசதிக்காக கொலை, கொள்ளை போன்ற பல தகாத காரியங்களில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் அல்லவா ? இப்படித்தான் நல்ல காரியங்கள் செய்து ஒருவர் வாழ்ந்திருந்தாலும் அவருக்குப் பிறவிகள் மலை போல் குவிந்து அவர் கழிக்க வேண்டிய கர்ம வினைகளாகப் பெருகி விடுகின்றன.

அதே சமயம் அந்த ஜமீன்தார் ஒரு சற்குருவைப் பெற்றிருப்பாரேயானால் சற்குரு அந்த ஜமீன்தார் தன் தகுதிக்கு மிஞ்சிய எந்த காரியங்களையும் செய்து விடாதபடி, விதிக்கப்பட்ட கர்மங்களைத் தவிர வேறு எந்த கர்மங்களையும் நிறைவேற்றாதபடி தன் சீடனை அவன் அறியாத வகையில் வழி நடத்திக் காத்திடுவார். ஒருமுறை நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் நிகழ்ந்த ஒரு கர்ம பரிபாலனக் காட்சியை இங்கு அடியார்களின் நலனுக்காக அளிக்கின்றோம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருஅண்ணாமலை கிரிவலம் வரும் அடியார்களுக்காக நம் ஆஸ்ரமத்தில் அன்னதானம் நிறைவேற்றப்படும். வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள், மருத்துவ மனைகளில் பணிபுரியும் பலரும் இந்த அன்னதான சேவையில் பங்கெடுத்துக் கொண்டு பாத்திரம் சுத்தம் செய்வதிலிருந்து அன்னதானம் சமைத்து பரிமாறுவது வரையிலான எல்லா துறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அப்போது சற்குரு ஒரு அடியாரை அழைத்து அந்தப் பௌர்ணமி அன்னதானத்திற்காக 120 படி அரிசியை அளந்து அன்னக்கூடைகளில் போடும்படி கூறினார். சற்று நேரம் கழித்து ஒரு அடியார் அங்கு வரவே, நம் சற்குரு, “வாங்க சார், இப்போதுதான் ...யை அன்னதானத்திற்காக 90 படி அரிசி போட்டு கூடைகளில் வைக்கும்படிக் கூறினேன். சரி போகட்டும், உங்கள் அலுவலகப் பணிகள் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா ?” என்று கேட்டார். அந்த அடியார் மௌனமாக இருப்பதைக் கண்டு, நம் சற்குரு, “என்ன சார், இந்தப் பௌர்ணமிக்கு 80 படி போதாது என்று நினைக்கிறாயா ? நீதான் பெரிய கிருஷ்ணன் பக்தன் ஆயிற்றே, சரி உனக்காக நூறு படி போட்டு விடுவோம் ...”, என்று கூறி, “சார், நம்ம ..... 100 படி அன்னதானம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் நீ 100 படி அரிசி போட்டு அன்னக் கூடைகளில் வைத்து விடு ...,” என்றார். அங்கு வந்த அடியாரும் தன் எண்ணம் நிறைவேறியது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டு அங்கிருந்து வேறு வேலை நிமித்தம் சென்று விட்டார்.

சற்று நேரம் கழித்து சற்குருவின் துணைவியார் அங்கு வரவே சற்குரு, “என்னம்மா, அன்னதானத்திற்கு 100 படி அரிசி போடச் சொல்லி விட்டேன். உனக்கு சம்மதம்தானே ?” என்று கேட்கவே சற்குருவின் துணைவியாரும், “அப்படியா 100 படி எப்படி போதும்?” என்று கேட்கவே, “அப்படியா, சரி, இன்னும் 20 படி சேர்த்து 120 படியாக போடச் சொல்லி விடுகிறேன். குரு நம்பரில் அன்னதானம் செய்வதில் உனக்கு கொள்ளை விருப்பம் அல்லவா ? சரி சார், அம்மா விரும்புவது போல் 120 படி அரிசி அன்னதானத்திற்காக போட்டு விடுங்கள் ...” என்றார் நம் சற்குரு. சற்குருவின் இந்த அனைத்து லீலைகளையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த அந்த அடியாருக்கு எப்படி இருக்கும் ? இதுவே நம் சற்குருவின் கர்ம பரிபாலன சுவைகளில் ஒன்று. சற்குருவின் மனைவியாக இருந்தாலும், வங்கியில் பணி புரிந்து ஆஸ்ரம சேவைக்காக வந்த அடியாராக இருந்தாலும் கர்ம பரிபாலனத்தில் அவர்கள் மனம் கோணாமல் அதே சமயத்தில் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய அன்னதான கைங்கர்யத்தை சிறப்புற நிறைவேற்ற துணை புரிந்ததே சற்குருவின் நிகழ்த்திய சுயநலமற்ற கர்ம பரிபாலனத் திருவிளையாடல்.

ராவத்தநல்லூர் முருகன்

ஒவ்வொரு திருக்கார்த்திகை தீப உற்சவத்தின்போதும் சற்குருவின் அடியார்கள் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் பாண்ட், சர்ட், சேலை, ஜாக்கெட், உள்ளாடைகள், போர்வை, ஜமுக்காளம், செருப்பு, வளையல், தொப்பி போன்ற பல்வேறு ஆடை அணிகலன்களை புதிதாக வாங்கி வந்து நம் சற்குருவிடம் சமர்ப்பிப்பார்கள். அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வைத்து திருக்கார்த்திகை தீப ஒளியில் அந்த புது வஸ்திரங்கள் எல்லாவற்றையும் புனிதமாக்கி அவற்றை இந்தியா எங்கும், சில சமயங்களில் வெளி நாடுகளிலும் அவற்றை நம் அடியார்கள் மூலம் தானமாக அளித்திடுவார். வஸ்திர தானம் என்று அழைக்கப்படும் என்ற இந்த கர்ம பரிபாலனத்தில் விளங்கும் சுவையை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஒரு முறை ஒரு அடியாருக்கு ஒரு பாண்ட், சர்ட், பனியன், ஜட்டி என்ற வஸ்திரங்களை அளித்து அவரை ராவத்தநல்லூர் திருத்தலத்தில் அளிக்குமாறு நம் சற்குரு கூறினார்.

ராவத்தநல்லூரிலிருந்து கிட்டும்
திருஅண்ணாமலை தரிசனம்

சென்னையிலிருந்து அவர் கள்ளக்குறிச்சி வழியாக ராவத்தநல்லூரை அடைந்து அங்கிருந்த முருகத் தலத்தில் மேலேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கி வந்தார். மலை உச்சியிலிருந்து திருஅண்ணாமலையை பார்த்தபோதுதான், “திருஅண்ணாமலை இவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை அறியாமல் நாம் எங்கெங்கோ சுற்றி அலைந்து விட்டோமே ?” என்று நினைத்துக் கொண்டே வஸ்திர தானத்தை நிறைவேற்றுவது எப்படி என்று எண்ணிக் குழம்பினார். காரணம் அந்த மலையில் ஆட்களோ, பக்தர்களோ இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததுதான் காரணம். ஒவ்வொரு இடமாகச் சுற்றி அந்த மலையில் அலைந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த சுனை அருகே தன்னுடைய ஒரு உடைமையான ஒரு பாண்ட், சட்டையை அந்தச் சுனையில் துவைத்து அருகில் இருந்த பாறையின் மேல் காய வைத்து விட்டு வெறும் ஜட்டியுடன் சுமார் 30 வயதுள்ள ஒரு இளைஞன் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டார் நம் அடியார். அந்த இளைஞனிடம் வஸ்திர தானத்தைப் பற்றிக் கூறியதும் அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுற்று நம் அடியாருக்கும் இறைவனுக்கும் நன்றி கூறி அந்த ஆடைகளைப் பெற்றுக் கொண்டானாம். கேட்பதற்கே பிரமிப்பூட்டும் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் அமைந்த தெய்வீக நுணுக்கங்களை அறிந்தால் அவை எந்த அளவிற்கு சுவையாக இருக்கும். பொதுவாக, பூலோகத்தில் மனிதப் பிறவி கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் பல லட்சக் கணக்கான மீட்டர் துணிகள், கிலோ கணக்கில் தங்க நகைகள், ஐந்து ஏக்கர் நன்செய் நிலம், வசிக்கும் ஒரு வீடு போன்ற பல தான தர்மங்களை நிறைவேற்ற வேண்டிய பாக்கி கணக்குடனேயே பிறக்கின்றான் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் மனிதப் பிறவி இரகசியம். ஆனால், தன்னுடைய சுய தேவைகளை பூர்த்தி அடையாத நிலையில் இருக்கும் மனிதன் எப்படி இத்தகைய பெருஞ்சுமையை ஏற்று தான தர்மங்களை நிறைவேற்ற முடியும் என்பது நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது.

ராவத்தநல்லூர்

இதை அறியாதவரா நம் சற்குரு. ஒவ்வொரு தான தர்மத்தையும் பசு மடம், காஞ்சி, திருஅண்ணாமலை என்று குறிப்பிட்ட தலங்களில் நிறைவேற்றும்போது அந்த தான தர்மங்களின் பலன்கள் பன்மடங்கு பெருகுவதால் அந்த குறித்த இடங்களைத் தேர்ந்தெடுத்து தான தர்மங்களை நிறைவேற்றி தன்னை நம்பும் அடியார்களின் கர்ம வினைச் சுமைகளை தணிக்கின்றார் நம் சற்குரு. இவ்வாறு ஒரு அடியார் நிறைவேற்ற வேண்டிய ஆயிரக் கணக்கான மீட்டர் துணிகளின் பாக்கிகளை ஓரிரு துணிகளின் மூலமும், பல பெண்களின் நல்வாழ்விற்கு துணை நிற்க வேண்டிய பாக்கியை ஒரு மாங்கல்யம் மூலமாக அல்லது சாதாரண மாங்கல்ய சரடு தானம் மூலமோ தீர்த்து வைக்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது ? ஸ்ரீராமபிரான் ராம பாணம் தொடுக்கும்போது வாசி கலையை சூரிய கலையில் பிருத்வி பூதத்தில் நிலைநிறுத்துவதால் அந்த பாணத்தை எவராலும் எதிர்க்க முடியாமல் போய் விடுகிறது. எனவே ஸ்ரீராமபிரான் எப்போதும் வெற்றி கொள்ளும் விஜயராமனாகவே திகழ்கின்றார். அது மட்டுமல்ல அவ்வாறு தொடுக்கப்பட்ட ராமபாணம் தன் இலக்கை வீழ்த்தாமல் திரும்பாது என்பதும் இந்த வாசி கலையின் இரகசியமாகும். இந்த இரகசியங்களைப் பூர்ணமாகத் தெரிந்து கொண்ட நம் சற்குரு இந்த தனுர் வித்தை இரகசியங்களை எப்படிப் பயன்படுத்துகிறார் ? ஆம், உங்கள் ஊகம் சரியே. நம் அடியார்கள் மூலமாய் வஸ்திர தானத்தை அளிக்கும்போது அவ்வாறு அளிக்கப்படும் ஆடைகள் அந்த வஸ்திரங்களைப் பெறுபவர்கள் எங்கிருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களையும் தானம் அளிப்பவரையும் இணைப்பதே இந்த வாசி கலை யோக இரகசியங்களாகும். பருத்தி, கைத்தறி ஆடைகளுக்கே இத்தகைய பஞ்சபூத சக்திகளை ஈர்க்கும் சக்தி உள்ளதால் வஸ்திர தானத்திற்காக அடியார்கள் அளிக்கும் ஆடைகள் கதர், கைத்தறி ஆடைகளாக இருக்கும்படி சற்குரு வலியுறுத்துவது இக்காரணம் பற்றியேதான். இத்தகைய வாசி கலை யோக சக்திகளைப் பெற அடியார்களுக்கு குறைந்தது 30 வருட தொடர்ந்த பயிற்சி அவசியம் என்றாலும் இந்த நுணுக்கத்தைப் பற்றி அறிந்து கொண்டோர் இனியாவது தங்கள் பிராணாயாம பயிற்சியை உரிய முறையில் நிறைவேற்றி மற்றவர்களுக்குப் பயன்படும்படி அதை செயல்படுத்தலாம் அல்லவா ?

உத்தண்ட வேலாயுத ஈசன்

கோவை காங்கேயத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளதே ஸ்ரீஉத்தண்ட வேலாயுத முருகப் பெருமான் அருள்புரியும் ஊதிமலை திருத்தலம். ஊதிமலை நிலவும் திருத்தலமே ஊதியூர் ஆகும். ஊதி சக்திகள் என்பவை பரவெளியில் உள்ள அக்னி சக்திகள். இந்த அக்னி சக்தியால் களைய முடியாத கர்ம வினைகளே இல்லை எனலாம். இந்த இரகசியத்தை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து கொண்ட ஸ்ரீகொங்கண சித்தர் ஊதிமலையில் பன்னெடுங் காலம் தவமியற்றி பரவெளியிலிருந்து இந்த ஊதி சக்திகளை கிரகித்து அதை ஒரு சந்திரகாந்தக் கல்லில் வர்ஷித்து அதை ஸ்ரீஉத்தண்ட முருகப் பெம்மானாக ஊதிமலையில் நிர்மாணித்தார் என்பதே இதுவரை எவரும் அறியாத சித்த இரகசியம். உத்தண்டம் என்றால் ஒரே ஒரு தண்டம், உரிய தண்டம், உகந்த தண்டம், ஓர் ஆயுதம் என்றெல்லாம் பொருளுண்டு. நீர் நிலம் என்ற பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது அக்னியே என்பதால் அக்னி என்ற ஊதி சக்திகளால் அனைத்து கர்ம வினைகளையும் மாய்ப்பது என்பது எளிதுதானே, முறைகள் அறிந்தவர்க்கு ?!

ஊதிமலை

கொங்கண சித்தர் என்பது ஒரு காரணப் பெயரே. கொங்கு அணை சித்தர் என்றால் அக்னியை ஆள்பவர், நெருப்பை அணைப்பவர் என்றெல்லாம் பொருள். ஊதிமலையில் ஒரு சந்திர காந்தக் கல்லில் ஊதி சக்திகளை தன் தபோ சக்தியால் கிரகித்து அதை பன்னெடுங் காலம் காத்து வந்தார். பின்னர் ஒரு நன்னாளில் அந்த சக்திகளை எல்லாம் திரட்டி ஸ்ரீஉத்தண்ட வேலாயுதப் பெருமானாக ஊதியூரில் நிர்மாணித்தார். ஸ்ரீகொங்கண சித்தர் ஒரு உத்தராயணப் புண்ணிய கால நன்னாளில் இத்தகைய பிரதிஷ்டையை நிகழ்த்தியதால் உத்தராயண புண்ணிய காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஊதியூர் முருகப் பெருமானை தரிசிப்பது மிகவும் சிறப்பான வழிபாடாக அமைகிறது. இங்குள்ள 156 படிகளும் உத்தண்ட படிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் 2 x 6 x 13 = 156 என்ற கணக்கில் அமைந்து ஆறுமுக சுவாமியின் முகங்களைக் குறிப்பதாகவும், அக்னி பகவானின் இரு நாக்குகளைக் குறிப்பதாகவும், அக்னியின் தம்ப சக்திகளைக் குறிப்பதாகவும், 1+5+6 = 12 என்றவாறாக குரு சக்திகளை, சுவாமிநாத சக்திகளைக் குறிப்பதாகவும் அமைந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. இந்த அக்னி சக்திகளைப் பற்றி எதுவும் அறியாவிட்டாலும் அக்னி பகவான் அளிக்கும் அனுகிரகங்களை நிச்சயமாக அனைத்து பக்தர்களும் பெற முடியும். இந்த 156 படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் சித்தர்கள் பாரம்பரிய ஸ்வஸ்தி நமஸ்காரத்தை நிறைவேற்றுவதால் இந்த 156+156=312 நமஸ்காரங்களும் வெவ்வேறு தம்ப சக்திகளை அளிக்கின்றன. எதிர்காலத்தில் வரவிருக்கும் எத்தகைய அக்னி சம்பந்தமான ஆபத்துக்களுக்கும் இந்த தம்ப அல்லது தம்பன நமஸ்கார பத்ததி காப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. பூவன், கற்பூரவல்லி, மலை வாழை, செவ்வாழை, பேயன்பழம் போன்ற வாழைப்பழங்களில் ஏதாவது மூன்று பழங்களை ஏடு ஏடாக அரிந்து அவற்றை தேனில் ஊற வைத்து வாழை இலையில் வைத்து தானமாக அளித்தலால் எத்தகைய அக்னி குற்றங்களையும் களைவது மட்டுமல்லாமல் அக்னி காயங்களால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும், உறவுகள் பலமடையும்.

உத்தண்ட படிக்கட்டுகள் ஊதிமலை

1998ம் ஆண்டில் நம் சற்குரு நிகழ்த்திய வஸ்திர தானத்தில் ஒரு அடியாரிடம் சில வஸ்திரங்களை அளித்து அவற்றை ஊதிமலையில் தானமாக அளிக்கும்படிக் கூறினார். நம் சற்குரு நிகழ்த்தும் வஸ்திர தானமே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு அடியாரும் அளிக்க வேண்டிய வஸ்திரங்களை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு சில அரசாங்க அலுவலர்கள் நம் ஆஸ்ரமத்தை பார்வையிட வந்து விட்டனர். அவர்கள் முன்னிலையில் தான் சற்குரு என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பாததால் தலையில் ஒரு தலைப் பாகையைக் கட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மேலே இருந்த சட்டையையும் கழற்றி விட்டு வெறும் உடம்புடன் காட்சி அளித்ததால் வந்திருந்தவர்கள் இவர் ஏதோ ஒரு வேலையாள் நினைத்துக் கொண்டு சென்று விட்டனர். இதுவும் ஒருவிதமான அக்னி கர்மமே. 1998 என்பது அக்னி பகவானுக்குரிய தேவதையான செவ்வாய் பகவானுக்குரிய எண் கணித ஆண்டாக பொலிவதால் அந்த ஆண்டு எத்தனையோ அடியார்களின், மக்களின் கர்மங்களை வஸ்திர தானத்தின் மூலமே களைந்தார் நம் சற்குரு. நம் சற்குரு போன்ற மகான்களின் உடலிலிருந்து ஸ்வேத மங்களாக்னி என்ற ஒரு வகை அக்னி எந்நேரமும் பொலிந்து கொண்டிருக்கும். இந்த அக்னி சக்திகளானவை தங்கு தடையின்றி நம் சற்குரு வஸ்திர தானத்திற்காக அளித்த ஆடைகளிலும் படியவே இந்த உடலில் வஸ்திரமில்லா நிலை உதவியது என்பதாக தம் ஒவ்வொரு செயலிலும் பல அடியார்களின் கர்மங்களை இணைத்துக் களைந்த நம் சற்குருவின் திருவிளையாடலை விளக்க யுகங்கள் போதா. மகான்களின் திருமேனியில் பொலியும் ஸ்வேத மங்களாக்னியே பரவெளியில் ஊதி சக்திகளாகப் பெருகி மக்களின் கர்ம வினைகளைக் களைவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மாதா அமிர்தானந்தா பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கையில் பெரும்பாலான யோக முறைகளில் இந்த ஸ்வேத மங்களாக்னி சக்திகள் வர்ஷிப்பதை நாம் இன்றும் கண்டு இரசிக்கலாம். இந்த அக்னி சக்திகளை வர்ஷிப்பதற்காக தன் வலது குருவிரலை இடது கை விரல்களால் பற்றி இருப்பார் மாதா. குரு விரல் என்பது அக்னி சக்திகளுடன் துலங்குவதுதானே ?

ஸ்வஸ்தி நமஸ்காரம்

ஸ்வஸ்தி நமஸ்காரம் என்ற சித்த பாரம்பரிய நமஸ்காரம் நம் உடலில் உள்ள அனைத்து நாளங்களையும் தூய்மை செய்து பலப்படுத்தும் தெய்வீக சக்திகளைப் பொலிபவையாகும். இந்த சித்த நமஸ்காரத்தை உலகிற்கு அளித்த நம் கோவணாண்டிப் பெரியவரிடம் இந்த நமஸ்கார முறையைப் பயில்வதற்காக ஒரு முறை ஸ்ரீபிரம்ம மூர்த்தி 13 யுகங்கள் சேவை புரிந்து காத்திருந்தாராம். ஆனால், இன்று நாமோ ஒரே கம்யூட்டர் க்ளிக்கில் இந்த நமஸ்காரத்தை அறிந்து கொள்ள நம் சற்குரு அருள்புரிகின்றார் என்றால் குரு கருணைக்கு ஈடு உண்டா ? ஸ்வஸ்தி நமஸ்காரத்தை முறையாகப் பயின்று வந்தால் நாளடைவில் இந்த ஸ்வேத அக்னி சக்திகள் சாதாரண மக்கள் உடலிலும் பரிணமிக்கும் என்பதே இந்த நமஸ்காரத்தின் பலன்களில் ஒன்றாகும்.

ஸ்ரீகொங்கண சித்தர் தவபீடம்
ஊதிமலை

பிரம்ம மூர்த்தி 13 யுகங்கள் காத்திருந்து இந்த ஸ்வேத மங்கள சக்திகளை சாதாரண மக்களும் கிரகிக்கும் பொருட்டு அதை 13 அக்னி தம்ப சக்திகளாக உலகிற்கு அளித்தார். பொறி, கனல், பிழம்பு, பந்தம், சுடர் என்றவாறாக பொலியும் இந்த அக்னி சக்திகளை முழுவதுமாகப் பெற உதவுவதே ஊதிமலையில் நாம் நிறைவேற்றும் ஸ்வஸ்தி நமஸ்கார வழிபாடுகளாகும். இங்குள்ள படிக்கட்டுகள் ஏன் இவ்வாறு 13 x 12 = 156 என்ற கணக்கில் பொலிகின்றன என்ற இரகசியங்கள் இப்போது ஓரளவிற்கு உங்களுக்குப் புரிந்து விட்டது அல்லவா ? ஊதிமலை திருத்தலத்தில் பொலியும் உத்தண்ட படிக்கட்டுகளில் இருதய கமல கோலத்தை பச்சரிசி மாவினால் வரைந்து வழிபடுவதே இத்தகைய ஊதி சக்திகளை, ஸ்வேத மங்கள சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 156 படிகளிலுமே இருதய கமல கோலத்தை வரையும் திருப்பணியை சத்சங்கமாக அல்லது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்று கூடி நிறைவேற்றுதல் நலமே. உத்தண்ட படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஒவ்வொரு படியிலும் ஒரு ஸ்வஸ்தி நமஸ்காரமாக இயற்றுதல் அவசியம். இத்தகைய 156 இருதய கமல கோலங்கள் வரைவதையும், 156+156 ஸ்வஸ்தி நமஸ்காரங்களை நிறைவேற்றுவதையும் ஒரே முறையில் நிறைவேற்றுவதை சிரமமாக நினைப்பவர்கள் இந்த வழிபாட்டை 12 மாதங்களுக்கு நிரவி நிறைவேற்றுவதையும் சித்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். எப்படி மாதம் ஒரு முறை திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்குவதால் மனிதர்கள் அம்மாதம் முழுவதும் நிறைவேற்றிய தவறான கர்மங்களுக்கு பிராயசித்தம் கிட்டுகிறதோ அதே போல் வருடம் ஒரு முறையோ அல்லது மாதா மாதம் வளர் சஷ்டி திதி, உத்திரம், விசாகம் நட்சத்திர நாட்களில் நிறைவேற்றப்படும் ஸ்வஸ்தி நமஸ்கார வழிபாடு பக்தர்களின் அனைத்து கர்மங்களையும் களையும் மாமருந்தாக அமைந்து அவர்களைக் காக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இந்த நமஸ்கார முறையால் குணமாகாத இதய நோய்களே இல்லை எனலாம். ஈரெட்டு நாளங்கள் நம் இதயத்தைக் காப்பதாக சித்தர்கள் உரைக்கின்றார்கள். இந்த 8x156=1248 என்ற கணக்கு மேலோட்டமாக நம் ஆயுளை இரட்டிக்கும் ஊதி கணக்கு என்றவாறாக விரியும். 1 2 4 8 என்று இரட்டிப்பாகும் எண் கணக்கிற்கும் ஊதி என்ற இரண்டு எழுத்து அக்னி சக்திகளுக்கும் உள்ள தொடர்பை ஆத்ம விசாரம் செய்து பார்ப்பதும் இந்த அக்னி சக்திகளை நாம் எப்படியெல்லாம் கர்ம வினை பரிபாலனத்திற்கு உபயோகிக்க முடியும் என்ற தெளிவை அளிக்கும். இந்த தெளிவே பொன்னூதி அனுகிரகமாக நாளடைவில் மலரும். காலையில் உறங்கி எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளை விரித்து ஒன்று சேர்த்து கர தரிசனம் செய்வதால் நாம் இரவில் பெற்ற சூட்சும சரீரப் பிரயாண அனுகிரகங்களை பூலோக வாழ்விற்குப் பயனாகும் சக்திகளாகப் பெறலாம் என்பது நீங்கள் அறிந்ததே. இதே போல் ஊதிமலையில் 156 உத்தண்ட படிகளில் ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றிய பின் கோபுரம் தரிசனம் பெறும்போது அது குருவருள் கூட்டும் உத்தண்ட கலச தரிசனமாக அமையும் என்பதை இந்த கோபுரத்தில் அமைந்த மூன்று கலசங்கள் உறுதி செய்கின்றன. இந்த கலச சக்திகளுடன் நாம் உள்ளே நுழைந்து ஸ்ரீஉத்தண்ட வேலாயுத பெருமானை தரிசிக்கும்போதுதான் ஊதி சந்திரகாந்தக் கல்லில் உருவான முருகப் பெருமானின் தரிசனம் பூர்ணம் அடைகின்றது, ஊதி சக்திகள் பெருகுகின்றன. அப்போதுதான் இந்த அக்னி சக்திகள் சற்றும் விரயமாகாமல் நம் கர்ம வினைகளைக் கழிப்பதற்கு மட்டுமே துணை புரிகின்றன. இதை விளக்குவதாகவே இத்தலத்தில் ஸ்ரீஅருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் அமைகிறது. 120வது திருப்புகழ் தலம் என்பதும் சுவாமிநாதனான குருகுக மகிமையைப் பறைசாற்றுகின்றது.

ஊதிமலை

தம் சீடர்களின் கர்மங்களை ஒரு சற்குரு ஏற்பது மட்டுமல்ல அந்த கர்ம வினையை தம் சீடர்கள் நிறைவேற்ற மனமில்லாத போது அது அவர்களின் இயலாமையாலோ அல்லது பூர்வ வினைகளின் விளைவாகவோ எக்காரணம் பற்றி இருந்தாலும் அதற்காக பாடுபடும் சற்குருமார்களின் செயல்பாட்டை நினைக்கும்போது அது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு முறை நம் சற்குரு ஒவ்வொருவரும் குடுமி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் பல அடியார்களும் குடுமி வைத்துக் கொள்ளவோ, பூணூல் அணிந்து கொள்ளவோ, கடுக்கன் போட்டுக் கொள்ளவோ தயாராக இல்லை. இருந்தாலும் சற்குரு கூறுகிறார் என்பதற்காக எல்லைப் பூணூல், எல்லைக் கடுக்கன் அணிந்து கொண்டோர் பலர். அதாவது தாங்கள் பணி புரியும் அலுவலகத்திற்கு கடுக்கன், பூணூல் போன்றவற்றை அணியாமல் இருந்து விட்டு திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு சேவை செய்ய வரும்போது மட்டும் பூணூல், கடுக்கன் இவற்றை அணிந்து வருவோர் நிறையவே உண்டு. இந்த எல்லைக் கடுக்கன் முறை நம் சற்குருவால் அங்கீகரிக்கப்பட்டதே. இந்நிலையில் மேலே குறிப்பிட்ட அடியார் குடுமி வைத்துக் கொள்ள தயங்கிய போது நம் சற்குருவே அவர் எப்படிப்பட்ட குடுமியை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு நடைமுறையில் நிறைவேற்றிக் காட்டினார். நாம் நினைப்பது போல் குடுமி என்பது ஏதாவது ஒரு முறையில் சிகையை அலங்கரிப்பது அல்ல, ஒவ்வொரு குடுமிக்குப் பின்னும் மிகப் பெரிய தாத்பர்யங்கள் உண்டு. நம் ஆயுர்தேவி கரப்பீடத்தை அலங்கரிக்கும் சித்தர்களின் குடுமிகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். நம் ஆஸ்ரமத்தில் அப்போது சேவை செய்த அடியார்கள் ஒரு சிலருக்கு அவர்கள் நிறைவேற்ற வேண்டிய சிகை அலங்காரத்தைப் பற்றி விவரித்தாலும் பலருக்கும் இது பற்றிய விளக்கங்களை சற்குரு நேரிடையாக அளிக்கவில்லை. இது அவர்கள் சற்குருவின் மேல் கொண்ட நம்பிக்கையைப் பொறுத்து மறைமுக உபதேசமாகவே அளிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அடியாருக்கு தாமே தம் கைப்பட குடுமியைக் கட்டி அலங்காரம் செய்து அதற்குரிய நாமத்தையும் அந்த அடியாருக்குத் தெரிவித்து, தொடர்ந்து அந்த வகையிலேயே சிகையை அலங்கரிக்கும்படிக் கூறினார். ஆனால், அந்த அடியாரோ அதற்குப்பின் அம்முறையில் சிகையை அலங்கரிக்காமலே ஆஸ்ரம சேவைக்கு வந்தார் என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி வந்தார், இன்றும் நிறைவேற்றி வருகிறார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய குரு சிஷ்ய கர்ம பரிபாலன இரகசியங்களில் ஒன்றாகும்.

இதய கமலமே
இருதய கமலம்

அந்த அடியாரின் சங்கோஜ சுபாவமே தம் சற்குரு அளித்த போதனையைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளியது என்பதே நாம் இத்தனை வருடங்களுக்குப் பின் அறிந்து கொண்ட இரகசியம் என்றாலும் அந்த அடியாரின் கர்ம பரிபாலனத்திற்கும் பாடுபட்ட நம் சற்குருவின் கருணை எத்தகைய பிரம்மாண்டமானது ? திருஅண்ணாமலையில் ஒரு படி அரிசி சாதத்தை தானமாக அளித்தால் அது மற்ற இடங்களில் அளித்த தானத்தைப் போல் ஆயிரம் மடங்கு பெருகும் என்பது மட்டும் சித்த இரகசியம் அல்ல. இவ்வாறு திருஅண்ணாமலையில் ஒரு முறை சற்குரு முறையில் கூறிய முறையில் சிகையை அலங்கரித்தால் அது மற்ற இடங்களில் நிறைவேற்றப்படும் சிகை அலங்காரத்தை விட ஆயிரம் மடங்கு சக்தி பெற்றதாக அமையும் என்பதும் திருஅண்ணாமலை திருத்தல மகிமையே ஆகும். இதைத் தொட்டுக்காட்டிய வித்தையாக உணர்த்தியவரே நம் சற்குரு. அதுவும் சற்குருவே இந்த சிகை தீட்சையை குரு தீட்சையாக அளிக்கின்றார் என்றால் அதன் மகிமைதான் என்னே !

பூஜ்யம் என்பது நேர்கோடு என்ற துவாதச அட்சர சித்த மந்திரம் ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க நம் பகுத்தறிவை விஞ்சும் சக்தி உடையதே. இருப்பினும் இதுபற்றி நாம் ஓரளவு அறிந்து கொள்ள உதவுவதே இருதய கமல கோலமாகும். பல அடியார்களும் இருதய கமல கோலத்தை வரையும் விதம் பற்றி தெளிவாக உணர முடியாததால் இந்த கோலம் வரையும் முறையை இங்கு வீடியோ படமாக அளித்துள்ளோம். இதய கமல கோலத்தை ஊதியூர் முருகத் தலத்தில் வரைந்து வழிபடும் அளவிற்கு பக்தர்கள் ஆன்மீகத்தைப் பற்றி, ஆன்மீகம் சுட்டும் இறைவனைப் பற்றிய தெளிந்த அறிவைப் பெறலாம் என்பது உறுதி. ஊதிமலையில் இந்தக் கோலத்தை ஆரம்பித்து மலைப் படிக்கட்டுகளில் வரைந்து வழிபட்டு, அக்கோலத்தை சித்த ஸ்வஸ்தி நமஸ்கார முறையில் வழிபட்டு வருவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆரம்ப கட்டத்தில் தெளிந்த ஆன்ம அறிவு தைல தாரையாக வர்ஷிக்கும். தொடர்ந்து இவ்வழிபாட்டை இயற்றி வர, திசைகள் பற்றிய அறிவு விருத்தியாகும், பின்னர் எண்கள் பற்றிய இரகசியங்களும், அதைத் தொடர்ந்து எண்ணம் பற்றிய குழப்பங்களும் விலகும். எண்ணம் தெளிவானால் அதன் பின்னர் சாதகர்கள் எவருடைய முயற்சியும், வழிகாட்டுதலும் இன்றி அவர்களே ஆன்மீகத்தில் உயர்ந்து இமயத்தை அடைவார்கள்.

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி ஊதிமலை

இதய கமல கோலம் வரைய புள்ளிகள் தேவையில்லை என்றாலும் ஆரம்பத்தில் புள்ளிகள் வைத்து பழகி வந்தால், அதாவது இதயம் சுட்டும் தத்துவத்தைப் புரிந்து கொண்டால், பின்னர் புள்ளிகள் இல்லாமலே கோலத்தை அடியார்கள் எளிதில் வரைந்து விடலாம். மேலும் ஆரம்பத்தில் இந்தப் புள்ளிகள் எட்டு திசையைக் குறிப்பதாக அமைந்தாலும் அவை சுட்டும் திசைகள் அடிப்படையாக திசையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலப்போக்கில் அடியார்களின் திசை ஞானம் பெருகும் அளவிற்கு அவர்களையும் அறியாமலே அவர்கள் வரையும் கோலம் அடிப்படை திசையாக அமையும், அதைத் தொடர்ந்து எண்ணம் பற்றிய இரகசியங்கள் விருத்தியாகும். ஆரம்பத்தில் நாம் காண்பது 40 புள்ளிகள், அடுத்து இந்த புள்ளிகள் மறையும், அதன் பின்னர் ஒரே ஒரு நேர் கோடு துலங்கும், இந்த நேர்கோடும் மறைந்த பின்னரே, பூஜ்யத்தின் மகிமையை, இறைவனைப் பற்றிய தெளிந்த அறிவை அடியார்கள் பெற முடியும். இதய கமல கோலத்தை பெண்கள்தான் வரைய வேண்டும் என்ற அவசியமே இல்லை, ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் வரைந்து, வணங்கி பயன் பெறலாம்.

ஊதிமலை

ஊதிமலையில் வலிய ஆக்னேயம் என்ற வகை அபூர்வ குரங்குகள் வாசம் செய்கின்றன. இந்த வகை குரங்குகள் ஊதி அக்னி சக்திகளை ஈர்த்து சிரஞ்சீவி சக்திகளாக வர்ஷிக்கும் சக்தி உள்ளவை. இத்தகைய வலிய ஆக்னேய குரங்குகள் நாம் நினைப்பது போல சாதாரண குரங்குகள் அல்ல. சூரபத்மன் பஞ்ச அக்னிகளுக்கு நடுவே பல யுகங்கள் தவமியற்றினான் என்பது நீங்கள் அறிந்ததே. நான்கு திசைகளிலும் அக்னி குண்டங்களை அமைத்து தலைக்கு மேலே பொலியும் சூரிய கிரணங்களை ஐந்தாவது அக்னியாகக் கொண்டு இயற்றும் பஞ்சாக்னி தவம் இதுவாகும். இத்தகைய அக்னி சக்திகளை குறைந்தது ஒரு சதுர் யுகம் பெற்ற குரங்குகளே இத்தகைய வலிய ஆக்னேயம் என்ற வகை குரங்குகளாகப் பிறப்பெடுக்கின்றன என்றால் இவைகளை குரங்குகள் என்றா அழைக்க முடியும் ? இந்த குரங்குப் படைகளின் அதீத சக்திகளை ஊதிமலை முருகப் பெருமானை தரிசனம் செய்யும்போது நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, மேற்கூறிய ரோகிணி நட்சத்திரமும் ஏகாதசி திதியும் இணையும் நாளில் நாம் ஊதிமலை முருகனை தரிசனம் செய்தபோது இந்த ஊதி சக்திகளை ஈர்த்து பக்தர்களுக்கு அனுகிரகமாக அளித்தன. நாம் முருகப் பெருமானை அந்த முகூர்த்தத்தில் தரிசனம் செய்த போது ஒரு வலிய ஆக்னேயம் என்ற குரங்கு ஆலய மணியை அடித்து பூஜையை நிறைவேற்றிய பின்னர் ஸ்ரீமுருகப் பெருமானையும் கை கூப்பி தரிசனம் செய்தது. மற்றோர் வலிய ஆக்னேய குரங்கு நீங்கள் இங்கு காணும் இருதய கமல கோலம் வரையும் நேரம் முழுவதும் இந்த கோலத்தின் மேல் திகழும் மரத்தில் அமர்ந்து கொண்டு ஊதி சக்திகளை அந்த கோலத்திற்கு அளித்தது என்பதை நீங்கள் காணும் வீடியோ படத்தில் திகழும் நிழலைக் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். இத்தகைய வலிய ஆக்னேய சக்திகளை நீங்களும் பெற வேண்டாமா ? உடனே ஊதிமலை விரைந்து செல்லுங்கள், முருக அனுகிரக சக்திகளை, ஊதி மலை அக்னி சக்திகளை, வலிய ஆக்னேய வரமால்ய சக்திகளை அள்ளிச் செல்லுங்கள். வறுத்த நிலக்கடலையை இங்குள்ள வலிய ஆக்னேய குரங்குகளுக்கு அளிப்பது சிறப்பு. பூஜ்யம் என்பது நேர்கோடு என்பதை உணர்த்தும் முகமாக ஊதிமலையிலிருந்து பார்த்தால் ஸ்ரீமுருகப் பெருமான் உறையும் வட்டமலையையும் தரிசனம் செய்யலாம்.

ஊதிமலை

ஸ்ரீமார்க்கண்டேயர் முந்தைய பிறவி ஒன்றில் ஊதிமலை முருகப் பெருமானை வணங்கியே பிரம்மச்சர்ய சக்திகளைப் பெற்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். ஒரு ஆண், பெண் துணையை போகத்திற்காக நாடுவதும், ஒரு பெண் ஆண் துணையை நாடுவதும் இறைவனின் படைப்பை அவமதிப்பது போலாகும் என்பார் நம் சற்குரு. காரணம், பூர்ணத்தின் தொகுதியாகத் தோன்றும் இறைவன் தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் பூர்ணமாகவே வழங்கி இருப்பதால் எந்த ஒரு சுகத்தையும் நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்த்துவதே இறைவனின் சிருஷ்டி இரகசியமாகும். இதை குறித்தே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் ஓரிரு குழந்தைகள் பிறக்கும் வரையே ஆண் பெண் என்ற உறவை வைத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் இருவரும் சகோதர சகோதரிகளாய், அன்னை குழந்தை என்ற உறவை மேற்கொள்தலே சிறப்பு என்பார். இதை நடைமுறையில் நிறைவேற்றி அனைவருக்கும் எடுத்துக் காட்டாய் திகழ்ந்ததே நம் சற்குருவின் வாழ்க்கை. இன்றும் இத்தகைய தெய்வீக உறவை மேற்கொள்ள விரும்பும் அடியார்களுக்கு கைகொடுத்து காக்கும் தெய்வமே ஊதிமலை ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி முருகப் பெருமான் ஆவார். பெண் துணையின்றி தன் ருத்ர சக்தியால் உருவகித்த ஸ்ரீமுருகப் பெருமானின் ருத்ராக்னி சக்திகள் பூரணமாய்ப் பொலியும் தலமே ஊதியூர், ஊதிமலை ஆகும். இவ்வாறு தங்கள் தவ சக்தியால் ஊதி அக்னி சக்திகளை முருகப் பெருமானின் அனுகிரக சக்தியாகப் பெற்ற ஸ்ரீகொங்கண சித்தர் போன்ற உத்தமர்கள் ஒரு மண் குழாயில் தற்கால விசில் போன்ற அமைப்பை பனை ஓலையில் வைத்து ஊதினார்கள். இதனால் சாதாரண மக்களும் இந்த ஊதி அனுகிரகங்களைப் பெற்றனர். இத்தகைய களிமண் குழாய்கள் இன்றும் ஊதியூரைச் சுற்றி காணக் கிடைக்கின்றன. இன்றும் ஸ்ரீஊதிமலை முருகனை தரிசித்து அந்த தரிசனப் பலன்களை பிறருக்கு அளிக்கும் எண்ணம் ஊடையவர்கள் காற்றாடிகள் அமைந்த விசில்களை (siren whistle) குழந்தைகளுக்குத் தானமாய் அளித்தல் சிறப்பாகும். ஊதிமலையில் மட்டுமே நிறைவேற்றக் கூடிய இத்தகைய விசில் தானத்தால் தம்பதிகளுக்கு இடையே அமையும் எத்தகைய மனக் குறைகளும் நீங்கும். கணவனையோ, மனைவியையோ இழந்து வாடுவோர்கள் தக்க மன அமைதி பெறவும், அவர்கள் இறை வழிபாட்டில் முன்னேறவும் உதவும் திருத்தலமே ஊதிமலை ஆகும். பெரும்பாலான பக்தர்கள் ஸ்ரீமுருகப் பெருமானை மட்டுமே தரிசனம் செய்து விட்டு வந்து விடுகின்றனர். மலைஅடிவாரத்தில் இருக்கும் ஸ்ரீகைலாச நாதர், மலை மேலுள்ள ஸ்ரீகொங்கண சித்தர் தவ பீடம், மலை உச்சியில் அருளும் ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் இவர்களின் இணைந்த தரிசனமே பூர்ண பலன்களை நல்கும். இந்த அனைத்து தரிசனங்களையும் ஒரே நாளில் பெறுமளவிற்கு உடல் பலம், நேரம் இல்லாதிருந்தாலும் இந்த ஆண்டில் ஒரு முறையாவது இந்த ஆலயங்கள் அனைத்தையும் தரிசித்தல் நலமாகும்.

குக சப்தம
கிரக சஞ்சாரம்

வரும் 10.2.2021 தேதி புதன் கிழமை ஆறு கிரகங்கள் மகர ராசியில் கூடும் கிரக அமைப்பை சித்தர்கள் குக சப்தம கிரக சஞ்சாரம் என்று அழைக்கிறார்கள். இந்த கிரக சஞ்சாரத்தின் விளைவுகளை அறிந்து கொள்வதை விட இத்தகைய அபூர்வ கிரக சஞ்சாரத்தின்போது நிறைவேற்ற வேண்டிய தான தர்மங்களை சித்தர்கள் எடுத்துரைக்கிறார்கள். இத்தகைய தான தர்மங்களின் பலன்களை நேரிடையாக தெரிவிப்பதைவிட ஒரு நிகழ்ச்சியின் மூலம் இங்கு அளிக்கிறோம். பூண்டி மகான் தன்னுடைய இள வயதில் பாண்ட் முழுகை சட்டையுடன்தான் திகழ்வார். அந்த பாண்ட்டும் ஒரு காலில் முழுவதுமாகவும், மறு காலில் முழங்கால் வரை மடித்து விட்ட நிலையிலும் இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நம் சற்குரு தெரிவிப்பது பூண்டி மகானின் இத்தகைய கோலம் பலரின் தவறான எண்ணங்களுக்கு ஒரு பிராயச்சித்தமாக இருந்தது என்பதே ஆகும்.

ஸ்ரீபூண்டி மகான் ஜீவ சமாதி
கலசபாக்கம்

திருமணம் ஆகாதவர்களுக்கு இரு கண் பார்வை, திருமணம் ஆனவர்களுக்கோ எக்ஸ்ரே பார்வை என்பார்கள். ஆனால், தற்போது செல்போன் அதிகரித்து விட்டதால் பலருக்கும் எக்ஸ்ரே பார்வை உருவாகி அவர்கள் பெண்களை பார்க்கும் கோணமே வேறு விதமாக அமைந்து விட்டது. இதை அறியாதவர்களா நம் முன்னோர்கள் ? காலத்தின் கோலத்தை அறிந்த பூண்டி மகான் போன்ற பெரியோர்கள் இவ்வாறு துணி போர்த்திய காலுக்கும், துணி போர்த்தாத காலிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை அடியார்கள் உள்மனதில் பதித்து அவர்கள் எதிர்கால தவறான கர்மங்களால் துன்புறாதவாறு காத்தார்கள். பிற்காலத்தில் தன்னுடைய சஞ்சாரம் குறைந்து ஒரு திண்ணையில் வசிப்பதாக தன்னுடைய அனுகிரகத்தை பூண்டி மகான் மாற்றிக் கொண்டபோது மாலையில் விளக்கேற்றியவுடன் அடியார்களுக்கு மகான் தரிசனம் அளிப்பதில்லை. இதற்கு அறிகுறியாக அவர் தங்கியிருந்த திண்ணையில் ஒரு சாக்குத் துணி கீழே அவிழ்த்து விடப்படும். இதை அறியாத ஒருவர் இரவில் ஒரு நாள் ஸ்ரீபூண்டி மகான் தங்கியிருந்த திண்ணையின் சாக்கை மேலே தூக்கி மகானைக் காண உள்ளே சென்று பார்த்தார். அவ்வளவுதான், அடுத்த விநாடி ‘வீல்’ என்று கத்திக் கொண்டே வெகுவேகமாக அந்த திண்ணையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அவர் உடம்பு அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. எதிரே இருந்த டீக்கடையில் பூண்டி மகான் டீ அருந்துவது வழக்கம். அந்தக் கடையில் இருந்த பலரும் என்னவென்று அறிவதற்காக நடுங்கிக் கொண்டிருந்த அந்த பக்தரிடம் விசாரித்தனர். அவரோ எதுவுமே சொல்ல இயலாமல் வாயடைத்து நின்றார். அவர் கை மட்டும் மகான் இருந்த திண்ணையை நோக்கி ஏதோ சாடை செய்யவே அவர்கள் அனைவரும் மகான் தங்கியிருந்த இடத்திற்கு தயங்கி, தயங்கி சென்று பார்த்தனர். உள்ளே மகான் அமைதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேர அமைதிக்குப் பின்னரே அந்த அடியார் சுய நினைவை அடைந்தார். தான் பூண்டி மகானை சென்று பார்த்தபோது ஒரு பெரிய மலைப் பாம்பு புடம் போட்டு படுத்திருப்பதைப் பார்த்ததாகவும், அதனால்தான் அவர் அச்சமடைந்தார் என்றும் கூறினார். அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து மறுநாள் காலையில் பூண்டி மகானை தரிசனம் செய்தபோதுதான் அந்த அடியார் அடைந்த துன்பத்திற்கு விளக்கம் கூறினார். அதாவது அந்த அடியார் ஒரு தனியார் வங்கியில் பணி புரிந்தாலும் அந்த வேலையில் வந்த வருமானம் பற்றாமல் இருந்ததால் வேறு வழியில் வட்டிக்கு பணம் கொடுத்து தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாமா என்பது பற்றிய விவரத்தை அறியவே அவர் பூண்டி மகானை அணுகினார். ஆனால், பூண்டி மகான் ஒரு மலைப் பாம்பு வடிவில் காட்சி அளித்தது, எப்படி மலைப் பாம்பு தன் உணவிற்காக எங்கும் அலைவதில்லையோ, உள்ளதைக் கொண்டு, கிடைத்த உணவைக் கொண்டு திருப்தி அடைகிறறோ அது போலவே அந்த அடியாரும் தனக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்பதையே மலைப்பாம்பு வடிவில் ஒரு சித்த அனுகிரகமாக, ஞானி ஒருவரின் தத்துவப் பாடமாக அந்த அடியாருக்கு அளித்தார். இதையே அஜகர விருத்தி என்ற வேத பாடமாக கூறுவதுண்டு.

செய்யாறு கலசபாக்கம்

ஸ்ரீபூண்டி மகானின் மலைப் பாம்பு தரிசனத்தை வரும் 10.2.2021 புதன் கிழமை அன்று கிட்டும் கிரக சஞ்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பல இரகசியங்கள் தெரிய வரும். இந்த கிரக சஞ்சாரம் மகர ராசியில் ஏற்படுகிறது. மகர ராசியில் அன்று காலை 6.15 மணிக்கு அமையும் மகர லக்னத்திற்கு நான்கில் மேஷ ராசியில் செவ்வாய் பகவான் திகழ, அவர் மட்டுமே இந்த கிரக சஞ்சார நிலையிலிருந்து விலகி ஆட்சி பெற்று உள்ளார். காலை 6.15 மணி என்பது சூரிய உதயத்தை வைத்து கணக்கிடும்போது செவ்வாய்க் கிழமையாகத்தானே அமையும். மகர லக்னத்திற்கு ஏழில் கடக லக்னத்தில் நவாம்சத்தில் லக்னம் அமைவதும், செவ்வாய் பகவான் துலா ராசியில் அமைவதும், அதற்கு ஏழில் மேஷ ராசியில் சனி பகவான் எழுந்தருளி இருப்பதும் கிரக சஞ்சார ரீதியாக குக சப்தம கிரக சஞ்சாரம் என்ற அபூர்வ அமைப்பைக் கொண்டுள்ளது. இத்தகைய அருமையான முகூர்த்த நேரத்தில் பத்துக்கு ஆறு வேஷ்டி, ஒன்பது கஜ நூல் புடவை இவற்றை குறைந்தது ஆறு சுமங்கலித் தம்பதிகளுக்கு அளித்தல் அமோக குக அனுகிரக சக்திகளை வர்ஷிக்கும். இத்தகைய தான தர்மங்களினால் விளையும் பலன்கள் அமோகமாக இருப்பதால் சத்சங்கமாக பலரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுதல் நலம். இந்த கிரக சங்கமத்தில் விளையும் தான தர்ம பலன்களால் உடன் இருந்தே குழி பறிக்கும் வஞ்சகர்களின் சதித் திட்டத்திலிருந்து உத்திராட நட்சத்திரத்தில் திகழும் சந்திர பகவானின் அனுகிரகம் மக்களைக் காக்கும் என்றால் மற்ற கிரகங்களின் பலன்கள் எத்தகைய வலிமை உடையதாக இருக்கும். இந்த வழிபாட்டை முருகப் பெருமான் கோவணாண்டியாய் தனித்தருளும் எந்த திருத்தலத்திலும் நிறைவேற்றலாம் என்றாலும் ஊதிமலையில் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றுதல் சிறப்புடையதாகும். பூண்டி மகானின் மற்றோர் நாமம் ஆற்று சுவாமிகள் என்பதாகும். பக்தர்களின் வழிபாட்டிற்கு எழுந்தருளும் முன்னர் அம்மகான் செய்யாற்றிலேயே புதையுண்டு இருப்பார். மழையானாலும் வெள்ளமானாலும் ஆற்றை விட்டு வெளியே வருவதே கிடையாது. பல்லாண்டுகள் கழித்தே மக்களின் வேண்டுகோளின் பேரில் ஆற்றிற்கு வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் அளிக்கத் தொடங்கினார். ஆறு என்றால் வழி நடத்துதல் என்ற பொருளும் உண்டு. எத்தகைய தவறுகள் இப்பிறவியில் அல்லது எப்பிறவியில் இழைத்திருந்தாலும் அவர்களுக்கு நன்னெறி புகட்டியவரே பூண்டி ஆற்று சுவாமிகள் ஆவார். பலரின் தவறான செய்கைகளையும் மன்னித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்தவரே செய் ஆற்று பூண்டி சுவாமிகள்.

ஊதிமலை

சற்றே ஆழ்ந்து சிந்தித்தாலும் இதய கமல கோலத்தால் சாதிக்க முடியாத தெய்வீக முன்னேற்றம் எதுவுமே கிடையாது என்பது புரிய வரும். ஒரு முறை ஸ்ரீரமண மகரிஷியிடம் காவ்ய கண்ட கணபதி என்ற ஒரு அடியார் இருந்தார். அவருடைய இறுதிக் காலத்தில் ரமண மகரிஷி அவர் நெஞ்சில் கை வைத்து அவர் ஆத்மா இறைவனுடன் ஒன்றுவதற்கு தன்னால் ஆன முயற்சியை மேற்கொண்டும் காவ்ய கண்ட கணபதியின் உயிர் பகவானின் கைகளில் “அகப்படாமல்” பிரிந்து விலகியது. அதுவும் ஒரு நன்மைக்கே. பின்னர் தன் தாய் இவ்வாறு உயிர் விடும் நிலையில் இருந்தபோது ரமண மகரிஷி மிகவும் கவனமாக தன் அம்மா என்ற ஆத்மா உடலிலிருந்து பிரியாதவாறு காத்து அது தன் தாயின் நெஞ்சில் நிறைந்து பூர்ணம் பெறுமாறு செய்தார் என்பதே சித்தர்கள் உரைக்கும் ஆன்ம இரகசியம். அதனால் இன்றும் நாம் ரமண மகரிஷியின் ஜீவாலயத்தில் அவர் தாயாரின் ஜீவ சமாதியையும் தரிசித்து பலன் பெறும் பாக்கியத்தைப் பெறுகிறோம். இத்தகைய அனுகிரகம் என்றோ இறைவனால் அளிக்கப்பட்ட ஒன்று என்பது கிடையாது என்பதை உறுதி செய்வதே இங்கு நீங்கள் காணும் ஊதிமலை இதய கமல கோலமாகும். மீண்டும் மீண்டும் இதய கமல கோல இரகசியங்களை படித்து, அதன் பின்னணியில் உறையும் தெய்வீக நுணுக்கங்களை அறிந்து கொண்டால் நீங்களும் இறைவன் சாம்ராஜ்யத்தில் நிலையான ஒரு இடைத்தைப் பிடிக்கலாம் என்பது உறுதி. ஆரம்ப கட்டமாக சாதாரண தியானத்தில் மட்டும் இறைவனை நம் இதயத்தில் வைத்து பூஜிப்பதோடு மட்டுமல்லாமல், நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு காரியத்தின் பின்னணியிலும் நம்மை வழி நடத்துபவன் அவனே என்ற ஆழ்ந்த உண்மையை நெஞ்சில் விதைத்து வருவதும் இந்த நிரந்தர இடத்தைப் பிடிக்கும் ஒரு வழி முறையாகும். திருத்தலங்களில் 63 நாயன்மார்களை வழிபடும்போது ஒவ்வொரு நாயன்மார் முன்னும் ஏதாவது ஒரு கோலத்தை அரிசி மாவால் வரைந்து வழிபடுவதும் பக்தியைப் பெருக்கும் ஒரு வழிபாட்டு முறையாகும். இவ்வாறு நாயன்மார்களின் அனுகிரகத்தைப் பெற விரும்புவோர் பூசல் நாயனார், வாயிலார் நாயனார் என்ற நாயனார் மூர்த்திகளின் முன் இதய கமல கோலத்தை வரைந்து வழிபடுவதும் சிறப்பே. அனைத்து நாயன்மார்களுமே இறைவனை இதயத்தில் வைத்து பூசித்தது உண்மையே என்றாலும் இந்த இரு நாயன்மார்களுக்கும் இந்த இதய கமல கோலத்திற்கும் ஒரு சிறப்பான இணைப்பு உண்டு என்பதே நீங்கள் தொடர்ந்த வழிபாட்டால் உணரக் கூடிய உண்மையாகும்.

ஹஜ்ரத் மொஹமத் அலி ஷா

அலாகாபாத் இரயில்வே சந்திப்பில் ஜீவ சமாதி கொண்டு அருள் புரியும் அற்புத மகானே ஹஜ்ரத் மொஹமத் அலி ஷா (شاه علي محمد حضرة) ஆவார். லைன் பாபா என்ற பெயரில் பிரசித்தமாக விளங்கும் இந்த மகானின் ஜீவ சமாதியை அலாகாபாத் திரிவேணி சங்கமத்தில் மேற்கொள்ளும் நீராடல் வழிபாட்டிற்குப் பின் தரிசித்தல் சிறப்பாகும். தன் அடியார்களுடன் காசி யாத்திரை சென்ற நம் சற்குரு இவ்வாறு லைன் பாபாவை திரிவேணி சங்கம வழிபாட்டிற்குப் பின் தரிசித்து அம்மகானை வழிபடும் முறையையும் அருகிலிருந்தே சுட்டிக் காட்டினார்கள். குறிப்பிட்ட நேரம் மட்டுமே இம்மகானின் ஜீவ சமாதி வழிபாட்டிற்காக திறந்து விடப்படும் என்பதால் நாம் திரிவேணி சங்கமம் என்ற முக்கூடலில் வழிபாட்டை நிறைவேற்றி வரும் நேரத்தில் சுவாமியின் சமாதி திறந்திருக்கும் என்று நிச்சயமாக கூற முடியாது என்பதால் இரவு பகல் எந்நேரமும் இம்மகானை வழிபடும் முகமாக நம் சற்குரு சுட்டிக் காட்டுவது என்ன ?

ஸ்ரீதுர்வாச மகரிஷி ஆலயம்
திருஅண்ணாமலை

சுவாமியின் ஜீவ சமாதியை தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ள ஜன்னலில் நம் கன்னங்களைப் பதித்து வணக்கம் செலுத்துதலே இம்மகானின் பூர்ண அனுகிரகத்தைப் பெறும் சித்த வழிபாட்டு முறையாகும். இடது கன்னம், வலது கன்னம் என்றவாறாக இரண்டு கன்னங்களையும் மாறி மாறி ஜன்னலில் பதித்து வழிபடுவதே சரவணபவ என்ற ஸ்வஸ்தி நமஸ்கார பத்ததி ஆகும். சரவணபவ ஸ்வஸ்தி சக்திகளைப் பெறுவதற்காக அனைவரும் வடநாட்டில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கோ அல்லது அலாகாபாத் ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியாது என்பதை அறியாதவரா நம் சற்குரு ?

இதற்காக திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும்போது ஸ்ரீதுர்வாச முனிவர் எழுந்தருளி உள்ள ஆலயத்தின் எதிரே உள்ள சுவாமியின் பாதங்களின் வழியே பஞ்ச நமஸ்காரம் முறையில் திருஅண்ணாமலையை நோக்கி வணங்கி அந்த நமஸ்கார முறையிலேயே கன்னத்தை தரையில் பதித்து வழிபடுவதும் இத்தகைய சரவணபவ சித்த சக்திகளைப் பக்தர்கள் எளிதில் பெறும் முறையாக நம் சற்குரு அளித்து வந்தார்கள் என்பது நீங்களே அறிந்ததே. காலத்தின் மாற்றத்தால் இந்த வழிபாட்டு முறையும் தற்போது மறைந்து விட்டதால் பக்தர்கள் இத்தகைய அரிய அனுகிரகத்தை எப்படிப் பெறுவது ? இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய ஒரு சற்குருமார்களின் திருவிளையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் நம் சற்குரு வெங்கடராமனிடம், “ஏண்டா இட்லி, ஒரு வேளை கடவுள் ஒரு தப்பு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன சொல்வாய் ?” என்று கேட்டார். நம் சற்குருவோ ஒரே ஒரு விநாடி யோசித்து விட்டு, “வாத்யாரே, கடவுளே தப்பு செய்தாலும் அது தப்புதான் ...,” என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு பலமான அறை விழுந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே அப்படி ஒரு பலமான அறையை நம் சற்குரு வாங்கியதில்லை. அவர் கண்களின் முன்னால் வண்ணத்துப் பூச்சிகள் மின்னலாய் பறக்க, பெருகிய கண்ணீரால் எதிரில் எதுவுமே தெரியவில்லை. தன் இரு கைகளாலும் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டார் நம் சற்குரு. துடித்த இதழ்களிடையே அவர் திக்கித் திணறிக் கொண்டே வார்த்தைகளை உதிர்த்தார், “வாத்யாரே, கடவுள் தப்பே செய்ய மாட்டார், தப்பே செய்ய மாட்டார்...”. “என்ன தைரியம் இருந்தா நெஞ்ச நிமித்திக் கிட்டு யார் தப்பு செய்தாலும் அது தப்புதான், கடவுளே தப்பு செய்தாலும் அது தப்புதான் என்று என்னிடமே நக்கீரன் டயலாக் பேசுவாய் ...”, என்று கர்ஜித்தார் கோவணாண்டி. சற்று நேர அமைதிக்குப் பின் கோவணாண்டி நம் சற்குருவின் தலையைக் கோதியவாறே, “ஏண்டா, இப்படி ஒரு அறை வாங்கிய பின்தான் கடவுளைப் பற்றிய தெளிவு உனக்கு வர வேண்டுமா, இதற்காகவா உன்னை இத்தனை கோயில்களுக்கும் நடையோ நடை என்று நடக்க வைத்தேன், அங்காளி ஆத்தாவை சுத்தோ சுத்து என்று சுத்த வைத்தேன் ...,” இவ்வாறு நம் சற்குரு இறைவனைப் பற்றி புரிந்து கொள்வதற்காக கோவணாண்டி பட்ட பாட்டையெல்லாம் விவரித்துக் கொண்டே போனார்.

ஸ்ரீலைன்பாபா ஜீவ சமாதி
அலகாபாத்

ஸ்ரீஒளியுல்லா சுவாமிகள் ஜீவசமாதி
துவரங்குறிச்சி

இது என்றோ நிகழ்ந்த ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியாக மலர்ந்தாலும் இந்த அனுகிரக சக்திகளை தம் அடியார்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அளித்துக் கொண்டே இருந்தவரே நம் சற்குரு ஆவார். இன்றும் இத்தகைய சித்த அனுகிரக சக்திகளை பெற விரும்பும் அன்பர்கள் திருஅண்ணாமலையில் ரோகிணி நட்சத்திரம் கூடும் திங்கட் கிழமை அன்று கிரிவலம் வந்து துர்வாச தரிசனத்தைப் பெறுதலால் இந்த அரிய குரு நம்பிக்கையை, இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம். பஞ்ச நமஸ்கார முறையில் துர்வாச முனிவரையும் திருஅண்ணாமலையையும் தரிசிக்கும்போது திருஅண்ணாமலை தரிசனம் கிடைக்கா விட்டாலும், திருஅண்ணாமலையை மானசீகமாகவே தரிசித்து இவ்வழிபாட்டை நிறைவேற்றலாம் என்பதும் நம் சற்குரு அளிக்கும் அனுகிரகமாகும். காசி யாத்திரைக்கு செல்லும் முன் ராமேஸ்வர திருத்தலத்தை தரிசனம் செய்து தனுஷ்கோடியில் விளங்கும் தீர்த்தத்திலிருந்து சிறிது மண்ணை எடுத்துச் சென்று அதை திரிவேணி சங்கமத்தில் சேர்க்க வேண்டும் என்பது காசி யாத்திரையின் ஒரு முக்கிய அங்கமே. அப்போது லைன்பாபாவின் அனுகிரகத்தைப் பெறும் முகமாக துவரங்குறிச்சியில் விளங்கும் ஸ்ரீஒலியுலா சுவாமிகளின் ஜீவ சமாதியில் மேற்கூறிய முறையில் தன் கன்னங்களை மூன்று முறை பதித்து சரவணபவ அனுகிரக சக்திகளைப் பெறுவது சிறப்பாகும். காசி யாத்திரையின் போது இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றா விட்டாலும் மற்றோர் சந்தர்ப்பத்தில் மேற்கண்ட முறையில் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளை துவரங்குறிச்சியில் வழிபட்டு தம் அடியார்களுக்கு இத்தகைய அனுகிரகத்தைப் பெற்றுத் தந்தவரும் நம் சற்குருவே. இத்கைய அபூர்வ கிரக சங்கமத்திற்காக காத்திருக்க முடியாதவர்கள் ஊதிமலையில் எந்நாளும் இறைவனை படியேறிச் சென்று ஸ்வஸ்தி நமஸ்கார முறையில் வழிபடுவதால் மேற்கூறிய சரவணபவ ஸ்வஸ்தி வழிபாட்டு சக்திகளைப் பெறலாம் என்பதும் நம் சற்குரு நமக்காக அளிக்கும் ஒரு வழிபாட்டு முறையாகும். மனித உடலின் ஒரு உணர்ச்சி மிகுந்த பகுதியாக விளங்கும் கன்னத்தில் நம் கோவணாண்டி அறையாக அளித்த அனுகிரகத்தை கன்னத்தைப் பதிக்கும் ஒரு வழிபாட்டில் நம் சற்குரு அளிக்கவல்லவர் என்றால் நம் சற்குருவிற்கு தம் அடியார்கள் மேல் உள்ள அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியுமா என்ன ? பல்லாயிரம் பிறவிகளில் கனியக் கூடிய ஒரு சித்த அனுகிரகத்தை ஒரே ஒரு பிறவியில், ஒரே ஒரு வழிபாட்டின் மூலமே அளிக்க வல்லவர் நம் சற்குரு என்றால் அவர்தம் மகிமைதான் என்னே என்னே ?! கூச்ச சுபாவமுள்ள பெண்கள் ஸ்வஸ்தி நமஸ்கார முறையை அனுசரிக்கா விட்டாலும் பஞ்ச நமஸ்கார முறையில் ஊதிமலையின் ஒவ்வொரு படியிலும் வணங்கி தம் கன்னங்களை ஆறு முறை பதித்து வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், கணவன் மனைவி இடையே திகழும் எத்தகைய வேறுபாடுகளும் மறையும். அமெரிக்கா சென்று தன் தாய் நாடு திரும்பிய விவேகானந்தர் கப்பலில் இருந்து கீழே இறங்கியவுடன் தரையைக் குனிந்து முத்தமிட்டு என் தாயை வணங்குகிறேன் என்றாராம். அந்த அன்பை இங்கே நினைவு கூறுங்கள் அனைத்தும் உங்களுக்குப் புரிந்து விடும், சித்த அனுகிரகம் கனிந்து விடும். அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். அடித்த கை அணைத்த சுகத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா ? ஒரு முறை நம் சிறுவன் வெங்கடராமனை காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்ற நம் கோவணாண்டி அலாகாபாத் சென்றபோது சிறுவனை லைன்பாபா ஜீவ சமாதியை மேற்கூறிய முறையில் தரிசிக்கச் செய்து அம்மகானின் அனுகிரகத்தை சிறுவன் பெறச் செய்தார். அது மட்டுமல்ல, கோவணாண்டி, “டேய், இவர் பெரிய மகான், இத்தோட இவர் தரிசனம் முடிஞ்சிடுச்சுன்னு நீ நினைக்காதே, எதிர்காலத்துல பல புள்ள குட்டிகளோட வந்து இவரை நீ தரிசிப்ப ...,” என்று கூறி கண் சிமிட்டினாராம். ஆனால், கோவணாண்டி கூறிய “புள்ள, குட்டி” என்ற வார்த்தைகள் தன் ஆருயிர் சீடர்களையே குறிக்கும் என்பதை நம் சற்குரு பல்லாண்டுகள் கழித்து நிகழ்ந்த தன் காசி யாத்திரையின்போதுதான் புரிந்து கொண்டாராம்.

ஸ்ரீஊதிமலை ஆண்டவர்

இணைந்த கரங்கள் இயைந்த கரங்கள் என்ற அபூர்வ அனுகிரகத்தை பக்தர்கள் பெறக் கூடிய திருத்தலமே ஊதிமலை ஆகும். ஊதி என்ற இரண்டு எழுத்துக்கள் இந்த அனுகிரகத்தை குறிப்பதாகும். லைன் பாபா என்றால் ஒன்றுக்கொன்று இணையாகத் திகழும் தண்டவாளங்களைக் குறிக்கும் தந்தையாகத் திகழ்பவர் என்றும் ஒரு பொருள் உண்டு. இணைந்த என்ற சொல் ஒன்றுக்கொன்று இணைந்து, கூடியிருத்தல் என்றும் ஒன்றுக்கொன்று சமமாகத் திகழ்வது என்ற பொருள்களைக் குறிக்கும். கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் இணையாக, சமமாக இருந்து, ஒருவர் கருத்தை மற்றவர் ஆமோதித்து ஒற்றுமையாகத் திகழும் தன்மையையும் குறிக்கும். இத்தகைய அனுகிரக சக்திகள் அனைத்தும் சற்குரு பாபா போன்ற மகான்களாலும், ஊதிமலை ஆண்டவர் வழிபாட்டினாலும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஒரு யுகத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் பரிணமிக்கும் இத்தகைய “தண்டவாள” ஒற்றுமை சக்திகள் வரும் 10.2.2001 புதன் கிழமை அன்று சப்தரிஷிகளால் அளிக்கப்படுவதால் கணவன் மனைவி, பெற்றோர்கள் குழந்தைகள், சகோதரி சகோதரர்கள், ஆண்டான் அடிமை அதாவது தொழிலாளி முதலாளி போன்ற அனைத்துத் “தண்டவாள” உறவுகளும் அன்று ஊதிமலை ஆண்டவரை வணங்கி வழிபடுதலால் ஒற்றுமையுடன் திகழும் என்பதே சித்தர்கள் அளிக்கும் அபூர்வ அனுகிரகமாகும். சப்த ரிஷிகள் முன்னின்று அளிக்கும் இத்தகைய அபூர்வ அனுகிரக சக்திகளை பக்தர்கள் அனைவரும் பெற்று வளம் வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். “லைன்” சக்திகள் என்பவை மனிதர்களை மட்டும், மனித உறவுகளை மட்டும் பலப்படுத்தும் என்று கிடையாது, மனிதர்கள் விலங்குகள், மனிதர்கள் தாவரம், மனிதர்கள் இயற்கை என்ற அனைத்து உறவுகளையும் நெறிப்படுத்தும் என்பதே இத்தகைய அபூர்வ கிரக சஞ்சாரத்தின் தன்மையாகும். திருமணத்தின்போது நடைபெறும் சப்தபதி போன்ற நிகழ்ச்சிகளின்போது மணமகன் தன் வலது கை சூரிய விரலில் மோதிரத்தை அணிந்து கொண்டு மணமகளின் இடது கையை பிடித்துக் கொண்டு வலம் வரும்போது திகழும் சக்திகளே ஊதி சக்திகள் ஆகும். இத்தகைய சக்திகளை திருமண தம்பதிகள் பெற்றாலும் திருமண வைபவத்திற்கு முன்னும் பின்னும் நிறைவேற்ற வேண்டிய உடல் சுத்தி முறைகளை பலரும் கடை பிடிக்காததால் இத்தகைய ஊதி அக்னி சக்திகள் உடலில் முழுமையாக நிரவுவதில்லை. இத்தகைய சக்திகளைப் பெறும் முகமாகவே சித்தர்கள் திருமணங்களை கோவில்களில் இறை மூர்த்திகளின் சன்னதிகளில் நிறைவேற்றும்படிக் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய திருமண முறைகளும் சித்தர்களின் எதிர்பார்ப்பின்படி நிகழாததால் பல திருமணங்களும் குறைபாடுகள் உள்ளதாகவே திகழ்கின்றன. இத்தகைய தவறுகளை நாம் திருத்திக் கொள்ள இறைவனால் அருளப்பட்டதே வரும் 10.2.2021 அன்று சித்தர்களால் அளிக்கப்பட்ட வழிபாட்டு முறையாகும்.
ஐந்துடன் ஒன்று சேர்ந்து ஆறாய்த் திகழ
ஆறுடன் ஒன்று சேர்ந்து ஏழாய் மாற
ஏழுடன் ஒன்று சேர்ந்து எட்டாய்ப் பொலிய
புவியில் எவருக்கும் எட்டாக் கனியைத்
தட்டாமல் அளிக்குமே
என்பது வரும் 10.2.2021 அன்று திகழும் கிரக சஞ்சார அனுகிரகம் குறித்து சித்தர்கள் அளிக்கும் ஊதி நாடிப் பாடல். ஊதியை நாடி அனைவரும் எட்டாக் கனியான இறை பக்தியை தட்டாமல் பெறலாமே. இரயில் பாதை ஒன்று இடது பக்கத்தில் திரும்புவதாக வைத்துக் கொள்வோம். அப்போது வலது பக்கம் அமையும் அந்த தண்டவாளத்தின் நீளம் இடது பக்கம் அமையும் தண்டவாளத்தின் நீளத்தை விடச் சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்பது கணக்கு விதி, பௌதிக விதி. நெளிவு சுழிவு இல்லாமல் எந்தப் பாதையும் இல்லை, பயணமும் இல்லை அல்லவா ? இந்த விதியைப் புரிந்து கொண்டால் தண்டவாளமாய்த் திகழும் கணவன் மனைவி இடையே வளரும் உறவு பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும், இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும், இதன் தொகுதியாய்த் திகழும் இறைவனைப் பற்றியும் புரிந்து கொண்டவர்கள் ஆவோம். இத்தகைய பிரபஞ்ச அறிவை ஊட்ட வல்லதே வரும் 10.2.2021 அன்று நிகழ்த்தும் வழிபாட்டின் சிறப்பாகும்.

நெளிவோ சுழியோ
இல்லாத பாதை

எந்த வாகனத்தில் பயணம் செய்பவர்களும் நெளிவோ சுழியோ இல்லாத பாதையாக இருப்பதையே விரும்புவார்கள் என்பது பொதுவான விதி. ஆனால், சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்தான் நெளிவு சுழிவு என்பது மனித வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு அவசியம் என்பது புரிய வரும். உதாரணமாக, சாலை ஓரத்தில் இருக்கும் மரங்கள் ஒரு வாகனத்தை புதிதாக ஓட்ட கற்றுக் கொள்ளும் ஒருவருக்கு எதிரே வந்து நிற்கும் என்று நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. உண்மையில் இதுதான் சற்குருவைப் பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். சற்குருவைப் பெற்றவர்களின் வாழ்க்கை நெளிவோ சுழியோ இல்லாத வாழ்க்கையாக நிச்சயம் அமையாது என்றாலும் எத்தகைய இடர் வரினும் அதைக் களையும் முறைகளை சற்குருவானவர் வருமுன் காப்பாக அமைந்து நமக்குக் கை கொடுப்பார் என்பதே சற்குருவைப் பெற்றவர்களின் தெளிவு. சற்குருவைப் பெறாதவர்கள் நல்ல பாதையில் சென்றாலும் ரோடு ஓரத்தில் இருக்கும் மரங்கள் ரோட்டின் நடுவே வந்து நின்று தொல்லை கொடுப்பது போல் உணர்வார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி

ஒரு முறை நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் மாடியில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வேலையை முருகன் நாமம் கொண்ட ஒருவர் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அமைக்கப்பட்ட அறைகளின் தடுப்புச் சுவராக எழுப்பப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் ஒரு அடி உயரத்தில் அமைந்திருந்தன. அதனால் பலரும் அந்த தடுப்புச் சுவர்களை என்னதான் கவனத்துடன் தாண்டிச் சென்றாலும் அவர்களையும் அறியாமல் ஒன்றிரண்டு தடுப்புச் சுவர்களின் மேல் அவர்கள் கால் மோதவே அதனால் பலரும் தங்கள் முட்டிகளைப் பெயர்த்துக் கொண்டு அவதியுற்றனர். நம் சற்குருவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு அடியார், “கொஞ்சம் கூட அறிவில்லாமல் இவ்வாறு சுவர்களை உயரமாகக் கட்டி விட்டார்கள் ...,” என்று கூறவே நம் சற்குருவோ, “சார், எய்தவன் இருக்க அம்பை நோவானேன். இந்தச் சுவர்களை அமைக்கச் சொன்னதே அடியேன்தான், இதில் ஏதாவது குறை இருப்பதாகத் தோன்றினால் அதை நீங்கள் நேரடியாக அடியேனிடமே கூறி விடலாம்,” என்று கூறி அந்த உயரமான சுவர்கள் அமைப்பட்டதன் காரணத்தை விளக்கினார்கள். “இப்போது பலருக்கும் நடை என்பதே குறைந்து விட்டது. அதிலும் சென்னை போன்ற நகரங்களில் எஸ்கலேட்டர் படிகள் வந்து விட்டதால் யாரும் காலை அரை அடி உயரத்திற்குக் கூட தூக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. ஆனால், நாம் அனைவரும் நம் அவயவங்களை நன்றாகத் தூக்கி வைத்து நடந்தால், ஓடினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அது மட்டுமல்ல குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள் என்று யாரையுமே தாண்டக் கூடாது. ஆனால், தற்போதைய ஒட்டுக் குடித்தனத்தில் பல அடியார்களும் இவர்கள் அனைவரையுமே தாண்டி, தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது. அதே போல கழிப்பு கழித்த சூடம், விபூதி, எலுமிச்சை பழம், குங்குமம் போன்றவற்றை மிதிக்கக் கூடாது, ஒதுங்கியோ அல்லது தாண்டியேதான் செல்ல வேண்டும். தாண்டிச் செல்ல வேண்டிய இவற்றை தாண்டாமல் இந்த பொருட்கள் இருப்பதே தெரியாததால் பலரும் இத்தகைய தோஷமுள்ள பொருட்களை மிதித்தே செல்கிறார்கள். இவ்வாறு தாண்ட வேண்டியதை தாண்டாமலும், தாண்டக் கூடாததை தாண்டுவதாலும் பலவிதமான கர்ம வினைகள் நம் அடியார்களைச் சூழ்ந்து அவர்களுக்கு இன்னலை விளைவிக்கும்போது அவர்களின் குரு என்று சொல்லிக் கொள்ளும் அடியேன் இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பரிகாரம் காண வேண்டாமா ?”

“அது மட்டுமல்லாமல் திருமணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் உருவங்களின் பின்னால் ஓடுகிறீர்கள். நெளிவு சுழிவை இரசிக்கிறீர்கள். உலக அழகிகள் என்பவர்களே இத்தகைய நெளிவு சுழிவு அம்சங்களை வைத்துத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் எங்கு, எப்படி பரிகாரம் காண்பது ? அது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது மிகவும் கவனத்துடன் நடத்தப்பட வேண்டிய ஒன்று. இதை ஒவ்வொரு நொடியும் உணர்த்தவே, உங்களை எச்சரிக்கும் பொருட்டே இத்தகைய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழே தரையைப் பார்த்து நடப்பது மட்டுமல்ல, தலைக்கு மேலே உள்ள பொருட்களையும் கவனமாகப் பார்த்துத்தான் நீங்கள் செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒரு இடத்தில் சாதாரண மின்விசிறி இருக்கும், ஆனால் அடுத்த அறையில் மின்விசிறியோ சுவற்றில் மாட்டப் பட்டிருக்கும். சற்றே நீங்கள் கவனக் குறைவுடன் இருந்தால் கூட ... ... அதன் விளைவு நீங்கள் அறிந்ததே. இவ்வாறு கவனத்துடன் நீங்கள் இங்கு ஆஸ்ரம சேவையில் ஈடுபடும்போது அந்த எச்சரிக்கையான செயல்பாடு உங்கள் அலுவலகத்தில், அவசர கதியான உங்கள் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இவ்வாறு நெளிவு சுழிவான வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீங்கள் எதிர்கொள்ளவே காவிரி போன்ற நதிகள் வலம் சுழித்துப் பாயும் திருவலஞ்சுழி போன்ற திருத்தலங்களில் எல்லாம் உழவாரத் திருப்பணிகளை நிறைவேற்றி அதில் உங்களை பங்கு கொள்ளச் சொல்கிறேன்.”

திருவலஞ்சுழி ஸ்ரீவெள்ளை வாரண விநாயகர்

சில மாதங்கள் கழித்து அந்த தடுப்புச் சுவர்களை பெரிதாக்கி அவற்றை ஆஸ்ரம சேவைக்கு வரும் பெண்களின் உபயோகித்திற்காக நம் சற்குரு அளித்தார். அப்போது காலியாக இருந்த அறைகளில் எல்லாம் ஆயிரக் கணக்கான லட்டுப் பிரசாதம் வைக்கப்பட்டு கிரிவல அடியார்களுக்கு திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பிரசாதமாகப் பரிமாறப்பட்டன. இதுவும் அடியார்களுக்கு அனுகிரகம் அளிக்கும் ஒரு சித்த வழிபாடே. எப்படி என்பதை அவரவர் ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்ளவும். இவ்வாறு நம் சற்குரு அளித்த அனுகிரகங்களில் ஒன்றே ஊதிமலை முருகனை வழிபடும் முறையாக எடுத்துரைத்த நற்செய்திகள் ஆகும். ஊதிமலையில் ஸ்ரீமுருகப் பெருமான் ஆவுடை மேல் எழுந்தருளி உள்ளார் அல்லவா ? தூய பசும்பாலில் குங்குமத்தை கலந்து செம்பால் அபிஷேகம் நிறைவேற்றுவதும், பஞ்சகவ்ய அபிஷேகமும், சிறுமலை வாழைப்பழம் கொண்டு நிறைவேற்றப்படும் பஞ்சாமிர்த அபிஷேகமும் ஊதிமலை முருகப் பெருமானுக்கு மிகவும் உவப்புடையதாகும். ஸ்ரீகாளஹஸ்தி திருத்தலத்தில் பொன்முகலி ஆறு வலம் சுழித்துப் பாய்வதால் ஸ்வர்ணமுகி என்ற ஆறு எழுத்துக்களில் பொலியும் இந்த ஆறு, முருகப் பெருமானுக்கு உரிய முப்புரி ஊதி சக்தி தலமாக விளங்குகிறது. பொன்முகலி ஆற்றின் தீர்த்தத்தால் ஸ்ரீஊதிமலை முருகனுக்கு அபிஷேகித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

பழங்கனியா பலகணியா ?

திருவலஞ்சுழி திருத்தலத்தில் ஸ்ரீவலஞ்சுழி சுவேத விநாயகரை பலகணி மூலமாக தரிசிப்பதே சிறப்பாகும். முற்காலத்தில் மக்களிடையே பரவலாக நிலவிய இந்த அற்புத தரிசன முறை இப்போது மறைந்து விட்டது என்றே கூறலாம். இறைவனை சாதாரணமாக தரிசிப்பதற்கும் வலஞ்சுழி போன்ற திருத்தலங்களில் அமைந்த பலகணி வழியாக தரிசிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. அக்காலத்தில் சிற்பிகள் திருவலஞ்சுழியில் உள்ள பலகணியைத் தவிர்த்து மற்ற கட்டிட வேலைப்பாடுகளை செய்து தருவதாக ஒப்புக் கொள்வார்களாம். அந்த அளவு சிறப்பு வாய்ந்தது திருவலஞ்சுழி என்பது மட்டுமல்ல, இங்குள்ள பலகணி சாளரமும் அத்தயை சிறப்பு வாய்ந்ததே.

பெருநகர்

பொதுவாக, அக்காலத்தில் சாளரங்கள், பலகணிகள் அமைக்கப்பட்ட திருத்தலங்களில் எல்லாம் இறைவனை சாளரங்கள், பலகணிகள் மூலம் மட்டுமே தரிசிக்கும் வழக்கம் இருந்தது. பல்வேறு ஆசைகள், அபிலாஷைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனிதன் இறைவனின் பூரணமான தரிசனத்தைப் பெறும் அளவிற்கு தன் ஆன்மீக சக்தியை, தெய்வீக ஆற்றலை வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் அருளை வாரி வழங்க தயாராக இருந்ததால் முதலில் சாளரங்கள் மூலமாக இறைவனை தரிசித்து வரும்போது இறைவனின் கல்யாண குணங்கள் ஒவ்வொன்றாக மனிதனுக்குத் தெரிய ஆரம்பிக்கவே மனிதன் இறைவனின் கல்யாண குணங்களை உருவமாகத் தரிசிக்கும் அளவிற்கு இறைப் பாதையில் முன்னேற்றம் அடைந்தான். இறுதியாக மனிதன் இறைவனின் முழு உருவத்தையும், அதாவது இறைவனின் பூரண கல்யாண குணங்களைக் காணும் அளவிற்கு சக்தி பெற்றபோது அவன் கருவறைக்குச் சென்று இறைவனை முழுமையாக தரிசிக்கும் ஆற்றலைப் பெற்றான். இதே போல்தான் திருவலஞ்சுழியில் ஸ்ரீவிநாயகர் முன் அமைக்கப்பட்டுள்ள பலகணியும். நாம் தொடர்ந்து ஸ்ரீசுவேத விநாயகப் பெருமானின் தரிசனத்தை பெற பெற சிறிதாக சுவாமியின் கல்யாண குணங்களை இந்தப் பலகணி வழியே தரிசிக்க முடியும். இந்த சாளர, பலகணி அனுகிரகங்களை பக்தர்களுக்கு அளிக்கும் பொருட்டே நம் சற்குரு இத்தகைய திருத்தலங்களில் திருப்பணி நிறைவேற்றும்போது இந்த சாளரங்களை எல்லாம் தன் திருக்கரங்களாலேயே சுத்தம் செய்து அவற்றிற்கு புனருத்தாரண திருப்பணிகள் நிறைவேற்றினார் என்பது ஒரு சில அடியார்களே அறிந்த இரகசியமாகும். திருவலஞ்சுழி மட்டும் அல்லாது திருச்சி திருவானைக்கோவில், காஞ்சிபுரம் அருகே பெருநகர் சிவாலயம் இவைகளில் உள்ள சாளரங்களையும் புனருத்தாரணம் செய்து அதை மக்களின் நன்மைக்காக அருளியவரே நம் சற்குரு ஆவார். நம் சற்குருவின் திருக்கரங்கள் பட்ட பழங்கனி என்று சித்தர்களால் அழைக்கப்படும் திருவலஞ்சுழி பலகணி சாளரத்தையே இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். காய் கனிந்தால் அது பழம். அது போல் பக்தர்களின் பக்தி கனியும்போது இறைவனின் கல் வடிவம் மறைந்து சைதன்ய ரூப தரிசனம் கிட்டுகிறது. இவ்வாறு பக்தர்களின் பக்தி கனியும்போது பழங்கனி பலகணி மறைந்து அங்கு பிள்ளையரப்பனின் கல்யாண குணங்களே தரிசனமாகக் கிட்டுவதால் இந்த பலகணி, பழங்கனி என்று சித்தர்களால் புகழப்படுகிறது. திருவலஞ்சுழி திருப்பணியின்போது அடியார்களுக்கு எல்லாம் இளநீர் வழங்கப்பட்டது. இதன் தாத்பர்யம் என்ன ? இளநீரை மட்டும் அருந்தி இறை தரிசனம் பெறும்போது அது ஸ்வேத வாரண தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்வேத வாரணம் என்றால் இந்திரனின் வாகனமான வெள்ளை யானையைக் குறிக்கும். திருவலஞ்சுழியில் எழுந்தருளி உள்ள பிள்ளையாரப்பனும் ஸ்வேத வாரணர் என்றுதானே அழைக்கப்படுகிறார். அதாவது இளநீரை மட்டும் உண்டு, ஒரு நாளைக்கு மூன்று இளநீருக்கு அதிகப்படாமல் உண்டு, இறை தரிசனம் பெறுவதால் அவ்வாறு கிட்டும் தரிசனம் எல்லாமே ஸ்வேத வாரண தரிசனமாக, வெள்ளை யானையே இறை மூர்த்திகளை தரிசனம் செய்ததற்கு சமமான அனுகிரகம் கிட்டும் என்றால் என்னே நம் சற்குருவின் பெருங்கருணை ?! இது நம் அடியார்களுக்கு என்றோ கிட்டிய குரு அனுகிரகம் கிடையாது. இன்றும் நாள் முழுவதும் வெறும் இளநீர் மட்டும் உண்டு (தேங்காய் தவிர்த்து) இறை தரிசனம் பெறுவதால் அத்தகைய தரிசனங்கள் அனைத்துமே ஸ்வேத வாரண தரிசனமாக அமையும் என்பதே சித்தர்கள் உவந்தளிக்கும் அனுகிரகமாகும்.

வெண்மை பெண்மை குளுமை

பால், பனிக்கட்டி, சங்கு, தும்பை மலர், கொக்கு போன்றவை வெண்ணிறமாக இருப்பதை நாம் அறிவோம். பாலைக் காய்ச்சினால் அது மஞ்சள் நிறமாகி விடும், தும்பை மலரை நெருப்பில் போட்டால் அது கருத்து விடும், ஒரு சில டிகிரி சூடு ஏறினால் பனிக்கட்டியோ கரைந்து விடும், சங்கோ சுடச்சுட மேலும் வெண்ணிறமாய்ப் பிரகாசிக்கும். சூரிய ஒளியில் திகழும் ஊதா முதலாக சிவப்பு ஈறாக உள்ள ஏழு வண்ணங்களை ஒரு அட்டையில் வைத்து சுழற்றினால் அவை ஒன்று சேர்ந்து வெண்ணிறமாக பிரகாசிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. அப்படியானால் வெண்மை என்பது என்ன ? அது எப்படி இருக்கும் என்பது பலரும் அறியாத ஒன்றே. பலரும் அறியாத இந்த வெண்ணிற, சுவேத விநாயகராய்ப் பிரகாசிப்பவரே திருவலஞ்சுழி விநாயகர் ஆவார். ஏழு வண்ணங்கள் சேர்ந்த சூரிய ஒளியை நாம் ஓரிரு நொடிகள் கூட பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. ஆனால், சூரியனின் உட்புறமோ மிகவும் குளிர்ச்சியானது. இந்த குளிர்ச்சியை நம் கண்கள் அனுபவிக்க முடிந்தால் அது நன்மையைத்தான் அளிக்கும். இந்த குளிர்ச்சியை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் சூரிய புத்திரனான கர்ணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே. இன்று நாம் திருவலஞ்சுழி முன் திகழும் பலகணி தரிசனத்தைத் தொடர்ந்து தரிசனம் செய்த பின் வெள்ளை வாரண விநாயகரின் கல்யாண குணங்களை உருவமாக தரிசிக்க முடிந்தால் அப்போது நமக்கு கிடைக்கும் தரிசனம் மிகவும் குளிர்ச்சி பொருந்தியதாக இருக்கும்.

ஊதியில் தும்பை

ஸ்ரீவெள்ளை விநாயகர் அளிக்கும் அனுகிரகங்களில் ஒன்று வலம் சுழித்த சக்தி பிரவாகம் ஆகும். கன்னி மூலை கணபதி மூர்த்தியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பெரும்பாலான திருத்தலங்களில் கன்னி மூலையில் வீற்றிருப்பவர். தென் மேற்கு திசை கன்னி மூலை என்று வழங்கப்படும். பெரும்பாலான கணபதி மூர்த்திகள் சித்தி, புத்தி என்ற பெண் தெய்வங்கள் இன்றி தனியாக, பிரம்மச்சாரியாகவே காட்சி அளிப்பர். இவ்வாறு பிரம்மச்சாரியாக கன்னி மூலையில் எழுந்தருளிய ஒரு தெய்வம் எப்படி மக்களுக்கு உரிய துணையை தேடித் தருவார் என்பது பலருக்கும் எழும் சந்தேகம் அல்லவா ? இதுவே பெண்மை என்ற தத்துவம் பற்றி நாம் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளோம் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு ஆணும் பெண் சக்தியுடன்தான் விளங்குகிறான், ஒவ்வொரு பெண்ணும் ஆண் சக்தியுடன்தான் துலங்குகிறாள். இதுவே அத்வைதம் சுட்டிக் காட்டும் உண்மை. மனிதன் என்ற உயிர் நிலை வரைதான் இவ்வாறு ஆண் பெண் என்ற பாகுபாடு துலங்குகிறது. இந்த நிலை கடந்தால் அங்கு ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அனைத்தும் சக்தி வடிவமே. இதுவே சித்தர்கள் அளிக்கும் மனத் தெளிவு.

மனிதனின் முதுகுத் தண்டில் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியை ஒரு வெண்ணிற நரம்பு வழியாக மேலே எழுப்பி சகஸ்ராரத்தை அடைந்தால் இறை தரிசனம் கிட்டும் என்பது அனைத்து பெரியோர்களும் உரைக்கும் உண்மை. இவ்வாறு சகஸ்ராரத்தை அடையும்போது உடலின் வெப்ப நிலை 30000 டிகிரியை அடைந்து விடும் என்றால் இந்த அதீத உஷ்ண நிலைக்கு ஆதாரமாக இருக்கும் வெண்ணிற நரம்பின் சக்தி யாதோ ? மனித உடலில் உள்ள இந்த வெண்ணிற நரம்பு மூன்று நாளைக்கு இத்தகைய உஷ்ண நிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறன் உடையது என்பது சித்தர்கள் உரைப்பது. இத்தகைய வெண்மை சக்திகளுடனும், பெண்மை சக்திகளுடனும், குளுமை சக்திகளுடனும் பொலிபவரே திருவலஞ்சுழி ஸ்ரீவெள்ளை வாரண விநாயகர் என்பதே கலியுக மக்கள் பெற்ற பேறு. ஆனால், இந்த வெண்ணிற வாரண சக்திகளை தரிசனம் செய்ய முடியுமே தவிர இந்த ஸ்வேத சக்திகளை உலகத்தவர்க்கு அளிக்க அருள்புரியும் தெய்வமே ஊதிமலை ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி முருகப் பெருமான் ஆவார். முருகப் பெருமானின் அபிஷேக ஆராதனைகளின்போது கிட்டும் ஊதி சக்திகளும் திருவலஞ்சுழி ஸ்ரீவெள்ளை வாரண கணபதி மூர்த்தியின் தரிசனத்தால் கிட்டும் வாரண சக்திகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை அளிக்கக் கூடியவையே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

ஸ்ரீகைலாசநாதர் ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீபிரகலநாயகி ஊதிமலை

முருகன், சிவன், பிள்ளையார் என்றவாறாக உருவங்களின் பின்னணியில் திகழும் கண்ணோட்டத்தைத் தவிர்த்து இறை சக்திகள் என்ற நோக்கில் பார்க்கும்போது ஊதிமலை முருக சக்தி சிவன், பிள்ளையார் என்ற இறை சக்திகளின் இடையே துலங்கும் குசா சக்தி என்ற அபூர்வ இறை சக்தியாகப் பொலியும். இந்த குசா என்ற இறை சக்திக்கு பிள்ளையார், சிவன் என்ற இறை சக்திகள் அவசியம் அல்லவா ? ஒரே வரிசையில் திகழும் மூன்று தீபங்களின் இடையே திகழும் தீபம் குசா சக்தி என்ற புனித சக்தியுடன் திகழும் என்றாலும் இந்த குசா சக்தியைப் பெற மற்ற இரு தீபங்களின் ஒளி சக்தி நமக்கு நிச்சயம் தேவையே. தற்போது பலரும் ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமியை தரிசனம் செய்வதோடு தங்கள் இறை தரிசனத்தை நிறைவு செய்து கொள்கிறார்கள். பூரணமாக ஊதி சக்திகளை பெற விரும்புவோர் மலை மேல் ஸ்ரீகொங்கண சித்தரின் ஜீவ சமாதியை தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல் மலை மேல் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையாரையும் அவசியம் தரிசனம் செய்து ஊதி சக்திகளை பூரணமாய்ப் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு நிறைவு பெறுவதா என்ன முருகப் பெருமானின் குசா சேவை ? அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகைலாச நாதர் சிவாலயத்தில் சோமஸ்கந்த மூர்த்தியாய் தம்பதி சகிதமாய் தாய் தந்தையருக்கு இடையே வீற்றிருக்கும் தெய்வமே ஸ்ரீமுருகப் பெருமான் ஆவார். இத்தயை எழில் கோலத்தால் மேலும் குசா சக்திகள் பெருகுகின்றது என்றால் முருகப் பெருமான் இங்கு தந்தையை விஞ்சிய தனயனாய் சிறப்புப் பெறுவதில் அதிசயம் அல்லவே ? இந்த அனுகிரகத்தை மக்கள் அனைவரும் பெறவே இதய கமல கோலத்தை ஊதிமலை சிவாலயத்தில் வரும் சிவராத்திரி அன்று வரைந்து அதில் 21 குரு குக தீபங்களை ஏற்றி வைத்து பக்தர்கள் பலனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் ஊதிமலை

ஊதிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாதர் சிவாலயத்தின் வரலாறு மிகவும் சுவையான ஒன்றாகும். தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவனைப் பல கட்டங்களிலும் பிரிந்து வாழ, வாட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன. அவ்வாறு சிவனைப் பிரிந்திருந்த காலங்களில் எல்லாம் இப்பூமியில் பல்வேறு திருத்தலங்களிலும் வழிபாடுகள் இயற்றி, ஊசி முனைத் தவம், பஞ்சாக்னி தவம், ஜலத்வீப தவம் என்றவாறக பல அரிய வழிபாடுகளுடன் கூடிய தவங்களை மேற்கொண்டு இறுதியில் இறைவனுடன் ஐக்யம் பெற்று தான் பெற்ற தவப் பலன்களை எல்லாம் பூலோக ஜீவன்களுக்கே தேவி அர்ப்பணித்தாள். இம்முறையில் ஒரு முறை இறைவனைப் பிரிந்து தேவி வாழ்ந்தபோது இறைவன் ஸ்ரீகைலாச நாதராக ஊதிமலையில் எழுந்தருள தேவியும் ஒரு சாதாரண மானிட பெண் வடிவில் இதய கமல கோலங்களை ஊதிமலை சிவாலயம் முழுவதும் வரைந்து அதில் 21 அகல் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்டாள். பார்வதி தேவி வழிபட்ட அத்தகைய ஒரு கிரக சஞ்சார நிலை வரும் மகாசிவராத்திரி 11.3.2021 வியாழக் கிழமை அன்று கூடுவதால் பக்தர்கள் ஊதிமலை சிவாலயத்தில் சிவராத்திரி வழிபாட்டை மேற்கொண்டு பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இத்தல இறைவியின் திருநாமம் ஸ்ரீபிரகல நாயகி என்பதாகும். பிரகலம் என்றால் இறைவனின் திருவடி நிழலையே நிரந்தர இருப்பிடமாக, துணை கொண்டு வாழ்தல் என்று பொருள். இத்தகைய ஒரு பரிபூர்ண சரணாகதி நிலையை அளிக்க வல்லது ஊதிமலையில் இயற்றும் சிவராத்திரி வழிபாட்டின் பலன் என்றால் இதைவிடச் சிறந்த ஒரு பேற்றை கலியுக மக்கள் எங்கு, எவ்வாறு பெற முடியும் ? சதயம் நட்சத்திரம் கூடும் சிவராத்திரியாக இது அமைவதால் பக்தர்கள் அனைவரும் இத்திருத்தலத்திலேயே சந்தனக் கல், கட்டை கொண்டு வந்து ஸ்ரீகாளஹஸ்தி பொன்முகலி ஆறு தீர்த்தம், காவிரி, கங்கை போன்ற புனித நதி தீர்த்தங்களைக் கொண்டு அரைத்த சந்தனத்தை “சுடச் சுட” ஸ்ரீகைலாச நாதருக்கு அபிஷேகத்திற்கு அளித்தலால் பெருகும் ஊதி சக்திகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வெண்மை, பெண்மை, குளுமை சக்திகள் பல்கிப் பெருகும் உத்தம வழிபாடு இது.
ஒரு முறை நாரத மகரிஷி எவராலும் பெற இயலாத சிரஞ்சீவி சக்திகள் நிறைந்த ஒரு மாங்கனியைக் கொண்டு வந்து சிவபெருமானிடம் அளித்து, “சுவாமி, சிரஞ்சீவி சக்திகள் நிறைந்த இந்த ஞானக் கனியை அடியேன் உண்பதை விட உலகையே இரட்சித்துக் காக்கும் தாங்கள் உண்பதே மேல் ...,” என்று கூறி அளிக்கவே அதை ஒரு போட்டி மூலம் தன் அன்புச் செல்வங்களுக்கு அளிக்க விளைந்தபோது அப்போட்டியில் வெற்று பெறுவதற்காக குழந்தை குமரன் தன்னுடைய மயில் வாகனத்தில் ஏறி இந்த உலகைச் சுற்றி வந்தார் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே. ஆனால், இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ தெய்வீக கருத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு நம் சற்குரு அளித்த சித்த இரகசியங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.

மூவுலகைச் சுற்றி வந்த மூவேந்தன்

மூவேந்தன் என்றால் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் என்ற மூன்று லோகங்களுக்கும் அதிபதி மட்டும் அல்ல, அனைத்து குடிமக்களுக்கும் மூத்த வேந்தன் என்ற பொருளும் கொண்டு விளங்குபவரே முருகப் பெருமான் ஆவார். இவ்வாறு தன் தந்தையிடமிருந்து ஞானக் கனியை பெறுவதற்காக முருகப் பெருமான் இப்பூவுலகை மயில் வாகனத்தில் சுற்றி வந்தார் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும் கூட அதனால் விளைந்த அனுகிரகங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. முருகப் பெருமான் அவ்வாறு மயில் வாகனத்தில் வலம் வந்த போது ஏரி குளங்கள் தூய நீரால் நிரம்பி வழிந்தன, தரிசு பூமிகள் எல்லாம் வளம் பெற்றன, பால் வற்றிய பசுக்கள் எல்லாம் புது வாழ்வு பெற்றன, காய்க்காத மரங்களும், பூக்காத செடிகளும் பூத்துக் குலுங்கின, காய்த்து கனிந்தன என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் செங்கழுநீர் இரகசியங்கள் ஆகும். அவ்வாறு சுவாமி இப்பூவுலகை வலம் வந்தபோது விளைந்த சக்திகளில் ஒன்றே பத்மராக சக்திகள் என்பதாகும். இத்தகைய பத்மராக சக்திகளை கிரகிக்கக் கூடிய எவரும் அந்த கால கட்டத்தில் இல்லை என்பதே இந்த பத்மராக சக்திகளின் மகத்துவமாகும். ஆறுமுகப் பெருமான் இவ்வாறு பூலோகத்தை வலம் வந்த போது ஊதிமலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார் ஸ்ரீகொங்கண சித்தர். அப்பெருமான் ஸ்ரீகைலாசநாதரின் உத்தரவின் பேரில் பத்மராக சக்திகளை ஈர்த்து அவற்றை வட்டமலையில் நிறுவினார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

ஆனால், இத்தகைய பத்மராக சக்திகளை ஈர்க்கும் அளவிற்கு தகுதி பெற்ற குருமார்களை மக்கள் அணுகி நல்லருள் பெற முடியாது என்ற காரணத்தால் பிற்காலத்தில் தோன்றிய தர்ம எண்ணங்கள் கொண்ட மன்னர்கள் 16 கால் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை நிறுவ அம்மண்டபத்தில் ஸ்ரீகொங்கண சித்தர் குக பிரசாதமாகப் பெற்ற பத்மராக சக்திகளை நிரவ அந்த அனுகிரக சக்திகள் எல்லாம் சித்த பிரசாதமாக இன்று அனைவரும் பெறக் கூடிய அனுகிரக சக்திகளாகத் துலங்குகின்றன. இத்தகைய திருப்பணிகளில் ஒன்றே வட்டமலையில் உள்ள 16 கால் மண்டபத்தில் இதய கமல கோலத்தை வரைந்து வழிபடுவதாகும். இந்தக் கோலத்தில் உள்ள 16 இதய நாள சக்திகளும் பத்மராக மண்டபத்தின் 16 கால்களில் பதிந்துள்ள சக்திகளை கிரகித்து அதை மக்களுக்கு 16 விதமான அனுகிரக சக்திகளாக அளிக்கின்றன. இதய கோலத்தை புள்ளிகள் வைத்து வரையும் முறையை ஊதிமலை வீடியோ படத்தில் விளக்கியுள்ளோம். அதேபோல் புள்ளிகள் இல்லாமல் இதய கமல கோலத்தை பத்மராக மண்டபத்தில் வரைந்து வழிபடுவதால் அனைவரும் வியாதிகள், தொற்றுநோய்களிலிருந்து மட்டுமல்லாமல் திடீர் விபத்துக்கள், எதிரிகளின் எதிர்பாராத தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவர் என்பதே 12 தூண்களின் நடுவில் அமைந்துள்ள நான்கு தூண்களின் நடுவே அமைந்துள்ள மண்டபத்தில் வரையும் இதய கோலத்தின் மகிமையாகும்.

உத்தமர் அருளும்
உத்தமர்சீலி

மார்க்கண்டேய மகரிஷியின் பெற்றோர்கள் தங்கள் முந்தையை பிறவியில் இந்த மண்டபத்தில் இதய கமல கோலத்தை வரைந்து அந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு அனுகிரக சக்திகளை கிரகித்தனர் என்பதே என்றும் 16 என்றவாறு துலங்கிய மார்க்கண்டேய மகரிஷியின் வரலாறு ஆகும். மார்க்கண்டேய மகரிஷி எட்டு பனைமரம் உயரம் உடையவராய்த் திகழ்ந்ததன் பின்னணி இப்போது தெளிவாகின்றது அல்லவா ? எப்படி அடி முடி காண முடியாத திருஅண்ணாமலை அழற் பிழம்பு சோதி அருட்பெருஞ்சோதியாய் சுமார் 1500 அடி உயரமே உள்ள திருஅண்ணாமலையாய் நம் கண்களுக்குக் காட்சி அளிக்கிறாரோ அது போல்தான் எட்டுப் பனை மரம் உயரம் கொண்ட ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியும் திருச்சி பனையயுரம் அருகே உள்ள உத்தமர்சீலி திருத்தலத்தில் ஒரு சிறிய பனைமரம் வடிவிலேயே இன்று நமக்கு காட்சி அளிக்கிறார். வட்டமலையில் எழுந்தருளிய ஈசன் ஸ்ரீகாடையீசர் என்றும் இறைவி ஸ்ரீபங்கஜவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். காடை என்றால் எல்லையில்லா அனுகிரகத்தை அளிக்கும் மூர்த்தி என்று பொருள். இவ்வாறு எல்லையில்லா அனுகிரகத்தை அளிக்கவல்ல மூர்த்தியே ஓர் அடி உயரமுடைய மூர்த்தி வடிவில் திகழும்போது எல்லையில்லா அனுகிரகத்தை அளிக்கும் மண்டபம் வெறும் 16 கால்களுடன் திகழ்வதில் வியப்பில்லையே. இதுவே வட்டமலை திருத்தலத்தில் கன்னி மூலையில் திகழும் பத்மராக சக்திகளை அருளும் மண்டபமாகும். இந்த 16 கால் மண்டபத்தில் புள்ளிகள் வைக்காத இதய கமல கோலத்தை பச்சரிசி மாவினால் வரைந்து 16 விதமான மங்கலப் பொருட்களை தானமாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அமோகமே. பொதுவாக, புள்ளிகள் என்பவை நிறுத்தத்தையும், வட்டம் என்பவை இயக்கத்தையும் குறிப்பதால் நம் சற்குருவின் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் எழுத்துக்களின் மேல் அமைந்த சிறிய வட்டங்களைக் கொண்டதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நம் சற்குருவின் உபதேசங்களை மக்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடும் ஒரு அடியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவன் சரியான கமா கேஸ், சார், எழுதும்போது full stop வைக்கவே அவனுக்குத் தெரியாது ...”, என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவருடைய சேவையைப் பாராட்டிக் கூறினார் நம் சற்குரு. ஒரு அடியாரின் சேவையைப் பற்றி கொச்சையாகக் குறிப்பிடுவதுபோல் தோன்றினாலும் என்ன இரத்தினச் சுருக்கமான வார்த்தைக் கோவை ?! வட்டமலையில் உள்ள 16 கால் மண்டபம் மார்க்கண்டேய மணி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தின் நடுவில் இதய கமல கோலத்தை வரையும்போது மண்டபத்தைச் சுற்றியுள்ள 16 தூண்கள் அடியிலும் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ மணியை ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஒலிப்பது ஒரு சிறந்த வழிபாடு ஆகும். இவ்வாறு இதய கமல கோலத்தை வரைய முடியா விட்டாலும் ஒரு மணி நேரம் அதாவது இரண்டரை நாழிகை என்ற மார்க்கண்டேய முகூர்த்த நேரத்திற்கு மணி ஓசையை எழுப்பியவாறே கீர்த்தனை பாடல்களைப் பாடுவதும், நமசிவாய மந்திரத்தை வாய்விட்டு ஓதுவதும், அப்பர் சுவாமிகள் அருளிய வேற்றாகி விண்ணாகி என்ற திருத்தாண்டக தேவாரப் பதிகத்தை ஓதுவதும் சிறப்பாகும்.

ஸ்ரீபங்கஜவல்லி சமேத ஸ்ரீகாடையீசர்
வட்டமலை

ஒரு முறை திருக்கைலாயத்தில் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது திடீரென கைலாயத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் உள்ள கண்டா மணிகள் தாமே அசைந்து ஒலித்தனவாம். சற்றே கண் திறந்த சிவபெருமான் அருகிலிருந்த பார்வதி தேவியைப் பார்த்து இந்த திடீர் கண்டா மணி ஓசைக்கு காரணம் யாதோ என்று சைகையால் வினவவே, பார்வதியோ தனக்கு எதுவும் தெரியாது என்பதாக மௌனமாக தலையசைத்து பதிலுரைத்தாளாம். தேவியே காரணம் தெரியாது என்று கூறி விட்டதால், பெருமானும் வேறு வழியின்றி தன் ஞான திருஷ்டியில் தாமாக கண்டா மணிகள் ஒலித்த காரணத்தை நோக்கவே பூலோகத்தில் மார்க்கண்டேயன் என்னும் சிறுவனின் உயிரைப் பறிக்க முயன்ற எம பகவான் வேறு வழியின்றி சிவலிங்கத்தின் மீதும் பாசக் கயிற்றை வீசி விட்டதால் இந்த சிறு தவற்றைப் பொறுக்காத கயிலாய கண்டா மணிகள் பதறித் துடித்தன என்பதே ஈசன் உணர்ந்ததாகும். அதன் பின்னரே நம் கோவணாண்டி பெரியவர், “அப்புறம் சிவனுக்கு கோவம் வராதா கண்ணு, அதுனால சிவன் எமனை புட்பால் ஆடிட்டான் ...”, என்று சிவபெருமான் எமனை உதைத்து அவர் தண்டத்தைப் பறித்த வரலாற்றை இவ்வாறு சுவையாக நம் சற்குருவிடம் தெரிவித்தாராம். அன்று வட்டமலையில் தோன்றியதே இந்த மார்க்கண்டேய முகூர்த்தமாகும். எத்தகைய அகால மரணம் தோன்றுவதாக இருந்தாலும் அதைத் தடுத்து பல தலைமுறைகளுக்கும் பக்தர்களைக் காப்பதே மார்க்கண்டேய மணி மண்டபத்தில் நிறைவேற்றப்படும் இத்தகைய வழிபாடுகளாகும். இந்த வழிபாட்டில் விளையும் அனுகிரகமே காடை என்பதாகும். இந்த காடை அனுகிரகமே பங்கஜம் என்ற தாமரையில், இதய கமல கோலத்தில் நிரவி பக்தர்களைக் காக்கிறது என்ற இரகசியம் இப்போது தெளிவாகின்றது அல்லவா ? அடியார்களின் நம்பிக்கையைப் பொறுத்து மார்க்கண்டேய மகரிஷியே ஏதாவது ஒரு வடிவில் அல்லது கோணத்தில் பக்தர்களுக்கு நேரில் பிரசன்னமாகி அருள் புரிவார் என்பதே இந்த காடை வழிபாட்டின் மகத்துவமாகும். உதாரணமாக, சரியான உச்சிப் பொழுதில் வேல் தீர்த்தத்தில் ஒளி பொருந்திய மின்னல் கீற்றை மார்க்கண்டேய பிரசாதமாக, காடை அனுகிரகமாக அடியார்கள் பெறலாம்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
உய்யக்கொண்டான்மலை

ஒரு முறை நம் அடியார் ஒருவரின் சதாபிஷேகத்தை நம் சற்குரு திருச்சி உய்யக்கொண்டான் மலை திருத்தலத்தில் முன்னின்று நடத்தினார். இதற்கு பல காரணங்களால் இருந்தாலும், அதில் முக்கியமான ஒன்று உஜ்ஜீவநாத சிவலிங்க மூர்த்தி சுயம்பு சக்தியுடன் எழுந்தருளி இருப்பது மட்டுமல்லாமல் மூன்று விதமான லிங்க மூர்த்திகளின் ஒருமித்த சக்தியே உஜ்ஜீவநாதர் என்னும் மூர்த்தமாகும். ஸ்ரீஉஜ்ஜீவநாதர் திருத்தலத்தில் விளங்கும் நடராஜப் பெருமான் இந்த உஜ்ஜீவ ஜீவ சக்திகளை பஞ்சபூத சக்திகளுடன் இணைத்து பக்தர்களுக்கு அருள்வதால் இந்த எட்டு சக்திகளும் அகால மரணங்கள், மிருத்யு தோஷங்கள் போன்றவற்றைக் களைந்து நீண்ட ஆயுளை அளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் சதாபிஷேகம் என்பது ஒரு சற்குரு முன்னின்று நிகழ்த்தும்போது அது சாட்சாத் இறை மூர்த்திக்கு நிறைவேற்றப்படும் அபிஷேகமாகவே துலங்குவதால் அந்த இறை மூர்த்தி உஜ்ஜீவ சக்திகளுடன் துலங்கி அபிஷேகத்தை தரிசனம் செய்யும் அனைவருக்கும் மிருத்யுஞ்சய அனுகிரக சக்திகளை வர்ஷிக்கின்றார் என்பதே இதன் மகத்துவமாகும். இன்று நம்மிடையே நம் சற்குரு தூல வடிவில் நடமாடாவிட்டாலும் சற்குரு அளித்த இதய கமல கோலத்தை வட்டமலையில் பத்மராக மண்டபத்தில் வரைந்து வழிபடுதலால் மிருத்யுஞ்சய சக்திகளை அபரிமிதமாகப் பெறலாம் என்பதும் நம் சற்குரு அளிக்கும் அனுகிரகமாகும். நடராஜப் பெருமானின் கிரீடத்தில் இத்தகைய உஜ்ஜீவ அனுகிரக சக்திகள் ஜ்வாலை வடிவில் திகழ்வதால் இதை பக்தர்கள் தங்கள் ஊனக்கண் மூலமும் கண்டு தரிசிக்கலாம் என்பதே உய்யக்கொண்டான்மலையில் பொலியும் உஜ்ஜீவ சக்திகளின் மகத்துவமாகும். இமயமலை, மதுரை போன்ற இடங்களிலும் உய்யக்கொண்டான் மலையிலும் ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிப்பது இத்தகைய உஜ்ஜீவ சக்திகளை, மிருத்யுஞ்ஜய சக்திகளை பக்தர்களுக்கு வழங்கும் பொருட்டே என்பதும் சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இத்தகைய உஜ்ஜீவ சக்திகளை பெற விரும்பும் பக்தர்கள் மூன்றாம் பிறை நிலவும் நாள் அன்று பகல் முழுவதும் உய்யக்கொண்டான் மலை ஓங்கார பிரகாரத்தை வலம் வந்து வணங்கிய பின்னர் மாலையில் மூன்றாம் பிறை தரிசனத்தைக் கண்டு அதன் பின்னர் மஞ்சள் துத்திப் பூக்கள் சேர்த்து காய்ச்சிய பசும்பாலில் டைமண்ட் கல்கண்டு சேர்த்து அதை மிருத்யுஞ்சய பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து தானும் அருந்தி வந்தால் அகால மரணங்களை அறவே வென்று விடலாம். அது மட்டுமல்லாமல் குடும்ப ஒற்றுமையும் இத்தகைய தான தர்மங்களால் பெருகும் என்பதே சதாபிஷேகத்தை நம் சற்குரு உய்யக்கொண்டான் மலையில் நிறைவேற்றி இந்த உலக மக்களுக்கெல்லாம் இத்தகைய அனுகிரக சக்திகளை வாரி வழங்கியதின் பின்னணியாகும். அந்நிகழ்ச்சியை வெறுமனே தரிசனம் செய்ய வந்த ஒரு அடியார் தன் மனைவி கருவுற்றிருப்பதை விரும்பாமல் சமுதாயத்திற்கு பயந்து அந்த கருவைக் கலைத்து விட எண்ணியபோது நம் சற்குருவின் மறைமுக போதனையால் மனம் திருந்தி அந்த தவற்றைச் செய்யாமல் விட்டு விட்டார். அந்த குழந்தையோ இன்று ஆண் வீரனாகத் தோன்றி உஜ்ஜீவ மலையைச் சுற்றி சுற்றி வருகின்றது என்றால் உய்யக்கொண்டான் மலையே உஜ்ஜீவ மலை என்பதிலோ உஜ்ஜீவ நாதர் நம் சற்குருதான் என்பதிலோ சந்தேகம் ஏதும் உண்டோ ?

ஸ்ரீகுழந்தையானந்தா ஜீவசமாதி
உய்யக்கொண்டான்மலை

குழந்தையைப் பெற்றுக் கொள் கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார் என்று நம் சற்குருவைப் போன்ற ஒரு மகான் வாக்களிப்பது மட்டுமல்ல அந்த குழந்தையை நன்முறையில் பெற்றெடுப்பதற்கு குருமார்கள் படும்பாட்டை அறிந்து கொண்டால் அது எத்தகைய பிரமிப்பை வரவழைக்கும் ? ஒரு முறை நம் சற்குருவை நம்பிய ஒரு அடியாரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார் நம் சற்குரு. அந்தப் பெண் கர்ப்பம் தாங்கி குழந்தைப் பேற்றிற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அந்தப் பெண்ணின் மகப்பேற்றை தாயுமானவர் புரிந்த செட்டிப் பெண் மருத்துவம் போல் நிகழ்த்தி தாயும் சேயும் நலமடைய அருள்புரிந்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். பெண்களின் கர்ப்பப்பையச் சுற்றி மொத்தம் 32 தசைகள் உள்ளன. பெண்களுக்கு மகப்பேறு என்பது மறுபிறவியே என்று நம் முன்னோர்கள் உரைப்பர். இது உண்மையே. ஒவ்வொரு பெண்ணும் மகப்பேற்றிற்கான நிலையை அடையுமபோது அப்பெண்ணின் மூதாதையர்களே உடனிருந்து அவள் கர்ப்பப்பையில் உள்ள இந்த 32 தசைகளையும் வரிசையாக கிரகமம் தவறாமல் ஒன்றின் பின் ஒன்றாக சுருக்கி விரித்து முறையான குழந்தைப் பிறப்பு நிகழ உதவி புரிகின்றனர். நம் சற்குருவைப் போன்ற உத்தமர்களை குருவாகப் பெற்ற அடியார்களைப் பொறுத்தவரை நம் சற்குருவே முன்னின்று சுருக்க வேண்டிய தசைகளை சுருக்கியும், விரிக்க வேண்டிய தசைகளை வேண்டிய அளவு விரித்தும் தாயும் சேயும் எந்த வித துன்பத்தையும் அடையாமல் நன்முறையில் அந்த குழந்தையானது இந்த உலகில் தோன்ற உதவி புரிகிறார்கள். நம் சற்குரு அளித்த,
தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்து உருகி
மாயமான் மழுவும் ஏந்தி மயிர்க்கூச்செறிந்து
ஏழையென் உடல்வலி தெரிந்திடாமல்
பிழைபொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே
என்ற பாடலை பாடிக் கொண்டே இருந்தால் கர்ப்பிணிப் பெண்கள் நன்முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடலில் முதல் வரி மங்கள சக்திகளுடனும், இரண்டாம் வரி குரு சக்தியாக குசாவாய்ப் பொலிவதும் என்றென்றும் நம்மை அரவணைக்கும் சக்திகளாகும். அடுத்த இரண்டு வரிகள் உஜ்ஜீவ சக்திகளுடன் துலங்கும் வரிகளாகும். இந்த உஜ்ஜீவ சக்திகளை குரு சக்தியாய்ப் பெற உதவுவதும் வட்டமலையில் நாம் வரையும் இதய கமல கோலமும் வழிபாடும் ஆகும். 8, 16, 32 என்பது உயிர் பரிமாணம் கொள்ளும் வெவ்வேறு நிலைகள் என்பது தெளிவாகின்றது அல்லவா ? இந்த நிலை முழுமை அடையவே ஒவ்வொருவரும் 32 தேவாரப் பதிகங்களை ஓதி உயர்ந்த நிலையை அடையும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார்கள்.

ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி
வட்டமலை

வட்டத்தை மிஞ்சிய வடிவமும் இல்லை, வட்டமலை ஈசனை மிஞ்சிய தெய்வமும் இல்லை என்னும் அளவிற்கு புகழ் பெற்றதே, சிறப்பு பெற்றதே வட்டமலையாகும். மனிதனின் வீரிய சக்தி முதற் கொண்டு பறக்கும் தட்டுகள் வரை அனைத்தும் வட்ட வடிவத்தில் துலங்குபவையே. எத்தகைய பிரச்னைகளுடன் இன்றைய மனிதன் திகழ்ந்தாலும் வட்டமலை ஈசனை மனதில் இருத்தி வட்டமலையை 9, 18, 27 என்ற எண்ணிக்கையில் வலம் வந்து வணங்குவதால் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வை அவன் காணலாம் என்பதே வட்டமலை மகிமையாகும். முத்து குமார சுவாமி என்ற மூன்று வார்த்தைகளையோ, காடையீசன் பங்கஜவல்லி என்ற இரண்டு வார்த்தைகளையோ, அல்லது வட்டமலை என்ற ஒரே வார்த்தையை மட்டுமே மனதில் தியானித்த வண்ணம் ஒருவர் வட்டமலையை வலம் வந்தால் போதும் என்ற அளவிற்கு இறைவன் இறங்கி வருகிறார் என்றால் அவர்தம் கருணைதான் என்னே ? இந்த வழிபாட்டின் மகிமையை இன்னும் சிறப்புடன் விளங்கச் செய்யும் எண்ணம் உடையோர் வட்ட வடிவில் அமையும் லட்டு, இட்லி, பூரி போன்ற உணவு வகைகளை தானமளித்தல் சிறப்பாகும். சுத்த முத்து ஆபரணங்களை ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கு அணிவித்து அவற்றை ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தலும், அனைத்திற்கும் மேலாக பத்மராக 16 கால் மண்டபத்தில் இலவச திருமணங்களை நிகழ்த்துதல் அரிதிலும் அரிய பாக்யமே. பல யுகங்கள் பஞ்சாக்னி நடுவில் தவமியற்றிய சூரபத்மன் இறைவனைக் காண விழைந்தபோது சுவாமி ஒரு துளி நீர் வடிவில்தான் அவனுக்குக் காட்சியளித்தார். காரணம் இறைவனின் தூய ஒளி வடிவை, அக்னிக் கோளமாக காணும் அளவிற்கு இத்தனை யுகங்கள் தவமியற்றியும் சூரபத்மனால் பெற இயலவில்லை என்றால் இறைவனின் ஒளி வடிவம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், அந்த ஒளி வடிவையே பக்தர்களுக்கு முருகப் பிரசாதமாக அருளக் காத்திருக்கின்றனர் மார்க்கண்டேய மகரிஷியும், கொங்கண சித்தரும், நம் சற்குருவும் என்றால் இத்தகைய அபூர்வ அனுகிரக சக்திகளைப் பெறாதது யார் குறை ?

தற்போது தம்பதிகள் பலரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து வாழும் அவல நிலையை, பாதுகாப்பற்ற சமுதாய வாழ்க்கை பெருகும் சூழ்நிலையை எங்கும் காண்கின்றோம். இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் இவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் ஆண்கள் இடையே பெருகிய மலட்டுத் தன்மையே ஆகும். இந்த அவகேட்டிற்கு முக்கிய காரணமாக அமைவதே அதிகப்படியான மின்சாரப் பயன்பாடும், செல்போன், டீவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் அதிகரிப்பும் ஆகும். இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டாலும் இத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து நம்முடைய சந்ததியினரையும், சமுதாயத்தையும் காக்க வேண்டிய கடமை நம்மைச் சார்ந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு உதவி செய்வதே வட்டமலையில் 16 மணிகள் கொண்டு பத்மராக இசையை மீட்டி முழக்கும் கானமும், இதய கமல கோலமும் ஆகும். ஒரே ஒரு இதய கமல கோலத்தை வட்டமலை பத்மராக மண்டபத்தில் வரைந்தாலே அதில் 2 x 8 = 16 நாள தேவதைகளும், 16 x 16 = 256 நாடி தேவதைகளும், 16 x 16 x 16 = 4096 கந்த லோக தேவதைகளும் ஆவாஹனம் ஆவார்கள் என்றால் இவர்கள் அளிக்கும் அனுகிரகம் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் ? வட்டமலையில் இத்தகைய வழிபாட்டை ஆரம்பித்து சஷ்டி திதிகளிலும், செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளிலும், உத்திரம், கார்த்திகை நட்சத்திர தினங்களிலும் குமரன் வேலேந்தி தனித்து அருளும் ஆலயங்களில் நிறைவேற்றி வருவதும் சிறப்புடையதே. குமரன் கோவணாண்டியாய் நின்றால் ஒரு பலன், கோலேந்திய வேலவனாய் காட்சி அளித்தால் ஒரு பலன், வள்ளி தேவசேனா மளாணனாய் அனுகிரகம் அளித்தால் அது வேறு பலன் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே. இவ்வாறு குழந்தை வடிவில் வட்டமலையில் அருளும் குகனின் இறை வடிவத்தை நீங்கள் தரிசிக்க முடிந்தால் உங்கள் கண் வேறொன்றையும் காணாது, நாடவும் நாடாதே.

நொய்யல் ஆறு

ஸ்ரீமூஷிகவாகனன்
வட்டமலை

சன்னியாசம் என்பது நிற்க வைத்த கத்தியின் மேல் நடப்பதைப் போல் மிகவும் சிரமமானது, கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போன்றது. ஆனால், சம்சாரம் என்பதோ படுக்க வைத்த கத்தியின்மேல் நடப்பதைப் போல் எளிதானது, எந்தவித ஆபத்தையும் விளைவிக்காதது என்பார் நம் சற்குரு. இதே நிலையைத்தான் ஒரு நிற்கும் வட்டமும், படுக்கை நிலையில் உள்ள ஒரு வட்டமும் குறிக்கும். நிற்க வைத்த வட்டத்தின் மேல் உச்சியில் இருக்கும் ஒருவன் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று நினைப்பதும், அந்த வட்டத்தின் கீழ் பகுதியில் இருக்கும் ஒருவன் தான் மற்றவர்களை விட தரத்தில் குறைந்தவன் என்று நினைத்து வருந்துவதும் இயற்கையே. சிவபெருமானுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உண்டு. இவர்களில் முக்கியமாய்த் துலங்கும் முருகன், பிள்ளையார், வீரபாகு இவர்களை மட்டுமே நாம் அறிவோம். முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்க படை எடுத்துச் சென்றபோது சூரபத்மன் வாழ்ந்த கிரவுஞ்ச கிரியில் பயங்கர யுத்தம் நடைபெற்றது. அப்போது சூரபத்மனின் படையில் இருந்த கலிபந்தனன் என்ற குள்ள பூதம் ஒன்றை வீரபாகு துட்சமாய் மதித்து அதனுடன் விளையாடியபோது அந்த பூதமோ சிவபெருமானின் செல்லக் குழந்தையாய் வீரபாகு இருந்தும் அவரையும் ஒருவித பசையால் ஒட்டி விட்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் வீரபாகு முருகப் பெருமானை வேண்ட முருகப் பெருமான் வீரபாகுவை அந்த குள்ள பூதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றினார். யுத்தம் முடிந்து திரும்பிய பின்னர் வீரபாகு முருகப் பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் கலியுக மக்களுக்கு ஒரு பாடமாக அமையுமாறும் வட்டமலை ஸ்ரீமுத்துக்குமார சுவாமியை 21 முறை வலம் வந்து வணங்கினாராம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் பல பாடங்களில் ஒன்று, என்னதான் நாம் நம் அவயவங்களை அசைக்க முடியாத எந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும் நம் மனமானது இறைவனை நாடினால் நாம் காப்பாற்றப்படுவோம். அதனால்தான் நம் சற்குருவும் மனம்தான் தருவேன் மகாதேவா என்று உரைத்தே அனைவருக்கும் நல்வழி காட்டினார்கள். ஒரு வட்டம் படுக்கை நிலையில் இருக்கும்போது அதில் உள்ள புள்ளிகள் அனைத்தும் சமமாய்த் தோன்றுவதால் இறைவன் படைப்பில் அனைவரும் சமமே என்ற உத்தம நிலையைப் பெற உதவும். இந்த அனுகிரகமும் நாம் வட்டமலை வழிபாட்டில் பெறக் கூடிய அரிய அனுகிரகமாகும். ஒல்லி, குண்டு என்ற உடல் ரீதியான காரணங்களால் திருமணம் தடைபட்டு வருந்துவோரும், தேவையான படிப்பிருந்தும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடுவோரும், ஜாதகப் பொருத்தங்கள் சரியாக இருந்தும் குழந்தை பாக்கியம் கிட்டாதோரும் சம அளவில் செம்பருத்தி கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து பத்மராக மண்டபத்தில் உள்ள ஸ்ரீமூஷிகவாகன பிள்ளையார் மூர்த்திக்கும் மற்ற தூண்களுக்கும் உரிய அனுமதி பெற்று எண்ணெய்க் காப்பு இட்டு வட்டமலையை வலம் வந்து வணங்குதலால் நற்பலன் பெறுவார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி முருகப் பெருமானுக்கு தேன், பால், பஞ்சாமிர்தம், தாமே அரைத்த சந்தனம், நொய்யல் தீர்த்தம் என்றவாறாக பதினாறு வித அபிஷேக பதார்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் நிறைவேற்றி நன்றி தெரிவித்தல் சிறப்பு.

சுபமங்கள சுமங்கலி பூஜை

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அனுகிரகம் அளிப்பதே வட்டமலையில் அமைந்துள்ள பதினாறு கால் மண்டபம் என்பதை அடியார்கள் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டபத்தில் நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண நாள், சீமந்தம், வளைகாப்பு போன்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி முத்துக் குமார சுவாமியின் திருவருளையும் நம் முன்னோர்களின் கனிந்த அனுகிரகங்களையும் பெறலாம். சுமங்கலி பூஜை என்ற ஒன்றை பல அடியார்களும் நிகழ்த்துவதே கிடையாது. அத்தகையோர் வெள்ளிக்கிழமை அல்லது வளர் சப்தமி திதிகளில் இந்த பத்மராக மண்டபத்தில் சுமங்கலி பூஜைகளை நிகழ்த்தி நற்சக்திகளைப் பெறலாம். மண்டபம் நடுவில் இதய கமல கோலத்தை வரைந்து அதன் மேல் ஒரு வாழை இலையை நுனி வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைத்து, அதன் மேல் பச்சரியைப் பரப்பி அதன் மேல் பிள்ளையார் சுழி இட்டு ஓங்கார சக்கரத்தை வரைந்து அதன் மேல் கும்ப கலசம் வைத்து, கலசத்தின் மேல் ஐந்து மாவிலைகளையும் நடுவில் ஒரு தேங்காயை வைத்து, கும்பத்தினுள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அதாவது கடல் தீர்த்தம் அல்லது கோடி தீர்த்தம் வைத்து, இந்த கும்பத்தைச் சுற்றி ஏழு வெண் தாமரை மலர்களையும் அந்த வெண் தாமரை மலர்களைச் சுற்றி ஒன்பது செந்தாமரை மலர்களையும் வைத்து வழிபடுதலே சுபமங்கள சுமங்கலி பூஜையாகும்.

ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தி பூஜை

கும்பத்தில் காவிரி, கங்கை, நொய்யல் ஆற்று தீர்த்தங்களையும் சேர்க்கலாம். இந்த மண்டபத்தின் கீழே அனைத்து அடியார்களும் அமர்ந்து, குறைந்தது ஒன்பது சுமங்கலிகள் இருத்தல் நலம், ஸ்ரீஆயுர்தேவி காயத்ரீ, மூலமந்திரம் இவற்றை ஒவ்வொன்றையும் 108 முறை ஜபித்தலே சுமங்கலி பூஜை, பிறந்த நாள் போன்ற வைபவங்களை கொண்டாடும் சித்த முறையாகும். பூஜை நிறைவில் புடவை, ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், பூ என்றவாறாக அவரவர் சக்திக்கு இயன்ற அளவு சுமங்கலிகளுக்கு தானத்தை அளிக்கவும். பூஜைக்குப் பின் கலச தீர்த்தத்தை ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகத்திற்காக அளிப்பதும் அல்லது கிரிவலப் பாதையில் அமைந்த பால் மரங்களுக்கு வார்த்து, வட்டமலையை கிரிவலமாக வருவதும் அற்புத சுமங்கலித்துவ, மங்கள மாங்கல்ய பலன்களை அபரிமிதமாக வர்ஷிக்கும்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அஸ்வமேதயாக குதிரையை அனுப்பியபோது ராமபிரானின் புதல்வர்களான லவன் குசன் இருவரும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டார்கள். அந்தக் குதிரையை மீட்பதற்காக இறுதியில் ராமச்சந்திர மூர்த்தியே சென்றபோது தன்னுடைய புதல்வர்கள் கையாலேயே மரணமடைந்தார். பின்னர் ஸ்ரீவால்மீகி ரிஷி ராமபிரானின் காதில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதவே ஸ்ரீராம பிரான் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார் என்ற வரலாற்றை ஒரு சில அடியார்கள் அறிந்திருக்கலாம். இது எப்படி ஒரு அவதாரத்தையே உயிர் பெறச் செய்தார், அதாவது கிட்டத்தட்ட ஒரு அவதாரத்தையே மீண்டும் தோற்றுவித்ததாகத்தானே வால்மீகியின் அரும்பெருஞ் செயல் அமையும் ? ஆம், இந்த அற்புத மிருஞ்ஜய சக்திகளை ஸ்ரீவால்மீகி பெற்ற இடமே வட்டமலை என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

வட்டமலையை வட்டமிடும்
தொகுதிவேல் சக்திகள்

தற்போது வட்டமலையில் பொலியும் 16 கால் மண்டபம் தோன்றுவதற்கு முன்னரே இங்கு ஸ்ரீவால்மீகி முனிவர் எழுந்தருளி ஸ்ரீகாடையீசரின் அனுகிரகமாக இந்த மிருத்யுஞ்சய சக்திகளைப் பெற்றார். எனவே வட்டமலையில் மிருத்யுஞ்சய மந்திரங்களை ஓதியவாறே வலம் வருவதும், ஸ்ரீமிருத்யுஞ்சய பூஜைகளை பத்மராக மண்டபத்தில் நிகழ்த்துவதும் கிடைத்தற்கரிய பேறே. எத்தகைய கொடுமையான தொற்றுநோய்களையும் தடுக்கும் வல்லமை பெற்றதே வேப்ப மரம் என்பது நீங்கள் அறிந்ததே. வட்டமலையில் வேல் தீர்த்தம் அருகில் உள்ள வேப்பமரம் ஸ்ரீவால்மீகி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். தற்போது மட்டும் அல்ல, எதிர்காலத்தில் வர இருக்கும் பல தொற்றுநோய்களுக்கு காப்பாக அமைவதே இந்த வேப்ப மரத்தின் சக்திகள் என்பதால் வட்டமலையை ஒன்பதின் மடங்காக 9, 18, 27 என்றவாறு வலம் வந்து மிருத்யுஞ்சய சக்திகளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நோய் எதிர்ப்பு சக்திகளை பரவெளியில் பரப்புவதற்காகவே வேப்பமரத்தின் இலைகள் தொகுதிவேல் என்ற நோய் எதிர்ப்பு சக்திகளுடன், அதாவது அரும்பு அரும்பாக துலங்குவதாக சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். வேல் சக்தி என்பது சூரபத்மன் என்ற அசுரனுடைய உயிரைப் பறிக்க மட்டுமே பார்வதி அன்னையால் அளிக்கப்பட்டது என்று கிடையாது இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்து தோன்றும் அரக்க சக்திகளை விடக் கொடூரமான நோய்களை எதிர்க்கும் வேல் சக்திகளை, தொகுதிவேல் என்ற நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பதும் தனிகை வேலவனின் திருக்கர வேலே. வட்டமலையில் உள்ள தொகுதிவேல் என்ற ஒரே ஒரு வேப்பிலையின் சக்தியைக் கொண்டு நம் மாநிலம் முழுவதிலும் தோன்றும் தொற்றுநோய்களை விரட்டி விடலாம் என்றால் வட்டமலை வேலவனின் மகிமைதான் என்னே ! தொகுதிவேல் வேப்பிலையின் நோய் எதிர்ப்பு சக்திகளை மற்றவர்களுக்கும் வழங்கி நற்பலன் பெற விரும்புவோர் வட்டமலையை கிரிவலம் வந்து வெற்றிலை பாக்கில் இரண்டு குண்டு மஞ்சள்களை வைத்து தானமாக அளித்தல் நலம். மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களும், இனந்தெரியாத நோய்களும் தொடர்ந்து வட்டமலையில் நிறைவேற்றும் இத்தகைய மிருத்யுஞ்சய தானத்தால் குணமடையும் என்பது கண்கூடு. கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களைப் புரிந்து வந்த ஒரு வேடன் ராம என்ற இரண்டு எழுத்து மந்திரத்தால் வால்மீகி மகரிஷி என்ற உயர்நிலையை அடைந்தான். அந்த இரண்டு எழுத்து மந்திர விளக்கமாய் தோன்றிய ராம அவதாரத்தையே தோற்றுவிக்கும் அளவிற்கு வால்மீகி உயர்ந்தார் என்றால் இதில் உயர்ந்தது மந்திரமா, ரிஷியா, அவதாரமா ? இவை அனைத்திற்கும் அதீதமாய், இவை அனைத்தையும் கடந்து என்றும் சத் சித் ஆனந்த சொரூப பிரம்மாண்டமாய் விரிந்து நிற்பது இறை சக்தியே ! இந்த இறை சக்தியை உணர்ந்து மிகச் சிறிய வட்டத்திற்குள் வணங்கி வழிபட்டு பயன்பெற வழிகாட்டுவதே வட்டமலை திருத்தலமாகும்.


வால்மீகிக்கு ராம என்ற மந்திரம் போதும் !
நமக்கு சற்குருவின் திருவடிகள் போதுமே !


ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam