மனம்தான் தருவேன் மகாதேவா !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மன அழுத்தம் களையும் வழிபாடுகள்

மனம் என்ற பொருளை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். மனிதன் தேவன் ஆவதும், தேவன் மிருகம் ஆவதும் மனத்தைப் பொறுத்ததுதானே?

இவ்வாறு மனதை ஆளும் முறைகள் கேட்பதற்கும் படிப்பதற்கும் எளிமையாகத் தோன்றினாலும் நடைமுறையில் மனத்தை அடக்குதல் மிகவும் கடினமான செயல் என்பதால் தெய்வங்களும் சற்குருமார்களும் தாங்களே பூமிக்கு மனித வடிவில் எழுந்தருளி மனிதர்களுக்கு அனுபவ பாடங்களை யுக யுகமாக தங்கள் வாழ்க்கை மூலம் போதித்து வருகிறார்கள்.

நமது சற்குரு வெங்கடராம சுவாமிகளின் ஆசான் ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் கோவணாண்டி கிழ ரூபத்தில் ஆட்கொண்டு ஆன்மீகப் பொக்கிஷங்களை அளித்தார் அல்லவா? அவை அனைத்துமே நம்முடைய மனதை ஆளும் நடைமுறை விளக்கங்களை அளிக்கின்றன.

ஸ்ரீபூண்டிமகான் ஜீவசமாதி
கலசபாக்கம்

குருகுல வாசத்தின் ஆரம்ப நாட்களில் சிறுவனான வெங்கடராமனுக்கு குரு நம்பிக்கை வலுப்படுவதற்காக பல சித்தர்கள், யோகிகள், ஞானிகளின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தார் கோவணாண்டிப் பெரியவர். பூண்டி மகான் போன்ற பிரம்ம ஆசான்களிடம் வருடக் கணக்கில் கூட உயர் ஆன்மீகத் தத்துவங்களை நேரியடையாகப் பெற அவர்களிடம் அனுப்பி வழிகாட்டியதும் உண்டு.

ஒரு முறை சிறுவனான வெங்கடராமன் பூண்டி மகானுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்தான். சமாதி நிலை கொள்ளும் சில வருடங்களுக்கு முன் உடல் நலம் குன்றிய நிலையில் ஒரே இடத்தில் இருந்து அருளாட்சி செய்து வந்தாலும் அதற்கு முன்னர் மிகவும் சுறுசுறுப்பாக தேனீயைப் போல சுற்றி அலைந்தவர்தான் பூண்டி மகான் அவர்கள். இந்த ரகசியம் அறிந்தோர் ஒரு சிலரே.

அத்தகைய நாட்களில்தான் சிறுவன் வெங்கடராமன் பூண்டி மகானுடன் திருஅண்ணாமலையை இரண்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்து அற்புத ஆன்மீக இரகசியங்களை எல்லாம் அறிந்தான். பூண்டி மகான் ஆறடி உயரமுள்ள கம்பீர தோற்றமுடையவர். தற்கால இளைஞர்களைப் போல பாண்ட் அணிந்திருப்பார். அதில் வலது கால் பாண்ட் பகுதியைத் தொங்க விட்டும் இடது கால் பாண்ட் பகுதியை முழங்கால் வரை சுருட்டி விட்டும் வைத்திருப்பார். பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் ஒரு விநோதமான கோமாளித்தனமான தோற்றம் அம்மகானுடையது.

சிறுவனுக்கும் பூண்டி மகானுடைய ஆடையையும் அவருடைய நடையையும் பார்த்தவுடன் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல்தான் தோன்றியது. ஆனால், சில மாதங்களுக்கு முன் பெரியவர் கூறிய விஷயங்கள் சட்டென ஞாபகம் வரவே பொங்கி வந்த சிரிப்பை தன்னுள் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அப்படி பெரியவர் என்ன அறிவுரை கூறியிருந்தார்?

பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் இறைவனின் மேன்மையை உணர்ந்து அவருக்குத் தொண்டுகள் பல செய்து இறைவழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டால் அவர்கள் இறந்தபின் கைலாயம் செல்கிறார்கள். இது உண்மையே.

பெருமாளை தீவிரமாக வழிபட்டவர்கள் வைகுண்டத்திற்கும், முருக உபாசகர்கள் சுப்ரமண்ய லோகத்திற்கும் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு பக்தர் எந்த குருநாதருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தானே தனக்குத் தோன்றிய முறையில் சிவ வழிபாடு செய்து, ஆன்மீக முன்னேற்றம் அடைந்து மனித பிறவியின் நிறைவில் கைலாயம் சென்றடைந்தார். அவர் கைலாயத்தின் வீதிகளில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஒரு சிவனடியார் வந்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வலது கையை சுற்றி எங்கோ தொலைவில உள்ள மாங்காயை அடிப்பது போல பாவனை செய்து கொண்டே எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்.

செய்யாறு கலசபாக்கம்

அது முதன் முதலில் அந்த சிவ பக்தர் கைலாயத்தில் கண்ட காட்சி என்பதால் பூமியில் உள்ள நினைவில் அவரைப் பார்த்தவுடன் பைத்தியம் என்று நினைத்து வாய் விட்டுச் சிரித்து விட்டார். ஆனால், எதிரே வந்தவரோ தெய்வீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு சித்தர். அவர் மாங்காய் அடிப்பது போல் கையை ஆட்டினால் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு அண்டம் உருவாகும். அவருடைய இரண்டாவது அசைவில் அவர் தோற்றுவித்த அண்டத்தில் உயிர்கள் தோன்றும். அவருடைய மூன்றாவது அசைவில் அவ்வாறு தோன்றிய உயிர்களின் கர்ம பரிபாலனத்திற்கான விதிகள் நிர்மாணிக்கப்படும். இவ்வாறு மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல தத்துவ செயல்பாடுகளை தன்னுடைய ஒவ்வொரு கை, விரல் அசைவிலும் தோற்றுவித்த அற்புத மகான்.

ஆனால், இது எதுவுமே அறியாத அப்பாவியான அந்தப் புது கைலாய வாசி அவரைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தவுடன் அந்த ரிஷி இவரைப் பார்த்து தன்னுடைய கையை கீழ் நோக்கி அசைத்தார். அவ்வளவுதான்.

அடுத்த விநாடி அந்த சிவ பக்தர் ஒரு புழுவாய் பூமியில் உள்ள ஒரு வயல் வெளியில் விழுந்து விட்டார். இனி அவர் புழுவிலிருந்து மரம், மிருகம், பறவை என பல பிறவிகளைக் கடந்து மனிதப் பிறவியை அடைந்து அதன் பின்னர் இறைவனை வழிபட்டு கைலாயம் அடைய வேண்டும்.

அதனால்தான் மனிதனுக்கு சற்குரு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியம் வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள். கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு இந்நிகழ்ச்சியைக் கூறி எச்சரிக்கை விடுத்தார்.

” தெய்வீகத்துல இருப்பவர்கள் எப்போதும் ஜாக்கிரதையாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கைலாயம்தான் என்று கணக்கு கிடையாது. எங்கு யாரைப் பார்த்தாலும் தேவையில்லாமல் ஒருவரை கிண்டல் செய்தால் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது.  கைலாயத்தில் ஒருவன் வசிக்கிறான் என்றால் அவன் எத்தகைய இறை உணர்வில் இருப்பான் என்று இங்கிருக்கும்போதே நன்றாக ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொண்டால்தான் யாரையும் மனதால் கூட துச்சமாக எண்ணும் மன நிலை வளராது.”

” மேலும் யாருடைய தெய்வீக நிலையையும் அவர்களுடைய வெளித் தோற்றத்தை வைத்து எடை போட முடியாது. இதையும் தெய்வீகத்தில் இருப்பவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறி கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு கிருஷ்ண பரமாத்மா, கர்ணன், குபேரன் இவர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது எத்தகைய எளிய கோலத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அனுபவ ரீதியாகவே காட்டினார். ஆனால், இந்த அற்புத தரிசனத்திற்காக சிறுவன் பல வருடங்கள் கிரிவலப் பாதையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது என்பதும் உண்மையே.

பூர்ண அவதாரமான கிருஷ்ண பரமாத்மா ஆறு வயது நிரம்பிய கருத்த இடையன் வடிவத்தில் இடையில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு மூங்கில் குச்சியை வைத்துக் கொண்டு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னே கர்ணன் ஒரு விறகு வெட்டியைப் போல தோளில் ஒரு கோடலியை தொங்க விட்டுக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான். கிருஷ்ண பாரமாத்மாவின் கண்கள் தனக்கு முன்னே சென்ற கர்ணனின் மீதுதான் இலயித்திருந்தது. ஒரு முறையாவது தன்னையும் அறியாமல் திரும்பி தன்னைப் பார்த்துவிட மாட்டானா என்ற ஏக்கத்துடன் கிரிவலத்தில் அவனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

மக்களுக்கெல்லாம் ஆடை, ஆபரணங்களையும், செல்வங்களையும் அள்ளி வழங்கும் குபேர மூர்த்தியோ கிழிந்த வேட்டியை அணிந்து கொண்டு குபேரத் தீர்த்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய வேட்டியில் ஓட்டைகள் இல்லாத இடமே கிடையாது. வேட்டியை விட ஓட்டையே அதிகம் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய வேட்டியில் வறுமை தாண்டவமாடியது. அந்த வேட்டையைத் துவைத்து பல வருடங்கள் ஆனது போல் அதில் அழுக்கு மண்டிக் கிடந்தது.

அர்த்த நாரீஸ்வர திருக்கோலம்
உய்யக்கொண்டான்மலை

இக்காட்சிகளை எல்லாம் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்குக் காட்டியவுடன்தான் பெரியவரின் வார்த்தைகளில் சிறுவனுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது.

மகான்களின் ஒவ்வொரு செயலுக்கும் விரல் அசைவிற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களும், தத்துவங்களும் பொதிந்துள்ளன என்ற பேருண்மையை மெல்ல மெல்லதான் சிறுவன் உணர ஆரம்பித்தான்.

அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் பூண்டி மகான் பேண்ட் அணிந்திருந்த கோலத்தில் உள்ள தெய்வீக இரகசியத்தை பல ஆண்டுகளுக்குப் பின் உணர்ந்தான். த்ரைலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் சிவ தத்துவத்தையும், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் சக்தி தத்துவத்தையும் போதிக்க அவதாரம் கொண்டவர்கள். ஷீரடி பாபா, ரமண மகரிஷி போன்ற உத்தமர்கள் அத்வைத தத்துவத்தை போதிக்கத் திருவுள்ளம் கொண்டவர்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினால் பூண்டி மகான் சிவ சக்தி ஐக்ய சொரூபத்தில் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் எழுந்தருளிய ஞானியாவார். அவருடைய முழுக்கால் பேண்ட் என்பது சிவ தத்துவத்தின் விளக்கமாகவும் முழங்கால் வரை மடக்கிய அரைக் கால் பேண்ட் சக்தி தத்துவத்தின் விளக்கமாகவும் அமைந்தது. மேலும் சிறுவனை பூண்டி மகானின் குருகுலத்திற்காக கோவணாண்டிப் பெரியவர் தற்போது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் தோன்றியுள்ள சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதியில்தான் விட்டுச் சென்றார் என்பதும் பிற்காலத்தில் சிறுவன் உணர்ந்து ஆனந்தமடைந்த தெய்வீக உண்மையாகும்.

இவ்வாறு சிறுவனும் பூண்டி மகானும் திருஅண்ணாமலைலையத் தொடர்ந்து  கிரிவலம் வந்த காலத்தில் பல்லாயிரக் கணக்கான தெய்வீக அனுபவங்கள் சிறுவனுக்குக் கிடைத்தன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டுமே நம்முடைய நலனுக்காக சுவாமிகள் வெளியிட்டுள்ளார்கள்.

அன்னபூரண சித்தர்

அந்த அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சிறுவனும் பூண்டி மகானும் நடந்து செல்வது லாரல் ஹார்டி சேர்ந்து நடப்பது போல் இருக்கும் என்று விளையாட்டாகக் கூறுவதுண்டு. பூண்டி மகான் நல்ல உயரமுடையவர். சிறுவன் வெங்கடராமனின் உயரமோ சராசரி சிறுவர்களை விடக் குறைவு. எனவே பூண்டி மகான் நடக்கும்போது அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சிறுவன் அவரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டேதான் இருப்பான். மேலும் அவர்களுடைய கிரிவலப் பாதை தற்காலத்தில் உள்ள தார் ரோட்டில் அமையவில்லை. பெரும்பாலும் திருஅண்ணாமலையை ஒட்டிய அடர்ந்த காடுகளிலும், நீர்வீழ்ச்சிகளை ஒட்டியும், சூரிய ஒளியே படாத இருண்ட குகைகளிலும் அவர்களுடைய சஞ்சாரம் இருந்தது. அச்சமயத்தில்தான் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் அடர்ந்த காடுகளில் வாழ்ந்த டினோசார்களைச் சிறுவன் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு டினோசாரின் உயரமும் குறைந்தது 300 அடி. பெரும்பாலும் டினோசார்களின் கால், வயிற்றை மட்டும்தான் சிறுவன் பார்க்க முடியும். ஒவ்வொன்றும் அவ்வளவு உயரம்.

வெள்ளை காக்கை, வெள்ளைப் புலிகள், ஐந்து தலை நாகம், ஐராவதம், பஞ்ச வர்ணக் கிளி போன்ற தேவலோகப் பறவைகள் விலங்குகளின் தரிசனத்தையும் பூண்டி மகான்தான் சிறுவனுக்குப் பெற்றுத் தந்தார். மைனா, கருங்குருவி போன்ற பறவைகளின் அற்புத பாஷைகளையும் சிறுவன் அந்த கிரிவலத்தில்தான் கற்றுக் கொண்டான். மைனா, கருங்குருவி போன்ற பறவைகள் உலகெங்கும் பல இடங்களில் வாழ்ந்தாலும் திருஅண்ணாமலையில் உள்ள பறவைகள் மற்றப் பறவைகளை விட என்ன தெய்வீக உயர் நிலைகளைப் பெற்றுள்ளன என்பதை பூண்டி மகான் சிறுவனுக்கு விளக்கிக் கூறினார்.

ஒரு முறை பஞ்ச முக தரிசனப் பகுதியில் சிறுவனும் பூண்டி மகானும் சென்று கொண்டிருக்கும்போது ஒரு சாண் உயரமுள்ள ஒரு சித்தரைக் கண்டனர். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. முதலில் அந்த சித்தரைப் பார்த்த சிறுவனுக்கு ஏதோ ஒரு சாவி கொடுத்த விளையாட்டுப் பொம்மை நகர்ந்து செல்வது போல் தோன்றியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் நன்றாகப் பார்த்தான். உண்மையில் மனித உருவத்தில் உள்ள ஒரு மகான்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள சிறுவனுக்கு வெகு நேரமாயிற்று.

அந்தக் குள்ள சித்தரைப் பார்த்ததும் சிறுவன் பூண்டி மகானைப் பார்த்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். பூண்டி மகான் ஒரு புன்முறுவலுடன், ” இவர் ஒரு பெரிய சித்தருடா, உனக்கு நிறைய விஷம் சொல்றதுக்காக அன்னபூரணி லோகத்திலிருந்து வந்திருக்கிறார். வா, அவருடன் பேசுவோம். அவரை அந்த சுமைதாங்கியின் மேல் உட்கார வை,” என்றார்.

சிறுவனுக்கு ஒரே குஷி. ” ஆஹா, நம்மையும் பார்ப்பதற்காக அன்னபூரணி லோகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அது என்ன அற்புதமான விஷயம், ” என்று மனதிற்குள் மிகவும் பரமானந்தத்துடன் அந்த ஒரு சாண் சித்தரைத் தன்னுடைய வலது கையால் தூக்கி எடுக்க முயன்றான்.

என்ன ஆச்சரியம். அந்தச் சித்தரை ஒரு துளி கூட அசைக்க முடியவில்லை. தரையில் ஆணி அடித்து நின்றதுபோல கொஞ்சம் கூட இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தன்னுடைய இரு கைகளாலும் சித்தரைத் தூக்க முயற்சி செய்தான்.

ஊஹூம், அந்த சித்தர் கொஞ்சமும் அசைவதாகத் தெரியவில்லை. இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது, என்று நினைத்து பூண்டி மகானைப் பார்த்தான். அவர் வாய் விட்டு சிரித்து விட்டு, ”ஏண்டா அடி மண்டு. அந்த கோவணாண்டிப் பெரியவர் எத்தனை முறை உன்னிடம் சொல்லி இருக்கிறார். உருவத்தை வைத்து யாரையும் எடை போடாதே, என்று. உன்னுடைய மர மண்டைக்கு எதுவு புரியாது என்பதற்காகத்தான் இவர் அன்னபூரணி லோகத்திலிருந்து வந்த உத்தமர் என்று முன்னமே உனக்கு விளக்கினேன். அப்படியும் புரியாமல் விழிக்கிறாயே.

முதலில் அவருக்கு ஒரு நமஸ்காரம் செய். அப்புறம் அவரைத் தூக்க முயற்சி செய்,” என்றார்.

இப்போதுதான் சிறுவனுக்கு உண்மை விளங்கியது. தன்னுடைய அறியாமையை நொந்து கொண்டே, சாஷ்டாங்கமாக அந்த சித்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

”சுவாமி, தெரியாத் தனமா தப்பு பண்ணி விட்டேன். மன்னிச்சுடுங்க. கருணை செய்து அந்த சுமைதாங்கியில் அமர வேண்டும்,” என்று பணிவுடன் கூறிக் கொண்டு அவரைத் தூக்கினான். இப்போது அவரைத் தூக்குவது என்பது ஒரு குழந்தையைத் தூக்குவது போல் எளிதாகி விட்டது. அவரும் சிறுவனின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சுமைதாங்கி மேல் அமர்ந்து கொண்டார்.

பூண்டி மகானும் அவர் அருகில் சிறுவனுடன் தரையில் அமர்ந்து கொண்டார். அன்னபூரணி லோகத்திலிருந்து வந்த அந்த சித்தர் அன்னதானத்தின் மகிமைகளைப் பற்றி சிறுவனுக்கு விளக்கிக் கூறினார். உலக அமைதிக்காக பல இறை வழிபாடுகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது அன்னதானமே என்பதை வலியுறுத்தினார். அப்போதுதான் சிறுவனுக்கு கோவணாண்டிப் பெரியவர் கூறிய, சோற்றைப் போடு, சித்தனாவாய், என்ற சித்த மந்திரத்தின் மகத்துவம் புரிய ஆரம்பித்தது.

     வாயிலும் வயிற்றும் இட்டது
     வான் வழியாய் வந்து
     போகும் வழிக்குத் துணையாய் நிற்குமே

என்று நமது மூதாதையர்களின் அனுகிரகத்தைப் பெற எளிய பூஜை இந்த அன்னதானமே என்பதை அற்புதமாக விளக்கினார் அந்த சித்த பிரான். அப்போது வெகு தூரத்தில் ஒரு குருவி அவலமாக கத்தும் குரல் கேட்டது. சித்தர் சிறுவனை அழைத்து, ”ராஜா, அந்த குருவி என்ன சொல்கிறது என்று உனக்குப் புரிகிறதா?” என்று அன்பு ததும்ப கேட்டார். சிறுவன் நன்றாக உற்றுக் கேட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒன்றும் புரியவில்லை என்று சித்தரிடம் தெரிவித்தான். சித்தர் சிறுவனை உற்று நோக்கி மனதை ஒரு நிலைப் படுத்தி கவனமாகக் கேள், என்று கூறினார். சிறுவன் மீண்டும் தன்னுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி அந்தக் குருவியின் குரலைக் கூர்ந்து கேட்டான். அந்தக் குருவி ஏதோ சொல்வது போல் தோன்றியது. ஆனால், சரியாக அது கூறுவது என்ன என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

சித்தர் தொடர்ந்து, ”இப்போது அந்தக் குருவி சற்று அருகில் வந்து விட்டது. இப்போது அதன் குரலைக் கேள், ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே”, என்று அது கூவுகிறது அல்லவா?”

ஆம், தற்போது சிறுவனால் குருவியின் அந்த, ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே,” என்ற குரலைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. சிறுவன் பிரமிப்படைந்தான். அமைதியுடன் பூண்டி மகானையும், அந்த சித்தரையும் மாறி மாறிப் பார்த்தான்.

சித்தர் தொடர்ந்து, ”இந்தக் குருவியின் குரல் கேட்கும் வரை உலகத்தில் பசித் துன்பம் இருப்பதாக அர்த்தம். அதனால் இந்தக் குரலை நீ கேட்கும் போதெல்லாம் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, மக்களின் பசி நோயைத் தீர்க்க பாடுபட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அந்தச் சித்த பிரானின் உத்தரவை ஏற்று நமது சுவாமிகளும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அன்னதானத்தை தன்னுடைய உயிரினும் மேலாகப் போற்றி பத்து கோடி பக்தர்களுக்கு மேல் சுவையான அறுசுவை உணவு வகைகளை வாரி வழங்கினார்கள்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன் மீண்டும் அந்தப் பசிக்குதே குருவி நமது ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து அவ்வாறு ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே”, என்று கூவிக் கொண்டே சென்றது. அப்போது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தன்னுடன் அப்போதிருந்த அடியார்களிடம் அந்தக் குருவியினுடைய சோக கீதத்தின் பொருளை உணர்த்தி சுவாமிகளின் உண்மையான சீடராகத் தொடர்ந்து இருக்க ஒருவர் விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இந்த பசிக்குதே குருவியின் குரல் பூமியில் கேட்கும் வரை அன்னதான கைங்கர்யத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் ஒரே வழி,” என்று உறுதியாகக் கூறினார்கள்.

பின்னர் அன்னபூரண சித்தர், பூண்டி மகான், சிறுவன் மூவரும் பஞ்ச முக தரிசனத்திற்கு எதிரே உள்ள காட்டுப் பகுதியில் மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சில மைல்களுக்குப் பின் அவர்கள் நடந்து சென்ற பாதை கரடு முரடாக இருந்தது. நிறைய முட்களும் புதர்களும் மண்டிக் கிடந்தன. முற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தது. விலங்குகள் கூட அந்த அடர்ந்தப் பகுதியில் பிரவேசிக்க முடியாத அளவிற்கு முள் புதர்கள் உயரமாக அடர்ந்து வளர்ந்திருந்தன.

அன்னபூரண சித்தர் முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து பூண்டி மகானும் அவர்களுக்குப் பின் சிறுவனும் சென்று கொண்டிருந்தான். அன்னபூரண சித்தர் முள் புதர்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் சுலபமாக புகுந்து புகுந்து வேகமாக முன்னே சென்று கொண்டிருந்தார். பூண்டி மகான் முள் புதர்களைத் தாண்டி, தாண்டி ஒலிம்பிக் வீரனைப் போல வேகமாக சென்று கொண்டிருந்தார். அவர்கள் மூவரில் சிறுவனின் நிலைதான் மிகவும் சிரமமானதாய் அமைந்தது.

சிறுவனால் புதர்கள் நெருங்கி வளர்ந்திருந்ததால் அவைகளின் இடைவெளியில் எளிதாக புகுந்து செல்ல முடியவில்லை. அவற்றைத் தாண்டி செல்லும் அளவிற்கு அவனுடைய உயரமும் இல்லை. அதனால் புதர்களில் நுழைந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக உடலெங்கும் கூர்மையான முட்கள் தைத்து முகம், கை, கால் எங்கும் இரத்தம் வழிய ஆரம்பித்தது.

சிறுவனால் வாய் திறந்து ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு வழியாக புற்கள், நீர் நிறைந்த ஒரு சமதளப் பகுதியை அடைந்தார்கள். சிறுவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அங்கே பச்சைப் பசேலென நிறைய செடிகள் வளர்ந்திருந்தன அவற்றில் ஒரு செடியை அன்னபூரணி சித்தர் சிறுவனுக்குச் சுட்டிக் காட்டினார். கண்ணைக் கவரும் மஞ்சள் நிறம் கொண்ட ஐந்து இதழ்களுடன் விளங்கிய ஒரு செடி அது. சுமார் ஒரு அடி உயரம் இருக்கும். சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் செடி கிறுகிறுவென சுற்ற ஆரம்பித்தது. சுற்றிக் கொண்டே தரையில் இறங்கி மறைந்து விட்டது.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது, பச்சையான செடி தரையில் ட்ரில் போட்டு மறைந்து போகிறதே. என்று ஆச்சரியமாக செடி மறைந்த இடத்தை பார்த்தான். ஆனால், அங்கு செடி இருந்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. தான் கனவு ஏதும் கண்டு கொண்டிருக்கிறோமா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

சிறுவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. நாம் கண்டது கனவு இல்லை. நிச்சயமாக நனவு நிலையில்தான் இருக்கிறோம். எவ்வளவு முட்கள் எனது உடலில் தைத்தன. இரத்தம் வெள்ளமாக ஓடியதே. வியர்வையால் சட்டை, டிராயர் எல்லாம் நனைந்து விட்டதே. என்று நினைத்துக் கொண்டே தன்னுடைய காயங்களைப் பார்க்க ஆரம்பித்தான். அப்போது இன்னும் ஒரு ஆச்சரியம் அவனக்குக் காத்திருந்தது. அவனுடைய உடம்பில் ஒரு கீறல், துளி இரத்த அடையாளம், வியர்வைத் துளி எதுவும் இல்லை. அருவியில் குளித்தது போன்ற ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி அவன் உடல் முழுவதும் வியாபித்தது. சிறுவனுக்கு ஆச்சரியம் வெள்ளமாகக் கரை புரண்டது. அவனுக்கு ஒரு விஷயம் சட்டென விளங்கியது.

அவன் உடல் முழுவதும் ஆயிரக் கணக்கான முட்கள் குத்தி, கிழித்து வேதனை அடைந்தது உண்மைதான். ஆனால், அந்த அற்புதச் செடியின் தரிசனத்தில் எல்லாம் மறைந்து விட்டன. இனம் புரியாத ஒரு தெய்வீகப் பரவசத்தில் சிறுவனை ஆட்கொள்ள அதில் மூழ்கி அவன் மிதக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழிந்தன….

எங்கோ ஒரு குரல் கேட்பது போல் தோன்றியது. அன்னபூரண சித்தரின் குரல் அருகில் ஒலிக்கவே மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பினான். சித்தர் தொடர்ந்தார், ”இதுதான் நிலம்புரண்டி என்ற மூலிகை. மிகவும் அற்புதமான, அபூர்வமான தெய்வீக மூலிகை. இந்த மூலிகையின் தரிசனம் பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தகைய இறை சக்திகள் நிரம்பிய மூலிகை இது. அனைவராலும் இம்மூலிகையைப் பார்க்க முடியாது. தகுதியில்லாதவர்கள் இதனருகில் வந்தால் பூமியில் குழியைப் பறித்துக் கொண்டு மறைந்து விடும். அது மறைந்த இடத்தில் ஆயிரம் அடி தோண்டினாலும் அதைப் பார்க்க முடியாது.”

சிறுவனுக்கு ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும் மறுபுறம், ”இவ்வளவு விஷயம் உள்ள செடி என்று முன்பே தெரிந்திருந்தால் அதை நன்றாகப் பார்த்து மனதில் இருத்தியிருக்கலாமே,” என்று நினைத்து மன ஏக்கத்துடன் அன்னபூரண சித்தரைப் பார்த்தான். சிறுவனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சித்தர் புன்முறுவலுடன் தன்னுடைய இடுப்பில் இருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்தார். அதிலிருந்து பட்டுத் துணியில் சுற்றப்பட்ட ஒரு வேரை எடுத்தார். சுமார் மூன்று அங்குல நீளமுள்ள அந்த வேரை சிறுவனின் ஆள்காட்டி விரலில் ஏதோ மந்திரத்தைச் சொல்லிக் கட்டினார்.

”இப்போது அந்த செடி மறைந்த இடத்தில் விரலை நீட்டு,” என்றார். சிறுவன் சித்தர் கூறிய படி செடி மறைந்த இடத்தை நோக்கி தன்னுடைய ஆள்காட்டி விரலைக் காட்டினான்.

அடுத்த விநாடியே பூமியிலிருந்து முன்போல கிறுகிறுவென சுற்றிக் கொண்டே அந்த நிலம்புரண்டிச் செடி மேலே வந்தது. சிறுவன் எல்லை யில்லாத ஆச்சரியம், சந்தோஷம் மேலிட அந்தச் செடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்தர் தொடர்ந்து, ”இந்தச் செடியில் உள்ள ஒவ்வொரு இதழும் வேதங்களின் சாரமாக விளங்கும் பஞ்சாட்சர சக்திகளைக் குறிக்கும். இந்தச் செடியைத் தொட்டாலே போதும், சாட்சாத் சிவபெருமான் இங்கு பிரசன்னமாக வேண்டும் என்பது எம்பெருமானே விதித்த விதி. அவ்வளவு அற்புத சக்திகள் படைத்தது இந்த நிலம்புரண்டி மூலிகை.”

சிறுவனுக்கு சந்தோஷம் விண்ணை முட்டியது. ”ஆஹா என்ன அற்புதமான மூலிகை. இப்போது நாம் அந்தச் செடியைத் தொட்டு விட்டால் போதுமே. இங்கேயே சிவபெருமானைத் தரிசித்து விடலாம்,” என்று எண்ணி குழந்தைத் தனமாக மனக் கணக்கு போட ஆரம்பித்தான்.

தொட்டால் வருவார் சிவபெருமான் !

சித்தரைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக, ”சுவாமி, அந்தச் செடியைத் தொடட்டுமா?” என்று கேட்டான். சித்தர் சிரித்துக் கொண்டே, ”ஏன் நைனா, சிவபெருமான் தரிசனம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக் கூடியதா? கஷ்டப் படாமல் கிடைத்து விட்டால் எதற்கும் அருமை தெரியாது, கண்ணு. உனக்கு இந்தச் செடியைப் பார்ப்பதற்குதான் உரிமை. அதைத் தொடுவதற்கு உனக்கு உரிமை கிடையாது. இதைப் பார்க்கும் உரிமை கூட உன்னுடைய தகுதியை வைத்து கிடையாது. அந்தக் கோவணாண்டிக் கிழவன் ரொம்ப வேண்டி உனக்கு கொடுத்திருக்கிறான், தெரியுமா?” என்றார்.

சிறுவனுக்கு இப்போதுதான் எல்லா உண்மையும் புரிந்தது. தனக்கு கிடைக்கும் எதுவுமே தன்னுடைய தகுதிக்காக கிடைக்கவில்லை. எல்லாம் தன்னுடைய குருநாதரான கோவணாண்டிப் பெரியவர் தனக்குப் போட்ட பிச்சைதான் என்பதை சிறுவன் நன்றாக உணர ஆரம்பித்தான்.   

சித்தர் சிறுவனின் விரலில் கட்டியிருந்த மூலிகை வேரை அவிழ்த்தார். உடனே நிலம்புரண்டி முன்போலவே பூமியில் சுழன்று மறைந்தது.

இவ்வாறு பற்பல தெய்வீக அனுபவங்களை பூண்டி மகான் மூலம் பெற்ற சிறுவன் வெங்கடராமன் இரண்டு ஆண்டுகள் கழித்து கோவணாண்டிப் பெரியவரைச் சந்தித்தபோது தான் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் அவரிடம் ஒன்று விடாமல் விவரித்து மகிழ்ந்தான்.

அப்போது சிறுவன், ”வாத்யாரே, நிலம்புரண்டி என்ற ஒரு மூலிகையை சுவாமி (பூண்டி மகான்) எனக்குக் காட்டினார். உன்னுடைய பிரார்த்தனையால்தான் அந்த மூலிகையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது என்று கூறினார். அப்படியானால் சாதாரண மக்களும் அதன் பலனை எப்படிப் பெறுவது? அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?” என்று பெரியவரிடம் கேட்டான்.

பெரியவர் சிறுவனைக் கட்டித் தழுவிக் கொண்டு, ”இப்போதுதாண்டா நீ உண்மையான சீடன். மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் மனதுதான் இறைவனை மகிழ்விக்கக் கூடியது.”

பெரியவர் தொடர்ந்தார். ”இறைவனைக் காணுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால், இறைவனைக் கண்டவர்களைக் காண்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு ஒத்து வரக் கூடியதே. அது போல நிலம்புரண்டி மூலிகையின் தரிசனம் பெறும் அளவிற்கு புண்ணிய சக்தியை ஒருவர் பெறா விட்டாலும் அம்மூலிகையின் தரிசனப் பலன்களை அளிக்கக் கூடிய தலமே திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலமாகும்,” என்று கூறி அத்திருத்தல மகிமையை விவரித்தார்.

ஸ்ரீபோஜீஸ்வர திருத்தலமகிமை

ஸ்ரீராமரின் ரகுவம்சத்தில் தோன்றிய மாமன்னர்களில் ஒருவரான விக்ரம ஆதித்தன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதே திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் ஆகும்.

சூரிய சக்திகள் பொலியும் அற்புதமான தலம். ஒவ்வொரு மாதமும் ஆவணி மாதத்தில் சூரிய பகவான் தன்னுடைய பொற் கிரணங்களால் சுவாமியைத் தழுவி ஆராதனை செய்யும் அற்புதத்தைக் காண கண் கோடி வேண்டும் என்று பெரியோர்கள் பாராட்டும் ஒப்பற்ற சூரிய தலம் இதுவே.

பாஸ்கர பூஜை மட்டும் அல்லாது பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானும் ஸ்ரீபோஜீஸ்வரரை பூஜித்து தன்னுடைய ஔஷத கிரணங்களை தூய்மைப் படுத்திக் கொள்கிறார். எனவே சூரிய பூஜையும் சந்திர பூஜையும் நிகழும் இந்த புராதன தலத்தின் மகிமைகளின் ஒரு சிறு துளியை இந்நூலில் விளக்குகிறோம்.

நிறைமங்கள கணபதி

ஆதி தெய்வமாம் கணபதி பல்வேறு ரூபங்களில் பலவிதமான அனுகிரக சக்திகளை அளிக்கும் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளி யுகங்கள் தோறும் மக்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார். இவ்வகையில் திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கணபதி மூர்த்தி சதுர ஆவுடையில் வீற்றிருக்கும் அரிதான கணபதி மூர்த்தியாகத் திகழ்கிறார்.

நிறை குணங்களை அள்ளி வழங்கும்
ஸ்ரீநிறைமங்கள கணபதி மூர்த்தி

பொதுவாக, மனிதர்கள் அவசியமாகப் பெற்றிருக்க வேண்டிய சிறப்பான குணங்களை ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பெரியோர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதாவது, இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, திட காரிய சித்தம், தெளிந்த அறிவு என்ற நான்கு குணங்களை ஆண்களுக்கு உரிய நிறை குணங்களாகவும், பெரியோர்களிடம் பக்தி, பிற ஜீவன்களிடம் தயை, எளிமை, இயல்பான மென்மை இவற்றை பெண்களுக்கு உரித்தான மங்கள குணங்களாகவும் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

இவ்வாறு நிறை குணம் பூண்ட ஆணும் மங்கள குணம் விளங்கும் பெண்ணும் இணையும் மண வாழ்க்கையே சிறப்பான தாம்பத்திய உறவுக்கு வழிவகுக்கிறது. இந்த நற்குணங்களில் குறைவு ஏற்படும்போது மணவாழ்க்கையில் குழப்பங்கள் தோன்றி இல்லறத்தில் அமைதியின்மையும் சண்டை, சச்சரவும் பெருகுகின்றன.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெற வேண்டிய நற்குணங்களை விருத்தி செய்து நற்சந்ததிகளையும் குடும்ப ஒற்றுமையையும் பெற வழி வகுக்கும் கணபதி மூர்த்தியே சமயபுரம் ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிறைமங்கள கணபதி மூர்த்தி ஆவார்.

சதுர்த்தி திதிதோறும் மிளகு கலந்த வெண் பொங்கலையும், சதுர்த்தசி திதியில் மிளகு கலந்த உளுந்த வடையையும் இம்மூர்த்திக்குப் படைத்து தானம் அளித்து வழிபட்டு வந்தால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். உடல் வேறுபாடுகளால் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் நீங்க வழி பிறக்கும். உதாரணமாக, கறுப்பு, சிவப்பு, உயரம், குள்ளம் போன்று தம்பதிகளிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை உரிய முறையில் எதிர்கொள்ளும் அறிவு முதிர்ச்சி மலரும்.

யாழமராந்தக பலி பீடம்

ஸ்ரீபோஜீஸ்வர திருத்தலத்தில் நிலவும் பலி பீடத்தை சித்தர்கள் யாழமராந்தக பலிபீடம் என்று அழைக்கிறார்கள். யாழ் அமராந்தகர் என்ற உத்தம ரிஷி திருஅண்ணாமலையில் பன்னெடுங்காலம் தவமியற்றி உலக ஜீவன்கள் அனைத்தும் அதிலும் குறிப்பாக எறும்புகள் உத்தம நிலை அடைய அருந்தொண்டு புரிந்தவர். இந்த தவசீலர் கட்டெறும்பு வடிவில் பல யுகங்கள் பூஜித்த தலமே ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலமாகும்.

யோகிகளும் ரிஷிகளும் தவமியற்றுவது மற்றவர்களின் நன்மைக்காகத்தானே? யாழ் அமராந்தகர் தவ முடிவில் தான் இயற்றிய பூஜா பலன் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க அதன் தூல வடிவாய் அமைந்ததே இத்தலத்தில் தற்போது நீங்கள் காணும் பலி பீடம். அமராந்தகரின் தியாகத்தைப் பாராட்டும் வண்ணம் சித்தர்கள் இப்பலி பீடத்தை யாழமராந்தக பலிபீடம் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சற்குரு உண்டு. இதே முறையில் எறும்புகளுக்கும் குருநாதர்கள் உண்டு. மேலும் மனிதர்களைப் போல எறும்புகளுக்கும் திருமண வாழ்க்கை இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் தங்கள் துணையை பெற்றோர்கள், பெரியோர்கள் அல்லது தாங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், எறும்புகளோ தங்கள் வாழ்க்கைத் துணையை தங்களுடைய சற்குரு காட்டும் வழியில்தான் அமைத்துக் கொள்கின்றன. அப்படியானால் மனித பிறவியை விட எறும்பு பிறவி எவ்வளவு உயர்ந்தது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு எறும்புக்கு அதன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பின் எறும்பின் குருநாதர் அந்த தம்பதி எறும்புகளை திருஅண்ணாமலைக்கு வரவழைத்து அங்கு திரு உண்ணாமுலை சமேத அண்ணாலையாரின் முன்னிலையில் நிலம்புரண்டி மூலிகைச் செடியின் நிழல் பீடத்தில் அமர்த்தி எறும்புகளின் திருமண வைபவத்தை மிகவும் சிறப்பாக, தெய்வீகமாக நிறைவேற்றி வைக்கிறார்.

யாழமராந்தக பலிபீடம்

சற்குருநாதரின் முன்னிலையில் நிகழும் இந்த தெய்வீக திருமணத்திற்கு தலைமை குருக்களாக இருப்பவரே யாழ் அமராந்தகர். நாம் அறிந்த நான்கு வேதங்கள் மட்டும் அல்லாது கோடிக் கணக்கான வேதங்களும், வேத மந்திரங்களும் பரவெளியில் செறிந்துள்ளன. அவற்றில் ஒவ்வொரு எறும்பு தம்பதிக்கும் உரித்தான வேத மந்திரத்தை தெளிவாக ஓதி திருமண வைபவத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றிருப்பவரே யாழ் அமராந்தகர்.

இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு எறும்பு தம்பதிக்கும் ஓத வேண்டிய விசேஷ வேத மந்திரங்கள் தனித்தனியாக இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு எறும்பு தம்பதிக்கு ஓதும் மந்திரத்தை மற்றொரு எறும்பு தம்பதிகளுக்கு ஓதுவது கிடையாது. இதுவே பிரபஞ்ச இறை லீலை. எண்ணிலடங்கா மெய்ப் பொருள் தத்துவம்.

எறும்புகளுக்காக தனித் தனி வேத மந்திரங்களை அளித்த இறைவன் மனிதர்களுக்கும் சிறப்பான மந்திர தோத்திரங்களை கட்டாயம் அளித்திருப்பான் அல்லவா? ஆம், நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் திருமணத்தின் போது ஓத வேண்டிய வேத மந்திரங்களை இறைவன் நிர்ணயித்துதான் வைத்திருக்கிறான். ஆனால், இந்த ரகசியங்களை அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. யாருக்கெல்லாம் சித்தர்கள் சற்குருவாய் அமையப் பெற்றுள்ளார்களோ அவர்களுடைய திருமணங்களில் எல்லாம் சித்த குருக்கள் இந்த பிரத்யேகமான மந்திரங்களை ஓதி தம்பதிகளை ஆசீர்வதிக்கிறார்கள்.

சற்குருவின் கருணை கடாட்சம் பெறாதோர் என்ன செய்வது? அவர்களுக்கும் நல்வழி காட்டுகிறான் இறைவன். சற்குருவை அறியாதவர்கள் கோயில்களில் திருமணங்களை நிகழ்த்தி இறைவனின் திருப்பாதங்களில் வைத்து பெறப்பட்ட மாங்கல்யத்தை அணிவித்து திருமண வைபவத்தை நிகழ்த்தினால் அக்னி மூர்த்தியே அத்தம்பதிகளுக்கு உரித்தான சிறப்பு வேத மந்திரங்களை ஓதி திருமணத்தை தெய்வீகத்தில் நிலைநாட்டுகிறார்.

திருமணம் நிச்சயிக்கும் முன் ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும். தற்காலத்தில் பத்துப் பொருத்தங்கள் மட்டும் பார்த்து விட்டு திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். மனித உடலில் பார்கவ நாடி, சுபமங்கள நாடி, வைவஸ்த நாடி, கங்கண நாடி, ம்ருத்யு நாடி என்றவாறு 1008 நாடிகள் உள்ளன. தம்பதிகளுக்கு இடையே உள்ள இந்த நாடிகளை வைத்து பொருத்தம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய திருமண வாழ்வு நோய் நொடியின்றி ஆரோக்யமாக அமையுமா, சந்ததிகள் குறையின்றி வாழ்வார்களா என்ற ரகசியங்கள் தெரிய வரும்.

ஸ்ரீஅகஸ்திய பெருமானும்,

     நாடிப் பொருத்தம் தேடிப் பார்த்திடில்
     கூடி வாழ்வர் நலமுடனே

என்று நாடிப் பொருத்தத்தின் முக்கியத்துவத்தை வர்ணிக்கிறார்.

ஆரம்பத்திலிருந்த 1008 நாடிப் பொருத்தங்கள் காலக் கிரமத்தில் 5, 6 என குறைந்து தற்போது நாடிப் பொருத்தம் என்பது பத்துப் பொருத்தங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

எதிர்காலத்தில் மேக நோய்களால் பலரின் திருமண வாழ்க்கை துன்பமாய் அமையும் என்று சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருபாலரும் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் திருமண வாழ்வை ஏற்றால் தேவையில்லாத மனக் குழப்பம், சந்ததியின்மை, விவாகரத்து போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்பது அவர்களுடைய அன்பு மொழி.

சூழ்நிலை காரணமாக சரியாக ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணத்தை அவசர கோலத்தில் நிகழ்த்தி அல்லல் அடைந்தவர்கள் ஸ்ரீபோஜீஸ்வரரை வணங்கி யாழமராந்தக பலி பீடத்தில் வழிபாடுகள் மேற்கொள்வதால் ஓரளவு தங்கள் துன்பம் நீங்கப் பெறுவார்கள்.

இவ்வாறு நாடிப் பொருத்தம் பார்ப்பது பலருக்கும் இயலாது என்ற காரணத்தால் அக்காலத்தில் திருமண வைபவத்தின்போது மாப்பிள்ளைக்கு  மோதிரம், மணிக்கட்டு கங்கன் (bracelet) போன்ற ஆபரணங்களை பெண்ணின் சகோதரர்கள் அணிவித்தனர். இதனால் மணிக்கட்டில் விளங்கும் வாத, பித்த, கப நாடிகள் ஓரளவு சீர் பெற்று மாப்பிள்ளையின் உடல் ஆரோக்கியமும், தாம்பத்ய வாழ்வும் மன உறுதியும் சிறப்பாக அமையும்.

மைத்துனன் ஆபரணம் அணிவிக்கும் திருமண வைபவத்தை ஆடம்பர சடங்காகச் செய்யாமல் அதை தெய்வீகமாக நிறைவேற்றி வந்தால் தம்பதிகளின் திருமண வாழ்க்கை சிறப்புறும்.

ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தி

ஒன்றரை பவுன் (12 கிராம்) தங்க மோதிரமும், 48 கிராமுக்கு தங்க மணிக்கட்டு கங்கனும் செய்து அதை ஸ்ரீபோஜீஸ்வரரின் திருப்பாதங்களில் வைத்து மணமகனுக்கு அணிவித்தால் நாடிப் பொருத்தம் போன்ற ஜாதகப் பொருத்தங்கள் பார்க்காத தோஷங்கள் ஓரளவு நிவர்த்தி பெறும்.
ஒரு கிராம் தங்கம் கூட வாங்க வழியில்லாத எளியவர்கள் என்ன செய்ய முடியும்? வசதி உள்ளவர்கள் இத்தகைய மோதிரங்களையும், கங்கன்களையும் தானம் அளிக்கலாமே. இதனால் தீரும் திருமண தோஷங்கள் ஏராளம், ஏராளம்.

‘இவ்வாறு தங்கம் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நவதானியங்களை வாங்கி அதை யாழமராந்தக பலி பீடத்தில் சமர்ப்பித்து அதைக் கொண்டு புது மண் சட்டிகளில் முளைப் பாலிகை வளர்க்கவும். இந்த முளைப் பாலிகைளின் முன்னிலையில் திருமண வைபவத்தை நிகழ்த்துவதால் நாடிப் பொருத்தங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தியாகும். திருமணத்திற்குப் பின் தம்பதிகள் இம்முளைப் பாலிகைகளுக்கு நன்றி தெரிவித்து அவைகளை ஓடும் நீரில் அல்லது புண்ணிய நதிகளில் சேர்க்க வேண்டும் என்பது முக்கியம்.  

செல்போன் தவிர்ப்பீர்

இன்றைய அத்தியாவசியமான வசதியாகக் கருதப்படும் செல்போன்களால் மனித சமுதாயத்திற்கு விளையும் துன்பங்கள் எண்ணற்றவை. பரவெளியில் உள்ள வேத சக்திகளை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யும் தீய விளைவுகளைக் கொண்டவையே செல்போன்கள். எனவே முடிந்த மட்டும் செல்போன்களைத் தவிர்ப்பது மனித சமுதாயத்திற்கும், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களுக்கும் நாம் செய்யும் சேவையாகும். முற்றிலுமாக செல்போன்களைத் தவிர்க்க முடியாதவர்கள் ஓரளவாவது செல்போன்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பதும் ஒரு சேவையே.
அமர சொல்லிசைத் துதி
செல்போன்களால் உடல் நலத்திற்கும், சமுதாயத்திற்கும் விளையும் கேடுகளைக் குறைக்க அருள்புரிபவரே யாழ் அமராந்தக ரிஷியாவார்.

     யாழினும் மெல்லிசை ஏழினும் சொல்லிசை
     வாழ்வினில் இன்னிசை வையத்துள் எண்திசை
     யாழமராந்தக நின்னிசையே

என்னும் அமர சொல்லிசைத் துதியை ஓதி செல்போன்களைப் பயன்படுத்துவதால் அதன் தீய விளைவுகளை ஓரளவு குறைக்க முடியும்.

மாணவர்கள் இத்துதியை ஓதுவதால் படித்த பாடங்களை மனதில் பதித்துக் கொள்ள உதவி செய்யும். நல்ல ஞாபக சக்தியையும் மனனம் செய்யும் திறமையையும் வளர்ப்பதே அமர சொல்லிசைத் துதியாகும்.

பட்டை லிங்க மகிமை

மன அழுத்தம், மனக் குழப்பம், மன வேதனை ஏற்பட ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் இரவில் மனிதன் உறங்கும்போது உறக்கத்தில் எந்த வித வேதனையையும் உடல் ரீதியாக அனுபவிப்பது கிடையாது அல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்மைச் சுற்றிலும் உள்ள எண்ண அலைகள் நம்மைத் தாக்கும்போது நமது மனம் சந்தோஷம் அல்லது வேதனை சக்திகளால் பாதிக்கப்படுகிறது.

பூமியில் உள்ள பட்டை லிங்க மூர்த்திகள் எட்டு திசைகளிலிருந்து வரும் எண்ண அலைகளை சமன் செய்து நமது மனதை ஒரு நிலைப்படுத்த வழிவகுக்கின்றனர். எந்த அளவிற்கு ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தி போன்ற பட்டை லிங்க மூர்த்திகளை வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு மனக் குழப்பங்களும் மன அழுத்தங்களும் நீங்கும் என்பது சித்தர்களின் அனுபவ மொழி. சமயபுரம் அருகே அருள்புரியும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தி 18 பட்டைகளுடன் விளங்கி சிறப்பாக மனிதனின் 18 சரீரங்களை நெறிப்படுத்துகிறார்.

மனிதனின் 9 தூல சரீரங்களும் அதன் பிரதிபலிப்பான 9 சூட்சும சரீரங்களும் முறையாக இயக்கப்படும்போதுதான் மனிதன் மனக் குழப்பங்கள் நீங்கி அமைதி பெறுகிறான். ஒவ்வொரு திசையிலும் ஆற்ற வேண்டிய சிறப்பான காரியங்கள் உண்டு. அதை அறியாமல் மனம் போன போக்கில் காரியங்களை நிகழ்த்துவதும் பல்வேறு மனக் குழப்பங்களுக்கு வித்திடுகின்றன. மேலும் ஒவ்வொரு திசைக்கும் உரித்தான தேவதைகள் உண்டு. தம்பதி சமேதராக இந்த திக்கு மூர்த்திகளை வழிபடுவதும் மனக் குழப்பத்திற்கு அருமருந்தாக அமைகிறது.

எட்டு திசைகளில் செய்ய வேண்டிய காரியங்கள்
கிழக்கு திசை

எட்டு திசைகளில் முதன்மையாகத் துலங்கும் கிழக்கு திசைக்கு அதிபதியான தேவதைகள் ஸ்ரீஇந்திராணி சமேத இந்திர மூர்த்திகள்.

எல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக கிழக்கு திசை அமைவதால் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க கிழக்கு திசை உகந்தது. காலை எழுந்தவுடன் கிழக்கு திசையை நோக்கி திக்கு தேவதைகளை நமஸ்கரித்து கர தரிசனம் போன்ற வழிபாடுகளை நிகழ்த்துதல் நன்று. துயில் எழுந்தவுடன் முதலில் கிழக்கு நோக்கி ஓரிரு அடிகளையாவது வைத்தல் நலம்.

பல் துலக்கும்போது கிழக்கு திசை நோக்கி நடு விரல் (சனி விரல்) கொண்டு பல் துலக்குவதால் ஆயுள் பெருகும். வீண் சச்சரவுகள் வராது. வாய் வார்த்தைகளால் துன்பங்கள் பெருகாது. வாய் கொப்பளிக்கும்போது இடது கை பக்கம் துப்பவும். அவ்வாறில்லாமல் வலது கை பக்கம் துப்பினால் செல்லும் காரியங்கள் தடைப்படும். நமது மூதாதையர்களான வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் நம்மைச் சுற்றி வலம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இவர்களில் வசு பித்ரு தேவதைகளும் அவர்களின் பத்னிமார்களும் நமது வலப் பக்கத்தில் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர். அதனால் நாம் வலப் பக்கம் துப்பினால், உமிழ்ந்தால் வசு பித்ரு மூர்த்திகளின் சாபத்திற்கு ஆளாவோம் என்பதை நினைவில் கொள்ளவும். விபத்து, தோல்வி, அவமானம் போன்ற எதிர்பாராத துன்பங்களுக்கு வசு பித்ரு தேவர்களின் சாபமும் ஒரு காரணம் ஆகும்.

மேலும் கிழக்கு திக்கு மற்ற எல்லா திசைகளுக்கும் மூல திசையாக அமைவதால் கிழக்கு திசையில் செய்யும் காரியங்களில் ஏற்படும் குற்றம் மற்ற திசைகளையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதே முறையில் கிழக்கு திசையில் செய்யும் வழிபாடுகள் மற்ற திசைகளில் செய்யும் காரியங்களுக்கு உறுதுணையாக அமைந்து காரிய சித்திகளை நல்கும் என்பதும் உண்மையே.

குளிக்கும்போது கிழக்கு திசை பார்த்து குளித்தல் உத்தமம். நதி, குளம், குட்டைகள், அருவிகள், கடல், கோயில் தீர்த்தங்கள் இவற்றில் குளிக்கும்போதும் திசைகளை கவனத்தில் கொள்ளவும். தவிர்க்க முடியாத காரணத்தால் கிழக்கு திசையைப் பார்த்து குளிக்க முடியாவிட்டால் ஓரிரு குவளைகள், அல்லது ஓரிரு துளி தீர்த்தத்தையாவது கிழக்கு திசை நோக்கி நின்று தலையில் தெளித்து விட்டு பின்னர் மற்ற திசையை பார்த்து குளியலைத் தொடரலாம்.

காலங்கள் மாறலாம், நாகரீகம் மாறலாம், மொழிகள் மாறலாம். இயற்கை என்றும் மாறாது. நீண்டு நிலைத்து நிற்பது இயற்கை வளம். எனவே பல அற்புத விஷயங்களை இறைவன் மலை, கடல், ஆறு, மரம், செடி போன்ற இயற்கை வளங்கள் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.

மனிதன் கிழக்கு நோக்கி தீர்த்த நீராடல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே கங்கை, யமுனை, காவிரி போன்ற சப்த புண்ணிய நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன என்ற தேவ உண்மையை சிந்தித்துப் பாருங்கள்.  

மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது அவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு நோயாளியை மருத்துவரின் வலப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பரிசோதித்தல் நலம். அதனால் நோயின் தன்மையை எளிதாக கண்டறிந்து பயனுள்ள சேவையாற்ற முடியும்.

காலையில் துயிலெழுந்து அறைகளின் கதவு, ஜன்னல்கள் இவற்றைத் திறக்கும்போது முதலில் வலது பக்கம் உள்ள கதவுகள், ஜன்னல்கள் இவற்றைத் திறத்தல் நலம்.

கிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவதால் கெட்ட கனவுகள் வராது தடுக்கலாம்.

உபநயனம் அணிதல் போன்ற வேதோத்தம காரியங்களுக்கும் கிழக்கு திசை உகந்தது.

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார் அல்லவா? பல யுகங்கள் சூரிய வழிபாடுகள் இயற்றியே ரிஷிகளே இவ்வாறு சூரிய பகவானின் குதிரை வாகனமாக அமைந்து உலகிற்கு ஒளியூட்டுகின்றனர். தற்போதைய யுகத்தில்

அருணன்
சரணன்
கருணாரச சிந்தன்
அசமான பலன்
ஆர்த்த ரட்சகன்
ஆதித்யன்
ஆதிபுதன்

என்ற ஏழு ரிஷிகளே ஏழு குதிரைகளாக சூரிய பகவானின் வாகனங்களாய் அமைந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் உலகைச் சுற்றி வருவதால் அவ்வப்போது தங்கள் சக்தியை புதுப்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு ரத சப்தமி அன்றும் சூரிய பகவான் வழிபாடுகள் இயற்றும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி தங்கள் அருண சக்தியை விருத்தி செய்து கொள்கின்றனர்.

எனவே ஏழு வண்ணங்களைப் பயன்படுத்தும் அனைவரும் ரத சப்தமி அன்று ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி பல வண்ண சித்ரான்னங்களை சுவாமிக்குப் படைத்து அன்னதானமாக வழங்குவதால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள்.

உதாரணமாக,

  1. பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள், ஓவியர்கள், ஸ்தபதிகள்
  2. பெயிண்ட் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள்
  3. ஓட்டல் உரிமையார்கள், பணியாளர்கள்
  4. காய்கறி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள்
  5. பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள், பணியாளர்கள்
  6. விளம்பரத் துறையில் ஈடுபட்டவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், நடிகர் நடிகைகள்
  7. ஏழு ஸ்வரங்களைப் பயன்படுத்தும் இசைத் துறையில் உள்ளவர்கள்

என அனைவருமே ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை ரத சப்தமி அன்றும் சிம்ம மாதமான ஆவணி மாதத்தின் அனைத்து நாட்களிலும் வழிபட்டு அற்புதமான பலன்களைப் பெறலாம்.
மேலும், கிழக்கு திசை எல்லா திசைகளுக்கும் மூல திசையாக அமைவதால் எந்த காரியத்தை ஆரம்பிக்கும் முன்னும் கிழக்கு நோக்கி அருளாட்சி செலுத்தும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி வழிபடுவதால் காரிய சித்தியும், காரிய ஜெயமும் இறைப் பிரசாதமாக சித்திக்கும் என்பது உண்மை.  

இனி வரும் காலங்களில் வேறு கிரகங்களிலிருந்து ஜீவன்கள் பூமிக்கு வருவர். குறிப்பாக, சனி கிரகத்திலிருந்து வரும் வேற்று லோக வாசிகளால் பூமியில் இருப்பவர்களுக்கு நிறைய துன்பங்கள் நிகழ வாய்ப்பண்டு என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. இத்தகைய துன்பங்களிலிருந்து மீள வேண்டுமானால் அதற்கு உரிய வழிபாடுகள் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு உரிய வழிபாடுகள், பிரார்த்தனைகளை ஏற்று பூமிக்கு வரும் நற்சக்தி ஜீவன்கள் பூமிக்கு வரும் வான்வெளி மார்கமாக திகழ்வதே கோயில் கோபுரங்கள்.

தற்காலத்தில் ஏர்போர்ட் ரன்வே, ஹெலிபேட் என்று அழைப்பது போல் பிற லோகத்திலிருந்து வரும் நல்ஜீவன்களுக்கு உதவுவதே கோயில் கோபுரங்களாகும். இவ்வாறு நன்மை புரியும் பிற லோக ஜீவன்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வதே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் திகழும் யாழமராந்தக பலி பீடமாகும்.

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்
போஜீஸ்வரர் திருத்தலம்

கிழக்குத் திசையில் தலை வைத்து உறங்கும்போது யாழமராந்தக ரிஷியை தியானித்து உறங்கச் செல்வதால் கெட்ட கனவுகள் வராமல் நிம்மதியான உறக்கம் கிட்டும். மேலும், பிற லோக ஜீவன்களின் எதிரிடையான சக்திகள் உறக்கத்தில் நம்மைத் தாக்காது பாதுகாத்துக் கொள்ளலாம்.

மூக்குக் கண்ணாடி அணியும்போது கிழக்கு திசையை நோக்கி நின்று

ஜபாகுசும சங்காசம் காஸ்யபேயம் மகத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்நம் ப்ராணதோஸ்மி திவாகரம்

என்னும் சூரிய துதியை 12 முறை ஓதி கண்ணாடி அணிவதால் பார்வைக் கோளாறுகள் தீவிரம் அடையாமல் கண்களைப் பாதுகாக்கலாம். படியில் இடறுதல், ஒளி முறிவு, ஒளி பிரதிபலிப்பு போன்று கண்ணாடி அணிவதால் ஏற்படக் கூடிய துன்பங்களுக்கு நிவர்த்தி அளிப்பதே மேற்கூறிய வழிபாடாகும்.

தென்கிழக்கு திசை

அக்னி திசை என்று அழைக்கப்படும் தென் கிழக்கு திசைக்கு உரிய மூர்த்திகள் ஸ்ரீஸ்வாஹா தேவி சமேத அக்னி மூர்த்தியாவார். படுக்கை அறை தென்கிழக்கு திசையில் அமைத்தல் நலம். அல்லது படுக்கைகளை தென் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். மருத்துவர்கள் தங்கள் ஸ்டெதாஸ்கோப் போன்ற உபகரணங்களை தங்கள் மேஜையின் நடுவில் வைத்தல் நலம். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை தென்கிழக்கில் வைத்தல் உத்தமம்.

கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனனம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும்.

ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும்.

தெற்கு திசை

தென் திசைக்கு உரிய சக்தி ஸ்ரீயம மூர்த்தியும் யம பத்னியும். யம மூர்த்தி பத்னியின் பெயரை வாய் விட்டுச் சொல்லக் கூடாது என்பது நியதி. எனவே எம மூர்த்தியின் சக்தியை எமபத்னி என்று கூறி வழிபடுவதே முறையாகும். தாய், தந்தை, முதியார்களுக்குச் சேவை செய்ய, பணி விடைகள் நிறைவேற்ற தென் திசை உகந்ததாகும். பித்ரு வணக்கங்களை தென் திசை நோக்கி நிகழ்த்த வேண்டும்.

பெண்கள் செவ்வாய், வெள்ளியும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடும்போது முதலில் ஒரு குவளை நீரை தென் திசை நோக்கி நின்று தலையில் ஊற்றி விட்டு பின்னர் ஏனைய திசைகளில் நின்று நீராடலாம்.

அக்னி தோத்திரப் பிரியர். எந்த அளவிற்கு அக்னியை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்மை அவர் பல துன்பங்களிலிருந்து காத்து பிறவிப் பிணியை வேரறுக்க உறுதுணை செய்வார்.

பெரும்பாலான உடல் நோய்கள் அக்னி தத்துவத்தின் மாறுபட்ட விகிதாசாரத்தால் ஏற்படுவதே. எலும்புருக்கி நோய் (சல்லடை நோய் என்பது சித்த பாஷை), புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் அக்னி மூர்த்தியின் வழிபாட்டால் நீங்கும் என்பது அனுபவ உண்மை.

அக்னி மூர்த்திக்கு இரண்டு நாக்குகள் உண்டு. இரண்டு நாக்குகள் கூடிய அக்னி பகவானை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் இன்றும் தரிசிக்கலாம். வாலாட்டி, சாலாட்டி என்ற அழைக்கப்படும் இரு நாக்குகளை உடைய அக்னி மூர்த்தியை வணங்கி சர்க்கரை கலந்த வெண்ணெயை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் நோய் நீங்கி ஆயுள் விருத்தியாகும். தீர்க்க ஆயுள் அளிக்கக் கூடியதே அக்னி தேவன் வழிபாடாகும்.

தென்மேற்கு திசை

நைதிருதி அல்லது நிருதி திசை எனப்படும் தென்மேற்கு திசைக்கு உரித்தான சக்தி தெய்வங்கள் ஸ்ரீயாதுதானி சமேத நைதிருதி மூர்த்தி ஆவார்.,

ஆயுதம், தங்கம் இவைகளை வைக்க நிருதி திசை உகந்தது. கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிருதி திக்கை நோக்கி கடன் கேட்டால் கடன் தடையில்லாமல் கிடைக்கும். அவ்வாறு பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதும் சுலபமாக இருக்கும். ஆனால், பயனுள்ள காரியங்களுக்காக மட்டுமே கடன் வாங்குவது என்ற நியதியை கவனத்தில் கொள்க,

இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்ய நிருதி திசை நலம். எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி எல்லாம் உதவலாம் என்று இறைவனிடம் மன்றாடி கேட்பதே உண்மையான பிரார்த்தனை என்று சித்தர்கள் அருள்கின்றனர்.

கன்னிப் பெண்கள் நல்ல கணவன்மார்களைப் பெற நிருதி மூலை எனப்படும் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள கன்னி மூலைக் கணபதியை வணங்கி வழிபடுதல் நன்று.

உங்களுக்குத் தேவையானதை, அவசியமானதை மட்டுமே இறைவனை நோக்கி வேண்டி கேட்டுப் பெறுங்கள். ஏசுபெருமான் கெஸ்தமணி தோட்டத்தில் நிருதி திக்கை நோக்கி பரமபிதா ஆசனம் இட்டு உலக மக்கள் அனைவரும் தங்கள் மனச் சுமை நீங்கி நிம்மதி அடைய இறைவனை வேண்டினார் அல்லவா? அப்போது யாதுதானி தேவியே கேப்ரியல் தேவதை வடிவில் தோன்றி அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை அளித்தாள்.

வாரணம் என்றால் யானை என்று பொருள். நிருதி திசையில் நிருதி வாரண சக்திகள் செறிந்துள்ளன. இச்சக்திகள் யானையைப் போன்ற கூரிய நுண்ணறிவையும், அதீதமான ஞாபக சக்தியையும் அளிக்க வல்லவை. அதனால்தான் யானை முகக் கடவுளான கணபதி தெளிவான அறிவை அளிக்க கன்னி மூலையில் எழுந்தருளி உள்ளார் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா?

மேற்கு திசை

மேற்கு திசைக்கு உரித்தான சக்தி ஸ்ரீவாருணி சமேத வருண மூர்த்தி ஆவார். மழை வரும் பதிகங்களையும், அமிர்த வர்ஷிணி ராகத்தில் அமைந்த வருணாமிர்த பாடல்களையும் இசைக்க மேற்கு திசை உகந்தது. வருண பகவானுக்கு உரிய வாகனம் முதலையாக இருப்பதால் முதலைகளுக்கு உணவிட்டால் வருணன் மகிழ்ந்து நல்ல மழை பொழிவை வர்ஷிப்பார். கடன் தொல்லைகள் நீங்கும். பண வரவு ஏற்பட்டு பெரிய செல்வந்தர்களாகவும் ஆக வாய்ப்புண்டு.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், யாருடைய துணையும் இல்லாமல் வருந்துவோர் மேற்கு திசையில் வழிபாடுகளை மேற்கொள்வதால் நிராதரவரான நிலை ஏற்படாமல் இருக்க இறைவன் உரிய துணையை அனுப்பி வைப்பார்.

வடமேற்கு திசை

வடமேற்கு திசைக்கு உரிய சக்தி ஸ்ரீவாயாவி சமேத வாயு மூர்த்தி ஆவார். வாயு பகவானின் புதல்வனான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை வழிபட உகந்த திக்கு வடமேற்கு திசையாகும். ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனா தேவி சென்னையிலுள்ள சித்துக்காடு ஈசனை பன்னெடுங் காலம் பிரார்த்தித்து வாயு பகவானுக்கு வாயு சக்தியைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தோஷங்களைக் களைய வேண்டினாள். ஈசனும் அஞ்சனா தேவியின் மூச்சுக் காற்றின் ஒரு கூறையும் சித்துக்காடு நந்தீஸ்வரரின் மூச்சுக் காற்றின் ஒரு கூறையும் ஒன்று சேர்த்து வாயாவி தேவியை தோற்றுவித்தார்.

வாயாவி வாயு தேவன் பிணைப்பால் பிரபஞ்சத்தில் உள்ள வாயு மண்டலம் தூய்மை அடைந்தது. எனவேதான் மற்ற எல்லா நாமங்களையும் விட அஞ்சனா புத்திரன் என்ற நாமத்தையே ஆஞ்சநேயர் விரும்பி ஏற்கிறார். அதிலும் ஓம் ரீம் ஹம் ஸ்ரீஅஞ்சனா புத்ராய நமஹ என்ற நாமத்தைக் கூறி ஆஞ்சநேய மூர்த்தியை வழிபட்டால் அனுமந்த மூர்த்தியின் வழிபாட்டுப் பலன் பன்மடங்காய்ப் பெருகும் என்று சித்த கிரந்தங்கள் பறை சாற்றுகின்றன. இதில் ஓம் ரீம் ஹம் என்பது வாயாவியின் பீஜாட்சர சக்தி அம்சம்.

வடக்கு திசை

வடக்கு திசைக்கு உரித்தான தேவதா மூர்த்தி ஸ்ரீமனோரமா சமேத குபேர மூர்த்தியாவார். கணவன்மார்கள் மனைவிக்கு குங்குமத் திலகம் இடும்போது குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தொட்டு மனைவியை தன் வலப் பக்கத்தில் இருத்தி திலகம் இட வேண்டும் என்று குபேர தந்திரங்கள் உரைக்கின்றன. இதனால் மனைவியின் மாங்கல்ய பலம் விருத்தி ஆவதுடன் கணவனின் ஆயுளும் வளரும்.

பைரவ மூர்த்தி
போஜீஸ்வரர் திருத்தலம்

கன்னிப் பெண்கள் குபேரனின் மகளான பத்மினியை தியானித்து கோயில் வசந்த மண்டபங்களில் மாக்கோலமிட்டு மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து வடக்கு நோக்கி 21 முறை வணங்கி வந்தால் மனதிற்கேற்ற மணாளன் அமைவான் என்பது பெரியோர்கள் வாக்கு.

தியானம் கைகூட உகந்த திசை வடக்கு திசையே. இரவில் நட்சத்திரங்களைத் தரிசனம் செய்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய உரிய திசை வடக்கு திசையாகும். முடிந்த மட்டும் எல்லா திசைகளிலும் கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களையும், கோள்களையும் தரிசனம் செய்த பின்னர் வட திசை வழிபாடு நிறைவாக அமைகிறது.

பாத பூஜை செய்யும் பெண்கள் கணவன்மார்களை வட திசை நோக்கி வழிபட்டு அவர்கள் பாதங்களை கண்களில் ஒற்றிக் கொண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் வராது. குடும்ப ஒற்றுமை பெருகும். விவாகரத்து நிலையில் உள்ள குடும்பப் பிரச்னைகள் கூட தீர்வடையும் என்று துர்கா தந்திரங்கள் விளக்குகின்றன.

வடகிழக்கு திசை

வடகிழக்கான ஈசான்ய திசைக்கு உரிய சக்தி ஸ்ரீகௌரி சமேத ஈசான்ய மூர்த்தி ஆவார்.

திசைகளில் புனிதமானது ஈசான்ய திக்கு. இறைவனுக்கு நைவேத்யம் அளிக்கக் கூடிய பிரசாதங்களில் புனிதமானது வடித்த கஞ்சியாகும். இதை சித்த பரிபாஷையில் சருகு என்று கூறுவதுண்டு. சருகு பிரசாதத்தை மட்டும் உண்டு வாழும் உத்தமர்களை வாழ்வில் ஒரு முறை தரிசனம் செய்தாலே நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் கூற்று.

திருக்கோயில்களில் உள்ள ஈசான்ய தேவருக்கும், திருஅண்ணாமலையில் ஈசான்ய லிங்க மூர்த்திக்கும் வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும் நைவேத்தியம் செய்வது சிறப்பு. விஷ சக்திகளை முறியடிக்க வல்லதே மேற்கூறிய நைவேத்திய வழிபாடு. பிஞ்சு மனம் நஞ்சு படாதிருக்க இத்தகைய வழிபாட்டைத் தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள்.

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின் தென்னாட்டிற்கு சீதா தேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது அவர் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு வடி கஞ்சியையும் இடி தேங்காயையும்தான் முதல் நைவேத்தியமாக வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தப் பிரசாதத்தை தன்னுடன் இலங்கையில் போரிட்ட வானரப் படைகளுக்கு பிரசாதமாக அளிக்க அவர்கள் உடலில் தங்கி, எஞ்சியிருந்த விஷ சக்திகளை முறிக்கும் ஔஷத பிரசாதமாக அது அமைந்தது.

மேலும் இந்திரஜித்து பலவிதமான விஷக் கணைகளை இலங்கை போரில் ஏவினான் அல்லவா? அவன் ஏவிய கணைகளுள் ஒன்றான மௌதிகா அஸ்திரம் என்பது பல்லாயிரக் கணக்கான மைல் தூரத்தில் இருப்பவர்களையும் தாக்கும் சக்தி படைத்தது. அந்த அஸ்திரத்தால் தாக்கப்பட்டவர்களுக்கெல்லாம் தாங்க முடியாக உடல் எரிச்சல் ஏற்படும். இவ்வாறு மௌதிகா அஸ்திரத்தால் அவதிப்பட்ட வானரப் படைகளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் பிரசாதம் அருமருந்தாக அமைந்து அவர்களின் அபரிமிதமான உடல் உஷ்ணத்தைக் குறைத்தது.

ஒன்றைப் புதிதாய் ஆக்கும் சக்தியைக் கொடுப்பதே வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும். ஈசான்ய திக்கில் இறைவனை வழிபட்டு கஞ்சி தேங்காய் பிரசாதம் தானம் அளித்து வந்தால் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை ஏற்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். உயர்ந்த கல்வி, திறமை பெற்றவர்கள் கூட அத்தகையோரிடம் வந்து வழிகாட்டுதல் கேட்கும் அளவிற்கு அறிவு வளர்ச்சியைத் தூண்டக் கூடியதே வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும்.

வடிகஞ்சியுடன் வெல்லம் சேர்த்து ஈசான்ய திக்கில் நைவேத்யம் செய்வதும் ஒரு சிறந்த வழிபாடாகும். மம்மியூர் சிவன் குருவாயூரப்பனுக்கு கஞ்சி வெல்லம் கொடுத்து வரவேற்றார் என்றால் அதன் சிறப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.  

சருகைப் போல நீராகாரமும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது. உடலில் ஏற்படும் அபரிமிதமான சூட்டைக் குறைத்து தோலின் ஆரோக்கியத்தை விருத்தி செய்வது நீராகாரம். மண் சட்டிகளில் நீராகாரம் வைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் குடல் புண்கள் நீங்கும், நரம்புகள் பலப்படும். வயிற்று நோய்கள் நிவர்த்தியாகும்.

இவ்வாறு எட்டு திசைகளில் செய்ய வேண்டிய காரியங்களை முறையாகச் செய்யப் பழகிக் கொண்டால் நம்மைச் சுற்றியுள்ள எண்ண சுழற்சிகளால் நம்முடைய மனம் பாதிக்கப்படாது.

மனதிற்கு அதிபதியான சந்திரன் வழிபடும் ஸ்ரீபோஜிஸ்வர மூர்த்தியை பௌர்ணமி தோறும் முறையாக வழிபட்டு வந்தால் எத்தகைய மனக் கிளர்ச்சியையும் எதிர் நோக்கும் வல்லமையை இறைவன் அருள்வார்.

ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு 18 வகையான மணமுள்ள மலர்கள், 18 விதமான கனிகள், தேன், பால், பஞ்சாமிர்தம் என 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என 18 வகையான பிரசாதங்களைப் படைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியை அருள்வார் ஸ்ரீபோஜீஸ்வரர் என்பதில் ஐயமில்லை.

ரத சப்தி நாட்களிலும், மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும், பௌர்ணமி தினங்களிலும், திங்கள் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு ஆராதனைகளை மேற்கொண்டு பயன் பெறலாம்.

கோதுமை ரவையுடன் சர்க்கரை கலந்து இங்குள்ள எறும்புகளுக்கு இட்டு வருதல் இத்தலத்திற்கு உரிய சிறப்பு வழிபாடாக கருதப்படுகிறது. எப்போது மனம் சஞ்சலம் அடைந்தாலும், உடல் வேதனை, மன வேதனை உங்களைப் பீடித்தாலும் உங்களால் முடிந்த அளவு எறும்புகளுக்கு உணவிட்டு யாழமராந்தக பீடத்தின் முன் மௌனமாக அமர்ந்து இறைவனை வழிபட்டால் எத்தகைய மனக் குழப்பத்திற்கும் உரிய தீர்வு கிட்டும் என்பது உறுதி.

உடலும் மனமும் ஒன்று பட்டால்தானே உயர்ந்த வாழ்வு சித்திக்கும். எனவே, சூரிய பகவானும் சந்திர பகவானும் ஒரு சேர ஆராதனை செய்யும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை இனியும் கால தாமதம் செய்யாது வழிபாட்டை நிறைவேற்றிப் பயன் பெறுங்கள்.

இறை நம்பிக்கையை, குரு நம்பிக்கையை வலுப்படுத்தும் தலமே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் ஆகும். நம்பிக்கை திடமானால் மன அழுத்தத்தை நீக்க அதைவிடச் சிறந்த மருந்து உலகில் வேறேது?

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam