முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கூனல் வினைகளைத் தீர்ப்பது எப்படி ?

நல்லதை நல்லதாக எடுத்துக் கொள்ளாது தீயதாக ஆக்குவதே கூனல் வினைகள் ஆகும். மந்தாரை (கூனி) எனும் ராமாயணப் பாத்திரத்தைப் பற்றி ஓரளவே பலரும் அறிவர். நமக்குக் கிட்டியுள்ள ராமாயணத்தில் உள்ள நிகழ்ச்சிகள் மிக மிகக் குறைவே! தேவாரம் போல் மறைந்துள்ள ராமாயண, மஹாபாரத வைபவங்கள் நிறையவே உள்ளன. இருடிகள் ராமாயணம், இருடிகள் மஹாபாரதம் எனும் சித்தர்கள் அருளும் ராமாயணத்தில், மஹாபாரதத்தில், எண்ணற்ற பல ராமாயண, மஹாபாரத அனுபூதிகள் நிறைந்துள்ளன. எழுதாக் கிளவியாய் சற்குருமார்கள் மூலம் மட்டுமே இவை அறியப் பெறுவதாகும்.
ஸ்ரீராமர், சிறுவனாய் இருக்கையில், முதுகுக் கூனலாய் இருந்த மந்தாரையின் முதுகில் சிறிய (புற்று) மண் உருண்டையை எறிந்தார். ஆனால் ஸ்ரீராமரின் ஒவ்வொரு காரியத்திற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை எவரறிவார்? முனிக் கல் எனப்படும் அந்த மூன்று (புற்று) மண் உருண்டைகளை அவள் தன் முதுகில் ஏற்றிருந்தால், அவளுடைய கூன் அன்றே நிமிர்ந்திருக்கும்.
மாயை விதி வசத்தால், மண் கல் உருண்டை ஒன்றோடு நின்று, சினம் கொண்டு, ராமனின் மேல் கோபம் பூண்டு வல்வினைக்குக் கூனி ஆளானாள்.

துடையூர் திருத்தலம்

முப்பாரம் முக்கல் ஏறி
முகுந்தனாய் முச்சொல் பெருமாள்
முத்திரை முனிக்கல் பட்டு
முதுகுக் கூன் மூகமாகும்
மூதுரை ஏற்றாலாகேல்
முவ்வினைக் கூனல்படுமே”
என்ற நாடி வாக்கியப் பரிபாஷைப் பாடலின்படி, முகுந்தனாகிய ஸ்ரீராம அவதாரச் செயலால் அவள் கூன் நிமிரும், ஆனால் இதனை அவள் அறிய விடாது மாயை தடுக்கும், அறியாதவளாகில் அவளுக்கு அவச்சொல் சேரும், எனவே கருத்துடன் செயல் படவேண்டும் என்பது இதன் பொருள்.
அதாவது முகுந்தனாகிய, விஷ்ணுவின் மூன்று வார்த்தைப் பெருமாள் நாமத்தைக் கொண்டவர் மூன்று முறை (புற்று மண்) கல் எறிந்து கூனியின் முதுகுக் கூன் சரியாகும் என்று இங்கு ஒரு ரகசிய அர்த்தப் பொடியை வைத்துக் கூனியின் விதிப் பரல் அமைந்தது. ஆனால், கடும் விதி வசத்தால் கூனி இதனை அறியாது, ஒரு மண் கல்லடி பட்டதுமே சிறுவனாம் ராமனை ஏசி, ராமன் மீது வஞ்சகக் கோபம் கொண்டனள். இதனால், முதுகுக் கூனோடு அவச் சொல்லும் பழியும் வாக்குக் கூனாகி, பழியாய் வந்து விட்டது.
இறைவனாகிய ராமமூர்த்தி நன்மை செய்யும் பொருட்டு, புற்று மண் கல் எறிந்திட, அதனைத் தாங்காது, கூனி ராமன் மேல் கோபம் கொண்டு ராமன் வனவாசம் செல்லக் காரணமாகி அவச் சொல்லுக்கும், பழிக்கும் ஆளாகினாள்.
அதே கூனியே பிற்பால் ராமனின் திருவடிகளில் வீழ்ந்து, பாவ நிவர்த்தி வேண்டிட, ஸ்ரீராமரும் அவளைக் கூன் முதுகுடன், துடையூர், திருக்கழுக்குன்றம், திருக்கச்சூர் (நந்திமண்), நாகர்கோயில், கும்பகோணம் போன்ற புற்று மண், பிருத்வித் தலங்களுக்கும் பாத யாத்திரை செல்லச் செய்து, புற்று மண்ணைச் சிறிது பிரசாதமாய் ஏற்கச் செய்து,
மண்ணால் தீரும் மாவினை மறந்ததாலே
மண்ணைத் துறந்து
துறந்த மண்ணைத் தழுவி
மண்ணை உண்டு, பாதம் புரிபட,
ஆஷாட ஆனி அவிட்ட அபிஜித்தில்
மண்ணுள் மறையுமே
மாகூனமும் மாமதியாலே!
(ஆஷாட அவிட்டம் = ஆனி மாத அவிட்ட நாள்)
என்றபடி, மந்தாரையும் கூன் முதுகுடன், தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, எந்த இடங்களில் ஸ்ரீராமரின் திருவடிகள் பட்டனவோ, அந்தந்தத் தலங்களில் இருக்கும் ஸ்ரீராம பாதங்களைப் பூஜித்து வந்தாள்.

ஸ்ரீஅரங்கநாயகி தாயார், ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீலட்சுமி வராகர்
ஸ்ரீரெங்கநாதர் திருவடிகள் சிங்கவரம்

இவ்வாறு ஸ்ரீராமர் அருளால் அவள் கூன் நிமிர்ந்த இடமே கூனிமேடு ஆகும். இது நிகழ்ந்த நாளே ஆனி மாத அவிட்ட நாள்! இங்கு கூனி மேட்டில், சித்த ரகசியமாய் ஸ்ரீராமபாதங்கள் உள்ளன. முதுகுத் தண்டு நோய்களை நிவர்த்தி செய்ய வல்ல பிருத்வி (மண்) சக்திகளைக் கொண்ட இடம்.
ஏனெனில் ஒரு வகை மூலிகைப் புற்று மண்ணால் ஆனதே அந்த மண் உருண்டை. இதன் ஒரு வகைதாம் முனிக் கல் எனப்படுவதாக அரிய மருத்துவ சக்திகளைத் தாங்கி, திருச்சி - திருவாசி அருகே துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் ஆலயத்தில் இன்றும் உள்ளது. முதுகுத் தண்டு நோய்கள் தீர இங்கு, குறிப்பாக அவிட்ட நட்சத்திர நாளில், முனிக் கல்லுக்குப் பசு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டு வர வேண்டும்.
விட்ட குறை தொட்ட குறை நிவர்த்தியாகவே, ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலும், சுவாமியே (புற்று) மண்ணை உண்ட கிருஷ்ணனாய், ஒரு கூனியின் முதுகை நிமிர்த்தினாரன்றோ!
“சிறுபிள்ளைகள் இறையம்சங்கள் நிறைந்தவர்கள். எனவே, சிறு பிள்ளையின் விளையாட்டுச் செயலைப் பெரிதுபடுத்தி வினையாக்குதல் கூடாது. சிறுவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதற்கு என் வாழ்க்கை அனைவர்க்கும் ஒரு பாடமாகட்டும்!”  என்று இருதயப் பூர்வமாகக் கூனி தாம் பாதயாத்திரை சென்ற இடமெங்கும் உரைத்துச் சென்றாள்.
ஒவ்வொருவருடைய மனித உடலில் உள்ள 72,000 நாளங்களிலும், அமிர்தச் சுரப்புகள் உண்டு. இவற்றின் ஆக்கத் துறைகள்தாம் வர்ம மருத்துவத் துறையில் அமிர்த நரம்புக் கிரந்திகள் எனப்படுவதாகும். இந்த அமிர்த கிரந்திகளை ஆக்கப்படுத்தி, அமிர்தம் சுரக்க வைப்பர். எந்த அமிர்தக் கிரந்தியை எந்தத் திசையில் வைத்து, எந்த விரலால் அமிர்தக் கிரந்தியை ஆக்கப்படுத்த வேண்டும் என்ற வர்ம மருத்துவ முறைகள் உண்டு. இதனால்தான் வர்ம மருத்துவத் துறைக்கு ஆதிகாலத்தில் அமிர்த வர்ம மருத்துவம் என்ற பெயரே இருந்தது.
ராமர் கூனியின் முதுகுப் பகுதியில் பர்த்திஸ்புட வடம் என்ற இடத்தில் புற்று மண் கல்லால் அடித்தார். இது முதுகுக் கூனைச் சரிப்படுத்த வல்லதாகும். வர்ம மருத்துவ முறையில் இது வருவதாகும். குறித்த புற்று மணணைக் குறித்த தைலம் சேர்த்துச் சுட வைத்து, முதுகில் குறித்த இடத்தில், கட்டை விரல், சுண்டு விரல் அழுத்தத்தால் அவிட்ட நட்சத்திர நாளில் பதனம் இட்டு வந்தால், எத்தகைய கடுமையான முதுகுத் தண்டு நோய்களும் குணமாகும்.
மந்தாரையாகிய கூனி, தன்னுடைய செயலே ராமனைக் காட்டுக்கு அனுப்பக் காரணமாக இருந்தது என்ற அவச் சொல்லைப் பணிவுடன் தாங்கி, ஸ்ரீராமரிடமே நிவர்த்தி பெற்ற இடமே கூனிபுரம் ஆகும்.
எனவே, சிறு பிள்ளைகளின் சொற்களைப் பெரிதுபடுத்தித் துன்பங்களை உருவாக்கியவர்கள், ஆனி மாத அவிட்ட நட்சத்திர நாளன்று தம் செயல்களுக்கு வருந்தி, ஸ்ரீராமர் சன்னதியில் பரிகாரம் நாடுதல் வேண்டும்.
முதுகுத் தண்டை வளைத்து ஆட்டங்கள் நிகழ்த்துவோர், வளையத்தைத் தலையில் மாட்டி, கால் வழியாக எடுக்கும் வித்தைகள் புரிவோர் வறுமையில் வாடும் கழைக் கூத்தாடிகள், தெருக் கூத்துக் கலைஞர்கள் போன்றோர்க்கு, ஆனி மாத அவிட்ட நாளில் தேவையான உதவிகளைச் (உணவு, உடை, பாத்திரங்கள் போன்றவற்றைத் தானமாக அளித்திடல்) செய்தல் மிகவும் விசேஷமானது.
இதனால், பிறரைப் பழித்தல், கோழி மூட்டுதல், அவச் சொல் பேசுதல், சிறுபிள்ளைகளின் பேச்சைப் பெரிதாக்கிப் பெருவினை ஆக்குதல் - போன்ற தீவினைகளால், பிறருடைய குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்குத் தீவினைத் துன்பங்கள் தணிய வழி பிறக்கும்.

மரண பயத்தை விரட்டும் வழி

சதய நட்சத்திரம் எம தர்ம மூர்த்திக்கு உரிய நட்சத்திரமாகும். திருப்பைஞ்ஞீலி, திருவாலங்காடு (கும்பகோணம் அருகே), ஸ்ரீவாஞ்சியம், விரிஞ்சிபுரம் போன்ற அரிய தலங்களில்தாம் ஸ்ரீஎமதர்ம மூர்த்தியின் சன்னதிகள் உள்ளன. 27 வகை யோகங்களில் ஆயுஷ்மான் எனும் யோக நாளில்தான் எமதர்ம மூர்த்தி பூலோகத்திற்கு வந்து மானுட வடிவில் பல பிருத்வி தலங்களிலும் பூஜிக்கின்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே யமனேஸ்வரம் என்ற சிவத் தலத்தில் ஆயுஷ்மான் யோக நாளில், ஸ்ரீஎமதர்ம மூர்த்தி தூல, சூக்கும வடிவுகளில் ஸ்ரீஎமனேஸ்வர உடையாராகிய, சிவ மூர்த்தியைப் பூஜிக்கின்றார். மார்கண்டேயரைக் காலால் நெஞ்சில் உதைத்தமையால் தன் நெஞ்சில் ஏற்பட்ட புற்றுக்கு, இங்குதாம் ஸ்ரீஎமதர்ம மூர்த்திக்கு, விமோசனம் கிட்டி, சிவ பூஜை மகிமையால் சிவப் பேரொளி மூலம் தரிசனம் கிட்டியது.
அமிர்த வர்ம மருத்துவ முறையில் இடது நெஞ்சில் இருதயத்திற்குக் கீழ் உள்ள வர்ம கிரந்திப் புள்ளிக்கு ஆயுஷ்மதம் என்று பெயர். சிறு பிள்ளைகள் அடம் பிடித்து அழும்போது, பெரியோர்கள் அவர்களை வாஞ்சையுடன் அரவணைத்து நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் மூன்றாலும் ஆயுஷ்மதப் பகுதியில் தட்டிக் கொடுத்து, இங்குள்ள அமிர்த வர்ஷக் கிரந்தியை ஆக்கப்படுத்துவதால், பிள்ளைகளுடைய அடமும் அடங்கி சாந்தம் அடைவர்.

பாணலிங்கம் திருத்துறைப்பூண்டி

இவ்வாறு மிக மிக எளிமையான முறையில், அமிர்த வர்ம மருத்துவ முறையில் சிறுவர்களை மிக அரிய முறையில் நல்வழிப்படுத்திடலாம். மிகவும் அடம் பிடிக்கின்ற, பிடிவாதமாக இருக்கின்ற பிள்ளைகளை, ஆயுஷ்மான் யோக நாளில் (ஆவுடை இல்லாத) பாண லிங்கத்திற்கு அல்லது ஆவுடை லிங்கத்தின் மேல் உள்ள பாணப் பகுதிக்கு கரிசலாங்கண்ணித் தைலக் காப்பு இட்டு வழிபடுவதால் பிள்ளைகள் நன்கு திருந்துவர்.
மேலும், நம் பெரியோர்கள் எந்தத் திதியில், எந்த நாளில், எத்தகைய உணவு, தானியம், கீரைகளை உண்ண வேண்டும் என்று வகைப் படுத்தித் தந்துள்ளார்கள். இதில் ஆயுஷ்மான் யோக நாளில் கரிசலாங் கண்ணிக் கீரையை உண்பதால் எமபயம் அகன்று மரண பயம் நீங்கி ஆயுள் நன்கு விருத்தி அடையும் நல்வழிகளைப் பெறுவர்.

ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா

தற்காலத்தில் எமன் என்றாலே அஞ்சுகின்றார்கள். அஷ்ட திக்கு பாலக மூர்த்திகளுள் தெற்கு திசை மூர்த்தியாகிய எம மூர்த்தியின் அனுகிரகம் நிச்சயமாக நமக்குத் தேவையே. எமன் என்றால் மரணத்தை அளிப்பவர் அல்லர். மாறாக, மரண பயத்தைப் போக்கி, ஆத்மத்திற்கும் உயிருக்கும் உள்ள பிணைப்பை உணர்த்தி உடல், உயிர் இலக்கணத்தின் விளக்கங்களை அளிப்பவர்.
உண்மையில் எம தரிசனம் என்பது பெறுதற்கரிய பாக்யமாகும். மரணத்தைக் கடந்தவர்களுக்குத்தான் கிட்டும். ஆயுஷ்மர் என்பவர் எம தர்மமூர்த்தியின் மண்டலத்தின் துவார பாலகர் ஆவார். பொதுவாக, மனித உடலுடன் எம மண்டலத்தை அண்ட இயலாது. அவ்வாறு மனித உடலுடன் அங்கு செல்பவர்கள் உத்தம தெய்வ நிலைகளைக் கொண்டவர்கள் ஆவர். இவ்வாறு மனித உடலுடன் எம மண்டலத்தை அடைந்த சிறுவனாம் நசிகேதனுக்கு எம மூர்த்தி உரைத்த பிறப்பு, இறப்பு ரகசியங்களே கடோபநிஷத்தாக மலர்ந்துள்ளன.
ஆயுஷ்மான் யோக நாளில் உணவில் சிறிது பிரண்டையைச் சேர்த்துக் கொள்தல் பித்ருக்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், பிரண்டையில் மிருத்யுஞ்ஜய அதாவது, ம்ருத்யு தோஷங்களை வெல்கின்ற சக்திகள் நிறைந்துள்ளன. தன் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம், திவசம், படையல் அளிக்காதோர் இந்நாளில் எமதர்மர் சன்னதியில் பிரண்டைத் துவையல் சாதம் படைத்து, அன்னதானமாக அளிப்பதும், எருமைக்கு வயிறு நிறைய அகத்திக் கீரை, புல், தழை, பிண்ணாக்கு, வைக்கோல், கஞ்சி நீர் வயிறார அளிப்பதும், பித்ருக்களுக்குப் ப்ரீதி தருவதுடன், எம பயம், மரண பயம் எப்போதும் அண்டாது தடுக்க உதவிடும்.
பொதுவாக, இளமை, வலிமை, பணம், ஆரோக்யம் போன்றவை இருக்கும்போது எம பயம் தோன்றாது. ஆனால், வயது ஆக ஆக, நோய்கள் சேரச் சேர இறந்து விடுவோமோ, இறந்து விடுவோமோ என்று மனம் துடிதுடித்து அஞ்சிக் கொண்டிருக்கும். இது மரண பயத்தின் ஒரு வகை. இவை எல்லாம் அண்டாமல் இருக்க ஆயுஷ்மான் யோக நாளிலும், சதய நட்சத்திர நாட்களிலும் மேற்கண்ட பூஜைகளை, நற்காரியங்களை ஆற்றுதல் வேண்டும்.

ஜாதக தோஷங்களும் மாயும்

புராதன வான சாத்திரத்தில், முதலில் ஐந்து கிரகங்களும், சூரிய, சந்திரனோடு ஏழாகி, ராகு கேதுவுடன் ஒன்பதாய் நவகிரக வழிபாடு தோன்றியது. யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களுடன், தற்போது துவாதச (12) கிரக வழிபாடாக ஆகி உள்ளது. யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்றும் அயல் மொழிப் பெயர்களாக இருக்கின்றன என்று எண்ணாதீர்கள். கிரேக்கம், ரோமனீயம் போன்ற மொழிகள், உலகின் ஆதி மூல முதல் சிவமொழியான தமிழ் மற்றும் தமிழை அடுத்துத் தோன்றிய சமஸ்கிருதம் எனப்படும் தேவ மொழியுடன் சிறப்பான தெய்வீக உறவு கொண்டவை. எனவே உலகின் அனைத்து மொழிகளுக்கும் கலைவாணிதான் மூலமுதல் மொழித் தெய்வம் ஆவாள் என்பதை அறிந்திடுக!

சிங்காவரம்

பிற மொழி நாமங்களைப் பூண்டவை போல் தோன்றும் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று பண்டைய தமிழ் வான சாஸ்திரத்தில் நல்ல தமிழ்ப் பெயர்களுடன் பொலிந்தவையே ஆகும். உரகம், நெடியம், புலடம் போன்று ஒவ்வொரு யுகத்திலும் இம்மூன்றும் பல அரிய தமிழ்ப் பெயர்களைப் பூண்டிருந்தன.
வருங்காலத்தில் நவகிரகம் என்பது தற்போதைய துவாதச கிரக வழிபாடாகவும், பிறகு ஷோடச (16) கிரக வழிபாடாகவும், பிறகு 24 கிரக வழிபாடாகவும் ஆகிடும் என்பது சித்தர்களுடைய வேத வாக்கு. அச்சமயத்தில், சுயம்பு லிங்கங்கள் தோன்றுவது போல, சில குறிப்பிட்ட ஆலயங்களில் பூமி அடியிலிருந்து 24 கிரக மூர்த்திகளுமே தோன்றிடுவர். யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ இவற்றின் பெயர்களும் வருங்காலத்தில் பல பெயர் மாற்றங்களைக் கொண்டிடும்.
இத்தகைய வான சாத்திர அறிவுக்குப் புத மூர்த்தி வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். சௌபாக்கிய சௌம்ய சக்தி என்ற புலனறிவு ஒன்று உண்டு. இது பரிபூரணமான ஆறாம் பகுத்தறிவில்தான் தோன்றும். ஆறாம் திதியான சஷ்டி திதி நாளன்று, ஆறு முகங்களை உடைய முருகப் பெருமானைப் பூஜித்து வருவோர்க்கு பகுத்தறிவுப் பிரகாசம் ஏற்படும். இதிலும், புத்திகாரகராக விளங்குகின்ற புத மூர்த்திக்கு உரிய சௌம்ய வாரம் எனப்படும் புதன் கிழமை அன்று சஷ்டி கூடினால், இதனால் ஏற்படும் புத்தி பிரகாசக் கிரணங்களின் மகிமையை சொல்லவும்தான் வேண்டுமோ!

ஸ்ரீசௌபாக்ய கணபதி அருளும்
கரிவலம்வந்த நல்லூர்

27 வகை யோகங்களில் மிகவும் சுபகரமான யோகங்களுள் சௌபாக்ய யோக நாளும் ஒன்று. சித்த யோகம், அமிர்த யோகம், புதன், சௌபாக்ய யோகம் கூடும் சுபமுகூர்த்த நாளில் திருமணம் செய்து கொள்வோர்க்கு, ஏனைய ஆன்ம சக்திகளும் கூடிட, புத்திப் பிரகாசமான சந்ததிகள் வாய்க்கும்.
உரகம் எனப்படும் யுரேனஸ் கிரகம் நாக கிரண சக்திகளை ரத்னப் பிரகாச வித்யா சக்தியாக அளிக்கின்றது. அதாவது, நாகங்கள் நிறைந்த உரகக் கோளான யுரேனஸ் கிரகத்தில், ஆயிரம் வயது நிறைந்த நாகங்கள், தம் அமிர்த விடசக்தியை ரத்ன சக்தியாக மாற்றி, வித்யப் பிரகாசக் கதிர்களாக சில குறித்த சௌபாக்ய யோக நாட்களில் பூலோகத்திற்கு அளிக்கின்றனர். இதனால் நல்ல மனன சக்தி கிடைக்கும். அதாவது, ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மனதிற்குக் கொண்டு வரும் அபாரமான நினைவாற்றலை அளிக்க வல்லவையே உரக நாகங்களாகும்.
சௌகந்தி புஷ்பம் என்ற ஓர் அரிய புஷ்பம் ஒன்று உண்டு. திரௌபதிக்கு இதனைப் பெற்றுத் தரவே, பீமன், இமாலயம் சென்று, சௌபாக்கிய நாக பூஜைகளை நிகழ்த்தி, உரக நாக தேவதைகளின் துணையுடன் சௌகந்தி புஷ்பத்தைக் கண்ட நாளே (சௌம்ய சௌபாக்ய நாளாகிய) புதனும், சௌபாக்ய யோக நாளும் கூடும் நாளாகும்.
இவ்வாறு யுரேனஸ் கிரக சக்திகள் நிறைந்த சக்திகளுள் சௌகந்தி புஷ்பம், மகிழம்பூ, செண்பகப் பூ, நாகலிங்கப் புஷ்பம், சீந்தலைக் கொடி போன்றவையாகும். புதன் கிழமை, சௌபாக்ய யோக நாட்களில் நாகதேவதா மூர்த்திகளுக்கு, குறிப்பாக 12 நாக தேவதைகளுக்கு மேல் அமைந்துள்ள - திருமயம் அருகே உள்ள பேரையூர், காஞ்சீபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம், நயினார் கோயில், திருச்செங்கோடு - போன்ற தலங்களில், மகிழம்பூ, செண்பகப்பூ போன்றவற்றால் நாக மூர்த்திகளை அர்ச்சித்து, முந்திரி, திராட்சை இட்ட காய்ச்சிய பசும் பால் தானம் செய்வதால் நாக தோஷங்கள் நிவர்த்தி அடைய உதவும். பொதுவாக, பிள்ளைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு வருவதும், குடும்பத்தில் அடிக்கடி முதுகு வலி பலருக்கும் ஏற்படுவதும் ஒரு வகை நாக தோஷத்தைக் குறிப்பிடுவதாகும். முதுகுத் தண்டு என்பது ஆன்மீக ரீதியாக நாக வடிவுடையதே! இவற்றிற்குத் தீர்வு பெற நாகமூர்த்திகளை சௌபாக்ய யோக நாளில் வழிபடுதல் வேண்டும்.

பஞ்சமி திதியில் நாகங்கள் உண்ணா விரதமிருக்கும். அவ்வாறு பஞ்சமித் திதியில் விரதம் இருந்த நாக மூர்த்திகளுக்கு, அடுத்த நாளான சஷ்டி திதியில் பசும் பால் அபிஷேகம் செய்வதானது விரதப் பூர்த்தியைக் குறிப்பதால், உரக நாதராக விளங்கும் ஆதிசேஷனின் படுக்கையில் சயனித்திருக்கும் ஸ்ரீரெங்கநாதர் வழிபாடு சஷ்டி தினத்தில் மிகவும் சிறப்பு பெறுகிறது.
சௌபாக்ய யோக நாளில் திருஅண்ணாமலை செஞ்சி அருகே சிங்காவரம் மலையில் விரத உரக வரத வடிவு பூண்டிருக்கும் நாகப் படுக்கையில் உள்ள ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீவராஹ மூர்த்தி ஆகிய மூன்று பெருமாள் மூர்த்திகளை வழிபடுவது பெறுதற்கரிய பாக்யமாகும். இதனால், அவரவர் அறியாத வகையில் ஜாதகத்தில் இருக்கும் பல தோஷங்களையும் வெளிக் கொணர வைத்து அவற்றிற்குப் பரிகாரங்களையும் பெற்றுத் தருவதாகும். சிங்காவரம் மலையில் உள்ள குரங்குகளுக்கு நிறைய உணவு அளிப்பது பெரும் குடும்ப பாரத்தால் மனச் சுமையால் வாடி வதங்குவோர்க்கு, நல்ல மனச் சாந்தி பெற்றிட உதவும்.

பொய் பேசும் கணவன் திருந்த ...

அறிவு என்பது மனம், உள்ளத்தை நன்னிலையில் செலுத்த உதவும் இயற்கையான தெய்வீக சாதனம் ஆகும். பிறரையும் நன்னிலையில் செலுத்த அறிவைப் பயன்படுத்துவது உத்தம நிலையைத் தருவதாகும். பொதுவாக, அறிவுப் பிரகாசத் தன்மையை உணர்த்தும் கருவிகளுள் ஒன்றே சப்தம் ஆகும். தெய்வீகப் பூர்வமாக பிறரிடம் பேசி அறிவைப் பிரகாசம் அடையச் செய்ய உதவுவது வாக் சக்தியாகும்.
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது கூட மனதினுள் சப்தம் எழுகின்றது. எண்ணம் என்பது கூட மனதினுள் ஏற்படும் சப்த அலைகளே! மனிதனுக்குப் புரியக் கூடிய சப்த வடிவை மொழிப் பொருளாகக் கொள்கின்றோம். ஆனால், காக்கை கரைதல், குயில் கூவுதல் போன்ற சப்தங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், அவை பறவை இனமொழியின்பால் அமைந்தாலும், இவற்றிற்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உண்டு. மிருகம் மற்றும் பறவை இன மொழிகளை அறிந்து அவற்றை மனித குல நன்மைக்காகப் பயன்படுத்திய மாமன்னனே விக்ரமாதித்ய மகாராஜா ஆவார்.

இவர் சிறு வயதிலிருந்தே வியாழனும், சப்தமியும் கூடிய நாளில்,
* உண்ணா நோன்பு,
* பாதங்களில் பாதணிகள் இன்றி நடத்தல்,
* இந்நாள் முழுதும் எப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சத்குருவாம் ஸ்ரீதோத்தாபுரி போல சுத்தமான அத்வைதியாய் எந்த நிழலிலும் கூட ஒதுங்காது வெட்ட வெளியிலேயே உலவுதல்,
* காதுகளில் கடுக்காய்களை அடைத்து இன்று முழுதும் உள் ஒலியை மட்டும் உணர்ந்து கேட்டல்,
* பரிபூரண மௌன விரதம்,
* ஸ்ரீராமருடைய வனவாசம் போல அன்று முழுதும் மர உரி, தழையாலான ஆடையை அணிந்திருத்தல்,
* நன்றாக நிமிர்ந்து முதுகுத் தண்டு வளையாது நிற்றல், நடத்தல், அமர்தல்,
* அன்று முழுதும் வட திசையை நோக்கி மட்டுமே நடத்தல், அமர்தல், இருத்தல் இவ்வாறாக பல விரதாதி விரதங்களை, வியாழனும் சப்தமியும் கூடிய தினத்தில் வித்ரமாதித்யன் கடுமையாகப் பயின்று வந்தமையால், மிக எளிதில் மிருக பாஷைகளை அறியும் வல்லமையைப் பெற்றார்.
ஆனால், எவராலும் அவ்வளவு எளிதில் அடைய முடியாத இந்த அறிவுப் பூர்வமான வித்தையைக் கொண்டு மிருகங்கள், பட்சிகள் மூலமாக நடக்க இருப்பதை அறிதல், பிற லோகங்களிலிருந்து வரும் செய்திகளைப் பெறுதல், சகுனங்களை உணர்தல், மிகவும் அரிய மூலிகைகளின் இருப்பிடத்தைக் கேட்டறிதல் என்றவாறாக இவற்றைச் சமுதாயத்திற்கு நலம் பயக்கும் வகையில் பயன்படுத்தியே விக்ரமாதித்ய மகாராஜா, வியாழன் கூடிய சப்தமியின் மகிமையை நமக்கு உணர்த்தியுள்ளார்.
சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மாமுனிகளிடமிருந்து, ஒரே சமயத்தில் பல மந்திரங்களை உபதேசமாகப் பெறும் பாக்யத்தை அடைந்தவரும் விக்ரமாதித்யர் ஆவார். எனவே, சப்த சக்திகள் பரிபூரணமாகப் பரிணமிக்கும் விசேஷமான நாள் இதுவே!
சப்தமி திதிகளில் வீட்டில் அனைத்து விதமான கண்டா மணி, சங்கு, மிருதங்கம், கஞ்சிரா, பூஜை மணி, தாம்பாள ஒலி, மேளம், நாதஸ்வரம் மங்கள ஒலிகளை அனைத்தையும் எழுப்பிப் பூஜித்தல் சப்த ரிஷிகளின் ஆசிகளைப் பெற்றுத் தரும். இதனால் சரியாகப் பேச்சு வராத தன்மை, குறை உடைய குடும்பங்களில், பிள்ளைகளுக்கு சப்த வள சக்திகள் நிறைய இந்நாளில் பூணும் விரதம் உதவும்.
பேச்சு சரியாக வராத குழந்தைகளின் பெற்றோர்கள் நாள் முழுவதும் மேற்கண்ட வகைகளில் ஏதேனும் ஒரு வகை விரதத்தையாவது பரிபூரணமான பக்தியுடன் கடைபிடித்தல் நலம் பயக்கும். திருவாசி, திடியன் மலை போன்ற தலங்களில் அருளும் ஸ்ரீபேச்சாயி, ஸ்ரீபேச்சியம்மனை வழிபடுதல் சப்த நாள சக்திகள் விருத்தியாக உதவும்.

ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலம் திருத்தலையூர்

சப்த கன்னிகள், சப்த மாதர்கள் உள்ள ஆலயங்களில் ஏழு முறை பிரதட்சிணம் செய்து, ஏழு வகை வண்ண ஆடைகளை அம்பிகையர்க்கு சார்த்தி வழிபடுதலால், அடிக்கடி பொய் பேசும் குணமுடைய கணவன், பிள்ளைகள் திருந்த நல்வழி பிறக்கும்.
பொதுவாக, தற்காலத்தில் வக்கீல் துறையில் பல காரணங்களுக்காக அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ பொய்மையுடன் பிணைய வேண்டிய நிர்ப்பந்தம் தொழிலில் ஏற்படுவதுண்டு. இதனால்தான் நீதி தேவதை கண்களை மூடிக் கொண்டு காட்சி தருகின்றாள். இதற்குப் பரிகாரமாக, வக்கீல்கள் சப்தமி திதிகளில்
* ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் என்ற பெயருடைய ஆலயங்கள் (திருச்சி லால்குடி, திருத்தலையூர்),
* சப்த கன்னிகள், சப்த மாதர்கள் உள்ள ஆலயங்கள், (லால்குடி அருகே நகர், ஆச்சிராமவல்லி, திருப்பைஞ்ஞீலி)
* ஏழு வகை தெய்வீக விருட்சங்கள் உள்ள புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவாசல் போன்ற தலங்கள்,
* அரசு, ஆல், வேம்பு மூன்றும் சேர்ந்திருக்கும் அபூர்வமான தலங்கள் (அறந்தாங்கி - மீமிசல் இடையே மணமேல்குடி - பொன்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம்),
ஏழு நரம்புகள் உள்ள வீணையைத் தாங்கி இருக்கும் தட்சிணா முர்த்தி, சரஸ்வதி அருளும் தலங்கள், தும்புரு மகரிஷி, நாரத மகரிஷி (திருச்சி சமயபுரம் அருகே மருதூர் சிவன் கோயில், விராலிமலை முருகன் கோயில்) காட்சி தரும் தலங்கள் போன்ற தலங்களில் வழிபட்டு, வக்கீல்கள் தம்முடைய வாக்கு தோஷங்களுக்கு நிவர்த்திகளைப் பெறுவதோடு, வாக் சக்தி மேம்படவும் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
அனைவரும் தங்கள் வாழ்வில் இதுவரையில் பேசிய பொய்களுக்கு என்றுதான், எப்படித்தான் பரிகாரம் தேடுவது? தொடர்ந்து ஆலம்பட்டைக் கஷாயத்தால் அடிக்கடி வாய் கொப்பளித்து வருதல், பொய்மைக்குப் பரிகாரம் பெற உதவும்.

ஐஸ்வர்யம் பெருகும் மார்கம்

சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக் கிழமை அசுரர்களின் குருவான சுக்கிர மூர்த்திக்கு உரித்தான நாளாகும் அல்லவா! கலியுகத்தில் தேவர்கள், அசுரர்கள் இருக்கின்றார்களா? பிறகு, ஏன் தேவ குருவான பிரஹஸ்பதிக்கு உரித்தான வியாழனும், சுக்கிர வாரமாகிய வெள்ளியும் தோன்றின என்ற எண்ணம் எழும்பிடும்.
கலியுகத்திலும் சூரபத்மன், இரண்யன், இரண்யாட்சஸன், மகிஷாசுரன், பத்மாசுரன் போன்ற அசுரர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய பிற யுகங்களில், அசுரர்களை அவர்களுடைய பிரம்மாண்டமான உருவத்தைக் கொண்டு அறிய முடிந்தது. ஆனால், கலியுகத்தில் மனித வடிவிலேயே அரக்கர்களும், தேவ குணங்களும் கலந்திருக்கின்றன. கலியில் தேவர்கள், அசுரர்கள் என்று சொல்வதை விட, நல்லொழுக்க குணங்களாகிய தேவ குணம், தீயொழுக்கத் தன்மையாகிய அசுர குணம் என்று அர்த்தம் கொள்வதுதான் சரியானதாகும்.

இப்படிப் பார்க்கின்றபோது, கலியுகத்தில், ஒரே மனிதனிடம் நல்லதும் தீயதும் கலந்திருப்பதால், ஒரே மனிதனிடத்திலேயே அசுர சக்தியும் தேவ சக்தியும் கூடி விடுகின்றது. அவனிடம் அசுர சக்தி ஆக்கம் பெறும்போது புகை பிடித்தல், மது அருந்துதல், தீயொழுக்கச் செயல்களில் அவன் ஈடுபடுகின்றான். தேவ சக்திகள் மிகும்போது பூஜைகள், ஆலய தரிசனம், தான தர்மங்களை ஆற்றுகின்றான். ஆனால், விநாடிக்கு விநாடி இத்தகைய அசுர, தேவ சக்திகளின் போக்குவரத்து மனிதனுக்குள் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருப்பதால்தான், மனிதன் மன அமைதியின்றித் தத்தளிக்கின்றான்.
நற்காரியங்களில் ஒரு மனிதன் பெறும் புண்ணிய சக்தி, பல விதங்களில் நல்விதமாகச் செயல்படுகின்றது. தற்காலத்தில் ஒருவர் நற்காரியங்கள் மூலமாகப் பெறும் புண்ணிய சக்தி, அவரவருடைய பாவச் சுமையைத் தணிப்பதற்கே பெரும்பாலும் செலவழிந்து விடுவதால், புண்ணிய சக்தியால் பெற வேண்டிய பிற தற்காப்புச் சக்திகள், நல்வளங்கள், நல் வரங்கள், அதிர்ஷ்டம், குடும்ப சௌக்யம், குழந்தை பாக்யம், செல்வ விருத்தி போன்றவை கலியுக மனித குலத்திற்குக் கிட்டாமல் போய்விடுகின்றன.
கலியில் நவகிரக வழிபாட்டில் அசுர குரு, தேவ குரு பிரஹஸ்பதி இருவரையுமே வணங்குவதற்குக் காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்திருக்கும் அசுர சக்திகளை ஒடுக்கிச் சீர்படுத்தவும், தேவ சக்திகளை நன்கு விருத்தி அடையச் செய்யவும் ஆகும்.
கலியுலகில் நல்லவர் போல் மேம்போக்காக இருப்பவர்கள் மனதில் மிகவும் கொடிய அசுர குணங்கள் நிறையவே கூடியிருக்கும். உடலெங்கும் திருநீறு அணிந்து, ஆலய வழிபாட்டிற்கு வருவபர் உள்ளம் முழுவதும் விஷ எண்ணங்களைத் தரித்து வருவார். எனவே, எவரை எவ்வளவு தூரம் நம்புதல் முடியும் என்பது கலியுகத்தில் மிகப் பெரிய கணக்காகி விடுகின்றது. இதில்தான் அனைவருமே பெரும்பாலும் தப்புக் கணக்குப் போடுகின்றார்கள்.
வெள்ளிக் கிழமையும் ரேவதி நட்சத்திரமும் கூடி வரும் நாள் மன சுத்திக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைகிறது.. மிக மிகப் புனிதமான எண்ணங்கள் கூடி இருப்பவள் ரேவதி நட்சத்திர தேவி. காருண்யத்தில் குடி கொண்டிருப்பதால் திருச்சி - முசிறி அருகே உள்ள காருகுடி திருத்தலமே ரேவதி நட்சத்திர வழிபாட்டுத் தலமாகப் பொலிகின்றது.

சிறுமயங்குடி

மருதூர் சிவாலயம்

பலவிதமான தீய எண்ணங்கள், தீய காரியங்கள், தீயொழுக்கச் செயல்களுக்கு அடிமைப் பட்டவர்கள், அசுர குணம் பெருத்து விளங்குகின்றார்கள். இவர்கள் சீர் திருந்திட, ரேவதி சுக்கிரச் சக்திகள் பூரிக்கும் நாள் பூஜையே மிகவும் ஏற்றதாகும். இந்நாளில்தான், ரேவதி நட்சத்திர தேவி, ஸ்ரீரைவத மகரிஷியிடம் பல மந்திரங்களை உபதேசமாகப் பெற்றனள்.
ஸ்ரீரைவத மகரிஷி மிகவும் கண்டிப்பானவர். ஸ்ரீதுர்வாச மகரிஷிபோல ஒரு சிறு தவறைக் கூடப் பொறுக்க மாட்டார். எனவே, ஸ்ரீரைவத மகரிஷியின் சீடர்கள் யாவருமே தவறே இழைக்காத சீர்மைக்குப் பெயர் பெற்றவர்கள். நேரத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஸ்ரீரைவத மகரிஷி. இவரிடமிருந்து ரேவதி நட்சத்திர தேவி, கலியுக மக்களுக்காக ஒரு நல்வரத்தைப் பெற்றுத் தந்த நன்னாளே ரேவதியும் வெள்ளியும் சேர்ந்த நாளாகும். அது என்ன நல்வரமோ?
கலியுக மனிதன் அறிந்தோ அறியாமலோ நல்ல நேரம் பாராது சில காரியங்களை ஆற்றும்போது பலத்த கால தோஷங்கள் ஏற்படுகின்றன. அறிந்து செய்த பாவ வினைகளையே தீர்க்க இயலாத மனிதன், தன்னை அறியாது ஆற்றும் தீவினைகளுக்கும், தான் அறியாது சேரும் கால வகை தோஷங்களுக்கும் எவ்வகையில் தீர்வைப் பெற முயற்சி செய்வான்? இத்தகைய கடுமையான தவறுகள் எல்லாம் கலியுகத்தில்தான் நிறைய நடக்கின்றன.
குறிப்பாக, மன ஒழுக்கம், உடல் ஒழுக்கம் இரண்டுமே இளைஞர் சமுதாயத்தினரிடம் சீர் கெட்டு வருகின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய வல்லவையே தக்க சற்குரு அளிக்கும் தெய்வீக வழிபாடுகளும், இறைப் பணிகளும் ஆகும். இவற்றை ஒருவர் பெறுவதற்கே நல்ல புண்ணிய சக்தியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது கால தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல நல்ல இறைப் பணிகளை ஆக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான புண்ணிய சக்தியே ரேவசுத சக்தியாகும். அது வியாழனும் ரேவதி நட்சத்திர நாளும் சேர்கையில் உற்பவிக்கின்றது.
பொதுவாக, செல்வ விருத்தி வரும் காலத்தைச் சுக்கிர தசை என்றும் சொல்வார்கள் அல்லவா! புண்ணியத்திலும், புண்ணியச் செல்வம், புண்ணிய சக்தி, புண்ணிய கீர்த்தி, புண்ணிய பாவனம், புண்ணிய ஐஸ்வர்யம் என்று பல வகைகள் உண்டு. இவற்றில் நல்ல இறைப் பணிகளை ஆற்றக் கூடிய வாய்ப்பைத் தருபவையே புண்ணியச் செல்வமாகும். இவற்றை நாம் பெறுவதற்காகவே ரேவதி நட்சத்திர தேவி கடுந் தவம் புரிந்து நமக்கு நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றாள். இத்தகைய புண்ணியச் செல்வத்தை அடைய உதவுவதே வெள்ளியில் கூடும் ரேவதி நட்சத்திர நாள் வழிபாடு.

சிறுமயங்குடி லால்குடி

இந்நாளில் செல்வ விநாயகர், செல்வ கணபதி, செல்வ குமார முருகன், ஐஸ்வர்ய கணபதி, குபேர கணபதி, குபேர மூர்த்தி, சௌபாக்கிய கணபதி, லட்சுமி கணபதி, தனலட்சுமி போன்ற புண்ணியச் செல்வ வளம் தரும் மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமானது. குறிப்பாக, ஸ்ரீஐஸ்வர்ய கணபதி, ஸ்ரீகுபேர கணபதி என்ற இரட்டைப் பிள்ளையார் மூர்த்திகள் அருளும் திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீஐஸ்வர்ய விநாயகருக்குச் சந்தனக் காப்பு இட்டு, மாதுளை முத்துக்கள் பதித்து, சோளம் மாதுளை, பலா போன்றவற்றைப் படைத்தும், ஸ்ரீகுபேர விநாயகருக்கு வெண்ணெய்க் காப்பு இட்டு, தாமரை இதழ்கள் பதித்து, பதினாறு வகை உணவுப் பண்டங்களைப் படைத்தும் பக்தியுடன் வழிபடுதலால், திரண்ட புண்ணியத்தை, புண்ணியச் செல்வமாகவே நேரடியாகப் பெற ரேவதி தேவியே உதவுகின்றாள்.
மயன் எனும் தேவ லோகத்து விஸ்வகர்ம மூர்த்தி இங்கு பல யுகங்கள் குடிகொண்டு பல்வகை முத்துக்கள், ரத்தினங்கள், பொன் மணிகளால் சகல மூர்த்திகளையும் வழிபட்ட, குபேர கடாட்சமும், ஐஸ்வர்ய கடாட்சமும் நிறைந்த பூமியாக ஆக்கிய தலமே சிறுமயங்குடி ஆகும்.
அனுஷ நட்சத்திரம், வெள்ளிக் கிழமை, வெள்ளியும் ரேவதியும் கூடும் புண்ணியச் சுக்கிர வாரம், துவாதசி போன்ற ஐஸ்வர்ய கடாட்ச நாட்களில் இங்கு, சிறுமயங்குடியில், ஸ்ரீஐஸ்வர்ய கணபதி, ஸ்ரீகுபேர கணபதி ஆகிய இரட்டைப் பிள்ளையாரை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலால் புண்ணியச் செல்வம் பெருகி, புண்ணியப் பற்றாக் குறையால் ஏற்பட்டுள்ள பணக் கஷ்டங்கள் நீங்க வழி பிறக்கும்.
ஸ்ரீசந்திர முர்த்தி, 16 கலைகளையும் இழந்து வாடிய போது, 16 கலைகளுக்கும் பொருந்தக் கூடிய குபேரப் பிரகாசத்தையும், ஐஸ்வர்ய ஜோதியையும் பெற, ஸ்ரீரேவதி தேவி வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீரைவத மகரிஷி பர்ணசாலைகள் அமைத்து, 1008 யானைகள் நிறைந்த கஜசாலை அமைத்து வழிபட்ட பூமி இதுவாகும். ஸ்ரீரைவத மகரிஷி சூக்குமமாக வந்து தினமும் வழிபட்டுச் செல்லும் தலங்களுள் இதுவும் ஒன்று.

அஸ்வினியில் அருளமுதம்

நோயும், நோய்க்குக் காரணமான கர்ம வினைகளும் தேய்வுதானே அடைதல் வேண்டும்! எனவே, நோய்களுக்கு மருந்து உண்பதைத் தேய்பிறையில் தொடங்குவது நல்லது. நாள்பட்ட நோய்க்காக, மருத்துவரிடம் செல்கையில், இதில், தேய்பிறையிலும், செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரை, பிரதமை, சஷ்டி, அஸ்வினி, ஆயில்யம் மற்றும் ஜாதக ரீதியாக 3, 7, 8ம் இட சுத்தி நாட்களைத் தேர்ந்தெடுத்து மருந்ததுகளை ஏற்பது, உத்தமமான நோய் நிவாரணப் பலன்களைத் தரும். வளர்பிறையில் மருந்துகளைச் சாப்பிட வேண்டிய கட்டாயம் வரும்போது, செவ்வாய் ஹோரையில் செய்திடவும்.
இதிலும் புண் வகை நோய்கள், சீதள நோய்கள் (ஜலதோஷம், இருமல்), உஷ்ண நோய்கள், அடிபட்டுக் காயப் படுதல் போன்றவற்றிற்கும் மருந்துகளை உண்ண வேண்டிய விசேஷ நேர லக்ன வகைகள் உண்டு. ஆயுர்வேத வைத்தியத்தில் இதற்கான விளக்கங்கள் நிறைய உண்டு. புலிப்பாணி சித்தர்தாம் இத்தகைய மருந்து உண்ணும் நேர வகை முறைகளைப் பகுத்துத் தந்துள்ளார்.
புலிப்பாணிச் சித்தர் அஸ்வினி நட்சத்திர தினத்தன்று ஸ்ரீமருந்தீஸ்வரர், ஸ்ரீஔஷதபுரீஸ்வரர், கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி ஸ்ரீஅருமருந்துநாயகி சமேத ஸ்ரீகற்கடேஸ்வரர், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி போன்ற மருத்துவ சக்தி மூர்த்திகளைப் பூலோகத்தில் நேரிலேயே வந்து வழிபடுவதும் நமக்குக் கிடைத்த பேறே.

ஸ்ரீபவஔஷதீஸ்வரர் திருத்தலம்
திருத்துறைப்பூண்டி

தேய்பிறையில் சனி, அஸ்வினி நட்சத்திரக் கூட்டு அபரிமிதமான மருத்துவ சக்திகளைப் பொழிகின்றது. புற்று நோய், நெடுங்காலக் கட்டி நோய்கள், வயிற்றுச் சூலை நோய்கள், மூல நோய், மூளைக் கொதிப்பு, இரத்த அழுத்த நோய்கள் போன்றவற்றைக் குணமாக்கும் அபரிமிதமாக, அருள்வளத்துடன், மருத்துவ சக்திகள் தோன்றுகின்ற நாள் இதுவே.
நமக்குத்தான் இத்தகைய நோய்கள் இல்லையே, நாம் ஏன் இத்தகைய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுயநலமாக எண்ணாதீர்கள். எதிர்காலத்தில் ஒருவருக்கு, இத்தகைய நோய்கள் வாராதிருக்கவும், சந்ததியினர் இவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும்,
இத்தகைய நோய்களால் அவதியுற்ற முன்னோர்களின் கர்ம வினைகள் தணிந்து அவர்களுடைய ஆவிச் சரீரம் தீர்வு பெற்று நல்ல பிறப்பு அமையவும், மேலும் சமுதாயத்தில் இவற்றால் அவதியுறும், நம் சகோதர ஜீவன்கள் நோய்க் கொடுமைகளின் விளைவுகளிலிருந்து தணிவு பெறுவதற்காகவும் பெறுதற்கரிய இத்தகைய விசேஷமான நாட்களில் தக்க வழிபாடுகளை ஆற்றுவது மகத்தான சமுதாய மருத்துவப் பணியாகவும் ஆகின்றது.
அஸ்வினி நாளன்று பசு, எருமைகளுக்கு அகத்திக் கீரை அளித்தும், ஏழைகளுக்குக் கீரை வகைகளோடு பருப்பு, மிளகாய், தேங்காய் போன்ற உணவு திரவியங்களோடு தானமாக அளித்தும், தானும் அரிசிச் சோறு அல்லாது மோர் மற்றும் கீரை உணவு வகைகளை மட்டும் முழுதும் உண்டும் விரதம் இருத்தல் நல்ல உடல் சுத்தியையும், மன சுத்தியையும் தரும்.
திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவஔஷதபுரீஸ்வரர், திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாத சுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்தியநாத சுவாமி, வைத்தீஸ்வரன் கோயில், மருங்கப்பள்ளம் ஸ்ரீஔஷதபுரீஸ்வரர், ஸ்ரீரங்கம் தன்வந்த்ரீ மூர்த்தி, நெல்லுவாய்புரம் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி போன்ற வைத்திய சக்தி நிறைந்த சந்நிதிகளில் அஸ்வினி நட்சத்திர நேரம் முழுதும் ஆலயத்தில் வழிபாட்டுடன் திளைத்திருப்பது, உடல் நாளங்களில் மருத்துவ சக்திகளைச் சேர்த்துத் தருவதாகும்.

நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போர், அவரவர் உடல் நிலைக்கேற்ப உண்ணா நோன்பையோ, சிறிதளவு திட, திரவப் பொருளை உண்டோ விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வைத்திய சக்தி மூர்த்திகளுக்கு செம்பருத்தித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம் போன்று எத்தனை வகைத் தைலங்களின் சேர்க்கைகளால் தைலக் காப்பு சார்த்த முடியுமோ, அந்த அளவுக்குத் தைலங்களைக் கூட்டிச் சார்த்தி, ஆலயம் முழுவதும் அகல் விளக்கு ஏற்றுதலும் தீபத்ரய மருத்துவ ஜோதி சக்திகளைப் பெற்றுத் தரும்.
அஸ்வினி நட்சத்திரத் தலமான திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவஔஷதீஸ்வரருக்கு (பவம் = விசேஷம் நிறைந்த தீர்கமான, ஔஷதம் = மருந்து), அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வழிபடுதல் நல்ல நோய் நிவாரண சக்திகளைப் பெற உதவும.
பீஜாட்சர மந்திரங்களில் ஷட்காரம் எனப்படும் ஷட்ஜம், ஷபீஜம், ஷஜட்காரம், ஷங்கர்சனம், ஷட்கம், ஷலஜம் ஆகிய ஆறுவகை மருத்துவ சக்திகளை ஒவ்வொரு மருந்தும் கொண்டிருக்க வேண்டும். பூஜை சக்தி, மூலிகை சக்தி, திரவ சக்தி, ஜோதி சக்தி, நாள சக்தி, மருந்து சக்தி ஆகிய ஆறும் நிறைவதே மூல மருந்தாகும். இவை தவிர வர்ம ஷட்காரம் என்று கூடுதலான ஆறு வகை மருத்துவ சக்திகள் உண்டு. இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றுத் தருபவைதாம் வைத்திய சக்திகள் நிறைந்த தலமாகும்.

திருந்துதேவன்குடி சிவாலயம்

அரசு, ஆல், வேம்பு, புங்கம், வன்னி, புன்னை, வாழை, பனை, தென்னை, கொன்றை, குருந்தை, வேலம், துளசி, வில்வம், கிளுவை, எருக்கு போன்ற சமித்துத் தாவரங்களில், குறைந்தது ஆறு வகைத் தாவரங்களின் அருகில் நின்று ஸ்ரீதன்வந்த்ரீ மந்திரங்கள், ஸ்ரீவைத்தியநாத அஷ்டகம், அபிராமி அந்தாதி, சஷ்டி கவச மந்திரங்கள், திருப்புகழ் பாடல்கள், பாம்பன் சுவாமிகளின் வேல்மாறல் பதிகங்கள் போன்றவற்றையும், சூரிய மந்திரங்களையும் தோத்தரித்து வழிபடுவதும் நல்ல மருத்துவ சக்திகளைத் தருவதாகும்.

அஸ்வினி புஷ்ப லிங்கம்
திருவொற்றியூர்

சிரசு முதல் பாதம் வரை உள்ள 72000 நாளங்களிலும் இத்தகைய பூஜைகள் மூலம் மருத்துவ சக்திகளை நன்கு திரள வைக்க முடியும். மருத்துவர்கள் நிறைய பூஜைகளையும், விரதக் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு ஸ்ரீகருட மந்திரம் ஓதி, வேப்ப மரத்தை வலம் வருதல் நல்ல கைராசியையும், மருத்துவ குணங்களையும் பெற்றுத் தர உதவும்.
மேலும் 24 ஏழைகளுக்காவது மருந்து, டானிக்குகளுடன் மருத்துவச் சேவை புரிந்து எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் மருத்துவச் சேவை ஆற்றுதல் அபூர்வமான மருத்துவ குண சக்திகளைப் பெற்றுத் தரும்.
சித்த வைத்தியர்கள் கண்டிப்பாக பச்சை இலைகளை மட்டும் உண்டு விரதம் இருத்தலும், ஆயுர்வேத மருத்துவர்கள் துளசிக் கஷாயம் போன்று பச்சிலைக் கஷாயத்தை மட்டும் ஒரு சிறிது அருந்தி விரதம் இருப்பதும்,
ஆங்கிலத் துறை மருத்துவர்கள் சிறிது இளநீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதும்,
அமிர்த வர்ம மருத்துவத் துறையினர் நெருப்பில் நேரடியாகச் சுட்டு உண்கின்ற சோளம், வேர்க்கடலை போன்றவற்றை ஒரு சிறிது மட்டும் உண்டு விரதம் இருப்பதும்
அவரவர் துறையில் நல்ல மருத்துவ சக்திகளைப் பெற்றுத் தந்திடும்.
சென்னை திருவொற்றியூர், திருவிடைமருதூர், ஆவுடையார் கோயிலில் உள்ள அஸ்வினி புஷ்ப லிங்க தரிசனம் பெற்று ஒரு ஏழைக்காவது டானிக், பொதுவான மருந்துகள், லேகியம், தைலம், மருந்து சக்திகள் நிறைந்த பற்பொடி, பற்பசை போன்றவற்றைத் தானமாக அளித்தல் மருத்துவப் பூர்வமாக சில அரிய புண்ணிய சக்திகளைப் பெற்றுத் தரும்.
பொதுவாக நட்சத்திர உதய நேரம், நட்சத்திர அஸ்தமன நேரம் இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இதனை அறிந்து உதய நேரம், நட்சத்திர அஸ்தமன நேரத்தில், அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கு மிகவும் ப்ரீதியான இஞ்சிச் சாற்றால் ஸ்படிக லிங்க பூஜை, ருத்ராட்ச அபிஷேகப் பூஜை போன்றவற்றை நிகழ்த்துதல் அபரிமிதமான, அபூர்வமான மருத்துவ குண சக்திகளை இல்லத்தில் நிரப்பித் தரும். பஞ்சாங்கத்தில் உள்ள சந்திர சஞ்சார நேரம் வேறு, இத்தகைய நட்சத்திர உதய நேரம், நட்சத்திர அஸ்தமன நேரம் வேறு என்பதை மனதில் கொள்க!

அகால மரணங்களைத் தடுக்க ...

பொதுவாக, மரண யோகத்தில் நாள் முழுவதுமாக அமைந்து வரும் ஏகாதசித் திதி மிகவும் சிறப்பான ம்ருத்யுஞ்ஜய சக்திகளைக் கொண்டிருக்கும். திரிதினமாக எந்தத் திதி, எந்த நட்சத்திரம் ஒரு நாளில் அமைகின்றதோ, அந்தத் திதி, அந்த நட்சத்திரம்தான் அன்றைய நாளில், அன்றைய தினத்திற்கான ஏனைய பஞ்சாங்க அம்சங்களை விடப் பலவிதங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
பிரண்டை, இஞ்சி, சுக்கு, கடுக்காய், தேன், நெல்லிக்காய் ஆகிய ஆறும் காயாரோகண, காய கல்ப சக்திகள் நிறைந்தவையாகும். மரண யோக நாளில் 11 விதமான புண்ணிய தீர்த்தங்களில், இந்த ஆறு காயாரோகணக் கல்பத் திரவியங்களையும் முறையாகக் கலந்து, சிவ, விஷ்ணு மூர்த்திகள் இருவருமே அருளும்கோயில்களில் பூஜித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீசங்கரநாராயணர் திருப்பூந்துருத்தி

* திருக்கோஷ்டியூர் போல, பெருமாள் ஆலயத்தில் உள்ள சிவ மூர்த்தி,
* திருச்சி அருகே திருநெடுங்களம் போன்று சிவாலயத்தில் உள்ள பெருமாள் - இவ்வாறாக சிவ விஷ்ணு ஆலயங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருஅண்ணாமலை சிவன் கோயில், காரைக்குடி - புதுவயல் அருகே உள்ள சாக்கோட்டை ஸ்ரீஉமையவள் சமேத வீரசேகர சிவாலயம், சிதம்பரம், திருச்சி உத்தமர் கோயில், சங்கரன் கோயில், திருப்பூந்துருத்தி போன்றவை சிவாவிஷ்ணு ஆலயங்களாகும். சிவனும், விஷ்ணுவும் இணைந்த அவதாரக் கோலமே சங்கர நாராயண திருக்கோலம். ஏகாதசி தினங்களில் ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுதல் சிறப்புடையது.
ஏகாதசி அன்று மிகவும் குண்டாக இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றுதலால், இரு வகையான முடிவுகளில் எந்த முடிவை எடுப்பது என்று திகைப்போருக்கு மனத் தெளிவு கிட்ட உதவும். இது எவ்வாறு செயல்படுகின்றது?
எந்த நற்காரியத்தில் எத்தகைய புண்ணியம் விளையும்? எப்புண்யம் எத்தகையப் புண்ய சக்தியாக மலர்ந்து, எவ்வகையில் நன்மை பயக்கும் என்பதான புண்யவிலாச தர்ம நியதிகள் உண்டு. இவ்வகைத் தேவ ரகசியங்களை அறிந்தோர் சற்குருமார்களே! எனவே அந்தந்தக் காரிய சித்திக்கான, அந்தந்தத் துன்பங்கள் தீர்வதற்கான புண்ணியம் செறியும் பூஜை, நற்காரிய, தான, தர்ம வகைகள் இவ்வாறாகக் கலியுக ஜீவன்களின் நலம் கருதி அளிக்கப்படுகின்றன.
அதே போல மிகவும் குண்டாக இருப்பவர்கள், மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றிட, தாழ்வு மனப்பான்மை அகல உதவும்.
ஏகாதசி விரதம் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, அவர்களுக்குப் புத்தாடைகளை அளிப்பதால், அறியாமல் பெரியவர்களைத் திட்டிய, வசை பாடிய தோஷங்கள் தீரப் பரிகாரங்கள் கிட்ட உதவும்.
அதே போல கிருத்திகை விரதம் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நல்ல பாடல் பெற்ற ஆலயங்களில் வழிபட அனைத்து உதவிகளுடன், ஆவன செய்து உதவுவதால் பிள்ளைகளை வாட்டும் திருஷ்டி தோஷங்கள் அகல உதவும்.
ஏழைகளுக்கு  திருஷ்டி தோஷ நிவாரண விளக்கு, பெரிய அகல் விளக்குகள், ஒரு வாரம் விளக்கேற்றத் தேவையான தைலம், திரிகளுடன் தானமாக அளிப்பதால், திரும்பி வராத கடனைப் பற்றிப் பெரும் நஷ்டம் அடைந்ததாகப் புலம்பிப் பெரிதும் வேதனை கொண்டிருப்போரின் சஞ்சலங்கள் அகலத் துணை புரியும்.
வாகன விபத்தில் திடீரென்று அகால மரணம் அடைந்தோர்க்கு, ஏகாதசி தினங்களில் அல்லது கிருத்திகை நட்சத்திர நாளன்று 24 எள் உருண்டைகளின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்திட, அகால மிருத்யு தோஷங்கள், குடும்பத்தை மேலும் பற்றாது தணிய உதவும்.  

பழைய வீடுகளில் வாஸ்து பூஜை

செவ்வாய்க் கிழமை என்பது ஸ்ரீவாஸ்து பகவான் பூஜைக்கு உரித்தான நாள் என்பது பலரும் அறியாததாகும். ஒரு தமிழ் வருடத்தில் வரும் மொத்தம் எட்டு வகை வாஸ்து நாட்களில், ஜீவபரிபாலன நல்வரங்களை நல்கிட, யோக சயனத்திலிருந்து மீண்டு, ஜீவன்களுக்கு அருள்புரிவதற்காக, ஆலயங்களில் உள்ளது போன்ற தரிசன மூர்த்தியாக, ஸ்ரீவாஸ்து மூர்த்தி, தர்சனப் பரிபாலன மூர்த்தியாய் ஒளிர்ந்து தோன்றிப் பிரகாசிக்கின்றார்.
இதற்காக ஏனைய நாட்களில் ஸ்ரீவாஸ்து மூர்த்தி உறங்குவதாகப் பொருள் கொள்ளலாகாது. இறை மூர்த்திகளுக்கு ஏது உறக்கம்? ஸ்ரீபார்வதி தேவி, ஈஸ்வரனின் கண்களை ஒரு சில இமை நொடிகளே சற்றே மூடிய போது பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டதல்லவா! எனவே, ஸ்ரீவாஸ்து மூர்த்தி ஏனைய நாட்களில் உறங்குகின்றார் என்று தவறாகப் பொருள் கொள்ளாதீர்கள்!
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு பூண்டு அருள்வது யோக சயனம்தானே! இதே போன்றே ஸ்ரீவாஸ்து பகவானும் யோகசயனம் கொள்கின்றார். இறைமூர்த்திகள் யோக நிலை பூண்வது, ஜீவன்களின் நல்வாழ்விற்காகவே!

சங்கரன்கோயில்

செவ்வாய்க் கிழமையானது ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் மங்கள யோகப்புல சக்திகள் பூரித்துப் பொங்கிடும் நாளாகும். பிருத்வி சக்திகள் நிறைந்ததாகவும், பூமி அம்சங்கள் நிறைந்ததாகவும், செவ்வாய்க் கிழமை விளங்குவதால்தான், ஒருவருக்கு உரிய நில, புல, புவி, வீடு அம்சங்கள், ஜாதக ரீதியாக, செவ்வாய் மூர்த்தியின் அமைப்பைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
செவ்வாய் கிரக மூர்த்தி, நிதமும் செவ்வாய் ஹோரை நேரத்தில், ஸ்ரீவாஸ்து பகவானுக்கு, சிரசு பூஜை, கர பூஜை, நாபி பூஜை, பாத பூஜை என நான்கு விதமான பூஜைகளை ஆற்றுகின்றார். நாம் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு ஆற்றுவது போல், யோக சயனம் பூண்டிருக்கும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் யோகநிலையிலேயே, செவ்வாய் மூர்த்தி, நிறைவேற்றும் அவருக்கு பூஜைகளில், பூலோக ஜீவநல்வரங்களுக்கு உரித்தான ஒன்றே கூர்ச்சபளீயம் எனப்படுவதாகும்.

தர்பைகளில், சிவ தர்பை, விஷ்ணு தர்பை என்று சில வகைகள் உண்டு. கூர்ச்சபளீயம் என்பது குறித்த அளவு ஸ்ரீவிஷ்ணு தர்ப்பைகளைக் கொண்டு தர்பைச் சுருட்பரல் ஆக்குவதாகும். இதில் ஸ்ரீமஹாவிஷ்ணு தசாவதார சக்திகளுடன் ஆவாஹனம் ஆவதாக ஐதீகம். இது முற்றிலும் உண்மையே.
செவ்வாய் மூர்த்தி, செவ்வாய் ஹோரை நேரத்தில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் சிரசில், கரங்களில், நாபியில், பாதங்களில் விஷ்ணு தர்பைக் கூர்ச்சங்களை வைத்துப் பூஜிக்கின்றார்.
ஒவ்வொரு நாளுக்கும் தாய் ஹோரை என்ற ஒன்று உண்டு. ஞாயிறுக்கு சூரிய ஹோரையே தாய் ஹோரை! இதே போல எந்தக் கிழமையோ, அந்தக் கிழமை ஹோரையே தாய் ஹோரையாக, சூரியோதயத்தின் முதல் ஹோரையாகக் காலை 6-7 மணி, மதியம் 1-2 மணி, இரவு 8-9 மணி வரையிலும், நள்ளிரவுக்குப் பின், விடியற் காலை 3-4 மணி வரையிலுமாக, நான்கு காலத் தாய் ஹோரைகள் அந்தந்த நாளுக்கு அமையும். செவ்வாய் நாளின் இந்த நான்கு சதுராமிர்த மாத்ரு ஹோரை நேரமே, செவ்வாய் மூர்த்தி வாஸ்து பகவானைப் பூஜிக்கும் நேரமாகும்.

ஸ்ரீஜகதீஸ்வரர் ஆலயம் மணமேல்குடி

செவ்வாய் மூர்த்தி இந்த நான்கு நேரங்களிலும் ஸ்ரீவாஸ்து பகவானை, நான்கு திசைகளிலும் நின்று பூஜிக்கின்றார். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையின் வாஸ்து அம்சங்களும், அவர் முதலில் ஸ்ரீவாஸ்து பூஜையைத் துவக்கும் திசையைப் பொறுத்து, வகை வகையாக அமைந்து, விசேஷமான பலன்களை நல்குவதாகவும் விளங்குகின்றன.
புதிய வீட்டிற்குதான் வாஸ்து பூஜைகள் என்று கிடையாது. பழைய வீட்டில் குடியிருப்போர், பழைய வீடுகளை வாங்கி வசிப்போர் செவ்வாய்க் கிழமைகளிலும், வாஸ்து நாட்களிலும் விசேஷமான வாஸ்து பூஜைகளை நிகழ்த்தி, ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீபூமீஸ்வரர் போன்ற பூமி வகை நாமம் பூண்ட இறை மூர்த்திகளின் ஆலயங்களில், இனிப்பு அப்பம் படைத்துத் தானமாக அளிப்பதால், பழைய வீட்டில் சேர்ந்துள்ள நில தோஷங்கள், ரண தோஷங்கள், நீர் வகை தோஷங்கள் தீர வழி பிறக்கும்.
ஸ்ரீபூமா தேவிக்குச் சிவப்பு வஸ்திரம் சார்த்தி வழிபடுவதால் பழைய வீட்டின் பத்திரம் சம்பந்தமான தீராத பிரச்னைகள் தீர வழி பிறக்கும்.
ஸ்ரீஜகதீஸ்வரருக்குச் சிகப்புப் பட்டு வஸ்திரம் சார்த்தி, ஆடுகளுக்கு உணவும், ஆடுகளை வளர்ப்போர்க்கு ஆன உதவிகளும் செய்தலால், அருகில் குடியிருப்பவர்களால் ஏற்படும் துன்பங்கள் அகல வழி பிறக்கும்.

ரோஹிணி பிரதோஷம்

ஸ்ரீபரத்வாஜ மகரிஷி, ஒரு முறை ஆழ்ந்த தவயோக நிலையில் துலங்கிய போது ஒரு சுண்டெலி, அவர் உடலில் ஏறி விளையாடத் தொடங்கியது. முழங்கால், கைகள், தாடி, தலை என ஒவ்வொரு அங்கமாய் ஏறிக் குதித்து அது ஆட்டம் போட்டு மகிழ்ந்தது. சுண்டெலியின் வேக அசைவுகள் மாமுனியின் தவத்தைப் பாதிக்கவில்லை ஆயினும், அன்றையப் பிரதோஷப் பூஜைக்கெனத் தவத்திலிருந்து மீண்டு, மஹரிஷி கண்களைத் திறந்த போது, சுண்டெலியின் சேஷ்டைகளை அறிந்தார். ஆனால் சற்றும் சினந்திடாது, அதனைப் பரிவுடன் நோக்கிட, சுண்டெலியோ, நாணி, வெண்ணிறத் தாடியினுள் புகுந்து விளையாடிடவே, மஹரிஷியும், அதனை அன்புடன் ஸ்பரிசித்திடவே, அது ஓர் அழகிய கந்தர்வனாய் மாறியது.
“சுவாமி! அடியேன் புருஷேந்திரியன் என்ற கந்தர்வன் ஆவேன். கந்தர்வ லோகத்தில் உத்தம நிலைகளை அடைந்து, நான்கு கால் பிராணிகளின் ஜீவ பரிபாலனத்தின் ஒரு பங்கை அடியேன் ஆற்றிய போது, கவனக் குறைவாக, ஒரு சுண்டெலியை மனிதனாகவும், ஒரு மனிதனைச் சுண்டெலியாகவும் மாற்றிய பெரும் பிழையால், எலிப் பிறப்பாகும் சாபம் பெற்றேன்.”

அபூர்வமான இரட்டைப் பிள்ளையார்
மூர்த்திகள் பூவாளூர்

“ரோஹிணி பூக்கும் புத்தொளிப் பிரதோஷப் பூஜைக்கெனத் தவத்திலிருந்து மீண்டு எழும் பரத்வாஜரின் திருக்கர ஸ்பரிசத்தால் சாப விமோசனம்! என்று விதிக்கப்பட்டது. அந்த சாப விமோசனம் அடியேனுக்கு இன்று தங்களருளால் கிட்டியது. அடியேன் இனி ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்விப்பீர்களாக” என்று கந்தர்வன் ஸ்ரீபரத்வாஜ மாமுனியை வேண்டிட்டான்.
ஸ்ரீபரத்வாஜ மாமுனியும் “புருஷேந்திரியா! வரும் யுகங்களில், குறிப்பாகக் கலி பிறந்த ஐயாயிரம் ஆண்டுகளில், குழந்தைகளின் புத்திப் பிரகாசமும் அதிகமாகிச் சேஷ்டைகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாகி விடும். பெற்றோர்களும், பெரியோர்களும், ஆசிரியர்களும் கட்டுக் கடங்காது சேஷ்டை செய்யும் பிள்ளைகளைக் கடிந்து “அப்படிப் போ, இப்படிப் போ, என்று திட்டி, வசையாடிச் சாபம் இடுவார்கள். இது முறையல்ல! இதற்காக அவர்கள் பரிகாரம் தேடியாக வேண்டும். அவர்கள் பரிகாரம் தேடிட நீ எவ்வகையிலேனும் உன் தபோபலன்களைத் தந்து, நல்வழிகாட்டி உதவிட வேண்டும்!” என்று அருளாணை இட்டார். கந்தர்வனுக்கு இவ்வாறு சாபவிமோசனம் கிட்டிய நாளே புதனும் ரோஹிணியும் கூடும் பிரதோஷ தினமாகும்.  
இந்த தேவ அனுபூதி நிகழ்ந்த தலமே திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடம் சிவத் தலமாகும். இங்குஸ்ரீபரத்வாஜ மாமுனியின் சயன யோகத் தவக் கோல பிருத்விப் படிவம் காணுதற்கரிய தரிசனமாகும். இங்கு பிரதோஷ பூஜை ஆற்றுதலால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொண்ட பாவ வினைகள் தீர வழி பிறக்கும்.
நோயில், விபத்தில் பிள்ளைகளை இழந்த, பறி கொடுத்த கர்ம வினைகளுக்கும் தக்க பரிகாரங்கள் கிட்டும்.

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
தவசிமடை

ஸ்ரீபரத்வாஜ கோத்திரக்காரர்கள் அனைவரும் தம் வாழ்வில் ஒரு முறையேனும் தவசிமடையில் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரைத் தரிசித்து, நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றையேனும் இப்புனிதமான தவசிமடை பூமியில் ஆற்றிட வேண்டும்.
ஸ்ரீபரத்வாஜ கோத்திரக்காரர்களுக்கு சான்றோர்களின் நல்வழித் துணை கிட்ட புருஷமாத்ரயப் பித்ரு பத்னிகளின் ஆசிகள் கிட்டும்.
ரோஹிணி நட்சத்திரம் கூடும் பிரதோஷ நாட்களில்
* இரட்டைப் பிள்ளையார் தரிசனமும்,
* பிள்ளையாரின் வாகனமான மூஷிகத்திற்கு எண்ணெக் காப்பும் இட்டும்,
* மூஷிகத் திருமேனி முழுதும் மலர்களால் அலங்கரித்தும்,
* மூஷிகத்தின் நெற்றிக்குத் திருநீர், மஞ்சள் குங்குமம், சிந்தூரம், சந்தனம் ஆகிய ஐந்தும் இட்டும்,
* பிள்ளையாருக்கு ரசகுல்லா, பால்கோவா, நைவேத்யம் படைத்துத் தானமும் அளித்தலால்
குழந்தைகளை அநாவசியமாகத் திட்டிய வினைகள் தீர, நற்பரிகாரங்கள் கிட்டும்.
மேலும் பாம்புப் பிடாரனுக்குத் வயிறார உணவளித்து, பாம்பினை இம்சை செய்யலாகாது என அறிவுறுத்தி, பிடாரனுக்குத் தேவையான வசதிகளைச் செய்திட, அடி வயிறு சம்பந்தமான பிணிகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் தரிசனம் எத்தனையோ உன்னத பலன்களை வர்ஷிப்பதாகும். மானிடர்கள் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் தரிசனத்தை நேரே பெறும் அளவிற்கு உயர்வது கடினம் என்றாலும் அம்மகரிஷியின் தரிசனப் பலன்களை நாம் பெறுவதற்கு வழிகாட்டுபவரே நம் சற்குரு ஆவார். அமாவாசை தினங்களில் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை தினங்களில் பச்சைக் கிளிகள் அமர்ந்திருக்கும் வில்வ மரங்களை மூன்று முறை வலம் வந்து குறைந்தது 12 பேர்களுக்கு முழு வாழை இலை நிறைய உணவு படைத்தலால் அத்தகையோரும் அவர்கள் சந்ததியினரும் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் அனுகிரகத்தைப் பூரணமாக பெறுவார்கள். இத்தகைய தரிசனம் ஒன்றை நீங்கள் இங்கு தரிசனம் செய்து பலன் பெறலாம்.

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam