முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சூரிய பூஜையின் மகத்துவம்

ஞாயிற்றுக் கிழமை சூரிய மூர்த்திக்கென விசேஷமான நாளாக விளங்குவதால், இன்று சூரிய கிரணங்களில் விசேஷமான சக்திகள் நிறைந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையன்று நிறையும் சூரிய கிரணங்களின் அதியற்புத சக்திகளை நம் உடலில் கிரகித்திட,
* நாள் முழுவதும் ஆரஞ்சு வண்ண நிற ஆடைகளை அணிந்திருத்தல்,
* நாள் முழுதும் சூரியத் துதிகள், ஸ்ரீகாயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரியத் துதிகள் ஓதுதல்
* சூரிய கிரகத் தானியங்கள் மற்றும் திரவியங்களான கோதுமை, துவரை போன்றவற்றைத் தானமாக அளித்தல்.
* காலையும், மாலையும் சூரிய மூர்த்தி ஆரஞ்சு வண்ணப் பந்து போலத் தோன்றுகையில், சந்தியாவந்தன முத்திரையான, பாசாங்குலி முத்திரை மூலம் சூரியனைத் தரிசித்தல்

* சூரிய மூர்த்தி தனித்து அருளும் சந்நிதிகளில் வழிபடுதல்.
* லிங்கத்தின் மேல் சூரியக் கிரணங்கள் படியும் சூரிய பூஜைத் தலங்களில் வழிபாடு
- போன்ற சூரிய வகை வழிபாடுகளை மேற்கொண்டிட தந்தை வகை முன்னோர்களில்
* நன்கு வாழாது தீவினை வசப்பட்டு வாழ்ந்தோர்
* இயற்கையாக மரணம் அடையாது, மிருத்யு தோஷத்தால் அகால வகை, அவல வகைகளில் மரணம் அடைந்தோர்
* தர்ப்பணம், படையல், திவசம் எதையும் செய்யாமல் வாழ்ந்து இறந்தோர்
* இறை வழிபாடுகளை முறையாக ஆற்றாது, இறைநம்பிக்கை இல்லாது வாழ்ந்தும், கடவுள் மற்றும் பெரியோர்களை, சான்றோர்களை, சற்குருமார்களை இகழ்ந்து பேசி வாழ்ந்து இறந்தோர்
* முறையாக ஒரு மனைவியுடன் வாழாது, பெண்களுக்குத் துரோகம் செய்து வாழ்ந்தோர்
இத்தகைய முன்னோர்களுக்கு, இன்றைய சூரிய மண்டலப் பூஜைகள்தாம் திருந்திய பிறவிகளைத் தர உதவும். எனினும், முன்னோர்கள் இட்ட பாவம், இன்னோரையும் அதாவது நடப்பு சந்ததியினரையும் வருத்தும் என்பதும் உண்மையே. முன்னோர்கள், எத்தகைய பாவச் செயல்களைப் புரிந்திருந்தாலும், அவற்றிற்கான பிராயச்சித்தப் பரிகாரங்களைத் தக்க சற்குரு மூலம் பெற்று, சந்ததியினர் மூலமாகவே ஆற்றித் தர முடியும்.

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் ஆமூர்

சூரிய பூஜைக்கு ஏற்ற தலங்களாக அமைவன :-
கரூர் அருகே வாங்கல் ஸ்ரீரவீஸ்வரர்
சென்னை வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர்
முசிறி அருகே ஸ்ரீரவீஸ்வரர்
சென்னை அருகே ஞாயிறு
பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம்
கும்பகோணம் அருகே பயரி
மற்றும் கீழ்சூரிய மூலை சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் பொழியும் சூரிய பூஜைத் தலங்களும் ஆகும். இங்கு ஆரஞ்சு வண்ணப் பழங்கள், கேசரி போன்றவற்றால் சுவாமிக்குக் காப்பிட்டு வணங்குதல், முன்னோர்களுக்கு நன்மை பயத்து, சந்ததியினருக்கு நன்மைகளாகத் திரும்பி வரும்.
அஷ்டமியும், நவமியும் சேரும் நேரத்தில் சூரிய பூஜையில் திளைப்பது பித்ருக்களுடன் பேசும் ஆற்றலை வளர்க்கும்.

மணி வால் ரகசியம்

சுவாதி நட்சத்திரம் சாந்தம், மன அமைதியைத் தர வல்லதாகும். சுவாதித் திருநாள் என்ற நாமத்தையே ஒரு மன்னர் பூண்டு, சங்கீத உலகத்திற்கு அருந்தொண்டு ஆற்றினார். சுவாதி நட்சத்திர நாளில் ராகப் பூர்வமாக, ஸ்வரப் பூர்வமாக, தாளப் பூர்வமாக, லயப் பூர்வமாக, குரல் நாதப்பூர்வமாக பூலோகத்தில் நற்கிரணங்கள் உற்பவிக்கின்றன. எனவே சுவாதி நட்சத்திர நாளில் இனனிசை பொழிவது பல வளங்களைத் தருவதாகும்.
சில தலங்களில், வாலில் சிறு மணி கட்டப்பட்ட நிலையில் ஆஞ்சநேயரின் தோற்றம் அமைந்திருக்கும். இதனைச் “சிவமணி” என்று சித்தர்கள் போற்றுகின்றனர். சிவ பூஜை, விஷ்ணு பூஜை ஆகிய இரண்டிலுமே சிறப்புப்பெற்றவரே ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி. ஸ்ரீராமரே, ஸ்ரீஅனுமாரை உத்தமச் சிவபக்தன் எனப் போற்றுகின்றார்.

சுவாதி நட்சத்திர தலம்
சித்துக்காடு சிவாலயம்

ஸ்ரீஅகஸ்தியரைப் போல், தினமும் காலையில் திருக்கயிலை, வைகுண்டம் இரண்டிலும் சிவ தரிசனம், விஷ்ணு தரிசனம் பெற்று வருபவரே அனுமாரப்பர் ஆவார். ஸ்ரீராமர் பூஜிக்கும் போது, பூஜைக்குரிய மணியைத் தக்க சமயத்தில் மணி அடிப்பதில் பேரானந்தம் கொண்டிருக்கும் ஆஞ்சநேய மூர்த்தியைத் தரிசிப்பது, சுவாதி நட்சத்திர தினத்தின் பெருவழிபாடாகும். இத்திருநாளில்தான் சாந்தவெளி மூர்த்தியாக, ஸ்ரீஆஞ்சநேயர் பரிபாலனம் கொள்கின்றார்.

பண்டைய காலத்தில், புனித பாரதத்தின் தமிழகத் தெய்வப் பகுதிக்கு ஸ்மார்த்த பூமி என்று பெயர். இதனால்தான் தமிழ் மக்களுக்கு ஸ்மார்த்தர்கள் என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்மார்த்த பூமி ரட்சகர்களுள் ஆஞ்சநேயத் தெய்வ மூர்த்தியும் ஒருவராவார்.
பொதுவாக, ஏகாதசி அன்று விரதம் பூண்டு, சயனக் கோலம் பூண்டுள்ள மூர்த்திகளைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையது. பாற்கடலில் ஆலகால விடமுண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றிய சிவபெருமான், விடமுண்ட களைப்பு தீர்வதற்காக, ஸ்ரீரெங்கநாதரைப் போல் ஓரிடத்தில் சற்றே தரையில் நீண்டு சயனக் கோலம் பூண்டார். தினமும் திருக்கைலாயத்தில் சிவலிங்க தரிசனம் பெறும் ஆஞ்சநேயர், அன்று சிவ தரிசனம் கிட்டாது ஏங்கிய போது, ஸ்ரீஅகஸ்தியர்பிரான் அவரை பூலோகத்தில், ஆதிசிவனின் சயனக் கோலத் தரிசனம் பெறுமாறு வேண்டிடவே, தற்போது ஊத்துக்கோட்டை அருகில் ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள சுரட்டப்பள்ளி வந்தடைந்த ஆஞ்சநேய மூர்த்தி, அனைத்து தெய்வ மூர்த்திகளும் இங்கு எழுந்தருளிய சயனக் கோல சிவமூர்த்தியைப் பள்ளி கொண்ட பசுபதியாக தரிசித்து நிற்கும் கோலம் கண்டு பேரானந்தம் கொண்டு மகிழ்ந்தார்.
தாம்பத்ய தட்சிணாமூர்த்தி என்றவாறாக, தெய்வமூர்த்திகள் தம்பதி சகிதம் நிறைந்து குடும்பத்திற்குச் சாந்த சக்திகளை அளிக்கும் திவ்யத் தலமே சுரட்டப்பள்ளி!

ஸ்ரீசிவமணி ஆஞ்சநேயர் கஞ்சனூர்

பல நாட்கள் இங்கு மௌன விரதம் பூண்டு இறைவனைப் பூஜித்த ஆஞ்சநேய மூர்த்திக்கு, இறைவியே இறைவனின் தம் திருமணிகண்டத்தில் இருந்து ஒரு மணியை எடுத்து அளித்து அணிந்து கொள்ளச் செய்தார். ராம், ராம் என்று உடல் எங்கும் ராம நாம ஜபத்தில் திளைக்க வைத்த, ஆஞ்சநேயருக்கு மணியை எவ்விடத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்றறியாது, இறைவனையே வேண்டினார். ஆனால் சுவாமியோ ஆயாசத்தில் யோகத்தில் நிலை பெற்றிருந்தார்.
பள்ளி கொண்ட பெருமானான சிவபெருமான் தரிசனம் அளித்தும் தமக்குச் சிவலிங்க தரிசனம் கிட்ட வில்லையே என ஏங்கிய ஆஞ்சநேயர், ஏகாதசியில் விரதம் பூண்டு, இறைவனே உவந்தளித்து மணியைத் தம் உள்ளங்கையில் தாங்கி ஆனந்தபாஷ்பவாரியாகக் கண்களில் ஆனந்த கண்ணீர் திரண்டு நிற்க, உத்தம பக்தியில் திளைத்தார்.

ஆஞ்சநேயரைப் போலவே தினமும் திருக்கைலாயம், வைகுண்டத்தில் தினமும் பெருமாள் சிவதரிசனங்களைப் பெறும் பாக்யம் பெற்றவரான ஸ்ரீபரத்வாஜ மகரிஷியும், ஆஞ்சநேயரிடம், விடமுண்ட களைப்பின் ஆயாசம் தீர, இறைவன் சாந்த சயனயோக நிலை கொண்டிருப்பதால், சற்றும் சப்தமின்றி பாத யாத்திரை பூண்டு, வானில் தோன்றும் ஒளியைப் பின்பற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
சிவபெருமானின் அமைதி நிறைந்த சயனக் கோலம் பாதிக்கலாகாது என்பதற்காக தன்னுடைய விஸ்வ ரூபத்தைத் தணித்துக் கொண்டு, கூப்பிய கரங்களுடன் பாத யாத்திரை செய்து, மாமுனிவர் உரைத்தது போல ஆஞ்சநேயர் பாதயாத்திரை பூண்டார். தம்முடைய வாலில் எண்ணற்ற சிவ லிங்க மூர்த்திகளைத் தாங்கி வந்தமையால், சிவ ஸ்பரிசம் திளைத்த அவருடைய வாலில் சிவமணி தானாகவே சென்று அமைந்தது.
எண்ணற்ற சிவலிங்கங்களின் சிவஸ்பரிசம், வாலில் இயற்கையாகவே சென்று அமர்ந்தமையால், எங்கே மணி சப்தம் கேட்டால் சயனக் கோலச் சிவபெருமானுக்கு நிஷ்டை கலைந்து விடுமோ என்ற பயபக்தியில், மணியின் நாக்கு சிறிது கூட அசையாது, தன்னுடைய பிரம்மாண்டமான உடலுடன், தாமரையை விட மெல்லிய அடிகளுடன் ஸ்ரீஆஞ்சநேயர் பாத யாத்திரை புரிந்து, சிவலிங்க தரிசனம் பெற்ற இடமே சுரட்டப்பள்ளிக்கு அருகில் இருக்கும் ராமகிரி ஆகும். இன்றும், இங்கு சிவபெருமானுக்கு முன் ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

ராமகிரியில் நந்தி வாய்த் தீர்த்தம் ஆகிய அனுமன் தீர்த்தக் குளத்தில் நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் சுரக்கும். இன்றைக்கும் நந்தி வாய்த் தீர்த்தம் தீர்த்தக் குளத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. பின்னணியில் உள்ள மலையே சஞ்சீவி மலை! கொடிய கண் நோய்களைத் தீர்க்கும் பல அரிய மூலிகைகளைக் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம். அடிவயிற்றில் கைகளை வைத்து ஆஞ்சநேயர் பாத யாத்திரை பூண்டமையால் இத்தீர்த்தம் சிறுநீரகம், வயிறு சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதாகும்.
சுவாதி தினத்தன்று வாலில் மணி கட்டிய ஸ்ரீஆஞ்சநேயரைத் தரிசித்து, வால் உள்ள பிராணிகளுக்கு வயிறு நிறைய உணவளித்தல் வேண்டும். அடிவயிறு சம்பந்தப்பட்ட சிறுநீரகக் கல், குடல் இறக்கம் போன்ற வியாதிகளால் அவதியுறுவோர் தினமும் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயருக்குப் பிரசாதம் படைத்துத் தானமளித்து, வழிபட்டும், ஆலயக் கதவுகளுக்கு மணிகளைச் சார்த்தும் திருப்பணிகளை ஆற்றியும் வர வேண்டும்.
சீதாப் பழம் படைத்து ஆஞ்சநேயரை வழிபடுவதால், பணப் பிரச்னைகளால் குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் மறைய வழி பிறக்கும்.

பாதுகாப்பான பயணத்திற்கு வழி

மரணயோகம் என்பது குறித்த கிழமையில், குறித்த நட்சத்திரம் சேரும் போது ஏற்படுவதாகும். உதாரணமாக, செவ்வாய் - விசாகம், செவ்வாய் - சதயம், வியாழன் - மிருகசீரிஷம் சேர்வது மரணயோக நேரமாகும். பொதுவாக மரண யோகத்தில் சுபகாரியங்களை ஒதுக்கினாலும், மரணயோக நேரத்தில் செய்ய வேண்டிய விசேஷமான பூஜைகள் நிறையவே உண்டு.
பூமியில், ஜீவவாழ்க்கை கர்மவினைகளை ஒட்டி அமைவதால்தான் காலத்தையும், ஜீவவாழ்க்கைக்கு ஏற்ப, பல நலன்களை, வரன்களை நல்குவதாக, நாள், கரணம், யோக, நட்சத்திரப் பகுப்பாகத் தந்துள்ளனர். கர்மவினைப் பகுப்பிற்கு அப்பாற்பட்ட மகான்கள், சித்தர்கள் இத்தகைய காலப் பகுப்பைக் கடந்து விளங்குவதால், இத்தகைய உத்தமர்களுக்கு ராகு காலம், எமகண்டம் போன்ற காலஅளவைகள் கிடையா.

சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை

சூரிய, சந்திர உதய, அஸ்தமன நேரங்கள் போல, ஒவ்வொரு நாளிலும் 27 நட்சத்திரங்களுக்கான உதய, அஸ்தமன நேரங்கள் உண்டு. ஒரு நாளில் வரும் கிழமை (வாரம்), நட்சத்திரம், யோகம், கரணம், திதி ஆகிய ஐந்தில் எது சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றது என்பது, அந்தந்த நாளின் காலஅம்சங்களைப் பொறுத்ததாகும். உதாரணமாக, அமாவாசைத் திதியன்று, அமாவாசைத் திதி வலிமைதான், நாள், நட்சத்திரம், யோகம், கரணத்தை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
இதே போல, வாஸ்து நாளில், வாஸ்து காலசக்திகள், காலஜோதி சக்திகளைப் பெற்று இருப்பதால், மரணயோகம் இருப்பினும், வாஸ்து பூஜைகளைத் தொடர்ந்திடலாம். ஏனெனில் வாஸ்து சக்திகள், மரண யோக அம்சங்களை வென்று விடும். இவ்வாறு அந்தந்த நாளின் காலசக்தி அம்சங்களை விளக்குவதாகப் பஞ்சாங்கங்கள் அமைந்துள்ளன.
அதே போல கோபத்ம விரதம், சாதுர்சாக விரதம் போன்ற விரதங்ளை கடைபிடிப்போர்க்கு மரணயோகத்தில் விளையும் தீயசக்திகள், வலிமை இழந்து விடுவதோடு, மிருத்யுவை வெல்ல வல்ல பூஜா பலன்களையும் தரும் என்பதும் உண்மை.
முதலில் மரணயோகம் என்பதன் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
* மிருத்யு தோஷம் எனப்படும் அகால மரண சக்திகள் தலைதூக்கும் நேரம்
* பிரயாணத் தடங்கல்கள், சுபகாரியத்தில் கர்மவினைப் பின்னல்கள் ஏற்படும் நேரம்
* அமிர்த சக்திகள், சித்த சக்திகள் மறையும் நேரம்

நெய்க்கொட்டாமரம்
திடியன்மலை

* தீய சக்திகள் தலைதூக்கும் நேரம்
* நல்லன அல்லாத சக்திகள் எழும் நேரம்
* வானில், காற்றுப்பர வெளியில் நிரவியிருக்கும் தீய சக்திகள் ஆக்கிரமிக்கும் நேரமே மரண யோக நேரம் என்பதோடு, மரணயோக நேரம் என்பது,
* மிருத்யு தோஷங்களை நீக்குவதற்கான சக்திகளைத் தர வல்ல பூஜைகளை ஆற்ற வேண்டிய நேரம்
* பிராணாயாமத்தில் கும்பம் எனப்படும் மூச்சை நிறுத்தும் நேரத்தை அதிகரித்துப் பிராணாயாமம் செய்யும் நேரம்
* மிருத்யுஞ்ஜய வழிபாடு, சண்டபைரவர், தர்மராஜா, எமதர்மர் வழிபாடு எமலிங்க வழிபாடுகளுக்குரிய நேரம்
* மிருத்யுஞ்ஜய காயத்ரீ ஜபசக்திகள் விருத்தி அடையும் நேரம்
எனவாகவும் அமைகின்றது. எனவே மிருத்யு தோஷம் எழும் நேரத்தில்தாம், மிருத்யுவை வெல்ல வல்ல பூஜைகளை ஆற்ற வல்ல நேரமாகவும் அமைகின்றது.
காஞ்சிபுரத்தில் இறவாத் தானம், பிறவாத் தானம் என்று இரண்டு சிவலிங்க மூர்த்திகள் உண்டு. இவைதாம் பிரபஞ்சத்தில் மிருத்யுஞ்ஜய சக்திகளை வேண்டுவோர்க்குப் பெற்றுத் தர வல்லவை!

ராகுகால ஸ்ரீதுர்க்கை பூஜை போல, இங்கு மரணயோக நேரத்தில், இறவாத் தான, பிறவாத் தான சிவலிங்க வழிபாடு மிகவும் விசேஷமானது.
* கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்போர் நலம் பெறவும்,
* விபத்து, தற்கொலை, இளவயது மரணம் போன்ற மிருத்யு தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற குடும்பங்களில் மிருத்யு தோஷங்கள் அகன்று, நன்மைகளைப் பெறவும்,

* அடிக்கடி விமானப் பயணம் செய்வோர், டிரைவர்கள் மற்றும், விமானம், கப்பல், ராணுவத்தில் பணி புரிவோர்களும்,
அடிக்கடி காஞ்சீபுரத்தில் இம்மூர்த்திகளுக்கு மரணயோக நேரத்தில் மிருத்யுஞ்ஜய வழிபாடு செய்தல் விசேஷமானது. நெய்க்கொட்டா மரத்தில் விசேஷமான மிருதயுஞ்ஜய சக்திகள் பொலிவதால், நெய்க்கொட்டா மரத்திற்கு, குறிப்பாக, இதனைத் தலவிருட்சமாகக் கொண்ட ஆலயத்தில் உள்ள நெய்க்கொட்டா மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுதல் வேண்டும்.
இத்தகைய மரண யோக வழிபாடுகளை நிறைவேற்றி மிருத்யுஞ்ஜய சக்திகளை விருத்தி செய்து கொள்வீர்களாக!

சுகசுகாம்ருத பிரதோஷம்

மிகவு அரிதிலும் அரிதாக வளர்பிறை, புதன், த்ரயோதசி, அனுஷம், சித்தயோகம், கௌலவ கரணம், தைதுல கரணம், சுபயோகம், ஜீவன், நேத்ரம் இரண்டும் முழுமையாக 2, 1 - இத்தகைய சுபயோக, சுபகரண, சுபவார சக்திகள் அனைத்தும் கூடிய சுபமங்கள நாட்கள் அமைவது உண்டு.
இத்தகைய சுபமங்கள சக்திகளுடன் பூரிக்கும் பிரதோஷத்திற்கு சுகசுதாம்ருதப் பிரதோஷம் என்று பெயர். இத்தகைய அபூர்வமானப் பிரதோஷ நாளில்தாம் ஸ்ரீச்யவன மகரிஷி, தவக் கூட்டில் இருந்து வெளி வருவார். எத்தனையோ மகரிஷிகளைப் பற்றிப் பல வரலாறுகளும் அற்புதங்களும் இருந்தாலும், ஸ்ரீச்யவன மகரிஷியைப் பற்றி எந்தக் குறிப்பையும் நாம் காண்பது மிக மிக அரிதே.
ஸ்ரீச்யவன மகரிஷியானவர் எங்கு வனவாசம், தவம், யோக நிலை பூண்டுள்ளார் என எதையுமே அறிய இயலாது. திடீரென ஓரிடத்தில் தோன்றுவார். பிறகு மறைந்து விடுவார். மேற்கண்ட சுப அம்சங்கள் நிறைந்த நாளில், பிரதோஷம் கூடுகையில், ஸ்ரீசயவன மகரிஷி, பூலோகத்தின் பல இடங்களிலும், தம் தபோ பலன்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும். இதனையே மகத்தான அறக்கட்டளையாகக் கொண்டு, தம்முடைய தபோ பலன்களில் பெரும் பங்கை, பூலோக ஜீவன்களுக்கு நல்கிட, ஸ்ரீச்யவன மகரிஷி சுகசுகாம்ருத பிரதோஷ நாட்கள் போன்ற சுபமங்கள நாட்களில் பூலோகத்திற்கு வருகிறார்.
குறித்த நாட்களில், குறித்த இடங்களில், பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தம் தவப் பலன்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மகரிஷிக்குமான இறைக் கட்டளையாகும்.
இதே போல மானுடர்களும், தாம் தினந்தோறும் ஜப, தவம், தியானம் புரிந்து பெறும் தம் தபோ பலன்களின் ஒரு பகுதியையாவது, மாதத்தில் ஒரு நாளேனும், குறிப்பாக, பௌர்ணமி அருணாசல கிரிவலத்திலும், அவரவர் நட்சத்திர நாளிலும், நட்சத்திரத் தலம் அல்லது நட்சத்திர லிங்கத்தின்பால் அர்ப்பணித்தல் மிகவும் விசேஷமானது.
பிரதோஷ நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு வலம்புரிச் சங்கில் கங்கை, காவிரித் தீர்த்தம் எடுத்து, துளசி, வில்வம், வாழை மரம், மா, பலா விருட்சத்தடியில், தம்முடைய பூஜா பலன்களில் ஓரளவுப் பகுதியையாவது, பிற ஜீவன்களின் நல்வாழ்வினுக்காக அர்ப்பணிப்பதாகப் பிரார்த்தனை செய்து, ஸ்ரீச்யவன மகரிஷியிடம் அர்ப்பணிப்பதாகச் சங்கல்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் உள்ளங்கையில் மஞ்சள், சந்தனம் தடவி, பிரதோஷ பூஜையில் பங்கு பெறுதல், அவரவர் பக்தி நிலைக்கு ஏற்ப ஸ்ரீச்யவன மஹரிஷியின் தரிசனத்தைப் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீஅதிகார நந்தி தென்காசி

ஸ்ரீச்யவன மஹரிஷியின் தரிசனம் அல்லது ஸ்பரிசம் பட்டதாக எவ்வாறு ஒருவர் அறிதல் கூடும்? பிரதோஷ நேரத்தில், காணுதற்கரிய பொருளை, காட்சியைக் காணுதலின் மூலம் இதனை நன்கு உணர்ந்திடலாம். ஸ்ரீச்யவன மஹரிஷியின் தரிசனமே மிகவும் அபூர்வமானது என்பதால் அவர் விஜயம் செய்யும் இடங்களில் அபூர்வமான பொருள், திரவியம், காட்சி, இயக்கமும் தென்படும்.
* உதாரணமாக, யானையே இல்லாத இடத்தில் யானை தரிசனம்,
* உலவாக் கிளி, பஞ்சவர்ணக் கிளி போன்ற அபூர்வமான பிராணிகளின் தரிசனம்,
* மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படாத போது, திடீரென்று மழை பெய்தல்,
* அபூர்வமான தரிசனங்களுடன் சுவாமி புறப்பாடு,
* விண்ணில் திடீரென்று புதிய நட்சத்திரத் தரிசனம்,
* எதிர்பாராத வகையில் சற்குருவை, சான்றோரைத் தரிசித்தல்
- என்றவாறாக அபூர்வமான, அரிய அனுபூதிகள் ஏற்படும்போது நாம் ச்யவன மகரிஷியின் தரிசனத்தைப் பெற்று விட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ள உதவும் திருநாளிது!
பொதுவாக ஸ்ரீஅதிகாரநந்தி உள்ள தலங்களில் பிரதோஷ வழிபாடு ஆற்றுவதால், தடங்கலாயுள்ள நற்காரியங்கள் நிறைவேறவும் ஆக்கப் பூர்வமான வழி பிறக்கும்.

கண்ட தோஷங்களுக்கு நிவர்த்தி

கூடா நாட்களில் சுப காரியங்களை விலக்க வேண்டும் என்றாலும் பல கடுமையான தோஷங்களைக் களையக் கூடிய பூஜைகளை கூடாநாட்களில் நிறைவேற்றுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம் என்பதும் உண்மையே. உதாரணமாக, குருவாரமாகிய வியாழனும், கேட்டையும் சேர்வது கூடாநாள் என்பதால் வியாழனையோ, கேட்டை நட்சத்திரத்தையோ குறை கூறுதல் கூடாது. பொதுவாக சமுதாயத்தில் ஆயில்யம், பூராடம், கேட்டை போன்ற நட்சத்திரங்களைப் பற்றித் தவறான எண்ணங்கள் நிலவி வருகின்றன. ஒவ்வொருவருக்கும் மதிகாரகராகிய சந்திர மூர்த்தியின் அருள் ஒவ்வொரு விநாடியுமே தேவைப்படுகின்றது அல்லவா! சூரியன் முதல் ராகு, கேது வரை அனைத்து நவகிரக சக்திகளும் தேவைப்படுகின்றன. அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுமே ஒவ்வொன்றாக வருவதால், அனைவருமே நட்சத்திரக் காலத்தில் தான் வாழ்கின்றோம். தினமுமே நட்சத்திர உதயம், நட்சத்திர அஸ்தமனமும் உண்டு. எனவே அனைத்து நட்சத்திர அனுகிரகங்களையும் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு கிழமைக்கும் ஆரம்பம், முடிவும் உண்டு. இவை யாவும் முதலும் முடிவும் அனைத்திற்கும் உண்டு என்பதையே உணர்விக்கின்றன.

உறக்கம் என்பதையே “மரணத்தின் ஒத்திகை” என்றே நம் பெரியோர்கள் உரைக்கின்றனர். கஷ்டங்கள் அதிகமாகும் போது பலரும் “நான் தினமும் செத்துப் பிழைக்கின்றேன்” என்று சொல்வதுண்டு. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறுவோரும், நித்ய கண்டம், பூரண ஆயுசுடன் வாழ்வதாகக் கூறி, தினசரியுமே பல கண்டங்களைக் கடப்பதாக உணர்வர். ஜாதக ரீதியான இத்தகைய கண்டங்கள் பலவற்றையும் கடப்பதற்கு உதவும் பூஜைகளை ஆற்ற வேண்டிய காலமாக வியாழனும் கேட்டையும் சேரும் பிரபலாரிஷ்ட யோகக் காலம் அமைகின்றது.
கடவுளை வழிபட 24 மணி நேரமும், 60 நாழிகையும் ஏற்றதே. இறைவனை வழிபடுவதில் இரண்டு வகைகள் உண்டு.
1. தனக்காக அல்லாது இறைவனை வழிபட வேண்டும் என்ற பிறவிக் கடமைக்காக, இறைவனைப் பூஜிப்பது. இதற்கு எவ்விதக் கால நிர்ணயமும் கிடையாது.
2. தன் குறைகளைத் தீர்க்க வேண்டிப் பூஜிப்பது, இவ்வகையில் குறித்த காலத்தில் குறித்த பலன்களைப் பெறலாம் என்ற பூஜை நியதிகளும் உண்டு.
பிரலாரிஷ்ட யோக நேரத்தில் எங்கும் வெளிச் செல்லாது, அல்லது ஆலயத்தில் இருந்து கொண்டு, இடைவிடாது பூஜிப்பதால், ஜாதக ரீதியாகப் பல கண்டங்களைப் பெற்றிருப்போர்க்குக் கண்ட தோஷங்கள் தணிய கூடாநாள் பூஜை மிகவும் உதவும்.
வியாழக் அன்று அமையும் கூடாநாள் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விரத முறையாக நாள் முழுவதும் மஞ்சள் நிற ஆடை அணிந்து, அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு ஒரு சிறிதும் நீர் அருந்தாது நிர்ஜலமாக விரதமிருப்பது நன்று. இயலாதோர் இளநீர் மட்டும் அருந்திடலாம்.

கேட்டை தேவி நல்ல மன திடகாத்திரத்தையும், நல்ல மனோ வைராக்யத்தையும் தர வல்லவள்
“பாரதி பார்கவி மந்திரமய கோபுர
கேட்டை ப்ரதாயிணி சஹாய க்ருபே!”
(கேட்டை நட்சத்திர தேவித் துதி)
காரட், தேங்காய், வெள்ளரிக் காய், மாங்காய், பழங்கள் போன்ற அப்படியே உண்ண வல்ல காய், கனிகளைப் படைத்துத் தானமளிப்பதுடன், தக்க மேல் சட்டை, மேலாடை இன்றி இருக்கும் ஏழைகளுக்குத் தக்க உடைகளை அளிப்பதால் சிலவகை கண்ட தோஷங்கள் நிவர்த்தியாக வழி பிறக்கும்.

ஸ்ரீவேத வியாசர்

பலரும் வியாசர் தொகுத்த வேத மந்திரங்கள், தேவ மொழி எனும் சமஸ்கிருதத்தில் (வடமொழி) இருப்பதாக எண்ணுகின்றனர். தேவமொழி தோன்றுவதற்கும் முன்னதாக, காலமறியா அநாதியாகவே, வேதஸ்வரங்கள் இறைவனிடம் இருந்தே தோன்றியதாக, வேதமந்திரங்கள் திளைக்கின்றன. எனவே, வேத சக்திகளில் இருந்து இறைவனின் வலக் கண்ணில் இருந்து முதலில் சித்தர்களின் மொழியாகத் தமிழ் மொழி தோன்றி, பிறகு ஈஸ்வரனின் இடக் கண்ணில் இருந்து தேவமொழி தோன்றியது.
வேத சக்திகள் நிறைந்த தமிழ் மறைகளான தேவாரம், திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா, திவ்யப் பிரபந்தம் போன்ற பலவும் வியாசரின் அனுகிரக சக்திகளால் விளைந்தனவே! இவற்றை இயற்றிய பலரும் வியாச குரு அனுகிரக அம்சங்கள் நிறைந்தவர்களே! வேதங்களில், தமிழ் மாமறைகளில் மட்டுமல்லாது, சத்குரு தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், அருணாசலக் கவிராயர் போன்றோருடைய கீர்த்தனைகளிலும், வியாச மகரிஷி அருளிய வேத சக்திகள் நன்கு திரண்டு பொலிகின்றன.
தமிழ் வருடத்தில் நான்கு மாதப் பௌர்ணமிகள், வேத சக்திகள் நிறைந்தவையாய்ப் பொலிகின்றன.

திருவிடைமருதூர்

* ஆ காகமப் பௌர்ணமி - ஆனி மாதம்
* கா ஞ்சனப் பௌர்ணமி - மாசி மாதம்
* மா தவீயப் பௌர்ணமி - கார்த்திகை மாதம்
* வை ச்ரவாயதனப் பௌர்ணமி - வைகாசி மாதம்
இவற்றின் முதல் எழுத்துக்களைக் கொண்டு, நான்கு ஆகாமாவைப் பௌர்ணமிகள் எனப் பெயர் வைத்தனர். இந்த நாளில் ஸ்ரீவியாசர் தொகுத்தளித்த ருக், யஜுர், சாம, அதர்வண வேத சக்திகள் நன்கு கூடிப் பரிணமித்து அருள்கின்றன.
இவ்வகையில் ஆனி, கார்த்திகை, மாசி, வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமித் திதிகள் ஆகாமாவை ஆகின்றன. ஆகாமாவைப் பௌர்ணமி தினங்களில், காலையில் உதய நேரத்தில் ஆறு, குளம், கடல், கிணறு போன்ற தீர்த்தங்களில் நீராடுதல் மிகவும் விசேஷமானதாகும். இது பித்ருக்களுக்கு ப்ரீதி தருவது.
மேல் மாடியில் தொட்டி வைத்து நீர் பெற்று நீராடுபவர்கள், முதல் நாளே நீர்த் தொட்டியில் அல்லது நீர்ப் பாத்திரத்தில், நீரில் வேத சக்திகள் நிறைந்த அரசு, புரசு, வன்னி, கொன்றை இலைகளைச் சிறிது போட்டு ஊற வைத்திட வேண்டும்.
ஜோதி விருட்சம், புண்ய விருட்சம் போன்ற ஜோதி சக்தி மரங்களின் கீழ் இத்தகைய ஆகாமாவை பௌர்ணமி தினத் தர்ப்பணத்தை அளிப்பது மகத்தான புண்ய சக்திகளைத் தரும். புண்ய விருட்சம் என்பது காண்பதற்கு அரியது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் நைனார்பட்டியில் தலவிருட்சமாக இருப்பதாகும். பலவிதமான பித்ரு தோஷங்களுக்கு ஆளாகி, பித்ரு கடனை முறையாக ஆற்றாமையால் விளைந்த பணக் கடன் பிரச்னைகள் தீர, புண்ய விருட்சத்தை இத்தகைய பௌர்ணமி நாட்களில் தரிசித்து, முறையாக 96 நாட்களிலும் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றி வர வேண்டும். தர்ப்பண பூஜை என்பது, எளிதான, பக்தியுடன் பரிமளித்துச் செய்ய வேண்டிய செலவில்லாத பூஜைதானே!
ராமேஸ்வரம், சென்னை - வியாசர்பாடி, திருவிடைமருதூர் மற்றும் சப்தரிஷிகள் அருளும் தலங்களிலும், ஸ்ரீஅகஸ்தியர், வியாசர் எழுந்தருளும் தலங்களிலும் இத்தகைய பௌர்ணமி நாட்களில் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

கடன் சுமை தணிய ...

தற்போது, சமுதாயத்தில் பெரும்பாலான குடும்பங்களில் உள்ள பிரச்னையே அளவுக்கு மீறிய கடன்கள் ஆகும். ஒருவர், வருடம் முழுதும் அமையும் 96 வகை தர்ப்பண நாட்களில் தம் மூதாதையர்களுக்கு முறையாக, எளிமையாகத் தர்ப்பணம் அளித்து வந்தால், பணக் கடன்கள் தீர சுமுகமாக வழி பிறக்கும். முறையான செலவுகளால் ஏற்பட்ட கடன்களுக்குத்தான் தீர்வுகளைப் பெற முடியும். ஆடம்பரச் செலவுகள், மது, புகை போன்ற தீவினைகளால் வந்த செலவுகள், சூதாட்டம், குதிரை ரேஸ், லாட்டரி, சூதாட்ட முறையில் ஷேர் பிஸினஸ் போன்றவற்றில், பலத்த தீவினைகள் சேர்வதால், இவ்வாறு வரும் கடன்களுக்குத் தீர்வுகள் பெறுதல் மிக மிகக் கடினமே.

இத்தகைய ஷண்ணாவதி தர்ப்பண நாட்கள் குறித்த முறையில் யோக ஸ்பரிசம் கொள்ளும்போது அதன் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும். உதாரணமாக, ஆனி மாதத்தில் சனியோடு இணைந்து வரும் வைதிருதி நாளைப் பற்றி,
சனித் தர்ப்பணம் சங்கு துவாரத்தில்
ஆனித் தர்ப்பணம் அர்கமார்கமாம்
ஞனித் தர்ப்பணம் ஙப்போல் வளைத்தே
என்ற சித்தச் சொற்பரலாடல் வழக்கு உண்டு. அதாவது,
சனிக் கிழமை, தர்ப்பண நாளாகில் சங்கு மூலமாய்த் தீர்த்தத் தர்ப்பணம்
ஆனி மாதச் சனிக் கிழமையானால் அர்க (எருக்க) இலை மேல் சங்கு நீர் ஊற்றித் தர்ப்பணமாம்
ஆனி மாதச் சனியில் வைதிருதி யோக நாள் சேர்கையில், யானை துதிக்கையை வளைக்கும் காட்சியைத் தரிசனம் கண்டவாறு தர்ப்பணம் அளிக்கும் வகையில் யானைக் கட்டம் அருகே தர்ப்பணம் என்பது இதன் அர்த்தம். எனவே வைதிருதி யோக நாளில் யானைக் கட்டத்தில் எருக்க இலை மேல், சங்கால் தீர்த்தம் வடித்துத் தர்ப்ப்பணம் மிகவும் விசேஷமானதாகும்.
ஞனி என்ற அகத்தியர் யுகத் தமிழ்ச் சொல் ஒன்று உண்டு. “ஞனித்த ஞானக் கனி” என்று யோகத்தில் கூடும் முதிர்வை உரைப்பர். முருகப் பெருமானுக்காக, ஔவையார் தம் வாயாற் சுட்ட நாவற் பழத்தை, “ஞனித்த ஞானக் கனி” என்று சித்தர்கள் போற்றுகின்றனர். இது வெறும் நாவல் பழம் மட்டுமன்று. யோகியாம் ஔவையாரின் ஸ்பரிசம் பட்டு, திருமுருகனின் தரிசனத்தையும் பெறுவதென்றால் இது “ஞனித்த ஞானக் கனி” அன்றோ!
அதாவது, ஞனித்தல் என்றால் சித்தர்கள், ஞானிகள், யோகிகள், மகான்கள் பெறுகின்ற ஞானாகாச இறை தரிசனம் என்று பொருள். எனவே, “ஞனித் தர்ப்பணம்” என்பது நன்கு கனிந்த கனிகளை, மகான்கள், சற்குருமார்களின் திருக்கரங்களில் இருந்து ஆசியாகப் பெற்று, உத்தராணி மரத் தாம்பாளத்தின் நடுவில் வைத்துத் தர்ப்பணம் அளித்தல் ஆகும். இவ்வாறு பெரியோர்களிடமிருந்து, 96 வகைத் தர்ப்பண நாட்களில், எந்நாளிலும், ஞனிக் கனி பெற்று ஆசியடைதல் மிகவும் அரிதான பாக்யமாகும்.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

தசரதருக்கு இவ்வகையில் அரிதிலும் அரிதான ஞனித் தர்ப்பணத்தை ஸ்ரீராமர் அளித்துள்ளார். வனவாசத்தில் தினமுமே நிறைய மகரிஷிகளைத் தரிசித்த ஸ்ரீராமர், தினமும் அவர்கள் அளித்த கனிகளை ஒளிர வைத்தளிக்கும் நித்தியத் தர்ப்பண சக்தி மூலமாகவே, விண்ணில் பித்ரு தேவர்கள் மற்றும் ஸ்ரீதசரதரின் தலையாய தரிசனத்தைப் பெற்றார். இவ்வாறு ஸ்ரீராமர், தசரதரின் வையாபுரிப் பித்ரு வடிவ தரிசனம் பெற்ற விருட்சமே நாவல் மரக் கிளையாகும்.
எனவே வைதிருதி யோகம் போன்ற ஷண்ணாவதி தர்ப்பண நாட்களில் நாவல் மர தரிசனம், நாவல் மரத்தடித் தர்ப்பணம், நாவல் மரம் தலவிருட்சமாக உள்ள இடத்தில் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது. நாவல் மரத்தை சாட்சியாக வைத்துத் தர்ப்பணம் அளித்தலால் விரோத உணர்வுகளுடன் இறந்தோரின் சாபங்கள் தாக்காது தற்காத்துக் கொள்ளலாம்.
ஜம்பு பழம் எனப்படும் சற்றுப் பெரிதாக கரிய நீல நிற நாவல் பழத்தை சாட்சியாக வைத்து செய்யும் தர்ப்பணத்தால், எதிர்பாராத விபத்தில் இறந்தோர், ஆவி வடிவை உகுத்து, நற்பலன்களை அடைய உதவும் மார்கத்தைப் பெறுவர். .
ஞனித்த ஞானாதீக ஞானப்ப ஞானிச்சாரம்
ஞானாதிக்க ஞாலச் சுடரே ஞானவாதூலமாக
ஞாயிற்றம்பலத்தார் ஞாயிற்றில் ஞனித்து ஞானித்தாரே
என்று ஓதித் தர்ப்பணம் அளித்தலால் நமநம என்று நமைச்சலாகப் பல திசைகளில் இருந்தும் வரும் பிரச்சனைகள் தீர உதவும்.

சமுதாய பூஜைகள் சிறக்கட்டும்

புனிதமான நம் பாரத நாடு, லட்சக் கணக்கான சுயம்பு மூர்த்திகளுடன், கோயில்களுடன் பொலிகின்றதாய், இப்பூவுலகின் ஆன்மீக மையம் என்பதாலும், விண்ணுலகப் பூஜைகளை விட, மண்ணுலகப் பூஜைக்கு மகத்துவமும் மகிமையும் அதிகம் என்பதாலும், பாரதப் புண்ணிய பூமியில் பிறந்த ஒவ்வொருவரும், இங்கு பிறக்கும் இறைபாக்யத்தைப் பூர்வ ஜன்ம புண்யவசத்தால், பெற்றமையால், சகல உலக சகோதர ஜீவன்களின் நலன்களுக்காகப் பூஜைகளை ஆற்ற வேண்டிய நித்தியக் கடமை உண்டு என்பதை உணர வேண்டும்.
“நமக்குத் தான், நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான், இவ்வகையில் எந்தத் துன்பங்களும் இல்லையே, நாம் ஏன் இத்தகைய விசேஷமான பூஜைகளை ஆற்ற வேண்டும், வெறுமனே விளக்கங்களை மட்டும் அறிந்து கொண்டால் போதுமே!” - என ஒரு போதும் எண்ணாதீர்கள்.
வருங்காலத்தில் நமக்கோ, நம் சந்ததிகளுக்கோ இத்தகைய துன்பங்கள் வாராது தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, எந்நாட்டிலும், எவர் குடும்பத்திலும், எத்தகைய பிரச்னைகளும் இருக்கலாம் அல்லவா, எனவே அவர்களுடைய துன்பங்களைக் களைய வல்ல தெய்வீக வழிமுறைகளை அவர்கள் அறியாத போது, பூவுலகின் உத்தமத் தெய்வீக பூமியான பாரத பூமியில் பிறந்த பாக்யம் பெற்றதற்காக, அவர்களுக்காக, நம் பிற நாட்டு நம் சகோதர ஜீவன்களுக்காக, மகத்தான தெய்வீகமான முறையில் பிரார்த்தனைகளை, பூஜைகளை ஆற்ற வேண்டிய, இறைலட்சியம், தெய்வீகக் கடமை ஒவ்வொரு பாரதக் குடிமகனுக்கும் நிச்சயமாக, நிறையவே உண்டு.
மாதம் ஒரு முறையாவது வீட்டில் அனைவரும் ஒரு சிறு அளவிலாவது ஹோமம் நடத்தி அளப்பரியப் புண்ய சம்பத் சக்தியை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அரசாங்க வரிகள், மழையின்மை, உணவு, தான்யப் பற்றாக் குறை, அளவுக்கு மீறிய கடன்கள் போன்றவற்றால் சமுதாயத்தில் மக்கள் வாடும் போது, பூமி வெடித்துப் பாளங்கள் உண்டாகி, மழையும் பெய்யாது, காற்று மூலமாகத் துர்நோய்கள் மிகவும் பரவும். பூமி வெடித்துப் பாளங்கள் தோன்றுவது நாட்டுக்கு அல்லதல்ல! பூமா தேவியே வேதனை அடையும் அளவிற்குப் பாவ வினைகள் பெருகின்றன என்பதே இதன் பொருள். இதனை இவ்வகையில் நன்கு உணர்ந்து, உணமையில் பூமிப் பாளங்கள் தோன்றும் இடங்களிலும் சாந்த பூமி யாகங்கள் நடத்தப் பெற வேண்டும்.
ஆலய பூஜைகள், குடமுழுக்குகள் சரியான நேரத்தில் நடைபெறாது, கும்பாபிஷேகத் தேதி மாறுவதும் நாட்டிற்கு நல்ல சகுனமல்ல. இந்த மாற்றத்திற்கு வெளிப்படையான காரணங்கள் நிறைய இருப்பது போல் தோன்றினாலும், ப்ரச்ன ஆரூடம் மூலமாகப் பெறும் கும்பாபிஷேகத் தேதியே மாறுவதானது, வாக்பலித சக்தி பங்கமடைவதைக் குறிக்கின்றது. இதுவும் நாட்டுக்கு நல்லதல்ல.
“மக்கள் செய்வது மன்னன் தலையில்” - என்ற முதுமொழி போல, மக்கள் செய்யும் பாவங்கள் யாவும் அரசை நிர்வகிப்பவர்களைச் சென்றடையும். அரசை நிர்வகிக்கின்றவர்கள் செய்யும் பாவ வினைகள் ஆலயங்களில் பூஜிப்பவர்களைச் சென்றடையும் என்பது தர்ம நியதி. எனவே சமுதாய நன்மைகளுக்காக சமுதாய இறைப் பூஜையை ஆற்றுபவர்கள், பூஜிப்பவர்கள் மிகுந்த பக்தியுடன், நல்லொழுக்கத்துடன் பொறுப்புடன் கடமைச் செயலாற்ற வேண்டும்.
மேற்கண்ட சமுதாயத் துன்பங்கள் பலவும் நிவர்த்தியாகி, ஜீவன்கள் சுபிட்சம் அடையவே, பாலபத்ர பூமி யாகம் போன்ற யாகங்களைக் குறித்த நாட்களில் ஆற்றப்படுதல் வேண்டும்.
நல்லதோர் நிலப்பரப்பில், ஓர் ஏரில் இரு எருதுகளைப் பூட்டி, அவற்றைச் சுதந்திரமாக விட்டு விட வேண்டும். அவை எங்கு போய் நிற்கின்றனவோ, அந்த இடத்தில் பாலபத்ர பூமி யாகம்தனைக் குறைந்தது 12 நாழிகைகளேனும் தொடர்ந்து நடத்துதல் வேண்டும். இதனை நன்கு நிறைவேற்றியவர்களே ராஜரிஷியான விஸ்வாமித்திரர், தர்மர், தசரதர் போன்றோர் ஆவர்.
குறைந்தது 237 செங்கற்களைக் கொண்டு அரச இலை வடிவில் யாக குண்டம் அமைத்து, பசு நெய், சமித்துக்கள், தானியங்கள், உலர் கனிகள், 108 ஹோம திரவியங்கள், கனிகள் போன்றவற்றைக் கொண்டு, நல்ல குரு ஹோரை நேரத்தில் யாகம் நிகழ்த்த வேண்டும். சமுதாய நல்லற ஹோமம் ஆதலால் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஹோம ஆகுதி அளித்தல் சிறப்புடையது.
பாரேத்தும் பரந்தாமப் பரலமுதம்
பாரெங்கும் பாசுரமாய்ப் பரவிடவே
பார்த்தன், பரமன் பணிந்தேத்தும்
பரயாகம், பரயோகப் பராக்னி பணிந்தோமே!
என்று ஓதி
ஓம் ஈஸ்வராக்னி சித்தாய வித்மஹே சித்தானந்த ஸ்கந்தாய தீமஹி
தந்நோ யாகப்ரம்ம ப்ரசோதயாத்
என்ற அரிய யாகபுருட மந்திரம்தனை 1008 முறையேனும் ஓதி, யாகவேள்வி நடத்துதல் நல்ல புண்ய சம்பத்தைத் தருவதாகும். பொதுவாக நற்காரியங்களில் புண்யம், புண்ய சக்தியே விளையும். இத்தகைய யாகத்தில் புண்யமே சம்பத்தாக, பல தலைமுறைகளுக்கும் வருவதாக அமையும் என்பது உண்மை.
இத்தகைய ஹோமத்தால் நீர் நிலைகள் நன்கு நிறையும். ஜீவன்கள் பட்டினியில் வாடிச் சாகும் நிலை மறையும், அரசாங்கக் குழப்பங்கள் அகல வழி பிறக்கும். கும்பாபிஷேக வைபவங்கள் தட்டுத் தடங்கல்களின்றி நிறைவேறும்.
இத்தகைய விரிவான வேள்வி, யாகங்களை நிறைவேற்ற இயலாதபோது மக்கள் நமது கடமையாக அவரவர் இல்லத்திலாவது மாதம் ஒரு முறையேனும் சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் தம் குடும்ப உறவினர்களைக் கொண்டு ஹோமத்தை நிகழ்த்த வேண்டும் என்ற நியதியைப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam