ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஐஸ்வர்ய வித்யா சக்திகள் |
ஞானத்தையும், கல்வி அறிவையும் அருளும் தெய்வ மூர்த்தியான சரஸ்வதியாம் கலைமகளுக்கு உரிய நவமித் திதியானது வித்யாவர்த்திக் கதிர்களை நன்கு பரிமளிக்கச் செய்வதாகும். பல அற்புதமான வித்யா மூலிகா சக்திகள் நிறைந்த வித்யாவிருத்தித் தைலத்தால் விளக்கேற்றுவது, வித்யா சக்திகளைப் பரவெளியில் பரப்பி பலரும் வித்யா சக்திகள் பெற உதவுவதாகும்.
உண்மையில் 27 நட்சத்திரங்களுக்கும் நான்கு பாதங்கள் உண்டு. பாதங்கள் என்றால் பிரிவுகள் என்று பொருளன்று. எவ்வாறு ஒரு சிலந்திக்கு எட்டுக் கால்களும், மனிதனுக்கு இரண்டு கால்களும் ஒருமித்ததாக மிகவும் முக்கியமானவையோ, இது போல, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்களும் மிகவும் முக்கியமானவையே. ஒவ்வொரு நட்சத்திரப் பாதத்திற்கும் ஒன்பது ஆரங்கள் உண்டு. இவற்றின் சில கால குணாதிசயங்கள்தாம் ஜாதகத்தில் நவாம்சங்கள் ஆகின்றன.
திருஇன்னம்பர்
ஜாதக ரீதியாக, தசை, புக்தி, அந்தரம் என உட்பிரிவுகள் போல, நான்கு நட்சத்திரப் பாதங்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு. இவை யாவும், தொன்மையான ஜோதிட கிரந்தங்களில், நமக்கு இதுவரையில் கிட்டா தேவாரப் பாக்கள் போலப் பதிந்து மறைந்துள்ளன. தக்க சமயத்தில் இவை வெளி வரும்.
நவமியும் புதனும் சேரும் நாட்களில் பாத சக்தி பூஜைகள் நன்கு விருத்தியாகின்றன. இதனால்தான் சரஸ்வதி பூஜை அன்று கும்பகோணம் அருகே கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி ஆலயத்தில், சரஸ்வதியின் பாதங்களை மலர்களால் நன்கு அலங்கரித்து, வெளியே நீட்டி விரிய வைத்து, அனைவரும் கலைமகளின் திருப்பாதத் தரிசனம் பெறும்படி நல்வடிவூட்டி வழிபடுவர்.
இல்லற தர்மத்தைப் பேணியவராய், பரிபூரண மனிதராய் அவதரித்த தெய்வ மூர்த்தியாம் பரம்பொருளாம் ஸ்ரீராமர், நவமித் திதியிலேயே அவதரித்து நவமித் திதிக்கு அணி சேர்த்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணர் - அஷ்டமி, ஸ்ரீராமர் - நவமி, தசாவதார மூர்த்திகளுக்கு விசேஷமான தசமி என்றவாறாக, தெய்வ மூர்த்திகளும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், அனைத்துத் திதிகளின், நட்சத்திரங்களின் மேன்மையைப் பறை சாற்றுகின்றனர்.
“அட்டமித் தொடக்க சார்வம்
நவராம சூர்ய போதம்
தசமூல பரபிரம்ம மூலத் தஞ்சமே அடையற் பாவாய்!”
என்பது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய மூன்று தினங்களிலும் புதன், சந்திர ஹோரை நேரத்தில் ஓத வேண்டிய, அஷ்டைஸ்வர்ய வித்யா சக்திகளை அளிக்க வல்ல எளிய மந்திரத் துதியாகும்.
தசமூலாரிஷ்டம் என்ற வகையிலான பத்து வகை மூலிகைத் திரவியங்கள் சேர்ந்த மாமருந்து, நல்ல ஆரோக்ய சக்திகளை அளித்து, பல நோய்களைப் போக்க வல்லதாகும். மேலும் அபிஷேக ஆராதனைகளில் தசமூலங்களைச் சேர்ப்பதும் உண்டு. நவமி அன்று தசமூல மூலிகா சக்திகள் கூடிய பத்து உருண்டைகளை ஆலயத் தல விருட்சத்திற்கு உரமாக வைத்துப் பதிப்பதால் சந்ததி தோஷங்களால் முறிவு பட்டுள்ள குடும்ப விருத்தி சீர் பெற நற்பரிகார வழிகள் கிட்டும்.
இன்னம்பூரில் மூலத்தானத்திலேயே அகஸ்தியரை அமர்வித்து, இலக்கணம் புகட்டிய எழுத்தறிவித்த நாதச் சிவலிங்க மூர்த்திக்கு நவமி திதி, புதன் கிழமைகளில் அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துவதால் வித்யா சக்திகளை நன்முறையில் கிரகித்து அருள் பெற்றிடலாம்.
சர்க்கரை நோய் நிவாரணம் |
உலகில் “க்ஷீரம்” எனப்படும் “இனிப்பான” அமிர்தம் போன்ற தேவாமிர்த தெய்வீகச் சக்திகள் நிறைந்த திரவியங்கள் மிகச் சிலவே. இவற்றுள் தாய்ப் பால், பசுவின் பால், தேன் ஆகிய மூன்றுமே மிகவும் முக்கியமான மதுராதி மதுராமிர்தமாக, அமிர்தாதி அமிர்தமாக மிகவும் போற்றப்படுகின்றன. ஆனால், இவற்றில் நிறைந்திருக்கும் கோடானு கோடி தேவ கோடி சக்திகளின் பலாபலன்களைத் தக்க சற்குரு மூலம் அறிந்தோர் ஒரு சிலரே!
தற்காலத்தில் சர்க்கரை வியாதி என்பதான நோய் மிகவும் பெருகி வருகின்றது. பொதுவாக 40 வயதைத் தாண்டினாலே, பலருக்கும் சர்க்கரை நோய் பற்றிய பலத்த கிலி பிடித்து விடுகிறது. இதற்கு காரணம் ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீவைத்யநாத சுவாமி வழிபாடு இளமையில் இருந்தே முறையாகக் கடைபிடிக்காமையே!
செவ்வாய்க் கிழமை - ஸ்ரீவைத்யநாதர் வழிபாடு
சனிக் கிழமை - ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி வழிபாடு
செவ்வாய், ஆயில்ய நட்சத்திர நாள் - கும்பகோணம்- திருவிசநல்லூர் அருகே திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி வழிபாடு
செவ்வாய், அஸ்வினி நட்சத்திர நாள் - ஸ்ரீமருந்தீஸ்வரர் வழிபாடு
தினமும் செவ்வாய் ஹோரை நேரத்தில், மேற்கண்ட அனைத்து மூர்த்திகளையும் வழிபடுதலால் நல்ல நோய் நிவாரண சக்திகளை, நோய் தற்காப்பு சக்திகளைப் பெற்றிடலாம்.
மருத்துவத் துறையிலும் சர்க்கரை நோயின் விளைவுகளைப் பற்றி அதிபயங்கரமாக பயமுறுத்தி விடுகின்றார்கள். இது சமீப காலத்தில் தோன்றியுள்ள பயம்தானே! மதுமேகம் என்ற வகையில் இதற்கான மருத்துவக் குறிப்புகள் சித்த, ஆயுர்வேதத் துறைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்காலத்தில் சர்க்கரை நோய் இவ்வளவாகப் பெருகி விடவில்லை. காரணம் என்ன?
தற்போது பலரும் எண்ணுவது போல பாரம்பரியமாக வருவது, அரிசி, இனிப்பு வகைகளை நிறையச் சாப்பிடுதல், மனக் கொந்தளிப்பு போன்றவையும் சர்க்கரை நோய் தோன்றக் காரணமாக ஆங்கில மருத்துவ ரீதியாக உரைத்தாலும் இதனை முற்றிலுமாக குணமாக்க முடியாது என்றே ஆங்கில மருத்துவம் மிகவும் தவறாக உரைக்கின்றது. நம் முன்னோர்களில் வெகுக் குறைவானவர்களே சர்க்கரை நோயைப் பெற்றிருந்தார்கள். ஆனால், பக்க விளைவுகள் இல்லாமல் மிக மிக எளிமையான முறையில் இதற்கு நோய் நிவர்த்தியும் கண்டார்கள். ஆழ்ந்த இறை நம்பிக்கையோடு, அற்புதமான அதிசயமான முறையில் சர்க்கரை நோய்க்கு நிவாரணம் பெற்றனர்.
மேலும் அக்காலத்தில் இயற்கை உரத்தோடு, ஆறு மாத நெற் பயிர் அரிசியானதால் அக்காலத்தில் அரிசிச் சோற்றால் சர்க்கரை நோய் வராதிருந்தது. பெரியோர்களை மதித்து அவர்கள் சொற்படி நடக்கும் பாங்கு செழித்தமையால், மனக் கொந்தளிப்புகள் ஏற்படாதிருந்தது.
நீர் ஆரை விசிறிச் சித்தர், பஞ்சு மிட்டாய்ச் சித்தர் போன்ற கட்டை விரல் அளவேயான சித்தர்கள், திருஅண்ணாமலையில் சர்க்கரை வியாதிக்கு தெய்வீக ரீதியாக நன்கு நிவாரணம் அளித்தவர்கள் ஆவர். செவ்வாய் ஹோரையிலான அருணாசல கிரிவலத்திற்குப் பல நோய்களுக்கு நிவாரணம் தரும் மருத்துவ குண சக்திகள் நிறைய உண்டு.
நோயைக் குணமாக்க வல்ல நன்கு ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த உத்தம நிலைகளுடன் மருந்தின்றி, தெய்வத்தை மட்டுமே நம்பி வாழ்தலானது அரும் இறைநிலையாகும். தலைவலி என்றாலே மாத்திரைகளை உள்ளே தள்ளும் மனப்பான்மை பெருகி உள்ள கலியுலகில் இத்தகைய உத்தம நிலையை அடைதல் மிக மிகக் கடினமே!
எனவே இத்தகைய பெறுதற்கரிய உத்தம நிலைகளுக்காக ஏங்காது, நோய் நிவாரணத்திற்கான மருந்துகளோடு பௌர்ணமி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் திருஅண்ணாமலையிலோ, தேனி மலையிலோ அவரவர் ஊர் அருகில் உள்ள மலைத் தலங்களிலோ கிரிவலம் வந்து, மருந்தின் நோய் நிவாரண சக்திகளைப் பன்மடங்கு விருத்தி செய்து, மருந்தைக் குறித்த செவ்வாய் ஹோரை போன்ற மருத்துவ குண நேரத்தில் ஏற்று உண்டு வருதலால், வியக்கத் தக்க அளவில் நோய் நிவாரணம் கிட்டும்.
அதிகம் இனிப்பு உண்பதால் சர்க்கரை வியாதி வரும் என்பதை விட, குறித்த சில கர்ம வினைகளே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்பதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்தமையாலும், மேலும், அத்தகைய கர்ம வினைக் கழிப்பு முறைகளை மேற்கொண்டமையினாலும் ஆங்காங்கே ஒரு சிலரே பெற்றிருந்த மதுமேக நோயை சித்த மருத்துவப் பூர்வமாகக் களைவது மிகவும் எளிதாயிற்று.
சர்க்கரை நோய் வருவதற்குப் பூர்வ ஜென்மக் கர்ம வினைப் பலாபலன்களாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல காரணங்கள் உண்டு.
* சுயநலம் காரணமாகத் தாய்ப் பாலைச் சரியாக அளிக்காது கைக் குழந்தைக்குச் செயற்கைப் பால் அளித்து வளர்த்தல்
* பிறரிடம் இனிமையாகப் பேசாது எப்போதும் வெறுப்புடன், ஆத்திரத்துடன் பேசுதல்.
* பசுவின் மடியிலிருந்து பாலை ஒட்டக் கறந்து கன்றுக்குப் பால் விட மறுக்கின்ற பாவச் செயல்.
* பிறருடைய சொத்துக்கள், நில புலன்களை அனுபவித்தல்.
* தான் சுயமாய்ச் சம்பாதிக்காது, தலைமுறையாய் வந்தவற்றின் சொந்தக்காரர்களுக்கு அல்லது அவருடைய சந்ததிகளுக்கு, தம் மூதாதையர்களுக்குத் தக்க படையல் வழிபாடுகளை, நன்றிக் காரியங்களை அளிக்காதிருத்தல் / செய்யாதிருத்தல்
* தான் சுயமாய்ச் சம்பாதிக்காது, பிறரிடம் இருந்து வந்ததற்கு நன்றி கூட இல்லாது ஒன்றும் செய்யாமல் ஏமாற்றுவது
* கோயில் சொத்துக்களை தக்க வாடகை, குத்தகை இன்றி, குறைந்த தொகையே கொடுத்து அதர்மமாக அனுபவித்தல்
போன்றவை சர்க்கரை நோய்க்கான பூர்வ ஜன்மமாயும், தற்போதையப் பிறவி பாக்கிகளாகவும் உள்ள ஆன்மீக மூலக் காரணங்களுள் சிலவாகும்.
எனினும், மருந்தின்றி குணம் பெற வல்ல, ஆழ்ந்த இறை நம்பிக்கை இன்னமும் நன்கு மலராத நிலையில், இவை ஒவ்வொன்றுக்குமான தக்க பரிகாரங்களைச் செய்து வருவதோடு, குறித்த இயற்கை மற்றும் ஆங்கில வகை மருந்துகளையும் உண்டுதான் வர வேண்டும்.
அனைத்தும் இறைவனின் சித்தம் என்ற பரிபூரணமான, புனிதமான ஆழ்ந்த நம்பிக்கையுடன் உத்தம நிலையைத் துய்ப்போர் மட்டுமே எவ்வித மருந்துகளும் இன்றி, இறைவனை நம்பியே வாழ்ந்திட முடியும்.
தினமும், ஆலயத்தில், அபிஷேக ஆராதனைகளுக்காக,பசும்பாலும், தேனும் அளித்து வந்தால் சர்க்கரை நோயின் தன்மைகள் தாமாகவே குறைவதைக் கண்கூடாகக் காணலாம்.
அழகு குறைந்து விடுமோ, பலவீனம் ஆகிவிடுமோ என்று தவறாக எண்ணித் தாய்ப் பாலைச் செயற்கையாக வற்றச் செய்யும் பெண்களின் குடும்பத்தில், சர்க்கரை நோய் நிச்சயமாக வரும்.
இவற்றுக்கு எல்லாம் பரிகாரமாக, க்ஷீர விரதம் என்னும் நாளில் தொடங்கி,
*கைக் குழந்தைக்குத் தாய்ப் பால் அளிக்கின்ற ஏழைத் தாய்மார்களுக்கு மருந்து, நல்ல காய்கறி உணவு வகைகள், சத்து வகை உணவுகளை அளித்தல்
* நிறைய பசும்பாலை பாலை அபிஷேகத்திற்காகத் தொடர்ந்து கோயிலுக்கு அளித்தலும்,
* வசதி இல்லாத ஆலயங்களுக்கு, அபிஷேக ஆராதனைகளுக்காக, பசுக்களைத் தானமாக அளித்தலுமாகிய நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வர வேண்டும்.
* சர்க்கரை நோயைத் தீர்க்க வல்ல அம்பிகையாக, கும்பகோணம் திருவிசைநல்லூர் அருகே திருக்கற்குடி அருந்தவ நாயகி அருள்கின்றாள். இரு அம்பிகையர்கள் அருளும் தலம். இவ்வாறு இரண்டு அம்பிகைகள் உள்ள தலங்களில் க்ஷீர விரத நாட்களில் அம்பிகையர்க்கு நிறையத் தேனபிஷேகம் செய்து வருவதுடன், உங்களுக்கு எந்த வகை இனிப்பு பிடிக்குமோ அல்லது சர்க்கரை வியாதி காரணமாக எந்த இனிப்பை உண்ண முடியவில்லையோ இவற்றைத் தொடர்ந்து தானம் அளித்து வருவதால், சர்க்கரை வியாதியின் கடுமைத் தன்மைகளைத் தணித்து விடலாம்.
கணவன் மனைவி ஒற்றுமை துலங்க ... |
ஒரு வருடத்தில், பெரும்பாலும் 24, 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. ஆனால் பலராலோ, ஒரு வேளை உணவைக் கூடக் கைவிட முடியாது, ஒரு நாள் விரதம் கூட இருக்க இயலாது தவிக்கின்றனர். அந்த அளவிற்குச் சிறு அளவு தியாகத்தைக் கூட ஆற்றிடத் தயங்குகின்றனர்.
ஒரு நாளைக்கு நான்கைந்து வேளைகள், சூடான, குளிர்ச்சியான பானங்கள் எதையாவது அருந்திக் காண்டு, உடல் ஆரோக்யத்திற்கு நலிவு தேடிக் கொள்கின்றனர். என்று தணியும் இந்த காபி, டீ, தாகமும், மோகமும்? என்று அகலும் இந்த மது மோகமும்?
சமுதாயத்திற்கு இழிவு தரும், குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பாழ்படுத்தும் இந்த மதுபானப் பழக்கம் ஏற்படக் காரணமாக இருந்து, லட்சக் கணக்கான குடும்பங்கள் சீர் கெட மூல காரணமாக இருக்கும் அனைவருமே கொள்கை நிர்ணயிப்பு, தயாரிப்பு, விற்பனை - மதுத் தொழிற்சாலைகளில், கடைகளில் பணி புரிதல் - என அனைத்துத் துறையினருக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் சொல்லொணாப் பாவச் சுமைகள் சந்ததி, சந்ததியாக வந்து சேர்ந்து வருத்தும் என்பதை உலகெங்கும் அனைவருக்கும் நன்கு உணர்த்துதலும் அனைவருடைய கடமையே.
மாதம் ஒரு நாளேனும் அனைவரும் முழுமையாக விரதம் இருக்க வேண்டும். இது ஏகாதசி நாளாக இருப்பின், உடல், மனம், உள்ளத்தின் வளத்திற்கு இது மிகவும் உதவுவதாகும். தீய வழக்கங்களுக்கு அடிமையாகாது காக்க உதவும்.
உடல் நோய், கடுமையான அலுவல்கள், உடல் வாகு, பணிபுரியும் இடம் போன்ற காரணங்களால் முழுமையான ஏகாதசி விரதத்தைப் பூண இயலாதோர், துளசி / வில்வத் தீர்த்தம் / சிறிது பால் / இளநீர் /ஏதேனும் ஒன்றைச் சிறிது மட்டும் அருந்தியும், அல்லது ஒரு வேளை/ இரு வேளை உண்ணாதும், பழம் மட்டும் உண்டும் இவ்வாறாக எவ்வகையிலேனும் ஏகாதசி விரதமிருந்து பழகுதல் வேண்டும்.
திதி என்பது பூமியிலிருந்து சூரிய, சந்திர கிரக இடைத் தூரத்தைக் குறிக்கின்றதல்லவா! ஏகாதசித் திதியில்தான், வான சாஸ்திர ரீதியாகவும், நவகிரகங்கள் மற்றும் இதர கோள்களின் வானியல் இயக்கங்களால் நம் உடல் நாளங்களோடு மிகவும் நெருக்கமான தொடர்புடைய நாளாகவும் அமைகின்றது.
விண்ணில் ராக்கெட் செலுத்துவது என்பது ஆன்மீகமாக ஏற்புடையதல்ல! வானியற் பொருட்களின் இயக்கங்கள் பாதிக்காத அளவில் விஞ்ஞானப் பயிற்சிகள் அமைய வேண்டும். இல்லையெனில் அந்தந்த நாட்டிற்குப் பலவிதமான இயற்கைச் சேதங்கள், நஷ்டங்கள், கஷ்டங்கள் வானவேதைகளின் சாபங்களாக வந்து மிகும்.
ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் ஒவ்வொரு பகுதியில் நவகிரக இயக்க சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சில நாளங்கள், வானத்தில் கிரக அசைவுகளுக்கு ஏற்ப இடமாற்றம் கொள்கின்றன. எனவே ஒவ்வொரு நிமிடமும் விண்ணில் ஏற்படும் கோள இயக்க மாறுதல்கள் நம் உடல் நாளங்களில் பல மாறுதல்களை, விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன என்பதும் உண்மையே. இதனால் தான், தினமுமே ஒவ்வொரு நிமிடமும் எந்த மனிதனின் மன உடல் அம்சங்கள், குணாதிசயங்கள், உடல் உறுப்புச் செயல் நிலைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, மாறிக் கொண்டே இருக்கும்.
நம் உடலின் 72000 நாளங்களும், ஒவ்வொரு அங்க அமைப்பும், குணாதிசயங்களும் பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் அமைபவையே. எனவே, ஒரே மாதிரியாக குணாதிசயங்களுடன் இன்னொருவர் இருப்பதில்லை. ஆனால், நவாம்சத் தத்துவப்படி ஒரே உருவை உடைய ஒன்பது பேர்கள் நம் பூமியிலும் இதைப் போன்ற எண்ணற்ற பூமிகளிலும் அமைவது உண்டு.
மேலும், பல கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வந்துள்ள பல கிரக வாசிகளும் மானுடர்களைப் போல வடிவைப் பெற்று, நம்முடைய பூமியில் தற்போதையக் கலியில் மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கலந்துள்ளனர். எனவே, பூலோக மக்கள் தொகை எனத் தற்போது விஞ்ஞானப் பூர்வமாக அளிப்பது சரியல்ல. கண்ணுக்குத் தெரியாத, விஞ்ஞான அறிவிற்குப் புலப்படாத பல நுண்ணிய தெய்வீக ரகசியங்கள் இவ்வாறாக இதில் நிறையவே உண்டு. தக்க சற்குரு மூலமாகவே இவை யாவும் அறியற்பாலன.
பிற வானியல் கோள்களில் இருந்து சில வகை எதிரிணி வகையினர் மனித வடிவில் நிறையவே பல நாடுகளில் வந்து கலந்துள்ளனர். இது மனித குலத்திற்கு நல்லதல்ல! அசுர சக்திகளின் திரட்சி இவை! மனித குலம் ஒற்றுமையாய் இருந்து ஆன்மீக ரீதியாக இத்தகைய எதிரிணிகளை வெற்றி கொள்ள வேண்டும்.
இத்தகைய சத்யப் பூர்வமான இறைப் பகுத்தறிவால் உணர வல்ல ஆன்மீக விஷயங்களெல்லாம் தற்போதைய விஞ்ஞான அறிவால் ஏற்கக் கூடியனவா? வருங்காலத்தில் படிப்படியாக இவை விஞ்ஞானத்திற்கு நன்கு புலப்படலாகும். எனினும் நம்பிக்கை உள்ளோர், இப்போதிருந்தே சமுதாயக் காப்பு சக்திகளை நன்கு விருத்தி செய்து ஜீவன்களைக் காத்திட, விஷ்ணுபதி, பிரதோஷ பூஜை, அஷ்டமி திதி பைரவ பூஜை போன்ற சமுதாய நல இறை வழிபாடுகளை, சத்சங்கப் பூர்வமாக, ஜாதி, மத, இன பேதமின்றி முனைந்து மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, ஜோதிடர்கள் யாவரும் ஏகாதசி திதியன்று பரிபூரணமான - ஒரு துளி நீர் கூட அருந்தாத வகையில் - நிர்ஜல விரதமிருந்து, மறு நாள் துவாதசித் திதி காலையில் நெல்லி முள்ளி, அகத்திக் கீரை மட்டும் உண்டு வந்திடல் இதனால் கிரகப் பூர்வ ஞானம் நன்கு பெருகுகின்றது.
ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!
12 என்ற எண் ஞான சக்திகளைக் கொண்டதாகும். இதனால்தான் 12 கரங்களுடன் முருகன் ஞானஸ்கந்தராக அருள்கின்றார். ஜாதகத்திலும் பன்னிரண்டாம் இடத்தில் கேது மூர்த்தி இருப்பது, ஞான சக்திகளைக் குறிப்பதாகும்.
எனவே, அமாவாசையிலிருந்து வரும் 12வது துவாதசி திதி ஞான விருத்தித் துவாதசியாகவும்,
பௌர்ணமியிலிருந்து 12வது திதி ஞான ஸ்திரத் துவாதசியாகவும் விளங்குகின்றது.
துவாதசித் திதி அமையும் நேரமும், அதனுடன் கூடும் பிற கால அம்சங்களும் மிகவும் முக்கியமானவை.
புதனும் துவாதசி திதியும் சேர்ந்து வருவது நல்ல ஞான சக்திகளை அளிக்கும். எனவே, துவாதசித் திதியின் ஞான பூஷண சக்திகளைப் பெறுதற்கு உறுதுணையாக இருப்பது அதற்கு முன் வரும் ஏகாதசி திதியில் விரதம் பூண்டு பெறும் பலாபலன்களாகும்.
உண்மையில் விரதம் என்றால் பகுத்துப் பலருக்கும் அளித்தல் என்று பொருளாகும். ஏகாதசி மூலமாக. உண்மையிலேயே மிகவும் எளிமையாக, சமுதாய மக்களுக்காக ஜாதி, மத, இன, குல பேதமின்றி அரிய சேவைகளை ஆற்ற விரும்புவோர், மிகவும் எளிதாக, எவ்விதப் படாடோபமும் இன்றி நல்ல மனோ வைராக்கியத்துடன் ஆற்ற வேண்டிய ஆன்மீகப் பணிகள் நிறையவே உண்டு.
ஏகாதசி நாட்களில்
நிர்ஜல ஏகாதசியாக, பல்லில் நீர் கூடப் படாது உண்ணா விரதம் இருத்தலும், உடல் நலிவு நிலை கருதிடில் ஏதேனும் சிறிது நீர் வகை ஆகாரம் மட்டும் அருந்தியும் எவ்வகையிலேனும் விரதம் பூண்டு, இதன் பலாபலன்களை, ஏகாதசி விரதம் பற்றி அறியாதோர், விரதம் பூண இயலாத ஏழை எளிய மக்களையும் சென்றடைய பூஜை, விரதச் சங்கல்பம் மேற்கொண்டு, தாங்கள் நன்முறையில் ஏகாதசி விரதம் பூண்டும்,
இவற்றை ஆற்ற இயலாதோர் தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைத் தானமாக அளித்தும், குறைந்தது 11 வகை பெருமாள் மூர்த்திகளைத் தரிசித்தலும் மிகச் சிறந்த பூஜை மார்கமாக, அறப் பணிகளாகின்றன.
மறு நாள் துவாதசித் திதியில், காலையில் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் காய்ந்த நெல்லிகளாலான நெல்லி முள்ளிப் பச்சடி, மசித்த அகத்திக் கீரை உண்டு விரதத்தை நிறைவு செய்திடலாம்.
பெருமாள் லோகத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரிநாம பரிவர்த்தனர்கள் எனும் உத்தமர்கள் இவற்றை ஏற்று, ஏகாதசி பலன்களை அவரவர் விரத பக்தி நிலைக்கு ஏற்ப அருள்கின்றனர். பலாபலன்களை எதிர்பார்க்காத ஏகாதசி என்றால் மிகவும் விசேஷமான ஏகாதசியாகும். ஆனால், மனித மனம் ஆயிற்றே, பலாபலன் இன்றி எந்த விரதத்தையும் ஆற்றிட மனம் ஏற்காதே, என் செய்வது? முயற்சி செய்திடுக!
கணவன் மனைவியாக ஒற்றுமையுடனோ அல்லது அவ்வளவாக ஒற்றுமை இன்றி வாழ்ந்தாலும், எத்துணையோ விஷயங்களில் மனதாரப் பரிமாறிக் கொள்ள இயலாது போய் விடும். உதாரணமாக, மாமியார் அளிக்கும் கொடுமை, வசவுகளை அப்படியே கணவனிடம் உரைக்கவும் முடியாது. இத்தகைய விஷயங்களையும், மனதாரப் பரிமாறி, குடும்பத்தின் தீபப் பிரகாசமாய் நல்ஒற்றுமை நன்கு சுடர் விட இத்தகைய ஏகாதசி விரதம் உதவும்.
எவ்விதச் சங்கல்பமும் இன்றி, சர்வ ஜீவநலன்களுக்காக ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்போர்க்கு, ஸ்ரீஹரிநாமப் பரிவர்த்தன உத்தமர்களே குடும்ப ஒற்றுமைக்காக மனமுவந்து அளிக்கும் ஏகாதசி விரத பலாதியான நல்வரம் இது.
ஏகாதசி விரதத்தையும், வழிபாட்டையும் சிறப்புடன் ஆற்ற வேண்டிய பல தலங்களுள் ஒன்றே திருச்சி - கரூர் அமராவதி ஆற்றங் கரையில் உள்ள ஸ்ரீஅபயரங்கநாதர் ஆலயமாகும். ஸ்ரீமார்கண்டேயர் இவ்வகை ஏகாதசி விரதங்களைக் கடைபிடித்து, விரதப் பலாபலன்களை சகல ஜீவன்களின் நலன்களுக்காக, ஸ்ரீஅபய ரங்கநாதரின் திருவடிகளில் அர்ப்பணித்துள்ள திவ்யமான வைணவத் தலம்.
எனவே ஏகாதசி விரதம் பூணுவோர் ஒரு முறையேனும் இங்கு கரூரில் ஸ்ரீஅபயரங்கநாதரை வழிபடுதல் வேண்டும். பெற்றோர்கள், கணவனை நம்பி வாழ்ந்தோர், விதிப் பயனால் இவர்களுடன் வாழ்ந்து தற்போது அபலைகளாக இருப்போர் இங்கு ரங்கநாதா சரணம் என அடைக்கலச் சரணாகத நிலையில் பக்திப் பெருக்குடன் வழிபட்டு வருதலால் வாழ்க்கையில் நல்ல ஸ்திரம் பெறுவதற்கான நன்னிலைகளைப் பெறுவர். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி.
வியாபார எதிரிகள் மறைய .... |
துவாதசி திதி, லக்ஷ்மீ கடாட்சம் நிறைந்ததாய், திருமகளுக்கு உரித்தானது என நாமறிவோம். ஆனால் வெறும் பண வரவு மட்டும் லக்ஷ்மீ கடாட்சமாகாது. வந்த லக்ஷ்மீ கடாட்சம், சந்ததி சந்ததியாய் நிலைத்து நின்று தழைப்பதும் லக்ஷ்மீ கடாட்ச அம்சமாகும்.
தனக்கு வர வேண்டியது நிசசயமாக வரும். ஆனால் இதற்கான, தர்ம ரீதியான மனிதப் பிரயத்னம் நன்கு எடுத்து முயன்று வாழ வேண்டும் என உணர்தலும் திருமகள் கடாட்சத்திற்கான ஆதார மூலசக்திகளுள் ஒன்றாகும்.
மனிதர்களாகிய நம் அனைவருடைய உடலிலும் எண்ணற்ற மந்திர சக்திகள் பொதிந்துள்ளன. இவற்றை ஆக்கப்படுத்த உதவுபவையே பூஜைகள், அருணாசல கிரிவலம், திருப்பதிப் பாத யாத்திரை போன்றவை! இதனை உணர்விப்பதே வாமன அவதார புராண அனுபூதியாம்!
கலியுக இறுதியில் தோன்ற இருக்கும் கல்கிப் பெருமாள் மூர்த்தி, கலியுகத்தின் அசுர சக்திகளையும் வென்று, புனிதமான தர்ம சக்திகளை நிலை நிறுத்துவதற்காக, ஜீவன்கள், திருமால் அவதாரப் பொலிவுகளை ஆராதிக்கும் பொன்னாளுமாய், கல்கி துவாதசி திதித் திருநாள் மலர்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு நாளுக்கும் எண்ணற்றப் புனித மகத்துவங்கள் உண்டு. தக்க சற்குரு மூலம் அறிந்து பயனடைதல் வேண்டும்.
உலகம் உருண்டை என்பதன் உண்மையான வேத வாக்கின் பொருள் யாதெனில், சித்தர்களின் வேதகால காலவேத வாக்கியமான, நடந்ததே நடப்பவையாக நடந்து கொண்டிருக்கின்றள என்பதாக, கிருத, திரேதா, துவாபர, கலியுகக் கால நிகழ்ச்சிகள் யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப் பெற்றதாய். விதிப் பூர்வமான சம்பவங்களாக, அனுபூதிகளாகச் சுழன்று சுழற்சியாய் நடந்து வருகின்றன என்பதை உணர்த்துவதாகும். ஆனால் பூமியின் வடிவோ உருண்டை அல்ல, லிங்கம் போல உலக்கை வடிவானதே என்பது சித்தர்களின் சித்தாந்தம். காலப்போக்கில் விஞ்ஞானப் பூர்வமாக இதனை உணரும் நன்னாளும் வரும்.
எனவே உலகத்தில் நிகழ்வதெல்லாம் ஏற்கனவே நிகழ்தலாகும் என விதிப் பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டவையே, இவ்வகையில், ஏற்கனவே நிச்சயிக்கப் பெற்றதாகவே உலகியல் அனுபூதிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர உதவுவதே கல்கி அவதார அனுபூதிகளாகும். இதனால்தான் இன்னாருக்கு இன்னார்தான் என நிர்ணயிக்கப் பெற்று அமையும் திருமணத்திற்கு முந்தையப் புனித நிகழ்ச்சியும் நிச்சயதார்த்தம் என ஆயிற்று.
கல்கி அவதார நாளன்று பெருமாளின் தசாவதார மூர்த்தங்களைத் தரிசித்தல் மனதுக்கு சாந்தத்தைத் தருவதாகும். ஏனெனில், நாம் செய்ததே நமக்கு இன்ப, துன்பங்களாக வருகின்றன என்ற ஞானக் கதிர்கள் நிறையும் நாள் இது. இத்தகைய உண்மையான காரண உணர்வுகளால்தாம் பூரணமான, உண்மையான மனசாந்தம் கிட்டும். ஆனால் மனித மனம் இந்த தெய்வீக உணர்வைத் தன் வசம் நெடுநாள் நிலை நிறுத்திக் கொள்வதில்லை! தன்னால் ஆவதே எல்லாம் என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் முகிழ்ப்பதால் இன்ப, துன்பங்களுக்கு ஊடேயே சிக்கிப் பரிதவிக்கின்றனர்.
மேருசக்கர பிரதிஷ்டையில்
திகழும் திருவிடைமருதூர்
வாமன அவதாரம், கல்கி அவதார நாட்ளில் தான் அஸ்வபூமக் கதிர்கள் பூமியில் பரிமளிக்கின்றன. இந்நாளில் குதிரைகளுக்கு அவித்த கொள், புல் அளித்திடல் சிறப்பானது. எப்போதும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பழக வேண்டி இருப்போர்க்கு இதனால், தக்க தற்காப்பு சக்திகள் கிட்டும். இரண்டடி, மூன்றடி என உள்ள குள்ளமானர்களின் தேவைகளை அறிந்து, இயன்றதை அவர்களுக்கு (நல்லனவாகத்) தானம் அளித்தலால், அவர்கள் பெறும் மன மகிழ்வில் பூரிக்கும் ஆசிகள் நமக்குப் பலவிதங்களில் துணை புரியும். பிறருடைய உதவியை, தொகையை நம்பித் தேங்கியுள்ள நற்காரியம் நிறைவு பெற இது உதவும்.
சங்கு, சக்கரம் தாங்கி உள்ள மூர்த்தி அல்லது, அமர்ந்த அல்லது கிடந்த கோலத்தில் உள்ள பெருமாளுக்கு, பாதத்தில் தாமரைப் பூக்களைச் சார்த்தி வழிபடுதலும், சக்கரங்கள், மேரு சக்கரம் பிரதிஷ்டை உள்ள ஆலயங்களில், சக்கரங்களுக்கும் யந்திர சக்திகள் நிறைந்த வெண் தாமரைகளைச் சார்த்துதலும் மிகவும் விசேஷமானது.
பெருமாள் சக்கர சக்தி பெற்ற கும்பகோணம் பாபநாசத்தை அடுத்துள்ள சக்கரப்பள்ளிச் சிவாலயத்தில் வழிபடுதலும் மிக, மிக சக்தி வாய்ந்த நல்லருளைத் தருவதாகும். விசேஷமானது.
மீதாரி தூபம் எனப்படுவதான, குங்கிலியம் நான்கு பங்கு, அகில் பொடி இரண்டு பங்கு, புனுகு, அத்தர் கோரோஜனை, ஜவ்வாது கலந்து அரைத்த சந்தனக் குழம்பைக் காய வைத்த பொடி ஆறு பங்கு இவற்றுடன் வஸ்திர காயம் செய்யப்பட்ட சாம்பிராணியுடன் சிறிது கற்பூரப் பொடியைச் சிறிது, சிறிதாக நன்கு நெருப்புத் தணலில் சேர்த்துத் தூபம் எழுப்பி, சக்கரப்பள்ளி சுவாமிக்குக் குறைந்தது இரண்டு நாழிகைகள் (48 நிமிடங்கள்) இடுவது மிகவும் விசேஷமானது. இதனால் பகைமை, விரோதம், குரோதத்துடன் வாழ்கின்ற குடும்பத்தினர், வியாபாரக் கூட்டாளிகள், ஒரே துறை வியாபார வகையினர் பகைமைச் சக்திகளில் இருந்து மீண்டு சுமுகம் பெற உதவும்.
செவ்வாய், சனிக் கிழமைகளில் ஆலயங்களில் இத்தகைய மீதாரி தூபம் இட்டு வழிபடுதல் விசேஷமானதாகும். இதனால் சுற்றி உள்ள பகைமை அகல உதவுவதுடன், மூதாதையர்கள் வீட்டில் வைத்து விட்டுச் சென்ற விக்ரகங்கள், பாத்திரங்கள், பலகை போன்றவற்றில் நிறைந்துள்ள பூஜை சக்திகளும் நன்கு ஆக்கம் பெற உதவும்.
அனந்த விரதம் |
அனந்தம் என்றால் குறைவற்ற நிறைவுடையதாக ஆக்கித் தருவதாகும். அனந்தம் என்பது எதையும் பரிபூரணமாக்கித் தருவதும் ஆகும்.
பௌர்ணமி விரத முறைகளும் பல உண்டு.
பௌர்ணமித் திதியில் தொடங்கி, பௌணர்மி நிறைவடையும் வரை
* ஒன்றும் உண்ணாது, உறங்காது தீப ஜோதி தரிசனம், தீப பூஜைகளை ஆற்றிக் கொண்டிருப்பது,
* ஆலயங்களில் நிறைய தீபமேற்றுவது,
* அருணாசலம், அய்யர்மலை போன்ற அக்னித் தலங்களில் கிரிவலம் வருதல்
* அன்ன ஜோதி பொலியும் அன்னதான தர்மக் காரியங்களில் பங்கேற்பது
- என்பதான ஒளி சம்பந்தமான பூஜைகளை, தான தர்மக் கைங்கர்யங்களை மேற்கொள்வதும் பௌர்ணமி விரத வகைகளில் ஒன்றாகும்.
அனந்த சயனக் கோலம் கொண்ட மூர்த்திகளைத் தரிசிப்பது எத்தனையோ துயரங்களுக்கு, துன்பங்களுக்கு இடையிலும், நல்ல மன ஆனந்தத்தைப் பெற்றுத் தருவதாகும். அனந்த சயனம் என்பது யோகப் பூர்வமான கோலமாகும். வெறும் உறங்கும் கோலம் மட்டுமன்று.
ஆனந்த யோகம், சயன யோகம் என்ற வகையில், ஸ்ரீரங்கநாத மூர்த்தியும், ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும், சிவ மூர்த்தியும் பல விதமான அனந்த சயனக் கோல வடிவுகளைக் கொண்டு அருள்கின்றனர். இத்தலங்களில் பௌர்ணமி ஆராதனைகளை ஆற்றுவது மிகவும் விசேஷமானது. பக்திப் பூர்வமாக வழிபட்டிட, அனந்தமான பலன்களைத் தர வல்லது.
அட்ட மாதன நாட்டியக்
கோலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான்
லால்குடி
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உரித்தான விசேஷமான மகத்துவங்கள் உண்டு. இவ்வகையில் பூரட்டாதி, உத்திரட்டாதி என இரு புரோட்டப் பத நட்சத்திரக் கால்களில் பௌர்ணமித் திதி நிலவும்போது அற்புதமான பலன்கள் பெருகுகின்றன பூரட்டாதி நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பௌர்ணமி திதி ஆரம்பித்து உத்ரட்டாதி நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பௌர்ணமி திதி நிறைவு அடைவது சிவபுரோட்டாதி பௌர்ணமி எனப்படும்.
அட்டாதி என்பதாதி
அட்டம் என ஆதியோதி
கிட்டப் புலப் புரோட்டம்
அதிபலா அதிபலாதி பல சௌபாக்யம்!
என்ற நட்சத்திர வாக்கியப்படி, எப்போதும் பல கோடி நாட்டிய தாரணைகளுடன், அட்டமாக் கோடானு கோடி என எண்ணற்ற பலாபலன்களுடன் நடராஜப் பெருமான் நாட்டிய லீலை கொண்டிருப்பதால் தான் உலகமே எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அதாவது ஆரம்ப அட்டா மாதன நாட்டியமாக, பாதங்களில் எட்டு விரல்கள் மட்டும் பூமியிற் பதிய நாட்டியமாடும் நடராஜப் பெருமான், உத்திரட்டாதி கூடிய பௌர்ணமியில்தான் பத்து விரல்களையும் பூமியிற் பதித்து அதியற்புத நாட்டியக் காட்சி தந்தார். காரைக்கால் அம்மையார் பெற்ற திவ்யக் காட்சிகளில் இதுவும் ஒன்றாம்.
இன்றும் சென்னை அருகே திருவாலங்காடு சிவத்தலத்தில், காலங் கடந்தவராய் காரைக்கால் அம்மையார் எப்போதும் நடராஜப் பெருமானின் திருநடனக் காட்சியைத் தரிசித்துக் கொண்டு இருக்கின்றார் என்பது எக்காலத்தும் உண்மையே. ஐந்து சபைகளில் ரத்தின சபை இது. கும்பகோணம் அருகேயும் மற்றொரு திருவாலங்காடு இருக்கின்றது.
அஷ்டமா அஷ்டைஸ்வர்ய சக்திகளை அருளும் திருநாளே பூரட்டாதியும், உத்திரட்டாதியும் இணையும் பௌர்ணமித் திதி.
தென்குடித் திட்டை சிவாலயம்
அனந்தம் பிரம்மா
அனந்தம் விஷ்ணு
அனந்தம் சிவமாதிபதி
அனந்தம் ஆத்மம்
அனந்தம் ஓம் ஓம்
அனந்தம் பரமாத்மம்
அனந்தம் சித்தம்
அனந்தம் பரபிரம்மம்
அனந்தப் பூரணா சோமாதித்ய
பரபிரம்ம சத்சித்ஆனந்தம்
என்ற அனந்தத் துதியை ஓதி, பௌர்ணமித் திதிப் பூஜையை, கிரிவலம் ஆற்றி வர வேண்டும்.
பௌர்ணமியில் அருணாசல கிரிவலம் வர இயலாதோர், மலைக்கோட்டை, அய்யர்மலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் ஆற்றிடுக!
இதனை ஆற்ற இயலாதோர் மானசீகமாகவேனும் கிரிவலம் ஆற்றிடுதல் வேண்டும். ஆனால் இதை முதலில் சொன்னால் பலருமே ஒரு சிறிதுமே உண்மையாக கிரிவவலத்திற்கே முயற்சிக்காது, மானசீகமான செலவில்லாத வகையையே நாடுவர். ஆனால் மானசீகமாக கிரிவலம் வருவதும் எளிதல்லவே! உண்மையாகவே காலால் நடந்து சென்றால் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் மானசீகமாகவும் கிரிவலம் வருதலே உண்மையாகவே தியான ரீதியான கிரிவலம் ஆகும்.
வாயிலார் நாயனார், பூசலார் நாயனார் இருவருமே மானசீகமாக இறைவனை வழிபட்டு ஆலயம் எழுப்பி வழிபட்ட (சித்த) நாயனார்கள் ஆவர். இந்த நாயன்மார்கள் அருளும் சன்னதியில் தியானம் காத்து, மானசீகமாக கிரிவலம் வந்து நாயன்மார்களின் அருளைப் பெறுவதற்கும் அமைந்ததே இந்த பௌர்ணமி வழிபாடாகும். இவ்வாறாக, ஒவ்வொரு பௌர்ணமித் திதியும் வாழ்க்கையில் பெறுதற்கரிய நாளாகும். ஒவ்வொன்றையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விஸ்வரூப தரிசனம் பெற வேண்டுமா ? |
பௌர்ணமித் திதி நிரவும் பகற் பொழுதில் என்ன செய்வது? இதற்கான வழிபாட்டு முறைகளும் பல உண்டு. பகல் நேர பௌர்ணமிப் பூஜைகளைப் பற்றிச் சித்தர்கள் நிறைய விளக்கங்களை அளித்திருக்கின்றனர்.
பௌர்ணமித் திதியானது பகலில் தொடங்கி இரவில் திதி முடிவது, பாதி பகல், பாதி இரவுத் திதிக் காலம், இரவில் தொடங்கி பகலில் முடிவது என்பதாகப் பௌர்ணமிக் கால வகைகளில் 108 வகைகள் உண்டு.
• அர்த்த பூர்ணிமம் என்பது பௌர்ணமித் திதி, பகலிலும் இரவிலும் சரியாக நிரவி இருப்பது
விநாயக சுப்ரமண்ய
துவார மூர்த்திகள் தவசிமடை
• பூர்வப் பூர்ணிமம் என்பது இரவில் பௌர்ணமித் திதி தொடங்கி இரவு முழுதும் நிறைந்து பகலில் முடிவது
* உத்தரப் பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவது
* பாசப் பூர்ணிமம் என்பது பெரும்பாலான திதி நேரம் பகலாகி, இரவில் சிறிது நேரம் பௌர்ணமி இருப்பது -
எனப் பல வகைகளில் பௌர்ணமித் திதி நிரவல் அமையும்.
பொதுவாக பௌர்ணமி நாள், விஸ்வரூப தரிசனம் பெற வேண்டிய நாள். தெய்வ மூர்த்திகளின் விஸ்வ ரூப தரிசனம், அதாவது பூமியிலிருந்து விண்ணளாவ எழும் தெய்வ வடிவ தரிசனம், பௌர்ணமித் திதியில் அவரவர் பக்தி நிலைக்கேற்ப நன்கு கிட்டும்.
ஆஞ்சேநேயர், அய்யனார், சங்கிலிக் கருப்பன் போன்ற மூர்த்திகள் வெட்ட வெளி மூர்த்திகளாக, பெரிய வடிவில் 20 அடிகளுக்கும் மேலான உயரமாக, விஸ்வ ரூபத்துடன் காட்சி தருவர். இவ்வாறு பன்னெடுங் காலமாக ஆராதிக்கப் பெற்று வரும் வானளாவிய மூர்த்திகளெனில் மிகவும் விசேஷமானது. இதற்காகவே ஆலய கோபுரங்களில் நிறைய தெய்வ மூர்த்திகளின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியில் உள்ள வான்வெளி மூர்த்திகளுக்கு ஆகாச அனுகிரக சக்திகள் மிகுந்திருக்கும். உங்கள் ஊரில் இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லையெனில், 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, நல்ல உயர்ந்த வேம்பு, ஆல் போன்ற தொன்மையான விருட்சங்களைத் தரிசிக்க வேண்டும்.
பௌர்ணமி முன்னிரவில் தொடங்கி மறுநாள் முன்னிரவில் முடியும்போது, இத்தகைய பகல் நேரப் பௌர்ணமியில் ஆற்ற வேண்டிய நற்பூஜைகள், நற்காரியங்கள் நிறைய உண்டு.
* பகலில் காலில் செருப்பு இல்லாமல் குறைந்தது ஒரு மைல் தூரமேனும் நடந்து ஆலய தரிசனம் செய்தல் நன்று.
* நட்சத்திர சூக்தம் அல்லது திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம், பவமான சூக்த மந்திரம் அல்லது காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி வேத மந்திரங்களை ஓதி, இறைமூர்த்திகளின் பிரம்மாண்ட உருவ தரிசன, வழிபாட்டைப் பெறுதல்,
குறைந்தது இருபதடி உயரமான மூர்த்திகளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமானது. திருச்சி வெக்காளி அம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர், கஞ்சமலை மாசானிம்மன், சயனக் கோல ரங்கநாதர் போன்ற பன்னெடுங்கால மூர்த்திகளின் தரிசனங்கள் மிகவும் விசேஷமானவை. அருகில் அமைய வேண்டும் என்பதற்காகப் புதுப் புது ஆலயங்களை எழுப்புவதை விட, பழமையான ஆலயங்களை நன்கு பராமரித்தலே நன்று.
தோல் நோய்களுக்கு நிவாரணம் |
பொதுவாக மாளயப் பட்ச நாட்களில் சிவ பூஜா சக்திகள் மஹான்களின், சித்தர்களின் ஜீவ சமாதியில் பூரிக்கும் மேலும் உருண்டையான திரவியங்களில் கிரஹாதாரண்ய சக்திகளும் நன்கு திரளும். எனவே மாளய பட்ச நாட்களில் சித்தர்களின் ஜீவ சமாதியில் பெரிய ருத்ராட்ச மாலை சார்த்திப் பூஜிப்பதுடன், கொண்டைக் கடலை, நிலக்கடலை, பாசிப் பருப்பு போன்ற உருண்டையான தானிய வகை உணவுகளைத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் இருக்க இடமின்றி மிகவும் சிறிதான இடத்தில் இருந்து அவதியுறுவோரின் துன்பங்கள் தீர வழி கிட்டும்.
தென்கயிலை வடகயிலை ஆலயங்கள்
நகர் லால்குடி
மாளய பட்சத்தின் ஒவ்வொரு நாளிலும் அந்தந்த நாளுக்குரிய எண் சக்திகள் விருத்தியாகி பெருகும் என்பது உண்மையே. உதாரணமாக, மாளய பட்ச புதன் கிழமை அன்று ஐந்து எண்ணின் சக்திகள் நன்கு பரிமளிப்பதால், எண் ஐந்தை ஒட்டிய வழிபாடுகளை நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானதாகும். ஐந்து பிரகாரங்கள், விமானங்கள், ஐந்து பைரவர்கள் (ஆவூர்) போன்றதாக ஐந்து எண் சிறக்கும் பழனி, பஞ்சவடி, பஞ்சாரண்யம் போன்ற தலங்களில், பஞ்சாமிர்த நைவேத்யத்துடன் வழிபடுதலால், மூச்சிறைப்பு போன்ற சுவாச நோய்களின் கடுமை தணிய உதவிடும்.
ஸ்ரீபஞ்சபைரவ மூர்த்திகள்
ஆவூர்
தமிழ்நாட்டுப் பெருமாள் ஆலயங்களில் ஐந்து வட்டில் பாத்திரங்களை வைத்துப் பூஜிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டில் மேற்கண்ட மாதிரியான (தாமிரம், பித்தளை, வெண்கலம்) ஐந்து பூஜைப் பஞ்ச பாத்திரங்களில் துளசித் தீர்த்தம், வில்வத் தீர்த்தம், வன்னித் தீர்த்தம், கங்கை அல்லது காவேரித் தீர்த்தம், நல்ல கிணற்றுத் தீர்த்தம், புண்ணிய நதித் தீர்த்தம் வைத்து, பஞ்ச பாத்திரத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு,
கங்கைச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சந்நிதிம் குரும்!
என்ற சுலோகத்தை 108 முறை ஓதி, பூஜித்தல் வேண்டும்.
தீர்த்த தேவதைகளைப் பூஜிக்கின்ற வழக்கம் முற்றிலுமாக மறைந்து வருகின்றது, இது தவறு. தீர்த்த தேவதைகளைப் பூஜிக்க மறந்ததால்தான் சமுதாயத்தில் நீர்ப் பஞ்சம் வருகின்றது. தீர்த்த சக்தி மங்கினால், குடும்பத்தில் குழந்தைகளுக்கு சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படும். வயதானோர்க்குத் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். எனவே அவ்வப்போது ஆலய தரிசனம் செய்கையில், தீர்த்த நீராடலையும் மேற்கொண்டிடுக. உருண்டை வடிவிலான பழங்களாலான கனி மாலையை ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி, புத மூர்த்திக்குச் சார்த்தி வழிபடுதலும், எண் ஐந்தின் வித்யாகாரக சக்திகளைப் பெற்றுத் தரும்.
தீய பழக்கங்களுக்கு அடிமையாகாது இருப்பது எப்படி ? |
துவார மூர்த்திகளாக, மூலக் கருத்தானமாகிய, கருவறைக்கு முன், பிள்ளையாரும் முருகனும் இருபுறமும் அமைந்துள்ள ஆலயங்கள் மிகவும் சிறப்புடையன. திண்டுக்கல் அருகே தவசிமடை, திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் போன்ற தலங்களில், துவார மூர்த்திகளாக, பிள்ளையாரும் முருகனும் அருள்கின்றனர். இத்தலங்களில் மூலத்தானக் கருவறை வளாகத்தில் திருக்கயிலாய சிவகிருத்ய சக்திகள் அபரிமிதமாக வர்ஷிக்கின்றன.
வாழ்வில் சிறிது, சிறிதாக வருகின்ற சங்கடமானது, அவரவருடைய கர்ம வினையின் அழுத்தத்தால் நாளடைவில் பன்மடங்காகப் பெருகி விடுகின்றது. இவ்வாறு, பெரிதாகித் துன்புறுத்தும் சங்கடங்களைக் களைவதற்கு சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பூஜையில் திரளும் பன்மடங்குக் கார்ய சித்சக்திகள்தாம் துணை புரியும். இதிலும், சங்கடஹர சதுர்த்திப் பூஜையை ஆற்றுபவர்கள், இவ்வாறு பிள்ளையாரும் முருகனும் துவார மூர்த்திகளாக உள்ள தலங்களில் உள்ள முக்கியமான கணபதி மூர்த்திக்கு, சங்கடஹர சதுர்த்தி அபிஷேக ஆராதனைகளைக் கடைபிடித்தலால், சங்கடஹர சதுர்த்திப் பூஜா பலன்கள் பன்மடங்காகின்றன.
மூன்று நிலைகளில் அருளும் தெய்வ
மூர்த்திகள், திருக்கோளக்குடி
சில காரியங்களில் அடிக்கடித் தடங்கல்கள் ஏற்பட்டு, அந்த நற்காரியங்களே பன்னெடுங் காலமாகவே கை கூடாது, அப்படியே தங்கி நிற்கும். இதில், என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் திகைப்போர்க்கு, நல்ல தெளிவான முடிவைப் பெற்றுத் தர வல்லதே - பிள்ளையார் - முருகன், துவார மூர்த்திகளாக உள்ள ஆலயத்தில் ஆற்றும் சங்கட ஹர சதுர்த்தி பூஜையின் மகிமையாகும்.
வட கைலாயம், தென் கைலாயம் என இரு கயிலாய லிங்க மூர்த்திகள் உள்ள தலங்களும் உண்டு. (லால்குடி அருகே நகர் திருத்தலம்) இவற்றில் எட்டு முறை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து, திருக்கயிலாயப் பொதிய முனியாம் ஸ்ரீஅகஸ்தியரிடம் வாதாபி கணபதியின் அருளைப் பெற்றுத் தர வேண்டியவாறே, காரியத் தடங்கல்களை நீக்க வல்ல சங்கட ஹர சதுர்த்தி பூஜையை, ஆலயத்தின் கன்னி மூலையில் அருளும் கணபதிக்கு ஆற்றிடுதலால், திருமணத்தைத் தடை செய்யும் தோஷங்கள் மிக விரைவில் நீங்கிட நல்அருள் பிறக்கும்.
விசாகம், அஸ்வினி, பரணி போன்று கிருத்திகை நட்சத்திரமும் அக்னி நட்சத்திர வகை ஆகும். அக்னி நட்சத்திர நாட்களில், மனித உடல் நாளங்களில் அபூர்வமான அக்னி நட்சத்திர சக்திகள் தோன்றுகின்றன. தேனி மலை, காஞ்சாத்து மலை, திருக்கோளக்குடி, குன்றக்குடி போன்ற முருகப் பெருமான் குடியிருக்கும் அக்னி வகை மலை ஆலயச் சுனைத் தீர்த்தத்தில் மாளய பட்ச நாளில் நீராடுதல், தர்ப்பணம் அளித்தலால் தன்னை அலைக்கழிக்கும் தீய வழக்கங்கள் அகலப் பெரிதும் உதவும்.
சந்திரனும் குளுமையான அக்னி கிரகமே! ஆம் சுடாத அக்னி வகையும் உண்டு. பகலிலும் சந்திர கிரகக் கிரணங்கள் படியும் தலங்களே சந்திரத் தீர்த்தம் மற்றும், தஞ்சாவூர் அருகே உள்ள சந்திர காந்தக் கல் உள்ள தென்குடித் திட்டை, சந்திர காந்தக் கல் மூர்த்திகள் உள்ள சென்னை அருகே முடிச்சூர் போன்ற தலங்களாகும். இத்தலங்களில் சங்கட ஹர சதுர்த்தி பூஜை ஆற்றுதலால், தன் சொற்கேளா மனைவி, பிள்ளைகள் சுமுகமாகி, குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்டு நல்வழிக்கு வர உதவும்.
மன மாசை அகற்றும் வழி |
சஷ்டித் தினத்தில் வெளிப் புற வகைகளில் நிரவி உள்ள ஆறாம் நிலைப் பகுத்தறிவுக் கதிர்கள் நன்கு பரிமாணம் கொள்கின்றன. எனவே, சஷ்டித் திதி அன்று, உண்ணாவிரதத்துடன், தேனி மலை, குன்றக்குடி, குன்றத்தூர், பழனி போன்ற முருகன் தலங்களில், கிரிவலம், முருகக் கவச மந்திரப் பாராயணம் போன்றவை மிகவும் முக்கியமானவை! மனிதன் முழுமையான பகுத்தறிவுடன் வாழ, சஷ்டி பூஜை நன்கு உதவும்.
ஒளிபடா தீர்த்தம்
வள்ளிமலை
ஈஸ்வரனுக்கும் ஓங்கார உபதேசம் அளித்தவர், பிரம்மனாம் நான்முகனுக்கு ஞானம் புகட்டியவர், ஔவைக்கு ஞானக் கனியைச் சுட்டியவர் ஆதலின் பகுத்தறிவுப் பிழம்பாக ஒளிர்பவரான முருகப் பெருமானுக்கு உரியதே சஷ்டி தினமாகும்.
பழுப்பு நிறக் கனிகளான சில வகை மாதுளை, ஆப்பிள், மங்குஸ்தான், சப்போட்டா போன்றவற்றுடன், சேனை, கருணை வகை உணவுப் பண்டங்களையும், சஷ்டி திதி, செவ்வாய்க் கிழமைகளில் தானமாக அளித்தலால் மனதை நெடுங்காலமாக அழுத்திக் கொண்டிருக்கும் (மனத்) தாங்கல்களுக்கு நிவர்த்தி பெற வழி கிடைக்கும்.
மேலும் நெருப்பில் சுட்டு உண்ணும் வகைகளான சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வேர்க்கடலை, முந்திரி போன்றவற்றை, முருகருக்கு இடப்புறம் தலை இருக்கும் வண்ணம் மயில் இருக்கும் நிலையில் அமைந்து அருளும் முருகனுக்குப் படைத்துத் தானமளிப்பதால், பெற்றோர்களிடம் பிள்ளைகள் கொண்டுள்ள பகைமை தீர்ந்து உறவு சுமுகமாக நல்வழி பிறக்கும். பகுத்தறிவில் உள்ள அறிவுக் குறைபாடே பகைமைக்கு மூலக் காரணமாகும். சஷ்டி வழிபாடு அறிவுக் குறைவுச் சங்கடங்களைப் போக்க வல்லதாம்.
காது குறைபாடுகள் தீர ... |
சப்தமித் திதியன்று, பூவுலகில் ஏழு விதமான சப்தாவரண ஜோதிக் கலா சக்திகள் நன்கு பரிமாணம் கொள்கின்றன. விண்ணில் மிதக்கும் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள், ஒவ்வொன்றிலிருந்தும் எத்தனையோ விதமான நல்சக்திகளை, நல்வரங்களை ஒவ்வொருவரும் பெற்றிட முடியும். ஆனால், இவற்றைப் பெறும் வழிமுறைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! இவற்றை அறியாத, அறிய இயலாத பாமரர்கள் என் செய்வது? கருப்பை உயிர்க்கும் உணவளிக்கும் இறைவன் இதற்கும் வழிவகை வைத்திருப்பார் அன்றோ!
கோடிக் கோடியாய் நட்சத்திரங்களைப் படைத்த இறைவன், இவற்றில் கோடிக் கணக்காய்ப் பொழியும் ஆன்ம சக்திகளைப் பாமரர்களும் பெறும் வழிமுறைகளை, தக்க சற்குரு மூலம் பெற வல்லதாயும்,
இயற்கையிலிருந்து தக்க வழிபாடுகள் மூலம் ஓரளவு பெறும் வகையிலும் நல்வழி முறைகளையும் அளித்துள்ளார். இவை எல்லாம் வெறும் படிப்பறிவால் அறிந்து பெறுவது கிடையாது. ஆழ்ந்த நம்பிக்கையால் அடையப் பெறுவதாகும்.
சப்தம் என்பதற்கும் ஏழிற்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு. ஏழு என்ற எண், மகத்தான ஒலிப் பிரவாகச் சக்திகளை உடையது. ஆம், ஒளிப் பூர்வமாக மட்டுமன்றி, ஒலிப் பூர்வமாகவும் நாம் நட்சத்திர சக்திகளை நன்கு அடைந்திட முடியும் என்பது உண்மையே!
சப்த கணபதிகள் அருளும்
லால்குடி திருத்தலம்
நட்சத்திரங்களில் இருந்து பொழியும் நல்ஜோதி சக்திகளைப் பெற்றுத் தர வல்ல நட்சத்திரப் பிரகாச ராகங்கள் சிலவும் உண்டு. சப்தமித் திதியில் இத்தகைய ராகங்களில் பாடுதலும், பிறரைப் பாட வைத்து, இசைக் கருவிகளில் இசைக்க வைத்துக் கேட்டலும், பல கர்ம விøனைகளை எளிதில் கரைப்பதுடன், அரிய பல நற்பலன்களையும் கேளாமலேயே தர வல்லதாகும்.
முதலில் நன்கு காது கேட்டு, வாழ்வின் நடுவில் பல காரணங்களால் காது கேட்கும் சக்தி மந்தமானவர்கள் கூட, இங்கு அளிக்கப்பட்டிருக்கும் சப்த ஒளிப் பிரவாக ராகப் பாடல்களை இசைத்து வந்தால், நல்ல மாற்றங்களைக் காணலாம்.
சப்த ஒளிப் பிரவாக ராகங்கள் யாவை என அறியலாமா? ரேவதி, சூரிய காந்தம், உதயரவிச் சந்திரிகா, யதுகுல காம்போதி, ஸ்ரீராகம், லலித ராகம், தனஸ்ரீராகம், ரவிச்சந்திரிகா, ஈசமனோஹரி, ஷண்முகப்ரியா, சுப்ரதீபம், ஸ்வரபூஷணி, கனகசாவேரி, ஆனந்த பைரவி, நாராயணீ, மேகரஞ்சனி, நாராயண கௌரீ, பானுமதி, ரேவகுப்தி ராகம் (உ-ம் ஸாமஜேந்த்ர எனும் சுவாதி திருநாள் கீர்த்தனை), பூபாளம், ப்ரபவ ஜோதி, மலயமாருதம், வாக்தீஸ்வரி, வம்சவதி, கீரவாணி, நளினகாந்தி, தேவரஞ்சனி, ஜெயந்தசேனா, ப்ருந்தாவன சாரங்கம், விஜயசரஸ்வதி, வகுளாபரணம், சங்கராபரணம், புஷ்பலதிகா, கலாவதீ, ரசிக ரஞ்சனி, நாதப் பிரம்மம், வர்ணப்ரியா, சரஸ்வதி குந்தல வராளி - போன்ற ராகங்களில் அமைந்திடும் பாடல்களுக்கு, கீர்த்தனைகளுக்கு நட்சத்திர ஜோதியை ஈர்த்துத் தரும் தீர்க்க வல்லமை உண்டு.
ஸ்ரீஆஞ்சநேயர் திருக்குரக்கா
இவ்வகை ராகங்களில் மூன்று பாடல்களைத் தினமும் பாடுதல், கேட்டல் காதுகளுக்கு நல்ல சக்திகளைப் பெற்றுத் தரும். நல்ல சப்த ஜோதி சக்திகளையும் அளிக்கும். கல்வித் துறை, பேச்சுத் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவும். வாக்வாதினீ தேவதா மூர்த்திகளுக்கு இந்த ராகக் கீர்த்தனைகள் நல்ல ப்ரீதியைத் தருவதாகும்.
ஒவ்வொருவரும் தம் வாழ்வில், ஏழு ராகங்களுக்கான ஆரோஹண, அவரோஹணங்களையாவது அதாவது மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி ஸ்வரங்களை நன்கு அறிந்து அவ்வப்போது பாடிப் பழகி வர வேண்டும். குரல் நன்றாக இல்லை, பாடத் தெரியாது என எண்ணாதீர்கள்! இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் அற்புதமான ஆன்மீகப் பொக்கிஷங்களை வைத்தே படைத்துள்ளார். இவை தவிர ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான நட்சத்திரத் தலம் போல, அந்தந்த நட்சத்திர தள ராகங்களும் உண்டு.
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் உள்ள பூமாலை வடிவான பூ நட்சத்திரத் தொகுப்பிற்குக் குந்தளம் என்று பெயர். இவைதாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நட்சத்திர லிங்க அட்டைப் பட வரிசையில் அளிக்கப்பட்டவையாகும்..
ஸ்ரீகுந்தளேஸ்வரர் என்ற சிவமூர்த்தியை, 27 நட்சத்திர மூர்த்திகளும் சப்தமித் திதி தோறும் வழிபட்டு, தம்முடைய புஷ்ப குந்தளத்திற்குமான பிரகாச வல்லீய நட்சத்திர சக்திகளைப் பெறுகின்றார்கள். மேலும், எந்த நாளில், எத்தகைய நட்சத்திரக் கிரணங்கள் அடைதல் வேண்டும் என்று ஒவ்வொரு நட்சத்திர தேவிக்கும் சர்வேஸ்வரன் அருளும் தலமே ஸ்ரீகுந்தளேஸ்வரி சமேத ஸ்ரீகுந்தளேஸ்வரர் அருளும் திருக்குரக்காவல் (பூம்புகார் - தலைஞாயிறு அருகே திருக்குரக்கா) மற்றும் சேலம் அருகே தாராமங்கலம் சிவத் தலங்களாகும். சப்தமி திதிகளில் இத்தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இசைத் துறையினருக்கு அருளும் தலங்களுள் திருக்குரக்காவும் ஒன்றாகும்.
ஸ்ரீ திருக்குரக்கா
27 நட்சத்திரக்காரர்களுமே வழிபட வேண்டிய மேற்கண்டவாறான அனைத்து நட்சத்திர சக்திக் கோயில்களும் உண்டு. அவரவர்க்கு உரித்தான நட்சத்திர ஆலய வழிபாட்டு விளக்கங்களை எம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம வெளியீடான, “நிரந்தர நட்சத்திர ஆலய வழிபாடு” எனும் மூன்று பாக நூல்களில் காணலாம். ஒவ்வொரு நட்சத்திரத்தாருக்கும் உரிய நட்சத்திர ஆலயங்களும் உள்ளன.
முதலில், ஒவ்வொரு நட்சத்திரத்தாரும் தமக்குரிய ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொள்வதோடு, தம் வாழ்நாளில், மூன்று முறையேனும் அனைத்து 27 நட்சத்திரக் கோயில்களையும் வழிபடும் கைங்கர்யத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
27 நட்சத்திர தேவியரும் வழிபடும் தலையான ஆலயங்களுள் ஒன்றே திருக்குரக்கா கிராமத்தில் உள்ள ஸ்ரீகுந்தளேஸ்வரி சமேத ஸ்ரீகுந்தளேஸ்வரர் ஆலயமாகும். நட்சத்திரக் குந்தளம் என்பதாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான பூ ஜோதிச் சார ஜயாதி வேதக் கிரண ஜோதிகள் தோன்றும் தலமே நட்சத்திரக் குந்தளத் தலமெனச் சிறப்புடன் போற்றப்படுகின்றது.
சப்தமி திதி அன்று 7 சிவலிங்க மூர்த்திகள், 7 பிள்ளையார் மூர்த்திகள், 7 முருக மூர்த்திகள் என்பதாக ஏழின் மடங்காய் மூர்த்திகளைத் தரிசிப்பது விசேஷமானது. சப்தமி சக்திகள் நிறைந்த இந்நாளில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் இசைத் துறையினர்களைப் பாட வைத்து, இசை வாத்தியங்களை முழங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான சன்மானம், உணவு, உடை, உதவிகளை ஆற்றி வர, நெடுங்காலமாக வீட்டை ஆட்டுவிக்கின்ற தோஷங்கள் நீங்குவதற்கு வழி பிறக்கும்.
ஓம் குருவே சரணம்