முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ருத்ராட்ச மகிமை

ருத்ரம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சிவனுடைய பரிபூர்ண அக்னி சக்திகள் நிறைந்தது என்றும், ருத்ர பூமி என்றால் ஆதி சிவசக்திகள் பரிபூரணமாய்ப் பரிமளிக்கும் பூமி என்றும் பொருளாகும்.
ருத்ராட்சம் என்றால் சிவ அட்சர சக்திகளைச் சிவாக்னியில் பதிக்கப் பெற்றது என்றும், ருத்ர மந்திரங்கள் என்றால் நமசிவாய சக்திகள் வேத பூர்வமாகப் பரிணமிப்பது என்றும் அர்த்தம். ருத்ர ப்ரதமை, ருத்ரத் துவிதியை, ருத்ர அஷ்டமி, ருத்ரச் சதுர்த்தசி, ருத்ரப் பௌர்ணமி, ருத்ர அமாவாசை என்பதாக ஷோடச ருத்ர திதி அம்சங்களும் நிறைய உண்டு.
திருஅண்ணாமலையில் அருணாசல கிரிவலப் பாதையில், (ஸ்ரீரமணாஸ்ரமத்தை அடுத்து வருவதான) ருத்ர பூமி, ஹரிஹர பூமி, (அடி அண்ணாமலையில்) பிரம்மேஸ்வர பூமி, (உண்ணாமுலை அம்மன் மண்டபத்தை ஒட்டிய) தேவிபுர பூமி, அர்த்தநாரீய பூமி என்று பற்பல மூர்த்தி அம்ச கிரிவல வளாகங்கள் உண்டு. பண்டைய யுகங்களில் மஹரிஷிகள் தெய்வ மூர்த்திகளுக்கான அந்தந்த உபாசனைகளை, வழிபாடுகளை, விசேஷமான பூஜைகளை, ஆங்காங்கே அருணாசல மலையைச் சுற்றிலும் பர்ணசாலைகள் மூலம், எண்ணற்ற சிஷ்யர்களுக்கு இவ்வாறு உணர்வித்த சர்வ தெய்வ மூர்த்த பூமியே அருணாசல கிரிவல வளாகம்.
ருத்ராட்சத்தில் உள்ள ஒவ்வொரு முகமும், அடைதற்கரிய அருணாசல மலை தரிசன முகட்டையும், பெறுதற்கரிய திருக்கயிலாயத் தரிசனத்தையும் குறிப்பதாகும். திருக்கயிலாயத்தின் சகல திக்குகளிலும் உள்ள அனைத்துத் தரிசனங்களும், அருணாசல மலையின் 64 திக்குகளிலும் தரிசன முகடுகளாகப் பொலிகின்றன.
எந்தத் திதியில் எத்தனை முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்ற நியதியும் உண்டு. உதாரணமாக அஷ்டமி திதிகளில் எட்டு முக ருத்ராட்சம் அணிந்து கிரிவலம் வருதலால், சிவ பூஜை ஆற்றுதலால் மிகவும் எதிர்பார்க்கின்ற உதவி, முடிவு கனிந்து வர, நமசிவாய அட்சர சக்திகள் துணை புரியும்.
ஒரு பட்சம் என்பது 15 திதிகளைக் கொண்டதாகையால், அஷ்டமித் திதி என்பது மத்யமான அதாவது நடுத் திதியாகின்றது. அமாவாசையை அடுத்து வரும் உத்தர மத்யாஷ்டமி, பௌர்ணமியை அடுத்து வரும் தட்சிண மத்யாஷ்டமி மகாத்மியங்களும், எந்தெந்த அஷ்டமியில் எத்தகைய வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதிகளும் நிறையவே உண்டு.
அஷ்டமத்துச் சனி என்பதாக ஜாதகத்தில் எட்டாமிடத்தில் சனி கிரகம் அமைவதைக் குறிக்கின்றது. கலியுக வழக்கில், அஷ்டம இடத்துச் சனி மூர்த்தி துன்பங்களையே தருவார் எனத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். இதனை இன்று முதலேனும் திருத்திக் கொள்ள வேண்டும்.
செய்த தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவித்தால்தானே தீவினைகள் கழியும், இதுதானே நியாயமானதும் ஆகும். இதற்கு உதவுகின்ற சனீஸ்வரரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மஹா காருண்ய மூர்த்தியே சனீஸ்வரர்! ஈன்ற தாய் போல அவ்வப்போது அதட்டி, அணைத்துத் திருத்திச் செல்லும் தயாகரரே சனீஸ்வரர்! எனவே சனீஸ்வரரிடம் அச்சமின்றி, ஆனால் பக்தியுடன் நிறைய மந்திரங்களை ஓதி, மந்திரங்கள் தெரியவில்லை எனில், பக்திப் பூர்வமாக உரிமையுடன் நன்கு பேசி வழிபடுங்கள்!
மாளய பட்சத்தின் மத்தியில் வரும் அஷ்டமித் திதியானது மத்யாஷ்டமி ஆகின்றது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மத்திய எழுத்தான (அட்சரமான) “சி” என்பதற்கான ருத்ராம்ச சக்திகளை உணர்விக்க வல்லதும் இத்தகைய ருத்ராஷ்டமியின் மகத்துவமாகும்.

சக்தி வலம் திருவிடைமருதூர்

மத்யாஷ்டமி அல்லது அஷ்டமி நாட்களில் 11 முறை ருத்ர வேத மந்திரங்கள், இதற்கு ஈடாக அப்பர் சுவாமிகள் அளித்துள்ள (வேற்றாகி விண்ணாகி...) போற்றித் திருந்தாண்டக மந்திரங்கள், மற்றும் சித்தர்கள் “ருத்ரத் தமிழ் வாடகம்” என அளிக்கும் ஞான சம்பந்தரின் திருக்கடவூர் மயானத் தேவாரப் பாக்களை (வரிய மறையார்...) ஓதுதல் மிகவும் விசேஷமானது. தன்னைப் பற்றி எழுந்துள்ள தன்னையே மாய்க்கும் தாழ்வு மனப்பான்மை அகன்று, சமுதாயத்தில், சுற்றம், உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ இதன் பலன்கள் நன்கு உதவிடும்.
மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மல்லிகார்ஜுனம் (ஆந்திரா), திருப்புடைமருதூர், (திருநெல்வேலி அருகே) திருவிடைமருதூர் ஆகிய மூன்றில், நடுவனதாக, மத்தியார்ஜுனமாக விளங்குவது (கும்பகோணம் அருகே உள்ள) திருவிடைமருதூர் ஆகும். எனவேதான் இது மத்யார்ஜுனம் என அழைக்கப்படுகின்றது. மத்தியாஷ்டமி மற்றும் ருத்ராஷ்டமி உற்சவங்கள் பண்டைய யுகங்களில் இங்கு நன்கு பிரசித்தி பெற்றிருந்தன.
மதிலழகு மாமருதூர் தன்னில்
மத்திய ருத்திர மாதேவ சிவபோதம்
மகத்துவ அட்டமி மாதவ பாவனமே
மத்துவச் சித்தம் மங்களமாமதாம்
மங்களச் “சி” அது மாஇடை மதிசிவமே!
என்பது மத்திய ருத்ராஷ்டமித் திதியில் திருவிடைமருதூரில் அஷ்டமி நாளில் பூரிக்கும் திருநாளின் மகத்துவத்தை உணர்த்துவதாகும்.
வேத மந்திரங்களின் மத்தியமாக விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும். ருத்ராஷ்டமியான, மத்யாஷ்டமி தினங்களில் “சி” என்னும் அட்சர சக்திகள் பூமியில் பரிணமிக்கும். எனவே “சி” எனும் எழுத்தில் துவங்கும் திரவியங்களை, பொருட்களை வைத்து,
(உ-ம் சிந்தூரம், சித்தரத்தை, சிவாநீ, சிப்பி, சிலாபஸ்மம், சிகப்பு நிற முள்ளங்கி, சிலம்பு, சிற்பம்)
-போன்றவற்றால் அஷ்டமி திதிகளில் தெய்வக் காரியங்களை, பூஜைகளை, நற்காரியங்களை, அன்னதானக் காரியங்களை ஆற்றுவது மிகவும் விசேஷமானது. அலுவலகத்தில், வீட்டில் கஷ்டப்பட்டு உழைத்தும் நல்ல பெயரில்லையே என வேதனையுறுவோர்க்கு நல்வழி காட்ட இது உதவும்.  

மன நிம்மதி பெருகும் வழிபாடு

பூவுலகின் தெய்வீக மையமான புனிதமான பாரதத்தில் பிறப்பது வாழ்வில் பெறுதற்கரிய பயனாகும். எவராயினும் சரி, முக்தி பெறும் நிலைக்கு முந்தைய பிறவி புனிதமான பாரதத்தில்தாம், இதிலும் தென்னாடுடைய தமிழ்நாட்டில்தான் நிச்சயமாகக் கடைசிப் பிறவி அமையும் என்பது தமிழ்நாட்டின் தெய்வீக மகத்துவத்தைப் பற்றி சித்தர்களுடைய, மகரிஷிகளுடைய திருவாக்கு! இதனால்தான் சகல லோகங்களுக்கும் உரிய சர்வேஸ்வரனாகிய இறைவன், “தென்னாடுடைய சிவனே போற்றி!” என அன்புடன் துதிக்கப் பெறுகின்றார்.
நவராத்திரி நவமிக்கு முந்தையதான நவமித் திதியானது துர்கா நவமி எனப் பெயர் பெறுகிறது. வாழ்வில் தொடர்ந்து பெருகும் பகைமை சக்திகளைக் களைய, 60 நாழிகையும் நவமித் திதி அமையும் நாளில், தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி -ரங்கநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீரௌத்ர துர்க்கையை வழிபடுதலால் நல்ல பலன்களைப் பெற்றிடலாம். நவமியில் ஸ்ரீரௌத்ர துர்க்கை வழிபாடு குடும்பத்தில் தம்பதிகளுக்கு இடையே உள்ள மனஸ்தாபங்களை நீக்கி, நல்அமைதி நிலவிட உதவும்.
நவமி திதிகளில் அமர்ந்த கோல துர்க்கையை வழிபடுவதும், துர்க்கை மூர்த்திக்கு ஆரஞ்சு நிறக் கேசரிக் காப்பு இட்டு வணங்குவதும் உறவுப் பகைமைகளைக் களைந்திட விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.

திருக்காட்டுப்பள்ளி ரெங்கநாதபுரம் சிவத்தலம்

துர்க்கா சக்திகள் பரிபூரணமாகப் பரிமளிக்கும் திரவியங்களை இல்லத்தில், அலுவலகங்களில் வைத்திருத்தல் மிகவும் விசேஷமானதாம். தாமரை, குங்குமம், ஜவ்வாது, குங்குமப் பூ போன்றவை துர்க்காக்னி சக்திகள் நன்கு பரிமளிப்பதாகும். விளக்கிற்கான எண்ணெயில், குங்குமப் பூ தைலம் அல்லது செம்பருத்தித் தைலம் சேர்த்து நல்ல பாதுகாப்புடன் அருகிருந்து நவமித் திதி நேரம் முழுதும் தீப ஜோதி இருக்குமாறு வைத்து வழிபடுதலால் காரண, காரியமின்றி ஏதாவது ஒன்று மாற்றி ஒன்றாகத் துன்பங்கள் வருகின்ற நிலைமையின் துன்பங்கள் தணிய உதவும்.
கைகளால் புதிதாக அரைத்த சந்தனத்தில் கஸ்தூரி, கோரோஜனை, புனுகு, அத்தர், குங்குமப் பூ, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய், ஏலக்காய்ப் பொடி ஆகிய நவதுர்க்கா திரவிய சக்திக் கலவையைப் பீடமாக தாம்பாளத்தில் அல்லது வாழை இலையில் பூசி வைத்து, இதன் மேல் 9 தாமரை மலர்களையும் வைத்து, நவமித் திதி முழு நேரமும் விளக்கேற்றி வைத்திருந்து, தாமரை மலர்களை நவதுர்க்கை தேவியராகப் பாவனை செய்து, ஸ்ரீதுர்க்கைக்கான அர்ச்சனைத் துதிகளை ஓதி வழிபடுதலால், அபூர்வமான காரிய சித்திகளைக் குறுகிய காலத்திலேயே கண்ணாரக் காணலாம்.
நவதுர்க்கா நவசக்தி பாவனமாகிய இதன் முன் அமர்ந்து ஸ்ரீதுர்க்கை மந்திரங்களை ஓதி வரவும். காரைக்குடி - குன்றக்குடி அருகே உள்ள நேமம் சிவாலயத்தில் நவ துர்க்கையரைச் சிற்பங்களாகத் தரிசித்திடலாம்.
துர்க்கா நவமித் திதி பகைமை, குரோதம், விரோதம் சக்திகளை வென்றிட வல்ல தேவ சக்திகளைப் பூவுலகில் நிரவுவதால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலகம், வீடு, உற்றம், சுற்றத்தில் ஏற்பட்டுள்ள பொறாமை, துவேஷம், அதிகாரம், ஆணவம், பேராசையால் பிறர் கொடுக்கும் துன்பம், சித்திரவதைகளில் இருந்து விடுபட நவமித் திரிதினப் பூஜை நன்கு உதவும்.
துர்கா நவமி அன்று ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு தாமரை மலர்களால் கிரீடம் அணிவித்துத் திருப்பாதங்களுக்கு செம்பருத்திப் பீடம் அணிவித்து வணங்குதல், குடும்பத்தில் நல்ல காப்பாக எவரும் இல்லையே என வருந்துவோர், தக்க காப்பு மார்கங்களையும் நல்ல மன நிம்மதியையும் பெற உதவிடும்.

மாரக தோஷங்களை மாற்றிடும் விந்தை

மனம், உடலுக்கு இடையே ஒற்றுமை வேண்டும். இல்லையெனில் நிறையத் தவறுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். இவற்றைக் களைந்து மனம், உடல் ஒருமித்திட, பூசமும் தசமியும் கூடும் நாள் பூஜை உதவும். தசமித் திதி வழிபாடு மாரக தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்லதாகும். பூச நட்சத்திர நாளில் மானசீக வழிபாடு செய்தலால், மாரக தோஷம் எனப்படுவதான மரண பயத்தால் ஏற்படும் ஆயுட் குறைப்பு தோஷங்களைப் போக்க வல்லதாகும்.
மிருத்யு தோஷங்களுள் ஒரு வகையே மாரக தோஷமாகும், வாயிலார் நாயனார், பூசலார் நாயனார் போன்றோர் பூச நட்சத்திர நாளில் அற்புதமான மானசீகமான பூஜைகளை ஆற்றி இதன் பலாபலன்களை பூச நட்சத்திர நாளில் வழிபடுவோர்க்கு நல்குகின்றனர். எனவே இந்நாளில் பூசலார் நாயனார் மானசீக வடிவில் வடித்ததை வைத்துப் பொறிக்கப் பெற்ற ஆலய வடிவான சென்னை- திருநின்றவூர் ஆலயத்தில் கண்களை மூடி அமர்ந்து, ஏதேனும் ஒரு நற்காரியத்தை மானசீகமாக மட்டுமல்லாது, உடற்சேவையாலும் ஆற்றுதல் குடும்பத்தில் நல்ல மாற்றங்களைத் தரும்.
(உதாரணம் மானசீகமாகப் பசுவிற்குப் புல் அளித்தல், சப்த மாதர்களுக்கு வஸ்திரம் சார்த்திப் பூஜித்தல் -  நேரடியாகவும் செய்தல்) இதனால் மனம், உடல் செய்கைகளில் உள்ள பலத்த வேறுபாடுகள் தணியலாகும்.
பூச நட்சத்திர தின பூஜைகள் பல்வகையான மிருத்யு மற்றும் மாரக தோஷங்களைப் போக்க வல்லதாகும்.

அரசமர் அண்ணல் கீரமங்கலம்

சுக்கிரப் பூசம்
மாரக சுத்தி
பூசச் சுக்கிரம்
தசதிதி கூடல்
புண்ணிய ஆயுள் பூசியே வருமே!
தசதிதி பூசம்
மரயோ கசுகீ
நாலுடன் மேதி
மாதவ வேதம்
மந்திர நாளே!
என்பது மரண யோகம், தசமி, பூசம், வெள்ளி ஆகிய நான்கும் கூடுவதன் மஹிமையைக் குறிப்பிடுகின்றது. சுக்கிர மூர்த்தியாகிய வெள்ளி கிரகம் பூஜித்த தலங்களில்  இத்தகைய நாட்களில் கத்தரிப் பூ நிறப் பட்டாடை சார்த்திப் பூஜித்தலால் பிறந்த வீட்டாரோடு உள்ள மனத்தாங்கல்கள் தணிய உதவும்
பூசத்திற்குரிய விருட்சமான அரச மரம் உள்ள தல மூர்த்திகளில் குறைந்தது ஆறு மூர்த்திகளுக்கு வெண்ணெயில் ஜம்பு எனும் நாவற்பழங்களைப் பதித்துக் காப்பிட்டு அலங்கரித்து வழிபடுதல் நன்று. எப்போதும் கடுகடுவென்று இருக்கும் மாமனார், மாமியார், கணவர், மேலதிகாரிகளுடன் சுமுகமான நிலை ஏற்பட இதன் பலாபலன்கள் நன்கு உதவும்.
யம மூர்த்தி வழிபட்ட / யமதீர்த்தம் உள்ள தலங்களில், பத்து விதமான பித்ரு சக்திப் பொருட்களாலான பண்டங்களை, திரவியங்களை, உணவுப் பொருட்களைத் தானமாக அளித்தலால்
குடும்பத்தில் தன்னை எவரும் மதிக்கும்படியான யோக்யதாம்சங்கள் அமையவில்லையே என ஏங்குவோர்க்கு மன ஏக்கங்கள் தணிந்து, முறையான நல்வழி முறையில் மனம் ஆக்கப் பூர்வமாக ஈடுபட உதவும்.
எள், புடலை, பிரண்டை, பாகற்காய், வாழைக்காய், அதிரசம், அப்பளம், புளியோதரை, எண்ணெயில் வேகும் பண்டங்கள் (வடை, பஜ்ஜி), அவரவரருக்குப் பிடித்த பண்டங்கள் போன்றவை - பித்ரு சக்திப் பொருட்களாகும்,
கத்தரிப் பூ நிறப் பட்டாடையைக் கிரீடம் போல் அழகாக மடித்து சுக்கிர மூர்த்தியின் சிரசில் வைத்து, பக்தர்கள் கண்டு துதித்து மகிழும்படி வைத்துப் பூஜித்தலால், சிறியவர்களுடன் ஏற்படும் மன உரசல்கள் தணிய உதவும்.

மனத் துயரங்களுக்கு நிலையான பரிகாரம்

ஆயுள் என்பது என்ன? இன்னார் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும் எனும் ஆயுள் விதி முன்னரேயே முற்றிலுமாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றே! ஆனால் இதில் சில தெய்வீகமான நியதிகளும், விதிப் பூர்வமான விலக்குகளும் உண்டு. சிலருக்கு ஆயுள் நிர்ணயமானது கோசாரப் பூர்வமாக, அதாவது அவர்களுடைய தியாகமய வாழ்வு அம்சங்களைப் பொறுத்து, ஆயுள் அம்சங்களாக அமைதலாகும் என்பதும் உண்டு. இதுவும் பூர்வ ஜன்மப் பலாபலன்களால் திரண்டு வருவதேயாம்.
தியாகப் பூர்வமாக வாழ்பவர்களுக்கான ஆயுளை, அவர்களுடைய பித்ருக்கள் நிர்ணயம் செய்கின்ற உத்தமப் பங்கு வந்தமைதலும் சாத்தியமே! எவருடைய இறைச் சேவைப் பரிமாணங்கள் பிற லோகங்களில் தேவை ஆகின்றனவோ, அவர்கள் பிற லோகங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்காக அவர்கள் குறுகிய ஆயுளில் இறந்தனர் எனப் பொருள் கொள்ளலாகாது.
பூவுலக ஜீவன்களைக் காக்கும் பொருட்டு பூமியில் மிகவும் மோசமாக, கேவலமாக வாழ்ந்து பிற ஜீவன்களை வதைத்து வாழ்பவர்களை உடனடியாக நரக லோகத்திற்கு அனுப்பி விடுவதும் உண்டு. இதற்காக, குறுகிய ஆயுளை, ஒரு பெரும் தண்டனை எனவும் கொள்ள முடியாது. மாரக தோஷங்கள், மிருத்யு தோஷங்களாலும் குறுகிய ஆயுள் ஏற்படும்.
இவ்வாறாக ஆயுள் நிர்ணயம் என்பது, பல தேவாதி தேவ ரகசியங்களைக் கொண்டதாகும். இவ்வகை விளக்கங்களை வெறுமனே படித்துக் கொண்டே சென்றால், சாதாரண (மாக) மனிதர்களுக்குக் குழப்பங்களே ஏற்படும். எனவேதான் ஆயுள் காலம் என்பது விதிப்படி ஏற்கனவே நிர்ணயம் ஆ(ன)வதே எனப் பொதுப்படையாக உரைக்கப்படுகின்றது.
வெறும் எழுத்து அல்லது உரை விளக்கங்களால், பலத்த புத்தக அறிவால் ஆயுள் விதியை ஒரு போதும் அறிந்து கொள்ளவே இயலாது. முழுமையான ஆறறிவு நிறைந்த இறைப் பகுத்தறிவால்தான், தக்க சற்குரு மூலமாகவே இதனைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் பிறக்கும் நேரம், இறக்கும் காலம் இரண்டும் தேவ ரகசியங்கள் ஆதலின், சற்குருவும், தக்க உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தோர்க்கே இதனை உணர்விப்பார்.

கலசங்களுக்கு குறைவில்லை
பூலோக வைகுண்டத்தில்!

ஒருவன் இத்தகைய தெய்வப் பாங்கான நிலையை அடைந்து விட்டாரா என எப்படி அறிந்து கொள்ள முடியும்? தன் மரண நேரத்தை அறிந்தும் எவரொருவர் மிகவும் சாந்தமாகத் தன் காரியங்களைத் தொடர்ந்து நடத்துகின்றாரோ இதுவும் மரணத்தை வெல்லும் இலக்கணச் சாதனைகளில், சாதனங்களுள் ஒன்று. இதற்கு ஒருவர் தயாராகி விட்டாரா என அவரவரே தன்னைப் பற்றி ஓரளவு எடை போட்டுக் கொள்ள வேண்டும்!
எனவே இவ்வாறாக, பிறப்பு நேரம், இறப்பு நேரத்தை அறிதல் பல தெய்வீக அனுபூதிகளை ஒட்டி அமைவதாகும். ஏதோ ஒரே ஒரு பாடமாக ஒரே செகண்டில் உடனேயே தேவ ரகசியப் புலமை வந்து குதித்து விடாது. மிக்க மனோதைர்யம் உள்ளவர்களுக்கும் கூட இறுதியில் மரண பயம் வந்து ஆட்டிப் படைக்கும். எனவே மரண பயத்தை வென்றோர்க்கே இறப்பு, பிறப்பு விஷயங்களை அறிதல் சாத்தியமாகும்.
எனினும் இத்தகைய உத்தம நிலையையாவது எப்படி இருக்கும் என ஓரளவு கோடிட்டுக் காட்ட முடியாதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது. உண்மையில், மரணம் என்பது உயிர் சக்தியானது ஓருடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மாற்றப்படுவதே ஆகும்! எனவே மரணத்தில் உடல் உயிரற்று ஜடமாக விழுந்தாலும், உயிர், அடுத்த உடலில் பரிமாணம் ஆகும். அடுத்துச் செல்லும் உடல் - எந்த வகையிலும் - மனிதனாகவோ, மாடாகவோ, செடியாகவோ, புழுவாகவா, ஆவியாகவோ - இந்த பூமியலும், எந்த லோகத்திலும் - எப்படி வேண்டுமானாலும் - அவரவருடைய கர்ம வினைகளின் தன்மைக்கு ஏற்ப அமையும். இதுவே மரணம் பற்றிய பொதுவான விளக்கமாகும்.
உயிர் சக்திகள் பெரும்பான்மையாக மனித குலத்திற்கு ஒன்றாக இருப்பது போல் அல்லாது, உயிர் சக்திகள் பிரிந்தும் எண்ணற்ற வகைகளில் பரிமாணம் அடைவதும் உண்டு. உதாரணமாக, ஒரு செடி என்பது ஒரு ஜீவன் அல்லவா! அதன் காய்கறிகள், பழங்களில், தானியங்களில் அந்தந்தத் தாவரத்தின் உயிர் அம்சங்கள் பகுக்கப்பட்டு உணவாகி, உண்பவரின் ஜீவ உடலில் விந்து சக்திகள் ஆகி அதன் மூலம் பிறவிகள் ஏற்பட்டு, ஜீவபிந்தமுதம் தொடரும்.
பிந்து சக்தி என்பது ஜீவ விருத்திக்கு மட்டும் பயன்படுவது அல்ல. விந்து சக்திகளிலும் யோக பிந்து, தீரதவ பிந்து, மானச பிந்து, இந்து பிந்து (இந்து-மனம்), அட்சர பிந்து, கைவல்ய பிந்து என எண்ணற்ற வகைகள் உண்டு.
பேச்சில், எழுத்தில், செய்கையில், காரியங்களிலும் விந்தார பிந்து சக்திகள் நிரவுகின்றன. இவை கார்ய பிந்தமுதம் ஆகும். தவறான பேச்சு, தவறான காரியம், தவறான எழுத்துக்களில் விந்து சக்திகள் விரயமாகும். நல்ல எண்ணங்களுக்கு வித்திடுதலும் பிந்து சக்தியால்தான். இதுவே பிறரிடம் அட்சர பிந்து சக்திகளாகச் சென்றடைகின்றன. இவ்வாறாக உயர் தேவ சக்தியைப் பற்றிய விளக்கங்களும் உணரப் பெற்றால்தான் மரணத்தை வெல்ல முடியும். இவ்வாறு பதினோரு வகை பிந்து சக்திகளை ஜீவன்கள் கலியுலகில் நன்கு அறிந்து பேணுதல் வேண்டும்.
ஏகாதசி மற்றும் ஆயில்யம் கூடும் ஸ்திர வாரமான சனிக் கிழமையில் ஜீவமேன்மைக்காக அமிர்த வகையில் ஸ்திர மதுர பிந்து சக்திகள் விருத்தி ஆகும். இவ்வாறு பதினோராவது திதியான ஏகாதசியில் மருத்துவ சக்திகள் நிறைந்த ஆயில்ய நட்சத்திர சக்திகள் ஸ்திர வாரத்தில் சேர்கையில், ஏகாதச ருத்ர சக்திகள் பதினொன்று அம்ச சக்தித் திரவியங்களில் பரமளிக்கின்றன. எனவே ஏகாதசி திதிகளில் பதினொன்று அல்லது இதற்கு மேல் உள்ள
தள வகை இலை -
பதினொன்று தளங்களுக்கு மேல் உள்ள வில்வம்,
பதினொன்று இலைகளுக்கு மேல் உள்ள வன்னி போன்றவை
பூக்கள் - பதினொன்று இதழ்களுக்கு மேல் உள்ள தாமரை, அல்லி, குவளை போன்றவை
கனிகளில் - பதினொன்று பழங்களுக்கு மேல் உள்ள கொத்தான திராட்சை இவற்றை மதுர பிந்து எனப்படும் தேனில் தோய்த்து, ஏகாதச ருத்ர மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை செய்தல் விசேஷமானதாகும்.
ராமேஸ்வரம் போன்று ஏகாதச ருத்ர மூர்த்தி உள்ள தலங்கள் இதற்கு மிகவும் ஏற்றவை. 11 கலசங்களுக்கு மேல் உள்ள ஆலயங்கள், 11 தீர்த்தங்களுக்கு மேல் உள்ள ஆலயங்களில் சனீஸ்வரருக்கு வழிபாடுகள் ஆற்றுதலால்,
கணவன் மனைவியிடமோ, மனைவி கணவனிடமோ, பிள்ளைகள் பெற்றோரிடமோ, பெற்றோர்கள் பிள்ளைகளிடமோ சொல்ல முடியாமல் திகைக்கின்ற பல விஷயங்களால் ஏற்படும் மனத் தாங்கல்கள் தீர ஸ்திரமான பரிகார வழிகள் கிட்டும்.

உத்தமர்களை மதிப்போம்
உயர்ந்த நிலை பெறுவோம்

கலியுக மக்கள், குறிப்பாக இளைய தலைமுறை செய்கின்ற பெருந் தவறு யாதெனில், பெரியோர்களை மதியாமை ஆகும். இன்றைக்கும் கலியுகத்தில் புனிதமான துறவிகள், இல்லறத்திலிருந்து உலக ஜீவன்களின் நலன்களுக்காக உழைக்கும் ஆன்மீகப் பற்றுள்ள தவசிகள் பலரும் உள்ளனர். ஆனால் இவர்களை மனித சமுதாயம் தேடி, நம்பிக்கையுடன் நாடி ஆசி பெறுவதில்லை. அப்படித் தேடிக் கண்டாலும், தங்களுடைய லௌகீகமான விருப்பங்களை அவர்களிடம் கொட்டித் தீர்த்து, அவை நிறைவேறாவிடில் அவர்களைத் திட்டி பலத்த சாபங்களையே தங்கள் சந்ததிகளுக்குத் தேடிக் கொள்கின்றனர்.

ஸ்ரீபோடா சுவாமி சித்தர்
காஞ்சிபுரம்

இவர்களுடைய திரண்ட ஆசிகளை, பூமி நீரோட்ட சக்திகளாக இன்றும் திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடை சிவாலயப் புண்ணிய பூமியில் நன்கு பெற்று உணர்ந்திடலாம். கலியுகத்தில் தவத்திற்கும், ஜபத்திற்கும், யோகத்திற்கும் உரிய உத்தமத் தவத் திருத் தலங்களுள் இதுவும் ஒன்று. பலரும் அறியாதது.
சத்குருமார்களை உலகம் மதிக்கத் தவறுவதுடன், உத்தமர்களாகிய அவர்களை இகழ்வதாலும், துன்புறுத்துவதாலும்தான் கலியுகச் சமுதாயத்தில், மக்களின் ஒழுக்கத்திற்கும், சமுதாயத்திற்கும் பலத்த சோதனைகள், வேதனைகள் ஏற்படுகின்றன. உலகின் எந்த ஒரு சிறு மூலையிலும், எந்த ஒரு நல்ல மனிதனுக்கு ஒரு சிறு துன்பத்தை மனித சமுதாயம் தந்திட்டாலும், அது உலக மனித சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாகப் பாதிக்கும் என்பதை இனியேனும் உணர்ந்திடுக!
இதே போல சத்குருமார்களை, புனிதமான துறவியரை ஏசிடினும், மக்கள் சமுதாயத்திற்கு எண்ணற்ற தீங்குகள் வந்து சேரும். இதுவரை இவ்வாறு நிகழ்ந்தமைக்கு ஓரளவேனும் பரிகாரம் பெற, நாம் சார்ந்திருக்கும் உலக மக்கள் சமுதாயத்திற்குப் பிராயச்சித்தம் பெற்றுத் தந்திடவும் மிகவும் எளிமையான வழிமுறைகளுள் ஒன்றே
* பாண்டிச்சேரி-வில்லியனூர் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் படேசாஹிப் ஜீவசமாதி
* மதுரை - அரசரடி குழந்தையானந்த சுவாமிகள் ஜீவாலயம்
* சிங்கம்புணரி வாத்யாரையா குருமூர்த்தம்
* காஞ்சீபுரம் ஸ்ரீபோடா சுவாமிச் சித்தர் (சிவசாமிச் சித்தர்) ஜீவசமாதி
போன்ற, உத்தமப்பாளையம் எனச் சித்தர்களால் போற்றப் பெறும் ஜீவாலயங்களில் நிகழ்த்தும் அமாவாசை, பௌர்ணமி வழிபாடுகள், அன்னதான வழிமுறைகள் ஆகும்.
உத்தமர்களை மதிக்கத் தெரியாத கலியுகத்தில், பல சித்தர்களும், மஹான்களும் ஒவ்வொருவராக பூமியை விட்டுக் கிளம்பி தத்தம் லோகங்களுக்குச் செல்லலாகின்றனர். “கடைவிரித்தேன் வாருவாரில்லை” என அருள்வழி பெற மறுக்கும் சுயநலமான மனித சமுதாயத்தைப் பற்றி உரைத்து, ஜோதியில் மறைந்தாரன்றோ வள்ளலார் சுவாமிகள்.

ஸ்ரீராம்பரதேசி ஜீவாலயம்
வில்லியனூர்

கலியுகத்தில், பலரும் அறியா வண்ணம் இலைமறை கனியாகச் சற்குருமார்கள் மக்களோடு மக்களாய் உறைந்து அருள்கின்றனர். எப்போதுமே எதையும் தேடி, அலைந்து, நாடிப் பெறுகையில்தான் அதனுடைய தெய்வீக மகத்துவமும் புரியலாகும். சற்குருவின் குருவருளும் இத்தகையதே!
பாரதமெங்கும், குறிப்பாகத் தமிழகமெங்கும் எண்ணற்ற சித்தர்கள், மாமுனிகளின் ஜீவ சமாதிகள் உள்ளன. இவை பிருந்தாவனம், அதிருஷ்டானம், ஜீவசமாதி, ஜீவாலங்கள் என்று பல வகைகளில் அழைக்கப் பெறும். இவற்றில் பௌர்ணமி, துவாதசி போன்ற குறித்த திதி நாட்களில் வழிபடுதல் சத்குருமார்களின் திரண்ட அருளைப் பெற்றுத் தருவதாகும்.
யதீந்த்ரர்கள் என்போர் உத்தமத் தெய்வீக நிலைகளை அடைந்தோர் ஆவர். யதீந்த்ர மாளயத் திருநாட்களில் அனைத்து பிருந்தாவனம், அதிருஷ்டானம், ஜீவசமாதி, ஜீவாலங்களில் நன்கு அடர்த்தியாக மணமுள்ள சாம்பராணி தூபமிட்டு, மந்தாரை இலைகளில் முழுமையுமாக உணவு வகைகளை வைத்து, குறைந்தது 12 பேர்களுக்கு அன்னதானம் செய்தல், யதீந்த்ரர்களாகிய உத்தம தெய்வ நிலைகளைத் துய்ப்போரின் கனிந்த ஆசிகளைப் பெற உதவிடும்.
இத்தகைய ஜீவாலயங்களில் வாழை இலையில் இயன்ற உணவு வகைகளைப் படைத்துப் படையலாக்குதல், பித்ருக்களின் நல் ஆசிகளைப் பெற்றுத் தரவும் உதவும். ஏனெனில் யதீந்த்ரர்களின் பிருந்தாவனம், அதிருஷ்டானம், ஜீவசமாதி, ஜீவாலங்களில் வழிபடப் பித்ருக்களும் யதீந்த்ர மாளய நாளில் ஓடோடி வருகின்றனர்.

பித்ருக்கள் லோகமே ஒளி பொருந்திய லோகம், பித்ருக்கள் நிலையே ஒளி பொருந்திய சரீர நிலை, பித்ரு லோகங்களில் இருந்தவாறே பூலோக ஆலயங்களின் தரிசனம், பிருந்தாவனம், அதிருஷ்டானம், ஜீவசமாதி, ஜீவாலய தரிசனங்கள் கிட்டும் எனினும் அவர்களே தேடி, நாடி பூமிக்கு வந்து பூஜிக்கின்றனர் எனில் நாமும் எவ்வளவு பணிவன்புடன் செயலாற்ற வேண்டும் என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.
ஞாயிறன்று அமையும் இத்தகைய யதிமாளயத் திருநாட்கள் தந்தை வகைப் பித்ருக்களுக்கு உத்தம நிலைகளைப் பெற்றுத் தர வல்லதாகும்.  
வலது காலை முன் வைத்து தரையில் அமர்ந்து உள்ள பசு, ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப நிலையைக் கொண்டதாகும். ஞாயிறு, யதிமாளய நாட்களில் இத்தகைய நிலையில் இருக்கும் பசுவை வலம் வந்து பசுவிற்கு கீரைகள், பழங்களை அளித்திடுதலால், மனச் சுமையை ஓரளவு பசுவே ஏற்றுத் தான் அனுபவித்து நம் மனச் சுமையைத் தணித்திட, தன் காயத்ரீ ஜப பலன்களைப் பசுவே அளிக்கும்.

யானைகளின் ஆசியை பெறுவது எப்படி ?

எவ்வாறு ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்றுகின்றது என்று அறிதல் மிக அவசியமாகும். 2003, 2004 என எண்ணிக்கை வகையிலான ஆண்டுகளின் எண்ணிக்கை முறை சமீபத்தில் வந்ததே! எனவே யுக மாற்ற நிலைகள் ஆண்டு எண்ணிக்கையில் வருவதாக எண்ணாதீர்கள்!
எண் கணக்கிற்கு நம் மனம் பழகி விட்டதால், தற்போதைக்கு மனித மனதிற்கு, மனிதனின் கணித அறிவிற்கு எட்டும் வகையில்,
கலியுகம் -- 432000 ஆண்டுகள்
துவாபரயுகம் -- 864000 ஆண்டுகள்
திரேதாயுகம் -- 1296000 ஆண்டுகள்
கிருதயுகம் -- 1728000 ஆண்டுகள்
என இத்தனை இலட்சாதி லட்சம் ஆண்டுகள் என்று அளிக்கப்படுகின்றது. இது எண் கணிதத்திற்கு ஏற்ப, நம் மனதிற்கு உணர்விக்கவே அளிக்கப்படுவது ஆகும். உண்மையில் யுக மாற்றம் என்பது ஆண்டுக் கணக்கில் அமைவதை விட, ஜீவன்களின் தார்மீக மனோ நிலைகளையும் குறித்து அமைவதாகும்.

மன்னார்குடி கஜேந்திரன்

கிருத யுகத்தில் மகத்தான நேர்மை, நாணயம், சத்தியம் நிறைந்த தர்ம சௌந்தர்யத்துடன் மிக மிகப் புனிதமாகத் துலங்கியதுதான் மனித மனம் ஆகும். யுகக் காலப் போக்கில் மனிதனுடைய பேராசை, காமம், பகைமை, விரோதம், குரோதம் தீவினைகள் காரணமாக, சமுதாயத்தில் தர்ம அம்சங்கள் மறைந்து, அதர்மம், அநியாயம் தலை தூக்கி விடுகின்றன. எனவே யுக மாற்றம் என்பது தர்ம அம்சங்கள் நிலவுவதைப் பொறுத்தும் அமைவதாகும்.
மாளய பட்ச துவாதசியை ஒட்டி கஜச் சாயை அம்சங்கள் படியும். கஜச் சாயை என்பதற்குப் பல யுகங்களிலும் பல அர்த்தங்கள் உண்டு. இதில் சாயை என்பதற்குப் பல அர்த்தங்களைக் கொண்டாலும், யுகப் போக்கில் சத்தியம், தர்மம், சாந்தம் ஆகிய முக்குணங்களை விட்டு, மனிதன் உடல், மனம், உள்ளத்தால் எவ்வளவு சாயைகளுடன் தள்ளி நிற்கின்றான் என்பதையும் இது உணர்த்துகின்றது. மனிதனுடைய நிழல், கஜச் சாயை உணர்த்தும் ஓர் அளவீடு. வள்ளலார் போன்ற இறைத் தூதுவர்கள், தம் ஆத்ம சங்கல்பத்தால், நிழல் பிம்ப மாயையை வெல்ல வல்லார். வள்ளலாருக்கு என்றுமே நிழல் ஏற்பட்டதில்லை.
மாளய பட்சத்தில், கஜச் சாயை நாளில், புடலை, மர வள்ளிக் கிழங்கு, முருங்கை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரைத் தண்டு போன்ற நீளமான வகைக் காய்கறிகள் கூடிய உணவை அன்னதானமாக அளித்தல் மிகவும விசேஷமானதாகும். இதனால், இது வரையில் நம்பிக்கை இல்லாது ஏனோதானோ என்ற வகையில் அளித்த தர்ப்பணம், திவசத்தில் ஏற்படும் குறைகள், மற்றும் தர்ப்பணம், படையல் அளிக்க மறுத்தமைக்கான தோஷங்களின் கடுமையும் தணிய உதவிடும்.
பலரும் மிக எளிமையான பூஜைகளை, மிக மிக எளிய தான, தர்மங்களையே உடல் நோகாமல் ஆற்ற விரும்புகின்றனர். பலா மரத்தில் இருந்து அப்படியே பலாச் சுளை வந்து விடுகின்றதா என்ன? தேனினும் இனிய பலாச் சுளையைப் பிரித்தெடுக்க எவ்வளவு சரீரப் பணி, நேரம் ஆகின்றது? நறுமணச் சர்க்கரைப் பொங்கலானது, சர்க்கரைப் பொங்கல் என வாயால் சொன்னதுமே வந்து விடுகின்றதா? இதற்கும் அரும்பாடு பட வேண்டி உள்ளது அல்லவா!
எனவே எவ்வாறு தம்முடைய பொய், பேராசை, பொறாமை, காமம், குரோதத்தால் பல அதர்மங்களைச் செய்து கர்ம வினைகள் பெருகி விட்டனவோ, இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தக்க நிவாரணம் பெறும் வரை, அத்தகைய கர்ம வினைகளின் விளைவுகள் நோய், மனக்கஷ்டம், அமைதியற்ற குடும்பம் எனப் பல்வகைத் துன்பங்களாக, ஒருவரைத் தொற்றிக் கொண்டே, துரத்திக் கொண்டே வரும். பாதிக்கப்பட்டவர்கள் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்க, இதற்குக் காரணமானவர் ஒரு சிறு பரிகாரம் மூலம் தப்பித்திட முடியுமா? - என்று சிந்தனை செய்திட வேண்டும்.
செய்த பாவங்களால், தீவினையால் பாதிப்பிற்கு ஆளானோர் துடிதுடித்துக் கொண்டிருக்க, பின் எப்படி மிக எளிய முறையில் பாவங்கள் கரையலாகும்? மனசாட்சியைத் தொட்டு ஆத்ம விசாரம் செய்திடுக! எண் ஜாண் அளவான உடல் தாங்கும் மனமானது, முறையற்ற வகையில் எண்பதாயிரம் கோடி கஜ தூரம் பாய்கையில், மிக எளிய பரிகாரத்தால் உடல், மனம், உள்ளத்தால் செய்த துன்பங்களுக்கு மிக எளிய வகையிலா பிராயச்சித்தம் தேட முடியும்? இவ்வாறு கஜச் சாயைத் திருநாளின் நீள்வகைக் காய்கறிகள் கூடிய அன்னதானத்திற்குப் பிறகு ஆற்றும் ஆத்மவிசாரம், இதற்கான நல்ல தெளிவைப் பெற உதவும்.
யானைச் சாணத்தை மிதித்தல், ஆயுர் வேதப் பூர்வமாக, சித்த வைத்திய ரீதியாக உடலுக்கு நன்மை பயப்பதோடு, ஆன்மீக ரீதியாகவும் பலத்த தோஷங்களையும் போக்க வல்லதாகும். வெறும் மூலிகைத் தாவரங்களை மட்டுமே உண்டு விலங்குகளிடையே நல்ல பலத்தைக் கொண்டு யானை விளங்க மூல காரணமே அதனுடைய ஆத்ம பலமும் ஒன்றாகும். பூர்வ ஜன்மப் புண்யத்தாலும் கிட்டுவது இது.
மனித குலமும் இத்தகைய ஆத்ம பலத்தை, வேத மந்திரங்கள், பூஜைப் பலன்கள், அரிய மூலிகைகள், சூரிய, சந்திர, நட்சத்திர ஒளிக் கிரணங்கள் போன்றவற்றின் மூலம் பெற்றிடலாம். பச்சிலைகளில் ஆத்ம பல சக்தி அதிகமாக நிறைந்து உள்ளது. ஆத்ம பலம் திரளும் நாளாகவும் கஜச் சாயைத் தினம் விளங்குகின்றது. எனவே கஜ சாயை தினத்தன்று, மூலிகைத் தளங்களால் - பித்ருக்களின் நாயகரான - பெருமாளை அர்ச்சித்தல் விசேஷமானதாகும். இதனால், அறிந்தோ, அறியாமலோ வாழ்வில் பலருடன் தர்கம், வாக்குவாதம், வாய்த் தகராறு செய்தமையால் ஏற்பட்டுள்ள வல்வினைகளுக்கு ஓரளவு பரிகாரம் கிட்டலாகும்.
ஆத்ம பலம் நிறைந்த பச்சைத் தாவரங்களுள் அருகம்புல்லும் முன் நிற்கின்றது. நாள் முழுதும் நீருக்கு பதில், சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட அருகம்புல் கஷாயத்தை அருந்துதலால், நாக்குத் தடித்து வலிய வார்த்தை பேசும் தீய தன்மை விலகிட உதவும்.
கஜ சாயை அன்று யானைச் சாணத்தை, அதன் இளஞ் சூடு தணியும் முன், சாணமிதி ஆற்றுதலாக, “கஜசாரண்ய காருண்யாத்ம பல குணவதீய சரணாகதாம்ருத ரஸ்து!” என ஓதி, சாணத்தை மிதித்து வலம் வருதல் மிகவும் விசேஷமானது.
யானைக்குள் இருக்கும் ஆத்மபல யோகாக்னி அக்னி சக்திகள், மூலிகைச் சாரமாகிய சாணத்தில் திரண்டு, பூமியில் ஆழ்நிலை நீரோட்டங்கள் மூலமாக ஜீவன்களை அடைகின்றன. தீ மிதி உற்சவம் போல, சாணமிதி ஆற்றுதலில், யானைச் சாண யோகாக்னி சக்திகள் பாத ரேகைகள் மூலம் ஆகர்ஷணம் செய்யப் படுகின்றன. யானைச் சாணத்தை பஸ்மமாக்கி சில வகைக் காப்புப் பஸ்பங்கள் செய்வதும் உண்டு. இவை மூலிகா ரகசியங்கள் ஆகும்.
கஜ சாயை அன்று கோயில்களில் நல்ல மிகப் பெரிய அளவில் பிரகாரம் முழுதும் கோலம் இட்டு வழிபடுவதும் கஜமூல சக்திகளை அளிப்பதாகும். அக்கம்பக்கத்தில் உள்ளோர்களுடன் உள்ள பிரச்னைகள் தீர, இதன் பலாபலன்கள் உதவும்.

பணத்தைப் பாதுகாக்கும் முறை

பணம் என்பது ஒரு வகைச் செல்வம் என்பது உண்மையே. ஆன்மீக ரீதியாக பணம் என்பது புண்ணியத்தின் விளைவாக வரும் வினை பொருள் ஆகும். பணத் தாளை பயன்படுத்துவோர், பயன்படுத்துவோரின் எண்ணங்களும் பணத்தில் பதிந்து வரும்.
எனவே, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியே பணத்தைக் கொடுக்கல், வாங்கல் செய்தல் வேண்டும். இதனால் பணத்தில் படிந்து வரும் தோஷங்கள், கர்ம வினைப் படிவுகள் ஓரளவு அகல உதவும். லஞ்சம், மது, போதைப் பொருட்கள், புகைபிடித்தல் போன்ற சாமான்கள் வாங்கி விற்றல், தீய காரியங்களில் சுழலும் பணம் போன்றவை மூலமாக பணத் தாளில் கர்ம வினைப் படிவுகள் குவிகின்றன.
பணத்தாளில் நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருந்தால் அதில் நற்கதிர்களும் படியும். இவ்வாறு வரும் பணத்தை நன்கு வேத, யோக, மந்த்ர, தந்தர சக்திகளால் சுத்திகரித்த பின் பயன்படுத்துவதும், பிறருக்கு அளிப்பதாலும் புனிதமான பணத்தாளைப் பிறருக்கு அளிக்கின்ற நல்பாக்கியத்தையும் பெற்றிடலாம்.
சந்தன மரப்பெட்டி, ஓலையால் ஆன பர்ஸ், இயற்கைப் பண்டங்கள் ஆகியவற்றில் பணத்தை வைப்பதால் அவை புனிதம் அடைவதற்கும், எப்போதும் கல்லாப் பெட்டியில் சங்குகளுக்குக் கீழ் பணத்தை வைத்து எடுப்பதும் நல்லது. நம் பாட்டிமார்கள் துணிச் சுருக்குப் பையில் பணத்தை வைத்து எடுப்பார்கள்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர் புதுக்கோட்டை

எல்லாவற்றோடு தினமும் சந்தனப் பெட்டியில் தினம் மல்லிகைப் புஷ்பம் வைத்து வருதல் நல்லது. இவ்வகையில் பண பூஜை செய்பவர்கள்தாம் பல பிறவிகளில் சிறிது சிறிதாக லட்சுமி கடாட்ச சக்திகளைச் சேகரித்து இப்பிறவியில் பெரும் தனவந்தர்கள் ஆகின்றனர். எனவே லட்சுமி கடாட்சத்திற்கான மூலம், பூர்வ ஜன்மப் புண்ய பலத்தால் வருவதாகும்.
திரயோதசித் திதி லட்சுமி கடாட்ச பூஜா சக்திகளைத் திரட்டி தர வல்லதாகும். தினமும் கஜலட்சுமிக்குத் தாமரைப் பூ சூடுதல், பசுவை வலம் வந்து மஞ்சள், குங்குமம் இடுதல், துளசி, மலர்களைத் தானே தொடுத்தும், சந்தனத்தைக் கைகளால் அரைத்துப் பெருமாள் ஆலயத்தில் அளித்தல், கை கால்களைக் கழுவி வீட்டினுள் செல்தல்,  பகலில், மாலையில் உறங்காதிருத்தல், பாண்ட், சட்டைகளில் கண்ட இடத்தில் பணத்தை வைக்காது நெஞ்சில் உறையுமாறு உள் சட்டைப் பாக்கெட்டினுள் பணம் வைத்தல் இவ்வாறு லட்சுமி கடாட்சத்தை விருத்தி செய்யும் முறைகள் உண்டு.
திரயோதசி நாட்களில் லட்சுமிக்கு முழுத் தாமரை மலர்களால் மாலை அணிவித்து, லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
திரயோதசி நாட்களில் அபூர்வமான பித்ரு சக்திகள் பூமியில் திரளும் என்பது உண்மையே. ஆயுதங்கள் என்றாலே எதிரிகள் மேல் பாய்ச்சுவது என்ற தவறான எண்ணமே எங்கும் ஏற்பட்டுள்ளது. தேங்காய் உடைப்பது, தோட்டங்களைச் சீர்படுத்துதல் போன்ற நல்ல காரியங்களுக்குமாக, அரிவாள், மண்வெட்டி போன்றவை பயன்படலாகும் அல்லவா! தீய செயல்களுக்கு அல்லாது, நல்லவற்றிற்கும், தொழில் ரீதியாகவும் ஆயுதங்கள் நன்கு பயன்படுவதற்குமாக சனிக்கிழமை, ஆயுத பூஜை, சஸ்த்ரஹத மாளயம் போன்ற பூஜை நாட்கள் அமைகின்றன.
மேலும் இரும்பு போன்ற உலோக வகைகளால் அடிபடுதல், ரணமாதல், வெடிகுண்டு, விபத்துக்கள் இவ்வகையில் இறந்தோருடைய சாயா சரீரம் நன்னிலை பெறவும், துருப்பிடித்த இரும்பு, வெடிக்காத குண்டுகள், கூர்மையான ஆயுதங்களாலும் தீங்குகள் நேரா வண்ணம் ஜீவன்களைக் காத்திடவும், இந்நாட்களில் இயற்றப்படும் தர்ப்பணப் பூஜா பலன்கள் உதவுகின்றன.
விபத்து, ஆயுதம், போர்முனை, குண்டு போன்ற ஆயுதங்களால், அஸ்திரங்கள், உலோகங்களால் இறந்தோர், கீழே தவறி விழுதல், அடிபட்டு வாழ்ந்து இறந்தோர் நன்னிலை பெற உங்களிடம் உள்ள பழைய சைக்கிளை நன்னிலைப்படுத்தி மாளயபட்ச நாட்களில் தானமளித்தல் ஏழை ரிக்ஷாக்காரர்களுக்கு ரிக்ஷா பழுது பார்ப்பதற்கு தேவையான உலோக வகைகளைத் தானமாக அளித்தல் மிகவும் நன்று.
உலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பொருட்கள் அதனதற்காகவும் நன்முறையில் பயன்பட, கண்ணும், கருத்துமாய் இருக்க வேண்டியது, இதற்காகத் தினந்தோறும் சனீஸ்வரரைப் பூஜிப்பது ஒவ்வொரு மனிதனின் ஆன்மீகக் கடமையாகும். இதிலும் புனிதமான பாரத நாட்டில் பிறந்தோர்க்கு இந்த உத்தமமான கடமையானது, பூவுலகின் தெய்வீக மையமாக உய்யும் பாரதத்தில் பிறந்தமையால், கொண்டதொரு மானுடப் பிறப்பின் தலையாய லட்சியக் கடமையாகவே விளங்குகின்றது.
மேலும் நம்மையும் அறியாமல் பல சிறு புழு, பூச்சிகளையும் உணவில் இருப்பதை அறியாது உண்ணல், வாகனங்களில் அடிபட்டு ஜீவன்கள் அடிபடுதல் - இவற்றிற்கு எல்லாம் காருண்யத் தர்ப்பணமாக, தான் வழ்வில் கண்டும் காணாமலும் இறந்த புழு, பூச்சி போன்ற ஜீவன்களுக்கும், உணவில் காய்கறிகளாய் உண்ட தாவரங்கள்,
இது வரை நாக்கு ருசிக்காக உண்டு தீர்த்த அசைவ உணவாக வந்த மீன், கோழி போன்ற பிராணிகள் இவற்றிற்கும் சனிக் கிழமைகளில் காருண்யத் தர்ப்பணம் அளித்திடல வேண்டும்
இரும்பு, தகரம் போன்றவை பூஜைகளில் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றது. எனினும் இவை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு நலன் தரும் வகைளில் குழாய்கள், எண்ணெய் டின்கள் போன்றவையாக நன்முறையில் மட்டுமே பயன்படவும், ஆயுதங்களாக கொள்ளை, திருடு, துப்பாக்கி போன்ற வகைகளில் தீயவற்றுக்குப் பயன்படாமல் தவிர்க்கவும் சஸ்த்ர ஹத மாளய நாளன்று அன்னதானமாக ஏழைகளுக்கு சமையற் பாத்திரங்களைத் தானமாக அளித்தலால் உலோக வகைகளால் குடும்பத்திற்கு, தொழிலுக்கு துன்பங்கள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.
திருமகளுக்கு உரித்தான திதியே மஹாதிரயோதசி ஆதலின், திரயோதசித் திதிகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாகத் துலங்கும் மஹா திரயோதசித் திதி நாளில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாக , தாயார் அருளுந் தலங்களில் ஏழைச் சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களைத் தானமாக அளித்தலால் அடிக்கடி பணநஷ்டங்கள் ஏற்பட்டு, பொருள் விரயமாவது தவிர்க்க உதவும்.

மாளய அமாவாசை சிறப்பு

மாளயபட்ச அமாவாசையின் அன்னதானத்தில் விளையும் “பிதரசுஜம்” எனும் சக்திகள்தாம் பிரபஞ்சத்தின் அண்ட சராசரங்களிலும் பயன்படும் ஆன்மீக நாணயமும் ஆகும். இதைப் பெறுதல் மிகவும் கடினம். அன்னதானப் புண்ய சக்திகள்தாம் இதனை மலர வைக்கும்.
புண்ணியங்களிலும் பல வகைகள் உண்டு. நற்காரியம் செய்த உடனேயே அதில் திரளும் புண்ய சக்தி உடனேயே, கலியுகத்தில் தற்போதைய வாழ்க்கையிலேயே பயன்படுவது, பாவ வினைகளைக் கழிக்கப் பயன்படுவது, நன்கு விருத்தியாகித் திரண்டு சந்ததிகளுக்கும் ஆகி வந்து ஆசிகளை அளிப்பது, கொடிய பாவங்களை ஓரளவு தணிக்க உதவுவது, அவரவர் குடும்பத்திற்கு மட்டும் பயனாவது, பிறருக்கு அர்ப்பணித்துப் பயன் தர வல்லது என்று புண்ய சக்திகளும் பல்வகைப்படும். அன்னதானத்தில்தாம் இவை அனைத்தும் ஒருமித்துக் குவிகின்றன.
பிற யுகங்களில் உணவின்றி மனிதன் பல்லாண்டுகள் வாழ முடியும். ஆனால் கலியுகத்தில், மனித உடல் அன்னமய கோசமாக, உணவைச் சார்ந்து உயிர் ஜீவிப்பது விளங்குவதால், அன்னதானத்தில்தான் அனைத்து வகைப் புண்ய சக்திகளும் திரண்டு வருவதாய் அமைந்துள்ளன.
அமாவாசைத் திதிகளுக்கு எல்லாம் மூலத் திதி மூர்த்தியாய் அமைவதே மாளய அமாவாசை! மாளயம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. மால் + அயம் என்றால் திருமாலின் திருவருளானது பல தெய்வீகக் காரியங்களின் பலா பலன்களாக அமாவாசைத் திதித் திதியில் தாமே திரண்டு வருதல் என்றும் அர்த்தமாகும். திருமாலுக்கும் ப்ரீதி தருவதாகவும், பித்ருக்கள் தம் பெருமாள் பூஜைகளைத் தம் சந்ததியர்க்கும் அர்ப்பணிப்பதாகவும் அமைகின்றது.
பித்ருக்கள் தம் சந்ததியினருக்கு உதவுகின்றனர் எனும் போது இந்த அருளும் அணுகு முறை குறுகியதாக இருக்கிறதே என்று பலரும் எண்ணுவர். இது தவறான எண்ணம். ஒவ்வொரு பித்ருவின் சந்ததியரும் அனைத்து நாடுகளிலும், தற்போதைய அனைத்து மதங்களிலும் மனிதர்களாகவும், தாவர, விலங்கினங்களாகவும் பிறப்பு எடுத்திருக்கலாம் அல்லவா! இவ்வாறு ஒரு பித்ருவிற்கே கோடிக் கணக்கான உயிரினங்களைக் கடைத்தேற்ற வேண்டிய அருளார்ந்த பொறுப்பும், கடமையும் உண்டு என்பதையும் அறிந்திட்டால்தான், பித்ரு பரிபாலனம் என்பது ஜாதி, சமய, இன, குல வேறுபாடுகளைத் தாண்டுவதோடு, மனிதன், ஆண், பெண், மாக்கள், தாவரங்கள், ஜடப் பொருட்கள் என்ற வேறுபாடுகளையும் கடந்த ஜீவகாருண்ய தேவ நிலையில், பூவுலகப் பித்ரு சாந்த ஜோதிப் பரிபாலனமாக நடைபெறுகின்றது என்பதை உணரலாகும்.
சிறிது எள்ளும், நீரும் வார்ப்பதையே மகத்தான வழிபாடாகப் பித்ருக்கள் ஏற்கின்றனர் எனில் என்னே பித்ரு வழிபாட்டு மஹிமை! இறந்த தாத்தா, பாட்டி, பெற்றோர்களின் விருப்பமான உணவு வகைகளை தானமாக அளிப்பதால், ஒரு சிறு வடைகறி, அடை அவியல், காபி மேல் வைத்த ஆசையைக் கூட நீக்க முடியாது இறந்து, பிறவித் தளையில் மாட்டி அவதியுறும் முன்னோருடைய ஆசைத் தளைகள் விலகி, அவர்களுடைய ஜீவசக்தியானது ஆசைப் பின்னலில் இருந்து விடுபட்டு, அடுத்த நிலைக்குச் செல்ல உதவிடும்.

மாளய பட்ச அமாவாசைத் திதி நேரம் முழுதும்
ஓம் நமோ நாராயணாய
ஓங்கார சுஜாதீய ஔஷதாம்
ஓம் பூர, பர பிரம்ம சர்வக்ஷேம சுதாம்ருதாம்!
ஓம் பொருளானவாறே மாதவா, மால்குணமாறா
ஓதியே கண்ட கீதம் நினைவது ஆகுமாறே
ஓம் அதுவென்றே ஓதி ஆதவா நீ ஆகிய ஜோதி
ராம் பரபிரம்ம ராமா! ரங்கனாய் ராகவ ராமா!
சோதித்த திருவடி ஆகி சோபனாய் ஜோதி பாதம்
வேதமே பரந்த ஜோதி வேய்ந்தாய்ந்த பரிபாத யோகம்!
என்று ஓதி அமாவாசைத் திதித் தர்ப்பணம் அளிப்பதும், நாள் முழுதும் இத்துதியை ஓதியவாறு நாராயண நினைவில் இருத்தி நிற்றலும் நன்று. மாளய அமாவாசை அன்று எத்தனை பெருமாள் ஆலயங்களில் அன்னதானம்தனை நிகழ்த்துகின்றீர்களோ அந்த அளவிற்கு, பித்ருக்களின் ஆசியால் குடும்பத்தில் அமைதி பூரிப்பதை நீங்களே கண்டிடலாம்.

இறைவனுக்கு முன் சாளரம்
உள்ள தீர்த்தம் பெருநகர்

மாளய அமாவாசையுடன் வைதிருதி சேர்ந்து வருவது மஹா வைதிருதி யோக நாளாகும். 1000 மடங்கு வைதிருதித் தர்ப்பண நாள் பலன்களை அளிக்க வல்லதாம்.
பொதுவாக, பித்ருக்கள், காக்கை வடிவில் வருவர். அல்லது பித்ரு லோகம் சென்று வந்த காக்கை வீட்டிற்கு வந்து குரல் கொடுத்து, பித்ரு சக்திகளை சப்த வடிவில் அளிக்கும்.  தினமும் காக்கைக்கு உணவிடுவது கரி தோஷங்களைப் போக்க உதவும்.
தான் எவ்விதத் தவறும் செய்யாத போது, பலரும் வீண் பழி, ஏசுதலுக்கு ஆளாவதுடன், பலத்த மானப் பிரச்னை, பெரும் நஷ்டத்திற்கும் ஆளாவதும் உண்டு. இவை எல்லாம் கரி தோஷங்களில் அடங்கும்.
தனக்கு உதவி செய்த வரை நன்றி மறந்திடினும் பலத்த கரிதோஷமாக வந்து விடும். இதற்குப் பிராயச்சித்தம் தர வல்லவை 96 நாட்களில் ஆற்றப் பெறும் ஷண்ணாவதி வகைத் தர்ப்பண சக்திகளே!
தான் செய்யாத தவறுக்காகத் தணடிக்கப்படுகின்றேனே என்று புலம்புவோர், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எத்தனை முறை தான் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படாது தப்பித்தோம், தனக்காகப் பிறர் தண்டனைக்கு ஆளானார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். செய்த தவறுகளை மனதார உணருவதும் தக்க பரிகாரத்தைப் பெற உதவும்.
கரிநாள், வைதிருதி யோகம், மாளய அமாவாசை மூன்றும் சேர்ந்து வருவது பிஞ்சாலத் தர்ப்பணம் ஆகும்.

இந்நாளில் எந்த மூதாதையர் மேலுலகில் நன்னிலை பெற வேண்டும் என எண்ணுகின்றீர்களோ, அவருக்காக விசேஷமாக 24 முறை எள்ளும், நீரும் கூடிய விசேஷத் தர்ப்பணம் அளித்திட, பிஞ்சாலத் தர்ப்பண சக்தியால், அவருடைய சாயைச் சரீரம் எங்கிருந்தாலும் சரி, எங்கோ பிறந்து எங்கு வாழ்ந்தாலும் சரி, பிறப்பில்லாது ஏதேனும் சாயைச் சரீரத்தில் அவதியுற்றாலும் சரி, இத்தகைய பிஞ்சாலத் தர்ப்பண பலன் நிச்சயமாக அவரைச் சென்றடையும் வண்ணம் வைதேஹி லோகப் பித்ருக்கள் உதவுகின்றனர்.
கரிநாள், வைதிருதி யோகம், மாளய அமாவாசை மூன்றும் சேர்ந்து வந்த பிஞ்சாலத் தர்ப்பண நேரத்தில் பிறந்த குழந்தையின் குடும்பத்தினர் மனம் குளிரும்படி, இன்றோ அல்லது அடுத்த பட்சமான நவராத்திரிக்குள்ளோ அன்னம், உடை, தானியங்கள், மளிகைச் சாமான்கள் அளித்தலானது, கரிதோஷ நிவர்த்திக்கு மிகவும் உதவிடும். இதனால் உண்மையை மறைத்ததால் வரும் வல்வினைகள் தீரவும், பிறருடைய பெருந் தவறாமல் தானும் அதர்மமாக சிக்கி அவதியுறுகின்ற தீவினைகளும் அகல தக்க நல்வழியைக் காட்டும்.
சொற் பொருளுக்கு அப்பாற்பட்ட மகத்துவம் வாய்ந்ததே இன்றைய பிஞ்சாலத் தர்ப்பணம் ஆகும். தான் செய்யாத தவறுக்காக வாட்டப்படுகின்றோம் என்று எண்ணுவோர், சனித் தீர்த்தம், சனி மூர்த்தி வழிபட்ட தலங்கள், நெல்லி, நெய்க் கொட்டா மரம், சந்தன மரம் தல விருட்சமாக உள்ள தலங்கள், இறை மூர்த்திக்கு முன் சாளரம் உள்ள ஆலயத் தீர்த்தம் இவற்றில் ஷண்ணாவதித் தர்ப்பண சங்கல்பத்துடன் தர்ப்பணம் அளிப்பதுடன், கரி தோஷ நீக்கப் படலமாக, கறுப்பு நிறக் கிஸ்முஸ் (சிறு உலர் திராட்சை) கலந்த சாம்பார் சாதப் பொட்டலங்களை களிப்பாக்கு வைத்த தாம்பூலத்துடன் தானமாக அளித்திட வேண்டும்.

வாக்குக் குற்றங்கள் மறைய ...

மாளய பட்ச அமாவாசை முடிந்த உடனேயே துவங்குவது நவராத்திரி பட்ச நாட்களாகும். அம்பிகையே பூவுலகிற்கு வந்து ஒன்பது இரவுகள், இறைவனை மானுடப் பெண் வடிவத்தில் பூஜிக்கும் அதியற்புத நாட்கள். இயன்றவர்கள் லலிதா சகஸ்ரநாமம் அல்லது அங்காள பரமேஸ்வரி அந்தாதி, அபிராமி அந்தாதி மந்திரங்களைத் தினமும் இத்தனை முறை ஓதுதல் எனச் சங்கல்பம் ஏற்றுச் செய்தல் நல்ல மனோதிடத்தை, நல்ல வைராக்யமான மனதைத் தரும்.
மூன்று முறை ஓதுவதாகச் சங்கல்பம் எடுத்தால்,
முதலாவது தாய் வகையினருக்கும்,
இரண்டாவது தந்தை வகையினருக்கும்
மூன்றாவது சந்ததிகளுக்குமாக பலன்களை அர்ப்பணித்து துதித்திடுக!
சுயநலப் பிரார்த்தனை இல்லாது அனைத்தையும் பிற ஜீவன்களின் நலன்களுக்காக அர்ப்பணித்தல் எளிதன்று, சமுதாய நல பூஜை என வெறும் உதட்டளவில் இல்லாது உளப்பூர்வமாக அமைதல் மிக மிகக் கடினமே! இந்த உத்தம நிலையை அடையும் வரை தனக்காக, தன் குடும்பத்திற்காக என வேண்டி வழிபடுவதில் தவறில்லை! சங்கல்பங்கள் எல்லாம் சங்கல்பங்கள் ஆவதில்லை என்பது சித்தர்களின் வாக்கை நன்கு ஆத்மவிசாரம் செய்திடுக!
எனவே என்னதான் நாம் இறைவனிடம் வேண்டினாலும், வர வேண்டியதே வரும். வர வேண்டி இல்லாதது வராது. இதுவே நல்வாழ்க்கையின் நியதிச் சித்தம்! இதுவே வரத்தின் கோட்பாடும் ஆகும்.
நவராத்திரியில் அமையும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். இந்நாளில் அம்பிகை, ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் சன்னதியில் தம் நவராத்திரிப் பூஜைகளைத் துவங்குகின்றாள்.  ஸ்ரீசந்திர மௌளீஸ்வரருக்கு வெண்மை நிறப் புஷ்பங்கள் சார்த்தி மௌனமாக அடிப் பிரதட்சிணம் வந்து வழிபட்டு, ஸ்ரீசந்திர மௌளீஸ்வர ஆலயத்தில் இருந்தே சந்திர தரிசனம் பெறுவது பிள்ளையைப் பற்றிய கவலைகள் எப்போதும் மனதில் மிதப்பதைத் தணிக்கும்.
நவராத்திரியில் சந்திர மூர்த்தி, அம்பிகையின் தரிசனம் பெற்று, அமுதசாகர மந்திரங்களை ஓதிப் பூஜிப்பதால், இன்றைய மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் அம்பிகையைப் பூஜிக்கும் சந்திர மூர்த்தியை வழிபடுகின்ற விசேஷத்தைக் கொண்டதாகின்றது.
சந்திர தரிசன நாளில் அமிர்தாம்பிகை, அமிர்தவல்லி நாமங்களை அம்பிகையின் அஷ்டோத்தரங்களாக (உ-ம் ஓம் ஸ்ரீஅமிர்த கற்பகாம்பிகையே போற்றி, ஓம் ஸ்ரீஅமிர்த மீனாட்சி தேவியே போற்றி) ஓதிப் பூஜித்தலால் அவசரப்பட்டுத் தவறாகப் பேசி, வாக்குக் குற்றங்களால் விளையும் துன்பங்கள், விபரீதங்கள் குறைய உதவும்.

பாத நோய்களுக்குப் பரிகாரம்

நவராத்திரியில் பிரதமை முதல் நவமி வரை ஒவ்வொரு திதியும் விசேஷமான பலன்களைக் கொண்டது ஆகும். தினமுமே மாங்கல்ய, மங்கள, மன அமைதியை அபரிமிதமாக அள்ளித் தரும் மாதுரீய சக்திகள் பூக்கும் நவராத்திரி உற்சவமிதுவே!
நவராத்திரியின் மூன்றாவது திரிதியைத் திதியின் மகத்துவம் யாதெனில், திரிபங்க நிலை எனப்படும் சற்று சாய்ந்து கருணாகர எழிலுடன் நின்று அம்பிகை இறைவனை நின்ற கோலத்தில் பூஜிக்கின்ற மகத்துவம் கொண்டதாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
இலஞ்சி

ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் பூலோகத்திற்குப் பல வடிவுகளில் வந்து பூஜிக்கும் சனீஸ்வர மூர்த்தி, நவராத்திரித் திரிதினமுமாக அமையும் சனிக் கிழமையன்று, த்ரிபங்கிக் கோலத்தில் அம்பிகை அருளும் தலங்களில், விசேஷமான பூஜைகளை மேற்கொண்டு அருள்கின்றார்.
இந்நாளில் த்ரிசதி, மூகபஞ்சசதி, காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, அருணாசலக் கவிராயரின் ராமாயணப் பாடல்களை ஓதி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் பெண் பிள்ளைகளின் சிறு உடற் குறைகளைப் பற்றிக் கவலையுறும் தாய்மார்களின் கவலைகள் தணிய உதவும்.
யோக நிலைகளில் நன்றாக நிமிர்ந்து, நின்று வலது காலை மடித்து, வலப் பாதத்தை இடது முழங்காலின் பக்கவாட்டில் நிற்கும் நிலைக்குத் த்ரிபாத பங்கஜ யோகம் என்று பெயர். சற்றுக் கடினமான யோகம் எனினும் தினமும் காலையிலும் மாலையிலும் இவ்வாறு யோகப் பூர்வமாக நின்று பழகுதலால் எப்போதும் தினமுமே எதிர்ப்புகள், போட்டி, பொறாமை உடையவர்களுடன் வாழ்வோர்க்கு நல்ல மனோ தைரியமும் ஸ்திரமான மனோ நிலையும் ஏற்பட உதவும். முறையாக இதனைச் செய்து வர, இந்த யோகப் பலன்கள் சர்க்கரையை சக்தியாக்கும் நாளங்கள் நன்கு விருத்தி பெற உதவுவதுடன், சர்க்கரை நோய்க் கடுமைக்கு ஓரளவு தணிவுகளும் கிட்டும்.
நவராத்திரியில் அமையும் சனிக் கிழமைகளில், நர்த்தன விநாயகர், பால தண்டாயுதபாணி, பைரவர் போன்ற நின்ற கோல மூர்த்திகளின் முன், குறைந்தது ஒரு நாழிகை நேரம் (24 நிமிடங்கள்) நின்று பூஜித்தலால், தரிசித்தலால் மனதில் நல்ல தெளிவான மன ஓட்டம் கிட்ட உதவிடும். உறவினர்கள் மற்றும் வியாபாரக் கூட்டாளிகள் மத்தியில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில், எத்தகைய முடிவை எடுப்பது எனத் திணறுவோர் நவராத்திரி திரிதியைத் திதி அல்லது சனிக் கிழமையுடன் கூடி வரும் நவராத்திரி நாட்களில்
நின்ற நிலையில் அருளும் நின்ற கோல பிரம்மா, நின்ற கோல விஷ்ணு, நின்ற கோலச் சிவ மூர்த்தி, மும்மூர்த்திகளையும் தரிசித்து, நடைப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம், கையை உயர்த்தி மேலே கூப்பிய கரங்களுடன் வானுறை நடைப் பிரதட்சிணம் 16 முறை செய்து வழிபடுதல், மனக் குழப்பங்களில் இருந்து தெளிவு பெற உதவும்.
இத்தகைய நாட்களில் மரப் பாதக் குறடு, பாதரட்சை எனப் பெறும் - கால் கட்டை விரலும் இதற்கு அடுத்த விரலும் மரக் குமிழில் மட்டும் தாங்கி நிற்கும் மரப் பாதக் குறடை அணிந்து, ஸ்திரமாக எட்டு நிமிடங்களேனும் நிமிர்ந்து நின்று, பிறகு சற்று நடந்து யோக நடை பயில்வதால் ரத்த அழுத்தம், தலைசுற்றல் போன்ற இன்னல்கள் தணிய உதவும். இது முதலில் சற்றுக் கடினமானதே!

துலா குளியல் மகிமை

கங்கைக்கும் மூத்தவள் காவேரி தேவி என்று பலரும் அறியார். கங்கையைத் தன் சிரசின் மீது சிவபெருமான் வைத்துக் கொண்ட போது, காவிரி நீரையே தன் சிரசில் தெளித்து, கங்கையை ஏற்றமையால், “கங்கைக்கு மூத்த காவேரி ஆத்தாள்” என்ற சிறப்பான அடைமொழிப் பெயரை ஏற்றாள். இன்றும் செட்டிநாட்டில் பெற்ற தாயை, ஆத்தாள் என்று அன்புடன் அழைத்தல் உண்டு.
ஐப்பசி மாதத்தில் சர்வேஸ்வரனே அனைத்து தெய்வ மூர்த்திகளுடன் பல காவேரி கட்டங்களிலும் புனித நீராடலை மேற்கொள்வதால், இந்த 30 நாட்களுக்குள் ஒரு முறையேனும் காவேரியில் நீராடுதல் என்ற சங்கல்பத்தை மேற்கொண்டிடுங்கள். காவேரி நதிக் கரையில் வசிக்கும் பேறு பெற்றவர்கள், 30 நாட்களிலும் தினந்தோறும் நீராடுதலாகிய சங்கல்பத்தை மேற்கொண்டு நீராடி வருதலுடன் ஷண்ணாவதித் தர்ப்பண நாட்களில் அப்போதே துவைத்து, அப்போதே காய்ந்த உடைகளை அணிந்து தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது. இதனால் பழைய வீடு, பழைய உடைகள், குறைந்த சம்பளம், பழைய ஊர் என்று வருந்தி வாடுவோர் நிலை சீரடைய உதவும்.

கங்கைக்கு மூத்தவளின்
கவின்மிகு நடை !

விபத்து, தற்கொலை என்றவாறான இயற்கையற்ற வகையில் இறந்தோரின் சாயைச் சரீரம் ஏதேனும் ஒரு கூடு வகையில் சிக்கி அடுத்த பிறவிக்குக் கூட வழி வகை இல்லாது தவிக்கும். இவர்கள் இக்கூட்டில் இருந்து விடுபட வழி வகை தருவதே, துலா மாத தினசரிக் காவிரி நீராடல், தினசரித் தர்ப்பணத்துடன் கூடிய, பலாப் பழம், பனம் பழம், பறங்கி போன்ற நார் வகை உணவு, பழங்களைத் தானமாக அளித்தலாகும்.
சந்தனக்கல், சந்தனக் கட்டை எடுத்துக் கொண்டு சென்று, காவிரியில் நீராடியவுடன் காவிரிக் கரையிலேயே சந்தனம் அரைத்து, அருகில் உள்ள விநாயகர் மற்றும் ஆலய மூர்த்திகளுக்கு இட்டு வருதலால், வருமானத்தில் ஏற்படும் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தியாக காவிரியில் பொலியும் தான்ய பகுபாலித சக்திகள் துணை புரியும்.
அனுஷ நட்சத்திர தேவி தினமும் காவிரியில் நீராடி, ஒவ்வொரு நாளையுமே துலா விஷூப் புண்ய காலமாக பாவனை கொண்டு, காவிரி தேவியை வணங்கி, சந்திர மூர்த்தியை மணக்கும் பெரும் பேற்றைப் பெற்றாள். எனவே துலா மாதக் காவிரி நீராடல், தம்பதியர் இடையே ஒற்றுமையைப் பேண உதவும்.
கபாலீஸ்வரர், ஆர்த்ர கபாலீஸ்வர மூர்த்திகள் ருத்ர சிவாம்ச மூர்த்திகள் ஆவர். துலா மாதத்தில், இம்மூர்த்திகளுக்குத் தினமும் பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, புனுகு, அத்தர், கோரோஜனை ஆகிய ஐந்தும் கலந்த காவிரி நீரை அபிஷேகத்திற்குத் தினமும் அளித்தல் மிகவும் விசேஷமானது. குறிப்பாக ஒற்றைத் தலைவலி, கபால நோய்கள், கபாலம் அடிபட்டுப் புண்கள் ஆறாதிருத்தல், கபாலத்தில் அடிபட்டு உறுப்புகள் செயல் இல்லாமல் இருத்தல் - போன்றவற்றிற்கு நிவர்த்திகளைப் பெற துலா மாதம் முழுதுமே கபாலீஸ்வரர், குடுமியான் மலை - முன் குடுமீஸ்வரர், கொடுமுடி ஆர்த்ர கபாலீஸ்வரர், தலையாலங்காடு சிவ மூர்த்தி - போன்ற மூர்த்திகளை மேற்கண்ட வகையில் அபிஷேகத் தீர்த்தம் அளித்து, தேங்காய், தர்பூசனி, மங்குஸ்தான் பழம், விளாம்பழம், பறங்கி, பூசனி போன்ற ஓட்டு வகைக் கனிகளை, உணவு வகைகளைப் படைத்து, தானமாக அளித்து வணங்குதல் மிகவும் விசேஷமானது.
ஐப்பசி மாதப் பிறப்பு நாளில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுதல் விசேஷமானது. இந்த மாதத்தில் ஒரு நாளாவது மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுதல் என்பதை வாழ்க்கைச் சங்கல்பமாக ஏற்றுச் செயலாற்றிடுக.
நீர் நன்கு புரண்டு ஓடும் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதப் பிறப்புத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது. ஆற்றங் கரையில், படித் துறையில், நல்ல ஆற்றங்கரை மரத்தடியில் கொய்யாப் பழங்களின் மேல் தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்தலால் தன்னுடைய சொத்துக்களை உடைமைகளைப் பிறர் கவர்ந்து சென்றிடுவார்களோ என்று அஞ்சி, அஞ்சி வாழ்வோர்க்கு மன பீதி அகல உதவும் நாள். கொய்யாப் பழங்களைத் தானமாக அளித்திடுக!
ஐப்பசி மாதப் பிறப்பு நாளில் நிறைய கொய்யாப் பழங்களைத் தானமாக அளித்திடுதலால், மனம் பூரிக்கும் படியான, சந்தோஷமான நிகழ்ச்சி நடைபெற அனுகிரகம் பிறக்கும். சோக மயமான வாழ்வின் ஊடேயும் ஓரளவேனும் மகிழ்ச்சி பூரிக்கும் அனுபூதியைப் பெற, நிறைய கொய்யாப் பழங்களை வைத்துத் தர்ப்பணமும் குறைந்தது 108 பெரிய வகைக் கொய்யாப் பழங்களைத் தானமாகவும் அளித்திடுக.

இறை மூர்த்திகளை நீரில் கரைப்பது ஏன் ?

பூவுலகின் தெய்வீக மையமான புனிதமான நம் பாரதத் திருநாட்டின் பண்டிகைகள் யாவும் உலகச் சமுதாய நலப் பொது மறைப் பூஜைகளேயாம். இப்பூஜா பலன்களை நீர், காற்று, ஆகாயம், அக்னி, பூமி மூலம், பூமியெங்கும் உறையும் அனைத்து ஜீவன்களுக்கும் அளிக்கும் ஆன்மீக வழிமுறைகளில் ஒன்றே விநாயக மூர்த்தியை நீரில் கரைக்கும் விஸர்ஜனப் பூஜையாகும்.
நேத்ர தரிசன பூஜை என்பது வெட்ட வெளியில் அல்லது கொட்டகையில் பெரிய விநாயகர் போன்று பிரம்மாண்டமான மூர்த்திகளை - விநாயக சதுர்த்தியின் போது பொது மக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுவது போல் - பர ஆகாசத்தில் ஆவாஹனம் செய்து - பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கும் போது, ஒவ்வொரு மனிதரும் அந்த மூர்த்தியின் சிரசு முதல் பாதம் வரை சாதாரணமாக வழிபாட்டு முறையில் கண்களால் பார்ப்பதைக் கூட “விழிமணி மலர் பூஜையாக, கண்மணிப் புஷ்ப பூஜையாக,” கலியுகத்தில் இறைவன் ஏற்று அருள்கின்றான். இதுவும் விநாயகச் சதுர்த்தியின் மகத்துவத்தில் ஒன்றாம்.
கண்மணிகளால் ஆக்கப் பெறும் இத்தகைய நேத்ர பூஜையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களையும் அறியாமல், இத்தகைய பெரிய மூர்த்திகளைப் பார்த்து, பார்த்து, தரிசனப் பூர்வமான கண்மணிகளால் ஆற்றுகின்ற பூஜா பலன்கள் யாவும் அந்த மூர்த்தியின் மேல் படிகின்றன. பிறகு, விஸர்ஜனம் எனப்படும் - நீரில் பிள்ளையார் மூர்த்திகளைக் கரைக்கும் வைபவத்தில் - கண்மணிப் பூஜா பலன்கள் யாவும் நீரோட்டம் மூலமாய், வான்வெளி, பூமிக்குள்ளும் நீரோட்டமாய் நிறைந்து பூவுலகெங்கும் பல கோடி ஜீவன்களுக்கும் பலனாகும் வகையில் நிறைகின்றன.

சாவித்ரி நதி லால்குடி அருகே

உதாரணமாக, கன்யாகுமரி நீரில் விஸர்ஜனம் செய்யப்படும் விநாயக மூர்த்தியில் பதிந்திருக்கும் கண்மணி புஷ்பப் பூஜை சக்திகள் யாவும், கடல் நீரோட்டம், பூமியடி நீரோட்டம், வான்வெளி நீரோட்டம் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, கீரின்ஸ்லாண்டு, ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, ஆர்க்டிக், அண்டார்டிக் என பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் நிரவிடும். எனவே விநாயகச் சதுர்த்திப் பூஜை உலகச் சமுதாய நலவள உத்தமப் பொது மறைப் பூஜையே!
இத்தகைய கண்மணி பூஜா புஷ்பப் பலன்கள், பூவுலக மக்கள், பூமிவாழ் அனைத்து ஜீவன்களையும் சென்றடைவதற்காகவும் விநாயக சதுர்த்தி விஸர்ஜனப் பூஜை நிகழ்கின்றது. இதே போன்று, சரஸ்வதி ஆவாஹனம், சரஸ்வதி விஸர்ஜன பூஜை முறைகளும் உண்டு. முந்தைய யுகத்தில் பரிணமித்த இவை யாவும், வருங்காலத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
நவராத்திரி பஞ்சமித் திதியில், களி மண் / சுதையாலான சரஸ்வதி ரூபத்தையோ, பொம்மையையோ பூஜையில் ஒரு பலகையில் எடுத்து வைத்து சரஸ்வதியை வந்தமர்ந்து அனுக்ரஹம் செய்யும்படி முதலில் கலைமகளின் பர்த்தாவாம் ஸ்ரீபிரம்ம மூர்த்தியை வேண்டிடுக. ஏனென்றால் சரஸ்வதி பூஜைக்கு வித்திட்ட மூலாதார மூர்த்தியே ஸ்ரீபிரம்மா ஆவார். ஆம், ஒரு பிரம்ம திருவிளையாடல் மூலமாகவே இத்தகைய சரஸ்வதி ஆவாஹன பூஜை தொடங்கிற்று.
ஒரு முறை, காஞ்சியில் அகண்டகார ஹோமம் எனும் நாள் முழுதும் ஆற்றும் யாக பூஜை ஆற்றித் தம் பிரம்ம சிருஷ்டித் தொழிலை நன்கு அபிவிருத்தி செய்வதற்காக, நான்முகனாகிய பிரம்மர் மிகவும் விழைந்தார். எப்போதுமே எந்த நற்காரியத்திற்கும் மனைவியின் அனுமதி பெற்று நிறைவேற்றுவதே சிறப்புடையது. இதற்காகவே தற்போதைய பூஜைகளில், மனைவியின் கரங்களில் தர்பையைக் கொடுத்து அனுமதி பெற்று வாங்கி. பூஜையை, ஹோமத்தை, நற்காரியத்தைத் துவங்கும் வழக்கம் இன்றும் நிவவுகின்றது.

பிரம்மா நிகழ்த்திய ஹோமத்திற்கு சரஸ்வதி வர இயலாமையால், பிரம்ம மூர்த்தி சரஸ்வதியைச் சுதை ரூபத்தில் ஆலாஹனம் செய்து, இதன் முன் அனுமதி பெற்று ஹோமத்தைத் தொடங்கினார். இவ்வாறு தொடங்கியதே சரஸ்வதி ஆவாஹன பூஜை! சரஸ்வதி தேவியும் திருமாலிடம் முறையிட்டுப் பிறகு சமரசத்திற்கு நேரில் வந்திட்டாள். சரஸ்வதியை ஆலாஹனம் செய்த சுதையை, பிரம்மா வேகவதி ஆற்றில் விஸர்ஜனம் செய்து, கலைமகளின் அருள் கிரணங்கள் பூலோகம் முழுவதும் நிரவும்படி பெருமாளை வேண்டிட்டார். இவ்வாறு நிகழ்ந்த சரஸ்வதி ஆவாஹன, விஸர்ஜன அனுபூதிகள் பல உண்டு.

வேகவதி ஆறு காஞ்சிபுரம்

சரஸ்வதி தேவி, பார்வதி தேவியை, மாதங்க பாரதியாகச் சுதை ரூபத்தில் வடித்து, யாழினும் மெல்லியாள் என்ற நாமப் பராசக்தி ரூபமாகப் பூஜித்து, இசைத் துறை நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றிட்டாள். பிறகு இந்த பாரதி வடிவமானது, ஏழு முக்கியமான புண்ணிய நதிகளில் விஸர்ஜனம் செய்யப் பெற்று, இவை தாம் இன்றைக்கும் பல தலங்களில் அந்தர்யாமியாக - நீரடியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து ஓடும் சரஸ்வதி நதியாக, திரிவேணி சங்கமமாக அலகாபாத்திலும், திருச்சி - அன்பில் அருகே முக்கூடலிலும், பவானியிலும் இதே போன்று முக்கூட்டு நதிகளின் சங்கமத்தில் அந்தர்யாமியாக சரஸ்வதி நதி ஓடுகின்றது.
பிரம்மா ஆவஹனித்த சரஸ்வதியின் சுதை வடிவம் கரைந்த புனிதமான ஆறே சரஸ்வதி ஆறாக, இன்றும் மூன்று நதி சங்கமத் தலங்களில் பொலிகின்றது.  
எனவே நவராத்திரியில் சரஸ்வதியை சந்தனம், சுதை ரூபம், மஞ்சள், களிமன் அல்லது நவராத்திரி பொம்மை போன்ற வடிவத்தில் வைத்து, நவமி திதி வரை வைத்துத் தினமும் பூஜித்து வர வேண்டும். தினமும் வெண் தாமரையால் அலங்கரித்துப் பூஜிப்பது மிகவும் சிறப்புடையதாகும். பிறகு நவமித் திதி அன்று, சரஸ்வதி நதி, அந்தர்யாமியாக இருக்கும் திரிவேணி சங்கமம் (அலாகாபாத்), முக்கூடல் நதிப் பீடத்தில், முக்கூடல் கடல் சங்கமத்தில், அல்லது ஓடும் நீர், ஆறு இவற்றில் சரஸ்வதி சுதை, களி மண் வடிவை விஸர்ஜனம் செய்வது சிறப்புடையது.

இந்த அபூர்வமான கலைமகள் பூஜை மஹிமையால் பிள்ளைகளுக்குக் கல்வி அறிவு நன்கு விருத்தி ஆகும். மிகவும் அபூர்வமான பூஜை! சரஸ்வதி சுதை வடிவம் கிட்டாவிடில் சந்தனத்தால் ஆக்கி கோரோஜனை, புனுகு, அத்தர், கஸ்தூரி, பன்னீர், ஜவ்வாது ஆகிவற்றைக் கலந்து சரஸ்வதி பிம்பம் வடித்து, சரஸ்வதி விஸர்ஜன நாளில் மாலை சூரிய அஸ்தமன நேரத்தில் கடலில், ஆற்றில் தாமரை இலையில் வைத்து விஸர்ஜனம் செய்திடல் வேண்டும். நல்ல நினைவுத் திறன், ஞாபக சக்தி, மந்திரங்களை மனனம் செய்யும் திறன் உண்டாகிட இப்பூஜை மிகவும் உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam