முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அன்பான உறவுகளைத் தொடருங்கள்

வானில் தோன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அசைவும் நம் உடலில் பல மாற்றங்களை, விளைவுகளை - நல்லதாகவும், கர்ம வினைகளை அனுபவித்துக் கழிப்பதாகிய துன்பங்களையும், அவரவர் கர்ம பரிபாலனப்படி ஜாதக ரீதியாகப்படி பெற்றுத் தரும். இதற்குக் காரணம், நமது உடலில், வானத்தில் உள்ள பல கிரகங்களின் அம்சங்களும் ஆங்காங்கே பதிந்து, அவ்வப்போது வானியற் கோளங்களின் நகர்வுகளுக்கு ஏற்ப, மனித உடலிலும் விளைவுகள் ஏற்பட்டு வருவதே ஆகும். இதுவே ஜாதக விஞ்ஞானத்தின் உட்பொருள் தத்துவமாகும்.
ஒவ்வொருவர் உடலிலும், வலது கண் சூரிய சக்தி, இடது கண் சந்திர சக்தி என பிறந்த கால கிரக சஞ்சாரப் பூர்வமாகவும், கோசார அம்ச இருப்புகள், நவாம்ச ரீதியான கிரக நிலைகள் போன்றவையும் உண்டு. வானத்தில் சூரிய, சந்திர முதல் இராகு, கேது கோள்கள் வரை உள்ள அனைத்துக் கிரகங்களின் அசைவுகள், நகர்வுகள், சலனங்களும் அவரவர் உடலிலும் அவரையும் அறியாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டு தாம் இருக்கின்றன.
இத்தகைய கோள ரீதியான மனம், உள்ளம், உடல் சலனங்களினால்தாம் மனிதனுடைய உடல் நிலை, மனோ நிலை உள்ள நிலை தினமுமே ஒரே மாதிரியாக இல்லாது மாறி மாறி அமைகின்றது. இதிலும் மனம் படுத்துகின்ற பாட்டையோ, மன ஓட்டத்தையோ சொல்லி மாளாது. நிமிடத்திற்கு நிமிடம் எங்கெங்கோ ஓடிக் கொண்டும், மாறிக் கொண்டும் எதை எதையோ எண்ணிக் கொண்டே இருக்கின்ற மனித மனப் பாங்கைத் தானே குரங்கு என்று சொல்கின்றனர்.

ஸ்ரீபெருமாள் பாதம்
பெருமாள்மலை துறையூர்

ஸ்ரீவிஷ்ணுபாதம்
மலையடிப்பட்டி

ஆனால், குரங்கு ஒரு விநாடி கூட உடல் பூர்வமாகச் சும்மா இராது அங்க சேஷ்டைகளைச் செய்து கொண்டிருந்தாலும், அது தவ்வித் தவ்வி ஓடுகையில், கிளைகளில் தாவுகையில், நல்ல ஒருமித்த மனத்தோடுதான் செயல்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, வானத்தில் கோளத்தின் அசைவுக்கு ஏற்ப, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே உண்மை ஆகும்.
பிறந்த நேரத்தை ஒட்டி அமைகின்ற ஜாதகக் கட்டத்தின் படி, உடலில் கிரகப் பூர்வ அம்சங்கள் அமைவதற்குப் பட்டக் கோளம் என்று பெயர். அந்தந்த நாளில் வானில் அமையும் கிரக நிலைகளுக்கு ஏற்ப, உடலில் கோள அம்சங்கள் அமையும் பாங்கிற்குச் பரிதக் கோளம் என்று பெயர்.  
இவ்வாறு குரு கிரகம் வக்ர கதி கொள்ளும்போது மோதிர விரல், வயிற்றின் நடுப்பகுதி, கபாலத்தின் தலைச் சுழிக்கு அருகே உள்ள பகுதி, காதுகளின் ஓங்கார வடிவம், இருதயத்தில் ஸ்வர்ண ரேகைப் பகுதி - போன்று குரு கிரக அம்சங்கள் பொதிந்துள்ள, அங்க அவயங்களில் பல மாற்றங்கள் ஏற்படும்.
இவை நன்முறையில் துலங்கி அமைந்திட, இத்தகைய நாட்களில் ஆலயங்களில் குறைந்தது 12 தெய்வ மூர்த்திகளின் திருப்பாத தரிசனங்களைப் பெறுதல் விசேஷமானது. ஸ்படிக குரு பாதங்களை ஆலய மூர்த்திகளின் பாதங்களில் வைத்து எடுத்து வந்து பூஜிப்பது இருதயத்திற்கு நல்ல ஆன்ம வலுவைத் தரும்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

மேலும் பித்ருக்களுக்கெல்லாம் நாயகராக விளங்குகின்ற பெருமாள் மூர்த்தியின் திருப் பாதங்களில் சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு, சந்தன, புனுகுக் காப்பு போன்ற வகைளில் ஆலயங்களில் எதை ஏற்று நடத்துகின்றார்களோ, அதைக் காப்பாக வைத்துக் கொண்டு பெருமாள் திருவடி தரிசனப் பூஜையாக நிகழ்த்துவதால் விடுபட்டு போன நெருங்கிய உள்ளம், சுற்றத்துடன், நன்முறையில் அன்பான உறவு தொடர வழி பிறக்கும்.
ஸ்ரீராமர் பாதம், ஸ்ரீகிருஷ்ணர் பாதம் என்பதாக, பாதங்கள் உள்ள தலங்களில், பாறைகளில் பாத பூஜை நிகழ்த்துதல் விசேஷமானது. இதன் பலாபலன்கள் பித்ருக்களையும் சென்றடையும்.
குரு கிரக மண்டலத்தை, தக்க சத்குருவின் அனுகிரகம் இன்றி அண்டவோ, அறியவோ இயலாது என்பதே மெய்ஞ்ஞானத்தின் சத்திய வாக்கு ஆகும்.
ஆண் துறவிகள் போல, முந்தைய யுகங்களில் கார்கி, மைத்ரேயி போன்ற மகரிஷினிகளும், அருந்ததி போன்ற உத்தம மகரிஷிகளின் நிலையோடு பொலியும் ரிஷிபத்னியரும், குரு கிரகம் இவ்வாறு வக்ர கதியில் அமையுங்கால், மிகவும் சிறப்பான முறைகளில் தவம் பல ஆற்றி, எண்ணற்ற வகைகளில் அபூர்வமான தபோ பலன்களைப் பெறுகின்றனர்.
எனவே இத்தகைய வக்ர கதி நாட்களில் அருந்ததி, அனுசுயா தேவி, கார்கி, மைத்ரேயி, தபதி, சபரி, காரைக்கால் அம்மையார் போன்ற உத்தம மகரிஷினிகளுக்கு, யோகியர்க்கு, தெய்வத் துறவிகளுக்கு அர்க்யம் அளித்தல் சிறப்பாகும்.
மேலும், 63 நாயன்மார்களுக்கும் ஒவ்வொருவருடைய நாமத்தையும் மூன்று முறையாவது ஓதி வடக்கு நோக்கி அர்க்யம் அளித்தல் மிகவும் விசேஷமானது. 63 நாயன்மார்களில், எப்போதும் அமர்ந்த நிலையில் தவம் பூண்டு இருப்பவரே காரைக்கால் அம்மையார்.

ஸ்ரீநடராஜர் உடையார்கோவில்

காரைக்கால் என்பது அவர் தோன்றிய இடமாகப் பலர் காரணம் கொண்டாலும், காரையம்பதீயம் என்பது நடராஜப் பெருமானுடைய அமர்ந்தும் அமராத யோக நிலையில் அற்புத நாட்டியம் கொண்டிட்ட சிவத் தலமாகும். பரத நாட்டியத்தில் இத்தகைய அமர்ந்தும் அமராத யோக நிலையில் நெடுநேரம் நடனம் ஆடுவது மிகவும் கடினமானது.
அம்பதி, ஆம்பதி, ஆரணம்பதி இந்த மூன்று நிலைகளில் அமையும் அமர்ந்தும், அமராத நிலையில் யோகப்புல நாட்டியம் ஆடுதல் மிகவும் விசேஷமானது. ஆரணவல்லி எனப் பெயர் பூண்டருளும் அம்பிகை இத்தகைய நாட்டிய சக்திகளுக்கு அருள்வதால், நாட்டியத் துறையினர் ஆரணவல்லி எனப் பெயர் கொண்டருளும் அம்பிகையை அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும். மேலும் ஆரணவல்லி சமேத பூமீஸ்வரர் வழிபாடானது பூமியில் பூகம்பத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு நிவாரணம் தர வல்லதாகும். மேலும், பூகம்பம் வராது தடுக்க வல்ல ஆத்ம சக்திகளைப் பொழியும் யோகப் புலத் தலமும் ஆரணவல்லி சமேத பூமீஸ்வரர் ஆலயமாம்! புதுக்கோட்டை குழிப்பிறை அருகே உள்ள செவலூரில் உள்ள ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஆரணவல்லி அருள்கின்றார்.
ஸ்ரீநடராஜப் பெருமான் பல தலங்களிலும் இவ்வரிய நாட்டியத்தை மேற்கொள்கின்றார். நடராஜப் பெருமானின் வலது கால் நடுச் சிலம்பிற்குக் குருகார்ணவம் என்று பெயர். வலது கால் குருகார்ணவத்தை இடது காலுக்கும், இடது கால் குருகார்ணவத்தை வலது காலுக்கும் மிகவும் லாவகமாக மாற்றி ஆடுகின்ற நடனமே காரையம்பதி காற்சிலம்பதீயத் திருநடனமாகும். இதனை எக்காலமும், எந்நேரமும் காணும் பேறு பெற்றவரே ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆவார்.
நடனக் கலையில் உள்ள கழைக் கூத்தாடிகள், கரகாட்டக்காரர்கள், நாட்டியம் பயில்வோர், ஆடுவோர், நட்டுவாங்கம் பாடுவோர், நாட்டியத் துறையில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வயதினருக்கு, இத்தகைய நாட்களில் இயன்ற உதவிகளைச் செய்திடுங்கள்.
ஸ்ரீநடராஜரின் இரு பாதங்களுக்கும் வெள்ளி, (இயன்றால் தங்கம், நவரத்தினக்) காப்பு, சிலம்பு இட்டு வழிபடுதல் விசேஷமானது. கல்லால் ஆன ஸ்ரீநடராஜரை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
நாட்டியத் துறையினருக்கு உதவி செய்தல், ஸ்திரமான வேலை இல்லாதோர்க்கு நற்பணி கிட்டிட உதவும் புண்ணிய காரியமாகும்.

கொட்டாவியும் அட்டமியும்

கால அளவீடுகளில் ஒன்றான அஷ்டமித் திதி என்பது, மனித சமுதாயத்திற்கு காலம் பற்றிய ஆத்ம சிந்தனையை ஆக்கப்படுத்தி ஊக்குவிக்கும் நாளாகும். ஒவ்வொரு மனிதனும் அறிந்தோ, அறியாமலோ, அஷ்டமித் திதி நாளில், காலத்தைப் பற்றி எவ்வகையிலேனும் சிந்தித்துத் தான் ஆக வேண்டும் என்ற ஆத்ம நியதியும் உண்டு. ஒவ்வொரு நாளும், காலமஹா தேவதையரும் கொட்டாவி, முழங்கால் வலி, தலைவலி, தும்மல், காற்று வீச்சு என்று பல வகைகளில் காலத்தைப் பற்றிய ஆத்ம சிந்தனையை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுப்பித் தந்துதான் வருகின்றனர். ஆனால் மனித குலமோ காலத்தைப் பற்றி ஆன்மீகமாகச் சிந்தனையைச் செலுத்தாது, அசட்டையாகவே இருந்து விடுகின்றது.

ஸ்ரீஆரணவல்லி அம்மன்
செவலூர்

கொட்டாவி என்பதும் காலத்தைப் பற்றிய சிந்தனாமிர்தங்களை ஊற்றி, ஊறித் தருவதேயாகும். கொட்டாவி ஏற்படப் பல காரணங்கள் உண்டு.
* கொள் ஆதீத விதேயம் என்பதாக, உத்தம நிலைத் தேவர்கள் சரீர மாற்றங்களை ஏற்படுத்தும் பாங்கு என்பதாயும்,
* கொட்டும் ஆவி என்பதாய் தீயசக்திகள் உட்புகுவது என்பதாகவும்,
கொட்டாவியிக்கு எண்ணற்ற ஆன்ம விளக்கங்கள் உள்ளன.
மனிதனுக்குத் திடீரென்று கொட்டாவி ஏற்படுவதை, பொதுவாக தூக்கம் வருவதைக் குறிப்பதாக மனித சமுதாயம் கொண்டாலும், இதில் பலத்த பொருட் செறிவுகள் உள்ளன. கொட்டாவியானது, பல வகைகளில், காலத்தைப் பற்றிய நற்சிந்தனையைப் பெருக்கி, மனிதனுக்குக் கபாலத்தில் உள்ள காலநாள சக்திகளை மேம்படுத்தித் தருவதும் ஆகும்.

மிக மிகக் குறைந்த கால அளவை நாம் எளிதில் உணரும் வகையில் சுட்டிக் காட்டுவதற்காகவே கை விரல்களைச் சொடுக்கும் நேரம், கண்ணிமைக்கும் நேரம் என்று உரைக்கின்றார்கள். கொட்டாவி விடும் நேரத்தைக் கூட அட்ட வாவியிற் கொட்டும் வாலியே! என்று கொட்டாவி விடும் போது ஏற்படுகின்ற காற்றுப் பரிமாணத்தை மெய்ஞானத்தில் குறிக்கின்றார்கள். காற்றிலும் கடுகிடும் அளவில் வாலியின் உடல் வலிமை விளங்கியது.
அடுத்த முறை நீங்கள் கொட்டாவி விடும் போது அதனை மனதினுள் வீடியோ பார்ப்பது போல நன்கு கவனித்துப் பாருங்கள். இதுவும் ஆத்ம விசார வகையே! காற்று உள்சென்று, பிறகு வெளி வந்து, உள்தொண்டையின் வளைவில்தான் கொட்டாவி முடிவது போல தோன்றிடும். இந்த அடித் தொண்டைப் பகுதிக்கே வாவி என்று பெயர். இங்கு (கொட்டாவிக்) காற்று சற்று நின்று செல்வதால், இதனை வெளி உலகுக்கும், உள்(வயிற்று) உலகிற்கும் இடையே உள்ள சாளரம் எனவும் ஆன்மீக ரீதியாக உரைப்பர். எனவே வான்வெளி-உள் வான்வெளிச் சாளரத் திறவு கோலாகவும் கொட்டாவி பரிணமிக்கின்றது.
மேலும் கொட்டாவி என்பது தனித்து வருவதும் கிடையாது. கடல் அலைகள் போலச் சேர்ந்தே வரும். ஒருவருக்கு ஒரு சமயத்தில் ஏற்படும் கொட்டாவியின் எண்ணிக்கையை வைத்து, அன்று அவருடைய கபால நிலைக் கணிப்பைத் தருகின்ற அட்டவாவிச் சாத்திர நெறி விளக்கங்களும் உண்டு.

ஸ்ரீநடராஜ பெருமான்
செவலூர்

கொட்டாவி என்பது மனித முயற்சியால் வருவதல்ல! மனித உடலில் கண் இமைப்பு போல ஏற்படும் தான் தோன்றிச் செயல்களுள் இதுவும் ஒன்று. இவ்வாறு, மனித உடலில் இயற்கையாகத் தோன்றுவனவற்றைப் பரிவிளாகம் என்று குறிப்பிடுகின்றார்கள். இத்தகைய இயற்கையான பரிவிளாகச் செயல்களுக்கு ஆன்மீக மகத்துவங்கள் அதிகம். இதில் பல தெய்வீகத் தாத்பர்யங்களும் உண்டு. தக்க சற்குரு மூலமே இவை அறியற்பாலன.
மனித உடலில், கொட்டாவி என்பது முகத்தில் எட்டு விதமான எலும்புக் கூடுகளின் ஆக்கத்தாலும், எட்டெட்டு வகைத் தசை நரம்பு ஆக்கப் பரிமாணங்களாலும் சேர்ந்து ஏற்படுவதாகும். சில சமயங்களில் கொட்டாவி மூலம் சில துர்தேவதைகள் உள்ளே புகுந்து விடுவதும் உண்டு.
கொட்டாவி வருகையில், வலதுகை சுக்கிர விரல், சனி விரல் (கட்டை விரல், நடுவிரல்) இரண்டாலும் முகத்தில், வாய்க்கு நேரே மூன்று முறை சொடுக்குப் போட்டு, சிந்தூர கணபதியைச் சிவ சிந்தனையுடன் துதிக்க வேண்டும்.  கொட்டாவி விடும் போது, ஸ்ரீசிந்தூர கணபதியை எண்ணி ஓதித் துதிக்கின்ற நல்மந்திரப் பழக்கத்தால் அட்டவாவி சக்திகள் பலவும் புலனாகும்.
கொட்டாவிக்கும், வெற்றிடத்திற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. வெற்றிடம் என்பதற்கு மையப் புள்ளி கிடையாது அல்லவா! ஆனால் வெற்றிடத்திற்கு ஒரு வடிவு கொடுக்கும் போது, அதன் மையப் பகுதியைச் சிந்தூரம் என்று குறிப்பார்கள். அளப்பரிய ஸ்வர சாகித்யங்கள் நிறைந்து பரந்ததாக விளங்கும் மிகப் பெரிய ராகங்களுள் ஒன்றான பைரவி ராகத்தின் மூல வெற்றிடத்திற்கான மையப் பகுதி ராகச் சந்தமே சிந்தூர பைரவி ராகமாகும்.
பிரபஞ்சத்தை அளவிட முடியாது. பூமியின் வடிவு கூட நாம் எண்ணுவது போல் உருண்டை அல்ல. எனினும் நமது மனித அறிவிற்குப் புலப்படும் வகையில் பூமி, பிரபஞ்சம் என்று சில வடிவுகளை நாமே கொண்டுள்ளோம். இதற்குள் வாழ்கின்ற ஜீவன்களைக் காப்பவரே ஸ்ரீசிந்தூர கணபதி. எனவே இந்த பிரபஞ்ச வெளியிடத்தின் மையப் பகுதியும் சிந்தூரம் ஆகும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

இதனால் தான் நெற்றியைப் பிரபஞ்சமாக விளித்து நடுவில் சந்தனம், குங்குமம், சிந்தூரம் போன்றவற்றை இடுகின்றோம்.
அஷ்டமித் திதியும் 15 திதிகளை உடைய ஒரு பட்சத்திற்கு மையமாக, சிந்தூரமாக இருக்கிறது அல்லவா! எனவே அஷ்டமியை விண்ணுலகில் சிந்தூரத் திதி என உரைக்கின்றனர்.  ஒரு பெரிய மரமானது கிளை விட்டுப் பரந்து விரிவதைப் பிரபஞ்சம் என உருவகமாக உரைப்பார்கள்.

எனவே, தேய்பிறை அஷ்டமியிலும் வளர்பிறை அஷ்டமியிலும் முதலில் ஸ்ரீகாலபைரவரைப் பூஜித்து, பிறகு எட்டு வகையான வில்வம், கொன்றை, புரசு போன்ற நல்வகை மரங்களுக்குச் சிந்தூரம் இட்டு விருட்ச பூஜை செய்வது சந்ததிகள் நன்கு தழைக்க உதவும்.
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற வழக்கம் உள்ள குடும்பங்களில் பிள்ளைகள் இவற்றில் சிக்காது நன்னெறிப்பட, திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையில் மூலவரை நோக்கி அருளும் ஸ்ரீகாலைபைரவரை அஷ்டமித் திதி தோறும் வழிபட்டு வர வேண்டும்.
தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகால பைரவரைப் பூஜிப்பது மிகவும் விசேஷசமானது என நாமறிவோம். இப்பிரபஞ்சத்தில் முதலில் சர்வேஸ்வரராக, ஸ்ரீமஹாபைரவேஸ்வரர் தோன்றிப் பிரகாசித்த தலமே கும்பகோணம் சோழபுரம் ஆகும். இங்கு அஷ்டமித் திதி தோறும் 64 வகையான அபிஷேகங்களுடன் ஸ்ரீமஹா காலபைரவேஸ்வரருக்குப் பூஜைகளை ஆற்றுவது அரிதான, அற்புதமான பலன்களைத் துரிதமாகத் தருவதாகும்.
64 விதமான பைரவ அம்சங்கள் தோன்றிய தலங்களுள் இதுவும் ஒன்று.

அஷ்டகத் துதிகள் எனப்படுவதான ஸ்ரீகால பைரவாஷ்டகம், ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீசிவாஷ்டகம் போன்ற எட்டுத் துதிகள் உள்ள அஷ்டகத் துதிகளை ஓதி, வாவியல் துதிகை தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றிடலாம். ஒரு தனி மனிதனின் அகங்காரம், ஆணவம், ஒத்துழைப்பின்மையால் தடைபட்டுள்ள நற்காரியத்தில், தடங்கல்காரர் மனந் திருந்தி, நற்காரியம் துரிதமாக நடைபெற, அஷ்டகத் துதிப் பாராயணத்துடன் கூடிய சிந்தூர கணபதி பூஜைகள் உதவும். செங்கழுநீர் விநாயகர், திருஅண்ணாமலை ஆலயத்தில் கொடிமரம் அருகில் அருளும் கணபதி மூர்த்திகளும் சிந்தூர கணபதி மூர்த்திகளே!
ஸ்ரீசிந்தூர கணபதியை வழிபட்டுக் கொண்டிருந்த ஒளவையார் பிராட்டியை, வான் பூர்வமாக இட்டுச் சென்று கயிலையில் துரிதமாகக் கயிலையில் இட்டவர்களே சிந்தூர கணபதி மண்டலத்தைச் சார்ந்த வாவியல் துதிகை தேவதா மூர்த்திகள் ஆவர்.
தொலை தூரத்தில் பணி புரிந்து குடும்பத்தைப் பிரிந்து வாழும் கணவன், மனைவி, பெண், பிள்ளைகள் குடும்பத்தோடு இணைய அஷ்டமித் திதி ஸ்ரீகால பைரவ பூஜை மிகவும் துணை புரியும். குறைந்தது எட்டு விதமான விருட்சங்களின் கீழ் வீற்றிருந்து அருளும் எட்டு விதமான பிள்ளையார் மூர்த்திகளுக்கும், செங்கழு நீர் விநாயகருக்கும், செங்கழுநீர் மலர் மாலை சார்த்தி, சிந்தூரம் இட்டு வழிபடுதல் மிகவும் சிறப்புடையது.
பொருளின்மை, நல்ல சத்சங்கப் பிணைப்பின்மை, நேரமின்மை, உடல் சுகமின்மை, அதிகமான பொறுப்புகள் காரணமாக நல்ல காரியங்களில் பங்கேற்க முடியவில்லையே என ஏங்குவோருக்குத் தக்க சந்தர்ப்பங்கள் வாய்த்திட இந்நாள் பூஜை உதவும்.

நமஸ்காரப் பிரதட்சிணம்

பலரும் அனந்த கோடி நமஸ்காரம் என்று கடிதத்தில் எழுதுவார்கள். பெரியோர்களிடமும் நேரிலும் இவ்வாறு அனந்த கோடி நமஸ்காரம் உரைப்பதும் உண்டு. மரியாதை, தவத்தை மதித்தல், பெரியோர்களிடமும் அன்பு காட்டுதல் போன்றவை நிமித்தமாக அனந்த கோடி நமஸ்காரம் என்று கருதியே இவ்வாறு எழுதினாலும், சொன்னாலும், கோடி முறை உண்மையிலேயே தரையில் வீழ்ந்து நமஸ்கரிப்பவர்கள் தாம் அனந்த கோடி நமஸ்காரம் என்று சொல்வதற்குத் தெய்வீகமாக உரிமை பெற்றவர்கள் ஆவர். மற்றதெல்லாம் வெறும் வாய் வார்த்தையே!
எனவே வெறுமனே கோடி நமஸ்காரம், கோடி நமஸ்காரங்கள் என்று எழுதினாலோ, பேசினாலோ கோடி முறை வணங்கியதாக ஆகி விடாது. ஆனால் கோடி முறை நமஸ்காரம் செய்யாது, ஏதோ கோடி நமஸ்காரம் செய்ததாக, செய்வதாக எழுதினால் அது அழகாகுமா, உண்மையாகுமா? நன்கு யோசித்துப் பாருங்கள்!
மகாபாரதத்தில் உத்தமரான அக்ரூரர் எனும் மாமுனித் தவர், தினந்தோறும் 108, 1008 முறை என்று பெரியோர்களை சாஷ்டாங்கமாக கீழே வீழ்ந்து நமஸ்கரிக்கும் இயல்பினையே வரமாகப் பெற்று, இதனையே தம் ஆயுளில் நமஸ்காரப் பூஜையாக வைராக்ய சங்கல்பத்துடன் நிறைவேற்றி வந்தார். இவரே உண்மையில் அனந்த கோடி நமஸ்காரத்தை ஆற்றியவர்.
எனவே, ஆலயத்திலோ, பெரியோர்களையோ வணங்குகையில், அக்ரூர மாதவத்துறை நமஸ்காரம் அர்ப்பணம் என்று ஓதி ஆற்றிடுக!
நாம் ஆலயங்களிலோ அல்லது பெரியோர்களையோ வணங்கும் போது முழுமையாக பரிபூரணமான வணக்கத்தைச் செய்வது கிடையாது. தலையில் இருந்து கால்கள் வரை பட்டும் படாமலும் ஏனோ தானோ, கடனே என்று என்று வீழ்ந்து எழுபவர்கள் தான் அதிகம்.
பெண்களுக்குப் பஞ்ச அங்க நமஸ்கார முறை என்பதாக, ஆண்களைப் போல் நீண்டு நெடுங்கிடையாய் வணங்காது, தலை, நாசி, கை, முழங்கால், கால் விரல்கள் ஆகிய ஐந்து பகுதிகள் மட்டும் தரையில் ஸ்பரிசித்துப் பெண்கள் நமஸ்கரித்தலே சிறப்புடையது.

பிரணவ பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை

திருவிடைமருதூர் சிவாலயம்

ஆண்கள் கேசாதி பாதமாக முன் உச்சி தலையில் இருந்து கால் விரல்கள் வரை அனைத்து அங்கங்களும் நன்கு பூமியில் படும்படி வணங்குதலே ஒரு உண்மையான நமஸ்காரமாகும்.
இவ்வாறு ஒரு கோடி முறை சற்குருவிற்கு நமஸ்காரம் செய்கின்றவர்கள் தாம் ஒரு முறை அனந்த கோடி நமஸ்காரம் என்று சொல்வதற்கு, எழுதுவதற்கு உரிமைப் பட்டவர்கள் ஆவார்கள். இதுதான் உண்மையான அனந்த கோடி நமஸ்காரம் என்பதும் ஆகும். இனியேனும் நீங்கள் உண்மையை உணர்ந்து கொண்டு, கோடி கோடி நமஸ்காரங்கள் என்று சொல்பவர்களிடம் உண்மையை உணர்த்துங்கள்.
இருந்தாலும் கலியுகத்தில் ஆர்வத்தின் மிகுதியால் இவ்வாறு அனந்த கோடி நமஸ்காரம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள் என்பதினால் தான், இறைவனே ஒரு பக்திப் பூர்வமான நமஸ்காரத்திற்கு பல மடங்கு பலன்களை அளிக்க வல்ல அற்புதமான தலங்கள் சிலவற்றையும் அளித்துள்ளார். உதாரணமாக, திருஅண்ணாமலை மற்றும் திருக்கயிலயமாகிய கைலாஷ் மலையை, திருவிடைமருதூர், உய்யக் கொண்டான் மலை ஓங்காரப் பிரகாரம் போன்றவற்றில் நமஸ்கரித்து, அதாவது கீழே சாஷ்டாங்கமாக வீழ்ந்து, வீழ்ந்து, கிரிவலம் வருகின்ற, பிரகாரத்தை வலம் வருகின்ற நமஸ்காரப் பிரதட்சிணம் முறை என்ற ஒன்று உண்டு. திபெத்திய லாமாக்கள் பக்திப் பூர்வமாக இன்றளவும் செய்து வருகின்ற திருக்கயிலாயக் கிரிவல முறை இது!
இவ்வாறு நமஸ்கார முறை மூலம் அருணாசலத்தைக் கிரிவலம் வருவோர்க்கு குருஅருள் கூடிட, பல்வகைகளில் பல கோடி கோடிக் கர்ம வினைகளை கழிக்க வல்லதாகும். இவ்வாறு அதிவிரைவில் கர்ம வினைகள் கழியும் போது, ஆரோக்கியமும் செல்வ வளமும் மேம்படும். இங்குதான் மாயை விளையாடி, நல்ல செல்வமும் நல்ல ஆரோக்கியமும் கை கூடுவதால் மனிதன் இறைவனை மறந்து, அல்லது பல பெரும் பாவச் செயல்களை, அகங்கார ஆணவத்தால் செய்யலாகின்றான். இதனால் என்ன விளைவுகள்? மீண்டும், மீண்டும் படுகுழி, பிறவிதான்.
எனவே தான் தக்க சற்குருமார்களின் அருளாசியோடு செய்யப்படுகின்ற பூஜைகளில், கிரிவலங்களில், கிரிவலப் பலாபலன்களை இறைவனிடமே அர்ப்பணித்துச் சங்கல்பம் செய்வதால் அகங்கார, ஆணவ இடர்ப்பாடுகள் ஏற்படாது.
பொதுவாக, தசமித் திதி நமஸ்காரப் பூஜைக்கு ஏற்ற நன்னாள். இந்நாட்களில் ஆலயங்களில் நமஸ்காரப் பிரதட்சண முறையை ஆற்றிப் பிறருக்கு இத்தகைய வழிபாட்டு முறை ஒன்று உண்டு என உணர்த்தி வழிகாட்டுக. தசமி திதி நாட்களில் குறைந்தது 108 முறை வீழ்ந்து வணங்குதல் நன்று. இவ்வகையில்தான் அனந்த கோடி நமஸ்காரம் உருவாகும். வெறும் வாய் வார்த்தையால் அல்ல!

இரண்டும் வேண்டும்

தசமித் திதியும், ஏகாதசியும் பெருமாளுக்கு உரியவை என நாமறிவோம். ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாப் பிராட்டியுடன், வனவாசத்தில் அதியற்புதமான முறையில் ஏகாதசி விரதம் பூண்டு, இதன் பலாபலன்களை நெல்லி, வில்வம், துளசி, கருநெல்லி போன்ற மூலிகா விருட்சங்களுக்கு அர்ப்பணித்துள்ளார். எனவே தசமியும், ஏகாதசியும் சேர்ந்துள்ள நாளில், விருட்ச (தலமர, நந்தவன மர, செடிகளுக்கான) பூஜைகளை ஆற்றி, அவதார புருஷர்கள் ஆற்றிய பூஜா பலன்களைப் பெறுதல் அரும்பெரும் பாக்யமன்றோ!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆலயத் தலமரத்தை போஷிப்பதற்கான கடமைகள் நிறைய உண்டு. இவற்றை முறையாக ஆற்றாவிடில், ஆண் அல்லது பெண் சந்ததி இல்லாது குடும்பப் பாரம்பரியம் தேக்கமுறும். ஒவ்வொருவருக்கும் ஆண், பெண் வகை இருவகைச் சந்ததிகளுமே இருந்தாக வேண்டும்.
ஆண் குழந்தைகள் மட்டும் இருப்பதால் துன்பங்கள் குறைவு, குடும்ப இன்னல்கள் தவிர்க்கப்படும், என்று எண்ணுவது பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. அதர்மமான, சுய நலமான எண்ணமும், தவறானதும் கூட!

ஸ்ரீஅக்னீஸ்வரர்
திருக்காட்டுப்பள்ளி

இரு வகைச் சந்ததிகளுடன் குலம் நன்கு தழைத்திட, அனைவரும் நகர ஆலயங்களில் உள்ள தல விருட்சங்களை மட்டும் பூஜித்துப் போஷிப்பது மட்டுமல்லாது, திருக்காட்டுப்பள்ளி, புளியங்குடி, நாகத்தி போன்ற தொலை தூர கிராமங்களில் இருக்கும் வசதியற்ற நிலையில், மூன்று வேளை பூஜைகளை நிறைவேற்ற இயலாத - சுயம்பு மூர்த்தி உள்ள ஆலயங்களில், தல விருட்சம் மற்றும் ஏனைய விருட்சங்களையும் போற்றிக் காத்திட, மாதம் ஒரு முறையேனும், பஞ்ச கவ்ய உரம் எனும் அரிய இயற்கை உரம் (பசுஞ்சாணம், பசுவின் கோமேயம், பசும்பால், பசு நெய், பசுந் தயிர் ஆகிய ஐந்தும் சேர்வது), தழை உரம், நன்னீர் போன்றவற்றை அளித்து, வேரடி மண்ணை நன்கு சீர் திருத்தி அமைத்து, பாத்தி, வரப்பு கட்டித் தந்து, ஆலய நந்தவனத்தைச் சுத்திகரித்துத் தரும் அறப் பணிகளைச் செய்து வர வேண்டும்.
இதில் உங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்திடுக! இதனால் சந்ததிகள் இருபாலாரும் நன்கு ஆரோக்யத்துடன் தழைக்க உதவிடும்.
ஆலயத்தில் தக்க அனுமதி பெற்று, அருகில் உள்ள - சுயம்பு மூர்த்திகள் அருளும் அல்லது மிகவும் தொன்மையான ஆலயங்களில், மேற்கண்ட நந்தவனப் பசுமர விருட்ச பூஜைகளை ஆற்றி வருதலால், தக்க ஆண், பெண் சந்ததிகள் தழைக்க, பித்ருக்கள் நன்கு கனிந்து அருள்வர்.
பொதுவாக, நம் முன்னோர்கள் பித்ருக்கள் ஆகி இருப்பர், மீண்டும் மனிதப் பிறவி பெற்றிருப்பர் என்று மட்டுமே பெரும்பாலோர் எண்ணுகின்றனர். முன்னோர்கள் அனைவருமே உத்தம தெய்வீகச் சிந்தனைகளுடன், நல்ல தார்மீக நெறியில் வாழ்ந்தனரா என்பதை அந்தந்தக் குடும்பத்தினரே நன்கு அறிவர். எனவே, பல முன்னோர்களும் தாவரங்களாகவும், பிராணிகளாகவும், ஜடப் பொருளாகவும் அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப பிறவி எடுத்திருக்கக் கூடும் அல்லவா!
பித்ருக்களாகுதல், நன்முறையில் மனிதப் பிறவி எடுத்தல் இரண்டுமே ஆகுதற்கு, தக்க சற்குருவின் வழிகாட்டுதலோடு, உத்தமமான தெய்வீக மனித வாழ்வைப் பூண்டு வாழ்ந்து இருத்தல் வேண்டும். இதிலும் ஆறறிவுப் பூர்த்தியுடன் மனிதராகப் பிறவி எடுத்தல் அரிதிலும் அரிதாம்.
தற்போது இறைவன் ஆறறிவை அளித்திருந்தும், ஓரறிவு, ஈரறிவைப் பயன்படுத்தும் சாதாரணப் பக்குவ நிலையிலேயே பலரும் பிறக்கின்றனர், வளர்கின்றனர், வாழ்கின்றனர். முழுமையான ஆறறிவுப் பகுத்தறிவு வேலை செய்யாமையால்தான், வன்முறைகள், திருட்டு, கொலை, கொள்ளை, லஞ்சம், அதர்மம், ஏமாற்றிப் பிழைத்தல், நன்கு உழைக்காது சம்பாதிக்க எண்ணுதல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன. இதனால்தான் மது அருந்துதல், போதை மருந்துகள், சுகக் கேளிக்கைகள் போன்றவற்றிற்கு மனித குலம் ஆட்பட்டு இருக்கின்ற சுய அறிவை இழக்கின்றது.
எனவே, பித்ரு நிலை, நல்ல மனிதப் பிறவி இந்த இரண்டு நிலைகளையும் மிகவும் எளிதில் அடைந்திட முடியாது என நன்கு அறிதல் வேண்டும்.
இதிலும், பித்ரு நிலையை அடைதல் என்பதில் ஆயிரக் கணக்கான வகையில் - மனிதர் முதல் மிருகம், தாவரம், ஜடப் பொருளாகப் பிறந்துள்ள எண்ணற்ற சந்ததிகளின் வகையினரைக் கடைத்தேற்ற வேண்டிய பலத்த தெய்வீகக் கடமையைப் பூண்டு இருப்பதால், பித்ரு நிலையே மிகப் பெரிய உத்தம தெய்வீக நிலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
இதே போல, தன்னலமின்றிப் பிற ஜீவன்களுக்குத் தொண்டாற்றும் அற்புதமான வாய்ப்புகளை தெய்வீக பாக்கியமாகவும் அளிப்பதால், மனிதப் பிறவியைப் பெறுதலும், ஒளவையார் உரைத்தது போல, அரிதினும் அரிதே!
ஆனால் நடப்புக் கலியுகத்தில் பெரும்பாலான மக்கள் உலகெங்கும் வாழ்க்கை நேரத்தைப் பலவற்றிலும் விரயம் செய்வதாலும், திருமணம் - திருமணமானவுடன் குழந்தை - என்பதைப் பூவுலகில் காண்பதாலும், மனிதப் பிறப்பின் மகத்துவத்தைப் பலரும் சரியாக அறியவில்லை! குழந்தை பிறப்பதையே ஒரு இயந்திர கதியான செயலாக, மிகவும் சர்வ சாதாரணமாக எண்ணி விடுவதால் மனிதப் பிறப்பின் மகத்துவம் தெரியாமல் போகின்றது.
எனவே தசமி ஏகாதசி சேரும் நாட்களில் தாவரங்களைப் படைத்து ரட்சிக்கும் ஸ்ரீசாகம்பரீ தேவியை அனைத்து வகைப் பூக்களாலும், தவனம், மரிக்கொழுந்து, வில்வம் போன்ற தளங்களாலும் பூஜித்து, நந்தவனத் திருப்பணி, ஆலய மரங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவை இட்டுப் பூஜித்தல் மிகவும் விசேஷமானது. சந்ததிகளைக் காக்க உதவும் அற்புதமான பூஜைகளுள் இதுவும் ஒன்றாகும்.
ஸ்ரீசாகம்பரீ தேவி படத்தை காய்கறி, தேங்காய், ஹோட்டல் வியாபாரிகளுக்கும், ஹோட்டல்களுக்கும் அளித்துப் பலரும் ஸ்ரீசாகம்பரீ தேவியைத் தரிசித்து, பூஜித்து அருளும் வண்ணம் அரிய நற்சேவையை இன்றிலிருந்து ஆற்றி வருக! பலருக்கும் உணர்த்திடுக!

திருமகள் அருள்நிறைத் திருநாள்

மிகவும் அபூர்வமாக ஒன்று கூடுகின்ற வெள்ளி, அனுஷம், துவாதசி, தைதுலை கரணம் கால அம்சங்கள் யாவும் லக்ஷ்மி கடாட்சத்தை, அபரிமிதமான பூஜா பலன்களாகப் பெற்றுத் தர, அளிக்க வல்லவை ஆகும். பல தேவாதி தெய்வ மூர்த்திகளின் வழிபாட்டுப் ப்ரீதி முறைகளும் யோகம், தவம், காவடி, விரதம் போன்றவையாக அமைந்திருக்க, திருமகளான மகாலக்ஷ்மியோ மிக, மிக எளிமையான பூஜைகளிலேயே மனங் கனிந்து அருள்கின்றாள் என்பது கலியுகத்தில் நாம் பெற்றுள்ள பாக்கியமாகும்.

அனுஷ நட்சத்திர நாளானது உத்தம தெய்வீக நிலைகளில், திருமகள் பெருமாளைப் பூஜித்து பூஜித்து ஆனந்தம் அடைகின்ற நிலையைக் குறிப்பதாகும். ஏனெனில் பூவுலகத்தாரைப் போல, வெள்ளி, அனுஷ நட்சத்திர நாட்களில் சித்தர்கள், மஹரிஷிகளும் திருமகளைப் பூஜித்திடினும், அவர்கள் பதினாறு செல்வங்கள், சங்க நிதி, குபேர நிதிக்காக லக்குமியை வேண்டுவது கிடையாது. முக்தி, மோட்ச நிலைகளைத் துய்க்கும் சித்தர்கள், மஹரிஷிகளும் செல்வமா வேண்டி நிற்பர்?

திருநின்றியூர் சிவத்தலம்

மேலும் முக்தி, மோட்ச நிலைகளைத் துய்த்தவர்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக, பிறருக்கும் இதற்கான நல்வழி முறைகளை எடுத்துரைப்பதும் தானே முக்தி, மோட்ச நிலைகளின் பேரிலக்கணமும்!
எனவே, சித்தர்கள், மஹரிஷிகளும் சாசுவதமான, நிலையான செல்வமான பரமானந்தத்தையே திருமகளிடம் வேண்டுகின்றனர். பிற ஜீவன்களின் நலன்களுக்காக அருந்தவம், அன்னதானம், கல்விப் பணிகள் போன்ற அரும் பணிகளை ஆற்றுவது பரமானந்தத்தைப் பெற்றுத் தரும் ஆன்ம சாதனங்களாகும் என்பதால்தான், நம்முடைய, அதாவது பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக, சாசுவதமான இறைப் பரமானந்த நிலையை நாமும் அடையவே அவர்கள் உழைக்கின்றனர்.
துவாதசித் திதி, திருமகள் தோன்றிய உத்தமத் திதியாம். வெள்ளிக் கிழமையானது, செல்வத்தை, சுபமங்கள சக்திகளாக ஆக்கித் தருகின்ற திருநாள். தைதுல கரணம் என்பது, செல்வத்தால் தரித்திரத்தைக் களைய வல்ல பூஜா பலன்களைத் தருவதாகும். இந்நான்கும் பதிந்து வருகின்ற சுபமங்களத் திருநாளில் திருமகளை மிக மிக எளிமையான முறையில் வழிபட்டு அரிய பலாபலன்களை அடைகின்ற வழி முறைகளை சுபகீர்த்தி மகரிஷி அளித்துள்ளார்.
* இந்நாளில் பாதணிகள் அணியாது, ஆலயத்திற்குக் கால்களால் நடந்து சென்று திருமகளை தரிசித்தல்,
* ஸ்ரீமகாலக்ஷ்மி என்ற பெயரில் அருளும் ஸ்ரீவிஷ்ணு பகவான் பத்னியாம் தேவியைத் தரிசித்தல் (திருநின்றவூர்),
* என்னைப் பெற்ற தாயார் என்ற உவப்பான, அன்பும், ஆனந்தமும் ததும்ப பெயரைத் தாங்கி அருளும் பெருமாள் தேவியைத் (தாயாரை) வழிபடுதல் (சென்னை அருகே திருநின்றவூர்),
* திரு என்ற மகாலக்ஷ்மியின் பெயரைத் தாங்கி வரும் ஊர் ஆலயங்களில் வழிபடுதல்,
* அமர்ந்த கோலத்தில் உள்ள லக்ஷ்மிக்கு, யானைகளை வைத்து மலர் மாலைகளை அணிவித்து, பூச்சொரிந்து பூஜித்தல்,
* 24 முழுத் தாமரை மலர்களைத் தாமே தொடுத்து மாலையாக்கி, பெருமாளின் பாதங்களில் வைத்துப் பிறகு மகாலக்ஷ்மிக்குச் சார்த்தி வணங்குதல்
-என்று இவ்வாறு 18 விதமான எளிய வழிபாட்டு முறைகளைக் கைக் கொண்டு திருமகளை பூஜிப்பதால் சில நல்ல திருப்பங்களை வாழ்வில் பெற்றிடலாம்.

மாலைப் பொழுது
மங்களமான பொழுது

சனிக் கிழமை அன்றுதான் மாலையில் சிவபெருமான் நந்தியெம்பிரானின் திருக் கொம்புகளிடையே திருநடனம் ஆடி, பிரதோஷ காலத்திற்கெல்லாம் தலையாயதான, மஹாபிரதோஷ காலத்தைப் பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக வித்திட்டு அளித்திட்டார். எனவே சனி பிரதோஷ நாட்களில் ஆலயத்தில் நறுமணப் பூச்செடி, மரத்திற்கு வித்திடுவது சிறப்புடையது,
தலவிருட்சம் இல்லாத ஆலயத்தில், தலமரம் மீண்டும் செழித்திட, சனியுடன் கேட்டை கூடிய சம்பூர்ண சாந்திப் பிரதோஷ பூஜை சங்கல்பம் மிகவும் உதவும்.

ஸ்ரீபாதாள ஈஸ்வரர்
வாத்தலை முக்கொம்பு

நட்சத்திரம், திதி, கிழமை, கரண, யோகம் போன்ற அனைத்துக் காலதேவதா மூர்த்திகளும், இந்த அற்புதமான மஹா பிரதோஷ தினத்தின் நந்திக் கொம்பிடைத் திருநடன வைபவத்தைக் கண்டு தரிசித்து ஆனந்தித்தமையால், காரண மஹரிஷி என்பார், ஸ்ரீமஹா காலபைரவரின் திருவருளுடன் எந்தெந்தத் திதி, நட்சத்திர, கரண, கிழமை இணைப்பில் வரும் பிரதோஷம், எத்தகைய பலாபலன்களைத் தர வல்லதாகும் என தீர்கமாக அறிந்து பூவுலக மக்களுக்கு உரைக்கலானார். பலரும் இத்தகைய அற்புதமான பலாபலன்களைத் தம் சுய நலத்திற்காகவே பயன்படுத்துவர் என்பதால், இவை யாவும் தக்க சற்குரு மூலமாகவே அறியற்பாலன.
இவ்வகையில், சனிக் கிழமை கேட்டையுடன் கூடிய மஹா பிரதோஷமே, சம்பூர்ண சந்தி பிரதோஷமாகவும் அமைகின்றது. அதாவது மாலைப் பொழுதானது, மூன்று சந்தியா வேளைகளில் (காலை, மதிய உச்சி, மாலை) ஒன்றானதாக, மகத்தான புனிதத்துடன் விளங்குகின்றது. இதில் நல்ல காரியங்களை ஆற்றினால், நல்ல கிரணங்கள், நற்பலன்கள் யாவும் மனதில், உடலில், உள்ளத்தில், சமுதாயத்தில் நன்கு பல்கிப் பெருகி விருத்தியாகும்.
ஆனால், இதற்கு மாறாக மாலை நேரத்தில் தூங்குதல், மது அருந்துதல், பீடி, சிகரெட் பிடித்தல், சினிமா, கேளிக்கைகளில் கழித்தல், கடன் வாங்குதல், தரமற்ற, தாழ்வான பேச்சுக்கள் போன்ற பயனற்ற வகையில் பொன்னான மாலைச் சந்தியாப் பொழுதை விரயம் செய்தால் சாபங்களே குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சேர்ந்து விடும். இதனால் வீட்டிற்கும், நாட்டிற்கும் கடன்களே பெருகும்.
எனவே, இதுவரையில் வாழ்க்கையில் மாலைப் பொழுதை விரயமாக்கிய பாவ வினைகளுக்கு கேட்டை, சனிக் கிழமை கூடும் மஹா பிரதோஷ பூஜையில்தான் பரிகாரம் கிட்டும்.
கேட்டை நட்சத்திரத்தைப் பற்றிப் பலரும் கலியுகத்தில் தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். அனைத்து நட்சத்திரங்களின் அருள் திரண்டால்தாம் வாழ்க்கை நன்கு அமையும். கேட்டை நட்சத்திர சக்திகள் நிறைந்த தலங்கள் பல உண்டு. பொதுவாக, மஹான்கள், சித்தர்களின் ஜீவாலயங்கள் அமைந்த, அல்லது அருகில் உள்ள ஆலயங்களில் கேட்டை நட்சத்திர சக்திகள் திரண்டு வந்து குவிந்து அருளும்.
பொதுவாக சித்தர்களும், மஹான்களும் பூமியடித் தவம் பூணுகையில், கேட்டை நட்சத்திரத் தினத்தன்றே பூமியில் குழி வெட்டி மண்ணினுள் மறைவர். மீண்டும் எழுகையில், கேட்டை நட்சத்திர நாளன்றே எழுவர்.
“கேட்டையில் கெழுமிய கேதார பூம்யம்” என்பது சித்த நட்சத்திர நிறைமொழி! அதாவது கேதார்நாத்தில் ஆதிசிவன் எருமை வடிவில் வந்து, பூமியடியில் மறைந்த இடத்தில்தாம், பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றான ஸ்ரீகேதாரீஸ்வரராக அருள்கின்றார்.

ஸ்ரீபாதாள ஈஸ்வரர் ஆலயம்
அரித்துவாரமங்கலம்

ஸ்ரீவாஸ்து பகவானுக்கு மிகவும் ப்ரீதி உடைய நட்சத்திர நாளும் கேட்டையே ஆகும். இதனால்தான் சனியும், பிரதோஷமும் கூடுவதை மஹாபிரதோஷம் என்று கூறுவதைப் போல, கேட்டையும், வாஸ்து நாளும் கூடுவதை மஹா (பல) வாஸ்து நாள் எனச் சித்தர்கள் உரைக்கின்றனர்.
எனவே கேட்டை கூடும் மஹாபிரதோஷ நாளில் பூமியடி மூர்த்திகள் உள்ள,
திருஅண்ணாமலை ஸ்ரீபாதாள லிங்கம்
விருத்தாசலம் ஆழத்துப் பிள்கையார்
திருச்சி அருகே முக்கொம்பு வாத்தலை ஸ்ரீபாதாளீஸ்வரர்
போன்ற பாதாள நிலையில் - பூமியடியில் உறையும் மூர்த்திகளுக்கும்
புதுக்கோட்டை - குழிபிறை அருகில் உள்ள ஸ்ரீபூமீஸ்வரர் போன்று பூலோகநாதர், பூமிநாதர் போன்று பூமி சம்பந்தமான பெயர்களை உடைய ஆலயங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
கேட்டையில் வரும் மஹாபிரதோஷ நாளில் பூமியடியில் விளையும் திரவியங்களால் ஆன - வெட்டி வேர், நிலக்கடலை - மாலைகள், அபிஷேக ஆராதனைகளுடன், பூமியடிக் கிழங்கு வகை உணவு தானத்துடன் வழிபடுதலால்,
பலத்த மன வேதனைகளுடன் வாழ்வோர்க்கு, மனத் தாங்கல்கள் தணிய நல்வழி கிட்டும்.
பன்னெடுங் காலமாக மனதை அரித்து வரும் வேதனைகளுக்குத் தக்க பரிகாரங்களும் உரிய உத்தமர்கள் மூலமாகக் கிட்டும்.

நம்பியவர் நலம் தருவார்

ஒரு வருடத்தில் வருகின்ற 12 அமாவாசைகளில், ஒரு சில அமாவாசைத் திதிகள், பஞ்சாங்கக் கணக்கு நியதிகளின்படி, போதாயன அமாவாசையாக அமையும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்வால் தோற்றுவிக்கப் பெற்றதே போதாயன அமாவாசைத் தாத்பர்யமாகும்.
சூரிய, சந்திர மூர்த்திகளை ஒருசேர வரவழைத்து, ஒரு மாம்பலகையில் அமர வைத்து, உபசரித்து, போதாயன அமாவசைக்குப் புனிதத்துவம் அளித்தவரே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஆவார் என நாமறிவோம். சர்வ அமாவாசையில் நாம் பெற இயலா பல அரிய பலாபலன்களை, போதாயன அமாவாசை விசேஷமாகப் பெற்றுத் தர வல்லதாகும்.
ஏனென்றால், கோள கதி ரீதியாக, சர்வ அமாவாசையில் சூர்யக் கோளமும், சந்திர கோளமும் சேர்கின்றன. ஆனால், போதாயன அமாவாசையிலோ ஸ்ரீகிருஷ்ண பராமாத்மாவே தம்முடைய லீலைகளில் ஒன்றாக, ஒரு தெய்வீகப் பலகையில்  சூரிய, சந்திர மூர்த்திகளை அமர வைத்து, சூரிய, சந்திர மூர்த்திகளின் இணைப்புத் திதி அமைப்பாகவே, போதாயன அமாவாசையை அதியற்புதப் பண்டிகையாக உருவாக்கித் தந்தார்.
இறை மூர்த்திகளின் வலது கண்ணில் சூரிய மூர்த்தியும், இடது கண்ணில் சந்திர மூர்த்தியும் உறைவதையும் நன்கு அறிவீர்கள். இதே போன்றே, உலக ஜீவன்கள் அனைத்துமே வலது கண், இடது கண்களில் முறையே சூரிய, சந்திர அம்சங்களுடன் பொழிகின்றன.

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

தியானம் என்பது கண்களை விழித்த நிலையிலும் மூடிய நிலையிலும் ஆகிய இரு வகைகளிலுமே ஆற்றக் கூடியதாகும். கண்களைத் திறந்த நிலையில், இரு கண்களையும் எதிரே உள்ள பொருளை மையமாக வைத்து மனதோடு ஒருமித்துப் பார்ப்பதும் துவிதியாதி நேத்ர பல தியானமாகும். இதில், வலது கண் பார்வையும், இடது கண் பார்வையும் ஒருமிக்கும் போது சூரிய சக்தியும், சந்திர சக்தியும் ஒருமிக்கின்றன. இவ்வாறு இரு கண்களையும் விழித்து ஒரு பொருளை உன்னிப்பாக, கண் இமைக்காமல் நோக்குகையில், கண்களில் நீர் வழிந்து சற்றே பார்வை இருண்டது போல் தோன்றும். இந்த இருள் தான் அமாவாசையாக, வெளிப் பிரபஞ்சத்தில் திதிப் பூர்வமாக அமைகின்றது.
எனவே சூரிய, சந்திர கோள்கள் முதல் திதி அம்சங்கள், கோள சங்கமங்கள் அனைத்துமே உடலிலும் நிகழ்வதாகும். ஆகவே, பிரபஞ்சத்தின்பிரதிபலிப்பே நம்முடல்.
மாத சிவராத்திரியை அடுத்து வருவது அமாவாசை எனப் பலரும் அறிதல் வேண்டும். மாத சிவராத்திரி என்பது பார்வதி தேவியே, அனைத்து ஆலயங்களுக்கும் வந்து இரவு நேர பூஜைகள், மலைத் தலங்களில் கிரிவலம் ஆற்றுகின்ற நேரமாகும்.
எனவே போதாயன அமாவாசை அன்று அமைகின்ற இரவு நேர சிவராத்திரிப் பூஜைக்குப் பிறகு, ஒரு மரப் பலகையில், குறிப்பாக மாம்பலகையில், சூரியக் கோலம், சந்திர கோலத்தை அருகருகே வரைந்திடுக!
பிறகு, சூரிய, சந்திர மூர்த்திகளுக்கு
சோம சூர்யாய நம:
ரவிச்சந்த்ராய நம:
பாஸ்கரச் சந்த்ராய நம:
ஆதித்ய சோமாய நம:
உதயச் சந்த்ராய நம:
பூர்ணச்சந்த்ராய நம:
அமிர்த சூர்யாய நம:
ஆகிய ஏழு துதிகளையும், ஏழு, ஏழு முறை ஓதி, ஏழு வகைப் பூக்களால் ஏழேழு முறைகள் அர்ச்சித்து, போதாயன அமாவாசை ஆரம்ப பூஜையாகத் தொடங்கிடுதல் வேண்டும். இப்பூஜைக்கு முன்னும் பின்னும் ஸ்ரீகிருஷ்ண பகவானை ஆராதித்தல் விசேஷமானது.
இதனால் ஒருவரையே நம்பியிருக்க, அவர் இல்லாமையால், உதவாமையால் காரியத் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தால், அவரே மனம் திருந்தி உதவி புரிய சோம சூரியப் பித்ருக்கள் நன்கு துணை புரிய போதாயன அமாவாசைப் பூஜைகள் உதவும். போதாயன அமாவாசை அன்று, பித்ரு லோகங்களில் பித்ருக்கள் சூரிய சந்திர மூர்த்திகளுக்குப் பாத பூஜைகளை ஆற்றுகின்றனர்.

சோமவார பிரதட்சிண மகிமை

பொதுவாக, திங்கட் கிழமை வரும் அமாவாசை, பிரதட்சிண அமாவாசையாகும். இதுவே சோமவாரப் பிரதட்சிண அமாவாசையாகப் போற்றப்படுகின்றது.
சோமவாரப் பிரதட்சிண அமாவாசை நாளில் மெளனம் பூண்டு 108 முறைக்குக் குறையாமல், ஆலயப் பிரதட்சிணம், ஆலயத் தலமரப் பிரதட்சிணம் செய்தல் விசேஷமானது.

ஸ்ரீபசுபதீஸ்வரர்
திருக்கொண்டீச்சரம்

இவ்வாறு சோம வாரப் பிரதட்சிண அமாவாசையுடன், அனுமத் ஜெயந்தி சேர்ந்து வரும் நாளில் தான், ஸ்ரீஆபத்சகாய மகரிஷி, மரண யோக நேரத்தின் தாத்பர்யங்களை உலகிற்கு எடுத்துரைக்கின்ற தபோ பலன்களைப் பெற்றார். தற்கொலை உணர்ச்சியும், மரண பயமும் வந்து வாழ்வில் வாடுவோர்க்கு நல்ல மன உறுதியைத் தரும் உத்தம மஹரிஷி!
இவருக்கு ஆபத்சகாய மகரிஷி என்ற பெயர் வரக் காரணமே, எத்தகைய ஆபத்து நிலைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அன்பு கனிந்த உள்ளத்துடன் பக்திப் பூர்வமாக இம்மாமுனியை வேண்டிடில், துணை வேண்டி, ஆலயத்தில் அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் வந்திட்டால், உடனே துணை வந்திடும் அதியற்புத யோகவள, தபோவள மஹரிஷி!

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

பாண்டிச்சேரி அன்னையைப் போல, கடுந் துன்பச் சூழ்நிலையிலும் கூப்பிட்ட குரலுக்குப் பெருந் துணையாய்த் தக்க சமயத்தில் வந்து சகாயம் தருகின்ற மாமுனியும் ஆவார். மேலும் ரேகைகள் உள்ள பழங்கள், காய்கறி உணவுகளை (பீர்க்கங்காய், முருங்கை, பறங்கி) முதியோர்க்குத் தானமாக அளித்தலால், நாளை என்ன செய்வோமோ என்று அஞ்சி வாழும் பீதிகள் அகல உதவும்.
அதிபயங்கரக் கனவுகள், தாள முடியாத வேதனைகள், அளவுக்கு மீறிய துன்பங்கள் வந்து, ஒருவரைச் சாய்க்கும் போது என்ன செய்வது, ஏது செய்வது என்று தவிக்கையில், ஒருவருடைய வாழ்வில் அவரவருடைய கர்ம வினைகளின் அழுத்தத்தைப் பொறுத்து 5, 7, 11, 13 என்ற எண்ணிக்கை முறைகளில் மட்டுமேதான், தம் ஆயுளில் ஜன்ஹூ மகரிஷி போன்றோர் தம் தவத்தைத் துறந்து வந்து உதவுதல் என்ற அருந்தவத் துறை நியதிகள் உண்டு.
ஆனால், ஜன்ஹூ மகரிஷியின் அரும்பெரும் சிஷ்யரான ஆபத்சகாய மகரிஷியானவர், கலியுக மக்கள் அளவுக்கு மீறிய துன்பங்களால் அவதியுறுவர் என்பதால், தம் தபோ பலன்களை அர்ப்பணித்து, எப்போது நம்பிக்கையுடன் அழைத்து ஆலயப் பிரதட்சிணம் செய்வோருக்கு உதவும் இந்த நல்வரத்தைப் பெற்றார்.
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தால் எப்போதும் அருந்துணை புரியவே, ஸ்ரீஆபத்சஹாயேஸ்வர சிவ மூர்த்தியின் திருவடிகளில் தவம் பூணும் ஸ்ரீஆபத்சஹாய மஹரிஷி உதவிடக் காத்திருக்கின்றார். மகத்தான அனுமத் உபாசகர்களுள் ஒருவரான ஆபத்சகாய மகரிஷி, திங்கட் கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வருகின்ற சோமவார அமாவாசை அன்று, ஆலயங்களில், குறிப்பாக அனுமார் சந்நிதியில் 108, 1008 முறை பிரதட்சிணமாக வருவோர்க்கு எந்த வகையிலேனும் தரிசனம் தந்து அருள்கின்றார். மிகவும் குட்டையான வடிவை உடையவர்.
ஸ்ரீஆபத்சஹாய மஹரிஷியின் திருஉருவம் கும்பகோணம்-நன்னிலம் அருகே ஒரு சிவாலயத்தில் இருக்கின்றது. தேடி, நாடிச் சரணடைந்து இவரைத் தரிசித்து வாழ்நாளில் நன்கு கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
எந்த வகைத் துன்பங்களிலும் துணை வந்து காக்கின்ற உத்தம மகரிஷி! வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாது ஏனோ தானோ என்று வாழ்வோர்,
“ இலட்சியம் இன்றி, குறிக்கோளின்றி வாழ்ந்து கெட்டு, அலைகின்றேனே! இறைவா என்னைக் காத்தருள்!'' என்று வருந்தி, மனதார வேண்டி,
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவோடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துள்ளானே!
(ஆலவாய் அண்ணல் நீயே அணைத்து நீ காத்தல் வேண்டும்!)
என்ற சக்தி வாய்ந்த தமிழ் மறைத் துதியைத் தினமும் உளமாற ஓதியவாறு ஆலயப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல சாசுவதமான, சத்தியமான பிடிப்பு ஏற்படும்.

மனம் உடலைச் சுற்றுமா ?

பிரதமை அன்று (அமாவாசைக்கு மறுநாள்) பரவெளியைச் சுத்திகரிக்கின்ற கிரணங்கள், ரேகை சக்திகள் விண்வெளிக் கதிர்கள் பரவெளியில் நிறையப் பரிணமிக்கின்றன. இதை ஒட்டித் தான் பிரதமை திதியைக் கார்த்திகப் பகுளம், மார்கசீர சுத்தம், புஷ்ய சுத்தம், ஆஷ்வின சுத்தம், பாத்ரபத சுத்தம் என்று பல விதங்களில் உரைக்கின்றார்கள்.
அரிச்சந்திர மஹாபிரபு நிகழ்த்திய ராஜசூய யாக நிறைவில், கலியில் மனம் உடலைச் சுற்றுகின்றதா, உடல் மனதைச் சுற்றுகின்றதா என்பது பற்றி மகரிஷிகளிடையே சிறப்பான ஆன்மீக விளக்க உரைகள் ஏற்பட்டன. விளக்க மேடை பல நாட்களுக்குத் தொடர்ந்திடவே, இதற்கு எவ்வகையில் நிறைவு காண்பது என்பதற்காக ஏனைய மஹரிஷிகள் கலந்தாலோசித்தனர். ஸ்ரீசந்திரமெளலீஸ்வர மூர்த்தி உபாசனை பூஜைகளை ஆற்றி, பகவானிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தனர்.
இதற்கு உரித்தான முடிவை ஸ்ரீசந்திரமெளலீஸ்வர பூஜை மூலமே பெறுதல் சிறப்புடையது என்று உரைத்தவரே, சந்திர மதியை உத்தமப் பத்தினியாகப் பெற்ற அரிச்சந்திர மகாராஜா ஆவார்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
மகிமாலை தஞ்சை மாவட்டம்

வேத மாமறைகள், உபநிஷத்துகள், ஆயிரக் கணக்கான புராணங்கள், ஸ்ம்ருதி, சுருதி போன்ற எண்ணற்ற தாத்பர்யங்களையும் கொண்டு, அறிவிற் சிறந்த ஒவ்வொரு மகரிஷியும் அதீத விளக்கங்கள் தந்தமையால், விரிவுரை விளக்கம் பல நாட்களுக்கும் மேலாக விரிந்து பரந்தது. இதைக் கண்டு ஒரு புறத்தில் தெய்வீக ஞானப் பிரவாகப் பிரச்சாரம் என அரிச்சந்திர மஹாராஜா சந்தோஷம் அடைந்தாலும், மறுபுறத்தில் விளக்க உரைக் காலம் இன்னமும் தொடர்ந்தால் மஹரிஷிகளின் அனுஷ்டானங்கள், பிற நாட்டு யாத்திரைகள் பாதிக்கலாகும் என்று கவலையுற்றார். இதற்கு நல்முடிவு தந்திடத் தம் குலதெய்வத்தை பக்திப் பூர்வமாக வேண்டிட்டார்.
அவருடைய குல தெய்வ மூர்த்தியிடம் இருந்து, "இது மனம், அறிவு சம்பந்தப்பட்டமையால், ஸ்ரீசந்திர மெளலீஸ்வரரை நாடி நல்விளக்கம் பெறுவாயாக”, என அருளாணை கிட்டியது. இதனால் மிகவும் ஆனந்தமடைந்த அரிச்சந்திர மஹாராஜா, தென்னைக் கீற்றுகளினால் கூரை வேய்ந்து, அதில் மூங்கில் பட்டைகளின்  ஸ்ரீசந்திரமெளலீஸ்வரரை ஸ்தாபனம் செய்து, சந்திர ஒளி எப்போதும் ஸ்ரீசந்திர மெளலீஸ்வரர் மீது வேயுமாறு வைத்து மஹரிஷிகளைக் கொண்டு சந்த்ரப்ரகாச வேள்வியுடன் பூஜித்தார். ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரரும் எழுந்தருளி மஹரிஷிகளுக்கு அருளாசியும், தக்க விளக்கங்களையும் அருளினார்.
மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை 80 ஆண்டுகள் இடைவிடாது தரிசிப்போருக்கு உடல், மனதில் அடங்கும், மனம் புத்தியில் ஒடுங்கும், புத்தி உள்ளத்தில் பதியும், உள்ளம் ஆத்மத்தில் உறையும், ஆத்மம் ஜோதியில் நிறையும் - என்ற வகையிலான, அரிய வல்லீய ஜோதி விளக்கங்களை, தட்சிணாமூர்த்தியின் குருமண்டல சனகாதி மஹரிஷிகள் மூலமாய் மஹரிஷிகள் பெற்றனர்.

ஸ்ரீஅகத்தீஸ்வரர்
திருக்கொண்டீச்சரம்

இத்தகைய அதீதமான விளக்கங்களைக் கலியில் உணர வைக்கப் பெற்றுத் தர வல்லவையே, வேதத்தில் உள்ள சீக்ஷாவல்லீ, ப்ருகுவல்லீ மந்திரங்கள் ஆகும்.
மார்கழி மாதத்தில் கூடாரவல்லீ வைபவ நாளில் சீக்ஷாவல்லீ, ப்ருகுவல்லீ மந்திரங்களை ஓதி, முதலில் ஆண்டாள் தரிசனமும், பிறகு ஸ்ரீபெருமாளின் திருவடி தரிசனமும் பெற்று, தேனும் நெய்யில் மேற்பரப்பில் மிதக்கும் வண்ணம், சுவையான சர்க்கரைப் பொங்கல் படைத்து, சின்னஞ் சிறு குழந்தைகளுக்குத் தானம் அளித்தல்,
காலையிலும், மாலையிலும் தரையில் பசுஞ்சாணம் இட்டு மெழுகி, சுத்திகரித்து, தர்பைப் பாய் இட்டு அமர்ந்து, சீக்ஷாவல்லீ, ப்ருகுவல்லீ மந்திரங்களை மனசுத்தி வேண்டிப் பிரார்த்தித்து வர, பிள்ளைகளின் மன ஓட்டங்கள் தணிந்து, நல்ல ஒழுக்க நிலைகள் வளர உதவும்.
சீக்ஷாவல்லீ, ப்ருகுவல்லீ வகை மந்திர சக்திகள் பதிந்த தமிழ்ப் பாசுரங்களான, பட்டர்பிரான் அருமகள் கோதையாம் ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்க வாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சிப் பாசுரங்கள் ஆகும்.
இவற்றை பிரம்ம முகூர்த்த நேரமான விடியற்காலை மூன்று மணி முதல் ஐந்து மணிக்குள் ஓதுதல், கபால நாளங்களுக்கு மிகம் சக்தி வாய்ந்த வல்லீயவாச நல்வரக் கிரணங்களை அளித்துப் பலனளிக்கும்.  

கழிக்க அல்லவே நாட்கள்

கரிநாள் போல, கூடாநாளில், இறைபூஜைகளை, குறிப்பாக விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற பெருமாள் துதிகளை ஓதியே, கூடாநாளைச் செலுத்த வேண்டும். ஆம், நாள் என்பதைக் கழிக்கக் கூடாது. நாள், மணி எனும் காலப் பகுதி வாழ்வில் அமைவது கழிப்பதற்காக அல்ல! காக்கும் கடவுளே பெருமாள், ஆதலின் தீய சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ள, கூடாநாள் பூஜைகள் நன்கு உதவுகின்றன.
மனித வாழ்க்கையே காலத்தால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கையில், மிகவும் புனிதமான மானுட வாழ்க்கையின் மூலமாகத் துலங்கும் காலத்தையா கழிப்பது என்று சொல்வது? காலத்தை நல்வகையில் செலுத்திப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, காலத்தை நல்வழியில் செலுத்தும் மார்கத்தை உணர்த்தவே, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா (காலத்) தேரோட்டியாய், ஸ்ரீபார்த்த சாரதியாய் வந்தருளினார்.
காலத்தை நன்கு பயன்படுத்திட, யாவரும் கடைபிடிக்க வல்ல மிகவும் எளிமையான கிருஷ்ண பக்தி நன்கு உதவும்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

திடமான மன உறுதியும், மனோ வைராக்யமும் கொண்டிருந்தால், எத்தகைய துன்பத்தையும், முன்னரே எதிர் நோக்கித் தடுத்தும், தணிக்கவும் வல்ல மனோ சக்தி தானே சுயம்பு சக்தியாய் நன்கு உருவாகும். இந்த வைராக்யத்தை, தீய சக்திகளை மாய்க்க வல்ல பூஜைகளில் இருந்து நிரம்பவே பெற்றிடலாம். போகியன்று அக்னியில் பலவகை தோஷங்கள் நீங்குதல் போல, கூடா நாளன்று ஆற்றும் பூஜைகளில் தீயவை கரைந்து மனமும், உடலும், பரவெளியும் சுத்திகரிக்கப்படும். கூடாநாளில் ஆற்றும் மானசீக பூஜைகளுக்கு அபரிமிதமான பலன்கள் பெருகும்.
கூடா நாளில் இறைபூஜைகளைத் தவிர எந்த நற்காரியத்தையும், புது காரியத்தையும் செய்தல் கூடாது என்று கால விதிகளை நிர்ணயித்து ஏன் தந்துள்ளார்கள் என ஆன்ம ரீதியாக அறிய முனைக! இதுவும் ஆத்ம விசார வகைப்பட்டதே!
முதலில், கூடாநாளில் பெருகும் தீய சக்திகள் யாவை என அறிந்திடுக. ஏதோ தீய சக்திகள் என்றால், வெளியிலிருந்து வந்து தாக்குபவை என்று மட்டுமே எண்ணாதீர்கள். ஒவ்வொருவரும் தாம் உடலால், மனத்தால் செய்துள்ள தவறுகளையும், பாவச் செயல்களையும் மனதார அல்லது மனதுக்குள் எண்ணிப் பார்த்திட வேண்டும். இவ்வாறு தான் செய்த தீங்குகளும், தீய செயல்களும், பாவ வினைகளும், அதர்மக் காரியங்களுமே மீண்டும் தமக்குத் தீயவையாக, தீய சக்திகளாக, பகைமையாக வந்து அமையும் என்பதை எண்ணிப் பிராயச் சித்தம் நாடுதல் வேண்டிட கூடா நாள் பூஜைகள் பெரிதும் உதவுகின்றன.
அவரவர் மனதால், உள்ளத்தால், உடலால் தற்போதைய மனிதப் பிறவியிலும், பூர்வ ஜென்மங்களிலும் செய்த பாவ வினைகளும் அவரவருக்குள்ளேயும், வானிலும் , வெளிப் பகையாயும், உட்பகையாயும் அசுர சக்தியாய் நெடுங்காலம் உறைந்து துன்பங்களைத் தரும்.
இவற்றை என்றுதான் களைவது? இதற்காகத் தான் கூடாநாள் தத்துவம் கால மார்கமாய் வழக்கிற்கு வந்துள்ளது.
தினமுமே கூடாநாளாக அசுர சக்திகள் பெருக்கெடுத்து ஓடினால் வாழ்வு என்னாவது? இப்படியே தினமும் அமைந்து விட்டாலோ, உலக வாழ்க்கையே மக்களின் வேதனைகளால் ஸ்தம்பித்து விடுமே!
எனவே, உடலில், மனதில், பிற இடங்களில், விண்ணில், வானில் பதிந்து கிடக்கும் தீய சக்திகள் வெளி வருவதற்காக காலதேவதைகளே சில நாட்களைப் பகுத்துத் தந்துள்ளனர். இவைதாம் கரிநாள், கூடா நாட்களாகின்றன. தீயவற்றைப் பூஜைகளால் பஸ்மம் செய்ய வல்ல நாட்கள். இந்நாட்களில் நாம் ஆற்றும் விசேஷமான இறைபூஜைகளால், தீயன பஸ்பம் ஆகி நம்மைக் காக்கின்றது. இதற்கு மேலும் கூடாநாளுக்கான விளக்கங்கள் உண்டு.
புனிதமான மண்ணுக்குப் புனிதப்படுத்தும் சக்தி உண்டு. இதனால்தான் பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணில் அதீத வேத சக்திகள் நிறைந்து நம்மைக் காக்க வல்லவை ஆகின்றன. கூடா நாளன்று பெருமாள் ஆலயங்களில் புது மண்பானையில் ஆன சர்க்கரைப் பொங்கலை, மடப் பள்ளிக்குப் புதுப் பானைகளை அளித்தேனும் - பெருமாளுக்குப் படைத்து,
முதலில் பசு, கன்றுகளுக்கு அளித்து, தாமும் சிறிது உண்டு, தானமாகவும் நிறைய அளித்திட வேண்டும். மண் பானையில், அரிசி, தான்யங்கள், பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகளை வைத்து ஏழைக் குடும்பத்திற்கு அளித்திடுக! இதனால் உள்பகைகள் தணியும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam