ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
கர்மம் எப்போது வினையாகும் ? |
உடலில், மனதில் கழிக்கப்பட வேண்டியதை உளமாற அறிய உதவும் அக்னி சக்திகள் பரிமளிக்கும் தினமே போகிப் பண்டிகை தினமாகும். இந்நாளில் ஏதேனும் ஒரு வகையிலாவது அக்னி பூஜையை ஆற்ற வேண்டும்.
*கோயிலில், இல்லத்தில் குறைந்தது நான்கு மணி நேர தீபம்,
* குறைந்தது ஒரு மணி மணி நேர சாம்பிராணி தூபம்,
* ஹோம பூஜை, குறைந்தது மூன்று மணி நேரம் சமைத்து அன்னதானம்
- என்வாறாக எவ்வகையிலேனும் அக்னி வகைப் பூஜைகளை ஆற்றிடுக!
தினமும் சூரியன் எழுவதானது, வாழ்வில் இறைவன் நிறைய வாய்ப்புகளை அளித்துக் கொண்டே இருக்கின்றான் என்பதைக் குறிப்பதாகும். சூரியன் மேற்கே உதிப்பது கலியுகத்தின் முடிவைக் காட்டும் தன்மைகளில் ஒன்று என்பது சித்தர்களின் வாக்கு. எனவே தினமும் சூரியன் கிழக்கில் உதிப்பதானது மனிதன், நல்முறையில் வாழ இறைவன் சளைக்காது நமக்கென அளித்துக் கொண்டே இருக்கும் நல்ல சந்தர்ப்பங்களைக் குறிப்பதாகும். சந்தர்ப்பங்கள் வாழ்வில், ஆயுளில் எப்போதும் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லையே!
பலவிதமான வினைக் கழிவுகளை லகுவாக்கித் தரும் அதியற்புத நாளும் போகிப் பண்டிகை நாளே! ஆம், கர்ம வினைகள் கழிவு பெற்றால்தான் துன்பங்கள் பரிபூரணமாகத் தீரும். கர்மம் என்பது மனதால், உடலால் செய்யும் செயல். செயலின் தன்மையைப் பொறுத்து, அது கர்மமா, கர்ம வினையா எனத் தெரியலாகும். கர்ம வினையிலும் நற்கர்ம வினை, தீய கர்ம வினைகளும் உண்டு. உதாரணமாக கைக் குழந்தையை வளர்க்கும் சேவைகள் நற்கர்மங்கள் ஆகும். உதவி, கடமையெனில் கர்ம வினை அம்சங்கள் அதனதற்கேற்ப மாறும்.
வழக்கில் கர்ம வினை என்றால் தவறான, அதர்மமான காரியங்களின் விளைவுகள் எனப் பொருள் கொள்கின்றனர். ஏழைக்கு உதவுவது நற்கர்மச் செயல் ஆகும். இதில் புண்ணியம் விளையும். பிறருக்குத் தீங்கு செய்தல் அல்லது செய்ய வேண்டிய கடமையைச் செய்யாதிருத்தல் தீய கர்மவினை ஆகும்.
செய்யும் செயலில் அதாவது, கர்மத்தில் சுயநலமும், தீயவையும் கலந்தால் அது தீய விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே பாவம் எனப்படுவது.
அதாவது நற்கர்மச் செயல்களில் புண்ணியமும், தீய கர்மச் செயல்களில் பாவமும் ஏற்படும். இவைதாம் கர்ம வினைகளின் விளைவுகள் ஆகும்.
ஆனால் வழக்கில் பாவ விளைவுகளையே கர்ம வினை எனப் பொதுவாகச் சொல்வர். எனவே கர்ம வினை என்று சொன்னாலே அது தீயதைக் குறிக்கும் என எண்ணாதீர்கள்!
மனப் பூர்வமாக, ஆத்மார்த்தமாகப் பூஜிக்கும் போது அதில், சுயநலப் பிரார்த்தனை ஒரு சிறிதும் இல்லாது இருப்பதால் அது கர்ம வினையற்ற நற்கர்மமாகும். இதை நற்கர்மம் என்ற கூடச் சொல்வது கிடையாது! அதாவது செய்யும் செயலில் பற்றற்றுச் செய்தல் இதுவேயாம்.
எனவே கர்மம் எனும் செயல் கர்மமாகவே இருத்தல் அதாவது எதையுமே பற்றற்றுச் செய்தல் மிகவும் கடினமே! புனிதமான துறவிகளுக்கே இது சாத்தியமாகும்.
மிச்ர கர்மம் என்பது காரியத்தில் எவ்விதப் பற்றும் இல்லாமல் - புயல், வெள்ளத்தில், திருமணக் காரியங்களுக்கு ஏழைகளுக்கு உதவி செய்வது போல எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆற்றுவதாகும்.
ஸ்ரீஅக்னீஸ்வரர்
திருக்காட்டுப்பள்ளி
ஆனால் இதில் நாம் நல்லது செய்தோம் என்ற அணுத் துளியான எண்ணம் தன்னையும் அறியாமல் ஏற்படவே செய்யும். இவ்வகை எண்ணம் ஏற்படாவிடில் மிச்ர கர்மா அதாவது பற்றற்றுச் செய்த உத்தமக் காரியமாகும். இதுவே (மிச்ர) கர்மமாகும், இதில் கர்ம வினை எதுவும் அணுகாது.
ஆனால் நாம் தான தர்மம் செய்தோம், நல்லது செய்தோம் என ஓரணுத் துளி எண்ணம் பிற்பாடு எப்போதாவது வந்தால் கூட, இது புண்ணியத்தை நற்கர்ம விளைவாக வர்ஷிக்கும் நற்கர்மமாக மாறும். பலரும் நற்காரியங்களை மனதாரச் செய்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின் எப்போதாவது துன்பங்கள், மரண துக்கம் வரும் போது, கடவுளே! அவ்வளவு பூஜைகள், தான தர்மங்கள் செய்தேனே, எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் என்று எண்ணுகையில் பற்றற்றுச் செய்ததாக எண்ணியது பற்றுள்ளதாகி, அதுவரையில் பற்றற்ற மிச்ர கர்மா போல் தோன்றியதானது, புண்ணியக் காரியமாக மாறி, புண்ணியத்தை அள்ளித் தரும்.
எனவே மனித மனத்தின் ஸ்திரமற்ற தன்மையால் ஆயுள் முடிவு வரை எது கர்மா, எது மிச்ர கர்மா, எது பற்றில்லாமல் செய்தது என்று முடிவு செய்ய இயலாது! இதற்காகவே ஆயுள் முழுதும் சற்குருவின் வழிகாட்டுதல் தேவையானதாகும். ஆனால் சற்குரு வந்தாலோ அவரை வரம் காய்க்கும் தெய்வ மரமாக்கி எப்போதும் அவரிடம் குறைகளைச் சொல்லிச் சொல்லி மனமே காய்ந்து விடும்.
எனவே, சற்குருவை அடையாத நிலையில் அதிக அளவு புண்ணியம் சேர்ந்தாலும் அகங்காரம், ஆணவம், மமதை, மறு பிறவிகளில் வசதியான வாழ்க்கை, பணக்காரக் குடும்ப வாழ்க்கை, பெரிய பதவிகள் கிட்டலாகும். எனவே அனைத்தும் இறையருளால் நடந்ததாகவும், தன்னை இறைவன் ஒரு கருவியாக வைத்துள்ளான் என உணர்தலே நன்று.
பொதுவாக நாம் செய்யும் காரியத்தில் பல விளைவுகள் ஏற்படும் அல்லவா! தான, தர்மங்கள், பூஜைகளாகிய நற்கர்மங்கள் புண்ணியங்களை விளைவித்து, முதலில் மேலும் தீய கர்மங்களைச் செய்ய விடாது காப்பாய் நின்று தடுக்கும். பழவினைகளின் விளைவுகளைச் சிறிது, சிறிதாய்த் தணித்து, கஷ்டங்கள் சிறிது, சிறிதாய் முழுவதுமாய் நீங்கும்.
இவையெல்லாம் ஆத்ம விசார விளக்கங்களாய் உணர வேண்டிய நாளே போகி நாள்! கர்மங்களைக் கழிக்க வல்ல திருநாள்! இதனால்தான் முற்காலத்தில் போகி நாளில் சற்குருவைத் தரிசனம் செய்வார்கள்! எனவே போகி அன்று சித்தர்கள், மஹரிஷிகளின் ஜீவாலயங்களில் இயன்ற அளவு அன்னதானத்துடன் தரிசனம் செய்திடுக!
மேலும் பழவினைகள் கழிதலுக்காக, அக்னி (நெருப்பு) சம்பந்தப்பட்ட நற்காரியங்களான அன்னதானம், ஹோமம், விளக்குப் பூஜைகளை ஆற்றிடுக! அக்னீஸ்வரர் தரிசனமும் விசேஷமானதாகும்.
சற்குரு மகிழ்வார் |
பலரும் இனிமையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாது சளசளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் காலத்தை விரயம் செய்யும் பாவச் செயல். மணிக் கணக்கில் தேவையற்ற வகையில் பேசாது, நல்லதை, அறவழிகளை, அன்புடன், தெய்வானுபூதிகளைப் பேசவேதான் வாய் பிறந்துள்ளது.
உத்தராயணப் புண்ய காலத்தில் நம் அங்கங்களில் வாய், நாக்கு, உள் நாக்கு பலம் பெறும் நாளாகும். இதனால்தான் உத்தராயணத்தில் மறைகள் ஓதும் வைபவங்கள் திருமணங்களாக, கும்பாபிஷேகங்களாக நிறையவே அமையும். இந்நாளில் வாய் நிறைய இறைநாமம் ஓதுங்கள், பாடுங்கள், உரக்கப் படியுங்கள்.
“தீதும், நன்றும் பிறர் தர வாரா'' என்பது உத்தமமான வேதவாக்கு. இதில் மனித வாழ்க்கைத் தத்துவமே முழுமையாக அடங்கி உள்ளது. நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ய காரியங்கள், தீய செயல்கள் போன்றவற்றை வைத்துத்தான், இப்பிறவியில் உடலமைப்பு, ஆரோக்யம், கல்வி, குடும்பம், சொத்து, படிப்பறிவு போன்றவையாக நாம் பெற்றிருக்கிறோம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.
“இதில் பிள்ளைகள் நன்கு படிக்கவில்லை, படிப்பில் மந்தமாக இருக்கின்றார்கள்!” என்றால் அதற்குரித்தான பூர்வ ஜென்ம கர்ம வினைகளை தக்க சற்குரு மூலமாக அறிந்து, இதற்குரித்தான பிராயச்சித்தத்தை முறையாக கடைபிடித்தல் வேண்டும். எதற்கெடுத்தாலும் தக்க சற்குரு என்று கூறிவிட்டால் போதுமா, சற்குருவை எவ்வாறு தேடுவது? எங்கே தேடுவது? எப்படிக் கிடைப்பார்?
உதிரத்தின் உணர்வே, நெஞ்சைத் தொட்டுச் சொல்! நீ செய்த தவறுகளுக்கெல்லாம் பரிகாரம் தேடினாயா? பரிகாரத்தை இன்று வரை தேடவில்லை என்றால் திருஅண்ணாமலையைக் குறைந்தது ஆயிரம் முறையாவது கிரிவலம் வந்திடு! பிராயச்சித்தத்திற்கான வழிமுறைகள் பிறக்கும்!
இதுவே சித்தோபநிஷத் அளிக்கின்ற, சத்குருவைத் தேடும் மார்கத்திற்கான சித்த குருவேத சூக்த மஹா மந்திரமாகும்.
எனவே பெற்றோர்களின் கர்ம வினைகள்தாம் குழந்தைகளுடைய மந்த புத்திக்கு காரணம் என்று முதன் முதலே அறிந்து விட்டால், இதற்குப் பிறகு பிராயச்சித்த முறைகளைக் கேட்டுப் பெற்றிடலாம். மந்த புத்தி என்பதற்காகத் தவறாகக் கொள்ளக் கூடாது, நன்கு முயற்சி செய்தல் வேண்டும். மனித வாழ்கையே தெய்வீகத்தில் முன்னேறுவதற்கான முயற்சித் தொகுப்புக் காலம்தானே!
காணும் பொங்கல் நாளன்று சித்தர்களும், மஹரிஷிகளும், உத்தமர்களும் எப்போதும் தூல, சூக்கும உருவங்களில் வழிபடும் திருஅண்ணாமலை கிரிவல வளாகம், பாடல் பெற்ற தலங்கள், சுயம்பு மூர்த்தித் தலங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களால் ஆராதிக்கப் பெற்ற தலங்கள், கிரிவலத் தலங்களில் வழிபடுக!
ஒரு சிறு பாத்திரத்திலாவது அன்ன வகைகளை எடுத்துச் சென்று நீங்களே அன்னதானம் செய்து மகிழுங்கள். ஓர் ஏழைக் குடும்பத்திற்காவது பொங்கல் சமைக்கத் தேவையான பண்டங்களை முழுமையாக வாங்கித் தாருங்கள். இவை எல்லாம் சத்குருவிற்கு ப்ரீதி தருவதாகும்.
உத்தராயணப் புண்யகாலம் அன்று 12 பேருக்காவது இலவசமாகத் தர்ப்பணப் பூஜை ஆற்றிட உதவிடுங்கள்
முத்தான மூன்று பொங்கல் |
நமது தமிழ் பஞ்சாங்க நியதிப்படி தை மாதத்தின் முதல் மூன்று நாட்களும் கரிநாளாக அமைகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாக இருக்கையில் முதல் மூன்று நாட்களில் சுப காரியங்களை நடத்த முடியாதவாறு கரிநாள் அமைவது ஏன்?
கரிநாள் என்பதால், சுப காரியத்திற்கு ஏற்றதாக இல்லாததால், கரிநாளைத் தாழ்வாக எண்ணுதல் கூடாது. முற்றிலுமாகச் சிலவகை இறைவழிபாடுகளுக்காக ஆன நாளே கரிநாள் என வகுக்கப்பட்டது.
சனீஸ்வர மூர்த்தியே கலியுகத்தில் ஜீவன்களுடைய ஆயுள்காரக மூர்த்தியாக விளங்குகின்றார். கலியுக மனித சமுதாயமோ, ஜீவன்கள் அதாவது உயிரினங்கள் என்ற தாத்பர்யத்தை நன்கு உணரவில்லை. சுயநலமாகவே, மனித குலம் தன்னளவில், தன் குடும்பத்தளவில், தன் சுற்றத்தோடு மட்டுமே குறுகிய மனப்பான்மையுடன் வாழ்வதாகவே உள்ளது.
சமுதாயப் பணிகளை இறைப் பணிகளாக ஆற்றுகின்ற தியாக மனப்பான்மை நன்கு நிரவினால் தான் இந்த பூவுலகில் உள்ள ஜீவன்களில் பொழியும் ஜீவ சக்தி புரியலாகும். இதை எல்லாம் புரிந்து கொண்டு வாழ வேண்டுமா என்று எண்ணிடலாம். ஆமாம், பிற ஜீவன்களின் தத்துவம் என்று தனிப்பட்ட ஒன்று கிடையாது. இவ்வாறு எண்ணினால் அதுவும் சுயநலமே. தன்னுள் உள்ள ஆத்மமே அனைத்திலும் விரிந்துள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது?
சமுதாயத்தில் பிறருடைய எந்த உதவியும் இல்லாமல் எவருமே தனித்து வாழ முடியாது. அப்படி வாழ வேண்டுமானால், காடு, மலைகளில், உண்ண உணவு, இருக்க வீடு இல்லாது தவத்தில் தாம் மூழ்கிட வேண்டும். இருக்க வீடு, உண்ண உணவிற்கான தானியங்கள், எண்ணெய், காய்கறிகள், பழங்கள், உடுத்த உடைகள் அனைத்தும் பிற ஜீவன்களுடைய உழைப்பால் வருவது தானே!
எனவேதான் ஒவ்வொரு விநாடியும் வாழ்வது இறை கருணையால், பிற ஜீவன்களின் உழைப்பால்தான் என்பதை உணர வைப்பதுதான் கரிநாள் தத்துவம் ஆகும். கரி என்றால் அனைத்தும் பயனாகி மிஞ்சுகின்றதாகும். பிற ஜீவன்களின் உழைப்பின் பயனாக, வீடு கட்டி, தினமும் உண்டு வாழ்கின்ற மனிதன் ஏதோ தான் சம்பாதித்துத் தானே, தன்னால் வாழ்வதாகவே எண்ணுகின்றான்.
ஆயுள்காரராகிய சனீஸ்வரர் தனக்கென இறைவன் அளித்துத் தந்த கரிநாட்களில் பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டு, தன் பூஜா பலன்களை ஆயுள் சக்திகளாகக் கரிநாளில் அளிக்கின்றார். நல்ல ஆயுள் நிறைந்தால்தானே மனித வாழ்க்கையில் பிறவியைக் கடக்கும் பெரும் பேற்றைப் பெறலாகும்.
தை மாத முதல் மூன்று நாட்களில் ஆயுள் சக்திகளைத் தருகின்ற முதல் நாளாக சூரிய பூஜை, காருண்ய சக்திகளையும் பெற்றுத் தருகின்ற இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாக, விலங்கு குலத்திற்கான கோமள சக்திப் பூஜை, பிற ஜீவன்களிடம் நேயத்தை அளிக்க வல்ல ஆன்ம நேய சக்தியான மூன்றாம் நாள் தாவர சக்திப் பொங்கலாகக் கொண்டாடுகின்றோம்.
இனியாவது ஒவ்வொரு மனிதனும், ஏனைய மனித குலம், விலங்குகள், தாவரங்கள் தவிர கோடானு கோடிக் கணக்கான ஜீவன்கள் காற்றிலும், நீரிலும், வானிலும், கடலிலும் உறைகின்றன என்பதை அனுபவப் பூர்வமாக உணர்தல் வேண்டும். உலக ஜீவன்கள் அனைத்திலும் பதிந்துள்ள ஆத்ம சக்திகள் தாம் உலகை இயக்குகின்றன என்பதை உணரவே இந்த மூன்று நாட்களிலும் மண் பானை, நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த பொங்கல் பூஜையாகத் துலங்குகின்றது.
பொங்கல் நாட்களில் பசுக்களுக்கு, நிறைய விலங்குகளுக்கு அவை மிகவும் விரும்புகின்ற உணவு வகைகளை அளியுங்கள். விலங்குகள் மனிதர்களிடம் உடை, பணம், பொருட்களை எதிர்பார்க்கவில்லை. வயிறார உணவு, மனதார அன்பு இவற்றையே எதிர்நோக்கும் விலங்குகளுக்கு அன்போடு உணவளித்தால் நம்மை அவை மனதார ஆசீர்வதிக்கும். எனவே விலங்குகளின் ஆசிகளைப் பெற வேண்டிய நன்னாட்களே இத்தகைய கரிநாட்களாகும். எந்தெந்த விலங்கிற்கு எது பிடிக்குமோ அதை அளித்து உங்களை ஆனந்தப்படுத்திக் கொள்ளுங்கள். பறவை, நான்கு கால் விலங்குகள், மீன் என ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஏதாவது உணவளித்து மகிழுங்கள்!
பொன்னான சூரியக் குடும்பம் |
சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். இந்நாளில் முந்திரி, விளாம்பழம், சுரைக்காய் போன்ற எட்டு வகைப் பண்டங்களைத் தானமாக அளிப்பதால், குடும்பத்தில் உள்ள உட்பகை தீர உதவும்.
சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி. துரியோதனின் பத்னியாகிய பானுமதி, பானு சப்தமி விரதத்தைக் கடை பிடித்து, தனரேகையை அபூர்வமாகக் கையில் கொண்டிருந்த துரியோதனனுக்கு, லக்ஷ்மி கடாட்ச சக்திகளை மேம்படுத்தித் தந்தாள்.
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார்.
ஸ்ரீபானுசுதாகரர் பாபநாசம்
ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர். பாபாநாசம் சிவாலயத்தில் உள்ள பெரிய சூரிய மூர்த்தி. இவருக்கு ஞாயிறு தோறும் வெண்ணெய்க் காப்பும், ஆரஞ்சு வண்ணப் பட்டாடையும் சார்த்தி, உருண்டை வடிவிலான உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வந்தால் பெற்றோர்கள் - பிள்ளைகள் இடையே உள்ள மன ஸ்தாபங்கள் தீர்ந்திட உதவும்.
சூரியக் குடும்பம் என்பதாக, சூரியன், சனிபகவான் சேர்ந்து அருள்கின்ற பொன்னமராவதி சிவாலயத்தில், சனி, ஞாயிறு இரு நாட்களும் - சனிக்கிழமை எட்டுக் கூட்டுத் தைல விளக்குகளும், ஞாயிறன்று ஏழு தைல விளக்குகளும் - 108 ஆக விளக்குகளை ஏற்றி வழிபடுவதால், பெற்றோர், பிள்ளைகளிடையே உள்ள மனஸ்தாபங்கள் தணிய உதவும். சப்பாத்தி, பூரி இதோடு சனீஸ்வரருக்கு உரித்தான கருவேப்பிலைத் துவையல் அல்லது ஊறுகாயோடு சேர்த்து அன்னதானமாக அளிப்பதும் சிறந்த அன்னதான பூஜையும் ஆகின்றது. இத்தகைய பூஜைகள் தந்தை, மகன் இடையே உள்ள வேறுபாடுகளைத் தணிக்க உதவும்.
கூட்டுத் தைலங்கள்: பசு நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், மருதாணித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம்
ஏழும் எட்டும் ஒளி கூட்டும் |
ஜாதகத்தில் ஏழாம் இடம் மிகவும் முக்கியமானது. இதில் சந்திர மூர்த்தி அமைவது பல தருணங்களில் அபரிமிதமான சக்திகளைப் பெற்றுத் தரும். பிரம்மச்சாரியாக, புனிதமான துறவியாக வாழ்ந்து மறைந்த துறவிகளின் ஜீவாலயங்களில், மேஷத்தில் சந்திரன் இருக்கும் தினத்தில் வழிபடுதல் மிகவும் விசேஷமான மன நிம்மதியைத் தருவதாகும்.
அஸ்வினி நட்சத்திரம் அக்னி வகை நட்சத்திரங்களில் ஒன்றாகும். தினமும் இல்லத்தில் விளக்கேற்றுகையில், அந்தந்த நாளுக்குரிய நட்சத்திர மூர்த்தியை வேண்டி விளக்கேற்றுவது மிகவும் பயனுடையது. இதனால் அந்தந்த நட்சத்திர மண்டலத்திலிருந்து ஒளிக் கிரணங்கள் வந்து சேர்ந்துக் கூடுதலாகப் பலன்களை அருள்கின்றன.
சத்குருவின் அருள், திருமணம், சந்தான பாக்யத்திற்கு குரு கிரகம், சிறந்த கல்விக்கு புதன், நீண்ட ஆயுளுக்கு சனீஸ்வரன், நல்ல ஞானத்திற்கு கேது, நல்ல ஒழுக்கத்திற்கு சந்திரன் என்றவாறாக அனைத்து கிரகங்களின் அருளாசி ஒருவருக்கு நிச்சயமாகத் தேவையானவைதாமே! இதனால்தாம் தினமும் ஒன்பது முறை காலை, மதியம், மாலை வேளைகளில் நவகிரக மூர்த்திகளைச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். மற்றப் பிரகார அமைப்புகள் சதுரம், செவ்வகமாக இருக்க, நவகிரகப் பிரதட்சிண அமைப்பானது, வட்டத்தின் நடுவில் சதுரமாக அமையும். இது ஒவ்வொருவர் மனதிலும் பதிந்துள்ள மனோவாக்யச் சக்கர அமைப்பைக் குறிப்பதாகும்.
இதே போல, ஒவ்வாருவரும் 27 நட்சத்திரங்களின் அருளாசியைப் பெற்றால்தான் வாழ்க்கை நன்கமையும். ஞானகாரகராகிய கேதுவுக்கு உரித்தான நட்சத்திரம் அஸ்வினி என்பதால் அஸ்வினி நட்சத்திர நாளில் அக்னிப் பூர்வமான ஞானம் நன்கு விருத்தியாகும். இதனால், ஷிர்டி ஆலயம் போன்று பல்லாண்டுகளாக எப்போதும் அக்னி (தூண்டா விளக்கு, தீபம், அல்லது நெருப்பு ஜ்வாலை) இருந்து கொண்டிருக்கும் தலங்களில் அஸ்வினி அன்று வழிபடுதலும், அக்னியைத் தொடர்ந்து பரிணமித்திடச் செய்யத் தேவையான உபகரணங்களையும், திரவியங்களையும் அளித்தலும் குலந் தழைக்க நன்கு உதவும்.
திருஅண்ணாலை, திருக்கோயிலூர் அருகே மணம்பூண்டியில் ரகோத்தமர் என்னும் மாமுனி எளிமையாக வாழ்ந்து பெறுதற்கரிய இறை தரிசனத்தைப் பெற்று, இன்றும் வெயில், மழை அனைத்தையும் தாங்கி, நிழல்கூட இல்லாது வெட்ட வெளியில் ஜீவாலயம் பூண்டுள்ளார். எட்டு விதமான சற்குணங்களை மனித குலத்திற்கு அருள வல்லவர். இவ்வாறு வெட்ட வெளியில் உள்ள ஜீவாலயங்களை அஸ்வினி, திங்கட் கிழமைகளில் தரிசிப்பது மிகவும் விசேஷமானது.
எட்டு விதமான இறைமூர்த்திகளை (சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், முருகன் போன்று) தரிசித்து அகல் விளக்கு, குத்து விளக்கு, எலுமிச்சைப் பாத விளக்கு போன்று எட்டு விதமான விளக்குகளை ஏற்றுதல் மஹிமை நிறைந்ததாகும். அஸ்வினி நட்சத்திர ஜோதியானது எட்டு மண்டலங்களில் இருந்து பூமிக்கு வருவதால், எட்டு விளக்குகளில் அல்லது எட்டுத் திரி விளக்குகளை வைத்துத் தீபம் ஏற்றுதல் நல்ல பலன்களைத் தருவதாகும்.
பொதுவாக, அஷ்டமியில் எட்டு விளக்குகளின் தரிசனம் பெறுதலால் - சந்தேகங்கள், வீண் பழிகளால் வாடுவோர் மன சாந்தியுடன் நல்ல தீர்வுகளைப் பெற உதவும்.
முதலில் பத்து முடிவிலும் பத்து |
பெருமாளுக்குரிய தசாவதார சக்திகள் பரிணமிக்கும் தசமி திதியன்று அருணாசல கிரிவலப் பகுதியில் ஆடையூர் சாலையில், காஞ்சி சாலை சந்திப்பில் உள்ள அபய மண்டபத்தருகே கிட்டும் மலையின் பத்து முகடு தரிசனமான தசாவதார தரிசனப் பகுதியில் தசாவதார சக்திகள் சித்திப்பதால் தசமித் திதி தோறும் இங்கு தியானிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
தசமியோடு பெருமாளுக்குப் ப்ரீதி தரும் புதனும் இணையும்போது மூளையில் உள்ள தசமூல நாளங்களை நன்கு விருத்தி செய்ய உதவும். தசமூல நாளஙகள் தாம் தியானம், யோகம், பித்ருப் பூஜைகள் மூலம் பித்ரு லோகங்களுடன் இணைப்பைக் கொண்டிட நன்கு உதவுவதாகும்.
ஸ்ரீஅனுமார் மூர்த்தி
உய்யக்கொண்டான்மலை
புதன், தசமியுடன் பத்து எனும் எண் சக்திகளும் தசமித் திதி சக்திகளாய்ப் பரிமளிக்கின்றன. பத்து விரல்களும் பவித்ரமான பரிபூரணமான தெய்வீக சக்திகளைப் பூண்டுள்ளன. கடவுளைக் கை கூப்பி வணங்குதல், அன்னதானத்தில் கை நிறைய அள்ளித் தருதல், விளக்கேற்றுதல் போன்ற அனைத்துக்குமே பத்து விரல்களால் ஆவதாகப் பரிபூரணம் தருகின்றன.
ஆலயங்களில் பாவை விளக்கு என்ற வகையில் பாவையர் தம் கரங்களில் விளக்கைத் தாங்கி இருக்க, இதில் விளக்கேற்றுவதே பாவை விளக்காகும். மார்கழி நோன்பில் இது விசேஷமானதாகும். சீதளாக்னி லோகத்தில் உறையும் பத்னியரே ஆலயப் பாவை விளக்கு ஆகின்றனர். தசமி அன்று பாவை விளக்கு உள்ள ஆலயங்களில் பத்து தீபங்களை ஏற்றுதல் நல்ல மன நிம்மதியைத் தரும்.
புதன் கிழமையிலும், தசமித் திதியிலும் கைகளில் அல்லது தாம்பாளத்தில் விளக்குகளை ஏற்றி ஆலயத்தை வலம் வரும் நேர்த்தி வைத்து அடிப் பிரதட்சிணமாக வலம் வருதல், பல பலன்களை எளிமையாகப் பெற்றுத் தரும். குறிப்பாக, பக்கத்தில் உள்ளவர்கள் பகைமையால் எரிந்து விழுவது தணியும்.
பத்து என்ற எண்ணிற்கு நிறைவை அளிக்கும் சக்திகள் உண்டு. உயிரைக் கூட மீட்டுத் தரும் சக்திகளைப் பத்து என்ற எண் கொண்டுள்ளது. எனவேதான் மரணச் சடங்குகளில் பத்தாம் நாள் சடங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நாளில்தான் இறந்தோருடைய சரீரச் சாயைச் சரீரமானது, சரீரக் கட்டில் இருந்து விடுதலை பெற்று, அடுத்த சரீர நிலையை அடையும்.
தேவார மறையோர்களும் பிடித்த பத்து, திருநெடுங்களப் பதிகம் என்பதாக, பத்துப் பாடல்களை உடைய மிகவும் சக்தி வாய்ந்த பதிகங்களைப் பாடித் தந்துள்ளனர். தசமியன்று ஆழ்வாராதியர்களின், நாயன்மார்களின், தேவாரப் பாடல்களின் பத்து பதிகங்களையேனும் பாடி, பத்து முறை ஆலயங்களில் வலம் வருக!
பத்து என்ற எண் முதலையும், முடிவையும் குறிப்பதால் இது பரிபூரண எண் ஆகின்றது. ஜாதகத்திலும் பத்தாம் இடம் மிகவும் முக்கியமானதாகும். இதில் (10) எண் ஒன்றும், பூஜ்யமும் சேருவதால் முதலும் முடிவுமாகி நிறைவைக் காட்டுகின்றது. ஒன்றில் துவங்கி பூஜ்யத்தில் முடிவதே நிறைவு ஆகும். பூஜ்யத்தில் தொடங்கி பூஜ்யத்தில் முடிவது துறவுச் சரீரமாகும். ஒன்றில் தொடங்கி, பூஜ்யத்தில் முடிவது இல்லறத்திற்கு உரியதாகும்.
வெற்றிலையில் அளப்பரிய எண் சக்திகள் உள்ளன. இதனால்தான் வெற்றிலைச் சகுன சாத்திரத்தில், ஒருவரிடம் வெற்றிலைகளை எடுக்கச் சொல்லி, அதில் வரும் வெற்றிலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பலாபலன்களை அளிப்பர். காரணம், வெற்றிலையில் பதிந்துள்ள எண் சக்திகளாகும். வெற்றிலைக் காம்பு எண் ஒன்றையும், வெற்றிலை நுனி பூஜ்யத்தையும் குறிப்பதாகும். வெற்றிலையில் அனைத்து எண் சக்திகளும் நரம்புகள், சக்கரங்கள் வடிவில் நிறைந்துள்ளன. இதனால்தான் நவவியாகரண பண்டிதராக அனைத்து மாமறைகளிலும் வல்லவரான ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுகின்றோம்!
புதன் கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு 108 வெற்றிலைகளால் ஆன மாலையைத் தாமே தொடுத்து சார்த்தி வழிபட்டு வர, குடும்பத்தில், இறந்து போனவர்கள் கொண்ட விரோதம், பகைமையால் வந்த விளைவுகள் சந்ததிகளையும், குடும்பத்தையும் தொற்றாமல் பாதுகாக்க உதவும்.
குருபரமே திருபரம் |
ஒரு வேளை மட்டும் உண்ணுதல், பழங்கள் மட்டும், நீர் வகை ஆகாரங்கள் மட்டும், சிறிது மோர் அன்னம் மட்டும் - என்று பல வகைகளிலும் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு ஏகாதசி நாளில் விரதம் இருந்து வந்தால்தான் இந்த சக்தி பிள்ளைகளைக் காக்க உதவும், மேலும், ஏகாதசித் திதியில் பரவெளியில் மிதக்கும் உதரபாந்தவ தேவசக்திகளை உடல் நாளங்களுக்கும் நல்வகையில் பெற்றுத் தர முடியும்.
விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் கூட ஏகாதசி விரதம் ஏற்கின்றன. சில நாட்களில் நாய்கள் எதும் உண்ணாது படுத்திருப்பது இதனால்தாம்! சில வகைக் காக்கைகளும், நாய்களும் கூட ஏகாதசி அன்று மாமிசம் இன்றியும், நீரும் அருந்தாமலும் விரதம் பூண்கின்றன என்றால் மனிதனுக்கு இதிலென்ன கஷ்டம்?
பெரும்பாலோர் உலகில் எதையுமே கடைபிடிக்காமல் நன்றாகத் தானே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள், இதில் நாமும் கடைபிடிக்கா விட்டால் என்ன என்ற எண்ணம் பலத்து ஊன்றி வருகின்றது. நம்முடைய தெய்வீகக் கடமையை அதாவது புனிதமான பாரதத்தில் பிறந்துள்ளமையால் அனைத்து ஜீவன்களுக்குமான நல்வாழ்விற்கான தினசரி பூஜைகளை ஆற்றி வர வேண்டும் என்ற கடமை உணர்வில் தினசரி ஆலய தரிசனம், இல்லத்தில் தினசரி பூஜைகளை ஆற்றி வர வேண்டும். எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் இதில் சோடை போகக் கூடாது என்று உறுதியாக இருத்தல் வேண்டும்.
கார்த்திகையும் ரோஹிணியும் பிணைந்து ஏகாதசியில், குருவாரத்தோடு பிணைந்து வரும்போது அற்புத குருபர சக்திகள் இந்த காலப் பிணைப்பில் விருத்தி ஆகும். ரோஹிணி குருபர நட்சத்திர சக்திகளைத் திரட்டித் தர வல்லதாகும். இதனால்தாம் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை அடுத்து ரோஹிணி வருகின்றது.
கிருத்திகையும், ரோஹிணியும் பிணையும் நேரம் குருபர சக்திகள் திரளும் அற்புத நேரமாகும். அதாவது கிருத்திகையின் நிறைவில் வரும் 12 நிமிடங்களும், ரோஹிணியின் முதல் 12 நிமிடங்களும் சேர்ந்து இந்த நட்சத்திரப் பிணைப்பான ஒரு நாழிகை நேரத்தில் ஸ்ரீகிருஷ்ண நாமத்தை இடைவிடாது துதித்து வர மனதில் நல்ல நிம்மதி உண்டாகும். இதில் வியாழன், ஏகாதசி கூடினால் அது அதி விசேஷமானதாகும்.
இந்த அபூர்வமான நேரத்தில்தாம் ஏகலைவனுக்குக் குரு கடாட்சம் கிட்டி உத்தம நிலைகளை அடைந்தான். குருபர நாட்களில் நாள் முழுதும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, மஞ்சள் நிற உணவு, பழ வகைகளை மட்டும் உண்ணுதல் என்று சங்கல்பம் பூண்டு நடத்தலால், தாயைப் பற்றிய, அல்லது தாயிடம் துரதிருஷ்ட வசமாக வந்துள்ள மன வருத்தங்கள் தீர உதவும்.
குருபர நாளில் முருகப் பெருமான் பராசக்தியை, சிவலிங்கத்தைப் பூஜித்தத் தலங்களில் வழிபடுதல் விசேஷமானது. அமர்ந்த கோலப் பெருமாள் தரிசனமும் ஏகாதசி விரதம் பூணுகின்ற முதியோர்க்குத் தேவையான உதவிகளையும் ஆற்றுதலால் தன் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றோமே என்று உள்ளூர வருந்தும் தந்தைமார்களுக்கு எவ்வழியிலேனும் நல்ல ஆறுதல் வழிகள் கிட்டலாகும்.
கனவு நனவாகுமா ? |
சனீஸ்வரருக்கு மிகவும் ஏற்புடைய நாள் கரிநாளும், சனிக்கிழமையும் அன்றோ! இக்கிழமையில் பல கோடி யுகங்கள் விசேஷமாகப் பூஜித்து, இறையருளால் இக்கிழமை தன் நாமத்துடன் பொலிய, ஸ்ரீசனீஸ்வரர் சிறப்பான நல்வரத்தைப் பெற்றார் என்பதே உண்மை! அதாவது, பல யுகங்களுக்கு முன்னர், சனிக் கிழமை என்ற பெயரை இக்கிழமை பெறும் முன், பிற பெயர்களுடன் வாரத்தின் இந்நாள் துலங்கியது.
எனவே சனிக் கிழமையன்று நந்தியெம்பிரானின் கொம்புகளின் ஊடே ஈஸ்வரன் திருநடனம் ஆடினார் என்பதை விட, ஈஸ்வரன் திருநடனம் ஆடிய தினத்தை நம் பூவுல பூஜைக்காக, சர்வேஸ்வரனே, சனிவாரமாக ஆக்கித் தந்தருளினார் என்பதே சரியானதாகும்.
நம் பூமி போல எண்ணற்ற பூமிகள் உண்டு. இதில் நம் பூவுலகிற்கு மட்டுமே நவகிரக பரிபாலனமும், ஏழு நாள் கூடிய வார அமைப்பும் ஆகும். சந்தபூவனம் எனும் மற்றொரு பூமியில் 16 கிழமைகள் கூடிய ஷோடச வார அமைப்பு உண்டு. பித்ரு லோகங்களில் 24 வாரங்கள் கூடிய கால அமைப்பு விளங்குகிறது. எனவே, பூவுலகில் நாம் காணும் கால அமைப்பானது, பிற லோகங்களில் மாறுபடும். இதை நாம் அறிய உதவுவதே கனவுகள் ஆகும்.
கனவு என்பது உறங்கிய பின், நம்முடைய ஒன்பது சரீரங்களில் பிறிதொரு சரீரத்தில், பிறிதொரு லோகத்தில் நாம் வாழும் நிலையாகும். கனவுலகில் அனைத்துக் கால வகைகளும் மாறுகின்றன அல்லவா! எனவே பிரதோஷ பூஜைக் கோட்பாடுகளும் ஒவ்வொரு லோகத்திற்கும் ஒன்றாக இருக்கும். இத்தகைய விளக்கங்களை நாம் அறிய வேண்டியதன் காரணமே - இறைமை என்பது - மனித குலத்திற்கு என அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஞானமயம் எனப் பகுத்தறியவே ஆகும்.
ஒவ்வொரு சனிப் பிரதோஷமும் மனிதனுடைய உள்ளம், மனம், உடலில் அபரிமிதமான தீர்க தரிசன சக்தி, பரந்தாம சேகர ஆயுள் சக்தி, வித்யா கீர்த்தி சக்தி எனப் பல்வகை அருட் சக்திகளை ஆக்கித் தருகின்றன. இதில் விசேஷமான மகத்துவம் என்னவெனில், பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருப்பதே அற்புதப் பலாபலன்களை வர்ஷிக்கின்றன எனில், இதில் கூடுதல் பூஜைகளை ஆற்றிடில் விளையும் பலாபலன்கள்தாம் என்னே, என்னே!
எவ்வாறு பிரதோஷ பூஜா பலன்களை நன்கு விருத்தி செய்வது?
* தாமே குடும்ப சகிதம், கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் சகிதம் பிரதோஷ நாளில் ஒன்றாக அமர்ந்து பூத்தொடுத்து, சந்தனம் அரைத்து ஆலயத்தில் அளித்தல், ஒன்றாக இல்லத்திலும் பூஜித்தல்
* எண்ணெய், திரி, அகல்களை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, பிரதோஷம் பற்றி ஒன்றுமறியாப் பாமரர்களையும் விளக்கேற்றச் செய்தல் - உதாரணமாக ஓர் ஏழை ரிக்ஷா ஓட்டுனரிடம் எண்ணெய், திரி, அகல்களை அளித்து ஆலயத்தில் தீபங்களை ஏற்றச் செய்து பாருங்கள், எத்தகைய சந்தோஷத்தை அவர் அடைகிறார் என்பது தெரிய வரும்! இத்தகைய சந்தோஷமே, பேரானந்தமாக நமக்குத் திரும்பி வரும்.
* பசும் பாலைக் கறந்த ஒரு நாழிகைக்குள் அதைக் கொண்டு பிரதோஷ அபிஷேகம் ஆற்றுதல்
* பூக்களைப் பறித்த ஒரு மணி நேரத்திற்குள் தொடுத்து சுவாமிக்குச் சார்த்துதல்
* பிரதோஷ நேரத்தில் சுவாமி புறப்பாடு இல்லாத ஆலயங்களில் இதற்காக ஆவன தொண்டாற்றுதல், குறைந்த பட்சம் நந்தீஸ்வரருக்கு 16 விதமான அபிஷேக ஆராதனைகளை ஆற்றுதல்
* அறக் கடவுளாக நந்தீஸ்வரர் அருள்கின்றார் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றார்கள். தற்போது கலியுகத்தில் உற்றம், சுற்றத்தில் கூட, எவ்வகையில் அறம் பிறழ்ந்து பலரும் வாழ்கின்றார்கள், பிறருக்குத் துன்பங்களை அளிக்கின்றார்கள் என்பதை நாமறிவோம். எனவே உலகில் அறம் வளர, நம் குடும்பப் பங்கு என்ற வகையில் குடும்பத்தோடு பிரதோஷ பூஜைக்காக ஆலயத்திற்குச் சென்று பூஜிக்க வேண்டும். உலகெங்கும் அறக் கொள்கைகள் தழைத்திட உதவுவதே பிரதோஷ வழிபாடாகும்.
* பாடல் பெற்ற 274 சிவத் தலங்கள் மட்டுமல்லாது செவலூர், மணக்கால் போன்ற பல்லாயிரக் கணக்கான சுயம்பு லிங்க ஆலயங்கள் உள்ளன. சத்சங்கக் குழு மூலமாக, பட்சம் ஒரு முறை ஒவ்வொரு சுயம்பு லிங்கம் அருளும் கோயிலாகச் சென்று பிரதோஷ பூஜைகளை ஆற்றுதல்
* ஒரு குடும்பத்திற்காவது அருகில் உள்ள சுயம்பு லிங்கம் அருளும் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகளை ஆற்றிடப் பலவகைகளிலும் உதவுதல்
* பிரதோஷ நேரத்தில் கோ (பசுவிற்கான) பூஜை
* பிரதோஷ நேரத்தில் எலுமிச்சை சாதம் நெல்லிக்காய் ஊறுகாய் தானமளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
* பிரதோஷ பூஜை முடிந்தவுடன் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணி
இயந்திர கதியாகவே வாழ்க்கையை ஓட்டாது, இனியேனும் பிரதோஷ பூஜா பலன்களை விருத்தி செய்யும் வண்ணம் சில முன்னேற்றங்களை உங்கள் வழிபாட்டில் கொணருங்கள்!
பலன் சொல்லும் பாதரேகைகள் |
இரு நாட்களில் மாலை நேரத்தில் பெளர்ணமித் திதி அமைவது, பெண் குலத்திற்கெனப் பல பூஜைகள் மூலமாக சில விசேஷமான பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
கலியுகச் சமுதாயத்தில் மனம்தானே அனைவரையும் ஆளவும், மாற்றவும், ஆட்டிப் படைக்கவும் செய்கின்றது. நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றச் செய்திட நிறைய வழிவகைகள் உண்டு, முதலில் காலம், காலமாய், பாளம், பாளமாய் மனத்தடியில் பாறையாய் இறுகிப் போயுள்ள முறையற்ற எண்ணங்களைத் தூர் வாரிட வேண்டும். இதற்கு உதவுவதே மலைத் தலங்களில் அமையும் பெளர்ணமி கிரிவலமாகும்.
கால் அடிப்பாத ரேகைகளுக்கும், கிரணங்களுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. இதனால்தான் ஒரு சிறு முள் சற்றே குத்தினாலும் கூட, உடனே மனம் அதை உணரலாகின்றது. எனவே உள்பாத ரேகையில் பொதியும் ஆன்ம சக்திகளை மனசுத்திக்கு நன்கு பயன்படுத்திக் கொள்வது நம் கடமையாகும். கோள ரீதியாக, சந்திரன் தன் ஆட்சிப் பீடமாகிய கடக ராசியில் அமர்கையில் ஏற்படுகின்ற பெளர்ணமித் திதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
எனவே வெற்றுக் காலால் நடக்கும் அருணாசல மலை கிரிவலத்தில் உள்ளங்காலில் ஏற்படும் குத்துயோகப் பரிமாணங்கள் பாதரேகைகள் மூலம் மனநாளங்களை அடைந்து சுத்திகரித்து, மனஅமைதியைப் பெறச் செய்கின்றது. இந்நாளில் அமையும் மலைத் தலக் கிரிவலம் மகத்தான பலன்களைத் தர வல்லதாகும்.
இந்நாளில் தெய்வ மூர்த்திகளுக்கு, குறிப்பாக, லிங்கம், சந்திர மூர்த்திகளுக்கு ஆற்றும் அன்னாபிஷேகம், வெண்ணெய்க் காப்பு, வெண் பட்டு சார்த்துதல், தயிர்க் காப்பு, பால் சாதக் காப்பு போன்றவை மிகவும் விசேஷமான பலாபலன்களை அளிக்க வல்லவை. மன அமைதியின்றி ஏதேதோ பீதிகளுடன் வாழ்வோர் அடிக்கடி, குறிப்பாக பெளர்ணமியில் மலைத்தல கிரிவலமும், ஆலயங்களில் அடிப் பிரதட்சிணமும் செய்து வர வேண்டும்.
மன நோயாளிகளாக இருப்பவர்களுக்கு அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சற்று உக்கிரமான நிலை ஏற்படுவது உண்டு. இவர்களுக்கு இவ்வாறு லிங்கத்திற்கோ மற்ற மூர்த்திகளுக்கோ சந்திர மூர்த்திக்கோ சார்த்தப் பெற்ற வெண்ணெய், அன்ன வகைகளைப் பிரசாதமாக அளித்தல் நலம் பயக்கும்.
பெளர்ணமி தோறும் திடியன் மலை, குன்றக்குடி, தேனி மலை என அவரவர் ஊரருகில் உள்ள மலைத் தல கிரிவலத்தைப் பிரசித்தி பெறச் செய்யுங்கள்! சமுதாய மன சுத்திதான் சமுதாய அமைதிக்கு வழி வகுக்கும். உலக சமுதாயத்தில் பெருகி வரும் வன்முறை, பயங்கர வாதத் தீய சக்திகளை மாய்க்க வல்ல சமுதாயத் தொண்டாக மாதாந்திரப் பெளர்ணமி கிரிவலத்தை ஒரு மகத்தான தேசீயத் தொண்டாக ஆற்றி வாருங்கள்!
தீர்த்த நீராடலில் தீரும் தோஷங்கள் |
மரண யோகம் ராகு காலம், அர்த்தப் பிரகரணன் போன்ற காலத்தின் தன்மைகளை அறிந்து, இவற்றில் பொதியும் சுப நேர அம்சங்களில் ஆற்ற வேண்டிய அந்தந்தப் பூஜைகளை அறிந்து பூஜைகளைத் தொடர்ந்து ஆற்றித்தான் வருதல் வேண்டும். உதாரணமாக, ஒருவர் தினமும் காலையில் 4.00 மணி அல்லது 6.00 மணிக்கு பூஜைகளை நடத்திடத் தினமும் பூஜையறையில் அமர்கின்றார் என்றால், அது எந்த வகை யோகம், காலமானாலும் இதனைத் தொடர்ந்து ஆற்றிடவே வேண்டும். ஆலயத்தில் ஆறு வேளைகளிலும் பூஜைகள் இவ்வாறுதாமே, அனைத்து யோகங்களிலும் நிகழ்கின்றன. எனவே, அந்தந்த நேரத்தில் நித்தியக் கடமையாக, தினந்தோறும் ஆற்றப் பெறும் பூஜைகள் காலத் தன்மைகளைக் கடந்ததாக விளங்குகின்றன என்பதே நாம் இதிலிருந்து அறிய வேண்டியதாகும்.
ஆனால் விசேஷமான திருமணம், கிரகப் பிரவேசம் போன்றவற்றை நிகழ்த்துகையில், பரிபூரணமான சுப முகூர்த்த அம்சங்கள் நிறைந்த வளர்பிறை நாளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
மக நட்சத்திரத்திற்கு அக்னியிலும், ஆகாசத்திலும், வானத்திலும், நிலத்திலும் தீர்த்தவாரி அம்சங்களை நிறைத்துத் தரும் அபூர்வமான சக்திகள் உண்டு. மக நாளில் பூமியில் அபூர்வமான நாம் இதுவரையில் அறிந்திடாத புனித நதி நீரோட்டங்கள் நிகழ்கின்றன. இதனால்தான் அக்னித் தீர்த்தம் உள்ள மகாமகக் குளம் போன்ற புண்ணியத் தீர்த்தத் தலங்களில், மக நட்சத்திர நாளில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகும்.
மேலும் கடற்கரைத் தலங்களில் கடந்த பல ஆண்டுகளில் நடைபெறாமல் நின்று போயுள்ள - மக நட்சத்திர நாளில் சுவாமிக்கான தீர்த்தவாரி உற்சவம் - மீண்டும் நிகழ்ந்தால்தாம், இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மை நன்கு தற்காத்துக் கொள்ள முடியும். இயற்கைச் சீற்றங்கள் நேருவதற்கு மக நட்சத்திரத் தீர்த்தவாரி ஆலய உற்சவங்கள் நின்றதும் ஒரு காரணமே. இதனால் சமுதாயத்தைக் காக்க வல்ல தீர்த்த வர சக்திகள் கிட்டாமல் போகின்றன.
பொதுவாக, பலவிதமான தோஷங்களால் மங்கள அம்சங்கள் குறைந்து இல்லறத்தின் நலங்கள் பாதிக்கப்பட்டு அவதியுறுவோர், மாதந்தோறும் மக நட்சத்திர நாளில், கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளத்தில் நீராடுதல், நீரைத் தலையில் ஸ்பரிசித்துக் கொள்தல், தர்ப்பணப் பூஜை, அன்னதானம் ஆகிய நான்கையும் நிறைவேற்றுதல், மனதுக்கும் குடும்பத்திலும் நல்ல அமைதியைப் பெற்றுத் தருவதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திடலாம். எனவே, இனியேனும் மக நட்சத்திர நாளில் ஆறு, தீர்த்தக் குளத்தில் நீராடுதல் என்பதை மகத்தான வழிபாடாக ஏற்று நடத்தி வாருங்கள்.
மக நட்சத்திர நாளில் புண்ணிய நதி, குளத் தீர்தத்தில் மாதம் ஒரு முறையேனும் கண்டிப்பாகத் தீர்த்த நீராடல் வேண்டும். குறைந்த பட்சம், ஆலயங்களுக்குத் தக்க காணிக்கைகளைச் செலுத்தி, சிறிது தீர்த்தத்தைக் கொணர்ந்து கிணறு, நீர்த் தொட்டியில் சேர்த்து முதல் நாள் இரவே வில்வம், வேப்பிலை, வன்னி இலைகளை நீரில் வைத்திருந்து, மக நட்சத்திர நாளில் நீராட வேண்டும்.
மக நட்சத்திர நாளன்று நதித் தீர்த்த தேவதா மூர்த்திகள் தரிசனம், மக நட்சத்திர தரினம், கங்காளச் சிவ மூர்த்தி தரிசனம், கங்கையைச் சிரசில் தாங்கும் மூர்த்தியை தரிசித்து ஆலயத் தல விருட்சங்களுக்குக் காவிரி, கங்கை போன்ற புனித நதி நீரை ஊற்றுதலால் - உறவினர்களால், அலுவலத்தாராலும் பிறராலும் ஏளனப்படுத்தப் படுவோர் நல்ல மனஅமைதி பெற உதவும்.
நலம் தருமே நமஸ்காரம் |
ஒவ்வொரு திதியும், கிழமையும், நட்சத்திர நாளும் விசேஷமான பலன்களைக் கொண்டுள்ளன என நாம் நன்கு அறிவோம். இதில் திரிதியைத் திதியானது சாஷ்டாங்கமாக கீழே வீழ்ந்து நமஸ்கரிக்கின்ற வகையான பூஜைகளுக்கு மிகவும் ஏற்புடைய நன்னாள் திதியாகும்.
இதற்காகவே, சாட்சாரத்காரமாக ஆற்றப் பெறும் நமஸ்காரம், ஆத்மார்த்தமாக நிகழ்த்தப் பெறும் நற்காரியப் பலாபலன்களையும் பன்மடங்காக விருத்தி செய்து, கோடிப் பன்மடங்காக்கி விருத்தி செய்து தரும் கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் ஆலயம், திருக்கோடிக்கா போன்ற அற்புதமான தலங்களில் வழிபட்டு வருதல் வணங்குரை சக்திகளை அபரிமிதமாக விருத்தி செய்து அளித்திடுவதாகும்.
ஸ்ரீகோடீஸ்வரர், ஸ்ரீகோடி முருகன் போன்று கோடி வகை நாம மூர்த்தித் தலங்களில், உண்மையாகவே பக்திப் பூர்வத்துடன் ஆற்றப்படும் நல்பூஜைகள் யாவுமே, கோடி மடங்காய் விரிவதாகும். ஆனால் பூஜிக்கையில் எண்ணத் திரிபுகள் சிறிதே வந்தாலும், அவையும் கோடி மடங்காகும். எனவே இத்தலங்களில் குடி கொண்டருளும் மஹரிஷிகளிடம் அனைத்துத் தரிசனப் பலாபலன்களையும் அர்ப்பணிப்பதாக முன்னரேயே சங்கல்பித்து வழிபடுதல் சாலச் சிறந்ததாகும். ஒன்றுமே வேண்டாது வழிபடுதல் அல்லது இவ்வாறு பூஜா பலன்களை ஆலயத்திலேயே அர்ப்பணித்தலே சிறப்பான வழிபாட்டு முறையாகும்!
திருப்பத்தூர்
திரிதியைத் திதியில், இத்தகைய தலங்களில் எத்தனை முறை வீழ்ந்து நமஸ்கரிக்க முடியுமோ, அத்தனை முறை தரையில் வீழ்ந்து நமஸ்கரித்தல் மிகவும் விசேஷமானது. எட்டுத் திக்குகளிலும் பலி பீடம் உள்ள தலங்கள், நீர்க் கோலம் இட்ட பிரகாரங்கள், நான்கு திசைகளிலும் தீர்த்தம் உள்ள பிரகாரம், ஓங்காரப் பிரகாரம் உள்ள ஆலயம், புதுக்கோட்டை, கீழாநெல்லிக் கோட்டை அருகே உள்ள நெடுங்குடி ஓங்கார பிரகாரம், கொன்றை தலமரமாக உள்ள (மதுரை - காரைக்குடி இடைப்பட்ட) திருப்பத்தூர் போன்றவை நமஸ்காரப் பிரதட்சிணத்திற்கு, அடிப் பிரதட்சிணத்திற்கு மிகவும் விசேஷமான தலங்களாகும். திபெத்தில் பனித் துறைக் களமாம் திருக்கயிலாய மலையின் 40 மைல் சுற்றளவையும் நமஸ்காரப் பிரதட்சிணமாகவே பக்திப் பூர்வமாக வழிபடும் லாமாக்களின் பக்தி சிரத்தை மிகவும் போற்றுதற்குரியது.
ஒவ்வொருவரும், ஒரு வாரத்தில் குறைந்தது 108 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும். கிரிவலத் தலஙகளில் சனி மூலையில் நமஸ்கரித்தலைத் தொடங்கி, கிரிவலப் பாதை முழுதும் 16 திக்குகளிலும் நமஸ்கரித்தலும் விசேஷமானதே.
திரிதியைத் திதியில் ஒரு புது எட்டு முழ வேட்டி அல்லது 4 முழ வேட்டி நிறைய தானியங்கள், பழங்களை வைத்து, இதனைச் சுமந்து ஆலயத்தை வலம் வந்து, வேட்டியைத் தானமாக அளித்தல் சிறப்பான வழிபாடு. தான் மிகவும் நம்பி வாழ்வோர் தன்னைக் கைவிடாதிருக்க மிகவும் உதவும் பூஜையிது!
திரிதியை மற்றும் அமாவாசைத் திதிகளில் நெடுங்குடித் தலத்தில் நமஸ்காரப் பிரதட்சிணம் மிகவும் விசேஷமான வழிபாடாகும். கருடாழ்வாரும், ஆஞ்சநேய மூர்த்தியும், ஸ்ரீமகாவிஷ்ணுவை சாஷ்டாங்கமாக நேரிடையாகவே தொழும் பேற்றைப் பெற்றவர்கள் ஆதலின், கருட மூர்த்தி, ஆஞ்சநேய மூர்த்தி, பித்ரு மூர்த்திகள், அக்ரூர மாமுனி ஆகிய நால்வரையும் நினைந்து நமஸ்காரம் செய்து, வெள்ளிக் கிழமை தோறும், குறைந்தது நான்கு பசுக்களை வலம் வந்து பசுவின் குளம்படியில் விழுந்து வணங்குதலால், பிறரின் தூண்டுதலால் தவறு செய்தவர்கள் தக்க பரிகாரம் பெற இயலும்.
இன்னிசை எழுப்புங்கள் |
சப்தமி திதியில் ஒலி சக்திகள் நற்பிரவாகம் கொள்வது போல, இன்னிசை சக்திகள் மிகும் நாட்களும் பல உண்டு. பஞ்சமி, உத்திரம், ஹஸ்தம், அமிர்த யோகம், சித்த யோகம், கௌலவ கரணம் போன்றவை இன்னிசைப் பிரவாக கால சக்திகளுடன் பரிணமிக்கின்றன.
இத்தகைய இன்னிசை சக்தி நாட்களில், ஸ்ரீஆஞ்சநேய மஹா பிரபு சென்னை அருகே மப்பேடு போன்ற இன்னிசை சக்திகள் நிறைந்த ஆலயங்களில் சூக்கும வடிவுகளில் பூஜித்து, உலகில் இசைப் பிரவாக சக்திகளை நிறைக்கின்றார்.
ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
துடையூர்
எனவே பஞ்சமி, மூல நட்சத்திர நாட்களில் மப்பேடு தலத்தில் உளமாறப் பாடுவது மிகவும் விசேஷமானதாகும். திருவையாறு ஆராதனை போல, ஆஞ்சநேயருக்கு உரிய, ஆவணி மாத மூலத் திருநாளானது, நவவியாகரண பண்டித உற்சவமாக மப்பேடு தலத்தில் மீண்டும் பிரகாசித்திட, இசைக் கலைஞர்கள் அரும்பாடுபட்டு உழைத்திட வேண்டும்.
அருணாசலக் கவிராயர், சத்குரு தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்று இன்னிசையால் முக்தி நிலை அடைந்தோர் பூவுலகிற்கு ஸ்தூல, தூல சரீரங்களில் வந்து பூஜிக்கும் இந்நாள், பக்தியுடன் இறைப் பாடல்களைப் பாடுவோரை, இசைக் கருவிகளில் வாசிப்பதை ஆசீர்வதிக்கும் திருநாளாகும். எனவே இத்தகைய மஹான்களின் பாடல்களை ஆலயங்களில் இசைத்தல், குடும்பத்தில் நல்ல சாந்தத்தைப் பெற்றுத் தர உதவுவதாகும்.
ஸ்ரீசரஸ்வதி தேவி பரிதிநியமம்
சங்கீத சக்திகள் நிறைந்த திரவியங்கள், பொருட்கள் நிறைய உண்டு. இவற்றை பயன்படுத்தி இசையைப் பற்றி ஒன்றும் அறியாத பாமரர்களும், இசையில் விளையும் பக்திக் கிரணங்களைப் பெறும்படி நற்பணிகளை ஆற்றிடுதல் வேண்டும்.
* வீணை ஏந்திய நிலையில் அருளும் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஆஞ்சநேயர் போன்ற இன்னிசைக் கோல மூர்த்திகளை தேன் அபிஷேகத்துடன் பூஜித்தல்
* பூக்களில் சண்பகப் பூ, நீலோத்பவம் சார்த்தியும்,
* உணவுத் திரவியங்களில் மோதகம், தேன், முந்திரி கலந்த கல்கண்டுப் பொங்கல், கத்தக்காம்பு ரசம், திராட்சை, கருவேப்பிலை, முந்திரி, வெல்லம் சிறிது கலந்த தயிர் சாதம், ஜாங்கிரி,
* ஆடைகளில் கிளிப் பச்சை நிற ஆடைகள்
- போன்றவற்றைத் தானமாக அளிக்கையில் பாடியும், வாசித்தும்,
சமைக்கையில் அவரவர் அறிந்த மொழிகளில் உள்ள இன்னிசைப் பாக்களைப் பாடியும், பாடியபடியே சமைத்தும்,
* ஏழை இசைக் கலைஞர்களுக்கு வயிறார உணவளித்தும், மனமார உதவிகளையும் நல்குவதுடன்,
* புல்லாங்குழல், கொட்டாங் குச்சி டமாரம் போன்றவற்றை விற்கும் ஏழை சிறு வியாபாரிகளுக்கும் உதவும் வண்ணம் நமக்குப் பயனாகுமா என்று எண்ணாது, சில கருவிகளை வாங்கிப் பலருக்கும் தானமளித்தல்,
போன்ற இசை சம்பந்தமான கைங்கர்யங்கள் மிகவும் விசேஷமான மனசாந்தியை அளிக்க வல்லவை.
குறிப்பாக, சர்க்கரை வியாதியால் அவதியுறுவோர்,
• தம்மால் உண்ண இயலாத இனிப்புகளை, அரிசி வகை உணவுகளைத் தானமாக அளித்தல் - சர்க்கரைப் பண்டங்களை நாடி ஏங்கும் மன, உடல் தவிப்புகளைத் தணித்திட உதவும். வியாதியின் கடுமையைத் தணிக்கவும் உதவும்.
* இத்தகைய இனிமையான நாளில், இசை மூலமாக தேவ இனிமையைப் பூவுலகில் விருத்தியாக்கும் நற்காரியங்களை ஆற்றுவீர்களாக!
* புகை பிடிக்கும் வழக்கம் உள்ளோர், இத்தகைய இன்னிசை நல்வரப் பஞ்சமித் திதித் தினங்களில் ஒரு விரதம் போல,
- சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றை முதலில் ஒரு நாள் முழுதேனும் தொடாமல்,
- அருணாசல கிரிவலம் போன்ற மலைத் தல கிரிவலம், ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிப் பிரதட்சிணம் ஆற்றுதலால், சிறிது சிறிதாக மனோ வைராக்யம் பெருகி வாழ்க்கையில் வீணாக ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த துர்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற உதவும்.
ரத்தக் காயம் ஏன் ? |
ரத்தம் என்பதாகிய உதிரபலத்தில் உள்ள பூர்வேதீய அணுக்கள்தாம் அந்தந்த குல (மஹரிஷிகளின்) வராம்சங்களைத் தாங்கி வருவதாகும். இதில், குலப் பாரம்பரியத்தில், சூரிய மூர்த்தி பிதாகாரகராக, ஜாதக ரீதியாகப் பொலிவதால், ஏழு தலைமுறைகளுக்கு ஒரு முறை, ஆதித்ய மார்கத் துறை, உதிர பலாம்ச ரீதியாக மாறுபடும். இதைத்தாம் குலசம்பத் என வகைப்படுத்துகின்றனர். இதன் ஒரு வகைதான் தற்போதைய விஞ்ஞானத்தின் அ, ஆ, எனப்படுவதான ரத்த குரூப் வகைகளாகும்.
ஏழு தலைமுறைகளுக்கு ஒரு முறை உதிர பலாம்சம் மாற்றம் பெறும். எனவே ஒவ்வொரு சப்தமி நாளும் ரத்த சுத்தி நாளாகப் போற்றப் பெறுகின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு மஹரிஷியின் வழிவந்தவரே! எனவே, ஜாதி, மத, இன, நிற, குலம் போன்ற கலியுலகில் காணப் பெறும் ஏழு வகை வித்யாசங்களைக் கடந்ததே உண்மையான அன்பாகிய பக்தியாகும். இந்நிலையைத்தாம் சித்தர்களும், மஹரிஷிகளும் நல்வரமாக அளித்திட விழைகின்றனர்.
ரத்தக் காயம் ஏற்பட்டால் குலதெய்வ பூஜை பாக்கியையும், தந்தை வகைப் பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றும் பொருள் தரும். எனவே ரத்த காயம் ஏற்பட்ட நாளில் இருந்து ஒரு வாரமேனும் குல தெய்வ பூஜை ஆற்றுதல், சிறிய அளவு அன்னதானத்துடனாவது, தினசரித் தர்ப்பணம் அளித்தல் நல்லது. உதிர சகுன சாஸ்திரம் என்ற முறையும் உண்டு.
சப்தமியும் செவ்வாயும் கூடும் நாளில் ருத்ராட்சம், ஸ்படிகம், கங்கண் போன்ற ஏழு வகை ஆன்மீக சாதனங்களை அணிந்து முதலில் சூரிய மூர்த்தி வணங்கி, சூரிய காயத்ரீ மந்திரங்களை ஓதியவாறு, ஆலயத்தை ஏழு முறை வலம் வருதலும் - சூரிய ஒளிச் சக்தியால் விருத்தியாகும் ஏழு வகைக் காய்கறிகள் கலந்த உணவைப் படைத்துத் தானமளித்தலும், முன்னோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவுறுத்தி ஆக்கப் பூர்வமாக வாழ்ந்திட உதவும்.
பட்டுப் போல் மேனி பரிசுத்தமாகும் |
அட்டகக் கலம் என்பது மானுடப் பெட்டகத்தைக் குறிப்பது. மனம், உடல், உள்ளம் இவை மூன்றும் தினமும் சுத்திகரிக்கப்பட வேண்டும். இவை எல்லாம் தினமுமே மாசடைகின்றன, அழுக்காகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்தானே! மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்பது தினமுமே ஆற்ற வேண்டிய யோகப் பூர்வமான பயிற்சி ஆகும். மனமென்பது உள்அகத்தின் வாசல்!
அகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அகமாகிய உள்ளத்தின் எட்டு வாயில்களையும் தினமும் பூஜை, தியானம், யோகம், தான, தர்மங்களால் நன்கு பராமரித்து வர வேண்டும். தான, தர்மங்கள்தாம் கலியுகத்தில் மிக எளிதில் உள்ளத்தைச் சுத்திகரிப்பவை!
ஒரே நாளில் மனம் சுத்தமாகி விடாது. மன சுத்திக்கு அகக்கலம்பத் திதியாகிய அட்டமித் திதி நாள் பூஜை நன்கு உதவுகின்றது. அஷ்டமியன்று துவார பாலகர்கள் முன்னால் நின்று எண் திக்கும் சுத்தி நல்வரமளிக்க வேண்டிடுக! துவாரபாலக மூர்த்திகளே நம் பிரார்த்தனைகளைச் சுத்திகரித்து மூலவரிடம் சேர்க்கின்றனர்.
ஆயுள் சக்திகளை நன்கு விருத்தி செய்யவும் அஷ்டமித் திதி பூஜைகள் உதவுகின்றன. அஷ்டமியில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணனைப் பூஜித்தே சனீஸ்வரர் ஆயுள்பல சக்திகளைப் பூண்டு ஆயுள்காரகராக அருள்கின்றார். அஷ்டமித் திதியில் கிழக்கு நோக்கி அருளும் சனீஸ்வரர் வழிபாடு அபூர்வமான பலன்களைத் தருவதாகும்.
அஷ்டமியுடன் சேர்ந்து வரும் சுவாதி நட்சத்திரம் பரிசுத்தத்தைத் தர வல்ல அற்புதமான சுப முகூர்த்த நட்சத்திரங்களுள் ஒன்றாகும்.
ஸ்ரீபார்த்தசாரதி ஆலயம்
திருவல்லிக்கேணி சென்னை
சுவாதியம்பல ஆமலபோதம்
நிர்மல சுத்தி நிறைவுறலாகும்
அட்டமிச் சுவாதியம் ஆவது ஆகில்
பட்டென ஓதும் அகமதியகமே!
என்பதாக சுவாதியும், அஷ்டமியும் சேர்ந்து வரும் நாளில் பட்டுப் போல அகமாகிய உள்ளம் பரிசுத்தமாகப் பிரகாசிக்கும் பூஜைகளுக்கு ஏற்ற நாளாகும்.
எட்டுதல் எட்டா எட்டும் எட்டகம் - என்று நம் உடலைச் சித்தர்கள் குறிக்கின்றனர். இதில் எண்ணாயிரத்திற்கும் மேலான உளப்பூர்வமான, ஞானப் பூர்வமான அர்த்தங்கள் உள்ளன. எட்டுதல் எனில் உள்ளத்தைத் தொடும் யோக சக்திகள், தொடும் எனில் ஞானப் பூர்வமாக அறிதல் எனப் பொருள்! எட்டுக்குடி வேலவனாகிய முருகப் பெருமான் தன் எட்டடி வேலால் எட்டகத்தில் எழுதி அருணகிரிநாதருக்கு சும்மா இரு சொல்லற! என உரைத்தான் அன்றோ! அட்டகமத்தில் எட்டகம் என்பது நாக்கையும் நாக்குடம் எனப்படும் இருதயத்தையும் குறிப்பதாகும்.
எட்டகம் என்பது நாம் வாழும் உடல் பெட்டகம். கருவில் வளரும் உயிர் அஷ்டமித் திதி தோறும் எட்டு விதமான வளர்ச்சிகளைப் பெறும். இது, அட்டகத்தின் அஷ்டாட்சச் சுடர்கள் என்பதாக இருதயத்துள் உறையும் ஆத்மச் சுடரின் எண்திசைச் சுடர்களைக் குறிக்கின்றது.
ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீபைரவாஷ்டகம், தட்சிணா மூர்த்தி அஷ்டகம், சிவாஷ்டகம் என்ற வகையில் எட்டு, எட்டுத் துதிகளாக உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இறைத் துதிகள் உண்டு. இவற்றை அஷ்டமித் திதி தோறும் ஓதி வருதல் மிகவும் விசேஷமானது. இவை யாவும் அஷ்டமித் துதியில் இயற்றப் பெற்றவை! எண்கண், எட்டுக்குடி போன்ற எண் எட்டு சம்பந்தப்பட்ட தலங்கள் எட்டாத் துறை ஆன்ம சக்திகளை, ஆத்மச் சுடர்ப் பொலிவை உணர்த்துபவை ஆகும்.
அஷ்டமி கூடும் சுவாதியில் எண் எட்டின் சக்திகள் பொலியும் ஓம் நமோ நாராயணாய அட்ட மந்திரங்களை ஓதி, பெருமாள் ஆலயத்தில் அஷ்டாங்க நமஸ்காரமாகிய எட்டுப் பகுதிகள் தரையில் தோயுமாறு வீழ்ந்து வணங்குதல்,
எட்டு முழத்திற்குப் புஷ்பங்கள் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி வழிபடுதல், எட்டு உழக்கு நவதான்யத்தை, எட்டு உழக்குக் கோலமாவில் கலந்து ஆலயப் பிரகாரங்களில் கோலமிடுதல்,
எட்டு ஆழாக்குப் பாலபிஷேகம்,
எட்டு உழக்கு சாதப் படையல்
போன்று எட்டின் மடங்காய் வழிபடுதலால், மனவேறுபாடுகளால் தம்பதியர் மற்றும் பெற்றோர் - பிள்ளைகள் மனந் திறந்து பேசாதிருக்கும் நிலை மாறி அகமகிழப் பேசும் நிலை வந்திடும். அஷ்டமியில் விரதம் இருந்து, மேற்கண்ட பூஜைகளை நிகழ்த்தி எண்கண், எட்டுக்குடி முருகன் தலம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் அமர்ந்த கோலத் தலங்களில் வழிபட்டு வர வேண்டும்.
ஓம் குருவே சரணம்