உள்ளம் திருக்கோயில், ஊணுடம்பே ஆலயம் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

பழையூர் சிவன் திருத்தல மகிமை

திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம். பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.
முன்பு ஒரு காலத்தில் தர்மம் செழித்தோங்கிய விதர்ப்ப நாட்டின் இளவரசி லோபாமுத்திரை. லோபாமுத்திரை என்றால் அன்பினாலும் பண்பினாலும் பேரழகாலும் மற்றவர்களைக் கவர்பவள் என்பது பொருள். இந்த இளவரசியின் கரம் பற்ற எத்தனையோ இளவரசர்கள் தயாராக இருந்தனர். ஆனால், இளவரசியின் பிரார்த்தனையோ வேறு விதமாக இருந்த்து.
தூய்மையிலும் தூய்மையான பக்தன் ஒருவனையே தான் மணக்க வேண்டும் என்பதே லோபாமுத்திரையின் விருப்பம். தன்னுடைய இந்த எண்ணத்தை தன் தாயிடமும் சொல்லாம்ல் மனதிற்குள் போற்றிய லோபாமுத்திரை தனது இஷ்ட தெய்வமான உஜ்ஜயினி காளி தேவியிடம் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுமாறு பிரார்த்தனை செய்து வந்தாள்.
இது ஒரு புறம் இருக்க, தவ சீலராய் பக்தியின் உச்சத்தில் பேரொளிப் பிழம்பாய் பிரகாசித்த அகத்திய பெருமான் தன்னுடைய நித்ய சேவையாக பிதுர் லோகத்தை அடைந்தபோது அங்கு தன்னுடைய மூதாதையர்கள் ஒரு படுகுழியில் தலை கீழாக தொங்கும் அவலை நிலையைக் கண்டு திடுக்கிட்டார். தன்னுடைய மூதாதையர்களுக்கா இந்த நிலை என்று நினைத்து அவர் உள்ளம் பதறியது.
அவர்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று வினவியபோது அவர்கள் அக்த்தியர் திருமணம் ஆகாமல் இருப்பதால்தான் தாங்கள் அடுத்த நிலையை முடியவில்லை. எனவே அகத்தியர் திருமணம் செய்து கொண்டால்தான் தங்களுடைய இந்த நிலையிலிருந்து நிவாரணம், விமோசனம் பெற முடியும் என்று தெரிவிக்கவே, மணமகனும் மணமகளைத் தேடிப் புறப்பட்டார்.

மனதிற்குகந்த மணமகள் எங்கே ?

அனைத்தும் அறிந்தவர் அல்லவா அகத்திய மாமுனி ? தன்னுடைய இதய ராணி இருக்கும் இடமான விதர்ப்ப நாட்டை அடைந்தார். அகத்தியர் வருகிறார் என்று செய்தி கிடைத்தவுடன் அக்த்திய பெருமானை நாட்டின் எல்லையிலேயே எதிர் கொண்டழைத்து அவர் பாதங்களைத் தூய நீரால் அலம்பி அபிஷேக ஆராதனைகள் செய்து உரிய மரியாதைகளுடன் அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தான் விதர்ப்ப நாட்டு மன்ன்ன் தர்மபாலன்.
அதிதி வரவேற்பு அனைத்தையும் முறையாக நிறைவேற்றிய பின் அரசன், ”முனிசிரேஷ்டரே, தங்களுடைய வருகையால் என்னுடைய நாடும், மக்களும், அனைவரும் புனிதம் அடைந்தோம். இந்தச் சிறிவயனால் நிறைவேற்றிய பணி ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்,” என்று பணிவுடன் கூறினான்.

ஸ்ரீஅகத்தீஸ்வரன்
பழையூர், பெருகமணி

அகத்தியர், ”தர்ம வேந்தே, உன்னுடைய அன்பு மகளை என்னுடைய தர்ம பத்தினியாக ஏற்றுக் கொள்ளவே வந்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.
அரசன் பெருமகிழ்ச்சி அடைந்தான். விரைந்து லோபாமுத்திரையை அழைத்து வரச் செய்தான. லோபாமுத்திரை அகத்திய முனியின் பாதத்தில் தொழுதெழுநதாள்.
மன்னன் மகரிஷியின் விருப்பத்தை மகளிடம் தெரிவித்தான். லோபாமுத்திரை அப்போது தன்னுடய மன ஏக்கத்தை தெரிவிக்கவே, அவன் அதிர்ந்து போனான். இப்போது அகத்தியரிடம் இது பற்றி தெரிவித்து அவர் கோபம் கொண்டு விட்டால் தன்னுடைய நாடே அழிந்து விடும், மக்களும் மாய்ந்து போய் விடுவார்கள், என்று அஞ்சி என்ன செய்வதென்று தெரியாது திகைத்தான்.
சூழ்நிலையை உணர்ந்து கொண்ட தவசீலர், ”மன்னா வருந்தாதே. அனைத்தும் எமபெருமான் விருப்பமே,” என்று கூறி லோபாமுத்திரையை அழைத்து, ”உத்தமியே, தூய்மையிலும் தூய்மையான மணமகனையே அடைய வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் புனிதமானதே.”
”இதற்காக நீ ஆற்ற வேண்டிய காரியங்கள் உண்டு. காசித் திருத்தலத்தில் உள்ள 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி விஸ்வநாதரையும் விசாலாட்சி தேவியையும் தரிசித்த பின்னர் உன்னுடைய இஷ்ட தெய்வமான உஜ்ஜயினி காளியிடம் உன்னுடைய பிரார்த்தனையை தெரிவித்தால் அன்னை அதை நிறைவேற்றுவாள்.”
”தூய்மையிலும் தூய்மையான மணாளனை நீ பெற வேண்டுமானால் புனிதத்திலும் புனிதமான திருத்தலத்தில் உறையும் இறைவனை நீ பூஜிக்க வேண்டும். அத்தகைய திருத்தலத்திற்கு வழிகாட்டுபவளே உஜ்ஜயினி காளி,” என்று கூறிய அக்த்திய பிரான் மன்ன்னிடம், ”தர்மபாலனே, எதற்கும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் மங்களமாகவே நிறைவேறும். உன்னுடைய நாட்டு மக்களும் நலமடைவர்,” என்று ஆசி அளித்து அவர்களிடமிருந்து விடை பெற்றார் அகத்திய மாமுனி.
தம்பதியர் திருமணத்திற்கு முன்போ திருமணம் நிறைவேறிய பின்னரோ காசியில் உள்ள 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி விஸ்வநாதரையும், விசாலாட்சி தேவியையும், அன்னபூரணி அம்மைனையும், சோளி அம்மனையும், கால பைரவரையும் அவசியம் வழிபட்டாக வேண்டும். இதுவே திருமண வைபவத்தின்போது நடைபெறும் காசி யாத்திரை என்ற சடங்கின் உட்கருத்து, உண்மைப் பொருள்.
ஒரு நல்ல சுப முகூர்த்த நாளில் தாய், தந்தையரிடம் விடைபெற்றுக் கொண்டு தோழியர் குழாம் சூழ படை பரிவாரங்களுடன் தன்னுடைய புனித யாத்திரையைத் தொடர்ந்தாள் லோபாமுத்திரை.
அகத்தியர் அருளியவாறே 64 தீர்த்த கட்டங்களிலும் நீராடி சுதர்மன் என்ற பிரம்ம்ம மூர்த்தி 1000 அஸ்வமேத யாகங்கள் நிறைவேற்றிய கங்கை கட்டத்திலும் சிறப்பாக பூஜைகளையும் தான தர்மங்களையும் நிறைவேற்றி இறை மூர்த்திகளைத் தொழுதாள்.
பின்னர் உஜ்ஜயினி சென்றடைந்து விக்ரமாதித்தன் வழிபட்ட மாகாளியை வணங்கிப் பிரார்த்தித்தாள். அப்போது அசரீரி எழுந்த்து.
அகத்தியன் வழிகாட்டுவான்
அகத்தீசன் அருள் பெறவே
அகத்தில் அகமகிழ்ந்த
அகத்தீசன் கரம் பற்றுவான்
லோபாமுத்திரை திகைத்தாள். தென் திசை நோக்கினாள். அப்போது வானில் அகத்திய நட்சத்திரம் பிரகாசித்தது. அது தென் திசை நோக்கி தன்னை வரவேற்பது போல் தோன்றியது.

மனம் மிக மகிழ்ந்து அன்னை பரிவாரங்களுடன் அகத்திய நட்சத்திரத்தை தரிசித்து அது காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.
வழியில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டும், தீர்த்தங்களில் நீராடி பூஜைகளை இயற்றியும் அகத்திய நட்சத்திரம் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்தாள் லோபாமுத்திரை.
இவ்வாறு வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த அகத்திய நட்சத்திரம் திடீரென பூமியில் ஓரிடத்தில் இறங்கி மறைந்து விட்டது. அவ்வாறு அகத்திய நட்சத்திரம் பூமியில் இறங்கிய இடமே தற்போதுள்ள பழையூர் திருத்தலம் ஆகும். அந்த திருக்கோயிலிலேயே தன்னுடைய பிரார்த்தனை நிறைவேறும், தான் தொடர்ந்து தீர்த்த யாத்திரை செய்ய வேண்டியதில்லை என்று உள்மனதில் உணர்ந்த லோபாமுத்திரை அத்திருத்தலத்திலேயே தங்கி அத்தல ஸ்ரீஅகத்தீஸ்வரனை வழிபட ஆரம்பித்தாள்.

செங்கழுநீர் சந்தனம்

செங்கழுநீர் சந்தனம் என்று சந்தனத்தில் ஒரு வகையான சந்தனம் உண்டு. பொதுவாக சந்தன மரங்கள் 60 ஆண்டுகள் வளர்ந்த பின்னரே அதன் கட்டைகளை இறைவன் பூஜைக்காக சந்தனம் அரைத்து சார்த்தவும், ஹோமம் போன்ற் இறைப் பணிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பது நியதி.
செங்கழுநீர் சந்தனம் வகையைச் சார்ந்த சந்தன மரங்களை 300 ஆண்டுகளுக்குப் பின்னரே இறை காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வகை சந்தன மரங்களை இறை மூர்த்திகளுக்கு மட்டுமே, தெய்வீக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய நலத்திற்காக பயன்படுத்தினால் பலத்த சாபங்கள் ஏற்படும்.
இந்த செங்கழுநீர் சந்தனக் கட்டைகளை அரைத்து அந்த சந்தனக் குழம்பைத் தொட்டு அரசங் குச்சியால் காசி வில்வ இலைகளின் மேல்
ஓம் ஸ்ரீஅகத்தீசா
என்று எழுதி அந்த வில்வ இலைகளால் ஸ்ரீஅகத்தீச பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தாள் லோபாமுத்திரை.

லோபாமுத்திரை இயற்றிய
காசி வில்வ வழிபாடு

பொதுவாக வில்வ இலைகள் மூன்று இலைகளாக சேர்ந்து இருக்கும். இவற்றை திரிதள வில்வம் என்பார்கள். இந்த மூன்று இலைகளைப் பிரிக்காமல் மூன்று மூன்றாக இறைவனை அர்ச்சிப்பதே முறை.
மூன்று இலைகளுக்கு மேல் கொத்தாக ஐந்து, ஏழு என்று எண்ணிக்கைகளுடனும் அதற்கு மேலும் எண்ணிக்கையில் உள்ள வில்வ இலைகளும் உண்டு. இவற்றை மகா வில்வம் என்பார்கள். இவ்வாறு சென்னை கோவூர் சிவாலயத்தில் 16 இலைகளுடன் கூடிய மகா வில்வம் உண்டு. இதன் நோய் நிவாரண சக்திகள் அபாரம். இந்த வில்வ இலைகளின் தரிசனமே எத்தனையோ கொடிய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றால் அதைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதால் ஏற்படும் பலன்களை என்னென்பது ?
அது போல ஏழு வில்வ தளங்களுடன் துலங்கும வில்வத்திற்கு காசி வில்வம் என்று பெயர். இதை சௌபாக்கிய வில்வம் என்றும் சொல்வதுண்டு. சகல சௌபாக்கிய செல்வங்களையும் கொடுக்க்க் கூடியதே காசி வில்வம்.
பொதுவாக காசி என்றால் காசு என்பது மருவி வந்ததாக பொருள் கொண்டாலும், காசி என்பது சௌபாக்கிய செல்வங்களையே குறிக்கும். அதனால்தான் காசி விஸ்வநாதர் சகல சௌபாக்கியங்களையும் நல்கும் பெருமானாக வணங்கப்படுகிறார்.
”வாசி தீரவே காசி நல்குவீர் … ” என்று திருஞானசம்பந்தப் பெருமான் இறைவனிடம் மக்களின் துயர் தீர வேண்டியபோது வெறும் பணம், காசு வேண்டும் என்றா வேண்டியிருப்பார் ? சற்றே சிந்தியுங்கள்.

நீங்களும் மகான் ஆகலாம்

இங்கு ஒரு சுவையான ஆன்மீக விளக்கத்தை அடியார்கள் அறிந்து கொள்தல் நலம். மகான்கள் வெற்று உறை (empty capsule) தத்துவம் என்ற ஒரு ஆன்மீக சேவையை சதா சர்வ காலமும் ஆற்றிக் கொண்டிருப்பார்கள்.
சென்னை, திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பல மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவச வைத்திய சேவைகளை ஆற்றினார்கள். அப்போது வில்வ தளங்களை இறைவனுக்கு அர்ச்சித்து அந்த வில்வ பிரசாத இலைகளைப் பொடியாக்கி, அந்தப் பொடியை மருந்து வைக்கும் வெற்று உறைகளுக்குள் நிரப்பி மற்ற மருந்துகளுடன் சேர்த்து அளித்து வந்தார்கள்.
மேலும் மாத்திரை, மருந்துகளைச் சுற்றி அமர்ந்து கொண்டு அடியார்கள் தேவார பாடல்களையும், காயத்ரீ மந்திரங்களையும் ஓதுவார்கள். ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு ஔஷத தேவதை என்ற நோய் நிவாரண தேவதை உண்டு. அந்த தேவதைகளையும் அந்தந்த தலத்தில் வசிக்கும் மக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்திப்பார்கள்.
இதன் பயனாக அந்த திருத்தலத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு அற்புதமாக நோயிலிருந்து விடுதலை பெற்றார்கள்.
எனவே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளித்தது சாதராண அன்னதானம் அல்ல, அது அண்ணாமலை ஈசனின் அருட் பிரசாதம், கைலாய பரம்பரை சித்தர்களின் தவப் பலன், சுவாமிகள் பாடுபட்ட சேர்த்த வைத்த புண்ணியத் திரட்சி.
ஒருவருக்கு சாப்பாடு போட்டால் அது சோம்பேறித் தனத்தை வளர்க்கும் என்பது ஒரு சிலர் வாதம். இது ஓரளவு உண்மையே. ஆனால், சாப்பாட்டை இறைப் பிரசாதமாக மாற்றினால், புண்ணியத்தை விநியோகிக்கும் சாதனமாகக் கொண்டால் அது மக்களின் எவ்வளவோ வேதனைகளைத் தணிக்கும்.
இறை மார்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் வெறுமனே இறை மூர்த்திகளை தரிசித்து வழிபடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இத்தகைய வெற்று உறைகளை பிரசாத உறைகளாக மாற்றும் வித்தையைக் கற்றுக் கொண்டால் அவர்களும் மகான்கள் ஆகி விடலாமே ?
இதனால் என்ன பிரயோஜனம் ?
ஒரு விதத்தில் தேவார திருவாசக பாடல்களும் வெற்று உறைகளே. இந்த வெற்று உறைகளுக்குள் உள்ள ”மருந்தை” (பீஜாட்சர ஒலிகள், ஒளி கீற்றுகள்) என்று ஒருவரால் ”பார்க்க” முடிகிறதோ அன்றுதான் அவர் ஆன்மீகத்தில் எல்கேஜி என்னும் முதல் படியை எடுத்து வைக்கத் தகுதி பெறுகிறார்.
லோபாமுத்திரை பழையூர் சிவத்தலத்திற்கு வந்தபோது 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக விளங்கியதாம் அத்திருத்தலம். இப்போது ஒரே ஒரு சன்னதியுடன் மட்டுமே அந்த அற்புத தலம் பிரகாசிப்பதும் எம்பெருமான் லீலையே.

அகத்திய ஜோதி அற்புதம்

செங்கழுநீர் சந்தனத்தின் விசேஷத்தன்மை என்னவென்றால் அதை நீர் விட்டு அரைத்தால் அது ரோஸ் வண்ணத்தில் பிரகாசிக்கும். இந்த வண்ணத்தை அகத்திய ஜோதி என்று சித்தர்கள் அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் வானில் சூரியன் உதயமாகும்போது சூரிய உதயத்திற்கு முன் வானில் பலவித வண்ணங்கள் மாறி மாறிப் பிரகாசிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவ்வாறு சூரிய உதயத்திற்கு முன் ஏழு நிமிடங்களுக்கு முன்னால் வானில் எழும் பிரகாசத்தையே அகத்திய ஜோதி என்று அழைக்கிறோம்.
மனதையும் உள்ளத்தையும் புனிதப்படுத்தக் கூடியதே இந்த அகத்திய ஜோதியாகும். முழுக்க முழுக்க இறை சிந்தனையிலேயே லயித்திருப்பவர்களுக்கே இந்த அகத்திய ஜோதியைத் தரிசனம் செய்வது சாத்தியம் என்றாலும் சாதாரண அடியார்களும் சூரியன் உதயத்திற்கு முன்னால் ஏழு நிமிட நேரத்தில் ஆதித்ய ஹ்ருதயம், சூரிய காயத்ரீ மந்திரங்களை ஓதுவதும் அகத்திய ஜோதி தரிசனப் பலன்களை நல்கும்.

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்
பழையூர் சிவத்தலம், பெருகமணி

அப்போது வானத்தைப் பார்க்க வேண்டியதில்லை. மந்திரங்களை ஓதிய பின்னர் கிழக்கு நோக்கி 12 முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்குதல் நலம். இதனால் கண் நோய்கள் மறையும். குரு நம்பிக்கை வளரும். தோல் நோய்கள் குணமாகும்.
அகத்திய ஜோதி தோன்றிய வரலாறும் சுவையானதே.
தூய்மையிலும் தூய்மையான கணவனை அடைய வேணடும் என்று லோபாமுத்திரை விரும்பியதைப் போல தன்னை ஒக்கும் தனயனை அடைய விரும்பினார் அகத்திய பெருமான். அதாவது தன்னைப் போல் இறைவனைத் தவிர வேறு எதையும் நினையாத இறை பக்தி உடைய மகனைப் பெற விரும்பினார். அந்த இறைத் திருப்பணியில் உதவக் கூடிய மங்கையே தன் துணைவியாக வர வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

அதற்காக எம்பெருமானை நாடிய போது சுவாமி, ”செங்கழுநீர் மணத் தூய்மை உள கழுநீர் மலம் மாற்றும்,” என்று அருளினார். அகத்தியர் சற்றே திகைத்தார். ஆழ்ந்த தியானத்திற்குப் பின் செங்கழுநீர் சந்தன மகிமைகள் அவருக்குப் புலனாயின.
எந்த மூலிகையாக இருந்தாலும் அகத்தியரைப் பார்த்தால் வணங்கி தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் என்றால் மூலிகை இனத்திற்கும், தாவரங்களுக்கும் எத்தனை கோடி யுக தவப் பலன்கைளை அம்மகரிஷி அளித்திருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.
மனத் தூய்மையையும் உள்ளத் தூய்மையையும் மக்களுக்கு அளிப்பது செங்கழுநீர் சந்தன மரம். அந்த மரத்தை பிரபஞ்சமெங்கும் விருத்தி செய்து புனிதமான தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவதை தனது கடமையாக இறைவன் உணர்த்துகிறார் என்று தெளிந்த அகத்திய முனி இந்த பாரத்த்தில் மட்டுமல்லாது அனைத்து புனிதமான இடங்களிலும் செங்கழுநீர் சந்தன மரத்தை வளர்த்து அற்புத ஆன்மீகப் பணியை நிறைவேற்றினார் அகத்திய பிரான்.
இறைவன் அகத்திய மகரிஷியின் இப்புனித சேவையை மெச்சி அகத்திய ஜோதி என்ற ஜோதி சுடரை அவர் திருமேனியில் அனுகிரகமாகப் பொழிந்தான். அது நாள் முதல் அகத்திய முனியின் திருமேனி அகத்திய ஜோதி சுடராய் நமக்குத் தெரிந்த ரோஸ் வண்ணத்தில் பொலிந்தது.
கோவணாண்டிப் பெரியவர் ஒரே ஒரு முறை அகத்திய முனியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதாக சிறுவன் வெங்கடராமனிடம் தெரிவித்தார்.
அப்போது அகத்தியரின் மேனி அழகைப் பற்றி விவரித்த பெரியவர்,
”டேய் அது ரோஸ்டா, ரோஸ்னா ரோஸ், ஒரே ரோஸ் …. ” என்று மட்டும்தான் அவரால் விவரிக்க முடிந்ததாம்.
இந்த அகத்திய ஜோதி வண்ணத்தைக் கொடுக்கக் கூடிய செங்கழுநீர் சந்தன மரமே பழையூர் சிவாலயத்தின் தலவிருட்சமாகும். ஆனால், தறபோது அது எங்கோ மறைந்து விட்டது காலத்தின் கோலமே.
ஒரு புறம் இறைவன் திருவிளையாடல் செய்து மறைத்து விட்டாலும் மறு புறம் அந்த செங்கழுநீர் சந்தன மரத்தின் சக்திகளை தன்னை நம்பும் இறை அடியவர்களுக்கு அளித்துக் கொண்டுதான் இருக்கிறான். அது எப்படி ?
தற்போது பழையூர் சிவாலயத்தில் வில்வ மரம் ஒன்று நிலவுகிறது. பொதுவாக, கோயில்களில் பூஜைகள் நிறைவேறி நடை சார்த்தப்பட்ட பின் மூல மூர்த்தியைத் தரிசிக்க முடியாது அல்லவா ? அது போன்ற தருணங்களில் கொடி மரம், தல விருட்சம், கோபுர கலசங்கள், தீர்த்தங்கள் போன்றவைகளைத் தரிசித்தால் கோயில் மூலவரைத் தரிசனம் செய்த பலன்களைத் தருகின்றன.
அதனால், கும்பலாக இருக்கும்போது எதற்காக சிரம்ப்பட வேண்டும் கோயில் கோபுரத்தை தரிசித்தால் போதும், கொடி மரத்தை தரிசனம் செய்தால் போதும் என்று பொருள் கொள்ளக் கூடாது. மூலவரைத் தரிசனம் செய்ய முடியாத போதே மற்ற தரிசன முறைகள் பூரணப் பலனைத் தரும் என்பதை உணரவும்.

பாப நாசினி வில்வ மகிமை

எந்த திருத்தலத்தில் எந்த இறை சக்தியும் மறைவது கிடையாது. உதாரணமாக, சிவத் தலத்தில் கோஷ்டத்தில் சில இடங்களில் நர்த்தன கணபதியின் உருவங்களைக் காண முடியாது. அந்நிலையிலும் அத்தலத்தில் நர்த்தன மூர்த்தியின் அனுகிரக சக்தி நிச்சயமாக இருக்கும்.
அது போல தல விருட்சங்கள் இல்லா விட்டாலும் அத்தகைய திருத்தலங்களுக்கு உரித்தான தல விருட்ச சக்திகளை அத்தலத்தில் விளங்கும் மற்ற தெய்வீக விருட்சங்கள் பெற்று மக்களுக்கு அதை அனுகிரக சக்திகளாக அளிக்கும். பெரும்பாலும் வில்வம், ஆல், அரசு, வன்னி, வேம்பு போன்ற மரங்கள் இத்தகைய அருட் சக்தியுடன் விளங்கும். இத்தகைய தல விருட்சங்களையே உபய தல விருட்சங்கள் என்கிறோம்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடம் பாப, குரூர கிரகங்களின் யோகம், சம்பந்தம் இவற்றைப் பெற்றால் அந்த ஜாதகர் உபய களத்தர தோஷங்களால் பாதிப்படைவார். அத்தகையோர் திருஅண்ணாமலையில் சிவசக்தி ஐக்ய தரிசனத்திற்கும் குபேர லிங்க தரிசனப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ள உபய தேவி தரிசனத்தைப் பெற்று மங்களப் பொருட்களை தானமாக அளித்தலால் உபய களத்திர தோஷங்களிலிருந்து நிவாரணம் பெற ஏதுவாகும்.
பழையூர் சிவாலயத்தில் அமைந்துள்ள வில்வ மரத்திற்கு மற்றொரு தனிச் சிறப்பும் உண்டு. இவ்வாலயத்தில் மூலவருக்கு விமானம் கிடையாது. இவ்வாறு விமானம் இல்லாத கோயில்களின் மூலவரின் விமான தெய்வீக சக்திகளையும் அத்தல வில்வம் ஏற்றுப் பொலிவது ஆகம இரகசியம்.
கோயில் தரிசனம் கோடி பாப நாசனம் என்று கூறுகிறோம் அல்லவா ? இவ்வாறு ராஜ கோபுரமோ, மூலவரின் விமான கோபுரங்களோ இல்லாத தலங்களில் உள்ள வில்வ மரங்கள் கோபுர கலசங்களின் பாப விநாசன சக்திகளுடன் திகழ்வதால் இவை பாப நாசன தல விருட்சங்கள் என்ற சிறப்பிடைத்தைப் பெறுகின்றன.

பாப நாசினி வில்வம், பழையூர்

இத்தகைய பாப நாசன தலவிருட்சங்கள் அசாத்திய அனுகிரக சக்திகள் உடையவை. உதாரணமாக, ஸ்ரீரங்கம் ரெங்கநாத ஆலய தல விருட்சமான புன்னை மரம் சில காலங்களில் மறைந்திருந்தது. அதனால் மூலவரின் பிரகாரத்திலேயே அமைந்துள்ள வில்வ மரம் இத்தகைய அசாத்திய அனுகிரக சக்திகளைப் பெற்றுத் துலங்குகிறது.
மேலும் ராஜகோபுரமும் நீண்ட காலம்க எழாமல் சூட்சும்மாகவே விளங்கியதால் இதன் பாப நாசன சக்திகளையும் இத்தல வில்வ மரமே ஏற்றுப் பிரகாசித்தது.
ஒரு முறை ஒரு அடியார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம், ”வாத்யாரே, நல்ல காரியங்களை, தான தர்மங்களை செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் காசு இல்லையே என்ன செய்வது ?” என்று வினவினார்.
அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, ”சார், உண்மையில் மனம் இருந்தால் எந்த நல்ல காரியத்தை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதற்கு பணம் தேவையே இல்லை. உதாரணமாக, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கட்ட துணை புரிந்த ஜீயர் நாலு முழ வேட்டி கட்டிய ஒரு சாதாரண சன்னியாசி. எதை வைத்துக் கொண்டு அவர் இந்த மாபெரும் காரியத்தைச் சாதித்தார் ? ரெங்கநாதர் மீதுள்ள நம்பிக்கை.”
”அவர் தினமும் ரெங்கநாதரை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அத்திருத்தல வில்வ மரத்திடம்தான் உளமார வேண்டிக் கொண்டார். அதன் பயன் மல்லாண்ட தின்தோள் மணிவண்ணனுக்கு வானுயரக் கோபுரம் எழுந்தது. அடியேனிடம் கூட சொல்லாமல் எத்தனையோ அடியார்கள் தங்கள் நகை, நட்டுகளை விற்று அந்த தெய்வீக திருப்பணிக்கு காணிக்கை அளித்தார்கள்,” என்று இறை நம்பிக்கையின் மகத்துவத்தை விளக்கினார்கள்.
இவ்வாறு அசாத்தியமான காரியங்களை நிறைவேற்ற பக்தர்களுக்கு உறுதுணையாக இருப்பவையே பாப நாசினி வில்வ மரங்கள்.
சில குடும்பங்களில் அண்ணனோ, தம்பியோ, அக்கா, தங்கை, மாமா, அத்தை என ஏதோ ஒருவர் அந்த குடும்ப்ப் பொறுப்பை தலையில் சுமந்து நிர்வகித்து வருவார்கள். அவர்கள் எதிர்பாராத விதமாக இறந்து போனாலோ அல்லது செயலற்றுப் போனாலோ அந்த குடும்பம் நிர்கதியாய் நடுரோட்டிற்கு வந்து விடும். வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலும் இத்தகைய நிலைகள் ஏற்படும்.
இவ்வாறு தலைமை பொறுப்பில் உள்ள ஒரே தலைவனை இழந்து குடும்பம் தவிக்கும் போது இத்தகைய பாப நாசினி வில்வ மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி 21 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கினால் நிராதரவான அக்குடும்பம் நலமடைய தெய்வ சகாயம் கிடைக்கும்.
இளம் வயதில் மண வாழ்க்கையைத் துறந்த பெணகளுக்கும், கணவனின் ஆதரவை இழந்த பெண்களுக்கும், மொத்த்த்தில் நிராதரவான அனைவருக்கும் உறுதுணையாய் நிற்பதே இத்தகைய பாப நாசினி வில்வ மரங்கள்.
இவ்வாறு அகத்திய ஜோதி திகழ்ந்த செங்கழுநீர் சந்தனக் குழம்பால் வில்வ தலங்களில் அக்த்திய தோத்திரத்தை எழுதி பூஜித்து வந்தாள் லோபாமுத்திரை. உணவை மறுத்து, உறக்கத்தையும் மறந்து அன்னை இயற்றிய பூஜையால் மகிழ்ந்த ஸ்ரீஅகத்தீசப் பெருமான் லோபாமுத்திரைக்கு தன் திருக்காட்சியை நல்கினான்.
எப்படி ?
பழையூர் ஸ்ரீஅகத்தீசப் பெருமானின் திருமார்பில் அகத்திய பிரபு வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டாள் அன்னை லோபாமுத்திரை. என்னே பாக்கியம் ? இறைவனின் திருமார்பில் வீற்றிருக்கும் பெருமானே நம்பெருமானாக அமைவார் என்றால் இதை விடச் சிறந்த பெருமை, பேறு ஒரு பெண்ணிற்கு வேறு எதுவாக இருக்க முடியும் ?
இவ்வாறு தானும் அகத்தியனும் வேறு வேறு கிடையாது. இருவரும் ஒருவரே என்று இறைவன் உலகத்திற்கு உணர்த்திய அற்புத தலமே பழையூர் சிவத் தலமாகும்.
அகத்தீசனை அகத்தில் பதித்தாள் அன்னை லோபாமுத்திரை. வானோர்கள் ஏத்த, வையகம் புகழ் பாட, சிவ கணங்கள் துதிபாட மும்மூர்த்திகள் முன்னிலையில் பிரம்ம மூர்த்தி யாகம் வளர்த்த வேள்வித் தீயின் சாட்சியாய் லோபாமுத்திரையின் கரம் பிடித்தார் அகத்திய மாமுனி பழையூர் சிவத்தலத்தில்.
லோபாமுத்திரை அகத்தியர் திருமணம் நிறைவேறிய இத்திருத்தலம் எத்தகைய திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியது என்பது உங்களுக்கு இப்போது சொல்லாமலே விளங்கும் அல்லவா ?

திருமணப் பொருத்தங்கள்

மணமகள், மணமகனுக்கு திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது வெறுமனே பத்துப் பொருத்தங்கள் மட்டும் அல்லாது ஜாதகத்தில் இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரெண்டாம் இடங்களையும் இரு பாலருக்கும் பொருத்திப் பார்ப்பது அவசியம்.
அதே போல திருமண முகூர்த்தம் நிர்ணயிக்கும்போது

  1. கூடா நாட்கள் என்னும் பிரபலாரிஷ்ட யோக நாட்கள்
  2. தம்பதியர் இருவருக்கும் சூன்ய திதி நாட்கள்
  3. தம்பதியர் இருவருக்கும் சந்திராஷ்டம நாட்கள்
  4. குரு சுக்ர மூட காலம்
  5. கத்ரி என்னும் அக்னி நட்சத்திர காலம்
  6. தேய் பிறை நாட்கள்

இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் மாங்கல்ய தாரண முகூர்த்த நேரம் சுப ஹோரையில், ராகு கால, யம கண்ட நேரங்கள் அல்லாது, ஏழு, எட்டாம் இட சுத்தியுடன், ஏழாமிடம் குரூர கிரகங்களின் பார்வை பெறாது இருத்தல் அவசியம்.
ஆனால், இன்றைய திருமண வைபவங்ளில் மிகவும் அபூர்வமாக சரியான முறையில் திருமணப் பொருத்தங்களும், முகூர்த்த லக்னங்களும் அமைகின்றன.
இவ்வாறு திருமண தோஷங்கள் பெரும்பாலான திருமணங்களில் அமைவதால் தம்பதியர்கள் அனைவரும் ஒரு முறையாவது லோபாமுத்திரை அகத்திய பெருமானின் திருமண வைபவம் நிகழ்ந்த பழையூர் சிவத் தலத்தில் இறை மூர்த்திகளை தரிசனம் செய்து இத்தலத்தில் மாங்கல்ய தாரண வைபவத்தை மீண்டும் ஒரு முறை நிறைவேற்றுவதால் எத்தகைய திருமண தோஷங்களும் நிவர்த்தி அடைந்து தம்பதிகள் சகல சௌபாக்கியங்களையும் பெறுகின்றனர்.

அவரவர் சம்பிராதயப்படி இங்கு மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்றலாம் என்றாலும் வடமொழி மந்திரங்களையோ, வேதங்களையோ அறியாதவர்களும் இங்கு அவர்களாகவே இந்த வைபவத்தை நடத்திக் கொள்ளும் முறையில் திருமண வைபவ மந்திரங்களை அளிக்கிறோம். சித்தர்கள் அளித்துள்ள இந்த எளிய வழிபாடு பல கால சந்தி தோஷங்களையும், திருமண தோஷங்களையும் விலக்கும் என்பது உண்மை.
பொதுவாக, திருமணத்திற்கு எத்தனையோ சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தாலும் குறைந்த பட்சமாக நிறைவேற்ற வேண்டிய ஏழு சடங்குகளைப் பற்றியும் அவற்றை நிறைவேற்ற கூற வேண்டிய பிரார்த்தனை மந்திரங்களையும் அளிக்கிறோம்.

  1. கோடி உடுத்தல்

மண மகள் ஒன்பது முழம் கொண்ட மஞ்சள் நிற நூல் புடவையை அணிதல் நலம். பட்டு சேலையை கட்டாயம் தவிர்க்கவும். மண மகன் எட்டு முழ பருத்தி வேட்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிதல் நலம். பட்டு தவிர்க்கவும்.
ஓத வேண்டிய மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டா தீமஹி
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
ந்ந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

2, யக்ஞோபவீதம் (பூநூல்) அணிதல்

மணமகன் பூநூல் அணிந்து கொள்ள வேண்டும். பலரும், ”எங்கள் சாதியில் இது வழக்கம் கிடையாது,” என்றாலும் மனிதர்கள் அனைவருமே அணிய வேண்டிய கவசமே பூநூலாகும். குறைந்தது மூன்று நாட்களாவது பூநூல் அணிந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் நலம். விரும்பினால் தொடர்ந்து பூநூல் அணிந்து காயத்ரீ ஜபித்து வருவதும் நலமே.
மந்திரம்
ஓம் பூர் புவ சுவஹ த்த் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலை பொடிப் பூசி என்னுள்ளங் கவர் களவன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

3. மணமகன், மணமகளுடைய பெற்றோர்களுக்குப் பாத பூஜை

மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வா அடி
உருவென் றுணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவாகும் அகத்தீசன் சீரார் அடி

4. சற்குரு பாத பூஜை

மந்திரம்
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரபிரம்ஹ மகரிஷி மகேசாய கௌஸ்துப புருஷாய இடியாப்ப சித்த ஈச மகரிஷி கீ ஜெய்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவ

5. மாங்கல்ய தாரணம்

நூலில் மாங்கல்யத்தைக் கோர்த்து மாங்கல்ய தாரணம் நிறைவேற்றுவதே சிறப்பு. தங்கச் சங்கிலியைத் தவிர்க்கவும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே லோபாமுத்ரா சமேதாய தீமஹி
தந்நோ அகஸ்தீஸ்வர ப்ரசோதயாத்
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால் அடியேன் உன்
அடியார் நடுவு ளிருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்ற

6. வாழ்த்துரை

தம்பதியரை அனைவரும் முழு அட்சதை மணிகளைத் தூவி ஆசிர்வதித்தல்
ஓம் தத் புருஷாய வித்மஹே சிவசக்தி ஐக்ய ஸ்வரூபாய தீமஹி
தந்நோ அருணாசலேஸ்வர ப்ரசோதயாத்
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே 
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே
மங்கை பங்கினீர் துங்கை மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

7. நன்றி நவிலல்

பழையூர் சிவத்தல இறை மூர்த்திகள் அனைவரையும் வணங்கி நன்றி செலுத்துதலால் அனைத்து திருமண தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெற்று தம்பதிகள் புது மண புது வாழ்விற்கு ஆயத்தமாகிறார்கள்.
திருமண் வைபவத்திற்குப் பின் தம்பதியர் சக்திக்கு இயன்ற அளவிற்கு அன்னதானம், ஆடை தானம், மாங்கல்ய பொருட்கள் தானம் அளித்தல் அவசியம். இத்தகைய தான தர்மங்களை திருமணம் நடந்த ஒரு மாத காலத்திற்குள் அவ்ரவர் சொந்த ஊரில் உள்ள திருக்கோயில்களிலோ தம்பதியரின் நட்சத்திரக் கோயில்களிலோ, காசி திருத்தலத்திலோ நிறைவேற்றுவதும் ஏற்புடையதே.
இதனால் ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்பிகையின் அருட்பிரசாதம் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றடைந்து சமுதாயத்தில் அமைதி நிலவ தம்பதிகள் இறை தூதுவர்களாய் பணி புரியும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

புனிதத்திலும் புனிதமான தலம்

பழையூர் சிவத் தலம் புனிதத்திலும் புனிதமான தலமாக விளங்குவதன் ஆன்மீக இரகசியம் என்ன ?
நாம் பொதுவாக சூரியன் கிழக்கு திசையில் உதிக்கிறான் என்று சொல்கிறோம். சூரியன் உதிப்பதால் அது கிழக்கு திசை என்று பொருள் கொள்வது தவறு. திசையை நிர்ணயிப்பது சூரியன் அல்ல. வாஸ்து பகவானே திசையை நிர்ணயிக்கிறார். வாஸ்து மூர்த்தி எழுந்தருளி உள்ள நிலையை வைத்தே கிழக்கு முதலான 64 திசைகளும் ஏற்படுகின்றன.
தம்பதியர் இந்த 64 திசைகளிலிருந்து வரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டு நல்வாழ்வை அடையவே திருமணத்திற்கு முன்போ பின்போ காசியில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களிலும் நீராடி இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்ற நியதியை நம் பெரியோர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு நமது பூமியில் கிழக்கு திசையிலிருந்து 90 டிகிரி பிரதட்சிணமாக அளந்து அதை தெற்கு திசையாகவும் அதிலிருந்து 90 டிகிரி பிரதட்சிணமாக அளந்து மேற்கு திசையாகவும் இவ்வாறு பிரதான நான்கு திசைகளைக் கொள்கிறோம். இந்த ஆதார திசைகளையே அடிப்படை திசைகள் (cardinal directions)  என்று சொல்கிறோம்.
நமது பண்டைய பாரதத்தில் எழுந்த திருக்கோயில்கள் பெரும்பாலும் இந்த அடிப்படை திசைகளை ஆதாரமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பொது விதிக்கு விலக்காக அமைந்த பல திருக்கோயில்களும். அவற்றிற்கான தெய்வீக விளக்கங்களும் காரணங்களும் அநேகம் உண்டு.
அது போல பழையூர் சிவத் தலம் பிரதான கிழக்கு திசையிலிருந்து சற்றே இடம் பெயர்ந்து உள்ளது. ஆகம இரகசியங்களில் இத்தகைய இடப் பெயர்ச்சியை புனிதத்தில் புனிதம் என்று உரைக்கிறார்கள்.
அகத்திய கிரந்தங்கள் கிழக்கு திசையில் ஏற்படும் இந்த இடப் பெயர்ச்சியை அகத்திய பூர்வம் என்று அழைக்கின்றன. எம்பெருமானின் அகத்திலிருந்து, இதயத்திலிருந்து தோன்றியதால் அந்தப் புனிதர் அகத்தியர் என்று அழைக்கப்படுவதால் அகத்திய பூர்வமும் புனிதமான திருத்தல சக்திகளுடன் தோன்றுவதில் வியப்பில்லையே ?
இத்தகைய அகத்திய பூர்வ சக்திகளுடன் அமைந்ததே ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் ஆகும். உலகிலேயே மிகப் பெரிய ராஜ கோபுரத்துடன் அமைந்து உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாகவும் அமைந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு பெருமை சேர்ப்பது இந்த அகத்திய பூர்வ ஆகம ரகசியமே என்றால் அகத்திய மாமுனியின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியுமா ?
மேலும் ஸ்ரீரெங்கநாத சுவாமி மேற்கே தலை வைத்து கிழக்கே திருப்பாதங்களை வைத்து தெற்கு நோக்கியவாறு சயனக் கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா ?
மேற்கூறிய அகத்திய பூர்வ நகர்வால் சுவாமியின் திருமுக மண்டலம் சற்றே தெற்கில் பின் நோக்கி நகர்கிறது. இதன் தாத்பர்யம் என்ன ?

தென்திசை நோக்கான் ராமபிரான்

பெருமாள் ராமச்சந்திர மூர்த்தியாய் மனித அவதாரம் கொண்டு பூமியில் தோன்றிய போது அவருடைய மனைவி சீதா தேவியை அசுரன் இராவணன் கவர்ந்து சென்று தென் திசையில் உள்ள இலங்கையில் சிறை வைத்து விட்டான். அதனால் ராமச்சந்திர மூர்த்தி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மன வேதனையை அடைந்தார்.
இலங்கையில் சீதா தேவி அடைந்த வேதனைகளும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே ராமர் இனி தென் திசையை நோக்க மாட்டேன் என்ற வைராக்யம் பூண்டார். அதனால்தான் ராமர் படத்தை தென் திசையைத் தவிர மற்ற திசைகளில் வைத்து வழிபட வேண்டும் என்ற நியதி தோன்றியது.
ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் முக மண்டலம் சற்றே தென் திசை நோக்கி பின்னால் நகர்ந்து தென் திசையிலிருந்து விலகும் அதே சமயத்தில் அவரது திருப்பாதங்கள் தென் திசையை நோக்கி சற்றே முன்னால் நகர்ந்து வந்துள்ளன. இந்தத் திருக்கோல தரிசனத்தால் மக்களுக்கு என்ன பயன் ?
இறை மூர்த்திகளின் ஒவ்வொரு திருக்கோலத்திலும் ஆயிரமாயிரம் இரகசியங்கள் பொதிந்திருக்கும். மேலும் அவை எல்லாமே மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படக் கூடியவையாகவே இருக்கும்.
கருணா மூர்த்திகள்தானே தெய்வங்களும் தேவதைகளும் ?
எனவே ஸ்ரீரெங்கநாத சுவாமியின் திருப்பாதங்களைச் சரணடைந்து வழிபடும் அடியார்கள்

  1. தங்கள் மனைவியை மற்றவர்கள் கவர்ந்து செல்லும் வேதனைகளுக்கு ஆட்பட மாட்டார்கள்.
  2. உத்யோகம், மன வேற்றுமை, நோய் போன்ற காரணங்களால் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகாது.
  3. இலங்கையிலிருந்து மீண்ட சீதையை அக்னி பிரவேசத்தற்கு உள்ளாக்கி அன்னையின் கற்புத் திறத்தை மக்களுக்கு நிரூபித்த பின்னரும் மக்களின் சந்தேகத்தின் காரணமாக நிறைமாத கர்ப்பிணியான சீதாபிராட்டியை வனத்திற்கு அனுப்பினார் அல்லவா ராமபிரான். பெருமாளை நம்பும் அடியார்கள் இத்தகைய வேதனையை அடையமாட்டார்கள்.

பெருமாள் நடந்தது ஏன் ?

நமது பாரத திருத்தலங்களில் இன்னும் பல விசேஷமான அம்சங்களும் பொதிந்துள்ளன. பெருமாள் நின்று, நடந்து, கிடந்து, அமர்ந்து இவ்வாறு பல கோலங்களில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார் அல்லவா ? இதன் பின்னால் உள்ள தெய்வீக மகத்துவங்கள் ஏராளம்.
ஒவ்வொரு திருத்தலமும் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எழுந்தருளியிருக்கும். அந்த தலம் பூகோள அமைப்பில் ஒரு குறிப்பிட்ட அட்சரேகையில், தீர்க்கரேகையில், பூமியின் அச்சிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில், பூமியின் ஒரு குறிப்பிட்ட சாய்தளத்தில் அமைந்திருக்கும்.
இவ்வாறு பூமியில் அத்தலத்தின் குணாதிசயங்களை மக்களுக்கு அனுகிரக சக்திகளாக வாரி வழங்குவதே இத்தகைய நின்று, நடந்து, கிடந்து, அமர்ந்து அருள்புரியும் கோலங்களாகும்.
சயன கோலம் அட்ச ரேகையுடன் தொடர்புள்ளதாக இருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் செல்பவைதானே தீர்க்க ரேகைகள்.
நின்ற கோலம் தீர்க்க ரேகையுடன் தொடர்பு கொண்டிருக்கும். வடக்கிலிருந்து தெற்கில் செல்பவையே தீர்க்க ரேகைகள்.
பெருமாளின் அமர்ந்த கோலம் பூமியின் அச்சிலிருந்து திருத்தலம் உள்ள தூரத்துடன் தொடர்பு கொண்டு அமையும்.
பாதங்களைத் தூக்கி நடந்த கோலம் பூமியின் சாய்தளத்துடன் தொடர்பு உடையதாக இருக்கும்.
இத்தகைய கோல இரகசியங்களை மனித மனதால் புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் ?
Our present study of electrons is restricted to a two-dimensional static plane.
இத்தகைய பெருமாள் மூர்த்தியின் கோல அனுகிரக சக்திகளை ஆதியில் சிவ லிங்க மூர்த்திகளே ஏற்று மக்களுக்கு அளித்து வந்தனர். ஆனால், அத்தகைய பூகோள தத்துவங்களை மனித மனம் ஏற்க முடியாமல் போனதால் எம்பெருமானே கருணை கொண்டு அமர்ந்த, நடந்த கோலங்களை அளித்தார்.
எனவே எந்த பெருமாள் தலத்தை தரிசித்தாலும் அதற்கு அடிப்படையாக அமைந்த சிவ லிங்க மூர்த்திகளையும் தரிசித்தால்தான் இறைவழிபாடு பூரணமடையும் என்று சித்தர்கள் வலியுறுத்துவதன் காரணம் இதுவேதான்.

மம்மியூர் சிவாலயம்

குருவாயூர் பெருமாள் ஆலயம்

உதாரணமாக, மம்மியூர் சிவன் குருவாயூரப்பன், குணசீலம் தார்மீக நாதர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், தாயுமானவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் போன்ற திருத்தல மகிமைகள் இந்த நியதியின் அடைப்படையில் அமைந்ததே.  
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். அட்சரேகை, தீர்க்க ரேகை என்பவை உண்மையில் எங்கும் வரையப்பட்ட கோடுகள் அல்ல, அவை கற்பனையே. கற்பனைக் கோடுகள் எப்படி இறை அனுகிரகத்தைத் தர முடியும் ?
நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் பத்து லட்சம் ரூபாயை டெபாசிட் செய்து விட்டு அதை உங்கள் பாஸ்புத்தகத்தில் வரவு வைத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் பாஸ் புத்தகத்தில் உள்ள 10,00,000 என்ற எண்ணை பார்த்தாலோ தொட்டாலோ எந்த உணர்வும் உங்களுக்கு ஏற்படப் போவதில்லை.
அந்த பத்து லட்ச ரூபாயை எடுத்து அதில் கார் வாங்கி அந்தக் காரில் பயணம் செய்யும்போதுதான் அந்த பணத்தின் மதிப்பை உங்களால் உணர முடியும். அதுவரை பத்து லட்ச ரூபாய் என்பது ஒரு கற்பனைதானே ?
அதே போல பெருமாள் மூர்த்திகளின் அவதார கோலங்களை தரிசித்து வந்தால்தான் அவைகளுக்கும் கற்பனைக் கோடுகளான அட்ச தீர்க்க ரேகைகளுக்கும் உள்ள தெய்வீக தொடர்பை ஓரளவிற்காவது உணர்ந்து கொள்ள முடியும்.

வடகிழக்கு திசை என்னும் ஈசான்யம் புனிதமானது என்கிறோம் அல்லவா ? கிழக்கு திசை அகத்திய பூர்வத்தால் சற்றே இடம் பெயரும் போது இத்தகைய புனித சக்திகள் பலப்படுத்தப் படுகின்றன என்பது ஓரளவிற்கு உணரக் கூடிய மெய்ஞான விளக்கமாகும்.
பழையூர் தலத்தில் இந்த அகத்திய பூர்வம் ஐந்து டிகிரிகளுக்கு நிரவி உள்ளது. ஐந்து டிகிரிகள் முழுமையான வட்டத்தில் 72ல் ஒரு பகுதி (360/5 = 72). இந்த 72 டிகிரி என்பது முழுமையைத் தரும் ஒன்பதுடன் அகத்திய எண்ணான எட்டால் பெருக்கக் கிடைப்பது. அகத்திய நட்சத்திரம் ஒளிர்வது 80 டிகிரி அட்சரேகை என்பதை தற்போது நினைவு கூறுங்கள்.

எனவே இதயத்தைக் காக்கும் துதியான
இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்
என்னும் பாடலை இத்தலத்தில் 16 முறை ஓதி 16 முறை இறைவனை வலம் வந்து வணங்குவதால் இதய நோய்கள் அகலும்.
பழையூர் சிவத்தலத்தில் அமைந்துள்ள அகத்திய பூர்வம் என்னும் இடப் பெயர்ச்சியால் இத்தல ஈசனின் வலது புறத்தில் ஆவுடையும் மாற்றத்தைக் கொள்கிறது அல்லவா ? இது மிகவும் அபூர்வமான ஆவுடை புனிதமாகும்.

நாரி குளியல் அபிஷேகம்

இத்தகைய புனிதமான தலங்களில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய விசேஷமான வழிபாடே நாரி குளியல் என்ற அபிஷேகம் ஆகும். புனிதமான இறை மூர்த்திக்கு புனிதமான அபிஷேகத்தைத்தானே நிறைவேற்ற வேண்டும் ? 108 இளநீர் தீர்த்தத்தை சுவாமியின் லிங்க பாகத்திற்கும் ஆவுடை பாகத்திற்கும் அபிஷேகம் செய்வதே நாரி குளியல் என்னும் சித்த முறை அபிஷேகம் ஆகும்.
முதல் இளநீரை லிங்கத்திற்கும், இரண்டாவது இளநீர் தீர்த்தத்தை ஆவுடைக்கும், மூன்றாவது இளநீரை லிங்கத்திற்கும், நான்காவது இளநீரை ஆவுடைக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது ஒன்றுவிட்டு ஒன்று மாறி மாறி லிங்கத்திற்கும் ஆவுடைக்கும் 108 இளநீர் தீர்த்தத்தை அபிஷேகம் செய்வதே நாரி குளியலாகும்.
அற்புதமான பலன்களை அளிக்க வல்லதே நாரி குளியல் அபிஷேகமாகும்.
இதற்கு மாறுதலாக முதலில் லிங்கத்திற்கு 54 இளநீர் தீர்த்தத்தையும் ஆவுடைக்கு 54 இளநீர்களை அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதே.
நாரி குளியல் அபிஷேகத்தால்

  1. நீதித் துறையில் பணி புரியும் நீதிக் காவலர்களான நீதிபதிகள், வக்கீல்கள் போன்றோர் நடு நிலைமையுடன் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தேவையான மனோ தைரியத்தையும், தங்கள் துறையில் நல்ல பெயரையும் புகழையும் பெற இறையருள் கிட்டும்.
  2. சில பெண்களுக்கு மாத விடாய் சமயங்களிலும், கருவுற்றிருக்கும்போதும் மனம் பேதலித்து அதனால் குடும்பத்தில பல மன குழப்பங்கள் ஏற்படும். அது அத்து மீறி விவாகரத்து வரை கூட சென்று விடுவதும். அத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதே நாரி குளியல் அபிஷேகம் ஆகும்.
  3. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் தேவையான மனோ வளர்ச்சி பெற நாரி குளியல் அபிஷேகம் துணை புரியும்.
  4. தம்பதியரிடையே பணம், பதவி, படிப்பு, உடல் அழகு போன்ற ஏற்றத் தாழ்வுகளால் மன வேற்றுமை ஏற்படும்போது நாரி குளியல் அபிஷேகம் மன ஒற்றுமையை ஏற்படுத்துவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

உடுக்கை சிவ சித்தர்

இப்பூவுலகில் மூன்று வகையான வலங்கள் உண்டு. பூமி தன்னைத் தானே சுற்றி வருதல், பூமி சூரியனைச் சுற்றி வருதல், பூமி தனது அச்சில் சுழல்தல். இதில் பூமி தன்னைத் தானே சுற்றி வருவதை ஆத்ம வலமாகவும், அதாவது தனக்குத் தானே சுற்றிக் கொள்ளுதல், பூமி சூரியனை சுற்றி வருவதை இறை மூர்த்திகளின் பிரதட்சண வலமாகவும், மலையை, பெற்றோர்களை வலம் வரும் வலமாகவும் மக்கள் இயற்றி பயன் பெறுகிறார்கள்.
ஆனால், பூமி தனது அச்சில் சுழலும் வலத்தின் பயனை மக்கள் எப்படி பெறுவது ? அதை நமக்குப் பெற்றுத் தந்த பெருமானே உடுக்கை சிவ சித்தராவார்.
ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம், அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் தோன்றிய அற்புத சித்தர் பெருமான். சிவராஜ யோகத்தில் தோன்றிய தவசீலர். சூரியனுடன் குரு இணைந்து யோகம் கொள்வதே சிவராஜ யோகமாகும்.
பூமியின் வடிவம் உலக்கை என்பதே சித்தர்கள் கூறும் உண்மை. இந்த உலக்கை வடிவில் உள்ள பூமி பம்பரம் போல சுழலும்போது அதன் வடிவம் உடுக்கையாகத்தானே தோன்றும் ? எனவே மக்களுக்கு அயன சலனத்தின் பலனை அளிக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்ற உடுக்கை சிவ சித்தர் இத்தல இறைவனுக்கு ஆறு கால பூஜையிலும் உடுக்கையை ஒலித்து தொடர்ந்து சேவைகள் ஆற்றி வந்தார்.

ஸ்ரீநந்தீஸ்வர மூர்ததி
பழையூர், பெருகமணி

இறை நம்பிக்கையுடன் தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அவர்களுடைய நியாயமான குடும்ப பிரச்னைகளுக்கும், வியாபாரம் தொழில் போன்ற தேவைகளுக்கும், ஆன்மீகத் தேடலுக்கும் முறையான தீர்வை அளித்து மக்களுக்கு நல்வழி காட்டி வந்தார் அந்த சித்தர் பிரான்.
தன்னைச் சுற்றி எத்தனை பேர் அமர்ந்திருந்தாலும் அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் சித்தர் பிரான் உடுக்கை ஒலியிலிருந்து அவரவர்க்குத் தேவையான தெய்வீக விடைகள் கிடைத்து விடும். அருகில் இருந்து கேட்பவர்களுக்கு உடுக்கை பேசுவதுபோல் வார்த்தைகளே அவர்கள் காதில் விழும். இந்த அற்புத்த்தை நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்தோர் எண்ணற்றோர்.
ஒரு ஆருத்ரா தரிசன தினத்தன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் உடுக்கை சிவ சித்தர் பழையூர் ஈசன் திருத்தலத்தில் ஜீவாலயம் பூண்டார். அது முதல் ஒவ்வொரு ஆருத்ரா தரிசனம் தினத்தன்றும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கருவறையில் இப்பிரானின் உடுக்கை ஒலிக்கும் அற்புதம் நிகழ்ந்த்து. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆருத்ரா தரிசன தினத்தன்றும் உடுக்கை சித்தரின் உடுக்கை ஒலியைக் கேட்டே வழிபாடு இயற்றும் வழக்கம் ஏற்பட்டது.
சபரி மலையில் மகர ஜோதி தரிசனத்தைக் கண்டே ஐயப்ப சுவாமிக்கு ஆராதனைக்ளை நிறைவேற்றுவதைப் போலவே ஸ்ரீஅகத்தீச பெருமானுக்கும் உடுக்கை சிவ சித்தரின் உடுக்கை பூஜை நிறைவேற்றிய பின்னரே ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நிறைவேறும்.
நம்பிக்கையுடன் இன்றும் உடுக்கை சித்தரை வழிபடுவோர்க்கு கருவறையிலும் சில சமயம் ஆலய வளாகத்திலும் உடுக்கை சித்தரின் உடுக்கை நாதம் கேட்கும். குறைந்தது மூன்று நிமிடங்களேனும் தொடர்ந்து ஒலிக்கும் இந்த உடுக்கை நாதத்தைக் கேட்பதும் ஒரு அற்புத ஆன்மீக அனுபவமே.
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் இடம் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர் பிறர் நலனுக்காக பாடுபட்டு இறை மார்கத்தில் முன்னேறுவார். மேலும் உடுக்கை சித்தரைப் போல நான்காம் இடத்தில் சிவராஜ யோகத்துடன் திகழ்பவர்கள் இயற்கையாகவே சிவ பெருமானின் நடன நாட்டிய கோலங்களை இதயத்தில் தரிசிக்கவும், எம்பெருமானின் உடுக்கை ஒலியைக் கேட்கவும் சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஜாதகத்தில் நான்காம் இடம் இறைவனின் நடன நாட்டிய அரங்கம். அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். விதி வசத்தால் நான்காம் இடம் பிரச்னைக்குரியதாக இருந்தால் அவர்கள் இத்தலத்தில் ஜீவ சமாதி கொண்டு அருள்புரியும் உடுக்கை சித்தரை வணங்கி பள்ளிக் குழந்தைகளுக்கு சிறு உடுக்கைகளைத் தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள்.
காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர், பதஞ்சலி மகரிஷி போன்ற உத்தமர்கள் இத்தகைய புனித்த்துடன் திகழ்ந்தவர்களே ஆவார்கள்.
பொதுவாக மருத்துவர்களும் சிறப்பாக இதய நோய் மருத்துவர்களும் உடுக்கை சித்தர் வழிபாட்டால் கைராசி பெருகி தங்கள் துறையில் பேரும் புகழும் பெறுவார்கள்.
மருத்துவர்களும் இதய நோய் நிபுணர்களும் உடுக்கை சித்தர் தியானத்துடன் தங்கள் இதய ஒலியையே தினமும் அரை மணி நேரத்திற்குக் குறையாமல் கேட்டு வருவதும் அவர்களுக்கு அற்புத மன அமைதியையும் சமயோசித புத்தியையும் தரும்.
ஆரம்பத்தில் இதய ஒலியைக் கேட்க முடியாதவர்கள் ஸ்டெதாஸ்கோப் கொண்டு இந்த பயிற்சியை ஆரம்பித்து தொடர்ந்து வந்தால் நாளடைவில் உடுக்கை சித்தரின் அருளால் ஸ்டெத் உதவி இன்றியே தங்கள் இதய ஒலியைக் கேட்க முடியும். அது மட்டுமல்லாமல் தொடர்ந்த தியானப் பயிற்சியால் தன்னிடம் வரும் நோயாளிகளின் இதயத் துடிப்பையே
ஸடெத் உதவி இன்றி அறிந்து கொள்ளும் திறனையும் பெறுவார்கள்.
ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து அவர் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என்ற கணக்கு உண்டு. அது குறையும்போது உடலுக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து போவதால் அதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு ஒரு மனிதனின் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என்ற மருத்துவ அறிவை எளிதில் அளிப்பதே உடுக்கை சித்தரின் தியான வழிபாடாகும். மருத்துவர்கள் இயற்ற வேண்டிய முக்கியமான வழிபாடு இது.
பெண்களின் ஜாதகத்தில் நான்காமிடம் கற்பின் தூய்மையைக் குறிக்கிறது. தங்கள் பெண்கள் கற்புடன் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களும் கற்புக்கரசியைக் கரம் பிடிக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்களும் இத்தல இறைவனுக்கு நாரி குளியல் அபிஷேகம் நிறைவேற்றி நற்பலனடையலாம்.
உடுக்கை சிவ சித்தர்பிரான் அருளிய
உடுக்கை பிறந்தது உன்னருளாலே சிவசிவ
உடுக்கை ஒலிப்பது உன்னருளாலே சிவசிவ
உடுக்கை சுழல்வது உன்னருளாலே சிவசிவ
உடுக்கை நாதமும் உன்னருளே சிவசிவ
என்ற உடுக்கை சிவ துதியை ஓதியவாறே இத்தல இறைவனை 18 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி இதயக் கமலத்தில் இஷ்ட தெய்வத்தை நிலை நிறுத்தி தியானித்தால் தியான சித்திகள் மலரும்.
உடுக்கை சிவ சித்தர் உடுக்கை சிவ துதி என்னும் வெற்று உறையில் ”மருந்து” என்னும் தனது தவ சக்தியை எப்படி நிறுவி உள்ளார் என்று அறிந்து கொள்வதும் தெய்வீகமே. மேற்கண்ட துதியின் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஆறாவது எழுத்துக்களை கீழிருந்து மேலாக சேர்த்தால் அது ”தழலிற” என்று அமையும்.

”மக்கள் வினை என்னும் கொடிய தீயில் அகப்படாமல் அவர்களைக் காப்பாற்ற (தழல்+அற) என்னுடைய தவ சக்திகளை இறைவனின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்,” என்ற பொருளில் துதியை அமைத்துள்ளார் சித்தர்பிரான். எதற்காக ஆறாவது அட்சரங்களை இணைக்கிறார் சித்தர் பிரான் ?
ஆறு எண் அசுர குரு சக்திகளைக் கொண்டு முள்ளை முள்ளால் எடுக்கும் த்த்துவமாக அமையும் என்று மேலோட்டமாக பொருள கொண்டாலும், இதன் ஆழமான தத்துவமும் உண்டு. அது என்ன ?
ஒரு நிமிடம் உங்கள் மூளையைக் கசக்குங்கள்
….  …. ….
கண்டு பிடித்து விட்டீர்களா ?
லோபாமுத்திரை பழையூர் சிவாலயத்திற்கு வந்தபோது அது 60 ஏக்கர் நிலப் பரப்பில் பிரம்மாண்டமாக வீற்றிருந்தது என்று கூறினோம் அல்லவா ? எனவே 6 (6+0=6) என்பது இத்தலத்திற்கான வாஸ்து இலக்கண எண் ஆகும். இந்த வாஸ்து இலக்கண விதியை ஒட்டி சித்தர் பிரான் ஆறாம் எழுத்துக்களின் கோவையில் தன்னுடைய தவ புண்ணிய சக்திகளை இறைவனிடம் அர்ப்பணித்துள்ளார்.
இது பற்றியே சித்தன் போக்கு சிவன் போக்கு என்று பெரியோர்கள் செர்ல்வார்கள். சிவன் அடுத்து என்ன செய்வான என்பதை வேறு எவருமே அறிய முடியாத்து போல சித்தர்கள் எந்த புண்ணிய சக்தியை, தபோ பலனை எங்கே எப்படி நிரவுவார்கள் என்பது எவருக்குமே தெரியாது, புரியாது.
சிவ பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களின் பெயர்களை மட்டுமே கூறுவது கூட ஒரு ஒப்பற்ற வழிபாடாக அமையும் என்பதால் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், அப்பர் போன்ற மகான்கள் சிவத்தலங்கள் என்னும் மணமுள்ள மலர்களைக் கோர்த்து திருக்ஷேத்திரக் கோவை போன்ற சிவனருட் மாலைகளாகப் படைத்துள்ளார்கள். இப்பதிகங்களை ஓதுவதும சக்தியுள்ள இறை வழிபாடு என்பதில் சந்தேகமில்லை.
இவ்வகையில் பழையூர் என்ற சிவத்தலத்திற்கும் அற்புத ஆன்மீகப் பொருள் ஒன்று இருக்கும் அல்லவா ?
பழையூர் என்றால் பழைய, தொன்மையான ஊர் என்றுதானே பொருள் ?
நீங்கள் பல பிறவிகளில் திருச்சியில் 50 ஆண்டுகள், மதுரையில் 30 ஆண்டுகள், சென்னையில் 40 ஆண்டுகள் வசித்ததாகக் கொண்டால் நீங்கள் எந்த ஊரில் வெகுகாலம் வசித்தீர்களோ அதுதானே உங்களுக்கு பழமையான ஊர் ?
அந்த ஊர் எது, சார் ?
இத்தனை பிறவிகளிலும் உங்களுடன் கூடவே இருந்த உங்களுடைய உள்ளம் என்ற மனமே உங்களுடைய பழைய ஊர். அந்த உள்ளத்தில், அகத்தில் குடி கொள்ளும் ஈசனே ஸ்ரீஅகத்தீசன்.
இதைத்தான் நமது வெங்கடராம சுவாமிகள், ”நாங்கள் போடுவது சாதாரண விதை கிடையாது. அது ஆன்மீக விதை. அதை உங்கள் உள்ளத்தில் போடுகிறோம். அது எப்போது முளைக்கும் என்று தெரியாது. ஆனால், என்றாவது ஒரு நாள் நிச்சயமாக முளைக்கும்,” என்பார்கள்.
எனவே நீங்கள் ஒரே ஒரு முறை பழையூர் ஸ்ரீஅகத்தீசனை தரிசித்தால் கூட போதும், அவர் உங்கள் அகத்தில் நிரந்தரமாகத் தங்கி விடுவார் என்பதில் ஐயமில்லை.

தன்னை ஒத்த தனயன்

அகத்தியர் லோபாமுத்திரையை மணந்ததே தன்னை ஒக்கும் தனயனைப் பெறுவதற்காகவே அல்லவா ? அப்போதுதான் அகத்தியரின் மூதாதையர்கள் நன்னிலை அடைவர். திருமணத்திற்குப் பின் லோபாமுத்திரை லோபாமாதா ஆனாள். அகத்திய முனியுடன் பொதிய மலை ஆஸ்ரமத்தை அடைந்தாள் அன்னை.
லோபாமாதா ஜகன்மாதாவாக உலகிற்கே அன்னையாக விளங்கினாள். தினமும் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து தன்னுடைய கணவன் நிறைவேற்ற வேண்டிய இறை வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றி வந்தாள் அன்னை.
அகத்தியரின் அகமே குளிரும் அளவிற்கு இருந்தது அன்னையின் சேவை. உத்தம தம்பதியரின் இலக்கணமே எவரும் வாய் விட்டுச் சொல்லாமலேயே ஒருவர் மற்றொருவரின் தேவையைப் புரிந்து அவர் எண்ணத்தை மனதார நிறைவேற்றுவதுதானே. கணவனின் தேவைகளை மட்டும் அல்லாது அனைத்து ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தையும் ஏற்று திறம்பட நிர்வகித்து வந்தாள் லோபாமாதா என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியம்.
அகத்தியர் தம்பதியர் குறித்த பெரும்பாலான கர்ம பரிபாலன இரகசியங்கள் இருடிகள் பாரதத்தில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் லோபாமாதா அகத்திய முனியின் பூஜைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து அளித்த பின் தங்களுடைய குடிசையிலிருநது வெளியே வருவாள் அன்னை. அப்போது அன்னையின் தரிசனத்திற்காக அனைத்து ஜீவராசிகளும் அகத்திய குடிலின் வெளியே காத்திருக்கும்.
ஐந்து தலை நாகம், பொன் பட்டாம் பூச்சி, வெள்ளைக் காக்கை, செந்தேள, ஆயிரங்க கால் பூரான், பஞ்ச வர்ணக் கிளி, நடமிடும் அன்னம் என்று மனிதர்கள் கண்டிராத, கேள்விப்பட்டிராத எத்தனேயா உயிரினங்களும் அன்னையை தரிசித்து தங்கள் குறைகளைக் கூறும். தேவியும் அந்த ஜீவராசிகளின் குறைகளைக் கேட்டு தகுந்து நிவாரண முறைகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த ”விருந்தினர்” அனைவருக்கும் தேவையான பிரசாதங்களையும் அளித்து வழி அனுப்பி வைப்பாள் அன்னை.
இத்தகைய சேவைகளால் பெரிதும் மகிழ்ந்த அகத்திய முனி தன்னுடைய விருப்பம் நிறைவேறும் பொன்னாள் நெருங்கி விட்டதை உணர்ந்து தேவியைப் பார்த்தபோது அகத்தியரின் விருப்பதை அறிந்த அன்னை, ”தவசீலரே, நீங்களோ தவ வேடத்தில் இருக்கிறீர்கள், நானும் உங்களோடு சேர்ந்து மரஉரி தரித்து தவக் கோத்தில் உள்ளேன்.”
”இத்தகைய மனோ நிலையில் தாம்பத்ய உறவு எப்படி முழுமை பெறும் ? எனவே தாங்கள் ஒரு அரசனுக்கு உரிய ஆடை ஆபரணங்களுடன் எழுந்தருளுங்கள். அதே போல் நாம் இருவரும பள்ளி கொள்ள விலை உயர்ந்த அழகிய படுக்கை ஒன்று வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம்,” என்று தன்னுடைய கருத்தை பணிவுடன் தெரிவித்தாள் லோபாமாதா.
அகத்திய முனிவரும் லோபாமாதாவின் கருத்தை ஆமோதித்து மீண்டும் பழையூர் சிவத்தலத்தை அடைந்தார்.
அகத்தியர் தவ சீலர். அவரிடம் பொன்னும் பொருளும் ஏது ? அடுத்த வேளை உணவிற்குக் கூட அவர் எம்பெருமானையே நம்பி இருந்தார். உத்தம சன்னியாசியின் இலக்கணமும் அதுதானே ?
எனவே பழையூர் சிவனை வணங்கி அவர் உத்தரவு பெற்று ஏதாவது அரசர்களிடம் சென்று லோபாமாதா விரும்பியவாறு பொன் ஆபரணங்களையும் விலையுயர்ந்த கட்டிலையும் யாசகமாக, தானமாக கேட்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார் அகத்தியர் முனி.
அகத்திய பெருமான் காலத்தில் பழையூர் சிவத்தலத்தில் கன்னி மூலையில் ஸ்ரீஅயன கணபதி மூர்த்தி எழுந்தருளி இருந்தார்.

அயன கணபதி மூர்த்தியின் வரலாறும் சுவையானதே.

உடுக்கை அயனம் மகத்துவம்

உடுக்கை சிவ சித்தர் மக்களுக்கு அய்ன சலனத்தால் வரும் பிரதட்சிண பலன்களை வழங்குவதற்காகத்தானே பழையூர் சிவத் தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தார். அவர் எவ்வாறு தன்னுடைய தபோ பலன்களை இத்தலத்திற்கு அளித்தார் ?
பழையூர் சிவத்தலத்தில் விரவி உள்ள அகத்திய பூர்வம் என்னும் கோணப் பெயர்ச்சி தத்துவத்தால் இத்தலம் புனிதத்திலும் புனிதம் உள்ளதாக திகழ்கிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டோம் அல்லவா ? இந்த அகத்திய பூர்வம் ஐந்து பாகைகளை உடையது. வாஸ்து திசைகளில் முதல் திசையான வாஸ்து புனிதத்தில் அகத்திய பூர்வம் போக மீதி உள்ள கோணம் பாரிஜாத க்ஷேத்திரம் என்று வழங்கப்படும்.

அகத்திய பூர்வம், உடுக்கை அயனம்
பழையூர் சிவாலயம்

பாரிஜாத யோகம் என்னும் யோக முறைப்படி லக்னாதிபதி இருக்கும் ராசி அதிபதி அடைந்துள்ள ராசி அதிபதி கேந்திரத்திலோ, கோணத்திலோ, ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் அது பாரிஜாத யோகம் ஆகும். இத்தகைய யோக அமைப்புகள் ஜாதகருடைய நவாம்சத்திலும் இருந்தால் அது பாரிஜாத க்ஷேத்திர யோகம் எனப்படும்.
இத்தகைய க்ஷேத்திர பாரிஜாத யோகம் பெற்று மக்களுக்கு அற்புத சேவைகள் சாதித்த உத்தமரே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.
ஜாதகத்தில் அமைந்துள்ளதுபோல் ஒரு திருத்தலத்தில் எவ்வாறு பாரிஜாத அமைப்புகள் ஏற்படக் கூடும் ? உதாரணமாக, லோபாமுத்திரை பழையூர் சிவத்தலத்திற்கு வந்தபோது இத்தல அமைப்பை நோக்கினால் அப்போது ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் இறைவனுக்கு வலப்புறமாக வீற்றிருந்தாள். அன்னைக்கு வலப்புறம் முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் கொலுவீற்றிருந்தார். முருகப் பெருமானின் வலப் புறம் கன்னி மூலையில் ஸ்ரீஅயன கணபதி எழுந்தருளி இருந்தார். அயன கணபதி உடுக்கை அயனம் கோணம் மூலம் மூல மூர்த்தியுடன் இணைந்து இருந்தார்.
இது சித்தர்கள் காட்டும் க்ஷேத்திர பாரிஜாத தல இலக்கணமாகும்.
வாஸ்து நியதியில் பாரிஜாத க்ஷேத்திரத்திற்கு எதிர்த்திசையில் உள்ள 0.625 பாகையில் உடுக்கை சித்தர் தன்னுடைய தபோ பலனை அளித்ததால் அவருடைய மகிமைகளை உலகிற்கு உணர்த்துவதற்காக இதை உடுக்கை அயனம் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். (படத்தைப் பார்க்கவும்)
உடுக்கை சித்தர் தன்னுடைய தபோ பலனை அளித்த திசை நிருதி என்னும் கன்னி மூலை என்பதால் சித்தர் பிரான் இங்கு அயன கணபதியை பிரதிஷ்டை செய்து அக்கணபதி மூர்த்திக்கு தன்னுடைய தபோ பலன்களை அர்ப்பணித்து வழிபட்டு வந்தார். அதனால் அயன கணபதியை பிரதட்சிணம் வந்து வழிபடும் பக்தர்கள் அயன சலன பிரதட்சிண பலனை பெறுவார்கள் என்ற சூக்கும இரகசியத்தை இத்தல வழிபாட்டு இரகசியங்களில் ஒன்றாக பதித்து வைத்தார் உடுக்கை சிவ சித்தபிரான்.
மக்கள் சேவையை மகேசன் சேவையாக ஏற்று வாழும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் சித்தர்கள் மட்டுமே அறிந்த இந்த அற்புத ஆன்மீக, ஆகம இரகசியத்தை மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்துள்ளார்கள். இதை அனைவரும் நன்முறையில் பயன்படுத்தி சமுதாயத்தில் அதன் மூலம் அமைதியை நிலை நிறுத்துவதே நாம் சுவாமிகளுக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.

உடுக்கை தாமரை அலங்காரம்

பழையூர் திருத்தல மூர்த்திகளுக்கு சிறப்பாக ஸ்ரீஅயன கணபதி மூர்த்திக்கு உகந்ததே உடுக்கை தாமரை மலர் அலங்காரம் ஆகும். ஒரு செந்தாமரை மலருடன் மற்றோர் மலரை அதன் கீழ் கவிழ்த்து வைத்து கட்டி இவ்வாறு 18 ஜோடி செந்தாமரை மலர்களை மாலையாகக் கட்டி 18, 36, 54 என்ற செந்தாமரை ஜோடி மலர்களால் இறை மூர்த்திகளை அலங்கரிப்பதே உடுக்கை தாமரை மலர் அலங்காரம் ஆகும். அற்புதமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியது.
இரு தாமரைகள் ஒன்றிற்கொன்று கவிழ்ந்த நிலையில் இருக்கும்போது அது உடுக்கையின் வடிவத்தில் இருக்கும் அல்லவா ? மேலும் மலர்களின் நடுவில் இருக்கும் மஞ்சள் நிற மகரந்த பகுதியும் (receptacle) உடுக்கையின் வடிவத்தில்தானே இருக்கும். இந்த உடுக்கைக்குள் உடுக்கையான மலர் அலங்காரம் இங்குள்ள புனிதத்தில் புனிதமான தல மூர்த்திகளுக்கு ஆனந்தம் அளிப்பதில் வியப்பென்ன ?
பழையூர் ஸ்ரீஅயன கணபதி அருளும் அனுகிரகம் யாதோ ? அதை உணர்த்துவதே அகத்திய முனியின் வரலாறு.
பழையூர் தலத்தை அடைந்த அகத்திய பெருமான் ஸ்ரீஅயன மூர்த்தியை வலம் வந்து தொழுதார். தும்பிக்கை நாதன் அகத்தியரை வாழ்த்தி ஒரு வாழை இலையால் மூடப்பட்ட தங்கத்தட்டை அவருக்கு அளித்தார்.
கணபதி மூர்த்தி, ”சிவ குழந்தையே, தன்னுடைய அடியார் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு சிவன் வைப்பானா ? சற்றும் தாமதியாது நேரே ஆகாய மார்கமாக பொதிய மலை செல்வாய். சிவ சிவ மங்களம்,” என்று வாழ்த்தி அகத்தியருக்கு விடை கொடுத்தார்.
கணபதி மூர்த்திக்கு தன் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்து விட்டு ஆகாய மார்கமாக பொதிய மலையை அடைந்தார் அகத்திய முனி.
வழி மேல் விழி வைத்து காத்திருந்த லோபாமாதா அகத்திய முனியைப் பார்த்து திகைத்தாள். கண் இமைக்கும் நேரத்தில் தனது கணவர் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஏன் அகத்தியரே எதிர்பாராத கூத்துதானே எம்பெருமான் நிகழ்த்திய அயன கணபதி கூத்து ?
லோபாமாதா பின் தொடர குடிசைக்குள் சென்ற அகத்தியர் கணபதி பிரசாதமான தங்கத் தட்டை தான் வழிபடும் ஸ்டிக சிவலிங்கத்தின் முன் வைத்து தரையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி எழுந்து அந்த தங்கத் தட்டை மூடியுள்ள வாழை இலையை எடுத்தார்.
அவ்வளவுதான். அடுத்த கணம் அகத்தியர் லோபாமாதா தம்பதியர் கண் முன் இருந்த அனைத்தும் மறைந்தன. ஓர் அற்புத அரண்மனை. அங்கே தோன்றியது. ஆயிரமாயிரம் பணிப் பெண்கள். எங்கும் தங்கமும் வைரமும் வைடூரியமும் கண்ணைப் பறித்தன. ஆங்காங்கே அழகிய நீர்ச் சுனைகள். அதன் நடுவே வைரங்களால் பதிக்கப்பட்ட தங்கப் படுக்கை அன்றலர்ந்த தாமைரையைப் போல பளிச்சிட்டது.
ஸ்ரீஅயன கணபதி அளித்த அரச போகத்தின் விளைவால் அகத்திய லோபாமாதா தம்பதிகள் பெற்ற ஈடு இணையற்ற அருள் முத்தே ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர். தன்னை ஒத்த தனயனை அகத்திய முனி பெற்ற வரலாறு இதுவே.
சித்தர்கள் அகத்திய முனியின் தவப் புதல்வனை ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் என்ற அடை மொழியுடனே அழைக்கிறார்கள். காரணம் என்ன ?
முதல் ஸ்ரீ இம்மைக்கும் மறுமைக்கும் நலந் தரக் கூடிய செல்வன் என்பதையும்,
இரண்டாவது ஸ்ரீ திருமாலைப் போல அழகு பொருந்தியவன் என்பதையும்

மூன்றாவது ஸ்ரீ நம்முடைய அகம் என்னும் உள்ளத்தில் நிரநதரமாய் எழுந்தருளி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியவன் என்பதையும் குறிக்கும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் மகராஜ் கீ ஜெய்.
யாகம், வேள்வி, யக்ஞம் என்னும் அனைத்துமே இடம், உடல்,  மனம், உள்ளம் என அனைத்தையுமே தூய்மைப்படுத்துவதற்காகத்தானே இயற்றப்படுகின்றன. எனவே தூய்மையிலும் தூய்மையான லோபாமாதா அகத்தியர் தம்பதிகள் புனிதத்திலும புனிதமான பழையூர் சிவத் தலத்தில் கருணையிலும் கருணை உள்ள அயன கணபதி மூர்த்தியின் அருள் பிரசாதமாகப் பெற்ற ஸ்ரீஸ்ரீஸ்ரீ இத்மாலகர் அனைத்து வேள்விகளிலும் பிரதான மூர்த்தியாக, எஜமானனாக வழிபடப் படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.

பரஸ்பர திருஷ்டி யோகம்

இவ்வுலகில் விலை உயர்ந்த ஆடைகளையும் பொன் ஆபரணங்களையும் விரும்பாத பெணகள் எவருமே இல்லை எனலாம். அவ்வாறிருக்க லோபாமாதா தனக்காக எதையுமே வேண்டாத நிலையிலும் ஒரு விலை உயர்ந்த படுக்கையை எதற்காக அகத்தியரிடம் வேண்டினாள் ?
அகத்தியர் ராஜ அலங்காரத்தில் திகழ வேண்டும் என்பது ஓரளவிற்கு ஒரு மனைவியின் நியாயமான விருப்பம் என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எதற்காக லோபாமாதா கட்டிலை குறிப்பிட்டாள் ? இங்குதான் அன்னையின் தனக்கென வாழா தனிப் பெரும் குணம் சுடர் விட்டு பிரகாசிக்கிறது.
இறைவன் படைத்த ஜீவ ராசிகள் அனைத்திற்கும் இன விருத்தி என்பதே தலையான தர்மம், கடமையாகும். இவ்வகையில் லோபாமாதா தம்பதியர் தங்கள் தர்மத்தை முறையாக நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு கட்டிலின் மேல் இயற்றும் தவ யோகமே சிருஷ்டியை பூரணமாக்கும்.
இதை விரிவாக விளக்கினால் தம்பதியர் சங்கமத்திற்கு முன் ஆற்ற வேண்டிய யோகம் ஒன்று உண்டு. அதாவது உடல் சுத்தியுடன் தம்பதியர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு படுக்கையின் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒருவரை ஒருவர் பார்த்துக கொண்டவாறே அமர்ந்திருக்க வேண்டும் என்பதே இந்த யோகத்தின் நியதி ஆகும்.
இந்த யோக நேரம் முழுவதும் பூரண மௌனம் அனுஷ்டிக்க வேண்டும் என்பது முக்கியம். எந்த மந்திரமும் துதியும் தேவையில்லை. ஆனால், தங்களுக்கு விருப்பமான துதியையோ மந்திரங்களையோ மனதிற்குள் ஓதுவதும் தவறு கிடையாது.
தம்பதியர் இயற்றக் கூடிய மிக மிக எளிமையான யோகம் இது. ஆனால், இதை பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. சித்தர்கள் விளக்கும் வழிபாடுகள் எதையும் வெறும் வார்த்தைகளால், கற்பனை குதிரை மேலேறி புரிந்து கொள்ள முடியாது.
முயற்சி திருவினையாக்கும்.
அகத்தியர் லோபாமாதா இயற்றிய இந்த பரஸ்பர திருஷ்டி யோகத்தை மக்கள் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த பெருந்தகையே ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார். தந்திர சாஸ்திரம் கூறும் 64 சாதனை முறைகளை எளிமைப்படுத்தி மக்களுக்குப் போதிப்பதற்காக கொல்லிமலையில் ஏழாண்டுகள் தவமியற்றி தன்னை நம்பி வரும் அடியார்களுக்காக 64 தந்திர சாதனைகளை ஒரே யோக முறையில் வெற்று உறைத் த்த்துவமாக அளித்துள்ளார்கள் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
தம்பதிகளுக்கு உத்தம சந்ததிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தக் கூடிய எளிய யோக முறையே பரஸ்பர திருஷ்டி யோகம். இதன் அடிப்படையில் அமைந்துள்ள த்த்துவத்தை புரிந்து கொண்டால் சமுதாயத்தையே அமைதிப் பூங்காவாக மாற்றி விடலாம். முயன்றுதான் பாருங்களேன்.
ஆனந்த வல்லியா, வள்ளியா ?
பழையூர் சிவத்தலத்தில் இறைவி ஸ்ரீ ஆனந்த வல்லியா அல்லது ஸ்ரீஆனந்த வள்ளியா என்பது சிலருக்கு ஏற்படும் குழப்பம். வள்ளி, வல்லி இரண்டும் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு பொருளையே குறிக்கின்றன.
வள்ளி என்றால் அன்புக் காதலி என்ற பொருளையும் வல்லி என்றால் அன்புடன் கொடி போல் கணவனைச் சுற்றி உள்ளவள் என்றும் பொருள்படும். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
பழையூர் சிவத்தலத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் உள்ள அன்புப் பிணைப்பு வெளிப்படையாகவே பக்தர்கள் உணரும் வண்ணம் இம்மூர்த்திகள் திருவிளையாடலைப் புனைகிறார்கள். எப்படி ?
அகத்தியர் நட்சத்திரம் நமது பூமியை மெதுவாக நெருங்கி வரும். பின்னர் பூமியை விட்டு விலகிச் சென்று விடும். யுக நியதியாக சத்ய யுகம் என்னும் கிருத யுக தொடக்கத்தில் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்கும். தற்போது கலியுகம் அல்லவா ? அகத்திய நட்சத்திரம் பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு சென்று விட்டது.
சத்ய யுகத்தில் மக்கள் தூய்மையாக இருப்பதால் அகத்தியர் அந்நிலையை விரும்பி பூமியை நெருங்குகிறார். கலியுகத்தில் எங்கும் அதர்ம்ம் பெருகி தீய எண்ணங்கள் பெருகி உள்ளதால் அதை விரும்பாத அகத்தியர் பூமியிலிருந்து விலகிப் போய் விட்டார் என்று கூறலாம்.
இதற்கு மாறாக. அகத்தியர் பூமியை நெருங்குவதால் மக்கள் மனத் தூய்மையுடன் கடவுள் பக்தியுடன் இருக்கிறார்கள். அகத்தியர் பூமியை விட்டு விலகிப் போய் விடுவதால் அதர்ம்ம் பூமியில் தலை விரித்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
இம்முறையில் பழையூர் சிவத்தல அன்னை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் இறைவனை நெருங்குவதும் இறைவனிடமிருந்து விலகிப் போவதுமாக ஒரு திருவிளையாடலைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறாள் என்பது வேறெங்கும் நாம் காணாத அற்புத இறை லீலையாகும்.
இத்தல இடிபாடுகள் இந்த உண்மையை உணர வைக்கும்.
ஒரு காலத்தில் அன்ன ஸ்ரீ ஆனந்தவல்லி இறைவனுக்கு வலப் புறம் எழுந்தருளி இருந்தாள். தற்போது அந்த ஆலயம் இடிந்து போய் விட்டதால் இறைவி இறைவனுடன் நெருங்கி ஒரே சன்னதியில் காட்சி தருகிறாள்.
என்னே எம்பெருமான் இறை லீலை ?

வாஸ்து சக்திகள் அற்புதம

பழையூர் சிவத்தலத்தில் ஈசான்ய திசையில் அகத்திய பூர்வம் எனும் புனித வாஸ்து சக்திகள் குடி கொண்டுள்ளதாக குறிப்பிட்டோம் அல்லவா ? அது போல அத்தல கன்னி மூலையில் நிருதி பிறை என்னும் 33வது வாஸ்து திசையில் அற்புதமான வாஸ்து சக்திகள் குடி கொண்டுள்ளன.
ஒரு வாஸ்து திசையின் கோணம் 5.625 பாகையை ஒன்பது பகுதிகளாக பிரித்து அதில் எட்டு பகுதிகளை (0.625 x 8 = 5 பாகைகள்) கன்னி சிரை எனவும் ஒரு பகுதியான 0.625 பாகையை உடுக்கை அயனம் எனவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். (உடுக்கை அயனம் படம் பார்க்கவும்).
இந்த கன்னி சிரை என்னும் வாஸ்து கோணத்தில் உடுக்கை சிவ சித்தர் அற்புத வாஸ்து சக்திகளை நிரவியுள்ளார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.
நிருதி மூலையின் ஒரு பகுதியான கன்னி சிரையில் எப்படி இந்த இரகசியங்கள் பதிந்துள்ளன என்பதை காண்போமா ?

வாஸ்து சக்தி தீர்த்தம்
பொன்னகரம், மணமேல்குடி

வாஸ்து பகவான் வருடங்களில் எட்டு மாதங்களில் தனது நித்திரையிலிருந்து எழுந்து மக்களுக்கு வாஸ்து சக்திகளை அளிக்கிறார். இத்தகைய எட்டு தினங்களின் வாஸ்து சக்திகளை மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் எட்டுப் படித்துறைகளில் நிர்மாணித்துள்ளனர் சித்தர்கள்.
அது போல சந்திரன் தன்னுடைய தேய்பிறை அஷ்டமி திதியில் வானில் நிலவும் வடிவத்தில் இத்தகைய எட்டு தினங்களின் வாஸ்து சக்திகளை மணிவாசகப் பெருமான் ஆவுடையார் கோவில் திருத்தலத்தில் அத்தல குருந்த மரத்தின் அருகில் உள்ள கிணற்றில் அமைத்துள்ளார் என்பது பலரும் அறியாத வாஸ்து இரகசியம்.
இந்தக் கிணற்றின் தரிசனமே எத்தனையோ வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியதாகும். கிணறு அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வாஸ்து நியதிகள் ஏராளம். அதை தற்காலத்தில் எவருமே பின்பற்றுவது கிடையாது.
உதாரணமாக, கிணற்றை 100 அடிக்கு மேல் தோண்டக் கூடாது. போர்வெல் அதாவது ஆழ்கிணறு அமைத்து நீரை பூமியிலிருந்து உறிஞ்சி எடுக்கக் கூடாது. கிணற்றின் அகலத்தைப் போல மூன்று மடங்கு ஆழத்திற்குத்தான் கிணற்றை அமைக்க வேண்டும். இவை எல்லாம் அவசியமான வாஸ்து நியதிகளே. ஆனால், ஆயிரத்தில் ஒருவர் கூட இந்த நியதிகளை பின்பற்றுவது கிடையாது.
எனவே மக்களுக்காக தவப் பயன்களை நல்கி வரும சித்தர்களும் மகான்களும் இவ்வுண்மையை உணர்ந்துள்ளதால் மணிவாசகப் பெருமான் வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக மேற்கூறிய கிணற்றை அமைதுள்ளார். இந்த கிணற்றில் அமைந்துள்ள சிறுபடிகள் தேய்பிறை சந்திரனின் அஷ்டமி திதி வடிவத்தை ஒத்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமாகும்.
இந்த வாஸ்து கிணற்றிற்கு இன்னும் மெருகூட்டக் கூடிய தெய்வீக அம்சங்களும் உண்டு. இந்த கிணற்றுக்கு எதிரே உள்ள வசந்த மண்டபத்தின் மேல் விதானத்தில் நவகிரகங்கள் எழுந்தருளியுள்ளனர். இந்த நவகிரகங்களைச் சுற்றி (எட்டு+எட்டு) 16 கல் வளையங்கள் தொங்குகின்றன.
பொதுவாக இந்த கல் வளையங்களைப் பாரப்பவர்கள் சிற்பிகள் தங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்காக ஒன்றிற்குள் ஒன்றான கல் வளையங்களை அமைத்துள்ளார்கள் என்று நினைப்பதுண்டு.
”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் …” என்று எம்பெருமானின் வானலாவிய பெருமையை வியந்து பாடும் மணிவாசகத் தலத்தில் மனிதன் தன் திறமையைப் பறைசாற்ற கனவிலும் நினைக்க முடியுமா ?
சற்றே ஆராய்ந்து பார்த்தால் இந்த கல் வளையங்களின் அற்புத ஆன்மீக இரகசியங்கள் நம்மை மலைக்க வைக்கும். இந்த பூமியில் உலகமும் உயிர்களும் தோன்றிய அதிசயத்தையே இந்த கல் வளையங்கள் மறை வாக்கியங்களாக, பரிபாஷையாக வெளிப்படுத்துகின்றன.
எப்படி ?

அஷ்டமி திதி நிலவு

விவேகானந்தரை ஒருமுறை ஒரு அன்பர், ”சுவாமி, நமக்கு வரக் கூடிய துன்பங்களுக்குக் காரணம் நாம் முற்பிறவியில் செய்த வினைகளே என்று கூறுகிறோம். முற்பிறவியில் ஏற்படும் துன்பங்களுக்குக் காரணம் அதற்கு முந்தைய பிறவியின் நல்வினை தீவினைகளே என்று பெரியோர்கள் பதில் சொல்கிறார்கள். அப்படியானால் நல்வினை தீவினை எதுவும் இல்லாமல் நம்முடைய ஆத்மா ஒரு சமயம் இருந்திருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட தூய ஆத்மா எப்போது எங்கு நல்வினை தீவினை என்ற கர்மத்தை சேர்த்துக் கொண்டது ?” என்று கேட்டார்.
உடனே விவேகானந்தர், ”சகோதரா, ஏன், எங்கு, எப்படி என்ற கேள்விகள் எல்லாம் கால தேச (time and space)  நியதிக்குள் அமைபைவை. கர்ம வினைகளோ இவைகளைத் தாண்டி, இவைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் கோட்பாடுகள். எனவே கால தேச ஆதிக்கத்திற்குள் இருந்து கொண்டு அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களை எப்படி உணர்ந்து கொள்ள முடியும் ?” என்று கேட்டார்.
இந்த கேள்வியும் பதிலுமே மேற்கூறிய ஆவுடையார் கோவில் வளையங்கள். கால தேசம் என்ற இரண்டு கோட்பாடுகள் ஒனறிற்குள் ஒன்றாக அமைந்துள்ளன. இவற்றில் எந்த ஒன்றைத் தாண்டி சென்றாலும் மற்றொன்று நம்மை பாதிக்காது.
இதைச் சற்று விவரித்தால், 1000 மைல் தூரத்திற்கு பரந்துள்ள ஒரு ஊரை நீங்கள் நொடியில் கடந்து விட்டால், அதாவது காலத்தின் பரிமாணத்திற்குள் நீங்கள் இல்லாதபோது அந்த 1000 மைல், அதாவது தேசம் என்ற கோட்பாடு உங்களைப் பாதிக்காது.
அதே போல் 1000 மைல் அகலம் உள்ள பூமிப் பகுதி black hole என்னும் சக்தியால் ஒரு குண்டூசி முனைக்கு சுருக்கப்பட்டு விட்டால் அங்கு காலம் என்ற கோட்பாட்டிற்கு வேலையே இல்லை. அது போல கால தேசம் என்ற மேற்கூறிய வளையங்களில் ஒன்றை நீங்கள் உடைத்து விட்டால் மற்றொன்றும் பலனில்லாமல்தானே போகும் ?
எனவே நவகிரகங்கள் கால தேச நியதிக்குள் உட்பட்டே இயங்குகின்றன. கால தேசத்தை தாண்டிச் செல்லக் கூடியவன் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்கு ஆட்படாதவன் ஆகிறான் என்ற அற்புத தெய்வீக செய்திகளை உணர்த்துவதே இந்த கல் வளையங்களின் மறை பொருளாகும்.
எப்படி இந்த கால தேச நியதிகளை தாண்டிச் செல்வது ? அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முக்கியமான எட்டு வாஸ்து திசைகளிலிருந்து வரக் கூடிய எண்ணங்களை அறியக் கூடியவன் கால தேச கட்டுப்பாட்டை மீறக் கூடிய சக்தி பெறுகிறான். ஆனால், அதற்கு குருவின் அனுகிரகம் தேவை.
எப்படிப்பட்ட குரு ? குரு உகந்து அமரும் மரமான குருந்த மர நிழலில் அமர்ந்து மணிவாசகரை ஆட்கொண்ட எம்பெருமானே மக்கள் அனைவரையும் கால தேச நியதிகளைத் தாண்டி, கர்ம வினைகளைக் களைந்து ஆட்கொள்ளக் கூடியவன். இந்த அற்புத ஆன்மீக உண்மைகளை உணர்த்துபவையே ஆவுடையார் கோவில் வசந்த மண்டபம், குருந்த மரம், வாஸ்து தீர்த்தம் என்ற குரு கோவிந்த சின்னங்களாகும்.
எனவே ரோஹிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் தோன்றிய உடுக்கை சித்தர் பிரான் இயற்கையாகவே வாஸ்து சக்திகளை நிர்மாணிக்கும் தெய்வீக சக்திகளுடன் விளங்கினார் என்பது இப்போது தெளிவாகிறது அல்லவா ?

நந்தி மூர்த்திகளின் அருள் பிரவாகம்

மக்களுடைய பெரும்பாலான பிரச்னைகளை, வேதனைகளை துவார பாலக மூர்த்திகளும், நந்தீஸ்வர மூர்த்திகளுமே தீர்த்து விடுவார்கள். அவர்களிடம் முறையிட்டாலே போதும்.
இவ்வகையில் கடுவெளி திருத்தலத்தில் அருள்புரியும் குறைகேள் நந்தீஸ்வர மூர்த்தி மக்களுடைய குறைகளைக் கேட்டு அதை அம்பாளிடம் தெரிவித்து இறையடியார்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார். இவருடைய தோற்றத்தைப் பார்த்தாலே இவர் எப்போதும் நம் குறைகளைக் கேட்கும் தயார் நிலையில் இருப்பது தெளிவாகத் தோன்றும்.
பெண்களுக்கு புகுந்த வீட்டினரால் ஏற்படும் துன்பங்கள், மாமனார் மாமியாருக்கு மருமகளால் விளையும் வேதனைகள், பெற்றோர்களுக்கு பிள்ளைகளாலும், பிள்ளைகளுக்கு பெற்றோர்களாலும் வரக் கூடிய துன்பங்கள் உண்டு. இத்தகைய உறவு முறைகளால் ஏற்படும் துன்பங்கள் மட்டும் அல்லாது அலுவலகங்களில், பணி புரியும் இடங்களில், வசிக்கும் இடங்களில் மக்கள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம்.
இந்த துன்பங்களை எல்லாம் கடுவெளி அம்பாளிடம் நந்தீஸ்வர மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் கருணா மூர்த்தியிடம் தெரிவித்தால் பக்தர்களின் குறைகளை தேவியிடம் தெரிவித்து பக்தர்களுக்கு உரிய நிவாரண முறைகளை பெற்றுத் தருகிறார் நந்தீஸ்வர மூர்த்தி.

குறைகேள் நந்தீஸ்வர மூர்த்தி
கடுவெளி, திருவையாறு

அது போல பழையூர் நந்தீஸ்வர மூர்த்தியின் அனுகிரக சக்திளை அறிவதற்கு முன்னால் அவர் இத்தலத்தில் எழுந்தருளிய காரணத்தை அறிந்து கொள்வது அவசியம்.
பட்டினத்தார் காவிரிப்பூம்பட்டிணத்தில் திருவெண்காடர் என்ற நாமத்துடன் வணிகராக வாழ்ந்தபோது அவரிடம் சந்திரகாந்தன் என்ற ஒரு வேலைக்காரன் இருந்தான். இறை பக்தியுடனும், தன்னுடைய எஜமானன் மீது விசுவாசத்துடனும் திகழ்ந்தான் சந்திரகாந்தன்.
முருகப் பெருமானே மருதவாணன் என்ற குழந்தையாய் திருவெண்காடரிடம் வாழ்ந்து வந்தார். அவரை வியாபாரத்திற்காக திருவெண்காடர் சந்திரகாந்தன் துணையுடன் அனுப்பி வைத்தார். ஆனால், வியாபாரம் முடிந்து மருதவாணன் திரும்பி வரவில்லை. மருதவாணன் அனுப்பிய கப்பல் மட்டும் ஊருக்குத் திரும்பி வந்தது. கப்பல் முழுவதும் நிறைந்திருந்த வராட்டிகளை சந்திரகாந்தன் திருவெண்காடருக்கு காண்பித்து அதையே மருதவாணர் தனது தந்தைக்கு கொடுக்கச் சொன்னதாக கூறினான்.
திருவெண்காடருக்கு கோபம் பொங்கியது. சினம் மேலிட, ”எவ்வளவோ அன்புடன் மருதவாணனை வளர்த்தேன். அதற்கு நன்றியா கேவலமான இந்த விராட்டி,” என்று கூறி ஒரு வராட்டியை எடுத்து எறிந்தார். அது அருகிலுள்ள தூணில் மீது பட்டு தெறித்து விழ அதிலிருந்து மாணிக்கக் கற்கள் நாலா புறமும் சிதறி மின்னின.
திகைத்தார் திருவெண்காடர். அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை மின்னியது, ”புலிக்குப் பிறந்த்து பூனையாகுமா ?” என்று மனதினுள் நினைத்துக் கொண்டிருந்தபோது சந்திரகாந்தன் மருதவாணன் அளித்த ஒரு ஓலைச் சுவடியை திருவெண்காடரிடம் கொடுத்தான்.
ஓலையைப் பிரித்து படித்துப் பார்த்தார் திருவெண்காடர். அதில், ”காதறுந்த ஊசியும் வாராது கடை வழிக்கே,” என்ற வார்த்தைகள் மாணிக்கத்தை விட பிரகாசமாய் மின்னின.
ஞானம் பெற்றார் திருவெண்காடர். திருவெண்காடர் பட்டினத்தார் என்ற ஞானியாய் உயிர் பெற்றார்.
அந்த கப்பலை அப்படியே சந்திரகாந்தனிடம் கொடுத்து விட்டு தன்னிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் தானமாக இறைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் பட்டினத்தார்.
எனவே பட்டினத்தார் மட்டுமா ஞானம் பெற்றார் ? சந்திரகாந்தனும் தான். கப்பல் முழுவதும் இருந்த வராட்டிகளை உடைத்து அதிலிருந்த மாணிக்கங்களை தானமாக அளித்து விட்டு அந்த பசு விராட்டிகளை எரித்து அற்புத்மாக விபூதி தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வந்தான் சந்திர காந்தன். முருகப் பெருமானின் திருக்கரங்கள் பட்ட பசு வரட்டிகள் அல்லவா ?
முருகப் பிரசாதம் பெற்ற பக்தர்களுக்கெல்லாம் நோய் நொடிகள் தீர்ந்ததோடு மட்டுமல்லாது இறை பக்தியும் வளரலாயிற்று. ஞான பண்டிதனின் பெருமையை இவ்வாறு நிறைவேற்றிய சந்திரகாந்தன் பட்டினத்தார் திருவொற்றியூரில் சமாதி அடைந்த பின்னரும கூட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய விபூதி சேவையைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தான். ஒரு கப்பல் முழுவதும் நிறைந்த விராட்டிகளைத் தீர்ப்பதென்பது எளிய செயல் அல்லவே ?
சந்திரகாந்தனின் சேவையை பாராட்டிய எம்பெருமான் அவன் வேண்டும் வரத்தைக் கேட்டார். அதற்கு சந்திரகாந்தன், சுவாமி, ”மக்கள் அனைவரும் அழியக் கூடிய செல்வமான காசு, பணம், வீடு, வாகன வசதிகளையே கேட்கிறார்கள். பக்தர்கள் அழியாப் பெருநிலையை தாங்கள் கருணை கூர்ந்து அருள வேண்டும் என்பதே அடியேனுடைய பிரார்த்தனை,” என்று தன் விருப்பத்தை வெளியிட்டான்.

லட்சுமி சேகர நந்தி மூர்த்தி

இறைவனும் மகிழ்ந்து, ”சந்திரகாந்தா, உன்னுடைய விருப்பம் பூர்த்தியாகும். லட்சுமிசேகர நந்தி மூர்த்தியாய் உன்னை பழையூர் சிவத்தலத்தில் ஏற்றுக் கொள்வோம். உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கெல்லாம் நிரந்தர லட்சமி கடாட்ச சக்திகளே நந்தி பிரசாதமாக கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
எம்பெருமான் திருவருளால் பழையூரில் குடி கொண்ட நந்தீஸ்வரர் எப்படி தன்னுடைய அனுகிரக சக்திகளை வாரி வழங்குகிறார் ?
காலையிலிருந்து மாலை வரை சூரிய பகவான் அருளும் சூரிய கிரணங்களின் சக்தி தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். சூரிய உதயத்திற்கு முன் ஏழு நிமிடங்களுக்கு முன் சூரியனின் அகத்திய ஜோதி கிரணங்கள் வானில் வியாபிக்கும் என்று ஏற்கனவே கூறினோம் அல்லவா ? அது போல சூரியன் மறைவதற்கு முன்னால் பொன் மாலை கிரணங்கள் என்ற தாவர சக்தி கிரணங்கள் தோன்றுகின்றன.
இதிலிருந்து வந்ததே பொன் மாலைப் பொழுது.

பழையூர் திருத்தல நந்தி மூர்த்தி கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளதால் மாலை நேர கிரணங்கள் அனைத்துமே நந்தி மூர்த்தியின் மேல் பிரகாசிப்பதால் இந்த பொன் மாலை சூரிய கிரணங்களை நந்தி மூர்த்தி ஈர்த்து அவற்றை எம்பெருமான் வழங்கிய வரத்தால் நிலையான லட்சுமி கடாட்ச சக்திகளாக மாற்றி தன் பெயருக்கு ஏற்றபடி அவற்றை குளிர் சந்திர கிரணங்களாக எம்பெருமானுக்கு அளிக்கிறார்.
லட்சுமி கடாட்ச சக்திகளை சேகரித்து ந்ந்தீஸ்வரர் அளிப்பதால் இப்பெருமான் லட்சுமிசேகர நந்தி மூர்த்தி என்றழைக்கப்படுகிறார்.
அகத்திய பூர்வ கோண விளைவால் சூரிய பகவானின் பொன் மாலை கிரணங்கள் நந்தியெம் பெருமானின் திருமேனியில் இடது பாகத்தை விட வலது பாகத்தில் நிறையவே நிறைகின்றன. இதன் பயனாக விவசாயிகளுக்கும் விவசாய பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கும் நந்தியெம் பெருமானின் தரிசனம் அற்புத லட்சுமி கடாட்ச சக்திகளை அளிக்கிறது.
பொன் மாலை தரிசனத்தில் மற்றோர் அதிசயமும் மறைந்துள்ளது. மாலைப் பொழுதில் சூரியனிடமிருந்து வெளிப்படும் கிரணங்களில் பசும் பொன் சக்திகள் நிறைந்துள்ளன. செல்வ வளர்ச்சியையும், நேத்ர குளிர்ச்சியையும் அளிப்பவையே பசும் பொன் சக்திகள்.
நெல் வயல்களை காலையில் பார்த்தால் ஒரு விதமாகவும் மாலையில் பார்த்தால் வேறொரு விதமாகவும் காட்சி அளிக்கும். மாலை நேர கிரணங்களில் வியாபித்துள்ள பசும் பொன் சக்திகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். நெற் பயிர்களுக்கு பசும் பொன் சக்திகளை எளிதில் கிரகிக்கும் சக்தி உண்டு.
அதனால்தான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பானைகளில் நெல்மணிகளை நிரப்பி வைக்கும் வழக்கமும், கோபுர கலசங்களில் நெல்லை நிரப்பி வைக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.
பெருகமணியைச் சுற்றி எங்கும் நெல் வயல்கள் சூழ்ந்துள்ளதால் மற்ற தலங்களைக் காட்டிலும் இத்தலத்தில் பசும் பொன் கிரண சக்திகள் ஏராளமாக பரிணமித்துள்ளன.
மாலை நேரங்களில நெல் வயல்களின் அருகே நின்று கொண்டோ அமைதியாக ஓரிடத்தில் அமர்நது கொண்டோ நெற்பயிரை உற்று நோக்கியவாறு ”மநதிரமாவது நீறு …” எனத் தொடங்கும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருநீற்றுப் பதிகத்தை ஓதி வந்தால் நெற் பயிர்களை பூச்சி அரிக்காது, கண் நோய்கள் விலகும், தலைவலி தீரும்.

பசு வராட்டியில் லட்சுமி கடாட்சம்

பழையூர் திருத்தல நந்தீஸ்வர மூர்த்தி அருளும் நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளை பெறும் வழிபாடாக சித்தர்கள் அருள்வது என்ன ? ஒரு பசு வராட்டியின் மேல் தாமரை இலையை வைத்து அதன் மேல் ஆறு பசு நெய் அகல் தீபங்களை பிறை வடிவில் ஏற்றி நந்தி மூர்த்திக்கு முன் வைத்து வழிபடுவதே இத்தல நந்திக்கு உரிய சிறப்பான வழிபாடாகும்.
பசு நெய் தீபங்களை ஏற்றிய பின்னர் அகத்தியர் அருளிய மகாலட்சுமி துதியை ஓதியவாறே இத்தல மூர்த்திகளை வலம் வரவும். தீபங்கள் குளிர்ந்த பின்னர் பசு விராட்டியை வீட்டிற்கு எடுத்து வந்து அதை எரித்து விபூதி தயாரித்து அந்த விபூதியை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தி வருவதால் நிரநதர லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகும். நோய்கள் குணமாகும்.
முருகப் பெருமான் பட்டினத்தாருக்கு மாணிக்கக் கற்களை பசு விராட்டியில்தானே பதித்து அளித்தார். இதன் தாத்பர்யம் என்ன ?
கிராமப் புறங்களில் இன்றும் ஒரு வழக்கு உண்டு. வயதான நாகங்கள் இரை தேடும் போது தங்கள் வாயில் உள்ள மாணிக்க கற்கள் வெளியே கக்கி வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் இரை தேடச் செல்லும். அப்போது அந்த நாகரெத்தினத்தின்மேல் சாணைத்தைப் போட்டு ரெத்தினத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது.
இது தவறான வழக்கு. காரணம் நாகங்கள் இரத்தினங்களை தங்கள் உடலிலிருந்து வெளியே எடுக்க முடியாது. மிகவும் முதிர்ந்த நாகங்களின் உடலில் இரத்தினங்கள் தோன்றியிருந்தால் நாகங்கள் வாயைத் திறக்கும்போது அந்த இரத்தின் ஒளி வெளியில் வீசும். அந்த ஒளியில் நாகங்கள் இரை தேடும் என்பதே உண்மை.
ஆனால், இந்த கிராமக் கூற்றில் ஒரு உண்மை உள்ளது. அதாவது ரெத்தினத்தை தூய்மைப்படுத்தும் தெய்வீக சக்தி பசுஞ் சாணத்திற்கு மட்டுமே உண்டு என்பதே அது.
எனவே நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெற விரும்பும் பெண்கள் தங்கள் கையாலேயே பசு விராட்டியைத் தட்டி தங்களுடைய ஐந்து விரல் ரேகைகளும் பதியுமாறு செய்து, அந்த வராட்டியில் மேற்கூறிய பூஜைகளை நிறைவேற்ற வேண்டும்.
பசு வராட்டி மட்டுமல்லாது பசுஞ் சாணத்தில் ஐந்து விரல் நுனிகளால் பிடிக்கப்படும் பிள்ளையார் மூர்த்திகளுக்கும் லட்சுமி கடாட்ச சக்திகள் அதிகம். இக்காரணம் பற்றியே லட்சுமி பூஜைகள், பூமி பூஜைகள், விதை நெல் பூஜைகள் போன்றவற்றில் பசுஞ் சாண பிள்ளையாரை வைத்து பூஜிக்கும் பழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. வெள்ளிக் கிழமை, வளர்பஞ்சமி திதி கூடி வரும் நாட்களில் நிறைவேற்றப்படும் இத்தகைய பசுஞ் சாண பிள்ளையார் மூர்த்தி பூஜைகள் தம்பதிகளுக்கு நீண்ட ஆயுளை வளர்ப்பதுடன் குடும்ப ஒற்றுமையையும் விருத்தி செய்யும். கணவன்மார்களின் தீய பழக்கங்கள் மறையும்.
இப்போது மற்றோர் இனிமையான நிகழ்ச்சியும் உங்கள் நினைவுக்கு வரலாம். லோபாமாதா அகத்திய முனியிடம் விலை உயர்ந்த கட்டில் ஒன்றைக் கேட்டாள். அப்போது ஸ்ரீஅயன கணபதி அருளால் தங்க அரண்மனையில் மாணிக்கங்கள் ஜொலிக்கும் படுக்கை ஒன்றை அகத்திய தம்பதிகள் பெற்றார்கள் அல்லவா ? லோபாமாதா தன்னுடைய குடிலை தினமும் பசுஞ் சாணத்தில் மெழுகி புனிதப்படுத்தி வந்ததால் அந்த லட்சுமி கடாட்ச சக்திகளே தங்க அரண்மனையில் வைரங்களாகவும் வைடூரியங்களாகவும் மாணிக்கங்களாகவும் பிரகாசித்தன என்பதே இந்த அற்புத நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ள தெய்வீக உண்மை. இதுவே பசுஞ் சாணத்தில் மிளிரும் பசும் பொன் சக்திகள்.
இவ்வாறு பொன் மாலைப் பொழுதில் பழையூர் நந்தியெம் பெருமானுக்கு வழிபாடு செய்யும்போது அது சனிக் கிழமையுடன் கூடினால் கிட்டும் பலன்கள் அற்புதம். சனிக் கிழமை மாலை ஐந்து மணிக்கு நிலவும் சுக்ர ஹோரை சனியுடன் நட்பு பாவத்தில் விளங்குவதால் ஸ்திர வார சக்திகளுடன் இணைந்து அற்புத லட்சுமி கடாட்ச சக்திகளை வர்ஷிக்கின்றன. அதனுடன் பிரதோஷமும் சேர்ந்தால், ஆஹா, அதன் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ?

இத்துடன் பாஸ்கர பூஜையும் பசும் பொன் தாரை கிரணங்களாக எம்பெருமான் மீது வர்ஷிக்கும்போது அதனால் கிட்டும் பலன்கள் மகா அற்புதம்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam