மனத் தூய்மைக்குச் சிறந்த பயிற்சி அன்னதானமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பஞ்சபூத வழிபாடு

மனிதன் நிலவில் இறங்கி சாதனை புரிந்தான், வான் வெளியில் உள்ள கிரகங்களுக்கும் ராக்கெட் அனுப்பினான், கடலுக்கடியில் ரயில் வண்டிகளை ஓட்டினான், எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தான் என்றெல்லாம் மனிதனின் சாதனைகளைப் பட்டியல் போட்டு பாராட்டுகிறார்கள், சாதனை என்றால் என்ன?

உண்மையில் சாதனை என்று எதுவுமே கிடையாது என்பதே சித்தர்களின் கூற்று. அப்படி ஒரு வேளை சாதனை என்று ஒன்று இருந்தால் அது இறைவன்தான், இறைவனின் நாமம்தான் சாதனை, இறைவன் விரும்பிய வண்ணம் சேவை செய்தலே சாதனை. இதுவே பெரியோர்களின் தீர்ப்பு.

இத்தகைய சாதனைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது மனிதப் பிறவிதானே. மனிதப் பிறவி என்ற ஒன்று கிட்டாவிட்டால் நாம் எந்த சாதனையையும் நிறைவேற்ற இயலாதே. இத்தகைய சாதனைகளைப் புரிய மனிதன் பெற்ற அவயவங்களே அவனுக்கு உதவி புரிகின்றன.

நமது கையை எடுத்துக் கொள்வோம். ஒரு மனித கையைப் படைப்பதற்கு சித்தர்களின் குழு ஒன்றரை சதுர்யுகங்கள் எடுத்துக் கொண்டது என்றால் மனிதனுடைய கை அமைப்பில் எத்தனை அதிசயங்கள், அற்புதங்கள் நிறைந்திருக்கும். அடுத்து உள்ளங்கையையும், ஐந்து விரல்களையும் படைப்பதற்கு மகான்களும் யோகிகளும் மூன்று சதுர்யுகங்கள் பாடுபட்டு அருஞ் சேவை புரிந்தனர் என்று சித்த கிரந்தங்கள் எடுத்துரைக்கின்றன.

ஒரு மனிதனின் உள்ளங்கையில் குறைந்தது ஒரு லட்சம் தேவதைகள் குடி கொண்டுள்ளன. எந்த அளவிற்கு நீங்கள் உங்கள் கையைப் பற்றி புரிந்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு இறைவனைப் பற்றியும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். பிதுர் லோக தேவதைகள், நவகிரக மூர்த்திகள், திதி, யோக தேவதைகள், அங்குலாஸ்திதி தேவதைகள் என கையில் குடிகொண்டுள்ள தேவதைகள் ஏராளம்.

மனித உடல் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுமே பஞ்ச பூதங்களால் ஆனதுதானே? எனவே பஞ்ச பூதங்களை முறையாக வழிபட்டால்தான் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட மனித உடல் தூய்மை அடையும். உடல் முழுமையாகத் தூய்மை பெற்றால் எவ்வித முயற்சியும் ,இன்றி மனிதனின் இதயத்தில் உறையும் இறைவனை நாம் தரிசனம் செய்ய முடியும்.


பஞ்சபூத தத்துவ விளக்கம்

செங்கல், மணல், சிமெண்ட், இரும்பு, கல் போன்ற பொருட்களைக் கொண்டு ஒரு கட்டிடம் உருவாவதைப் போல சதை, எலும்பு, ரத்தம் போன்ற பொருட்களால் நமது உடல் உருவாக்கப்பட்டடுள்ளது. ஆனால், ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் அழைக்கப்படும் மனித உடலில் உள்ள மூலப் பொருட்களுக்கு அடிப்படையாக இருப்பது ஐந்து மூலப் பொருட்கள் மட்டுமே. அதாவது, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து அடிப்படை தத்துவங்களே மனித உடலில் மட்டும் அல்லாது இந்த உலகில் உள்ள அசையும், அசையாப் பொருட்கள் அதாவது தாவரங்கள், விலங்குள், மலை, கடல் என அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.

ஆகாயத் தத்துவம்

பஞ்ச பூதங்களில் ஆகாயத் தத்துவமே மற்ற தத்துவங்களுக்கு ஆதாரமாக அமைந்து மற்ற தத்துவங்கள் நிலை கொள்ள உதவி புரிகின்றது. மேலும், ஆகாயத் தத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் மற்ற தத்துவங்கள் கால தேச பரிமாணத்திற்கு உட்பட்டு இயங்கினாலும் ஆகாயத் தத்துவம் எந்த மாறுதலுக்கும் உட்படாது. அதோடு மட்டுமல்லாமல் மற்ற தத்துவங்கள் மனிதன், இயற்கையின் விளைவுகளால் தோஷம் அடைந்தாலும், ஆகாயத் தத்துவத்தை எந்த தோஷமும் அண்டாது, எந்த மாற்றமும் அடையாமல் தூய்மையாகவே இருக்கும் இயல்புடையது.

அக்னித் தத்துவம்

பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது அக்னி தத்துவமே. எம்பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய இத்தத்துவமே அடிமுடி காணாத திருஅண்ணாமலை ஜோதிப் பிழம்பாக பெருமாளுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்தது. எம்பெருமான் எதற்காக அக்னி சொரூபியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்? எம்பெருமானின் ஆகாய தத்துவ பரவெளி ரூபத்தையோ, வாயு தத்துவ சொரூபத்தையோ அவதார வடிவங்களான பிரம்மாவும், பெருமாள் மூர்த்தியுமே காண இயலாது என்ற காரணத்தினால்தான் பெருங் கருணை கொண்டு நித்ய சத்யமான இறைவன் ஜோதிப் பிழம்பாக காட்சி தந்து அருளினான் என்பது சித்தர்கள் கூறும் விளக்கம்.

எம பயம் நீக்கும்
திருவையாறு திருத்தலம

எம்பெருமானின் அக்னி வடிவத்தை அவதார மூர்த்திகளைத் தவிர வேறு எவராலும் தரிசிக்க இயலாது என்பது உண்மையே. 1008 அண்டங்களை 108 யுகங்களாக ஆண்டான் சூரபத்மன். அந்த அளவிற்கு அவன் தபோ பலனை அசுர தவத்தால் பெற்றிருந்தாலும் இறைவனை அக்னி வடிவிலோ, வாயு, ஆகாய தத்துவ சொரூபத்திலோ தரிசிக்கக் கூடிய சக்தியைப் பெற முடியவில்லை. எத்தனையோ பிரம்மாக்களும் விஷ்ணு மூர்த்திகளும் சூரபத்மனின் தவ காலத்தில் வந்து போயினர். அத்தகைய யுகாதீத தவம் பெற்ற அசுரனாலும் கூட இறைவனின் அக்னித் தத்துவ சக்திப் பூரணத்தை தாங்கிக் கொள்ள இயலவில்லை.

மிகவும் வேண்டிக் கொண்டதன் பேரில் இறைவன் ஒரே ஒரு துளி நீராக சூரபத்மன் முன் தோன்றி அவனுடைய வேண்டுகோளைக் கேட்க திருவுள்ளம் கொண்டார். எனவே இறைவனின் தத்துவ வெளிப்பாட்டைக் கண்ணாலோ மற்ற புலன்களாலோ காண்பது, உணர்வது என்பது மிக மிக கடினம் என்பதைப் புரிந்து கொள்வதற்காகத்தான் எம்பெருமான் இத்தகைய திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான்.

இவ்வாறு முதன் முதலில் தோன்றிய தத்துவ வெளிப்பாடாக திருஅண்ணாமலை அமைந்துள்ளதால் பிரபஞ்சம் அனைத்திற்கும் அதுவே ஆதிமூலக் கடவுள் உருவமாக அமைந்து, இந்த பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சிவலிங்க வடிவமாகவும் பொலிகிறது.

அக்னித் தத்துவத்தின் ஒரு ஒளிக் கீற்றைக் காண்பது கூட அவதார மூர்த்திகளுக்கும் இயலாது என்ற காரணத்தினால்தான் எம்பெருமான் அடிமுடி காணாத ஜோதிப் பிழம்பாக திருஅண்ணாமலையில் தோன்றினார். விஷ்ணு மூர்த்தியும் படைப்புக் கடவுளும் தரிசனம் செய்தது இறைவனின் அக்னி தத்துவ வடிவத்தின் ஒரு சின்னஞ் சிறு துளியே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அவதார மூர்த்திகளுக்கே அக்னி தத்துவம் எட்டாக் கனியாக இருந்தால் ஒன்றும் அறியாத பாமர மக்கள் இறைவனின் அக்னி தத்துவத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? மக்கள் நல்வாழ்விற்காகவே அல்லும் பகலும் பாடுபடும் மகான்களுக்கும், ஞானிகளுக்கும் இந்த உண்மை புரியாததா என்ன? அதனால், அவர்கள் அக்னி தத்துவத்தை வழிபடும் சில எளிமையான வழிபாட்டு முறைகளை மக்களுக்கு அவ்வப்போது அளித்து வந்துள்ளனர்.

அக்னியில் தயாரான உணவுப் பதார்த்தங்களை சாதி, மத, இன பேதமின்றி இறைவனை நம்பி வாழும் ஏழைகளுக்கும், இறைவனை வழிபடும் அடியார்களுக்கும் அளித்தல் அற்புதமான அக்னி தத்துவ வழிபாடாகும். சிறப்பாக இறைவன் அக்னி வடிவமாக எழுந்தருளிய திருஅண்ணாமலையில் அக்னியில் தயாரான ரொட்டி (bread) கலந்த பிரிஞ்சி போன்ற உணவு வகைகளையும், திருக்கோயில் தெப்பக் குளங்களில் உள்ள மீன்களுக்கு ரொட்டி தானமும் அளித்தல் நலம்.

நெருப்பு, மின்னல், தீபம், மின்சார விளக்குகள் போன்றவை கண்களால் காணக் கூடிய அக்னி சக்தி வெளிப்பாட்டுப் பொருட்களாக உள்ளன. ஆனால், கண்களால் காண முடியாத அக்னி ஒன்று உண்டு. அதுவே ஏழைகளின் வயிற்றில் குடிகொண்டுள்ள பசி என்னும் கொடிய தீயாகும். மற்ற அக்னிகளை விட இந்தக் காணா அக்னித் தீயை காணக் கூடிய உணவால் அணைப்பதே அற்புதமான வழிபாடு என்று சித்தர்கள் போற்றுகின்றனர்.

பார்க்க முடியாத அக்னியை, பார்க்கக் கூடிய உணவால் தீர்த்து, தீர்க்க முடியாத கர்ம வினைகளைக் களையலாம் என்பது சித்தர்கள் கலியுக மக்களுக்கு அளிக்கும் நல்லுரை, அதாவது, கண்களுக்குத் தெரியாத பசி என்னும் கொடிய தீயை, நிறைய உணவை வாரி வழங்கி அன்னதானத் தரையால் அணைப்பதால் இனந் தெரியாத கர்மங்களும் களையப் பெறும் என்பது பெரியோர்கள் காட்டும் அறப் பாதை.

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா நோய்களுக்கும் அவரவர் கர்ம வினையே காரணம் ஆகும். சத்துக் குறைவு, அசுத்தமான சூழ்நிலை, நோய்க் கிருமிகளின் தாக்கம் என்று பொதுவாக நாம் கூறும் காரணங்கள் மேலோட்டமானவையே. உண்மையில் முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ மனிதன் இயற்றிய தீய காரியங்களின் விளைவே நோய்களும், உடல், மன துன்பங்களும், கடன் தொல்லைகளும். இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும் என்பதே உண்மை.

எனவே, ஒரு மனிதனின் எந்த கர்மத்தால் ஒரு நோய் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டால்தான் அந்நோயிலிருந்து அவனுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும்.

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவரான ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரைக் காண சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்ரீஅங்காளி கோயிலுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். அப்போது சிறுவனான நமது குருமங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகளும் பெரியவருடன் இருந்தான். அந்த இளைஞனுக்கு சுமார் 30 வயதிருக்கும், சிவந்த நிறம், சுருள் கேசம், பெரியவரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கினான்.

பெரியவர் அவனை எழச் செய்து, ” நீ யாரப்பா, முன் பின் தெரியாத இந்த கிழவன் காலில் விழுந்து வணங்குகிறாயே. இந்த அங்காளி காலில்தான் விழ வேண்டும். மாறும் மனம் படைத்த மனிதர்களின் காலில் விழக் கூடாது, ” என்று தனது வழக்கமான அறிவுரையை அன்புடன் வழங்கினார்.

இளைஞன் எழுந்து, ”சுவாமி, நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், உங்களைப் பார்த்தால் கடவுளையே நேரில் பார்த்தது போல் தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பெரியவர்கள் காலில் விழுந்து நல்லாசி பெற முயற்சி செய்கின்றேன். எவ்வளவு நாள் இது நடக்கும் என்று தெரியவில்லை,” என்று வினயத்துடன் கூறினான்.

அவனுடைய குரலில் தொனித்த சோகத்திற்கான காரணம் சிறுவனுக்கு விளங்கவில்லை. ஆனால், அவனுடைய இடது கால் நன்றாக வீங்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக நடந்துதான் பெரியவரைப் பார்க்க வந்தான் என்பதையும் சிறுவன் கவனித்திருந்தான்.

பெரியவரும் பரிவுடன், ”அங்காளியை நம்பி வந்த யாரும் வெறுங் கையுடன் திரும்பியது கிடையாது, ராஜா. உனக்கு என்ன பிரச்னை அவளிடம் சொல். அவ பாத்துக்குவா,” என்றார்.

இளைஞன் தொடர்ந்து, ”நான் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன். எனக்கு திருமணமாகி மூன்று வயதுள்ள ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்ற வருடம் விபத்து ஒன்றில் எனது இடது காலில் சிறிய காயம் ஏற்பட்டு, மேல் தோல் கிழிந்து விட்டது. மருத்துவர்கள் கிழிந்த தோலைச் சேர்த்து வைத்து தையல் போட்டு காயத்தைச் சரிப்படுத்தி விட்டனர்.

ஆனால், சில மாதங்கள் கழித்து காயம்பட்ட இடத்தில் மிகுந்த வலி ஏற்படவே மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது மேல்தோலின் உள்ளே இருந்த ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகக் கூறி அதை அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்தினர். மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு வேதனை அதிகமானது. அப்போது அதை சோதனை செய்த மருத்துவர்கள் காயம் அதிகமாகி புரையோடி விட்டதாகவும், இனி காலை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விட வேண்டும் என்றும் அப்போதுதான் உயிர் பிழைப்பேன் என்று சொல்லி விட்டார்கள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை.

நண்பர் ஒருவர் மூலமாக உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு ஓடோடி வந்தேன். எப்படியாவது நீங்கள்தான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்,” என்று கதறி அழுதான்.

பெரியவர் அவனுக்குப் பல ஆறுதல்கள் சொல்லித் தேற்றினார்.

சற்று நேரம் கழித்து, ”தம்பி, ஏற்கனவே சொல்லியது போல அங்காளிக்கிட்டே உன் பொறுப்பை கொடுத்து விட்டால் உன்னை நிச்சயம் காப்பபாற்றுவாள், கவலைப்படாதே.

மிகவும் எளிமையான தானத்தைச் செய்து வந்தாலே உன்னுடைய பிரச்னை தீர்ந்து விடும்.  உன்னுடைய வீட்டிற்கு அருகில் என்ன கோயில் இருக்கிறது?

என்னுடைய வீட்டின் அருகில் சொல்லும்படியாக பெரிய கோயில் ஒன்றும் இல்லை. நாங்கள் அரசாங்கம் ராணுவ வீரர்களுக்காக அளித்துள்ள குடியிருப்பில் இருப்பதால் கோயிலைக் காண வெகு தூரம் செல்ல வேண்டும்.

அப்படியா, பரவாயில்லை. உங்கள் வீட்டிற்கு அருகே ஏதாவது பள்ளிக் கூடம்  இருக்கிறதா?

ஆமாம், ஒரு அரசு ஆரம்பப் பள்ளிக் கூடம் இருக்கிறது, சுவாமி.

அது போதும். தினமும் நாலு பாக்கெட் பிரட் வாங்கி அதில் வெண்ணெய், ஜீனி தடவி பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்து வா. அங்காளி உன்னுடைய வேதனையைத் தீர்த்து வைப்பாள், என்று அந்த இளைஞனுக்கு நல்வழி காட்டி அனுப்பினார் கோவணாண்டிப் பெரியவர்.

இளைஞன் சென்றதும் சிறுவனிடம், ”எந்தக் கர்மாவின் விளைவால் அந்த இளைஞனுக்கு இந்த வேதனை வந்த சேர்ந்தது என்று புரிகிறதா?” என்று கேட்டார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மனதிற்குள், ”பள்ளியில் சொல்லும் பெருக்கல் கணக்கே புரியவில்லை. இதில் பெரியவர் சொல்லும் கர்மா கணக்கு எப்படி இந்த மர மண்டையில் ஏறும்,” என்று நினைத்தவாறு பெரியவரை அப்பாவித்தனமாகப் பார்த்தான்.,

ஏண்டா, இப்படி புத்திவிலாசமா (?) இருந்தால் எப்படிடா எதிர்காலத்தில் உன்னிடம் வரும் அடியார்களின் கர்ம வினையைத் தீர்த்து வைப்பாய்?

இங்கு வந்தவன் போன பிறவியில் நல்ல அக்னிஹோத்ரியா இருந்தான். ஒழுங்கா அக்னி காரியம் எல்லா செய்து வந்தான். ஆனால், ஒரு முறை தன்னைப் பார்த்துக் குரைத்த ஒரு நாயின் மேல் ஒரு எரியும் விறகுக் குச்சியை எறிந்து விட்டான். அது நாயின் இடது காலில் பட்டு அந்த நாய்க்குப் புண் ஏற்பட்டு விட்டது. அந்தக் கர்மாவைத்தான் இவன் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீதீர்த்த நாராயணர் ஜீவசமாதி
திருப்பூந்துருத்தி

இவன் எதிர்காலத்தில் நாட்டுக்காக பல அரிய செயல்களை நிறைவேற்ற இருப்பதால் அதை அனுசரித்து இவனுடைய பித்ருக்கள் மேலுலகத்தில் இருந்து இவனுடைய கர்மாவைத் தீர்த்து நல்வழி காட்டும்படி அடியேனை வேண்டிக் கொண்டனர். நல்லது எங்கு நடந்தாலும் அதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறு கருவியாகச் செயல்பட வேண்டும் அல்லவா? அதனால்தான் அவன் உடல் ஊனமாகி விடாமல் நன்னிலை அடைய அங்காளி இந்தக் கிழவன் மூலம் அவனுக்கு ஒரு நல்வழியைக் காட்டி விட்டாள்,” என்று ஒரு கர்ம வினை காண்டத்தை அற்புதமாக எடுத்துரைத்தார்.

பெரியவர் தொடர்ந்து, ”எதிர்காலத்தில் உன்னிடம் வரும் அடியார்கள் இத்தகைய கர்ம பரிபாலன ரகசியத்தை தெரிந்து கொள்ளும் பக்குவம் அடையாத அரை வேக்காடாகத்தான் இருப்பார்கள். இருந்தாலும் எந்தக் கர்ம வினையால் ஒருவருக்கு வியாதி ஏற்பட்டது என்று தெரியாவிட்டாலும் எந்த வித வியாதிக்கும், உடல் வேதனைக்கும் அக்னியில் தயாரான உணவுப் பொருட்கள் நிவாரணத்தைத் தரும் என்று இரகசியத்தை மட்டுமாவது அவர்கள் உணரும்படிச் செய்வது உன் கடமை,” என்றார்.

கோவணாண்டிப் பெரியவரின் அருளுரையை சிரமேற் கொண்டு அன்னதான கைங்கர்யத்தை நிறைவேற்றி வந்த நமது குருமங்கள கந்தர்வா அவர்கள் எதையுமே செயல் மூலமாகவே தமது அடியார்களுக்கு போதித்து வந்தார். அதனால், ஒவ்வொரு திருக்கார்த்திகை தீப உற்சவத்தின்போதும் திருஅண்ணாமலையில் தயாரான ப்ரட் கொண்டு பிரிஞ்சி உணவு வகைகளைத் தயார் செய்து திருக்கார்த்திகை தீப நாளில் திருஅண்ணாமலையை வலம் வரும் அடியார்களுக்கு திருஅண்ணாமலையாரின் தீப பிரசாதமாக வழங்கி உலகெங்கும் கர்ம வினையைத் தீர்த்தருளும் கர்ப்பகத் தருவாக விளங்கினார்.

மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள அனைத்து பாடல் பெற்ற திருத்தலங்களிலும், மங்கள சாசனம் பெற்ற வைணவத் திருத்தலங்களிலும் உள்ள திருக்குளங்களில் உள்ள மீன்களுக்கு ப்ரட், பன் உணவு வகைகளை அளித்து அங்குள்ள மக்களின் கர்ம வினை பரிபாலனத்தையும் மேற்கொண்டார் நமது வெங்கடராம சுவாமிகள்.

வாயு தத்துவம்

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? குழந்தை பிறந்தவுடன் அழுவது ஆரோக்கிய நிலையைக் குறிக்கும். குழந்தையின் முதல் சுவாசமே அழுகையாக வெளிப்படுகிறது என்பது மருத்துவர்களின் கொள்கை. ஆனால், குழந்தை அழுவதற்கு உண்மையான காரணத்தை அளிக்க வல்லவர்கள் சித்தர்களே.

குழந்தை பிறந்தவுடன் தான் எப்போது இறக்கப் போகிறோம் என்பது அதற்கு தெளிவாக இறைவனால் உணர்த்தப்படுகிறது. அதே சமயம் தான் இறக்கும் முன் நிறைவேற்ற வேண்டிய நற்காரியங்களும் அதற்கு இறை ஆணையாக தெரிவிக்கப்படுகிறது. மனிதப் பிறவியோ குறுகியது. செய்ய வேண்டிய நற்காரியங்களோ ஏராளம். எனவே, இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் எப்படி இத்தனை நற்காரியங்களை செய்து முடிக்க முடியும் என்ற இயலாமையால் எழும் வேதனையே குழந்தையின் அழுகையாக வெளிப்படுகிறது என்பது சித்தர்கள் நமக்குக் காட்டும் உண்மைப் பாடமாகும்.

குழந்தை அழும்போதுதான் முதன்முதலில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் என்பது உண்மையே. ஆனால், அந்த முதல் சுவாசத்தை குழந்தை எங்கிருந்து பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் தனது முதல் மூச்சுக் காற்றை ஸ்ரீதாந்த்ரீஸ்வரரின் நந்தி வாகன மூர்த்தியிடமிருந்தே பெறுகிறது என்பது இதுவரை நீங்கள் அறியாத இரகசியமாகும். சென்னை அருகே உள்ள சித்துக்காடு திருத்தலமே இந்த உலகின், பிரபஞ்சத்தின் வாயு மையமாகும். இத்திருத்தல நந்தீஸ்வர மூர்த்தியே பெருமானிடமிருந்து பெறும் வாயு தத்துவத்தை மக்கள் சுவாசிக்கக் கூடிய பிராண வாயுவாக மாற்றி மக்களுக்கு முதல் சுவாசக் காற்றாக அளித்து அருந் தொண்டாற்றி வருகிறார். இப்பெருமானுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு மனிதனின் கடமை அல்லவா? இப்பூவுலகிலிருந்து விடை பெறும் முன்னர் ஒரு முறையாவது சித்துக்காடு திருத்தல இறைவனையும் நந்தீஸ்வர மூர்த்தியையும் தரிசிப்பது இப்புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.

நந்தி எம்பெருமானின் அற்புதத் தொண்டை சாதாரண மக்களும் உணரும் வண்ணம் இப்பெருமான் தெளிவான இரு நாசித் துவாரங்களுடன் இன்றும் காட்சி அளிக்கிறார். கண்டு அருள் பெறுங்கள்.

எனவே மனிதனுக்கு இன்றியமையாத வாயுக் காற்றை, சுவாசக் காற்றை பரிபாலிக்கும் மூர்த்தியாக நந்தியெம்பெருமான் எழுந்தருளி இருப்பதால் நந்தீஸ்வர மூர்த்திக்கு நாம் இயற்றும் வழிபாடுகள் வாயு தத்துவத்தை தூய்மைப்படுத்தும் என்பது உண்மை.    

தங்கள் கையால் முறையாக அரைத்த சந்தனக் காப்பு, பசு வெண்ணெய்க் காப்பு, கொள்ளுக் காப்பு, தைலக் காப்பு போன்ற காப்புகளால் நந்தீஸ்வரரை வழிபட்டு, பசு நெய் தீபங்கள் ஏற்றி வணங்கினால் மனித வாழ்வு தித்திக்கும், இறையருள் சித்திக்கும்.

முதல் மூச்சை சித்துக்காடு நந்தீஸ்வரர் அளித்தால் மனிதனின் இறுதி மூச்சைப் பெறுபவர் யார்? மனிதனின் இறுதி மூச்சிற்குச் சொந்தமானவரும் நந்தீஸ்வர மூர்த்திதான். ஆனால், இது தன்னிச்சையாக நடப்பதல்ல. எந்த அளவிற்கு ஒரு மனிதன் இறைவனின் அருளாணையை ஏற்று தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணித்து வாழ்கின்றானோ அதைப் பொறுத்து அவனுடைய இறுதி மூச்சு சென்றடையும் இடம் அமையும்.

ஒரு சற்குருவின் மேற்பார்வையில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களின் இறுதி மூச்சு திருக்குற்றால நந்தீஸ்வரரின் திருப்பாதங்களை அடையும் என்பதை சித்தர்கள் மக்களின் இறுதி கால இரகசியங்கள் குறித்த கிரந்தங்களில் குறித்து வைத்துள்ளார்கள்.

பெரும்பாலான பக்தர்கள் நந்தியெம்பெருமானின் காதுகளில் தங்கள் கனவுகளைக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? சித்தர்களின் கோணத்தில் கனவுகள் வெறும் எண்ணத்தின் பிரதிபலிப்புகளாக அமைவதால், கனவுகளுக்குத் தேவையில்லாத முக்கியத்துவத்தை அளிப்பதால் எவ்வித பலனும் கிட்டாது.

”கனவுகள் கனவுகளாகவே இருக்கட்டும்,” என்பது சித்தர்களின் கனவு பற்றிய அறிவுரை, எனவே கனவுகளைப் பற்றிய நந்தீஸ்வர மூர்த்தியிடம் கூறி முறையிடுவதால் தங்கள் பொன்னான காலமே விரயமாகும். அதை விடுத்து, ”பிறவாமை வேண்டும், அப்படி ஒரு வேளை மீண்டும் பிறக்க நேர்ந்தால் இறை நினைவோடு இருக்கும் நிலையே வேண்டும்,” என்று நந்தி மூர்த்தியிடம் பிரார்த்திப்பதே மனிதனின் சரியான அணுகுமுறை என்று வலியுறுத்துகின்றனர்.  

மனிதன் நல்லவனாகவே பிறக்கின்றான். நல்லவனாகவே வாழ முயற்சி செய்கின்றான். ஆனால், அவனையும் அறியாமல் பற்பல தீய காரியங்களில் ஈடுபட்டு கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கிறான். இவ்வாறு மனிதனுக்குத் தோன்றும் பல தீய எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? எண்ணங்கள் பற்பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு கோணத்திலிருந்து தோன்றினாலும் அவை மனிதனை அடைவது பெரும்பாலும் மூச்சுக் காற்று மூலமாகத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

இக்காரணம் பற்றியே தியானத்திற்கு முன்னோடியாக பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை பெரியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முறையான பிராணாயாமம் மூலம் எண்ணங்களின் தாக்குதலை ஓரளவு சீர்படுத்த முடியும். ஆனால், தகுதி பெற்ற சற்குருவின் மேற்பார்வையில்தான் பிராணாயமம் பயில முடியும் என்பதால் சற்குருவின் கர்ம பரிபாலனத்தைப் பெற முடியாதவர்களுக்கும் உதவி புரிவதற்காகவே எல்லாத் திருத்தலங்களிலும் நந்திபெருமான் எழுந்தருளி மக்கள் எண்ணங்களைத் தூய்மை செய்ய வழிகாட்டுகிறார். நந்தி வழிபாடு எண்ணங்களைச் சுத்திகரிக்கும் இயல்புடையது.

இவ்வாறு நல்லெண்ணத்தில் தோய்ந்து, நற்காரியங்களை இயற்றி, நல்லோர்களின் துணையுடன் வாழ்பவர்கள் இறுதியில் தங்கள் மூச்சை திருக்குற்றால நந்தீஸ்வரரின் திருவடிகளில் சமர்ப்பிக்கும் தெய்வீக வாய்ப்பைப் பெறுகின்றனர்.

யார் ஒருவர் இறக்கும் தருவாயில் திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தியைத் தியானித்து அப்பர் பெருமானின் மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்ஜய துதியான,

’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’

என்ற துதியை ஒருமுறையாவது ஓதுகின்றார்களோ அவர்களுடைய வேண்டுகோளை எம்பெருமான் மனமுவந்து ஏற்பதால் அதுவே அவர்கள் இப்புவியில் ஏற்கும் கடைசி பிறப்பாக அமையும் என்பது உறுதி.

திருக்குற்றால நாதர், அம்பாள் குழல்வாய் மொழியம்மை, நந்தியெம்பெருமான் இவர்கள் வழிபாடு மட்டும் அல்லாது எந்த இறை மூர்த்தியையோ, அவதார மூர்த்திகளையோ, கீழ்க்காணும் உத்தமர்களையோ நினைத்து இறுதி மூச்சை விடுத்தாலும், உயிர் பிரிந்தாலும் பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது உறுதி.

 1. ஸ்ரீஅகஸ்திய மகாபிரபு
 2. திருக்கயிலாய பொதிய முனிப்பரம்பரை பீடாதிபதிகள்
 3. 63 நாயன்மார்கள் (உண்மையில் நாயன்மார்கள், ஆழ்வார்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டது என்பது சித்தர்களின் வாக்கு),
 4. பன்னிரு ஆழ்வார்கள்
 5. மாணிக்க வாசகர், ஆதிசங்கரர் போன்ற கடவுள் நெறியாளர்கள்
 6. நவநாத சித்தர்கள்
 7. என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளான போடா சுவாமிகள், கசவனம்பட்டி சித்தர், அவதூது பாபா, மயிலை சுந்தரராம் குருஜீ, பன்றிமலை சுவாமிகள், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளலார் சுவாமிகள் போன்றோர்.
 8. திருவேங்கடத்துறை கும்பமுனிப் பரம்பரை பீடாதிபதிகள்
 9. அவரவருக்கு உரிய சற்குருமார்கள், கோத்ராதிபதிகள், குலதெய்வங்கள்.

தனது வலது குருவிரலை உயர்த்தி எல்லையில்லாத கருணா மூர்த்தியான பரம்பொருளைச் சுட்டிக் காட்டும் ஷீரடி பாபாவை நினைத்து இறுதி மூச்சை விடுபவர்கள் எந்த உடல் வேதனையையும் மன வேதனையைம் அடையாமல் இந்த மனித உடலை உகுப்பதுடன் பிறவா நிலையையும் அடைவார்கள். மேலும், பிரளயம், வெள்ளம், புயல், பூகம்பம், ஆழிப் பேரழிவு போன்ற பெரும் ஆபத்துக் காலத்தில் ஷீரடி பாபாவின் குரு விரலைத் தியானிப்பவர்கள் எத்தகைய ஆபத்திலிருந்தும் மீள்வார்கள் என்பது உண்மையே.

நீர்த் தத்துவம்

காற்றை அடுத்து நாம் நீர் மூலம் நிறைய எண்ணத் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் இறை மார்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் அவசியம் காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தற்காலத்தில் பெரும்பாலான ஜீவ நதிகள், ஆறுகள், குளங்கள், கோயில் தீர்த்தங்கள் மக்களின் அசிரத்தையாலும், சுயநலப் போக்காலும் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. கலியுக நியதியால் அத்தகைய அவகோலத்தைத் தடுப்பது சாதாரண மக்களால் இயலாத காரியம். ஆனால், எல்லாத் திருக்கோயில்களிலும், திருத்தலங்களிலும் நிலத்தடி நீரோட்டம் செம்மையாக உள்ளது என்பது மனதிற்கு உவப்பூட்டும் ஒரு செய்தியாகும்.

எனவே நீர்த் தத்துவத்தை சுத்திகரிக்க நிலத்தடி நீர்ப் பூஜைகளே கலியுகத்திற்கு ஏற்றவையாகும். இத்தகைய பூஜைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதால் நமது உடலில் உள்ள ஆயிரக் கணக்கான நீர்த் தாரைகள் தூய்மை அடைந்து நமக்கு ஆன்மீக முன்னேற்றத்தை அள்ளி வழங்கும்.

இறை நியதியாக தற்காலத்தில் பாத யாத்திரைகள் பெருகி வருவது வரவேற்கத் தக்க ஆன்மீக மறுமலர்ச்சியாகும். முடிந்த போதெல்லாம் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலங்களுக்கும், மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களுக்கும் பாத யாத்திரையாகவே சென்று வழிபட்டு வருவதால் நிலத்தடி தீர்த்த்ங்கள் செம்மை பெறும். சப்த ரிஷிகள் எழுந்தருளியுள்ள தலங்களை வழிபடுவதும், சப்தரிஷிகளுக்கு இறைவன் அருள் புரிந்த தலங்களில் பூஜைகளை நிறைவேற்றுவதும், சப்தமி திதிகளில் பழரசங்கள், பானகம், நீர் மோர் தானங்களை அளிப்பதும் சமுதாயத்தில் நீர்க் குற்றங்கள் நீங்கி மக்கள் நோயற்ற வாழ்வைப் பெற வழிவகுக்கும்.

சப்தமி வழிபாடுகளும், சப்த ஸ்தான வழிபாடுகளும் சமுதாயத்தை அச்சுறுத்தும் தொற்று நோய்களையும், நீரிழிவு நோய்களையும் தீர்க்க வழிகோலும்.

அனைத்து விதமான நீர்க் குற்றங்களையும் நீக்கி உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க உதவுவதே ஆசமனம் என்னும் எளிய வழிபாடாகும். சாதி, மத, இன, குல பேதமின்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் இயற்றக் கூடிய, இயற்ற வேண்டிய உன்னத வழிபாடே ஆசமனம் என்பதாகும்.

ஆசமன வழிபாடு

ஆசமனம் என்றால் என்ன? அலைபாயும் மனத்தை அடக்கி இறைவன்பால் செலுத்த பஞ்ச பூத தத்துவங்களை சமன்படுத்தும் வழிபாடு என்பதே ஆசமனம் ஆகும். ஆசமன வழிபாடு மிக மிக எளிதானது.

ஒரு சுத்தமான தாமிரம், வெள்ளி அல்லது பித்தளை பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி அதிலிருந்து சில துளிகளை வலது உள்ளங்கையில் தெளித்து ஏதாவது ஒரு இறை நாமத்தைக் கூறி அருந்துவதே ஆசமனம் இயற்றும் முறையாகும்.

பொதுவாக, அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று மும்முறை பெருமாள் திருநாமத்தைக் கூறி மூன்று முறை நீரை அருந்தி ஆசமனம் செய்வது வழக்கம்.

மலஜலம் கழிக்கும் முன்னும் பின்னும், இறை வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும், உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் இத்தகைய ஆசமன வழிபாட்டை நிறைவேற்றுவது சிறப்பாகும்.

இத்தகைய வழிபாட்டால் நிகழ்ந்த ஓர் அற்புதத்தை கீழ்க் காணும் நிகழ்ச்சியின் மூலம் விவரிக்கிறோம்.

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவரும் சிறுவனும் பொள்ளாச்சி வழியாகச் சென்று கொண்டிருந்தனர். எங்கு நோக்கினும் வானுயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் காற்றில் அசைந்து ஆடி அந்த உத்தமர்களை வரவேற்பது போல் தோன்றியது. வெகு நேரம் தகிக்கும் வெயிலில் நடந்த களைப்பில் வழியில் உள்ள ஒரு பிள்ளையார் கோயில் மண்டபத்தில் அமர்ந்து சற்று இளைப்பாறினர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு பண்ணையார் அவர்களைப் பார்த்து காரிலிருந்து இறங்கி வந்து பெரியவரை வணங்கி நின்றார்.

பெரியரும் ரொம்ப நாட்களாக பழகியவர் போல் அந்த பண்ணையாரைப் பார்த்து குசலம் விசாரிக்கத் தொடங்கினார்.

என்ன, கவுண்டரய்யா, சௌக்கியமா? அம்மணி (மனைவி) எப்படி இருக்காங்கா? உன்னைப் பார்த்து பத்து வருஷம் ஆச்சே? குழந்தை குட்டீசு ஏதாவது இருக்கா, ஐயா ? என்று வரிசையாக கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு அந்த பண்ணையாரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர்கள் பேச்சிலிருந்து சிறுவனுக்கு ஓர் உண்மை தெரிய வந்தது. அந்த பண்ணையாருக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பல திருத்தலங்களுக்கு சென்று பல வழிபாடுகளை இயற்றிய பின்பும் குழந்தை பேற்றிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

பெரியவர் ஜமீன்தாரிடம், ”இதெற்கெல்லாம் கவலைப்படக் கூடாது, ஐயா, ஆத்தா, யாரையும் கைவிட மாட்டா.

(சிறுவனைச் சுட்டிக் காட்டி.. )

ஆமா, இந்தப் பயலுக்கு இப்ப ரொம்பப் பசிக்குதாம். இட்லிதான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறான். இந்த வனாந்தரத்தில இட்லிக்கு நான் எங்கே போறது? உன் பெண்டாட்டி நல்லா இட்லி சுடுவாள் என்று சொல்லுவியே. பயலுக்கு நல்ல இட்லியா நாலு சுட்டுத் தர சொல்லு,”

பெரியவர் தொடர்ந்து, ”ஒரு விஷயம் நைனா. வேலைக்காரப் பொண்ணுங்களை வைத்து இட்லி சுடாதே. பையன் சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கிறான். உன் பெண்டாட்டியை நல்லா குளித்து விட்டு சுத்தமா இட்லி சுட்டுத் தரச் சொல்லு,” என்றார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”நான் எங்கே இந்தக் கிழவனிடம் இட்லி கேட்டேன். காய்ந்த புரோட்டா இந்தக் காட்டில்கிடைப்பதே குதிரைக் கொம்பு, இதில் இட்லிக்கு எங்கு கொட்டாவி விடுவது? மேலும், பெரியவர் ஏன் நான் சபரிமலைக்கு யாத்திரை போகிறேன் என்று புளுகுகிறார். அப்படி ஒரு எண்ணமே நமக்குக் கிடையாதே.

சரி எப்படி இருந்தால் என்ன? இன்று நமக்கு அங்காளி கருணையால் நல்ல இட்லி கிடைக்கும்போல் இருக்கிறது. அதை முதலில் கவனிப்போம்,” என்று மனதிற்குள் பல கணக்கை போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த பண்ணையார் மிகவும் ஆனந்தத்துடன் அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறுவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம். காலையிலிருந்து சாப்பிடாததால் காய்ந்த பரோட்டாவை எதிர்பார்த்த இடத்தில் இட்லி கிடைக்கும் என்ற சந்தோஷம் ஒரு புறம், பொசுக்கும் வெயிலில் அலைவதை விட கொஞ்ச தூரமாவது காரில் சென்றால் சொகுசாக இருக்குமே என்ற ஆனந்தம் மறுபுறம்.

பண்ணையாரின் பங்களாவைப் பார்த்தால் ஒரு அரண்மனை போல் தோன்றியது, நூற்றுக் கணக்கான தென்னை மரங்களுக்கு நடுவே அற்புத சோலை வனமாக காட்சி அளித்தது கண்ணைக் கவரும் அந்த பங்களா. அந்தப் பங்களாவை பராமரிப்பதற்காக மட்டுமே வேலைக்காரர்கள் நூற்றுக் கணக்கில் இருந்தார்கள். அவ்வளவு செல்வாக்குடன் வாழ்ந்த அந்த பண்ணையாரின் மனைவி எப்படி வேலைக்காரியின் உதவி இல்லாமல் இட்லி சுடுவாள் என்று சிறுவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பதால் அதில் எவ்வளவோ அதிசயங்கள் நிகழும் என்று எதிர்பார்த்து அவைகளை எதிர்கொள்ள குஷியுடன் காத்திருந்தான். பெரியவர் அந்த பண்ணையாரின் மனைவியை வணங்கி அவளுக்கு எப்படி அரிசி, உளுந்தை ஆட்டுக் கல்லில் ஆட்ட வேண்டும் என்பதை நேரிடையாக விளக்கிக் கூறினார்.

மேலும் ஒவ்வொரு முறை உணவு சமையல் செய்யும் முன்னும் சமையல் முடிந்த பின்னும் வலது கை மோதிர விரலில் தர்பையை அணிந்து ஆசமனம் செய்யும் பாங்கையும் அந்த அம்மணிக்கு நேரிடையாகவே சொல்லிக் கொடுத்தார்.

ஒருபுறம் சிறுவனுக்கு இந்தக் காட்சி சந்தோஷத்தை அளித்தாலும் மறுபுறம் தனக்குக் கூட இத்தகைய அற்புத சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லையே என்று நினைத்து ஏங்க ஆரம்பித்தான்.
சாதாரணமாக அமரும் கோலத்திற்குப் பதிலாக குத்துக் காலிட்டு அமர்ந்து ஆசமனம் அளிக்கும்படியும், அதே ஆசனத்தில் மாவாட்டும்படியும் அந்த அம்மணியிடம் கூறினார். அவ்வாறே பண்ணையாரின் மனைவியும் மாவு தயார் செய்து அற்புதமாக இட்லி வார்த்து சிறுவனுக்கும் பெரியவருக்கும் அளிக்க, பண்ணையார் அவர்கள் பக்கத்திலேயே நின்று கொண்டு பரிமாறினார்.

பின்னர் அவர்களிடமிருந்து பெரியவரும் சிறுவனும் விடைபெற்றனர். அப்போது பெரியவர் பண்ணையாரிடம், ஐயா, மிகவும் அற்புதமான இட்லிகளை உங்கள் மனைவி வார்த்துக் கொடுத்து சேவை செய்திருக்கிறாள். அங்காளி நிச்சயம் அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பாள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தினமும் அடியேன் செய்து காட்டியபடி இட்லிகளைத் தயார் செய்து இறைவனை நம்பி வாழும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கி வந்தால் உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிட்டும், என்று அன்புடன் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அந்த பண்ணையாரும் அவர் மனைவியும் பெரியவர் கூறிய வண்ணமே அன்னதான கைங்கர்யத்தை மேற்கொண்டனர். அடுத்த மூன்றாவது மாதத்திலேயே அந்த அம்மையார் கருவுற்றாள். அதன் பின்னர் அங்காளி அருளால் ஒரு ஆண் மகவையும் பெற்றெடுத்தாள்.

காளி ஆசன மகிமை

பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்ட பெரியவர் வழியில் அந்த ஜமீன்தாரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறி அவருக்கு அளித்த வழிபாட்டின் தத்துவ விளக்கத்தையும் விவரித்தார்.

பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம் ஆகும். பெண்கள் கோலம் இடுதல், தான்யங்களைப் புடைத்து சுத்தம் செய்தல், மஞ்சள் அரைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடும்போது அவர்களையும் அறியாமல் இந்த காளி ஆசனத்தில் அமர்ந்து காரியங்களில் ஈடுபடுவதால் இயற்கையான முறையில் அவர்களுக்கு கர்பப்பை வளம் பெறுகிறது. ஆனால், தற்காலத்தில் இத்தகைய செயல்பாடுகள் குறைந்து வருவதால் அந்த ஆசனத்தில் அமர்ந்து அன்னதான பிரசாதங்களை தயார் செய்ய வைத்து உள்ளுறுப்புகளை வளம்படுத்தும் வழிபாடுகளை பெரியோர்களும், மகான்களும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

குத்துக் காலிட்டு அமர்வதே காளி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் கருவுற்ற தாய்மார்களை இத்தகைய காளி ஆசனத்தில் அமர வைத்து மகப்பேற்றை நிறைவேற்றியதால் எத்தகைய வேதனையும் இன்றி பெரும்பாலான தாய்மார்களுக்கு சுகப் பிரசவமே நிகழ்ந்தது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் பூரண உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று விளங்கின.

Breech presentation போன்ற பிரசவ கால பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவதே காளி ஆசனமாகும்.

ஒரு முறை ஸ்ரீகுருமங்கள கந்தர்வாவிடம், ”கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களில் சில விரச காட்சிகள் தென்படுகின்றனவே, இதன் தாத்பர்யம் என்ன?” என்று ஒரு அடியார் கேட்டார்,

அதற்கு குருநாதர் அவர்கள், ” கோயில் கோபுரங்கள் எல்லாம் இறை உணர்வு மிக்க யோகிகள், ஞானிகளால் நிர்மாணிக்கப்பட்டவை. எனவே, அதில் எந்த விதமான விரசங்களும் இல்லை. உங்கள் பார்வையில் இருக்கும் விரசம்தான் அந்த சிற்பங்களில் பிரதிபலிக்கிறது, கோயில் சிற்பங்கள் எல்லாம் நமது நல்வாழ்விற்காக அளிக்கப்பட்ட இறைப் பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்தால்தான் அதன் மகத்துவத்தை ஆத்ம விசாரத்தின் மூலம் உணர்ந்து பயன் பெற முடியும்,” என்று அருளினார்கள்.

சுவாமிகள் அளித்த விளக்கத்தின் உட்பொருளை காளி ஆசனத்தின் மூலம் நாம் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். காளி ஆசனத்தில் மகப்பேறு பெறும் காட்சியைக் கோயில் சிற்பங்களில் சித்தரித்து மக்களின் சுகவாழ்விற்கான நிரந்தர விளக்கத்தை அதன் மூலம் வார்த்தைகள், மொழி கடந்த தத்துவத்தை மக்களுக்குப் போதித்துள்ளார்கள். இத்தகைய காளி ஆசன சிற்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கோயில் கோபுரங்களில் இன்றும் காட்சி அளிக்கின்றன.

காளி ஆசனத்தின் மகிமையை உணர்ந்த ஒரு சில மருத்துவர்கள் ஆரோக்கியமான மகப்பேறு பெற அந்த ஆசனத்தை தற்காலத்தில் நடைமுறையில் கொண்டு வந்து பயன்பெற்றாலும் சித்தர்கள் வழங்கிய அனைத்து ஆன்மீக மாமறைப் பொக்கிஷங்களையும் மக்கள் உணர்ந்து பயன்பெறும் நாள் எந்நாளோ?

பெரியவர் அருளிய முறையில் நன்மக்கட்பேற்றைப் பெற்ற அந்த பண்ணையார் தனது ஆண் செல்வத்தைச் சீரும் சிறப்புடன் வளர்த்ததுடன் அதற்கு அற்புத ஆன்மீகப் பாடங்களையும் போதித்து வந்தார். அங்காளியின் பிரசாதமாக விளங்கிய அக்குழந்தை பிற்காலத்தில் சிறந்த ஆன்மீக வாதியாகவும், பொது மக்கள் தொண்டனாகவும், பிரபல தொழிலதிபராகவும் புகழ் பெற்றது.

ஆசமனத்தின் மகிமை

சிறப்பாக நீர்க் குற்றங்களை நீக்கும் தன்மையை உடையது ஆசமனம் என்றாலும், பொதுவாக அனைத்து விதமான பூத தோஷங்களையும் நீக்கும் சிறப்பைப் பெற்றதே ஆசமனமாகும்.

மல ஜலம் கழிப்பதற்கு ஆசமனம் தேவையா என்ற சந்தேகம் சிலருக்கும் எழலாம். உண்மையில் மல ஜலம் கழித்தல் என்பது ஆன்மீக சாதனையின் மிக முக்கியமான ஓர் அங்கமாகும்.

எல்லா இறை வழிபாடுகளுக்கும் உள்ளது போல மல ஜலம் கழிப்பதற்கும் குறித்த நேரம், திசை, கிரமம், ஆசனம், நாடி, மந்திரம் போன்ற எல்லா அங்கங்களும் உண்டு. அக்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இந்த அனைத்து அங்கங்களையும் முறையாக நிறைவேற்றியதன் மூலமே அற்புதமான உடல், மன, உள்ள ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு பூஜையை ஆரம்பிக்கும் முன்னும் (உதய ஆசமனம்), பூஜையை நிறைவேற்றிய பின்னும் (மங்கள ஆசமனம்) ஆசமனம் நிறைவேற்றுவதால் பெறும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, நீங்கள் இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் மலர்கள் எங்கிருந்தோ திருடப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மலர்களால் இறைவனை அர்ச்சிக்கும்போது அந்த மலர்களில் படிந்துள்ள தவறான எண்ணம் உங்கள் பூஜையில் படியும் வாய்ப்புண்டு.

நீங்கள் அந்த மலர்களை பணம் கொடுத்துதான் பெற்றீர்கள் என்பது உண்மையே ஆயினும் எந்தப் பொருளுக்கும் உரிய சரியான விலையை யாராலும் நிர்ணயிக்க முடியாது என்ற காரணத்தால் அந்த மலர்களின் உண்மையான சொந்தக்காரருக்கு அந்த மலர்களுக்கு வரும் பலனில் நிச்சயம் பங்குண்டு.

மேலும், அந்தப் பூஜையில் கிட்டும் பலனில் ஒரு பங்கு அந்த மலர்களைத் திருடியவருக்கும் சென்றடைவதால் ஒரு திருடனுக்கு பூஜா பலனை அளித்த தோஷமும் உங்களை வந்து சேரும்.

எனவே இத்தகைய எதிர்பாராத துன்பங்களைக் களையும் நன்மார்கமே ஆசமனம் என்னும் எளிய பூஜையாகும்.

நமது மணிக்கட்டில் கங்கண ரேகைகள் எனப்படும் ரேகைகள் உண்டு. இந்த கங்கண ரேகைகள் மனிதனுடைய செயல்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கும் தன்மை உடையவை. ”நீ ஏன் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறாய்?” என்று நடைமுறைப் பழக்கத்தில் கூட கேட்பது உண்டு அல்லவா?

கங்கண ரேகைகளில் மொத்தம் 3000 கங்கண தேவதைகள் உறைகின்றன. நமது மூதாதையர்களுக்கு உணவாக தர்ப்பண தீர்த்தத்தை அளிப்பது போல இந்த கங்கண தேவதைகளுக்கு நாம் அளிக்கும் அர்க்ய தீர்த்தமே ஆசமன தீர்த்தம் எனப்படும் ஆசமணீயம் ஆகும். ஆசமணீயத்தைப் பெற்ற கங்கண தேவதைகள் நற்காரியங்களில் உறுதிப்பாட்டை வழங்குவதுடன் நாம் கையாளும் பொருட்களில் உள்ள பூத தோஷங்களையும், காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்.

உதய ஆசமனத்தை கிழக்கு திக்கை நோக்கி சுதீக்ஷண மகரிஷியை தியானித்தும், மங்கள ஆசமனத்தை வடக்கு திக்கை நோக்கி சுத்தோதக மகரிஷியை தியானித்தும் நிறைவேற்றுவது சிறப்பு.

முடிந்த மட்டும் பெண்களும் ஆண்களும் காளி ஆசனத்தில் அமர்ந்து ஆசமனத்தை நிறைவேற்றுவதே சிறப்பாகும். தொடர்ந்து ஆசமன பூஜையை நிறைவேற்றுபவர்களை இதய நோய்களும், நீரிழிவு, தோல் நோய்கள் போன்றவைகளும் நெருங்காது.

பூமி தத்துவம்

பூமி அல்லது நிலத் தத்துவத்தை எப்படி தூய்மை செய்வது?

இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அறிந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்களும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து தத்துவங்களும் முற்றிலும் வேறானவை. பஞ்ச பூதங்களால் ஆன பொருட்களை பார்க்க, உணர முடியும், ஆனால், பஞ்ச பூத தத்துவங்களை புலன்களால் உணர முடியாது, அவை மனதிற்கு அப்பாற்பட்டவை.

உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தால்தான் பஞ்ச பூத தத்துவங்களை உணர்ந்து அவைகளைத் தூய்மைபடுத்த முடியும். ஆனால், பஞ்ச பூதங்களுக்கு நாம் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் அது உயர்ந்த ஆன்மீக நிலைக்கு இட்டுச் சென்று பஞ்ச தத்துவங்களை உணர வழிகோலும், சற்குரு ஒருவரே இந்த தத்துவ நிலைக்கு மனிதர்களை உயர்த்த வல்லவர் என்பதால் குருவின் கருணை கடாட்சம் நிச்சயம் நாம் வேண்டிப் பெற வேண்டிய ஒன்றாகும்.

நாம் பூமாதேவிக்கு இழைக்கும் குற்றங்கள் பலப்பல, எச்சில் துப்புதல், மல ஜலம் கழித்தல், இரசாயணக் கழிவுகளைப் பூமியில் சேர்த்தல், அக்னியைக் கொட்டுதல் போன்ற பல செயல்களால் தொடர்ந்து பூமா தேவிக்கு துன்பம் இழைத்து வருகிறோம். இல்லறம் என்பது நல்லறமே ஆயினும், சந்ததி விருத்திக்கு இன்றியமையாயினும், அது மானிட கடமையே ஆயினும் அதன் மூலமாகவும் பூமி தத்துவம் மாசு பெறும் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. எனவே, நம்மை அறிந்தோ அறியாமலோ பூமி தத்துவத்தை தினமும் மாசு படுத்தி வருகிறோம் என்பதே உண்மை.

தவிர்க்க முடியாத இந்தத் தவறுகளால் பூமா தேவியும் பூமி தத்துவமும் மாசடையும் என்பது பரம சத்தியமான இறைவனுக்குத் தெரியாதா என்ன? பூமாதேவியின் இன்னலைக் களைவதற்காக எம்பெருமான் மதுரை மாநகரில் உதிர்ந்த புட்டிற்கு மண் சுமந்து பூமி தத்துவத்தின் மாசைக் களைந்தார், பூமா தேவியை மகிழ்வித்தார்.

சிவபெருமான் வைகை ஆற்று வெள்ளத்தை அடைக்க கூடையில் மண் சுமந்து சென்றபோது கூடையில் மண் வடிவம் கொண்ட பூமாதேவி சிவபெருமானின் தலையில் இருந்த மூன்றாம் பிறையைக் காண முடியும் அல்லவா? அப்போது முதல் மூன்றாம் பிறை வடிவில் இருந்த சந்திர பகவானுக்கும் பூமா தேவிக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டது.

எனவே, யாரெல்லாம் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்கிறார்களோ அவர்களின் தரிசனம் பூமா தேவிக்கு ஆனந்தத்தை அளிக்கும் என்பதை நீங்கள் இப்போது எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

மூன்றாம் பிறை வளர்ச்சி, அதீத ஞானம், அமிர்த சக்திகளைக் குறிப்பதால் பிறை தரிசனம் பெறுபவர்கள் உடல், மன வளர்ச்சி பெறுவதுடன், உன்னத ஞான வளத்தையும், நோய் நோடியற்ற நீண்ட வாழ்வையும் பெற்று வாழ்வார்கள் என்பது உறுதி.

ஒவ்வொரு மூன்றாம் பிறை தரிசனத்தையும் குறிப்பிட்ட இடத்திலிருந்து, குறிப்பிட்ட திருத்தலங்களிலிருந்து பெற வேண்டும் என்ற நியதி உண்டு, இந்த நியதியை உணர்ந்து, மூன்றாம் பிறையை தரிசனம் செய்து அதன் பலன்களை மக்கள் சமுதாயத்திற்கு வாரி வழங்கிய பெருந்தகையே காஞ்சி பரமாச்சார்யாள் ஆவார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து ஆயிரக் கணக்கான திருத்தலங்களில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்து ஒப்பற்ற சேவை செய்த கனிந்த கனியே காஞ்சி மகான். காஞ்சிப் பெரியவர் மூன்றாம் பிறை தரிசனம் பூஜை மட்டும் அல்லாது தான் யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் நிலத்தடி தீர்த்தத்தையும் சீர் செய்து வந்தார் என்பது சித்தர்கள் மட்டுமே உணர்ந்த ஆன்மீக இரகசியமாகும்.

நம் பாரத தேசத்தில் உள்ள எல்லா திருத்தலங்களும் நிலத்தடி தீர்த்த வளம் கொண்டவையே. ஆனால், அவை நாம் காணும் சாதாரண நீர் வடிவில் இருக்காது. அவை அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவம் கொண்டவை. உத்தம மகான்கள் மட்டுமே தங்கள் ஞான திருஷ்டியால் அந்த தீர்த்தங்களின் மகிமையை உணர்ந்து அந்த தீர்த்தங்களை சீர் செய்து தருகிறார்கள்.

சாதாரண மனிதர்கள் நிலத்தடி சூட்சும நீரோட்டத்தைக் காண இயலாது எனினும் பாத யாத்திரையாக திருத்தலங்களுக்குச் செல்லும்போது அந்த நீரோட்டங்களின் அமிர்த சக்திகளை தங்கள் பாதங்கள் மூலம் எளிதில் பெற்று விடலாம்.

சில நிலத்தடி நீரோட்டங்களின் அமிர்த சக்திகளைப் பெறும் அளவிற்கு பக்தர்களின் உடல் போதுமான புனிதத்தைப் பெற்றிருக்காது, அத்தகைய சூழ்நிலையில் சற்குருமார்கள் அறிவுறுத்தும் குறித்த வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் தேவையான ஆன்மீக தகுதியை வளர்த்துக் கொண்டு அத்தகைய அற்புதமான தீர்த்தங்களின் அமிர்த சக்திகளையும் நாம் கிரகிக்க முடியும்.

உதாரணமாக, திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள நிலத்தடி நீரோட்டத்தை ஸ்பரிசம் செய்தால்தான், அதாவது கிரிவலமாக யாத்திரை செய்தால்தான், சபரி மலையில் பெரிய பாதையில் உள்ள நிலத்தடி தீர்த்த சக்திகளை பக்தர்கள் கிரகிக்க முடியும். பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக சபரி மலை ஈசனே ஒவ்வொரு கார்த்திகை தீபத்தன்றும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து நிலத்தடி தீர்த்த சக்திகளைப் பெற்று அதை சபரிமலையில் நிலை கொள்ளச் செய்கிறார் என்பது நீங்கள் இதுவரை அறியாத ஆன்மீக இரகசியம்.

அதுபோல ராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, காசி யாத்திரைக்குச் சென்றால்தான் அங்குள்ள திரிவேணி சங்கமம், கயா போன்ற தீர்த்தங்களில் உள்ள புனித சக்திகளை முழுமையாகப் பெற முடியும். இவ்வாறு ஒன்றொக்கொன்று தொடர்புடைய தீர்த்த சக்திகளை இணைப்பதே பூமியும், பூமித் தத்துவமும்.

எனவே பூமி தத்துவத்தை வழிபடுவதன் மூலம் நீர்த் தத்துவத்தையும் வழிபட்டவர்கள் ஆகிறோம்.

மகான்கள் பூத உடலை விடுத்து தங்கள் பூர்வ லோகத்திற்குச் செல்லும்போது பெரும்பாலும் அவர்களை உடலை எரிப்பது கிடையாது. காரணம், பூமியில் இருக்கும்போது பல வழிபாடுகளை இயற்றி பஞ்ச பூதத்தால் ஆன உடலை மிகவும் தூய்மையாக வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் உடல் பூமியில் மறையும்போது அது குறைந்த பட்சம் ஏழு மைல் சுற்றளவுள்ள பூமியைப் புனிதப்படுத்தும், நிலத்தடி நீரோட்டங்களைச் சீர்படுத்தும்.

முடிந்த போதெல்லாம் போடா சுவாமிகள், தட்சிணா மூர்த்தி சுவாமிகள், நாராயண தீர்த்தர், பூண்டி மகான், கசவனம்பட்டி சித்தர் போன்ற சித்தர்களின் ஜீவ சமாதிகளைத் தரிசனம் செய்து, அஷ்ட நமஸ்காரம் மூலம் வழிபட்டு, இளநீர், பழரசம் போன்றவற்றை தானம் செய்து வந்தால் நிலம், நீர் என்ற பூதங்கள் மட்டும் அல்லாது பஞ்ச பூதங்களும் தூய்மை பெறும், பஞ்ச பூதத்தால் ஆன நமது உடலும் ஆரோக்கியமாக விளங்கும்.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போல ஆயிரக் கணக்கான மகான்களின் ஜீவ சமாதிகளை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே வைத்துக் கொண்டு ஏகப்பட்ட நோய்களால் வருந்தும் இந்த மனித சமுதாயத்தை என்னென்று கூறுவது?

கை விரல்கள் கூறும் ரகசியம்
அற்புதமான நமது கையைப் பற்றி ஆத்ம விசாரம் செய்யத் தொடங்கினால் நீங்கள் முக்தி நிலையை அடைய முடியும் என்பது உண்மையே. அத்தனை பொக்கிஷங்களை இறைவன் நமது கையில் அடக்கி வைத்திருக்கிறான்.

நமது குருமங்கள கந்தர்வா அவர்கள், ”உங்கள் கைகளை ஒழுங்காகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும் இந்த உலகத்தையே வில்லாக வளைக்கலாம்,” என்று கூறுவார்.
ஐந்து விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உண்டு அல்லவா? இந்த பகுதிகளைப் பிரிக்கும் கோடுகளில் அங்குலாஸ்திதி தேவதைகள் என்று பெயர் கொண்ட 1500 புனித தேவதைகள் உறைகின்றன. ஒவ்வொரு தேவதைக்கும் தனித் தனி பெயர் உண்டு.

ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய காயத்ரீ முத்திரைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் நாளடைவில் நீங்களே இந்த அங்குலாஸ்திதி தேவதைகளின் புனித நாமங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து கர தரிசனம் பூஜை செய்யும்போது இந்த அங்குலாஸ்திதி தேவதைகள் உங்களுடன் உரையாடி இனி வரப்போகும் விஷயங்களைக் குறித்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ தெரியப்படுத்தும். காஞ்சிப் பெரியவர் போன்ற மகான்கள் இந்த அங்குலாஸ் திதி தேவதைகளுடன் உரையாடி அன்று தம்மை தரிசனம் செய்ய வரப்போகும் அடியார்களைக் குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான அனுகிரகத்தை அளிக்க தேவையான பூஜைகளை மேற்கொள்கிறார்கள்.

மகான்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போது இந்த அங்குலாஸ்திதி தேவதைகள் அவர்களுக்கு வேண்டிய புண்ணிய சக்தியை பூலோகத்திற்கு உகந்த சக்தியாக மாற்றி அளிக்கின்றன.

சாதாரண மக்கள் காயத்ரீ ஜபம், முத்திரைகள் மூலமாகவும், இறை நாம, சுய நாம ஜபம் மூலமாகவும் இந்த அங்குலாஸ்திதி தேவதைகளை வழிபடலாம்.

அங்குலாஸ்திதி ஜபம்

தொன்று தொட்டு வரும் ஜப முறை இது. ஜபமாலைகளைக் கொண்டு இறை நாம எண்ணிக்கையை கணக்கிடுவதற்குப் பதிலாக நமது கைவிரல்களின் மூலமே லட்சக் கணக்கான இறை நாமங்களை எண்ண முடியும் என்பது உண்மையே.

நமது ஐந்து விரலிலும் நவகிரக தேவதைகள் உறைகின்றன.

   
கட்டை (பெரு) விரல் சுக்கிர பகவான்
ஆள்காட்டி விரல் குரு பகவான்
நடு விரல் சனீஸ்வர பகவான்
மோதிர விரல்சூரிய பகவான்
சுண்டு விரல்   புத பகவான்
   

நாம் கோயில்களில் காணும் நவகிரக மூர்த்திகளும், நம் கைகளில் உறையும் நவகிரக தேவதைகளும் வேறானவை. அது போல கோயில்களில் உள்ள நவ மூர்த்திகளும் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் உறையும் நவகிரகங்களும் வேறு வேறே. இந்த விஷயத்தை நன்றாக ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்வது அவசியம்.

பஞ்சபூத பிரதிஷ்டை முத்திரையுடன்
திகழும் வள்ளலார் சுவாமிகள்

நவகிரகங்களைப் பற்றி முழுயாகப் புரிந்து கொள்ளததால்தான் தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, குரு சுப கிரகம், சனீஸ்வரன் பாப கிரகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், அதை அப்படியே நமது கையில் உறையும் தேவதைகளுக்கு ஏற்றுக் கொள்வதால் குழப்பமே விளையும். ஆள்காட்டி விரலால் பல் துலக்கக் கூடாது, நடு விரலால்தான் பல் துலக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

நமது மேலோட்டமான ஏட்டுப் படிப்பை வைத்துப் பார்த்தால் ஆள் காட்டி விரல் என்றால் குரு விரல்தானே. அப்படியானால் புனிதமான சுப கிரக ஆசியுடன் பல் துலக்கும்போது அது எப்படி தீமையைச் செய்யும் என்ற குழப்பம் ஏற்படலாம். எனவே, நவகிரக தேவதைகளின் உண்மையான செயல்பாட்டைத் தெரிந்து கொண்டால்தான் குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.

முதலில் வலது கை சூரிய விரலில் உள்ள நடுக் கோட்டிலிருந்து (அங்குலாஸ்திதி) இறை நாமத்தை சுக்கிர விரல் நுனியால் எண்ண ஆரம்பித்து கீழ்க் கண்ட முறையில் தொடர வேண்டும்.

 1. சூரிய விரல் நடுக் கணு (கோடு, அங்குலாஸ்திதி)
 2. சூரிய விரல் கீழ்க் கணு
 3. புத விரல் கீழ்க் கணு
 4. புத விரல் நடுக் கணு
 5. புத விரல் மேல் கணு
 6. சூரிய விரல் மேல் கணு
 7. சனி விரல் மேல் கணு (நடுக் கணுவும், கீழ்க் கணுவும் ஜபத்தில் பயன்படுவதில்லை)
 8. குரு விரல் மேல் கணு
 9. குரு விரல் நடுக் கணு
 10. குரு விரல் கீழ்க் கணு

இவ்வாறு ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நமசிவாய என்று ஒவ்வொரு இறை நாமத்தைக் கூறி நமது கட்டை விரல் நுனியால் மேற்கூறிய அங்குலாஸ்திதிகளைத் தொட்டு ஜபிக்கும் முறையே அங்குலாஸ்திதி ஜபம் என்பதாகும். மிக மிக சக்தி வாய்ந்த ஜப வழிபாடு.

கட்டை விரல் மற்ற விரல்களில் நகரும் புள்ளிகளைச் சேர்த்தால் அது ஓங்கார வடிவில் அமையும். அதனால் அதை அங்குலாஸ்திதி ஓங்கார ஜபம் என்றும் அழைப்பதுண்டு. இவ்வாறு ஜபம் செய்து பழகிக் கொண்டபின் இரண்டாம் நிலைக்கு நீங்கள் தயாராகிறீர்கள்.

அங்குலாஸ்திதி ஜபம் இரண்டாம் நிலை
இவ்வாறு ஒரு முறை ஜபம் செய்தால் பத்து இறை நாமங்களை நீங்கள் ஜபித்து விடுவீர்கள் அல்லவா? உங்களுடைய ஒரு ஓங்காரச் சுற்றில் பத்து இறை நாமங்கள் பதிந்து விடுகின்றன. இரண்டாம் நிலையில், நீங்கள் பத்தாம் முறை இறை நாமத்தைக் கூறுவதற்குப் பதிலாக குசம் என்று அழைப்பதன் மூலம் நீங்கள் கூறிய ஒன்பது இறை நாமங்களும் குசா என்னும் சித்த சக்தியைப் பெற்று விடுகின்றன.

உதாரணமாக,
ராமா, ராமா
ராமா, ராமா, ராமா
ராமா
ராமா
ராமா, ராமா, குசம்

என்று ஜபிப்பதால் குசா சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.
இவ்வாறு நீங்கள் எந்த இறை நாமத்தை ஜெபித்தாலும் அதை ஒன்பது முறை ஜபித்து விட்டு பத்தாவது முறையாக குசம் என்று சொல்வது நலம்.

மூன்றாம் நிலை

மேற்கூறிய ஜப முறையில் கட்டை விரல் வலஞ் சுழியாக விரல்களின் மீது தவழும். மூன்றாம் நிலை ஜபத்தில் கட்டை விரலை இடஞ் சுழியாக வருடி ஜபம் செய்ய வேண்டும். அதாவது முதல் சுற்றில் சூரிய விரலில் ஆரம்பித்து  குரு விரலில் ஜபம் முடியும் அல்லவா? அப்போது மீண்டும் சூரிய விரலில் ஜபத்தை ஆரம்பிப்பதற்குப் பதிலாக முதல் சுற்று முடிந்த குரு விரலிலிருந்தே (அதாவது குரு விரல் அடிக் கணுவிலிருந்து) இரண்டாவது சுற்று ஜபத்தை ஆரம்பித்து இடஞ் சுழியாக கட்டை விரலை நகர்த்தி (reverse direction or anti-clockwise) சூரிய விரல் நடுக் கணுவில் முடிக்க வேண்டும். இப்போது ஓங்கார வடிவம் இடஞ் சுழி இயக்கத்தைப் பெறும்.

நான்காம் நிலை
சூரிய விரல் நடுக் கணுவில் ஒரே ஒரு முறை மட்டுமே இறை நாமத்தைக் கூறுவதற்குப் பதிலாக கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல்பகுதி, இடப் புறம் கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல் பகுதி, வலப் பறம் கணு, கணுவின் அடிப் பகுதி, கணுவின் மேல் பகுதி என ஒரே கணுவில் ஒன்பது இறை நாமங்களை ஜபிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விரல் கணுவிலும் ஒன்பது இறை நாமங்களைக் கூறி ஜபித்தால் ஐந்து விரல்களிலும் ஒரே ஓங்காரச் சுற்றில் 90 இறை நாமங்களை ஜெபித்து விடலாம்.

அடுத்த கட்டமாக வலஞ்சுழியாக 90 இறை நாமங்களை ஜபித்தது போலவே இடஞ்சுழியாகவும் 90 இறை நாமங்களை ஜபிக்கலாம் அல்லவா? இவ்வாறு ஒரு இடவல ஓங்காரச் சுற்றில் 90+90=180 இறை நாமத்தை ஜபித்து விடலாம். ஒரு இடவல ஓங்காரச் சுற்று ஜபம் முடிந்தவுடன் அதை இடது கையில் உள்ள கணுக்களைக் கொண்டு கணக்கிடவும்.

வலது கையில் உள்ள கணுக்களை இறை நாமங்களை ஜபிப்பதற்குப் பயன்படுத்தியது போல இடது கையில் உள்ள கணுக்களை ஓங்கார ஜப சுற்று எண்ணிக்கைகாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலது கையை ஜபம் செய்வதற்காகவும், இடது கையை ஜப எண்ணிக்கைகாகவும் பயன்படுத்துவதன் மூலம் இடது கையும் வலது கையும் சேர்ந்த ஒரு சுற்றில் மொத்தம் (180 x 180) 32400 நாமங்களை ஜபிக்க முடியும். இவ்வாறு மூன்று சுற்றுகள் ஜபத்தை நிறைவேற்றினால் மொத்தம் 97200 இறை நாமங்களைக் கூறியதாகும். ஐந்து விரல்களைக் கொண்டு லட்சம் இறை நாமங்களை எண்ணி ஜபிக்க முடியும் என்றால் விரல்களின் மகிமையை எவராலும் வாய் விட்டுக் கூற முடியுமா?

மேற்கூறிய ஜப முறையை நேரில் காண விழைவோர் எமது தளத்தில் திகழும் வீடியோ படத்தைப் பார்த்துப் பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்ச லிங்க பிரதிஷ்டை முத்திரை


மேற்கூறிய முறையில் 97200 இறை நாமங்களைக் கூறி ஜபம் செய்தவுடன் உங்கள் இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை வைத்து (குரு மங்கள கந்தர்வா, வள்ளலார் சுவாமிகள் போல்) ஒரே ஒரு முறை இறை நாமத்தைக் கூறினால் அது பஞ்ச லிங்கங்களை பிரதிஷ்டை செய்த பலனைக் கொடுக்கும் என்று சித்த கிரந்தங்கள் பறை சாற்றுகின்றன. (படம் பார்க்கவும்)

இந்த அற்புதமான ஜப விதானத்தின் மூலம் நீங்கள் ஜபித்த இறை நாமங்களின் பலன் (5 x 10) 50 மடங்காய்ப் பெருகும், அதாவது கிட்டத்தட்ட 50 லட்சம் இறை நாமங்களைக் கூறிய பலனை மிக எளிதாக நீங்கள் பெற்று விடலாம்.

கலியுகத்தில் இறைவனை நினைப்பது மிகவும் கடினம் என்று சொல்வார்கள், ஆனால், கலியுகத்தில் இறைவனின் அனுகிரகத்தை எளிதில் பெறுவது போல மற்ற யுகங்களில் நிச்சயமாக இறை அனுபூதியைப் பெற முடியாது என்பதும் உண்மையே. இந்த உண்மையை பஞ்ச லிங்க பிரதிஷ்டை முத்திரை மூலம் நீங்கள் அனுபவ பூர்வமாக உணர முடியும்.

கலியுக நடமாடும் தெய்வமாக விளங்கிய வள்ளலார் பெருமான் மேற்கூறிய பஞ்சலிங்க பிரதிஷ்டை முத்திரை மூலம் அற்புத தொண்டுகள் பல ஆற்றியுள்ளார்கள். உதாரணமாக, அவர் இயற்றிய திருவருட்பாவை மருட்பா என்று இகழ்ந்து அவருக்கு எதிராக கோர்ட்டில் ஒரு வழக்கு கொண்டு வரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது வள்ளலாரை கோர்ட்டில் ஆஜராகும்படி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் செயலுக்கு மதிப்புக் கொடுத்து வள்ளலார் பெருமானும் கோர்ட்டில் எழுந்தருளினார்கள். அச்சமயம் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அன்பர்கள், வழக்கறிஞர்கள், பொது மக்கள், நீதிபதி உள்பட அனைவரும் எழுந்து நின்று வள்ளலார் சுவாமிகளை வணங்கி வரவேற்றனர்.

வழக்கைத் தொடர்ந்தவர்களே வள்ளலார் பெருமானை வணங்கி வரவேற்றதைச் சுட்டிக் காட்டி நீதிபதியும் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். அதே சமயம் வள்ளலார் பெருமானின் கருணை நீதிபதியை ஈர்க்கவே அவர் வள்ளலாரைச் சரணடைந்து தனக்கு நல்வழி காட்டும்படி அனைவர் முன்னிலையிலும் கேட்டுக் கொண்டார்.

வள்ளலார் அன்பு ததும்பும் புன்னகையுடன் நீதிபதியின் மேஜை மேல் இருந்த கொட்டாப்புளியை (மரசுத்தியல்) எடுத்து தன் இடது கையில் வைத்துக் கொண்டு அதை வலது கையால் தடவிக் கொடுத்தார். பாசம் மிகுந்த அன்னை தன் குழந்தையைத் தடவிக் கொடுப்பதைப் போன்ற அன்பு அவரிடம் ஊற்றெடுத்ததைக் கண்டு அனைவரும் பிரமித்து விட்டனர். கண் கொட்டாமல் நீதிபதி உட்பட அனைவரும் வள்ளலார் பெருமானின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த மரசுத்தியலை நீதிபதியிடம் கொடுத்து, ”இதை உங்கள் அறையில் சென்று தனியாக அமர்ந்து பாருங்கள்,” என்று சொல்லி விட்டு நீதி மன்றத்திலிருந்து மௌனமாக வெளியேறி விட்டார் வள்ளலார் சுவாமிகள்.

வள்ளலார் சுவாமிகளிடமிருந்து மரசுத்தியலை வாங்கிய நீதிபதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மரசுத்தியலை நீதிபதி தொட்டதுமே ஏதோ மின்சாரத்தைத் தொட்டது போன்ற ஓர் அதிர்வும் உடல் முழுவதும் ஆனந்த அலைகள் பல்கிப் பெருகுவதையும் உணர்ந்தார். அந்த இன்ப வெள்ளத்தில் மூழ்கியவாறே விரைந்து தன்னுடைய பிரத்யேகமான அறைக்குச் சென்று கதவை உள்புறமாக தாளிட்டுக் கொண்டு வள்ளலார் பெருமான் தன்னிடம் திருப்பிக் கொடுத்த மரச் சுத்தியலை உற்றுப் பார்த்தார்.

தன்னுடைய கண்களை அவரால் நம்ப முடியவில்லை. காரணம், அந்த மர சுத்தியல் முழுக்க முழுக்க தங்கத்தாலான சுத்தியலாக மாறி விட்டது. நீதிபதியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. இனம் புரியாத இன்பம் உடல் மனம் முழுவதும் வியாபித்தது.

அந்நிகழ்ச்சி அவருடைய ஞானக் கண்களைத் திறந்து விட்டது. தன்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி விட்டார். ஒலியை எழுப்புவதற்காக அவர் பயன்படுத்தி வந்த கொட்டாப்புளி இன்று அவருடைய உள்ளத்தின் ஒலியை அறிவிக்கும் ஆலயமணியாக, குரு பிரசாதமாக மாறியது.

மரத்திற்கும் தங்கத்திற்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொருளில் உள்ள பஞ்ச பூத சக்திகளின் விகிதாசாரம் தானே ஒரு பொருளின் தன்மையை நிர்ணயம் செய்கிறது. பஞ்ச பூத பிரதிஷ்டை முத்திரையில் எப்போதும் இலயித்த வள்ளலார் பெருமான் அன்றுதான் தன்னுடைய கையை விரித்து நீதிபதியின் மரசுத்தியலைத் தொட்டார்.

அதன் விளைவு மர சுத்தியல் தங்க சுத்தியலானது. சப்தம் அளிக்க வேண்டிய சுத்தியல் அமைதி அடைந்தது. கருவி கடவுளாய் மாறியது. அந்த நீதிபதியின் பரம்பரையில் இன்றும் அழியா இறைச் செல்வமாக அது பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு எந்த அளவிற்கு உங்கள் கைகளை புனித இறை நாமங்களைக் கூறுவதற்குப் பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் பஞ்ச பூதங்களைத் தூய்மை செய்து பஞ்ச பூதத்தால் உருவான இந்த உடலையும் புனிதப்படுத்த முடியும்.

தூய்மையான உடலில் யார் குடியேறுவார்கள்? தூய்மையான இறைவன்தானே தூய்மையான உங்கள் உள்ளத்தில் குடியேற முடியும்?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam