கைலாயத்தில் ஒரு திருப்பணி |
ஆயிரக் கணக்கான தேவதைகளும் தெய்வ மூர்த்திகளும் நிலை கொண்ட தெய்வத் திருமேனியை உடையதே பசுவாகும். பசுவை வணங்கினால் எல்லா தெய்வ மூர்த்திகளையும் வணங்கியதற்குச் சமமாகும். பசுவிற்கு உணவளித்தால் எல்லா தேவதைகளுக்கும் உணவிட்டதாகக் கணக்காகும். அதனால்தான் திருமூலரும் பசுவிற்குச் சிறிது அருகம்புல் அளித்தால் கூட அது மிகச் சிறந்த அறமாகக் கருதப்படும் என்று சிறப்பிக்கிறார். இத்தகைய பசு மாதாக்களை எப்படி பூஜிப்பது என்று அடியார்களுடன் இருந்து அவர்களுக்கு அற்புத பாடம் புகட்டியவரே திரு வெங்கடராம சுவாமிகள்.
திருச்சியில் நல்ல உள்ளம் கொண்ட புனித ஜெயின் சமூகத்தினரால் பராமரிக்கப்டும் பசு காப்பகம் உள்ளது. இங்கு கறவை நின்று போன பசு மாடுகளும், வயதான எருதுகளும், காளை மாடுகளும், அநாதையாக விடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பசு காப்பகத்தில் ஒரு புத்தாண்டு தினத்தன்று திருப்பணி மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார் வாத்யார் அவர்கள். அதன்படியே சென்னை, திருச்சி நகரங்களிலிருந்த அடியார்கள் இங்கு வந்து குழுமினர்.
வழக்கம்போல் திருப்பணி நடக்கும் இடத்திற்கு வந்து சீருடைகளை மாற்றிக் கொள்ளும் வாத்யார் அவர்கள் இக்காப்பகத்திற்கு வரும்போதே சீருடையுடன் வந்து விட்டார். பசுக் காப்பகத்தில் நுழைந்தவுடனேயே அனைத்துப் பசுக்களையும் நமது அகஸ்திய பாரம்பரிய முறையில் தரையில் விழுந்து வணங்கினார். அடுத்த கணமே யாரும் என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ளும் முன் அங்கிருந்த பசுஞ் சாணக் குவியல்களை அள்ளிக் கூடை ஒன்றில் போட ஆரம்பித்து விட்டார். அவர் பசுஞ் சாணத்தில் மேல் பாய்ந்து அதை வாரிக் கூடையில் போட்ட விதம் பல மணி நேரம் தண்ணீரைப் பார்க்காமல் தாகத்தால் வருந்தும் ஒருவன் நீரூற்றைக் கண்டால் எப்படிப் பாய்வானோ அப்படி இருந்தது அவருடைய செய்கைகளில் கொப்பளித்த ஆர்வமும் வேகமும்.
வாத்யாரின் அளவில்லாத ஆர்வம் மற்றவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்த அவர்களும் உடனே தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு பசுஞ் சாணம், குப்பைகளை அகற்ற ஆரம்பித்தனர். இது பற்றிய விளக்கத்தை பின்னர் வாத்யாரே எடுத்துரைத்தார். இவ்வாறு அடிமாடுகளைப் பராமரிக்கும் கோசாலைகளில் செய்யும் திருப்பணி கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ நிறைவேற்றும் சேவைக்கு ஒப்பானது. யாராவது கைலாயத்தில் சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் அதை சாதாரணமாக நினைத்து விடுவார்களா? அதனால்தான் கிடைத்தற்கரிய மிகப் புனிதமான பொக்கிஷமாக அதை பாவித்து நிறைவேற்ற வேண்டும்.
சாணம், குப்பை கூளங்களை அகற்றிய பின்னர் மாட்டுக் கொட்டில்களின் தரையைக் கூட்டி விட்டு நீர் விட்டு அலம்பி, பின்னர் சோப்புப் பவுடர் போட்டு சுத்தமாக அலம்பினோம். அதற்கு மேல் டெட்டாலை நீரில் கலந்து மாட்டுத் தொழுவம் முழுதும் தெளித்தோம். தரையில் பரவிக் கிடக்கும் குப்பைக் கூளங்களில் புழுக்கள் உருவாகி விடும். இந்தப் புழுக்கள் பசுக்களின் கால் நக இடுக்குகளில் தங்கி அவைகளுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். இவ்வாறு நாம் மாட்டுத் தொழுவத்தை சுத்தமாக நீர், சோப்பு போட்டு அலம்பி டெட்டால் கொண்டு தூய்மைப் படுத்தினால் புழு, கொசுத் தொந்தரவுகளால் மாடுகள் துõக்கத்தை இழக்கும் நிலை வராது. நாம் திருப்பணி செய்யும் அந்த ஒரு நாள் இரவு மாடுகள் நன்றாகத் தூங்கும். டெட்டால் என்னும் கிருமி நாசினி
நாம் நினைப்பது போல தற்போது புதிதாக வந்த ஒரு ரசாயணப் பூச்சி கொல்லி அல்ல. முற்காலத்தில் வழுவா மருந்து என்னும் பெயர் பெற்ற பூச்சி கொல்லியே தற்போது டெட்டால் என்ற பெயரைக் கொண்டுள்ளது. நம் திருப்பணியால் விளைவது ஒரு நாள் துõக்கமாக இருந்தாலும் பல நாட்கள் ஒட்டடை படிந்த கோயில்களில் ஒட்டடையை நீக்கித் திருப்பணி செய்தால் அது எப்படி பல நாட்களாக அக்கோயிலில் திருப்பணி செய்த பலனைக் கொடுக்கிறதோ அவ்வாறே பல ஆண்டுகள் துõக்கம் வராமல் அவதிப்பட்ட பசு மாடுகளுக்குக் கிடைக்கும் ஒரு நாள் தூக்கமே அவைகளுக்குப் பல்லாண்டுகள் நிம்மதியைத் தந்த புண்ணிய சக்தியைக் கொடுக்கும். இதுவே சற்குரு ஒருவர் மூலம் நிறைவேற்றும் திருப்பணியின் மகத்துவமாகும்.
தரையை அலம்பிய பின்னர் மாடுகளைக் குளிப்பாட்டும் திருப்பணி முறையை வாத்யார் அவர்கள் விளக்கினார். ஒவ்வொரு மாட்டையும் அலம்பும் முன் அதற்குச் சாஷ்டாங்கமாகவோ அல்லது நமது ஆஸ்ரம பாரம்பரிய முறையிலோ நமஸ்காரம் செய்ய வேண்டும். நாம் நம்முடைய அம்மாவைக் குளிப்பாட்ட நேர்ந்தால் எப்படி அன்புடன் அவளைக் குளிக்கச் செய்வோமோ அத்தகைய பரிவுடன் பசு மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். முதலில் நல்ல நீரால் கழுவி, பின்னர் தரமான வாசனையுள்ள சோப்புப் போட்டு மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். மாடுகளைக் குளிப்பாட்டும்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
சிலர் பசு மாடுகளைக் கல் விக்ரஹங்கள் போல் பாவித்து வேகமாக தண்ணீரைப் பாய்ச்சி, கூர்மையான நகங்கள், ஓடுகளைப் பயன்படுத்தி சுத்தப்படுத்துவது உண்டு. இது தவறாகும்.. இதனால் சாபமே மிஞ்சம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் இளங்கன்றுகள், வயதான மாடுகளை வெகுநேரம் நீரால் அலம்பக் கூடாது. பசு மாடுகளுக்கு அதிகத் தண்ணீர், மழை ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் நினைவு கூறவும். பசு மாட்டை அலம்பிய பின்னர் அதன் தோலை முகர்ந்து பார்த்தால் சோப்பின் நறுமணம் வீசினால் மாட்டை போதுமான அளவிற்கு சுத்தமாகக் குளிப்பாட்டி விட்டோம் என்று கணக்கில் கொள்ளலாம். ஒவ்வொரு மாட்டையும் குளிப்பாட்டும் முன்னும், குளிப்பாட்டிய பின்னும் நமஸ்காரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பசு மாட்டைக் குளிப்பாட்டுகிறோம் என்பதை விட ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கான தேவதைகளுக்கு அபிஷேகம் நிகழ்த்தும் அற்புத திருப்பணியை ஆற்ற கடவுள் நமக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டால் மற்றதெல்லாம் தானே புரிய வரும். பின்னர் சுத்தமான அரைத்த மஞ்களை மாடுகளின் நெற்றியிலும் உடலில் பல இடங்களிலும் பூசி குங்குமப் பொட்டு இட வேண்டும். இடையிடையே மாடுகளுக்கு கோதுமைத் தவிடு கலந்த நீர், அச்சு வெல்லம், வாழைப்பழம் வழங்கப்பட்டன. கன்றுக் குட்டிகள் உடைத்த அச்சு வெல்லத்தை மிகவும் சந்தோஷமாக உண்டன. திருப்பணி முடிந்த பின் மாட்டுத் தொழுவம் முழுவதும் அடர்த்தியாக நறுமண சாம்பிராணி துõபம் காட்டப்பட்டது.
மாலையில் நிறைவாக ஒவ்வொரு மாடும், கன்றும் திருப்தியாக உண்ணும் அளவிற்கு அகத்திக் கீரை வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு மாட்டுத் தொழுவத்தை முறையாக நீர் விட்டு அலம்பி, மாடுகளைக் குளிப்பாட்டி அவைகளுக்கு வயிறார உணவிடுவதால் கிட்டும் புண்ணிய சக்தியை வாய் விட்டுக் கூற இயலாது. பல அசுவமேத யாகங்களை ஒரே சமயத்தில் இயற்றிய அளப்பரிய புண்ணிய சக்தியைத் திரட்டித் தருவதே இத்தகைய அடிமாட்டுப் பண்ணைகளில் நிறைவேற்றும் திருப்பணியாகும் என்று வாத்யார் பின்னர் விளக்கினார். குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை என்று வாயால் கூறுவதை விட அதை நடைமுறையில் அனுபவிக்க இவ்வாறு பல சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தவரே நமது வெங்கடராம சுவாமிகள்.